மகாபாரதம்
மகாபாரதம்
மகாபாரதம்
விதுர நீதி
-
திருதராஷ்டிரன் {விதுரனிடம்},
“நன்மை தரக்கூடியதும், உயர்ந்த அறநெறிகள் நிறைந்தவையுமான வார்த்தைகளை நான் உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்.
இந்த ராஜரிஷிகளின் குலத்தில், நீ மட்டுமே ஞானமுள்ளோரால் போற்றப்படுகிறாய்” என்றான்.
விதுரன் {திருதராஷ்டிரனிடம்},
“அனைத்து அறமும் அருளப்பட்ட யுதிஷ்டிரன், மூவுலகையும் ஆட்சி செய்யத் தகுந்தவனாவான்; இருப்பினும், ஓ! திருதராஷ்டிரரே, உம் தரப்பில் வைத்துக் கொள்ள அவன் எவ்வளவுதான் தகுந்தவனாக இருப்பினும், உம்மால் நாடுகடத்தப்பட்டான். அவன் கொண்டதுக்கெல்லாம் நேர்மாறான குணங்களையே நீர் கொண்டிருக்கிறீர்.
என்னதான் அறம் மற்றும் அறநெறியுடன் இருந்தாலும், நீர் குருடராக இருப்பதால், முறையான பங்கை இன்னும் கொடுக்காமல் இருக்கிறீர். குற்றமற்ற தன்மை, அன்பு, நீதி, உண்மை மற்றும் சக்தியில் கொண்ட விருப்பம் ஆகியவற்றின் விளைவாலும், உம்மீது வைத்திருக்கும் மரியாதையாலும், எண்ணிலடங்கா தீங்குகளை யுதிஷ்டிரன் பொறுமையாகத் தாங்கிக் கொண்டே வருகிறான்.
பேரரசின் பராமரிப்பைத் துரியோதனன், சுபலனின் மகன் {சகுனி}, கர்ணன், துச்சாசனன் ஆகியோரிடம் கொடுத்த பிறகு, செழிப்பில் நீர் எவ்வாறு நம்பிக்கை கொள்ளலாம்?
வாழ்வின் உயர்ந்த நிலைகளில் பணியாற்றாமல் ஆத்ம ஞானம், உழைப்பு, பொறுமை, அறத்தில் உறுதி ஆகியவற்றைக் கொண்டவன் ஞானி எனப்படுகிறான்.
மேலும், செயல்களில் ஈடுபாடு, புகழ்ச்சிக்குத் தகுதி, பழியைத் தவிர்ப்பது, நம்பிக்கை, மதிப்பு ஆகியவை ஞானம் கொண்ட மனிதனின் குறிகளாகும்
கோபமோ, மகிழ்ச்சியோ, செருக்கோ {கர்வமோ}, போலிப்பணிவோ, மலைப்போ, மாயையோ, ஒருவனை வாழ்வின் விளிம்புகளிலிருந்து நழுவச் செய்யவில்லையென்றால் அவன் ஞானி என்றே கருதப்படுவான்.
ஒருவனது செயல்களின் நோக்கங்களும், பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைகளும், பகைவரிடம் மறைக்கப்பட்டே இருந்தாலும், செய்த பிறகு மட்டுமே ஒருவனது செயல் அறியப்பட்டாலும் அவன் ஞானி எனக் கருதப்படுகிறான்.
எவனது பரிந்துரைக்கப்பட்ட செயல்கள் வெப்பத்தாலோ, குளிராலோ, அச்சத்தாலோ, செல்வத்தாலோ, வறுமையாலோ தடைப்படாமல் இருக்கிறதோ, அவன் ஞானி எனக் கருதப்படுகிறான்.
எவனுடைய தீர்மானங்கள் விருப்பத்தில் இருந்து விடுபட்டு அறம் செல்வம் ஆகிய இரண்டையும் பின்தொடர்கின்றனவோ, எவன் இன்பத்தை அலட்சியம் செய்து, இரு உலகுக்கும் தகுந்த சேவைகளைத் தேர்ந்தெடுக்கிறானோ, அவன் ஞானி எனக் கருதப்படுகிறான்.
தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி முயற்சி செய்பவர்களும் {உழைப்பவர்களும்}, தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திச் செயல்படுபவர்களும், எதையும் முக்கியமற்றதாக அலட்சியம் செய்யாதவர்களும் ஞானி என்று அழைக்கப்படுகிறார்கள்.
விரைந்து புரிந்து கொள்பவனும், பொறுமையாகக் கேட்பவனும், விருப்பத்தால் அல்லாமல் {காரியங்களை} அறிந்து கொண்டு தன் நோக்கங்களைத் தொடர்பவனும் , கேட்கப்படாமல் அடுத்தவர் காரியங்களில் தனது மூச்சைக்கூட விடாதவனும், ஞானத்தின் முதன்மையான குறியீட்டைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அடைய முடியாத பொருட்களுக்காக முயற்சிக்காதவர்களும், தொலைந்தவற்றுக்காக வருந்தாமல் இருப்பவர்களும், பேராபத்துக்களுக்கு மத்தியில் இருள் சூழ்ந்த மனத்தால் பாதிக்கப்படாதவர்களும், ஞானம் கொண்ட அறிவினை உடையவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
ஒரு வேலையை ஆரம்பித்த பிறகு அது முடிவடையும் வரை பெருமுயற்சி செய்பவனும், தன் நேரத்தை எப்போதும் வீணாக்காதவனும், தனது ஆன்மாவை கட்டுப்படுத்தி வைத்திருப்பவனும் ஞானிகளாகக் கருதப்படுகின்றனர்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஞானமுள்ளோர் எப்போதும் நேர்மையான செயல்களில் மகிழ்ந்து, மகிழ்ச்சியானதையும், செழிப்பானதையுமே செய்வார்கள், எது நன்மையானதோ, அதை அவர்கள் வெறுப்பதில்லை.
கங்கையின் வழியில் இருக்கும் ஒரு தடாகத்தைப் போல, எவன் மரியாதைகளில் மகிழ்ச்சி அடையவில்லையோ, ஏளனங்களுக்காக வருந்துவதில்லையோ, கலங்காமல், குளிர்ச்சியாக நீடிக்கிறானோ, அவனே ஞானி என்று எண்ணப்படுகிறான்.
அனைத்து உயிரினங்களையும் அறிந்தவனும், அனைத்துச் செயல்களின் இணைப்புகளையும் நன்கறிந்தவனும், (தங்களது பொருட்களை) அடைய மனிதர்கள் கைக்கொள்ளும் வழிகளைக் குறித்த அறிவில் நிபுணத்துவம் வாய்ந்தவனும், ஞானி என எண்ணப்படுகிறான்.
எவன் துணிவுடன் பேசுகிறானோ, பல்வேறு தலைப்புகளில் உரையாடுகிறானோ, பேச்சுக்கலை அறிவியலை {தர்க்க சாஸ்திரத்தை} அறிந்தவனும், மேதைமை உடையவனும், புனித நூல்களில் உள்ளவற்றுக்குப் பொருளை விளக்கிச் சொல்பவனும் ஞானி என எண்ணப்படுகிறார்கள்.
எவன், காரணங்களால் கட்டுப்படுத்தப்பட்ட கல்வியைக் கற்கிறானோ, எவனுடைய கொள்கைகள் சாத்திரங்களைப் பின்பற்றி வருகிறதோ, நல்லவர்களை மதிப்பதில் எவன் எப்போதும் தவறாதவனாக இருக்கிறோனோ, அவன் ஞானி என்று அழைக்கப்படுகிறான்.
-
விதுர நீதி
{இரண்டானவை} இரண்டு இரண்டாக
--
{விதுரன் சொன்னான்}
“போரிடத் திறனற்ற மன்னன், புனித இடங்களுக்குப் பயணம் போகாத அந்தணன் ஆகிய இருவரையும் பொந்துகளில் வாழும் எலிகளை ஒரு பாம்பு விழுங்குவதுபோல, இந்தப் பூமி விழுங்கிவிடும்.
(புனித இடங்களுக்கு பயணம்போவதால் அந்த இடங்களும் புனிதம் அடைகின்றன.புனித இடங்களுக்கு வரும் மக்கள் புனிதம் அடைகிறார்கள். எனவே அந்தணன் தான் தவத்தின் மூலம் பெற்றுள்ள புனிதத்தை மக்களுக்கு வழங்குவதில் ஈடுபட வேண்டும்)
கடுஞ்சொல் தவிர்ப்பது, தீயவற்றைப் புறக்கணிப்பது ஆகிய இரண்டையும் செய்வதால் ஒரு மனிதன் உலகில் புகழடைகிறான்.
ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே},
சமுதாயத்தில் உள்ள எல்லா பெண்களும் ஆண்கள் மேல் ஆசை கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக, வெறுமனே ஆண்களை விரும்பும் பெண்களும்,
பிறரால் ஒருவர் வழிபடப்படுகிறார் என்பதற்காக, வெறுமனே மற்றவரை வழிபடும் ஒருவன் ஆகிய இருவரும் தங்களுக்கென்று சுய விருப்பம் இல்லாதவர்கள் ஆவார்கள்.
ஏழையின் ஆசைகள், சக்தியற்றவன் கோபம் ஆகிய இரண்டும், உடலை வருத்தும் கூரிய முட்களைப் போன்றனவாகும். (இவைகள் தங்களையே காயப்படுத்திக்கொள்ளும்)
உழைக்காத இல்லறத்தான், வேலைகள் கொண்டிருக்கும் சந்நியாசி ஆகிய இருவரும் தங்களுடைய பொருந்தாச் செயல்களால் ஒளிருவதேயில்லை.
(இல்லறத்தான் எப்போதும் வேலைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். சந்நியாசி எப்போதும் தியானத்திலும்,ஓய்விலும் ஆழ்ந்திருக்க வேண்டும்)
மன்னிக்கும் தன்மையோடிருக்கும் {பொறுமையோடிருக்கும்} சக்திமிக்க மனிதன், ஈகை குணம் கொண்ட ஏழை ஆகிய இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கத்தைவிட உயர்ந்த உலகத்தில் வாழ்வது போல, இவ்வுலகில் வாழ்வார்கள்.
நியாயமாக ஒருவன் சம்பாதித்திருந்தாலும் தகுதியற்றவர்களுக்கு அளிக்கப்படும் கொடை,
தகுந்தவர்களுக்கு மறுக்கப்படும் கொடை ஆகிய இரண்டும் தவறான பயன்பாடு கொண்டவை என்றே கருத வேண்டும்.
(ஒருவன் நல்லவனுக்கு மட்டுமே தானம் வழங்கவேண்டும். அதேபோல நல்லவனுக்கு தானம் வழங்க மறுக்கவும்கூடாது)
தானமளிக்காத செல்வந்தன், கர்வமுடைய ஏழை ஆகிய இருவரையும், கழுத்தில் பாரமிக்க கற்களைக் கட்டி நீருக்குள் எறிய வேண்டும். (அழிந்துபோவார்கள்)
யோகத்தின் மூலம் லட்சியத்தை அடைந்த சந்நியாசி, நேர்மையாக நடத்தப்பட்ட போரில் கொல்லப்பட்ட வீரன், ஆகிய இருவரும், சூரியனையே துளைத்துவிடக் கூடியவர்களாவர்.
(சூரியனையே கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள்)
விதுர நீதி
...
{மூன்றானவை} மூன்று மூன்றாக
-
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள்
[1]நல்லவர்களாகவும்,
[2]அக்கறையற்றவர்களாகவும்,
[3]தீயவர்களாகவும் {மூன்று வகையிலேயே} இருக்கின்றனர்.
எனவே, அவரவருக்குப் பொருந்தும் வகையிலான வேலைகளில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும்.
[1] அமைதி,
[2] கொடுத்தல் மற்றும் மிரட்டல்,
[3] தண்டிப்பது என்றும் கொள்ளலாம்.
-
வேலைக்காரர்கள் மூன்று வகையினராக இருக்கிறார்கள்.
ஆட்சி செய்பவன் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களை வேலை வாங்கும்போது எல்லோரையும் ஒரே போல பாவிக்கக்கூடாது.
நல்லவர்களிடம் அமைதியாக பேசவேண்டும்.அகங்காரத்துடன் பேசினால் அவர்களுக்கு பிடிக்காது.
அக்கரையற்றவர்களிடம் வேலை வாங்கும்போது. சில பரிசுகளை கொடுப்பதாக கூறலாம் அல்லது சரியாக வேலை செய்யாவிட்டால் ஊதியம் பிடிக்கப்படும் என்று மிரட்டலாம்
தீயவர்கள் எப்போதும் தீமை செய்வதிலேயே கருத்தாக இருப்பார்கள்.அவர்களை சுதந்திரமாக விட்டுவிட்டால் பேரழிவை ஏற்படுத்திவிடுவார்கள். எனவே அவர்களை தண்டிப்பதன் மூலமே வேலைவாங்க முடியும்.
....
[1]மனைவி, [2]அடிமை, [3]மகன் ஆகிய மூவரும் தங்களுக்கு என்று சொத்து வைத்துக் கொள்ள முடியாது.
அவர்களால் ஈட்டப்படும் அனைத்தும், அவர்களை உரியவர்களுக்கே சொந்தமாகும்.
மனைவியிடம் சொத்து இருந்தால் கணவனை மதிக்க மாட்டாள்
அடிமையிடம் சொத்து இருந்தால் எஜமானனை மதிக்க மாட்டான்.
மகனிடம் சொத்து இருந்தால் பெற்றோரை மதிக்க மாட்டான்
....
[1]பிறர் பொருளைத் திருடுதல்,
[2]பிறர் மனைவி மீது மோகம் கொள்ளுதல்,
[3]நண்பனை மீறுதல் ஆகிய மூன்று குற்றங்களில் இருந்தும் பெரும் அச்சம் எழுகிறது.
பிறர்பொருளை திருடினால் ஜெயிலுக்கு செல்லவேண்டியிருக்கும்
பிறர் மனைவிமீது மோகம் கொண்டால் தன்னுடைய குடும்பமே அழிந்துபோகும்
நண்பன் சொன்ன வார்த்தையை மீறி நடந்தால் நட்பு உடைந்துபோகும். நண்பன் எதிரியாக மாறிவிட வாய்ப்பு உள்ளது.
.....
ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் [1]காமம், [2]கோபம், [3]பேராசை ஆகிய மூன்றும் நரகத்தின் வாயில்களாகும். எனவே, அனைவரும் இவற்றைத் துறக்க வேண்டும்.
....
பேராபத்தில் இருக்கும்போதுகூட,
[1]தொண்டன்(அல்லது வேலைக்காரன்),
[2]“நான் உனதே” என்று சொல்லி உம் பாதுகாப்பை நாடும் ஒருவன்(உன்னை சார்ந்தவர்கள்),
[3]உமது வசிப்பிடத்திற்கு வந்த ஒருவன்(அடைக்கலமாக வந்தவன்) ஆகிய மூவரையும் கைவிடக்கூடாது.
...
பஞ்சம்,நோய்,விபத்து போன்ற பேராபத்து காலத்தில் சிலரை கைவிடவேக்கூடாது.
தொண்டன் இதுவரை நம்மை பாதுகாத்து வந்தவன்,ஒரு தொண்டனை கைவிட்டால்கூட எல்லா தொண்டர்களும் விலகி சென்றுவிடுவார்கள்.
நம்மை சார்ந்தவர்கள்,எப்போதும் நம்மோடு இருப்பவர்கள்,நம்மை அடைக்கலமாக கொண்டு இதுவரை வாழ்ந்தவர்கள்.இவர்களை கைவிடக்கூடாது.அப்படி கைவிட்டால் எதிர்காலத்தில் நம்மை கவனிக்க ஆள் இல்லாமல் போய்விடும்.
விருந்தாளியை கைவிட்டுவிட்டால் நம்மைப்பற்றி தவறான கருத்துக்களை எல்லா இடத்திலும் பரப்பிவிடுவார்கள்.
-
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே},
[1]வரம் அளிப்பது , [2]மன்னனாவது, [3]மகனைப் பெறுவது ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கணக்கில் எடுத்தாலும் ஆபத்திலிருக்கும் எதிரியை விடுவிப்பதே [4] தகுதியில் பெரியதாகும்.
-
வரம் அளிக்கும் நிலையில் இருக்கும் தபஸ்வி உயர்ந்தவன்
நாட்டை ஆளும் அரசனும் உயர்ந்தவன்
தவத்தின் மூலம் மகளைப் பெற்றெடுக்கும் தந்தை உயர்ந்தவன்
இந்த மூன்றையும்விட உயர்ந்தது, தனக்கு இதுவரை துன்பத்தை கொடுத்துக்கொண்டிருந்த எதிரிக்கு ஆபத்து ஏற்படும்போது அவனுக்கு உதவுவது.
இது எல்லோராலும் செய்ய முடியாத வேலை.
அவர்களுக்கு உதவினால் மீண்டும் நம்மை தாக்குவார்கள்.
( துரியோதனையும் பிறரையும் கந்தர்வர்கள் சிறைபிடித்தபோது, பஞ்சபாண்டவர்கள் அவர்களை மீட்டார்கள்)
-
தொடர்ந்து நம்மிடம் போரிட்டுவந்த எதிரி நாட்டை சேர்ந்தவர்கள், பட்டினியில் இறக்கும்நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு உணவளித்து காப்பாற்ற வேண்டும். அதேநேரத்தில் அவர்களை நம்பவும்கூடாது.
இப்படி உதவும்போது பெரும்பாலான சமயங்களில், அந்த எதிரிகளாலேயே தாக்கப்பட்டு உயிரிழப்பதைபற்றிய வரலாறுகளை நாம் படித்திருக்கிறோம்.
-
இது மிகவும் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயம்.
எதிரி, தீயவனாக இருந்தால் அவனுக்கு உதவக்கூடாது.அப்படி உதவினால் தீயவன் செய்துள்ள பாவத்தை உதவுபவன் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
அதனால் உதவுபவனும் அவனை சார்ந்தவர்களும் அதே தீயவனால் அழிவுக்கு உட்படுவார்கள்.
எதிரி நல்லவனாக இருந்தால் அவனுக்கு உதவலாம். அப்படி உதவினால் எதிரியின் புண்ணிய பலன் உதவுபவர்களுக்கு கிடைக்கிறது.
எதிரி மனம் திருந்தி நட்போடு பழக வாய்ப்புள்ளது.
...
-
விதுர நீதி
...
{நான்கானவை} நான்கு நான்கானவை
...
ஒரு மன்னன் சக்திமிக்கவனாக இருப்பினும்,
...
[1]சிறுபுத்தி கொண்டோர்,
[2]காலந்தாழ்த்துவோர்,
[3]சோம்பேறி,
[4] முகத்துதி செய்வோர் ஆகிய நான்கு பேரிடம் ஒருபோதும் ஆலோசனை செய்யக்கூடாது.
-
சிறுபுத்தி கொண்டவன்,தனக்கு வேண்டியவர்கள் நன்மைபெறும்படியான ஆலோசனைகளைக்கூறுவான்
காலம் தாழ்த்துபவன் உரிய நேரத்தில் ஆலோசனைகளைச் சொல்லாமல் இழுத்தடிப்பான்
சோம்பேரி யோசிக்காமல் ஏதாவது ஒன்றைக்கூறுவான்
முகத்துதி செய்பவன் மன்னன் என்ன கூறினாலும் சரி என்பான்
-
ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, செழிப்பால் மகுடம்சூட்டப்பட்டு இல்லற வாழ்வு வாழ்பவனான உம்மிடம்,
[1]இரத்த உறவு கொண்ட முதியவர்கள்,
[2]உறவினர்கள்,
[3]வறுமையில் விழுந்த உயர் பிறப்பாளர்கள்,
[4]ஏழை நண்பர்கள் மற்றும் பிள்ளையற்ற சகோதரிகள் ஆகிய நால்வரையும் வசிக்கச் செய்வீராக.
..
இல்லறத்தான் கூட்டுக்குடும்பமாக வாழவேண்டும். அதில் சிலர் மட்டுமே சம்பாதிப்பார்கள்.மற்றவர்கள் ஓய்வில் இருப்பார்கள்.
அப்படி சம்பாதிக்க இயலாமல் இருப்பவர்களில் நான்கு வகையினர் எப்போதும் இருக்க வேண்டும்
இரத்த உறவு கொண்ட பெரியப்பா போன்ற வயதில் மூத்தவர்கள் வீட்டுக்காவலாகவும்,ஆலோசனை கூறுபவர்களாகவும் இருப்பார்கள்
உறவினர்கள் இல்லாமல் தனிக்குடித்தனமாக வாழக்கூடாது
உயர்ந்த ஜாதியை சேர்ந்த ஒருவர் நல்லவராக இருந்தால்,வறுமையோடு இருந்தால் அவரையும் வைத்துக்கொள்ள வேண்டும்.உயர்ந்த ஆன்மீக கருத்துக்களை அவரிடமிருந்து அறிந்துகொள்ளலாம்
ஏழை நண்பர்கள்,பிள்ளையற்ற சகோதரிகள் அனைத்து வேலைகளிலும் உதவியாக இருப்பார்கள்.
-
அச்சத்தை விலக்கவல்லவைகளான
[1]அக்னி ஹோத்ரம்,
[2]பேசாநோன்பு {மௌன விரதம்},
[3]கல்வி மற்றும்
[4] வேள்வி ஆகிய நான்கும்,
முறையற்ற வகையில் செய்யப்பட்டால், அவை அச்சத்தையே தரும்.
-
தீயவர்கள்,அசுர இயல்பு கொண்டவர்கள் மேலே உள்ள நான்கையும் செய்து,அதனால் கிடைக்கும் சக்தியை தீய வழியில் பயன்படுத்துவார்கள்.
-
அக்னி ஹோத்திரம் என்பது வீட்டின் ஒரு பகுதியில், சிறு அக்னி குண்டம் அமைத்து, அக்னி வளர்த்து அதனை அணையாமல் காத்து, நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் (சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனம்) ஒரு இல்லறத்தான், காயத்ரி மந்திரம் ஓதி செய்யும் வேதகால சிறு வேள்வியாகும்.
இவ்வேள்வியை யார் உதவியின்றி தனிமனிதன் செய்ய வேண்டியது.
அக்னி ஹோத்திரம் செய்ய வேண்டிய பொருட்கள்:
சிறு அக்னி குண்டம், சாண வறாட்டிகள், பசு நெய் மற்றும் முனை உடையாத பச்சரிசி.
அக்னி ஹோத்திரம் வேள்வியை செய்பவருக்கு ”அக்னி ஹோத்திரி” எனும் சிறப்பு பெயரிட்டு அழைக்கின்றனர். அக்னி ஹோத்திரி இறப்பின், அவன் அக்னி ஹோத்திரத்திற்காக வளர்த்த அக்னி குண்டத்திலிருந்து நெருப்பு எடுத்து அவனின் சவ உடலை எரிப்பர். பின்னர் அவன் வளர்த்த அக்னி குண்டத்தின் நெருப்பு அணைக்கப்பட்டுவிடும்.
தற்போது அக்னி ஹோத்திரம் எனும் வேள்வி மிகச் சிலரால் மட்டுமே செய்யப்படுகிறது.
பெண்களைப்பொறுத்தவரை திருமணமான பெண் புகுந்தவீடு செல்லும்போது விளக்கேற்றுகிறாள்.
பூஜையறையில் அந்த விளக்கு அணையாமல் சுடர்விட்டுக் கொண்டுகொண்டிருக்கும்
அவளது கடைசி காலம்வரை அந்த விளக்கு அணையாமல் பாதுகாக்கப்படும்.
தினமும் அந்த விளக்கின் முன்னால் அமர்ந்து பூஜை,தியானம்,ஜபம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
-..
{ஐந்தானவை} ஐந்து ஐந்தானவை
...
ஓ! பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே},
1.தந்தை,
2.தாய்,
3.அக்னி(வழிபாட்டிற்குரிய அக்னி அல்லது வழிபாட்டிற்குரிய தெய்வம்),
4.ஆன்மா,
5.குரு ஆகிய
ஐந்துபேரும் ஒரு மனிதனால் மரியாதையுடன் வழிபடப்பட வேண்டியவை.
-
1.தேவர்கள்(மேல் உலகில் வாழும் தெய்வங்கள்),
2.பித்ருக்கள்(முன்னோர்),
3.மனிதர்கள்(நல்லவர்கள்),
4.பிச்சைக்காரர்கள்(சந்நியாசிகள்),
5.விருந்தினர்கள்(தொலைதூர இடங்களுக்கு புனிதப்பயணம் மேற்கொள்பவர்)
ஆகிய ஐவருக்குச் சேவையாற்றுவதால் ஒரு மனிதன் இவ்வுலகில் பெரும்புகழை அடைகிறான்.
...
1.நண்பர்கள்,
2.எதிரிகள்,
3.பாகுபாடற்றவர்கள்(நீதிமான்கள்),
4.உம்மை சார்ந்து இருப்பவர்கள்(அடைக்கலமாக வந்திருப்பவர்),
5.உரிமையுள்ளவர்கள் (உறவினர்)
ஆகிய ஐயவர், நீர் எங்கே சென்றாலும் உம்மைத் தொடர்வார்கள்.
{1.கண், 2.காது, 3.மூக்கு, 4.நாக்கு, 5.உடல் [தோல்] ஆகிய} ஐம்பொறிகளில்
ஒரு பொறி பற்றுடையதானால்கூட,
தோலால் செய்யப்பட்ட ஓட்டைப் பாத்திரத்தில் இருந்து நீர் ஒழுகுவது போல,
ஒருவனுடைய ஞானம் அந்தப் பொறியின் குறைபாடு கரணமாக அதன் வழியாக வெளியே நழுவிவிடும்.
ஞானம் அவனிடம் தங்காது.
விதுர நீதி
...
{ஆறானவை} ஆறு ஆறாக
..
1.உறக்கம்,
2.தூக்கக் கலக்கம்,
3.அச்சம்,
4.கோபம்,
5.சோம்பல்,
6.காலதாமதம்
ஆகிய ஆறு குறைகளையும் செழிப்பை அடைய விரும்பும் மனிதன் தவிர்க்க வேண்டும்.
...
1.சாத்திரங்களுக்கு விளக்கமளிக்க இயலாத குரு,
2.கல்லாத புரோகிதர்,
3.பாதுகாக்க இயலாத மன்னன்,
4.இனிமையற்ற வார்த்தைகள் பேசும் மனைவி,
5.வயலுக்குச் செல்ல விரும்பா உழவன்,
6.காட்டுக்காக கிராமத்தை துறக்க விரும்பும் நாவிதர்
ஆகிய அறுவரையும் உடைந்த படகை கடலில் தள்ளுவது போலத் துறக்க வேண்டும்.
..
கிராமத்தில் உள்ள அனைவருக்கும் முடி திருத்துவது முந்தைய நாட்களில் நாவிதனது பணியாக இருந்தது.
நாவிதன் அதை செய்ய விரும்பாமல் காடுகளில் சென்று வாழ விரும்பினால்,அவனால் கிராமத்தினருக்கு பயன் இல்லை.
..
1.உண்மை,
2.தானமளித்தல்,
3.விடாமுயற்சி ,
4.இரக்கம்,
5.சமமான மனநிலை,(எதனாலும் பாதிக்கப்படாத மனம்)
6.பொறுமை
ஆகிய ஆறு குணங்களையும் ஒரு மனிதன் ஒருபோதும் விடக்கூடாது.
...
1.பசுக்கள்,
2. தொண்டு,
3.விவசாயம்,
4.மனைவி,
5.கல்வி,
6.சூத்திரனின் செல்வம்
ஆகிய ஆறும் புறக்கணிக்கப்பட்டால் உடனே அழிந்து விடும்.
...
பசுவை பாதுக்காக்க தவறினால் இன்னொருவன் திருடுவான்.
தொண்டு செய்வதால் புண்ணியம் கிடைக்கிறது.செய்ய தவறினால் பாவம் வருகிறது
விவசாயம் செய்ய தவறினால் உணவு கிடைக்காது
மனைவியை பாதுகாக்க தவறினால்.இன்னொருவன் கடத்தி சென்றுவிடுவான்
தான் கற்ற கல்வியை பயன்படுத்தாமலும்,பிறருக்கு கல்வி கற்பிக்காமலும் இருந்தால்,ஏற்கனவே கற்ற கல்வியும் மறந்துபோகும்.
சூத்திரன் செல்வம் சேர்க்க அனுமதி இல்லை.அப்படி சேர்த்தால் யாருக்கும் தெரியாமல் அவன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.வெளியில் தெரிந்தால் அந்த செல்வத்தை பிறர் அபரித்துசென்றுவிடுவார்கள்.
...
1.கல்வி கற்ற சீடர்கள் தங்கள் குருக்களையும்;
2.மணமானவர்கள் தங்கள் அன்னையரையும்;
3.விருப்பங்கள் ஈடேறியவர்கள், பெண்களையும்(விபச்சாரிகள்)
4.வெற்றியடைந்தவர்கள், உதவி செய்தவர்களையும்;
5.ஆற்றைக் கடந்தவர்கள், {தங்களைச் சுமந்த} படகையும்,
6.பிணி குணமான நோயாளிகள், மருத்துவர்களையும்
என இந்த ஆறு பேரும், தங்களுக்குக் கடமையாற்றியவர்களை மறந்து போவார்கள்.
...
1.உடல்நலன்,
2.கடன்படாநிலை,
3.வீட்டில் வாழ்தல் {வெளிநாடு செல்லாமல் பிழைக்கக்கூடிய வாய்ப்பு உள்ள நிலை},
4.நன்மனிதர்களின் துணை,
5.வாழ்வாதாரங்களுக்கான வழிகளில் உறுதி,(தேவையான வசதி)
6.அச்சமற்று இருத்தல் ஆகிய ஆறும்,
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.
..
1.பொறாமையுள்ளோர்,
2.அருவருப்புள்ளோர்,
3.மனநிறைவற்றோர்,
4.கோபமுள்ளோர்,
5.எப்போதும் சந்தேகமுள்ளோர்,
6.பிறரின் நற்பேறைச் சார்ந்து இருப்போர் (பிறரை அண்டி வாழ்பவர்)
ஆகிய அறுவரும் எப்போதும் துக்கமாகவே இருப்பர்.
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
1.செல்வத்தை அடைதல்,(தேவையான செல்வம் உள்ளவன்)
2.தடையற்ற உடல் நலன்,
3.இனிய பேச்சுடையவன்
4.அன்பிற்குரிய மனைவி,
5.கீழ்ப்படியும் மகன்,
6.இலாபகரமான அறிவு {தொட்டதெல்லாம் வெற்றியில் முடியும் அறிவுடையவர்}
ஆகிய ஆறையும் கொண்ட மனிதர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
..
மனித இதயத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கும்
1காமம்-ஆசை
2.குரோதம்-கோபம்
3.லோபம்-பேராசை
4.மோஹம்-இன்பத்தை அனுபவிக்க துடித்தல்
5.மதம்-அடங்காத திமிர்,
6.மாத்ஸரியம்-பொறாமை
ஆகிய அந்த ஆறையும் அடக்கியவன், தனது புலன்களை {பொறிகளை} வென்று, எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை. எனவே, அவனால் பிறருக்கு ஆபத்து இல்லை.பிறரால் அவனுக்கு ஆபத்து இல்லை
..
1.திருடர்கள் பொறுப்பற்றவர்களாலும்(தன் சொத்தை பாதுகாக்க தவறியவன்),
2.மருத்துவர்கள் நோயாளிகளாலும்,
3.பெண்கள்(விபச்சாரி) காமத்தால் பாதிக்கப்பட்டவர்களாலும்,
4.புரோகிதர்கள், வேள்வி செய்பவர்களாலும்,
5.மன்னன், சண்டையிடுபவர்களாலும்(எதிரிகளால்),
6.கற்றோர், கல்லாதோராலும்
என இந்த அறுவரும் மற்ற அறுவரால் வாழ்கின்றனர்.
விதுர நீதி
...
{ஏழானவை}
உறுதியாக நிறுவப்பட்ட ஏகாதிபதிகளுக்குக் கூட அழிவை ஏற்படுத்தக் கூடியவையும், துயரத்தைத் அளிக்கக்கூடியவையுமான,
1.பெண்கள்(விபச்சாரிகள்),
2.பகடை(சூதாட்டம்),
3.வேட்டை(காட்டில் உள்ள உயிரினங்களைக் கொல்லுதல்),
4.மது,
5.கடுஞ்சொல்,
6.கடுந்தண்டனை,
7.செல்வத்தை வீணடித்தல்
ஆகிய ஏழு தீமைகளை ஒரு மன்னன் கைவிட வேண்டும்.
....
{எட்டானவை} எட்டு எட்டானவை
இறைவனுக்காக உலக இன்பங்களைத் துறந்து,அறவழியில் வாழ்பவர் அந்தணர். அந்தணர்கள் உலகியில் வேலைகள் எதையும் செய்வதில்லை. பூஜை,ஜபம்,தியானம்,வேதம் ஓதுதல் என்று இறைதொடர்புள்ள வேலைகளை மட்டும் செய்வார்கள்
1.அந்தணர்களை வெறுப்பது,
2.அந்தணர்களுடன் சச்சரவு,
3.அந்தணர்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்வது,
4.அந்தணனின் உயிரைப் பறிப்பது,
5.அந்தணர்களை நிந்திப்பதில் இன்பம் கொள்வது,
6.அந்தணர்களின் புகழைக் கேட்டு வருந்துவது,
7.அந்தணர்கள் இல்லாமல் சடங்கு செய்வது,
8.அந்தணர்கள்} எதையும் கேட்கும் போது கொடுக்காமல் அவர்களைப் பழிவாங்குவது
ஆகிய எட்டும் அழிவடைய விதிக்கப்பட்ட மனிதனின் உடனடி அறிகுறிகளாகும்.
அறிவுடைய மனிதன் இந்த வரம்புமீறல்களை அறிந்து கொண்டு, அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
...
அந்தணர்களை யார் துன்புறுத்துவார்? அறநெறி வாழாத மன்னன், அசுர இயல்பு கொண்டவர்கள்
...
ஓ! பாரதரே {திருதராஷ்டரரே},
1.நண்பர்களுடன் சந்திப்பு,
2.அபரிமிதமான செல்வத்தை அடைவது,
3.மகனின் அணைப்பு,
4.கலவி(உடலுறவு),
5.சரியான நேரங்களில் நண்பர்களுடன் உரையாடல்,
6.தன் தரப்பைச் சார்ந்த மனிதரின் முன்னேற்றத்தை காணுதல்,
7.விரும்பியதை அடைவது,
8.சமூகத்தில் மரியாதை
ஆகிய எட்டும் வாழ்வில் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியின் சாரமேயாகும்,
இவை யாவையும் ஒருவனால் இங்கே இவ்வுலகில் மட்டுமே அடைய முடியும்.
....
1.அறிவு,
2.உயர்பிறப்பு,
3.தன்னடக்கம்,
4.கல்வி,
5.ஆற்றல்,
6.நிதானமான பேச்சு,
7.தன் சக்திக்குத் தக்க கொடை,
8.செய்நன்றி அறிதல்
ஆகிய எட்டு குணங்களும் ஒரு மனிதனைப் புகழடையச் செய்கின்றன.
......
ஒன்பதானவை
இந்த வீட்டுக்கு ஒன்பது வாயில்கள்,
மூன்று தூண்கள் மற்றும் ஐந்து சாட்சிகளாகும்.
அது ஆன்மாவால் நிரம்பியிருக்கிறது.
இவையனைத்தையும் உண்மையில் அறிந்த ஞானமுள்ளவனே கற்றவனாவான்.
...
மூன்று தூண்கள்-மூச்சு விடும் செயல்பாடுகளான இடகலை {இளை}, பிங்கலை {பிங்களை}, சுழிமுனை {சூஷுமனை}
ஒன்பது வாயில்கள்-இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்கு துவாரங்கள், ஒரு வாய், ஆசனவாய், குறி ஆகிய ஒன்பது ஓட்டைகள் என்ற வாயில்கள்.
ஐந்து சாட்சிகள்-
கண் - ஒளி
காது- ஒலி
மூக்கு- சுவாசம்
வாய் - சுவை,
மெய் - உடல்
..
இந்த உடலாகிய அந்த வீட்டில் ஆன்மா என்ற தலைவன் வசிக்கிறான்.
அதை உண்மையில் அறிந்தவனே ஞானி
...
-
விதுர நீதி
...
{விதுரன் சொன்னான்} “ஓ! திருதராஷ்டிரரே,
1.போதையில் இருப்பவன்,
2.கவனம் குறைந்தவன்,
3.உளறுபவன்,
4.களைப்பாக இருப்பவன்,
5.கோபம் கொண்டவன்,
6.பசியோடு இருப்பவன்,
7.அவசரப்படுபவன்,
8.பேராசை கொண்டவன்,
9.பயம் கொண்டவன்,
10.காமம் கொண்டவன்
ஆகிய பத்து பேரும் அறம் எது என்பதை அறிய மாட்டார்கள்.
மன்னன் செழிப்பை அடைய வேண்டுமானால்
1.காமத்தை துறந்தவனாக,
2.கோபத்தையும் துறந்தவனாக,
3.தகுந்தவனுக்குச் செல்வத்தை அளித்து,
4.பாகுபாட்டை அறிந்து,
5.கல்வி கற்று,
6.சுறுசுறுப்பாக இருக்கும் மன்னனே அனைத்து மனிதர்களுக்கும் அதிகாரியாகக் கருதப்படுகிறான்.
7.பிறரை நம்பிக்கை கொள்ளச் செய்பவனும்,
8.குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளிப்பவனும்,
9.தண்டனையின் சரியான அளவை அறிந்தவனும்,
10.கருணை எப்போது காட்டப்பட வேண்டும் என்பதை அறிந்தவனுமான மன்னனையே செழிப்பு அடைகிறது.
...
1.பலமற்ற எதிரியைக் கூட அலட்சியம் செய்யாதவனும்,
2.எதிரியைப் பொறுத்தமட்டில் சந்தர்ப்பத்திற்காக ஆவலாகக் காத்திருந்து புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்பவனும்;
3.தன்னைவிட பலமான மனிதர்களிடம் பகைமையை விரும்பாதவனும்;
4.சரியான நேரத்தில் ஆற்றலை வெளிப்படுத்துபவனும் ஞானியாவான்.
5.ஏற்கனவே வந்துவிட்ட துயரத்துக்காக வருந்தாதவனும்,
6.தனது அனைத்துப் புலனங்களையும் குவியச் செய்து முயற்சிப்பவனும்,
7.துயரமான காலத்தைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்பவனுமே
நிச்சயமாக மனிதர்களில் முதன்மையானவன் ஆவன்.
அவனது எதிரிகள் அனைவரும் வீழ்த்தப்படுவார்கள் என்பது நிச்சயம்.
1.பயனில்லாத நம்பிக்கையுடன் வாழ்வைக் கழிக்காதவனும்,
2.பாவிகளுடன் நட்பு கொள்ளாதவனும்,
3.அடுத்தவன் மனைவியை சீரழிக்காதவனும்,
4.ஆணவத்தைக் காட்டாதவனும்,
5.திருடாதவனும்,
6.நன்றிமறக்காதவனும்,
7.குடியில் ஈடுபடாதவனும்
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
8.கேட்கப்படும்போது உண்மையைச் சொல்பவனும்,
9..நண்பர்களுக்காகக் கூட சச்சரவு செய்யாதவனும்,
10.அலட்சியப்படுத்தப் பட்டாலும் கோபம் கொள்ளாதவனும்
ஞானி என்று கணிக்கப்படுகிறான்.
...
1.பிறருக்கு இழைக்கப்படும் தீங்கைப் பொறுக்காதவனும்,
2.அனைவரிடமும் அன்பாக இருபவனும்,
3.பலமற்றவனாக இருப்பின் பிறருடன் பூசல் கொள்ளாதவனும்,
4.ஆணவமாகப் பேசாதவனும்,
5.சச்சரவை மறப்பவனும், எங்கும் புகழப்படுகிறான்.
6.கர்வம் கொண்ட முகத்தை எப்போதும் கொள்ளாதவனும்,
7.பிறரைக் கண்டித்து, தன்னைப் புகழாதவனும்,
8.தான் பெற வேண்டியவற்றுக்காக பிறரிடம் எப்போதும் கடுஞ்சொல் பேசாதவனும்
அனைவராலும் எப்போதும் விரும்பப்படுவான்.
9.பழைய பகைமை வளர்க்காதவனும், ஆணவத்துடனோ, மிகுந்த பணிவுடனோ நடந்து கொள்ளாதவனும்,
10துயரத்தில் இருக்கும்போதும், முறையற்ற செயலைச் செய்யாதவனும் நன்னடத்தையுள்ளவன் ஆரியர்களில் சிறந்தவன் என்று மரியாதைக்குரியவர்களால் கருதப்படுகிறான்.
...
1.தனது மகிழ்ச்சியில் மிகவும் மகிழாதவனும்,
2.அடுத்தவர் துயரைக்கண்டு மகிழாதவனும்,
3.கொடையளித்துவிட்டு அதற்காகவருந்தாதவனும்,
4.நல்ல இயல்பும் நடத்தையும் கொண்ட மனிதன் எனச் சொல்லப்படுகிறான்.
5.பல்வேறு நாடுகளின் சடங்குகளில் ஞானத்தை அடைய விரும்புபவனும்,
6.பல்வேறு நாடுகளின் மொழிகளை அறிய விரும்புபவனும்,
7.பல்வேறு வகைகளிலான மனிதர்களின் சாதி தர்மங்களை அறிய விரும்புபவனும்,
8.ஏற்றத்தாழ்வு அனைத்தையும் அறிந்தவனுமான மனிதன், அவன் எங்கே சென்றாலும், மகிழ்ச்சியாக இருப்பவர்களை விட அதிக மகிழ்ச்சியடைவது நிச்சயம்.
..
1.செருக்கு,
2.மடமை, {முட்டாள்தனமான} துடுக்குத்தனம்,
3.பாவச்செயல்கள்,
4.மன்னனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது,
5.நடத்தையில் கோணல்,
6.பலருடன் பகைமை,
7.குடிகாரர்கள், பைத்தியக்காரர்கள், தீயவர்கள் ஆகியோருடன் சச்சரவு
ஆகியவற்றை விட்டுவிடும் புத்திசாலி மனிதன் தன் இனத்தில் முதன்மையானவன் ஆவான்.
...
1.தன்னடக்கம்,
2.தூய்மை,
3.நல்ல சடங்குகள்,
4.தேவர்களை வழிபடுதல்,
5.பரிகார விழாக்கள் மற்றும் உலகளாவிய அளவில் கடைப்பிடிக்கப்படும் பிற சடங்குகள்
ஆகியவற்றைத் தினமும் பயிலும் மனிதனுக்கு தேவர்களே செழிப்பை அளிக்கின்றனர்.
... ....
1.தாழ்ந்தவர்களோடு அல்லாமல் சம நிலை உள்ள மனிதர்களிடம் மண உறவு கொள்பவனும்,
(வசதி,குலம் போன்றவற்றில் சமநிலையில் உள்ளவர்களிடம் மணஉறவு வைத்துக்கொள்ள வேண்டும்)
2.தன் முன் மேம்பட்ட தகுதியுடைவயர்களை அமர்த்துபவனும்,
(தன்னைவிட மேம்பட்ட தகுதியுடையவனை தனக்கு கீழ் அமர்த்தக்கூடாது)
3.சம நிலை மனிதர்களுடன் பேச்சும், நடத்தையும், நட்பும் கொள்பவனுமான கற்றறிந்த மனிதனின் செயல்கள், கருத்தில் கொள்ளவும், பயன்படுத்தவும் ஏற்றவை ஆகும்.
...
1.தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளித்துவிட்டு மிதமாக உண்பவனும்,
2.அளவற்ற வேலைகளைச் செய்துவிட்டு மிதமாக உறங்குபவனும்,
3.யாசிக்கப்பட்டால் எதிரிகளுக்கும் கொடுப்பவனும் {தானம் அளிப்பவனும்},
தன் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வான்.
அவனிடம் இருந்து துயரங்கள் விலகி நிற்கின்றன.
....
1.எவனுடைய ஆலோசனைகள் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளப்படுகிறதோ {கமுக்கமாக பாதுகாக்கப்பட்டு}, நல்ல முறையில் செயல்படுத்தப்படுகிறதோ,
2.எவனுடைய செயல்களின் விளைவுகள் பிற மனிதர்களைக் காயப்படுத்துவதில்லையோ, அவன், தனது சிறு நோக்கங்களை அடைவதில் கூட வெற்றியாளனாகவே இருப்பான்.
...
1.அனைத்து உயிர்களுக்கு தீங்கிழையாமல் இருப்பதை நோக்கமாகக் கொண்டவனும்,
2.உண்மையுள்ளவனும்,
3.மென்மையானவனும்,
4.ஈகை குணம் கொண்டவனும்,
5.தூய மனம் கொண்டவனும்,
அற்புதமான சுரங்கத்தைத் தோற்றுவாயாகக் கொண்ட விலைமதிப்பற்ற ரத்தினத்தின் தூய கதிர் போல,
தன் உறவினர்களுக்கு மத்தியில் பெரும் ஒளியுடன் ஒளிர்வான்.
...
தன்னைத்தவிர வேறு யாருக்கும் தனது குற்றங்கள் அறியப்படாமல் இருந்தாலும், அதற்காக {அக்குற்றங்களுக்காக} வெட்கப்படுபவன்,
அனைத்து மனிதர்களுக்கும் மத்தியில் உயர்வாக மதிக்கப்படுகிறான்.
..
தூய இதயத்துடனும்,
அளவிலா சக்தியுடனும்,
சித்தத்தில் நிலை பெற்றும் இருப்பவன் தனது சக்தியின் விளைவாக சூரியனைப் போலவே ஒளிர்கிறான்.
விதுர நீதி
...
🏮எவனுடைய ஆலோசனைகள் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளப்படுகிறதோ , நல்ல முறையில் செயல்படுத்தப்படுகிறதோ,
எவனுடைய செயல்களின் விளைவுகள் பிற மனிதர்களைக் காயப்படுத்துவதில்லையோ, அவன், தனது சிறு நோக்கங்களை அடைவதில் கூட வெற்றியாளனாகவே இருப்பான்.
....
🏮அனைத்து உயிர்களுக்கு தீங்கிழையாமல் இருப்பதை நோக்கமாகக் கொண்டவனும்,
உண்மையுள்ளவனும்,
மென்மையானவனும்,
ஈகை குணம் கொண்டவனும்,
தூய மனம் கொண்டவனும்,
அற்புதமான சுரங்கத்தைத் கொண்ட விலைமதிப்பற்ற ரத்தினத்தின் தூய கதிர் போல,
தன் உறவினர்களுக்கு மத்தியில் பெரும் ஒளியுடன் ஒளிர்வான்.
...
🏮தன்னைத்தவிர வேறு யாருக்கும் தனது குற்றங்கள் அறியப்படாமல் இருந்தாலும், அதற்காக {அக்குற்றங்களுக்காக} வெட்கப்படுபவன், அனைத்து மனிதர்களுக்கும் மத்தியில் உயர்வாக மதிக்கப்படுகிறான்.
..
🏮தூய இதயத்துடனும், அளவிலா சக்தியுடனும், சித்தத்தில் நிலை பெற்றும் இருப்பவன் தனது சக்தியின் விளைவாக சூரியனைப் போலவே ஒளிர்கிறான்.
...
🏮திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான்
“உறக்கமற்று, துயரத்தால் எரிந்து கொண்டிருக்கும் மனிதன் என்ன செய்ய வேண்டும் என்பதை நீ எனக்குச் சொல். ஏனென்றால், நம்மில் நீ ஒருவனே, அறம் மற்றும் பொருளை அறிந்திருக்கிறாய்.
ஓ! விதுரா, ஞானத்துடன் எனக்கு ஆலோசனை கூறுவாயாக.
ஓ! மேன்மையான இதயம் கொண்டவனே {விதுரா},
எதிர்காலத் தீமைகளை அறிந்து கொண்டு, அஜாதசத்ருவுக்கு {யுதிஷ்டிரனுக்கு} நன்மையானவை என்றும், குருக்களின்(குருவம்சம்-கௌரவர்கள்) நன்மையை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை என்றும் நீ கருதுவதைச் சொல்வாயாக.
எனது முந்தைய குற்றத்தை நான் திரும்பிப் பார்க்கிறேன். பதட்டம் நிறைந்த இதயத்துடன் நான் உன்னைக் கேட்கிறேன்,
ஓ! கற்றவனே {விதுரா}, அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} மனதில் என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சரியாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.
...
🏮விதுரன் {திருதராஷ்டிரனிடம்},
“ஒருவனின் தோல்வியை {அவமானத்தை} விரும்பாத ஒருவன், கேட்கப்படாத போதும், தனது வார்த்தைகள் நன்மையானவையாகவோ தீமையானவையாகவோ, வெறுப்புடனோ, இனியுடனோ இருக்குமேயானாலும் கூட உண்மையைச் சொல்ல வேண்டும்.
எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் குருவம்சத்தினருக்கு நன்மை எதுவோ அதையே சொல்வேன். எது நன்மை என்றும், எது அறநெறி சார்ந்தவை என்றும் இரண்டையும் நான் சொல்வேன். நான் சொல்வதைக் கேளும்.
🏮ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே},
நீதியற்ற முறையற்ற வெற்றியின் வழிகளில் உமது இதயத்தை நிலைநிறுத்தாதீர்.
நியாயமான, முறையான வழிவகைகளில் தனது நோக்கத்தின் பயன்பாடு நிற்கவில்லையென்றால், அதன் வெற்றியைக் குறித்து ஒரு புத்திசாலி மனிதன் வருந்தக்கூடாது.
..
🏮ஒருவன் ஒரு செயலில் ஈடுபடும் முன்னர்,
1.செயலைச் செய்பவரின் திறன்,
2.செயலின் இயல்பு,
3.அதன் நோக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
அனைத்துச் செயல்களும் இவற்றையே சார்ந்திருக்கின்றன.
இவற்றைக் கருத்தில் கொண்டே ஒருவன் செயல்பட வேண்டும்.
திடீர் உந்துதலால் {ஆர்வக் கோளாறால்} எதையும் செய்யக்கூடாது.
...
🏮ஞானமுள்ளவன்,
1.தனது சொந்த திறனையும்,
2.செயலின் இயல்பையும்,
3.வெற்றியினால் உண்டாகும் விளைவுகளையும் முழுதும் கருத்தில் கொண்டே செயல்படவோ, செயல்படாமலோ இருக்க வேண்டும்.
..
🏮நாட்டைப் பொறுத்தவரை
1.அதன் விகிதாச்சாரம்,
2.அளவு,
3.ஆதாயம்,
4.இழப்பு,
5.கருவூலம்,
6.மக்கள் தொகை,
7.தண்டனை ஆகியவற்றை அறியாத மன்னன் தனது நாட்டை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியாது.
அதே வேளையில், மறுபுறம்
ஒப்பந்தங்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை அறிந்து,
அறம் மற்றும் பொருளின் அறிவை அறிந்தவன்
தனது நாட்டைத் தக்க வைத்துக் கொள்வான்.
-
விதுர நீதி
...
{புலனடக்கம்} மனத்தை கட்டுப்படுத்துதல்
இவ்வுலகம் புலன்களால் பாதிக்கப்படுகிறது.
கட்டுத்தப்படாத புலன்கள் தங்களுக்குரிய புலன்நுகர்ச்சி பொருட்கள்மீது செலுத்தப்படும்போது இவ்வுலகம் பாதிப்படைகிறது.
...
வளர்பிறை நாட்களில் இருக்கும் நிலவைப் போல, இயற்கையான நிலையில் உள்ள தங்கள் ஐம்புலன்களால் வீழ்த்தப்படும் மனிதனின் துயரங்கள் அதிகரிக்கவே செய்யும்.
அவை எப்போதும் அவனைப் பல்வேறு செயல்பாடுகளை நோக்கி இட்டுச் செல்லும்.
(நிலவு வளர்கிறது பின்பு படிப்படியாக தேய்கிறது,பின்பு வளர்கிறது.அதேபோல ஐம்புலன்களும் சில நாட்கள் மனிதனுக்கு நண்பனாகவும்,சில சமயம் எதிரியாகவும் உள்ளது)
...
தன்னைக் கட்டுப்படுத்தாத ஒருவன்(ஐம்புலன்களை கட்டுப்படுத்தாதவன்) தனது ஆலோசகர்களைக் கட்டுப்படுத்த விரும்புபவனோ,
தனது ஆலோசகர்களைக் கட்டுப்படுத்தாது தனது பகைவர்களை வீழ்த்துபவனோ,
கடைசியில் வலிமையை இழந்து போக நேரும்.
எனவே, முதலில் தன்னையே(ஐம்புலன்களை) எதிரி என்று நினைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவன்,
கடைசியின் தனது ஆலோசகர்களையோ,
எதிரிகளையோ வெல்வதில் தோல்வியுற மாட்டான்.
..
1.தனது புலன்களை வெல்பவனுக்கோ,
2.தனது ஆன்மாவைக் கட்டுப்படுத்துபவனுக்கோ,
3.குற்றமிழைப்பவர்கள் அனைவரையும் தண்டிக்கும் திறன் பெற்றவனுக்கோ,
4.நீதியுடன் செயல்படுபவனுக்கோ,
5.பொறுமையால் அருளப்பட்டவனுக்கோ
பெரும் செழுமை காத்திருக்கிறது.
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
ஒருவனின் உடல் அந்த ஒருவனின் தேராகும்;
அதற்குள் இருக்கும் ஆன்மாவே அதன் ஓட்டுநராகும்;
புலன்கள் அதன் குதிரைகளாகும்.
அந்த நன்கு பழக்கப்பட்ட அந்த அற்புதமான குதிரைகளால் இழுக்கப்படும் ஞானி,
தனது வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக நடத்தி,
நிம்மதியாகக் கண் விழிக்கிறான்.
...
அடக்கப்படாத, கட்டுப்படுத்த இயலாத குதிரைகள்,
நிபுணத்துவம் இல்லாத ஓட்டுநரால் செலுத்தப்பட்டு,
பயணத்தின் வழியில் அழிவடைய நேர்கிறது;
எனவே அடக்கப்படாத ஒருவனின் புலன்கள் அழிவுக்கே வழிகோலுகின்றன.
...
அனுபவமற்ற மனிதன் ஒருவன், இந்த அடக்கப்படாத புலன்களால் வழிநடத்தப்பட்டு,
நன்மையில் இருந்து தீமையையும்,
தீமையில் இருந்து நன்மையையும் பெற்று மகிழ்ச்சியைத் துயரம் எனக் குழப்பிக் கொள்கிறான்.
..
அறம் பொருள் ஆகியவற்றைக் கைவிட்டவன்,
புலன்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி,
செழிப்பு, வாழ்வு, செல்வம் மனைவி ஆகியவற்றைத் தாமதமில்லாமல் இழக்கிறான்.
..
புலன்களுக்கல்லாமல் செல்வங்களுக்கு மட்டுமே தலைவனாக இருப்பவன்,
புலன்களைக் கட்டுப்படுத்தாததன் விளைவாகத் தனது செல்வங்களை நிச்சயமாக இழக்கிறான்.
...
ஒருவன் தன்னைத் தன்னால் அறிய வேண்டும். {ஆன்மாவை அறியவேண்டும்}.
தானே தனக்கு நண்பனாகவும் எதிரியாகவும் இருப்பதால், ஒருவன் தனது மனம், அறிவு மற்றும் புலனங்களைக் கட்டுப்படுத்தி, தன்னால் தன்னை அறிய வேண்டும்.
தானே தனக்கு நண்பனும், எதிரியும் ஆனதால், தன்னால் தன்னை வென்ற மனிதன், தன்னைத் தன் நண்பனாகக் கொள்கிறான்.
....
-
விதுர நீதி
...
{ஆசையும் கோபமும்}
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
பெரிய மீன் ஒன்று வலையின் மெல்லிய கயிறுகளை அறுப்பது போல,
ஆசையும் கோபமும் ஞானத்தை அறுக்கும்.
..
அறத்தையும் பொருளையும் இவ்வுலகில் மதித்து வெற்றியின் வழிவகைகளை அடைய முயல்பவன்,
தான் வேண்டுவது அனைத்தையும் அடைந்து மகிழ்ச்சியை வெல்கிறான்.
...
மனம்சார்ந்த தனது ஐந்து எதிரிகளைக் கட்டுப்படுத்தாத ஒருவன்,
பிற புற எதிரிகளை வீழ்த்த விரும்பினால், உண்மையில் அவற்றால் {அந்த ஐந்து எதிரிகளால்} வீழ்த்தப்படுகிறான். தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தாத தீய மனம் கொண்ட மன்னர்கள், நாடாசையின் காரணமாகத் தங்கள் செயல்களாலேயே அழிவடைகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.
...
{தீயோருடன் நட்பு}
..
ஈரவிறகு, காய்ந்த விறகோடு எரிவது போல, பாவிகளோடு நிலைத்த தொடர்புடைய பாவமற்ற மனிதனும் தண்டிக்கப்படுகிறான். எனவே, பாவிகளோடு ஏற்படக்கூடிய நட்பைத் தவிர்க்க வேண்டும்.
...
அறியாமையில் இருப்பவன், பேராசை கொண்ட தனது ஐந்து எதிரிகளைக்(ஐம்புலன்கள்) கட்டுப்படுத்த தவறி,
ஐந்து தனித்துவமான பொருட்களைக் கொண்டு பேரழிவில் மூழ்குகிறான்.
..
1.கபடமற்ற தன்மை,
2.எளிமை,
3.தூய்மை,
4.மனநிறைவு,
5.இனிமையான பேச்சு,
6.சுய கட்டுப்பாடு,
7.உண்மை,
8.உறுதி
ஆகியன எப்போதும் தீயவர்களிடம் இருக்காது
...
1.தன்னறிவு {ஆத்மஞானம்},
2.உறுதி,
3.பொறுமை,
4.அறத்தில் அர்ப்பணிப்பு,
5.ஆலோசனைகளைக் கமுக்கமாக வைத்துக் கொள்வது,
6.ஈகை ஆகியவை
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே},
இழிந்த மனிதர்களிடம் இருப்பதில்லை.
....
போலிக் குற்றச்சாட்டுகள், தீய உரைகள் மூலம் மூடர்கள் ஞானிகளுக்குத் தீங்கிழைக்கின்றனர்.
இதன் விளைவாக ஞானிகளால் செய்யப்பட்ட பாவங்களை அந்த மூடர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஞானிகள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டு இப்படியே மன்னிக்கப்படுகின்றனர்.
...
தீய குணத்தாலேயே தீயவர்கள் பலம் பெறுகிறார்கள்;
குற்றவியல் சட்டத்திலும்,
பலமற்றவர்களையும் பெண்களையும் கவனமாகப் பார்த்துக் கொள்வதிலுமே மன்னர்களின் பலம் இருக்கிறது. மன்னிக்கும் தன்மையிலேயே {பொறுமையிலேயே} அறம்சார்ந்தவர்களின் பலம் இருக்கிறது.
(மன்னிப்பதனால் பலம் அதிகரிக்கிறது)
..
{பேச்சு [உரை]}
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
பேச்சைக் கட்டுப்படுத்தவதே மிகவும் கடினமானது என்று சொல்லப்படுகிறது.
பொருள் நிறைந்த வார்த்தைகளுடன் கேட்பவர்களுக்கு இனிமையாக நீண்ட உரையை ஆற்றுவது என்பது எளிதானதல்ல.
நன்கு பேசப்பட்ட பேச்சு, பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்;
தீமையாகப் பேசப்பட்ட பேச்சு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தீமைகளுக்குக் காரணமாக இருக்கும்.
..
கணைகளால் துளைக்கப்பட்ட அல்லது கோடரியால் வெட்டப்பட்ட காடு மீண்டும் வளரலாம்,
ஆனால் காயப்படுத்தும் வகையில் தீய வார்த்தைகளால் நிந்திக்கப்பட்டுக் காயமடைந்த இதயம் மீண்டெழுவதில்லை {ஆறுவதில்லை}.
...
கணைகள், குண்டுகள், பராசங்கள் ஆகிய ஆயுதங்களை உடலில் இருந்து எளிதில் எடுத்துவிடலாம்,
ஆனால், இதயத்தின் ஆழத்தில் குத்தப்பட்ட வார்த்தைகளாலான குறுவாளை வெளி உருவி எடுப்பது இயலாதது.
..
வார்த்தைக் கணைகள் வாயில் இருந்து அடிக்கப்படுகின்றன. அதனால் தாக்குண்ட ஒருவன் அல்லும் பகலும் வருந்துகிறான். பிறரது உயிரையே அது தொட்டுவிடுவதால், கற்ற மனிதன் அத்தகு கணைகளை அடிக்கக்கூடாது.
...
-
விதுர நீதி
...
விதுரன் {திருதராஷ்டிரனிடம்},
1.“புனித இடங்கள் அனைத்திலும் நீராடுவதும்,
2.அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு காட்டுவதுமாகிய இரண்டும் சமமே.
அனைத்து உயிரினங்களிடமும் அன்புகாட்டுவது புனித இடங்களில் நீராடுவதைவிட ஒருவேளை விஞ்சியதாக இருக்கலாம்.
..
ஒரு மனிதனின் நற்செயல்கள் எவ்வளவு காலம் இவ்வுலகில் பேசப்படுமோ,
அவ்வளவு காலம் அவன் சொர்க்கத்தில் மகிமைப்படுத்தப்படுகிறான்.
...
ஒருவன் நீதி மற்றும் அறநெறிகள் ஆகியவற்றில் கொண்டுள்ள கவனத்தின் விகிதத்தின் படியே ஒருவன் தனது நோக்கங்களில் வெற்றியடைகிறான் என்பதில் ஐயமில்லை.
..
பொய்மையில் வாழும் ஏமாற்றுகர மனிதனை,
வேதங்கள், பாவத்தில் இருந்து மீட்பதே இல்லை. மறுபுறம், புதிதாய் சிறகு படைத்த பறவைகள் தங்கள் கூடுகளைக் கைவிடுவதைப் போல, அவன் {ஏமாற்றுகர மனிதன்} மரணப்படுக்கையில் கிடக்கையில், வேதங்கள் அவனைக் கைவிடுகின்றன.
...
1.குடிப்பழக்கம்,
2.சண்டை,
3.அதிக எண்ணிக்கையிலான மனிதர்களிடம் பகை,
4.திருமணம் தொடர்பான அனைத்து மோதல்கள்,
5.கணவன் மனைவிக்கு இடையேயான உறவின் முறிவு,
6.உட்பகை,
7.மன்னனுக்குத் துரோகம்
ஆகியவை அனைத்தும் பாவிகளின் செயலாகும். இவை தவிர்க்கப்பட வேண்டும்.
...
1.கைரேகை பார்க்கும் ஒருவன்,
2.வணிகராக மாறிய திருடன்,
3.வேடன்,
4.யோகி வேடம் பூண்ட மருத்துவன்
5.எதிரி,
6.நண்பன்,
7.இழிந்த தன்மை கொண்டவன்
ஆகிய ஏழு பேரும் சாட்சி அளிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.
..
1.செருக்கின் காரணமாகச் செய்யப்படும் அக்னிஹோத்ரம்,
2.அதே போன்ற நோக்கத்துக்காக நோற்கப்படும் பேசாநிலை {மௌனம்},
3.அதே நோக்கத்திற்காகச் செய்யப்படும் கல்வி
4.மற்றும் வேள்வி ஆகிய
நான்கையும் {நான்கின் நோக்கத்தையும்} அறியாமல்,
தேவையில்லாமல் {அல்லது அளவுக்கு அதிகமாக} செய்தால் அவை தீங்கையே தரும்.
...
{அந்தணர்களைக் கொன்ற இழிகுணம் கொண்டவர்கள்}
...
1.வீட்டைக் கொளுத்துபவன்,
2.நஞ்சைக் கையாள்பவன்,
3.பரத்தமைத் தரகன் {விபச்சாரத் தரகன் },
4.சோமச் சாறு {சோமலதை} விற்பனையாளன்,
5.அம்புகளைச் செய்பவன்,
6.கணியன் {ஜோதிடன்},
7.நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன்,
8.பிறன்மனை நயப்பவன்(பிறரது மனைவியை விரும்புபவன்) ,
10.கருக்கலைப்பு செய்பவன்,
11.தனது ஆசானின் படுக்கையை மீறுபவன்(ஆசானின் மனைவியை நோக்குபவன்),
12.மதுவுக்கு அடிமையான பிராமணன்,
13.கூரிய சொல் கொண்டவன்,
14.பழைய புண்ணைக் கிளறுபவன்,
15.இறைமறுப்பாளன் {நாத்திகவாதி},
16.வேதங்களைத் தூற்றுபவன்,
17.கையூட்டு {இலஞ்சம்} பெறுபவன்,
18.பரிந்துரைக்கப்பட்ட வயதைத் தாண்டி புனித நூலைத் தரித்துக் {பூணூல்} கொள்பவன்,
19.கமுக்கமாகக் கால்நடைகளைக் கொல்பவன்
20. பாதுகாப்பு வேண்டுபவனைக் கொல்வபவன்
ஆகிய தார்மீக அடிப்படையில் இழிகுணம் கொண்ட இந்த அனைவரும்,
அந்தணர்களைக் கொன்றவர்களாகவே கருதப்படுவர்.
-
விதுர நீதி
...
{சோதனை}
..
1.தங்கம் நெருப்பால் சோதிக்கப்படுகிறது;
2.நல்ல பிறப்பு பிறந்தவன் தனது ஒழுக்கத்தாலும்,
3.நேர்மையானவன் தனது நடத்தையாலும் சோதிக்கப்படுகிறான்.
4. துணிச்சலுள்ளவன், .அச்சம் நிறைந்த காலத்திலும்;
5.தன்னடக்கம் {சுயக்கட்டுப்பாடு} உள்ளவன், வறுமையான காலத்திலும்;
6.நண்பர்களும் எதிரிகளும் துயரம் மற்றும் ஆபத்தான காலங்களிலும் சோதிக்கப்படுகின்றனர்.
..
1.முதுமை அழகை அழிக்கும் ,
2.இலக்கில் {இலட்சியத்தில்} நம்பிக்கை பொறுமையை அழிக்கும்,
3.மரணம் வாழ்வை அழிக்கும்,
4.பொறாமை நீதியை அழிக்கும்,
5.கோபம் செழிப்பை அழிக்கும்,
6.தாழ்ந்தவருடன் சேர்க்கை நன்னடத்தையை அழிக்கும்,
7.காமம் பணிவை அழிக்கும்,
8.செருக்கு அனைத்தையும் அழித்துவிடும்.
..
{இந்த எட்டுக் குணங்கள் ஒருவனுக்கு மிளிர்வைத் தருகின்றன}
..
நற்செயல்களில் செழிப்புப் பிறக்கிறது,
செயல்பாட்டின் விளைவாக அது வளர்கிறது,
திறனின் விளைவாக அஃது ஆழமாக வேர்விடுகிறது,
தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதால் {சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பதால்} அஃது உறுதி பெறுகிறது.
1.அறிவு,
2.நல்ல குலத்தில் பிறப்பு,
3.தற்கட்டுப்பாடு {சுயக்கட்டுப்பாடு},
4.சாத்திரங்களின் அறிவு,
5.ஆற்றல்,
6.வம்பளப்பு இல்லாமை {மிதமான பேச்சு},
7.சக்திக்குத்தக்கபடி தானம்,
8.நன்றியறிதல்
ஆகிய எட்டு குணங்களும் அதைக் கடைப்பிடிப்பவனை மிளிரச் செய்கின்றன.
...
ஆனால், ஓ! அய்யா {திருதராஷ்டிரரே},
இந்தக் குணங்கள் அனைத்தையும் ஒன்றுபடச்செய்யக் கூடிய அறக்கொடை ஒன்று மட்டுமே உள்ளது.
உண்மையில், ஒரு மன்னன் ஒரு குறிப்பிட்ட மனிதனை மதிக்கும்போது,
அந்த அரச உதவி, இந்தப் பண்புகள் அனைத்தையும் (உதவி பெற்றவனிடம்) மிளிரச் செய்யும்.
மனிதர்களின் உலகில், அந்த எட்டும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கத்தைக் குறிப்பதாகும்.
...
1.நான்கு, 2.வேள்வி, 3.கொடை, 4.கல்வி மற்றும் தவம் ஆகியன நன்மையுடன் பிரிக்கமுடியாதபடி தொடுக்கப்பட்டுள்ளது {இணைக்கப்பட்டுள்ளது}.
அதேவேளையில், 1.தன்னடக்கம், 2.உண்மை, 3.எளிமை, 4.எவருக்கும் ஊறிழையாமை {அஹிம்சை} ஆகிய மற்ற நான்கும் எப்போதும் நல்லவர்களால் பின்பற்றப்படுகின்றன.
...
{நீதியின் எட்டு வெவ்வேறு பாதைகள்}
...
வேள்வி, கல்வி, ஈகை, தவம், உண்மை, மன்னிக்கும் மனநிலை {பொறுமை}, இரக்கம் {கருணை}, மனநிறைவு ஆகியன நீதியில் உள்ளடங்கிய எட்டு வெவ்வேறு பாதைகளாகும். இவற்றில் முதல் நான்கு பெருமைக்காகப் பயிலப்படலாம், ஆனால் கடைசி நான்கும் உண்மையில் உன்னதமானவர்களிடம் மட்டுமே இருக்கும்.
...
{சபை}
...
பெரியோரில்லாத சபையேதும் இல்லை {பெரியோரில்லாதது சபையாகாது}.
அறநெறி எது என்பதைத் தீர்மானிக்காதவர்கள் பெரியோரல்ல {தர்மத்தைச் சொல்லாதவர் பெரியோரல்ல}. உண்மையில் இருந்து பிரிந்து இருப்பது அறநெறியல்ல {சத்தியம் இல்லாதது தர்மம் அல்ல}.
வஞ்சனை நிறைந்தது உண்மையல்ல {கபடம் கொண்டது சத்தியம் அல்ல}.
1.உண்மை, 2.அழகு, 3.சாஸ்திரம் அறிதல், 4.அறிவு, 5.உயர்பிறப்பு, 6.நன்னடத்தை {ஒழுக்கம்}, 7.வலிமை, 8.செல்வம், 9.துணிச்சல், 10.பல்வேறு பேச்சுத்திறன்கள் ஆகிய பத்தும் சொர்க்கத்திற்கான காரணங்களாகும்.
..
{பாவம்}
...
பாவத்தை இழைக்கும் ஒரு பாவி, அனைத்து தீய விளைவுகளாலும் தாக்கப்படுகிறான். அறம் பயிலும் அறவோன் {நல்லவன்}, பெரும் மகிழ்ச்சியை அறுவடை செய்கிறான்.
எனவே, ஒரு மனிதன், கடுந்தீர்மானத்துடன் {கடும் விரதத்துடன்} பாவத்தில் இருந்து விலக வேண்டும்,
மீண்டும் மீண்டும் இழைக்கப்படும் பாவம், அறிவை அழிக்கிறது;
அறிவை இழந்த மனிதன் மீண்டும் மீண்டும் பாவத்தைச் செய்கிறான்.
-
விதுர நீதி
...
{அறம்}
மீண்டும் மீண்டும் பயிலப்படும் அறம் அறிவை மேம்படுத்துகிறது;
அறிவு வளர்ந்த மனிதன் மீண்டும் மீண்டும் அறம் பயில்கிறான்.
அறத்தைப் பயிலும் அறவோன் அருள் நிறைந்த உலகங்களுக்குச் செல்கிறான்.
எனவே, ஒரு மனிதன் அறம் பயில உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்.
...
1.பொறாமையுள்ளவன்,
2.பிறரை ஆழமாகக் காயப்படுத்துபவன்,
3.கொடூரன்,
4.தொடர்ச்சியாகச் சண்டையிடுபவன்,
5.வஞ்சகன் ஆகியோர்
இந்தப் பாவங்களைப் பயில்வதால் விரைவில் பெருந்துன்பத்தைச் சந்திக்கின்றனர்.
...
பொறாமையில்லாதவனும், அறிவுடையவனும்,
எப்போதும் நன்மையைச் செய்வதால், பெருந்துன்பத்தை அவன் சந்திப்பதே இல்லை;
மறுபுறம் அவன் எங்கும் ஒளிர்கிறான்.
...
ஞானிகளிடமிருந்து ஞானத்தைப் பெறுபவனே உண்மையில் கற்றவனும்,
ஞானியுமாவான்.
அறம், பொருள் ஆகிய இரண்டையும் கவனித்து, மகிழ்ச்சியை அடைவதில் வென்றவனே ஞானியாவான்.
...
1.இரவை மகிழ்ச்சியாகக் கடத்த உம்மைத் தகுந்தவராக்கும் காரியத்தைப் பகலில் செய்யும்.
2.மழைக்காலங்களை மகிழ்ச்சியாகக் கடத்த உம்மைத் தகுந்தவராக்கும் காரியங்களை வருடத்தின் எட்டு மாதங்களில் செய்வீராக.(4 மாதம் மழைக்காலம்)
3.முதிர்ந்த வயதில் மகிழ்ச்சிக்கு எது உத்தரவாதம் அளிக்குமோ அதை இளமையில் செய்யும்;
4.மறுமையில் மகிழ்ச்சியாக வாழத் தகுந்தவனாக்கும் எதையும் முழு வாழ்விலும் செய்யும்.
...
1.எளிதாகச் செரிக்கும் உணவையும்,
2.இளமை கடந்த மனைவியையும்,
3.வெற்றி பெற்ற வீரனையும்,
4.முயற்சிகளில் வெற்றி மகுடம் பெற்ற துறவியையும்
ஞானிகள் புகழ்கின்றனர்.
..
அநீதியாக அடைந்த செல்வத்தால் ஏற்பட்ட இடைவெளி அடைபடாமலேயே நீடிக்கிறது.
அதேவேளையில் புதியவற்றால் வேறு இடங்களிலும் அடைபடாத இடைவெளிகள் தோன்றுகின்றன..
(அநீதியாக அதிகம் செல்வம் சேர்த்தவன் இன்னும் அதிகம் செல்வம் சேர்க் வேண்டும் என்ற ஆவலால் தூண்டப்படுகிறான்).
..
1.தங்கள் ஆன்மாக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்போரை ஆசான் கட்டுப்படுத்துகிறார்;
(தங்கள் ஆன்மாவை கட்டுப்படுத்தியவனுக்கு அதீத சக்திகள் கிடைக்கின்றன.அதனால் பிறருக்கு துன்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே குரு அவனை கட்டுப்படுத்துகிறார்)
2.தீயோரை மன்னன் கட்டுப்படுத்துகிறான்; அதே வேளையில்,
3.கமுக்கமாகப்(பிறருக்கு தெரியாமல்) பாவமிழைப்போரை, விவஸ்வத்தின் மகனான யமன் கட்டுப்படுத்துகிறான்.
...
{ஆய்ந்து உறுதிபடுத்த முடியாதவை}
1.முனிவர்கள்,
2.நதிகள், நதிக்கரைகள்,
3.உயர் ஆன்ம மனிதர்கள் ஆகியவற்றின் பெருமைகளையும்
பெண்களின்(விபச்சாரியின்) தீய குணங்களுக்கான காரணங்களையும்
உறுதியாகச் சொல்ல முடியாது அல்லது அவற்றின் மூலத்தை அறிய முடியாது
...
{உலகை எப்போதும் ஆள்பவர்கள் யார்?}
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
1.அந்தணர்களின் வழிபாட்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும்,
(ரிஷிகளைப் போற்றி பணிபவன்)
2.தானம் அளிப்பவனும்,
3.தன் உறவினர்களிடம் நீதியுடன் நடந்து கொள்பவனும்,
(உறவினர்களுக்கு சாதகமாக நடக்காதவன்)
4.மேன்மையுடன் {உன்னதமாக} நடந்து கொள்ளும் க்ஷத்திரியனும் எப்போதும் உலகை ஆள்வான்.
...
1.துணிச்சல் உள்ளவனும்,
2.கல்வி உள்ளவனும்,
3.பிறரைப் பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்தவனும் ஆகிய மூவரும்,
உலகத்தில் இருந்து தங்க மலர்களைச் சேகரிக்க {பொன்விளையும் பூமியை ஆள்வதற்கு} எப்போதும் இயன்றவர்களாவார்கள்.
...
அறிவால் சாதிக்கப்பட்ட செயல்களே முதன்மையானவை {சிறந்தவை};
(ரிஷிகளின் செயல்கள்)
கைகளால் சாதிக்கப்பட்டவை இரண்டாம் {மத்திம} தரம்;
(ஷத்திரியர்களின் செயல்கள்)
தொடைகளாலும்(உட்கார்ந்திருந்து செய்யும் வியாபாரம் போன்ற வைஷிய செயல்கள்),
தலையில் பாரஞ்சுமந்து செய்யப்பட்ட செயல்கள் தாழ்ந்தவை.
( சூத்திரர்களின் செயல்கள்)
...
பிறர் செய்யும் நிந்தனைகளையோ, பழியையோ ஒருவன் திரும்பச் செய்யக்கூடாது. அவற்றைப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டால், தன்னால் உணரப்படும் வலி, நிந்திப்பவனை எரித்துவிடும்.
மேலும், {பழியையோ, நிந்தனையையோ} தாங்கிக் கொள்பவன், நிந்திப்பவனின் நல்வினைப் பயன்களையும் {புண்ணியங்களை} தனதாக்கிக் கொள்வதில் வெல்கிறான்.
..
அவதூறு கூறுவதிலோ, நிந்திப்பதிலோ ஈடுபடாதீர்.
பிறரை இழிவு படுத்தவும் அவமதிக்கவும் செய்யாதீர்.
நண்பர்களுடன் சண்டையிடாதீர்.
..
தீயவர்கள் மற்றும் இழிந்தவர்களின் தோழமையில் இருந்து விலகுவீராக.
ஆணவ மற்றும் இழிந்த நடத்தை கொள்ளாதீர்.
...
கோபம் நிறைந்த கடுஞ்சொற்களைத் தவிர்ப்பீர்.
1.எலும்புகள்,
2.இதயம்,
3.மனிதர்களின் வாழ்வாதாரங்கள்,
4.உயிரையே கூடக்
கடுஞ்சொற்கள் எரித்துவிடும்.
எனவே, அறம் சார்ந்து இருப்பவன் {நல்லவன்},
கோபம் நிறைந்த கடுஞ்சொற்களை எப்போதுமே விலக்க வேண்டும்.
..
முள்ளெனும் வார்த்தைகளால் பிறரின் உயிரையே துளைக்கும் கோபம் நிறைந்த கடும் பேச்சுடைய இழிந்தவன், தனது நாவில் நரகத்தையே கொண்டிருக்கிறான்.
எப்போதுமே மனிதர்களுக்குத் துயரத்தை வழங்குபவன் அவன் என்று கருதப்பட வேண்டும்.
..
சூரியனைப் போன்றோ நெருப்பைப் போன்றோ வெப்பமுடையவையும்,
கூரிய முனை கொண்டவையுமான பிறரின் சொல்லம்புகளால், ஆழமான காயமடைந்து,
வலியால் எரிந்தாலும்,
ஒரு ஞானம் கொண்ட மனிதன், அப்படித் தன்னை நிந்திப்பவனுடைய நல்வினைப்பயன்கள் தன்னுடையதாகும் என்பதை நினைவில் கொண்டு,
அந்தச் சொல்லம்புகளைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
(ஞானியை யார் தூற்றுகிறார்களோ அவர்களுடைய புண்ணியம் ஞானியை வந்தடையும் என்பதால்,ஞானி பொறுமையாக இருக்க வேண்டும்.மீறி பதிலுக்கு கோபப்பட்டால் ஞானியிடமிருந்து வெளிப்படும் சக்தி எதிரியையும் அழிக்கும் ஞானியையும் அழிக்கும்)
...
1.நல்லவனுக்காகக் காத்திருப்பவன் ,
2.தீயவனுக்காகக் காத்திருப்பவன்,
3.தவத்தகுதியுடையவனுக்காகக்(தவயோகிக்காக) காத்திருப்பவன்,
4.திருடனுக்காகக் காத்திருப்பவன்
ஆகியோர், சாயத்தில் தோய்த்த துணியைப் போல,
விரைவில் தனது தோழனின் நிறத்தையே அடைவார்கள்.(அவர்களைப்போலவே மாறிவிடுவான்)
...
நிந்தையால் காயப்பட்டவன், தானும் திரும்ப நிந்திக்காமல், பிறரை ஏவி அவனை நிந்திக்க செய்யாமல் , அடிவாங்கிய பிறகு திரும்ப அடிக்காமல், பிறரையும் பிறரை ஏவி அவனை அடிக்க செய்யாமல்,
தன்னைக் காயப்படுத்தியவனுக்குச் சிறு காயத்தையும் விரும்பாமலோ இருக்கும்போது,
அவனுடைய (அந்த நல்ல மனிதனுடைய) தோழமையைத் தேவர்களே கூட விரும்புகிறார்கள்.
.
-
விதுர நீதி
...
{மௌனமும், உண்மையும்}
1.பேச்சைவிட மௌனமே சிறந்தத்து என்று சொல்லப்படுகிறது.
2.பேசத்தான் வேண்டும் என்றால், உண்மையைச் சொல்வதே சிறந்தது.
3.உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அதை ஏற்புடைய வகையில் இனிமையாகச் சொல்வதே சிறந்தது. 4.ஏற்புடையவை சொல்லப்பட வேண்டுமென்றால் அறநெறிக்கு இசைவானதைச் சொல்வதே சிறந்தது.
{துணை - தோழமை- நட்பு}
ஒரு மனிதன் யாருடன் வாழ்கிறானோ, சரியாக அவனைப் போலவே அவன் ஆகிறான்.
அல்லது அவன் யாரை மதிக்கிறானோ அவனைப் போல ஆகிறான்.
அல்லது, தான் யார் போல ஆக வேண்டும் என்று நினைக்கிறானோ அவனைப் போலவே ஆகிறான்.
...
ஒரு மனிதன் எந்தப் பொருட்களைத் விலக்குகிறானோ அவற்றில் இருந்து விடுபடுகிறான்.
ஒருவன் அனைத்தையும் விட்டுவிட்டால், அவனைச் சிறு துயரமும் பாதிக்காது. அப்படிப்பட்ட ஒரு மனிதன் பிறரை வீழ்த்துவதில்லை, அதே போலப் பிறரால் வீழ்த்தப்படுவதுமில்லை.
அவன் பிறரை எதிர்க்கவோ அவர்களைக் காயப்படுத்துவதோ இல்லை.
அவன் புகழுக்கும், பழிக்கும் அசைந்து கொடுப்பதில்லை. அவன் துயரப்படுவதுமில்லை மகிழ்வதுமில்லை.
...
1.அனைவருக்கும் செழிப்பை விரும்புபவனும்,
2.பிறருக்குத் துயரேற்படுத்த மனதில் நினையாதவனும்,
3.பேச்சில் உண்மையுள்ளவனும்,
4.நடத்தையில் அடக்கம் கொண்டவனும்,
5.தனது அனைத்து ஆசைகளையும் கட்டுக்குள் வைத்திருப்பவனுமான
ஒரு மனிதன் மனிதர்களிலே முதன்மையானவனாகக் கருதப்படுகிறான்.
...
1.உண்மையல்லாதவற்றைச் சொல்லி(அதனால் பாதிப்பு ஏற்பட்ட பிறகு) ஆறுதல் கூறாதவனும்,
2.உறுதியளித்தபடி கொடுப்பவனும்,
3.பிறரின் பலவீனத்தில் ஒரு கண் வைத்திருப்பவனுமான மனிதன்,
நல்ல தன்மையில் {முதன்மையானவனுமல்லாமல், இழிந்தவனுமல்லாமல் இருக்கும்} நடுத்தர மனிதன் என்று கருதப்படுகிறான்.
...
1.கட்டுப்படுத்த இயலாமை,
2.ஆபத்துகளால் பாதிப்படையக் கூடிய நிலை,
3.கோபத்துக்கு வழிகொடுத்து, அதற்கு உள்ளாவது,
4.நன்றிமறப்பது,
5.பிறருக்கு நண்பனாக இயலாமை,
6.தீய இதயம் ஆகியவை
ஒரு தீய மனிதனின் குறியீடுகளாகும்.
...
பிறரிடம் இருந்து வரும் நன்மையில் மனநிறைவு கொள்ளாமல்,
தன்னையே கூடச் சந்தேகித்துக் கொள்பவன்,
தன்னிடம் இருந்து தன் உண்மையான நண்பர்களையே விரட்டி விடுபவன்
மனிதர்களில் இழிந்தவனாவான்.
...
தனக்குச் செழிப்பை விரும்புபவன், நல்லவர்களுக்குக் காத்திருக்க {பணி செய்ய} வேண்டும்.
சில நேரங்களில் பாகுபாடற்றவருக்கும் காத்திருக்கலாம். ஆனால் தீயவர்களுக்காகக் காத்திருக்கவே கூடாது.
...
தீயவன், தன் பலத்தாலும், தொடர் முயற்சியாலும், புத்திக்கூர்மையாலும், ஆற்றலாலும் செல்வம் ஈட்டுவான் என்பது உண்மையே, ஆனால், அவனால் நேர்மையான புகழை வெல்லவே முடியாது.
அதே போல, (அவன் எக்குலத்தில் பிறந்திருந்தாலும்) அவனால், உயர் குடும்பங்களின் நடத்தைகளையோ அறங்களையோ அடையவே முடியாது”
...
{உயர்ந்த குடும்பங்கள் -உயர்குலங்கள்}
..
திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான்,
“அறம், பொருள் ஆகிய இரண்டிலும் இருந்து வழுவாமல்,
அந்த இரண்டையும் மதிப்போரும்,
பெரும் கல்வியறிவு உடையோரும்,
தேவர்களும் கூட உயர்ந்த குடும்பங்களைத் தாங்கள் விரும்புவதாகவே வெளிப்படுத்துகின்றனர்.
...
ஓ! விதுரா, உயர்ந்தவை {மகாகுலங்கள்} என எக்குடும்பங்கள் அழைக்கப்படுகின்றன?
என்பதை நான் உன்னிடம் கேட்கிறேன்” என்றான்.
...
அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்},
1.தவம்,
2.தன்னடக்கம் {புலனடக்கம்},
3.வேத அறிவு,
4.பொறுமை,
5.வேள்விகள்,
6.தூயத் திருமணங்கள்,
7.அன்ன தானங்கள்
ஆகிய ஏழும் அந்தக் {உயர்} குடும்பங்களில் இருக்கும்;
அங்கே {அந்த உயர் குடும்பங்களில்} அவை முறையாகப் பயிலப்பட்டு, உயர்வாக மதிக்கப்படுகின்றன.
...
எவை சரியான பாதையில் இருந்து வழுவாமல் இருக்கின்றனவோ,
எவற்றில் இருந்த உயிர்நீத்த மூதாதையர் (தங்கள் வழித்தோன்றல்கள் தவறுகள் இழைப்பதைக் கண்டு)
வலிக்கு உள்ளாவதில்லையோ,
எவை அனைத்து அறங்களையும் உற்சாகமாகப் பயில்கின்றனவோ,
எவற்றில் பிறந்தோர் தாங்கள் பிறந்த குலத்தின் தூய புகழை மேம்படுத்த விரும்பி,
எந்த வகையான பொய்மையையும் தவிர்க்கின்றனரோ
அவையே உயர்ந்த குடும்பங்களாகும் {மகா குலங்களாகும்}.
...
{உயர்ந்த நிலையில் இருந்து வீழ்ந்து இழிவடையும் குடும்பங்கள்}
..
வேள்விகள் செய்யாமை,
தூய்மையற்ற திருமணங்கள்,
வேதங்களைப் புறக்கணித்தல்,
அந்தணர்களை அவமதித்தல்
ஆகியவற்றைச் செய்யும் குடும்பங்கள் தங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து கீழே விழுந்து இழிந்தவை ஆகின்றன.
..
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே},
குடும்பங்களின் உறுப்பினர்கள், அந்தணர்களைப் பற்றி அவதூறு பேசி, அவர்களை அவமதிப்பதாலோ,
அவர்களிடம் {அந்தணர்களிடம்} உள்ளவற்றை மோசடி செய்து பறிப்பதாலோ அக்குடும்பங்கள் வீழ்ந்து இழிந்தவையாகின்றன.
குடும்ப உறுப்பினர்களும், செல்வமும், பசுக்களும் கொண்டிருந்தாலும்,
நன்னடத்தை இல்லாவிட்டால் அவை குடும்பங்களாகக் கருதத்தக்கவையல்ல.
அதே வேளையில், செல்வமற்றிருந்தாலும், தனித்துவக் குணங்களும்,
நன்னடத்தையும் கொண்ட குடும்பங்களே, குடும்பங்கள் என்று கருதப்பட்டுப் பெரும் புகழை வெல்கின்றன.
எனவே, நல்ல குணங்களையும், நல்ல நடத்தையையும் கவனத்துடன் பேண வேண்டும்.
செல்வத்தைப் பொறுத்தவரை,
அது வரும் அல்லது போகும். ஆனால் நன்னடத்தையையே எப்போதும் பேண வேண்டும்.
...
செல்வமில்லாதவன் உண்மையில் குறைந்தவனல்ல.
ஆனால், குணமோ, நடத்தையோ இல்லாதவன் உண்மையில் குறைந்தவனே {ஒன்றும் இல்லாதவனே}.
பசுக்களும், கால்நடைகளும், உழவு உற்பத்தியும் நிறைந்து இருந்தாலும்,
நல்ல குணங்களும் நடத்தையும் இல்லாதிருந்தால்,
உண்மையில் அக்குடும்பங்கள் மதிப்புக்கும், புகழுக்கும் தகுந்தவை அல்ல.
...
சண்டைகளுக்கு வித்திடும் மன்னனுக்கு அமைச்சனாகவோ,
பிறர் செல்வத்தைத் திருடுபவனாகவோ,
குடும்பப் பகையைத் தூண்டுபவனாகவோ,
ஏமாற்றுக்காரனாகவோ,
பொய் நடத்தை கொண்டவனாகவோ,
முனிவர்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர் ஆகியோரைச் உபசரிப்பதற்கு முன்பு உண்பவனாகவோ
நமது குலத்தில் எவனும் இல்லாதிருக்கட்டும்.
..
அந்தணர்களைக் கொல்பவனோ, அவர்களிடம் வெறுப்பை ஊக்குவிப்பவனாகவோ,
உழவைத் தடுப்பவனாகவோ, அதற்குத் தீங்கு விளைவிப்பவனாகவோ இருக்கும் ஒருவன் நமது குலத்தில் கலவாதிருக்கட்டும்.
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
சந்தன மரம் மெலிதாக இருந்தாலும், (மிகத் தடிமனான) பிற மரங்கள் தாங்க முடியாத பாரத்தைத் தாங்குவது போல, உயர் குடும்பங்களில் உள்ளோர், சாதாராண மனிதர்களால் இயலாத காரியமான, பெரும் சுமையைச் சுமக்க இயன்றவர்களாக எப்போதும் இருக்கிறார்கள்.
விதுர நீதி
..
நட்பு
.
எவனுடைய கோபம் பயத்தைக் கொடுக்கிறதோ,
எவன் மீது கொண்ட பயத்தால் அவனுக்காக ஒருவன் காத்திருக்கிறானோ அவன் நண்பனல்ல.
.
ஆனால், எவனிடம் ஒரு தந்தையிடம் கிடைக்கும் ஆறுதலை ஒருவன் பெறுகிறானோ,
அவனே அவனுக்கு உண்மையான நண்பனாவான்.
.
பிற நட்புகள் சாதாரணத் தொடர்புகளே. பிறப்பால் இரத்தத் தொடர்பு இல்லாமல் இருந்தாலும்,
உண்மையான ஆதரவளிப்பவனாகவும், பாதுகாப்பாளனாகவும் இருப்பவனே ஒருவனுக்கு உண்மையான நண்பனாக இருக்க முடியும்.
.
நிலையற்ற இதயம் கொண்டவனோ, பெரியோருக்காகக் காத்திருக்காதவனோ,
மனநிலையில் உறுதியற்றவனோ நண்பர்களைப் பெறவே முடியாது.
.
நீர்வற்றிய குளங்களைக் கைவிடும் அன்னங்களைப் போல, நிலையற்ற இதயம் கொண்டவனையோ,
மனதைக் கட்டுக்குள் வைக்காதவனையோ, புலன்களுக்கு அடிமையானவனையோ,
வெற்றிக் கைவிடுகிறது.
.
மனதளவில் பலமற்றவர்களே திடீரெனக் கோபத்தையோ,
போதுமான காரணமே இல்லாமல் மனநிறைவையோ அடைகிறார்கள்;
அவர்கள் நிலையற்ற மேகங்களைப் போன்றவர்களாவர்.
..
நண்பர்களால் உபசரிக்கப்பட்டும், அவர்களால் ஆதாயமடைந்தும்கூட, அவர்களிடம் நன்றிமறந்து இருப்பவர்களின் பிணங்களை, இரை தேடித் திரியும் பறவைகள் கூடத் தவிர்க்கின்றன.
..
ஏழையாக இருந்தாலும், செல்வந்தனாக இருந்தாலும் உமது நண்பர்களை மதிப்பீராக.
..
ஏதாவதொரு உதவி கேட்கப்படும் வரை,
நண்பர்களின் நேர்மையையும்,
நேர்மையற்ற தன்மையையும் அறிய முடியாது.
{துயரம்}
..
சோகம் அழகைக் கொல்கிறது {அழிக்கிறது};
சோகம் பலத்தைக் கொல்கிறது;
சோகம் புரிதலைக் கொல்கிறது;
மேலும் சோகம் நோயைக் கொடுக்கிறது.
.
துயரம் என்பது, ஒருவனின் நோக்கத்தை அடைய உதவாமல், அவனது உடலை வற்ற செய்து,
எதிரிகளை மகிழ்ச்சியடையச் செய்கிறது.
எனவே, துயரத்துக்கு ஆட்படாதீர்.
..
மனிதர்கள் இறந்து மீண்டும் பிறப்பது அடிக்கடி நிகழ்கிறது;
அவர்கள் அடிக்கடி வளர்ந்து உதிர்கின்றனர்.
அடிக்கடி அவர்கள் பிறர் உதவியைக் கேட்கிறார்கள்,
அவர்களது உதவியும் பிறரால் கேட்கப்படுகிறது;
அடிக்கடி அவர்கள் புலம்புகிறார்கள்,
அவர்களிடமும் பலர் புலம்புகிறார்கள்.
மகிழ்ச்சி மற்றும் துயரம், நிறை மற்றும் குறை, ஆதாயம் மற்றும் இழப்பு {இலாபம் மற்றும் நஷ்டம்},
வாழ்வு மற்றும் மரணம், ஆகியவை முறையான வரிசையில் அனைவராலும் அனுபவிக்கப்படுகின்றன.
எனவே, தற்கட்டுப்பாடு கொண்ட ஒருவன் இன்பத்தில் மகிழ்ச்சியடையவும்,
துன்பத்தில் துயரடையவும் கூடாது.
..
ஆறுபுலன்களும் {மனத்துடன் கூடிய ஐம்பொறிகளும்}
எப்போதும் அமைதியற்றே இருக்கின்றன.
பானையின் ஓட்டைகளின் வழியாக ஒழுகும் நீரைப் போல,
அவற்றில் {ஆறு புலன்களில்} முக்கியமான ஒன்றின் வழியாக,
தான் கொண்ட பலத்துக்குத் தக்க வகையில் அறிவு அழிவடைகிறது”,
இவ்வாறு விதுரன் கூறினான்
..
திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான்
“நெருப்புச்சுடர் போன்ற மன்னன் யுதிஷ்டிரன் என்னால் ஏமாற்றப்பட்டான்.
அவன் நிச்சயம் எனது மகன்களைப் போர்க்களத்தில் அடியோடு அழிப்பான்.
எனவே, அனைத்தும் ஆபத்து நிறைந்ததாகவே எனக்குத் தெரிகிறது.
என் மனம் முழுவதிலும் கவலையே இருக்கிறது.
ஓ! பெரும் புத்திசாலித்தனம் கொண்டவனே {விதுரா},
என் கவலைகளை அகற்றும் வகையிலான சொற்களை எனக்குச் சொல்வாயாக” என்றான்.
...
அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்},
“ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே},
அறிவு மற்றும் தவத்தைத் தவிர,
புலன்களை அடக்குவதைத் தவிர,
பேராசையைக் கைவிடுவதைத் தவிர
வேறு எதிலும் நான் நன்மையைக் காணவில்லை.
..
ஆன்ம ஞானத்தால் அச்சம் அகலுகிறது;
தவத்தால் பெரியதும் மதிப்புமிக்கதும் வெல்லப்படுகிறது(அனைத்தும் கிடைக்கிறது);
பெரியோருக்குப் பணிவிடை செய்வதால் கல்வி அடையப்படுகிறது,
புலனடக்கத்தால் அமைதி பெறப்படுகிறது.
...
கொடையாலோ, வேதச் சடங்குகளைப் பயில்வதாலோ கிடைக்கும் தகுதியை அடையாமல்,
விடுதலையை {முக்தியை} விரும்புவோர், கோபம் மற்றும் வெறுப்பில் இருந்து விடுபட்டு வாழ்வைக் கடத்துவதில்லை.
..
சிறந்த வழியில் கிடைக்கும் கல்வியாலும்,
அறம்சார்ந்த போராட்டத்தாலும்,
கடுமையாகச் செய்யப்பட்ட தவத்தாலும் கிடைக்கும் மகிழ்ச்சி,
இறுதிக்காலம் வரை எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
…
-
விதுர நீதி
..
உறவினர்கள்
...
தன் உறவினர்களுடன் அமைதியாக இல்லாதவர்கள்,
நன்கு தயாரிக்கப்பட்ட படுக்கைகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் உறக்கத்தைப் பெறுவதில்லை.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
உறவினர்களுடன் அமைதியாக இல்லாதவர்கள் பெண்களிடத்திலோ, புலவர்கள் {மாகதர்கள்} மற்றும் துதிபாடிகளின் துதி பாடல்களிலோ கூட மகிழ்ச்சியை அடைவதில்லை.
அப்படிப்பட்ட மனிதர்கள் அறம் பயிலவே முடியாது.
இவ்வுலகில் மகிழ்ச்சி அவர்களுடையதாக இருக்காது.
எந்தச் சிறப்பும் அவர்களுடையதாக இருக்க முடியாது.
அமைதி அவர்களிடம் எந்த அழகையும் கொடுப்பதில்லை.
தங்களுக்கு நன்மை தரும் ஆலோசனைகள் அவர்களுக்கு நிறைவைத் தருவதில்லை.
அவர்களிடம் இல்லாததை அவர்கள் பெறுவதுமில்லை,
தங்களிடம் உள்ளதையும் அவர்கள் தக்க வைத்துக் கொள்ளவும் இயலாது.
ஓ! மன்னா, அத்தகு மனிதர்களுக்கு அழிவைத் தவிர வேறு எந்த முடிவும் கிடையாது.
...
ஒற்றுமையின் வலிமை
...
பசுக்களிடம் பாலும், அந்தணர்களிடம் தவமும்,
பெண்களிடம் உறுதியற்ற தன்மையும் உண்டாவதைப் போல,
உறவினர்களிடம் அச்சமும் உண்டாக வேண்டும்.
ஒன்றாகச் சேர்க்கப்பட்ட சம நீளம் கொண்ட எண்ணற்ற மெல்லிய நூல்கள், தங்கள் எண்ணிக்கையின் பலத்தால், தங்கள் மேல் முன்னும் பின்னும் நிலையாக உருண்டு கொண்டிருக்கும் உருளையைத் தாங்க முடிகிறது.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நல்ல உறவினர்களின் காரியத்திலும் இதுவே வழக்கு. அதாவது, நல்ல உறவினர்களுடன் ஒற்றுமையாக இருப்பதே, பெரும் பாரத்தைச் சுமக்கும் வலிமையைத் தரும்.
...
ஓ! திருதராஷ்டிரரே,
அந்தணர்கள், பெண்கள், உறவினர்கள், பசுக்கள் ஆகியோர் மீது கொடுங்கோன்மை செலுத்துபவர்கள்,
கனிந்த கனிகள் விழுவதைப் போல, தங்கள் நிலையில் இருந்து விரைவில் விழுகிறார்கள்.
...
தனியாக நிற்கும் ஒரு மரம், என்னதான் பெரியதாக, பலமாக, ஆழமான வேர்கள் உடையதாக இருந்தாலும்,
பலத்த காற்று வீசும்போது, அதன் அடிமரம் திசை திரும்பவும், நொறுங்கவும் செய்கிறது.
எனினும், நெருக்கமாகவும், கச்சிதமாகவும் வளரும் மரங்கள், பரஸ்பரமாக ஒன்றோடு ஒன்று சார்ந்து இருக்கும் தங்கள் தகுதியின் காரணமாக, மிகப் பெரிய கடுமையான காற்றையும் எதிர்த்து நிற்கின்றன.
..
எனவே, யாரோடும் சேராமல் தனியாக இருக்கும் ஒருவன்,
அனைத்து அறங்களுடனும் இருந்தாலும், காற்றால் வீழ்த்தப்படும் தனி மரம் போல,
எதிரிகளால் வீழ்த்தப்படக் கூடியவனே என்று கருதப்படுகிறான்.
அதே போல, உறவினர்கள், ஒருவருக்கு ஒருவர் சார்ந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதன் விளைவாக, தடாகத்தில் இருக்கும் தாமரைத் தண்டுகளைப் போல இணைந்தே வளர்கின்றனர்.
உறவினர்களுடன் ஒற்றுமையாக வாழ்பவன், அவர்களோடு சேர்ந்து தானும் வளர்கிறான்.
...
கொல்லத்தகாதவர்கள்
...
அந்தணர்கள், பசுக்கள், உறவினர்கள், குழந்தைகள், பெண்கள்,
உணவிட்டோர், பாதுகாப்பு கோரி சரணடைந்தோர் ஆகியோர் எப்போதும் கொல்லப்படவே கூடாது.
...
உடல் நலம்
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
செல்வமில்லாவிட்டால் ஒருவன் தன் உடல் நலனை பேண முடியாது.
உடல்நலத்தோடு இருந்தால், உமது நன்மையை அடைய முடியும்.
உடல் நலமற்று நோயாளியாய் இருப்பவன் பிணமே.
...
சினம்
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
கோபம் அதன் கசப்பு,
காரம் அதன் உறைப்பு,
சூடு ஆகியவற்றால்
வலிநிறைந்த விளைவுகளையே கொடுக்கும்.
கோபம், எந்த உடல் நோயாலும் உண்டாகாத ஒருவகைத் தலைவலியாகும்.
அறிவற்றவர்களால் அவற்றைச் செரிக்கவே முடியாது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
நீர் அறிவுள்ளவராகையால் அதை விழுங்கி கோபத்தை அடக்கி அமைதி அடைவீராக.
பிணியால் துன்பப்படுவோர் எந்த இன்பங்களையும் விரும்புவதில்லை,
செல்வத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் அவர்கள் விரும்புவதில்லை.
எனினும், நோய்வாய்ப்பட்டவர், கவலையால் நிறைந்து,
மகிழ்ச்சி என்ன என்பதையோ,
செல்வத்தால் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதையோ அறியமாட்டார்கள்.
..
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
பகடையில் திரௌபதி வெல்லப்படுவதைக் கண்டு,
“நேர்மையானவர்கள், விளையாட்டில் ஏமாற்றுத்தனத்தைத் தவிர்ப்பார்கள்.
எனவே, துரியோதனனை நிறுத்தும்” என்ற சொற்களை முன்பே நான் உம்மிடம் சொன்னேன்.
எனினும், எனது சொற்களின் படி நீர் செயல்படவில்லை.
..
வலிமை என்பது, மென்மைக்கு எதிரானது அல்ல. மென்மையானவர்களை எதிர்ப்பவர்கள் பலசாலிகளல்ல.
றுபுறம், வலிமையுடன் கலந்த மென்மையே, எப்போதும் பின்பற்றப்பட வேண்டிய உண்மையான கொள்கையைக் கொண்டுள்ளது.
...
செழுமை
...
நேர்மையற்றதனத்தை ,கொடுமையை மட்டுமே சார்ந்திருக்கும் செழுமை, அழிக்கப்படும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், வலிமை, மென்மை ஆகிய இரண்டையும் சார்ந்த செழுமை, ஒருவனின் மகன்கள் மற்றும் பேரர்களிடம் திறத்துடன் இறங்கிச் செல்கிறது.
எனவே, உமது மகன்கள் பாண்டவர்களைப் பேணிக் காக்கட்டும்.
பாண்டவர்களும் உமது மகன்களைப் பேணிக் காக்கட்டும்.
..
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
ஒரே நண்பர்களையும், எதிரிகளையும் பெற்ற குருக்கள்(கெளரவர்கள்), பாண்டவர்கள் ஆகிய இருவரும்,
மகிழ்ச்சியுடனும் செழுமையுடனும் ஒற்றுமையாக வாழட்டும்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இன்று, குருக்களின் மகன்களுக்கு நீரே புகலிடம்.
..
உண்மையில், கௌரவகுலம், உம்மையே சார்ந்து இருக்கிறது.
ஓ! அய்யா, உமது புகழுக்குக் களங்கம் ஏற்படாமல் பாதுகாத்து,
கடுமையான வனவாச துன்பத்தை அனுபவித்த பாண்டுவின் பிள்ளைகளைப் பேணிக் காப்பீராக.
..
உமது எதிரிகள் உம்மிடம் இருக்கும் ஓட்டைகளைக் கண்டுபிடிக்காதிருக்கட்டும்.
ஓ! மனிதர்களில் தேவரே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் அனைவரும் சத்தியத்துக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்.
ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே},
துரியோதனனை அவனது தீய வழிகளில் இருந்து திருப்புவீராக” ,என்றான் {விதுரன்}.
…
விதுர நீதி
..
பதினேழு வகையான மூடர்கள்
......
1.கட்டுப்படுத்தப்பட இயலாதவனைக் கட்டுப்படுத்த முயல்பவன்.
2.சிறு லாபங்களால் மகிழ்ச்சியடைபவன்.
3.எதிரிகளிடம் பணிவாகப் பணி செய்பவன்.
4.பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்த முயல்பவன். பெண்களால் வரும் பொருளைக் கொண்டு பிழைப்பவன்.
5.கேட்கக்கூடாதவனிடம் தானம் கேட்பவன்.
6.எதையும் செய்யாமலே, தன்னைப் புகழ்ந்து கொள்பவன்
7.உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.
8.பலமற்றவனாக இருந்து கொண்டு, பலமானவனிடம் எப்போதும் பகை பாராட்டி வருபவன்.
9.ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் பேசுபவன்.
10.அடைய முடியாததை அடைய விரும்புபவன்.
11.மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிடம் கேலி செய்பவன்.
12.தனது மருமகளால் தனது அச்சங்கள் அனைத்தும் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.
13.பிறர் மனைவியரை அடைய நினைப்பவன்.
14.தன் மனைவியைக் குறித்துத் தவறாகப் பேசுபவன்.
15.பிறரிடம் இருந்து எதையும் பெற்றுக் கொண்டு, அது நினைவில்லையே என்று சொல்பவன்.
16.புனித இடங்களில் தானமளித்துவிட்டு, வீட்டில் தன் வார்த்தைகளால் அவற்றைச் சொல்லித் தற்பெருமை பேசுபவன்.
17.பொய்மையை உண்மை என்று நிறுவ முயல்பவன்
ஆகியோரே அந்தப் பதினேழு வகையான மூடர்கள் ஆவர்.
கரங்களில் சுருக்குக் கயிறுகளோடு {பாசங்களோடு} வரும் யமனின் தூதர்கள், அம்மனிதர்களை நரகத்திற்கு இழுத்துச் செல்கின்றனர்.
..
தன்னிடம் மற்றவன் நடந்து கொள்ளும் விதத்திலேயே, ஒருவன் அவனிடம் நடந்து கொள்ள வேண்டும். இதுவே சமூக அரசியல் முறைமைக்கு இசைவானதாக இருக்கும்.
..
1.முதுமை- அழகை அழிக்கிறது;
2.பொறுமை- நம்பிக்கை அழிக்கிறது;
3.மரணம்-வாழ்வை அழிக்கிறது;
4.அறப்பயிற்சி- உலகம் சார்ந்த இன்பங்களை அழிக்கிறது;
5.காமம்- தன்மானத்தை அழிக்கிறது;
6.தீயோர் தோழமை- நன்னடத்தையை அழிக்கிறது;
7.கோபம்- செழுமையை அழிக்கிறது;
8.செருக்கு அனைத்தையும் அழிக்கும்
என்றான் {விதுரன்}.
...
திருதராஷ்டிரன் {விதுரனிடம்},
“நூறு ஆண்டுகள் ஆயுள் கொண்டவன் என்று மனிதன் வேதங்களில் பேசப்படுகிறான். அப்படி இருக்கையில், என்ன காரணத்தினால், மனிதர்கள் அனைவரும் அந்தக் குறிப்பிட்ட வயதை அடைவதில்லை நூறு வயது வரை ஏன் வாழ்வதில்லை? என்று கேட்டான்.
அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்},
1.அதிகமான செருக்கு,
2.அதிகமான பேச்சு,
3.அதிகமாக உண்ணுதல்,
4.கோபம்,
5.இன்பத்தில் விருப்பம்,
6. உட்பகை ஆகிய ஆறும்,
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரினங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆயுளை அறுக்கும் ஆறு கூரிய வாட்களாகும். இவையே மனிதர்களைக் கொல்கின்றன; மரணமல்ல. இதை அறிந்து அருளப்பட்டிருப்பீராக!
...
மகாபாரத உபதேங்கள்-24🏮
-
விதுர நீதி
...
சொர்க்கம் அடைவதில் வெல்பவர்கள்
..
1.ஞானிகளின் போதனைகளை ஏற்றுக் கொள்பவன்;
2.அறநெறிகளின் விதிகளை அறிந்தவன்;
3.பரந்த மனமுடையவன், தானமளிக்கும் தயாளன்;
4.முதலில் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உணவை அர்ப்பணித்த பிறகு உண்பவன்;
5. பொறாமை கொள்ளாதவன்; பிறருக்குத் தீங்கை ஏற்படுத்தும் எதையும் செய்ய இயலாதவன்;
6.நன்றி, உண்மை, எளிமை, கல்வி ஆகியவற்றுடன் இருப்பவன்
ஆகியோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
எப்போதுமே இனிமையான வார்த்தைகளைப் பேசுவோர் பலர் உண்டு. எனினும், இனிமையற்ற, ஆனால் மருத்துவக் குணம் கொண்ட வார்த்தைகளைப் பேசுவோரும், கேட்போரும் கிடைப்பதரிது.
..
தனது தலைவனால் ஏற்கத்தக்கது, தகாதது எனக் கருதாமல், அறத்தை மட்டுமே அகக்காட்சியில் கண்டு, சுவையற்றதாக கசப்பாக இருப்பினும், மருந்தாக இருப்பவற்றைச் சொல்பவன், உண்மையில் அந்த மன்னனுக்குப் பலத்தையே சேர்க்கிறான்.
...
தியாகம்
...
1.ஒரு குடும்பத்துக்காக, அதன் உறுப்பினர் ஒருவரைத் தியாகம் செய்யலாம்;
2.ஒரு கிராமத்துக்காக, ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம்;
3.ஒரு நாட்டுக்காக ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம்;
4.ஒருவனது ஆன்மாவுக்காக, முழுப் பூமியையும் கூடத் தியாகம் செய்யலாம்.
...
செல்வத்தைப் பாதுகாக்க
...
தனக்கு வருங்காலத்தில் வரக்கூடிய துன்பங்களை நோக்கில் கொண்டு,
ஒருவன் தனது செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்;
தனது செல்வத்தைக் கொண்டு ஒருவன் தனது மனைவிகளைப் பாதுகாக்க வேண்டும்.
தனது செல்வம் மற்றும் மனைவிகளைக் கொண்டு ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
..
சூதாட்டம்
...
சூதாட்டம் சண்டைகளைத் தூண்டிவிடும் என்பது பழங்காலத்தில் இருந்தே காணப்படுகிறது. எனவே, ஞானமுள்ள ஒருவன், வேடிக்கைக்காகக் கூட சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது.
ஓ! பிரதீபனின் மகனே {திருதராஷ்டிரரே}, அரசசபையில் நடந்த சூதாட்டத்தின் போது,
ஓ! மன்னா, நான் உம்மிடம், “இது சரியல்ல” என்று சொன்னேன்.
ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரரே}, நோயாளி மருந்தை விரும்பாதது போல,
எனது வார்த்தைகள் உமக்கு ஏற்புடையனவாக இனிமையாக இல்லை.
..
ஓ! மன்னா, பலவண்ணத் தோகை கொண்ட மயில்களைப் போல இருக்கும் பாண்டுவின் மகன்களை நீர் வீழ்த்த விரும்புகிறீர். உமது மகன்கள் அனைவருமோ வெறும் காக்கைகளாக இருக்கின்றனர்.
சிங்கங்களைக் கைவிட்டு, நரிகளைப் பாதுகாக்கிறீர்!
ஓ! மன்னா, நேரம் வரும்போது, இவை அனைத்துக்காகவும் நீர் வருந்த வேண்டி வரும்” {என்றான் விதுரன்}.
...
ஊழியர்கள் -பணியாட்கள்
...
{விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்}
“ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, ஆர்வத்துடன் தனக்கு நன்மைகள் செய்வதைத் தொடர்ந்து வரும் அர்ப்பணிப்புமிக்க ஊழியர்களிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தாத முதலாளி, தன் ஊழியர்களின் நம்பிக்கையை வென்றவர்கள் பட்டியலில் சேர்கிறான்.
அந்த முதலாளி, தனது ஊழியனின் விசுவாசத்தைப் பெறுகிறான். உண்மையில் ஊழியர்கள் அவனது முதலாளியின் துயர்நிறைந்த காலங்களிலும் அவனைப் பின்தொடருவார்கள்.
..
1.தன் ஊழியர்களுக்குக் கிடைக்கும் மானியங்களைப் பறிமுதல் செய்வதாலோ,
2.அவர்களின் ஊதியத்தை நிறுத்துவதாலோ,
ஒருவன் தனது செல்வத்தைத் திரட்டக் கூடாது.
அப்படிச் செய்தால்,
தங்கள் வாழ்வு மற்றும் இன்பத்துக்குரிய வழிகள் அடைபட்டுப் போவதால்,
பாசம் நிறைந்த அவனது ஆலோசகர்களும்கூட,
முதலாளிக்கு எதிராகத் திரும்பி
அவனது துன்ப காலத்தில் அவனை விட்டுப் பிரிந்துவிடுவார்கள்.
...
1.முதலில் செயல்களின் நோக்கங்கள் அனைத்தையும் ஆலோசித்து,
2.தனது வருமானம் மற்றும் செலவுகளைக் கணக்கில் கொண்டு,
3.ஊழியர்களின் ஊதியத்தையும், படிகளையும் சரிபார்த்து,
ஊழியர்களைக் கொண்ட சரியான கூட்டணியை ஒரு மன்னன் உருவாக்க வேண்டும்.
ஊழியர்களின் கூட்டணிகளால் அடைய முடியாதது எதுவும் இல்லை.
...
1.தனது அரசத் தலைவனின் நோக்கங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு,
அனைத்துக் கடமைகளையும் சுறுசுறுப்பாகச் செய்யும் ஓர் அலுவலர் {ஊழியன்},
2.மரியாதைக்குரியவனாக இருந்து, தனது தலைவனுக்கு அர்ப்பணிப்போடு இருந்து,
தன் தலைவனின் நன்மையையே எப்போதும் சொல்லும் ஒருவன்,
3.தனது சொந்த பலத்தின் அளவை முழுமையாக அறிந்து,
ஒரு செயலில் தன்னோடு இணைந்து பணியாற்றப் போகும் மற்றவர்கள் பலத்தையும் அறிந்து இருப்பவன்
ஆகியோரை ஒரு மன்னன் தனது இரண்டாவது பாதி என்றே கருத வேண்டும்.
...
எனினும், தனது தலைவனால் கட்டளையிடப்பட்டும்,
அந்தத் தலைவன் சொன்ன தடைகளை அலட்சியம் செய்து,
தன் அறிவில் செருக்குக் கொண்டு, தன் தலைவனால் அறிவுறுத்தப்பட்ட எதையும் ஏற்க மறுத்து,
தனது தலைவனுக்கு எதிராகப் பேசும் ஊழியனைச் சிறு தாமதமும் இன்றி விரட்டி விட வேண்டும்.
விதுர நீதி
...
ஊழியனின் எட்டு குணங்கள்
...
1.செருக்கில்லாமை,
2.திறமை,
3.தாமதம் செய்யாமை,
4.அன்பு,
5.தூய்மை,
6.கறைபடியாமை,
7.நோய்ச்சுவடு இல்லாத குடும்பத்தில் பிறப்பு,
8.மதிப்புமிக்கப் பேச்சு
ஆகிய எட்டுக் குணங்கள் ஓர் ஊழியனிடம் இருக்க வேண்டும் என்று கற்றவர்கள் சொல்கிறார்கள்.
...
ஊழியன் செய்யக்கூடாதது
...
1.முன்னறிவிப்புச் செய்திருந்தாலும், எந்த மனிதனும் மாலைநேரத்திற்குப் பிறகு, நம்பிக்கையுடன், ஓர் எதிரியின் வீட்டில் நுழையக்கூடாது.
2.இரவு நேரத்தில், மற்றவர் இடத்தின் முற்றத்தில், ஒருவன் பதுங்கக் கூடாது.
3.மன்னனால் விரும்பப்படும் பெண்ணிடம் இன்பம் பெற முயலக்கூடாது.
4.இழிந்தோர் சேர்க்கை,
தான் சந்திக்கும் அனைவரிடமும் ஆலோசிக்கும் பழக்கமும் கொண்ட ஒருவன் எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக உம்மை அமைத்துக் கொள்ளாதீர். “நான் உன்னை நம்பவில்லை” என்று எப்போதும் அவனிடம் சொல்லாதீர்;
மாறாக ஏதாவதொரு காரணத்தைக் கற்பித்து, சாக்குபோக்கு சொல்லி இந்த ஊழியனை வேலையைவிட்டு நீக்கிவிடவேண்டும்
...
பணப் பறிமாற்றம்
..
1.ஆதீத கருணை கொண்ட மன்னன்,
2.கீழ்த்தரமான நடத்தை கொண்ட பெண்(விபச்சாரி),
3.மன்னனின் ஊழியன்,
4.முதலாளியின் மகன்,
5.முதலாளியின் தம்பி,
6.ஓர் ஆண் குழந்தையுடைய விதவை,
7.படையில் ஊழியம் செய்பவன்,
8.தொழிலில் பெரும் நஷ்டமடைந்தவன்,
ஆகியோர் கடன் கொடுக்கவோ, கடன் வாங்கவோ கூடிய பணப்பரிமாற்றங்களில் ஈடுபடக்கூடாது.
...
மனிதனைப் பிரகாசிக்கச் செய்யும் எட்டு குணங்கள்
...
1.ஞானம்,
2.நல்ல குலத்தில் பிறப்பு,
3.சாத்திரங்களறிதல்,
4.தன்னடக்கம்,
5.ஆற்றல்,
6.மிதமான பேச்சு,
7.தனது சக்தியின் அளவுக்குத்தக்க தானம்,
8.நன்றியறிதல்
ஆகிய எட்டு குணங்களும் மனிதர்கள் மேல் மிளிர்வைச் சிந்தும்.
ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, தானத்தினால், இந்த உயர்ந்த குணங்கள் அத்தனையும் ஒருவனால் அவசியம் ஒன்றாகக் அடையப்படுகிறது.
..
மித உணவு உண்ணுதல்
...
மிதஉணவு உண்பதால் கிடைக்கும் நன்மைகள்
1.உடல்நலன்,
2.நீண்ட வாழ்நாள்,
3.சுகம்,
4.உடல்நலமுள்ள குழந்தைகள்,
5.பெருந்தீனிக்காரன் என்று எவராலும் நிந்திக்கப்படாமை
...
அடைக்கலம்
...
1.எப்போதும் முறையற்ற செயல் செய்பவன்,
2.அதிகமாக உண்பவன்,
3.எல்லோராலும் வெறுக்கப்படுபவன்,
4.பெரும் ஏமாற்றுக்காரன்,
5.கொடுமைபுரிபவன்,
6.காலம் இடம் ஆகியவற்றின் தன்மைகளை அறியாதவன்,
7.பண்பற்ற வகையில் உடை உடுத்துபவன்
ஆகியோருக்கு ஒருவன் தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கக்கூடாது.
...
இவர்களிடம் தானம் கேட்கக் கூடாது
...
ஒருவன் எவ்வளவுதான் துன்பத்தில் இருந்தாலும்,
1.பிச்சையிடாத கஞ்சன்,
2.பிறரை குறை பேசுபவன் {நிந்திப்பவன்},
3.சாத்திரங்களை அறியாதவன் ,
4.காட்டில் வசிப்பவன்,
5.தந்திரம் செய்யும் வஞ்சகன்,
6.மதிப்புக்குரியோரை மதிக்காதவன்,
7.கொடூரமான மூர்க்கன்,
8.பிறருடன் சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவன்,
9.நன்றிமறந்தவன்
ஆகியோரிடம் தானம் கோரவே கூடாது.
...
மகாபாரத உபதேங்கள்-26🏮
-
விதுர நீதி
...
இந்த ஆறு பேரிடம் ஊழியஞ்செய்யக்கூடாது
...
1.எதிரி,
2.எப்போதும் தவறிழைப்பவன்,
3.பொய்மைக்கு இணக்கமானவன் ,
4.தெய்வத்திடம் பக்தி இல்லாதவன்,
5.அன்பில்லாதவன்,
6.அனைத்தையும் செய்ய வல்ல திறமையுள்ளவனாகத் தன்னைக் கருதிக் கொள்பவன்
ஆகிய இந்த ஆறு பேரிடம் ஊழியஞ்செய்யக்கூடாது
...
ஒருவனின் நோக்கங்கள், தங்கள் வெற்றிக்கு வழிவகைகளையே சார்ந்திருக்கின்றன.
அதே போல வழிமுறைகளும், அந்த நோக்கங்களின் தன்மையையே இயல்புகளையே சார்ந்துள்ளன.
ஒன்றை ஒன்று சார்ந்து பிணைப்புடன் இருக்கும் இவற்றைச் {வழிமுறைகளும், நோக்கங்களும்} சார்ந்தே வெற்றி இருக்கிறது.
...
மகன்களைப் பெற்று, யாரையும் சார்ந்தில்லாமல் அவர்கள் இருப்பதற்கு, ஏதாவது ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, கன்னிகைகளான தனது மகள்களைத் தக்க மனிதர்களுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டு, காட்டிற்கு சென்று, முனிவனாக வாழவே ஒரு மனிதன் விரும்ப வேண்டும்.
...
தனது மகிழ்ச்சிக்குச் செய்து கொள்வது போலவே, பரமாத்மாவின் உதவிகளை அடைய, அனைத்து உயிர்களுக்கும் நன்மையைச் செய்ய வேண்டும். பிற உயிரினங்களுக்கு நன்மையைச் செய்வதே ஒரு மனிதனின் நோக்கங்கள் அனைத்தும் வெற்றியடைவதற்கு வேராக இருக்கும்.
...
புத்திசாலித்தனம், சக்தி, ஆற்றல், பலம், சுறுசுறுப்பு, விடாமுயற்சி ஆகியவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவனுக்கு என்ன கவலை இருக்க முடியும்?
...
பாவிகளாக இருப்பவர்கள், தங்கள் குறைகளை உறுதி செய்து கொள்ளாததைப் போலப் பிறருடைய நல்ல குணங்களையும் உறுதி செய்ய மாட்டார்கள்.
...
அனைத்துக் காரியங்களிலும் உயர்ந்த வெற்றியை விரும்பும் ஒருவன், தொடக்க நிலையில் இருந்தே அறம் பயில வேண்டும்.
...
பாவங்களில் இருந்து விடுபட்ட ஆன்மா கொண்டவன், அறத்தில் உறுதியாக நிலைத்து நின்று, அனைத்துப் பொருட்களையும் அதன் இயல்பு மற்றும் இயல்பற்ற நிலைகளைப் புரிந்து கொண்டவனாக இருப்பான்.
...
அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பின்பற்றும் ஒருவன், அந்த மூன்றின் கலவையையும் இவ்வுலகிலும், மறு உலகிலும் சரியான காலங்களில் அடைகிறான்.
...
கோபம் மற்றும் மகிழ்ச்சியின் சக்தியைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பவன்,
ஓ! மன்னா, பேரிடர் காலங்களிலும் தனது உணர்வுகளை இழக்காமல் செழிப்பை வெல்கிறான்.
....
ஐந்து வகையான பலங்கள்
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் சொல்வதைக் கேளும்.
மனிதர்கள் ஐந்து வகையான வெவ்வேறு பலங்களைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அவற்றில்,
1.கரங்களில் பலம் மிகத் தாழ்ந்த வகையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
2. நல்ல ஆலோசகர்களை அடைவது இரண்டாவது வகைப் பலமாகக் கருதப்படுகிறது.
3.செல்வம் அடைதலை மூன்றாவது வகைப் பலமாக ஞானிகள் கூறியுள்ளனர்.
4.ஒருவனுடைய தந்தை, பாட்டன் மூலம் இயற்கையாக அடையப்படுவதான பிறப்பின் பலம் நான்காவது வகைப் பலமாகக் கருதப்படுகிறது.
5.எனினும்,எதைக் கொண்டு இவை அனைத்தையும் வெல்ல முடியுமோ, அனைத்து வகைப் பலங்களிலும் முதன்மையான அஃது, அறிவின் பலம் என்று அழைக்கப்படுகிறது.
...
சக உயிரின் மேல் பெரும் தீங்கை விளைவிக்க வல்ல ஒரு மனிதனின் எதிர்ப்பைத் தூண்டிவிட்ட பிறகு,
அவன் தொலைவில்தான் இருக்கிறான் என்று நம்பி அமைதியாக இருக்கக்கூடாது.எந்த நேரத்திலும் அவன் தாக்குதல் நடத்தலாம்.
...
நம்பத்தகாதவை
....
1.பெண்கள்,
2.மன்னர்கள்,
3.பாம்புகள்,
4.தனது தலைவன் {முதலாளி},
5.எதிரிகள்,
6.இன்பங்கள்,
7.வாழ்வின் காலம் ஆகியவற்றை நம்பக்கூடாது.
ஞானி இவர்களை நம்புவதில்லை
...
அறிவு என்ற கணையால் தாக்கப்பட்டவர்களுக்கு
1.மருந்துகளோ மருத்துவர்களோ கிடையாது.
2.ஹோம மந்திரங்களோ,
3.மங்கள விழாக்களோ,
4.அதர்வண வேத மந்திரங்களோ (ஆபிசார மந்திரங்களோ),
5. விஷத்தினாலான மருந்துகளோ (ரசகுளிகைகளோ) பயனளிப்பதில்லை.
அறிவின் வலிமை அத்தகையது
...
விதுர நீதி
...
விருந்தினர்
...
விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான்
“வயது முதிர்ந்த ஒரு மதிப்பிற்குரிய நபர், தனது இல்லத்திற்கு வரும்போது,
ஓர் இளைஞனின் இதயம் அவர் மீது கொண்ட மதிப்பால் உயர எழுகிறது.
அவரை எதிர்கொண்டு அழைத்து, வணங்கிய பிறகே அவன் மீண்டும் வருகிறான்.
..
சுயக்கட்டுப்பாடு கொண்டவன், விருந்தினருக்கு இருக்கையை அளித்து,
நீரைக் கொண்டு வந்து, அவரது காலைக் கழுவச் செய்து,
வழக்கமான விசாரிப்புகளைச் செய்த பிறகே, தனது சொந்த விவகாரங்களைப் அவரிடம் பேச வேண்டும். அனைத்தையும் கருத்தில் கொண்ட பிறகு,
அவருக்கு உணவு அளிக்க வேண்டும்.
...
ஒருவன் மீது கொண்ட பயத்தினாலோ, அவனது கஞ்சத்தனத்தாலோ,
அவனது விருப்பமின்மையாலோ, எவனுடைய வீட்டில்,
மந்திரங்கள் அறிந்த அந்தணர் ஒருவர்(விருந்தினராக வரும்போது) நீர், தேன், தயிர்க்கடைசல் மற்றும் பசுக்கள்
ஆகிய தானங்களைப் பெறவில்லையோ,
அவன் வீணாக வாழ்பவன் என்று ஞானிகள் கூறியுள்ளனர்.
...
பிக்ஷு வகை யோகி
..
உப்பு, சமைத்த உணவு, தயிர்க்கடைசல், பால், தேன், எண்ணெய், தெளிந்த நெய், எள், இறைச்சி, பழங்கள், கிழங்குகள், கீரைவகைகள், சாயமேற்றப்பட்ட துணிகள், அனைத்து வகைச் சந்தனக்கலவைகள் நறுமணப்பொருட்கள் மற்றும் வெல்லம் பாகு ஆகியவற்றை விற்பனை செய்பவனாக
வியாபாரியாக ஓர் அந்தணன் இருக்கக்கூடாது.
...
கோபவசப்படாதவன், துயரத்தைக் கடந்தவன்,
எப்போதும் நட்போ சண்டையோ தேவைப்படாதவன்,
புகழ் மற்றும் பழி ஆகிய இரண்டையும் அலட்சியம் செய்பவன்,
விருப்பு மற்றும் வெறுப்பு இரண்டையும் விட்டு விலகி நிற்பவன்,
இவ்வுலகில் இருந்து முழுமையாக விடுபட்டவனாக இருப்பின்,
அவனே உண்மையான பிக்ஷுவகை யோகியாவான்.
...
காட்டில் முளைக்கும் தினை {அரிசி போலப் புல்லில் முளைக்கும் சிறுதானியங்கள், உ-ம், கம்பு, சோளம், கேழ்வரகு,வரகு அரிசி, குதிரைவாலி அரிசி}, கிழங்குகள், கீரைகள் ஆகியவற்றைக் கொண்டு வாழ்ந்து, தன் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்கள் வைத்து, தனது வழிபாட்டுக்குரிய நெருப்பைக் கவனமாக வைத்து, விருந்தினர்களை எப்போதும் மதிப்புடன் கருதி, காட்டில் வசிக்கும் அறம்சார்ந்த தவசியே, உண்மையில் சகோதரத்துவத்தில் முதன்மையானவன் ஆவான்.
...
நம்பிக்கை
..
ஒரு புத்திசாலி மனிதனுக்குத் தீங்கிழைத்துவிட்டு,
அந்தத் தீங்குக்குள்ளானவன் உண்மையில் தொலைவில்தான் வாழ்கிறான் என்று உறுதிசெய்தாலும் ஒருவன் அமைதியடையக்கூடாது .
புத்திசாலி மனிதர்களின் கரங்கள் நீளமானவை. அவற்றைக் கொண்டு அவர்கள் அந்தத் தீங்குக்கான பதில் தீங்கைத் திரும்பச் செய்ய முடியும்.
...
நம்பத்தகாதவனிடம் ஒருவன் நம்பிக்கை கொள்ளக்கூடாது.
அதே போல, நம்பத்தகுந்தவனிடமும் அதீத நம்பிக்கை கொள்ளலாகாது.
நம்பிக்கையைப் பெற்றவனிடம் இருந்து எழும் ஆபத்து, ஒருவனது குலத்தையே அறுத்துவிடும்.
...
ஒருவன், பொறாமையைக் கைவிட வேண்டும்,
தனது மனைவிகளைக் காக்க வேண்டும்,
பிறருக்கு உரியதைச் சரியாகக் கொடுக்க வேண்டும்,
பேச்சில் இனிமையுடையவனாகவும் இருக்க வேண்டும்.
...
தனது மனைவிகளிடம்,
ஒருவன், இனிய நாக்கும், பேச்சும் கொண்டவனாக இருக்க வேண்டும்.
ஆனால் அவன் அவர்களது அடிமையாக இருக்கக்கூடாது.
உயர்ந்த அருள் கொண்டவர்களாவும்,
அறம்சார்ந்தவர்களாகவும், வழிபடத்தகுந்தவர்களாகவும்,
தங்கள் குடும்பத்தின் ஆபரணங்களாகவும் திகழும் மனைவிகளே ஒருவனது இல்லச் செழிப்பின் உருவகம் என்று சொல்லப்படுகிறது. எனவே,
அவர்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
...
தந்தைக்கு அந்தப்புரத்தின் மேற்பார்வையை அளிக்கலாம்.
தாய்க்கு சமையலறையையும் ,
தன்னைப் போன்ற ஒருவனுக்குப் பசுக்களை மேற்பார்வையிடும் பொறுப்பையும் அளிக்கலாம்.
ஆனால், வேளாண்மையைப் பொறுத்தவை, தானே நேரடியாக அதை மேற்பார்வையிட வேண்டும்.
...
வியாபார சாதியைச் சேர்ந்த விருந்தினர்களுக்குப் பணியாட்களைக் கொண்டும்,
பிராமணச் சாதியைச் சேர்ந்தவருக்குத் தனது மகன்களைக் கொண்டும் பணிவிடை செய்ய வேண்டும்.
...
விதுர நீதி
...
ஆட்சித்திறம்
...
நெருப்பு அதன் தோற்றத்தை நீரில் கொண்டுள்ளது;( நீரைக்கொண்டு நெருப்பை அணைக்கலாம்)
க்ஷத்திரியர்கள், தங்கள் தோற்றத்தை பிராமணர்களில் கொண்டுள்ளனர், (பிராமணர்கள் முயன்றால் சத்திரியர்களை கட்டுப்படுத்துவார்கள்)
இரும்பு தனது தோற்றத்தை கற்களில் கொண்டுள்ளது.(கற்களை சேர்ப்பதன் மூலம் இரும்பு ஆற்றலை இழந்துவிடுகிறது)
தங்கள் முன்னோடிகளுடன்(நீர்,பிராமணன்,கற்கள்) தொடர்பு ஏற்படும்போது,
அனைத்தையும் பாதிப்படையச் செய்யும் .அவற்றின் சக்தி, விரைவில் சமநிலை அடைந்துவிடும்.
(நாட்டை ஆட்சி செய்பவன் பிராமணர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்தால் ஆட்சி செய்ய மனமற்ற நிலையை அடைந்து தவவாழ்விற்குள் இழுக்கப்படுவான்)
..
நெருப்புத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மரத்தில் மறைந்திருக்கிறது.
நெருப்பு சக்தி கொண்டவர்களான நற்குடியில் பிறந்த நல்லவர்களும், மன்னிக்கும் இயல்பு கொண்ட பொறுமைசாலிகளும், அவர்களுக்குள் இருக்கும் நெருப்பு போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
...
தன்னைச் சார்ந்தவர்களாலும், வெளியில் இருப்பவர்களாலும் தனது ஆலோசனைகள் அறியப்படாமல் இருக்கச் செய்யும் அதே வேளையில், (தான் ஆலோசிப்பது வெளியில் தெரியக்கூடாது)
பிறரின் ஆலோசனைகளை ஒற்றர்கள் மூலமாக எந்த மன்னன் அறிந்து கொள்கிறானோ, அவன் நீடித்த செழிப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
...
தான் செய்ய நினைப்பதை ஒருவன் பேசக்கூடாது.
அறம், பொருள், இன்ப வகைகளில் நீர் செய்யும் எதுவும்,
அது நிறைவடையும் வரை அறியப்படாமல் இருக்கட்டும் . பிறரிடம் செய்யும் ஆலோசனைகள் பலரால் அறியப்படாதிருக்கட்டும்.
...
மலையின் உச்சிக்கோ, மாளிகையின் மேல்தளத்திற்கோ , மரங்களோ செடிகளோ அற்ற காட்டுப்பகுதிக்கோ சென்று, கமுக்கமாக உமது ஆலோசனைகளில் முதிர்வீராக.(யாரும் ஒட்டுகேட்காத இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.)
...
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே},
கல்வியறிவில்லாத நண்பன்,
கல்வியறிவுள்ள, ஆனால் புலனடக்கம் இல்லாத நண்பன் ஆகியோர்,
அரசாங்க இரகசியத்தின் களஞ்சியங்களாக இருக்கத் தகுதிற்றவர்களாவர்.
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
ஒரு மன்னனின் நிதிகள், அவனது ஆலோசனைகள் ஆகிய இரண்டையும் பாதுகாக்கும் பொறுப்பு ஓர் அமைச்சனுடையது.
எனவே, ஒருவனை நன்றாகச் சோதியாமல் உமது அமைச்சர்களில் ஒருவனாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்.
..
எவனுடைய அமைச்சர்கள்,
அவன்(அரசன்) செய்யும் அறம், பொருள், இன்பம் சார்ந்த செயல்களை,
அவை நிறைவேறிய பிறகு அறிகிறார்களோ,
அந்த மன்னனே ஆட்சியாளர்களில் முதன்மையானவன் ஆவான்.
...
எவனுடைய ஆலோசனைகள் சந்தேகமில்லாமல் கமுக்கமாகப் பேணப்படுகிறதோ,
அந்த மன்னனே வெற்றியடைவான்.
...
அறியாமையால் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்பவன்,
அந்தச் செயல்களின் விளைவால் தனது வாழ்வையே இழக்கிறான்.
...
புகழத்தக்க காரியங்களைச் செய்யும்போது,
அஃது எப்போதும் சுகத்தையே அளிக்கும்.
அத்தகு செயல்களைச் செய்யாமல் இருப்பதே மனவருத்தத்திற்கு வழிவகுக்கும்.
...
பித்ருக்களின் நினைவாகச் செய்யப்படும் சிரார்த்தங்களைச் செய்ய, வேதமறியாத பிராமணனுக்குத் தகுதியில்லாதது போல, நாட்டைப் பாதுகாக்கும் வழிகளான ஆறு வழிகளைக் குறித்துக் கேள்விப்படாதவன்
அரசியல் கருத்தரங்குகளில்(அரசியல் விவாதங்கள்) பங்கு பெற தகுதியற்றவனாவான்
1. படை,
2. குடிமக்கள்,
3. குறையாத வளம் {செல்வம்},
4. அமைச்சன்,
5. நட்பு {அண்டை நாட்டு நட்பு},
6. அரண் {காவல்} ஆகிய ஆறு அங்கங்களைக் கொண்டவனே மன்னர்களில் சிம்மமாவான்.
..
தனது தலைக்கு மேல் பிடிக்கப்படும் குடையையும், தான் வென்ற பெயரையும் கொண்டு ஒரு மன்னன் மனநிறைவு கொள்ள வேண்டும்.
..
தனக்கு ஊழியம் செய்வோருடன் தனது நாட்டின் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
...
தனியாக அனைத்தையும் ஒரு மன்னன் தீர்மானிக்கக்கூடாது.
1.ஓர் அந்தணன், மற்றொரு அந்தணனை அறிவான்,
2.ஒரு கணவன், மனைவியைப் புரிந்து கொள்வான்,
3.ஒரு மன்னன் அமைச்சரை அறிவான்,
4.ஒரு அரசனே இன்னொரு அரசனை அறிவான்
..
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
{வருவாய்} அதிகரித்தல், குறைதல், உபரி ஆகியவற்றில் ஒரு கண் கொண்டு,
ஆறு வழிகளை [2] அறிந்து, தனது சுயத்தை அறிந்து,
மெச்சத்தகுந்த நடத்தை கொண்டிருக்கும் ஒருவன் முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான்.
விளைவை உண்டாக்கும் கோபத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு,
எது செய்யப்பட வேண்டுமோ அதை நேரடியாகக் கண்காணித்து,
தனது கருவூலத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான்.
..
மரணத்திற்குத் தகுந்தவர்கள்
...
மரணத்துக்குத் தகுந்த எதிரி ஒருவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரப்படும்போது,
அவனை விடுவிடக்கக்கூடாது. எதிரி மரணத்திற்கே தகுந்தவனென்றாலும்,
பலம்நிறைந்த எதிரியிடம், பலவீனமாக இருக்கும் ஒருவன் வணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால், பலத்தில் நிறைவடைந்தவுடனேயே, அவன், அந்த எதிரியைக் கொல்ல வேண்டும்.
அவன் கொல்லப்படவில்லையென்றால், அவனால் அந்த எதிரியால் விரைவில் ஆபத்து எழும்.
...
தேவர்கள், மன்னர்கள், அந்தணர்கள், முதிர்ந்தோர், குழந்தைகள், ஆதரவற்றோர்
ஆகியோருக்கு எதிரான கோபத்தை ஒருவன் முயற்சியுடன் அடக்க வேண்டும்.
விதுர நீதி
..
முட்டாள்கள் ஈடுபடுவது போல, ஆதாயமற்ற சண்டைகளில் ஒரு ஞானி ஈடுபடக்கூடாது.
அப்படிப்பட்ட சண்டைகளில் ஈடுபடாமல் இருப்பதால் அவன், இவ்வுலகில் பெரும் புகழை அடைந்து, ஆபத்து மற்றும் பெருந்துயரங்களைத் தவிர்க்கிறான்.
...
அலியாக இருக்கும் கணவனை விரும்பாத பெண்களைப் போல,
பலனற்ற அருள், விளைவில்லாத கோபம் கொண்டோரைத் தலைவனாக ஏற்றுக் கொள்ள மக்கள் விரும்ப மாட்டார்கள்.
...
செல்வத்தை அடைய புத்தி காரணமல்ல,
அதே போல, வறுமைக்கு மூடத்தனம் காரணமல்ல;
இவ்வுலகில் உள்ள வேறுபாடுகளின் காரணங்களை ஞானிகள் மட்டுமே அறிவர்; பிறரல்ல.
...
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே},
வயதில் மூத்தோரையும், நடத்தை, அறிவு, புத்திசாலித்தனம், செல்வம், குலமரபு ஆகியவற்றில் தலைமையாக இருப்போரையும் மூடன் எப்போதும் அவமதிப்பான்.
..
தீய மனநிலை கொண்டோர்,
அறிவற்றவர்கள்,
பொறாமை கொண்டோர்,
பாவிகள்,
குற்றங்களையே பேசுபவர்கள்,
கோபமுடையவர்கள்
ஆகியோர் விரைவில் துயரத்திற்கு உள்ளாகின்றனர்.
...
ஏமாற்றுத்தனமில்லாமை, தானம்,
நிறுவப்பட்டுள்ள புணர்வு விதிகளை நோற்பது,
நன்கு அடக்கப்பட்ட பேச்சு ஆகியவை
அனைத்து உயிர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
...
ஏமாற்றுத்தனமில்லாத, சுறுசுறுப்பான, நன்றியுணர்வு கொண்ட, புத்திசாலித்தனமுள்ள, கபடமற்ற ஒருவனது கருவூலம் வெறுமையாக இருப்பினும்,
நண்பர்கள், ஆலோசகர்கள், பணியாட்கள் ஆகியோரை அவன் அடைகிறான்.
...
புத்திக்கூர்மை, மன அமைதி, தற்கட்டுப்பாடு, தூய்மை, கடுஞ்சொல் பேசாமை, நண்பர்களுக்கு ஏற்பில்லாத எதையும் செய்யவிரும்பாமை ஆகிய ஏழும் ஒருவனுடைய செழிப்பு எனும் சுடருக்கு எரிபொருளாகக் கருதப்படுகின்றன.
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
பிறருக்கு உரியதைக் கொடுக்காத இழிந்தவன்,
தீய ஆன்மா கொண்டவன்,
நன்றிமறந்தவன்,
வெட்கங்கெட்டவன் ஆகியோரைத் தவிர்க்க வேண்டும்.
..
குற்றமற்ற அப்பாவியைப் பற்றி, அடுத்தவனிடம் தூண்டிவிடும் குற்றவாளி,
ஒரே அறையில் பாம்புடன் இரவைக் கடத்தும் மனிதனைப் போல,
இரவில் அமைதியாகத் தூங்க முடியாது.
...
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே},
எவன் கோபம் அடைந்தால், ஒருவனின் உடமைகளும், பொருள் கொள்ளும் வழிகளும் ஆபத்துக்குள்ளாகுமோ, அவனை, தேவர்களை அமைதிப்படுத்துவது போல அமைதிப்படுத்த வேண்டும்.
..
பெண்கள்,
பொறுப்பற்றவர்கள்,
தங்கள் சாதிக்குரிய கடமைகளில் இருந்து விழுந்தவர்கள்,
தீய மனநிலை கொண்டவர்கள்
ஆகியோரை நம்பியிருக்கும் நோக்கங்களின் வெற்றி சந்தேகத்திற்குரியதே.
..
ஓ! மன்னா {திருதராஷ்டரரே},
பெண்,
ஏமாற்றுக்காரன்,
குழந்தை ஆகியோரைத் தனது வழிகாட்டியாகக் கொண்டிருப்பவன்
கல் தோணியைப் போல ஆதரவற்று மூழ்குவான்.
..
வேலையின் பொதுவான நெறிமுறைகளில் திறமையுள்ளவர்கள், அவ்வேலையின் குறிப்பிட்ட வகைகளை அறியாதிருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட வகை வேலைகள் துணை வேலைகளே என்பதால்,
அவர்கள் கற்றவர்கள் என்றும், அறிவுள்ளவர்கள் என்றும் மனிதர்களால் கருதப்படுகிறார்கள்.
...
மோசடிக்காரர்கள்,
கூத்தாடிகள்,
கெடுபுகழ் கொண்ட மகளிர் {விலைமகள்} ஆகியோரால் புகழப்படும் மனிதன்
உயிரோடிருந்தாலும் இறந்தவனாகவே கருதப்படுகிறான்.
..
திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான்
“செழிப்புக்கோ, வறுமைக்கோ மனிதன் காரணமானவன் அல்ல. அவன், நூலால் அசைக்கப்படும் மரப்பாவை {பொம்மையைப்} போன்றவனே.
உண்மையில், படைப்பாளனே {பிரம்மனே} மனிதனை விதிக்கு ஆட்படுத்துகிறான்.
நீ சொல்வதைக் கவனமாகக் கேட்டு வருகிறேன். மேலும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.
-
விதுர நீதி
..
ஏற்புடையவனாதல்-இனிமையானவனாதல்
..
பிருஹஸ்பதியே ஆனாலும், காலம் தவறி பேசுபவன் - நிந்தனையையும், அறியாமையுடையவன் என்ற குற்றச்சாட்டையும் அடைகிறான்.
ஒருவன் தானத்தால் ஏற்புடையவன் {இனிமையானவன்} ஆவான்,
இன்னொருவன் இனிய சொற்களால் ஏற்புடையவன் ஆவான்.
மூன்றாமவன், மந்திர ஆற்றல் மற்றும் மருந்துகளின் சக்தியால் ஏற்புடையவன் ஆவான்.
எனினும் இயல்பாகவே ஏற்புடையவனாக இருப்பவன் அப்படியே நீடித்து வருவான்.
..
ஒருவனால் வெறுக்கப்படும் மற்றவன், அவனால் {வெறுப்பவனால்} நேர்மையானவனாகவோ, புத்திசாலியாகவோ, அறிவாளியாகவோ எப்போதுமே கருதப்படமாட்டான்.
தனக்கு நன்மை செய்யும் அனைத்தையும் ஒருவன் விரும்புகிறான்; தனக்கு தீமை செய்யும் அனைத்தையும் அவன் வெறுக்கிறான்.
...
ஆதாயமும் இழப்பும்
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
துரியோதனன் பிறந்ததும், “இந்த ஒரு மகனை நீர் புறக்கணிக்க வேண்டும்.
துரியோதனனைப் புறக்கணித்தால் மற்ற நூறு மகன்களும் வளமையை அடைவார்கள்.
துரியோதனனை உம்மிடமே வைத்துக் கொண்டால்,
உமது நூறு மகன்களுக்கு அழிவு ஏற்படும்” என்றும் நான் உமக்குச் சொன்னேன்.
..
இழப்புக்கு வழிவகுக்கும் எந்த ஆதாயத்தையும் உயர்வாகக் கருதக்கூடாது.
மறுபுறம், இழப்பேயானாலும் ஆதாயத்தைக் கொண்டு வரும் அந்த இழப்பை உயர்வாகவே கருத வேண்டும்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆதாயத்தைக் கொண்டு வரும் அது இழப்பாகாது.
எனினும், இன்னும் பெரிய இழப்பைக் கொண்டு வரப்போவதை இழப்பு என்றே கருத வேண்டும்.
குறிப்பு--- போர் என்ற இழப்புக்கு வழிவகுக்கும் துரியோதனனை, ஆதாயம் என்று நினைத்து உயர்வாகக் கருதக்கூடாது. துரியோதனனைப் புறக்கணித்து பாண்டவர்களை மீண்டும் கொண்டுவருவதால் உண்டாகப் போவது இழப்பாகாது. அதுவே பெரும் ஆதாயம். ஆனால், பாண்டவர்களைப் புறக்கணிப்பதால் ஏற்படப் போகும் போரால், துரியோதனனையும் இழந்து, பலரையும் இழக்கப் போவது பெரும் இழப்பே என்று பொருள்.
...
சிலர் நல்ல குணங்களின் விளைவாகச் சிறந்தவர்களாகிறார்கள்;
பிறர் செல்வத்தின் விளைவால் சிறந்தவர்கள் ஆகிறார்கள்.
ஓ! திருதராஷ்டிரரே, செல்வம் நிறைந்திருந்தாலும்,
நல்ல குணங்களற்று இருப்பவர்களைத் தவிர்ப்பீராக” என்றான் {விதுரன்}.
....
திருதராஷ்டிரன் {விதுரனிடம்},
“நீ சொன்ன அனைத்தும் ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டதும்,
எனது எதிர்கால நன்மைக்கும் ஆனதே.
எனினும், நான் எனது மகனை {துரியோதனனைப்} புறக்கணிக்கத் துணியேன்.
எங்கே நீதி இருக்கிறதோ அங்கே வெற்றி இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்” என்றான் {திருதராஷ்டிரன்}.
..
விதுரன், “அனைத்து அறங்களும் அருளப்பட்டு, பணிவுடன் இருப்பவன்,
வாழும் உயிரினங்களுக்கு ஏற்படும் சிறு பாதிப்புகளையும் பாரபட்சமின்றி எப்போதும் பார்ப்பான்.
எனினும், பிறரை எப்போதும் குறை சொல்வதில் ஈடுபடுபவர்கள்,
அனைத்து விஷயங்களிலும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடவும்,
அடுத்தவருக்கு வலியைத் தரவுமே எப்போதும் முயல்கிறார்கள்.
...
நட்பு ஏற்றல்
..
யாரைப் பார்த்தாலே கெடுதல் உண்டாகுமோ,
யாருடைய தோழமை ஆபத்து நிறைந்ததோ
அவர்களுக்குத் தானமளிப்பதாலோ, அவர்களிடம் தானத்தைப் பெறுவதாலோ பாவம் ஏற்படுகிறது.
..
1.சண்டையிடுவதையே வழக்கமாகக் கொண்டவன்,
2.பேராசைக்காரர்கள்,
3.வெட்கமற்றவர்கள்,
4.ஏமாற்றுக்காரர்கள்,
5.அநீதியானவர்களாக அறியப்பட்டவர்கள்
ஆகியோரது தோழமை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
அதே போன்ற குறைகளுடன், கொடும் இயல்பும் கொண்ட மனிதர்களையும் தவிர்க்க வேண்டும்.
நட்புக்குக் காரணமான நிகழ்வு முடிந்ததும், இழிந்தவர்களின் நட்பும் முடிந்துவிடுகிறது.
அந்தத் தொடர்பால் ஏற்பட்ட நல்ல விளைவுகளும், அதனால் உண்டான மகிழ்ச்சி ஆகிய அத்தனையும் முடிவுக்கு வந்துவிடும்.
பின்னர் அந்த இழிந்த மனிதர்கள், தங்கள் (முன்னாள்} நண்பனை நிந்தித்து, அவனுக்கு இழப்பேற்படுத்த முயல்கிறார்கள். தாங்கள் அடைந்த இழப்பு மிகச் சிறியதாக இருப்பினும், சுயக்கட்டுப்பாடு இல்லாமையால், அமைதியை அனுபவிக்கத் தவறிவிடுகின்றனர்.
கற்றவனொருவன், இவை அனைத்தையும் கவனமாகப் பரிசோதித்து, நன்றாக ஆலோசித்து, கீழ்த்தரமானவர்கள் மற்றும் தீய மனம் கொண்டவர்களின் இது போன்ற நட்புகளைத் தூரத்தில் இருந்தே தவிர்த்துவிட வேண்டும்.
-
விதுர நீதி
..
உறவினர்கள்
..
ஏழைகள், இழிந்தவர்கள், ஆதரவற்ற உறவினர்கள் ஆகியோருக்கு உதவும் ஒருவன்,
பிள்ளைகள், கால்நடைச் செல்வம் ஆகியவற்றை அடைந்து, முடிவிலாத செழிப்பை அனுபவிக்கிறான்.
..
தங்கள் நன்மையை விரும்புபவர்கள், எப்போதும் தங்கள் உறவினர்களுக்கு உதவ வேண்டும்.
எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது குலத்தை வளர்க்க முயல்வீராக.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீர் உமது உறவினர்களிடம் நன்றாக நடந்து கொண்டால், செழிப்பு உமதாகும்.
..
நற்குணங்களற்ற உறவினர்களும் ஒருவனால் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்து அறங்களையும் கொண்டு, உமது உதவிகளைப் பணிவுடன் எதிர்நோக்குபவர்களை {பாண்டவர்களை} எந்த அளவுக்குப் பாதுகாக்க வேண்டும்?
..
பாண்டுவின் வீர மகன்களுக்கு உதவி செய்வீராக,
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்களின் பராமரிப்பில் சில கிராமங்களைக் கொடுப்பீராக.
இப்படிச் செய்வதால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் புகழ் உமதாகும்.
நீர் முதிர்ந்தவராக இருக்கிறீர்; எனவே, உமது மகன்களை நீர் கட்டுப்படுத்த வேண்டும்.
உமக்கு எது நன்மையோ, அதையே நான் சொல்ல வேண்டும்.
நீர் நலமாக இருக்க விரும்புபவர்களில் நானும் ஒருவன் என்பதை அறிவீராக.
ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, தனது நன்மையை விரும்பும் ஒருவன் தனது உறவினர்களுடன் சண்டையிடவே கூடாது.
...
இவ்வுலகில், உறவினர்களே ஒருவனை காக்கிறார்கள். மேலும், உறவினர்களை அழிக்கவும் செய்கிறார்கள். நீதிமிக்கவர்கள் மத்தியில் இருப்பவர்கள் ஆபத்துகளில் காக்கிறார்கள்;
அதே வேளையில் அநீதிமிக்கவர்கள் மத்தியில் இருப்பவர்கள் தங்கள் சகோதரர்களை ஆபத்தில் மூழ்கடிக்கிறார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! மரியாதைகளைக் கொடுப்பவரே, பாண்டுவின் மகன்களிடம் நீதியோடு நடப்பீராக. அவர்களால் சூழப்பட்டிருக்கும் நீர், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவராக இருப்பீர்.
..
கையில் கணைகளுடன் இருக்கும் வேடனைக் கண்ட மான் போல, செழிப்புடன் இருக்கும் ஒரு உறவினரின் முன்னிலையில் மற்றொரு உறவினன் {செழிப்பில்} சுருங்கிப் போனால் {வறுமை நிலை அடைந்தால்},
அந்த வறியவனின் பாவங்கள் அனைத்தையும் செழிப்புடன் இருக்கும் அந்த உறவினனே ஏற்றுக் கொள்ள வேண்டிவரும்.
..
ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே},
தற்போதைய உமது செயல்பாடின்மையால், எதிர்காலத்தில் பாண்டவர்களின் அல்லது உமது மகன்களின் இறப்பைக் கேள்விப்பட்டு, நீரே வருந்த வேண்டியிருக்கும்.
ஓ!, இவை யாவையும் சிந்திப்பீராக. வாழ்வே நிலையற்றதாக இருக்கும்போது,
எந்த செயலின் அல்லது செயலின்மையின் விளைவால் ஒருவன் சோக அறைக்குள் நுழைந்து வருத்தத்தில் ஈடுபட வேண்டிவருமோ, அதை ஆரம்பத்திலேயே அவன் தவிர்த்துவிட வேண்டும்.
..
நீர் குரு வம்சத்தவரில் முதிர்ந்தவராவீர். துரியோதனன், பாண்டு மகன்களுக்கு இத்தீமைகளைச் செய்தால், ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அவை அனைத்தையும் தடுப்பது உமது கடமையாகும்.
பாண்டவர்களை, மீண்டும் அவர்களது பொறுப்புகளில் அமர்த்தி, இவ்வுலகில் நீர் செய்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு,
ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களைப் போல வழிபடத்தகுந்தவர் ஆவீராக.
..
ஞானிகள் கண்ட விளைவுகள் படி அவர்களால் சொல்லப்பட்ட நல்ல வார்த்தைகளை நினைவில் கொண்டு,
எவன் செயலில் ஈடுபடுகிறானோ, அவன் தனது புகழை இழப்பதில்லை.
..
கல்வியும், திறமையும் கொண்ட மனிதர்களால் சொல்லப்படும் வார்த்தைகள் கூட ஞானமற்றவையாக அறிவற்றவையாக இருக்கின்றன.
ஏனெனில், சொல்லப்பட்டவையைத் தவறாகப் புரிந்து கொண்டு, பதிய வைக்கப்படுகிறது.
அல்லது, புரிந்து கொள்ளப்பட்டாலும், நடைமுறையில் அவை சாதிக்கப்படுவதில்லை.
...
பாவம், துன்பம் ஆகியவற்றை விளைவிக்கும் எக்காரியத்தையும் எப்போதுமே செய்யாத கற்ற மனிதன்,
எப்போதும் செழிப்பில் வளர்கிறான். எனினும், தீய ஆன்மா கொண்ட மனிதன்,
தனது மூடத்தனத்தால், பாவ வழியில் தொடர்ந்து செல்ல ஆரம்பித்து, சேறு நிரம்பிய ஆழமான பள்ளத்தில் விழுகிறான்.
...
நேராமல் காக்க வேண்டிய ஆறு
..
செய்யப்படும் ஆலோசனைகளைப் பகிரங்கப்படுத்தும் பின்வரும் ஆறு வழிகளை, அறிவுள்ள ஒருவன் எப்போதும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வெற்றியையும், நீண்ட மரபையும் விரும்பும் ஒருவன் இந்த ஆறில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.
{1} மயக்கம் {குடி},
{2} உறக்கம்,
{3} ஒற்றர்களைக் கவனியாமை,
{4} தன் இதயச் செயல்பாட்டைச் சார்ந்து, ஒன்றின் மேல் ஒன்றை வைக்கும் அணுகுமுறை (சிலர்மீது பற்று)
{5} தீய ஆலோசகரிடம் வைக்கப்படும் நம்பிக்கை,
{6} திறமையற்ற தூதர்கள் ஆகியவையே அவை அந்த ஆறும்.
...
ஆலோசனைகள் மறைத்தல்
..
அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடைவதில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் ஒருவன், ஆலோசனைகளைப் பகிரங்கமாக்கும் இந்த ஆறுதுவாரங்களை அறிந்து, அவற்றைத் தவிர்ப்பதால் {செய்யப்படும் ஆலோசனைகளை மறைப்பதால்}, எதிரிகளை அடக்குவதில் வெல்கிறான்.
..
சாத்திரங்கள் எதையும் அறியாமல், பெரியோருக்காகக் காத்திராமல் {பணிவிடை செய்யாமல்} இருக்கும் ஒருவன், பிருஹஸ்பதியின் அறிவையே பெற்றிருந்தாலும், அறத்தையோ, பொருளையோ அறியமாட்டான்.
...
கடலிலிட்ட பொருள் தொலைந்து போகும்; கேட்காதவனிடம் பேசப்படும் வார்த்தைகள் தொலைந்து போகும்; ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காத ஒருவனிடம் சாத்திரங்கள் {சாத்திர அறிவு} தொலைந்து போகும்;
அணைந்த நெருப்பால் விடப்பட்ட சாம்பலில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யும் தொலைந்து போகும்.
..
புத்திசாலி ஒருவன், தனது புத்தியைப் பயன்படுத்தியும்,
தனது காதுகள், கண்கள் மூலம் கேட்டும், தானே பார்த்தும்.
ஒரு தீர்மானத்தை எட்டி அறிவாளிகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
..
1.அடக்கம்- காதுகள் கேட்கும் அவதூறையும்;
2.ஆற்றல்- தோல்வியையும் அகற்றும்.
3.மன்னிக்கும் தன்மை-கோபத்தை வெல்லும்.
4.மங்களச் சடங்குகள் - தீய அறிகுறிகள் அனைத்தையும் அழிக்கும்.
..
ஒருவனது குலம், ஓ! மன்னா {திருதராஷ்டரரே},
இன்பத்தைக் கொடுக்கும் பொருள், பிறந்த இடம், வீடு, நடத்தை, உணவு, ஆடை ஆகியவற்றைக் கொண்டு சோதிக்கப்படுகிறது
..
இன்பத்தைக் கொடுக்கும் பொருள் கிடைக்கும்போது,
துறவை அடைந்த ஒருவன் கூட, அதை அனுபவிக்க விரும்பாமல் இருப்பதில்லை ,அதை அனுபவிக்கவே விரும்புகிறான்.
அப்படியிருக்கும்போது, ஆசைகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஒருவனைக் குறித்து என்ன சொல்ல முடியும்?
...
-
விதுர நீதி
..
ஆலோசகர்களைப் பேணுதல்
...
{விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்}
1.கல்வியறிவு,
2.அறம்,
3.ஏற்புடைய இனிய தோற்றம்,
4.நண்பர்கள்,
5.இனிய பேச்சு,
6.நல்ல இதயம் ஆகியவற்றைக் கொண்டு,
ஞானிகளை வழிபடும் ஓர் ஆலோசகனை மன்னன் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
...
தாழ்ந்த பிறப்போ, உயர் பிறப்போ கொண்டிருந்தாலும்,
கண்ணிய தொடர்புகளின் விதிகளை மீறாமல் மரியாதையைத் தாண்டாமல்,
அறத்தில் ஒரு கண் கொண்டு தர்மத்தை விரும்பி,
பணிவும் அடக்கமும் கொண்ட ஒருவன்,
நூறு உயர் பிறப்பாளர்களை விட உயர்ந்தவனாவான்.
...
இரகசிய நோக்கங்கள், இன்பங்கள், ஈட்டல்கள்
போன்ற அனைத்து காரியங்களிலும் எந்த இருவர் அல்லது பலரின் இதயங்கள் உடன்படுகின்றனவோ, அவர்களுக்குள் உள்ள நட்புக்கு எப்போதும் கெடுதல் உண்டாவதில்லை.
...
புற்களால் மறைக்கப்பட்டிருக்கும் குழியின் வாய் போல,
தீய ஆன்மா கொண்ட மூடனை
ஒரு புத்திசாலி தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், அப்படிப்பட்ட மனிதனுடனான நட்பு நிலைக்காது.
...
1.செருக்குடையவன்,
2.மூடன்,
3.கடுமையானவன்,
4.மூர்க்கன்,
5.நீதி வழுவியவன்
ஆகியோருடன் அறிவுள்ள ஒரு மனிதன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
...
நன்றி, அறம் ஆகியவற்றைக் கொண்டு, உண்மைநிறைந்து,
பெரிய இதயம்கொண்டு, அர்ப்பணிப்புடன் இருந்து,
தனது புலன்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன்,
தனது கண்ணியத்தைக் காத்துக் கொண்டு,
எப்போதும் நண்பர்களைக் கைவிடாமல் இருக்கிறான்.
அப்படிப்பட்டவனையே நண்பனாகக் கொள்ள விரும்ப வேண்டும்.
...
1.பணிவு,
2.அனைத்து உயிர்களிடத்தும் அன்பு
3.மன்னிக்கும் குணம்
4.நண்பர்களிடம் மரியாதை ஆகியவை
ஆயுளை நீட்டிக்கின்றன என்று கற்றோர் கூறியுள்ளனர்.
...
செழிப்பும் பொறுமையும்
..
1.எதிர்காலத்தில் பயன்படுத்த வேண்டிய தீர்வுகளை அறிந்தவன்,
2.தற்காலத்தில் உறுதியான தீர்மானத்துடன் இருப்பவன்,
3.கடந்த காலத்தைக் கருத்தில் கொண்டு, தொடங்கப்போகும் ஒரு செயல் எப்படி முடியும் என்பதை சரியாக எதிர்பார்ப்பவன்
தனது நோக்கங்கள் அனைத்தையும் அடைகிறான்.
..
சொல், செயல், எண்ணம் ஆகியவற்றால் எவற்றை ஒரு மனிதன் தொடர்கிறானோ, அவற்றைத் தானே அடைகிறான்;
எனவே, ஒருவன் தனக்கு நன்மையைத் தரும் காரியங்களையே முயல வேண்டும்.
..
நன்மையை அடைந்த பிறகும் மேலும்
1.விடாமல் முயற்சி செய்வது
2.காலம், இடம், வழிவகைகள்ஆகியவற்றின் தன்மைகளை அறிவது
3.சாஸ்த்திரங்களை அறிவது,
4.செயல்பாடு,
5.ஒளிவுமறைவற்ற தன்மை,
6.நல்லவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகள்
ஆகியன செழிப்பையே கொண்டு வரும்.
நன்மை, ஆதாயம், செழிப்பு ஆகியவற்றின் வேர் விடாமுயற்சியே.
..
விடாமுயற்சியுடன், மனவேதனைக்கு ஆளாகாமல், தனது நோக்கத்தைத் தொடர்ந்து செய்வதால்,
ஒரு மனிதன் முடிவிலாக மகிழ்ச்சியை அடைந்து, உண்மையில் பெரிய மனிதன் ஆவான்.
...
ஓ! அய்யா {திருதராஷ்டிரரே},
பலமும் சக்தியும் கொண்ட ஒரு மனிதனுக்கு,
அனைத்து இடங்களிலும், எல்லாக் காலங்களிலும்,
மன்னிக்கும் தன்மையை விட எதுவும் மிகுந்த மகிழ்ச்சியையும், நன்மையையும் தராது.
..
பலவீனனோ அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
..
சக்தியுள்ளவன், அறநோக்கத்தால் மன்னிப்பவனாக வேண்டும்;
வெற்றியையும், தோல்வியையும் சமமாகக் கருதுபவன்
இயல்பாகவே மன்னிக்கும் தன்மையுடன் இருக்கிறான்.
...
அறத்திற்கும், பொருளுக்கும் பழுதேற்படுத்தாத நிறைவை அடைய,
ஒருவன் இன்பத்தேடலை நிச்சயம் தொடரவேண்டும்.
எனினும், புலன்களில் எப்போதும் ஈடுபடும் மூடனைப் போலவும் அவன் நடந்து கொள்ளக்கூடாது.
...
1.துயரத்தால் துன்புறுத்தப்படுபவன்,
2.தீய வழிகளுக்கு அடிமையாக இருப்பவன்,
3.இறைமையை மறுப்பவன் {நாத்திகன்},
4.சோம்பேறி,
5.புலன்களைத் தனது கட்டுப்பாட்டில் வைக்காதவன்,
6.முயற்சியற்றவன்
ஆகியோரிடம் எப்போதுமே செழிப்பு தங்காது.
...
அடக்கமாக இருக்கும் எளிமையான மனிதன், தனது பணிவால் பலவீனமானவனாகக் கருதப்பட்டு,
தவறான அறிவு படைத்தவர்களால் துன்புறுத்தப்படுகிறான் .
..
1.அளவுக்கதிகமான தயாளன்,
2.அளவில்லாமல் தானமளிப்பவன்,
3.மிதமிஞ்சிய துணிவுள்ளவன்,
4.கடுமையான நோன்புகளைப் பயில்பவன்,
5.அறிவில் செருக்குடையவன்
ஆகியோரிடம் கொண்ட பயத்தினால், செழிப்பு (லட்சுமிதேவி) அவர்களை அணுகுவதேயில்லை.
..
அதிக நற்குணம் கொண்டவனிடமும்(மிகமிகநல்லவன்),
நற்குணமே அற்றவனிடமும் செழிப்பு தங்குவதில்லை.
அனைத்து அறங்களின் சேர்க்கையை அவள்(லட்சுமிதேவி) விரும்புவதில்லை.
அதே போல எந்த அறங்களும் அற்றவர்களிடமும் அவள் மகிழ்ச்சி கொள்வதில்லை.
..
கண்பார்வையற்ற பசுப் போல, செழிப்பானவள்(லட்சுமிதேவி),
குறிப்பிடத்தக்கவனாக இல்லாதவனிடம் கூட தங்குகிறாள் {யாரிடம் தங்குவாள் எனத் தெரியாது}.
...
1.மனிதர்களே இல்லாத பாலைவனங்கள்,
2.அல்லது ஆழ்ந்த காடுகளில்,
3.அல்லது அடைவதற்கரிதான கடுமை நிறைந்த இடங்கள்(மோசமான பகுதிகள்)
ஆகியவற்றின் மத்தியிலும்,
4.அனைத்துவிதமான அச்சங்கள் மற்றும் ஆபத்துகளின் மத்தியிலும்,
5.அல்லது தன்னைத் தாக்குவதற்காக மரண ஆயுதம் ஓங்கப்பட்டிருந்தாலும்,
மனோபலம் கொண்ட ஒரு மனிதன்,
அவற்றுக்கு முன்னிலையில் அச்சத்தை அடைவதில்லை.
...
-
விதுர நீதி
..
செழிப்பின் வேர்
...
1.முயற்சி,
2.சுயக்கட்டுப்பாடு,
3.திறன்,
4.கவனம்,
5.உறுதி,
6.ஞாபக சக்தி,
7.முதிர்ச்சியுடன் தீர்மானித்த செயல்களின் துவக்கம்
ஆகியவையே செழிப்பின் வேர் என அறிவீராக.
...
பலம்
...
தவங்களே துறவிகளின் பலம்;
வேதங்களே அதை அறிந்தவர்களின் பலம்;
பொறாமையே தீயவர்களின் பலம்;
அதே போல, மன்னிக்கும் தன்மையே அறம்சார்ந்தவர்களின் பலமாகும்.
...
நோன்பை அழிக்காதவை
..
1.நீர்,
2.கிழங்குகள்,
3.பழங்கள்,
4.பால்,
5.தெளிந்த நெய்,
6.அந்தணரின் விருப்பம்,
7.ஆசானின் உத்தரவு,
8.மருந்து
ஆகிய எட்டும் நோன்பை அழிக்காதவையாகும்.
(நோன்பு காலங்களிலும் பயன்படுத்தலாம்)
...
அறம்
..
எது தனக்குக் கெடுதலாக இருக்கிறதோ, அதை அவன் வேறு ஒருவனுக்குச் செய்யக்கூடாது. சுருக்கமாக, இதுவே அறம் எனப்படுவதாகும்.
பிற வகை அறங்களும் இருக்கின்றன. ஆனால், அவை உறுதியற்றவை.
..
கோபத்தை- மன்னிக்கும் தன்மையால் வெல்ல வேண்டும்;
தீயவர்களை- நேர்மையால் வெல்ல வேண்டும்;
கஞ்சனைக் -கொடையாலும்,
பொய்யை- உண்மையாலும் வெல்ல வேண்டும்.
...
நம்பக்கூடாது
..
1.பெண்கள்,
2.ஏமாற்றுக்காரன்,
3.சோம்பேறி,
4.கோழை,
5.மூர்க்கன்,
6.பலத்தில் செருக்குடையவன்,
7.திருடன்,
8.நன்றிமறந்தவன்,
9.இறைமறுப்பாளன் {நாத்திகவாதி}
ஆகியோரை ஒருபோதும் நம்பக்கூடாது.
...
பெரியோரை மரியாதையாக வணங்கி, முதிர்ந்தவர்களுக்குப் பணிவிடை செய்பவனின்
1.சாதனைகள்,
2.ஆயுளின் அளவு,
3.புகழ்,
4.சக்தி ஆகிய நான்கும் எப்போதுமே பெருகுகிறது.
..
1.வலிநிறைந்த முயற்சியல்லால் அடைய முடியாத பொருட்களிலோ {இலவசமாகக் கிடைக்கும் விலை உயர்ந்த பொருளிலிலோ},
2.நீதியைத் தியாகம் செய்வதிலோ,
3.எதிரியிடம் தலைவணங்குவதிலோ உமது இதயத்தைச் செலுத்தாதீர்.
...
இரக்கப்படத் தக்கவன்
...
1.அறிவில்லாத மனிதன் இரக்கப்படத்தக்கவன்;
2.கனியற்ற கலவி இரக்கப்படத்தக்கது(குழந்தை பிறக்க வாய்பில்லாதவர்களின் உடல்உறவு);
3.ஒரு நாட்டில் உணவற்று இருக்கும் மக்கள் இரக்கப்படத்தக்கவர்கள்;
4.மன்னன் இல்லாத நாடு இரக்கப்படத்தக்கது.
..
உடல் கொண்ட உயிரினங்களின் வலிக்கும், பலவீனத்திற்கும் தோற்றுவாய்களாகும் இவை.
...
1.குன்றுகள் மற்றும் மலைகளுக்குச் சிதைவை உண்டாக்கும் மழை;
2.பெண்களுக்கு வேதனையை உண்டாக்கும் இன்பமின்மை;
3.இதயத்திற்குக் கணையாகும் கடுஞ்சொற்கள்.
4.வேதங்களின் களங்கமான கல்லாமை;
5.அந்தணர்களின் நோன்பின்மை;
6.மனிதர்களின் பொய்மை;
7.அரிய பொருட்களின் மீது கற்புடைய பெண்களின் ஆர்வம்;
8.பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுதல் களங்கம்.
9.தங்கத்தின் களங்கம் வெள்ளி;
10.வெள்ளிக்கு ஈயம்;
11.ஈயத்திற்குக் காரீயம்;
12.காரீயத்துக்கு பயனற்ற கசடுகள் களங்கம்
ஆகியவை ஒவ்வொன்றுக்கும் பலவீனத்தையும் வலியையும் தரும்.
...
ஒரு மனிதனால் வெல்ல முடியாததவை
...
படுப்பதால் உறக்கத்தை
ஆசையால் பெண்களை(ஆசையுள்ளவள் பெண்களை அருகில் வைத்துக்கொண்டிருந்தால் ஆசையை வெல்ல முடியாது)
விறகினால் நெருப்பை,
குடிப்பதால் மதுவை
...
நண்பனை தானத்தாலும்,
எதிரிகளைப் போரினாலும்,
மனைவியை உணவு மற்றும் பானங்களாலும் வென்றவனுக்கு வாழ்வு பயனுள்ளதே.
ஆயிரம் உள்ளவர்களும் வாழ்கிறார்கள்; நூறு உள்ளவர்களும் வாழவே செய்கிறார்கள்.
...
ஓ! திருதராஷ்டிரரே ஆசையைத் துறப்பீராக.
ஏதாவதொரு வழியில் தங்கள் வாழ்வைப் பராமரிக்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை.
இந்தப் பூமியில் இருக்கும் உமது நெல், கோதுமை, தங்கம், கால்நடைகள், பெண்கள் ஆகிய அனைத்தும் ஒரு மனிதனைக் கூட மனநிறைவு கொள்ளச் செய்யாது…
..
இதை நினைவில் கொண்டே, அறிவாளிகள் உலகளாவிய ஆளுகை இல்லை என்பதற்காக எப்போதுமே வருந்துவதில்லை.(உலகத்தையே ஆள முடியவில்லையே என்று வருந்துவதில்லை)
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
நான் மீண்டும் உமக்குச் சொல்கிறேன்.
பாண்டுவின் மகன்கள் மற்றும் உமது மகன்கள் ஆகிய உமது பிள்ளைகளின் மீது சமமான நடத்தையைக் கடைப்பிடிப்பீராக. அவர்களுக்குள் பாரபட்சம் பாராமல் இருப்பீராக.” என்றான் {விதுரன்}.
..
விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான்
“நல்லவர்களால் வழிபடப்பட்டு, செருக்கைக் கைவிட்ட நல்ல மனிதன் ஒருவன்,
தனது சக்திக்கு மீறாமல், தனது நோக்கங்களைத் தொடர்ந்து சென்றால்,
அவன் விரைவில் புகழை வெல்வான்.
ஏனெனில், ஒரு மனிதனிடம் மனநிறைவு கொண்ட நல்லவர்கள், நிச்சயம் அவனுக்கு மகிழ்ச்சியை அளிப்பார்கள்.
...
அநீதி நிறைந்த ஒரு பெரும் பொருளை, தன் சொந்த விருப்பத்தின் பேரில் கைவிடும் ஒருவன்,
சட்டையை உரித்து வெளியேறும் பாம்பு போல, அனைத்து எதிரிகளையும் கைவிட்டு மகிழ்ச்சியாக வாழ்வான்.
..
1.பொய்மையால் ஈட்டப்பட்ட வெற்றி,
2.மன்னனிடம் ஏமாற்றுகரமான நடத்தையுள்ள அலுவலர்கள்,
3. நேர்மையற்ற உணர்வுகளை ஆசான் முன்பு வெளிப்படுத்தல்
ஆகிய மூன்றும் பிராமணனைக் கொன்ற பாவத்திற்கு நிகரானவை ஆகும்.
...
-
விதுர நீதி
..
மாணவர்கள்
..
1.ஆசானைக் கவனிப்பதில் கவனமின்மை,
2.அவசரம்,
3.தற்பெருமை
ஆகிய மூன்றும் ஞானத்திற்கு எதிரிகளாகும்.
..
1.சோம்பல்,
2.கவனமின்மை,
3.அறிவாற்றலில் குழப்பம் {மதிமயக்கம்},
4.அமைதியின்மை,
5.நேரத்தை வீணடிக்கும் கூடுகை {கூட்டங்கள்),
6.அகந்தை,
7.பேராசை,
ஆகிய ஏழும் கல்வி கற்கும் மாணவர்களுடைய குறைகள் என்று சொல்லப்படுகின்றன.
..
இன்பத்தில் ஆசை கொண்டவர்களால் அறிவை எப்படி அடைய முடியும்?
கல்வி கற்கும் மாணவர்கள், இன்பம் அனுபவிப்பது ஆகாது..
இன்பத்தில் பற்றுடையோர் அறிவை விட்டு விட வேண்டும்.
அதே போல அறிவில் பற்றுடையோர் இன்பத்தை விட்டுவிட வேண்டும்.
..
விறகால் நெருப்பு நிறைவடைவதில்லை (அதிக விறகினால் நெருப்பு அதிகம் எரிகிறது).
தான் பெறும் நதிகளால் பெருங்கடல் நிறைவடைவதில்லை (கடல் நிரம்புவதில்லை).
வாழும் மொத்த உயிரினங்களாலும் மரணம் மனநிறைவைக் கொள்வதே இல்லை (எத்தனைபேர் இறந்தாலும் மரணம் நிற்பதில்லை).
அதே போல, ஓர் அழகான மங்கை, {விபச்சாரி) எத்தனை ஆடவரிலும் மனநிறைவடைவதில்லை.
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
நம்பிக்கை- பொறுமையைக் கொல்கிறது {அழிக்கிறது};
யமன் -வளர்ச்சியைக் கொல்கிறான்;
தானமளிக்காமை- புகழைக் கொல்கிறது;
பரிபாலனம் செய்யாமை- கால்நடைகளைக் கொல்கிறது;
கோபக்கார அந்தணன் ஒருவன் மொத்த நாட்டையுமே அழிக்கிறான்.
...
1.ஆடுகள்,
2.வெண்கலம் {பாத்திரங்கள்},
3.வெள்ளி,
4.தேன்,
5.நச்சுமுறிவு {விஷமுறிவு} மருந்துகள்,
6.பறவைகள்,
7.வேதங்களை அறிந்த அந்தணர்கள்,
8.முதிர்ந்த உறவினர்கள்,
9.உயர் பிறப்பு பிறந்து வறுமையில் மூழ்கியவர்கள்
ஆகியோர் எப்போதும் உமது வீட்டில் இருக்கட்டும்.
....
ஓ! பாரதரே,
1.ஆடுகள்,
2.காளைகள்,
3.சந்தனம்,
4.வீணைகள் {இசைக்கருவிகள்},
5.கண்ணாடிகள்,
6.தேன்,
7.தெளிந்த நெய்,
8.இரும்பு,
9.தாமிரம்,
10.சங்குகள்,
11.சாளக்கிராமம் (உள்ளே பொன் கொண்ட விஷ்ணுவின் கல் உருவம்),
12.கோரோசனை (பசுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறமுள்ள வாசனைப் பண்டம், அது மனிதர்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.)
ஆகியவற்றைத் தேவர்களை வழிபடுவதற்காக ஒரு வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று மனு கூறியிருக்கிறார்.
...
போதனைகள் அனைத்திலும் உயர்ந்தவை
..
ஓ! அய்யா {திருதராஷ்டிரரே},
பெருங்கனிகளை {பெரும்பலன்களைக்} கொடுக்க வல்ல மற்றொரு புனித பாடத்தை நான் உமக்குச் சொல்கிறேன்.
..
காமத்தாலோ, அச்சத்தாலோ, நிலையற்ற உள்ளத்தாலோ, சபலத்தாலோ அறத்தைக் {தர்மத்தைக்} கைவிடக்கூடாது.
உயிருக்காக கூட அறத்தைக் கைவிடக்கூடாது. இந்தப் பாடமே அனைத்துக் கல்வியிலும் {போதனைகளிலும்} உயர்ந்ததாகும்.
..
அறம் நித்தியமானது; இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவன;
வாழ்வோ உண்மையில் நித்தியமானதே என்றாலும், குறிப்பிட்ட பகுதிகளில் அது மாறி மாறியே வரும்.(மறுபடிமறுபடி பிறவி வரும்)
மாறி மாறி வருவனவற்றைக் கைவிட்டு, நித்தியமானதைக் கடைப்பிடிப்பீராக.
..
மனநிறைவு உமதாகட்டும். ஏனெனில், அடையக்கூடிய அனைத்திலும் மனநிறைவே உயர்ந்ததாகும்.
..
சிறப்புமிக்கவர்களும், பலமிக்கவர்களுமான மன்னர்கள்,
செல்வமும் சோளமும் {தானியங்களும்} அபரிமிதமாக விளையும் நிலங்களை ஆண்டு,
தங்கள் நாடுகளை விட்டு, பரந்த இன்ப ஊற்றுகளை விட்டு,
உலகத்தை அழிப்பவனுக்கு {யமனுக்கு} இரையானதைப் பாரும்.
..
மிகக் கவனமாக வளர்த்த மகன் இறக்கும்போது, அவனை மனிதர்கள் சுடுகாட்டுக்குத் தூக்கிச் சென்றுவிடுகிறார்கள்.
கலைந்த மயிருடனும், இரங்கத்தக்க வகையில் அழுதும் அந்த உடலை, ஏதோ ஒரு மரத்துண்டு போல ஈமச்சிதையில் இடுகிறார்கள்.
இறந்தவனின் செல்வத்தைப் பிறரே அனுபவிக்கின்றனர்.
அதே வேளையில் இறந்தவனது உடலின் தாதுக்களைப் பறவைகளும் நெருப்பும் உண்கின்றன.
..
மறு உலகத்துக்கு, தன்னுடனே வரும் தனது புண்ணியங்கள் மற்றும் பாவங்கள் ஆகிய இரண்டை மட்டுமே அவன் {இறந்தவன்} கொண்டு செல்கிறான்.
....
ஓ! அய்யா {திருதராஷ்டிரரே},
உறவினர்கள், நண்பர்கள், மகன்கள் ஆகியோர் அந்த (இறந்த)உடலைத் தூக்கி எறிந்துவிட்டு,
பூக்களும் கனிகளுமற்ற மரத்தைத் துறந்து செல்லும் பறவைகளைப் போல,
தங்கள் சுவடுகளை மீண்டும் பின்பற்றி {வந்த வழியே வீட்டிற்கு} செல்கிறார்கள்.
..
ஈமச்சிதையில் இடப்பட்டவனுடன் அவனது செயல்கள் {கர்மங்கள்} மட்டுமே செல்கின்றன.
எனவே, மனிதர்கள் கவனமாகவும் படிப்படியாகவும் நீதிமிக்கத் தகுதிகளை {புண்ணியங்களை} ஈட்ட வேண்டும்.
..
இதற்கு மேலுள்ள உலகிலும், இதற்குக் கீழுள்ள உலகிலும், பெரும் பிரகாசமும், காரிருளும் உள்ள பகுதிகள் இருக்கின்றன.(நரகங்கள்)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பகுதிகளில் தான் மனிதர்களின் புலன்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வீராக. ஓ!, அந்த இடங்கள் எதுவும் உமதாகாதிருக்கட்டும்.
...
இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டு, அதன்படி உம்மால் நடந்து கொள்ள முடிந்தால்,
நீர் மனிதர்களின் உலகில் பெரும்புகழை அடைந்து, இம்மையிலும் மறுமையிலும் அச்சத்தை அடையாதிருப்பீர்.
...
End..
சனத்சுஜாதரின் உபதேங்கள்
-
திருதராஷ்டிரன், முனிவரிடம் சனத்சுஜாதர் என்ற முனிவரிடம் கேட்கிறான்
, “ஓ! சனத்சுஜாதரே, மரணம் இல்லை என்ற கருத்தை நீர் கொண்டிருப்பதாக நான் கேள்விப்பட்டேன்.
மரணத்தைத் வெல்வதற்கே தேவர்களும், அசுரர்களும் தவம் பயில்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
, இந்த இரு கருத்துகளில் எதுதான் உண்மை?” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் திருதராஷ்டிரனிடம் கூறினான்,
“சில குறிப்பிட்ட கர்மங்களை செய்வதால் மரணத்தை வெல்லமுடியும் என்று சிலர் கூறுகிறார்கள்
(கர்மங்களை செய்வதன் மூலம் மரணத்தை கடந்து செல்வது.தேவர்களும்,அசுரர்களும் அமிர்தத்தை உண்பதால் மரணத்தை வெல்லலாம் என்ற கருத்தை கொண்டவர்கள்)
பிறர் மரணம் இல்லை என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்;
(ஞானத்தின் மூலம் மரணத்தை கடந்து செல்வது,ஞானிகள் தங்களை ஆன்மா என கருதுவதால்,தங்களுக்கு மரணம் இல்லை என்று கூறிக்கொள்வார்கள்)
எது உண்மை என நீ என்னிடம் கேட்கிறாய்.
ஓ! மன்னா, இதுகுறித்து நான் சொல்கிறேன் கேள்.
அதனால் உனது ஐயங்கள் அகலும்.
ஓ! க்ஷத்திரியா இவை இரண்டுமே உண்மைதான் என அறிந்து கொள்வாயாக.
அறியாமையின் விளைவே மரணம் எனக் கற்றோர் கருதுகின்றனர்.
நானோ, அறியாமையே மரணம் என்றும், ஞானமே அமரநிலை என்றும் சொல்கிறேன்.
அறியாமையினாலேயே அசுரர்கள் தோல்விக்கும் மரணத்துக்கும் ஆட்படுகிறார்கள்.
அறிவாலேயே தேவர்கள் பிரம்மனின் {தேவ இயல்பை} இயல்பை அடைகிறார்கள்.
புலியைப் போல, மரணம் உயிரினங்களை விழுங்குவதில்லை; மரணத்தின் உருவம் அறியமுடியாததாக இருக்கிறது. இஃது ஒருபுறமிருக்க, சிலர் யமனே மரணம் எனக் கற்பனை செய்கிறார்கள். எனினும், இந்த எண்ணம் பலமற்ற மனதினால் விளைவதே.
பிரம்மம் அல்லது தன்னறிவின் நோக்கம், இறவா நிலையை அடைவதே.
நல்லவர்களுக்கு அருளின் ஊற்றுக்கண்ணாகவும், பாவிகளுக்குத் துன்பத்தின் ஊற்றுக்கண்ணாகவும் திகழும் பித்ருக்களின் உலகை, அந்தத் யமன் ஆட்சி செய்கிறான். யமனின் கட்டளையின் பேரில் கோபம், அறியாமை, பேராசை ஆகியவற்றின் உருவத்தை ஏற்று வரும் மரணம், மனிதர்கள் மத்தியில் ஏற்படுகிறது {அதனால் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுகிறது}.
செருக்கில் தத்தளிக்கும் மனிதர்கள் அநீதியான பாதையிலேயே எப்போதும் நடக்கிறார்கள்.
அவர்களுக்கு மத்தியில் இருப்பவன் எவனும் ஆத்ம தரிசனத்தைப் பெறுவதில் வெற்றி பெறுவதில்லை.
புரிந்து கொள்ளும் தன்மை மறைக்கப்பட்டு , ஆசைகளில் தத்தளித்து, தங்கள் உடல்களைத் துறக்கும் அவர்கள், மீண்டும் மீண்டும் நரகத்திற்குள்ளேயே விழுகிறார்கள்.
அவர்கள் எப்போதும் தங்கள் புலன்களால் தொடரப்படுகிறார்கள். இதற்காகவே, அறியாமை மரணம் என்ற பெயரைப் பெறுகிறது.
செயல்பாடுகளின் பலன்களை விரும்பும் மனிதர்கள், அந்தக் பலன்களை அனுபவிக்கும் நேரம் வரும்போது தங்கள் உடல்களை விட்டு விட்டுச் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர்.
எனவே, அவர்களால் மரணத்தைத் தவிர்க்க முடியாது.
உருவம் கொண்ட உயிரினங்கள், பிரம்மத்தின் அறிவை அடையும் திறன் இன்மையாலும், உலகளாவிய இன்பங்களில் தாங்கள் கொள்ளும் தொடர்புகளாலும் மறுபிறவி எனும் சுழற்சியில் மேலாகவும், கீழாகவும், சுற்றியே உலவி கொண்டிருக்கும் கடமைக்கு ஆட்படுகின்றனர.
உலக இன்பங்களை நோக்கி நாட்டங்கொள்ளும் மனிதனின் இயற்கையான உந்துதலே, புலன்கள் தவறானவற்றை அடைய காரணமாக அமைந்து வழிகாட்டுகிறது.
உண்மையற்ற பொருட்களில்(உலக இன்பங்களில்) தொடர்ந்து நாட்டங்கொள்வதால் பாதிப்படையும் ஆன்மா, எப்போதும் தான் ஈடுபட்ட செயல்களை மட்டுமே நினைவு கூர்ந்து, தன்னைச் சூழ்ந்திருக்கும் உலகளாவிய இன்பங்களை மட்டுமே வழிபடுகிறது
இன்பங்களில் விருப்பமே முதலில் மனிதர்களைக் கொல்கிறது.
இச்சையும் , கோபமும் விரைவில் அதன் பின்னேயே தொடர்ந்து வருகின்றன.
இன்பங்களில் விருப்பம், காமம், கோபம் ஆகிய மூன்றும் மூடர்களை மரணத்திற்கு வழிநடத்துகின்றன.
எனினும், தங்கள் ஆன்மாக்களை வென்றவர்கள், தன்னடக்கத்தில் வென்று, மரணத்தில் இருந்து தப்பிக்கிறார்கள்.
தனது குறிக்கோளின் மீது கொண்ட ஆசையால் உற்சாகமடைந்து, தான் பாதிக்காத வகையில் தனது ஆன்மாவை வென்றவன், சுயஞானத்தின் உதவியால் இவற்றை {ஆசை, காமம், கோபம் ஆகியவற்றை} மதிப்பில்லாதவை எனக் கருதி இவையாவையும் வெல்கிறான்.
இம்முறையில் தனது விருப்பங்களை அடக்கியவனான கற்ற மனிதன் ஒருவனை, யமனின் உருவத்தை ஏற்று வரும் அறியாமையால் விழுங்க முடியாது.
தனது விருப்பங்களைப் பின்தொடரும் மனிதன், தனது விருப்பங்களுடன் சேர்த்தே அழிக்கப்படுகிறான்.
எனினும், ஆசையையைத் துறக்க முடிந்தவனால் நிச்சயமாக அனைத்துவிதமான துன்பங்களை விரட்டிவிட முடியும்.
மகாபாரத உபதேங்கள்-2
-
சனத்சுஜாதரின் உபதேங்கள்
-
உண்மையில் ஆசையே அறியாமை.
அனைத்து உயிரினங்களுக்கும் அதுவே இருளும் நரகமுமாகும்.
அறியாமையில் தத்தளிக்கும் உயிரினங்கள் தங்கள் அறிவை இழக்கின்றன.
தெருவில் போதையில் நடக்கும் மனிதர்கள் மேடு பள்ளங்களில் விழுவதைப் போல, ஆசையால் பீடிக்கப்பட்ட மனிதர்கள், இன்பங்களில் ஏமாந்து தவறான வழியை அடைந்து அழிவை நோக்கி ஓடுகிறார்கள்.
ஆசையால் குழப்பப்படவோ, தவறாக வழிநடத்தப்படவோ முடியாத ஆன்மாவைக் கொண்ட மனிதனை மரணத்தால் என்ன செய்துவிட முடியும்?
வைக்கோலாலான புலியைப் போல மரணம் அவனுக்குப் பயத்தை {எப்போதும்} அளிப்பதில்லை.
எனவே, ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, அறியாமையான ஆசையின் இருப்பு அழிக்கப்பட வேண்டுமானால், மிகச் சிறிய ஆசையாகவே இருந்தாலும், எந்த ஆசையும் மனதால் நினைக்கப்படவோ, தொடரப்படவோ கூடாது.
கோபம், பேராசை ஆகியவற்றைக் கொண்டு, உனது உடலுக்குள் இருக்கும் ஆன்மா, அறியாமையில் நிறைந்தால் அதுவே மரணமாகும்.
மரணம் இப்படியே உண்டாகிறது என்பதை அறிந்தவன், அறிவைச் சார்ந்திருந்து, மரண அச்சத்தை ஊக்குவிப்பதில்லை.
உண்மையில், மரணத்திற்கு ஆட்படும் உடல் அழிக்கப்படுவது போலவே, அறிவுக்கு ஆட்படும் மரணமும் அழிகிறது.
மகாபாரத உபதேங்கள்-3
-
சனத்சுஜாதரின் உபதேங்கள்
-
சனத்சுஜாதர் திருதராஷ்டிரனிடம் கூறினார்
-
“தனி நபர்களுக்கு மத்தியில், தங்கள் மனங்களை அடக்க தேர்ச்சி அடைந்தவர்களும்,
அப்படி தேர்ச்சி அடையாதவர்களும் உண்டு.
எனினும், பரமாத்மா மனிதர்கள் அனைவரிலும் சமமாகக் காணப்படுகிறான்.
உண்மையில், முக்தி அடைந்தவனிடமும், முக்தி அடையாதவனிடமும் பரமாத்மா சமமாகவே இருக்கிறான்.
முக்தியை அடைந்தவர்கள் மட்டுமே அடர்த்தியான தேனூற்றை {பேரின்பத்தை} அடைகிறார்கள்.
தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் யோகிகளால் காணப்படுகிறான்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா},
“நான் உனது அடிமை”(இறைவனின் அடிமை) என்பது போன்ற வார்த்தைகள் பரமாத்மாவை அடைய முயற்சிப்பவர்கள் வாயில் இருந்து வராதிருக்கட்டும்.
(அடிமை உணர்வு அடையவர்களால் பரமாத்மாவை அடைய முடியாது)
தூய அறிவு {சுத்தஞானம்} என்ற மற்றொரு பெயரும் பரமாத்மாவுக்கு உண்டு.
மனதை அடக்கியவர்கள் மட்டுமே அவனை {பரமாத்மாவை} அடைகின்றனர்.
தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் யோகிகளால் காணப்படுகிறான்.
அவன் அப்படியே இருக்கிறான். நீக்கமற பரிபூரணமாய் நிறைந்திருக்கும் அவனிடம் {பரமாத்மாவிடம்},
அனைத்து உயிரினங்களும் இணைகின்றன.
பரிபூரணத்தின் உருவகத்தை அறிபவன், தனது விடுதலை என்ற முக்தியை இங்கேயே {இவ்வுலகிலேயே} அடைந்துவிடுகிறான்.
ஆயிரம் சிறகுகளை விரித்து மனோ வேகத்துடன் பறக்கும் ஜீவாத்மா,
வாழும் உயிரினத்திற்குள் உள்ள மைய ஆவியிடமே {பரமாத்மாவிடமே} திரும்பி வர வேண்டும்.
---
பரமாத்மாவை யோகிகள் காண்கிறார்கள்
---
அவனது {பரமாத்மாவின்} உருவம் பார்க்கத்தக்க ஒரு பொருளாக இருக்க இயலாது.
தூய இதயங்கள் கொண்டோர் மட்டுமே அவனைக் {பரமாத்மாவைக்} காண இயலும்.
அனைவரின் நன்மையையும் ஒருவன் நாடும்போது, {அவன்} தனது மனதைக் கட்டுப்படுத்துவதில் வெல்கிறான். அவனது மனம் எப்போதும் துயரத்திற்கு ஆட்படாது. அப்படியிருப்பவன் தனது இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்த உலகத்தையும் அதன் பயன்களையும் கைவிடத்தக்கவர்கள் அழியா {இறவா} நிலையை அடைகிறார்கள்.
அனைத்து காரணங்களுக்கும் விளைவுகளுக்கும் தோற்றமாக நானே இருக்கிறேன்” என்று முக்தியடைந்த ஒருவன் நினைக்கிறான்.
பிரம்மத்தை அறிந்த, அந்தப் பிரம்மத்துக்கு நிகரான மனிதன் நற்செயல்களால் சிறப்படைவதோ, தீய செயல்களால் அசுத்தமடைவதோ இல்லை.
சாதாரண மனிதர்களுக்கு மட்டுமே நல்ல அல்லது தீய செயல்கள் வேறுபட்ட விளைவுகளை உண்டாக்குகின்றன.
பிரம்மத்தை அறிந்த மனிதன் அமிர்தத்துக்கு ஒப்பாகவோ, நன்மை அல்லது தீமைகளால் பாதிக்கப்படாத கைவல்யம் {Kaivalya} என்று அழைக்கப்படும், நிலையடைந்தவனாகக் கருதப்பட வேண்டும்.
எனவே, ஒருவன், சுட்டிக்காட்டப்பட்ட வழியில் மனதை அகற்றி, அந்தச் சாரத்தின் இனிமையை (பிரம்மத்தை) அடைய வேண்டும்.
அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் காணப்படுகிறான்.
பிரம்மத்தை அறிந்த மனிதனின் இதயம், “நான் கற்கவில்லை(படிப்பறிவற்றவன்), அல்லது நான் அக்னி ஹோத்ரம் செய்ய வில்லை” என்ற நிந்தை எண்ணத்துக்கு வருந்தாது. (தினசரி கடமைகளை செய்யாவிட்டாலும் வருத்தமடையாது)
மனதைக் கட்டுப்படுத்தியவர்கள் மட்டுமே அடையும் அறிவை {ஞானத்தை}, பிரம்ம அறிவு கொண்டவன் விரைவில் அடைகிறான்.
எனவே, தன்னில் அனைத்தையும் கண்ட ஒருவன் அதற்கு மேலும் வருந்த தேவையில்லை. பல்வேறு வகையான உலகத் தொழில்களில் ஈடுபடுவோரே வருந்த வேண்டியிருக்கும்.
பரமாத்மா பார்க்கத்தக்க ஒரு பொருளல்ல
---
இதயத்தில் வசிக்கும் கட்டைவிரல் அளவுள்ளவனும், பரிபூரணத்தின் உருவகமும் ஆன அந்த ஒப்பற்றவன் பார்க்கத்தக்க ஒரு பொருளாக இருக்க மாட்டான்.
பிறப்பற்ற அவன் இரவும் பகலும் விழிப்பான நிலையில் நகர்ந்து கொண்டிருக்கிறான்.
அவனை {பரமாத்மாவை} அறிந்தவர்கள், கற்றவர்களாகவும் இன்பம் நிறைந்தவர்களாகவும் ஆகிறார்கள்.
நானே தாய் என்றும் தந்தை என்றும் அழைக்கப்படுகிறேன். மேலும் நானே மகனாகவும் இருக்கிறேன். இருந்த அனைத்தும், இருக்கப்போகும் அனைத்தும் ஆத்மாவாக இருப்பவன் நானே.
ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, நானே பாட்டன், நானே தந்தை, நானே மகனுமாக இருக்கிறேன். நீங்கள் எனது ஆத்மாவிலேயே வசிக்கிறீர்கள், எனினும் நீங்கள் என்னுடையவர்களல்ல, நானும் உங்களுடையவன் கிடையாது!
---
கடவுள் துகள்-எலக்ட்ரான் -அணு- மூலக்கூறு-
DNA-இனப்பெருக்கம்-வம்சவிருத்தி
--
பிறப்புக்கும், இனப்பெருக்கத்திற்கும் {வம்ச விருத்திக்கும்} எனது ஆன்மாவே காரணமாக இருக்கிறது.
நானே இந்த அண்டத்தின் குறுக்கும் நெடுக்குமாகவும் {தொகுப்பாகவும்}, ஊடு இழையாகவும்(DNA) இருக்கிறேன்.
நான் ஓய்ந்திருக்கும் இடம் அழிவற்றதாக இருக்கிறது. பிறப்பற்றவனான நான் பகலும் இரவும் விழித்திருக்கிறேன். என்னை அறிந்த ஒருவனே கற்றவனாகவும் இன்பம் நிறைந்தவனாகவும் ஆகிறான்.
--
நுட்பமானவற்றைவிட நுட்பமானவனாக(அணுவிலும் நுட்பமான GOD particle), கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்கும் திறன் பெற்ற அற்புதமான கண்களுடன் கூடி அனைத்து உயிர்களிலும் பிரம்மம் விழிப்புடன் இருக்கிறது.
அவனை {பிரம்மத்தை} அறிந்தவர்கள், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் இதயத்திலும் வசிக்கும் அண்டத்தின் தகப்பனை {பரமாத்மாவை} அறிகிறார்கள்.
மகாபாரத உபதேங்கள்-4
-
சனத்சுஜாதரின் உபதேங்கள்
-
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்},
“ஓ! சனத்சுஜாதரே, ஒரே வகையான அனைத்து தவத்துறவுகளும் சில நேரங்களில் வெற்றியைத் தருவதும்,
சில நேரங்களில் வெற்றியைத் தராததும் எவ்வாறு?
நாங்களும் அறிந்து கொள்ளும்படி எங்களுக்கு அதைச் சொல்லும்!” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்},
“(ஆசை மற்றும் பிறவற்றால்) {பயனில் விருப்பம் முதலிய} தவறுகளால் கறை படியாத துறவே விடுதலையைப் {முக்தியைப்} பெறும் திறம் கொண்டது என்று கூறப்படுகிறது.
எனவே அப்படி செய்யப்படும் துறவு வெற்றியைத் தருகிறது.
அதே வேளையில் பகட்டால் கறைபடும் துறவும், உண்மையான அர்ப்பணிப்பு இல்லாத துறவும் வெற்றியடையாது எனக் கருதப்படுகிறது.
ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, உனது விசாரணைகள் அனைத்தும் துறவின் வேரையே தொடுகிறது.
கற்றவர்கள் துறவினாலேயே பிரம்மத்தை அறிந்து அழியா {இறவா} நிலையை அடைகின்றனர்!” என்றார் {சனத்சுஜாதர்}.
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான்,
“தவறுகளால் கறைபடியாத தவத்தைக் குறித்து நீர் சொன்னதை நான் கேட்டுவிட்டேன்.
அதனால் நிலைத்த மர்மம் ஒன்றை அறிந்து கொள்வதில் வென்றேன்.
ஓ! சனத்சுஜாதரே, இப்போது, தவறுகளால் கறைபடிந்த தவம் குறித்து எனக்குச் சொல்லும்” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்},
“ஓ! மன்னா {திருதராஷ்டிரா} கோபத்துடன் கூடிய பனிரெண்டும் , இன்னும் பதிமூன்றுவகைத் தீய குணங்களும் தவத்தைக் கறை படுத்தும் தவறுகளாகும்.
1.கோபம்,
2.காமம்,
3.பேராசை,
4.சரி தவறு அறியாத அறியாமை,
5.நிறைவின்மை,
6.கொடுமை,
7.தீய குணம்,
8.மாயை,
9.துக்கம்,
10.இன்பத்தில் நாட்டம்,
11.பொறாமை,
12.பிறர் குறித்துத் தவறாகப் பேசுதல்ஆகியவை மனிதர்களின் பொதுவான தவறுகளாகும்.
இந்தப் பனிரெண்டும் மனிதர்களால் எப்போதும் விலக்கத்தக்கவையே.
ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரா}, இவற்றில் ஏதாவது ஒன்று கூடத் தனியாகவே ஒரு மனிதனை அழிவுக்கு உள்ளாக்கத்தக்கதுதான்.
உண்மையில், மானை கொல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கும் வேடுவனைப் போல,
இவற்றில் ஒவ்வொன்றும், மனிதர்களைப் பொறுத்தவரை, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
(பன்னிரண்டு வடமொழி பெயர்கள் குரோதம், காமம், லோபம், மோஹம், விதிதஸை, அக்ருபை, அஸூயை, மானம், சோகம், ஸபருஹை, ராஷை, ஜுகுபஸை)
1.தனது சொந்த மேன்மையை வலியுறுத்தும் முனைப்பு,
2.பிறர் மனைவியிடம் இன்பம் கொள்ள நினைக்கும் ஆசை,
3.அதீத செருக்கால் பிறரை அவமதிப்பது,
4.சீற்றம் {கோபம்} நிறைந்திருத்தல்,
5.நிலையின்மை,
6.தன்னால் பேணிக் காக்கப்பட வேண்டியவர்களைப் பேண மறுத்தல்
ஆகிய தீய குணம் கொண்ட இந்த ஆறு செயல்களும் இவ்வுலகிலும் மறுஉலகிலும் நேரக்கூடிய ஆபத்துகளையெல்லாம் மீறி {பெரும் ஆபத்துகள் வரும் என்று தெரிந்தும் அதற்கு அஞ்சாமல்} பாவிகளால் எப்போதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
1.காமத்தைத் தணித்துக் கொள்வதே வாழ்வின் இலக்கு என்று கருதுபவன்,
2.ஆதீத செருக்குடையவன்,
3.கொடுத்ததற்காக வருந்துபவன்,
4.எப்போதுமே பணத்தைச் செலவு செய்யாதவன் {கஞ்சன்},
5.வெறுக்கத்தக்க வரிகளை {tax} வற்புறுத்துவதன் மூலம் தனது குடிமக்களைத் துன்புறுத்துபவன்,
6.பிறரை அவமதிப்பதில் இன்பம் காண்பவன்,
7.தன் சொந்த மனைவியரை வெறுப்பவன் ஆகிய இந்த ஏழு பேரும் தீயவர்கள் என்று அழைக்கபடும் பிறராவர்.
-
பிராமணத்தன்மை
-
1.நெறிசார்ந்திருக்கும் தன்மை {அறம் கடைப்பிடித்தல்},
2.உண்மை (தாக்காமல் பேசப்படும் உண்மை நிறைந்த பேச்சு),
3.சுயக்கட்டுப்பாடு
4. தவம்,
5.பிறரின் மகிழ்ச்சியில் இன்புறுவது,
6.அடக்கம்,
7.பொறுமை,
8.பிறரிடம் அன்பு,
9.வேள்விகள்,
10.பரிசுகள்,
11.விடாமுயற்சி,
12.சாத்திர அறிவு
ஆகிய பனிரெண்டும் அந்தணர்களின் நடைமுறைகள் ஆகின்றன.
இந்தப் பனிரெண்டையும் அடைவதில் வெற்றி அடைபவன், இந்த முழுப் பூமியையும் ஆளும் திறன் பெற்றவன் ஆவான்.
இவற்றில் மூன்றையோ, இரண்டையோ, ஏன் ஒன்றையோ கூடப் பெற்றிருப்பவனை தெய்வீகச் செழிப்புடையவன் {பாக்கியம் பெற்றவன்} என்று கருத வேண்டும்.
சுயக்கட்டுப்பாடு, துறவு, ஆத்மஞானம் ஆகிய இவற்றில் தான் முக்தி இருக்கிறது.
உண்மை {சத்தியம்} ஆதிக்கம் செலுத்தும் காரணிகள், இந்தப் பண்புகளிலேயே இருக்கின்றன’, என்று அறிவுள்ள அந்தணர்கள் சொல்கின்றனர்.
சுயக்கட்டுப்பாடு
பதினெட்டு நல்லொழுக்கங்களைக் கொண்டது சுயக்கட்டுப்பாடு.
1.அத்துமீறல்கள், விதிக்கப்பட்ட செயல்களைக் கடைப்பிடிக்காமல் தவிர்ப்பது,
2.பொய்மை, 3.கெடுநோக்கு, 4.காமம், 5.செல்வம்,(புலன்) இன்பத்தில் விருப்பம், 6.கோபம், 7.துக்கம், 8.தாகம்(ஏக்கம்), 9.பேராசை, 10.ஏமாற்றுத்தனம், 11.பிறர் துயரில் மகிழ்வது, 12.பொறாமை, 13.பிறரைக் காயப்படுத்தல், 14.வருத்தம், 15.பக்திச் செயல்களை வெறுத்தல், 16.கடமை மறத்தல், 17.பிறர் மீது பழிகூறுதல், 18.தற்பெருமை ஆகிய இந்த பதினெட்டு தீமைகளில் இருந்து விடுபட்டவன் தற்கட்டுப்பாடு {சுயக்கட்டுப்பாடு} உடையவன் என்று நெறிசார்ந்தவர்களால் சொல்லப்படுகிறான்.
வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தப் பதினெட்டுத் தவறுகள் மதம் என்றோ செருக்கு என்றோ அழைக்கப்படும் ஒன்றில் இருக்கின்றன.
-
சமஸ்கிருதத்தில் மதம் என்ற பெயரில் இரண்டு வார்த்தைகள் உள்ளன.தமிழில் ஒரு வார்த்தை மட்டுமே உள்ளது.
1.மதம் என்னும் வார்த்தையில் உள்ள ”த” வை மென்மையானக உச்சரிக்கும்போது “மதம்“ என்பது நம்பிக்கை என்ற அர்த்தத்தை கொடுக்கும். இந்துமதம் என்றால் இந்துவின் நம்பிக்கை அல்லது இந்துவின் கொள்கை என்று அர்த்தம்.
2.மதம் என்ற வார்த்தையில் உள்ள “த“ வை உச்சகுரலில் உச்சரிக்கும்போது “மதம்“ என்பது திமிர், அடக்காமை என்ற அரத்தத்தை கொடுக்கும். யானைக்கு மதம் பிடித்திருக்கிறது என்றால் யானை அடங்க மறுக்கிறது என்று அர்த்தம்.
-
துறவு
-
துறவு ஆறு வகைகளைக் கொண்டது. அவற்றுக்கு நேர் எதிரான ஆறும் மதம்(திமிர்) என்று அழைக்கப்படும் தவறுகளாகும்.
-
ஆறுவகையான துறவுகள் அனைத்துமே வரவேற்கத்தக்கவையாக இருக்கின்றன.
அதில் மூன்றாவது வகை நடைமுறைக்குக் கடினமானதாகும், ஆனால் அதுவே துயரங்கள் அனைத்தையும் கடந்து செல்ல உறுதுணையாக இருக்கும்.
உண்மையில், அந்த வகையான துறவு நடைமுறையில் சாதிக்கப்பட்டால், அவன் உலகத்தில் உள்ள முரண்பட்ட இரட்டைகள்(இன்பம்,துன்பம் போன்ற) அனைத்தையும் கடந்துவிடுவான்.
ஆறுவகைத் துறவுகள் அனைத்தும் வரவேற்கத்தக்கவையே.
அவற்றில்
1.செழிப்புமிக்கச் சந்தர்ப்பங்களில் இன்பம் அனுபவிக்காமை.
-
செல்வம் நிறைந்திருக்கிறது என்பதற்காக ஆடம்பரமாக செலவுசெய்து,அந்த இன்பத்தில் திழைத்திருக்காமல், குறைவான பொருட்களைக்கொண்டு வாழுதல் ஒருவகை துறவு.அதற்காக கஞ்சனாக வாழ்வது என்று அர்த்தமலல.தனது தேவைகளை சுருக்கிக்கொண்டு வாழ்வது.
2.வேள்விகள், துதிகள், பக்திச் செயல்கள் ஆகியவற்றைக் கைவிடல்.
-
இந்த மூன்றும் உயர்ந்த செயல்கள்தான்.இல்லறத்தார்களுக்கு மிகவும் தேவையானவை.ஞானம் அடைவதற்கு முன்புவரை இவைகள் தேவைப்படுகின்றன.
உயர்ஞானம் மற்றும் உயர்பக்தி இவற்றில் ஆழந்து செல்ல விரும்புபவர்கள் வெளிச் செயல்களை விட்டுவிட்டு.ஆழந்த தியானத்தில் ஈடுபட வேண்டும்.
3.மூன்றாவதாக அழைக்கப்படுவது யாதென்றால், ஆசையைத் துறத்தல் அல்லது உலகத்தில் இருந்து விடுபடுதல்.
உண்மையில், இன்பம் தரும் அனைத்துப் பொருட்களையும் (அவற்றை அனுபவியாமல்) கைவிடுதல்.
அவற்றை நிறைவாக அனுபவித்துவிட்டு கைவிடுதல் அல்ல.
அவற்றை அனுபவிக்கும் திறனற்று கைவிடுதலும் அல்ல
-
இன்பம் தரும் பொருட்கள் அனைத்தையும் அனுபவித்து முடித்த பிறகு அவைகளை விட்டுவிடலாம் என்பது அல்ல.
எதையுமே அனுபவிக்காமல் அனைத்தையும் விட்டுவிடுதல்.
உண்மையில் இது மிகவும் கடினமானது.
இதை அடையவேண்டுமானால் உலகத்திலிருந்து விடுபட்டு செல்ல வேண்டும்.
சிலரிடம் அனுபவிக்க எதுவுமே இருக்காது. பிச்சைக்காரர்களாக இருப்பார்கள்.அவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு செல்வதாக கூறுவார்கள். அது துறவு அல்ல.
அனுபவிப்பதற்கு நிறைய இருந்தும்.அதை அனுபவிக்காமல் விட்டுவிட்டு செல்வதுதான் துறவு.
சிலரிடம் அனுபவிப்தற்கு நிறைய இருக்கும்,ஆனால் அவர்களால் அனுபவிக்க முடியாத அளவுக்கு நோய்கள் இருக்கும். எனவே அனுபவிக்கும் திறன் இல்லாமல் அனைத்தையும் விட்டுவிடுவது துறவு அல்ல.
4.நான்காம் வகைத் துறவில், ஒருவனுடைய செயற்பாடுகள் தோல்வியடையும்போது, அவனது அனைத்து அறங்கள் மற்றும் அனைத்து வகைச் செல்வம் ஆகியவற்றை எதிர்த்துத் தாக்குப்பிடிக்க இயலாமலோ அவன் துக்கப்படவோ, வேதனை கொள்ளவோ கூடாது. அல்லது ஏற்பில்லாத எது நடைபெற்றாலும், ஒருவன் வலியை உணரக்கூடாது.
-
எது நடந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதும் துறவுதான்.இது இல்லறத்தார்களுக்கான துறவு.
உலகத்தை துறந்து செல்ல வேண்டியதில்லை. உலகத்தில் இருந்துகொண்டே அன்றாட கடமைகளை பற்றில்லாமல் செய்துகொண்டே வாழவேண்டும்.அதனால் வரும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
5.ஐந்தாவது வகைத் துறவானது தனக்கு மிகவும் அன்பான தனது மகன்கள், மனைவியர் மற்றும் இன்னும் பிறரையும் கேட்காமல் {யாசிக்காமல்} இருப்பதேயாகும்.
-
வயதான காலத்தில் மனைவியை சார்ந்து வாழாமல்,மகன்களை சார்ந்து வாழாமல்,கிடைப்பதைக்கொண்டு வாழ்தல்.
எல்லோரும் இருப்பார்கள்.ஆனால் தாங்கள் யாரையும் சார்ந்து வாழக்கூடாது.
6.ஆறாவது வகைத் துறவானது தன்னிடம் யாசிக்கும் தகுதிவாய்ந்த மனிதனுக்குத் தானமளிப்பதே ஆகும்.
அந்தத் தானம் எப்போதும் தகுதியை உண்டாக்கும்.
மேலும், இவற்றால் ஒருவன் தன்னறிவை {ஆத்மஞானம்} அடைகிறான்.
-
தகுதிவாய்ந்தவனுக்கு தானம் கொடுப்பதும் துறவுதான்.இப்படி தன்னிடமுள்ள அனைத்தையும் தகுதியானவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும்.
எதற்காக தகுதியானவர்களுக்கு கொடுக்க வேண்டும்?
தகுதி இல்லாதவர்களுக்கு கொடுத்தால் அந்த பணத்தை அவர்கள் தவறான வழியில் செலவிடுவார்கள்.
எனவே தானத்தை கொடுத்தவருக்கும் பாவம் வருகிறது.
-
ஆத்மஞானம் என்பது, எட்டுக் குணங்களை உடையதாகும்.
அவை,
1.சத்தியம்,
2.தியானம்,
3.பொருள்கள் மற்றும் கருத்தின் வேறுபாடு அறிதல்,
4.ஊகிக்கும் திறன்,
5.உலகத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளல்,
6.பிறர் உடைமைகளை அபகரிக்காமை,
7.பிரம்மச்சரிய நோன்புகளின் நடைமுறைகள்,
8.(பரிசுகள்) ஏற்காமை ஆகியவையே.
ஓ! மன்னா {திருதராஷ்டிரா},
உனது ஆன்மா உண்மையில் {சத்தியத்தில்} அர்ப்பணிப்புடன் இருக்கட்டும்;
அனைத்து உலகங்களும் உண்மையிலேயே நிறுவப்பட்டுள்ளன; உண்மையில், சுயக்கட்டுப்பாடு, துறவு மற்றும் தன்னறிவு ஆகியவை உண்மையையே தனது முதன்மையான பண்பாகக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
(இந்த) தவறுகளைத் தவிர்க்கும் ஒருவன், தவம் பயில வேண்டும்.
உண்மை {சத்தியம்} மட்டுமே நீதிமிக்கவர்களின் நோன்பாக இருக்க வேண்டும் என்று விதி சமைப்போன் {பிரம்மன்} விதித்திருக்கிறான்.
இந்தத் தவறுகளில் இருந்து விடுபட்டு, அந்த அறங்களைக் கைக்கொண்ட தவமே, பெருஞ்செழிப்பின் ஊற்றுக்கண்ணாகும்.
பிறப்பு, இறப்பு மற்றும் முதுமையில் இருந்து ஒருவனை விடுவிக்கும் திறன் பெற்றதும், பாவத்தை அழிப்பதும், புனிதமான கருத்துமான இதை நான் உனக்குச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்” என்றார் {சனத்சுஜாதர்}.
-
-
மகாபாரத உபதேங்கள்-5
-
சனத்சுஜாதரின் உபதேங்கள்
-
பிரம்மச்சரியம் பயில்வதால் மட்டுமே பிரம்மத்தை அடைய முடியும்” என்றார் சனத்சுஜாதர்.
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்},
“பிரம்மச்சரியத்தால் மட்டுமே கண்டடையப்படும் பிரம்ம ஞானம் மனதிலேயே வசிக்கிறது என்றும்;
மனதிலேயே வசிக்கும் அது {பிரம்ம அறிவு} வெளிப்படுவதற்கு எந்த முயற்சியும் தேவையில்லை என்றும், பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்துத் தேடும்போது அந்த பிரம்ம அறிவு தானே வெளிப்படும் என்றும் சொல்கிறீர்.
பிறகு எப்படி இறவா {அழியா} நிலை, பிரம்மத்தை அடைவதோடு தொடர்புப்படுத்தப்படுகிறது?”
என்று கேட்டான்.
அதற்குச் சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்},
“மனதில் உள்ளார்ந்து இருக்கும் பிரம்ம ஞானம், அதனுள்ளேயே வசித்தாலும் வெளிப்படுத்த இயலாததாக இருக்கிறது. தூய அறிவு மற்றும் பிரம்மச்சரியம் ஆகியவற்றின் துணையுடனேயே அந்த அறிவு வெளிப்படுகிறது.
உண்மையில், அந்த அறிவை அடைந்த யோகியர் உலகத்தைக் கைவிடுகின்றனர்.
இதுவே, எப்போதும் தலைமையான குருக்கள் மத்தியில் காணப்படுகிறது.
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்},
“பிரம்ம அறிவை சிரமமில்லாமல் அடையச்செய்யும் பிரம்மச்சரியத்தின் இயல்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? ஓ! பிராமணரே, இதை எனக்குச் சொல்லும்” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்},
“தங்கள் குருவின் வசிப்பிடங்களில் வசித்து, நல்ல விருப்பங்களையும், நட்பையும் அடைந்து, பிரம்மச்சரிய துறவை பயில்பவர்கள், தங்கள் உடல்களைத் துறந்து பரமாத்மாவுடன் இணைந்து, இவ்வுலகில் பிரம்மத்தின் உருவமாகிறார்கள்.(பிரம்மத்தில் ஒன்றுகலக்கிறார்கள்)
இவ்வுலகில் பிரம்ம நிலையை அடைய விரும்பி, தங்கள் ஆசைகளை அடக்கி, நெறிசார்ந்து இருப்போர், அடர்த்தியான முஞ்சைப்புல்லில் துருத்திக் கொண்டிருக்கும் கத்தியைப் போல, உடலில் இருந்து ஆத்மாவை பிரித்தெடுப்பதில் வெல்கிறார்கள்.
ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, தந்தை மற்றும் தாயால் உடல் படைக்கப்படுகிறது; எனினும், குருவின் அறிவுறுத்தல்களின் காரணமாக அடையப்படும் புதிய பிறவி, புனிதமானதும், பலவீனமற்றதும், அழிவற்றதுமாகும்.
பனிரெண்டு அறங்களைக் கொண்டது பிரம்மச்சரியம் என்று கற்றோர் சொல்கின்றனர்.
யோகப் பயிற்சிகள் அதன் அங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
யோக தியானத்தில் விடாமுயற்சி வளம் என்று அழைக்கப்படுகிறது.
குருவினுடைய உதவி மற்றும் வேதங்களின் பொருளை புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றின் விளைவால் ஒருவன் {பிரம்மச்சரியத்தில்} வெற்றி மகுடம் சூட்டப்படுகிறான்.
இந்த வகைப் பிரம்மச்சரியத்தின் மூலமே தேவர்கள் தங்கள் தெய்வீகத்தன்மையையும், உயர்ந்த அருள் மற்றும் பெரும் ஞானம் கொண்ட தவசிகள் பிரம்ம லோகத்தையும் அடைந்தார்கள்.
இதன் காரணமாகவே கந்தர்வர்களும், அப்சரஸ்களுத் தங்கள் மேனி அழகை அடைந்தார்கள்.
பிரம்மச்சரியத்தாலேயே சூரியன் ஒளி வீசுகிறான்
பிரம்மச்சரியத்தை நிறைவு செய்பவர்கள், தாங்கள் விரும்புபவற்றை அடையும் திறனைப் பெறுவதன் விளைவாகப் பெரும் மகிழ்ச்சியை அடைகிறார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, தவத்துறவுப் பயிற்சிகளுக்குத் தன்னை அர்ப்பணித்து, முழுமையாகப் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து, அதன் மூலம் தனது உடலை தூய்மைப்படுத்திக் கொள்பவன் உண்மையில் ஞானியாகிறான். எனெனில், அவன் குழந்தையைப் போல ஆவதால், இறுதியில் அவன் மரணத்தையே வெல்கிறான்.
ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா},
முக்தியை {விடுதலையை} அடைய வேறு ஒரு பாதை இல்லை” என்றார் {சனத்சுஜாதர்}
-
மகாபாரத உபதேங்கள்-6🏮
-
🏮சனத்சுஜாதரின் உபதேங்கள்🏮
-
🏮யார் பிராமணன் ?
🌸பிரம்மத்தை அடைய முயல்பவன் பிராமணன்.
🌸பிராமணநிலையை அடைய விரும்புபவன் குருவிடமிருந்து உபதேசத்தை பெறவேண்டும்.
அப்போது அவனுக்கு இன்னொரு பிறவி கிடைக்கிறது. எனவே இருபிறப்பாளன் என்று அழைக்கப்படுகிறான்.
அதன்பிறகு வேதம்கூறும் இல்லறக்கடமைகளை செய்துகொண்டே பிரம்மத்தை அடைய முயல்கிறான்.
பிராமணன் என்பது பிறப்பை அடிப்படையாக கொண்டதல்ல என்பதை வேதம் தெளிவுபடுத்துகிறது.
-
🏮திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான்,
🌿“இவ்வுலகில், சிலர் அறம் பயில்கிறார்கள்(இல்லறக்கடமைகளை செய்கிறார்கள்), சிலர் செயல் அல்லது கர்மத்தைத் துறக்கிறார்கள் (சந்நியாசம் மேற்கொள்கிறார்கள்).
நான் கேட்கிறேன். தீமையை அழிக்கும் திறன் அறத்திற்கு இருக்கிறதா?
அல்லது தீமையால் அறம் அழிவுக்குள்ளாகிறதா?”
🏮அதற்குச் சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்},
🌿அறம் மற்றும் செயலின்மை இரண்டும் விடுதலையை(முக்தி) அடைவதற்கு உறுதியான வழிமுறைகளே.
எனினும், அறிவுள்ள ஒருவன் {ஞானி},
அறிவால் (சந்நியாசத்தால்) வெற்றியை அடைகிறான்.
🌿மறுபுறம், ஒரு பொருள்முதல்வாதி(இல்லறத்தான்) செயலால் தகுதியை அடைந்து,
அதன் விளைவால் விடுதலையை அடைகிறான்.தகுதியை அடையாவிட்டார் அவன் பாவத்துக்கு ஆட்படுகிறான்.
🌿நிலையற்றவையான அறம் மற்றும் மறம் {தீமை} ஆகிய இரண்டின் பலன்களையும் அடையும் செயல்பாடுள்ள ஒரு மனிதன் {செயலாற்றுபவன்},
தனது முந்தைய அறங்கள் மற்றும் மறங்களின் விளைவால், மீண்டும் செயலுக்கு அடிமையாகிறான்.(மறுபடியும் பிறக்கிறான்)
எனினும், செயல்புரியும் ஒரு மனிதன் அறிவுடையவனாக இருந்தால், அவன் தனது பாவங்களை அறச்செயல்கள் மூலம் அழிக்கிறான். எனவே, அறம் வலிமையானதே. எனவே, செயல்பாடுள்ள மனிதனும் வெற்றியடைகிறான்” என்றார் {சனத்சுஜாதர்}.
🏮திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்},
🌿“அறம் பயிலும் இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்}, தங்கள் சொந்த அறச் செயல்களின் பலன்களால் அடையத்தக்க அழிவற்ற உலகங்களை, அதனதன் படிநிலைகளின்படி எனக்குச் சொல்லும். அதே போன்ற பிற உலகங்களையும் எனக்குச் சொல்லும்.
🏮சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்},
🌿“பலமிக்கவர்கள் தங்கள் பலத்தில் பெருமை கொள்வதைப் போல, தங்கள் யோகப் பயிற்சிகளில் பெருமை கொள்ளும் இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்}, இங்கிருந்து விடைபெற்றுப் பிரம்மலோகத்தில் ஒளிர்கிறார்கள். 🌸(பிரம்மலோகத்தில் ஒளி உடலில் நீண்ட காலம் வாழ்கிறார்கள்.ஆனால் முக்திபெறவில்லை)
-
🌿வேள்விகளையும், வேதச் சடங்குகளையும் பெருமையுடன் செய்யும் இருபிறப்பாளர்கள், அதன் பலனாக அறிவை அடைந்து, அந்தச் செயலின் விளைவால் இந்த உலகத்தில் இருந்து விடுதலையடைந்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருக்கும் உலகத்திற்குச் செல்கிறார்கள்.
🌸(பிரம்மலோகத்தைவிட சற்று தாழ்ந்த உலகத்தில் பல தெய்வங்கள் வசிக்கின்றன.அங்கே சென்று நீண்ட காலம் வாழ்கிறார்கள்.ஆனால் முக்தி அடையவதில்லை)
-
🌿மேலும் வேதமறிந்தவர்களில் சிலர், வேள்விளையும் சடங்குகளையும் செய்வது கட்டாயம் அவற்றைச் செய்யாமல் விடுவது பாவம் என்ற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்குச் சில மரியாதைகள் அளிக்கப்பட வேண்டுமென்றாலும் இவர்கள் மிக உயர்வாகக் கருதப்பட வேண்டியவர்கள் அல்ல.
🌸(இவர்கள் மேல் உலகம் செல்வதில்லை. மீண்டும் மனிதனாகப்பிறக்கிறார்கள்)
🌿மழைக்காலத்தில் ஓர் இடத்தில் உள்ள புல்லையும் நாணலையும் போல, ஓர் அந்தணனுக்குத் தேவையான உணவும், நீரும் எங்கு அதிகமாக இருக்கிறதோ, அங்கே ஒரு யோகி தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். எந்த வகையிலும் அவன் பசி மற்றும் தாகத்தால் தனது சுயத்தை ஒடுக்காமல் இருக்க வேண்டும்.
(பட்டினியுடன் வாழக்கூடாது)
-
இயற்கையாக உணவு எங்கே கிடைக்கிறதோ அந்த இடத்தை பிராமணன் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.உணவுக்காக அதிக நேரத்தை செலவிடக்கூடாது.குறைவாக உணவு உட்கொண்டு ஆன்மீக பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.
-
🌿ஒருவனின் மேன்மையைத் தெளிவு படுத்தும் இடத்தில், மற்றவனின் வெறுப்பைச் சம்பாதிக்கும் சிரமமும், ஆபத்தும் ஒருவனுக்கு இருந்தால், தனது மேன்மையை அறிவிக்காதவனே அறிவிப்பனை விடச் சிறந்தவனாவான்.
-
🌸(தனது அறிவாற்றல்,தவசக்தியினால் வரும் ஆற்றல்களை வெளிப்படுத்தினால் சிலர் புகழ்வார்கள்,சிலர் இகழ்வார்கள்.இதனால் பிரம்மத்தை நோக்கி செல்வதில் தடங்கல் ஏற்படும்)
🌿இரத்த உறவுகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு, தான் செய்யும் அறப் பயிற்சிகளை அவர்கள் {உறவுகள் கூட} எப்போதும் அறியாதிருக்க விரும்புபவனையே அந்தணன் என்று ஞானியர் அறிகிறார்கள்.
🌿நிலையற்ற, குணங்களற்ற, மாற்றமற்ற, எந்த வகையான இருமையுமற்ற தனியனான பரமாத்மாவை அறிவதை விட ஓர் அந்தணன் வேறு எதை அறிய வேண்டும்? (பிரம்மத்தை அறிவதே அவனது குறிக்கோள்)
🌿இத்தகு பயிற்சிகளின் விளைவாக ஒரு வீரன் பரமாத்மாவை அறிந்து கொண்டு, தன்னைத் {அந்தப் பரமாத்மாவைத்} தனது சொந்த ஆன்மாவிலேயே காணலாம்.
🌸(ஒரு பிராமணன் வீரனாகவும் இருக்க வேண்டும்.வீரம்மிக்கவர்களால்தான் பிரம்மத்தை அடைய முடியும்)
🌿ஓர் அந்தணன் முயற்சி அற்றவனாக இருக்க வேண்டும், பரிசுகளை ஏற்கக்கூடாது, நீதிமான்களின் மதிப்பை வெல்ல வேண்டும், அமைதியாக இருக்க வேண்டும், வேதங்களை அறிந்திருந்தாலும் அறியாதவன் போல இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவனால் அறிவை {ஞானத்தை} அடைந்து பிரம்மத்தை அறிய முடியும்.
🌿மண்ணுலக {மனித} செல்வத்தில் ஏழையாகவும், விண்ணுலக {தெய்வீக} செல்வம் மற்றும் வேள்விகளில் செல்வந்தனாகவும் இருப்பவர்கள் வெல்லப்பட முடியாதவர்களாகவும், அச்சமற்றவர்களாகவும் ஆகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பிரம்மத்தின் உருவம் {எல்லையற்றவன்} என்றே அவர்கள் கருதப்பட வேண்டும்.
🌿தங்கள் கண் இமைகளைத் திறந்து மூடுவதைப் போலவே, மக்கள் தங்கள் இயல்புக்கு ஏற்றவாறு செயல்படுகிறார்கள்; கற்றோர் மட்டுமே பிறருக்கு மரியாதை செலுத்துகிறார்கள். மதிப்பைப் {மரியாதையைப்} பெற்ற ஒருவன் இப்படியே {அதை} நினைத்துக் கொள்ள வேண்டும்.
🌸(கற்றவர் மட்டுமே மரியாதை செய்வார்கள் என்பதால், எல்லோரிடமும் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது)
🌿பாவம் செய்பவர்களும், ஏமாற்றுத்தனமுள்ளவர்களுமாக இருக்கும் இவ்வுலகத்தின் மூடர்கள், மரியாதைக்குத் தகுந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதில்லை; மறுபுறம், அத்தகு மனிதர்களுக்கு அவர்கள் அவமரியாதையே செய்கிறார்கள்.
🌿உலகின் மதிப்பும் தவமும் ஒன்றாகச் சேர்ந்திருக்க முடியாது.
மரியாதைக்குரியவர்களுக்கே இவ்வுலகம் என்றும், அதே வேளையில் தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவர்களுக்குப் பிற உலகம் என்றும் அறிவாயாக.
🌿ஞானமில்லாதவனால் தெய்வீகச் செழிப்பை அடையவே முடியாது. இந்த வகைச் செழிப்பை அடைய, காக்க கடினமான பல்வேறு வகையான வாயில்கள் இருக்கின்றன என்று நீதிமான்கள் சொல்கின்றனர்.
🌿அந்த வாயில்கள், உண்மை, நேர்மை, பணிவு, தற்கட்டுப்பாடு, மனத்தூய்மை, நடத்தை, (வேத) அறிவு ஆகியனவாகும். இந்த ஆறும் மாயை அறியாமை ஆகியவற்றை அழிக்கவல்லவையாகும்” என்றார் {சனத்சுஜாதர்}.
உபநிடதம்-வகுப்பு-1
-
நாள்-25-10-2019
-
உபநிடதம் என்றால் என்ன?
-
உபநிடதம் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு வேதம் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும்.
-
வேதம் என்ற வடமொழி சொல்லிற்கு அறிவு என்று பொருள்.
அறிவு என்பது நேருக்கு நேராக அறிவது.உண்மையை நேராக உணர்வது
-
முற்காலத்தில் ரிஷிகள் இறைவனை நேருக்குநேராக கண்டார்கள்.
இறைவனுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை கண்டார்கள்.
இந்த உலகத்திற்கும் இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பைப்பற்றிய அறிவை பெற்றார்கள்.
-
அந்த அறிவை தங்கள் சீடர்களுக்கு கூறினார்கள்.
இந்த அறிவு என்பது எப்போதும் இருக்கக்கூடியது.
ரிஷிகள் அதை உருவாக்கவில்லை.
ஏற்கனவே இருப்பதை தங்கள் சீடர்களுக்கு கூறினார்கள்.
சீடர்கள் அதை குறித்துவைத்துக்கொண்டார்கள்.
-
இவ்வாறு பல்வேறு ரிஷிகளால் கூறப்பட்ட உண்மைகள் வேதங்கள் என்று பெயர்.
இதை பழைய காலத்தில் நான்காக தொகுத்தார்கள்..
அவை ரிக்,யஜுர்,சாம,அதர்வண வேதம்.
-
இந்த நான்கும் ஒரே கால கட்டத்தில் தொகுக்கப்பட்டவை அல்ல.
ரிக் வேத காலம் என்பது சுமார் 10,000 முதல் 20,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதன் பின்னர் தொகுக்கப்பட்டது யஜுர்வேதம், அதன் பின்னர் தொகுக்கப்பட்டது சாமவேதம்.
-
ஸ்ரீகிருஷ்ணரது காலத்தில் மூன்று வேதங்கள்தான் இருந்தன.
அதர்வண வேதம் அவரது காலத்திற்கு பின் தொகுக்கப்பட்டது.
-
அதர்வண காலத்திற்கு பிறகு தோன்றிய ரிஷிகளின் வார்த்தைகளை எதிர்கால சந்ததியினர் தொகுத்து ஐந்தாவது வேதத்தை உருவாக்குவார்கள்.வேதத்தை முழுவதுமாக யாராலும் தெரிந்துகொள்ள முடியாது.அதன் ஒருபகுதி வெளிப்பட்டுள்ளது பல பகுதிகள் இன்னும்வெளிப்படவில்லை
-
வேதத்தின் உதவியால்தான் இறைவன் உலகத்தை படைத்தார்.இந்த உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே வேதம் இருக்கிறது.வேதம் என்பது புத்தகம் அல்ல.
-
இந்த வேதம் இரண்டு பகுதிகளைக்கொண்டது ஒன்று பரஞானம்,இரண்டாவது அபரஞானம்.
பரஞானம் என்றால் இறைவனைப்பற்றியும்,அவரை அடைவதற்குரிய வழிகளைப்பற்றியும் கூறுவது.
அபரஞானம் என்பது உலகியல் வாழ்க்கைக்கு தேவயானவற்றை கற்றுக்கொடுப்பது
-
இறைவனை உணரவேண்டும் என்ற எண்ணம் உள்ள சீடர்களுக்கு குரு பரஞானத்தை உபதேசிப்பார்.இதற்கு உபநிடதம் என்று பெயர்.உப-நிடதம் என்றால் குருவின் அருகில் இருத்தல் எனறு பொருள்.
-
இறைஞானத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால் குருவின் அறிவுரைகள் அவசியம்.
-
ஏன்? புத்தகங்களைப் படித்தால் ஞானம் வராதா?
-
குரு தனது சீடர்களுக்கு,தான் சேமித்துவைத்துள்ள தவ-சக்தியை கொடுக்கிறார்.
அதன் மூலம் சீடர்களின் பாவங்கள் குறைகிறது.
உயர்ந்த உண்மைகளை புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் ஏற்படுகிறது.
-
குரு எந்த அளவுக்கு தவத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ,அந்த அளவுக்கு விரைவாக சீடனின் அஞ்ஞானம் நீங்குகிறது
-
சில நேரங்களில் குரு எதுவும் பேசாமலே தனது சக்தியை கொடுக்க முடியும். சீடன் எதவும் கேட்காமலே ஞானம் பெற முடியும்.
-
புத்தகத்தை படிப்பதால் உயர்ந்த உண்மைகளை அனுபவத்தில் புரிந்துகொள்ள முடியாததற்கு காரணம் இதுதான்
-
உபநிடதம்-வகுப்பு-2
(நாள்26-10-2019)
-
ரிஷி என்றால் யார்?
-
ஞானம் பெற்றவர்கள்.உண்மையை நேருக்கு நேராக சந்தித்தவர்கள்.தான் யார் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் ரிஷி.
-
ரிஷிக்கு இன்னொரு பெயர் உண்டு பிராமணன்.தற்காலத்தில் வாழும் பிராமணர்கள் அல்ல.
பிராமணன் என்பது காரணப்பெயர். பிரம்மத்தை உணர்ந்தவன் பிராமணன்.அது ஒரு பட்டம்.
-
பிராமணனது ஆணைக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள்.அரசர்கள்,தேவர்கள் உட்பட அனைவரும் பிராமணனுக்கு கீழ்தான்.இந்த உலகை ஆளும் சக்திகளை அவன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்.
-
பிரம்மத்தை உணராதவர்களை பிராமணன் என்று அழைக்கக்கூடாது. பிரம்மத்தை உணராதவர்கள் தங்களை பிராமணன் என்று அழைத்துக்கொள்ளக்கூடாது.அவ்வாறு தங்களை பிராமணன் என்று கூறிக்கொண்டு,சாஸ்திரங்களில் கூறியபடி பிராமணனுக்குரிய சலுகைகளை எதிர்பார்ப்பது தவறு.
-
இராமாயணம் எழுதிய வால்மீகி,மகாபாரதம் எழுதிய வியாசர் போன்றவர்கள் பிறப்பால் தாழ்ந்த குலத்தில் பிறந்திருந்தும்,தவத்தின் காரணமாக பிராமணர்களானார்கள்
-
இவ்வாறு முற்காலத்தில் பல ரிஷிகள் வாழ்ந்தார்கள்.அவர்களுக்கு இந்த உலகத்தின்மீதோ, வேறு உலகத்தில் உள்ள எதன்மீதோ ஆசை இருக்கவில்லை. தனக்கு கிடைத்த ஞானத்தை பிறருக்கு கொடுப்பது ஒன்றே தனது கடமை என்று வாழ்ந்தார்கள்
-
அப்படிப்பட்ட ரிஷிகளின் வார்த்தைகள்தான் உபநிடதங்கள்.
-
முற்காலத்தில் உபநிடதங்கள் எழுத்து வடிவில் இல்லை. குரு தன் சீடனுக்கு உபதேசிப்பார், சீடன் ஞானம் பெற்றபிறகு தனது சீடர்களுக்கு அதை உபதேசிப்பார்.இவ்வாறு அது குரு-சீடன் பரம்பரையாக வந்தது.எனவே இவைகளை சாதாரண மக்கள் அறிந்துகொள்ள வழியில்லை.ஞானம் பெறுவதற்காக குருவை நாடி செல்பவர்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள்.
-
குரு தன் சீடனுக்கு காதில் கூறியதால் அதற்கு ஸ்ருதி என்று பெயர். வேதத்திற்கு இன்னொரு பெயர் ஸ்ருதி.
-
ஸ்மிருதி என்று இன்னொன்று உண்டு. மனுஸ்மிருதி போன்றவை...இவைகள் அந்த காலத்தில் மக்களை வழிநடத்திய சட்டங்கள்.இந்த ஸ்மிருதிகள் காலத்திற்கு காலம் மாறும். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு ஸ்மிருதி நடைமுறையில் இருக்கும்.
-
ஸ்ருதிக்கும் ஸ்மிருதிக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். ஸ்ருதி என்றால் காலத்தால் மாறாதது.மதத்துடன் தொடர்புள்ளது. ஸ்மிருதி என்றால் காலத்திற்கு காலம்,இடத்திற்கு இடம் மாறக்கூடியது.ஆட்சியாளர்களுடன் தொடர்புள்ளது.மதத்துடன் தொடர்பில்லாதது
-
பழைய காலத்தில் உள்ள ஏதாவது ஸ்மிருதியை குறிப்பிட்டு இந்துமதத்துடன் சம்மந்தப்படுத்தி சிலர் பேசி வருகிறார்கள்.அவர்கள் சிற்றறிவு படைத்தவர்கள்.அவர்கள் கேள்விக்கு மதவாதிகள் பதில் சொல்லத் தேவையில்லை.
-
நமது இந்திய நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு புதிய சட்டங்கள் இயற்றுகிறார்கள்.பழைய சட்டங்களை நீக்குகிறார்கள்.நடைமுறையில் இல்லாத பழைய சட்டங்களைப்பற்றி தற்போது மக்கள் இகழ்வாக பேசுவது போன்றதே,பழைய ஸ்மிருதியைக்குறித்து இப்போது பேசுவதும்
-
வேதம் பரஞானம்,அபரஞானம் என்ற இரண்டைப்பற்றி பேசுகிறது என்பதை பார்த்தோம். பரஞானத்திற்கு உபநிடதம் என்று பெயர்.
-.
உபநிடதங்கள்-வகுப்பு-3
-
நாள்-28-10-2019
-
உபநிடதங்கள் ஞானத்தை போதிக்கின்றன என்பதைப் பார்த்தோம்
-
ஞானத்தை அடைவதற்கு இரண்டு பாதைகள் இருக்கின்றன.
1. எல்லாவற்றையும் விடுவது.2. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வது
-
எல்லாவற்றையும் விடும் வழிக்கு சந்நியாசம் என்று பெயர்.
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதற்கு யோகம் என்று பெயர்
-
சில உபநிடதங்கள் யோக சாஸ்திரம் என்று அழைக்கப்படுகின்றன.
சில உபநிடதங்கள் சந்நியாச சாஸ்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
-
பொதுவாக குருமார்கள் ஏதாவது ஒரு வழியை பின்பற்றி ஞானம் பெற்றிருப்பார்கள்.
எனவே தங்கள் சீடர்களுக்கு அந்த வழியைப்பற்றி போதிப்பார்கள்.
தங்களுக்கு எந்த உபநிடதம் ஏற்றதாக உள்ளதோ அதை போதிப்பார்கள்.
-
உபநிடதங்களில் மிகச்சிறந்ததாக கருதப்படுவது பகவத்கீதை.இது ஒரு யோக சாஸ்திரம்.
-
போர்க்களத்தில் நின்றுகொண்டிருக்கும் அர்ஜுனன் சந்நியாசியாக வேண்டும் என்று கூறுகிறான்.ஸ்ரீகிருஷ்ணர் அவனை கோழை என்கிறார்.
-
பாண்டவர்கள் என்ன சபதம் செய்திருந்தார்கள்?
போரில் வெற்றிபெற்று துரியோதனை,கர்ணனை,துச்சாதனனை கொல்வோம்,நாட்டை கைப்பற்றுவோம்.
இந்த சபதங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை அர்ஜுனனுக்கு உண்டு
-
தன் கடமையை புறம்தள்ளிவிட்டு, சந்நியாச மார்கத்திற்கு ஒருவன் செல்ல முடியாது. யாருக்கு எல்லா கடமைகளும் முடிந்துவிட்டதோ அவர்களே சந்நியாச மார்க்கத்திற்கு தகுதியானவர்கள்.
-
கடமையை செய்துகொண்டே ஞானம் அடைய விரும்புபவர்களுக்கு யோக மார்க்கமே சிறந்தது
-
அதனால் ஸ்ரீகிருஷ்ணர் யோக மார்க்கத்தை அர்ஜுனனனுக்கு உபதேசித்தார்.
-
மகாபாரத காலத்தில்கூட யோக மார்க்கம் பிரபலமாக இல்லை. சந்நியாச மார்க்கமே பிரபலமாக இருந்திருக்கிறது.அதை கிருஷ்ணரே கூறுகிறார்.காலத்தால் யோக மார்க்கம் மறக்கப்பட்டுவிட்டது.எனவே மீண்டும் இன்று உனக்கு இதை உபதேசிக்றேன் என்கிறார்.
-
பொதுவாக தமிழ்நாட்டில் சந்நியாச மார்க்கமே பிரபலமாக இருக்கிறது. குடும்பத்தில் தீராத தொல்லை ஏற்படும்போது அதை அப்படியே விட்டுவிட்டு சந்நியாசத்திற்கு சென்றவர்கள் ஏராளம்.இது கோழைத்தனம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
-
பிரச்சினைகள் ஏற்படும்போது துன்பங்களை அனுபவிப்பதை தவிர வேறு வழி இல்லை.இந்த துன்பங்கள் ஏன் ஏற்படுகின்றன? நாம் முன்பு செய்த தீய செயல்களால். இதை சரி செய்ய வேண்டும்.அல்லது துன்பங்களை அனுபவித்து அந்த வினையை தீர்க்க வேண்டும்.
-
அதைவிட்டுவிட்டு பாதியில் ஓடுவதால் பிரச்சினை தீராது.அப்படி பாதியில் ஓடினால் தன்னாலும் ஞானம் பெற முடியாது. குடும்பத்தில் உள்ள எல்லோரும் மேலும் துன்பத்தில் சிக்கிக்கொள்வார்கள்.
-
ஞானம் பெற வேண்டுமானால் மனம் சமநிலையில் இருக்க வேண்டும். மனதிற்கு திருப்தி ஏற்பட வேண்டும். நான் எனது எல்லா கடமைகளையும் முடித்துவிட்டேன்.இப்போது திருப்தியாக இருக்கிறேன் என்ற மனநிறைவும்.மனஅமைதியும் ஏற்பட வேண்டும். பாதியில் குடும்பத்தைவிட்டு ஓடுபவர்களுக்கு இது கிடைக்காது. காலம் முழுவதும் மனஅமைதியில்லாமல் வாழ்ந்து,மீண்டும் மறுபிறவியை அடைவார்கள்.
-
இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே அவர்களால் ஞானம் பெற முடியும்.இல்லாவிட்டால் முடியாது.
பொதுவாக பாதியில் ஓடுபவர்களை இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை.ஒவ்வொருவரின் நலனில் அக்கரை காட்டும் இறைவன்,இப்படி பொறுப்பை தட்டிக்கழிப்பவரை எப்படி ஏற்றுக்கொள்வார்?
-
சந்நியாச மார்க்கமே சிறந்தது என்று நினைப்பவர்கள்,முதலில் தங்கள் கடமைகள் அனைத்தையும். முடிக்கவேண்டும். பெற்றோர்களுக்கு செய்யும் கடமை,மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை,குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமை,நாட்டிற்கு செய்ய வேண்டி கடமை,இயற்கைக்கு செய்ய வேண்டிய கடமை,குருவுக்கு(ரிஷி யக்ஞம்) செய்ய வேண்டிய கடமை என்று கடமைகள் ஏராளம் உள்ளன.
-
இரண்டு பாதைகளும் முடிவில் ஒரே இடத்தைநோக்கியே செல்கின்றன.
-
நாம் இரண்டு மார்க்கங்களைப்பற்றியும் விவாதிக்க இருக்கிறோம். கடமைகள் முடிந்தவர்களுக்கு சந்நியாசம் ஏற்புடையதாக இருக்கும்.கடமைகள் உள்ளவர்களுக்கு யோக மார்க்கம் ஏற்புடையதாக இருக்கும்.
-
-
உபநிடதங்கள்-வகுப்பு-4
-
நாள்-29-10-2019
-
தற்போது நம்மிடம் 108 உபநிடதங்கள் இருக்கின்றன.இதன் எண்ணிக்கை இவ்வளவுதானா?
-
1.உபநிடதங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை.ஆயிரக்கணக்கான உபநிடதங்கள் அழிந்துவிட்டன.
2.பல உபநிடதங்கள் கணக்கில் இன்னும் சேர்க்கப்படாமல் உள்ளது
-
உபநிடதங்கள் எவ்வாறு அழிந்தது?
-
முற்காலத்தில் ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு கூறிய உயர் உண்மைகள்தான் உபநிடதங்கள் என்று பார்த்தோம்.
பாரததேசம் முழுவதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல ரிஷிகள் தோன்றி மக்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
-
முற்காலத்தில் பாரததேசத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட மொழிக்கு வேதமொழி என்று பெயர்.அந்த மொழிக்கு முன்பு எழுத்துக்கள் இல்லை.
முற்காலத்தில் தமிழ் மொழிக்குகூட எழுத்துக்கள் இல்லை.
அந்த கால தமிழ்மொழியும்,அந்த கால வேதமொழியும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். பெயர் மட்டுமே வேறுபட்டுள்ளது.
நமது ஆதி நூலான தொல்காப்பியமும்,வேத மொழியும் அதிக ஒற்றுமையுடன் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
-
ராமனும் விபீஷணனும் நேருக்கு நேராக பேசிக்கொண்டார்கள்.விபீஷணன் வேறு மொழியிலும் ராமர் வேறு மொழியிலும் பேசியதாக ராமாயணம் கூறவில்லை.எனவே அந்த காலத்தில் ஒரே மொழியே பண்பட்டவர்கள் பேசியிருக்கிறார்கள்.
-
வேதம் என்பது மிகப்பெரிய தொகுப்பு.முற்காலத்தில் வேதமொழிக்கு எழுத்துக்கள் இல்லை.
ஒவ்வொரு சொல்லையும் சரியான ஒசையுடன் உச்சரிக்க சொல்லிக்கொடுக்கப்பட்டது.
-
வேதம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு,ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு குடும்பத்தின் பொறுப்பில் விடப்பட்டது.
அவர்கள் அதை மனப்பாடம் செய்து அழியாமல் காத்துவந்தார்கள்.
அந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் அந்த வேதபகுதியை மனப்பாடம் செய்து வந்தார்கள்
-
ஒரு குடும்ப பரம்பரையை சார்ந்தவர்கள் தெரிந்துவைத்திருந்த வேதம்,இன்னொரு கும்ப பரம்பரைக்கு தெரியாது.அந்த அளவுக்கு அவைகள் ரகசியமாக இருந்தன.
-
பிராமணர்கள்மீது போர்தொடுக்ககூடாது என்பது பாரத தேசத்தின்விதி.
அதேபோல பிராமணர்கள் ஆயுதம் ஏந்தி சண்டையிடவும்கூடாது.அவ்வாறு ஆயுதம் ஏந்தினால் பிராமண ஜாதியிலிருந்து விலக்கிவைத்துவிடுவார்கள்.வேதம் ஓதும் உரிமை பறிக்கப்படும் என்பதும் விதி.
பல ஆயிரம் ஆண்டுகளாக பிராமணர்களை மன்னர்கள் பாதுகாத்து வந்தார்கள்
-
பிற்காலத்தில் பல வெளிநாட்டினர் இந்தியாமீது படையெடுத்து வந்தார்கள்.பல பிராமணர்கள் கொல்லப்பட்டார்கள்.அவர்கள் பாதுகாத்துவந்த வேதபகுதி அதோடு அழிந்துபோனது.
-
தற்போது நூற்றில் ஒரு பகுதியே நம்மிடம் மிஞ்சியுள்ளது.
-
அடுத்து கணக்கில் சேர்க்கப்படாத உபநிடதங்கள் என்பவை என்ன?
-
தென்னிந்தியாவிலும் பல ரிஷிகள் வாழ்ந்தார்கள்.அவர்கள் பேசிய வார்த்தைகளும் உபநிடதங்கள்தான்.உதாரணமாக திருக்குறள் ஒரு வேதம்.இதேபோல சித்தர்களின் வார்த்தைகள் வேதம்.இவைகளையும் உபநிடதங்கள் வரிசையில் சேர்த்திருக்க வேண்டும்.
-
மொழிப்பிரச்சினை காரணமாக இவைகள் புறம்தள்ளப்பட்டுவிட்டன. வேதத்திற்கு மொழியே கிடையாது. வேதத்தை வெளிப்படுத்துவதற்குத்தான் ஒரு மொழி தேவை.அந்த மொழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.மொழியை மட்டும்வைத்து சண்டையிடுபவர்கள் தாழ்ந்தபடியில் உள்ளவர்கள்.அதாவது உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள்.உண்மைதான் வேண்டும் என்று நினைப்பவர்கள் மொழியை பார்ப்பதில்லை.உண்மை எங்கிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வார்கள்
-
சமீப காலத்தை சேர்ந்த ஸ்ரீராமகிருஷ்ணர்,ரமணர் போன்றவர்கள் கூறிய வார்த்தைகளும் உபநிடதம்தான். எதிர்காலத்திலும் பல ரிஷிகள் தோன்றப்போகிறார்கள். எனவே உபநிடதங்களின் எண்ணிக்கை வரையறை செய்ய முடியாதது.
-
உபநிடதங்கள்-வகுப்பு-5
-
நாள் 30-10-2019
-
வேதங்களை யரெல்லாம் படிக்கலாம்?
-
ஒரு காலத்தில் வேதங்களைப்படிக்க பலருக்கு அனுமதி இல்லை.அவைகள் ஒரு சில குடும்பங்களிடம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.ஆங்கிலேயர்களின் வருகைக்குபின் அவைகள் படிப்படியாக ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டன.
-
வேத காலத்தில் பெண்களும் வேதம் படித்தார்கள் என்ற குறிப்பு வேதத்திலேயே உள்ளது.பல ரிஷிகள் கூடியிருந்த சபைகளில் அவர்கள் விவாதம்புரிந்தார்கள்.ரிஷியிடமிருந்து ரிஷிபத்தினி ஞானஉபதேசம் பெற்ற குறிப்புகள் உள்ளன.
-
வேதம் ரிஷிகளால் கூறப்பட்டவை.எனவே அதன் வார்த்தைகளுக்கு சக்தி உண்டு. உரிய நம்பிக்கையோடு,உரிய முறையில் உச்சரித்தால் நாம் நினைக்கும் பலன்களை அது கொடுக்கும்.
-
சிலர் தங்கள் சுயநலத்திற்காகவும்,பிறருக்கு தீங்கு செய்வதற்காகவும் வேதமந்திரங்களை பயன்படுத்தலாம் என்பதற்காக அனைவரும் வேதம் படிக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம்
-
வேத மந்திரங்களின் உச்சரிப்புகள் சரியாக இருக்க வேண்டும்.அப்படி இல்லாவிட்டால் தவறான பொருளை குறிக்கும்.அது மட்டுமல்ல வேதத்தை தவறாக உச்சரிக்கும் ஒருவருக்கு பல சீடர்கள் இருந்தால்,அவர்களும் அதை தவறாக உச்சரிப்பார்கள்,படிப்படியாக அதுவே உண்மை என்ற நிலை ஏற்பட்டுவிடும்.
-
வேதம் படிக்க வேண்டுமானால்,வாழ்க்கை முழுவதையும் அதற்கே அர்பணிக்க வேண்டும்.பகல் முழுவதும் உலகியல் வேலைகளை செய்துகொண்டு,மாலையில் சிறிது வேதம் படிக்கலாம் என நினைத்தால் அது பெரிதும் உதவாது.சிறுவயதிலிருந்து கடைசிகாலம் வரை வேதம் படிப்பது,வேதம் படித்துகொடுப்பது என்ற நிலையில் இருப்பவர்களுக்கே வேதம் படிப்பது பொருந்தும் என்று முற்காலத்தில் நினைத்திருக்கலாம்.
-
பரம்பரை பரம்பரையாக தங்களுக்கு கிடைத்த ஞானத்தை பிற ஜாதியினரிடம் பகிர்ந்துகொள்ள உயர்ந்த ஜாதியினர் விரும்பவில்லை.அனைவரும் வேதம் படித்தால் பிறகு உயர்ந்த ஜாதியிரின் மரியாதை குறைந்துவிடும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்
-
தற்போது காலம் மாறிவிட்டது.இன்று எல்லோருமே உலகியல் வேலைகளில் மூழ்கிக்கிடக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதற்காக எந்த வேலையையும் செய்ய பலர் தயாராக இருக்கிறார்கள்.
-
இதில் உயர்ந்த ஞானத்தை பெற வேண்டும் என்ற யாரிடமெல்லாம் ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் வேதம் படிக்கலாம்
-
முற்காலத்தில் வேதம் எழுத்துவடிவில் இல்லை.எனவே உச்சரிப்பு முக்கியம்.
தவறாக உச்சரித்தால் பொருள் மாறிவிடும். ஆனால் தற்காலத்தில் ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள பொருள் எழுத்து வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே பொருள் தெரிந்து படித்தால் போதும்.
-
ரிஷிகள் உடல்உணர்வைக்கடந்து உயர்ந்த மனநிலையில் இருக்கும்போது அருளிய வேதத்தை, நாமும் உயர்ந்த மனநிலையில் இருந்து படித்தால்தான் அதன் பொருள் விளங்கும்.உடல் உணர்வைக்கடந்து செல்லும் ஆற்றல் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கே வேதத்தின் உண்மை சரியாக புரியும். மற்றவர்கள் வெறும் வார்த்தைகளைவைத்து பேசிக்கொண்டிருப்பார்கள்
-
வேதத்தை படிப்பதற்கு முக்கியத்தேவை நல்லசிந்தனை,நல்ல நடத்தை,நல்ல செயல்,தியாக மனப்பான்மை போன்றவை.
-
இந்த காலத்தில் மொழிக்கு முக்கியத்துவம் குறைவு. எந்த மொழியை சேர்ந்த நூலையும் எளிதில் மொழிமாற்றம் செய்து படிக்க முடியும். எனவே ஆதிகால சமஸ்கிருதம் தெரியாவிட்டாலும், ஆதிகால தமிழ் தெரியாவிட்டாலும் தவறில்லை.
-
எனக்கு ராமகிருஷ்ண மடத்தில் ஜந்து ஆண்டுகள் சமஸ்கிருதம் சொல்லிக்கொடுத்தார்கள்.ஆனால் என்னால் ஒழுங்காக படிக்க முடியவில்லை.அதற்கு காரணம் சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இல்லை.எந்த மொழியை படிப்பதிலும் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை.
பெரும்பாலும் தமிழ் மொழிபெயர்ப்புகளை வைத்தே உபநிடதங்களை படித்தேன்.எனவே என்னிடம் சமஸ்கிருத ஞானம் இல்லை.அது மட்டுமல்ல தமிழ்மொழியிலும் எனக்கு புலமை இல்லை.
-
ஆனால் உபநிடதங்களை படிப்பதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்தது.பகவத்கீதையை பலமுறை மீண்டும்மீண்டும் படித்து அதை தியானித்திருக்கிறேன் அதன் ஆழமான பொருளை புரிந்துகொள்ளும் தன்மை உள்ளது.புரியாத வார்த்தைகள் இருந்தால் அதைக்குறித்து தியானிப்பதில் ஈடுபடுவேன்.
-
வரும் நாட்களில் ஒவ்வொரு உபநிடதமாக நாம் பார்க்க இருக்கிறோம்....
-
உபநிடதங்கள்-வகுப்பு-6
-
நாள்-1-11-2019
-
ஒவ்வொரு வேதத்திலும் பல உபநிடதங்கள் உள்ளன.அந்த வகையில் நாம் பார்க்க இருப்பது சாமவேதத்தில் இடம்பெற்றுள்ள மைத்ரேயீ உபநிடதம்.மைத்ரேயர் என்பது ஒரு ரிஷியின் பெயர்
-
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்
-
சாந்தி மந்திரம்
-
ஓம் ஆப்யாயந்து மமாங்கானி வாக்ப்ராணச் சக்ஷú: ச்ரோத்ரம் அதோ பலமிந்த்ரியாணி ச ஸர்வாணி ஸர்வம் ப்ரஹ்மௌப- நிஷதம் மாஹம் ப்ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்ரஹ்ம நிராகரோத் அனிராகரணமஸ்து அனிராகரணம் மேஸஸ்து ததாத்மனி நிரதே ய உபநிஷத்ஸு தர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
-
பொருள்
-
எனது அவயவங்களான வாக்கு, பிராணன், கண்கள், காதுகள் மற்றும் எல்லா இந்த்ரியாணிங்களும்
பலம் மிகுந்த ஆற்றலுடன் விளங்கட்டும்.
உபநிஷதங்கள் கூறுகின்ற ப்ரஹ்மமே எங்கும் நிறைந்துள்ளது.
ப்ரஹ்மத்தை நான் மறுக்காதிருப்பேனாக; ப்ரஹ்மம் என்னை மறுக்காதிருப்பாராக.
அந்த ஆன்மாவை நாடுகின்ற எனக்கு எந்த தர்மங்கள் உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ளனவோ அவை என்னில் குடிகொள்ளட்டும்.
-
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
-
எந்த நல்ல காரியத்தை துவங்குவதற்கு முன்பும் பிரார்த்தனை செய்துகொள்வது இந்துக்களின் வழக்கம்.
-
சாந்தி என்றால் அமைதி,சமாதானம்,நன்மை போன்ற பல பொருள் உள்ளன.
மூன்று முறை சாந்தி, சாந்தி,சாந்தி என்று சொல்லப்படுகிறது.
-
பல்வேறு பிரச்சினைகளுக்கு நாம்தான் காரணமாக இருப்போம் .உடல் நோய்களுக்கு நாமே காரணமாக இருக்கிறோம்.மனநோய்களுக்கும் நாமே காரணமாக இருக்கிறோம். எனவே அதிலிருந்து சாந்தி கிடைக்க வேண்டும்
பிற உயிர்களால் நமக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன.பிற மனிதர்கள்,விலங்குகள்,பூச்சிகள், தற்காலத்தில் கொசுகூட பல்வேறு பிரச்சினையை உருவாக்குகிறது.வெளியிலிருந்து வரும் தொல்லைகளிலிருந்து சாந்தி ஏற்பட வேண்டும்
இயற்கை சூழ்நிலைகளின் காரணமாக பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன.வெயில்,மழை,குளிர்,இடி,நிலநடுக்கம் போன்றவற்றால் வரும் இன்னல்களிலிருந்து சாந்தி ஏற்படவேண்டும்.
முதலில் நாம் பலமுள்ளவர்களாக மாறவேண்டும். உடல் உறுப்புகள் அனைத்தும் பலமுள்ளதாக மாறவேண்டும்.அப்போதுதான் உண்மையை உணரும் தகுதிபெறுவோம்
உபநிடதங்கள் இறைவனை பிரம்மம் என்ற பெயரில் அழைக்கிறது.
ப்ர+அஹம். அஹம் என்றால் நான். ப்ர என்றால் எல்லையற்ற.
நான் என்பது எல்லையற்ற நிலையை அடைந்தால் அப்போது பிரம்மம்.
இறைவனின் எல்லையற்ற நிலை,உருவமற்றநிலை பிரம்மம்.
ஆன்மா என்றால் அஹம்+மா
மா என்றால் பெரிய. பொதுவாக நாம் நான்என்று சொல்லும்போது நமது சிறிய உடலையே குறிப்பிடுகிறோம்.அதைத்தாண்டி நமக்கு இன்னொரு உடல் உள்ளது.அது மிகப்பெரியது.எல்லையில்லாததது.அதற்கு ஆன்மா என்று பெயர்
-
அந்த பிரம்மத்தை நாம் நிராகரிக்காமல் இருக்கவேண்டும்.பிரம்மம் என்ற ஒன்று உண்டா இல்லையா என்ற சந்தேகக்கண்ணோட்டதோடு இந்த உபநிடதங்களை படிக்க ஆரம்பிக்ககூடாது
குருவின் வார்த்தைகளில் நம்பிக்கை வேண்டும். குரு அதை அனுபவித்து உணர்ந்தாரோ அதையே சீடர்களுக்கு கூறுகிறார்.
நாம் சிறிய காந்தம் போல இருக்கிறோம் பிரம்மம் பெரிய காந்தம்போல உள்ளது. பிரம்மம் நம்மை எல்லாம் கவர்ந்துகொண்டே இருக்கிறது.
உபநிடதங்கள் எந்த தர்மத்தைகூறுகின்றனவோ அந்த தர்மத்தின்படி வாழவேண்டும்.அந்த தர்மம் நம்மிடம் குடிகொள்ள வேண்டும்.
-
இது பிரார்த்தனை
உபநிடதங்கள்-வகுப்பு-7
-
நாள்-2-11-2019
-
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்
-
மைத்ரேயர் என்ற ரிஷி பரமசிவனிடம் பெற்ற உபதேசத்தைப்பற்றி சாகாயன்யர் ரிஷி சீடரிடம் கூறுகிறார்
-
1.பிரஹத்ரதன் என்ற அரசன் தனது மூத்த மகனுக்கு முடிசூட்டிவிட்டு, இந்த உடல் நிலையற்றது எனவே அது வீழ்வதற்கு முன்பே ஞானம் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில்,வைராக்கியம் பெற்றவனாய் நாட்டைவிட்டு வனம் நோக்கி வந்தான்.
அங்கு சூரியனைநோக்கி தன் கைகளை உயரத்தூக்கிநின்றுகொண்டு பல நாட்கள் தவம் செய்தான்
அங்கு ஒருமுறை அக்னிபோல் பிரகாசமான ஒளிபொருந்திய சிறந்த ஆத்மஞானியான பகவான் சாகாயன்யர் என்பவர் வந்தார்.
அவரை அரசன் நமஸ்கரித்தான்
எழுந்திரு!எழுந்திரு! என்ன வரம்வேண்டும் கேள் என்று முனிவர்,அரசனிடம் கேட்டார்
-
பகவான் என்பது ஒரு பட்டப்பெயர்.
1) ஞானம் - எல்லாம் அறிந்திருத்தல்
2) ஐஸ்வர்யம் - எல்லாச் செல்வங்களையும் தன்னிடம் கொண்டிருத்தல்
3) சக்தி - எதையும் செய்யக் கூடிய ஆற்றல்
4) பலம் - எல்லாவற்றையும் தாங்கிப் பிடிக்கும் (காக்கும்) வலிமை
5) வீரியம் - சக்தி சிறிதும் குன்றாத தன்மை
6) தேஜஸ் - தன்மயமான, முழுமையான நிலை மற்றும் எல்லாவற்றையும் விஞ்சி நிற்கும் தெய்வாம்சம்.
-
மேலே குறிப்பிடடப்பட்ட ஆறு குணங்களும் ஒருவருக்கு இருந்தால் அவர் பகவான்.
-
2.அரசன் கூறினார்- “பகவானே! இந்த உடல் ஆண்,பெண் சேர்க்கையால் உருவானது.ஞானம் இல்லாதது. நரகம் போன்றது. பலவிதமான அழுக்குகள் நிறைந்தது. இப்படிப்பட்ட உடலில் கட்டுப்பட்டு கிடக்கிறேன். நீங்கள்தான் அதிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்” என்றார்
-
3. பகவான் சாகாயன்யர் அன்புடன் கூறினார் “ மஹாராஜா! பிருஹத்ரதா! இஷ்வாகு வம்சத்தில் வந்தவனே! தலைசிறந்த ஆத்மஞானியே! நீர் செய்யவேண்டிய கடமைகளை எல்லாம் செய்து முடித்தவர். மருத் என்று மிகுந்த புகழ்பெற்றவர்.நீ தற்போது இருக்கும் இந்த நிலைதான் ஆத்மஞானியின் நிலை” என்றார்
-
ஆத்மஞானத்தை விளக்கிக்கூறும்படி மஹாராஜா கேட்டுக்கொண்டார்
-
பகவான் சாகாயன்யர் கூறத்தொடங்கினார்...
உபநிடதங்கள்-வகுப்பு-8
நாள் 3-11-2019
-
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்
-
நேற்று நாம் பார்த்ததன் தொடர்ச்சி...
-
ஞானம் ஏற்படவேண்டுமானால் வைராக்கியம் ஏற்படவேண்டும்.
இந்த உடல் நிலையற்றது,இந்த உலகப்பொருட்கள் நிலையற்றது,இவைகளை அனுபவித்ததுபோதும் என்ற எண்ணம் ஏற்படவேண்டும்.
பிரஹத்ரதன் என்ற அரசனுக்கு வைராக்கியம் ஏற்பட்டது.
-
வைராக்கியம் என்பது என்ன?ஏன் வைராக்கியம் ஏற்படுகிறது?
--
ஒருவனுக்கு ஜஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.அவனது ஆசையை பூர்த்திசெய்ய மூன்று வேளையும் அவனுக்கு ஜஸ்கிரீம் மட்டுமே கொடுக்கப்பட்டது.ஒரு சில நாட்களுக்கு பிறகு ஜஸ்கிரீமை கண்டாலே பிடிக்கவில்லை வெறுப்பு ஏறபட்டுவிட்டது.
-
ஒரு பொருளை அனுபவிக்கும்வரை அதன்மீது ஆசை இருக்கும்.போதிய அளவு அனுபவிக்க அனுபவிக்க அதன்மீது வெறுப்பு ஏற்படுகிறது.அதற்கு வைராக்கியம் என்று பெயர்.
-
வைராக்கியம் ஏற்படும்போது மனம் துன்பத்தை அனுபவிக்கிறது.
-
அதேநேரத்தில் உலக இன்பங்களை அனுபவிக்காமல் இருந்தால்,அதை அனுபவிக்கவில்லையே என்ற ஆசையும்,ஏக்கமும் ஏற்படுகிறது.
-
இந்த உலகத்திலுள்ள இன்பங்களை அனுபவிக்க அனுபவிக்க முடிவில் துன்பம்தான் ஏற்படும்.அது இயல்பு.
ஆனால் சிற்றின்பத்திற்கு மட்டும் இது பொருந்தாது. சிற்றின்பத்தை தொடர்ந்து அனுபவித்துக்கொண்டே இருந்தால் வைராக்கியம் வருமா என்று கேட்டால் வராது.
தீயில் ஒருவன் நெய்யை விட்டான்,தீ மேலும் தீவிரமான எரிந்தது.மேலும் மேலும் நெய்யைவிட்டான்,தீ மேலும்மேலும் எரிந்தது.அதேபோலத்தான் சிற்றின்பத்தை அனுபவிக்க அனுபவிக்க அனுபவிக்க தீவிரம் அதிகமாகுமே தவிர வைராக்கியம் வராது.சிற்றின்பத்தை அனுபவித்துக்கொண்டே ஞானத்தை பெற முடியாது என்பதை நமது ரிஷிகள் தெளிவாக கூறிவிட்டார்கள்.
-
உபநிடதங்களை எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் அரசர்கள்தான்.அவர்கள் அனைத்து அன்பங்களையும் போதிய அளவு அனுபவித்துப்பார்த்தார்கள்.அதனால் திருப்தி ஏற்படவில்லை.
ஒரு காலகட்டத்தில் அரசபோகங்களை துறந்து வனம் சென்று தவம்புரிந்து ஞானம் பெற்றார்கள்.
-
எந்த இன்பத்தையும் அனுபவிக்காத ஒருவனுக்கு வைராக்கியம் வருமா? வராது
சிலருக்கு சிறுவயதிலேயே வைராக்கியம் வருகிறது.அதற்கு காரணம் முற்பிறவியில் அவர்கள் உலக இன்பங்களை அனுபவித்து முடித்திருப்பார்கள்.ஞானம் பெறுவதற்காகவே இந்த பிறவி பிறந்திருப்பார்கள்.எனவே சிறுவயதிலேயே அவர்களுக்கு வைராக்கியம் வருகிறது.
-
ஒருவனுக்கு வைராக்கியம் வரும்போது உலகத்தின்மீது வெறுப்பு ஏற்படுகிறது.அதனால் மனம் கடுமையான துன்பத்தை அனுபவிக்கிறது.
-
இந்த உபநிடதத்தின் முதல் பாடம் என்ன? ஞானம் பெற வேண்டுமானால் முதலில் வைராக்கியம் வரவேண்டும். இந்த உலக இன்பங்கள் வேண்டாம் என்ற எண்ணம் உறுதியாக ஏற்பட வேண்டும்.
-
உலக இன்பங்களையும் அனுபவிப்த்துக்கொண்டே,ஞானத்தையும் பெற முடியுமா? முடியாது.
ஞானத்தை பெற்ற பிறகு வேண்டுமானால் இரண்டையும் வைத்துக்கொள்ளலாம்.அப்போது உலக இன்பங்கள் துன்பத்தை தராது.ஏனென்றால் ஞானிக்கு அனைத்து பொருட்களின் இயல்பும் தெரியும்.எதை எதை எப்படி பயன்படுத்துவது என்ற ஞானம் அவனுக்கு இருக்கும்.
--
உபநிடதங்கள்-வகுப்பு-9
-
நாள் 4-11-2019
-
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்
-
பிருஹத்ரதன் என்ற அரசன் நாட்டை துறந்துவிட்டு, வனத்தில், கைகளை சூரியனைநோக்கி உயரத் தூக்கிக்கொண்டு பல நாட்கள் தவம் செய்தான்.
-
எதற்காக கைகளை தூக்கிக்கொண்டு தவம் செய்தான்? ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்தபடி இருந்திருக்கலாமே என்ற கேள்வி வருகிறது.
-
மனத்தை கட்டுப்படுத்துவது எளிதல்ல. ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்தால் சிறிது நேரத்தில் பல்வேறு சிந்தனைகள் எழுகிறது.படிப்படியான மனம் சோர்வடைந்து தூக்கம் வந்துவிடுகிறது.இதில் மனத்தை கட்டுப்படுத்துவது இயலாத காரியம்
-
கைகளை மேலே தூக்கிக்கொண்டு ஒருவரால் எவ்வளவு நேரம் நிற்க முடியும்? ஒரு மணிநேரம் நிற்பதற்குள் வைராக்கியம் குறையத்தொடங்கிவிடும். நான்கு மணிநேரம் நின்றால், போதும் இந்த தவம் என்ற எண்ணம் வந்துவிடும்
-
மனத்தில் பல பிறவிகளில் செய்த கர்மவினைகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.அவைகள் மனத்தை கடந்தநிலையை அடைய நம்மை விடாது.மனத்தை கடந்த நிலையை ஒரு தடவையாவது ஒருவன் அடையவேண்டுமானால்கூட கர்மவினைகளை ஓரளவாவது அனுபவித்து முடித்திருக்க வேண்டும்.
-
பிருஹத்ரதன் முறையாக ஆட்சிசெய்து,செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்து முடித்து.அனுபவிக்க வேண்டி இன்பங்களையெல்லாம் அனுபவித்து முடித்துவிட்டான்,இனிமேல் உலகத்தில் சென்று அவன் அனுபவிக்க எதுவும் இல்லை.இந்த தவம் கடுமையாக இருந்தாலும் வேறு வழி இல்லை.இந்த கடுமையான தவத்தின் காரணமாக கடுமையான துன்பத்தை அனுபவிக்கவேண்டியுள்ளது.
-
வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது.ஒருவர் இன்பத்தை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருக்கிறர் என்றால்,துன்பம் இனிமேல் வரப்போகிறது என்று அர்த்தம்.
அதேபோல ஒருவர் துன்பத்தை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருந்தால் இன்பம் இனி வரப்போகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
-
அரசன் என்பவன் அதிக இன்பத்தை அனுபவிக்கும் இடத்தில் இருக்கிறான்.இந்த தவத்தின் மூலம் துன்பத்தையும் அனுபவிக்கிறார்.
தற்போது குடும்பத்தில் வாழ்பவர்கள்,தங்கள் வாழ்க்கையிலேயே எண்ணற்ற துன்பங்களை அனுபவித்துவருகிறார்கள்.அதனால் அரசன் செய்தததுபோல கைகளை தூக்கிக்கொண்டுநிற்க தேவையில்லை
-
இன்னொன்று மனத்தை அடக்குவது எளிதல்ல.நாம் தினமும் ஏதவது ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை செய்யவிடாமல் மனம் தடுக்கிறது.நமது மனத்தை அடக்க வேண்டுமானால் அதை ஒரு ஒழுங்குமுறைக்கு கொண்டுவரவேண்டும்.
-
காலையிலிருந்து இரவுவரை நாம் எதை எதை செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டிருக்கிறோமோ அதை அப்படியே செய்யும்படி பழக்க வேண்டும்.இந்த முறையான தினசரி நல்ல பழக்கத்திற்கு ஒழுக்கம் என்று பெயர்.
-
கைகளை தூக்கிக்கொண்டு நிற்கும்போது மனம் அதை தடுக்கிறது. தலைக்கு மேல் ரத்த ஓட்டம் செல்வது குறைகிறது.இதனால் கைகளில் மிகுந்த வலி ஏற்படும்.படிப்படியாக கைகள் செயலிழந்துபோகும்.பிறகு கைகளை சாதாரணமாக நாம் பயன்படுத்துவதுபோல பயன்படுத்த முடியாது.
-
இவ்வளவு வேதனைகளையும் தாங்கிக்கொள்ளும்போது திடசங்கல்பம் உருவாகிறது.பல்வேறு ரிஷிகள் இந்த வழியை பின்பற்றி ஞானம் அடைந்திருக்கிறார்கள்.நானும் இந்த வழியை பின்பற்றினால் ஞானம் அடைய முடியும் என்ற நம்பிக்கை அவனிடம் இருந்தது.
-
இந்த நம்பிக்கை முக்கியம்.நாம் செய்யும் ஆன்மீக பயிற்சிகளினால் ஞானம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வேண்டும்.அப்பொழுதுதான் தொடர்ந்து அதை செய்ய முடியும்.
-
திடசங்கல்பம் வந்துவிட்டால் மனத்தில் எண்ணங்கள் எழுவது நின்றுவிடுகிறது.அப்போது மனத்தை கடந்த நிலையின் காட்சி கிடைக்கிறது.
-
சிலருக்கு எப்போதாவது ஒருமுறை மனத்தை கடந்த காட்சி கிடைத்திருக்கலாம்.ஆனால் அதைப்பற்றிய ஞானம் அவர்களிடம் இருக்காது.ஞானநூல்களை படித்தபின்புதான் அந்த காட்சி என்பது என்ன என்று புரிகிறது.
-
அதேபோல இந்த அரசனுக்கு மனத்தை கடந்த ஆத்மாவின் காட்சி கிடைத்திருக்கிறது.ஆனால் அதைப்பற்றிய ஞானம் இல்லை.
-
அங்கு வந்த பகவான் சாகாயன்யர் அரசனை நோக்கி, நீர் இப்போது இருக்கும் நிலைதான் ஆத்மஞானியின் நிலை. இந்த ஞானத்தைப்பற்றி உணக்கு விளக்கமாக கூறுகிறேன் என்று தனது பேச்சைத் தொடர்ந்தார்...
-
4.சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் முதலிய இந்திரிய விஷயங்கள் “அர்த்தம்“ (இன்றியமையாத பொருள்) என்று கூறப்பட்டாலும் அவை உண்மையில் “அனர்த்தம்”(முக்கியமில்லாத பொருள்). அவைகளை அனுபவித்தால் துன்பத்தை தருவதாவே இருக்கிறது.அவற்றில் பற்றுக்கொண்டவன் பூதாத்மா எனப்படுகிறான்.அவன் பரமாத்மாவை விரும்புவதில்லை.(ஐம்பூதங்களில் பற்றுகொண்டவன் பூதாத்மா.பரத்தில் நிலைபெற்றவன் பரமாத்மா)
--
உபநிடதங்கள்-வகுப்பு-10
-
நாள் 5-11-2019
-
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்
-
-
இதை சற்று விளக்கமாக பார்ப்போம்
-
வெளி உலகிலிருந்து நம்மை தொடர்புகொள்பவை 10 அடிப்படை பொருள்கள்
(மஹாபூதங்கள்(5)- நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு,
-
இந்திரியார்த்தங்கள்(இந்திரியவிஷயங்கள்) அல்லது தன்மாத்திரிகைள்(5) - சப்த,ஸ்பர்ச,ரூப,ரச,கந்த
அதாவது ஒலி,தொடுதல்,ஒளி,சுவை,மணம்
-
இந்த பத்தும் வெளி உலகிலிருந்து மனிதனை நோக்கி வருகின்றன.
-
மனிதன் ஞான இந்திரியங்கள் மூலம் அவைகளை கிரகித்து.கர்ம இந்திரியங்கள் மூலம் செயல்புரிகிறான்
-
இந்திரியங்கள் மொத்தம் பத்து.அதில் ஐந்து ஞான இந்திரியங்கள்.ஐந்து கர்ம இந்திரியங்கள்
-
ஞான இந்திரியங்கள்(5)- கண்,காது,நாக்கு,மூக்கு,தோல்
கர்ம இந்திரியங்கள்(5) வாய்,கை,கால்,மலவாய்,கருவாய்
-
--------------
இந்திரிய விஷயங்கள் --- ஞான இந்திரியங்கள்
ஒலி ---------- காது
தொடுதல் ---------- தோல்
ஒளி, ---------- கண்
சுவை ---------- நாக்கு
மணம் ---------- மூக்கு
-
வெளியிலிருந்து வரும் ஒலியைக்கேட்க காது வேண்டும்.சிலருக்கு காது நன்றாக இருக்கும் ஆனாலும் ஒலி கேட்காது.இதற்கு காரணம் காதுக்கும் மூளைக்கும் இடேயே உள்ள நரம்பு மண்டலங்களில் பாதிப்பு இருக்கும்.
-
கண்களுக்கும் அதேபோல தனியாக நரம்பு மண்டலங்கள் உள்ளன.
எனவே ஞான இந்திரியங்கள் என்று சொல்லும்போது ஒவ்வொரு இந்திரியங்களுக்கும் உரிய தனித்தனி நரம்புமண்டலங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
-
கர்ம இந்திரியங்கள் மூலம் மனிதன் எப்படி செயல்புரிகிறான்?
-
“வாய்”---வாய் மூலம் கட்டளைகளை பிறப்பிக்கிறான்.அதைக்கேட்டு மற்றவர்கள் வேலை செய்கிறார்கள்.
-
“கை”--கைகள் மூலமாகவே உலகிலுள்ள பெரும்பாலான வேலைகள் நடக்கின்றன.உணவு உற்பத்தி முதல் அதை சாப்பிடுவது வரை அனைத்திற்கும் கை தேவை
-
“கால்”--ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு கால் தேவை.
-
“மலவாய்”-- நாம் உண்ணும் உணவின் கழிவை வெளியேற்ற மலவாய் உதவுகிறது
-
“கருவாய்“--உலகத்தில் புதிய உயிரை உற்பத்திசெய்ய கருவாய் பயன்படுகிறது.
-
சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் முதலிய இந்திரிய விஷயங்கள் “அர்த்தம்“ (இன்றியமையாத பொருள்) என்று மக்கள் நினைக்கிறார்கள்.
-
உலகத்தில் ஓசையே இல்லாவிட்டால் எப்படி இருக்கும் கற்பனை செய்து பாருங்கள். உலகத்தில் உருவங்கள் எதவும் இல்லாமல் வெறுமையாக இருந்தால் எப்படி இருக்கும்? யாரையும் எந்த உயிர்களையும் எந்த பொருட்களையும்கூட தொடாமல் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? சாப்பிடுவதற்கு உணவு இருக்கிறது.ஆனால் அதில் சுவையே இல்லை என்றால் எப்படி இருக்கும்? ஒவ்வொரு பொருளுக்கும் இயல்பாக ஒரு மணம் இருக்கும்.ஆனால் எதற்கும் மணமே இல்லாவிட்டால் எப்படி இருக்கும்?
-
வாழ்க்கை வாழத்தகுந்ததாக இருக்குமா?அப்படிப்பட்ட ஒரு இடத்தில் ஒருவனால் வாழ முடியுமா? ஆகவே இவைகள் எல்லாம் இருப்பதால்தான் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள்.
-
ஆனால் இந்த ரிஷியோ இவைகளை அர்த்தமற்றவைகள் என்கிறார்
-
உபநிடதங்கள்-வகுப்பு-11
-
நாள்6-11-2019
-
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்
-
தனக்கு தேவைகள் இருக்கும்வரை இந்த உலகம் அர்த்தமுள்ளதாக தெரிகிறது.எல்லா தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்ட ஒருவனுக்கு இந்த உலகம் அர்த்தமற்றதாக தோன்றுகிறது.
-
சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் முதலிய இந்திரிய விஷயங்களை தொடர்ந்து அனுபவிப்பதால் துன்பம் ஏன் வருகிறது?
-
பகல்வேளைகளில் பல்வேறு ஓசைகளை நாம் கேட்கிறோம்.அதே அளவுக்கு ஓசைகள் இரவிலும் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எரிச்சலை உண்டாக்கும். அது துன்பத்தை தருகிறது.
-
இனிய சங்கீதம் இன்பத்தை தருகிறது. எப்போதும் அதே சங்கீதத்தை கேட்டுக்கொண்டே இருந்தால் அது துன்பத்தை தருகிறது.சப்தத்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க நாம் விரும்புவதில்லை.
-
அதேபோல பிறரை நாம் தொடுவதாக இருந்தாலும்,நம்மை பிறர் தொடுவதாக இருந்தாலும்,அதன் மூலம் நமது சக்திகள் பிறருக்கு செல்கின்றன.பிறரது சக்திகள் நமக்கு வருகின்றன.சக்தியை தனக்குள்ளேயே சேமித்துவைக்க வேண்டும் என்று நினைப்பவன் பிறரை தொடுவதோ,தன்னை பிறர் தொட அனுமதிக்கவோ கூடாது.
-
மனத்தை அமைதி நிலையில் வைத்திருக்கவேண்டுமானால் சக்தியை தனக்குள்ளேயே அடக்கி வைக்க வேண்டும்.அப்படிப்பட்ட பயிற்சியில் இருக்கும் ஒருவனுக்கு தொடுவது துன்பத்தை கொடுப்பதாக இருக்கும்
-
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ரூபம் உண்டு.அந்த ரூபத்திற்கு பின்னால் எண்ணங்கள் உண்டு.நமக்கு வேண்டப்படாத ஒருவரை திடீரென்று பார்க்கநேரந்தால் மனத்திற்குள் எத்தனையோ எண்ணங்கள் எழுந்து துன்பத்தை உண்டாக்குகிறது.
-
ஒரு காலகட்டத்தில் உணவே துன்பத்தை தருகிறது.ஆன்மீக வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் சில குறிப்பிட்டவகை உணவுகளைத்தவிர மற்ற உணவுகளை உண்ண முடியாது.
தியானம் என்பது என்ன?உடல் இயக்கங்களை நிறுத்துதல். வயிறுநிறைய உணவு இருந்து,அந்த நேரத்தில் தியானம் செய்ய முயற்சித்தால் என்ன நடக்கும்? தியானம் முடியும்வரை உணவு ஜீரணிக்காமல் அப்படியே நின்றுவிடும்.அதுவே விஷமாகிவிடும்.பல்வேறு வயிற்றுப்பிரச்சினைகள் ஏற்படும்.
-
நறுமணம் வீசுகிறது என்பதற்காக அதையே சுவாசித்துக்கொண்டிருந்தால் சுவாசப்பிரச்சினைகள் ஏற்படும்.ஒவ்வொரு உயிரும் சிறிது மணத்தை வெளியிடுகிறது.அதனுடன் சேர்ந்து அதன் குணமும் பரவுகிறது.நல்ல மணமாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் இரண்டும் ஒருகால கட்டத்தில் துன்பத்தை தருகிறது.
-
சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் முதலிய இந்திரிய விஷயங்கள் யாருக்கு துன்பத்தை தரும்?
-
ஆன்மீக வாழ்வில் உயந்த நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே துன்பத்தை தரும்.
-
நமது உடல் தூலஉடல் அல்லது பூதஉடல் என்று அழைக்கப்படுகிறது.கண்களால் காக்கூடியதாக இருப்பதால் தூலஉடல் என்றுபெயர். பஞ்சபூதங்களால் ஆனதால் பூதஉடல் என்று பெயர்.
-
பஞ்சபூதங்கள் ஐந்து.இந்த ஐந்து பூதங்களிலும் பற்றுகொண்டு,அதை அனுபவிப்பவன் பூதாத்மா எனப்படுகிறான்.அவன் பரமாத்மாவை விரும்புவதில்லை.இந்த உலகத்தில் பெரும்பாலானவர்கள் பூதாத்மா
-
பரமாத்மாவை அடைய வேண்டுமானால் உலகத்தின்மீது உள்ள பற்றைவிட விட வேண்டும்.
-
உபநிடதங்கள்-வகுப்பு-12
-
நாள்7-11-2019
-
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்
-
5. தவத்தால் ஸத்வபுத்தி ஏற்படும்.அதனால் நல்லமனம் ஏற்படும்.
நல்ல மனத்தால் ஆத்மாவை அடையலாம்.ஆத்மாவை அடைந்து முக்திபெறலாம்.
-
ஸத்வம்,ரஜஸ்,தமஸ் என்று மூன்று தன்மைகள் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளன
-
சோம்பல்-தமஸ்
சுறுசுறுப்பு-ரஜஸ்
அமைதி-சத்வம்
-
கவரும் சக்தி-தமஸ்
விலக்கும்சக்தி-ரஜஸ்
சமநிலை-சத்வம்
--
ஒளி-ரஜஸ்
இருள்-தமஸ்
ஒளிக்கு அப்பால்-சத்வம்
-
புரோட்டான்-தமஸ்
எலக்ட்ரான்-ரஜஸ்
நியூட்ரான்-சத்வம்
-
காமம்-தமஸ்
பந்தம்-ரஜஸ்
பற்றற்றஅன்பு-சத்வம்
-
இரவு-தமஸ்
பகல்-ரஜஸ்
சந்தியாவேளை-சத்வம்
-
கீழ்உலகம்-தமஸ்
பூலோகம்-ரஜஸ்
மேல்உலகம்-சத்வம்
-
இப்படி இன்னும் ஏராளம் கூறிக்கொண்டே செல்லலாம்
-
இங்கே தவத்தால் சத்வபுத்தி ஏற்படுகிறது.அதனால் நல்லமனம் ஏற்படுகிறது என்கிறார்.
-
தவம் என்றால் என்ன? எரித்தல்
எதை எரித்தல்? பாவ கர்மங்களை எரித்தல்
-
நூற்றுக்கணக்கான தவங்கள் உள்ளன.ஒற்றைக்கையை தூக்கிக்கொண்டு தவம் செய்தாலும்சரி,
ஏழைகளுக்கு சேவை செய்தாலும் சரி,
தாய் தந்தைக்கு செய்யவேண்டிய கடமையை செய்தாலும்சரி எல்லாமே தவம்தான்.
-
தவம் செய்கிறோம் என்பதை எப்படி உணர்வது?
நாம் நமது கடமையை அல்லது நல்ல செயலை செய்துகொண்டே இருப்போம் ஆனால் பதிலுக்கு தொடர்ந்து துன்பம் வந்துகொண்டே இருக்கும்.
இப்படி தொடந்து துன்பங்கள் வரும்போது நமது முற்பிறவி பாவ கர்மங்கள் எரிக்கப்படுகின்றன.இது தவம்
-
தொடர்ந்து துன்பங்களை தாங்கிக்கொண்டே இருப்பது பழக்கப்பட்டுவிட்டால் மனம் சமநிலை அடைகிறது.அதன்பிறகு துன்பமே வராது என்று அர்த்தமல்ல.துன்பத்தால் மனம் பாதிக்கப்பாடாது என்று அர்த்தம்
-
மனம் சமநிலை அடைந்துவிட்டால் நல்லமனம் ஏற்படுகிறது.
நல்லமனம் என்றால் நன்மைகளை நினைத்துக்கொண்டிருக்கும் மனம் என்று அர்த்தமல்ல.
எந்த எண்ணங்களும் இல்லாத மனம் என்று அர்த்தம்
-
மனத்தில் எந்த எண்ணங்களும் இல்லாமல் போனால் ஆத்மாவை அடையலாம்.
ஆத்மாவை அடைந்தால் முக்தி அடையலாம்
-
முக்திக்கு தமிழில் விடுதலை என்று அர்த்தம்
-
விடு-தலை
-
தலை வழியாக உயிரைவிடு
-
உச்சந்தலையின் மத்தியில் ஒரு துளை உள்ளது. அந்த துளை வழியாக உயிரை விட்டால் அதன்பிறகு பிறக்கவேண்டிதில்லை.ஆன்மாவோடு ஒன்றுகலந்துவிடலாம்.
-
உயிரைவிட வேண்டுமானால் தலைவழியாக விடு.அதற்கு விடுதலை என்று பெயர்
-
உபநிடதங்கள்-வகுப்பு-13
-
நாள்8-11-2019
-
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்
-
6.விறகில்லாத அக்னி தன்னிடமே ஒடுங்குவதுபோல்
அலைச்சல் இல்லாத மனது தனது மூலமாகிய ஆத்மாவில் ஒடுங்கும்
-
ஒரு விறகுக்கட்டையில் தீ எரியும்போது முதலில் கொழுந்துவிட்டு எரிகிறது.விறகு முழுவதும் எரிந்தபின் அந்த தீ என்ன ஆகிறது? படிப்படியாக சிறியதாகி கடைசியில் விறகுக்கட்டையிலேயே அடங்கிவிடுகிறது
-
வாழ்க்கையில் சிறிய வயதில் எவ்வளவோ ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம் என்று வேடிக்கை வினோதங்களில் வாழ்க்கை நகர்கிறது. எத்தனையோ விஷயங்களை சாதிக்க நினைக்கிறோம்,உலகம் நமது கையில் இருப்பதுபோல தோன்றுகிறது.
ஆனால் நாட்கள் ஆகஆக நாம் நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்றாக இருக்கிறது.
திருமணம் செய்துகொண்டு,குழந்தைகளை பெற்றெடுத்து,அவர்களுக்கு ஒரு நல்லவழி காட்டுவதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது.நாம் கண்ட கனவுகள் பலவற்றை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கத்துடனேயே வாழ்க்கை முடிகிறது.வாழ்க்கை எவ்வளவு கடினமானவு என்பது அப்போதுதான் புரிகிறது.
-
எத்தனை ஏச்சுக்கள்,எத்தனை அவமானங்கள்,எத்தனை தோல்விகள் அனைத்தையும் மனம் அனுபவித்தபிறகு வாழ்க்கை சலித்துபோய்விடுகிறது.
-
ஒரு பறவை கப்பல் ஒன்றில் மயங்கிய நிலையில் படுத்துக்கிடந்தது. கப்பல் நடுக்கடலில் சென்றபோதுதான் மயக்கம் தெளிந்து விழித்தது.பின்பு அங்கிருந்து பறந்து சென்றது.
முதலில் வடக்கு பக்கமாக பறந்து பார்த்தது கரையை காண முடியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கடல்தான் தெரிந்தது.
மீண்டும் திரும்பி வந்து கப்பவில் அமர்ந்துகொண்டது. இனி தெற்கு பக்கமாக பறந்து செல்லலாம் என நினைத்து பறந்து சென்றது.அப்போதும் கரையை காண முடியவில்லை.
மீண்டும் பறந்துவந்து கப்பலில் அமந்துகொண்டது.பின்பு கிழக்கு மற்றும் மேற்கு பக்கங்களிலும் பறந்து பார்த்தது. எங்கும் கடல் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.
-
அதற்கு போதும் போதும் என்றாகிவிட்டது. கப்பலைவிட்டால் வேறு வழியில்லை என்பதை தெரிந்துகொண்டது
பின்பு எல்லா முயற்சிகளையும் கைவிட்டுவிட்டு கப்பவில் அமர்ந்துகொண்டது. கப்பல் என்றாவது ஒரு நாள் கரையைச்சேரும் அப்போது நாமும் கரையை பார்க்கலாம் என்ற முடிவுடன் அமைதியாக இருந்தது.
-
அதேபோலத்தான் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களை பார்த்தபின் இனிபோதும் இந்த வாழ்க்கை என்ற முடிவு வந்துவிடுகிறது. அப்போது மனமே உன் இருப்பிடம்நோக்கி திரும்பிச்செல் என்று யாரோ அழைக்கும் குரல் திரும்பத்திரும்ப கேட்கிறது.
-
அந்த குரல் ஆத்மாவிலிருந்து வந்தது. படிப்படியாக மனம் ஆத்மாவில் ஒடுங்குகிறது.
-
உபநிடதங்கள்-வகுப்பு-14
-
நாள்9-11-2019
-
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்
-
7. தன்னிடம் ஒடுங்கிய மனது ஸத்தியத்தை நாடும்.
இந்திரியத்தை நாடி மதிகெட்டவன் கர்ம வசப்பட்டு பொய்யை நாடுகிறான்.
-
ஆத்மாவின் இயல்பு ஸத்யம்.ஸத்யம் என்றால் எப்போதும் இருப்பது.மாற்றம் இல்லாதது.நிலையானது,உண்மையானது.
எது பொய்? எப்போதும் மாறக்கூடியது,நிலையில்லாத இந்த உலகம்
-
பொய் என்றால் இல்லை என்று அர்த்தம் அல்ல.நிலையில்லாதது என்று அர்த்தம்.
-
ஒருவன் பொய் சொல்கிறான் என்று ஏன் சொல்கிறோம்? அவன் நேற்று வேறு மாதிரி சொன்னான்.இன்று அதை மாற்றி சொல்கிறான். எனவே பொய் சொல்கிறான் என்கிறோம்.
எப்போதும் ஒரேமாதிரி சொன்னால் உண்மை சொல்கிறான் என்று அர்த்தம்.
-
இந்த உலகம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.அதனால் அது பொய். ஆத்மா எப்போதும் ஒரேமாதிரி இருக்கிறது.அதனால் அது உண்மை.ஆத்மா நிலையானது(ஸத்யம்).இந்த உலகம் மாறக்கூடியது(அஸத்யம்,பொய்).
-
பத்து இந்திரியங்கள் உண்டு என்று பார்த்தோம். கர்மேந்திரியங்கள் ஐந்து,ஞானேந்திரியங்கள் ஐந்து.இவைகள் மனத்தை வெளிஉலகை நோக்கி செல்லும்படி தூண்டுகின்றன.
-
இயற்கை காட்சிகள் கண்களை கவர்கிறது.இனிய இசை காதுகளை கவர்கிறது.நல்ல சுவை நாவை இழுக்கிறது.நறுமணம் மூக்கை இழுக்கிறது.தொடுஉணர்ச்சி உடலை இழுக்கிறது.
-
வெளியிலிருந்து வரும் ஒளி,ஒலி,சுவை,மணம்.தொடுஉணர்ச்சி இவைகளை நோக்கி மனம் இழுக்கப்படுவதால் ஸத்யத்தை நாடுவதில்லை.
-
கர்மம் என்றால் செயல்.இந்த உலகம் கர்மபூமி.எப்போதும்,எல்லா இடங்களிலும் செயல் நடந்துகொண்டே இருக்கிறது.,எல்லோரும் செயல்புரிந்துகொண்டே இருக்கிறார்கள்.யாராலும் செயல்புரியாமல் ஒரு கணப்பொழுதுகூட இந்த உலகில் வாழ முடியாது.
-
வாழ்க்கை என்றாலே செயல் நடந்துகொண்டே இருக்கிறது என்றுதான் அர்த்தம்.சும்மா இருக்கும் ஒருவனை எடுத்துக்கொண்டாலும்கூட அவனது உடலுக்குள் கோடிக்கணக்கான செயல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.
அதை அவன் அறியாமல்போகலாம், ஆனாலும் அவனது ஆழ்மனத்தின் மூலம் இந்த செயல்களை அவன்தான் செய்துகொண்டிருக்கிறான்.
-
ஒரு அணுவிலிருந்து,பெரிய கிரகங்கள் வரை,ஒரு செல் உயிரிலிருந்து,பெரிய உயிர்கள் வரை எங்கும் செயல் நடந்துகொண்டே இருக்கிறது.
-
இந்த உலகம் பொய்(மாறக்கூடியது) என்று தெரிந்த மனிதன் செயல்களை விட்டுவிட்டு உண்மையை(மாறாததை)நாடுகிறான்.
அறிவில்லாத மனிதன் பொய்யான இந்த உலகை நாடி சென்று மீண்டும்மீண்டும் பிறவிச்சுழலில் அகப்பட்டுக்கொள்கிறான்
8.மனமே ஸம்ஸாரம்.அதை முயற்சிசெய்து பரிசுத்தமாக்க வேண்டும்.அப்பொழுது மனம் ஆத்மவடிவாகும்.இதுதான் மிகப்பழமையான ரகசியம்
-
ஸம்ஸாரம் என்றால் உண்டாக்கிக்கொண்டது.தானாக உருவானதல்ல.உண்டாக்கிக்கொண்டது என்று அர்த்தம்.
மனைவிக்கு ஸம்ஸாரம் என்று பெயர்.ஆண்மையின் வடிவம் சிவம் பெண்மையின் வடிவம் சக்தி.
சிவத்திலிருந்து சக்தி வெளிப்பட்டது.சிவம் உருவாக்கிக்கொண்டதால் சக்திக்கு ஸம்ஸாரம் என்றுபெயர்.
இந்த உலகத்திற்கும் ஸம்ஸாரம் என்றுதான் பெயர்
-
சில ஆண்கள் உருவத்தில் மட்டும் ஆண்களாக இருப்பார்கள் ஆனால் அவர்களிடம் பெண்மை நிறைந்திருக்கும்.அதேபோல சில பெண்களிடம் ஆண்மை நிறைந்திருக்கும்.
இதில் ஸம்ஸாரம் என்பது பெண்ணை குறிக்கவில்லை,பெண்மையைக் குறிக்கிறது.
ஒரு பெண் துறவியானால் அவளை ஆணாக கருதவேண்டும் என்பது விதி.அவளும் ஸம்சாரத்தைதான் துறந்தாள்.
ரிஷியும்-ரிஷி பத்தினியும் ஸம்ஸாரத்தை துறந்தவர்கள்தான்.அவர்கள் உலகத்தை துறந்தார்கள்
உலகத்தை துறந்தவன் ஸம்ஸாரத்தை துறந்தவனாக கருதப்படுகிறான்.
-
இந்த ஸம்ஸாரத்தை உருவாக்கியது எது? மனம்.
இப்போது மனமே ஸம்ஸாரமாக உள்ளது.
மனத்தை சுத்தமாக்க ஆரம்பித்தால் ஸம்ஸாரம் நீங்கிவிடும்.
அப்பொழுது மனம் ஆத்மாவின் வடிவத்தை பெறும்.அதாவது சுத்தமனமே ஆத்மாவாகிவிடும்.
ஆதிகாலத்திலிருந்தே இருக்கக்கூடிய ரகசியம் இதுதான்
-
மனத்தை தூய்மைப்படுத்து.ஆத்மாவை காணலாம்.
-
தூய்மைப்படுத்துவது என்றால் எண்ணங்கள் எதுவும் இல்லாமல் செய்வது.மனத்தை தெளிவாக்குவது.
-
9.மனத்தின் தெளிவால் புண்ணிய கர்மமும்.பாவ கர்மமும் அழிக்கப்படுகின்றன.
தெளிவடைந்த மனது ஆத்மாவில் நிலைபெற்று அழிவில்லாத சுகத்தை அனுபவிக்கிறது
-
நம்மிடம் இரண்டு கர்மங்கள் உள்ளன.ஒன்று புண்ணிய கர்மம் இன்னொன்று பாவ கர்மம்.
மனிதனாக பிறக்க வேண்டுமானால் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
முற்பிறவிகளில் நாம் புண்ணிய கர்மங்கள் செய்ததால்தான் இந்த பிறவியில் மனித உடல் கிடைத்திருக்கிறது.
அதேபோல முன்பு உள்ள பல பிறவிகளில் பாவம் செய்ததால்தான் இந்தப்பிறவியில் துன்பத்தை அனுபவிக்கிறோம்.
-
உபநிடதங்கள்-வகுப்பு-16
-
நாள்13-11-2019
-
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்
-
9.மனத்தின் தெளிவால் புண்ணிய கர்மமும்.பாவ கர்மமும் அழிக்கப்படுகின்றன.
தெளிவடைந்த மனது ஆத்மாவில் நிலைபெற்று அழிவில்லாத சுகத்தை அனுபவிக்கிறது
-
மனம் தெளிவடையவேண்டுமானால் புண்ணிய கர்மமும்,பாவ கர்மமும் அழிக்கப்பட வேண்டும்.
பாவ கர்மத்தை அழிக்க வேண்டுமானால் புண்ணிய கர்மம் தேவை.
புண்ணிய கர்மத்தை அழிப்பதற்கு பாவ கர்மம் தேவை.
-
பாவிக்கு ஒரு புண்ணியவான் உதவினால்,புண்ணியவானின் புண்ணியம் பாவிக்கும்,பாவியின் பாவம் புண்ணியவானுக்கும் வந்துவிடும்.அதனால்தான் பல நூற்றாண்டுகளாக உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதியினருக்கு உதவி செய்யாமல் வாழ்ந்தார்கள்.பார்த்தால் பாவம்.தொட்டால் பாவம்.உதவினால் பாவம்.தீண்டாமைக்கு காரணம் இந்த கருத்துதான்.
-
புண்ணிய கர்மத்தின் பலனாக மனிதப்பிறவி வாய்க்கிறது. எது புண்ணிய கர்மம் செய்து மனிதப்பிறவியை பெற்றது?
-
இந்த உலகத்தில் எதுவும் இலவசமாக கிடைப்பதில்லை.ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலன் உண்டு.
ஒவ்வொரு செயலும் ஒரு புண்ணியபலனையோ அல்லது பாவ பலனையோ விளைவிக்கும்.
சும்மா இருப்பவனுக்கு பாவ கர்மங்கள் வருமேதவிர புண்ணிய கர்மங்கள் வராது.
-
முன்னோர்கள் தங்கள் வீடுகளில் வீட்டு விலங்குகளை வளர்த்து வந்தார்கள்.முக்கியமாக பசுவை வளர்த்து வந்தார்கள். பசு இல்லாத வீடே இருக்காது. பசுவின் பாலிலிருந்து மனிதனுக்கு தேவையான முக்கிய உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன.யாகங்கள் வளர்க்க நெய் கிடைக்கிறது.
இவ்வாறு பசுவை மனிதன் சார்ந்திருந்ததால்,அதனிடமிருந்து அதிக உதவியைப்பெற்றதால் மனிதனின் புண்ணியம் பெருமளவிற்கு பசுவிற்கு செல்கிறது.இந்த புண்ணிய பலனின் விளைவாக அடுத்தபிறவியின் அது மனிதனாக பிறக்கிறது.
-
வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு ஒருவன் உதவி செய்து கொண்டே இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.
ஒரு கால கட்டத்தில் அவனால் உங்களுக்கு உதவி செய்ய முடியவில்லை.
நமக்கு உதவி செய்யாத இயலாத இவன் இனி தேவையில்லை.இவனை கொன்றுவிடுவோம் என்று நீங்கள் முடிவு செய்வீர்களா? அப்படி கொன்றால் அது எவ்வளவு பெரிய மகா பாவம்.
-
அதேபோல்தான் பசு தன் வாழ்நாளில் மனிதனுக்கு தொடர்ந்து உதவிக்கொண்டே இருக்கிறது. அ
தனுடைய கடைசி காலத்தில் அதை பேணி பாதுகாக்க வேண்டுமே தவிர,அதைக் கொல்லக்கூடாது.
அப்படி கொன்றால் மகாபாவம் வந்து சேரும்
-
மனிதனிடமிருந்து பெற்ற புண்ணியத்தின் பலனாக விலங்குகள் அடுத்த பிறவியில் மனிதனாக பிறக்கின்றன.
மனிதனாக பிறந்த பிறகு பாவ கர்மங்களை செய்தால் மீண்டும் விலங்குகளாக பிறக்க நேரலாம்.
-
முற்காலத்தில் தென்னிந்தியாவில் இறந்தவர்கள் உடலை எரிப்பதில்லை.அதை புதைத்துவிடுவார்கள்.புதைத்த இடத்தில் மரம் நடுவார்கள்.எப்படி ஒரு ஜீவன் கருவிலிருக்கும் மனித சிசுவிடம் ஜக்கியமாகி அதை தனதாக நினைக்கிறதோ
அதேபோல, புதைக்கப்பட்ட அந்த இடத்தில் வளரும் மரத்தை தனதாக கருதிக்கொண்டு ஜீவன் அதில் ஜக்கியமாகியிருக்கும்.
அந்த மரத்தில் விளையும் பழங்களை மனிதனுக்கு கொடுத்து,அதன் மூலம் புண்ணிய கர்மத்தை அது பெற்றுக்கொண்டிருக்கும்.
மரமாக வளர்ந்தாவது இந்த ஜீவன் மனிதனுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் அவ்வாறு செய்தார்கள்.
-
மனிதன் தொடர்ந்து புண்ணிய கர்மத்தை செய்துகொண்டே இருந்தால் உயர்ந்த பிறவிகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். மனிதனைவிட உயர்ந்தது தேவபிறவி.அதைவிட உயர்ந்த பிறவியும் உண்டு.
எல்லாவற்றையும்விடப்பெரியது இறைநிலை.இந்த உலகை ஆளும் இறைவனுக்கு இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கடன்பட்டிருக்கின்றன.எனவே அதுதான் மிகப்பெரியது.இது இறைவனின் செயல்படும் நிலை.இறைவன் தொடர்ந்து செயல்புரிந்துகொண்டே இருக்கிறார்.
-
இறைவனின் செயல்படாத நிலை என்று ஒன்று உண்டு.அது பாவ புண்ணியங்களை கடந்தது.அதைப்பற்றித்தான் படித்துக்கொண்டிருக்கிறோம்
-
மனிதன் புண்ணிய கர்மங்களை சேமித்து வைத்துக்கொண்டே இருந்தால் உயர்ந்த நிலையை அடைந்துகொண்டே இருக்கலாம்.ஆனால் ஆத்மாவில் நிலைபெற முடியாது.செயலற்ற நிலையை அடைய முடியாது.அழிவில்லாத சுகத்தில் நிலைபெற முடியாது.
-
ஆத்மாவை அடைய வேண்டுமானால் புண்ணிய கர்மத்தையும் துறந்துவிட வேண்டும்.பாவ கர்மத்தையும் துறந்துவிட வேண்டும்.
இறைவா என்னுடைய புண்ணிய கர்மங்களை ஏற்றுக்கொள். எனக்கு முக்திகொடு என்று பிரார்த்திக்க வேண்டும்.இறைவன் புண்ணிய கர்மங்களை ஏற்றுக்கொண்டு முக்தி கொடுப்பார்.
-
இறைவா என்னுடைய பாவ கர்மங்களை ஏற்றுக்கொண்டு எனக்கு முக்தி கொடு என்று இறைவனிடம் கேட்கக்கூடாது.அது சுயநலம். பாவத்தின் பலனை அனுபவிக்க வேண்டுமே தவிர அதை இறைவனிடம் தள்ளிவிட நினைக்கக்கூடாது.சில நேரங்களில் பக்தனின் பாவத்தை ஏற்றுக்கொண்டு பகவான் மனிதனாகப்பிறந்து துன்பப்படுவதுண்டு.
-
ஒரு மனிதன் இந்த உலகத்தில் பணக்காரனாகவும்,மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமானால் புண்ணியம்தேவை.ஆனால் நிரந்தரமாக மகிழ்ச்சியை பெற முடியாது. சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம்.
இந்த உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் ஒருவன் முக்தியைப்பற்றி சிந்திப்பதில்லை.மேலும்மேலும் பல்வேறு செயல்களை செய்துகொண்டே இருக்கிறான்.
-
இந்த இயற்கை யாரையும் ஒரே நிலையில் இருக்க விடுவதில்லை.இன்பம் துன்பம் இரண்டையும் இயற்கை மாறிமாறி கொடுத்துக்கொண்டே இருக்கும்.எனவே பணக்காரன்கூட என்றாவது தெலிந்தோ தெரியாமலோ தவறு செய்கிறான்.அதன்பின் ஒரு நாள் துன்பத்தை சந்தித்தே ஆகவேண்டும்.அப்போது இந்த உலகத்தின்மீது உள்ள பிடிப்பு தளர்ந்துபோகிறது.
-
உபநிடதங்கள்-வகுப்பு-17
-
நாள்14-11-2019
-
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்
-
10.ஒரு ஜீவனுடைய மனது இந்திரிய விஷயங்களில் எப்படி பற்றுடையதாயிருக்கிறதோ,
அப்படி பிரம்மத்திடம் பற்றுக்கொண்டால்,
எப்படி அந்த ஜீவன் தளைகளிலிருந்து முக்தியடையாமல் போவான்.(கண்டிப்பாக முக்தியடைவான்)
-
பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,நுகர்தல்,தொடுதல் என்பவை ஐந்து இந்திரிய விஷயங்கள்.
இவைகளில் மனிதன் பற்றுகொண்டவனாக இருக்கிறான்.
-
எதையும் பார்க்காமல்,எதையும் கேட்காமல் ஒருவனால் எத்தனை நாட்கள் இருக்க முடியும்?
-
சீக்கிரமே ஞானம் பெற வேண்டும் என்று சீடன் ஒருவன் குருவிடம் கூறினான்
-
குரு அவனை இருட்டு அறை ஒன்றில் வைத்து பூட்டினார். உள்ளே கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்திரு விரைவில் ஞானம் கிடைக்கும் என்றார்.
-
வெளியிலுள்ள சத்தம் எதுவும் அறைக்கு உள்ளே கேட்காது.பார்த்தல்,கேட்டல்,நுகர்தல்,தொடுதல் எதற்கும் வாய்ப்பு இல்லை
தினமும் ஒருவேளை உணவு மட்டும் கொடுக்கப்பட்டது.
-
எது பகல்,எது இரவு என்று கூட அவனால் உணர முடியவில்லை.இரண்டு நாளுக்கு மேல் சீடனால் தாக்குபிடிக்க முடியவில்லை.இன்னும் ஒருநாள் கூடுதலாக இருந்தால் பைத்தியமே பிடித்துவிடும் என்ற நிலமையை அவன் உணர்ந்தான் சீடனை குரு வெளியே திறந்துவிட்டார்
-
இப்படிப்பட்ட ஒரு அறையில் உட்கார்ந்து ஆழந்து தியானம் செய்யும் அளவுக்கு மனம் எப்போது பக்குவம் அடையுமோ அப்போது உனக்கு ஞானம் கிடைக்கும். அதுவரை அவசரப்பட வேண்டாம் என்று அறிவுரை கூறினார்.
-
பலருக்கு வாழ்க்கையின் கடைசி காலத்தில்தான் தியானத்தில் ஆழ்ந்துசெல்லும் மனநிலை வாய்க்கிறது.
-
இறைவனிடம் அன்பு ஏற்படும்போது இறைவனைத்தவிர வேறுஎதையும் பார்க்கவோ,அதையும் கேட்கவோ விருப்பம் இருக்காது.அதுவரை நமக்கு உள்ள கடமைகளை பற்றற்று செய்துகொண்டே வரவேண்டும்.
அவசரப்பட்டால் மனப்பிரச்சினைகள்தான் அதிகமாகும்.
-
பிரம்மம் என்றால் பிர+அஹம். “அஹம்” என்றால் நான்.“ப்ர” என்றால் எல்லையற்ற
-
இப்போது நம்மிடம் உள்ள “நான்” எல்லைக்கு உட்பட்ட “நான்”. நான் பார்க்கிறேன். நான் சுவைக்கிறேன் போன்றவை
-
இதே “நான்” எல்லையற்ற அளவு விரிவடைந்தால் அது ப்ரம்மமாகிறது.அதாவது எல்லையற்ற நான் ஆகிறது
-
தற்போது நான் என்று குறிப்பிடும்போது நமது உடலை குறிப்பிடுகிறோம்.
நமக்கு நூறு உடல்கள் இருந்தால் அப்போது நமது நான் என்பது சற்று பெரிய நானாக இருக்கும்.
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாமே நம்முடையதுதான் என்று புரிந்துகொண்டால் அப்போது நமது நான் மிகப்பெரிய நானாக மாறிவிடும்
-
இந்த பிரபஞ்சமே என்னுடையதுதான் என்று அனுபவத்தில் உணர்ந்தால் அப்போது அந்த நான் பிரபஞ்சஅளவுக்கு விரிவடைந்துவிடுகிறது. பிரபஞ்சம் எல்லையற்றது.
சிறிய-நான் எல்லையற்றதாகும்போது பிரம்மாகிறது
-
இந்திரிய விஷயங்களில் பற்றுகொண்ட மனிதன், பிரம்மத்திடம் பற்றுகொண்டவாக மாறும்போது தளையிலிருந்து விடுபட்டு முக்தி அடைகிறான்.
-
உபநிடதங்கள்-வகுப்பு-18
-
நாள்15-11-2019
-
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்
-
11.இருதய கமல மத்தியில், புத்திவிருத்திக்கு சாட்சியாகவும்,உயர்ந்த அன்பினால் அடையத்தக்கவனாகவும் உள்ள பரமேசுவரனை தியானிக்க வேண்டும்
-
இருதய கமல மத்தி என்பது எங்கே இருக்கிறது?
-
நமது உடலின் மையப்பகுதி எதுவோ அது தான் இருதயம்.லப்,டப் என்று துடித்துக்கொண்டிருப்பது அல்ல.அதற்கு அருகில் உள்ளது.அனாஹதம்
கமலம் என்றால் தாமரை
-
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு உருவம் உண்டு.அந்த உருவத்திற்கு ஒரு மையம் உண்டு.ஒரு அணுவை ஆராய்நால்கூட அதற்கு ஒரு மையம் உண்டு.
-
சூராவளி உருவாகும்போது அதற்கு ஒரு மையம் உருவாகிறது.சூராவளியின் வெளிப்புறத்தில் மணிக்கு 200 கி.மீ காற்று வீசும்.ஆனால் அதன் மையப்பகுதி அமைதியாக இருக்கும்.
-
மனிதனின் மையப்பகுதியும் அதேபோலத்தான் அமைதியானது.அங்கே இயக்கம் இல்லை.ஆனால் இந்த உடல் முழுவதையும் கட்டுப்படுத்துவது அதுதான்.
அனைத்து இயக்கத்திற்கும் காரணம் அதுதான்.ஆனால் அது இயங்காமல் இருக்கிறது.
-
சூரியனைக்கண்டதும் தாமரை மலர்கிறது.இரவு வேளைகளில் கூம்பிவிடுகிறது.அதேபோல மனிதனின் இருதயம் விரிவடையாமல் இருக்கிறது.இறைவனைக்கண்டதும் அது விரிவடைகிறது.
-
புத்தியின் இருப்பிடம் புருவமத்தி(ஆக்ஜா).அங்கே இறைவன் சாட்சியாக இருக்கிறார்.
உச்சந்தலை(சஹஸ்ராரம்) அங்கே இறைவன் எல்லையற்றவராக பிரம்மமாக இருக்கிறான்.
இது இறைவனின் இரண்டு நிலைகள்
-
சாட்சியாக இருக்கும் இறைவனிடம் அன்புசெலுத்தலாம்.அவரும் பிரதியாக அன்பு செலுத்துவார்.ஆனால் அவரது இயல்பு என்ன? சாட்சியாக இருப்பது.சாட்சியாக இருப்பவருக்கு எல்லாம் தெரியும்.ஆனாலும் அவர் செயல்புரிவதில்லை.
-
பிரம்மமாக இருக்கும் நிலையில் உருவங்கள் அனைத்தும் மறைந்துவிடுகிறது.அன்பை செலுத்துபவர் அன்பை பெறுபவர் என்ற வேறுபாடுகள் எதுவும் இல்லை.பிரம்மம் எதையும் பார்ப்பதில்லை,கேட்பதில்லை,சாட்சியாகவும் இருப்பதில்லை.ஏனென்றால் அங்கே உருவங்ளே இல்லை.இயக்கங்களே இல்லை.அதைத்தவிர வேறு எதுவும் இல்லை
-
எதற்காக இருதயத்தில் தியானிக்க சொல்கிறார்கள்? ஏன் புருவமத்தியில் தியானிக்ககூடாது?
-
புருவமத்தி என்பது சாட்சியாக இருக்கும் இறைவனின் இருப்பிடம்.யார் அந்த அளவுக்கு பக்குவம் அடைந்துள்ளார்களோ அவர்களால்தான் அந்த இடத்தில் தியானிக்க முடியும்.
குருநிலையில் இருப்பர்களால் மட்டுமே புருவமத்தியில் தியானிக்க முடியும்.சாதாரண மனிதர்கள் முயற்சிசெய்தால் மூளை அதிகஅளவு சூடாகி,மனநல பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.
-
எனவே ஆரம்ப நிலை சாதகர்கள் படிப்படியாக முன்னேற வேண்டும்.இருதயக்கமல மத்தியில் சாட்சியாக இருக்கும் இறைவனை நினைத்து தியானிக்க வேண்டும்.அவரிடம் அன்பு செலுத்த வேண்டும்.அவரும் பதிலுக்கு அன்பு செலுத்துவார்.அன்பைத்தவிர வேறு எதையும் அவர் எதிர்பார்ப்பதில்லை.அதேபோல அவரிடமிருந்தும் அன்பைத்தவிர வேறு எதையும் எதிர்பார்க்ககூடாது
-
நமது உடலில் மையம் இருதயக்கமலம். அங்கே தியானிக்கும் ஒருவன் படிப்படியாக உயர்ந்து தொண்டை,புருவமத்தி என்று தியானத்தை மாற்றிக்கொண்டே வரவேண்டுமா?
வேண்டாம்... முக்தி வேண்டும் என்று யார் விரும்புகிறார்களோ .பிறப்பற்ற நிலையை அடைய வேண்டும் என்று யார்விரும்புகிறார்களோ அவர்கள் இருதயக்கமலத்தில் மட்டும் தியானித்தால் போதும்.
-
குருநிலையை அடைய விரும்புபவர்கள் படிப்படியாக உயர்ந்த தளங்களில் தியானிப்பார்கள்.புருவமத்தியில் தியானித்து அதில் வெற்றி காண்பவன் பிரபஞ்ச சக்திகளை அடக்கியாளும் வல்லமை பெறுகிறான்.ஈஸ்வரன் என்ற பதவியைப் பெறுகிறான்.பிரபஞ்ச சக்திகள் அவருக்கு கட்டுப்பட்டு இயங்கும்.அந்த நிலையை அடைந்த ஒருவர் சாட்சியாக மட்டுமே இருக்க முடியும்.அவர் ஆணையிட வேண்டியதில்லை.அவரது இருப்பு ஒன்றே போதும்.
-
இராவணன் கடும்தவம் புரிந்து இராவணேஸ்வரன் என்ற பதவியைப்பெற்று பின்பு அந்த நிலையிலிருந்து வழுவி அழிந்துபோனதை இராமயணத்தில் படிக்கிறோம்.
-
உபநிடதங்கள்-வகுப்பு-19
-
நாள்16-11-2019
-
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்
-
பரமேசுவரனை இருதயக்கமல மத்தியின் தியானிக்க வேண்டும்.
தியானிக்கும்போது அவரது இயல்பை மனதில் மீண்டும்மீண்டும் கொண்டுவர வேண்டும்
ஒரு மனிதனைப்பற்றி சிந்திக்கும்போது அவன் செய்த நல்ல செயல் தீயசெயல் போன்ற அனைத்தும் மனதில் எழுகிறது.அதேபோல பரமேசுவரனை தியானிக்கும்போது அவரது இயல்பை மனதில் கொண்டுவர வேண்டும்
-
அந்த பரமேசுவரனின் இயல்பு என்ன?
-
12.அந்த பரமேசுவரன் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாதவர்.
அவர் ஆதியும் அந்தமும் இல்லாதவர்.
ஒரே அறிவு மயமாகப் பிரகாசிப்பவர்.
பாவனைக்கு அப்பாற்பட்டவர்
-
13.தள்ளவும் கொள்ளவும் முடியாதவர்.
குணமும் குறியும் அற்றவர்.
மாறுபடாதவர்.
ஆழங்காண முடியாதவர்.
இருளுக்கும் ஒளிக்கும் அப்பாற்பட்டவர்.
கற்பனைக்கு எட்டாதவர்.
பரம சாந்தி ஸ்வரூபமான ஞான ஒளியாய் விளங்குபவர்
-
14.நித்திய சுத்த புத்த முக்த இயல்பினர்
ஸத்தியமாகவும்
ஸுக்ஷ்மமாகவும்
எங்கும் நிறைந்தவராகவும்
இரண்டற்றவராகவும்
ஆனந்தக்கடல் போன்றவராகவும் அந்த பரமேசுவரன் இருக்கிறார்
அந்த பரமேசுவரனே “நான்” என்று தியானம் செய்ய வேண்டும்
இப்படி தியானம் செய்பவனுடைய எல்லா சந்தேகங்களும் தீர்ந்துபோகும்
-
அந்த பரமேசுவரனின் இயல்பு என்ன என்பதை பார்த்தோம். அவரே ”நான்” என்று தியானிக்க வேண்டும்.
பொதுவாக ”நான்” என்று கூறும்போது நமது உடலை மையப்படுத்தி கூறுகிறோம்.அது சிறிய நான்.
இங்கே அந்த ”நான்” என்பதை கூறவில்லை.
-
அந்த பரமேசுவரனும் நானும் ஒன்று.இரண்டும் வேறல்ல என்று தியானிக்க வேண்டும்.
முதலில் பரமேசுவனின் இயல்புகளை தியானிக்க வேண்டும்.
பின்பு நானும் பரமேசுவரனும் ஒன்று என்று தியானிக்க வேண்டும்.
-
முதலில் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வது கடினம்.
நூறில் ஒருவராவது ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம்.
அப்படி ஏற்றுக்கொண்ட ஒருவரால் இப்படி தியானிக்க முடியுமா என்பது மேலும் சந்தேகம்
-
சுவாமி விவேகானந்தர் இந்த கருத்துக்களை வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்தார்.
அவரது சொற்பொழிவை கேட்ட வெளிநாட்டினர் அப்படியே ஆச்சர்யத்தில் அசந்துபோய்விட்டார்கள்.
கடவுளிடம் பயப்படவேண்டும்,அவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்றே காலம் காலமாக எங்களுக்கு போதித்துள்ளார்கள்.எங்கள் மதநூல்களுக்கு எதிராக கேள்வி கேட்கக்கூட எங்களுக்கு தைரியம் இல்லை.அப்படி கேள்வி கேட்பவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
ஆனால் நீங்கள் நானும் கடவுளும் ஒன்று என்ற கருத்தை போதிக்கிறீர்கள்.இதுதான் இந்தியாவின் சாஸ்திரம் என்கிறீர்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இப்படிப்பட்ட கருத்துக்கள் இருக்கிறது.அதை அங்குள்ள மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்,பின்பற்றுகிறார்கள் என்றால்,அவர்கள் எந்த அளவுக்கு பக்குவப்படவார்களாக இருக்க வேண்டும் என்று ஆச்சர்யப்பட்டு கூறினார்கள்.
-
கடவுளுக்கு பயப்படுவதாக கூறுபவன் மூடநம்பிக்கை உள்ளவன்.உண்மையை அறியாதவன்.
-
இதைத்தான் நமது வேதங்கள் உரத்தக்குரலில் கூறுகின்றன.
-
தியானத்தில் ஆழ்ந்துசென்று,உலக வாழ்க்கையை துறந்து,உலகத்தில் பற்று நீங்கி,தனது உடலை நான் என்று எண்ணாத,உடல் பற்று இல்லாதவர்கள் மட்டுமே ”நானே பரமேசுரன்” என்று கூற தகுதி உள்ளவர்கள்.
-
மற்றவர்கள் அப்படிக்கூற தகுதி இல்லை.அது தன்னையும் ஏமாற்றி பிறரையும் ஏமாற்றும் செயலாகும்.
வேதத்தை நன்கு படித்த ஒருவன்கூட ”நானே இறைவன்” என்று இன்னொருவரிடம் கூறினால்கூட தவறுதான்.நான்-நீ என்ற பாகுபாடு இருக்கும் ஒருவர்,தன்னை ஒரு உடலாகக் கருதும் ஒருவன் இந்த வார்த்தையை பய்னடுத்துவது என்பது பொய் சொல்வது போன்றது.
ஒருவர் தியானிக்கும்போது இந்த உணர்வோடு தியானிக்கலாம்.
தியான நேரம் தவிர மற்ற நேரங்களில் உடல் உணர்வு இருக்கும்.
நான்-உடல் என்ற உணர்வு இருக்கும்வரை அறியாமை இருக்கும்.
அறியாமை இருக்கும்வரை ”நானே இறைவன்” என்ற ஞானம் வராது.
-
இங்கே இந்த உபதேசங்களை யார் யாருக்கு கூறுகிறார் என்பதை மனதில் அவ்வப்போது கொண்டுவர வேண்டும்.
பிரஹத்ரதன் என்ற அரசன் நாட்டைத்துறந்து,உலகத்தைத் துறந்து கடும்தவம் செய்து ஞானம் பெற்றிருக்கிறான்
அந்த ஞானம் எது என்பதை, ஏற்கனவே ஞானம் பெற்று பகவான் என்ற நிலையில் இருக்கும் சாகாயன்யர் கூறுகிறார்
-
பகவான் சாகாயன்யர் ”நானே இறைவன்” என்பதை உணர்ந்தவர். பிரஹத்ரதன் என்ற அரசன் இதை உணரவேண்டும் என்று விரும்புகிறார்.
-
அப்படியென்றால் நாம் எதற்காக இதையெல்லாம் பற்றி படிக்கிறோம் என்றால்,இவைகளை முதலில் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் சொத்து எது? என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் பிறநாட்டினர் இதை திருடிச்சென்று,அவர்களுக்கு சொந்தமானது என்று கூறுவார்கள். ஏற்கனவே நமது வழிபாடுகள்,சடங்குகள் பலவற்றை திருடிவிட்டார்கள்.
-
பிரஹத்ரதன் என்ற அரசனைப்போல முழுக்க முழுக்க தியானத்தில் ஆழ்திருக்க வல்லவர்களுக்கு இந்த கருத்துக்கள் உபயோகமாக இருக்கும். மற்றவர்கள் இதை தெரிந்து வைத்திருப்பது நல்லது. எப்போதாவது ஒரு காலத்தில் பயன்படும்.சிலருக்கு வாழ்க்கையின் கடைசி காலத்தில் பயன்படும்.எனவே படிப்பது நல்லதுதான்.படித்ததைக்குறித்து சிந்திப்பதும் நல்லதுதான்.அதை பின்பற்றும் அளவுக்கு தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்
-
அந்த பரமேசுவரன் மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாதவன்.
-
ஏன் மனத்தால் அறிய முடிவதில்லை? பரமேசுவரனை நேரில் கண்டவர்கள் எப்படி அதை கண்டிருப்பார்கள்? அவர்களால் ஏன் விளக்கிகூற முடிவதில்லை?
-
தியானத்தில் ஆழ்ந்திருக்கும் ஒருவன் முதலில் சாதாரணமாக நாம் காணும் வெளிஉலகத்தைவிட்டு கண்களை மூடி,
மனத்தால் சிந்திக்கக்கூடிய மன உலகிற்கு வருகிறான்.
இங்கே பல ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு உருவங்கள் மனதில் எழுகின்றன.
பல்வேறு சிந்தனைகள் வருகின்றன.
படிப்படியாக மனத்தில் உள்ள எண்ணங்களை எல்லாம் நீக்கியபின்
மனம் சமநிலை அடைகிறது.
அப்போது உலகத்தைப்பற்றிய சிந்தனைகள் இல்லை.
உடலைப்பற்றிய சிந்தனைகள் இல்லை.
மனம் என்பதே வேலைசெய்யவில்லை.
அந்த நிலையில் அவனது நான் உணர்வு எல்லையற்றநிலையை அடைகிறது.
அப்போது பரமேசுரனின் காட்சி(பரமாத்மா) கிடைக்கிறது.
அப்போது எல்லையற்ற ஆனந்தம் கிடைக்கிறது.
அந்த காட்சியை பதிவுசெய்ய மனம் இல்லை.
ஏனென்றால் அதற்கு முன்பே மனம் இல்லாமல்போய்விட்டது.
மனம் இல்லாதததால் பரமேசுவரனின் காட்சி அதில் பதிவாகாது.
-
பின்பு உயர்ந்த நிலையிலிருந்து சற்று கீழே வரும்போது பரமேசுரனின் காட்சி கிடைப்பதில்லை.
இப்போது மனம் மீண்டும் வேலைசெய்ய ஆரம்பிக்கிறது.
மனத்தில் எவ்வளவுதான் தேடிப்பார்த்தாலும் பரமேசுவரனைப்பற்றிய பதிவுகள் இல்லாததால்,அதைக்குறித்து அவனாலும் தெரிந்துகொள்ள முடியாது பிறரிடமும் எதுவும் கூற இயலாது.
ஆனால் நான் பார்த்தேன் என்ற உணர்வு மட்டும் அவனிடம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும்.
பரமாத்மாவைக் காணும்போது கிடைத்த ஆனந்தம் மறைந்துபோகும்
-
15.அந்த காட்சி ஆனந்தத்திற்கு உறைவிடமாக உள்ளது,ஆசையாகிய பேயை அவமதித்து விரட்டுவதாக உள்ளது.
நான் பரமாத்மாவைக் கண்டுகொண்டேன்,இந்த உலகம் ஒரு இந்திரஜாலம் போன்று பொய் என்பதை தெரிந்துகொண்டேன்.இனி என்னிடம் ஆபத்து எப்படி வரும்?
-
பரமாத்மா-பரமேசுவரன் எல்லாம் ஒன்றுதான்,வார்த்தைகள்தான் வேறு.பர என்றால் மேலான, ஆத்மா என்றால் எல்லையற்ற நான் உணர்வு. பர-ஈஸ்வரன்(பரமேசுவரன்) என்றால் பிரபஞ்சத்தையே ஆள்பவன்.
-
பரமாத்மாவின் காட்சி ஆனந்தத்தை கொடுத்தது.அதை அடைந்தபின் இந்த உலகத்திலுள்ள எதையும் மனம் விரும்பாது.ஆசைகள் அனைத்தும் அகன்றுவிடும்.
இந்த உலகம் ஒரு மாயத்தோற்றம்போல காட்சிதருகிறது.அது இருப்பதுபோல தெரிகிறது. இல்லாததுபோலவும் தெரிகிறது.
எனக்கு சிறிய உடல் இருப்பதுபோல தெரிகிறது.அதேவேளையில் உடல் இல்லை என்பதும் புரிகிறது.
இந்த நிலையில் எதைக்குறித்து கவலைப்பட வேண்டும்? யாரைக்குறித்து கவலைப்பட வேண்டும்? இந்த உலகமே மாயத்தோற்றம்போல.ஒரு கனவு போல தெரியும்போது பயப்படுவதற்கு என்ன உள்ளது?
கனவு கலைவதற்கு யாராவது பயப்படுவார்களா?இந்த உடல் என்பது கனவில் வரும் ஒரு கதாபாத்திரம்போல உள்ளது.இது மறைந்தாலும் நான் அழிவதில்லையே!!!
-
உபநிடதங்கள்-வகுப்பு-21
-
நாள்18-11-2019
-
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்
16. வர்ணாசிரம தர்மத்தில் மதியிழந்து பல்வேறு கருமங்களில் பற்றுகொண்டவர்கள் அவற்றின் பயனை அடைகிறார்கள்.
வர்ணாசிரம தர்மங்களைத் துறந்து ஆத்மானந்தத்தில் திருப்தியடைந்தவர்களே உண்மையான புருஷர்களாவார்
-
17. வர்ணாசிரம தர்மம் பல பாகங்களை உடையதாய் ஆதியும் அந்தமும் உடையதாய் மிகுந்த துன்பத்தையே தருவதாக உள்ளது.
அதில் பற்றைத்துறந்து குடும்பம்,பிள்ளைகள்,உடல் முதலிய அபிமானத்தைவிட்டு,
உத்தமமான, அளவு கடந்த ஆத்மசுகத்தை நாடுவதே வாழ்க்கையின் பயன்
-
வர்ணாசிரமம்=வர்ணம்,ஆசிரமம் என்று இரண்டு உண்டு.ஒவ்வொரு குணம் உள்ளவனும் தனது குணத்துக்கு ஏற்ப உள்ள தொழிலை செய்கிறான்.அறிவில் குறைந்தவன் கூலிவேலை செய்யவே விரும்புவான்.அவனை மந்திரியாக்க முடியாது.மந்திரியாக்கினால் நாடு அழிந்துபோகும்
-
மனிதன் செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்து நான்கு வர்ணங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
பிறருக்கு கீழ் வேலை செய்பவன் -சூத்திரன்
சுயதொழில் செய்பவன்-வைசியன்
மக்களை ஆட்சி செய்பவன்-சத்திரியன்
வேதத்தை பயிற்றுவிப்பவன்-பிராமணன்
-
மனிதனின் வாழ்க்கைப் படிகள் நான்கு
குருவிடம் பாடம் கற்கும் பருவம்-பிரம்மச்சர்யம்
திருமணம்செய்து குடும்பவாழ்வில் ஈடுபடும் பருவம்-கிருஹஸ்தம்
குடும்ப வாழ்விலிருந்து ஒதுங்கி கணவன்,மனைவி தனியாக வாழ்வது-வனப்பிரஸ்தம்
உலகத்தை துறந்து தனிமையில் வாழ்வது-சந்நியாசம்
-
முற்ககாலத்தில் நான்கு வர்ணத்தினருக்கும்,
நான்கு ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கும்
தனித்தனியாக சட்டங்கள்,கடமைகள் வரையறுக்கப்பட்டன.
சந்நியாசம் சென்றவர்களுக்கு கடமைகள் இல்லை.சில நியதிகளை பின்பற்ற வேண்டும்
-
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலன் உண்டு.அந்தந்த நிலைகளில் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை முறையாக செய்தால் அதற்கு ஏற்ப பலன் கிடைக்கும்.
அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்கவேண்டும் என்று விரும்பினால் ராஜாவாக பிறக்க வேண்டும்.
இந்த பிறவியில் தவம் செய்தால் அடுத்த பிறவியில் ராஜாவாக பிறக்கலாம்.
ஒரு ராஜா பிராமணனாக வேண்டுமானால் தவம் செய்ய வேண்டும்.
ஒரு நிலையில் உள்ளவர்கள் வாழ்க்கை முழுவதும் அப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஒரு சூத்திரன் தன் தகுதிகளை வளர்த்துக்கொண்டால் விரைவில் வைசியனாகலாம்,
பின்னர் சத்திரியனாகலாம் பின்னர் ராஜாவாகலாம்.
பிராமணனுக்குரிய தகுதி உள்ள ஒருவனால் சூத்திரனுக்குரிய வேலையை செய்ய முடியாது.
அவன் சூத்திர குலத்தில் பிறந்திருந்தாலும் விரைவில் பிராமணனுக்குரிய அந்தஸ்தை பெறுவான்.
உலகம் அவனை பிராமணனாக அறிவிக்கும்.
-
பிராமணனுக்கு மகனாக பிறப்பவன் பிறப்பவன் பிராமணன் அல்ல.தவம் செய்து பிராமண நிலையை அடைய வேண்டும். அந்த நிலையை அடைய முடியாவிட்டால் உலகம் அவனை பிராமணனாக ஏற்றுக்கொள்ளாது.
தங்களை பிராமணன் என்று சொல்லிக்கொண்டு,பிறருக்குகீழ் வேலை செய்பர்கள்,,சுயதொழில் செய்பவர்கள்,ஆட்சிஅதிகாரத்தில் இருப்பார்கள் பலரை நாம் பார்கிறோம்.இவர்கள் உண்மையில் பிராமணர்கள் அல்ல.பிராமண வம்சத்தில் வந்தவர்கள்.இவர்களது முன்னோர்கள் ஒரு காலத்தில் உண்மையான பிராமணர்களாக வாழ்ந்திருப்பார்கள்.
-
அதனால் நாம் இப்போது இருக்கும் நிலைக்கு நாம்தான் காரணம்.
நமது தகுதிக்கு ஏற்ற வேலையைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறோம்.
வியாபாரத்தில் நுணுக்கம் தெரிந்த ஒருவன் அதிகநாள் பிறரிடம் அடிமைவேலை செய்ய மாட்டான்.
தன்னிடமுள்ள சிறிய வருமானத்தைக்கொண்டு சுயதொழில் தொடங்கி படிப்படியாக பெரிய வியாபாரியாக மாறிவிடுவான்.
ஒரு வியாபாரிக்கு அரசியல் அறிவு இருந்தால்.படிப்படியாக அரசியலில் ஈடுபட்டு நாட்டை ஆளும் நிலைக்கு வந்துவிடுவான்.
அதனால் நான் பெரிய அறிவாளி உலகம் என்னை கண்டுகொள்ளவில்லை என்று நினைப்பது அறிவீனம்.
புத்தகங்களை படித்து பரீட்சை எழுதியவன் அறிவாளி அல்ல.
படிக்காமலேயே பெரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பவர்கள் அதிகம்பேர் இருக்கிறார்கள்.
ஏழையாக பிறந்து நாட்டையே ஆள்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சூத்திரகுலத்தில் பிறந்து வேதத்தையே தொகுத்துகொடுத்த வியாசர் இருக்கிறார்.சூத்திரகுலத்தில் பிறந்து தவத்தின் மூலம் பிராமணநிலையை அடைந்த வால்மீகியை யாரும் மறக்க முடியாது.
-
இந்த வர்ணாசிரமங்களில் வாழ்பவர்கள் இன்பம்,துன்பம் இரண்டையும் அனுபவிக்கிறார்கள்.இன்பமும் வேண்டாம் துன்பமும் வேண்டாம்,இந்த உலகில் உள்ள சுகங்கள் எதுவும் வேண்டாம் என்ற வைராக்கியம் ஏற்பட்டவர்கள் தியானத்தில் ஆழ்ந்து செல்கிறார்கள்.
ஆத்மாவிலிருந்து வரும் ஆனந்தத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.அந்த ஆனந்தத்திற்கு இணையானது வேறு எதுவும் இல்லை.
-
இந்த உலகத்தில் கிடைக்கும் இன்பங்களின் அளவு சிறியது. ஆத்மாவிலிருந்து வரும் ஆனந்தத்தின் அளவு எல்லையற்றது. அதை ஒருமுறை அனுபவித்தபிறகு இந்த உலகின் மிகப்பெரிய இன்பங்கள்கூட மிகச்சிறியதாகவே தோன்றும்
-
மனிதர்கள் இன்பத்தை நாடியே உழைக்கிறார்கள்.பெரிய இன்பம் கிடைக்கும் என்று தெரிந்தால் சிறிய இன்பத்தை துறக்க யாரும் வருத்தப்படமாட்டார்கள்.
ஆத்மானந்தம் என்பதுதான் மிகப்பெரிய இன்பம்.அது சில உத்தமமான மனிதர்களுக்கே கிடைக்கிறது.
மற்றவர்கள் சிற்றின்பத்தில் திருப்தியடைந்து,மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து சம்சார சக்கரத்தில் மிதிபடுகிறார்கள்.
-
ஒரு நரி திராட்சைப்பழங்களை பறிக்க ஆசைப்பட்டு.கடைசியில் சீ.சீ இந்தப்பழம் புளிக்கும் என்று கூறிய கதை நமக்கு தெரியும்.
அதேபோலத்தான் எல்லா மனிதர்களுக்கும் பேரின்பத்தை அடையவேண்டும் என்ற ஆசை உள்ளது.
பிறப்பதற்கு முன்பு ஒருவன் என்ன நினைக்கிறான் என்றால்,இந்த பிறவியில் எல்லா பாவகர்மத்தையும் அனுபவித்து முடித்துவிட்டு மீண்டும் பிறப்பற்ற நிலையான முத்தியை அடைந்து பேரின்பத்தை சுவைத்துக்கொண்டே இருப்பேன்
என்று நினைக்கிறான்.
ஆனால் உலகத்தில் பிறந்த உடன் அந்த அறிவு மறைந்துவிடுகிறது.மாயை கண்ணை மறைத்துவிடுகிறது. மீண்டும் பாவங்கள் செய்து மறுபிறவியை அடைகிறான்.
-
இந்த உலக வாழ்வில் கிடைக்கும் இன்பமே போதும் என்று நினைப்பவன் திராட்சைப்பழங்களை தின்ன நினைத்து ஏமாந்த நரியைப்போன்றவனே...
Copyright © 2020 hindumatham.in - All Rights Reserved.
swami vidyananda-Guruji