இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்இந்துமதத்தின் தத்துவங்கள்

stories of sri ramakrishna ஸ்ரீராமகிருஷ்ணர் கூறிய கதைகள்,

அடித்தவரே பாலூட்டுகிறார்

அடைகாக்கும் பறவையும் யோகியும்

அடைகாக்கும் பறவையும் யோகியும்

image86

அடைகாக்கும் பறவையும் யோகியும்

அடைகாக்கும் பறவையும் யோகியும்

அடைகாக்கும் பறவையும் யோகியும்

image87

அரசனும் சமையல்காரனும்

அடைகாக்கும் பறவையும் யோகியும்

அரசனும் சமையல்காரனும்

image88

ஆட்டுப் புலி

ஆஸ்பத்திரியும் உலக வாழ்க்கையும்

அரசனும் சமையல்காரனும்

image89

ஆஸ்பத்திரியும் உலக வாழ்க்கையும்

ஆஸ்பத்திரியும் உலக வாழ்க்கையும்

ஆஸ்பத்திரியும் உலக வாழ்க்கையும்

image90

உப்பு பொம்மை

ஆஸ்பத்திரியும் உலக வாழ்க்கையும்

ஆஸ்பத்திரியும் உலக வாழ்க்கையும்

image91

அடித்தவரே பாலூட்டுகிறார்

PART-1

  


மணிலால் மல்லிக் காசிக்குச்சென்று திரும்பியிருந்தார். அவர் ஒரு வியாபாரி, காசியில் அவருக்கு ஒரு வீடு இருந்தது.

ஸ்ரீராமகிருஷ்ணர்--- நீங்கள் காசிக்குப்போயிருந்தீர்களே! ஆமாம், அங்கே சாது-டாது யாரையாவது பார்த்தீர்களா?

மணிலால்--- ஆம் சுவாமி, திரைலங்க சுவாமி, பாஸ்கரானந்தர் ஆகியோரைக் காணப் போயிருந்தேன்.

ஸ்ரீராமகிருஷ்ணர்--- அவர்கள் எப்படிப்பட்டவர்கள், சொல்லுங்கள் கேட்கலாம்.

மணிலால்---திரைலங்க சுவாமி மணிகர்ணிகா கட்டத்தில், வேணி மாதவர் கோயிலுக்கு அருகில் அதே கோயிலில் தான் இருக்கிறார். முன்பெல்லாம் அவர் இன்னும் உயர்ந்த நிலையில் இருந்ததாக மக்கள் சொல்கிறார்கள். அப்போது பல அற்புதச் செயல்களைச் செய்யக்கூடிய திறமை அவருக்கு இருந்ததாம். இப்போது அந்த சக்தி எல்லாம் மிகவும் குறைந்துவிட்டது.

ஸ்ரீராமகிருஷ்ணர்---இதெல்லாம் உலகியல் மக்கள்பேசும் நிந்தை மொழிகள்.

மணிலால்---சுவாமி பாஸ்கரானந்தர் அனைவருடனும் கலந்து பழகுகிறார். அவர் திரைலங்க சுவாமியைப்போல் ஒரேயடியாக யாருடனும் பேசாமல் இல்லை.

ஸ்ரீராமகிருஷ்ணர்--- பாஸ்கரானந்தருடன் நீங்கள் ஏதாவது பேசினீர்களா?

மணிலால்----ஆம் பலவிஷயங்களைப் பேசினோம். பாவ புண்ணியம் பற்றியும் பேச்சுவந்தது. பாவ வழியில் போகாதே, பாவ நினைவுகளை விட்டொழி. புண்ணியம் தரக்கூடிய செயல்களிலேயே ஈடுபடவேண்டும். இதையே கடவுள் விரும்புகிறார்” என்றார் அவர்.

ஸ்ரீராமகிருஷ்ணர்----ஆம் அப்படியும் ஒரு பாதை இருக்கிறது, அது உலகியல் மக்களுக்கு உள்ளது. ஆனால் விழிப்புணர்வுபெற்றவர்கள் , அதாவது இறைவன் மட்டுமே உண்மை, மற்ற எதுவும் உண்மையில்லை” என்பதை உணர்ந்தவர்கள் வேறு மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள்.” இறைவன் ஒருவனே அனைத்தையும் செய்பவன், மற்ற அனைவரும் அவருடைய கருவிகள் மட்டுமே என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

விழிப்புணர்வு பெற்றவர்கள் ஒரு போதும் தாளம் தவறுவதில்லை. ஆராய்ந்து பாவங்களை விலக்க வேண்டியதில்லை. இறைவனிடம் அவர்களுக்கு அந்த அளவுக்கு பக்தி நிறைந்திருப்பதன் காரணமாக அவர்கள் எதைச் செய்தாலும் அது நல்லதாக ஆகிவிடுகிறது.ஆனால் அந்தச்செயலைச்செய்தவன் நான் அல்ல, நான் இறைவனின் சேவகன். நான் எந்திரம், இறைவனே அதை இயக்குபவர். அவர் என்னை எவ்வாறு செய்விக்கிறாரோ அவ்வாறு நான் செய்கிறேன், அவர் எப்படி பேச வைக்கிறாரோ அப்படியே நான் பேசுகிறேன், அவர் எப்படி என்னை இயக்குகிறாரோ அப்படி நான் இயங்குகிறேன், என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர்.

விழிப்புணர்வு பெற்றவர்கள் பாவ புண்ணியங்களைக் கடந்தவர்கள். இறைவனே எல்லாவற்றையும் செய்கிறார் என்பதை அவர்கள் பார்க்கின்றனர்.

ஒரு கதை சொல்கிறேன் கேள்..

ஓரிடத்தில் ஒரு மடம் இருந்தது. அங்கே வாழ்ந்து வந்த துறவிகள் நாள்தோறும் மதுகரி பிட்சைக்காகப் போவார்கள். அவர்களுள் ஒருவர் ஒருநாள் பிட்சை வாங்கிக்கொண்டிருந்த போது, ஒரு ஜமீன்தார், யாரோ ஒருவனை ஈவிரக்கமின்றி அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்தத் துறவி மிகவும் கருணை வாய்ந்தவர். அவர் இடையில் குறுக்கிட்டு, அடிப்பதை நிறுத்தும்படி ஜமீன்தாரிடம் கேட்டுக்கொண்டார்.

ஜமீன்தாருக்கு அப்போது கோபம் பொங்கிக்கொண்டிருந்தது. 

அந்தக்கோபத்தை துறவியின் மீது காட்டி விட்டார். ஜமீன்தார் அடித்த அடியில் துறவி சுயநினைவை இழந்து தரையில் சாய்ந்தார். இதைப் பார்த்த ஒருவர் மடத்திற்குச் சென்று., உங்களுள் ஒருவரை ஜமீன்தார் புரட்டி எடுத்துவிட்டார் என்று தெரிவித்தார்..

மடத்துத் துறவிகள் ஓடிச்சென்றனர், அங்கே துறவி நினைவிழந்து கிடந்தார். நாலைந்து துறவியர் அவரை மடத்துக்குத் தூக்கிக்கொண்டு போய் ஓர் அறையில் படுக்க வைத்தனர். அவருக்கு நினைவு வரவில்லை. சில துறவிகள் அவரைச்சுற்றி வருத்தத்துடன் உட்கார்ந்திருந்தனர். ஒரு சிலர் அவருக்கு விசிறினர். வாயில் கொஞ்சம் பால் புகட்டிப்பார்க்கலாம்” என்று ஒருவர் சொன்னார். வாயில் சிறிது சிறிதாகப் பாலை புகட்டியதும் அவருக்கு மயக்கம் தெளிந்தது. அவர் கண்களைத் திறந்து பார்த்தார். ஓ! இவருக்கு நினைவு வந்துவிட்டதா? ஆட்களை அடையாளம் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்! என்று கூறிவிட்டு , ஒருவர் அவரிடம் உரத்த குரலில், சுவாமி, உங்களுக்கு யார் பால் புகட்டுகிறார்கள்? என்று கேட்டார். அதற்கு அந்தத்துறவி மெல்லிய குரலில், சகோதரா, யார் என்னை அடித்தாரோ அவரே தான் இப்போது பாலூட்டுகிறார்” என்று கூறினார்.

இறைவனை அறியாமல் இத்தகைய நிலை ஏற்படுவதில்லை.

மணிலால்- ஆம், நீங்கள் கூறியது மிக மிக உயர்ந்த நிலை. இது போன்ற விஷயங்களைப் பற்றி எல்லாம் பாஸ்கரானந்தருடன் பேசினேன்.

(கருத்து…அவன் அனைவரையும் இறைவனாக காணக்கூடிய உயர்ந்த மனநிலையில் இருந்தார். ஜமீன்தார் வடிவத்தில் இருந்தவரும் இறைவன்தான் என்பதை புரிந்துகொண்டிருந்ததால் அவர்மீது கோபப்படவில்லை)

image92

அடைகாக்கும் பறவையும் யோகியும்

2


🌸

மாலை நேரம் ஆகத் தொடங்கியது. அறையின் தென்கிழக்கு வராந்தாவில் வாசலின் அருகில் குருதேவர் ம-வுடன் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-(ம-விடம்)---

யோகியின் மனம் எப்போதும் இறைவனிடம் இருக்கும். எப்போதும் ஆன்மாவிலேயே நிலைத்திருக்கும். பார்க்கும்போதே அவனை அடையாளம் கண்டுகொள்ளலாம். அவனது கண்கள், முட்டையை அடைகாக்கும் பறவையின் கண்கள்போல் எங்கேயோ பார்த்தவண்ணம் அகலத்திறந்திருக்கும்.மனம் முழுக்க முழுக்க முட்டையின் மீது நிலைத்திருக்கும். கண்களில் ஒரு வறட்டுப்பார்வையிருக்கும். அப்படிப்பட்ட ஒருபடத்தைக் கொண்டு வந்து காட்டுகிறாயா?

ம---ஆகட்டும், சுவாமி, எங்கேயாவது கிடைக்குமா என்று பார்க்கிறேன்.

மாலைநேரம் ஆகிவிட்டது. காளி கோயிலிலும் ராதாகாந்தர் கோயிலிலும், பிற கோளில்களிலும் அறைகளிலும் விளக்குகள் ஏற்றப்பட்டன. குருதேவர் சிறிய கட்டிலில் அமர்ந்து தேவியை தியானித்தார். பிறகு தெய்வத்திருநாமங்களை இனிமையாகப் பாடினார். அறையில் சாம்பிராணிப் புகை இடப்பட்டது. ஒருபக்கம் விளக்குத்தண்டு ஒன்றில் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் சங்கும் மணியும் முழங்கின. காளி கோயிலில் ஆரதி நடைபெற்றது. வளர்பிறை பத்தாம் நாள், நாலாபுறமும் வெள்ளம்போல் நிலவொளி பரவியிருந்தது.

🌸

ஆரதி நிறைவுற்றது . குருதேவர் சிறிய கட்டிலில் அமர்ந்திருந்தார். அறையில் மகேந்திரர்(ம-)மட்டும் தரையில் உட்கார்ந்திருந்தார்.குருதேவர் அவரிடம் பேசத்தொடங்கினார்.

பற்றின்றி வேலை செய்து வா, வித்யாசாகர் செய்கி்ன்ற பணிகள் சிறந்தவை. அவர் பற்றின்றி பணி செய்ய முயற்சிக்கிறார்.

மகேந்திரர்(ம-)---அப்படியே சுவாமி, வேலைகளைச்செய்து கொண்டே இறைவனை அடைய முடியுமா? கடவுளும் ஆசையும் இணைந்திருக்க முடியுமா? யஹாம் ராம் தஹாம் நஹி காம், யஹாம் காம் தஹாம் நஹி ராம்” என்று ஓர் இந்தி நூலில் படித்தேன்.(காமம் உள்ளவர்களிடம் இறைவன் இல்லை)

ஸ்ரீராமகிருஷ்ணர்--- எல்லோரும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறோம். பகவானின் நாமங்களைப் பாடுவதும் அவரது மகிமைகளைப்பேசுவதும் கூட செயல்தான். அத்வைதிகள் ”நானே அவன்” என்று தியானிப்பதும் செயல்தான். மூச்சு விடுவது கூட செயல்தான். செயலை விட்டுவிடுவது சாத்தியமில்லை, எனவே கடமைகளைச்செய்.ஆனால் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்துவிடு.

மகேந்திரர்(ம-)--அப்படியே செய்கிறேன், அதிகமாகப்பணம் சம்பாதிக்க நான் முயற்சி செய்யலாமா?

ஸ்ரீராமகிருஷ்ணர்--- தார்மீக வாழ்க்கைக்காகச் செய்யலாம்.நன்றாக முயற்சி செய். ஆனால் பணம் சம்பாதிப்பது லட்சியம் அல்ல. இறைவனுக்குச்சேவை செய்வதே லட்சியம். பணத்தால் இறைவனுக்குச்சேவை நிகழுமானால் அந்தப் பணத்தில் குற்றம் இல்லை.

மகேந்திரர்(ம-)- எவ்வளவு காலம் குடும்பக் கடமைகளைச்செய்ய வேண்டும்?

ஸ்ரீராமகிருஷ்ணர்--- அவர்களுக்கு உணவும் உடையும் சிரமமின்றிக் கிடைக்கின்ற நிலைமை வரும்வரை. பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கும் திறமை வந்துவிட்டால் அதன்பிறகு அவர்களின் பாரத்தைச் சுமக்க வேண்டியதில்லை. குஞ்சுகள் தாங்களே இரையைக்கொத்தித் தின்ன கற்றுக் கொண்ட பின் தாயிடம், உணவிற்காக வந்தால் தாய்ப்பறவை அவற்றைக் கொத்தி விரட்டிவிடும்.

மகேந்திரர்(ம-)- எவ்வளவு காலம் கடமைகளைச் செய்யவேண்டும்.?

ஸ்ரீராமகிருஷ்ணர்- காய் தோன்றியபின் பூ நிலைப்பதில்லை. இறையனுபூதி பெற்றபின் ஒருவன் கடமைகளைச்செய்ய வேண்டியதில்லை. அதற்கு மனமும் இருக்காது.

image93

அரசனும் சமையற்காரனும்

3

    

அரசனும் சமையற்காரனும்

🌸

ஆதி சங்கரர் பிரம்மஞானி என்பது உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அவரிடம் வேற்றுமை பாராட்டும் மனநிலை இருந்தது. 

அத்வைதத்தில் அவ்வளவு நம்பிக்கை இருக்கவில்லை. ஒரு சமயம் அவர் கங்கையில் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார். 

ஒரு சண்டாளன் மாமிசத்தைத்தூக்கிக்கொண்டு எதிரே வந்தான். அவனது உடம்பு சங்கரரின் மீது பட்டுவிட்டது, டேய், நீ என்னைத் தொட்டு விட்டாயே! என்று கூவினார் சங்கரர். 

அதற்கு சண்டாளன், சுவாமி நீங்களும் என்னைத்தொடவில்லை, நானும் உங்களைத்தொட வில்லை.சுத்த ஆன்மா யாரோ அவர் உடல் அல்ல, பஞ்சபூதங்கள் அல்ல, இருபத்து நான்கு தத்துவங்களும் அல்ல, என்றான். அப்போது சங்கரருக்கு உண்மை விளங்கியது.

🌸

ரகு கணன் என்ற மன்னனின் பல்லக்கைச் சுமந்து சென்றபடியே ஜடபரதர் ஆன்ம ஞானம் பற்றிபேசினார். 

உடனே மன்னன் பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி வந்து, தாங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு ஜடபரதர், நான் இது அல்ல, இது அல்ல. நான் சுத்த ஆன்மா” என்று கூறினார். 

தான் சுத்த ஆன்மா என்பதில் ஜடபரதருக்குப் பரிபூரண நம்பிக்கை இருந்தது.

நானே அவன், நான் சுத்த ஆன்மா-இது ஞானிகளின் கருத்து. 

பக்தர்களோ இவையெல்லாம் பகவானின் ஐசுவரியம் என்பார்கள். செல்வம் இல்லாவிட்டால் எப்படி ஒரு செல்வந்தரைப் பிரித்தறிய முடியும்?

சாதகனின் பக்தியைப் பார்த்து பகவானே அந்தச் சாதகனிடம், நான் எதுவோ, அதுவே நீ” என்று சொல்வாரானால் , அப்போது விஷயமே வேறு, 

🌸

அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். சமையற்காரன் அங்கு வந்து அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு, அரசே நீங்களும் நானும் சமம். என்று கூறுவானானால், உலகம் அவனைப் பைத்தியம் என்று கூறும். 

ஆனால் சமையற்காரனின் சேவையைக்கண்டு மகிழ்ந்து அரசனே ஒரு நாள் அவனிடம், அடேய் நீ என்னருகில் வந்து அமர்ந்து கொள், அதில் தவறு எதுவும் இல்லை. நீயும் நானும் சமம் என்று கூறுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது சமையற்காரன் அரசனின் அருகில் சென்று அமர்வதில் தவறில்லை. 

சாதாரண மனிதன் , நான் அவனே” என்று சொல்வது நல்லதல்ல. அலை, தண்ணீரைச் சார்ந்தது, தண்ணீர் அலையைச் சார்ந்ததாகி விடுமா என்ன?

உண்மை இதுதான். எந்த வழியைப்பின்பற்றினாலும் சரி, மனம் நிலைபெறாமல் யோகம் கைகூடாது. 

யோகிக்கு மனம் வசப்பட்டிருக்கும், யோகி மனத்திற்கு வசப்பட்டிருக்கமாட்டான்.

மனம் நிலைபெற்றால் பிராணன் நிலைபெறுகிறது, கும்பகம் கைகூடுகிறது. 

பக்தியோகத்தின் வாயிலாகவும் கும்பகத்தை அடையலாம். பக்தியினால் பிராணன் நிலைபெறுகிறது.

(கருத்து..அத்வைதிகள் நானே இறைவன் என்று சொல்வார்கள்.இறைவன் ஒரு மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவாரானால் அப்போது நானே இறைவன் என்று சொல்லலாம்.அதற்கு முன்பு அப்படி சொல்வது நல்லதல்ல)


4


அம்பிகையும் பாட்டியும்

🌸

குருதேவர் அதர்சேனிடம் நலம் விசாரித்தார்.அதர்சேன் தமது நண்பருடைய துயரத்தின் காரணத்தைக்கூறினார். அதைக்கேட்ட குருதேவர் பாடத்தொடங்கினார்.

போரிட வேண்டி எமன் வருவானே,

மானிடா, இதனை அறிவாயா?

போதையில் ஆழ்ந்தாய், விழித்திடு

எமனுடன் போரிடத் தயாராகிடு!

ஆரமுதாகிய ஞானம் என்கிற

அம்பறாத்தூணியைக்கொள்க!

ஆழ்மன பக்தி எனும் ரதமேறி!

ஆண்மையுடன் நீ போரிடுக!

நாக்காம் வில்லை அன்பு என்கிற

நாணால் நன்றாய் வளைத்திடுவாய்!

நடனமிடும் திருக்காளியின் பெயரால்

பிரம்மாஸ்திரத்தை நாணேற்று!

போர்க்களம் தனிலோர் தந்திரம் உண்டு

பகைவனை எளிதில் மாய்த்திடவே!

தேரும் வேண்டாம் சாரதி வேண்டாம்

கங்கை க்கரை தனில் போர்செய்தால்!

பேசத்தொடங்கினார்…

ஸ்ரீராமகிருஷ்ணர்- --என்ன செய்வாய்? மரணத்திற்குத் தயாராக இரு. எமன் வீட்டில் புகுந்துவிட்டான். இறைவனின் நாமமாகிய ஆயுதத்தைக்கொண்டு போரிடவேண்டும். 

கடவுள் தான் நம்மை இயக்குபவர்.இறைவா! நீ எப்படி செய்விக்கிறாயோ அப்படி நான் செய்கிறேன். நீ எப்படி பேசவைக்கிறாயோ அப்படியே நான் பேசுகிறேன். நான் எந்திரம், நீ எந்திரத்தை இயக்குபவன். நான் வீடு, நீ வீட்டில் உறைபவன், நான் வண்டி, நீ எஞ்சினியர் என்று நான் சொல்கிறேன்.

ஆண்டவனிடம் வக்காலத்து கொடுத்துவிடு. நல்ல வரிடம் பொறுப்பைக் கொடுத்தால் துன்பம் விளையாது. அவர் விரும்புவதைச்செய்யட்டும்.

சொந்த மகன் ஆயிற்றே எப்படி வேதனை இல்லாமல் போகும்? 

ராவண வதம் முடிந்தது? லட்சுமணன் ஓடிச்சென்று ராவணனைப்பார்த்தான். அவனது உடம்பில் துளை படாத இடம் ஒன்று கூட இல்லை. உடனே ராமரிடம், ராமா உன் அம்பின் மகிமைதான் என்ன?

ராவணனின் உடலில் அம்பு துளைக்காத இடம் ஒன்று கூட இல்லையே! என்று சொன்னான். அதற்கு ராமர், தம்பி! நீ பார்க்கும் துளைகள் அம்பால் ஏற்பட்டவை அல்ல. புத்திர சோகத்தால் ராவணனின் எலும்புகள் நொறுங்கிப்போயிருக்கின்றன. அந்தத் துளைகள் அவனது புத்திர சோகத்தின் சின்னங்கள். சோகம் எலும்புவரை சென்று துளைத்திருக்கிறது” என்று கூறினார்.

ஆனால் இந்த அனைத்தும் நிலையற்றவை. வீடு, மனைவி, மக்கள், எல்லாம் இரண்டொரு நாட்களுக்கு மட்டுமே, பனைமரம் தான் உண்மை, இரண்டொரு பனம் பழங்கள் உதிர்ந்துவிட்டன. இதற்கு வருத்தம் ஏன்? 

படைத்தல் அழித்தல், காத்தல் ஆகிய மூன்று தொழில்களைக் கடவுள் செய்கிறார். மரணம் சர்வ நிச்சயமான ஒன்று. பிரளய காலத்தில் எல்லாம் அழிந்துவிடும். எதுவும் மிஞ்சாது. அம்பிகை அடுத்த படைப்பிற்கான விதையைச் சேகரித்து மட்டும் வைக்கிறாள். புதிய படைப்பின் போது அவற்றை வெளியே கொண்டு வருகிறாள். 

பாட்டிகள் கண்டதையெல்லாம், ஒரு கலயத்தில் போட்டு வைப்பது போல் (எல்லோரும் சிரித்தனர்). அந்தக் கலயத்தில் வெள்ளரி விதை, கடல் நுரை, வாயு மாத்திரை எல்லாம் இருக்கும். சிறியபெரிய பொட்டலங்களாகக்கட்டி வைத்திருப்பாள்.

ஸ்ரீராமகிருஷ்ணர் தமது அறையின் வட கிழக்கு வராந்தாவில் நின்று அதர்சேனுடன் பேசிக்கொண்டிருந்தார்.

உலகம் ஒரு கர்ம பூமி. இங்கு வேலை செய்ய வந்திருக்கிறோம்.

ஓரளவிற்காவது வேலைகளில் ஈடுபடுவது இன்றியமையாதது . அதுவும் ஒரு சாதனைதான். கடமைகளை விரைவில் முடித்துவிட வேண்டும்.image94

ஆட்டுப் புலி

5

    

ஆட்டுப் புலி

🌸

பகலுணவிற்குப் பிறகு குருதேவர் சிறிது இனைப்பாறினார். ஆழ்ந்த உறக்கம் இல்லை. கண்களை மூடியவாறு படுத்திருந்தார். 

பிரம்மசமாஜத்தின் பழைய அங்கத்தினரான மணிலால் மல்லிக் வந்து குருதேவரை வணங்கிவிட்டு கீழே அமர்ந்தார். 

குருதேவர் அப்போதும் படுத்திருந்தார். மணிலால் அவரிடம் இடையிடையே கேள்விகள் கேட்டார். 

குருதேவரும் அரைத் தூக்கத்தில் ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதிலளித்தார்.

மணிலால்- நித்திய கோபாலை சிவநாத் மிகவும் புகழ்ந்து சொல்கிறார். அவனுடைய நிலை மிகவும் உயர்ந்ததாக இருக்கிறது என்கிறார் அவர்.

குருதேவர் படுத்துக்கொண்டே இருந்தார். தூக்கம் முழுவதும் கலையவில்லை.

ஹாஸ்ராவைப்பற்றி எல்லோரும் என்ன சொல்கிறார்கள்? என்று கேட்டுவிட்டு எழுந்து உட்கார்ந்தார். 

பிறகு மணிலாலிடம் பவநாத்தின் பக்தியைப் பற்றிப்பேச ஆரம்பித்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-- ஆகா! அவனது மனநிலை எவ்வளவு உயர்ந்ததாக உள்ளது! பாடத்தொடங்கிய உடனே கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்துவிடுகிறது.ஹரிஷைப் பார்த்தால் ஒரேயடியாக அவனுக்குப்பரவசம் ஏற்பட்டுவிடுகிறது. ஹரிஷ் மிகவும் பாக்கியம் செய்தவன் என்று பவநாத் சொல்கிறான். ஏன் தெரியுமா? ஹரிஷ் வீட்டைவிட்டு அடிக்கடி இங்கே வந்து தங்குகிறான் அல்லவா?

மகேந்திரர் (ம-விடம்) பக்தி ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பது எது? பவநாத்தைப்போன்ற இந்த இளைஞர்களிடம் இந்த அளவுக்கு ஆன்மீக எழுச்சி ஏற்பட்டிருப்பதற்கு என்ன காரணம்?

மகேந்திரர்(ம-)-மௌனமாக இருந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்---என்ன காரணம் தெரியுமா? மக்கள் எல்லோரும் பார்ப்பதற்கு ஒரேவிதமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் சிலருள் திரட்டுப்பால் இருக்கிறது. கொழுக்கட்டையின் உள்ளே உளுத்தம் பருப்பும் இருக்கலாம், அல்லது திரட்டுப்பாலும் இருக்கலாம். ஆனால் எல்லாமே பார்க்க ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். 

இறைவனை அறிவதற்கான ஆவல், அவரிடம் பிரேம பக்தி- 

இது தான் அந்தத் திரட்டுப்பால்.

குருதேவர் பக்தர்களுக்கு அபயம் அளித்து பின்வருமாறு பேச ஆரம்பித்தார்.

(ம-விடம்) எனக்கு ஞானமோ பக்தியோ கிடைக்காது என்று தான் தோன்றுகிறது, நான் கட்டுண்டவன்” என்று சிலர் நினைக்கிறார்கள்.

ஆனால் குருவின் அருள் கிடைக்குமானால் எதற்கும் பயப்படத் தேவையில்லை.

ஒரு கதை சொல்கிறேன் கேள்…

கருவுற்ற பெண் புலி ஒன்று ஓர் ஆட்டு, மந்தையைத்தாக்கியது. பாய்ந்த வேகத்தில் அங்கேயே குட்டியை ஈன்றுவிட்டு இறந்தது. அந்தப் புலிக்குட்டி ஆடுகளுடனேயே வளர்ந்தது.ஆடுகள் புல்லைத்தின்றன. 

புலிக்குட்டியும் புல்லைத் தின்றது. ஆடுகள் மேமே என்று கத்தின. புலிக்குட்டியும் மேமே என்று கத்தியது. மெள்ள மெள்ள புலிக்குட்டி வளர்ந்து பெரிய புலியாக ஆயிற்று.

ஒரு நாள் இன்னொரு புலிஅந்த ஆட்டு மந்தையைத்தாக்க வந்தது. அங்கே புல் மேய்ந்து கொண்டிருந்த புலியைக்கண்டு பிரமித்துவிட்டது.

ஓடிச்சென்று அதைப் பிடித்தது, உடனே அந்த ஆட்டுப்புலி மேமே என்று கத்த ஆரம்பித்தது. அதைப் பற்றியிழுத்துக்கொண்டு குளத்து நீரின் அருகில் சென்று, இதோ இந்த நீரில் உன் முகத்தைப்பார், என் முகத்தைப்போலவே உள்ளதைக்கவனி. இதோ சிறிது இறைச்சி, இதைத் தின்றுபார்” என்றது. இவ்வாறு சொல்லிக்கொண்டே ஆட்டுப்புலியின் வாய்க்குள் இறைச்சித் துண்டைத் திணித்தது. 

ஆனால் ஆட்டுப்புலியோ அதைத் தின்னாமல் மேமே என்று கத்தியது. மெல்ல மெல்ல ரத்தத்தின் ருசி கண்ட பிறகு இறைச்சியைத் தின்ன ஆரம்பித்தது. 

அப்போது காட்டுப்புலி ஆட்டுப்புலியிடம், இப்போது தெரிந்து கொண்டாயா? நான் எதுவோ அதுவே நீயும். உனக்கும் எனக்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை. இப்போது வா, என்னுடன் காட்டிற்கு வந்துவிடு, என்று கூறியது.

ஆகவே குருவின் அருள் கிடைத்துவிட்டால் பிறகு, எந்தவிதப் பயமும் இல்லை. நீயார், உனது உண்மை இயல்பு என்ன என்பதை அவர் உனக்குக் காட்டுவார்.

ஒரு சிறிது சாதனைகள் செய்தால்போதும், குரு ஒவ்வொன்றையும் அவனுக்குப் புரிய வைப்பார். எது உண்மை, எது உண்மையற்றது என்பதை அப்போது சீடன் அறிந்து கொள்கிறான். இறைவன் தான் உண்மை, இந்த உலகம் நிலையற்றது.

(கருத்து—ஆட்டுப்புலி சாதாரண மனிதன்.புலி குரு. குருவின் தொடர்பு ஏற்பட்டால் சாதாரண மனிதன்கூட குரு அடையந்த உயர்ந்த ஞான நிலையை அடைய முடியும்.குருவே அதைப் புரிய வைப்பார்)


6


அனுமனும் மண்டோதரியும்

🌸

குருதேவர் இளைஞர்களுடன் ,சம வயதினர் போல் கேலியும் கிண்டலும் குறும்புமாக வேடிக்கை வினோதங்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டிருந்தார்.சிரிப்பின் பேரலைகள் எழுந்தவண்ணம் இருந்தன. அங்கே ஆனந்தச்சந்தை கூடியிருப்பது போல் தோன்றிற்று.

மகேந்திரர்(ம-)வியப்புடன் அந்த அற்புத மனிதரைப்பார்த்தார். இது என்ன! சமாதியிலும், இதுவரை கண்டிராத பேரானந்தப் பரவச நிலையிலும் மூழ்கியவராக நாம் நேற்று கண்டது இவரையா? அவரா இன்று இப்படி மிகமிகச் சாதாரண மனிதனைப்போல் ந்டந்து கொள்கிறார்! 

முதன்முறையாக எனக்கு உபதேசம் செய்தபோது என்னைக் கடிந்து கொண்டவர், இவர் தானா? நீ என்ன ஞானியா? என்று கேட்டவரா இவர்? கடவுளுக்கு உருவம் உண்டு, கடவுள் அருவமும் கூட, இரண்டும் உண்மை” என்று சொன்னவர் இவர்தானா? இறைவனே உண்மை, உலகிலுள்ள அனைத்தும் நிலையற்றவை, என்று எனக்குச்சொன்னது, இவரா? ஒரு செல்வந்தரின் வீட்டு வேலைக்காரியைப்போல் இந்த உலகத்தில் வாழுமாறு சொன்னவர் இவர்தானா? என்றெல்லாம் மகேந்திரர்(ம-)வின் மனம் எண்ணியது.

இளைஞர்களுடன் சிரித்துக் களித்தபடியே குருதேவர் மகேந்திரர்(ம-)- -வை அவ்வப்போது பார்த்தார். 

மகேந்திரர்(ம-)-வியப்புடன் அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் ராம்லாலை அழைத்து அவரிடம், பார்த்தாயா? இவர்கள் எப்படி யெல்லாம் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!இவனோ உம்மென்று அமர்ந்திருக்கிறான். வயது கொஞ்சம் அதிகம் அல்லவா? என்றார். அப்போது ம-விற்கு வயது இருபத்தேழு.

பேச்சின் இடையே அனுமனைப்பற்றிய பேச்சு எழுந்தது. குருதேவரின் அறையில் அனுமனின் படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது.

ஸ்ரீராமகிருஷ்ணர்---அனுமனின் நிலையைப் பாருங்கள்.பணம், புகழ், உடல்சுகம் எதையும் அவர் விரும்பவில்லை. ராமர் ஒருவரையே விரும்பினார். பளிங்குத் தூணிலிருந்து பிரம்மாஸ்திரத்தை எடுத்துக்கொண்டு அவர் ஓடிய போது மண்டோதரி பலவகை பழங்களைக்கொண்டு ஆசை காட்டினாள்! பழங்களால் கவரப்பட்டு, கீழே இறங்கி வந்து அஸ்திரத்தைப்போட்டுவிடுவார் என்று நினைத்தாள் அவள். ஆனால் அதற்கெல்லாம் மசிபவரா அனுமன்? அவர் மண்டோதரியைப் பார்த்துச்சொன்னார்.

வேறுபழம் விழைவேனோ? பழவினையைக்கொய்யும்

மெய்ஞானப்பழம் இருக்க, வீண்மயக்கம் உண்டோ?

பேறருளும் ஸ்ரீராமன் எழில்மரமாய் நெஞ்சில்

பெருகுகிறான், மோட்சமெனும் நறுங்கனியைத் தருவான்.

குன்றாத பசுமையுடன் என் மனத்தில் நிற்கும்

கோதண்ட ராமன் எனும் கற்பகத்தின் கீழ்

நன்றாக நல்லின்ப நயம் கமழ வாழ்வேன்,

நான் விரும்பும் பழம் அனைத்தும் நினைத்தவுடன் பெறுவேன்

தந்திரமாய் நீ கொடுக்கும் சாரமிலாக்கனியைத்

தருக எனக் கையேந்தும் இரவலனும் நானோ?

வெந்துயரக் காஞ்சிரங்காய் நீ சுவைக்கவிட்டு

வெளியேறிப்போகிறேன், அதிவேகம் கொள்வேன்.

குருதேவர் இந்தப்பாட்டைப் பாடினார். 

மறுபடியும் அதே சமாதி! 

அசைவற்ற நிலை! பாதி மூடிய கண்கள்! 

அசைவற்ற உடல்! அவருடைய புகைப் படத்தில் இன்று நாம் காண்கிறோமே! அதே போல் அமர்ந்திருக்கின்ற நிலை!

இது வரை அவருடன் சேர்ந்து வேடிக்கை வினோதங்களில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் அந்த அற்புத நிலையைக்கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

(கருத்து—இறைவன் கேட்டதைத்தரும் கற்ப விருட்சம்போல இருக்கிறார்.

நாம் எது கேட்டாலும் நமக்கு தருவார்.

முக்தி என்ற கனியைக் கேட்டாலும் தருவார்.

அப்படிப்பட்ட நிலையைவிட்டுவிட்டு 

சாரமில்லாத சாதாரண உலகியியல் கனியை(இன்பத்தை) சுவைத்து அதில் மயங்கியிருப்பது ஏன்?)


7


  

ஆமையும் இல்லற வாழ்வும்


மகேந்திரர்(ம-)-- (பணிவோடு)- சுவாமி, இல்லறத்தில் எவ்வாறு வாழ வேண்டும்?

ஸ்ரீராமகிருஷ்ணர்- --எல்லா கடமைகளையும் செய், ஆனால் மனத்தை இறைவனிடம் வை. மனைவி, மக்கள், தாய், தந்தை எல்லோருடனும் சேர்ந்து வாழ். அவர்களுக்குச் சேவை செய். அதே வேளையில் அவர்கள் உன்னுடையவர்கள் அல்ல என்பதை உள்ளத்தில் தெரிந்து வைத்துக்கொள்.

பணக்கார வீட்டு வேலைக்காரி அங்கே எல்லா வேலைகளையும் செய்கிறாள். ஆனால் அவளது மனம் கிராமத்தில் உள்ள தன் வீட்டையே சதா நினைத்துக்கொண்டிருக்கிறது. 

அவள் அந்தப் பணக்காரரின் குழந்தைகளைத் தன் குழந்தைகளைப்போலவே கவனிக்கிறாள். என் ராமன், என் ஹரி, என்றெல்லாம் அந்தக் குழந்தையை சீராட்டுகிறாள். இருந்தாலும் அந்தக் குழந்தைகள் தன்னுடையவர்கள் அல்ல என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்.

ஆமை தண்ணீரில் இங்குமங்கும் திரிகிறது. ஆனால் அதன் மனமெல்லாம் எங்கிருக்கும் தெரியுமா?

தான் கரையில் இட்ட முட்டைகளின் மீது . 

அது போல் இல்லறத்தில் உனக்குரிய எல்லா கடமைகளையும் செய், ஆனால் மனத்தை இறைவனிடம் வை.

இறைவனிடம் பக்தியை அடையாமல், .இல்லறத்தில் ஈடுபட்டால் மேலும் மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்வாய்.

ஆபத்து, துன்பம், கவலை இவையெல்லாம் வந்து மோதும் போது மன உறுதியை இழப்பாய், அது மட்டுமல்ல. உலகியல் விஷயங்களில் மனம் செல்கின்ற அளவுக்கு பற்றும் அதிகரிக்கும்.

கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு பலாப்பழத்தை வெட்ட வேண்டும். இல்லாவிட்டால் பிசின் கைகளில் ஒட்டிக்கொள்ளும். அது போல் பக்தி என்ற எண்ணெய்ப் பூசிக்கொண்டு இல்லறத்தில் ஈடுபடவேண்டும்.

image95

ஆஸ்பத்திரியும் உலக வாழ்க்கையும்

கதை-8

  

ஆஸ்பத்திரியும் உலக வாழ்க்கையும்


பக்தர்---சுவாமி, உலக வாழ்வில் இறைவன் ஏன் நம்மை வைத்திருக்கிறார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்---- இந்த உலகம் ஒரு செயல்களம், செயல் புரிந்து கொண்டே சென்றால் ஞானம் உதிக்கிறது. இந்தக் காரியங்களைச்செய்., இவைகளைச்செய்யாதே, என்று குரு உபதேசிக்கிறார். வேலை செய்யச்செய்ய மனத்தில் உள்ள மாசுகள் மறைகின்றன. நல்ல டாக்டர் வாய்த்துவிட்டால், அவர் தரும் மருந்தை உட்கொள்ள, நோய் நீங்கி நாளடைவில் குணமடைவது போன்றது இது.

கடவுள் நம்மை ஏன் உலக வாழ்க்கையிலிருந்து விடுவிக்கவில்லை.? 

நோய் குணமடையும் போது விடுவிப்பார். 

காமினீ- காஞ்சனத்தை அனுபவிப்பதில் நாட்டம் மறையும் போது விடுவிப்பார். ஆஸ்பத்திரியில் பெயரைப் பதிவு செய்து விட்டால் ஓடிப்போக முடியாது. நோய் கட்டுப்பாட்டிற்குள் வராமல் டாக்டர் விடுவிக்க மாட்டார்.

இப்போதெல்லாம் குருதேவர் யசோதையைப்போல் வாத்சல்ய பாவனையில் மூழ்கியிருந்தார். ஆகவே ராக்காலைத் தம்முடன் வைத்துக்கொண்டிருந்தார். ராக்காலும் குருதேவரிடம் இருக்கும்போது, ஒரு சின்னஞ்சிறு குழந்தை தன் தாயிடம் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார். குழந்தை பால் குடிக்க தாயின் மடி மீது சாய்ந்து உட்கார்ந்து கொள்வது போல் ராக்காலும் குருதேவரது மடி மீது சாய்ந்து உட்கார்ந்து கொள்வார்.

இவ்வாறு அந்த பாவனையில் குருதேவர் அமர்ந்திருந்த போது, ஒரு பக்தர் கங்கையில் நீரேற்றம் ஏற்பட்டிருப்பதைக் கூறினார். அதைக்கேட்டதும் குருதேவர், ராக்கால், ம-முதலிய அனைவரும் அதைக்காண பஞ்சவடிக்கு விரைந்தனர்.

விஷ்ணு கோயில் நகைகள் எல்லாம் களவு போனபோது மதுர்பாபுவும் நானும்(குருதேவர்) சுவாமி விக்கிரகத்தைப் பார்க்கச்சென்றோம். 

அப்போது மதுர்பாபு,-- பகவானே! வெட்கக்கேடு! உமது மதிப்பு இவ்வளவு தானா? உம் மீதிருந்த நகைகளைத் திருடியிருக்கிறான். 

உம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்றார்.

உடனே நான் மதுர்பாபுவிடம், இது என்ன பேச்சு? 

நீங்கள் எதை நகையென்று பிரமாதப் படுத்துகிறீர்களோ, அதுவெல்லாம் பகவானைப் பொறுத்தவரையில் வெறும் மண்ணாங்கட்டிகளே, சாட்சாத் மகாலட்சுமியே யாருடைய பத்தினியாக இருக்கிறாளோ, அவர் உங்கள் அற்பப் பணம் களவு போய் விட்டதற்காக கவலையில் ஆழ்ந்திருப்பாரா என்ன? இப்படியெல்லாம் பேசாதீர்கள் என்றேன்.

இறைவன் என்ன, செல்வத்திற்குக் கட்டுப்பட்டவரா? 

அவர் பக்திக்குக் கட்டுப்பட்டவர். அவர் விரும்புவது என்ன? பணம் அல்ல. அவர் விரும்புவதெல்லாம் பாவனை, அன்பு, பிரேமை, பக்தி, விவேகம், வைராக்கியம் என்பவை தான்.

ஒவ்வொருவரும் தங்கள் மனநிலைக்கு ஏற்பவே இறைவனை நினைக்கிறார்கள். 

தமோ குண பக்தனை எடுத்துக்கொள்வோம்- தேவியும் ஆட்டிறைச்சி உண்கிறான். என்று நினைக்கிறான் அவன். ஆதலால் ஆட்டைப் பலியிடுகிறான். 

ரஜோ குண பக்தன் பல்வேறு வகையான சோறும் கறிகளும் சமைத்து நிவேதிக்கிறான். 

சத்வ குண பக்தனின் பூஜையில் ஆடம்பரம் இருக்காது. அவனது பூஜையைப்பற்றி பிறர் அறிந்து கொள்ளவே முடியாது. பூ கிடைக்காவிட்டால் வில்வ இலைகளையும், கங்கை நீரையும் அர்ப்பித்து வெல்லம் கலந்த சிறிது அவல் அல்லது சிறிது கற்கண்டு-இதிலேயே அடங்கிவிடும்.ஏதோ சிலவேளைகளில் கொஞ்சம் பாயாசம் செய்து படைப்பான்.

மூன்று குணங்களையும் கடந்த பக்தர்களும் உள்ளனர். அவர்கள் குழந்தை இயல்பு கொண்டவர்கள். தெய்வ நாமத்தை ஜெபிப்பது தான் அவர்கள் செய்யும் பூஜை, தெய்வ நாமம் புனிதமானது.

புன்சிரிப்போடு (கேசவரிடம்) உங்களுக்கு உடல்நலம் சரியில்லை. அதற்கொரு காரணம் உண்டு. பல்வேறு பாவனைகள் உங்கள் உடலில் புகுந்து சென்றுள்ளன. அதனால் நோய் வந்துள்ளது. பரவச நிலை வரும் போது நாம் ஒன்றும் அறிவதில்லை. பல நாட்களுக்குப் பிறகு அது உடல் நலத்தைப் பாதிக்கிறது.

பெரிய நீராவிக் கப்பல்கள் கங்கையைக்கடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். 

அவை போகும் போது அதன் விளைவு ஒன்றும் தெரிவதில்லை. ஆனால் சிறிது நேரம் கழிந்த பிறகோ , அம்மம்மா! அலைகள் பளார்பளார் என்று கரைகளில் மோதுகின்றன.

என்ன அமளிதுமளி! சில வேளைகளில் கரையின் ஒரு பகுதி இடிந்து கூட போகலாம்.

ஒரு குடிசையில் யானை புகுமானால் முற்றிலுமாக ஓர் உலுக்கு உலுக்கி, கீழே தள்ளி விடுகிறது. 

பரவச நிலை என்னும் யானை உடம்பாகிய குடிசையில் புகுந்து, அதை உலுக்குகிறது.

என்ன நடக்கிறது தெரியுமா? வீடு தீப்பிடித்தால் முதலில் உள்ளேயிருக்கும் சில பொருட்கள் எரிகின்றன. 

பிறகு ஒரே கூச்சலும் குழப்பமும் ஏற்படுகிறது.மொத்தமும் எரிந்து அழிந்துபோகிறது.அதன்பிறகே தீ அடங்கும். 

அது போல் ஞானத் தீயும் முதலில் காமம். குரோதம் முதலிய எதிரிகளை அழிக்கிறது. பின்பு நான் உணர்வை அழிக்கிறது. பிறகு உடம்பில் ஆரம்பிக்கிறது. ஒரு பெரிய அமளி!

எல்லாம் முடிந்து விட்டது என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் நோயில் இம்மியளவு மீதி உள்ளவரை இறைவன் உங்களை விடமாட்டார். 

ஆஸ்பத்திரியில் பெயரைப் பதிவு செய்து விட்டால், பிறகு வெளியே வர முடியாது. நோய் முற்றிலுமாக குணமாகாமல் உங்களை டாக்டர் வெளியே விட மாட்டார். நீங்கள் ஏன் உங்கள் பெயரைப்பதிவு செய்தீர்கள்? (எல்லோரும் சிரித்தனர்)

குருதேவர் மருத்துவமனையை உதாரணமாகக்கூறியதைக்கேட்டு கேசவர் திரும்பத்திரும்ப ச் சிரித்தார். அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பல முறை முயன்று பார்த்தும் முடியாமல், விட்டு விட்டுச் சிரித்தார்.


  9


தங்குவதற்கு இடம் பிடித்த சாது


கீர்த்தனம் முடிந்ததும் எல்லோரும் உட்கார்ந்தனர். குருதேவர் என்ன சொல்லப்போகிறார் என்பதைக்கேட்க ஆவலோடு அவரைச்சுற்றி அமர்ந்தனர். 

தம்மைச்சுற்றி அமர்ந்திருந்த பிரம்மசமாஜ பக்தர்களைநோக்கி குருதேவர் பேசத்தொடங்கினார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்----பற்றின்றி இல்லற வாழ்க்கை நடத்துவது கடினம். பிரதாப்(பிரதாப் சந்திர மஜும்தார்.பிற்காலத்தில் கிறிஸ்தவ பாதிரிகளுடன் சேர்ந்துகொண்டு சுவாமி விவேகானந்தரை தரக்குறைவாக பேசியவர்) ஒரு முறை என்னிடம், சுவாமி நாங்கள் ஜனகராஜாவைப்போன்றவர்கள்.ஜனகர் பற்றின்றி இல்லறத்தில் வாழ்ந்தார். நாங்களும் அப்படியே வாழ்வோம்” என்றார்.

அதற்கு நான், மனத்தில் நினைத்துவிட்டால் ஜனகராகிவிட முடியுமா? ஜனகர் எவ்வளவு தவம் செய்து ஞானத்தைப்பெற்றார் என்பது உங்களுக்குத்தெரியுமா? தலைகீழாக, கால்களை மேலே தூக்கி வைத்துக்கொண்டு பல ஆண்டுகள் மிகக்கடுமையான தவம் செய்ததன் பிறகுதான் இல்லற வாழ்க்கைக்குத் திரும்பினார்” என்று கூறினேன்.

அப்படியானால் இல்லறத்தார்க்குக் கதியே இல்லையா என்றால், இருக்கிறது. நிச்சயமாக இருக்கிறது. சில நாட்கள் தனிமையில் சாதனைசெய்யவேண்டும். அப்போது பக்தி கிடைக்கும். ஞானம் கிடைக்கும். அதன் பிறகு இல்லறத்தில் ஈடுபட்டால் குற்றம் இல்லை.தனிமையில் சாதனை செய்யும்போது இல்லறத்தில் அடியோடு விலகியிரு, மனைவி, மகன், தாய், தந்தை, சகோதரன், சகோதரி, உறவினர் யாரும் அருகில் இருக்கக்கூடாது. 

தனிமையில் சாதனை செய்யும்போது, எனக்கு யாருமில்லை, இறைவனே எனக்கு எல்லாம்” என்று எண்ண வேண்டும். 

ஞானத்திற்காகவும் பக்திக்காகவும் அழுது அழுது அவரிடம் பிரார்த்திக்க வேண்டும்.

எவ்வளவு நாட்கள் குடும்பத்தைவிட்டு விலகி தனிமையில் இருக்க வேண்டுமென்று கேட்டால், ஒரு நாள் விலகி இருந்தாலும் நல்லது தான், மூன்றுநாட்கள் இருக்கமுடிந்தால் இன்னும் நல்லது.. 

பன்னிரண்டு நாட்கள், ஒரு மாதம்,மூன்று மாதங்கள், ஓர் ஆண்டு என்று யாருக்கு எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு காலம் தனித்து இருக்கலாம். 

ஞானமும் பக்தியும் பெற்ற பின்னர் இல்லறத்தில் இருந்தால் அவ்வளவு பயம் இல்லை. 

கையில் எண்ணெய் பூசிக்கொண்டு பலாப்பழத்தை அறுத்தால் கையில் பிசின் ஒட்டாது. 

கண்ணாமூச்சி விளையாட்டில் தாய்ச்சியைத் தொட்டுவிட்டால் பிறகு பயம் இல்லை. 

ஒரு முறை பரிசமணியைத்தொட்டு பொன்னாகி விடு. பொன்னாக மாறிய பின் ஆயிரம் ஆண்டுகள் மண்ணில் புதைந்து கிடந்தாலும், மண்ணைத்தோண்டினால் பொன்னாகவே இருப்பாய்.

பாலைப்போன்றது மனம். இந்த மனத்தை இல்லறமாகிய தண்ணீரில் வைத்தால் பாலும் தண்ணீரும் கலந்து விடும். ஆகவே பாலைத் தனியிடத்தில் வைத்துத் தயிராக்கி, கடைந்து வெண்ணெய் எடுக்கவேண்டும். 

தனிமையில் சாதனைகள் செய்து மனமாகிய தயிரிலிருந்து ஞானம், பக்தி என்ற வெண்ணெயைக் கடைந்தெடுக்கவேண்டும். அந்த வெண்ணெயை இல்லறமாகிய தண்ணீருடன் ஒரு போதும் கலக்காது. இல்லறத் தண்ணீரின் மீது ஒட்டிக்கொள்ளாமல் மிதக்கும்.

விஜய கோசுவாமி சில நாட்களுக்கு முன்புதான் கயையிலிருந்து திரும்பி வந்திருந்தார். அங்கே தனிமையில் வாழ்வதும், சாது சங்கமுமாக நாட்களைக் கழித்திருந்தார். காவியுடை அணிந்திருந்தார். அவர் எப்போதும் அகமுகமாகக் காணப்பட்டார். 

அற்புதமான நிலை, குருதேவரின் அருகில் அவர் குனிந்த தலையுடன் அமர்ந்திருந்தார்.

விஜயரைப் பார்த்துக்கொண்டிருந்த குருதேவர் அவரிடம், விஜய், நீங்கள் இடம் பிடித்துவிட்டீர்களா? 

இதைக்கேளுங்கள், இரண்டு சாதுக்கள் சுற்றுப் பயணவழியில் ஒரு நகரத்தை அடைந்தார்கள். ஒருவர் வீதிகள், கடைகள், வீடுகள் அனைத்தையும் பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தார். 

அந்த வேளையில் மற்ற சாதுவை அவர் சந்திக்க நேர்ந்தது. அந்த சாது அவரிடம், ஆமாம் இப்படி பிரமிப்புடன் நகரைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே? உங்கள் மூட்டை முடிச்சுகள் எல்லாம் எங்கே? என்று கேட்டார். 

அதற்கு முதல் சாது, முதலில் நான் ஓர் இடம் பிடித்து, அதில் மூட்டை முடிச்சுகளை பத்திரமாக வைத்துவிட்டு, அறையைப் பூட்டிக்கொண்டு கவலையில்லாமல் வெளியே கிளம்பியிருக்கிறேன். 

இப்பொழுது நகரின் அழகைப் பார்த்தபடி சுற்றுகிறேன்.மூட்டை முடிச்சுகளைப்பற்றி கவலையில்லை” என்று பதில் கூறினார். 

அதனால் தான் நீங்கள் இடம் பிடித்துவிட்டீர்களா என்று உங்களைக்கேட்கிறேன். 

(ம-முதலியவர்களிடம்) இதோ பாருங்கள், இவ்வளவு நாட்களாக விஜயருள் நீரூற்று மூடிக் கிடந்தது. இப்பொழுது திறந்து கொண்டது.

(கருத்து…இறைக்காட்சியை முதலில் பெற்றுவிட வேண்டும்.அதன்பிறகு இந்த உலகத்தில் எவ்வளவுநாள் வாழ்ந்தாலும் கவலை ஏற்படாது)


  10


இயற்கைக்கடன் உணர்ச்சியும் குழந்தையும்


எனக்குப் பத்து பதினொரு வயதிருக்கும் போது காமார் புகூரில் அந்த நிலை ஏற்பட்டது. 

வயல் வரப்பின் வழியாகச்சென்று கொண்டிருந்தபோது பெற்ற காட்சியின் விளைவாக நினைவிழந்தேன்.

இறைக்காட்சிக்குச் சில அறிகுறிகள் இருக்கின்றன. 

ஜோதி தரிசனம் உண்டாகும், ஆனந்தம் ஏற்படும், வாணம் கிளம்புவது போல் நெஞ்சினுள் மகாவாயு குர் குரென்ற சத்தத்துடன் மேலெழும்.

பாபுராமும் ராம்தயாளும் மறுநாள் வீடு திரும்பினர். மகேந்திரர்(ம-)அன்று பகலும் இரவும் குருதேவருடன் தங்கியிருந்தார். அன்று அவர் கோயிலில் பிரசாதம் உட்கொண்டார்.

பிற்பகல் ம-வும் ஓரிரு பக்தர்களும் இருந்தனர். சில மார்வாரி பக்தர்கள் வந்து குருதேவரை வணங்கினர். அவர்கள் கல்கத்தாவில் வியாபாரம் செய்பவர்கள். நீங்கள் எங்களுக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள், என்று குருதேவரிடம் அவர்கள் வேண்டினர். குருதேவர் சிரித்துக்கொண்டார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்--- (மார்வாரி பக்தர்களிடம்),- இதோ பாருங்கள் ”நான்” எனது, இந்த இரண்டும் அஞ்ஞானம். 

எம்பெருமானே! நீயே எல்லாம் செய்பவன், இவை அனைத்தும் உன்னுடையவை-இது ஞானம். 

எனது” என்று எப்படிக் கூற முடியும்.? 

தோட்டக்காரன். இது எனது தோட்டம்” என்கிறான். ஆனால் ஏதாவது குற்றத்திற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டால் தன்னுடைய மரப் பெட்டியைக்கூட தோட்டத்திலிருந்து வெளியே எடுத்துச்செல்ல அவனுக்கு தைரியம் இருக்காது.

காமம், கோபம், முதலியவை விலகாது. அவற்றை இறைவனை நோக்கித் திருப்பிவிடுங்கள். 

காமினீ- காஞ்சனம் இருக்கவேண்டும் என்றால் இறைவனை அடைவதற்காக அவற்றைத் திருப்புங்கள். 

ஆராய்ந்து அவற்றை விரட்டுங்கள். 

யானை பிறரது வாழை மரங்களைத்தின்னச்சென்றால் பாகன், அங்குசத்தால் குத்துகிறான்.

நீங்கள் வியாபாரம் செய்கிறீர்கள், படிப்படியாக வியாபாரத்தைப்பெருக்க உங்களுக்குத் தெரியும். சிலர் முதலில் ஆமணக்கு எண்ணெய் ஆட்டுவதற்கான செக்கு ஒன்றை நிறுவுகின்றனர்.

நல்ல பணம் கிடைத்ததும் துணிக்கடை திறக்கின்றனர். அது போலவேஇறை நெறியில் முன்னேறிச்செல்லவேண்டும். இடையிடையே சில நாட்கள் தனிமையில் இருந்து நீண்ட நேரம் அவரை அழைக்கவேண்டும். 

ஆனால் விஷயம் என்ன தெரியுமா? உரிய வேளை வராவிட்டால் ஒன்றும் நடக்காது. சிலருக்கு இன்னும் உலக இன்பங்களும், பல காரியங்களும் அனுபவிப்பது பாக்கி இருக்கிறது. அதனால் தாமதம் ஏற்படுகிறது. 

பழுக்காத கட்டியை அறுத்தால் தீங்குதான் நேரும், பழுத்து முகம் கூட்டிய பிறகே டாக்டர் கத்தியை வைக்கிறார்.

குழந்தை தாயிடம் , அம்மா, நான் தூங்கும்போது, இரண்டுக்குப் போக வேண்டிய நேரத்தில் என்னை எழுப்பி விடு” என்று கூறியது. 

அதற்குத் தாய் , மகனே, அந்த உணர்ச்சியே உன்னை எழுப்பி விடும். நான் எழுப்பவேண்டிய அவசியம் ஏற்படாது.” என்றாள்.(எல்லோரும் சிரித்தனர்)

மார்வாரி பக்தர்கள் குருதேவருக்காக இனிப்பு, பழங்கள், வெல்லம், கற்கண்டு முதலியவற்றை அடிக்கடி எடுத்து வருவார்கள். வெல்லம் மற்றும் கற்கண்டில் பன்னீர் வாசனை நிறைந்திருக்கும். 

பொதுவாக குருதேவர் அவற்றைச் சாப்பிடுவதில்லை. 

அவர்கள் பல பொய் சொல்லி பணம் சம்பாதிக்கின்றனர் என்பார் அவர்.

அவர்களுக்கு மீண்டும் உபதேசம் செய்யலானார்.

இதோ பாருங்கள் ! வியாபாரத்தில் இறங்கினால் உண்மை பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க முடியாது. வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். 

நல்லொழுக்கம் இல்லாதவனின் உணவை உண்ணச் சென்றபோது அவை ரத்தத்தில் தோய்ந்து கிடப்பதைக்கண்டேன்” என்று குருநானக்கூறியிருக்கிறார். 

சாதுக்களுக்குத் தூய பொருட்களைக் கொடுக்க வேண்டும். தீய வழியில் சம்பாதித்தவற்றைக் கொடுக்கக்கூடாது. உண்மையின் வழியில் இறைவனை அடையலாம்.

image96

உப்பு பொம்மை

கதை-11

  

இரண்டு நண்பர்களும் பாகவதமும்

🌸

மனநிலைக்கு ஏற்பவே பலனும் அமைகிறது.

இரண்டு நண்பர்கள் தெரு வழியாகச்சென்று கொண்டிருந்தனர். ஒருவன் மற்றவனைப் பார்த்து, வா நண்பா, பாகவதம், கேட்கலாம்” என்று சொல்லி உள்ளே நுழைந்தான். 

மற்றவனுக்கு அதில் ஆர்வம் இல்லை.எனவே உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு, வெளியே சென்று ஒரு விலைமகளின் வீட்டிற்குப் போனான். 

ஆனால் சிறிது நேரம் கழிந்ததும் அவனுக்கு அந்த இடம் வெறுத்துவிட்டது. 

என்ன வெட்கக்கேடு! என் நண்பன் மகா விஷ்ணுவின் மகிமைகளை கேட்டுக்கொண்டிருக்கிறான். 

நானோ இங்கு விழுந்து கிடக்கிறேன், என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். அவன் அன்று முழுவதும் மகாவிஷ்ணுவையே நினைத்துக்கொண்டிருந்தான்

அங்கு பாகவதம் கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. அவனும் தனக்குள், எத்தகைய முட்டாள் நான்! இங்கே ஒருவன் வளவளத்துக் கொண்டிரக்கிறான்.

நானும் உட்கார்ந்திருக்கிறேன்! என் நண்பனோ அங்கு இன்பத்தில் மிதந்து கொண்டிருக்கிறான்! என்று நினைத்துக்கொண்டான். அவனது மனத்தில் பக்தி எண்ணங்களே இல்லாமல் போனது

அன்று இருவரும் இறந்தனர். 

பாகவதம் கேட்டுக் கொண்டிருந்தவனை எம தூதன் வந்து கொண்டு போனான். 

விலைமகள் வீட்டிற்குப்போனவனை விஷ்ணு தூதன் வந்து, வைகுண்டத்திற்கு அழைத்துச்சென்றான்.

இறைவன் மனத்தைப் பார்க்கிறான், ஒருவன் என்னென்ன செய்கிறான், எங்கெங்கே வாழ்கிறான், என்றெல்லாம் பார்ப்பதில்லை, பாவக்ராஹீ ஜனார்தன!

கர்த்தா பஜா சம்பிரதாயத்தைச்சேர்ந்தவர்கள் மந்திர தீட்சை தரும்போது ”இப்போது மனம் உன்னுடையது என்பார்கள். அதாவது இப்போது முதல் எல்லாம் உன் மனத்தைப்பொறுத்தது. 

யாருக்கு மனம் நல்லதாக இருக்கிறதோ அவனது செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அவனுக்குக் கிடைக்கின்ற பலனும் நன்றாகவே இருக்கும்” என்று அவர்கள் சொல்வார்கள்.

உயர்ந்த மனநிலையின்காரணமாகவே ஆஞ்சநேயர் கடலைத்தாவிச் சென்றார். நான் ராமருடைய சேவகன், நான் ராமநாமத்தை உச்சரிப்பவன், என்னால் சாதிக்க இயலாத ஏதாவது இருக்கமுடியுமா? இப்படிப்பட்ட நம்பிக்கை அவருக்கு இருந்தது.

அகங்காரம் இருக்கும்வரை அஞ்ஞானமும் இருக்கும். அகங்காரம் இருக்கும் வரை முக்தி கிடையாது.


  12

இறைவனின் பெயர்கள் பல


படைத்தல், காத்தல், அழித்தல், உயிர், உலகம் எல்லாம் சக்தியின் விளையாடல் என்கின்றனர் ஞானிகள். ஆராய்ந்து பார்த்தால் இவை எல்லாம் கனவு போன்றவை, பிரம்மம்ஒன்றே உள்ளது, மற்ற எதுவும் கிடையாது, சக்தியும் கனவைப்போன்றது தான்.

ஆனால் ஆயிரம் ஆராய்ச்சி செய்தாலும் சமாதி நிலையை அடையாமல் சக்தியின் எல்லையை விட்டு வெளியே வர முடியாது. நான் தியானம் செய்கிறேன், நான் சிந்தனை செய்கிறேன்- இவையெல்லாம் சக்தியின் எல்லைக்கு உட்பட்டவை, சக்தியின் ஐசுவரியத்திற்கு உட்பட்டவை.

எனவே பிரம்மமும் சக்தியும் வேறல்ல, ஒன்றை ஏற்றுக்கொண்டால் மற்றொன்றையும் ஏற்றேயாக வேண்டும். நெருப்பும் அதன் சூடும்போல், நெருப்பை ஏற்றுக் கொண்டால் அதன் சூட்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சூட்டை விட்டு விட்டு நெருப்பை நினைக்க முடியாது. நெருப்பை விட்டுவிட்டு அதன் சூட்டையும் நினைக்க முடியாது. சூரியனை விட்டுவிட்டு அதன் கதிர்களை நினைக்க முடியாது. கதிர்களை விட்டுவிட்டு சூரியனையும் நினைக்க முடியாது.

பால் எப்படியிருக்கிறது? ஓ! வெண்மை, வெண்மை தான். 

பாலை விட்டுவிட்டு அதன் வெண்மை நிறத்தை மட்டும் நினைக்க முடியாது. அது போல் பாலின் வெண்மை நிறத்தை விட்டு விட்டு பாலையும் நினைக்க முடியாது. 

இது போன்றே பிரம்மத்தை விட்டு விட்டு சக்தியையோ, சக்தியை விட்டுவிட்டு பிரம்மத்தையோ நினைக்க இயலாது. 

இறைவனை விட்டுவிட்டு உலகையோ, உலகை விட்டு விட்டு இறைவனையோ நினைக்க முடியாது.

ஆத்யா சக்தி ஆடல் மயமானவள். அவள் படைக்கிறாள். காளி தான் பிரம்மம், பிரம்மமே காளி. 

இருவரும் ஒருவரே,.ஆக்கல் , அளித்தல், அழித்தல் என்று எந்தச் செயலும் இல்லாமல் அவள் இருப்பதாக நாம் நினைக்கும்போது பிரம்மம் என்கிறோம். 

இந்தச் செயல்களைச்செய்யும்போது அவனைக்காளி என்கிறோம். சக்தி என்கிறோம். 

உள்ளது ஒன்று, நாம ரூபம் தான்வேறு.

தண்ணீர் ஒன்றே, அதையே ஜலம் வாட்டர், பானி என்றெல்லாம் அழைக்கிறோம். 

ஒரு குளத்திற்கு மூன்று நான்கு படித்துறைகள். 

ஒரு துறையில் இந்துக்கள் நீர் அருந்துகிறார்கள், அவர்கள் அதைத் தண்ணீர் என்கிறார்கள். 

மற்றொரு படித்துறையில் முகமதியர்கள் நீர் அருந்துகிறார்கள். அவர்கள் பானி என்கிறார்கள். 

இன்னொரு படித்துறையில் ஆங்கிலேயர்கள் நீர் அருந்துகிறார்கள். அவர்கள் வாட்டர் என்கிறார்கள். 

மூன்றும் ஒன்றுதான், பெயரில் தான்வேறுபாடு. 

இறைவனைச் சிலர் அல்லா என்கிறார்கள். சிலர் காட்(God) என்கின்றனர். சிலர் பிரம்மம் என்கிறார்கள். 

சிலர் காளி என்கிறார்கள்,சிலர் ராமர், ஹரி, என்றெல்லாம் கூறுகின்றனர்.

சுரேந்திரரின் சகோதரர்---சுவாமி பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும், ஜாதி வேற்றுமையை ஒழிக்க வேண்டும். என்றெல்லாம் பிரம்மசமாஜம் பிரச்சாரம் செய்து வருகிறது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஸ்ரீராமகிருஷ்ணர்--- இறைவனிடம்புதிதாக அன்பு ஏற்படும்போது இப்படி யெல்லாம் வரும். 

சுழற்காற்று அடிக்கும் போது புழுதி கிளம்பும். அப்போது எது புளியமரம். எது மாமரம் என்று எதுவும் தெரியாது. காற்று நின்ற பிறகு எல்லாம் தெரியும். மதத்தின்மீது புதிய அன்பு என்ற சுழற்காற்று நின்று விட்டால் இறைவன் ஒருவரே மேலானவர், உள்ளவர் மற்றவையெல்லாம் நிலையற்றவை என்பதெல்லாம் படிப்படியாக தெரியவரும். 

சாதுக்களின் தொடர்பும் தவமும் இல்லாமல் இவை எதையும் புரிந்துகொள்ள முடியாது. 

மிருதங்க ஓசையை வாயினால் சொல்லி என்ன பயன்? கையினால் அதை வாசிப்பது மிகவும் கடினம். வெறும் லெக்சரால் ஆவது என்ன?

தவம் செய்ய வேண்டும், அப்போது தான் புரியும்.

ஜாதி வேற்றுமையா? ஒரே ஒரு வழியினால் தான் ஜாதி வேற்றுமையை ஒழிக்க முடியும். 

அது பக்தி. 

பக்தர்களுக்கு ஜாதி கிடையாது. 

தீண்டப்படாத ஜாதியும் பக்தியால் தூய்மை பெறுகிறது.

சண்டாளனுக்கு பக்தி ஏற்படுமானால் அவன் சண்டாளனே அல்ல. சைதன்யதேவர் சண்டாளர் வரையுள்ள அனைவரையும் கட்டியணைத்துக்கொண்டார்.

பிரம்ம சமாஜத்தினர் ஹரிநாமத்தைச்சொல்கிறார்கள். 

அது மிகவும் நல்லது. மன ஏக்கத்துடன் அவரை அழைத்தால் அவரது அருள் உண்டாகும். அவரது அனுபூதி உண்டாகும்.

எல்லாவழிகள் மூலமும் இறைவனை அடையலாம். ஒரே கடவுளைப் பல பெயர்களால் அழைக்கிறோம்.

குருதேவரை வடகிழக்கில் உள்ள ஓர் அறையில் உட்கார வைத்தனர். அவர் இன்னும் பரவச நிலையிலேயே இருந்தார். அவரை அங்கே அழைத்திருந்த பக்தர் வந்து வரவேற்றார். அவர் ஒரு வைணவர், உடலில் நாமம் முதலிய சின்னங்கள் கையில் ஒரு ஜபமாலை பை. ஆள் சற்று பழைமை வாதி, கோலாத் கோஷின் சம்பந்தி. அவ்வப்போது தட்சிணேசுவரம் சென்று குருதேவரைத் தரிசித்திருக்கிறார். 

சில வைணவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள். அவர்கள் வேதாந்திகளையும் சாக்தர்களையும் நிந்திப்பார்கள். 

குருதேவர் பேச ஆரம்பித்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்---(வைணவ பக்தரையும் மற்ற பக்தர்களையும் பார்த்து), என் மதம் தான் உண்மை. மற்றவர்களின் மதம் தவறு. இத்தகைய போக்கு நல்லதல்ல. 

இறைவன் ஒருவனே, இரண்டல்ல. அவரைப்பல்வேறு மக்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கின்றனர். 

சிலர் கிருஷ்ணன் என்றும், சிலர் சிவன் என்றும், சிலர் பிரம்மம் என்றும் அழைக்கின்றனர். 

குளத்தில் தண்ணீர் இருக்கிறது. ஒரு துறையில் வாட்டர் என்கின்றனர். இன்னொரு துறையில் ஜலம் என்கின்றனர், மற்றொரு துறையில் பானி என்கின்றனர். 

இந்துக்கள் ஜலம் என்கின்றனர். முகமதியர்கள் பானி என்கின்றனர். கிறிஸ்தவர்கள் வாட்டர் என்கின்றனர். ஆனால் பொருள் ஒன்றுதான். 

மதம் என்றால் வழி.ஒவ்வொரு மதமும் நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்கின்ற ஒவ்வொரு வழியாகும். 

பல இடங்களிலிருந்து பாய்ந்து வருகின்ற நதிகள் கடலில் சங்கமமாவது போல்.

வேதம் புராணம், தந்திரம் எல்லாம் காட்டுவது ஒரே சச்சிதானந்தமே.

வேதத்தில் சச்சிதானந்த பிரம்மம், புராணத்தில் சச்சிதானந்த கிருஷ்ணர், சச்சிதானந்த ராமர், 

தந்திரத்தில் சச்சிதானந்த சிவன். சச்சிதானந்த பிரம்மம் , 

எல்லோரும் அமைதியாக இருந்தனர்.


  13

உப்பு பொம்மை


பிரம்மத்தை அறிந்து விட்டதாக மனிதர்கள் நினைக்கிறார்கள். 

எறும்பு ஒன்று சர்க்ரைக் குன்றிற்குச் சென்றது.ஒரே ஒரு பொடி அதன் வயிற்றை நிரப்பி விட்டது. மற்றொரு பொடியை வாயில் எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கித் திரும்பியது. போகும்போது அது தனக்குள்ளே, அடுத்த முறை வந்து சர்க்கரைக் குன்றையே எடுத்துச்செல்வேன் என்று எண்ணிக்கொண்டது. 

சாதாரண மனிதர்கள் இப்படியெல்லாம் தான் நினைக்கின்றனர். 

பிரம்மம் வாக்கிற்கும் மனத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை அவர்கள் அறிவதில்லை. 

யாராக இருந்தாலும் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் பிரம்மத்தைப் பற்றி அவன் என்னதான் அறிந்து விடுவான். 

சுகதேவர் போன்றோர் சற்று பெரிய எறும்புகள்- மிஞ்சிப்போனால் எட்டு பத்து பொடிகளைத் தான் கொண்டு வந்திருப்பார்கள், அவ்வளவு தான்.

ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ளதே, அது எப்படி தெரியுமா? 

ஒருவன் கடலைப் பார்த்து விட்டு வந்தான். அவனிடம் ஒருவன் கடல் எப்படி இருந்தது? என்று கேட்கிறான். 

மற்றவன் வாயை ஆவென்று திறந்து, ஆ! அதை என்னவென்று சொல்வேன்! அப்பப்பா! எவ்வளவு பெரிய அலைகள்! எப்பேர்பட்ட பயங்கர ஓசை! என்று சொல்வான். 

பிரம்மத்தைப்பற்றி சொல்லப்பட்டிருப்பது இப்படித்தான். அவர் ஆனந்தமயமானவர், சச்சிதானந்த வடிவினர் என்று வேதங்கள் கூறுகின்றன.

சுகர் முதலான மகா முனிவர்கள் பிரம்மமாகிய கடலின் கரையில் நின்று கொண்டு அதைப் பார்த்தார்கள். தொட்டார்கள். 

ஒரு சிலரின் கருத்துப்படி அவர்கள் அந்தக் கடலில் இறங்கவே இல்லை, அதில் இறங்கினால் மீண்டுவர வழியில்லை. 

சமாதி நிலையில் பிரம்ம ஞானம் ஏற்படுகிறது, பிரம்ம தரிசனம் கிடைக்கிறது. அந்த நிலையில் சிந்தனை முற்றிலுமாக நின்று விடுகிறது. மனிதன் மௌனியாகி விடுகிறான். 

பிரம்மம் என்றால் என்ன என்பதை விளக்கிக்கூறும் ஆற்றல் அவனுக்கு இருப்பதில்லை.

உப்பு பொம்மை ஒன்று கடலின் ஆழத்தை அளக்கச்சென்றது. 

கடலின் ஆழம் எவ்வளவு என்று எல்லோருக்கும் சொல்ல அது ஆசைப்பட்டது. 

அதனால் சொல்ல முடியுமா? கடலில் இறங்கியதும் கரைந்து விட்டதே! பிறகு யார் வந்து கடலின் ஆழத்தைச் சொல்வது?

ஒரு பிரம்ம பக்தர்---கடவுள் உருவம் உடையவரா? உருவம் அற்றவரா?

ஸ்ரீராமகிருஷ்ணர்--- அவர் இப்படிப் பட்டவர் என்று சொல்ல முடியாது. அவர் உருவம் இல்லாதவர், அதே வேளையில் உருவம் உடையவரும் கூட, பக்தர்களுக்காக அவர் உருவம் தாங்குகிறார். 

யார் ஞானியோ அதாவது யார் உலகத்தைக் கனவு போல் காண்கிறார்களோ, அவர்களுக்கு அவர் உருவம் அற்றவராக உள்ளார். 

தான் தனிப்பட்ட ஒருவன் என்பதும் உலகம் தன்னிலிருந்து வேறுபட்ட ஒன்று என்பது பக்தனுக்குத்தெரியும். 

எனவே இறைவன் பக்தனுக்கு ஒரு தனி நபராக ஆகி காட்சி அளிக்கிறார். ஞானி, அதாவது வேதாந்தவாதி, இது அல்ல, என்று ஆராய்ச்சி செய்து. நான் உண்மையல்ல, உலகமும் கனவு போல் உண்மையற்றது என்பதை அகத்தில் உணர்கிறான்.

ஞானி பிரம்மத்தைத் தன் உணர்வில் உணர்கிறான். ஆனால் அவர்யார் என்பதைச் சொற்களால் சொல்ல அவனால் முடிவதில்லை.

ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது நான், அது இது எல்லாம் மறைந்துவிடுகிறது

பிரம்மத்தின் இயல்பை உணர்வில் உணர்வது என்றால் என்ன என்பதையெல்லாம் அங்கே யார் கூறுவது?

பூரண ஞானத்தின் அடையாளம் என்ன? 

பூரண ஞானம் ஏற்படும்போது மனிதன் மௌனியாகிறான். 

அப்போது நான் என்ற உப்புப் பொம்மை சச்சிதானந்தம் என்ற கடலில் கரைந்து ஒன்றாகிவிடுகிறது. அங்கே வேறுபாட்டு உணர்வு சிறிதும் இருப்பதில்லை.

image97