இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்இந்துமதத்தின் தத்துவங்கள்

தீவிர தியானப் பயிற்சி

தீவிர தியானப் பயிற்சி


பிரம்ம சமாஜ முறைப்படி நரேந்திரர் வழிபாடுகளில் ஈடுபட்டாலும் மற்ற உறுப்பினர்களிலிருந்து வேறுபட்டார்.கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவர் நிச்சயமாக உண்மையான பிரார்த்தனைக்குச் செவிமடுத்து பக்தன் முன் தோன்றுவார். அவரை உணர்வதற்கு ஏதாவது ஒரு வழி இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் வாழ்க்கையே பாழாகிவிடும் என்று உறுதியாக நம்பினார் அவர். ஆனால் அத்தகைய இறைநெறியைப் போதிப்பதில் பிரம்ம சமாஜம் சாதகமாக இல்லை என்பதைச் சிறிது நாட்களில் உணரத் தொடங்கினார் அவர்.

🌸

உண்மையை அறியவேண்டும், இறைவனை உணர வேண்டும் என்ற எண்ணம் அவரிடம்  இந்த நாட்களில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இப்போதிலிருந்து நரேந்திரர் ஒரு புதிய முறையில் தியானப் பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தார். இறைவனை உருவமுடையவராக நினைத்தாலும், உருவமற்றவராக நினைத்தாலும் மனித வடிவையோ குணங்களையோ ஏமாற்றாமல் நம்மால் அவரைத் தியானிக்க முடியாது. இதை உணரும் முன்பு நரேந்திரர், பிரம்ம சமாஜத்தினரின் கொள்கைப்படி  இறைவனை உருவமற்ற, ஆனால் குணங்களுடன் கூடியவராக தியானித்து வந்தார்.,இதுவும் ஒரு விதத்தில் கற்பனை என்று முடிவு செய்து அந்த தியானத்தைக்கைவிட்டு, இறைவா! உன் உண்மையான வடிவத்தைக்காண என்னைத் தகுதியுடையவனாக்கு” என்று பிரார்த்தித்தார். அதன் பின் மனத்திலிருந்து எல்லா எண்ணங்களையும் நீக்கிவிட்டு. காற்றில்லாத இடத்தில் எரியும் தீபச்சுடர் போன்று மனத்தை ஆடாது அசையாது வைத்திருக்கப் பயிற்சி செய்தார். இவ்வாறு சில காலம்  பயின்றதும் அவரது மனம் பரிபூரணமாக அடங்கிவிட்டது. சில  வேளைகளில் அவருக்கு உடலுணர்வும், கால உணர்வும் கூட இல்லாமல் போயின. வீட்டில்  உள்ள அனைவரும் படுக்கச்சென்றபின்  அவர் தம் அறையில் இவ்வாறு தியானிப்பார். பல நாட்களில் இரவு முழுவதும் தியானத்திலேயே கழியும்.

🌸

அதன் காரணமாக ஒரு நாள் நரேந்திரருக்கு அசாதாரணமான அனுபவம் ஒன்று கிடைத்தது. அவர் கூறினார், ஆதாரம் எதுவும் இல்லாமல் மனத்தை ஒரு முகப்படுத்தி நிலைநிறுத்தினால் , மனத்தில் ஒரு வித அமைதிப்பேரானந்தம் ஊற்றெடுத்துப்பெருகும். தியானம் நிறைவுற்ற பின்னரும் அந்த ஆனந்த போதை நீண்ட நேரம் இருக்கும். எனவே இருக்கையை விட்டு உடனடியாக எழுந்திருக்க மனம் வருவதில்லை. அத்தகைய தியான ஆனந்தத்தைச்சுவைக்க த்  தொடங்கியிருந்தார் நரேந்திரர்.

🌸

லட்சிய சாதகர்

🌸

வேடிக்கை. வினோதம், பாட்டு, உடற்பயிற்சி என்று புறத்தளவில் நரேந்திரரின் நாட்கள் கழிந்தாலும், அவரது மனம் இவ்வாறு தியானத்தின் மூலம் உண்மையை அகத்தில் ஆழ்ந்து தேடத்தொடங்கியிருந்தது. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து காத்து, செயல்படுகின்ற ஒரு சக்தி இருக்குமானால்,அந்தச் சக்தியை எத்தனையோ மகான்கள் கண்டு போற்றிப் புகழ்ந்திருப்பது உண்மையானால், அந்த உண்மையை அந்தச் சக்தியை நானும் காணவேண்டும் என்ற எண்ணம்  அவரிடம் தீவிரமாகியது. நேருக்கு நேராக காண்பதைத் தவிர வேறு எந்த நிரூபணமும் அவருக்குப்போதுமானதாக இல்லை. அப்படியானால் அந்த உண்மையைக் காணவேண்டும்.

அதற்கு முதலில் வேண்டுவது என்ன?

அதற்கான தகுதி.

🌸

அந்தத் தகுதிகள் என்னென்ன?

தவம், ஸ்வாத்யாயம், .இறைநாட்டம், இவை மூன்றும்  கிரியா யோகம்” என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்(தப- ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி க்ரியாயோக-யோக சூத்திரங்கள்)

மூன்றும் இயல்பாக கைவரப்பெற்றிருந்ததைக்காண்கிறோம்.

🌸

பிரம்மச்சரியம்

🌸

காமத்தின் வழியில் செல்கின்ற ஆற்றலைக்கட்டுப்படுத்தி, உயர் நோக்கங்களுக்காக ச் செலவிடும்போது அந்த நோக்கம் விரைவில் கைகூடுகிறது. ஆனால் காம ஆற்றலைக் கட்டுப்படுத்துவதும், அதற்கு ஓர்  உயர் திருப்பத்தை அளிப்பதும் அத்தனை எளிதானது அல்ல. அப்படி ஒருவன் செய்து விட்டால்  அது அவனிடம் பிரம்மச்சரிய ஆற்றல் அல்லது மேதை ஆற்றல் என்ற புதிய ஆற்றலை உருவாக்குகிறது. இந்த ஆற்றல் செய்வதற்கு அரியவற்றைச் செய்யவல்லது.இந்த ஆற்றலை அடைந்தே தீருவது என்று முடிவு செய்தார் நரேந்திரர். அதற்கேற்பத் தம்  வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டார். இருப்பினும் ஒரு நாள் கட்டுக்கடங்காமல் அந்தவேகம்  அவரருள் எழுந்தது. அதனை இனித் தலையெடுக்காமல் அடக்கியே தீர்வது என்ற சங்கல்பம் அவருள் எழுந்தது. ஒன்றை நினைத்தால் அதைச்செய்து முடிப்பவர் ஆயிற்றே அவர்! சுற்று முற்றும் பார்த்தார். குளிர்காய்வதற்கான அடுப்பு கனன்று கொண்டிருந்தது. அதன் மீது சென்று அமர்ந்து விட்டார். அந்தப் புண் ஆறுவதற்கு மாதக்கணக்கில் ஆகியது. ஆனால் உடம்பில் புண் ஏற்பட்டதே தவிர மனம் காமம் என்ற பிடியிலிருந்து விடுபட்டது. அதன்பிறகு அவரது வாழ்வில் காமம் என்ற ஒன்றிற்கு இடமில்லாமல் போய்விட்டது. அந்த  இளமையிலேயே தம்மை நாடி வந்தப் பெண்களைத் தாயாக க் கண்டு, அவர்களை விலக்குகின்ற ஆற்றல் அவரிடம் வந்தது. சில நிகழ்ச்சிகளைக் காண்போம்.

🌸

தேர்வு நெருங்கும்போது அருகிலுள்ள பாட்டியின் வீட்டிற்குச்சென்று படிப்பது நரேந்திரரின் வழக்கம்.அந்த வீடு ஒதுக்குப்புறமாக இருந்ததால் அங்கு சத்தங்களும் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களும் கிடையாது. இரவு பகலாகப் படிப்பில் மூழ்கி நாட்கணக்கில் அங்கே தங்கி விடுவார். படிக்க வேண்டிய பாடங்களை முடிக்காமல் அறையை விட்டு வெளியே வருவதில்லை என்று உறுதியும் எடுத்துக்கொள்வார்.

🌸

படிப்பின் இடைவேளைகளில் நரேந்திரர் மெல்லிய குரலில் பாடுவது வழக்கம். அந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் ஓர் இளம் விதவை வாழ்ந்து வந்தாள். அவள் தனது வீட்டின் ஜன்னல் அருகில் நின்று கொண்டு நரேந்திரர் பாடுவதைக்கேட்டு வந்தாள். அவரது குரலின் இனிமை மற்றவர்களைப்போலவே அவளையும் கவர்ந்தது. அவள் மெள்ள மெள்ள அவரது பாடல்களில்  ஈடுபடத்தொடங்கினாள். அவர் பாடத்தொடங்கினால் தன் வீட்டு ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு கேட்பாள். கடைசியில் அவள் அவரையே நேசிக்கத் தொடங்கினாள். இது எதுவும் நரேந்திரருக்குத்தெரியாது. ஒரு நாள் இரவு வேளையில் அவள் துணிந்து அவரது அறைக்கே வந்துவிட்டாள். அவளது நோக்கமோ தோற்றமோ எதுவும் நரேந்திரரைச் சலனப்படுத்தவில்லை. அவர் அவளது பாதங்களில் விழுந்து வணங்கி, தாயே! இந்த நேரத்தில் இங்கு வருவது தவறல்லவா? உடனடியாக இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என்று கூறினார். அவரது திட மனம் அவளை நாணச் செய்தது. உடனடியாக அவள் அங்கிருந்து சென்றுவிட்டாள். நரேந்திரர் அதன்பிறகு தாம் படிக்கும் அறையை மாற்றிக்கொண்டார்.

🌸🌸

புனிதம்

🌸

 நரேந்திரரின் புனிதம் அந்த நாட்களிலேயே  பிறர் கண்டு போற்றதக்கதாக இருந்தது. ஒரு முறை பிரபல நாடக ஆசிரியரான கிரீஷின் ”வில்வ மங்களா்” என்ற நாடகம் நடைபெற்றது. கிரீஷ் நரேந்திரருக்கு அறிமுகமானவர்.நரேந்திரருக்கு இசையில் இருந்த தேர்ச்சியை அறிந்திருந்த அவர் அவரை மேடைக்கு அழைத்துச்சென்று ஓரிரு பாடல்களைப்பாடுமாறு கேட்டுக்கொண்டார். நரேந்திரர் தம்புராவை மீட்டி பாடத் தொடங்கினார். ஒப்பனை அறையிலிருந்த நடிகைகளுக்கு அந்தப் பாடல் கேட்டது. ஏனோ ஒருவிதமான பயம் கலந்த மரியாதை உணர்வை அந்தப் பாடல் அவர்களிடம்  எழுப்பியது. ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அவர்கள் எழுந்து வந்து, கைகூப்பியபடியே சற்று தள்ளி நின்றனர். அந்த நடிகைகளின் பயத்தை உணர்ந்த கிரீஷ் ஓரிருபாடல்கள் நிறைவுற்றதும் நரேந்திரரை அழைத்துச்சென்று விட்டார்.

🌸

மறு நாள் ஒரு நடிகை கிரீஷிடம் சென்று, அவரைப்பார்த்தால் பெரிய ஆன்மீக சாதகராகத்தோன்றுகிறது. எங்களைப்போன்ற பெண்கள் இருக்கின்ற இடத்திற்கு அவரை அழைத்துவரலாமா? அவரைக்கண்டு எங்கள் மனத்தில் ஏதாவது தீய எண்ணம் தோன்றுமானால் எங்களுக்குக்கதி உண்டா? இந்த உலகம் தான் எங்களுக்கு இல்லை என்றாகிவிட்டது. மறு உலகமும் இல்லாமல் போக வேண்டுமா? என்று கடிந்து கொண்டார். யார் மனத்திலும் அவ்வாறு புனிதத்தை எழுப்புகின்ற புனிதராக அந்த இளமையிலேயே திகழ்ந்தார் நரேந்திரர். என்னிடம் நீ மரியாதையும் விசுவாசமும்  எப்படி காட்ட முடியும் தெரியுமா? உன் தூய வாழ்க்கை மூலம் தான்” என்று ஒருமுறை புவனேசுவரி தேவி கூறியிருந்ததை அவர் முற்றிலுமாக வாழ்ந்து காட்டினார்.

🌸

அடுத்த தகுதி ஸ்வாத்யாயம் . இது பொதுவாக படிப்பு, மந்திரஜபம் என்றெல்லாம் விளக்கப்படுகிறது. ஆனால் இதன் சிறப்பான பொருள் ”தன்னை ப் படித்தல், அதாவது சுயஆராய்ச்சி என்பதாகும். இதனை ஆன்மீக வாழ்விற்கு மிக முக்கியமான ஒரு நிபந்தனையாக வைக்கிறார் அன்னை ஸ்ரீசாரதாதேவி, கப்பலுக்குச்சுக்கானபோல சுய ஆராய்ச்சி ஒரு சாதகனை வழிநடத்துகிறது  என்கிறார் அவர். நான் யார்? எனது மனப்பாங்கு என்ன? நான் எதைத்தேடுகிறேன்? அதை அடைவதற்கு உரிய வழியில் செல்கிறேனா? இத்தகைய கேள்விகளை ஆழ்ந்து சிந்திப்பது மிகவும் இன்றியமையாதது. இவற்றிற்கு விடை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தினமும் சிறிது நேரம் இவற்றைச்செய்வது மிகவும் அவசியம்.

🌸

நரேந்திரரின் வாழ்வில் இந்த சுய ஆராய்ச்சி என்பதும் இயல்பிலேயே ஊறியிருந்தது. உண்மையை அடைவது தான் நோக்கம் என்பது அவருக்கு மிகவும் தெளிவாக இருந்தது. உண்மையை அடைய இரண்டு பாதைகளைக் காட்டுகிறது இந்து மதம்.................

🌸

ஏற்றுக்கொள்ளுதல்-(ப்ரவ்ருத்தி)

🌸

மாணவ நிலை(பிரம்மச்சரியம்), இல்லறநிலை(கார்ஹஸ்த்யம்), அகத்துறவு நிலை(வானப்ரஸ்தம்), புறத்துறவு நிலை( சன்னியாசம்) என்று அனைத்தின் வழியாகவும் சென்று அவை தரும் அனுபவங்களை ஏற்று பக்குவப்பட்டு அறுதி உண்மையாகிய இறைவனை அடைதல்..

🌸

2) துறந்து செல்லுதல்(நிவ்ருத்தி)-

🌸

உலகையும் அது தரும் அனுபவங்களையும் ஒதுக்கி, புலன்களைக் கட்டுப்படுத்தி,இளமையிலேயே துறவு வாழ்க்கையை ஏற்று இறைவனை நாடுதல்.

இரண்டாவது பாதை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மிகவும் கடினமானது. ஆனால் நரேந்திரரை இந்த  இரண்டாவது பாதை தான் மிகவும் கவர்ந்தது. இந்த இரண்டு பாதைகளையும் பற்றி அவர் ஆழ்ந்து சிந்திப்பார். ஆராய்ந்து பார்ப்பார். அவரது ஆராய்ச்சி வெறும் கற்பனை அளவில் மட்டும் நடைபெறுவது அல்ல. அவர் தூங்கச்செல்லும்போது இந்த இரண்டு காட்சிகளும் ஒரு நாடகம் போல் அவரது கண்முன் தோன்றும். 

🌸

முதலாவது உலகியல் இன்ப வாழ்க்கையின் ஒரு தோற்றம், செல்வச்செழிப்பு மிக்க வாழ்க்கை, பெரிய வீடு. வேலைக்காரர்கள் , நல்ல மனைவி, குழந்தைகள், பெயர், புகழ் என்று அனைத்தும் நிறைந்தது. இரண்டாவதாக உலகைத்துறந்த ஒரு துறவியின் தோற்றம், கையில் எதுவும் இன்றி, இறைவனை முழுமையாகச் சார்ந்து, ஊர்ஊராகத் திரிந்து, பிச்சை உணவு ஏற்றுஉண்டு, ஏதோ மரத்தடியில் இரவைக் கழித்து வாழ்கின்ற வாழ்க்கை.

இந்த இரண்டு சித்திரங்களும் அவரது மனக் கண்முன் சிறிது நேரம் போட்டியிடுவது போல் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு வர முயற்சிக்கும். அவர் அகத்தில் ஆழ்ந்து செல்லச்செல்ல முதல் சித்திரம் மங்கத்தொடங்கும். துறவியின் தோற்றம் அவரது மனத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும். நாட்பட நாட்பட துறவு வாழ்க்கை அவரது மனத்தில் உறுதியாகத் தொடங்கியது.

🌸

துறவு வாழ்க்கை என்பது வழி மட்டுமே, அடையவேண்டிய லட்சியம் ஆகாது. இல்லற வாழ்க்கை என்பது நீரோட்டத்தின் போக்கிலேயே செல்வது என்றால் துறவு வாழ்க்கை என்பது அதனை எதிர்த்து நீச்சலடிப்பது.தகுந்த  ஒருவரின் துணையின்றி இதில் வெற்றி கிடைப்பது அரிது. அந்த ஒருவரையே நமது சாஸ்திரங்கள் குரு என்று அழைக்கின்றன. அவர் உண்மையை அறிந்தவராக இருக்க வேண்டும்ஃ உண்மை என்ற ஒன்று இருக்குமானால் அதனை நேருக்குநேர் கண்டவராக இருக்கவேண்டும்.

🌸

இப்போது நரேந்திரருக்குத் தேவையாக இருந்தது அப்படி  உண்மையை நேருக்குநேர் கண்டிருக்கிறேன்.என்று சொல்லத்தக்க ஒருவர். எனவே அறிஞர்கள், தத்துவ வாதிகள், மகான்கள் என்று யாரைப் பற்றி கேள்விப் பட்டாலும் அவர்களைச்சென்று காண்பது அவரிடம் இத்தகைய கேள்வியை கேட்பதும் நரேந்திரரின் வழக்கம் ஆயிற்று.

🌸

இந்த கேள்வியுடன் நரேந்திரர் அலைந்து கொண்டிருந்த போது தான் அவர் ஒரு நாள் மகரிஷி தேவேந்திர நாத் தாகூரைச் சந்திக்க நேர்ந்தது. பிரம்ம சமாஜத்தை வளர்த்த முன்னோடிகளுள் மிக முக்கியமானவர் இவர். எனவே அன்றைய அறிஞர்களின் மத்தியில் பெரும் மதிப்பு பெற்றிருந்தார். பலரால் ஆன்மீக குருவாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார். அவரைக் காண நரேந்திரர் தமது நண்பர்களுடன் சென்றார்.நரேந்திரரின் ஆர்வத்தையும் துடிப்பையும் கண்ட அவர் ஆழ்ந்து தியானம் செய்யுமாறு கூறினார். ஆனால் நரேந்திரருக்கு அது அவ்வளவு தூரம் மனத்தில் பதியவில்லை. எப்படியாவது ஒரு நாள் அவரைத் தனிமையில்  சந்திக்கவேண்டும் என்று முடிவு செய்தார் அவர்.

🌸

கங்கை நதியில் ஒரு படகு வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த  மகரிஷியை ஒருநாள் சென்று சந்தித்தார் நரேந்திரர். முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று அவர் சென்று நின்றதும் மகரிஷி ஒரு கணம் திகைத்துவிட்டார். அவரது திகைப்பு மறையும் முன்னரே நரேந்திரரிடமிருந்து கேள்வி பிறந்தது, ஐயா , நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா? மகரிஷியால் நேரடியாக எந்தப் பதிலையும் சொல்ல முடியவில்லை. எனவே மகனே, உனக்கு ஒரு யோகியின்  கண்கள் உள்ளன” என்றார். இந்தப் பதில் நரேந்திரருக்குத் திருப்தி அளிக்கவில்லை, பெருத்த ஏமாற்றத்தையே தந்தது.

இருப்பினும் நரேந்திரர் மனம் தளரவில்லை. அறிஞர்கள், மதத்தலைவர்கள் என்று பலரையும் சந்தித்து அவர் இந்தக்கேள்வியைக்கேட்ட வண்ணம் இருந்தார். ஆனால் பதில் என்னவோ கிடைத்தபாடில்லை.

🌸

ஆனால் மகரிஷியைச் சந்தித்தது நரேந்திரரின் தியான வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல் ஆகியது. அன்று மகரிஷி நரேந்திரரையும் நண்பர்களையும் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு பல உபதேசங்களை அளித்தார். நாள்தோறும் தியானம் பழகும் படி கேட்டுக்கொண்டார். நரேந்திரரிடம் யோகியின் அறிகுறிகள் தென்படுவதாகவும், அவர் தியானம்  பழகினால் யோக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள பலன்களை விரைவில் அடையலாம் என்றும் கூறுவார்... அதன் படி நரேந்திரர் முன்னைவிட ஆர்வத்துடன் தியானத்தில்் ஈடுபட்டார். சில நாட்களில் அவர் தியானத்தில் ஆழ்ந்து இரவு முழுவதும் அப்படியே கழிவதும் உண்டு.


திருப்புமுனை

இவ்வாறு தியானத்தில் முதிர்ச்சி பெற்று, உயர்நிலைகளுக்குச்சென்று கொண்டிருந்தது. ஆனாலும் தமக்குவழி காட்டுகின்ற ஒருவருக்கான தேடலை அவர் நிறுத்தவில்லை. உண்மையான முயற்சி வீண்போவதில்லைஅல்லவா? நரேந்திரரின் முயற்சி கனியும் தருணமும் வந்தது. அது 1881 நவம்பர் மாதம். நரேந்திரர் எஃப்.ஏ படித்துக்கொண்டிருந்தார். ஆங்கிலப்பேராசிரியர் விடுமுறையில் இருந்ததால், நரேந்திரரின் ஆங்கில இலக்கிய வகுப்பைக் கல்லூரி முதல்வரான வில்லியம் ஹேஸ்டி நடத்திக்கொண்டிருந்தார்.வோட்ஸ்வொர்த் எழுதிய சுற்றுலா என்ற கவிதை அன்றைய பாடமாக இருந்தது. அதில் வழிப்போக்கன் ஒருவன் இயற்கையை ரசித்து அதில் ஒன்றிக்ரைத்து, பரவச நிலையை அடைந்த பகுதியை அவர் விளக்கிக் கொண்டிருந்தார். பரவச நிலையை எப்படி மாணவர்களுக்குப்புரிய வைப்பது? சாதாரணமான அனுபவங்களைக்கூட, , அதனை அனுபவித்திராத ஒருவருக்கு எடுத்துக்கூறுவது இயலாத ஒன்று. உதாரணமாக, இனிப்பையே சுவைத்திராத ஒருவரிடம் இனிப்பு எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்கூறி விளக்க முடியுமா? இந்த நிலையில் அதிமன அனுபவங்களை விளக்குவது என்பது இயலாத ஒன்றே அல்லவா!

ஹேஸ்டிக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. பரவச நிலை அனுபவத்தை அவர் பெற்றதில்லை என்பது உண்மைதான், ஆனால் பரவச நிலையை மீண்டும், மீண்டும் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற ஒருவரை அவர் அறிந்திருந்தார். அந்த நபர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். உடனேஅவர் மாணவர்களிடம், இந்த அனுபவம் அபூர்வமானது, குறிப்பாக இந்த நாட்களில் மிகவும் அரிதான ஒன்று மனத்தூய்மை, மன ஒருமைப்பாடு இவற்றின் விளைவாக, நீண்ட பயிற்சியின் காரணமாக கிடைக்கின்ற ஆனந்த அனுபவம் அது. அந்த அற்புத அனுபவத்தைப்பெற்ற ஒருவரை நான் கண்டிருக்கிறேன். அவர் தட்சிணேசுவரத்தில் வாழ்ந்து வருகின்ற ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். நீங்களும் அவரைப் பார்த்தால் அதனைப்புரிந்து கொள்ள முடியும்“ என்று கூறினார்.

நரேந்திரரின் இருதய நாளங்களில் ஒன்றை யாரோ மீட்டியது போல் இருந்தது. காரிருள் மண்டிக்கிடந்த அறையில் தவித்துக்கொண்டிருந்த ஒருவனுக்கு நுண் துளை வழியாக சன்னமானதோர் ஒளிக்கீற்று வந்து வழிகாட்டுவது போல் தோன்றியது அவருக்கு!

மனித வாழ்வில் சிலநேரங்களில் சில நிகழ்ச்சிகள் , சில தூண்டுதல்கள் , சில வார்த்தைகள் திருப்புமுனைகளாக அமைகின்றன.” காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே“ என்ற ஒரு வாக்கியம் பெரும் செல்வந்தராக இருந்த  ஒருவரை அனைத்தையும் துறக்கச்  செய்து பட்டினத்தார் ஆக்கியது. நிச்சயதார்த்த நாளன்று உணவிற்கு ஏற்பட்ட கால தாமதம் சதாசிவ பிரம்மேந்திரர் உருவாகக் காரணமாக அமைந்தது. நரேந்திரரின் வாழ்வில் அத்தகைய இரண்டு சம்பவங்களாகத் திகழ்ந்தவை ஸ்ரீராமகிருஷ்ணருடன்  சந்திப்பு மற்றும் தந்தையின் மரணம் ஆகியவை. ஸ்ரீராமகிருஷ்ணருடன் நரேந்திரரின் சந்திப்பு என்பதுஒரு  தெய்வ சங்கல்பம்! அந்தச் சந்திப்பை ப் பார்க்குமுன்  ஸ்ரீாமகிருஷ்ணரைப் பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.


 குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்க்கை சுருக்கமாக...

பாரதத் திருநாட்டின் மூவாயிரம் ஆண்டு ஆன்மீகத்தையும் கலாச்சார பாரம்பரியத்தையும் ஒரு வாழ்வில் வாழ்ந்தவர். என்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரை வர்ணிக்கிறார் ரோமா ரோலா என்ற பிரெஞ்சு அறிஞர். ஸ்ரீராமகிருஷ்ணர் ஆன்மீக வாழ்விற்கு ஓர் அகராதி, அவரது வாழ்க்கையைப் படிப்பதன் மூலம் நமது  ஆன்மீகப் பாரம்பரியத்தை நாம் சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும்.

அவரைப்பற்றியும் அவரது பெருவாழ்வைப்பற்றியும் பல நூல்கள் வந்து விட்டன. எனவே இங்கு நாம் நரேந்திரரின் வாழ்வு எவ்வாறு அவரது வாழ்க்கையுடன் சேர்ந்து ஒரு புதிய செய்தியை உலகிற்குத் தந்தது. புதிய யுகத்தின் அஸ்தி வாரமாக அமைந்தது என்பதை மட்டும் காண்போம். சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளிலேயே ஆரம்பிப்போம்.

கால வெள்ளத்தில் ஆரியரின் பரம்பரையினர் உண்மை லட்சியத்திலிருந்து வீழ்ந்தார்கள், துறவு மனத்தை இழந்தார்கள். கண்மூடித்தனமான பழக்கங்களில் தோய்ந்து அறிவிழந்தார்கள்., வீழ்ச்சியுற்றார்கள்.வேதாந்த உண்மைகளை உய்த்துணரும் ஆற்றலற்றுப்போனார்கள். இதனால்  என்ன நடந்தது? சமய நாடாகிய இந்தியா குழப்பக் குட்டை ஆயிற்று. நிலையான வேதமாகிய சனாதன தர்மத்தில் மக்கள் நம்பிக்கை இழந்தனர்.ஆன்மீக லட்சியத்தின் பல்வேறு அம்சங்களையும் ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த சனாதன மதம் பிளவுபட்டு பல்வேறு மதங்களாகக் காட்சியளித்தது. இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டு நின்று, பகை, பொறாமை, சகிப்பின்மை, குறுகிய இனவெறி ஆகிய நெருப்பிற்கு இரையாகி அழிவதற்கு ஒன்றையொன்று முந்தின. உந்தின. பாரதத் திருநாட்டை அவை நரகமாக்கிவிட்டது போல் தோன்றியது.

இந்த நிலையில் இந்தியா இருந்தபோது தான் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்  அவதரித்தார். ஆரியர்களின் உண்மைச்சமயம் எது என்பதை எடுத்துக்காட்டினார். இந்து மதம் பல்வேறு கிளைகளுடனும் விழுதுகளுடனும் படர்ந்து நாடு முழுவதும் விரிந்திருந்தாலும் அதன் உண்மையான ஒருமை எங்குள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். எண்ணற்ற சமயப் பிரிவுகளாலும், வெளிப்பார்வைக்கு முரண்பட்டவைபோல் தோன்றிய பல்வேறு  பழக்க வழக்கங்களாலும் பிரிந்து நின்று, பூசலிட்டு, மக்களுக்குத் தவறான பாதையைக்காட்டி, பிற நாட்டினரின்  விமர்சனத்திற்கும் நகைப்புக்கும் மதம் இடமளித்து வந்தபோது, உண்மை மதம் எங்குள்ளது என்பதை எடுத்துக்காட்ட, அவர் சனாதன தர்மத்தின் உருவமாக அவதரித்தார்.

சமய வரலாற்றில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை ஒரு மைல் கல், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சிந்து, கங்கை, சரஸ்வதி நதி தீரங்களில் தவம்  இயற்றிய முனிவர்களின் வாயிலாக வெளிப்பட்ட அழிவற்ற உண்மைகள் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வில்  நிரூபிக்கப்பட்டன. ஆன்மீக சாதனைகள் மூலம் தங்களைத் தகுதி உடையவர்களாக ஆக்கிக்கொள்பவர்களின் வாயிலாக அந்த உண்மைகள்  வெளிப்படுகின்றன. காலமோ இடமோ எவையும் அந்த உண்மைகளைக் கட்டுப்படுத்துவதில்லை. அந்த முனிவர்கள் வெளிப்படுத்திய உண்மைகளைக்கொண்ட சாஸ்திரங்கள் எதையும்  கற்றவர் அல்ல ஸ்ரீராமகிருஷ்ணர்.ஆனால் அவர் வேத கால முனிவர்கள் காட்டிய வழியில்,, தமது வாழ்வையே சோதனைக்களமாக்கி, ஆன்மீக சாதனைகள் செய்து அந்த உண்மைகளைத்தமது வாழ்வில்  வெளிப்படுத்தினார். இதனால் வேதங்களின் உண்மை நிரூபிக்கப் பட்டது. இவ்வாறு வேதங்கள் வெளிப்படுவதற்கு ஒரு கருவியாகத் தம்மை ஆக்கிக்கொள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் பன்னிரண்டு ஆண்டுகள் கடுமையான தவ வாழ்வில் ஈடுபட்டார்.

படிப்பறிவற்ற ஒரு சாதாரண மனிதராக , ஒரு குக்கிராமத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை தொடங்கியது.அனால்  இறைவனை அடைய வேண்டும் என்ற தீவிர தாகம் மிகச் சிறு வயதிலேயே அவரிடம் குடிகொண்டிருந்தது.இளமையில் அவர் தட்சிணேசுவரக் காளி கோயிலில் பூஜாரி ஆனார். தாம் செய்கின்ற பூஜையை உண்மையிலேயே காளி தேவி ஏற்கிறாளா அல்லது வெறும் கல்லுக்குத்தான் பூஜை செய்கிறோமா என்ற கேள்வி அவருள் தீவிரமாக எழுந்தது. உண்மையிலேயே காளி தம் பூஜையை ஏற்கிறாள் என்றால் அது தமக்கு த் தெரிய வேண்டும், அவளைக்காண வேண்டும் என்ற மனஏக்கமும், தணியாத தாகமும் அவருள் ஒரு வெறியாக வளர்ந்தது. ஆறு ஆண்டுகள் அவரது முடிவற்ற ஏக்கத்திற்குப் பிறகு காளிதேவி தன்னை அவருக்குக்காட்டி யருளினாள்.

காளியின் காட்சி மனத்திருப்தியைத் தருவதற்குப் பதிலாக அவரிடம் தீவிரத்தேடலை த்தோற்றுவித்தது. எத்தனை பாதைகள் இருக்குமோ, அத்தனை பாதைகள் வழியாகவும் இறையின்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் கட்டுக்கடங்காமல் எழுந்தது. எனவே இந்து மதத்தின் பல்வேறு நெறிகளையும் கிறிஸ்தவ, இஸ்லாம் நெறிகளையும் பின்பற்றி, அவை ஒவ்வொன்றின் மூலமும் அறுதிநிலையை அடைந்தார் . சமய வரலாற்றில் இத்தகைய நிகழ்ச்சி இதற்கு முன்பு நடந்ததில்லை.

இவ்வாறு தமது சோதனைகளுக்குப்பிறகு அவர் எத்தனை மதங்களோ அத்தனை வழிகள் என்ற அனுபவ உண்மையை வெளியிட்டார். எந்த மதங்களையும் குறைசொல்லவேண்டாம், எல்லா மதங்களும் அறுதி உண்மையை நோக்கி நம்மை அழைத்துச்செல்பவை தான். எனவே மதங்களுக்குள் சண்டை வேண்டாம். ஒருவன் தனது நெறியில் மனப்பூர்வமாக ஈடுபட்டால் போதும், அதுவே அவனை உண்மையில் சேர்கின்ற பாதையாக அமையும். இந்த ச் சமய சமரசக்கருத்து காலத்தின் தேவைக்கு மிகவும் ஏற்புடையதாக இருந்தது.

ஸ்ரீராமகிருஷ்ணர் கண்ட உண்மைகள்

 இந்தச் சமயசமரசக் கருத்தை அடிப்படையாகக்கொண்ட ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவது தமது அவதார நோக்கம் என்பதை தெய்வீக அனுபவத்தின் வாயிலாகத் தெரிந்து கொண்டார்ஸ்ரீராமகிருஷ்ணர். காளி தேவியின் கரங்களில் தாம் ஒரு கருவியே  என்றும், சொந்த வாழ்வில் உணர்ந்த  சமய ஒருமைப்பாடு என்ற கோட்பாட்டிற்குப்பொருந்திய வகையில் புதிய நெறி ஒன்றைத்தாம் நிறுவவேண்டும் என்றும் உணர்ந்தார் குருதேவர் ” என்று எழுதுகிறார் அவரது  வரலாற்று ஆசிரியரான சாரதானந்தர்..


ஸ்ரீராமகிருஷ்ணர் பிறந்ததிலிருந்தே கீழை அடி வானம் ஒளிரத் தொடங்கிவிட்டது. உதய கால சூரியனின் கிரணங்கள் பரவத்தொடங்கி விட்டன. காலப்போக்கில் அந்தப்பேரொளி, நண்பகல் சூரியன் போல் உலகையே ஒளி வெள்ளத்தில் ஆழ்த்தப் போகிறது. அவர் பிறந்த நாள் முதலே சத்திய யுகம் தோன்றிவிட்டது. என்றார் சுவாமி விவேகானந்தர். அந்த சத்திய யுகத்திற்கான புதிய சமுதாயமே ஸ்ரீராமகிருஷ்ணர் கண்ட சமுதாயம். சத்திய யுகத்தை நிறுவுகின்ற அந்தப்புதிய சமுதாயத்தைின் சில அம்சங்களை அவரது உபதேசங்களின் வழியாகக் காண்போம்.

சத்திய யுகம் ஒருபார்வை

புதிய சமுதாயம் என்பது ஒரு நாளில் அமைவதில்லை. மனிதர்களின் சேர்க்கையே சமுதாயம். புதிய சமுதாயம் உருவாக வேண்டுமானால் புதிய மனிதர்கள் உருவாகவேண்டும். புதிய எண்ணங்கள், புதிய பார்வை, புதிய கண்ணோட்டம் கொண்ட மனிதர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அவர்களைப்பற்றி 

ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைகளைக் காண்போம்.

வாழ்க்கை லட்சியம்

1) வாழ்க்கையின் லட்சியம் இறையனுபூதி, எண்ணெய் இல்லாமல் விளக்கு எரிய முடியாது. அது போல் இறைவன் இல்லாமல் மனிதனால் வாழ இயலாது.

2) இறையனுபூதி பெறுவதற்கு ஜாதி, மதம் , இனம் மொழி, பால், தேசம், அந்தஸ்து, படிப்பு, பணம் என்று எதுவும் தடையில்லை.

கடவுள்

1.கடவுள் ஒருவரே, வெவ்வேறு மதங்கள் அவரை வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றன. தண்ணீர் ஒன்றுதான். ஆங்கிலேயர்கள் ”வாட்டர்” என்றும் வட இந்தியர்கள் ”பானி” என்றும் வெவ்வெறு மொழியினர் வெவ்வெறு விதத்தில் அழைத்தாலும் தண்ணீர்  ஒன்றுதான்.

2. கடவுளின் நிலைகளான உருவம், அருவம் இரண்டுமே உண்மை. ஒரே பாம்பு படமெடுத்து ஆடுவதும் சுருண்டு கிடப்பதும் போன்ற நிலைகள் இவை. ஒரே கடவுள் உலகைப்படைத்து, காத்து, ஒடுக்கும்போது சக்தி அல்லது தேவி என்று பெயர் பெறுகிறார். அதே கடவுள் இந்தச்செயல்களைக்கடந்த நிலையில் பிரம்மம் எனப்படுகிறார்.

3.பக்தர்களுக்காகக் கடவுள் பல்வேறு உருவங்கள் தாங்குகிறார்.குளிர் காரணமாக நீர் சில இடங்களில் பனிப்பாறை ஆகிறது. சூரியன் உதிக்கும்போது அந்தப் பாறைகள்  கரைந்து மீண்டும் கடல் நீராகின்றன.அது போல் பக்தி காரணமாகக் கடவுள் பல்வேறு உருவங்களைத் தாங்கி வருகிறார். ஞான சூரியனாகிய அத்வைத ஞானம்  உதிக்கும் போது உருவங்கள் மறைகின்றன. அவர் உருவமற்ற நிலையில்  உணரப்படுகிறார். ஆனால் பனி, உருகாத பகுதிகள் இருப்பது போல் கடவுளின் உருவங்கள் மறையாத உயர்நிலைகளும் உண்டு.

4. காலங்கள் தோறும் கடவுள் மனிதனாக அவதரிக்கிறார். மற்றவர்கள் இறைநிலையை அடைவதற்கான ஒரு வாசலாக அந்த அவதார ப

புருஷர் திகழ்கிறார்.

5.தேவியின் திருவுளத்தாலேயே இந்த உலகம் இயங்குகிறது. வாழ்க்கை அவளது லீலை., அவளது திருவிளையாடல், பந்தம், முக்தி இரண்டுமே அவள் கையில் உள்ளன. மனித அறிவு எல்லைக்கு உட்பட்டது. அதன் காரணமாகத் தான் இந்தத் திருவிளையாடலின் உண்மையை அவனால் உணர முடியவில்லை.

ஆன்மீக அனுபூதி

1.ஆன்மா, கடவுள் போன்ற உண்மைகளை நிரூபிப்பதற்கான ஒரே வழி நேரடி நேரடி அனுபவம். சாஸ்திரங்கள் கைகாட்டிப் பலகைகளைப்போல் இந்த உண்மைகளைச்சுட்டிக்காட்ட மட்டுமே இயலும். அவற்றை நிரூபிக்க இயலாது. மழை வரும் விவரங்களைப் பஞ்சாங்கம் தரலாம். அதற்காகப் பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் தண்ணீர் வராது.

2.ஆன்மீக அனுபவங்களுக்கு எல்லை இல்லை. எனவே கிடைத்த அனுபவங்களுடன் திருப்தி அடைந்து நின்றுவிடாமல் தொடர்ந்து முன்னேற வேண்டும்.

3. குண்டலினி சக்தி விழித்தெழுவதால் தான் ஆன்மீக அனுபவங்கள்  வாய்க்கின்றன.

4. இரண்டற்ற நிலையாகிய அத்வைத அனுபவம் மிக உயர்ந்த ஆன்மீக அனுபவம்.

5. ஆனால் அத்வைதம் கடைசி அனுபவம் அல்ல. அத்வைத அனுபவம் பெற்றசிலர் மீண்டும் சாதாரண நிலைக்கு வருகிறார்கள். அவர்கள் எங்கும் கடவுளைக்காண்கிறார்கள். அந்த இறையின்பத்திலேயே வாழ்கிறார்கள் . இந்த நிலை ”விஞ்ஞானம்” எனப்படுகிறது. இந்த நிலையை அடைந்தவர் ”விஞ்ஞானி” எனப்படுகிறார். அவர் இறைவன் (நித்யம்), உலகம்(லீலை) இரண்டையுமே உண்மை என்று காண்கிறார்.

6. ஒரு போதும் பந்தத்திற்கு உட்படாத, எப்போதும் முக்தி நிலையிலேயே இருக்கின்ற சிலர் உள்ளனர். நித்திய முக்தர்களாகிய இவர்கள் இறைவன் அவதரிக்கும் போது அவருடன் பிறந்து, அவரது பணிக்கு உதவுகின்றனர். இவர்கள் ஈசுவரகோடிகள் எனப்படுகின்றனர்.

ஸ்ரீராமகிருஷ்ணர் இவற்றைப்போதித்தது மட்டுமல்ல, இந்த உண்மைகளை நிரூபிப்பதற்காகச் சில வாழ்க்கைகளையும் உருவாக்கிச்சென்றார். இந்த லட்சியத்தை ஏற்று வாழ்ந்து காட்டியவர்களில் ஆண்கள், பெண்கள் இல்லறத்தார், துறவியர், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் இருந்தார்கள்.ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியது மட்டுமல்ல, அது சாத்தியமே என்று நிரூபித்தும் சென்றார் அவர்.

ஸ்ரீராமகிருஷ்ணர் கண்ட இந்த உண்மைகள் இன்று உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆன்மீக வாழ்க்கையில் வழிகாட்டியாக உள்ளன. சமயச் சண்டைகளுக்கும் பூசல்களுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வாக விளங்குகின்ற அவரது இந்தக்கோட்பாடுகள் மனித வாழ்வில் கடைப்பிடிக்கும் போது வாழ்க்கை உயர்கிறது. சமுதாயம் வளர்கிறது. புதிய சமுதாயம் உருவாகிறது, சத்திய யுகம் மலர்கிறது.

இன்று ஒரு வார்த்தை . இன்று  எந்த ஆன்மீக நூல்களை எடுத்தாலும் இந்தக் கருத்துக்களைப்பொதுவாகக்காணலாம். பல ஆச்சாரியர்களும் குருமார்களும் இத்தகைய கருத்துக்களைக்கூறுகின்றனர். ஆனால் இன்று நாம் பல இடங்களிலும் காண்கின்ற இந்தக் கருத்துக்கள் ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்தே பெறப்பட்டவை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். வெண்ணெய் க் கடைகள் பல இருக்கும். அங்கே எல்லாம் வெண்ணெய் கிடைக்கவும் செய்யும்.ஆனால் பாலைத் தயிர் ஆக்கலாம். அதைக்கடைந்து வெண்ணெய் எடுக்கலாம் என்று முதலில் கண்டுபிடித்தவனின் அறிவை நாம் பொதுவாக எண்ணிப் பார்ப்பதில்லை. அது போலவே ஸ்ரீராமகிருஷ்ணருக்கு முன்பு இந்தக்கருத்துக்கள்  இவ்வளவு தெளிவான மொழியில் கூறப்படவில்லை. அவரே முதன்முறையாகச் சூத்திரங்கள் போல் இவற்றை வகுத்துக்கொடுத்தவர் இன்று நாம் காண்பவை அவற்றின்  விரிவுகளே.

சீடர்களின் பணி

அவதார புருஷர்கள் தங்கள் செய்தியை உலகிற்கு அளிக்கு முன்னர் தங்கள் வாழ்க்கையை ஒரு மாபெரும் சோதனைக்களமாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த மாபெரும் தவத்தைச்செய்து காலத்திற்கு ஏற்ற உண்மைகளைக் கண்டு பிடிப்பதில் அவர் களுடைய ஆற்றலும் நேரமும் பெருமளவிற்குச் செலவழிகிறது. எனவே தகுதியான ஒருசிலரைத்தேர்ந்தெடுத்து அவர்களிடம் அந்தச்செய்தியை அளித்துவிட்டு மறைந்து விடுகின்றனர். மழைத்துளியையோ, மணல்துகளையோ தன்னுள் பெற்ற சிப்பி அதனை ஏற்றுக்கொண்டு ஆழ்கடலில் சென்று அதனை முத்தாக்குகிறது.முத்தாக்குவதுடன்  அதன் வேலை நிறைவுற்றுவிடுகிறது. அதனை எடுத்து உலகிற்கு அளிக்கின்ற பணியைப் பிறர் செய்வது போல், அவதார புபுஷர்கள் தங்கள் தவ வாழ்வின மூலம் கண்ட உண்மைகளை அவரது சீடர்கள் தங்கள் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுகின்றனர். உலகிற்கு அளிக்கின்றனர்.

ஆன்மீக உண்மைகளும் பாரம்பரியமும் பொதுவாக துறவியர் பரம்பரை மூலமாக வே பாதுகாக்கப் பட்டு வந்திருக்கிறது. ஸ்ரீராமகிருஷ்ணரின்  இந்தப்புதிய செய்தியையும் பரப்ப அத்தகையதொரு துறவியர் சமுதாயம் தேவைப்பட்டது. இந்து மதத்தில் அத்தகையதொரு துறவியர் சமுதாயம் அது வரை கேள்விப்படாத ஒன்று. அதனை உருவாக்குவதற்குத் தகுந்த கருவி ஒன்று அவருக்குத்தேவைப்பட்டது. அத்தகைய கருவியாக வருபவர் நமது ஆன்மீக கலாச்சாரப் பாரம்பரியத்தைப்பற்றி தெரிந்தவராக இருக்கவேண்டும். அதே வேளையில் இந்து மதத்திற்கு அன்றைய சவாலாக இருந்த மேலை நாட்டுக் கலாச்சாரம், மேலை விஞ்ஞானம் ஆகியவற்றை  அறிந்தவராகவும் இருப்பது அவசியம். அத்தகைய ஒருவருக்காக ஸ்ரீராமகிருஷ்ணர் காத்திருந்தார்.

வேத முனிவர்கள் கூறிய உண்மைகளை நேருக்கு நேர் கண்ட ஒருவர் உண்டா என்று தேடிக்கொண்டிருந்தார். நரேந்திரர். அத்தகைய ஒருவராக இருந்தது மட்டுமின்றி, தாம் கண்ட உண்மைகளை உலகிற்கு வழங்குவதற்கான ஒரு புதிய துறவியர் சமுதாயத்தையே உருவாக்க வல்ல ஒருவருக்காகக் காத்திருந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். அவர்கள் இருவரும் சந்திப்பது காலத்தின் தேவை ஆயிற்று.


 MAIN PAGE 


image110

கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?

கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?


யாரோ சொன்னார்கள் என்பதற்காகவோ , ஏதோ நூலில் எழுதியிருந்தார்கள் என்பதற்காகவோ எதையும் ஏற்றுக்கொள்பவர் அல்ல நரேந்திரர். உண்மையை நேருக்கு நேர் கண்ட ஒருவரை நாட வேண்டும் என்ற அவருள் எழுந்த  தணியாத தாகம், அடங்காத ஆர்வம் அவரைப் பலரிடம் இட்டுச் சென்றது. அவர் பலரைச்சென்று கண்டார். விசாரித்தார். ஆனால் எங்கிருந்தும், ஆம்” என்ற தெளிவான, உறுதியான பதில் அவருக்குக் கிடைக்கவில்லை. இந்த வேளையில் ஒரு நாள் அவரது உறவினரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லற பக்தர்களில் ஒருவருமான ராம்சந்திர தத்தர் அவரிடம், இதோ பார் நரேந்திரா! 

உண்மையான மகானைத்தேடி நீ இங்குமங்குமாக அலைந்து கொண்டிருக்கிறாய், தட்சிணேசுவரத்தில் ஒரு பரமஹம்சர் வாழ்கிறார். ஒரு நாள் நீ என்னுடன் வா. வந்து அவரைப்பார், என்றார். அதற்கு நரேந்திரர், எனக்குத்தெரியும். அவரைப் பற்றியும் நான் விசாரித்துவிட்டேன். ஆனால் அவர் படிப்பறிவற்றவர் ஆயிற்றே! ஸ்பென்சர், ஹேமில்டன், லாக்கே என்று பலரைப் படித்துள்ள எனக்கு, படிப்பறிவற்ற அவர் என்ன வழிகாட்ட முடியும்? என்று கேட்டுவிட்டார்.ராம்சந்திரர் பதில் எதுவும் கூறவில்லை, ஆனாலும் தமது முயற்சியை விடாமல். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணரைப்பற்றி அவரிடம் கூறிக்கொண்டே இருந்தார். 

எதற்கும் வேளை வர வேண்டும் அல்லவா? அந்த வேளையும் விரைந்து வந்தது.

அறிமுகம்

ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லற பக்தர்களில் ஒருவர் சுரேந்திரநாத் மித்ரர். அவர் நரேந்திரரின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். ஒரு நாள் அவர் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்து விழாக்கொண்டாட எண்ணினார். வழக்கமாக இது போன்ற விழாக்களில் கீர்த்தனைகள்  பாடுவது, பாகவத புராணம் படிப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். சுரேந்திரரின் வீட்டில் பாடுவதற்கு யாரும் கிடைக்கவில்லை. எனவே அவர் நரேந்திரரை அழைத்தார். அப்போது கல்லூரி தேர்விற்குப் படித்துக்கொண்டிருந்தார் நரேந்திரர். இருப்பினும் சுரேந்திரரின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.


அது 1881 நவம்பர். ஸ்ரீராமகிருஷ்ணர் வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்குப் பிறகு நரேந்திரர் பாடினார்.ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரிடம்  வெகுவாகக் கவரப்பட்டார். எனவே பாடல்கள் நிறைவுற்றதும் சுரேந்திரரையும் ராம்சந்திரரையும் அழைத்து, இனிமையாகப் பாடிய அந்த இளைஞரைப் பற்றிய விவரங்களை விசாரித்து  த் தெரிந்து கொண்டார்.. ஒரு நாள் அவரைத் தட்சிணேசுவரக்காளி கோயிலுக்கு அழைத்து வருமாறும் கேட்டுக்கொண்டார்.பிறகு நரேந்திரரிடம் சென்று ஓரிரு வார்த்தைகள் பேசினார். அவரது உடல் அமைப்பைக்கூர்ந்து கவனித்தார். தாமதம் இன்றி ஒரு நாள் தட்சிணேசுவரத்திற்கு வருமாறு அவரை அழைக்கவும் செய்தார்.


நரேந்திரரைப்பொறுத்தவரை அன்றைய சந்திப்பு அவரிடம் பெரிய தாக்கம்  எதையும் ஏற்படுத்தவில்லை. பாடுவதற்காக சுரேந்திரர் வற்புறுத்தி அழைத்ததால் சென்றார்.பாடினார். ஸ்ரீராமகிருஷ்ணரைக்கண்டார்.ஆனால் அவரைப்பற்றிப்  பெரிதாக எதுவும் நினைக்க வில்லை.


இந்த நிகழ்ச்சி நடந்த சில வாரங்களுக்குப்பிறகு நரேந்திரரின் தேர்வு நிறைவுற்றது. உடனடியாக அவரது திருமணப்பேச்சு முடுக்கிவிடப்பட்டது. ஒரு பெரிய குடும்பத்திலிருந்து மணம் பேசினர். நரேந்திரர் மறுத்துவிட்டார்.புனிதமும் உண்மையை அடைவதற்கான ஏக்கமும் அவரது தனிப்பெரும் அடையாளங்களாகத் திகழ்ந்தன. பிரம்மசரியமும் சத்திய நிதிஷ்டையும் அவரது இயல்பில் ஊறியவையாக இருந்தன.அவற்றை விடுவது என்பது அவரால் எண்ணிப்பார்க்க இயலாத ஒன்றாக இருந்தது. 


அவற்றிற்கு இடையூறாக வருகின்ற எதையும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக  இல்லை. அத்தகைய ஒரு தடையாகத் திருமணத்தைக் கண்டார் அவர்.  எனவே திருமணத்திற்கு மறுத்தார். ஆனால் பெண் வீட்டிலோ, பெண் சற்று கறுப்பாக இருந்ததால் அவளது தந்தை பத்தாயிரம் ரூபாய் வரதட்சணை கொடுக்கத் தயாராக இருந்தார். விசுவநாத தத்தரின் தூண்டுதலால் ராம்சந்திர தத்தரும் மற்ற உறவினர்களும் நரேந்திரரை வற்புறுத்திப் பார்த்தனர். ஆனால் நரேந்திரர் இணங்கவில்லை.

ஆன்மீக லட்சியங்களின் காரணமாக நரேந்திரர் திருமணம் செய்து கொள்ள மறுப்பதை அறிந்த ராம்சந்திரர் நரேந்திரரிடம், உனக்கு இறையனுபூதி பெற வேண்டும் என்று உண்மையான ஆர்வம் இருக்குமானால் , பிரம்ம சமாஜம் போன்ற இடங்களில் அலைவதை விட்டுவிட்டு தட்சிணேசுவரத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் செல், என்று கூறினார். அந்தச் சமயத்தில் ஒரு நாள் அண்டை வீட்டு வாசியான சுரேந்திரரும் நரேந்திரரைத் தம்முடன் தட்சிணேசுவரத்திற்கு வருமாறு அழைத்தார். 

எப்படியாவது இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தணியாத தாகத்துடன் இருந்த நரேந்திரர், இந்த நாள்வரை அனைவரிடமும் கேட்டுக்கொண்டிருந்த அந்தக் கேள்வியை ஸ்ரீராமகிருஷ்ணரிடமும் கேட்கலாம் என்று எண்ணினார். எனவே அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு ராம்சந்திர தத்தருடனும் ஓரிரு நண்பர்களுடனும் சுரேந்திரரின் குதிரை வண்டியில் தட்சிணேசுவரம் சென்றார். 

அது ஜனவரி 1882.


கல்கத்தாவிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் கங்கைக் கரையில் அமைந்துள்ளது தட்சிணேசுவரம்.ராணி ராசமணி என்ற ஜமீன்தாரினி கட்டிய கோயில்கள் அங்கே அமைந்திருந்தன.முக்கியக்கோயிலாகத் திகழ்ந்தது பவதாரணி காளிகோயில். அதைத் தவிர ராதா காந்தர் கோயிலும் பன்னிரு சிவன் கோயில்களும் உள்ளன. அங்கே ஓர் அறையில் ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்து வந்தார். சிறிய அறை அது.பெரியதும், சிறியதுமாக அங்கே இரண்டு கட்டில்கள் உள்ளன. 


பொதுவாக ஸ்ரீராமகிருஷ்ணர் சிறிய கட்டிலில் அமர்ந்து ஓய்வெடுப்பார். பக்தர்கள் தரையில் விரித்துள்ள விரிப்பின் மீது அமர்வார்கள்.

நரேந்திரரும் பிறரும் சென்ற வண்டி காளி கோயிலுக்கு அருகில் சென்று நின்றது. அனைவரும் வண்டியிலிருந்து இறங்கி ஸ்ரீராமகிருஷ்ணரின் அறையை நோக்கிச்சென்றனர்.குளிர் காற்றைத் தடுப்பதற்காக அறையின் வடக்கு வாசல் மூங்கில் தட்டிகளால் தடுக்கப்பட்டிருந்தது. 


ஆகையால் நரேந்திரர் அறையின் மேற்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்தார். அறையில் பக்தர்கள் பலர் இருந்தனர்.ஸ்ரீராமகிருஷ்ணர் இசையிலும் இறைவனைப் பற்றி பேசுவதிலும் மூழ்கியிருந்தார். நரேந்திரர் சென்றதும் ஸ்ரீராமகிருஷ்ணரின்  பார்வை அவர் மீது விழுந்தது. அன்றைய சந்திப்புபற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் பின்னாளில் கூறினார்.


அன்று நரேந்திரன் மேற்குக் கதவு வழியாக இந்த அறைக்குள் வந்தான். அவன் தன் உடம்பைப்பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.தலைமுடியும்  ஆடையும் கலைந்து கிடந்தன. எந்தப்பொருளும் அவனுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. மனத்தின் பெரும்பகுதி அகமுகமாகத் திருப்பப் பட்டிருந்ததை அவனது கண்கள் காட்டின. உலகியல் மக்கள் மலிந்த இந்தக் கல்கத்தாவில் சத்வ குணம் படைத்த இப்படி  ஒருவன் வாழ்வது சாத்தியமா என்று வியந்தேன்.


தரையில் பாய் விரிக்கப் பட்டிருந்தது. அதில் உட்காரும் படி அவனிடம் கூறினேன். அதோ அங்கே கங்கை நீர் ஜாடியிருக்கிறதே, அதன் அருகில் அமர்ந்தான். நண்பர்கள் சிலரும் அவனுடன் வந்திருந்தனர். அவர்களின் இயல்பு அவனது இயல்பிற்கு நேர்மாறானதாக இருந்தது. அவர்கள் சாதாரண  இளைஞர்களைப்போல் சுக போக நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

நரேந்திரர் சென்று பக்தர்களுடன் அமர்ந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் அவரைப்பாடும் படி கேட்டுக்கொண்டார். பிரம்ம சமாஜத்தில் பாடப்படும் சில பாடல்களை அவர் பாடினார். அந்தப் பாடல்கள்-


மனமே மீண்டும் உன் வாழ்விடம் செல்வாய்!

வாழ்க்கை அதிலே மாற்றான் பால்நீ

ஆழ்ந்து  மயங்கி அல்லல் ஏன் பட்டனை?

உன்னைச்சுற்றி உள்ளவை அனைத்தும்

மன்னம் ஐந்து மாபெரும் மூலமும்

அன்னியம் தானே! அவைகளில் ஏதும்

 உன்னுறவாக உரைக்க முடியுமா?

பிறரையே நாளும் பெரிதும் விரும்பி

மறந்தனை உனையே! மனமே ஏன் இது?

உண்மை வழியில் உளமே நீ நில்!

அன்பு விளக்கால் அடைகநல் உயர்வு!

தொடரும் வழியிலே துன்பம் வந்துற்றால் 

அவன் தான் அவ்வழி ஆளும் தலைவன்!

 அவனுக்கு எமனும் அடங்கி வணங்குவான்.!

பாடலின் ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் வண்ணம் உணர்ச்சிமிக்கக்குரலில் , ஒருமுகப்பட்ட மனத்துடன் பாடினார் நரேந்திரர். பாடலில் லயித்த ஸ்ரீராமகிருஷ்ணர் பரவச நிலையை அடைந்தார்..

அடுத்த பாடல்

இறைவனே! என்றன் வாழ்நாள் எந்த வோர் பயனும் இன்றி

மறைவதோ வீணே? உன்றன் வரவினை எதிர்பார்த்திங்கே

இருவிழி வழிமேல் நாட்டி இரவொடு பகலும் ஏங்கி

இருக்கிறேன் காத்துக்கொண்டே என்னரும் பிராண

நெஞ்சக் கதவை எந்த நேரமும் திறந்து வைத்தேன்.

கொஞ்சம் நீ கருணை கூர்ந்து குலவிட ஒரு கால் வந்து

சஞ்சலம் நீக்கி இன்பம் தங்கிடச் செய்தல் வேண்டும்

 தஞ்சம் நீ தானே யன்றித் தாங்கிட யாரும் இல்லை.

பாடல் நிறைவுற்றது.ஸ்ரீராமகிருஷ்ணர் நரேனை மிகவும் புகழ்ந்தார். நரேந்திரனுக்கு வித்யையின் தெய்வமான சரஸ்வதியின் அருள் உள்ளது.என்றார். அனைவரும் நரேந்திரரை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


ஸ்ரீராமகிருஷ்ணரின் வினோத நடத்தை


அதன் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் நடந்து கொண்ட விதம் வினோதமாக இருந்தது. திடீரென்று அவர் நரேந்திரரிடம் ஆமாம்” நீ உறங்குவதற்கு முன்பு ஓர் ஒளியைக் காண்கிறாயா? என்று கேட்டார். நரேந்திரர் அதற்கு, ஆம்! ஏன் மற்றவர்கள் காண்பதில்லையா? என்று கேட்டார். ஆஹா! எல்லாம் சரியாக உள்ளது.நரேன் பிறப்பிலிருந்தே தியான சித்தன் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

பிறகு திடீரென்று ஸ்ரீராமகிருஷ்ணர் தமது இருக்கையிலிருந்து எழுந்து நரேந்திரரின் கையைப் பிடித்து அவரைத் தனியாக வடக்கு வராந்தாவிற்கு அழைத்துச்சென்றார். 


அறையிலிருந்து வராந்தாவிற்குச் செல்லும் கதவைச் சாத்தித் தாளிட்டார். அங்கே இருவரும் தனியாக இருந்தனர். தமக்கு அவர் ஏதோ உபதேசம் செய்யப்போ

கிறார் என்று  நினைத்தார் நரேந்திரர். 

ஆனால் நடந்தது  என்னவோ வேறு! பின்னாளில் நரேந்திரர் கூறினார்.

 என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு அவர் ஆனந்தக் கண்ணீர் வடிக்கத்தொடங்கினார். நெடுநாட்கள் பழகியவர் போல் மிகவும் அன்புடன் என்னை அழைத்து ஓ! இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறாயே நீ! லௌகீக மனிதர்களின் உலகியல் பேச்சுக்களால் என் காதுகள்  புண்ணாகி விட்டன.  என் ஆழ்ந்த அனுபவங்களை, தகுந்த ஒருவரிடம் கூறுவதற்கு எவ்வளவு பிரிதவிக்கிறேன்! என்று அழுது கொண்டே கூறினர். மறுகணம் கைகூப்பி என்னை வணங்கினார். 


கைகூப்பியபடியே நின்றுகொண்டு என்னிடம், ஐயனே! தாங்கள் பண்டைய ரிஷியான நரன், நாராயணரின் அவதாரம், உலக மக்களின் துயர் துடைக்க இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்திருக்கிறீர்கள்” என்றெல்லாம் கூறினார்.


ஆனால் நானோ எனக்குள், இது என்ன விபரீதம்! நான் விசுவநாத தத்தரின் மகன்.ஆனால் இவர் என்னை ரிஷி என்கிறார். நாராயணன் என்கிறார்! சந்தேகம் இல்லை. இந்த மனிதர் ஒரு பைத்தியக் காரராகத்தான் இருக்கவேண்டும். என்று நினைத்துக்கொண்டேன். இருப்பினும் நான் எதுவும் பேசவில்லை.


பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணர் தமது அறைக்குள் சென்றார். இனிப்பு எடுத்து வந்து தமது கைகளாலேயே நரேந்திரருக்கு ஊட்டினார். நரேந்திரர் அதைத் தடுத்து, என் கையில் கொடுங்கள்.நான் உள்ளே சென்று என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்றார். ஸ்ரீராமகிருஷ்ணர் அதைக்கேட்காமல், அவர்களுக்குப் பிறகு கிடைக்கும், என்று கூறி நரேந்திரரை உண்ணச்செய்தார். பிறகு அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு, அப்பா, விரைவில் ஒரு நாள் தனியாக வருவேன் என்று  எனக்கு உறுதி கூறு” என்று கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை மறுக்க முடியாமல் நரேந்திரர் ஏற்றுக்கொண்டார்.


மழைத்துளி விழுந்தது!

பிறகு நரேந்திரரை அறைக்குள் அழைத்துவந்து மற்றவர்களுடன் பேச்சு வார்த்தை த் தொடர்ந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.நரேந்திரரும் தமது நண்பர்களின் அருகில் சென்று அமர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணரின்  நடவடிக்கைகளைக் கவனிக்கத் தொடங்கினார்.சற்று முன்பு வராந்தாவில் தம்முடன் பேசியவரும் இவரும் வெவ்வேறானவர்கள் போல் அவருக்குத்தோன்றியது. அந்த அளவிற்கு அவர் மற்றவர்களிடம் சாதாரணமாக நடந்துகொண்டார். 


நரேந்திரருக்கு வியப்பு தாளவில்லை.

ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணரின் பேச்சும் அனுபவங்களும் அவர் ஓர் உண்மையான துறவி என்று நரேந்திரருக்குக் காட்டின. அவரது வாழ்க்கையும் சொற்களும் இசைந்திருந்தன. அவர் எளிய மொழியில் பேசினார். 


அப்போது நரேந்திரருள், இந்த மனிதர் ஒரு குருவாக இருக்க முடியுமா? என் சந்தேகத்தை இவரிடம் கேட்கலாமா? என்ற கேள்வி எழுந்தது. உடனே அவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருகில் சென்றார். நெடுநாட்களாக மனத்தை உறுத்திக்கொண்டிருந்த , பலரிடமும் கேட்கும் பதில் கிடைக்காத அந்தக்கேள்வியைக்கேட்டார்.

ஐயா, நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?


எங்கெங்கோ முட்டிமோதி தோல்வி கண்டு திரும்பிய கேள்வி இப்போது உரிய இடத்தை அடைந்தது. உ்டேனே பதிலும் வந்தது.

ஆம், கண்டிருக்கிறேன், ஆனால் தெளிவாக, உன்னைப் பார்ப்பதைவிடத் தெளிவாக, இன்னும் தெளிவாக” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.


கடலிலேயே வாழ்ந்தாலும் மழைத்துளிக்காக ஏங்கி, அதற்காகவே தன்னைத்திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தது முத்துச்சிப்பி! இன்று மழைத்துளி விழுந்தது.!


ஸ்ரீராமகிருஷ்ணர் தொடர்ந்தார்.

உன்னைப் பார்ப்பது போல், உன்னுடன் பேசுவது போல் கடவுளைப் பார்க்கலாம், பேசலாம். ஆனால் யார் அதை விரும்புகிறார்கள்! மனைவி மக்களின் சோகத்தில்  மக்கள் குடங்குடமாகக் கண்ணீர் விடுகிறார்கள். பணத்திற்காகவும்,சுகபோகங்களுக்காகவும் அழுது புரள்கிறார்கள்்.கடவுளை அடையவில்லையே என்று யார் அழுகிறார்கள்? 

அவரைக்காணவேண்டும் என்று ஏங்கிய மனத்துடன் கூவி, அழைத்தால் அவர் கண்டிப்பாகக் காட்சி  தருவார்.

பின்னாளில் நரேந்திரர் கூறினார்.


அவரது பதில் என் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. நான் கடவுளைக் கண்டிருக்கிறேன்.மதம் என்பது உணர வேண்டிய உண்மை. இந்த உலகத்தை நாம் உணர்வதை விடப் பல மடங்கு ஆழமாக உணரப்படக்கூடிய ஒன்று, என்றெல்லாம் கூறும் ஒருவரை நான் முதன்முதலாகச் சந்தித்தேன். அவர் கூறியதைக்கேட்டபோது, மற்ற மத போதகர் களைப்போல்  இவர் கற்பனையில் தோன்றியதைப் பேசவில்லை.இறைவனுக்காக உண்மையிலேயே அனைத்தையும் துறந்து, அவரை முழுமனத்துடன் அழைத்து, இறையனுபூதி பெற்று, அந்த அனுபவத்திலேயே பேசுகிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.


ஆனால் அவரது இபபொதைய பேச்சும், சற்றுமுன்பு என்னிடம் நடந்துகொண்ட விதமும் ஒன்றுக்கொன்று முரண்படுவது போல் தோன்றியது.அப்படியானால் சில நேரங்களில் தெளிவாகவும் சிலநேரங்களில் பைத்தியமாகவும் இருப்பாரா இவர்? ஒரு வேளை அரைப்பைத்தியமாகவும் இருக்குமோ? என்று தோன்றியது. இருக்கலாம், பைத்தியமாக இருக்கலாம், ஆனால் கடவுளுக்காக இப்படி அனைத்தையும் துறப்பவர்களைக் காண்பது அரிது. பைத்தியமாக இருந்தாலும் இவர் புனிதர், மேலான துறவி, அதனாலேயே மனித குலத்தால் போற்றி வழிபடத் தக்கவர்” என்று நினைததென். இப்படி முரணான பல கருத்துக்களுடன் அன்று விடைபெற்று கல்கத்தா திரும்பினேன்.


மற்றொரு பிரமிப்பும் நரேந்திரரிடம் எழாமல் இல்லை. தூங்கும்போது தாம் பெறுகின்ற ஒளி அனுபவத்தைப் பற்றி அவர் ஆரம்பத்தில் ஓரிரு நண்பர்களிடம் கூறியதுடன் சரி, பிறகு யாரிடமும் அதைத் தெரிவிக்கவே இல்லை. அதனை இவர் எப்படி அறிந்தார்! அது மட்டுமல்ல, நரேந்திரரை ஸ்ரீராமகிருஷ்ணர் ”தியான  சித்தன்” என்று கூறினார். எனக்கு தியானத்தில் ஆர்வம் இருப்பதும், நான் தியானம் செய்வதும் இவருக்கு எப்படித் தெரிந்தது? இப்படி பல்வேறு கேள்விகளும் எழுந்து அவருள் அலைமோதின.

ஸ்ரீராமகிருஷ்ணரிடமும் அலைமோதத் தான் செய்தது. அது அதன் பின் அலை! நரேந்திரரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அலை! அந்த ஏக்கம் அவரது மனத்தைக் கசக்கிப் பிழிந்தது. 


இரண்டாம் சந்திப்பு


ஸ்ரீராமகிருஷ்ணரைச்சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நரேந்திரரின் மனத்தில் அவ்வப்போது எழுந்தாலும் பல நாட்கள் அவரால் தட்சிணேசுவரத்திற்குச்செல்ல இயலவில்லை.படிப்பும் பிரம்மசமாஜக் கூட்டங்களும் நண்பர்களும் என்று நாட்கள் கரைந்தன. அது மட்டுமல்ல, முதல்முறை தட்சிணேசுவரத்திற்குச் சென்றபோது ஏற்பட்ட அனுபவம் கடவுள் கருத்தில் ஒரு தெளிவை அவரிடம் ஏற்படுத்தினாலும் ஸ்ரீராமகிருஷ்ணரைப்பற்றி அவரால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அவர் போகாததற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் அங்கே வருவதாக அவர்  ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வாக்கு கொடுத்திருந்தார். கொடுத்த வாக்கினைக் காப்பதற்காகவேனும் சென்றேயாக வேண்டும் என்று தீர்மானித்த நரேந்திரர் சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் தனியாக ஒரு நாள் சென்றார்.

அன்று நடந்தது ஓர் அற்புத நாடகம்! அதைப் பற்றி நரேந்திரர் பின்னாளில் கூறினார். அன்று நான் தட்சிணேசுவரக் காளிகோயிலுக்கு நடந்து சென்றேன். கல்கத்தாவிலிருந்து அது எவ்வளவு தொலைவில் உள்ளது என்று எனக்குத்தெரியாது.முன்பு வண்டியில் சென்றிருந்தேன்,தாசரதி சன்யால், சாத்கடி லாஹிரி முதலிய நண்பர்களைச் சந்திக்க ப் பலமுறை வராக நகருக்குப் போயிருக்கிறேன்.அவர்களின் வீட்டிற்கு அருகில் தான் ராணி ராசமணியின் தோட்டம்  இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் நடக்க நடக்கப் பாதை  நீண்டு கொண்டே போனது. பலரிடமும் விசாரித்துக்கொண்டு கடைசியில் தட்சிணேசுவரத்தை அடைந்தேன்.

நெராக ஸ்ரீராமகிருஷ்ணரின் அறைக்குச் சென்றேன். அவர் சிறிய கட்டிலில் தமக்குள் தாமாக அமர்ந்திருந்தார். அங்கே வேறு யாரும் இல்லை.  என்னைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அமரும்படிக்4றினார். நான் அமர்ந்தேன். அவர் ஏதோ விந்தையான மனநிலையில் ஆழ்ந்தார். தெளிவின்றி ஏதோ முணுமுணுத்துக்கொண்டு என்னைக்கூர்ந்து பார்த்தபடியே என்னை நோக்கி மெல்ல நகர்ந்து வந்தார். பைத்தியம் தொடங்கி விட்டது, அன்று போல்  இன்றும் வினோதமாக ஏதாவது செய்யப்போகிறது” என்று நினைத்தென் நான். இதற்குள் அவர் என்னை நெருங்கி வந்து தம் வலது பாதத்தை என்மீது வைத்தார். அந்தக் கணமே எனக்கு ஓர் அற்புத அனுபவம் உண்டாயிற்று. என் கண்கள் திறந்தே இருந்தன. நான் கண்டது என்ன தெரியுமா?

அறையில் இருந்த எல்லாப் பொருட்களும் சுவர்களும்  சுழன்று எங்கோ கரைந்தன. பிரஞ்சமும், அதனுடன் எனது நான்-உணர்வும் எல்லாமே மகாசூன்யத்தில் கரையப்போவதைப்போன்றதோர் உணர்வு என்னுள்ஏற்பட்டது.சொல்ல முடியாத பேரச்சம் என்னைக்கௌவிக்கொண்டது. நான் உணர்வின் அழிவு தான் மரணம். அந்த மரணம் இதோ நிற்கிறது. என் கண்முன் நிற்கிறது” என்று தோன்றியது. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.ஆ! நீங்கள் என்னை என்ன செய்கிறீர்கள்! எனக்குப்பெற்றோர் இருக்கிறார்கள்” என்று அலறினேன். அதைக்கேட்டு அந்த அற்புதப் பைத்தியக்காரர் கலகலவென்று சிரித்தபடியே என் மார்பைத் தம் கையால் தொட்டு, அப்படியானால் போதும்.ஒரேயடியாக வேண்டாம்.உரிய காலத்தில் எல்லாம் நடக்கும்” என்று கூறினார். அவர் அவ்வாறு கூறித்தொட்டது தான் தாமதம். அந்தக் கணமே என் அற்புத அனுபவம் மறைந்து விட்டது! நான் இயல்பான நிலையை அடைந்தேன். அறையின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பொருட்கள் முன்போலவே இருந்ததைக்கண்டேன்.

இந்த நிகழ்ச்சியை விவரிக்க இவ்வளவு நேரம் ஆயிற்று. ஆனால் இவையனைத்தும் ஓரிரு கணங்களில் நடந்து முடிந்துவிட்டன. இந்த நிகழ்ச்சி என் மனத்தில் பெரிய புரட்சியை உண்டாக்கியது. என்ன நடந்தது என்று பிரமிப்புடன் யோசித்தேன். அந்த விந்தை மனிதரின் ஆற்றலினால் நொடிப்பொழுதில் இந்த அனுபவம் ஏற்பட்டு. அதே வேகத்தில் மறைந்தும் விட்டிருந்தது.

மெஸ்மரிசம் , ஹிப்னாடிசம் பற்றி  படித்திருக்கிறேன்.இது அதைப்போல் ஏதாவது இருக்கலாமோ என்று யோசித்தேன். ஆனால் அதை ஏற்க என் மனம் மறுத்தது. ஏனெனில் உறுதியற்ற மனங்களின் மீது மட்டுமே மன ஆற்றல் மிக்கவர்கள் ஆதிக்கம் செய்து இத்தகைய நிலைகளை உண்டாக்க முடியும். நான் அப்படிப்பட்டவன் அல்ல. சொல்லப்போனால், என் மன வலிமையிலும், அறிவுக்கூர்மையிலும் அசாத்தியப்பெருமை கொண்டிருப்பவன் நான்இ மற்றொன்றும் தோன்றியது. அவரது ஆளுமையின் தாக்கம் பெற்றிருப்பேனா?  இருக்காது. சாதாரண மனிதர்கள் தான் உயர்ந்தோரின் குணநலன்களால் கவரப்பட்டு, அவர்களின் கைப்பொம்மைகளாக ஆவார்கள். என் விஷயத்தில் அப்படியிருக்க முடியாது.ஏனெனில் ஆரம்பத்திலிருந்தே நான் அவரை அரைப்பைத்தியம் என்று தான் முடிவு செய்திருந்தேன். எனக்கு எப்படி இந்த நிலை ஏற்பட்டது? ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தேன். எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.

என் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. உனதுதத்துவம் காணும் கனவைவிட அதிகமான  எத்தனையோ பல விஷயங்கள் விண்ணிலும் மண்ணிலும் உள்ளன என்று கவிஞர் கூறிய சொற்கள் என் நினைவிற்கு வந்தன. இதுவும் அதில் ஒன்று என்று நினைத்துக்கொண்டேன். இவ்வாறெல்லாம் மண்டையைக் குழப்பி , இறுதியில் இதைப்புரிந்து கொள்ள முடியாது என்ற முடிவிற்கு வந்தேன். இனி இந்த அற்புதப் பைத்தியக்காரர் தன் சக்தியால் என் மனத்தைக் கட்டுப்படுத்தி இத்தகையதொரு நிலையை உருவாக் உருவாக்குவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் திடப்படுத்திக்கொண்டேன்.

உறுதியான மனமும் திட சங்கல்பமும் உடைய என் போன்றவர்களின் மனங்களையும் உடைத்து, தூள் தூளாகச்செய்து, களிமண்ணைப்பொன்று பிசைந்து, தான் வேண்டிய உருவம் கொடுக்கவல்ல இவரை எப்படிப்பைத்தியம் என்று கூறுவது என்ற எண்ணமும் எழுந்தது. ஆனால் நான்  முதன்முறையாக சென்றபோது என்னைத் தனியாகக் கூட்டிச்சென்று அவர் பேசியவற்றை நினைத்தால் பைத்தியம் என்று அல்லாமல் வேறு என்ன சொல்வது? மேலே கூறிய என் அனுபவத்தின் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாததைப்போன்று, குழந்தையைப்போல் புனிதமும் எளிமையும் பெற்ற அந்த மனிதரைப்பற்றி திடமான எந்த முடிவிற்கும்  என்னால் வர முடியவில்லை.

ஒரு பொருளைப்பற்றியோ மனிதரைப்பற்றியோ கண்டு, கேட்டு, அறிவுபூர்வமாக ஆராய்ந்து பார்த்த பிறகும் என் புத்திக்க ஒன்று எட்டவில்லையானால் அதை நான் ஏற்றுக்கொள்வதோ நிராகரிப்பதோ இல்லை. பொருட்படுத்தாமல் விட்டுவிடுவேன். ஆனால் அன்று எனது அந்த இயல்பிற்குப் பலமான அடி விழுந்தது. மனம் சொல்லொணா வேதனையில் ஆழ்ந்தது. அதன் காரணமாக அந்த விந்தை  மனிதரின் இயல்பையும் ஆற்றலையும் எப்படியாவது ஆராய்ந்து உண்மையைக் கண்டுபிடித்து விடுவது என்ற உறுதியான முடிவிற்கு வந்தேன்.

இவ்வாறு பலவித எண்ணங்களும் தீர்மானங்களுமாக என் பொழுது கழிந்தது. அந்த நிகழ்ச்சிக்குப்  பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணர் முற்றிலும்  மாறுபட்டவராக இருந்தார். மிகுந்த அன்புடன் எனக்கு உணவு ஊட்டினார். நீண்ட நாள் பழகிய வரைப்போல் நடந்துக்கொண்டார்.நீண்டபிரிவிற்குப் பின்னர் நெருங்கிய நண்பர்களையோ, உறவினர்களையோ சந்தித்தால் எவ்வாறு நடந்து கொள்வோமோ, அது போன்றே அவரது செயல்கள் இருந்தன. எனக்கு உணவு அளித்து, என்னிடம் பேசி, வேடிக்கை வினோதங்கள் செய்து என் மீது தமக்கிருந்த அன்பை எப்படியெல்லாமோ வெளிப்படுத்தினார். அப்படியும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. இதையெல்லாம் கண்டு எனக்கேற்பட்ட பிரமிப்பு கொஞ்சநஞ்சமல்ல.மெல்ல மெல்ல அந்திவேளை நெருங்கியதை க் கண்ட நான் அவரிடமிருந்து விடைபெற்றேன். அவர் மிகவும் வேதனையுற்றதுபோல் தோன்றியது.மீண்டும் விரைவில் வருவாயா? சொல், என்று மீண்டும் பிடித்துக்கொண்டார். வருவதாக அன்றும் வாக்களிக்க வேண்டியதாயிற்று. அதன் பின் வீடு திரும்பினேன்.


மூன்றாம் சந்திப்பு- சந்தேகம் தெளிதல்

சில நாட்கள் கழித்து மூன்றாம் முறையாக நரேந்திரர் தட்சிணேசுவரம் சென்றார். ஸ்ரீராமகிருஷ்ணரின் மகத்தான சக்தியைப்பற்றி தெரிந்தபின், அவரை முழுமையாக அறியவேண்டும், புரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் நரேந்திரரிடம், தீவிரமாக எழுந்தது. ஏதேனும் ஒன்றை அறியும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டால் உணவு, உடை, ஓய்வு எதிலும் அவரது கவனம் செல்லாது. அதை அறியும் வரை அவரத மனம் அமைதி கொள்ளாது. ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி அறியவேண்டும் என்று தோன்றியபோதும் அவரது மனம் அவ்வாறே அமைதி இழந்தது.

இந்த முறை சற்று முன்னேற்பாடுடன் சென்றார் நரேந்திரர். இரண்டாம் முறை ஏற்பட்டது போன்று இம்முறை ஏற்படக்கூடாது என்பதில் உறுதியுடனும் எச்சரிக்கையுடனும் அவர் சென்றார்.ஆனால் நடந்ததென்னவோ சிறிதும் எதிர்பாராதது.

அன்று தட்சிணேசுவரத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாலோ வேறு காரணத்தாலோ ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரை அருகிலுள்ள யதுமல்லிக்கின் தோட்டத்திற்கு அழைத்துச்சென்றார். யது மல்லிக்கும் அவரது தாயும் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் அன்பும் மரியாதையும் கொண்டவர்கள்.தாங்கள் அங்க இல்லாதபோதும் ஸ்ரீராமகிருஷ்ணர் வந்தால் அவர் அமர்வதற்காக ஓர் அறையைத் திறந்து விட வேண்டுமென்று பணியாளர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார் யதுமல்லிக்.

அந்த தோட்டத்தில் சிறிது நேரம் நரேந்திரருடன் நடந்த படியே பல விஷயங்களைப்பேசினார்ஸ்ரீராமகிருஷ்ணர். பின்னர் அந்த அறையில் சென்று அமர்ந்தார்.சிறிது நேரத்தில் பரவச நிலையில் ஆழ்ந்தார். சற்றுதள்ளியிருந்தபடியே அதனைக் கவனித்துக் கொண்டிருந்தார் நரேந்திரர்.அப்போது, அந்தப் பரவச நிலையிலேயே வந்து திடீரென்று நரேந்திரரைத்தொட்டார். நரேந்திரர் எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தும் அந்த சக்தி வாய்ந்த  ஸ்பரிசத்தால் தன்வசம் இழந்தார். முந்தைய அனுபவங்களைப்போலன்றி இம்முறை அவர் புறவுலக உணர்வை அடியோடு இழந்தார். சிறிது நேரத்திற்குப்பின் அவருக்கு நினைவு வந்தபோது ஸ்ரீராமகிருஷ்ணர் புன்முறுவலுடன் அவரது மார்பின் மீது கையால்  தடவிக்கொண்டிருந்ததைக் கண்டார்.

நரேந்திரரின் மனநிலை

என்ன நடந்தது என்பதை நரேந்திரர்  உணரவில்லை. ஒரு வேளை அவர் உணர வேண்டிய அவசியம் இல்லை என்று ஸ்ரீராமகிருஷ்ணர் நினைத்திருக்கலாம். ஸ்ரீராமகிருஷ்ணரின் ஸ்பரிசத்தால் நரேந்திரரின் மனநிலையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது.ஸ்ரீராமகிருஷ்ணரை இப்போது முதல் அவர் பைத்தியக் காரராகக் கருதவில்லை. மாறாக, காமமும் பணத்தாசையும் பிடித்த  தன்னலமிக்க பைத்தியங்களுக்கு நடுவில் வாழ்கின்ற தெளிந்த அறிவு படைத்தவராக அவரைக்கருதினார். ஆனாலும் நடந்த நிகழ்ச்சிகள் அவருக்குப் புதிராகவே இருந்தன.

மொத்தத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி நரேந்திரரால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. அவரைப் பற்றிய ஒரு தெளிவான அறிவு இல்லாத நிலையில் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள நரேந்திரரின் பகுத்தறிவு மனம் இடம் தரவில்லை.எனவே அவரிடம் ஈர்க்கப்பட்டாலும் சற்று விலகியே இருக்க முயன்றார் நரேந்திரர். அவரது வாழ்க்கை புற மாற்றங்கள்  பெரிதாக எதுவுமின்றி சென்றது.கல்லூரிக்குச் சென்றார். வீட்டில் பாடங்களைப் படித்தார். வழக்கம் போல் ஞாயிற்றுக் கிழமைகளில் பிரம்ம சமாஜக் கூட்டங்களுக்குச்சென்றார். நண்பர்களுடன் பழகினார். வேடிக்கை வினோதங்களில் ஈடுபட்டார்.

அதே வேளையில் அவரது அகவாழ்வு மேலும் தீவிரம் அடைந்தது. இரவின் ஆழ்ந்த அமைதியில் அவர் நீண்ட நேரம் தியானம் செய்தார். யோகப் பயிற்சிகளில் ஈடுபட்டார். கண்களில் கண்ணீர் பெருகி கன்னங்களில் வழிந்தோட இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.

ஏழு முனிவர்களும் இறை உலகமும்

நரேந்திரர் சென்ற போதெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணர் ஏதோ செய்ய முயற்சிப்பதும் நரேந்திரர் அதை விரும்பாமலோ அல்லது அதற்குத் தயாராக  இல்லாமலோ தடுப்பதுமாக ஏதோ நிகழ்ந்தது போல் உள்ளது. புதிராகத்தோன்றுகின்ற அது என்ன? ஸ்ரீராமகிருஷ்ணர் அப்படி என்னதான் செய்தார்.? அதைப்புரிந்து கொள்ள வேண்டுமானால் ஸ்ரீராமகிருஷ்ணர் பெற்ற இரண்டு காட்சிகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் அவதார புருஷர், ஒரு செய்தியுடன் உலகில் அவதரித்தவர் என்று ஏற்கனவே கண்டோம். அவருக்குத் துணை செய்ய நித்திய முக்தர்களாகிய சிலர் உலகில் பிறக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வரும் போது ஸ்ரீராமகிருஷ்ணர் உடனடியாக இனம் கண்டு கொள்வார். அவரது செய்தியை உலகம் முழுவதற்கும் அறிவித்து, சத்திய யுகத்தை நிறுவுவதில் முக்கியப் பங்கு வகிக்கப்போகின்றவர் நரேந்திரர். அவரைப் பற்றியும் அவர் பல காட்சிகள் பெற்றிருந்தார். அவற்றுள் இரண்டை இங்கு காண்போம். ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார்.

ஒரு நாள் சமாதியில் என் மனம் ஓர் ஒளிப்பாதை வழியாக மேலே சென்றத. சந்திரன், சூரியன், நட்சத்திரங்களுடன்  கூடிய தூல உலகை விரைவாகக் கடந்து ,எண்ணங்களால் ஆகிய நுண்ணுலகில் அது நுழைந்தது. மனம் அந்த உலகில் ஆழ்ந்து மேலே செல்லச்செல்ல பாதையின் இரு புறங்களிலும் பல்வேறு தேவதேவியர் உணர்வுதிரண்ட உருவத்துடன் நின்றிருந்தனர். மனம் படிப்படியாக அந்தப் பகுதியின் இறுதியை அடைந்தது. அங்கே பகுக்கவொண்ணாப்பகுதியிலிருந்து பகுபடும்  பகுதியை ஓர் ஒளிவேலி பிரித்தது. அந்த வேலியைத் தாண்டி மனம் சிறிது சிறிதாக பகுக்கவொண்ணாத பகுதியில் நுழைந்தது. அங்கே உருவங்களோ வேறு எதுவுமோ இல்லை. ஒளியுடல்களுடன் கூடிய தேவதேவியரும் கூட அந்தப் பகுதியில் நுழைய அஞ்சியது போல் மிகவும் கீழ்பகுதிகளிலேயே தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். அங்கே அந்த உன்னத உலகில் தெய்வீக ஒளியினாலான உடம்புடன் கூடிய ஏழு ரிஷிகள் சமாதி நிலையில் ஆழ்ந்திருந்தனர். ஞானம், புனிதம், தியானம், அன்பு என்று அனைத்திலும் அவர்கள் தேவதேவியரை விஞ்சியவர்களாக இருந்தனர். அவர்களை மனிதர்களுடன் ஒப்பிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

 அந்த ரிஷிகளைப் பற்றியும்  அவர்களின் மகிமைகளைப் பற்றியும் நான் சிந்தித்துக்கொண்டிருக்கும் போது, அந்தப் பகுக்கவொண்ணாப் பொருளின் ஒரு பகுதி சற்றே விலகி, அந்த ஒளித்திரள் ஒரு குழந்தையாக உருவெடுத்தது.அந்த தெய்வக்குழந்தை அங்கு அமர்ந்திருந்த ரிஷிகளில் ஒருவரிடம் வந்து தன் மென்மையான கைகளால் அவரது கழுத்தைக் கட்டிக்கொண்டது. பின்னர் வீணையை மிஞ்சும் அழுதக்குரலால் அவரை அழைத்து சமாதியிலிருந்து அவரை எழுப்ப முயன்றது. இந்த மென்மையான அன்பின் அணைப்பினால் சமாதி கலைந்த ரிஷி அந்த அதிசயக்குழந்தையைத் தன் பாதி மூடிய கண்களால் கனிவுடன் பார்த்தார். அவரது முகமலர்ச்சியைக் கண்டபோது , அந்தக் குழந்தை அவரது இதயப்பொக்கிஷம், காலம் காலமாக அவருடன்  தொடர்புடையது என்று தோன்றியது. அந்த தெய்வக்குழந்தை பேரானந்ததுடன் அந்த ரிஷியிடம், நான் போகிறேன். நீ என்னுடன் வரவேண்டும்” என்று கூறியது. இந்த வேண்டுகோளுக்கு ரிஷி பதில் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் கருணைமயமான அவரது கண்கள் இதயபூர்வமான இசைவினை வெளிப்படுத்தின. அந்தக் குழந்தையை அன்புடன் நோக்கியவாறே அந்த ரிஷி மீண்டும் சமாதியில் ஆழ்ந்தார். அப்போது ரிஷியின் உடல் மற்றும் மனத்தின் ஒரு பகுதி ஒளியுருப்பெற்று கீழே பூமியை நோக்கி விரைந்தது. நரேந்திரரைக் கண்டதும் அவனே அந்த ரிஷி என்பதை அறிந்து கொண்டேன்.(பின்னாளில் பக்தர்கள் கேட்டபோது தாமே அந்த குழந்தைஎன்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார்)

இனி இரண்டாவது காட்சி. இது நரேந்திரர் பிறந்த வேளையில் ஸ்ரீராமகிருஷ்ணர் கண்டது. அந்த வேளையில் காசியிலிருந்து ஓர் ஒளி புறப்பட்டு கல்கத்தாவில் பிறந்ததாக அவர் கண்டார். என்னுடைய பிரார்த்தனை பலனளித்து விட்டது. எனக்குச் சொந்தமான அவன் ஒரு நாள் இங்கு வருவான், என்று கூறி அவர் ஆனந்த க் கூத்தாடினார்.


என்ன செய்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்?


இனி ஸ்ரீராமகிருஷ்ணர் –நரேந்திரர் சந்திப்பின்போது நடந்த நிகழ்ச்சிகளுக்கு வருவோம். சுரேந்திரரின் வீட்டில் சந்தித்தபோதே அவரை இனம்கண்டு கொண்டார் ஸ்ரீராமகிருஷ்ணர். அப்போது அவரது உடலமைப்பு போன்றவற்றைக்கூர்ந்து கவனித்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சீடர்களைப் பரிசோதிக்கின்ற  முறைகளில் இது ஒன்று. நரேந்திரரின் அங்க அமைப்பகளைப் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் பலமுறை கூறியதுண்டு.இதோ பார்” உனது அங்க அடையாளங்கள் சிறப்பாக உள்ளன.ஆனால் ஒன்று. நீ தூங்கும் போது புஸ், புஸ் என்று கடினமாக மூச்சுவிடுகிறாய். இத்தகையோருக்கு ஆயுள் குறைவு என்று யோகிகள் கூறுகிறார்கள். மேலும், நீ ஒரு வறட்டு ஞானி அல்ல  என்று உன் கண்கள் காட்டுகின்றன. உன்னிடம் எளிய பக்தியும் ஆழ்ந்த ஞானமும் இணைந்துள்ளன” என்றும் அவர் ஒரு முறை கூறினார். அவரது முதல் நாள் பரிசோதனை திருப்திகரமாக அமைந்ததால் நரேந்திரரைத் தட்சிணேசுவரத்திற்கு அழைத்தார்.

நரேந்திரர் தட்சிணேசுவரத்திற்குச்சென்றார். அவரைத் தனியாக அழைத்துச்சென்று ”நீ அந்த ரிஷி” என்று கூறிப்பார்த்தார். நரேந்திரர் அதைப்புரிந்து கொள்ளவில்லை.

எனவே இரண்டாம் முறை சென்றபோது அவருக்கு ஆன்மீக ஆற்றலை வழங்கி, அவரை உயர்நிலைகளுக்கு அழைத்துச்சென்று அவரிடமிருந்து உண்மையைப்புரிந்து கொள்ள எண்ணி அவரைத்தொட்டார். ஆனால் நரேந்திரர் தயாராக இல்லை. ஐயோ, எனக்கு அப்பா- அம்மா இருக்கிறார்கள்” என்று கதறினார். ஸ்ரீராமகிருஷ்ணரும் விட்டுவிட்டார்.

மூன்றாம் முறையாக அவர் தட்சிணேசுவரத்திற்குச் சென்ற போது தான் ஸ்ரீராமகிருஷ்ணரால் முழுமையாக வெற்றி பெற முடிந்தது. அன்று அவர் தொட்டபோது நரேந்திரர் முற்றிலுமாகப்புறவுணர்வை இழந்தார். அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் அவரை உயர் உணர்வு நிலையில் ஆழ்த்தி, அவரது மனத்தின் அடியாழங்களிலிருந்து பல விஷயங்களை அறிந்து கொண்டார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார், நரேந்திரன் புறவுணர்வை இழந்த அந்த வேளையில் நான் அவனிடம், அவன் யார், எங்கிருந்து வந்திருக்கிறான், எதற்காகப் பிறந்துள்ளான். இங்கே (பூமியில்) எவ்வளவு காலம் இருப்பான் என்றெல்லாம் பல கேள்விகளைக்கேட்டேன். அவனும் தன்னுள் மூழ்கி, பொருத்தமான பதில்களைச்சொன்னான்.அந்தப் பதில்கள் நான் அவனைப்பற்றி  கண்டவற்றையும் எண்ணியவற்றையும் ஊர்ஜிதப்படுத்தின. அவை எல்லாவற்றையும் வெளியில் சொல்லக்கூடாது. ஆனால் அவனது பதில்களிலிருந்து ஒன்று தெரிந்துகொண்டேன். தான் யார் என்பதை அவன் அறிந்து கொண்டால்  அதன் பின் அவன் இவ்வுலகில் இருக்கமாட்டான். அன்றே திட சங்கல்பத்துடன் யோகத் தில் தன் உடலை உகுத்துவிடுவான். நரேந்திரன் தியான சித்தன், மாமனிதன்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் பரிசோதனை நிறைவுற்றது. ஆனால் நரேந்திரர்? அவரது உள்ளம் ஒரு முடிவுக்கு வர வில்லை. அவரது பரிசோதனை ஆரம்பித்தது.7) அற்புத குரு

அற்புதச்சீடன்


குருவையும் சீடனையும் ஒருவருக்குள் ஒருவராகக் காண்கிறது இந்து மதம்.குரு, சீடன் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும்  அனுபவிக்குமாறு செய்வாராக!நாம் இருவரும் சேர்ந்து ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்குப் பயன் தருவதாக விளங்கட்டும்! நாம் இருவரும் எதற்காகவும் ஒருவரையொருவர்  வெறுக்காமல் இருப்போமாக! என்று இருவரையும் இணைத்தே பேசுகின்றன வேதங்கள். சீடனுக்கு மனத்தெளிவு குருவால் உண்டாகிறது என்றால், குருவின் நிறைவு சீடனின்மூலம் வெளிப்படுகிறது. குருவின் வாழ்க்கையை வெளிப்படுத்துபவனாக அவரது செய்தியின் வெளிபாடாக இருப்பவனே உண்மையான சீடன்.

குரு சொன்னதைப்புரிந்து கொண்டு அதனை அப்படியே செய்பவன் உயர்ந்த மாணவன். ஆனால் அவர் சொல்ல இருப்பதையும் புரிந்துகொண்டு அதனையும் செயல்படுத்துபவனே சீடன். உண்மையில் அத்தகைய சீடனுக்காகவே குரு காத்திருக்கிறார். காத்திருப்பது மட்டுமல்ல, பிரார்த்திக்கவும் செய்கிறார்.


குருதேவர் அதிசய குரு


அப்படி பிரார்த்தனை செய்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.தாம் பெற்ற ஆன்மீகச் செல்வத்தைத் தரணியெங்கும் எடுத்துச்செல்வதற்கான சீடர்கள் வரவேண்டும் என்று அழுதார். இறைவனைக்காண வேண்டும். இறையனுபூதி பெறவேண்டும் என்று எத்தனையோ மகான்கள் அழுதுள்ளார்கள். ஆனால்  இறைவனைக் கண்டதுடன் அவர்களது அழுகை ஓய்ந்துவிட்டது. இங்கோ ஸ்ரீராமகிருஷ்ணர், ஒரு பாதையில் அல்ல, இரண்டு பாதைகளில் அல்ல, பல பாதைகள் வழியாகச்சென்று இறையின்பத்தை அனுபவித்தார். இறையானந்தத்தில்  திளைத்தார். அவரது அழுகையும் நின்றிருக்க வேண்டும். ஆனால் அது நிற்கவில்லை. இறைவனுக்காக அழுவது நின்றது. மனிதனுக்காக அழுவது தொடங்கியது.

மனிதர்களுக்காக அழுதார் ஸ்ரீராமகிருஷ்ணர் ! தாம் பெற்ற அனுபவங்களை, தாம் பெற்ற இன்பத்தைப் பிறருடன் பகிர்ந்து  கொள்வதற்காக, அவர்களும் அந்த இன்ப வாழ்வைப்பெறவேண்டும் என்பதற்காக அழுதார். அவர், சிவபேரானந்தப்பெருவெள்ளம் பொங்கி ததும்பி பூரணமாய் கிடக்குதே! மரணம் வந்து சேருமுன் அந்தப் பேரானந்தத்தை அனுபவிக்க வாருங்கள் உலகினரே! என்று ஒரு முனிவர் உலகத்தையே அழைத்தாரே, அது போல் அழைத்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். உடனடியாக யாரும் வராத போது அவரது ஆர்வம் ஏக்கமாகி அழுகைக்குரலாக மாறியது. கோயில்கள் மாலை ஆரதிக்கான மணி அடிக்கும். ஆ. இன்னொரு நாளும் போய்விட்டதே! என் குழந்தைகள் யாரும் வரவில்லையே! என்று மனம் துடிதுடிக்கும். ஈரத்துணியைக் கசக்கிப் பிழிவது போல் வேதனைப்படும். விருந்தினர் மாளிகை மாடியில் ஏறி நின்றுகொண்டு, என் குழந்தைகளே, எங்கிருக்கிறீர்கள்? விரைந்து வாருங்கள்.என்று கதறுவேன். என்று பின்னாளில் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவதுண்டு. இத்தகைய அற்புத குருவை உலகம் கண்டதில்லை.

அவரது அழுகுரல் இயற்கையெங்கும் மௌனமாக ஒலித்தது. அந்த மௌனக்குரலை இயற்கையின் தலைவியான காளிதேவியும் கேட்டாள். காலத்தின் தேவையை உணர்ந்திருந்த அவள்  சீடர்களை ஒவ்வொருவராக அனுப்பிவைத்தாள். ஆனால் யாரும் அந்த ஒருவருக்கு ஈடாகுமா?தாமே சென்று மோனத் தவத்தை கலைத்து அழைத்து வந்த  ரிஷியாகுமா? அவர் வரவில்லையே என்று தவித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். அந்த ரிஷியாகிய நரேந்திரர் வந்தார். இனி அவரிடம் தமது செய்தியாகிய விதையைத்தூவ வேண்டும். அதற்கு முதலில் நிலத்தைத் தயார் செய்யவேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.


ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரர் உறவு


நரேந்திரரைப்பார்த்த அளவிலேயே இவன் என் மகன் நண்பன், என் கட்டளையை நிறைவேற்றப் பிறந்தவன்., என்றென்றும் பிரிக்க முடியாத அன்புக் கயிற்றினால் என்னுடன் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பவன், என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கண்டார். காலம்காலமாகச் சனாதன தர்மத்தில் படிந்துவிட்ட கறையை நீக்கி, அதைக்காலத்திற்கு ஏற்ற ஒரு வாழ்க்கை முறையாக்கி, சத்திய யுகத்தை நிறுவும் பணியில் தேவி தம்மை ஈடுபடுத்தியிருக்கிறாள், அதில் உதவவே நரேந்திரர் பிறந்திருக்கிறார் என்பது அவருக்குத் தெய்வீகக் காட்சிகளின் வாயிலாகத் தெரிந்திருந்தது. அதனை அவர் தமது பரிசோதனைகளின் மூலம் தெளிவுபடுத்தியும் கொண்டார். அதன் பின்  எல்லையற்ற அன்பினாலும் நம்பிக்கையினாலும் நரேந்திரரைத் தம்முடன் நிரந்தரமாகப் பிணைத்துக்கொண்டார்.

பின்னர் நரேந்திரரைப் பல வழிகளில் பயிற்றுவித்து அந்த உயரிய லட்சியத்திற்குத் தகுந்த கருவியாக மாற்றி அமைத்தார். பயிற்சி முடிவடைந்து, தயாராக இருந்த நரேந்திரருக்கு சத்திய யுகத்தை நிறுவும் பணியில் எவ்வாறு ஈடுபடுவது என்று போதித்தார். பின்னர் இந்தப் பணியையும் பொறுப்பையும் நரேந்திரரிடம் ஒப்படைத்தார்.

இந்தப் பயிற்சியில் அன்புடன் கூடிய நம்பிக்கை, சோதனை, போதனை ஆகிய மூன்றும் கலந்திருந்தன.


 MAIN PAGE 

image111

ஸ்ரீராமகிருஷ்ணரின் அன்பு

ஸ்ரீராமகிருஷ்ணரின் அன்பு

ஸ்ரீராமகிருஷ்ணரின் அன்பு


நரேந்திரரைச் சந்தித்த பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் சுமார் ஐந்து வருடங்கள்  உயிர்வாழ்ந்தார். அரம்ப காலத்தில் வாரந்தோறும் ஓரிரு முறை தவறாமல் தட்சிணேசுவரம் சென்று வந்தார் நரேந்திரர். சில வேளைகளில்  அங்கே இரவிலும்  தங்குவார். தொடர்ந்து சில நாட்கள் அவர் போகாவிட்டால் ஸ்ரீராமகிருஷ்ணர் தவித்துப்போவார். வருவோர் போவோரிடமெல்லாம் நரேந்திரரைப்பற்றி விசாரிப்பார். அவரைத் தட்சிணேசுவரத்திற்கு வரச் சொல்லுமாறு கேட்டுக்கொள்வார். அழுதவாறே தேவியிடம் பிரார்த்தனை செய்வார். இரவு வேளைகளில் கூட தூங்காமல் அவரைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார். ஸ்ரீராமகிருஷ்ணர் என் மீது கொண்டிருந்த அன்பே என்னை அவருடன்  பிணைத்தது” என்று பின்னாளில் நரேந்திரர் கூறுவதுண்டு.

ஒரு நாள் ராம்தயாள், பாபுராம் என்ற இரு இளைஞர்கள் தட்சிணேசுவரத்தில் தங்கியிருந்தனர். இரவு சுமார் பதினொரு மணி இருக்கும். ஸ்ரீராமகிருஷ்ணர் தமது அறையிலிருந்து வெளியே வந்து ராம்தயாளிடம், என்னப்பா, தூங்கிவிட்டாயா? என்று கேட்டார். இல்லை என்று கூறியதும் அவர், இதோ பார், நரேனை ஒரு முறை தட்சிணேசுவரத்திற்கு வந்து போகுமாறு சொல். அவனைக்காணாமல் என் இதயம் எப்படித்துடிக்கிறது தெரியுமா? ஈரத்துணியை முறுக்கிப்  பிழிவது போல் என் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிகின்ற வேதனை உண்டாகிறது” என்று கூறிவிட்டு, கையிலிருந்த துணியை முறுக்கிப் பிழிந்து காட்டினார்.ஸ்ரீராமகிருஷ்ணரின் குழந்தை மனத்தை அறிந்திருந்த ராம்தயாள் அவரைப்பலவிதங்களில் தேற்றினார்.

வைகுண்ட நாத் என்ற பக்தர் தமது அனுபவத்தைக் கூறினார்.

அன்று முழுவதும் ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரின் பெருமைகளையே பேசிக்கொண்டிருந்தார். பேசப்பேச, அவரைக்காண வேண்டும் என்ற வேகம் அவரிடம் எழுந்தது. திடீரென்று அறையிலிருந்து வெளியே சென்று, வராந்தாவில் நின்றபடி தேவியிடம், அம்மா, அவனைப் பார்க்காமல் என்னால் வாழ முடியாது. என்று கூறி அழுதார். பிறகு அறைக்கு வந்து கவலை தோய்ந்த குரலில், நான் இவ்வளவு அழுதுவிட்டேன். ஆனால் அவன் வரவில்லை. என் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல் உள்ளது. ஆனால் அவன் இதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை” என்று கூறினார். பிறகு எழுந்து வெளியில் சென்றார். மீண்டும் உள்ளே வந்தார். அவர் நிலைகொள்ளாமல் தவிப்பது நன்றாகப்புரிந்தது. மீண்டும் கூறினார், ஒரு சிறுவனுக்காக முதியவன் நான் இப்படி அழுது அரற்றிக் கொண்டிருக்கிறேன்! மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நீங்கள் என்னுடையவர்கள். என் மனத்தில் இருப்பதை உங்களிடம் கூற நான் வெட்கப்படவில்லை. ஆனால் மற்றவர்கள்  என்ன நினைப்பார்கள்? என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லையே! என்று கூறினார்.

இப்படி நரேந்திரரைக் காணாமல் தவிப்பது போலவே, நரேந்திரர் வந்தால் ஸ்ரீராமகிருஷ்ணரின் மகிழ்ச்சியும் நிலை கொள்ளாததாக இருக்கும். பல நேரங்களில் நரேந்திரரைப் பார்த்ததுமே சமாதியில் ஆழ்ந்து விடுவார். எனவே சில வேளைகளில் அவர், நரேன் இங்கே வராமல் இருப்பதும் நல்லது தான், அவனைப் பார்த்தாலே என்  உணர்ச்சிகள்  கட்டற்றுப்போய் விடுகின்றன. அவன் வருவதே ஒரு மாபெரும் நிகழ்ச்சி ஆகிவிடுகிறது” என்று கூறுவதுண்டு.


ஈசுவரகோடி


ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சீடர்களை ஈசுவரகோடிகள், ஜீவகோடிகள் என்று இரண்டு பிரிவாகப் பிரித்திருந்தார். ஓர் அவதார புருஷருடன் அவரது பணிக்குத்துணையாக உயர் உலகங்களிலிருந்து வருபவர்கள் ஈசுவரகோடிகள்.இவர்கள் வினைப்பயனின் காரணமாகப் பிறப்பவர்கள் அல்ல. அவர்களது பிறப்பும் தவமும் சாதனைகளும் அனைத்தும் உலக நன்மை ஒன்றிற்காக மட்டுமே தவிர அவர்களுக்கென்று எந்த நோக்கமும் கிடையாது. தமது சீடர்களில் ஆறு பேரை ஸ்ரீராமகிருஷ்ணர் இத்தகையவர்களாக இனம் கண்டிருந்தார். நரேந்திரர், ராக்கால், பாபுராம், நிரஞ்சன், யோகின், பூர்ணன் ஆகியோர் அந்த ஆறுபேர்.நரேந்திரன், ராக்கால், போன்றோர் நித்திய சித்தர்கள், ஈசுவரகோடிகள். இவர்கள் சாதனை செய்வது என்பது பெயரளவிற்குத்தான். நரேந்திரனைப்பாருங்கள்.அவன் யாரையும் பொருட்படுத்துவதில்லை. ஒரு நாள் அவன் என்னுடன் கேப்டனின் வண்டியில் வந்து கொண்டிருந்தான்.கேப்டன் நரேந்திரனை நல்ல  இடத்தில் உட்காரச்சொன்னார். ஆனால் அவன் கேப்டனைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவன் என்னைக்கூட எதிர்பார்த்திருப்பதில்லை. தனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதைக்கூட அவன் என்னிடம் சொல்வதில்லை. நரேந்திரன், ஒரு பெரிய மேதை, என்று நான் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு திரிவேனோ என்று அவன் நினைப்பது ஒரு வேளை அதற்குக் காரணமாக இருக்கலாம். அவனிடம் மாயையின் மோகமே இல்லை, எந்தப் பந்தமும் இல்லை, அவன் மிகவும் நல்லதொரு பாத்திரம். பல நற்குணங்கள் ஓரிடத்தில் அமைந்துள்ளன. பாடுகிறான், வாத்தியங்கள் வாசிக்கிறான், எழுதுகிறான், படிக்கிறான்! அது மட்டுமல்ல. புலன்களையும் வென்றவன். திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறான் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.


ஆயிரம் இதழ் தாமரை


கேசவ சந்திர சேன், விஜய கிருஷ்ண கோசுவாமி போன்ற பிரபலமான பிரம்ம சமாஜத் தலைவர்கள் ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணரின் அறையில் கூடியிருந்தனர். நரேந்திரரும் அங்கு இருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் சேகவரையும் விஜயரையும் மலர்ந்த முகத்துடன் பார்த்தார். பின்னர் நரேந்திரனைப் பார்த்தார். அவரது மனத்திரையில் நரேந்திரரின் எதிர்காலம் ஒளிமிக்க ஓவியம்போல் சுடர்விட்டது. கூட்டம் நிறைவுற்றபின் கூறினார், எந்தச் சக்தியால் கேசவர் உலகப்புகழ் பெற்று விளங்குகிறாரோ அதைப்போல் பதினெட்டு சக்திகள் நரேந்திரனிடம் நிறைநிலையில் உள்ளதைக் கண்டேன். கேசவரிடமும் விஜயரிடமும் ஞான ஒளி ஒரு தீபம் போல் தான் பிரகாசிக்கிறது. நரேந்திரனைப் பார்த்தாலோ, அவனது உள்ளத்தில் ஞான சூரியனே உதித்து ஒளிர்கிறான். அந்த ஒளி மாயையின் சுவடு கூட அவனிடம் இல்லாமல் துடைத்துவிட்டது.

மற்றொரு முறை கூறினார், நரேந்திரன் மிக உயர்ந்த தளத்தைச்சேர்ந்தவன். ஆண்மை மிக்கவன், எத்தனையோ பக்தர்கள் இங்கு வருகிறார்கள். ஆனால் ஒருவர் கூட அவனைப்போல் இல்லை. இங்கு வருகின்ற பக்தர்களைப்பற்றி அவ்வப்போது நான் எண்ணிப்பார்ப்பது உண்டு. அவர்களில் சிலர் பத்து இதழ் தாமரை, சிலர் பதினாறு இதழ் தாமரை, சிலர் நூறு இதழ் தாமரை.ஆனால் நரேனோ, ஆயிரம் இதழ் தாமரை, மற்ற பக்தர்கள் பானைகள், குடங்கள், நரேனோ பெரிய அண்டா, மற்றவர்கள் குளம் குட்டைகள்.நரேனோ ஹல்தார்புகூரைப்போன்ற பெரிய ஏரி. மற்றவர்கள் சிறுசிறு மீன்கள், நரேனோ சிவப்புக் கண்கள் கொண்ட பெரிய  கயல் மீன்.

உள்ளொளி இல்லாத பலவீனன், ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவாயிலிருந்து இத்தகைய புகழ் மொழியைக் கேட்டால் அகங்காரத்தால் பூரித்து தலைகால் புரியாமல் குதிப்பான். நரேந்திரரிடம் இந்த வார்த்தைகள்  முற்றிலும் வேறுவிதமான விளைவை ஏற்படுத்தின. அசாதாரணமான அக நோக்குடைய அவரது மனம் உள்ளே ஆழ்ந்து, கேசவர் மற்றும் விஜயரின் எண்ணற்ற நற்பண்புகளுடன் தமது அப்போதைய நிலையை ஒப்பிட்டுப் பார்த்தது.அத்தகைய புகழ்ச்சிக்குத் தான் தகுதியற்றவன் என்பதைக் கண்ட நரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சொற்களை எதிர்த்தார். என்ன சொல்கிறீர்கள்? இதைக்கேட்டால் மக்கள் உங்களைப்பைத்தியம் என்று சொல்வார்கள். உலகப் புகழ்பெற்ற கேசவர் எங்கே? மகாத்மாவான விஜயர் எங்கே? ஒன்றுமில்லாத பள்ளிச் சிறுவனான நான் எங்கே? அவர்களுடன் என்னை ஒப்பிட்டு, தயவு செய்து இப்படிப்பேசாதீர்கள்” என்றார் அவர். ஆனால் நரேந்திரரின் மறுப்பை ஸ்ரீராமகிருஷ்ணர் பொருட்படுத்தவில்லை. அது அவருக்கு மகிழ்ச்சியையே அளித்தது. அன்புடன் அவர் கூறினார். அப்பா! நான் என்ன செய்யட்டும்? இதை நான் கூறினேன் என்றா நீ நினைக்கிறாய்? தேவி எனக்குக் காட்டினாள், நான் சொன்னேன். அவள் சத்தியத்தைத் தவிர வேறொன்றையும் காட்டியதில்லை. அதனால் தான் அவ்வாறு பேசினேன்.


ஸ்ரீராமகிருஷ்ணரின் நம்பிக்கை


நரேந்திரனை யாரும் எடை போடாதீர்கள். அவனை முற்றிலுமாக அறிந்து கொள்ள யாராலும் இயலாது ” என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.நரேந்திரரிடம் அவர் வைத்திருந்த நம்பிக்கை அளவிட முடியாதது. நரேந்திரரின் தன்னம்பிக்கை, ஆண்மை, ஒரு முகப்பட்ட செயல்பாடு, அறுதி உண்மையை அடைவதற்கான தாகம் போன்ற பண்புகள் அவரை  அத்தகைய நம்பிக்கை கொள்ளச்செய்தன. பிறரது கண்களுக்குத் தவறாகப்பட்ட அவரது பல குணங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரின் கண்களுக்கு அப்படிப் படவில்லை. அந்தப் புறத்தோற்றத்திற்குப் பின்னால் இருந்த உண்மையை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. பலரும் நரேந்திரரைப் பிடிவாதம் மிக்கவராக, முரடராக , பக்குவப்படாத அறிவு கொண்டவராகக் கண்டனர். ஆனால்  ஸ்ரீராமகிருஷ்ணரோ அவரது பிடிவாதத்திற்குப் பின்னால் தன்னம்பிக்கையைக் கண்டார்.முரட்டுத்தனத்திற்குப் பின்னால் ஆண்மையைக் கண்டார். பக்குவப்படாத அறிவிற்குப் பின்னால் நேரடி அனுபவத்தைத்தவிர எதனாலும் அமைதியுறாத ஆன்ம தாகத்தைக்கண்டார். தம்மைப்புகழ்வதையோ இகழ்வதையோ நரேந்திரர் பொருட்படுத்துவதில்லை. அதற்குக் காரணம் அவரது இதயத் தூய்மை. அவரது சுதந்திரமான செய்லபாடுகளும் சிந்தனைகளும் சுயக்கட்டுப்பாட்டிலிருந்து பிறந்தவை. வெளியில் தெரிகின்ற இந்தச்சில குறைகள் கூட காலப்போக்கில் மறைந்து உண்மைப்பண்புகள் வெளித்தோன்றும் என்பதையும்  ஸ்ரீராமகிருஷ்ணர் அறிந்திருந்தார். எனவே நரேந்திரர் மீது ஸ்ரீராமகிருஷ்ணரின்  நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்தது.

ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணரைக் காண அவரது இல்லறச் சீடரான நாக மகாசயர்  வந்திருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் அறையில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது குளித்து விட்டு தோளில் ஈரத்துண்டுடன் ”சிவோஹம்” சிவோஹம்“ (நானே சிவன், நானே சிவன்) என்று கூறியபடியே நரேந்திரர் உள்ளே வந்தார். நாக மகாசயர் அதிர்ந்துபோனார். மிக உயர்ந்த மகானாக இருந்தும் தம்மை மிகமிகச் சாதாரண பக்தனாக வைத்துக்கொண்டவர் அவர். பணிவின் வடிவம் அவர். பதினேழு, பதினெட்டு வயதான ஒரு வாலிபன், அதுவும் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருமுன்பு ”நானே சிவன்” என்று பொருள்படுகின்ற மிக உயர்ந்த மந்திரத்தைக்கூறிய போது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் நாக மகாசயரைச்சுட்டிக் காட்டி நரேந்திரரிடம் இவர் நான் என்ற அகந்தை சிறிதும் இல்லாதவர். ஆனால் அதை வெளிக் காட்டுவதில்லை” என்று கூறினார். நரேந்திரர் நீங்கள் சொன்னால் அது சரியாகவே இருக்கும். என்று பதில் சொன்னார். இரண்டு சீடர்களும் பேச ஆரம்பித்தனர்.

நாக மகாசயர்-எல்லாம் தேவியின் ஆணைப்படி நடக்கிறது. அவள் செய்கின்ற செயலை அகந்தையினால் மக்கள் தாங்கள் செய்வதாக நினைத்துக்கொள்கின்றனர்.

நரேந்திரர்-இல்லை, என்னால் தான் யாவும் நடக்கிறது,உலகம் என்னிடத்திலிருந்து தான் தோன்றியது, என்னிடம் தான் இருக்கிறது, என்னிலேயே மறைகிறது.

நாக மகாசயர்-அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

நரேந்திரர்- என்னுடைய விருப்பமின்றி சந்திர சூரியர்கள் கூட அசைய முடியாது.என் விருப்பத்தால் தான் மட்டுமே இந்த உலகம் ஓர் எந்திரத்தைப்போல் இயங்குகிறது.

  அவர்களுடைய உரையாடலைக்கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ணர் புன்முறுவலுடன், நரேன் உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப்போன்றவன். அவன் சொல்வதில் தவறில்லை” என்று நாக மகாசயரிடம் கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் வார்த்தைனைக்கேட்ட நாக மகாசயர் நரேந்திரருக்கு  வணக்கம் செலுத்திவிட்டு 

மௌனமாக இருந்தார்.


தேடிச்சென்று அருள் புரிதல்-


நரேந்திரர் சில வாரங்கள் தொடர்ந்து தட்சிணேசுவரத்திற்குச் செல்லாவிட்டால் தவித்துப்போவார் ஸ்ரீராமகிருஷ்ணர். சிலவேளைகளில் தாமே அவரைத்தேடிப்போய்விடுவார். அந்த நாட்களில் நரேந்திரர் தமது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்தார்.படிப்பிற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகவும் அங்கேயாரும்  காணாமல் இரவு வேளைகளில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடமுடியும் என்பதற்காகவும் அந்த வீட்டை அவர் தேர்ந்தெடுத்திருந்தார். அவரது படிப்பறை மாடியில் இருந்தது. ஒரு நாள் காலையில் அவர் படிப்பதற்கு அமர்ந்தார். அப்போது நண்பர்களான ஹரிபாதர், தாசரதி ஆகியோர் வந்தனர். எல்லோருமாகச்சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு அந்த நண்பர்கள் நரேந்திரரிடம் பாடுமாறு கேட்டுக்கொண்டனர். நரேந்திரர் பாட ஆரம்பித்திருப்பார், அப்போது கீழிருந்து ஒரு குரல் தவிப்புடன் , நரேன், நரேன்” என்று அழைப்பத கேட்டது. அது ஸ்ரீராமகிருஷ்ணரின் குரல் என்பதைப் புரிந்து கொண்டார் நரேந்திரர். உடனே அவசர அவசரமாகக் கீழே சென்று அவரை மேலே அழைத்து வந்தார். நரேந்திரருக்காக ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு துணியில் இனிப்பைக் கட்டி எடுத்து வந்திருந்தார். மேலே வந்ததும், மற்றவர்கள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் நரேந்திரருக்கு அதனை ஊட்டத்தொடங்கினார். பின்னர் பாடுமாறு கேட்டுக்கொண்டார்.

அன்னையே விழித்தெழு என்ற பாடலையும் அம்மா காளி நீ மீண்டும் ஒரு முறை ஆனந்தத் தாண்டவம் ஆடிடுவாய், என்ற பாடலையும் பாடினார் நரேந்திரர். பாடலைக்கேட்டபடியே ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதியில் ஆழ்ந்தார். நண்பர்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.ஸ்ரீராமகிருஷ்ணர் வந்ததும், இனிப்பை ஊட்டியதும் தம்மை மறந்த நிலையில் நிற்பதும் எல்லாம் அவர்களுக்குப் புதிராக இருந்தது. சமாதிநிலையைக்கண்ட அவர்கள் குழம்பிப்போனார்கள். ஒரு வேளை மயக்கமாகி விட்டாரோ என்று எண்ணி அவரது முகத்தில் தண்ணீர்  தெளிக்க முற்பட்டனர். நரேந்திரர் அவர்களைத் தடுத்து, விட்டு விடுங்கள், சிறிது நேரத்தில் அவரே சரியாகி விடுவார்.......... என்று கூறினார். தொடர்ந்து காளி தேவியின் மீது சில பாடல்களையும் பாடினார். சிறிது நேரத்தில் புறவுணர்வைப்பெற்ற ஸ்ரீராமகிருஷ்ணர், நீநீண்ட நாட்களாக தட்சிணேசுவரத்திற்கு வர வில்லை. இப்போதே என்னுடன் வா” என்று நரேந்திரரை அழைத்தார். மறுபேச்சின்றி அவருடன் சென்றார் நரேந்திரர்.

மற்றொரு முறையும் இப்படித்தான் 


ஓரிரு வாரங்கள் தொடர்ந்து நரேந்திரரால் தட்சிணேசுவரம் செல்ல இயலவில்லை. நாள்தோறும்ஸ்ரீராமகிருஷ்ணர் அவரது வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இறுதியாகத் தாமே கல்கத்தா செல்ல எண்ணினார். ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை யாரையாவது பார்க்க அவன் வெளியே போயிருக்கலாம். எனவே கல்கத்தா சென்றாலும் அவனைப் பார்க்க முடியாமல் போகலாம். ஆனால் சாதாரண பிரம்மசமாஜத்தின்  கூட்டுப் பிராத்தனையில் அவன் ஞாயிற்றுக்கிழமைகளில் பாடுவான். எனவே அங்கே சென்றால் கட்டாயம் அவனைப்பார்க்கமுடியும். அங்கே திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நான் போய் நின்றால்  பிரம்மசமாஜத்தினர் அதை ஒரு தொந்தரவாகக் கருத மாட்டார்களா? ஏன் கருத வேண்டும்? இப்படி  எத்தனையோ கேசவரின் கூட்டத்திற்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் மகிழ்ச்சியே அடைந்தார்கள். விஜயர், சிவநாத் போன்ற சாதாரண பிரம்மசமாஜத்தலைவர்கள் கூட அப்படி எத்தனையோ முறை தட்சிணேசுவரத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று எவ்வாறெல்லாமோ குழம்பி, இறுதியில் போவது என்று முடிவு செய்தார்.

ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணரின் குழந்தை உள்ளம் ஒன்றை மறந்துவிட்டது. தம்மிடம் தொடர்பு ஏற்பட்ட பின் விஜயர், கேசவர் ஆகியோரின் கருத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைக்கண்ட சிவநாத் முதலான சாதாரண பிரம்ம சமாஜ உறுப்பினர்களில்பலர் தட்சிணேசுவரத்திற்கு வருவதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார்கள் என்பது அவரது கவனத்திற்கு வரவில்லை.

அப்போது மாலைவேளை, நூற்றுக்கணக்கான பிரம்ம சமாஜத்தினர் கூடி, “ஸ்த்யம் ஞானம் அனந்தம் ப்ரஹம” முதலான மந்திரங்களைக்கூறி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். பிரார்த்னையும் தியானமும் நிறைவுற்றன. அதன் பின் ஆசாரியர் மேடை மீது அமர்ந்து இறையன்பும் ஆன்மீக ஈடுபாடும் எவ்வாறு வளரும் என்பதைப்பற்றி பேசினார். அந்தச் சமயத்தில் பரவசம் கலையாத நிலையில் அங்கே வந்த ஸ்ரீராமகிருஷ்ணர் நேராக ஆசாரியர் அமர்ந்திருந்த மேடையை நோக்கிச்சென்றார். அங்கிருந்தோரில் பலர் அவரை முன்பே பார்த்திருக்கிறார்கள் . எனவே ஸ்ரீராமகிருஷ்ணர் வந்திருக்கிறார்” என்ற செய்தி கூட்டத்தில் பரவியது. அவரைப் பார்த்திராத சிலர் எழுந்து நின்று கொண்டும், சிலர் பெஞ்சின் மீது ஏறிக்கொண்டும் பார்க்க முயன்றனர். அதனால் அங்குக் குழப்பம் ஏற்பட்டது.ஆசாரியர் பேச்சை நிறுத்தினார்..

நரேந்திரர் பாடுவோரின் கூட்டத்தில் இருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் எதிர்பாராமல் வந்ததன் காரணத்தைப்புரிந்து கொண்ட அவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருகில்  வந்தார். பிரம்ம சமாஜத்தின் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாட்டிற்குக் காரணகர்த்தா ஸ்ரீராமகிருஷ்ணர் என்று ஆசாரியரும் வேற சில முக்கிய உறுப்பினர்களும் முடிவு செய்திருந்த தால் அவர்கள் குருதேவரை வரவேற்கவில்லை. ஏன் சாதாரண விருந்தாளிக்குக் காட்டும் மரியாதையைக்கூட காட்டவில்லை.

ஸ்ரீராமகிருஷ்ணர் எதையும் பார்க்காமல் நேராக மேடைக்கு அருகில் வந்து நின்று சமாதியில் ஆழ்ந்தார். அவரது இந்த நிலையைக் காண்பதற்கான ஆர்வம் கூட்டத்தினருக்கு ஏற்பட்டதால் கூச்சலும் குழப்பமும் மிகுந்தது. பிரச்சனை கட்டுக்கடங்காமல் போன போது கூட்டத்தைக் கலைக்கும் நோக்கத்துடன் யாரோ ஒருவர் விளக்குகளை அணைத்தார். விளைவு  விபரீதமானது.இருள் சூழ்ந்ததால் பயந்துபோய், முண்டியடித்துக்கொண்டு வெளியே போக எல்லோரும் கதவை நோக்கி ஓடியதால்  ஒரே அமளியாகியது.

ஸ்ரீராமகிருஷ்ணரை வரவேற்க யாரும் முன்வராததைக்கண்டபோதே நரேந்திரர் சுதாரித்துவிட்டார். குழப்பம் மிகுந்தபோது, அவரை எப்படி வெளியே கூட்டிவருவது என்பது தான் அவரது கவலையாக இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரின் பரவச நிலை கலைந்ததும் மிகுந்த சிரமத்துடன் பின்பக்க வழியாக அவரை வெளியே கூட்டிவந்தார். பின்னர் அவரை ஒரு வண்டியில் தட்சிணேசுவரத்திற்கு அழைத்துச்சென்றார். அதைப்பற்றி பின்னாளில் நரேந்திரர் கூறினார்,அன்று எனக்காக அவர் அடைந்த அவமானத்தை எண்ணி நான் பட்ட வேதனையைச்சொல்லி முடியாது. அவரது செயலுக்காக அன்று நான் அவரை எவ்வளவு கடிந்துகொண்டேன் ்தெரியுமா? ஆனால் அவர் வேதனை கொள்ளவும் இல்லை, என் வார்த்தைகளுக்குச் செவி சாய்க்கவும் இல்லை.

என்னிடம் கொண்ட அன்பின் காரணமாக அவர் தம்மைப்பற்றி கவலைப்படாததைக் கண்ட நான் மிகவும் கடுமையாகப்பேசினேன்.” பரத மன்னன் மானை எண்ணியெண்ணியே மாண்டான்” மானாக பிறந்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. அது உண்மையானால் என்னையே நினைத்து க் கொண்டிருக்கும் உங்கள் கதியை நினைத்துப் பாருங்கள். ஜாக்கிரதையாக இருங்கள், என்றெல்லாம்் கூறினேன். குழந்தை உள்ளம் படைத்த ஸ்ரீராமகிருஷ்ணர் என் பேச்சைக்கேட்டு மிகுந்த கவலை கொண்டார். சரியாகத் தான் சொல்கிறாய், உண்மைதானே! அப்படி நடந்தால் என்னாவது? ஆனால் என்னால் உன்னைப் பார்க்காமல் இருக்க முடியாது? என்று கூறிவிட்டு அச்சத்துடனும் வேதனையுடனும் இந்த விஷயத்தைப் பற்றி காளியிடமே சென்று முறையிட்டார். சிறிது நேரம் கழித்து மகிழ்ச்சியுடன் திரும்பிவந்து சிரித்த படி  என்னிடம் கூறினார், போக்கிரிப் பயலே! நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன், நீ அவனை நாராயணனாகக் காண்பதால் தான் அவனிடம் அன்பு செலுத்துகிறாய், என்றைக்கு உன்னால் அவனிடம்  நாராயணனைக் காண இயலவில்லையோ, அன்று முதல் நீ அவன் பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டாய், என்று அன்னை சொன்னாள், இவ்வாறு எனது மறுப்புக்களையும் வாதங்களையும் ஒரேயடியாக ஒதுக்கிவிட்டார்.


நரேந்திரரின் வாழ்வில் ஸ்ரீராமகிருஷ்ணர்.

இனி நரேந்திரரின் வாழ்வில் ஸ்ரீராமகிருஷ்ணரின் இடமோ விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது. பின்னாளில் ஒரு முறை நரேந்திரர், விவேகானந்தனிலிருந்து  ஸ்ரீராமகிருஷ்ணரைக் கழித்தால் எஞ்சுவது வெறும் உணர்ச்சிப்பிண்டம் மட்டுமே என்று கூறியதுண்டு. இளமையிலிருந்தே நரேந்திரர் செய்த சாதனைகள் பெற்ற அனுபவங்கள் , பிரம்மச்சரியம், தவம் போன்ற அனைத்திற்கும் சரியான பாதையை வகுத்துக்கொடுத்தவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரிடம் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தார். நரேந்திரரோ ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இனம் தெரியாத மரியாதை வைத்திருந்தார். நரேந்திரர் பக்குவம் பெறப்பெற ஸ்ரீராமகிருஷ்ணரின் தெய்வீக அன்பிற்கு முற்றிலுமாக வசப்படத்தொடங்கினார்.

நரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரை நேசித்தார் என்றாலும் ஆரம்பத்தில் அவரைக்குருவாக ஏற்றுக்கொள்ளவோ முற்றிலுமாக அவரிடம் தம்மை ஒப்படைக்கவோ இல்லை. ஸ்ரீராமகிருஷ்ணரின் மற்ற சீடர்களான ராக்கால், பாபுராம், சரத் போன்றோரிடமிருந்து நரேந்திரர் இதில் பெரிதும் வேறுபட்டிருந்தார். அவருக்கென்று தனியான நம்பிக்கைகள் இருந்தன, கொள்கைகள் இருந்தன. அவை தவறு என்று யாராவது நிரூபிக்கும் வரை அவற்றை விடாப்பிடியாக அவர் பற்றிக் கொண்டிருந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை மிகவும் எளிமையானது. அவர் முற்றிலுமாகத் தம்மைக் காளி தேவியின் திருவடிகளில் ஒப்படைத்து அவளது அருளாணைப்படியே வாழ்க்கையை நடத்துபவர். பழக்க வழக்கங்களில் மிகவும் ஆசாரமானவர். நரேந்திரர் பிரம்மசமாஜத்து உறுப்பினர்.உணவிலோ, மற்ற பழக்க வழக்கங்களிலோ பெரிதாக ஆசாரங்களைப் பின்பற்றாதவர். பலதரப்பட்ட நண்பர்கள் உடையவர். அவரது கண்ணோட்டத்தில் சிலவேளைகளில் ஸ்ரீராமகிருஷ்ணரின் செயல்களே தவறென்று பட்டது. அவற்றைக் கண்டிக்கவும் அவர் தயங்க வில்லை. பின்னாளில் நரேந்திரர், என்னைப் பற்றி என்ன சொல்வேன்,? நான் அவரது பூதகணங்களுள் ஒருவன் என்றெண்ணுகிறேன். அவரிடமே அவரைப் பற்றி தவறாக எதையாவது உளறுவேன், அதைக்கேட்டு அவர் சிரிப்பார் என்று கூறியதுண்டு.

ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு கருத்தைப்பற்றி கூறிக்கொண்டிருந்தார். நரேந்திரர் அதனை எதிர்த்துக்கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் எவ்வளவோ முயன்றும் அவரது கருத்தை நரேந்திரர் ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய இயலவில்லை. நரேந்திரருக்கோ தமது கருத்தை ஸ்ரீராமகிருஷ்ணர் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஆதங்கம்! எனவே ஸ்ரீராமகிருஷ்ணர் எதைச்சொன்னாலும் பொருட்படுத்தாமல் மௌனமாக இருந்தார். கடைசியில் ஸ்ரீராமகிருஷ்ணர் சற்று ஆத்திரத்துடன், இதோ பார்! நான் சொல்வதைக்கேட்க முடியாது என்றால் நீ ஏன் இங்கு வருகிறாய்? என்று கேட்டார். அதற்கு நரேந்திரர் அமைதியாக, நீங்கள் சொல்வதைக் கேட்பதற்காக நான் இங்கு வரவில்லை. நான் உங்களை நேசிக்கிறேன். அதற்காக இங்கு வருகிறேன் என்றார். ஸ்ரீராமகிருஷ்ணர் உணர்ச்சிப்பெருக்குடன்  எழுந்து நரேந்திரரை அப்படியே கட்டிக்கொண்டார்.

 மகனாக

நரேந்திரரைத் தம் மகனாகக் கண்டிருந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். அந்த நாட்களில் நரேந்திரர் காளியை ஏற்றுக்கொள்வதில்லை. அது மட்டுமல்ல, அவளை நிந்திக்கவும் செய்வார் . ஒரு நாள் வாய்க்கு வந்தபடியெல்லாம் ஏசத்தொடங்கினார். அதைக்கேட்டு ஆத்திரமுற்ற ஸ்ரீராமகிருஷ்ணர், போக்கிரி , இப்படியெல்லாம் ஏசுவதானால் இனி என்னிடம் வராதே” என்று கடிந்து கூறினார். நரேந்திரர் அமைதியாக வெளியில் சென்றார். ஆனால் நேராகச்சென்று புகைக்குழாய் தயார் செய்து ஸ்ரீராமகிருஷ்ணருக்குக் கொண்டு வந்து புன்னகையு்ன் கொடுத்தார். ஸ்ரீராமகிருஷ்ணரும் சிரித்தபடியே அதனைப்பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி பின்னர் ம-விடம் கூறிய ஸ்ரீராமகிருஷ்ணர் , அவன் என் மகன். நான் ஏசுவதால் கோபம் கொள்வானா? என்று கேட்டார்.

நானே அவன்

மகன் என்ற நிலையைக் கடந்து நரேந்திரரையும் தம்மையும் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒன்றாகவே கண்ட நிகழ்ச்சிகளும் உண்டு. ஒரு நாள் மாலை வேளையில் நரேந்திரர் தட்சிணேசுவரத்திற்கு வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்று அவரை வணங்கி அமர்ந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் அன்று வினோதமாக நரேந்திரரை நெருங்கிச்சென்று, ஏறக்குறைய அவரது மடிமீதே அமர்ந்துவிட்டார். பிறக தம்மையும் நரேந்திரரையும் மாறிமாறி சுட்டிக்காட்டியபடி. இருவருக்கும் இடையில் எந்த வேற்றுமையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் நானாகவும் இருக்கிறேன். அவனாகவும் இருக்கிறேன். நீரில் ஒரு கம்பை மிதக்க விட்டால், அந்த நேரத்திற்குத் தண்ணீர் பிரிந்திருப்பது போல் தோன்றும், ஆனால் உண்மையில் தண்ணீர் ஒன்றே தான், நான் சொல்வது உனக்குப் புரிகிறதா? கடைசியில் பார்த்தால் இருப்பவை அனைத்தும் தேவியே அல்லவா? என்றார்.

அதன் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் புகை பிடிக்க விரும்பினார். வைகுண்டர் அவருக்காகப் புகைக் குழாயைத் தயார் செய்து கொண்டு வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் தாம் ஒரு முறை புகையை இழுத்துவிட்டு நரேந்திரரை இழுக்குமாறு கூறினார். அவரது கையில் இருக்கின்ற குழாயைப் புகைத்தால் அவரது கை எச்சிலாகுமே என்று தயங்கினார் நரேந்திரர். ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர், நீ ஒரு முட்டாள். நான் உன்னிலிருந்து வேறானவனா? நானும் நான் தான்? நீயும் நான் தான்? என்று கூறி அவரைப் புகைபிடிக்கச்செய்தார். நரேந்திரர் ஓரிரு முறை இழுத்த பிறகு மீண்டும் தாம் புகை பிடிப்பதற்காகக் குழாயைில் வாயை வைக்க எத்தனித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். தாம் பிடித்த எச்சில் குழாயை அவர் வாயில் வைப்பதா என்று அவரை விரைந்து தடுத்தார் நரேந்திரர். ஆனால் அவரது மறுப்பைப் பொருட்படுத்தாமல் புகை பிடித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். நான் நரேந்திரனை என் ஆன்மாவாகக் காண்கிறேன். அவனுக்கு நான் அடிபணிகிறேன், என்றும் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதுண்டு.

நரேந்திரரைத் தம்மில் ஒரு பாதியாகவே ஸ்ரீராமகிருஷ்ணர் கண்டார். அவரை யாராவது குறை சொன்னால், அப்படி சொல்லாதீர்கள். அது சிவ நிந்தை” என்பார் அவர்.


நரேந்திரருக்குத் தனி இடம்

ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்தித்த பிறகும் நரேந்திரர் பிரம்ம சமாஜக் கூட்டங்களுக்குப்போய் வந்தார். கேசவரின் சமாஜத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடவசதி உண்டு. நரேந்திரர் சாதாரண பிரம்மசமாஜத்தைச் சேர்ந்தவர். அங்கே அப்படித் தனி இடவசதி கிடையாது. எனவே அந்தக் கூட்டங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றசீடர்களைத் தடுத்திருந்தார். ஆனால் நரேந்திரரை அவர் தடுக்கவில்லை. ஏனெனில் அவர் இத்தகைய சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத அளவிற்குத் திடமனம் படைத்தவர் என்பதை அவர் அறிந்திருந்தார். இந்த  ஒன்றில் மட்டுமல்ல, எல்லாவிஷயங்களிலும் நரேந்திரருக்குத் தனி இடம் அளித்திருந்தார் அவர். சில நிகழ்ச்சிகளைக் காண்போம்.


உணவு


ஸ்ரீராமகிருஷ்ணர் பொதுவாக எல்லோரிடமிருந்தும் உணவை ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு டம்ளர் தண்ணீராக இருந்தாலும், அதைக்கொண்டு வருபவரின் மனநிலையைப் பொறுத்தே அதனை அவர் ஏற்பார்.தகந்தவராக இல்லாவிட்டால் அதனை விலக்கிவிடுவார் கொண்டு வருபவரின் மனத்தை உடனடியாக அவரால் புரிந்து கொள்ள முடிந்திருந்தது. நல்லொழுக்கம் இல்லாத யாரிடமிருந்தும் எதையும் அவர் ஏற்றுக் கொள்வதில்லை. அது போலவே சிரார்த்தச் சடங்குகளில் படைக்கப்படும் உணவையும் அவர் உண்பதில்லை. இந்த விஷயங்களில் தமது சீடர்களுக்கும் அவர் இதே விதியை வகுத்திருந்தார். ஆனால் நரேந்திரர் எந்த உணவையும் யாரிடமிருந்து வாங்கி உண்பதையும் அவர் தடுக்கவில்லை. அவனிடம் எரிந்து கொண்டிருக்கும் ஞான அக்கினி எந்தக் குறையையும் எரித்துவிடும்” என்பார் அவர். ஒரு முறை அவர் நரேந்திரரிடமே, நீ எந்த உணவை உண்டாலும் பரவாயில்லை. அது உன்னை ஒன்றும் செய்யாது. மாட்டிறைச்சியோ, பன்றி இறைச்சியோ எது சாப்பிட்டாலும் சரி, அதன் பிறகு மனத்தை நிலையாக இறைவனிடம் வைக்க முடியுமானால் அந்த உணவு  ஹவிஷ்யான்னத்திற்குச் சமமானது.ஹவிஷ்யான்னம் சாப்பிட்டும் ஒருவனது மனம் காமத்திலும் பணத்தாசையிலும் உழலுமானால் அவன் கேவலமானவன்” என்றார்.


குருசேவை

குருசேவை ஆன்மீக வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. குருவிற்குச்சேவை செய்வதற்கான எந்த வாய்ப்பையும் ஒரு சீடன் இழக்க விரும்புவதில்லை. குரு சேவையை ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய நிபந்தனையாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் தமக்கு எந்த ச்சேவை செய்யவும் நரேந்திரரை அனுமதிக்கமாட்டார். அவருக்கு வீசுவது, கால்பிடித்து விடுவது, தண்ணீர் கொண்டு செல்வது என்று பல பணிகளை மற்ற இளைஞர்கள் செய்யும்போது  நரேந்திரரும் செய்ய விரும்பினார். ஆனால் அவர் எதையாவது செய்ய முற்படும்போது ஸ்ரீராமகிருஷ்ணர் உடனடியாக அதனைத்தடுத்து, உன் பாதை வேறானது” என்று கூறிவிடுவார்.

சேவை செய்வது மனம் தூய்மை பெறுவதற்காக, ஆனால் நரேந்திரன் ஏற்கனவே தூய மனத்தைப்பெற்றுள்ளான். எனவே அவன் சேவை செய்யத்தேவையில்லை” என்பது ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்தாக இருந்தது. மற்றொரு காரணமும் இருக்கலாம்.  உன்னை நான் நாராயணனாகவே காண்கிறேன், என்று ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரிடம் கூறுவதுண்டு. அந்த நாராயணன் தமக்குச்சேவை செய்வதா என்ற எண்ணமும் அவரைத் தடுத்திருக்கலாம். என்னை இவ்வளவு தூரம் நேசித்த, அதே வேளையில் மரியாதையும் அளித்த மற்றொருவர் கிடையாது, என்று பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கூறினார்.


அதே வேளையில் நரேந்திரர் எதைச் செய்தாலும் அதை ஸ்ரீராமகிருஷ்ணர் ஏற்றுக்கொண்டார் என்பதும் கிடையாது. என்னிடம் தான் அவருக்கு எவ்வளவு அன்பு!அதே நேரம் என்னிடம் ஏதேனும் தீய சிந்தனை தோன்றினால் அவருக்கு உடனே தெரிந்துவிடும். வேலை தேடி அலைந்த நாட்களில் தீயவர்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டேன். வேலை தேடுவது ஸ்ரீராமகிருஷ்ணரைப்பொறுத்தவரை உலகியல், எனவே அந்த நாட்களில் நான் கொடுக்கும் உணவு எதையும் அவர் உட்கொள்ள மாட்டார். உண்பதற்காகக் கையைத்தூக்குவார். ஆனால் கை உயராது. பிறகு என்னிடம், இன்னமும் நீ தயாராகவில்லை, என்றார் என்று பின்னாளில் நரேந்திரர் கூறினார்.


நரேந்திரர் வைத்த சோதனை


சோதித்தறியாமல் நரேந்திரர் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று கண்டோம். தீயவர்களின் கையிலிருந்து எதையும் ஸ்ரீராமகிருஷ்ணரால் ஏற்கஇயலாது என்பதை நரேந்திரர் நம்பவில்லை. உங்கள் குருவைப் பகலில் பரிசோதனை செய்யுங்கள். மீன்காரி, நாணயத்தைச்சோதித்து வாங்குவது போல் பரிசோதனை செய்யுங்கள் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.நரேந்திரரும் அதற்கு துணிந்தார். ஒர நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் பண்டித சசதரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது வீட்டிலுள்ள ஒருவர் அவருக்குக் குடிக்க தண்ணீர் கொண்டு வந்தார். 


டம்ளரைக்கையில் வாங்கிய  ஸ்ரீராமகிருஷ்ணர் குடிக்காமல், யாரும் கவனிக்காத  வண்ணம் தண்ணீரைக் கீழே கொட்டி விட்டார். நரேந்திரர் இதனை கவனித்தார். பின்னர் தண்ணீர் கொண்டு வந்தவனைப்பற்றி அவர் விசாரித்த போது ஸ்ரீராமகிருஷ்ணரின் நடத்தைக்கான பொருளை அறிந்து கொண்டார்- அவன் ஒழுக்கமற்றவனாக இருந்தான்.

ஸ்ரீராமகிருஷ்ணர்  காமத்தையும் பணத்தாசையையும் அடியோடு விட்டவர். அவரால் பண்த்தை மட்டுமல்ல, உலோக ப்பொருட்களையே தொடமுடியாது.தொட்டால் அவரது கை ஏதோ தேள் கொட்டியது போல் இழுத்துக்கொள்ளும். இதையும் நரேந்திரர் நம்பத் தயாராக இல்லை. அதைச்சோதிக்க எண்ணிய அவர் ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் அறையில் இல்லாதபோது அவரது படுக்கையின் கீழ் ஒரு நாணயத்தை வைத்துவிட்டார். அறைக்கு வந்த ஸ்ரீராமகிருஷ்ணர் அந்தப் படுக்கையின் மீது அமர்ந்தார்.மறுகணமே துடித்துப்போய் எழுந்தார். என்ன காரணம் என்று அனைவரும் படுக்கையைச்சோதித்துப்பார்த்தனர். படுக்கையை உதறியபோது அதிலிருந்து நாணயம் ஒன்று கீழே விழுந்து உருண்டோடியது .ஸ்ரீராமகிருஷ்ணர் பொருள் பொதிந்த பார்வை ஒன்றைத்தமது அன்புச் சீடர் மீது செலுத்தினார்.நரேந்திரர் நாணத்தால் தலை குனிந்தார்.


 MAIN PAGE 

image112

ஸ்ரீராமகிருஷ்ணரின் பயிற்சிமுறை

தீயவர்களிடமும் கருணை


ஒரு முறை குருதேவர் ஒரு நபரைப்பற்றி இளைஞர்களிடம் கூறினார். அவரது நடத்தை சரியில்லை என்றும் அவரது வீட்டில் யாரும் சாப்பிடக்கூடாது என்றும் கூறியிருந்தார். நரேந்திரர் இதை எப்படியோ கேள்விப்பட்டார். உடனே, குருதேவரின் கட்டளைக்கு எதிராக நடக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டவர் போல் செயல்பட்டார். இளம் பக்தர்களில் ஓரிருவரை அழைத்துக்கொண்டு அந்த நபரின் வீட்டிற்குப்போய் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தட்சிணேசுவரத்திற்கு வந்தார். வந்தவர் நேராக குருதேவரிடம் சென்று அனைத்தையும் கூறினார். குருதேவர் மிகுந்த கோபம் அடைந்தார். அவரது கோபத்தைக் கண்ட நரேந்திரர் அழஆரம்பித்தார். எப்படியோ நிலைமை சமாதானமாகியது.


நரேந்திரர் அத்துடன் நிற்கவில்லை. இயல்பாகவே இளகிய அவரது இதயம் அந்த நபருக்காக உருகியது. ஒருநாள் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு நேராக குருதேவரிடம் வந்தார். இவனுக்கு நற்கதி கிடைக்க அருள் புரியுங்கள், இந்தப் பிறவியிலேயே இவன் இறையனுபூதி பெற ஆசீர்வதியுங்கள், என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார். அதற்கு குருதேவர், இல்லை. இந்தப் பிறவியில் நடக்காது, என்று கூறினார். ஆனால் நரேந்திரர் விடவில்லை. நீங்கள்  மறுத்தால் அவன் எங்கே போவான்? என்று பிடிவாதமாகக்கேட்டார். இவனை என்ன  செய்வது! நடக்காது என்று ஏற்கனவே கூறிவிட்டேனே! என்று குருதேவர் சலிப்புடன் கூறினார். ஆனால் நரேந்திரர் கடைசிவரை விடவில்லை. இறுதியில் குருதேவர், போ, போ! மரணவேளையில் முக்தி கிடைக்கும்” என்று கூறினார். தீயவர்கள் என்று மற்றவர்கள் ஒதுக்குபவர்களிடமும் அத்தகைய கருணை கொண்டவராக இருந்தார் நரேந்திரர்.

ஸ்ரீராமகிருஷ்ணரும் பல்வேறு வழிகளில் நரேந்திரரைச்சோதித்தார். அவரது புலனடக்கம் , சத்திய நிதிஷ்டை என்று ஒவ்வொன்றையும் சோதித்தறிந்தார். முக்கியமான இரண்டு நிகழ்ச்சிகளைக்காண்போம்.


ஸ்ரீராமகிருஷ்ணர் வைத்த சோதனை


 நரேந்திரர் தட்சிணேசுவரத்திற்கு  வந்தால் ஸ்ரீராமகிருஷ்ணரின் பேச்சும் செயல்களும் எல்லாம் பொதுவாக அவரைச்சுற்றியே இருக்கம். தொலைவில் நரேந்திரர் வருவதைக் கண்டால் போதம், ஸ்ரீராமகிருஷ்ணரின் உள்ளம் முழுமையாக அப்படியே வெளியே வந்து  அவரை அன்பினால் ஆரத்தழுவிக்கொள்வதைப் போலிருக்கும்  அதோ ந.........ந.... என்று சொல்லிக்கொண்டே அவர் பரவச நிலையில் ஆழ்ந்துவிடுவார்.ஆனால் ஒரு முறை இந்த நிலைமை தலைகீழாகியது. நரேந்திரர் வந்தபோதெல்லாம் அவரைக் கவனிக்காமல் பாராமுகமாக இருந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். அவர் வந்ததைக் கவனித்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை. நரேந்திரர் எப்போதும் போல் வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரை வணங்கிவிட்டு அவர் முன் அமர்ந்தார். சிறிது நேரம் காத்திருந்தார்.ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நலம் விசாரிப்பது பற்றிய பேச்சே இல்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் பரவச நிலையில் இருக்கலாம் என்று கருதினார் நரேந்திரர். எனவே சிறிதுநேரம் காத்திருந்து விட்டு வெளியே வந்து ஹாஸ்ராவுடன்  பேசியபடியே புகைபிடிக்கலானார்.ஆனால் நரேந்திரர் வெளியே வந்ததும் ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றவர்களுடன் பேசத்தொடங்கினார். அவர் பேசும் சத்தம் கேட்டதும் உள்ளே சென்று அமர்ந்தார் நரேந்திரர். ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் அவருடன் பேசவில்லை. முகத்தைத் திருப்பிய வாறு படுத்துக்கொண்டார். அன்று முழுவதம் இவ்வாறே கழிந்தது. மாலை வந்த பின்பும் ஸ்ரீராமகிருஷ்ணரின் மனநிலையில் எவ்வித மாற்றமும் இல்லாததைக்கண்ட நரேந்திரர் அவரை வணங்கிவிட்டு கல்கத்தா திரும்பினார்.


ஒரு வாரத்தில் மீண்டும் நரேந்திரர் தட்சிணேசுவரம் வந்தார். அப்போதும்  அதே கதை தான். அன்றும் பகல் முழுவதும் அங்கிருந்த ஹாஸ்ராவுடனும் பிறருடனும் பேசிக் கொண்டிருந்து விட்ட மாலையில் வீடு திரும்பினார். மூன்றாம் முறை வந்தார். நான்காம் முறை வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நரேந்திரர் இதற்காகச் சிறிதும் வருத்தமோ வேதனையோ படவில்லை. சற்றும் மாறாத மனத்துடன் அவர் எப்போதும் போல் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வந்து போய்க் கொண்டிருந்தார். நரேந்திரர் வீட்டில் இருக்கும் போது அவரது நலம் விசாரிப்பதற்காக ஸ்ரீராமகிருஷ்ணர் அவ்வப்போது யாரையாவது கல்கத்தா அனுப்பவே செய்தார். ஆனால் அவர்நேரில் வந்தால் அதே பாராமுகம்! இவ்வாறாக ஒரு மாதத்திற்கு மேல் ஓடியது. நரேந்திரர் சிறிதும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து தட்சிணேசுவரம் வருவதைக்கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர் இறுதியில் ஒரு நாள்  அவரைக் கூப்பிட்டு, என்னப்பா, நான் உன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே! இருப்பினும் நீ ஏன் வந்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு நரேந்திரர் நீங்கள் பேசுவதைக் கேட்கவா நான் இங்கு வருகிறேன்.? நான் உங்களை நேசிக்கிறேன். உங்களைப்பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதனால் வருகிறேன். ” என்று கூறினார். இதைக்கேட்டு ஸ்ரீராமகிருஷ்ணர் மிகவும் மகிழ்ந்து, என் அன்பும் உபசரணையும் கிடைக்காவிட்டால், நீ இங்கு வருவதை நிறுத்தி விடுவாயா என்று உன்னைச் சோதித்துப் பார்த்தேன். உன்னைப்போன்ற உறுதிவாய்ந்தவர்கள் தான் இவ்வளவு அவமானத்தையும் பாராமுகத்தையும் தாங்கிக்கொள்ளமுடியும். வேறொருவர் என்றால் எப்போதோ ஓடியிருப்பார், இந்தப் பக்கம் தலைவைத்துக்கூட படுத்திருக்க மாட்டார்” என்றார்.


சித்திகளை மறுத்தல்


 ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரைத் தனியாகப் பஞ்சவடிக்கு அழைத்துச்சென்று அவரிடம், இதோ பார், வருடக்கணக்காக நான் செய்த தவத்தின் விளைவாக என்னிடம் அணிமா முதலான சித்திகள் உள்ளன.ஆனால் உடையைக்கூட நழுவாமல் பார்த்துக்கொள்ள முடியாத என்னைப்போன்ற ஒருவனுக்கு இவற்றை எல்லாம் பயன்படுத்த நேரம் எங்கே? அன்னை பராசக்தியின் பல்வேறு பணிகளை நீ செய்யப்போவதாக அவள் என்னிடம் கூறியிருக்கிறாள். எனவே அவளிடம் சொல்லி இவற்றை எல்லாம் உனக்குத் தர எண்ணுகிறேன். இப்போது நீ பெற்றுக் கொண்டால் தேவை ஏற்படும் பொழுது பயன்படுத்திக்கொள்ளலாம். என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்.


நரேந்திரர் சிறிதுநேரம் சிந்தித்தார், பிறகு, ஐயா! இறையனுபூதி விஷயத்தில் இவை எனக்கு உதவுமா? என்று கேட்டார் நரேந்திரர். அதற்கு  ஸ்ரீராமகிருஷ்ணர், உதவாது. இறையனுபூதி உதவாவிட்டாலும் அவரை அடைந்தபின் அவரது திருப்பணிகளைச்செய்யும் போது இவை மிகவும் உதவும் என்று கூறினார். இதைக்கேட்டதும்  நரேந்திரர், அப்படியானால் இந்த சித்திகளால் எனக்குப் பயனில்லை. முதலில் இறையனுபூதி கிடைக்கட்டும். பின்னர் அவற்றை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்கிறேன். அற்புத சக்திகளை இப்போதே பெற்று அதனால் லட்சியத்தை மறந்து தன்னலத்தால் தூண்டப்பட்டு அவற்றைத் தவறாகப் பயன்படுத்தநேரலாம். அப்போது எல்லாம் வீணாகிவிடுமே! என்று கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் உண்மையிலேயே அந்த ஆற்றல்களை நரேந்திரருக்குக் கொடுக்க விரும்பினாரா அல்லது நரேந்திரரின் மனநிலையைச்சோதித்துப் பார்த்தாரோ? ஆனால் நரேந்திரர் அவற்றை ஏற்க மறுத்தது, அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக்கொடுத்தது.

சிறு வயதிலேயே சீதாராமர், சிவபெருமான் என்றெல்லாம் உருவங்களை வழிபட்டவர் நரேந்திரர். அவர்  வாலிபராகிய போது இந்தக் கருத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. கடவுளுக்கு உருவம் கிடையாது. உருவ வழிபாடு தவறு என்று கருதத்தொடங்கினார். பிரம்ம சமாஜக்கொள்கைகளும் இந்த  ரீதியிலேயே இருந்ததால் அவரது நம்பிக்கை உறுதிப்பட்டது. உருவவழிபாடு செய்ய மாட்டோம்” என்று சமாஜ உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும். நரேந்திரரும் அவ்வாறு எடுத்துக் கொண்டிருந்தார். அதனால் அவர் தட்சிணேசுவரத்திற்கு வந்தாலும் காளி கோயிலுக்கோ மற்ற கோயில் களுக்கோ செல்வதில்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் உருவவழிபாடு செய்வதையே அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. காளியின் திருவுருவை அவன் வெறும்  பொம்மை என்கிறான். இன்னும் கூட இவர் கோயிலுக்குச்சென்று உருவங்களை வழிபடுகிறார் என்று என்னைப் பற்றியே கூறுகிறான்” என்று கூறிச் சிரிப்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

தாம் உண்மை என்று நம்புவதை யாரிடமும் தயங்காமல் கூறுவது நரேந்திரரின் பண்பு. ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணரின் முன்னிலையிலேயே   கிரீஷ் போன்றோருடன் அவர் இது பற்றி விவாதித்தார். அமுத மொழிகளில் இந்த விவாதம் முழுமையாகத் தரப்பட்டுள்ளது. அதனைக் காண்போம்.


நரேந்திரர்- கடவுள் மனிதனாக அவதரிக்கிறார் என்பதை(நிரூபணம்) இல்லாமல் எவ்வாறு நம்புவது?

கிரீஷ்- நம்பிக்கையே (போதுமான நிரூபணம்). இந்தப்பொருள் இங்கே இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம், நம்பிக்கை தான் ஆதாரம்.

ஒரு பக்தர்-(புறவுலகம்) ஒன்று வெளியில் இருக்கிறது என்று தத்துவ அறிஞர்கள் யாராவது செய்ய(நிரூபிக்க) முடிந்திருக்கிறதா? ஆனால் அதில் தங்களுக்கு (அசைக்க முடியாத நம்பிக்கை) 


இருப்பதாகச்சொல்கிறார்கள்.

கிரீஷ்(நரேந்திரரிடம்)-கடவுள்உன் எதிரில் வந்தால் கூட நீ நம்பமாட்டாய்! அப்பா நான் தான் கடவுள். மனித வடிவில் வந்திருக்கிறேன்” என்று அவரே உன்னிடம் கூறினாலும் நீஅவரைப் பித்தலாட்டக்காரன் என்று தான் சொல்வாய்.

பின்னர் தேவர்கள் மரணமற்றவர்களா என்பது பற்றி பேச்சு திரும்பியது.

நரேந்திரர்- அதற்கு என்ன நிரூபணம் இருக்கிறது?


கிரீஷ்- அவர்கள் உன் எதிரில் வந்தாலும் நீ நம்ப மாட்டாய்!

நரேந்திரர்- மரணமற்றவர்கள் (கடந்த காலங்களிலும்) இருந்தார்கள் என்பதற்கு proof வேண்டும்.

ம-பால்டுவிடம் ஏதோ கூறினார்.

பால்டு (சிரித்தபடியே நரேந்திரரிடம்)- மரணமற்றவர் களுக்குப் பிறப்பு இல்லை என்பதன் அவசியம் என்ன? அவர்களுக்கு இறப்பு இல்லாமல் இருந்தால் போதுமே!


ஸ்ரீராமகிருஷ்ணர்(சிரித்தபடியே)—நரேந்திரன் வக்கீலின் மகன். பால்டு டெபுட்டியின் மகன்.(துணைநீதிபதி என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் இவ்வாறு குறிப்பிடுகிறார்)

சற்று நேரம்அங்கு  அமைதி நிலவியது.

யோகின்(கிரீஷ் முதலிய பக்தர்களிடம்)-இவர் (குருதேவர்) நரேந்திரனின் வார்த்தைகளை ஒப்புக்கொள்வதில்லை.

ஸ்ரீராமகிருஷ்ணர்(சிரித்தபடியே)- ”சாதகப் பறவை ஆகாயத்திலிருந்து விழும் மழை நீரைத் தவிரவேறு எதையும் பருகாது என்று ஒரு நாள் சொன்னேன். அதற்கு நரேந்திரன், இல்லை சாதகப்பறவை எந்தத் தண்ணீரையும் குடிக்கும் என்றான். உடனே நான் தேவியிடம், தாயே அப்படியானால் நான் சொன்னதெல்லாம் பொய்யாகி விட்டதோ! என்று முறையிட்டேன், மிகுந்த வேதனையாகிவிட்டது.பிறகு ஒருநாள் நரேந்திரன் வந்திருந்தான். அறையின் அருகில் பறந்து கொண்டிருந்த சில பறவைகளைப் பார்த்து, இதோ, இதோ! என்றான். என்ன? என்று கேட்டேன். நான் , அதேதான், சாதகப்பறவை, சாதகப்பறவை” என்றான்.போய்ப் பார்த்தேன், வௌவால்கள் ! அதன் பிறகு நான் அவனது வார்த்தைகளை எடுத்துக்கொள்வதில்லை.(எல்லோரும் சிரித்தனர்)

வாதம் தொடர்ந்தது.நரேந்திரரர் வாதத்தைத் தொடர்ந்தார். அவருக்கு வயது இருபத்திரண்டு வருடம் நான்கு மாதம்.


நரேந்திரர் (கிரீஷ், ம-முதலியவர்களிடம்)- 


சாஸ்திரங்களையே நான் எப்படி நம்புவது? மகா நிர்வாண தந்திரம் ஓரிடத்தில், பிரம்ம ஞானம் கிடைக்காவிட்டால் நரகம் தான்” என்கிறது. மற்றோரிடத்தில் , பார்வதி உபாசனையைத் தவிர வேறு வழி இல்லை” என்று கூறுகிறது. மனுசம்1ிதையில் மனு தம்மைப் பற்றி கூறியுள்ளார். மோசஸ் பென்டாட்யூக்கை எழுதியுள்ளார். தமது மரணத்தைப் பற்றி அவரே அதில் எழுதியுள்ளார்.

(பென்டாட்யூக்கை-பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து பகுதிகள்)

இறைவன் இல்லை(ஈச்வராஸித்த)என்கிறது சாங்கியம். ஏனெனில் இறைவன் இருக்கிறான் என்பதை நிரூபிக்க வழியில்லை. அதே வேளையில் வேதங்களை ஒப்புக்கொள்ள வேண்டும், வேதம் நித்தியமானது” என்றும் கூறுகிறது.

இப்படியெல்லாம் இருந்தாலும் , இவை இல்லை என்று நான் கூறவரவில்லை. என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிய வையுங்கள். சாஸ்திரங்களை யார் எப்படி புரிந்து கொண்டார்களோ அப்படி அவர்கள் எழுதி வைத்தார்கள். எதை ஏற்பது? White light( வெள்ளை ஒளி)

Red light (சிவப்புக் கண்ணாடி) வழியாக வரும்போது சிவப்பாகத் தெரிகிறது.green medium( பச்சைக் கண்ணாடி) வழியாக வரும்போது பச்சையாகத்தெரிகிறது.

ஒரு பக்தர்- கீதை பகவானே சொன்னது.

ஸ்ரீராமகிருஷ்ணர்- கீதை அனைத்து சாஸ்திரங்களின் சாரம். ஒரு துறவியிடம் வேறு எது இல்லாவிட்டாலும் கீதை இருக்கும்.

ஒரு பக்தர்- கீதை ஸ்ரீகிருஷ்ணர் சொன்னவை.

நரேந்திரர்- கிருஷ்ணர் சொன்னாரோ, வேறு யாராவது சொன்னார்களோ!

குருதேவர் இதைக்கேட்டு திகைத்துவிட்டார்.


தெய்வ வடிவங்கள் மனமயக்கங்களா?


 ஒரு  நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரிடம் தமது தெய்வீகக் காட்சிகளைப் பற்றி கூறினார். நரேந்திரர் அவற்றை நம்பவில்லை. எல்லாவற்றையும் கேட்ட அவர் கடைசியில், இந்தக் காட்சிகள் உண்மையல்ல, அவை உங்கள் மனமயக்கத்தால் விளைந்தவை, என்று கூறிவிட்டார். 


ஸ்ரீராமகிருஷ்ணருக்குத் தூக்கி வாரிப் போட்டது.ஏய், என்ன சொல்கிறாய் நீ? அந்தத் தெய்வங்கள் என்னோடு பேசுகிறார்கள்” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். அப்படித்தான் தோன்றும்” என்று ஒரே போடாகப்போட்டார் நரேந்திரர்.ஸ்ரீராமகிருஷ்ணர் அதிர்ந்து போனார். 

நரேந்திரர் சத்தியத்தில் தீவிரமான ஈடுபாடு உடையவர். எனவே அவர் சொல்வதில் தவறு இருக்காது என்பதில் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. தாம் கண்ட தெய்வ வடிவங்கள் எல்லாம்  மன மயக்கங்கள் என்று அவர் கூறியபோது ஸ்ரீராமகிருஷ்ணருக்கே குழப்பமாகி விட்டது. அவர் உயர் உணர்வு நிலைகளில் இருக்கம் போது இவற்றையெல்லாம் கேட்டால் சிரித்தவாறே விட்டுவிடுவார். மற்ற வேளைகளில் இத்தகைய கருத்துக்கள் அவரைக் குழப்பிவிடும். ஆனால் அது, சொல்பவர் நரேந்திரர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே.

இப்போதும் குழம்பிய ஸ்ரீராமகிருஷ்ணர் நேராகக்காளிகோயிலுக்குச் சென்று தமது பிரச்சனையை அவளது திருமுன்னர் வைத்தார். கனிவே வடிவான அவள் அவரிடம், நீ ஏன் அவன் பேசுவதைப்பெரிதாக எடுத்துக் கொள்கிறாய்? அவன் சிறுவன். இப்போது இப்படித்தான் சொல்வான், காலப்போக்கில் நீ சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையையும் உண்மை என்று நம்பப்போகிறான்” என்று கூறினார். தேவி கூறியதை நரேந்திரரிடம்  வந்து தெரிவித்து விட்டு, போக்கிரிப்பயலே,! என்னிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தி விட்டாயே! இனி இங்கு வராதே” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.நரேந்திரர் மௌனமாக இருந்தார்.


ஸ்ரீராமகிருஷ்ணர் அவதாரமா?


ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்த நாட்களிலேயே அவரைச் சிலர் அவதாரமாக வழிபடத் தொடங்கியிருந்தனர். இல்லற பக்தர்களில் ராம்சந்திரர் போன்றோர் இதில் மிகவும் தீவிரமாக இருந்தனர்.ஸ்ரீராமகிருஷ்ணரும் பலரிடம், என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்? என்று கேட்பதுண்டு. சிறந்த பக்தன், ஈடிணையற்ற ஞானி, பெரிய மகான், ராதையின் அவதாரம், சைதன்யரின் அவதாரம், இறைவனே மானிடனாக வந்த அவதாரம் என்று வெவ்வெறு பக்தர்களிடமிருந்து வெவ்வேறு பதில் வரும் . பதிலிலிருந்து ஒருவனுடைய மனநிலையைப் புரிந்து கொள்வார் ஸ்ரீராமகிருஷ்ணர். அவர்  தமது சீடர்களின் மனநிலையைப் பரிசோதிக்கின்ற பல்வேறு வழிகளில் இதுவும் ஒன்று. இதே கேள்வியை அவர் நரேந்திரரிடமும் கேட்டார். ஆயிரம் பேர் உங்களை அவதாரம் என்று சொல்லலாம், ஆனால் எனக்கு அதில் உறுதியான நம்பிக்கை வரும்வரை என்னால் அதனை ஏற்றுக்கொள்ள இயலாது” என்று கூறிவிட்டார் நரேந்திரர். ஸ்ரீராமகிருஷ்ணர் வழக்கம்போல் சிரித்துவிட்டு மௌனமானார்.


இது விஷயமாக ஒருமுறை பக்தர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றம் நடந்தபோது நரேந்திரர், கடவுளைப் போன்ற ஒருவராக அவரை நான் கருதுகிறேன், தாவரத்திற்கும்  மிருகத்திற்கும் இடைப்பட்ட படைப்பு ஒன்று உண்டு. அந்த உயிரினம் தாவரமா, மிருகமா என்று உறுதியாகக்கூற முடியாது. அது போல் மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையில் ஒரு நிலை உள்ளது. அந்த நிலையில் இருப்பவர் கடவுளா, மனிதனா என்று கூறுவது கடினம். அத்தகைய ஒரு நிலையில் உள்ளார் ஸ்ரீராமகிருஷ்ணர் என்று கூறினார். டாக்டர் மகேந்திரலால் சர்க்கார் அதனை, கடவுள் பற்றிய விஷயங்களை உவமை கூறி விளக்க முடியாது என்று கூறினார். அதற்கு நரேந்திரர் அவரை நான் கடவுள் என்று அழைக்கவில்லை. மனிதர் என்றே கருதுகிறேன். என்றார். ஸ்ரீராமகிருஷ்ணருடன் நெருங்கிப் பழகப்பழக நரேந்திரரின் கடவுள்- கருத்து படிப்படியாக மாறத்தொடங்கியது.


அத்வைதம்


கடவுள் எல்லையற்ற மங்கலப் பண்புகளை உடையவர், ஆனால் அவருக்கென்று உருவம், எதுவும் கிடையாத- பிரம்ம சமாஜத்தினரின் இந்தக் கருத்து நரேந்திரருக்கு மிகவும் ஏற்புடையதாக இருந்தது. இந்த நிலையில் ஸ்ரீராமகிருஷ்ணர் அவருக்கு அத்வைதத்தைக் கற்பிக்க விரும்பினார். அதனை முற்றிலுமாக மறுத்தார் நரேந்திரர். அத்வைதம் என்ன சொல்கிறது? அதை ஏற்றுக் கொள்ள  நரேந்திரர் ஏன் மறுத்தார்? எல்லா உருவங்களும்,எல்லா உயிர்களும் நான், நீ என்று அனைத்தும் கடவுளே என்கிறது அத்வைதம். கடவுளுக்கு உருவமே இல்லை என்கிறார் நரேந்திரர். ஆனால் அத்வைதமோ எல்லாம் அவரது உருவங்கள் என்று கூறுகிறது. அதை அவரால் எப்படி ஏற்க இயலும்? ஆனால் அதற்காக விட்டுவிடுவாரா ஸ்ரீராமகிருஷ்ணர்ஃ தகுதி வாய்ந்த ஒரு பாத்திரமாக நரேந்திரர் இருப்பதைக் கண்ட அவர் அவருக்கு அத்வைத அறிவைக் கொடுத்தே தீர்வது என்று முடிவு செய்தார்.


எனவே நரேந்திரர் தட்சிணேசுவரம் வந்தால் உடனே அஷ்டாவக்ர சம்ஹிதை” போன்ற  அத்வைத நூல்களைக்கொடுத்துப் படிக்கச்சொல்வார். நரேந்திரரின் கண்களில் இத்தகைய நூல்கள் நாத்திக நூல்களாகவே தோன்றின. ஸ்ரீராமகிருஷ்ணரின் வேண்டுகோளுக்கு இணங்கிப் படிக்க ஆரம்பிப்பார். ஆனால் சிறிது நேரத்திலேயே பொறுமை இழந்து, இதற்கும் நாத்திகத்திற்கும் என்ன வேறுபாடு? ஒரு சாதாரண மனிதன் தன்னைக் கடவுளாக எண்ணுவதா? இதை விடப்பெரிய பாவம் வேறென்ன இருக்க முடியும்? 

எல்லாம் கடவுளாம்! நான் கடவுள், நீ கடவுள், காணும் அனைத்தும் கடவுள்- இதைவிடப் பகுத்தறிவிற்குப் பொருந்தாத வேறு ஏதாவது இருக்க முடியுமா? இந்த நூல்களை எழுதிய ரிஷி, முனிவர்களுக்குக் கட்டாயம் மூளை குழம்பிப் போயிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் இப்படி எழுதியிருப்பார்களா? என்று வெடிப்பார். நரேந்திரர் இப்படி வெளிப்படையாகப்பேசுவதை குருதேவர் மகிழ்ச்சியுடன் வரவேற்பார். அவரது போக்கைத் திடீரென்று தாக்காமல் , நான் உன்னை எதற்காகப் படிக்கச் சொல்கிறேன், நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லையே! இதை நீ இப்போது ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அதற்காக ரிஷிகளையும் முனிவர்களையும் ஏன் குறை கூறுகிறாய்? ஏன் இறைவனின் இயல்பிற்கு எல்லை வகுக்கிறாய்? சத்தியப் பொருளான இறைவனிடம் பிரார்த்தனை செய்து  கொண்டே இரு. அவர் தம் எந்த வடிவத்தை உனக்குக் காட்டியருள்கிறாரோ அதில் நம்பிக்கை வை, என்பார். ஆனால் நரேந்திரர் அதைப் பொருட்படுத்தவில்லை. பகுத்தறிவினால் நிலைநாட்டப்படாத எதுவும் அவருக்குப்பொய்யாகத் தோன்றியது. பொய் எதுவானாலும் அதை எதிர்த்து நிற்பது தான் அவருடைய இயல்பு. அதனால்  அத்வைதக்கொள்கையை எதிர்த்தார், வாதம்  செய்தார், கேலி பேசினார்.


அத்வைத அனுபவம்


நரேந்திரர் பேசியதிலோ, நடந்து கொண்ட விதத்திலோ ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அத்வைதம் விவாதத்திற்கு உரிய ஒன்று அல்ல. பேச்சு நிலையில் அத்வைதம்  கிடையாது. எல்லாம் கடவுள். பானையும் கடவுள், குவளையும் கடவுள். அதனால் பானையும் குவளையும் ஒன்று என்றால் அது அத்வைதம் ஆகாது. மாறாக நகைப்பிற்குரிய ஒன்றே ஆகும். ஏனெனில் பானையும் குவளையும்  ஒன்றல்ல. உண்மை என்னவென்றால் பானையும் குவளையும் அடிப்படையில் ஒன்று. அதாவது இரண்டும் களிமண்ணால்  செய்யப்பட்டவை. களிமண் நிலையில் இரண்டும் ஒன்று. அதுபோல் உயிரும் இறைவனும் ஒன்றல்ல. அடிப்படை ஆன்மநிலையில் எல்லாம்  ஒன்று. எனவே அத்வைதம் அனுபவத்திற்குரிய ஒன்று. விவாதத்திற்குரிய ஒன்று அல்ல. அதனால் எத்தனை நூல்களைப் படிக்கச்சொன்னாலும் நரேந்திரர் அத்வைதக்கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றுகண்ட ஸ்ரீாமகிருஷ்ணர் அந்த அனுபவத்தை அவருக்கு அளிக்க எண்ணினார்.

ஒரு நாள்  அத்வைதக்கொள்கையை ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரருக்கு விளக்கினார். நரேந்திரர் கவனமாகக்கேட்டுக் கொண்டார். அவர் பேசி முடித்ததும் ஹாஸ்ராவிடம் சென்றார். புகைபிடித்துக்கொண்டே அவரிடம், இப்படிக்கூட இருக்க முடியுமா, என்ன? 

பானையும் கடவுள், குவளையும் கடவுள், இதென்ன கூத்து! என்று கூறிவிட்டு, இருவருமாக விழுந்து விழுந்து  சிரித்தனர். அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் பரசவ நிலையில் இருந்தார். நரேந்திரரின் சிரிப்பைக்கேட்ட அவர் ஒரு சிறுவனைப்போல் உடுத்திருந்த துணிகளை உருவி அக்குளில் இடுக்கிக்கொண்டு, சிரித்தவாறே வெளியில் வந்தார். நேராக அவர்களிடம் வந்து, என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? என்று அன்புடன் கேட்டவாறே நரேந்திரரைத் தொட்டு விட்டு சமாதியில் ஆழ்ந்தார்.

இதைக்குறித்து நரேந்திரர் பிறகு கூறினார், அன்று குருதேவர் என்னைத்தொட்ட கணத்தில் மனத்தில் ஒரு புரட்சியே ஏற்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தில் கடவுளைத் தவிர வேறு எதுவுமில்லை என்பதைக் கண்டேன் நான்! எவ்வளவு நேரம் இந்த நிலை நீடிக்கும் என்று அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று முழுவதும் அந்த உணர்வு என்னைவிட்டு நீங்கவில்லை. வீடு திரும்பினேன், அங்கும் அதே உணர்வு! பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற இறைவனே நிறைந்திருந்தார். சாப்பிட அமர்ந்தேன்- உணவு, தட்டு, பரிமாறியவர், உணவை உட்கொள்ளும் நான் அனைத்தும் அவரேயன்றி வேறில்லை! ஓரிரு வாய் உண்டு விட்டு, ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருந்தேன். ஏன் இப்படி இருக்கிறாய்? சாப்பிடு, என்று என் தாய் கூறியபின்னரே மீண்டும் உண்ணத் தொடங்கினேன். இவ்வாறாக, ஊண், ஓய்வு, கல்லூரிக்குச் செல்லும்போது என்று எப்போதும் அதே காட்சி! ஏதோ ஒருவிதமான விவரிக்க இயலாத பரவசம் எப்போதும் என்னை ஆட்கொண்டிருந்தது. சாலையில் போய்க்கொண்டிருந்தேன். வண்டிகள் வந்தன. ஆனால் மற்ற நேரங்களைப்போல், ஒதுங்க வேண்டும் என்று தோன்றவில்லை. அந்த வண்டி எதுவோ அதுவே நானும் என்று தோன்றியது. என் கைகால்கள் உணர்வற்றது போலிருந்தன. உணவில் சற்றும் திருப்தி இல்லாமல் போய்விட்டது. வேறு யாரோ சாப்பிடுவது போல் தோன்றும். சிலவேளைகளில் சாப்பிடும் போதே தரையில் சாய்ந்துவிடுவேன். எழுந்து அமர்ந்து மறுபடியும் சாப்பிடுவேன், சிலவேளைகளில் அளவுக்குஅதிகமாக ச் சாப்பிட்டு விடுவேன்! அது எனக்கு எந்தவிதமான கெடுதலையும் உண்டாக்கவில்லை என்றாலும் என் தாய் பயந்துவிட்டாள். உனக்கு ஏதோ பயங்கர நோய் வந்துள்ளது போல் தோன்றுகிறது, என்பாள். சிலசமயம் , ”இனி இவன் பிழைக்க மாட்டான்” என்றும் கூறுவாள்.

அந்த உணர்வு சிறிது குறைந்தபோது உலகம் ஒரு கனவு போல் தோன்றியது. ஹேதுவா குளத்தின் கரையில் நடந்து கொண்டிருந்தேன். அதன் நான்கு பக்கமும் அமைந்திருந்த இரும்புவேலி உண்மையா அல்லது கனவா என்றறிய அவற்றில் தலையை மோதிப் பார்த்தேன். கை கால்களில் உணர்ச்சியே இல்லை. பக்கவாதம் வந்து விட்டதோ  என்று தோன்றியது, இப்படி சில நாட்களுக்கு அந்த உணர்வின் தீவிரமான ஆதிக்கத்திலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. இயல்பான நிலை ஏற்பட்ட போது இது தான் அத்வைத அனுபவம் என்று எண்ணினேன். அப்படியானால்  சாஸ்திரங்களில் எழுதப்பட்டிருப்பது  பொய்யல்ல என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதன் பின் அத்வைத தத்துவத்தின் முடிவுகளை என்னால் சந்தேகிக்க முடியவில்லை.

இப்படி பரஸ்பர அன்பு, பரிவு, பரிசோதனை, உயர் அனுபவம்  என்று அந்த அற்புத குருவும் அருமைச்சீடரும் வாழ்க்கையை நடத்தினர்.
8-சாதனை வாழ்க்கை


இயற்கைக்கென்று நியதிகள் உள்ளன. இது இருந்தால் அது இருக்கும்,  இதன் பின்னால் அது வரும் என்றெல்லாம் பல்வேறு நியதிகளை வைத்துள்ளது இயற்கை. செடிகளில் பூ முதலில் வரும்.  தொடர்ந்து பிஞ்சு வரும்- இது அத்தகைய நியதிகளில் ஒன்று. ஆனால் இந்த நியதிகள் சில இடங்களில் சில நேரங்களில் மாறுபடுவதும் உண்டு. பூசணிச் செடிகளில் முதலில் பிஞ்சு வரும். பிறகு தான் பூ வரும். இதனை ஈசுவரகோடிகளான தமது சீடர்களுக்கு உதாரணம் காட்டுவார் ஸ்ரீராமகிருஷ்ணர். பொதுவாக ஆன்மீக சாதனைகள் தவம் என்றெல்லாம் செய்து இறையனுபூதி  பெறுவார்கள்.இது நியதி. ஆனால் ஈசுவரகோடிகளின்  விஷயத்தில் இந்த நியதி  மாறுபடுகிறது. அவர்கள் முதலிலேயே ஆன்மீக அனுபவங்களைப்பெற்றுவிடுகிறார்கள். பிறகு தவம் முதலான வற்றைச்செய்து ஆன்மீக அனுபவங்களைப் பெற்று, ஏற்கனவே பெற்ற அனுபவங்களுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஈசுவரகோடிகளிலும் தலைமையிடத்தைப்பெற்றவர் நரேந்திரர். அவர் ஏற்கனவே மிக உயர்ந்த பல

. அனுபவங்களைப்பெற்றுள்ளதைக் கண்டோம். ஆனால் அவரும் ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டார். குருதேவர் அவருக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்தார்.


தீட்சையும் வழிகாட்டுதலும்


ஆன்மீகப் பயிற்சிகளுக்கான முதல் படியாக அமைவது மந்திர தீட்சை. பொதுவாக குரு ஒருவர் சீடனின் தகுதிக்கேற்ப ஒரு மந்திரத்தை உபதேசிப்பதன்மூலம்  தீட்சை அளிக்கிறார். அதாவது ஆன்மீக வாழ்விற்கு வழிகாட்டுகிறார். இந்த மந்திரம் ஸித்த மந்திரமாக இருக்கவேண்டும். ஸித்த மந்திரம் என்றால் விழிப்புற்ற மந்திரம் என்று பொருள். அதாவத ஒரு குரு அந்த மந்திரத்தை ஜபித்து, அதன் மூலம் அந்த மந்திரத்திற்குரிய தெய்வத்தின் அருள் பெற்றவராக இருக்க வேண்டும். அத்தகைய குரு அளிக்கின்ற தீட்சை மட்டுமே பலன் அளிக்கக்கூடியது. ஏனெனில் மந்திரத்துடன் அந்த மந்திரத்தை ஜபிப்பதற்கான ஆற்றலையும் அவர் அளிக்கிறார். அதனால் தான் நூல்களில் படித்து, அந்த மந்திரங்களை ஜபிக்க க்கூடாது. குரு மூலம் பெற்ற மந்திரத்தையே ஜபிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த மந்திர தீட்சைக்கென்று குறிப்பிட்ட நியதிகளும் நிபந்தனைகளும் உள்ளன.

ஆனால் நிறைநிலை பெற்ற குரு நியதிகளையெல்லாம் மீறி, தாம் விரும்பும் விதத்தில் தீட்சை அளிப்பதுண்டு. ஆன்மீக ஆற்றலைச் சீடனிடம் பாய்ச்சுவதே தீட்சையின் நோக்கம். அதனை அவர்கள் தாங்கள் விரும்பும் விதத்தில் சாதிப்பார்கள். இத்தகைய தீட்சையைத் தந்திர சாஸ்திரங்கள் சாம்பவி தீட்சை என்கின்றன. ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரருக்கு  இத்தகைய தீட்சையை அளித்தார்.

ஒரு முறை ஸ்ரீராமகிருஷ்ணர் அதர்லால் சேன் என்ற பக்தரின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.  அங்கே பக்தர்களுடன்  பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது பார்வை நரேந்திரரின் மீதுவிழுந்தது. உடனே எழுந்து நின்று சமாதியில் ஆழ்ந்தார். அந்த நிலையிலேயே தமது கால்களை நீட்டி நரேந்திரரின்  முழங்காலின் மீது வைத்தார். அப்படியே நீண்ட நேரம் நின்றார். அவருக்குப் புறவுணர்வு சிறிதும் இல்லை. கண்கள் நிலைகுத்தி நின்றன. சிலநேரங்களில் நரேந்திரரின் நெஞ்சைத்தொடுவார். இவ்வாறு பலவிதமாக நரேந்திரருக்கு ஆன்மீக ஆற்றலை வழங்கினார்.


ஸ்ரீராமகிருஷ்ணரின் பயிற்சிமுறை


 ஸ்ரீராமகிருஷ்ணர் ஆன்மீக சாதனைகளில் எப்படிப் பயிற்சி அளித்தார்  என்பது பற்றி நரேந்திரர் பின்னாளில் கூறினார். விளையாட்டு வேடிக்கை என்று சாதாரணமான அன்றாட நிகழ்ச்சிகள் வாயிலாக அவர் எவ்வாறு மிக உயர்ந்த ஆன்மீகப் பயிற்சியை அளித்து, நாங்கள் அறியாமலே எங்கள் ஆன்மீக வாழ்க்கையைப் ப ண்படுத்தினார் என்பதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. சிறந்த மற்போர் வீரன் ஒருவன் ஒரு சிறுமிக்கு கற்பிக்கும் போது  அதற்குத்தேவையான ஆற்றலை மட்டுமே வெளிக் காட்டுவான். மிகுந்த சிரமத்தின் பேரில்  சிறுவனுடன் மோதுவது போலவும், சில சமயம் தான் தோற்பது போலவும் காட்டிக்கொள்வான். இதன் மூலம் மாணவனின் மனத்தில் தன்னம்பிக்கை வளர்க்கிறான். ஸ்ரீராமகிருஷ்ணரும் எங்களை அப்படித்தான் பயிற்றுவித்தார். துளி நீரில் அவர் கடலையே கண்டார். எங்கள் உள்ளேயிருந்த ஆன்மீக விதை முளைவிட்டு காலப்போக்கில் எவ்வாறு வளர்ந்து, பூத்து, காய்த்து, கனிகளை நல்கப்போகிறது.என்பதை அவர் கண்டிருந்தார். எனவே எங்களைப் புகழ்வார், ஊக்குவிப்பார். நாங்கள் உலகியலில் சிக்கிவிடாமல் இருப்பதற்காக எங்கள் செயல்கள் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து, அறிவுரை கூறி எச்சரித்துக் காப்பார். ஆனால் இதையெல்லாம் நாங்கள் சிறிதும் அறியவில்லை. கற்பதிலும் வாழ்க்கையைப் பண்படுத்துவதிலும் அவரது வழி அது.

ஸ்ரீராமகிருஷ்ணர் சாதனை செய்த இடமாகிய ஏகாந்தமான பஞ்சவடிதான் எங்கள் சாதனைகளுக்கு ம் உகந்த இடமாக இருந்தது. சாதனையை மட்டும் ஏன் கூற வேண்டும்? நாங்கள் நீண்டநேரம்  விளையாடி க் களித்து மகிழ்ந்ததும் அங்கே தான். அப்போதெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணரும் எங்களுடன் சேர்ந்து கொண்டு எங்கள் மகிழ்ச்சியைப் பன்மடங்காக்குவார். அங்கு நாங்கள் ஓடுவோம், மரத்தில் ஏறுவோம், கொடிகளை இணைத்துக் கட்டி ஊஞ்சல் ஆடுவோம். சில சமயம் நாங்களே உணவு சமைத்து உண்போம். ஒரு நாள் நான் சமைத்த உணவை அவர் உண்டார். பிராமணர்கள், அதிலும் நல்லொழுக்கமுள்ளவர்கள், சமைத்த சாதத்தை மட்டும் தான் அவர் உண்பார் என்பது எனக்குத் தெரியும். ஆதலால் சோறு மட்டும் கோயில் பிரசாதத்திலிருந்து ஏற்பாடு செய்தேன். ஆனால் அவர் என்னைத் தடுத்து, உன்னைப்போன்ற தூய சத்வ குணம் படைத்தவர்கள் சமைத்த சாதத்தை உண்டால் எந்த க்குற்றமும் இல்லை” என்று கூறினார். எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் நான் சமைத்த உணவையே உண்டார்.


தியானப் பயிற்சியில் வழிகாட்டல்


 நரேந்திரரின் தியானப் பயிற்சியில் ஸ்ரீராமகிருஷ்ணர் எவ்வாறு வழிகாட்டினார் என்று பார்ப்போம். நரேந்திரர் அதிகாலை வேளையில் தியானத்திற்காக அமர்வார். அது சரியாக அருகிலுள்ள சணல் ஆலையில் சங்கு ஒலிக்கும் நேரம். அலறுவது போல் ஒலிக்கின்ற இந்தச் சத்தம் தியான வேளையில் நரேந்திரருக்கு இடைஞ்சலாக இருந்தது. ஒரு நாள் அதனை ஸ்ரீராமகிருஷ்ணரிடம் தெரிவித்து வழிகேட்டார். அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் சங்கு முழக்கத்தை ஏன் ஒரு தடையாக நினைக்கிறாய்? அந்தச் சத்தத்திலேயே மனத்தை ஒருமைப்படுத்திப் பார், எல்லாம் சரியாகி விடும் என்றார். அப்படியே செய்த நரேந்திரரால் ஆழ்ந்து தியானத்தில் ஈடுபட முடிந்தது.

மற்றொரு முறை தியான வேளையில் தம்மால் முற்றிலும் உடம்பை மறந்து தியானப் பொருளுடன் ஒன்ற இயலவில்லை என்று ஸ்ரீராமகிருஷ்ணரிடம் முறையிட்டார் நரேந்திரர். உடனே ஸ்ரீராமகிருஷ்ணர் தமது நகத்தால் நரேந்திரரின் புருவ மத்தியில் அழுத்தி, இந்த வேதனையில் உன் மனத்தை  ஒருமைப்படுத்து   என்று கூறினார். இவ்வாறு மனத்தை ஒருமைப்படுத்திய நரேந்திரரால் உடம்பை மறந்து தியானத்தில் ஈடுபடமுடிந்தது. அந்த வலி இருந்தது வரை, நான் விரும்பிய மட்டும் மனத்தை ஒரே சீராக வைத்துக்கொள்ள முடிந்தது. அப்போது மற்ற உறுப்புகள் இருக்கின்றன என்ற நினைவு அறவே மறந்துவிட்டது,எனவே உடலை நினைப்பது பற்றிய கேள்வியே இல்லாமல் போய்விட்டது” என்று பின்னாளில் கூறினார் நரேந்திரர்.

இவை தவிர நரேந்திரர் தட்சிணேசுவரத்தில் தங்கும் போது ஸ்ரீராமகிருஷ்ணர் குறிப்பிட்ட வகை சாதனைகளை அவருக்குக்கூறி பஞ்சவடியில் சென்று தியானிக்குமாறு அனுப்புவதுணடு.


யானையும் குட்டையும்


நரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரின் பேரருளால் சாதனை வாழ்வில் தீவிரமாக முன்னேறிக்கொண்டிருந்தாலும் அவரைப் பொறுத்தவரை அது ஒரு பெரிய விஷயமாகத்தெரியவில்லை. பக்தர்களில் சிலர் பரவசநிலைகளில் ஆழ்வதும், கண்ணீர் வடிப்பதுமாகப் பேரானந்த நிலைகளை அனுபவிப்பதை அவர் கண்டபோது, ஒருவேளை தாம் முன்னேறவில்லையோ என்ற சந்தேகம் அவருக்கு வந்துவிட்டது. எனவே ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணரை அணுகி, தமக்கும் அத்தகைய நிலைகளை அருளுமாறு கேட்டார். அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர், மகனே, இதற்குப்போய் வருந்துகிறாயே! ஒரு யானை சாதாரண குட்டையில் இறங்குவதாக வைத்துக்கொள், குட்டையிலுள்ள தண்ணீரில் அலையெழும், கரையில் மோதிச்சிதறி அமர்க்களப்படும். ஆனால் அதே யானை கங்கையில் இறங்கட்டும், கங்கை நீரில் ஏதாவது மாற்றம் உண்டாகுமா? அது போல் தான் இதுவும், இந்தப் பக்தர்கள் வெறும் குட்டை போன்றவர்கள், பக்தியின் சிறு அனுபவங்கள் வாய்த்ததுமே இப்படி உணர்ச்சிப்பெருக்கில்  தள்ளாடுகிறார்கள். நீயோ மாநதி கங்கையைப்போன்றவன். இது போன்ற உணர்ச்சிப் பெருக்கு உனக்கு வராது, என்று உண்மையைத்தெளிவுபடுத்தினார்.


பிரம்மச்சரிய வாழ்விற்கான உபதேசம்


நரேந்திரரின் பாட்டி வீட்டில் உள்ள அவரது படிப்பறைக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் அவ்வப்போது செல்வதுண்டு. அப்போதெல்லாம் ஆன்மீக சாதனையைப் பற்றிய பல விஷயங்களை அவருக்கு உபதேசிப்பார். பெற்றோரின் வற்புறுத்தலுக்காகத் திருமணம் என்ற தளையில் சிக்கிவிடாமல் இருக்குமாறு அவரை எச்சரிப்பார். பிரம்மச்சரியத்தின் பெருமைகளைக் கூறுவார். தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் பிரம்மசரியம் காத்தால் மேதா நாடி திறக்கிறது. அதனால் நுட்பமான மற்றும் மிக நுட்பமானவற்றை எல்லாம் ஊடுருவி அறிந்து கொள்ள ஒருவனால் முடிகிறது. இந்த அறிவாற்றலின் உதவியால் தான் இறையனுபூதி பெற முடியும். இப்படிப்பட்ட தூய புத்திக்குத்தான் இறைவன் தென்படுகிறார்” என்றெல்லாம் எடுத்துரைப்பார்.

ஸ்ரீராமகிருஷ்ணரின்  தொடர்பால் தான் நரேந்திரர் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று அவரது வீட்டினர் நினைத்தனர். அதைப்பற்றி நரேந்திரர் கூறினார். ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணர்  வழக்கம்போல் என் படிப்பறைக்கு வந்து பிரம்மச்சரியத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். மறைவிலிருந்து அதை என் பாட்டி கேட்டு, என் பெற்றோரிடம் கூறிவிட்டாள். துறவி ஒருவருடன்  பழகுகின்ற நானும் துறவியாகிவிடுவேன் என்று பயந்து அன்றிலிருந்து  திருமணஏற்பாடுகள் முடுக்கிவிடப் பட்டன. ஆனால் என்ன பயன்?  ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுளத்திற்கு முன் அவர்களின் முயற்சிகள் எல்லாம் தோல்வியுற்றன. சில  இடங்களில் எல்லாம் முடிந்து இதோ திருமணம் என்ற நிலை வரை வந்துவிடும். ஆனால் ஏதோ அற்ப விஷயத்திற்காக இரண்டு வீட்டாருக்கும்  இடையே கருத்து வேறுபாடு தோன்றி திருமணம் தடைபட்டு விடும்.

நரேந்திரர் அடிக்கடி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் போவதை வீட்டில் யாரும் விரும்பாவிடினும் அவரிடம்  அதைச்சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. இளமை முதற்கொண்டே அவர் எப்போதும் யாருடைய எதிர்ப்புகளையும் பொருட்படுத்தியதில்லை. வாலிபனான பின்பு உணவு, உடை என்று எல்லாவற்றிலும் தன் விருப்பம் போல் தான் செய்து வந்தார். அவரிடம் இதைச்செய், அதைச்செய்யாதே, என்றெல்லாம் கட்டுப்பாடுகளை  விதித்தால் விளைவு விபரீதமாகிவிடும் என்பதை வீட்டிலுள்ளோர் அறிந்திருந்தார்கள். எனவே நரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் தடையின்றி சென்றுவர முடிந்தது.

வேடிக்கை, வினோதம்

பொதுவாக, மகான்களிடம் வேடிக்கை வினோதங்களுக்குக் குறைவிருக்காது. ஸ்ரீராமகிருஷ்ணரும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. அமுத மொழி”களில் பல இடங்களில் அவரது பேச்சைக்கேட்டு அனைவரும் சிரிப்பது பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். நரேந்திரர் சம்பந்தப் பட்ட ஓரிரு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

ஒரு நாள் நரேந்திரர் பாட இருந்தார். ஆனால் தம்புராவில் சுருதி கூட்டுவதிலேயே நீண்ட  நேரம் போய்க்கொண்டிருந்தது. பாட்டு தொடங்கக் காணோம். குருதேவரும்  மற்றவர்களும் பொறுமை இழந்தனர். அங்கிருந்த வினோத்  என்பவர், நரேந்திரன் இன்று தம்புராவைச் சரி செய்வான், இன்னொரு நாள் பாடுவான், என்றார். எல்லோரும் சிரித்தனர்.

ஸ்ரீராமகிருஷ்ணரும் சிரித்தபடி, அந்தத் தம்புராவையே உடைத்துவிட்டால்  என்ன என்று தோன்றுகிறது. எவ்வளவு நேரமாக இந்த ”டொய்ங் டொய்ங்ஙூம்” தானானன நேரெநும்” மும் நடக்கும், என்று கேட்டார்.

பவநாத்-யாத்ராவிலும் ஆரம்பத்தில் இப்படித்தான்! சுருதி சேர்க்கிறோம் என்று இவர்கள் செய்யும் கூத்தில், எல்லாம் வெறுப்பாகி விடுகிறது.

நரேந்திரர்-(கம்பியை இழுத்து சுருதி சேர்த்தவாறு)-

புரியா விட்டால் தான் வெறுப்பாகும்.

ஸ்ரீராமகிருஷ்ணர்(சிரித்தபடி)- இதோ, நம்மை யெல்லாம் ஊதித்தள்ளி விட்டான்.

மற்றொரு நாள்.

ஸ்ரீராமகிருஷ்ணர்(நரேந்திரரிடம்)- ஒரு பாட்டுப் பாடேன்.

நரேந்திரர்-வீடு திரும்ப வேண்டும், பல வேலைகள் இருக்கின்றன.

ஸ்ரீராமகிருஷ்ணர்-அப்படிச்சொல்லப்பா! நாங்கள் சொல்வதை நீ எதற்காகக்கேட்க வேண்டும்.? காதில் கடுக்கன் போட்டவன் சொன்னால், ஆமாம், போடுவாய்.கட்ட கோவணம் இல்லாதவனின் பேச்சை யார் கேட்பார்கள்?( எல்லோரும் சிரித்தனர்).குகன் குடும்பத்தினரின் தோட்ட வீட்டிற்குப்போக உன்னால் முடியும். அதை நான் அடிக்கடி கேள்விப்படவும் செய்கிறேன், இன்று எங்கே நரேந்திரன்” என்று கேட்டால்” குகனின் தோட்ட வீட்டில்” என்று பதில் வருகிறது. இதையெல்லாம்  சொல்லியிருக்க மாட்டேன், நீ தான் என் வாயைக் கிளறிவிட்டாய்.

நரேந்திரர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு, பக்கவாத்தியம் எதுவும் இல்லையே! வெறுமனே பாடட்டுமா? என்று கேட்டார்.


ஸ்ரீராமகிருஷ்ணர்- அப்பனே, எங்கள் நிலைமை இது, இங்கு இவ்வளவு தான் கிடைக்கும். உன்னால் முடியுமானால் பாடு, பலராமின் ஏற்பாடு இவ்வளவு தான். அவர் என்னிடமே, நீங்கள் படகில் வாருங்கள், முடியாவிட்டால் மட்டும் வண்டி வைத்துக்கொள்ளுங்கள்” என்பார்.( எல்லோரும் சிரித்தனர்). இன்று விருந்து தந்தார் அல்லவா. அதனால் மாலையில் எல்லோரையும் ஆடவைத்து அதை மீட்டுவிடுவார்..(சிரிப்பு). ஒரு நாள் இங்கிருந்து தடசிணேசுவரம் செல்ல ஒரு வண்டியை ஏற்பாடு செய்தார். வண்டி வாடகை பன்னிரண்டு அணா! பன்னிரண்டணாவிற்கு தட்சிணேசுவரம் வரை வருவானா? என்று கேட்டேன் . அதற்கு அவர் ”அதுவே போதும் என்று கூறிவிட்டார். ஒரு வழியாக வண்டி புறப்பட்டது. ஆனால் பாதி வழியிலேயே ஒரு சக்கரம் உடைந்தது. (எல்லோரும் உரத்த குரலில் சிரித்தனர்). அது மட்டுமல்ல.குதிரை நடுநடுவே நின்றுவிடும். என்ன செய்தாலும் நகராது. வண்டிக்காரன் அடிஅடியென்று அடிப்பான். உடனே கொஞ்ச தூரம் ஓடும்.(உரத்த சிரிப்பு). இன்றைய ஏற்பாடும் அது போல் தான். மிருதங்கம் வாசிக்கப்போவது ராம், நாம் ஆட வேண்டும். இதில் விஷயம் என்னவென்றால் ராமுக்குத் தாள ஞானமே கிடையாது. (எல்லோரும் சிரித்தனர்). நீங்களே பாடிக் கொள்ளுங்கள். நீங்களே ஆடிக்கொள்ளுங்கள், நீங்களே ஆனந்தம் அடையுங்கள்” என்பது தான் பலராமின் விஷயம். (எல்லோரும் சிரித்தனர்)


மாயையும் அஞ்சும் ஞானம்


நரேந்திரர் சிவபெருமானின் அம்சத்துடன் பிறந்தவர். சிறு வயதிலேயே அவரிடம் தியானத்தில் மூழ்குவதற்கான ஆற்றல் இருந்தது. அதே போல் ஆன்மீக ஞானமும் அவரிடம் இயல்பாகவே இருந்தது. உலகையே  மயக்குகின்ற மகா மாயையான சக்திகூட நரேந்திரனிடமிருந்து பத்தடி தள்ளியே நிற்க முடியும். என்று அவரது ஞானத்தைப்பற்றி கூறினார்  ஸ்ரீராமகிருஷ்ணர். உலகின் ஆசைகள் அனைத்தையும் ஒரேயடியாக வெட்டி வீழ்த்தி, இறையுணர்வில் இரண்டறக் கலப்பதற்குத் தயாராக இருந்தார் நரேந்திரர். மற்ற சீடர்களுக்காக தேவியிடம் அம்மா, உலகை மயக்குகின்ற உன் மாயா சக்தியாகிய திரையை இவர்களிடமிருந்து அகற்று, என்று பிரார்த்தனை செய்கின்ற ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரருக்காக, அம்மா உன் மாயா சக்தியைச் சிறிதளவு நரேந்திரனிடம்  வைத்திரு, என்று பிரார்த்தனை செய்தார்.!


 MAIN PAGE 

image113

துன்ப நாட்கள்

பிரேம பக்தியும் ராதையின் காட்சியும்.

பக்தியின் உச்சநிலையாகிய பிரேம பக்தியும் நரேந்திரரிடம் அந்த இளம் வயதிலேயே நிறைந்திருந்தது. ஒரு நாள் அவரது வீட்டிற்கு அவரது சகோதரச் சீடர்களான சரத்தும் சசியும்  வந்திருந்தனர். மூவருமாகப்பேசியபடியே நடந்து சென்று பக்கத்திலிருந்த கார்ன்வாலிஸ் சதுக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இரவு 11 மணி ஆயிற்று. அன்று முழுவதும் நரேந்திரர் பக்தி பற்றியே பேசிக் கொண்டிருந்தார். கடைசியில், பிரேமைப் பொக்கிஷத்தை அள்ளி வீசியபடி சைதன்யர் வந்து கொண்டிருக்கின்றார்... வாருங்கள் தோழர்களே என்று நித்யானந்தர் அழைக்கின்றார்” என்ற பாடலை உணர்ச்சிப்பெருக்குடன் பாடினார். பாடல் முடிந்ததும் தமக்குத்தாமே பேசிக்கொள்வது போல் , பிரேமை மட்டுமா? ஆற்றலையும் ஞானத்தையும் முக்தியையும் எல்லோர் முன்பும் உண்மையிலேயே வாரி இறைக்கிறாரே! என்று மெல்லிய குரலில் கூறினார்.சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு தொடர்ந்தார். அன்று இரவு கதவுகளை மூடிவிட்டு நான் படுத்திருந்தேன்.  அவர் என்னை இழுத்தார்- சரியாக ச் சொல்வதானால் என்னுள் இருந்த வரை   இழுத்தார். என்னைத் தட்சிணேசுவரத்திற்கு அழைத்துச்சென்றார். என்னிடம் ஏராளம் பேசினார். எவ்வளவோ உபதேசித்தார் . அதன் பிறகே நான் திரும்பி வர அனுமதித்தார். உண்மை தான் தட்சிணேசுவரத்தில் உள்ள சைதன்யரால் எல்லாம் முடியும். அவர் எல்லாம் வல்லவர்.


என்ன தான் பக்தி என்றாலும் நரேந்திரரால் ராதா கிருஷ்ணர் காதலையும் பிரேமையையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்கள் இருவரும் உண்மையிலேயே வாழ்ந்தார்களா என்பது அவரது முதல் சந்தேகம். அவர்கள் இருவரும் கொண்ட காதவைத் தவறாக, வரம்பு மீறியதாக க்கருதினார் அவர். ஸ்ரீராமகிருஷ்ணர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவரால் நரேந்திரரிடம் ராதா- கிருஷ்ணர் தத்துவத்தை உணர்த்த இயலவில்லை. எனவே ஒரு நாள்  கூறினார், ராதை என்ற ஒருத்தி இருந்ததில்லை என்றே வைத்துக் கொள்வோம். ஏதோ ஒரு சாதகர் தன் கற்பனையில் ராதையை உருவாக்கினார் என்றே இருக்கட்டும். ஆனால் கற்பனையாகவே இருந்தாலும், அவர் தன்னை ராதையாக எண்ணும் போதும் அவளது குணநலன்களைச் சிந்திக்கும்  போதும் அவளுடைய அகவுணர்வுகளை ஏற்றுக்கொள்வதால் தன்னினைவு அழந்து அச்சமயத்திற்கு அவளாகவே ஆகிவிடுகிறார் என்பதை நீ ஏற்கத்தானே வேண்டும்! அப்படியானால் அந்தப் பிருந்தாவன லீலை நடைபெற்றது என்பது உண்மைதானே!


ஆனால் அனபவத்திற்குக் குறைந்த எதையும் நரேந்திரர் ஏற்றுக் கொள்வதில்லையே! எனவே அவருக்கு அனுபவத்தை வழங்கினார் ஸ்ரீராமகிருஷ்ணர். . ஒரு நாள் நரேந்திரருக்குக் கனவு ஒன்று வந்தது. அதில் ஸ்ரீராமகிருஷ்ணர்  தோன்றிவா,  உனக்குக் கோபிகையான ராதையைக் காட்டுகிறேன்” என்று கூறி நரேந்திரரைச்சிறிது தூரம் அழைத்துச்சென்றார். பிறகு திரும்பி, ராதையை எங்கே தேடுவாய்? என்று கேட்டுவிட்டு, தாமே ராதையாக மாறி நின்றார்.  ராதையின் பேரழகு விளக்கங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்ததை நரேந்திரர் கண்டார். இந்தக் கனவு நரேந்திரரின் வாழ்க்கையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது.


பிரம்ம சமாஜத்தில் பொதுவாகப் பாடப்படுகின்ற பாடல்களை மட்டுமே பாடிவந்த நரேந்திரர் இந்த அனுபவத்திற்குப் பிறகு ராதை-கிருஷ்ணர் பற்றிய பக்திப்பாடல்களை அதிகம் பாடத் தொடங்கினார்.

தந்திரம் அல்லது தாந்திரிகம் என்பது தேவியை வழிபடுகின்ற நெறியாகும். இதில் தட்சிணாசாரம் (வலது முறை, வாமாசாரம் (இடது முறை) என்று இரண்டு பிரிவுகள் உண்டு. தட்சிணாசாரம்  என்பது மற்ற நெறிகளைப்போல சாதாரண வழிபாட்டு முறை. ஸ்ரீவித்யா உபாசனை போன்று தென்னிந்தியாவிலும் மற்ற பகுதிகளிலும்  பரவலாக தேவியை வழிபடுகின்ற முறைகள் தட்சிணாசாரத்தைச்சேர்ந்தவை.

வங்காளத்தில் வாமாசாரம்  அதிகமாக அந்த நாட்களில்  வழக்கத்தில் இருந்தது. பொதுவாக காமம், கோபம், ஆசை ஆகியவை மனிதனின் எதிரிகளாகக் கருதப்படுகின்றன. அவற்றை வென்று , கடந்து செல்லுமாறு எல்லா நெறிகளும் போதிக்கின்றன. ஆனால். வாமாசாரம், காமம், முதலியவற்றை நண்பர்களாகக் கொள்ளுமாறு போதிக்கிறது. அவற்றின் வழியே சென்று, அவற்றின் ஆற்றலையும் சொந்தமாக்கிக்கொண்டு  ஆன்மீகத்தில் முன்னேறுவதற்கு வாமாசாரம்  வழிகாட்டுகிறது. காமத்தையும் ஆசைகளையும் விலக்குவதற்குப் பதிலாக ஏற்றுக்கொண்டு செய்கின்ற சாதனைகளை இது போதிக்கிறது. பேசுவதற்கும் கேட்பதற்கும் இதமாக இருக்கின்ற  இந்தப் பாதை , உரிய கவனமின்றி பின்பற்றப்படும்போது நல்லொழுக்கச்  சீர்குலைவுகளுக்கு இட்டுச் செல்வனவாக அமையக்கூடியவை. அத்தகைய ஒரு நிலைமையே அன்றைய வங்காளத்தில் காணப்பட்டது. தந்திர சாதனை என்ற பெயரில் ஒழுக்கக்கேடுகள் கட்டவிழ்ந்து சமுதாயத்தைச் சீர்குலைத்து வந்தது.

ஒரு நாள் நரேந்திரர் வாமாசாரம் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கேட்டார். ஸ்ரீராமகிருஷ்ணர் அந்தப் பேச்சையே வளர்க்க விரும்பவில்லை. இவற்றைப் பற்றி எல்லாம் நீ அறிய வேண்டாம். என்னைப் பொறுத்தவரை, எல்லா பெண்களையும் நான் தாயாகக் காண்கிறேன். இது தூய வழி. இதில் கவலையோ அபாயமோ இல்லை. பெண்ணைச் சகோதரியாகக் காண்பதும் பரவாயில்லை. பெண்ணை வேறு எந்தக் கண்ணோட்டத்தில் காண்பதும் தவறானது, அபாயகரமானது. இந்தப் பாதைகளில் செல்லும்போது  மனத்தூய்மையைக் காப்பது கடினம். கடவுளை அடைய பல வழிகள் உள்ளன. வாமாசாரப் பாதையும் வழிதான். ஆனால் அழுக்கான பாதை, துப்புரவாளர்  வருவதற்காகப் புழக்கடை வாசல் இருக்குமே, அது போன்ற பாதை அது. முன் வாசல் வழியாக வருவது தானே சிறப்பு!  என்று கூறினார் அவர்.

நரேந்திரரின் சாதனைகள் பற்றி பின்னாளில் சாரதானந்தர் கூறினார், ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரருக்குப் பல்வேறு உபதேசங்கள் கொடுத்து, பக்தி நெறி மற்றம் பல நெறிகளில் பல்வேறு சாதனைகளைச்செய்யுமாறு செய்தார். நரேந்திரரும் அசாதாரண ஆற்றல் படைத்தவராக , கிரகிக்கும் திறமை பெற்றவராக இருந்தார். அதனால் குறைந்த காலத்திலேயே ஒவ்வொன்றின் வாயிலாகவும் முன்னேறி அந்தந்த சாதனையின் பலன்களைப் பெற்றார். அந்த நாட்களில் ஒரு நாள் நரேந்திரர் தமது வீட்டில் ஆனந்தமாக அமர்ந்திருந்தார். அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது அவரது ஆனந்தத்திற்கான காரணம் புரிய வந்தது. குருதேவரின் திருவருளால் அவர் ஸ்ரீராதையின் தரிசனம் பெற்றிருந்தார். பல்வேறு தேவதேவியரின் தரிசனமும்  அவருக்கு வாய்த்திருந்தது. ஆனால் அவர் எதையும் வெளியில் கூறுவதில்லை.

ராதையின் பக்தியில் தோய்ந்தவராக  பின்னாளில் ஒரு முறை ராதையைப் பற்றி சுவாமி விவேகானந்தர்  கூறினார். அப்போது கறந்த பாலில் தோன்றும் நுரை பட்டால்  உன் விரல் வெட்டுப் படுமா? ஒரு வேளை அது கூட சாத்தியமாகலாம். ராதையின் இதயமோ அதைவிட மென்மையானது.


ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட ஈடுபட சில அமானுஷ்ய அனுபவங்களைத் தவிர்க்க இயலாது. கனவில் வரும் அனுபவங்கள், விழிப்பு நிலையிலேயே நடைபெறும் சம்பவங்கள் என்று இவை பலதரப்பட்டவை. இவற்றைப் புரிந்து கொள்ளவும் , சரியாக ஏற்றுக் கொள்ளவும் ஒரு தகுந்த குருவின் வழிகாட்டுதல் மிகவும் தேவை.


சில அமானுஷ்ய அனுபவங்கள்


 நரேந்திரரின் சில அனுபவங்களைக் காண்போம். இந்த நாட்களில் தம்மைப்போல் உருவம் கொண்ட, தமது இரட்டை” ஒருவரை நரேந்திரர் காண ஆம்பித்தார். அவர் நரேந்திரரைப்போலவே இருப்பார். கண்ணாடியில் தெரிகின்ற பிம்பம் செய்வது போல், நரேந்திரர் செய்கின்ற அனைத்தையும் அந்த இரட்டையும் செய்வார். சில நேரங்களில் ஒரு மணிநேரம் கூட நரேந்திரருடன் அந்த இரட்டை இருப்பதுண்டு. நரேந்திரர் இதனை ஸ்ரீராமகிருஷ்ணரிடம் தெரிவித்தார். அவர் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தியானத்தின் உயர்நிலைகளில் இத்தகைய அனுபவங்கள் சாதாரணமாக நிகழக்கூடியவை என்று கூறிவிட்டார்.


மற்றொரு சம்பவம்.  நண்பரான சரத்தின் வீட்டிற்கு ஒரு நாள் இரவில் சென்றார் நரேந்திரர்.  வீட்டில் நுழைந்ததும் திகைத்துச் சிலைபோல் நின்றார். காரணம் கேட்ட போது அவர்,  இந்த வீட்டை இதற்கு முன்பு நான் எப்போதோ பார்த்திருக்கிறேன், எந்த வழியாக எங்கே போக வேண்டும், எந்த அறை எங்கே உள்ளது, என்று எல்லாமே எனக்குத் தெரிந்துள்ளன. ஆச்சரியம்! என்றார். ஆனால் அவர் அன்றுதான் சரத்தின் வீட்டிற்கு முதன் முறையாகச்சென்றார். இது பற்றி அவர் பின்னாளில் குறிப்பிட்டார்.


சிறு வயதிலிருந்தே சில  இடங்களையும் பொருட்களையும், மனிதர்களையும் பார்க்கும்போது, அவர்களை முன்பே பார்த்திருக்கிறேன், பழகியுள்ளேன் என்ற உணர்வு சில வேளைகளில் எனக்கு ஏற்படுவதுண்டு. நினைவு படுத்த முயற்சிப்பேன். எவ்வளவு முயன்றாலும்  ஞாபகம் வராது. அதே வேளையில் அவர்களை அதற்கு முன்னால் பார்த்த தில்லை என்றும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவ்வப்போது நிகழும். நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பேன். திடீரென யாரோ ஒருவனது ஏதோ ஒரு வார்த்தை என் நினைவைத் தூண்டி விடும். இதே விஷயத்தைப்பற்றி இவர்களுடன் இதே வீட்டில் முன்னரும் பேசியிருக்கிறேன். இந்த நண்பனே அப்பொழுதும் இதே கருத்தைச்சொன்னான்” என்று தோன்றும். ஆனால் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் எங்கே, எப்போது என்பது மட்டும் நினைவிற்கு வராது. முற்பிறவிக்கொள்ளையைப் பற்றி அறிந்த போது, இந்த இடங்களையும் இந்த மனிதர்களையும் முற்பிறவிகளில் சந்தித்திருக்கலாம், அந்த நினைவுகளே அவ்வப்போது சிறிது வருகிறது என்று கருதினேன். ஆனால் இந்த முடிவு அறிவுக்குப் பொருந்தியதாக இருக்கவில்லை. ஆனால் இப்பொது எனக்கு உண்மை தெரிகிறது. நான் இந்தப் பிறவியில் யார் யாருடன் எங்கே, எப்போது எப்படிச் சந்திக்கப்போகிறேன், பழகப்போகிறேன், என்பதை நான்  பிறக்குமுன்னரே ஓவியக் காட்சிபோல் கண்டிருக்க வேண்டும், அந்த நினைவு தான் அவ்வப்போது மனத்தில் எழுகிறது.

தொலைதூரத்தில் நடப்பவற்றைக் காண்கின்ற , கேட்கின்ற ஆற்றலும் நரேந்திரருக்கு உண்டாயிற்று. ஒரு நாள் அவர் தியானத்திற்கென அமர்ந்து, சற்றே தியானம் கைகூடியதும் அவரது  மனம் ஓர் உயர்ந்த நிலையை அடைந்தது. குறிப்பிட்ட மனிதன். குறிப்பிட்ட வீட்டில் அமர்ந்து, குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை அவரால் காண முடிந்தது. இவ்வாறு கண்டதும் அந்தக் காட்சி உண்மையா, பொய்யா என்று அறிய ஆவல் எழுந்தது. உடனே எழுந்து, தாம் கண்ட அந்த  இடத்திற்குச்சென்றார். அவர் தியானத்தில் கண்ட அனைத்தும் உண்மையாக இருந்தன. துளி கூட மாற்றம் இல்லை. சில நாட்களுக்குப் பின் அவர் இதனை குருதேவரிடம் தெரிவித்தார். அதற்கு குருதேவர் இவை  இறையனுபூதிக்கான வழியில் உள்ள தடைகள். சில நாட்கள் தியானம்  செய்யாதே, என்று கூறினார்.

மற்றோர் அமானுஷ்ய ஆற்றலும் நரேந்திரரிடம் வளரத்தொடங்கியது. யாராவது ஒருவர் எழுதிய காகிதத்துணுக்குகளைத் தம் கையில் வைத்திருந்தால்  அந்த எழுத்திற்குரிய நபரைப்பற்றிய அனைத்தும் அவருக்குத் தெரிந்துவிடும். அந்த நபரின் தோற்றம்., அவர் என்ன  உடை அணிந்துள்ளார், அவரது மனத்தில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது போன்ற அனைத்தும் அவருக்குத் தெரிந்து விடும். இதனைத் தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு பல நேரங்களில் அவர் களித்ததுண்டு. ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் அதனைக் கண்டித்தார். இது ஒரு பெரிய வரப்பிரசாதம். ஆனால் மனித குலத்தின் நன்மை என்ற ஒன்றைத் தவிர வேறு எதற்கும் இந்த ஆற்றலைப் பயன்படுத்தாதே. யாரையோ பற்றிய தகவல்களை உனக்குக்கொண்டு வருகின்ற இந்தக் கைகள் மனிதர்களின் வேதனையைத்துடைக்கவும் வல்லவை. உன் ஆற்றலைப் பிறரது வேதனையைத் துடைப்பதற்காகப் பயன்படுத்து” என்றார் அவர்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் இந்த உபதேசம் நரேந்திரருக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு மாறுபட்ட பரிமாணத்தைக் காட்டின என்பதில் ஐயமில்லை. நமக்கு இறைவன் தருகின்ற ஆற்றல்களையும்மேன்மைகளையும் மற்றவர்களின் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவரது மனத்தில் ஆழப்பதிந்தது.ஆயினும் மற்றொரு நிகழ்ச்சியின் மூலமாக அது பரிபூரணமாக அவரது மனத்தில் பதிந்தது.


ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து பெற்ற செய்தி


ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்களுடன் தம் அறையில் அமர்ந்திருந்தார். நரேந்திரரும் அங்கிருந்தார். பேச்சும் வேடிக்கை வினோதங்களுமாக நேரம் போய்க்கொண்டிருந்தது.  அப்போது வைணவ நெறிபற்றி பேச்சு எழுந்தது. அதன் கொள்கையை ஸ்ரீராமகிருஷ்ணர் சுருக்கமாகக் கூறினார். இறைநாமத்தில் ஈடுபாடு, உயிர்களிடம் தயை, பக்தர்களை மதித்தல் ஆகிய மூன்றையும் கடைப்பிடிக்குமாறு இந்த நெறி போதிக்கிறது. இறைவனும் அவரது திருப்பெயரும் ஒன்றே. அதில் எந்த வேறுபாடும் இல்லை என்பதை உணர்ந்து எப்போதும் ஆழ்ந்த அன்புடன் இறைநாமத்தை ஓத வேண்டும், பக்தனும் பகவானும் ஒன்றே, கிருஷ்ணனும் பக்தனும் ஒன்றே என்பதை  உணர்ந்து சாதுக்களையும் பக்தர்களையும் போற்றி வணங்க வேண்டும். பிரபஞ்சம் முழுமையும் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு உரியது என்ற திடநம்பிக்கையுடன் எல்லா உயிர்களிடமும் தயை.


எல்லா உயிர்களிடமும் தயை” என்று கூறிக் கொண்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் பேச்சு தடைபட்டது. அப்படியே பரவச நிலையை அடைந்தார் அவர் .ஓரளவிற்குப்புறவுணர்வு ஏற்பட்டதும், உயிர்களிடத்தில் தயையா? உயிர்களிடம் தயை.......? அற்ப மானிடனே, கேவலம் புழுவுக்குச்சமம் நீ. நீ உயிர்களிடம் தயை காட்டப்போகிறாயா? தயை காட்ட நீயார்? இல்லை, ஒரு போதும் இல்லை. மனிதனைச் சிவ வடிவில் கண்டு சேவை தான் செய்யவேண்டும். அது தான் நீ செய்ய வேண்டியது, என்றார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதை அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவற்றின் உட்பொருளை எல்லோராலும் புரிந்து கொள்ள இயலவில்லை. நரேந்திரர் மட்டுமே ஸ்ரீராமகிருஷ்ணரின் எண்ண ஓட்டத்தைச்சரியாக அறிந்து கொண்டார். வெளியே வந்ததும் அவர், இன்று குருதேவரின் வார்த்தைகளிலிருந்து ஓர் அற்புத ஒளியைப்பெற்றேன், சாரமற்றதாக , வறண்டதாக க் கூறப்படுகின்ற வேதாந்த ஞானத்தை பக்திநெறியுடன், இணைத்து என்னவோர் எளிய, இனிய, சாரமிக்க வழியைக் காட்டிவிட்டார். அவர்!  

அத்வைத ஞானத்தைப்பெற வேண்டுமானால் உலகத்தையும் மக்களையும் முற்றிலுமாகத்துறந்து காட்டிற்குச் செல்லவேண்டும், அன்பு, பக்தி போன்ற மென்மையான உணர்வுகளை இதயத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்துவிட வேண்டும் என்றெல்லாம் தான் கூறப் பட்டு வந்தது. விளைவு? அந்தப் பாதையில்  செல்கின்றவன் உரகத்தையும் அதிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் தனது பாதையில் உள்ள தடையாகக்கருதி, அவனை வெறுத்து தனக்குத்தானே அழிவைத்தேடிக்கொள்கிறான்.ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் இன்று பரவச நிலையில் கூறியதிலிருந்து, காட்டில் இருக்கும் வேதாந்த ஞானத்தை வீட்டிற்குக் கொண்டுவரலாம். அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் அதைக் கடைப்பிடிக்கலாம் என்பது தெளிவாகிறது.  செய்வதை ஒருவன் தொடர்ந்து செய்யட்டும். அதில் தீங்கில்லை. ஆனால் இறைவனே உயிர்களாகவும்  உலகமாகவும்  உள்ளான் என்ற எண்ணத்தை மட்டும் உறுதியாகக்கொண்டிருந்தால் போதும், வாழ்வில் ஒவ்வொரு கணமும் நாம் யாருடன் தொடர்பு கொள்கிறோமோ, அன்பு செய்கிறோமோ, மதிப்பும் மரியாதையும் அளிக்கிறோமோ, தயை காட்டுகிறோமோ அவர்கள் அனைவரும் இறைவனின் அம்சமே. இவ்வாறு அனைவரையும் சிவ வடிவாகக் கருதும் பொழுது எவ்வாறு அவனால் மற்றவர்களைவிடத் தன்னை உயர்வாகக் கருத முடியும்? மற்றவர்களிடம் கோபமும் வெறுப்பும் எப்படி கொள்ள முடியும்? எவ்வாறு தயை காட்ட இயலும்? இவ்வாறு மனிதனை இறைவனாகக்  கண்டு அவனுக்குச்சேவை செய்யச் செய்ய அவனது இதயம் தூய்மையடைகிறது. விரைவில் அவன் தன்னைப்பேருணர்வு வடிவான இறைவனின் அம்சம், புனிதன், விழிப்புற்றவன், முக்தன் என்று உணர்கிறான்.


ஸ்ரீராமகிருஷ்ணரின் இந்த வார்த்தைகள் பக்திநெறியிலும் புதிய ஒளியைத் தருகிறது. அனைத்து உயிர்களிலும் இறைவனைக்காணும்  வரை ஒருவன் உண்மையான பக்தி (பரா பக்தி) என்றால் என்ன என்பதை உணர முடியாது. சிவபெருமான் அல்லது நாராயணனின்  வடிவில் மக்களைக் கண்டு அவர்களுக்குச் சேவை செய்யும்போது விரைவில் அவன் உண்மையான பக்தியைப்பெற்று லட்சியத்தை அடைகிறான். கர்மயோகம் மற்றும் ராஜயோகத்தைப் பின்பற்றும் சாதகர்களுக்கும் ஸ்ரீராமகிருஷ்ணரின் வார்த்தைகள் புதிய ஒளியைத் தருபவை. மனிதனால் ஒரு கணம் கூட செயலற்று இருக்க முடியாது. அப்படியானால் சிவ வடிவில் மக்களைக் கண்டு அவர்களுக்குச் சேவை செய்யும்போது மனிதன் குறிக்கோளை அடைகிறான் என்பது சொல்லாமலே விளங்கும். இறைவன் எனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால், இன்று கேட்ட இந்தப் பேருண்மையை நான்  உலகெங்கும் முழங்குவேன். பண்டிதர், பாமரர்,  செல்வந்தர், ஏழை, பிராமணர், சண்டாளர், என்று அனைவருக்கும் எடுத்துக்கூறுவேன்.

இவ்வாறு ஸ்ரீராமகிருஷ்ணர் ஞானம், பக்தி , யோகம், மற்றும் கர்ம நெறிகளில் இது வரை காணாத ஒளியைக்கொணர்ந்து வாழ்க்கை நெறியை வளம் பெறச்செய்தார். சாதாரண மனிதர்களால் அவரது வார்த்தைகளைப்புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தத் தெய்வீக வார்த்தைகளை அறிவுத் தெளிவுமிக்க நரேந்திரர் மட்டுமே புரிந்து கொண்டார். அவ்வப்போது விளக்கி பிறரையும் வியக்கச்செய்தார். நரேந்திரர் பின்னாளில் விவேகானந்தராகி உலகிற்குப்போதித்த  அனைத்து உண்மைகளின் சாரம் அவரது இந்தப் பேச்சில் உள்ளது. 

இப்படி ஆன்மீக சாதனை, ஸ்ரீராமகிருஷ்ணரின் தொடர்பு, படிப்பு என்று சென்று கொண்டிருந்த நரேந்திரரின் வாழ்வில் திடீரென வீசியது ஒரு சூறாவளி!


துயர நாட்கள்

துன்பம் ஏன்?


நாடு, மொழி, இனம், மதம் என்று அனைத்து எல்லைகளையும் கடந்து எல்லா தத்துவ அறிஞர்களையும் ஒருசேர ஆக்கிரமித்த கேள்வி ஒன்று உண்டென்றால் அது, இந்த உலகில் துன்பம் ஏன் உள்ளது? இதற்குப் பதில் கூற அவர்களில் பலரும் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் கேள்வி என்னவோ  இது வரை பொதுவான ஒரு விடையின்றியே நிற்கிறது. வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது. முற்றிலும் இன்பமாக யாராலும் வாழ முடியாது. அது போலவே வாழ்நாள் முழுவதும் துன்பத்திலும் யாரும் உழல்வதில்லை. பிரமிப்பூட்டும் ஓர் உண்மை என்னவென்றால் அரிய, பெரிய காரியங்களைச் சாதித்த அனைவருக்கும்  இன்பத்தை விட துன்பமே சிறந்த வழிகாட்டியாக விளங்கியுள்ளது. துன்பங்களிலிருந்தே அவர்கள் அதிக பாடம் கற்றுக்கொண்டார்கள். துன்பங்களே அவர்களுள் தூங்கிக் கிடந்த பல ஆற்றல்களையும் திறமைகளையும் வெளியே கொண்டு வந்திருக்கிறது. துன்பங்களே அவர்களை மனித குலத்தை நேசிக்கத்தூண்டிருக்கிறது. துன்பங்களே அவர்களை மனிதர்களுக்காகப் பாடுபடச் செய்திருக்கிறது. தமது இருபத்து நான்காம்  வயதில் அத்தகைய துன்ப நாட்களை நரேந்திரர் எதிர் கொள்ள நேர்ந்தது.


தந்தையின் மறைவு


 1884-ஆரம்பம். நரேந்திரரின் பி.ஏ.தேர்வு. அப்போது தான் முடிந்திருந்தது. தேர்வு முடிவுகள் ஜனவரி 30-ஆம் நாள் வெளியாகின. அவர் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார். விசுவநாதர் அவரை  நிமாய்சரண் போஸ் என்ற புகழ்பெற்ற வழக்கறிஞரிடம் உதவியாளராகச் சேர்த்தார். மெட்ரோபாலிடன் கல்லூரியில் மூன்று வருடசட்டப் படிப்பிற்காக இங்கிலாந்து செல்ல விரும்பினார். விசுவநாதரும் அதற்கு இசைந்தார். ஆனால் விதி வேறுவிதமாக கணக்குப் போட்டிருந்ததை யாரும் அறியவில்லை.

பிப்ரவரி 25. அன்று நரேந்திரர் வராக நகர் நண்பர்கள் அழைத்ததற்காக அங்கே சென்றிருந்தார். இரவு பதினொரு மணிவரை ஆடல், பாடல், கும்மாளம் என்று அந்த இடம்  அமர்க்களப்பட்டது. பின்னர் நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டு, படுத்தவாறே அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். அதிகாலை  இரண்டு மணி இருக்கும். திடீரென நண்பர் ஒருவர் வந்து நரேந்திரரை அழைத்தார். இந்த நேரத்தில் இவர் ஏன் இங்கே வந்தார்? என்ற சிந்தனையுடன், வந்தவரைப்பார்த்தார் நரேந்திரர். வந்தவர் தயங்கிய வாறே தாம் கொண்டு வந்த செய்தியைக்கூறினார்.

உன் தந்தை மாரடைப்பால்  காலமானார்.

காலின் கீழ் பூமி பெயர்ந்து பாதாளத்தில் தலைகீழாக விழுவது போலிருந்தது நரேந்திரருக்கு.!

சிறிது நேரத்தில் தம்மைச் சுதாரித்துக்கொண்டு , நெஞ்சு வெடிக்கும் துயரைத் தாங்கிக்கொண்டு புறப்பட்டு கல்கத்தா வந்து சேர்ந்தார் நரேந்திரர். அளவுக்கு மீறிய வேலையின் காரணமாக விசுவநாதர் சில காலமாகவே மிகவும் களைத்துப் போயிருந்தார். இரவு சுமார் பத்து மணிக்குத்  திடீரென்று மாரடைப்பால்  இறந்தார். விசுவநாதரின் உடல்  மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்குத் தயாராக வைக்கப் பட்டிருந்தது. நரேந்திரரின் தாயும் சகோதர சகோதரிகளும்  அழுது கொண்டிருந்தனர். முதலில் நரேந்திரர் தமது துயரத்தை வெளியே காட்டாமல் தான் இருந்தார். ஆனால் எவ்வளவு நேரத்திற்கு! கொஞ்ச நேரத்தில் ஓவென்று அவரும் கதறிவிட்டார். நரேந்திரர் மூத்த மகன். தந்தைக்குச்செய்ய வேண்டிய ஈமக்கடன்களைச் செய்து முடித்தார்.


வறுமையின் பிடியில்


 விசுவநாதர் மறைந்த பிறகு தான் அவரைப் பற்றிய ஓர் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.  எனக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? என்று ஒரு முறை நரேந்திரர் அவரிடம் கேட்டபோது கண்ணாடியில் நரேந்திரரின் உருவத்தையே காட்டினார் அல்லவா? உண்மையிலேயே அவர் அப்படித்தான் செய்திருந்தார். அவர் வேறு எதையும் விட்டுச்செல்லவில்லை. ஜமீன்தார் போல் வாழ்ந்த குடும்பம் ஒரே நாளில் திக்கற்ற நிலைக்கு த் தள்ளப்பட்டது.

வழக்கறிஞராகப் பணியாறிறிய விசுவநாதர் ஏராளம் சம்பாதித்தார். ஆனால் வரவை மீறிச் செலவழித்தார். அத்துடன் அவருடையது பெரிய குடும்பம். எனவே அவரால் எதையும் சேர்த்துவைக்க இயலவில்லை. அவரது சித்தப்பாவான காளி பிரசாத் தனது  பங்கிற்குக் கூட்டுக்குடும்பத்தின்  சொத்திலிருந்து செலவு செய்ததுடன் விசுவநாதரிடமிருந்து ம் தனியாகப் பணம் பெற்றுக்கொள்வார். வேலை காரணமாக வெளியூர் செல்லும் விசுவநாதர் மாதக்கணக்கில் ஆங்காங்கே தங்கி விடுவார். அதைப் பயன்படுத்தி, அவரது உறவினர்கள் அவரது பெயரில் பல இடங்களில் கடன் வாங்கி, தங்கள் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். கடன் விசுவநாதர் பெயரில் வாங்கப்பட்டது. செலவு உறவினர்களுக்காக நடைபெற்றது. மொத்தத்தில் விசுவநாதரின் கடன் தலைக்கு மேல் இருந்தது. எனவே அவரது குடும்பம் வெளிப்பார்வைக்கு நன்றாக வாழ்வது போல் தோன்றினாலும் உண்மையில் கடனாளியாகவே இருந்தது. இது நரேந்திரருக்கோ புவனேசுவரிக்கோ தெரியாது.

 இது போதாதென்று கூட்டுக்குடும்பச்சொத்து விஷயத்திலும் வீட்டில் சண்டை ஏற்பட்டது. எனவே அவர் பொதுச்சொத்தான வீட்டை விட்டு, மனைவி மக்களுடன் வேறொரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் குடிபெயர்ந்தார். புதிய வீடு நரேந்திரரின் பாட்டி வீட்டில் அருகில் இருந்தது. வாடகை வீட்டிற்குச் சென்ற சில மாதங்களுக்குப் பிறகு தான்  விசுவநாதர்  காலமானார். சில மாதங்களுக்குப்பிறகு நரேந்திரரும் குடும்பத்தினரும் அந்தப் பாட்டி வீட்டிற்கே  சென்று வாழத் தொடங்கினர்.

விசுவநாதரின் உதவியால் தங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொண்ட உறவினர்கள் இந்தப் பரிதாபமான நிலையில் எதிரிகள்போல் நடந்துகொண்டார்கள். நரேந்திரரின் குடும்பத்தை வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேற்றவும்  முடிவு செய்தார்கள். அதற்காக நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்கள். கடன் கொடுத்தவர்கள் கதவைத்தட்டினார்கள், கடன் வாங்கியவர்கள் காணாமல் போனார்கள். சில நாட்களிலேயே வீட்டில் சாப்பாட்டிற்கும் வழியில்லை என்ற நிலைமை நரேந்திரருக்குத் தெரியவந்தது. குடும்பத்திற்கு எந்த வருவாயும் இல்லை, ஆனால் ஐந்தாறுநபர்களைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற நிலைமை. எனவே நிமாய் சரணிடம் தாம் பெற்றுவந்த சட்டப் பயிற்சியைப்பாதியில் விட்டுவிட்டு, தீட்டு நாட்கள் முடியுமுன்னரே வேலை தேடி அலையத்தொடங்கினார். போதாத காலம் வரும்போது  நூற்றுக்கணக்கான முயற்சிகளும் பயனற்றுப்போய்விடுமே! எந்த வேலையும் கிடைத்தபாடில்லை.நரேந்திரருக்கு எல்லாத் திசைகளும் சூன்யமாகத் தெரிந்தன.


ஸ்ரீராமகிருஷ்ணர் அளித்த நம்பிக்கை


எல்லையில்லாத் துயரத்தில் ஆழ்ந்திருந்தபோதிலும் ஸ்ரீராமகிருஷ்ணரின் நினைவுகள் நரேந்திரருக்கு நம்பிக்கை ஒளியாகத் திகழ்ந்தன. ஒரு வாரத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரைச்சென்று கண்டார் அவர். தீட்டு நாட்கள் இன்னும்  கழியவில்லை. அவர் இன்னும் தீட்டுச் சடங்குகளுக்கான உடையுடனேயே இருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து அவரது கை எலும்பு பிசகியிருந்தது. கையிலும் கட்டுப்போடப்பட்டிருந்தது. வலி இன்னும் இருந்தது. நரேந்திரர் சென்று மற்ற பக்தர்களுடன் அமர்ந்து கொண்டார். பிரம்மசமாஜ பக்தரான திரைலோக்கியர் பாடிக்கொண்டிருந்தார். நரேந்திரரின் துயர் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணரின் வேதனை வார்த்தைகளுக்கு அப்பாற்படடதாக இருந்தது. இருப்பினும் அவர் நேரடியாக எதுவும் நரேந்திரரிடம் சொல்லவில்லை. பாடல் முடிந்ததும் உலகம் மற்றும் இறைவனைப் பற்றிய பல கருத்துக்களைக் கூறிவிட்டு, உடம்பு இரண்டு நாட்களுக்கு மட்டுமே, கடவுள் ஒருவரே உண்மை. உடம்பு இதோ இருக்கிறது, மறுகணம் இல்லை, உடம்பிற்கு இன்ப துன்பங்கள் இருக்கவே  இருக்கின்றன. நரேந்திரனை எடுத்துக்கொள்ளுங்கள். தந்தை இறந்து விட்டார், வீட்டில் தாங்க முடியாத கஷ்டம், எந்த வழியும் பிறக்கவில்லை. இறைவன் சில சமயம் நம்மை இன்பத்தில் வைக்கிறார், சில சமயம் துன்பத்தில் வைக்கிறார், என்று கூறினார். நரேந்திரனுக்கு இன்னும் கருணை காட்டில்லையே என்று இறைவன் மீது ஸ்ரீராமகிருஷ்ணர் கோபத்துடன் பேசுவது போல் இருந்தது. இடையிடையே அவர் நரேந்திரரை அன்புடன் பார்த்தார் என்று எழுதுகிறார் இந்த  நிகழ்ச்சியைக்குறித்து வைத்துள்ள ம-

மற்றொரு நாள் நரேந்திரர் தமது நண்பரான அன்னதாகுகர் என்பவருடன்  தட்சிணேசுவரத்திற்குச் சென்றிருந்தார். அருமைச் சீடனின் துயரத்தில் துயருற்ற ஸ்ரீராமகிருஷ்ணர் அன்னதாவிடம் நரேந்திரரின் கஷ்டங்களை எடுத்துக்கூறி, ஒரு நண்பன் என்ற முறையில் அவருக்கு உதவுவது  அன்னதாவின் கடமை என்றெல்லாம் கூறினார். சிறிது  நேரத்தில் அன்னதா புறப்பட்டு விட்டார். அவர் சென்ற பிறகு நரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சற்றுக்கோபத்துடன், ஏன் என் நிலைமையை  இப்படி ஊருக்கெல்லாம் தெரியும் படி க்கூறுகிறீர்கள்? என்று கடிந்து கொண்டார். ஸ்ரீராமகிருஷ்ணரின் கண்களில் கண்ணீர் வழிந்தது அவர் பரிவுடன் நரேந்திரரைப் பார்த்து , என் மகனே! உனக்காக வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்கவும் நான் தயங்கமாட்டேன், என்று கூறினார். நெகிழ்ந்து போனார் நரேந்திரர்.

இவ்வாறு ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்ப்பதிலும் அவரது கருணையிலும் நரேந்திரரின் நம்பிக்கை சற்று வலுப்பட்டது. பி.ஏ. படித்திருந்த நரேந்திரர் தமக்கு விரைவில் ஏதாவது வேலை கிடைக்கும் என்று நம்பினார். தினமும் இறைநாமத்தைச்சொல்லிக்கொண்டே பல்வேறு அலுவலகங்களிலும் ஏறிஇறங்கினார்.ஆனால் மாதம் 15 ரூபாய் சம்பளம் கிடைக்கின்ற வேலை கூட அவருக்கு க் கிடைக்கவில்லை. மௌனமாக வறுமையை ஏற்றுக்கொண்டார் நரேந்திரர். குடும்பமும் அவருடனேயே அதனை ஏற்றுக் கொண்டது. அவர்கள் யாரும் யாரிடமும் குடும்ப நிலைமையைக் கூறவில்லை.

 தீட்டுக்காலம் முடிந்ததும் நரேந்திரர் சாதாரண உடைகளை அணியத் தொடங்கினார். அவரது பணக்கார நண்பர்களும் வழக்கம்போல் வரத்தொடங்கினர். ஆனால் அவர்களில் யாரும் அவரது வீட்டு நிலைமையைப் புரிந்து கொள்ளவில்லை. அவரும் சிலவேளைகளில் அவர்களுடன் வெளியில் சென்றார். அவர் மெலியத்தொடங்கியிருந்தார். அவரது முகமும் சற்றே வெளிறியிருந்தது. இதையும் அவரது நண்பர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை யாரேனும் கவனித்திருந்தாலும் , அது வறுமை காரணமாக என்று அவர்களால் ஊகிக்க முடியவில்லை. தந்தை இறந்த  தால் ஏற்பட்ட சோகம் காரணமாகவே அவர் மெலிந்துள்ளார் என்றே அவர்கள் நினைத்தார்கள். இப்படி வறுமையும், அதனை நிர்க்கதியான நிலையில் எதிர்கொள்வதுமாக நரேந்திரரின் சோக நாட்கள் கழிந்தன.


ஏமாற்றங்கள்

நரேந்திரர் தம் தாயிடமும் சகோதர சகோதரிகளிடமும் சிரித்த முகத்துடன் நம்பிக்கை தொனிக்கப்பேசுவார். விரைவில் வேலைகிடைத்துவிடும், துன்பங்களுக்கு ஒரு முடிவு வந்துவிடும்  என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிப்பார். மற்றவர்கள் சற்று அதிகமாகவேச் சாப்பிடுவதற்காக தமது சாப்பாட்டைக் குறைத்துக்கொள்வார். காலையில் வேலை தேடிப் புறப்படுவார். மாலையில் களைத்துப்போய் திரும்புவார். சற்று முன்பு தான் சாப்பிட்டதாகக்கூறி மற்றவர்களைச் சாப்பிடச்செய்வார். தாம் பட்டினியாகப் படுத்துக்கொள்வார். அந்த நிலையிலும் அவர் சட்டப் படிப்பை விடவில்லை. பல நாட்கள் சாப்பிடாமல், கிழிந்து போன உடைகளை அணிந்து கல்லூரிக்குச்சென்றிருந்தார். பசி காரணமாகப் பலமுறை மயங்கிக்கூட விழுந்திருக்கிறார்.

நரேந்திரரின் நண்பர்கள் வழக்கம்போல் அவரைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து ச்செல்வார்கள் . நீண்ட நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார். அவர்கள் சாப்பிட அழைக்கும்போது மட்டும் மறுத்துவிடுவார். ஏனெனில் வீட்டில் தாயும் சகோதர சகோதரிகளும் பட்டினியில் வாடும் கோலம் அவரது கண் முன்னால் தோன்றும். உடனே ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி தட்டிக் கழித்து விட்டு சாப்பிடாமலேயே வீட்டிற்குத் திரும்புவார். வீட்டிலோ தாம் நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டதாகக் கூறுவார்.தமது பங்கையும் தம்பி தங்கையருக்கு அளித்துவிட்டு படுத்துக்கொள்வார்.


 MAIN PAGE 

image114

காளி ஆட்கொள்கிறாள்

தீய வழிகாட்டிகளும் நரேந்திரரின் மனநிலையும்

இந்தக் காலகட்டத்தைப் பற்றி நரேந்திரர் பின்னாளில் கூறினார்.


தந்தையின் மரணத்தீட்டு முடியும் முன்பாகவே நான் வேலை தேடி அலையலானேன். உணவின்றி, வெறுங்காலுடன், கையில் விண்ணப்பத் தாளுடன், கொளுத்தும்  வெயிலில் ஒவ்வோர்  அலுவலகமாக ஏறி இறங்கினேன்.என் துன்பத்தைக் கண்டு இரக்கப்பட்ட என் நெருங்கிய நண்பர்களுள் சிலர் சில நாட்கள் என்னுடன் வருவார்கள்். சிலநாட்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால் எனக்கு எல்லா இடங்களிலும் ஏமாற்றமே காத்திருந்தது. உலகத்துடன் ஏற்பட்ட இந்த முதல் அனுபவத்தின் மூலம் ஒன்று தெளிவாக விளங்கியது. தன்னலமற்ற இரக்கத்தைக் காண்பது அரிது. ஏழைகளுக்கும் பலவீனர்களுக்கும் இங்கே இடமில்லை.! இரண்டு நாட்களுக்கு முன்புவரை எனக்கு ஏதோ சிறு உதவி செய்யும் வாய்ப்புக்கிடைத்தால் அதைப் பெரும் பேறாக எண்ணியவர்கள், இன்று என் நிலைமை மாறிவிட்டதை அறிந்து, முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அவர்களால் உதவ முடிந்ததும் என்னைப் பார்த்து  விலகினார்கள். இதையெல்லாம் பார்த்த எனக்கு இந்த உலகம் அசுரனால் படைக்கப்பட்டதாகத் தோன்றிற்று.

ஒரு நாள் வெயிலில் சுற்றியதில் பாதங்களில் கொப்புளங்கள் தோன்றிவிட்டன. முற்றிலுமாகச்சோர்ந்து போய் மைதானத்தில் நின்ற நினைவு த் தூணின் நிழலில் சாய்ந்தேன். அன்று நண்பர்களும் ஓரிருவர்  இருந்தார்கள். ஒரு வேளை என்னை அங்கே அந்த நிலையில் கண்ட பின்னர் கூடினார்களோ என்னவோ, சரியாக நினைவில்லை. அவர்களுள் ஒருவன்  எனக்கு ஆறுதலாக இருக்கட்டும் என்று , இதோ, இறைவனின் மூச்சாம் அருட்காற்று வீசுகிறது” என்ற பாடலைப் பாடினான். அந்தப் பாடலைக் கேட்டபோது யாரோ என் தலையில் ஓங்கி அடிப்பது போலிருந்தது. என் தாய் மற்றும் சகோதர சகோதரிகளின் பரிதாப நிலைமை நினைவிற்கு வந்தது. தாங்கொணா வேதனையுடனும் ஏமாற்றத்துடனும் மனக்கசப்புடனும், போதும், நிறுத்து உன் பாட்டை! யாருடைய உறவினர்கள் பசியின் கொடுமையால் வாடி வதங்கவில்லையோ, மானத்தை மறைப்பதற்கு ஒரு முழத்துணிக்காக யார் அலைய வேண்டாமோ, அப்படி பஞ்சணையில் சாய்ந்து சுகபோகம் அனுபவிப்பவர்களுக்குத் தான் இந்தக் கற்பனை எல்லாம் இனிமையாக இருக்கும். எனக்கும் அப்படி ஒரு நாள் இருந்தது. ஆனால் இன்று வாழ்க்கையில் கொடூரமான உண்மையின் முன் அவையெல்லாம் கேலிக்கூத்தாகத் தெரிகின்றன என்று கத்தினேன். என் நண்பன் இந்த வார்த்தைகளால் மிகவும் வேதனைப்பட்டான். வறுமையின் எத்தகைய கோரப்பற்களில் அரைபட்டுக் கொண்டிருந்தால், என் வாயிலிருந்து இப்படிப்பட்ட சொற்கள் வந்திருக்க முடியும் என்பதை அவன் எப்படி அறிவான்.

காலையில் எழுந்து ரகசியமாக விசாரித்துவிட்டு நிலைமையை அறிவேன். சில நாட்களில் வீட்டில் கொஞ்சம் தான் சாப்பாடு இருக்கும். என் கையிலோ  தம்பிடிக் காசு கிடையாது. உடனே என் தாயாரிடம், நண்பன் ஒருவன் சாப்பிடக் கூப்பிட்டிருக்கிறான்” என்று கூறிச்செல்வேன். சில நாட்கள் ஏதாவது உண்பேன், சில நாட்கள் பட்டினி தான். என் நிலைமையை யாரிடமும் பேச மனம் இடம் கொடுக்கவில்லை. முன்போலவே பணக்கார நண்பர்கள் என்னைத் தங்கள் வீட்டிற்கோ தோட்டத்திற்கோ அழைத்துச்சென்று, என்னைப் பாடச்சொல்லிக்கேட்பார்கள். தவிர்க்க முடியாமல் சிலவேளைகளில் அவர்களுடன்  சென்று அவர்களை மகிழ்விப்பேன். ஆனால் உள்ளத்தின் குமுறல்? அதை நான் யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. அவர்களும் விசாரித்த தில்லை. அத்திபூத்தாற்போல் யாரோ ஒருவர், நீ ஏன் இப்போதெல்லாம் வருத்தமாகவும்  சோர்வாகவும் இருக்கிறாய்? என்று கேட்பார்கள்ஃ அவர்களில் ஒருவன் மட்டும் என் வீட்டுச் சூழ்நிலையை விசாரித்துத் தெரிந்து கொண்டு, அவ்வப்போது தன் பெயர் தெரிவிக்காமல் என் தாய்க்குப் பணம் அனுப்பி வந்தான். அதன் மூலம் என்னை என்றென்றைக்குமாக அவனுக்கு நன்றிக்கடன் படுமாறு செய்துவிட்டான்.

ஒரு வழியாக 1884 பிற்பகுதியில் தாம் படித்த மெட்ரோபாலிடன் பள்ளியிலேயே நரேந்திரருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. ஜீன் 1886-இல் ம-வின் சிபாரிசால்  அந்தப் பள்ளியின் புதிய கிளையில் தலைமையாசிரியர் பதவி கிடைத்தது. இந்த வருமானம் காரணமாக, பட்டினி நிலைமையிலிருந்து  ஒரு படி முன்னேறமுடிந்தது. ஆனால் குடும்பச் சொத்தின் மீது நடந்த வழக்கினாலும், வரவிருந்த சட்டத் தேர்வினாலும் நரேந்திரர்  அந்த வேலையைத்துறக்க  வேண்டியதாயிற்று.ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அப்போது தொண்டையில் புண் ஏற்பட்டிருந்தது. தாம் அருகில் இருந்து  அவருக்குச்சேவை செய்ய வேண்டும் என்று நரேந்திரர் நினைத்ததும் அதற்கு ஒரு காரணம்.

இந்த நாட்களில் கீத கோவிந்தம்” என்ற பாடலை வங்க மொழியில் மொழிபெயர்த்தார் நரேந்திரர். அவரது நண்பரான மோதிலால் போஸ் அதனை வெளியிட்டார். இதிலிருந்தும்  கொஞ்சம் பணம் கிடைத்தது.


தீய வழிகாட்டிகளும் நரேந்திரரின் மனநிலையும்


இந்தப் பிரச்சனைகள் காரணமாக நரேந்திரர் சுமார் ஏழு மாதங்களாக ஸ்ரீராமகிருஷ்ணரைச்சென்று காணவில்லை. இடையில் ஈசான் என்ற பக்தரின் வீட்டிற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் சென்றிருந்தபோது  ஒரு முறை கண்டதுடன் சரி, இந்த நாட்களில் அவருக்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்களுடனோ அங்கே  சந்தித்த இளம் நண்பர்களுடனோ பொதுவாக எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ம-மட்டும் சில நாட்கள் அவரது வீட்டிற்குச்செல்வார். இருவருமாக கீதகோவிந்தம் பாடல்களைப்பாடுவதும் உண்டு.


படிப்படியாக நரேந்திரரின் நிலைமை நண்பர்கள் பலருக்கும் தெரிய வந்தது. யாரும் பெரிதாக எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் அவருக்குத் தவறான வழிகாட்டுவதற்குப் பலர் தயாராக இருந்தனர். அவரது நண்பர்களில் சிலர் நல்வழிச் செல்பவர்கள் அல்ல என்று ஏற்கனவே கண்டோம். அவர்களில் ஒருவர் அன்னதா குகர். அவரது வீட்டில் சந்தித்த அத்தகைய ஓரிரு  இளைஞர்கள் அவருக்குக் குறுக்கு வழியில் பண்ம் சம்பாதிப்பதற்கான வழிகளைக்கூறினர். அவர் ஒத்துழைத்தால் அவருக்கு உதவத் தயாராக இருப்பதாகப் பணக்கார விதவைகள் சிலரும் தகவல் அனுப்பினர். அவர்கள் காட்டிய வழிகள் அனைத்தையும் துச்சமாக ஒதுக்கிவிட்டு, தம் வழியிலேயே தனித்துச்சென்றார் நரேந்திரர்.!


ஆனால் ”நண்பர்கள்” விடுவதாக இல்லை. நரேந்திரரை எப்படியாவது தவறான வழியில் இழுத்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டது போல் செயல்பட்டனர். ஒரு நாள் நரேந்திரர் நண்பன் ஒருவனின் விட்டிற்குச் சென்றிருந்தார். அங்கே நண்பர்கள் அனைவருமாகப் பாடியாடிக்  களிப்பாக இருந்தனர். அதன் பிறகு அவர் ஓர் அறையில் ஓய்வெடுக்கச்சென்றார். அப்போது அந்த நண்பர்களின் ஏற்பாட்டின் படி இளம் பெண் ஒருத்தி அவரது அறைக்குள்  சென்றாள். தன்னை நல்லவள்போல் காட்டிக்கொண்ட அவள், தான் மிகவும் ஏழ்மையில் வாடுவதாகவும் எல்லையற்ற துன்ப துயரங்களை அனுபவிப்பதாகவும் கூறினாள். அவளது பேச்சை நம்பிய நரேந்திரர் அவளுக்கு ஆதரவாகச் சில வார்த்தைகள் கூறினார்.  சிறிது நேரத்தில் அவள் அவரைத் தவறான எண்ணத்துடன் அணுகத்தொடங்கினாள். நரேந்திரர் மிகவும் கண்டிப்பாக அவளை அறையைவிட்டு வெளியே அனுப்பினார். அவள் நேராக அந்த நண்பர்களிடம்  சென்று, நல்ல சாதுவிடம்  என்னை அனுப்பிவிட்டீர்களே! என்று கடிந்து கொண்டாள்.


மற்றொரு முறை நடந்த நிகழ்ச்சியைப் பற்றி நரேந்திரரே கூறினார். என் நண்பர்களுள் சிலர் தீய வழியில் சென்று பொருள் சம்பாதித்தார்கள். என் வறுமை நிலைமையைக்கேள்விப்பட்ட அவர்கள் இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி, என்னைத் தங்கள் பக்கம் இழுக்க முயன்றார்கள். அவர்களில் சிலர் என்னைப்போல் திடீரென்று சூழ்நிலை மாறியதால் வயிற்றுப்பிழைப்புக்காகத் தகாத வழிகளில் சென்றவர்கள். அவர்கள் உண்மையிலேயே என்னிடம் அனுதாபப்பட்டார்கள்.மகாமாயையும் என்னை நிம்மதியாக  இருக்கவிடவில்லை. பணக்காரப்பெண் ஒ ருத்திக்கு நீண்ட நாட்களாக என்மேல் ஒரு கண் இருந்தது. இது உகந்த தருணம் என்று அவள் தன் செல்வத்தையும் அதனுடன் தன்னையும் ஏற்றுக்கொண்டு வறுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் படிச்செய்தி  அனுப்பினாள்! வெறுப்புடன் அதனை கடுமையாக நிராகரித்தேன். மற்றொரு பெண்ணும் என்னைக் கவர முயன்றாள். நான் அவளிடம், பெண்ணே, ஒரு பிடிச் சாம்பலாகப்போகின்ற இந்த உடலின்பத்திற்காக இதுவரை என்னவெல்லாமோ  செய்துவிட்டாய்! இதோ மரணம்  உன் முன் உள்ளது. அதனை எதிர்கொள்ள நீ ஏதாவது செய்திருக்கிறாயா? கீழான எண்ணத்தை விட்டுவிடு. இறைவனைக்கூவி அழை, என்று கூறினேன்.


ஆனால் தமக்குத் தீய வழி காட்டியவர்களிடமும் நரேந்திரர் கோபம் கொள்ளவில்லை. விதி இப்படி இருக்கும் போதுயாரை எதற்காக நொந்து கொள்வது? அவர்களிடமும் தமது உள்ளத்தில் இருப்பதைக்கூறுவார். துறவு வாழ்வின் பெருமையைப் பற்றி பேசுவார். ஆனால் அவர்கள் மீண்டும் அவரை உலக விஷயங்களில் இழுக்கவே முயற்சி செய்வார்கள், வாழ்க்கையில் எந்த முடிவும் எடுக்காமல் ஏன் இப்படி இருக்கிறாய்? பொருளைத்தேடுவதற்கான முயற்சியில் முழு மூச்சுடன்  இறங்கு .அப்போது தானே ஒரு வளமான வாழ்க்கை வாழ இயலும்! என்று அறிவுரை கூறுவார்கள். அதற்கு நரேந்திரர், என்னிடமும் அந்த எண்ணங்கள் எழாமல் இல்லை, புகழும் பெருமையும் பதவியும் செல்வமும் அந்தஸ்தும்  மிக்க ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் அடிக்கடி தோன்றுவதுண்டு. ஆனால் ஆழ்ந்து சிந்திக்கும்போது , இந்த நோக்கம் பொருளற்றது என்று தோன்றுகிறது. மரணம் என்ற ஒன்று இந்த உலகில் உள்ளதே! அதிலிருந்து யாராவது தப்ப முடியுமா? துறவிகள் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முயல்கின்றனர். என்றென்றைக்கும் உண்மையான, மாறாத பொருளைத்  தேடுகின்றனர். எனவே துறவு வாழ்க்கைதான் உயர்ந்ததாக எனக்குத்தோன்றுகிறது என்றார். நண்பர்கள் விடவில்லை. அவர்களில் ஒருவர், தட்சிணேசுவரக்கிழவர் தான் நரேந்திரரைக் கெடுக்கிறார். அவனது எதிர்காலத்தைப் பாழாக்குகிறார், என்றார். பிறகு நரேந்திரரைப் பார்த்து, நரேன் ! உனக்கு ஏதாவது சுய புத்தி இருக்குமானால், அவரிடம் போவதை விட்டுவிடு. இல்லாவிட்டால், உன்னுடைய படிப்பும் எதிர்கால வாழ்வும் நாசமாகிவிடும். உன்னிடம் பல திறமைகள் உள்ளன. வாழ்க்கையில் மனத்தைத் திருப்பினால் நீ எதையும் சாதிக்கலாம். எனவே தட்சிணேசுவரம் செல்வதை விட்டுவிடு” என்று அறிவுரை கூறினர். இதோ பாருங்கள்” அவரைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. எனக்கும் பெரிதாக எதுவும் புரியவில்லை. ஆனால், நான் அந்த முதியவரை.ஸ்ரீராமகிருஷ்ணரை மிகவும் நேசிக்கிறேன்” என்று நாத்தழுதழுக்கக் கூறினார் நரேந்திரர்.


திருமண முயற்சிகள்

நண்பர்களின் முயற்சிகள் இவ்வாறு இருந்தன என்றால் வீட்டில் வேறுவிதமான ஒரு சூழ்நிலையை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. தந்தை வாழ்ந்தபோதே தொடங்கிய திருமண முயற்சிகள் இப்போது தொடர்ந்தன. அவரை இக்கட்டான நிலைமையில் தள்ளின. தந்தை இருந்தபோது அவர் திருமணத்தை மறுத்தது பெரிய விஷயமாக இருக்கவில்லை. ஆனால் இப்போது அது விசுவரூபம் எடுத்தது. வேண்டிய வரதட்சணைதந்து, பெண்ணையும் தரத் தயாராக இருந்தபோது, இந்த ஏழ்மை நிலையில் அவர் மறுப்பதை வீட்டினரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. வறுமையின் பிடியிலிருந்து விடுபடுவதற்குத் தென்படுகின்ற ஒரே வழியையும் அவர் அடைப்பதாக அவர்கள் கருதினார்கள். கடைசியில் புவனேசுவரி ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயமும் செய்துவிட்டார். நரேந்திரரால் அதன் பிறகு தட்டிக்கழிக்க இயலவில்லை. வருவது வரட்டும், தம்மை நம்பி இருப்பவர்களுக்காகத் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தார்.

நரேந்திரரின் தீர்மானத்தைப் பற்றி கேள்விப்பட்டார் ஸ்ரீராமகிருஷ்ணர். உடனடியாக ஒரு வண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு நேராக நரேந்திரரின் வீட்டிற்குச் சென்றார். நரேந்திரர் வெளியில் வந்து அவரைச் சந்தித்தார். அவரைக் கண்டதும் ஸ்ரீராமகிருஷ்ணர் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு, தாம் கேள்விப்பட்டது உண்மைதானா, என்று கேட்டார்.  நரேந்திரர் தலைகுனிந்த படியே, ஆம்,. நான் திருமணத்திற்கு இசைந்துவிட்டேன்” என்றார். ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரின் கைகளை அழுத்திப் பிடித்தவாறே, இந்தத் திருமணம் நடக்காது. இவை என் வார்த்தைகள் என்று கூறிவிட்டு வண்டியில் ஏறிச்சென்றுவிட்டார். பேச்சற்று நின்றார் நரேந்திரர்!


கடவுள் என்ன செய்தார்!


கடவுள் மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கையின்  தீவிரமும் உறுதியும் சோதனைகள் வரும்போது தெரிந்து விடும். நான் இவ்வளவு துன்பப்படுகிறேனே! இந்தக் கடவுளுக்குக் கண் இல்லையா? என்று கேட்காத சாதாரண மனித இதயங்கள் இருக்க முடியாது. கிருஷ்ணா! நீ கொடியவன், உனக்கு ஒன்று சொல்கிறேன், நீ என்னைக் கட்டியணைத்து உன் திருப்பாதங்களில்  அடைக்கலம் தந்தாலும் சரி, இல்லை, என் காட்சிக்கு எட்டாமல் நின்று என்னை வேதனைப் படுத்தினாலும் சரி,  என்னை நீ   என்ன செய்தாலும் நீ தான் எனக்கு எல்லாம் . எனக்கு உன்னைத் தவிர யாரும் இல்லை.என்று ஸ்ரீசைதன்யர் கூறியது போல், கடவுளைத் திட்டினாலும் அவரையே சார்ந்து வாழ்வது சாதாரண விஷயம் அல்ல. நரேந்திரர் என்ன செய்தார்? அவரது வாய்மொழியிலேயே கேட்போம்.

இத்தனை துன்பங்களும் சோதனைகளும் வந்த போதும் எனது ஆத்தக எண்ணம் மறையவில்லை. அதாவது கடவுள் நன்மையே  செய்பவர், என்பதில் சிறிதும் சந்தேகம் எழவில்லை. காலையில் கண் விழித்ததும் இறைவனை நினைத்து அவரது திருநாமத்தைக்  கூறியபடி தான் படுக்கையிலிருந்து எழுவேன். அதன் பின் நம்பிக்கைளை  நெஞ்சில் சுமந்தபடி வேலை தேடத்தொடங்குவேன். வழக்கம்போல் ஒரு நாள் இறைநாமத்தை  உச்சரித்துக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்திருந்தேன். பக்கத்து அறையிலிருந்து அதைக்கேட்ட என் தாய் வெறுப்புடன்,நிறுத்தடா அதை! சிறுவயதிலிருந்தே பகவான், பகவான் என்று நீயும் பல்லவி பாடி வருகிறாய், அந்த பகவான் தான் இவ்வளவு செய்துவிட்டாரே! இன்னும் ஏன் புலம்பிக் கொண்டிருக்கிறாய்! என்று கூறினார். அவரது வார்த்தைகள் என் நெஞ்சில் ஆழமாகத் தைத்தன. கடவுள், என்றொருவர் உண்மையிலேயே இருக்கிறாரா? ஒரு வேளை இருந்தாலும், மனிதனின் மனம் நொந்த பிரார்த்தனைகளுக்கு ச் செவி சாய்க்கிறாரா? அப்படியானால், இவ்வளவு கதறுகிறேனே,ஏன் அதற்கு எந்தப் பதிலும் இல்லை? நன்மை வடிவான் இறைவனின் படைப்பில் இவ்வளவு தீமை  எங்கிருந்து வந்தது? மங்கலமயமான இறைவனின் ஆட்சியில் இவ்வளவு அமங்கலம் ஏன்? என்றெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினேன். பிறர் துன்பம் கண்டு துடித்த வித்யாசாகர் ஒரு முறை, கடவுள் நன்மையே வடிவெடுத்தவர்  , மங்கல மயமானவர் என்றால் ஏன் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தின் கோரப்பிடியில் அகப்பட்டு ஒரு வாய்ச்சோற்றிற்காக ஏன் உயிர் உயிர் துறக்கிறார்கள்? என்று கேட்டாரே, அந்தச்சொற்கள் , எள்ளி நகையாடுவது போல் என் காதுகளில் எதிரொலித்தன. கடவுள் மீது வெறுப்பென்றால் அப்படியொரு வெறுப்பு அன்று எனக்குத்தோன்றியது. இந்தத் தருணத்திற்காகவே காத்திருந்தது போல், உண்மையிலெயே கடவுள் இருக்கிறாரா? என்ற சந்தேகமும் என்னுள் தலைதூக்கியது.


எதையாவது ரகசியமாகச்செய்வது என்பது என் இயல்பிற்கு மாறானது. சிறு  வயதிலிருந்தே அப்படித்தான். அச்சம் காரணமாகவோ வேறு எந்த நோக்கத்திற்காகவோ என் எண்ணங்களை என்னால் மறைக்க முடிவதில்லை. செயல்களை மறைப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை. எனவே கடவுள் இல்லை! அப்படியே இருந்தாலும் அவரை நினைத்துப் பயனில்லை” என்று மற்றவர்களிடம் துணிந்து கூறி, அதை நிரூபிக்க நான் முயன்றதில் என்ன வியப்பு இருக்க முடியும்! விளைவு? நான் நாத்திகனாகி விட்டேன், இழிகுணம் உடையவர்களுடன் சேர்ந்து மது அருந்துகிறேன், விலைமகளிரின் வீட்டிற்குப்போகிறேன் என்றெல்லாம் தயங்காமல் பேசத் தொடங்கினார்கள்! யாரிடமும் அடங்கிப்போகும் மனம் சிறுவயதிலிருந்தே எனக்குக் கிடையாது. அது இப்போது இத்தகைய தவறான வதந்தியால் இறுகிக் கடினமாகிவிட்டது. இந்தத் துக்கமயமான சம்சாரத்தில் ஏதோ சிறிது நேரமாவது அந்தத் துன்பங்களை மறந்திருக்க மது அருந்துவதோ, விலைமகளிடம் செல்வதோ துளி கூட தவறில்லை. இந்த வகையில் இன்பம் கிடைக்கும் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியுமானால் யாருக்கும் அஞ்சாமல் நானும் அந்த வழியைப் பின்பற்றுவேன்” என்றெல்லாம் எல்லோரிடமும் அவர்கள் கேட்காமலேயே கூறத் தொடங்கினேன்.

செய்தி காற்றோடு காற்றாகப் பரவியது. நான் சொன்னது காது, மூக்கு எல்லாம் சேர்க்கப்பட்டு ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் அவரது பக்தர்களுக்கும் எட்ட அதிக காலம் ஆகவில்லை. உண்மையை அறிய சிலர் வந்தனர். தாங்கள் கேளிவிப் பட்ட அனைத்தையும் நம்பாவிட்டாலும் சிலவற்றையாவது நம்பத்தான் வேண்டியிருக்கிறது என்று அவர்கள் சூசகமாக க் கூறினர். அவர்கள் என்னை இவ்வளவு இழிவாக  எண்ணுவது கண்டு என் மனம் வேதனையில் துடித்தது, பொறுத்துக்கொண்டேன்,. மனத்தைக் கல்லாக்கிக்கொண்டேன். 


தண்டனை கிடைக்கும் என்பதற்காகப் பயந்து கடவுளை நம்புவது கோழைத்தனம்” என்றெல்லாம் ஆவேசத்துடன் கூறி,ஹ்யூம். பெயின், மில், காம்டே என்று பல மேலை நாட்டு அறிஞர்களை மேற்கோள் காட்டி, கடவுள் இருக்கிறார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை, என்று காரசாரமாக விவாதித்தேன். திருத்த முடியாத அளவிற்கு நான் கெட்டுவிட்டேன் என்று முடிவுகட்டி அவர்கள் விடைபெற்றார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஸ்ரீராமகிருஷ்ணரின் எண்ணம் வந்தபோது மனம் துணக்குற்றது. இவற்றையெல்லாம் கேள்விப்பட்டு அவரும் ஒரு வேளை நம்பக்கூடுமோ என்று தோன்றியது. ஒரு கணம் தான், மனிதர்களின் இத்தகைய மதிப்பற்ற ஆதாரங்களை வைத்து என்னை அவர் முடிவு செய்வாரானால் செய்து விட்டுப்போகட்டும். எனக்குக் கவலையில்லை.” என்று மறு கணமே தெளிந்து விட்டேன். ஆனால் அவர் இதை எப்படி எடுத்துக்கொண்டார் என்பதைக்கேள்விப்பட்ட போது அதிர்ந்து போனேன். முதலில் அவர் பதில் எதுவும் கூறவில்லையாம். பின்பு பவநாத் அழுதுகொண்டே, ஐயா! நரேந்திரன் இப்படி கெட்டுப்போவான் என்று கனவில் கூட நினைக்கவில்லை,என்று சொன்னபோது ஆத்திரத்துடன் அவனிடம் , மடையா, உளறாதே! வாயை மூடு, நரேன்  அப்படி இருக்க முடியாது என்று அன்னை பராசக்தி எனக்குக் கூறியிருக்கிறாள். இதுபோல் நீ இன்னொரு முறை பேசினால் நான் உன் முகத்தில் விழிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டாராம்.

ஆனால் திமிர் பிடித்துப்போய்  வரிந்து கட்டிக்கொண்டு இப்படி நாத்திகத்தில் இறங்குவதால் என்ன பயன்? சிறு வயது முதலே, அதிலும் குறிப்பாக ஸ்ரீராமகிருஷ்ணரைத் தரிசித்த பின் எனக்குக் கிடைத்த அற்புதமான தெய்வீகக் காட்சிகள் என் உள்ளத்தில் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தனவே! எனவே, நிச்சயமாகக் கடவுள் இருக்கிறார். அவரை அடையும் வழியும் இருக்கவே செய்கிறது. இல்லையென்றால்  உயிர்வாழவே தேவையில்லை. எல்லா இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் இடையில் அந்த வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும்” என்று எண்ணிக்கொண்டேன். இவ்வாறு நாட்கள் நகர்ந்தன. மனம் சந்தேகத்திற்கும் தெளிவிற்கும் இடையில் ஊசலாடியது, சிறிது சிறிதாக அமைதி விலகிப்போய்க்கொண்டிருந்தது, வறுமையும் எந்த விதத்திலும் குறைவதாகத் தெரியவில்லை.


மனத்துயர் மாற்றிய அனுபவம்


கோடைக்காலம் மு டிந்து, மழைக்காலம் தொடங்கியது. அப்போதும் முன்போல் தொடர்ந்து வேலை தேடினேன். ஒரு நாள் நன்றாக மழையில் நனைந்து விட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். உடல் மிகவும் களைத்துவிட்டது. உள்ளம் அதைவிடச்சோர்ந்து போயிருந்தது. இனி ஓர் அடியும் எடுத்து வைக்க முடியாத நிலையில், அருகில் இருந்த ஒருவீட்டுத் திண்ணையில் அப்படியே துவண்டு வீழ்ந்தேன். நினைவு இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் ஏதேதோ நிழலோவியங்களும்  எண்ணங்களும் ஒன்றன்பின் ஒன்றாக எமுந்ததும் மறைந்ததும் நினைவில் உள்ளன. அவற்றை விலக்கவோ, ஏதேனும் ஓர் எண்ணத்தில் உள்ளத்தை ஆழ்ந்து செலுத்தவோ இயலவில்லை. அந்த வேளையில் ஏதோ ஒரு தெய்வீக சக்தியால் என் அகத்திரைகள் பல ஒன்றன்பின் ஒன்றாக விலகுவது போலிருந்தது. இத்தனை நாட்களாக  என் மனத்தைக் குழப்பிக்கொண்டிருந்த, நன்மை வடிவான இறைவனின் படைப்பில் ஏன் தீமை உள்ளது? கடவுளின் கடின நீதியும் அளவில்லா கருணையும் எப்படி இயைந்திருக்க முடியும்? போன்ற பல பிரச்சனைக்களுக்கான அறுதித் தீர்வுகளை என் உள்ளத்தின் ஆழ்பகுதியில் கண்டேன். ஆனந்தம் கரைபுரள எழுந்தேன். உடலில் சோர்வு என்பது துளிகூட இல்லாமல் போய்விட்டிருந்தது. மனம் ஓர் அற்புத வலிமையுடனும் அமைதியுடனும் விளங்கியது. அப்போது இரவு நீங்கச் சிறிதே நேரமிருந்தது.


 துறவியாக முடிவு


மக்களின் வந்தனை, நிந்தனை இரண்டையும் ஒதுக்கித் தள்ளினேன். சாதாரண மக்களைப்போன்று பணம் சேர்க்கவும், குடும்பத்தைப் பராமரிக்கவும் , இன்பங்களை அனுபவிக்கவும் நான் பிறக்கவில்லை என்ற எண்ணம் என் மனத்தில் உறுதிப்பட்டது. என் தாத்தாவைப்போல் உலகத்தைத்துறக்க நான் ரகசியமாகத் தயாரானேன். அதற்கான நாளையும் முடிவு செய்தேன்.ஆனால் ஆச்சரியம்! அன்று ஸ்ரீராமகிருஷ்ணர் கல்கத்தாவில் ஒரு பக்தரின் வீட்டிற்கு வரப்போகிறார் என்று அறிந்தேன். நல்லது தான். குரு தரிசனம் பெற்று நிரந்தரமாக வீட்டைத்துறக்கலாம் என்று  எண்ணினேன். ஆனால் நான்  அவரைக் கண்டது தான் தாமதம் , இன்று நீ தட்சிணேசுவரத்திற்கு என்னுடன் வந்தே தீரவேண்டும் என்று ஒரே பிடியாய்ப் பிடித்துக்கொண்டார். எவ்வளவோ சாக்குப் போக்கு சொல்லிப் பார்த்தேன், ஆனால் அவர் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. வேறு வழியின்றி அவருடன் சென்றேன், வண்டியில் போகும் போது அவர் அதிகமாகப்பேசவில்லை. தட்சிணேசுவரத்தை அடைந்த பின்னர் மற்றவர்களுடன் சிறிது நேரம் அவரது அறையில் உட்கார்ந்திருந்தேன். ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பரவச நிலை உண்டாயிற்று. அப்படியே என்னை நோக்கி வந்தார். என்னை அன்புடன் பிடித்துக்கொண்டு கண்களிலிருந்து நீர் வழிய,

பகிர்ந்திட நானும் பயப்படுகின்றேன்

பகரா திருக்கவும்  பயப்படுகிறேன்

எங்கே மணியை இழந்திடுவேனோ

 என்று அஞ்சுகின்றேன்..............

என்று பாடலைப் பாடினார்.

உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த உணர்ச்சிப் பிரவாகத்தை அதற்கு மேல் அடக்க முடியவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரைப்போல்  என் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தோடியது. எல்லாம் அவருக்குத் தெரிந்து விட்டது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி எனக்குப் புரிந்தது. எங்கள் இருவருக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது வேறு யாருக்கும் புரியவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் சாதாரண நிலைக்கு வந்ததும் சிலர், என்ன விஷயம்? என்று கேட்டனர். அவர் விஷமமாகச் சிரித்தவாறே, ஓ! அதுவா. அது எங்களுக்குள் ஏதோ  ஒன்று,  என்று கூறிவிட்டார். இரவு பிறருக்கு விடை கொடுத்து அனுப்பியபின், என்னை அருகில்  அழைத்து, தெரியும் அப்பா, நீ அம்பிகையின் பணிக்காகவா வந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். உன்னால் உலகியல் வாழ்க்கையை மேற்கொள்ள முடியாது. ஆனாலும் நான் இருக்கும்வரை எனக்காக உன் வீட்டில் இரு, என்று கூறிவிட்டு உணர்ச்சி வேகத்தினால் தொண்டை கம்மக் கண்ணீரில் கரைந்தார்.


காளி ஆட்கொள்கிறாள்


மறு நாள் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் விடைபெற்று வீடு திரும்பினார் நரேந்திரர். குடும்பத்தைப்பற்றிய கவலைகள் அவரது மனத்தை ஆக்கிரமித்தன. வேலை தேடும் படலம் தொடர்ந்தது. ஒரு வழக்கறிஞரின் அலுவலகத்தில்  வேலை பார்த்தும், சில நூல்களை மொழிபெயர்த்தும் ஏதோ சிறிது சம்பாதித்து எப்படியோ செலவு கழியத்தான் செய்தது. ஆனால் நிரந்தரமான வேலை எதுவும் கிடைக்கவில்லை. நரேந்திரரின் வாழ்க்கை இப்படிச்சென்று கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் ஹாஸ்ரா குருதேவரிடம் நரேந்திரரின்  வறுமை நிலைமை பற்றி பேசிக்கொண்டிருந்தார். 


அவன் அனுபவிக்கும் துயரங்கள் போதாதென்று இப்போது நீதி மன்ற வழக்கும் சேர்ந்துள்ளது“ என்றார் ஹாஸ்ரா. அவன் காளியை ஏற்றுக் கொள்வதில்லை. உலகில் வாழ வேண்டுமானால் அவளை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்” என்று சட்டென்று கூறினார் ஸ்ரீராமகிருஷ்ணர்.


நரேந்திரரின் மனத்திலும் அந்த எண்ணம் ஒரு நாள் தோன்றியது. இடையில் ஓரிரு முறை அவர் பக்தர்களின்  வீடுகளில் ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்திக்கவும்  செய்தார். செப்டம்பர் 14-ஆம் நாள் தட்சிணேசுவரத்திற்குச்சென்றார் நரேந்திரர். காலையில் பல பாடல்களைப் பாடினார். வழக்கம்போல் அவரது பாடல்களைக்கேட்டு ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதியில் ஆழ்ந்தார். பிற்பகலில் தேவியைப் பற்றிய பாடல்களைப் பாடினார். 


பொதுவாக பிரம்ம சமாஜப் பாடல்களையே பாடுகின்ற நரேந்திரர் தேவியை ப் பற்றி பாடியது  ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ஆச்சரியத்தை அளித்தது. அது எப்படி? என்று ஹாஸ்ராவிடம் வியப்புடன் கேட்டபடியே, மேற்கு வராந்தாவில் நின்று கொண்டிருந்த நரேந்திரரிடம் சென்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். என்னப்பா, இன்று தேவியைப்பற்றிய பாடல்களைப் பாடினாயே! என்று கேட்டார். ஆனால் நரேந்திரர் பதில் எதுவும் கூறவில்லை. ஏதோ ஒரு சக்தி அவரை ஆட்கொண்டிருப்பது போல் அவர் மெதுவாக நடந்து கங்கைக் கரைக்குச்  சென்றார். கங்கை , நீரேற்றம்  காரணமாக வடக்கு நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. மாலை சூரியன் அடிவானத்தில் மறைய ஆரம்பித்ததால் வானம் சிந்தூர வண்ணமாகச் சிவந்து, அந்தச் சிந்தூர வண்ண தேவியின்  நினைவை அவரிடம் எழுப்பியது. அவளது நினைவில் ஆழ்ந்தவராக மீண்டும் தேவியைப்பற்றிய பாடல்களைப் பாடத் தொடங்கினார். ஒன்றன் பின் ஒன்றாகப் பல பாடல்களைப் பாடினார். ஸ்ரீராமகிருஷ்ணர் அருகில் நின்றபடியே கேட்டுக்கொண்டிருந்தார். தேவி நரேந்திரரை ஆட்கொள்ளத் தொடங்கி விட்டாளா? அல்லது தேவியின் உணர்வை நரேந்திரரிடம் ஸ்ரீராமகிருஷ்ணர் எழுப்பத் தொடங்கினாரா?


துன்பத்தில் துடிக்காத, துவளாத இதயம்  இல்லை. அது போலவே, வேறு கதியற்ற நிலையில் இறைவனை நோக்கித் திரும்பாத உள்ளமும் இருக்க முடியாது. தத்துவங்கள் பேசலாம், கோட்பாடுகள்  வகுக்கலாம். ஆனால் காலின் கீழ் பூமியே பெயர்ந்து விடுவது போன்ற நிலைமை வரும்போது அபயக்கரம் ஒன்று எங்கிருந்தாவது வராதா  என்ற ஆதங்கம் மனித மனத்தில் எழவே செய்யும். பொதுவாக ஏழைகள் எழ்மையை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். அவர்களுக்கு அது சகஜமாகிவிட்டது.


 காளியை ஏற்றுக்கொள்கிறார்


நரேந்திரரும் ஏழையாகவே பிறந்திருந்தால் இந்த நிலைமை அவரைப்பெரிதாகப் பாதித்திருக்காது. ஆனால் நேற்றுவரை அரசனாக இருந்தவன்  இன்று ஆண்டியாவது இருக்கிறதே, அது கொடுமை!நேற்றுவரை எந்தக் கவலையும் இல்லாமல் பட்டாம்பூச்சிபோல் சிறகடித்துப் பறந்த அவர் மீது இன்று எத்தனை சுமைகள்.! ஒவ்வொரு முறை வீட்டினுள் நுழையும்போதும், இன்று என் மகனுக்கு வேலை கிடைத்திருக்குமா? நமது வறுமை நீங்குமா? என்று கவலையுடன் தெரிகின்ற தாயின் முகம். இன்று தம்பி ஏதாவது வழி கொண்டு வந்திருப்பானா? என்று துயரத்துடன் தெரிகின்ற தமக்கையர்  முகம் , இன்று அண்ணன் ஏதாவது வாங்கி வந்திருப்பானா? என்று ஆர்வத்துடன் தெரிகின்ற தம்பி தங்கையர் முகம், இவர்கள் அனைவருக்கும் இல்லை,‘ என்ற பதிலைத்தேக்கியவாறு வீட்டினுள் நுழைகின்ற வாலிபனின் உள்ளம் விவரிப்பதற்கு அத்தனை எளிதான ஒன்று அல்ல. எங்குவழி கிடைக்கம், என்று தேடிய நரேந்திரரின் உள்ளத்தில் எழுந்தாள் தேவி! மனித உதவிகள் எதுவும் இல்லாதபோது அவளைத் தான் நாடிப் பார்ப்போமே, என்று துணிந்தார். அவர். பின்பு நடந்ததை அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்.


ஸ்ரீராமகிருஷ்ணரின் பிரார்த்தனையை இறைவன் நிறைவேற்றுகிறான் என்பது என் நினைவுக்கு வந்தது. அவரிடம் எனக்காகக்கூறி, என் தாய்க்கும் சகோதரர்களுக்கும் உணவுக்கும் உடைக்கும் வழி கிடைக்கப் பிரார்த்திக்குமாறு சொல்ல வேண்டும். நிச்சயமாக அவர் எனக்கு இந்த உதவியைச் செய்வார் என்று எண்ணி தட்சிணேசுவரத்திற்கு விரைந்தேன், ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்று, என் அம்மா மற்றும் சகோதரர்களின் வறுமை அகல்வதற்குத்தேவியிடம் நீங்கள் பிரார்த்திக்க வேண்டும்” என்று வற்புறுத்தினேன். அதற்கு அவர், அப்பா, இப்படியெல்லாம் கேட்க என்னால் முடியுமா, நீயே ஏன் போகக்கூடாது? நீ காளியை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் இவ்வளவு துன்பங்களும்” என்றார். உடனே நான், ”எனக்கு அவளைத்தெரியாது.நீங்களே எனக்காக அவளிடம் சொல்லுங்கள். சொல்லியே தீரவேண்டும். அவ்வாறு செய்யாதவரை நான் உங்களை விடவே மாட்டேன், என்று சொன்னேன். ஸ்ரீராமகிருஷ்ணர் கனிவுடன், உன் துன்பத்தை நீக்கும்படி நான் எத்தனையோ முறை அவளிடம் பிரார்த்தனை செய்துவிட்டேன்,நீ அவளை ஏற்றுக் கொள்ளாததால் அவள் என் பிரார்த்தனையை நிறைவேற்றவில்லை.போகட்டும், இன்று செவ்வாய் க்கிழமை. இன்றிரவு கோயிலுக்குச்சென்று அவளை வணங்கு,நீ எதைக்கேட்டாலும் அவள் கொடுப்பாள். என் தாய் பேருணர்வு வடிவினள், பிரம்மசக்தி, தன் திருவுள்ளத்தால் இந்தப் பிரபஞ்சத்தையே படைத்துள்ளாள். அவள் நினைத்தால் செய்ய முடியாதது ஒன்று உண்டா? என்று கூறினார்.


  

அன்னை பராசக்தியிடம் பிரார்த்தனை செய்ததும் என் கஷ்டங்களுக்கு விடிவுகாலம் வந்துவிடும் என்று திடநம்பிக்கை உண்டாயிற்று. பேராவலுடன் இரவுக்காக காத்திருந்தேன். ஒரு வழியாக இரவு வந்தது. ஒன்பது மணி அளவில் ஸ்ரீராமகிருஷ்ணர் என்னைக்கோயிலுக்குப்போகச் சொன்னார்.போகும் போதே ஒரு வித தெய்வீக போதை என்னை ஆட்கொண்டது. கால்கள் தடுமாறின. உண்மையிலேயே அன்னை பராசக்தியைப் பார்க்கப் போகிறோம், அவள் பேச்சை க்கேட்கப் போகிறோம் என்ற திடநம்பிக்கைமனத்தில் எழுந்தது. நான் மற்ற எல்லாவற்றையும் மறந்தேன். அந்த எண்ணத்தில் கரைந்தேனயிலுக்குச் சென்றேன். அங்கே சென்றபோது காளிதேவி நின்றாள்! அன்பின் வற்றாத ஊற்றாக, எல்லையற்ற அழகின் இருப்பிடமாக உயிரோடும் உணர்வோடும் அவள் நின்றாள்! 

அன்பாலும் பக்தியாலும் என் இதயம் பூரித்தது. என்னை மறந்து மீண்டும் மீண்டும் அவளை வணங்கி, அம்மா, எனக்கு விவேகத்தைக்கொடு, உன்னை இடையறாமல் தரிசிக்கும் பேற்றினைக்கொடு, என்று பிரார்த்தித்தேன். மனம் அமைதியில் ஆழ்ந்தது. உலகம் அடியோடு மறந்தது. காளி மட்டுமே என் இதயத்தில் நிறைந்திருந்தாள்!

நான் திரும்பி வந்ததும் ஸ்ரீராமகிருஷ்ணர், என்னப்பா, வறுமை விலக அன்னையிடம் வேண்டிக்கொண்டாய் அல்லவா,? என்று கேட்டார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. 

இல்லை, மறந்துவிட்டேன், இப்போது என்ன செய்யட்டும்? என்று கேட்டேன். அதற்கு அவர் , போ, போ, மீண்டும் போ. போய் உன் குறைகளை முறையிட்டுவா” என்று கூறினார். 

நான் மறுபடியும் கோயிலுக்குச்சென்றேன்.ஆனால் அன்னையின் திருமுன்னர் சென்றதும் அனைத்தும் மறந்து போயிற்று. மீண்டும், மீண்டும் அவளை வணங்கி ஞானம், பக்தி முதலியவற்றை அருளுமாறு வேண்டிக்கொண்டு திரும்பினேன். என்ன, இந்தத் தடவையாவது கேட்டாயா? என்று ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்துக் கொண்டே கேட்டார். 

எனக்குப் பேரதிர்ச்சியாகி விட்டது. 

இல்லை, அன்னையைக் கண்டதும் ஏதோவொரு தெய்வீக சக்தியின் காரணமாக அனைத்தையும் மறந்துவிட்டு ஞானம், பக்தி ஆகியவற்றை நல்கும்படி மட்டும் தான் வேண்டிக்கொண்டேன். இப்போது என்ன செய்வது? என்றுகேட்டேன். அதற்கு அவர், என்ன அசட்டுத்தனம்! சிறிதுநேரம் உன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு உனக்கு வேண்டியதைக்கேட்க முடியவில்லையா! முடிந்தால் இன்னொரு முறை போ, என்று கூறினார். மூன்றாவது முறையாகப்புறப்பட்டேன்.

ஆனால் சன்னிதியை அடைந்த மாத்திரத்தில் சொல்லொணாத வெட்கம் என்னைப் பற்றிக்கொண்டது. எத்தகையதோர் அற்பப்பொருளை வேண்டி அம்பிகையிடம் வந்திருக்கிறேன்,ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி கூறுவாரே, மாமன்னரின் கருணையைப்பெற்று விட்டு அவரிடம் பூசணிக்காயைக்கேட்பது போல், என்று அதைப்போன்ற முட்டாள் தனம் தான் இது!எவ்வளவு கீழான எண்ணம்! வெட்கத்துடனும் வேதனையுடனும் மீண்டும் மீண்டும் அன்னையை வணங்கி, அம்மா, எனக்கு வேறெதுவும்வேண்டாம். ஞானத்தையும் பக்தியையும் மட்டும் தந்தருள்வாய்” என்று வேண்டினேன்.

கோயிலுக்குவெளியே வந்தபோது, இவையெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணரின் விளையாட்டு என்பது புரிந்தது. இல்லாவிட்டால் ஒரு முறையல்ல, இரண்டு முறையல்ல , மூன்று மறையும், கொருள் வேண்டும் ” என்று பிரார்த்திக்காமல் இருந்திருப்பேனா! எனவே அவரிடம் சென்று,நீங்கள் தான் இப்படி என்னை மறக்கச் செய்து விட்டீர்கள்! என் தாயும் சகோதரர்களும் வறுமையின் பிடியிலிருந்து விடுபட நீங்கள் தான் அருள வேண்டும். என்று அவரை வற்புறுத்தினேன். அப்போது அவர், யாருக்காகவும் இப்படிப்பட்ட பிரார்த்தனை செய்ய என்னால் இயலாது, என் வாயிலிருந்து அத்தகைய வார்த்தைகள் வராது. அதனால் தான் அன்னை பராசக்தியிடம் நீ உனக்கு வேண்டியதைக்கேள், கிடைக்கும் என்று கூறினேன். உன்னால் அது முடியவில்லை. உன் தலையில் உலகின் இன்பங்கள் எழுதப்படவில்லை. நான் என்ன செய்யட்டும்? என்று கேட்டார். நான் அவரை லேசில் விடுவதாக இல்லை.. அப்படிச் சொல்லாதீர்கள், எனக்காக பிரார்த்தனை செய்தேயாக வேண்டும். நீங்கள் கூறினாலே அவர்களின் துயரம் அகன்றுவிடும், என்ற திடநம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றேன். என் பிடிவாதத்தைக் கண்டு அவர் , நல்லது! எளிய உணவிற்கும் துணி மணிகளுக்கும் அவர்களுக்குக் குறைவிருக்காது” என்றார்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் மகிழ்ச்சி

காளியை ஏற்றுக்கொண்டு, அவளிடம் பிரார்த்தனை செய்தது நரேந்திரரின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்ச்சி. அதில் ஸ்ரீராமகிருஷ்ணர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். மறுநாள் தட்சிணேசுவரம் சென்றிருந்த வைகுந்தர் இதைப்பற்றிக் கூறுவதைக்கேட்டால் –ராமகிருஷ்ணரின் ஆனந்த மேலீட்டைப்புரிந்து கொள்ளலாம்.

பகலில் நான் தட்சிணேசுவரம் சென்றேன். ஸ்ரீராமகிருஷ்ணர் கட்டிலில் அமர்ந்திருந்தார். நரேந்திரர் வெளியே உறங்கிக்கொண்டிருந்தார். வேறு யாரும் இல்லை. ஸ்ரீராமகிருஷ்ணரின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அவரை அணுகி வணங்கியவுடன் அவர் நரேந்திரரைச்சுட்டிக்காட்டிக்கூறினார். இதோ! இவரைப்பார், மிகவும் நல்லவன். பெயர் நரேந்திரன். இதுவரை இவன் அன்னை பராசக்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நேற்று ஏற்றுக்கொண்டான். வறுமையில் வாடுகிறான். எனவே அன்னையிடம் அனுப்பி பொன்னும் பொருளும் வேண்டிப் பிரார்த்திக்கச்சொன்னேன்.அவனால் அதைக்கேட்க முடியவில்லை. அவமானமாக இருக்கிறதாம். கோயிலிலிருந்து திரும்பி வந்தவன், அவள் மீது ஒரு பாட்டு சொல்லிக்கொடுங்கள்” என்று கேட்டான். தாரா தேவி நீயே அம்மா” என்ற பாடலைச்சொல்லிக்கொடுத்தேன். இரவு முழுவதும் அதையே பாடிக் கொண்டிருந்தான். இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறான்(சிரித்துக்கொண்டு) நரேந்திரன் காளியை ஏற்றுக்கொண்டு விட்டான்! நல்லது. அப்படித்தானே! என்று கேட்டார். குழந்தையைப்போல் அவர் மகிழ்வதைக்கண்ட நான், ஆம், ஐயா! நல்லது தான்” என்று கூறினேன். சிறிது நேரம் கழித்து, சிரித்துக் கொண்டே, நரேந்திரன் காளியை ஏற்றுக்கொண்டது பெரிய விஷயம் தானே! என்று மீண்டும் கேட்டார். இவ்வாறு திரும்பத்திரும்பச்சொல்லி மகிழ்ந்தார்.

மாலை நான்கு மணி அளவில் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருகில் நரேந்திரர் வந்து அமர்ந்தார். விடைபெற்று கல்கத்தாவிற்குத் திரும்புவார் என்று தோன்றியது. அவரைக் கண்டவுடன் ஸ்ரீராமகிருஷ்ணர் பரவச நிலை அடைந்தார். அந்த நிலையிலேயே அவர் நரேந்திரரின் உடம்பைத் தடவினார். பின்னர் அவரது மடியில் சென்று அமர்ந்து கொண்டு பேசினார். ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரை எவ்வளவு தூரம் நெருங்கியவராகக் கருதுகிறார் என்பது எனக்குப் புரிந்தது.


  

காளி தேவியை நரேந்திரர் ஏற்றுக் கொண்டதை ஸ்ரீராமகிருஷ்ணர் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகக் கருதினார். ஏன்? காளி-மயானம் , சுற்றிலும் எரிகின்ற பிணங்கள், பேய்களின் கோரத் தாண்டவம், நரிகளின் ஊளைச்சத்தம், விரித்த கூந்தல், ரத்தம் சொட்டத் தொங்கும் நாக்கு, மனிதத் தலைகள் கோர்த்த மாலை, கையில் ரத்தம் சொட்டும் வாள், வெட்டப்பட்ட தலை, சிவபெருமானின் மார்புமீது நிற்கின்றகோலம்,-இது அவளது தோற்றம்! வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டுகின்ற ஒரு சின்னமாக விளங்குகிறாள்,அவள். இன்பமும் இதமும் இனிமையும் அழகும் ஆனந்தமும் மட்டும் கலந்தது அல்ல வாழ்வு. வாழ்விற்கு மறுபக்கம் ஒன்று உள்ளது. துன்பமும் துயரமும் தீமையும் கோரமும் அழுகையும் நிறைந்தது அது. அது எங்கிருந்து வந்தது? சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளிலேயே அதனைக்கேட்போம்.

தீமை ஏன் உள்ளது? இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி நன்மை., தீமை இரண்மையும் கடவுள் படைத்தார் என்று கொள்வதே.... இறைவன் எப்போதும் நல்லவரேயானால். இந்தத் தீமையனைத்திற்கும் பொறுப்பாளி யார்? சாத்தான் என்று ஒரு பேர்வழி இருப்பதாகக் கிறிஸ்தவரும் முகமதியரும் கூறுகின்றனர். இரண்டு பேர்வழிகள் செயல்படுவதாக எப்படிச்சொல்ல முடியும்? ஒருவர் மட்டுமே இருக்க இயலும்... குழந்தையைச் சுடுகின்ற தீயே சமையல் செய்யவும் பயன்படுகிறது. 

தீ நல்லது என்றோ, தீயது என்றோ எப்படிச்சொல்வீர்கள்? அதைப் படைத்தவர் வேறுபட்ட இருவரென்று எப்படிச்சொல்ல முடியும்? தீயதென்று சொல்லப் படுவதையும் படைத்தவர் யார்? கடவுளே! வேறு வழியில்லை! மரணத்தையும், வாந்திபேதி முதலிய தொற்று நோய்கள் அனைத்தையும் அவரே அனுப்புகிறார். ஆண்டவர் அத்தகையவரானால் அவர் நல்லவரே. அவரே தீயவர். அழகுள்ளவரும் அவரே, பயங்கரமானவரும் அவரே, வாழ்க்கையும் அவரே.மரணமும் அவரே. அத்தகைய கடவுளை வழிபடுவது எப்படி? 

பயங்கரமானதை உண்மையாகவே வழிபட ஆன்மா எப்படிக்கற்றுக்கொள்ளும் என்பதை நாம் அ அறிந்து கொள்வோம். அப்போதே அந்த ஆன்மா அமைதி பெறும். உங்களுக்கு அமைதி இருக்கிறதா? நீங்கள் கவலைகளை விட்டு விட்டீர்களா? திரும்ர்ங்கள். முதலில் பயங்கரத்தை எதிர்கொள்ளுங்கள். முக மூடியைக் கிழித்தெறியுங்கள்.அதே கடவுள் அங்கிருப்பதைப் பாருங்கள். நன்மையாகத்தோன்றுபவரும் தீமையாகத்தோன்றுபவரும் உருவக்கடவுளாகிய அவரே, வேறு ஒருவரும் இல்லை.

இந்த உண்மையை அன்று நரேந்திரர் கண்டு கொண்டார். இது வாழ்க்கையைப்பற்றிய அவரது கண்ணோட்டத்தை, கடவுளைப் பற்றிய அவரது கண்ணோட்டத்தை முழுமையாக்கியது. பின்னாளில் உலக குருவாகத் திகழஇருந்த அவரது பார்வை பூரணத்துவம் பெற்றது. அதனால் தான் ஸ்ரீராமகிருஷ்ணர் அவ்வளவு மகிழ்ந்தார்.தமது பணி பூர்த்தியாகி விட்டது என்ற எண்ணம் ஒருவேளை அவரது மனத்தில் இழையோடியிருக்கலாம். ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் என்னைக் காளியின் கைகளில் ஒப்படைத்தார். இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? இதன் பிறகு அவர் இரண்டு வருடங்கள் தான் உயிர் வாழ்ந்தார். அந்த நாட்களிலும் அவர் உடம்பில் நோய்களால் பெரும் அவதிக்கு உள்ளாக்கியபடிதான் வாழ்க்கையைக் கழித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு 6 மாதங்கள் கூட அவர் பூரண ஆரோக்கியத்துடன் வாழவில்லை என்று பின்னாளில் விவேகானந்தர் கூறினார்.

இவ்வாறு துயரம் என்ற ஓர் அலை எழுந்து நரேந்திரரைப் பூரண மனிதர் ஆக்கியது. வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ள செய்தது.

சங்கம் மலர்கிறது

ஓங்கி வளர்ந்த பெரிய மரம் பலருக்கும் நிழலளித்துக் காக்கிறது. ஆனால் அந்த நிழலின் கீழ் புதிய மரங்கள் செழித்து வளர முடிவதில்லை. அந்த நிழலின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் போதே மற்ற மரங்கள் வளர முடியும். ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற தெய்வ மரமும் பல இளம் கன்றுகளைத் தன் நிழலில் வளரச் செய்தது. ஆயினும் அவை செழித்தோங்கி வளர வேண்டுமானால் பெரிய மரம் தன் நிழலை விலக்கிக்கொள்ள வேண்டும். அதற்காகத் திருவுளம் கொண்டார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

1884-இறுதியிலிருந்தே ஸ்ரீராமகிருஷ்ணரின் உடல்நிலை சீர்கெடத் தொடங்கியிருந்தது. அவரது பெயர் கல்கத்தாவில் பரவிவிட்டதால் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரை நாடி வரத் தொடங்கினர். வந்த அனைவரிடமும் அவர் பேசினார்., ஆடினார்,பாடினார், பரவச நிலைகளில் ஆழ்ந்தார். இவை அவரது உடல்நிலைக்குப் பாதகமானவை என்று டாக்டர்கள் எச்சரித்தும் அவர் பொருட்படுத்தவில்லை. உலகின் துயரங்களில் துவண்டு வருகின்ற மக்களுக்கு ஒரு சிறிதாவது தம்மால் ஆறுதல் கிடைக்கும் என்றால் அதற்காக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார்.

1885- கோடைக்காலம் மிகவும் தீவிரமாக இருந்தது. எனவே ஸ்ரீராமகிருஷ்ணர் ஐஸ், சர்பத் போன்றவற்றை அதிகமாகக்குடித்தார். அதன் விளைவாக அவருக்குத்தொண்டையில் வலி ஏற்பட்டது. ஒரு மாதத்தில் அந்த வலி அதிகமாகியது. டாக்டரை அழைத்து வந்தனர். அதிகம் பேசுவதாலும், பாடுவதாலும், பரவச நிலைகளின் காரணமாகவும் தொண்டையில் ரத்தம் பாய்வத அதிகமாகியதால் அந்த வலி ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அவற்றைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுரை கூறினார்.

நாட்கள் செல்லச்செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது.ஸ்ரீராமகிருஷ்ணரின் பேச்சு, பாட்டு எல்லாமே அதிகரித்தன. ஜீன் மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் திடீரென்று அவரது தொண்டையிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியது.

சாதாரண தொண்டைப்புண்ணாகத் தான் இருக்கும் என்று கருதப்பட்ட அவரது நொய், அவ்வளவு சாதாரணமானதல்ல, என்று தோன்றியது. பக்தர்கள் கவலைக்கு உள்ளாயினர். யாரை மையமாகக்கொண்டு நாம் ஆனந்தத்தில் மிதக்கிறோமோ அவர் நம்மைவிட்டுச் சென்றுவிடுவார்் என்று தோன்றுகிறது.நான் சில நூல்களைப் படித்தேன். சில மருத்துவ நண்பர்களைக் கலந்தாலோசித்தேன். அவற்றின் உதவியுடன் பார்க்கும்போது, இந்தத் தொண்டைப்ர்ண் பின்னாளில் புற்று நோயாக ஆவதற்கான சாத்தியக்கூறு உள்ளது” என்று கூறினார் நரேந்திரர்.

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு த் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் முடிவு செய்தனர். தட்சிணேசுவரத்தில் அதற்கான வசதிகள் இல்லை. எனவே கல்கத்தாவில் ஒரு வீடு வாடகைக்கு அமர்த்தப்பட்டது. அந்த வீடு மிகவும் சிறியதாக இருந்தது. தட்சிணேசுவரத்தின் திறந்த வெளியில் வாழ்ந்து பழகிய ஸ்ரீராமகிருஷ்ணரால் அந்த வீட்டில் தம்மை அடைத்துக்கொண்டு வாழ இயலவில்லை. எனவே சியாம் புகூர் என்ற இடத்தில் ஒரு வீட்டை ஏற்பாடு செய்தனர். பக்தர்கள், ஸ்ரீராமகிருஷ்ணரின் சிறந்த சிகிச்சைக்குத் தேவையான வசதிகளைச்செய்தனர். அன்னை ஸ்ரீசாரதாதேவி பத்திய உணவைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இளம் சீடர்கள் ஸ்ரீராமகிருஷ்ணருடனேயே தங்கி, அவருக்குப் பணிவிடை புரிந்து காத்து நின்றனர்.


 MAIN PAGE 

image115

குருதேவரின் நோய்

காசிப்பூர்

ஸ்ரீராமகிருஷ்ணர் சியாம்புகூருக்கு வந்து மூன்று மாதங்கள் ஆயின. மருத்துவர்களின் சிகிச்சையையும்  அன்னையின் கவனிப்பையும் மீறி அவரது நோய் நாளுக்கு நாள் தீவிரமாகியது. முன்பு ஏதோ பலனளித்துவந்த மருந்து  களும் இப்போது பலனளிக்காமல் போயின. கல்கத்தாவின் புழுதிமிக்க காற்றின் காரணமாகத்தான் இவ்வாறு நோய் தீவிரமாகிறது என்று முடிவு செய்த டாக்டர்கள் , நகரப்பகுதியை விட்டு வெளியே காற்றோட்டமான இடத்திற்கு அவரை அழைத்துச்செல்வது நல்லது என்று கூறினர். அதற்கேற்ப பக்தர்கள் காசிப்பூர் என்ற இடத்தில் தோட்ட வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தினர். 


1885 டிசம்பர் 11-ஆம் நாள்  அங்கே குடிபெயர்ந்தார் –ஸ்ரீராமகிருஷ்ணர்.

ராமகிருஷ்ண சங்கத்தின் வரலாற்றில் அழியா இடம் பெற்றது காசிப்பூர். இங்கே ஸ்ரீராமகிருஷ்ணர் சுமார் 8 மாத காலம்  தங்கியிருந்தார். அவரது ஈடிணையற்ற வாழ்க்கையின் உச்சக்கட்ட நிகழ்ச்சிகள் இங்குதான் நடைபெற்றன. இங்கு தான் அவர் நரேந்திரரின் வாழ்க்கைக்கு ஓர் உருக்கொடுத்து, இளைஞர்களை அவரிடம் ஒப்படைத்து, ராமகிருஷ்ண சங்கத்தின் அஸ்திவாரத்தை அமைத்தார். இந்த எட்டு மாதங்களில் அவரது நோய் படிப்படியாக முற்றிக்கொண்டே வந்து அவருடைய உடலை வெறும் எலும்பும் தோலுமாக ஆக்கியது. ஆயினும் கட்டுப்பாடுமிக்க அவரது மனம் நோயையும் அதன் விளைவாக ஏற்பட்ட வலிமையும் ஒதுக்கிவிட்டது. அவர் இங்கே சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் தேவைக்கேற்ப தனித்தனியாகவும் , சிலவேளைகளில் கூட்டமாகவும் பயிற்சி அளித்தார். குறிப்பாக நரேந்திரரைத் தனிமையில் அழைத்து உபதேசித்தார்.சிலவேளைகளில் கதவு,ஜன்னல்களை எல்லாம் அடைத்துவிட்டு அவருக்குப்போதனைகள் செய்தார். அவர் என்ன சொன்னார் என்பதை நரேந்திரர் வெளியில் கூறவில்லை. ஆனால் அவரிடம் இளைஞர்களின் பொறுப்பை ஒப்படைப்பது பற்றியும் அவர்களை எப்படிப் பயிற்றுவிப்பது போன்ற விஷயங்களைத்தான் அவர் கூறியிருக்க வேண்டும் என்று மற்ற சீடர்கள் கருதினர்.


ஆசைகளை எரிப்போம்.


பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதும் ஸ்ரீராமகிருஷ்ணரின் செயல்பாடுகளும் ஓர்  உண்மையை உணர்த்தின. அவர் அதிக நாள் வாழப்போவதில்லை என்ற உண்மை தான் அது. 1886 ஆரம்பத்தில் ஒரு நாள் இரவு நரேந்திரர் இது பற்றி  மற்ற இளைஞர்களுடன் பேசிவிட்டு படுக்கச்சென்றார்.  அவருக்குத் தூக்கம் வரவில்லை. தம்மைப்போலவே  மூத்தகோபால், சரத், காளி, என்று ஓரிருவரும் விழித்திருப்பதைக்கண்ட அவர் அவர்களையும் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் நடக்கத் தொடங்கினார். நடந்த படியே பேசினார். குரு தேவரின் நோய் தீவிரமாகிக்கொண்டே போகிறது. உடலை விட்டு விடுவெதென்று அவர் முடிவு செய்துவிட்டதாகத் தோன்றுகிறது. அவருக்குச்சேவை செய்வதன் மூலமும், பிரார்த்தனை, தியானம் ஆகியவை செய்தும் ஆன்மீக முன்னேற்றத்திற்காக இயன்ற அளவு இப்போதே பாடுபடுங்கள். அவர் போன பிறகு வருந்திப் பயனில்லை. கடமைகளை யெல்லாம் முடித்துவிட்டுக் கடவுளை நாடலாம்,என்று நினைப்பது முட்டாள்தனம். ஆசைகளை நாம் வேருடன் களைய வேண்டும்.

நரேந்திரர் உணர்ச்சிப்பெருக்கில் நனைந்தவர்போல் தோன்றினார். சிறிது நேரம் பேசியபிறகு ஒரு மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்தார். அருகில் சில சுள்ளிகளைக்கண்ட அவர், நாம் நமது ஆசைகளை எரிப்பதற்காக அக்கினி மூட்டுவோம், என்றார். எல்லோருமாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். நெருப்பு எரியத் தொடங்கியது. அந்த இரவின் இருளில் அக்கினியைச்சுற்றி அனைவரும் அமர்ந்தனர். தங்கள் ஆசைகளை எரிப்பதாகக் கருதி ஒவ்வொரு வரும் ஒவ்வொரு சுள்ளியாக அந்த நெருப்பில் இட்டனர். அமைதியாக தியானத்தில் ஆழ்ந்தனர். அன்றைய இரவு அவர்களுக்கு ஒரு மாபெரும் இரவாக அமைந்தது.


நரேந்திரரின் மருத்துவ அறிவு


ஸ்ரீராமகிருஷ்ணரின் இறுதி நாட்கள் இவை, என்று நரேந்திரர் கூறியது வெறுமனே அல்ல, அவருக்கு மருத்துவத்திலும்  ஆழ்ந்த அறிவு இருந்தது. அந்த அறிவின் அடிப்படையிலேயே அவ்வாறு கூறினார். குருதேவரின் நோய் விஷயமாகக் கலந்தாலோசிப்பதற்கு அவர் ஒரு நாள் டாக்டர் மகேந்திர லால் சர்க்காரைக் காண ச்சென்றார். இவர் ஸ்ரீராமகிருஷ்ணருக்குச் சிகிச்சை செய்து வந்தவர். மிகவும் பிரபலமானவர்.டாக்டர், குருதேவரின் நோய்பற்றி ஒரு கருத்தைக்கூறிவிட்டு, தாம் கூறுவதற்கான ஆதாரங்களை ஒரு மருத்துவ நூலை மேற்கோள் காட்டி தெரிவித்தார். அனைத்தையும் கேட்ட நரேந்திரர், டாக்டர், நீங்கள் கூறிய நூலை முழுவதும் படித்திருக்கிறீர்களா? அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்தீர்களா? என்று கேட்டார். இந்தக்கேள்வியால் டாக்டர் அதிர்ந்துபோனார். உண்மை தான் , தாம் முற்றிலுமாகப் படிக்கவில்லை என்பதை அவர் ஒத்துக்கொண்டார். நரேந்திரர் அந்த நூலின் பகுதிகளை அப்படியே ஒப்பித்து, டாக்டர் கூறிய கருத்துகளை விளக்கினார். டாக்டர் இதனைச்சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் நரேந்திரரைப் பாராட்டி ஆசீர்வதித்தார்.


நோய் ஒரு நிமித்தம்.


ஸ்ரீராமகிருஷ்ணருக்குத் தீவரமான நோய் வந்துள்ளது. அவர் தமது இறுதி நாட்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் புரிந்தது. அனைவரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சேவையில் மனப்பூர்வமாக ஈடுபட்டனர். இளைஞர்களில் பலரும் காசிப்பூரிலேயே  தங்கினர். நரேந்திரர் அவர்களையெல்லாம்  ஒன்று திரட்டி, அனைவருமாகப்  படிப்பு, கலந்துரையாடல், தியானம் என்று ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டனர். ஒரு பக்கம் ஸ்ரீராமகிருஷ்ணரின் தன்னலமற்ற அன்பும், மறுபக்கம் நரேந்திரரின் சகோதர பாசமும் அனைவரையும் அங்கே கட்டி வைத்திருந்தன. இளைஞர்கள் பன்னிருவர் இருந்தனர். அவர்கள் நரேந்திரர், ராக்கால், பாபுராம், நிரஞ்சன், யோகின், லாட்டு, தாரக், மூத்தகோபால் , காளி, சசி, சரத், இளைய கோபால்.

இளைஞர்கள் முறை வைத்துக்கொண்டு ஸ்ரீராமகிருஷ்ணருக்குச்சேவை செய்தனர். ஆனால் சிலரது மனத்தில் ஒரு தயக்கம் அலைமோதியது.ஸ்ரீராமகிருஷ்ணரின் நோய் தொற்று நோயா? ஒரு வேளை அப்படியிருந்தால்  தங்களுக்கும் பரவக்கூடுமே என்று சிலர் பயந்தனர். இதனைப்புரிந்து கொண்ட நரேந்திரர் ஒரு நாள் அனைவரின் முன்னால் , ஸ்ரீராமகிருஷ்ணர் குடித்துவிட்டு வைத்திருந்த ரவை ப் பாயாசத்தை எடுத்துக்குடித்தார். இதைக் கண்ட பிறகு இளைஞர்களின் சந்தேகம் தீர்ந்தது.


நரேந்திரரும் மற்ற இளைஞர்களும் ஸ்ரீராமகிருஷ்ணரைின் நோயை நோயபகவே கண்டனர். ஆனால் இல்லற பக்தர்களான கிரீஷ், ராம்சந்திர தத்தர் போன்ற சிலர் இந்த நோய்க்கு ஓர் அமானுஷ்ய வண்ணம் கொடுத்தனர்.ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் அவதார புருஷர் , அவர் தமது சங்கல்பத்தாலேயே இந்த நோயை ஏற்றுக் கொண்டுள்ளார். ஒரு நாள் திடீரென்று தமது தெய்வீக சக்தியை வெளிப்படுத்தி நோளைக் குணப்படுத்துவார் என்று அவர்கள் நம்பினர்.


ஆனால் இந்த நோயை ஒரு நிமித்தமாகக் காட்டினார் ஸ்ரீராமகிருஷ்ணர். எனது நோய் ஒரு நிமித்தம் மட்டுமே. இந்த நோய் உங்கள் அனைவரையும் ஒருங்கிணைத்திருக்கிறது என்று கூறினார் அவர். அந்த நோயின் காரணமாகவே பக்தர்கள் அனைவரும் ஒன்று கூட முடிந்தது. அவர்களுக்கு இடையில் ஒரு பாசப் பிணைப்பு வளர்ந்தது. அது எதிர்கால இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

நரேந்திரர் வழிகாட்டுகிறார்.


இந்த நாட்களிலேயே நரேந்திரரின் பணி தொடங்கிவிட்டது எனலாம். ஒரு புதிய யுகத்தைப்படைக்க வந்தவர் ஸ்ரீராமகிருஷ்ணர். இதில் புதிய சிந்தனைகளும், புதிய பாதைகளும் வகுக்கப் படும் என்பதை நரேந்திரர் அறிந்திருந்தார். ஆனால் மற்ற பலரும் அதைப்புரிந்து  கொள்ளவோ, ஏன் அப்படி எண்ணிப்பார்க்கவோ கூட இல்லை. இதனால் பக்தர்களில் பலரும் பழைய பாதைகளிலேயே செல்லத் தலைப்பட்டனர். அவர்களை வழிக்குக்கொண்டு வருவது நரேந்திரரின் முக்கிய வேலையாக இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு நாள் திடீரென்று அமானுஷ்ய சக்தியால் தமது நோயைக்குணப்படுத்துவார் என்று கூறியவர்களிடம் அவர் உண்மையைத் தெளிவுபடுத்தி, ஸ்ரீராமகிருஷ்ணரின் உடம்பும் இயற்கையிலிருந்து  உருவாகியது, இயற்கை நியதிகளுக்கு உட்பட்டது, ஒரு நாள் அது அழிந்தேயாக வேண்டும். எனவே திடீரென்று  அமானுஷ்ய சக்தியால் அவரது நோய் குணமாகும் என்று எதிர்பார்க்கக் கூடாது‘‘ என்பதை எடுத்துக்கூறினார்.


இன்னொரு பக்கம், ஒரு சிலர் ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் அவதாரம் முந்தைய அவதாரத்தில் அவர் யாராக இருந்தார், இப்போதுள்ள பக்தர்களில் யார்யார் முந்தைய அவதாரங்களில் யார்யாராக இருந்தனர் என்றெல்லாம் கற்பனைகளில் மிதக்கத்தொடங்கினர். பரவச நிலை என்று கூறிக்கொண்டு ஆடவும் பாடவும் சிலர் முற்பட்டனர். 

இவற்றைத்தடுக்கவும் நரேந்திரர் தம்மால் இயன்ற அளவு முயற்சி செய்தார்.கண்ணீர் விடுவதும், மயிர்க்கூச்செறிவதும் எல்லாம் உண்மையான ஆன்மீகத்திற்குப் புறம்பானவை. இவற்றைத் தடுக்க இயலாவிட்டால் உடம்பும் உள்ளமும் நோயுற்றுள்ளது என்று பொருள். இது நரம்புத் தளர்ச்சி காரணமாகவும் ஏற்படலாம். எனவே நல்ல உணவை உண்ண வேண்டும், நல்ல டாக்டர்களைப்பார்க்க வேண்டும் என்று அவர்களிடம் கூறினார்.

நரேந்திரரின் அறிவுரைகளைச்சிலர் ஏற்றுக் கொண்டனர். தங்களைக் கட்டுப்படுத்தி உண்மையான ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டனர்

பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. 


நரேந்திரர் அவர்களை எளிதாக விட்டுவிடவில்லை. பலர் முன்னால் அவர்களைக்கேலி செய்தார். அவர்களின் பரவசநிலைகளை நடித்துக்காட்டி அவர்களை வெட்கப்படச் செய்தார்.அதே வேளையில், ஸ்ரீராமகிருஷ்ணரின் பெரு வாழ்விலிருந்து பல்வேறு உதாரணங்களை எடுத்துக்காட்டி அவர்களுக்கு உண்மை ஆன்மீகத்தைப் புரிய வைத்தார்.

அனைத்திற்கும் மேலாக அற்புதமான ஒரு கருத்தைக்கூறி அவர்கள் உண்மையை உணர்ந்து கொள்ளுமாறு செய்தார் நரேந்திரர்.

”கிறிஸ்துவின் பாதையில்”(imitation of christ) என்ற நூலிலிருந்து மேற்கோள் காட்டி. அவர் கூறினார். உண்மையாக ஏசுவை நேசிப்பவர்களின் வாழ்க்கை முற்றிலுமாக அவரது வாழ்க்கை போலவே ஆகிவிடும்.  இது நமக்கு ஒரு உரைகல். 

நமது வாழ்க்கை ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையைப்போல் ஆகுமானால்  நாம் அவரை நேசிக்கிறோம் என்பது பொருள்.வேறு எதுவும்  உண்மை ஆகாது, ஏதோ சில நேரங்களில் ஆடுவதும் பாடுவதும் கண்ணீர் வடிப்பதுமாக இருந்து கொண்டு மற்ற நேரங்களில் விருப்பம் போல் வாழ்வது ஸ்ரீராமகிருஷ்ணர் காட்டிய வாழ்க்கை அல்ல என்பதை இதன் மூலம் நரேந்திரர் தெளிவு படுத்தினார்.


தீவிர மன ஏக்கம்


ஸ்ரீராமகிருஷ்ணரின் இறுதி நாட்கள் நெருங்க நெருங்க நரேந்திரர் மேலும் மேலும் தமக்குள் ஏதோ சூன்யத்தை உணரத் தொடங்கினார். ஆன்மீக வாழ்க்கையில் தாம் இன்னும் எதுவுமே அடையவில்லையோ என்ற எண்ணம் அவரது உள்ளத்தை வாட்டியது. வீட்டு நிலைமையோ மற்றொரு பக்கம் பெரும் சுமையாக அவரை அழுத்தியது. வீட்டுநிலைமையைச் சமாளிப்பதற்காக அவர் சட்டப்படிப்பைத் தொடர வேண்டியிருந்தது. தேர்வு நெருங்கி வந்ததால் காசிப்பூருக்கும் தமது புத்தகங்களைக்கொண்டுவந்து, அவற்றில் கவனம் செலுத்தினார். சில வேளைகளில் அந்தப் படிப்பில்  மூழ்கியிருந்ததில் , காசிப்பூரிலேயே வாழ்ந்தாலும் மாடியில் சென்று ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்திக்கக் கூட போகாமல் இருந்து விடுவார். 


இதனைக் கவனித்த ஸ்ரீராமகிருஷ்ணர் , ஒரு நாள், இதோ பார், நீ ஒரு வக்கீல் ஆனால் உன் கையிலிருந்து  தண்ணீர் கூட என்னால் குடிக்க முடியாது” என்றார். குருதேவரின் வார்த்தைகளைக்கேட்ட பிறகு, இனி சட்டப்படிப்பு தேவையில்லை, ஆன்மீக சாதனைகளில் ஆழ்ந்து மூழ்குவது என்று அவர் முடிவு செய்தார்.


1886 ஆரம்பத்தில் ஒரு நாள் நரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அறைக்குச் சென்று , எல்லோருக்கும் எவ்வளவோ ஆன்மீக அனுபவங்கள் வாய்க்கின்றன. ஏன் எனக்கு மட்டும் எதுவும் கிடைக்கவில்லை.?  எனக்கும் ஏதாவது கிடைக்க வேண்டும்”  என்று கேட்டார். சரி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார் ஸ்ரீராமகிருஷ்ணர். அதற்கு நரேந்திரர், மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து சமாதியில் மூழ்கியிருக்க வேண்டும்.ஏதோ உணவிற்கு மட்டும், அவ்வப்போது மனம் கீழே வர வேண்டும்” என்றார் . அதைக்கேட்ட ஸ்ரீராமகிருஷ்ணர், நீ ஒரு முட்டாள். இதுவா பெரிய நிலை? இதை விடப்பெரிய நிலை உள்ளது. இருப்பவை எல்லாம் நீயே. என்று  நீயே பாடுவதுண்டு அல்லவா? இந்த நிலையை நீ அனுபவிக்கலாம். ஆனால் அதற்கு முன்பு உன் குடும்பத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச்செய்து விட்டு வா” என்றார்.


மறுநாள் வீடு சென்றார் நரேந்திரர். படிப்பிலோ உணவிலோ கவனம் செலுத்தாமல் இப்படி இருப்பதற்காக அவரது தாயார் அவரைக் கடிந்து கொண்டார். வீட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற  எண்ணத்தில் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த நினைத்தார் நரேந்திரர். எனவே தமது பாட்டி வீட்டிற்குச் சென்று படிக்கத் தொடங்கினார். அங்கு போய் புத்தகங்களைக்கையில் எடுத்தது தான் தாமதம். எங்கிருந்தோ பய உணர்ச்சி ஒன்று  அவரைப் பற்றிக்கொண்டது. தாம் ஏதோ தவறு செய்வது போல் அவருக்குத்  தோன்றியது. திடீரென்று என்ன நினைத்தாரோ, புத்தகங்களை அப்படியே தூக்கி வீசியெறிந்து விட்டு ஓட ஆரம்பித்தார். ஏதோ ஒரு சக்தி அப்படி ஓடச் செய்தது போன்றஆவேசத்தில் அவர் ஓடினார். ஓடிய வேகத்தில் செருப்பு, மற்ற பொருட்கள் என்று  ஒவ்வொன்றுமாக அங்கங்கே தெறித்து வீழ்ந்தன. வழியிலிருந்த ஒரு வைக்கோற்போரில்  மோதியதில் உடம்பெல்லாம் வைக்கோல்! நல்ல மழை வேறு! வெறிபிடித்தவர்போல் அவர் ஓடினார்! கடைசியில்  சென்று நின்றஇடம் காசிப்பூர். நனைந்து தொப்பலாகி, சேறும் சகதியும் கலந்த உடையுடன் அவரது கோலம் அலங்கோலமாக இருந்தது.


அங்கே இருந்த ம-விடம் , நான் அழுதேன், இப்படி என் வாழ்நாளில் ஒரு முறைகூட அழுததில்லை. அப்படி அழுதேன், என்று பின்னாளில் நரேந்திரர் கூறினார்.

பிறகு நரேந்திரர் நேராக மேலே குருதேவரிடம் சென்றார். அவர் தூங்கிக் கொண்டிருந்தார். தொண்டை வலி மிக வும் அதிகமாக இருந்தது. இரவு சுமார் 9 மணி க்கு அவர் எழுந்தார். எழுந்தவர் நரேந்திரரைப் பற்றியே பேசினார். நரேந்திரனின் நிலைமை எவ்வளவு அற்புதமாக இருக்கிறது! ஒரு காலத்தில் அவன் உருவக் கடவுளையே நம்பாதவனாக இருந்தான். இப்போது பார், இறையனுபூதிக்காக எவ்வளவு துடிக்கிறான்.


சில அனுபவங்கள்


நரேந்திரரின் மன ஏக்கம் தீவிரமாகியது. 1886 ஜனவரி ஆரம்பத்தில் ஒரு நாள் அவர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்று, தாம் தட்சிணேசுவரத்திற்குப்போய் , அங்கே வில்வ மரத்தின் அடியில் துனி அக்கினி வளர்த்து அதன் அருகில் அமர்ந்து தியானம் செய்யப்போவதாகக்கூறினார். வேண்டாம், அருகிலுள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் உள்ளவர்கள் மறுப்பு தெரிவிப்பார்கள். பஞ்சவடி அழகான  இடம். பல சாதுக்கள் ஜப தியானம் செய்த இடம். ஆனால் அங்கே குளிர் அதிகமாக இருக்கும். இருட்டாகவும் இருக்கும் ” என்று கூறினார். பிறகு, ஆமாம், நீ உன் படிப்பைத் தொடரவிரும்புகிறாயா? என்று கேட்டார். அதற்கு நரேந்திரர், இது வரை படித்தவற்றை மறப்பதற்கு  ஒரு மருந்து கிடைக்குமா என்று நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். இதில் படிப்பைத்  தொடர்வதா? என்றார். இப்போதிலிருந்து  நரேந்திரின் மனம் ஆன்மீக சாதனைகளில் தீவிரமாக ஈடுபட்டது. அடிக்கடி அவர் தட்சிணேசுவரம் சென்று தியானத்தில் ஈடுபட்டார்.


ஒரு முறை நரேந்திரர் கிரீஷீடன் சென்றார். இருவருமாகப் பஞ்சவடியில் தியானத்தில் அமர்ந்தனர். கொசுக்கடிகாரணமாக  கிரீஷால் தியானம் செய்ய முடியவில்லை. திரும்பி நரேந்திரரைப் பார்த்தால், அவரது உடல் முழுவதும் ஒரு போர்வையால் மூடியது போல் கொசுக்கள் அமர்ந்திருந்தன.அவர் புறவுணர்வை முற்றிலுமாக இழந்து தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரை அழைத்துப் பார்த்தார் கிரீஷ், பதில் இல்லை. தொட்டுப் பார்த்தார், உணர்வில்லை. பிடித்து உலுக்கினார்-அவ்வளவு தான், ஒரு மரக்கட்டை போல் சாய்ந்தார் நரேந்திரர். அவருக்கு உணர்வு வரவே இல்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு புறவுணர்வு வந்த போது, நடந்த எதையும் அவர் உணர்ந்திருக்கவில்லை.


மற்றொரு நாள் நரேந்திரர் தியானித்துக் கொண்டிருந்த போது முக்கோண வடிவப்பேரொளி ஒன்று தோன்றி பிரகாசிப்பதைக் கண்டார். அது உயிருணர்வுள்ளதாக அவருக்குத்  தோன்றிற்று. குருதேவரிடம் இதைப்பற்றி கூறினார். அதற்கு அவர், நல்லது, நல்லது, நீ பிரம்ம யோனியைப் பார்த்திருக்கிறாய். வில்வ மரத்தடியில் சாதனைகள் செய்த போது நானும் அதனைப் பார்த்தேன்.  ஒவ்வொரு வினாடியும் அதிலிருந்து கணக்கற்ற பிரம்மாண்டங்கள் தோன்றிக் கொண்டிருந்ததையும் கண்டேன்” என்று சொன்னார்.

ஒரு நாள் தியான வேளையில் இடை, பிங்கலை போன்ற நாடிகளின் செயல்பாட்டையும் குண்டலினி சக்தி யின் விழிப்பையும் உணர்ந்தார் அவர்.


ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரருக்குத் தமது இஷ்ட மந்திரமாகிய ராமநாமத்தில் தீட்சை தந்தார். மிகச்சிறு வயதிலேயே ராமரிடம் கொண்டிருந்த பக்தி குருதேவர் அளித்த மந்திர ஆற்றலால்  நரேந்திரரிடம் கிளர்ந்தெழுந்தது. அவர் ஆனந்த பரவசத்தில் தம்மை மறந்து, ராமா, ராமா, என்று கூவிய படி வீட்டைச்சுற்றிச் சுற்றி வந்தார். நேரம் செல்லச் செல்ல அவரது குரல் மேன்மேலும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. அவரது நிலையைக் கண்டவர்கள் அவரது அருகில் செல்வதற்கே அஞ்சினார்கள்.ராமா, ராமா என்று கூறியவாறே மணிக்கணக்காக அவர் சுற்றுவதைக் கண்டு ஸ்ரீராமகிருஷ்ணரிடம் விவரத்தைக்கூறினார்கள். அதற்கு அவர், அவனை அப்படியே விட்டுவிடுங்கள், விரைவில் சரியாகிவிடுவான்” என்றார். 

பல மணி நேரங்களுக்குப் பிறகும் அவர் சுயநிலைக்குத் திரும்பாததைக் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர் அவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு கூறினார். ஆனால்  யாராலும் நரேந்திரரை நிறுத்த இயலவில்லை. கடைசியில் ஓரிருவர் பலவந்தமாக அவரைப் பிடித்து குருதேவரிடம் கொண்டு சென்றார்கள். படிப்படியாக அவரைச் சுயவுணர்வு நிலைக்குக் கொண்டு வந்தார் குருதேவர். பிறகு அவரிடம், என் மகனே, நரேந்திரா! இப்படி ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறாய்? இது எந்தப் பயனையும் விளைவிக்காது. இந்த ஓர் இரவை நீ கழித்தது போல் எனது வாழ்க்கையின் பன்னிரண்டு வருடங்கள் கழிந்தன. ஒரு கடும் சூறாவளி போல் அனைத்தும் கடந்து சென்றுவிட்டன. ஓர் இரவில் நீ என்ன சாதிக்க முடியும், என் மகனே! என்று கேட்டு அவரைச் சமாதானப் படுத்தினார்.


சக்தியை அளிப்பதற்கான ஆற்றல்

இந்த நாட்களில் நரேந்திரர் தம்முள் ஓர் அசாதாரண ஆற்றல் வளர்வதை உணர்ந்தார். அந்த ஆற்றலைப் பிறருக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் மனத்தை மாற்றியமைக்கும்  வல்லமை தமக்கு இருப்பது அவருக்குத் தெரிந்தது. மார்ச் மாதம். சிவராத்திரி நாள். நரேந்திரர் சிவபெருமான் மீது”தாதையா தாதையா” என்ற  பஜனை பாடலை எழுதினார். பஜனை, பூஜை, தியானம் என்று இளைஞர்கள் அனைவரும் சாதனைகளில் ஆழ்ந்தனர். முதல் யாம பூஜை நிறைவுற்றது. நரேந்திரர் இளைஞர்களுடன்  பேசிக்கொண்டிருந்தார். 

ஒவ்வொருவராகப்  பலரும் வெளியே சென்றனர். தமக்குப் புகைக்குழாய்  தயாரிக்குமாறு ஒருவரிடம் கூறினார் நரேந்திரர். அறையில் காளியும் நரேந்திரரும் மட்டும் இருந்தனர். அப்போது தமது ஆற்றலைப் பரிசோதிப்பதற்கான ஆர்வம் நரேந்திரரிடம்  எழுந்தத. அவர் காளியிடம் , காளி, நான் தியானம்  செய்கிறேன், சிறிது நேரத்திற்குப் பிறகு  என்னைத் தொடு” என்று கூறிவிட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.

வெளியே சென்றவர் புகைக்குழாயுடன் திரும்பி வந்தபோது பிரமிப்பூட்டும் காட்சி ஒன்றைக்கண்டார். நரேந்திரரும் காளியும் தியானத்தில் மூழ்கி இருந்தனர். காளியின் வலது கை நரேந்திரின்  வலது முட்டியில் இருந்தது. அது நடுங்கிக்கொண்டிருந்தது. 

சிறிது நேரம் கழித்து கண் விழித்தார் நரேந்திரர்.

நரேந்திரர்-காளி! கையை எடு, நீ என்ன உணர்ந்தாய்?

காளி-மின் சக்தி என் உடம்பில் பாய்வது போல் இருந்தது. என் கைகள் நடுங்கின.

இளைஞர்- நீ நரேனைத் தொட்டதால் தான் உன் கைகள் நடுங்கினவா?

காளி- ஆம். நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என் கைகள் நடுங்குவதைத் தடுக்க இயலவில்லை.

சிவராத்திரி பூஜைகள்  தொடர்ந்தன. காளி தியானத்தில் மூழ்கினார். இப்படி அவர் ஆழ்ந்து தியானம்  செய்ததை யாரும் கண்டதில்லை. நரேந்திரரைத் தொட்டதால் தான் இது சாத்தியமாயிற்று என்று அனைவரும் உணர்ந்தனர்.

அதிகாலை 4  மணிக்கு நான்காம் யாம பூஜைகள் நிறைவுற்றன. அப்போது பூஜையறையினுள் வந்த சசி நரேந்திரரிடம், குருதேவர் உன்னைக்கூப்பிடுகிறார்” என்றார். 


நரேந்திரர் சசியுடன் மேலே சென்றார். அவரைக் கண்டது தான் தாமதம், குருதேவர் கண்டிக்கும் குரலில், என்ன இது! சேமிப்பதற்கு முன் செலவு செய்வதா! முதலில் தேவையான அளவு சேமித்துக்கொள், எங்கே எப்படி அதைச் செலவு செய்வது என்பது பிறகு தான் உனக்குத் தெரியவரும். தேவியே அதை உனக்கு உணர்த்துவாள், உனது உணர்வைக் காளியிடம் செலுத்தியதன் மூலம் அவனுக்கு எவ்வளவு தீங்கு செய்திருக்கிறாய் தெரியுமா? அவன் ஒரு குறிப்பிட்ட பாதையில் முன்னேறிக்கொண்டிருந்தான். ஆறு மாதத்தில் கலைந்த கருபோல் அது பயனற்றுப்போய்விட்டது. போகட்டும், நடந்தது நடந்தது தான். இனி இப்படிச் சிந்திக்காமல் செயல்படாதே. இன்னும் மோசமான விளைவுகள் ஏற்படாமல் போனதில் காளி பாக்கியசாலிதான்” என்றார்.


மௌனமாக வெளியே வந்தார் நரேந்திரர். திகைத்துப் போய்விட்டேன் நான். பூஜை வேளையில் நடைபெற்ற அனைத்தும் அவருக்குத்தெரிந்திருந்தன. அவர் என்னைக் கண்டிக்கும்போது மௌனமாக நிற்பதை த் தவிர வேறு என்ன செய்ய இயலும்! என்றார் நரேந்திரர்.


ஆல மரமாய் இரு!


 இப்படி பக்தியின் உயர் அனுபவங்கள், தியான அனுபவங்கள் என்று நரேந்திரரின் காசிப்பூர் நாட்கள் கழிந்தன. எப்போதும் உயர் நிலைகளில் திளைத்திருக்க வேண்டும். சமாதி நிலையில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற ஆர்வம் நரேந்திரரிடம் நாளுக்கு நாள் வளர்ந்தது. எனவே தடுக்க இயலாத ஆர்வத்துடன் ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணரின் அறைக்குச் சென்று, எனக்கு நிர்விகல்ப சமாதி  நிலையை அருளவேண்டும்” என்று கேட்டார்.

இந்தக்கேள்வி ஸ்ரீராமகிருஷ்ணருக்குச் சற்று திகைப்பை அளித்தது.


ஸ்ரீராமகிருஷ்ணர்-முதலில் என் உடம்பு சரியாகட்டும்.நீ கேட்கும் எதையும் அதன்பிறகு தருகிறேன்.

நரேந்திரர்-ஆனால் நீங்கள் மறைந்துவிட்டால் நான் என்ன செய்வேன்.?

ஸ்ரீராமகிருஷ்ணர்-ஒரு கணம் நரேந்திரரைக் கனிவுடன் உற்றுப் பார்த்தார். இவன் என்ன நினைக்கிறான்? என் உடல் மறைந்தாலும் எனக்கு அழிவில்லை என்பது இவனுக்கு இன்னும் புரியவில்லையா? அதன் பிறகும் இவனுக்கு வேண்டியதை நான் கொடுக்க மாட்டேனா? என்று அவர் தமக்குள் நினைப்பது போல் இருந்தது. அந்தப் பார்வை. இருப்பினும் தமது அருமைச் சீடனிடம் அன்புடன்  கேட்டார்.


ஸ்ரீராமகிருஷ்ணர்- என் மகனே, உனக்கு என்ன வேண்டும்?

நரேந்திரர்-முன்பே கூறியது தான் . நான் தொடர்ந்து பல நாட்கள் சமாதியில் ஆழ்ந்திருக்க வேண்டும். உடம்பைப் பாதுகாப்பதற்காக மட்டும் அவ்வப்போது கீழே வரவேண்டும்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் முகம் சற்று கம்பீரமாகியது. அவர் கூறினார்.

தூ தூ! நீ பரந்த மனம் படைத்தவன் என்று நினைத்தேன். ஆனால் இப்படிக்கேட்கிறாயே! இது உனக்குத்தகுமா? நீ ஓர் ஆலமரம் போல் பரந்து, வாழ்க்கையில் அடிபட்டு அல்லலுற்று வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிழல் அளிப்பாய் என்று நான் நினைத்தேன். ஆனால் நீயோ உன் சொந்த முக்தியை நாடுகிறாய். ஒரு தலைப்பட்சமான இத்தகைய லட்சியத்தை உன்னால் எப்படி நினைத்துப் பார்க்க முடிந்தது? எல்லா பக்கமும் ஒரு சேர வளர்கின்ற வளர்ச்சியே நான் விரும்புவது. மீன் கறியை நான் சாப்பிடுவதாக வைத்துக்கொள். குழம்பு, பொரியல், சட்னி என்று அதனை நான் பலவிதமாகச் சாப்பிட விரும்புவேன். சமாதியில் ஆழ்ந்து இறையுணர்வில் திளைக்கின்ற இன்பத்துடன் மட்டும் நான் திருப்தி அடைந்து விடுவதில்லை. மனித உறவுகளைப்போல் இறைவனுடன் பல்வேறு வழிகளில் தொடர்பு கொண்டு இறையின்பத்தைப் பல்வேறு வழிகளில் அனுபவிப்பதையே நான் விரும்புகிறேன். நீயும் அப்படியிருக்க  வேண்டும் என்பது தான் என் ஆவல்.


நிர்விகல்ப சமாதியில்


சீடரிடம் இப்படி கூறிவிட்டாலும் அவருக்கு அந்த அனுபவத்தின் சுவையை அளிப்பது என்று ஸ்ரீராமகிருஷ்ணர் முடிவு செய்திருக்க வேண்டும். ஒரு நாள் மாலையில் நரேந்திரர் தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு அந்த அறுதி அனுபவமாகிய நிர்விகல்ப சமாதி நிலை வாய்த்தது. முதலில் அவரது தலைக்குப் பின்புறம் ஓர் ஒளி தோன்றியது. பின்னர் அவர் சிறிது சிறிதாக உலக நினைவையும் தம் நினைவையும்  இழந்து சமாதியில் கரைந்தார். புலன்களையும் மனத்தையும் உலகங்களையும் எல்லா வற்றையும் கடந்து உணர்வுமயமான நிர்விகல்ப சமாதியில் மூழ்கினார். நெடுநேரம் கழிந்தது. சமாதி நிலையிலிருந்து திரும்பிய பிறகும் அவருக்கு  உடலுணர்வு முற்றிலுமாகத் திரும்பவில்லை. தலை இருப்பதை மட்டும் அவரால் உணர முடிந்தது. உடல் இருப்பது  தெரியவே இல்லை. எனவே , என் உடம்பு எங்கே? உடம்பு எங்கே? என்று அலறினார். அவருடைய கதறலைக்கேட்டு , விரைந்து சென்ற மூத்தகோபால் அவரது உடம்பைத் தொட்டுக்காட்டி, இதோ இருக்கிறது, நரேன், இதோ இருக்கிறது” என்றார். கோபாலின் வார்த்தைகள்  நரேந்திரரின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. முன்போலவே கூச்சலிட்டார். பயந்து போன கோபால் மாடிக்கு ஓடி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் விவரத்தைக்கூறினார். கோபால் சொல்வதை அமைதியாகக்கேட்ட ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்தபடியே, அவன் இன்னும்  கொஞ்சநேரம் அதே நிலையில் இருக்கட்டும். இந்த நிலை வேண்டும் என்று அவன் பலமுறை என்னைத் தொந்தரவு செய்தான்” என்றார்.

நெடுநேரத்திற்குப் பிறகு நரேந்திரருக்கு உலக நினைவு திரும்பியது. கண் விழித்த அவர் தம்மைச்சுற்றிலும் சகோதரச் சீடர்கள் கவலையுடன் அமர்ந்திருப்பதைக்கண்டார். 

இத்தனை நாட்கள் அவர் மனத்தில் வீசிக்கொண்டிருந்த புயல் ஓய்ந்து ஆழ்ந்த  அமைதி நிலவியது. பிறகு அவர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்றார். ஸ்ரீராமகிருஷ்ணர் மகிழ்ச்சியோடு அவரைப்பார்த்து, அன்னை காளி இப்போது உனக்கு எல்லாவற்றையும் காட்டிவிட்டாள், ஆனால் இந்த அனுபவம் தற்காலிகமாகப் பூட்டி வைக்கப்படும். அதன் சாவி  என்னிடம் இருக்கும். நீ அவளது பணிகளைச்செய்து முடிந்ததும் இந்தப் புதையல்  உனக்கு மறுபடியும் கிடைக்கும், நீ மீண்டும் எல்லாவற்றையும் உணர்வாய், என்றார்.


நரேந்திரருக்கோ இன்னும் அந்த நிலையிலேயே ஆழ்ந்திரக்க வேண்டும் என்ற ஆவல் அடங்கவில்லை. எனவே  அவர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் , ஆ! நான் அந்த நிலையில் மிகவும் ஆனந்தமாக இருந்தேன். என்னை அந்த  நிலையிலேயே இருக்க விடுங்கள், என்று கேட்டார். ஸ்ரீராமகிருஷ்ணர் மீண்டும் அவரைக் கண்டித்தார். என்ன இது! தேவியின் அருளால் இந்த  அனுபூதி உனக்கு இயல்பாக வாய்க்கும். எல்லாஉயிர்களிலும் ஒரே இறைவன் உறைவதை நீ சாதாரண நிலையிலேயே அனுபவிப்பாய். உலகில் நீ அரும்பெரும் காரியங்கள் பலவற்றைச் சாதிப்பாய். எண்ணற்ற மனிதர்களுக்கும் நீ ஆன்மீக உணர்வைக்கொண்டு செல்வாய். ஏழை எளியவர்களின் துயர் துடைப்பாய், என்று கூறினார்.

நரேந்திரர் சென்றபிறகு மற்ற சீடர்களிடம் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார். 

தன் சுய சங்கல்பத்தாலேயே நரேன் உலகிலிருந்து மறைவான்.தான் யார் என்பதை அவன் உணர்ந்து விட்டால் அதன் பிறகு ஒருகணம் கூடஉடம்பில் தங்க மாட்டான். தனது அறிவாற்றலாலும் ஆன்மீக சக்திகளாலும் அவன்  உலகின் அஸ்திவாரங்களையே அசைக்கின்ற ஒரு காலம் வரும். அவன் அறுதி உண்மை நிலையின்அனுபூதி பெறாமல் இருக்கட்டும் என்று நான் தேவியிடம்  பிரார்த்தனை செய்தேன். ஏனென்றால் அதை அவன் பெற்றால் அதன் பிறகு உலகில் வாழமாட்டான். அவன் செய்ய வேண்டிய வேலை ஏராளம் உள்ளது. அறுதி நிலையை அவன் அடைவதற்கு ஒரு திரை  மட்டுமே இடையில் உள்ளது. அந்தத் திரை மிக மெல்லியதாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அது விழுந்துவிடலாம்.


வீட்டுப் பிரச்சனைகள்


தியானம், சமாதிநிலைகள் என்று ஒரு பக்கம் தொடர்ந்த அதே வேளையில் வீட்டுப் பிரச்சனைகள் நரேந்திரரின் மனத்தை அலைக் கழித்தன. உன் வீட்டிற்கு ஏதாவது வழி செய்துவிட்டு வா” என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியது நரேந்திரரின் மனத்தில் பதிந்திருந்தது. எனவே மறுநாள் நண்பன் ஒருவனிடமிருந்து ரூ-100 கடன் வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார். அந்தப் பணத்தால் வீட்டுப் பிரச்சனைகள் மூன்று மாதங்களுக்குச் சமாளித்துக்கொள்வது அவரது எண்ணமாக இருந்தது.

ஆனால் மூன்று மாதத்தில் முடிகின்ற விஷயமா வீட்டுப் பிரச்சனை? 

யாரோ துன்புற்றாலே கருணையால் இளகுகின்ற மனம் படைத்த நரேந்திரர் தன் தாயும் சகோதர சகோதரிகளும் பசியால் வாடுவதைப்பார்த்துக் கொண்டிருப்பாரா? எனவே அவரது பிரச்சனைகள் தொடரவே செய்தன. கயையில் ஒரு ஜமீன்தாரிடம் மேலாளர் வேலையில் சேர எண்ணினார். அங்கே செல்வதைவிட வித்யாசாகரின் பள்ளியில் ஒரு வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் ம-விடம் கூறவும் செய்தார். ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை.


இந்த நாட்களில் நரேந்திரர் புத்தரின் வாழ்க்கையில் ஆழ்ந்தார். உயர் வாழ்க்கைக்கும் உறவுக்கும் இடையில் அலைக் கழிக்கப் பட்ட புத்தரின் பெருவாழ்க்கை நரேந்திரரை ஆட்கொண்டதில் வியப்பு இல்லை. நிர்வாண நிலை தமக்கு முன்பாக இருந்தும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து, உயிர்க்குலத்தின் துயர் துடைப்பதற்காக அவர்களின் சேவைக்கென்று தமது வாழ்க்கையை  அர்ப்பணித்த மாபெரும் கருணைப்பெருவள்ளல் அல்லவா அவர்! ஏறத்தாழ அத்தகைய நிலையில் இருந்த நரேந்திரர் அவரது வாழ்க்கையால் கவரப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. உலக மக்கள் மீது கொண்ட கருணையால் புத்தர் நிர்வாய நிலையைத்துறந்தார். நரேந்திரரும் உலக மக்கள் சேவைக்காக அறுதி நிலையைத்துறக்க வேண்டியதாயிற்று. புத்தரின் கருணைப்பெருவாழ்வு நரேந்திரரைப் பரிபூரணமாக ஆட்கொண்டது. அவரும் தாரக்கும்  காளியும் புத்தரின் வாழ்க்கையை ஆழ்ந்து படித்தனர். சிந்தித்தனர், உண்மையை அடைய வேண்டும் என்ற உறுதியுடன் புத்தர் போதி மரத்தடியில் அமர்ந்தபோது எடுத்துக்கொண்ட சங்கல்gத்தைத் தியான சுவரில் எழுதி வைத்தனர்.

இந்த இருக்கையிலேயே என் உடம்பு வற்றி உலர்ந்தது

போகட்டும்! என் தோல் , எலும்பு சதை எல்லாம் கரைந்து

 போகட்டும், காலம் காலமாக முயன்றும் கிடைப்பதற்கு

அரிதான அனுபூதி நிலையை அடையாமல் நான் இந்த 

இருக்கையிலிருந்து எழ மாட்டேன்.


புத்தரின் உணர்வுகளில் மூழ்க மூழ்க நரேந்திரருக்கு புத்த கயைக்குச் செல்லும் ஆர்வம் தோன்றியது. புத்தர் அனுபூதிபெற்ற போதி மரத்தடியில் சிறிது நேரமாவது அமர்ந்து தியானம் செய்ய வேண்டும் என்ற தாகம் அலருள் எழுந்தது. எனவே ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு நாள் பிற்பகலில் நரேந்திரரும் தாரக்கும் காளியும் யாரும் அறியாமல் வீட்டின் பின் வாசல் வழியாக புத்த கயைக்குப் புறப்பட்டனர்.

மூவரும் காவியுடை அணிந்து கொண்டனர். துறவிகள் வைத்திருப்பது போல் கையில் இடுக்கியை வைத்துக்கொண்டனர். புத்த கயைக்குச் செல்ல மறுநாள் காலைவரை ரயில் இல்லாததால் அன்றிரவை ஒரு கடையில் கழித்தனர். நரேந்திரர் காலையில் மூன்று மணிக்கெல்லாம் எழுந்து கிச்சடி சமைத்தார். அதனை உண்டுவிட்டு மூவருமாகப் புறப்பட்டனர். வழி நெடுக புத்தரின்  வாழ்க்கையைப் பற்றியே பேசினர். மூன்றாம் நாள் காலையில் கயையை அடைந்தனர். அங்கே பல்கு நதியில் குளித்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர். அங்கிருந்து எட்டு மைல் நடந்து, மாலை வேளையில் புத்த கயையை அடைந்தனர்.

மாலையில் சந்தடியெல்லாம்  ஓய்ந்த பிறகு மூவரும் போதி மரத்தடிக்குச் சென்று தியானத்தில் அமர்ந்தனர். சிறிது நேரத்தில்  நரேந்திரரின் முன்பாக அசாதாரணமானதொரு பேரொளி தோன்றியது. அவரது மனத்தில் அமைதியும் ஆனந்தமும் நிறைந்தது.நரேந்திரர் அந்த ஆனந்தத்தில் மூழ்கியவராக அமர்ந்திருந்தார். புத்தரின் அற்புதமான பண்பு நலன், அவரது இணையற்ற கருணை, மனிதநேயம் மிக்க அவரது உபதேசங்கள், புத்த மதத்தின் தாக்கத்தால் இந்திய வரலாற்றில் நிகழ்ந்த மாற்றங்கள் எல்லாம் அவரது மனக் கண்களில் எழுந்தன. அவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. காட்சி மறைந்ததும் அவர் தாரக்கைக் கட்டிக்கொண்டு ஒரு குழந்தை போல் அழுதார். தாரக்கும் காளியும் கூட பேரானந்தத்தை அனுபவித்தனர். மறுநாள் காலையில் நரேந்திரரிடம் அவர் அழுததற்கான காரணத்தைக்கேட்ட போது, புத்தருடன் தொடர்புடைய பொருட்களையோ புத்தரோ அங்கு இல்லையே என்ற எண்ணம் எழுந்தபோது என் இதயம் வேதனையில் துடித்தது. அதனால் தான் அழுதேன்” என்றார்.

அங்கே காசிப்பூரில் மூவர் திடீரென்று காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைவரும்மிகுந்த கவலைக்கு உள்ளாயினர். அவர்கள் புத்த கயைக்குப் போயிருக்கிறார்கள் என்ற விஷயம்  எப்படியோ தெரியவந்தது.விஷயத்தை ஸ்ரீராமகிருஷ்ணரிடம் தெரிவித்தனர். அதற்கு அவர், அவன் எங்கே போய்விடுவான்? எவ்வளவு நாட்கள் தான் இருந்துவிடுவான்? விரைவில் வந்து சேர்வான்.கவலை வேண்டாம்” என்றார். சிறிது நேரம் கழித்து நீங்கள் உலகின் நான்கு மூலைகளுக்கும் பயணம்  செய்து பாருங்கள். உங்களால் எதையும் காண முடியாது. அங்கே இருக்கின்ற அனைத்தும் (தம் உடம்பைக் காட்டி) இங்கே இருக்கிறது” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.


புவனேசுவரியின் கலக்கம்


 நரேந்திரர் துறவிக்கோலத்தில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று புறப்பட்டுச் சென்றுள்ளது பற்றி கேள்விப்பட்டார் புவனேசுவரி. அவரது தாயுள்ளம் கலங்கியது. அடிமேல் அடியாக எத்தனையோ சோதனைகளைத் தாங்கி வருபவர் அவர். ஒரு ஜமீன்தாரிணிபோல் வாழ்ந்த அவர் வறுமையின் பிடியில் வாடுகின்ற நிலையிலும்  அவருக்கு ஒரே நம்பிக்கையாக இருப்பவர் நரேந்திரர். அவரும் குடும்ப வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வாழ்வது சொல்லொணா வேதனையைத் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.ஆனாலும் காசிப்பூரில் தானே வாழ்கிறார் என்று தம்மைத் தாமே தேற்றிக்கொண்டு வாழ்ந்தார் அந்தத் தாய். காசிப்பூரிலிருந்து  நரேந்திரர் அவ்வப்போது வீட்டிற்குச் சென்றுவரவும் செய்தார். அவரது சகோதரச் சீடர்களும் சிலர் சென்று வருவதுண்டு. இப்போது காசிப்புரிலிருந்தும் அவர் சென்றுவிட்டார் என்று கேள்விப்பட்டதும் நேராகக் காசிப்பூருக்குச்சென்று ஸ்ரீராமகிருஷ்ணரைக்கண்டார் நரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தரிசிப்பதற்குக் கருவியாக இருந்தஒருவரான ராம்சந்திர தத்தரின் தந்தையான நரசிம்ம பிரசாத் தத்தரும் புவனேசுவரியுடன் சென்றார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் புவனேசுவரியை வரவேற்று, நான்   அவனைத் தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்,  ஆனாலும் அவன் சென்றுவிட்டான்.நான் என்ன செய்யட்டும். அவன் திரும்பி வந்துவிடுவான்” என்று கூறி அவரைத்தேற்றினார். அவ்வளவு எளிதாக புவனேசுவரியின் கலக்கம் தீருமா? நம்பிக்கையைச்சுமந்தபடி வீடு திரும்பினார் அவர்.


வட்டத்தைத் தாண்டி


 இரண்டு நாட்கள் கழித்தும் நரேந்திரரும் மற்றவர்களும் திரும்பி வராததைக் கண்ட மற்ற சீடர்கள் மீண்டும் ஸ்ரீராமகிருஷ்ணரைக் கவலையுடன் அணுகினர். ஸ்ரீராமகிருஷ்ணர் அமைதியாக எழுந்து தமது கையால் தரையில் வட்டம் ஒன்றை வரைந்து, இந்த வட்டத்தைத் தாண்டி நரேந்திரனால் போகமுடியாது, என்றார். அனைவரும் காத்திருந்தனர்.


புத்த கயையில் மூன்று நான்கு நாட்கள் மூவரும் கழித்தனர். திடீரென்று நரேந்திரர் வயிற்றுப்போக்கால் அவதிக்கு உள்ளானார். அவரது உடம்பு மிகவும்  பலவீனம் அடைந்தது. அதன் பிறகும் அங்கே தங்க அவர்கள்  விரும்பவில்லை. உடனே காசிப்பூருக்குத் திரும்ப முடிவு செய்தனர். ஆனால் கையில் சல்லிக்காசு கிடையாது. தாங்கள் தங்கியிருந்த கோயில் தலைவராகிய துறவியிடம் பணம் கேட்கலாம் என்று எண்ணி  அவரிடம் சென்றனர். 

அங்கே நரேந்திரர் ஓரிரு பாடல்களைப் பாடினார். இது அந்தத் துறவிக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர் பயணச்செலவின் ஒரு பகுதியைக்கொடுத்தார்.

கயைக்கு மூவரும் வந்து சேர்ந்தபோது தந்தையின் நண்பர் ஒருவரைத்  தற்செயலாக அங்கே சந்தித்தார் நரேந்திரர். தம் வீட்டில் இசைவிழா ஒன்று நடப்பதாகவும்  அந்த விழாவில் நரேந்திரர் வந்து பாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்டு அங்கே  சென்று பாடினார் நரேந்திரர். மீதி பயணச் செலவை அளித்தார் அந்த நண்பர். அனைவரும் காசிப்பூரை அடைந்தனர். ஸ்ரீராமகிருஷ்ணர் மகிழ்ச்சியுடன் அவர்களிடம்  புத்தரைப் பற்றியும் , புத்த மதத்தைப் பற்றியும் பேசிக் களித்தார்.


ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுளம்


ஏப்ரல், மே, ஜீன், ஜீலை மாதங்கள் கழிந்தன. ஸ்ரீராமகிருஷ்ணரின் உடல்நிலை மிகவும் மோசமாகியது. அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம் என்று பல சிகிச்சைகள் அளிக்கப் பட்டன. 

ஆனால் அனைத்தையும் மீறி அவரது உடல் நிலை நாளுக்கு நாள் சீர்குலைந்தது. இந்த நோயிலிருந்து தாம் மீளப்போவதில்லை என்பது தெரிந்திருந்தாலும், இது தெரிந்தால் மற்றவர்கள் கவலைப்படுவார்களே என்ற காரணத்திற்காக யாரிடமும் அது பற்றி அவர் கூறவில்லை.ஒரு முறை ம-விடம் என் மறைவிற்குப் பிறகு நீங்கள் மனம் கலங்கி அழுதபடி தெருக்களில் திரிவீர்கள் என்பதை நினைக்கும்போது வருத்தம் ஏற்படுகிறது. இந்த உடலை உகுப்பதற்கும் மனம் வரவில்லை” என்று கூறியிருந்தார். ஆனால் ஆரம்பம் என்ற ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் இருக்கத்தானே வேண்டும். அவர் மறைவதற்குத் திருவுளம் கொண்டு விட்டார் என்பதை அனைவரும் உணரத் தொடங்கினர். 

ஏனெனில் தாம் மறையப்போகும் காலத்தில் எத்தகைய சம்பவங்கள் நிகழும் என்று  அவர் கூறியிருந்தாரோ அவை ஒவ்வொன்றாக நிகழத்தொடங்கின. கனவு களும் காட்சிகளுமாக அன்னை ஸ்ரீசாரதாதேவியும் பல நிமித்தங்களைக்கண்டார். 

தமது நோய் குணப்படுத்த முடியாதது என்று ஸ்ரீராமகிருஷ்ணர் முடிவு செய்து அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள திருவுளம் கொண்டுவிட்டார் என்பதைக் கீழ்வரும் நிகழ்ச்சியாலும் அறியலாம். 


ஒரு நாள் பண்டித சசதர் காசிப்பூருக்கு வந்தார். அவர் குருதேவரிடம், மகான்களின் ஆற்றலைப்பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவர்களுக்கு நோய் வந்தால் அவர்கள்  தங்கள் மன ஆற்றலை நோயுற்ற பகுதியில் செலுத்துவதன் மூலம் அதிலிருந்து   விடுபடலாம். நீங்களும் ஏன் அப்படி செய்யக்கூடாது.? என்று கேட்டார். குருதேவருக்கு இது சிறிதும் பிடிக்கவில்லை. சற்றே கண்டிப்பான குரலில், ஒரு பெரிய பண்டிதராக இருக்கின்ற உங்களிடம் இத்தகைய எண்ணங்களா? இந்த மனம் முற்றிலுமாகக் கடவுளிடம்  கொடுக்கப் பட்டு விட்டது. அதை அவரிடமிருந்து திருப்பி, பயனற்ற இந்த உடம்பிற்குக்கொண்டு வருவதா? என்று கேட்டார். பண்டிதர் மௌனமானார். 

ஆனால் சீடர்கள் பிடித்துக்கொண்டனர். எப்படியாவது நீங்கள் இந்த நோயைக் குணப்படுத்தியே ஆக வேண்டும். எங்களுக்காகவாவது நீங்கள் இதனைச் செய்யுங்கள்” என்று அனைவரும் கேட்டுக்கொண்டனர். எல்லாம் தேவியின் திருவுளத்தைப் பொறுத்து உள்ளது” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். அப்படியானால் அவளிடமே பிரார்த்தனை செய்யுங்கள், எங்களுக்காக நீங்கள் இதைத் தேவியிடம் கேட்டேயாக வேண்டும், என்றார் நரேந்திரர். தயக்கத்துடன் சம்மதித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.


சில மணிநேரங்கள் கழிந்தன. நரேந்திரர் குருதேவரிடம் சென்று, தேவியிடம் கேட்டீர்களா ? என்று கேட்டார். ஸ்ரீராமகிருஷ்ணர் அமைதியாக க்கூறினார். ஆம். கேட்டேன். அம்மா, தொண்டை வலி காரணமாக என்னால் எதுவும் சாப்பிட இயலவில்லை. ஏதோ கொஞ்சம் நான் சாப்பிடுவதற்கு அருள் புரிவாய், என்று அவளிடம் கூறினேன். அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா? ஏன், இந்த வாய் வழியாகத்தான் நீ சாப்பிட வேண்டுமா? எத்தனையோ வாய்கள் வழியாகச் சாப்பிடுகிறாயே! அது போதாதா? என்று கேட்டாள். எனக்கு வெட்கமாகப்போய்விட்டது. என்னால் ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லை.

மற்றொரு நாள் ராக்கால் ஸ்ரீராமகிருஷ்ணரிடம்  இந்த நோயைக்குணப்படுத்துவது பற்றி பேசினார்.

ராக்கால்-உங்கள் உடம்பு இன்னும் சில காலம் நிலைக்க வேண்டும் என்று தேவியிடம் கேளுங்கள்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-எல்லாம் தேவியின் திருவுளத்தைப்பொறுத்து அமையும்.

நரேந்திரர்-உங்கள் திருவுளமும் தேவியின் திருவுளமும் வெவ்வேறா? இரண்டும் ஒன்றாகி விட்டனவே!

ஸ்ரீராமகிருஷ்ணர் சிறிது நேரம்  மௌனமாக இருந்தார்.பிறகு கூறினார், நான் தேவியிடம் பேசியும் பயனில்லை. நானும் அவளும் ஒன்றாகி விட்டதாக இப்போது காண்கிறேன்.


கடவுள் இருக்கிறாரா?


சிகிச்சை, பிரார்த்தனை என்று பல வழிகளில் முயன்றும் ஸ்ரீராமகிருஷ்ணரின் நோயைக் குணப்படுத்த முடியாத நிலையில் நரேந்திரரின் மனம் மிகவும் சஞ்சலப் பட்டது. பழைய சந்தேகங்கள் மீண்டும் தலைதூக்கியது போல் இருந்தது. கடவுள் ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா? அப்படி   ஒருவர் இருந்தால் இத்தகைய நல்ல மனிதருக்கு ஏன் இந்தநோய்  வர வேண்டும் என்பன போன்ற கேள்விகள் அவரது உள்ளத்தைக்குடைந்தன.


கடவுள் கருத்துக்கள் மட்டுமல்ல, ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி கூட நரேந்திரரின் கருத்துக்கள் படிப்படியாகப் பரிணமிப்பதை நாம் காண முடியும். முதலில் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதாரம் அல்ல” என்றார். பிறகு கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் அறியமுடியாத ஏதோ ஒரு நிலையில் இருப்பவர்” என்றார். அவரது கருத்துக்கள் மேலும் வளர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணரிடம் , உங்கள் திருவுளமும் தேவியின்  திருவுளமும் வெவ்வேறா? என்று கேட்பதைக் காண்கிறோம். கடைசியாக இந்த நாட்களில் அவரது கருத்து இன்னும் மாறுபட்டது.


ஒரு நாள் ராக்கால்ஸ்ரீராமகிருஷ்ணரிடம், உங்களை இப்போது தான் நரேந்திரன் நன்றாகப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறான்” என்றார். ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்துவிட்டு, ஆம், உண்மைதான்” என்றார். சிறிது நேரம்  கழித்து அவர், அனைத்தும்-இருக்கின்ற  அனைத்தும்-இதிலிருந்தே (அதாவது தம்மிலிருந்தே) வந்திருப்பதாக நான் காண்கிறேன். என்று கூறிவிட்டு, நரேந்திரரிடம் நீ இதிலிருந்து என்ன புரிந்து கொள்கிறாய்? என்று கேட்டார். அதற்கு அவர் படைப்பு அனைத்தும் உங்களிலிருந்தே தோன்றியிருக்கின்றன” என்று பதிலளித்தார். இதைக் கேட்டு ஸ்ரீராமகிருஷ்ணர் மிகவும் மகிழ்ந்தார்.


நரேந்திரரின் கருத்துக்கள் முதிர்ச்சியுற்று வருவதைக் கண்ட ம- அவரிடம் ஒரு நாள், உன் விஷயம் மட்டுமல்ல, தமக்கும் கூட இத்தகைய நிலைகள் ஏற்பட்டதாக குருதேவர் ஒரு நாள் என்னிடம் கூறினார்” என்று கூறினார்.


எங்கு அழைத்தாலும் நான் வருவேன்.


ஸ்ரீராமகிருஷ்ணரின் நோய் பல நோக்கங்களைச் சாதிப்பதற்கான ஒரு நிமித்தமாக இருந்தது என்பதை ஏற்கனவே கண்டோம். இதன் மூலம் பக்தர்களுக்கிடையே ஓர் அன்புப் பிணைப்பு உருவாயிற்று. பின்னாளில் துறவியராக மலர இருந்த இளைஞர்களுக்கு இடையே ஒரு சகோதரப் பாசம் ஏற்பட்டது. அதே வேளையில் ஸ்ரீராமகிருஷ்ணரில் முற்றிலுமாக நம்பிக்கையில்லாதவர்கள் அவரது நோயைக் கண்டு அவரிடமிருந்து விலகுவதற்கும் இந்தநோய் ஏதுவாயிற்று. இந்த நாட்களில் ஸ்ரீராமகிருஷ்ணரின் இளம் சீடர்கள், இல்லற பக்தர்கள் சிஷ்யைகள் என்று அனைவரும் அவரது சேவையில் ஈடுபட்டிருந்தனர். செலவை இல்லற பக்தர்கள் ஏற்றிருந்தார்கள்.தமது நோயின் பெயரில் ஒரு பணவசூல் நடத்தப் படுவதை ஸ்ரீராமகிருஷ்ணர் ஏற்றுக்கொள்ளவில்லை. 

குருதேவருக்கு ஆகும் செலவை பலராம்போஸ் ஏற்றுக்கொண்டார். வீட்டு வாடகையை சுரேந்திரநாத் மித்ரர் கொடுத்தார். இப்படிப் பலராக செலவைப் பகிர்ந்து கொண்டார்கள். இளைய கோபால் வரவு செலவு கணக்கை கவனித்துக்கொண்டார்.

செலவு அதியமாகியபோது , இல்லற ச் சீடர்கள் இளைஞர்களைக் குற்றம் சாட்டினார்கள். அவர்கள் அதிகமாகச் செலவழிக்கிறார்கள், எனவே செலவைக்குறைக்க வேண்டும் என்று கூறினார்கள். அது மட்டுமல்ல, ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இரண்டு பேர் மட்டும் சேவை செய்தால் போதும், மற்றவர்கள்  அவரவர் வீட்டில் தங்கிக்கொண்டு, இங்கே வந்து பார்த்துக் கொண்டால் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டார்கள்.


இது இளைஞர்களுக்குப் பிடிக்கவில்லை. இரு சாரருக்கும் கருத்து வேறுபாடு வளர்வதைக் கண்ட நரேந்திரர் எல்லாவற்றையும் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கூறினார். நரேந்திரரின் வருத்தத்தைக் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர், இனி  இந்த இல்லற பக்தர்களின் காசு எனக்கு வேண்டாம். ஓ என் நரேன், உன்தோள்களில் என்னை நீ எங்கே தூக்கிச் சென்றாலும் நான் அங்கு வந்து தங்குகிறேன், அப்பா” என்று நெகிழ்ந்து போய் கூறினார். பின்னர் அந்த இளைஞர்களிடம் ,நீங்கள் துறவிகள், பிச்சை ஏற்று சாப்பிடுவது தான் உங்கள் தர்மம். அப்படியே நீங்கள் வாழ இப்போதிலிருந்தே கற்றுக்கொள்ளுங்கள்”  என்றார். இளைஞர்களும் அதன் படி நடக்க முடிவு செய்தனர்.


இல்லற பக்தர்களிடமிருந்து பணம் பெறுவது நிறுத்தப் பட்டது.அவர்கள் ஸ்ரீராமகிருஷ்ணரை வந்து காண்பதும் தடுக்கப் பட்டது. லட்சுமி நாராயண் என்ற மார்வாரி பக்தர் பணம் அளிப்பதற்கு முன்வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் அதனை மறுத்துவிட்டார். பின்னர் கிரீஷை அழைத்து நிலைமையைக் கூறினார். கிரீஷ் அனைத்து செலவையும் தாம் ஏற்றுக் கொள்வதாகவும், தேவைப்பட்டால் தமது வீட்டை விற்றுக் கூட செலவு செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால் அந்த அளவுக்குப்போகு முன்னர் ஸ்ரீராமகிருஷ்ணரே இருசாரையும் அழைத்துப்பேசி  நிலைமையைச் சீர்படுத்தினார். மனக் கசப்புகள் குறைந்து மீண்டும் பழையது போல் எல்லோரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சேவையில் ஈடுபட்டனர்.


துறவிகள் ஆக்குகிறார்!


ஒரு நாள் மூத்தகோபால் சில காவித் துணிகளையும்  ருத்திராட்ச மாலைகளையும் மூட்டையாகக் கட்டி ஸ்ரீராமகிருஷ்ணரிடம்்் கொண்டு வந்தார். அவற்றைச் சிறந்த சன்னியாசிகளுக்குக் கொடுக்கப் போவதாகக் கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் தம் முன் இருந்த இளம் சீடர்களைக் காட்டி, இவர்களைவிட சிறந்த சன்னியாசிகள் கிடையாது. இவர்களுக்கே அவற்றைக் கொடு” என்றார் மூத்த கோபால் மூட்டையைக்கொண்டு வந்து ஸ்ரீராமகிருஷ்ணர் முன் வைத்தார். அவற்றை அந்த இளைஞர்களுக்கு அளித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். ஒரு நாள் மாலையில் சன்னியாசத்திற்கான சடங்கொன்றைச்செய்ய சொல்லி, ஊருக்குள் சென்று பிச்சையேற்று வரச் சொன்னார்.


ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியது போல் அனைவரும் வெளியில் பிச்சையேற்கப்புறப் பட்டனர். அவர்களில் பலர் பணக்கார வீட்டுப்பிள்ளைகள். செல்வச் செழிப்பில் வளர்ந்தவர்கள். என்றாலும் ஸ்ரீராமகிருஷ்ணரின் இந்தக் கட்டளையை நிறைவேற்ற மிகுந்த மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். ஸ்ரீராமகிருஷ்ணர் அளித்த காவித்துணியையும் அணிந்து கொண்டனர். அவர்கள் முதல் பிச்சை கேட்டது அன்னை ஸ்ரீசாரதா தேவியிடம்  தான். அவர்கள் சென்று கேட்டதும் அன்னை ஒரு ரூபாயை அவர்களின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டார். இவ்வாறு ராமகிருஷ்ண சங்கத்திற்கு முதல் அருள் சக்தியை அளித்தார் அன்னை. அதன் பின்னர் அவர்கள் பிச்னைக்காக வெளியில் சென்றனர்.


அவர்களின் அனுபவங்கள் பலவிதமானவை. சில இடங்களில் அரிசி, உருளைக்கிழங்கு, வாழைக்காய், கத்தரிக்காய், என்றெல்லாம் பிச்சை அளித்தனர். சில இடங்களிலோ பெரிய உபதேசங்களை அளித்து துரத்தினர். சிலர், கொழு கொழுவென்று நன்றாகத் தானே இருக்கிறீர்கள்? ஏன் வேலை செய்து சம்பாதிக்கக் கூடாது? இப்படி காவித்துணி உடுத்தி ஏன் பிச்சையெடுக்க வேண்டும்? என்று கேட்டு துரத்தினர். சிலரோ, இவர்கள் கட்டாயம் ஏதாவது கொள்ளைக் கூட்டத்தைச்சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பகலில் இப்படி சன்னியாசிபோல் வந்து தகவல் திரட்டிக் கொள்கிறார்கள்” என்றனர்.


எப்படியோ, கிடைத்த அரிசியையும் காய்கறிகளையும் சமைத்து  ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கொண்டு வந்தனர். அவர் அதைனை அன்னையிடம் கொடுத்து சமைக்கச்சொன்னார். 

சமைத்த உணவிலிருந்து சிறிது எடுத்துத் தம் வாயில் போட்டுக்கொண்டு, இந்த உணவு மிகவும் தூய்மையானது” என்றார். அவருக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது. மேலும் ஓரிருமுறை அவர் இளைஞர்களை வெளியில் அனுப்பி பிச்சையேற்றுவரச்செய்தார். இவ்வாறு அவர் ஸ்ரீராமகிருஷ்ண துறவியர் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.


நரேன் போதிப்பான்.


துறவியர் இயக்கத்தை ஆரம்பித்தாகிவிட்டது, அடுத்தது? ஒரு முறை ஒரு காகிதத்துண்டில் , ஜெய் ராதே ப்ரேம மயீ” நரேன் உலகிற்கு போதிப்பான். எங்கும் சென்று உண்மைகளைப் பறைசாற்றுவான் என்று எழுதிக் காண்பித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.நரேந்திரர் அதனை மறுத்து, என்னால் அதெல்லாம் முடியாது, என்று கூறினார். அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர்  ” நீ செய்தேயாக வேண்டும். காலப்போக்கில் என் ஆற்றல்கள் உன் மூலம் வெளிப்படும் என்றார்.

நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள்  ஸ்ரீராமகிருஷ்ணர் யோகினை அழைத்து பஞ்சாங்கம் கொண்டு வரச்சொன்னார். ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியிலிருந்து வரிசையாக நாட்களையும்  நட்சத்திரங்களையும் அதன் பலன்களையும் படித்துக் கொண்டே போகும் படி க்கூறினார். மாதத்தின் கடைசி நாள் வந்ததும் மேலும் படிக்க வேண்டாமென்று சைகை காட்டினார்.


 MAIN PAGE 

image116

ஸ்ரீராமகிருஷ்ணர் மறைகிறார்

சக்தியை அளிக்கிறார்


இந்த நிகழ்ச்சிநடந்து நாலைந்து நாட்கள் கழிந்தன. ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரரைத் தம் அருகே அழைத்தார். அப்போது அறையில் அவர்கள்  இருவர் மட்டுமே இருந்தனர். நரேந்திரரைத் தம் எதிரே உட்காரச்சொல்லி அவரை உற்றுப் பார்த்தபடியே ஆழ்ந்த சமாதியில் மூழ்கினார் ஸ்ரீராமகிருஷ்ணர். சிறிது நேரத்திற்குள் நரேந்திரர் தம் உடம்பில்  மின்சாரம் போன்று ஒரு சக்தி பாய்ந்து செல்வதை உணர்ந்தார். சிறிது சிறிதாக அவரும் உலக நினைவை இழந்தார். தாம் எவ்வளவு நேரம் இப்படி சமாதியில் மூழ்கியிருந்தோம் என்பது அவருக்குத் தெரியவில்லை. உணர்வு திரும்பிக் கண்களைத் திறந்து பார்த்தபோது ஸ்ரீராமகிருஷ்ணர் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். நரேந்திரர் காரணம் கேட்டபோது., என்னிடமிருந்த எல்லாவற்றையும்  இன்று உனக்குக் கொடுத்துவிட்டு நான் பக்கிரியாகிவிட்டேன். இந்த ஆற்றல்களின் மூலம் நீ உலகிற்கு மிகுந்த நன்மைகளைச்செய்வாய். அதன் பிறகு, நீ எங்கிருந்து வந்தாயோ  அந்த இடத்திற்குத் திரும்புவாய், என்று கூறினார். இவ்வாறு தமது சக்தியை நரேந்திரருக்கு அளித்தார்.

இரண்டு நாட்கள் கழிந்தன. தம்மை அவதாரம் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லிக்கொள்வதை ச் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் நரேந்திரருக்குத்தோன்றியது. அன்று மிகக் கடுமையான வலியால் ஸ்ரீராமகிருஷ்ணர் துடித்துக்கொண்டிருந்தார். உடம்பின் நோயால் இப்படித் துடிக்கும் இந்த நிலையிலும் அவர் தம்மை அவதார புருஷர் என்று கூறுவாரானால் , அவர் உண்மையில் அவதார புருஷர் என்பதை நம்புவேன், என்று நினைத்தார். நினைக்கத்தான் செய்தார், அடுத்த விநாடியே தம் ஆற்றல் முழுவதையும் திரட்டி எழுந்து உட்கார்ந்து மிகத்தெளிவான குரலில் , நரேன் முன்பு யார் ராமராகவும், கிருஷ்ணராகவும் வந்தாரோ, அவரே இப்போது ராமகிருஷ்ணராக இந்த உடம்பில் இருக்கிறார், ஆனால் உன் வேதாந்த கருத்தின் படி அல்ல, என்றார். எவ்வளவோ தெய்வீகக் காட்சிகளையும் ஆற்றல்களையும் அவரிடம் கண்டபிறகும் இன்னும் தனது சந்தேகம் நீங்காததற்காக  நரேந்திரர் வெட்கமும் அவமானமும் அடைந்தார்.


பொறுப்பை ஒப்படைக்கிறார்.


ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு நாள் நரேந்திரரைத் தவிர மற்ற தமது இளம் சீடர்களை அழைத்தார். அவரால் பேச இயலவில்லை. இருப்பினும் மிக மெல்லிய குரலில் கூறினார். இதோ பாருங்கள் உங்களை நரேனின்  பொறுப்பில் விட்டுச்செல்கிறேன். அவன் கூறுவதன்படி செய்யுங்கள். அவனது ஆரோக்கியத்தையும்  மற்ற நலன்களையும் கவனித்துக்கொள்ளுங்கள். பிறகு நரேந்திரரை அழைத்து, இதோ பாரப்பா, நரேன்! இந்த என் பிள்ளைகளை எல்லாம் உன் பொறுப்பில் விட்டுச்செல்கிறேன். அனைவரிலும் புத்திசாலியும் திறமைசாலியும் நீ. அனைவரையும்  அன்புடன் வழி நடத்து. எனக்காகப் பணி செய், என்றார்.


ஸ்ரீராமகிருஷ்ணர் மறைகிறார்!


ஆகஸ்ட் பதினைந்தாம் நாள். எந்த நாள் வரக்கூடாதென்று பக்தர்கள் கவலைக்கொண்டிருந்தார்களோ, பக்தர்களை ஆற்றொணா துயரில் ஆழ்த்திய அந்த நாள் வந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை.ஸ்ரீராமகிருஷ்ணரின் நோய் இது வரை இல்லாத அளவு மிகவும் பயங்கரமாக இருந்தது. அவரது நாடி ஒழுங்கற்று துடித்தது. அதுல் என்ற பக்தர் அவரது நாடியைப் பார்த்து, அவரது உடல்நிலை மோசமாகிவிட்டதை அறிந்தார். சுற்றியிருந்தவர்களிடம் அவர் இனி பிழைப்பது அரிது என்று கூறினார்.


சூரியன் மறைவதற்குச் சிறிது நேரம் இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரால் சீராக மூச்சுவிட முடியவில்லை.மூச்சு இழுக்க ஆரம்பித்தது. பக்தர்கள் தேம்பித்தேம்பி அழத் தொடங்கினர்.தங்கள் வாழ்வில் இதுவரை எந்த ஒளி, இன்பத்தை நிறைத்து வந்ததோ அது அணைந்து விடப் போகிறது என்பதை உணர்ந்த எல்லோரும்  அவரைச் சூழ்ந்து கொண்டனர்.சிறிது நேரத்திற்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் தமக்குப் பசிப்பதாகக் கூறினார். நீராகாரம்  கொடுக்கப் பட்டது. அவரால் விழுங்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு சிறிது குடித்தார். வாயைக் கழுவி மெல்ல அவரைப் படுக்க வைத்தனர். இரண்டு கால்களையும் நீட்டித் தலையணையின் மீது வைத்தனர். இரண்டு பேர் விசிறினர். படுத்துக்கொண்டிருந்தவர் சிறிது நேரத்திற்குப் பின் திடீரென்று சமாதியில்  மூழ்கினார். உடம்பு அசைவற்று சிலைபோல் ஆகியது. மூச்சு நின்றது.


இத்தனை நாட்களாக இரவும் பகலும் உடனிருந்து சேரவ செய்து வந்த சசிக்கு இந்தச் சமாதிநிலை வழக்கமாக அவருக்கு ஏற்படுகின்ற சமாதி போல் தோன்றவில்லை. ஏதோ பெரிய மாறுதல் இருப்பதாகத் தோன்றவே அழ ஆரம்பித்தார். நரேந்திரர் எல்லோரிடமும் , ஹரி ஓம் தத்ஸத்” என்று ஓதுமாறு கூறினார். நீண்ட நேரம் அதனை அனைவரும் ஓதினர்.

நள்ளிரவுக்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ப் புறவுணர்வு திரும்பியது. பசிப்பதாகக் கூறினார். மற்றவர் களின் உதவியோடு எழுந்து உட்கார்ந்தார். எல்லோரும் ஆச்சரியப்படும்படி ஒரு கோப்பை கஞ்சி முழுவதையும்  எளிதாகக் குடித்து முடித்தார். அவர் இவ்வளவு ஆகாரம் சாப்பிட்டு எத்தனையோ நாட்களாகி விட்டிருந்தன. சாப்பிட்டு முடிந்ததும் உடம்பு தெம்பாக இருப்பதாகச் சொன்னார்.  


ஸ்ரீராமகிருஷ்ணர் தூங்குவது நல்லது என்று நரேந்திரர் கூறினார். வலியின் காரணமாக அருகில் இருப்பவரும் கேட்க முடியாதபடி மிக மெதுவாகப்பேசுகின்ற ஸ்ரீராமகிருஷ்ணர் திடீரென்று உரத்த குரலில், அம்மா, காளி! என்று மூன்றுமுறை அழைத்தார். பிறகு மெல்ல படுத்துக்கொண்டார். நரேந்திரர் கீழே சென்றார்.

இரவு ஒரு மணி இரண்டு நிமிடம், கட்டிலில் படுத்திருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் உடம்பில் திடீரென்று பரவச உணர்ச்சி பாய்ந்தது. மயிர்கள் சிலிர்த்து நின்றன. பார்வை  மூக்கு நுனியில் நிலைக்குத்தி நின்றது, உதடுகளில் புன்னகை அரும்பியது. அவர் சமாதியில் மூழ்கினார். அது இத்தனை காலமாக அவர் அனுபவித்த சாதாரண சமாதி நிலை அல்ல. மகா சமாதி, அன்னை காளியின் மடியில் அவளது அருமைச்செல்வன்  என்றென்றைக்குமாகத் துயில் கொண்ட ஆழ்ந்த சமாதி! இந்தச் சமாதிக்குப் பிறகு அவரது உயிர் உடலுக்குள் திரும்பவே இல்லை, அது 1886, ஆகஸ்ட் 16.


நான் இறக்கவில்லை


அன்னை ஸ்ரீசாரதாதேவி அப்போது  அருகில் இல்லை. விவரம் தெரிந்ததும் விரைந்து படுக்கையருகில் வந்து, அம்மா காளீ” நீ எங்கே போய் விட்டாய்  என் தாயே! என்று கதறினார். அனைவரின் இதயமும் கலங்கியது. குருதேவரின் புனிதவுடல் காசிப்பூர் மயானத்தில் எரியூட்டப்பட்டது. அஸ்தி ஒரு செம்புப் பாத்திரத்தில் சேகரிக்கப் பட்டு குருதேவர் படுத்திருந்த படுக்கையின் மீது வைக்கப் பட்டது.

முப்பத்து மூன்றே வயது நிரம்பியிருந்த அன்னை  அன்று மாலையில் விதவைக்கோலம் பூணலானார். ஆனால் அவரது கணவர்  இறந்து விட்டாரா? மரணமே இல்லாதவராயிற்றே அவர்! அன்னை தம் தங்க வளையல்களைக் கழற்ற முற்பட்டபோது அவர் முன் தோன்றினார் ஸ்ரீராமகிருஷ்ணர். நான் இறந்து போனேன் என்றா நீ உன் சுமங்கலிக்கொலத்தைக் களைகிறாய்? நான் இறக்கவில்லை.இதோ இங்கேயே இருக்கிறேன், என்று கூறி அன்னையின் முயற்சியைத் தடுத்தார். தொடர்ந்த நாட்களில் மேலும் இருமுறை தம் வளையல்களைக் கழற்ற முற்பட்டார் அன்னை. அப்போதும் குருதேவர் முன்பு போலவே தோன்றி தடுத்தார். அதன் பின் வளையல்களுடனும்  மெல்லிய கரையிட்ட சேலையுடனும் நித்திய சுமங்கலியாகவே வாழ்ந்தார் அவர்.


காசிப்பூர் மயானத்திலிருந்து ஸ்ரீராமகிருஷ்ணரின் அஸ்தியைச்சேகரித்து ஒரு கலசத்தில் அதனை சுமந்தபடி காசிப்பூர் தோட்ட வீட்டை அடைந்தார்கள் பக்தர்கள். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்  தேவ் கீ ஜெய்”  என்ற கோஷத்துடன் அதனை ஸ்ரீராமகிருஷ்ணர் படுத்திருந்த கட்டிலில் வைத்தபோது ஸ்ரீராமகிருஷ்ணரின் சான்னித்யத்தை உணர்ந்தாலும், அவர்களின் மனத்தை ஒரு வெறுமை ஆட்கொண்டது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் எந்த ஓர் அழிவற்ற அன்பினால் பிணைக்கப்பட்டிருந்தார்களோ அதே ஆழ்ந்த அன்பு இப்போதும் அவர்களைப் பிணைத்து நின்றது. ஒரே லட்சியத்துடன் வாழ்ந்த அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலும் தேறுதலும் கூறிக் கொண்டு ஆழ்ந்த நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கினார்.


வராக நகர் மடம்


ஸ்ரீராமகிருஷ்ணர் மறையவில்லை. தங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் நரேந்திரர் முதலான இளைஞர்களிடம் திடமாக இருந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் அன்னை ஸ்ரீசாரதாதேவி பல காட்சிகளைக் கண்டிருந்தார். நரேந்திரருக்கும் அத்தகைய காட்சி ஒன்று கிடைத்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் மறைந்து ஒரு வாரம் ஆகியிருக்கும். ஒரு நாள் இரவு எட்டு மணி . அவரும் ஹரீஷ் என்பவரும் பேசியவாறே தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தனர். 

அப்போது ஒளியுருவம்  ஒன்று துணியால் போர்த்தியபடி தம்மை நோக்கிச்சுமார் பத்தடி தூரத்தில் வருவதை நரேந்திரர் கண்டார். அந்த உருவம் குருதேவரைப்போல் இருந்தது. ஒரு வேளை அது தன் மனமயக்கமாக இருக்கலாம். என்று எண்ணி அவர் பேசாமல் இருந்தார்.அப்போது ஹரீஷ் நரேந்திரரைத் தொட்டு அவரது காதில் மெல்லிய குரலில், அதோ, அங்கே ஒளியுருவாக வருவது யார்? என்று கேட்டார். 

ஹரீஷீம் அந்த ஒளியுருவைக் கண்டிருக்கிறார். எனவே தான் கண்டது மனமயக்கம் அல்ல என்று தெளிந்த நரேந்திரர் உரத்த குரலில், யாரது? என்று கேட்டார். அவரது குரலைக்கேட்டு வீட்டினுள் இருந்த அனைவரும் ஓடி வந்தனர். அதற்குள் அவர்கள் கண்ணெதிரே இருந்த மல்லிகைப் புதர் ஒன்றில் அந்த உருவம் மறைந்துவிட்டது. விளக்குகள் கொண்டு வந்து தேடினர். அங்கே யாரும் இல்லை. அது ஸ்ரீராமகிருஷ்ணர் தான் என்று அனைவரும் நம்பினர்.


 ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்கிறார், அவர் தங்களுடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை காரணமாக அவர்கள் தினமும் அஸ்திக் கலசத்தின்முன்  அமர்ந்து தியானம், பிரார்த்தனை போன்றவற்றில் ஈடுபட்டனர். ஸ்ரீராமகிருஷ்ணரின் பெரு வாழ்வைப்பற்றி பேசினர். இல்லற பக்தர்களும் அவ்வப்போது வந்து அவர்களுடன் கலந்து கொண்டனர்.


அஸ்தி விஷயத்தில்  கருத்து வேற்றுமை


1886 ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் காசிப்பூர் வீட்டின் வாடகை க் காலம் நிறைவுற்றது. வீட்டைக்காலி செய்ய வேண்டியிருந்தது. அந்த  இளைஞர்கள் எங்கே போவார்கள்?அவர்களில் பலர் அந்த வீட்டிலேயே தங்கி, ஸ்ரீராமகிருஷ்ணரின்  அஸ்தியைப் பூஜித்தபடி தவ வாழ்க்கையில் ஈடுபட விரும்பினர். ஆனால் வாடகை யார் கொடுப்பது?

 பலராம் போஸ்,சுரேந்திர மித்ரர், கிரீஷ் கோஷ்,ம-முதலானோர் இனம் சீடர்கள் தங்குவதற்கான ஒரு மடம் அமைக்கலாம் என்ற கருத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.ஆனால் ராம்சந்திரர் மற்றும் ஓரிருவர் அதனை மறுத்து அந்த இளைஞர்களிடம் , இப்படி நீங்கள் வீடு வாசலை விட்டு துறவிகளாக வேண்டும் என்று குருதேவர் சொல்லவில்லை. நீங்கள் உங்கள் வீடுகளுக்குத் திரும்புங்கள். குருதேவர் கூறியது போல் குடும்பத்தில் ஓர் ஆன்மீக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அஸ்தியைப் பூஜிப்பது பற்றியும் உங்களுக்கு க் கவலை வேண்டாம். ஏனெனில் காங்குர்காச்சியில் எனக்குச் சொந்தமான தோட்டம்  ஒன்று உள்ளது. அங்கே அதனை நிறுவி தினசரி வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்துள்ளேன். அது பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றார்.


இளைஞர்கள் யாருக்கும் ராம்சந்திரரின் ஆலோசனையில் சம்மதம் இல்லை. கங்கைக் கரையில் ஓரிடத்தில் அஸ்தியை நிறுவி தினசரி வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருந்தது. இத்தகைய ஒரு கருத்தை ஸ்ரீராமகிருஷ்ணரும் முன்பு வெளியிட்டிருந்தார். ஆனால் தற்போது அதற்கு வழியில்லாதது போல் தோன்றிற்று. உடனடியாக ஓர் இடத்தை ஏற்பாடு செய்ய இயலாது. பின்னாளில் தைச்செய்யலாம், எனவே அஸ்தி தங்களிடமே இருக்கவேண்டும் என்று இளைஞர்கள் கருதினார்கள்.இந்தக் கருத்து வேற்றுமை வளர்ந்து ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது, இதையெல்லாம் கேள்விப்பட்ட அன்னை ஸ்ரீசாரதாதேவி, ஈடிணையற்ற மகாபுருஷரை இழந்து நிற்கிறோம், இவர்கள் என்னடாவென்றால் அவருடைய அஸ்திக்காக அடித்துக் கொள்கிறார்கள்” என்று வேதனையுடன் கூறினார்.


கடைசியில் நரேந்திரர் தலையிட்டு அந்த இளைஞர்களிடம், சகோதரர்களே! நாம் இப்படிச் சண்டையிடுவது சரியல்ல. பரமஹம்சரின் சீடர்கள் அஸ்திக்காக அடித்துக் கொண்டார்கள் என்று மற்றவர்கள் சொல்வதற்கு இடம் கொடுக்கவேண்டாம். அது மட்டுமல்ல, நாம் எங்கே தங்கப்போகிறோம் என்பதே இன்னும் முடிவாகவில்லை, இதில் அஸ்தியை எப்படிப் பாதுகாப்பது? ராம்பாபு தமது தோட்ட வீட்டில் அஸ்தியை நிறுவி அதனை ஸ்ரீராமகிருஷ்ணரின் பெயரில் தானே அமைக்கப்போகிறார்! தாமும் அங்கே போகலாம். அவரை வழிபடலாம், குருதேவர் காட்டிய லட்சியத்தின்படி  வாழ்ந்து காட்டினால் அது இந்த  அஸ்தியைப் பூஜிப்பதைவிட பெரிய விஷயம் என்றார். நரேந்திரர் கூறியதன் பிறகு அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டனர். ஆகஸ்ட் 23 கிருஷ்ண ஜெயந்தியன்று அஸ்தியை நிறுவுவது என்று முடிவாயிற்று.

இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொண்டாலும் ஏனோ இளைஞர்களின் மனத்தில் ஒரு நெருடல் இருக்கவே செய்தது. கடைசியில் நரேந்திரருடன் பேசி இளைஞர்கள் அனைவருமாக முடிவெடுத்து, ஆகஸ்ட் 22-ஆம் நாள் அஸ்தியின் பெரும் பகுதியைப் பிறர் அறியாமல் மற்றொரு கலசத்தில் மாற்றி தங்களுக்காக வைத்துக் கொண்டனர்.


கிருஷ்ண ஜெயந்தியன்று காலையில் சசி அஸ்திக் கலசத்தைத் தலையில் சுமந்து வர அனைவரும் காங்குர்காச்சி  சென்று அங்கே முறைப்படி அஸ்தியை நிறுவி பூஜைகள் செய்தனர். ஆனால் இளைஞர்கள் அஸ்தியைப் பிரித்துவிட்டது விரைவில் அனைவருக்கும் தெரியவந்தது.அப்போது இல்லற பக்தர்கள் , குருதேவரின் திருவுளம்  அதுவானால் அப்படியே நடக்கட்டும், என்று கூறி மௌனமானார்கள்.


காசிப்பூருக்கு விடை


ஆகஸ்ட் இறுதிக்குள் காசிப்பூர் வீட்டைக்காலி செய்தாகவேண்டும். அன்னை ஸ்ரீசாரதாதேவி எங்கே போவார்கள்? வீட்டைக்காலி செய்யாமல் இருக்குமாறு மீண்டும் ஒரு முறை பக்தர்களிடம் இளைஞர்கள் கேட்டுக்கொண்டார்கள். நாங்கள் பிச்சை எடுத்து வந்தாவது அன்னைக்கு உணவளித்து க் காப்போம்” என்று கூறிப் பார்த்தார்கள். ஆனால் இல்லற பக்தர்கள் வீட்டைக்காலி செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்கள். ஆகஸ்ட் 21-ஆம் நாள் பலராம் போஸ் அன்னையைத் தம் வீட்டிற்கு அழைத்துச்சென்று தங்கச் செய்தார். இளைஞர்கள் தங்களுக்காக வைத்த அஸ்திக் கலசத்தை அன்னை தம்முடன் எடுத்துச் சென்று பலராம் வீட்டில் தினமும் பூஜை செய்யத்தொடங்கினார் அன்னை. ஸ்ரீராமகிருஷ்ணர் உபயோகித்த பொருட்களையும் தம்முடன் கொண்டு சென்றார். ஆகஸ்ட் 30-ஆம் நாள் காளி, யோகின், லாட்டு என்று இளம் பக்தர்களுடனும் பக்தைகளுடனும் பிருந்தாவனம் முதலான இடங்களுக்குத் தீர்த்த யாத்திரை புறப்பட்டார் அன்னை.

இளைஞர்கள்?

 அவர்கள் எங்கே போவார்கள்? அன்னையுடன் ஓரிருவர் சென்றனர். ஓரிருவர் வீட்டிற்குத் திரும்பி தங்கள் படிப்பைத் தொடர்ந்தனர். நரேந்திரர் அவ்வப்போது வீட்டிற்குச்சென்று வந்தார். மூத்தகோபால் , நிரஞ்சன் என்று சிலர் வீடோ வீடு இல்லையோ, மடமோ மடம் இல்லையோ, துறவு வாழ்க்கையைத்தொடர்வத என்று முடிவு செய்தார்கள். பாம்பு தனக்கென்று வளை அமைத்துக்கொள்வதில்லை. மற்ற ஜந்துக்களின் வளைகளில் தங்குகிறது. துறவியும் அப்படியே. அவன் சத்திரம் சாவடியில் தன் வாழ்க்கையைக் கழிக்க வேண்டும், அப்படியே நாம் வாழலாம், என்றார் நிரஞ்சன். நில்லாமல் ஓடும் தண்ணீர் போல் துறவி ஓரிடத்தில் தங்காமல் பயணம் செய்யவேண்டும் என்று மற்றொருவர் கூறினார். எப்படியும் துறவு வாழ்க்கையைத்தொடர்வது என்று அவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் எங்கே தங்குவது.?


சுரேந்திரரின் மாபெரும் பங்களிப்பு


ஸ்ரீராமகிருஷ்ணர் வழிகாட்டுவார் என்று அந்த இளைஞர்கள் நம்பினார்கள். ஒரு புதிய செய்தியுடன் வந்து, அதனை உலகெங்கும் பரப்புவதற்காக இளைஞர்களையும்  பயிற்றுவித்த அவர் அருள் புரியாமல் இருப்பாரா? அருள்புரியவே செய்தார். அவரது அருட்கரம் அந்த இளைஞர்களின் துணைக்கு வந்தது!

 ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறசீடர்களில் முக்கியமான ஒருவர் சுரேந்திரநாத் மித்ரர். நரேந்திரர் இவரது வீட்டில் தான் முதன்முறையாக ஸ்ரீராமகிருஷ்ணரைச்சந்தித்தார். அவர் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த பிறகு வழக்கம் போல் படுத்திருந்தார். திடீரென்று ”சுரேன்” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது. பார்த்தால் ஸ்ரீராமகிருஷ்ணர்- உயிருணர்வுடன்  நின்றிருந்தார் அவர். அமைதியாக சுரேந்திரரைப் பார்த்துவிட்டு, என் பிள்ளைகள் இங்குமங்குமாக அலைகிறார்கள்? நீ அவர்களுக்காக எதுவும் செய்ய மாட்டாயா? என்று கேட்டு மறைந்தார். சுரேந்திரர் உடனே எழுந்து நரேந்திரரின் வீட்டிற்கு ஓடினார். அவரிடம், தம்பி, நாம் உடனே ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்துவோம். அங்கே குருதேவருக்குக்கோயில் அமைப்போம். வழிபடுவோம்.நாங்கள் குடும்ப வாழ்க்கையில் மனைவிமக்களென்று அழுந்திக் கிடந்தால்  எங்கள் நிலைமை என்ன ஆவது? ஆகவே அமைதி தேடி நாங்கள் அங்கே அடிக்கடி வருவோம். காசிப்பூர்த்தோட்ட வீட்டில் குருதேவர் தங்கியிருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை நான் அளித்து வந்தேன் அந்த தொகையை உங்களுக்கு இப்போது  சந்தோஷமாகக் கொடுக்கிறேன். அது உங்கள் செலவிற்குப்பயன்படட்டும் என்றார்.  நெகிழ்ந்தார் நரேந்திரர்!

உடனடியாக வீடு தேடும் படலம் தொடங்கியது. வராக நகரில் 10 ரூபாய் வாடகையில் ஒரு பாழடைந்த வீடு அமர்த்தப்பட்டது.இதுவே பின்னாளில் துறவியரின் இருப்பிடமாக, துறவியர் மடமாக மாறியது. இப்படி உலகின் சமய வரலாற்றில் புதிய யுகத்தின் ஆரம்பத்திற்கு அடிக்கல் அமைத்துக் கொடுத்தார் சுரேந்திரர்.வரலாற்றின் அழியா இடம் பெற்றார். சுரேந்திரரைப் பற்றி உணர்ச்சிப் பெருக்குடன் கீழ்வருமாறு எழுதுகிறார் ம-

சுரேந்திரரே! நீர் கொடுத்துவைத்தவர். முதன் முதலாக இந்த மடம் உம்மால் நிறுவப்பட்டது. இதை நிறுவுவதற்கு உமது விருப்பமே காரணமாயிருந்தது. உம்மைக் கருவியாகக் கொண்டு குருதேவரின் மூலமந்திரமான காமினீ- காஞ்சனத்துறவுக்கான சின்னம் அமைக்கப் பட்டது.தூய மனம் படைத்த நரேந்திரர் முதலிய இளந்துறவியரின் மூலம் அழிவற்ற இந்து மதத்தை மக்களின் முன் நிலை நாட்டினார் குருதேவர். சகோதரரே! உமக்கு யார் நன்றிக்கடன் செலுத்த முடியும்! அந்த இளந்துறவியர் தாயில்லாக் குழந்தைகள் போல் , நீங்கள்  எப்போது வருவீர்கள்? என்று உம்மை எதிர்பார்த்து நின்றனர். இன்று  வீட்டு வாடகை கொடுத்ததால் பணமெல்லாம் தீர்ந்துவிட்டது. உண்ண உணவில்லை நீங்கள் வந்தால் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்வீர்கள். நீங்கள் எப்போது வருவீர்கள்? என்று எதிர் பார்த்திருந்தனர். உமது அன்பையும் எதையும் எதிர்பாராத சேவையையும் நினைத்தால் யாருடைய கண்களில் தான் நீர் வழியாது.


வரலாற்றுப் புகழ் மிக்க ராமகிருஷ்ண மடம் இவ்வாறு செப்டம்பர் , அக்டோபர் 1886-இல் ஆரம்பிக்கப் பட்டது. முதலில், ஒருசில மாதங்களுக்குச் சுரேந்திரர்  மாதந்தோறும் 30 ரூபாய் வழங்கி வந்தார். பின்னர் மடத்தில் படிப்படியாக அதிகம்பேர் தங்கத் தொடங்கியதால் அதை 60 ரூபாயாக அதிகரித்தார். பிறகு 100 ரூபாயாக உயர்த்தினார். ஒரு மாதத்திற்கு வீட்டு வாடகை ரூ.11, சமையற்காரருக்குச் சம்பளம் ரூ.6, எஞ்சிய தொகை உணவிற்காகச் செலவழிக்கப் பட்டது. இளையகோபாலிடம் மடத்தில் தங்குமாறும் அவரது குடும்பச்செலவைத் தாம் ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார் சுரேந்திரர். இளைய கோபாலும் ஏற்றுக்கொண்டார். 


இளையகோபாலின் மூலம் மடத்து நிலைமையைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப உதவி செய்தார் அவர். பலராமும் இளைஞர்களுக்கு உதவி செய்தார். சுரேந்திரர்(1890மே25) பலராம் போஸ்(1890 ஏப்ரல் 13) ஆகிய இருவரின்  மரணத்திற்குப் பிறகு கிரீஷ் மடத்தின் செலவுகளை ஏற்றுக்கொண்டார். 

வராக நகரைச்சேர்ந்த யோகேந்திர நாத் சட்டர்ஜி என்பவரும் எப்போதாவது மடத்தில் உணவுப்பற்றாக்குறை இருப்பதாகக்கேள்விப்பட்டால் உடனடியாக முன்வந்து உதவிசெய்தார். இவ்வாறு ஆரம்ப நாட்களில் இளைஞர்களுக்கு உதவியதன் மூலம் இவர்கள் ராமகிருஷ்ண இயக்க வரலாற்றில் அழியாப்புகழ் பெற்றார்கள். 


இளைஞர்களில் சிலர் குருதேவரின் மறைவிற்குப் பிறகு வீட்டில் படிப்பைத் தொடர்ந்தனர். ஆனால் நரேந்திரர் அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. வராக நகர் மடம் தொடங்கு முன்பே நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று அவர்களைச் சந்தித்து துறவு வாழ்க்கையைப் பற்றி பேசுவார்.இந்தப் படிப்பெல்லாம் எதற்கு? 


இறையனுபூதி பெறாவிட்டால் வாழ்க்கையே வீண்.தேர்வை விட்டுத் தள்ளுங்கள், பட்டங்களை உதறுங்கள். கடவுளை அறிவோம். அனுபூதி பெறுவோம். மற்ற எந்த  அறிவினாலும் ஒரு பயனும் இல்லை. எல்லாம் அறியாமை, எல்லாம் முட்டாள் தனம். நமது குருதேவர் மட்டுமே உண்மை” என் றெல்லாம் அவர்களிடம் பேசி அவர்களின்  மனம் துறவுப் பாதையிலிருந்து விலகாமல் பார்த்துக்கொண்டார். இரவு பகலின்றி எப்போது நேரம் கிடைத்தாலும் அவர்களின் வீட்டிற்குச்சென்றார்.


நரேந்திரர் போவதை  மற்ற இளைஞர்கள் சிலரது வீட்டினர் விரும்பவில்லை. அவரால் தங்கள் பிள்ளைகளும் படிப்பைக் கைவிடுவதாக அவர்கள் நினைத்தனர். எனவே நரேந்திரர் சென்றால்அவரை வரவேற்பதோ உபசரிப்பதோ கிடையாது. சிலநேரங்களில் அவர் செல்லும்போது கதவைக்கூட சாத்தினர்.... துயரம் என்னவென்றால் , சில இளைஞர்களே நரேந்திரர் போவதை விரும்பாமல் இருந்தனர். அவர் வருவதால் தங்கள் படிப்பு கெடுவதாக நினைத்து, நரேந்திரர் சென்றாலே ஏதாவது அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டனர்.


நரேந்திரர் விட மாட்டார். அவர்கள் எரிச்சலடைந்தோ  பயந்தோ திறக்கும் வரை கதவைத் தட்டிக்கொண்டிருப்பார். பின்னர் அவர் களுடன் அங்கே அமர்ந்தோ அல்லது தெருவில் நடந்த படியோ பேசுவார். குருதேவரின் மகிமைகளை எடுத்துக் கூறுவார். துறவு வாழ்வின் பெருமைகளைப் பற்றிபேசுவார். எதிர்ப்பு, ஏச்சு, அவமதிப்பு, எதையும் அவர் பொருட்படுத்த வில்லை. ஏனெனில் குருதேவர் அளித்த பணி ஒன்றே அவரது நெஞ்சில் நிறைந்திருந்தது. வறுமை, நீதி மன்றம், வழக்கு என்று வீட்டுப் பிரச்சனைகள் சுமையாக அழுத்திக்கொண்டிருந்த நேரத்தில், இப்படி பலரது ஏச்சையும் அவமதிப்பையும் ஏற்றுக்கொண்டு, அனைவரையும் ஒருங்கிணைத்தார் அவர் என்பதைக்கருத்தில் கொள்ள வேண்டும்.


கடைசியில் நரேந்திரரின் அன்பிற்கும் விடாமுயற்சிக்கும்  அனைவரும் கட்டுப்பட வேண்டியதாயிற்று. 1886 டிசம்பரில் ஏறக்குறைய அனைவரையும் மடத்தில் சேர்த்து விட்டார் நரேந்திரர். இதன் பிறகு தான் உண்மையில் மடத்து வாழ்க்கை ஆரம்பித்தது. தாங்கள் மறுத்தும் பெற்றோர்  மறுத்தும், எதிர்ப்புகளையும் அவமதிப்புகளையும்  பொருட்படுத்தாமல் தங்களை இந்த வாழ்க்கைக்குக் கொண்டு வந்த நரேந்திரர் மீது மற்ற இளைஞர்களின் நெஞ்சம் நன்றியால் நிறைந்தது. அவரை அனைவரும் மனப்பூர்வமாக தங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டனர். பலர் அவரைக் குருவாகவே மதித்தனர்.


வராக நகர் மடம் தோற்றம்


சுரேந்திரர், மாதம்தோறும் அளித்தது 30 ரூபாய். சுமார் 15 பேருக்கு ஒரு மாதச் செவிற்கான பணம் அது. உணவு, உடை , இதர செலவுகள் இவற்றுடன் வாடகையும் இதிலிருந்தே கொடுக்க வேண்டும். அதிக அளவாக 10 ரூபாய்க்கு மேல் வாடகை கொடுக்க இயலாது. அந்தக் பணத்திற்குள் ஒரு வீடு தேடியாக வேண்டும். தேடினார்கள். மனிதர்கள் தங்குகின்ற நிலையிலுள்ள எந்த வீடும் அந்த வாடகைக்குக் கிடைக்க வில்லை. கிடைத்தது ஒரு பாழடைந்த வீடு. பேய்கள் நடமாட்டம் இருப்பதாக ஒரு வதந்தி உலவியதால் அந்த வீட்டில் யாரும் தங்கவில்லை. பரவாயில்லை, நாங்களே, ஒரு விதத்தில் பேய்கள் தான். எங்களை எந்தப்பேயும் எதுவும் செய்ய இயலாது” என்று அந்த வீட்டைத் தஞ்சமடைந்தனர் இளம் துறவியர். அது ஒரு மாடி வீடு. முற்றிலுமாகச் சிதிலமடைந்து ஆங்காங்கே இடிந்து வீழ்ந்து பார்ப்பதற்கே ஒரு பயங்கரத்தோற்றத்தை அளித்துக்கொண்டிருந்தது. கீழ்தளம் யாரும் தங்க இயலாத அளவிற்கு இடிந்து, செடிகொடிகள்  முளைத்து பொந்தும் புதருமாகக் கிடந்தது. அதில் பாம்புகளும் நரிகளும் இன்னும் பல்வேறு உயிரினங்களும் வசித்து வந்தன. நீண்ட நாட்களாகத் தங்கி இருக்கின்ற அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று  இந்தப் புதுயுகத் துறவியர் மாடிப் பகுதியை மட்டும் பயன்படுத்தினர்.

கட்டிடத்தின் பின்புறத்திலோ தோட்டம் என்ற பெயரில் புதர்கள் மண்டிக் கிடந்தன. பின்னால் ஒரு சிறிய குளம் இருந்தது. அதிலுள்ள தண்ணீர் பாசிபிடித்து, கொசுக்களின் உற்பத்தித் தலமாக ஆகிவிட்டிருந்தது.


மாடியில் சிறிதும் பெரிதுமாகப் பல அறைகள் இருந்தன. அவற்றில் ஜன்னல், கதவு, என்ற பெயரில் வெறும் சட்டங்கள் எஞ்சியிருந்தன. உத்திரங்கள் பல இடங்களில் பழுதடைந்து, அவற்றிற்குப் பதிலாக மூங்கில்கள் வைக்கப் பட்டிருந்தன.

தென்கோடியிலிருந்த ஓர் அறையைத் தனிமையில் தியானம் செய்வதற்கும், படிப்பதற்கும் ஒதுக்கினர். காளி இந்த அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டு நீண்ட நேரம் இருப்பது வழக்கம். எனவே இந்த அறையை ” காளி தபஸ்வியின் அறை” என்று அழைத்தார். இதற்கு வடக்கு அறை பூஜையறை, அதையடுத்து நிவேதனம் தயாரிக்கும் அறை. இந்த அறையில் அமர்ந்து கொண்டும் ஆரதி தரிசனம் செய்யலாம். 

பக்தர்கள் பெரும்பாலும் இங்கிருந்தே குருதேவரை வணங்கினர். நிவேதனம் தயாரிக்கும் அறைக்கு வடக்கில் தானவர் அறை. இது விசாலமான கூடம். மடத்து சகோதரர்கள் இங்குதான் ஒன்று கூடுவர். பக்தர்களும் விருந்தினர்களும் வந்தால் அவர்களை வரவேற்பதும்  இங்குதான். இந்த அறைக்குத் தள்ளி வடக்கிலுள்ள இன்னொரு சிறிய அறையில் பக்தர்கள் சாப்பிடுவார்கள். வரவேற்பறைக்கு க் கிழக்கே ஒரு வராந்தா இருந்தது. திருவிழா நாட்களில் பக்தர்கள் இங்குதான் சாப்பிடுவார்கள். வராந்தாவிற்கு வடக்கே சமையலறை இருந்தது. நரேந்திரரும் மற்ற சகோதரர்களும்  சிலசமயம் மாலைவேளைகளில் மொட்டை மாடிக்குச் செல்வார்கள். அங்கே அமர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள், சங்கரர், ராமானுஜர், ஏசுநாதர், நம் நாட்டு மேலைநாட்டு தத்துவங்கள், வேதம், புராணம், தந்திரம், போன்றவைப்பற்றி பேசி மகிழ்வார்கள்.


 MAIN PAGE 

image117

மடத்து வாழ்க்கை

மடத்து வாழ்க்கை


முதன் முறையாக மடத்தில் வந்து நிரந்தரமாகத் தங்கியவர் மூத்தகோபால், சரத் சில நாட்கள் தங்கினார். சசி, பாபுராம், நிரஞ்சன், காளி ஆகியோர் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம்  வந்து போய்க் கொண்டிருந்தனர். 

பிருந்தாவனத்திலிருந்து திரும்பி வந்துதாரக் நிரந்தரமாக மடத்தில் தங்கலானார்.1887 ஜீனிலிருந்து நரேந்திரர் மடத்தில் நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினார்.அந்த நாட்களில் அவர்கள் தங்கள் சொந்த வீட்டில் வசிக்கவில்லை. குடும்பத் தகராறு காரணமாக, அவரது தந்தை இருந்த நாட்களிலேயே வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தனர். நரேந்திரர் மடத்தில் தங்கிய பிறகு புவனேசுவரி தேவி தமது தாயாரின் வீட்டில் வாழத் தொடங்கினார். நரேந்திரரின்  தம்பியான மகேந்திரர் அவ்வப்போது மடத்திற்கு வந்தார். சில வேளைகளில் ஓரிரு நாட்கள் தங்க வும் செய்தார்.


இல்லற பக்தர்கள் அடிக்கடி மடத்திற்கு வந்து அவர்களைக் கண்டு பேசி மகிழ்ந்தனர். அவர்களுடன் தியானம் செய்வதும் சாஸ்திரங்களைப் படிப்பதுமாக பல மணி நேரங்கள், சிலவேளைகளில் பல நாட்கள் என்று காலம் கழித்தனர். அவர்களில் ஒருவரான ம-வராக நகர் மடத்துத் தவ வாழ்க்கையைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.


வராகநகர் மடத்தில் இந்த இளந்துறவிகள்  வாழ்ந்த தீவிர ஆன்மீக வாழ்க்கையை என்னென்பது! புற உலகிலிருந்து மறைந்து விட்ட குருதேவரைத் தங்கள் அகத்தில் எழுந்தருளச்செய்ய வேண்டும் என்ற வேகத்துடன் அவர்கள் இருந்தனர். இடையிடையே அவர்கள் பெற்ற தெய்வீகக் காட்சிகள், எத்தகைய வறுமையையும் வேதனையையும்  புறக்கணிப்பையும் இகழ்ச்சிகளையும் பொருட்படுத்தாமல் மேன்மேலும் முயலும் அளவிற்கு அவர்களைப் பித்தர்களாக்கின. புறவுலக உணர்வு அற்றவர்களாக , பக்திப் பாடல்களைப் பாடுவதிலும் ஆடுவதிலும் சுவை கண்டவர்களாக அல்லும் பகலும்  பிரார்த்தனைகளிலும் தியானத்திலும் சாஸ்திரங்களைப் படிப்பதிலும் ஆர்வம் கொண்டவர்களாக அவர்கள் விளங்கினர். அவர்களது வாழ்க்கையின் ஒரே குறிக்கோள்  இறைவனைக் காண்பது என்பதாக இருந்தது. வேத புராண, தந்திர நூல்களில் கூறப்பட்ட துறவு வாழ்க்கைக்கான நியதிகளை முழுமனத்தோடு அவர்கள் பின்பற்றத் தொடங்கினர். பகற் பொழுதில் மடத்திலும் மரத்தடியிலும் , நடுநிசியில் அருகிலிருந்த மயானத்திலும்  கங்கைக் கரையிலும் ஆன்மீக சாதனைகளைப் பழகினர். தவம் செய்தனர். குருதேவர் தேர்வு செய்து காட்டிய ஒப்பற்ற தவ முயற்சிகளைப் பற்றிய நினைவு அவர்களுடைய தவக்கனலைக் கொழுந்து விட்டெரியச்செய்தது. தொடர்ந்து தியானம் செய்வதற்காக பட்டினி கிடந்து சாவதற்கும் அந்த இளைஞர்கள் தயாராக இருந்தனர்.

அந்த நாட்களைப் பற்றி பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கூறினார்.

குருதேவர் இவ்வுலக வாழ்வை நீத்த பிறகு வராக நகர் மடத்தில் நாங்கள் தீவிரமான சாதனைகள் செய்தோம். காலை மூன்று மணிக்கு எழுவோம். குளித்துவிட்டு அல்லது முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு பூஜையறையில் ஜப தியானத்தில் மூழ்குவோம். அந்த நாட்களில் எவ்வளவு வைராக்கியத்துடன் இருந்தோம். உலகம் இருந்ததா இல்லையா என்ற நினைப்பே எங்களிடம் இருக்கவில்லை. சசி இரவும் பகலும் ஸ்ரீராமகிருஷ்ணரின் பூஜையிலும் சேவையிலும் ஈடுபட்டிருந்தான். இல்லத் தலைவியைப்போல்  செயல்பட்டான் அவன்..


ஸ்ரீராமகிருஷ்ணரின் பூஜைக்கான பொருட்களையும் எங்களுக்கு வேண்டிய உணவையும் பிச்சை எடுத்தாவது தேடி வைப்பான். ஜபம், தியானம் என்னும் சாதனை வெள்ளத்தில் நாங்கள் அடித்துச்செல்லப்பட்டோம். காலை முதல் மாலை ஐந்து மணி வரை ஜபமும் தியானமும் நடந்த நாட்கள் கூட உண்டு. ஆகா அவை எத்தனை அற்புதமான நாட்கள்! அன்றைய எங்கள் தீவிர தவம், பேய்களையே நடுங்கச்செய்திருக்கும். மனிதர்களைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது.

நரேந்திரரைப்பொறுத்தவரை அவர் இருபத்து நான்கு மணி நேரமும் வேலை செய்தார் என்று தான் சொல்லவேண்டும்.ஒரு வெறித்தனமாக அவர் செயல்பட்டது போலவே தோன்றிற்று. அதிகாலையில் எழுந்துவிடுவார். பின்னர் , எழுந்திருங்கள், எழுந்திருங்கள் தெய்வீக அழுதத்தைப் பருகுபவர்களே எழுந்திருங்கள்! என்று அனைவரையும் எழுப்புவார். பிறகு அனைவருமாகச் சென்று தியானத்தில் அமர்வார்கள். பஜனை, கலந்துரையாடல் என்று மதியம் வரை ஈடுபட்டிருப்பார்கள். சசி அதற்குள் சமையல், பூஜை முதலானவற்றை முடித்துவிட்டு அவர்களைச்சாப்பிட அழைப்பார். அதன்பிறகும் பேச்சும் பஜனையும் தொடரும்.பிறகு மாலை ஆரதி, சிலவேளைகளில் காலையில் தொடங்கும் பஜனை, உணவு ஓய்வு எதுவுமின்றி இரவு வரை நடந்த நாட்களும் உண்டு. சிலநேரங்களில் மாடியில் அமர்ந்து அனைவருமாக இரவு நெடுநேரம் வரை ராமநாம ஜபம் செய்வார்கள்.


நரேந்திரரின் தியான வாழ்வும் மிகத்தீவிரமாக இருந்தது. இரவு 9மணிக்கு தியானத்தில் அமர்வார். காலை 5 மணிவரை அப்படியே தியானத்தில் மூழ்கியிருப்பார்.

பிறகு எழுந்து குளிக்கச்செல்வார். 

ஒரு கம்பளம் போர்த்தியது போல் கொசுக்கூட்டம் அவர் உடம்பின்மீது அமர்ந்திருக்கும். அந்த உணர்வே அவருக்கு இருக்காது. சிவபெருமான் தியானத்தில் மூழ்கியிருப்பது போல் இருப்பார் அவர். 

புலன்களும் மனமும் அவருக்கு முழுமையாகக் கட்டுப்பட்டிருந்தது. முற்றிலுமாக சமத்துவ நிலையில் இருந்தார். அவர். இது சத்வ குணத்தின் அடையாளம். இது கேள்வி ஞானம் அல்ல. நான் அவரது அருகில் இருந்து பார்த்தது என்று பின்னாளில் ஹரி(துரியானந்தர்) கூறினார்.


வறுமை


சமுதாயத்தின் எதிர்ப்பு அல்லது புறக்கணிப்பு , வீட்டினரின் வற்புறுத்தல் என்று அந்த இளம் துறவியரின் புறவாழ்க்கை அமைந்தது. அக வாழ்க்கையோ ஜபம், தியானம், சாஸ்திரப்படிப்பு என்று தீவிரமான இறைநெறியில் சென்றது. வறுமை அவர்களின் நிரந்தர நண்பனாக இருந்தது. சுரேந்திரர் அதிகபட்சமாக மாதந்தோறும் ரூ.100 கொடுத்தார். பலராம்-ம- மற்றும் சிலர் அவ்வப்போது உதவி செய்தனர். ஆனால் சுமார் 15 பேருக்கு உணவு , உடை, வாடகை அனைத்திற்கும் இந்தப் பணம் போதுமானதாக இல்லை. அது பற்றி சுவாமி விவேகானந்தர் கூறினார்.


பணம் இல்லாததால் மடத்தையே மூடிவிடலாம் என்று கூட நான் நினைத்தது உண்டு.ஆனால் சசியை அதை ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய முடியவில்லை.  அவனே இந்த மடத்திற்கு நடுநாயகமானவன். மடத்தில் ஒன்றுமே இல்லாத நாட்கள் கூட இருந்தன. பிச்சையெடுத்துச் சிறிது அரிசி கிடைத்தால் உப்பு இருக்காது. பல நாட்கள் உப்பிட்ட சோறு தான் எங்கள் உணவு. ஆனால் சாப்பாட்டைப்பற்றி நாங்கள் யாரும் கவலைப் படவில்லை. வேகவைத்த கீரையும் உப்பிட்டசோறுமே ஒரு மாதத்திற்கு உணவாக இருந்ததும் உண்டு. சசி உணவைத் தயார் செய்து வைத்துக்கொண்டு எங்களுக்காகக் காத்திருந்து , இறுதியில் தியானித்து க் கொண்டிருக்கும் எங்களை இழுத்துச்சென்று உணவு ஊட்டுவான். அவனது ஒருமைப்பட்ட ஈடுபாடுதான் எவ்வளவு அற்புதமானது.


கருணை இதயம்


 உடை விஷயமும் அப்படியே. அனைவருக்கும் சொந்தமாக இருந்தது ஒரு வேட்டி, ஒரு துண்டு. வெளியில் செல்பவர்கள் அதனை அணிந்துகொள்வார்கள். மற்றபடி ஆளுக்கொரு கௌபீனம், ஒரு துண்டு மட்டுமே அவர்களது உடை.

வீட்டுப் பிரச்சனைகள் ஒரு பக்கம், மடத்தின் வறுமை நிலைமை ஒரு பக்கம் என்று இருந்தாலும் நரேந்திரரின் கருணை இதயம் எப்போதும் பிறருக்காகத் துடித்துக்கொண்டே இருந்தது. ஒரு நாள் அவர் பலராம் போஸின் வீட்டில் அமர்ந்திருந்தார். தவறான வாழ்க்கை வாழ்கிறார் என்று பலரும் ஒதுக்கி வைத்திருந்த நண்பர் ஒருவர் அங்கே நரேந்திரரைக்காண வந்தார். 

வங்க வாசி பத்திரிகைக்கும், தாரகேசுவரர் சிவன் கோயில் நிர்வாகிக்கும் இடையில் உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு பற்றி பேச்சு வந்தது. அது பற்றிய செய்திகள் அன்றைய செய்தித்தாள்களில் வெளி வந்த வண்ணம் இருந்தன. அந்த வழக்கின் போக்கையும் வாதங்களையும் அறிந்திருந்த நரேந்திரர் அவைப்பற்றி கேலியாகக்கூறிவிட்டு, நான் அந்தக்கோயில் நிர்வாகியின் வக்கீலாக இருந்தால் இப்படித்தான் வாதிடுவேன்” என்று பல்வேறு வாதங்களை எடுத்துரைத்தார். மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளான நண்பர் ஒன்று விடாமல் அத்தனை வாதங்களையும் குறித்து வைத்துக்கொண்டார்.


பிறகு நேராக க்கோயில் நிர்வாகியிடம் சென்று அந்த வாதங்களைக்கூறி , சன்மானமாக ரூ.250 பெற்றுக்கொள்ளவும் செய்தார். மறுநாள் அவர் இதை நரேந்திரரிடம் தெரிவித்தபோது நரேந்திரர் சிரித்தார். இது பற்றி கேள்விப்பட்ட சரத் ஆத்திரத்திற்கு உள்ளானார். அதற்கு நரேந்திரர் போகட்டும்! அவன் வறுமையில் வாடுகிறான். என்னால் அவனுக்கு வேறு எந்த உதவியும் செய்ய இயலாது, இப்படியாவது அவனுக்கு ஒரு வேளை உணவிற்கு வகை செய்ய முடிந்ததே என்று எனக்குத் திருப்தியாக இருக்கிறது என்றார். அத்தகைய உருகும் இதயம் நரேந்திரருடையது.


படிப்பு


ஆன்மீக வாழ்க்கையில் படிப்பிற்கு முக்கிய இடம் உண்டு. தொடர்ந்து இறைநினைவுகளில் மனத்தை வைக்க முடியாத போது, மனம் கீழ்நிலைகளுக்குச்செல்லாமல் பாதுகாக்கப் படிப்பு உதவுகிறது. உண்மையான அறிவு தாகம் உடையவர்கள் மனம் கீழ் நோக்கிப்போவதிலிருந்து  தப்பித்துக்கொள்கிறார்கள். எனவேபடிப்பையும் ஒரு தவமாக க் கண்டனர் நமது முன்னோர். கற்றலும் கற்பித்தலுமே முக்கியம். அதுவே தவம், அதுவே தவம் என்று கூறுகிறார்  நாக மௌத்கல்யர் என்ற உபநிஷத முனிவர்.


புதிய சமுதாயத்தைப்படைக்க வந்தவர்களான இந்தப் புதிய துறவியர் இதில் ஒரு புதுமையைப் புகுத்தினார்கள் பொதுவாக வேதங்கள், உபநிஷதங்கள், கீதை போன்ற சமய இலக்கியங்கள் மட்டுமே துறவியரின் படிப்பில் இடம் பெற்றிருக்கும். ஆனால் வராக நகர மடத்துத் துறவியர்  மற்ற நூல்களையும் படித்தார்கள். சமுதாயக் கடமைகளை வலியுறுத்தி இந்திய வரலாற்றில் எழுந்த முதல் துறவியர் சங்கம், என்று ராமகிருஷ்ண துறவியர் சங்கத்தைப்பற்றி எழுதினார் நிவேதிதை. சமுதாயத்திலிருந்து விலகாமல், அதனுடனேயே தங்களைப் பிணைத்துக்கொண்டு வாழ வேண்டும் என்பதால் அவர்கள் சமுதாய சம்பந்தமான மற்ற நூல்களையும் படித்தனர். 


மார்க் ட்வெயினின் நூல்களையும் The Innocents A t Home,The Innocents Abroad போன்ற நூல்களையும் விரும்பிப் படித்தார் சசி. சிலவேளைகளில் அவர் தமக்கு மிகவும் பிடித்த கணித பாடப் புத்தகத்தை வைத்து கொண்டு அல்ஜீப்ரா கணிதங்களையும் போடுவதுண்டு. அறிவின் களஞ்சியமாகத் திகழ்ந்த நரேந்திரர் அந்த இளம் துறவியருக்குத்  தத்துவம், மதம், வரலாறு, சமூகஇயல், இலக்கியம், கலை, விஞ்ஞானம் என்று பல வகுப்புகள் நடத்தினார். பொதுவாக அவர் சொற்பொழிவு பாணியிலேயே வகுப்புகளை நடத்தினார். அதாவது அங்குமிங்கும் நடந்தபடியே பேசுவார். சிலவேளைகளில் தோட்டத்தில் வில்வ மரத்தடியில் வகுப்புகள் நடைபெறும். இந்தியத் தத்துவம், மேலைத் தத்துவம், புத்தமதம் என்று பல்வேறு தத்துவச் சிந்தனைகள் அலசப்பட்டன. 

சரத்திற்கு அவர் சங்கீதம்  கற்றுத் தந்தார். காளிக்கு பக்வாஜ் வாசிக்கக் கற்றுத்தந்தார். அவ்வப்போது எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வார்கள். சிலவேளைகளில் பலராம் போஸ், கிரீஷ், ராம்சந்திரர் போன்றோரின் வீட்டிற்குச்சென்றும்  பஜனைகள் செய்வதுண்டு.

வேடிக்கை வினோதம்

இவ்வளவு தீவிரமான வாழ்க்கைக்கு இடையிலும் அந்த இளைஞர்கள் தங்கள் வேடிக்கை வினோதங்களை விடவில்லை.


 ஒரு நாள் நரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சமாதிநிலையை நடித்துக் காட்டினார். ஒரு ரசகுல்லாவை வாயில் வைத்துக்கொண்டு அசையாமல் நின்றார். கண்கள் இமைக்கவில்லை. ஒரு பக்தர்” அவர் விழுந்து விடாமல் தாங்கிப் பிடித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு நரேந்திரர் ரசகுல்லாவை வாயில் வைத்தபடியே கண் திறந்து ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது போல், நான் நன்றாக இருக்கிறேன்” என்றார். எல்லோரும் உரக்கச் சிரித்தனர்.


மற்றொரு நாள் ஒரு சகோதரர் படுத்துக்கொண்டு, இறைவனைக் காணாத பிரிவுத்துன்பம் தாங்க மாட்டாதவர் போல், ஐயோ, ஒரு கத்தியைத் தாருங்கள். இனி வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை. இனிமேலும் இதைப்பொறுக்க முடியாது” என்றார்.  உடனே நரேந்திரர் கம்பீரமாக , இதோ பக்கத்திலேயே இருக்கிறது சக்தி! எடுத்து குத்திக்கொள் என்றார். எல்லோரும் சிரித்தனர்.


உயரத் தளங்களில்


மடத்தின் நிர்வாகம், வீட்டின் பிரச்சனைகள் எதுவும் நரேந்திரரின் ஆன்மீக உயர்நிலைகளைக் குலைக்கவில்லை. அவரது மனம் எப்போதும் உயரத் தளங்களிலேயே சஞ்சரித்தது. ஒரு நாள் மாலை 4 மணி இருக்கலாம். அன்று நரேந்திரரைக் காண்பதற்காக அவரது சகோதரரான மகேந்திரர் மடத்திற்கு வந்திருந்தார். படிகளில் ஏறி மாடி வராந்தாவில் சென்றால் அங்கே நரேந்திரர் நடந்து கொண்டிருந்தார். நடந்து கொண்டிருந்தாரா அல்லது யாராவது அவரை நடக்க வைத்துக்கொண்டிருந்தார்களா என்பது புரியவில்லை. அத்தகைய ஒரு நிலையில் அவர் இருந்தார். நிலைத்த கண்கள், மேல்நோக்கியபார்வை , உடலுணர்வே இல்லாதது போன்ற தோற்றம், புனிதப் பேரொளி யில்  பொலிந்த முகம், கலைக்க முடியாததொரு பேரமைதி அந்த இடம் முழுவதும் நிலவியது.


மகேந்திரர் பலமுறை நரேந்திரரை அழைத்தார். பதில் இல்லை. அவர் நடந்து தம் பக்கத்தில வந்தபோது உரத்த குரலில் அழைத்துப் பார்த்தார்்். நரேந்திரரிடமிருந்து எந்த  மறுமொழியும் இல்லை. மகேந்திரருக்குப் பயமாகி விட்டது. திரும்பி சிறிது தூரம் சென்றால் அங்கே ராக்கால், சரத்  என்று பலரும் கைகளைப் பிசைந்த வண்ணம் நின்று கொண்டிருந்தனர். மதியம் ஒன்றரையிலிருந்தே இப்படித்தான் இருக்கிறான். இப்படி அவனை நாங்கள் கண்டதே இல்லை.  சில நாட்கள் ஜபதியானத்தில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார். சவிகல்ப சமாதி, நிர்விகல்ப சமாதி என்றெல்லாம் பல ஆழ்ந்த விஷயங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தான். 

அவற்றையெல்லாம் சிந்தித்ததில் அவனது மனம் உயரத் தளங்களில் திளைக்கிறது. நீ ஏதாவது முயற்சி செய்து அவனது மனத்தை ச் சாதாரண நிலைக்குக்கொண்டுவர முடியுமா பார், இப்படி உயர்ந்த நிலைகளில் மனம் செல்லுமானால்  அவனது உடம்பு நிலைக்காது என்று குருதேவர் கூறுவார். நாங்கள் மிகவும் கலங்கிப்போயுள்ளோம் என்று அவர்கள் மகேந்திரரிடம் கூறினர்.

நேரம் இருட்டத்தொடங்கியது. மகேந்திரர் நரேந்திரரின் அருகில் சென்று உரத்த குரலில் அவரது பெயரைக் கூப்பிட ஆரம்பித்தார். எந்தப் பயனும் இல்லை. கால்கள் நடந்து கொண்டே இருந்தன. முகம், கண்கள், எல்லாம் எங்கேயோ பார்த்தபடி இருந்தன. அவர் சாதாரண நிலையை அடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. 

மகேந்திரரும் விடாமல் குரலை உயர்த்தியதுடன் ஏசவும் ஆரம்பித்தார். ஏழெட்டு நிமிடங்கள் கழிந்தன.  அதன்பிறகு நரேந்திரர் படிப்படியாகச் சாதாரண நிலைக்குவர ஆரம்பித்தார். எல்லையற்றுப் பரந்த ஒளிமயமான உலகைப் பார்த்திருந்த அவரது கண்கள் இருளும் ஒளியும் மாறிமாறி வருகின்ற இந்த உலகைப் பார்ப்பது போல் பார்த்தன. புதிய உலகைப் பார்ப்பது போல் அவரது கண்கள் எதிலும் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் சுழன்றன. இறுதியாக தெளிவற்ற குரலில், என்ன இது, என்ன இது, என்று வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வெளிவந்தன. நீண்ட நேரத்திற்குப் பிறகு அவர் புற உலக நினைவை முழுமையாகப்பெற்றார்.


வளர்ந்தது செந்தீ ஆன்ட்பூர்


ஆன்மீக சாதனைகள், அனுபவங்கள், படிப்பு, வேடிக்கை வினோதங்கள் என்று சென்று கொண்டிருந்த இளைஞர்களின் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர்களில் ஒருவரான பாபுராமின் தாயார் மாதங்கினிதேவி ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யை ஆவார். அவர் அவரது சீடர்களிடம் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தார். டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் அவர்களைத்தம் வீட்டிற்கு அழைத்தார் அவர். அவரது வீடு கல்கத்தாவிலிருந்து சுமார் 24 மைல் தொலைவிலுள்ள ஆன்ட்பூர் என்ற கிராமத்தில் இருந்தது. அவரது அழைப்பை ஏற்று நரேந்திரர், பாபுராம், சரத், சசி, தாரக், காளி, நிரஞ்சன், கங்காதர் , சாரதா ஆகியோர் சென்றனர். அங்கே அவர்களின் சாதனை வாழ்க்கை தொடர்ந்தது. சில நாட்களில் ராக்காலும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.


ஒரு நாள் இரவு, துனி அக்கினி வளர்த்து அனைவரும் அதைச்சுற்றி அமர்ந்து  ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டனர். தீயின் செந்நாக்குகள் ஓங்கி வளர்ந்தன. அவர்களின் மனத்தில் துறவுத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. ஏதோ ஓர் ஆவேசத்திற்கு ஆட்பட்டவர்போல் நரேந்திரர் துறவின் பெருமையைப்பற்றி பேசினார். ஏசு நாதரைப்பற்றி பேசினார். அவரது சீடர்கள் எப்படி அவரது செய்திகளை உலகெங்கிலும் பரப்பினார்களோ அது போல் தங்கள் வாழ்க்கையையும் அர்பணித்துக் கொள்ள வேண்டும் என்று உணர்ச்சி பூர்வமாக எடுத்துரைத்தார். ஓர் அசாதாரணமான அமைதி அவர்களை ஆட்கொண்டது. அனைவரும் நீண்ட நேரம் தியானம் செய்தனர். ஸ்ரீராமகிருஷ்ணர் அவர்களின் உள்ளங்களில் ஏற்றி வைத்த துறவு தீபம் அன்று சுடர்விட்டு எரிய ஆரம்பித்தது. பிறகு தான் அன்று கிறிஸ்மசுக்கு முந்திய நாள்(டிசம்பர் 24-1886) என்பது அவர்களின் நினைவிற்கு வந்தது. குருதேவர் எங்களைத்துறவிகள் ஆக்கியிருந்தார். ஆனால் ஓர் ஒருங்கிணைந்த அமைப்பாகவேலை  செய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஆன்ட்பூரில் தான் வலுப்பட்டது. என்று பின்னாளில் தாரக்(சிவானந்தர்) கூறினார். ஒரு வாரம் ஆன்ட்பூரில் தங்கிவிட்டு அனைவரும் கல்கத்தாவிற்குத் திரும்பினர்.


விரஜா ஹோமம்


மனத்தளவில் துறவிகளாகவே இருந்தார்கள். அந்த இளைஞர்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் அவர்களில் சிலருக்குக் காவியுடை அளிக்கவும் செய்திருந்தார். இருப்பினும் புறத்தளவிலும் முழுத் துறவிகளாக ஆகவேண்டும் என்று விரும்பினார் நரேந்திரர். விரஜா ஹோமம் என்ற சடங்கைச்செய்து , அந்த அக்கினியின் முன்பு சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ளும்போதே  ஒருவன் முழுத்துறவியாக ஆகிறான். எனவே விரஜா ஹோமம் செய்ய வேண்டும் என்று விரும்பினார் நரேந்திரர். அதற்கான மந்திரங்கள் தமக்குத் தெரியும் என்று காளி கூறியபோது நரேந்திரர் மிகவும் மகிழ்ந்தார்.

1887 ஜனவரி 3-ஆம் வாரத்தில் ஒருநாள் குறிக்கப் பட்டது. அன்று காலையில் அனைவரும் கங்கையில் குளித்து பூஜையறைக்குச்சென்றனர். வழக்கம்போல் சசி ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பூஜை செய்தார். அனைவரும் ஸ்ரீராகிருஷ்ணரை வழிபட்டனர். பின்னர் விரஜா ஹோமம் தொடங்கியது. காளி, மந்திரங்களை வாசித்தார். முதலில் நரேந்திரர், பிறகு ராக்கால். பாபுராம், நிரஞ்சன், சரத், சசி, சாரதா என்று மற்றவர்களும் கடைசியில் காளியும் ஆஹீதி அளித்தனர். இவ்வாறு ஸ்ரீராமகிருஷ்ணரின் இளம் சீடர்கள்  நரேந்திரரின் தலைமையில் துறவிகள் ஆயினர். நரேந்திரர் அவர்களுக்கு துறவுப்பெயர்களைச் சூட்டினார்.ராமகிருஷ்ணானந்தர் என்ற பெயரைத் தாம் ஏற்றுக்கொள்ள விரும்பினார் நரேந்திரர். ஆனால் சசியின் பக்தி காரணமாக அவருக்கு அநதப்பெயரை அளித்தார். தாம் விவிதிஷானந்தர் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.


இளம் சீடர்களின் துறவுப்பெயர்கள் பின்வருமாறு-


நரேந்திரர்-சுவாமி விவிதிஷானந்தர்.

ராக்கால்-சுவாமி பிரம்மானந்தர்

பாபுராம்-சுவாமி பிரேமானந்தர்.

நிரஞ்சன்-சுவாமி நிரஞ்ஜானந்தர்

யோகின்- சுவாமி யோகானந்தர்

சசி- சுவாமி ராமகிருஷ்ணானந்தர்

சரத்- சுவாமி சாரதானந்தர்

காளி- சுவாமி அபேதானந்தர்

தாரக்- சுவாமிசிவானந்தர்

ஹரி- சுவாமி துரியானந்தர்

கங்காதரர்- சுவாமி அகண்டானந்தர்

ஹரி பிரசன்னர்- சுவாமி விஞ்ஞானானந்தர்

சாரதா பிரசன்னர்- சுவாமி திரிகுணாதீதானந்தர்

சுபோத்- சுவாமி சுபோதானந்தர்

லாட்டு- சுவாமி அத்புதானந்தர்

மூத்தகோபால்- சுவாமி அத்வைதானந்தர்.(

(இவர்கள் அனைவரும் ஒரே நாளில் துறவறம் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னாளில் இந்தியா முழுவதும் சுற்றியபோது, சகோதரத்துறவிகள் தம்மைத் தொடரக்கூடாது என்பதற்காக சுவாமி விவேகானந்தர்  தமது பெயரை இரண்டு முறை மாற்றினார். 1891 பிப்ரவரி முதல் 1892 அக்டோபர், விவேகானந்தர். 1892 அக்டோபர் முதல் 1893 மே சச்சிதானந்தர், 1893  மே மாதம் மேலை நாடுகளுக்குக் கிளம்பியதிலிருந்து நிரந்தரமாக விவேகானந்தர் என்ற பெயரை வைத்துக்கொண்டார்.)நரேந்திரர் விவிதிஷானந்தர் என்ற பெயரை ஏற்றுக்கொண்டாலும் அதனை அப்போது அவர் பயன்படுத்தவில்லை. நீதி மன்றத்தில் வீடு சம்பந்தமான வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிலையில் பெயர் மாற்றமோ, துறவு நெறியை ஏற்றுக்கொள்வதோ வழக்கில் தமக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கருதினால், அவர் சுவாமிஜி, என்றே இன்று அறியப் படுகிறார். இனி நாமும் அப்படியே அழைப்போம்.


சமுதாயத்தின் பார்வை


ஸ்ரீராமகிருஷ்ணர் நிறுவ வந்த ஒரு புதிய யுகத்தின் விடியலை நோக்கி இந்த இளம் துறவிகள் நடைபோட்டுக் கொண்டிருக்க சமுதாயம்  அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயங்கியது. நரேந்திரருக்குப் பைத்தியம்  பிடித்துவிட்டது. என்ன பேசுகிறான், என்ன நினைக்கிறான் , என்ன செய்கிறான். என்பது எதுவும் புரியவில்லை. சங்கரரைப் படிக்கிறார்களாம், உபநிஷதமும் பஞ்சதசியும் மனப்பாடம் செய்கிறார்களாம், தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை” என்றே பலரும் கூறினர். அந்த இ.ளைஞர்களை அறியாதவர்கள்  மட்டும் அல்ல. அறிந்தவர்களும் உடன் பழகியவர்களும் கூட அவ்வாறே எண்ணினர். எனவே அவர்களுக்கு உதவி செய்வது, அவர்களை ஏற்றுக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிற்று.


அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டதில் வியப்பு எதுவும் இல்லை. அன்றைய வங்காளத்தில் துறவிகளோ மடங்களோ அரிதாகவே காணப்பட்டன.வட இந்தியாவிலிருந்து வருகின்ற துறவிகளே ஓரிருவர் காணப்பட்டனர். அவர்கள் கோவணம் உடுத்தி, சடை முடி தரித்து, குளிப்பது போன்ற புறத்தூய்மைகளில் அவ்வளவு கவனம்  செலுத்தாமல் வாழ்பவர்கள், பொதுவாக அவர்களுக்கென்று  நிலையான இடம் கிடையாது. பிச்சையேற்று உண்டு, ஏதாவது மரத்தடியில் காலம் கடத்தினர். அவர்களுக்குச் சிறிது உணவளிப்பதை மக்கள் ஒரு பெரிய விஷயமாக நினைக்கவில்லை என்றாலும் அவர்களிடம் பொதுவாக யாரும் பெரிய மரியாதை காட்டவில்லை.

மற்றொரு பிரிவு துறவிகள் வங்காளத்தில் காணப்பட்டனர். அவர்கள், ”வைராகி” என்று அழைக்கப்பட்ட வைணவத்துறவிகள் . இவர்கள்  ஏக்தாரா என்ற ஒற்றை நரம்பு வாத்தியத்தை மீட்டி, ராதா-கிருஷ்ண பிரேமையைப் பற்றிய வங்க மொழிப்பாடல்களைப் பாடியபடி பிச்சைக்குச்செல்வார்கள்.  இவர்களின் பாடலுக்காக மக்கள் இவர்களைப்பொதுவாக ஆதரித்தாலும் பெரிய ஆன்மீக வாதிகளாகக் கருதவில்லை.


ராமகிருஷ்ண துறவிகள் இந்த இரண்டு பிரிவிலும் சேராதவர்களாக இருந்தார்கள். அவர்கள் நன்றாகப் படித்தவர்கள், நவீனக் கல்வி பெற்றவர்கள். சேர்ந்து ஒரே இடத்தில் தங்கினார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வசதியான குடும்பங்களில் பிறந்தவர்கள். ஆனால் வீட்டை விட்டு விட்டு, பேய் வீடு என்று கருதப் பட்ட ஒரு பாழடைந்த வீட்டில் வாழ்க்கை நடத்தினார்கள். இரவுகளில் தூங்காமல் ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டார்கள். தூய உடை உடுத்தினார்கள். இவையெல்லாம் அன்றைய சமுதாயத்தில் வினோதமாகப் பட்டன. அவர்களின் லட்சியத்தையோ

 ஆர்வத்தையோ சமுதாயம் புரிந்து கொண்டதாகத் தெரிய வில்லை. ஒரு சந்தேகக் கண்ணுடனேயே அவர்களை அன்றைய வங்காள சமுதாயம் பார்த்தது.

இளகிய இதயம் படைத்த தாய்மார்கள் அந்த இளைஞர்களைப் பரிவுடன் பார்த்தனர். ஐயோ! இந்த இளம் வயதில் இப்படி ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்டார்களே! என்று மனம் நொந்து. அவர்களிடம் வீடுகளுக்குத் திரும்புமாறு அறிவுரை கூறினார். சிறுவர்களோ , அவர்கள் தெருவில் செல்லும்போது, பரம ஹம்சம் போகிறது” என்று கத்திக்கொண்டு வாத்துக்கள் போல் குரல் எழுப்பியபடி அவர் களின் பின்னால் ஓடினர்.(ஹம்சம்-சம்ஸ்கிருதத்தில் ஹம்சம் என்பது அன்னப் பறவையைக் குறிக்கும். பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலைத் தனியாகப் பிரித்து அருந்துவதற்கான ஆற்றல் பெற்றது அன்னம்  என்று கூறப்படுகிறது. அது போல் உலகிலிருந்து கடவுளைப் பிரித்து அவரில் மனத்தைச்செலுத்த வல்லவர்கள் என்ற பொருளில் துறவிகள் பரமஹம்சர்கள்  என்று அழைக்கப் படுகின்றனர். ஸ்ரீராமகிருஷ்ணர் அவ்வாறே அறியப்பட்டார்.


ஆனால் ஹம்சம் என்றால் வங்க மொழியில் வாத்து என்று பொருள் . பரமஹம்சம் என்றால் பெரிய வாத்து” என்று பொருள்படும்.)


இளைஞர்கள் வசதி படைத்தவர்கள், நன்றாகப் படித்தவர்கள், ஆங்கிலம் அறிந்தவர்கள்,-இவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாழடைந்த பேய்வீட்டில்” என்ன செய்கிறார்கள் என்று அறிவதற்கு வராக நகர மடத்தின் அருகில் வாழ்ந்தவர்கள் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். சிலருக்கு அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய சந்தேகமும் இல்லாமல் இல்லை. சிலவேளைகளில் இரவு முழுவதும் நாம சங்கீர்த்தனம், ஆடல், பாடல் என்று அவர்கள் எழுப்புகின்ற சத்தம் இரவின் அமைதியைக் குலைத்து அக்கம் பக்கத்தில் உள்ளோரின் தூக்கத்தையும் கெடுத்துவிடும். இவர்களை என்ன  செய்வதென்று தெரியாமல் அவர்கள் திகைத்தனர். ஒரு நாள் இரவில் மடத்திலிருந்து ஒரு  பெண்ணின் பாட்டு கேட்டது. இனிமையான குரலில் ஒரு பெண் பாடுவதைக்கேட்டதும் அருகிலுள்ளோர் தங்கள் சந்தேகம் சரியானதே என்று முடிவு செய்தனர். அவர்களைக்கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்பதற்காக சிலர் ஓசையின்றி மடத்திற்குள் சென்றனர். அடிமேல் அடி எடுத்து வைத்து பாடல் வந்த அறையை நோக்கிச்சென்றனர். இப்போது பிடித்துவிடலாம் என்று உள்ளே சென்றால் அங்கே பாடிக்கொண்டிருந்தவர்்்் ஓர் ஆண்-சரத். அவருக்குப் பெண் குரல்! வந்தவர்களின் முகத்தில் ஈயாடவில்லை! ஏதோ சாக்குப்போக்கு சொல்லி விட்டு நழுவினார்! இவ்வாறு எதிர்ப்பு, சந்தேகம், சிலவேளைகளில் ஆமோதிப்பு என்று சமுதாயம் அந்த இளம் துறவியரை ப்பார்த்தது. அதே வேளையில் கிறிஸ்தவ மிஷனரிகளும் ஒர முயற்சியில் ஈடுபட்டனர். இளைஞர்கள், ஓர் உயர்ந்த நோக்கத்துடன் இல்லறவாழ்க்கையைத்துறந்தவர்கள்- இத்தகையோர் தங்கள் பக்கத்தில் இரந்தால் நன்றாக இருக்கும் என்று அவர்களின் மனம் கற்பனை செய்தது. எனவே ஒரு நாள் வராக நகர மடத்திற்கு வந்து ஏசுவின் புகழையும் கிறிஸ்தவ மதத்தின் பெருமைகளையும் அவர்களிடம் எடுத்துக் கூறினர். 


ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களில் பலரும் பைபிளையும் முக்கியமான கிறிஸ்தவ நூல்களையும் ஆழ்ந்து கற்றவர்கள். வந்தவர்கள் கூறிய அனைத்தையும் அவர்கள் பொறுமையாகக்கேட்டனர். கடைசியில் சுவாமிஜி அவர்களே வியக்கும் வண்ணம் கிறிஸ்தவ மதக்கோட்பாடுகளை விளக்கினார். எந்த விதத்திலும் அவை வேதாந்தக் கோட்பாடுகளை விட உயர்ந்தவை அல்ல என்பதை நிரூபித்தார். இவர்களிம் தங்கள் முயற்சிகள் செல்லுபடியாகாது என்பதைப் புரிந்து கொண்ட அந்த மிஷனரிகள் வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். வேண்டிய பணம் தருவதாகக்கூறி கிறிஸ்தவ மதத்திற்கு வந்து விடுமாறு அவர்களுடைய வழக்கமான பாணியில் முயற்சி செய்தனர். அதிலும் இந்த இளம் துறவிகள்  மயங்காத போது பெண்களைக்கூட தருவதாகக் கூறி ஆசை காட்டுகின்ற இழிந்த நிலைக்கும் சென்றனர். ஆனால் காமமும் பணத்தாசையும் மனிதனின் பரம விரோதிகள்” என்று போதித்த குருதேவரின் சீடர்களை இந்தக் கவர்ச்சிகள் அசைக்க இயலுமா? தங்கள் அனைத்து முயற்சிகளிலும் தோற்ற மிஷனரிகள் பின் வாங்கினர்.


பலராம் போஸின் வீட்டிலிருந்து ஸ்ரீராமகிருஷ்ணரின் அஸ்திக் கலசத்தைக்கொண்டு வந்து , அதனை ஒரு தனியறையில் வைத்து அந்த அறையிலேயே தியானம் முதலான ஆன்மீக சாதனைகளைத் துறவியர் செய்து வந்தனர்.


ராமகிருஷ்ண பூஜை


 ராமகிருஷ்ணானந்தர் மடத்தில்  நிரந்தரமாகத்  தங்கத்தொடங்கிய பிறகு அந்த அறையை ஒழுங்குபடுத்தினார். நடுவில் குருதேவரின் படம் ஒன்றை வைத்து தினசரி பூஜையை ஆரம்பித்தார். சுவாமிஜி, பல துறவிச் சீடர்கள், சுரேந்திரர் என்று பலரும் இதனை விரும்பவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் தம்மை வழிபடுமாறு யாரிடமும் கூறியதில்லை என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர். அதிலும் விரஜா ஹோமம், செய்து துறவிகள் ஆகிய பிறகு பூஜை முதலான சடங்கு களுக்கு இடமில்லை என்பது அவர்களது வாதமாக இருந்தது.


ஒரு நாள் சுவாமிஜி பூஜையறையில் நின்று கொண்டே அதனை எதிர்த்து காரசாரமாக விவாதித்தார். ராமகிருஷ்ணானந்தரும் உரிய பதிலைக்கூறினார். சிறிது நேரத்தில் வாதம், மிகவும் சூடாகியது. ஒரு கட்டத்தில் ராமகிருஷ்ணானந்தர் சுவாமிஜியின் முடியைப் பிடித்து இழுத்து பூஜையறைக்கு வெளியே தள்ளினார். எல்லாம் சிறிது நேரம் தான். பின்னர் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து அவரிடம் மன்னிப்பும் கேட்டார். சுவாமிஜி மன்னித்தது மட்டுமல்ல, அவரது குரு பக்தியை வெகுவாகப்புகழவும் செய்தார். இது விஷயமாகப் பலநேரங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும் ராமகிருஷ்ண பூஜை தொடர்ந்தது.

ராமகிருஷ்ணானந்தர்  செய்த பூஜையைக் கண்டவர்கள் அனைவரும் அங்கே குருதேவரின் சான்னித்தியத்தை உணர்ந்தனர். உயிருடன் இருப்பவருக்கு எப்படி உபசாரங்கள் செய்யப் படுமோ  அப்படியே அவரை வழிபட்டார் ராமகிருஷ்ணானந்தர். அவருக்கு உணவு நிவேதிக்கப் பட்டது. புகையிலை போன்று அவர் பயன்படுத்தும் மற்ற பொருட்கள் சமர்ப்பிக்கப் பட்டன. ஆரதி செய்யப் பட்டது. ஆரதி வேளையில், ஜெய் குருதேவா” என்று  அனைவரும் சேர்ந்து ஓதினர். சிலவேளைகளில் குரு கீதை சுலோகங்களைக்கூறினர். தீபாராதனை கண்கொள்ளாக்  காட்சியாக இருந்தது. அனைவரும் ஜெய் சிவ ஓங்காரா” என்ற பாடலைப்பாடினர்.


நாட்கள் செல்லச்செல்ல பூஜை முறையை  மேலும் ஒழுங்குபடுத்தினார் ராமகிருஷ்ணானந்தர். சம்ஸ்கிருதத்தில் வல்லுனராக இருந்த அவர் உரிய மந்திரங்களைச்சேர்த்து ராமகிருஷ்ண பூஜை முறையை உருவாக்கினார்.

தினசரி பூஜையைத் தவிர  சிவராத்திரி, காளி பூஜை போன்ற விசேஷ நாட்களையும் கிறிஸ்மஸையும் அவர்கள் கொண்டாடினர்.

சுவாமிஜி வழி நடத்துகிறார்.


 விரைந்து செல்லும் வாழ்க்கையின் ஊடே அந்த இளம் துறவியர் அனைவரும் இறையனுபூதி என்ற ஒன்றையே நோக்கமாகக்கொண்டு தீவிரமான தவ வாழ்க்கை வாழ்ந்தனர். வாழ்கிறோமா, வாழ வில்லையா என்ற உணர்வு கூட இன்றி அவர்கள் மணிக்கணக்காக தியானம் செய்தார்கள். துனி அக்கினி வளர்த்து அதன் அருகில் அமர்ந்து சாதனைகள் செய்தார்கள். ஆனால் படிப்பு ஆகட்டும், சாதனைகள் ஆகட்டும், எதுவும் எல்லை மீறாமல் பார்த்துக்கொண்டார் சுவாமிஜி. சிலவேளைகளில் அவர்கள் கடின தவத்திற்காக முயலும் போது. அவர்களை தடுத்து, என்ன  எல்லோரும் ராமகிருஷ்ண பரமஹம்சர்கள்ஆகிவிடலாம் என்று நினைக்கிறீர்களா? அது ஒருபோதும் முடியாது. ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு முறை மட்டுமே பிறக்கிறார். என்பார். 


சிலவேளைகளில், சகோதரர்களே குருதேவர் கூறும் எறும்பும் சர்க்கரை மலையும் உவமையை மறந்துவிட்டீர்களா? உங்களுக்கு ஒரு சர்க்கரைத் துகள் போதும், நீங்களோ சர்க்கரை மலையையே தூக்கி ச் சென்றுவிடலாம் என்று நினைக்கிறீர்கள். அத்தகைய முயற்சிகளை விடுங்கள்” என்று அவர் களை அன்புடன் வழிநடத்துவார். யாராவது அவரது பேச்சை மீறி தீவிர சாதனைகளில் ஈடுபட்டால் உங்களை ஸ்ரீராமகிருஷ்ணர் என் பொறுப்பில் விட்டுச்சென்றிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்? என்று அவர்களைப் பரிவுடன் தமது வழிக்குக் கொண்டு வருவார். ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதால் மட்டுமல்ல, சுவாமிஜியின் ஆளுமையும் அவர்களை மிகவும் ஆட்கொண்டது. அவரது முகம், அவரது பேச்சு, அவரது கண்கள், அவர்களுக்கிடையே அவர்  செயல்பட்ட விதம், அவர்களை உற்சாகப்படுத்திய விதம் ஏன், சிலவேளைகளில் அவர்களைக் கடிந்து கொண்ட விதம் என்று அனைத்துமே அவரை அந்த இளம் துறவியர்களின் தன்னிகரற்ற தலைவராகக் காட்டியது.


ஆனால் சுவாமிஜி அவர்களை எப்படி வழிநடத்தினாலும், ஏன் கடிந்து கொண்டாலும் அதன் பின்னணியாகத் திகழ்ந்தது அவரது தன்னலமற்ற அன்பு ஒன்றே. இதனை அனைவரும் புரிந்து கொண்டிருந்தனர். ஒரு முறை திடீரென்று திரிகுணாதீதானந்தர் யாரிடமும் சொல்லாமல்  மடத்தை விட்டுப்போய் விட்டார். அவரது பிரச்சனை கொஞ்சம் வித்தியாசமானது. நரேன் அடிக்கடி வீட்டிற்குப் போய்வருகிறான், குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறான். எங்கே  எனக்கு அது போல் வீட்டிற்குப்போகும் ஆசை வந்து விடுமோ என்று பயப்படுகிறேன், என்று கூறிவிட்டு அவர் சென்றிருந்தார். நரேந்திரர் எங்கே இருந்தாலும் அது அவரது மனத்தைப் பாதிக்காது. ஆனால் தம்மால் அத்தகைய ஒரு பற்றற்ற நிலைமை சாத்தியமல்ல என்பதை நினைத்து அவர் வருந்தினார். இவ்வாறு மடத்தை விட்டுச்சென்ற அவரால் பத்து மைல்களுக்கு மேல் போக இயலவில்லை. எனவே சில நாட்களுள்  மடத்திற்குத் திரும்பி வந்தார். அப்போது பிரம்மானந்தர் அவரிடம், ஏன் இப்படிச்செய்தாய்? நீ  எங்கே போவாய்? எங்கு போனாலும் நரேனிடம் உள்ளது போல் ஓர் அன்பை நீ எங்காவது காண இயலுமா?என்று கேட்டார். இவ்வாறு தமது பிரச்சனைகள் , குடும்பப் பிரச்சனைகள் அனைத்தையும் மீறிஅனைவரையும் அன்பினால் ஆண்டார் சுவாமிஜி.


 குருதேவர் ஒரு நாள் பரவச நிலையில் உயிர்களுக்கு உதவ இயலாது, தொண்டுதான் செய்ய இயலும், என்று கூறியதை சுவாமிஜி ஒரு புதிய கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டது பற்றி ஏற்கனவே கூறினார். உயிர்களை இறைவனாகக் கண்டு அவர்களுக்குச்சேவை செய்வது முக்திக்கு வழி என்று சுவாமிஜி கூறியதை அவரது சகோதரத் துறவிகள் பலராலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது விஷயமாக அவ்வப்போது வாதங்களும் நடைபெறுவதுண்டு. சுவாமிஜி அன்பினாலும் அரவணைப்பினாலும் மெல்ல மெல்ல அவர்களிடம் அந்தக் கருத்தைப் புகுத்தினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தி என்ன, அதன் புதுமை என்ன, அதனை எந்த வழியில் மக்களிடம் கொண்டு செல்வது என்பது பற்றியெல்லாம் அவர் அவர்களிடம் கூறி படிப்படியாக அவர் களை அந்த வழிக்குக்கொண்டுவர  முயற்சி செய்தார்.


இவற்றுடன் சுவாமிஜிக்கு இருந்த மற்றொரு முக்கியமான வேலை மற்றத்துறவியரின் பெற்றோரைச் சமாளிப்பது, இந்த ”சீர்கேடுகள்” அனைத்திற்கும் நரேந்திரனே காரணம். அவன் தான்  எங்கள் பிள்ளைகளையும் கெடுக்கிறான். அவன் இல்லாமல் இருந்தால் அவர்கள்  தங்கள் படிப்பைத் தொடர்ந்திருப்பார்கள். என்று பல பெற்றோரும் சுவாமிஜியைக் குற்றம் சாட்டினர். 

அவர்கள் வரும்போதெல்லாம் அவர்களின் ஏச்சைப்பொறுத்துக்கொண்டு அவர்களிடம் பொறுமையாகப்பேசி அவர்களை உபசரித்து வழியனுப்புவார் சுவாமிஜி.

பிரம்மச்சரியம், எளிமை, ஆன்மீக சாதனைகள் என்ற மூன்றும் துறவிற்கு அடிப்படையாகக் கூறப்படுகின்றன. பிரம்மச்சரியம் என்பது காமத்திற்குக் கட்டுப்படாத வாழ்க்கை. எளிமை என்றால் தேவைக்கு அதிகமாக மிகக்குறைவாக தேவைப்படுமோ அந்த மிகக்குறைந்த அளவை மட்டுமே ஒரு துறவி பயன்படுத்த வேண்டும் அடுத்து வருபவை ஆன்மீக சாதனைகள், தவம், படிப்பு போன்றவை.


வராக நகர் மடத்துத் துறவியரிடம் இந்த அடிப்படைப் பண்புகள் எல்லாம் இயல்பாகவே அமைந்திருந்தன. இறைவனே மனிதனாக அவதரித்த குருதேவரின் தொடர்பு அவர்களுக்கு இளம் வயதிலேயே ஏற்பட்டது. அவரது அருளால் இறையனுபூதி என்ற ஒன்றையே வாழ்க்கையின் லட்சியமாகக்கொண்டு அவர்கள் தவத்தில் ஈடுபட்டனர். தவத்திற்குப் பல்வேறு வழிகளும்  முறைகளும்  கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று ப்ரவ்ரஜனம், அதாவது ஓரிடத்தில் தங்காமல் சஞ்சரித்தல்.


தேங்கும் நீரும் தங்கும் துறவியும் இழிநிலையை அடைய நேரும், என்பார்கள். நீர் என்றால் அது ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அதில் அழுக்கு சேர்ந்து குடிக்க உதவாததாகி விடும். துறவி ஓரிடத்தில் தொடர்ந்து தங்கினால்  அந்த இடத்துடன், அந்த நபர்களுடன் அவனுக்குப் பற்று ஏற்பட்டு இறைநெறியில் தடைக்கல்லாகி விடும். எனவே அவன் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

துறவின் மற்ற நியதிகள் வாழ்க்கையில் சிறப்பாக அமைந்துவிட்ட வராக நகர் மடத்துத்துறவிகள் தீர்த்த யாத்திரை செல்ல நினைத்தனர். இமயமலை, புரி, காசி, என்று பலரும் பல்வேறு இடங்களுக்குப்போக முடிவு செய்தனர். 188-லிருந்தே பலரும் போகவும் தொடங்கிவிட்டனர். சுமார் ஒன்றரை வருட காலம் வராக நகர மடத்தை ஒரு தவபூமியாக்கிய பிறகு துறவு வாழ்வின் அடுத்த பரிமாணம் ஆரம்பித்தது. சுவாமிஜி ஆரம்பத்தில் இப்படி பயணம் சென்றவர்களைக் கண்டித்தாலும் அவரது மனத்திலும் அந்த ஆர்வம் துளிர் விட ஆரம்பித்தது. அவரும் தமக்கென்று சில திட்டங்களை வகுத்துக்கொண்டார்.


 MAIN PAGE 


image118