Join WhatsApp Group 9789 374 109

Hindumatham.in

Hindumatham.inHindumatham.inHindumatham.in
  • Home
  • About Us
  • Sri Ramakrishna
  • vivekananda
  • Hindumatham
  • RK2
  • RK3
  • TITLES
  • More
    • Home
    • About Us
    • Sri Ramakrishna
    • vivekananda
    • Hindumatham
    • RK2
    • RK3
    • TITLES

Hindumatham.in

Hindumatham.inHindumatham.inHindumatham.in
  • Home
  • About Us
  • Sri Ramakrishna
  • vivekananda
  • Hindumatham
  • RK2
  • RK3
  • TITLES

Site Content

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

  

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-

பாகம்-1

........................

குருவும் சீடரும்

...........................

பிப்ரவரி 26, 1882

.......................

கங்கைக் கரையில் தட்சிணேசுவரக் காளிகோயில், காளிதேவியின் உறைவிடம்.வசந்த காலம்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்த நாள் விழா நிறைவுற்று சில நாட்கள் சென்றிருந்தன. பிப்ரவரி 23 வியாழனற்று அவர் கேசவசந்திர சேன், கேப்டன் குக் முதலியவர்களுடன் நீராவிப்படகில் சென்றிருந்தார். அதற்குச் சில நாட்களுக்குப் பிறகு நடைபெற்றது இது.

ஞாயிற்றுக் கிழமை ம-வுக்கு விடுமுறை. ஆதலால் மாலையில் நண்பர் சிதுவுடன் வராக நகரில் பல பூந்தோட்டங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு பிரசன்ன பானர்ஜியின் பூந்தோட்டத்திற்குச் சென்றார். அங்கே இருவரும் உலவிக் கொண்டிருக்கையில் சிது. ”கங்கைக் கரையில் ஓர் அழகிய தோட்டம் இருக்கிறது. அங்கே பரமஹம்சர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். போய்ப் பார்க்கலாமா? என்று கேட்டார். ம-உடன் பட்டார். இருவரும் தட்சிணேசுவரம் சென்று ஸ்ரீராமகிருஷ்ணருடைய அறையை அடைந்தனர். அங்கே ஸ்ரீராமகிருஷ்ணர் முகத்தில் புன் முறுவல் தவழ ஒரு கட்டிலின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு இறைவனைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அறை முழுவதும் பக்தர்கள் தரையில் உட்கார்ந்து அந்த அமுதமொழிகளை ஆழ்ந்த அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.

ம- வின் முதல் சந்திப்பு அது. அறையின் உள்ளே சென்ற அவர் பேச்சிழந்தவராய், வியப்புடன் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றார். புண்ணியத் தலங்கள் அனைத்தும் அந்த அறையில் கூடியிருப்பது போல் அவருக்குத் தோன்றியது. சுகதேவரே அங்கு அமர்ந்து கொண்டு எம்பெருமானின் மகிமைகளைக் கூறுவது போன்றதோர் உணர்வு அவர் உள்ளத்தில் எழுந்தது. ஸ்ரீசைதன்ய தேவர் புரி ஷேத்திரத்தில். ராமானந்தர், சுவரூப் முதலான பக்தர்களோடு சேர்ந்து இறைவனின் திருநாமத்தையும் மகிமைகளையும் மெய் மறந்து பாடி ஆடிக் கொண்டிருப்பது போலவும் அந்தக் காட்சி அவருக்குத்தோன்றியது.

ஸ்ரீராமகிருஷ்ணர்பேசிக்கொண்டிருந்தார். ஹரிநாமத்தையோ ராம நாமத்தையோ ஒரு முறை சொன்ன அளவிலேயே ஒருவனுக்கு மயிர்க்கூச்செரியுமானால் ஆனந்தக் கண்ணீர் வழியுமானால், அவன் அதன் பிறகு சந்தியாவந்தனம் முதலியவற்றை செய்ய த்தேவையில்லை. அவன் கர்மத் தியாகம் செய்யும் தகுதி பெறுகிறான். இதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். செயல்கள் தானாகவே அவனிடம் இருந்து கழன்றுவிடுகின்றன. இந்த நிலையில் அவன் ராமநாமத்தையோ , ஹரிநாமத்தையோ அல்லது ஓங்காரத்தையோ ஜபம் செய்தாலே போதுமானது. பின்னர் மேலும் கூறினார், சந்தியா காயத்ரியில் ஒடுங்குகிறது. காயத்ரி ஓங்காரத்தில் ஒடுங்குகிறது. எல்லாவற்றையும் பிரமிப்புடன் பார்த்த ம-விற்கு ஆகா உள்ளத்தைக் கொள்ளைக்கொள்ளும் எவ்வளவு அழகான இடம் இது. எத்தகைய அதிசய மனிதர் இவர் என்ன அற்புதமானப்பேச்சு. இந்த இடத்தைவிட்டு நகர என் மனம் மறுக்கிறதே என்று தோன்றுகிறது. பிறகு சரி இந்த இடத்தை முதலில் சுற்றிப் பார்த்து விடுவோம். பிறகு இங்கு வந்து உட்காரலாம் என்று முடிவு செய்தார். சிதுவுடன் அறையைவிட்டு வெளியில் வந்து கொண்டிருந்த போது, கோயிலிலிருந்து மாலை தீபாராதனையின் இனிய நாதங்கள் ம-வின் காதுகளில் ஒலித்தன.சேகண்டி, மணி, கோல், ஜால்ரா, என்று இன்னிசைக் கருவிகள் ஒலிக்க லாயின. தோட்டத்தின் தென் பகுதியில் உள்ள நகபத்திலிருந்தும் நாதம் வரலாயிற்று. அந்த நாதங்கள் எல்லாம் கங்கை நீர்பரப்பின் மீது தவழ்ந்தபடி வெகு தூரம் சென்று எங்கோ கரைந்து மறைவது போல் தோன்றியது. மலர் மணம் கமழும் வசந்தகாலத் தென்றல் மெல்லென்று வீசத் தொடங்கிற்று. நிலவொளி மெதுவாக எங்கும் பரந்தது.ஏதோ இயற்கை அன்னையும் நம்மைப்போலவே மாலை வழிபாட்டிற்காக நான்கு திசைகளிலும் ஏற்பாடு செய்து கொண்டிருப்பது போல் தோன்றியது. 

பன்னிரு சிவாலயங்களிலும், ராதாகாந்தர் கோயிலிலும், பவதாரணி காளி சன்னிதியிலும் ஆரதியைத் தரிசித்து ம- மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். ராணி ராசமணி கட்டிய கோயில் இது. இங்கே தினமும் பூஜை நடந்து வருகிறது. அன்றாடம் யாத்திரிகர்களும் பக்தர்களும் இங்கே வந்து பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்” என்று தெரிவித்தார் சிது.

காளி கோயிலிலிருந்து இருவரும் பேசிக்கொண்டே முற்றத்தைக் கடந்து மீண்டும் ஸ்ரீராமகிருஷ்ணரின் அறை வாசலை அடைந்தனர். அறைக் கதவு மூடியிருந்தது. அப்போது தான் தூபம் போட்டிருந்தார்கள். மேலை நாட்டுப் பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்த ம- அனுமதியின்றி உள்ளே போக தயங்கினார். வாசலில் வேலைக்காரி பிருந்தா நின்று கொண்டிருந்தாள். அவளிடம், என்னம்மா சாது, உள்ளே இருக்கிறாரா? என்று கேட்டார்.

பிருந்தா-

ஆம், உள்ளே தான் இருக்கிறார்.

ம-

எவ்வளவு நாளாக இங்கே இருக்கிறார்?

பிருந்தா-

ஓ! ரொம்ப நாளாக.

ம-

நிறைய புத்தகம் படித்திருக்கிறாரா?

பிருந்தா-

புத்தகமாவது, படிப்பதாவது! எல்லாம் அவர் நாக்கிலேயே நடமாடுகின்றன.

ம-

படித்தவர். ஸ்ரீராமகிருஷ்ணர் புத்தகங்களே படித்ததில்லை என்று கேள்விப்பட்ட போது அவருக்கு வியப்பு உண்டாயிற்று.

ம- சரி, இப்போது அவர் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். நாங்கள் உள்ளே போகலாமா? நீ அவருக்குச் சற்று தெரிவிப்பாயா?

பிருந்தா-

நீங்கள் உள்ளே போகலாம், போய் உட்காருங்கள்.

சிதுசும் ம-வும் உள்ளே சென்றனர். அறையில் வேறு யாரும் இல்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் மட்டும் தனியாக கட்டிலில் அமர்ந்திருந்தார்.அறையில் தபம் போடப் பட்டிருந்ததால் எல்லா கதவுகளும் மூடியிருந்தன. உள்ளே நுழைந்ததும் ம- கைகூப்பி ஸ்ரீராமகிருஷ்ணரை வணங்கினார். அவர் இருவரையும் உட்காருமாறு கூறினார். அவர்கள் தரையில் உட்கார்ந்தனர்.

ஸ்ரீராமகிருஷ்ணர் ம-விடம், நீ எங்கே வசிக்கிறாய்? என்ன செய்கிறாய்? வராக நகருக்கு என்ன விஷயமாக வந்திருக்கிறாய்? போன்ற கேள்விகளைக்கேட்டார்.

ம-

தன்னைப் பற்றிய விவரங்களையெல்லாம் கூறினார்.நடுநடுவே வேறு நினைவில் ஆழ்ந்துவிடுவது போல் ம-விற்கு த்தோன்றியது. அது தான் பரவச நிலை என்பதைப் பின்னர் அவர் தெரிந்து கொண்டார்.தூண்டிலைக் கையில் ஏந்தியபடி ஒருவன் மீன் பிடிக்க உட்காருகிறான். இரையை மீன் கௌவும்போது மிதவையில் அசைவு ஏற்படும். மீன் பிடிப்பவன் கண்ணும் கருத்துமாக அதையே கவனித்துக் கொண்டிருப்பான். யாரிடமும் பேச மாட்டான். மனம் ஒரு மித்த இது போன்ற நிலையே பரவச நிலை. சந்தியா வேளையில் குருதேவர் இப்படிப் பரவச நிலையில் இருப்பார் என்றும், சில வேளைகளில் வெளி உணர்வை முற்றிலும் இழந்துவிடுவார் என்றும் ம- பிறகு கேள்விப் பட்டார். பின்னாட்களில் தானே பல முறை கண்டும் இருக்கிறார்.

ம- 

நீங்கள் இப்போது சந்தியாவந்தனம் செய்வீர்கள் அல்லவா? நாங்கள் போய் வருகிறோம்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

(பரவச நிலையில்)- சந்தியாவா?- இல்லை- அந்தமாதிரி- எதுவும் இல்லை.

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ம- ஸ்ரீராகிருஷ்ணரை வணங்கி விடைபெற்றார். மறுபடியும் வா” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

திரும்பிப்போகும் போது ம- தனக்குள் , யார் இந்த சாந்த மூர்த்தி! இவரிடம் மறுபடியும் வர என் மனம் ஆவல் கொள்கிறதே! ஆமாம், புத்தகம் படிக்காமல் ஒருவர் உயர்ந்தவராக முடியுமா? என்ன ஆச்சரியம்! அவரை மீண்டும் காண என் மனம் விரும்புகிறது. மறுபடியும் வா” என்று அவரும் கூறியிருக்கிறார். நாளை அல்லது நாளை மறுநாள் வருவேன்” என்று எண்ணியபடி சென்றார்.

பாகம்-2

  

மார்ச்-1882

................

இரண்டாம் முறையாக ம- ஸ்ரீராமகிருஷ்ணரை தரிசிக்க வந்தபோது, அவர் தமது அறைக்குள்த் தென்கிழக்கிலுள்ள வராந்தாவில் சவரம் செய்து கொள்ளத் தயாராக இருந்தார். காலை எட்டு மணி, இன்னும் குளிர் இருந்தது. எனவே சால்வை போர்த்திக் கொண்டிருந்தார். அதில் சிவப்புக் கரை இருந்தது. ம-வைப் பார்த்ததும் ஓ! நீ வந்து விட்டாயா? நல்லது. இங்கே உட்கார்” என்றார்.

பிறகு சவரம்செய்து கொள்ள உட்கார்ந்தார். இடையிடையே ம-வுடன் பேசவும் செய்தார். உடம்பில் போர்வை, கால்களில் செருப்பு, சிரித்த முகம், கொஞ்சம் திக்கலோடு வரும் பேச்சு.

ஸ்ரீராமகிருஷ்ணர்-(ம-விடம்)

ஆமாம், உன் வீடு எங்கே இருக்கிறது?

ம- கல்கத்தாவில்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இங்கே எங்கு வந்தாய்?

ம- 

வராக நகரில் என் மூத்த சகோதரி வசிக்கிறாள், ஈசான் கவிராஜரின் வீடு .

ஸ்ரீராமகிருஷ்ணர்-

ஓ! ஈசானின் வீட்டிலா? கேசவர் எப்படியப்பா இருக்கிறார்? மிகவும் நோயுற்றிருந்தாரே!

ம-

நானும் அப்படித் தான் கேள்விப் பட்டேன். இப்போது குணம் அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

கேசவர் குணமடைவதற்காக தேவிக்கு இளநீரும் சர்க்கரையும் படைப்பதாக நான் வேண்டிக் கொண்டேன். சில வேளைகளில், அதி காலையில் விழித்துக்கொண்டு அவளிடம், அம்மா, கேசவரைக் குணமாக்கி விடு. அவர் இல்லாவிட்டால், நான் கல்கத்தாவிற்குப் போகும் போது யாரிடம் பேசுவேன்? என்று முறையிடுவேன். அதற்காகத் தான் இளநீரும் சர்க்கரையும் படைப்பதாக வேண்டினேன்.

அது சரி, குக் என்ற யாரோ வெள்ளைக் காரர் ஒருவர் கல்கத்தாவிற்கு வந்திருக்கிறாமே, அவர் லெக்சர் செய்கிறாராம். உனக்குத் தெரியுமா? சேகவர் ஒரு முறை என்னை நீராவிப் படகில் அழைத்துச் சென்றார். அப்போது குக்கும் இருந்தார்.

ம-

ஆம், நானும் கேள்விப்பட்டேன். ஆனால் அவரது சொற்பொழிவைக்கேட்டதில்லை. அவரைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

பிரதாபின் சகோதரன் இங்கே வந்து சில நாட்கள் தங்கியிருந்தான். வேலை வெட்டி எதுவும் இல்லை, இங்கேயே தங்கிவிடப்போவதாகச்சொன்னான். மனைவி மக்களை மாமனார் வீட்டில் விட்டு வைத்திருக்கிறானாம். இதைக்கேள்விப் பட்டதும் அவனைக் கடுமையாகத் திட்டினேன். நீயே சொல். அவனுடைய குழந்தை குட்டிகளை ஊராரா சோறு போட்டு வளர்ப்பார்கள்? வெட்கம் கெட்டவன்! அவனுடைய குழந்தைகளை வேறு யாரோ கவனித்துக் கொள்கிறார்கள்! அவர்களை மாமனார் வீட்டில் விட்டு வந்திருக்கிறான். முதலில் ஒரு வேலை தேடிக்கொள்ளும்படிச் சொல்லி கடுமையாக ஏசினேன். அதற்குப் பிறகு தான் இந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

ஆமாம் உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?

ம-ஆம்.

ஸ்ரீராமகிருஷ்ணர்- (அதிர்ந்து போய்)-

ஏ ராம்லால், இவனுக்குத்திருமணம் ஆகி விட்டதாம்!

ஏதோ மாபெரும் அபராதம் செய்து விட்டவர் போல் ம- தலை குனிந்து, வாய் மூடி, மௌனமாக உட்கார்ந்திருந்தார். திருமணம் செய்து கொள்வது அவ்வளவு பெரிய குற்றமா என்ன! என்று தனக்குள் நினைத்துக் கொண்டார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் மறுபடியும் கேட்டார், உனக்குக் குழந்தை குட்டி இருக்கிறதா?

ம- வின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. பயந்துகொண்டே, ஆம், சுவாமி. எனக்குக் குழந்தை இருக்கிறது” என்று சொன்னார்.

இதைக்கேட்டதும் குருதேவர், ஏதோ கேட்க விரும்பாததைக்கேட்டது போல், ஐயோ, இவனுக்குக் குழந்தையும் இருந்கிறதாமே! என்று திகைப்புடன் கூறினார்.

ம-

நிலை குலைந்து போனார். அவருடைய அகங்காரம் தூள் தூளாகத் தொடங்கியது.

சில வினாடிகளுக்குப் பிறகு குருதேவர் ம-வை அருள் கனியப் பார்த்து அன்புடன் கூறினார்.

இதோ பார், உன்னிடம் சில நல்ல அறிகுறிகள் தென் படுகின்றன. நெற்றி, கண்கள் முதலியவற்றைப் பார்த்து என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதிருக்கட்டும் உன் மனைவி எப்படிப்பட்டவள்- வித்யா சக்தியா, அவித்யா சக்தியா.?

ம- சுவாமி, அவள் நல்லவள்,ஆனால் அஞ்ஞானி.

ஸ்ரீராமகிருஷ்ணர்- (வெறுப்புடன்)

நீ பெரிய ஞானியோ.

ம-வுக்கும் ஞானம் எது, அஞ்ஞானம் எது என்பது இன்னும் தெரியவில்லை. எழுதப் படிக்கத் தெரிந்து விட்டால் . நூல்களைப் படிக்க முடிந்தால் ஞானம் ஏற்பட்டு விடும் என்று தான் அவர் இது வரை எண்ணியிருந்தார். பிற்காலத்தில் இந்தத் தவறான கருத்து அவரிடமிருந்து அகன்றது. கடவுளை அறிவதே ஞானம். அவரை அறியாதிருப்பது அஞ்ஞானம். என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

நீ பெரிய ஞானியோ? என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கேட்டதும் ம-வின் அகங்காரத்திற்கு மீண்டும் பலத்த அடி கிடைத்தது.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

போகட்டும், உனக்கு எதில் நம்பிக்கை- உருவத்திலா, அருவத்திலா?

ம- வியப்படைந்தவராக தமக்குள் நினைக்கலானார். உருவத்தில் நம்பிக்கை இருந்தால் அருவத்தில் எப்படி நம்பிக்கை உண்டாக முடியும்? இறைவன் உருவம் அற்றவர் என்ற நம்பிக்கை இருக்கும்போது, அவர் உருவம் உடையவர் என்ற நம்பிக்கை பிறக்க முடியுமா? மாறுபட்ட இரண்டு நிலைகள் ஒரேசமயத்தில் எப்படி உண்மையாக இருக்க முடியும்? சாதாரணப்பொருள் ஒன்றையே எடுத்துக் கொள்வோம்.

-பால், பாலின் நிறம் வெண்மை. அது கறுப்பாக முடியுமா?

ம-( ஸ்ரீராமகிருஷ்ணரிடம்)-

சுவாமி, அருவம் தான் எனக்குப் பிடித்திருக்கிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அது நல்லது, . ஒன்றில் நம்பிக்கை இருந்தாலே போதும். உனக்கு அருவத்தில் நம்பிக்கை. அது நல்லது. ஆனால் அது ஒன்று தான் உண்மை. மற்றவை பொய் என்ற எண்ணத்திற்கு இடம் கொடுக்காதே. அருவமும் உண்மை. அது போல் உருவமும் உண்மை. இதை நினைவில் வைத்திரு. ஆனால் உனக்கு எதில் நம்பிக்கையோ அதைப் பிடித்துக் கொள்.

இறைவனுக்கு அருவம், உருவம் ஆகிய இரண்டு நிலைகளும் உண்மை என்பதைத் திரும்பத் திரும்ப கேட்ட ம- ஆச்சரியம் அடைந்தார். இந்த விஷயம் அவர் படித்த ஏட்டுக் கல்வியில் இல்லையே!

ம- வின் அகங்காரத்திற்கு மூன்றாவது முறையாக அடி விழுந்தது. ஆனாலும் அது அடியோடு அழிந்து விட வில்லை. ஆகவே அவர் இன்னும் சிறிது வாதிடத் தயாரானார்.

ம-

சுவாமி, இறைவன் உருவம் உடையவர் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியும் அவர் களிமண் பொம்மையாக இருக்க முடியாது அல்லவா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

நீ என்ன சொல்கிறாய்? களிமண் பொம்மையா? அது உணவ்வு வடிவம் ஆயிற்றே,.

உணர்வு வடிவம் ” என்ற கருத்தை ம-வினால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ம-

களிமண் உருவத்தை வழிபடுபவர்களுக்கு முதலில், களிமண் உருவம் கடவுள் அல்ல என்பதைப் புரிய வைக்க வேண்டுமு். அதோடு, அந்த உருவத்தில் இறைவனை நினைத்துத் தான் பூஜை செய்ய வேண்டுமே தவிர களிமண்ணிற்குப் பூஜை செய்வது சரியல்ல.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

(வெறுப்புடன்)- கல்கத்தாவாசிகளாகிய உங்களுக்கு இது ஒரு பொழுதுபோக்காகி விட்டது. லெக்சர் செய்வதும் புரிய வைப்பதும்ஒரு தொழிலாகவே போய்விட்டது. தான் உண்மையை அறிவது எப்படி என்று ஒருவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. புரிய வைப்பதற்கு நீங்கள் யார்? இந்தப் புவனங்கள் அனைத்தும் யாருக்குச் சொந்தமோ அவர் புரிய வைப்பார். இந்த உலகை யார் படைத்தாருா, யார் சூரியன் , சந்திரன், மனிதர்கள், ஏனைய உயிரினங்கள் அனைத்தையும் படைத்தாரோ, உயிரினங்களின் உணவிற்கு வழிவகை செய்து வைத்தாரோ. அவற்றை வளர்த்துக் காக்க தாய் தந்தையரைப் படைத்தாரோ, அந்தத் தாய் தந்தையரிடம் மக்கள் மீது பாசத்தையும் வைத்தாரோ அவர் புரிய வைப்பார். எதற்கெல்லாமோ வழிவகை செய்துள்ள அவர் இதற்கொரு வழி செய்யாமல் போவாரா?

புரிய வைக்க வேண்டும் என்ற தேவை இருந்தால் அவரே புரிய வைப்பார். நமக்குள் இருந்து கொண்டு நம்மை நடத்திச் செல்பவர் அவரே அல்லவா! களி மண்ணுருவை வழிபடுவது தவறாகவே இருந்தாலும், அவர்கள் அந்த மண் வடிவில் தன்னைத் தான் வழிபடுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியாதா என்ன? அந்த வழிபாட்டிலேயே அவர் மகிழ்ச்சி அடைவார். உனக்கு ஏன் இந்தத் தலைவலியெல்லாம் நீ ஞானமும் பக்தியும் பெறுவதற்கு என்ன வழி என்று பார்த்து அதற்கு முயற்சி செய்.

இப்போது ம-வின் அகங்காரம் தவிடு பொடியாகியது. இவர் சொல்வது சரி தானே! நான் பிறருக்குப்போதிக்க வேண்டிய அவசியம் என்ன? நான் என்ன கடவுளை அறிந்தவனா அல்ல அவரிடம் எனக்கு பக்தி தான் இருக்கிறதா? தனக்கே படுக்க இடம் இல்லை. இதில் சங்கரனை வேறு கூப்பிடுகிறான் என்ற கதை போலல்லவா உள்ளது! நான் கடவுளைக் கண்டதுமில்லை, கேட்டதும் இல்லை. இதில் மற்றவர்களுக்கு அவரைப் புரிய வைக்க முயல்வது வெட்கக்கேடு. என்ன அற்ப புத்தி! மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு இது என்ன கணிதமா, வரலாறா, இலக்கியப் பாடமா? இது இறை தத்துவம். இவர் 4றுவது என் நெஞ்சத்தைத் தொடுகிறது” என்று எண்ணினார். ம- குருதேவருடன் அவர் வாதிட்டது இது வே முதலும் கடைசியும்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

மண் உருவத்தைப் பூஜை செய்வது பற்றி பேசினாய். பூஜை , மண் உருவத்திற்கே ஆனாலும் அதில் பயன் இருக்கிறது. பல விதமான பூஜை முறைகளை இறைவனே ஏற்படுத்தியிருக்கிறார். இந்த உலகம் யாருடையதோ அந்த ஆண்டவனே இவைகளையெல்லாம் மக்களின் தகுதிக்கு ஏற்ப அமைத்திருக்கிறார். ஒரு தாய் தன் குழந்தைகளின் ஜீரண சக்திக்கு ஏற்ப உணவு சமைக்கிறாள் அல்லவா! அது போல்.

ஒரு தாய்க்கு ஐந்து குழந்தைகள். வீட்டில் மீன் கொண்டு வரப் பட்டுள்ளது. யாருடைய வயிற்றுக்கு எது சரியாக இருக்கும் என்பதற்கு ஏற்ப அதை அவள் பலவகைகளில் சமைக்கிறாள்- ஒருவனுக்குப் பரியாணி. ஒருவனுக்குக் குழம்பு, ஒருவனுக்குக் கறி, ஒருவனுக்கு வறுவல், யாருக்கு எது நல்லதோ, யாருடைய ஜீரண சக்தி எப்படி உள்ளதோ அதற்கேற்ப செய்கிறாள். என்ன, புரிகிறதா?

ம-(பயிவுடன்)- 

புரிகிறது சுவாமி! சுவாமி, இறைவனிடம் மனத்தைச் செலுத்துவது எப்படி?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இறைவனின் திருநாமத்தை எப்போதும் ஜபம் செய். அவரது திருப் புகழை இடைவிடாமல், எப்போதும் ஜபம் செய். அவரது திருப் புகழை இடைவிடாமல் பாடு. அத்துடன் சத்சங்கம் வேண்டும். அவ்வப்போது பக்தர்களையோ சாதுக்களையோ நாடிச்செல்ல வேண்டும். குடும்ப விவகாரங்களிலும் உலகியல் விஷயங்களிலும் இரவு பகலாக ஆழ்ந்து கிடந்தால் மனம் இறைவனிடம் செல்லாது. எனவே அவ்வப்போது தனிமையில் சென்று இறைவனை நினைப்பது மிகவும் இன்றியமையாதது. ஆரம்பத்தில் தனிமை வாழ்க்கையைப் பழகாவிட்டால் பிறகு மனத்தை இறைவனிடம் நிறுத்துவது மிகவும் கடினம். இளஞ்செடியாக இருக்கும் போது சுற்றி வேலி போட வேண்டும். இல்லாவிட்டால் ஆடு மாடுகள் மேய்ந்து விடும்...

மனத்திலோ, மூலையிலோ , காட்டிலோ, தியானம் செய்ய வேண்டும். இறைவனே உண்மை. அதாவது நிலையானவர், மற்றவை அனைத்தும் உண்மை அல்லாதவை. அதாவது நிலையற்றவை என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இவ்வாறு சிந்தித்து சிந்தித்து நிலையற்ற பொருட்களை மனத்திலிருந்து அகற்றி விடு.

ம- (பணிவோடு)-

சுவாமி, இல்லறத்தில் எவ்வாறு வாழ வேண்டும்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

எல்லா கடமைகளையும் செய். ஆனால் மனத்தை இறைவனிடம் வை. மனைவி, மக்கள், தாய், தந்தை, எல்லோருடனும் சேர்ந்து வாழ். அவர்களுக்குச்சேவை செய். அதே வேளையில் அவர்கள் உன்னுடையவர்கள் அல்ல என்பதை உள்ளத்தில் தெரிந்து வைத்துக் கொள்.

பணக்கார வீட்டு வேலைக்காரி அங்கே எல்லா வேலைகளையும் செய்கிறாள். ஆனால் அவளது மனம் கிராமத்தில் உள்ள தன் வீட்மையே சதா நினைத்துக்கொண்டிருக்கிறது. அவள் அந்தப் பணக்காரரின் குழந்தைகளைத் தன் குழந்தைகளைப்போலவே கவனிக்கிறாள். என் ராமன், என் ஹரி, என்றெல்லாம் சீராட்டுகிறாள். இருந்தாலும் அந்தக் குழந்தைகள் தன்னுடையவர்கள் அல்ல என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்.

ஆமைத் தண்ணீரில் இங்கு மங்கும் திரிகிறது. ஆனால் அதன் மனமெல்லாம் எங்கிருக்கும் தெரியுமா? தான் கரையில் இட்ட முட்டைகளின் மீது. அது போல் இல்லறத்தில் உனக்குரிய எல்லா கடமைகளையும் செய், ஆனால் மனத்தை இறைவனிடம் வை.

இறைவனிடம் பக்தியை அடையாமல், இல்லறத்தில் ஈடுபட்டால் மேலும் மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்வாய். ஆபத்து, துன்பம், கவலை இவையெல்லாம் வந்து மோதும் போது மன உறுதியை இழப்பாய். அது மட்டுமல்ல. உலகியல் விஷயங்களில் மனம் செல்கின்ற அளவுக்கு பற்றும் அதிகரிக்கும்.

கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு பலாப் பழத்தை வெட்ட வேண்டும். இல்லாவிட்டால் பிசின் கைகளில் ஒட்டிக்கொள்ளும். அது போல் பக்தி என்ற எண்ணெயைப் பூசிக்கொண்டு இல்லறத்தில் ஈடுபட வேண்டும்.

இந்த பக்தியை அடைவதற்கு தனிமை தேவை. வெண்ணெய் எடுக்க வேண்டுமானால் உறையிட்ட பாலைத் தனியிடத்தில் வைக்க வேண்டும். அசைத்துக் கொண்டிருந்தால் தயிர் தோயாது. பிறகு எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு தயிரைக் கடைய வேண்டும். அப்போது தான் வெண்ணெய் திரண்டு வரும்.

இன்னும் கேள்! தனிமையில் அமர்ந்து, இறை சிந்தனையில் ஈடுபட்டால் மனத்தில் ஞானம், வைராக்கியம், பக்தி முதலியவை உண்டாகிறது.ஆனால் அதே மனத்தை உலகியல் விஷயங்களில் ஈடுபடுத்தினால் அதன் தரம் தாழ்ந்து விடுகிறது. உலகியல் வாழ்க்கையில் காமினீ- காஞ்சன சிந்தனை ஒன்றே உள்ளது.

இல்லறம் தண்ணீர், மனமோ பால். பாலைத் தண்ணீரில் கலந்தால் அவை கலந்து ஒன்றாகி விடும். தூய பாலைக் காண முடியாது. அதே பாலைத் தயிராக்கி, வெண்ணெய் எடுத்து, அந்த வெண்ணெயைத் தண்ணீரில் இட்டால் அது ஒட்டாமல் மிதக்கும். எனவே தனிமையில் சாதனைகள் செய்து, முதலில் ஞானம், பக்தி என்னும் வெண்ணெயைப்பெறு. அந்த வெண்ணெயை இல்லற வாழ்க்கை என்னும் நீரில் இட்டால் அது நீருடன் கலக்காது. மிதக்கும்.

அத்துடன், ஆராய்ச்சி மிகவும் அவசியம். காமினீ- காஞ்சனம் நிலையற்றது. இறைவன் ஒருவர் மட்டுமே நிலையானவர். பணத்தால் என்ன கிடைக்கும்? தங்க இடம் கிடைக்கும். அவ்வளவு தான். இறைவன் கிடைக்க மாட்டார். எனவே பணம் ஒருபோதும் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க முடியாது. இப்படிச் சிந்திப்பது தான் ஆராய்ச்சி, புரிந்ததா?

ம- 

புரிந்தது சுவாமி.சில நாட்களுக்கு முன் பிரபோத சந்த் ரோதயம் என்ற நாடகத்தைப் படித்தேன். அதில்” வஸ்து விசாரம் ”பற்றி காணப்பட்டது

ஸ்ரீராமகிருஷ்ணர்-

ஆம், வஸ்து விசாரம். இதோ பார். பணத்தில் என்ன இருக்கிறது. அழகிய உடம்பில் தான் என்ன இருக்கிறது.பகுத்தறிந்து பார். அழகிய பெண்ணின் உடம்பிலும் வெறும் எலும்பு , சதை, கொழுப்பு, மலம், மூத்திரம் எல்லாம் தான் இருக்கின்றன. இறைவனை விட்டு விட்டு மக்கள் இத்தகைய விஷயங்களில் ஏன் தான் மனத்தைப் பறி கொடுக்கிறார்களோ! ஏன் தான் எம்பெருமானை மறக்கிறார்களோ!

ம- சுவாமி! இறைவனைக் காண முடியுமா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

முடியும். நிச்சயமாக முடியும். அதற்கு அவ்வப்போது தனிமையில் வாழ வேண்டும். பகவானின் திருநாமத்தையும் மகிமைகளையும் பாட வேண்டும். பகுத்தறிந்து உணர வேண்டும். இந்த வழிகளையெல்லாம் பின்பற்ற வேண்டும்.

ம-

சுவாமி, எந்த நிலையில் ஒருவன் இறைவனைக் காண முடியும்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-. ஆழ்ந்த மன ஏக்கத்துடன் அழுதால் அவரைக் காண முடி யும். மனைவி மக்களுக்காக மக்கள் குடங்குடமாக க் கண்ணீர் வடிக்கிறார்கள். பணத்திற்காக அழுது புரள்கிறார்கள்.ஆனால் கடவுளுக்காக யார் அழுகிறார்கள்? எப்படி அழைக்க வேண்டுமோ அப்படி அழைக்க வேண்டும்.

மன ஏக்கம் வந்து விட்டாலே அருணோதயம் ஆகி விட்டது. அதன் பிறகு கதிரவன் தன்னைக் காட்டியருள்வான். அது போல் மன ஏக்கத்திற்குப் பிறகு இறைக் காட்சி வருகிறது.

மூன்று வித கவர்ச்சிகள் ஒன்று சேர்ந்தால் இறைவன் தம்மைக் காட்டியருள்வார்- உலகியல் மனிதனுக்கு இன்பப் பொருட்களிடமுள்ள பற்று, தாய்க்குத் தன் குழந்தையிடம் இருக்கும் பாசம், கணவனிடம் கற்புடைய மனைவி கொள்ளும் காதல், இந்த மூன்று கவர்ச்சிகளும் ஒருங்கே ஒருவனுக்கு இறைவனிடம் ஏற்படுமானால் இந்தக் கவர்ச்சிகளின் வலிமையினால் அவன் இறைவனைப்பெற முடியும்.

கடவுளை நேசிக்க வேண்டும், அது தான் விஷயம். தாய் குழந்தையை நேசிப்பது போல், மனைவி கணவனை நேசிப்பது போல், உலகியல் மனிதன் இன்பங்களை நேசிப்பது போல் கடவுளை நேசிக்க வேண்டும். இந்த மூவரின் நேசமும், இந்த மூன்று கவர்ச்சியும் சேர்ந்தால் எவ்வளவாகுமோ அந்த நேசத்தை இறைவனிடம் செலுத்த முடியுமானால் அவரைக் காண முடியும்.

மன ஏக்கத்துடன் அவரை அழைப்பது அவசியம். மியாவ் மியாவ் என்று கத்தி தாயை அழைக்க மட்டுமே பூனைக்குட்டி அறிந்திருக்கிறது. தாய்ப் பூனை அதனை எங்கே வைக்கிறதோ அங்கே யே இருக்கிறது. சில சமயம் சமையல் அறையிலும், சில சமயம் தரையிலும், சில சமயம் படுக்கையிலும் குட்டியைத் தாய்ப் பூனை வைக்கிறது.ஏதாவது துன்பம் வருமானால் குட்டிப் பூனை மியாவ் மியாவ் என்று கத்துகிறது. கத்துவதைத்தவிர அதற்கு வேறு எதுவும் தெரியாது. தாய்ப்பூனை எங்கிருந்தாலும் இந்த மியாவ் மியாவ் சத்தத்தை க் கேட்ட அந்தக் கணமே ஓடோடி வந்து விடுகிறது.


  பாகம்-3

ஞாயிறு- மார்ச் 5, 1882

.....................

குருதேவரைக் காண ம- மூன்றாம் முறையாகச் சென்றார். வராக நகரிலுள்ள தன் சகோதரியின் வீட்டில் ம- தங்கியிருந்த காலம் அது. அவரைச் சந்தித்ததிலிருந்து ம-வுக்கு எப்போதும் அவரைப் பற்றிய சிந்தனை தான். எப்போதும் அந்த ஆனந்தமயமான மூர்த்தியைத் தரிசித்துக் கொண்டிருப்பது போலவும் அவரது அமுதகளைக்கேட்டுக் கொண்டிருப்பது போலவும் அவருக்குத் தோன்றும். இந்த எளிய மனிதர் எப்படி இந்த ஆழ்ந்த தத்துவங்களை எல்லாம் கற்றார். எப்படி புரிந்து கொண்டார் என்ற கேள்வி ம-வின் மனத்தில் எழுந்தவண்ணம் இருந்தது. இவ்வளவு ஆழமான விஷயங்களை இவ்வளவு எளிமையாக யாரும் விளக்கி இது வரை அவர் கேட்டதில்லை. மீண்டும் அவரிடம் எப்போது போவேன், அவரை எப்போது காண்பேன்” என்பதே இரவு பகல் அவரது சிந்தனையாக இருந்தது.

மெள்ள மெள்ள ஞாயிறும் வந்தது. வராக நகரைச்சேர்ந்த நேபால் பாபுவுடன் ம- தட்சிணேசுவரக்கோயிலை அடைந்தார். மாலை மூன்று அல்லது நான்கு மணி இருக்கும்.முன்பு பார்த்த அதே அறையில் குருதேவர் சிறிய கட்டிலின் மீது உட்கார்ந்திருந்தார். ஞாயிறு விடுமுறைநாளாதலால் குருதேவரைத் தரிசிக்க பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் ம- விற்கு அறிமுகம் இல்லை. எனவே அவர் அறையின் ஒரு மூலையில் சென்று உட்கார்ந்தார்.குருதேவர் மலர்ந்த முகத்துடன் பக்தர்களோடு பேசிக் கொண்டிருந்தார்.

பத்தொன்பது வயதான ஒரு வாலிபரைப் பார்த்த வண்ணம் ஆனந்தத்தால் பூரித்தபடி குருதேவர் பேசிக்கொண்டிருந்தார். அந்த இளைஞரின் பெயர் நரேந்திரர். கல்லூரி மாணவர். சாதாரண பிரம்ம சமாஜத்திற்கு அடிக்கடி சென்று வருபவர். ஆற்றலும் உறுதியும் மிக்க பேச்சு. ஒளி வீசும்கண்கள், பக்தனுக்குரிய தோற்றம் அவருடையது.

பேச்சு, சுகபோக நாட்டத்தில் ஊறிக் கிடக்கின்ற உலகியல் மனிதர்களைப் பற்றியதாக இருப்பதை ம- ஊகித்து உணர்ந்தார். இறைவனை நாடுபவர்களையும் தர்ம வழியில் நடப்பவர்களையும் இவர்கள் நிந்திக்கிறார்கள். உலகில் எவ்வளவோ துஷ்டர்கள் உள்ளனர், அவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றியெல்லாம் பேச்சு நடந்து கொண்டிருந்தது.

ஸ்ரீராமகிருஷ்ணர்(நரேந்திரரிடம்)-

நரேந்திரா, நீ என்ன நினைக்கிறாய்? உலகியல் மக்கள் எவ்வளவோ இகழ்ந்து பேசுகின்றனர்.ஆனால் ஒன்று, யானை போகும் போது அதன் பின்னால் எத்தனையோ மிருகங்கள் எப்படியெல்லாமோ கூச்சலிடுகின்றன. யானை திரும்பிக் கூட பார்ப்பதில்லை. உன்னை யாராவது இகழ்ந்து பேசினால் அவர்களைப் பற்றி நீ என்ன நினைப்பாய்?

நரேந்திரர்-

நாய் குரைக்கிறது என்று நினைப்பேன்.

ஸ்ரீராமகிருஷ்ணர் (சிரித்துக் கொண்டே)-

வேண்டாமடா, அவ்வளவு தூரம் போகாதே! ((எல்லோரும் சிரித்தனர்)

கடவுள் எல்ல உயிரிலும் இருக்கிறார். ஆனால் நல்லவர்களுடன் நெருங்கிப் பழகலாம். கெட்டவர்களைக் கண்டால் தூர விலகி நிற்க வேண்டும். புலியிலும் நாராயணன் இருக்கிறார். அதற்காக யாரும் புலியைக் கட்டித் தழுவிக்கொள்ள முடியாது. (எல்லோரும் சிரித்தனர்) புலியும் நாராயணன் தானே, அதைக் கண்டு ஏன் ஓட வேண்டும் என்று நீ கேட்கலாம். ”புலி வருகிறது” என்று கூறி எச்சரிக்கிறார்களே அவர்களும் நாராயணன்தானே? அவர்களுடைய வார்த்ததைகளை ஏன் கேட்கக் கூடாது? என்பது தான் என் பதில்.

ஒரு கதை சொல்கிறேன் கேள். ஒரு காட்டில் சாது ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பல சீடர்கள். ஒரு நாள் அவர் தமது சீடர்களிடம், கடவுள் எல்லோரிலும் இருக்கிறார். எனவே எல்லோரையும் வணங்குங்கள்! என்று உபதேசம் செய்தார். ஒரு நாள் அந்தச் சீடர்களில் ஒருவன் ஹோமத்திற்கு விறகு சேகரிக்கக் காட்டிற்குச் சென்றான். அப்போது, யார் எங்கிருந்தாலும் எல்லோரும் ஓடி விடுங்கள். ஓடி விடுங்கள். மத யானை ஒன்று வருகிறது.” என்று யாரோ உரத்த குரலில் சத்தமிடுவது கேட்டது. எல்லோரும் ஓடினர். ஆனால் சீடன் ஓடவில்லை. யானையும் நாராயணன் என்பது தான் அவனுக்குத் தெரியுமே!

அவன் ஏன் ஓட வேண்டும்? எனவே அங்கேயே நின்று கொண்டு , கைகூப்பிய வண்ணம் நாராயணனைத் துதிப் பாடி போற்றத் தொடங்கினான். யானைப் பாகன் ஓடுங்கள், ஓடுங்கள்” என்று கத்திக் கொண்டு வந்தான். சீடன் அதைப்பொருட்படுத்தவில்லை. நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். கடைசியில் மத யானை துதிக்கையால் அவனைத் தூக்கி வீசி எறிந்து விட்டுப்போய் விட்டது. உடல் முழுவதும் காயங்களுடன் சீடன் மூர்ச்சித்து விழுந்தான்.

இந்தச் செய்தியைக்கேட்டு குருவும் மற்ற சீடர்களும் விரைந்து சென்று, அவனை ஆசிரமத்திற்குத் தூக்கி வந்து சிகிச்சை அளித்தார்கள். சிறிது நேரத்தில் அவனுக்கு நினைவுதிரும்பியது. அப்போது சீடர்களுள் ஒருவன் அவனைப்பார்த்து, ஆமாம், மத யானை வருகிறது என்பதைக்கேட்டும் நீ ஏன் ஓட வில்லை? என்று கேட்டான். அதற்கு அந்தச் சீடன் நாராயணனே மனிதன் முதலிய எல்லா உயிர்களுமாக இருக்கிறார் என்று அல்லவா குரு நாதர் நமக்கு உபதேசித்தார்.! ஆகவே யானை நாராயணன் வந்த போது, அந்த இடத்தைவிட்டு ஓடாமல் இருந்து விட்டேன்” என்றான். இதைக்கேட்ட குரு, ” மகனே, யானை நாராயணன் தான் வந்தான். அது உண்மை. ஆனால், யானைப் பாக – நாராயணன் உன்னை எச்சரித்தானே! எல்லோரும் நாராயணன் என்றால் , நீ ஏன் அவனது வார்த்தைகளை நம்பவில்லை? யானைப் பாக- நாராயணனின் வார்த்தைகளையும் நீ மதித்திருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். (எல்லோரும் சிரித்தனர்)

ஆபோ நாராயண- அதாவது தண்ணீரும் நாராயணன் என்று சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் சில தண்ணீரைத்தான் பூஜைக்குப் பயன் படுத்தலாம்...... சில தண்ணீரை பாத்திரம் கழுவ, வாய் கொப்பளிக்க , துணி துவைக்க மட்டும் தான் உதவும். குடிக்கவோ பூஜைக்கோ பயன் படாது. அது போலவே நல்லவன்- கெட்டவன், பக்தன்- பக்தன் அல்லாதவன் என்று எல்லோரின் இதயத்திலும் நாராயணன் இருப்பது என்னவோ உண்மை தான். ஆனாலும் தீயவர்கள், பக்தர்கள் அல்லாதவர்கள், துஷ்டர்கள், இவர்களோடு எந்த வித உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது. பழகக் கூடாது. சிலருடன் வெறும் வாய்ப்பேச்சு மட்டும் வைத்துக்கொள்ளலாம். இன்னும் சிலருடன் அதுவும் கூடாது. இத்தகைய மனிதர்களிடமிருந்து விலகியே வாழ வேண்டும்.

ஒரு பக்தர்- 

சுவாமி, சீதயவர்கள் கெடுதல் செய்ய வந்தாலோ, கெடுதல் செய்தாலோ நாம் சும்மா இருக்க வேண்டுமா?

ஸ்ரீராமகிருஷ்ணர்- 

உலகில் வாழ நேரும் போது, தீயவர்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள சிறிது தமோ குணத்தைக் காட்டுவது அவசியம் தான். ஆனால் அவர்கள் தீமை செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அவர்களுக்குத் தீமை செய்யக் கூடாது.

சில சிறுவர்கள் புல்வெளியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கே கொடிய விஷப்பாம்பு ஒன்று வசித்து வந்தது. பாம்பிடம் உள்ள பயத்தால் எல்லோரும் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள். ஒரு நாள் பிரம்மச்சாரி ஒருவர் அந்தப் புல்வெளி வழியாகச் சென்றார். மாடு மேய்க்கும் பிள்ளைகள் அவரிடம் ஓடிச்சென்று, சுவாமி, அந்த வழியாகப்போகாதீர்கள்.அந்தப் பக்கம் ஒரு கொடிய விஷப்பாம்பு இருக்கிறது” என்று சொன்னார்கள். அதற்கு அந்த பிரம்மச்சாரி பிள்ளைகளே, அது இருந்து விட்டுப்போகட்டும், அதனிடம் எனக்குப் பயமில்லை. எனக்கு மந்திரம் தெரியும்” என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து நடக்கலானார். பயத்தினால், அந்தச் சிறுவர்கள் யாரும் அவருடன் செல்லவில்லை. யாரோ வருவதைக் கண்ட பாம்பு படமெடுத்தபடி சீறிக்கொண்டு வேகமாக ஓடி வந்தது. பிரம்மச்சாரியை நெருங்கியதும் அவர் ஒரு மந்திரத்தை உச்சரித்தார். அவ்வளவு தான், சீறி வந்த பாம்பு மண்புீவைப்போல் அவரது காலடியில் வீழ்ந்தது.

பிரம்மச்சாரி அதைப் பார்த்து, நீ ஏன் இப்படி மனிதர்களைத் துன்புறுத்திக்கொண்டு திரிகிறாய்? வா, உனக்கு ஒரு மந்திரம் கற்றுத் தருகிறேன். இந்த மந்திரத்தை நீ ஜபம் செய்தால் பகவானிடம் உனக்கு பக்தி ஏற்படும். நீ அவரைப் பெறுவாய், பிறருக்குத் தீமை செய்யும் இந்தத் தன்மை போய்விடும்” என்று சொல்லி அந்தப் பாம்பிற்கு மந்திரத்தை உபதேசம் செய்தார். மந்திர உபதேசம் பெற்ற பாம்பு குருவை வணங்கி, குருநாதா, நான் எவ்வாறு சாதனை செய்ய வேண்டுமு்? என்று கேட்டது. அதற்கு கரு, இந்த மந்திரத்தை ஜபம் செய், யாருக்கும் தீங்கு செய்யாதே, என்று சொன்னார். பிறகு புறப்படும் போது, நான் மறுபடியும் வந்து உன்னைப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டுச்சென்றார்.

சில நாட்கள்கழிந்தன, அந்தப் பாம்பு யாரையும் கடிக்க வருவதில்லை என்பதைச் சிறுவர்கள் கண்டு கொண்டனர். கல்லெறிந்தாலும் அது ஒன்றும் செய்யவில்லை, மண் புழுவைப்போல் கிடந்தது. ஒரு நாள் சிறுவன் ஒருவன் அதன் வாலைப் பிடித்து தூக்கிச் சுழற்றி தரையில் அடித்தான். அதன் வாயிலிருந்து ரத்தம் பீறிட்டது. சுரணையற்று வீழ்ந்தது. அதனிடம் அசைவோ நெளிவோ இல்லை. எனவே அது இறந்து விட்டது. என்று எண்ணி சிறுவர்கள் போய் விட்டனர்.,

இரவு வெகுநேரம் சென்ற பிறகு பாம்பிற்கு உணர்வு வந்தது. மிகுந்த சிரமத்துடன் மெல்ல மெல்ல நகர்ந்து அது தன் வளைக்குள் சென்றது. அதன் உடம்பெல்லாம் சின்னாப்பின்னமாகிவிட்டது. அசையக் கூட அதனிடம் தெம்பில்லை. நாட்கள் கடந்தன. அது எலும்பும் தோலுமாக ஆகிவிட்டது. பயம் காரணமாக இரை தேடிக்கூட பகல்வேளையில் வெளியே வருவதில்லை. எப்போதாவது இரவு வேளையில் மட்டும் வெளியே வந்தது. மந்திர உபதேசம் பெற்றதிலிருந்து அது யாரையும் துன்புறுத்துவதில்லை. மண், இலை, உதிர்ந்த பழங்கள் இவற்றைத் தின்று உயிர் வாழ்ந்தது.

இப்படி ஏறக்குறைய ஓர் ஆண்டு கழிந்தது. பிரம்மச்சாரி அந்த வழியாக மறுபடியும் வந்தார். வந்ததும் பாம்பைப் பற்றி விசாரித்தார்.

அந்தப் பாம்பு இறந்து விட்டதாகச் சிறுவர்கள் சொன்னார்கள். பிரம்மச்சாரி அதை நம்பவில்லை. தான் உபதேசித்த மந்திரத்தின் பலனை அடையாமல் பாம்பு இறந்திருக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். எனவே இங்கும் அங்கும் தேடியபடி தான் கொடுத்த பெயரைச் சொல்லி அழைத்தார். குருவின் குரலைக்கேட்ட பாம்பு வளையிலிருந்து வெளியே வந்து அவரை மிகுந்த பக்தியோடு வணங்கியது. என்னப்பா, எப்படி இருக்கிறாய்? என்று பிரம்மச்சாரி விசாரித்தார். ”சுவாமி, சௌக்கியமா இருக்கிறேன்” என்றது பாம்பு. ஆனால் ஏன் இவ்வளவு மெலித்திருக்கிறாய்? என்று கேட்டார் பிரம்மச்சாரி. குருவே, யாருக்கும் தீங்கு செய்யாதே என்று தாங்கள் எனக்குக் கட்டளையிட்டிருந்தீர்கள். அதன்படி இலைகளையும் பழங்களையும் தின்று வாழ்ந்து வருவதால் மெலிந்து விட்டேன் போலும்” என்று பாம்பு கூறியது.

அந்தப் பாம்பிற்கு சத்வ குணம் அதிகரித்திருந்ததால் அதற்கு யாரிடமும் கோபம் இல்லை. சிறுவர்கள் தன்னைக்கொல்ல முயன்றதைக்கூட அது மறந்து விட்டது. சரியாக சாப்பிடாததால் மட்டுமே உனக்கு இந்தநிலை ஏற்பட்டிருக்க முடியாது. கண்டிப்பாக வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும். சற்று யோசித்துப் பார்” என்று பிரம்மச்சாரி கூறினார். சிறுவர்கள் தன்னைத் தரையில் அடித்தது அப்போது தான் பாம்பின் நினைவிற்கு வந்தது. ”குரு நாதா, இப்போத என் நினைவுக்கு வருகிறது. ஒரு நாள் இந்த மாடு மேய்க்கும் சிறுவர்கள் என்னைத் தரையில் சுழற்றி அடித்தார்கள். அவர்கள் அறியா சிறுவர்கள். என் மனநிலை அவர்களுக்குத் தெரியாது. நான் யாரையும் கடிப்பதில்லை, யாருக்கும் எந்தத்தீங்கும் செய்வதில்லை என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? என்று பாம்பு சொல்லிற்று. இதைக்கேட்டதும் அந்த பிரம்மச்சாரி , சீச்சீ, நீ இவ்வளவு முட்டாளா? உன்னைக் காப்பாற்றிக்கொள்ள உனக்குத் தெரியாமல் போய் விட்டதே! மற்றவர்களைக் கடிக்காதே என்று சொன்னேனே தவிர, சீறாதே என்று சொல்லவில்லையே. சீறி அவர்களை ஏன் பயமுறுத்த வில்லை? என்றார்.

தீயவர்களிடம் சீற வேண்டும். அவர்கள் நமக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதற்காக அவர்களைப் பயமுறுத்த வேண்டும். ஆனால் அவர்கள் மீது ஒரு நாளும் விஷத்தைச் செலுத்திவிடக் கூடாது. தீமை செய்யக் கூடாது.

இறைவனது படைப்பில் மனிதர்கள், மிருகங்கள், செடி கொடிகள் என்று பல்வேறு உயிரினங்கள் உள்ளன. மிருகங்களில் அமைதியானவை உள்ளன, பயங்கரமானவை உள்ளன, புலியைப்போன்ற கொடிய மிருகங்களும் உள்ளன. மரங்களில் அழுதம் போன்ற பழங்களைத் தருகின்ற மரங்கள் உள்ளன, நச்சுப் பழத்தைத் தருகின்ற மரங்களும் உள்ளன. இப்படியே மனிதர்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அமைதியானவர்கள் இருக்கிறார்கள், பயங்கரமானவர்களும் இருக்கிறார்கள். உலகியல் மனிதர்களும் இருக்கிறார்கள், பக்தர்களும் இருக்கிறார்கள்.

மக்களை நான்கு வகையாகப்பிரிக்கலாம்- பத்தர்கள், முமுட்சுக்கள், முக்தர்கள், நித்தியர்கள்.

நாரதர் போன்றோர் நித்தியர்கள். இவர்கள் மக்களின் நன்மைக்காக, அவர்களுக்கு போதிப்பதற்காக உலகில் வாழ்கிறார்கள்.

பத்தர்கள் உலகியலில் கட்டுண்டவர்கள், பகவானை மறந்தவர்கள். மறந்தும் கூட அவரை நினைக்காதவர்கள்.

முமுட்சுக்கள் முக்தியை நாடுபவர்கள். ஆனால் இவர்களில்ஒரு சிலர் முக்தர் ஆகின்றனர். சிலரால் முடிவதில்லை.

முக்தர்கள், சாதுக்களைப்போல், மகான்களைப்போல், இவர்கள் காமினீ- காஞ்சன ஆசையால் கட்டுப் படாதவர்கள். இவர்களின் மனத்தில் உலகியல் இல்லை. இவர்கள்எப்போதும் எம்பெருமானின் திருவடிகளைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மீன் பிடிப்பதற்காகக் குளத்தில் வலை வீசுகிறார்கள். சில மீன்கள் திறமையானவை. அவை ஒரு போதும் வலையில் மாட்டிக்கொள்வதில்லை. அவை நித்தியர்களுக்கு உதாரணம்.ஆனால் பல மீன்கள் மாட்டிக்கொள்ளும். அவற்றுள் சில தப்பிக்க இயலும். இவை முமுட்சுக்களுக்கு எடுத்துக் காட்டு. ஆனால் முயல்கின்ற எல்லா மீன்களாலும் தப்பிக்க முடிவதில்லை. ஏதோ இரண்டொன்று தடால் தடால் என்று வலைக்கு வெளியில் குதிக்கின்றன. அப்போது மீனவன், ”இதோ ஒரு பெரிய மீன் தப்பி விட்டது” என்று கூச்சலிடுகிறான். ஆனால், வலையில் சிக்கிக் கொண்ட மீன்களுள் பெரும்பாலானவற்றால் தப்பிக்க முடிவதில்லை. தப்பிக்க அவை முயற்சி செய்வதும் இல்லை. அதற்கு மாறாக வலையைக் கௌவிக்கொண்டு, தலையைச்சேற்றில் புதைத்த படி நிம்மதியாக இருக்கும். இனி ஒரு பயமும் இல்லை, நாம் சுகமாக இருக்கிறோம், இனி ஒருபயமும் இல்லை, நாம் சுகமாக இருக்கிறோம்” என்று நினைத்துக்கொள்ளும். சற்று நேரத்தில் மீனவன் வலையைக் கரைக்கு இழுக்க போகிறான் என்பது அவற்றிற்குத் தெரியாது. இவை பத்தர்களுக்கு உதாரணம்.

பத்தர்கள்- காமினீ- காஞ்சனத்தில் கட்டுண்டவர்கள், கையும் காலும் கட்டப் பட்டவர்கள் காமினீ- காஞ்சனத்தால் தான் வாழ்க்கையில் இன்பம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். இவர்களுக்கு கடவுள் பயமே கிடையாது. அந்த இன்பத்திலேயே அழிவும் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. பக்தன் சாகும் போது அவனது மனைவி, ஐயோ! நீ போகிறாயே, எனக்கு என்ன வழி செய்திருக்கிறாய்? என்று புலம்புவாள். அப்பப்பா! இந்த மாயைதான் எப்படிப் பட்டது! மரணப் படுக்கையில் இருக்கிறான். சிறிது நேரத்தில் சாகப்போகிறான். அவன் அருகே விளக்கு சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து, எண்ணெய் தீர்ந்து விடும், விளக்கை அணை” என்று புலம்புகிறான்.

பத்தர்கள் இறைவனை நினைப்பதில்லை. நேரம் கிடைத்தால் போதும். வம்பளப்பார்கள் அல்லது பயனற்ற வேலைகளைச்செய்வார்கள். காரணம் கேட்டால், என்னால் சும்மா இருக்க முடியாது. அதனால் தான் இந்த வேலியைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்” என்பார்கள். பொழுது போகாவிட்டால் சீட்டாடத் தொடங்கி விடுவார்கள். (அனைவரும் வியப்புடன் கேட்டபடி அமைதியாக அமர்ந்திருந்தனர்)

ஒரு பக்தர்-

சுவாமி, இப்படிப்பட்ட இல்லறத்தான் கடைத்தேற வழியே இல்லையா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

நிச்சயமாக இருக்கிறது, அவ்வப்போது சத்சங்கம் வேண்டும். அவ்வப்போது தனிமையில் வாழ்ந்து இறைவனைச் சிந்திக்க வேண்டும். அதோடு ஆராய்ச்சி செய்ய வேண்டும். எனக்கு பக்தியும் நம்பிக்கையும் கொடு” என்று ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் எல்லாமே ஆகிவிட்டது. நம்பிக்கையைத் தவிர வேறு எதுவும் வேண்டியதில்லை. (கேதாரிடம்) நம்பிக்கை எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதைக்கேள்விப் பட்டதில்லையா? புராணத்தில் இவ்வாறு சொல்லப் பட்டிருக்கிறது. பூரண பிரம்மமும் சாட்சாத் நாராயணனுமான ஸ்ரீராமர்- இலங்கைக்குப்போக ப் பாலம் கட்ட வேண்டியிருந்தது. ஆனால் அனுமனோ ராம நாமத்தில் வைத்த நம்பிக்கையால் ஒரே தாவலில் கடலைத் தாண்டி விட்டார். அவருக்குப் பாலம் தேவைப் படவில்லை. (எல்லோரும் சிரித்தனர்)

ஒருவனுக்குக் கடலைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. விபீஷணர் ஓர் இலையில் ராம நாமத்தை எழுதி அதை அவனது ஆடையின் ஒரு முனையில் முடித்தார். பிறகு அவனிடம், பயப்படாதே, நம்பிக்கையோடு தண்ணீரின்மேல் நட. ஆனால் ஒன்று, நம்பிக்கை இழந்தாயானால் அந்தக்கணமே நீரில் மூழ்கி விடுவாய்” என்று கூறினார். அந்த மனிதனும் கடலின் மீது எளிதாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, துணியின் முனையில் முடிந்திருப்பது என்னவென்று பார்க்க அவனுக்கு மிகுந்த ஆவல் உண்டாயிற்று, முடிச்சை அவிழ்த்துப் பார்த்தான். அங்கே வெறும் ராம நாமம் எழுதப் பட்டிருந்தது.இது என்ன! வெறும் ராம நாமம் தானே எழதியிருக்கிறது” என்று நினைத்தான். சந்தேகம் வந்தது. மறுகணமே கடலில் மூழ்கிவிட்டான்.

இறை நம்பிக்கை உள்ளவன் பசுக்கொலை, பிராமணர் கொலை, பெண் கொலை போன்ற கொடிய பாவங்களைச் செய்திருந்தாலும் , அந்த நம்பிக்கையின் வலிமையினால், பாவத்திலிருந்து விடுபட முடியும். இனி இத்தகைய கொடிய செயல்களைச்செய்ய மாட்டேன்” என்று அவன் உறுதியாக இறைவனிடம் சொன்னால் போதும், எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

நரேந்திரரைச் சுட்டிக் காட்டி குருதேவர் பேசலானார்-

இந்தப் பையனைப் பாருங்கள்! இங்கே இப்படி அமர்ந்திருக்கிறான். சுட்டிப்பையன் தன் தந்தையின் அருகில் இருக்கும்போது அப்படியே மரியாதைக்காரனாக இருப்பான். முற்றத்தில் விளையாடப் போய் விட்டால், ஆளே மாறி விடுவான். இவர்கள் நித்திய சித்தர் கூட்டத்தைச்சேர்ந்தவர்கள். சம்சாரத்தில் ஒரு போதும் கட்டுப் படுவதில்லை. சற்றே வயது வந்ததும் விழிப்புணர்வு பெற்றுவிடுகிறார்கள். இறைவனை நாடிச்சென்று விடுகிறார்கள். இவர்கள் உலகிற்கு வருவது பிறருக்குப் போதிப்பதற்காகவே . உலகப் பொருட்கள் எதுவும் இவர்களுக்கு இன்பம் தருவதில்லை. இவர்கள் ஒரு போதும் காமினீ- காஞ்சனத்தில் பற்று வைப்பதில்லை.

ஹோமா என்றும் பறவையைப் பற்றி வேதங்கள் பேசுகின்றன. இந்தப் பறவை வானத்தில் மிக உயரத்தில் வாழ்கிறது.வானத்திலேயே முட்டை இடுகிறது. அந்த முட்டை அதிக உயரத்திலிருந்து விழுவதால் கீழே வருவதற்குப் பல நாட்களாகும். அப்படி வந்து கொண்டிருக்கும் போதே முட்டை பொரித்து குஞ்சு வெளிவரும். குஞ்சும் கீழ் நோக்கி வரத் தொடங்கும். அப்போது அதன் கண்கள் திறக்கும். இறகுகள் முளைக்கும். பார்வை வந்ததும், தான் கீழ் நோக்கிச்செல்வதையும் தரையில் வீழ்ந்தால் அடிபட்டுச் சின்னா பின்னா மாகி விடுவோம் என்பதையும் உணரும். உடனே இறக்கைகளை அடித்துக்கொண்டு, தாய்ப்பறவையை நோக்கி வேகமாக மேலே பறந்து சென்று விடும்.

நரேந்திரர் எழுந்து வெளியே சென்றார். அறையில் கேதார், பிராண கிருஷ்ணர், ம- முதலிய பலர் இருந்தனர்.

ஸ்ரீராமகிருஷ்ணர்- 

இதோ பாருங்கள் , பாட்டு, வாத்தியம், படிப்பு எல்லாவற்றிலும் நரேந்திரன் கெட்டிக் காரன். அன்றொரு நாள் கேதாருடன் வாதம் செய்தான். கேதாரின் வாதங்களை எல்லாம் நொறுக்கித் தூள் தூளாக்கி விட்டான். ( குருதேவரும் மற்றவர்களும் சிரித்தனர்)

குருதேவர் (ம-விடம்)-

ஆங்கிலத்தில் தர்க்கம் பற்றி ஏதாவது புத்தகம் இருக்கிறதா?




Site Content

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

   பாகம்- 4

மார்ச்-5- 1882

....................

ம- ஆம்சுவாமி, ஆங்கிலத்தில் தர்க்க சாஸ்திரம் உண்டு.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

நல்லது, அதைப் பற்றி சிறிது கூறு. கேட்கலாம்.

ம- தர்ம சங்கடத்தில் மாட்டிக்கொண்டார். அவர் கூறினார். பொதுவான கருத்திலிருந்து குறிப்பிட்ட கருத்தைக்கூறும் தர்க்கம் ஒரு வகை. உதாரணமாக, மனிதர்கள் எல்லோரும் சாகக் கூடியவர்கள். பண்டிதர்களும் மனிதர்களே, ஆகவே பண்டிதர்களும் சாகக் கூடியவர்கள். இது ஒருவகை.

மற்றொரு வகையான தர்க்கம் இருக்கிறது. சில குறிப்பிட்ட உதாரணங்களையோ நிகழ்ச்சிகளையோ பார்த்து. அதிலிருந்து சாதாரணக் கருத்தை அறிதல். உதாரணமாக, இந்தக் காக்கை கறுப்பு, அந்க் காக்கையும் கறுப்பு. நாம் பார்க்கும் காக்கைகளெல்லாம் கறுப்பாகவே இருக்கின்றன. அதனால் உலகில் உள்ள காக்கைகள் எல்லாம் கறுப்பு. இது மற்றொரு வகை. ஆனால் இதில் தவறு ஏற்பட இடம் இருக்கிறது. ஏனென்றால் தேடிப் பார்த்தால் ஒரு வேளை எங்கோ ஒரு நாட்டில் வெள்ளைக் காக்கை இருக்கலாம்.

இன்னோர் உதாரணம்- 

எங்கு மழை பெய்ததோ அங்கே மேகம் இருந்தது. அல்லது இருக்கிறது. இங்கே மேகத்திலிருந்து மழை பெய்கிறது என்ற சாதாரணக் கருத்து உருவாகிறது.

இன்னும் ஓர் உதாரணம், இவனுக்கு முப்பத்திரண்டு பற்கள், அவனுக்கு முப்பத்திரண்டு பற்கள். எந்த மனிதனைப் பார்த்தாலும் அவனுக்கு முப்பத்திரண்டு பற்கள். ஆகவே எல்லா மனிதர்களும் முப்பத்திரண்டு பற்களைக் கொண்ட வர்கள். இப்படிப்பட்ட தர்க்க முறைகள் ஆங்கில தர்க்க சாஸ்திரத்தில் உள்ளன.

ஸ்ரீராமகிருஷ்ணர் இவற்றையெல்லாம் ஏதோ கேட்டு வைத்தார். கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவரது மனம் வேறு எங்கோ லயிக்கத் தொடங்கியது. ஆகவே இது பற்றிய பேச்சு மேலும் தொடரவில்லை. கூட்டம் கலைந்தது, பக்தர்கள் இங்கும் அங்குமாக உலவிக் கொண்டிருந்தனர்.

மாலை நேரம். சுமார் ஐந்து மணி இருக்கும். ம-வும் பஞ்சவடி முதலிய இடங்களில் உலவிக் கொண்டிருந்தார்.

அப்போது ஸ்ரீராமகிருஷ்ணருடைய அறையின் வடக்கிலுள்ள சிறிய வராந்தாவில் ஓர் அற்புத நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

ஸ்ரீராமகிருஷ்ணர் அசையாமல் நின்றிருந்தார். நரேந்திரர் பாடிக்கொண்டிருந்தார். ஓரிரு பக்தர்கள் அருகில் நின்று கொண்டிருந்தனர். ம-வும் வந்து பாட்டைக்கேட்கலானார். பாட்டைக்கேட்டதும் அதிலேயே மனம் ஒன்றிப்போனார். இவ்வளவு இனிமையான குரலை அவர் குருதேவரைத் தவிர வேறு யாரிடமும் எங்கேயும் கேட்டதில்லை.

அப்போது எதேச்சையாக குருதேவர்நின்றிருந்த திசையில் பார்த்தார் ம-. பார்த்தகண்கள் பார்த்தபடி நின்று விட்டார். என்ன ஒரு காட்சி! குருதேவர் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். கண்கள் இமைக்க வில்லை. மூச்சுகூட நின்று விட்டது போல் தோன்றியது. ஒரு பக்தரைக்கேட்ட போது, இது தான் சமாதி” என்று அவர் கூறினார். ம- இவ்வாறு இது வரை கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை. வியந்து போன அவர், இறைவனைச் சிந்திப்பதன் மூலம் ஒருவர் இவ்வளவு தரம் புற நினைவை இழந்துவிட முடியுமா என்ன! எவ்வளவு ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் இருந்தால் இந்தநிலை ஏற்படும் தெரியவில்லையே” என்று நினைத்தார்.

இந்த வரிகளை நரேந்திரர் பாடிய போது குருதேவரின் திரு மேனி ஒருமுறை நடுங்கியது. மயிர் சிலிர்த்தது. கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. இடையிடையே அவர் எதையோ பார்த்து ஆனந்தப் புன்னகை புரிந்தார். ஆயிரம் ஆயிரம் நிலவினை மிஞ்சும் அருட்சுடர் பொஞ்கும் பரம்பொருளின் ஒப்பற்ற அழகை அவர் தரிசிக்கிறாரா? இறைவனின் உணர்வுமய ரூப தரிசனம் இது தானா? இத்தகைய காட்சி பெற அவர் எவ்வளவு சாதனைகளை, எவ்வளவு தவங்களைச் செய்திருக்க வேண்டும். எந்த அளவுக்கு பக்தியும் நம்பிக்கையும் இருந்திருக்க வேண்டும்.

குருதேவரின் சமாதி நிலையையும் பரவசப்பேரின்ப நிலையையும் என்றும் அழியா சித்திரங்களைாக உள்ளத்தில் தாங்கியவராக ம- வீடு திரும்பினார். இதயத்தை இளக்கி இனிமை பொழியும் அந்தப் பாடல் வரிகள் அவரது இதயத்தில் எதிரொலித்தன.

பேரின்ப ரசத்தில் மூழ்குக நித்தியம் மூழ்குகவே” என்ற வரிகள் மீண்டும் மீண்டும் அவரது காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தன.


பாகம்- 5

திங்கள், மார்ச்-6, 1882

......................

ம-வுக்கு விடுமுறை நாள். மாலை மூன்று மணியளவில் தட்சிணேசுவரம் வந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் தமது அறையில் உட்கார்ந்திருந்தார். தரையில் பாய் விரிக்கப் பட்டிருந்தது. அதில் நரேந்திரர், பவநாத் மற்றும் ஓரிரு பக்தர்கள் அமர்ந்திருந்தனர். எல்லோரும் பத்தொன்பது இருபது வயது இளைஞர்கள். குருதேவர் சிறிய கட்டிலில் அமர்ந்து கொண்டு, சிரித்த முகத்துடன் அவர்களோடு ஆனந்தமாகப்பேசிக்கொண்டிருந்தார்.

ம- அறையில் நுழைந்ததும் குருதேவர் உரக்கச் சிரித்த படியே. இதோ பாருங்கள்! மறுபடியும் வந்துவிட்டான்! என்று அந்த இளைஞர்களிடம் கூறினார். எல்லோரும் சிரித்தனர்.ம- தரையில் வீழ்ந்து குருதேவரை வணங்கிவிட்டு உட்கார்ந்தார். முன்பெல்லாம் ம- ஆங்கிலப் படிப்புப் படித்தவர்களைப்போல் நின்றபடி கைகூப்பி தான் வணங்குவார். ஆனால் இன்று தரையில் வீழ்ந்து வணங்கக் கற்றுக் கொண்டார்.

ம- அமர்ந்ததும் ஸ்ரீராமகிருஷ்ணர் தாம் சிரித்ததற்கான காரணத்தை நரேந்திரர் முதலியவர்களுக்கு விளக்கினார்.

ஒரு மயிலுக்கு ஒரு நாள் மாலை நான்கு மணிக்குக் கொஞ்சம் அபின் கொடுத்தான் ஒருவன். மறுநாள் சரியாக நான்கு மணிக்கு அந்த மயில் அங்கே வந்து விட்டது. அபினின் போதைக்கு அது அடிமையாகிவிட்டது. எனவே மறுநாளும் அதைச் சாப்பிட சரியான நேரத்திற்கு வந்து விட்டது.(எல்லோரும் சிரித்தனர்)

ம- தனக்குள் கூறினார்- இவர் சரியாகத்தான் சொல்கிறார்! வீட்டிற்குப்போனால் அங்கே கூட மனம் இரவும் பகலும் இவரையே நாடுகிறதே! அவரை எப்போது காண்போம். எப்போது காண்போம்.” என்று ஏங்குகிறதே! என்னை யாரோ இங்கு இழுத்து வருவது போல் அல்லவா தோன்றுகிறது! வேறு இடத்திற்கு ப்போக நினைத்தாலும் மனம் இடம் தரவில்லை. இங்கே வந்தேயாக வேண்டியிருக்கிறது.

இதற்குள் குருதேவர் இளைஞர்களுடன், சம வயதினர் போல் கேலியும் கிண்டலும் குறும்புமாக வேடிக்கை வினோதங்களில் ஈடுபடத் தொடங்கி விட்டிருந்தார். சிரிப்பின் பேரலைகள் எழுந்தவண்ணம் இருந்தன. அங்கே ஆனந்தச் சந்தை கூடியிருப்பது போல் தோன்றிற்று.

ம- வியப்புடன் இந்த அற்புத மனிதரைப் பார்த்தார். இது என்ன! சமாதியிலும் , இதுவரை கண்டிராத பேரானந்தப் பரவச நிலையிலும் மூழ்கியவராக நாம் நேற்று கண்டது இவரையா? இவரா இன்று இப்படி மிகமிகச் சாதாரண மனிதனைப்போல் நடந்து கொள்கிறார்! முதன் முறையாக எனக்கு உபதேசம் செய்தபோது என்னைக் கடிந்து கொண்டவர் இவர்தானா? நீ என்ன ஞானியா? என்று கேட்டவரா இவர்? கடவுளுக்கு உருவம் உண்டு? கடவுள் அருவமும் கூட, இரண்டும் உண்மை என்று சொன்னவர் இவர் தானா? இறைவனே உண்மை, உலகிலுள்ள அனைத்தும் நிலையற்றவை” என்று எனக்குச்சொன்னது இவரா? ஒரு செல்வந்தரின் வீட்டு வேலைக்காரியைப்போல் இந்த உலகத்தில் வாழுமாறு சொன்னவர் இவர்தானா? என்றெல்லாம் ம-வின் மனம் எண்ணியது.

இளைஞர்களுடன் சிரித்துக் களித்தபடியே குருதேவர் ம-வை அவ்வப்போது பார்த்தார். ம- வியப்புடன் அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் ராம்லாலை அழைத்து அவரிடம், பார்த்தாயா? இவர்கள் எப்படியெல்லாம் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவனோ உம்மென்று அமர்ந்திருக்கிறான். வயது கொஞ்சம் அதிகம் அல்லவா? என்றார். அப்போது ம-விற்கு வயது இருபத்தேழு.

பேச்சின் இடையே அனுமனைப் பற்றிய பேச்சு எழுந்தது. குருதேவரின் அறையில் அனுமனின் படம் ஒன்று மாட்டப் பட்டிருந்தது.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அனுமனின் நிலையைப் பாருங்கள். பணம், புகழ், உடல் சுகம் எதையும் அவர் விரும்ப வில்லை. ராமர் ஒருவரையே விரும்பினார். பளிங்குத் தூணிலிருந்து பிரம்மாஸ்திரத்தை எடுத்துக்கொண்டு அவர் ஓடிய போது மண்டோதரி பலவகை பழங்களைக்கொண்டு ஆசை காட்டினாள்!பழங்களால் கரவப்பட்டு, கீழே இறங்கி வந்து அஸ்திரத்தைப்போட்டு விடுவார் என்று நினைத்தாள் அவள். ஆனால் அதற்கெல்லாம் மசிபவரா அனுமன்? 

ம-குருதேவரின் சமாதி நிலையைக் காண்பது இது இரண்டாவது தடவை. நீண்ட நேரத்திற்குப் பிறகு சமாதி கலையத் தொடங்கியது. குருதேவரின் திருமேனி பழைய நிலைக்குத் திரும்பியது. முகத்தில் புன்சிரிப்பு தோன்றியது. புலன்கள் தத்தம் செயல்களைச்செய்யத் தொடங்கின. கண்களில் ஓரத்திலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது, வாய் , ராம் ராம்” என்று உச்சரித்தது.

என்ன! இவ்வளவு பெரிய மகானா சற்று நேரத்திற்கு முன்பு ஐந்து வயது சிறுவனைப்போல் வேடிக்கை வினோதங்களில் ஈடுபட்டிருந்தார்! என்று நினைத்துக் கொண்டார் ம-.

குருதேவர் பழைய நிலையை அடைந்தவராய் சாதாரண மனிதனைப்போல் மீண்டும் பழகத் தொடங்கினார்.

ம- வையும் நரேந்திரரையும் பார்த்து,நீங்கள் இருவரும் ஆங்கிலத்தில் தர்க்கம் செய்யுங்கள், நான் கேட்கிறேன் என்றார்.

ம- வும் நரேந்திரரும் சிரித்தனர். பிறகு இருவரும் பேச ஆரம்பித்தனர். ஆனால் பேச்சு வங்க மொழியிலேயே நடந்தது.குருதேவரின் முன்னால் ம-வினால் தர்க்கம் செய்ய முடிய வில்லை. தர்க்கம் செய்யும் மனப்பான்மை குருதேவரின் திருவருளால் ஒருவிதமாக அவரிடமிருந்து நீங்கி விட்டது. அதன் படி எப்படி தர்க்கம் செய்வார்? குருதேவர் மீண்டும் ஒரு முறை வற்புறுத்தினார் என்றாலும் இருவரும் ஆங்கிலத்தில் பேசவில்லை.

மணி ஐந்து, ம-வையும் நரேந்திரரையும் தவிர மற்ற பக்தர்கள் வீடு திரும்பினர்.

நரேந்திரர் முகம் கழுவுவதற்காக ஒரு செம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஹம்சபுகூர் மற்றும் சவுக்குத்தோப்பு இருந்த திசையில் சென்றார்.ம- கோயில் தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு குடிசையின் பக்கமாக ஹம்சபுகூரை நோக்கி வந்தார். அங்கே அந்தக் குளத்தின் தென்புறப் படிகளின் மேல் குருதேவர் நின்றிருந்தார். நரேந்திரர் செம்பைக்கையில் வைத்தபடி முகம் கழுவிக் கொண்டிருந்தார்.

அப்போது குருதேவர் நரேந்திரரிடம், இதோ பார்! இன்னும் கொஞ்சம் அதிகமாக இங்கு வந்து போ. நீங்கள் எல்லாம் இப்போது தான் புதிதாக வர ஆரம்பித்திருக்கிறீர்கள். அறிமுகமானபிறகு, பொதுவாக மனிதர்கள் அடிக்கடிசந்தித்துக் கொள்வார்கள்- புது மாப்பிள்ளையைப்போல் .( நரேந்திரரும் ம-வும் சிரித்தனர்) என்ற வருவாய் அல்லவா?

நரேந்திரர் பிரம்ம சமாஜத்தைச்சேர்ந்தவர், வாக்கு க் கொடுப்பதில் சற்றே எச்சரிக்கையாக இருப்பவர். எனவே சிரித்துக்கொண்டே, முயற்சி செய்கிறேன்” என்றார்.

மூவரும் குடிசைப் பக்கமாக நடந்து குருதேவரின் அறையை நோக்கி வந்தனர். குடிசையின் அருகில் வந்ததும் குருதேவர் ம-வைப் பார்த்து, இதோ பார்! விவசாயிகள் காளைமாடு வாஙடக சந்தைக்குப்போவார்கள். உழைக்கின்ற காளை எது, மந்தமான காளை எது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். வாலுக்குக் கீழே கையை வைப்பார்கள். சில காளைகள் கை பட்டாலும் அப்படியே படுத்துக் கிடக்கும். அவற்றை வாங்க மாட்டார்கள். வாலுக்கு அடியில் கை வைத்ததும் எந்தக் காளை தடார் படாரென்று துள்ளிக் குதிக்கிறதோ அதையே விரும்புவார்கள். நரேந்திரன் அப்படிப்பட்ட காளையைப்போன்றவன். துடிப்பு நிறைந்தவன்.” என்றார்.

இதனைக் கூறி விட்டுச் சிரித்தார் குருதேவர். பிறகு தொடர்ந்தார். இன்னும் சிலர் இருக்கிறார்கள்- நனைந்த அவல் போன்றவர்கள். துடிப்பில்லை. துணிச்சல் இல்லை, உள்ளே எதுவும் இல்லை.

சந்தியாவேளை ஆயிற்று. குருதேவர் இறை எண்ணங்களில் மூழ்க ஆரம்பித்தார். ம-விடம், நீ நரேந்திரனிடம் பேசிப்பார். அவன் எத்தகையவன் என்பதை எனக்குச் சொல்” என்றார்.

கோயிலில் தீபாராதனை நிறைவுற்றது. சிறிது நேரம் தேடிய பிறகு, ம- நரேந்திரரை முற்றத்தின் மேற்குப் பகுதியில் சந்தித்தார். இருவரும் பேச ஆரம்பித்தனர். தான் கல்லூரி மாணவன், சாதாரண பிரம்ம சமாஜத்தைச்சேர்ந்தவன் போன்ற விஷயங்களையெல்லாம் நரேந்திரர் கூறினார்.

இரவாகி விட்டது, ம- விடு திரும்ப வேண்டும். ஆனால் இது வரை அவரால் போக முடியவில்லை. ஆகவே நரேந்திரரை விட்டு விட்டு குருதேவரைத் தேட ஆரம்பித்தார். குருதேவரின் பாடல்களைக்கேட்டு உள்ளம் பூரித்திருந்த ம- மேலும் அவரது பாடல்களைக்கேட்க விரும்பினார். பல இடங்களில் தேடியபின், இறுதியாக காளி கோயிலின் முன் மண்டபத்தில் அவர் நடந்த கொண்டிருப்பதைக் கண்டார்.கோயிலினள் காளியின் இரண்டு பக்கங்களிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்தப் பெரிய மண்டபத்திலும் மங்கிய ஒளியுடன் ஒற்றை விளக்கு ஒன்றுமினுமினுத்துக் கொண்டிருந்தது. இருளும் ஒளியும் கலந்ததோர் அற்புதக் காட்சியில் மண்டபம் மிளிர்ந்தது.

ம- குருதேவரின் பாடலைக்கேட்டு தன்னை மறந்தார். மந்திரத்தில் கட்டுண்ட பாம்புபோல் ஆனார். தயக்கத்தோடு குருதேவரிடம், இன்று இனி ஏதாவது பாடுவீர்களா? என்று கேட்டார். குருதேவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு , இல்லை, இனி பாட்டு இருக்காது ” என்றார். பிறகு எதையோ நினைத்துக்கொண்டவர் போல், ஒன்று செய். நான் கல்கத்தாவில் பலராமின் வீட்டிற்குப்போவேன். அங்கே வா. நான் பாடுவதைக்கேட்கலாம்” என்றார். ம- அப்படியே வருவதாகக் கூறினார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

பலராம்போஸை உனக்குத் தெரியுமா?

ம- இல்லை சுவாமி, தெரியாது.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அவரது வீடு போஸ்பாராவில் இருக்கிறது.

ம-

நல்லது சுவாமி, நான் விசாரித்துக்கொள்கிறேன்.

ஸ்ரீராமகிருஷ்ணர் ம-வுடன் மண்டபத்தில் நடந்து கொண்டே, உன்னை ஒன்று கேட்கிறேன்- என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்? என்றார்.

ம- மௌனமாக இருந்தார். குருதேவர் மறுபடியும் ம-வைப் பார்த்து, உன்னைத் தான் கேட்கிறேன்- என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்? எனக்கு எத்தனை அணா ஞானம் இருக்கும்?

ம-

அணா விஷயம் எல்லாம் எனக்குத்தெரியாது.ஆனால் இத்தகைய ஞானத்தையோ,பிரேம பக்தியையோ, நம்பிக்கையையோ, பற்றின்மையையோ , பரந்த கருத்தையோ இதற்கு முன்பு நான் எங்குமே கண்டதில்லை.

இதைக்கேட்டு குருதேவர் சிரித்தார்.

அதன் பிறகு ம- குருதேவரின் திருமுன் வீழ்ந்து வணங்கி விடை பெற்றார். வாசல்வரை சென்றவர், திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டு மறுபடியும் திரும்பி வந்தார்.

அந்த மங்கிய ஒளியில் குருதேவர் அப்போதும் நடந்து கொண்டிருந்தார். தன்னந்தனியாக நடந்து கொண்டிருந்தார். யாருமே அருகில் இல்லை. மிருக வேந்தனான சிங்கம் காட்டின் நடுவே தன்னந்தனியாக நடைபோடுவது போல் இருந்தது அந்தக் காட்சி. சிங்கம் தனிமையையே விரும்பும், தனிமையிலேயே உலவும். குருதேவரும் தம்முள் மூழ்கியவராக, யாரையும் சாராதவராக நடந்து கொண்டிருந்தார்.

ம- பிரமிப்புடன் நின்றவாறு அந்த மகாபுருஷரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்(ம-விடம்)-

ஏன், திரும்பிவந்தாய்?

ம- தாங்கள் கல்கத்தாவில் வரச் சொல்லியிருக்கும் வீடு பணக்கார வீடாக இருக்கலாமென்று தோன்றுகிறது. என்னை உள்ளே விடுவார்களோ என்னவோ? அதனால் அங்கு வராமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன். இங்கு வந்தே உங்களை தரிசிக்கிறேன்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இல்லை இல்லை! ஏன் அப்படி நினைக்கிறாய்? என் பெயரைச் சொல், இன்னவரிடம் போக வேண்டும் என்றுசொல். யாராவது ஒருவர் உன்னை என்னிடம் அழைத்து வருவார்.

ம- அப்படியே ஆகட்டும், என்றகூறி மறுபடியும் குருதேவரை வணங்கி விடைபெற்றார்.



Site Content

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

   பாகம்- 6

சனிக்கிழமை மார்ச்-11, 1882

....................

காலை எட்டு ஒன்பது மணி இருக்கும். குருதேவர் ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி கல்கத்தாவில் உள்ள பரலாம்போஸ் என்ற பக்தரின் வீட்டிற்குச் சென்றார். டோல் யாத்திரை, முடிந்து ஒருவாரம் ஆகியிருந்தது. ராம், மனமோகன், ராக்கால், நித்திய கோபால் முதலான பக்தர்கள் அவரைச் சுற்றி நின்றுக் கொண்டிருந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு தட்சிணேசுவரத்தில் குருதேவர். நான் கல்கத்தாவில் பலராமின் வீட்டிற்குப்போவேன். நீயும் அங்குவா, என்று கூறியதற்கு ஏற்ப ம- அங்கே வந்து சேர்ந்தார். பக்தர்களும், குருதேவரும் ஹரி நாம சங்கீர்த்தனம் செய்தவாறு ஆடியும் பாடியும் இறையுணர்வில் மூழ்கியிருந்தனர். அவர்களில் பலருக்கு பரவச நிலை ஏற்பட்டிருந்தது. பரவச நிலையின் காரணமாக நித்திய கோபாலின் மார்பு சிவந்து காணப்பட்டது. ராக்கால் உலகநினைவை இழந்து தரையில் கிடந்தார். குருதேவர் ராக்காலின் மார்பைத் தடவிய வண்ணம் ”அமைதி பெறு” அமைதி பெறு” என்று கூறிக்கொண்டிருந்தார். இரண்டாவது தடவையாக ராக்காலுக்கு பரவசநிலை ஏற்பட்டிருந்தது. அவர் தந்தையுடன் கல்கத்தாவில் வாழ்ந்து வந்தார். அடிக்கடி தட்சிணேசுவரத்திற்கு வந்து குருதேவரைத் தரிசித்துச்செல்வார். சியாம்புகூரில் உள்ள குருதேவரைத் தரிசித்துச்செல்வார். சியாம்புகூரில் உள்ள வித்யாசாகர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். எல்லோரும் உட்கார்ந்த பிறகு ம- குருதேவரை வணங்கினார்.

சங்கீர்த்தனம் நிறைவுற்றதும் பக்தர்கள் வராந்தாவில் அமர்ந்து சாப்பிட்டனர். பலராம் போஸ் ஒரு பணியாளைப் போல் பணிவுடன் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த வீட்டின் எஜமான் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ம- அந்த இடத்திற்குப் புதியவர். நரேந்திரரை தட்சிணேசுவரத்தில் ஒரு முறை பார்த்ததோடு சரி, மற்ற பக்தர்களுடன் அவருக்கு இன்னும் அறிமுகம் ஆகவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு ம- தட்சிணேசுவரம் சென்று குருதேவரைக் கண்டார்.

குருதேவர் தமது அறையில் தரையில் விரிக்கப் பட்டிருந்த படுக்கையில் சாய்ந்தவாறு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.ஹிருதயர் வேலையிலிருந்து நீக்கப் பட்டு, காளி கோயிலை விட்டுச்சென்றதிலிருந்து குருதேவருக்குச் சேவை செய்ய ஆளில்லாமல் இருந்தது. அதனால் அவர் மிகவும் சிரமப் பட்டார்.

ம- வந்தபோது மாலை 4 அல்லது 5 மணி இருக்கும். சிவாலயங்களின் படிக்கட்டில் குருதேவர் சென்று அமர்ந்தார். ம- அவர் அருகே சென்று உட்கார்ந்தார். முற்றத்தின் மறுபக்கம் அமைந்திருந்த ராதா காந்தர் கோயிலைக் கண்டவுடன் திடீரென்று குருதேவர் பரவச நிலையை அடைந்தார்.

தேவியிடம் குருதேவர் பேசிக்கொண்டிருந்தார். அம்மா”, தன் கடிகாரம் தான் சரியானது என்று ஒவ்வொருவரும் சொல்கிறார்கள். கிறிஸ்தவர்கள், பிரம்ம சமாஜத்தினர், இந்துக்கள், முகமதியர்கள் எல்லோரும் தங்கள் மதம் தான் சரியானது என்கிறார்கள். ஆனால், தாயே யாருடைய கடிகாரமும் சரியில்லையே! உன்னைச்சிரியாகப் புரிந்து கொள்ள யாரால் முடியும்?ஆனால் ஏங்கி அழைத்தால், உன் அருள் பெற்றால் எல்லா பாதைகள் வழியாகவும் உன்னை வந்து அடையலாமே! அம்மா! கிறிஸ்தவர்கள் சர்ச்சில் உன்னை எப்படி வழிபடுகிறார்கள் என்பதை எனக்கு ஒரு முறை காட்டியருள மாட்டாயா? ஆனால் தாயே, நான் சர்ச்சுக்குப்போனால் மக்கள் என்ன சொல்வார்கள்? ஏதாவது குழப்பம் வந்து அதன்பிறகு ஒருவேளை காளி கோயிலுக்குள் என்னை அனுமதிக்காவிட்டால்? எனவே வெளியிலிருந்தே நான் பார்க்க அருள் செய்.

மற்றொரு நாள். குருதேவர் தமது அறையில் சிறிய கட்டிலின் மீது ஆனந்தமயமாக அமர்ந்து கொண்டிருந்தார். அவரது முகத்தில் புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது.

காளி கிருஷ்ணர் என்னும் நண்பரை ம- அழைத்து வந்திருந்தார். ம- தன்னை எங்கு கூட்டி வந்திருக்கிறார். என்பது அந்த நண்பருக்குத் தெரியாது. கள்ளுக்கடைக்குப் போக வேண்டுமானால் என்னுடன் வா. அங்கே பெரிய ஜாடிநிறைய கள் இருக்கிறது” என்று ம- சொல்லியிருந்தார்.

குருதேவரை வணங்கிவிட்டு அதைக் கூறியபோது குருதேவரும் வேடிக்கையை ரசித்துச் சிரித்தார்.

குருதேவர் கூறினார், பஜனானந்தம், பிரம்மானந்தம் இவை தான் கள், பிரேமைக்கள், மானிடப் பிறவியின் நோக்கம் இறைவனிடம் அன்பு செலுத்துவது, அவரை நேசிப்பது. பக்தி தான் சாரம். ஆராய்ச்சியின் மூலம் இறைவனை அறிவது மிகவும் கடினம்.

...........................

ஞாயிறு, ஏப்ரல் 2, 1882

...........................

ஸ்ரீராமகிருஷ்ணர் கல்கத்தாவில் சியாம்புகூருக்கு வந்திருந்தார். அங்கே பிராண கிருஷ்ண முகோபாத்யாயருடைய வீட்டு மாடியிலுள்ள வரவேற்பறையில் பக்தர்கள் கூட்டத்தின் நடுவே அமர்ந்திருந்தார். சற்று முன்பு தான் பக்தர்களுடன் பிரசாதம் சாப்பிட்டார்.

பிற்பகல் ஒன்று அல்லது இரண்டு மணி இருக்கும். கேப்டன் இந்தப் பகுதியில் தான் வசித்துவந்தார். சிறிது ஓய்விற்குப் பின் கேப்டனின் வீட்டிற்குச்சென்று அவரை சந்தித்து விட்டு, அங்கிருந்து கமலகுடீர் சென்று கேசவசேனைப் பார்த்துப்பேச எண்ணினார் குருதேவர். பிராண கிருஷ்ணர், ராம், மனமோகன், கேதார், சுரேந்திரர், கிரீந்திரர், ராக்கால், பலராம், ம- முதலியோர் அங்கே இருந்தனர். அந்தப் பகுதியில் வாழ்கின்ற பெரியவர்களும் மற்றும் பலரும் வந்திருந்தனர்.குருதேவர் கூறப்போவதைக்கேட்க எல்லோரும் மிக்க ஆவலோடு இருந்தனர்.

ஸ்ரீராமகிருஷ்ணர்- இறைவனும் அவருடைய மகிமையும், இந்த உலகம் அவருடைய மகிமை. ஆனால் மக்கள் மகிமையைக் கண்டு அதில் மயங்கிவிடுகிறார்களே தவிர, இந்த மகிமைகள் யாருடையதோ அவரைத் தேடுவதில்லை. காமினீ- காஞ்சனத்தை நாடி அனைவரும் ஓடுகின்றனர். அவர்களுக்குக் கிடைப்பது என்னவோ பெருந்துன்பமும் அமைதியின்மையும் தான். விசாலாட்சியின் நீர்ச்சுழி போன்றது இந்த உலகம். இதில் ஒரு படகு அகப்பட்டுக் கொண்டால் அதோகதிதான்.மேலும், இந்த உலகம் ஒரு விதமான முட்செடி போன்றது. இதில் சிக்கிக் கொள்பவன் ஒரு முள்ளிலிருந்து தன்னை விடுவிப்பான். அதற்குள் இன்னும் மூன்றில் மாட்டிக்கொள்வான். தடுமாறச்செய்கின்ற குழப்பமான வழியைப்போன்றது இந்த உலகம். ஒரு முறை இதில் அகப்பட்டுக்கொண்டதால் வெளி வருவது மிகக் கடினம். மனிதன் இதில் வறுக்கப் படுகிறான்.

ஒரு பக்தர்-

அப்படியானால் வழி என்ன?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

வழி? சாது சங்கமும் பிரார்த்தனையும் தான் வழி.

வைத்தியரிடம் போகாவிட்டால் நோய் குணமாகாது. சாதுசங்கம் ஒருநாள் போதாது. எப்போதும் அவசியம்.ஏனெனில் நோய் முற்றிவிட்டது. மேலும், வைத்தியருடன் இருந்தால் தான் நாடி பற்றி தெரிந்து கொள்ள முடியும். அவர் பின்னாலேயே சுற்றி அலைந்தால் தான் எது பித்த நாடி, எது கப நாடி என்பதெல்லாம் புரியும்.

பக்தர்-

சாதுசங்கத்தினால் என்னபயன்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இறைவனிடம் ஆழ்ந்த பக்தி ஏற்படும், அவரிடம் அன்பு உதயமாகும். உள்ளம் உருகாவிட்டால் எந்தப் பயனும் இல்லை, சாதுசங்கம் வளரவளர இறைவனுக்காக உள்ளம் துடிக்க த் தொடங்கும். நோயில் வாடுபவன் எந்த வகையில் குணமாவான் என்று அவனது வீட்டினர் துடிப்பது போன்றது அது. ஒருவனுக்கு வேலை போய் விட்டதாக வைத்துக் கொள்வோம். மறுபடியும் வேலை கிடைப்பதற்கு அவன் எவ்வளவு பாடுபடுவான்? எத்தனை அலுவலகங்களில் ஏறி இறங்குவான்? அது போல் தான். வேலை காலி இல்லை என்று ஓர் அலுவலகத்தில் கூறினாலும் மறுநாள் மீண்டும் அதே அலுவலகத்திற்கு வந்து, இன்று ஏதாவது வேலை காலி இருக்கிறதா? என்று கேட்பான்.

இன்னொரு வழி இருக்கிறது- மன ஏக்கத்துடன் பிரார்த்தனை செய்வது, இறைவன் நமக்கு உரியவர், நீ எப்படி இருக்கிறாய்? எனக்கு உன் திருக் காட்சியைத்தா. தந்தே யாக வேண்டும். இல்லாவிட்டால் என்னை நீ ஏன் படைத்தாய்? என்று அவரிடம் உரிமையுடன் கேட்க வேண்டும்.

சில சீக்கியர்கள் என்னிடம், இறைவன் கருணையே வடிவானவர்” என்று சொன்னார்கள். நான் அவர்களிடம், கருணை வடிவானவர் என்று ஏன் சொல்ல வேண்டும்? அவர் நம்மை படைத்தவர். நமக்கு நன்மை தருபவற்றை அவர் செய்வது வியப்பிற்குரிய விஷயமா என்ன? என்று கேட்டேன். தாய் தந்தையர் குழந்தையை வளர்க்கிறார்கள். இதில் கருணை எங்கிருந்து வந்தது? குழந்தையை அவர்கள் வளர்த்தேயாக வேண்டும். எனவே கடவுளிடம் பிடிவாதத்துடன் பிரார்த்தனை செய்ய வேண்டும். நமது தாயும் தந்தையும் அவரே அல்லவா?

மகன் உண்ணாமல் கொள்ளாமல் அடம் பிடித்து, தனக்குச்சேர வேண்டிய சொத்தைத் தரும் படி தந்தையை வற்புறுத்தினால், உரிய காலத்திற்குச் சில ஆண்டுகள் முன்னதாகவே அவர் சொத்தைப் பாகம் பிரித்துக் கொடுத்து விடுகிறார். குழந்தை தாயிடம் காசு கேட்கிறான். உன் காலில் விழுந்து கேட்கிறேன். எனக்குக் காசு கொடு” என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறான். வேறு வழியில்லாமல் தாயும் கொடுத்து விடுகிறாள்.

சாது சங்கத்தினால் மற்றொரு பயனும் உண்டு- உண்மை எது, உண்மையற்றது எது என்ற விவேகம் அதனால் உண்டாகிறது. நிலையான பொருள் அதாவது இறைவன் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் உண்மையற்றவை அதாவது நிலையற்றவை. உண்மையற்றதான வழியில் மனம் சொல்லத் தொடங்கினால் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அடுத்தவன் வீட்டு வாழை மரத்தைத் தின்ன யானை துதிக்கையை நீட்டினால் உடனே யானைப்பாகன் அங்குசத்தால் ஒரு போடு போட்டு அதைத் தடுக்கிறான்.

மற்றொருவர்-

சுவாமி, பாவ எண்ணம் ஏன் ஏற்படுகிறது?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இறைவனது படைப்பில் எல்லா ரகங்களும் உண்டு. நல்லவர்களையும் அவரே படைத்திருக்கிறார். தீயவர்களையும் அவரே படைத்திருக்கிறார். நல்ல அறிவை அளிப்பவரும் அவரே, தீய அறிவை அளிப்பவரும் அவரே.

பக்தர்-

அப்படியானால் பாவம் செய்வதில் நமக்கு பொறுப்பு ஒன்றும் இல்லையா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

பாவம் செய்தால் அதன் பயனை அனுபவித்தே தீர வேண்டும் என்பது இறைவன் வகுத்த நியதி. மிளகாயைக் கடித்தால் காரத்தை அனுபவிக்காமல் இருக்க முடியுமா?

மதுர்பாபு இளவயதில் தாறு மாறாக வாழ்ந்தார். அதனால் தான் கடைசி க் காலத்தில் அவருக்குப் பல்வேறு நோய்கள் வந்தன. இளவயதில் இது அவ்வளவாகத் தெரிவதில்லை.காளி கோயிலில் நைவேத்தியம் சமைக்க விறகு வைத்திருப்பார்கள்.ஈரமான கட்டைகள் முதலில் நன்றாக எரியும். அவற்றின் உள்ளே தண்ணீர்இருக்கிறது என்பதே அப்போது நமக்குத் தெரியாது. எரிந்து முடியும் தறுவாயில் தண்ணீர் எல்லாம் கட்டையின் பின் புறத்திற்கு விரைந்து வருகிறது. புஸ் புஸ் என்ற சத்தத்துடன் சீறிப் பாய்ந்து அடுப்பையே அணைத்து விடுகிறது. அதனால் தான் காமம்,கோபம், பேராசை இந்த விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யோசித்துப் பார், அனுமனுக்குக்கோபம் வந்தது, உடனே இலங்கையை எரித்து விட்டார். அசோகவனத்தில் சீதை இருப்பது அதன் பிறகு தான் நினைவிற்கு வந்தது. சீதைக்கு ஆபத்து வந்து விடுமே என்று பதை பதைத்துப்போனார்.

பக்தர்- அப்படியானால் இறைவன் தீயவர்களை ஏன் படைத்தார்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-“

அது அவரது திருவுளம். அவருடைய திருவிளையாடல், அவரது மாயையில் வித்யா மாயையும் உண்டு, அவித்யா மாயையும் உண்டு. இருட்டின் அவசியமும் இருக்கிறது. இருட்டு இருப்பதால் தான் வெளிச்சத்தின் பெருமை விளக்குகிறது. காமம், கோபம், பேராசை முதலியவை தீயவைதான், அதில் சந்தேகமில்லை. அப்படியானால் அவர் ஏன் அவற்றைத் தந்திருக்கிறார்? மாமனிதர்களை உருவாக்குவதற்காகத்தான் என்று சொல்கிறார்கள். புலன்களை வென்றால் மாமனிதன் ஆகலாம். புலன்களை வென்றவனால் சாதிக்க முடியாதது ஏதாவது உண்டா? இறைவனின் அருளால் இறையனுபூதியைக் கூட அவன் பெற்றுவிடுவான். மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். காமத்தால் தான் இறைவனின் படைப்பாகிய திருவிளையாடல் தொடர்ந்து நடைபெறுகிறது.

தீயவர்களும் இருக்க வேண்டியது அவசியம். ஒரு கிராம வாசிகள் மிகவும் கொடியவர்களாக இருந்தார்கள். அவர்களை அடக்க கோலோக் சௌத்ரியை அனுப்ப வேண்டியிருந்தது. அவனுடைய பெயரைக்கேட்டாலே மக்கள் நடுங்கினர். அவ்வளவு கொடூரமானது அவனது ஆட்சி முறை.

எல்லா வகையானவர்களும் வேண்டும், சீதை ராமனைப் பார்த்து. நாதா! அயோத்தியில் எல்லாம் மாளிகைகளாக இருந்தால் நன்றாக இருக்கும். பல வீடுகள் இடிந்து பாழடைந்து காணப்படுகின்றனவே, என்று சொன்னாள். அதற்கு ராமர், சீதா! எல்லா வீடுகளும் அழகாக இருந்துவிட்டால் கொத்தனார்களின் பிழைப்பு என்ன ஆவது? என்றார். (எல்லோரும் சிரித்தனர்)

இறைவன் பலவிதமானவற்றையும் படைத்திருக்கிறார். நல்ல மரம், தீய மரம், அவற்றுடன் களையையும் படைத்திருக்கிறார். மிருகங்களிலும் நல்லவை, தீயவை என்று எல்லாம் இருக்கின்றன. புலி, சிங்கம், பாம்பு எல்லாம் உள்ளன.

பக்தர்-

சுவாமி, இல்லறத்தில் இருந்து கொண்டே இறைவனை அடைய முடியாதா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

கட்டாயமாக முடியும். ஆனால் முன்பு கூறியது போல் சாதுசங்கமும் இடைவிடாத பிரார்த்தனையும் வேண்டும். இறைவனிடம் அழ வேண்டும். மனத்தின் மாசுகள் துடைக்கப் பட்டால் அவரது காட்சி கிடைக்கும்.சேறு படிந்த இரும்பு ஊசி போன்றது மனம், கடவுள் காந்தக் கல்.ஊசியில் சேறு விலகாதது வரை ஊசியும் காந்தமும் சேர்வதில்லை. கழுவுவதால் காமம், கோபம், பேராசை, தீய எண்ணம் , பற்று இவை மனத்திலிருந்து விலகுகின்றன. சேறு விலகி விட்டால் காந்தம் ஊசியை இழுத்துக் கொள்கிறது. அதாவது இறைக்காட்சி கிடைக்கிறது. மனம் தூய்மை அடைந்தால் இறைவனின் திருக்காட்சி கிடைக்கும். காய்ச்சல். கண்டிருக்கிறது. உடம்பெல்லாம் வேறு கோர்த்திருக்கிறது. இதில் வெறும் கொய்னா மாத்திரையால் என்ன பலன்? இல்லறத்தில் இருந்து கொண்டே ஏன் கடவுளை அடைய முடியாது? அதற்காகத் தான் சாதுசங்கம், அழுது அழுது பிரார்த்தனை செய்வது, இடையிடையே தனிமையில் வாழ்வது முதலியவை வேண்டும். சிறியதொரு வேலி இல்லாவிட்டால் நடைபொதையிலுள்ள இளஞ்செடிகளை ஆடுமாடுகள் மேய்ந்து விடும்.

பக்தர்- அப்படியானால் இல்லறத்தில் இருப்பவனும் இறைவனை அடைவான்.அப்படித்தானே?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

எல்லோரும் முக்தி பெறுவார்கள். அதற்கு குருவின் உபதேசத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும். சுற்றி வளைத்த வழியில் சென்றால் திரும்பி வருவது சிரமமாகிவிடும். முக்தி கிடைக்க மிகுந்த கால தாமதம் ஆகும். இந்தப் பிறவியில் கிடைக்காமல் போகலாம். பல பிறவியிலும் கிடைக்காமல் போகலாம். பல பிறவிகளுக்குப் பிறகு வாய்க்கலாம்.ஜனகர் போன்றவர்கள் இல்லறத்தில் இருந்து கொண்டே கடமைகளை ச் செய்து வந்திருக்கின்றனர். அவர்கள் இறைவனைத் தலையில் தாங்கிய வண்ணம் கடமைகளைச்செய்தனர். தலையில் குடத்தை வைத்துக்கொண்டு பெண் நடனமாடுவது போல், மேற்குப் பகுதி பெண்களைப் பார்த்த தில்லையா? தலையில் தண்ணீர்க் குடங்களைச் சுமந்து செல்வார்கள். அதே வேளையில் சிரித்துப்பேசியபடியே நடப்பார்கள்.

பக்தர்-

குருவின் உபதேசத்தைப் பற்றி குறிப்பிட்டீர்கள். குரு எப்படி கிடைப்பார்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

எல்லோரும் குரு ஆகி விட முடியாது. பெரிய மரக்கட்டை தானும் மிதக்கும். பல மனிதர்களையும் மிருகங்களையும் கூட ஏற்றிச் செல்லும். ஆனால் உறுதியற்ற கட்டையின் மீது ஏறினால் கட்டையும் மூழ்கும், ஏறியவனும் மூழ்குவான்.

ஆகவே உலகை வழி நடத்த ஒவ்வொரு யுகத்திலும் இறைவனே குருவாக அவதரிக்கிறார். சச்சிதானந்தமே குரு.

எதை ஞானம் என்று சொல்வது? இந்த ”நான்” யார்? எல்லாம் இறைவன் செயல், நம்மால் ஆவது ஒன்றுமில்லை. நான் இறைவனின் கையில் ஒரு கருவி. அதனால் தான், அம்மா, நீ இயக்குபவள், நான் எந்திரம். நீ குடியிருப்பவள், நான் வீடு. நான் வண்டி, நீ ஓட்டுபவள், எப்படி நடத்துகிறாயோ அப்படி நடக்கிறேன். எப்படி செய்விக்கிறாயோ அப்படி செய்கிறேன். எப்படி பேசுவிக்கிறாயோ அப்படி பேசுகிறேன், நான் இல்லை, நான் இல்லை, நீயே, நீயே, என்று நான் சொல்கிறேன்.

பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணர் அங்கிருந்து புறப்பட்டு கேப்டன் விசுவநாதரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு, கேசவரின் வீடான கமலகுடீர் சென்றார்.

கமலகுடீருக்கு வந்தபோது மாலை 5 மணி இருக்கும். கேசவர் உள்ளே இருந்தார். அவருக்குச்செய்தி தெரிவிக்கப் பட்டது. கேசவர் சட்டை அணிந்து, தோளில் துண்டும் போட்டுக்கொண்டு வந்து குருதேவரை வணங்கினார். நோயுற்றிருந்த தன் நண்பரான காளி நாத வசுவைக் காண்பதற்காக அவர் புறப்பட்டுக்கொண்டிருந்தார். குருதேவர் வந்திருப்பதால் அங்கே போவது முடியாமல்போயிற்று.

சேகவரைக் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார், உங்களுக்கு ஏகப்பட்ட வேலை. அதோடு பத்திரிகையும் நடத்தியாக வேண்டும். தட்சிணேசுவரம் வருவதற்கு உங்களுக்கு நேரம் இருக்காது. அதனால் உங்களைப் பார்க்க நானே வந்து விட்டேன். நீங்கள் உடல் நலமில்லாமல் இருப்பதைக்கேள்விப் பட்டதும் காளிதேவிக்கு இளநீரும் சர்க்கரையும் படைப்பதாக வேண்டிக்கொண்டேன். அம்மா” கேசவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் கல்கத்தாவிற்கு ப்போகும் போது யாரோடு பேசுவேன்” என்று அவளிடம் முறையிட்டேன்.

பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் அங்கிருந்த பிரதாப் முதலான மற்ற பிரம்ம பக்தர்களிடம் பேசினார். அருகே அமர்ந்திருந்த ம-வைச் சுட்டிக்காட்டி கேசவரிடம், இவன் தட்சிணேசுவரத்திற்கு வருவதில்லை. ஏன் என்று கேளுங்களேன். இதில், மனைவிமக்களிடம் மனம் ஈடுபடவில்லை” என்றும் சொல்கிறான்” என்றார்.

ஒரு மாத காலமாக ம-குருதேவரிடம் வந்து போய்க் கொண்டிருந்தார். இப்போது சில நாட்களாக போகவில்லை. அது தான் குருதேவரின் இந்தப் பேச்சுக்குக் காரணம். தட்சிணேசுவரத்திற்கு வருவது தாமதப்படுமானால் அது பற்றி தமக்கு கடிதம் எழுதுமாறு ஏற்கனவே குருதேவர் ம- விடம் கூறியிருந்தார்.

பண்டித சாமாத்யாயி என்பவரும் அங்கிருந்தார். பிரம்ம சமாஜத்தினர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் அவரைச் சுட்டிக்காட்டி, இவர் பண்டிதர். வேதம் முதலான சாஸ்திரங்களில் நல்ல ஞானம் உடையவர்” என்று அறிமுகப் படுத்தினார்கள்.குருதேவர் உடனே ஆமாம்,ஆமாம், வீட்டிற்குள் இருப்பவைக் கண்ணாடிக் கதவு வழியாக எப்படித் தெளிவாகத் தெரியுமோ அப்படி இவரது மனத்தில் இருப்பவை இவருடைய கண்கள் வழியாக தெளிவாகத் தெரிகின்றன” என்றார்.

திரைலோக்கியர் பாடத் தொடங்கினார். அவர் பாடிக் கொண்டிருக்கும் போதே மாலை நேர தீபங்கள்ஏற்றப் பட்டன. பாட்டு தொடர்ந்தது. பாட்டைக்கேட்டுக் கொண்டிருந்த குருதேவர் திடீரென்று எழுந்து நின்றார். தேவியின் திருநாமத்தைக் கூறியபடியே சமாதியில் ஆழ்ந்தார். பிறகு சிறிது நினைவு பெற்றதும் நடனமாடியபடியே பாடத்தொடங்கினார்.

மிகவும் நெருங்கிய உறவினரைப் பார்ப்பது போல் குருதேவர் கேசவரைஅன்பு கனிய பார்த்தார். எங்கே கேசவர் ஒரு வேளை தன்னைவிட்டு விலகிச்சென்று விடுவாரோ என்று அவர் பயப்படுவது போல் தோன்றியது. அவரைப் பார்த்த படியே மீண்டும் பாடினர்.

பாடலின் கடைசிக் பகுதியை மீண்டும் ஒருமுறை பாடிய குருதேவர் கேசவரிடம் கூறினார்.

அதாவது எல்லாவற்றையும் துறந்து கடவுளை நம்பி இருங்கள். அவரே உண்மை, மற்ற எல்லாம் நிலையற்றவை. அவரை அறியவில்லையென்றால் மற்ற எல்லாமே வீண்! இது தான் மகா மந்திரம்.

பிறகு குருதேவர் அமர்ந்து கொண்டு பக்தர்களுடன் பேசத் தொடங்கினார். அவருக்குச் சிற்றுண்டி கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. அறையின் ஒரு மூலையில் ஒரு பக்தன் பியானோ வாசித்துக் கொண்டிருந்தான். சிரித்த முகத்தோடு குருதேவர் அவனருகில் சென்று,அவன் பியானோ வாசிப்பதை ஒரு குழந்தையைப்போல் கண்டு ரசித்தார். சிறிது நேரத்தில் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். சிற்றுண்டி அருந்தவும், பெண்கள் வந்து அவரை வணங்கவும் அங்கே ஏற்பாடாகியிருந்தது.

சிற்றுண்டி முடிந்ததும் குருதேவர் சென்று வண்டியில் அமர்ந்தார். பக்தர்கள் வண்டியின் அருகே நின்றார்கள். கமலகுடீரை விட்டு வண்டி தட்சிணேசுவரம் நோக்கிப் புறப்பட்டது.



Site Content

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

   பாகம்- 7

சனிக்கிழமை, ஆகஸ்ட் 5, 1882

...........................

ஸ்ரீராமகிருஷ்ணர் ,ஈசுவர சந்திர வித்யாசாகரைச் சந்திக்க கல்கத்தாவில் அவரது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். பவநாத், ம- ,ஹஸ்ரா முதலியோர் உடன் சென்றனர்.

குருதேவர் ஹுக்ளி மாவட்டத்தில் காமார்புகூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். அதன் அருகே உள்ள வீர்சிங் என்னும் கிராமத்தில் தான் வித்யாசாகர் பிறந்தார்.குருதேவர் இளமைப்பருவத்திலேயே வித்யாசாகரின் கருணை உள்ளத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார். தட்சிணேசுவரக்கோயிலுக்கு வந்த பிறகு அவருடைய பல்வேறு சிறந்த குணங்களையும் தானதருமச் செயல்களையும் அதிகமாகக் கேள்விப்பட்டு அவரைக் காண வேண்டும் என்று பல நாட்களாக பெரிதும் ஆவல் கொண்டிருந்தார்.

ம-, வித்யாசாகரின் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார் என்று அறிந்ததும், வித்யாசாகரிடம் என்னை அழைத்துச் செல்கிறாயா? அவரைக் காண எனக்கு ப் பெரிதும் ஆவலாக இருக்கிறது” என்று குருதேவர் கேட்டார். வித்யாசாரிடம் ம- இதைதெ் தெரிவித்த போது அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்திக்க இசைந்தார். ஒரு சனிக்கிழமை மாலை நான்கு மணி அளவில் ஸ்ரீராமகிருஷ்ணரைக் காண ஏற்பாடு செய்யும்படிக் கூறினார். பிறகு ம-விடம் ”ஒரே ஒரு விஷயம். எப்படிப்பட்ட பரமஹம்சர் அவர்? காவி உடை அணிந்தவரா? என்று கேட்டார். அதற்கு ம- அப்படி யொன்றும் இல்லை. அவர் ஓர் அற்புத மனிதர். சிவப்புக் கரை வேட்டி, சட்டை, பாலிஷ் போட்ட செருப்பு எல்லாம் அணிகிறார். ராணி ராசமணியின் காளி கோயிலில் ஓர் அறையில் வசித்து வருகிறார். அந்த அறையில் கட்டில் உண்டு, பாய் உண்டு, அதன்மேல் மெத்தை உள்ளது. கொசு வலையும் உள்ளது. மெத்தையில் அவர் தூங்குகிறார். புற அடையாளங்கள் எதுவும் இல்லை. ஆனால் கடவுளைத் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. இரவும் பகலும் இறைநினைவிலேயே வாழ்கிறார்” என்றார்.

தட்சிணேசுவரக் காளி கோயிலிலிருந்து புறப்பட்ட வண்டி பாலத்தைக் கடந்து சியாம் பஜார் வழியாக ஆமர்ஷ்ட் வீதியை அடைந்தது. பாதூர்பகானை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்” என்று பக்தர்கள் கூறினார்கள். குருதேவர் ஒரு சிறுவனைப்போல் களிப்புடன் பேசிக்கொண்டே வந்தார். ஆமர்ஷ்ட் வீதி வந்ததும் திடீரென்று அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அவர் பரவச நிலையில் மூழ்கத்தொடங்கினார்.

வண்டி ராஜாராம் மோகன்ராயின் மாளிகை வழியாகச்சென்று கொண்டிருந்தது. ம- குருதேவரின் பரவச நிலையைக் கவனிக்காமல் பரபரப்போடு, இது தான் ராம்மோகன் ராயின் வீடு” என்றார். குருதேவருக்கு அதுபிடிக்கவில்லை. இது போன்ற பேச்சுக்கள் இப்போது பிடிக்கவில்லை” என்றார் . அவர் பரவச நிலையில் ஆழ்ந்தார்.

வித்யாசாகரின் வீட்டு வாசலில் வண்டி சென்று நின்றது. மேலை நாட்டு முறையில் கட்டப் பட்ட மாடி வீடு அது. பரந்த மைதானம், நாற்புறமும் சுவர். நடுவில் வீடு. வீட்டின் மேற்கு ஓரத்தில் கீழறையில் முக்கிய வாசலும் படிகளும் இருந்தன. வாசலின் தெற்குப் பக்கம் படி.மேற்கு மதில் சுவருக்கும் வீட்டிற்கும் இடையில் அங்கங்கே அழகிய பூமரங்கள். படிக்கட்டுகளின் வழியாக மாடியை அடையலாம். மாடியில் வித்யாசாகரின் அறை இருந்தது.

படிக்கட்டு வழியாக ஏறிச் சென்றால் வடக்கில் ஓர் அறை . அதன் கிழக்கில் ஒரு ஹால், ஹாலின் தென் கிழக்கே இருப்பது வித்யாசாகரின் படுக்கை அறை. அதன் தெற்கு அறையிலும், வேறு ஓரிரு அறைகளிலும் பல அரிய நூல்கள் வைக்கப் பட்டிருந்தன. சுவரின் அருகிலுள்ள அலமாரிகளில் நூல்கள் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. ஹாலின் கிழக்கு மூலையில் மேஜையும் நாற்காலியும் போடப் பட்டிருந்தன. வித்யாசாகர் இந்த இடத்தில் மேற்கு பார்த்தபடி அமர்ந்து வேலைகளில் ஈடுபடுவார். அவரைப் பார்க்க வருபவர்கள் மேஜையைச் சுற்றியுள்ள நாற்காலிகளில் அமர்வார்கள். பேப்பர், பேனா,மை, மைஒற்றும் பேப்பர், கடிதங்கள், கணக்குப் புத்தகங்கள், முதலியவை மேஜைமீது இருந்தன. வித்யாசாகர் எழுதிய ஓரிருப் பாடப் புத்தகங்களும் அங்கே இருந்தன. வித்யாசாகர் எழுதிய ஓரிரு பாடப் புத்தகங்களும் அங்கேஇருந்தன. இந்த நாற்காலிக்குத் தெற்கிலுள்ள அறையில் கட்டிலும் படுக்கையும் உள்ளது. அவர் அதில் தூங்குவார்.

மேஜையின் மீது பல கடிதங்கள் வைக்கப் பட்டிருந்தன. அவற்றில் என்ன எழுதப் பட்டிருக்கும்? ஒரு வேளை ஒரு விதவை இப்படி எழுதியிருக்கலாம். என் கைக்குழந்தை அனாதையாக இருக்கிறது. காப்பாற்ற யாரும் இல்லை. நீங்கள் தான் எனக்கு கதி.

மற்றொரு கடிதம், தாங்கள் கோடை விடுமுறையில் போய் விட்டீர்கள். எனவே எங்களுக்குவர வேண்டிய மாத உதவித் தொகை உரிய வேளையில் கிடைக்கவில்லை. மிகவும் துன்பப் படுகிறோம்.

மற்றோர் ஏழை எழுதியிருக்கலாம். உங்கள் பள்ளிக் கூடத்தில் இலவசமாக என்னை சேர்த்துக் கொண்டார்கள். ஆனால் புத்தகம் வாங்க வழியில்லை.

என்னுடைய குடும்பம் பசியால் வாடுகிறது. அருள் கூர்ந்து ஒரு வேலை தர வேண்டும்- இப்படிஒரு கடிதம்.

வித்யாசாகருடைய பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் எழுதியிருக்கலாம். என் சகோதரி விதவையாகி விட்டாள். அவளையும் இப்போது நான் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. இப்போதைய சம்பளம் போதவில்லை.

இன்னொரு கடிதம் ஒரு வேளை மேலை நாட்டிலிருந்து வந்திருக்கலாம். நான் இங்கே மிகுந்த துன்பத்திற்குள்ளாகி இருக்கிறேன். நீங்கள் ஏழையின் நண்பர் அல்லவா? கொஞ்சம் பணம் அனுப்பி என்னை இப்போதைய துன்பத்திலிருந்து விடுவிக்க வேண்டம்.

இன்னும் ஒருவர், இன்ன தேதியில் எங்கள் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அன்று தாங்கள் வந்து எங்கள் வழக்கைத் தீர்த்து வைக்க வேண்டும்” என்று எழுதியிருக்கலாம்.

குருதேவர் சட்டை அணிந்திருந்தார். சிவப்புக் கரையிட்ட வேட்டியின் ஒரு நுனியை அங்கவஸ்திரம்போல் தோளின் மீது போட்டிருந்தார். காலில் பாலிஷ் செய்த பளபளப்பான செருப்புகள்.

குருதேவர் வண்டியிலிருந்து இறங்கினார். ம-வழிகாட்டியபடி மைதானத்தின் வழியேச்சென்றார். முற்றத்தில் பல்வேறு பூச்செடிகள். அவற்றின் ஊடே நடந்து வரும்போது குருதேவர் தன் சட்டை பட்டனில் கைவைத்து ம-விடம் ”பட்டன் இடாமல் சட்டை திறந்திருக்கிறதே! அதில் தவறு ஒன்றும் இல்லையே! என்று ஒரு குழந்தையைப்போல் கேட்டார். அது பற்றி நீங்கள் கவலைப் படவேண்டியதில்லை. உங்களுக்கு எதனாலும் பிரச்சனைவராது. நீங்கள் பட்டன் போட வேண்டிய அவசியமில்லை” என்று ம- பதில் கூறினார். இதைக்கேட்டதும் ஒரு குழந்தையைப்போல் நிம்மதி அடைந்தார் குருதேவர்.

பக்தர்களுடன் படிகளில் ஏறி முதல் அறையில்( ஏறும் போது வடக்கு திசையில் முதல் அறை) குருதேவர் நுழைந்தார். அறையின் வடக்குப் பக்கத்தில் தெற்கே பார்த்த வண்ணம் வித்யாசாகர் அமர்ந்திருந்தார். எதிரே நீண்ட பெரிய மேஜை. அதைச் சுற்றிலும் சில நாற்காலிகள், அடுத்து ஒரு சாய்வு பெஞ்சு. வித்யாசாகருடன் சில நண்பர்கள் இருந்தனர். அவர்களோடு வித்யாசாகர் பேசிக் கொண்டிருந்தார்.

குருதேவர் உள்ளே நுழைந்ததும் வித்யாசாகர் எழுந்து நின்று வரவேற்றார். குருதேவர் மேஜையின் கிழக்குப் பக்கத்தில் மேற்கு முகமாக நின்றார். இடது கையை மேஜையின் மீது வைத்துக்கொண்டு, ஏற்கனவே அறிமுகமானவர்போல் வித்யாசாகரைப் பார்த்தார். பரவச நிலையில் புன்முறுவல் பூத்தார்.

வித்யாசாகருக்கு அறுபத்திரண்டு அறுபத்து மூன்று வயது இருக்கும். குருதேவரை விட பதினாறு பதினேழு வயது மூத்தவர்.கைத்தறி வேட்டியும் மெல்லிய கம்பளிச் சட்டையும் அணிந்திருந்தார். காலில் செருப்பு. ஒரிசா மக்களைப்போல் முடி வெட்டியிருந்தார். புதிதாகக் கட்டப்பட்ட பலவரிசைகள் பேசும்போது பளிச்சிட்டன. பெரியதலை, எடுப்பான சற்றே சிறிய நெற்றி, பிராமணர், அதனால் பூணூல் அணிந்திருந்தார்.

வித்யாசாகர் பல அரிய குணங்கள் படைத்தவர். முதலில் கல்வியில் ஆர்வம். ம-விடம் ஒருநாள் அவர். நிறைய படிக்க வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆவல் இருந்தது. ஆனால் என்ன செய்வது? குடும்ப வாழ்க்கையில் சிக்கியதில் எதுவுமே நிறைவேறவில்லை” என்று கண்ணீருடன் கூறினார்.

இரண்டாவது உயிர்களிடம் அவர் காட்டிய தயை. வித்யாசாகர் தயா சாகர் தான். கன்றுக்குத் தாய்ப் பசுவின் பால் கிடைப்பதில்லை என்பதன் காரணமாக பல வருடங்களாகஅவர் பால் குடிப்பதையே நிறுத்தியிருந்தார். பின்னாளில் மிகவும் நோயுற்றபோது வேறு வழியில்லாமல் மீண்டும் பால் பருகத் தொடங்கினார். குதிரை வண்டியில் பயணிக்க மாட்டார். ஏனெனில் குதிரைகளால் தங்கள் கஷ்டத்தைப் பிறருக்குத் தெரிவிக்க முடியாது அல்லவா? ஒரு சமயம் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவன் காலரா கண்டு வாந்தியும் பேதியுமாக நடைபாதையில் விழுந்து கிடந்தான். அவனது சுமையும் அருகில் கிடந்தது. இதைக் கண்ட வித்யாசாகர் அவனைத்தன் தோளில் தூக்கி வீட்டிற்குக் கொண்டு வந்து பராமரித்தார்.

மூன்றாவதாக, சுதந்திரமான போக்கு, சம்ஸ்கிருதக் கல்லூரியில் அவர் முதல்வராக இருந்தார். ஆட்சியாளர் களோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது பதவியையே துறந்துவிட்டார்.

நான்காவதாக, பிறர் கேட்காமலேயே அவர்களின் துன்பம் அறிந்து உதவுதல், ஓர் ஆசிரியரிடம் அன்பு வந்தார் அவர். அந்த ஆசிரியரின் மகளுக்குத் திருமணம் நடந்தது. தாமே நேரில் சென்று புடவையொன்றைப் பரிசாக அளித்தார்.

ஐந்தாவதாக, தாயிடம் கொண்ட மதிப்பும் மன வலிமையும். ஒரு முறை அவரது தாயார் அவரிடம், ஈஸ்வர்! நீ இந்தத் திருமணத்திற்கு (சகோதரரின் திருமணம்) வரவில்லையென்றால் நான் மிகவும் வருந்துவேன்” என்ற கூறினார். வித்யாசாகர் கல்கத்தாவிலிருந்து புறப்பட்டார். நடந்து தான் சென்றார். வழியில் தாமோதர் என்ற ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. படகு இல்லை. எனவே ஆற்றை நீந்தியே கடந்தார். அந்த ஈரத்துணியுடனேயே தாயின் முன் சென்று, அம்மா, இதோ வந்து விட்டேன் என்றார்.

குருதேவர் பரவச நிலையில் மூழ்கத் தொடங்கினார். சிறிது நேரம் அதே நிலையில் அப்படியே நின்றார். பரவச நிலையைக் கட்டுப் படுத்துவதற்காக அவ்வப்போது ”தண்ணீர் குடிக்க வேண்டும்” என்று கூறிக் கொண்டிருந்தார்.

மெள்ள, மெள்ள வீட்டிலுள்ள பிள்ளைகளும், உறவினர்களும், நண்பர்களும், வரத் தொடங்கினர்.

குருதேவர் பரவச நிலையில் பெஞ்சின் மீது அமர்ந்தார். படிப்பிற்காக பண உதவி கேட்டு வித்யாசாகரிடம் வந்திருந்த பதினாறு பதினேழு வயதுள்ள இளைஞன் ஒருவனும் அந்த பெஞ்சின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தான்.

குருதேவர் ஒரு ரிஷியின் அகநோக்கு உடையவர். அந்த இளைஞனின் மனப்போக்கைப் புரிந்து கொண்டார். அவனிடமிருந்து சற்று அகன்று உட்கார்ந்த அவர் பரவச நிலையிலேயே, அம்மா! இந்தப் பையன் மிகுந்த உலகப் பற்று உடையவனாக இருக்கிறான். இவன் உன் அவித்யை உலகைச்சேர்ந்தவன், அவித்யையின் வாரிசு இவன், என்றார்.

பிரம்ம வித்யையை அடைவதற்கான துடிப்பில்லாத, வெறும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் படிக்கின்ற ஒருவனது வாழ்க்கை வீண்தான்- இதைத் தான் இங்கு குருதேவர் குறிப்பிடுகிறாரோ?

வித்யாசாகர் சற்று படபடப்புடன் ஒருவரிடம் தண்ணீர் கொண்டு வருமாறு கூறினார். பிறகு ம-விடம் ஏதாவது கொண்டு வந்தால் இவர் உண்பாரா? என்று கேட்டார். உண்பார், கொண்டு வாருங்களேன்”என்றார். ம-உடனே வித்யாசாகரே ஆர்வத்தோடு உள்ளே சென்று சிறிது இனிப்புகளைக் கொண்டு வந்து வைத்துவிட்டு, இவை பர்துவானி லிருந்து வந்தவை” என்றார். குருதேவர் உண்பதற்காகச் சிறிது கொடுக்கப் பட்டது. பவநாத்திற்கும் ஹாஸ்ராவுக்கும் சிறிது கிடைத்தது. ம- விற்கு க் கொடுத்த போது வித்யாசாகர், அவன் இந்த வீட்டு மாப்பிள்ளை. அவனைக் கணக்கில் சேர்க்க வேண்டாம்” என்றார்.

குருதேவர் வித்யாசாகரிடம்பக்தனான ஓர் இளைஞனைப் பற்றி கூறினார். அந்தப் பையன் அருமையானவன். பல்கு நதியைப்போன்றவன். மேல் பகுதி மணல் மூடிக் கிடக்கிறது. சிறிது தோண்டினால் போதும்,. தண்ணீர் ஓடுவதைக் காணலாம்.

இனிப்பை உண்ட பிறகு, குருதேவர் புன்னகையோடு வித்யாசாகரிடம், பேசத் தொடங்கினார், இதற்குள் வீடு முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பியது. சிலர் அமர்ந்திருந்தனர், சிலர் நின்றனர்.

ஸ்ரீராமகிருஷ்ணர்- இன்று கடலில் வந்து சேர்ந்திருக்கிறேன். இது வரை ஓடை,ஆறு, அதிகமாகப்போனால், நதியைப் பார்த்திருக்கிறேன், இன்று கடலையே பார்க்கிறேன்! (எல்லோரும் சிரித்தனர்)

வித்யாசாகர்-(புன்னகையோடு)-

அப்படியானால் கொஞ்சம் உப்பு நீரை எடுத்துச் செல்லுங்கள்(சிரிப்பு)

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இல்லை, இல்லை! ஏன் உப்புஏன் உப்பு நீர்? நீங்கள் அவித்யைக் கடல் அல்ல, வித்யைக் கடல்! நீங்கள் ஒரு பாற்கடல்!(எல்லோரும் சிரித்தனர்)

வித்யாசாகர்-

வேண்டுமானால் அப்படிச் சொல்லலாம்.

வித்யாசாகர் மௌனமாக அமர்ந்திருந்தார். குருதேவர் தொடர்ந்து பேசலானார்.

நீங்கள் செய்வது சாத்வீக கர்மம். உங்கள் ரஜஸ் சத்வம் சேர்ந்தது. சத்வ குணத்திலிருந்து கருணை பிறக்கிறது. பிறர் மீது கொண்ட பரிவின் காரணமாக செய்யப் பட்டாலும் , செயல் என்றாலே அது ரஜோ குணம் தான்.ஆனால் உங்களுடையது சத்வத்தின் ரஜஸ். அதனால் குற்றமில்லை.

சுகதேவர் போன்றோர் உலகிற்கு போதிப்பதற்காக, கடவுளைப் பற்றி உபதேசிப்பதற்காக கருணையை வைத்திருந்தனர். நீங்கள் உணவும் கல்வியும் தருகிறீர்கள். அதுவும் நல்லது தான். பற்றின்றி வேலை செய்ய முடியுமானால் இறையனுபூதி உண்டாகும். ஆனால் சிலர் புகழுக்காக வேலை செய்கிறார்கள். சிலர் புண்ணியம் சம்பாதிப்பதற்காகச் செய்கிறார்கள். இவை பற்றின்றிச் செய்யப் படுபவை அல்ல, இனி நீங்கள் ஒரு ஸித்தரும் கூட.

வித்யாசாகர்-

அது எப்படி?

ஸ்ரீராமகிருஷ்ணர்-(சிரித்தபடியே)

உருளைக் கிழங்கம் மற்ற காய்கறிகளும் ”ஸித்த மானால்” மென்மையாகி விடும். நீங்களோ மிகவும் மென்மையானவர். எவ்வளவு கருணை மிக்கவர் நீங்கள்! (சிரிப்பு)

வித்யாசாகர்-(சிரித்துக்கொண்டே)

ஆனால் உளுந்து மாவு உருண்டையை வேகவைத்தால், அது கெட்டியாகி விடுகிறதே.(எல்லோரும் சிரித்தனர்)

-ராமகிருஷ்ணர்-

நீங்கள் அத்தகையவர் அல்ல, வெற்றுப் பண்டிதர்கள் அரை வேக்காட்டு விஷயங்களைப் படிக்கிறார்கள், அவர்கள் இங்குமில்லை, அங்குமில்லை. கழுகுகள் மிக உயரத்தில் பறக்கின்றன. ஆனால் அவைகளின் பார்வை சவக்குழியில். வெறும் பண்டிதர்கள் இருக்கிறார்களே, அவர்கள் பெயருக்குத் தான் பண்டிதர்கள். ஆனால் காமினீ- காஞ்சனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள். கழுகைப்போல் அழுகிய பிணக்குழியை நாடுகிறார்கள். உலகத்தின் அவித்யைப் பகுதியைப் பற்றிப் பிடித்திருக்கிறார்கள் இவர்கள். தயை, பக்தி, வைராக்கியம் போன்றவை வித்யையின் மகிமைகள்.

வித்யாசாகர் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார். எல்லோரும் ஒரே நோக்குடன் குருதேவர் என்னும் அந்த ஆனந்த மூர்த்தியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவருடைய அமுத மொழிகளைக்கேட்டுக் கொண்டிருந்தனர்.

வித்யாசாகர் பெரிய பண்டிதர். சம்ஸ்கிருதக் கல்லூரியில் படித்த காலத்தில் வகுப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். ஒவ்வொரு தேர்விலும் பல தங்கப்பதக்கங்களும் சான்றிதழ்களும் பெற்றவர். படிப்படியாக சம்ஸ்கிருதக் கல்லூரியின் தலைமையாசிரியராக உயர்ந்தவர். அவருக்கு சம்ஸ்கிருத இலக்கணத்திலும் காவியத்திலும் நல்ல பயிற்சி இருந்தது.சுய முயற்சியினால் ஆங்கிலமும் கற்றிருந்தார்.

வித்யாசாகர் பிறருக்கு மத விஷயமாக அறிவுரைகள் வழங்குவதில்லை. தரிசனங்கள் போன்றவற்றைப் படித்திருக்கிறார். ஒரு முறை மா- அவரிடம், இந்துமத தரிசனங்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார்.அதற்குஅவர், அவை எதைவிளக்க முயல்கின்றனவோ, அதில் வெற்றி பெறவில்லை என்றுதான் எனக்குத்தோன்றுகிறது” என்று கூறினார். மற்ற இந்துக்களைப்போலவே சிராத்தம் போன்ற எல்லா சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் செய்தார். பூணூல் அணிந்திருந்தார். வங்க மொழியில் எழுதும் கடிதங்களில் ”ஸ்ரீஸ்ரீஹரி சரணம்” என்று முதலில் எழுதி இறைவனை வணங்கியே கடிதத்தை ஆரம்பிப்பார்.

வேறொரு சமயம் கடவுளைப்பற்றி அவருடைய கருத்து என்ன என்று ம- கேட்ட போது வித்யாசாகர். கடவுளை அறிவது என்பது இயலாத காரியம். அப்படியானால் செய்ய வேண்டியது என்ன? நாம் எதைச் செய்தால் எல்லோரும் நம்மைப் பின்பற்றி, அதன் மூலம் இந்த உலகமே சொர்க்கமாகுமோ அதைச் செய்ய எல்லோரும் முயல வேண்டும்” என்று பதிலளித்தார்.

இதுவரை வித்யை, அவித்யை பற்றி பேசிக் கொண்டிருந்த குருதேவர் பிரம்ம ஞானத்தைப் பற்றிபேசத் தொடங்கினார்.

வித்யை மற்றும் அவித்யைக்கு அப்பாற்பட்டது பிரம்மம். அது மாயையைக் கடந்தது.

இந்த உலகில் வித்யா மாயை, அவித்யா மாயை இரண்டும் இருக்கின்றன. ஞானமும் பக்தியும் இருக்கின்றன. காமமும் பணத்தாசையும் இருக்கின்றன. உண்மை உள்ளது. உண்மையற்றதும் உள்ளது. நல்லது உண்டு. தீயதும் உண்டு. ஆனால் பிரம்மம் இவற்றால் தொடப் படாதது. நல்லதும் தீயதும் உயிர்களுடன் தொடர்புடையவை. உண்மை- உண்மையற்றது எல்லாம் உயிர்களுக்கே. இவற்றால் பிரம்மத் திற்கு எதுவும் ஆவதில்லை. விளக்கின் வெளிச்சத்தில் ஒருவன் பாகவதம் படிக்கிறான். மற்றொருவன் திருட்டுக்கையெழுத்துப் போடுகிறான். ஆனால் விளக்கு இவற்றால் பாதிக்கப் படுவதில்லை. சூரியன் நல்லவனுக்கும் ஒளி தருகிறான். தீயவர்களுக்கும் ஒளி தருகிறான்.

அப்படியென்றால் துன்பம், பாவம், அமைதியின்மை இவையெல்லாம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு விடை இது தான். இவையெல்லாம் உயிர்களுக்கே, பிரம்மம் இவை எவற்றாலும் பாதிக்கப் படுவதில்லை. பாம்பில் விஷம் இருக்கிறது. பாம்பு ஒருவனைக் கடித்தால் அவன் இறந்து விடுவான். ஆனால் பாம்பிற்கு ஒன்றும் நேர்வதில்லை.

பிரம்மம் என்றால் என்ன என்பதைச்சொற்களால் விளக்க இயலாது. எல்லாப் பொருட்களும் எச்சிலாக்கப் பட்டு விட்டன. வேதம், புராணம், தந்திரம், ஆறு தரிசனங்கள் எல்லாம் எச்சிலாகி விட்டன. நாக்கால் தீண்டப் பட்டு விட்டன. வாயால் சொல்லப் பட்டுவிட்டன. அதனால் எச்சிலாகி விட்டன. ஆனால் ஒன்று மட்டும் எச்சிலாக வில்லை. அது தான் பிரம்மம். பிரம்மம் என்பது எது என்பது இன்றுவரை யாராலும் சொல்லப் படவில்லை.

வித்யாசாகர்-(நண்பர்களிடம்)

ஆஞ இது ஓர் அற்புதக் கருத்து. இன்று ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொண்டேன்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

ஒருவருக்கு இரண்டு பிள்ளைகள் பிரைம்ம வித்யை பயில்வதற்காக இருவரையும் ஆசிரியரிடம் அனுப்பினார் தந்தை. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் திரும்பி வந்தார்கள். வந்து தந்தையை வணங்கினார்கள். அவர்களுக்கு எந்த அளவிற்கு பிரம்ம ஞானம் உள்ளது என்பதை அறிய விரும்பினார் தந்தை. மூத்தவனைப் பார்த்து, மகனே!நீ எல்லாவற்றையும்படித்திருக்கிறாய் அல்லவா, பிரம்மத்தைப் பற்றி சொல்” என்றார். அவன் வேதத்திலிருந்து பல்வேறு சுலோகங்களை ஒப்பித்து பிரம்மத்தை விளக்க முயன்றான். தந்தை மௌனமாக அமர்ந்திருந்தார். இளைய மகனிடமும் அதே கேள்வியைக்கேட்டார்தந்தை. அவனோ தலை குனிந்து அமைதியாக நின்றான். அவனது வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. இதைக் கண்ட தந்தை மகிழ்ச்சியுடன் இளைய மகனிடம், மகனே! நீ தான் ஏதோ சிறிது தெரிந்து கொண்டிருக்கிறாய். பிரம்மம் எது என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது” என்றார்..

பிரம்மத்தை அறிந்து விட்டதாக மனிதர்கள் நினைக்கிறார்கள். எறும்பு ஒன்று சர்க்கரைக் குன்றிற்குச் சென்றது.ஒரே ஒரு பொடி அதன் வயிற்றை நிரப்பி விட்டது. மற்றொரு பொடியை வாயில் எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கித் திரும்பியது.போகும் போது அது தனக்குள்ளே” அடுத்த முறை வந்து சர்க்கரைக் குன்றையே தூக்கிச் செல்வேன்” என்று எண்ணிக் கொண்டது. சாதாரண மனிதர்கள் இப்படியெல்லாம் தான் நினைக்கின்றனர். பிரம்மம், வாக்கிற்கும், மனத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை அவர்கள் அறிவதில்லை. யாராக இருந்தாலும் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் பிரம்மத்தைப் பற்றி அவன் என்னதான் அறிந்து விடுவான்! சுகதேவர் போன்றோர் சற்று பெரிய எறும்புகள்- மிஞ்சிப்போனால் எட்டு பத்து பொடிகளைத் தான் கொண்டு வந்திருப்பார்கள், அவ்வளவு தான்.

ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ளதே, அது எப்படி தெரியுமா? ஒருவன் கடலைப் பார்த்து விட்டு வந்தான். அவனிடம் ஒருவன், கடல் எப்படி இருந்தது? என்று கேட்கிறான். மற்றவன் வாயை ஆவென்று திறந்து, ஆ, அதை என்னவென்று சொல்வேன்! அப்பப்பா! எவ்வளவுபெரிய அலைகள்! எப்பேர்ப்பட்ட பயங்கர ஓசை! என்று சொல்வான். பிரம்மத்தைப் பிற்றி சொல்லப் பட்டிருப்பது இப்படித்தான். அவர் ஆனந்தமயமானவர், சச்சிதானந்த வடிவினர் என்று வேதங்கள் கூறுகின்றன.

சுகர் முதலான மகா முனிவர்கள் பிரம்மமாகிய கடலின் கரையில் நின்று கொண்டு அதைப் பார்த்தார்கள். தொட்டார்கள். ஒரு சிலரின் கருத்துப் படி அவர்கள் அந்தக் கடலில் இறங்கவே இல்லை. அதில் இறங்கினால் மீண்டு வர வழியில்லை.

சமாதி நிலையில் பிரம்ம ஞானம் ஏற்படுகிறது. பிரம்ம தரிசனம் கிடைக்கிறது. அந்த நிலையில் சிந்தனை முற்றிலுமாக நின்றுவிடுகிறது. மனிதன் மௌனியாகி விடுகிறான். பிரம்மம் என்றால் என்ன என்பதை விளக்கி க் கூறும் ஆற்றல் அவனுக்கு இருப்பதில்லை.

உப்புப் பொம்மை ஒன்று கடலின் ஆழத்தை அளக்கச் சென்றது.( எல்லோரும் சிரித்தனர்) கடலின் ஆழம் எவ்வளவு என்று எல்லோருக்கும் சொல்ல அது ஆசைப் பட்டது. அதனால் சொல்ல முடியுமா? இறங்கியதும் கரைந்து விட்டதே! யார் வந்து கடலின் ஆழத்தைச் சொல்வது?

ஒரு பக்தர்-

சமாதியில் பிரம்ம ஞானத்தை அடைந்த மனிதனால் பேச முடியாதா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

சங்கராச்சாரியார் மக்களுக்கு போதிப்பதற்காக வித்யை- நான்- உணர்வை வைத்திருந்தார். பிரம்ம தரிசனம் கிடைத்தால் மனிதன் மௌனியாகி விடுகிறான். தரிசனம் பெறாத வரையில் தான் பேச்சும் ஆராய்ச்சியும் எல்லாம்.

வெண்ணெயை உருக்கும்போது, அது பக்குவமாகும் வரை உஸ் என்ற சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். உருகி நெய்யாகிய பின் ஓசை வருவதில்லை. அதில் பூரி தட்டிப்போட்டால் மீண்டும் உஸ் என்று சத்தம் எழும். பூரி பொரிந்து பக்குவமானதும் ஓசை நின்றுவிடும். அது போல் சமாதி நிலையை அடைந்தவன் பிறருக்குப் போதிப்பதற்காக கீழே இறங்கி வருகிறான், பேசுகிறான்.

தேனீ, பூவில் உட்காராத வரை ரீங்காரமிடுகிறது. பூவில் அமர்ந்து தேனைப் பருகத் தொடங்கியதும் மௌனமாகி விடுகிறது. தேனைக் குடித்த வெறியில் சில வேளைகளில் மறுபடியும் ரீங்கார மிட ஆரம்பிக்கிறது.

குடத்தைக் குளத்திற்குக் கொண்டு சென்று நீர் நிறைக்கும்போது பக்பக்கென்று சத்தம் வரும். குடம் நிறைந்தால் சத்தம் நின்றுவிடுகிறது. (எல்லோரும் சிரித்தனர்) ஆனால் அந்தக் குடத்திலிருந்து வேறு இடத்தில் தண்ணீரை ஊற்றினால் மீண்டும் சத்தம் வரும். (சிரிப்பு)

ரிஷிகள் பிரம்ம ஞானம் பெற்றிருந்தனர். உலகியல் ஆசையின் சுவடு இருந்தால் கூட இந்த பிரம்ம ஞானம் கிடைக்காது. ரிஷிகள் எவ்வளவு பாடுபட்டார்கள். அதிகாலையில் ஆசிரமத்தை விட்டுச்செல்வார்கள். தனிமையில் அமர்ந்து நாள் முழுவதும் தியானம் செய்வார்கள். சிந்திப்பார்கள். இரவில் ஆசிரமத்திற்குத் திரும்பி கொஞ்சம் பழமோ கிழங்கோ சாப்பிடுவார்கள். பார்ப்பது, கேட்பது, தொடுவது முதலான விஷயங்களிலிருந்து மனத்தை விலக்கி வைத்திருந்தார்கள். அதனால் தான் பிரம்ம உணர்வை அவர்களால் பெற முடிந்தது.

கலியுகத்தில் மனிதன் உணவை நம்பி இருக்கிறான். அதனால் உடலுணர்வு நீங்குவதில்லை. இந்த நிலையில் ஸோஹம்( நானே அவன்) என்று சொல்வது நல்லதல்ல. அவன் செய்யாத காரியம் எதுவும் இல்லை. இதில் ”நானே பிரம்மம்” என்று சொல்வது சரியல்ல.யாரால் பற்றை விட முடியவில்லையோ, என்னதான் முயன்றாலும் யாருடைய ”நான்” போகவில்லையோ அவர்களுக்கு ”நான் சேவகன்” ”நான் பக்தன்” என்ற பாவனை நல்லது. பக்தி நெறியின் மூலமும் அவரை அடையலாம்.

ஞானி, இது வல்ல, இது வல்ல” என்று பகுத்தறிந்து உலகப் பொருட்கள் மீதுள்ள பற்றை விடுகிறான். அப்போது தான் அவனால் பிரம்மத்தை அறிய முடியும். படிகள் ஒவ்வொன்றாகக் கடந்து மாடியை அடைவது போன்றது இது. ஆனால் விஞ்ஞானி அவருடன் பேசுகிறான். மேலும் சிலவற்றைக் காண்கிறான். செங்கல், சுண்ணாம்பு, காரை போன்ற எந்தப் பொருட்களால் மாடி கட்டப் பட்டிருக்கிறதோ அதே பொருட்களால் தான் படிகளும் கட்டப்பட்டிருப்பதை அவன் காண்கிறான். இது வல்ல, இது வல்ல” என்னும் வழியின் மூலம் யாரை பிரம்மம் என்று அறிந்தானோ, அவரே இந்த அண்ட சராசரங்களாகவும் உயிர்களாகவும் ஆகியிருக்கிறார். நிர்க்குணமே சகுணமாகவும் இருப்பதை விஞ்ஞானி காண்கிறான்.

மாடியிலே நீண்ட காலம் தங்க முடியாது. கீழே வந்தேயாக வேண்டும். சமாதி நிலையில் பிரம்மத்தைக் கண்டவர்களும் கீழே இறங்கி வருகிறார்கள். அதே பிரம்மம் தான் உலகமாகவும் உயிர்களாகவும் ஆகியிருப்பதைக் காண்கிறார்கள்.

ச, ரி, க, ம, ப, த, நி. நி” யில் நீண்ட நேரம் நிற்க முடியாது. நான்- உணர்வு நீங்குவதில்லை. அவரே நான், அவரே உயிர்கள். உலகம் எல்லாம் என்று அப்போது விஞ்ஞானி காண்கிறான். இது வே விஞ்ஞானம்.

ஞானியின் பாதையும் பாதை தான். ஞானமும் பக்தியும் கலந்தது பாதை தான். பக்தி நெறியும் பாதை தான். ஞான யோகமும் உண்மை, பக்தி, நெறியும் உண்மை. எல்லா பாதைகள் வழியாகவும் இறைவனை அடையலாம். அவர் எவ்வளவு காலம் நான்- உணர்வை நம்முள் வைக்கிறாரோ, அது வரை பக்தி நெறிதான் சுலபமானது.

பிரம்மம் மேருமலையைப்போல் அசைவற்றது. செயலற்றது என்று காண்கிறோன் விஞ்ஞானி. இந்த உலகம் இறைவனின் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களால் உருவாகியுள்ளது.ஆனால் அவர் இவற்றுடன் சம்பந்தப் படாதவராக இருக்கிறார்.

யார் பிரம்மமாக இருக்கிறாரோ அவரே பகவானாகவும் இருப்பதை விஞ்ஞானி காண்கிறான்.குணங்களைக் கடந்தவரான அவரே ஆறு ஐசுவரியங்கள் நிறைந்த பகவானாகவும் இருக்கிறார். உயிர்கள், உலகங்கள், மனம், புத்தி, பக்தி, வைராக்கியம், ஞானம், இவை எல்லாம் பகவானின் ஐசுவரியங்கள். (சிரித்தபடியே) வீடு, வாசல், இல்லாத பிரபு- ஒரு வேளை அவன் எல்லாவற்றையும் வீற்றிருக்கலாம். ஒரு பிரபுவா? (எல்லோரும் சிரித்தனர்) இறைவன் ஆறு ஐசுவரியங்கள் உடையவர். இவை இல்லாவிட்டால் யார் அவரை மதிப்பார்கள்?(அனைவரும் சிரித்தனர்)

இந்த உலகம் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது பாருங்கள்! என்னென்ன பொருட்கள்- சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள்! எத்தனை வகையான உயிரினங்கள்- பெரியவை, சிறியவை, நல்லவை, கெட்டவை, சிலரிடம் அதிக சக்தி, சிலரிடம் குறைந்த சக்தி.

வித்யாசாகர்-

சிலருக்கு அதிக சக்தியையும், சிலருக்கு குறைந்த சக்தியையும் கடவுள் தருகிறாரா என்ன?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

கடவுள் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறார். எறும்பு வரை எல்லா உயிரினங்களிலும் இருக்கிறார்.ஆனால் சக்தி வெளிப் பாட்டில் வித்தியாசம் உண்டு. இல்லாவிட்டால், ஒருவன் பத்துப்பேரை அடித்து வீழ்த்து கிறான். மற்றொருவன் ஒருவனைக்கண்டே ஓடுகிறான், அது எப்படி? சக்தி வெளிப் பாட்டில் வித்தியாசம் இல்லை” என்றால் உங்களை ஏன் எல்லோரும் மதிக்க வேண்டும்? உங்களுக்கு என்ன இரண்டு கொம்புகளா முளைத்திருக்கின்றன.?(சிரிப்பு) உங்களிடம் பிறரைவிட அதிக படிப்பும் கருணையும் உள்ளன. அதனால் தான் மக்கள் உங்களை மதிக்கிறார்கள். பார்க்க வருகிறார்கள், இதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா (வித்யாசாகர் புன்னகைத்தார்)

வெறும் படடிப்பினால் எந்தப் பயனும் இல்லை. புத்தகம் படிப்பது கடவுளை அடைவதற்கான வழியைத்தெரிந்து கொள்வதற்காகவும் அவரை அறிவதற்காகவும் தான். ஒரு சாது புத்தகம் ஒன்று வைத்திருந்தார். அதில் என்ன இருக்கிறது என்று கேட்ட போது புத்தகத்தைத் திறந்து காட்டினார். பக்கம் பக்கமாக அதில் ஓம் ராம், ஓம் ராம் என்று மட்டுமே எழுதப் பட்டிருந்தது, வேறு எதுவும் இல்லை!

கீதையின் சாரம் என்ன? பத்து முறை சொன்னால் என்ன வருமோ அது தான். கீதா, கீதா என்று பத்து தடவை சொன்னால் தாகீ, தாகீ( அதாவது த்யாகீ , த்யாகீ) என்று வரும். அது தான் கீதையின் போதனை- ஏ மனிதா, எல்லா வற்றையும், தியாகம் செய்து விட்டு, கடவுளை அடையமுயற்சி செய்,துறவியானாலும் சரி, இல்லறத்தானாக இருந்தாலும் சரி, மனத்திலிருந்து எல்லா பற்றுகளையும் உதற வேண்டும்.

சைதன்யதேவர் தென் னாட்டிற்கு யாத்திரை சென்றிருந்த போது ஒரு நாள் ஒருவன் கீதை படித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். சற்று தூரத்தில் மற்றொருவன் கீதையைக்கேட்ட படி தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தான், கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது. சைதன்யர் அவனது அருகே சென்று, இதெல்லாம் உனக்குப் புரிகிறதா? என்று கேட்டார். அதற்கு அவன், சுவாமி, இந்த சுலோகம் அது இது என்பதெல்லாம் எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை” என்றான். பின் ஏன் அழுகிறாய்? என்று கேட்டார் சைதன்யர். அதற்கு அவர், அர்ஜுனனின் தேர் தெரிகிறது . அதன் முன்னால் ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜுனனும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டு அழுகிறேன்” என்று கூறினான்.

விஞ்ஞானி ஏன் பக்தி நெறியைப் பின் பற்றுகிறாள்? இதற்குவிடை,நான் –உணர்வு போகாததால் என்பது தான்.சமாதி நிலையில் அது போய்விடும் என்பது உண்மை, ஆனால் மறுபடியும் வந்து விடுகிறது. சாதாரண மக்களுக்கோ நான் என்பது போவதே இல்லை, அரச மரத்தை வெட்டி எறியுங்கள். மறுநாளே அது முளைவிட்டிருக்கும்.

ஞானம் பெற்ற பிறகு கூட, இந்த நான் எங்கிருந்தோ வந்து தொலைக்கிறது. கனவில் புலியைக் கண்டான். பிறகு விழித்தான். விழித்த பின்னும் இதயம் படபட வென்று அடித்துக்கொண்டிருக்கிறது. இந்த நான் காரணமாகத்தான் எத்தனை துயரங்கள்! மாடு ஹம்பா ஹம்பா(நான்) என்று கத்துகிறது. அதனால் தானே அத்தனை துன்பங்களுக்கு உள்ளாகிறது. ஏரில் பூட்டப்படுகிறது. மழையிலும் வெயிலிலும் வேலை செய்கிறது. கிழடானதும் கசாப்புக் கடைக்கு அனுப்பப் படுகிறது. அதன் தோலிலிருந்து செருப்புகள் செய்யப் படுகின்றன. மேளங்கள், செய்யப் படுகின்றன. அப்போது அடி அடியென்று அடி வாங்குகிறது. இதிலிருந்து அதன் துன்பங்கள் ஓய்ந்தனவா என்றால் இல்லை, அதன் நரம்பிலிருந்து நாண் செய்யப் படுகிறது. அந்த நாணிலிருந்து பஞ்சடிக்கின்ற வில தயாராகிறது. பஞ்சடிக்கும்போது நான் என்று சத்தம் எழுவதில்லை.துஹு, துஹு( நீ, நீ) என்று சத்தம் வருகிறது. நீ, நீ என்று சொல்கின்ற நிலைக்கு வந்த பிறகு தான் விடுதலை. ஹே பிரபு! நான் அடிமை, நீ எஜமான். நான் பிள்ளை , நான் அன்னை.

ஒரு சமயம் ராமர் அனுமரிடம் நீ என்னை எப்படிக் கருதுகிறாய்? என்று கேட்டார். அதற்கு அனுமான் பிரபோ, நான் உணர்விருக்கும்போது நீ பூரணன், நான் அம்சம், நீ எஜமான் நான் சேவகன், என்று காண்கிறேன். உண்மை ஞானம் வரும்போது நீ யே, நான், நானே நீ என்று காண்கிறேன்.” என்று கூறினார்.

எஜமான் சேவகன் பாவனையே நல்லது. இந்த நான்” என்பது போவதாக இல்லை, எனவே அந்தப்போக்கிரி அடிமை. நான் என்று இருக்கட்டுமே.

நான்- எனது , இவை இரண்டும் அஞ்ஞானம். என் வீடு, என் செல்வம், என் படிப்பு, இவையெல்லாம் என் சொத்து- இத்தகைய மனப்போக்கு அஞ்ஞானத்திலிருந்து வருகிறது. பகவானே! நீயே இந்த உலகத்தைப் படைத்தவன்! வீடு, வாசல், மனைவி, மக்கள், வேலையாட்கள், நண்பர்கள் சகலமும் உன்னுடையவை- இந்த மனப்போக்கு ஞானத்திலிருந்து பிறக்கிறது.

மரணத்தைப் பற்றி சிந்தித்து வரவேண்டும். மரணத்திற்குப் பிறகு எதுவும் இருக்காது. வேலையின் காரணமாக மக்கள் கிராமங்களிலிருந்து கல்கத்தாவிற்கு வருவது போல், நாமும் சில கடமைகளைச் செய்வதற்காக வந்திருக்கிறோம். பணக்காரனுக்குத்தோட்டம் உள்ளது. யாராவது அதைப் பார்க்க வந்தால் தோட்டக்காரன் அவர்களிடம், இது எங்கள் தோட்டம்” இது எங்கள் குளம்” என்றெல்லாம் சொல்கிறான். ஏதோ தவறுக்காக அந்த தோட்டக்காரன் வேலையிலிருந்து நீக்கப் பட நேர்ந்தால் ஒரு தகர டப்பாவைக்கூட எடுத்துச்செல்ல முடியாது. காவலாளியின் துணையுடன் ரகசியமாக எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.(அனைவரும் சிரித்தனர்)

கடவுள் இரண்டு தருணங்களில் சிரிக்கிறார். நோயாளியின் தாயிடம் வைத்தியன், அம்மா! பயம் எதற்கு?நாங்கள் மகனைக்குணப்படுத்தி விடுகிறேன்” என்று கூறும் போது கடவுள் சிரிக்கிறார் எப்படி? என்ன இது? இவனது உயிரை நான் கொண்டுப்போகப்போகிறேன். இந்த வைத்தியனோ பிழைக்கவைத்து விடுவேன் என்கிறானே! என்று கூறிச் சிரிக்கிறார். அனைத்தையும் நடத்துபவர்! அந்த இறைவன் என்பதை மறந்து தன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்று வைத்தியன் நினைத்துக்கொள்கிறான். மேலும், இரண்டு சகோதரர்கள் கயிறு பிடித்து நிலத்தைப்பிரித்து, இந்தப் பக்கம் என்னுடையது, அந்த ப் பக்கம் உன்னுடையது” என்று கூறும்போது கடவுள் சிரிக்கிறார். இந்த அண்டசராசரமே என்னுடையது. ஆனால் இவர்களோ, இந்தப் பக்கம் என்னுடையது. இந்தப் பக்கம் என்னுடையது, அந்தப் பக்கம் உன்னுடையது” என்கிறார்கள் என்று எண்ணி சிரித்துக் கொள்கிறார்.

இறைவனைப் பகுத்தறிவினால் அறிய முடியுமா என்ன? அவருக்கு அடிமையாகி, அவரிடம் சரணாகதி அடைந்து அவரைக் கூப்பிடு.( சிரித்தபடி வித்யாசாகரிடம்) உங்கள் பாவனை என்ன?

வித்யாசாகர்-

தனிமையாக ஒருநாள் அதை உங்களுக்குச் சொல்கிறேன்.( எல்லோரும் சிரித்தனர்)

ஸ்ரீராமகிருஷ்ணர் (சிரித்துக் கொண்டு)-

கல்வி கேள்விகளினால் பகுத்தறிந்து இறைவனை அடைய முடியாது.

நம்பிக்கையும் பக்தியும் வேண்டும். நம்பிக்கை எந்த அளவுக்கு ஆற்றல் மிக்கது என்பதைக் கூறுகிறேன் கேளுங்கள். ஒருவனுக்கு இலங்ககையிலிருந்துக் கடலைக் கடக்க வேண்டியிருந்தது. அவனிடம், விபீஷணர், இதோ பார், இந்தப் பொருளை உன் ஆடை நுனியில் முடிந்து வைத்துக்கொள். கடலைப் பத்திரமாகத் தாண்டி விடுவாய், கடலின் மீது உன்னால் நடந்தே செல்ல முடியும். ஆனால் அதைப் பிரித்துப் பார்க்காதே. பார்த்தால் அந்தக் கணமே கடலில் மூழ்கி விடுவாய்” என்றார். அந்த மனிதனும் கடல் மீது நன்றாக நடக்கத் தொடங்கினான். நம்பிக்கை அவ்வளவு ஆற்றல். கொஞ்ச தூரம் சென்றபோது அவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. விபீஷ்ணர் அப்படி என்ன பொருள் கொடுத்திருக்கிறார்? இதைக்கொண்டு நீரின் மீது இவ்வளவு எளிதாக நடக்க முடிகிறதே!உடனே முடிச்சை அவிழ்த்துப் பார்த்தான். அங்கே ராம் என்று எழுதிய ஓர் ஓலை இருந்தது. அதைக் கண்டதும், ஓ! இவ்வளவு தானா என்று நினைத்தான். அவ்வளவு தான், உடனே கடலில் மூழ்கி விட்டான்!

அனுமனுக்கு ராம நாமத்தில் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் வலிமையால் தான் கடலையே அவர் தாண்டினார். ஆனால் ராமனுக்கோ பாலம் கட்டித்தான் கடக்க வேண்டியிருந்தது என்று சொல்லப் படுகிறது.

இறைவனிடம் நம்பிக்கை இருந்தால் பாவம் செய்தாலும் மகா பாதகம் செய்தாலும் எதற்கும் பயப்படத்தேவையில்லை.

இப்படிக் கூறிவிட்டு, குருதேவர் ஒரு பக்தனின் மன நிலையை ஏற்றுக்கொண்டு, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தவராக நம்பிக்கையின் மகிமைபற்றி பாடலானார்.

பாடிக்கொண்டிருக்கும் போதே குருதேவர் சமாதி யில் ஆழ்ந்தார்! கூப்பிய கரங்கள், நிமிர்ந்த நிலையில் அசையாத உடல், இமைக்காத கண்கள், கால்களைத் தொங்க விட்டுக்கொண்டு மேற்கு திசையைப் பார்த்தபடி பெஞ்சின் மீது அமர்ந்திருந்தார். எல்லோரும் மிகுந்த வியப்போடு அந்த அற்புதக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். வித்யாசாகரும் பேச்சற்று, இமைகொட்டாமல் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

குருதேவர் சாதாரண நிலைக்குத் திரும்பினார். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுச் சிரித்துக் கொண்டே மறுபடியும் பேச ஆரம்பித்தார்.

பரவச பக்தி என்றால் இறைவனை நேசிப்பது என்பது பொருள். யார் பிரம்மமோ அவரையே தேவி என்று அழைக்கிறோம்.

ராமபிரசாதர் மனத்திடம் சொல்கிறார்- சூசகங்கள் கொண்டே அவனை நீ யாரென்றுணர்ந்திடவாய்- வேதத்தில் யார் பிரம்மம் என்று கூறப்படுகிறதோ, அவரையே தாம் தேவி என்று அழைப்பதைப் புரிந்து கொள்ளுமாறு கூறுகிறார். நிர்குணமானவரே சகுணமாகவும் உள்ளார். யார் பிரம்மமோ அவரே சக்தி. செயலற்றதாகத் தோன்றும்போது அவரை பிரம்மம் என்கிறோம். படைத்து , காத்து, அழிக்கும் செயல்களைப்புரிவதாகத்தோன்றும் போது ஆத்யா சக்தி என்கிறோம், காளி என்கிறோம்.

நெருப்பும் அதன் சூடும்போல் பிரம்மமும் சக்தியும் வேறல்ல. நெருப்பு என்றவுடன் சூட்டைப் புரிந்து கொள்கிறோம். சூடு என்றால் நெருப்பை நினைத்துக்கொள்கிறோம். ஒன்றை ஒப்புக் கொண்டால் மற்றொன்றையும் ஒப்புக் கொண்டதாகி விடுகிறது.

பிரம்மத்தையே அன்னை என்று அழைக்கிறோம். அன்னை ஆழ்ந்த அன்பிற்கு உகந்தவள் அல்லவாஞ இறைவனை நேசிக்க முடியுமானால் அவரை அடைய முடியும். பாவனை, பக்தி, அன்பு, நம்பிக்கை.

மனம் இறைவனில் லயித்து விட வேண்டும். அவரை ஆழ்ந்து நேசிக்க வேண்டும். அவர் அமுதக் கடல்” அல்லவா.! அதில் மூழ்கினால் மனிதன் இறப்பதில்லை, சாகா நிலையை அடைகிறான். இறைவனை அதிகமாக நினைத்தால் மூளை குழம்பிவிடும் என்று சிலர் நினைக்கின்றனர். அது உண்மையல்ல. ஏனென்றால் அவர் அமுதக் கடல்” வேதம் அவரை ”அமுதம்” என்று பாடுகிறது. அதில் மூழ்கினால் மரணம் இல்லை, மரணமிலா பெருநிலை கிடைக்கிறது.

பூஜை, ஹோமம், யாகம், யஜ்ஞம் எதிலும் பயனில்லை. இறைவனிடம் பக்தி ஏற்பட்டாலோ இத்தகைய கிரியைகளுக்கு அவ்வளவு தேவையும் இல்லை. காற்றில்லாத போது விசிறி தேவை. தென்றல் வீசத் தொடங்கியதும் விசிறியை வைத்து விடுகிறோம். அதன் பிறகு விசிறிக்கு என்ன வேலை?

(வித்யாசாகரிடம்) நீங்கள் செய்பவை எல்லாம் நல்ல காரியங்கள். ”நான் செய்கிறேன்” என்ற அகங்காரத்தை விட்டு விட்டு பற்றின்றி ச் செய்ய முடியுமானால் மிகவும் நல்லது.

பற்றின்றிப் பணி செய்யுந்தோறும் இறைவனிடம் பக்தியும் அன்பும் உண்டாகிறது. இத்தகைய பணி செய்வதன்மூலம் இறையனுபூதி வாய்க்கிறது.

ஆனால் இறைவனிடம் பக்தியும் அன்பும் வளர்கின்ற அளவிற்கு உங்கள் கடமைகள் குறையும். மருமகள் கருவுற்றால் மாமியார் அவளுடைய வேலைகளைக் குறைக்கிறாள். மாதங்கள் செல்லச்செல்ல வேலைகளைக் குறைத்துக் கொண்டே போகிறாள். பத்தாவது மாதம் ஆகிவிட்டால் அவளுக்கு எந்த வேலையும் கொடுக்க மாட்டாள். குழந்தைக்கு ஏதாவது கெடுதல் விளைந்து விடக் கூடாதே, பிள்ளைப்பேற்றின் போது தொல்லைகள் ஏற்படக்கூடாதே என்று தான்.(சிரிப்பு)

நீங்கள் செய்யும் பணிகளால் உங்களுக்கு நன்மை உண்டாகிறது. பற்றின்றி ப் பணி செய்வதால் மனம் தூய்மையாகிறது. உங்களுக்கு இறைவனிடம் அன்பு பிறக்கிறது. அன்பு ஏற்பட்டால் அவரைக்காண முடியும்.

மனிதர்களால் உலகிற்கு உதவ முடியாது. அவரே உதவுகிறார். சந்திர சூரியர்களைப் படைத்தவர் யாரோ, மேலோரின் உள்ளத்தில் கருணையை வைத்தவர் யாரோ, தாய் தந்தையர் உள்ளத்தில் பாசத்தை வைத்தவர் யாரோ, சாதுக்கள் மற்றும் பக்தர்களின் மனத்தில் பக்தியை வைத்தவர் யாரோ அவரே செய்கிறார். ஆசைகள் இன்றி யார் வேலை செய்கிறானோ, அவன் தனக்கே நன்மை செய்கிறான்.

உள்ளே பொன் உள்ளது, அது இன்னும் உங்களுக்குத் தெரியவில்லை. மண்ணால் சிறிது மூடப் பட்டிருக்கிறது. ஒரு முறை தெரிந்து விட்டால் எல்லா வேலைகளும் குறைந்து விடும். மருமகளுக்குக் குழந்தை பிறந்து விட்டால், குழந்தையைப் பார்த்துக் கொள்வதும், அதைக்கொஞ்சுவதும் குலவுவதும் தான் அவளுடைய வேலை. வீட்டு வேலை எதையும் மாமியார் அவளுக்குக்கொடுப்பதில்லை. (எல்லோரும் சிரித்தனர்)

இன்னும் முன்னேறிச்செல்லுங்கள். ஒரு விறகு வெட்டி விறகு வெட்டிக் கொண்டு வர காட்டிற்குச்சென்றான். பிரம்மச்சாரி ஒருவர் அவனிடம், முன்னேறிச்செல்” என்று கூறினார்.முன்னேறிச்சென்ற அவனுக்குச் சந்தன மரம் கிடைத்தது. சில நாட்கள் கழிந்தன. முன்னேறிச் செல்லுமாறு தானே கூறினார். சந்தனமரத்துடன் நின்று விடச் சொல்ல வில்லையே” என்று நினைத்த விறகு வெட்டி மேலும் முன்னேறிச்சென்று பார்த்தான். வெள்ளிச் சுரங்கத்தைக் கண்டான். சில நாட்கள் கழித்து மேலும் முன்னால் சென்று பார்த்தான். தங்கச் சுரங்கத்தைக் கண்டான். அதற்குப்பிறகு வைரம், மாணிக்கம், எல்லாம் கிடைத்தன. அவன் பெரிய பணக்காரனாக ஆகி விட்டான்.

பற்றின்றி வேலை செய்தால் இறைவனிடம் அன்பு ஏற்படும். படிப்படியாக அவரது அருளால் அவரது காட்சியையும் பெறலாம். இறைவனைக் காண முடியும்! அவருடன் பேச முடியும். நான் இப்போது எப்படி உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேனோ அது போல் அவருடன் பேச முடியும்?( திகைப்புடன் அனைவரும் மௌனமாக இருந்தனர்)

எந்தப்பேச்சுமின்றி ஆடாமல் அசையாமல் அனைவரும் இந்த அமுதமொழிகளைக்கேட்டுக் கொண்டிருந்தனர். கலைமகளே குருதேவரின் நாவில் தோன்றி, வித்யாசாகரை முன் வைத்து, உலக மக்களின் நன்மைக்காகப்பேசிக் கொண்டிருப்பது போல் தோன்றியது.

இரவாகி விட்டு. ஒன்பது மணி. குருதேவர் இன்னும் சிறிது நேரத்தில் விடை பெறுவதாக இருந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

(சிரித்தவாறே வித்யாசாகரிடம்)-

நான் எதையும் சொல்லியிருக்கத்தேவையில்லை. நான் கூறியவை யெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவை தான், ஆனால் உங்கள் நினைவில் இல்லை. (எல்லோரும் சிரித்தனர்) வருண தேவனின் கருவூலத்தில் எவ்வளவோ ரத்தினங்கள் உள்ளன, ஆனால் வருணனுக்கு நினைவில்லை.

வித்யாசாகர்-(சிரித்துக்கொண்டே)

நீங்கள் வேண்டுமானால் அப்படிக் கூறலாம்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-(சிரித்துக் கொண்டே)- நீங்கள் வேண்டு மானால் அப்படிக் கூறலாம்.

ஸ்ரீராமகிருஷ்ணர்(சிரித்துக்கொண்டே)-ஆமாம், பல பணக்காரர்களுக்குத் தங்கள் வேலைக்காரர்களின் பெயர் கூடத் தெரிவதில்லை. (எல்லோரும் சிரித்தனர்) வீட்டில் எங்கே என்ன விலையுயர்ந்த பொருட்கள் இருக்கின்றன என்பதும் அவர்களுக்குத் தெரியாது.

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகளைக்கேட்டுக்கொண்டிருந்த எல்லோரும் மகிழ்ந்தனர். அனைவரும் மௌனமாக இருந்தனர். குருதேவர் மறுபடியும் வித்யாசாகரிடம் பேசத் தொடங்கினார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-( சிரித்துக் கொண்டே)-

ஒரு முறை தோட்டத்தைப் பார்ப்பதற்கு வாருங்களேன். ராசமணியின் தோட்டம் மிகஅழகான இடம்.

வித்யாசாகர்- நிச்சயமாக வருகிறேன். நீங்கள் வந்திருக்கிறீர்கள், நான் வராமல் இருப்பேனா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

என்னைக் காணவா, ச? சீ, சீ!

வித்யாசாகர்-

என்ன, ஏன் அப்படி சொல்கிறீர்கள்?எனக்குப் புரிய வையுங்கள்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

(சிரித்துக்கொண்டே)

நாங்கள் சின்னஞ்சிறு படகுகள். (எல்லோரும் சிரித்தனர்) ஓடையிலும் ஆற்றிலும் செல்லலாம். பெரிய நதியிலும் செல்லலாம். ஆனால் நீங்களோ கப்பல். வந்து சேற்றில் மாட்டிக்கொண்டால்.............

எல்லோரும் சிரித்தனர். குருதேவரும் சிரித்தனர். வித்யாசாகர் சிரித்த முகத்தோடு மௌனமாக இருந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-(சிரித்தபடி)

ஆனால் இப்போது கப்பல்களும் வர முடியும்.

வித்யாசாகர்( சிரித்துக் கொண்டே)-

ஆமாம், ஆமாம். இது மழைக்காலம் அல்லவா! (எல்லோரும் சிரித்தனர்)

ம- (தனக்குள்)- ஆம், புதியதோர் அன்பு மழை. புதிய காதலின்போது மானம், அவமானம் எதுவும் இருக்காது தானே!

குருதேவர் பக்தர்களுடன் புறப்படலானார். வித்யாசாகர் தம் சுற்றத்தாருடன் எழுந்து நின்றார். அவர்கள் அவரை வண்டியில் அனுப்பி வைப்பார்கள்.

ஸ்ரீராமகிருஷ்ணர் இன்னும் எதற்காக நின்று கொண்டிருக்கிறார்? மூல மந்திரத்தை ஜபிக்கிறார். ஜபித்தவாறே பரவச நிலையை அடைந்து விட்டார்.

நிபந்தனையின்றி அருள் வழங்கும் கருணைக் கடல் அவர்! புறப்படு முன், சான்றோரான வித்யாசாகரின் ஆன்மீக மேன்மைக்காக தேவியிடம் பிரார்த்தனை செய்கிறார் போலும்!

ஒரு பக்தரின் கையைப் பிடித்துக்கொண்டு குருதேவர் படிக்கட்டு வழியாக இறங்க ஆரம்பித்தார். வித்யாசாகர் கையில் விளக்கேந்தி உறவினர் மற்றும் நண்பர்களுடன் வழி காட்டிக்கொண்டு முன்னே சென்றார்.

தேய்பிறை ஆறாம் நாள். இன்னும் நிலவு உதிக்க வில்லை. இருள் சூழ்ந்திருந்த தோட்டத்தின் வழியாக, விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் எல்லோரும் வாசலை நோக்கி நடந்து சென்றனர்.

ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்களுடன் வாசலை அடைந்தார். அங்கே ஓர் அழகான காட்சியைக் கண்டு அனைவரும் அப்படியே நின்றனர். முப்பத்தாறு முப்பத்தேழு வயது மதிக்கத் தக்க ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்தார். வங்க நாட்டு உடை தரித்திருந்தார், தாடி வைத்திருந்தார். சீக்கியரைப்போன்ற தலைப் பாகை, சட்டை முதலியவற்றை அணிந்திருந்தார். காலுறையும் அணிந்திருந்தார். மேல் துண்டு எதுவும் இல்லை. குருதேவரைக் கண்டவுடன் அவரது திருவடிகளில் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினார். அவர் எழுந்ததும் குருதேவர் அவரிடம், ஓ பலராம்! நீங்களா, இந்த இரவில்? என்று கேட்டார்.

பலராம் (சிரித்துக்கொண்டே)- நான் வந்து நீண்ட நேரமாகிவிட்டது. இங்கேயே நின்று கொண்டிருந்தேன்.

ஸ்ரீராமகிருஷ்ணர்- ஏன் உள்ளே வர வில்லை?

பலராம்-

எல்லோரும் உங்கள் பேச்சைக்கேட்டுக் கொண்டிருந்தார்கள். நடுவிலே வந்து இடையூறு செய்வதா? (இவ்வாறு கூறிவிட்டு பலராம் சிரித்தார்)

குருதேவர் பக்தர்களுடன் வண்டியில் ஏறிக் கொண்டார்.

வித்யாசாகர்- (ம- விடம் தாழ்ந்த குரலில் ) வாடகை கொடுக்கட்டுமா?

ம- வேண்டாம், ஏற்கனேவே கொடுத்தாகி விட்டது.

வித்யாசாகரும் பிறரும் குருதேவரை வணங்கினர். வண்டி தட்சிணேசுவரக்காளி கோயிலை நோக்கிச்செல்ல ஆரம்பித்தது. வண்டி செல்வதைப் பார்த்தபடி அனைவரும் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார்கள். இந்த மகாபுருஷர் யார்? இறைவனை இவ்வளவு நேசிக்கிறார்! பக்தர்களுடைய வீடு தேடிச்செல்கிறார்! இறைவனை நேசிப்பது தான் வாழ்க்கையின் நோக்கம் என்று கூறுகிறார். இந்த மகா புருஷர் யார்? என்று நினைத்துக் கொண்டிருந்தார்களோ?

   பாகம்- 8

ஞாயிறு, ஆகஸ்ட் 13, 1882

................

அமாவாசை, மாலை ஐந்து மணி . குருதேவர் தட்சிணேசுவரக் காளி கோயிலில் தமது அறையில் கேதார் முதலிய பக்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

கேதார் சட்டர்ஜி ஹாலிசகரில் வசித்து வந்தார். அரசாங்க அலுவலகம் ஒன்றில் கணக்கராக வேலை பார்த்து வந்தார். பல காலம் டாக்காவில் இருந்தார். அந்த நாட்களில் விஜய கிருஷ்ண கோசுவாமி அவருடன் குருதேவரைப்பற்றி பேசுவது வழக்கம். இறைவனின் மகிமைப் பற்றிக்கேட்டால் போதும், அவருடைய கண்களில் கண்ணீர்பெருகும். ஒரு காலத்தில் பிரம்ம சமாஜத்தின் உறுப்பினராக இருந்தவர் அவர்.

குருதேவர் தமது அறையின் தெற்கு வராந்தாவில் பக்தர்களுடன் அமர்ந்திருந்தார். ராம், மன மோகன், சுரேந்திரர், ராக்கால், பவநாத், ம- என்று பலரும் அங்கே இருந்தனர். கேதார் அன்று விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். சங்கீர்த்தனமும் நடைபெறும். அதற்காக ஒரு பாடகரை ராம் அழைத்து வந்தார். நாள் முழுவதும் ஆனந்த மழை தான்.

சங்கீர்த்தன வேளையில் குருதேவர் அறையில் உள்ள சிறிய கட்டிலின் மீது சமாதியில் ஆழ்ந்தவராக அமர்ந்திருந்தார். ம-வும் மற்ற பக்தர்களும் கீழே அமர்ந்திருந்தனர்.

குருதேவர் சமாதி நிலை பற்றி பேசத் தொடங்கினார்.

சச்சிதானந்தத்தை அடைந்தால் சமாதி நிலை வாய்க்கிறது. அந்த நிலையில் கடமைகள் கழன்று விடுகின்றன.

நான் பாடகரின் பெயரைச் சொல்லி கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். அந்த வேளையில் அவரே வந்து விட்டார். அதன் பிறகும் அவரது பெயரைச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

தேனீ, எதுவரை ரீங்காரம் செய்து கொண்டிருக்கும்? பூவின் மீது அமரும் வரை. ஆனால் சாதகர்கள் கடமைகளை விடக் கூடாது. பூஜை, தியானம், சந்தியா வந்தனம், கவசம், திர்த்த யாத்திரை எல்லாவற்றையும் செய்தேயாக வேண்டும்.

இறைக்காட்சி பெற்ற பிறகம் யாராவது ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்களானால் , அவர்கள் தேன் குடித்துக்கொண்டிருக்கும் போதே மெல்ல ரீங்காரம் செய்கின்ற தேனீக்களைப்போன்றவர்கள்.

பாடகர் நன்றாகப் பாடினார். அதில் மகிழ்ந்த குருதேவர் அவரிடம், ஒருவரிடம் எதிலாவது விசேஷத் திறமை இருந்தால்- சங்கீதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்- அதில் சிறப்பாக தேர்ச்சி பெற்றிருந்தால், அவரிடம் கடவுளின் சக்தி தனிச் சிறப்புடன் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றார்.

பாடகர்-சுவாமி, எந்த வழியில் இறைவனைப்பெறலாம்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

பக்தி தான் சாரம். இறைவன் எல்லா உயிர்களிலும் உள்ளார் என்பது நிச்சயம். இதில் பக்தன் என்று யாரைச்சொல்வது? யாருடைய மனம் எப்போதும் இறைவனில் இருக்கிறதோ அவனே பக்தன். ஆணவமும் தற்பெருமையும் இருந்தால் அது சாத்தியமில்லை. ஆணவம் என்னும் குன்றின் மீது கடவுளுடைய கருணை எனப்படும் மழை நீர் தங்காது. வழிந்து கீழே ஓடி விடும்.நான் ஒரு கருவி.

கேதார் முதலிய பக்தர்களைப் பார்த்து) எல்லா நெறிகளின் மூலமாகவும் கடவுளை அடைய முடியும். எல்லா மதங்களும் உண்மை. மாடியை அடைவது தான் முக்கியம். சரியான படிகள் வழியாக ஏறி நீ அதை அடையலாம். மரப்படிகள் வழியாக அடையலாம். மூங்கிற்படிகள் வழியாக, இன்னும் மூங்கிலை ஊன்றித் தாவியும் அடையலாம்.

பிற மதங்களில் பல தவறுகளும் மூட நம்பிக்கைகளும் இருப்பதாக நீங்கள் சொல்லலாம். இருந்தால் என்ன? இருக்கட்டுமே என்பேன் நான். எல்லா மதங்களிலும் தவறுகள் இருக்கத் தான் செய்கின்றன. தங்கள் கடிகாரம் மட்டுமே சரியான நேரத்தைக் காட்டுவதாக ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். மன ஏக்கம் இருந்தால் போதும், இறைவனிடம் அன்பு, அவரிடம் ஈர்ப்பு இருந்தாலே போதும். நம்முள் இருந்து கொண்டு நம்மை வழி நடத்துபவர் அவர். நமது மனத்தின் ஏக்கமும் துடிப்பும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

ஒருவனுக்குப் பல பிள்ளைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம், மூத்த பிள்ளைகள் அவனை அப்பா என்று திருத்தமாகக் கூப்பிடுகிறார்கள். ஆனால் பச்சிளம் குழந்தையோ பா என்று அரைகுறையாகத்தான் அழைக்கும். அதற்காக குழந்தையிடம் தந்தை கோபம் கொள்வானா? அந்தக் குழந்தையும் தன்னைத் தானே் அழைக்கிறது. அதனால் சரியாக உச்சரிக்க முடியவில்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். தந்தைக்கு எல்லா குழந்தைகளும் சமம். பக்தர்கள் பல்வேறு பெயர்களில் பரம்பொருளையே அழைக்கிறார்கள். ஒருவரையே அழைக்கிறார்கள். ஒரு குளத்தில் நான்கு படித்துறைகள். இந்துக்கள் ஒரு துறையில் இறங்கி நீரைப் பருகி விட்டு அதைத் தண்ணீர் என்கின்றனர். முஸ்லீம்கள் இன்னொரு படித்துறையில் நீரைப் பருகிவிட்டு பானி என்கின்றனர்.ஆங்கிலேயர்களோ அடுத்த படித்துறையில் வாட்டர் என்கிறார்கள். மற்றொரு படித்துறையில் இருப்பவன் அக்வா என்கிறான். இறைவன் ஒருவர். அவரது பெயர்கள் பல.



Site Content

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

   பாகம்- 9

வியாழன், ஆகஸ்ட் 24, 1882

-

தட்சிணேசுவரக் காளி கோயில். தமது அறைக்கு வட கிழக்கில் உள்ள நீண்ட வராந்தாவில் நின்று கொண்டு குருதேவர் ஹாஸ்ராவுடன் பேசிக் கொண்டிருந்தார்.ம- வந்து அவரது தாமரைத் திருப் பாதங்களை வணங்கினார். சில நாட்களாக ராம்லால், ஹாஸ்ரா, ராக்கால் முதலியோர் குருதேவருடன் தங்கியிருந்தனர். ராம்லால் குருதேவரின் அண்ணன் மகன், காளி கோயிலில் பூஜை செய்கிறார்.

குருதேவர் மலர்ந்த முகத்துடன் ம-விடம் கூறினார். இன்னும் ஓரிரு முறை வித்யாசாகரைச் சந்திக்க வேண்டும். ஓலியன் படம் வரையும்போது முதலில் கோடுகளை மிகுந்த கவனத்தோடு வரைந்து கொள்கிறான். பிறகு நிதானமாக வண்ணம் தீட்டுகிறான். அது போல், சிலைகள் செய்பவர்கள் முதலில் களி மண்ணில் மொட்டையாக உருவம் செய்து கொள்வார்கள். பிறகு நுணுக்க வேலைகள், பிறகு சுண்ணாம்பு அடிப்பார்கள். இறுதியாக வண்ணம் பூசுதல், இவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக செய்யப்பட வேண்டும்.

வித்யாசாகருக்கு எல்லாம் தயாராக உள்ளது. ஆனால் மூடிக் கிடக்கிறது. அவ்வளவு தான்எவ்வளவோ நற்பணிகளைச் செய்கிறார். ஆனால் தன்னுள் என்ன உள்ளது என்பதை அவர் அறியவில்லை. உள்ளே தங்கம் மறைந்திருக்கிறது. உள்ளே இறைவன் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தால் பணிகளை எல்லாம் விட்டு விட்டு, உள்ளம் உருகிக் கடவுளை அழைக்க ஆசைப் படுவார்.

சிறிதுநேரம் நின்று கொண்டும், சிறிது நேரம் நடந்து கொண்டும் குருதேவர் ம-விடம் பேசிக் கொண்டிருந்தார்.

ம- எப்போதும் சாதனைகள் செய்ய வேண்டுமா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இல்லை, ஆனால் ஆரம்பக் காலத்தில் சற்று முட்டி மோதித் தான் தீரவேண்டும். பிறகு அவ்வளவு கஷ்டப்பட வேண்டாம். படகு அலைகள், புயல், சுழற்காற்று போன்றவற்றை எதிர் கொள்ள நேரிடும் போது, வளைவுகளில் செல்ல நேரும்போது படகோட்டி எழுந்து நின்று துடுப்பைக் கவனமாகப் பிடிக்க வேண்டும். இவற்றைக் கடந்து விட்டால் பிறகு அத்தனை சிரமப் படவேண்டாம். வளைவைக் கடந்தாகி விட்டது. சாதகமான காற்று வீசுகிறது என்று கண்டால் படகோட்டி ஓய்வாக உட்கார்ந்து கொள்கிறான்.துடுப்பில் பெயருக்குக் கை வைத்திருப்பான். பிறகு பாய் மரத்தை விரிப்பதற்கு ஏற்பாடு செய்கிறான். சாவகாச மாக உட்கார்ந்து புகை பிடிக்க ஆரம்பிக்கிறான்.காமினீ- காஞ்சனம் என்னும் அலைகளையும் புயல்களையும் சமாளித்து விட்டால் நிம்மதி.

சிலரிடம் யோகிக்குரிய அடையாளங்களைக் காணலாம். ஆனால் அவர்களும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காமினீ- காஞ்சனம் தான் யோகத்திற்குத் தடை. சிலர் யோகத்திலிருந்து நழுவி, வாழ்க்கைச் சுழலில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்- ஒரு வேளை இன்ப நுகர்ச்சியில் நாட்டம் சிறிது இருக்கலாம். அதை அனுபவித்து முடித்ததும் மீண்டும் இறைவனை நாடுவார்கள். மீண்டும் அந்த யோக நிலையை அடைவார்கள்.

விசைத் தூண்டிலைப் பார்த்திருக்கிறாயா?

ம- இல்லை சுவாமி, பார்த்ததில்லை.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

கிராமப் புறங்களில் அதைக் காணலாம். ஒரு மூங்கிலை பூமியில் நடுவார்கள். அதை வளைத்து முனையில் தூண்டிலோடு கூடிய கயிற்றைக் கட்டுவார்கள். தூண்டிலில் இரை இருக்கும். மீன் இரையைக்கௌவினால் மூங்கில் நிமிர்ந்து விடும்.

தராசில் ஒரு தட்டில் எடை கூடினால் கீழ் முள்ளும் மேல் முள்ளும் ஒரே கோட்டில் நிற்காது. கீழ் முள் தான் மனம். மேல் முள் கடவுள். கீழ் முள் மேல் முள்ளுடன் ஒன்றுபட்டு நிற்பது தான் யோகம்.

மனம் அமைதியடையாவிட்டால் யோகம் கை கூடாது. உலகியலாகிய காற்று மனமாகிய தீபத்தை எப்போதும் அலைக் கழிக்கிறது. இந்தத் தீபம் சிறிதும் சஞ்சலப்படாமல் இருக்குமானால் சரியான யோக நிலை கைகூடி விட்டது என்று பொருள்.

காமினீ- காஞ்சனம் தான் யோகத்திற்குத் தடை. பகுத்தறிவு எப்போதும் பயன் படுத்து. பெண்ணின் உடம்பில் அப்படி என்ன இருக்கிறது- ரத்தம், தசை, கொழுப்பு, குடல், மலம், சிறுநீர் இவைதான். இந்த உடம்பின் மீது ஆசை ஏன்?

ஆசைகளை விடுவதற்காக நான் சில நேரங்களில் ரஜோ கு நிலையை மேற் கொண்டதுண்டு. தங்கச் சரிகையிட்ட துணி உடுத்த வேண்டும், விரலில் மோதிரம் அணிய வேண்டும், நீண்ட குழாய் கொண்ட ஹுக்காவில் புகை பிடிக்க வேண்டுமு். என்றெல்லாம் ஒரு முறை ஆசை எழுந்தது. இவர்கள்( மதுர்பாபு) அவற்றை வாங்கித் தந்தனர். சிறிது நேரம் எல்லாவற்றையுமே் அணிந்திருந்தேன். பிறகு மனத்திடம், மனமே, தங்க ச் சரிகை ஆடை என்கிறார்களே அது இது தான்” என்று கூறிவிட்டு அதை எடுத்து தூர எறிந்தேன். அதன் பிறகு அதில் மனம் போகவில்லை. மனமே, இதன் பெயர் தான் போர்வை. இதன் பெயர் தான் மோதிரம். இது தான் நீண்ட ஹுக்காவில் புகைபிடித்தல்” என்று மனத்திடம் சொன்னேன். பிறகு எல்லாவற்றையும் வீசி எறிந்தேன். அதன் பிறகு என் மனத்தில் அவற்றின் மீது ஆசை தோன்றவில்லை.

மாலை நேரம் ஆகத் தொடங்கியது. அறையின் தென் கிழக்கு வராந்தாவில் வாசலின் அருகில் குருதேவர் ம-வுடன் தனியாகப்பேசிக்கொண்டிருந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-(ம-விடம்)-

யோகியின் மனம் எப்போதும் இறைவனிடம் இருக்கும். எப்போதம் ஆன்மாவிலேயே நிலைத்திருக்கும். பார்க்கும்போதே அவனை அடையாளம் கண்டு கொள்ளலாம். அவனது கண்கள் முட்டையை அடைகாக்கும் பறவையின் கண்கள் போல் எங்கேயோ பார்த்தவண்ணம் அகலத் திறந்திருக்கும்.- மனம் முழுக்க முழுக்க முட்டையின் மீது நிலைத்திருக்கும். கண்களில் ஒரு வறட்டுப் பார்வையிருக்கும். அப்படிப்பட்ட ஒரு படத்தைக்கொண்டுவந்து காட்டுகிறாயா?

ம- ஆகட்டும், சுவாமி, எங்கேயாவது கிடைக்குமா என்று பார்க்கிறேன்.

மாலை நேரம் ஆகிவிட்டது. காளி கோயிலிலும், ராதா காந்தர் கோயிலிலும், பிற கோயில்களிலும் , அறை களிலும் விளக்குகள் ஏற்றப் பட்டன. குருதேவர் சிறிய கட்டிலில் அமர்ந்து தேவியை தியானித்தார். பிறகு தெய்வத் திருநாமங்களை இனிமையாகப் பாடினார். அறையில் சாம்பிராணிப் புகை இடப்பட்டது. ஒரு பக்கம் விளக்குத் தண்டு ஒன்றில் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் சங்கும் மணியும் முழங்கின. காளி கோயிலில் ஆரதி நடைபெற்றது. வளர்பிறை பத்தாம் நாள். நாலாபுறமும் வெள்ளம்போல் நிலவொளி பரவியிருந்தது.

ஆரதி நிறைவுற்றது. குருதேவர் சிறிய கட்டிலில் அமர்ந்திருந்தார். அறையில் ம- மட்டும் தரையில் உட்கார்ந்திருந்தார். குருதேவர் அவரிடம் பேசத் தொடங்கினார்.

பற்றின்றி வேலை செய்துவா. வித்யாசாகர் செய்கின்ற பணிகள் சிறந்தவை.அவர் பற்றன்றி பணி செய்ய முயற்சிக்கிறார்?

ம- அப்படியே சுவாமி. வேலைகளைச்செய்து கொண்டே இறைவனை அடைய முடியுமா? கடவளும் ஆசையும் இணைந்திருக்க முடியுமா? ”யஹாம் ராம் தஹாம் நஹி காம், யஹாம் காம் தஹாம் நஹி ராம்” என்று ஓர் இந்தி நூலில் படித்தேன்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

எல்லோரும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறோம். பகவானின் நாமங்களைப் பாடுவதும் அவரது மகிமைகளைப்பேசுவதும் கூட செயல் தான். அத்வைதிகள் ”நானே அவன்” என்று தியானிப்பதும் செயல் தான். மூச்சு விடுவதும் கூட செயல் தான். செயலை விட்டு விடுவது சாத்தியமில்லை. எனவே கடமைகளைச்செய். ஆனால் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்து விடு.

ம- அப்படியே செய்கிறேன். அதிகமாகப் பணம் சம்பாதிக்க நான் முயற்சி செய்யலாமா?

ஸ்ரீராமகிருஷ்ணர்- 

தார்மீக வாழ்க்கைக்காகச் செய்யலாம். நன்றாக முயற்சி செய். ஆனால் பணம் சம்பாதிப்பது லட்சியம் அல்ல. இறைவனுக்குச்சேவை செய்வதே லட்சியம். பணத்தால் இறைவனுக்குச்சேவை நிகழுமானால் அந்தப் பணத்தில் குற்றம் இல்லை.

ம- எவ்வளவு காலம் குடும்பக் கடமைகளைச் செய்ய வேண்டும்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அவர்களுக்கு உணவும் உடையும் சிரமமின்றிக் கிடைக்கின்ற நிலைமை வரும் வரை. பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கும் திறமை வந்து விட்டால் அதன் பிறகு அவர்களின் பாரத்தைச்சுமக்க வேண்டியதில்லை. குஞ்சுகள் தாங்களே இரையைக்கொத்தித் தின்ன கற்றுக் கொண்ட பின், தாயிடம் உணவிற்காக வந்தால் தாய்ப்பறவை அவற்றைக்கொத்தி விரட்டி விடும்.

ம- எவ்வளவு காலம் கடமைகளைச் செய்ய வேண்டும்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

காய் தோன்றியபின் பூ நிலைப்பதில்லை. இறையனுபூதி பெற்றபின் ஒருவன் கடமைகளைச்செய்ய வேண்டியதில்லை. அதற்கு மனமும் இருக்காது.

குடிகாரன் அளவுக்கு மீறி குடித்தால், அவனால் தெளிவாக இருக்க முடியாது. இரண்டணாவிற்கு மட்டும் குடித்தானானால் அவன் தனது வேலைகளையும் காரியங்களையும் நடத்திச் செல்ல முடியும். இறைவனை நோக்கிச் செல்லச் செல்ல அவர் உன் கடமைகளைக் குறைந்து கொண்டே வருவார். பயம் வேண்டாம். மருமகள் கருவுற்றால் மாமியார் அவளது வேலைகளைக்கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கிறாள். பத்து மாதமானால் அவளை எந்த வேலையும் செய்ய விட மாட்டாள்.

குழந்தை பிறந்து விட்டாலோ அதைக் கொஞ்சிக்கொண்டிருப்பது மட்டும் தான்.

இருக்கின்ற கடமைகளை முடித்துவிட்டால் நிம்மதி. வீட்டுத் தலைவி சமையலறையும் சில்லறை வேலைகளையும் முடித்து விட்டு க் குளிக்கப்போனால் திரும்ப மாட்டாள். நீ என்ன தான் கரடியாகக் கத்தினாலும் திரும்பிப் பார்க்க மாட்டாள்.

ம- சுவாமி, இறையனுபூதி என்றால் என்ன? எது இறைக் காட்சி என்று சொல்லப் படுகிறது? அதைப் பெறுவது எப்படி?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இறை நெறியில் செல்பவர்களும் அவரை அடைந்தவர்களும் பல தரத்தில் உள்ளனர் என்று வைணவர்கள் கூறுகிறார்கள்- பிரவர்த்தகன், சாதகன், சித்தன், சித்தரில்சித்தன்.

பாதையில் அடியெடுத்து வைத்திருப்பவன் பிரவர்த்தகன் என்று சொல்லப் படுகிறான். பூஜை, தியானம், ஜபம், இறை நாமத்தையும் அவரது மகிமையையும் பாடுதல் போன்ற சாதனைகளைச் செய்து வருபவன் சாதகன். இறைவன் இருக்கிறான் என்பதை உள்ளுணர்வில் உணர்ந்தவன் சித்தன் என்று அழைக்கப் படுகிறான். வேதாந்தத்தில் ஓர் உவமை உள்ளது- வீட்டிற்குச் சொந்தக் காரன் இருட்டறையில் படுத்திருக்கிறான். இருட்டிலே தட்டுத் தடுமாறி தடவியபடி ஒருவன் அவனைத்தேடுகிறான். சோபாவில் கை வைத்துவிட்டு, இது வல்ல. என்கிறான். ஜன்னலைத் தொட்டு விட்டு, இது வல்ல, என்கிறான். கதவைத் தொட்டுவிட்டு, இது வல்ல” என்கிறான். நேதி, நேதி, நேதி. கடைசியாக வீட்டுக் காரனின் உடம்பின் மீது கை படுகிறது. உடனே, இதோ, இதோ எஜமான்” என்கிறான். அதாவது, எஜமான் இருப்பதை உணர்ந்து கொண்டான். எஜமானை அடைந்தாகி விட்டது. ஆனால் நல்ல அறிமுகம் ஏற்படவில்லை.

இன்னொரு பிரிவினர் உள்ளனர். அவர்களே சித்தரில் சித்தர்கள். வீட்டின் தலைவனுடன் நெருங்கியஉறவு ஏற்படுவது என்ற நிலையே தனி தான். பிரேம பக்தியின் வாயிலாக இறைவனுடன் நெருக்கமான உறவு கொள்கின்ற நிலை அது. சித்தர்கள் கடவுளை அடைந்தவர்கள் தான். சந்தேகமே இல்லை. ஆனால் சித்த சித்தர்கள் அவருடன் மிக மிக நெருக்கமாகப் பழகுபவர்கள்.

இறைவனை அடைய வேண்டுமானால் சாந்தம், தாஸ்யம்,சக்யம், வாத்சல்யம், மதுரம் என்கின்ற பாவனைகளுள் ஒன்றைப் பின்பற்ற வேண்டும்.

சாந்தம்- ரிஷிகளின் பாவனை. இன்ப நுகர்ச்சியில் எந்த நாட்டமும் அவர்களுக்கு இல்லை. மனைவி கணவனிடம் கொள்கின்ற ஈடுபாடு போன்றது இது- அவள் அவனை மன்மதனாகவே காணகிறாள்.

தாஸ்யம்-

அனுமனின் பாவனை போன்றது. ராம காரியம் என்றால் சிங்கம்போலாகி விடுவார் அவர். மனைவியிடமும் தாஸ்ய பாவனையைக் காணலாம். உயிரைக்கொடுத்து கணவனுக்குச்சேவை செய்கிறாள் அவள். தாயிடமும் இத்தகைய பாவனை சிறிது இருக்கிறது. யசோதையிடம் இருந்தது.

சக்யம்- தோழமை, வா, வந்து அருகில் உட்கார்” என்ற அளவில் நெருக்கமாகப் பழகுவது. குசேலர் போன்றோர், கடித்த எச்சில் பழங்களையே சில வேளைகளில் கண்ணனுக்குக் கொடுத்தனர். சில வேளைகளில் தோள் மீது ஏறி உட்கார்ந்தனர்.

வாத்சல்யம்-

யசோதையின் பாவனை போன்றது. மனைவியிடம் ஓரளவு உள்ளது. அவள் கணவனுக்கு மனமார உணவு படைக்கிறாள். குழந்தை வயிறு நிறைய உண்டால் தான் தாய்க்குத் திருப்தி. கண்ணன் உண்பான், என்று கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு அலைந்தாள் யசோதை.

மதுரம்-

ராதையின் பாவனை போன்றது இது. மனைவியின் நிலையும் இது தான். சாந்தம், தாஸ்யம், சக்யம், வாத்சல்யம் போன்ற எல்லா பாவனைகளும் இதில் அடங்கி விடுகின்றன.

ம- சுவாமி, இந்தக் கண்களால் கடவுளைக் காண முடியுமா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இந்த ஊனக் கண்களால் அவரைக் காண முடியாது. சாதனைகள் செய்து செய்து ஒரு பிரேமை உடல் உண்டாகிறது. பிரேமைக் கண்கள், பிரேமைக் காதுகள் எல்லாம் உண்டாகின்றன. அந்தக் கண்களால் அவரைக் காணலாம். அந்தக் காதுகளால் அவரது பேச்சைக்கேட்கலாம். அவ்வாறே பிரேமைமயமான ஆண் பெண் உறுப்புகளும் ஏற்படுகின்றன.

இதைக்கேட்டதும் ம- உரக்கச் சிரித்தார். குருதேவர் முகம் சுளிக்காமல் தொடர்ந்து பேசினார். இந்தப் பிரேமை உடல் ஆன்மாவோடு கலந்து இன்புறுகிறது.

ம- கவனமாக கேட்கலானார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இறைவனிடம் ஆழ்ந்த அன்பு ஏற்படாமல் இது கிடைக்காது. ஆழ்ந்த அன்பு உண்டானால் எங்கும் இறைமயமாகக் காணலாம். தீவிரமான காமாலை நோய் கண்டால் காண்பவை எல்லாம் மஞ்சளாகத் தெரியும். அப்போது ” அவனே நான்” என்ற உணர்வு உண்டாகிறது. போதை அதிகமாகி விட்டால் ”நானே காளி” என்கிறான் குடிகாரன். பிரேமைப் பித்தில் கோபியர் ”நானே கண்ணன்” என்று சொல்ல ஆரம்பித்தனர். இரவு பகலாக இறைவனையே நினைத்துக் கொண்டிருந்தால் எங்கும் அவரைக் காணலாம். தீபத்தின் சுடரைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தோமானால், பிறகு, பார்க்கின்ற திசைகளில் அதே தீபச் சுடரைக் காண்கிறோம் அல்லவா?

அந்தச் சுடர் நிஜம் அல்லவே” என்ற எண்ணம் அப்போது ம-வின் மனத்தில் எழுந்தது. பிறர் மனத்தை அறிபவரான குருதேவர் கூறினார்-

உணர்வுப் பொருளைச் சிந்திப்பவன் ஜடமாக மாட்டான். இறைவனை அதிகமாகச் சிந்தித்தால் மூளை குழம்பி விடும்” என்று சிவநாத் ஒரு முறை என்னிடம் கூறினார். அதற்கு நான் அவரிடம், என்ன?, உணர்வுப் பொருளைச் சிந்திப்பவன் உணர்வற்றவனாக ஆக முடியுமா? என்று கேட்டேன். 

ம- புரிகிறது, சுவாமி. நிலையற்ற எதையும் சிந்திப்பது போன்றதல்லவே இது! இறைவன் நித்திய உணர்வு வடிவினர். அவரில் மனத்தைச் செலுத்துபவன் ஏன் உணர்விழக்க வேண்டும்!

ஸ்ரீராமகிருஷ்ணர்-( மகிழ்ச்சியுடன்)-

நீ இவ்வாறு புரிந்து கொண்டது) அவரது அருளால் தான். அவரது அருளில்லாமல் சந்தேகங்கள் விலகாது.ஆன்ம அனுபூதி கிடைக்காவிட்டால் சந்தேகம் நீங்காது. அவரது அருள் கிடைத்து விட்டாலோ பிறகு பயம் இல்லை. குழந்தை தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தால் ஒரு வேளை விழ நேரலாம். ஆனால் தந்தை. குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டால் பயம் இல்லை. இறைவனே அருள் கூர்ந்து சந்தேகங்களை விலக்குவாரானால், காட்சி அளிப்பாரானால் பிறகு கஷ்டமில்லை. ஆனால் ஏங்கும் மனத்துடன் அவரை அழைக்கவேண்டும். சாதனைகள் செய்ய வேண்டும். அப்போது தான் அவரது அருள் கிடைக்கும். குழந்தை கதறியபடி அங்கும் இங்கும் ஓடுவதைக் கண்டால் தாய்க்குக் கருணை பிறக்கிறது. ஒளிந்து கொண்டிருந்த அவள் வெளியே வந்து குழந்தையின் முன் நிற்கிறாள்.

ஆண்டவன் ஏன் நம்மை அங்குமிங்கும் ஓடச் செய்கிறார்? என்று ம- தனக்குள் நினைத்தார். குருதேவர் உடனே கூறினார்.

நாம் அங்குமிங்கும் சற்று ஓட வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அப்போது தான் சுவையாக இருக்கும். அவர் விளையாட்டாகவே இந்த உலகைப்படைத்தார். இதன் பெயர் தான் மகாமாயை. எனவே தான் அந்தச் சக்தி வடிவினளான தேவியிடம் சரணடைய வேண்டும்.மாயை என்னும் பாசக் கயிற்றினால் அவள் நம்மைக் கட்டியிருக்கிறாள். இந்தத் தளைகளை அறுத்தெறிய முடியுமானால் உடனே இறைக்காட்சி கிடைக்கும்.

இறைவனின் அருளைப் பெற வேண்டுமானால் ஆத்யா சக்தி வடிவினளான தேவியை மகிழ்விக்க வேண்டும். அவளே மகா மாயை. உலகை மயக்கத்தில் ஆழ்த்தி படைத்தல், காத்தல், அழித்தல், எல்லாம் செய்து வருகிறாள் அவள். அந்த மகாமாயை கதவைத் திறந்து விட்டால் தான் நாம் உள்ளே போக முடியும். வெளியில் விழுந்து கிடந்தால், வெறும் புற விஷயங்களைத்தான் காண முடியும். நித்தியமான அந்த சச்சிதானந்த இறைவனை அறிந்து கொள்ள முடியாது. அதனால் தான், மதுகைடபர்களைக் கொன்றபோது பிரம்மா முதலான தேவர்கள் மகாமாயையைத் துதித்ததாக தேவீ மாகாத்மியத் தில் கூறப்பட்டுள்ளது.

சக்தியே உலகின் மூல ஆதாரம். அந்த ஆத்யா சக்தியிடம் வித்யை, அவித்யை இரண்டும் உள்ளன. அவித்யை மோகத்தில் ஆழ்த்துகிறது. காமினீ- காஞ்சன நாட்டம் அதிலிருந்தே உண்டாகிறது. அது மனிதனை மோகத்தில் ஆழ்த்துகிறது. பக்தி, தயை, ஞானம், பிரேமை இவற்றைத்தோற்றுவிப்பது வித்யை. அது இறைநெறியில் நம்மை அழைத்துச்செல்கிறது.

அந்த அவித்யையை மகிழ்விக்க வேண்டும். அது தான் சக்தி பூஜையின் நோக்கம். அவளை மகிழ்விப்பதற்காக தாச பாவனை, வீர பாவனை, சந்தான பாவனை, என்று பல்வேறு பாவனைகளில் பூஜைகள் செய்யப் படுகின்றது.வீர பாவனை, அதாவது உடலுறவின் வாயிலாக அவளை மகிழ்வித்தல்.

சக்தி சாதனைகள் மிகவும் கடினமானவை, செப்பிடு வித்தை அல்ல. தேவியின் தாச பாவனையிலும் சக்ய பாவனையிலும் நான் இரண்டு வருடங்கள் இருந்தேன்.ஆனால் எனக்குப் பிடித்தது சந்தான பாவனை. பெண்களின் மார்பைத் தாயின் மார்பாகவே நான் கருதுகிறேன்.

பெண்கள் அனைவரும் சக்தியின் வடிவங்கள்.மேற்குப் பகுதிகளில் திருமணத்தின்போது மணமகன் கையில் ஒரு கத்தி இருக்கும், வங்காளத்தில் அவனது கையில் பாக்கு வெட்டி இருக்கும். சக்தி வடிவான அந்தப் பெண்ணின் உதவியுடன் அவன் மாயா மோகங்களை வெட்டி வீழ்த்துவான் என்பதேஅதன் பொருள். இது தான் பாவனை. நான் வீர பாவனையில் பூஜை செய்யவில்லை. எனக்குப் பிடித்தது சந்தான பாவனை.

பெண், சக்தியின் வடிவம். திருமணத்தில் பார்த்ததில்லையா? மாப்பிள்ளை அசடுவழிய பின்னால் உட்கார்ந்திருக்கிறான். பெண் தான் தைரியமாக உட்கார்ந்திருக்கிறாள்.

இறையனு பூதி பெற்றுவிட்டால், புற உலகின் வசீகரங்கள், அவரது உலகின் ஐசுவரியங்கள் எல்லாம் மறந்து விடுகின்றன. அவரைக் கண்டு விட்டால் அவரது செல்வங்களை உள்ளம் நாடுவதில்லை. இறையின் பத்தில் மூழ்கிய பக்தனுக்குக் கணக்கு வழக்குகள் தேவையற்று விடுகின்றன.நரேந்திரனைப் பார்த்துவிட்டால் அதன் பிறகு, உன் பெயர் என்ன? என் வீடு எங்கே? என்றெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை.கேட்பதற்கு நேரம் தான் எங்கே? அனுமனிடம் ஒருவர், இன்று என்ன திதி? என்று கேட்டபோது, அவர் தம்பி! எனக்கு நாள், கிழமை, நட்சத்திரம் எதுவும் தெரியாது. நான் ராமனை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பதில் கூறினார்.

   பாகம்- 10

திங்கள், அக்டோபர் 16, 1882

......................................

வரும் வியாழனன்று துர்க்கா பூஜைஆரம்பமாகும். இன்று குருதேவர் பேரானந்தத்தில் திளைத்திருந்தார். நரேந்திரர் தட்சிணேசுவரக் கோயிலுக்கு வந்திருந்தார். மேலும் சில அந்தரங்க பக்தர்களும் இருந்தனர். குருதேவருடன் ராக்கால், ராம்லால், ஹாஸ்ரா ஆகியோர் இருந்தனர். பிரம்ம சமாஜத்தைச்சேர்ந்த ஓரிரு இளைஞர்கள் நரேந்திரருடன் வந்திருந்தனர். ம-வும் வந்திருந்தார்.

நரேந்திரர் கங்கையில் குளித்துவிட்டு குருதேவருடன் மதிய உணவு உண்டார். உணவுக்குப் பிறகு குருதேவர் தம் அறையில் படுக்கை விரிக்குமாறு கூறினார். அதில் பக்தர்கள் குறிப்பாக, நரேந்திரர் ஓய்வு பெறுவார். பாய் விரித்து, மெத்தையும் தலையணைகளும் வைக்கப் பட்டன. குருதேவர்

ஒரு குழந்தையைப்போல் நரேந்திரருக்கு அருகில் படுக்கையில் உட்கார்ந்து கொண்டார். பக்தர்களிடம், குறிப்பாக நரேந்திரரிடம்,அவரைப் பார்த்தபடி, மலர்ந்த முகத்துடன் ஆனந்தமாகப்பேச ஆரம்பித்தார். அவரது நிலை, அவரது வாழ்க்கை எல்லாம் பேச்சின் இடையில் வந்தன.

ஸ்ரீராமகிருஷ்ணர்-( நரேந்திரர் முதலிய பக்தர்களிடம்)-

எனக்கு இந்த நிலை ஏற்பட்ட பிறகு,இறைவனைப் பற்றிய பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று என் மனம் ஏங்கியது. எங்கே பாகவதம் கேட்கலாம். எங்கே அத்யாத்ம ராமாயணம் கேட்கலாம், எங்கே மகாபாரதம் கேட்கலாம் என்று தேடியலைந்தேன். அத்யாத்ம ராமாயணம் கேட்பதற்காக ஏடேதாவிலுள்ள கிருஷ்ணகிஷோரிடம் பல முறை சென்றதுண்டு.

கிருஷ்ணகிஷோருக்குத் தான் எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை! அவர் பிருந்தாவனத்திற்குப் போயிருந்தார். ஒரு நாள் தாகம் ஏற்பட்ட போது ஒரு கிணற்றடிக்குச்சென்றார். அங்கே ஒருவன் நின்று கொண்டிருந்தான். தண்ணீர் கேட்ட போது அவன், ஐயா! நான் தாழ்ந்த ஜாதியைச்சேர்ந்தவன். நீங்களோ பிராமணர். நான் எப்படி உங்களுக்குத் தண்ணீர் தர முடியும்? என்று கேட்டான். கிருஷ்ண கிஷோர் அவனிடம், நீ சிவ என்று சொல். சிவ சிவ என்று சொன்னாலேயே நீ தூயவன் ஆகி விடுவாய்” என்று சொன்னார். அவன் சிவசிவ என்று உச்சரித்தபடி அவருக்குத் தண்ணீர் கொடுத்தான். ஆசாரம் மிக்க கிருஷ்ண கிஷோரும் அந்தத் தண்ணீரைக் குடித்தார்! என்ன நம்பிக்கை!

ஒரு சமயம் ஏடேதா படித்துறைக்கு அரகே ஒரு சாது வந்தார். ஒரு நாள் அவரைத் தரிசித்துவர நினைத்திருந்தோம். நான் காளிகோயிலில் ஹலதாரியிடம், கிருஷ்ணகிஷோரும் நானும் சாதுவைப் பார்க்கப்போகிறோம். நீங்கள் வருகிறீர்களா? என்று கேட்டேன். அதற்குஅவர், ஒரு மண் கூட்டைப் பார்க்கப்போவதால் என்ன பயன்? என்றார். கீதை, வேதாந்தம், எல்லாம் படிப்பவர் அல்லவா, அதனால் தான் சாதுவை மண் கூடு என்று குறிப்பிட்டார்! அவர் சொன்னதை நான் கிருஷ்ணகிஷோரிடம் தெரிவித்தேன். அவருக்கு மகாகோபம் வந்து விட்டது. என்ன? ஹலதாரி அப்படியா சொன்னார்? யார் பகவானைச் சிந்திப்பவரோ, யார் ஸ்ரீராமபிரானை தியானிப்பவரோ, யார் அவருக்காக அனைத்தையும் துறந்தவரோ அவரது உடம்பு மண் கூடா? பக்தரின் உடம்பு உணர்வு மயமானது என்பது ஹலதாரிக்குத் தெரியாதா? என்று கேட்டார். கிருஷ்ண கிஷோருக்கு ஹலதாரியின் மீது வந்த கோபம் கொஞ்சநஞ்சமல்ல.

பூப்பறிப்பதற்காக அவர் காளி கோயில் பூந்தோட்டத்திற்கு அடிக்கடி வருவதுண்டு. ஹலதாரியைச் சந்திக்க நேர்ந்தால் கூட முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொள்வார்.

ஒரு முறை கிருஷ்ண கிஷோர் என்னிடம், ஏன் பூணூலை எறிந்து விட்டீர்கள்? என்று கேட்டார்.அந்நாளில் பெரும் புயல் காற்றைப்போன்ற ஏதோ ஒன்று என்னை எங்கெல்லாமோ அடித்துச் சென்று கொண்டிருந்தது. அப்படியிருந்தும் என் நிலை. பழைய அடையாளம் எதுவும் மிஞ்சவில்லை உடலுணர்வே கிடையாது. துணியே தங்கவில்லை. இதில் பூணூல் எம்மாத்திரம்? என்னைப்போல் உங்களுக்கும் ஒரு முறை பித்து பிடிக்கட்டும். அப்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்” என்று அவரிடம் கூறினேன்..

அப்படித்தான் நடக்கவும் செய்தது! அவருக்கும் அந்தப் பித்துப் பிடித்துக்கொண்டது. ஓர் அறையில் அமர்ந்து கொள்வார். எந்தநேரமும் ஓம், ஓம் என்று ஜபிப்பார். யாருடனும் பேசுவதும் இல்லை, அவருக்கு மூளை கெட்டு விட்டது என்று வைத்தியரை அழைத்து வந்தனர். கிருஷ்ணகிஷோர் அவரிடம், ஐயா, என் நோயை க் குணப்படுத்தும் . ஆனால் எனது ஓம் ஜபத்தை மட்டும் குணப்படுத்தி விடாதீர். என்று சொன்னார்.

ஒரு நாள் அவரை சென்று பார்த்தேன். சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். என்ன விஷயம்? என்று கேட்டேன். வரி வசூலிப்பவன் வந்திருந்தான். அது தான் யோசிக்கிறேன் , பணம் செலுத்தாவிட்டால் வீட்டிலுள்ள சாமான்களையெல்லாம் ஏலம் போட்டு விடுவான்” என்று தெரிவித்தார். சரி, அதைப் பற்றி கவலைப் படுவதனால் என்ன பயன்? அதிகப் படசம் அவன் பாத்திரம் பண்டங்களை மட்டும் தானே எடுத்துச்செல்ல முடியும்? கட்டி எடுத்துக் கொண்டு போகட்டும்! உங்களை எடுத்துக்கொண்டு போகட்டும்! உங்களை எடுத்துச் செல்ல முடியாதே! நீங்கள் தான் ”க” ஆயிற்றே.! என்று நான் கூறினேன்.(நரேந்திரரும் பிறரும் சிரித்தனர்) நான் ஆகாசம் போன்றவன்” என்று கிருஷ்ண கிஷோர் அடிக்கடி சொல்வார். அத்யாத்ம ராமாயணம் படிப்பவர் அல்லவா! நீங்கள் ”க” என்று அவரை நான் கேலி செய்வதுண்டு. அதனால் தான், நீங்கள் ”க” ஆயிற்றே! வரி விதிப்பதால் உங்களை அசைத்துவிட முடியாது” என்று அன்றும் அவரிடம் சொன்னேன்.

இறைப்பித்து பிடித்த நாட்களில், மனத்தில் தோன்றுவதை அப்படியே அப்படியே சொல்லி விடுவேன். யாரையும் மதிக்க மாட்டேன். பெரிய மனிதர்களைக் கண்டாலும் பயம் எதுவும் தோன்றியதில்லை.

யது மல்லிக்கின் தோட்டத்திற்கு யதீந்திரர் வந்தார். அப்போது அங்கிருந்த நான் அவரிடம், எது கடமை? பகவானை நினைப்பது தானே நமது கடமை? என்று கேட்டேன் அதற்கு யதீந்திரர், நாங்கள் சம்சாரிகள். எங்களுக்கு முக்தியா! தர்ம புத்திரருக்கே நரகத்தைப் பார்க்க வேண்டிய நிலைமை ஏறபட்டதே! என்றார். அதைக்கேட்டு எனக்கு பயங்கர கோபம் வந்தது. என்ன மனிதர் நீங்கள்! தர்ம புத்திரர் நரகத்தைப் பார்த்ததை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கிறீர்களே! அவரது சத்திய நிஷ்டை, மன்னிக்கும் தன்மை, பொறுமை, விவேகம், வைராக்கியம், பக்தி இவையெல்லாம் உங்கள் மனத்தில் படவில்லையா? என்று ஆத்திரத்துடன் கேட்டேன். இன்னும் என்னனென்னவோ சொல்லியிருப்பேன். ஹிருதயன் என் வாயைப் பொத்தி விட்டான். கொஞ்ச நேரத்தில் யதீந்திரர், எனக்கு சிறிது வேலை இருக்கிறது” என்று சொல்லி விட்டு அங்கிருந்து போய் விட்டார்.

பல நாட்களுக்குப் பிறகு கேப்டனுடன் சௌரீந்திர தாகூரின் வீட்டிற்குச்சென்றேன். அவரைப் பார்த்த அளவிலேயே அவரிடம், உங்களை ராஜகீஜா என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் அது பொய் சொல்வதாகும்” என்றேன்.அவர் என்னுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பெரிய மனிதர்கள் பலர் அங்கே வருவதும் போவதுமாக இருந்தனர். சௌரீந்திரர் ரஜோகுணம் படைத்தவர். பல பணிகளில்ஈடுபட்டிருந்தார். யதீந்திருக்குத் தகவல் அனுப்பப் பட்டது. அதற்கு அவர், எனக்குத் தொண்டை வலி” என்று சொல்லி அனுப்பி விட்டார்.

எனக்கு இறைப்பித்து பிடித்திருந்த அந்த நாட்களில் ஒரு நாள் வராக நகர் படித்துறையில் ஜய முகர்ஜியைக் கண்டேன். அவர் ஜபம் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவரது மனம் எங்கேஆயா அலைந்து கொண்டிருந்தது.அருகில் சென்று இரண்டு அறைவிட்டேன்.

ஒரு சமயம் ராசமணி வந்திருந்தார். காளிதேவியின்திருச் சன்னதிக்கு வந்தார். பூஜை வேளையில் வருவார், இரண்டொரு பாட்டுக்கள் பாடும்படி கேட்டுக் கொள்வார். அன்றும் அவ்வாறு நான் பாடினேன். ஆனால் அவர் ஏதோ சிந்தனையில் உழன்று கொண்டிருந்தார். அவ்வளவு தான், இரண்டு அறை விட்டேன். திடுக்கிட்டுப்போன அவர் இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு அமர்ந்து விட்டார்.

ஹலதாரியிடம், அண்ணா! இது என்ன பழக்கம்! நான் என்ன செய்வேன்! என்ன சொன்னேன். பிறகு தேவியிடம் திரும்பத் திரும்ப பிரார்த்தனை செய்த பிறகு தான் இந்தப்பழக்கம் நீங்கியது.

அந்த நிலையில் இறைவனைப் பற்றிய பேச்சைத் தவிர வேறு எதுவுமே எனக்குச் சுவைக்க வில்லை. உலகிய் விஷயங்கள் காதில் விழுந்தால் உட்கார்ந்து அழுவேன். மதுர் பாபு என்னைத் தீர்த்த யாத்திரைக்கு அழைத்துச் சென்றார். காசியில் ராஜா பாபுவின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தோம். ஒரு நாள் மதுர்பாபு வுடன் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். ராஜாபாபுவும் வேறு பலரும் இருந்தனர். அவர்கள் உலகியல் விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். இவ்வளவு நஷ்டம், அது இது என்றெல்லாம் பேச்சுக்கள். நான் அழ ஆரம்பித்தேன். அம்மா! என்னை எங்கே அழைத்து வந்திருக்கிறாய்? ராசமணியின் கோயிலில் மகிழ்ச்சியாக இருந்தேனே! தீர்த்த யாத்திரையிலும் காமினீ- காஞ்சனம் பற்றிய பேச்சா? தட்சிணேசுவரத்தில் உலகியல் விஷயங்களைக்கேட்க வேண்டியிருக்கவில்லையே! என்று முறையிட்டேன்.

பக்தர்களை, முக்கியமாக நரேந்திரரைச் சிறிது ஓய்வு கொள்ளுமாறு கூறினார் குருதேவர். குருதேவரும் சிறிய கட்டிலில் படுத்துக்கொண்டார்.

மாலைப் பொழுது, நரேந்திரர் பாடினார். ராக்கால், லாட்டு, ம-, ஹாஸ்ரா, நரேந்திரரின் பிரம்ம சமாஜ நண்பரான பிரியர் ஆகியோர் இருந்தனர். நரேந்திரர் பாடினார், கூட மிருதங்கமும் வாசிக்கப் பட்டது.

மிருதங்கம், ஜால்ரா ஆகியவையும் பாடலுடன் கலந்து ஒலித்தன. நரேந்திரரும் மற்ற பக்தர்களும் குருதேவரைச்சுற்றி வந்து பாடினார்கள். சிலவேளையில், பிரேமானந்த ரசத்தில்மூழ்கு” என்று பாடினார்கள். மீண்டும் ”சத்தியம் சுந்தரம்” என்ற பாடலைப் பாடினார்.

கடைசியாக நரேந்திரரே மிருதங்கத்தை வாசித்தார். பேருணர்வில் மூழ்கி, ஆனந்தமுகத்துடன் ஆண்டவன் திருப்பெயர் அனுதினம் நீபாடு” என்று குருதேவருடன் சேர்ந்து பாடினார். பாட்டு நிறைவுற்றதும் குருதேவர் நரேந்திரரை நீண்ட நேரம் அணைத்தவண்ணம், இன்று எங்களுக்கு எத்தனை ஆனந்தம் தந்துவிட்டாய்!என்று கூறினார். இன்று குருதேவரின் இதயத்தின் அன்புப் பேரூற்று மடை திறந்து கொண்டது.

மணி எட்டு இருக்கும். குருதேவர் அன்புப் பரவசத்தில் மூழ்கியவராய், வராந்தாவில் தனியாக நடந்து கொண்டிருந்தார். வடக்கு வராந்தாவிற்கு வந்தார். ஒரு கோடிக்கும் மறுகோடிக்கும் விரைவாக அடியிட்டு நடக்கலானார். இடையிடையே அம்பிகையுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று பித்தனைப்போல், நீ என்னை என்ன செய்து விட முடியும்? என்று உரக்கக் கூவினார். யாரை தேவி காக்கிறாளோ அவர்களை மாயை என்ன செய்து விட முடியும் என்று சொல்கிறாரா?

நரேந்திரர், ம-, பிரியர், மூவரும் இரவில் அங்கேயே தங்குவார்கள். நரேந்திரர் தங்குவார் என்பதால் குருதேவரின் மகிழ்ச்சி கரை காணாததாகியது.

இரவு உணவு தயாராகியது. அன்னை சாரதாதேவி நகபத்தில் வசித்துவந்தார். பக்தர்களுக்காக சப்பாத்தி, பருப்புக் குழம்பு போன்றவற்றைத் தயாரித்து அனுப்பியிருந்தார். தென் கிழக்கு வராந்தாவில் இலைகள் போடப் பட்டன.

பக்தர்கள் அவ்வப்போது இரவில் தங்குவது வழக்கம். பக்தர்களின் உணவுச் செலவிற்காக மாதந்தோறும் சுரேந்திரர் சிறிது பணம் கொடுத்துவந்தார்.

அறையின் கிழக்கு க் கதவருகே நரேந்திரரும் பிறரும் பேசிக்கொண்டிருந்தனர்.

நரேந்திரர்-

இந்தக் கால இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்?

ம-

பரவாயில்லை. ஆனால் நல்வழி எதுவும் அவர்களுக்குப்போதிக்கப் படுவதில்லை.

நரேந்திரர்-

நான் பார்த்ததில் அவர்கள் கீழ் நோக்கித் தான் போய்க் கொண்டிருக்கிறார்கள்.புகை பிடித்தல், வீண் வம்பு, ஆடம்பரம், பள்ளிக்கு மட்டம் போடுதல், இவை தாராளம். இவற்றுடன் போகத்தகாத இடங்களுக்குப்போவதையும் கூட கண்டிருக்கிறேன்.

ம- நாங்கள் படித்த காலத்தில் இப்படி பார்த்ததும் இல்லை, கேட்டதுமில்லை.

நரேந்திரர்-

நீங்கள் அவ்வளவாக மாணவர்களோடு நெருங்கிப் பழகவில்லைஎன்று நினைக்கிறேன். ஒழுக்கமற்ற சிலர் அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் நெருங்கிய தொடர்பு எப்படி ஏற்பட்டதோ, யாருக்குத் தெரியும்?

ம- என்ன ஆச்சரியம்!

நரேந்திரர்-

பலர் ஒழுக்கம் தவறி விட்டனர் என்பது எனக்குத் தெரியும். பள்ளி நிர்வாகிகளும் பிள்ளைகளின் பாது காவலர்களும் இந்த விஷயங்களில் சற்று கவனம் செலுத்தினால் நல்லது.

இவ்வாறு ம-வும் நரேந்திரரும் பேசிக்கொண்டிருந்தபோது குருதேவர் தமது அறையிலிருந்து அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தார். சிரித்தவாறே அவர்களிடம், என்னப்பா, என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

நரேந்திரர் (ம-வைக்காட்டி)-

இவருடன் பள்ளியைப்பற்றி பேசிக் கொண்டிருந்தேன். மாணவர்களின் ஒழுக்கம் நன்றாக இல்லை.

அதைக்கேட்டதும் குருதேவர் கம்பீரமான குரலில் ம-விடம் , இந்தப் பேச்செல்லாம் நல்லதல்ல. இறைவனைப் பற்றிய பேச்சைத் தவிர வேறு எந்தப்பேச்சும் நல்லதல்ல. நீ இவர்களைவிட வயதில் பெரியவன். புத்தியும் உள்ளது, இத்தகைய பேச்சுக்களுக்கு நீ இடம் கொடுப்பது சரியல்ல” என்றார். (அப்போது நரேந்திரருக்கு வயது 19 அல்லது 20 இருக்கும். ம-விற்கு 27 அல்லது 28.

ம- இதை எதிர்பார்க்கவில்லை. நரேந்திரர் முதலியவர் களும் மௌனமாக இருந்தனர்.

பிறகு நரேந்திரர் உடபட பக்தர்கள் சாப்பிட ஆரம்பித்தனர். அவர்களின் அருகில் நின்றுகொண்டு, சிரித்துப்பேசி அவர்களை வயிறு நிறைய உண்ணச் செய்தார் குருதேவர். அவர் பேரானந்தத்தில் திளைத்தவராக இருந்தார்.

சாப்பாடு முடிந்ததும் குருதேவரின் அறையில் தரை மீது விரிக்கப் பட்டிருந்த பாயில் அமர்ந்து ஓய்வு கொண்டனர். குருதேவருடன் உரையாடவும் செய்தனர். அது ஓர் ஆனந்தச் சந்தையாகவே இருந்தது. பேச்சிற்கு இடையில் நரேந்திரரை நோக்கி, ஞான வானில் பிரேமையெனும் என்ற பாட்டை ஒரு தடவை பாட மாட்டாயா? என்று கேட்டார். நரேந்திரர் பாட ஆரம்பித்தார். கூடவே மிருதங்கம், ஜால்ரா போன்ற கருவிகளையும் இசைத்தனர்.

குருதேவர் பாடிக்கொண்டே ஆடினார். பக்தர்களும் அவரைச் சுற்றி ஆடினார்கள்.

பாட்டு முடிந்த பின்குருதேவர் வடகிழக்கு வராந்தாவில் நடந்து கொண்டிருந்தார். ஹாஸ்ரா வடக்குப் பக்கமாக உட்கார்ந்திருந்தார். ம-அவருடன் பேசிக்கொண்டிருந்தார். குருதேவரும் அங்கே சென்று அவர்களுடன் அமர்ந்து கொண்டார்.

குருதேவர் ஒரு பக்தரிடம், நீ கனவு-கினவு காண்பது உண்டா? என்று கேட்டார்.

பக்தர்-ஆம், ஓர் அற்புதக் கனவு கண்டேன். இந்த உலகம் முழுவதும் ஒரே தண்ணீர் மயம்! கண்களுக்கெட்டும் தூரம் வரையில் தண்ணீர் தான்! அங்குமிங்குமாக சில படகுகள். திடீரென்று எழுந்த ஒரு பெரிய அலையில்அந்தப்படகுகள் எல்லாம் மூழ்கி விட்டன. நானும் வேறு சிலரும் ஒரு கப்பலில் ஏறிக்கொண்டோம். அந்த வேளையில், கரை காண இயலாத அந்தக் கடலின் மீது ஒரு பிராமணர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடம் நான், உங்களால் எப்படி நடந்து போக முடிகிறது? என்று கேட்டேன். அதற்கு அந்தப் பிராமணர் புன் சிரிப்புடன், இதில் ஒரு கஷ்டமும் இல்லையே! தண்ணீருக்கு அடியில் கீழே உறுதியான ஒரு பாலம் இருக்கிறது” என்று கூறினார். நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று மீண்டும் கேட்டேன். பவானிபூருக்குப்போகிறேன்” என்றார் அவர். நான், கொஞ்சம் இருங்கள், நானும் உங்களோடு வருகிறேன்” என்று கூவினேன்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இதைக்கேட்கவே எனக்கு மயிர்க் கூச்செறிகிறது.

பக்தர்- ஆனால் அந்த பிராமணர், நான் விரைவாகச்செல்ல வேண்டும்” நீ இறங்குவதற்குச் சிறிது நேரம் பிடிக்கும். நான் போகிறேன். இந்தப் பாதையை நினைவில் வைத்துக் கொள். பிறகு வா, என்று கூறிவிட்டார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்- எனக்கு மெய்சிலிர்க்கிறது” நீ சீக்கிரமாக மந்திர தீட்சை பெற்றுக்கொள். இரவு பதினொரு மணி ஆகிவிட்டது. நரேந்திரரும் பிறரும் குருதேவரின் அறையில் தரை மீது படுக்கையை விரித்துப் படுத்தனர்.

 பாகம்- 11  

செவ்வாய், அக்டோபர் 17, 1882

............................

பொழுது விடிந்தது. ஓரிரு பக்தர்கள் விழித்தெழுந்தனர். அறையில் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு குழந்தையைப்போல் ஆடையின்றி, பகவானின் பல்வேறு திருநாமங்களை ஓதியபடி நடந்து கொண்டிருந்தார். சில வேளை கங்கை தரிசனம். சில வேளை தெய்வத்திருவுருவப் படங்களின் அருகில் சென்று வணங்குதல், சிலவேளை இனிய குரலில் பாட்டு, சிலவேளையிலோ வேதம், புராணம், தந்திரம், கீதை,, காயத்ரி, பாகவத, பக்த, பகவான், என்று உச்சரித்தார். சிலவேளை, கீதையை உள்ளத்தில் கொண்டு , தியாகி, தியாகி, தியாகி” என்று கூறினார். இன்னும் சிலவேளையில், நீயே இறைவன், நீயே சக்தி, நீயே தனிப் பரம்பொருள், நீயே உலகாக ஆடல் புரிபவள். நீயே இருபத்து நான்கு தத்துவங்கள்” என்று கூறினார்.

காளி கோயில் மற்றும் ராதாகாந்தர் கோயில்களில் மங்கல ஆரதி நடைபெற்றது. கங்கொலியும் மணியோசையும் காற்றில் மிதந்து வந்தன. பக்தர்கள் எழுந்து வெளியே வந்தனர். பூஜைக்காக பூ பறிக்கத் தொடங்கி விட்டிருந்தனர். நகபத்திலிருந்து காலை வேளையின் வாத்திய இன்னிசை முழங்கிக் கொண்டிருந்தது.

நரேந்திரரும் மற்ற பக்தர்களும் காலைக் கடன்களை முடித்துவிட்டு குருதேவரிடம் வந்தனர். குருதேவர் முகத்தில் இனிய புன்னகை தவழ, தமது அறையின் வடக்கிழக்கு வராந்தாவின் மேற்குப் பகுதியில்நின்று கொண்டிருந்தார்.

நரேந்திரர்-

நானக் சம்பிரதாயத்தைச்சேர்ந்த சாதுக்கள் பஞ்சவடியில் அமர்ந்திருந்ததைக்கண்டேன்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

ஆம், அவர்கள் நேற்று வந்தார்கள். நீங்கள் எல்லோரும் பாயில் சேர்ந்துஉட்காருங்கள், நான் பார்க்கிறேன்.

பக்தர்கள் அனைவரும் பாயில் உட்கார்ந்தனர். குருதேவர் மகிழ்ச்சி பொங்க அவர்களைப்பார்த்தார். பிறகு பேசத் தொடங்கினார். நரேந்திரர் சாதனைகளைப் பற்றி பேச்சை ஆரம்பித்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-(நரேந்திரர் முதலியவர்களிடம்)- பக்தியே சாரம். இறைவனை நேசித்தால் விவேகமும் வைராக்கியமும் தானாகவே வரும்.

நரேந்திரர்-

பெண்களுடன் சேர்ந்து சாதனைகள் செய்வது பற்றி தந்திர சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதா?

ஸ்ரீராமகிருஷ்ணர்- அவையெல்லாம் நல்ல வழிகள் அல்ல. மிகவும் கடினமானவை, பெரும்பாலும் வீழ்ச்சி தான் பலனாக இருக்கும். வீர பாவனை. தாச பாவனை, மாத்ரு பாவனை, என்னுடையது மாத்ரு பாவனை. தாச பாவனையும் நல்லது தான். வீர பாவனை சாதனை மிகவும் கடினமானது. சந்தான பாவனை மிகவும் பரிசுத்தமானது.

அப்போது அங்கு வந்த நானக் சம்பிரதாயத்தைச்சேர்ந்த சாதுக்கள், நமோ நாராயணாய என்று கூறி, குருதேவரை வணங்கினர். குருதேவர் அவர்களை அமருமாறு கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

கடவுளால் இயலாதது எதுவும் இல்லை. அவரது இயல்பை வாக்கினால் யாராலும் விளக்க முடியாது. அவரால் எல்லாம் முடியும். இரண்டு யோகிகள் இருந்தார்கள். இருவரும் சாதனைகள் செய்தவர்கள். ஒரு நாள் நாரத முனிவர் அந்த வழியாகச் சென்றார். அவர்களுக்குள் அறிமுகமான பிறகு அவர்களுள் ஒரு யோகி நாரதரைப் பார்த்து, நீங்கள் நாராயணரிடமிருந்து வருகிறீர்கள் அல்லவா? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?என்றுகேட்டார். அதற்கு நாரதர், அவர்ஓர் ஊசியின் காது வழியாக ஒட்டகம், யானை, போன்றவற்றை நுழைத்துக்கொண்டும் வெளியே எடுத்துக் கொண்டும் இருந்ததை நான் கண்டேன். என்று பதில் சொன்னார். இதைக்கேட்ட ஒரு யோகி, இதிலென்ன விந்தை? அவரால் எதையும் செய்ய முடியும்” என்று கூறினார். மற்ற யோகியோ, இது நடக்க க் கூடிய காரியமா? நீங்கள் ஒரு போதும் பகவானுடைய இருப்பிடத்திற்குச் சென்றதே இல்லை! என்று மறுத்துக்கூறினார்.

காலை சுமார் ஒன்பது மணி. குருதேவர் தமது அறையில் அமர்ந்திருந்தார். கொன்னகரிலிருந்து மனமோகன் குடும்பத் தினருடன் வந்தார். அவர் குருதேவரை வணங்கி, இவர்களைக் கல்கத்தாவிற்கு அழைத்துச் செல்கிறேன்” என்று கூறினார். குருதேவர் அவருடைய நலன்களை விசாரித்துவிட்டு, இன்றுயாத்திரைக்கு நல்ல நாள் அல்லவே! கல்கத்தாவிற்குப் போகிறாய். எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும் என்றார். பிறகு மலர்ந்த முகத்துடன் மனமோகனுடன் வேறு விஷயமாகப்பேசினார்.

நரேந்திரரும் அவருடைய நண்பர்களும் குளித்துவிட்டு வந்தனர். குருதேவர் அன்புடன் நரேந்திரரிடம், போய் ஆலமரத்தடியில் தியானம் செய், ஆசனம் தரட்டும்? என்று கேட்டார்.

பத்தரை மணி, நரேந்திரரும் அவருடைய பிரம்ம சமாஜ நண்பர்கள் சிலரும் பஞ்சவடியில் தியானம் செய்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் குருதேவர் அங்கு சென்றார். ம-வும் சென்றார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-( பிரம்ம சமாஜ பக்தர்களிடம்)- தியான வேளையில் இறைவனில் ஒன்றிவிட வேண்டும். மேல் மட்டத்தில் மிதந்தால், தண்ணீரில் அடியில் உள்ள ரத்தினங்கள் கிடைக்குமா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

மூழ்கும்போது முதலைகள் பிடித்துக்கொள்ளலாம். ஆனால் மஞ்சள் பூசிக்கொண்டால் முதலைகள்நெருங்காது. இதய ஆழம் தனிலே” காமம் முதலான ஆறு முதலைகள் உள்ளன. ஆனால் விவேகம், வைராக்கியம் என்னும் மஞ்சளைப் பூசிக்கொண்டால் அவை உன்னைத் தொடாது.

விவேகமும் வைராக்கியமும் இல்லாமல் வெறும் புலமையும் லெக்சரும் என்ன பயனைத் தரும்? இறைவனே உண்மை, மற்ற அனைத்தும் நிலையற்றவை. இருப்பவர் அவர் மட்டுமே. மற்ற எதுவும் இல்லை. இதன் பெயர் தான் விவேகம்.

முதலில் உன் இதயக்கோளிலில் இறைவனை எழுந்தருளச்செய். பேச்சு, பிரசங்கம், எல்லாம் வேண்டுமானால் பிறகு வைத்துக்கொள். விவேகமும் வைராக்கியமும் இல்லாமல் வெறுமனே பிரம்மம், பிரம்மம் என்று சொல்லிக் கொண்டிருப்பதனால் என்ன பயன்? அது வெறும் சங்குமுழக்கம் தான்.

ஒரு கிராமத்தில் பத்மலோசனன் என்ற சிறுவன் இருந்தான். ஊரார் அவனை, போதோ. போதோ என்று அழைப்பார்கள். பாழடைந்த கோயில் ஒன்று அந்தக் கிராமத்தில் இருந்தது. உள்ளே தெய்வ விக்கிரகம் எதுவும் இல்லை. கோயில் சுவர்களில் அரசும், இது அது என்று பல செடிகளும் முளைத்திருந்தன.கோயிலுக்குள் வௌவால்கள் குடி புகுந்திருந்தன. தரையில் தூசியும் வௌவால்களின் புழுக்கையும் . யாரும் அங்கே போவதில்லை.

ஒருநாள் மாலை மறைந்து இருட்டத் தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் கிராம மக்கள் ஒரு சங்கு முழக்கத்தைக்கேட்டனர். பூம், பூம் என்று அந்தச் சத்தம் கோயிலிலிருந்து தான் வந்து கொண்டிருந்தது. யாரோ ஒருவர் கோயிலில் பகவானின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார். மாலை ஆரதி நடக்கிறது” என்று மக்கள் நினைத்தனர். எனவே சிறுவர், வயதானவர், ஆண், பெண் என்று அனைவரும் ஓடோடிச்சென்று கோயிலின் முன்னால் கூடினர். தெய்வத்தைத் தரிசிக்கலாம். ஆரதியைக் காணலாம் என்பது அவர்களது எண்ணம். கூட்டத்தில் ஒருவன் கோயிலின் கதவை மெல்லத் திறந்து, மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தான். அங்கு பத்ம லோசனன் ஒரு மூலையில் நின்றுகொண்டு பூம், பூம் என்று சங்கை ஊதிக் கொண்டிருந்தான். தெய்வப் பிரதிஷ்டை செய்யப் படவில்லை. இடம் கூட்டிச் சத்தம் செய்யப் படவில்லை. இடம் கூட்டிச் சுத்தம் செய்யப்படவில்லை. வௌவால்களின் புழுக்கையும் அப்படி யே கிடந்தன. எட்டிப் பார்த்தவன் போதோவைப் பார்த்து கத்தினான்.

இதயக்கோவிலில் இறைவனைப் பிரதிஷ்டை செய்ய விரும்பினால், ஆண்டவனை அடைய ஆசைப் பட்டால் வெறுமனே பூம், பூம் என்று சங்கை மட்டும் ஊதுவதில் எந்தப் பயனுமில்லை. முதலில் மனத்தைச் சுத்தமாக்கு. மனம் தூய்மையாகிவிட்டால், அந்தப் புனித ஆசனத்தில் இறைவன் வந்து அமர்வான். வௌவால்களின் புழுக்கை கிடக்கும்போது இறைவனை அழைத்துவர முடியாது. கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஆகிய பதினொரு இந்திரியங்களும் தான் பதினொரு வௌவால்கள். முதலில் தெய்வ பிரதிஷ்டை, பிறகு வேண்டுமானால் பேச்சு, பிரசங்கம் எல்லாம் வைத்துக்கொள்.

முதலில் மூழ்கு, மூழ்கி ரத்தினங்களை எடு, பிறகு மற்றவேலை. ஆனால் யாரும் மூழ்க விரும்புவதில்லை. சாதனை-தவம் கிடையாது. விவேக- வைராக்கியம் கிடையாது. இரண்டொரு வார்த்தைகளைக் கற்றுக் கொள்கிறார்கள். உடனே லெக்சர் செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

மக்களுக்குப் போதிப்பது கடினம். பகவானது தரிசனம் கிடைத்த பிறகு, அவரிடமிருந்து யாராவது ஆணை பெற்றால், பிறகு மக்களுக்குப் போதிக்கலாம்.

இவ்விதம் பேசிக் கொண்டே குருதேவர் வடக்கு வராந்தாவின் மேற்குப் பகுதியில் வந்து நின்றார். ம-வும் அருகில் நின்று கொண்டிருந்தார்.

விவேகமும் வைராக்கியமும் இல்லாவிட்டால் பகவானை அடையவே முடியாது” என்று குருதேவர் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தார். ம-வுக்கு திருமணம் ஆகியிருந்தது.ஆகவே, அவர் தன் நிலை என்ன ஆகுமோ என்று யோசிக்கலானார். அவருக்கு வயது இருபத்தெட்டு. கல்லூரியில் ஆங்கிலக் கல்விசிறிது கற்றிருந்தார். விவேக வைராக்கியம் என்றால் காமினீ- காஞ்சனத்தை விட்டு விடுவதைா? என்று அவர் தமக்குள் சிந்திக்கலானார்.

ம-(ஸ்ரீராமகிருஷ்ணரிடம்)- மனைவி ஒருத்தி கணவனிடம், நீங்கள் என்னைக் கவனிப்பதே இல்லை. நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்று கூறினால் என்ன செய்வது?

ஸ்ரீராமகிருஷ்ணர்-(கம்பீரமான குரலில்)-

இறை நெறியில் தடையாக நிற்கும் அத்தகைய மனைவியைப் புறக்கணித்து விடு. அவள் தற்கொலை தான் செய்து கொள்ளட்டும். அல்லது என்ன வேண்டுமானாலம் செய்து கொள்ளட்டும்! இறைநெறியில் தடையாக இருப்பவள் அவித்யை வடிவான பெண்.

ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவராய்,ம-சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தார். நரேந்திரரும் மற்ற ாப்தர்களும் ஒரு வினாடி வாய்பேசாமல் திகைத்துப்போய் நின்றனர்.

குருதேவர் அவர்களுடன் ஒரு சில வார்த்தைகள் பேசினார். பிறகு திடீரென்று ம-வின் அருகில் சென்று அவரிடம் மிக மெதுவாகக் கூறினார்.

ஆனால் யாருக்கு இறைவனிடம் ஆழ்ந்த பக்தி இருக்குமோ அவனுக்கு அரசன், தீணவர், மனைவி என்று எல்லோரும் அனுகூலமாக அமைந்து விடுவார்கள். ஒருவனுக்கு மனப்பூர்வமான பக்தி இருக்குமானால் காலப்போக்கில் அவனுடைய மனைவியும் இறைநெறியில் செல்வது சாத்தியமாகிவிடும். அவன் நல்லவனாக இருந்தால் இறைவனது அருளால் மனைவியும் நல்லவளாக ஆகிவிடக் கூடும்.

ம-வின் மனக்கவலை என்னும் நெருப்பில் தண்ணெற்ற நீர் பொழிந்தது. தற்கொலை செய்து கொள்வதானால் செய்து கொள்ளட்டும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்று இவ்வளவு நேரமும் நினைத்துக் கொண்டிருந்தார் அவர்.

ம-(ஸ்ரீராமகிருஷ்ணரிடம்)-

உலக வாழ்க்கை மிகவும் பயங்கரமானது தான்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-(ம- நரேந்திரர் ஆகியோரைப் பார்த்து)- அதனால் தான் சைதன்ய தேவர், தம்பி நித்தியானந்தா கவனமாகக்கேள், உலகியல் மனிதர்களுக்கு எந்தக் கதியும் கிடையாது” என்று சொன்னார்.

ம-விடம் குருதேவர் ஒருநாள், தனிமையில் கூறியிருந்தார். இறைவனிடம் தூய பக்தி இல்லாவிட்டால் கதி இல்லை. இறைவனின் தரிசனத்தைப்பெற்ற பிறகு யாராவது உலகவாழ்க்கையில் ஈடுபட்டால் எந்தப் பயமும் இல்லை. அவ்வப்போது தனிமையில் வாழ்ந்து சாதனைகள் செய்து, தூய பக்தியைப்பெற வேண்டும். அப்படிப் பட்டவர் உலக வாழ்க்கையில் இருந்தாலும் எந்தப் பயமும் இல்லை. சைதன்ய தேவருக்கு இல்லற பக்தர்கள் இருந்தார்கள். பெயரள விற்குத்தான் அவர்கள் இல்லறத்தில் இருந்தார்கள், ஆனால் பற்றற்றவர்களாக வாழ்க்கையை நடத்தினார்கள்.

கோயிலில் நைவேத்தியம் நிறைவுற்றுஆரதி நடைபெற்றது. நகபத்தில் வாத்தியங்கள் முழங்கின. இனி அனைவரும் ஓய்வுகொள்வார்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் சாப்பிட அமர்ந்தார். நரேந்திரரும் மற்ற பக்தர்களும் அன்றும் அவருடன் பிரசாதம் உட் கொண்டனர்.



Site Content

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

  பாகம்- 12 

ஞாயிறு, அக்டோபர் 22, 1883

............................................ 

காலை ஒன்பது மணி. விஜய தசமி நாள்.

தட்சிணேசுவரக் காளிகோயிலில் குருதேவர் தமது அறையில் சிறிய கட்டிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.ம- தரையில் அமர்ந்திருந்தார். அவருடன் குருதேவர் பேசிக் கொண்டிருந்தார். சில நாட்களாக ராக்கால் குருதேவருடன் தங்கியிருந்தார். நரேந்திரரும் பவநாத்தும் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தனர். ராம், மனமோகன், சுரேஷ், ம- பலராம் முதலியோர் வாரம் ஒரு முறையாவது குருதேவரைத் தரிசிக்க வருவது வழக்கம். பாபுராம் ஓரிரு முறை வந்து சென்றிருந்தார். குருதேவருடன் ராம்லாலும் ஹாஸ்ராவும் வசித்து வந்தனர்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

பூஜை விடுமுறை தொடங்கி விட்டதா?

ம- ஆம் சுவாமி, சப்தம், அஷ்டமி, நவமி, நாட்களில் நான் கேசவ சேனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

ஸ்ரீராமகிருஷ்ணர்- பிறகு?

ம-

துர்க்கா பூஜையைப் பற்றிய அழகான விளக்கத்தை அங்கே கேட்டேன்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அப்படியா? என்ன சொன்னார்கள்.

ம-

கேசவ சேனின் வீட்டில் தினமும் காலையில் பத்து பதினொரு மணிவரை பூஜை நடைபெறும். இந்த வேளையில் தான் அவர் துர்க்கா பூஜைத் தத்துவத்தை விளக்கினார்.தேவியை அடைய முடியுமானால், அதாவது யாராவது துர்க்கா தேவியை இதயக்கோயிலில் எழுந்தருளச் செய்ய முடியுமானால் , லட்சுமி, சரஸ்வதி, முருகன், கணபதி எல்லோரும் தாமாகவே வருவார்கள். தேவி வந்தால் லட்சுமியும் அதாவது செல்வமும், சரஸ்வதியும் அதாவது அறிவும், முருகன் அதாவது வீரமும், கணபதியும் அதாவது வெற்றியும் எல்லாம் தாமாக வந்து சேரும்.

பூஜை பற்றி கேசவரின் விளக்கங்களைக்கேட்டுக் கொண்டிருந்தார் குருதேவர். இடையிடையேகேள்விகளும் எழுப்பினார். கடைசியில் ம-விடம் கூறினார்.

நீ இங்கே அங்கே போய்க் கொண்டிருக்காதே, இங்கு மட்டும் வா, யாரெல்லாம் அந்தரங்க பக்தர்களோ அவர்கள் இங்கு மட்டும் தான் வருவார்கள். நரேந்திரன், பவநாத், ராக்கால்- இவர்கள் என் அந்தரங்கச் சீடர்கள். இவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்களை நீஒரு நாள் அழைத்துச் செல். நரேந்திரனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

ம- மிக நல்லவன்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அவனிடம் எவ்வளவோ திறமைகள் இருக்கின்றன- பாடுகிறான், இசைக்கருவிகளை வாசிக்கிறான், படிக்கிறான், மேலும் , புலன்களை வென்றவன். திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்கிறான். சிறு வயதிலிருந்தே மனத்தை இறைவனில் வைத்திருக்கிறான்.

குருதேவர்-ம-வுடன் பேச்சைத் தொடர்ந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இப்போதெல்லாம் உன் தியானம் எப்படி இருக்கிறது? உருவ முறை, அருவ முறை- உனக்கு எது பிடித்திருக்கிறது?

ம- உருவ முறையில் என் மனம் ஈடுபடவில்லை. அதே வேளையில் அருவ நிலையில் மனத்தை நிலைபெறச்செய்யவும் முடியவில்லை.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

பார்த்தாயா எடுத்த எடுப்பிலேயே மனம் அருவத்தில் நிலைபெறாது. ஆரம்பத்தில் உருவ முறைதான் நல்லது.

ம- அப்படியானால், இந்த மண் சிலைகளை எல்லாம் தியானிக்க வேண்டுமா?

ஸ்ரீராமகிருஷ்ணர்- ஏன் மண் சிலைகள்? இவை உணர்வு வடிவங்கள்.

ம- அப்படியே இருந்தாலும், கை, கால், எல்லாம் கற்பனை செய்யவேண்டுமே! ஆரம்பத்தில் உருவ தியானம் செய்யாவிட்டால் மனம் ஒரு முகப் படாது என்றும் தோன்றுகிறது. நீங்களும் கூறியிருக்கிறீர்கள். போகட்டும். இறைவனால் எந்த வடிவத்தையும் எடுத்துக் கொள்ள முடியும் அல்லவா? எனவே சொந்தத் தாயின் உருவத்தை தியானம் செய்யலாமா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

செய்யலாம், அவளே குரு. அவள் பிரம்ம ரூபினி.

ம- பேசாமல் இருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு குருதேவரிடம், சுவாமி, அருவக் காட்சி எப்படி இருக்கும்? அதனை விளக்குவது இயலாத காரியமா? என்று கேட்டார்.

குருதேவர்-(சிறிது யோசித்து)-

அது எப்படிப்பட்ட காட்சி தெரியுமா? என்று கூறி சற்று மௌனமாக இருந்தர். பிறகு உருவ, அருவக் காட்சி அனுபவத்தைச்சிறிது விளக்கினார். மீண்டும் மௌனமாக இருந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

விஷயம் என்ன தெரியுமா? இதனைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் சாதனைகள் வேண்டும். அறையினுள் உள்ள ரத்தினங்களைப் பார்க்க வேண்டுமானால், அவற்றை எடுக்க விரும்பினால், அந்த அறையின் சாவியைக் கொண்டு வரவேண்டும், கதவைத் திறக்க வேண்டும். பிறகே ரத்தினங்களை வெளியே கொண்டு வர முடியும். அப்படியில்லாமல்,பூட்டப்பட்ட அறைக்குப் பக்கத்தில் நின்று கொண்டு, இதோ! நான் கதவைத் திறந்து விட்டேன், பெட்டியைத் திறந்து விட்டேன். ரத்தினங்களை வெளியே எடுத்து விட்டேன்” என்றெல்லாம் வெறுமனேநினைத்துக் கொண்டிருந்தால் ஏதாவது நடக்குமா? சும்மா நின்று கொண்டு சிந்திப்பதால் எதுவும் நடக்காது. சாதனைகள் செய்ய வேண்டும்.

ஞானிகள் அருவ தியானம் செய்கிறார்கள். அவதாரங்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. நீயே பூரண பிரம்மம்” என்று அர்ஜுனன் கிருஷ்ணரைத் துதித்தான். உடனே கிருஷ்ணர் அர்ஜுனனிடம், நான் பூரண பிரம்மமா, இல்லையா என்பதை வந்து பார்” என்று கூறி, அவனை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அவனிடம், இங்கே என்ன பார்க்கிறாய்? என்று கேட்டார். ஒரு பெரிய மரம் தெரிகிறது. அதில் கருநாகப் பழத்தைப்போன்ற பழங்கள் கொத்துக் கொத்தாக தொங்குவதைக் காண்கிறேன்” என்றான். கிருஷ்ணர் அவனிடம், இன்னும் கொஞ்சம் அருகில் சென்றுபார். மரத்தில் தொங்குவது கறுப்பு நிறப் பழங்கள் அல்ல, கொத்துக்கொத்தாக என்னைப்போன்ற கிருஷ்ணர்கள் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார். அதாவது பூரண பிரம்மமாகிய மரத்தில் எண்ணற்ற அவதாரங்கள் வருகிறார்கள், போகிறார்கள்.

கபீர்தாஸ் அருவ நிலையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். கிருஷ்ணரைப் பற்றி சொன்னால் அவர், நான் ஏன் அவனை வழி பட வேண்டும்? கோபியர் கைகொட்டித் தாளமிட்டனர். அதற்கேற்ப குரங்கைப்போல் நடனம் ஆடியவன் தானே அவன்! என்பார்.(சிரித்துக்கொண்டே) உருவக் கடவுளை வழிபடுபவர்களுடன் நான் உருவ வாதியாக இருக்கிறேன். அருவத்தை நாடுபவர்களுடன் அருவவாதியாக இருக்கிறேன்.

ம-( புன் சிரிப்போடு)-

நாம் இப்போது யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோமோ அந்தக் கடவுள் எப்படி எல்லையற்றவரோ, அது போல் நீங்களும் எல்லையற்றவர்! உங்கள் ஆழத்தை யாராவும் அறிய முடியாது!

ஸ்ரீராமகிருஷ்ணர்-9சிரித்துக் கொண்டே)-

நீ கண்டு பிடித்து விட்டாயே! விஷயம் என்ன தெரியுமா? எல்லா மதங்களையும் சிறிது கடைப்பிடித்துப் பார்க்க வேண்டும். எல்லாப் பாதை வழியாகவும் போய்ப் பார்க்க வேண்டும். சொக்கட்டான் ஆட்டத்தில் ஒரு காய், எல்லா கட்டங்களையும் கடக்காவிட்டால் எப்படி நடு இடத்தை அடைய முடியும்? அப்படிச் சுற்றி, காய் ஒரு முறை நடு இடமாகிய சொர்க்கத்தை அடைந்த பிறகு எதனாலும் அதை வெட்ட முடியாது.

ம- உண்மை தான் சுவாமி!

ஸ்ரீராமகிருஷ்ணர்-யோகிகள் இருவகை-

பஹுதகர், குடீசகர். பல்வேறு இடங்களுக்குத் தீர்த்த யாத்திரை செல்கின்ற, மனத்தில் இன்னும் அமைதி கிடைக்காத சாதகர்கள், பஹுதகர்கள், பல்வேறு இடங்களிலும் சுற்றி, மனத்தை ஒரு முகப் படுத்தியவர்கள். அமைதி கண்டவர்கள். எங்கும் அலையாமல் ஓரிடத்தில் நிலையாக தங்கிச் சாதனைகள் செய்பவர்கள் குடீசகர்கள். ஒரே இடத்தில் தங்குவதில் தான் அவர்களுக்கு ஆனந்தம். தீர்த்த யாத்திரைகளில் அவர்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. ஒரு வேளை அவர்கள் அப்படிச் சென்றாலும் அது ஒரு புத்துணர்வைப் பெறுவதற்காக மட்டுமே.

இந்து மதம் இஸ்லாம், கிறிஸ்தவம், முதலியவற்றுடன் சாக்தம், வைணவம், வேதாந்தம் என்று எல்லா நெறிகளையும் நான் பின்பற்ற வேண்டியிருந்தது. எல்லா பாதைகள் வழியாகவும் செல்ல வேண்டியிருந்தது. எல்லோரும் அந்த ஒரே கடவுளை நோக்கியே வருகிறார்கள். வெவ்வேறான பாதைகள் வழியாக வருகிறார்கள் என்று அப்போது கண்டேன்.

தீர்த்த யாத்திரை சென்றபோது சில வேளைகளில் எனக்கு மிகுந்த கஷ்டம் ஏற்பட்ட துண்டு. காசியில் ஒருசமயம் மதுர் பாபுவுடன் ராஜாபாபுவின் வரவேற்பறைக்குச் சென்றேன்.அங்கேபணம், நிலம், என்று வெறும் உலகியல் பேச்சுதான் நடந்தது. அதைக்கேட்டதும் நான் அழத் தொடங்கினேன்.தேவியிடம், அம்மா, என்னை எங்கே அழைத்து வந்துள்ளாய்! தட்சிணேசுவரத்தில் நான் மகிழ்ச்சியாக இருந்தேனே! என்று முறையிட்டேன். பிரயாகைக்குச் சென்றேன். அங்கும் அதே குளங்கள். அதே அறுகம்புல், அதே மரங்கள். அதே புளிய மர இலைகள். 

ஆனால் தீர்த்தத் தலங்களில் ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுவது உண்மை. மதுர்பாபுவுடன் பிருந்தாவனம் சென்றேன். மதுர் பாபு வீட்டுப் பெண்களும் ஹிருதயனும்உடனிருந்தனர். அங்கே காளிய மர்த்தனம் செய்த நீர்த்துறையைப் பார்த்தவுடனே என் உள்ளம் கிளர்ந்து எழுந்தது. நான் பரவசத்தில் ஆழ்ந்தேன். யமுனையின் அந்த நீர்த்துறையில் ஹிருதயன் என்னை ஒரு சிறு குழந்தை போல் குளிப் பாட்டுவான்.

மாலை வேளையில் பசுக் கூட்டம் புல் மேய்ந்து விட்டுத் திரும்பும். அந்த வேளையில் யமுனைக் கரையில் நடந்து செல்வேன். மணல் திட்டுகள் வழியாக வருகின்ற பசுக்களைக் கண்டதும் என் மனத்தில் கிருஷ்ணரைப் பற்றிய நினைவு கிளர்ந்து விடும். பைத்தியம் பிடித்தவன்போல், கிருஷ்ணன் எங்கே, கிருஷ்ணன் எங்கே? என்று கதறிக்கொண்டு ஓடுவேன்.

சியாம குண்டத்தையும் ராதா குண்டத்தையும் பார்க்க பல்லக்கில் சென்றேன். வழியில் கோவர்த்தன மலையைப் பார்க்க இறங்கினேன். கோவர்த்தன மலையைக் கண்டதும் மனம் ஒரேயடியாக கிளர்ந்து எழுந்தது. ஒரே ஓட்டமாக ஓடி அதன் மீதே ஏறி விட்டேன். அங்கே புற நினைவிழந்தேன். கிராமவாசிகள் என்னைக் கீழே கொண்டு வந்தனர். சியாம குண்டம் மற்றும் ராதா குண்த்திற்குப் போகும் வழியில் அதே புல்வெளிகள், மரங்கள், பறவைகள், மான்கள், எல்லாவற்றையும் கண்டு புற நினைவை இழந்தேன். அழுதழுது என் ஆடைகள் கண்ணீரால் நனைந்தன. ஓ! கிருஷ்ணா, எல்லாம் இருக்கின்றன. உன்னை மட்டும் காண முடியவில்லையே. என்றெல்லாம் மனத்தில் நினைவுகள் எழுந்தன. பல்லக்கில் அமர்ந்திருந்தேன். ஒரு வார்த்தைகூட பேச சக்தி இல்லை, மௌனமாக இருந்தேன். ஹிருதயன் பல்லக்கின் பின்னால் நடந்து வந்தான். பல்லக்குத் தூக்கிகளிடம் என்னை மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறினான்.

கங்காமாயி என்னிடம் மிகவும் அன்பாக இருந்தார். வயது முதிர்ந்தவர். நிதுவனத்தின் அருகே குடிசை ஒன்றில் தனியாக வசித்து வந்தார். எனது நிலையையும் பரவசத்தையும் கண்ட அவர், சாட்சாத் ராதா தேவியே மீண்டும் இவராக உடல் தரித்து வந்துள்ளான்” என்று கூறினார். அவர் என்னை துலாலி என்று அழைத்தார். அவரைக் கண்டால் உண்பது, குளிப்பது, திரும்பிச்செல்வது என்று எல்லாவற்றையும் நான் மறந்து விடுவேன். சில நாட்கள் ஹிருதயன், நாங்கள் தங்கியிருந்த விட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்து தருவான். சில வேளைகளில் கங்காமாயியும் சமைத்துத் தருவதுண்டு.

கங்காமாயிக்குப் பரவச நிலை வருவதுண்டு. அதைக்காண திருவிழா போல் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஒரு நாள் பரவச நிலையில் அவர் ஹிருதயனின் தோள் மீது அமர்ந்து விட்டார்.

கங்காமாயியை விட்டு விட்டு தட்சிணேசுவரம் திரும்ப எனக்கு விருப்பமே இல்லை. நான் அங்கே தங்குவதற்குத்தேவையான ஏற்பாடுகளும் செய்யப் பட்டன. எனக்குப் புழுங்கல் அரிசி சாதம் வேண்டும். அறையின் ஒரு பக்கம் அவரது படுக்கை, மறு பக்கம் என் படுக்கை.

எல்லா ஏற்பாடுகளும் ஆகிவிட்டன. அப்போது ஹிருதயன், உங்களுக்கோ வயிற்றுக்கோளாறு அதிகம். உங்களை யார் கவனித்துக் கொள்வார்கள்? என்றான். உடனே கங்காமாயி, ஏன்? நான் பார்த்துக் கொள்கிறேன். நான் சேவை செய்வேன்” என்றார். ஹிருதயன் என் ஒரு கையையும் கங்காமாயி இன்னொரு கையையும் பிடித்து இழுக்கத் தொடங்கினர். அப்போது திடீரென்று என் தாயின் நினைவு என்னுள் எழுந்தது. அவர் அப்போது தட்சிணேசுவர கோயிலில், நகபத்தில் தனியாக வசித்துவந்தார். அதன் பிறகு பிருந்தாவனத்தில் என்னால் இருக்க முடியாமல் போயிற்று. உடனே கங்காமாயிடம், முடியாது. நான்போக வேண்டும். என்று சொல்லி விட்டேன். பிருந்தாவனம் மிக நன்றாக இருந்தது. புதிய பயணிகளிடம் பிருந்தாவனச் சிறுவர்கள், ஹரியென்று சொல், பணப்பையைத் திற” என்று கூறுவார்கள்.

பகல் பதினொரு மணி. குருதேவர் காளி கோயில் பிரசாதத்தை உட்கொண்டார். சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு பக்தர்களுடன் பேசத் தொடங்கினார். இடையிடையே ”ஓம், ஓம் என்றும் ஹா! சைதன்யம் என்றும் கூறினார்.

கோயிலில் மாலை ஆரதி தொடங்கியது. அன்று விஜயதசமி. குருதேவர் காளி கோயிலுக்கு வந்தார். பக்தர்கள் காளியை வணங்கிவிட்டு, பிறகு குருதேவரின் பாததூளியைத் தலையில் ஏற்றுக் கொண்டனர். ராம்லால் தேவிக்கு ஆரதி செய்தார். குருதேவர் ராம்லாலை அழைத்து, ஓ ராம்லால்! நீ எங்கே இருக்கிறாய்? என்று கேட்டார்.தேவிக்கு ஸித்தி நைவேத்தியம்” செய்திருந்தனர். குருதேவர் அந்தப் பிரசாதத்தைத் தொடுவார். அதற்காகத் தான் ராம்லாலை அழைத்தார். பக்தர்கள் எல்லோருக்கும் அதில் சிறிது கொடுக்கும் படி கூறினார்.

 பாகம்- 13  

செவ்வாய், அக்டோபர் 24, 1882

.............................

பிற்பகல் மூன்று மணி இருக்கும். தின்பண்டங்கள் வைக்கும் அலமாரியின் அருகில் நின்றுகொண்டிருந்தார் குருதேவர். ம-வும் பலராமும் கல்கத்தாவிலிருந்து வண்டியில் வந்தனர். வந்ததும் குருதேவரை வணங்கினர். அவர்கள் அமர்ந்ததும் குருதேவர் சிரித்தவாறே அவர்களிடம், அலமாரியிலிருந்து கொஞ்சம் இனிப்பு எடுக்கலாம் என்று சென்றேன். இனிப்பில் கையை வைத்தேனோ இல்லையோ பல்லி ஒன்று என் மேல் விழுந்தது. உடனே கையை எடுத்துவிட்டேன்( எல்லோரும் சிரித்தனர்)

ஆம், இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பாரேன், ராக்கால் உடல் நலம் இல்லாமல் இருக்கிறான். எனக்கும் கைகால் வலிக்கிறது. நடந்தது என்ன தெரியுமா? இன்றுகாலைநான் படுக்கையை விட்டு எழுந்த போது ஒருவன் வந்தான். ராக்கால் என்று எண்ணி நான் அவன் முகத்தில் விழித்துவிட்டேன். அது தான்! (எல்லோரும் சிரித்தனர்)

அங்க அடையாளங்களையும் கவனிக்க வேண்டும். அன்றொரு நாள் நரேந்திரன் தன் நண்பன் ஒருவனை இங்கே அழைத்துவந்தான். அவனுக்கு ஒரு கண் சரியாக இருந்தது. மற்றொரு கண் சரியில்லை. அது எப்படியோ போகட்டும். இனியென்ன நேரப் போகிறதோ என்று அடித்துக் கொண்டது என் மனம்.

மற்றொருவன் இங்கே வருவான். அவனிடமிருந்து எதையும் என்னால் உட்கொள்ள முடியாது. அவன் அலுவலகத்தில் வேலை பார்க்கிறான். இருபது ரூபாய் சம்பளம். திருட்டுக் கணக்கு எழுதி இன்னொரு இருபது ரூபாய் சம்பாதிக்கிறான். அவன் பொய் சொல்வதன் காரணமாக அவனிடம் நான் அதிகம் எதுவும் பேச முடிவதில்லை. சில நேரங்களில் வேலைக்குப்போகாமல் இரண்டு மூன்று நாட்கள் இங்கே யே தங்குவான். எதற்குத் தெரியுமா? இங்கு வருகின்ற பெரிய மனிதர் யாரிடமாவது வேறு எங்காவது நல்ல வேலைக்க நான் சிபாரிசு செய்வேன் என்று தான்.

பலராம் பரம வைதீக வைணவக்குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தைக்கு வயதாகி விட்டது. பரம வைணவர். தலையில் குடுமி, கழுத்தில் துளசி மாலை, கையில் ஜபமாலை, எப்போதும் ஜபம் செய்து கொண்டிருப்பார். அவருக்கு ஒரிசாவில் ஏராளமான சொத்து உண்டு. கோட்டார், பிருந்தாவனம் போன்ற பல இடங்களில் ராதா கிருஷ்ணர் கோயில்களும் சத்திரங்களும் கட்டியுள்ளார். பலராம் புதிதாக வரத் தொடங்கியிருந்தார். பேச்சு வாக்கில் குருதேவர் அவருக்குப் பல உபதேசங்களைத் தரலானார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அன்றொரு நாள் இன்னார் இங்கே வந்திருந்தான். அவன் அந்தக் கறுப்பு மூதேவியின், அது தான் அவனைக் கைபிடித்தவளைத் தான் சொல்கிறேன். அவளது தாசன் என்று கேள்விப் பட்டேன். ஏன் இறைவனைக் காண முடிவதில்லை? காமினீ- காஞ்சனம் இடையில் திரையாக மறைப்பதால் தான். அன்று அவன் உன்னிடம் எவ்வளவு திமிராகப்பேசினான்! என் தந்தையிடம் ஒரு பரமஹம்சர் வந்திருந்தார். என் தந்தை அவருக்கு கோழிக்கறி விருந்து படைத்தார்! என்றான்! (பலராம் சிரித்தார்)

இப்போதுள்ள என் நிலையில், தேவிக்குப் படைக்க பட்டிருந்தால் கொஞ்சம் மீன் குழம்பை மட்டும் சாப்பிட முடிகிறது. பிரசாதமாக இருந்தாலும் இறைச்சியை என்னால் சாப்பிட முடிவதில்லை. விரலால் தொட்டு கொஞ்சம் வாயில் வைத்துக் கொள்வேன். தேவிக்குக்கோபம் வந்து விடக் கூடாதே! (எல்லோரும் சிரித்தனர்)

நல்லது, என்னுடைய இந்தநிலை என்ன சொல்லுங்கள் பார்க்கலாம். ஒரு முறை நான் பர்த்வான் வழியாக காமார் புகூருக்கு மாட்டு வண்டியில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது கடுங்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. பார்த்தால், எங்கிருந்தோ சிலர் வந்து வண்டியைச் சூழ்ந்து கொண்டார்கள். என்னுடன் வந்தவர்கள் அவர்களைக் கொள்ளைக் காரர்கள் என்றனர்! நான் தெய்வ நாமங்களை ஓத ஆரம்பித்தேன். ஆனால் சிறிது நேரம், ராம், ராம் , சிறிது நேரம், காளி, காளி, சிறிது நேரம் ”ஆஞ்சநேயா, ஆஞ்சநேயா” என்று பல்வேறு பெயர்களைக் கூறினேன். ஏன் இப்படி சொன்னேன் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

கடவுள் ஒருவரே, அவருடைய திருநாமங்கள் கணக்கற்றவை, அப்படியிருக்க பல்வேறு மதத்தினரும் நெறியினரும் வீணாக அடித்து சாகிறார்கள் என்பதை ஒரு வேளை குருதேவர் சுட்டிக் காட்டுகிறாரோ? 

ஸ்ரீராமகிருஷ்ணர்-(பலராமிடம்).-

காமினீ- காஞ்சனம் தான் மாயை. இவற்றின் பிடியில் நீண்ட நாள் இருக்க நேர்ந்தால் கூருணர்ச்சியை இழக்க நேரிடுகிறது. நான் நன்றாக தான் இருக்கிறேன்” என்றே அவன் நினைத்துக் கொள்வான்.தோட்டி மலக் கூடையைச் சுமந்து செல்கிறான். பழக்க தோஷத்தின் காரணமாக அதன் மீதுள்ள வெறுப்பு அவனுக்குப் போய் விடுகிறது.

இறைவனின் திருநாமத்தையும் புகழையும் பாடுவதில் தொடர்ந்து ஈடுபட்டால் படிப்படியாக பக்தி வருகிறது.(ம-விடம்) அதற்கு வெட்கம் கூடாது. வெட்கம், வெறுப்பு, பயம்- மூன்றும் கூடாது. காமார் புகூரில் பிரமாதமாக பஜனை நடைபெறும். மிருதங்கம் எல்லாம் உண்டு. நகுல் ஆசாரியரின் பாட்டு அற்புதமாக இருக்கும். (பலராமிடம்) பிருந்தாவனத்தில் பூஜைக்கு ஏற்பாடு உண்டா?

பலராம்- ஆம் சுவாமி, ஒரு தோட்டம் உள்ளது. அங்கே சியாம சுந்தருக்கு வழிபாடு நடைபெறுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

நான் பிருந்தாவனத்திற்குப் போயிருந்தேன். நிதுவனம் நல்ல இடம்.!



Site Content

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

   பாகம்- 14

வெள்ளி, அக்டோபர்27, 1882

.......................

இன்று கோஜாகரி லட்சுமி பூஜை நாள். குருதேவர் தமது அறையில் விஜய கோசுவாமி மற்றும் ஹரலாலுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கேசவரின் சீடர்கள் சிலர் வந்து குருதேவரை வணங்கி, சுவாமி. நீராவிக் கப்பல் வந்து விட்டது. நீங்கள் புறப்பட வேண்டும். சற்று வெளியில் சென்று வரலாம். கேசவர் கப்பலில் உள்ளார். தங்களை அழைத்து வருவதற்காக எங்களை அனுப்பினார்.” என்று கூறினார்கள்.

மாலை நான்கு மணி. குருதேவர் படகில் சிறிது தூரம் சென்று நீராவிக் கப்பலில் ஏறிக் கொண்டார். ஏறியது தான் தாமதம், புற உணர்வை இழந்து சமாதியில் ஆழ்ந்தார். அவருடன் விஜய கோசுவாமியும் இருந்தார்.

ம- கப்பலில் நின்று கொண்டு, சமாதியின் அந்த அற்புதக் காட்சியைப் பார்த்தார். ம- மூன்று மணிக்கு கல்கத்தா விலிருந்து கேசவருடன் கப்பலில் புறப்பட்டார். கேசவர் தமது நற்குணங்களாலும் பேச்சுத் திறமையாலும் ம-போன்ற பலவங்க இளைஞர்களின் மனங்களைக்கொள்ளை கொண்டவர். எனவே குருதேவர்- கேசவரின் சந்திப்பைக் காணவும் அவர்களுடைய பேச்சைக்கேட்கவும் ம-மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கேசவரைப் பலர் தமது நெருங்கிய உறவினரை நேசிப்பது போல் நேசித்தனர். அவர் ஆங்கிலம் கற்றவர். மேலை த் தத்துவ சாஸ்திரங்களிலும் இலக்கியங்களிலும் புலமை வாய்ந்தவர். அவர் உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக அதைப் பொம்மை வழிபாடு என்று கேலி செய்வார்.

இத்தகைய ஒருவர் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தரிசிக்க வந்திருக்கிறார். அவரை உள்ளன்போடு நேசிக்கிறார். அவருக்கு மரியாதை காட்டுகிறார். இது விந்தைதானே! இந்த இருவருடைய மனங்களும் எந்த விஷயத்தில், எப்படி ஒன்று சேர்ந்தன என்பதை அறிய ம- போன்ற பலரும் ஆவல் கொண்டிருந்தனர். குருதேவர் உருவமற்ற கடவுளை ஏற்றுக் கொள்கிறார். உருவக் கடவுளையும்வணங்குகிறார். பிரம்மத்தைச் சிந்திக்கிறார். அதே வேளையில் தேவ தேவியர்களின் திருவுருவங்களை மலர் தூவி, சந்தனம் இட்டு பூஜை செய்கிறார். பக்தியில் தம்மை மறந்து ஆடிப் பாடுகிறார். கட்டிலில் படுக்கிறார். சிவப்புக்கரை வேட்டி உடுத்துகிறார். காலுறை, செருப்பு எல்லாம் அணிகிறார்.ஆனால் இல்லறத்தில் ஈடுபடவில்லை. அவரது வாழ்க்கை ஒரு துறவியின் வாழ்க்கைபோல் உள்ளது. அதனால் மக்கள் அவரைப் பரமஹம்சர் என்று அழைக்கின்றனர்.

கேசவரோ உருவமற்ற பரம்பொருளை வணங்குகிறார். மனைவி மக்கள் என்று இல்லறத்தில் இருக்கிறார். ஆங்கிலத் தில் சொற்பொழிவு செய்கிறார். செய்தித்தாளில் எழுதுகிறார். பல்வேறு உலகக் கடமைகளில் ஈடுபட்டிருக்கிறார்.

கேசவரும் பிரம்ம சமாஜ அன்பர்களும் கப்பலில் இருந்தபடியே எதிரேயுள்ள காளி கோயிலின் அழகை ரசித்தனர். கப்பலிலிருந்து சற்றுதூரத்திலேயே, கிழக்கில் படிக்கட்டுகளும் கோளில் முற்றமும் தெரிந்தன. படித்துறைக்கு வலது பக்கம் ஆறும், இடதுபக்கம் ஆறுமாக பன்னிரு சிவன் கோயில்கள், காளி கோயிலின் கோபுரமும் , பஞ்சவடியின் மரங்களும், சவுக்கு மரங்களின் உச்சியும் குளிர் காலத்து நீல வானின் பின்னணியில் அற்புதப்பேரழகுடன் பொலிந்து தோன்றின. மகிழ மரத்தின் அருகிலும், காளிகோயிலின் தெற்குப் பகுதியிலும், நகபத்கள். இரண்டு நகபத்களையும் இணைத்த தோட்டப் பாதையின் இரு புறங்களிலும் வரிசை வரிசையாக பூஞ்செடிகள்.

குளிர் கால வானத்தின் தூய நீல நிறம் கங்கை நீரில் பிரதி பலித்துக் கொண்டிருந்தது. உலகம் ஆனந்த மயமாகக்காட்சியளித்தது.பிரம்ம பக்தர்களின் மனத்திலும் ஆனந்தம் பொங்கியது.மேலே நிர்மலமான நீல வானம், எதிரே அழகிய கோயில். கீழே புனித கங்கை! இவளது கரையில் எத்தனையோ முனிவர்கள். இறைவனைச் சிந்தித்து வந்தனர். இதோ இன்றும்,சனாதன தர்மத்தின் வடிவமாக ஒரு மகாபுருஷர் வாழ்ந்து வருகிறார். இத்தகைய காட்சி எப்போதும் கிடைக்கக் கூடியதல்ல. இத்தகைய இடத்தில் சமாதி நிலையில் ஆழ்கின்ற ஒரு மகாபுருஷரைக் காண்கின்ற யாருக்குத் தான் பக்தி பெருக்கெடுத்து ஓடாது? எந்தக் கல்நெஞ்சுதான் கரையாது?

குருதேவர் வந்த படகு நீராவிக் கப்பலை அடைந்ததும் அனைவரும் குருதேவரைக் காண பரபரப்புடன் ஓடிவந்து மேல் தளத்தில் கூட்டமாகநின்றனர். எந்த வித சிரமமும் இல்லாமல் குருதேவரைக் கப்பலுக்குள் அழைத்து வருவதில் கேசவர்மிகவும் கவனமாக இருந்தார். கஷ்டப்பட்டுத் தான் அவரை உள்ளே அழைத்துவர வேண்டியிருந்தது. அவர் பரவச நிலையிலேயே இருந்தார். ஒருவர் அவரைத் தாங்கியபடி கூட்டி வந்தார். குருதேவரின் கால்கள் மட்டுமே எந்திரம்போல் நகர்ந்தன.

தனியறை ஒன்றில் குருதேவரை அழைத்துச் சென்றார்கள். கேசவர் முதலான பக்தர்கள் அவரை வணங்கினர். குருதேவர் எதையும் உணரவில்லை. அறையில் சில நாற்காலிகளும் மேஜைகளும் இருந்தன. ஒரு நாற்காலியில் அவரை அமரச் செய்தனர். வேறு நாற்காலிகளில் கேசவரும் விஜய கோசுவாமியும் அமர்ந்தனர். மற்ற அன்பர்கள், கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டனர். பலருக்கு அறையில் இடம் கிடைக்கவில்லை. அவர்கள் வெளியிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அமர்ந்ததும் குருதேவர் மீண்டும் சமாதியில் மூழ்கி புறவுலக நினைவை முற்றிலுமாக இழந்தார். அனைவரம் ஒரே பார்வையாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அறை முழுவதும் கூட்டம் நிரம்பியிருந்ததால் காற்று வராமல் குருதேவர் சிரமப் படுவதைக் கண்டார் கேசவர். எனவே ஜன்னல்களைத் திறப்பதற்காக எழுந்தார். விஜயர் அங்கே வந்தது கேசவருக்கு தர்ம சங்கடமாக இருந்ததுகேசவருடைய மகளின் திருமணத்தாலும் வேறு காரணங்களாலும் விஜயர் கேசவரைப் பிரிந்து சாதாரண பிரம்ம சமாஜத்தில் சேர்ந்திருந்தார். பல கூட்டங்களில் கேசவரைத் தாக்கிப்பேசியிருந்தார். எனவேவிஜயரின் வரவு கேசவருக்குச் சற்று சங்கடத்தைக்கொடுத்தது.

பிரம்ம பக்தர்கள் ஆர்வத்துடன் குருதேவரைப் பார்த்துக்கொண்டிருந்தனர். குருதேவரின் சமாதி நிலை கலையத் தொடங்கியது. இருந்தாலும் பரவச நிலையிலேயே இருந்தார். தெளிவற்ற குரலில் மெல்ல தமக்குள், அம்மா, என்னை ஏன் இங்கு அழைத்து வந்தாய்? இவர்களை வேலிக்கு வெளியே கொண்டு வர என்னால் முடியுமா? என்று கேட்டார்.

உலகியல் மக்கள் வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். வெளியில் வர முடியவில்லை. வெளியிலுள்ள ஒளியையும் அவர்களால் காண முடியவில்லை. அவர்களின் கைகால்கள் உலகக் கடமைகளில் கட்டுண்டு கிடக்கின்றன- இதைக் கண்டு கொண்டிருக்கிறாரா குருதேவர்? இவர்களால் சொந்த வீட்டிற்குள் உள்ள உலகத்தை மட்டுமே நினைக்க முடிகிறது. உடல் சுகமும் உலக கடமைகளும் காமினீ- காஞ்சனமும் தான் வாழ்க்கையின் லட்சியம் என்று எண்ணுகிறார்கள் இவர்கள். அதனால் தான் குருதேவர் தேவியிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தாரா?

குருதேவருக்கு சிறிது சிறிதாக வெளியுலக உணர்வு வந்தது. காஜிபூரைச்சேர்ந்த நீலமாதவ பாபுவும், பிரம்ம பக்தர் ஒருவரும் பவஹாரி பாபாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

ஒருபிரம்ம பக்தர்-( குருதேவரிடம்)- சுவாமி இவர்கள் பவஹாரி பாபாவைப் பார்த்து விட்டு வந்திருக்கிறார்கள். அவர் காஜிபூரில் வசிக்கிறார். அவரும் தங்களைப்போல் ஒருவர்.

குருதேவரால் இன்னும் பேச முடியவில்லை. எனவே மென்மையாகப் புன்னகைத்தார். பக்தர் தொடர்ந்து பேசினார், சுவாமி பவஹாரி பாபா தங்கள் புகைப்படம் ஒன்றைத் தம் அறையில் வைத்திருக்கிறார், குருதேவர் தம் உடம்பைக் காட்டிப் புன்னகை செய்தபடி, இந்த உறையையா? என்றார்.

தலையணையும் அதன் உறையும்- உயிரும் உடம்பும். உடல் அழிவது, நிலையில்லாதது, உடலுள் உறையும் உயிர் தான் அழியாது.

உடலின் புகைப்படத்தால் என்ன பயன்? உடல் நிலையற்றது. அதில் கவனம் செலுத்துவதால் என்ன லாபம்? மனிதனின் இதயத்தில் மறைந்து நிற்கின்ற இறைவனை வழிபடுவது தான் செய்யத்தக்கது- இவ்வாறு குருதேவர் கூறுகிறாரா?

குருதேவருக்கு ச் சற்று புறஉணர்வு திரும்பியது. அவர் பேசத் தொடங்கினார்.

ஆனால் ஒன்று, பக்தனின் இதயம்இறைவனின் இருப்பிடம். அவர் எல்லா உயிர்களிலும் உறைகிறார் என்பது உண்மை தான்.ஆயினும் பக்தனின் இதயத்தில் அவர் சிறப்பாக எழுந்தருள்கிறார். ஒரு ஜமீன்தார் தனக்குச் சொந்தமான இடத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பொதுவாக இன்ன வரவேற்பறையில் போனால் அவரைக் காண முடியும் என்பது மக்களுக்குத் தெரியும். அது போல் பக்தனின் மனம் பகவானுடைய வரவேற்பறை. (எல்லோரும் ஆனந்தம் அடைந்தனர்)

ஞானிகள் யாரை பிரம்மம் என்கிறார்களோ அவரையே யோகிகள் ஆன்மா என்கிறார்கள். பக்தர்கள் பகவான் என்கின்றனர். ஒரே பிராமணன், பூஜை செய்யும் போது பூஜாரி, சமையல் செய்யும்போது அவன் சமையல்காரன். ஞான நெறியைப் பின்பற்றுபவனான ஞானி இது அல்ல. இது அல்ல என்று பகுத்தறிகிறான். பிரம்மம் இது அல்ல, அது அல்ல, உயிர்களல்ல, உலகம் அல்ல என்று ஆராய்ந்து அவனது மனம் நிலைப் படுகிறது. ஒடுங்குகிறது, சமாதி வாய்க்கிறது. அப்போது பிரம்ம ஞானம் உண்டாகிறது.

ப்ரஹ்ம ஸத்யம், ஜகத் மித்யா, நாமரூபங்கள், எல்லாம் கனவு போன்றவை என்ற உறுதியான உணர்வு பிரம்ம ஞானியிடம் இருக்கும். பிரம்மம் என்ன என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது. பிரம்மம் ஓர் உருவக் கடவுள் என்றும் சொல்லிவிட முடியாது. ஞானிகள் இவ்வாறு கூறுகிறார்கள்.

ஆனால் பக்தர்கள் எல்லா நிலைகளையும் ஏற்றுக் கொள்கிறார்கள், விழிப்பு நிலையும் உண்மை என்று கொள்கிறார்கள் அவர்கள். இந்த உலகம் கனவு போன்றது என்று அவர்கள் சொல்வதில்லை. இந்த உலகம் இறைவனின் மகிமை என்று பக்தர்கள் கூறுகின்றனர். வானம், நட்சத்திரம், சந்திரன் சூரியன், மலை, கடல் உயிரினங்கள், அனைத்தையும் இறைவன் படைத்திருக்கிறார். அவரது மகிமை, உள்ளே. நம் இதய நடுவில் அவர் இருக்கிறார். வெளியிலும் இருக்கிறார். அவரேஇருபத்து நான்கு தத்துவங்களாக, உயிர்களாக, உலகமாக ஆகியுள்ளார் என்று உயர்ந்த பக்தர்கள் கூறுகின்றனர். பக்தர்கள் சர்க்கரையைக் சுவைக்க விரும்புகிறார்கள்.சர்க்கரையாக ஆக விரும்புவதில்லை. (எல்லோரும் சிரித்தனர்)

பக்தனின் நிலை என்ன தெரியுமா? பகவானே! நீ எஜமான். நான் உன் கேவகன் . நீ என் தாய். தந்தை, நான் உன் பிள்ளை. நீ முழுமை, நான் உன் அம்சம்” என்கிறான் பக்தன். நான் பிரம்மம்” என்றெல்லாம் சொல்வதை பக்தன் விரும்புவதில்லை.

யோகிகள் பரமாத்மாவை அடைய முயற்சி செய்கிறார்கள். ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவது(யோகம்) தான் அவர்களின் லட்சியம். யோகி உலகியல் விஷயங்களிலிருந்து மனத்தைப் பின்னால் இழுத்து பரமாத்மாவில் நிறுத்த முயல்கிறான். அதனால் தான் ஆரம்ப காலத்தில் தனிமையான இடத்திற்குச்சென்று, அசைவில்லாத ஆசனத்தில் அமர்ந்து மனத்தை மற்ற எண்ணங்களிலிருந்து விடுவித்து தியானம் செய்கிறான்.

ஆனால் இருப்பது ஒன்றுதான். பெயரில் தான் வேறு பாடு.யார் பிரம்மமோ அவரே ஆன்மா, அவரே பகவான். ஞானியின் பிரம்மம், யோகியின் பரமாத்மா, பக்தனின் பகவான் எல்லாம் ஒருவரே.

நீராவிக் கப்பல் கல்கத்தாவை நோக்கிச்சென்று கொண்டிருந்தது. அறையில் ஸ்ரீராமகிருஷ்ணர் மீது வைத்த கண்வாங்காமல் அவரையே பார்த்தவாறு அவரது அழுத மொழிகளைக்கேட்டுக் கொண்டிருந்த பக்தர்களுக்கு கப்பல் போககிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. தேனீ மலரில் அமர்ந்த பிறகு ரீங்காரம் செய்யுமா? கப்பல் மெள்ள மெள்ள தட்சிணேசுவரத்திலிருந்து விலகிச்செல்லத் தொடங்கியது. அழகான அந்தக் கோயில் பார்வையிலிருந்து மறைந்தது. கப்பலின் சக்கரங்கள் சுழலத் தொடங்கியதில் நுரையும் அலையுமாக கங்கை அல்லோலகல்லோலப் பட்டது. அந்த அமளி எதுவும் பக்தர்களின் காதுகளில் விழவில்லை. அவர்கள் மலர்ந்த முகத்துடன் அன்பில் தோய்ந்த கண்களும் இனிமை ததும்பும் தோற்றமும் கொண்ட ஆனந்த வடிவினரான அற்புத யோகியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இறைவனைத் தவிர வேறுஎதையும் அறியாத, அனைத்தையும் துறந்த, அன்பால் நிறைந்த ஒரு தபஸ்வியைப் பார்த்தபடி அசைவற்றிருந்தனர்.

குருதேவர் தொடர்ந்து பேசலானார்-

படைத்தல், காத்தல், அழித்தல் , உயிர், உலகம், எல்லாம் சக்தியின் விளையாடல் என்கின்றனர்ஞானிகள். ஆராய்ந்து பார்த்தால் இவை எல்லாம் கனவு போன்றவை. பிரம்மம் ஒன்றே உள்ளது. மற்ற எதவும் கிடையாது. சக்தியும் கனவைப்போன்றது தான்.

ஆனால் ஆயிரம் ஆராய்ச்சி செய்தாலும் சமாதி நிலைமை அடையாமல் சக்தியின் எல்லையை விட்டு வெளியேவர முடியாது. நான் தியானம் செய்கிறேன்” நான் சிந்தனை செய்கிறேன்”- இவையெல்லாம் சக்தியின் எல்லைக்கு உட்பட்டவை. சக்தியின் ஐசுவரியத்திற்கு உட்பட்டவை.

எனவே பிரம்மமும் சக்தியும் வேறல்ல. ஒன்றை ஏற்றுக் கொண்டால் மற்றொன்றையும் ஏற்றேயாக வேண்டும்.- நெருப்பும் அதன் சூடு்ம்போல், நெருப்பை ஏற்றுக் கொண்டால் அதன் சூட்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சூட்டை விட்டு விட்டு நெருப்பை நினைக்க முடியாது. நெருப்பை விட்டு விட்டு அதன் சூட்டையும் நினைக்க முடியாது. சூரியனை விட்டு விட்டு அதன் கதிர்களை நினைக்க முடியாது. கதிர்களை விட்டு விட்டு சூரியனையும் நினைக்க முடியாது.

பால் எப்படியிருக்கிறது? ஓ, வெண்மை, வெண்மை தான். பாலை விட்டு விட்டு அதன் வெண்மை நிறத்தை மட்டும் நினைக்க முடியாது. அதுபோல் பாலின் வெண்மை நிறத்தை விட்டு விட்டு பாலையும் நினைக்க முடியாது. இது போன்றே பிரம்மத்தை விட்டு விட்டு சக்தியையோ, சக்தியை விட்டு விட்டு பிரம்மத்தையோ நினைக்க இயலாது. இறைவனை விட்டு விட்டு உலகையோ, உலகை விட்டு விட்டு இறைவனையோ நினைக்க முடியாது.

ஆத்யா சக்தி ஆடல் மயமானவள். அவள் படைக்கிறாள், காக்கிறாள், அழிக்கிறாள். அவளுடைய பெயர்தான் காளி. காளி தான் பிரம்மம், பிரம்மமே காளி. இருவரும் ஒருவரே. ஆக்கல் , அழித்தல், அளித்தல் என்று எந்தச் செயலும் இல்லாமல் அவள் இருப்பதாக நாம் நினைக்கும்போது பிரம்மம் என்கிறோம். இந்தச் செயல்களைச் செய்யும்போது அவளைக் காளி என்கிறோம். சக்தி என்கிறோம். உள்ளது ஒன்று, நாமரூபம் தான் வேறு.

தண்ணீர் ஒன்றே, அதையே ஜலம், வாட்டர், பானி என்றெல்லாம் அழைக்கிறோம். ஒரு குளத்திற்கு மூன்று நான்கு படித்துறைகள். ஒரு துறையில் இந்துக்கள் நீர் அருந்துகிறார்கள். அவர்கள் அதைத் தண்ணீர் என்கிறார்கள். மற்றொரு படித்துறையில் முகமதியர்கள் நீர் அருந்துகிறார்கள். அவர்கள் பானி என்கிறார்கள். இன்னொரு துறையில் ஆங்கிலேயர்கள் நீர் அருந்துகிறார்கள். அவர்கள் வாட்டர் என்கிறார்கள். மூன்றும் ஒன்றுதான். பெயரில் தான்வேறுபாடு. இறைவனைச் சிலர் அல்லா என்கிறார்கள், சிலர் காட் என்கின்றனர். சிலர் பிரம்மம் என்கிறார்கள். சிலர் காளி, ராமர், ஹரி, ஏசு துர்க்கை என்றெல்லாம் கூறுகின்றனர்.

கேசவர்-(புன்முறுவலுடன்)-

காளி எத்தனை நிலைகளில் திருவிளையாடல் புரிகிறாள்? சொல்லுங்கள்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-(புன்னகையோடு)- அவள் பல்வேறு நிலைகளில் விளையாடுகிறாள். அவளே மகா காளி, நித்ய காளி, ஸ்மசான காளி, ரஷா காளி, சியாமா காளி, மகா காளி, நித்ய காளி பற்றி தந்திர நாஸ்திரங்களில் உள்ளது. படைப்பே இல்லாமல், சந்திரன் சூரியன் கிரகங்கள் பூமி எதுவுமே இல்லாமல், எங்கும் காரிருள் மயமாக இருந்தபோது தேவி மட்டும் உருவமற்ற மகா காளியாக மகா காலனுடன் விளங்குகிறாள்.

சியாமா காளிக்கு மென்மையான பல வடிவங்கள். வரமும் அபயமும் தருபவள் அவள். வீடுகளில் அவளையே பூஜிப்பார்கள்.

தொற்று நோய், பஞ்சம், நிலநடுக்கம், பெருமழை வறட்சி போன்ற காலங்களில் ரஷா காளியை வழிபட வேண்டும்.

ஸ்மசான காளிசக்தி, பிணம், நரி, மற்றும் டாகினி,யோகினி போன்றதேவதைகள் சூழ சுடுகாட்டில் உறைபவள். அவளது வாயிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்கும். கழுத்தில் மனிதத் தலை மாலை, இடுப்பில் மனிதக் கை மாலை. அண்ட சராசரங்கள் அழியும்போது, மகா பிரளய காலத்தில் படைப்பிற்கான விதைகளை தேவியே சேகரித்து வைக்கிறாள். பாட்டியிடம் அது இது எல்லாம் போட்டு வைப்பதற்கு ஒரு பானை இருக்கும். அவள் அதில் பல்வேறு சாமான்களைப்போட்டு வைத்திருப்பாள். ((கேசவரும் மற்ற வரும் சிரித்தனர், குருதேவரும் சிரித்துக்கொண்டே) ஆம். பாட்டியிடம் இப்படி ஒரு பானை இருக்கும். அதனுள் கடல் நுரை, வாயு மாத்திரை, சுரை வெள்ளரி, பூசனி விதைகளின் சிறு சிறு பொட்டலங்கள் எல்லாம் போட்டு வைத்திருப்பாள். தேவைப்படும்போது வெளியே எடுப்பாள். பிரம்மமயியான தேவியும் பிரபஞ்சம் அழிந்த பிறகு எல்லா விதைகளையும் சேகரித்து வைக்கிறாள். படைப்பிற்குப் பிறகு ஆத்யா சக்தி உலகத்தின் உள்ளேயே உறைகிறாள். உலகத்தை ஈன்றெடுக்கிறாள், உலகின் உள்ளும் உறைகிறாள் அவள். வேதம் சிலந்தி பற்றிக் கூறுகிறது.-சிலந்தியும் அதன் வலையும் . சிலந்தி தனக்குள் இருந்தே வலையைத் தோற்றுவிக்கிறது. பிறகு அந்த வலையிலேயே வசிக்கவும் செய்கிறது. கடவுள் உலகத்திற்கு ஆதாரமாகவும் இருக்கிறார். அதன் உள்ளும் இருக்கிறார்.

காளி என்ன கரு நிறத்தவளா? தொலைவில் இருப்பதால் கறுப்பு, நெருங்கி அறிய முடிந்தால் கறுப்பு அல்ல. தொலைவிலிருந்து வானம் நீல நிறமாகத் தெரிகிறது. அருகில் சென்று பாருங்கள், எந்த நிறமும் இல்லை. தொலைவிலிருந்து பார்க்கும்போது கடல் நீரும் நீலமாகத்தான் தெரிகிறது. அருகில் சென்று கையில் எடுத்துப் பாருங்கள். அந்த நீருக்கு நிறமே இல்லை.

குருதேவர் மீண்டும் பேசத்தொடங்கினார்.

பந்தம், முக்தி- இரண்டையும் படைத்தவள் அவளே. அவளுடைய மாயையால் தான்உலகியல் மக்கள் காமினீ- காஞ்சனத்தில் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவளது கருணை பிறந்தால் முகதர்களாகவும் ஆகிறார்கள். அவள் சம்சாரத் தளைகளை அறுத்தெறிந்து காப்பவள்.

அவள் ஆடல் மயமாவனவள். இந்த உலகம் அவளது திருவிளையாடல். நினைத்ததை செய்பவள் அவள். அவள் ஆனந்தமயமானவள்! லட்சக்கணக்கானவர்களில் யாரோ ஒருவருக்குத்தான் முக்தியை அருள்கிறாள்.

பிரம்ம பக்தர்-

சுவாமி அவள் விரும்பினால் எல்லோருக்குமே முகதி அளித்துவிட முடியும் அல்லவா? நம்மையெல்லாம் ஏன் சம்சார பந்தத்தில் ஆழ்த்திவைத்திருக்கிறாள்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அது அவளது திருவுளம். இவ்வாறெல்லாம் விளையாட வேண்டும் என்பது அவளது விருப்பம். கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே தாய்ச்சியைத் தொட்டு விட்டால் ஆட்டமும் சாட்டமும் மேலும் தொடராது. எல்லோரும் தொட்டு விட்டால் ஆட்டம் எப்படித் தொடரும்? எல்லோரும் தொட்டு விடுவது அந்தத் தாய்ச்சிக்கு எரிச்சலையே தரும். விளையாட்டு தொடர்ந்தால் அவளுக்கு மகிழ்ச்சி.

மனத்திடம் அவள் ரகசியமாகக் கண்சிமிட்டி, போ! போய் உலகத்தை அனுபவி, என்று கூறியுள்ளார். இதில் மனத்தின் குற்றம் என்னஃ அவளே அருள் கூர்ந்து மனத்தைத் திருப்பினால் மனம் உலகியலிலிருந்து விடுபடுகிறது. அதன் பிறகு அவளது தாமரைத் திருவடிகளை நாடுகிறது.

உலக மக்களின் நிலையிலிருந்து குருதேவர் தேவியிடம் முறையிட்டு பாடத் தொடங்கினார்.

பிறகு குருதேவர் பேசத் தொடங்கினார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அவளது மாயையில் மயங்கித்தான் மனிதர்கள் உலகில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதையேராம் பிரசாதர், என் மனம் அமைத்தாய், உன்றன் இச்சைப்போல் அச்சில் வார்த்தாய், அருள் விழிச் சாடை காட்டி அனுமதி அளித்தாய், என்று பாடினார்.

பிரம்ம பக்தர்-

சுவாமி, அனைத்தையும் துறக்காமல் இறைவனை அடைய முடியாதா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

(சிரித்துக்கொண்டே)

ஓ முடியும். நீங்கள் அனைத்தையும் துறக்க வேண்டியதில்லை. சுகம் போகம் என்று நீங்கள் நன்றாகத் தான் இருக்கிறீர்கள், உண்மையில் நீங்கள் வெல்லப்பாகில் இருக்கிறீர்கள்- கட்டி வெல்லமாகவும் இல்லை, கரைந்த வெல்லமாகவும் இல்லை, கொஞ்சம் கட்டி, கொஞ்சம் தண்ணீர் சேர்ந்த நள பாகம்.(எல்லோரும் சிரித்தனர்) உங்கள் காரியம் எல்லாம் பேஷ்தான்.

நக்ஸ் சீட்டாட்டம் தெரியுமா? நான் அதிக எண்ணிக்கை எடுத்து, விலகி நிற்கிறேன்.நீங்களோ மிகவும் புத்திசாலிகள். சிலர் பத்து எடுத்திருக்கிறீர்கள். சிலர் ஆறு, சிலர் ஐந்து, நீங்கள் அதிக எண்ணிக்கை எடுக்கவில்லை. எனவே என்னைப்போல் வெளியேறவும் இல்லை. ஆட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. பேஷ், பேஷ் (எல்லோரும் சிரித்தனர்)

உண்மையாகச் சொல்கிறேன். நீங்கள் இல்லறத்தில் இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் மனத்தை இறைவனிடம் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பயனில்லை. ஒரு கையால் உலகக் கடமைகளைச் செய்யுங்கள். மற்ற கையால் இறைவனைப் பற்றிக்கொள்ளுங்கள். கடமைகள் முடிந்தால் இரண்டு கைகளாலும் இறைவனைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

எல்லாம் மனத்தைப் பொறுத்தது. மனத்தில் தான் பந்தம், மனத்தில் தான் முக்தி. அதனை எந்த நிறத்தில் தோய்க்கிறீர்களோ அந்த நிறம் பெறும். வண்ணானிடமிருந்து வந்திருக்கிற துணியைப்போன்றது மனம். சிவப்பு ச் சாயத்தில் தோய்த்தால் சிவப்பு, நீலச் சாயத்தில் தோய்த்தால் நீலம், பச்சையில் தோய்த்தால் பச்சை. எந்தச் சாயத்தில் தோய்க்கிறீர்களோ அந்த நிறம் பெறுகிறது. பாருங்களேன், கொஞ்சம் ஆங்கிலம் படித்து விட்டால் போதும், உடனே ஃபுட், ஃபாட், (எல்லோரும் சிரித்தனர்) அதோடு விட்டானா! காலில் பூட்ஸ், சீட்டியடித்துப் பாடுவது எல்லாம் வந்து சேர்கின்றன. இனி சம்ஸ்கிருதம் படித்த பண்டிதனானால் உடனே சம்ஸ்கிருத சுலோகங்களைஉதிர்க்கத் தொடங்கி விடுவான். மனத்தைத் தீய சகவாசத்தில் வைத்திருந்தால் தீய பேச்சும் தீய சிந்தனையும் வந்து விடுகிறது. பக்தர்களுடன் சகவாசம் வைத்திருந்தால் இறை சிந்தனையும் தெய்வீகப் பேச்சும் வருகின்றன.

மனத்தைப் பொறுத்து தான் எல்லாம் . ஒரு பக்கம் மனைவி, இன்னொரு பக்கம் மகள். அவன் இருவரிடமும் வெவ்வேறுவிதமாகப் பழகுகிறான். ஆனால் மனம் ஒன்றுதான்.

மனத்தில் தான் ஒருவன் கட்டுண்டவன். மனத்தில் தான் முக்தன். ”நான் முக்தன், இல்லறத்தில் இருந்தாலும் சரி, காட்டில் இருந்தாலும் சரி, எனக்கென்ன பந்தம்? நான் இறைவனின் குழந்தை. ராஜாதிராஜாவின் பிள்ளை. யார் என்னைக் கட்டுப்படுத்த முடியும்? பாம்பு தான் கடிக்கட்டும், விஷம் இல்லை என்று உறுதியாக நினைத்தால் விஷம் இறங்கிவிடும். அது போல் திரும்பத் திரும்ப, நான் கட்டுண்டவன் அல்ல. முக்தன்” என்று உறுதியாகச்சொல்லி வந்தால் அப்படியே ஆகி விடுகிறது.

கிறிஸ்தவர்களின் நூல் ஒன்றை யாரோ ஒருவர்ஒருநாள் கொண்டு வந்தார். நான் அதைப் படிக்கச்சொன்னேன். அதில் இருந்தெல்லாம் வெறும் ”பாவம்” பாவம்” பாவம்” தான்.(கேசவரிடம்) உங்கள் பிரம்ம சமாஜத்திலும் பாவம், பாவம் தான் பேச்சு. நான் கட்டுண்டவன், நான் கட்டுண்டவன்” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கின்ற உதவாக்கரை கட்டுண்டவனாகவே ஆகி விடுகிறான்” ”நான் பாவி” நான் பாவி” என்று இரவும் பகவும் பிதற்றுபவன் அப்படியே ஆகி விடுகிறான்.

என்ன, நான் இறைவனின் திரு நாமத்தைச்சொல்கிறேன். என்னிடம் இன்னும் பாவம் இருக்க முடியுமா? எனக்கு என்ன பாவம்? எனக்கு என்ன பந்தம்? இறைநாமத்தில் இத்தகைய உறுதியான நம்பிக்கை வேண்டும்.

கிருஷ்ண கிஷோர் தீவிர இந்து. ஆசார சீலரான பிராமணர். அவர் பிருந்தாவனத்திற்குச் சென்றிருந்தார். ஒரு நாள் அங்குமிங்கும் சுற்றியதில் அவருக்குத் தாகம் எடுத்தது. ஒரு கிணற்றருகே சென்றார். அங்கே ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனிடம், என்னப்பா, ஒரு செம்பு தண்ணீர் கொடுக்க முடியுமா? நீ என்ன ஜாதி,? என்று கேட்டார். அதற்கு அவன், ஐயா! நான் தாழ்ந்த வகுப்பினன். சக்கிலியன்” என்றான். அதற்குக் கிருஷ்ணகிஷோர், சிவ என்று சொல்லி தண்ணீர் இறைத்து கொடு” என்றார்.

இறை நாமத்தைச் சொல்வதால் மனிதனுடைய மனம், உடல் எல்லாமே பரிசுத்தமாகின்றன.

வெறும் பாவம், நரகம், என்றெல்லாம் ஏன் பேச வேண்டும்? தீயவை செய்து விட்டேன், இனி செய்ய மாட்டேன்” என்று ஒரு முறை சொல், இறை நாமத்தை நம்பு.

தூய பக்தியை மட்டுமே நான் தேவியிடம் வேண்டினேன். கைகளில் மலரெடுத்து அவளுடைய திருத்தாமரைகளில் இட்டு, அம்மா, இதோ உனது பாவம், எடுத்துக்கொள், இதோ உனது புண்ணியம் எடுத்துக்கொள். எனக்குத் தூய பக்தியைக்கொடு. இதோ உனது ஞானம். எடுத்துக்கொள். இதோ உனது அஞ்ஞானம், எடுத்துக்கொள். எனக்குத் தூய பக்தியைக்கொடு. இதோ உனது தூய்மை, எடுத்துக்கொள். இதோ உனது அசுத்தம், எடுத்துக்கொள். எனக்குத்தூய பக்தியைக்கொடு.இதோ உன் தர்மம்.எடுத்துக்கொள். இதோ உன் அதர்மம். எடுத்துக்கொள். தூய பக்தியை மட்டும் எனக்குக் கொடு. என்றெல்லாம் வேண்டினேன்.

இல்லற வாழ்வில் இறையனுபூதி ஏன் கிடைக்காது? ஜனகருக்குக் கிடைத்தது. ராம்பிரசாதர் இந்த உலகை மாய மாளிகை என்று கூறுகிறார். ஆனால் இறைவனுடைய பாத கமலங்களில் பக்தி கொண்டு விட்டாலோ,

ஆனால் திடீரென்று யாரும் ஜனகராகி விட முடியாது.ஜனக மன்னர் தனிமையில் கடின தவம் செய்துள்ளார்.

இல்லறத்தில் இருந்தாலும், அவ்வப்போது தனிமையில் வாழ வேண்டும். மூன்று நாட்களாவது வீட்டை விட்டுத் தனிமையில் சென்று இறைவனை நாடி அழுதால் அது நல்லது. அது முடியவில்லை என்றால் ஒரு நாளாவது தனிமையில் இருந்து இறைவனைச் சிந்தித்தால் அதுவும் நல்லது தான். மனைவி மக்களுக்காக குடங்குடமாக க் கண்ணீர் விடுகிறார்கள்.இறைவனுக்காக யார் அழுகிறார்கள். சொல், இறைவனை நாடி, அவ்வப்போது தனிமையில் சாதனைகள் செய்ய வேண்டும். இல்லறத்தில் பல்வேறு கடமைகளுக்கு இடையில் மனத்தை ஒரு முகப் படுத்துவதற்கு ஆரம்பக் காலத்தில் பல தடைகள் ஏற்படத் தான் செய்யும். நடைபாதையிலுள்ள மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது செடியாக இருக்கும்போது வேலியிடாவிட்டால் ஆடு மாடுகள் மேய்ந்து விடும். ஆரம்ப நிலையில் வேலி வேண்டும். அடி பருத்து விட்டால் பிறகு வேலி தேவையில்லை. அதில் யானையைக் கட்டினால் கூட ஒன்றும் ஆகாது.

நோயோ விஷ ஜுரம், இதில் நோயாளியின் அறையில் குடத்தில் தண்ணீரும் புளி உறுகாயும் உள்ளன.நோயாளி குணமடையவேண்டுமானால் முதலில் அவனை அந்த அறையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். உலகியல் மனிதன் ஜுர நோயாளி. போகப் பொருட்கள் தான் தண்ணீர்க்குடம். இன்ப நாட்டம் தான் தாகம். ஊறுகாயை நினைத்தாலே நாக்கில் நீர்ஊறுனிறது. அதை அருகில் கொண்டு வரக் கூட தேவையில்லை. இத்தகைய பொருள் கூட வீட்டில் உள்ளது, அது தான் பெண்ணின் உறவு. எனவே தனிமைச் சிகிச்சை வேண்டும்.

விவேகமும், வைராக்கியமும் பெற்ற பிறகே இல்லறத் தில் ஈடுபட வேண்டும். வாழ்க்கைக் கடலில் காமம், கோபம், முதலான முதலைகள் உள்ளன. மஞ்சளை உடம்பில் பூசிக் கொண்டு நீரில் இறங்கினால் முதலைகளைக்குறித்துபயப்பட வேண்டியதில்லை. விவேக வைராக்கியம் தான் மஞ்சள். உண்மை- உண்மையற்றது. இவற்றைப் பகுத்தறிவதே விவேகம். இறைவனே உண்மை. அவரே நிலையானவர். மற்றவையெல்லாம் உண்மையற்றவை. நிலையற்றவை. இரண்டு நாட்களுக்கே இருப்பவை. இந்த உணர்வும், இறைவனிடம் அனுராகமும் வேண்டும் . அவரிடம் ஈர்க்கப்பட வேண்டும். அன்பு வேண்டும். கோபியர் கண்ணனிடம் இத்தகைய ஈர்ப்பைப் பெற்றிருந்தார்கள்.

ராதையையும், கிருஷ்ணனையும் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி, அவர்கள் இருவருக்கும் இடையே நிலவிய இந்த ஈர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். இறைவனுக்காக இத்தகைய ஏக்கம் வருவதற்காக முயற்சி செய்யுங்கள். மன ஏக்கம் இருந்தால் போதும். இறைவனை அடையமுடியும்.

கங்கையில் நீரிறக்கம் தொடங்கியது. கப்பல் கல்கத்தா நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தது. (ஹௌரா) பாலத்தைக் கடந்து கம்பெனியின் தோட்டமும் தெரிந்தது. இன்னும் சிறிது தூரம் செல்லுமாறு காப்டனுக்குக் கூறப்பட்டிருந்தது.

கப்பல் எவ்வளவு தூரம் சென்றுள்ளது என்பது பலருக்கும் தெரியாது. அவர்கள் தங்களை மறந்து குருதேவரின் அமுத மொழிகளைக்கேட்டுக் கொண்டிருந்தனர். நேரம் எப்படி போகிறது என்பதே யாருக்கும் தெரியவில்லை.

தேங்காய் துருவல் கலந்த பொரி கொடுக்கப் பட்டது. அனைவரும் தங்கள் ஆடை துனியில் அதனைச் சிறிது வாங்கி உண்ணலாயினர். அங்கே ஆனந்த சந்தை தான். பொரிக்கு கேசவர் ஏற்பாடு செய்திருந்தார்.

கேசவரும் விஜயரும் அப்போதும் ஒருவரை ஒருவர் தவிர்ப்பதை குருதேவர் கவனித்தார். அவர்களின் மனக்கசப்பை நீக்கி இருவரையும் மீண்டும் நண்பர்களாக்க த் திருவுளம் கொண்டார். உயிர்களின் இன்பத்தில் இன்பம் அடைபவர் அல்லவா அவர்!

ஸ்ரீராமகிருஷ்ணர்-(கேசவரிடம்)-

இதோ பாருங்கள். இங்கே விஜயர் வந்துள்ளார். உங்கள் சண்டை சிவனுக்கும் ராமனுக்கும் நடந்த சண்டைபோல் உள்ளது.(சிரிப்பு) ராமனின் குருசிவன். சிவனின் குரு ராமன். இருவருக்கும் போர் நடந்தது. உடனே அவர்கள் சமாதானமாகி யும் விட்டார்கள். ஆனால் சிவ பெருமானுடைய பூதகணங்களுக்கும் ராமனின் குரங்குப் பட்டாளத்திற்கும் இடையில் சண்டையும் அடிதடியும் நிற்கவில்லை. (உரத்த சிரிப்பு)

மிகவும் நெருக்கமானவர்களுக்கு இடையே இவ்வாறு உண்டாகவே செய்கிறது. லவ குசர்கள் ராமனுடன் போரிட்டனர். தாயும் மகளும் தனித்தனியாக செவ்வாய் விரதம் இருப்பார்கள். தாயின் நலனும் மகளின் நலனும் வெ்வேறா என்ன? இல்லை. இவளின் நன்மையில் அவளுக்கு நன்மை உண்டாகிறது. அவளின் நன்மையில் இவளுக்கு நன்மை உண்டாகிறது. அது போல் இவருக்கு ஒருசமாஜம் உள்ளது, அவருக்கும் ஒன்று வேண்டும்.(அனைவரும் உரக்கச் சிரித்தனர்)ஆனால் இதெல்லாம் வேண்டியது தான். இல்லாவிட்டால் பகவானே பிருந்தாவனத்தில் கோபியருடன் விளையாடும்போது, ஜடிலனும் குடிலனும் எதற்கு? ஜடிலனும் குடிலனும் இல்லாமல் விளையாட்டு சுவைக்காது. (எல்லோரும் சிரித்தனர்) ஜடில குடிலர்கள் இல்லா விட்டால் தமாஷ் ஏது?

ராமானுஜர் விசிஷ்டாத்வைதவாதி, அவரது குருவோ அத்வைதி. இறுதியில் இருவருக்கும் கருத்து வேறுபாடு. ஒருவர் மற்றவரைக் கண்டிக்க ஆரம்பித்தனர். இவ்வாறெல்லாம் நடக்கவே செய்யும்.ஆனால் எது எப்படியானாலும் அவர்கள் குரு- சீடர், குரு- சீடராகவே இருந்தார்கள்.

அனைவரும் மகிழ்ந்தனர்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-(கேசவரிடம்)

நீங்கள் மனிதர் களின் இயல்பை எடைபோட்டு, அவர்களைச் சீடராகக்கொள்வதில்லை. அதனால் தான் இப்படி பிரிந்து பிரிந்து போகிறார்கள்.

மனிதர்கள் அனைவரும் பார்க்க ஒரே போல் தான் இருக்கிறார்கள்.ஆனால் இயல்போ மனிதருக்கு மனிதர் வேறு படுகிறது. சிலரிடம் சத்வ குணம் அதிகம், சிலரிடம் ரஜோ குணம் , சிலரிடம் தமோ குணம். கொழுக்கட்டைகள் எல்லாம் பார்க்க ஒரே போல் தான் உள்ளன. ஆனால் சில வற்றின் உள்ளே திரட்டுப் பால், சிலவற்றின் உள்ளே தேங்காய், இன்னும் சிலவற்றில் உளுத்தம் பருப்பு,(எல்லோரும் சிரித்தனர்)

என்னுடைய மனப்போக்கு என்ன தெரியுமா? நான் உண்டு உறங்கி காலம் கழிக்கிறேன், மற்றவையெல்லாம் தேவி அறிவாள்.குரு, கர்த்தா, பாபா என்ற மூன்று சொற்கள் என் உடம்பில் முள்ளாகக் குத்துகின்றன.

குரு ஒருவரே, அவரே சச்சிதானந்தம். அவரே உபதேசிக்கிறார். குழந்தைக்குத் தாயிடம் உள்ள மனப்போக்கே என்னுடையது. லட்சக்கணக்கில் மனித குருக்களைப்பெறலாம். எல்லோருமே குருவாக விரும்புகிறார்கள். சீடராக இருப்பதற்கு யார் விரும்புகிறார்கள்?

பிறருக்கு உபதேசிப்பது மிகவும் கடினம்? இறைவனே தரிசனம் தந்து, ஆணை பிறப்பித்தால் தான் அது முடியும். நாரதர், சுகதேவர் போன்றோருக்கு ஆணை இருந்தது. ஆதிசங்கரரும் ஆணை பெற்றிருந்தார். ஆணை கிடைக்கவில்லை என்றால் உங்கள் பேச்சை யார் கேட்பார்கள்?

கல்கத்தாவாசிகளின் ஆரம்ப சூரத்தனம் உங்களுக்குத் தெரிந்தது தானே! அடுப்பில் நெருப்பு எரியும்வரை பால் கொதித்துப்பொங்கும், நெருப்பை எடுத்துவிட்டால் எல்லாமே அடங்கிப்போகும். இது போன்றது தான் கல்கத்தா மக்களின் சூரத்தனமும். தண்ணீர் வேண்டும் என்று இதோ அங்கே கிணறு தோண்டுவார்கள். பாறை தட்டுப் பட்டால் விட்டு விடுவார்கள். வேறோர் இடத்தில் தோண்டுவார்கள். அங்கே மணல் தட்டுப்படும். அங்கும் விட்டு விட்டு, மற்றோர் இடத்திற்குச் சென்று மீண்டும் ஆரம்பிப்பார்கள். இப்படியே போய்க் கொண்டிருக்கும்.

இறையாணை கிடைத்து விட்டதாக வெறுமனே நினைத்துக்கொள்வதால் எதுவும் நடக்காது. அவர் உண்மையிலேயே நமக்கு தரிசனம் தருகிறார்.நம்மோடு பேசுகிறார். அப்போது ஆணை கிடைக்கலாம். ஆணை பெற்றவனுடைய பேச்சின் சக்தி எப்படிப்பட்டது தெரியுமா? அது மலைகளைப் புரட்ட வல்லது. வெறும் லெக்சர்! அதை நான்கு நாட்கள் மக்கள் கேட்பார்கள். பிறகு மறந்துவிடுவார்கள். அதைப் பின்பற்றி நடக்க மாட்டார்கள்.

காமார் பகூரில் ஹல்தார் புகூர் என்று ஒரு குளம் இருக்கிறது. அதன் கரையில் தினமும் மக்கள் காலையில் வெளிக்குப் போவார்கள். காலையில் குளிக்க வருவோர் அவர்களைக் கண்டபடி திட்டி விட்டுப்போவார்கள். மறுநாளும் இதே கதை தான். அசுத்தம் செய்வது நின்ற பாடில்லை. கடைசியில் ஊர் மக்கள் கம்பெனியில் தெரிவித்தனர். அவர்கள் ஒரு காவல் காரனை அனுப்பி வைத்தனர். அவன் வந்து, ” இங்கு யாரும் அசுத்தம் செய்யக் கூடாது” என்று எழுதப் பட்ட காகிதத்தை ஒட்டினான். அவ்வளவு தான், எல்லாம் நின்றுவிட்டது.

மக்களுக்குப் போதிப்பதற்கு இறைவனுடைய அதிகார முத்திரை வேண்டும். இல்லாவிட்டால் போதனை கேலிக் கூத்தாகிவிடும். தனக்கே இல்லை. இதில் அடுத்தவனுக்குக் கொடுக்கிறானாம்! குருடன் குருடனுக்கு வழி காட்டிய கதைதான். விளைவு விபரீதம் ! இறை தரிசனம் பெற்றவனுக்கு அகக் காட்சி உண்டாகிறது. யாருக்கு என்ன நோய் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியும். அப்போது அவன் உபதேசிக்கலாம்.

ஆணை பெறா விட்டால், நான் உலகிற்கு உபதேசிக்கிறேன்” என்ற ஆணவம் வந்து விடுகிறது. ஆணவம் வருவது அறியாமை காரணமாக.அறியாமை காரணமாகவே ”நான் கர்த்தா”. அவர் தான் எல்லாவற்றையும் செய்பவர். நான் எதையும் செய்யவில்லை” என்ற உணர்வு ஏற்படுமானால் அவன் ஜீவன் முக்தன். நானே செய்பவன், நானே செய்பவன்” என்ற நினைப்பிலிருந்து தான் எல்லா துன்பங்களும் அமைதியின்மையும் வருகின்றன.

கேசவர் முதலிய பக்தர்களைப் பார்த்து)- உலகிற்கு நல்லது செய்ய வேண்டும்” என்று நீங்கள் சொல்கிறீர்கள். உலகம் அவ்வளவு சிறியதா என்ன? உலகத்திற்கு உதவ நீங்கள் யார்? சாதனைகள் செய்து இயைவனை அறியுங்கள், அவரைப்பெறுங்கள். அவர் ஆற்றலைத் தந்தால் தான் எல்லோருக்கும் உதவி செய்ய முடியும். இல்லாவிட்டால் துளியளவும் முடியாது.

ஒரு பக்தர்-

காட்சி கிடைக்காதவரை எல்லா காரியங்களையும் விட்டு விட வேண்டுமா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

வேண்டாம், எதற்காக விட வேண்டும்? கடவுளைச் சிந்தித்தல், அவரது திருப்பெயரையும் மகிமைகளையும் பாடுதல், நித்திய கர்மம்- எல்லாவற்றையும் செய்யத்தான் வேண்டும்.

பிரம்ம பக்தர்-

அப்படியானால் குடும்பக் கடமைகள், அதாவது பணம் சம்பாதிப்பது போன்றவை?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அவற்றையும் செய்யலாம். குடும்பத்தை நடத்த எந்த அளவுக்கு வேண்டுமோ, அந்த அளவுக்குச்செய்ய வேண்டும். ஆனால் அவற்றையும் பற்றின்றி செய்வதற்காக தனிமையில் இறைவனிடம் கண்ணீருடன் பிரார்த்திக்க வேண்டும்.” எம்பெருமானே, அதிகமாக செயல்களில் ஈடுபடும்போது நான் உன்னை மறந்து போவதைக் காண்கிறேன். எனவே என் உலகக் கடமைகளைக் குறைத்துவிடு. பற்றின்றி வேலை செய்வதாகத் தான் நினைக்கிறேன். ஆனால் பற்று எப்படியோ நுழைந்து விடுகிறது- இவ்வாறு பிரார்த்தனை செய். அன்னதானம்போன்ற தரும காரியங்களை அதிகமாக செய்யச்செய்ய பெயரும் பெருமையும் பெற வேண்டும் என்ற ஆசை தோன்றிவிடுகிறது.

ஆஸ்பத்திரிகள், ஸ்கூல், சாலைகள், குளங்கள், எல்லாம் ஏற்படுத்துவது பற்றி சம்புமல்லிக் ஒரு முறை கூறினார். அதற்கு நான், உங்களிடம் வந்து சேர்பவற்றை, தவிர்க்க முடியாதவற்றை, செய்யக் கூடாது என்பதில்லை. ஆனால் அவற்றையும் பற்றின்றி செய்ய வேண்டும். வரிந்து கட்டிக் கொண்டு பல வேலைகளில் ஈடுபடுவது நல்லதல்ல. அது கடவுளை மறக்கச் செய் து விடும். என்றேன்.ஒருவன் காளி காட் கோயிலுக்க வந்தான். தானம் செய்ய ஆரம்பித்தான்.ஆனால் காளியை தரிசிக்கவில்லை.(எல்லோரும் சிரித்தனர்)

முதலில் எப்படியாவது கூட்டத்தில் புகுந்து, இடியும் உதையும் பெற்றாவது காளியின் தரிசனத்தைப்பெற்றுவிட வேண்டும். அதன் பிறகு வேண்டிய அளவு தான தருமம் செய்யுங்கள். அல்லது செய்யாமல் இருங்கள். வேண்டுமானால் செய்து கொண்டே இருங்கள். செயல்கள் எல்லாம் இறையனுபூதிக்காகவே இருக்க வேண்டும். சம்புவிடம், கடவுள் உன் முன்னால் வந்தால் அவரிடம் இத்தனை ஆஸ்பத்திரிகளும் இத்தனை டிஸ்பென்சரிகளும் கட்டிக் கொடு என்றா கேட்பீர்கள்? என்று கேட்டேன். பக்தன் ஒரு போதும் அப்படி கேட்க மாட்டான். மாறாக, பகவானே! உனது தாமரைத் திருவடிகளில்எனக்கு இடம் கொடு, எப்போதும் என்னை உன் அருகிலேயே வைத்துக்கொள். உன் பாதத் தாமரைகளில் எனக்கு தூய பக்தியைக்கொடு“ என்றுதான் வேண்டுவான்.

கர்ம யோகம் மிகவும் கடினமானது. சாஸ்திரங்கள் விதிக்கின்ற கர்மங்களையெல்லாம் செய்வது இந்தக் கலியுகத்தில் மிகவும் கடினம். இப்போது மக்களின் வாழ்க்கை உணவையே ஆதாரமாகக்கொண்டுள்ளது. அதிகமான கருமங்களும் கிரியைகளும் செய்ய அவர்களால் முடியாது. காய்ச்சல் கண்டவனுக்கு நாட்டு மருந்தும் பத்தியமும் என்று ஆரம்பித்தால், நோய் தீருமுன் அவனே போய்ச்சேர்ந்துவிட நேரலாம். நீண்ட கால சிகிச்சையெல்லாம் ஒத்துவராது. இப்போது டி. குப்தாவின் மருந்து தான் ஏ்றது. கலியுகத்திற்கு பக்தியோகம், அதாவது பகவானுடைய பெயரையும் மகிமைகளையும் பாடுவதும் பிரார்த்தனை செய்வதும் தான் ஏற்ற வழி. இந்த யுகத்தின் தர்மம் பக்தியோகம் தான்.

(பிரம்ம பக்தர்களைப் பார்த்து) நீங்களும் பக்தியோகத்தையே பின்பற்றுகிறீர்கள். ஹரி நாமத்தைப் பாடுகிறீர்கள். அன்னையின் புகழைப் பாடுகிறீர்கள். நீங்கள் பாக்கிய சாலிகள். உங்கள் போக்கு நல்லது. வேதாந்திகள் சொல்வது போல், இந்த உலகம் ஒரு கனவு போன்றது என்று சொல்வதில்லை. நீங்கள் அத்தகைய பிரம்ம ஞானிகள் அல்ல. நீங்கள் பக்தர்கள். இறைவனை ஒரு தனி நபராக நினைக்கிறீர்கள், அதுவும் நல்லது. நீங்கள் பக்தர்கள். மன ஏக்கத்துடன் அவரை அழைத்தீர்களானால் , நிச்சயம் அவரை அடைவீர்கள்.

கப்பல் கொய்லாகாட் துறையை அடைந்தது. எல்லோரும் இறங்க தயாரானார்கள். அறையைவிட்டு வெளியே வந்தபோது வானத்தில் முழுநிலா தான்றியிருப்பதையும், கங்கை நீர் நிலவின் ஒளியில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்டு மகிழ்ந்தனர். குருதேவர் செல்வதற்காக வண்டிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. குருதேவரும் ம-வும் மற்றும் சில பக்தர்களும் அதில் ஏறிக் கொண்டனர். குருதேவருடன் கொஞ்ச தூரம் சென்று வழியனுப்புவதற்காக கேசவரின் தம்பி மகனான நந்தலாலும் வண்டியில் அமர்ந்தார். வண்டியில் அனைவரும் அமர்ந்ததும் குருதேவர், எங்கே? அவர் எங்கே? என்று கேசவரைப் பற்றி கேட்டார். அப்படி கேட்டுக் கொண்டிருக்கும் போதே சிரித்த முகத்துடன், கேசவர் அங்கே வந்து, இவருடன் யார் யார் போகிறீர்கள்? என்று கேட்டார். எல்லோரும் வண்டியில் அமர்ந்ததும், அவர் வீழ்ந்து வணங்கி குருதேவருடைய பாத தூளியை ஏற்றுவிடை பெற்றார். குருதேவரும் அன்போடு விடை தந்தார்.

வண்டி ஆங்கிலேயர்களின் குடியிருப்பு வழியாகச்சென்றது. அழகிய ராஜ பாதை. சாலையின் இரு பக்கங்களிலும் அழகிய வீடுகள்.

வானத்தில் உதித்தெழுந்த குளிர் நிலவில் அந்த வீடுகள் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பது போல் தோன்றின. இரவை ஒளிமயமாக்கிய வண்ணம் வீட்டு வாசல் களில் க்யாஸ் விளக்குகள் எரிந்தன. வீடுகளின் அறைகளுள் விளக்குகள் ஒளி வீசின. பல வீடுகளில் ஆங்கிலேயப்பெண்கள் ஆர்மோனியம் , பியானோ முதலியவைகளை வாசித்தபடி பாடிக் கொண்டிருந்தனர்.

குருதேவர் ஆனந்தமாக வண்டியில்போய்க் கொண்டிருந்தார். திடீரென்று, எனக்கு தாகமாக இருக்கிறது. என்ன செய்வது? என்றார். நந்தலால் இந்தியா கிளப்பின் முன்னால் வண்டியை நிறுத்தி, மாடிக்குச்சென்று கண்ணாடி டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து தந்தார். டம்ளர் கழுவப் பட்டுள்ளதா? என்று கேட்டுவிட்டு, அதனை க்குடித்தார். சிறுவனின் இயல்பு அவருடையது.

வண்டி நகர்ந்தது.குருதேவர் தலையை வெளியே நீட்டி பாதையில் செல்கின்ற மக்கள், வண்டிகள், குதிரை, நில வொளி, முதலியவற்றைப் பார்த்து மகிழ்ந்தார். அவரது மகிழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றனர். நந்தலால் கலுடோலாவில் இறங்கினார்.

பிறகு வண்டி சிமூலியா தெருவிலுள்ள சுரேஷ் மித்ரரின் வீட்டின் முன்னால் நின்றது. குருதேவர் அவரை சுரேந்திரர் என்று அழைப்பார். அவர் குருதேவரின் பரம பக்தர். அப்போது அவர் வீட்டில் இல்லை, தமது புதிய தோட்டத்திற்குச் சென்றிருந்தார்.

வண்டியில் வந்தவர்கள் அமர்வதற்காக வீட்டிலுள்ளோர் ஓர் அறையைத் திறந்து கொடுத்தனர். வண்டி வாடகை கொடுக்க வேண்டும். யார் கொடுப்பது? சுரேந்திரர் இருந்தால் கொடுத்திருப்பார்.

குருதேவர் ஒரு பக்தரிடம், பெண்களிடம் போய் வண்டி வாடகை வாங்கிவா. சுரேந்திரர் தட்சிணேசுவரத்திற்கு வந்து போவது அவர்களுக்குத் தெரியாதா என்ன? என்று கூறினார்.

நரேந்திரரின் வீடும் இந்தப் பகுதியில் தான் இருந்தது. அவரை அழைத்து வர குருதேவர் ஆளனுப்பினார். குருதேவர் மாடியில் ஓர் அறைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். தரையில்கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது.அதன் மீது ஓரிரு மெத்தையும் திண்டுகளும் வைக்கப் பட்டிருந்தன. சுரேந்திரரின் விருப்பப்படி வரையப்பட்ட ஓவியம் ஒன்று சுவரில் மாட்டப் பட்டிருந்தது. அதில் ஸ்ரீராமகிருஷ்ணர் கேசவருக்கு இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்கள் மற்றும் சைவ, வைணவ, சாக்த நெறிகள் இவைகளுக்கு இடையே சமரசத்தை விளக்கிக்கொண்டிருந்தார்.

குருதேவர் சிரித்த படி அமர்ந்து,பேசிக் கொண்டிருந்தார். அப்போது நரேந்திரர் வந்தார். அது குருதேவரின் ஆனந்தத்தை இரண்டு மடங்காக்கியது போல் இருந்தது. அவர் கூறினார், இன்று கேசவருடன் கப்பலில் ஆனந்தமாகப்போய் வந்தோம். விஜயரும் இவர்களும் வந்தனர். செவ்வாய் விரதமிருக்கின்ற தாய்- மகள் பற்றியும், ஐடில குடிலர்கள் இல்லாவிட்டால் விளையாட்டில் சுவை இருக்காது என்பது பற்றியும் விஜயருக்கும் கேசவருக்கும் எப்படி விளக்கினேன் என்பதை (ம- வைச் சுட்டிக் காட்டி) இவனிடம் கேட்டுப் பார்(ம- விடம்) அப்படித்தானே.

ம- ஆம், சுவாமி.

இரவு வெகுநேரமாகி விட்டது. மணி பத்தரை. சுரேந்தர் இன்னும் வந்த பாடில்லை. குருதேவர் தட்சிணேசுவரம் செல்ல வேண்டியிருந்தால் அதற்கு மேலும் தாமதிக்க முடிவில்லை. வண்டி வந்ததும் ம-வும் நரேந்திரரும் வணங்கி விடைபெற்றனர். ஸ்ரீராமகிருஷ்ணர் வண்டியில் அமர்ந்ததும் வண்டி நிலவொளி வீசும். வீதிகள் வழியாக தட்சிணேசுவரம் நோக்கிச்சென்றது.



Site Content

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

 பாகம்- 15  

சனிக்கிழமை, அக்டோபர் 28, 1882

..........................

சித்தியிலுள்ள பிரம்ம சமாஜத்திற்கு இன்று ஸ்ரீஸ்ரீ குருதேவர் வந்திருந்தார். அங்கே பிரம்ம சமாஜத்தின் அரையாண்டு விழா. அதில் கலந்து கொள்ளத்தான்அவர் அழைக்கப் பட்டிருந்தார். மாலை மூன்று அல்லது நான்கு மணி இருக்கும். குருதேவர் சில பக்தர்களுடன் தட்சிணேசுவரத்திலிருந்து வேணி மாதவ பாலின் அழகிய தோட்ட வீட்டிற்கு வந்து சேர்ந்தார். பிரம்ம சமாஜக் கூட்டங்கள் அங்கே நடைபெறுவதுண்டு. குருதேவர் பிரம்ம சமாஜத்தை மிகவும்நேசித்தார். பிரம்ம பக்தர்களும் அவரிடம் மிகுந்த பக்தியும் சிரத்தையும் கொண்டிருந்தனர். முந்தின நாள் தான், அதாவது வெள்ளியன்று கேசவர் மற்றும் அவரது சீடர்களுடன் நீராவிக் கப்பலில் பக்தர்கள் சூழ தட்சிணேசுவரத்திலிருந்து கல்கத்தா வரை ஆனந்தமாக குருதேவர் கங்கையில் பயணம் செய்தார்.

சிந்தி, பைக் பாடாவின் அருகில், உள்ளது. கல்கத்தா விலிருந்து மூன்று மைல் இருக்கும். தோட்ட விடு அழகானதென்று முன்பே கூறினோம்.ஏகாந்தமான இடத்தில் அமைந்திருந்ததால் அது தியானத்திற்கும் வழி பாட்டிற்கும் மிகவும் ஏற்றதாக இருந்தது. சரத்காலம், வசந்தகாலம், என்று வருடத்திற்கு இரண்டு முறை வீட்டின் சொந்தக் காரர் அங்கே விழா நடத்துவார். இந்த விழாவின்போது அவர் கல்கத்தா மற்றும் சிந்திக்கு அருகிலுள்ள பக்தர்களை அழைப்பார். அதனால் தான் கல்கத்தாவிலிருந்து சிவநாத் முதலான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களுள் பலரும் காலை வழிபாட்டில் கலந்து கொண்டனர். மாலையிலும் வழிபாடு நடக்கும். அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

குறிப்பாக குருதேவர் வருவார் என்று கேள்விப் பட்டிருந்ததால் மிகுந்த ஆவலுடன் அவரது வரவை எதிர்பார்த்திருந்தனர்.

இந்த மாலையில் அந்த மகா புருஷர் வருவார். ஆனந்தமே உரு வெடுத்தாற்போன்ற அவரைக் கண்குளிரக் காணலாம், மனத்தைக் கவரும் அவருடைய அமுத மொழிகளைக்கேட்கலாம். இனிமை ததும்பும் பாடல்களைக்கேட்கலாம். தேவர்களுக்கும் காணக் கிடைக்காத அற்புத நடனத்தைக் காணலாம். என்றெல்லாம் அவர்களின் எண்ணம் சுழன்று கொண்டிருந்தது.

பிற்பகலிலிருந்தே பக்தர்கள் வரத் தொடங்கி விட்டனர். பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர். சிலர் அழகிய குளத்தின் கரையோரமாக உறவினர்களுடன் உலவிக் கொண்டிருந்தனர். சிலர் குருதேவரின் அமுத மொழிகளைக் கேட்பதற்கு வசதியான இடங்களில் அமர்ந்து கொண்டிருந்தனர்.

தோட்டத்தின் வாசலில் ஒரு வெற்றிலை பாக்குக் கடை இருந்தது. அதைக் கடந்து உள்ளே சென்றால் ஒரு பூஜை அறையில் நுழைந்தது போலிருக்கும். இரவில் யாத்ரா நடைபெறும்.

எங்கும் ஆனந்தமயமானதொரு சூழ்நிலை நிலவியது. சரத் காலத்தின் நீல வானம் பளிச்சென்று நிர்மலமாக இருந்தது. மரம் , செடி கொடிகள், மலர்கள், இவைகளிலிருந்து மணத்தை அள்ளிக்கொண்டு, காற்று பரமானந்தமாக வீசியது. மேலே தெரிகின்ற வானம், கீழே இருக்கின்ற விலங்குகள். பறவைகள், மரங்கள், செடி கொடிகள் என்று அனைத்தும் ஒரே சுருதியில் ஏதோ இன்ப இசை எழுப்பிக் கொண்டிருப்பது போலிருந்தது. இறைவனின் அருட்கிரணம் இதயத்தில் வீசப்போவதாலா ஆனந்தத் தென்றல் இங்கே அலைவீசிச் செல்கிறது!

எல்லோரும் இறைவனைக் காணத் துடிப்பது போலிருந்தது. அந்த வேளையில் வீட்டு வாசலில் குருதேவரின் வண்டி வந்து நின்றது. அனைவரம் எழுந்து நின்று அந்த மகா புருஷரைவரவேற்றனர். அவர் வந்து விட்டார்! நாலா பக்கங்களிலிருந்தும் மக்கள் வந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

சமாஜ வீட்டின் முக்கிய அறையில் மேடை போடப் பட்டிருந்தது.. அந்த இடம் முழுவதும் மக்களால் நிறைந்திருந்தது. முன்னால் ஒரு வாராந்தா, அங்கே தான் குருதேவர்அமர்ந்திருந்தார். அங்கும் மக்கள் கூட்டம். வராந்தாவின் இரண்டு பக்க அறைகளிலும் மக்கள். அறையின் வாசலில் நின்று உள்ளே எட்டிப் பார்த்தவாறும சிலர் நின்றிருந்தனர். வராந்தாவிற்கு ஏறிவருவதற்கான படி ஒரு கோடி முதல் மறு கோடி வரை பரந்ததாக இருந்தது. அதிலும் முழுவதும் ஆட்கள்.

படியின் அருகில் ஓரிரு மரங்கள். ஒரு பக்கம் ஒரு கொடி மண்டபம். அதில் ஓரிரு பெஞ்சுகள். அவற்றிலும் ஏறி நின்று கொண்டு, கழுத்தை வளைத்து எட்டிப் பார்த்தபடி காதுகளைத் தீ்ட்டிக்கொண்டு அந்த மகா புருஷரைப் பார்த்தவாறு நின்றனர் சில பக்தர்கள்.

வரிசை வரிசையாக பூஞ்செடிகளும் பழ மரங்களும் நின்றன. தவழ்ந்து வந்த தென்றலில் அந்த மரங்கள் எல்லாம் மெல்ல சாய்ந்தாடிக்கொண்டிருந்தன. ஆனந்தம் பொங்க அவை அவரை வரவேற்பது போலிருந்தது அந்தக் காட்சி.

சிரித்தபடியே குருதேவர் இருக்கையில் சென்று அமர்ந்தார். அனைவரது கண்களும் அந்த ஆனந்த மூர்த்தியின் மீது ஒரே நேரத்தில் பதிந்தன. மேடையில் நாடகம் ஆரம்பிக்குமுன் பார்வையாளர்களுள் சிலர் சிரித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் வீட்டு விஷயங்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். சிலர் தனியாகவோ நண்பர்களுடனோ நடந்து கொண்டிருப்பார்கள். சிலர் வெற்றிலைப்போட்டுக் கொண்டிருப்பார்கள். சிலர் புகையிலையைக் குதப்பிக் கொண்டிருப்பார்கள். ஆனால் திரைவிலகியதும் எல்லா சத்தங்களும் அடங்கிவிடும். எல்லோரும் ஒரே மனத்துடன் நாடகம் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அது போன்ற சூழ்நிலையே இப்போது உருவாகியிருக்கிறது. பல்வேறு மர்களை நாடி பறந்து கொண்டிருக்கின்ற வண்டினம் தாமரை மலரின் மணத்தை நுகர்ந்தால் மற்ற மலர்களை விட்டு விட்டு, தாமரையிலுள்ள தேனைக் குடிக்க விரையும், அந்த நிலையில் இருந்தனர் பக்தர்கள்.

குருதேவர் சிரித்த முனத்தோடு, சிவநாத் முதலானோர் அமர்ந்திருந்தபக்கம் திரும்பி கூறினார். இதோ பாருங்கள், சிவநாத்! நீங்கள் எல்லோரும் பக்தர்கள். உங்களைப் பார்ப்பதில் எனக்குப்பேரானந்தம் உண்டாகிறது. கஞ்சா குடிக்கின்ற ஒருவன் அதுபோன்ற மற்றொருவனைக் கண்டால் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறான். சிலவேளை அவர்கள் கட்டித் தழுவவும் செய்வார்கள். (சிவநாத்தும் மற்றவர்களும் சிரித்தனர்)

இறை சிந்தனையில்லாதவர்கள் என்று நான் தெரிந்து கொள்பவர்களிடம், நீங்கள் சற்று போய் அங்கே உட்காருங்கள்” என்பேன். அல்லது போங்கள், பில்டிங் எல்லாவற்றையும் பார்த்து வாருங்கள்” என்பேன்.

சில வேளைகளில் பக்தர்களுடன் வீணர்களும் வருவார்கள். உலகியலில் மூழ்கிக் கிடக்கின்ற அவர்களுக்கு இறைவனைப் பற்றிய பேச்சு பிடிக்காது. பக்தர்கள் என்னிடம் நீண்ட நேரம் இறை விஷயங்களைப்பேசிக் கொண்டிருக்க நேரலாம். அங்கே அவர்கள் இருப்புக் கொள்ளாமல் நெளிவார்கள். கடைசியில் பொறுமையிழந்து, எப்பொழுது போகலாம்,? என்ற பக்தர்களின் காதில் தொண தொணக்கத் தொடங்கிவிடுவார்கள். அதற்கு பக்தர்கள், கொஞ்சம் பொறுங்கள், இதோ போகலாம், இப்போது போகலாம், என்பார்கள். உடனே அவர்கள் சலிப்புடன், நீங்கள் பேசிக் கொண்டிருங்கள், நாங்கள் படகில் காத்திருக்கிறோம்” என்பார்கள்

உலகியல் மனிதர்களிடம், எல்லாவற்றையும் துறந்து விட்டு, இறைவனின் தாமரைத் திருவடிகளை நாடுங்கள்“ என்று சொன்னால் ஒரு போதும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் சைதன்யர், நித்தியானந்தர் ஆகிய இரண்டு சகோதரர்களும் ஆலோசித்து, அத்தகையோரை இழுக்க ஒரு தந்திரம் செய்தார்கள். மாகூர் மீன் குழம்பு சாப்பிடுங்கள்” இளம் பெண்களைத் தழுவுங்கள். ஹரி நாமத்தைச் சொல்லுங்கள்” என்று அவர்கள் கூறினார்கள். முதல் இரண்டின் ஆசையினால் பலர் ஹரிநாம சங்கீர்த்தனத்தில் பங்கு கொண்டனர். ஹரி நாம அமுதத்தில் சிறிது ஆனந்தம் பெற்றதும், மாகூர் மீன் குழம்பு என்பது ஹரிப் பிரேமையினால் ஏற்படக் கூடிய ஆனந்தக் கண்ணீர் என்றும், இளம் பெண்களை த்தழுவுதல் என்றால். ஹரிப்பிரேமையால் பூமியில் புரள்வது என்றும் தெரிந்து கொண்டனர்.

மக்களை எப்படியாவது ஹரி நாமத்தைச்சொல்ல வைத்து விடுவார் நிதாய். இறை நாமத்திற்கு விசேஷ மகிமை இருக்கிறது” என்பார் சைதன்ய தேவர். பலன் உடனே கிடைக்காவிட்டாலும் என்றாவது ஒரு நாள் கிடைக்கவே செய்யும், வீடுகளில் உத்திரங்களில் வைக்கப் படும் விதை போல், பல நாட்களுக்குப் பிறகு வீடு இடிந்து போயிற்று. அப்போது அந்த விதை மண்ணில் விழுந்து முளைத்தது. கனிகளும் தந்தது.

உலகிறல் மனிதர்களிடம் சத்வம், ராஜசம், தாமசம், என்று மூன்று குணங்கள் அமைந்திருப்பது போல் பக்தியிலும் இந்த மூன்று குணங்கள் உள்ளன.

சத்வ குணம் மிக்கவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? அவர்களுடைய வீடு அங்கும் இங்கும் இடிந்து கிடக்கும். அதைப் பழுது பார்க்க மாட்டார்கள். பூஜையறையில் புறாக்கள் அசுத்தம் செய்யும். முற்றத்தில் பாசி படிந்திருக்கும். அதை யெல்லாம் பற்றிகவலைப் படவே மாட்டார்கள். மேஜை நாற்காலி எல்லாம் பழையனவாகவே இருக்கும், அவற்றை அழகாக வைக்க வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டார்கள். உடுப்பதற்கு ஏதோ துணி என்று ஒன்று இருந்தால் போதும். இவர்கள் மிகவும் கருணை நிறைந்தவர்கள், ஒழுக்கம் உடையவர்கள், கபடம் இல்லாதவர்கள், சாந்தமானவர்கள். யாருக்கும் எந்த தீமையும் செய்ய மாட்டார்கள்.

ரஜோ குண மனிதர்களுக்கும் சில அடையாளங்கள் உண்டு. கைக் கடிகாரம், அதில் செயின், விரலில் இரண்டு மூன்று மோதிரங்கள் இவற்றோடு அவர்கள் காட்சியளிப்பார்கள். வீட்டிலுள்ள மரச் சாமான்கள் பளபளப்பாக இருக்கும். சுவர்களில் குயீன். இளவரசர், மற்றும் பெரிய மனிதர்களின் படங்கள் எல்லாம் மாட்டப்பட்டிருக்கும். வீடு சுண்ணாம்பு அடித்து ஒரு கீறல் கூட இல்லாமல் பளிச்சென்று இருக்கும். பலவிதமான அழகிய துணிகள் இருக்கும். வேலைக் காரர்கள் கூட நல்ல உடைகள் உடுத்தியிருப்பார்கள். இப்படி பல விஷயங்கள்.

தமோ குண மனிதர்களின் அடையாளங்கள் தூக்கம், காமம், குரோதம், அகங்காரம்.

பக்தியிலும் சத்வ குணம் உள்ளது.சத்வ குண பக்தன் மிகவும் ரகசியமாக தியானம் செய்வான். சில வேளைகளில் கொசுவலைக்குள் உட்கார்ந்தும் தியானம் செய்வான். இவன் தூங்குகிறான்” ஒரு வேளை இரவெல்லாம் தக்கம் இல்லையோ என்னவோ? அதனால் தான் இன்னும் படுக்கையிலேயே கிடக்கிறான்” என்று மற்றவர்கள் நினைப்பார்கள். பசியைப்போக்கும் அளவுக்குத் தான் உடல் மீது கவனம் செலுத்துவான். இவனுக்குச்சோறும் கீரையும் கிடைத்தாலே போதும், சுவையாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் எதுவும் இல்லை. உடையிலும் ஆடம்பரம் இருக்காது. வீட்டுச் சாமான்களும் சாதாரணமாகத்தான் இருக்கும். சத்வ குண பக்தன் ஒரு போதும் பிறரை முகஸ்துதி செய்து பணம் சம்பாதிக்க முயல மாட்டான்.

ரஜோ குண பக்தன் பொட்டு வைத்துக் கொள்வான். ருத்திராட்ச மாலை அணிந்திருப்பான். இதில் இடையிடையே தங்க மணிகள் கோர்க்கப் பட்டிருக்கும். பூஜை செய்யும்போது பட்டு உடுத்திக் கொள்வான்.

தமோகுண பக்தனிடம் நம்பிக்கை கொழுந்து விட்டு எரியும். பணத்தைப் பிடுங்குகின்ற கொள்ளைக் காரனைப்போல் இந்த பக்தன் இறைவனை வற்புறுத்துவான். அடி, உதை, கட்டு என்று கொள்ளைக் காரனது வழியே இவனிடம் காணப்படும்.

தமோ குணத்தின் போக்கைத் திருப்பி விட்டால் இறையனுபூதி வாய்க்கிறது. இறைவனிடம் அடம் பிடி. அவர் வேற்று மனிதர் அல்லவே. அவர் நமக்கு உரியவர் அல்லவா! நம் உறவினர். இன்னும் கேள். இந்த தமோ குணத்தையே பிறரது நன்மைக்காகவும் பயன்படுத்தலாம்.

முதல் தரம், இடைதரம், கடைத்தரம் என்று வைத்தியர்கள் மூவகையினர். எந்த வைத்தியன் நாடியை பரிசோதித்துப் பார்த்துவிட்டு, மருந்து சாப்பிடு” என்று மட்டும் சொல்லி விட்டுப்போய் விடுகிறானோ அவன் கடைத்தரம். நோயாளி மருந்து சாப்பிட்டானாஇல்லையா என்பதை ப் பற்றிஅவன் விசாரிப்பதில்லை.

மருந்து சாப்பிடும் படி நோயாளியை பல விதங்களில் கேட்டுக்கொள்பவன் இடைத்தர வைத்தியன். அவன் நோயாளியிடம், இதோ பார்” மருந்து சாப்பிடு. சாப்பிடா விட்டால் எவ்வாறு குணமடைவாய்? இந்த மருந்தைச் சாப்பிடு. இதோ நானே குழைத்துத் தருகிறேன்” வாயைத் திற” என்றெல்லாம் இனிமையாகப்பேசி மருந்து சாப்பிட வைப்பான். எவ்வளவு வற்புறுத்தியும், இதமாகக் கூறியும் நோயாளி மருந்தைச் சாப்பிட மறுக்கிறான் என்று கண்டால் அவனைக் கீழே தள்ளி மார்பில் முட்டியை ஊன்றிக் கட்டாயப்படுத்தி மருந்து சாப்பிட வைப்பவன் முதல் தர வைத்தியன். ஆனால் இந்த குணத்தால் நோயாளிக்கு நன்மை ஏற்படுகிறது. தீமை ஏற்படுவதில்லை.

வைத்தியர்களைப்போல் ஆச்சாரியர்களும்மூன்று வகையினர். சீடர்களுக்கு உபதேசம் மட்டும் செய்துவிட்டு, அவர்களைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் கொள்ளாதவர் கடைத்தரம். எந்த ஆச்சாரியர் சீடர்களின் நன்மைக்காக திரும்பத் திரும்ப விளக்குகிறாரோ, அதன் மூலம் உபதேசங்களின் உட்கருத்துக்களைச் சீடர்கள்அறிந்து கொள்ளுமாறு செய்கிறாரோ, பல வகைகளில் அவர்களைத் தூண்டுகிறாரோ, நெருங்கிப் பழகி அன்பு காட்டுகிறாரோ அவர் இடைத்தர ஆச்சாரியர். சீடர்கள் எந்த விதத்திலும் உபதேசங்களைப் பின்பற்ற வில்லை என்று கண்டால் சில ஆச்சாரியர்கள் அவர்களைப் பல வந்தப் படுத்தவும் தயங்க மாட்டார்கள். அவர்களையே முதல் தர ஆச்சாரியர் என்கிறேன்.

ஒரு பிரம்ம பக்தர்-

கடவுள் உருவம் உடையவரா, உருவம் அற்றவரா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அவர் இப்படிப்பட்டவர் என்று சொல்ல முடியாது. அவர் உருவம் இல்லாதவர். அது வேளையில் உருவம் உடையவரும் கூட. பக்தர்களுக்காக அவர் உருவம் தாங்குகிறார். யார் ஞானியோ, அதாவது யார் உலகத்தைக் கனவு போல் காண்கிறார்களோ, அவர்களுக்கு அவர் உருவம் அற்றவராக உள்ளார். தான் தனிப்பட்ட ஒருவன் என்பதும்் உலகம் தன்னிலிருந்து வேறுபட்ட ஒன்று என்பது பக்தனுக்குத் தெரியும். எனவே இறைவன் பக்தனுக்கு ஒரு தனி நபராக ஆகி காட்சி அளிக்கிறார். ஞானி, அதாவது வேதாந்த வாதி, இது அல்ல, இது அல்ல, என்று ஆராய்ச்சி செய்கிறான். இவ்வாறு ஆராய்ச்சி செய்து, நான் உண்மையல்ல, உலகமும் கனவு போல் உண்மையற்றது, என்பதை அகத்தில் உணர்கிறான். ஞானி பிரம்மத்தைத் தன்உணர்வில் உணர்கிறான். ஆனால் அவர் யார் என்பதைச் சொற்களால் சொல்ல அவனால் முடிவதில்லை.

அது எப்படி தெரியுமா? கங்கு கரையற்ற சச்சிதானந்தப்பெருங்கடலில் பக்தி என்னும் குளிர்ச்சியினால் தண்ணீர் அங்கங்கே உறைந்து பனிக்கட்டியாகிறது. திடமான பனிக்கட்டியாகி விடுகிறது. அதாவது, பக்தர்களுக்காக இறைவன் தனி நபராக  வருகிறார். அதாவது சில வேளைகளில் உருவம் தாங்கி வருகிறார். ஞான சூரியன் உதித்தால் அந்தப் பனிக்கட்டி உருகி விடுகிறது. அப்போது இறைவன் உருவம் உடையவர் என்று உணர்வதில்லை. அவருடைய உருவக் காட்சி கிடைப்பதில்லை. அவர் யார் என்பதை வாயினால் சொல்ல முடியாது. யார் சொல்வது? யார்சொல்வானோ அவனே இல்லை. அவனது நான்- உணர்வு தேடினாலும் கிடைப்பதில்லை.

ஆராய்ச்சி செய்து பார்க்கும்போது நான், அது இது எல்லாம் இல்லாமல் போய்விடுகிறது. வெங்காயத்தின் சிவப்பான முதற்தோலை உரித்தால் வெள்ளைத்தோல் வருகிறது. இப்படி உரித்துக்கொண்டே போனால் உள்ளே ஒன்றையும் காண முடிவதில்லை.

எங்கே தனது நான் என்பதையே தேடிப்பிடிக்க முடியாதோ அங்கே தேடுபவர் தான், பிரம்மத்தின் .யல்பை உணர்வில் உணர்வது என்றால் என்ன என்பதையெல்லாம் அங்கே யார் கூறுவது?

ஓர் உப்புப்பொம்மை கடலை அளக்கச் சென்றது. கடலில் இறங்கியதுமே அதில் கரைந்து விட்டது. பிறகு செய்தி சொல்வது யார்?

பூரண ஞானத்தின் அடையாளம் என்ன? பூரண ஞானம் ஏற்படும் போது மனிதன் மௌனியாகிறான். அப்போது நான் என்ற உப்புப் பொம்மை சச்சிதானந்தம் என்ற கடலில் கரைந்து ஒன்றாகி விடுகிறது. அங்கே வேறுபாட்டு உணர்வு சிறிதும் இருப்பதில்லை.

ஆராய்ச்சி முடியாதவரை மனிதர்கள் வெற்று வாதங்களில் ஈடுபடுகின்றனர். அது முடிவுற்ற அளவில் மௌனமாகி விடுகின்றனர். குடம் நிறைந்து விட்டால், குடத்துத் தண்ணீரும் குளத்துத் தண்ணீரும் ஒன்றாகி விட்டால், சத்தம் எழுவதில்லை, குடம் நிரம்பாதது வரை சத்தம் வந்து கொண்டு தான் இருக்கும்.

கடலில் கறுப்புத் தண்ணீர் ப் பகுதியைக் கப்பல் அடைந்தால் அது திரும்பி வராது என்று பழங்கால மக்கள் கூறுவார்கள்.”நான்” ஒழிந்தால் எல்லா தொல்லைகளும் ஒழிந்து போகும் (சிரிப்பு) . ஆயிரம் ஆராய்ச்சி செய்யுங்கள். ”நான்” மட்டும் போவதே இல்லை. உங்களுக்கும் எனக்கும் ”நான் பக்தன்” என்ற எண்ணம் நல்லது.

பக்தனுக்குப் பிடித்தது சகுண பிரம்மம். அதாவது இறைவன் குணங்களோடு கூடியவர் என்ற கருத்து. அவர் ஒரு மனிதராக, உருவம் தாங்கி வந்து காட்சி தருகிறார். பிரார்த்தனைகளைக்கேட்கிறார். உங்கள் பிரார்த்தனைகளை அவரை நோக்கியே செய்யப் படுகின்றன. நீங்கள் வேதாந்திகளோ ஞானிகளோ அல்ல, நீங்கள் பக்தர்கள். இறைவனுக்கே உருவம் உண்டு என்பதை ஏற்பதாலோ ஏற்காததாலோ எதுவும் நடந்துவிடப்போவதில்லை. இறைவன் ஒரு தனிநபர், அவர் நம் பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்க்கிறார். இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பதும் காப்பதும் அழிப்பதும் அவரே. அவர் அளவற்ற ஆற்றல்களைப்பெற்றவர்.- இந்த உணர்வு இருந்தாலே போதும். பக்தி நெறியின் மூலம் அவரை அடைவது எளிது.

பிரம்ம பக்தர்-

சுவாமி, இறைவனைக் காண முடியுமா? முடியுமானால் எங்களால் ஏன் அவரைக் காண முடிவதில்லை?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இறைவனைக் காணலாம். கட்டாயமாகக் காணலாம். உருவத்துடன் காணலாம். உருவம் இல்லாமலும் காணலாம். இதை எப்படி உங்களுக்குப் பரிய வைப்பேன்?

பிரம்ம பக்தர்-

அவரைக் காண்பதற்கான வழி எது?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

மன ஏக்கத்துடன்அவருக்காக உன்னால் அழ முடியுமா? குழந்தைகளுக்காகவும் மனைவிக்காவும், பணத்திற்காகவும் மக்கள் குடம் குடமாக கண்ணீர் வடிக்கின்றனர். இறைவனுக்காக யார் அழுகிறார்கள்?குழந்தை ஊதலை ஊதிக்கொண்டு, தாயை மறந்திருக்கும் வரை தாயும் சமைத்தல் போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறாள்.ஊதலில் சலிப்பு தட்டி, அதனை வீசி யெறிந்து விட்டு குழந்தை கதறி அழும்போது தாய் சோற்றுப்பானையை அவசரமாக இறக்கி வைத்துவிட்டு ஓடோடி வந்து குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக்கொள்கிறாள்.

பிரம்ம பக்தர்-

சுவாமி, இறைவனின் இயல்பு குறித்து ஏன் இவ்வளவு வேறுபட்ட கருத்துக்கள்? கடவுளுக்கு உருவம் உண்டு என்று சிலர் கூறுகின்றனர்.வேறு சிலரோ கடவுள் அருவமானவர் என்கின்றனர். உருவம் உண்டு என்பவர்களும் கூட பல உருவங்களைப் பற்றி பேசுகிறார்கள், ஏன் இவ்வளவு குழப்பம்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

எந்த பக்தன் எந்த உருவைக் காண்கிறானோ அதையே புரிந்து கொள்கிறான். உண்மையில் எந்தக் குழப்பமும் இல்லை. எப்படியோ அவரை ஒரு முறை கண்டு விட்டால்போதும், அவரே நமக்கு எல்லாவற்றையும் புரிய வைத்து விடுவார். அந்தப் பக்கமே காலடி எடுத்து வைக்க வில்லை, இந்த நிலையில் அனைத்தையும் அறிவது எப்படி? உரு கதை சொல்கிறேன் கேள்.

ஒருவன் வெளிக்குப்போனான். அங்கே ஒரு மரத்தில் பிராணி ஒன்றைக் கண்டான். திரும்பி வந்து மற்றொரு வனிடம், இதோ பார், நான் இன்ன மரத்தில் அழகிய சிவப்பு நிறமுள்ள, ஒரு பிராணியைக் கண்டேன்” என்றான். அதற்கு அவன், நானும் அங்கே போயிருந்தேன்” அந்தப் பிராணியைப் பார்த்தேன். ஆனால் அது எவ்வாறு சிவப்பு நிறமாக இருக்க முடியும்? அது பச்சை நிறம் ஆயிற்றே! என்றான். வேறொருவன், இல்லை இல்லை, நானும் அதைப் பார்த்திருக்கிறேன், அது மஞ்சள் நிறம்” என்றான். இவ்வாறாக பலர் சாம்பல் நிறம், ஊதா நிறம், நீல நிறம் என்றெல்லாம் சொன்னார்கள். அவர்களுக்குள் சண்டையே மூண்டு விட்டது. கடைசியாக எல்லோரும் அந்த மரத்தடிக்குச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார்.

அது பற்றி அவரைக்கேட்டனர். அதற்கு அவர், நான் இந்த மரத்தடியில் வசிப்பவன். அந்தப் பிராணியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் ஒவ்வொருவர் சொல்வதும் உண்மை தான். அது சிலவேளைகளில் சிவப்பாகவும், சில வேளைகளில் பச்சையாகவும், சில வேளைகளில் நீலமாகவும், இன்னும் எவ்வளவோ நிறங்களாகவும் இருக்கிறது. அது ஒரு பச்சோந்தி. சில வேளைகளில் நிறம் இல்லாமலும் அதை நான் பார்த்திருக்கிறேன். சில வேளைகளில் நிறத்துடன், சிலவேளைகளில் நிறங்கள் இல்லாமலும் இருப்பது அது” என்றார்.

அது போல் இறைவனை இடைவிடாமல் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவனுக்கே அவரது இயல்பு என்ன என்பது தெரியும். அவர் பல்வேறு வடிவங்களில் காட்சி தருகிறார். பல்வேறு நிலைகளில் காட்சி தருகிறார். அவருக்குக் குணம் உண்டு.அதே வேளையில் குணம் இல்லை என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். பச்சோந்தி பல நிறங்களைக்கொண்டது, சிலவேளைகளில் நிறமற்றது என்பது மரத்தடியில் இருப்பவனுக்கே தெரியும். மற்றவர்கள் கடவுளைப் பற்றி வீண்வாதமும் சண்டையும் செய்து கஷ்டப்படுகிறார்கள்.

அருவக் கடவுள் என் தந்தை, உருவக் கடவுள் என் தாய் என்பார் கபீர்தாஸ்.

பக்தன் எந்த உருவத்தை நேசிக்கிறானோ, அந்த உருவத்தில் கடவுள் காட்சி அளிக்கிறார். அவர் பக்தவத்சலன் ஆயிற்றே! வீர பக்தரான அனுமனுக்காகவே பகவான் ராம உருவத்தைத் தாங்கினார் என்று புராணத்தில் உள்ளது.

வேதாந்த ஆராய்ச்சியில் உருவம், கிருவம் எல்லாம் பறந்து விடுகின்றன. பிரம்மமே உண்மை, நாம ரூபங்களோடு கூடிய இந்த உலகம் உண்மையற்றது என்பதே வேதாந்தத்தின் முடிவு. நான் பக்தன் என்ற நினைப்பு இருக்கும் வரை தான் கடவுளை உருவமாகக் காணவும், அவர் ஒரு தனி நபர் என்று உணரவும் முடியும்.ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தில்பார்க்கும் போது, பக்தன் கொள்கின்ற நான் என்ற எண்ணம் அவனை இறைவனிலிருந்து சற்று தொலைவில் வைத்திருக்கிறது.

காளி மற்றும் கண்ணன் சிலைகள் மூன்றரை முழம் உயரமே இருப்பதன் காரணம் என்ன தெரியுமா? தூரத்திலிருந்து பார்ப்பதால் தான் தொலைவில் இருப்பதால் தான் சூரியன் சிறியவனாகத் தெரிகிறான். அருகில் சென்றால் நீ எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு அவன் பெரியவனாகத் தெரிவான். காளியும் கண்ணனும் ஏன் கறுப்பாகத்தோன்றுகின்றனர்? தூரம் காரணமாகத்தான். தொலைவிலிருந்து ஏரியைப் பார்க்கும்போது அதன் நீர் பச்சையாக, நீலமாக, கறுப்பாக தெரியும். அருகில் சென்று கையில் அள்ளிப் பார்த்தால் எந்த நிறமும் இல்லாதிருப்பது தெரியும். தூரத்திலிருந்து பார்ப்பதால் ஆகாயம் நீல நிறமாகத்தோன்றுகிறது. அருகில் சென்று பார்த்தால் அதற்கு எந்த நிறமும் இல்லை.

ஆகவே, வேதாந்த ஆராய்ச்சியில் பிரம்மம் குணமற்றது என்கிறேன் நான். அவரது இயல்பு என்ன என்பதைச் சொற்களால் விவரிக்க இயலாது. ஆனால் நீ இருப்பது எது வரை உண்மையோ அது வரை இந்த உலகமும் உண்மை, கடவுளுடைய பல வடிவங்களும் உண்மை, கடவுளை ஒரு நபராக நினைப்பதும் உண்மை.

உங்களுக்குரிய வழி பக்தி நெறி. இதுமிகவும் நல்லது. எளியதும் கூட. எல்லையற்ற இறைவனை அறிய முடியுமா என்ன? அறிய வேண்டிய அவசியம் தான் என்ன? பெறுதற்கரிய மானிடப் பிறவியைப்பெற்ற நமக்கு வேண்டிய தெல்லாம் அவரது பாத கமலங்களில் பக்திதான்.

ஒரு டம்ளர் தண்ணீரில் என் தாகம் தீர்ந்து போகும் போது குளத்தில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை நான் அளக்க வேண்டிய அவசியம் என்ன? அரை புட்டி கள் குடித்தாலே போதை ஏற்பட்டு விடும் என்கின்ற போது கடையில் எவ்வளவு கள் இருக்கிறது என்ற கணக்குவழக்கினால் எனக்கு என்ன பயன்? எல்லையற்ற அவரை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் தான் என்ன?

வேதங்களில் பிரம்ம ஞானிகளின் பல்வேறு நிலைகள் கூறப் பட்டுள்ளன. ஞான நெறி மிகவும் கடினமானது. உலகியலின் அதாவது காமினீ- காஞ்சனத்தின் சாயல் இருந்தாலும் ஞானம் வராது. எனவே இது கலியுகத்திற்கு ஏற்ற நெறி அல்ல.

இது சம்பந்தமாக வேதங்களில் ஏழு தளங்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இவை மனத்தின் வெவ்வேறு மையங்களாகும். மனத்தின் நான்காம் தளம் இதயம். இங்கே முதன் முதலாக உணர்வின் விழிப்பு ஏற்படுகிறது. நாலாபக்கங்களிலும் ஜோதி தரிசனம் உண்டாகிறது. அந்த ஜோதியைக்கண்டு திகைக்கிறான் மனிதன். ஆ! இது என்ன! இது என்ன! என்று கூவுகிறான். இதற்குப் பிறகு அவனது மனம் கீழ் நோக்கி, அதாவது உலகியலை நோக்கி இறங்குவதில்லை.

மனத்தில் ஐந்தாவது தளம் தொண்டை, யாருடைய மனம் தொண்டையை அடைத்துவிட்டதோ, அவனது அவித்யை, அஞ்ஞானம், எல்லாம் நீங்கி விடுகிறது.கடவுளைத் தவிர வேறு எதையும் கேட்பதற்கோ பேசுவதற்கோ அவன் விரும்புவதில்லை. அப்படி வேறு யாராவது பேசினால் அந்த இடத்தைவிட்டு எழுந்து போய் விடுவான்.

மனத்தின் ஆறாம் தனம் புருவ மத்தி, மனம் அந்தத் தளத்தை அடையும் போது இரவு பகலாக இறைவனின் உருவக் காட்சி கிடைக்கிறது. அந்த நிலையிலும் நான் என்பது சிறிது இருக்கிறது.ஈடிணையற்ற அந்தக் காட்சியில் மனிதன் பித்தனாகிறான். அந்தஉருவத்தைத் தொடவும் அணைக்கவும் விரும்புகிறான். ஆனால் அது முடிவதில்லை. எப்படியென்றால் லாந்தர் விளக்கின் சுடரைத் தொட்டு விடலாம். தொட்டு விடலாம் என்று தோன்றுகிறது. ஆனால் கண்ணாடித் தடுப்பு இருப்பதால் தொட முடிவதில்லை.

உச்சந்தலை மனத்தின் ஏழாவது தளம், மனம் அந்த இடத்தை அடையும்போது சமாதி ஏற்படுகிறது. பிரம்ம ஞானிக்கு நேரடியான பிரம்ம தரிசனம் கிடைக்கிறது. ஆனால் அந்த நிலையில் உடம்பு அதிக நாள் நீடிப்பதில்லை. எப்போதும் சுய நினைவு அற்ற நிலை அது. எதுவும் உண்ண முடிவதில்லை. வாயில் பால் ஊற்றினால் வெளியே வழிந்து விடுகிறது. இந்தத் தளத்தில் இருந்தால் இருபத்தொரு நாட்களில் உடல் வீழ்ந்து விடும். இதுவே பிரம்ம ஞானியின் நிலை. உங்களுக்குரிய வழி பக்தி நெறி. அதுமிகவும் நல்லது, சுலபமானது.

என்னிடம் ஒருவன், சுவாமி! நீங்கள் எனக்கு சமாதி நிலையைக் கற்றுக் கொடுக்கிறீர்களா? என்று கேட்டான்.( எல்லோரும் சிரித்தனர்)

சமாதி நிலையை அடைந்து விட்டால் எல்லா கிரியைகளும் நம்மை விட்டு விலகி விடுகின்றன. பூஜை, ஜபம் முதலியவை. உலகக் கடமைகள் எல்லாம் விலகி விடுகின்றன. ஆரம்ப காலங்களில் கிரியைகள் பற்றி பெரிய ஆரவாரம் இருக்கும். இறைவனை நோக்கி முன்னேறும் அளவிற்கு அந்த ஆரவாரங்கள் குறைந்து கொண்டே வரும். நாம சங்கீர்த்தனம் கூட நின்று போக நேரும். (சிவநாத்தைப் பார்த்து) நீங்கள் இங்கே வராதவரையில் உங்கள் பெயரையும் புகழையும் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர். நீங்கள் வந்ததும் அந்தப்பேச்சுகளெல்லாம் நின்று விட்டன. உங்களைப் பார்ப்பதே ஆனந்தம்! இதோ, சிவநாத் பாபு வந்து விட்டார்” என்று மட்டும் சொல்கின்றனர். உங்களைப் பற்றிய மற்றப்பேச்சுகளெல்லாம் அடங்கி விட்டன.

இந்த நிலை ஏற்பட்ட பிறகு ஒரு சமயம் நான் கங்கையில் தர்ப்பணம் செய்யச்சென்றேன். முடியவில்லை. கைவிரல் இடுக்குகளின் வழியே நீர் வழிந்து விட்டது. உடனே நான் ஹலதாரியிடம், அண்ணா , என்ன இது? என்று கேட்டேன். அதற்கு அவர், இது கலிதஹஸ்த நிலை.” என்றார். இறைக் காட்சிக்குப் பிறகு தர்ப்பணம் முதலிய கிரியைகள் விலகி விடுகின்றன.

பஜனைகளில் முதலில் ” எந்தன் நிதாயி மதயானை” என்று முழுதாக பாடுகிறார்கள்”. பரவசம் அதிகமாக அதிக மாக வெறும், யானை, யானை என்று தான் வரும். அதற்குப் பிறகு யா, யா” என்று சொல்லிக் கொண்டே சமாதி ஏற்பட்டு விடுகிறது. இவ்வளவு நேரம் பாடிக் கொண்டிருந்தவன் அப்போது தௌனமாகி விடுகிறான்.

விருந்து வேளையில் ஆரம்பத்தில் பெரிய ஆரவாரம் நிலவுகிறது. இலையின் முன்உட்கார்ந்ததும் ஆரவாரம் பெருமளவில் குறைந்து விடுகிறது. ”பூரி கொண்டு வா, பூரி கொண்டு வா! என்ற சத்தம் மட்டும் கேட்கிறது.பூரியையும் கறியையும் உண்ண ஆரம்பித்ததும் முக்கால் பங்கு சத்தம் குறைந்து விடுகிறது. தயிர் வந்த பிறகோ வெறும் ஸுப் ஸுப் சத்தம் தான். சத்தம் இல்லை என்றே சொல்லி விடலாம். உண்ட பின்போ உறக்கம்! அப்போது எல்லாம் அமைதி!

ஆகவே முதலில் கிரியைகள் அது இது என்று பெருத்த ஆரவாரம் இருக்கவே செய்யும். இறை நெறியில் முன்னேறுகின்ற அளவிற்கு அவை குறைகின்றன. பிறகு கிரியைகள் விலகி விடுகின்றன. கடைசியில் சமாதி.

மருமகள் கருவுற்றால் மாமியார் அவளது வேலைகளைக் குறைக்கிறாள். பத்தாம் மாதத்தில் அவள் அனேகமாக எந்த வேலையும் செய்வதில்லை.குழந்தை பிறந்த பின்போ ஒரேயடியாக வேலைகள் விலகி விடுகின்றன. குழந்தையைக் கொஞ்சுவது மட்டுமே அவளது வேலை. வீட்டு வேலையை மாமியார், நாத்தனார் எல்லாம் செய்கிறார்கள்.

சமாதி நிலையை அடைந்த பிறகு அனேகமாக உடல் நிலைப்பதில்லை. ஏதோ சிலரது விஷயத்தில், உலகிற்குப்போதிப்பதற்காக உடல் நீடிக்கிறது. உதாரணமாக நாரதர்போன்றோர், மற்றும் சைதன்யரைப்போன்றஅவதார புருஷர்கள். கிணறு வெட்டியபிறகு சிலர் மண்வெட்டி, கூடை முதலியவற்றை எறிந்து விடுகிறார்கள். சிலர் அவை வேறு யாருக்காவது உபயோகப் படும் என்று பத்திரப்படுத்தி வைக்கின்றனர். அது போல் இத்தகைய மகா புருஷர்களும் மக்களின் துயரத்தில் துடிக்கின்றனர். தாங்கள் ஞானம் பெற்றால்போதும் என்று நினைக்கின்ற சுயநலவாதிகள் அல்ல இவர்கள். சுயநலவாதிகளின் விஷயம் உங்களுக்குத் தெரிந்தது தானே? இங்கே ஒன்றுக்குப்போங்கள்” என்றால் போக மாட்டார்கள். அதனால் உங்களுக்கு ஏதாவது நன்மை வந்துவிடும் பாருங்கள். (எல்லோரும் சிரித்தனர்) ஒரு பைசாவுக்கு இனிப்பு வாங்கி வரச் சொன்னால், கொஞ்சம் நக்கிப் பார்த்து விட்டுத்தான் கொண்டு வருவார்கள்.(அனைவரும் சிரித்தனர்)

ஆனால் ஞானிகளிலும் ஆற்றல்வேறுபாடு உண்டு. சாதாரண ஞானிகள் மக்களுக்குப்போதிக்க பயப்படுகின்றனர். சிறிய சுள்ளி எப்படியோ நீரில் மிதந்து செல்லும், அதன் மீது ஒரு குருவி உட்கார்ந்தாலும் போதும், மூழ்கிவிடும். நாரதர் போன்றவர்கள், வலுவான மரக்கட்டைகள். அவை தாமும் மிதக்கும். மனிதர்கள், பசுக்கள், ஏன் யானைகளைக்கூட ஏற்றிச் செல்லவும் செய்யும்.

(சிவநாத் முதலியோரைப் பார்த்து)போகட்டும், நீங்கள் இறைவனின் ஆற்றல்களைப் பற்றி இவ்வளவு வர்ணிப்பது ஏன்?

இதனை நான் கேசவரிடமும் கேட்டேன். ஒருநாள் அவர்கள் அங்கே (காளிகோயிலுக்கு) வந்திருந்தனர். நீங்கள் எப்படி லெக்சர் செய்கிறீர்கள் என்று கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னேன். கங்கைப் படித்துறையிலுள்ள மண்டபத்தில் கூட்டம் கூடிற்று. கேசவர் பேசத் தொடங்கினார். மிக நன்றாகப்பேசினார். எனக்குப் பரவசம் ஏற்பட்டது. பேச்சு முடிந்ததும் நான் கேவசரிடம், நீங்கள் இவற்றையெல்லாம் ஏன் இவ்வளவு தூரம் பேசுகிறீர்கள்- எம்பெருமானே, நீ எவ்வளவு அழகான மலர்களைப் படைத்திருக்கிறாய்- நீ வானத்தைப் படைத்திருக்கிறாய்! நட்சத்திரங்களைப் படைத்திருக்கிறாய்.! கடலைப் படைத்திருக்கிறாய் என்றெல்லாம் ஏன் சொல்கிறீர்கள்? என்று கேட்டேன். ஆற்றல்களின் விருப்பம் உடையவன் தான் இறைவனின் ஆற்றல்களை வர்ணித்துக் கொண்டிருப்பான்.

ராதாகாந்தர், கோயிலின் நகைகள் களவு போன போது மதுர் பாபு கோயிலில் சென்று,”கடவுளே அவமானம்,உமது நகைகளையே உம்மால் காப்பாற்றிக் கொள்ள முடிய வில்லையே? என்று கூறினார். அவரிடம் நான், என்ன அற்ப புத்தி? லட்சுமி தேவியே யாருக்கு பணிப்பெண்ணாகப் பாத சேவை செய்கிறாளோ, அவருக்குச் செல்வத்திற்கு என்ன குறைவு! உங்களுக்குத்தான் இந்த நகைகள் ஏதோ பெரிய விஷயம். அவருக்கு இவை வெறும் மண்ணாங்கட்டிகள்! சீ! சீ! இவ்வளவு அற்பமாகப்பேசுவது உசிதமல்ல. எந்தச் செல்வத்தை நீங்கள் அவருக்குக் கொடுத்து விட முடியும்? என்றேன். அதனால் தான் சொல்கிறேன், யாரிடம் ஆனந்தம் கிடைக்கிறதோ,அவரையே மக்கள் நாடுகிறார்கள். அவருடைய வீடு எங்கே இருக்கிறது, எத்தனை வீடுகள், எத்தனை தோட்டங்கள், எவ்வளவு பணம், எத்தனை வேலைக் காரர்கள் போன்ற விவரங்களால் எல்லாம் என்ன பயன்? நரேந்திரனைப் பார்க்கும்போது நான் எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன். அவனது வீடு எங்கே உள்ளது, அவனது தந்தை என்ன செய்கிறார், அவனுக்கு எத்தனை சகோதரர்கள் இவற்றை மறந்து போய்க் கூட நான் அவனிடம் கேட்டதில்லை. இறைவனின் இன்ப ரசத்தில் மூழ்கி விடு! அவரது படைப்பு எல்லையற்றது, அவரது மகிமை வரம் பற்றது, போன்ற விவரங்களால் நமக்கு என்ன பயன்?

ஆனால் இறைக் காட்சிக்குப் பிறகு பக்தனுக்கு அவருடைய திருவிளையாடல்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. ராவணனைக் கொன்ற பின் ராமசந்திரர் அரக்கனின் நரகத்திற்குள் நுழைந்தார். கிழவியான நிகஷா பயந்து ஓடத் தொடங்கினாள். அதைக் கண்ட லட்சுமணன் ராமனிடம், அண்ணா, எவ்வளவு வயதான கிழவி, எத்தனை பிள்ளைகளை இழந்திருக்கிறாள்! இவளுக்கு உயிரைப் பற்றி இவ்வளவு பயம், இப்படி ஒடுகிறாளே! இதை என்னவென்று சொல்வது என்றான், ராமசந்திரர் நிக ராமா! நிகஷாவுக்கு அபயம் அளித்து , அவளைத் தம்மிடம் வரவழைத்து அதை அவளிடம் கேட்டார். அதற்கு நிகஷா, ராமா! நான் இத்தனை நாள் பிழைத்திருந்த தால் தான் உன்னுடைய இவ்வளவு லீலைகளைப் பார்க்க முடிந்தது. இன்னமம் உயிர் வாழ்ந்தால் எத்தனையோ லீலைகளைப் பார்ப்பேனே” என்றாள். (எல்லோரும் சிரித்தனர்) (சிவநாத்தைப் பார்த்து) உங்களைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை ஏற்படுகிறது. தூயவர்களைப் பார்க்காமல் எப்படி வாழ்வது? தூயவர்கள் முந்திய பிறவியில் எனது உறவினரோ என்று தோன்றுகிறது.

பிரம்ம பக்தர்-

சுவாமி, நீங்கள் மறு பிறவியை நம்புகிறீர்களா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

ஆம், மறுபிறவி உண்டு என்ற கேள்விப் பட்டிருக்கிறேன். நமது சிற்றறிவைக்கொண்டு இறைவனுடையசெயல்களை எப்படி அறிந்து கொள்ள முடியும்? பலர் கூறி இருக்கிறார்கள். எப்படி நம்பாமல் இருப்பது?

பீஷ்மர் உயிரை விடும் நேரம், அம்பு படுக்கையில் படுத்திருக்கிறார். பாண்டவர்கள் கிருஷ்ணருடன் நின்று கொண்டிருக்கிறார்கள். பீஷ்மரின் கண்களில் கண்ணீர் பெருகுவதைப் பாண்டவர்கள் பார்க்கின்றனர். அப்போது அர்ஜுனன். கிருஷ்ணரிடம், கிருஷ்ணா, இது என்ன விந்தை!தாத்தா பயங்கரமான உறுதி மொழியை எடுத்து அதன் படி வாழ்பவர். சத்தியமே உருவானவர். புலன்களை வென்றவர். ஞானி. அஷ்ட வசுக்களில் ஒருவர். உயிர்போகும் தருணத்தில் மாயையின் வசப்பட்டு அழுகிறாரே! என்றான். பீஷ்மரிடம் கிருஷ்ணர் இதைத் தெரிவித்தார். அதைக்கேட்ட பீஷ்மர், கிருஷ்ணா!நான் அதற்காக அழவில்லை என்பது உனக்குத் தெரியும். பகவானே பாண்டவர்களுக்கு சாரதியாக இருந்தும் அவர்கள் படுகின்ற துன்பங்களுக்கு முடிவே இல்லாமல் இருக்கிறது. இதை எண்ணித்தான் பகவானுடைய காரியங்கள் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லையே என்று அழுகிறேன் என்றார்.

இரவு எட்டரை மணியாயிற்று. திருவிழா மண்டபத்தில் மாலை வழிபாடு தொடங்கியது. நிலவொளி எங்கும் பரவியிருந்தது. தோட்டத்துச் செடி கொடிகள், மரங்கள் எல்லாமே நிலவொளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. சமாஜ அறையில் பாடல் ஆரம்பமாகியது . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் பக்திப் பெருக்கு மேலிட்டவராகஆடத் தொடங்கினார். பிரம்ம சமாஜ பக்தர்கள் மத்தளம் முதலிய வாத்தியங்களைவாசித்த படி அவரைச் சுற்றிச் சுற்றி ஆடினர். இறைக் காட்சி பெற்றவர்கள்போல் அனைவரும் பரவசத்தில் திளைத்தனர்.ஹரி நாமம் மேலும் மேலும் ஓங்கி ஒலிக்கலாயிற்று. பிராமவாசிகளுக்கு பகவானின் திருநாமத்தைக்கேட்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதற்காக அற்தப் பூஞ்சோலையின் சொந்தக் காரரான வேணி மாதவருக்கு அவர்கள் மனத்திற்குள் நன்றி செலுத்தினர்.

பாடல்கள் முடிந்ததும் குருதேவர் தரையில் வீழ்ந்து தேவியை வணங்கினார். ”பாகவதம், பக்தன், பகவான், ஞானியரின் திருவடிகளை வணங்குகிறேன். பக்தர்களின் திருவடிகளை வணங்குகிறேன். உருவக் கடவுளை வழிபடுகின்ற பக்தர்களின் பாத மலர்களை வணங்குகிறேன். அருவக் கடவுளை வழிபடுகின்ற பக்தர்களின் அடி மலர்களை வணங்குகிறேன். முற்கால பிரம்ம ஞானியரின் திருவடிகளையும் பிரம்ம சமாஜத்தினரான இக்கால பிரம்ம ஞானியரின் திருவடிகளையும் வணங்குகிறேன். என்று கூறியபடியே வணங்கிஎழுந்தார்.

வேணி மாதவர் நல்ல விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். கூடியிருந்த பக்தர்கள் எல்லோருக்கும் வயிறும் மனமும் நிறைய விருந்தளித்து மகிழ்ந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்களோடு ஆனந்தமாக உணவை உட்கொண்டார்.

  

புதன், நவம்பர் 15, 1882

..............................

குருதேவர் சியாம் புகூரில் வித்யா சாகரின் பள்ளிக்கு ஒலு வண்டியில் வந்திருந்தார்.மாலை மூன்று மணி இருக்கும். பள்ளியிலிருந்து ம- வையும் தம்மோடு வண்டியில் ஏற்றிக் கொண்டார். வண்டியில் ராக்காலும் வேறு ஓரிரு பக்தர்களும் இருந்தனர். வண்டி சித்பூர் சாலை வழியாக மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. குருதேவர் மைதானத்தில் நடக்கும் வில்சன் சர்க்கஸைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார்.

மது அருந்தியவனைப்போல் ஆனந்த போதையில் மிதந்து கொண்டிருந்தார் குருதேவர். ஒரு சிறு குழந்தையைப்போல் முகத்தை வண்டிக்கு வெளியே நீ்ட்டியவாறு, அந்தப்பக்கமும் இந்தப் பக்கமும் வேடிக்கை பார்த்துக்கொண்டும், அதே வேளையில் தெருவில் சென்று கொண்டிருந்தவர்களைக் குறித்து அன்பர்களிடம் பேசிக்கொண்டும் சென்றார்.ம-விடம் இதோ பார், எல்லோருடைய நோக்கமும் கீழ் நோக்கியதாக உள்ளது. எல்லோரும் வயிற்றிற்காக ஓடுகிறார்கள். யாரும் கடவுளை நினைப்பதாகத் தெரியவில்லை” என்றார்.

மைதானத்தை அடைந்ததும் மிகக் குறைந்ததான எட்டணா டிக்கட் வாங்கப் பட்டது. பக்தர்கள் குருதேவரை அழைத்துச்சென்று, ஓர் உயர்ந்த இடத்தில் பெஞ்சின் மீது அமர்த்தினர். குருதேவர் மிக்க மகிழ்ச்சியோடு, ஆகா! இந்த இடத்திலிருந்து நன்றாகப் பார்க்க முடியும்”என்று கூறி பூரிப்படைந்தார்.

நீண்ட நேரம் பல சாகசக் காட்சிகள் நடைபெற்றன. வட்டப் பாதையில் குதிரை ஒன்று மிக வேகமாக ஓடியது. அதன் மீது ஒரு ஆங்கிலப்பெண் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தாள். வழியில் இரும்பு வளையங்கள் பொருத்தப் பட்டிருந்தன. குதிரை அந்த வளையங்களின் கீழ்ஓடும் போது, அவள் அந்த வளையத்தின் வழியாகக் குதித்து மீண்டும் குதிரையின் மீது ஒற்றைக் காலில் நின்றாள்.குதிரை பல முறை வளையங்களின் கீழ் ஓடியது. அந்தப் பெண் குதிரை மீ து குதித்து அதுபோல் நின்றாள்.

நீண்ட நேரம் பல சாகசங்கள் நடைபெற்றன. வட்டப் பாதையில் குதிரை ஒன்று மிக வேகமாக ஓடியது. அதன் மீது ஆங்கிலப்பெண் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தாள். வழியில் இரும்பு வளையங்கள் பொருத்தப் பட்டிருந்தன.குதிரை அந்த வளையங்களின் கீழ் ஓடும்போது, அவள் அந்த வளையத்தின் வழியாகக் குதித்து மீண்டும் குதிரையின் மீது ஒற்றைக் காலில் நின்றாள். குதிரை பலமுறைவளையங்களின் கீழ் ஓடியது.அந்தப் பெண் குதிரை மீது குதித்து அதுபோல் நின்றாள்.

சர்க்கஸ் நிறைவுற்றது, குருதேவர் இறங்கி பக்தர்களோடு மைதானத்தில் வண்டியின் அருகே வந்து நின்றார். நல்ல குளிர் . ஒரு பச்சைப் போர்வையை போர்த்திக்கொண்டு மைதானத்தில் நின்று பேசலானார். பக்தர்கள் அருகில் நின்று கொண்டிருந்தனர். ஒருபக்தரின் கையில் சிறிய பை ஒன்றிருந்தது அதில் மசாலா , முக்கியமாக கிராம்பு இருந்தது.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

(ம-விடம்)- குதிரை மின்னல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த போது அந்தப் பெண் எவ்வளவு சாமார்த்தியமாகக் குதிரையின் மீது ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தாள் பார்த்தாயா? எவ்வளவு கடினம்! நீண்ட காலமாகப் பயிற்சி செய்திருக்க வேண்டும். அதனால் தான் இது சாத்தியமாயிற்று. கொஞ்சம் கவனக்குறைவு இருந்தால் போதும், காலோ கையோ ஒடிந்து போயிருக்கும். ஏன், உயிரே போயிருக்கலாம். உலகில் வாழ்வதும் இது போல் கடினமானது. பல சாதனைகள் செய்து, இறையருளைப்பெற்ற ஒரு சிலரால் தான் வெற்றி பெற முடிகிறது. பெரும்பாலோரால் முடிவதில்லை. வாழ வாழ அதில் மேன்மேலும் கட்டுண்டு விடுகின்றனர். மேலும் மேலும் அதில் மூழ்குகின்றனர். மரண வேதனை அனுபவிக்கின்றனர். ஜனகர் போன்ற ஏதோ ஒரு சிலர் கடுமையான தவங்கள் செய்து, அவற்றின் வலிமையால் வாழ்க்கையை நடத்தினர். எனவே சாதனைகள் மிகவும் அவசியம், இல்லையென்றால் வாழ்க்கையைச் சரிவர நடத்த முடியாது.

குருதேவர் வண்டியில் ஏறி அமர்ந்தார். வண்டி போஸ்பாராவில் பலராம் போஸின் வீட்டிற்கு வந்தது. பக்தர்களுடன் மாடியில் வரவேற்பறையில் சென்று அமர்ந்தார் குருதேவர். மாலை விளக்குகள் ஏற்றப் பட்டிருந்தன. பக்தர்கள் பலர் கூடினர். அவர்களுடன் பேச்சில் ஈடுபட்டார். அவரது திரு வாயிலிருந்து இறைவனைப் பற்றிய பேச்சை தவிர வேறு எந்தப்பேச்சும் வரவில்லை.

ஜாதிவேற்றுமைபற்றி பேச்சு திரும்பியது. குருதேவர் கூறினார்-

ஒரு வழியில் ஜாதி வேற்றுமையை நீக்க முடியும். பக்தி தான் அந்த வழி. பக்தர்களுக்கு ஜாதி இல்லை. பக்தி ஏற்பட்டால் உடல், மனம், ஆன்மா அனைத்தும் தூய்மை பெறுகின்றன. வைதன்யரும் நித்தியானந்தரும் ஹரி நாமத்தை எல்லோருக்கும் வழங்கினர், சண்டாளர்களையும் தழுவிக் கொண்டனர். பக்தி இல்லாத பிராமணன் பிராமணனும் அல்ல,பக்தியுடைய சண்டாளன் சண்டாளனும் அல்ல, தீண்டத் தகாதோரிடமும் பக்தி இருக்குமானால் அவர்கள் தூயோராகின்றனர். புனிதம் பெறுகின்றனர்.

உலகியலில் கட்டுண்டவர்களைப் பற்றி குருதேவர் பேசத் தொடங்கினார்.

அவர்கள் பட்டுப் புழுவைப்போன்றவர்கள். அது விரும்பினால் கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வர முடியும். ஆனால் மிகுந்த முயற்சியுடன் கட்டிய கூடு அல்லவா! வெளியேற முடியாமல் அதிலேயே கிடந்து சாகிறார்கள். இவர்களை வலையில் அகப்பட்ட மீன் என்றும் சொல்லலாம். எந்த வழியாக சென்று மாட்டிக்கொண்டதோ, அந்த வழியாகவே மீன் தப்பி விடலாம். ஆனால் அது நீரின் சலசல ஒலியில் மகிழ்ந்து மற்ற மீன்களோடு களித்தபடி எல்லாவற்றையும் மறந்து விடுகிறது. தப்புவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை. மனைவி மக்களின் கொஞ்சல் மொழிகள் தான் நீரின் சலசல ஒலி, உறவினர்களும் நண்பர்களும் தான் வலையில் சிக்கியிருக்கும் மற்ற மீன்கள். ஆனால் ஓரிரு மீன்கள் தப்பி விடுகின்றன. இவர்களே ஜீவ ன் முக்தர்கள்.

மனிதனைப் பருப்புக்கு நிகராகச்சொல்லலாம். திரிகல்லின் இடையில் அகப் பட்டிருக்கிறான். அரைபட்டு விடுவான். ஆனால் மையக் கம்பியின் அருகில் உள்ள பருப்பு மணிகள் அரைபடுவதில்லை. எனவே மையக்கம்பியாகிய கடவுளைத் தஞ்சம் அடை. அவரைக் கூறி அழை. அவருடைய திருநாமத்தைச்சொல். அப்போது தான் முக்தி. இல்லா விட்டால் கால வடிவான திரிகல்லில் அரைபட்டுப்போவாய்.

அத்தனைநேரமும் அங்கே அமர்ந்திருந்த விஸ்வாஸ் பாபு எழுந்து சென்றார். ஒரு காலத்தில் பெரும் செல்வந்தராக விளங்கியவர் அவர். தீய வழிகளில் சென்றதன் காரணமாக அனைத்தையும் இழந்தார். தற்போது மனைவி மகள் யாரையும் கவனிப்பதில்லை. விஸ்வாஸைப் பற்றிய பேச்சை பலராம் எழுப்பியபோது குருதேவர் கூறினார்.

அவன் ஓர் அதிர்ஷ்டம் கெட்ட உதவாக்கரை. இல்லறத்தானுக்குக் கடமை உள்ளது. கடன் உள்ளது. தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும், ரிஷிகளுக்கும்மட்டுமின்றி குடும்பத்திற்கும் அவன் கடன் பட்டவன். கற்புடைய மனைவியாயிருந்தால் அவளை அவன் காப்பாற்றவேண்டும். குழந்தைகள் தக்கவயது அடையும் வரை அவர்களையும் காப்பாற்றியே தீர வேண்டும்.

சாதுக்கள் மட்டுமே சேமித்து வைக்கக் கூடாது. பறவையும் துறவியும் சேர்த்து வைப்பதில்லை. ஆனால் குஞ்சுகள் பொரித்து விட்டால் பறவையும் சேகரிக்கிறது. குஞ்சுக்காகத் தன் அலகில் உணவைக்கௌவிக் கொண்டு வருகிறது.

பலராம்-

இப்போது விஸ்வாஸ் சாதுக்களோடு இருப்பதை விரும்புகிறான்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

(புன்சிரிப்போடு)-

சாதுவின் சுரைக்குடுக்கை எல்லா புண்ணியத் தலங்களுக்கும் சென்று வரத் தான் செய்கிறது.ஆயினும் அதன் இயல்பான கசப்பு நீங்குவதில்லை. மலயமாருதம் வீசும்போது, அந்தக் காற்று படுகின்ற மரங்களெல்லாம் சந்தன மரங்களாக மாறுகின்றன. ஆனால் இலவம், அரசு, மரிமாங்காய், போன்ற மரங்கள் மாறுவதில்லை. சிலர் கஞ்சா பிடிப்பதற்காக சாதுக்களுடன் பழகுகின்றனர். (சிரிப்பு) சாதுக்கள், கஞ்சா பிடிக்கிறார்கள் அல்லவா.? அவர்கள் அருகில் அமர்ந்து கொள்வார்கள். கஞ்சா தயார் செய்து கொடுப்பார்கள். பிறகு அதில் பிரசாதம் பெற்றுக் கொள்வார்கள்.(எல்லோரும் சிரித்தனர்)

 பாகம்- 16

வியாழன், நவம்பர் 16, 1882

.............................

சர்க்கஸ் பார்த்த மறுநாள் குருதேவர் மீண்டும் கல்கத்தாவிற்கு வந்தார். நிம்தலாவில் வைணவ மடம் ஒன்று இருந்தது. அதன் தலைவர் ஸ்ரீகிரிதாரிதாஸ், குருதேவர் முதலில் மாலையில் அங்கு சென்று ஆறு கரங்களைக்கொண்ட சைதன்ய மகாபிரபுவைத் தரிசித்தார். வெகுநாட்களாக அங்கே சைதன்யருக்குப் பூஜை நடைபெற்று வந்தது.

பிறகு குருதேவர் சிமூலியாவிலுள்ள ராஜ்மோகனின் வீட்டிற்கு வண்டியில் சென்றார். அங்கே நரேந்திரர் முதலானபிரம்ம சமாஜ இளைஞர்கள் ஒன்று கூடி, பிரம்ம சமாஜ வழிபாடு நடத்துவார்கள் என்று குருதேவர் கேள்விப் பட்டிருந்தார்.

அதைக் காணவே அவர் அங்கு வந்திருந்தார். ம-வும் ஓரிரு பக்தர்களும் உடன் வந்திருந்தனர். ராஜ்மோகன் புராதன பிரம்ம சமாஜ பக்தர்.

நரேந்திரரைக் கண்ட குருதேவர் மகிழ்ச்சி அடைந்தார். உங்கள் வழி பாட்டைப் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.நரேந்திரர் பாடத் தொடங்கினார். பிரியர் முதலிய இளம் பக்தர்கள் இருந்தனர்.

வழிபாடு தொடங்கியது. இளைஞர்களுள் ஒருவன் வழிபாட்டைத்தொடங்கி பிரார்த்தித்தான். பகவானே, அனைத்தையும் துறந்து உம்மிடம் லயிக்க அருள் புரிவாய். குருதேவரைக் கண்டதால் அவன் பரவசம் அடைந்தான் போலும். அதனால் தான் அனைத்தையும் துறப்பது பற்றி பேசினான். குருதேவர் அதைக்கேட்டு, இதுவாவது நடப்பதாவது, என்று மெல்லிய குரலில் கூறினார். ம-குருதேவருக்குமிக அருகில் அமர்ந்திருந்தார். எனவே அவர் மட்டும் அதைக்கேட்க முடிந்தது. ராஜ்மோகன் குருதேவரை வீட்டினுள் அழைத்துச்சென்று சிற்றுண்டி அளித்தார்.

  

ஞாயிறு, நவம்பர் 19, 1882

.....................

ஜகத்தாத்ரி பூஜை,. சுரேந்திரர் குருதேவரை அழைத்திருந்தார்.சுரேந்திரரின் வீட்டிற்கு அருகிலுள்ள மனமோகனின் வீட்டிற்கு குருதேவர் முதலில் சென்றார். அங்கே சற்றுஓய்வெடுத்து விட்டு சுரேந்திரரின் வீட்டிற்குச் செல்வதாக ஏற்பாடு. ஓய்வுக்குப் பிறகு வரவேற்பறையில் அமர்ந்து சிறிது நேரம் பேசினார்.

ஏழைகள் மற்றும் திக்கற்றவர்களின் பக்தி இறைவனுக்குப் பிரியமானது. பிண்ணாக்கு கலந்த வைக்கோல் பசுவிற்குப் பிரியமானது போல், துரியோதனன் எவ்வளவோ செல்வத்தையும் ஐசுவரியங்களையும் காட்டியபோதும் கண்ணன் அவரது மாளிகைக்குப் போகவில்லை. விதுரனின்  வீட்டிற்கே சென்றார். இறைவன் பக்த வத்சலர். கன்றைத்தேடி ஒடும் தாய்ப்பசுவைப்போல் பக்தர்களிடம் ஓடுகிறார்.

கிருஷ்ண நாமத்தைக்கேட்ட அளவிலேயே சைதன்ய தேவர் கண்ணீர் உகுப்பார். இறைவனே இருப்பவன், மற்றவை இல்லாதவை. மனிதன் விரும்பினால் இறையனுபூதி பெற முடியும். அவனோ காமினீ- காஞ்சனத்தில் பித்து பிடித்து அலைகிறான். பாம்பின் தலையில் மாணிக்கம் இருக்கிறது.அதுவோ தவளையைத் தின்று வாழ்கிறது.

பக்தி தான் சாரம். ஆராய்ச்சியின் மூலம் இறைவனை யாரால் அறிய முடியும்? எனக்கு வேண்டியது பக்தி. அவருடைய எல்லையற்ற கீர்த்திகளை அறிந்து கொள்வதால் எனக்கு ஆக வேண்டியது என்ன? ஒரு புட்டி கள்ளிலே எனக்குபோதை ஏறி விடுமானால், கடையில் எவ்வளவு கள் உள்ளதுஎன்ற கணக்கினால் எனக்கு என்ன பயன். ஒரு கப் தண்ணீர் என் தாகத்தைத் தீர்த்து விடும் போது இந்தப் பஸ்ரீமியில் எவ்வளவு உள்ளது என்பதை அறிவதால் எனக்கு எந்த பயனும் இல்லை.

குருதேவரின் வருகையை எதிர் பார்த்த வண்ணம் சுரேந்திரர் தன் வீட்டில் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தார். அப்போது ம- உள்ளே நுழைந்தார். ம-வைக் கண்டதும் பரபரப்புடன், நீ வந்து விட்டாய், குருதேவர் எங்கே? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து குருதேவர் பயணம் செய்த வண்டி வாசலில் வந்து நின்றது.

வண்டியிலிருந்த இறங்கிய குருதேவர் மாடி வரவேற்பறையில் சென்று அமர்ந்தார். சுரேந்திரரின் அண்ணனும் அங்கே இருந்தார். அவர் ஒரு நீதிபதி. பக்தர்கள் பலர் வந்திருந்தனர். குருதேவர் சுரேந்திரரின் சகோதரரிடம் கூறினார்.

நீங்கள் ஒரு ஜட்ஜ். அது நல்லது. ஆனால் எல்லாம் இறைவனின் சக்தி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உயர்ந்த பதவியையும் அவரே தந்துள்ளார். அதனால் தான் கிடைத்திருக்கிறது. நாமே பெரியவர்கள் என்று மக்கள் நினைக்கின்றனர். மாடியிலுள்ள நீர் சிங்க முகக் குழாய் வழியாகக் கீழே விழுகிறது. பார்த்தால் சிங்கம் தன் வாய் வழியாகத் தண்ணீரைக் கொட்டுவது போல் இருக்கும். ஆனால் தண்ணீர் எங்கிருந்து வருகிறது. எங்கோ ஆகாயத்தில் மேகம் திரளுகிறது. அந்தத் தண்ணீர் மாடியில்பொழிகிறது. அது குழாய்க்கு வருகிறது. பிறகு சிங்கத்தின் வாய் வழியாக வெளியே வருகிறது.

சுரேந்திரரின் சகோதரி-

சுவாமி, பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். ஜாதி வேற்றுமையை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் பிரம்ம சமாஜம் பிரச்சாரம் செய்து வருகிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக் கிறீர்கள்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இறைவனிடம் புதிதாக அன்பு ஏற்படும்போது இப்படி யெல்லாம் வரும். சுழற்காற்று அடிக்கும் போது புழுதி கிளம்பும். அப்போது எது புளிய மரம், எது மாமரம் என்று எதுவும் தெரியாது. காற்று நின்ற பிறகு எல்லாம் தெரியும். புதிய அன்பு என்ற சுழற்காற்று நின்றுவிட்டால் இறைவன் ஒருவரே மேலானவர். உள்ளவர், மற்றவையெல்லாம் நிலையற்றவை என்பதெல்லாம் படிப் படியாக தெரியவரும். சாதுக்களின் தொடர்பும் தவமும் இல்லாமல் இவை எதையும் புரிந்து கொள்ள முடியாது. மிருதங்க ஓசையை வாயினால் சொல்லி என்ன பயன்? கையினால் அதை வாசிப்பது மிகவும் கடினம். வெறும் லெக்சரால் ஆவது என்ன? தவம் செய்ய வேண்டும். அப்போது தான் புரியும்.

ஜாதி வேற்றுமையா? ஒரே ஒரு வழியினால் தான் ஜாதி வேற்றுமையை ஒழிக்க முடியும். அது முக்தி. பக்தர்களுக்கு ஜாதி கிடையாது.தீண்டப் படாத ஜாதியும் பக்தியால் தூய்மை பெறுகிறது. சண்டாளனுக்கு பக்தி ஏற்படுமனால் அவன் சண்டாளனே அல்ல. சைதன்ய தேவர் சண்டாளர் வரையுள்ள அனைவரையும் கட்டியணைத்துக்கொண்டார்.

பிரம்ம சமாஜத்தினர் ஹரி நாமத்தைச் சொல்கிறார்கள். அது மிகவும் நல்லது. மன ஏக்கத்துடன் அவரை அழைத்தால் அவரது அருள் உண்டாகும். அவரது அனுபூதி உண்டாகும்.

எல்லா வழிகள் மூலமும் இறைவனை அடையலாம். ஒரே கடவுளைப் பல பெயர்களால் அழைக்கிறோம். ஒரு படித்துறையில் இந்துக்கள் தண்ணீர் பருகும் போது அதைத் தண்ணீர் என்கின்றனர். மற்றொரு துறையில் கிறிஸ்தவர்கள் வாட்டர் என்கின்றனர். இன்னொரு துறையில் முஸ்லீம்கள் பானி என்கின்றனர்.

சரேந்திரரின் சகோதரர்-

சுவாமி, தியாசபியைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய சக்தியை இவர்கள் பெறுவதாக ஏதோ கேள்விப்பட்டேன். இவ்வாறு ஆவிகளைக் கட்டுப் படுத்தக் கூடிய ஒருவனை நான் தேவன் பாபுவின் வீட்டில் பார்த்தேன். அந்த ஆவி எவ்வளவோ பொருட்களை அவனுக்குக் கொண்டு வந்து கொடுத்தது. இந்த அசாதாரண சக்திகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது? இதனால் இறையனுபூதி கிடைக்குமா என்ன? இறையனுபூதி கிடைக்காவிட்டால் எல்லாமே வீண்.

.....................

ஞாயிறு , நவம்பர் 26, 1882

.......................

மாலை நான்கு மணி இருக்கும். கல்கத்தாவிலுள்ள சிந்தூரியாபட்டியில் மணிலால் மல்லிக்கின் வீட்டிற்கு குருதேவர் பக்தர்களுடன் வந்திருந்தார். அங்கே ஆண்டுதோறும் பிரம்ம சமாஜ விழா நடைபெறும். அன்று பிரம்ம சமாஜ ஆண்டு விழா நடைபெற இருந்தது.

விஜய கிருஷ்ண கோசுவாமி. பிரம்ம சமாஜ பக்தர்கள், பிரேம் சந்த். மல்லிக்கின் உறவினர்கள் என்று ஏராளமானோர் வந்திருந்தனர். ம-வும் உடனிருந்தார். பக்தர்களை உபசரிப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளை மல்லிக் செய்திருந்தார். பிரகலாத சரித்தம் பற்றிய கதா காலட்சேபம் நடைபெறும்.

அதன் பிறகு பிரம்ம சமாஜ வழிபாடு நடைபெறும். இறுதியில் பிரசாதம் வழங்கப் படும்.

விஜயர் இப்போதும் பிரம்ம சமாஜத்தில் இருந்தார்.இன்று அவர் வழிபாடு நடத்துவார். அவர் இன்னும் காவி உடுக்கவில்லை.

பாகவதர் , புராணத்திலிருந்து பிரகலாத சரித்திரத்தைக் கூறினார்.

இதனைக்கேட்ட அளவில் குருதேவரின் கண்களில் நீர் வழியலாயிற்று. விஜயர் முதலானோர் குருதேவரின் அருகில் உட்கார்ந்திருந்தனர். குருதேவருக்குப் பரவச நிலை ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு விஜயர் முதலிய பக்தர்களிடம் பேசத் தொடங்கினார் குருதேவர்.

பக்தி தான் சாரம். பகவானின்  நாமத்தையும் புகழையும் எப்போதும் பாடிக்கொண்டேயிருந்தால் பக்தி உண்டாகும். ஆகா! சிவநாத்திற்குத்தான் எத்தகைய பக்தி! சர்க்கரைப் பாகில் ஊறிய பாலாடை போல் அல்லவா இருக்கிறார்!

என்னுடைய மதம் தான் சரியானது. மற்றவர்களுடைய மதங்களெல்லாம் தவறானவை என்று நினைப்பது சரியல்ல. எல்லா பாதைகள் வழியாகவும் அவரை அடைய முடியும். ஆழ்ந்த மனஏக்கம் இருந்தால் போதும். எண்ணற்ற பாதைகள் எண்ணற்ற மதங்கள்.

இதோ பார், இறைவனைக் காண முடியும். அவர் மனம், வாக்குகளுக்கு எட்டாதவர் என்று வேதங்கள் கூறுகின்றன. அதாவது அவர் உலகியலில் மூழ்கிய மனத்திற்குப் புலப்படாதவர். தூய மனம், தூய புத்தி, இவற்றால் அவரை அடைய முடியும், என்று வைஷ்ணவ சரண் கூறுவதுண்டு. சாதுசங்கம், பிரார்த்தனை, குருவின் உபதேசம், முதலியவை அவசியமானவை. அப்போது தான் மனம் தூய்மை பெறும். பிறகு இறைவனின் காட்சி கிடைக்கும். அழுக்குத் தண்ணீரில் படிகாரத்தை இட்டால் தண்ணீர் தெளிகிறது. அதன் பிறகு அதில் முகம் பார்க்க முடியும். தசி படிந்த கண்ணாடியில் முகம் பார்க்க முடியாது.

மனம் தூய்மை பெற்ற பிறகு பக்தி ஏற்படுமானால் இறைவனின் அருளால் அவரைக் காண முடியும். காட்சிக்குப் பிறகு அவரது ஆணை கிடைக்குமானால், மக்களுக்கு உபதேசம் செய்யலாம். அதற்கு முன்பு லெக்சர் செய்வது நல்லதல்ல.

இதயக்கோயிலை முதலில் தூய்மைப்படுத்த வேண்டும். இறைவனுடைய திருவுருவைக்கொண்டு வர வேண்டும்.பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இந்த ஏற்பாடுகளைச் செய்யாமல் வெறுமனே சங்கைஊதி ஆர்ப்பாட்டம் செய்வதில் என்ன பயன்?

பிறகு விஜய கோசுவாமி மேடையில் அமர்ந்து பிரம்ம சமாஜ வழிபாட்டை ஆரம்பித்தார். வழிபாடு முடிந்ததும் அவர் குருதேவரின் அருகில் சென்று அமர்ந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

(விஜயரிடம்)-

ஆமாம் , நீங்கள் ஏன் பாவம் பாவம் என்று இவ்வளவு கூறுகிறீர்கள்? நான் பாவி, நான் பாவி” என்று நூறு முறை ஒருவன் சொன்னால் , அவன் பாவியாகத்தான் ஆவான். இறைவனுடைய திருநாமத்தைச் சொல்கிறேன்” எனக்காவது பாவமாவது” என்ற நம்பிக்கை வேண்டும். அவரே நமது தாயும் தந்தையும், பாவம் செய்து விட்டேன். இனி அவ்வாறு செய்ய மாட்டேன். என்று அவரிடம் முறையிடுங்கள். அவரது திருநாமத்தைச் சொல்லுங்கள். அவரது திரு நாமத்தைால் உடல் மனம் எல்லாம் பரிசுத்த மாகின்றன.அவரது திருநாமத்தைச் சொல்வதன் மூலம் நாக்கைத் தூய்மைப் படுத்துங்கள்.



Site Content

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

  பாகம்- 17 

டிசம்பர் 1882

.....................

பிற்பகல் வேளை. குருதேவர் தட்சிணேசுவரக்கோயிலில் தமது அறையை ஒட்டினாற் போன்ற மேற்கு வராந்தாவில் பேசிக்கொண்டிருந்தார். பாபுராம்,ம-ராம் தயாள் முதலானோர் இருந்தனர். அவர்கள் இரவில் தங்குவார்கள். கிறிஸ்மஸ் விடுமுறை தொடங்கி விட்டது. ம- நாளையும் தங்குவார். பாபுராம் புதிதாக வரத் தொடங்கியிருந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

(பக்தர்களிடம்)-

எல்லாம் இறைவன் செய்கிறார் என்ற உணர்வு வருமானால் அவன் ஜீவன்முக்தனாகி விட்டான். ஒருமுறைகேசவர் சம்பு மல்லிக்குடன் வந்திருந்தார். இறைவனின் விருப்பமின்றி ஓர் இலையும் அசைவதில்லை“ என்று நான் அவரிடம் சொன்னேன்.சுயேச்சை எங்கே? எல்லாரும் இறைவனுக்குக் கீழ்தான்.

நங்டா எவ்வளவு பெரிய ஞானி! அவரே தண்ணீரில் மூழ்கி இறப்பதற்காகச்சென்றார். இங்கே பதினொரு மாதங்கள் தங்கியிருந்தார். அவருக்கு வயிற்று நோய் கண்டது.நோயின் வேதனை தாங்க முடியாமல் கங்கையில் மூழ்கி இறப்பதற்காகச்சென்றார். படித்துறைக்கு அருகே நீண்ட மணல் திட்டு, எவ்வளவு தூரம் சென்றாலும் முழங்காலுக்கு மேல் தண்ணீர் இல்லை. கடைசியாக புரிந்து கொண்டார் திரும்பிவந்தார்.

ஒரு முறை எனக்கு வாதநோய் தீவிரமாகியது. வேதனை தாளாமல் கழுத்தை வெட்டிக்கொள்ளவே போய் விட்டேன். அதனால் தான், அம்மா, நான் எந்திரம் , நீ அதை இயக்குபவள், நான் தேர், நீ தேரை ஓட்டுபவள். நீ எப்படிநடத்துகிறாயோ அப்படி நடக்கிறேன். எப்படி செய்விக்கிறாயோ அப்படி செய்கிறேன்” என்று சொல்கிறேன்.

குருதேவரின் அறையில் சங்கீர்த்தனம் நடைபெற்றது. பக்தர்கள் பாடினர்.

நந்தன் பகானைச்சேர்ந்த ஸ்ரீநாத் மித்ரர் நண்பர்களுடன் வந்தார்.குருதேவர் அவரைக் கண்டதும்,இதோ கண்ணாடி கதவு வழியாக வீட்டிலுள்ள பொருட்கள் எல்லாம் தெரிவது போல், உள்ளே உள்ளவை அனைத்தும் இவரது கண்களின் வழியாகத் தெரிகிறது” என்றார்.

ஸ்ரீநாத், யக்ஞநாத் இருவரும் நந்தன் பகவானிலுள்ள பிரம்ம சமாஜ பக்தர்கள், இவர்களின் வீட்டிலும் ஆண்டு தோறும் பிரம்ம சமாஜ விழா நடக்கும். பின்னாளில் அந்த விழாவிற்கு குருதேவர் ஒரு முறை சென்றார்.

மாலை வேளைக்குப் பிறகுகோயிலில் தீபாராதனை தொடங்கியது. குருதேவர் தமது அறையில் சிறிய கட்டிலில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். படிப்படியாக பரவச நிலையில் ஆழ்ந்தார். அந்த நிலை சற்றே தணிந்ததும், அம்மா, அவனையும் இழுத்துக்கொள். அவன் எவ்வளவு பணிவுடையவனாக இருக்கிறான்! உன்னிடமும் வந்து போய்க் கொண்டிருக்கிறான்” என்று கூறினார்.

ஒரு வேளை பாபுராமைப் பற்றி கூறுகிறாரோ?

பாபுராம்-

ம- ராம்தயாள் முதலியோர் உட்கார்ந்திருந்தனர். இரவு எட்டு ஒன்பது மணி இருக்கும். குருதேவர் சமாதி தத்துவத்தை விளக்கினார். ஜட சமாதி , சேதன சமாதி. ஸ்தித சமாதி, உன்மனா சமாதி என்று பலவகை சமாதி நிலை களைப் பற்றி கூறினார்.

சுகதுக்கங்களைப் பற்றி பேச்சு திரும்பியது. இவ்வளவு துக்கங்களை இறைவன் படைத்தது ஏன்?

ம- ஒரு முறை வித்யாசாகர் மனம் புண்பட்டவராய் என்னிடம், இறைவனிடம் முறையிட்டு என்ன பயன்? இதையே பாரேன், செங்கிஸ்கான் நாட்டைக்கொள்ளையடித்தபோது, பலரைச் சிறையிலும் அடைத்தான். கைதிகளின் எண்ணிக்கை படிப்படியாக ஒரு லட்சத்தை எட்டியது. அப்போது சேனைத் தலைவன் செங்கிஸ்கானிடம் சென்று, அரசே! இவர்களுக்கு யார் உணவிடுவது? இவர்களை நம்மோடு வைத்திருப்பது ஆபத்து. விடுவிப்பதும் ஆபத்து. என்ன செய்வது? என்று கேட்டான். அதற்கு செங்கிஸ்தான் உண்மை தான். இப்போது என்னசெய்யலாம்? சரி, எல்லோரையும் கொன்றுவிடு” என்றான். அவர்களைக் கண்ட துண்டமாக வெட்ட ஆணையும் பிறப்பித்தான். இந்தப் படுகொலையை இறைவன் பார்த்துக் கொண்டு தானே இருந்தார்? எந்த விதத்திலும் அதைத் தடுக்கவில்லையே? எனவே அவர் இருந்தால் இருக்கட்டும். எனக்கு அவரிடமிருந்து ஆக வேண்டியது எதுவும் இல்லை” என்று என்னிடம் கூறினார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இறைவன் எதை எதற்காகச்செய்கிறார் என்பதை நம்மால் அறிய முடியுமா என்ன? அவர் ஏன் அழிக்கிறார் என்பதை நம்மால் அறிய முடியுமா? அம்மா, நான் எதையும் அறிய வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு உன் பாத கமலங்களில் பக்தியைத் தா, என்று நான் அன்னையிடம் கேட்கிறேன். மானிட வாழ்க்கையின் குறிக்கோள் இந்த பக்தியைப்பெறுவதே. மற்றவைகளை அன்னை அறிவாள்.

தோட்டத்திற்கு நான் வந்தது பழம் சாப்பிட, அங்கே எத்தனை மரங்கள், எத்தனை கிளைகள், எத்தனை கோடி இலைகள் என்றெல்லாம் கணக்குப்பார்ப்பதற்கு என்ன அவசியம் வந்தது? நான் மாம்பழம் சாப்பிட வேண்டும், இலைகள் முதலியவற்றைக் கணக்கிடுவதால் எனக்கு ஆவது எதுவும் இல்லை.

குருதேவரின் அறையில் விரிப்பை விரித்து, அன்றிரவு பாபுராம், ம- ராம்தயாள் மூவரும் உறங்கினார்கள்.

இரவு இரண்டு மூன்று மணியிருக்கும். குருதேவரின் அறையில் விளக்கு அணைக்கப் பட்டிருந்தது. அவர் படுக்கையில் உட்கார்ந்த படியே அவ்வப்போது பக்தர்களோடு பேசிக் கொண்டிருந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-(ம- முதலியவர்களிடம்)-

இதோ பாருங்கள், தயை, மாயை இரண்டும் வெவ்வேறானவை. மாயை என்பது உற்றார் உறவினரிடம் கொள்ளும் பாசம். தந்தை- தாய் சகோதரன்- சகோதரி, மனைவி- மக்கள்போன்றோரிடம் வைக்கும் பாசம். எல்லா உயிர்களையும் நேசிப்பது, அதாவது சமமாகப் பார்ப்பது தயை. வித்யா சாகரிடம் பார்க்கிறீர்களே அது போல் யாரிடமாவது தயையைக் கண்டால், அது இறைவனின் தயை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.தயையினால் தான் எல்லா உயிர்களுக்கும் சேவை செய்ய முடியும். மாயையும் இறைவனுடையது தான். மாயையால், நம்மை நம் சுற்றத்தாருக்குச்சேவை செய்ய வைக்கிறார்அவர்.ஆனால் ஒன்று, மாயையால் நம்மை அறியாமையில் வைக்கிறார். கட்டுப்படச் செய்கிறார் இறைவன். தயையால் மனத் தூய்மை உண்டாகிறது. படிப்படியாக முக்தியும் கிடைக்கிறது.

மனம் தூய்மை அடையாமல் இறைக் காட்சி கிடைக்காது. காமம், கோபம், பேராசை இவற்றை வென்றால் அவரது அருள் கிடைக்கும். அப்போது தான் அவருடைய காட்சியும் கிடைக்கும். உங்களுக்கு மிக ரகசியமான ஒன்றைக் கூறுகிறேன். காமத்தை வெல்ல நான் பல சாதனைகள் செய்திருக்கிறேன். ”ஜெய்காளி, ஜெய் காளி” என்று கூறிக்கொண்டு ஆனந்தாசனத்தைப் பல முறை சுற்றிச் சுற்றி வந்திருக்கிறேன்.

எனக்குப் பத்துப் பதினொரு வயதிருக்கும் போது காமார் புகூரில் அந்த நிலை ஏற்பட்டது. வயல் வரப்பின் வழியாகச் சென்று கொண்டிருந்த போது பெற்ற காட்சியின் விளைவாக நினைவிழந்தேன்.

இறைக் காட்சிக்குச் சில அறிகுறிகள் இருக்கின்றன. ஜோதி தரிசனம் உண்டாகும். ஆனந்தம் ஏற்படும். வாணம் கிளம்புவது போல் நெஞ்சினுள் மகாவாயு குர்குரென்ற சத்தத்துடன் மேலெழும்.

பாபுராமும் ராம்தயாளும் மறுநாள் வீடு திரும்பினர். ம- அன்று பகலும் இரவும் குருதேவருடன் தங்கியிருந்தார். அன்று அவர் கோயிலில் பிரசாதம் உட்கொண்டார்.

பிற்பகல் ம-வும் ஓரிரு பக்தர்களும் இருந்தனர். சில மார்வாரி பக்தர்கள் வந்து குருதேவரை வணங்கினர். அவர்கள் கல்கத்தாவில் வியாபாரம் செய்பவர்கள் நீங்கள் எங்களுக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள்” என்று குருதேவரிடம் அவர்கள் வேண்டினர். குருதேவர் சிரித்துக் கொண்டார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-(மார்வாரி பக்தர்களிடம்)

இதோ பாருங்கள் ”நான்” ”எனது” இந்த இரண்டும் அஞ்ஞானம்.

எம்பெருமானே! நீயே எல்லாம் செய்பவன். இவை அனைத்தும் உன்னுடையவை-,இது ஞானம். ”எனது” என்று எப்படிக் கூற முடியும். தோட்டக்காரன், இது எனது தோட்டம்” என்கிறான். ஆனால் ஏதாவது குற்றத்திற்காக வேலையிலிருந்து நீக்கப் பட்டால் தன்னுடைய மரப்பெட்டியைக்கூட தோட்டத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல அவனுக்கு தைரியம் இருக்காது.

காமம், கோபம், முதலியவை விலகாது. அவற்றை இறைவனை நோக்கி த் திருப்பி விடுங்கள். காமினீ- காஞ்சனம் இருக்க வேண்டும் என்றால் இறைவனை அடைவதற்காக அவற்றைத் திருப்புங்கள். ஆராய்ந்து அவற்றை விரட்டுங்கள். யானை பிறரது வாழை மரங்களைத் தின்னச்சென்றால் , பாகன் அங்குசத்தால் குத்துகிறான்.

நீங்கள் வியாபாரம் செய்கிறீர்கள். படிப்படியாக வியாபாரத்தைப்பெருக்க உங்களுக்குத் தெரியும். சிலர் முதலில் ஆமணக்கு எண்ணெய் ஆட்டுவதற்கான செக்கு ஒன்றை நிறுவுகின்றனர். நல்ல பயம் கிடைத்ததும் துணிக்கடை திறக்கின்றனர். அது போலவே இறை நெறியில் முன்னேறிச்செல்ல வேண்டும். இடையிடையே சில நாட்கள் தனிமையில் இருந்து நீண்ட நேரம் அவரை அழைக்க வேண்டும். ஆனால் விஷயம் என்ன தெரியுமா உரிய வேளை வராவிட்டால் ஒன்றும்நடக்காது. சிலருக்கு இன்னும் உலக இன்பங்களும், பல காரியங்களும் அனுபவிப்பது பாக்கி இருக்கிறது. அதனால் தாமதம் ஏற்படுகிறது. பழுக்காத கட்டியை அறுத்தால் தீங்குதான் நேரும், பழுத்து முகம் கூட்டிய பிறகே டாக்டர் கத்தியை வைக்கிறார்.

குழந்தை தாயிடம், அம்மா, நான் தூங்கும்போது இரண்டுக்கு ப்போக வேண்டிய நேரத்தில் என்னை எழுப்பி விடு” என்று கூறியது. அதற்கு தாய்” மகனே, அந்த உணர்ச்சியே உன்னை எழுப்பிவிடும். நான் எழுப்ப வேண்டிய அவசியம் ஏற்படாது.” என்றாள்.(எல்லோரும் சிரித்தனர்)

மார்வாரி பக்தர்கள் குருதேவருக்காக இனிப்பு, பழங்கள், வெல்லம், கற்கண்டு முதலியவற்றை அடிக்கடி எடுத்து வருவார்கள். வெல்லம் மற்றும் கற்கண்டில் பன்னீர் வாசனை நிறைந்திருக்கும். பொதுவாக குருதேவர் அவற்றைச் சாப்பிடுவதில்லை, அவர்கள் பல பொய் சொல்லி பணம் சம்பாதிக்கின்றனர் என்பார் அவர். அவர்களுக்கு மீண்டும் உபதேசம் செய்யலானார்.

இதோ பாருங்கள்! வியாபாரத்தில் இறங்கினால் உண்மை பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க முடியாது. வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நல்லொழுக்கம் இல்லதவனின் உணவை உண்ணச்சென்றபோது , அவை ரத்தத்தில் தோய்ந்து கிடப்பதைக் கண்டேன்” என்று குருநானக் கூறியிருக்கிறார். சாதுக்களுக்குத் தூய பொருட்களைக் கொடுக்க வேண்டும். தீய வழியில் சம்பாதித்த வற்றைக்கொடுக்க க் கூடாது. உண்மையின் வழியில் இறைவனை அடையலாம்.

எப்போதும் இறைவனது திருப்பெயரைச் சொல்ல வேண்டும். வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது மனத்தை அவரிடம் வைத்திருக்க வேண்டும்.

எனக்கு முதுகில் பிளவை வந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலம் மனம் அந்தக் கட்டியையே நினைத்துக்கொண்டிருக்கும். நாம நாமத்தை ஜபிப்பது நல்லது. எந்த ராமர் தசரதனுடையதிருக் குமாரனோ, அவரே உலகத்தைப் படைத்திருக்கிறார். அவரே எல்லா உயிர்களிலும் உள்ளார். நமக்கு மிக அருகில் இருப்பவரும் அவரே, உள்ளும் புறமும் நிறைந்திருப்பவரும் அவரே!



Site Content

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

 பாகம்- 18  

வியாழன், டிசம்பர் 14, 1882

....................

பிற்பகல் வேளை, தட்சிணேசுவரக்கோயில், விஜயகிருஷ்ண கோசுவாமி குருதேவரைக் காண வந்திருந்தார். இரண்டு மூன்று பிரம்ம சமாஜ அன்பர்களும் உடன் வந்தனர். அவர்கள் கல்கத்தாவிலிருந்து ஒரு படகில் குருதேவரின் மிகச் சிறந்த பக்தரான பலராமுடன் வந்தார்கள். பிற்பகலில் குருதேவர் சற்று ஓய்வெடுத்தார்.

ஞாயிற்றுக் கிழமைகளில் தான் பக்தர்கள் அதிகமாக வருவார்கள். குருதேவருடன் தனித்துப்பேச விரும்புபவர்கள் பொதுவாக மற்ற நாட்களில் வருவார்கள்.

பரமஹம்சர் கட்டிலின் மீது உட்கார்ந்திருந்தார். விஜயர், பலராம், ம- மற்றும் பல பக்தர்கள் கிழக்கு முகமாக அவரைப் பார்த்தபடி சிலர் பாயிலும் சிலர் தரையிலுமாக அமர்ந்திருந்தனர். அறையின் மேற்கு வாசல் வழியாகக் கங்கையைக் காணலாம். குளிர்கால கங்கை அமைதியாக தெளிந்த தண்ணீருடன் தவழ்ந்து சென்று கொண்டிருந்தாள்.மேற்குக்கதவையடுத்து அவரை வட்ட வராந்தா, அதையடுத்து பூந்தோட்டம், பின்னர் தடுப்புச் சுவர், அதற்கும் அப்பால் புவியோரின் பாவங்களைப்போக்கும் புண்ணிய கங்கை காளிகோயிலைவருடியவாறு ஆனந்தமாக ஓடிக் கொண்டிருந்தாள்.

குளிர்காலம், எல்லோரும் கம்பளிப்போர்வை போர்த்தியிருந்தனர். விஜயர் கடுமையான வயிற்று வலியால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். அதனால் புட்டியில் மருந்து கொண்டு வந்திருந்தார். உரியவேளையில் குடிப்பார்.

விஜயர் சாதாரண பிரம்ம சமாஜத்தில் சம்பளம் பெறும் ஓர் ஆசாரியர். மேடையேறி சொற்பொழிவு செய்வது அவரது வேலை. இப்போதெல்லாம் பிரம்ம சமாஜக் கொள்கைகள் பலவற்றில் அவருக்குக் கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் என்ன செய்வார்? சம்பளத்திற்கு வேலை செய்கின்ற அவரால் தம் கருத்தைக் கூறவோ, விருப்பம்போல் செயல்படவோ இயலவில்லை.

விஜயர் கண்ணியமான குடும்பத்தில் பிறந்தவர். அத்வைத கோசுவாமியின் சந்ததியில் வந்தவர். அத்வைத கோசுவாமிஒரு ஞானி. அவர் உருவமற்ற பரம்பொருளை தியானித்தார். அதே வேளையில் பக்தியின் மிகவுயர்ந்து எல்லையையும் காட்டிச்சென்றார். ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் நெருக்கமான சீடர்களுள் ஒருவர் அவர். ஹரிபிரேமையில் பித்துப் பிடித்தவராக தம்மை மறந்து ஆடுவாராம். அப்படி ஆடும்போது உடுத்தியிருக்கும் துணி கூட நழுவி விழுந்து விடுமாம்.விஜயர் உருவமற்ற பரம் பொருளை தியானித்துவந்தார். ஆனால் மகா பக்தரான அத்வைத கோசுவாமியின் ரத்தம் இவரது உடலிலும் ஓடியது அல்லவா? எனவே அவரில் இருந்த ஹரிப்பிரேமை என்னும் விதை முளைத்து எழுவதற்குத் தயாராக இருந்தது. அதற்கான வாய்ப்பிற்காகக் காத்திருந்தது. அவ்வளவு தான்.ஆகவே தான் தேவர்களுக்கும் காணக் கிடைக்காத ஸ்ரீராமகிருஷ்ணரது ஹரிபிரேமையின் துள்ளி எழுகின்ற வெறி”யைக் கண்டு அதில் தம்மை இழந்து விட்டார். பாம்பு எவ்வாறு பாம்பாட்டியின் மந்திரத்திற்குக் கட்டுப் பட்டு, அவனது அருகிலேயே கிடக்குமோ அது போல் விஜயரும் குருதேவரின் திருவாயிலிருந்து வெளி வருகின்ற அமுத மொழிகளைக்கேட்டு, அதிலேயே தம்மை இழந்து அவரது அருகிலேயே அமர்ந்திருப்பார். ஹரிப்பிரேமையில் மூழ்கி குருதேவர் குழந்தைபோல் ஆடும்போது விஜயரும் அவருடன் சேர்ந்து ஆடுவார்.

ஏடேதாஹாவிலுள்ள விஷ்ணு என்பவன் சில நாட்களுக்கு முன்பு கத்தியால் தன் கழுத்தை வெட்டிக்கொண்டு மாண்டான். அவனைப் பற்றிய பேச்சு அன்று முதலில் எழுந்தது.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

( விஜயர் , ம-, மற்றும் பிற பக்தர்களிடம்)-

அந்தப்பையன் இறந்துபற்றி கேள்விப்பட்டதிலிருந்து மனம் வேதனையில் மூழ்கியுள்ளது. அவன் இங்கே அடிக்கடி வருவான். ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தான். உலக வாழ்க்கை பிடிக்கவில்லை என்று சொல்வான்.மேற்குப் பிரதேசத்திற்குப்போய் தன் உறவினர் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தான். அங்கே மைதானத்திலும் காட்டிலும் மலைகளிலும் தனிமையில் உட்கார்ந்து தியானம் செய்வான். பல தெய்வீகக் காட்சிகளைக் கண்டதாகக் கூறுவான்.இதுவேஅவனுக்கு கடைசிப் பிறவியாக இருக்க லாம் என்று நினைக்கிறேன். முற்பிறவியில் அதிக வேலை செய்திருக்க வேண்டும். சிறிது பாக்கியிருந்தது, அதுவும் இப்போது தீர்ந்து விட்டது என்று தோன்றுகிறது.

முற்பிறவி சம்ஸ்காரத்தை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் . நான் கேட்ட ஒரு விஷயத்தைச்சொல்கிறேன். ஒரு சமயம் அடர்ந்த காட்டில் ஒருவன் பிணத்தின்மேல் அமர்ந்து தேவியைக் குறித்து சாதனை செய்து கொண்டிருந்தான். அவன் கண்முன் பல பயங்கரக் காட்சிகள் தோன்றின. கடைசியில் ஒரு புலி வந்து அவனைத்தூக்கிக்கொண்டு போய் விட்டது. அங்கே வேறொருவன், புலிக்குப் பயந்து மரத்தின் மீது உட்கார்ந்திருந்தான். பூஜைக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருப்பதைக் கண்டு அவன் கீழே இறங்கிவந்து அந்தப் பிணத்தின் மீது உட்கார்ந்து சாதனை செய்யத் தொடங்கினான். சற்று நேரம் ஜபம் செய்த மாத்திரத்திலேயே அவனுக்கு தேவியின் தரிசனம் கிடைத்தது. ”உன்னைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்” வேண்டும் வரம் கேள்! என்றாள் தேவி. அவன் தேவியின் திருவடிகளில் வீழ்ந்து அம்மா, முதலில் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன்” உன் செயல் எனக்கு வியப்பாக இருக்கிறது. அந்த மனிதன் எவ்வளவு சிரமப்பட்டு, எவ்வளவு பொருட்களைத் தயார் செய்து இவ்வளவு நாட்கள் சாதனை செய்தான். அவனிடம் உனக்குக் கருணை பிறக்கவில்லை! எனக்கோ ஒன்றும் தெரியாது!கேள்விப் பட்டது கூட இல்லை. நான் உன் பெயர் சொல்லாதவன், சாதனை செய்யாதவன், ஞானம் அற்றவன், பக்தி இல்லாதவன், என் மீது உனக்கு இவ்வளவு கருணை ஏன்? என்றான். தேவி சிரித்துக்கொண்டே, மகனே, உனக்கு முற்பிறவி நினைவு இல்லை. நீ பல பிறவிகளாக என்னைக் குறித்து தவம் செய்து வந்திருக்கிறாய். அந்த சாதனைகளின் வலிமையால் உனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் தான் என் காட்சியைப்பெற்றாய். எனவே என்ன வரம் வேண்டும் என்று இப்போது கேள்” என்றாள்.

ஒரு பக்தர்-

தற்கொலை செய்து கொண்டான் என்பதை கேட்கவே பயமாயிருக்கிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர்- தற்கொலை செய்து கொள்வது பெரும் பாவம். அப்படிச் செய்வதால் திரும்பத் திரும்ப பிறவி எடுக்க வேண்டும். வாழ்க்கையின் வேதனைகளை அனுபவிக்க வேண்டும். ஆனால் இறைக் காட்சியை பெற்ற பின் ஒருவர் உடலை விடுவாரானால் அதைத் தற்கொலை என்று சொல்ல முடியாது. உடலை இவ்வாறுவிடுவதில் தவறு இல்லை. ஞானம் அடைந்த பிறகு சிலர் உடலை விட்டு விடுகின்றனர். மண் அச்சில் பொற்சிலையை வார்த்துவிட்டால் அச்சை வைத்தும் கொள்ளலாம், உடைத்தும் விடலாம்.

பல ஆண்டுகளுக்கு முன் வராக நகரிலிருந்து ஓர் இளைஞன் அடிக்கடி வந்து கொண்டிருந்தான். வயது இருபது இருக்கலாம். கோபால் சேன் என்பது அவனுடைய பெயர். இஙகே வந்தால்போதும், அவனுக்குப் பரவச நிலை அதிகமாகி விடும். அவன் கீழே விழுந்து கைகால்களை ஒடித்துக்கொள்ளாமல் இருப்பதற்காக ஹிருதயன் அவனைப் பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கும். அந்த இளைஞன் ஒரு நாள் என் காலைப் பிடித்துக்கொண்டு, நான் இனி மேல் இங்கே வர முடியாது. நான் போகிறேன்” என்று சொல்லி விட்டுச் சென்றான். சில தினங்களுக்குப் பிறகு அவன் உடலை விட்டு விட்டான் என்று கேள்விப் பட்டேன்.

மக்களில் நான்கு வகை உண்டு என்று சொல்லப் படுகிறது. அவர்கள் பக்தர்கள், முட்முசுக்கள், முக்தர்கள், நித்தியர்கள். உலக வா்க்கை ஒரு வலை போன்றது. மக்கள் மீன்கள். சாந்த மாயையால் இந்த உலகைப் படைத்த இறைவன் மீனவன். வலையில் மாட்டிக் கொள்பவற்றுள் சில மீன்கள் வலையை அறுத்துக் கொண்டு தப்பிக்க, அதாவது முக்தி பெற முயல்கின்றன. இவற்றை முமுட்சுக்களுக்கு ஒப்பிடலாம்.

தப்ப முயல்பவை எல்லாமே தப்ப முடிவதில்லை. இரண்டொரு மீன்கள் தபாங் என்ற சத்தத்தோடு தப்புகின்றன. அப்போது அருகிலுள்ளவர்கள், பார்த்தாயா, அந்தப் பெரிய மீன் தப்பி விட்டது! என்று பேசிக் கொள்வார்கள். இப்படி தப்பிக்கின்ற இரண்டொருவர் தான் முக்தர்கள்.

சில மீன்கள் இயல்பாகவே எச்சரிக்கையாக இருக்கும். அவை ஒரு போதும் வலையில் அகப் பட்டுக் கொள்வதில்லை. நாரதர் போன்ற நித்தியர்கள் சம்சார வலையில் அகப்படுவதே இல்லை.

ஆனால் பெரும்பாலான மீன்கள் வலையில் சிக்கிக் கொள்கின்றன. நாம் வலையில் அகப் பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் இறக்க நேரிடும், என்ற எண்ணமும் அவற்றிற்கு இல்லை. வலைக் கயிற்றைப் பற்றிக் கொண்டே இங்கு மங்கும் நீந்து கின்றன. தண்ணீரின் அடியில் சென்று சேற்றில் மறைந்து கொள்ள முயல்கின்றன. தப்புவதற்கு எந்த முயற்சியும் செய்வதில்லை. சொல்லப்போனால், இன்னமும் நன்றாகச்சேற்றில் அழுந்திக் கொள்கின்றன. இத்தகையவர்களே பக்தர்கள். வலையில் பிடிப்பட்டிருந்ததும் தாங்கள் அங்கே சுகமாக இருப்பதாக நினைத்துக் கொள்கின்றனர்.

பக்தர்கள் உலகியலில் அதாவது காமினீ- காஞ்சனத்தில் பற்றுக் கொண்டிருக்கின்றனர். அழுக்குக் கடலில் மூழ்கிக் கிடக்கின்றனர். ஆனால் சுகமாக இருப்பதாக நினைக்கின்றனர். முமுட்சுக்களும் முக்தர்களும் உலகியல் வாழ்க்கையைப் பாழுங்கிணறாக நினைக்கிறார்கள். அது அவர்களுக்குப் பிடிப்பதில்லை. அதனால் தான் சிலர் ஞானம் அடைந்த பிறகு, இறையனுபூதிக்குப் பிறகு உடலை விட்டு விடுகின்றனர். ஆனால் இப்படி உடலை விடுவது எளிதான காரியமல்ல.

பக்தர்கள் , அதாவது உலகியல் மனிதர்கள் எந்த வழியிலும் விழிப்புணர்வு பெறுவதில்லை. எத்தனை துன்பங்கள், எத்தனை அதிர்ச்சிகள் , எத்தனை ஆபத்துக்கள்! எனினும் அவர்களுக்குப் புத்தி வருவதில்லை. ஒட்டகம் முட்செடியை விரும்பித் தின்கிறது. தின்னும்போது வாயிலிருந்து ரத்தம் பீறிடுகிறது. இருந்தாலும் அது முட்செடியைத் தான் தின்னும், விடாது. உலகியல் மனிதர்களும் எத்தனையோ துன்பங்களுக்கும், ஏக்கங்களுக்கும் உள்ளாகின்றனர். இருந்தாலும் சில நாட்களுக்குப் பிறகு பழைய கதை தான். மனைவி இறந்து விடுகிறாள் அல்லது அவனுக்கேத் துரோகம் செய்து விடுகிறாள். இதற்குப் பிறகும் அவன் மறுமணம் செய்து கொள்கிறான். குழந்தை இறந்து விட்டாலோ எவ்வளவு துக்கம்!ஆனால் சில நாட்களுக்குள் எல்லாம் மறந்து போகின்றன! குழந்தையை இழந்த தாயே சில நாட்களுக்குப் பிறகு தலையை வாரிக் கொள்கிறாள். நகைகளை ப்போட்டுக் கொள்கிறாள்! பெண்ணின் திருமணம் காரணமாக சொத்துக்கள் அனைத்தையும் இழக்கின்றனர். அப்படி யிருந்தும் ஆண்டு தோறும் பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர். நீதி மன்றத்தில் வழக்காடி எல்லா சொத்துக்களையும் இழக்கின்றனர்.ஆனால் மறுபடியும் வழக்கு தொடர்கின்றனர். ஏற்கனவே பிறந்திருக்கின்ற குழந்தைகளுக்கே சோறு போட வழியில்லை, படிக்க வைக்க முடிவதில்லை. நல்ல வீட்டில் வாழ வைக்க முடிவதில்லை. ஆனாலும் ஆண்டு தோறும் குழந்ததை களைப் பெற்றுக் கொள்வதற்கும் குறை வில்லை

சில வேளைகளில் உலகியல் மனிதனின் நிலைமை எலியைப் பிடித்த பாம்பின் நிலைமையாக உள்ளது. விழுங்கவும் முடிவதில்லை,விடவும் முடிவதில்லை. உலக வாழ்க்கையில் எந்த சாரமும் இல்லை என்பதை பக்தர்கள் ஒரு வேளை அறிந்து கொள்ளலாம். இருந்தாலும் அதை அவர்கள் விட மாட்டார்கள். மரி மாங்காய் பழத்தில் இருப்பதெல்லாம் வெறும்தோலும் கொட்டையும் தான், இருந்தாலும் அதை எறிந்து விடுவதில்லை. உலகியல் மனிதனால் இறைவனிடம் மனத்தைச் செலுத்த முடிவதில்லை. கேசவரின் உறவினர் ஒருவரைக் கண்டேன். ஐம்பது வயது இருக்கும். சீட்டு ஆடுகிறார். இறைவனின் திருநாமத்தைச்சொல்ல இன்னும் வேளை வரவில்லை போலும்!

உலகியல் மனிதனை அறிந்து கொள்வதற்கு மற்றோர் அடையாளமும் இருக்கிறது. அவனை உலகியல் வாழ்விலிருந்து பிரித்து, நல்ல இடத்தில் வைத்தால், ஏக்கத்தால் செத்தே போவான். மலத்தில் இருக்கும் புழு அங்கேயே ஆனந்தமாக உள்ளது. அதையே உண்டு கொழுத்து வளர்கிறது. அந்தப் புழுவை எடுத்து சோற்றுப் பாத்திரத்தில் வைத்தால் , இறந்துபோகும். (எல்லோரும் அசையாமல் கேட்டுக் கொண்டிருந்தனர்)

விஜயர்-

உலகியல் மனிதர்கள் எத்தகைய மன நிலையை அடைந்தால் முக்தி பெறலாம்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இறையருளால் தீவிர வைராக்கியம் உண்டாகுமானால், காமினீ- காஞ்சனத்தின் மீதுள்ள பற்றிலிருந்து விடு பட முடியும். எதைத் தீவிர வைராக்கியம் என்பது? நடப்பது நடக்கும்? கடவுளின் பெயரைச்சொல்லிக் கொண்டிருப்போம்.” என்றெல்லாம் இருப்பது மந்த வைராக்கியம். தீவிர வைராக்கியம் ஏற்பட்டிருக்கிற ஒரு வனுடைய பிராணன், வயிற்றிலுள்ள குழந்தைக்காகத் தாயின் மனம் துடிப்பதைப்போல் இறைவனுக்காக ஏங்கித் துடிக்கும். தீவிர வைராக்கியம் உள்ளவன் இறைவனைத் தவிர வேறு எதையும் விரும்ப மாட்டான். உலகியல் வாழ்க்கையை ஒரு பாழுங்கிணறாகப் பார்க்கிறான். அதில் மூழ்கி விடுவானோ என்று அஞ்சுகிறான். உறவினர்களைக் கருநாகமாகக் காண்கிறான். அவர்களிடமிருந்து விலகி ஓட விரும்புகிறான். ஓடியும் விடுகிறான். முதலில் வீட்டிற்கு வேண்டிய ஏற்பாடு களைச் செய்வோம். பிறகு இறைவனைச் சிந்திப்போம். என்ற எண்ணம் அவனிடம் தோன்றவே தோன்றாது. உள்ளே உறுதியானவன் அவன்.

எதைத் தீவிர வைராக்கியம் என்று சொல்வது? ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். ஓர் ஊரில் நீண்ட காலமாக மழை பெய்யவில்லை. குடியானவர்கள் வெகு தொலைவிலிருந்து வாய்க்கால் வெட்டித் தண்ணீர் கொண்டு வந்தார்கள். ஒரு குடியானவன் உறுதியான மனம் கொண்டவன்” கால்வாயை ஆற்றில் இணைத்து வயலுக்கு த் தண்ணீர் கொண்டு வரும் வரை வாய்க்கால் வெட்டுவதை நிறுத்த மாட்டேன் ” என்று சபதம் செய்து கொண்டான். குளிக்கும் நேரம் வந்தது. மகளிடம் எண்ணெயை அனுப்பி வைத்தாள் அவனது மனைவி. மகள் அவனிடம் வந்து, அப்பா நேரமாகி விட்டது. எண்ணெய் தேய்த்துக் களியுங்கள்” என்று சொன்னாள். அதற்கு அவன், எனக்கு இப்போது வேலை இருக்கிறது” நீ போ, என்று சொல்லி விட்டான். பிற்பகல் வந்தது. மணி இரண்டு ஆயிற்று. குடியானவன் அப்பொழுதும் வேலையை நிறுத்த வில்லை.குளிக்க வேண்டும் என்ற நினைவே அவனுக்கு இல்லை. அப்போது அவனுடைய மனைவி அங்கே வந்து, என்ன இன்னும் குளிக்காமல் இருக்கிறீர்களே! உணவு ஆறிப்போகிறது. நீங்கள் எல்லாவற்றையும் பெரிதாக்கிக் கொள்கிறீர்கள். எதையும் பெரிது படுத்துவதே உங்கள் வழக்கமாகப் போய் விட்டது. இன்று முடியா விட்டால் நாளை செய்யுங்கள் அல்லது சாப்பிட்டு விட்டாவது செய்யுங்கள்” என்றாள். குடியானவன் கோபத்துடன் அவனைப் பார்த்து, புத்தி கெட்டவளே! மழையோ பெய்யவில்லை. இருப்பது இந்தக் கொஞ்சம் பயிர்தான். இதுவும் வாடிப்போனால் குழந்தைகள் எதைச் சாப்பிடுவார்கள்? சோறில்லாமல் எல்லோரும் செத்துப் போவீர்கள். இன்று வயலுக்குத் தண்ணீர் கொண்டு வந்த பிறகு தான் குளியல், சாப்பாடு பற்றிய பேச்சு எல்லாம் என்றுசபதம் செய்திருக்கிறேன் என்று கூறிவிட்டு, மண்வெட்டியால் அவளை அடிக்கவே போய் விட்டான். அவனது கோபத்தைக் கண்ட மனைவி ஓடி விட்டாள். முதுகெலும்பு ஒடிய நாள் முழுவதும் உழைத்தான். மாலை வேளையாகிய போது வாய்க்காலை ஆற்றோடு இணைத்து விட்டான். தண்ணீர் சள சள என்று வாய்க்கால் வழியாக ஓடி வயலுக்குள் பாய்வதை வரப்பில் உட்கார்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பார்க்கலானான் . அவன் மனம் அமைதியுற்றது.ஆனந்தத்தில் மூழ்கியது. வீட்டிற்குச் சென்று மனைவியைக் கூப்பிட்டான். இந்தா, இப்பொழுது எண்ணெய் கொண்டு வா. ஹுக்கா ஏற்பாடு செய்” என்றான். பிறகு குளித்துச் சாப்பிட்டான். கவலையற்று படுத்து குறட்டை விட்டுத் தூங்கினான். இத்தகைய உறுதி தான் தீவிர வைராக்கியத்திற்கு உதாரணம்.

மற்றொரு குடியானவன். இவனும் வயலுக்குத் தண்ணீர் கொண்டு வரும் வேலையில் ஈடுபட்டிருந்தான். அவனுடைய மனைவி வயலுக்குப் போய், அதிக நேரம் ஆகி விட்டது. வாருங்கள், இப்படி அலட்டிக் கொள்வதில்பயனில்லை” என்றாள்.அவனும்பதில் எதுவும் பேசாமல், மண் வெட்டியை வைத்து விட்டு, சரி, நீ கூப்பிடும் போது என்ன செய்வது? வா போகலாம்” என்று வந்து விட்டான்.( எல்லோரும் சிரித்தனர்) இந்தக் குடியானவனால் வயலுக்குத் தண்ணீர் கொண்டு வர இயலவில்லை. இது மந்த வைராக்கியத்திற்கு உதாரணம்.

எப்படி இந்தக் குடியானவனின் வயலுக்கு தண்ணீர் வரவில்லையோ, அப்படியே மனிதனுக்குத் தீவிரமான உறுதி இல்லாவிட்டால் இறையனுபூதி கிடைக்காமல் போய்விடும்.

விஜயரிடம்- 

முன்பெல்லாம் அடிக்கடி வருவீர்கள். இப்போது வருவதில்லையே. ஏன்?

விஜயர்-

இங்கேவர மிகவும் விருப்பம் தான். ஆனால் எனக்குச் சுதந்திரம் இல்லை. பிரம்ம சமாஜத்தில் வேலை செய்கிறேன் அல்லவா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

காமினீ- காஞ்சனம் தான் மனிதனைத் தளைக்கு உள்ளாக்குகிறது. அவனது சுதந்திரம் போய் விடுகிறது. காமத்தின் காரணமாகத் தான் பணத்தின் தேவையும் ஏற்படுகிறது. அதற்க்காகத் தான் மற்றவர்களுக்கு அடிமைப் பட நேரிடுகிறது. சுதந்திரம் போய் விடுகிறது. விருப்பம் போல் வேலை செய்ய முடிவதில்லை.

ஜெய்பூரிலுள்ள கோவிந்தஜீயின் கோயில் அர்ச்சகர்கள் முதலில் பிரம்மச் சாரிகளாக இருந்தார்கள். அப்போது அவர்கள் பெரும் தேஜஸ்விகளாக இருந்தார்கள். ஒரு தடவை அரசன் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். அவர்கள் போகவில்லை. அரசனை இங்கே வரச்சொல்” என்று கூறிவிட்டார்கள். பிறகு அரசனும் மந்திரிகளும் கலந்தாலோசித்து, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர். அதன் பிறகு அர்ச்சகர்களைக் கூப்பிட்டனுப்ப வேண்டிய தேவையே ஏற்படவில்லை. அவர்கள் தாங்களாகவே அரசனிடம் போய் நின்றார்கள். மன்னா, ஆசீர்வாதம் செய்ய வந்திருக்கிறோம். இதோஈ அர்ச்சித்த மலர்களைக் கொண்டு வந்திருக்கிறோம். பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். வீடு கட்ட வேண்டும், குழந்தைக்கு உணவு ஊட்டும் விழா நடத்த வேண்டும், படிப்புத் துவங்கும் சடங்கு செய்ய வேண்டும்” என்றெல்லாம் அவர்களுக்கு அடிக்கடி அரசனிடம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது

1200 நேடாக்களும் 1300 நேடிகளும் கதை தான் உங்களுக்குத் தெரியுமே! நித்தியானந்த கோசுவாமியின் மகனான வீரபத்திரருக்கு மொட்டைத் தலைச் சீடர்கள் 1300 பேர் இருந்தனர். அவர்கள் சித்தர்கள் ஆகியதும் வீரபத்திரருக்குப் பயம் உண்டாயிற்று. இவர்கள் சித்தர்கள் ஆகி விட்டார்கள், யாரிடம் எது சொன்னாலும் அது பலித்து விடும். இவர்கள் எங்கே போனாலும் அங்கே பயம் தான். மனிதர்கள்அறியாத்தனமாக இவர்களுக்குத் தீங்கு செய்து அவமரியாதை செய்து விட்டால் அவர்களுக்கெல்லாம் துன்பம் ஏற்படும்” என்று நினைத்த வீரபத்திரர் அவர்களைக் கூப்பிட்டு, நீங்கள் கங்கைக்குப்போய் சந்தியாவந்தனம் முதலியவற்றை முடித்து வாருங்கள்” என்றார். கங்கைக்குப் போய் தியானத்தில் அமர்ந்த சீடர்கள் சமாதியில் மூழ்கி விட்டனர். அந்த அளவுக்கு தேஜஸ்விகள் அவர்கள். கங்கையில் நீரேற்றம்ஏற்பட்டு, வெள்ளம் தலை மீது சென்றதையும் அவர்கள் உணரவில்லை, பிறகு தண்ணீர் மட்டம் இறங்கியதையும் அவர்கள் அறியவில்லை. அவர்களது தியானமும் கலையவில்லை.

அவர்களுள் நூறு சீடர்கள் வீரபத்திரர்என்ன சொல்லப்போகிறார் என்பதைப் புரிந்து கொண்டார்கள். குருவின் கட்டளையை மறுக்கக் கூடாது. எனவே ஓடி விட்டனர். வீரபத்திரரைச் சந்திக்க வில்லை. மற்ற 1200 சீடர்களும்அவரைச் சந்தித்தனர். வீரபத்திரர் அவர்களைப் பார்த்து, இந்த 1300 நேடிகளும், உங்களுக்குச் சேவை செய்வார்கள். நீங்கள் இவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று சொன்னார். அந்தச் சீடர்கள் குருவிடம், உங்கள் ஆணைப்படியே ஆகட்டும். ஆனால் எங்களுள் நூறு பேர் எங்கேயோ போய் விட்டார்கள்” என்றனர்.

பிறகு இந்த 1200 சீடர்களும் பெண்களுடன் தங்கினர் இதற்குப் பிறகு முன்பிருந்த தேஜஸ் அவர்களிடம் இல்லை, தவ வலிமையும் இல்லை, பெண்களுடன் தங்கியதால் அவர்களுடைய முன்னைய வலிமை போய்விட்டது. ஏனென்றால் பெண்களின் தொடர்பினால் சுதந்திரம் பறி போய் விடுகிறது.

(விஜயரைப் பார்த்து) பிறரின் கீழ் வேலை செய்வதால் நிலைமை எப்படியாகி விட்டது என்பது உங்களுக்கே தெரியும். பாருங்கள். எவ்வளவோ பாஸ் செய்திருக்கிறார்கள்.ஆங்கிலம் எல்லாம் படித்திருக்கிறார்கள். வெள்ளைக் காரனின் கீழ் வேலைக்குச் சேர்கிறார்கள். அவர்களுடைய பூட்ஸ் காலால் இரண்டு வேளைகளிலும் உதைபடுவது தான் மிச்சம். இவற்றிற்கெல்லாம் காரணம் காமம் தான். கல்யாணம் செய்து கொண்டு, மனைவி மக்களுடன் கடை விரித்த பிறகு அதைத் திரும்பக் கட்டிக்கொண்டு போகத் திறன் இல்லை. ஆகவே இவ்வளவு அவமானமும், அடிமைத்தனத்தின் மனவேதனைகளும் பட வேண்டியிருக்கிறது.

தீவிர வைராக்கியம் ஒரு முறை ஏற்பட்டு இறையனுபூதி பெற்றுவிட்டால், பிறகு பெண்ணிடம் பற்று ஏற்படுவதில்லை. குடும்பத்தில் தங்கியிருந்தாலும் பெண்ணிடம் மனம் செல்லாது. அவர்களால் எந்தப் பயமும் இல்லை. ஒரு காந்தம் பெரியது. மற்றொன்று சிறியது. எது முதலில் இரும்பைக் கவரும்? பெரியது தானே! இறைவன் பெரியகாந்தம், அவர் முன்னால் பெண் ஒரு சிறிய காந்தம். பெண் என்ன செய்ய முடியும்?

ஒரு பக்தர்-

சுவாமி! பெண்களை வெறுக்க வேண்டுமா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

எந்தப் பார்வையால் பெண்களைப் பார்த்தால் பயம் ஏற்படுமோ, அந்தப் பார்வையால் பெண்களைப் பார்க்க மாட்டான் இறையனுபூதி பெற்றவன். பெண்கள் தேவி பராசக்தியின் அம்சம் என்பதை அவன் தெளிவாகக் காண்கிறான். எனவே எல்லோரையும் தேவி என்றே அவன் வழிபடுவான். (விஜயரிடம்) நீங்கள் அவ்வப்போது இங்கு வாருங்கள். உங்களைப் பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன்.

விஜயர்-

பிரம்ம சமாஜ வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் தான் அடிக்கடி வர முடிவதில்லை. நேரம் கிடைக்கும்போது வருகிறேன்.

ஸ்ரீராமகிருஷ்ணர்- (விஜயரிடம்)-

இதோ பாருங்கள்! ஆசாரியனுடைய வேலை மிகவும் கடினமானது. இறைவனிடமிருந்து நேர்முக ஆணை இல்லாமல் மக்களுக்குப்போதிக்க முடியாது.

இறையாணை பெறாமல் போதிப்பீர்களானால் மனிதர்கள் கேட்க மாட்டார்கள். அந்த உபதேசத்தில் எந்த சக்தியும் இருக்காது.முதலில் சாதனைகள் செய்தோ வேறு எந்த விதத்திலோ இறையனுபூதி பெற வேண்டும். அவருடைய ஆணை பெற்ற பிறகே லெக்சர் செய்ய வேண்டும்.

காமார் புகூரில் ஒரு குளம் இருக்கிறது. அதன் பெயர் ஹல்தார் பகூர் . அதன் கரையில் சிலர் தினமும் வெளிக்குப் போவார்கள். காலையில் அங்கே செல்பவர்கள் அவர்களைத் திட்டி கூச்சல் இடுவார்கள். ஆனால் அந்தக் கூச்சலால் எந்தப் பயனும் ஏற்பவில்லை. மறு நாளும் அதே கதை தான். கடைசியாகக் கம்பெனி ஆள் ஒருவன் வந்து, இங்கு யாரும் அசுத்தம் செய்யக் கூடாது. செய்தால் தண்டனைக்கு உள்ளாவார்கள்” என்ற நோட்டீசைத் தொடங்கவிட்டான். அவ்வளவு தான், குளக்கரையில் அசுத்தம் செய்வது நின்று விட்டது.

ஆண்டவனுடைய ஆணை கிடைத்தபின் எங்கு வேண்டு மானாலும் ஒருவன் ஆசாரியனாக இருக்கலாம். லெக்சர் செய்யலாம். இறைவனிடமிருந்து ஆணையைப் பெறுபவன் அவரிடமிருந்து சக்தியையும் பெறுகிறான். அப்போது தான் கடினமான இந்த ஆசாரிய வேலையைச் செய்யமுடியும்.

ஒரு பெரிய ஜமீன்தாருக்கு எதிராக ஒரு சாதாரண மனிதன் வழக்குத் தொடுத்தான். அதைக் கண்ட மக்கள், இந்தச் சாதாரண மனிதனுக்குப் பக்கபலமாக பெரிய புள்ளி ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து கொண்டார்கள். மற்றொரு பெரிய ஜமீன்தார் அவனுக்குப் பின்னால்  இருந்து கொண்டு வழக்கை நடத்த க் கூடும் அல்லவா? மனிதன் சாதாரண மானவன். இறைவனுடைய நேர்முகச் சக்தியைப் பெறாவிட்டால் ஆசாரியனாக இருக்கின்ற கடினமான வேலையை அவனால் ஒரு போதும் செய்ய முடியாது.

விஜயர்-

சுவாமி, பிரம்ம சமாஜத்தில் போதனைகள் முதலியன தரப் படுகின்றனவே. அவற்றால் மக்களுக்கு உய்வு கிடைக்காதா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

உலக பந்தத்திலிருந்து ஒரு மனிதனை விடுவிக்க மற்றொரு மனிதனுக்கு என்ன சக்தி இருக்கிறது? உலகை மயக்குவதான இந்த மாயை யாருடையதோ, அவர் தான் இந்த மாயையிலிருந்து விடுவிக்க முடியும். சச்சிதானந்த குருவை த் தவிர வேறு கதியில்லை. யார் இறையனுபூதி பெறவில்லையோ, யாருக்கு அவருடைய ஆணை கிடைக்கவில்லையோ, யார் அவருடைய சக்தியால் சக்தி வாய்ந்தவராக ஆகவில்லையோ அவரால் மக்களை எப்படி சம்சார பந்தத்திலிருந்து விடுவிக்க முடியும்?

ஒரு நாள் நான் பஞ்சவடி வழியாக சவுக்குத் தோப்பிற்கு இயற்கைக் கடனைக் கழிக்க போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு தவளை உரக்கக் கத்துவதைக்கேட்டேன். பாம்பு அதனைப் பிடித்துக் கொண்டது என்பது தெரிந்தது. நீண்ட நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்தேன். அப்போதும் தவளை கத்தி க் கொண்டிருந்தது. என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தேன். ஒரு தண்ணீர்ப் பாம்பு தவளையைக் கௌவிக் கொண்டிருந்தது. அதனால் தவளையை விடவும் முடியவில்லை. விழுங்கவும் முடியவில்லை. தவளையின் வேதனையும் குறைந்த பாடில்லை. அப்போது நினைத்துக்கொண்டேன், அப்பப்பா, ஒரு நல்ல பாம்பு மட்டும் பிடித்திருந்தால் மூன்று குரலில் இந்தத் தவளையின் சத்தம் அடங்கிப்போயிருக்கும். பிடித்தது தண்ணீர்ப் பாம்பு ஆயிற்றே. அதனால் பாம்புக்கும் சோதனை, தவளைக்கும் வேதனை!

சத்குரு வாய்ப் பாரானால் , சீடனின் அகங்காரம் மூன்று குரலிலேயே அடங்கிவிடும். பக்குவப்படாத குருவாக இருந்தால் குருவுக்கு வேதனை, சீடனுக்கும் வேதனை. சீடனுடைய அகங்காரம் மறைவதும் இல்லை, சம்சாரத் தளை அறுபடுவதும் இல்லை. பக்குவப்படாத குருவிடம் அகப் பட்டுக் கொண்டால் சீடன் முக்தனாக மாட்டான்.

விஜயர்-

சுவாமி, நாம் ஏன் இவ்வாறு பந்தப் பட்டவர்களாக இருக்கிறோம். ஏன் இறைவனைக் காண முடிவதில்லை?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

மனிதனின் அகங்காரம் தான் மாயை. இந்த அகங்காரமே எல்லாவற்றையும் திரையிட்டு வைத்திருக்கிறது. ”நான்” இறந்தால் தொந்தரவு தீர்ந்தது. எதையும் செய்பவன் நான் அல்ல” என்ற உணர்வு இறையருளால் ஏற்படுமானால், அவன் ஜீவன் முக்தனாகி விடுகிறான், பிறகு அவனுக்குப் பயமில்லை.

இந்த மாயை அதாவது, ”நான்” என்பது மேகம் போன்றது. ஒரு சிறு மேகத்தின் காரணமாக நம்மால் சூரியனைப் பார்க்க முடிவதில்லை. மேகம் விலகினால் சூரியனைப் பார்க்க முடிகிறது. குருவின் அருளால் ஒரு முறை இந்த ”நான்” விலகி விடுமானால் இறைக்காட்சி கிடைக்கிறது.

சாட்சாத் இறைவனான ராமர் இரண்டு அடி தூரத்தில் தான் இருக்கிறார். சீதை என்ற மாயை நடுவில் இருப்பதால், லட்சுமணனாகிய ஜீவனுக்கு அந்த இறைவனைப் பார்க்க முடியவில்லை. இதோ பாருங்கள், இந்தச் சிறு துணியால் என் முகத்திற்கு முன்னால் திரையிடுகிறேன். இப்போது உங்களால் என்னைப் பார்க்க முடியவில்லை.ஆனால் நான் வெகு அருகில் தான் இருக்கிறேன். இவ்வாறு தான் இறைவன் எல்லோரையும் விட நமக்கு மிக அருகில் இருக்கிறார். இருந்தாலும் இந்த மாயையாகிய திரை இருப்பதால் அவரைப் பார்க்க முடிவதில்லை.

மனிதன் சச்சிதானந்த இயல்பினன். ஆனால் மாயை அல்லது அகங்காரத்தினால் பல்வேறு தளைகள் ஏற்பட்டு விட்டன. இதனால் அவன் தன் உண்மையான இயல்பை மறந்து விட்டான்.

தளைகள் ஒவ்வொன்றாக வரவர மனிதனின் இயல்பும் மாறுகிறது. கறுப்புக்கரை வேட்டி உடுத்தவனைப் பாருங்கள், நிது பாபுவின் காதல் கீதங்கள், சீட்டாட்டம் , உலாவச்செல்லும் போது கையில் ஒரு தடி இவையெல்லாம் அவனிடம் தானாகவே வந்து சேரும். ஒல்லியாக இருப்பவனும் கூட காவில் பூட்ஸ் அணிந்து கொண்டால் சீட்டி அடிக்க ஆரம்பித்து விடுகிறான். படிப்பட்டில் ஏறும் போது வெள்ளையரைப்போல் குதித்துக் குதித்துச் செல்கிறான். கையில் பேனா கிடைத்தது விட்டால் போதும், ஒரு பேப்பரைத்தேடிப் பிடித்து அதில் கிறுக்கிக்கொண்டே இருப்பான். பேனாவின் இயல்பு அது.

பணமும் ஒரு பயங்கர தளைதான், பணம் வந்து விட்டாலே மனிதன் மாறி விடுகிறான். முன்னைய மனிதனாக இருப்பதில்லை. இங்கே ஒரு பிராமணன் வந்து போவதுண்டு. பார்ப்பதற்கு அவன் மிகவும் பணிவுள்ளவனாக இருந்தான். சில நாட்களுக்குப்பிறகு நாங்கள் கொன்னகருக்குப்போய்க் கொண்டிருந்தோம். ஹிருதயனும் உடன் வந்தான். படகை விட்டு இறங்கிய போது அந்தப் பிராமணன் கங்கைக் கரையில் உட்கார்ந்திருந்தான். காற்று வாங்கிக் கொண்டிருந்தது போல் தோன்றியது. எங்களைக் கண்டதும், என்ன பூஜாரி, எப்படி இருக்கிறாய், சௌக்கியமா? என்றான். அவனுடைய பேச்சின் தோரணையைக்கேட்டு நான் ஹிருதயனிடம், ஹிருதயா, இவனுக்குப் பணம் கிடைத்திருக்கிறது. அதனால் தான் இப்படி பேசுகிறான்” என்றேன். ஹிருதயன் சிரித்தான்.

ஒரு தவளையிடம் ஒரு ரூபாய்இருந்தது. அதன் வளையில் அந்தப் பணம் இருந்தது. யானை ஒன்று அந்த வளையைத் தாண்டிச்சென்றது. அதைக் கண்ட தவளை மிகுந்த கோபத்தோடு வளையிலிருந்து வெளியே வந்து யானையை எட்டி உதைப்பதற்காகக் காலைத் தூக்கியது. உனக்கு இவ்வளவு துணிச்சலா? என்னைத் தாண்டிச் செல்கிறாயே! என்று யானையைப் பார்த்துக் கூறியது. பணத்திற்கு இவ்வளவு அகங்காரம்.

ஞானம் ஏற்பட்டால் அகங்காரம் போகலாம். ஞானம் கிடைத்து விட்டால் சமாதி நிலை உண்டாகிறது. சமாதி நிலையில் அகங்காரம் அழிகிறது. ஆனால் அத்தகைய ஞானத்தை அடைவது மிகக் கடினம்.

ஏழாவது தளத்தை மனம் அடைந்தால் சமாதி ஏற்படுகிறது என்று வேதத்தில் உள்ளது. சமாதி நிலை ஏற்பட்டால் நான்- உணர் வு போய்விடும்.மனம் இதயத்தில் இருக்கும் போது தெய்வீக ஜோதி தரிசனம் கிடைக்கிறது. ஜோதி தரிசனம் பெறுபவன் கிதைப்புடன், இது என்ன! இது என்ன! என்று கூறுகிறான்.

அடுத்த பூமி தொண்டை. மனம் அங்கே இருக்கும் போது ஒருவனுக்கு இறைவனைப் பற்றி மட்டுமே பேசவும் கேட்கவும் ஆசை எழுகிறது. மனம் புருவத்தின் நடுவே சென்றால் சச்சிதானந்த தரிசனம் கிடைக்கிறது. அந்த உருவத்தைத் தொடவும் கட்டிக்கொள்ளவும் ஆவல் எழுகிறது. ஆனால் முடிவதில்லை. லாந்தர் விளக்கின் சுடரைப் பார்க்க முடியுமே தவிர தொட முடிவதில்லை. தொட்டு விடலாம், தொட்டு விடலாம். என்று தோன்றுகிறது.ஆனால் தொடமுடிவதில்லை. ஏழாவது தளத்திற்கு மனம் செல்லும்போது, ”நான்” இருப்பதில்லை, சமாதி ஏற்படுகிறது.

விஜயர்-

அந்த நிலையை அடைந்த பிறகு அதாவது பிரம்ம ஞானம் ஏற்பட்ட பிறகு மனிதன் என்ன காண்கிறான்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

ஏழாவது தளத்தை மனம் அடைந்த பிறகு என்ன ஏற்படும் என்பதை வாயினால் சொல்ல முடியாது. கப்பல் ஒரு முறை கறுப்புத் தண்ணீரை அடைந்து விட்டால் திரும்பி வருவதில்லை. அதன் பிறகு கப்பலைப் பற்றிய செய்தி கிடைப்பதில்லை. கடலைப்பற்றிய செய்தியும் கப்பலிலிருந்து கிடைப்பதில்லை. உப்புப் பொம்மை ஒன்று கடலின் ஆழத்தை அளக்கச் சென்றது.ஆனால் இறங்கிய உடனே கரைந்து விட்டது. பிறகு கடலின் ஆழத்தை யார் வந்து சொல்வது? எது வந்து சொல்ல வேண்டுமோ அது வே கரைந்து போய் விட்டது. ஏழாவது தளத்தில் மனம் அழிகிறது. சமாதி நிலை வாய்க்கிறது. எத்தகைய அனுபவம் அங்கு ஏற்படுகிறது என்பதைச் சொற்களால் விளக்க முடியாது.

எந்த நான் நம்மை உலகியலில் ஆழ்த்துகிறதோ, காமினீ- காஞ்சனத்தில் பற்றுக் கொள்ளச் செய்கிறதோ அந்த நான் தீயது. இந்த நான் இடையில் இருக்கும் காரணத்தால் தான் ஜீவனுக்கும் ஆன்மாவுக்கும் வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. தண்ணீரின்மேல் ஒரு கம்பை வைத்தால் தண்ணீர் இரண்டு பிரிவாகத்தோன்றுகிறது. உண்மையில் தண்ணீர் ஒன்றுதான். கம்பின் காரணமாக அது இரண்டாகத் தெரிகிறது. ”நான்” தான் இந்தக் கம்பு. கம்பை எடுத்துவிடு, ஒரே தண்ணீர் தான் இருக்கும்.

தீய- நான் எது? எந்த நான், என்னை உனக்குத் தெரியாதா? என்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?

என்னைவிட பெரியவன் யார்? என்றெல்லாம் பேசச் செய்கிறதோ அந்த ”நான்” தான் அது. திருடன் பத்து ரூபாயைத் திருடி விட்டால் அந்தத் தீய –நான் முதலில் அவனிடமிருந்த பணத்தைப் பிடுங்கிக்கொள்ளும். பிறகு திருடனை நன்றாக அடிக்கும். அத்துடன் நிற்காது, அக்கம் பக்கத்தினரைக் கூப்பிட்டு, அவனைப் போலீசாரிடம் ஒப்படைத்து, சிறைக்கு அனுப்பும், நான் யார், என்று இவனுக்குத் தெரியாது.- என்னுடைய பத்து ரூபாயை எடுத்து விட்டான்! என்ன திமிர்” என்று கூறும் . இது தீய- நான்.

விஜயர்-

நான் அழியா விட்டால் வாழ்க்கையில் பற்று நீங்காது. சமாதி நிலையும் ஏற்படாது. அதனால் சமாதி நிலையைத் தருவதான ஞான நெறியைப் பின்பற்றுவதே நல்லது. பக்தி யோகத்தில் நான் என்பது அழியாது என்றால், ஞான யோகமே நல்லது.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

ஏதோ இரண்டொருவருக்குச் சமாதி நிலை ஏற்பட்டு . நான் போய் விடுகிறது என்பது உண்மை தான். ஆனாலும் அனேகமாக நான் மறைவதே இல்லை. ஆயிரம் முறை ஆராய்ச்சி செய்தாலும், எப்படியோ சுற்றி வளைத்துக்கொண்டு மீண்டும் வந்து நிற்கிறது. காலையில் மறுபடியும் துளிர் விட்டிருக்கும். ஆதலால் நான் என்பது அடியோடு போகாது என்றால் அந்த போக்கிரிப் பயல், சேவக நானாக” இரந்து தொலையட்டும். இறைவா, நீதலைவன், நான் தொண்டன்” என்னும் இந்த எண்ணத்தில் இரு. நான்சேவகன், நான் பக்தன்- இப்படிப்பட்ட ”நானில்” குற்றம் இல்லை. இனிப்பை உட்கொண்டால் வயிற்றுக்கோளாறு உண்டாகிறது. ஆனால் கற்கண்டு அத்தகைய இனிப்பு இல்லை.

ஞான யோகம் மிகக் கடியமானது. ”நான் உடம்பு” என்றும் உணர்வு மறையாவிட்டால் ஞானம் ஏற்படாது. கலியுகத்தில் வாழ்விற்கு உணவே ஆதாரமாக உள்ளது. ”நான் உடம்பு” என்ற உணர்வு மறைவதில்லை. ஆகவே கலியுகத்திற்கானது பக்தியோகம். பக்தி நெறி எளியது. ஆழ்ந்த மன ஏக்கத்துடன் இறைவனுடைய திரு நாமத்தையும் மகிமையையும் பாடு, பிரார்த்தனை செய். இறைவனை அடைவாய், அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தண்ணீரின் மேல் மூங்கிலைப்போடாமல் அதனால் வெறும் கோடு மட்டும் கிழிக்கிறோம். அப்போது தண்ணீர் இரண்டு பட்டது போல் தோன்றுகிறது. ஆனால் அந்தக் கோடு அதிக நேரம் நிலைப்பதில்லை. அதே போல் ”நான் சேவகன்” ”நான் பக்தன்” நான் குழந்தை” என்பவை ”நான்” என்பதன் வெறும் நீர்க்கோடுகள் மட்டுமே.

விஜயர்-

சுவாமி, ”தீய நான்” என்பதை விலக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்” சேவக நானில்” குற்றம் இல்லையா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இல்லை, ”நான் சேவகன்” அதாவது ”நான் ஆண்டவனின் சேவகன், நான் அவருடைய பக்தன்” என்ற அகங்காரத்தில் குற்றம் இல்லை. மாறாக, இதனால் இரறக்காட்சி கிடைக்கிறது.

விஜயர்-

சரி, ”நான் சேவகன்” என்று கருதுபவரின் காமம், கோபம், முதலியவை என்ன ஆகும்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அந்த உணர்வு சரியாக இருக்குமானால் காமம், கோபம் எல்லாம் வெறும் பெயரளவில் தான் இருக்கும். இறைக் காட்சிக்குப் பிறகு ”நான் சேவகன்” ”நான் பக்தன்” என்ற உணர்வு இருக்குமானால், அவனால் யாருக்கும் கெடுதல் செய்ய முடியாது. பரிச மணி தீண்டியதும் வாள் பொன் வாளாக மாறி விடுகிறது. உருவத்தில் அது பழையது போலவே இருக்கிறது. ஆனால், அதனால் யாருக்கும் துன்பம் செய்ய முடியாது.

தென்னை மட்டை உலர்ந்து விழுந்து விட்டால் மரத்தில் வெறும் சுவடு மட்டுமே காணப்படும். அந்தச் சுவட்டைக் காணும்போது, அந்த இடத்தில் ஒருகாலத்தில் மட்டை இருந்தது என்பதை அறிய முடியும். அது போல், இறையனுபூதி பெற்றவனிடம் பெயரளவில் மட்டுமே அகங்காரம் இருக்கும். காமம், கோபம், எல்லாம் பார்வையளவில் மட்டுமே இருக்கும். அவனுக்கு குழந்தையின் நிலை ஏற்பட்டு விடும். குழந்தைக்கு சத்வம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களிலுமே பிடிப்பு இல்லை. ஒரு பொருளில் ஆசை வைக்க எவ்வளவு நேரம் பிடிக்கிறதோ அதே அளவு நேரத்தில் அந்த ஆசையும் அது விட்டு விடவும் செய்யும். இரண்டு பைசா பொம்மையைக் கொடுத்து, ஐந்து ரூபாய் துணியைக் குழந்தையிடமிருந்து நீ சுலபமாக வாங்கி விடலாம். ஆனால் முதலில், இல்லை, நான் கொடுக்க மாட்டேன். அப்பா எனக்கு வாங்கித் தந்தது” என்று பிடிவாதமாகச் சொல்லும். குழந்தைக்கு எல்லோரும் சமம். இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்ற உணர்வு அதற்கு இல்லை. அதற்கு ஜாதி வித்தியாசமும் இல்லை, தாயார் , ஒருவனைக் காட்டி, இவன் தான் உன் அண்ணன்” என்று சொன்னால், அவன் தீண்டத் தகாதவனாக இருந்தாலும் அவனுடன் ஒரே இலையில் சோறு சாப்பிடும். குழந்தையிடம் வெறுப்பு இல்லை, சுத்த- அசுத்த உணர்ச்சி இல்லை. வெளிக்கு போய்விட்டு, மண்ணிட்டு கை கழுவாமலே வந்து நிற்கும்.

சிலர், சமாதி நிலையை அடைந்த பிறகும், ”நான் சேவகன்””நான் பக்தன்” என்ற பாவனையை வைத்துக் கொள்கின்றனர்””நான் சேவகன்” நீ எஜமான்” நான் பக்தன்” நீ பகவான்” என்ற அகங்காரம்” பக்தர்களிடம் இருக்கும். இறைக் காட்சிக்குப் பிறகும் ”நான்” இருக்கிறது. அது அடியோடு மறைவதில்லை. இத்தகைய நான்- உணர்வைப் பயிற்சி செய்யச் செய்ய இறையனுபூதி வாய்க்கிறது. இது தான் பக்தியோகம்.

பக்தி நெறியில் சென்றால், பிரம்ம ஞானம் உண்டாகிறது. பகவான் எல்லாம் வல்லவர். அவர் விரும்பினால் பிரம்ம ஞானத்தையும் தர முடியும். பொதுவாக பக்தர்கள் பிரம்ம ஞானத்தை விரும்புவதில்லை. ”நான் சேவகன்” நீ எஜமான், நான் குழந்தை, நீ தாய்- இத்தகைய அகங்காரத்தை வைத்து கொள்ளவே விரும்புகின்றனர்.

விஜயர்-

வேதாந்த ஆராய்ச்சி செய்பவர்களும் இறைவனைத்தானே அடைகிறார்கள்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

ஆம், ஆராய்ச்சி நெறியின் வழியாகவும் அவரை அடைய முடியும். இதைத்தான் ஞான யோகம் என்கின்றனர். ஆராய்ச்சி நெறி மிகக் கடினமானது.

மனத்தின் ஏழு தளங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். மனம் ஏழாவது தளத்தை அடைந்தால் சமாதி ஏற்படுகிறது. இறைவன் உண்மை, உலகம், உண்மையற்றது- இந்த உணர்வு சரியாக ஏற்படும்போது மனம் ஒடுங்குகிறது. சமாதிநிலை வாய்க்கிறது. ஆனால் கலியுகத்தில் மனித வாழ்க்கைக்கு உணவே ஆதாரமாக உள்ளது- இறைவன் உண்மை, உலகம் உண்மையில்லை- என்ற உணர்வு எப்படி வரும்? உடலுணர்வு மறையாமல் இந்த உணர்வு ஏற்படாது. ”நான் உடல் அல்ல, ” நான் மனம் அல்ல”, நான் சுக துக்கங்கங்களைக் கடந்தவன், இருபத்து நான்கு தத்துவங்கள் அல்ல, எனக்காவது நோய், சோகம், மூப்பு, மரணம் போன்றவை வருவதாவது- இத்தகைய எண்ணங்கள் கலியுகத்தில் கடினம்.-எவ்வளவு தான் ஆராய்ந்தாலும், நான் உடல்” என்னும் உணர்வு எங்கிருந்தோ வந்து நிற்கிறது. அரச மரத்தை இப்போது வெட்டினோம். வேரோடு , வேரோடு வீழ்த்தி விட்டோம் என்று நினைக்கிறோம். ஆனால் அடுத்த நாள் காலையில் பார்த்தால் அது புதிதாகத் துளிர் விட்டிருக்கும். உடலுணர்வு அழிவதில்லை, ஆகவே கலியுகத்தில் பக்தி யோகம் தான் ஏற்றது, சுலபமானது.

நான் சர்க்கரையாக இருக்க விரும்புவதில்லை. சர்க்கரையை ருசிக்கவே விரும்புகிறேன்.” நான் பிரம்மம்” என்று சொல்ல எனக்கு ஒரு போதும் ஆசை எழுவதில்லை.”நீ பகவான்” நான் உனது சேவகன்” என்ற சொல்லேவே விரும்புகிறேன். ஐந்து மற்றும் ஆறாம் தளங்களுக்கு இடையே படகை ப்போல் வந்து போய் விளையாடுவது நல்லது.ஆறாம் தளத்தைக் கடந்து ஏழாம் தளத்தில் அதிக நேரம் தங்கியிருப்பதை நான் விரும்புவதில்லை. இறைவனுடைய திரு நாமத்தையும் திருப்புகழையும் பாடுவேன்- இது தான் எனக்குப் பிடிக்கும். எஜமான் –சேவகன் நிலை மிக நல்லது. அலை கங்கைக்குச் சொந்தம். அலைக்கு கங்கை சொந்தம் என்று யாரும் சொல்வதில்லை. ”நானே அவன்” என்ற பாவனை நல்லதல்ல. ”நான் உடல்” என்ற எண்ணம் இருக்கும் போது இப்படி நினைப்பது பெரிய தீமையைத் தரும். மேல் நோக்கிச் செல்ல முடியாது. படிப்படியாக வீழ்ச்சிதான் நேரும். இவர்கள் பிறரைஏமாற்றுகின்றனர். தங்களையும் ஏமாற்றிக் கொள்கின்றனர். தங்கள் நிலையை அவர்களால் அறிய முடிவதில்லை.

ஆனால் ஏனோ தானோ என்ற பக்தியினால் இறைவனை அடைய முடியாது. பிரேம பக்தி ஏற்படா விட்டால் இறையனுபூதி கிடைக்காது. பிரேம பக்திக்கு மற்றொரு பெயர் ராக பக்தி. பிரேமையும் அனுராகமும் உண்டாகாமல் இறையனு பூதி இல்லை. அவரிடம் அன்பு ஏற்படாமல் அவரை அடைய முடியாது.

மற்றொரு வகையான பக்தி உள்ளது. அதற்கு வைதீ பக்தி என்று பெயர். இவ்வளவு ஜபம் செய்ய வேண்டும் இவ்வளவு உபவாசம் இருக்க வேண்டும், தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும், இவ்வளவு உபசாரங்களுடன் பூஜை செய்ய வேண்டும்- இவ்வளவு பலியிட வேண்டும்- இது வைதீ பக்தி, இவற்றை அதிகமாகத் தொடர்ந்து செய்யச்செய்ய படிப்படியாக ராக பக்தி உண்டாகிறது. ராக பக்தி உண்டாகாமல் இறையனுபூதி கிடைக்காது. அவரை நேசிக்க வேண்டும். இதயம் நூற்றுக்கு நூறு அவரிடம் பதிய வேண்டும், அப்போது அவரை அடையலாம்.

ஆனால் ஏதோ சிலருக்கு ராக பக்தி தானாகவே உண்டாகிறது. இயல்பாகவே அவர்களிடம் அது உள்ளது. குழந்தை பருவத்திலிருந்தே உள்ளது. அவர்கள் சிறுவர்கள் இருக்கும் போதே பிரகலாதனைப்போல் கடவுளுக்காக ஏங்கி அழுவார்கள். காற்றிற்காக விசிறிக்கொள்வது போன்றது வைதீ பக்தி. காற்று வேண்டுமானால் விசிறி வேண்டும். அது போல் கடவுளிடம் அன்பு ஏற்படுவதற்காக ஜபம், தவம், உபவாசம் முதலியவற்றைச் செய்வது. ஆனால் தென்றல் காற்று வீச தொடங்கினால் விசிறியை மக்கள் எறிந்து விடுகின்றனர். அது போல் இறைவனிடம் அனுராகமும் பிரேமையும் ஏற்படும் போது ஜபம் முதலிய செயல்கள் தாமாகவே விடுபடுகின்றன. ஹரிப்பிரேமையின் பித்து பிடித்துவிட்டால் யார் தான் வைதீக கர்மங்களைச் செய்வார்கள்?

இறைவனிடம் அன்பு ஏற்படாதவரையுள்ள பக்த பழுக்காத பக்தி. அவரிடம் அன்பு உண்டாகி விட்டால் அது பழுத்த பக்தி.

பழுக்காத பக்தி உடையவர்களால் இறைவனைப் பற்றிய உண்மைகளையும் உபதேசங்களையும் புரிந்து கொள்ள முடியாது. பழுத்த பக்தி ஏற்பட்டால் அவற்றையெல்லாம் புரிந்து கொள்ளலாம். கறுப்பு திரவம் பூசப்பட்டுள்ள கண்ணாடியில் தான் ஃபோட்டோ பதியும். வெறும் கண்ணாடியில் ஆயிரக் கணக்கான உருவங்கள் விழுந்தாலும் ஒன்று கூட பதியாது. உருவங்கள் விலகியதும், கண்ணாடி முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இருக்கும். இறைவனிடம் அன்பு உண்டாகாவிட்டால் உபதேசங்களைப் புரிந்து கொள்ள முடியாது.

விஜயர்-

சுவாமி, இறையனு பூதி பெறுவதற்கு, அவரது காட்சியைப் பெறுவதற்கு, பக்தி ஏற்பட்டால் மட்டும் போதுமா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

ஆம், பக்தி ஒன்று இருந்தாலே போதும். இறைவனைக் காண முடியும். ஆனால் பழுத்த பக்தி, அதாவது பிரேம பக்தி, ராக பக்தி வேண்டும். அந்த பக்தி உண்டானால் அவரிடம் அன்பு பிறக்கிறது. குழந்தைக்குத் தாயிடமும், தாய்க்குக் குழந்தையிடமும், மனைவிக்குக் கணவனிடமும் உள்ள அத்தகைய அன்பு வேண்டும். இந்த அன்பு, இந்த ராக பக்தி உண்டாகும் போது மனைவி மக்கள் உற்றார் உறவினர் முதலியவர்களிடம் மாயை காரணமாக, எழுகின்ற கவர்ச்சி இருக்காது.தயை இருக்கும். உலகம் அன்னிய இடம் என்று தோன்றும். அது கர்ம பூமி மட்டுமே என்ற உணர்வு ஏற்படும். வீடு கிராமத்தில் உள்ளது. பட்டணத்தில் வேலை என்றால் அங்கே ஒரு வாடகைவீடு தேவை. இறைவனிடம் அன்பு தோன்றினால் உலக வாழ்க்கையில் பற்று- உலகியல் அடியோடு மறைகிறது.

உலகியலில் சாயல் இருந்தாலும் கூட இறைக் காட்சி கிடைக்காது. தீக்குச்சி ஈரமாகி விட்டால், அதை ஆயிரம் முறை கிழித்தாலும் பற்றாது. குச்சிகள் வீணாவது தான் மிச்சம். உலகியல் பற்றுக் கொண்ட மனம் ஈரமான தீக்குச்சியைப்போன்றது.

நான் எல்லாவற்றையும் கிருஷ்ணமயமாகக் காண்கிறேன்” என்று ராதை சொன்னபோது தோழிகள், ” எங்கே. நாங்கள் காணவில்லையே! என்ன உளறுகிறாய். நீ! என்கிறார்கள். அதற்கு ராதை, தோழிகளே, கண்ணில் அனுராகம் என்னும் மையைத் தீட்டிக்கொண்டு பாருங்கள். அப்போது அவனைக் காண முடியும்” என்றாள்.(விஜயரைப் பார்த்து) உங்கள் பிரம்ம சமாஜத்தின் பாட்டே இருக்கிறதே-

இந்த அனுராகம் , இந்தப் பிரேமை, இந்தப் பழுத்த பக்தி, இந்த அன்பு ஒரு முறை உண்டானால் உருவக் கடவுள், அருவக் கடவுள் இரண்டின் அனுபூதியும் கிடைக்கும்.

விஜயர்-

இறைக் காட்சி எவ்வாறு கிடைக்கும்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

மனத் தூய்மை உண்டாகாவிட்டால் கிடைக்காது. காமினீ- காஞ்சனத்தால் மனம் மாசு படிந்துள்ளது. தூசி படிந்துள்ளது.ஊசியைச்சேறு மூடியிருக்கும். போது காந்தம் அதைக் கவராது. சேற்றைக் கழுவினால் காந்தம் இழுக்கும். அதே போல் மனத்தின் அழுக்கைக் கண்ணீரால் கழுவலாம். இறைவா, இப்படிப்பட்ட செயலை இனி ஒரு போதும் நான் செய்ய மாட்டேன்” என்று பச்சா தாபத்துடன் முறையிட்டு அழுதால் மன அழுக்கைத் துடைத்து விடலாம். அப்போது இறைவனாகிய காந்தக் கல் மனமாகிய ஊசியை இழுத்துக்கொள்ளும். அப்போது சமாதி நிலை உண்டாகிறது. இறைக்காட்சி கிடைக்கிறது.

ஆனால் ஆயிரம் முயற்சி செய்யுங்கள். இறைவனின் அருள் இல்லாமல் எதுவும் நடக்காது. அவருடைய அருள் இல்லாமல் அவரைக் காண முடியாது. அருள் என்பது சுலபமாகக் கிடைக்குமா என்ன? அதற்கு அகங்காரத்தை அடியோடு விட வேண்டும். ”நான் கர்த்தா” என்ற உணர்வு இருந்தால் இறைக்காட்சி கிடைக்காது. பண்டக அறைக்கு ப் பொறுப்பாக ஒருவன் இருக்கும் போது, வீட்டுத் தலைவனிடம், ஐயா, நீங்கள் வந்து பொருட்களை எடுத்துத் தாருங்கள்” என்று கேட்டால் தலைவன், பண்டக அறையில் தான் ஒருவன் இருக்கிறானே, நான் வந்து என்ன செய்வது? என்பான். தானே கர்த்தா வாக இருப்பவனுடைய இதயத்தில் இறைவன் எளிதில் வர மாட்டார்.

அருள் உண்டானாலே காட்சி கிடைக்கிறது. அவர் ஞான சூரியன். அவரது ஒரே ஒரு கிரணம் தான் இந்த உலகம் முழுவதற்கும் அறிவொளியைக்கொடுக்கிறது. அதனால் தான் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள முடிகிறது. எத்தனையோ விதமான கலைகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. தமது ஒளியை அவரே தமது முகத்தின் மீது ஒரு முறை திருப்பு வாரானால் அவரைக் காண முடியும். போலீஸ் காரன் இரவு வேளையில் கையில் லாந்தரை வைத்துக் கொண்டு சுற்றுகிறான். அவனுடைய முகத்தை யாரும் பார்க்க முடிவதில்லை.ஆனால் அந்த விளக்கின் ஒளியால் அவன் மற்றவர்களின் முகத்தைப் பார்க்க முடிகிறது, மற்றவர்களும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொள்ள முடிகிறது. யாராவது போலீஸ் காரனைப் பார்க்க விரும்பினால், அவனிடம் சென்று, ஐயா, தயவு செய்து விளக்கை உங்கள் முகத்தின் பக்கமாக ஒரு முறை திருப்புங்கள். உங்களைப் பார்க்க விரும்புகிறேன்” என்று கேட்க வேண்டும். பகவானே! ஞான ஒளியைக் கருணை கூர்ந்து உங்கள் மீது ஒரு முறை திருப்பு. நான் உன்னைப் பார்க்கிறேன்” என்று பிரார்த்தனை செய். 

வீட்டில் விளக்கெரியா விட்டால் அது தரித்திரத்தின் அடையாளம். ஆகவே இதய வீட்டில் ஞான விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

விஜயர் தாம் கொண்டு வந்திருந்த மருந்தை குருதேவரிடன் எதிரிலலேயே உண்டார். அந்த மருந்து தண்ணீரோடு கலந்து சாப்பிட வேண்டியது. குருதேவர் அதற்காகத் தண்ணீர் கொண்டு வரச் செய்தார். காரணம் இல்லாமலே கருணையைப்பொழியும் கடல் குருதேவர். படகிலோ வண்டியிலோ வாடகை கொடுத்து வர இயலாதவர் விஜயர். எனவே குருதேவரே அடிக்கடி அவரைக் கூப்பிட்டு அனுப்புவார். இந்த முறை பலராமை அதற்காக அனுப்பி வைத்தார். பலராம் வாடகையைக் கொடுத்து விடுவார். தற்போது பலராமுடன் தான் விஜயர் வந்திருந்தார்.

மாலை வேளை வந்தது. விஜயரும் நவ குமாரும் விஜயருடைய மற்ற நண்பர்களும் பலராமின் படகில் ஏறிக் கொண்டனர். பலராம் பாக்ஜார் துறையில் அவர்களை இறக்கி விடுவார். ம-வும் அந்தப் படகில் ஏறிக் கொண்டார்.

படகு பாக் பஜாரில் அன்னபூர்ணா துறையை அடைந்தது. பலராம் பாக்பஜாரில் தன் வீட்டரகே இறங்கினார். நிலவு உதித்து விட்டது. குளிர் காலம், எனவே குளிர ஆரம்பித்தது. குருதேவரின் அமுத மொழிகளைச் சிந்தித்தவாறு அவருடைய ஆனந்த மயமான வடிவத்தை இதயத்தில் இருத்தியவாறு, விஜயர் பலராம் ம- முதலியோர் வீடு திரும்பினர்.



Site Content

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

 பாகம்- 19  

திங்கள், ஜனவரி 1, 1883

.................

காலை எட்டு மணி. தட்சிணேசுவரக் காளி கோயிலில்தமது அறையில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பக்தர்களுடன் அமர்ந்திருந்தார். இரவு பகலாக ஹரிப்பிரேமையில், தேவியின் அன்பில் மூழ்கியிருந்தார் அவர்.

தரை மீது பாய் விரிக்கப் பட்டிருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் அதில் தான் அமர்ந்திருந்தார். குளிர் காலமானதால்கம்பளிப்போர்வையைப்போர்த்திக் கொண்டிருந்தார். பிராண கிருஷ்ணரும் ம-வும் அவருக்கு எதிரில் அமர்ந்திருந்தனர். ராக்காலும் இருந்தார். ஹாஸ்ரா அறைக்கு வெளியே தென்கிழக்கு வராந்தாவில் உட்கார்ந்திருந்தார்.

குருதேவரின் அந்தரங்க பக்தர்களும் பலரும் இப்போது ம-விற்கு அறிமுகமாகி விட்டனர். ஏறக்குறைய ஒரு வருட காலமாக நரேந்திரர், ராக்கால், பவநாத், பலராம், ம- பாபுராம், லாட்டு முதலியோர் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தனர். மனமோகன், சுரேந்திரர், கேதார் முதலியோர் வரத் தொடங்கி ஒரு வருடத்திற்கும் அதிகமாகி விட்டது.

ஐந்து மாதங்களுக்க முன்பு குருதேவர் வித்யா சாகரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் விஜயர் முதலான பிரம்ம சமாஜ பக்தர்கள் கேவகர் முதலியோருடன் நீராவிக் கப்பலில் கல்கத்தாவரை சென்று வந்தனர்.

பிராண கிருஷ்ண முகோபாத்யாயர் கல்கத்தாவில் சியாம்புகூர் பகுதியில் வாழ்ந்து வந்தார். அவர் ஜனாயி கிராமத்தைச்சேர்ந்தவர். அரசாங்கப் பொருட்களை ஏலம் விடும் அதிகாரியாக உயர் பதவி வகித்து வந்தார். முதல் மனைவியின் மூலம் குழந்தைகள் பிறக்கவில்லை. எனவே அவளுடைய அனுமதியுடன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருந்தார். ஓர் ஆண் குழந்தையும் பிறந்திருந்தது.பிராண கிருஷ்ணர் குருதேவரிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். பருத்த சரீரம்உடையவராதலால், குருதேவர் சில வேளைகளில் அவரை ”குண்டு பிராமணர்” என்று அழைப்பதுண்டு. அவர் மிகவும் நல்லவர். அவரது அழைப்பின் பேரில் ஏறக்குறைய ஒன்பது மாதங்களுக்கு முன்பு அவருடைய வீட்டிற்கு பக்தர்களுடன் சென்றிருந்தார் குருதேவர். பிராண கிருஷ்ணர் கறி, கூட்டு, இனிப்பு, என்று நல்ல விருந்து அளித்தார்.

தரையில் அமர்ந்திருந்தார். பக்தர் ஒருவர் கூடை நிறைய ஜிலேபி கொண்டு வந்து அருகே வைத்தார். குருதேவர் ஒன்றைத் துண்டாக்கி சிறிது உட்கொண்டார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்- (பிராண கிருஷ்ணர் முதலானவர்களைப் பார்த்து சிரித்தபடியே)

பார்த்தாயா! நான் தேவியின் பெயரைச் சொல்கிறேன். அதனால் தான் இதெல்லாம் எனக்குச் சாப்பிடக் கிடைக்கின்றன. (சிரிப்பு) ஆனால் அவள் பூசணிக்காயும் சுரைக்காயும் தருவதில்லை. அவள் தருவது அமுதப்பழம். அவள் தருவது ஞானம், அன்பு, விவேகம், வைராக்கியம்.

அப்போது ஆறு ஏழு வயதுடைய ஒரு சிறுவன் வந்தான். ஸ்ரீராமகிருஷ்ணரும் சிறுவனின் மன இயல்பு உடையவர். எப்படி ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனைப் பார்த்ததும், தன்னிடமுள்ள தின்பண்டங்களை ஒளித்து வைத்துக் கொள்வானோ, அப்படியே அவரும் ஜிலேபிக் கூடையை ஒரு கையால் மூடி மறைத்தபடி ஒரு பக்கமாக மெல்லத் தள்ளினார்.

பிராண கிருஷ்ணர் இல்லறத்தார், இருந்தும் வேதாந்த ஆராய்ச்சி செய்வார். குருதேவர்அவரிடம், கலியுகத்தில் மனித வாழ்க்கை உணவை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. ஆகவே கலியுகத்திற்கு நாரதர் போதித்த பக்தி நெறியே சிறந்தது” என்பார்.

கையினால் ஜிலேபிக் கூடையை மூடியபடியே குருதேவர் சமாதி நிலையை அடைந்தார்.

நீண்ட நேரம் சமாதி நிலையில் உட்கார்ந்திருந்தார். உடம்பு அசையவில்லை. கண்கள் நிலைகுத்தியிருந்தன. மூச்சு விடுகிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. நீண்ட நேரம் கழித்து ஆழ்ந்த பெரு மூச்சு ஒன்று அவரிடம் எழுந்தது. புலன்களின் உலகிற்குத் திரும்பினார் அவர்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

( பிராண கிருஷ்ணரிடம்)- தேவி உருவமற்றவள் மட்டுமல்ல, உருவமுடையவளும் கூட. அவளுடைய உருவத்தைப் பார்க்க முடியும். பாவனை- பக்தியின் மூலம் அவளது ஈடிணையற்ற உருவைப் பார்க்க முடியும். அவள் பல வடிவங்களில் காட்சி அளிக்கிறாள்.நேற்று நான் அவளைக் கண்டேன். தையல் எதுவுமில்லாத காவிநிறச் சட்டை அணிந்திருந்தாள். என்னுடன் பேசவும் செய்தாள். மற்றொரு நாள் ஒரு முஸ்லீம் பெண்ணின் வடிவில் என்னிடம் வந்தாள். ஆறு அல்லது ஏழு வயதிருக்கும். நெற்றியில் பொட்டு வைத்திருந்தாள். ஆடை எதுவும் இல்லை. கிண்டல் செய்தபடியே என்னுடன் துள்ளிக் குதித்து ஓடி வந்தாள்.

ஹிருதயனின் வீட்டில் இருந்த போது சைதன்யரின் காட்சி கிடைத்தது. அவர் கறுப்புக் கரைவேட்டி அணிந்திருந்தார்.

உண்டு , இல்லை என்ற நிலைகளைக் கடந்தவர் இறைவன் என்று ஹலதாரி கூறுவார். இதைக்கேட்டதும் நான் தேவியிடம் சென்று, அம்மா, ஹலதாரி இப்படிக் கூறுகிறாரே, அப்படியானால் உருவம், கிருவம் எல்லாம் உண்மையில்லையா? என்று முறையிட்டேன். அப்போது தேவி, ரதியின் தாய் வடிவத்தில் என் முன் தோன்றி, நீ பாவ நிலையில் இரு” என்று கூறினாள். நான் ஹலதாரியிடம் இதைக்கூறவும் செய்தேன்.

சில வேளைகளில் நான் அவள் கூறியதை மறந்து துன்பத்தில் மாட்டிக்கொள்வேன். பாவ நிலையில் இருக்காத காரணத்தினால் ஒரு முறை பற்களை உடைத்துக்கொள்ள நேர்ந்தது. அதனால் தான், இறைவனிடமிருந்து ஆணையோ, தரிசனமோ கிடைக்கும் வரை பாவ நிலையிலேயே இருப்பேன்! பக்தியையே கடைப்பிடிப்பேன்! நீ என்ன சொல்கிறாய்?

பிராண கிருஷ்ணர்- ஆம், சுவாமி.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அதற்கு நான் ஏன் உன்னைக்கேட்க வேண்டும்? என்னுள் யாரோ ஒருவர் இருக்கிறார். அவர் என்னைக் கொண்டு இப்படி யெல்லாம் செய்விக்கிறார். சில வேளைகளில் தெய்வ நிலையும் என்னிடம் வருவதுண்டு. அந்த நேரங்களில் என்னைப் பூஜிக்காவிட்டால் என் மனம் அமைதி அடைவதில்லை.

நான் எந்திரம், இறைவன் என்னை இயக்குபவன். அவர் எப்படி செய்விக்கிறாரோ, அப்படியே செய்கிறேன், அவர் எப்படி பேசுவிக்கிறாரோ, அப்படியே பேசுகிறேன்.

புயற்காற்றில் பட்ட எச்சில் இலை காற்று அடிக்கின்ற திசையில் செல்கிறது. சில நேரங்களில் பறந்து நல்ல இடங்களிலும் சில வேளைகளில் சாக்கடையிலும் விழுகிறது.

நெசவாளி கூறினான், ராமரின் விருப்பப்படி கொள்ளை நடந்தது. ராமரின் விருப்பப்படியே தான் நான் போலீசாரால் கைது செய்யப் பட்டேன். ராமரின் விருப்பப்படி தான் என்னை விடுதலையும் செய்தார்கள்.

அனுமன் ராமரிடம் , ராமா, உன்னிடம் சரணடைகிறேன், சரணடைகிறேன். உன்னுடைய திருவடித் தாமரையில் எனக்கு தூய பக்தியைத் தருவாய். உலகத்தை மயக்கும் உனது மாயையில் நான் சிக்கி மயங்காமல் என்னைக் காப்பாற்றுவாய், என்று வேண்டினார்.

சாகும் தறுவாயில் இருந்த தவளை ராமரிடம், ராமா! பாம்பு என்னைப் பிடிக்க வந்தால், ராமா என்னைக் காப்பாற்று” என்று கூவுவேன். ஆனால் இப்போது ரைாமரின் வில் முனையாலே கிழிக்கப் பட்டு சாகப்போகிறேன்” அதனால் தான் பேசாமல் இருக்கிறேன்” என்றது.

உன்னை நேருக்கு நேர் பார்ப்பது போல் இந்தக் கண்களாலேயே காட்சிகளைக் காண்பதுண்டு. இப்போது பரவச நிலையில் மட்டும் தான் காட்சிகள் வருகின்றன.

இறையனுபூதிக்கு ப் பிறகு சிறுவனின் இயல்பு வந்து விடுகிறது. யார் யாரைத் தியானிக்கிறாரோ அவர் அவரது இயல்பைப்பெறுகிறார். கடவுள் குழந்தை இயல்பு படைத்தவர். குழந்தைகள் வீடு கட்டி விளையாடுவார்கள். பிறகு அதை அழிப்பார்கள். மீண்டும் கட்டுவார்கள். அது போல் கடவுளும்படைக்கிறார். காக்கிறார், பிறகு அழித்து விடுகிறார். குழந்தை எப்படி எந்தக் குணத்திற்கும் கட்டுப் பட்டதாக இல்லையோ அதே போல் கடவுளும் சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் கடந்தவராக விளங்குகிறார். குழந்தையின் இத்தகைய இயல்பை அடைவதற்காக பரமஹம்ச சன்னியாசிகள் ஐந்து பத்து வயது சிறுவர்களைத் தங்களுடன் வைத்திருப்பது வழக்கம்.

அகர் பாராவைச்சேர்ந்த இருபது இருபத்திரண்டு வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் வந்திருந்தான். அவன் வரும்போது, குருதேவருக்குச் சைகை காட்டித் தனி இடத்திற்கு அழைத்துச் சென்று, தன் மனத்தில் உள்ள வற்றையெல்லாம் அவரிடம் கூறுவான். அவன் தரையில் உட்கார்ந்திருந்தான்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-( அந்த இளைஞனிடம்)-

ஆழ்ந்த பாவனையால் இயல்பை மாற்ற முடியும். ஆண் தன்னைப்பெண்ணாக ஆழ்ந்து பாவனை செய்தால், படிப்படியாக காமம் முதலிய எதிரிகளிடமிருந்து விடுபட்டு விடலாம். சரியாக அவன் பெண்களைப்போலவே பழக ஆரம்பித்து விடுவான். நாடகங்களில் பெண் வேடம் இடுபவர்கள் குளிக்கும் போது பார்த்திருக்கிறேன். பெண்களைப்போல் பல் தேய்ப்பார்கள். பேசுவார்கள், நீ செவ்வாய், சனி நாட்களில் ஒரு முறை வா.

பிராணகிருஷ்ணரிடம்( பிரம்மமும் சக்தியும் பிரியாதவை. சக்தியை ஒப்புக் கொள்ளா விட்டால் உலகமே- பொய்- நான், நீ, வீடு, சுற்றம் எல்லாமே பொய் என்றாகி விடும். ஆத்யா சக்தி இருப்ப தால் தான்உலகம் நிலைத்து நிற்கிறத. மூங்கில் தூண்களும் சட்டங்களும் இல்லை யென்றால் அசு்சுக் கூடு இல்லை. அச்சுக் கூடு இல்லையானால் துர்க்கையின் அழகிய சிலையை உருவாக்க முடியாது.

உலகியல் எண்ணங்களைத் துறக்காமல் ஆன்மீக விழிப்பு உண்டாவதில்லை. இறைக் காட்சியும் கிடைப்பதில்லை. மனத்தில் உலகியல் இருக்கும் போது கபடத்தனம் இருக்கவே செய்யும். கள்ளம் கபடமற்ற எளிய இயல்பு இல்லாமல் இறைவனை அடைய முடியாது.

உலகக் கடமைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் , ஆபீஸ்களில் வேலை செய்பவர்கள். வியாபாரிகள் என்று யாரானாலும் உண்மையைக் கடைப்பிடிப்பது நல்லது. உண்மை பேசுவது கலியுகத்தில் தவமாகும்.

ஸ்ரீராமகிருஷ்ணர் சென்று சிறிய கட்டிலில் அமர்ந்தார். அவர் எப்போதும் பரவச நிலையிலேயே உள்ளார். அந்த நிலையிலேயே ராக்காலைப் பார்த்தார். பார்த்தபடியே வாத்சல்ய பாவனையில் ஆழ்ந்தார். அவரது உடல் சிலிர்த்தது. இப்படித்தான் யசோதை கண்ணனைப் பார்த்திருப்பாளோ! பார்த்தபடியே மீண்டும் சமாதி நிலையை அடைந்தார். அறையில் இருந்த பக்தர்கள் பேச்சிழந்து, குருதேவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறிது புறநினைவு பெற்றதும் குருதேவர் கூறினார். ராக்காலைப் பார்த்தும் ஏன் இந்த ஆவேச நிலை உண்டாகிறது? நாம் முன்னேறும் அளவுக்கு இறைவனின் மகிமையில் நாட்டம் குறைந்து விடுகிறது. சாதகன் முதலில் பத்துக் கைகள் உடைய தேவியின் தரிசனம் பெறுகிறான். இந்த வடிவத்தில் மகிமை அதிகமாகத் தென்படுகிறது. பிறகு இரண்டு கைகளைக்கொண்ட உருவத்தைக் காண்கிறான். பத்து கைகள் இல்லை, அவ்வளவு ஆயுதங்கள் இல்லை, பிறகு பால கோபாலனின் காட்சி. இதில் மகிமையின் எந்த அடையாளமும் இல்லை, வெறும் பிஞ்சுக் குழந்தையின் வடிவம். இதற்குப் பிறகும் காட்சி உண்டு. அது ஜோதி தரிசனம்.

இறையனுபூதி பெற்றுவிட்டால் , சமாதி நிலை வாய்த்து விட்டால் ஞான ஆராய்ச்சிகள் மறைந்து விடுகின்றன. எவ்வளவு காலத்திற்குத்தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது? பன்மை உணர்வு இருக்கின்ற வரைக்கும்- உலகம், நான், நீ, மக்கள், உயிர்கள் என்ற உணர்வுகள் இருக்கின்ற வரைக்கும் தான். சரியான ஒருமை உணர்வு ஏற்பட்டதும் எல்லாம் அகன்று விடுகின்றன. திரைலங்க சுவாமி இந்த நிலையில் தான் இருந்தார்.

விருந்து வேளையில் கவனித்திருக்கிறாயா? முதலில் ஒரே பேச்சு, ஆரவாரம், வயிறு கொஞ்சம் கொஞ்சமாக நிறைய ஆரம்பித்ததும் ஓசை குறைந்து கொண்டே வரும். கடைசியாகத் தயிர்ச்சோறும் இனிப்பும் பரிமாறியதும் ஸுப்ஸுப் என்ற ஓசை மட்டுமே கேட்கிறது.வேறு பேச்சு வார்த்தை கிடையாது. பிறகு உறக்கம், அதாவது சமாதி, அப்போது எந்த ஓசையும் இல்லை.

ம- பிராண கிருஷ்ணர் இருவரிடமும்)- பலர் பிரம்ம ஞானத்தைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர் களின் மனமோ வீடு வாசல், பணம் காசு, பெயர் புகழ், புலன் இன்பம் என்று தாழ்ந்த விஷயங்களிலேயே உழல்கிறது. மானுமென்டின் அடியில் நின்று கொண்டிருக்கும் வரை வண்டி, குதிரை, வெள்ளைக் காரன், வெள்ளைக் காரி எல்லாம் தெரிகிறது. உச்சியில் சென்று நின்றாலோ ஆகாயமும் சமுத்திரமும் பரந்து கிடப்பதைக் காணலாம். அப்போது வீடு, வண்டி, குதிரை, மனிதர்கள், எதிலும் மனம் செல்வதில்லை. எல்லாம் எறும்புகள்போல் தென்படுகின்றன.

பிரம்ம ஞானம் அடைந்த பிறகு உலகில் பற்று, காமினீ- காஞ்சன நாட்டம் எல்லாம் மறைந்து விடுகின்றன. எல்லாம் சாந்தமாகி விடுகின்றன. விறகு எரியும்போது தான் கடமுட சத்தமும் தீப்பொறியும் எல்லாம், எரிந்து முடிந்தால் சாம்பல் மட்டுமே மிச்சம். அதன் பிறகு எவ்வித சத்தமும் இல்லை. பற்று மறைந்தால் வேகம் மறைகிறது. இறுதியில் முடிவற்ற அமைதி.

இறைவனை நோக்கி நாம் அருகில் செல்கின்ற அளவிற்கு அமைதி, அமைதி, அமைதி, அளவற்ற அமைதி. கங்கையின் அருகில் செல்லச் செல்ல குளிர்ச்சியை உணரலாம். குளித்தல் இன்னும் நல்ல குளிர்.

உலகம், உயிர்கள், இருபத்து நான்கு தத்துவங்கள் எல்லாமே இறைவன் இருப்பதால் தான் இருக்கின்றன. அவரை எடுத்து விட்டால் எதுவும் இருக்காது. ஒன்றுக்குப் பக்கத்தில் பூஜ்யங்கள் போடுகின்ற அளவுக்கு எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால் அந்த ஒன்றை நீக்கி விட்டால், பூஜ்யங்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது.

பிராண கிருஷ்ணருக்கு அருள் வதற்காக குருதேவர் தமது நிலையையே மறைமுகமாகக் கூறுகிறாரே என்ன?

குருதேவர் தொடர்ந்தார்-

பிரம்ம ஞானத்திற்குப் பிறகு, சமாதி நிலைக்குப் பிறகு சிலர் அங்கிருந்து கீழே இறங்கி,” நான் ஞானி” ”நான் பக்தன்” என்ற உணர்வுடன் வாழ்கிறார்கள். சந்தை கலைந்த பிறகும் சிலர் சொந்த விருப்பத்தால் அங்கே தங்குகிறார்கள் அல்லவா, அது போல். நாரதர் முதலானவர்கள் உலக மக்களுக்கு உபதேசிப்பற்காக ”நான் பக்தன்” என்ற உணர்வை வைத்துக் கொண்டனர். சங்கரர் உலகிற்கு உபதேசிப்பதற்காக ”நான் ஞானி” என்ற உணர்வை வைத்திருந்தார்.

சிறிதளவு பற்று இருந்தாலும் கடவுளைப்பெற முடியாது. நூலின் நுனியில் ஓர் இழை பிரிந்திருந்தால் கூட அது ஊசியின் காதில் நுழையாது.

இறையனுபூதி பெற்றவனின் காமம், கோபம் முதலியவை எல்லாம் பெயரளவில் தான்- எரிந்து போன கயிறு போல்- பார்ப்பதற்குக் கயிற்றைப்போல் தான் இருக்கும். ஊதினால் பறந்துவிடும்.

மனம் பற்றற்ற நிலையை அடைந்தால் இறைவனைக் காணலாம். தூய மனத்தில் எழுவது இறைவனின் குரலே. தூய மனமே தூய புத்தி. அதுவே தூய ஆன்மா, ஏனெனில் இறைவனைத் தவிர வேறு யாரும் தூயவர் அல்ல.

கடவுளை அடைந்தால் தர்மம் அதர்மம் இரண்டையும் கடந்து செல்ல முடியும்.

இவ்வாறு கூறிக்கொண்டே குருதேவர் தமது இனிய குரலில் ராம பிரசாதரின் பாடலைப் பாடத் தொடங்கினார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் தென்கிழக்கு வராந்தாவில் சென்று அமர்ந்தார். பிராண கிருஷ்ணர் முதலிய பக்தர்களும் பின்னாலேயே சென்றனர். ஹாஸ்ராவும் அங்கே உட்கார்ந்திருந்தார் குருதேவர் சிரித்துக் கொண்டே (பிராண கிருஷ்ணரிடம்) கூறினார். ஹாஸ்ரா சாதாரண ஆள் அல்ல. இது ஒரு பெரிய தர்கா என்றால் ஹாஸ்ரா ஒரு சிறிய தர்கா. (எல்லோரும் சிரித்தனர்)

அப்போது நவகுமார் என்பவன் வந்து கதவருகில் நின்றாள். பக்தர்களைக் கண்டதும் போய் விட்டான். ஓ! இவன் ஆணவமே வடிவெடுத்தவன்” என்றார் குருதேவர்.

மணி ஒன்பதரை ஆகியது. பிராண கிருஷ்ணர் குருதேவரை வணங்கி விடை பெற்றார்.

ஒரு வைணவ சாது குருதேவரின் அறைக்கு வந்து கோபீ எந்திரத்தை மீட்டியபடி பல பாடல்களைப் பாடினார்.

குருதேவர் பாட்டைக்கேட்டு க் கொண்டிருந்தார். அப்போது கேதார் சட்டர்ஜி வந்து வணங்கினார். கோட் , கடிகாரம், கடிகாரத்தின் சங்கிலி, என்று அலுவலக உடையுடன் வந்திருந்தார் அவர். அவர் ஒரு சிறந்த பக்தர். கோபியரின் பாவனையில் பக்தி செய்பவர். இறைவனைப் பற்றிய பேச்சு கேட்டாலே அவருடைய கண்களில் கண்ணீர் வழியும்.

கேதாரைப் பார்த்ததும் குருதேவரின் உள்ளத்தில் கிருஷ்ணரின் பிருந்தாவன நிகழ்ச்சிகள் கிளர்ந்தெழுந்தன. பிரேமையில் மூழ்கியவராய் எழுந்து நின்று கேதாரைப் பார்த்துப் பாடத் தொடங்கினார்.

ராதையின் பாவனையில் பாடிக்கொண்டே குருதேவர் சமாதியில் ஆழ்ந்தார். ஓவியம்போல் ஆடாமல் அசையாமல் நின்றார். அவருடைய கண்களின் ஓரங்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. கேதார் குருதேவரை வீழ்ந்து வணங்கினார். குருதேவரின் திருவடித் தாமரைகளைப் பற்றிக்கொண்டு துதிக்கத் தொடங்கினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு குருதேவர் புற நினைவு பெற்றார். கேதார் தமது சொந்த ஊராகிய ஹாலிசஹரிலிருந்து கல்கத்தாவிலுள்ள தமது அலுவலகத்திற்குச் செல்வார். வழியில் குருதேவரைக் காண்பதற்காக க் காளி கோயிலுக்கு வந்திருந்தார். சிறிது நேரம் இருந்து விட்டு கேதார் சென்றார்.

இவ்வாறு பக்தர்களுடன் பேசிப்பேசி இரண்டு மணி ஆகிவிட்டது. ராம்லால் குருதேவருக்காக ஒரு தட்டில் காளி கோயில் பிரசாதம் கொண்டு வந்தார். தம் அறையில் தெற்கு முகமாக அமர்ந்த படி குருதேவர் பிரசாதத்தை உண்டார். சிறிய குழந்தையைப்போல் ஒவ்வொன்றிலிருந்தும் சிறிது எடுத்து உண்டார். உணவிற்குப் பிறகு ஓய்வு கொள்வதற்காக சிறிய கட்டிலில் படுத்துக் கொண்டார்.

பிற்பகல் மூன்று மணி. மார்வாரி பக்தர்கள் சிலர் வந்து அமர்ந்தனர். தரையில் உட்கார்ந்து கொண்டு குருதேவரிடம் கேள்விகள் கேட்கலாயினர். ம-, ராக்கால், மற்றும் பல பக்தர்களும் அறையில் இருந்தனர்.

மார்வாரி பக்தர்- சுவாமி, வழி என்ன?

ஸ்ரீராமகிருஷ்ணர்- இரண்டு வழிகள் உள்ளன? ஒன்று ஆராய்ச்சி வழி, மற்றொன்று அனுராகம் அல்லது பக்தி நெறி. 

உண்மை- உண்மையற்றது பற்றிய ஆராய்ச்சி. உண்மையானது, நிலையானது இறைவன் மட்டுமே. மற்ற எதுவும் உண்மையில்லை. எல்லாம் அழியக்கூடியவை. ஜால வித்தை காட்டுபவன் உண்மை. ஜால வித்தை கள் பொய். இவ்வாறு பாகுபடுத்தி அறிவது தான் ஆராய்ச்சி.

விவேகம், வைராக்கியம், உண்மை- உண்மையற்றது என்ற ஆராய்ச்சி தான் விவேகம். உலகப் பொருட்களிடம் ஏற்படும் வெறுப்பு தான் வைராக்கியம். எடுத்த எடுப்பிலேயே இது வந்து விடுவதில்லை. தினமும் பயிற்சி செய்ய வேண்டும். காமினீ- காஞ்சனத்தை முதலில் மனத்திலிருந்து அகற்ற வேண்டும். பிறகு கடவுளின் அருளால் அவற்றை மனத்தாலும் செயலாலும் துறக்க வேண்டும்.

கடவுளுக்காக எல்லாவற்றையும் துறந்து விடு. என்று கல்கத்தா மக்களிடம் கூறுவது முடிகிற காரியமில்லை. அதனால் மனத்தளவில் துறந்து விடுங்கள்” என்று கூற வேண்டியிருக்கிறது.

அப்பியாச யோகத்தின் மூலமாக காமம், பணம் இவற்றின் மீதுள்ள பற்றை விட முடியும். இது கீதையில் சொல்லப் பட்டிருக்கிறது. பயிற்சியால் அசாதாரண சக்தி வருகிறது. அப்பொழுது புலன்களை அடக்குவது, அதாவது காமம், கோபம், மயக்கம், முதலியவற்றை அடக்குவதற்குச் சிரமம் இருக்காது. ஆமை கால்களை உள்ளே இழுத்துக்கொண்டால் பிறகு வெளியே நீட்டாது. கத்தியால் நான்காக வெட்டினாலும் நீட்டாது.

மார்வாரி பக்தர்-

சுவாமி, இரண்டு வழிகள் என்று கூறினீர்கள், மற்றொரு வழி என்ன?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அனுராகம் அல்லது பக்தி நெறி, மன ஏக்கத்துடன் தனிமையில், எனக்கு உன்னைக் காட்டியருள், என்று ஒரு முறை கதறி அழு.

மார்வாரி பக்தர்-

சுவாமி, உருவ வழிபாடு என்றால் என்ன? உருவமற்ற, குணமற்ற வழிபாட என்றால் என்ன?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

தந்தையின் போட்டோ கிராஃப் எப்படி தந்தையை நினைவிற்குக்கொண்டு வருகிறதோ, அது போல் உருவ வழிபாட்டைச்செய்யச்செய்ய உண்மை உருவத்தை உணர்வாய்.

உருவம் என்றால் என்ன தெரியுமா? நீரின் அடியிலிருந்து எழுகின்ற குமிழிகள் போன்றது அது. எல்லையற்று ப் பரந்ததான உணர்வு வெளியில் பல்வேறு உருவங்கள் உதிக்கின்றன. அவதாரமும் இந்தப் பல உருவங்களில் ஒன்றாகும். இத்தகைய அவதார புருஷர்களின் வாழ்க்கையும் தேவி பராசக்தியின் திருவிளையாடலே.

வெறும் நூலறிவில் என்ன இருக்கிறது? மன ஏக்கத்துடன் அழைத்தால் அவரை அடைய முடியும். பல விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

யார் ஆசாரியரோ, அவர் பல விஷயங்களை அறிய வேண்டும். அடுத்தவனைக்கொல்ல வாள், கேடயம் எல்லாம் அவசியம். ஆனால் தன்னையே மாய்த்துக் கொள்ள ஒரு ஊசியோ, நகம் வெட்டும் சிறு கத்தியோ போதும்.

நான் யார் என்பதை தேடினால் இறைவனை அடையலாம். நான் என்பது என்ன? மாமிசமா, எலும்பா, ரத்தமா, மஜ்ஜையா, அல்லது மனமா, புத்தியா? இவ்வாறு ஆராய்ந்து கொண்டே போனால் கடைசியில், ”நான்” என்பது இவை எதுவும் அல்ல என்பதை அறியலாம். இது அல்ல” இது அல்ல” ஆன்மாவை அறியவோ தொடவோ முடியாது. அது குணமற்றது, தளைகள் அற்றது.

ஆனால் பக்தி நெறியிலோ அவர் குணங்களும் கூடியவர். அவரும் உணர்வுமயமும் , அவரது இருப்பிடமும் உணர்வு மயம்- எல்லாம் உணர்வுமயம்.

மார்வாரி பக்தர்கள் குருதேவரை வணங்கி விடை பெற்றுச்சென்றனர்.

மாலை வேளையாகியது. குருதேவர் கங்கையைத் தரிசித்தார். அறையில் விளக்கேற்றப்பட்டது. குருதேவர் அன்னையின் திருநாமத்தை உச்சரித்த படியே கட்டிலில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.

காளி கோயிலில் தீபாரதனை ஆரம்பமாகியது. கங்கைக் கரையிலும் பஞ்சவடியிலும் இருந்த பக்தர்கள் தொலைவில் இருந்த வண்ணம் தீபாரதனையின் இனிய நாதத்தைக்கேட்டனர். நீரேற்றம் காரணமாக கங்கை சல சலவென்ற ஓசையுடன் வடதிசை நோக்கிப் பாய்ந்து சென்றது. மாலை தீபாரதனையின் இனிய மணியோசை காற்றில் மிதந்து சென்று கங்கை நீரில் சலசல த்த ஓசையில் கலந்து இனிமையைக் கூட்டிற்று. அந்த அருமையான சூழ்நிலையில், பிரேமப் பித்து கொண்ட பரமஹம்சர் தமது அறையில் அமர்ந்திருந்தார். இதயம் இனிமை மயம்! எல்லாம் இனிமை! இனிமை! இனிமை!

   பாகம்- 20

ஞாயிறு. பிப்ரவரி 18, 1883

........................

காலை ஏழு அல்லது எட்டு மணி இருக்கும். பெல்கேரியாவிலுள்ள கோவிந்த முகோ பாத்யாயரின் வீட்டிற்கு குருதேவர் சென்றிருந்தார். நரேந்திரர், ராம், மற்றும் பல பக்தர்களும் அக்கம் பக்கத்து வீட்டாரும் அங்கே கூடியிருந்தனர். கீர்த்தனை நடந்து கொண்டிருந்தது. குருதேவர் பக்திப் பரவசத்துடன் நரேந்திரர் முதலியவர்களுடன் சேர்ந்து ஆடினார்.

கீர்த்தனை முடிந்த பிறகு அனைவரும் அமர்ந்தனர். பலர் குருதேவரை வணங்கினர். கடவுளை வணங்குங்கள், என்று அவர் இடையிடையே கூறினார்.

குருதேவர் பேசலானார்-

கடவுள் ஒருவரே எல்லாமாக ஆகி இருக்கிறார். சில இடங்களில் அவருடைய வெளிப்பாடு அதிகம். உதாரணத்திற்கு சாதுக்கள்.

தீயவர்கள் இருக்கிறார்களே, புலி சிங்கம், முதலியவை இருக்கின்றனவே என்று நீங்கள் சொல்லலாம். அதற்காக புலி- நாராயணனைக் கட்டியணைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தொலைவிலிருந்து வணங்கி அகன்று விட வேண்டும். தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். சில தண்ணீரைக் குடிக்கலாம். சில தண்ணீரைக்கொண்டு பூஜை செய்யலாம். சிலவற்றில் குளிக்கலாம். சிலவற்றில் கைகால்களை கழுவிக்கொள்ள மட்டுமே முடியும்.

அண்டை வீட்டான்-

சுவாமி, வேதாந்த மதம் என்பது என்ன?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

வேதாந்திகள், ஸோஹம் பிரம்மம் ஒன்றே உண்மை, உலகம் உண்மையில்லை. நான் என்பதும் உண்மையில்லை தான். இருப்பதெல்லாம் அந்தப் பரம் பொருள் மட்டுமே, என்பார்கள். ஆனால் நான் என்பது மறைவதே இல்லை, ஆகையால் ”நான் அவரது சேவகன்” நான் அவருடைய குழந்தை, நான் அவருடைய பக்தன்” என்று கருதுவது மிகவும் நல்லது.

கலியுகத்திற்கு பக்தி யோகமே சிறந்தது. பக்தியின் வாயிலாகவும் அவரை அடைய முடியும். உடலுணர்வு இருக்கும் வரை உலகியலும் இருக்கவே செய்யும். சுவைப்பது, காண்பது, உணர்வது, கேட்பது, தொடுவது – இவையே உலகியல், உலகியலை விலக்குவது மிகக் கடினம். உலகியல் இருக்கும்போது ஸோஹம் உணர்வு தோன்றாது.

துறவியரிடம் உலகியல் குறைவாக இருக்கும். இல்லற வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்போதும் அதில் தான் மூழ்கியிருப்பார்கள்.ஆதலால் அவர்கள் ”நான்- சேகவன்” என்றநிலையைக்கொள்வது நல்லது.

பக்தன்-

நாங்கள் பாவிகள், எங்கள் நிலைமை என்னவாகும்?

ஸ்ரீராமகிருஷ்ணர்- பகவானுடைய திருநாமத்தையும் மகிமைகளையும் பாடினால் உடலின் எல்லா பாவங்களும் பறந்து விடுகின்றன. உடலாகிய மரத்தில் பாவப் பறவைகள் அமர்ந்துள்ளன. அவரது பெயரையும் புகழையும் பாடுவது என்பது கைகளைத் தட்டுவது போலாகும். கைகளைத் தட்டினால் எப்படி மரத்திலுள்ள பறவைகள் பறந்து விடுகின்றனவோ, அப்படி அவரது பெயரையும் புகழையும் பாடினால் எல்லா பாவங்களும் பறந்து விடுகின்றன. அவரது பெயரையும் புகழையும் பாடுவது என்பது கைகளைத் தட்டுவது போலாகும். கைகளைத் தட்டினால் எப்படி மரத்திலுள்ள பறவைகள் பறந்து விடுகின்றனவோ, அப்படி அவரது பெயரையும் புகழையும் பாடினால் எல்லா பாவங்களும் பறந்து விடுகின்றன.

மேலும் கேள், குளத்து நீர் வெப்பத்தின் காரணமாக தானாகவே வற்றி விடுகிறது. அதே போல் இறைவனது பெயரையும் புகழையும் பாடுவதனால் பாவக் குளத்தின் தண்ணீர் தானாகவே வற்றி விடுகிறது.

தினமும் பயிற்சி செய்ய வேணடும். சர்க்கஸ் பார்த்து வந்தேன். வேகமாக ஓடுகின்ற குதிரையின் மேல் பெண் ஒரே காலில் நின்று கொண்டிருந்தாள். அதற்கு எவ்வளவு பயிற்சி தேவை!மேலும் கடவுளைக் காண்பதற்காக ஒரு முறை அழு.

இவை தான் இரண்டு வழிகள். ஒன்று பயிற்சி, மற்றவை அனுராகம். அவரைக் காண்பதற்காக மன ஏக்கம்.

பிறகு வீட்டின் மாடி அறையின் வராந்தாவில் குருதேவர், பக்தர்களுடன் பிரசாதம் உட்கொண்டார். பகல் ஒரு மணி. விருந்து முடிந்தும் முடியாமலும் இருக்கும்போதே கீழே முற்றத்தில் பக்தர் ஒருவர் பாட ஆரம்பித்தார்.

பாட்டைக்கேட்டு குருதேவர் சமாதியில் ஆழ்ந்தார். உடலில் அசைவில்லை.கை பிரசாதத் தட்டைத் தொட்டபடி சித்திரம் போல் அப்படியே இருந்தது. அவரால் மேற்கொண்டு சாப்பிட இயலவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு சமாதி நி லை சிறிது சிறிதாகக் கலையத் தொடங்கியது. அப்போது அவர், ” நான் கீழே போக வேண்டும்” நான் கீழே போக வேண்டும்” என்று கூறினார். ஒரு பக்தர் மிகவும் கவனமாக அவரைக் கீழே அழைத்துச்சென்றார்.

காலையில் பக்தர்களுடன் குருதேவர் ஆனந்தமாக ஆடியும் பாடியும் களித்த இடத்தில் விரிப்பு இப்போதும் விரித்த படியே இருந்தது. குருதேவர் இப்போதும் பரவசநிலையிலேயே இருந்தார். பாடகரின் பக்கத்தில் சென்று அமர்ந்தார். பாடகர் உடனே பாட்டை நிறுத்தினார். அப்போது குருதேவர் மிகவும் பணிவுடன் பாடகனிடம், ஐயா, தேவியைப் பற்றிய பாடலை இன்னொரு முறை கேட்க விரும்புகிறேன்” என்றார். பாடகர் மீண்டும் பாடத் தொடங்கினார்.

பாட்டைக்கேட்ட குருதேவர் மீண்டும் பரவச நிலையில் ஆழ்ந்தார்.

   பாகம்- 21

ஞாயிறு, பிப்ரவரி 25, 1883

.................

மதிய உணவிற்குப் பிறகு குருதேவர் தமது அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

ராக்கால், ஹரீஷ், லாட்டு, ஹாஸ்ரா, ஆகியோர் இப்போதெல்லாம் குருதேவருடன் வசித்து வந்தனர். ராம், கேதார், நித்தியகோபால், ம- மதலிய பக்தர்கள் கல்கத்தாவிலிருந்து வந்திருந்தனர்.

சௌதுரி என்பவரும் வந்திருந்தார். செனதுரியின் மனைசி சமீபத்தில் காலமாகி விட்டிருந்தார். மன ஆறுதலுக்காக, அவர் குருதேவரைக் காண அடிக்கடி இங்கு வருவதுண்டு. அவர் படித்து ப் பட்டம் பெற்றவர். அரசாங்க வேலையில் இருப்பவர்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

(ராம் முதலிய பக்தர்களிடம்)-

ராக்கால், நரேந்திரன், பவநாத் இவர்கள் நித்திய சித்தர்கள். பிறவியிலிருந்தே ஆன்மீக உணர்வு பெற்றவர்கள். மக்களுக்குப்போதிக்கவே இவர்கள் உடல் தரித்துள்ளனர்.

கிருபா சித்தர்கள் என்ற மற்றொரு பிரிவினர் உண்டு. இவர்கள் உயர்ந்த வகுப்பைச்சேர்ந்தவர்கள். இவர்களுக்குத் திடீரென்று இறையருள் கிடைக்கிறது. உடனே இறைக்காட்சிபெறுகிறார்கள். ஞானம் பெறுகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளாக இருள் மூடிக்கிடக்கும் அறையில் விளக்கினை எடுத்துச் சென்றால், அந்தக் கணமே இருள் அகன்று ஒளி நிறைகிறது. அது போன்றது இவர்கள் நிலை. சிறிது சிறிதாக வருவதில்லை.

இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள். சாதனைகள் செய்வது அவசியம். தனிமையில் சென்று மன ஏக்கத்துடன் இறைவனைக் கூவி அழைக்க வேண்டும். (சௌதுரியிடம்) நூலறிவினால் அவரை அடைய முடியாது.

அவரது விஷயங்களை ஆராய்ந்து அறிய யாரால் முடியும்? முடியாது. எதைச் செய்தால்அவருடைய திருவடித் தாமரைகளில் பக்தி உண்டாகுமோ அதற்காக முயல்வதே எல்லோருக்கும் நல்லது. இறைவனுடைய மகிமை எல்லையற்றது. அதை அறிந்தவர் யார்? அவருடைய செயல்பாடு களைத் தான் யாரால் புரிந்து கொள்ள முடியும்?

பீஷ்மர் சாட்சாத் அஷ்ட வசுக்களில் ஒருவர். அம்புப் படுக்கையில் படுத்திருந்த போது அழத் தொடங்கினார். என்ன ஆச்சரியம்? பகவான் ஸ்ரீகிருஷ்ணரே பாண்டவர் களுடன் எப்போதும் இருக்கிறார். அப்படி இருந்தும் பாண்டவர்கள் பட்ட துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் அளவில்லையே! கடவுளுடைய செயலை யாரால் அறிய முடியும்? என்றார் அவர்.

ஏதோ நான் கொஞ்சம் சாதனையெல்லாம் செய்துள்ளேன். எனவே நான் ஜெயித்து விட்டேன் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் ஜெயிப்பதும் தோற்பதும் இறைவனின் கையில் உள்ளது. இங்கே கங்கைக் கரையில் உயிரை விட வந்த விலைமகள் ஒருத்தி, இறுதிவரை நினைசுடன் இருந்தே உயிரை விட்டதை நான் கண்டேன்.

சௌதுரி-

கடவுளைக் காண்பது எப்படி?

ஸ்ரீராகிருஷ்ணர்-

இந்தக் கண்களால் காண இயலாது. அவர் தெய்வீகக் கண்களைத் தருவார். அப்போது தான் காண முடியும். விசுவரூப தரிசனத்தின்போது அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தெய்வீகக் கண்களைக்கொடுத்தார்.

உங்கள் ஃபிலாசஃபியில் இருப்பதெல்லாம் வெறும் ஊகக் கணக்கு வழக்குகள் தான். வெறுமனே ஆராய்வதுடன் சரி, இவைகளால் இறைவனை அடைய முடியாது.

ராகபக்தி தோன்றுமானால், அதாவது ஆழ்ந்த அன்புடன் கூடிய பக்தி இருக்குமானால், அதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க இறைவனால் முடியாது. பக்தி அவருக்கு எவ்வளவு விருப்பமானது தெரியுமா? பிண்ணாக்கு கலந்த தீனியில் பசுவுக்கு எவ்வளவு விருப்பமோ அவ்வளவு. அந்தத் தீனியைப் பசு கப்கப் என்று தின்று விடும்.

ராக பக்தி என்றால் சுத்த பக்தி. அஹேதுகீ பக்தி. அதாவது எதையும் எதிர் பாராத பக்தி, பிரகலாதனிடம் இருந்தது போன்ற பக்தி.

ஒரு பெரிய மனிதரை நீ மிகவும் விரும்புகிறாய். அவரைப் பார்க்க தினமும் போகிறாய். ஆனால் அவரிடம் நீ எதையும் வேண்டுவதில்லை. உனக்கு ஏதாவது வேண்டுமா? என்று அவர் கேட்டாலும், ஐயா, எதுவும் வேண்டாம். உங்களைப் பார்க்க வருகிறேன். அதுவேபோதும்” என்று கூறுகிறாய். இதைத் தான் அஹேதுகீ பக்தி என்று கூறுவார்கள். இவர்கள் இறைவனிடமிருந்து எதையும் விரும்புவதில்லை. அவரை நேசிக்கிறார்கள். அவ்வளவு தான்.

இவ்வாறு கூறிக்கொண்டே குருதேவர் பாடத் தொடங்கினார்.

சுருக்கமாகச் சொன்னால், நமக்கு வேண்டியதெல்லாம் இறைவனிடம் ஆழ்ந்த பக்தி, விவேகம், வைராக்கியம், இவை தான்.

சௌதுரி-

சுவாமி, குரு இல்லாவிட்டால் ஆன்மீக வாழ்க்கை பலனளிக்காதா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

சச்சிதானந்தம் தான் குரு. சவ சாதனை செய்து , இஷ்ட தெய்வத்தின் காட்சி கிடைக்கும் வேளையில், குருதோன்றி, இதோ பார்! உன் இஷ்ட தெய்வம், என்று கூறுகிறார். பிறகு இஷ்ட தெய்வத்தில் அவர் ஒடுங்கி விடுகிறார். குரு யாரோ அவரே தான் இஷ்ட தெய்வம். இஷ்ட தெய்வத்தை நோக்கி நாம் செல்வதற்கு அடியெடுத்து க்கொடுப்பவர்குரு.

பெண்கள் ஆனந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். ஆனால் விஷ்ணுவைப்பூஜிக்கின்றனர். அவரில் இறைவனின் எல்லையற்ற உருவங்கள் அடங்கியுள்ளன.

ராம் முதலிய பக்தர்களிடம்)

எந்த தெய்வத்தைதியானிக்க வேண்டும் என்று கேட்டால், எந்த தெய்வம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ அந்த தெய்வத்தை தியானம் செய்யுங்கள் என்பேன். ஆனால் எல்லாம் ஒருவரே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

யாரையும் வெறுக்கக் கூடாது. சிவன், காளி, ஹரி எல்லோரும் ஒருவரின் பல்வேறு வடிவங்கள். எல்லாவற்றையும் ஒன்றொன்று அறிபவன் பேறு பெற்றவன். புறத்திலே சிவன், அகத்திலே காளி, வாயிலே ஹரி நாமம்.

சிறிது காமம், கோபம் முதலியவை இல்லாமல் உடல் நிலைக்காது. எனவே நீங்கள் இவற்றைக் குறைக்க மட்டுமே முயல வேண்டும்.

(கேதாரைக் காட்டி) இவர் நல்லவர். நித்தியத்தையும் ஒப்புக் கொள்கிறார். லீலையையும் ஒப்புக் கொள்கிறார்.

ஒரு புறம் பிரம்மம். அதே வேளையில் தெய்வீக லீலை. மானிட லீலை என்று எல்லாவற்றையும் நம்புகிறார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் மனித உடல் தாங்கிய அவதார புருஷர் என்பது கேதாரின் கருத்து.

நித்திய கோபாலைக் குறித்து, குருதேவர் பக்தர்களிடம் இவன் உயர்ந்த நிலையில் இருக்கிறான்” என்றார். (நித்திய கோபாலிடம்) நீ அங்கே அடிக்கடி போகாதே. எப்போதாவது ஒரு முறை போ. பக்தையாக இருக்கலாம்.ஆனாலும் அவள் பெண் அல்லவா? ஆகவே எச்சரிக்கையாக இரு.

துறவியரின் நியதிகள் கடுமையானவை. பெண்களின் படத்தைக் கூட பார்க்கக் கூடாது. ஆனால் இல்லறத்தார் விஷயத்தில் அப்படி அல்ல. பெண்கள் எவ்வளவு தான் பக்தி உடையவர்களாக இருந்தாலும் அவர்களுடன் துறவி நெருங்கிப் பழகக் கூடாது. மனத்தை எவ்வளவு தான் கட்டுப் படுத்தியவராக இருந்தாலும் உலக மக்களுக்கு எடுத்துக் காட்டாக இருப்பதற்காக இந்த விதிகளைத் துறவி பின் பற்ற வேண்டும். துறவியின் முழுத்துறவைக் கண்டு உலக மக்கள் துறக்கக் கற்றுக் கொள்வார்கள். இல்லையென்றால் மேலும் மேலும் மூழ்கிப்போவார்கள். துறவி ஜகத்குரு ஆகிறார்.

குருதேவரும் பக்தர்களும் எழுந்து நடக்கலாயினர்.ம- பிரகலாதனுடைய படத்தின் முன் நின்று அதைப் பார்த்து கொண்டிருந்தார். பிரகலாதனின் அஹேதுக பக்தியைப் பற்றி குருதேவர் குறிப்பிட்டார் அல்லவா!........

   பாகம்- 22

வெள்ளி, மார்ச் 9, 1883

........................

தட்சிணேசுவரத்தில் குருதேவர் தமது அறையில் ராக்கால், ம- முதலிய பக்தர்களுடன் அமர்ந்திருந்தார். காலை எட்டு அல்லது ஒன்பது மணி இருக்கும். அன்று அமாவாசை. அமாவாசை நாட்களில் குருதேவர் பொதுவாகவே தேவியின் ஆவேசத்தில் ஆழ்ந்திருப்பார். அவர் கூறினார்-

கடவுள் ஒருவர் தான் உண்மை. மற்ற எதுவுமே உண்மையில்லை. தேவி, எல்லோரையும் தன் மகா மாயையில் ஆழ்த்தி வைத்திருக்கிறாள். மனிதர்களைப் பாருங்கள். கட்டுண்டு கிடப்பவர்களே அதிகம். காமினீ- காஞ்சனத்தில் பற்றுவைத்து இவ்வளவு துன்பத்திற்கு உள்ளாகின்றனர். என்றாலும் பற்று விட்ட பாடில்லை. முட்செடியைத் தின்பதால் ஒட்டகத்தின் வாயிலிருந்து ரத்தம் பீறிடும். இருந்தாலும்அது முட் செடியையே தின்கிறது. பிரசவ வேதனையின்போது பெண், ஐயோ, இனி கணவனின் அருகிலேயே போக மாட்டேன். என்று கூக்குரலிடுகிறாள். பிறகு மறந்து விடுகிறாள்.

இதோ பார்! கடவுளை யாரும் தேடுவதில்லை. அன்னாசிச்செடியின் பழங்களை விட்டுவிட்டு இலைகளைத் தின்கிறார்கள்.

பக்தர்-

சுவாமி, உலக வாழ்வில் இறைவன் ஏன் நம்மை வைத்திருக்கிறார்?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இந்த உலகம் ஒரு செயல்களம். செயல் புரிந்து கொண்டே சென்றால் ஞானம் உதிக்கிறது. இந்தக் காரியங்களைச் செய், இவைகளேச்செய்யாதே” என்று குரு உபதேசிக்கிறார். பற்றின்றி பணி செய்யுமாறு கூறுகிறார். வேலை செய்யச் செய்ய மனத்தில் உள்ள மாசுகள் மறைகின்றன. நல்ல டாக்டர் வாய்த்து விட்டால், அவர் தரும் மருந்தை உட்கொள்ள உட்கொள்ள, நோய் நீக்கி, நாளடைவில் குணமடைவது போன்றது இது.

கடவுள் நம்மை ஏன் உலக வாழ்க்கையிலிருந்து விடு விக்கவில்லை? நோய் குணமடையும் போது விடுவிப்பார். காமினீ- காஞ்சனத்தை அனுபவிப்பதில் நாட்டம் மறையும் போது விடுவிப்பார்.ஆஸ்பத்திரியில் பெயரைப் பதிவு செய்து விட்டால் ஓடிப்போக முடியாது. நோய் கட்டுப்பாட்டிற்குள் வராமல் டாக்டர் விடுவிக்க மாட்டார்.

இப்போதெல்லாம் குருதேவர் யசோதையைப்போல் வாத்சல்ய பாவனையில் மூழ்கியிருந்தார். ஆகவே ராக்காலைத் தம்முடன் வைத்துக்கொண்டிருந்தார்.ராக்காலும் குருதேவரிடம் இருக்கும்போது, ஒரு சின்னஞ்சிறு குழந்தை தன் தாயிடம் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார். குழந்தை பால் குடிக்க தாயின் மடி மீது சாய்ந்து உட்கார்ந்து கொள்வது போல் ராக்காலும் குருதேவரது மடி மீது சாய்ந்து உட்கார்ந்து கொள்வார்.

இவ்வாறு அந்த பாவனையில் குருதேவர் அமர்ந்திருந்த போது, ஒரு பக்தர் வந்து கங்கையில் நீரேற்றம் ஏற்பட்டிருப்பதைக் கூறினார். அதைக்கேட்டதும் குருதேவர், ராக்கால் ம-முதலிய அனைவரும் அதைக் காண பஞ்சவடிக்கு விரைந்தனர். காலை 10.30 மணி இருக்கும். அந்த நீரேற்றத்தில் ஒரு படகு சிக்கிக் கொண்டது. அதைக் கண்ட குருதேவர், ஓ! அதோ பார்! அந்தச் சிறிய படகின் நிலைமையைப் பார், என்ன நேருமோ? என்று கூறினார்.

பிறகு எல்லோரும் வழியில் பஞ்சவடியில் உட்கார்ந்தனர்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

(ம-விடம்)- ஆமாம், நீரேற்றம் எப்படி ஏற்படுகிறது?

ம- தரையில் சூரியன், சந்திரன், பூமி இவற்றின் படம் வரைந்து , புவி யீர்ப்பு விசை, நீரேற்றம்- நீரிறக்கம் அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் முதலியவற்றை விளக்கத் தொடங்கினார்.

சிறிது நேரம் ம- சொல்வதைக்கேட்டுக் கொண்டிருந்த குருதேவர், நிறுத்து, எனக்கு ஒன்றும் புரியவில்லை. தலை சுற்றுகிறது. சுள் சுள்ளென்று குத்துகிறது. ஆமாம்,

இப்படி தொலைவிலுள்ள சமாசாரங்களை எல்லாம் எப்படி தெரிந்து கொள்கிறார்கள்?

சிறு வயதில் நான் நன்றாகப் படம் வரைவேன்.ஆனால் எண் சுவடியை எடுத்தாலே தலை சுற்றும், கணக்குப்போட எனக்குக் கொஞ்சமும் வராது.

இவ்வாறு கூறிக் கொண்டே குருதேவர் தமது அறைக்குத் திரும்பினார். அங்கு சுவர் மீது மாட்டப் பட்டிருந்த யசோதையின் படத்தைப் பார்த்து விட்டு, படம் நன்றாக இல்லை. ஒரு பூக்காரியைப்போல் யசோதையை வரைந்திருக்கிறார்கள் என்று கூறினார்.

பகலுணர்விற்குப் பிறகு குருதேவர் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டார்அதரும் மற்ற பக்தர்களும் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். அதர் சேன் குருதேவரைப் பார்க்க வருவது இதுவே முதல் தடவை. அவரது வீடு கல்கத்தாவில் பேனேடோலாவில் உள்ளது. அவர் துணை நீதிபதியாக இருந்தார். வயது இருபத்தொன்பது முப்பது இருக்கும்.

அதர்(ஸ்ரீராமகிருஷ்ணரிடம்)-

சுவாமி, நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். உயிர்ப்பலி நல்லதா? இது உயிர்களைத் துன்புறுத்துவது ஆகாதா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

சிலவிசேஷ காலங்களில் பலியிடுவதை சாஸ்திரம் அனுமதிக்கிறது. சாஸ்திரம் அனுமதிக்கின்ற காலங்களில் பலியிடுவதில் குற்றமில்லை. அஷ்டமிதிதியில் ஆடு பலியிடுவது போல். ஆனால் எல்லா காலங்களிலும் கூடாது. எனது இப்போதைய நிலையில், பலியிடுவதை என்னால் நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பிரசாத மாமிசத்தை உண்ணவும் முடிவதில்லை. தேவி கோபித்துக்கொள்ளக் கூடாதே என்ற பயம் காரணமாக, அதைக்கையால் தொட்டு தலையில் வைத்துக்கொள்கிறேன்.

எல்லா உயிர்களிலும், எறும்பிலும் இறைவனைக் காணும் நிலையும் சில வேளைகளில் எனக்கு வருவதுண்டு. இந்த நிலையில், ஏதாவது ஒரு பிராணி இறப்பதைக் கண்டால், அதன் உடல் தான் அழிந்தது என்று ஆறுதல் ஏற்படுகிறது. ஆன்மாவிற்கு ப் பிறப்பு இறப்பு இல்லை.

அதிக ஆராய்ச்சி நல்லதல்ல, அன்னையின் பாத கமலங்களில் பக்தி இருக்குமானால் அது வே பேர்தம். அதிக ஆராய்ச்சி குழப்பத்தையே உண்டாக்கும். குளத்தின் மேல் மட்டத்திலுள்ள தண்ணீரைக்குடி, அது தூய்மையாக இருக்கும். அடி மட்டத்தில் கையைவிட்டுக் கலக்கினால் தண்ணீர் கலங்கிவிடும். எனவே அவளிடம் பக்திக்காகப் பிரார்த்தனை செய்.

துருவனுடைய பக்திக்குப் பின்னால் ஆசை இருந்தது. நாட்டை அடைவதற்காக அவன் தவம் செய்தான். ஆனால் பிரகலாதனுடைய பக்தி ஆசை இல்லாதது, பலன் கருதாதது.

பக்தர்-

சுவாமி, இறைவனை அடைவது எப்படி?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

இந்த பக்தியின் வழியாகத் தான், நீ காட்சி தராவிட்டால் என் கழுத்தை வெட்டிக் கொள்வேன். என்று இறைவனை வற்புறுத்த வேண்டும். இது தமோ குண பக்தி.

பக்தர்-

கடவுளைக் காண முடியுமா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-

ஆம், கட்டாயமாகக் காணலாம். அருவம், உருவம் இரண்டு நிலைகளையும் காணலாம். உருவக் கடவுளை உணர்வோடு கூடியவராகக்காணலாம். மேலும் மனித வடிவிலும் அவரைப் பிரத்தியட்சமாகக் காண முடியும். எப்படி யெனில் அவதார புருஷரைக் காண்பது ஆண்டவனையே காண்பதாகும். யுகந்தோறும் கடவுள் மனித வடிவில் தோன்றுகிறார்.



Site Content

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

  

ஞாயிறு- மார்ச்11, 1883

.....................

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்த நாள். அவரது சீடர்களும் நெருங்கிய பக்தர்களும் தட்சிணேசுவரக் காளி கோயிலிலுள்ள அவருடைய அறையில் அந்தப் புனித நாளைக்கொண்டாட விரும்பினர்.

அதிகாலையிலிருந்தே பக்தர்கள் ஒவ்வொருவராகவும் கூட்டமாகவும் வரத் தொடங்கி விட்டனர். பவதாரணி குாயிலில் மங்கல ஆரதி

நிறைவுற்றதும் நகபத்திலிருந்து இனிய நாதம் கேட்க ஆரம்பித்தது. அது வசந்த காலம். மரங்களும், செடி கொடிகளும் புத்தம் புதிய இலைகளோடும் மலர்களோடும்காட்சி அளித்தன. சூழ்ந்து வீசிய காற்றும், ஆனந்தத்தைச் சுமந்து வந்தது போல் தோன்றிற்று. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்த நாள் என்பதனால், அந்த மங்கல நாளில், பக்தர்களின் இதயங்களில் ஆனந்தப் பூரிப்பு குடி கொண்டிருந்தது.

அதிகாலையிலேயே குருதேவரின் அறைக்கு வந்து சேர்ந்த ம- அங்கு பவநாத், ராக்கால், பவநாத்தின் நண்பரான காளி கிருஷ்ணர் ஆகியோர் வந்திருந்ததைக் கண்டார். குருதேவர் புன்னகை தவழ கிழக்கு வராந்தாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த ம- தரையில் வீழ்ந்து குருதேவரை வணங்கினார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-(ம-விடம்)-

ஓ! வந்து விட்டாயா? (பக்தர்களிடம்) வெட்கம், வெறுப்பு, பயம் – இந்த மூன்றும் கூடாது. இன்று எவ்வளவுஆனந்தம்நிலவப் போகிறது. ஆனால் ஹரி நாமப் பித்தேறி ஆடவும் பாடவும் இயலாத உதவாக்கரைகளுக்கு அந்த ஆனந்தம் கிடையாது. பகவானின் நாமங்களைப் பாடுவதற்கு வெட்கமோ பயமோ எதற்கு? போகட்டும். இப்போது நீங்கள் பாடுங்கள்.

பவநாத்தும் அவரது நண்பர் காளி கிருஷ்ணரும் சேர்ந்து பாடினார்கள்.

குருதேவர்கூப்பியகரங்களுடன் அமர்ந்து பாட்டை கேட்டுக் கொண்டிருந்தார். கவனமாகக்கேட்ட படியே அவரது மனம் ஏதோ தெய்வீக உலகில் ஆழ்ந்து விட்டது. உலர்ந்த தீக்குச்சி போன்ற அவரது மனத்தில் ஒரு சிறு தூண்டுதல் போதும், விழிப்புணர்வு கிளர்ந்து விடும். சாதாரண மக்களின் மனம் ஈரத் தீக்குச்சியைப்போன்றது. எவ்வளவு கிழிந்தாலும் நெருப்பு பற்றாது. காரணம், அவர்களது மனம் உலகியலில் மூழ்கியிருப்பது தான்.

குருதேவர் நீண்ட நேரம் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். பவநாத்தின் காதில் காளி கிருஷ்ணர் ஏதோ மெதுவாகக் கூறி னார். பின்பு அவர் குருதேவரின் முன்பு வீழ்ந்து வணங்கியெழுந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் வியப்புடன், நீ எங்கே போகிறாய்? என்று கேட்டார்.

பவநாத்-

சுவாமி! அவனுக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர்- என்ன வேலை?

பவநாத்-

அவன் வராக நகரிலுள்ள தொழிலாளர் நிறுவனத்திற்குப்போக வேண்டும்.( காளி கிருஷ்ணர் புறப்பட்டு விட்டார்)

ஸ்ரீராமகிருஷ்ணர்-

அவனது தலையில் எழுதவில்லை. இன்று ஹரிநாமத்தால் இங்கே எவ்வளவு ஆனந்தம் பெருகி யோடப் போகிறது!அவனுக்கு க் கொடுத்து வைக்கவில்லை!

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அன்று உடல் நலம் சரியாக இல்லை. அதனால் அவர் கங்கையில் குளிக்கவில்லை.நேரம் எட்டரை, ஒன்பது மணி இருக்கும். குருதேவரின் அறைக்குக் கிழக்கேயுள்ள வராந்தாவில் கங்கை நீரைச் சில குடங்களில் கொண்டு வந்து வைத்தார்கள். குருதேவர் குளித்தார். பக்தர்கள் அதற்கு உதவி செய்தனர். குளித்துக்கொண்டிருந்த குருதேவர், ஒரு செம்பு நீரைத் தனியாக வையுங்கள்” என்று கூறினார். கடைசியில் அந்த நீரைத் தலையில் ஊற்றிக்கொண்டார். அவர் அன்று மிக எச்சரிக்கையுடன் இருந்தார். ஒரு செம்பு நீருக்கு மேல் தலையில் ஊற்றிக் கொள்ளவில்லை.

குளித்த பிறகு குருதேவர் தமது இனிய குரலில் பகவானுடைய நாமங்களை ஓதிக் கொண்டே தூய ஆடை ஒன்றை உடுத்திக் கொண்டார்.ஓரிரு பக்தர்கள் உடன் செல்ல, தென் திசையில் முற்றத்தின் வழியாகக் காளி கோயிலுக்குச்சென்றார். அவரது வாய் திருநாமத்தை இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருந்தது. பார்வைஈ அடைகாக்கும் பறவையின் பார்வைப்போல் அகமுகமாக இருந்தது.

கோயிலினுள் சென்ற குருதேவர் தேவியை வணங்கிய பிறகு பூஜை செய்தார். ஆனால் பூஜைக்குரிய விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. மலரையும் சந்தனத்தையும் தேவியின் திருவடிகளில் இட்டார். பிறகு தமது தலையில் இட்டுக்கொண்டார். கடைசியாக காளி தேவிக்குச் சமர்ப்பித்திருந்த மலர்களைத் தலையில் வைத்துக் கொண்டு பவநாத்திடம், இளநீரை எடுத்துக்கொள், என்றார். அது தேவியின் பிரசாதம்.

மறுபடியும் முற்றத்தின் வழியாகத் தமது அறைக்கு த்திரும்பினார் குருதேவர். ம-வும் பவநாத்தும் அவருடன் வந்தனர். பவநாத்தின் கையில் இளநீர் இருந்தது. வழியில் வலது புறம் ஸ்ரீராதா காந்தர் கோயில் இருந்தது. குருதேவர் அதை விஷ்ணு கோயில் என்பார். அங்கு சென்றுராதை, கிருஷ்ணன், இருவரையும் வணங்கினார். இடது புறம் பன்னிரு சிவாலயங்கள், சிவபெருமானையும் நெஞ்சில் நினைத்து வணங்கினார் அவர்.

குருதேவர் அறைக்குத் திரும்பியபோது அங்கே இன்னும் பல பக்தர்கள் வந்திருப்பதைக் கண்டார் . ராம், நித்திய கோபால், கேதார் சட்டர்ஜி என்று பலரும் வந்திருந்தனர். பக்தர்கள் அனைவரும் குருதேவரைவீழ்ந்து வணங்கினர். அவரும் அவர்களை அன்புடன் வரவேற்று அவர்களிடம் நலன் விசாரித்தார்.

நீ ஏதாவது சாப்பிடுகிறாயா? என்று நித்திய கோபாலிடம் அன்புடன் கேட்டார்.உம், சாப்பிடுகிறேன்” என்றார் அவர். குழந்தை இயல்புடையவர் அவர். அவர்பேசியது ஒரு குழந்தையின் பேச்சைப்போன்றிருந்தது. இருபத்து மூன்று இருபத்து நான்கு வயது இருக்கும். இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்போதும் ஆன்மீக நிலையில் இருந்தார்.

சிலவேளைகளில் தனியாகவும், சிலவேளைகளில் ராமுடனும், குருதேவரைத் தரிசிக்க அடிக்கடி வருவார். நித்திய கோபாலின் பரவச நிலைகளைக் கண்டு குருதேவர் அவரை நேசித்தார். அவர் பரமஹம்ச நிலையை எய்தியவர் என்றுகுருதேவர் கூறுவதுண்டு. நித்திய கோபாலை அவர் பிருந்தாவன கோபாலனாகவே கருதினார்.

நித்திய கோபால் சாப்பிட்டு முடிந்ததும், குருதேவர் கங்கையை நோக்கியிருந்த தமது அறையின் அரைவட்டத் தாழ்வாரத்திற்கு அவரை அழைத்துச்சென்று அவருடன் பேச ஆரம்பித்தார்.

பரம பக்தையான ஒரு பெண், அவளுக்கு முப்பத்தொன்று முப்பத்திரண்டு வயது இருக்கும். அவள் அடிக்கடி வந்து ஸ்ரீராமகிருஷ்ணரைத் தரிசிப்பது வழக்கம். அவரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவள். அவள் நித்திய கோபாலின் அற்புத மான பரவச நிலையைக் கண்டு, அவரைத் தன் குழந்தையாகப் பாவித்து அன்பு செலுத்தினாள். அவரை அடிக்கடி தன் வீட்டிற்கு அழைத்துச்செல்வதும் உண்டு.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

ஏ! சாது! எச்சரிக்கையாக இரு. ஓரிரு முறை போய்வா. அதிகமாகப்போகாதே, தவறி விடுவாய். காமினீ- காஞ்சனம் தான் மாயை. சாதுக்கள் பெண்களிடமிருந்து மிகவும் விலகி யிருக்க வேண்டும். அதில் எல்லோருமே மூழ்கி ப்போய் விடுகிறார்கள். பிரம்மாவும் விஷ்ணுவும் கூட அந்தச் சூழலில் வீழ்ந்து திணறுகிறார்கள்.

நித்திய கோபால் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார்.

ம-( தனக்குள்)- என்ன ஆச்சரியம். நித்திய கோபால் பரம ஹம்ச நிலையை அடைந்தவர் என்று குருதேவரே அடிக்கடி கூறுகிறார். அத்தகைய உயர்ந்த நிலையை எட்டியிருப்பவருக்கும் கூட ஆபத்துஏற்படுமா? துறவிகள் விஷயத்தில் தான் குருதேவர் எவ்வளவு கடினமான நியதிகளை விதித்திருக்கிறார்! பெண்களுடன் நெருங்கிப் பழகுவதால் துறவிகளும் வீழ்ச்சி அடைவதற்கு வாய்ப்பு ஏற்படுமாமே! இத்தகைய உயர்ந்த லட்சியங்கள் இல்லாவிட்டால் மக்கள் கடைத்தேறுவதற்கு வேறு வழி தான் எது? அவள் பக்தை என்றாலும் கூட பயம் தான்.

சின்ன ஹரிதாசுக்கு ஸ்ரீசைதன்யர் ஏன் அவ்வளவு கடுமையான தண்டனை விதித்தார் என்பது இப்போது புரிகிறது. ஸ்ரீசைதன்யர் தடுத்திருந்தும் பக்தையான ஒரு விதவையுடன் அவர் பேசிவிட்டார். ஆனால் ஹரிதாஸ் ஒரு துறவி ஆயிற்றே! அதனால் ஸ்ரீசைதன்யர் ஹரிதாஸை அறவே புறக்கணித்து விட்டார். எப்படிப்பட்ட தண்டனை! சன்னியாசிக்குத் தான் எவ்வளவு கடுமையான கட்டுப் பாடுகள்!குருதேவருக்குத்தான் நித்திய கோபால் மீது எத்தகைய அன்பு! பின்னால் அவருக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்றெண்ணி, முன் கூட்டியே அவரை எச்சரிக்கிறார்!

பக்தர்கள் திகைத்துப்போய் அமர்ந்திருந்தனர். சாது” எச்சரிக்கையாக இரு” என்ற குருதேவரின் வார்த்தைகள் இடி முழக்கம்போல் அவர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

பின்னர் குருதேவர் பக்தர்களுடன் தமது அறையின் வடகிழக்கு வராந்தாவிற்குச்சென்றார். அந்த பக்தர்களுடன் தட்சிணேசுவரத்தைச்சேர்ந்த ஓர் இல்லற பக்தரும் இருந்தார். அவர் வீட்டில் வேதாந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார். குருதேவரின் திரு முன்னர் அவர் கேதார் சட்டர்ஜியுடன் சப்த பிரம்மம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

பக்தர்-

இந்த அனாஹத ஒலி எப்போதும் உள்ளும் புறமும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

வெறும் ஒலியைக்கேட்டால் மட்டும் போதாது. அந்த ஒலி குறிப்பிடும் பொருள் ஒன்று இருக்க வேண்டும். உன் பெயர் மட்டுமே எனக்கு மகிழ்ச்சியைத் தந்து விடுமா என்ன? உன்னை நேரில் பார்க்காவிட்டால், எனக்குப் பூரண மகிழ்ச்சி ஏற்படாது அல்லவா?

பக்தர்-

இந்த அனாஹத ஒலியே பிரம்மம்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-(கேதாரிடம்)-

என்ன, உனக்குப் புரிகிறதா? இவர் முனிவர்களின் கருத்தை உடையவர். அவர்கள் ராமரிடம், ஹே ராமா, நீ தசரதனின் மகன் என்று தான் எங்களுக்குத் தெரியும். பரத் வாஜர் போன்ற முனிவர்கள் உன்னை அவதாரமாக எண்ணி பூஜிக்கட்டும். எங்களுக்கு வேண்டியது அகண்ட சச்சிதானந்த பிரம்மம்” என்றார்கள். முனிவர்களின் சொற்களைக்கேட்ட ராம பிரான் புன்னகைத்தபடி அங்கிருந்து அகன்றார்.

கேதார்-

ராமரை அவதார புருஷர் என்று அறிந்து கொள்ள இயலாத அந்த முனிவர்கள் மூடர்களாகத் தான் இருந்திருக்க வேண்டும்!

ஸ்ரீராமகிருஷ்ணர்-

(கம்பீரமாக)-

இது மாதிரி பேசாதீர்கள், அவரவருடைய மனப்போக்கையும் மனப் பக்குவத்தையும் பொறுத்தது அது. ஒரே மீனைப் பல்வேறு முறைகளில் சமைத்து குழந்தைகளுக்குத் தருகிறாள் தாய். சிலருக்குப் புலவு செய்து தருகிறாள். அதை எல்லா குழந்தைகளாலும் ஜுரணிக்க முடியாது. அவர்களுக்கு மீன் குழம்பு தருகிறாள். யாருக்கு எது ஜுரணமாகுமோ, அதற்கேற்ப சமைத்துத் தருகிறாள். சிலர் வறுத்த மீன், மீன் சட்னி போன்ற வகைகளை விரும்புகின்றனர். (அனைவரும் சிரித்தனர்) யாருக்கு எது பிடிக்குமோ அது.

அந்த முனிவர்கள் ஞானிகள். எனவே அவர்கள் அகண்ட சச்சிதானந்தத்தை விரும்பினர். ஆனால் பக்தர்களோ பக்தியை அனுபவிப்பதற்காக அவதார புருஷர்களை விரும்புகின்றனர். இறைவனின் காட்சி பெற்றால் மனத்தின் இருள் விலகுகிறத. ஸ்ரீராமபிரான் சபையில் நுழைந்த போது நூறு சூரியர்கள் உதித்தது போல் சபையில் பிரகாசம் சூழ்ந்தது என்று புராணம் கூறுகிறது. அப்படியானால் சபையிலிருந்த மக்கள் ஏன் எரிந்துசாம்பலாகவில்லை என்று கேட்கலாம். அதற்குப் பதில், அந்தப் பிரகாசம் பௌதீகப் பிரகாசம் அல்ல. சூரியன் உதித்தால் தாமரை மலர்கிறதல்லவா? அது போல் சபையில் இருந்த எல்லோருடைய இதயத் தாமரையும் மலர்ந்தது.

பக்தர்கள் முன் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கும் போதே குருதேவரின் மனம் ஒரேயடியாகப் புறஉலக நினைவிலிருந்து விடுபட்டு அகமுகமாகத் திரும்பியது. இதயத் தாமரை மலர்ந்தது” என்று சொன்னாரோ இல்லையோ, சமாதியில் ஆழ்ந்து விட்டார்.

குருதேவர் சமாதியிலேயே ஆழ்ந்திருந்தார். இறைவனுடைய தரிசனத்தைப் பெற்று அவரது இதயத் தாமரை மலர்ந்து விட்டது! சித்திரத்தில் வரையப்பட்ட உருவம் போல் நின்று கொண்டிருந்தார். புறவுலக நினைவு இல்லை. அவருடைய முகம் ஒளி வீசியது. அதில் புன்னகை தவழ்ந்தது. பக்தர்களுள் சிலர் நின்று கொண்டிருந்தனர். சிலர் உட்கார்ந்திருந்தனர். பிரேமைப்பேரரசின் அந்த அற்புதத் திருவுருவை, இது வரை காணாத சமாதி நிலையை அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு குருதேவரின் சமாதி கலைந்தது. அவர் நீண்ட பெரு மூச்ச விட்ட படியே ராம் , ராம் என்று பல முறை கூறினார். அவர் சொன்ன அந்த ஒவ்வொரு சொல்லும் அமுதத்தைப்பொழிவது போலிருந்தது. பிறகுகுருதேவர் உட்கார்ந்திருந்தார். பக்தர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

(பக்தர்களைப் பார்த்து)- அவதாரபுருஷர் வரும்போது சாதாரண மக்களால் அவரை அறிந்து கொள்ள முடிவதில்லை. அவர் ரகசியமாக வருகிறார். ஓரிரு அந்தரங்கச் சீடர்கள் மட்டுமே அவரை அறிந்து கொள்கின்றனர்.ஸ்ரீராமபிரான் பூரண பிரம்மம், பூரண அவதாரம் என்பதைப் பன்னிரு முனிவர்கள் மட்டுமே அறிந்திருந்தனர். மற்ற முனிவர்களோ, ராமா, உன்னை தசரத குமாரன் என்று தான் நாங்கள் அறிவோம்” என்றனர்.

அகண்ட சச்சிதானந்தத்தை அனைவராலும் அறிந்து கொள்ள முடியுமா என்ன? நித்திய நிலையை அடைந்த பிறகு, பேரானந்தத்தை அனுபவிப்பதற்காக யார் லீலை நிலையில் தங்கியிருக்கிறாரோ, அவர் மட்டுமே பழுத்த பக்தியை உடையவர். இங்கிலாந்து சென்று குயீனைப் பார்த்து வந்தால் பிறகு அவரது பேச்சு, செயல்கள், எல்லாவற்றையும் விளக்க இயலும். அப்போது தான் குயீனின் விஷயங்களைச் சரியாகச்சொல்ல முடியும். பரத்வாஜ் முதலிய முனிவர்கள் ராமரைத் துதித்து, ராமா, அந்தஅகண்ட சச்சிதானந்தம் நீயே. நீ எங்களிடையே மனித உருவில் அவதரித்திருக்கிறாய். உண்மையில் நீ உன் மாயையை ஏற்றுக் கொண்டதால் மனிதனைப்போல் தோன்றுகிறாய்” என்று கூறினார். பரத்வாஜ் முதலிய முனிவர்கள் ராமபிரானின் பரம பக்தர்கள். அவர்களுடைய பக்தி பழுத்த பக்தி.

பக்தர்கள் இந்த அவதார தத்துவத்தை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.என்ன ஆச்சரியம்!வேதம் யாரை அகண்ட சச்சிதானந்தம் என்கிறதோ, யாரை மன வாக்குகளுக்கு எட்டாதவர் என்று கூறுகிறதோ, அந்த ப் பரம புருஷர் ஐந்தடி உயர மனித வடிவில் வருகிறார் என்று குருதேவரே சொல்கிறார். எனவே அது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். இல்லாவிடில் ராம், ராம் என்று உச்சரித்தவுடன் இவருக்கு சமாதி நிலை ஏற்படுகிறதே! இவர் கட்டாயமாகத் தமது இதயத் தாமரையில் ஸ்ரீராமபிரானைத் தரிசித்திருக்கிறார். என்று ஒரு சில பக்தர்கள் நினைத்துக்கொண்டனர்.

அந்த வேளையில், கொன்னகரிலிருந்து சில பக்தர்கள் மிருதங்கம், தாளம் ஆகிய பக்க வாத்தியங்களுடன் கீர்த்தனம் செய்து கொண்டே வந்தனர். மனமோகன், நவாய், இன்னும் பல பக்தர்கள் குருதேவரது அறையின் வட கிழக்கு வராந்தாவை அடைந்தனர். குருதேவர் தாமும் கீர்த்தனத்தில் கலந்து கொண்டு, தெய்வீகப் பித்தேறிய நிலையில் அவர்களுடன் சேர்ந்து, பிரேமை பொங்கப் பாடவும் ஆடவும் தொடங்கினார். கீர்த்தனத்தின் போது அடிக்கடி சமாதி நிலை அடைந்து, சிலையைப்போல் அசைவற்று நின்றார். அவர் அந்த நிலையில் ஆழ்ந்திருந்த போது பக்தர்கள் பெரிய பெரிய மல்லிகை மாலைகளை அணிவித்து அவரை அலங்கரித்தனர். ஸ்ரீசைதன்யரே ஆழ்ந்த பரவசநிலையில் தங்கள் எதிரில் நின்று கொண்டிருப்பது போல் பக்தர்களுக்குத்தோன்றியது. குருதேவர் சில வேளையில் அகமுகநிலையில் இருந்தார். அப்போது ஜடம் போல், புற உணர்வு எதுவுமின்றி ஓவியம், புால் இருப்பார். சில வேளைகளில் அரையுணர்வு நிலையில், அப்போது பிரேமைப்பரவச நிலையில் நடனம் ஆடுவார். சில வேளைகளில் ஸ்ரீசைதன்யரைப்போல் புற உணர்வு நிலையில் பக்தர்களுடன் பாடுவார்.

குருதேவர் சமாதியில் ஆழ்ந்து மேற்கு நோக்கி நின்று கொண்டிருந்தார். அவர் கீழே விழுந்து விடக் கூடாதே என்று பக்தர் ஒருவர்அவரைத் தாங்கிப் பிடித்திருந்தார். குருதேவரின் பார்வை குத்திட்டு நின்றது. கழுத்திலிருந்து மலர் மாலைகள் தொங்கின. மதி முகம் பக்திப் பரவசத்தினால் ஒளி வீசியது. பக்தர்கள் மிருதங்கம் முதலிய தாளக் கருவிகளுடன் அவரைச் சுற்றி கீர்த்தனைகளைப் பாடி ஆடிக் கொண்டிருந்தனர். அந்த ஆனந்த மூர்த்தியை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சமாதி கலைந்தது. நேரம் அதிகமாகி விட்டது.சிறிது நேரத்தில் கீர்த்தனமும் நிறைவுற்றது. குருதேவரின் உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் பக்தர்கள் முனைந்தனர்.

குருதேவர் சிறிது நேரம் ஓய்வு கொண்டார். பிறகு ஒரு புதிய மஞ்சள் ஆடையை அணிந்து கொண்டு, சிறிய கட்டிலில் வந்த மர்ந்தார். ஆனந்த மயமான , ஒளி மயமான, பக்தர்களின் மனத்தைக் கொள்ளை கொள்வதான அந்த மஞ்சள் உடை மகா- மகா புருஷரை பக்தர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். தேவர்களுக்கும் காணக் கிடைக்காத, புனிதமான அந்த அழகிய திருவுருவை எவ்வளவோ கண்டும் அவர்களின் கண்கள் நிறையவில்லை. இன்னம் பார்க்க வேண்டும். இன்னும் பார்க்க வேண்டும். அந்த திருவுருவக் கடலில் கரைந்து விட வேண்டும் என்றே மனம் விரும்பியது.

குருதேவர் சாப்பிட அமர்ந்தார். பக்தர்களும் அவருடன் மகிழ்ச்சியோடு பிரசாதம் உண்டனர். உணவிற்குப் பிறகு குருதேவர் சிறிய கட்டிலில் ஓய்வெடுத்துக் கொண்டார். அறையில் கூட்டம் அதிகமாகியது. வெளி வராந்தாக்களிலும் மக்கள் நிறைந்திருந்தார்கள். அறையில் பக்தர்கள் தரையில் உட்கார்ந்து குருதேவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். கேதார், சுரேஷ், ராம், மனமோகன், கிரீந்தர், ராக்கால், பவநாத், ம- முதலியோர் அங்கே இருந்தனர். ராக்காலின் தந்தையும் இருந்தார். வைஷ்ணவ கோசுவாமி ஒருவரும் அந்த அறையில் அமர்ந்திருந்தார். குருதேவர் அவரைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார். கோசுவாமிகளைக் கண்டால் குருதேவர் தலைதாழ்த்தி வணங்குவது வழக்கம். சில வேளைகளில் தலையில் வீழ்ந்தும் வணங்குவார்.

-ஸ்ரீராமகிருஷ்ணர்-

நல்லது, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? வழி என்ன?

கோசுவாமி-

சுவாமி, பகவானின் திருநாமத்தையே எல்லாம் நடக்கும். கலியுகத்தில் நாம ஜபம் மகிமை வாய்ந்ததாகும்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-

ஆம், நாமத்திற்கு மகிமை உண்டு, உண்மை தான். ஆனால் ஆழ்ந்த அன்பு இல்லாமல் என்ன பயன்? இறைவனுக்காக மனம் துடிக்க வேண்டும். ஒரு பக்கம் நாம ஜபம் நடைபெறுகிறது.மனமோ காமினீ- காஞ்சனத்தில் உழல்கிறது. இதனால் என்ன நடக்கும்? தேளோ, குளவியோ கொட்டி விட்டால், வெறும் மந்திரத்தை ஒதுவதால் மட்டும் பயனில்லை. வறட்டியைச் சுட்டு, புகையையும் ( தேளோ குளவியோ) கொட்டிய இடத்தில் படும்படி செய்ய வேண்டும்.

கோசுவாமி-

அப்படியானால் அஜாமிளன்? அஜாமிளன் பெரும் பாதகன். அவன் செய்யாத பாவம் இல்லை. ஆனால் மரணத் தறுவாயில் நாராயணா என்று மகனைக் கூப்பிட்ட தாலேயே நற்கதிகிடைத்ததே!

ஸ்ரீராமகிருஷ்ணர்-

ஒரு வேளை அஜாமிளன் முற்பிறவிகளில் பல புண்ணியச் செயல்களைச் செய்திருக்கக் கூடும். அவன் பின்னாளில் தவம் செய்தான் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. அதுவே அவனது கடைசிக் காலமாக இருந்தது என்றும் சொல்லலாம். யானையைக் குளிப் பாட்டியதால் மட்டும் என்ன பிரயோஜனம்! அது மறுபடியும் தலையில் மண்ணைப்போட்டுக்கொண்டு முன்போலவே இருக்கும். ஆனால் கொட்டிலுக்கு அனுப்பு முன் அதனுடைய அழுக்கைப்போக்கி குளிப்பாட்டி விட்டால் அது தூய்மையாக இருக்கும்.

நாமஜபத்தில் ஒருவன் ஒரு முறை தூய்மை அடைந்ததாக வைத்துக் கொள்வோம். ஆனால் அவன் அதன் பிறகு பல பாவங்களால் தூய்மை கெடலாமே! அவனிடம் மனவுறுதி இல்லை. இனிமேல் பாவம் செய்ய மாட்டேன்” என்று அவன் உறுதிமொழி எடுத்துக் கொள்வதில்லை. கங்கையில்குளிப்பதால் பாவங்கள் புாய்விடும். உண்மை தான்.அதனால் என்ன? எல்லா பாவங்களும் மரங்களில் காத்திருக்கின்றன என்றும், அவன் குளித்து விட்டுக் கரைக்கு வந்ததும் அந்தப் பழைய பாவங்கள் எல்லாம் ஒரே குதியாக அவனது தோள்மீது குதித்து அவனைப் பற்றிக் கொள்கின்றன என்றும் சொல்கிறார்களே!( எல்லோரும் சிரித்தனர்) பழைய பாவங்கள் எல்லாம் தோளில் ஏறி உட்கார்ந்து கொள்கின்றன.குளித்து விட்டு ஓரிரு அடி நடந்து வந்ததும் மீண்டும் தொற்றிக் கொள்கின்றன!

எனவே நாமஜபம் செய். அத்துடன் பிரார்த்தனையும் செய். இறைவனிடம் பக்தி உண்டாக வேண்டும். இரண்டொரு நாள் மட்டுமே நிலைக்கக் கூடியசெல்வம், புகழ், உடலின்பங்கள், ஆகியவற்றின் மீதுள்ள பற்று குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். (கோசுவாமியிடம்) உண்மையான ஈடுபாடு இருக்குமானால் எல்லா மதங்களின் மூலமாகவும் இறைவனைப்பெறலாம். வைணவர்களும் அவரைப்பெறுவார்கள். சாக்தர்களும் பெறுவார்கள். வேதாந்திகளும் பெறுவார்கள். பிரம்ம சமாஜத்தினரும் பெறுவார்கள். அது போலவே முகமதியர்களும் கிறிஸ்தவர்களும் பெறுவார்கள். உண்மையான ஈடுபாடு இருக்குமானால் எல்லோரும் பெறுவார்கள்.

எங்கள் ஸ்ரீகிருஷ்ணனை வழிபடாமல் எதுவும் நடக்காது, எங்கள் காளிதேவியே வழிபடாமல் எதுவும் நடக்காது. எங்கள் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் எதுவும் நடக்காது” என்றெல்லாம் கூறுகின்றனர். தங்களுக்குள் அடித்துக் கொள்கின்றனர். இதன் பெயர் தான் மத வெறி. அதாவது, என் மதம் மட்டும் தான் உண்மை, மற்றவர்களின் மதம் பொய், இந்தப்போக்கு தீயது. பல்வேறு பாதைகள் வழியாகவும் பரமனைப்பெறலாம்.

மேலும் சிலர், இறைவன் உருவம் உடையவர். உருவம் இல்