காளியின் குழந்தையாக
அமர்நாத் யாத்திரையைத் தொடர்ந்து சுவாமிஜியின் மனம் காளியின் திருப்பாதங்களை நாடத் தொடங்கியது. குருதேவரின் அரவணைப்பில், தாயின் மடியில் குழந்தையைப்போல் அவளது திருப்பாதங்களைத் தஞ்சமடைந்த தட்சிணேசுவர நாட்கள் அவர் மனத்தில் ஒரு வேளை நிழலாடியிருக்கலாம். அவரது வாய் எப்போதும் அவளது திருநாமத்தை உச்சரித்தது. ராமபிரசாதர் குழைந்து உருகி காளியின் மீது பாடிய பாடல்களை அவர் தொடர்ந்து பாடி வந்தார். படகோட்டியின் நான்கு வயது பெண் குழந்தையை ஒரு நாள் சாட்சாத் உமாதேவியாக வழிபடவும் செய்தார். நான் எங்கெங்கு திரும்புகிறேனோ அந்தத் திசைகளில் எல்லாம் அவளே நிற்கிறாள். இந்த அறையில் அவளும் ஒரு நபராக உலவுவது போல் உள்ளது” என்று கூறினார் அவர்.
காளி வழிபாடு எனது விசேஷ பைத்தியம்” என்பார் சுவாமிஜி. ராமபிரசாதரும், கமலாகாந்தரும், ஸ்ரீராம கிருஷ்ணரும், உலவிய வங்க பூமியில் பிறந்த சுவாமிஜிக்குக் காளி வழிபாடு என்பது இயல்பாகவே கைகூடிய ஒன்றாக இருந்ததில் வியப்பில்லை. தமது படகிலேயே மிகவும் தனிமையான இடத்திற்குச் சென்று வாழத் தொடங்கினார். யாரையும் சந்திக்க மறுத்துவிட்டார். அவரிடம் மிகவும் பக்தியுடன் அணுகிய டாக்டர் ஒருவரை மட்டுமே அவர் தம்மிடம் அனுமதித்தார். அந்த டாக்டர் அவரது தேவைகளையும் கவனித்துக்கொண்டார். பல நாட்கள் எந்தப்பேச்சும் இருக்காது. டாக்டர் செல்லும்போதெல்லாம் சுவாமிஜி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருப்பார். டாக்டரும் எதுவும் சொல்லாமல் மௌனமாகத் திரும்பி விடுவார்.
ஒரு நாள் மாலை, உண்மையில் இந்த உலகம் என்ன என்பது பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் சுவாமிஜியின் மனம் ஆழ்ந்தது. இன்பம், உற்சாகம், ஒளி இவையெல்லாம் என்ன? இவையெல்லாம் வேறு யாருடையதாகவாவது இருக்க முடியாது. ஏனெனில் அவளைத் தவிர வேறு எதுவும் கிடையாது” என்றல்லவா வேதங்கள் கூறுகின்றன! எனவே இவையும் அந்தத்தேவியின் பண்புகளாக , அவளது ஒரு பக்கமாகத் தானே இருக்க வேண்டும்! சுவாமிஜியின் சிந்தனை சுழன்றது.
ஒருநாள் இருள் கவியலாயிற்று. எங்கும் இயல்பாகவே அமைதி சூழும் வேளை அது. இமயத்தின் அந்தத் தனிமைக் சூழலில் பேரமைதி நிலவியது. சுவாமிஜியின் மனம் மட்டும் எரிமலையாய்க் கனன்று கொண்டிருந்தது. அப்போது- அவரது சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவித்தபடி, வாழ்க்கையின் மறு பக்கத்தை உணர்த்தியபடி காளி தேவி அவர் முன் தோன்றினாள். தம் முன் திடீரென்று தோன்றிய கால பயங்கரியான அவளது தரிசனம் அவருள் உறைந்தது. அந்த அனுபூதியின் வேகத்திலேயே சென்று தமது காட்சியை ஒரு கவிதையாக வடித்தார் அவர். எழுதி முடித்தவர். உணர்ச்சிப்பெருக்கின் வேகத்தில் நிலை குலைந்தார். அவரது கைகளிலிருந்து பேனா நழுவித் தரையில் விழுந்தது. அவரும் மயங்கித் தரையில் விழுந்தார்.
தொடர்ந்த நாட்களில் சுவாமிஜி காளி மயமாகவே வாழ்ந்தார். அவளைப் பற்றியே பேசினார்.அவளது தத்துவத்தை விளக்கினார். இன்ப நாட்டமே அனைவரின் நோக்கம் என்று நினைப்பது தவறு. இன்பத்தை நாடுகின்ற அதே அளவில் துன்பத்தை நாடுபவர்களும் பிறக்கவே செய்கிறார்கள். சோகத்திலும் சுகம் இருக்க முடியும். பயங்கரத்தைப் பயங்கரத்திற்காகவே வழி படுவோம்.
இன்பத்திலும் இனிமையிலும் மகிழ்ச்சியிலும் தேவி யைக் காண்கிறோம். அது போலவே தீமையிலும் பயங்கரத்திலும் வேதனையிலும் மரணத்திலும் அவளைக் காண்பதற்குக் கற்றுப் கொள்வோம்.
அம்மா! என்ன விந்தை! உனக்குத்தலை மாலையை அணிவிக்கிறார்கள். ஆனால் பயத்தில் நடுங்குகிறார்கள். அதே வேளையில் உன்னை, ”கருணையின் வடிவே” என்று அழைக்கவும் செய்கிறார்கள்.
பயங்கரத்தை வழிபடுவதால் மட்டுமே பயத்தை வெல்ல முடியும். மரணமிலாப் பெருநிலையை அடைய இயலும். மரணத்தைப் பற்றி சிந்தனை செய்யுங்கள். மரணத்தைத் தியானம் செய்யுங்கள்! பயங்கரத்தை, பயங்கரத்தை, பயங்கரத்தை வழிபடுங்கள்! அவளே எல்லாம். அவளது சாபமும் ஆசியே, உங்கள் இதயம் சுடுகாடா கட்டும், ஆணவம், சுயநலம், ஆசைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகட்டும்! அப்போது , அப்போது மட்டுமே அங்கே காளி வருவாள். அவளே காலம். அவளே மாற்றம். அவளே எல்லையற்ற ஆற்றல்!
எப்போதும் சுவாமிஜியின் திருவாயிலிருந்து காளியின் நாமமே எழுந்தது. அவளே உடம்பு, அவளே நோய், வேதனையைத் தருபவளும் அவளே. காளி, காளி, காளி! என்று கூறியபடி இருந்தார் அவர். இந்த நாட்களில் அவரது அறிவுரைகளும் காளியைப் பற்றியே இருந்தன. பயம் கூடாது. பிச்சை கேட்கக் கூடாது. உரிமையுடன் கேளுங்கள்- உரிமையுடன் மிக உயர்ந்ததைக்கேளுங்கள்! காளியின் உண்மையான பக்தர்கள் கரும்பாறை போல் உறுதியாகவும் சிங்கம்போல் பயமற்றும் இருக்க வேண்டும். பிரபஞ்சமே திடீரென்று நொறுங்கிப் பொடி ப் பொடியாகி, தூசியாகச் காலடியில் வீழ்ந்தாலும் அவர்கள் கலங்க மாட்டார்கள். நீங்கள் சொல்வதை அவள் கேட்குமாறு செய்யுங்கள். அவள் முன்னால் கூனிக்குறுகி நிற்காதீர்கள். அவள் எல்லா ஆற்றலும் வாய்ந்தவள். கல்லிலிருந்து கூட வீரர்களை உருவாக்க அவளால் இயலும்.
காளியின் எண்ணங்கள் மனத்தில் உறைய உறைய மேலும் தனிமையில் ஆழ்ந்து செல்ல வேண்டும் என்று விரும்பினார் சுவாமிஜி. எனவே திடீரென்று ஒருநாள் ஷீர்பவானி கோயிலுக்குச்சென்றுவிட்டார். யாரும் தம்மைத் தொடரக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறியும் விட்டார்.
சுமார் ஒருவாரகாலம் அங்கே இருந்தார் சுவாமிஜி. தினமும் அவளை வழிபட்டார். ஹோமங்கள் செய்தார். அந்தப் பவானி தேவிக்கு உகந்ததான ஷீரம்(பால் பாயாசம்) நைவேத்தியம் செய்தார். ஒரு சாதாரண யாத்திரிகரைப்போல் ஜபமாலை கொண்டு ஜபங்கள் செய்தார். அங்கே உள்ள பண்டிதர் ஒருவரின் மகளான சிறுமியைத்தேவியாகத் தினமும் வழி பட்டார்.
தேவி பேசினாள்
ஷீர் பவானி கோயில் முகலாயர்களின் படை யெடுப்பால் மிகவும் சிதிலமடைந்திருந்தது. கோயிலின் நிலைமை சுவாமிஜியை உறுத்திக் கொண்டே இருந்தது. இப்படியெல்லாம் ஒரு கோயிலைச் சூறையாட எப்படித்தான் அனுமதித்தார்களோ? நான் மட்டும் இருந்திருந்தால் இப்படி ஒருகாரியம் நடக்க விட்டிருக்க மாட்டேன். தேவியைக் காக்க என் உயிரையே கொடுத்திருப்பேன்” என்றெல்லாம் எண்ணங்கள் அவரது சிந்தனையில் எழுந்தன. அப்போது, மகனே! என்றொரு குரல் எழுந்தது. ஆம், தேவி பேசினாள். மகனே, என் கோயில்களில் சாத்திகர் நுழைந்தால் என்ன? எனது விக்கிரகங்களை உடைத்தால் தான் என்ன? அதனால் உனக்கு என்ன வந்தது? நீ என்னைக் காக்கிறாயா? அல்லது நான் உன்னைக் காக்கிறேனா? என்று கேட்டாள் அவள். சுவாமிஜிக்குச் சுரீர் என்றது. உண்மைதானே! திகைத்துப்போனார் அவர்! அம்மா! என்று குழைந்தது அவரது உள்ளம். நான் தசறு செய்துவிட்டேன்! ஒரு குழந்தையாக உன் திருவடிகளில் இருப்பதற்கு அருள் புரிவாய்! என்று அரற்றினார்.!
தேவியின் திருவுளத்தை அறிந்த பிறகும் சுவாமிஜியின் மனம் ஏனோ அமைதி கொள்ளவில்லை. ஒருநாள் அந்தக்கோயிலின் சன்னதியில் மௌனமாக அமர்ந்திருந்தபோது மீண்டும் அவரது மனத்தில், இந்தக்கோயில் இப்படிச் சிதிலமாகிக் கிடைக்கிறதே! என்னால் இங்கே புதிய கோயில் கட்ட முடியுமானால்..... என்றெல்லாம் சிந்தனைகள் எழுந்தன. அப்போதும் தேவி பேசினாள், மகனே! கோயில்களையும் மடங்களையும் உருவாக்க என்னால் இயலாதா? இதே இடத்தில் ஏழுமாடி பொற்கோயிலை ஒரு கணத்தில் என்னால் எழுப்ப இயலும்- தேவியின் குரல் சுவாமிஜிக்குத் தெளிவாகக்கேட்டதுஇ அவளது கனிந்த குரலைக்கேட்ட பிறகு திட்டங்கள் தீட்டுவதையே விட்டு விட்டேன். எல்லாம் அவள் திருவுளம்போல் நடக்கட்டும். என்று பின்னாளில் கூறினார் அவர்.
அவள் மயமாக
ஒரு வாரத்திற்குப் பிறகு ஷீர்பவானியிலிருந்து ஸ்ரீநகருக்குத் திரும்பினார் சுவாமிஜி.நேராக நிவேதிதையும் மற்றவர்களும் இருந்த படகு வீட்டிற்குச்சென்றார். கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தபடியே, தேவிக்குச் சமர்பித்த சில சாமந்திப் பூக்களைப் பிரசாதமாக அவர்களுக்குக்கொடுத்தார். தேவிக்கு அணிவித்த மாலையை ஒருவரிடம் கொடுத்தார். பிறகு அமர்ந்து, இனி ஹரி ஓம்” கிடையாது. இனி எல்லாம் ”தேவி” தான்! எனது தேச பக்தி எல்லாம் விலகியது. இனி எல்லாம் ”அம்மா” அம்மா தான்” என்றார்.
ஷீர்பவானி நாட்களைப் பற்றி நிவேதிதை எழுதுகிறார். சுவாமிஜியின் நிலையைப் பற்றி என்னால் உங்களுக்கு எழுத இயலாது. ஏனெனில் அது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு குழந்தைபோல் அவர், அம்மா, அம்மா என்று கூறுகிறார்.ஆனால் அவரது குரல் தெய்வத்தின் குரலாக ஒலிக்கிறது. அவரது ஆன்மாவோ பரமாத்மாவாகிய இறைவனுடையதாகவே தெரிகிறது.... கடவுளைக் கண்ட ஒருவராகவே அவர் இருக்கிறார். அவரது கண்கள் இன்னும் அந்தக் காட்சியைக் கண்ட படியே உள்ளன.
சீடர்களுடனும் நண்பர்களுடனும் சுவாமிஜி இருந்தாலும் அவரைப் பற்றி அவர்கள் அறிந்தது மிகமிகச் சிறிதளவே. ஆழ்ந்த அமைதி கலந்த அவரது கம்பீரம் சில நேரங்களில் யாரையும் அவரிடம் அணுக அனுமதிக்காது. சிலநேரங்களில் அவர் உலகையே மறந்தபடி நதிக்கரையில் உலவுவார். தம்மைச் சுற்றி ஓர் உலகம் உள்ளது என்பதையே அவர் உணராதது போல் இருக்கும். மனமும் வாக்கும் எட்டாத ஏதோ உலகங்களில் அவர் சஞ்சரிக்கிறார். உடம்பு மட்டுமே இங்கு உலவுகிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.ஒரு நாள் அவர் காளியைப் பற்றி தாம் எழுதிய பாடலில் சில வரிகளைப் பாடியபடியே திடீரென்று அவர்கள் முன்னால் வந்து, அத்தனையும் உண்மையாக நடந்தது. இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் என் கண் முன்னால் நடந்தவை. ஆம் , நான் மரணத்தின் பேருருவைத் தழுவினேன்” என்றார்.
காஷ்மீரும் ஷீர்பவானிக்கோயிலும் சுவாமிஜியின் வாழ்க்கையில் இவ்வாறு அவரது தெய்வீக வெளிப்பாட்டிற்குச் சான்றாக நிற்கின்றன. காஷ்மீரிலும அமர்நாத்திலும் ஷீர்பவானியிலும் அவர் என்னென்ன அனுபவங்களை பெற்றார். அவரது சிந்தனைகள் எத்தகைய புதுப் பொலிவைப் பெற்றன, அவர் கண்ட காட்சிகள் எத்தனை என்பதெல்லாம் அவர் மட்டுமே அறிந்தவை. அவர் வெளியில் கூறியவை மிகச் சொற்பமே என்பது மட்டும்உறுதி. இவற்றையும் பின்னால் சீடர்களுக்குச் சொல்லிவிட்டு அவர் இதற்கு மேல் என்னால் சொல்ல இயலாது, சொல்வதும் சரியல்ல”என்று கூறினார் . ஆனால் இன்னும் ஓரிரு முக்கியமான காட்சிகளைத் தமது சகோதரத்துறவிகளிடம் தெரிவித்திருந்தார். அவை புறவுலகிற்குக் கிடைக்கவில்லை.
பக்கீரின் சாபம்-
நன்மையும் தீமையும் கலந்தது உலகம் என்பது எல்லா பரிமாணங்களிலும் உண்மை. இத்தனை ஆன்மீக அனுபூதிகளுக்கிடையில் சுவாமிஜி ஒரு சாபத்தையும் ஏற்க நேர்ந்தது. முஸ்லிம் பக்கீர் ஒருவரின் சீடன் சுவாமிஜியிடம் அவ்வப்போது வந்து சென்றான். அவரிடம் மிகவும் கவரப் பட்டான். ஒருநாள் அவனுக்குக் காய்ச்சலும் தலைவலியும் வந்து மிகவும் துன்பப் பட்டான். சுவாமிஜி அவனைச்சென்றுபார்த்து, அவனது தலையைக் கைகளால் வருடினார். அவனது நோய் அவனைவிட்டு அகன்றது. இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அவன் சுவாமிஜியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டான். அவரிடம் தொடர்ந்து வரத் தொடங்கினான். இதனைக்கேள்விப்பட்ட பக்கீர் சுவாமிஜியிடம் கடும் கோபம் கொண்டார். எங்கே சீடனை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் சுவாமிஜியைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக ஏதேதோ கதை கட்டி அவனிடம் கூறிப் பார்த்தார். ஆனால் அது அவனிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சுவாமிஜியைவிடத் தமக்கு அதிக ஆற்றல் உண்டு என்பதை நிரூபிப்பதற்காக, என் ஆற்றலால் உன் சுவாமிஜியை என்ன செய்கிறேன்” பார். காஷ்மீரை விட்டு வெளியேறுவதற்கு முன்னால் அவர் வாந்தியாலும் தலை சுற்றலாலும் சிரமப்படப்போகிறார்” என்றார்.
அப்படியே நடந்தது. வாந்தியாலும் தலைசுற்றலாலும் சுவாமிஜி மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். அவருக்குக் கோபம் கோபமாக வந்தது- பக்கீர் மீது அல்ல, குருதேவர் மீது! குருதேவர் இருந்து என்னபயன்? எனது அனுபூதிகளும், எல்லா ஆற்றலும் வாய்ந்த ஆன்மா நம்முள் இருக்கிறது” என்ற எனது வேதாந்த போதனையும் என்ன சாதித்தன? அவையெல்லாம் கேவலம் ஒரு மந்திரவாதியின் செப்பிடுவித்தை சாபத்திலிருந்து என்னைக் காக்க வில்லையே! என்று ஆதங்கப் பட்டார் அவர்.
உன் குடுமி அவர் கையில்!
1898 அக்டோபர் 18-ஆம் நாள் கல்கத்தா திரும்பினார் சுவாமிஜி. அவரது ஆதங்கம் கல்கத்தா வந்த பிறகும் தணிய வில்லை. ஒரு நாள் அன்னை ஸ்ரீசாரதா தேவியைத் தரிசிக்கச்சென்றார். அன்னையைக் கண்டதும் அவர் பக்கீரின் சாபத்தைப் பற்றி கூறி, புகார் கூறும் தொனியில், அம்மா” உங்கள் குருதேவரின் ஆற்றல் பிரமாதம் தான்! உங்கள் குருதேவரால் என்னைக் காப்பாற்ற முடியவில்லை” என்றார். அதற்கு அன்னை, மகனே, அந்தச் சாது பெற்றுள்ள சித்திகளின் விளைவு அது. அவற்றின் ஆற்றலை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். குருதேவர் அவற்றை நம்பினார். அவர் எதையும் அழிக்கவரவில்லை. எல்லா நெறிகளையும் அவர் ஏற்றுக்கொண்டார்” என்றார். சுவாமிஜியும் விடாமல் இனி தாம் குருதேவரை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை” என்றார். அதற்கு அன்னை சற்று கேலியாக, என் மகனே” அது உன்னால் முடியக் கூடிய காரியமா? உன் குடுமி அவர் கையில் அல்லவா உள்ளது” என்றார்.
உடல் நலம் பாதிப்பு
சுவாமிஜி மடத்திற்குத் திரும்பி வந்தது துறவிகளுக்கும் பிரம்மசாரிகளுக்கும் பேரானந்தத்தை அளித்தது. ஆனால் அவரது உடல்நிலை அவர்களுக்குக் கவலையை அளித்தது. பார்ப்பதற்கு ஒரு நோயாளியைப்போல் தோற்றமளித்தார் அவர். டாக்டர் ஆர். எல். தத்தா மற்றும் பிரபல மருத்துவர்கள் சுவாமிஜிக்குச் சிகிச்சை அளித்தனர். சர்க்கரை வியாதியும், தூக்கமின்மையும் அப்போது அவரைப் பாதித்திருந்தன. அதனுடன் அமர்நாத் யாத்திரை காரணமாக உடல் தளர்ந்து இதயமும் பலவீனமாகியிருந்தது. இதய நோய் அவரது பரம்பரை நோய். சுவாமிஜி லண்டனில் இருந்தபோது தீவிர நெஞ்சுவலி யால் ஒரு முறை ஏற்கனவே தாக்கப் பட்டிருந்தார். அது பற்றி ஏற்கனவே கண்டோம். உடலில் நீர்க்கட்டும் இருந்தது.
தூக்கமின்மையால் சுவாமிஜி எந்த அளவிற்குச்சிரமப்பட்டிருப்பார் என்பதைக் கீழ்வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம். அந்த வருடம் ஜனவரியில் அவர் பலராம் போஸின் வீட்டில் தங்கியிருந்தார். 22-ஆம் தேதி முழு சூரியகிரகணம். ஒரு குழந்தைபோல் சுவாமிஜி கூறினார், கிரகண வேளையில் ஒருவன் எதைப் பிரார்த்திக்கிறானோ அது அவனுக்கு நூறு மடங்காகக் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. நான் தூங்கப்போகிறேன். அப்படியாவது எதிர்காலத்தில் நூறு மடங்கு தூக்கம் கிடைக்குமா என்று பார்க்கிறேன். ஆனால் அவரால் 15 நிமிடம் மட்டுமே தூங்க முடிந்தது. விழித்ததும் அவர் கூறினார், ஆழ்ந்த தூக்கம் என்பதை தேவி இந்த உடம்பிற்கு விதிக்கவில்லை.
அந்தநாட்களைப் பற்றி சுவாமிஜியின் சீடரான கேதார் பாபா கூறினார். சிறிதும் தூக்கம் வராமல் அவதிப்பட்ட அந்த நாட்களில் ஒரு முறை சுவாமிஜி என்னிடம், ”அப்பா ஏதாவது செய்து சற்று எனக்குத் தூக்கம் வர உதவுவாயா? நீ என்ன கேட்டாலும் நான் தருகிறேன்” என்று கூறினார். அவருக்குத் தூக்கத்தைத் தருவதற்கான சக்தி என்னிடம் எங்கே? உடம்பினால் அவர் பட்ட அவதிகள் கொஞ்சமல்ல. ”ஞானம் ஏற்பட்ட பிறகு ஒரு முறை கூட நான் நான்கு மணிநேரத்திற்கு அதிகமாகத் தூங்கியதில்லை” என்று என்னிடம் சுவாமிஜி கூறினார்.
இத்தனை நோய்களும் போதாதென்று ஆஸ்த்மா வேறு அவருக்கு மிகுந்த தொந்தரவு கொடுத்து வந்தது. சிலவேளைகளில் அவர் மூச்சுத் திணறலால் அதிலிருந்து விடுபடும் போது உடல்நிலை மிக மிக மோசமானதாக ஆகியிருக்கும். மூச்சுத் திணறல் பிரச்சனை இப்போது அவரை அடிக்கடி வாட்டத் தொடங்கியது.
மருத்துவர்களின் பரிசோதனை முடிவுகள் ஓர் எச்சரிக்கை மணியாக ஒலித்தன. இதயம் சிகிச்சையைக் கடந்த நிலையில்பழுது பட்டிருப்பதாகவும், மிகவும் கவனமாக இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று அவர்கள் கூறினர். கட்டாயமாக பொதுச்சொற்பொழிவுகள் கூடாது, காலையிலும் மாலையிலும் கங்கையில் படகுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பல நிபந்தனைகளை அவர்கள் கூறினர். நாராயிலைச்சேர்ந்த ஜமீன்தார்கள் தங்கள் படகுகளை சுவாமிஜியின் பயணத்திற்காக அளிக்கவும் செய்தனர். சுவாமிஜியும் தம்மால் இயன்ற அளவு இந்த நிபந்தனைகளைப் பின்பற்றினர். மருந்துகளை உரிய வேளையில் சாப்பிட்டார். சொற்பொழிவுகளைத் தவிர்த்தார்.
உடல் நிலை இவ்வாறு இருக்க, மனநிலையோ அவர் எப்போதும் இறையுணர்வின் ஆழங்களில் அமிழ்ந்து கொண்டிருப்பதைக் காட்டுவதாக இருந்தது. யாரும் அருகில் இல்லையென்றால் சிறிது நேரத்தில் அவர் தியானத்தில் ஆழ்ந்து விடுவார். அவருக்கும் இறையுணர்வின் அறுதி நிலைக்கும் இடையே ஒரு மெல்லிய திரை மட்டுமே ஊசலாடிக் கொண்டிருப்பது போலவும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அது கிழிந்து அவரது உணர்வு முற்றிலுமாக இறையுணர்வில் ஆழ்ந்து விடும் என்றும் மற்றவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. தான் யாரென்று நரேன் எப்போது அறிந்து கொள்கிறானோ அப்போது அவன் தன் உடம்பை விட்டு விடுவான்” என்று குருதேவர் கூறியிருந்தது அனைவரின் நினைவிலும் உறுத்திக் கொண்டிருந்தது. அப்படி ஏதும் நிகழ்ந்து விடாதிருக்க அவர்கள் மிகுந்த முயற்சி செய்தனர். அவரிடம் ஆன்மீகம் பற்றிய விஷயங்களைப்பேசுவதை த் தவிர்த்து, எப்போதும் சாதாரணமான விஷயங்களைப் பேசவும் அவர் வேடிக்கை வினோதங்களில் ஈடுபடுமாறு பார்த்துக் கொள்ளவும் செய்தனர்.
ஒருநாள் சுவாமிஜி தமது சீடரான சுத்தானந்தருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஏதோ கேள்வி கேட்டார், சுத்தானந்தர் பதிலளித்தார். சுவாமிஜி மீண்டும் அதே கேள்வியைக்கேட்டார். சுத்தானந்தர் அதே பதிலைச்சொன்னார். இவ்வாறு பத்துப் பன்னிரண்டு முறை அதே கேள்வியும் அதே பதிலும் தொடர்ந்தது. சுவாமிஜியின் மனம் சிறிதும் இங்கே இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு அவரை உலக உணர்வு நிலைகளுக்குக்கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இந்த நாட்களிலும் இளம் துறவிகளுக்கும் பிரம்மச் சாரிகளுக்கும் பயிற்சிகள் அளிப்பதை சுவாமிஜி மிக முக்கியமானதாகக் கருதினார். வராக நகர நாட்களிலிருந்தே மடத்தில் பல இளைஞர்கள் சேர்ந்தது பற்றி கண்டோம். அவர்களில் சிலர், வராக நகர மடத்தில் முதன் முதலாகச் சேர்ந்தவர் காளி கிருஷ்ணர் (சுவாமி விரஜானந்தர்) அவரைத் சென்றனர். சுவாமிஜி, பிரம்மானந்தர் , சாரதானந்தர்,ம- சுரேந்திரநாத் தத்தர், ஹர மோகன் போன்ற பலரும் அங்கே சென்றனர். பெண்கள் கல்விக்காக ஒரு பள்ளி திறப்பது பற்றி கலந்து பேசுவதற்காக அன்று கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நிவேதிதை அந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி ஒரு சிறிய உரை நிகழ்த்தினார். அந்தப் பணிக்கு ஆதரவு தருமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டத்தில் ஆதரவு இல்லை.
அப்போது ஒரு வேடிக்கை நிகழ்ந்தது. நிவேதிதை பேசிக்கொண்டிருந்தபோது சுவாமிஜி உள்ளே வந்தார். யாருடைய கவனத்தையும் கவராமல் அமைதியாகச் சென்று பின்வரிசையில் அமர்ந்து கொண்டார். நிவேதிதை ஆதரவு கேட்டும் யாரும் அதற்கு ஒத்துழைக்க முன்வராத போது சுவாமிஜி பின்னாலிருந்து பக்தர்களை தமது கையால் உந்தி அவர்களை எழுந்து ஏதாவது சொல்லுமாறு கூறினர். அப்போதும் யாரும் உடன் படவில்லை. எனவே தாமே எழுந்து ஹர மோகனைச் சுட்டிக்காட்டி, மிஸ் நோபிள், இதோ இவர் தமது மகளை உன் பள்ளிக்கு அனுப்பத் தயாராக உள்ளார்” என்று கூறிவிட்டார். சுவாமிஜியைக் கண்ட நிவேதிதை மிகுந்த மகிழ்ச்சியுடன் கைதட்டி ஒரு சிறுமியைப்போல் ஆடிக் களித்தார்
.
பெண்கள் பள்ளியின் ஆரம்பம்
நவம்பர் 13-ஆம் நாள் பெண்கள் பள்ளி, முறையாகத் தொடங்கப் பட்டது. அன்று காளி பூஜை நாள். பள்ளியைத் திறந்து வைக்க அன்னை ஸ்ரீசாரதாதேவியே நேரில் வந்திருந்தார். நிவேதிதை தங்கியிருந்த வீட்டிலேயே பள்ளி தொடங்கப் பட்டது. சுவாமிஜி, பிரம்மானந்தர், சாரதானந்தர், யோகின்மா, கோலாப்மா என்று பலரும் வந்திருந்தனர். அன்னை வழக்கம்போல் மிக மெல்லிய குரலில் இந்தப் பணிக்கான தமது ஆசிகளைத் அதரிவித்தார். அதனை கோலாப்மா உரத்த குரலில் எல்லோருக்கும் தெரிவித்தார். தேவியின் ஆசிகள் எப்போதும் இந்த ப் பள்ளியில் நிலவ வேண்டும் என்றும், அந்தப்பள்ளியில் பயிற்சி பெறுகின்ற பெண்கள் லட்சியப்பெண்களாகத் திகழவேண்டும் என்று தாம் பிரார்த்தனை செய்வதாக அன்னை கூறினார். எதிர்காலத்தில் பெண்கள் கல்வி பெற்றவர்களாகத் திகழப்போகிறார்கள் என்பதற்கு அன்னையின் ஆசிகளைவிட மேலான ஒரு நல்ல சகுனத்தை என்னால் கற்பனை கூட செய்ய இயலாது” என்று எழுதினார் நிவேதிதை. சுவாமிஜியிடமும், அவரது பணியிலும் உயர்ந்த மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்த இல்லற பக்தர்களின் வீடுகளிலிருந்து சிறுமிகள் அந்தப் பள்ளிக்கு அனுப்பப் பட்டனர். சிறுமிகளை அழைத்துவர ஒரு பணிப்பெண் அமர்த்தப் பட்டாள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணி ஒன்று அன்று சுவாமிஜியால் இவ்வாறு தொடங்கப் பட்டது. தொடர்ந்து சுவாமிஜி நிவேதிதைக்கு ஆலோசனைகள் வழங்கியும், தமது சகோதரத் துறவிகளை அவருக்கு வழிகாட்டுவதில் ஈடுபடுத்தியும் பெண்கள் கல்விப் பணி வளர வகை செய்தார்.
இந்த நாட்களில் சுவாமிஜியிடமிருந்து பொங்கிய அன்புப் பேரூற்று தங்கு தடையின்றி எல்லோர் மீதும் பாய்ந்தது.ஆண், பெண், பணக்காரன்-ஏழை, இளைஞர்- முதியவர், உயர்ந்தவன்- தாழ்ந்தவர், நல்லவர்- கெட்டவர், என்ற எந்தப் பாகுபாட்டையும் அவர் பொருட்படுத்தவில்லை. வந்தவர்க்கெல்லாம் மந்திர தீட்சை அளித்தார் அவர். தீயவர்கள், வழி தவறியவர்கள் என்று யாரையும் அவர் விலக்கவில்லை. அவரது இந்தக் கருணைப் பெருக்கு சிலவேளைகளில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. ஒரு வேளை சுவாமிஜிக்கு மனிதர்களைத் தரம் பிரித்து அறியத்தெரியவில்லையோ என்று கூட சிலர் சந்தேகப் பட்டதுண்டு. இவ்வாறு பலர் பேசியதைக்கேட்ட சுவாமிஜியின் சீடர் ஒருவர் சுவாமிஜியிடமே நேரடியாக இதனைக்கேட்டார். அன்பு கனிந்த குரலில் பதிலளித்தார் சுவாமிஜி.
மகனே! எனக்கா மனிதர்களைப் பற்றித் தெரியாது என்கிறாய்! ஒரு மனிதனை நான் பார்க்கும்போது, அவனது முற்பிறவியைக்கூட நான் அறிந்து கொள்கிறேன். நான் அறிவது அவனுக்கேத் தெரியாது. அவனது ஆழ்மகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரிய வருகிறது அவையெல்லாம் தெரிந்தும் நான் என் அத்தகையோருக்கு மந்திர தீட்சை வழங்குகிறேன்? பாவம், மன அமைதிக்காக அவர்கள் எல்லாக் கதவுகளையும் தட்டினார்கள்.ஆனால் எல்லா இடங்களிலும் அவர்கள் மறுக்கப் பட்டார்கள். கடைசியாக என்னிடம் வந்துள்ளார்கள். நானும் மறுத்தால் அவர்கள் எங்கு செல்வார்கள்? அதனால் நான் அவர்களை ஏற்றுக்கொள்கிறேன். ஓ! எவ்வளவு துன்பப் படுகிறார்கள்! இந்த உலகமே துன்பம் நிறைந்தது. மகனே!
பல பணிகளைத் துவக்கியாயிற்று. அளிக்க வேண்டிய செய்தியை அளித்தாயிற்று. ஸ்ரீகுருதேவர் ஆரம்பித்த துறவியர் பரம்பரைக்கு ஒரு வடிவம் கொடுத்தாயிற்று. இனி? குருதேவர் மறைந்த பிறகு அந்த நாட்களிலேயே பிரமததாஸ் மித்ரருக்கு எழுதினாரே- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அஸ்தியைப் பிரதிஷ்டை செய்வதற்கு கங்கைக்கரையில் ஓர் இடம் கிடைக்கவில்லையே என்று எண்ணியெண்ணி என் இதயம் உடைந்து போகிறது. அந்தப் பணிக்குக் காலம் கைகூடி வருவதைக் கண்டார் சுவாமிஜி. தமது வாழ்க்கையில் ஒருமுக்கியமான அந்தப் பணியைச் செய்வதற்குத் தயாரானார்.
புதியதொரு துறவியர் பரம்பரை
வங்க மண்ணாகிய கோமுகியிலிருந்து ஒரு கருணை கங்கைப் பொங்கிப் பாய்கிறது. மனிதர்களே! நீங்கள் யார் யார் இருக்கிறீர்களோ, அனைவரும் விரைந்தோடி வாருங்கள்! வந்து, அந்தப் புனித நீரைப் பருகி, தாகத்தால் வறண்ட உங்கள் தொண்டைக்கு தாக சாந்தி அளியுங்கள்! என்று ஸ்ரீராமகிருஷ்ணரைக் கங்கையாக வர்ணிக்கிறது வங்க மொழிப் பாடல் ஒன்று. வற்றாத ஜீவ நதியான கங்கை புறப்படும் இடம் கோமுகி. அவள் உலகினரின் பாவங்களைப் போக்குவதற்காகக் கோயில் கொண்டு எழுந்தருளி அருள் புரியும் இடம் கங்கோத்ரி. அது போல் ஸ்ரீராமகிருஷ்ண கங்கைக்கு கோமுகியாக அமைந்தது தட்சிணேசுவரம் என்றால் கங்கோத்ரியாக அமைமகிறது பேலூர் மடம். கங்கைக்குக் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது தட்சிணேசுவரம், மேற்குக் கரையில் அமைந்துள்ளது பேலூர் மடம். தட்சிணேசுவரத்திலிருந்து ஸ்ரீராமகிருஷ்ண கங்கை புறப்பட்டு, பேலூர் மடத்தை அடைந்து அருள் பரப்பத் தொடங்குவதற்கு, சுமார் 15 வருடங்கள் ஆயின. ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளும் அன்னையின் ஆசிகளும், சுவாமிஜியின் விடா முயற்சியும் பேலூர் மடத்தின் அடித்தளமாக அமைந்தன என்றால் ஸ்ரீராமகிருஷ்ணரின் மற்ற சீடர்களுடைய ஒத்துழைப்பும், சுவாமிஜியின் மேலைநாட்டுச் சீடர்களுடைய பங்களிப்பும், அந்த அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்பட்ட கட்டிடங்களாக அமைந்தன.
புனித பூமி
பேலூர் மடத்திற்கான நிலமே ஒரு புனித பூமி. கங்கையின் மேற்குக் கரை காசிக்குச் சமம்” என்ற வழக்கின்படி கங்கையின் மேற்குக் கரையில் அமைந்துள்ளதான பேலூர் மடம் காசிக்குச் சமமாகிறது. அந்த இடம் வாழைத்தோட்டமாக இருந்த போதே அங்கு ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்வதாக அன்னை தமது தெய்வீகக் காட்சி ஒன்றில் கண்டிருந்தார். பின்னாளில் அவர் அதனைக் குறிப்பிட்டு, அங்கே குருதேவர் வாழ்வதை நான் கண்டேன். கங்கையின் மறுகரையிலுள்ள அந்த இடம் முன்பு வாழைத்தோட்டமாக இருந்தது. பேலூர் மடத்தில் அவர் வாழ்கிறார்” என்று கூறினார்.
இந்த இடம் சுவாமிஜியின் தீர்க்கதரிசனமாகவும் அமைந்தது. அப்போது மடம் வராக நகரில் கங்கையின் கிழக்குக் கரையில் இயங்கிக் கொண்டிருந்தது. மேலை நாடுகளுக்குச் செல்வதற்கு முன்பு ஒரு நாள் சுவாமிஜி மற்றத் துறவியருடன் கங்கைப் படித்துறையில் நின்று, பேலூரைச் சுட்டிக் காட்டி, நமது நிரந்தரமான மடம் கங்கையின் மறுகரையில் அதோ அந்த இடத்தில் அமையும் என்று எனக்குத்தோன்றுகிறது” என்றார். அந்த இடம் பேலூர்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் அஸ்தியை வைத்துப் பூஜிப்பதற்காகவும், ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு ஒரு நிலையான இடம் வேண்டும் என்பதற்காகவும் சுவாமிஜியின் மனம் கொண்ட தவிப்பு வார்த்தைகளால் விளக்க இயலாதது.
உணர்ச்சிகளைக் கொட்டி அவர் தமது கடிதங்களில் இதனைக் குறிப்பிடுவதைக் காண முடியும். 1897- மார்ச் அல்லது ஏப்ரலில் அவர் டார்ஜிலிங்கிலிருந்து கேத்ரி மன்னரைக் காண்பதற்காக கல்கத்தாவிற்கு வந்தார். அப்போது அன்னை கல்கத்தாவில் இருந்தார். சுவாமிஜி அவரிடம் சென்று, அம்மா, மடத்திற்கு ஒரு நல்ல இடம் அமைய வேண்டும் என்று இப்போது தான் நான் குருதேவருக்கு நூற்றெட்டு வில்வ இலைகளைச் சமர்ப்பித்தேன், என்றார். அதற்கு அன்னை, அது பலனளிக்காமல் போகாது , நீ விரும்பியது நடைபெற்றே தீரும்” என்று ஆசீர்வதித்தார்.
காசிப் பூர், பானி ஹாட்டி, கொன்னகர், தட்சிணேசுவரம் என்று பல இடங்களில் நிலங்கள் விலை பேசப் பட்டன. ஆனால் ஏதோ காரணங்களால் அந்த முயற்சிகள் பலனளிக்க வில்லை. கடைசியில் பேலூரில் சுமார் 10 ஏக்கர் நிலம் வாங்கப் பட்டது. இதற்காக சுவாமிஜியின் மேலை நாட்டு சிஷ்யையான மிஸ் முல்லர் ஏற்கனவே ரூ. 40,000 நன்கொடை அளித்திருந்தார். 1898 பிப்ரவரி 25-ஆம் நாள் நிலம் கையகப் படுத்தப் பட்டது.
சீரமைப்புப் பணிகள்.
பேலூர்ப் பகுதி படகுகளைக் கங்கைக் கரையில் நிறுத்துவதற்கான இடமாகப் பயன் பட்டு வந்தது. நிலத்தின் வடகிழக்கு மூலையில் இரண்டு சிறிய கட்டிடங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று மாடிக் கட்டிடம். அவை செப்பனிட்டுச் சீரமைத்தால் மட்டுமே பயன்படுத்தத் தக்க நிலையில் இருந்தன. அவற்றின் அருகே பல மரங்கள் நின்றன. அவற்றுள் ஒன்று மாமரம். தெற்கு மூலையில் மூன்று அசோக மரங்கள் இருந்தன. இவை தவிர அந்த நிலத்தில் குளங்கள், தென்னை, பனை, பேரீச்சை, ஜாம் ரூல், பலா, மா, வாழை போன்ற மரங்கள் இருந்தன. நிலம் குண்டும் குழியும்மேடும் பள்ளமுமாக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்தச் சீரமைப்புப் பணிகளுக்காகவும் மிஸ் முல்லர் ரூ.4, 000 அளித்திருந்தார். சீரமைப்புப் பணிகளின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் விஞ்ஞானானந்தர். அவருக்கு அத்வைதானந்தர் உதவி செய்தார்.
-
அன்னையின் ஆசிகள்
அன்னை ஸ்ரீசாரதாதேவியை சங்க ஜனனி”( ராமகிருஷ்ண இயக்கத்தைத் தோற்றுவித்தவள்) என்று சுவாமிஜி அழைத்தது பற்றி ஏற்கனவே கண்டோம். ராமகிருஷ்ண சங்கத்தின் தோற்றம் முதல் அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் அன்னையின் அருள் துணையுடனேயே நடைபெற்றது. சுவாமிஜி உட்பட துறவியர் அதன் செய்ல்படு தலைவர்களாக இருந்த போதிலும் அன்னையே அதன் உண்மைத் தலைவியாகத் திகழ்ந்தார். முக்கியமான முடிவுகள் அனைத்தையும் அவர்கள் அன்னையின் அனுமதியுடனேயே எடுத்தனர். உங்கள் பெயரில் உலகைத் துறந்த என் பிள்ளைகள் தலை சாய்க்க ஓர் இடம் வேண்டும்” என்று ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கண்ணிருடன் பிரார்ததனை செய்தவர் அன்னை. இப்போது அவர்களுக்கென்று நிலையான இடம் அமையும்போது அவரை விட மகிழ்பவர் வேறு யார் இருக்க முடியும்?
புனிதப்பேரருளின் வடிவான அன்னையின் திருப் பாதங்கள் பேலூர் மடத்தில் பதிய வேண்டும் என்று சுவாமிஜியும் மற்ற துறவியரும் விரும்பினார்கள். 1898 ஏப்ரல் மாத வாக்கில் அன்னை அந்த இடத்திற்கு முதன் முதைலாக அழைத்துச்செல்லப் பட்டார். அவருடன் நிவேதிதை, சாராபுல், மெக்லவுட் ஆகியோரும் வந்தனர். மடத்துத் துறவியரும் பிரம்மசாரிகளும் அன்னையைப் பணிந்து வரவேற்றனர். அன்னையின் மகிழ்ச்சி கரை கடந்ததாக இருந்தது. இப்போது என் பிள்ளைகள் தலை சாய்க்க ஓர் இடம் கிடைத்தது. இறுதியில் குருதேவர் அவர்களுக்கு அருள் புரிந்து விட்டார்” என்று குதூகலத்துடன் கூறினார்.
சுவாமிஜி அன்னையுடன் சென்று மடத்தைச்சுற்றிக்காண்பித்து, அம்மா, இது உங்கள் இடம். எல்லா இடத்தையும் பாருங்கள்” என்று கூறினார். அதன் பிறகு சீரமைப்புப் பணிகளும் புதிய கட்டிடப் பணிகளும் தொடங்கின. பூஜையறை, தியான அறை போன்றவை புதிதாகக் கட்டப்பட்டன. இதற்காக மிசஸ் சாரா நிதியுதவி அளித்தார்.
அதே ஆண்டு காளி பூஜை நாளில் (நவம்பர் 12) அன்னை அந்த இடத்தில் குருதேவரைப் பூஜித்து அங்கே அவரது பேரருளை நிறைத்தார். தாம் பூஜித்துவந்த குருதேவரின் படத்தைக்கொண்டு வந்து, தம் கையாலேயே நிலத்தின் ஒரு பகுதியைச் சுத்தம் செய்து, அங்கே அந்தப் படத்தை வைத்து குருதேவரைப் பூஜித்தார். ஒரு மாதத்தில் சீரமைப்புப் பணி ஒருவாறு நிறைவுற்றது.மேலும் தாமதிக்காமல் ஸ்ரீகுரு தேவரை ப் புதிய மடத்தில் எழுந்தருள ச்செய்ய எண்ணினார் சுவாமிஜி
மடத்தை நிறுவுகிறார்-
1898 டிசம்பர் 9, வெள்ளி, அன்று சுவாமிஜியின் வாழ்விலும் ராமகிருஷ்ண மடத்தின் வரலாற்றிலும் ஒரு பொன்னாள்! அன்றுதான் சுவாமிஜி பேலூர் மடத்தில் குருதேவரை எழுந்தருளச் செய்தார். சகோதரத் துறவிகள் மற்றும் சீடர்களின் உதவியுடன் எல்லா கிரியைகளையும் அவரே செய்தார். காலையில் கங்கையில் குளித்து, புதிய காவியுடை உடுத்தி, பூஜையறைக்குச் சென்று பூஜாரியின் இருக்கையில் தியானத்தில் அமர்ந்தார். பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணரின் புனிதச் சாம்பல் இருந்த கலசத்தை மிகுந்த பக்தியுடன் பூக்களால் வழிபட்டார். அதன் பிறகு கங்கைக்கரை வழியாக ஊர்வலம் புறப்பட்டது. ஒரு செப்புப்பெட்டியில் வைக்கப் பட்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் புனித அஸ்தியை சுவாமிஜி தாமே தமது வலது தோளில் தாங்கியபடி முன்னால் சென்றார். மணிகள் மற்றும் சங்கின் நாதம் எங்கும் நிறைந்தது..
போகும் வழியில் சுவாமிஜி சரத் சந்திரரிடம், ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு முறை என்னிடம், நீ என்னை உன் தோளில் தூக்கிக்கொண்டு போய் எங்கு வைத்தாலும், அது மரத்தடியாக இருந்தாலும் சரி, குடிசையாக இருந்தாலும் சரி, அங்கே நான் தங்கியிருப்பேன்” என்று கூறினார். அதனால் தான் புதிய மடத்திற்கு நானே அவரது அஸ்தியைச் சுமந்து செல்கிறேன். பலரது நன்மைக்காக அவர் அந்த இடத்தில் நெடுங்காலம் வாழப்போகிறார். இது நிச்சயம்” உண்டு உணர்ச்சி பொங்கக் கூறினார்.
சரத்துடன் பலவிஷயங்கள்பேசிக்கொண்டே சென்று சுவாமிஜி இறுதியாக, நமது மடம் மதப் பிரிவுகள் அனைத்தையும், கொள்கைகள் அனைத்தையும் சமரசப்படுத்தி நிற்கும்.ஸ்ரீராமகிருஷ்ணர் பரந்த கொள்கைகளைக்கொண்டிருந்தது போலவே இந்த மடமும் அத்தகைய பரந்த கொள்கையின் மையமாக விளங்கும். இங்கிருந்து எழுந்து பரவும் சமரசப்பேரொளி வெள்ளம் உலகனைத்தையும் நிறைக்கும்” என்றார்.
எல்லோரும் மடத்தை அடைந்தார்கள். சுவாமிஜி தமது தோளில் இருந்து அஸ்திப் பெட்டியை இறக்கி தரை மீது விரிக்கப் பட்டிருந்த விரிப்பில் வைத்து , அதன் முன் நெற்றி தரையில் படும்படி விழுந்து வணங்கினார். மற்றவர்களும் அது போலவே வணங்கினார்கள். பிறகு சுவாமிஜி அமர்ந்து ஸ்ரீராமகிருஷ்ண பூஜை செய்தார். பூஜையை முடித்துவிட்டு ஹோமம் செய்தார். சகோதரச் சீடர்களின் துணையோடு தாமே பாயாசம் செய்து ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ப் படைத்தார்.
இந்தச் சடங்குகள் முடிந்த பிறகு சுவாமிஜி அங்குக் கூடியிருந்தவர்களைப் பார்த்து, இந்த யுகத்தின் மகத்தான அவதார புருஷரான ஸ்ரீராமகிருஷ்ணர் பலரது நன்மைக்காகவும் பலரது மகிழ்ச்சிக்காகவும் இன்றிலிருந்து இந்தப் புனிதமான தீர்த்தத்தலத்தில் பல காலம் வாழ்ந்து, இந்த இடத்தை இணையற்றதொரு சர்வசமய சமரச மையமாக ஆக்கும் படி இதய பூர்வமாக ப் பிரார்த்தனை செய்யுங்கள். என்றார். எல்லோரும் அவர் கூறியபடியே கைகளைக் குவித்துப் பிரார்த்தனை செய்தனர். அத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பின்னர் அனைவரும் நீலாம்பர் மடத்தை அடைந்தனர். நிகழ்ச்சி தடையின்றி சிறப்பாக நிறைவுற்றதால் எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். பன்னிரண்டு வருடங்களாகச் சுமந்த பாரம் சுவாமிஜியின் மனத்திலிருந்து இறங்கியது. ஆழ்ந்ததோர் அமைதிப் பேருணர்வுடன் அவர் கூறினார், ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுளத்தால் அவரது தர்ம ஷேத்திரம் நிறுவப்பட்டு விட்டது. பன்னிரண்டு ஆண்டுகளாக இருந்த என் கவலை தீர்ந்தது.
இவ்வாறு ஒரு புதிய தீர்த்தத் தலம் உருவாயிற்று. அது பற்றி பின்னாளில் சிவானந்தர் கூறினார், இந்த இடம் உண்மையிலேயே வைகுண்டம் தான்.ஸ்ரீகுருதேவர் இங்கே நம்முடன் இருக்கிறார், குருதேவரின் சீடர்கள் இங்கே நுண்ணுடம்பில் வாழ்கிறார்கள். சிலவேளைகளில் அவர் களைக் காணவும் முடிகிறது. இது ஒரு தீர்த்தத் தலம். இதன் மண் துகள் ஒவ்வொன்றும் புனிதமானது.
காசிக்குச் செல்வது பற்றி ஒரு முறை பேச்சு வந்தபோது பக்தைகளிடம் அன்னை கூறினார், தட்சிணேசுவரத்திற்கோ பேலூர் மடத்திற்கோ போவதால் காசிக்குச்செல்கின்ற அதே புண்ணியம் கிடைக்கும். ஆனால் அத்தகைய நம்பிக்கை வேண்டும். காசியில் இருப்பவர் தான் தட்சிணேசுவரத்திலும் பேலூர் மடத்திலும் இருக்கிறார்.
பேலூர் மடம் இப்படித் தீர்த்தத் தலமாக அமைந்ததுடன் மட்டும் நின்றுவிடவில்லை. புதியதொரு துறவியர் பரம்பரைக்கு அது ஒரு மையமாகத் திகழ்கிறது. துறவு லட்சியம் வேதகாலத்திலிருந்தே வருகிறது. ஆனால் காலங்களுக்கு ஏற்ப அதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.யுக ஆச்சாரியர்கள் அந்த மாற்றங்களைச்செய்கிறார்கள். அடிப்படை நிபந்தனைகளிலிருந்து சமுதாயத்தின் அன்றைய சூழ்நிலை மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவர்கள் இந்த மாற்றங்களைச் செய்கிறார்கள். வேத காலம், உபநிஷத காலம், புராண காலம், பின்னாளில் புத்தர், சங்கரர், ராமானந்தர், மதுசூதன சரஸ்வதி போன்ற ஆச்சாரியர்களின் காலம் இவற்றிலெல்லாம் துறவு நெறியில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை வரலாறு காட்டுகிறது.
வேத கால துறவு வாழ்க்கையில் கடின தவங்கள், உடம்பை வருத்துகின்ற பயிற்சிகள், போன்றவை முக்கிய இடம் பெற்றன. உபநிஷத காலத்தில், கடின தவங்கள் மட்டும் ஒருவனுக்கு முக்தியைத் தர முடியுமா என்ற கேள்வி எழுப்பப் பட்டது. முக்திக்கு ஆன்மீக ஞானமும் அவசியம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
இதிகாச, புராண காலங்களில், துறவியர் சேர்ந்து வாழ தலைப்படுவதைக் காண்கிறோம். மகாவீரர் முதன் முதலில் துறவு நெறியை இயக்கரீதியாகக்கொண்டு வந்தார். பிறகு புத்தர் தோன்றி துறவு நெறியில் பல முக்கிய அம்சங்களைச் சேர்த்தார். குறிப்பாக 5 கருத்துக்களைக் கூறலாம்.
1- துறவு என்றால் வெறும் கடின தவங்களும் பயற்சிகளும் மட்டும் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்ற கருத்தைக் கொண்டு வந்தது.
2- துறவியரை இயக்கரீதியாகச் செயல்பட வைத்தது.
3- துறவியர் இயக்கத்தை மதத்தின் மையமாக்கியது.
4- துறவியர் இயக்கத்தைக் கல்வி மையமாகக்கியது.
5- உலக மக்களின் துயர் துடைக்கும் பணியில் துறவியரை ஈடுபடச்செய்தது.
புத்தரின் கருத்துக்கள் இந்த மதத்தில் ஊடுருவிசிறிது காலம் பிடித்தது. அதனை கி.பி 8-ஆம் நூற்றாண்டில் செய்தவர் ஸ்ரீசங்கரர். இந்து மதத்தில் முதன்முறையாக ஒரு துறவியர் இயக்கத்தை ஆரம்பித்தார் அவர். துறவியரைப் பத்து பிரிவினராகப் பிரித்து ” தச நாமி சம்பிரதாயம்” என்ற மரபை உருவாக்கினார்.
ஆதி சங்கரரின் பாதையில் ஞானத்திற்கு மட்டுமே இடம் இருந்தது. துறவுப்பாதையில் பக்திக்கும் இடத்தை அளித்தார்ராமானந்தர். 12-ஆம் நூற்றாண்டில் அவர் வைராகிகள் என்ற வைணவத் துறவிகளை உருவாக்கினார். ஜாதி பேதமின்றி துறவு நெறியை மகாவீரரும் புத்தரும் முதலில் கொண்டு வந்தாலும், இந்து மதத்தில் அதனை அனைவருக்கும் திறந்த பெருமை ராமானந்தரையே சாரும்.
துறவிகள் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தைக்கொண்டு வந்தவர் 16- ஆம்நூற்றாண்டில் வாழ்ந்த மது சூதன சரஸ்வதி. இவ்வாறு உருவானவர்களே நாகா துறவியர். இவர்கள் பிராமண மற்றும் ஷத்திரிய ஆற்றல்களின் சங்கமமாகத் திகழ்ந்தனர். இவர்கள் 3 பிரிவினராகப் பிரிக்கப் பட்டனர். ஒவ்வொரு பிரிவும் ”அக்காடா” என்று வழங்கப் பட்டது.
தொடர்ந்த 19- ஆம் நூற்றாண்டு வரை துறவு நெறியில் பெரிய மாற்றங்கள் எதவும் இல்லை, மாறாக துறவு நெறிக்குப்பெரிய சவால்கள் தான் 19- ஆம் நூற்றாண்டில் எழுந்தன. விஞ்ஞானம், மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் ஆதிக்கம் போன்ற பல காரணங்களால் துறவு நெறி இழிவாகப் பார்க்கப் பட்டது. துறவி சமுதாயத்தின் ஒட்டுண்ணியாகப் பார்க்கப் பட்டான்.அந்த நேரத்தில் தான் சுவாமி விவேகானந்தர் பாரதத் திருநாட்டின் துறவு வானில் ஒரு விடி வெள்ளியாகத்தோன்றினார். சமுதாயக் கடமைகளை வலியுறுத்தி இந்திய வரலாற்றில் எழுந்த முதல் துறவியர் இயக்கம் தோன்றியது.
ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறப்பு எல்லா நிலைகளிலும் ஒரு புதிய யுகத்தின் ஆரம்பமாக அமைந்தது. லட்சியங்கள், வாழ்க்கைமுறை, சூழ்நிலை, மனித உறவுகள், என்று அனைத்திலும் இந்தக் காலம் இதற்கு முந்தைய காலங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.பண்டைய செயல்முறைகள் இந்தக் காலத்திற்கு ஏற்றதாக அமைய முடியாது. எனவே இல்லற நெறிக்கும், துறவு நெறிக்கும் அவர் புதிய பரிமாணங்கள் வகுத்துத் தந்தார். அவற்றை அடிப்படையாகக் கொண்டு சுவாமிஜி புதியதொரு துறவியர் பரம்பரையைஉருவாக்கினார். 1897- மார்ச்சில் டார்ஜிலிங்கில் இருந்த போது சுவாமிஜி ஒரு முறை சுவாமி துரியானந்தரிடம், துறவுப் பாதையில் நான் ஒரு புரட்சியைக் கொண்டு வருவேன்” என்றார். அந்தப் புரட்சியைப் பற்றி சுருக்கமாகச் சொல்வதானால் துறவு நெறி சமுதாயத்துடன் இணைக்கப் பட்டது. துறவியர் சமுதாயத்துடன் இணைக்கப் பட்டனர்.
ராமகிருஷ்ண துறவியர்
ஸ்ரீராமகிருஷ்ணர் தோதாபுரி என்ற துறவியிடமிருந்து சன்னியாசம் பெற்றவர். புரி என்பது ஆதிசங்கரர் தோற்றுவித்த பத்துப் பிரிவினருள் ஒரு பிரிவினரின் பட்ப்பெயர் ஆகும். மேலும் வராக நகர் மடத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் இளம் பக்தர்கள் துறவு நெறியைத்தழுவியபோது, அபேதானந்தர் இமயமலை மடங்களிலிருந்து கொண்டு வந்த பரம்பரை சன்னியாச மந்திரங்களை ஓதியே துறவிகள் ஆயினர். எனவே மரபுப்படி, ராமகிருஷ்ண மடத்துத் துறவியர் புரி பரம்பரையைச்சேர்ந்தவர்கள்.ஆனால் வாழ்க்கை முறையாலும் செயல்பாடுகளாலும் ராமகிருஷ்ண துறவு நெறியை ஒரு தனித்துவத்துடன் அமைத்தார் விவேகானந்தர்.
துறவு நெறியின் அடிப்படையாக மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. அவை யஜனம்,(வேள்வி), விரஜா (புனிதம்), ப்ரவ்ரஜனம்(பற்றின்மை)
1- யஜனம்-
பண்டைய ரிஷிகள் வேள்விகளின் மூலம் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டனர். இயற்க சக்திகள் ஒவ்வொன்றும் ஒரு தேவதையாக உருவகிக்கப் பட்டது.வேள்விகளில் நெய் முதலான பதார்த்தங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் அவர்களுக்கு நைவேத்தியம் அளிப்பதாகவும், அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் நமக்கு மழை முதலியவற்றைத் தருவதாகவும் கருதப் பட்டது. இயற்கையும் மனிதனும் இயைபுடன் வாழவேண்டும் என்பது இதன் அடிப்படைக் கருத்தாக இருந்தது.
ஆனால் காலப்போக்கில் மனிதனால் இத்தகைய வேள்விகளைச்செய்ய இயலவில்லை. காலத்தின்தேவைகளுக்கு ஏற்ப புதிய கருத்துக்களும் தோன்றின. நெய் முதலிய பொருட்களை வேள்விகளில் சொரிவதற்குப் பதிலாக வாழ்க்கையையே ஒரு வேள்வியாக வாழ வேண்டும். என்ற கருத்து உருவாயிற்று. இதனை பகவத் கீதை சிறப்பாக ஆராய்கிறது.
அவ்வாறு, ஒரு துறவி தனது வாழ்க்கையையே ஒரு வேள்வியாக, ஒரு வழிபாடாகக் கருத வேண்டும் என்றார் சுவாமிஜி. எப்படி? சேவை- தர்மத்தின் மூலம். மனித குலத்திற்குச்சேவை செய்வதே ஒரு சலுகை தான். ஏனெனில் அது இறைவழிபாடு. நம் கண்முன் காணும் எல்லா மனிதர்களிலும் கடவுள் இருக்கிறார். வாழும் கடவுளுக்குத் தொண்டு செய்யுங்கள்! குருடன், நொண்டி, ஏழை, பலவீனன், முரடன் என்று இவர்கள் மூலமாகவெல்லாம் கடவுள் உங்களிடம் வருகிறார். அவரை வழிபட என்னவொரு மகோன்னதமான வாய்ப்பு! ராமகிருஷ்ண மிஷனின் சேவைப் பணிகள் அனைத்தும் இந்த அடிப்படையிலேயே இயங்குகின்றன. சேவையால் பிறர் நன்மை பெறுகிறார்கள். அதனை ஒரு வழிபாடாகச் செய்வதால், சேவை செய்பவரும் நன்மை பெறுகிறார். ராமகிருஷ்ண துறவி, இவ்வாறு தன் வாழ்க்கையிலேயே ஒரு சேவையாக, ஒரு வழிபாடாக அதை்துக் கொள்ளுமாறு எதிர்பார்க்கப் படுகிறார். வேதக் கருத்தாகிய ”யஜனம்” என்பதை இவ்வாறு காலத்திற்கு ஏற்ற மாற்றங்களுடன் துறவியின் வாழ்க்கையுடன் இணைத்தார் சுவாமிஜி.
2- விரஜா-
முற்றிலும் புனிதமான வாழ்க்கை ஒரு துறவியின் அடுத்த முக்கிய அடிப்படைப் பண்பாகும். இதனைக் குறிப்பதற்கு விரஜா என்ற ஹோமம் வளர்க்கப் பட்டது. அதன் முன்னிலையில் சில உறுதிமொழிகளை ஏற்று ஒருவன் துறவியாகிறான். சுவாமிஜி இந்தக் கருத்தை அப்படியே, ஏற்றுக்கொண்டார். இந்தப் புனிதமான வாழ்க்கை வாழ்வதற்கான நிபந்தனைகளாக நமது சாஸ்திரங்கள் ஒரு துறவி செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்பதற்கு உணவு, உடை, பழக்க வழக்கம் என்று ஒவ்வொன்றிலும், ஒரு நீண்ட பட்டியலைத் தருகின்றன.ஆனால் சிலவேளைகளில் இதைச்செய்ய வேண்டும். அதைச்செய்யக் கூடாது” என்றெல்லாம் கவனம் வைப்பதில் செய்வதும் செய்யாததுமே நோக்கங்கள் ஆகிவிடுகின்றன. உண்மையான நோக்கம் மனத்திலேயே இல்லாமல் போய் விடுகிறது.ஸ்ரீராமகிருஷ்ணர் இந்தப் பட்டியலைச்சுருக்கி, புனித வாழ்க்கையின் அடிப்படையை ஒரு சூத்திரம் போல் தந்துள்ளார். அதுவே காமினீ- காஞ்சன தியாகம். அதாவது காமத்தையும், பணத்தாசையையும் துறப்பது. இந்த இரண்டு அடிப்படை ஆசைகளிலிருந்தே மற்ற அனைத்து ஆசைகளும் பிரச்சனைகளும் உருவாகின்றன. இவை இரண்டையும் துறப்பது எல்லா ஆசைகளையும் வேருடன் களைவதற்கு ஒப்பாகிறது. எனவே காமினீ- காஞ்சன தியாகம்” என்பது ராமகிருஷ்ண துறவியின் முக்கிய விரதம் ஆகிறது.
3- ப்ரவ்ரஜனம்-
ஒரு துறவி எதிலும் பற்றில்லாதவனாக இருக்கவேண்டும். ஓரிடத்தில் தங்கியிருந்தால் அந்த இடத்துடனும் பொருட்களுடனும் பற்று ஏற்பட்டு விடும் என்பதற்காக எந்த இடத்திலும் மூன்று நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது என்பது துறவு நியதி.ஆனால் துறவியோ, இல்லறத்தானோ- மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் தான் பிறந்த நமுதாயத்திற்கென்று ஆற்ற வேண்டிய கடமை ஒன்று உண்டு. உணவு, உடை, அறிவு என்ற தனது வாழ்க்கைக்குத்தேவையான அனைத்தையும் மனிதன் சமுதாயத்திலிருந்து பெறுகிறான். அதனை அவன் திருப்பிக் கொடுத்தாக வேண்டும். அப்படி திருப்பிக்கொடுக்காமல் வாழ்வதால் தான் மனிதன் பந்தங்களுக்கும் பற்றுகளுக்கும் உள்ளாகிறான் என்றும் அப்படி வாழ்பவனைத் ” திருடன்” என்றும் கீதை கூறுகிறது. அலைந்து திரிகின்ற துறவியின் வாழ்க்கை மூலம் சமுதாயத்திற்கும் நன்மை கிடைத்தது. அவனது தூய வாழ்க்கையும் உபதேசங்களும் மக்களை நல்வழிப்படுத்தின. இந்த முறையில் அவன் தான் சமுதாயத்திலிருந்து பெற்றதைத் திருப்பிக்கொடுத்தான்.
சுவாமிஜி காலத்திற்கு ஏற்ப இதனை மாற்றி அமைத்தார். அலைந்து திரிவதை விட்டு, ஓரிடத்திலேயே தங்கி சுயநலமற்ற பணிகளில் ஈடுபடுவது சொந்த ஆன்மீக முன்னேற்றத்திற்கும், அது போலவே பிறரது நன்மைக்கும் காரணமாக அமையும். இதற்காக சுவாமிஜி காட்டிய பாதையே கர்மயோகம். இது சுவாமி விவேகானந்தரின் மாபெரும் கொடைகளுள் ஒன்று ஆகும்.
இந்த கர்மயோகத்தின் மூலம் பல புதிய அம்சங்கள் ஆன்மீக வாழ்வில் சேர்க்கப் பட்டன. இவை துறவிக்கும் அதுபோலவே இல்லறத்தானுக்கும் மாபெரும் வரப்பிரசாதமாக அமைந்தவை.
1- கர்ம யோகத்தின் வேலை-
அது எந்த வேலையாயினும்- ஒரு வழிபாடாகச்செய்யப் படுகிறது. இதன் மூலம் வேலை ஒரு வழிபாட்டு நிலைக்கு உயர்த்தப் பட்டது. எனவே நாம் எந்த வேலையைச்செய்தாலும் அதனை ஒரு வழிபாடாக, இறைவனுக்குச் சமர்ப்பணமாகச்செய்தால் அதன் மூலமே இறைவனை அடையலாம்.
2- சுவாமிஜி இந்தப் புதிய பாதையைத் தரும்வரை வேலை செய்வது என்பதைத் துறவியர் இழிவான கண்யோட்டத்தில் பார்த்தனர். ஆனால் உண்மையாகவே உயர் நிலையை அடையாதவர்களும் வேலை செய்வதற்கெல்லாம் அப்பாற் பட்டவர்களாகத் தங்களைக் கருதியது, அவர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்தது. அவர்கள் ஆன்மீக முன்னேற்றத்தை இழந்தனர். சமுதாயம் அவர்கள் மீது நம்பிக்கை இழந்தது. சுவாமிஜி தந்த புதிய பாதை துறவியர் சுய மரியாதையுடன் சமுதாயத்தில் வாழ வகை செய்தது. ஒவ்வொருவரும் உழைத்து உண்பதற்கு வகை செய்தது.
3- சமுதாயத்திற்காக உழைப்பதால் துறவி நமுதாயத்துடன் ஒரு நல்ல உறவை அமைத்துக்கொள்ள இந்த கர்மயோகம் உதவி செய்தது.
4- இவை மட்டுமின்றி, ஜாதி, மதம், இனம், மொழி , நாடு என்ற எந்தப் பாகுபாடும் இனறி அனைவரையும் சமநோக்குடன் ஏற்றுக் கொள்ளுதல் இந்தப் புதிய துறவுப் பாதையில் ஒரு முக்கிய அம்சம் ஆயிற்று.
5- இவ்வாறு பரம்பரை துறவு நெறிக்கு, காலத்தின் தேவைக்கு ஏற்ப ஒரு புதிய வடிவம் கொடுத்தார் சுவாமிஜி, என்கிறார் துரியானந்தர். இப்படியொரு துறவியர் பரம்பரையின் மையமாகத் திகழ்ந்தது பேலூர் மடம்.
6- பேலூர் மடத்தின் எதிர்காலம் பற்றி, சுவாமிஜி அதனை நிறுவிய நாளில் என்ன நினைத்தாரோ அதனைத் தமது சீடரிடம் சொன்னார். இப்போது என் மனத்தில் தோன்றும் காட்சி என்ன தெரியுமா? இந்த மடம் கல்விக்கும் ஆன்மீகத்திற்கும் ஒரு மையமாக அமையும். அறவழி நிற்கின்ற இல்லறத்தார்கள் இதைச் சுற்றி வீடுகளைக்கட்டி க் கொண்டு வாழ்வார்கள். நடுவே துறவிகள் வாழ்வார்கள். மடத்திற்குத்தெற்குப் பகுதியில் ஆங்கிலேய மற்றும் அமெரிக்கச் சீடர்கள் வாழ்வதற்கான வீடுகள் கட்டப்படும். இந்தத் திட்டம் எப்படி இருக்கிறது?
அற்புதமான ”கற்பனை” என்றார் சீடர். உடனே சுவாமிஜி, கற்பனையா? நம்பிக்கையற்றவனே! காலப்போக்கில் இவைஎல்லாம் நடக்கும். நான் அதற்கான அடிக்கல்லை மட்டுமே அமைக்கிறேன். இதன்பிறகுஎன்னென்ன நடக்கப்போகிறது தெரியுமா! நான் சிலவற்றைச் செய்வேன். ஆனால் உங்கள் உள்ளத்தில் பல கருத்துக்களை விதைத்துச்செல்வேன் நீங்கள் அவற்றை எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
ஸ்ரீராமகிருஷ்ணரை ஒரு நிரந்தர இடத்தில் நிறுவிய சுவாமிஜி தமது வாழ்க்கைப் பணிகளுள் ஒன்று நிறைவுற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரை மையமாகக்கொண்ட இந்த மடம் காலப்போக்கில் எப்படி செயல்படப்போகிறது, என்னென்ன அரும் காரியங்களைச் சாதிக்கப்போகிறது” என்பதையெல்லாம் அவர் உணர்ந்தே இருந்தார். அதனை அவ்வப்போது தெரிவிக்கவும் செய்தார். ஆனால் யுகத்தின் ஆச்சாரியராக, யுக நாயகராக , உலக குருவாகத்தோன்றியவர் சுவாமிஜி. தாம் கூறியவை அப்படியே நடைபெற வேண்டும் என்ற எண்ணம் ஒரு போதும் அவருக்கு இருக்கவில்லை. காலப்போக்கில் சமுதாயத்தில் எழுகின்ற மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப செயல் முறையில் தமக்குப் பின்னால் வருபவர்களை் தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பையும் அவர் அளித்தார்.
பேலூர் மடம் நிறுவப்பட்டு, ஸ்ரீராமகிருஷ்ணர் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு விட்டாலும் 1899 ஜனவரி வரை மடம் பழைய இடத்தில், அதாவது நீலாம்பார் முகர்ஜியின் தோட்ட வீட்டிலும் தொடர்ந்து இயங்கியது.பேலூர் மடம் நிறுவப்பட்ட நாளிலிருந்தே சில துறவிகள் புதிய மடத்தில் வாழத் தொடங்கினார்கள். படிப்படியாக எல்லாம் புதிய மடத்தில் இயங்கத் தொடங்கின.
நீயே சரணம் ஸ்ரீராமகிருஷ்ணா
உண்மையிலேயே அரும்பெரும் காரியங்களைச் சாதித் தபலரின் வாழ்க்கையில் அவர்கள் தங்கள் இறுதிக் கட்டத்தில் ஓர் உண்மையை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். தாங்கள் எதையும் சாதிக்க வில்லை என்ற உண்மைதான் அது. உண்மையில் எல்லாம் நிகழ்ந்தன. தாங்கள் ஒரு கருவியாக மட்டுமே இருந்தோம் என்பது அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. தங்கள் மூலம் அதனைச் சாதித்த இறைவனின் பெருமையை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இறைவா, நீயே சரணம்” என்று அவரைச் சரணடைகிறார்கள். இத்தகையதொரு நிலைமை சுவாமிஜியின் இந்த நாட்களில் காண்கிறோம். அவர் இந்த நாட்களில் எழுதிய இரண்டு பாடல்களிலிருந்து இதனை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இரண்டும் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி அவர் எழுதியவை.
முதற்பாடல் ” ஆசண்டால” என்று தொடங்குவது ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கைத் தத்துவத்தை இதில் அப்படியே பிழிந்து தந்துள்ளார் சுவாமிஜி. அவரது பெருமைகளைக் கூறி, அத்தகைய குருவைச் சரணடைகிறேன்” என்று அந்தப் பாடல்களை முடிவடைகின்றன.
இரண்டாவது பாடல் ”ஓம் ஹ்ரீம் ரிதம்” என்று தொடங்கும் பாடல். இந்தப் பாடலுக்கு ஒரு பெருமை உண்டு. இந்தப் பாடல், ஒரு பிரார்த்தனையாக, தோத்திரமாக மட்டுமின்றி ஒரு மந்திரமாகவும் செயல்படுகிறது. ஏனெனில் இந்தப் பாடலில் ஸ்ரீராமகிருஷ்ண மந்திரத்தை அடக்கியுள்ளார் சுவாமிஜி. ஒவ்வொரு வரிகளுடைய முதல் எழுத்தையும் சேர்த்துப் படித்தால் ”ஓம் நமோ பகவதே ராமக்ருஷ்ணாய“ என்று வரும் எனவே இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் மந்திர ஜபத்தின் பலனும் கிடைக்கிறது.
இந்த பாடலை எழுதி முடித்த பிறகு ஒரு நாள் சுவாமிஜி சம்ஸ்கிருத வல்லுனரும் தமது சீடருமான சரத் சந்திரரிடம் பேசிக்கொண்டிருந்தார். அது பற்றி சரத் எழுதுகிறார். இன்று கலைமகள் சுவாமிஜியின் நாவில் நடம்புரிவது போல் தோன்றியது. சீடரிடம் என்னிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிக இனிமையான சம்ஸ்கிருதத்தில் பேசினார். பிறகு சுவாமிஜி அவரிடம் அந்தப் பாடலைக்கொடுத்து, இதோ பார், எனது சிந்தனை, கருத்தில் மூழ்கியிருந்ததால் இலக்கணப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். இவற்றைக்கொஞ்சம் திருத்து” என்றார். அதற்கு சீடர், அப்படியே பிழைகள் இருந்தாலும் அவை பிழைகள் அல்ல, அது ஆர்ஷ் ப்ரயோகம், அறிஞர்களுக்கு மொழியில் தரப் படும் அனுமதி என்றார்.உடனே சுவாமிஜி, நீ அப்படி ச் சொல்லலாம், மற்றவர்களும் இதை ஒப்புக் கொள்ள வேண்டுமென்று என்ன கட்டாயம் இருக்கிறது? என்று கூறினார். ஆனாலும் ஏனோ சுவாமிஜியின் எழுத்தைத் திருத்த சரத் சந்திரர் முன்வரவில்லை.
இந்தப் பாடல் நான்கு பத்திகள் கொண்டது. ஒவ்வொரு பத்தியிலும் கடைசி வரியை, ஆகையால் , எளியவரின் புகலான ஸ்ரீராமகிருஷ்ணா நீயே எனது சரணம்” என்று அமைத்துள்ளார் சுவாமிஜி.
ஸ்ரீராமகிருஷ்ணர் கோயில்
..............................
பேலூர் மடத்தில் அமைய வேண்டிய ஸ்ரீராமகிருஷ்ணர் கோயில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மனத்தில் கண்டார் சுவாமிஜி. அந்தக்கோயிலுக்கான திட்டத்தையும் வகுத்தார். அது விஷயமாக அண்டானந்தரிடமும் விஞ்ஞானானந்தரிடமும் பேசினார். சுவாமிஜி. வடமேற்கு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது விஞ்ஞானந்தரை( ஹரி பிரசன்னர்) உடன் அழைத்துச்சென்றதை நாம் ஏற்கனவே கண்டோம். அங்குள்ள பல கோயில்களை ஹரி பிரசன்னருக்குக் காட்டி, பல்வேறு கட்டிடக் கலைகளின் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளச்செய்தார். தாம் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் சென்றபோது கண்ட கோயில்கள் மசூதிகள், அரண்மனைகள் , கண்காட்சி சாலைகள், கலைக் கூடங்கள், என்று அனைத்தின் சிறப்பு அம்சங்களையும் கிரகித்திருந்தார்.
ஒரு நாள் விஞ்ஞானானந்தரை அழைத்து ஸ்ரீராமகிருஷ்ணர் கோயில் பற்றிய தமது எண்ணங்களைத் தெரிவித்தார். அந்தக்கோயில் எங்கே அமைய வேண்டும் என்பது பற்றி கூறினார். பிறகு விஞ்ஞானானந்தரிடம் தமது கருத்துக்களுக்கு ஏற்ப, கோயிலுக்கான வரைபடம் ஒன்றை வரையுமாறு கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் எல்லா மதங்களுக்கும், எண்ணற்ற கருத்துக்களுக்கும் இருப்பிடமாக திகழ்ந்தார். அவருக்கு அமைய இருக்கின்ற கோயிலும் எல்லா கட்டிடக் கலை அழகுகளின் சங்கமமாகத் திகழ வேண்டும். கிரேக்க, ரோமானிய, இந்து, இஸ்லாமியக் கலைகளின் அழகெல்லாம் அதில் மிளிர வேண்டும்“ என்று தெரிவித்தார்.
விஞ்ஞானானந்தர் அதற்கேற்ப வரைபடம் தயார் செய்தார். சுவாமிஜியின் ஆலோசனைகளுக்கேற்ப இரண்டு மூன்று முறை படம் திருத்தி வரையப் பட்டது. அதன்பிறகு படத்தை ஏற்றுக் கொண்டார் சுவாமிஜி. ஆனால் விஞ்ஞானானந்தரிடம் , ஸ்ரீராமகிருஷ்ணரின் கோயில் உருவாகும் போது, அதைக் காண நான் இந்த உடம்பில் இருக்கமாட்டேன். ஆனாலும் மேலே இருந்து அதனைக் காண்பேன்” என்றார்.
சுவாமிஜி ஆமோதித்த வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போதுள்ள கோயில் எழுப்பப் பட்டுள்ளது. ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயில் பற்றி சுவாமிஜி மேலும் பல கருத்துக்களை வைத்திருந்தார். அவற்றையும் இங்கு காண்பது பொருத்தமாக இருக்கும்.
இந்தக்கோயிலில் மேலை மற்றும் கீழை நாடுகளில் உள்ள சிறந்த கலை அம்சங்கள் அனைத்தையும் அமைக்க விரும்புகிறேன். உலகம் முழுவதிலும் நான் பார்த்துச்சேகரித்த கட்டிடக் கலை விவரங்கள் அனைத்தையும் இந்தக்கோயிலின் அமைப்பில் உட்படுத்த முயல்வேன். பல தூண்களுடன் கூடிய ஒரு விசாலமான பிரார்த்தனை மண்டபம் இருக்கும். அதன் சுவர்களில் நூற்றுக் கணக்கான மலர்ந்த தாமரைகள் செதுக்கப் படும். ஆயிரம் பேர் உட்கார்ந்து தியானம் செய்யும் அளவு மண்டபம் பெரியதாக இருக்கும்.
தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்குக் கோயிலும் பிரார்த்தனை மண்டபமும் இணைந்து, ஓம், என்ற வடிவில் தெரியும் படிக் கட்டப் படும். கோயிலுக்குள் அன்னத்தின் மீது அமர்ந்தது போல் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுருவம் இருக்கும். கதவின் இரண்டு பக்கங்களிலும் சிங்கமும் ஆடும் ஒன்றின் உடம்பை ஒன்று அன்போடு நசுக்கிக் கொண்டு இருப்பது போன்ற சித்திரங்கள் காணப்படும். பேராற்றலும் மென்மையும் அன்பினால் இணைந்திருப்பதைக் குறிப்பதே அதன் நோக்கம்.
இத்தகைய கருத்துக்கள் எல்லாம் என் மனத்தில் இருக்கின்றன. நான் உயிரோடு இருந்தால் நானே இதை அமைப்பேன். இல்லையென்றால் எதிர்காலச் சந்ததிகள் முயன்றால் சிறிது சிறிதாக இதை அமைக்கலாம்.
சுவாமிஜியைப் பொறுத்தவரை அவரது பணிகள் நிறைவுற்றது போல் தோன்றியது. ராமகிருஷ்ணமடம், ராம கிருஷ்ண மிஷன், ஆகிய இரட்டை இயக்கங்கள் சிறப்பாகச் செயல்படுவது கண்டு திருப்தி கொண்டார் சுவாமிஜி. அவற்றிற்கான சட்ட திட்டங்கள் சிலவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று, அவருக்குத்தோன்றியது. பல கடிதங்களில் இது பற்றி குறிப்பிடவும் செய்திருந்தார். 1896 ஏப்ரல் 27-ஆம் நாள் சகோதரத்துறவிகளுக்கு எழுதிய கடிதத்தில்விரிவாக சுவாமிஜி சில சட்ட திட்டங்களை எழுதி அனுப்பியிருந்தார். இதில் மடத்து நிர்வாகம், நிர்வாகக் குழு, மடத்தில் இருக்க வேண்டிய துறைகள், துறவியரின் வாழ்க்கை முறை போன்றவற்றை எழுதியுள்ளார.
மேலை நாடுகளிலிருந்து திரும்பி வந்த பிறகு சுவாமிஜியின் சீடர்களில் ஒருவரான நித்யானந்தர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சட்ட திட்டங்களை முறைபடுத்தி ஒரு வடிவம் கொடுத்தார். அப்போது மடம் ஆலம்பஜார் மடத்தில் இயங்கி வந்தது. ஒரு நாள் எல்லாத் துறவியரையும் ஓரிடத்தில் கூடச்செய்தார். தாம் சொல்வதை ஒருவர் எழுதுமாறு கூறினார். சுத்தானந்தர் அந்தப் பணியை செய்தார்”
கூட்டத்தின் முடிவில் சுவாமிஜி கூறினார்,
எல்லா சட்ட திட்டங்களையும் கடந்து செல்வது தான் நமது நோக்கம், ஏனெனில் நாம் துறவிகள், சுதந்திரமானவர்கள். ஆனால் தீயவற்றைக் களைவதற்கு சில நல்ல சட்ட திட்டங்கள் வேண்டியிருக்கின்றன. நல்லவை மூலம் தீயவற்றைக் களைந்து விட்டு பிறகு இரண்டையும் விட்டு விடலாம். சட்ட திட்டங்களின் பலன் இது தான். நாம் நல்லவர்களாக இல்லாமல் வெறும் சட்டதிட்டங்களால் பயனில்லை. சட்ட திட்டங்கள் இருந்தாலே அவற்றை உடைத்து வெளியேற வேண்டும் என்ற உந்துதலும் இருக்கும். துறவிகள் ஒரு போதும் தவறான அடி எடுத்து வைக்கக் கூடாது. சொந்த முக்தியும் பிறரது நன்மையும் தான் நமது லட்சியம். புதிதாக மடத்தில் சேர்பவர்கள் இந்த லட்சியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்தச் சட்டதிட்டங்கள்.
பிறகு சுத்தானந்தரிடம், இதோ பார், இவற்றைக் கவனமாக எழுதி பிரதிகளை எடு, கூடாது, போன்ற எதிர்மறை வாக்கியங்கள் எதுவும் வராமல் எல்லாமே உடன் பாட்டு வாக்கியங்களாக இருக்குமாறு பார்த்துக்கொள் என்றார்.
இந்தச் சட்ட திட்டங்கள் பொதுவாக ”பேலூர் மடத்து சட்ட திட்டங்கள்” என்று அறியப்படுகின்றன.ராமகிருஷ்ண மடங்கள் பெயரளவிற்கு மடமாகவும் கோயிலாகவும் செயல்படாமல், சமுதாயத்திற்கு நன்மை பயக்கின்ற ஓர் இயக்கமாகத் திகழவேண்டும், அரசியலுடன் எந்தத் தொடர்பும் கூடாது போன்ற கருத்துக்களை அதில் வற்புறுத்திள்ளார்.
இந்தச் சட்ட திட்டங்களைத் தவிர நீலாம்பர் மடத்திலும் சுவாமிஜி சில பொது நியதிகளை உருவாக்கினார். அவற்றை சுவாமிஜி சொல்லச்சொல்ல சிவானந்தர் எழுதிக்கொண்டார்.
இந்த நியதிகளைப் பின்னாளில் ஒரு முறை மடத்தில் பிரம்மானந்தரின் அறையில் சுத்தானந்தர் படித்தார். பல துறவியர் அங்கே இருந்தனர். படித்து முடித்ததும் பிரம்மானந்தர் கூறினார், சுவாமிஜி, இந்தச் சட்ட திட்டங்களைச் சாதாரண நிலையிலிருந்து கூறவில்லை. அவர் தமது மனத்தை மேலான உணர்வுநிலைக்கு உயர்த்தி அந்த நிலையிலிருந்தே கூறினார். சிவானந்தர் எழுதிக்கொண்டார் மனித குலத்தின் நன்மைக்காக ஸ்ரீராமகிருஷ்ணரின் லட்சியங்களைப் பரப்புவதற்கு உதவுவதற்காகவே சுவாமிஜி இந்த நியதிகளை வகுத்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகப் பாரம் பரியத்தையைப்பெறவும், அவருக்குச்சேவை செய்யவும், ஆண்- பெண், பணக்காரன்- ஏழை, உயர்ந்தவன்- தாழ்ந்தவன். என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் உரிமை உண்டு, ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி அவருக்குச்சேவை செய்பவர்கள் பேறு பெற்றவர்கள். சுவாமிஜி வகுத்த நியதிகளைச்சந்தேகம் சிறிதும் இல்லாமல் முழு நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்றுங்கள். அதன் பிறகு அவற்றை எல்லாத் திசைகளிலும் பரப்புங்கள். அப்போது கலியுகத்தின் தீமைகள் விலகி சத்திய யகம் மலர்வதைக் காண்பீர்கள்.
தேவைக்கு ஏற்ப சட்டங்களையும் நியதிகளையும் எதிர் காலத்தில் சேர்த்துக் கொள்ளலாம். என்று சுவாமிஜி கூறியிருந்த போதிலும் அத்தகைய முயற்சிகள் எதுவும் செய்யப் படவில்லை. உயர் உணர்வுத் தளங்களிலிருந்து சுவாமிஜி கூறியவை, அவற்றைப் பின்பற்றினாலே போதும் என்ற முடிவே இதற்குக் காரணமாக இருந்தது. ஒரு முறை தீரானந்தர் பிரம்மானந்தரிடம் ”மகராஜ்” இளம் துறவிகளுக்கு உதவுவதற்காக நீங்கள் இன்னும் சில நியதிகளைச்சேர்த்தால் நன்றாக இருக்கும்” என்று கேட்டுக்கொண்டார். அதற்கு, பிரம்மானந்தர், நமக்கு என்ன தேவையோ அதை ஏற்கனவே சுவாமிஜி தந்துவிட்டார். புதிதாக நாம் எந்த நியதிகளையும் சட்ட திட்டங்களையும் சேர்க்க வேண்டியதில்லை. நாம் சேர்க்க வேண்டியது அன்பு. அன்பைச்சேருங்கள். பக்தியைச்சேருங்கள், மற்றவர்களை நேசிப்பதன் மூலம், அவர்களும் லட்சியத்தை அடைவதற்கு உதவி செய்யுங்கள்” என்றார்.
இவ்வாறு நிரந்தரமான சட்ட திட்டங்களையும் அளித்து பேலூர் மடத்தை நிறுவியதுடன் சுவாமிஜி தமது வாழ்க்கைப்பணிகளில் மிக முக்கியமான ஒன்றை நிறைவு செய்தார்.
பேலூர் மடத்து நாட்கள்
சுவாமிஜியின் வாழ்க்கையில் முக்கியப் பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறின. கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்ற குடும்பத் தலைவன் தனது பிள்ளைகளும் சந்ததிகளும் தனது பாதையில் நடைபோடுவதைப்பெருமையுடன் பார்ப்பதைப்போல், ஸ்ரீராமகிருஷ்ணரின் பணி தமது சந்ததியால் சிறப்பாக வளர்வது கண்டு பெருமை கொண்டார் சுவாமிஜி.
பேலூர் மடம் நிறுவப் பட்டதிலிருந்து சுமார் ஆறு மாதங்கள் சுவாமிஜி கல்கத்தாவில் இருந்தார். இந்த நாட்களை அவர் மடத்திலும், சில வேளைகளில் பலராம் போஸின் வீட்டிலுமாகக் கழித்தார். அவர் எங்கிருந்தாலும் புதிய தலைமுறையினரை உருவாக்குவது, துறவுக்கு உன்னத லட்சியங்களாக த் திகழ்கின்ற சில துறவியரை விட்டுச்செல்வது, அதன் மூலம் ஸ்ரீராமகிருஷ்ணரின் மாபெரும் பணி தொடர்ந்து நடைபெறச் செய்வது என்பது அவரது நோக்கமாக இருந்தது. அதற்கேற்ப தமது வழிகாட்டுதல் மூலமும், அதற்குமேல் தமது வாழ்க்கை மூலமும் இளம் துறவியருக்கு எப்போதும் உதவினார் அவர்.
சுவாமிஜி சில வேளைகளில் பலராம்போஸின் வீட்டில் சென்று தங்குவது மற்றொரு விதத்திலும் நன்மை விளைத்தது. பேலூர் மடம் கல்கத்தாவிலிருந்து சற்று தொலைவில் இருந்ததால் பலராம் அவரைச் சென்று காண முடியவில்லை. கல்கத்தாவில் அவர் பலராம்போஸின் வீட்டில் வரும்போது பலர் அவரைக் காண முடிந்தது. அதன் மூலம், குறிப்பாக இளைஞர்கள், அவரிடம் நெருங்கிப் பழக முடிந்தது. சுவாமிஜியின் கருத்துக்களால் தங்கள் வாழ்க்கையைப்பொருள் பொதிந்ததாக மாற்றிக்கொள்ள முடிந்தது.
பணிவும் பரவசமும்
இவ்வாறு ஒரு முறை சுவாமிஜி பலராம்போஸின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போத அவரைக் காண விஜய்கோசுவாமி வந்திருந்தார். சுவாமிஜி அவரை வரவேற்பதற்காக அங்கே வந்தார். விஜயர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நெருங்கிய சீடர். அது மட்டுமின்றி, சுவாமிஜியின் பிரம்ம சமாஜ நாட்களில் அவருக்கு ஆச்சாரியராகத் திகழ்ந்தவர். அந்த மரியாதை நிமித்தமாக சுவாமிஜி அவரது பாதங்களைத் தொட்டு வணங்கச்சென்றார். தம் முன் ஒரு மாணவனாக வளைய வந்த நரேன் இன்று உலக குருவாகத் திரும்பி வந்திருப்பது கண்டு, அந்த மரியாதையில் அவரது
பாதங்களைப் பணியச் சென்றார் விஜயர். ஆனால் இருவரும் ஒருவர் பாதங்களை மற்றவர் தொட அனுமதிக்கவில்லை. மீண்டும்ஒரு முறை இருவரும் முயற்சித்தனர்.ஆனால் நடக்கவில்லை. கடைசியில் சுவாமிஜி சிரித்தபடியே விஜயரின் கையைப் பிடித்துக்கொண்டு , கீழே விரிக்கப் பட்ட விரிப்பில் அமர்ந்து, அவரைத் தம் பக்கத்தில் அமர்த்திக்கொண்டார்.
விஜயரின் உணர்ச்சிகள் பெருக்கெடுத்து, அவர் ஆழ்ந்த பரவசத்தில் இருந்தார். எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால்பேச முடியவில்லை.. ஸ்ரீகுருதேவர் அருள் கூர்ந்து என்னை ஆசீர்வதித்துவிட்டார்.” என்று துண்டு துண்டாகச் சில வார்த்தைகள் மட்டுமே வெளிவந்தன. சுவாமிஜியின் சான்னித்தியம் அவரிடம் அவ்வளவு தெய்வீக அலைகளை எழுப்பியிருந்தது. அவர் அசைவின்றி அமர்ந்திருந்தார். அவரது கண்களில் நீர் பொங்கி கன்னங்கள் வழியாக வழிந்தோடியது. அவர்களை அந்த நிலையில் கண்ட பக்தர்கள் இருவரையும் சுற்றி சங்கீரத்தனம் செய்தபடியே ஆடினர். அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இந்த நாட்களில் சுவாமிஜியின் ஆஸ்த்மா தீவிரமாகியது. உடம்பைத்தேற்றிக்கொள்வதற்காக அவர் தேவ்கருக்குச்செல்வதென்று முடிவாயிற்று. பிரம்மசாரி ஹரேந்திர நாத் சுவாமிஜியுடன் சென்றார். உடல்நிலை காரணமாக சுவாமிஜி தேவ்கருக்கு வந்துள்ள செய்தி அங்கே பலருக்கும் தெரிய வந்தது. அங்கே மெட்ரிகுலேஷன் படித்துக்கொண்டிருந்தவர் கே.எஸ் கோஷ். அவரும் ஒரு நண்பருமான சுவாமிஜிரயத் தரிசிப்பதற்காகக் கிளம்பினர். ஆச்சரியம்! அவர்கள் அறையைவிட்டு வெளியே வந்தால் சுவாமிஜி அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஓடிச்சென்று அவர்கள் இருவரும் சுவாமிஜியின் பாதங்களைத்தொட்டு வணங்க முயற்சித்தனர். சுவாமிஜி விரைந்து பின் வாங்கினார். அவர்கள் தமது பாதங்களைத் தொட அவர் ஏனோ அனுமதிக்கவில்லை. அவர்கள் ஏதோ பேச முயற்சித்தபோது அவர்களிடம், தம்முடன் தொடர்ந்து நடக்குமாறு கூறிவிட்டு போகத் தொடங்கினார்.
வழியில் அவர்களின் உடல் நிலை, சுகாதாரம் , விடுதி, அங்குள்ள உணவு என்று பல விஷயங்களை விசாரித்தார். அவர்களுக்கு அறிவுரையும் வழங்கினார் சுவாமிஜி. உணவு பற்றி பேசியபோது, தியமும் சிறிது நெய் சாப்பிடுவது நல்லது. வெண்ணெய் அதைவிட ச் சிறந்தது என்றார். தூரத்தில் தெரிந்த அழகிய பெரிய மலைத் தொடரைக்காட்டி, அவர்கள் அங்கே சுற்றுலா சென்றதுண்டா என்று கேட்டார். இல்லை என்று கூறியதும், விரைவில் ஒரு முறை அங்கே சுற்றுலா சென்றுவாருங்கள், சுற்றுலா உடம்பிற்கும் நல்லது, மனத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும், என்று கூறினார்.
பேசிக்கொண்டே சென்றபோது கோஷின் ஷீவில் நாடா அவிழ்ந்திருப்பதைக் கண்டார் சுவாமிஜி. அவரிடம் அதனைச் சரியாகக் கட்டுமாறு கூறினார். திடீரென்று ஷீ நாடாவைப் பற்றி கூறியதும் கோஷ் குழம்பிப்போனார். அவர் திகைத்து நிற்பதைக்கண்ட சுவாமிஜி குனிந்து, சரி, நானே கட்டுகிறேன்” என்று கூறிவிட்டு கட்டத்தொடங்கினார். திடுக்கிட்டு நின்றார் கோஷ். அவர் சுதாரிப்பதற்குள், சுவாமிஜி மிக நேர்த்தியாகக் கட்டி முடித்திருந்தார். சுவாமிஜி தன் கால்களைத் தொடுடுவதற்கு அனுமதித்தால் ஏதோ பாவம் செய்து விட்டதாககருதிய கோஷ் ஒரு பரிகாரம் போல் மீண்டும் சுவாமிஜியின் பாதங்களைத் தொட்டு வணங்கச் சென்றார். முன்பு போலவே சுவாமிஜி அதற்கு அவரை அனுமதிக்கவில்லை.
நண்பர்கள் இருவரும் விடுதிக்குத் திரும்பினர். இதற்குள், உலகப் புகழ் பெற்ற விவேகானந்தர்” கோஷின் ஷு நாடாவைக் கட்டியது பற்றி விடுதி முழுவதும் பரவிவிட்டது. நண்பர்கள் பலரும் வந்து அதைப் பார்ப்பதும் தொடுவது மாக நேரம் கழிந்தது.ஷுவை க் கழற்றுவதற்கு யாரும் அவரை அனுமதிக்கவில்லை. கடைசியில் எல்லோரும் தூங்கிய பிறகு நள்ளிரவில் கனத்த இதயத்துடன் நாடாவை அவிழ்த்தார் கோஷ்.
தேவ்கரில் சுவாமிஜியின் உடல்நிலை சற்று சீர்பட்டது. சுவாமிஜியும் சற்று நம்பிக்கை கொள்ளவே செய்தார். அமெரிக்கா திரும்பஇருந்த சாராவும் மெக்லவுடும் சுவாமிஜியை உடன் வருமாறு அழைத்தனர். சுவாமிஜி நமது நிலைமையைவிளக்கி உங்களுடன் நான் வர இயலாது. என்பது உங்களுக்கே தெரியும். அதற்குப்போதிய வலிமை இன்னும் வரவில்லை.
சளி இன்னும் இருக்கிறது, அது என்னை பயணத்திற்குத் தகுதியற்றவன் ஆக்குகிறது. இங்கு என் உடல்நிலை தேறும் என்று நம்புகிறேன்” என்று அவர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் எதிர் பாராத விதமாக திடீரென்று, அவரது உடல் நிலை மோசமடைந்தது. ஆஸ்த்மா தீவிரமாகியது. அவர் மரணத்தின் விளிம்பிற்கே சென்று மீண்டார் என்று தான் சொல்லவேண்டும்.
சாரதானந்தரையும், சதானந்தரையும் உடனடியாக தேவ்கருக்கு அனுப்புமாறு பேலூர் மடத்திற்கு தந்தி அனுப்பப்பட்டது. ஒரு நாள் ஜன்னிக் கண்டது போல் வெட்டி இழுக்க ஆரம்பித்தது. பார்த்து நின்ற தவிப்பைத் தவிர யாராலும் எந்த உதவியும் செய்ய இயலவில்லை. உயரமான தலையணையில் தலையைச் சாய்த்தபடி சுவாமிஜி யும் மரணத்தை எதிர்கொள்ள தயாரானார். ஒருநாள், அல்ல இரண்டு நாள், அல்ல, எட்டு நாட்கள் இவ்வாறு மரணத்தின் விளிம்பில் ஊசலாடினார் சுவாமிஜி. அதன் பிறகு நிலைமை முன்னேறி.. ஒரு நடை பிணமாக என்னை கல்கத்தாவிற்கு கொண்டு வந்தார்கள் என்று எழுதினார் அவர். தாம் மூச்சுவிட்ட சத்தம் ஸோஹம், ஸேஹம்.....( அஹம்- பரம் பொருளே நான்) என்று தமக்கு கேட்டதாக பின்னர் சுவாமிஜி தெரிவித்தார். 1899- ஜனவரி 22-ஆம் நாள், சுவாமிஜி தேவ்கரிலிருந்து கல்கத்தாவிற்குத் திரும்பினார். அடுத்த நாள் அவர் நிவேதிதையை அழைத்து இருந்தார்.அவரைக் காணச்சென்று நிவேதிதை, எழுதுகிறார் மன்னர் நேற்றிரவு திரும்பினார். இன்று காலை எட்டு அளவில் என்னை அழைத்திருந்தார். அவரை அவரைப் பார்த்துவிட்டு ஒரு மணிநேரத்திற்கு முன்பு தான் திரும்பினேன். அவர் தெய்வீக பொலிவுடனேயே திகழ்கிறார். அவரது தோற்றம் அற்புதமாக உள்ளது. மூன்று இரவுகள் மூச்சிற்காகப்போராடியதாக என்னிடம் தெரிவித்தார்.ஆனால் அவரிடம் எதிர்காலத் திட்டங்களுக்குக் குறைவே இல்லை. இத்தகைய ஒரு நிலையில் நான் அவரைக் கண்டதில்லை .
சுவாமிஜியின் வழி காட்டுதல்-
மடத்து நிர்வாகத்தைத் சாரதானந்தர் சிறப்பாகக் கவனித்து வந்தார். அதற்காகவே சுவாமிஜி அவரை அமெரிக்காவிலிருந்து வரவழைத்திருந்தார். அமெரிக்காவில் சாரதானந்தர் மிக நல்ல பணியாற்ற முடியும் என்று தெரிந்திருந்தாலும் பேலூர் மடத்தில் அவரது தேவையை மிகவும் உணர்ந்தார் சுவாமிஜி. அது மட்டுமின்றி அமெரிக்காவில் அபேதானந்தர் வெற்றிகரமாக வேலை செய்து வந்ததால், பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பது சுவாமிஜிக்குத் தெரிந்திருந்தது. சாரதானந்தர் திரும்பி வந்ததிலிருந்து நிர்வாகப் பணயை மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டார். கேள்வி- பதில், சம்ஸ்கிருதம், கீழை-மேலை தத்துவம் ஆகிய வகுப்புகளைத் துரியானந்தர் முறையாகநடத்தினார். தினமும் தியான வகுப்புகள் நடைபெற்றன. தனிமையில் ஒருவர் தியானம் செய்வதைப் பார்ப்பது போல் சுவாமிஜிக்கு வேறு எதுவும் அவ்வளவு மகிழ்ச்சி தராது.
மடத்தின் தினசரி நடவடிக்கைகள் இளம் துறவியரின் பொறுப்பில் விடப்பட்டன. பொறுப்பை அவர்களும் உணர வேண்டும் என்று விரும்பினார் சுவாமிஜி. இளம் துறவிகளும் பிரம்ம சாரிகளும் ஒரு குழுவாக மாதந்தோறும் கூடி பணிகள் பற்றி விவாதித்தனர். தங்களுக்குள் தலைவர் ஒருவரையும் தேர்ந்தெடுத்துச் செயல் பட்டனர். காலம் தவறாமை, தூய்மை போன்றவை மிகவும் கடைபிடிக்கப் பட்டன. அனைவரின் ஈடுபாடும் பொறுப்புணர்ச்சியும் சுவாமிஜிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத்தந்தது.
துறவு, பிரம்மசரியம், சேவை, முக்தி போன்ற லட்சியங்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சுவாமிஜி இளைஞர்களின் மனத்தில் பதிய வைத்தார். அதற்கு மேல் அவரது நிதர்சனமான வாழ்க்கை கொழுந்து விட்டெரியும் துறவிகள் அக்னியாக இளைஞர்களின் முன்னால் நின்றது. பிரம்மசரியம் என்பது நாடி நரம்புகளில் எல்லாம் கனலாக எரியவேண்டும்”. சொந்த முக்தியும் பிறருக்குச்சேவையும் என்பது தான் நமது லட்சியம் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்” என்று மீண்டும் மீண்டும் இளைஞர்களிடம் எடுத்துக் கூறினார்.
வழுவாத பிரம்மச்சரியத்தை அடிப்படையாகக்கொண்ட துறவு- இறையனு பூதிக்கு இது ஒன்றே சாவி என்ற உண்மையை சுவாமிஜி மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். ஒரு துறவியின் வாழ்க்கை என்பது தொடர்ந்து அவன் தன் மனத்துடன் நிகழ்த்தும் போரே தவிர வேறல்ல. இந்த போரில் வெல்ல வேண்டுமானால் அவன் தீவிரமான தவ வாழ்க்கை, புலனடக்கம், மன ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கடைப் பிடித்தேயாக வேண்டும். ஒரு முறை ஒருவர் தேவையற்ற கேள்வி ஒன்றைக்கேட்ட போது சுவாமிஜி கோபத்துடன், போ, போய் தவம் செய். சிறிது காலம் தவம் செய்தாயானால் மனம் தூய்மையாகும். அப்போது இத்தகைய முறைகேடான கேள்விகளைக்கேட்க மாட்டாய், என்றார்.
ஆரம்ப நாட்களில் எல்லா விஷயங்களிலும் தீவிரமான கட்டுப் பாடும் கண்காணிப்பும் அவசியம் என்பார் சுவாமிஜி. உணவு கட்டுப்பாடு மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ளத் தக்கது. உணவில் கட்டுப்பாடு இல்லாமல் மனத்தைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். தேவைக்கு அதிகமாக உண்பது பல தீமைகளை உண்டாக்குகிறது. அளவுக்கு மீறிச் சாப்பிடுவதால் உடம்பும் மனமும் கெட்டுப்போகின்றன என்பார் அவர்.
துறவியர் இல்லறத்தாரிடமிருந்துஅகன்றிருப்பதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைப்பார். உலக வாழ்க்கையில் மூழ்கி கிடக்கின்ற மக்களின் உடம்பிலிருந்தும் துணியிலிருந்தும் ஒரு விதமான காம வாடை வீசுவதை நான் உணர்கிறேன். என்னால் அதைச் சகிக்க முடிவதில்லை. இது பற்றி நான் சாஸ்திரங்களில் படித்திருக்கிறேன். துறவும் தூய்மையும் நிறைந்தபுனிதர்களால் ஏன் உலகியல் மனிதர்களின் ஸ்பரிசத்தைப்பொறுத்துக் கொள்ள இயல்வதில்லை என்பதை நான் இப்போது புரிந்து கொள்கிறேன்” என்பார் அவர்.
அது போலவே இளம் துறவியரும் பிரம்மசாரிகளும் பெண்களிடம் நெருங்கிப் பழகுவதையும் சுவாமிஜி ஏற்றுக் கொள்ளவில்லை. அன்னை ஸ்ரீசாரதாதேவி கல்கத்தாவிற்கு வரும்போது, அவரது சேவைக்கென்று கூட இளம் துறவியர் அங்கே செல்வதை சுவாமிஜி விரும்பவில்லை. ஏனெனில் அங்கே பெண்கள் ஏராளமாகக் கூடுவார்கள்.
இதன் பொருள் சுவாமிஜி இல்லறத்தாரையும் பெண்களையும் வெறுத்தார் என்பது அல்ல. ஆண்களும் பெண்களுமான சில இல்லறத்தார் அவரது மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அவர்களின் வாழ்க்கையைத் தமது சீடர்களுக்குக் கூட உதார வாழ்க்கையாக அவர் காட்டியதுண்டு. இல்லற லட்சியம் பற்றி பின்வருமாறு சுவாமிஜி கூறுவார்.
இல்லற லட்சியத்தின் பெருமை எனக்குப் புரிகிறது. நல்ல வழியில் சம்பாதிப்பது, நல்ல காரியங்களில் அதனைச்செலவு செய்வது, குடும்பத்தைப் பாதுகாப்பது, பெரியவர்களுக்குத் தொண்டு செய்வது, ஓர் ஆன்மீக லட்சியத்தை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நிறைவு செய்வது என்று இல்லற வாழ்க்கை ஓர் உன்னதமான லட்சியம் என்பதில் சந்தேகம் இல்லை. திருமணமும் ஒரு பாதை தான். ஏன், சிலருக்கு அதுதான் பாதை. ஆனால் துறவு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டவன், உலகின் அனைத்தும் பயத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். துறவு மட்டுமே ஒருவனைப்பயமின்றி வாழச்செய்கிறது. இல்லற லட்சியத்தின் பெருமையை நீங்கள் உணர்ந்து வாழவேண்டும்.
நாக மகாசயர்
-
இல்லறத்தாரை அவர் எவ்வளவு போற்றினார் என்பதை ஒரு முறை நாக மகாசயர் மடத்திற்கு வந்தபோது அவர் நடந்து கொண்ட விதத்திலிருந்து காண முடிந்தது.சுவாமிஜியை சாட்சாத் சிவபெருமானாகவே கண்டார் நாகமகா சயர். சுவாமிஜி இருக்கும் இடத்தில் அவர் அமரமாட்டார். கைகூப்பியபடியே நிற்பார். நாக மகாசயர் சரத் சந்திரருடன் மடத்திற்கு வந்திருந்தார்.
சுவாமிஜி( நாகமகாசயரை வணங்கி)- நலம் தானே?
நாக மகாசயர்- உங்களைத் தரிசிப்பதற்காக வந்தேன். ஜெய் சங்கரா! ஜெய் சங்கரா! இன்று சிவ தரிசனம் பெற்று விட்டேன்.
இவ்வாறு சொல்லியபடி நாக மகா சயர் சுவாமிஜியின் முன் இரண்டு கைகளையும் கூப்பி வணங்கியபடி பணிவுடன் நின்று கொண்டிருந்தார்.
சுவாமிஜி-
உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது?
நாகமகாசயர்-
தசையும் எலும்புகளும் சேர்ந்த கூடாகிய , எதற்கும் உதவாத இந்த உடம்பைப்பற்றி ஏன் கட்கிறீர்கள்! உங்களைக் கண்டதால் நான் பேறு பெற்றேன், பேறு பெற்றேன்.
இவ்வாறு கூறி அவர் நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்து சுவாமிஜியை வணங்கினார்.
சுவாமிஜி( அவரைத் தூக்கியபடி)-
என்னகாரியம் செய்கிறீர்கள்?
நாக மகாசயர்-
இன்று நான் சிவ தரிசனம் பெற்றேன். என் அகக் கண்களால் நான் அதை க் காண்கிறேன். ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா!
சுவாமிஜி( சரத்தைப் பார்த்து)-
உண்மையான பக்தி மனிதனை எப்படி மாற்றுகிறது பார்த்தாயா?நாக மகாசயர் தெய்வீகத்தில் மூழ்கி தம்மையே விட்டிருக்கிறார். உடம்பைப் பற்றிய நினைவு அவரிடம் அறவே இல்லை.
இப்படி இன்னொருவரைக் காண முடியாது. ( பிரேமானந்தரிடம்)- நாக மகாசயருக்குக் கொஞ்சம் பிரசாதம் கொண்டு வா.
நாகமகாசயர்-
பிரசாதமா! பிரசாதமா! (கைகளைக் குவித்து சுவாமிஜியை வணங்கிய படி) உங்களைக் கண்டதும் இன்று என் பிறவிப் பசியே தீர்ந்து விட்டது.
அப்போது துறவிகள் மற்றும் பிரம்மச் சாரிகளுக்கு உபநிஷத வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. சுவாமிஜி அவர்களிடம், இன்று குருதேவரின் மகத்தான பக்தர் ஒருவர் வந்திருக்கிறார். எனவே இன்று உங்களுக்கு வகுப்பு தேவையில்லை” என்றார். உடனே எல்லோரும் புத்தகங்களை மூடி வைத்துவிட்டு, நாகமகாசயரைச் சுற்றி அமர்ந்தார்கள். சுவாமிஜியும் அவருக்கு முன்னால் உட்கார்ந்தார்.
சுவாமிஜி-
( எல்லோரையும் பார்த்து)-
பாருங்கள்! நாக மகாசயரைப் பாருங்கள். இவர் இல்லறத்தில் இருப்பவர். ஆனால் உலகம் என்ற ஒன்று இருப்பதைப் பற்றிய உணர்வே இவருக்கு இல்லை. எப்போதும் இறையுணர்விலேயே ஆழ்ந்திருக்கிறார். (நாகமகாசயரிடம்) எங்களுக்கும் பிரம்மசாரிகளுக்கும் குருதேவரைப் பற்றி சிறிது சொல்லுங்கள்.
நாகமகாசயர்- என்ன சொல்கிறீர்கள்! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்! அவரைப் பற்றி நான் என்ன சொல்வேன்? அவரது அவதார ப் பணியில் உதவியாக இருக்கும் மகாவீரரான தங்களைத் தரிசிக்க வந்தேன். இப்போது அவரது உபதேசங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள். ஜெய் ராமகிருஷ்ண! ஜெய் ராமகிருஷ்ண!
சுவாமிஜி- ஸ்ரீராமகிருஷ்ணரை உள்ளபடி புரிந்து கொண்டவர் நீங்கள் தாம். நாங்கள் இங்குமங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான்.
நாகமகாசயர்- ஓ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் குருதேவரின் நிழல், நீங்கள் இருவரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள், கண்ணுள்ளவர்கள் இதைக் காணட்டும்!
சுவாமிஜி- இந்த மடங்களையெல்லாம் ஆரம்பித்தது சரியான வழிதானா?
நாகமகாசயர்-
நான் அற்பன். எனக்கு என்ன தெரியும்? நீங்கள் என்ன செய்தாலும் அது உலகிற்கு நன்மையே செய்யும். ஆமாம், நன்மையே செய்யும்.
பல பிரம்மசாரிகளும் சாதுக்களும் நாக மகாசயருடைய திருப் பாதங்களைத் தொட்டு வணங்க முயன்றார்கள். இது நாக மகாசயரிடம் பதற்றத்தை ஏற்படுத்தியது. உடனே சுவாமிஜி, அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள். அவர் மிகவும் சங்கடப்படுகிறார்” என்றார். இதைக்கேட்டதும் எல்லோரும் தங்கள் இடங்களில் சென்று அமர்ந்தார்கள்.
சுவாமிஜி-
நீங்கள் ஏன் மடத்தில் வந்து தங்கக் கூடாது? உங்கள் வாழ்க்கை , இங்குள்ள பிரம்மசாரிகளுக்கு நல்ல பாடமாக அமையும்.
நாமகாசயர்-
ஸ்ரீராமகிருஷ்ணரிடம் நான் இதைப் பற்றி ஒரு முறை கேட்டேன். அதற்கு அவர், இல்லறத்திலேயே இரு” என்றார். எனவே குடும்பத்திலேயே இருக்கிறேன்” உங்களையெல்லாம் இடையிடையே தரிசிக்கும் பேறு பெறுகிறேன்.
சுவாமிஜி-
தங்கள் ஊருக்கு நான் ஒரு முறை வரலாம். என்று எண்ணியுள்ளேன்.
இதைக்கேட்டதும் நாகமகாசயர் ஆனந்தத்தால் பைத்தியம் போலவே ஆகி விட்டார். அந்த நாள் என்று வரும்? அந்தத் தலமே காசியாகி விடும். அந்தப்பேறு எனக்குக் கிடைக்குமா? என்று உணர்ச்சி பொங்கக்கேட்டார்.
சுவாமிஜி-
அங்கு வர வேண்டுமென்று ஆசை இருக்கிறது. தேவி அழைத்து வந்தால் வருவேன்.
நாகமகாசயர்-
உங்களை யார் புரிந்து கொள்ள முடியும்? யார் புரிந்து கொள்ள முடியும்? அகக்கண் திறக்காமல் உங்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஸ்ரீராமகிருஷ்ணர் மட்டும் தான் உங்களைப் புரிந்து கொண்டார்.
பிறர் அவர் சொன்னதை நம்பினார்கள். அவ்வளவு தான், அல்லாமல் உங்களை யார் புரிந்து கொண்டார்கள்!
சுவாமிஜி-
இப்போது என் ஒரே ஆசை இந்த நாட்டை எழுச்சிபெறச்செய்ய வேண்டும் என்பது தான். தன் சக்தியில் நம்பிக்கை இழந்து, எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் மக்கள் உறங்கிக் கொண்டிருப்பது போல் உள்ளது. அவர்களை எப்படியாவது எழுப்பி, அவர்களிடம் சனாதன தர்மத்தின் உணர்வை ஊட்டி விட்டேனானால், ஸ்ரீராமகிருஷ்ணரும் நாமும் பிறந்தது பயன் உடையதாகி விட்டது என்பதைப புரிந்து கொள்ளலாம். இந்த ஆசை மட்டுமே உள்ளது. முக்தி முதலியவை எல்லாம் எனக்குத் துச்சமாகத் தெரிகிறது. என் ஆசை நிறைவேற நீங்கள் ஆசீர்வதியுங்கள்.
நாகமகாசயர்-
ஸ்ரீராமகிருஷ்ணர் ஆசீர்வதிப்பார் . உங்கள் விருப்பத்தை யாரால் தடுக்க முடியும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது நடந்தே தீரும்.
சுவாமிஜி- அவரது விருப்பம் இல்லையென்றால் எதுவுமே நடக்காது.
நாகமகாசயர்-
அவர் விருப்பமும் உங்கள் விருப்பமும் ஒன்றாகி விட்டது. உங்கள் விருப்பமே அவருடைய விருப்பமும். ஜெய் ராமகிருஷ்ண! ஜெய ராமகிருஷ்ண!
சுவாமிஜி-
வேலை செய்ய வேண்டு மென்றால் வலிமையான உடல் வேண்டும். இந்த நாட்டிற்கு வந்ததிலிருந்தே என் உடல் நலம் சரியில்லை. மேலை நாடுகளில் இருந்தபோது நல்ல உடல் நலத்தோடு இருந்தேன்.
நாகமகாசயர்
உடலெடுத்தால் வாடகை கொடுத்தேயாக வேண்டும் என்று குருதேவர் சொல்வது வழக்கம். நோய்களும் துன்பமும் தான் வாடகை. உங்கள் திருமேனியோ தங்கப் பெட்டி. அதை மிகவும் கவனமாகக் காக்க வேண்டும். யார் அதைச் செய்வார்கள்? யார் இதைப் புரிந்து கொள்வார்கள்? ஸ்ரீராமகிருஷ்ணர் மட்டும் தான் புரிந்து கொண்டார். ஜெய் ஸ்ரீராமகிருஷ்ண! ஜெய்
ஸ்ரீராமகிருஷ்ண!
சுவாமிஜி-
மடத்தில் உள்ளோர் என்னை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்கள்.
நாகமகாசயர்- யார் கவனித்துக்கொள்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மை. அவர்களுக்குத் தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி, இது உண்மை. சரியான அக்கறை எடுத்துக் கொள்ளாவிட்டால் அது நிலைக்காமல் போய் விடுகின்ற அபாயம் உள்ளது.
சுவாமிஜி-
நாகமகாசயரே! நான் என்ன செய்கிறேன். என்ன செய்யவில்லை என்பது புரியவில்லை. ஒரு குறிப்பிட்ட வேளையில் ஒரு குறிப்பிட்ட திசையில் வேலை செய்வதற்கு ஆர்வம் கொள்கிறேன். அதன் படியே காரியங்களைச் செய்கிறேன். அது நல்லதற்கா, கெட்டதா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நாகமகாசயர்- பெட்டி இப்போது பூட்டப் பட்டது என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார். எனவே முழுவதுமாக றெிந்து கொள்ள உங்களை விட மாட்டார். நீங்கள் அதை அறிந்து கொண்டால் உங்கள் இகவுலக வாழ்க்கை முடிந்துவிடும்.
இதைக்கேட்டதும் சுவாமிஜி வெட்ட வெளியைப் பார்த்த படி சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் நின்றார். அப்போது பிரேமானந்தர் பிரசாதம் கொண்டு வந்து நாக மகாசயருக்கும் பிறருக்கும் கொடுத்தார். நாகமகாசயர் அதை இரு கைகளாலும் வாங்கி, ஆனந்தக் கூத்தாடியபடி உட்கொண்டார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு சுவாமிஜி குளத்தின் அருகே மண் வெட்டியால் எதையோ தோண்டிக் கொண்டிருப்பதை நாக மகாசயர் கண்டார். அதைக் கண்டதும் நேராக அவரிடம் சென்று அவரது கைகளைப் பிடித்து, நாங்கள் இங்கே இருக்கும்போது நீங்கள் ஏன் இதை யெல்லாம் செய்கிறீர்கள்? என்று கூறி மண்வெட்டியை வாங்கிக்கொண்டார். சுவாமிஜி மண்வெட்டியைப் போட்டு விட்டு தோட்டத்தில் நடந்தவாறு நாக மகாசயரைப் பற்றி சில நிகழ்ச்சிகளைக் கூறினார்.
புதிய உலகைப் படைப்போம்-
இறைவனிடம் மனப்பூர்வமான நம்பிக்கையுள்ள, உலக விஷயங்களைச் சிறிதும் பொருட்படுத்தாத ஒரு புதிய மனித இனத்தை இங்கு நான் படைக்க வேண்டியுள்ளது என்று சுவாமிஜி ஒரு முறை எழுதினார்.
அதற்கான முயற்சிகளையும் அவர் தளராமல் செய்தார். ஒரு நாள் மாலை வேளையில் சுவாமிஜி சற்று பரபரப்பாக நடந்து கொண்டிருந்தார். அவரது சிந்தனை எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருப்பது புரிந்தது, திடீரென்று நடப்பதை நிறுத்தி விட்டு அருகிலிருந்த துறவிச் சீடரைப் பார்த்து கூறினார், இதோ பாரப்பா!ஸ்ரீராமகிருஷ்ணர் உலகின் நன்மைக்காக வந்தார். உலகின் நன்மைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார். நானும் என் வாழ்க்கையை அப்படியே தியாகம் செய்வேன். நீங்களும், நீங்கள் ஒவ்வொருவரும், அப்படியே செய்ய வேண்டும். இந்த வேலைகள் எல்லாம் ஆரம்பம் மட்டுமே. நாம் வாழ்க்கை ரத்தத்தைச் சிந்தி வேலை செய்திருக்கிறோமே, அதிலிருந்து மாபெரும் வீரர்கள், இறைவனின் போர் வீரர்கள் தோன்றுவார்கள். அவர்கள் இந்த உலகையே புதிதாகப் படைப்பார்கள்.
இது மெதுவாக ,மிக மிக அமதுவாக ஆக வேண்டிய வேலை, என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் என்னால் இயன்ற அளவு நான் செய்வேன், பிறகு எனது ஆர்வத்தையும் வேகத்தையும் பிறரிடம் செலுத்தி என் பணியைத் தொடர்வேன். எனக்கு ஓய்வு கிடையாது. போர்க்களத்தில் தான் எனக்கு மரணம்! நான் வேலையை நேசிக்கிறேன்! ராணுவ மொழியில் சொல்வதானால், வாழ்க்கை ஒரு போர், ஒருவன் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான்வேலை செய்தபடியே வாழ வேண்டும், வேலை செய்தபடியே சாக வேண்டும்” என்பார் அவர்.
இந்த உத்வேகத்துடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் அவர் தமது துறவிச் சீடர்களை நாடெங்கும் அனுப்ப எண்ணினார். மனித குல சேவை, இறையனுபூதி- இவையே ஒரு துறவியின் லட்சியம் என்பதை ஒரு போதும் மறவாதீர்கள். எப்போதும் அதனைப் பற்றிக் கொள்ளுங்கள். துறவுப் பாதை தான் நேரடியான பாதை.துறவிக்கும் கடவுளுக்கும் இடையில் எந்தச் சின்னங்களும் கிடையாது.வேதங்களின் தலை மீது நிற்கிறான் துறவி” என்று வேதங்களே கூறுகின்றன.ஏனெனில் கோயில், மதப்பிரிவு, மகான் சாஸ்திரம்என்று அனைத்திலிருந்தும் விடுபட்டிருக்கிறான் அவன். பூமியில் நடமாடும் தெய்வம் அவன். இதை எப்போதும் நினைவில் வையுங்கள்.துறவின் கொடியை ஏந்தி, அமைதி, சுதந்திரம், புனிதம், ஆகியவற்றின்கொடியை ஏந்தி,வீரத் துறவிகளே, உங்கள் வழியே விரைந்து செல்லுங்கள்” என்று அவர் இளம் துறவியரை ஊக்குவிப்பார். அவர்களை நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பி அங்கெல்லாம் மடங்களை நிறுவ ஏற்பாடுகள் செய்தார். இதற்காக மடத்துத் துறவிகளை அழைத்து ஒரு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார். அதில் தமது கருத்தை எடுத்துக் கூறினார்.
சக்தியைப் பாய்ச்சுகிறேன்!-
..........
முதல் கட்டமாக விரஜானந்தரையும் பிரகாஷானந்தரையும் டாக்காவிற்கு அனுப்பினார்.
சுவாமிஜி, எனக்கு என்னதெரியும்? எதுவுமே தெரியாது. நான் சென்று எதைப்போதிப்பேன்.? என்று மறுத்தார் விரஜானந்தர். அதற்கு சுவாமிஜி, அதையே போதனை செய். உனக்கு எதுவுமே தெரியாது என்பதை மக்களுக்குத் தெரிவி. அதுவே பெரிய செய்தியாக இருக்கும்” என்று ஒரு கணமும் தாமதிக்காமல் கூறினார். சீடர் மேலும் தயங்கியதைக்கண்ட சுவாமிஜி இடிபோல் முழங்கினார்.
உனது முக்தியை மட்டும் தேடுவாயானால் நீ நரகத்திற்குத்தான் போவாய். உனக்கு கடவுள் வேண்டுமானால், பிறரது முக்திக்காகப் பாடுபடு! சொந்த முக்தியில் நாட்டத்தை விட்டு விடு. பின்னர் கனிவுடன் கூறினார், என் குழந்தைகளே! வேலை செய்யுங்கள்.! உங்கள் முழு உள்ளத்தையும் ஈடுபடுத்தி வேலை செய்யுங்கள்! விளைவு என்ன என்பதைப் பற்றி கவைலைப் படாதீர்கள். பிறருக்காக வேலை செய்யுங்கள். அதனால் நீங்கள் நரகத்திற்கே போக நேர்ந்தாலும் பிறருக்காகப் பாடுபடுவதிலிருந்து விலகாதீர்கள்.
பின்னர் விரஜானந்தரையும் பிரகாஷானந்தரையும் பூஜையறைக்கு அழைத்துச்சென்று, அமர்ந்து தியானம் செய்யுமாறு கூறினார் சுவாமிஜி. அவர்கள் அமர்ந்ததும், என் குழந்தைகளே, இதோ. நான் என் சக்தியை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன்” என்றார்.
சாரதானந்தரையும், துரியானந்தரையும் குஜராத்திற்கு அனுப்பினார் . அனுப்பிய ஒரு மாதத்தில் பிரகாஷனந்தரை பேலூர் மடத்திற்கு அழைத்துக் கொண்டார் சுவாமிஜி.பின்னர் ஒரு மாதம் கழித்து தமது அமெரிக்க சிஷ்யையான அபயானந்தரை டாக்காவிற்கு அனுப்பினார். அங்கே சில மாதங்கள் பணியாற்றிவிட்டு அபயானந்தர் கல்கத்தா திரும்பினார்.
தமிழில் முதல் முயற்சி
அடுத்தது மற்றொரு பணிக்குத் தயாரானார் சுவாமிஜி. ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தியும் தமது கருத்துக்களும் சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும் என்று சுவாமிஜி விரும்பினார். அவரது இந்த நோக்கத்தை முதலில் செயல்படுத்தியது தமிழ்நாடு என்பது பெருமைக்குரிய விஷயம்ஆகும்.
அந்த நாட்களில் ”லோகோபகாரி” என்ற தமிழ் வாரப் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வந்தது. இதன் ஆசிரியரான வி. நடராஜ ஐயர் மத வாழ்க்கையிலும் சமூக முன்னேற்றத்திலும் மிகுந்த ஈடுபடு உடையவர். இவர் சுவமிஜியின் கர்மயேகம், ஞான யோகம், பக்தியோகம், சிகாகோ செற்பொழிவுகள், அன்பு மதம் . செயல்முறை வேதந்தம் ஆகியவற்றிலிருந்து சில பகுதிகளை மெழி பெயர்த்து இந்தப் பத்திரிகையில் வெளியிட்டு வந்தர்.
பின்னர் இவற்றைத் தெகுத்து ”ஞனத் திரட்டு” என்ற பெயரில் 1898 ஏப்ரல் முதல் நாள் வெளியிட்டர். இதன் 2 மற்றும் 3-ஆம் பகுதிகள் தெடர்ந்து வெளிவரும் என்றும் அதில் குறிப்பிட்டார். இந்த நூலுடன் சுவமிஜியின் படம் ஒன்றும் இலவசமாக அளிக்கப் பட்டது.
இந்த நூலின் ஒரு பிரதியை சுவாமிஜிக்கும் ஒரு பிரதியைச் சென்னையிலிருந்த ராமகிருஷ்ணானந்தருக்கும் அனுப்பினார் நடராஜ ஐயர். அப்போது சுவாமிஜி டார்ஜிலிங்கில் இருந்தர். இந்த நூலை பெற்றுக்கெண்ட சுவாமிஜி மிகவும் மகிழ்ந்தர். நடராஜஐயருக்கு ப்பதிலும் எழுதினார்.
டார்ஜிலிங்
15 எப்ரல் 1898
அன்புடையீர்-
உங்கள் 7-ஆம் தேதி கடிதமும், எனது செற்பெழிவுகளில் சிலவற்றின் தமிழ் மொழிப்பெயர்ப்பு நூலும் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி, பொதுவாக தமிழ் மக்களுக்கும், குறிப்பாக உங்கள் பத்திரிகையின் சந்தாதரர்களுக்கும் உண்மையிலேயே நீங்கள் பெரிய சேவை செய்திருக்கிறீர்கள். நான் கூறிய கருத்துக்களை எல்லா இடங்களிலும் பரவுமாறு செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு ஏற்றவழி அவற்றை மாநில மொழிகளில் மொழி பெயர்ப்பதே. இதில் நீங்கள் முன்னோடியாக அமைந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்கள் முயற்சியில் எல்லா வெற்றிகளும் கிடைக்குமாறு வாழ்த்துகிறேன். ஆசிகள் ஏற்றுக் கொள்ளுங்கள்.
தங்கள் உண்மையுள்ள விவேகானந்த சுவாமிஜியின் இலக்கியம் இந்திய மொழிகளில் முதன் முதலாகத் தமிழில் தான் கட்டுரைகளாகவும் நூல் வடிவிலும் வெளி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமிஜியின் இலக்கியம் இந்திய மொழிகளில் முதன் முதலாகத் தமிழில் தான் கட்டுரைகளாகவும் நூல் வடிவிலும் வெளி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்க மொழிப் பத்திரிகை
இது சுவாமிஜியை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எனவே வங்கமெழியிலும் அவை வெளியிடப்பட வேண்டும் என்று எண்ணினார். அதற்காக வங்க மொழியில் ஒரு மாதப் பத்திரிகை ஆரம்பிப்பதில் முனைந்து ஈடுபட்டார். இந்தியாவுக்கு வந்திருந்த சாராவும் மெக்லவுடும் அமெரிக்கா திரும்பு முன்பு சுவாமிஜியைச் சந்தித்தனர். புதிய மடம் கட்டுவதற்காக சாரா பெரிய அளவில் ஏற்கனவே நிதியுதவி அளித்திருந்தார். மிஸ் மெக்லவுடும் தாம் பல வருடங்களாகச்சேமித்து வைத்திருந்த 800 டாலர்களை சுவாமிஜியிடம் அளித்தார். அப்போது சுவாமிஜி அருகில் நின்றிருந்த திரிகுணாதீதரைப் பார்த்து, இதோ அச்சகம் ஆரம்பிப்பதற்கான பணம் வந்துவிட்டது. உடனடியாக வங்க மொழிப் பத்திரிகையை ஆரம்பி” என்றார். இவ்வாறு உத்போதன் பத்திரிகை ஆரம்பிக்கப் பட்டது. திரிகுணா தீதர் அதன் ஆசிரியரானார்.
பரிணாம வாதம்
...........
ஒரு நாள் நிவேதிதை, யோகானந்தர் மற்றும் சரத் சந்திரருடன் சுவாமிஜி கல்கத்தாவில் அலிபூரில் உள்ள மிருககாட்சிச் சாலையைக் காணச் சென்றார். அதன் கண்காணிப்பாளர் அவர்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று, சுற்றிக் காண்பித்தார். அங்குள்ள பல வகையான விலங்குகளைப் பார்த்தபடியே, டார்வினின் பரிணாமக் கொள்கையைப் பற்றி மேலோட்டமாகப்பேசிக்கொண்டு வந்தார் சுவாமிஜி. பாம்புகள் இருந்த இடத்திற்கு வந்தனர். அங்கே உடம்பெல்லாம் வட்டவட்டமான வளையங்கள் கொண்ட மலைப் பாம்பைச் சுட்டிக்காட்டி, இந்த மலைப்பாம்பிலிருந்து தான் படிப்படியாக ஆமை தோன்றியது. இது போன்ற பாம்பு நெடுநாட்கள் ஒரே இடத்தில் இருந்ததால் அதன் முதுகு மிகவும் கடினமான ஓடாக மாறியது” என்றார்.
பின்னர் சரத்திடம்வேடிக்கையாக, கிழக்கு வங்காளத்தினராகிய நீங்கள் ஆமைகளைச் சாப்பிடுவீர்கள் இல்லையா? பாம்பு தான் படிப்படியாக ஆமையாக மாறியது” என்கிறார் டார்வின். எனவே, ஒரு வழியில் பார்த்தால் நீங்கள் பாம்பை உண்பவர்கள்்” என்றார். இதைக்கேட்ட சரத், பரிணாம முறைப்படி ஒரு விலங்கு இன்னொன்றாக மாறும்போது அதற்கு முந்தைய வடிவமம் குணங்களும் இருப்பதில்லை. எனவே ஆமையைச் சாப்பிடுவது பாம்பைச் சாப்பிடுவது ஆகாது” என்று மறுத்தார். எல்லோரும் சிரித்தார்கள்.
மேலும் சில விலங்குகளைப் பார்த்து விட்டு சுவாமிஜி அங்கிருந்த ராம் பிரம்மபாபுவின் வீட்டிற்குச் சென்றார். அங்க தேனீர் அருந்தினார்கள். நிவேதிதையின் அருகில் அமரவும் அவர் தெட்ட இனிப்பு, தேனீர் முதலியவற்றைத் தொடவும் சரத் தயங்கியதைக் கண்ட சுவாமிஜி, சரத்தை நிவேதிதையின் அருகே நாற்காலியில் அமரும் படியும் இனிப்பையும் தேனீரையும் சாப்பிடும் படியும் கூறினார். சரத் அந்தக் கட்டளைக்குப் பணிந்தார். சுவாமிஜி தண்ணீரைக் குடித்துவிட்டு மீதியைச் சரத்திடம் கொடுத்தார். சரத் அதை அருந்தினார். அதன் பிறகு டார்வினின் பரிணாம வாதத்தைப் பற்றிய கீழ்காணும் பேச்சு நடந்தது.
ராம்பாபு-
டார்வினின் பரிணாமக் கொள்ளையைப் பற்றியும், அந்தக் கொள்கையை நிலைநாட்ட அவர் கூறும் காரணங்களைப் பற்றியும் உங்கள் கருத்து என்ன?
சுவாமிஜி- ஒரு பேச்சுக்காக அவரது கருத்து சரியென்று கொண்டாலும், உயிர்களின் பரிணாமத்திற்கு அது தான் முடிவான காரணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
ராம் பாபு- நமது பண்டையஅறிஞர்கள் இதைப் பற்றி கூறுகிறார்களா?
சுவாமிஜி-
சாங்கியத் தத்துவத்தில் சிறந்த முறையில் கூறப் பட்டிருக்கிறது. பரிணாமம் பற்றியகருத்தில் பழங்கால இந்திய ஞானியரின் கருத்தே அறுதி முடிவு என்று நான் நினைக்கிறேன்!
ராம்பாபு-
அது பற்றி சுருக்கமாக நீங்கள் சொல்ல முடியுமா?
சுவாமிஜி-
வாழ்க்கைப்போராட்டம், மிகத் தகுதியுள்ளவை வாழ்தல், இயற்கையான தேர்வு, முதலிய விதிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். மிகச் சிறிய உயிர் மிகப்பெரிய உயிராகப் பரிணமித்ததற்கான காரணங்களாக இவற்றை மேலைநாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் பதஞ்சலியின் நூலில் இவை காரணம் என்று கூறப்படவில்லை. ஓர் இன உயிர் மற்றோர் இனமாக மாறுவதன் காரணம், ”இயற்கையின் உள் நிறைவு” என்கிறார் பதஞ்சலி. தடைகளுக்கு எதிராக இரவு பகலாகப்போரடுவது கரணம் அல்ல. என்னைப் பொறுத்தவரையில், போராட்டங்களும் பேட்டிகளும், பல வேளைகளில், உயிர் முழுமை அடைவதற்குத் தடைகளாகவே இருக்கின்றன. மேலை நட்டுக் கருத்துபோல், ஆயிரக்கணக்கன உயிர்களின் அழிவால் தன் ஓர் உயிர் பரிணமிக்கிறது என்றால், அத்தகைய பரிணாமத்தல் உலகிற்கு நன்மை எதுவுமில்லை. போராட்டங்களால் ஒரு வேளை பௌதீக வளர்ச்சி இருக்கிறது என்று கொண்டாலும் ஆன்மீக வளர்ச்சிக்கு இது ஒரு பெருந்தடை என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
நம் நாட்டு தத்துவ அறிஞர்களின் கருத்துப்படி, உயிர் என்பது பூரண ஆன்மா.மாறுபாடுகள் எல்லாம் ஆன்மாவின் வெளிப்பாட்டிலுள்ள வேற்றுமையே ஆகும். பரிணாம வளர்ச்சிக்கும் இயற்கையின் வெளிப்பாட்டிற்கும் தடைகளாக இருப்பவை நீக்கப் பட்டதும் ஆன்மா முழுமையாக வெளிப் படுகிறது. இயற்கையின் வெளிப்பாடு சிறு உயிர்களில் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் உயர்ந்த இனங்களில், எப்போதும் தடைகளை எதிர்த்து நடத்தும் போராட்டங்களால் தான் அவை பரிணமிக்க முடியும் என்பது சரியல்ல. போராட்டத்தை விட கல்வி, பண்பாடு, மன ஒருமைப்பாடு, தியானம், முக்கியமாக தியாகம் ஆகியவற்றால் தான் தடைகள் நீக்கப் படுகின்றன. அதற்கேற்ப ஆன்மாவும் வெளிப்படுகிறது... தீமை செய்கின்ற ஆயிரம் பேரைக் கொல்வதன் மூலம் தீமையை உலகத்திலிருந்து நீக்க முயல்வதால் உலகில் தீமைதான் அதிகமாகும்.ஆனால் அறிவுரைகளின் மூலம் மக்கள் தீமைசெய்யாமல் தடுக்கப் பட்டால் உலகில் தீமையே இருக்காது. மேலை நாட்டினரின் இந்தப்போராட்டக்கொள்கை எவ்வளவு பயங்கரமானது என்பதைப் பாருங்கள்!
ராம்பாபு சுவாமிஜியின் இந்தப்பேச்சைக்கேட்டு ஆச்சரியத்துடன், இந்தியாவிற்குத் தற்போது உங்களைக் போல் கீழை நட்டு, மேலை நாட்டுத் தத்துவங்களில் நல்லதேர்ச்சி பெற்றவர்களே உடனடியாகத்தேவை. எதிலும் ஒரு பக்கத்தை மட்டுமே ஏற்றுக் கொள்பவர்களான, இன்றைய படித்தவர்களின் தவறுகளை அத்தகையோரால் தான் திருத்த முடியும். பரிணாமக்கொள்கை பற்றிய உங்கள் விளக்கத்தைக்கேட்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
சிறிது நேரத்தில் சுவாமிஜியும் மற்றவர்களும் அங்கிருந்து புறப்பட்டு பாக்பஜாரில் உள்ள பலராம் போஸின் வீட்டை அடைந்தார்கள். அப்போது இரவு மணி எட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு சுவாமிஜி வரவேற்பறைக்கு வந்தார். அவர் மிருகக் காட்சி சாலையில் சுருக்கமாகப் பரிணாமக்கொள்கைப் பற்றி க் கூறிய கருத்தை விரிவாகக்கேட்க ச் சிறு கூட்டம் ஆர்வத்தோடு காத்திருந்தது. சுவாமிஜி அறைக்குள் வந்ததும், சரத் அந்தப் பேச்சை ஆரம்பித்தார்.
சரத்-
சுவாமிஜி, நீங்கள் மிருகக் காட்சி சாலையில் கூறிய பரிணாம வளர்ச்சி பற்றிய கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை எளிய முறையில் கூறுங்கள்.
சுவாமிஜி-
புரியவில்லையா! எந்தப்பகுதி புரியவில்லை?
சரத்
நீங்கள் அடிக்கடி எங்களிடம், புறச் சக்திகளை எதிர்த்துப்போராடும் ஆற்றல்தான் உயிர் இருப்பதன் அடையாளமாகவும் முன்னேற்றத்தின் முதற்படியாகவும் உள்ளத என்று கூறியிருக்கிறீர்கள். இப்போது அதற்கு மாறாகக் கூறுகிறீர்களே!
சுவாமிஜி-
நான் ஏன் மாறாகக் கூற வேண்டும்? நீதான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் கூறும் வாழ்க்கை ப்போராட்டம், மிகத் தகுதி உள்ளவை வாழ்தல் முதலிய விதிகள் விலங்குகளின் உலகத்தில் இருப்பதைத் தெளிவாகக் காண்கிறோம். அதனால் தான் டார்வினின் கொள்கை ஏறக்குறைய சரி என்று தோன்றுகிறது. ஆனால் பகுத்தறிவுள்ள மனிதர்களிடம் இந்த விதிகள் முற்றிலும் மாறாக இருக்கின்றன. உதாரணமாக, நாம் யாரை மாமனிதர்களாக, லட்சிய மனிதர்களாகக் கொண்டிருக்கிறோமோ, அவர்களிடம் இந்தப் புறப்போராட்டம் எதையும் காணவே முடியாது. விலங்குகளிடம் இயல்புணர்ச்சி மிகுந்து காணப்படுகிறது.ஆனால் மனிதனிடமோ, அவன் உயரும் அளவிற்கு அவனிடம் பகுத்தறிவு மிகுந்து காணப்படுகிறது. எனவே விலங்குகளின் உலகில் ஒன்று மற்றவற்றை அழிப்பதால் முன்னேற்றம் ஏற்படுவது போல் பகுத்தறிவு நிறைந்த மனித உலகில் ஏற்பட முடியாது.
மனிதனின் மிக உயர்ந்த பரிணாமம் தியாகத்தின் மூலம் மட்டுமே ஏற்படுகிறது. ஒருவன் மற்றவர்களுக்காக எவ்வளவு தூரம் தியாகம் செய்வானோ அந்த அளவிற்கு அவன் உயர்ந்தவன். விலங்கினத்திலோ, எந்த விலங்கு மற்ற விலங்குகளை அதிகமாகக் கொல்கிறதோ, அது தான் மிருகங்களில் மிகுந்த வலிமை படைத்ததாகக் கருதப் படுகிறது. எனவே இந்தப்போராட்டக்கொள்கை இரண்டு பக்கத்திற்கும் ஒருங்கே பொருந்த முடியாது. மனிதனின் போராட்டம் மனத்தில் நடக்கிறது. மனத்தை அடக்கும் அளவிற்கு ஒருவன் உயர்கிறான், மனத்தின் செயல்பாடுகள் முழுமையாகக் கட்டுப் படுத்தப்படும் போது தான் ஆன்மா வெளிப்படுகிறது. உடம்பைக் காப்பாற்றுவதற்காக மிருகங்களிடையே நடக்கின்ற போராட்டம், மனிதர்களிடம் மனத்தைக் கட்டுப்படுத்துவது அல்லது மனத்தை சத்வநிலையில் நிறுத்துவதாகிய போராட்டமக அமைகிறது. உண்மையான மரமும் தண்ணீரில் தெரிகின்ற அதன் நிழலும் போல் மிருகங்களின் வாழ்க்கையிலும் மனித வாழ்க்கையிலும் போராட்டங்கள் வெவ்வேறாக அமைந்துள்ளன.
சரத்- அப்படியென்றால் நீங்கள் ஏன் உடல் வலிமையை அவ்வளவு வலியுறுத்துகிறீர்கள்!
சுவாமிஜி-
உங்களை நீங்கள் மனிதர்கள் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களிடம் ஏதோ கொஞ்சம் பகுத்தறிவு இருக்கிறது. அவ்வளவு தான். வலிமையான உடல் இல்லையானால் மனத்துடன் எப்படிப் போராடுவீர்கள்? பரிணாமத்தின் மிக உயர்ந்த படியான, ” மனிதன்” என்ற நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்? உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் என்பதைத் தவிர உங்களிடம் வேறு ஏதாவது இருக்கிறதா என்ன? நீங்கள் இன்னும் நான்கு கால்கள் படைத்த மிருகங்களாக ஆகாமல், இருப்பது உங்கள் அதிர்ஷ்டம் தான். தன்னுணர்வும், சுய மதிப்பும், இருப்பவனே மனிதன் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்வது வழக்கம். நீங்களோ வெறுமனே பிறந்து இறக்கின்ற பிராணிகள்! சொந்த நாட்டினரின் பொறாமைக்கும் அயல் நாட்டினரின் வெறுப்புக்கும் ஆளாகித் திரிகின்ற அவலங்கள்! நீங்கள் வெறும் மிருகங்கள். அதனால் தான் உங்களைப்போராடச் சொல்கிறேன். தத்துவங்களையும் அதையும் இதையும் ஒதுக்கி வையுங்கள். அன்றாட வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் சற்று அமைதியாகக் கவனியுங்கள். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடைப்பட்ட நிலையில் நீங்கள் இருப்பதை அப்போது அறிவீர்கள். முதலில் உடல் வலிமையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன் பிறகே மனத்தைக் கட்டுப்படுத்த முடியும். நாயமாத்மா பல ஹீனேன லப்ய- இந்த ஆன்மா பலவீனர்களால் அடையப்படுவதில்லை. புரிகிறதா?
சரத்- சுவாமிஜி, இந்தப் பலவீனம் என்ற செல்லுக்கு பிரம்மச்சரியத்திலிருந்து வழுவுதல் என்று அல்லவா உரையாசிரியர் (சங்கரர்) பொருள் கெள்கிறார்?
சுவாமிஜி-
கொள்ளட்டுமே! உடல் பலவீனமானவன் ஆன்மாவை அடையத் தகுதியற்றவன் என்று நான் சொல்கிறேன்.
சரத்- ஆனால் மூடர்கள் பலர் வலிமையான உடலைப் பெற்றிருக்கிறார்களே!
சுவாமிஜி-
சற்று சிரமப்பட்டு ஒரு முறை அவர் களுக்கு நல்ல கருத்துக்களைக்கொடுக்க முடியுமானால்,நோஞ்சானைவிட அவர்கள் வெகு சீக்கிரத்தில் அதை நடைமுறையில் பின்பற்றுவார்கள். பலவீனமான உடம்பு உடையவர்களால் காமத்தையோ கோபத்தையோ கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருப்பதை நீ பார்க்கவில்லையா?
மெலிந்த உடலுடன் இருப்பவர்கள், மிக எளிதாகக் கேப வசப்படுவார்கள், காம வசப்படுவார்கள்.
சரத்-
ஆனால் இந்த விதிக்கு விலக்கானவர்களும் இருக்கிறார்கள்.
சுவாமிஜி-
இல்லை, என்று யார் சொன்னார்கள்? ஒரு முறை மனம் கட்டுப் பட்டு விட்டது என்றால் பிறகு அவனது உடம்பு வலிமையாக இருக்கிறதா அல்லது மெலிந்திருக்கிறதா என்பதுபற்றிக் கவலையே இல்லை. உண்மை என்னவென்றால் , வலிமையான உடல் இல்லாதவன் ஆன்ம ஞானத்திற்குத் தகுதி உடையவன் ஆக மாட்டான்.
சுவாமிஜி உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைக் கண்ட சீடர் அதற்கு மேலும் அந்தப்பேச்சை வளர்க்க விரும்பவில்லை. அமைதியாக இருந்தார். சிறிது நேரம் கழிந்தது. சுவாமிஜி அங்கு கூடியிருப்பவர்களைப் பார்த்து , இந்தப் புரோகிதன் இன்று நிவேதிதை தொட்ட உணவைச் சாப்பிட்டான் தெரியுமா? அவள் தொட்ட இனிப்பைச் சாப்பிட்டான். அதாவது பரவாயில்லை( சீடரைப் பார்த்து) ஆனால் அவள் தொட்ட தண்ணீரை நீ எப்படிக் குடித்தாய்? என்றார்.
சரத்-
அப்படிச் செய்யும்படி கட்டளையிட்டது நீங்கள். குரு கட்டளையிட்டால் நான் எதையும் செய்வேன். தண்ணீரைக் குடிக்க எனக்குப் பிடிக்கவில்லை தான். ஆனால் நீங்கள் குடித்துவிட்டு என்னிடம் தந்தீர்கள்.அதை நான் பிரசாதமாக ஏற்றுக் கொண்டேன்.
சுவாமிஜி- அப்படியா! இப்போது உன் ஜாதி போய் விட்டது. இனிமேல் உன்னை யாரும் பிராமணன் என்று மதிக்க மாட்டார்கள்.
சரத்- மதிக்காவிட்டால் போகட்டும், நீங்கள் கட்டளையிட்டால் சண்டாளனின் வீட்டிலும் உண்பேன்.
சரத்தின் இந்த வார்த்தைகள் சுவாமிஜியையும் அங்கிருந்தவர்களையும் பலத்த சரிப்பில் ஆழ்த்தின.
இந்த நாட்களில் சுவாமிஜி மற்றொரு முக்கியமான காரியத்தையும் செய்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் மறைந்த பிறகு அவரது புனிதச் சாம்பலை எங்கே நிறுவுவது என்பது சம்பந்தமாக அவரது இல்லறச் சீடர்களுக்கும் துறவிச் சீடர்களுக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது பற்றி ஏற்கனவே கண்டோம். நாட்கள் செல்லச்செல்ல மேலும் சில கருத்து வேற்றுமைகள் எழுந்தன.சுவாமிஜி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வருவதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்த ராம்சந்திர தத்தரும் வேறு சிலரும் துறவிச் சீடர்களிடமிருந்து சற்று விலகத் தொடங்கினர். இந்தத் தற்காலிகப் பிரிவுணர்ச்சிக்கு நிரந்தரத் தீர்வு காண விழைந்தார் சுவாமிஜி. நோயுற்றுப் படுக்கையில் கிடந்த ராம்சந்திரரைச் சென்று நேரில் கண்டார் அவர்.
அற்புதமானதொரு சந்திப்பாக இருந்தது அது. சிறிது நேரம் பேசியபிறகு ராம் சந்திரர் கழிப்பறைக்குச் செல்வதற்காகப் படுக்கையிலிருந்து எழுந்தார். சுவாமிஜி, உடனே எழுந்து, சற்று தள்ளிக் கிடந்த அவரது செருப்புகளை அருகில் எடுத்து வைத்து, அவர் அதை அணிந்து கொள்வதற்கு உதவினார். நெகிழ்ந்து போனார் ராம்சந்திரர். அமெரிக்காவிற்குப் போன பிறகு நீ பெரிய ஆளாகி விட்டாய், எங்களையெல்லாம் மறந்து விட்டாய் என்று நினைத்தேன். பலரும் என்னிடம் அப்படித்தான் கூறினார்கள். ஆனால் நீ அதே பழைய ”பிலே”யாகத் தான் இருக்கிறாய். உன்னில் எந்த மாற்றமும் இல்லை. நான் தான் தவறாகப் புரிந்து கொண்டேன். ஸ்ரீராமகிருஷ்ணர் உன்னை ஏன் ” சூடாமணி” என்று குறிப்பிட்டார் என்பதை இப்போது தான் புரிந்து கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு. நீ மன்னித்தால் தான் குருதேவரிடம் எனக்கு ஏதோ சிறிது இடம் கிடைக்கும்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். தேவையற்ற கருத்து வேற்றுமைகளை விட்டு விடுமாறு சுவாமிஜியும் கனிவான குரலில் கூறினார். ராம்சந்திரர் கண்ணீர் விட்டு அழுதபடியே, மன்னித்தேன் என்று நீ ஒரு வார்த்தை சொல்லாமல் ஸ்ரீராமகிருஷ்ணர் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்.என்று கூறினர். அதற்கு சுவாமிஜி, அத்தகைய பயமே உங்களுக்குவேண்டாம். குருதேவரின் அருகில் எனக்கு ஓர் இடம் கிடைக்குமனல் உங்களுக்கும் கிடைத்தே தீரும்” என்று அழுத்தமான குரலில் கூறினார். இது ராம்சந்திரரைச் சமாதானப் படுத்தியது.
மிஸ் முல்லர் தந்தவேதனை
உடல்வேதனைகள் ஒரு புறம் இருக்க சுவாமிஜி மன வேதனைகளையும் ஏற்க நேர்ந்தது. அவரிடம் மிகுந்த ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் இருந்த மிஸ்முல்லர் திடீரென்று சுவாமிஜியிடமிருந்து விலகுவதாக அறிவித்தார். சற்று பிடிவாத குணமும் முன் யோசனையின்றிச் செயல்படுவதும் அவரது இயல்புகளாக இருந்தன. சுவாமிஜியிடம் வரும் முன்பு இப்படித்தான் திடீரென்று ஒரு நாள் தியாசபிகல் சொசைட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.1895 ஜுலை 16-ஆம் நாள் ”மெட்ராஸ் மெயில்” பத்திரிகையில் அவரது அறிவிப்பு வெளியாயிற்று. அவரது திடீர் முடிவை ”மெட்ராஸ் மெயில்” மகாபோதி ஜர்னல்” போன்றவை மிகவும் விமர்சித்து எழுதின. இந்தியா தன்னால் வீராங்கனைகளைத் தோற்று விக்க இயலாமல் போகலாம். அதற்காக இத்தகைய மூளை குழம்பிய, அடிக்கடி நிறம் மாறுகின்ற பெண்களை ஏற்றுக் கொள்வதால் பெரிய நன்மை எதுவும் விளையப்போவதில்லை. மிஸ் முல்லரின் செயல் மிகவும் ஏமாற்றத்தை அளிப்பதாகும்“ என்று மெட்ராஸ் மெயிலில் செப்டம்பர் 30-ஆம் நாள் செய்தி வெளி வந்தது. இன்னும் ஆயிரம் பிறவிகளாவது எடுத்த பிறகு தான் மிஸ் முல்லர் ஓர் உண்மையான இந்துப் பெண்ணின் குணங்களுடன் பிறக்க முடியும்” என்று மகாபோதி ஜர்னல் எழுதியது.
இதன் பிறகு தான் முல்லர் சுவாமிஜியிடம் வந்தார். பல நற்பணிகளில் சுவாமிஜிக்குத் துணை நின்றார், ஏன் பேலூர் மடத்து நிலமே அவரது நன்கொடையால் வாங்கப் பட்டது தான். ஆனால் அவருடைய இயல்பான சுபாவம் திடீரென்று தலை தூக்கியது. அவர் சுவாமிஜியிட மிருந்து விலகுவதாக அறிவித்தார். நிவேதிதை எழுதுகிறார். ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமிஜி, தியானம், சமயசமரசம் என்று அனைத்தையும் தூக்கி எறியப்போவதாக மிஸ் முல்லர் என்னிடம், கூறுகிறார். ”இந்து மதம் கேவலமானது” ”நாம ஜபம்” பயனற்றது” தியானம் கேவலமானது” என்றெல்லாம் கூறுகிறார். தாம் ஓர் உத்வேகமான கிறிஸ்தவப்பெண்ணாக, பொற்காலத்தை நோக்கிச் செல்வதாகவும் அவர் சொன்னார். நான் சுவாமிஜியைப் பற்றி கூறிறேன்” அதற்கு அவர், ஓ! நீயும் அதிக நாள் அவரை நேசிக்க மாட்டாய்” என்று கூறிவிட்டார்.
மிஸ் முல்லர் ஏன் விலகினார் என்பதற்கான காரணங்களை சாரதானந்தர் மெக்லவுடிற்குக் கீழ் வருமாறு எழுதுகிறார். பாவம்! மிஸ் முல்லர் புதனன்று( 1899 ஜனவரி 18) இங்கிலாந்திற்குத் திரும்பினார். அங்கே போய் வேறு வழியில் முயற்சிக்கப் போகிறாரோ என்னவோ! அவர் புறப்படும் முன்பு அவருக்கு நிவேதிதை எழுதிய ஒரு கடிதம், ரோஜா, பழங்கள், மலர்கள் போன்றவற்றை காளி கிருஷ்ணனிடம் கொடுத்தனுப்பினோம். முல்லர் விலகியதற்கான சில காரணங்கள் இவை-
1- சுவாமிஜி சில சித்து வேலைகள் செய்யவும். அது சம்பந்தமான சங்கம் ஒன்று தொடங்கவும் முயற்சி செய்தார்.ஆனால் தோல்வியுற்றார். அவரது தோல்விபற்றி இந்தியாவின் சித்து வேலைகளில் வல்ல பல குருமார்களும் கூறியிருந்தனர். அதனால் முல்லருக்கு சுவாமிஜியிடம் இருந்த அன்பு வாடி ஒரு பூ போல் உதிர்ந்து விட்டது.
2- இந்தியா மந்திரவாதிகளின் நாடு. உணவு போன்ற வற்றைக்கூட நாம் மாய வேலைகளின் மூலம் தான் பெறுகிறோம். நமது அன்பிற்குரிய பாட்டி( மிசஸ் சாராபுல்) நீங்கள் மற்றும் பலரை நாங்கள் வசியம் செய்து வைத்திருக்கிறோம். அதனால் தான் நீங்கள் எங்களிடம் பக்தி காட்டுகிறீர்கள்.
3- தமக்குக் கிடைத்த இந்த அற்புத அனுபவங்களை இங்கிலாந்து முழுவதிலும் சொல்ல வேண்டுவது முல்லரின் புனிதக் கடமை. எனவே அவர் இங்கிலாந்திற்குச் சென்றாக வேண்டும்.
4- நாங்கள் கிறிஸ்தவர்கள் ஆகாதவரை சுவாமிஜிக்கோ எங்களுக்கோ கதி கிடையாது. ஆனால் முல்லருக்கே ஞானஸ்நானம் ஆகவில்லை என்பது வேறுவிஷயம்.
என்கிறார் சுவாமிஜி.
காரணங்கள் என்னவானாலும் மிஸ் முல்லர் விலகியது கிறிஸ்தவர்களுக்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தது. இன்டியன் சோசியல் ரிஃபார்மர் ” டிசம்பர் 25-ஆம் நாள் இப்படி எழுதியது. கிறிஸ்தவ சகோதரர்களுக்கு இதோ ஒரு கிறிஸ்மஸ் பரிசு! இது ஒரு செய்தி. இந்து மதத்தைப் பரப்புவதற்காக சுவாமி விவேகானந்தர் ஆரம்பித்திருந்த இயக்கத்துடன் வைத்திருந்த நமது தொடர்பை மிஸ் முல்லர் விலக்கிக் கொண்டார். நம்பகமான செய்தி இப்போது தான் கிடைத்தது.
சுவாமிஜி அனைத்தையும் மௌனமாக ஏற்றுக் கொண்டார்.ஆன்மீகவாதிகள் யாரும் நோயுறக் கூடாது என்பது மிசஸ் ஜான்சனின் கருத்து. நான் புகைபிடிப்பது பாவம் என்று அவருக்கு இப்போது படுகிறது. மிஸ் முல்லர் என்னைவிட்டுப் பிரிவதற்கும் எனது நோய் தான் காரணமாக இருந்தது. அவர்கள் கூறுவது சரியாகவே இருக்கலாம். நீங்கள் கூறுவதும் சரியாகவே இருக்கலாம். ஆனால் நான் உள்ளது உள்ளபடி தான் இருக்க முடியும்” என்று அவர் ஸ்டார்டிக்கு எழுதினார்.
லியான் லான்ட்ஸ்பர்க் ( கிருபானந்தர்) தம்மை விட்டு விலகியபோதும் மாறாத அன்புடன் அவரை நேசித்தாரே அவ்வாறே முல்லரையும் நேசித்தார் சுவாமிஜி. இருப்பினும் நேசித்தஒருவர் விலகுவது மனத்தை வருத்தத் தானே செய்யும்!தமது துயரை கிறிஸ்டைனுக்கு எழுதினார் சுவாமிஜி. அவர் என்னைவிட்டுப் பிரிந்தது எனக்கு ஒரு பேரிடி. ஏனெனில் அவரை நான் அவ்வளவு நேசித்தேன். அவரும் எனது பணியில் மிகவும் துணையாக இருந்தார். அவரிடம் உலகின் செல்வம் ஏராளம் இருந்தது. அறிவுக் கூர்மையும் இருந்தது. ஆனால் என்னைப்போலவே அடிக்கடி உணர்ச்சிசவப் பட்டு, பயங்கரமானஆத்திரம் கொள்வார் அவர். அவருக்கு வயதாகி விட்டது. அதனால் அப்படி நடந்து கொள்கிறார் என்று அவரை மன்னிக்கலாம்.
அது சுவாமிஜியின் வழி. யாருடைய குற்றங்களையும் அவர் பெரிதாகக்கொண்டதில்லை. யாருடைய குணங்களையும் அவர் சிறிதாகக் கொள்வதும் இல்லை. பிறரது அணு போன்ற நன்மையை மலையாகக் கண்டார். மலை போன்ற தவறுகளை அணுவாகக் கண்டார். இத்தகைய உறவு காரணமாக அவர் பேசிய, சிந்தித்த, முயற்சித்த, சாதித்த ஒவ்வொன்றும் புரிந்து கொள்ளப் பட்டன. புரியாவிட்டாலும் அவரது வேகமும் ஆற்றலும் ஒவ்வொருவரையும் தூண்டிக் கொண்டே இருந்தன. சகோதரத் துறவிகள் ஆனாலும் சரி, சீடர்கள் ஆனாலும் சரி. அவர்கள் சாதித்ததைக் கொண்டு சுவாமிஜி அவர்களை எடைபோடுவதில்லை. எத்தகைய உணர்வுடன் அவர்கள் அந்த வேலையைச் செய்தார்கள் என்பதை மட்டுமே அவர் பார்த்தார். தங்களால் இயன்ற அளவு செய்திருந்தால் போதும், பலன் என்னவானாலும் அது அவருக்குத் திருப்தி தான்.
மனித ஆன்மாவில், அதன் எல்லையற்ற ஆற்றலில் அவர் எல்லையற்ற நம்பிக்கை வைத்திருந்தார். அந்த ஆற்றலையே அவர் பிறரிடம் தூண்டினார். அது தான் சுவாமிஜியின் வழியாக இருந்தது.
அத்வைத ஆசிரமம்-
1899 ஜனவரியில் சுவாமிஜியின் இரண்டு விருப்பங்கள் பூர்த்தியாயின. தட்சிணேசுவரக்கோயிலுக்கு அவர் செல்லக் கூடாது என்று தடை விதித்தபிறகு ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒரு நிரந்தரமான இடத்தில் கொண்டாட வேண்டும் என்பது அவரது பெரும் ஆவலாக இருந்தது. சென்றவருடம் அது நிறைவேறவில்லை.பேலூரில் நிலம் வாங்கப்பட்டிருந்தாலும் பணி முற்றுப்பெறாத நிலையில் இருந்தது. இந்த முறை பேலூர் மடத்தில் முதன் முதலாக ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப் பட்டது. அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சுவாமிஜி கலந்து கொண்டார். நிவேதிதை சொற்பொழிவாற்றினார்.
இரண்டாவது விருப்பம் இமயமலையில் ஓர் ஆசிரமம் அமைப்பது. இது வரை தகுந்த ஓர் இடத்தை தேடிக்கண்டு பிடிக்க இயலாமல் இருந்தது. இப்போது அதற்கான ஓர் இடமும் கிடைத்தது. அல்மோரா மாவட்டத்தில் மலை உச்சியில் 6800 அடி உயரத்தில் அமைந்திருந்த மாயாவதி என்ற அழகிய இடத்தை அதற்காகத் தேர்ந்தெடுத்தனர். அடர்ந்த காடு, சுற்றிலும் அழகிய மலைகள், திரிசூல், நந்தா தேவி போன்ற பனி மலைச் சிகரங்களில் காட்சி என்று அந்த இடம் ஆன்மீக வாழ்க்கைக்கு ஓர் அற்புதக் சூழ்நிலையைத் தருவதாக அமைந்திருந்தது.
அந்த இடத்தில் அத்வைத ஆசிரமம் அமைக்க வேண்டும் என்பது சுவாமிஜியின் விருப்பம். அத்வைதம் என்பது வேதாச்தத்தில் ஒரு பிரிவு. ஆதி சங்கரர் இதனைப் பரபலப்படுத்தினார். இந்த நெறியில் உருவங்களோ கோயில்களோ வழிபாடுகளோ ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. மிக உயர்ந்த நிலைசாதகர்களுக்கே இந்த நெறி சாத்தியமாகும். ராமகிருஷ்ணத் துறவிகளில் சிலரேனும் அந்த உயர்ந்த நிலை சாதனைச்செய்ய வேண்டும் என்பது சுவாமிஜியின் விருப்பமாக இருந்தது. அதற்காக மாயாவதியில் அத்வைத ஆசிரமம் நிறுவ விரும்பினார் அவர். மார்ச் 1899- இல் அந்த ஆசிரமத்திற்காக எழுதிய அறிக்கையில் அதன் நோக்கத்தைக் கீழ் வருமாறு குறிப்பிட்டார் அவர்.
யாரிடம் பிரபஞ்சம் இருக்கிறதோ, யார் பிரபஞ்சத்தில் இருக்கிறாரோ, யார் பிரபஞ்சமாக இருக்கிறாரோ அவரை அறிந்து, அதன் மூலம் பிரபஞ்சத்தை அறிந்து , அவரையும் பிரபஞ்சத்தையும் நமது ஆன்மாவாக அறிவது மட்டுமே எல்லா பயத்தையும் அழித்து, துன்பத்தை ஒழித்து, எல்லையிலா சுதந்திரத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறது. தனி மனிதர்களின் வாழ்க்கையை உயர்த்தவும், மக்கள் சமுதாயத்தின் பண்பை உயர்த்தவும், இந்த ஒப்பற்ற உண்மை எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் வெளிப் படுவதற்கான வாய்ப்பை அளிப்பதற்காகவும் இந்த உண்மை முதன் முதலில்தோன்றிய இடமாகிய இமயமலையின் உச்சியில் இந்த அத்வைத ஆசிரமத்தைத் தொடங்குகிறோம்.
ஆங்கில மாத இதழாகிய பிரபுத்த பாரதத்தின் அலுவலகமும் அச்சுக் கூடமும் மாயாவதிக்கு மாற்றப் பட்டது. சுவாமிஜியின் சீடரான சுவரூபானந்தர் அதன் ஆசிரியர் ஆனார். அத்வைத ஆசிரமம் உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்த சேவியர் அதன் பதிப்பாளர் ஆனார்.
யோகானந்தர் மறைகிறார்.
1899 மார்ச் . கிரீஷின் வீட்டில் அருகிலுள்ள ஒரு வாடகை வீட்டில் அன்னை ஸ்ரீசாரதா தேவி தங்கியிருந்தார். அவரது சேவைக்காக யோகானந்தரும் உடன் இருந்தார். ஆனால் அவருக்கே உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்க நேர்ந்தது. அங்கே யோகானந்தர் மகாசமாதி அடைந்தார். அவரது கடைசிநேரம் என்பது தெரிந்து தானோ என்னவோ சுவாமிஜி அன்று அங்கே சென்றார். உயிர் பிரியும் வரை அவரது அருகிலேயே இருந்தார். நாம ஜபம் போன்ற எதுவும் செய்யவில்லை. தமது அன்புச் சகோதரரை அமைதியாகப் பிரிந்து செல்லுமாறு விட்டு விட்டார். மாலை 3 மணி அளவில் சுவாமிஜி யோகானந்தரின் திருமேனிக்கு ஆரதி செய்தார்.-நைவேத்தியம் செய்தார். சுடுகாட்டிற்கு அவர் போகவில்லை. மௌனமாக அமர்ந்திருந்தார். ஒருசெங்கல்விழுந்து விட்டது. இனி ஒவ்வொன்றாக ஓடும் கூரைகளும் எல்லாம் விழுந்து விடும், என்று அமைதியாகக் கூறினார் அவர்.
1899 மார்ச்சில் கல்கத்தாவில் பிளேக் நோய் மீண்டும் தலை தூக்கியது. தினசரி பல உயிர்களைப் பலி வாங்கிய அந்த நோய் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. 1897- இல் இந்தநோய் வந்த போது, நோய் பரவுவதைத் தடுக்கவும் நோயாளிகளைக் காக்கவும் அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு காரணங்களால் இந்த முறை அரசாங்கம் கண்டும் காணாதது போல் இருந்து விட்டது. மக்கள் அறியாமையில் இருந்தால் அரசாங்கம் என்ன செய்ய முடியும். இந்த ”சுதேசி”களைக் சுத்தம்” செய்ய இயலாது என்று கூறி அரசாங்கம் கைவிரித்து விட்டது.
சுவாமிஜியால் அவ்வாறு இருக்க இயலவில்லை. பிளேக் நோய் மீண்டும் தாக்கும் என்பதை அவர் எதிர்பார்த்தே இருந்தார். எனவே உடனடியாக நிவாரணப் பணியில் இறங்கினார். மார்ச் 31-ஆம் நாள் நிவாரணப் பணி தொடங்கியது. நிவேதிதை அதற்குத் தலைவராகவும் செயலாளராகவும் இருந்தார். சதானந்தர் அலுவலக நிர்வாகியாகவும் , சிவானந்தர், நித்யானந்தர், ஆத்மானந்தர் ஆகியோர் துணை நிர்வாகிகளாகவும் செயல் பட்டனர்.
சுவாமிஜியின் உடல்நிலை அப்போது மிகவும் சீர்குலைந்திருந்தது. அது மட்டுமின்றி, அவரது சகோதரத் துறவியான யோகானந்தர் மகாசமாதி அடைந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. அந்தத் துயரிலிருந்தும் அவர் மீளவில்லை. ஆனால் சுவாமிஜி தமது உடல், மனத் துயரங்கள் எதையும் பொருட்படுத்தாமல் , பிளேக் கடுமையாகப் பரவி வந்த குடிசைப் பகுதிகளில் சென்று தங்கினார்.இது அந்த மக்களுக்குத் தைரியத்தை ஊட்டும் என்று கருதினார் அவர்.
நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தக் குடிசைப் பகுதிகளைச் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம் என்பது பற்றி நிவேதிதை எவ்வளவு எடுத்துக் கூறியும் மக்கள் அதனைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. எனவே நிவேதிதை தாமே செயலில் இறங்கினார். ஒரு நாள் காலையில் கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு தெருத்தெருவாகச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். இதுமக்களிடையே மிகுந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவருடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினர். சதானந்தர் பலரிடமும் நன்கொடை வசூலித்து, ஆட்களை நியமித்து, தாமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு தெருக்களைச் சுத்தம் செய்தார். நோயாளிகளுக்கு உதவினார். அவரது தன்னலமற்ற தொண்டைக் கண்ட பல இளைஞர்கள் அவருடன் சேர்ந்து பணியாற்றினர். அவரது வாழ்க்கையினால் மிகவும் கவரப்பட்ட அவர்கள் தங்களை ”சதானந்தரின் நாய்கள்” என்று தாங்களே கூறிக்கொள்ளும் அளவுக்கு அவரிடம் ஈடுபட்டனர். இவ்வாறு அனைவருமாக இந்தக் கொடிய நோயைக் கட்டுப்படுத்துவதில் முனைந்து ஈடுபட்டனர்.
காளியின் முன்னால்
சுதந்திரமாக இருக்க என்னைப்போல் இவ்வளவு தூரம் முயன்றதும் யாருமில்லை. சுற்றிலும் இவ்வளவு கர்ம பந்தங்களும் என்னைப்போல் யாருக்கும் இல்லை. அதிகமாக எது என்னை வழி நடத்தியிருக்கிறது என்று நினைக்கிறாய்- அறிவா, இதயமா- நமது வழிகாட்டி தேவியே, நிகழ்ந்த எதுவும் , நிகழ இருக்கின்றஎதுவும் அவளது ஆணைப் படியே! என்றுஎழுது கிறார் சுவாமிஜி.
1899 மே மாதத்தில் ஒரு நாள். சுவாமிஜிக்குத் திடீரென்று காளிகாட்டில் உள்ள காளி கோயிலுக்குச்செல்ல வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஓரிரு துறவிகளை உடன் அழைத்துக்கொண்டு அவர் கோயிலுக்குச்சென்றார். கோயில் அதிகாரிகள் அவரை அன்புடன் வரவேற்றனர். நேராகச் சென்று தேவியின் திருமுன்பு அமர்ந்தார் சுவாமிஜி. அவரது பெரிய விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது. செம்பருத்திப் பூக்களைக் கையில் எடுத்து அவற்றைச் சந்தனத்தில் தோய்த்து பக்தியுடன் தேவிக்கு அர்ப்பணித்தார். பின்னர் மற்றவர்களையும் அவ்வாறு செய்யுமாறு கூறினார். பல ஸ்தோத்திரங்களை ஓதி தேவியைத் துதித்தார்.
அடுத்த மாதத்தில் மீண்டும் மேலை நாட்டுப் பயணம் செல்ல இருக்கின்ற நிலையில், தேவியின் அருளாசிகளை நாடி அவர் ஒரு வேளை காளி கோயிலுக்குச்சென்று அவளை வழிபட்டிருப்பாரோ!
உலக குரு
மேலை நாடுகள்-
இரண்டாம் பயணம்
சுவாமிஜி இரண்டாம் முறையாக 1899 ஜுன் 20- ஆம் நாள் மேலை நாடுகளுக்குப் புறப் பட்டார். துரியானந்தரும் நிவேதிதையும் அவருடன் சென்றனர். அவரது பயணத்திற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, மிகவும் சீர்குலைந்த அவரது உடல் நிலை முன்னேறும் என்ற நம்பிக்கை. இரண்டு முடிவற்று நீள்கின்ற இந்தியப் பணிகளுக்காகப் பணம் திரட்டுவதற்கான முயற்சி.
துரியானந்தரை மேலை நாடுகளுக்கு வருமாறு சம்மதிக்க செய்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. வைதீகமும் ஆசாரமும் தவமும் அவரது சிறப்பு அம்சங்களாகத் திகழ்பவை. ஆன்மீக உன்னதங்களை அடைந்திருந்த அவர் ” சொல் வன்மையும் கம்பீரக் குரலும் உடையவர் என்று சுவாமிஜியாலேயே புகழப்பட்டவர்.
மேலைநாடுகளுக்குச் செல்வதற்கு அவர் மறுத்தபோது சுவாமிஜி, இதோ பார், ஹரி, நீ அங்கே வந்து ஒன்றும் செய்ய வேண்டாம். அவர்களிடையே வாழ்ந்தால் போதும்” என்று கூறினார். ஆனாலும் பொது வாழ்க்கையை அறவே விரும்பாத துரியானந்தர் மறுத்துவிட்டார். உடனே சுவாமிஜி துரியானந்தரின் அருகில் சென்றார். அவரது தோளில் தமது கைகளை வைத்து ஆதரவாகப் பற்றினார். தமது தலையை அவரது நெஞ்சில் சாய்த்தார். சுவாமிஜியின் கண்களில் கண்ணீர் திரண்டது. விம்முகின்றகுரலில் துரியானந்தரிடம், குருதேவரின் திருப்பணியை நிறைவேற்றுவதற்காக அங்குலம் அங்குலமாக என் வாழ்க்கையையே பணயம் வைத்து, இன்று மரணத்தின் விளிம்பில் நிற்கிறேனே! கைகளைக் கட்டியபடி நீ பார்த்துக்கொண்டு தான் நிற்பாயா?வந்து இந்தப் பாரத்தைச் சுமப்பதில் எனக்குத்தோள் கொடுக்க மாட்டாயா? என்று கேட்டார். சுவாமிஜியின் குரல் கம்மியது. அதற்கு மேலும் துரியானந்தரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை, புறப்பட்டு விட்டார்.
அமெரிக்காவிற்குத் தம்முடன் சில வேதாந்த நூல்களை எடுத்துச்செல்ல விரும்பினார் துரியானந்தர். அதற்கு சுவாமிஜி, புத்தகங்களும் படிப்பும் எல்லாம் அவர்கள் வேண்டிய அளவு பார்த்தாகிவிட்டது. ஷத்திரிய ஆற்றலை அவர்கள் கண்டு விட்டார்கள். பிராமண ஆற்றலை அவர்களுக்குக் காட்ட விரும்புகிறேன்.” என்றார் சுவாமிஜி. இந்தியாவைப் பற்றியும் இந்திய ஆன்மீகத்தைப் பற்றியும் துணிவாக எடுத்துக் கூறி, எதிர்த்து வந்த தடைகளையெல்லாம் தகர்ந்தெறிந்து, புயல் வேகத்தில் அமெரிக்கா எங்கும் சுற்றி சொற்பொழிவுகள் செய்த தம்மை அமெரிக்கர்கள் கண்டு விட்டார்கள். இனி, இந்தியப் பாரம்பரியத்தின் பண்பாட்டில் வளர்ந்த, தியான வாழ்வை முக்கியமாகக்கொண்ட துரியானந்தரை அவர்கள் காண வேண்டும் என்பது சுவாமிஜியின் விருப்பமாக இருந்தது.
நிவேதிதை தமது தங்கையின் திருமண விஷயமாகவும், பெண்கள் பள்ளிக்கான நிதி திரட்டுவதற்காகவும் சுவாமிஜியுடன் செல்வதென முடிவு செய்தார். புறப்படுவதற்கு ஓரிரு வாரங்கள் முன்பே நிவேதிதை அன்னை ஸ்ரீசாரதாதேவி யின் வீட்டில் சென்று தங்கத் தொடங்கினார். அன்னை அவருக்கு ஒரு நாள் விருந்தளித்தார்.
சுவாமிஜி புறப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு பல பிரமுகர்கள் வந்து அவரைச் சந்தித்தனர். சுவாமிஜியும் சென்று சில நண்பர்களைச் சந்தித்தார். ஜீன் 19-ஆம் நாள் இரவு சுவாமிஜிக்கும் துரியானந்தருக்கும் பிரிவுபசார விருந்து அளிக்கப் பட்டது. பலர் பேசினர். சுவாமிஜியும் ”துறவு” அதன் லட்சியமும் செயல் முறையும்” என்பது பற்றி பேசினார். புறப்படுகின்ற அன்று அன்னை தமது வீட்டில் சுவாமிஜிக்கும் துரியானந்தருக்கும் மற்ற துறவியருக்கும் விருந்தளித்தார்.
சுவாமிஜியை வழியனுப்ப பலர் துறைமுகத்திற்கு வந்திருந்தனர். அன்று சாரதானந்தரின் தம்பியும் அவர்களுடன் அமெரிக்கா செல்வதாக இருந்தது. எஸ். எஸ், கோல்கொண்டா என்ற கப்பலில் நால்வரும் ஏறினர். கப்பல் புறப்பட்டது.
இந்தப் பயணம் சுமார் 40 நாட்கள் நீடித்தது. வங்கப் பத்திரிகையான உத்போதனின் ஆசிரியரான திரிகுணாதீதர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சுவாமிஜி இந்தப் பயணம் பற்றிய தமது நினைவுக் குறிப்புகளைத்தொடர்ந்து எழுதி வந்தார். அது ஒரு தொடராக வெளியாயிற்று. சுவாமிஜியின் வரலாற்று அறிவிற்கும் நகைச்சுவை உணர்விற்கும் சான்றாக நிற்பது இந்தக் கட்டுரை. அதுமட்டுமின்றி, இலக்கிய நடையில் கட்டுரைகள் எழுதப் பட்டு வந்த அந்தக் காலத்தில் பேச்சு மொழியில் இதனை எழுதினார் சுவாமிஜி. இதனை மிகவும் புகழ்ந்தார் ரவீந்திரநாத் தாகூர். பின்னாளில் சுவாமிஜியின் இந்தப் பாணி ஒரு முன்னோடியாக ஏற்றுக் கொள்ளப் பட்டு பலரும் அவ்வாறு எழுதத் தொடங்கினர். சுவாமிஜி எழுதிய ”கீழை நாடும் மேலை நாடும்” என்ற கட்டுரையைப் பற்றி தாகூர், சாதாரண பேச்சு மொழியை எப்படி உயிருணர்வு மிக்கதாகவும் ஆற்றல் வாய்ந்ததாகவும் எழுத முடியும் என்பதை இந்தக் கட்டுரையைப் படிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்” என்று குறிப்பிட்டார்.
சென்னை துறைமுகத்தில்
அமெரிக்க செல்லும் வழியில் ஜுன் 24-ஆம் நாள் கப்பல் சென்னையை அடையும் என்ற செய்தி எட்டியதிலிருந்தே சென்னையிலும் சுவாமிஜியைக் காண்பதற்காகப் பெருத்த உற்சாகம் நிலவியது.ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கல்கத்தாவில் பிளேக் நோய் பரவியிருந்த காரணத்தால் யாரும் சென்னையில் இறங்க முடியாமல் போயிற்று. எவ்வளவோ முயன்றும் கப்பலில் உள்ளவர்கள் இறங்குவதற்கோ, சென்னையில் உள்ளவர்கள் கப்பலில் செல்வதற்கோ அரசு அனுமதி கிடைக்கவில்லை. இதில் வினோதம் என்னவென்றால் வெள்ளையர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு கிடையாது. அவர்கள் போவதற்கும் வருவதற்கும் அனுமதி உண்டு. ”சுதேசி” களுக்கு மட்டுமே அந்த அனுமதி மறுக்கப் பட்டது. வெள்ளையன் சுத்தமாக இருப்பவன். சுதேசி” யாராக இருந்தாலும் அவன் அழுக்கானவன். பிளேக் நோயைப் பரப்பி விடுவான்! எனவே அவனுக்கு அனுமதி இல்லை.
தாய் நாட்டிலேயே அடிமைகளாக வாழ்வதன் இந்தக் கொடுமை சுவாமிஜியை நிலைகுலையச்செய்தது. கூண்டில் அடைபட்ட சிங்கம்போல் அவர் அங்குமிங்கும் உலாவினார், அவர்கள் ஏன் என்னைக் கைது செய்யக் கூடாது? ஏன் உன் உயிரை எடுக்கக் கூடாது? என்று மீண்டும் மீண்டும் கூறினார். உடன் இருந்த துரியானந்தர், ஏன்? உங்களைக்கைது செய்வதாலோ கொல்வதாலோ என்ன நடந்து விடும்? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, இந்த நாடு முழுவதுமே என்னை எதிர்நோக்கி நிற்பதை நீ பார்க்கவில்லையா? எனக்கு எதிராக ஆங்கிலேயர்கள் ஏதாவது செய்தால் நாடு முழுவதுமே ஒரு சீறிக் கிளம்பிவிடும்” என்றார்.
எப்படியானாலும் அனுமதி கிடைக்கவில்லை. எனவே நூற்றுக்கணக்கான பக்தர்களும் துறவியரும் சிறு சிறு படகுகளில் சென்றுகப்பல் தளத்திற்கு வந்த சுவாமிஜியைக் கண்டு மகிழ்ந்தனர். ராமகிருஷ்ணானந்தரும் நிர்பயானந்தரும் பழங்கள், மவர்கள் என்று பல்வேறு காணிக்கைகளைக்கொண்டுசென்றிருந்தனர். சென்னை அன்பர்கள் பலரும் சுவாமிஜியை தரிசிக்கச் சென்றிருந்தனர். சுவாமிஜியும் கப்பல் தளத்தின் இரும்புத் தடுப்பில் சாய்ந்தவாறே அவர்களுடன் பேசினார். ராமகிருஷ்ணானந்தர் கேட்டிருந்ததன் படி சுவாமிஜிமண் ஜாடியில் கங்கை நீர் கொண்டு வந்திருந்தார். அதை ஒரு கயிற்றில் கட்டி கீழே கொடுத்தார். பின்னர் அந்தக் கயிற்றை வெட்டுவதற்காக கத்தி ஒன்றையும் மேலிருந்து கீழே போட்டார் சுவாமிஜி.
அளசிங்கரிடம் சுவாமிஜியின் அன்பு
சுவாமிஜியிடம் பேசுகின்ற வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதற்காக அளசிங்கர் கொழும்பிற்குச் செல்வதற்கான டிக்கட் வாங்கிக்கொண்டு ஒரு பயணியாக உள்ளே சென்றுவிட்டார். ஜாதிக் கட்டுப் பாடுகள் அவரைக் கடற்பயணம் செய்ய அனுமதிக்காத போதிலும் சுவாமிஜியிடம் கொண்டஈடுபாட்டின் காரணமாக அவர் இலங்கைக்குச் சென்றார். பிரம்மவாதின் பத்திரிகைபற்றி சுவாமிஜியிடம் ஆலோசனை கேட்பதும் அவரது நோக்கமாக இருந்தது.
மழித்த தலை, குடுமி, வேட்டி, நெற்றியில் தென்கலை நாமம் என்று அளசிங்கர் சுத்த வைதீக பிராமணராக, எதைப் பற்றியும், கவலைப் படாதவராக கப்பல் தளத்தில் உலவியதும், கப்பலிலுள்ள எதையும் சாப்பிடக் கூடாது என்பதற்காக தாம் கொண்டு வந்திருந்த பொரி, கடலை போன்றவற்றை அவ்வப்போது கொறித்துக் கொண்டதும் பார்ப்பவர்களுக்கு வினோதமாக இருந்தது.
சுவாமிஜியிடம் அளசிங்கர் அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்தார் என்றால் சுவாமிஜி அளசிங்கரிடம் கொண்ட அன்பு எல்லையற்றதாக இருந்தது. ஒரு நிகழ்ச்சியைக் காண்போம். மெக்லவுட் பம்பாயில் அளசிங்கரைச் சந்தித்திருந்தார். அவர் ஒரு வைதீக இந்தியரைச் சந்திப்பது அது வே முதல் தடவை. பஞ்சகச்சம், குடுமி, நெற்றியில் நாமம் போன்றவை மெக்லவுட்டிற்குப் புதியவை. புதுமையானவை. அளசிங்கரை விமர்சிக்கவோ கேலி செய்யவோ கூடாது என்று சுவாமிஜி எச்சரித்திருந்தும் மெக்லவுடால் தம்மைக் கட்டுப் படுத்திக் கொள்ளஇயலவில்லை. காஷ்மீரில் இருந்தபோது ஒருநாள் அவர் பேச்சுவாக்கில், என்ன அறிவீனம்! இந்த அளசிங்கர் இப்படி நெற்றியில் படம் வரைந்திருக்கிறாரே! என்று கூறிவிட்டார். அவ்வளவு தான், சுவாமிஜி ஆத்திரத்துடன் திரும்பி, வாயை மூடு, இனி அவனைப் பற்றி ஏதாவது சொன்னால் அப்போது தெரியும் சேதி! அப்படி நீ என்ன பெரிதாகச் செய்து சாதித்து விட்டாய்? என்று சாடினார். மெக்லவுட்டின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அளசிங்கர் வீடு வீடாகச்சென்று தாம் அமெரிக்கா செல்வதற்காகப் பணம் சேர்த்ததும், தமது வெற்றிகளுக்குப் பின்னால் அவரது தன்னலமற்ற பணியின் பங்கு இருப்பதும் சுவாமிஜி அறிந்தவை. மெக்லவுட் அறியாதவை. அதனால் தான் அவரைப் புறச் சின்னங்களுக்காக விமர்சிக்கக் கூடாது என்று சுவாமிஜி கூறினார். அதை மீறி மெக்லவுட் செயல்பட்ட போது அவருக்கு ஆத்திரம் வந்தது
-.
கொழும்பில்
கப்பல் கொழும்பை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த ஜீன் 27 மாலையை இப்படி வர்ணிக்கிறார் நிவேதிதை. இது அமைதியின் வேளை. ஒவ்வொரு நாளும் கதிரவனின் ஒளி கரைகின்ற இந்த வேளையில் கடல் கன்னி ஒரு புது ராகம் இசைக்கிறாள்- அது ஒரு சோக ராகம்! அலைகளின் ஓசையுடன் கலந்து கரைகின்ற ஒரு மெல்லிய இழையாக அது ஒலிக்கின்றது. ஒவ்வோர் இரவிலும், இரவு முழுவதிலும் அவளது சோகத்தின் முணு முணுப்பாக இது ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இன்று மட்டும் அவள் ஏதோ ஒரு பெயரை உச்சரிப்பது போல் உள்ளது. அது- சீதா” என்ற பெயர்! அலைகள் உயர்ந்து எழுந்து கப்பலில் மோதும்போதோ அது ஜெய சீதா ராம்! சீதாராம்! என்று ஒலிப்பது போல் உள்ளது. மீண்டும் மீண்டும் கேட்டபடி அது உங்கோ தொலைதூரத்தில் மௌனத்தில் கரைகிறது.
ஜுன் 28-ஆம் நாள் கப்பலில் கொழும்பை அடைந்தது. சென்னைரயப் போலன்றி அங்கே சுவாமிஜி இறங்க அனுமதி கிடைத்தது. நாதஸ்வர மேளங்களுடன் சிறப்பாக வரவேற்கப் பட்டார் அவர். கட்டுக் கடங்காத கூட்டம் கூடியிருந்தது. ஜெய சிவா! ஜெயசிவா! என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. சுவாமிஜியைச் சிவ பெருமானின் அவதாரமாகவே அவர்கள் கொண்டாடினர். பின்னர் சுவாமிஜிக்கு பழமும் பாலும் அளித்தனர். அன்று முழுவதும் சுவாமிஜி இலங்கையில் இருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிளகுத் தண்ணி” யும் (ரசம்), இளநிரும் சாப்பிட்டேன்” என்று எழுதுகிறார் அவர்.
பயணம்-
இலங்கையிலிருந்து ஏடன், நேப்பிள்ஸ் வழியாகப் பயணம் தொடர்ந்தது. படிக்கவோ, உத்போதன் பத்திரிகைக்காக எழுதவோ, நிவேதிதை மற்றும் துரியானந்தருடன் பேசவோ செய்தபடி இருந்தார் சுவாமிஜி. அவருடைய உடல்நிலை தேறியது. அவருக்கென்று உடற்பயிற்சிகள் இருந்தன. தாம் தவறினால் நினைவூட்டுமாறு துரியானந்தரிடம் கூறவும் செய்திருந்தார் அவர். ஆரம்பத்தில் சில நாட்கள் தவறாமல் உடற் பயிற்சி செய்தார், பின்னர், பேசிக்கொண்டே இருப்பதில் உடற்பயிற்சியை மறந்துவிடுவார். துரியானந்தர் நினைவூட்டினால், இன்று முடியாது. இப்போது என் உடல்நிலை நன்றாகத் தான் இருக்கிறது. அது மட்டுமின்றி, நான் இப்போது நிவேதிதையுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவள் ஓர் அயல்நாட்டுப் பெண். என்னிடமிருந்து இவற்றையெல்லாம் கற்றுக் கொள்வதற்காகச் சொந்த நாட்டையே விட்டு வந்திருக்கிறாள். அவள் நல்ல அறிவாளி. அவளுடன் பேசுவதில் நானும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று ஏதே தோ காரணம் கூறி உடற்பயிற்சியைத் தட்டிக் கழித்துவிடுவார். ஆனால் எப்படியோ அவரது உடல்நிலை மிகவும் முன்னேறியது.
அலைகள் ஓய்ந்திருக்கின்ற சில வேளைகளில் சுவாமிஜி கப்பல் தளத்தில் உலவுவார். அரசிளங்குமாரனைப்போன்ற கம்பீரமான நடை, வசீகரமான உடை, நிலவின் கிரணங்களைப்போன்ற மேனி வண்ணம், தன்னம்பிக்கையும் துணிச்சலும் திரண்டு நிற்பது போன்ற தோற்றம், கீழை நாடுகளின் பெருமைக்கும் உறுதிக்கும், சான்றாகத் திகழ்கின்ற வடிவம்” என்று அவரது தோற்றத்தை வர்ணிக்கிறார் நிவேதிதை.
இந்த நாட்களை ஒரு தீர்த்த யாத்திரையாகவேக் கருதினார் நிவேதிதை. சுவாமிஜியுடன் இந்த ஆறுவாரப் பயணம் எனது வாழ்க்கையின் மிக மிக உன்னதமான நாட்கள் ஆகும். உலகைச் சுற்றி வருகின்ற சுற்றுலா கூட குருவுடன் செல்வதானால் தீர்த்த யாத்திரையாகிவிடும்” என்று எழுதுகிறார் அவர். சுவாமிஜி பேசுவதைக்கேட்பதும், அவரது திருவடிகளின் கீழ் வாழ்வதும் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவை என்று நினைவு கூர்கிறார் அவர். சிவராத்திரி, விக்கிரமாதித்தனின் சிம்மாசனம், பிருதிவிராஜ், புத்தர்என்று கதைகள் ஒரு புறம். ஜாதி, மனித குலம், வரலாறு என்றெல்லாம் சிந்தனைகள் ஒரு புறம்! இவ்வாறு தொடர்ந்தன சுவாமிஜியின் சிந்தனை அலைகள்! சிலவேளைகளில் அவரது சிந்தனை ஓட்டத்தை தொடர முடியாமல் திணறு வாராம் நிவேதிதை. அப்போதும் சுவாமிஜி, இதற்கு மேலும் என்னால் முடியாது” என்றுகூறிவிடுவார். சுவாமிஜியும் நிறுத்திவிடுவார். சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்வார்! சுவாமிஜி தன்னிடம் கூறுபவை அனைத்தும் தனக்காக அல்ல, பிறருக்காக, அவர் கூறுவதை ஏற்று வாங்கி பிறருக்கு அளிக்க வேண்டியது தன்னுடைய கடமை என்று உணர்ந்தார் நிவேதிதை. சுவாமிஜி கூறியவற்றைக் குறிப்பெடுத்து, தமது The Master as I Saw Him என்ற நூலில் சேர்த்தார் அவர்.
கப்பலில் பயணம் செய்தவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் போகேஷ். திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியிருந்தன. தன் மனைவியுடனும் 6 குழந்தைகளுடனும் வந்திருந்தார் அவர். குழந்தைகளைக் கப்பல் தளத்தில் விட்டு விட்டு அவர்கள் மணிக்கணக்காக எங்காவது மூலையில் அமர்ந்து பேசுவதும், சிரிப்பதும் களிப்பதுமாகப்பொழுது போக்கினார்கள். போகேஷ் தம்பதிகளின் போக்கு சுவாமிஜிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. தமது எரிச்சலைத் தமது பயணக் கட்டுரையில் வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.
எங்கள் கப்பலில் இரண்டு புரோடஸ்டன்ட் மிஷனரிகள் பயணம் செய்கின்றனர். ஒருவர் அமெரிக்கர். குடும்பத்துடன் பயணம் செய்கிறார், பெயர் போகேஷ். அவருக்குத் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. பிள்ளைகள் ஆறு. இது கடவுளின் விசேஷக் கருணை என்று கப்பல் பணியாளர்கள் கூறுகின்றனர்.ஆனால் பிள்ளைகள் அவ்வாறு நினைக்க வழியில்லை என்றுதான் தோன்றுகிறது. மிகஸ் போகேஷ் தளத்தில் ஓர் அழுக்கு துணியை விரித்து அதில் பிள்ளைகளைப் படுக்க வைத்துவிட்டுப்போய் விடுவார். அவர்கள் உருண்டு, புருண்டு , உடம்பையெல்லாம் அழுக்காக்கிக்கொண்டு , அழுது கூச்சலிட்டுத் தொந்தரவு செய்கின்றனர். தளத்தில் நடக்கவே பயணிகள் பயப்படுகின்றனர். எங்கே அந்தக் குழந்தைகள் மீது விழுந்து, அவற்றின் உயிரைப் பறிக்க நேருமோ என்ற பயம் தான் காரணம்! இளைய குழந்தையை ஒரு தொட்டிலில் படுக்கவைத்து விட்டு, போகேஷும் மனைவியும் கட்டிப் பிடித்துக்கொண்டு ஒரு மூலையில் மணிக்கணக்கில் ஒடுங்கிக் கிடக்கின்றனர். இது தான் ஐரோப்பிய நாகரீகம்! பொது இடத்தில் வாயைக் கொப்பளிப்பதும், பல் துலக்குவதும் கூட எவ்வளவு அநாகரீகமான செயல்! இவற்றைக் கூடத் தனியிடத்தில் அல்லவா செய்ய வேண்டும்! இதில் கட்டிப் பிடிப்பதையும் கூடிக் குலவுவதையும் பொது இடங்களில் தவிர்ப்பது எவ்வளவு நாகரீகமாக இருக்கும்! இந்த நாகரீகத்தின் பின்னால் தான் நீங்கள் ஓடுகிறீர்கள். புரோடஸ்டன்ட் மதம் வட ஐரோப்பாவிற்கு எந்த அளவுக்கு நன்மை செய்திருக்கிறது. என்பதை அறிய வேண்டுமானால் இந்த புரோடஸ்டன்ட் மிஷனரி களைத் தான் பார்க்க வேண்டும். பத்துக்கோடி ஆங்கிலேயர்களும் இறந்து, இந்த மிஷனரிகள் மட்டும் உயிரோடிருந்தால் போதும், இருபது ஆண்டுகளில் மற்றுமொரு பத்துக்கோடி மக்கள் உருவாகி விடுவார்கள்.
ஆனால் அந்தக் குழந்தைகளின் நிலைமையைக் கண்ட நிவேதிதையால் அவர்களை அப்படியே விட முடியவில்லை. எனவே ஒரு தாய்போல் அவர்களைப் பராமரிக்கத் தொடங்கினார் அவர். ”டூட்டில் என்ற சிறுமி தனது தந்தையுடன் பயணம் செய்கிறாள்” தாய் இல்லை. டூட்டிலுக்கும் போகேஷின் குழந்தைகளுக்கும் நமது நிவேதிதை தாயாகி விட்டாள்” என்று எழுதுகிறார் சுவாமிஜி.
லண்டனில்
42-நாள் பயணம் ஜுலை 31-ஆம் நாள் லண்டனில் நிறைவுற்றது. காலை 6 மணி வேளையில் கப்பல் லண்டனை அடைந்தது. இரண்டரை வருடங்களுக்கு முன்பு நூற்றுக் கணக்கானோர் வந்து கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த அந்த இடத்தில் இப்போது சுவாமிஜியை வரவேற்க நிவேதிதையின் தாய், சகோதரி, மிஸ் பேஸ்டன் என்று மிகச்சிலரே இருந்தனர். அமெரிக்காவிலிருந்து அவரது சீடர்களான கிறிஸ்டைனும், மேரி ஃபங்கேயும் வந்திருந்தனர். சுவாமிஜியின் லண்டன்பணிகளுக்கு நிர்வாகியாக இருந்த ஸ்டர்டிகூட வரவில்லை. தாம் எங்கோ வெளியூர் செல்வதாக கூறிவிட்டு அவர் சென்று விட்டிருந்தார். இங்கிலாந்து அன்பர்கள் யாரும், குறிப்பாக ஸ்டர்டி, அங்கே வராதது, லண்டன் பணிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதை சுவாமிஜிக்கு உணர்த்தியது.
ஸ்டர்டியின் தவறான போக்கு-
சுவாமிஜி 1896-இல் லண்டனில் இருந்தபோது பணிகள் மிகச் சிறப்பாக நடை பெற்றன. பொறுப்பை ஸ்டர்டியிடம் ஒப்படைத்துவிட்டு அமெரிக்காவிற்குச் சென்றார் சுவாமிஜி. ஆனால் ஸ்டர்டியால் பணிகளைச் சிறப்பாக நடத்த இயலவில்லை. ஒரு தலைவராக ஏற்க மற்றவர்கள் தயாராக இல்லை. வருமானம் குறைந்தது. இதற்குள் சுவாமிஜி இந்தியாவிற்கு வந்து விட்டிருந்தார். பணிகள் முற்றிலுமாக நின்று போவதற்கு முன்னால் ஒரு முறை சுவாமிஜி, அங்கே வந்தால் நன்றாக இருக்கும் என்றுவிரும்பினார் ஸ்டர்டி. அதற்காக 1897மார்ச்- ஏப்ரலில் சுவாமிஜியை அழைக்கவும் செய்தார். நிலைமையை நன்றாகப் புரிந்து கொண்டிருந்த சுவாமிஜி அதற்கு முயன்றார். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் டாக்டர்கள் அவரது பயணத்தைத் தடுத்தனர்.
சுவாமிஜி வேண்டுமென்றே இங்கிலாந்துப் பயணத்தைத் தவிர்த்து விட்டதாக எண்ணினார் ஸ்டர்டி.லண்டன் பணிகள் நாளுக்கு நாள் மோசமாகி, ஏறத்தாழ முற்றிலுமாக அழிந்து போகின்ற நிலைக்கு வந்தபோது ஸ்டர்டி சுவாமிஜியின் மீது ஆத்திரம் கொண்டார். அவர் வராதது தான் இத்தகைய நிலைமைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார். சுவாமிஜியின் மீது அவரது மனக் கசப்பு வளர்ந்தது. பின்னர் சுவாமிஜியிடம் குறை காண ஆரம்பித்தார் அவர், சுவாமிஜியின் கருத்து, செய்தி, செயல்முறை எல்லாமே தவறு. அவரது வாழ்க்கை முறையும் தவறு என்றெல்லாம் எழுதத் தொடங்கினார். ஆனால் இவை எதுவும் சுவாமிஜி அவர் மீது கொண்ட அன்பை மாற்றவில்லை. பரிவுடன் அனைத்துக் கடிதங்களுக்கும் பதிலளித்தார். எதனாலும் ஸ்டர்டியின் மனத்தை மாற்ற இயலாது என்று கண்டபோது கடிதப் போக்குவரத்தை ஒரு முடிவுக்குக்கொண்டு வந்தார் சுவாமிஜி.
1899 நவம்பரில் அவர் ஸ்டர்டிக்கு எழுதிய கடிதத்தில், எனது நடத்தை சரியானதென்று நிரூபிப்பதற்காக எழுதப் படுவதல்ல இந்தக் கடிதம்” என்று ஆரம்பித்து,, ஸ்டர்டி, என் இதயம் வேதனைப்படுகிறது. எல்லாம் எனக்குப் புரிகிறது. உங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்களின் பிடியில் நீங்கள் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். பண்டைய இந்தியாவைப் பற்றி நீங்கள் ஏராளம் சொன்னீர்கள், ஸ்டர்டி, அந்த இந்தியா இன்றும் வாழ்ந்து வருகிறது. அழிந்து போகவில்லை. நான் அந்த இந்தியாவின் பிள்ளைகளுள் மிகச் சிறியவன், நான் உங்களை நேசிக்கிறேன். இந்திய அன்பால் நேசிக்கிறேன். இந்த மயக்கத்திலிருந்து நீங்கள் வெளிவர உதவுவதற்காக ஓர் ஆயிரம் உடல்களையும் நான் விட்டுத் தருவேன்” என்று எழுதினார் சுவாமிஜி.
இப்போது ஸ்டர்டி ஒரு தடவை வந்து சுவாமிஜியைப் பார்க்கவே செய்தார்.இருப்பினும் அவரால் மனம் திறந்து எதையும் பேச இயலவில்லை. லண்டன் பணிகள் இவ்வாறு வளர்ச்சி குன்றிய நிலையிலும், அமெரிக்காவிலிருந்து இருவர் தம்மைக் காண வந்தது சுவாமிஜியின் புண்பட்ட இதயத்திற்கு இதமாக இருந்தது.
சுவாமிஜியும் துரியானந்தரும் விம்பிள்டனில் நிவேதிதையின் வீட்டில் தங்கினர். ஆனால் அவர்களின் வீடு சிறியதாக இருந்ததால், ஓரிரு நாட்களில் அருகிலுள்ள மற்றொரு வீட்டில் தங்கினர். சாரதானந்தரின் சகோதரர் ஒரு சில நாட்கள் அங்கே தங்கிவிட்டுபோஸ்டனுக்குப் புறப்பட்டார்.
இங்கிலாந்துப் பணிகள் தடைப்பட்டது. சுவாமிஜியின் மனத்தைக் கட்டாயம் பாதித்திருக்க வேண்டும். அது அவரது உடல்நிலையிலும் பிரதிபலித்தது. கப்பல் பயண வேளையில் நன்றாக இருந்த அவரது உடல்நிலை இப்போது தளர்ந்தது. ஐந்து நிமிடங்கள் நடக்கவே அவருக்கு மூச்சு வாங்கியது. நிவேதிதையின் தாயும் சகோதரியும் சகோதரனும் சுவாமிகள் இருவரையும் தங்கள் வீட்டில் ஒருவராகவே கவனித்துக் கொண்டனர். தினமும் போவதற்கு சுவாமிஜியின் உடல்நிலை அனுமதிக்க வில்லை என்றாலும் சுவாமிஜி அவ்வப்போது நிவேதிதையின் வீட்டிற்குச்சென்று வந்தார்.
நிவேதிதையின் சகோதரரான ரிச்மண்ட் இள வயதினராக இருந்தார். சுவாமிஜியை ஏசு கிறிஸ்துவின் பிரதிபிம்பமாகக் கண்டார் அவர். ”கடவுள்”உலக வாழ்க்கை என்று எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு சுவாமிஜியிடம் கிடைக்கும்” என்று அவர் நம்பினார். எனவே மனம் திறந்து அவரிடம் பேசினார்.
சுவாமிஜியின் தெய்வீகத்தால் மிகவும் கவரப் பட்டார் ரிச்மண்ட். அவரது அழைப்பிற்கு என் சகோதரி அடிபணிந்தாள் என்றால் அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.ஏனெனில் நான் அவரைக் கண்டிருக்கிறேன். அவரது ஆற்றலை உணர்ந்திருக்கிறேன். அவரைக் கண்டால்போதும், அவர் பேசுவதைக்கேட்டால் போதும், யாரும் இதைப் புரிந்து கொள்ள முடியும். அவர் உண்மையைப்பேசுகிறார், அதையும், ஒரு பண்டிதராகவோ, மதபோதகராகவோ அல்லாமல், சொந்த உறுதிப் பாட்டின் ஆதாரத்தில் பேசுகிறார். அவர் தம்முடன் உறுதிப் பாட்டைக்கொண்டு வருகிறார். நம்பிக்கையையும் அபயத்தையும் வழங்குகிறார்” என்று பின்னாளில் எழுதினார் ரிச்மண்ட்.
சுமார் 15 நாட்கள் லண்டனில் தங்கிய சுவாமிஜி ஆகஸ்ட் 16-ஆம் நாள் அமெரிக்காவிற்குப் புறப்பட்டார். துரியானந்தரும் இரண்டு அமெரிக்கப்பெண்களும் அவருடன் சென்றனர். தங்கையின் திருமணத்திற்காக நிவேதிதை விம்பிள்டனில் தங்கிவிட்டார்.
மீண்டும் பத்து நாள் கப்பல் பயணம்.இந்த முறை சுவாமிஜியின் அருகில் இருக்கும் பேறு கிறிஸ்டைனுக்கும் மேரி ஃபங்கேக்கும் கிடைத்தது. அவர்களுக்கும் அந்த நாட்கள் மறக்க முடியாதவையாக அமைந்தன. தினமும் காலையில் கீதை, பாராயணம், விளக்கம், வேத மந்திரங்கள் ஓதுதல் என்று நாட்கள் கழிந்தன. கடல், அலைகள் இன்றி அமைதியாகஇருந்தது. வெண்ணிலாவின் தண்ணொளி இரவுகளை மிகவும் இனிமையானதாக ஆக்கியது. அந்த இரவின் தனிமையில் சுவாமிஜி தம்முள் மூழ்கியவராக கப்பல் தளத்தில் கம்பீரமாக நடப்பார். ஒரு நாள் இப்படி சிறிது நேரம் நடந்தவர் திடீரென்று திரும்பி அமெரிக்க பக்தைகளைப் பார்த்து, இந்த மாயை இவ்வளவு அழகாக இருக்கிறது. என்றால் இந்த மாயைக்கு பின்னாலுள்ள உண்மை எவ்வளவு அற்புதமான அழகு வாய்ந்ததாக இருக்கும்! என்றார்.
ஒரு பௌர்ணமி நாள். முழு நிலவு வெள்ளித் தட்டாக மென்மையான ஒளிக் கிரணங்களைச் சிந்திக் கொண்டிருந்தது. அந்த இரவையும் அதன் அழகையும் நீண்ட நேரம் மௌனமாகப் பருகினார் சுவாமிஜி. பிறகு திரும்பி நிலவையும் கடலையும் சுட்டிக்காட்டி, ”கவிதைகள் எதற்கு? கவிதையின் சாரம் நம் முன் விரிந்து கிடக்கும்போது கவிதைகள் ஏன்? என்று கேட்டார்.
ரிஜ்லிமேனரில்
சுவாமிஜி 1899 ஆகஸ்ட் 28-ஆம் நாள் நியூயார்க்கை அடைந்தார். குறித்த நேரத்திற்குச் சில மணிநேரத்திற்கு முன்பே கப்பல் துறைமுகத்தை அடைந்துவிட்டதால் அவரை வரவேற்க ஓரிருவர் மட்டுமே இருந்தனர். அபேதானந்தர் ஊரில் இல்லாததால் அவரும் வரவில்லை. இந்தியாவிலிருந்து மெக்லவுடிற்காக ஒரு குப்பியில் சட்னியை கொண்டு வந்திருந்தார் சுவாமிஜி. அதனைக் கையில் பிடித்தவாறே கப்பலிலிருந்து இறங்கினார் அவர்.
நியூயார்க்கிலிருந்து சுமார் 90 மைல் தொலைவில் அமைந்திருந்த அழகிய வீடான ரிஜ்லிமேனரில் சுவாமிஜியும் துரியானந்தரும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது ஒரு பெரிய வீடு. சுவாமிஜிக்கு ஏற்கனவே அறிமுகமான லெக்கட்டின் வீடு அது. வீட்டின் முக்கியப் பகுதியிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு வீடு சுவாமிகள் இருவருக்கும் ஒதுக்கப் பட்டிருந்தது. சுவாமிஜி தங்கியதன் காரணமாக அது, சுவாமிஜியின் வீடு” என்று அழைக்கப் படலாயிற்று. ஐந்து அறைகளும் மாடியும் கொண்ட வீடு அது.
துரியானந்தரின் பக்தி
துரியானந்தர் சுவாமிஜியின் சகோதரச் சீடராக இருந்தாலும் அவர் சுவாமிஜியிடம் கொண்டிருந்த பக்தி அலாதியானது. அவர் சுவாமிஜியின் முன்பு நடந்து கொள்வதைப் பார்த்தால் சுவாமிஜியின் சீடர் என்றே தோன்றும். ரிஜ்லி மேனரில் அனைவரும் அவரவருக்குரிய அறைகளில் தங்க வைக்கப் பட்ட பிறகு, ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என்பதைப் பார்ப்பதற்காக மிசஸ் லெக்கட் ஒவ்வோர் அறையாகச் சென்றார். துரியானந்தரின் அறையில் சென்று பார்த்தால் அவர் தமது படுக்கையைத் தரையில் விரித்திருந்தார். ”ஏன் சுவாமி, கட்டில் சரியில்லையா? என்று அவரிடம் கேட்டார். அதற்குத் துரியானந்தர், கட்டில் சரியாகத் தான் இருக்கிறது. ஆனால் சுவாமிஜி படுக்கின்ற சம உயரத்தில் நானும் படுக்க முடியுமா? அதனால் தான் படுக்கையைக்கீழே விரித்திருக்கிறேன்” என்று கூறிவிட்டார். மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானார் மிசஸ் லெக்கட். அவர் துரியானந்தரை சுவாமிஜியின் சீடர் என்றே நினைத்தார். சாராவிற்கு அவர் எழுதிய கடிதத்தில், ”சுவாமிஜிக்கு இந்த ஓய்வு நல்ல அமைதியைத் தருவதாக உள்ளது. அவர் தமது சீடருடன் ( துரியானந்தர்) தனியாக இருப்பதையே விரும்புகிறார். அந்தச் சீடரும் சுவாமிஜியின் ஒவ்வோர் அசைவையும் தேவைகளையும் கவனித்து, புரிந்து கொண்டு காட்டுகின்ற பக்தி வியப்பூட்டுவதாக உள்ளது” என்று எழுதுகிறார்.
அன்பும் நம்பிக்கையும் ஒரு பக்கம் இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும், தங்கள் ஆற்றல் முழுவதையும் வெளியே கொண்டு வந்து செயலில் ஈடுபட வேண்டும் என்பது சுவாமிஜியின் ஆர்வமாக இருந்தது. யாரும் தம்மைச் சார்ந்திருப்பதை அவர் விரும்பவில்லை. துரியானந்தரையும் அவ்வாறே காண விரும்பினார் அவர். அதற்காகத் துரியானந்தருக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் அவர். துரியானந்தர் கூறுகிறார்.
அமெரிக்காவிற்குப் போயிருந்த வேளை, ரிஜ்லிமேனரில் தங்கியிருந்தோம். திடீரென்று ஒரு நாள் சுவாமிஜி என்னை அழைத்து, என்னிடம் காசு பணம் அதிகம் கிடையாது. சான் பிரான்ஸிஸ்கோ சென்று நண்பர்களுடன் தங்கப் போகிறேன். இனி, உன் பாதையைப் பார்த்துக்கொள்” என்றார். நான் சொந்தக் காலில் நிற்கப் பழகுவதற்காக அவர் ஒரு வாய்ப்புத் தருகிறார்” என்பதைப் புரிந்து கொள்ளாமல் நான் அவரிடம் கோபம் கொண்டேன். ஆனால் எதையும் வெளிக் காட்டாமல் ”நல்ல காரியம்” என்று மட்டும் கூறினேன். எங்கே போவாய்? என்று கேட்டார் சுவாமிஜி. அது பற்றி நான் யோசித்திருக்கவில்லை. மான்ட் கிளேயரைச்சேர்ந்த மிசஸ் ஹுலர் என்னை அழைத்திருந்தது. திடீரென்று நினைவுக்கு வந்தது. உடனே, மிசஸ் ஹுலரிடம் போவேன்” என்றேன். நல்லது, அங்கே ஒரு மடம்-கிடம் ஏதாவது ஆரம்பி” என்றார் சுவாமிஜி. என்னுள்ளே கோபம் பொங்கிக் கொண்டிருந்தது. அவர் மடம் ஆரம்பிக்குமாறு கூறியதும் சட்டென்று, மடம்- கிடம் எதுவும் என்னால் ஆரம்பிக்க முடியாது. போய் வெறுமனே தங்குவேன்” என்று ஆத்திரத்துடன் கூறினேன். சுவாமிஜி புன்னகையுடன், அதைத்தான் மடம் ஆரம்பித்தல் என்பார்கள். நீங்கள் எங்கே தங்குவீர்களோ அங்கே மடம் தானாக உருவாகிவிடும்” என்றார். சகோதரத் துறவியரிடம் அவருக்கு அவ்வளவு நம்பிக்கையும் அன்பும் இருந்தது.
ரிஜ்லிமேனர் நாட்கள்
சுவாமிஜி ரிஜ்லிமேனரில் சுமார் இரண்டரை மாதங்கள் தங்கினார். அந்த நாட்கள் சுவாமிஜிக்கு நல்ல ஓய்வை அளித்தன. நண்பர்களும் தெரிந்தவர்களுமாகப் பலர் வந்து சுவாமிஜியைச் சந்தித்தனர். அவரும் அவர்களுடன் நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தார். அபேதானந்தர் வந்து சுவாமிஜியுடன் சுமார் பத்து நாட்கள் தங்கினார். நியூயார்க்கில் மடத்திற்கென்று சொந்தமாக ஒரு கட்டிடமும் இடமும் அமைந்தது பற்றி அவர் சுவாமிஜியிடம் தெரிவித்தார். சுவாமிஜி மிகவும் மகிழ்ந்தார். இங்கிலாந்தில் தங்கிவிட்ட நிவேதிதை தமது தங்கையின் திருமணத்திற்குப் பிறகு வந்து சுவாமிஜியுடன் சேர்ந்து கொண்டார். தமது இந்தியப் பபணிகளுக்காக இங்கிலாந்தில் நன்கொடை திரட்ட அவர் திட்ட மிட்டிருந்தார். ஆனால் அவரது திட்டத்திற்கு இங்கிலாந்தில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஹேல் சகோதரிகள், சாராஎன்று பலரும் சுவாமிஜியைச் சந்தித்தனர். லெக்கட் தம்பதியர் சுவாமிஜியிடம் மிகுந்த அன்பு காட்டினர். மெக்லவுட் சுவாமிஜியிடம் கொண்டிருந்த இடுபாடு அலாதியானது.
சுவாமிஜியின் ரிஜ்லிமேனர் நாட்கள் மிகவும் சிறப்பாக அமைந்தன. சிறந்த டாக்டர் ஒருவர் வந்து அவருக்குச் சிகிச்சை அளித்தார். இதனால் உடல்நிலையும் வெகுவாகத் தேறலாயிற்று. லெக்கட் தம்பதியினரின் குடும்ப டாக்டர் வந்து என்னைக் கவனித்து க் கொள்கிறார். எனக்கு இதய நோய் எதுவும் இல்லை. சிறிது நரம்புத் தளர்ச்சியே உள்ளது, அதுவும் முறையான உணவினால் சரியாகி விடும் என்று அவர் கருதுகிறார். என்று எழுதுகிறார் சுவாமிஜி.
ரிஜ்லிமேனரில் எப்போதும் ஒரு புனிதம் கலந்த அமைதி நிலவியது. அத்துடன் படிப்பு, பேச்சு. நகைச்சுவை என்று நாட்கள் கழிந்தன. தினமும் அதிகாலையில் சுவாமிஜி வீட்டைச்சுற்றியுள்ள பெரிய தோட்டத்தில் நடப்பார். அங்கே ஓர் ஓரத்தில் நின்றிருந்த ஓக் மரத்தின் கீழ் அமர்ந்துதியானம் செய்வார். எழுந்து மீண்டும் நடப்பார். வழியில் இரண்டு முதல் ஆறு வயதான மூன்று குழந்தைகளுடன் சிறிது நேரம் விளையாடுவார். அவர் களுக்குக் காசு கொடுப்பார். சிலவேளைகளில் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடுவார். சில மாலைகளில் அருகிலுள்ள மலைக்குச் செல்வார் அல்லது புல்வெளிகள் மீது நடந்து மகிழ்வார். சாப்பாட்டு நேரம், சில வேளைகளில் நகைச்சுவையும் கொண்டாட்டமுமாக இருக்கும். சிலவேளைகளிலோ சுவாமிஜி மிக உயர்ந்த விஷயங்களைக் கூறி மற்றவர்களைப் பரவசப்படுத்துவார். சாக்லெட் ஐஸ்கிரீம் அவருக்கு மிகவும் பிடிக்கும். மாலைவேளைகளில் அனைவரும் சுவாமிஜியின் முன்பு கூடுவார்கள். குளிருக்கு இதமாக அடுப்பு எரிந்து கொண்டிருக்கும். வாயு விளக்குகளிலிருந்து மெல்லொளி பரவிக் கொண்டிருக்கும். சுவாமிஜி பேசுவார். அந்தச் சூழ்நிலையே மாறிவிடும்.அனைத்தும் புனிதத்தில், அமைதியில் மிதப்பது போல் இருக்கும் .
இந்த நாட்களில் தான் சுவாமிஜி நிவேதிதைக்காக ”அமைதி” என்ற கவிதையை எழுதினார். இங்கிலாந்தில் தமது இந்தியப் பணிகளுக்கு அவ்வளவு ஆதரவு கிடைக்காத நிலையில் அமெரிக்காவில் சிறிது பணம் திரட்ட முயன்றார் நிவேதிதை. அதற்கு முன்பாக சில நாட்கள் தனிமையில் தியான வாழ்வில் ஈடுபட விரும்பினார் அவர். ஒரு சன்னியாசிக்குரிய ஆடையை அணிய விரும்புவதாகவும் தெரிவித்தார். அதற்கு மகிழ்ச்சியுடன் அனுமதி அளித்த சுவாமிஜி அன்று மாலையில் இந்தக் கவிதையை நிவேதிதைக்கு அளித்தார்.
சில்லிட்ட குளிர் மாலை வேளைகளில் நெருப்பின் அருகில் குளிர் காய்ந்தபடி சுவாமிஜியின் பேச்சை க்கேட்பது ஓர் இனிய அனுபவம்.பல விஷயங்களை அவர் கூறுவார். இடையில் யாராவது, சுவாமிஜி, நீங்கள் கூறும் இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது என்பார்கள். அப்படியானால் அது உங்களுக்கு உரியது அல்ல” என்பார் சுவாமிஜி. பிரமாதம்! இந்தக் கருத்து தான் உங்கள் உண்மைக் கருத்தாக எனக்குத்தோன்றுகிறது என்பார். ஆ! அப்படியானால் அந்தக் கருத்து உங்களுக்கு உரியது. என்பார் சுவாமிஜி. எதையும் யாரிடமும் அவர் திணிப்பதில்லை.
ஒரு நாள் மாலை வேளையில் பத்துப் பன்னிரண்டு பேர் சவாமிஜி பேசுவதைக்கேட்டுக் கொண்டிருந்தார்கள். தடையின்றி கம்பீரமாகப்பேசிக் கொண்டிருந்தவரின் குரல் திடீரென்று மென்மையாகியது. படிப்படியாக மெலிதாகி எங்கோ தொலைதூரத்தில் ஒலிப்பது போல் கேட்டது. அங்கிருந்த அனைவரும் வேறு ஏதோ ஓர் உலகிற்கு எடுத்துச்செல்லப் பட்டது போல் உணர்ந்தார்கள். சுவாமிஜி பேச்சை நிறுத்தினார். யாரும் அந்த உலகிலிருந்து மீண்டு வர விரும்பாதது போல் இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு எல்லோரும் எழுந்தனர். ஆனாலும் அந்த அமைதியுலகின் தாக்கத்திலிருந்து விடுபடாத நிலையில் இருந்த அவர்கள் ஒருவருக்கொருவர் வணக்கம் கூட சொல்லாமல் பிரிந்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு மிசஸ் லெக்கட் அன்றைய பேச்சில் கலந்துகொண்ட ஒருவரின் அறைக்குச்செல்ல நேர்ந்தது. அந்த நபர் அவ்வளவாகக் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் மிசஸ் ரெக்கட் சென்றபோது அவர் கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். காரணம் கேட்டதற்கு அவர் கூறினார். அவர் அழிவற்ற வாழ்க்கையை எனக்குத் தந்து விட்டார். அவர்பேசுவதை மீண்டும் கேட்பதற்கு நான் விரும்பவில்லை.
சுவாமிஜி சிகாகோ சர்வமத மகாசபையில் பேசிய போது கேட்ட ஒருவரின் அனுபவமும் இவ்வாறே இருந்தது. அவர் ஹேரியட் மன்றோ, ஒரு கவிஞர். சுவாமிஜியின் சொற்பொழிவைக்கேட்ட பிறகு அவர் எழுதினார்.
முற்றிலும் நிறைவான, முற்றிலும் பூரணமான சில கணங்கள் வாழ்வின் சிலநேரங்களில் வாய்க்கின்றன. ஒரு முறை மட்டுமே வந்து செல்லும் அவற்றை மீண்டும் அனுபவிக்க இயலாது. அதற்கு முயற்சி செய்வதும் வீண். அதனால் தான் விவேகானந்தர் பேசுவதை ஒரு முறை கேட்ட பிறகு, அவர் நகரம் முழுவதும் பல இடங்களில்பேசி பலரைக் கவர்ந்து கொண்டிருந்தாலும், நான் அவர் பேசுவதைக்கேட்கச் செல்லவில்லை.
ரிஜ்லிமேனரில் இருந்தவர்களில் ஒருவர் மிஸ் ஸ்டம். அவர் ஓர் ஓவியர். ஒருநாள் சுவாமிஜி அவரிடம், வெறுமனே அமர்ந்து ஏதேதோ நினைத்துக்கொண்டிருப்பதை விட ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட விரும்புகிறேன். நீங்கள் ஏன் எனக்கு ஓவியம் வரைவதற்குக் கற்றுத் தரக் கூடாது? என்று கேட்டார். ஸ்டம் அதற்கு இசைந்தார். தேவையான பொருட்கள் வாங்கப் பட்டன. பயிற்சிகளைத் தொடங்குவதற்கான நாளில் குறித்த நேரத்தில் சுவாமிஜி சென்றார். கையில் ஒரு நல்ல சிவந்த ஆப்பிளையும் எடுத்துச் சென்றார். பணிவுடன் தலை வணங்கியபடி அதனை ஸ்டம்மிடம் குரு தட்சிணையாகக்கொடுத்தார் சுவாமிஜி. ஸ்டம்மிற்கு எதுவும் புரியவில்லை. காரணம் கேட்டபோது சுவாமிஜி, நான் உங்கள் மாணவன், பாடங்கள் பலனளிப்பதற்காக இதனை தட்சிணையாக உங்களுக்குத் தருகிறேன்” என்றார். மிக விரைவாக, சிறப்பாக ஓவியங்கள் தீட்டத் தொடங்கினார் அவர். ஸ்டம் எழுதுகிறார்.
எத்தகைய மாணவர் அவர்! எதையும் ஒரு முறை சொன்னால்போதும், அப்படியே பிடித்துக்கொள்வார். அவரது மன ஒருமைப்பாடும் நினைவாற்றலும் அபாரமானவை. அவர் வரைகின்ற ஓவியங்கள், ஆரம்பநிலையிலுள்ள மாணவர் ஒருவர் வரைந்தது என்று சொல்ல முடியாத அளவிற்குச் சிறப்பாக இருந்தன. நான்காம் பாடம் படிக்கத் தொடங்கியபோதே, ஒருவரைப் பார்த்து ஓவியம் வரையும் அளவிற்கு சுவாமிஜி தேர்ச்சி பெற்றார். துரியானந்தர் ஒரு சிலைபோல் அமர்ந்திருக்க அவரைப்பார்த்து வரைந்தார் அவர். நிவேதிதையும் வரைந்தார். தம்மால் ஓவியம் வரையமுடியும் என்பதில் மிகவும் பெருமையும் கொண்டார் சுவாமிஜி.
தெய்வ மனிதர்
-
அக்டோபர் ஆரம்பத்தில் மெக்லவுடின் சகோதரர் லாஸ்ஏஞ்ஜல்சில் நோயுற்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவரைக் காணக் கிளம்பினார் மெக்லவுட். அவர் வண்டியில் ஏறும்போது சுவாமிஜி சென்று சில சம்ஸ்கிருத மந்திரங்களைக்கூறி அவரை ஆசீர்வதித்தார். பிறகு, ஏதாவது வகுப்புகளுக்கு ஏற்பாடு செய், அப்போது நான் வருகிறேன்” என்றார். மெக்லவுட் சென்று தம் சகோதரரைக்கண்டார். அவரது நிலைமை மிகவும் கவலைக் கிடமாக இருந்தது. அவர் மிசஸ் பிளாஜட் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். மெக்லவுட் தன் சகோதரரின் அருகில் அமர்ந்து அவருக்கு இதமாகப்பேசிக் கொண்டிருந்தபோது தற்செயலாகச் சுவரைப் பார்த்தார். அங்கே சுவாமிஜியின் பெரிய படம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. மெக்லவுட்டிற்கு இது ஓர் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பிளாஜட்டிடம் கேட்டபோது அவர், சுவாமிஜியின் முதல் சிகாகோ சொற்பொழிவைக்கேட்டு மெய்மறந்தவர்களுள் நானும் ஒருத்தி. ஓ, எத்தகைய மனிதர் அவர்! கடவுளே பூமியில் வந்து அவராக உலவினார் என்றுதான் சொல்ல வேண்டும். தெய்வ மனிதர் அவர். என்றார் அவர். உடனே மெக்லவுட் அவரைத் தமக்குத் தெரியும் என்றும், தற்போது அவர் தமது வீட்டிலேயே இருக்கிறார் என்று கூறியபோது பிளாஜட் மிகவும் மகிழ்ந்தார். விரைவில் சுவாமிஜி அங்கே வருவார். ஒருவேளை பிளாஜட்டின் வீட்டிலேயே அவர் தங்கவும் வாய்ப்பு உண்டு என்று மெக்லவுட் தெரிவித்தபோது அவரது மகிழ்ச்சி பன்மடங்காகியது.
மூன்று வாரங்களில் மெக்லவுடின் சகோதரர் இறந்தார்.
ரிஜ்லிமேனரிலிருந்து மெக்லவுட் சென்றபிறகு, மற்ற ஓரிருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனால் சுவாமிஜி எப்போதும் போலவே நகைச்சுவையும் களிப்புமாக நாட்களைக் கழித்தார். ஆனால் அவருக்கு மறுபக்கம் ஒன்று இருந்தது. அதிர்ச்சிகளை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. துயரங்கள் அவருக்கும் இருந்தன. ஆன்மீகப்பேருணர்வு அனுபவங்கள் ஒருவரது மனத்தையும் உடம்பையும் மாற்றி அமைக்கின்றன. அவரது உடம்பும் மனமும் மிக மிக மென்மையானவை ஆகின்றன. மனித ஆனந்தங்களைவிட மேலான தெய்வ ஆனந்தங்களை அனுபவிப்பதற்கு ஏற்ற வகையில் மாறி அமைகின்றன. ஆனால் உயர் இன்பங்களை அனுபவிக்கின்ற அதே மனம் தான் துன்பங்களையும் அனுபவிக்கிறது.அவர்கள் அனுபவிக்கின்ற இன்பங்களின் பரிமாணத்தை நாம் அறிய முடியாதது போலவே அவர்கள் அனுபவித்த துன்பத்தையும் நாம் உணர இயலாது. சுவாமிஜியும் துன்பங்களில் துடிப்பதுண்டு. ஆனால் அவை பிறர் அறியாவண்ணம் மறைத்து விடுவார். இருப்பினும் மிக நெருக்கமானவர்களிடம் அவர் தமது மனத்துயரைக் கூறியதுண்டு. நிவேதிதை எழுதுகிறார்.
இந்தியப் பணிகள் ஏற்படுத்திய பிரச்சனைகள், ஸ்டர்டியால் எழுந்த கவலை, லண்டன் பணிகளின் பின்னடைவு என்று பல விஷயங்கள் அவர் முன்பு எழுந்தன. எதுவும் அவரைப் பாதிக்கவில்லை. அவர் ஒரு துறவியாக, முற்றிலும் அவற்றைக் கடந்த நிலையிலேயே இருந்தார். ஆனால் தனி நபர்கள் அவரிடம் கொண்ட உறவுகளில் பிணக்கம் ஏற்பட்டபோது அவர் துடித்தார். நெருங்கிய வர்கள் பிரிந்தபோது துவண்டார். அவர்கள் ஏமாற்றியபோது தவித்தார். எனது பணிகளைப் பொறுத்தவரை கடவுள் என்னுடன் இருக்கிறார், வழி காட்டுகிறார். என்னைப் பாதுகாக்கிறார். ஆனால் என் சொந்த வாழ்விலோ எல்லாம் தகர்ந்து தவிடு பொடியாகி விட்டன” என்று கூறினார் அவர். வியாழன் மாலையில் நானும் சாராவும் பேசிக்கொண்டிருந்த போது அவர் எங்களுடன் வந்து அமர்ந்து தமது துயரங்களை எல்லாம் தெரிவித்தார். அதன் பிறகு என் அறைக்கு வந்தபோது சாராவின் கண்கள் குளமாகியிருந்தன. ஒரு மணிநேரம் நானும் சாராவும் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு , ”அவரது மனத்தில் அமைதி நிலவ நாமும் பிரார்த்திப்போம்” என்றுகூறினார்.
மறுநாள் சுவாமிஜியிடம் துயரத்தின் சாயலே இல்லை. அவர் தெம்புடன் காணப்பட்டார். அதற்கு அடுத்த நாள் மீண்டும் தமது துயரங்களை என்னிடம் தெரிவித்தார். சிறிது நேரத்திற்கு என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. நான் எனது அறைக்கு ஓடிச்சென்று அமர்ந்து அழத்தொடங்கினேன். என்னைத் தொடர்ந்து வந்த சுவாமிஜி அறைவாசலில் நின்றபடி மீண்டும் கூறினார். உலகை வெறுத்து ஏன் ஓடினார்கள் என்பதை இப்போது புரிந்து கொள்கிறேன்”. பணம், புகழ் இவற்றை வெறுக்க வேண்டும் என்ற பொருள் கொண்ட சுலோகங்களை வாழ்நாள் முழுவதும் ஓதி வந்திருக்கிறேன். ஆனால் அதன் பொருள் என்ன என்பதை இப்போது தான் புரிந்து கொள்கிறேன். இனியும் என்னால் தாங்க இயலாது.ஓ! நான் இப்போது எங்கு வந்து சேர்ந்து விட்டேன்? பிறகு திடீரென்று என்னை நோக்கித் திரும்பினார். அவரது முகத்தில் சோகமும் வேதனையும் நம்பிக்கையும் மண்டிக்கிடந்தன. பிறகு, எனவே ஸ்ரீராமகிருஷ்ணா! உம்மையே நான் சரணடைகிறேன்” ஏனெனில் எளியவர்களுக்கு ஒரே புகலிடம் உமது திருவடிகளே அல்லவா! என்றார்.
சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மீண்டும் தொடர்ந்தார், இந்த உடம்பு வீழ்ந்துக் கொண்டிருக்கிறது. கடின தவ வாழ்க்கையில் அது போகட்டும். இனி நான் தினமும் 10,000 பிரணவ மந்திரம் ஜபிப்பேன். உபவாசங்கள் இருப்பேன். ஹர, ஹர வ்யோம் வ்யோம்” என்று கூறிய படி இமயமலைகளில் கங்கை க் கரையில் தன்னந்தனியாக வாழ்வேன். எனது பெயரை மீண்டும் மாற்றிக் கொள்வேன். இந்த முறை என்னை யாரும் கண்டு பிடிக்க முடியாது. நான் மீண்டும் சன்னியாச தீட்சை பெற்றுக்கொள்வேன். ஆனால் இதன்நோக்கம் வேறு. மீண்டும் கட்டாயமாக மீண்டும் உங்கள் முன் வரக் கூடாது என்பதற்காகவே சன்னியாசம் பெற்றுக் கொள்வேன்.
நிவேதிதையின் குறிப்புகளிலிருந்து நாம் பெறுகின்ற இந்தப் பக்கங்கள் சுவாமிஜியின் மறு பக்கத்தைப் பிரதிபலிக்கின்றன. அவரது துயரங்களையும் வேதனைகளையும்் நமக்குத் தெரிவிக்கின்றன. வேதனையின் விளிம்பிலிருந்து அவர் கதறுவது போல் உள்ளது.ஆனால் நம்பிக்கையிழந்தவனின் விரக்திக் கதறல் அல்ல இது. தனிமை வாழ்க்கை மீதுள்ள தீவிர ஆர்வத்தாலும், அது தம்மிடமிருந்து பறிபோயிற்றே என்ற வேதனையாலும் எழுந்த கூக்குரல் இது. கங்கைக் கரையின் ஏகாந்தத்தில் வாழ்கின்ற தவ வாழ்க்கையையே அவர் இப்போதம் விரும்பினார். தமது ஆற்றலையும் அன்பையும் எந்த அளவிற்கு உலக நன்மைக்காக உலகின் மீது செலுத்தினாரோ, எந்த அளவிற்கு மனிதரோடு மனிதராக வாழ்ந்து வேலை செய்தாரோ அந்த அளவிற்கு அவர் துன் புற்றார்.
அப்படியானால் மரணமிலாப் பெருநிலையைஅடைந்து விட்ட அவர், சம்சாரப்பெருங்கடலின் மறுகரையைத் தொட்டு விட்ட அவர், இறைவனின் திருப் பாதங்களைக் கண்டுவிட்ட அவர் துன்புற்றாரா?
ஆம்,அதே வேளையில் ” இல்லை”.
அவர் துன் புற்றது உண்மை. நம்பிக்கையின்மையின் சாயல்” அவரிடம் தெரிந்ததும் உண்மை. ஆனால் நாம் கருதுகின்ற பொருளில் அவர் துன்புறவில்லை. ஏனெனில் அவர் எப்போதுமே ஓர் ஆனந்தப் பெருங்கடலின் திரண்ட வடிவமாகவே காணப் பட்டார். ஒரு கணம் அவர் துன்புற்றது போல் தோன்றினாலும் மறுகணம் அவர் தெய்வீக ஆனந்தத்தில் மிதந்தார். அவர் எதைப்பேசினாலும், எந்த மனநிலையில் இருந்தாலும் அவரது தெய்வீகம் ஒவ்வொரு கணமும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அவர் பேசிக் கொண்டிருக்கும்போது அவரைக் கூர்ந்து பார்த்தால் திறந்து கிடக்கின்றவாசல்களின் வழியாக எல்லையற்ற பரம்பொருளை அவர் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது புரியும். இது எப்படி சாத்தியம்? ”நான்” என்ற உணர்வையே இழந்து விட்டதாலா? என்று எழுதுகிறார் நிவேதிதை. எல்லையற்ற பரம்பொருளின் வாசல் அவருக்கு எப்போதுமே திறந்திருந்தது. ஏனெனில் வாழ்க்கையின் இன்பத் துன்பங்கள் எதுவும் அந்த வாசலை மறைக்கவோ மூடவோ இயலவில்லை” என்று எழுதுகிறார் மேரி லூயி பர்க்.
வாழ்க்கையில் மாறி மாறி வருகின்ற இந்தச் சுகத்தையும் துக்கத்தையும் பற்றி சுவாமிஜியின் அற்புதமானதொரு விளக்கத்தை இங்கே காண்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். மிசஸ் ஹேலுக்கு இந்த நாட்களில் எழுதிய கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிடுகிறார்.
நாய் குரைத்தால் அதன் எஜமானன், திருடன் வருவதாக எச்சரிக்கை அடைகிறான் அல்லது நண்பன் வருவதாக வரவேற்கத் தயாராகிறான். இதன் பொருள் நாயும் அதன் எஜமானனும் ஒரே இயல்பு உடையவர்கள் என்பதோ அல்லது அவர்களுக்கிடையே ஏதாவது தொடர்பு இருக்கும் என்பதோ அல்ல. சுகம், துக்கம் போன்ற உணர்ச்சிகளும் அது போல் மனத்தைச் செயல்படத் தூண்டுகின்றன. ஆனால் மனத்திற்கும் அந்த உணர்ச்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆன்மா வேதனைக்கும் சுகத்திற்கும் அப்பாற்பட்டது. அது சொந்த இயல்பிலேயே திருப்தியுடன் இருப்பது. எந்த நரகமும் அதைத் தண்டிக்க முடியாது. எந்தச் சொர்க்கமும் அதை மகிழ்விக்க முடியாது.
மரணத்தை நேசி!
-
ஆனால் நடைமுறை வாழ்வில் யாராவது, எந்தக் காரணத்தாலாவது சோகமாகவோ வேதனையுடனோ இருந்தால் சுவாமிஜியின் முதல் வேலை அதனைத் தீர்ப்பதாகத் தான் இருக்கும் ஒரு வார்த்தை, ஒரு கதை, மனம் நிறைந்த ஆசிகள் என்று ஏதாவது ஒரு வழியில் அதனைத் தற்காலிகமாகவாவது தீர்த்து விடுவார் அவர்.
ரிஜ்லிமேனரில் இருந்தவர்களுள் இளம் பெண் ஓலியா ஒருத்தி. இவள் சாராவின் மகள். உடல் நோயால் துன்புற்ற அவள் மனத்தளவிலும் பெரிதும் பாதிக்கப் பட்டவள். அவளது திருமணம் விவாகரத்தில் முடிந்திருந்தது. ஒரே குழந்தையும் இறந்துவிட்டது. இரவில் ஏதேதோ பயங்கரக் கனவுகள் காண்பதும் பயத்தில் அலறியபடி எழுவதுமாக அமைதியின்றித் தவித்தாள் அவள். சுவாமிஜி அவளிடம் மிகுந்த பரிவு காட்டினார். அடிக்கடி அவளிடம் சென்று அன்பாகப்பேசி அவளது மனத்தை அமைதிப்படுத்தினார். ஞாயிறு மதிய உணவு வேளையில் சுவாமிஜி மூன்றரை மணி நேரம் ஓலியாவுடன் தனிமையில் செலவிட்டார். சுவாமிஜியின் இந்த ஆசிகள் அவளை முற்றிலும் மாறுபட்ட ஒரு பெண்ணாக மாற்றியிருக்கிறது” என்று எழுதுகிறார் நிவேதிதை.
மற்றொரு நாள் சுவாமிஜி பயங்கரக் கனவு பற்றி ஓலியாவிடம் கூறினார். இந்த பயங்கரக் கனவுகள் எல்லாம் நல்ல, இனிமையான கனவுகளாகத்தான் ஆரம்பிக்கும். போகப்போக பயங்கரமாக மாறும். நாம் பயத்தின் உச்சத்தில் உறையும்போது கனவு கலைந்து விடும். அது போல்தான் வாழ்க்கைக் கனவும். மரணம் வந்து அந்தக் கனவை க் கலைக்கிறது. எனவே மரணத்தை நேசி.
மிசஸ் லெக்கட்டின் 22 வயது மகள் ஆல்பெர்ட்டா. ஓலியாவின் திருமண வாழ்க்கையும் அதன் சோக முடிவும் அவளது மனத்தை ஆக்கிரமித்திருந்தன. ஒரு நாள் அவள் சுவாமிஜியிடம்,திருமண வாழ்க்கையில் இன்பமே கிடையாதா? என்று கேட்டாள்.உண்டு, மகளே, உண்டு. அதற்குத் திருமணத்தை ஒரு பெரும் தவமாகக் காணவேண்டும். அந்தப் பின்னணியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்ஃ ஒரு தவம் செய்கிறோம் என்ற கருத்தைத் தவிர மற்ற அனைத்தையும் விட்டிருக்க வேண்டும்” என்றார் சுவாமிஜி.
ஆல் பெர்ட்டாவின் தம்பியான ஹாலிஸ்டர் ஒருநாள். எனக்கு இந்தத் துறவு வாழ்க்கை வேண்டாமப்பா! நான் திருமணம் செய்து பிள்ளைக் குட்டிகளைப் பெற்றுக் கொள்ள வே விரும்புகிறேன்” என்றான். அதற்கு சுவாமிஜி, அப்படியே செய், மகனே! ஆனால் ஒன்று, நீ கடினமான பாதையைத்தேர்ந்தெடுக்கிறாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே, என்றார்.
குழந்தையான பிரான்சஸும் அவரது கருணையைப்பெறவே செய்தாள். ஒரு நாள் அவள் தோட்டத்திலிருந்து சில பூக்களைப் பறித்து சுவாமிஜியிடம் கொடுத்தாள். சுவாமிஜி மிகவும் நெகிழ்ந்தார். அந்தப் பூக்களைப் பெற்றுக்கொண்டு அமைதியாக, இந்தியாவில் நாங்கள் குருமார்களுக்கே பூக்களை அளிப்போம்” என்று கூறிவிட்டு சில சம்ஸ்கிருத மந்திரங்களைக்கூறி அவளை ஆசீர்வதித்தார்.
-
சக்தியை அளித்தல்
-
ஏற்கனவே ப்ளாஜட்டும் மெக்லவுடும் சுவாமிஜியை வாஸ் ஏஞ்சல்ஸுக்கு அழைத்திருந்தனர். அதனை ஏற்று ரிஜ்லிமேனரிலிருந்து கிளம்ப ஆயத்தமானார் சுவாமிஜி. அதற்கு முன்பு ஓர் அசாதாரணமான சம்பவம் நடைபெற்றது. எப்படி ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சக்தியை சுவாமிஜிக்கு அளித்தாரோ அப்படி சுவாமிஜி தமது சக்தியை இருவருக்கு அளித்தார். தமது பணிகளில் நிவேதிதை வகிப்பது போன்றதொரு முக்கியமான இடத்தை மிசஸ் சாராவிற்கும் அளித்திருந்தார் சுவாமிஜி. அது பற்றி ஏற்கனவே சாராவிற்கு எழுதவும் செய்திருந்தார் அவர். சமீப கால நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது என்னைக் கவனித்துக் கொள்வதற்காக தேவியால் நீங்கள் நியமிக்கப் பட்டுள்ளீர்கள் என்று நிரூபணமாகிறது. எனவே அன்புடன் நம்பிக்கையும் சேர்ந்து விட்டது. என்னையும் என் பணியையும் பொறுத்தவரை இனிமேல் நான் உங்களை இறைவனின் அனுமதி பெற்றவன் என்றே கொள்வேன்.அதனுடன் எல்லாப் பொறுப்புகளையும் என் தலை யிலிருந்து சந்தோஷமாக உதறியெறிந்து விட்டு, தேவிஉங்கள் மூலம் கட்டளையிடுவதன் படி நடப்பேன்.
அன்று நவம்பர் 5 ஞாயிறு பிற்பகல். சுவாமிஜி நிவேதிதையை அழைத்துக்கொண்டு சாராவின் அறைக்குச்சென்றார். அறைக் கதவைச் சாத்திவிட்டு, தாம் கொண்டு வந்திருந்த காவித்துணியை இருவரிடமும் கொடுத்தார்.பிறகு இருவர் தலை மீதும் தமது இரு கைகளையும் வைத்து கூறினார்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் எனக்கு எதை அளித்திருந்தாரோ அவை அனைத்தையும் நான் உங்களுக்குத் தருகிறேன். ஒரு பெண்ணிடமிருந்து( காளிதேவி) எங்களுக்கு வந்ததை நான் இரு பெண்களிடம் தருகிறேன். அதைக்கொண்டு உங்களால் இயன்றதைச்செய்யுங்கள். என்னால் என்னை நம்ப இயலவில்லை. நாளைக்கு என்ன செய்வேனோ, அது வேலையை எப்படிப் பாதிக்குமோ தெரியாது. காளிதேவியாகிய பெண்ணிடமிருந்து வந்ததைப் பெண்களே கட்டிக் காப்பது தான் மிகச் சிறந்தவழி. அவள் யார், அவள் என்ன பொருள் என்பது எனக்குத் தெரியாது. நான் அவளை ஒரு போதும் கண்டதில்லை. ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் அவளைக் கண்டார்.( நிவேதிதையின் அங்கியைத்தொட்டு) இப்படி அவளைத் தொட்டார். எனக்குத் தெரிந்தவரை அவள் ஓர் உருவமற்ற பொருள். எப்படியோ, சுமையை நான் உங்களிடம் தருகிறேன். அமைதியில் மூழ்கி வாழ்வதற்காக நான் போகிறேன். காலையில் என் மனமே சரியில்லை. மதிய உணவிற்கு முன்பு நான் என் அறைக்குச்சென்றபோது இது பற்றி தீவிரமாக யோசித்தேன். பிறகு தான் இந்த முடிவிற்கு வந்தேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.விடுதலைப்பெற்றது போல் உள்ளது. இது வரை நான் சுமந்து கொண்டிருந்தேன், இப்போது விட்டு விட்டேன்.
இந்த நிகழ்ச்சியின் பொருள் என்ன, விளைவு என்ன, அவர்கள்இருவரின் வாழ்க்கையிலும் இந்தச் சம்பவத்தால் என்ன நிகழ்ந்தது-இதற்கு யார் விடை சொல்வது? நிவேதிதை பின்னாளில் இந்தியாவின் பெண் கல்வியிலும், விடுதலைப்போராட்டத்திலும் முக்கியப் பங்கு வகித்து இந்தியவரலாற்றில் ஓர் அழியாத இடத்தைப்பெற்றார். சாராவைப் பொறுத்த வரையில் அத்தகைய பணிகள் எதிலும் அவர் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு நியூயார்க் புறப்பட்டார் சுவாமிஜி.
நியூயார்க்கில்
அமெரிக்காவில் சுவாமிஜி விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்ந்தவர்கள் குறிப்பாக நால்வர். அவர்கள் சாரதானந்தர், அபேதானந்தர், அபயானந்தர், மிஸ் வால்டோ ஆகியோர் . சாரதானந்தர் கிரீனேக்கர், நியூயார்க், போஸ்டன் முதலான இடங்களில் தொடர்ந்து வேதாந்த வகுப்புகள் நடத்தினார். அவரது சொற்பொழிவுகளுக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. பணியும் பாதிப்பின்றி தொடந்தது. சாரதானந்தர் செல்ல முடியாத வேளைகளில் வால்டோ வேதாந்த வகுப்புக்களை நடத்தினார். 1898 ஜனவரியில் சுவாமிஜியின்அழைப்பை ஏற்று இந்தியாவிற்குத் திரும்பினார் சாரதானந்தர். தொடர்ந்து அபேதானந்தர் பணிகளைத் தொடர்ந்ததுடன் விரிவுபடுத்தவும் செய்தார். நியூயார்க்கில் மடத்திற்காகச் சொந்த இடமும் வாங்கினார். அபயானந்தரும் இதில்பெருமளவிற்கு உதவினார். இவ்வாறு சுமார் 6 வருடங்களுக்கு முன்பு சுவாமிஜி விதைத்துச்சென்றவிதை இன்று வளர்ந்து, படர்ந்து அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பரவியிருந்தது.
1899 நவம்பர் 7- ஆம் நாள் நியூயார்க் சென்ற சுவாமிஜி முதலில் சென்று வேதாந்த மையத்தைப் பார்வையிட்டார். நவம்பர் 10- ஆம் நாள் சுவாமிஜிக்கு மடத்தில் வரவேற்பு அளிக்கப் பட்டது. அங்கே அவர் சில நாட்கள் தங்கினார். அந்த நாட்களில் பொதுச்சொற்பொழிவு எதுவும் அவர் செய்யவில்லை. ஓரிருவகுப்புச் சொற்பொழிவுகள் மற்றும் கேள்வி- பதில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்தவேளையில், தற்போது மாண்ட்க்ளேர் சென்ற துரியானந்தர் தாம் பணிகளை ஆரம்பித்துவிட்டதாகச்செய்தி அனுப்பியிருந்தார். இதுவும் சுவாமிஜிக்கு மனநிறைவைத் தந்தது. பொதுவாக அமெரிக்கப் பணிகளின் இந்த வளர்ச்சியில் மிகவும் பெருமிதம் கொண்டார் சுவாமிஜி.
சுவாமிஜியின் வகுப்புகள் எப்படி நடைபெற்றன? அவர் வெறும் சொற்களால் மட்டும் பேசவில்லை. வெறும் கருத்துக்களை மட்டும் அளிக்கவில்லை. அவற்றுடன், அந்தக்கருத்துக்களை உணர்ந்து கொள்வதற்கான ஆற்றலை அளித்தார்.எண்ணற்ற சொற்பொழிவுகள், எத்தனையோ வகுப்புகள், தனிநபர் உரையாடல்கள், இவை அத்தனையிலும் அள்ளி வழங்குவதற்கு அவரிடம் ஆன்மீக ஆற்றல் நிறைந்திருந்தது. அவர் ஓர் ஆற்றலின் சுரங்கமாக விளங்கினார்.
இந்த நாட்களில் ஒரு முறை அவர் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார். பேசுவதைத்திடீரென்று பாதியில் நிறுத்தினார், அறையைவிட்டு வெளியே சென்றுவிட்டார். வந்தவர்கள்மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர். சுவாமிஜி தமது அறைக்குச்சென்று கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர், சுவாமிஜி, பேச்சு அப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்திருந்தது. சொல்ல வேண்டிய கருத்துக்களை மறந்து விட்டீர்களா? அல்லது தளர்ந்து விட்டீர்களா? என்று கேட்டார். இல்லையப்பா, இவை எதுவும் காரணமல்ல, என்று சொல்லிவிட்டு சுவாமிஜி தொடர்ந்தார். அளவிட முடியாத ஆற்றல் என்னிடம் நிறைந்திருப்பதை அந்தப்பேச்சின்போது நான் உணர்ந்தேன்.கேட்பவர்கள், அந்த ஆற்றலின் காரணமாக, நான் கூறியகருத்துக்களில் ஆழ்ந்து மூழ்கிக் கரைவதைக் கண்டேன். சிலர் தங்கள் தனித்துவத்தையே இழக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். இதோ, இவர்களெல்லாம் குழைத்த களிமண்போல் மென்மையாகி விட்டார்கள். நான் விரும்பியவாறுஇவர்களின் வாழ்க்கையை உருவாக்க முடியும்” என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அது எனது நோக்கமல்ல. ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தங்கள் தனித்துவத்தை இழக்காமல், அதன் போக்கிலேயே வளர வேண்டும். அது தான் என் விருப்பம். அவர்களின் வளர்ச்சியில் குறுக்கிட விரும்பாததால் தான் நான் பாதியில் நிறுத்த நேர்ந்தது.
ஒரு வேளை சொல்ல வேண்டியதை மறந்ததால் தான், பாதியில் நிறுத்தினீர்கள் என்று கேட்பவர்கள் நினைத்திருக்கக் கூடும்” என்றார் அந்த நண்பர். அவர்கள் என்ன நினைத்தால் எனக்கென்ன? என்று தமக்கே உரிய பாணியில் பதிலளித்தார் சுவாமிஜி.
கிறிஸ்தவ மதத்தில் பாவம்” என்பது ஒரு முக்கியக் கருத்து. மனிதன் பாவத்தில் பிறந்தவன். அவன் பாவிஎன்ற கருத்தை அது வலியுறுத்துகிறது. சுவாமிஜியோ, மனிதன் தெய்வீகமானவன், என்று இந்திய ஆன்மீகத்தை எதிரொலித்தார். இதை அந்தக் கிறிஸ்தவ நாட்டில் பலரால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஒரு நாள் கேள்வி நேரத்தின்போது சர்ச்சில் பணியாற்றுகின்ற பெண் ஒருவர், சுவாமிஜி, நீங்கள் ஏன் பாவத்தைப் பற்றியே பேசுவதில்லை? என்று கேட்டார். சுவாமிஜியின் முகத்தில் ஓர் ஆச்சரிய உணர்ச்சி படர்ந்தது. அவர் கூறினார்.
சகோதரி, நான் என் பாவங்களை வாழ்த்துகிறேன். பாவத்தின் மூலமே நான் புண்ணியத்தை உணர்ந்தேன். இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு என் புண்ணியங்களைப்போல் பாவங்களும் காரணம். இன்று நான் புண்ணியத்தைப்போதிக்கிறேன். நான் ஏன் மனிதனின் பலவீனத்தைப்போதிக்க வேண்டும்? சிலவேளைகளில் மகான்களிடம் இல்லாத சில நற்பண்புகள் கொடியவர்களில் இருப்பதை நீங்கள் கண்டதில்லையா? இருப்பது ஒரே ஆற்றல்தான். அதுவே நன்மையாகவும் தீமையாகவும் வெளிப்படுகிறது. கடவுளும் சாத்தானும் ஒரே ஆறுதான். கண்ணீர் மட்டும் எதிரெதிர் திசைகளில் பாய்கின்றன, அவ்வளவு தான்.
கிறிஸ்தவ மதத்தில் ஊறிய அந்தப் பெண் அதிர்ந்து போனாள். அதன்பிறகு சுவாமிஜி மனிதனின் தெய்வீகத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.ஆன்மா பூரணமானது. நிலையானது, அழிவற்றது. அந்த ஆன்மா ஒவ்வொரு வரிலும் உள்ளது.. என்று அவரது பேச்சு தொடர்ந்தது.
அந்தப்பேச்சைக்கேட்ட குருதாஸ் பின்னாளில் எழுதினார், தனது சொந்த தெய்வீகத்தை உணர்வதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் தெய்வம் ஆகலாம். இது நமக்கு நம்பிக்கை தருகிறது.வலிமையை ஊட்டுகிறது. எங்கெல்லாம் தேடி அலைந்து உழன்றும் கிடைக்காதவர்களுக்கு, எத்தனையோ கதவுகளைத் தட்டியும் திறக்கப் படாதவர்களுக்கு சுவாமிஜியின் போதனை எவ்வளவு பெரிய ஆறுதலாக உள்ளது. அவர்களுக்கெல்லாம் சுவாமிஜி ரட்சகராக வந்தார். அவர்களின் இதய வாசலுக்கே வந்து தட்டினார். அவர் தட்டியதைக்கேட்டு கதவைத் திறந்தவர்கள் பேறு பெற்றவர்கள். ஏனெனில் அவரது வரவுடன் ஆசிகளும் சேர்ந்தல்லவா வந்தன!
நியூயார்க்கில் சுவாமிஜி ஒரு வேதனையை அனுபவிக்க வேண்டியிருந்தது. அது அவரது அமெரிக்கச் சீடரான லான்ட்ஸ்பர்க்கை மீண்டும் சந்தித்தது. 1895- 96- இல் சுவாமிஜியிடமிருந்து விலக ஆரம்பித்த அவர், 1898 ஆகஸ்டில் அவர் THE New YorkHerald என்ற அமெரிக்கப் பத்திரிகையில் சுவாமிஜியையும், அவர் போதித்த யோக முறைகளையும், அவரது அமெரிக்கச் சீடர்களையும் கடுமையாக விமர்சித்து க் கட்டுரை ஒன்று எழுதினார். அதன் பிறகு சுவாமிஜியுடன் அவர் பெரிதாகத்தொடர்பு எதுவும் வைக்க வில்லை.
இப்போது திடீரென்று எங்கிருந்தோ முளைத்தார் லான்ட்ஸ்பர்க். சுவாமிஜி ஒருநாள் தமது உடல்நிலைப் பரிசோதனைக்காக டாக்டர் கர்ன்சி என்பவரைக் காணச் சென்றிருந்தார். இந்த டாக்டர், சுவாமிஜியின் நண்பரும் கூட, அவர் லான்ட்ஸ்பர்க்கைப் பற்றி கேள்விப்பட்டு முன்பே அவரை அந்த வீட்டிற்கு வரக் கூடாது என்று தடை செய்திருந்தார். ஆனால் திடீரென்று அன்று அங்கேவந்தார் லான்ட்ஸ்பர்க்.
அப்போது சுவாமிஜியின் நாடித் துடிப்பைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார் டாக்டர். அது சீராக இருந்தது. திடீரென்று நாடித்துடிப்பு முற்றிலுமாக நின்றுவிட்டது. பார்த்தால் வாசலில் லான்ட்ஸ்பர்க்! அவரைக் கண்டதும் சுவாமிஜியின் நாடித்துடிப்பு நின்றுவிட்டது. மகிழ்ச்சியுடன் சிரித்தார் டாக்டர். வந்தவருக்கு நன்றி சொல்லத் தான் வேண்டும். ஏன், அவருக்குப் பணம் கூட கொடுக்கலாம். ஏனெனில் அவர் வந்ததால் சுவாமிஜியின் நாடித்துடிப்பு நின்றது. இது அவரது உடல்நிலையை அறிந்து கொள்வதில் பேருதவி செய்துள்ளது” என்றார். சுவாமிஜி லான்ட்ஸ்பர்கிடம் இனிமையான, இதமான வார்த்தைகளைச் சிறிது நேரம் பேசினார். ஆனால் அவை எதுவும் அவரது மனத்தை மாற்றியதாகத் தெரியவில்லை. பிறகு சுவாமிஜி அங்கிருந்து அகன்றார். லான்ட்ஸ்பர்க்கும் சென்றுவிட்டார். அவரது பிரிவு சுவாமிஜியின் மனத்தை மிகவும் வாட்டியது.
உணர்ச்சிகளும் உடல்நோயும்
இத்துடன், தொடர்ந்து ஸ்டர்டியிடமிருந்து வந்த கடிதம்களும் சுவாமிஜியின் மனவேதனையை அதிகரித்தன. அவரது மனத்துயர் சகோதரச் சீடர்களிடம் கோபமாக வெளிப் பட்டது. அவர்களைவிட அவரது அன்பைப் புரிந்து கொண்டவர்கள் யார்?அவர்களின் பணி வளர்ச்சி திருப்தியான வகையில் இல்லை என்று அவர்களைத் திட்டி எழுதினார்.
சுயமாக சிந்தித்துச் செயல்படுங்கள். பணம், கல்வி, அனைத்திற்கும் மூத்த சகோதரனையே நம்பியுள்ளோம்! என்றிருந்தால் சர்வ நாசத்தை த் தவிர வேறு என்ன ஏற்படும்? பத்திரிகைக்கான பணத்தை நான் சம்பாதிக்க வேண்டும், கட்டுரைகள் நான் எழுதித்தரவேண்டும், நீங்கள் என்னதான் செய்வீர்கள்? நமது துரைமார்கள் என்ன செய்கிறார்கள்? என் பங்கை நான் செய்து முடித்தாயிற்று. இனி செய்ய வேண்டியதை நீங்கள் செய்யுங்கள். ஒரு பைசா சம்பாதிப்பதற்கு யாரும் இல்லை, பிரச்சாரம் செய்வதற்கு யாரும் இல்லை, தன் விஷயத்தைக் கவனித்துக்கொள்வதற்கான புத்தி யாருக்கும் இல்லை. ஒருவரி எழுதுவதற்கு யாருக்கும் திறமை இல்லை, எதுவுமில்லாமலே எல்லோரும் மகா புருஷர்கள்... உங்கள் நிலைமை இதுவே ஆகுமானால், இளைஞர்களின் கையில் ஆறு மாத காலத்திற்குப் பத்திரிகை, பணம், பிரச்சார வேலை அனைத்தையும் ஒப்படைத்துவிடுங்கள், அவர்களாலும் எதுவும் செய்ய முடியாவிட்டால், எல்லாவற்றையும் விற்று, நன்கொடை தந்தவர்களிடம் பணத்தையெல்லாம் திருப்பிக்கொடுத்து விட்டுப் பக்கிரிகளாகப்போய்விடுங்கள்.
அதே வேளையில் கோபம் தணிந்ததும் அவர்களைத்தேற்றவும் செய்தார். முன்பு எழுதிய கடிதங்களிலிருந்த கடுஞ்சொற்களைப் பொருட்படுத்த வேண்டாம். அவை உங்களுக்கு நன்மையே செய்யும். சிறிது காலம் நான் மறைந்துவிட வேண்டியது அவசியம்.............
யாரும் எனக்கு எழுதவோ, என்னைத்தேடவோ வேண்டாம். எனது உடல் நலத்திற்கு அது முற்றிலும் அவசியம்” என்று அவர்களுக்கு எழுதினார்.
மன அதிர்ச்சிகள் உடம்பையும் பாதிக்கும் என்பது உண்மைதான். ஹெல்மர், கர்ன்சி போன்ற நல்ல டாக்டர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்து வந்ததும் ஜலதோஷமும் காய்ச்சலும் அவரை வாட்டின. ஆனால் இந்த அளவிற்கு உடனடி எதிர்விளைவுகள் மிகவும் சாத்வீகமான உடம்புகளிலேயே உண்டாகும். எத்தனையோ பேருக்கு ஆன்மீக ஆற்றலை அள்ளி வழங்கிக்கொண்டிருந்த அவரது உடம்பு எவ்வளவு நுண்ணிய சாத்வீகமானதாக இருக்கும். அவரது உடம்பைப் பற்றி அவரே அறிவார். மொத்தத்தில் எனது உடம்பைப்பற்றி கவலைப்பட காரணம் எதுவுமிருப்பதாக நான் நினைக்கவில்லை. இது போன்ற நரம்புத் தளர்வுற்ற உடல் தான், சிலவேளைகளில் இனிமையான இசை பாடவும் சில வேளைகளில் இருளில் கிடந்து புலம்பவும் ஏற்ற கருவியாகிறது. இத்தகைய உடம்பில் வினோதம் என்னவென்றால் உடம்பின் உறுப்புகள் பாதிக்கப் படுகின்றன என்று எழுதுகிறார் அவர்.
என் ஆன்மா விரிகிறது
-
சுவாமிஜியின் பரபரப்பான வாழ்க்கையும், கூடவே உடல் நோய்களும் ஒரு பக்கம் தொடர்ந்தன. மறுபக்கம், அவரது ஆன்மீக ஆற்றலின் வெளிப் பாடும் உச்சங்களை நோக்கி விரிந்து கொண்டிருந்தன. ஒருநாள் அவர் அபேதானந்தரிடம், சகோதரா, என் நாட்கள் எண்ணப் பட்டு விட்டன. இனி மூன்றோ , நான்கோ வருடங்கள் தான் நான் உயிர் வாழ்வேன்” என்றார். அதனை இடைமறித்த அபேதானந்தர், நீங்கள் அப்படிச்சொல்லக் கூடாது. சுவாமிஜி! உங்கள் உடல்நிலை நன்றாகத்தேறி வருகிறது. இன்னும் சில காலம் இங்கே இருந்தால் உங்கள் தெம்பும் ஆற்றலும் பழைய நிலைக்குவந்துவிடும். அது மட்டுமின்றி, நாம் இப்போது தான் பணியை ஆரம்பித்திருக்கிறோம்் இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ உள்ளது” என்றார் . அமைதியாக ஆனால் அழுத்தமாகப் பதில் கூறினார் சுவாமிஜி.
உன்னால் என்னைப் புரிந்து கொள்ள முடியாது. நான் மிகப் பெரிதாக வளர்ந்து கொண்டே போவது போல் உணர்கிறேன். என் ஆன்மா விரிந்து கொண்டே போகிறது. இனியும் இந்த உடம்பால் என்னைத் தாங்கிக்கொள்ள முடியாது என்று சிலவேளைகளில் உணர்கிறேன். இப்போது வெடித்துவிடுவேன். உண்மையாகவே சொல்கிறேன், வெறும் சதையும் ரத்தமும் சேர்ந்த இந்தக் கூட்டினால் என்னை இனியும் அதிக நாள் தாங்கிக்கொள்ள இயலாது.
நியூயார்க்கிலிருந்து நவம்பர் 22-ஆம் நாள் சிகாகோ சென்றார் சுவாமிஜி. அங்கே ஹேல் குடும்பத்தினார், எம்மா கால்வே முதலானோரைச் சந்தித்துவிட்டு, கலிபோர்னியா விற்குப் புறப்பட்டார்.
தென் கலிபோர்னியாவில்
சிகாகோவிலிருந்து 1899 டிசம்பர் 3-ஆம் நாள் கலிபோர்னியாவிலுள்ள ஒரு முக்கிய நகரமான லாஸ் ஏஞ்ஜல்ஜுக்குச்சென்றார். சகோதரனை இழந்த மெக்லவுட் அங்கே ப்ளாஜட்டின் வீட்டில் தங்கியிருந்தார். அவர்களுடன் சென்று தங்குவதற்கு முன்பு சுவாமிஜி சில நாட்கள் தமது மாணவியான மிஸ் ஸ்பென்சரின் வீட்டில் தங்கினார். ஸ்பென்சர் சுமார் பத்து வருடங்களாகத் தமது முதிய, பார்வையற்ற தாயாரைப் பராமரித்து வந்தார். சுவாமிஜி தினமம் அந்த முதியவரின் அருகில் நீண்ட நேரம் அமர்ந்து அவருடன் பேசுவார். இந்த நாட்களில் பல புதிய நண்பர்களை மெக்லவுட் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அங்கும் சுவாமிஜி சொற்பொழிவுகள் ஆற்றினார்.
சுவாமிஜியின் முதல் சொற்பொழிவின்போது அவரைச் சந்தித்தவர்களே மீட் சகோதரிகள். உங்கள் மூவரையும் முன்பே எனக்குத்தெரியும்” என்று சுவாமிஜி ஒரு முறை அவர்களிடம் கூறினார். சகோதரிகளாகிய நீங்கள் மூவரும் என்றென்றைக்குமாக என் மனத்தின் ஓர் அங்கம் ஆகிவிட்டீர்கள்” என்று அவர் கூறுமளவிற்கு அவரது வாழ்க்கையில் அவர்கள் இடம் பிடித்தார்கள்.
மிசஸ் கேரி வைக்காஃப் , மிசஸ் ஆலிஸ் மீட் ஹேன்ஸ்ப்ரோ மிஸ் ஹெலன் மீட் ஆகியோரே அந்த மீட் சகோதரிகள். இவர்கள் ஏற்கனவே சுவாமிஜியின் ராஜயோகம் மற்றும் கர்மயோகம் நூல்களைப் படித்திருந்தனர். என்ன அற்புதமான கருத்துக்கள்! இவற்றை எழுதிய மனிதர் எவ்வளவு அற்புதமானவராக இருப்பார்! என்று தங்களுக்குள் பேசியபடி ஓர் உருவத்தையும் அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களாம். அப்படிக் கற்பனையில் கண்ட ஒருவர் நேரிலேயே வந்து பேசப்போகிறார் என்பதைப் பத்திரிகைகள் மூலம் அறிந்த அவர்கள் அந்த வாய்ப்பைநழுவ விடவில்லை. அவரது சொற்பொழிவுகளைக்கேட்டனர். அவருடன் நெருங்கிப் பழகினர். அவரது சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்வதில் உதவினர்.
ப்ளாஜட்டின் வீட்டில்
ஸ்பென்சரின் வீட்டிலிருந்து சுவாமிஜி ப்ளாஜட்டின் வீட்டிற்கு இடம் பெயர்ந்தார். இவர் சுவாமிஜியின் வரலாற்றுப் புகழ்மிக்க சிகாகோ சொற்பொழிவுகளை நேரில் கேட்டவர் என்பதை ஏற்கனவே கண்டோம். சுவாமிஜி இப்போது தம் வீட்டிற்கு வந்தபோது ப்ளாஜட் மிகவும் மகிழ்ந்தார். ப்ளாஜட்டின் வீட்டில் சுவாமிஜி பொதுவாக நாட்களை ஓய்விலேயே கழித்தார்.ஆனால் அவருடன்வாழ்கின்ற ஒவ்வொரு கணமும் மற்றவர்களும் வாழ்வில் மறக்க முடியாத கணங்களாக ஆகிவிடும்.நோய், துயரம், வேதனை, சோகம், என்று எது இருந்தாலும் அவர் வரும்போது அவை விலகி அங்கே ஓர் உற்சாகத்தின் அலை புரள ஆரம்பிக்கும்.
பிளாஜட்டின் வீட்டில் சமையலறையும் குளியலறையும் அருகருகே அமைந்திருந்தன. சுவாமிஜி குளிக்கும்போது கம்பீரமான குரலில் சம்ஸ்கிருத ஸ்தோத்திரங்களை ஓதுவார். அதன்பொருள் புரியாவிட்டாலும் அதன் சாரத்தை கிரகித்துக்கொண்டு அந்தத் தெய்வீக எண்ணங்களில் ஆழ்ந்த படியே சமைப்பார் ப்ளாஜட். பின்னர் சாப்பாடு. அதன்பிறகு சுவாமிஜியும் மெக்லவுடும் நடக்கச் செல்வார்கள்.
காலையில் வகுப்புச்சொற்பொழிவுகள் நடைபெறும். அதன் பிறகு சுவாமிஜி வந்து மதிய உணவு சமைப்பார். சொற்பொழிவு முடிந்ததும், பள்ளியிலிருந்து திரும்பும் சிறுவனைப்போன்ற குதூகலத்துடன்,இனி நாம் சமைக்கலாம்” என்று கூறியபடியே சமையறைக்குள் ஓடுவார் சுவாமிஜி என்று எழுதுகிறார் ப்ளாஜட். ஆனால் சொற்பொழிவிற்காக அணிகின்ற கோட் போன்ற துணிகளை மாற்றாமலேயே சமையலறைக்குள் சென்றுவிடுவார். மெக்லவுட் அதைக் கண்காணித்து அவரைச் சாதாரணத் துணிகளை அணிந்து கொள்ளுமாறு செய்வார்.மதிய உணவிற்குப் பிறகு வேறு எந்த அலுவலும் குறுக்கிடாவிட்டால் தோட்டத்துப் படுக்கை ஊஞ்சலில் படுத்தபடி ஏதாவது படிப்பார். இந்த நாட்களில் அவர் பிரெஞ்சு புவியியல் வல்லுனரும் சமுதாயத் தத்துவவாதியுமான எலிஸீரெக்ளூ எழுதிய ”பூமியும் அதன் மக்களும் என்ற நூலை ப் படித்து வந்தார். இது அழகிய படங்களுடன் பல தொகுதிகள் கொண்ட பெரிய நூலாகும். தமக்கு மிகவும் பிடித்த விஷயமான ”மனிதன்” என்பதைப் பற்றிய நூல் ஆதலால் சுவாமிஜி அதை விரும்பிப் படித்தார்.
டிசம்பர் 21-ஆம் நாள் சூரிய காலண்டரின் படி புத்தாண்டு நாள். அன்று காலையில் அனைவரும் சூரியனை வழிபட்டார். சுவாமிஜி காயத்ரி மந்திரத்தை ஓதினார்.
ஒரு நாள் சுவாமிஜி சொற்பொழிவுக்குக் கிளம்பினார். தாமதமாகிவிட்டது என்று மெக்லவுட் அசவரப்படுத்திக்கொண்டிருந்தார். சுவாமிஜியோ அமைதியாக தலைப்பாகையைச்சுற்றியபடி அதை எப்படி ச் சுற்றுவது என்பதைப் பொறுமையாக ப்ளாஜட்டிற்குக் காட்டிக் கொண்டிருந்தார். மெக்லவுடின் அவசரத்தைக் கண்டப்ளாஜட்,சுவாமிஜி, நீங்கள் அவசரப் பட வேண்டாம். ஒரு கதை சொல்கிறேன். ஒருவனைத் தூக்கிலிடுவதற்காக க் கொண்டு சென்றார்கள். அதைக் காண்பதற்காக மக்கள் முண்டியடித்தபடி ஓடிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட அவன் அவர்களிடம், நீங்கள் ஓடவேண்டாம். பொறுமையாகப்போங்கள். நான் வரும்வரை அங்கே பெரிதாக எதுவும் நடக்காது” என்றானாம். அது போல், சுவாமிஜி! நீங்கள் போகும்வரை அங்கே பெரிதாக எதுவும் ந்க்காது. இதைக்கேட்ட சுவாமிஜி ஒரு சிறுவனைப்போல் விழுந்து விழுந்து சிரித்தார். பின்னாளிலும் பல நேரங்களில் அவர் இதைக் கூறிச் சிரிப்பாராம்
மற்றொரு நாள் காலை, ப்ளாஜட்டின் வீட்டில் வகுப்புச் சொற்பொழிவிற்கு ஏற்பாடாகியிருந்தது. மக்கள் கூட்டமாக வந்து அமர்ந்திருந்தனர். சுவாமிஜி சென்று அமைதியாக உட்கார்ந்தார். தியானத்தில் ஆழ்ந்தார். அவரது கண்கள் கீழ்நோக்கிய பார்வையுடன் இருந்தன. நேரம் கடந்தது. அனைவரும் ஒருவித வசீகரத்திற்கு உட்பட்டவர்கள் போல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு சுவாமிஜி கண்விழித்தார். அவரது முகம் ஒரு குழந்தையின் களங்கமின்மையைப் பிரதிபலித்தது. ஒரு குழந்தை போல் அவர் மிசஸ் லெக்கட்டிடம்,, நான் என்ன பேசுவது? என்று கேட்டார். எந்தக் கூட்டத்தையும் வசீகரித்து சொற்பொழிவாற்ற வல்ல. அறிஞர்கள் பலர் வியந்து பாராட்டுகின்ற அறிவுக்கூர்மை படைத்த அவர் எதைப் பற்றிப்பேசுவதென்று கேட்கிறார். சில நேரங்களில் சுவாமிஜி குழந்தைபோல் ஆகிவிடுவார்.
சுவாமிஜியைப் பற்றிய நாடகம்
இந்த நாட்களில் சுவாமிஜி குறைவாகவே பேசினார். இந்த அளவிற்கு அவர் மௌனமாக இருந்ததைத் தாம் இதற்கு முன்பு கண்டதில்லை என்று எழுதுகிறார் மெக்லவுட். ஆனால் பல பிரமுகர்கள் அவரை வந்து சந்தித்தனர். சுவாமிஜியும் பல நண்பர்களைச் சென்று கண்டார்.
இந்த நாட்களில் அங்கே ”இந்தியாவிலிருந்து வந்துள்ள எனது நண்பன்” என்றநாடகம் ஒன்று நடைபெற்றது. இது ஒரு நகைச்சுவை நாடகம். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை நாடகம்” என்று விளம்பரப் படுத்தப் பட்டிருந்தது. வினோதம் என்னவென்றால் இந்த நாடகம் குறிப்பிடுகின்ற ”நண்பன்” சுவாமிஜியே ஆவார். அவரை மையப்படுத்தி அமைந்த நாடகம் அது. அவர் முதன்முறை வந்திருந்தபோது பெற்ற புகழின் எதிரொலி இது. இந்தப் பாத்திரம் நேரடியாக சுவாமிஜியைக் குறிக்கவில்லை என்றாலும், அவர் அடைந்த புகழின் தாக்கத்தால் தான் அந்தக் கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும். சுவாமிஜி இந்த நாடகத்தைச்சென்று கண்டார். வயிறு வலிக்கச் சிரித்து மகிழ்ந்தார்.
வேதாந்தம் விளைத்த நடனம்
-
மற்றொரு முறை லாஸ் ஏஞ்ஜல்ஸில் நாட்டிய நாடகம் ஒன்றையும் காணச்சென்றார். இந்த நாட்டிய நாடகத்திற்கும் தூண்டுதலாக இருந்தது சுவாமிஜியின் கருத்துக்களே. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவரது சொற்பொழிவுகளைக்கேட்டாள் ஓர் இளம் பெண். எல்லோருள்ளும் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது என்று சுவாமிஜி கூறிய கருத்து அவளை மிகவும் கவர்ந்தது. அந்த ஆற்றல் என்னுள்ளும் இருக்குமானால் அதை என் வாழ்க்கையில் வெளிப்படுத்த வேண்டும்” என்று முடிவு செய்தாள் அவள். அவள் ஒரு நடன மங்கை. தன்னுள் உள்ள ஆற்றலை நடனத்தின் மூலம் வெளிக் கொணர்ந்து, கலை, மதம் போன்றவற்றின் நுண்மையை உலகிற்குக் காட்டவேண்டும் என்று விரும்பினாள் அவள். அதற்கேற்ப ஒரு நாட்டிய நாடகத்தை உருவாக்கினாள். அதனைக் காண வருமாறு அவளும் அவளது தாயாரும் வந்து சுவாமிஜியை அழைத்தனர். சுவாமிஜியும் மற்றவர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் சென்று அவளது நாடகத்தைக் கண்டு ரசித்தனர்.
ஒரு மரண வதந்தி-
சுவாமிஜி லாஸ் ஏங்ஜல்ஸுக்கு வந்ததிலிருந்து அவரது உடல்நிலை ஓரளவிற்குத்தேறி வந்தது. வேதனை மிக்கதாக இருந்தாலும் காந்தச் சிகிச்சையும் ஏற்றுக்கொண்டார் அவர். இந்தச் சிகிச்சையைச் செய்தவர் மிசஸ் மெல்டன் என்பவர். இவர் எழுதப் படிக்கக்கூட தெரியாதவர். ஆனால் ஏதோ ஒருவித சக்தியால் தாம் இயங்குவதாக அவர் கூறினார். ஓரு ஆவேசம் வந்தது போல் அவர் தமது கைகளை நோயாளியின் உடம்பு முழுவதிலும் தவழவிடுவார். நோயாளியின் உடம்பை அழுத்தி அழுத்தித் தேய்ப்பார். அப்போது நோயாளியின் தோல் உரிந்து, தீக் கொள்ளியை உடம்பில் வைப்பது போன்ற வேதனை உண்டாகும். சுவாமிஜி எழுதுகிறார். என்னைக் குணப்படுத்துவது யார் தெரியுமா? டாக்டர் அல்ல, கிறிஸ்தவ விஞ்ஞான சிகிச்சைக்காரர்கள் அல்ல. ஆனால் காந்த முறையில் சிகிச்சை செய்யும் ஒரு பெண். ஒவ்வொரு முறை சிசிக்சை அளிக்கும்போது என் தோலை உரித்துவிடுகிறார். ஆச்சரியங்கள் நிகழ்கின்றன. தோலைத்தேய்ப்பதாலேயே அவர் அறுவைச் சிகிச்சைகள் செய்கிறார். உட்சரீர அறுவைச் சிகிச்சைகள் கூட செய்கிறாராம்.அவரிடம் சிகிச்சை பெறுபவர்கள் சொல்கிறார்கள். ஆரம்பத்தில் இந்தச் சிகிச்சையால் அவர் சற்று குணமடைந்தார். பிறகு அதனால் பெரிய நன்மை எதுவும் உண்டாகவில்லை.
தமது உடல்நிலை பற்றி சுவாமிஜி அவ்வப்போது நண்பர்களுக்கும் பேலூர் மடத்திற்கும் எழுதி வந்தார். ஆனாலும் அவரைப் பற்றிய பல வதந்திகள் இந்தியாவில் நிலவத்தொடங்கிள- சுவாமிஜி இறந்து விட்டதாகக் கூட! இது பற்றி சுவாமிஜி துரியானந்தருக்கு எழுதுகிறார். நமது நாட்டில் பிளேக் நோய் தோன்றியுள்ளது. யார் இருக்கிறார்கள், யார் இறந்து விட்டார்கள், யாருக்குத் தெரியும்? சரி, அச்சுவிடமிருந்து இன்று ஒரு கடிதம் வந்துள்ளது. சிகாரில் ராம்கர் நகரில் அவன் எங்கோ ஒளிந்து கொண்டிருந்தானாம். விவேகானந்தர் காலமாகி விட்டார் என்று யாரோ அவனுக்குச் சொன்னாராம்! எனவே அவன் எனக்குக் கடிதம் எழுதியுள்ளான். அவனுக்கு ஒரு பதில் எழுதப்போகிறேன்.
சில கவலைகள்-
உடல் நிலையைத் தவிர சுவாமிஜி கவலைப் படுவதற்கு வேறு சில காரணங்களும் இந்த நாட்களில் இருந்தன. முதலாவதாக பேலூர் மடம். அது அமைந்துள்ள பாலி நகராட்சி, மடத்திற்கு வரிகளை விதித்தது. மடத்தை ஒரு வழிபாட்டுத் தலமாகக் கருதி வரிவிலக்கு அளிக்காமல், தங்குமிடமாகக் கருதி வீட்டு வரி போன்றவற்றை விதித்தது. அதை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப் பட்டது.ஆனால் ரூ. 20,000-க்கு மேல் மதிப்புள்ள பேலூர் மடச் சொத்து விஷயமாகத் தங்களால் எந்த முடிவையும் எடுக்க இயலாது என்று பாலி நகராட்சி நீதிமன்றம் கூறிவிட்டது. சுவாமிஜி சட்டம் படித்தவர். சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர். மடத்தைத் தமது பெயரில் வைத்திருக்காமல் நிர்வாகிகள் குழு ஒன்றின் கீழ் ஒரு பொதுச்சொத்தாக வைத்திருந்தால் இந்தப் பிரச்சனை எழுந்திருக்காது. அப்படிச் செய்யாதது தம் தவறு என்று கவலை கொண்டார் சுவாமிஜி. இந்தப் பிரச்சனை சுவாமிஜியின் மனத்தை வாட்டியது.
அடுத்தது, நியூயார்க் மடத்தைப் பற்றிய கவலை. இதன் தலைவராக இருந்தவர் லெக்கட். அவருக்கும் அபேதானந்தருக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றி வளர்ந்தது. கடைசியில் லெக்கட் தமது பதிவியை ராஜினாமா செய்தார். இது நீதி மன்ற விவகாரங்களைவிட சுவாமிஜியை மிகவும் கவலையுறச்செய்தது. இருவரும் முக்கியமானவர்கள். சுவாமிஜி யாருக்குத் துணை போவார்.? ஆரம்பத்தில் அவர் நடுநிலைமையையே வகித்தார். சாராவும் மெக்லவுடும் லெக்கட்டின் பக்கமே நியாயம் இருப்பதாகக் கூறினர். அபேதானந்தரிடமிருந்து வந்த ஒரு நீண்ட கடிதம் இதோ உள்ளது. அவர் முற்றிலும் மனம் தளர்ந்து உள்ளார் என்று தோன்றுகிறது. சிறிதளவு அன்பு காட்டுவது அவரைப் பூரணமாக வென்றுவிடும் என்று நான் நம்புகிறேன் என்று சாராவுக்கு எழுதினார் சுவாமிஜி. பொறுமையாகக் காத்திருக்குமாறு, அபேதானந்தருக்கு எழுதினார். கடைசியில் டாக்டர் பார்க்கர் என்பவரைத் தலைவராக்கி பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும் இது அவருக்கு மன உளைச்சலைத் தரவே செய்தது.
மூன்றாவதாகவும் ஒரு கவலை இருந்தது. அமெரிக்காவில் நிதி திரட்ட வந்த நிவேதிதைக்கும் மேரி ஹேலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றியது. சுவாமிஜியின் இந்தியப் பக்கத்தை அறியாதவர் மேரி. வேதாந்தச் சொற்பொழிவுகளையும் , ஞானயோகக் கருத்துக்களையும் மட்டுமே அவர் சுவாமிஜியிடமிருந்து கேட்டுள்ளார். எனவே இந்தியப்பெண்களுக்கான கல்வி, கர்மயோகம், காளி வழிபாடு என்றெல்லாம் நிவேதிதை பேசுவதையும் அதற்காகப் பணம் திரட்டுவதையும் மேரியால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை வளர்த்தது. நிவேதிதை மகள் என்றால் மேரி சகோதரி. இருவரில் யாருக்குத் துணை போவார் சுவாமிஜி. இந்தியாவைப் பற்றியும் சுவாமிஜியின் இந்தியப் பக்கத்தையும் நன்றாக அறிந்திருந்த மெக்லவுட் போன்றோர் நிவேதிதையின் பக்கமே நியாயம் இருப்பதாகக் கூறினர். சுவாமிஜி மேரியின் மனத்திற்கு ஆறுதலாகக் கடிதம் எழுதினார். ஆனால் அவர் நிவேதிதையையே சார்ந்து நின்றார் என்பது அவரது கடிதங்களிலிருந்து தெளிவாகிறது. அன்பு மகளே” நிவேதிதா” என்று தொடங்கி , உன் தந்தை, விவேகானந்த” என்று ஒரு கடிதத்தை இந்த நாளில் எழுதுகிறார் அவர். மற்றொரு கடிதத்தில் ஆசிகள், சிறிது கூட மனம் தளராதே. ஜெய் குரு! ஜெய குரு! நீ ஷத்திரிய ரத்தத்தில் பிறந்தவள்.நமது காவியுடைப் போர்க்களத்தின் மரணஉடை. வெற்றியல்ல, புனிதப் பணிக்காகச் சாவதே நமது லட்சியம். ஜெய் குரு! கொடியதான விதியின் திரைகள் கறுத்தவை. ஊடுருவ முடியாதவை. ஆனால் நான்தான் எஜமானன். என் கையைத் தூக்கினால் அவை மறைந்தோடுகின்றன. எல்லாம் முட்டாள்தனம். பயமா? நான் பயத்தையே அஞ்சி நடுங்கச் செய்பவன். பயங்கரத்திற்கே பயங்கரமானவன். பயமற்ற, இரண்டற்ற ஒரே பொருள் நான். நான் விதியையே ஆட்டி வைப்பவன். தலை யெழுத்தையே அழிப்பவன். ஜெய் குரு! என் மகளே, உறுதியுடன் எழுந்து நில். பொன்னிற்கோ வேறு எதற்குமோ விலையாகி விடாதே. வெற்றி நமதே. என்று எழுதி நிவேதிதையை உற்சாகப் படுத்தினார்.
தென் கலிபோர்னியவில்
........................
பல நேரங்களில் அவரது பேச்சு இந்தியா பற்றியதக இருக்கும். அவரது இதயத்தின் மூலையின் ஒருநரம்பு எப்போதும் இந்தியாவிற்காகத் துடித்துக் கொண்டே இருந்தது. வெள்ளையரின் அடிமைகளக இந்தியர்கள் படுகின்ற வேதனை சிலவேளைகளில் அவரது முகத்தில் பிரதிபலிக்கும். மௌனமாக அதைத் தங்கிக்கெள்வார் அவர். ஒரு நாள் அவர் கூறினார்.
வெள்ளையர்கள் இந்தியாவிற்கு வந்தது இந்துக்களை வெல்வதற்காக அல்ல, அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அல்ல, உண்மையில் அவர்களின் ரத்தத்தை உறிஞ்சுவதற்காக! ஆனால் என்ன துரதிர்ஷ்டம்! வந்த படைவீரர்களும் சரி, அதிகாரிகளும் சரி மிகவும் தாழ்ந்த ஜாதியைச் சார்ந்தவர்களாக, நாகரீகம் தெரியாதவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் நான் தெருவோரமாக அமர்ந்திருந்தேன். அந்த வழியாக இரண்டு ஆங்கிலேய வீரர்கள் சென்றார்கள். அவர்களில் ஒருவன் என்னைக் காலால் உதைத்தான். திகைப்புடன் நான் அவனிடம் காரணம் கேட்டேன். அதற்கு அவன், அழுக்கு மூட்டையாகிய இந்தியன் நீ. ன்னைக் கண்டாலே இப்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது” என்றான் அவன். நானும் விடவில்லை. ஓ! நாங்கள் உங்களை அதைவிட இழிவாகக் கருதுகிறோம். உங்களை அழுக்கு மிலேச்சன் என்றல்லவா அழைக்கிறோம்” என்றேன். இந்தக் காலி படைவீரர்கள் எத்தனை கீழ்ஜாதிப்பெண்களின் வாழ்க்கையைச் சீரழித் திருக்கிறார்கள். தெரியும? ஆங்கிலேயனின் வீட்டில் எதையவது ஒருவன் திருடிவிட்டல் அவனைக்கென்று விடுவர்கள்.பாவம், இந்துக்கள், கதியற்ற நிலையில் உட்கர்ந்து அழுவார்கள், அவ்வளவு தான்.
எங்களுக்கு மட்டும் சற்று போர்க்குணம் இருக்குமானால் இப்படி விரல்விட்டு எண்ணக் கூடிய சில ஆங்கிலேயர்கள் எங்களை ஆள முடியுமா? அதனால் தான் நான் இந்தியாவில் நாடு முழுவதும் சென்று அனைவரும் இறைச்சி சாப்பிட்டு, போர்க்குணத்தை வளர்த்துக்கெள்ளவேண்டும் என்று போதிக்கிறேன்.
…
சில நிகழ்ச்சிகள்
................................
காலை வேளைகளில் சொற்பொழிவு இல்லை என்றால் சுவாமிஜி சிறிது நேரம் தோட்டத்தில் உலாவுவார்., அல்லது நூல்நிலையத்தில் சென்று படிப்பார். மதிய உணவிற்குப் பிறகு சிறிது நேரம் படுத்திருப்பார். இல்லாவிடில் மிசஸ் வைக்காஃப் வீட்டு வேலைகளைச் செய்யும்போது பேசிக் கொண்டிருப்பர். சில வேளைகளில் அவரையும் அழைத்தபடி தேட்டத்தில் உலாவுவார். உலவியபடியே வங்க மொழிப் பாடல்களைப் படி அதன் பெருளை விளக்குவார். அறியாமையில் மூழ்கிய அஞ்ஞானி கல்லையும் மண்ணையும் வணங்குகிறான். என்ற கிறிஸ்தவப் படலைப்பாடி அத்தகைய அஞ்ஞனி நான்” என்று கூறிச் சிரிப்பார்.
சில வேளைகளில் மதிய நேரத்தில் கடிதங்கள் எழுதுவார். இந்த நாட்களில் நிவேதிதைக்காக பலப் புராணக் கதைகளையும், அன்னையின் விளையாட்டு அறிந்தவர் யாரோ? என்ற கவிதையையும் எழுதி அனுப்பினார்.
சில வேளைகளில் சுவாமிஜி பேட்டி அளிப்பதுண்டு. பேட்டி என்ற பெயரில் வினோதங்களும் நிகழ்வதுண்டு. வருபவர்கள் மீட் சகோதரிகளுடன் தொடர்ந்து பேசிக்கெண்டிருப்பார்கள். சுவாமிஜி எதுவும் கூறாமல் புகையை இழுத்தபடியே அமைதியாக அமர்ந்திருப்பர். அவராக ஏதாவது பேச வேண்டும் என்று நினைத்த பெண்மணி ஒருவர் ஒரு நாள் எழுந்து செல்லும்போது, இவர் என்ன இப்படி அமர்ந்திருக்கிறார்? இந்த மனிதருக்கு ஆங்கிலம் தெரியாதா? என்று கேட்டே விட்டார்.
ஒரு பெண் அவரை அமர வைத்து ஓவியம் வரைய விரும்பினாள்.ஆனால் சுவாமிஜி ஏனோ அதற்கு உடன்படவில்லை. எவ்வளவோ கேட்டும் மறுத்துவிட்டார். அந்தப் பெண் ஹேன்ஸ்ப்ரோ மூலம் தனது வேண்டுகோளை வைத்த போத சுவாமிஜி கண்டிப்பாக, அந்தப் பெண்ணை வெளியில் பேகச்சொல்கிறாயா அல்லது நான் வீட்டை விட்டு போகட்டுமா? என்று உறுதியான குரலில் கேட்டார். அந்தப் பெண் திரும்ப வேண்டியதாயிற்று.
மாலை வேளைகளில் இரவு உணவு தயாரிப்பதற்கு உதவுவார். சில வேளைகளில் தாமே சமைக்கவும் செய்வார். அவர் செய்கின்ற சப்பத்தியும் கறிகளும் டோரதிக்கும் ரால்ஃபிற்கும் மிகவும் பிடிக்கும். முதலில் மாசாலாப்பொருட்களை அரைத்துக்கொள்வார். நின்று கொண்டு அரைப்பது அவருக்குப் பிடிக்காது. எனவே சம்மணமிட்டு அமர்ந்து கெண்டு அரைப்பார். பிறகு வெண்ணெயில் தாளிக்கத் தொடங்குவார். அதில் எழுகின்ற புகை என்றாலே மீட் சகோதரிகளுக்கு அலர்ஜி- எரிச்சலால் கண்கள் குளமாகி விடும். அதனால் தாளிக்கும் முன், இதோ வருகிறது புகை! பெண்கள் இந்த இடத்தைவிட்டு அகலுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்”என்று உரத்த குரலில் ஓர் அறிவிப்பு செய்வார்.
பொதுவாக மலை 6.30 மணிக்குஇரவு உணவு முடிந்துவிடும். அதில் காய்கறி, பாயசம், சப்பத்தி, குழம்பு, மீன், அல்லது இறைச்சி சூப் ஆகியவை இருக்கும். சாப்பாடு முடிந்த பிறகு குளிர் காய்வதற்காக அடுப்பை மூட்டுவார்கள்.
சிலர் நாற்காலியில், சிலர் கட்டிலில் என்று வசதியாக அமர்ந்து கொள்வார்கள். சாய்வு நாற்காலியில் சம்மணமிட்டு அமர்வார் சுவாமிஜி. சிலவேளைகளில் சாஸ்திரங்கள் எதையாவது படித்துப்பொருள் கூறுவார். சில வேளைகளில் வேறு ஏதாவது பேசுவார். ஆனால் அவர் எதைச் செய்தாலும் அது ஓர் ஆன்மீக அனுபவத்தை அவர்களின் உள்ளத்தில் நிறைப்பதாக இருந்தது.
சமையல் மற்றும் சாப்பாட்டு நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பொதுவாக சுவாமிஜி அதிகம் சிரிப்பதோவேடிக்கை பேசுவதோ கிடையாது. ஆனால் அவருடன் இருக்கின்ற ஒவ்வொரு கணமும் நாம் வளர்வோம். பெரிதாக எந்த உபதேசத்தையும் அவர் எங்களுக்குத் தர வில்லை. ஆனால் அவர் எங்கள் கண்களைத் திறந்தார். தமது வாழ்க்கை மூலம் அவர் கற்றுத்தந்த பாடத்தை ஒரு போதும் மறக்க இயலாது” என்று எழுதுகிறார் ஹேன்ஸ்ப்ரோ.
ஒரு நாள் சுவாமிஜி வைக்காஃபிடம், நான் தயாரித்த அந்த மசாலா கறி எப்படி இருந்தது? என்று கேட்டார். ஓ, பிரமாதம்” என்றார் வைக்காஃப்.ஆனால் சுவாமிஜியை அவ்வளவு எளிதாக ஏமாற்ற இயலாது. சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, இந்தப் பதிலை உண்மையாகச் சொல்கிறீர்களாஅல்லது நட்பிற்காகச் சொல்கிறீர்களா? என்று கேட்டார் சுவாமிஜி. இதற்கு பதில் சொல்ல தயக்க மாகத்தான் இருக்கிறது.ஆனாலும் சொல்கிறேன்” நட்பிற்காகத்தான் அதைப் புகழ்ந்தேன்” என்றார் வைக்காஃப்.
மற்றொரு நாள் வைக்காஃப் சுவாமிஜிக்காகச் சமைத்துக்கொண்டிருந்தார். சுவாமிஜி அங்கே முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தார்.திடீரென்று நின்று அவரைப் பார்த்து, உங்கள் திருமண வாழ்க்கை இனிமையாக உள்ளதா? என்று கேட்டார். ஆம், சுவாமிஜி என்றார் வைக்காஃப். சுவாமிஜி மௌனமாக வெளியில் சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து வைக்காஃபிடம், மேடம், இந்த உலகில் ஒரு திருமண வாழ்க்கையாவது மகிழ்ச்சியாக நடைபெறுகிறதே என்று எனக்கு ச் சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.ஒரு வேளை வைக்கா.ஃபின் துயரத்தை ஆற்றுவதற்காகத்தான் சுவாமிஜி அந்தக் கேள்வியைக் கேட்டாரோ? என்று எழுதுகிறார் மேரி லூயி பர்க். ஏனெனில் வைக்காஃபின் வாழ்க்கை உண்மையில் மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்பது பின்னாளில் தெரியவந்தது. ஒரு வேளை அன்று அவர் உண்மையைக் கூறியிருந்தால் தொடர்பின்மை நமக்குப் புரிகிறது. அது போலவே உலகம் என்ற இந்தக் கனவிலிருந்து விழித்து அதை உண்மையுடன் ஒப்பிடும் போது அது தொடர்பற்றதாக. முன்னுக்குப் பின் முரணாக இருப்பது நமக்குப் புரியும்.
....
சொற்பொழிவுகள்
................................
லாஸ் ஏஞ்ஜல்ஸிலும் தெற்கு பாஸடேனாவிலும் சுவாமிஜி குறைந்தது 38 பெதுச்சொற்பொழிவுகளும் வகுப்புச்சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார். அவற்றில் சில வற்றிற்குக் கட்டணம் வசூலிக்கப் பட்டன. பல சொற்பொழிவுகள் ஷேக்ஸ்பியர் மன்றத்தில் நடைபெற்றன. மீட் சகோதரிகளின் வீட்டிலிருந்து சில அடிகள் நடந்தால் மின்சார ரயில் கிடைக்கும். அதில் ஏறி பாஸடேனா சென்று அங்கிருந்து மன்றத்திற்குச்செல்வார் சுவாமிஜி. பொதுவாக ஹேன்ஸ்ப்ரோ அவருடன் செல்வார். நடக்க வேண்டும் என்பதற்காகவே சில வேளைகளில் சவாமிஜி அந்த இடம் வரை நடந்து செல்வதுண்டு.
சவாமிஜியின் சொற்பொழிவில் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்திய ஒரு விஷயம் உண்டு. அது- அவர் தமது சொற்பொழிவுகளுக்குக் குறிப்புகள் எதுவும் எடுத்து வராதது தான். அவர் கூட்டத்திற்கு வந்த பிறகு தன் பெதுவாகத் தலைப்பையே முடிவு செய்வர்கள். ஒரு கண நேரத்தில் அந்தத் தலைப்பில் பேசத் தயாராகிவிடுவார். சுவாமிஜி. எந்தத் தயக்கமும் இல்லமல், மடை திறந்த வெள்ளம் போல் கருத்துக்கள் வெளிவரும். யாரையும் திகைப்பில் ஆழ்த்திவிடக் கூடியது இது.
முதல் நாள் சொற்பொழிவுக்கு (தலைப்பு- அன்புமதம்)
முன்பு ஒரு பெண்மணி அங்கிருந்த பேராசிரியர் பாம்கரிடம், சொற்பொழிவாளர் கிறிஸ்தவராகிய ஓர் இந்து என்று நினைக்கிறேன், அப்படித்தானே? என்று கேட்டார். அதற்கு பேராசிரியர் பெருமையுடன், இல்லை, அவர் மதம் மாற்றப்படாத இந்து. உண்மையன ஓர் இந்துவிடமிருந்து நீங்கள் இந்து மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்” என்றார்.
….
குழப்பவாதிகள்
....................
லாஸ் ஏஞ்ஜல்ஸில் ஒரு முறை ”பாரசீகக் கலை” என்ற தலைப்பிலும் சுவாமிஜி சொற்பொழிவாற்றினார்.
வழக்கம்போல் எல்லா சொற்பொழிவுகளும் சுமுகமாக நடைபெறவில்லை. சில வேளைகளில் சிலர் எப்படியவது சுவாமிஜியை வளைத்து, அவரது வாயிலிருந்து முன்னுக்குப் பின் முரணான ஏதாவது வரவழைத்து அவரை மாட்டி விடவேண்டும் என்றே சொற்பொழிவுக்கு வந்தார்கள். ஜனவரி 18 ஆம் நாள் ”இந்தியப் பெண்கள்” என்ற தலைப்பில் சுவாமிஜி பேசினார். இந்தியாவிற்கு மிஷனரிகளை அனுப்புகின்ற ஒரு சர்ச்சுடன் தொடர்புடைய பெண்களும் ஆண்களுமாக அத்தகைய சிலர் அன்று வந்திருந்தார்கள். அன்றைய சொற்பொழிவின்போது, கேட்பவர்களே ஒரு தலைப்பைக் கூறுமாறு சுவாமிஜி கேட்டுக்கொண்டார். உடனே சர்ச்சிலிருந்து வந்தவர்கள் தங்களுக்குள் கூடி ஏதோ பேசிக் கொண்டார்கள். பிறகு அவர்களில் ஒரு பெண் எழுந்து, நாங்கள் உங்கள் தத்துவத்தின் விளைவைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேம்.. உங்கள் தத்துவமும் மதமும் உங்கள் பெண்களை எங்கள் பெண்களை விட மேலான நிலைக்கு உயர்த்தி இருக்கிறதா? என்று கேட்டார். இந்திப் பெண்களைப் பற்றி சொல்லுங்கள்” என்று நேரடியாகக்கூறாமல் இப்படி சுற்றி வளைத்துப் பேசியது சுவாமிஜிக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர் இதோ பாருங்கள், உங்கள் கேள்வியே சரியில்லை. யார் மேலே, யார் கீழே? நான் எங்கள் பெண்களை மதிக்கிறேன்” உங்கள் பெண்களையும் மதிக்கிறேன்” என்றார்.
இப்படி சற்று மாறுபட்ட சூழ்நிலையில் அன்றைய சொற்பொழிவு தொடங்கியது. செற்பெழிவு முடிந்ததும் கேள்வி- பதில் தொடங்கியது. 1894-இல் ஒரு முறை அவர் கேம்ப்ரிட்ஜில் இதே தலைப்பில் பேசியபோது கேட்ட கேள்விகளையே இப்போதும்கேட்டார்கள். இந்துப் பெண்களைக் கொடுமைப்படுத்துவது, பால்ய விவாகம், சிறு வயதிலேயே தாயாக்கப் படுவது, குழந்தைகளை முதலைக்குத் தீனியாக நதிகளில் எறிவது போன்ற கேள்விகளே இருந்தன. சுவாமிஜியும் அனைத்திற்கும் பொறுமையாகப் பதில் கூறினார்.
கடைசியாக திருமணம்பற்றிய கேள்விகள் எழுந்தன. அவற்றிற்கும் பதில் அளித்துவிட்டு கடைசியாக, இந்தியாவிலுள்ள திருமண உறவையும், கணவன்- மனைவி தொடர்பையும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. ஏனெனில் இந்தியாவில் திருமணத்தின் நோக்கம் உடலின்பம் அல்ல” என்றார். ஆரம்பத்தில் கேள்விகேட்ட அந்தப் பெண் மீண்டும் மீண்டும் இது பற்றிய கேள்விகளையே கேட்டு சுவாமிஜியை வற்புறுத்தினார். இந்த ஒரு நிகழ்ச்சியைத் தவிர சுவாமிஜி மேடையில் கோபப்பட்டதோ ஆத்திரப்பட்டதோ நான் கண்டதில்லை. ஒரு கட்டத்தில் அவர் தமது கைகளை ஓங்கி மேஜையில் அடித்ததில் காயம் ஏற்பட்டிருக்குமோ என்று கூட தோன்றியது” என்று எழுதுகிறார் ஹேன்ஸ்ப்ரோ. இல்லை, உங்களால் புரிந்து கொள்ள முடியாது. இருளின் தனிமையில், காமத்தின் எழுச்சி காரணமாக ஓர் உயிரை உற்பத்தி செய்யும் உறவு முறை இந்தியாவில் கிடையாது” என்று அடித்துச் சொன்னார் சுவாமிஜி.
இதைக்கேட்டதும் அந்தப் பெண்ணும் எழுந்து, இவர் பொய் சொல்கிறார் இவர் பொய்யர்” என்று கத்தினாள். உடனே சுவாமிஜி, இந்தியாவைப் பற்றி என்னைவிட நீங்கள் நன்றாக அறிந்திருப்பது புால் உள்ளது. நீங்களோ பேசுங்கள். நான் வருகிறேன்” என்று கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கி விட்டார். அவர் அரங்கில் பாதிவரை சென்ற பிறகும் விடாமல் அந்தப் பெண்ணும் அவளது கூட்டதினரும் தொடர்ந்து சென்று ஏதேதோ கேள்விகள் கேட்டனர். இதற்குள் கூட்டத்திலும் சலசலப்பு எழுந்தது. கடைசியில் ஒரு வழியாக எல்லாம் அமைதியாயிற்று. அந்தப் பெண் வெளியேறும்போது ஹேன்ஸ்ப் ரோவிடம் ஆத்திரமாக, முட்டாள் பெண்ணே! அந்த மனிதர் உன்னையே வெறுக்கிறார்” என்பதைக் கூட உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா? என்று கேட்டாள். அதற்கு ஹேன்ஸ்ப்ரோ இல்லை, இன்னும் நான் அதைப் புரிந்து கொள்ளவில்லை” என்றார்
இது ஒன்றும் புதிதல்ல
...................................
சுவாமிஜியின் இரண்டாவது மேலைநாட்டு பயணத்தில் இது ஒன்று தான் இத்தகைய ஒரு நேரடித் தாக்குதல் நடை பெற்ற நிகழ்ச்சி. இது சிறிய ஒன்று தான். அவரது பெரிய போராட்டங்கள் எல்லாம் முதல் பயணத்திலேயே நிறைவுற்று விட்டன. கிடைத்த ஆயுதங்கள் ஒவ்வொன்றாலும் அவர்கள் சுவாமிஜியை எதிர்த்தனர். ஆனால் சுய கம்பீரத்தாலும், சுய மகிமையாலும் அப்பழுக்கற்ற தூய வாழ்க்கையாலும் அவர்களின் தாக்குதல்களை எல்லாம் முறியடித்தார் சுவாமிஜி. இதனை ஏற்கனவே விரிவாகக் கண்டோம். இந்தத் தாக்குதல் சுவாமிஜியைப் பொறுத்தவரை ஒரு மிகச் சாதாரண விஷயம். அவர் மேலும் குறைந்தது 12 முறையாவது அந்த மன்றத்தில் உரையாற்றினார்.
மற்றொரு நாள், எனது வாழ்வும் பணியும்” என்ற தலைப்பில் பேசிய போது, தமது தாய் நாட்டை இழிவாகப்பேசிய மிஷனரிகளை மிகவும் தாக்கினார். அவர் வட்டார வழக்கிலுள்ள வசை மொழிகளைச் சொற்பொழிவின் பயன் படுத்தியதை இந்த ஓர் இடத்தில் தான் கேட்டேன்” என்கிறார் ஹேன்ஸ்ப்ரோ, அவ்வளவு தூரம் அவர்களைத் தாக்கிப்பேசி விட்டு, திரும்பி வரும் வழியில் அவர் ஹேன்ஸ்ப்ரோவிடம், சொற்பொழிவு எப்படி இருந்தது? பிடித்திருந்ததா? என்று கேட்டார். நன்றாக இருந்தது. ஆனால் கேட்பவர்களின் அதிருப்தியைச் சம்பாதித்து விட்டீர்களோ என்று அஞ்சுகிறேன்” என்றார் ஹேன்ஸ்ப்ரோ.
அவரது அச்சத்தை தமது உதாசீனச் சிரிப்பு ஒன்றாலேயே உதறிய சுவாமிஜி, மேடம் எனது பேச்சால் அதிருப்தியுற்று, கேட்பவர்கள் மொத்தமாக எழுந்து வெளியே சென்ற நினழ்ச்சிகள் கூட நியூயார்க்கில் நடைபெற்றதுண்டு. எனவேஇது ஒன்றும் எனக்குப் புதிதல்ல” என்றார்.
சுவாமிஜியைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவது மிஷனரிகளின் தாக்குதல் முறையாக இருந்தது தெரிந்ததே. இதையும் சுவாமிஜி தமக்கே உரிய நிதானத்துடன் பெருந்தன்மையுடனும் தான் எதிர் கொண்டார். இந்த முறையும் அத்தகைய பேச்சு எழுந்தது.பேராசிரியர் பாம்கர் தம்பதிகள் அவரைக் காண வந்திருந்தபோது இதுபற்றிய பேச்சு எழுந்தது. சுவாமிஜி அமைதியாக மௌனமாக அனைத்தையும் கேட்ட படி நடந்து கொண்டிருந்தார். கடைசியாகக்கூறினார், இதோபாருங்கள், நான் யார், நான் என்ன என்பது என் முகத்தில் எழுதப் பட்டுள்ளது. உங்களால் அதைப் படித்துப் புரிந்து கொள்ள முடியுமானால் நீங்கள் பேறு பெற்றவர்கள். முடியாவிட்டால் நஷ்டம் எனக்கல்ல, உங்களுக்குத் தான்.
வட கலிபோர்னியாவில்
...................
லாஸ் ஏஞ்ஜல்ஸிலிருந்து 1900 பிபரவரி 22-ஆம் நாள் வட கலிபோர்னியாவிலுள்ள சான்பிரான்சிஸ்கோவை அடைந்தார் சுவாமிஜி. ஹேன்ஸ்ப்ரோ ஒரு வாரத்திற்கு முன்பே அங்கு சென்று சுவாமிஜியின் சொற்பொழிவிற்கான ஏற்பாடுகளைச்செய்ய வேண்டும் என்று முடிவாகியது. ஆனால் இந்தப் பணிக்குத் தாம் போதுமா என்று ஹேன்ஸ்ப்ரோ தயங்கினார். அவரது சகோதரிகளும் சந்தேகித்தனர். சுவாமிஜிக்கு அதில் தயக்கம் இல்லை.
ஒரு நாள் திடீரென்று சுவாமிஜி ஹேன்ஸ்ப்ரோவிடம், நீ எப்போது சான்பிரான்சிஸ் கோவிற்குப்போகிறாய்? என்று கேட்டார். நீங்கள் விரும்பினால் இப்போதே போகிறேன்” என்றார் ஹேன்ஸ்ப்ரோ. அதற்கு சுவாமிஜி மென்மையாகச் சிரித்துவிட்டு, ஒரு வேலையைச்செய்ய வேண்டும் என்று நீ நினைத்தால் அதிலிருந்து உன்னை எதுவும் விலக்கக் கூடாது. மற்றவர்களிடம் கேட்க வேண்டாம். உன் உள்ளத்தையே கலந்தாலோசனை செய். உள்ளம் சொல்வதன் படிச் செயல்படு” என்றார். அதன் பிறகு ஹேன்ஸ்ப்ரோ தயங்காமல் உடனடியாகக் கிளம்பினார்.
இதற்குள் வட கலிபோர்னியாவிலுள்ள ஓக்லாந்தில் நடைபெற உள்ள சமய மாநாட்டில் பேசுமாறு சுவாமிஜிக்கு அழைப்பு விடுத்திருந்தார் மில்ஸ் என்ற பாதிரி. ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை என்று நினைத்தார். ஆனால் சுவாமிஜி, அந்த ஏற்பாடுகள் நடக்கட்டும்” நீ சென்று உன் திட்டப்படியே ஏற்பாடுகளைச் செய். அவர்கள் அழைத்திருந்தாலமு் நாம் நம் காலில் நிற்பது நல்லது. அவர்களின் அழைப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். நான் அங்கே எனது முதல் சொற்பொழிவைச் சுதந்திரமாக செய்யவிரும்புகிறேன். ஓர் அமெரிக்கப்பெண்ணை நம்ப நான் தயாராக உள்ளேன். ஆனால் அமெரிக்க ஆணைச் சிலவேளைகளில் நம்பலாம். ஆனால் அமெரிக்கப் பாதிரியை ஒரு போதும் நம்புவதற்கில்லை” என்று கூறினார். இவ்வாறு சுவாமிஜியின் வடகலிபோர்னியா பணிகள் ஆரம்பமாயின.
முதல் சொற்பொழிவைத் தனியாக அளித்தார் சுவாமிஜி. பின்னர் ஏற்கனவே அழைக்கப் பட்டிருந்த சமய மாநாட்டில் கலந்து கொண்டார்.சுவாமிஜியை அழைத்தவரான மில்ஸ்கிகாகோ சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியவர். அதன் பிறகு அவரது மன நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. முன்பு கிறிஸ்தவ மதவெறியராக இருந்த அவர், பின்னர் பரந்த மனம் படைத்தவர் ஆனார். பல நாடுகளில் புனித நூல்களைப் படித்த பிறகு, பைபிள் ஒன்றுதான் கடவுளின் வார்த்தை என்று கருதுவதை நான் விட்டு விட்டேன். வாழ்க்கையின் முழுவளர்ச்சிக்கு பைபிள் ஒரு தடையாக உள்ளது..... இந்த மனிதர்(சுவாமிஜி) எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டார்” என்றுகூறும் அளவிற்கு அவரது மனத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து அவர் கிறிஸ்தவ மத போதகராகவே இருந்தார். அவர்போதகராக இருக்கின்ற யூனிட்டேரியன் சர்ச்சில் நடைபெற இந்த மாநாட்டில் சுவாமிஜி வேதாந்தம் பற்றி பேசினார். அந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிஸ்சாராஃபாக்ஸ் எழுதுகிறார்.
காவியுடுத்தி, தலைப்பாகை அணிந்த அந்த அற்புத மனிதர் மெதுவாக, அடிமேல் அடி எடுத்து வைத்ததுபோல் நடந்து மேடையை நோக்கிச்சென்றார். எதற்கும் அஞ்சாதவராக,எதையும் பொருட்படுத்தாதவராக அவர் காணப்பட்டார். பேரலை ஒன்று தவழ்ந்து செல்வதைப்போல்ஆற்றலுடன் நடந்து சென்றார் அவர். அவரது முதுகு ஒரு கம்பிபோல் நேராக இருந்தது. அவர் மேடையில் சென்று நின்று நீண்ட நேரம் பார்வையாளர்களைப் பார்த்தார். பிறகு பேசத்தொடங்கினார்............... அதன் பிறகு கேள்வி- பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நேரான கேள்விக்கு நேரான பதில், கேலியான கேள்விகளுக்கு கேலியான பதில் என்று கணம் கூடத் தாமதமின்றி அவரிடமிருந்து பதில்கள் வந்தன.
.....
முதலைக்கு எறிதல்- நகைச்சுவை
................................
சுவாமி, உங்கள் நாட்டில் பச்சிளம் குழந்தைகளை முதலைகளிடம் எறிவார்களாம், உண்மையா? என்று ஒரு பெண் பழைய அதே கேள்வியைக்கேட்டாள். சுவாமிஜியும் சட்டென்று, மேடம் உங்கள் நன்றிகூறல் நிகழ்ச்சிகளில் பச்சிளங்குழந்தைகளைப் பரிமாறுவார்களாமே, உண்மையா? என்று பதில் கேள்வி கேட்டார். இந்தக்கேள்வி சுவாமிஜியிடம் பல முறை கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பதில்களைக் கூறினார். அவை ஒவ்வொன்றும் வேடிக்கையானவை. சிரித்து மகிழத்தக்கவை, அவற்றில் சில வற்றைக் காண்போம்.
உண்மைதான் மேடம், நான் மட்டும் எப்படியோ தப்பி வந்து விட்டேன்.-லாஸ் ஏஞ்ஜல்ஸ்.
என்னையும் எறிவதற்காக என் தாயார் எடுத்துச் சென்றார், நான் குண்டாக இருந்ததால் முதலைகள் என்னை விழுங்க மறுத்துவிட்டன,- தி ட்ரிப்யூன்.
ஆமாம், என்னையும் எறிந்தார்கள். நான் குண்டாக இருந்ததால் முதலைகளால் விழுங்க முடியவில்லை. இப்போது, நான் குண்டாக இருக்கிறேனே என்ற எண்ணம் எழும்போதெல்லாம் அந்த முதலை நிகழ்ச்சியை எண்ணி ஆறுதல் பெறுகிறேன்- டெட்ராய்ட்.
உண்மை தான். என்னையும் எறிந்தார்கள். ஆனால் உங்கள் ஜோனாவை ப்போல் நான் வெளியில் வந்து விட்டேன்- மின்னாபொலிஸ்.
சில வேளைகளில் பொதுவாக க் குழந்தைகள் என்று சொல்லாமல் குறிப்பாக ப்பெண் குழந்தைகளை எறிவதுபற்றி கேட்டார்கள். அதற்கும் சுவாமிஜியின் பதில்கள் கேட்டவர்களைச் சிரிக்க வைக்கும் விதமாகவே இருந்தது.
ஆமாம், ஒரு வேளை பெண் குழந்தைகள் மென்மையாக இருப்பார்கள். முதலைகள் கடித்துச் சாப்பிடச் சுலபமாக இருக்கும் என்பதற்காகப்பெண் குழந்தைகளை எறிவார்கள்- டெட்ராய்ட்.
எல்லாப் பெண் குழ்ந்தைகளையும் எறிந்ததில் இப்போது இந்தியாவில் பெண்களே இல்லை.பிள்ளை பெற்றுக் கொள்வது கூட ஆண்கள் தாம்.
கேள்வி கேட்பவர் உட்பட அனைவரும் வயிறு வலிக்கச் சிரித்தார்கள் என்பதைச்சொல்ல வேண்டியது இல்லை அல்லவா?
சில வேளைகளில் முட்டாள் தனமாகக்கேள்விகள் கேட்கும் போது சுவாமிஜி அந்த முட்டாள்தனத்தைச்சுட்டிக் காட்டி அவர்களைச்செய்யும் கேலியில் அவர்கள் வெட்கித் தலைகுனிவார்களாம். ஒரு முறை ஒரு பெண் அப்படி வெட்கப்பட்டு நாற்காலிக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள். உடனே சுவாமிஜி, அது உங்கள் தவறல்ல,மெடம், இப்படி ஒரு கேள்வியை நான் கேட்டிருந்தால் நானும், அப்படித்தான் ஒளிந்திருப்பேன்” என்றார்.
.....
வேலை நிறுத்தம் செய்கிறேன்!
........................
ஆனால் வடக்கு கலிபோர்னியாவிலும் சொற்பொழிவுகள் மூலம் பணம் பெரிதாகக் கிடைக்கவில்லை.தேவையான அளவு விளம்பரம் இல்லாததே அதற்குக் காரணமாக இருந்தது. இரண்டு வாரங்கள் பல சொற்பொழிவுகள் செய்த பிறகும் வேண்டிய அளவு பணம் கிடைக்கவில்லை. பணத்தைப் பொறுத்தவரையில் வடக்கு கலிபோர்னியாவில் முற்றிலும் தோற்றுப்போய்விட்டேன். லாஸ் ஏஞ்ஜல்சைவிட இங்கு நிலைமை மோசமாக உள்ளது. இலவசச்சொற்பொழிவு என்றால் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள், பணம் கொடுக்க வேண்டுமென்றால் ஒரு சிலரே வருகிறார்கள்---- மேடைச்சொற்பொழிவுப் பணி என்னளவில் அனேகமாகத் தீர்ந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் வலுக்கட்டாயமாகச் சொற்பொழிவுகளை நிறுத்துவது என்பது முடிவை விரைந்து வரவேற்பதே ஆகும். பயணச்செலவிற்கு வேண்டிய பணம் கிடைத்ததும் இங்கிருந்து புறப்படுவேன். லாஸ் ஏஞ்ஜல்சில் கிடைத்த 300 டாலர் என்னிடம் உள்ளது. அடுத்த வாரம் இங்கு சொற்பொழிவு செய்வேன். அதன்பிறகு நிறுத்திக்கொள்வேன். அந்தச் சுமையிலிருந்து எவ்வளவு விரைவில் விடுபடுவேனோ அவ்வளவு நல்லது என்று எழுதுகிறார் சுவாமிஜி.
சுவாமிஜிக்குப் பணத் தட்டுபாடு மிகவும் அதிகமாக ஏற்பட்ட காலம் இது- பேலூர் மடத்திற்குப் பணம்
தேவையிருந்தது. அது எப்போதும் இருக்கவே செய்தது! தமது தாயாருக்கு வீடு வாங்குவதற்காக சுவாமிஜி பேலூர் மடத்திலிருந்து 5, 000 ரூபாய் கடனாக வாங்கியிருந்தார். அதனைத் திருப்பிக்கொடுக்க வேண்டும். வீட்டு விஷயமாக ஏமாற்றிய அத்தைக்கு எதிராக வழக்கு நடத்தப்பணம் வேண்டும்.1,000 டாலர் நியூயார்க்கில் அவர் லெக்கட்டிடம் சேமிப்பாக வைத்திருந்தார். இது அவரது ராஜயோக நூலை விற்ற பணத்துடன் கேத்ரி மன்னர் அவருக்கு அவ்வப்போது அளித்த பணமும் ஆகும். இதனைத் தம் தாய், பாட்டி, சகோதர்கள் ஆகியோருக்காக ஒதுக்கி வைத்திருந்தார் அவர்.
ஏற்கனவே பல இடங்களில் கூறியது போல், தம் தாய்க்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்ச்சி சுவாமிஜியின் மனத்தில் இடையறாது இருந்து வந்துள்ளது. வாழ்வெல்லாம் நான் என் ஏழைத் தாய்க்கு ஒரு தொல்லையாக இருந்து வந்துள்ளேன். அவளது வாழ்க்கை ஒரு தொடர் துயரமாகவே இருந்துள்ளது. முடிந்தால் அவளுக்கு ஒரு சிறிது மகிழ்ச்சியைத் தருவதே கடைசி முயற்சி. நான் அதையெல்லாம் திட்டமிட்டு வைத்துவிட்டேன். வாழ்நாள் முழுவதும் நான் உலகின் அன்னைக்குச் சேவை செய்துள்ளேன். அது முடிந்து போயிற்று. இனியும் அவளுக்காக என்னால் உழைக்க முடியாது. வேறு பணியாளர்களை அவள் தேடிக்கொள்ளட்டும், நான் வேலை நிறுத்தம் செய்கிறேன் என்று எழுதுகிறார் சுவாமிஜி.
ஆனால் சுவாமிஜியின் வேலை நிறுத்தம்” நடைபெறாமலே போய் விட்டது. கடைசி வரை ஒரு நாள் கூட அவரால் இந்த வேலையிலிருந்து விடுபட இயலவில்லை!
.....
காலத்தைக் கடந்து
...................
சில காலம் ஆலன் என்பவர் சுவாமிஜியின் சொற்பொழிவுகளுக்கு அவருடன் உதவியாகச்சென்று வந்தார். ஒரு நாள் சொற்பொழிவுக்குச்செல்லும்போது சுவாமிஜி அவரிடம், இன்று நான் இந்தியா பற்றி பேசப்போகிறேன். இது எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு என்பது உங்களுக்குத் தெரியும். இந்தத் தலைப்பில் நான் பேசத் தொடங்கினால் எங்கே எப்போதும் நிறுத்துவது என்பது எனக்குத் தெரியாது. எனவே நான் நீண்ட நேரம் பேசினால் ஏதாவது சைகை மூலம் தெரிவியுங்கள்” என்று கூறினார்.சரியாக 8 மணிக்குச் சொற்பொழிவு ஆரம்பமாகியது. 10 மணியைத் தாண்டியபோது சுவாமிஜிக்குச்சைகை செய்ய நினைத்தார் ஆலன். எனவே அரங்கின் கடைசி வரிசையில் சென்று நின்றுகொண்டு, தமது கைக்கடிகாரத்தைக் கழற்றி , சுவாமிஜி பார்க்கும் படி கையைத்தூக்கி கடிகாரத்தை ஆட்டினார். சுவாமிஜி அதனை பதிலாக, அதோ கடிகாரத்தை அசைத்து நான் நிறுத்த வேண்டும் என்று நினைவுபடுத்துகிறார்கள். நானோ இப்போது தான் ஆரம்பிக்கவே செய்திருக்கிறேன்” என்று கூறி விட்டுத் தமது சொற் பொழிவைத் தொடர்ந்தார். நீண்ட நேரம் பேசிய பிறகு நிறுத்தினார்.
.....
சொற்பொழிவுகள்
...................
குறிப்பிட்ட எந்த இடத்திலும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் சுவாமிஜி எந்தெந்த இடங்களில் தங்கினார். எத்தனை சொற்பொழிவுகள் செய்தார் என்பதெல்லாம் நிர்ணயிக்கப் படாத விஷயங்கள், காலம் செல்லச்செல்ல புதிய கண்டு பிடிப்புகள் பலசெய்திகளைத் தந்து கொண்டிருக்கின்றன. சான் பிரான்சிஸ்கோவில் இந்த நாட்களில் குறைந்தது 61 சொற்பொழிவுகள் செய்துள்ளதாகவேக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆனால் மிஸ்ஈடா ஆன்செல் குறிப்பெடுத்திருந்த 16 சொற்பொழிவு களைத் தவிர வேறு எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.
மார்ச் 18 ஆம்-நாள் சுவாமிஜி ஆற்றிய உலகிற்கு புத்தரின் செய்தி” என்ற சொற்பொழிவைக் கேட்ட எர்னஸ்ட் சி.ப்ரௌன் என்பவரின் அனுபவத்தைக்கேட்போம். அவர் மத விஷயங்களில் ஈடுபாடுள்ள இளைஞர். ஒரு நாள் அவர் மிலிட்ஸ் என்ற மத போதகரின் சொற்பொழிவிற்குச்சென்றார். அன்றைய சொற்பொழிவில் அந்த போதகர், உண்மைக்காக அனைத்தையும் துறப்பது பற்றிநான் உங்களிடம் பல முறை கூறியிருக்கிறேன்” அத்தகைய ஒருவர் இருந்தால் எங்களுக்குக் காட்டுங்கள்” என்று நீங்கள் என்னிடம் கேட்டுள்ளீர்கள்.இதோ அத்தகையோர் உண்மைத் துறவியை உங்களுக்குக் காட்டுகிறேன். அவர் சமீபத்தில் இந்தியா விலிருந்து வந்துள்ளார். அவரது பெயர் சுவாமி விவேகானந்தர் . நீங்கள் அனைவரும் சென்று அவரதுசொற்பொழிவைக்கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியாவின் மாபெரும் ஆச்சாரியர்கள் மற்றும் மாபெரும் முனிவர்களில் ஒருவர் இவர்” என்று அறிவித்தார். இதற்கும்ப் பிறகு தான் ப்ரௌன் சுவாமிஜியின் அன்றைய சொற்பொழிவிற்கு வந்திருந்தார். அவரது நினைவுக் குறிப்பைக் காண்போம்.
நாங்கள் சென்றபோது சுவாமிஜி வந்திருக்கவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு காவியுடை அணிந்த ஒருவர் அருகிலுள்ள சிறிய அறையிலிருந்து மேடையை நோக்கிச் சென்றார். இவர் யார்? சக்கரவர்த்தியாக இருப்பாரோ? என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ஒரு வேளை தெய்வம் நேரில் வந்து நடந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவரது நடை- ஆளப் பிறந்த ஒருவரின் நடை அது! அவர் சென்று மேடையில் அமர்ந்ததும் பார்வையாளர்களிடையே பலத்த கைதட்டல் ஒலி எழுந்தது. அவர் இந்த ஒலியால் எந்தச் சலனமும் இல்லாதவராக அமர்ந்திருந்தார். அவரது அகத்தில் நிறைந்திருந்த பூரண அமைதி முகத்தில் பொலிந்தது. சிறிது நேரத்தில் அவர் எழுந்து பார்வையாளர்களை நோக்கித் தமது கைகளை உயர்த்தினார். கூட்டத்தினரிடையே அந்தக் கணமே பூரண அமைதி நிலவியது. இவ்வளவு பெரிய கூட்டத்தைத் தமது கையசைவு ஒன்றினாலேயே கட்டுப் படுத்தவல்ல. இவர் யார்? பலருக்குத் தலைவராக இருப்பவர் இவர் என்று தோன்றுகிறது” என்று மீண்டும்எனக்குள் தோன்றியது. பிறகு அவர் பேச ஆரம்பித்தார். நிறைவுற்றதும் அனைவரும் வரிசையில் நின்று அவருடன் கைகுலுக்கினர். பலரிடம் அவர் ஓரிரு வார்த்தைகள் பேசினார். என்னிடமும் ஏதோ கூறினார்.
அவரது சொற்பொழிவைக்கேட்ட டாம் என்பவர் பரவசத்துடன் கூறினார். நான் ஒருவரைச் சந்தித்தேன். அவர் மனிதர் அல்ல, தெய்வம். அவர் சத்திய வார்த்தைகளையே பேசுகிறார்.
இந்தியா பற்றி ஒரு பேட்டி
...............................................
இந்தச் சொற்பொழிவு நிறைவுற்றதும் க்ரோனிகிள் பத்திரிகையின் நிருபர் சுவாமிஜியைப்பேட்டி கண்டார். சுவாமிஜியின் சொற்பொழிவைக் குறிப்பெடுத்துவிட்டு, அதனைப் பத்திரிகையில் வெளியிடுவதற்கு அவரது புகைப்படம் ஒன்றையும்கேட்டார். பல பத்திரிகைகளில் வெளி வந்த ஒரு படத்தை ஒருவர் அவரிடம் கொடுத்தார். அது பல இடங்களில் பத்திரிகைகளில் வெளி வந்திருந்தாலும் சுவாமிஜிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை-
நிருபர்-
சுவாமிஜி, அது உங்களைப்போல் இல்லை.
சுவாமிஜி(சிரிப்பு)-
உண்மை தான், ஓதெல்லோ நாடகத்தில் வரும் மூரைப்போல் நான் யாரையோ கொல்லப்போவது போல் உள்ளது.
அப்படி ஒரு தோற்றத்தை அந்தப் படத்தில் காண இயலவில்லை. எனவே அனைவரும் சிரித்தனர். நிருபர் அந்தப் படத்தைப் பயன்படுத்தவில்லை. பேட்டி தொடங்கியது.
நிருபர்-
சிகாகோ சர்வமத மகாசபைக்குப் பிறகு நீங்கள் உங்கள் தாய் நாட்டிற்குச் சென்றபோது மன்னர்களும் உங்கள் காலடியில் மண்டியிட்டு வணங்கினார்கள். பல மன்னர்கள் தெரு வழியாக நீங்கள் அமர்ந்திருந்த வண்டியை இழுத்துச் சென்றார்கள் என்றெல்லாம் பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி உண்மையா? நாங்கள் எங்கள்மதத் தலைவர்களை இப்படியெல்லாம் கொண்டாடுவது கிடையாது.
சுவாமிஜி-
அது பற்றியெல்லாம் பேசுவது அவ்வளவு சரியல்ல. ஒன்று மட்டும் சொல்லலாம். இந்தியாவில் மதம் தான் ஆள்கிறது. பணம் அல்ல.
நிருபர்-
ஜாதி விஷயம்?
சுவாமிஜி-(சிரித்தபடி)-
உங்கள் நானூறு விஷயம் என்ன? இந்தியாவிலுள்ள ஜாதிப்பிரிவுகளைப் பற்றி மேலை நாட்டினரால் அறிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோவும் இயலாது. அது எந்தக் குறைபாடும் அற்ற ஒரு முறை என்று நாங்கள் சொல்லவில்லை. உங்களிடையே உள்ள பாகுபாட்டு முறைகளையும் நாங்கள் பார்க்கிறோம். அது எந்த விதத்திலும் எங்கள் பிரிவுகளைவிட மேம்பட்டதாகத் தோன்றவில்லை. ஒரு நிரந்தரமான ஜாதி அமைப்பைச் செயல்படுத்துவதில் வெற்றி கண்டுள்ள ஒரே நாடு இந்தியா தான். இந்தநிலையில் உங்கள் மூட நம்பிக்கைகளையும் பிரிவுகளையும் நாங்கள் ஏன் பின்பற்ற வேண்டும்?
நிருபர்-
நீங்கள் எல்லா விதத்திலும் சுதந்திரத்தைப் பற்றி போதிக்கிறீர்கள். உங்கள் நாட்டிலோ ” இதை உண்ணக் கூடாது” அதை உண்ணக் கூடாது” இவனை இவள் திருமணம் செய்யக் கூடாது” என்பன போன்ற கட்டுப் பாடுகள் நிறைந்துள்ளன. நீங்கள் போதிக்கும் சுதந்திரம் அங்கே செயல்முறையில் சாத்தியமா?
சுவாமிஜி-
சாத்தியம் இல்லை. ஆனால் ஜாதி விதிகளின் தேவையை இந்தியா கடந்து செல்லாதவரை அங்கே ஜாதிகள் இருக்கவே செய்யும்.
நிருபர்-
வெளி நாட்டினரோ, நாத்திகரோ சமையல் செய்த உணவை நீங்கள் உண்ணக் கூடாது என்பது உண்மையா?
சுவாமிஜி-
இந்தியாவில் சமையல்காரன் வேலைக் காரனாக கருதப்படுவதில்லை. அவன் அதே ஜாதி அல்லது உயர்ந்த ஜாதியினனாக இருக்க வேண்டும். ஒருவன் தொடுகின்ற உணவு அவனது ஆளுமையின் பதிவைப்பெறுகிறது. மனிதன் தன்னை வெளிப்படுத்த உடம்பு முக்கியம். அந்த உடம்பு உணவால் உருவாக்கப் படுகிறது. எனவே உண்ணும் உணவு விஷயத்தில் கவனம் தேவை என்பது அறிவுறுத்தப் படுகிறது. சில உணவு ஆன்மீக வளர்ச்சிக்குச் சாதகமாகவும் சில பாதகமாகவும் அமைகின்றன. உணவிற்காக நாங்கள் உயிரினங்களைக் கொல்வதில்லை. அத்தகைய உணவு தூல உடம்பை வளர்க்கும். ஆன்மீக உடம்பை வளர்க்காது. உயிர் இந்த தூல உடம்பை விட்டுப் போகும்போது ஆன்மீக உடம்பின் வளர்ச்சி முக்கியம். அது மட்டுமின்றி , உணவிற்காக உயிர்களைக்கொல்லும் போது, கொல்பவனுக்குப் பாவமும் வந்து சேர்கிறது.
அப்பாடா! என்று தன்னையறியாமலே கூவினார் நிருபர். உணவில் இவ்வளவு பிரச்சனையெல்லாம் இருக்கிறது என்பது அவருக்குப் புதுமையாக இருந்திருக்க வேண்டும். உயிர்கள் எல்லாம் மனிதனுக்காகப் படைக்கப் பட்டுள்ளன என்ற கருத்தையே அறிந்திருந்த அவர் சுவாமிஜியின் கருத்தைக்கேட்டதும் திடுக்கிட்டார். அவற்றிற்கும் உயிர் உண்டு என்று சுவாமிஜி கூறியபோது, ஆட்டுக் குட்டிகளும், கோழிக் குஞ்சுகளும், மாடுகளும் ஆவியாக அலைவது போன்ற கற்பனை என்னுள் எழுந்தது” என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார் அந்த நிருபர். சுவாமிஜி தொடர்ந்தார்.
இந்தப்பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே. மிகச் சாதாரணமான உயிரினம் முதல் மிக உயர்ந்த யோகி வரை அனைவரும் ஒன்றே. எல்லாம் ஒன்றே. நாம் அனைவரும் ஒன்றே. நீங்களும் நானும் எல்லோரும் ஒன்றே.
இதைக் கூறிவிட்டு இந்தப் பொருளைத் தருகின்ற சம்ஸ்கிருத சுலோகம் ஒன்றை மிக இனிமையாக ஓதினார் சுவாமிஜி. அது ஓர் அழகிய காலை வேளை. சில்லென்ற குளிர் இதமாகப் படர்ந்திருந்தது. அவர் அந்த அறையில் அங்குமிங்குமாக நடந்தபடியே பதிலளித்து க் கொண்டிருந்தார். சில வேளைகளில் நின்று புகை பிடித்தார்.
நீங்களே இன்னும் எல்லா ஆசைகளையும் கட்டுப் படுத்த வில்லையே! என்று துணிச்சலாகக்கேட்டார் நிருபர். சுவாமிஜியின் பரந்த முகத்தில் ஒருகுழந்தையின் புன்னகை படர்ந்தது. கேட்டவரைவிடத் துணிச்சலாக இல்லை, மேடம். என்னைப் பார்த்தால் ஆசைகளை வென்றவன் போலவா தெரிகிறது! என்று பதில் சொன்னார் அவர். அவரது முகத்தில் தவழ்ந்த புன்னகை மறைய வில்லை.
நிருபர்-
இந்து மதத் தலைவர்கள் திருமணம் செய்து கொள்வார்களா?
சுவாமிஜி-
அது அவரவர் விருப்பத்தைப்பொறுத்தது. ஒரு பெண்ணிற்குஅடிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் திருமணம் செய்து கொள்வான். பெண்ணிற்கு அடிமையாக இருக்க விரும்பாதவன் திருமணம் செய்து கொள்ள மாட்டான்.
நிருபர்-
அப்படி எல்லோரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் ஜனத்தொகை என்ன ஆவது?
சுவாமிஜியின் கண்கள் மின்னின. அவர் கூறினார்.
பிறந்ததில் உங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியா? பசியும் நோயும் அறியாமையும் நிறைந்த இந்த உலகத்துடன் போராடுவதைத் தவிர உயர்ந்ததாக எதுவும் உங்களுக்குத் தெரியவில்லையா? பிறக்காமல் இருப்பதால் (மரணத்தால்) உங்கள் தனித்துவத்தை நீங்கள் இழந்து போவது போல் தோன்றலாம். ஆனால் அதற்காகப் பயப்படாதீர்கள். ஏனெனில் அதில் லாபம் ஒன்று இருக்கிறது- இப்போதுள்ள இந்தத் துயரமான, பசியும் நோயும் அறியாமையும் நிறைந்த இந்த நிலைமை அகன்றுவிடுகிறது. எனவே நாம் இல்லாமல் போவது நல்லது தானே!
குழந்தை அழுது கொண்டே இந்த உலகிற்கு வருகிறான். வருகின்ற அவன் அழலாம்! ஆனால் உலகை விட்டுச் செல்வதற்காக நாம் ஏன் அழ வேண்டும்? ஒருவன் இறந்துவிட்டான் என்பதைக்கீழை நாட்டிலும் மேலை நாட்டிலும் சொல்கின்ற விதத்தை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அவன் உடம்பை விட்டு விட்டான்” என்று நாங்கள் சொல்கிறோம். அவன் உயிரை விட்டு விட்டான்” என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது எப்படி முடியும்? இறந்த உடம்புஉயிரை வெளியில் போக அனுமதித்ததா என்ன? என்னவினோதமான சிந்தனை!
நிருபர்-
ஆனால் சுவாமி, மொத்தத்தில் பார்த்தால், வெறுமனே வாழ்வதை விட சாவதே மேல் என்று நீங்கள் சொல்வது போல் அல்லவா தோன்றுகிறது?
சுவாமிஜி-
ஸ்வாஹா! ஸ்வாஹா! நீங்கள் அப்படியே வைத்துக்கொள்ளலாம்.
இப்படி இன்னும் ஓரிரு கேள்விகளைக்கேட்ட பிறகு நிருபர், ரயிலுக்கு நேரமாகி விட்டது. நான் கிளம்ப வேண்டும்” என்றுகூறியபடி புறப்பட்டார். அதற்கு சுவாமிஜி, அமெரிக்கர்கள் என்றாலே இப்படி த் தான். இந்த பஸ்ஸுக்காக அல்லது அந்த ரயிலுக்காக எப்போதும் பறந்து கொண்டே இருப்பீர்கள். இதை விட்டால் அடுத்த ரயில் கிடையாதா என்ன? என்று கேட்டார். நேரம் என்பது பற்றி இந்தியர்களும் மேலை நாட்டினரும் கொண்டுள்ள கருத்தைப் பற்றி யெல்லாம் நான் சுவாமிஜிக்கு விளக்க முயற்சிக்க வில்லை. இந்தியாவில் எல்லாவற்றிற்கும் ” போதுமான நேரம்” இருப்பது போல் தோன்றுகிறது.- மூச்சுவிட, சிந்திக்க, வாழ எல்லாவற்றிற்கும் போதிய நேரம் இருக்கிறது. ஆனால் இங்கு அப்படியில்லை. நாம்( மேலை நாட்டினர்) காலத்தில் வாழ்கிறோம். அவர்கள் (இந்தியர்கள்) காலத்தைக் கடந்து வாழ்கிறார்கள்” என்று தமது பேட்டியை நிறைவு செய்கிறார் அந்த நிருபர்.
அந்த நிருபர் எழுதியது சுவாமிஜியைப் பொறுத்தவரை முற்றிலும் உண்மை. அவர் எதையும் அவசரப்பட்டு செய்வதில்லை. எப்போதும் ஒரு நிதானம் அவரது வேலைகளில் இருக்கும். ரயிலையோ வண்டியையோ பிடிப்பதற்காக யாராவது ஓடுவதைக் கண்டால் அவருக்கு வேடிக்கையாக இருக்கும். ஏன் இதற்குப் பிறகு வண்டியே கிடைக்காதா? என்று கேட்பார். அவர். சொற்பொழிவுகளையோ வகுப்புகளையோ குறித்த நேரத்தில் ஆரம்பிப்பது பற்றியும் அவர் கவலைப் படுவதில்லை. அது போலவே எப்போது முடிப்பார், என்பதையும் சொல்ல இயலாது. எடுத்த தலைப்பை முடிக்கும் வரை அவர் பேசிக்கொண்டே இருப்பார். குறித்த நேரத்தை விட இரு மடங்கு அதிகமானாலும் பொருட்படுத்த மாட்டார். வகுப்புகளுக்குச்செல்வதற்குச் சில நிமிடங்கள் முன்புவரை அறையில் சாவகாசமாக அமர்ந்திருப்பார். சாதாரண உடையில், நாற்காலியில் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருப்பார். கேள்விகளுக்குப் பதிலளிப்பார், வேடிக்கைப் பேசுவார், புகைபிடிப்பார். கிளம்புவதற்கு ஓரிரு நிமிடங்கள் இருக்கும்போது எழுந்து தமது அறைக்கு செல்வார். காவி உடை அணிந்துகொள்வார். கம்பீரமாக வகுப்புக்குச்செல்வார். அந்தக் கம்பீரநிதானம் ஒரு போதும் அவரிடமிருந்து விலகியதில்லை.
எந்தச் சொற்பொழிவிற்கும் சுவாமிஜி பொதுவாக த் தாமதமாகவே போவார். ஒருநாள் பிற்பகல் 3 மணிக்கு சுவாமிஜி ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி பேசுவதாக இருந்தது. அவர் வரவேயில்லை. சுவாமிஜியின் சொற்பொழிவுகளுக்குப் பொறுப்பாளரான ஆலன் பல முறை தெரு முனையில் சென்று சுவாமிஜி வருகிறாரா என்று பார்த்த வண்ணம் இருந்தார். ஐந்தாம் முறை சென்று பார்த்த போது தெருக்கோடியில் சுவாமிஜி நடந்து வருவது தெரிந்தது. அப்போது மணி 3.30 வழக்கம்போலவே நிதானமாக, கம்பீரமாக வந்துகொண்டிருந்தார் அவர். அதற்கு மேலும் ஆலனால் பொறுக்க இயலவில்லை. நேராக சுவாமிஜியிடம் சென்று அவருடன் திரும்பி நடக்கலானார். சுவாமிஜியின் வேகம் அதிகரிக்கவில்லை. கடைசியில் ஆலன், சுவாமிஜி, எல்லோரும் காத்திருக்கிறார்கள். ஏற்கனவே தாமதமாகி விட்டது” என்று சொல்லியே விட்டார். அதற்கு சுவாமிஜி ”ஆலன்” நான் ஒரு போதும் தாமதமாவதில்லை. உலகின் நேரம் முழுவதும் என்னிடம் உள்ளது. காலமே என் கையில் உள்ளது” என்றார். இதைப் பார்வையாளர்கள் புரிந்து கொள்ள மாட்டார்களே! என்றார் ஆலன்.ஆனால் சுவாமிஜி எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தார். விஷயங்கள் அங்கும் முடியவில்லை.
வழியில் செருப்பு பாலிஷ் செய்யும் இடம் ஒன்று இருந்தது. பாலிஷ் செய்பவன் வேலையில்லாமல் இருப்பதைக் கண்ட சுவாமிஜி நேராகக் கடைக்குள் சென்றார். செருப்பைப் பாலிஷ் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவசரத்தை அறிவிப்பதற்காக ஏதேதோ சைகைகள் செய்து பார்த்தார் ஆலன். ஆனால் சுவாமிஜி எதையும் பொருட்படுத்தவில்லை. கடைசியில் ஒரு வழியாக மேடையை அடைந்தார் . காலம் என்கையில்” என்று சுவாமிஜி கூறியதை உணர்ந்து கொள்கின்ற வாய்ப்பு ஆலனுக்கு அப்போதே கிடைத்தது. சுவாமிஜி மேடையில் நின்றார். ஆலன் அருகில் சென்று நின்றபடி சுவாமிஜியை அறிமுகம் செய்ய ஆரம்பித்தார். பிறகு நடைபெற்றதை ஆலன் கூறினார்.
சுவாமிஜியை அறிமுகம் செய்யத்தொடங்கிவிட்டு அவரைப் பார்த்துன். கண நேரத்தில் ஓர் அற்புத அனுபவத்தைப்பெற்றேன். திடீரென்று சுவாமிஜி எல்லையற்று வளர்ந்த ஒரு பெரிய உருவம் போலவும் நான் ஆப்பிரிக்கக் குள்ளன் போலவும் எனக்குத் தோன்றியது. இவரை நான் அறிமுகம் செய்வதா என்று எனக்குள் தோன்றியது. அதன் பிறகு ஒரு போதும் நான் அவரது அருகில் நின்று அறிமுகம் செய்வதில்லை. மேடையின் கீழ் நின்றுதான் அறிமுகம் செய்வேன்.
அன்று அவர் பேச வேண்டிய தலைப்பு ”ஸ்ரீகிருஷ்ணர்”. ஆனால் அவர் பேசியது” முகமது நபி” . இதை மேடையில் தான் அவர் முடிவு செய்தார். ஆனால் நபிகளைப் பற்றி அவர் கூறிய கருத்துக்களிலோ, வரலாற்றுக் கணக் கீட்டிலோ, மற்ற தகவல்களிலோ ஒரு சிறு தவறு கூட இல்லை” என்றுவியந்து கூறுகிறார் ஆலன். சொற்பொழிவு முடிந்து சுவாமிஜி வந்ததும் ஆலன் அவரிடம், சுவாமிஜி உங்கள் நினைவாற்றல் அபாரமானது. என்று கூறினேன். அதற்கு சுவாமிஜி, இல்லை ஆலன், என்நாட்டை எடுத்துக்கொண்டால் அங்குள்ள பலருடன் ஒப்பிடும் போது என் நினைவாற்றல் ஒன்றுமே இல்லை. மெக்காலே எழுதிய ” இங்கிலாந்தின் வரலாறு”உங்களுக்குத் தெரியுமே! அதை மனப்பாடம் செய்து, வார்த்தை பிசகாமல் ஒப்பிக்க நான் மூன்றுமுறை அதைப் படிக்க வேண்டியிருந்தது. என் தாயோ எந்த நூலானாலும் ஒரு முறை படித்துவிட்டே அப்படியே ஒப்பிக்கும் திறமை பெற்றிருந்தார்” என்று ஏதோ சாதாரண விஷயத்தைச்சொல்வது போல் கூறினார். திகைப்பினாலும் வியப்பினாலும் எனக்கு நாவே எழவில்லை. அப்படியே மௌனமாக நின்றேன். கடவுளே! சுவாமிஜி கூறிய வரலாற்று நூலைப் படித்து அப்படியே ஒப்பிக்க வேண்டுமானால் நாங்கள் எத்தனை முறை அதைப் படிக்க வேண்டியிருக்கும்! என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது” என்று எழுதுகிறார் ஆலன்.
தாம் படித்த நூல்களை வார்த்தை பிசகாமல் ஒப்பிப்பது என்பது ஒரு புறம் இருக்க, அவர் படித்த நூல்களும் ஒன்றிரண்டல்ல.
எந்தத் தலைப்பிலும் எந்த நேரத்திலும் பேசுவதற்குத் தயாராக இருக்கின்ற அளவிற்கு எண்ணற்ற நூல்களை க் கற்றவர். ஒரு முறை ” எக்சாமினர்” பத்திரிகைக்கு அவர் பேட்டி அளித்த போது பண்டைய ரஷ்ய வரலாறு, நாடோடி இனமான தார்த்தர்கள், ஸ்பெயினில் மூர் வம்சத்தினரின் ஆட்சி போன்ற விஷயங்களைத் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். எங்கும் எந்தத் தடங்கலோ தயக்கமோ இல்லாமல் ஆண்டு, தேதி போன்றவற்றைக் கூட சிறிதும் பிசகின்றி அவர் கூறினார்.
ஆனால் சுவாமிஜி கூறியவற்றில் அறிவு மூலம் அவர் பெற்ற கருவூலம் இருந்தது மட்டுமல்ல, அதைக் கடந்த ஒன்றும் இருந்தது. அந்த ஏதோ ஒன்று” உணர்வு கடந்த ஏதோ தளங்களிலிருந்து அவருக்கு வருகிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. அறிவு எங்கிருந்து பிறக்கிறதோ, அறிவின் இருப்பிடம் எதுவோ அந்த இடத்தின்வாசல்கள் அவருக்காகத் திறந்திருந்தது போல் தோன்றியது. அந்த இடம் சுவாமிஜியைப் பொறுத்த வரை தேவியின் திருவடிகள். ”நான் தேவியை நம்புகிறேன்” எனக்கு முற்றிலும் தெரியாத ஒரு தலைப்பில் பேச வேண்டுமானாலும் நான் அவளது தைரியத்தில் மேடை ஏறுகிறேன். ஏனெனில் எனது நாவில் அவள் சொற்களை நடமிடச்செய்வாள் என்பது எனக்குத் தெரியும்” என்பார் அவர்.
தியான அனுபவம்
................
சுவாமிஜியின் சொற்பொழிவுகளைப்பொது இடங்களில் கேட்ட பலரும் அவரிடம் தனியாகக் கற்றுக் கொள்ளவும் அறிவுரை பெறவும் விரும்பினர். அதற்காக வகுப்புச் சொற்பொழிவுகளையும் ஆரம்பித்தார் சுவாமிஜி. இவை பொதுவாக காலையில் 10 அல்லது 10-30 மணி அளவில் நடைபெற்றன.1.00 முதல் 2.30 மணி நேரம் இவை நடைபெற்றன. 30 அல்லது 40 பேர் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டார்கள். பொதுவாக இந்த வகுப்புகள் சுவாமிஜி தங்கிய வீட்டிலேயே நடைபெற்றன. எல்லோருக்கும் போதுமான நாற்காலிகளோ மற்றவசதிகளோ இருப்பதில்லை இருந்தாலும் மூன்றாம் மாடியில் இருந்த அந்த வீ்ட்டிற்கு அத்தனை படிகளையும் ஏறி, சிலவேளைகளில் மாடிப்படிகளில் கூட அமர்ந்து அவரது சொற்பொழிவுகளை மக்கள் கேட்பதுண்டு.
பொதுவாக சுவாமிஜி கட்டிலிலோ சோபாவிலோ பத்மாசனத்தில் அமர்ந்த படி பேசுவார். அவரைப் பார்த்து பலரும் அது போல் அமர முயற்சி செய்வார்கள். அவர்களின் முயற்சிகளையும் தோல்விகளையும் கண்டு சிரித்தபடியே சுவாமிஜி, உங்கள் கால்கள் அதற்கான பயிற்சி பெற வில்லை. இந்தியாவில் குழந்தைப் பருவத்திலிருந்தே எங்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப் படுகிறது” என்பார். பிறகு, தரையில் அமர முடியாத சிலரை அழைத்துத் தம் அருகிலேயே அமர்த்திக்கொள்ளவும் செய்வார். எப்படி அமர்ந்துள்ளோம் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். வசதியாக அமர வேண்டும், உடம்பு நேராக இருக்க வேண்டும்- அவ்வளவு தான், அதே வேளையில் உடம்பு ஒளிர்வதாக, முற்றிலும் ஒளிமிக்கதாகத் திகழ்வதாக நினைத்துக் கொள்ளுங்கள், என்று கூறிவிட்டு சொற்பொழிவை ஆரம்பிப்பார். 15 முதல் 20 நிமிடம் ஆரம்பத்திலோ கடைசியிலோ அனைவரையும் தியானம் செய்யுமாறு கூறிவிட்டு தாமும் தியானமும் அமர்வார்.
தியானத்தில் ஆரம்பத்தில் மிகவும் கம்பீரமாக ஆழ்ந்த குரலில் சில சம்ஸ்கிருத மந்திரங்களை ஒதுவார். அமர்ந்திருப்பவர் மனத்தின் ஏதோ நாளங்களை எல்லாம் அந்தக் குரல் சுண்டிவிடும். ஏனெனில் முறையான ஏற்ற இறக்கங்களுடன் ஓதப் படுகின்ற சம்ஸ்கிருத மந்திரங்கள் இதய நாளங்களைச் சுண்டி விடுகின்ற ஆற்றல் பெற்றவை, என்பார் சுவாமிஜி. அதன் பிறகு நிகழ்வதோ சுவாமிஜியின் சன்னிதியின் ஓர் அற்புத அனுபவம்.
இந்த அனுபவம் ஒரு வேளை ஓரிருவரைத் தவிர, அனைவருக்கும் வாய்த்தது. அவரது சன்னதியில் அமர்பவர்கள் அந்தத் தியான அனுபவத்தைப்பெறாமல் இருக்க முடியுமா? அந்த வேளையில் நான் என் மனத்தை ஓர் ஆனந்த நிலைக்கு உயர்த்துகிறேன். அதன் பிறகு அதே நிலையை உங்கள் மனத்திலும் உருவாக்க முயற்சி செய்கிறேன்” என்று அந்த தியான வகுப்புகளைப் பற்றி சுவாமிஜி கூறுவார்.
சுவாமிஜி இந்த நாட்களில்ராஜயோகம் பற்றியே அதிகம் வகுப்புச்சொற்பொழிவுகளில் பேசினார். அதன் செயல்முறை ப் பகுதி அவ்வளவு எளிதல்ல என்பது மாணவர்களுக்கும் புரிந்தேயிருந்தது. ஆனால் ”தியான சித்தராகிய சுவாமிஜியின் அருகில் அமர்வதும் அந்த தியான அனுபவத்தைப்பெறுவதும் ஒரு மாபெரும் பேறு அல்லவா!
.....
தியானம் பற்றிய உண்மை
...............
ஆனாலும் தியானம் ஒரு வழி மட்டுமே என்பதை சுவாமிஜி மாணவர்களிடம் மிகவும் வலியுறுத்திக் கூறுவார். தியான அனுபவத்தைப்பெறுவது லட்சியம் அல்ல, அதன் மூலம் இறைவனைநாடுவதே லட்சியம் என்பதைத் தெளிவுபடுத்துவார். அவர் கூறுவார், நாம் எதற்காகத் தியானம் செய்வதற்குக் கற்றுக் கொள்கிறோம்? இறைவனை நினைப்பதற்காக, இறைவன் என்ற லட்சியத்திற்கு நம்மை அழைத்துச்செல்வதற்கான ஒரு வழி மட்டுமே ராஜயோகம். ராஜயோகத்தின் ரிஷியான பதஞ்சலி மாமுனிவர் இந்தக் கருத்தை எடுத்துக் கூறுவதற்கான வாய்ப்பு ஒன்றைக் கூட நழுவவிடவில்லை. நீங்கள் இப்போது இளம் வயதினர். இது தான் தருணம். வயதான பிறகு கடவுளை நினைக்கலாம் என்று கருதாதீர்கள். வயதாகும் போது அவரை நினைக்க முடியாது. இறைவனை நினைப்பதற்கான ஆற்றல் இளம் வயதில் தான் ஏற்படுகிறது.
யாராவது இந்தக் கருத்துக்களைப் புரிந்து கொள்வதிலோ பயிற்சிகளிலோ சிரமப்பட்டால் சுவாமிஜி கருணையோடு அவர்களை வழி நடத்துவார். கொஞ்சம் பொறுமையாக இருங்கள், இந்தப் பாதையில் வெற்றி பெற வேண்டுமானால் மிகுந்த பொறுமை அவசியம். இன்னும் அவர்களிடம் சந்தேகம் எழுமானால், நான் உங்களுடன் இருக்கிறேன். என்னிடம் சிறிது நம்பிக்கை வையுங்கள்” என்று அபயம் அளிப்பார். அவர்களுக்கும் தியான அனுபவத்தை வழங்குவார்.
.....
உனக்காகத் தியானிக்கிறேன்.
..................
சுவாமிஜியின் அருகில் அமர்ந்தவர்கள் மட்டும் தான் அந்த அனுபவத்தைப்பெற்றார்களா என்றால் இல்லை. அவர் இளமையிலேயே தியான சித்தர். தமது சங்கல்பம் ஒன்றினாலேயே தியான அனுபவத்தைவழங்க வல்லவர். அது பற்றி ஹேன்ஸ்ப்ரோவின் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றைப் பார்ப்போம்.
சுவாமிஜிக்காக சூப் ஒன்றைத் தயாரித்து வைத்துவிட்டு 10.30 வகுப்பில் கலந்து கொள்வார் ஹேன்ஸ்ப்ரோ. இந்த சூப்தயாரிக்க மூன்று நான்கு மணிநேரம் ஆகும். ஒரு நாள் அவரால் குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிக்க இயலவில்லை. அப்போது வகுப்பிற்குக் கிளம்பிய சுவாமிஜி ஹேன்ஸ்ப் ரோவிடம், என்ன, நீ தியான வகுப்பிற்கு வரவில்லையா? என்று கேட்டார். தாம் வகுப்பிற்குச்செல்ல முடியாததன் காரணத்தைச்சொன்னார் ஹேன்ஸ்ப்ரோ. உடனே சுவாமிஜி, பரவாயில்லை, உனக்காக நான் தியானம் செய்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.ஆச்சரியம்! சுவாமிஜியின் வகுப்பு முடியும்வரை ஹேன்ஸ்ப்ரோ தியான அனுபவத்திலேயே இருந்தார் . சுவாமிஜி தனக்காகத் தியானம் செய்கிறார் என்பதை அவர் புரிந்து கொண்டார். இதை நீண்ட காலத்திற்குப் பிறகு நினைவு கூர்ந்த ஹேன்ஸ்ப்ரோ, இன்னொரு விஷயம் தெரியுமா? அன்று மட்டுமல்ல, இன்றும் அவர் எனக்காகத் தியானம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை நான் எப்போதும் உணர்கிறேன்” என்று அமைதியாகக் கூறினார்.
மற்றொரு நாள் ஏதோ காரணத்திற்காக ஹேன்ஸ்ப்ரோ உற்சாகம் இழந்து சோர்ந்து போய் காணப் பட்டார். அதைக் கண்ட சுவாமிஜி, வா, உட்கார், நாம் தியானிப்போம், என்றார். ஓ! சுவாமிஜி, நான் தியானமே செய்ததில்லை என்றார் ஹேன்ஸ்ப்ரோ, அதனால் என்ன!வந்து என் பக்கத்தில் உட்கார். நான் தியானிக்கிறேன்” என்றார் சுவாமிஜி. ஹேன்ஸ்ப்ரோ சென்று சுவாமிஜியின் அருகில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டார். ஒரு கணம் தான், நான் எங்கேயோ மிதக்கப்போவது போன்ற ஓர் உணர்ச்சி எழுந்தது. விரைந்து கண்களைத் திறந்து சுவாமிஜி யைப் பார்த்தேன். ஒரு சிலைபோல் அவர் அமர்ந்திருந்தார். 20 இல் பாதி 15 நிமிடங்களுக்கு அவர் தியானித்து விட்டு எழுந்தார்.
சுவாமிஜி தியானத்தில் அமர்ந்திருப்பதைப் பார்ப்பதே ஓர் அற்புத அனுபவம் அல்லவா! தாம் கண்ட சித்திரத்தை ரொடீமல் என்பவர் எழுதுகிறார். காவியுடை தரித்து, பத்மாசனத்தில் அமர்ந்து, ஒன்றன் மீது ஒன்றாக வைத்த கை மலர்களைச்சேர்த்து மடி மீது வைத்து. விழிகளைப் பாதி மூடி தியானத்தில் அமர்ந்திருப்பது. செப்பு ச்சிலை ஒன்று இருப்பது போல் தோன்றும்.ஆ! அவர் ஒரு யோகி என்பதில் ஐயமில்லை. புற உலகின் சிந்தனைகள் எதுவும் தொடாத, உன்னத உலகின் சிந்தனைகளை மட்டுமே உடைய ஒரு மாபெரும் லட்சிய புருஷர், அவரைக் கண்டவர் யாரும், அவருக்கு மரியாதை செய்யாமல், அவரை நேசிக்காமல், அவரிடம் பக்தி கொள்ளாமல் இருக்க இயலாது.
அவர் கடவுளே!
................
மீட் சகோதரிகளில் ஒருவரான மிசஸ்கேரி வைக்காஃப், அவர் கடவுளே தான்” என்றார். அவருக்கு அத்தகைய உணர்வை ஏற்படுத்திய சம்பவத்தைப் பற்றி அவரே கூறுகிறார். ஒருநாள் மாடியிலிருந்து படிக்கட்டு வழியாக நான் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் சுவாமிஜி இறங்கிக் கொண்டிருந்தார். திடீரென்று என் கால் இடறிவிட்டது விழப்போன நான் அப்படியே சுவாமிஜியின் தோளைப் பிடித்துக்கொண்டு சமாளித்துக் கொண்டேன். ஆனால் சுவாமிஜியைத் தொட்டதுமே என்னுள், நீ கடவுளைத் தொட்டுள்ளாய், என்ற ஓர் உணர்வு எழுந்தது. என் மனம் மிகவும் உயர்ந்த ஆன்மீக நிலைக்கு உயர்த்தப் பட்டது. அந்த உயர்ந்த ஆன்மீகப் பேரானந்த நிலையில் பல நாட்கள் மூழ்கியிருந்தேன். அவர் கடவுளே தான்.
தம் சகோதரியின் இந்த அனுபவத்தைப்பற்றி மிஸ்ஹெலன் பிற்காலத்தில் குறிப்பிடும்போது, அவளது குரலில் தொனித்த மரியாதையும், வெளிப்பட்ட பக்தியுணர்வும், அன்பும் அதைக்கேட்டவர்களும் கூட ”சுவாமிஜி கடவுள் தான்” என்ற அதே உணர்வைக் கொடுத்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
......
சில இனிய சம்பவங்கள்
......................
இந்த வகுப்புச் சொற்பொழிவுகளுக்கான சுவாமிஜியின் நோக்கம், மாணவர்களின் மனத்தை ஒளியின் பாதையில் திருப்பவது, வசதியான ஒரு பாதையை இனிய மொழியில் கூறி அவர்களை இருளின் பாதையில் ஆழ்த்துவது அல்ல, எனவே அவர் தேவையான இடங்களில் மாணவர்களைக் கடிந்து கொள்ள வும், மனத்தில் உறைப்பது போல் சுரீரென்று பேசவும் செய்தார்.
ஒரு முறை ஒரு பெண், சுவாமிஜி, எல்லோரும் துறவிகளாகி விட்டால் உலகம் என்ன ஆவது? என்று வழக்கமான கேள்வியைக்கேட்டார்.சட்டென்று வந்தது சுவாமிஜியின் பதில், மேடம் பொய்யை உதடுகளில் வைத்துக்கொண்டு, ஏன் என்னிடம் வர வேண்டும்? உங்கள் சொந்த சுக போகங்களைத் தவிர இந்த உலகில் வேறு எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட்டதே இல்லையே!
ஒரு நாள் சுவாமிஜியின் வகுப்பு அவரது அறிவுக் கூர்மையை, நுண்ணறிவைக் காட்டுவதாக அமைந்திருந்தது. பேசிக்கொண்டே இருந்த அவர் திடீரென்று நிறுத்திவிட்டு,தம் பெயரையே எழுதத் தெரியாத ஒருவரின் சீடன் நான். ஆனால் அவரது செருப்பைக் கழற்றக் கூட எனக்குத் தகுதி கிடையாது. எனது இந்த அறிவை மொத்தமாக எடுத்து கங்கையில் எறிந்து விட முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்று கூறினார்.அப்போது ஒரு பெண் எழுந்தது. ஆனால் சுவாமிஜி, உங்கள் அந்த அறிவை அல்லவா நான்மிகவும் நேசிக்கிறேன்! என்றார். அது ஏன் தெரியுமா? மேடம்? நீங்கள் ஒரு முட்டாள்- என்னைப்போல் என்று சட்டென்று கூறினார் சுவாமிஜி.
சுவாமிஜி, நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா? என்று ரொடீமல் ஒரு முறை சுவாமிஜியிடம் கேட்டார். சுவாமிஜி சிரித்தபடியே, என்னைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது,? என்னைப்போல் குண்டான ஒருவன் கடவுளைக் கண்டிருப்பான் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டார்.
ஒரு நாள் ஒருவர் சுவாமிஜியிடம், சுவாமிஜி, ஏசுநாதர் ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்று கூறுவது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, இப்படி இங்கு மட்டுமல்ல, காலங்காலமாக எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறார்கள். இந்தியாவில் இப்படி பலருடைய வரலாற்றில் கூறுகிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், என்னுடையபிறப்பு சாதாரணமாக நடந்தது, எனக்கு முறையான ஒரு தாயும் தந்தையும் இருந்தார்கள்” என்றார்.
ஆனால் கன்னி கருத்தரிப்பது என்பது இயற்கை நியதிக்கே எதிரானது அல்லவா? என்று தொடர்ந்தார் கேள்வி கேட்டவர்.
சுவாமிஜி அப்போது புகைக் குழாயில் புகை பிடித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.குழாய் வாயில் தேங்கிய சாம்பலைக் கொட்டுவதற்காக குழாயைத் தமது செருப்பில் தட்டினார். அந்தச் சாம்பல் தரை விரிப்பில் வீழ்ந்து அந்த இடத்தை அசுத்தம் செய்வதைப்பற்றி அவர் கவலைப்பட்டதாகத்தெரியவில்லை. பிறகு நிதானமாக புகையை ஒரு முறை இழுத்துக்கொண்டார். பிறகு பேசினார்.
நாம் அனைவருமே இயற்கையின் அடிமைகள். இயற்கையின் தலைவர் இறைவன் மட்டுமே. தாம் விரும்புவது போல் செய்வார் அவர். இந்தக் கணத்தில் அவர் ஓர் உடம்பைக்கொள்ளலாம் அல்லது ஒரு டஜன் உருவங்களை எடுக்கலாம். வேண்டிய உருவத்தில் வரலாம். நம்மால் எப்படி அவரை எல்லைப்படுத்த இயலும்?
......
மௌன குரு
.............
கேள்விகள் கேட்டு, பதில் பெற்று சந்தேகங்களை நிவர்த்தி செய்த நிகழ்ச்சிகள் பல என்றால் பதில் கூறாமலே சந்தேகங்களைத் தீர்த்த நிகழ்ச்சிகளும் சுவாமிஜியின் வாழ்க்கையில் நடைபெற்றன. சுவாமிஜியின் இந்தக் கால சொற்பொழிவுகளுக்குப் பொறுப்பாளராக இருந்த ஆலனின் மனைவி எடித் ஆலன்.ஆவிகளை அழைத்துப் பேசுகின்ற ஒரு கூட்டத்தில் சேர்ந்து, அவர்களின் அறிவுரைப்படி சில பயிற்சிகளைச் செய்ததில் எடித்தின் உடல் நலம் கெட்டு, மனநிலையும் சீர்குலைகின்ற அளவிற்கு ஆகிவிட்டது. சுமார் இரண்டு வருடங்கள் எந்த நம்பிக்கையும் இன்றி அவதியுற்ற எடித்திடம் சுவாமிஜியைக் காணுமாறு வற்புறுத்தினார் ஆலன்.
எடித் ஒருநாள் மாலையில் சுவாமிஜியிடம் சென்றபோது மறுநாள் காலையில் வருமாறு தெரிவித்தார் சுவாமிஜி. மறுநாளைப் பற்றி நினைத்து இரவின் பெரும்பொழுதைத் தூக்கமின்றியே கழித்தார் எடித். சுவாமிஜி யிடம் கேட்பதற்கென்று பல கேள்விகளை நினைத்து வைத்துக்கொண்டார். மறுநாள் காலையில் சென்றபோது, சுவாமிஜி வெளியில் செல்வதாகவும் தற்போது யாரையும் பார்க்க மாட்டார் என்றும் தெரிவித்தார் ஹேன்ஸ்ப்ரோ. ஆனால் வாழ்க்கைப் பிரச்சனைகளில் சிக்குண்டு, வேறுயாரும் காப்பாற்ற இயலாத நிர்கதியான நிலையில் சுவாமிஜியே தஞ்சமென்று வந்தஎடித் அவ்வளவு எளிதாகத் திரும்ப விரும்பவில்லை. இப்போது என்னைச் சந்திப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே அவர் என்னைச் சந்திப்பார்” என்று உறுதியாகத் தெரிவித்தார் எடித். கடைசியில் அவரை மாடியறையில் அமரச் செய்தார் ஹேன்ஸ்ப்ரோ.
சிறிது நேரத்தில் சுவாமிஜி உள்ளே வந்தார்.ஜன்னல் அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அவருக்கே உரிய கம்பீரத்துடன் சம்ஸ்கிருதசுலோகங்களை ஓத ஆரம்பித்தார். பிறகு அமைதியாக எடித்தை நோக்கித் திரும்பி, என்னம்மா? என்று கேட்டார். அவ்வளவு தான், எடித்தால் எதுவும் பேச இயலவில்லை. அவரது மனத்தின் ஆழங்களில் எங்கேயோ ஒரு கதவு படாரென்று அடித்துத் திறந்து கொண்டது போல் இருந்தது. எங்கிருந்தோ அழுகை வந்தது. கண்ணீர் வடித்தபடி ஏங்கி அழ ஆரம்பித்தார் அவர். சுவாமிஜி மௌனமாக அமர்ந்திருந்தார். அரை மணி நேரம் அழுது தீர்த்தார் எடித். சுவாமிஜி ஒரு வார்த்தையும் பேசவில்லை. இறுதியில், நாளை இதே நேரம் வா” என்றார். எடித் சென்றார். அவரது சன்னதியிலிருந்து புறப்பட்ட போது எனது கேள்விகள் அத்தனைக்கும் விடை என்னுள்ளேயே கிடைத்திருந்தது. எனது பிரச்சனைகள் முற்றிலுமாக விலகி யிருந்தன. நான் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. அவரும் என்னிடம் எதுவும் கூறவில்லை. அன்று வெளியில் வந்து வீட்டை நோக்கிச்செல்லும்போது சாலையில் கிடந்த கூழாங்கற்கள் எல்லாம் பல வண்ணம் காட்டும் ரத்தினக் கற்களாக ஜொலித்தன. எப்படியோ ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன். அந்தநாள் வாழ்வின் ஒரு பொன்னாளாக இருந்தது” என்று பின்னாளில் தெரிவித்தார் எடித். அதன் பிறகும் ஓரிரு நாட்கள் எடித் சுவாமிஜியைத் தனிமையில் சந்தித்தார். அப்போது சுவாமிஜி அவருக்குத் தியானம் மற்றும் பிராணாயாமப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்தார்.
பொதுவாகக் காலை வகுப்புகள் முடிந்தபிறகு சுவாமிஜி சமையலில் ஈடுபடுவார். பெரும்பாலும் புலவு தயாரிப்பார். மிகச் சிலரை மட்டுமே சமையலறையில் அனுமதிப்பார். அவர்கள் அவருக்கு உதவி செய்வது என்பது அரிதாகவே இருக்கும். ஆனால் அவரது அருகில் இருப்பதே ஒரு பெரிய அனுபவம். தமது அருகில் இருப்பதன் மூலம் அவர்களுக்கு இன்னும் சில விஷயங்களைச்சொல்ல வேண்டும் என்று தாம் எண்ணுபவர்களை மட்டுமே அவர் சமையலறையில் உதவி செய்ய அனுமதிப்பார். அப்படி பேறு பெற்ற சிலருள் எடித்தும் ஒருவர். அந்த நேரங்களில் சுவாமிஜி பேசியவற்றைப் பற்றி சில குறிப்புகளையும் அவர் விட்டுச்சென்றுள்ளார்.
.........
உலகம் தாய விளையாட்டு
...............
ஒரு நாள் சுவாமிஜி கீதை 18.61-ஆம் சுலோகத்தை இனிமையாக ஓதி அதன் பொருளை விளக்கினார். கடவுள் எல்லா உயிரினங்களின் இதயத்திலும் உறைகிறார். ஒரு குயவனின் சக்கரத்தில் வைத்துச் சுழற்றுவது போல், தமது மாயா சக்தியால் உயிரினங்களை அவர் சுழலச்செய்கிறார்” என்பது அந்தச் சுலோகம். இதனை விளக்கும்போது சுவாமிஜி கூறினார்.
இப்போது நாம் காண்கின்ற இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏற்கனவே நடைபெற்றவைதான். விளையாடுபவன் தாயக் கட்டையைக் குலுக்கி இடுகிறான். எண்கள் வருகின்றன. ஒரே விதமான சேர்க்கை பல நேரங்களில் வரலாம். வாழ்க்கையும் அப்படித்தான். சக்கரம் சுழல்கிறது- ஒருமுறை நிகழ்ந்ததே மீண்டும் நிகழ்கிறது. அதோ அந்தப் பானை, அந்த டம்ளர், இந்த வெங்காயம், இந்தஉருளைக்கிழங்கு எல்லாம் ஏற்கனவே ஒரு முறை இதே இடத்தில் இப்படியே இருந்தன. இப்போது அதே சேர்க்கையில் மீண்டும் இங்கே இருக்கின்றன. நாம் என்ன செய்யலாம் அம்மா! வாழ்க்கையின் சக்கரத்தில் நம்மை வைத்துச் சுழற்றுவது அவர் அல்லவா!
எடித் கூறினார். சுவாமிஜி, இந்த நாட்களில் உடம்பிலிருந்து விடுதலை பெற மிகவும் ஏங்கினார்.ஆனால் நான் மீண்டும் ஒரு முறை வரவேண்டியுள்ளது” என்று அவர் ஒரு முறை கூறினார். இதனை விளக்கும்போது, தாம் வரும்போது மீண்டும் நானும் வர வேண்டும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு முறை என்னிடம் கூறினார்” என்று தெரிவித்தார். உடனே நான், அவர் சொன்னார் என்பதற்காகவா நீங்கள் வர வேண்டும்? என்று நான் கேட்டேன். அதற்கு சுவாமிஜி அவர்களைப்போன்றவர்களின் ஆற்றல் அளவிட இயலாதது” என்றார்.
இத்தகைய கருத்தை சுவாமிஜி பாசடேனாவில் இருந்த போதும் ஒரு முறை வெளியிட்டார். 200 வருடங்களுக்குப் பிறகு தாம் ஒரு முறை மீண்டும் வருவதாக ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார். நான் அவருடன் வருவேன். எஜமானன் வரும் போது அவன் தன் ஆட்களையே கூட்டி வருகிறான், அல்லவா, அது போல்!
எடித்தின் நினைவுக் குறிப்பு தொடர்கிறது. சுவாமிஜி பல பரிமாணங்கள் உடையவர். அதனை விவரிப்பது அவ்வளவு எளிதல்ல. சில சமயங்களில் வேதாந்தச் சிங்கமாக இருக்கின்ற அவரே சில நேரங்களில் குழந்தை போல் இருப்பார். ஆனால் எனக்கு அவர் எப்போதும் ஒரு பொறுமையான, அன்பான தந்தையாக இருந்தார். நான் சொல்பவற்றைப்பொறுமையுடன் கேட்டார். தம்மை ”சுவாமிஜி” என்று அழைக்க வேண்டாம் என்றும், பாபாஜி! என்று அழைக்குமாறும் அவர் கூறினார். பாபாஜி என்பது இந்தியாவில் துறவியை மட்டுமல்ல, தந்தையை அழைப்பதற்கும் உரியசொல்லாகும். சில வேளைகளில் அவர் அன்பான தாயாகவும் எனக்குத் தோன்றியதுண்டு.
அவர் கலிபோர்னியாவை விட்டுக் கிளம்புமுன் என் னிடம், மீண்டும் உனக்கு மனப் பிரச்சனைகேளோ வேறு எந்தப் பிரச்சனைகளோஎழுமானால் என்னை அழை, எங்கிருந்தாலும் நான் உனது குரலைக்கேட்பேன்” என்று வாக்குறுதி தந்தார். அதனை வாழ்க்கையில் பல முறை அனுபவித்துள்ளேன்” என்று பின்னாளில் நினைவு கூர்ந்தார் எடித்.
அமெரிக்காவில் தொடரும் நாட்கள்
...................
மாறிவரும் மன அலைகள்
...................
சுவாமிஜியின் சான் பிரான்சிஸ்கோ வாழ்க்கை அவருக்கு நல்ல மனஅமைதியைத் தந்தது. அவரது மனமும் பல்வேறு மாற்றங்களுக்கும், பல்வேறு உயர்வு தாழ்வுகளுக்கும் உட்பட்டே செயல்பட்டிருக்கிறது என்பது அவரது கடிதங்களிலிருந்து புரிகிறத. லாஸ் ஏஞ்ஜல்ஸிலிருந்து அவர் எழுதிய கடிதங்களில் ஒருவிதமான மனத் தளர்வையும் ஏமாற்றத்தையும் காண்கிறோம். சான் பிரான்சிஸ்கோவிலிருந்து எழுதிய கடிதங்கள் மன அமைதியைப் பிரதிபலிக்கின்றன.அங்கிருந்து அலமேடாவிற்குச் சென்று, அங்கிருந்து எழுதிய கடிதங்கள் அவர் ஒருவிதமான ஆனந்தப் பரவசத்தில் திளைப்பதைக் காட்டுகின்றன.
...
லாஸ் எஞ்ஜல்ஸ் கடிதங்களிலிருந்து-.
...
என்னுடைய துன்பங்களை மட்டுமே நினைக்கிறேன். பிறருடைய கஷ்டங்களைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறேன். எனக்காகப் பிரார்த்தனை செய். துன்பத்தைச் சகிப்பதற்கான வலிமை எனக்கு உண்டாக வேண்டும் என்று வலிமையான எண்ண அலைகளை அனுப்பு. நான் மிருகத்தனமானவன். உண்மை தான். மென்மை பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறீர்களே, அது எனது குற்றம். மென்மை என்னிடம் இன்னும் குறைவாக, மிக க் குறைவாக இருக்கக் கூடாதா, என்று விரும்புகிறேன். அது இருப்பது என் பலவீனம். ஐயோ, அதிலிருந்து தான் என் கஷ்டங்கள் அனைத்தும் வந்துள்ளன.
..
சான் பிரான்சிஸ்கோ கடிதங்களிலிருந்து-
...
கடந்த இரண்டு ஆண்டுகளாக அனுபவித்த சித்தரவதைகள் பல வழிகளில் பெரிய படிப்பினைகளாக இருந்துள்ளன என்பதைச் சில வேளைகளில் உணர்கிறேன்.நோயும் துரதிர்ஷ்டமும் வருகின்றபோது நாம் என்றென்றைக்குமாக மூழ்கி விட்டோம் என்று தான் உணர்கிறோம். ஆனால் காவப்போக்கில் நமக்கு நன்மை செய்யவே அவை வருகின்றன. எல்லையற்ற நீலவானம் நான், என் மீது மேகங்கள் குவியலாம். ஆனால் நான் அதே எல்லையற்ற நீல வானம் தான். என் இயல்பும், ஒவ்வொருவருடைய இயல்புமாக உள்ளதாக நான் அறிந்துள்ள அந்த அமைதியைச் சுவைக்க நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உடல்களாகிய இந்தத் தகர டப்பாக்களும், இன்பம் துன்பம் என்ற மூடக் கனவுகளும் – இவை என்ன? என் கனவுகள் கலைந்து கொண்டிருக்கின்றன- ஓம் தத் ஸத்.!
அறிவுகடந்த இமைதியை நான் அடைந்து கொண்டிருக்கிறேன். அது இன்பமும் அல்ல, துன்பமும் அல்ல, அந்த இரண்டிற்கும் மேலானஒன்று- சென்ற இரண்டு ஆண்டுகளாக நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மரணத்தின் வாசல் வழியாக வந்தது இந்த நிலையை அடைய எனக்கு உதவியுள்ளது. இப்போது நான் அந்த அமைதியை. அந்த மோன நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். இப்போது ஒவ்வொன்றையும் உள்ளது உள்ளபடி, அந்த அமைதி நிலையில், அதனதன் போக்கில், பூரணமாகக் காண்கிறேன். எண்ணற்ற பிறவிகள், சொர்க்கங்கள், நரகங்கள், - இவை மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பெரிய பாடம் இது தான். –வேண்டும் என்று கேட்பதற்கோ, ஆசைப்படுவதற்கோ சொந்த ஆன்மா வைத் தவிர எதுவும் இல்லை- இப்போது தினமும் அதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். ஆம், நான் உணர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். நான் முக்தன், தனியானவன், தனியானவன், இரண்டற்ற ஒன்றேயானவன் நான்.
...
இந்தக் கடிதத்தின் பின் குறிப்பாக சுவாமிஜி எழுதியுள்ளது அவரது மிகவுயர்ந்தநிலையை அற்புதமாகக் காட்டுகிறது.
இப்போது நான் உண்மையிலேயே விவேகானந்தனாக இருக்கப்போகிறேன். நீ எப்போதாவது தீமையை ஆனந்தமாக அனுபவித்திருக்கிறாயா?ஆ! ஆ! முட்டாள் பெண்ணே. எல்லாம் நல்லது என்றா சொல்கிறாய்.? பொருளற்ற பேச்சு அது. நல்லவை சில, தீயவை சில. நல்லவற்றை நான் ஆனந்தமாக அனுபவிக்கிறேன்.அதே போல் தீயவற்றையும் ஆனந்தமாக அனுபவிக்கிறேன். ஏசுவாக இருந்தேன் நான், யூதாஸாகவும் நானே இருந்தேன். இரண்டும் என் விளையாட்டு , என் வினோதம். தீமையே வா, உனக்கு மங்கலம் உண்டாகட்டும். நன்மையே நீயும் வா, உனக்கும் மங்கலம் வரட்டும். என் காதுகளுக்கருகில் பிரபஞ்சமே தலை கீழாக வீழ்ந்தாலும் அதனால் எனக்கென்ன? அறிவு கடந்த அமைதியே நான். அறிவு நமக்கு நன்மையையோ தீமையையோ மட்டும் தான் கொடுக்கிறது. நான் அதற்கும் அப்பால் உள்ளேன். நானே அமைதி.
..
சான் பிரான்சிஸ்கோவில் சுவாமிஜி ஆற்றிய சொற்பொழிவுகள் இத்தகைய மிக உயர்ந்த ஆன்மீக நிலையிலிருந்து செய்யப் பட்டவை என்பைதை அந்தச் சொற்பொழிவுகளைப் படிக்கும்போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் மாறிவரும் மனநிலைகளைக் கடந்து, அவர் எப்போது வேண்டுமானாலும் சமாதிநிலையில் ஆழ்ந்து விடக் கூடிய உயர்ந்த நிலையிலேயே எப்போதம் இருந்தார் என்பதை, அவருடன் வாழ்ந்த பலரது நினைவுக் குறிப்புகள் கூறுகின்றன. அவர் எவ்வளவு நேரம் தூங்குவார் என்பது பொதவாக யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் மிகக் குறைந்த அளவே தூங்கினார். நள்ளிரவிலும் அதிகாலைவேளையிலும் நீண்ட நேரம் தியானம் செய்தார். அவர் கண்ட காட்சிகள் என்ன. பெற்ற அனபவங்கள் என்ன என்பது பற்றி யெல்லாம் அவர் ஒரு போதும் வெளியில் கூறியதில்லை.
.....
சுவாமிஜியின் காட்சி
.....................
இப்படி அகத்தில் எப்போதும் ஆழ்பவராக இருந்தாலும் அவர் யாரையும் ஒதுக்கவில்லை. எல்லா வித மனிதர்களையும் சந்தித்தார். எல்லோரிடமும் நட்புடன் பழகினார். எடித் எழுதுகிறார், அவர் எல்லோரையும் நேசித்தார். கருணையின் வடிவம் அவர். மனிதர்களுக்கு இடையில் எந்த வேறுபாட்டையும் அவர் காணவில்லை. ஏன், மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும், இடையில் கூட அவர் எந்த வேறுபாட்டையும் காணவில்லை. அவரைப் பொறுத்தவரை மனிதனும் வாத்தும் ஒன்றே. அவர் அனைத்திலும் கடவுளையே கண்டார். அவரது வாழ்க்கையும் செயல்பாடுகளும் அவரது அந்தக் காட்சியைப் பிரதிபலிப்பனவாகவே இருந்தன. இதன் மூலம் அவர் ஒரு மாபெரும் போதனையை வழங்கினார். அது- யாரையும் வெறுக்காதிருத்தல்.
சுவாமிஜி அடிக்கடி கூறுவார், நாம் தவறிலிருந்து உண்மைக்குச் செல்லவில்லை. மாறாக உண்மையிலிருந்தே உண்மைக்குச்செல்கிறோம். நமது காட்சி இப்படி இருக்க வேண்டும். என்ன செய்கிறார்கள் என்பதற்காக யாரையும் குறை சொல்லக் கூடாது. ஏனெனில் அந்த வேளையில்அவர்கள் தங்களால் மிகவும் இயன்ற நல்லதையே செய்கிறார்கள். கூரான கத்தி குழந்தையின் கையில் கிடைத்து விட்டால் அதை அவனிடமிருந்து பிடுங்க முயற்சிக் காதீர்கள். அவனது கையில் ஓர் ஆப்பிளையோ ஒரு பெரிய பொம்மையையோ கொடுங்கள். கத்தியை அவனே கீழே போட்டு விடுவான். தீயில் கையை வைத்தால் அது சுடவே செய்யும். நாம் அனுபவத்திலிருந்தே கற்றுக் கொள்கிறோம்.
...
பிடிக்காதவர்கள்
.....................
எடித்தின் நினைவுக் குறிப்பு தொடர்கிறது. சுவாமிஜிக்குப் பிடிக்காதவர்கள் என்று யாராவது உண்டா? உண்டு, அவர் மனிதர்களை வேறுபடுத்திப் பார்த்தார். ஒருவன் நேர்மையானவன், நல்லவன், ஆனால் சில எல்லைக்குள் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்டு முன்னேற எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பவன். மற்றொருவன் பாவி, தவறுகள் செய்பவன், ஆனால் தனது பாவங்களின் மூலமும் தவறுகளின் மூலமும் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொண்டு முன்னேறுபவன். இந்த இருவரில் சுவாமிஜி இரண்டாமவனை விரும்பினார். சுவாமிஜிக்குப் பிடிக்காதவர்கள் என்று யாராவது உண்டானால் அது வளவள கொள கொள மனிதர்கள்! அவர்களால் எந்தப் பயனும் இல்லை என்று அவர் கருதினார். ஏதாவது செய்யுங்கள்” அது தீயதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஏதாவது செய்யுங்கள்! நல்லவனாய் இரு. நல்லவனாய் இரு. என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் நான் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்? என்று கேட்டார் சுவாமிஜி.
......
அகம் தான் முக்கியம்-
.....................
புறத்தோற்றம், புற அழகு, புறச் செயல்பாடுகள், என்று புற விஷயங்களுக்கே மேலை நாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.ஆனால் சுவாமிஜி புற விஷயங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இது பல நேரங்களில் அவர்களைத் திகைக்க வைக்கும், சுவாமிஜியை மகிழச்செய்யும் அதே வேளையில் அனைவருக்கும் ஒருபடிப்பினையை விட்டுச்செல்லும். ஒரு நாள் சுவாமிஜியும் எடித்தும் ஊறுகாய் வாங்குவதற்காக ஒரு கடைக்குச்சென்றனர். அங்கே உப்பு நீர்த்தொட்டியினுள் ஊறுகாய் வைக்கப் பட்டிருந்தது. அதிலிருந்து உறுகாயை அகப்பையில் எடுத்து,காகிதம் போன்ற மெல்லிய தட்டுகளில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பார்கள். சுவாமிஜி அதைக் கையில் வைத்திருந்தார்.திரும்பி வரும்போது உப்பு நீர் அவரது கைவழியாக வழிந்தது. சிறிதும் தயங்காமல் ஆனந்தமாக அதை நக்கிச் சுவைத்தார் சுவாமிஜி. ஓவென்று அலறினார் எடித். பொது இடத்தில் சுவாமிஜி இப்படி நாகரீகமின்றி நடந்து கொண்டது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் சுவாமிஜி சிறிதும் சலனப்படவில்லை. அமைதியாக, மேடம், உங்கள் பிரச்சனையே இது தான். வெளியில் எல்லாம் நேர்த்தியாகக் காட்சியளிக்க வேண்டும் என்று தான் நீங்கள் கவலைப்படுகிறீர்கள். ஆனால் புறம் எப்படி இருக்கிறது என்பது முக்கிய மல்ல, அகம் தான் முக்கியம்” என்றார்.
.......
ஆன்மீகமா, வயிற்றுவலியா?
..................................
சுவாமிஜியுடன் வாழும் ஒவ்வொரு கணமும் கற்பதற்கு ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது. முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு யாராவது சோகமாக இருந்தால் அவனிடம் ஆன்மீகம் இருக்கவே இருக்காது. ஒரு வேளை வயிற்றுவலி இருக்கலாம்” என்பார் அவர். ஒருநாள் எடித்திடம், மேடம், பரந்த மனம் வேண்டும். எப்போதும் இரண்டு வழிகளை வைத்துக் கொள்ளுங்கள். ஆன்மீகத்தின் உயர்நிலைகளில் இருக்கும்போது நான், சிவோஹம், சிவோஹம், நானே அவன், நானே அவன்” என்கிறேன். வயிற்று வலியால் அவதிப்படும் போது, அம்மா, என்னிடம் இரக்கம் காட்டு” என்கிறேன் என்றார்.
சுவாமிஜி சற்று பருமனான உடல் கொண்டவர். ஒரு நாள் பருமனான சில துறவிகளின் ஓவியம் ஒன்றைப் பார்த்துவிட்டு, பாருங்கள், ஆன்மீக வாதிகள் எப்போதும் குண்டாகவே இருக்கிறார்கள், நானும் அப்படித்தானே. என்று கூறி சிரித்தார்.
.......
கண்டிப்புகள்
..................................
தம்முடன் வாழ்பவர்களின் வாழ்க்கை, அவர்களது பிரச்சனைகள் அனைத்தையும் உன்னிப்பாகக் கவனிப்பதுடன் பல விஷயங்களை அவர்களிடம் கேட்டும் தெரிந்து கொள்வார் சுவாமிஜி. பிறகு இந்தியாவில் குடும்ப வாழ்க்கைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைப்பார். உரையாடல்கள், பேட்டிகள் முதலிய வற்றின்போது மிக மென்மையாகவே பேசுவார். பொதுவாக அவர் மிக மெல்லிய குரலிலேயே பேசினார்- ஒரே யொரு வேளையைத் தவிர- யாரையாவது கண்டிக்கும் வேளையைத் தவிர.
கண்டிப்பு என்றால் பெரிதாக எதுவும் இருக்காது. என்னுடன் வேலை செய்ய தேவி முட்டாள்களையே தேர்ந்தெடுத்திருக்கிறாள். முட்டாள்களுடன் அல்லவா நான் வாழ வேண்டியிருக்கிறது- இவை தான் அவர் பொதுவாகப் பயன்படுத்துகின்ற கடுஞ்சொற்கள்! செய்ய வேண்டியவற்றை யாராவது செய்யத் தவறும் போது, நீ நல்லது செய்யத்தான் நினைக்கிறாய், ஆனால் செய்யும் போது தான் முட்டாளாகி விடுகிறாய்” என்பார். சுவாமிஜி யிடம் ஏச்சு வாங்கியதில் முன்னணியில் இருப்பவர்கள் மீட்சகோதரிகள், அவர்களிலும் மிசஸ் ஹேன்ஸ்ப்ரோ ! ஒரு நாள் அவருக்கு விருந்தே கிடைத்தது. நீ ஒரு வடிகட்டின முட்டாள், உன்னைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் அது இது தான்- மூளை என்ற ஒரு பொருளே இல்லாத முட்டாள்” என்று தொடர்ந்தது. அந்த வேளையில் மிசஸ் ஆஸ்பினால் உள்ளே வந்தார். அவரைக் கண்டதும், சுவாமிஜி திட்டுவதை நிறுத்தினார். உடனே ஹேன்ஸ்ப்ரோ, சுவாமிஜி, அவர் வந்ததை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். உங்கள் ஆத்திரம் தீரவில்லை என்றால் திட்டி முடித்துவிடுங்கள்” என்றார்.
...
சுவாமிஜியின் கோபத்தைப் பற்றி ஹேன்ஸ்ப்ரோ என்ன நினைத்தார்? ஒரு போதும் என்னை அவரது கோபம் காயப் படுத்தியதில்லை. சில வேளைகளில் எனக்கும் கோபம் வரும். நான் அறையை விட்டு வெளியே போய் விடுவேன்” அவர் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருப்பார்” என்றார் ஹேன்ஸ்ப்ரோ.
தாம் திட்டுவதைப் பற்றி சுவாமிஜி என்ன நினைத்தார்? நான் யாரை அதிகம் நேசிக்கிறேனோ அவர்களை அதிகம் திட்டுகிறேன். அதனால் தான் திட்டிய பிறகு நான் மன்னிப்புக் கேட்பதில்லை” என்பார் அவர். மன்னிப்பு கேட்காவிட்டாலும் மறுகணமே தாம் அவர்களிடம் கொண்டுள்ள அன்பை உணர்த்தும் விதமாக நடந்து கொள்வார்.
அதே வேளையில் அவர்கள், ஒவ்வொருவரும் செய்கின்ற பணிகளை மிகவும் புகழ்வார். சிறிய காரியங்களைக் கூட பெரிதாகப் போற்றுவார். இதில் ஒரு போதும் அவர் தவறியதே இல்லை”. மூன்று சகோதரிகளுள் இரண்டாமவரான ஹேன்ஸ்ப்ரோ இங்கே இருக்கிறார். எனக்கு உதவி செய்ய அவர் உழைக்கிறார். உழைக்கிறார். அப்படி உழைக்கிறார். அவர்களின் உள்ளங்களில் இறைவனின் அருளாசிகள் நிறையட்டும். அந்த மூன்று சகோதரிகளும் மூன்று தேவதைகள் அல்லவா!ஏதோ இங்குமங்குமாக அத்தகையோரைக் காண்பது இந்த வாழ்க்கையின் மூடத்தனங்களுக்கெல்லாம் ஒரு பரிகாரமாகிறது” என்று மீட் சகோதரிகளைப் பற்றி எழுதுகிறார் சுவாமிஜி.
...
ஹேன்ஸ்ப்ரோ தமது மகளான டோரதியிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தார். சுவாமிஜி சில நேரங்களில் இதைப் பற்றி ஹேன்ஸ்ப்ரோவை எச்சரிப்பதும் உண்டு. சுவாமிஜியுடன் சான்பிரான்சிஸ்கோ வில் தங்கி அவருக்கான உதவிகளைச்செய் து வந்த நாட்களில் பல முறை ஹேன்ஸ்ப்ரோ பாசடேனாவில் தமது வீட்டிற்குச் சென்று மகளைக் காண வேண்டும் என்று நினைத்தார். ஒரு நாள் சூட்கேஸ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். திடீரென்று ஒரு குரல், நீ போக வேண்டாம். அதற்கு முயற்சி செய்யாதே” என்று கேட்டது. உடனே எங்கிருந்தோ ஹேன்ஸ்ப் ரோவிற்கு அப்படியொரு களைப்பு வந்தது. ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாமல் பெட்டிகளை அங்கேயே வைத்துவிட்டு அமர்ந்து விட்டார்! இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரைத் தடுத்தது சுவாமிஜியின் குரல் அல்ல, அவர் எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றார். அந்தக் குரல் யாருடையதென்று எனக்குத் தெரியவில்லை. என்று பின்னாளில் ஹேன்ஸ்ப்ரோ கூறினார்.
......
டிராம் யாத்திரை
.....................
காலை வகுப்புகள் இல்லாத நாட்களில் சுவாமிஜி ஹேன்ஸ்ப்ரோவுடன் வெளியே செல்வார். கடைகள், சந்தை,பொது இடங்கள் என்று எல்லா இடங்களுக்கும் செல்வதில் அவர் ஆர்வம் காட்டினார். டிராம்களில் செல்லும்போது நேராக அமர்வார்.கைத்தடியை முன்னால் நட்டு வைத்து, அதன் மீது இரு உள்ளங்கைகளையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்துக்கொள்வார். பயணங்களின் போது சில வேளைகளில் மிக மெல்லிய குரலில் பாடுவார். பூங்கா, கண்காட்சி, பறவைகள் சரணாலயம் என்று எல்லா இடங்களையும் பார்த்தார். ரசித்தார். ஆனால் சில காட்சிகளைவிட மனிதனும் அவனது கைவண்ணங்களுமே அவரை மிகவும் கவர்ந்தன. பல இடங்களை அவர் சென்று பார்த்தாலும், இந்தஇடத்தைப் பார்த்தேயாக வேண்டும் என்ற ஆசையுடன் அவர் எந்த இடத்திற்கும்் சென்றதில்லை. எல்லா இடங்களுக்கும் சென்றார். ஆனால் எந்த இடமும் அவருக்குச் சொந்தமில்லை. யாரும் அவருக்கு அன்னியரும் இல்லை. எந்த இடமானாலும் சென்று பார்க்கும்போது, இந்த இடம், அந்த இடம், இந்தப் பொருள், அந்தப் பொருள் என்று தனித்தனியாகப் பார்ப்பதில் அவர் ஆர்வம் காட்ட மாட்டார். மொத்தமாக அந்த இடங்கள் வழியாகஒரு முறை சென்று வருவார். ஒரு பறவை அருகிலுள்ள எதைப் பற்றியும் கவலைப் படாமல் பறந்து செல்வதைப்போல் அது இருக்கும்”என்று எழுதுகிறார் ஹேன்ஸ்ப்ரோ.
.....
கிழவரைப்போல்!
................
ஹேன்ஸ்ப்ரோவின் குறிப்புகள் தரும் மற்றொரு செய்தியையும் இங்கே காண்போம். அது சுவாமிஜியின் உயர் நிலை! ஆன்மீக வாழ்வில் உணவின் முக்கியத்துவம் பற்றி சுவாமிஜி பல சொற்பொழிவுகளில் கூறியதுண்டு. தூய வாழ்க்கை இல்லா தவர்கள் தொட்ட உணவை ஸ்ரீராமகிருஷ்ணர்மறுப்பது பற்றி ஏற்கனவே கண்டோம். சுவாமிஜியும் அத்தகைய நிலையிலேயே இருந்ததை ஹேன்ஸ்ப்ரோவின் குறிப்புகள் காட்டுகின்றன.
ஒரு முறை சுவாமிஜிக்கு சார்லஸ் பி. நீல்சன் என்பவர் ஒரு ஹோட்டலில் விருந்து அளித்தார். மிசஸ் ஹேன்ஸ்ப்ரோ மற்றும் ஓரிருவர் உடன் சென்றனர். அனைவரும் சாப்பாட்டிற்காக அ மர்ந்தனர். சமையல் காரன் வந்து அனைவரையும் வணங்கி விட்டு பரிமாறத் தொடங்கினான். அவனைப் பார்த்ததுமே சுவாமிஜிக்கு அவன் தொட்ட எதையும் சாப்பிட முடியாது என்று தோன்றியது. அவரால் எதையும் சாப்பிட முடியவில்லை. விருந்து அளித்தவருக்கு மிகவும் ஏமாற்றமாயிற்று. யாருக்கும் எதுவும் புரியவில்லை. அந்தச் சமையல்காரன் நல்லவன் அல்ல. அதனால் தான் தம்மால் உணவை உட்கொள்ள முடியாமல் போயிற்று என்று பின்னாளில் சுவாமிஜி கூறினார்.
மற்றொரு முறையும் இவே்வாறே நடந்தது. சுவாமிஜியும் ஹேன்ஸ்ப்ரோவும் பிரெஞ்சு ஹோட்டல் ஒன்றிற்றுச் சென்றிருந்தனர். எறால் வறுவல் பரிமாறப்பட்டது. அங்கும் சுவாமிஜி சாப்பிட தயங்கினார். பின்னர் நடந்ததுபற்றி உடன் சென்றிருந்த மிசஸ் ஹேன்ஸ்ப்ரோ கூறினார். ஒருவாறாக சுவாமிஜி சாப்பிட்டு முடித்தார். ஆனால் வீட்டிற்கு வந்ததும் வாந்தி எடுத்தார்,உடனே நான், அந்தவறுவலே அப்படித்தான் , ஜீரணிக்கக் கடினமானது” என்றேன். அதற்கு சுவாமிஜி, இல்லை, சமைத்தவன் நல்லவன் அல்ல. நானும் வரவர அந்தக் கிழவரைப்போல் ஆகி வருகிறேன். இப்படியே போனால் நான் கண்ணாடிக் கூண்டிற்குள் தான் வாழவேண்டும் போலிருக்கிறது” என்றார். அவர் ”கிழவர்” என்று குறிப்பிட்டது ஸ்ரீராமகிருஷ்ணரைத்தான். தூயவர்கள் அல்லாதவர்கள் தொட்ட எதையும் அவரால் சாப்பிட முடியாது. அவரது உடம்பே அதனை ஏற்றுக் கொள்ளாது, என்று விளக்குகிறார் மேரி தூயி பர்க்.
வெடிகுண்டு எறிவேன்
..................
மார்ச் மாதத்திலிருந்து சுவாமிஜி சான் பிரான்சிஸ்கோவில் அளித்த சொற்பொழிவுகள் மனம், மன இயல் சம்பந்தமானவை, ராஜ யோகத்துடன் தொடர்பு உடையவனாக இருந்தன. முக்திக்கு வழி என்ற தலைப்பில் ஒரு நாள் பேசினார். அந்தச் சொற்பொழிவு நிறைவுறும் வேளையில், நாளை நான் மனம்” அதன் ஆற்றல்களும் சாத்திய கூறுகளும்” என்ற தலைப்பில் பேசவுள்ளேன்” வந்து கேளுங்கள். அதில் சிறப்பான செய்தி ஒன்றை உங்களுக்கா ச் சொல்லப்போகிறோம். ஆம், வெடிகுண்டு ஒன்றை வீசப்போகிறேன்” என்றார். இதனை க் கூறிவிட்டு முகத்தில் புன்னகை மலர பார்வையாளர்களை ஒரு முறை பார்த்தார். பிறகு கைகளை அசைத்தபடியே, வாருங்கள், அது உங்களுக்கு நன்மை செய்யும்” என்றார்.
மறுநாள் அரங்கம் நிரம்பி வழிந்தது. நிற்கக் கூட இடமில்லாத அளவிற்குக் கூட்டம் அலை மோதியது. சவாமிஜியும் வெடிகுண்டை எறியவே செய்தார். மக்கள் மனத்தில் விழுந்து, ஒரு மாபெரும் விளைவை ஏற்படுத்தும் வண்ணம் சொல்-குண்டை எப்படி எறிவது என்பது அவருக்கே கைவந்த கலை என்கிறார் ரொடீமல். அப்படி அவர் எறிந்த வெடிகுண்டு தான் என்னஃ தூய்மை, புனிதம், கற்பு, நல்லொழுக்கம் போன்ற கருத்துக்களை அவர் ஆணித்தரமாகஎடுத்துக் கூறியது தான் அந்த வெடிகுண்டு இவை மேலை நாட்டினருக்குத் தெரிந்த விஷயங்கள் தான். ஆனால் அவர்களுக்கு அவற்றின் முழுப் பரிமாணம் , இந்திய அணுகுமுறை போன்றவை புதியவை. காம ஆற்றலை முற்றிலுமாக க் கட்டுப் படத்த முடியும் என்பதில் மேலை விங்ஙானம் அக்கறை காட்டுவதில்லை. கத்தோலிக்கத் தத்துவம் ஏற்றுக் கொண்ட போதிலும் அவ்வளவு வற்புறுத்துவதில்லை. சவாமிஜி உண்மையைப் பேசினார்.
அன்று இந்து இளைஞன் ஒருவன் என்னைக் காண வந்திருந்தான். உடல் நிலை, சரியில்லாமல் இருந்தான் அவன். பேச்சுவாக்கில் அவன், பிரம்மச்சாரியம் என்பதெல்லாம் பொய், அது முடியவே முடியாது. அது இயற்கை நியதிக்கே எதிரானதுஎன்று இந்த நாட்டிலுள்ள டாக்டர்கள் கூறுகிறார்கள்” என்றான் அவன். நான் அவனிடம்,பொ. இந்தியாவிற்குத் திரும்பிப்போ. உன் முன்னோர்களின் உபதேசங்களைப் படி. அது சாத்தியம் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் போதிப்பது மட்டுமல்ல. வாழ்ந்ததும் காட்டி வருகிறார்கள்” என்றேன்.
இந்த இடத்தில் சுவாமிஜி வார்த்தைகளால் விளக்க முடியாத வெறுப்பை முகத்தில் தேக்கியபடி பார்வையாளர்களை ஒரு முறை பார்த்தார். பிறகு அதிர் வேட்டு போல் முழங்கினார். இந்த நாட்டின் ம டாக்டர்களே! காம ஆற்றலைக் கட்டுப் படுத்துவது இயற்கை நியதிக்கே முரணானது என்று நீங்கள் கூறுகிறீர்கள். பாவம், என்ன சொல்கிறீர்கள் என்பதே உங்களுக்குத் தெரியவில்லை. கற்பு என்பதன் பொருள் உங்களுக்குப் புரிய வில்லை. நீங்கள் மிருகங்கள்! மிருகங்கள்! மிருகங்களின் ஒழுக்க முறையை வாழ்கின்ற நீங்கள் இதற்கு மேல் என்ன சொல்ல முடியும்?
தாம் சொல்வதற்கு ஏதாவது எதிர்க் கருத்துக்கள் இருக்குமானால் சொல்லலாம் என்று சவால் விடுவது போல் சுவாமிஜி கூட்டத்தின ரை ஒரு முறை பார்த்தார். எங்கும் நிசப்தம்! ஒருவரும் பேசத் துணியவில்லை. அந்தக் கூட்டத்தில் டாக்டர்களும் பலர் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி, அந்த 19- ஆம் நூற்றாண்டில் காமம், உறவு, உடலுறவு போன்ற வார்த்தைகளைப் பொது இடங்களில் பேசவே மக்கள் தயங்கினர். இந்தத் தலைப்பில் பொதுச் சொற்பொழிவுகள் இந்த நாட்டில் வரவேற்கப் படுவதில்லை” என்று சுவாமிஜியே கூறியதுண்டு. அது தெரிந்தும் அவர் அவைபற்றி பேசினார். சுவாமிஜியின் பேச்சு பலரை முகம் சுளிக்க வைத்தது. பலர் அதன் பிறகு அவரது சொற்பொழிவுகளுக்கு வருவதையே நிறுத்தி விட்டனர். சிலரோ, சுவாமிஜி இந்த அளவிற்குப் பேசக் கூடாது என்றெல்லாம் அவருக்கு அறிவுரை கூறினர்.
ஆனால் சுவாமிஜி எதையும் பொருட்படுத்த வில்லை. அது மட்டுமல்ல, தொடர்ந்தும் அவர் தேவையான இடங்களில் அத்தகைய ரீதியில் பேசவே செய்தார். ஒரு முறை ” ம ன ஒருமைப் பாடு” என்ற தலைப்பில் பேசிக் கொண்டிருந்த போது, ஒருவர் அவரிடம் தத்துவச் சொற்பொழிவுகள் வேண்டும் என்று கேட்டார். அப்போதும் சுவாமிஜி, உங்களுக்குத் தத்துவம் வேண்டுமா? அப்படியானால் பீரங்கி குண்டுகளை எதிர்கொள்ள த் தயாராக இருங்கள் என்று கூறினார். அது போலவே அவர் தொடர்ந்து பேசிய, ” இயற்கையும் மனிதனும்” ஆன்மாவும் கடவுளும்” நான் அந்த நானே” ”லட்சியம்” போன்ற சொற்பொழிவுகள் மேலை நாட்டுத் தத்துவக் கருத்துக்களை அடியோடு அசைப்பனவாக இருந்தன! தங்கள் மதக் கொள்கைகள் அடியோடு அசைவது கண்டு பார்வையாளர்கள் திகைப்பதும் பிரமிப்புடன் உட்கார்ந்திருப்பதும் சுவாமிஜிக்கு சிரிப்பையே அளித்தன. சல வேளைகளில் பற்களால் கீழ் உதட்டை அழுத்தியபடி சிரிப்பை அடக்கிக் கொள்வாராம் அவர்!
நான் எல்லையற்ற ஆன்மா, இயற்கையின் தலைவன், நான் இயற்கையின் அடிமை அல்ல, வேறுபாடுகள், தொகுப்புகள் எல்லாவற்றிற்கும் அப்பால், காலம் இடம் காரண காரிய நியதழ அனைத்திற்கும் அப்பால், நான் அந்த நானாக இருக்கிறேன்”.
சாஸ்திரங்கள் இல்லை. கற்பிப்பவர் இல்லை, தெய்வங்கள் இல்லை, கோயில்கள், பூஜாரிகள், தெய்வங்கள், அவதாரங்கள், ஏன், கடவுளையே கூட விட்டு விடுங்கள். இது வரை இருந்துள்ள அனைத்துக் கடவுளும் நானே!
சுவாமிஜி இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தினர் ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருப்பார்கள். ”நான் பாவி” நான் அஞ்ஞானி” என்றெல்லாம் கூறப் பட்ட கருத்துக்கள் அதிர்ச்சியை அளித்திருக்கும் என்பதில் ஐய மில்லை. இத்தகைய சொற்பொழிவு ஒன்றின் போது முன் வரிசையில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் எழுந்து, ஐயோ, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இங்கிருந்து தப்பித்து விட வேண்டும்” என்று கூறியபடியே எழுந்து தமது கைத்தடியை வேகமாக ஊன்றி நடந்தபடி வெளியேறினார். சுவாமிஜி முகத்தில் புன்னகை தவழ பார்த்துக்கொண்டிருந்தார்.
தமது சொற்பொழிவுகளில் கூறப் படுகின்ற சில கருத்தைக்கேட்டு , இன்று அவர்கள் கோபம் கொண்டாலும் நாளை அவர்கள் இதனால் பெரும் பயன் அடைவார்கள் என்பது சுவாமிஜிக்குத் தெரிந்திருந்தது. உண்மையை நான் எதற்கு ஒப்பிடுவேன் தெரியுமா? அளவிட முடியாத ஆற்றல் வாய்ந்த அமிலத்திற்கு. எங்கு விழுந்தாலும் அந்த இடத்தை அது அரித்து எரித்துவிடும். மென்மையான பொருட்களை விரைவில் அழிக்கும். கடினமாக கல்போன்றவற்றைக் கொஞ்சம் தாமதமாக அழிக்கும். ஆனால் என்றாவது அது அழிந்தே தீரும்........... நானும் தருவதெற்கென்று செய்தி ஒன்று உள்ளது. அதனை இனிமையான மொழியில் பேசி இதமாக எல்லோருக்கும் எடுத்துச் சொல்வதற்கு எனக்கு நேரமில்லை. அது மட்டுமல்ல, இனிமையாக மாறுவதற்கான முயற்சிகள் ஒருவனை ஏமாற்றுப் பேர் வழியாகவே மாற்றும்
” என்று ஒரு முறை சுவாமிஜி கூறினார்.
......
மின்சார அதிர்ச்சி
.........
சுவாமிஜியைச் ” சூறாவளித் துறவி” என்று கூறுவதுண்டு. ஆனால் இப்போது அவர் அந்த அளவிற்குச் சொற்பொழிவுகள் செய்யவில்லை. ஆனால் செய்தவை இத்தகைய ஆற்றல் மிக்கவையாக இருந்தன. சான் பிரான்சிஸ்கோவில் தான் அவர் தமது மிகச் சிறந்த ஆன்மீக ஆற்றலை வெளிப்படுத்தினார்” என்று எழதுகிறார் ஹேன்ஸ்ப்ரோ. தமது ஒரே வாக்கியத்தால் அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவருக்கும் மின்சார அதிர்ச்சி போன்ற அனுபவத்தை அவர் அளித்த நிகழ்ச்சியும் நடைபெற்றதுண்டு. ஒரு நாள் தமது சொற்பொழிவை ஆரம்பிக்கு முன் ஒரு முறை அனைவரையும் பார்த்தார். பிறகு திடீரென்று, ”எழுந்திருங்கள்” விழித்திருங்கள். லட்சியம் கைகூடும்வரை நில்லாது செல்லுங்கள்” என்று கூறினார். அங்கிருந்த அனைவரும் தங்கள் உடம்பில் மின்சாரம் போன்ற ஒரு சக்தி பாய்ந்ததை நிதர்சனமாக உணர்ந்தனர்” என்கிறார் மிசஸ் எடித் ஆலன்!
சுவாமிஜி தமது சொற்பொழிவுகளுக்கு முன்னால் எதுவும் சாப்பிடுவதில்லை, அது சிந்திக்கும் ஆற்றலைத் தாமதப்படுத்துகிறது” என்பார் அவர். சொற்பொழிவு முடிந்ததும் சாப்பிடுவார். பொதுவாக யாராவது அவருக்கு விருந்து ஏற்பாடு செய்திருப்பார்கள். சில வேளைகளில் அவரும் சிலருக்கு விருந்தளிப்பது உண்டு.
நான் விரும்புவதை இன்று போதிக்கிறேன். இப்படி லட்சியத்திலேயே நான் வளர்ந்திருக்க க் கூடாதா. துவைதக் கொள்கைகளைடீய அறியாமல் இருந்திருக்கக் கூடாதா என்று நான் எண்ணுகிறேன்” என்று தமது ” எதிர்கால மதம் வேதாந்தமா? என்ற சொற்பொழிவில் சுவாமிஜி கூறுகிறார். அவர் விரும்பினார். போதித்தார் என்பதல்ல இதன் பொருள். காலத்தின் தேவை என்பதை உணர்ந்திருந்த தால் அவர் இதனைச்செய்தார்.
இதே சொற்பொழிவில் சுவாமிஜி கூறுகின்ற மற்றொரு கருத்து மிகவும் சிந்திக்கத் தக்கது.உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த நூல்கள்வேதங்கள். அந்த நூல்கள் கூறுகின்ற அறுதித் தத்துவமாக வேதாந்தம் கருதப்படுகிறது. ஆனால் அது ஒரு வாழ்க்கை நெறியாக இது வரை கருதப் படவில்லை என்பது சுவாமிஜியின் அனுபவ பூர்வமான கருத்து.
மறைந்த ஒருவரின் சேவகன் நான். நான் தூதன் மட்டுமே. நான் பரிசோதனை செய்து பார்க்க விரும்புகிறேன். நான் உங்களுக்குக் கூறிய வேதாந்த போதனைகள் இதற்கு முன் பரிசோதனை செய்யப்படவில்லை. தத்துவங்களில் மிகப் பழமையானது வேதாந்தம் என்பது உண்மையானாலும், அது எப்போதும் மூட நம்பிக்கைகளுடனும் அவை போன்ற பிறவற்றுடனும் கலந்து குழம்பியே இருந்திருக்கிறது.
நானும் என் தந்தையும் ஒருவரே” என்றார் எசு. நீங்களும் அதைத் திருப்பிச் சொல்கிறீர்கள். ஆனால் அது மனித குலத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை. பத்தொன்பது நூற்றாண்டுகளாகியும் இன்னும் அவர்கள் அந்தப் போதனையைப் புரிந்து கொள்ளவில்லை. ஏசுவை அவர்கள் மனிதர்களின் ரட்சகர் ஆக்குகிறார்கள். அவர் கடவுள், நாம் புழுக்கள்! இந்தியாவிலும் இப்படித்தான்.
ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற நம்பிக்கை தான் மதத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பலகோடி மக்கள் உலக நாயகராகிய ஒருவரை, அவதார புருஷர்களை, ஆச்சாரிய புருஷர்களை வழிபடவே கற்பிக்கப் பட்டிருக்கிறார்கள். தாங்கள் எந்தவித ஆற்றலும் அற்றவர்கள், துன்பத்தில் உழல்வதற்கே பிறந்தவர்கள், முக்தி பெறுவதற்கு வேறு ஒருவர் அல்லது பலரின் கருணை அவசியம் என்றே போதிக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகளில் பல சிறந்த விஷயங்கள் உள்ளன என்பது உண்மை தான். இவை மிகச் சிறப்பான நிலையில் இருந்தாலும் மதத்தின் பாலர் வகுப்பு நிலையில் உள்ளவை மட்டுமே. அவை செய்துள்ள உதவியும்மிகக் குறைவே. மனிதர்களின் மனம் இந்த நம்பிக்கைகளால் எந்த இழிவையும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு மயங்கியுள்ளது. என் றாலும் சில மாமனிதர்கள் இந்த மயக்கத்திலிருந்து விடுபடுகின்றனர். மகான்கள் தோன்றுவார்கள். இந்தக் குழந்தை விளையாட்டுக்களை ஒதுக்கித் தள்ளி, ஆன்மாவின் மூலமே ஆன்மாவை வழிபடுவதான இந்த உண்மை மதத்தைத் தெளிவாகவும் ஆற்றல் மிக்கதாகவும் செய்வார்கள்- அதற்கான காலம் விரைவில் வந்து கொண்டிருக்கிறது.
சுவாமிஜி ஏன் வேதாந்தத்தைப்போதித்தார் என்பதை இங்கே தெளிவாக எடுத்துக் கூறுகிறார். நான் தூதன் மட்டுமே, என்று கூறுவதன் மூலம் இது ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆணைப்படி நடக்கின்ற ஒன்று என்பதையும் அவர் தெளிவு படுத்துகிறார். ஆன்மாவின் மூலமே ஆன்மாவை வழிபடுவதான” அந்தக் காலம் எப்போது வரும்.
எனக்குத் தெரியாது. ஆயிரம் ஆண்டுகளுக்குள் நடக்காது. பழைய மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டும். மூட நம்பிக்கைகளை எப்படி அழியாமல் காப்பது என்பதிலேயே நீங்கள் மூழ்கி யிருக்கிறீர்கள். இத்துடன் உடன் பிறந்த சகோதரன், ஜாதிச் சகோதரன், சமுதாயச் சகோதரன் என்ற எண்ணங்கள் வேறு இருக்கின்றன. வேதாந்த லட்சியத்தை அடைவதில் இவை எல்லாம் தடைகள். மதம் என்பது இது வரை ஒரு சிலருக்கே மதமாக இருந்திருக்கிறது. உலகம் முழுவதும் மதத் துறையில் வேலை செய்தவர்களுள் பலரும் உண்மையில் அரசியல் வாதிகள்........
...... இங்கே நான் இந்தக் கோட்பாடுகளைச் சொல்கிறேன். எத்தனைபேர் இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வீர்கள்? ஆனால் எல்லா உண்மையும் இங்கே உள்ளது, உண்மையை உங்களுக்குச் சொல்ல வேண்டுவது என் கடமை.
.....
பணத்திற்காகச் சொற்பொழிவு
.....................
மேற்கண்ட சொற்பொழிவு தான் சான்பிரான்சிஸ்கோ வில் சுவாமிஜியின் கடைசி சொற்பொழிவு. பணத்திற்காகச் சொற்பொழிவு செய்கின்ற இந்தநிலையிலிருந்து நான் விடுபடுவேனா? என்று சவாமிஜி ஏங்குவதுண்டு. ஆனால் மடத்திற்காகவும் பணிகளுக்காகவும் அவர் சம்பாதித்தாக வேண்டியிருந்தது. அவருக்குக் கணக்கு என்பது சுத்தமாக வராது. இருப்பினும் ஏதோ ஒரு கணக்கு வைத்துக் கொள்வார். அவரது வரவு செலவுகளை யெல்லாம் ஹேன்ஸ்ப்ரோதான் கவனித்துக் கொண்டார். அவருக்கு உதவி செய்த ஹேன்ஸ்ப்ரோவும் இந்த விஷயத்தில் அவ்வளவு திறமை சாலி அல்ல. அவர் உண்டியல் போன்ற சிறிய பானைகளை வைத்திருந்தார். பணம் வரவர அவற்றில் இட்டு வைப்பார். கடைசியில் எடுத்து எண்ணுவார். இவ்வளவு பணம் என்று சுவாமிஜியிடம் தெரிவிப்பார். அது போதாது என்று தோன்றினால் சுவாமிஜி மீண்டும் சொற்பொழிவுகள் செய்ய ஆரம்பிப்பார். இப்படிச் சென்றது அவரது வாழ்வு.
இந்த நாட்களில் சுவாமிஜிக்குக்கேத்ரி மன்னர் அனுப்பி வந்த பணம் நிறுத்தப் பட்டது. பல வழிகளில் சுவாமிஜிக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தினருக்கும் உதவி வந்தவர் கேத்ரி மன்னர். சுவாமிஜியின் சொந்தச் செலவுகளுக்காக வும், அவரது தாயாருக்காகவும் அவர் மாதந்தோறும் தனித்தனியாகப் பணம் அனுப்பி வந்தார். இப்போத திடீரென்று சுவாமிஜிக்கு அனுப்பி வந்த பணத்தை மட்டும் அவர் நிறுத்தினார். ஒரு வேளை சுவாமிஜிக்குப் பணக்கார அமெரிக்கச் சீடர்கள் பலர் உள்ளனர். எனவே தாம் அனுப்ப வேண்டியதில்லை என்று மன்னர் எண்ணியிருக்கலாம். இதன் காரணமாக சுவாமிஜி அலமேடா சென்ற பிறகும் ஓரிரு முறை சான் பிரான்சிஸ்கோவிற்கு வந்து சொற்பொழிவு செய்ய வேண்டியதாயிற்று.
சான்பிரான்சிஸ்கோவை விட்டுப் புறப்படு முன் சுவாமிஜி அங்கே நிரந்தரமாகச் செயல்படுவதற்கான வேதாந்த சொசைட்டி” ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
...................
அமெரிக்காவில் கடைசி நாட்கள்
............................
துடுக்குச் சிறுவனாக
.......................
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து 1900 ஏப்ரல் 11-ஆம் நாள் அலமேடா சென்றார் சுவாமிஜி. சான் பிரான்சிஸ்கோவிற்கு அருகில் அமைந்த அழகிய ஊர் இது. அங்கே உண்மை இல்லம் என்ற நிறுவனத்தின் கட்டிடத்தில் சுவாமிஜி தங்கினார். அதன் நிறுவர்களான ஜார்ஜ் ரூர்பாக் தம்பதிகள் மற்றும் மிஸ் லூசி ஆகியோர் அவரை மிகவும் அன்பாக வரவேற்று தங்கச் செய்தனர். பூக்களும் அழகிய தோட்டங்களும் சுற்றிலும் அமைந்த ஒரு வீடு அது.
உண்மை இல்லத்தில் யாரும் புகைபிடிக்கக் கூடாது என்பது நியதி. ஒரு நாள் சுவாமிஜி அங்கே ஒரு விருந்திற்கு அழைக்கப் பட்டிருந்தார். அழைத்தவர் உண்மை இல்லத்தின் அங்கத்தினர். அவர் விருந்தின் இடையில் எதற்காகவோ உள்ளே சென்றார். நியதி தெரியாத சுவாமிஜி. அந்த நேரத்தில் புகைக் குழாயை எடுத்து புகை பிடிக்க ஆரம்பித்தார். அனைவரும் திகைப்புடன் பார்த்தனர். சுவாமிஜியை அழைத்திருந்தவர் அப்போது உள்ளே வந்தார். சுவாமிஜி புகைபிடிப்பதைக் கண்டதும் சற்று ஆத்திரத்துடன், சுவாமிஜி, மனிதன் புகை பிடிக்க வேண்டும் என்று கடவுள் நினைத்திருந்தால், புகையை வெளியே விடுவதற்காக அவர் மனிதனின் தலையில் ஒரு புகைக் குழாயை வைத்தே படைத்திருப்பாரே! என்றார் . சுவாமிஜி சற்றும் அதிராமல், அமைதியாக, ஆனால் புகைக் குழாயைக் கண்டு பிடிப்பதற்கான அறிவை நமக்கு அவர் தந்திருக்கிறாரே” என்று புன்னகையுடன் கூறினார். அனைவரும் சிரித்தனர். சுவாமிஜி புகை பிடிக்க அனுமதி வழங்கப் பட்டது. உண்மை இல்லத்தின் நியதிகள் தெரிந்திருந்தால் சுவாமிஜி புகை பிடிப்பதைத் தவிர்த்திருப்பார். அல்லது புகை பிடிப்பதற்கான அனுமதியாவது பெற்றிருந்திப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரு நாள் காலை உணவிற்கு வைத்திருந்த பாலாடைக் கட்டியைக் காணவில்லை. உணவிற்காக அமர்ந்த பின்னரே அதனைக் கவனித்தார்கள். தேடோதேடென்று அனைவரும் தேடினார்கள். எங்கும் கிடைக்கவில்லை. பால்காரன் அதனைக் கொண்டு வந்ததைக் கண்டதாக ஓரிருவர் கூறினார்கள். இந்தப் பரபரப்பு அனைத்தையும் கவனித்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தார் சுவாமிஜி. எவ்வளவு தேடியும் கிடைக்காமல் அனைவரும் ஓய்ந்து போய் அமர்ந்த போது, ஓ அதுவா, நான் தான் அதைச் சாப்பிட்டேன் என்று தோன்றுகிறது” என்று அமைதியாகக் கூறினார் சுவாமிஜி. பலர் சுவாமிஜியின் துடுக்குத்தனத்தை ரசித்தாலும் சிலரால் இதனை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர்கள் முகம் சுளித்தனர்.
....
காற்றாலையின் நோய்.
...............................
உண்மை இல்லம் என்பது அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவ மதப் பிரிவுகளில் ஒன்று. ஏசுநாதர் நோயாளிகளைக் குணப்படுத்தினார். எனவே நாமும் நமது மன ஆற்றலைப் பயன் படுத்தி நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பது அவர்களின் கருத்து. தங்கள் கொள்கைப் பிடிப்பில், அவர்கள் தங்கள் ஆற்றலால் மனிதர்களின் நோயை மட்டுமல்ல, பழுதான எந்திரங்களையும்சரியாக்க முடியும் என்றுநம்பத் தொடங்கினர். கீழ் வரும் நிகழ்ச்சியை சுவாமிஜி கூறினார்.
ஒரு முறை தொடர்ந்து மழை இல்லாமல் போனதால் இல்லத்தின் தோட்டத்தில் செடிகள் வாடத்தொடங்கின. அந்த வேளையில் காற்றாலை பழுதாகியது. அதனால் கிணற்றிலிருந்து நீரும் இறைக்க இயலவில்லை. எளிய மனத்தினனான தோட்டக்காரன் அங்கத்தினரை அழைத்து, இந்தக் காற்றாலையின் நோயைக் குணப்படுத்துவோம். எல்லாம் தெய்வீக மனத்தில் உள்ளது. தெய்வீக மனத்தில் எந்தக் குறைபாடும் இல்லை. இந்தக் காற்றாலை உண்மையில் நன்றாகவே உள்ளது. நிர் இறைக்க அது தயாராகவே உள்ளது” என்று இதய பூர்வமாக மனத்திற்குள் அனைவரும் சொல்வோம்” என்று கூறினான். அனைவரும் எழுந்து மௌனமாக நின்று அவன் கூறியபடியே செய்தனர். அவர்களும் நின்றனர். காற்றாலையும் அப்படியே நின்றது. கடைசியில் தோட்டக்காரன் சென்று ஒரு மெக்கானிக்கைக் கூட்டி வந்து தான் சரி செய்ய வேண்டியிருந்தது!
....
உடம்பை நினைப்பதா?
.......................
நோயைக் குணப்படுத்துவதை ஒரு பெரிய விஷயமாக உண்மை இல்லத்தினர் கருதுவதை சுவாமிஜி ஆமோதிக்க வில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரின் இறுதி நாட்களில் அவரிடம் ஒருவர், மன ஆற்றலைப் பயன் படுத்தி நோயைக் குணப்படுத்துமாறு ஆலோசனை கூறினார். அதற்கு அவர், என்ன அற்பத்தனம்! தேவியிடம் கொடுத்த மனத்தைச் சதை பிண்டமான உடம்பில் செலுத்துவதா? என்று கேட்டார். ஒருநாள் இதனைக் கூறிய சுவாமிஜி, ஏசுநாதரும் தமது ஆற்றலைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்காமல் இருந்திருந்தால் இன்னும் மாமனிதராக த் திகழ்ந்திருப்பார். என்று கூறினார். இதுவும் இல்லத்தின் சில அங்கத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. சிலரோ, புளித்துப்போன சிந்தனை முறையிலிருந்து சுவாமிஜி தங்களை மீட்டதாகக் கொண்டாடினர்.
இல்லத்தின் தலைவர்களில் ஒருவரான மிசஸ் ரூர்பாக் ஒருநாள் நேரடியாக சுவாமிஜியிடமே கூறினார். நோய்களைத் தீர்க்க வேண்டுமென்று மக்கள் எங்களிடம் வருகிறார்கள். நானும் பலரது நோய்களைத் தீர்த்துள்ளேன். ஆனால் சுவாமிஜி, இது எப்படி நடக்கிறதென்றே எனக்குத்தெரியவில்லை. நானே புரிந்து கொள்ளாத ஓர் ஆற்றலை நான் பயன் படுத்துகிறேன் என்று எனக்குத்தோன்றுகிறது. இந்த எண்ணம் எனக்கு பயத்தைத்தான் தருகிறது. இப்படி நோய் தீர்ப்பதை விட்டு விடலாம் என்று இருக்கிறேன். இதைக்கேட்டு விட்டு சுவாமிஜி அமைதியாகச் சிரித்தார். பிறகு, நல்லது, நல்லது” என்று கூறினார்.
அந்த நாட்களில் உண்மை இல்லம் பலர் பின்பற்றும் ஒரு மதப் பிரிவாக இருந்தது. சுவாமிஜியின் வருகையால் அதன் கருத்துக்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் களின் கொள்கைகளை மீறி, அவர் அங்கே புகை பிடித்தார். அசைவ உணவு சாப்பிட்டார். இவற்றை அவர் வேண்டுமென்றே செய்ததாகத்தான் தோன்றுகிறது.ஏனெனில் எதையும் காரணமின்றி அவர் செய்வதில்லை. இந்த நியதிகளை மீறியதன் மூலம் அவர்களுக்கு அவர் போதித்தார்.ஏன், அவர் சாப்பிடுவது, அவர் நடப்பது, அவரது வாழ்க்கை முறை உண்மையைத் தேடுபவர்களுக்கு ஒரு பாடமாக இருந்தது. இந்த நியதிகளை மீறியதன் மூலம் உண்மையான ஆன்மீகம் எது என்பதை அவர்களுக்குக் காட்டினார். கீரையை மட்டும் சாப்பிட்டு விட்டால் அது ஆன்மீகம் ஆகிவிடாது என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தார் சுவாமிஜி.
ஏற்கனவே கண்டது போல் சுவாமிஜியின் மனம் மிக உன்னதங்களில் திளைத்த நாட்கள் இவை. எப்போதுமே அவர் ஒருவிதமான பரவச நிலையில் காணப் பட்டார். அவர் பேசுவது, ஏதோ உயர் நிலையிலிருந்து பேசுவது போல் தோன்றியது. இந்த நாட்களில் எழுதிய கடிதங்கள் அவரது அற்புத உணர்வு நிலைகளைத் தெரிவிப்பனவாக உள்ளன. அவரது எளிய உரையாடல்கூட அவர் திளைத்த உயர்நிலைகளை நமக்கு உணர்த்துகின்றன.
ஒரு நாள் ஆலன் சுவாமிஜியைக் காண வந்தார். சுவாமிஜியைக் கண்டதும், ஓ! சுவாமிஜி , நீங்கள் அலமேடாவில் இருக்கிறீர்கள்” என்றார். உடனே சுவாமிஜி, இல்லை, ஆலன், நான் அலமேடாவில் இல்லை. அலமேடா என்னில் இருக்கிறது” என்றார்.
அற்புதமான அமைதி நிலை!
..........................
இங்கிருந்து தான் சுவாமிஜி அந்த அற்புதமான, படிக்கின்ற யாரையும் சிறிது நேரமாவது அவரது உணர்வுகளில்திளைக்கச்செய்கின்ற கடிதத்தை மெக்லவுடிற்கு எழுதினார்.இதோ சில பகுதிகள். வேலை செய்வது எப்போதுமே கஷ்டமானது தான். ஜோ, எனது வேலைகள் என்றென்றைக்குமாக நின்று போகட்டும் என்றும், என் முழு ஜீவனும் தேவியிடம் லயித்திருக்கட்டும் என்றும் பிரார்த்தனை செய், தேவியின் வேலைகள், தேவியே அறிவாள்.
நான் நலமாக இருக்கிறேன். மனத்தளவில் மிகவும் நலமாக இருக்கிறேன். உடலின் ஓய்வைவிட மனத்தின் ஓய்வை அதிகமாகவே உணர்கிறேன். போர்கள் நடந்தன. சில தோல்வி அடைந்தன. சில வெற்றி பெற்றன. நான் என் பொருட்களை மூட்டைக் கட்டிக்கொண்டு. மாபெரும் விடு விப்பவனுக்காகக் காத்திருக்கிறேன். ”சிவபெருமானே , ஓ சிவபெருமானே, என் படகை மறுகரைக்குக் கூட்டிச்செல்.
கடைசியாகப் பார்க்கும்போது ஜோ, நான் வெறும் சிறுவன், தட்சிணேசுவர ஆலமரத்தின் அடியில் ஸ்ரீராமகிருஷ்ணரின் அற்புத மொழிகளை ஆச்சரியமான பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அந்தச் சிறுவனே! அதுவே எனது உண்மை இயல்பு. வேலைகளும், திட்டங்களும், நன்மை செய்வதும் இவைபோன்ற எல்லாம் என்மீது ஏற்றப் பட்டவை. இப்போது மீண்டும் அவரது குரல் எனக்குக்கேட்கிறது. என் ஜீவனைப் பரவசப்படுத்துகின்ற பழைய அதே குரல்! பந்தங்கள் அறுகின்றன. அன்பு சாகிறது. வேலைகள் சுவையற்றதாகின்றன. வாழ்விலிருந்தமாய வசீகரம் போய்விட்டது. குருதேவரின் குரல் அழைப்பது மட்டுமே உள்ளது- நான் வருகிறேன். அப்பா, நான் வருகிறேன்! செத்தவர்கள் செத்தவர்களைப்புதைத்துக்கொள்ளட்டும். நீ என்னைப் பின் தொடர்ந்து வா- நான் வருகிறேன்- என் அன்பான ஐயா, நான் வருகிறேன்.
ஆம், நான் வருகிறேன். நிர்வாணம் என் முன்னால் உள்ளது- அதே எல்லையிலா அமைதிக் கடல், ஒரு சிற்றலையும் இல்லாமல், மூச்சுக் காற்றுகூட இல்லாமல் உள்ளது. அவ்வப்போது அதை நான் உணர்கிறேன். நான் பிறந்ததற்காக மகிழ்கிறேன். இவ்வளவு கஷ்டப் பட்டதற்காக மகிழ்கிறேன். பெரிய தவறுகளைச் செய்ததற்காக மகிழ்கிறேன். அமைதியில் புகுவதற்காக மகிழ்கிறேன். யாரையும் நான் பந்தப்பட்டவராக விட்டுப்போகவில்லை. பந்தம் எதையும் நான் ஏற்றுச்செல்லவும் இல்லை. இந்த உடல் வீழ்ந்து என்னை விடுவிக்குமோ அல்லது இந்த உடலிலேயே நான் முக்தியினுள் பிரவேசிப்பேனோ, எப்படியானாலும் சரி, பழையவன் போய்விட்டான், என்றென்றைக்குமாகப் போய்விட்டான். ஒருபோதும் வராதவாறு போய் விட்டான். வழிகாட்டி, குரு, தலைவன், ஆசாரியன் காலமாகிவிட்டான், சிறுவன், மாணவன், ஏவலன், எஞ்சியுள்ளான்.
நோக்கம் எதுவுமின்றி நான் மிதந்து சென்ற நேரங்களே என் வாழ்க்கையின் மிக இனிமையான காலங்கள். மீண்டும் நான் மிதந்து கொண்டிருக்கிறேன். மேலே ஒளி வீசுகின்ற வெப்பக் கதிரவன், சுற்றிலும் கூட்டம் கூட்டமாகப் பயிர் பச்சைகள். இந்த வெப்பத்தில் எல்லாம் அசைவற்றிருக்கின்றன. அமைதியில் திளைத்திருக்கின்றன. நான் மந்த கதியில் மிதந்து கொண்டிருக்கிறேன். நதியின் கதகதப்பான மார்பின் மீது மிதந்து கொண்டிருக்கிறேன். என் கைகளாலோ கால்களாலோ நீரைத் துழாவ நான் துணியவில்லை. அந்த அற்புதமான அமைதி நிலையை, அது ஒரு மாயத்தோற்றம் என்று நம்மை நிச்சயமாக உணர வைக்கின்ற அந்த அமைதி நிலையைக் கெடுத்து விடுவேனே என்ற அச்சம் தான் அதற்கு காரணம்.
என் பணிக்குப் பின்னால் ஆசை இருந்தது. என் அன்பிற்குப் பின்னால் ஆளுமை இருந்தது. என் தூய்மைக்குப் பின்னால் பயம் இருந்தது.நான் வழி காட்டியதன் பின்னால் அதிகார வேட்கை இருந்தது. இப்போது அவை மறைகின்றன. நான் மிதந்து கொண்டிருக்கிறேன். நான் வருகிறேன். அம்மா, நான் வருகிறேன். உன் கதகதப்பான மார்பில், நீ என்னை எங்கு எடுத்துச்சென்றாலும், அங்கு மிதந்த வண்ணம் ஒலியிலா அந்த அற்புதப் பிரதேசத்தில், ஒரு சாட்சியாக, ஒரு போதும் நடிகனாக அல்லாமல், நான் வருகிறேன்.
ஓ, எல்லாம் அமைதியில் ஆழ்ந்துள்ளது. என் எண்ணங்கள் இதயத்தின் ஆழங்களில் எங்கோ தொலை தூரத்திலிருந்து வருவனபோலுள்ளன, ஏதோ மெல்லிய, தூரத்த முணு முணுப்புகள் போல் ஒலிக்கின்றன. அனைத்திலும் அமைதி தவழ்கிறது. இனிமையான, மிக இனிமையான அமைதி அது- உறக்கத்தில் ஆழ்வதற்குச் சற்று முன்னதாக ஒரு சில கணங்கள் உணர்கிறோமே அப்படிப்பட்ட அமைதி. அங்கே எல்லாம் நிழல்கள் போல் காணப்படுகின்றன. உணரப் படுகின்றன. அங்கே அச்சமில்லை. அன்பு இல்லை, உணர்ச்சியின் எழுச்சி இல்லை. சிலைகளும் சித்திரங்களும் சூழ இருக்கும்போது, அந்த த் தனிமையில் ஒருவன் உணர்கின்ற அந்த அமைதி அது. நான் வருகிறேன். பிரபோ நான் வருகிறேன்!
உலகம் உள்ளது, அது அழகாகவும் இல்லை, அழகற்றும் இல்லை. உணர்ச்சிகள் எதையும் எழுப்பாத அதிர்வுகளாக உள்ளது. ஓ, ஜோ, அதன் இன்பத்தை என்னென்பேன்! எல்லாம் நல்லவை, எல்லாம் அழகானவை,ஏனெனில் என்னைப் பொறுத்தவரை பொருட்கள் தங்கள் சார்புப் பரிமாணங்களை இழந்து வருகின்றன. அதில் முதன் முதலாக என் உடம்பின் பரிமாணமே விலகத் தொடங்கிவிட்டது. ஓம் தத் ஸத்!
.....
இதயத்தை எதிர்த்து இழுக்க
.........................
அலமேடாவிலிருந்து சிகாகோ செல்வது சுவாமிஜியின் திட்டமாக இருந்தது. இருப்பினும் அஸ்பினால் தம்பதிகளின் அழைப்பை ஏற்று அருகிலுள்ளகேம்ப் இர்விங் என்ற இடத்திற்குச் செல்ல எண்ணினார் அவர். ஹேன்ஸ்ப்ரோ, வழியில் சாஸலித்தோ என்ற இடம் வரை சென்று, அங்கே சுவாமிஜியை வழியனுப்பிவிட்டு, லாஸ் ஏஞ்ஜல்ஸ் சென்று மகளைக் காண விரும்பினார். ஆனால் அவர் தம்முடன் வர வேண்டும் என்று சுவாமிஜி விரும்பியதால் அவரும் உடன் சென்றார்.அலமேடாவிலிருந்து முதலில் ஒரு ரயிலில் சென்று, பிறகு படகில் சான் பிரான்சிஸ்கோ ஏரியைக் கடந்து, மீண்டும் படகில் சாஸலித்தோ வரை சென்று அங்கிருந்து மீண்டும் ரயிலில் கேம்பை அடைய வேண்டும்.
ஹேன்ஸ்ப்ரோ மற்றும் ஓரிருவருடன் உண்மை இல்லறத்திலிருந்து கிளம்பினார் சுவாமிஜி. கால தாமதம் காரணமாக முதல் ரயிலை தவற விட்டனர். சற்று தூரம் சென்றால் மற்றொரு ரயில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டதும் அனைவருமாக அங்கே சென்றனர். அவர்கள் செல்லும் போது அந்த ரயில் புறப்படத் தொடங்கியிருந்தது. சற்று நிறுத்துமாறு நடத்துனரை நோக்கிக் கத்தினார் ஹேன்ஸ்ப்ரோ, நீங்கள் ஓடி வந்தால் ரயிலைப் பிடித்துவிடலாம். என்று திரும்பிக் கத்தினார் நடத்துனர். அவர்களுக்கும் ரயிலுக்கும் சில அடி தூமே இருந்தது. ஓடினால் பிடித்து விடலாம், ஹேன்ஸ்ப்ரோ சுவாமிஜியைப் பார்த்தார். நடந்து கொண்டிருந்த சுவாமிஜி அசையாமல் நின்று கொண்டு, நான் ஓட மாட்டேன்” என்று கூறிவிட்டார். அடுத்தரயில் மாலையில் தான். எனவே அனைவரும் உண்மை இல்லத்திற்குத் திரும்பினர்.
தாம் கேம்ப் இர்விங்கிற்குச் செல்ல விரும்பாததுபற்றி சுவாமிஜியிடம் விவாதித்தது தான் தாமதத்திற்கான காரணம் என்பது ஹேன்ஸ்ப்ரோவிற்குத் தெரியும். அதே வேளையில் சுவாமிஜி ஓடியிருந்தால் ரயிலைப் பிடித்திருக்கலாம் என்பதும் உண்மை. இரண்டையும் தொட விரும்பாத ஹேன்ஸ்ப்ரோ, நாம் சென்ற காரின் எஞ்ஜின்சரியில்லை. தாமதமானதால் தான் ரயிலைத் தவறவிட நேர்ந்தது” என்றார். உடனே சுவாமிஜி ஹேன்ஸ்ப்ரோவை நோக்கித் திரும்பி, இது அது எதுவும் காரணமல்ல, உன் இதயம் லாஸ் ஏஞ்ஜல்ஸில் இருந்ததால் தான் நாம் போக முடியவில்லை. இதயத்தை எதிர்த்து இழுக்க இந்த உலகில் எந்த இஞ்ஜினும் இல்லை. ஒரு வேலை செய்யும்போது அதில் முழு இதயத்தையும் ஈடுபடுத்தி வேலை செய். உன்னை எதுவும் தடுக்க முடியாது” என்றார். என் வாழ்நாளில் மறக்க முடியாத உபதேசம் அது. இன்றும் அது என் மனத்தில் பசுமையாக உள்ளது” என்று பின்னாளில் கூறினார் ஹேன்ஸ்ப்ரோ.
இந்தக் குழப்பம் முடிவதற்குள் ஹேன்ஸ்ப்ரோவின் பெட்டி தவறியிருப்பது தெரிய வந்தது. ஏற்கனவே சென்ற ஆஸ்பினால் தம்பதிகள் அதைக் கொண்டு சென்று விட்டிருந்தனர். ரயிலைத்தவறவிட்ட அந்த இடைவெளியில்ஹேன்ஸ்ப்ரோவின் மனத்தில், இதுவும் நல்லது தான். நான் இனி லாஸ் எஞ்ஜல்ஸிற்குப் போகலாம்”என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் இப்போது பெட்டி ஏற்கனவேகேம்ப் இர்விங்கை அடைந்துவிட்டது தெரிந்த போது சுவாமிஜி, ஆச்சரியம்! நீயோ கேம்பிற்குப் போகாமல் இருக்க உன்னால் இயன்ற அளவு முயற்சி செய்கிறாள். ஆனால் தேவியோ உன்னை அங்கே இழுக்கிறாள்” என்றார். எப்படியோ, உண்மை இல்லத்திற்குத்திரும்பிய அவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகே கேம்பிற்குச் சென்றனர்.
இரண்டு பெரிய தொலை நோக்கிகளையும் அவர்கள் கொண்டு சென்றனர். ரூர்பாக் அவற்றைச் சுமந்து சென்றார். அதற்கு அவர் மிகவும் சிரமப்படுவதைக் கண்ட சுவாமிஜி ” வெறும் உருளைக் கிழங்கும் கீரையும் சாப்பிட்டால் இப்படித்தான் திணற வேண்டியிருக்கும்” என்றார்.
சாஸலித்தோவிலிருந்து அழகிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த பகுதி வழியாக ரயில் சென்றது. காட்சிகளை ரசிப்பதற்காகவே ஜன்னல் ஓரமான இருக்கையைத்தேர்ந்தெடுத்தார் சுவாமிஜி. ஓய்வாக உட்கார்ந்தபடி, நான் நானாக இருப்பதை உணர ஆரம்பிக்கிறேன்” என்றார்.
கேம்ப் இர்விங் ஓர் அழகிய இடம். குற்றுச்செடிகள். புதர் மண்டிய பகுதிகள், அழகியநீரோடைகள் என்று அந்தப் பகுதி வன வாழ்க்கையை நினைவூட்டியது.அங்கே அவர்கள் கூடாரங்களில் தங்கினார். முதல் நாள் இரவே அங்கு ஒரு மரத்தடியில் சுவாமிஜி தீ வளர்த்தார். எல்லோரும் அதைச் சுற்றி அமர்ந்தனர். மிக அமைதியான இரவு அது. சுவாமிஜி பாடினார். சுகரையும் வியாசரையும் பற்றிய கதைகள் சொன்னார். பிறகு, ஆழ்ந்த ஓர் அமைதி நிலையிலிருந்து பேசினார்.
இந்தியக் காடுகளில் வாழ்கின்ற யோகிகளாக உங்களை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பட்டணங்களையும் மற்ற அனைத்தையும் மறந்து விடுங்கள். கடவுளை மட்டுமே நினையுங்கள். அவரை மட்டுமே காணுங்கள். இதோ பாய்கிறதே நீரோடை. இது தான் கங்கை. இதோ வளர்கின்ற தீ, இதுதான் புனித அக்கினி.
அதன் பிறகு எப்படி ஜபம் செய்வது, எப்படி தியானம் செய்வது என்பதைக் கற்பித்தார் சுவாமிஜி. பிறகு மெல்லிய குரலில், ஹர, ஹர, வ்யோம், வ்யோம், ஹர, ஹர வ்யோம், வ்யோம் என்று ஓதினார். அந்த நாதம் எங்கள் மனங்களையெல்லாம் விழித்தெழச் செய்தது. எங்கள் நினைவிலிருந்து உலகம் மறைந்தது. ஆன்மாவோ, இது வரை அறிந்திராத வெளிகளில் சிறகடித்துப் பறந்தது” என்று எழுதுகிறார் அங்கே சுவாமிஜியுடன் இருந்த ஒருவர்.
அதன் பிறகு அனைவரையும் தியானம் செய்யும் படி கூறிய சுவாமிஜி, நீங்கள் விரும்புகின்ற எதைவேண்டுமானாலும் தியானிக்கலாம். நான் ஒரு சிங்கத்தின் இதயத்தைத் தியானிக்கப்போகிறேன். அது சக்தியைத் தரும்” என்றார்.
சிலவேளைகளில் ” உறுதி” பயமின்மை” போன்ற கருத்துக்களை கூறி, அவற்றைத் தியானம் செய்யுமாறு கூறுவார்.
அது ஒரு மறக்க முடியாத இரவு. காட்டில் நிலவிய ஆழ்ந்த அமைதி. கொழுந்து விட்டெரியும் அக்கினியின் அழகு. அனைத்தையும் விட அந்தச் சூழ்நிலைக்கே உயிருணர்வு ஊட்டியபடி கம்பீரமாக அமர்ந்திருந்த சுவாமிஜி! அவரது பொலிவே விளக்க இயலாததாக இருந்தது” என்று எழுதுகிறார் மற்றொருவர்.
......
துப்பாக்கியால் சுடுதல்
...............................................
ஒரு நாள் சுவாமிஜி வெளியில் நடக்கச் சென்றிருந்தார். அழகிய நீரோடையின் கரை வழியாகச் சென்று கொண்டிருந்தார். வழியில் பாலம் ஒன்று குறுக்கிட்டது. அங்கே சில இளைஞர்கள் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பழகிக் கொண்டிருந்தனர். நீரோடையில் மிதக்க விடப்பட்ட முட்டை ஓடுகள் அவர்களது குறியாக இருந்தன. அவற்றை ஒரு நூலில் கோர்த்து கல் ஒள்றில் கட்டி வைத்திருந்தனர். நீரின் விரைவிற்கு ஏற்ப மேலும் கீழுமாக அசைந்த முட்டை ஓடுகளைச் சுடவேண்டும். அதுவே நோக்கம். ஆனால் யாரும் அதில் வெற்றி பெறவில்லை. சுவாமிஜி சிறிது நேரம் அவர்களது முயற்சியைப் பார்த்தார், அவர்களது தோல்வியைக் கண்டு சிரித்தார். இதைக் கண்ட அந்த இளைஞர்களில் ஒருவன் அவரை அணுகி, நீங்கள் நினைப்பது போல் இது அவ்வளவு சாமானிய காரியம் அல்ல. முயன்று பாருங்கள். உங்களுக்கே புரியும் ” என்றான். சவாமிஜி துப்பாக்கியைக்கையில் எடுத்தார். வரிசையாக சுமார் ஒரு டஜன் ஒடுகளைச் சுட்டுத் தள்ளினார். இளைஞர்களால் வியப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. நீங்கள் துப்பாக்கிசுடுவதில் நல்ல பயிற்சி உள்ளவராக இருக்க வேண்டும் சரிதானே! என்று கேட்டார்கள் அந்த இளைஞர்கள்! அதற்கு சுவாமிஜி மௌனமாகப் புன்முறுவல் செய்தபடி, நண்பர்களே, என் வாழ்நாளில் இன்றுதான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன்! என்றார். அந்த இளைஞர்களால் நம்பவே முடியவில்லை. சுவாமிஜி விளக்கினார், எல்லாம் மன ஒருமைப் பாட்டில் தான் இருக்கிறது. மன ஒருமைப்பாட்டுடன் செய்கின்ற எதுவும் வெற்றியைத் தருகிறது.
.....
கேம்ப் இர்விங்- வாழ்க்கை முறை
...................
கேம்ப் இர்விங் வாழ்க்கை ஏறக்குறைய கேம்ப் பெர்சி, ஆயிரம் தீவுப் பூங்கா போன்ற இடங்களின் வாழ்க்கைமுறையைப் போன்றதாகவே இருந்தது. சூரிய உதயமாகின்ற ஐந்து மணிக்கு சுவாமிஜி எழுந்து விடுவார். மெல்லிய குரலில், ஏகம் ஸ்த் விப்ரா பஹுதா வதந்தி”. போன்ற மந்திரங்களை ஒதுவார். கூடாரத்தின் அருகில் நிற்பவர்களுக்கு அந்த வேத நாதம் இனிமையாகக்கேட்கும். அருகில் ஓடிய நீரோடையில் மற்றவர்கள் குளிப்பார்கள். குளிர் அதிகம் என்பதற்காக சுவாமிஜி அதில் குளிப்பதில்லை. காலை எட்டு மணியளவில் காலை உணவை முடிப்பார். பத்து மணிக்கு கூட்டு தியானம் நடைபெறும். திறந்த வெளியிலும் மரத்தடியிலும் அவர்கள் தியானம் செய்வார்கள்.
சிலவேளைகளில் சுவாமிஜி சமைப்பார். மசாலாவை அவரே அரைப்பார். அவர் அரைப்பது மிகவும் மென்மையாக இருக்கும். சமையலில் வழக்கம்போலவே காரம் தூக்கலாக இருக்கும். அந்தக்காரமே மற்றவர்களுக்குச் சாப்பிட சிரமமாக இருக்கும். சுவாமிஜியோ பக்கத்தில் தனியாகக்கொஞ்சம் மிளகுகளை வைத்துக் கொள்வார். ஒரு மிளகைக் கையில் எடுத்து,கையில் சுழற்றி மேலே எறிந்து, ஓர் உல்லாச இளைஞனைப்போல் வாயால் கௌவிச் சாப்பிடுவார். ஒருநாள் ஆன்சலிடம் மிளகு ஒன்றைக்கொடுத்து , இதைச் சாப்பிடு, இது உனக்கு நல்லது செய்யும்” என்றார். சுவாமிஜி தருவதானால்விஷத்தைச் சாப்பிடவும் நாங்கள் தயாராகவும் இருந்தோம். எனவே அவர் தந்ததை அப்படியே சாப்பிட்டேன். அவ்வளவு தான் காரத்தைத் தாங்காமல் நான் பட்ட அவஸ்தையைப் பார்த்து உரக்கச் சிரித்தார் அவர். அது மட்டுமல்ல, பிறகும் என்னைக் காணும்போதெல்லாம் என்ன, இன்னும் அடுப்பு எரிகிறதா? என்று கேட்டுச் சிரிப்பார்.
ஒரு நாள் ஆன்சல், மிஸ் பெல்லிற்காகக் கற்கண்டு பானகம் தயாரித்துக்கொண்டிருந்தார். கற்கண்டுத் துண்டுகளை உருகவைத்து அதனை நன்றாகக் கிளறி விட்டுக் கொண்டிருந்தார் ஆன்சல். சுவாமிஜி அருகில் நின்று கவனித்தபடியே, நன்றாகக்கொதிக்கவிடு. சர்க்கரையைக் கொதிக்க வைக்கின்ற அளவிற்கு வெண்ணிறமாகும். அந்த அளவிற்கு அதன் அழுக்குவிலகும்” என்றார்.
சுவாமிஜி கடுகு சேர்த்து ஒரு பானகம் தயாரிப்பார். மாலை வேளைகளில் சப்பாத்தி செய்வார். இதற்காக நீரோடையின் கரையிலேயே அவர் ஒரு நிலக்கரி அடுப்பை உருவாக்குவார். அந்தத் தண்ணீரிலேயே மாவைப்பிசைந்து, தட்டி, அடுப்பில் சுட்டுக்கொடுப்பார். தண்ணீர் வேண்டியிருந்தால் ஒரு கரண்டியில் நேராகவே நீரோடையிலிருந்து எடுத்துக்கொள்வார்.
சுவாமிஜி நிலக்கரி அடுப்பைத்தயார் செய்வதிலும் ஒரு நேர்த்தி இருந்தது. ஒரு நாள் ரூர்பாக் அடுப்பைத் தயார் செய்தார். நிறைய கரி வைத்ததில் அது மிகவும் பெரியதாகி விட்டது. சுவாமிஜி வந்து பார்த்துவிட்டு, அடேயப்பா! இது சப்பாத்திக்காகச்செய்யப்பட்ட அடுப்புபோல் தோன்றவில்லை. இதில் இருக்கிற விறகையும் கரியையும் வைத்து ஒரு சிதையையே தயாரித்து விடலாம்” என்றுகூறி அதனைக் கலைத்து விட்டு , தாமே சிறியதாக ஒன்றைத் தயார் செய்தார்.
பொதுவாக பெண்களே சமையல் செய்தனர். சில வேளைகளில் சுவாமிஜி அவர்களின் சமையலைக் கற்றுக்கொள்வார்” அவர் எங்களைப் பொறுத்த வரையில் எங்களுக்கு ஒரு குழந்தையாகவே இருந்தார். அவருக்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருந்தோம். அவரது ஆரோக்கியத்தை நாங்கள் அனைவருமே கவனித்துக் கொண்டோம்” என்கிறார் மிசஸ் ரூர்பாக்.
ஒரு முறை சுவாமிஜிக்கு உடல் நிலை சரியில்லை. சுவாமிஜி ஒரு குழந்தைபோல். ”நான் ஓர் ஈயை விழுங்கி யிருப்பேன் என்று தோன்றுகிறது. அதனால் தான் உடல் நிலை சரியில்லை” என்றார். அனைவரும் வயிறு வலிக்கச் சிரித்தனர்.
மாலை வேளைகளில் பலரும் நடக்கச்செல்வதுண்டு.பொதுவாக சுவாமிஜி அமைதியாக கூடாரத்திலேயே இருப்பார். மிசஸ் ரூர்பாக் எழுதுகிறார், நாங்கள் செல்லும் வழியில் விறகு வெட்டிகள் பலர் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அவ்வளவு நல்லவர்கள் அல்ல. அந்த வழியாக நான் நடந்து செல்வேன். கடைக்குச்செல்லும் வழியிலோ பாம்புகள் ஏராளம்.ஆனால் எதுவும் எனக்கு பயத்தைத் தந்ததில்லை. தெய்வ மனிதர் ஒருவரின் சன்னதியில் நான் இருக்கிறேன் என்ற எண்ணம் எப்போதும் என்னுள் இருந்தது. அது எனக்கு ஆற்றலைத் தந்தது.
.....
சுவாமிஜி பயந்தார்!
.......................................
இந்தக் கூடாரங்களில் என்ன நடைபெறுகிறது. இங்கு யார் தங்குகிறார்கள் என்றெல்லாம் அந்த இடத்திற்கு அருகில் உள்ளவர்களுக்கு ஆர்வம் எழுவது இயல்பு தான். சில வேளைகளில் அவர்களில் சிலர் எள்ளே வந்து எட்டிப் பார்ப்பதுண்டு. ஒருநாள் ஒரு பெண் இப்படித்தான் உள்ளே வந்தார். சுவாமிஜி அவனை ஒரு பார்வை பார்த்தார்.அவளில் என்ன கண்டாரோ! ஒரு பேயைப் பார்த்து நடுங்குவது போல் அதிர்ச்சியுடன் கூடாரத்திற்குள் சென்று அமர்ந்துவிட்டார். ஒரு நாள் தியானத்திற்காக தரத்தடிகளை நோக்கி அனைவரும் சென்று கொண்டிருந்தனர். வழியில் சீப்பு ஒன்று கிடந்தது. சுவாமிஜி அதைக் கையில் எடுத்து, இது உங்களில் யாருடையதாவதா? என்று கேட்டார். அவர்கள், இல்லை, என்றதும் ஏதோ தீயைத் தொட்டவர்போல் அதனைத் தூக்கி எறிந்து விட்டார்.
ஒரு நாள் தியானத்திற்குப் பிறகு மிஸ் பெல் சுவாமிஜியிடம் கூறினார்.
பெல்- சுவாமிஜி, இந்த உலகம் ஒரு பழைய பள்ளி என்று எனக்குத்தோன்றுகிறது. இங்கு நாம் அனைவரும் பாடங்கள் படிக்க வந்திருக்கிறோம்.
சுவாமிஜி-
அப்படி யார் சொன்னது? எனக்கு அப்படித்தோன்றவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்த உலகம் ஒரு சர்க்கஸ் கூடாரம். நாம் அனைவரும் கோமாளிகள், கூத்தாடுகிறோம். விழுகிறோம்.
பெல்-
ஏன் விழுகிறோம்?
சுவாமிஜி-
ஏனெனில் விழுவதை நாம் விரும்புகிறோம். விழுவதில் களைப்பு ஏற்படும் போது விடைபெறுகிறோம்.
சுவாமிஜியின் சான் பிரான்சிஸ்கோ சொற்பொழிவுகளில் இத்தகைய ஒரு மன நிலையைக் காண முடியும். இந்த பிரபஞ்சமே ஒரு மாபெரும் விளையாட்டு” விளையாட்டு.
எல்லாம் வல்ல இறைவன் விளையாடுகிறார். எல்லாம் விளையாட்டே. நீங்கள் விளையாடுகிறீர்கள். உலகங்களுடன் விளையாடுகிறீர்கள்................ எல்லாம் வேடிக்கை. வேறு எந்த நோக்கமும் இல்லை. தூக்கில் தொங்குவதற்காக நிற்பவன் நானே. எல்லா தீயவர்களும் நானே. நரகங்களில் வாட்டப்படுவனும் நானே. அதுவும் ஒரு விளையாட்டுத்தான். என்றெல்லாம் அவர் லட்சியம்” என்ற தமது சொற்பொழிவில் அவர் கூறுகிறார்.
சான்பிரான்சிஸ் கோவில்
.................................
கேம்ப் இர்விங்கில் இரண்டு வாரங்கள் தங்கிவிட்டு அங்கிருந்து மீண்டும் சான் பிரான்சிஸ் கோவிற்கு வந்தார் சுவாமிஜி. இங்கே ஹேன்ஸ்ப்ரோ விடை பெற்றுக் கொண்டார். சுவாமிஜிடாக்டர் லோகன் என்பவரின் வீட்டில் தங்கினார். மிக நல்லவரும் சுவாமிஜியிடம் அளவற்ற பக்தி கொண்டவருமான லோகன் அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார். ஆனால் அவரது மனைவி, சகோதரி மற்றும் குடும்பத்தினர் யாரும் சுவாமிஜியிடம் ஈடுபாடு காட்டவோ அவரது சொற்பொழிவுகளைக்கேட்கவோ செய்யவில்லை. அவர் அங்கே தங்குவதையே அவர்கள் விரும்பவில்லை எனலாம். அத்தகைய சூழ்நிலையிலும் சுவாமிஜி அங்கே தங்கியது லோகனின் பக்தி ஒன்றிற்காகவே. சுவாமிஜி எங்கள் வீட்டிலிருந்து சென்ற பிறகு வீடு வீடாகவே இல்லை.ஏ தோ எல்லா தெய்வங்களும் எங்களைக் கைவிட்டுவிட்டன போல் இருந்தது. எனக்கு அவர் ஏசுநாதரே என்று பின்னாளில் எழுதினார் லோகன்.
சுவாமிஜி அங்கிருந்த போது சான் பிரான்சிஸ்கோ வேதாந்த சங்கத்தின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் அவர் கீதை பற்றி பேசினார். இன்னும் ஓரிரு சொற்பொழிவுகளும் நடைபெற்றன. அவையும் கீதை மற்றும் கிருஷ்ணர் பற்றியவையாக இருந்தன. மே 30-ஆம் நாள் சுவாமிஜி அங்கிருந்து விடைபெற்றார். அத்துடன் சுவாமிஜியின் கலிபோர்னியா பயணம் நிறைவு க்குவந்தது.
ஜுன் இரண்டாம் நாள் சிகாகோ வந்த சுவாமிஜி நாலைந்து நாட்கள் அங்கே தங்கினார். தம் வாழ்வில் நீங்கா இடம் பெற்ற ஹேல் குடும்பத்தினரைச் சென்று கண்டார். காலை சிகாகோவிலிருந்து புறப்படும் நாள் காலை சுவாமிஜியின் அறைக்கு வந்தார் மேரி ஹேல்.சுவாமிஜி கவலையே வடிவானவராக அமர்ந்திருந்தார். அவரது படுக்கை கலையாமல் இருந்தது. காரணம் கேட்டபோது” இரவு முழுவதும் தூங்கவில்லை” என்றார். பிறகு மெல்லிய குரலில், ஓ, மனித உறவுகளைப் பிரிவது எவ்வளவு சிரமமாக உள்ளது” என்றார்.ஹேல் குடும்பத்தினரைப் பிரிய அவர் அவ்வளவு சிரமப் பட்டார். உனக்கும் சகோதரிகளுக்கும் அம்மாவிற்கும் ஆசிகள். அபஸ்வரங்கள் நிறைந்த, ஓசை மிகுந்த என் வாழ்வில் நீங்களே இன்னிசை நாதங்களாக இருந்து வந்துள்ளீர்கள் என்று ஒரு முறை மேரிக்கு அவர் எழுதினார்.
....
நியூயார்க்கில்
...................
சிகாகோவிலிருந்து ஜுன் 7- ஆம் நாள் நியூயார்க்கை அடைந்தார். வேதாந்த சங்கத்தில் தங்கினார். அங்கே ஏற்கனவே இருந்த துரியானந்தரும் அபேதானந்தரும் சுவாமிஜியைக் கண்டு மிகவும் மகிழ்ந்தனர். நிவேதிதையும் அங்கே இருந்தார். வேலைகளைப் பொறுத்தவரை அவ்வளவு திருப்திகரமாக இல்லை” நான் இங்கு வந்த போது சங்கம் ஏறக்குறைய சிதறிச் சின்னாபின்னமாகி விட்டிருந்தது- எல்லோரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் ஒட்ட வைக்க வேண்டியிருந்தது” என்று எழுதுகிறார் சுவாமிஜி. அவரது நண்பர்களில் பலர் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தனர்.சிலர் முற்றிலுமாகத் தொடர்பை விட்டிருந்தனர். பழைய நண்பர்களைக் காண்பதில் சுவாமிஜி மகிழ்ந்தார். சுவாமிஜி வந்திருப்பது பத்திரிகைகளில் பிரசுரிக் கப் பட்டன. சுவாமிஜி பல சொற்பொழிவுகள் செய்தார்.
.....
சொற்பொழிவுகள்
................
நான் வெறுமனே, பேசுகிறேன் என்று நினைக்கிறீர்களா?கேட்பவர்களுக்காக. அவர்கள் உணரத்தக்க ஒன்றை நான் கொடுக்கிறேன். அப்படி ஒன்றை நான் கொடுக்கிறேன் என்பதை அவர்களும் உணர்கிறார்கள்” என்று தமது சொற்பொழிவைப் பற்றி சுவாமிஜி ஒரு முறை கூறினார். தியான வேளையில் எப்படி ஆன்மீக சக்தி விழித்தெழுமோ அப்படி அவரது சொற்பொழிவுகளைக்கேட்டு கொண்டிருக்கும் போதும், ஆன்மீக சக்தி விழித்தெழுவதை நான் உணர்ந்திருக்கிறேன்” என்று ஒரு முறை அபேதானந்தர் கூறினார்.
ஒரு முறை சுவாமிஜியின் சொற்பொழிவிற்குப் பிறகு அபேதானந்தர் கேள்வி- பதில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த விரும்பினார். இதற்குப் பிறகு ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியா? என் சொற்பொழிவு ஏற்படுத்திய தாக்கத்தைக்கெடுக்க விரும்புகிறாயா? என்று கேட்டார் சுவாமிஜி. இதனை கூறிவிட்டு அபேதானந்தர், ஓ, உலகிற்காக சுவாமிஜியிடம் ஸ்ரீராமகிருஷ்ணர் எத்தகைய மாபெரும் ஆற்றலை விட்டுச் சென்றிருக்கிறார்! உலகின் சிந்தனைப் போக்கையே அவர் மாற்றிவிட்டார் என்றார்.
சுவாமிஜியின் கேள்வி- பதில் நிகழ்ச்சிகளில் சிலர் சிறந்த கேள்விகள் கேட்பார்கள். சிலரது கேள்வியே வளவளவென்று நீண்ட சொற்பொழிவு போல் இருக்கும். சுவாமிஜியிடமிருந்து கேட்பதைவிட, தாங்கள் சொல்வதிலேயே அவர்கள் கவனமாக இருப்பார்கள். ஆனால் சுவாமிஜி அதன் பிறகு ஓரிரு வார்த்தைகளிலேயே அவர்களை அடக்கி அமரச் செய்து விடுவார்.
இந்த நாட்களில் கலிபோர்னியாவில் சுமார் 160 ஏக்கர் கொண்ட தமது சொந்த இடத்தை மிஸ் மின்னி புக் என்பவர் வேதாந்த இயக்கத்திற்காக அளித்தார்.
அந்த இடத்தில் ஓர் ஆசிரமத்தை நிறுவி அதன் பொறுப்பை துரியானந்தர் வகிக்க வேண்டும் என்று சுவாமிஜி விரும்பினார். நீ அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தேவியின் திருவுளம்” என்றார் சுவாமிஜி. துரியானந்தர் மெள்ள சிரித்து விட்டு, தேவியின் திருவுள்ளம்? ஏன் , உங்கள் திருவுளம் என்று சொன்னாலே போதுமே! இந்த விஷயத்தில் தேவி தனது திருவுளத்தை உங்களிடம் சொன்னாளா? நீங்கள் கேட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, ஆம், அவள் சொன்னாள், நான் கேட்டேன். உனது நரம்புகளும் மிக மிக நுண்மை பெறுமானால் நீயும் தேவியின் வார்த்தைகளை நேரடியாகவே கேட்கலாம்” என்றார். ஏறக்குறைய ஓர் ஆண்டிற்கு முன்பு துரியானந்தர் மேலை நாட்டிற்கு வர மறுத்தபோது, தமது அன்பு ஒன்றினால் அவரை வசப் படுத்தியது போலவே இம்முறையும் அவரைச் சம்மதிக்கச்செய்தார் சுவாமிஜி.
புறப்படுமுன் துரியானந்தர் சுவாமிஜியிடம், எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்” என்று கேட்டார். சுவாமிஜி கூறினார். போ, கலிபோர்னியாவில் சென்று ஓர் ஆசிரமத்தை ஏற்படுத்து, ஆன்மீகக்கொடியை அங்கே பறக்கவிடு. இந்தக் கணத்திலிருந்து இந்தியா பற்றிய நினைவுகளைக் கூட உன் சிந்தனையிலிருந்து அழித்துவிடு! அனைத்திற்கும் மேலாக! வாழ்க்கையை வாழ், மற்றதை தேவி கவனித்துக் கொள்வாள், இது தான் ”சாந்தி ஆசிரமம்” என்று பின்னாளில் உருவாகியது.
ஜுலை 3-ஆம் நாள் நியூயார்க்கிலிருந்து டெட்ராய்ட் சென்றார் சுவாமிஜி. கிறிஸ்டைனையும் அவரது தாயாரையும் சந்திப்பது அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. அங்கே கிறிஸ்டைனின் வீட்டில் தங்கினார். ஏழைகளாக இருந்தாலும் அவர்கள் தங்களால் இயன்ற அளவு சுவாமிஜிக்கு வேண்டியவற்றைச்செய்தனர். அங்கே பொதுவாக ஓய்விலேயே தமது நாட்களைக் கழித்தார் சுவாமிஜி.
.....
உடற் சிறையில்
..................................
நெருங்கிய அன்பர்களுக்காக ஓரிரு கூட்டங்களில் கலந்து கொண்டார். சுவாமிஜி அங்கே அறிந்திருந்த மற்றொருவர் மேரி ஃப்ங்கே. சுவாமிஜி மிகவும் மெலிந்திருந்ததாகவும், உலகம் சாராத ஒரு மென்மை அவரிடம் மிளிரத் தொடங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அந்த மாபெரும் ஆன்மா இனிமேலும் உடற்சிறையில் நீண்ட நாட்கள் தங்காது என்று தோன்றியது. அது தான் உண்மை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் ஏதோ அசட்டு நம்பிக்கைகளில் எங்களைப் புதைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டோம்” என்று எழுதுகிறார் அவர். இங்கு சுவாமிஜி மூன்று நான்கு நாட்கள் தங்கினார். இங்கும் கிறிஸ்டைன் முதலானவர்களிடம் தமது அன்பு மழையைப்பொழிந்தார். அவர்களுக்குச் சமைத்தார். சாப்பிடச்செய்தார். பின்னர் மீண்டும் நியூயார்க் திரும்பினார்.
ராமகிருஷ்ண மிஷனின் சின்னம்
... நியூயார்க்கில் சுவாமிஜி வேதாந்த சங்கத்தின் கட்டிடத்திலேயே தங்கினார். சங்கத்திற்காக ஓர் அறிக்கை தயார் செய்த சுவாமிஜி அதில் சின்னம் ஒன்று வேண்டும் என்றுவிரும்பினார். அப்போது தான் வந்திருந்த கடிதத்தின் உறை ஒன்றைக் கிழித்து அதன் உட்பகுதியில் அவர் ஒரு சின்னத்தை வரைந்தார். பிறகு அதை அங்கிருந்த ஹென்றி வான் ஹாகன் என்பரிடம் கொடுத்து, அதனைத் தகுந்த அளவுகளில் வரையுமாறு கேட்டுக்கொண்டார். ஹாகன் வரைபடங்கள் வரைவதிலும், அச்சுக்கலையிலும் தேர்ச்சி பெற்றவர். சுவாமிஜியின் பிரம்மச்சாரி சீடர்களில் ஒருவர் அவர். அவர் தான் அந்தச் சின்னத்தை வரைந்து பூர்த்தி செய்தவர். அது தான் இன்று ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் சின்னமாக விளங்குகிறது.
அலைவீசும் தண்ணீர் கர்மத்தையும், தாமரைபக்தியையும், உதய சூரியன் ஞானத்தையும் சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பு யோகத்தையும் எழுப்பப்பட்ட குண்டலினி ஆற்றலையும் அன்னம் இறைவனையும் குறிக்கிறது. எனவே இந்தப் படத்தின் திரண்ட கருத்து, ஞானம்,கர்மம், பக்தி, யோகம் ஆகிய நான்கின் இணைப்பால் இறைக் காட்சியைப் பெறுவதாகும் என்று அந்தச் சின்னத்தை விளக்குகிறார் சுவாமிஜி.
......
சிவனின் பூதகணங்கள்
...................
ஒரு நாள் சுவாமிஜி நடப்பதற்காக வெளியில் சென்றார். தெருவில் அழுக்கான கோலத்தில் நின்றிருந்த ஏழைச்சிறுவன் ஒருவன் சுவாமிஜியிடம் எப்படியோ ஒட்டிக்கொண்டான். சுவாமிஜியும் மிகுந்த பாசத்துடன் அவனையும் அழைத்துக் கொண்டு வேதாந்த சங்கத்திற்கு வந்தார். வரும் வழியில் அவனைப்போன்ற மற்ற ஓரிரு சிறுவர்களும் சேர்ந்து கொள்ள, ஓர் ஏழைச் சிறுவர் பட்டாளத்துடன் சுவாமிஜி மடத்திற்குள் நுழைந்தார். அங்கு நின்றிருந்த கிறிஸ்டைன், இப்படிப்பட்டவர்களை எல்லாம் ஏன் இவர் கவர்கிறார்? என்று தமக்குள் நினைத்தார். அவர் நினைத்தது தான் தாமதம். பளிச்சென்று வந்தது சுவாமிஜியின் பதில். இதோ பார், இவர்கள் சிவபெருமானின் பூத கணங்கள்.
மற்றொரு முறை தெரு வழியாகச்சென்று கொண்டிருந்த இரண்டு ஏழைகளைப் பார்த்து, ஆ, இவர்கள் தோற்றுவிட்டார்கள். வாழ்க்கை இவர்களை வென்றுவிட்டது. என்று நெகிழ்ந்த குரலில் கூறினார்.
......
அமெரிக்காவிற்கு விடை
...............................
கலிபோர்னியாவில் பண்கள் நிறைவுற்றதும் அங்கிருந்து நேராக இந்தியாவிற்குத் திரும்பவே விரும்பினார் சவாமிஜி. ஆனால் லெக்கட் தம்பதிகள், மெக்லவுட், சாரா, நிவேதிதை போன்றோர் ஏற்கனவே பாரிஸ் சென்றிருந்தனர். உடல் நலமற்றிருந்த மிசஸ் லெக்கட்டிற்கு அங்குதான் சிகிச்சை நடைபெற்றது. அவர்கள் மிகவும் வற்புறுத்திக்கேட்டுக்கொண்டதன்பேரில் பாரிஸ் செல்ல இசைந்தார் அவர்.
இவ்வாறு சுவாமிஜியின் அமெரிக்க நாட்கள் நிறைவிற்கு வந்தன. 1900ஜுலை 26-ஆம் நாள் நியூயார்க்கிலிருந்து அவர் புறப்பட்டார்.
.........................
உலக அரங்கிற்கு விடை
...................................................
பாரிஸ் உலகக் கண்காட்சி
.....................................
நவீன நாகரீகத்தின் தலைநகரும், ஆடம்பரம், வேடிக்கை, வினோதம், சுகபோகம் ஆகியவற்றின் சொர்க்கமும், கலை மற்றும் விஞ்ஞானிகளின் மையமும் ஆகிய இடம் பாரிஸ்.அங்கே அமெரிக்கா முதலான பல நாடுகளும் பங்கேற்கின்ற உலகக் கண்காட்சி ஒன்று நடைபெற இரந்தது. 549 ஏக்கர் மைதானத்தில் அது நடைபெற்றது. விஞ்ஞானம், மதம் என்று பல துறைகளும் அதில் பங்கு பெற்றன. இந்திய விஞ்ஞானியான டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸும் அதில் ஒரு கட்டுரை வாசிக்க இருந்தார். சிகாகோ போலவே அங்கும் சர்வமத மகாசபை ஒன்று ஏற்பாடு செய்யவே முதலில் அமைப் பாளர்கள் விரும்பினர். ஆனால் சிகாகோ போல் கீழை நாட்டு மதக் கருத்துக்கள் ஓங்கி, கிறிஸ்தவ மதத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என்று பயந்த ரோமன் கத்தோலிக்கர்கள் அதனை எதிர்த்தனர். எனவே மதங்களின் வரலாறு பற்றிய ஒரு மாநாடு நடத்த முடிவு செய்தனர்.
1900 ஜுலை 26- ஆம் நாள் நியூயார்க்கிலிருந்து கப்பலில் புறப்பட்ட சுவாமிஜி ஆகஸ்ட் 3-ஆம் நாள் வெள்ளியன்று பாரிசை அடைந்தார். சுவாமிஜி பிரான்ஸிற்கு வருவது இது நான்காவது முறையாகும். 1895-இல் ஒரு முறை, 1896- இல் இரு முறை அவர் ஏற்கனவே வந்திருந்தார். ஆனால் அந்த மூன்று முறையுமாகச்சேர்த்து மொத்தம் நான்கு மாதங்களுக்கும் குறைவாகவே தங்கியிருப்பார். ஆனால் இந்த முறை தொடர்ந்து 83- நாட்கள் தங்கினார்.
ஆரம்பத்தில் லெக்கட் தம்பதியினருடனும் வேறு இடங்களிலும் தங்கிய சுவாமிஜி செப்டம்பர் மாதத்தில் ஜுல் போயி என்ற பிரெஞ்சு க் காரருடன் தங்க ஆரம்பித்தார். இடையில் இரண்டு முறை பிரிட்டனிக்குச் சென்று அங்கே தங்கியிருந்த சாராவைச் சந்தித்து வந்தார். ஜுலுக்கு ஆங்கிலம் தெரியாது. சுவாமிஜி ஓரளவு பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்தார். சுமார் 8 வருடங்களுக்கு முன்பு போர் பந்தரில் அவர் சிறிது பிரெஞ்சு கற்றுக் கொண்டதும் அதிலேயே தமது சகோதரத் துறவிகளுக்குக் கடிதம் எழுதியதும் நினைவிருக்கலாம்.பின்னர் சிகாகோவில் இருக்கும் போதும் ஒரு முறை அவர் பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்தார். 1900 செப்டம்பர் 15- ஆம் நாள் அவர் கிறிஸ்டைனுக்கு ”விரைவின்பிப்ஆபசினால் என்னால் பிரெஞ்சு மொழியைப் புரிந்து கொள்ள முடிகிறது” என்று எழுதினார். ஆகஸ்ட் 24-ஆம் நாள் அவர், இந்து மதமும் தத்துவமும்” என்ற சொற்பொழிவு ஆற்றினார். ஆனால் அது ஆங்கிலத்திலா பிரெஞ்சிலா என்பது தெரியவில்லை.
செப்டம்பர் 29-ஆம் நாள் மத்தியக் காலங்களில் மிகவும் பிரபலமாக இருந்த கிறிஸ்தவ மடம் ஒன்றைச்சென்று கண்டார் சுவாமிஜி. அவருடன் சாரா, மெக்லவுட்,ஜுல் போயி ஆகியோர் சென்றனர். அருகில் குற்றவாளிகளை அடைத்து வைப்பதற்கான இருள் குகைகள் இருந்தன. அதனைப் பார்த்துவிட்டு சுவாமிஜி, ஆ, தியானத்திற்கு எவ்வளவு உகந்த இடம்! என்று கூறினாராம்.
எந்திரத் துப்பாக்கியைக் கண்டு பிடித்தவர் ஹிராம் மாக்ஸிம். அதே வேளையில் அதற்காக வருத்தப் பட்ட வரும்கூட, நான் வேறு எதையும் கண்டு பிடிக்கவில்லையா என்ன? இந்த அழிவுச்சாதனத்தை மட்டுமே என்னுடன் தொடர்பு படுத்துகிறார்களே! என்று அவர் வருத்தப் பட்டதுண்டு. உண்மையில் அவர் வேறு பலவற்றையும் கண்டு பிடித்தார். எடிசன் மின்சார பல்பைக் கண்டு பிடித்த அதே வேளையில்இவரும் கண்டு பிடித்தார்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக எடிசன் முந்திக்கொண்டு, அதனை அரசாங்கத்தில் பதிவு செய்துவிட்டார்.பறக்கும் எந்திரம ஒன்றையும் 1894- இல் இவர் கண்டு பிடித்தார். இவர் சுவாமிஜியிடம் மிகுந்த ஈடுபாடு உடையவர். அவரது சிகாகோ சொற்பொழிவைக்கேட்டவர். பாரிஸில் இவரைச் சந்தித்தார் சுவாமிஜி. இவர்பல்வேறு வகைத் துப்பாக்கிகளை விக்கர்ஸ் என்பவருடன் கண்காட்சியில் வைத்திருந்தார். வேறு ஓரிரு நண்பர்களையும் சுவாமிஜி சந்தித்தார். பாரிஸின் தலை சிறந்த ஓவியர்கள், சிற்பிகள் போன்றோரையும் சந்தித்தார்.
......
கண்காட்சியில்
..................
உலக க் கண்காட்சியைப் பல முறை பார்த்தார் சுவாமிஜி. மின்சாரத்தின் மாயா ஜாலங்கள், அப்போது தான் கண்டு பிடிக்கப் பட்டிருந்த எக்ஸ்-ரே போன்றவை மக்களைமிகவும் கவர்ந்தன. பௌதீக இயல்பகுதி சுவாமிஜியை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் அங்கு தான் டாக்டர் போஸ் தமது கட்டுரைகளைப் படித்தார். ஓர் இந்தியரின் வெற்றியில் மிகவும் மகிழ்ந்தார் சுவாமிஜி. அந்த இளம் பௌதீக இயல் விஞ்ஞானி, தனி மனிதனாக மின்னல் வேகத்தில் வந்து தனது அறிவாற்றல் மூலம் மேலை நாட்டு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். மின்சாரம் பாய்ச்சியது போன்ற இந்தச்செயல் அரைப் பிணமாகக் கிடந்த நமது தாயகத்திற்குப் புத்துயிர் அளித்தது! பௌதீகத் துறை விஞ்ஞானிகளுள் தலை சிறந்து விளங்குபவர் ஜகதீஷ் சந்திரபோஸ். அவர் ஓர் இந்தியர். ஒரு வங்காளி! நற்செயல் புரிந்தீர். வீரரே! டாக்டர் போஸும், அவரது லட்சிய மனைவியும் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கெல்லாம் இந்தியாவில் புகழைப் பரப்புகின்றனர். நற்பேறு பெற்ற தம்பதியர் என்று எழுதுகிறார் சுவாமிஜி.
சுவாமிஜி கண்காட்சியின் புற அழகுகள் எதிலும் பெரிதாக ஈடுபட வில்லை. அவரை ப் பொறுத்தவரை இந்த நாட்களில் தியானம் நன்றாகக் கைகூடியதாக எழுதுகிறார். எல்லாம் தேவியின் திருவுளம். எதைச்செய்ய வேண்டும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.அவள் எதையும் பேச மாட்டாள். மௌனமாக இருந்து விடுகிறாள்” ஒரு மாத காலமாக எனது ஜபமும் தியானமும் மிக நன்றாக நடந்து வருகிறது.
......
எம்மா கால்வே
.................
சுவாமிஜியின் இந்தப் பயணத்தில் பிரபல பாடகியான எம்மா கால்வே கலந்து கொண்டார். கால்வே சுவாமிஜியைக் கிறிஸ்தவ முறைப்படி ஃபாதர் என்றே அழைத்தார். ஒருநாள் கால்வேயின் பாடல் நிகழ்ச்சிக்கும் மிஸ்டர் லெக்கட்டுடன் சென்று வந்தார் சுவாமிஜி. அன்றைய நிகழ்ச்சி தான் கால்வேயை உலகப் புகழ்பெற்ற பாடகி ஆக்கியது. நிகழ்ச்சி முடிந்தபிறகு சுவாமிஜி அவரை ஒப்பனை அறையில் கண்டு வாழ்த்தினார். மறுநாள் கால்வே சுவாமிஜி தங்கியிருந்த லெக்கட் தம்பதியினரின் வீட்டிற்கு வந்த போது அவர்களுக்காக பிரெஞ்சு தேசிய கீதத்தைப் பாடினார்.
உலகக் கண்காட்சியின் ஒரு பகுதியான சமய வரலாறு மாநாடு செப்டம்பர் 3 முதல் 8 வரை 6 நாட்கள் நடைபெற்றது. சுவாமிஜி செப்டம்பர் 7-ஆம் நாள் இரண்டு முறை அதில் பேசினார். முதற் சொற்பொழிவில் சிவ லிங்கம், சாளகிராமம், போன்றவை காமத்துடன் தொடர்புடைய சின்னங்கள் அல்ல என்பதை எடுத்துக் கூறினார். இரண்டாவது சொற்பொழிவில் இந்தியாவில் சமயக் கருத்துக்களின் பரிணாமம் பற்றி பேசினார். அவர் பிரெஞ்சு மொழியில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் என்ன மொழியில் பேசினார் என்பது தெரியவில்லை.
ஓவிய நுணுக்கம்
........................................
அந்தக் காலத்தில் பிரெஞ்சு ஓவியக் கலையில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஓவியர் ஒருவர், சுவாமிஜியின் வேதாந்தக் கருத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் தாம் வரைந்த ஓவியங்கள் இடம் பெற்ற நாடகத்திற்கு சுவாமிஜியைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். சுவாமிஜிக்கு பிரெஞ்சு மொழி தெரியும்.ஆதலால் அவர் நாடகத்தைக் கூர்ந்து கவனித்தார். நாடகத்தின் நடுவில் திரையில் தெரிந்த ஓர் ஓவியத்தில் ஒரு தவறு இருப்பதை சுவாமிஜி கண்டார். அது ஒரு தொழில் நுட்பத் தவறு. அந்தத் தவறு சரி செய்யப் பட்டிருந்தால், நாடகம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று சுவாமிஜி கருதினார்.
நாடகம் முடிந்தது. சிறப்பு விருந்தினராகியசுவாமிஜியிடம் நாடகம் பற்றிய கருத்தை அறிய அந்த ஓவியரும் அரங்கின் நிர்வாகியும் வந்தார்கள்.
அப்போது சுவாமிஜி தாம் நாடகத்தை மிகவும் ரசித்ததை அவர்களிடம் தெரிவித்தார். அதோடு, அவர் தாம் கண்ட தொழில் நுட்ப த் தவறையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். அதைக்கேட்டதும், பிரெஞ்சு நாட்டின் புகழ் பெற்ற அந்த ஓவியருக்கு ஒரே ஆச்சரியம்! ஏனென்றால் ஓவியக் கலையில் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே அந்தத் தவறைப் புரிந்து கொள்ள முடியும்! அந்த ஓவியர் சுவாமிஜி எடுத்துக் காட்டிய தவறையும், அவர் கூறிய பொருத்தமான திருத்தங்களையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.
பிரான்சிஸ் சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்டவர்களில் ஒருவர் ரிச்சலியு இளவரசர் . அவர் அப்போது சிறுவனாக இருந்தார். சுவாமிஜி அங்கிருந்து புறப்படத் தயாரானபோது ஒருநாள் அந்த இளவரசரிடம், நீங்கள் ஏன் உலகைத் துறக்கக் கூடாது? ஏன் என்னுடன் உங்கள் வாழ்க்கையைத் தொடரக் கூடாது? என்று கேட்டார். அதற்கு அந்த இளவரசர், சுவாமிஜி, உலகைத் துறப்பதால் எனக்குக் என்ன கிடைக்கும்? என்று கேட்டார். நீங்கள் அதனால் மரணத்தைநேசிக்க வல்லவர் ஆகலாம்” என்றார் சுவாமிஜி. இளவரசருக்குப் புரியவில்லை. சுவாமிஜி தொடர்ந்தார். இதன் பொருள் என்னவென்றால் நீங்கள் மரணத்தைக் கண்டு அஞ்சாத நிலையை உங்களுக்கு என்னால் தர முடியும். மரணம் உங்கள் முன்னால் நிற்கும்போது, அதைப் பார்த்து நீங்கள் சிரிக்க வல்லவர் ஆவீர்கள். ஆனால் ஏனோ அப்போது அந்த இளவரசர் சுவாமிஜி கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் உலக வாழ்வையே நாடினார்.
….
தொடரும் பயணங்கள்
.....................................................................
அக்டோபர் 24-ஆம் நாள் நண்பர்களுடன் பாரிஸை விட்டுப் புறப்பட்டார் சவாமிஜி. அவருடன் மெக்லவுட், கால்வே, ஜுல்போயி, லாயிஸன் தம்பதிகள் ஆகியோர் சென்றனர். வியன்னா, கான் ஸ்டான்டி நோபிள் வழியாக அவர்கள் சென்றனர். கான்ஸ்டான்டிநோபிளில் சுவாமிஜி பொதுச் சொற்பொழிவுகள் ஆற்ற அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் இரண்டு இடங்களில் வகுப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
அடுத்ததாக அவர்கள் சென்ற இடம் கிரீஸ். அங்குள்ள பல கோயில்களுக்கும் அவர்களை அழைத்துச்சென்ற சுவாமிஜி அதன் வரலாற்று முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறினார். அந்தக்கோயில்களின் மகத்துவத்தையும் உட்பொருளையும் விளக்கினார். அங்கிருந்த பலி பீடங்கள் வழியாகவும் எங்களை அழைத்துச்சென்று அங்கு நடந்த சடங்குகள் போன்றவற்றையும் விளக்கினார்” என்று எழுதுகிறார் கால்வே.
அடுத்தது எகிப்து, எகிப்தின் தலை நகரான கெய்ரோ வில் உள்ள கண்காட்சியைக் காண மிகவும் விரும்பினார் சுவாமிஜி. அவற்றைப் பார்த்ததுடன் பிரமிடுகள், ஸ்பிங்ஸ் போன்றவற்றையும் கண்டார். கெய்ரோவில் நடந்த ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவத்தைக் கால்வே கூறினார்.
….
விலை மகளிருக்கு அருள்
............................................................
ஒரு நாள் கெய்ரோவில் சுவாரசியமாகப்பேசிக்கொண்டே சென்றதில் வழி தவறி விட்டனர். சுற்றி ச்சுற்றி க் கடைசியில் விலை மகளிர் வசிக்கின்ற ஒரு தெருவில் நுழைந்து விட்டனர். சிதிலமான ஒரு வீட்டின் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் சுவாமிஜியையும் அழைக்கலாயினர். சுவாமிஜியுடன் சென்றவர்கள் அந்த இடத்தை விரைவாகக் கடந்து விடலாம் என்று வேகமாக நடக்குமாறு அவரிடம் கூறினர்ஆனால் சுவாமிஜி அவர்களைப்பொருட்படுத்தாமல் அந்தப் பெண்களிடம் சென்றார். பிறகு கருணையால் நெகிழும் குரலில் அவர்களிடம், பரிதாபத்திற்குரிய ஜீவன்கள், பாவம்! தங்கள் தெய்வீகத்தை அழகிலட வெளிப்படுத்தினார்கள்........ இப்போது இவர்களின் நிலைமையைப்பாருங்கள்” என்று கூறினார். அவர்களின் நிலைமையைக்கண்டு சுவாமிஜியின் இதயம் நெகிழ்ந்தது. கண்கள் குழமாயின. சிறிது நேரத்தில் அவர் அழவே ஆரம்பித்து விட்டார். கண நேரத்தில் அந்தச்சூழ்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அந்தப் பெண்கள் ஒரு தெய்வ மனிதரின் முன்பு தாங்கள் நிற்பதை உணர்ந்தனர். அவர்களில் ஒருத்தி சுவாமிஜியின் முன்னால் மண்டி யிட்டு அவரது அங்கியின் நுனியை முத்தமிட்டு, ஸ்பானிஷ் மொழியில் இவர் தெய்வ மனிதர், இவர் தெய்வ மனிதர் என்று கண்ணீருடன் கூறினாள்.. ஒரு தெய்வ மனிதரின் முன் நிற்பதற்குத் தான் தகுதியில்லாதவள் என்று எண்ணிய மற்றொருத்தி கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து விட்டு அங்கிருந்து அகன்றார் சுவாமிஜி.
பாரிஸிலிருந்து புறப்பட்ட போது, எகிப்து முதலான இடங்களைப் பார்த்துவிட்டு, மீண்டும் பாரிஸிற்கு வந்து சில சொற்பொழிவுகள் செய்ய வேண்டும் என்று தான் எண்ணியிருந்தார் சுவாமிஜி. ஆனால் இறைவன் திருவுளத்தையும், அது ஒன்றையே சார்ந்து வாழும் இறைவனின் திருக் குழந்தைகளின் செயல்பாட்டையும் போக்கையும் அறிய வல்லவர் யார்? உள்ளத்தளவில் நான் ஓர் இறையுணர்வாளன் . எனது விவாதங்கள், சர்ச்சைகள் எல்லாம் வெறும் தோற்றம் மட்டுமே. நான் உண்மையில் எப்போதும் சில தெய்வீக அறிகுறிகளையும் அது போன்ற சிலவற்றையும் நாடுகிறேன்” என்று சுவாமிஜியே தம்மைப் பற்றி கூறியதுண்டு. இறையாணை பெற்றே அவர் எதையும் செய்தார்.
கெய்ரோவிலிருந்த போது திடீரென்று தாம் இந்தியா திரும்பப்போவதாக அறிவித்தார் சுவாமிஜி. அங்கே அவருக்கு உடல்நிலை சரியில்லமல் போயிற்று. ஒரு முறை மாரடைப்பும் தாக்கியது. அவர் திடீரென்று புறப்பட முடிவு செய்ததற்கு இவை காரணமாக இருக்கலாம். அது மட்டுமின்றி, அவரது வாழ்க்கையில் ஒன்றி விட்டவரும், இமய மலையில் மாயாவதியில் அத்வைத ஆசிரமத்தில் வாழ்ந்தவருமான சேவியர் அக்டோபர் 28-ஆம் நாள் மரணமடைந்தார். இந்தச் செய்தி சுவாமிஜியைச்சென்று சேர முடிய வில்லை. அவர் உடல் நலமற்றிருப்பது சுவாமிஜிக்குத் தெரியும். ஏதோ உள்ளுந்தலின் காரணமாக அவருக்கு திடீரென்று சேவியரைக்காண வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதுவும் சுவாமிஜியைத் துரிதப்படுத்தியிருக்கலாம்.
ஆனால் சுவாமிஜியின் இந்தத் திடீர் முடிவு அவருடன் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுவாமிஜியும் அவர்களைப் பிரிவதில் வருந்தவே செய்தார். ஆனாலும் போக முடிவு செய்து விட்டார். கால்வே அவரிடம் சென்றார்.
கால்வே-
சுவாமிஜி, ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்?
சுவாமிஜி-
என் சகோதரத் துறவிகளுடன் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது எனவே நான் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டுமு்.
கால்வே-
இவ்வளவு தானா! நீங்கள் போக வேண்டும். அவ்வளவு தானே! உங்கள் பயண ச் செலவை நானே தருகினே். ஆனால், சுவாமிஜி, நீங்கள் ஏன் எங்களைவிட்டுப் பிரிய நினைக்கிறீர்கள்?
சுவாமிஜியின் கண்கள் குளமாயின. உலகின் தலைசிறந்த பாடகியருள் ஒருவராகத் திகழ்ந்த கால்வேயின் பரந்த மனம் சுவாமிஜியை நெகிழச்செய்தது. தழுதழுத்த குரலில் கூறினார்.
நான் இந்தியாவிற்குப்போக வேண்டும். அங்கே மரணம் எனக்காகக் காத்திருக்கிறது. நான் என் சகோதர்களுடன் வாழ வேண்டும்.
கால்வே-
ஆனால், சுவாமிஜி நீங்கள் இறக்க முடியாது. எங்களுக்கு நீங்கள் வேண்டும்.
சுவாமிஜி-
ஜுலை 4-ஆம் நாள் என் இறுதி நாளாக இருக்கும்-
அதன் பிறகு அருகிலுள்ள பல இடங்களைக் காண மெக்லவுட் முதலானோர் சென்றனர். ஆனால் சுவாமிஜி போகவில்லை. அதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. அவரதுமுடிவை மாற்ற இயலாது என்பது தெரிந்த போது அவரது பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். பாதி வருத்தத்துடனும் பாதி இறைவன் திருவுளத்தைச் சார்ந்தசரணாகதி நிலையிலும், கப்பலில் நின்று எங்களை நோக்கி கையசைத்து, ஆசிகளைத் தெரிவித்தபடி எங்களிடமிருந்து பிரியாவிடை பெற்றார் அவர், என்று எழுதுகிறார் ஒருவர். சுவாமிஜி புறப்பட்ட நாள் 1900 நவம்பர் 26.
….
கப்பலில்
.............................
கப்பலில் சுவாமிஜியின் தோற்றத்தால் கவரப்பட்ட பலரும் அவரை அணுகி அவருடன் பல விஷயங்களைப்பேசினர். அவர்களில் ஒருவரான கால்கின்ஸ் சுவாமிஜியின் சிகாகோ சொற்பொழிவுகளைக்கேட்டார். ஆங்கிலேயரான டிரேக் பிராக்மேன் என்பவர் சுவாமிஜியிடம் பல முறை வாதங்களில் ஈடுபட்டார். அவரது அறிவுக் கூர்மையை வெகுவாக ரசித்தார்.ஆனாலும், இந்தியாவிற்கு யாரும் ஆன்மீகத்தைக் கற்பிக்க வேண்டியதில்லை என்று சுவாமிஜி கூறிவதை டிரேக்கினால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
இந்தப் பயணம் சாதாரண பயணம் அல்ல. உலக அரங்கிற்கு அவர் விடை கொடுத்த பயணம் ஆகும். உலக அரங்கில் அவரது பணிகளை இப்போது பார்ப்போம்.
..................
மேலை நாட்டுப் பணி
.......................................................
மேலை நாட்டில் எனது பணி அதிகமாக இருக்கும். அதன் எதிரொலி இந்தியாவில் கேட்கும்” என்று ஒரு முறை துரியானந்தரிடம் கூறினார் சுவாமிஜி.சுவாமிஜி இரண்டு முறை மேலை நாடுகளுக்குச் சென்றார். முதலில் 1893 ஜுலை இறுதி முதல் 1896டிசம்பர் வரை சுமார் மூன்றரை வருடங்கள். இரண்டாவதாக 1899 ஜுன் முதல் 1900 நவம்பர் வரை சுமார் ஒன்றரை வருடங்கள். மொத்தமாக சுமார் 5 வருடங்கள் அவர் மேலை நாடுகளில் செலவிட்டார். ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்கு என்று ஆயிரக்கணக்கான மைல்கள் அவர் அங்கே ஓடி ஓடி உழைத்தார். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கி போன்ற வசதிகள் கிடையாது என்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும். எத்தனை பெரிய கூட்டமானாலும் அத்தனை பேருக்கும் கேட்குமளவிற்கு உரக்கக் கத்திப்பேச வேண்டும். இப்படி ஒரு நாள் அல்ல, இரண்டு நாட்கள் அல்ல. ஐந்து வருடங்கள் பணி செய்தார்.
இரண்டு முறை மேலை நாடுகளில் அவர் பயணம் செய்த மொத்த தூரம் சுமார் 1,07, 396 கி.மீ. ஆற்றிய சொற்பொழிவுகள் சுமார் 317. வகுப்பு ச்சொற்பொழிவுகள் சுமார் 431, கலந்து கொண்ட கருத்தரங்கம் போன்றவை சுமார் 26, பிரமிப்பாக இருக்கிறது! இந்த விவரம் கூட இது வரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் படி உள்ள தகவல்கள் மட்டுமே. மேலை நாடுகளில் சுவாமிஜியின் பணி பற்றிய ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த அயராத உழைப்பின் விளைவு என்ன?
...
அமெரிக்கப் பணியின் தாக்கம்.
......................................................
ஹெலன் ஹன்டிங்டன் என்பவர் பிரம்ம வாதின் பத்திரி கைக்கு ஒரு கடிதம் எழுதினார். சுவாமி விவேகானந்தரின் தாக்கம் அமெரிக்காவில் ஆழமான, ஆற்றல் மிக்க ஆன்மீக விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டு விட்டது. இந்த விழிப்புணர்ச்சி வெளியிலும் மக்களிடையே நன்றாகத்தெரிய ஆரம்பித்து விட்டது. வேதாந்த இலக்கியங்கள் மிகவும் விற்பனையாகின்றன. ஆன்மா போன்ற வார்த்தைகள் பத்திரிகைகளிலும் பரவ லாகப் பயன்படுத்தப் படுகின்றன. ஹக்ஸ்லி, ஸ்பென்சர் போன்ற பெயர்களைப்போலவே சங்கரர், ராமானுஜர் போன்ற பெயர்களும் பிரபலமாகி விட்டன. இந்தியாவைப் பற்றிய நூல்கள் என்றல்ல. இந்தியாவைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய நூல்களைக்கூட நூல் நிலையங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றன. ஷோபனேரின் இலக்கியங்கள் எவ்வளவு வறட்டுத்தனமாக, சலிப்பைத் தருவனவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் வேதாந்தப் பின்னணி இருக்கின்ற ஒரே காரணத்தால் அவரது நூல்களைக் கூட இப்போதுமக்கள் விரும்பிப் படிக்கத் தொடங்கி விட்டனர்.
இப்படி ஆரம்பிக்கின்ற கடிதத்தை அவர் சற்றே நகைச்சுவை ததும்ப இவ்வாறு நிறைவு செய்கிறார். சுவாமிஜி எங்களுக்குச் சொந்தம்” என்று இந்தியா இப்போதே அறிவித்து விடுவது நல்லது. ஹோமர் ஒரு காலத்தில் தெரு வழியாகப் பிச்சை எடுத்துத் திரிந்தார். ஆனால் அதேஹோமர் தங்கள் நாட்டில் பிறந்ததாக பின்னாளில் ஏழு நாடுகள் சொந்தம் கொண்டாடின. அது போல் எங்கள் குரு நாதரையும் (சவாமிஜி) எல்லோரும் சொந்தம் கொண்டாடும் நாள் ஒன்று வரும். இந்தியா தனது இணையற்ற புதல்வன் ஒருவன் மீது தனது உரிமையை இழக்க நேரும்.
....
இங்கிலாந்து பணியின் தாக்கம்.
.........................
இனி இங்கிலாந்தில் சுவாமிஜியின் தாக்கம் பற்றி பார்ப்போம். பிரபல தேசியத் தலைவரும், பிரம்ம சமாஜத் தலைவர்களில் முக்கியமான ஒருவருமான பி.சி. பால் 1898- இல் கூறியது இது. சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்தில் ஆற்றிய சொற்பொழிவுகளால் பெரிய விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. அவரது அன்பர்களும் நண்பர்களும் சாதாரண விஷயத்தைப் பெரிது படுத்து கிறார்கள்” என்று சிலர் இந்தியாவில் கூறுகிறார்கள். ஆனால் நான் இங்கே இங்கிலாந்திற்கு வந்த பிறகு அவரது பணியின் தாக்கத்தை எங்கும் காண்கிறேன். விவேகானந்தரை மிகவும் மதிக்கவும் போற்றவும் செய்கின்ற பலரை நான் இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் சந்தித்தேன். நான் விவேகானந்தரின் மதப் பிரிவைச் சார்ந்தவன் அல்ல. எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் பல உண்டு. இருந்தாலம் விவேகானந்தர் இங்கே பலரது கண்களை த் திறந்துள்ளார். இதயத்தை விரிவு படுத்தியுள்ளார் என்பதை நான் சொல்லியே ஆகவேண்டும். அவரது போதனைகளால் இங்குள்ள பலரும் பண்டைய இந்து சாஸ்திரங்களிலுள்ள அற்புதமான ஆன்மீக உண்மைகளை நம்புகிறார்கள். அது மட்டுமல்ல அவர் இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே ஓர் உன்னதமான தொடர்பை உருவாக்குவதிலும் வெற்றி பெற்றுள்ளார்.
ஒரு முறை தெற்கு லண்டனுக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு தெருவில் சாதாரண பெண் ஒருத்தி தனது மகனிடம் என்னைக் காட்டி. அதோ பார் சுவாமி விவேகானந்தர்” என்றாள். நான் அணிந்திருந்த காவித் தலைப்பாகையின் காரணமாகத் தான் அவள் அவ்வாறு கூறுகிறாள் என்பதை புரிந்து கொண்டேன். இவ்வாறு சாதாரண மனிதர்களும் விவேகானந்தரை அறிந்திருப்பதைக் கண்டேன்.
சுவாமிஜியின் பணி.
ஐந்து அம்சங்கள்
.........................
இத்தகைய தாக்கத்தை சுவாமிஜி எப்படி ஏற்படுத்தினார்? தமது ஐந்து அம்சப் பணியின் மூலம், சுவாமிஜியின் பணி முக்கியமாக ஐந்து அம்சங்கள் கொண்டதாக இருந்தது. அவை சொற்பொழிவுகள், வகுப்புச்சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், அந்தர்யோகங்கள் , தனிநபர் வழிகாட்டல்.
...
சொற்பொழிவுகள்
...................................
இந்தியாவின் ஏழைகளையும் பாமரர்களையும் முன் னேற்றுவதற்காக நிதி திரட்டுவது சுவாமிஜி மேலை நாடுகளுக்குச்சென்றதன் முக்கிய நோக்கமாக இருந்தது. அதற்காக மேலை நாட்டினரிடம் யாசிப்பது சுவாமிஜியின் வழி அல்ல. நம்மிடம் இருப்பதை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களிடம் இருப்பதை நாம் பெறுவது அவரது வழியாக இருந்தது. இதற்கான களமாக இருந்தவை சொற்பொழிவுகள். நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகளை அவர் செய்திருந்தாலும் நமக்குக் கிடைத்தவை மிகக் குறைவே.
ஆயிரக் கணக்கான அமெரிக்கர்கள்சுவாமிஜியின் சொற்பொழிவைக்கேட்டனர். கரவொலி எழுப்பினர். தலைதாழ்த்தி ஏற்றுக் கொண்டனர். சொற்பொழிவுகளில் அவர் கொடுத்த ஆன்மீகச் சிந்தனைகள், போதித்த ஆன்மீகத்திற்கு ஓர் உதாரணமாகத் திகழ்ந்த அவரது வாழ்க்கை, அவரது எல்லையற்ற ஆன்மீக ஆற்றல் ஆகியவை ஒரு பக்கம் எதிர்ப் பாளர்களின் வாயை மூடின. மறு பக்கம் உயர் வாழ்க்கையில் உண்மையான நாட்டம் உடையவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தன.விவேகானந்தரும் அவரது செய்தியும் உண்மையான கிறிஸ்தவர்கள் அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்தன. என்று அயோவா ஸ்டேட் ரெஜிஸ்டர் என்ற பத்திரிகை எழுதியது.
ஆனால் சொற்பொழிவுகள் சுவாமிஜியின் மன அமைப்பிற்கு உகந்தவையாக இல்லை. 1894 மார்ச் 15- ஆம்நாள் ஹேல் சகோதரிகளுக்கு எழுதினார். இந்தச் சொற்பொழிவுகளிலும் இது போன்ற முட்டாள் தனங்கள் அனைத்திலும் எனக்குச் சலிப்புத் தட்டி விட்டது. நூற்றுக் கணக்கில் இந்தப் பல்வேறு விதமான மனித மிருகங்களுடன் கலந்து பழகுவது எனக்கு வெறுப்பாக உள்ளது. நான் மிகவும் விரும்புவதை உங்களுக்குச் சொல்கிறேன், என்னால் எழுத முடியாது. சொற்பொழிவாற்ற முடியாது. ஆனால் ஆழ்ந்த சிந்தனை செய்ய முடியும். ஆனால் ஆழ்ந்து சிந்தனை செய்ய முடியும். அத்துடன், என்னில் உணர்ச்சிக் கனல் எரியும் போது அனல் பறக்கப்பேச முடியும். ஆனால் அந்தப் பேச்சும் சிலருக்காக, தேர்ந்தெடுத்த சிலருக்காக இருக்க வேண்டும். அந்தச் சிலர் வேண்டுமானால் என் கருத்துக்களைப் பரப்பட்டும்.
இதற்காக சுவாமிஜி ஆரம்பித்ததே வகுப்புச் சொற்பொழிவுகள், இவை பொதுவாக அவரது அறையிலோ, நெருங்கிய சிலரின் வீடுகளிலோ நடைபெற்றன. பண்டைய முறைப்படி சுவாமிஜி கீழே அமர்ந்து போதித்தார். பொதுவாகக் காலையிலும் மாலையிலும் வகுப்புகள் நடைபெற்றன. குறைந்த அளவிலேயே மக்கள் இதில் கலந்து கொண்டனர். நான்கு யோகங்கள்., செயல்முறை வேதாந்தம் போன்ற முக்கியமான விஷயங்களை அவர் இந்த வகுப்புகளில் பேசினார். அவரது பணியைத்தொடர இந்த வகுப்புகளிலிருந்தே சிலர் உருவாயினர். கிருபானந்தர், அபயானந்தர், வால்டோ போன்றோர் அவர்களில் சிலர்.
.....
அந்தர்யோகங்கள்
.................
இன்னும் ஆழமாகச் செல்ல விரும்பினார் சுவாமிஜி. வெறும் பாடங்கள் வாழ்க்கைக்குப் போதாது, ஒரு சிலரது வாழ்க்கையையாவது உருவாக்க வேண்டும் என்று எண்ணினார் அவர். அதற்காக, தேர்ந்தெடுத்த சிலருடன் முகாம்களில் தங்கினார். சொற்பொழிவுகளுடன், ஒரு கட்டுப்பாடானவாழ்க்கை முறையையும் அங்கே போதித்தார். இன்று “ அந்தர்யோகம்” என்று வழங்குப் படுவதன் முன்னோடியாகத் திகழ்பவை இந்த முகாம்கள்.
சுவாமிஜியின் மேலை நாட்டு வாழ்க்கையில் மூன்று முக்கியமான அந்தர்யோகங்களைக் காண்கிறோம்.1. 1894 ஜுலை 16 முதல் 2வாரங்கள் கிரீனேக்கரில், 2. 1895 ஜுன் முதல் ஆகஸ்ட் வரை ஆயிரம் தீவுப் பூங்காவில், 3. 1900 மே மாதம் கேம்ப் இர்விங்கில். குறிப்பிட்ட சிலருடன் அவ்வப்போது அவர் சுற்றுலா மற்றும் பிக்னிக்குகளுக்குச் சென்றதும் இந்தப் பிரிவில் அடங்கும்.
.......
கலந்துரையாடல்கள்
.....................
இவை தவிர, போட்டிகள், கலந்துரையாடல்கள் போன்றவை மூலம் சுவாமிஜி அறிவு ஜீவிகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரைப் பலர் சென்று கண்டனர். துருவித்துருவி கேள்விகள் கேட்டனர். விவாதித்தனர். பத்திரிகைகளில் வெளியிட்டனர். சுவாமிஜியும் பலரைச்சென்று கண்டார். மாக்ஸ் முல்லர், பால் தாசன், போன்ற மேதைகள், நிகோலா டெஸ்லா போன்ற விஞ்ஞானிகள். சாரா பெர்ன்ஹட் போன்ற இசைக் கலைஞர்கள், இங்கர்சால் போன்ற பகுத்தறிவாதிகள், ராக்.பெல்லர் போன்ற தொழிலதிபர்கள் என்று பலரிடம் அவர் ஆன்மீகக் கருத்துக்களை விதைத்தார்.
சுவாமிஜியின் சொற்பொழிவுத் தொகுப்புகள் அவரது காலத்திலேயே நூல் வடிவில் வெளிவரத் தொடங்கியிருந்தன. கர்மயோகம், ராஜ யோகம், போன்ற நூல்கள் பிரபலமாகி யிருந்தன. நூல்கள் வெளியீடும் அவரது பணிகளில் முக்கியமான ஓர் அம்சமே.
சுவாமிஜியின் மேலை நாட்டுப் பணியின் ஐந்தாம் அம்சமான ” தனிநபர் வழி காட்டுதல்” என்பதை அடுத்த அத்தியாயத்தில் விரிவாகக் காண்போம்.
இத்தனை விதமான பணிகளின் மூலம் சுவாமிஜி மேலை நாட்டிற்கு அளித்தது என்ன?
இந்தியச் சிந்தனையாளர்களின் செயல்முறை பற்றி சுவாமிஜி ஒரு முறை இவ்வாறு குறிப்பிட்டார் . இந்தியச் சிந்தனையின் ஒரு பண்பு அதன் மௌனம். அதன் அமைதி. அதே வேளையில் வன்முறையின் மூலம் ஒரு போதும் வெளிப்படுத்த முடியாத மாபெரும் ஆற்றல் அதன் பின்னால் இருக்கிறது. அமைதியாகப் பிறர் மனத்தை வசீகரிப்பதே எப்போதும் இந்தியச் சிந்தனையின் தன்மை. மெல்லெனப் பனி பெய்கிறது. அதை யாரும் காண்பதில்லை, கேட்பதுமில்லை. எனினும் அழகிய ரோஜாக்களை அது எவ்வளவு அற்புதமாக மலரச்செய்கிறது! சிந்தனை உலகிற்கு இந்தியா தன் கொடையை வழங்கியதும் இவ்விதமே. மௌனம் யாரும் அறிய முடியாதது. எனினும் விளைவுகளைத் தருவதில் அது எல்லாம் வல்லது. உலகச் சிந்தனையையே அது மாற்றி உள்ளது. ஆனால் இது எப்போது நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.
என்னிடம் ஒரு முறை, இந்திய சாஸ்திரங்களை எழுதயவர்களின் பெயர்களை உறுதி செய்வது எவ்வளவு கடினமாக இருக்கிறது! என்று சொன்னார்கள். அது தான் இந்தியாவின் கொள்கை” என்றுநான் சொன்னேன். பிறர் எழுதியதிலிருந்து தொண்ணூறு சதவீதத்தைத் திருடி, பத்து சதவீதம், சொந்தக் கருத்தையும் சேர்த்து, முன்னுரையில் மட்டும், இவை என் சொந்தக் கருத்துக்கள்” என்று எழுதுகின்ற தற்கால எழுத்தாளர்கள் போன்றவர்கள் அல்ல பழங்கால இந்திய எழுத்தாளர்கள். மனித குலத்தின் இதயத்தில் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகின்ற அந்த மாபெரும் சிந்தனையாளர்கள், தங்களை ஆசிரியர் என்று அறிவித்துக் கொள்ளாமல் நூல்களை மட்டும் எழுதுவதில் திருப்தி கண்டார்கள். சிந்தனையாளர்கள், தங்களை ஆசிரியர் என்று அறிவித்துக்கொள்ளாமல் நூல்களை மட்டும்எழுதுவதில் திருப்தி கண்டார்கள். அந்த நூல்களைச் சந்ததிக்கு விட்டு விட்டு அமைதியாக மறைந்து போனார்கள்.
தமது தத்துவங்களை எழுதியவர் யார்? நமது புராணங்களை எழுதியவர்கள் யார்? யாருக்குத்தெரியும்? அத்தனை பேரும் பொதுப் பெயர்களான வியாசர், கபிலர் போன்ற பெயர்களின் கீழ் மறைந்து போனார்கள்.அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின்உண்மையான குழந்தைகள், அவர்கள் கீதையை உண்மையாகப் பின்பற்றுபவர்கள். வேலை செய்வதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு, அதன் பலனில் இல்லை” என்ற மகத்தான ஆணையை நடைமுறையில் வாழ்ந்து காட்டியவர்கள்.
சுவாமிஜியின் பணியும் நூற்றுக்கு நூறு இதே மாபெரும் சிந்தனையாளர்களின் வரிசையில் அமைந்ததாகும். இன்றைய அறிஞர்கள் ஏற்று கொண்டதாலும் இல்லாவிட்டாலும், உலக கலாச்சாரம்” என்றெல்லாம் கூறப் படுகின்ற இன்றைய சிந்தனைகளுக்கு விதை விதைத்தவர் சுவாமிஜி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
சுவாமிஜி தமது பணிகளின் மூலம் மேலை நாட்டிற்கு மூன்று முக்கியக் கொடைகளை அளித்தார். அவை
1, இந்திய ஆன்மீகம்.2, ஸ்ரீராமகிருஷ்ணர்,3. உண்மை மதம்.
1-இந்திய ஆன்மீகத்தை சுவாமிஜி மேலை நாடுகளுக்கு அளித்தார் என்று கூறும்போது, அதற்கு முந்தைய சிந்தனையாளர்களின் பணியை நாம் குறைத்து மதிப்பிட வில்லை.குறிப்பாக ஹென்றி டேவிட் தரோ, ரால்ஃப், வால்டோ , எமர்சன், வால்ட் விட்மேன், போன்றோரின் பணியை நாம் குறிப்பிட்டேயாக வேண்டும். இவர்கள் அனைவருமே இந்தியச் சிந்தனைகளின் தாக்கம் பெற்றவர்கள்.
2-இந்திய ஆன்மீகம்
.அவர்களின் வாழ்க்கையிலும் எழுத்திலும் அதனைக் காணமுடியும். ஆனால் சுவாமிஜி சிகாகோ சர்வமத மகாசபையில் சொற்பொழிவாற்றி, அமெரிக்கச் சமுதாயத்தின் மீது ஏற்படுத்திய தாக்கமும் தொடர்ந்த சொற்பொழிவுகளும் தான் அமெரிக்கச் சமுதாயத்தில் இந்திய ஆன்மீகத்தை ஒரு முக்கிய அம்சம் ஆக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆன்மீகம் என்னும்போது, சடங்குகள் சம்பிரதாயங்களைக் கடந்த, கோயில்களும் சர்ச்சுகளும் மசூதிகளும் குறுக்கிடாத தூய ஆன்மீகத்தை சுவாமிஜி வழங்கினார். ஆன்மீக வாழ்க்கை என்பது உங்களுக்கும் உங்கள் இறைவனுக்கும் இடையில் உள்ளது. மூன்றாம் மனிதன் அதில் குறுக்கிடக் கூடாது. என்று 1900- இல் தமது சான் பிரான்சிஸ்கோ சொற்பொழிவில் அவர் குறிப்பிட்டார். அத்தகைய தூய ஆன்மீகம் தான் அவர் அளித்த ஆன்மக் கருத்து.
மனிதனில் உடல், மனம் என்ற இரண்டைத் தவிர ” ஆன்மா” என்ற மூன்றாவது ஒன்று உள்ளது. அது தெய்வீகமானது. எல்லா ஆற்றல்களும் உள்ளடக்கியது. அதுவே உண்மை மனிதன். இந்த உண்மையை அனுபூதியில் உணர்வதே உண்மை மதம். இந்த உண்மை உணரப் படும் போது மனிதன் எல்லாம் வல்லவன் ஆகிறான். ஏனெனில் அனைத்து ஆற்றலும் ஆன்மாவில் அடங்கியுள்ளன.
இதையே சுவாமிஜி, ஒவ்வோர் ஆன்மாவும் உள்ளடங்கிய தெய்வீகம் நிறைந்தது. புற மற்றும் அக இயற்கையை அடக்குவதன் மூலம் இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே நோக்கம். செயல் அல்லது வழிபாடு அல்லது பிராணனைக் கட்டுப்படுத்தல் அல்லது தத்துவ ஆராய்ச்சி- இவற்றுள் ஒன்றாலோ பலவற்றாலோ எல்லாவற்றாலுமோ இதனைச்செய்து சுதந்திரனாக இரு! இதுவே மதத்தின் முமு உண்மை. கொள்கைகளும் கோட்பாடுகளும், சடங்குகளும் சாஸ்திரங்களும், கோயில்களும் உருவங்களும் இரண்டாம் நிலையிலுள்ள விளக்கங்களே. என்று தமது பதஞ்ஜி யோக சூத்திர விளக்கவுரையில் கூறுகிறார்.
இந்தக் கருத்துக்கள் மேலை நாடுகளுக்கு முற்றிலும் புதியவை அல்ல. ஏற்கனவே நாம் குறிப்பிட்ட சில சிந்தனையாளர்கள், இந்தியக் கருத்துக்களின் தாக்கத்தால், இத்தகைய சிந்தனைகளை ஏற்கனவே தங்கள் எழுத்துக்கள் மூலம் அறிமுகப் படுத்தவே செய்திருந்தார்கள். ஆனால் அது சில அறிவுஜீவிகள் வரையிலும் மட்டுமே நின்றது. சுவாமிஜி போன்ற, ஆன்மாவை அனுபூதியில் உணர்ந்த ஓர் இறையுணர்வாளர் எடுத்துக் கூறியபோது அது கேட்போர் நெஞ்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி பல இடங்களுக்கும் சென்று அவர் ஆற்றிய நூற்றுக் கணக்கான சொற்பொழிவுகளின் மூலம் சாதாரண மக்களும் இத்தகைய அற்புதச் சிந்தனையைக்கேட்பதற்கான வாய்ப்பு பெற்றார்கள்.
அது போலவே அறிவு ஜீவிகளிடையேயும் சுவாமிஜி யின் தாக்கம் மிகவும் ஆழமானதாக இருந்தது. அவரது விஞ்ஞான நாட்டம் அவருக்கு யோகப் பயிற்சிகளின் உண்மையைப் பற்றிய ஆழ்ந்த அறிவைக் கொடுத்திருந்தது. அவர் அனைத்தையும் அறிவு பூர்வமாகச் சிந்தித்தார். நரம்பு மண்டலம், அவற்றிற்கு மூளையுடன் உள்ள தொடர்பு, நரம்பின் செயல்பாடுகளுக்கும் மனத்திற்கும் உள்ள தொடர்பு போன்றக் கருத்துக்கள் அமெரிக்காவின் முக்கியமான மருத்துவர்களையும் உடலியல் நிபுணர்களையும் ஈர்த்தன. அவர்கள் இந்தக் கருத்துக்களை வரவேற்றார்கள், அவற்றை ஆழ்ந்து ஆராய வேண்டும் என்று உறுதியும் கொண்டார்கள். தியானம் என்பது ஓர் அற்புத நிகழ்ச்சி விளக்க இயலாதது என்று தான் அது வரை கருதப்பட்டு வந்தது. ஆனால் தியானம் மனித உணர்வில் மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் கொண்டு வர முடியும் என்று அவர் கூறியது பல நிபுணர்களுக்கு இந்தக் கருத்தில் ஈடுபாட்டைக் கொடுத்தது. இந்த ஆர்வத்தால் தான் பேராசிரியர் வில்லியம் ஜேம்ஸ் ஆன்மீக அனுபவங்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டார்.
அது போலவே சுவாமிஜி விளக்கிய சாங்கியத் தத்துவம் சிறந்த மின்னியல் நிபுணரான நிக்கோலா டெஸ்லாவை அதன் மீது மிகுந்த ஈடுபாடு கொள்ளச் செய்தது. பிரபஞ்சத்தின் படைப்பு பற்றி சாங்கியம் கூறுகின்ற கோட்பாடு அனைத்திலும் மேலானது என்று அவர் ஒத்துக்கொண்டார். அது மட்டுமன்றி, சாங்கியத்தில், வருகின்ற கல்பங்கள், பிராணன், ஆகாசம் போன்ற கோட்பாடுகளையும் கணிதபூர்வமாக நிரூபிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
3- ஆன்மக் கருத்து போலவே ஸ்ரீராமகிருஷ்ணரை மேலை நாடுகளுக்கு அறிமுகப் படுத்தியதும் சுவாமிஜி தான்.மாக்ஸ் முல்லர், ஓர் உண்மையான மகான்” என்ற பெயரில் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தாலும் சுவாமிஜியின் மூலம் தான் பலரது வாழ்வில் அறிமுகம் ஆனார். இந்தியாவிலும் சரி, மேலை நாடுகளிலும் சரி, சுவாமிஜி ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தியைத் தான் கொண்டு சென்றார். ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற தனி நபரைப் பற்றிபேசவும் எழுதவும் அவர் தயங்கினார். சுவாமிஜியின் பணிவு தான் இதற்குக் காரணம். அதற்கு தாம் தகுதியானவர் அல்ல என்று எண்ணினார் அவர்.
ஒரு முறை சுவாமிஜியின் சகோதரச் சீடர் ஒருவர் அவரிடம், நீங்கள் ஏன் ஸ்ரீரமகிருஷ்ணரை அவதார புருஷரென மேலை நாட்டில் பிரச்சாரம் செய்யவில்லை? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, தங்கள் விஞ்ஞானத்தையும் தத்துவத்தையும் பற்ி அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்கிறார்கள். நியாயம், விஞ்ஞான பூர்வமான வாதம். தத்துவ ஆராய்ச்சி இவற்றின் மூலம் அவர்களது அறிவுச் செருக்கைத் தகர்த்து எறியாமல், அங்கு ஒன்றையும் நீங்கள் உருவாக்க முடியாது. முடிந்தவரை அறிவால் ஆராய்ந்தும் ஒன்றும் காணாமல், உண்மையை உணர வேண்டும் என்றும் ஆழ்ந்த ஆர்வத்துடன் என்னிடம் வருபவர்களிடம் நான் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி பேசுவதுண்டு. மாறாக, எடுத்தவுடனே நான் அவதாரங்களைப் பற்றி பேசத் தொடங்கினால், ஓ, நீங்கள் சொல்வதில் புதியது ஒன்றுமில்லை. அவரைப்போன்ற ஏசு எங்களிடம் உள்ளார்” என்று அவர்கள் கூறி விடுவார்கள்” என்றுகூறினார்.
மற்றொரு முறை தமது சீடரான சரத் சந்திரரிடம் சுவாமிஜி கூறினார். அவர் யார், எவ்வளவு உணர்ந்தவர் என்பதை இப்போது கூட என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவரைப் பற்றி எல்லா இடங்களிலும் என்னால் பேச முடியவில்லை.அவர் யார் என்பது அவருக்குத் தான் தெரியும். அவரது உடம்பு மட்டும் தான் மனித உடம்பாக இருந்தது, அவரது செயல்பாடு நடவடிக்கை, எல்லாமே அமானுஷ்யமானதாகவே இருந்தன.
காரணம் எதுவாயினும் சுவாமிஜி ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தார். மிகச்சிலரிடமே அவர் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி பேசினார். அவர்களிலும் சிலரே அவரை ஏற்றுக்கொண்டார். ஒரு முறை மிசஸ் சாராவிற்கு எழுதிய கடிதத்தில், ஸ்ரீராமகிருஷ்ணரை ஏற்றுக்கொண்ட மிகச் சிலரில் நீங்கள் ஒருவர்” என்று எழுதுகிறார் அவர்.
தமது தகுதியின்மையின் காரணமாக ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி பேசவில்லை என்று சுவாமிஜி கூறினார். ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தியைப் பரப்பினால் அவரது பெயர் தானாக பரவும்என்று நம்பினார் சுவாமிஜி. இன்று உலகெங்கும் அவரது பெயரும் அவரது வழிபாடும் பெருகி வருகின்றன. அவ்வாறே ஸ்ரீராமகிருஷ்ணரின் ” சமய சமரசம்” போன்ற செய்திகள் பற்றியும் பேசினார். அவ்வாறு சுவாமிஜி அன்று அளித்த செய்தியின் மூலம் சத்தியயுகமாகிய ஒரு புதிய சமுதாயம் உருவாகி வருவது மறுக்க முடியாத உண்மை.
....
உண்மை மதம்
............
4-உருவாகும் அந்தப் புதிய சமுதாயத்திற்கென ஓர் ஆக்கபூர்வமான மதத்தைப் பற்றியும் அவர் பிரச்சாரம் செய்தார். குறுகிய போக்குடைய, கொள்கை வெறி பிடித்த மதங்கள் எதிர் காலத்தில் ஏற்கப் படாது என்பதை சுவாமிஜி நன்றாக உணர்ந்திருந்தார். எனவே தான்உலகம் தழுவிய மதக் கருத்தை அவர் மேலை நாட்டில் போதித்தார். என்றாவது உலகம் தழுவிய மதம் என்ற ஒன்று உருவாக வேண்டுமானால், அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப் படுத்தப் படாததாக இருக்க வேண்டும். அந்த மதம் யாரைப் பற்றிபிரச்சாரம் செய்கிறதோ, அந்தக் கடவுளைப்போன்று எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக் கிரணங்களை எல்லோர் மீதும் சமமாக வீசுவது போல் அந்த மதம் கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள் எல்லோரையும் சமமாகப் பார்க்க வேண்டும். அது பிராமண மதமாகவோ பௌத்த மாதமாகவோ கிறிஸ்தவ மதமாகவோ முகமதிய மதமாகவோ இருக்காமல், இவற்றின் ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். விலங்கினங்களைப்போல் உள்ள காட்டுமிராண்டி மக்களிலிருந்து, இவரும் மனிதரா என்று சமுதாயம் பய பக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்து மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோரை் வரை, எல்லோருக்கும் இடமளித்து, தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக்கொள்ளும் பரந்த மனப் பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும், சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண், பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத்தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும். என்ற அதனை விளக்கவும் செய்கிறார் அவர்.
5-இத்தகைய ஒரு மதத்தை நோக்கியே உலகக் கலாச்சாரம் இன்று சென்று கொண்டிருப்பதை நாம் அறிவோம். இதற்கு அடிக்கல் இட்ட பெருமை சுவாமிஜியையே சாரும்.
...
6- முடிவற்று நீளும் பணி
....................
வேத ரிஷிகள், புத்தர், குரு நானக், சங்கரர்,ராமானுஜர், மத்வர் போன்றோரின் பணிகளுக்கு முடிவு உண்டா? அவர்களின் பணி இன்றும் மனித மனங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன அல்லவா! அவர்களைப் பற்றியும் அவர்களது செய்தியைப் பற்றியும் இன்றும் படிக்கிறார்கள். ஆராய்கிறார்கள். புதுப்புது விளக்கங்கள் தருகிறார்கள். இன்னும் படிப்பார்கள். ஆராய்வார்கள், புதுப்புது விளக்கங்கள் தருவார்கள். அவை முடிவற்று நீள்பவை. சுவாமிஜியின் பணி அத்தகையது.
மேலை நாட்டுச் சீடர்கள்
..........................................
சூறாவளிபோல் சுழன்று சொற்பொழிவுகள் செய்து மக்களிடம் ஓர் ஆன்மீக எழுச்சியை உண்டாக்கியது ஒரு புறம். அவர்களில், தத்துவ விஷயங்களைச் சற்று ஆழ்ந்து கற்க வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்களுக்கு வகுப்புச்சொற்பொழிவுகள் போன்றவை ஒரு புறம். இவற்றுடன், சுவாமிஜியின் மற்றொரு முக்கியப் பணியாகத்திகழ்ந்தது தனி நபர் வழிகாட்டல். இது அவரது பணியின் ஐந்தாம் அம்சம். மாபெரும் துறவியும் இறையுணர்வாளருமான சுவாமிஜியின் அருள் எல்லையில் வருகின்ற அனைவரும் ஆன்மீக எழுச்சியைப் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டு , இறையனு பூதி என்ற உயர் லட்சியத்தைக் கைக்கொண்டு வாழ முற்பட்டார்கள். தகுதி வாய்ந்த அந்தச் சிலருக்கு ஆன்மீகத்தின் உயர் வாசல்களை அவர் திறந்து வைத்தார். அவர்களுக்கு வழிகாட்டுவதை ஒரு முக்கியப் பணியாகச்செய்தார் சுவாமிஜி.
சுவாமிஜி ஆயிரக்கணக்கானோரைச் சந்தித்திருப்பார் அவர்களில் பலரும் அவரது வாழ்க்கையால் கவரப் பட்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் சீடர் என்று சொல்லும்போது சுவாமிஜி அதற்கென்று சில நியமங்களை வைத்திருந்தார், நான் தங்கள் சீடராக வேண்டும்” என்பதை ஒருவர் தெளிவாக அவரிடம் தெரிவிக்கும் வரை, அந்த நபர் ஆன்மீக வாழ்க்கையைப் பின்பற்றத் தயாராக இருக்கிறார் என்பதை உணரும் வரை சுவாமிஜி யாருடைய வாழ்க்கையிலும் புகுவதில்லை. அவர்களின் வாழ்க்கையை அவர் தொடுவதில்லை. புதிய சிலரை எங்களுக்குஅறிமுகப்படுத்தும்போது கூட, இவர் சீடர் அல்ல, நண்பர் மட்டுமே” என்று எங்களுக்கு அவர் தெளிவாகக் கூறுவார்” என்று எழுதுகிறார் கிறிஸ்டைன். தம்முடன் நெருங்கிப் பழகுபவர்களிடையே சுவாமிஜி இத்தகைய ஒரு வேறுபாட்டை வைத்திருந்தர்.
கிறிஸ்டைன் தொடர்கிறார், நண்பர்களுடன் அவரது தொடர்பு முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது.அவர்களின் தவறுகள், கொள்கைகள், குறுகிய கண்ணோட்டங்கள் எதைப் பற்றியும் அவர் பொதுவாகக்கவலைப் படுவதில்லை. அது பற்றி ஒரு வார்த்தை சொன்னால் கூட எங்கேஅது அவர்களின் தனி நபர் வாழ்க்கையில் தலை யிடுவது ஆகிவிடுமோ என்று அவர் எண்ணியது போல் தோன்றும்.
.....
சீடர்கள்
............
ஆனால் அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டவர்களுடன் அவர் பழகும் விதம் வேறாக இருக்கும் . அவர்களின் வாழ்க்கைக்குத் தாம் பொறுப்பு என்பதை உணர்த்தும் விதமாக அவர் நடந்து கொள்வார். அவர்களது தவறுகளையும் பலவீனங்களையும் அவர் திருத்தினார். தேவைப்பட்ட இடங்களில் கண்டித்தார். அவர்களின் வாழ்க்கை உருவாவதற்கு என்னென்ன தேவையோ அவற்றைத் தயக்கமின்றிச் செய்தார். அவர்களில் சிலருக்கு மந்திர தீட்சை அளித்தார். சிலருக்கு வேறு வேறு விதமான தீட்சைகளை அளித்தார். சிலரிடம் தமது பார்வை ஒன்றினாலேயே ஆன்மீக ஆற்றலை எழுப்பினார்.
இப்படி அவர் சீடர்களாக ஏற்றுக்கொண்ட மேலை நாட்டினர் மிகச் சிலரைப் பற்றித் தான் நமக்குத் தெரியும். ஆயிரம் தீவுப் பூங்காவில் அவர் லான்ட்ஸ்பர்க் மற்றும் மேரி லூயி இருவருக்கு சன்னியாச தீட்சை அளித்து அவர்களுக்கு கிரபானந்தர், அபயானந்தர், என்ற பெயர்களை அளித்தார். கிறிஸ்டைனுக்கு பிரம்மச்சரிய தீட்சை அளித்தார். ஆயிரம் பூங்காவில் தங்கியிருந்த மற்றவர்களும் சுவாமிஜியின் ”சீடர்கள்” என்றே குறிப்பிடப் படுகின்றனர். 1896 பிப்ரவரியில் அவர் டாக்டர் ஸ்ட்ரீட் என்பவருக்கு சன்னியாச தீட்சை அளித்துள்ளார். தொடர்ந்த வாரத்தில் பல இளைஞர்களும் பெண்களும் அவரிடம் மந்திர தீட்சை பெற்றுள்ளனர். இதே மாதத்தில் தான் அவர் குட்வினுக்கு பிரம்மச்சரிய தீட்சை தந்தார். சேவியர் தம்பதிகள் அவரது சீடர்களே. நிவேதிதை அவரது மேலை நாட்டுச் சீடர்களில் முதன்மையானவர் என்றாலும் அவரது தீட்சைகள் இந்தியாவில் நடைபெற்றன. இவர்களைப்போல் இன்னும் ஓரிருவரைப் புறவுலகிற்குத் தெரிந்திருக்கலாம்.
…
எல்லோரும் பிராமணரே!
.......................................
தேவி என்னை இந்த வினோத உலகத்தில் கொண்டு வந்து போட்டிருக்கிறாள். இவர்களும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. நானும் இவர்களைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் நீண்ட நாட்கள் இங்கே தங்கிய பிறகு ஒன்று எனக்குத் தெரிகிறது. மேலை நாட்டிலும் நான் சந்தித்த சிலர் என்னுடையவர்கள், எனது பணியில் எனக்கு உதவி செய்யவே இங்கு உள்ளார்கள்” என்று ஒருமுறை சுவாமிஜி தம்முடன் பழகிய மேலை நாட்டினரைப் பற்றி கூறினார்.
இவர்களில் உண்மையில் சுவாமிஜியின் சீடர்கள்” எத்தனைபேர்?
ஒரு முறை கல்கத்தாவில் சுவாமிஜியிடம் அவரது சீடரான பிரிய நாத், சுவாமிஜி, உங்களுக்கு மேலை நாட்டில் எத்தனை சீடர்கள். இரண்டாயிரம் மூவாயிரம் இருக்குமா? என்று கேட்டார்.
சுவாமிஜி-
ஒரு வேளை அதைவிட அதிகமாக இருக்கலாம்.
பிரியர்-
அவர்கள் எல்லோருக்கும் நீங்கள் மந்திர தீட்சை அளித்தீர்களா?
சுவாமிஜி- ஆம்
பிரியர்-
அவர்கள் பிரணவ மந்திரத்தை ஜபிக்கவும் அனுமதி கொடுத்தீர்களா?
சுவாமிஜி- ஆம்.
பிரியர்-
அது எப்படி சுவாமிஜி? பிரணவத்தை ஜபிக்க சூத்திரர்களுக்கு உரிமை இல்லை. பிராமணர்களைத் தவிர யாருக்கும் அந்த உரிமை இல்லை என்று சொல்கிறார்களே! மேலை நாட்டினரோ சூத்திரர்கள் கூட இல்லை, அவர்கள் மிலேச்சர்கள்.
சுவாமிஜி- என் சீடர்கள் எல்லோரும் பிராமணரே.
நியமங்களுடன் அவர் தீட்சை அளித்தவர்களே சீடர்கள் என்று பார்த்தால் 100பேரைக் கூட நமக்குத்தெரியாது.ஆனால் சுவாமிஜியோ தமது சீடர்கள் 3000-க்கும் மேல் என்று கூறியுள்ளார். இதனை எப்படிப் புரிந்து கொள்வது? தீட்சை என்பது வெறும் ஒரு மந்திரத்தைச்சொல்லிக்கொடுப்பது மட்டும் அல்ல. சீடனுள் ஓர் ஆன்மீக ஆற்றலைப் பாய்ச்சுவதே உண்மையான தீட்சை. சுவாமிஜியின் வாழ்க்கையில் மிகவும் பங்கு கொண்டு அவருக்குப் பல உதவிகளைச்செய்த சிலர் உள்ளார்கள். அவர்களுக்கு அவர் சாஸ்திர முறைப்படியுள்ள எந்த தீட்சையும்கொடுத்ததாகத் தெரியவில்லை. உதாரணமாக பேராசிரியர் ரைட், ஹல் சகோதரிகள், மிசஸ் பாக்லே, கர்ன்ஸி தம்பதிகள், லெக்கட் தம்பதிகள், டாக்டர் லூயி ஜி, ஜேன்ஸ், மீட் சகோதரிகள், அவர்களுக்கெல்லாம் அவர் அருள் புரியவில்லையா? அவர்களை அவர்தம்முடையவர்களாக ஏற்றுக் கொள்ளவில்லையா? ஏற்றுக் கொண்டார் என்பதே இதற்கு பதில்.
இது பற்றி ஒரு முறை சுவாமிஜி, சாதாரண ஆச்சாரியர்கள் ஆன்மீக ஆற்றலை மந்திரத்தின் மூலம் அளிப்பார்கள். ஆனால் ஜகத் குருவாக, உலக குருவாக இருப்பவர்கள் மந்திரத்தைப் பயன்படுத்துவதில்லை” என்று கூறினார்.
இதனை விளக்குகிறார் மேரி லூயி பர்க். நியமங்களும் நிஷ்டைகளும் இல்லாமல் ஒருவரிடம் தமது ஆன்மீக ஆற்றலை ப் பாய்ச்ச சுவாமிஜியால் இயலாதா என்ன? அவர் தமது ஆசிகளை அளித்தார். ஒரு வேளை, சில உபதேசங்களை அத்திருப்பார். ஆனால் தம்மிடம் வந்தவர்களின் சுமைகளை எல்லாம் அவர் ஏற்றுக்கொண்டார். அவர்களிடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தம்மிடம் பணிவாக இருக்க வேண்டும், தமது போதனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் மூட அவர் எதிர்பார்க்கவில்லை. அளிக்க வேண்டியதை மட்டும் அளித்து விட்டு அவர் தம் போக்கில் சென்றார். ஒரு வேளை அவர் ஒரு மந்திரத்தைக்கூட அளித்திருக்க மாட்டார். ஒருவரைப் பற்றி தாம் அறிய வேண்டியதை ஒரு பார்வையிலேயே அறிய வல்லவர் அவர். ஒரு பார்வை, ஒரு ஸ்பரிசம்,- இவற்றாலேயே அவர் ஆன்மீக ஆற்றலை அளித்தார். அந்த ஆற்றல் அவர்களுக்குள் அற்புதங்களை விளைத்தது, முக்தியின் பாதையில் அவர்களை அழைத்துச் சென்றது.
மந்திர தீட்சை கொடுத்து சிலரை ஆட்கொண்டார். கொடுக்காமலும் பலரை ஆட்கொண்டார். அவரது சீடர்கள் எத்தனை ஆயிரங்களோ அது அவருக்கு மட்டுஆம தெரியும். அவர்களில் சிலரை, குறிப்பாக, பின்னாளிலும் அவரது பணியுடன் தம்மை இணைத்துக்கொண்ட சிலரைப் பற்றி பார்ப்போம்.
....
ஜோசையா ஜான் குட்வின்
....................
இவரைப் பற்றி பல இடங்களில் கண்டோம். சுவாமிஜியின் சொற்பொழிவுகளை எழுதியதால் சுவாமிஜியின் கணபதி” என்று இவரைக் குறிப்பிடுகிறார் பிரேமானந்தர். திடீரென வானில் மின்னி மறையும் எரி நட்சத்திரம் போல் சுவாமிஜியின் வாழ்க்கையில் திடீரென வந்து மறைந்தார் இவர்.1895 டிசம்பரில் சுவாமிஜியின் சொற்பொழிவுகளைக் குறிப்பெடுக்க சுருக்கெழுத்தாளர் தேவை என்று விளம்பரம் செய்யப் பட்டது. அந்த விளம்பரத்தின் வாயிலாக சுவாமிஜி யின் வாழ்க்கையில் இணைந்தார் குட்வின்.
1896 பிப்ரவரியில் சுவாமிஜி குட்வினுக்கு பிரம்மச்சரிய தீட்சை அளித்தார். அவரதுவாழ்க்கை சுவாமிஜியின் வாழ்க்கையைப் பின்பற்றுவதாக இருந்தது. சுவாமிஜி அதிகமாக உழைத்த போது குட்வினும் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது. சொற் பொழிவுகளைக் குறிப்பெடுக்க அவர் ஏழு நோட்டு புத்தகங்களைப் பயன் படுத்தினார்.
சுவாமிஜியின் சீடரான சேவகராக விளங்கிய குட்வினிடம் தேச பக்தி மிகுந்து விளங்கியது. ஆங்கிலேயர்களையோ ஆங்கில அரசையோ சுவாமிஜி விமர்சிப்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு நாள் இங்கிலாந்து மன்னரான ஏழாம் எட்வர்ட்டின் குதிரை, ஒரு பந்தயத்தில் வென்றது பற்றி பேச்சு வந்தது. குட்வின் அது பற்றி மிகவும் பெருமையாக சுவாமிஜியின் சகோதரராகிய மகேந்திரரிடம் பேசிக்கொண்டிருந்தார். சுவாமிஜி அங்குமிங்குமாக நடந்தவதறே, குட்வின் குதிரையைப் புகழும்போதெல்லாம் முகத்தைக்கோணுவதும் அழகு காட்டுவதுமாக கேலி செய்து கொண்டிருந்தார். சுவாமிஜியின் போக்கை உணர்ந்திருந்த குட்வின் எழுந்து சுவாமிஜியின் முன் மண்டியிட்டு, கூப்பிய கைகளுடன் சுவாமிஜி, நீங்கள் என்ன விமர்சிக்க வேண்டுமோ, கேலி செய்ய வேண்டுமோ அனைத்தையும் இந்த ஏழை குட்வினின் மீது செய்யுங்கள். குட்வின் உங்கள் சீடன், உங்கள்சேவகன், ஆனால் தயவு செய்து அரச குடும்பத்தைப் பற்றி எதுவும் கூறாதீர்கள், அதனை இந்த நாட்டில் யாரும் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். தயவு செய்து என்னிடம் இரக்கம் காட்டுங்கள்” என்று கூறினார். குட்வினின் ராஜ பக்தி அனைவரையும் ஸ்தம்பிக்க ச் செய்தது.
மற்றொரு நிகழ்ச்சியிலும் குட்வினின் ராஜ விசுவாசத்தைக் காண முடியும். இங்கிலாந்திற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட போரைப் பற்றி ஒரு நாள்பேச்சு வந்தது. ஆங்கிலேயர்களின் வீரத்தால் தான் பிரிட்டிஷ் அரசு நிறுவப் பட்டது. எனவே அதனை அவர்கள் கட்டிக் காக்கவும் செய்வார்கள், என்று குட்வின் கூறினார். சுவாமிஜிக்கு இது பிடிக்கவில்லை.ஏனெனில் உண்மை வரலாறு அதுவல்ல. உண்மையை சுவாமிஜி கூற ஆரம்பித்தார். சீனப்போரில் ஆகட்டும், அல்லது வேறு எந்தப்போரிலும் ஆகட்டும், ஆங்கிலேயர்கள் பெரிதாக என்ன செய்து விட்டார்கள்? எங்கள் இந்திய வீரர்கள் தான் எங்கும் சென்று போரிட்டனர், வென்றனர். பிரிட்டிஷ் அரசை உருவாக்குவதற்காக ரத்தம் சிந்தினர். வெற்றியை ஆங்கிலேயர்களுக்குக் கொடுத்தனர். இந்திய ரத்தத்தாலும் இந்தியப் பணத்தாலும் தான் இந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உருவாகியுள்ளது. நீங்கள் ஆங்கிலேயர்கள் என்ன செய்து விட்டீர்கள்,? இந்தியர்கள் சம்பாதித்தார்கள், நீங்கள் சாப்பிடுகிறீர்கள்?
இல்லை சுவாமிஜி, போர் செய்வது எப்படி என்றே உங்கள் மனிதர்களுக்குத்தெரியாது” என்றார் குட்வின். அவ்வளவு தான், சுவாமிஜி சரமாரியாக ப்பொழிய ஆரம்பித்தார். எங்கள் இந்தியர்களுக்கா போரிடத் தெரியாது? கிரேக்க நாட்டின் அலெக்சாண்டர் பெர்சியாவை வென்று, ஆணவத்தால் இறுமாப்புற்று , இந்தியாவின் மீது படையெடுத்துவந்தபோது அவரை எதிர்த்தது யார்? புாரஸ் என்ற இந்துமன்னன் தானே! அர்பேலா போரில் பாரசீக மன்னன் தேரியஸ் கொடோம்மனஜுக்கு உதவியது இந்தியப் படை! அதன் காரணமாகத் தான் அலெக்சாண்டர் இந்தியர்களுடன் போரிட வேண்டும். என்றே முடிவு செய்தார். நீ என்னடாவென்றால் இந்தியர்களுக்குப்போரிடத்தெரியாது என்கிறாய்! ஆனால் ஒன்று, ஆங்கிலேயர்களின் நம்பிக்கைத் துரோகமும் , நன்றி மறப்பதும் இந்தியர்களுக்குத் தெரியாது தான்! வீர உணர்வு நிறைந்ததவர்கள் இந்துக்கள். சிறப்பு வாய்ந்தது, பெருமை மிக்கது என்றெல்லாம் நீங்கள் பெருமையடித்துக் கொள்கின்ற உங்கள் இனம் இந்தியாவை வஞ்சனை மூலம் தானே கையகப்படுத்தியது! இந்தியாவைக் கீழடக்கிப்பெற்ற இந்தியச் செல்வத்தினால் தான் உங்கள் இனம் வளர்ந்தது. இந்தியர்கள் தங்கள் மயக்கத்தை உதறி, தூக்கத்திலிருந்து எழும்போது உங்களை ஓர் எலுமிச்சப் பழம்போல் பிழிந்து விடுவார்கள்.
குட்வினும் விட வில்லை, நீங்கள் உயர்ந்தவர் தான், சந்தேகமில்லை, ஆனால் உங்கள் மக்கள் தங்களையே ஆளத் தெரியாதவர்கள். இந்தியாவை ஆள்வதற்கு மிகச் சிறந்தவர்கள் நாங்கள் ஆங்கிலேயர்களே” என்றார் அவர். சுவாமிஜி மேலும் ஆத்திரவசப் பட்டவராகத் தொடர்ந்தார்.
சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த மெகஸ்தனிஸ் அன்று நிலவிய சிறப்பான பஞ்சாயத்து ஆட்சி முறையைப் பற்றி எழுதியுள்ளார். அன்று திருட்டு கிடையாது, மக்கள் உண்மையை மதித்தனர். இன்றும் ஆங்கிலேய ஆதிக்கம் நுழையாமல் தேசிய ஆட்சி நடைபெறுகின்ற இடங்களில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பிரச்சனைகளும் குறைவாக உள்ளன, தங்கள் சொந்த நாட்டை வளப் படுத்துவது ஒன்றையே குறியாகக்கொண்டு தான் ஆங்கிலேயர்கள் செயல் படுகின்றனர். இதில் உங்கள் ஆட்சியின் பெருமையை நீ கூறிக்கொள்கிறாய்!
சுவாமிஜியும் குட்வினும் பேசிக்கொண்டது பற்றி மகேந்திரர் எழுதுகிறார். குட்வின் இந்திய வரலாற்றையோ ஆங்கில வரலாற்றையோ ஆழ்ந்து கற்றவர் அல்ல, செய்தித்தாள்களிலிருந்து பெற்ற அறிவு மட்டுமே அவருக்கு இருந்தது. எனவே சுவாமிஜி உண்மை வரலாற்றைக் கூறியபோது அவருக்குத் திகைப்பாக இருந்தது. சுவாமிஜியை எதிர்த்து அவர் இப்படி பல விஷயங்களைக் கூறினாலும் நாளுக்கு நாள் சுவாமிஜியின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை வலுப்பட்டது
குழந்தை போல் சுவாமிஜி!
...................................
சில வேளைகளில் குட்வின் தமது சொற்பொழிவுகளைப் பற்றி கூறுவதைக்கேட்டு குழந்தைபோல் ரசிப்பார் சுவாமிஜி. ஒரு நாள் குட்வின், டெட்ராய்ட்டில் தான் மிகப் பெரிய கூட்டம்! ஏறக்குறைய 6, 000 பேர் வந்திருந்தனர்! அன்று உங்கள் சொற்பொழிவு பிரமாதம்! மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஏதோ சக்தியிலிருந்து புறப்பட்டவை போல் வார்த்தைகள் வெளிவந்தன. ஆனந்தத்தால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும்போல் இருந்தது” என்று கூறினார். குட்வினின் மகிழ்ச்சியைக் கண்டு தாமும் மகிழ்ந்தார் சுவாமிஜி.
சிலவேளைகளில் சுவாமிஜி உயர்ந்த உணர்வுத் தளங்களிலிருந்து பேசுவார். இதனால், சொற்பொழிவு முடிந்த பிறகு, தாம் சொற்பொழிவில் என்ன பேசினோம், அதனைப் பார்வையாளர்கள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்பதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்காது. இந்த வேளைகளில் குட்வின், சுவாமிஜி” இன்று நீங்கள் பிரமாதமாகப் பேசினீர்கள், என்று எடுத்துக் கூறுவார். சுவாமிஜியும் ஒரு குழந்தை போல் , ஓ, அப்படியா! நான் என்ன பேசினேன்? என்ன பேசினேன்? என்று கேட்பார். குட்வின் அன்றைய சொற்பொழிவின் சுருக்கத்தைக் கூறுவார். சுவாமிஜி மிகவும் மகிழ்வார். இவற்றையெல்லாம் எழுதி வைத்துக்கொள். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பார்.
சுவாமிஜி மேலை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய போது குட்வினும் உடன் வந்தார். பின்னர் பிரம்மவாதின் வேலைகளுக்காக 1897 ஜுலையில் சென்னைக்கு வந்தார். 1898 மார்ச்சில், ஒரு வேளை சென்னை கோடை வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக, ஊட்டிக்குச்சென்றார் அவர். கிரிக்கெட்டில் தீவிர ஆர்வம் கொண்ட அவர் ஒருநாள் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடியே ஒரு கிரிக்கெட் போட்டியைக் கண்டு களித்தார். அதன் விளைவாக ஏற்பட்ட காய்ச்சல் கடைசியில் அவரது உயிரைப் பறித்தது. அப்போது குட்வினுக்கு வயது 28 தான்.
...
ஹேல் குடும்பம்
................
ஹேல் குடும்பமும், குறிப்பாக நான்கு சகோதரிகளும் சுவாமிஜிக்கு அமெரிக்காவில் ஒரு பேறாக வாய்த்தனர். நான்கு சகோதரிகளாகிய உங்களுக்கு நான் என்றென்றும் கடன் பட்டுள்ளேன். அமெரிக்காவில் எனக்கு என்னென்ன கிடைத்தனவோ அவை அனைத்தும் உங்களால் தான் கிடைத்தன” என்று சுவாமிஜி எழுதும் அளவிற்கு அவர்கள் அவரது வாழ்வில் இடம் பெற்றிருந்தனர்.
ஹேல் குடும்பத்தின் தலைவர் ஜார்ஜ் ஹேல். சுவாமிஜி சந்திக்கும்போது அவருக்கு வயது 64. இரும்பு கம்பெனி ஒன்றின் பற்கு தாரதாக இருந்தார் அவர். அவரை சுவாமிஜி ஃபாதர் போப்” என்று அழைத்தார். சுவாமிஜியின் பணிகளைக் குடும்பத்தின் மற்ற அங்கத்தினருடன் இவர் பகிர்ந்து கொண்டார்.
அடுத்தவர் குடும்ப தலைவியாகிய மிசஸ் எலன் ஹேல். சுவாமிஜி சந்திக்கும்போது அவரது வயது 56. உயர் குடிப் பெண்களுள் ஒருவரான அவர் பல தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருந்தார். கிறிஸ்தவ மதத்தின் பிரெஸ்பிடீரியன் மற்றும் கிறிஸ்தவ விஞ்ஞானப் பிரிவுகளில் அவருக்குத்தொடர்பு இருந்தது. பொறுமைக்கு அவர் ஓர் உதாரணமாகத் திகழ்ந்தார். சுவாமிஜியின் அமெரிக்கப் பணிகளுக்கு ஆரம்ப காலத்தில் ஒரு மையமாக விளங்கியது ஹேல் குடும்பம். அதிலும் மிசஸ் ஹேல் ஒரு தாயாகவே சுவாமிஜியின் அனைத்துத்தேவைகளையும் கவனித்துக் கொண்டார். சுவாமிஜி இவரை ” மதர் சர்ச்” என்று அழைத்தார்.
அடுத்தது ஹேல் சகோதரிகள்- மேரி ஹேல், ஹேரியட் ஹேல், ஹேரியட் மெகின்ட்லி, இசபெல் மெகின்ட்லி. சுவாமிஜி சந்திக்கும்போது மேரிக்கு 28 வயது. ஹேரியட்டிற்கு 23 வயது.பணக்காரப் பெண்கள் சம்பளத்திற்கு வேலை பார்ப்பதைத் தவிர்த்த காலம் அது. எனவே இருவரும் வேலைக்குச்செல்லவில்லை. இருவரும் நன்றாகபியானோ வாசிப்பார்கள். பியானோ சகோதரிகள்” என்று பெயர் பெறவும் செய்திருந்தார்கள். இருவரின் திருமண வாழ்வும் வெற்றிகரமாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சுவாமிஜியின் கால்த்திலேயே ஹேரியட் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அது நிலைக்க வில்லை. மேரி, சுவாமிஜியின் மறைவிற்குப் பிறகு 1902- இல் 72 வயது இத்தாலிய செல்வந்தர் ஒருவருக்கு வாழ்க்கை ப்பட்டார். கணவரின் 95 வயது வரை அவரைக் கவனித்துக்கொண்டார். சகோதரிகள் இருவருமே சுவாமிஜியை ஒரு மூத்த சகோதரனாகக் கருதினர். அவரது ஆன்மீக உயர்வையோ அவரது செய்தியையோ பற்றி அவர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.சுவாமிஜியும் ஒரு சகோதர உணர்விலேயே அவர்களுடன் பழகினார்.
ஹேரியட் மெகின்ட்லி, இசபெல் மெகின்ட்லிஇருவரும் ஹேல் குடும்பத்திலேயே வாழ்ந்தனர். ஜார்ஜ் ஹேலின் சகோதரி மகள்கள் இவர்கள். சிறு வயதிலேயே தாயை இழந்தனர். பங்குச் சந்தை வீழ்ச்சியில் பணத்தை இழந்த தந்தையின் மறைவிற்குப் பிறகு இவர்கள் ஹேல் குடும்பத்தில் வாழத் தொடங்கினர். இவர்களுக்கென்று பணம் எதுவும் இல்லாததால் வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருந்தனர். அதற்காக மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வந்தனர். சுவாமிஜியைச் சந்தித்த போது ஹேரியட்டின் வயது 32. இசபெல் இன்னும் இளையவராக இருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஹேல் குடும்பத்திலுள்ள மற்றொருவர் ஹேலின் மகனான சாம். சுவாமிஜி அவரை ” ப்ரதர் சாம்” என்று அழைத்தார். இவர் மேரி ஹேலை விட நான்கு வயது சிறியவர். ஜார்ஜ் ஹேலின் மற்றொரு சகோதரி மிசஸ் ஜேம்ஸ் மாத்யூஸ். இவரை சுவாமிஜி ” மதர் டெம்பிள்” என்று அழைத்தார்.
இவர்கள் அனைவரும் சுவாமிஜிக்குமிகவும் நெருங்கியவர்களாக இருந்தனர். ஆனாலும் யாரும் சுவாமிஜியைக் குருவாகக் கருத வில்லை. அவர்களில் சுவாமிஜிக்கு மிகவும் நெருங்கியவராக இருந்த மேரி ஹேல், சுவாமிஜியை மற்றவர்கள் ஒரு குருவாகக் கொண்டாடுவதை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இதுவிஷயமாக அவருக்கும் நிவேதிதைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது பற்றி ஏற்கனவே கண்டோம்.
ஹேல் குடும்பத்தினரைப் பொறுத்தவரை, அவர்கள் சுவாமிஜிக்கு உதவுபவர்களாக இருப்பதிலேயே நிறைவு கண்டனர். அவர் மீது அவர்கள் எந்தத் தனி உரிமையும் கொண் டாடவில்லை. சொற்பொழிவுகளும் பயணங்களுமாகக் களைத்து வருகின்ற சுவாமிஜிக்குத்தேவையான ஓய்வை அவர்கள் அளித்தனர்.
அங்கே தங்கியிருந்த போது சக்கிரச்செருப்பு அணிந்து பாய்ந்து செல்லப் பழகினார் சுவாமிஜி. ஃபோனோகிராஃப் அப்போது தான் கண்டு பிடிக்கப் பட்டிருந்தது. ஹேலிடம் அது இருந்தது. அதில் பல முறை தமது குரலைப் பதிவு செய்தும் மகிழ்ந்தார். அவர் ஹேல் சகோதரிகளுடன் கடைகளுக்குச் சென்றார். நாடகங்களுக்குச் சென்றார். ” சார்லியின் அத்தை” என்ற நாடகத்தைப் பார்த்துவிட்டு, சிரித்துச் சிரித்து” என் உயிரே போய்விடும் போல் ஆகிவிட்டது என்று எழுதுகிறார் அவர்.
சுவாமிஜியின் தேவைகளைக் கவனித்து அவரை ஹேல் குடும்பத்தினர் பாதுகாத்திருக்காவிட்டால் ஒரு வேளை அவர் இன்று நம்மிடையே இருந்திருக்க மாட்டார். என்று மெக்லவுட்கூறுவார்.
ஹேல் குடும்பத்தில் மேரி ஹேல் மட்டுமே கடைசி வரை சுவாமிஜியின் சீடர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். நிவேதிதை மற்றும் மெக்லவுடுடன் கடிதப்போக்குவரத்து வைத்திருந்தார். இறுதிக் காலத்தில் ரூ. 48, 500-ஐ பேலூர் மடத்திற்கு எழுதி வைத்துவிட்டு மறைந்தார்.
....
மிஸ் ஜோசபைன் மெக்லவுட்
....................
சுவாமிஜியின் வாழ்வில் அவரது நண்பராக அழியா இடம் பெற்றவர் மிஸ் மெக்லவுட் சுவாமிஜியைவிட ஐந்து வயது பெரியவர் இவர். சுவாமிஜியைச் சந்திக்கும் முன்பே அவருக்கு இந்து மதக் கருத்துக்களில் பரிச்சயம் இருந்தது. பகவத் கீதையைப் படித்திருந்தார் அவர். தமது 44-ஆம் வயதில் தான் அவர் சுவாமிஜியைச் சந்தித்தார். ஆனால் அந்த நாளிலிருந்து தான் தமது வயதையே கணக்கிடுவார் அவர். அதாவது சுவாமிஜியைக் கண்ட நாள் தான் தமது உண்மையான பிறந்த நாள் என்று அவர் கூறுவார். சுவாமிஜியும் இவரைத் தமது நண்பராகவே குறிப்பிட்டுள்ளார்.
சுவாமிஜியிடம் என்னை ஈர்த்தது எது தெரியுமா? அது அவரது எல்லையற்ற தன்மை. அவர் எல்லையில்லாதவராக இரந்தார். மேல், கீழ், பக்கம் என்று அவரை எந்தப் பக்கமும் என்னால் தொட இயலவில்லை. அத்தகைய ஓர் எல்லையற்ற தன்மை அவரிடம் இருந்தது....... எனக்கு முக்தி தருவதற்காகத் தான் சுவாமிஜி அவதரித்தார்” என்று ஆணித்தரமான நம்பிக்கையுடன் கூறுவார் மெக்லவுட்.
சுவாமிஜியின் வாழ்நாளில் மட்டுமல்ல, பின்னாளிலும் பேலூர்மடத்தின் பணிகள் பல வற்றிற்கும் மெக்லவுட் உறு துணையாக இருந்தார். பெரிய பணக்காரியாக இருந்தும் வாடகைக் கார் போன்றவற்றில் பயணம் செய்யாமல் பொது பஸ்களில் செல்வார்” ஏன் தெரியுமா? இப்படி பணத்தை சேமித்தால் சுவாமிஜியின் பணிகளுக்கு உதவலாமே என்று தான்” என்பார் அவர்.
கிரேக்க எழுத்தாளரான நிகோஸ், மெக்லவுடிற்கு அறிமுகமானவர். மெக்லவுட் அளித்த 1500 டாலர்களில் வெளியிட்ட நூல் தான் நிகோஸை 20- ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக உலகிற்கு அடையாளம் காட்டியது. ஒரு நாள் மெக்லவுட் நிகோஸை கேட்டார்.
மெக்லவுட்- நீங்கள் பிரார்த்தனை செய்வதுண்டா? மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கும்போதோ ஆழ்ந்த துயரத்தில் துவளும்போதோ எப்போதாவது நீங்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டதுண்டா?
நிகோஸ்-
இல்லை, நான் பிரார்த்தனை செய்வதில்லை.
மெக்லவுட்-
வேறு என்ன செய்வீர்கள்?
நிகோஸ்-
எழுதுவேன், எழுதுவது எனக்கு மிகுந்த ஓய்வையும் அமைதியையும் தருகிறது.
மெக்லவுட்-
நானும் பிரார்த்தனை செய்வது கிடையாது. சுமைகள் மனத்தை அழுத்தும்போது வெளியில் நடக்கச்செல்வேன்- சாதாரண இடங்களுக்கு அல்ல, பரபரப்பான நகரத்திற்கு! அங்கே விரைகின்ற மக்களின் முகங்களைப் பார்த்து, வாழ்க்கையின் பொருளைத்தேட முயற்சிப்பேன். இல்லாவிட்டால், நற்பணி என்று நான் நினைப்பதைச்செய்வேன். அல்லது சுவாமிஜி எழுதிய அந்த அற்புதமான கடிதத்தைப் படிப்பேன். எனது மனச்சுமை எதுவானாலும் அகன்றுவிடும்.
மெக்லவுடிற்கும் அவரது தோழியான டோராவிற்கும் சுவாமிஜி பிரணவ மந்திர தீட்சை அளித்திருந்தார். எப்படி தியானம் செய்ய வேண்டும்? என்று அவர்கள் சுவாமிஜியைக்கேட்ட போது , ஓம், என்ற மந்திரத்தை ஒரு வாரம். தியானம் செய்யுங்கள். பிறகு என்னிடம் வாருங்கள்” என்றார் சுவாமிஜி. ஒரு வாரத்தில் அவர்கள் திரும்பி வந்தனர். நான் ஓர் ஒளியைக் காண்கிறேன்” என்றார் டோரா. நல்லது, தொடர்ந்து செய்யுங்கள்” என்றார் சுவாமிஜி. இதயத்தில் ஒரு பிரகாசத்தைக் காண்கிறேன்” என்றார் மெக்லவுட். அவரிடமும், நல்லது , தொடர்ந்து செய்யுங்கள் என்றார். அவர் எனக்களித்த உபதேசம் இவ்வளவு தான்” என்று பின்னாளில் கூறினார் மெக்லவுட்.
....
மிசஸ் சாரா புல்
...........
ஒருநாள் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் ஒருவர், புனிதர்” என்பவர் யார்? என்று கேட்டார். பதிலுக்காக அனைவரும் சுவாமிஜியின் முகத்தைப் பார்த்தனர். அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதைக்கேட்க ஆவலுடன் அனைவரும் அமர்ந்திருந்தனர். அங்கே ஓர் ஆழ்ந்த அமைதி நிலவியது. அதனை கலைத்த படி சுவாமிஜி றினார். மிசஸ் சாரா புல், இப்படி சுவாமிஜியால் புனிதையாகக் கருதப் பட்டவர் மிசஸ் சாரா. அதன் பிறகு அவர் ” புனித சாரா” என்று அழைக்கப் பட்டார். சுவாமிஜி இவருக்கு ” தீரா மாதா” ( உறுதி மிக்க தாய்) என்ற பெயரும் அளித்திருந்தார்.
சுவாமிஜியைச் சந்திக்கும் முன்பே இந்திய த் தத்துவங்களில் சாராவிற்கு அறிமுகம் இருந்தது. மோகினி மோகன் சட்டர்ஜி என்பவரிடமிருந்து பகவத் கீதை முறையாகக் கற்றிருந்தார் அவர். சுவாமிஜியை சாரா சந்திக்கும் போது அவருக்கு வயது 40- க்கு மேல் ஆகியிருந்தது. சுவாமிஜி அவரைத் தாயாகக் கருதினார். சாராவும் சுவாமிஜியை மகனாகவே கருதினார். ப ண உதவி, இயக்க ரீதியான உதவி என்று எல்லா வகையிலும் சுவாமிஜிக்குத் துணையாக நின்றார் சாரா. சுவாமிஜியை ஒரு மகன் என்ற முறையில், தேவைப்படும் போது கண்டிக்கவும் அவர் தயங்க வில்லை. சுவாமிஜிக்கும் பேலூர் மடத்திற்கும் என்றல்ல. அபயானந்தர், கிருபானந்தர், குட்வின், நிவேதிதை என்று பலருக்கும் பல நேரங்களில் பண உதவி செய்துள்ளார்.
சிஸ்டர் கிறிஸ்