மதுர்பாபு காலமாகிவிட்டார். தடசிணேசவரக்காளி கோயிலில் வாழ்க்கை ஓடம் வழக்கம்போல் ஓடிக் கொண்டிருந்தது.
ஆறு மாதங்கள் சென்றன. 1872-ஆம் ஆண்டு வந்தது. அந்தச் சமயத்தில் குருதேவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதனை அறிய நாம் ஜெயராம்பாடியிலுள்ள குருதேவரின் மாமனார் வீட்டிற்குச்செல்லவேண்டும்.
பைரவி பிராம்மணியுடனும் ஹிருதயருடனும் குருதேவர் காமார்புகூருக்கு 1867-இல் சென்றிருந்தபோது உறவுப்பெண்கள் குருதேவரின் மனைவியை அங்கு அழைத்துச்சென்றனர். இந்த சந்திப்பைத்தான் அவர்களின் முதல் சந்திப்பு என்று கூற வேண்டும்.
கல்கத்தா போன்ற நகரப் பெண்களையும் காமார்புகூர் போன்ற கிராமப்பெண்களையும் ஒப்புநோக்கினால் , நகரப்பெண்களின் உடலும் மனமும் சிறுவயதிலேயே வளர்ச்சியடைந்து விடுகின்றன.
கிராமப்பெண்களின் வளர்ச்சி அவ்வாறு இல்லை என்பது தெரிய வரும். பதினான்கு, சில வேளைகளில் பதினைந்து பதினாறு வயதில் கூட கிராமப் பெண்களின் உடல் இளமைத்தோற்றத்தை அடையாமல் இருப்பதைக் காணலாம்.
உடலைப்போலவே அவர்களின் மனமும் மெதுவாகவே வளர்ச்சி அடைகிறது. கூண்டுக்கிளி போலின்றி கிராமத்தின் பரந்த வெளிகளில் வளைய வருவதாலும் சுதந்திரமாக வளர்வதாலும் தான் ஒருவேளை இயற்கையின் இந்த மாறுபாடு போலும்!
குருதேவரை இந்த முறை சந்தித்தபோது சாரதையின் வயது பதினான்கு.
கிராமப்பெண்களுக்குரிய மேற்குறிப்பிட்ட இயல்புகளை வைத்துப் பார்க்கும் போது அவள் அப்போது சிறுமி, என்றே கூற வேண்டும்.
இல்லற வாழ்க்கையின் உயர்ந்த லட்சியத்தையும், பொறுப்புகளையும் உணரும் ஆற்றல் அவளிடம் அப்போது தான் அரும்பிக் கொண்டிருந்தது. உடலுணர்வைக் கடந்த குருதேவரின் தெய்வீகத் தொடர்பாலும், தன்னலமற்ற பண்பாலும் தூய்மையே உருவான அவள் விவரிக்க இயலாத பேருவகை எய்தினாள்.தாம் எய்திய மகிழ்ச்சியைப் பற்றி பிற்காலத்தில் சாரதாதேவி குருதேவரின் பக்தைகளிடம், குருதேவரைக்கண்ட நாளிலிருந்து ஆனந்தத்தின் நிறைகுடம் ஒன்று எப்போதும் இதயத்தில் இருப்பது போன்ற உணர்வில் என் உள்ளம் திளைக்கிறது.
அந்த ஆழமான, மாறுபாடற்ற தெய்வீகப்பேருவகையில் என்மனம் எவ்வளவு தூரம், எவ்வாறு நிறைவு பெற்றுப்பொலிகிறது என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது.
சில மாதங்களுக்குப் பின்னர் குருதேவர் காமார்புகூரிலிருந்து கல்கத்தாவிற்குத் திரும்பினார். சாரதையும் தந்தையின் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.ஏதோ விலைமதிப்பற்ற ஆனந்தச்செல்வம் தனக்குக் கிட்டியுள்ளது என்ற உணர்வு மட்டும் அவளது இதயத்தில்நிலையாகத் தங்கிற்று. உள்ளத்தில் பொலிந்த உவகையால் அவளது நடத்தை, பேச்சு, செயல்கள் அனைத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பிறரால் இந்த மாற்றத்தைக் கண்டுகொள்ள முடிந்ததா என்பதைப் பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. இந்தமாற்றம் அவளிடம் சலனத்திற்குப் பதிலாக சாந்தியைத்தோற்றுவித்தது.
ஆரவாரத்திற்கப் பதிலாக ஆழ்ந்த சிந்தனையுணர்வைத்தூண்டியது.சுயநலத்திற்குப் பதிலாகத் தன்னலமற்ற அன்பைப் பிரசாசிக்கச் செய்தது.
மனத்திலிருந்து தனக்கென்ற தேவைகள் அனைத்தையும் நீக்கி, மக்களின் மீது பரிவு கொண்டு அவர்களின் துன்பங்களையும் துயரங்களையும் தனதாக க் கண்டு கசிந்துருகும் கருணையே வடிவினளாக அவளை ஆக்கியது.
உள்ளத்தில் பொங்கிய பேரின்பத்தின் காரணமாக உடல் துன்பங்கள் அவளிடம் எந்தவிதமான பாதிப்பையும் விளைவிக்கவில்லை.
பிறரிடம் தான் காட்டும் பரிவும் அன்பும் அவர்களிடமிருந்து தனக்குக் கிட்டாத போதும் அவள் வருந்தவில்லை.கிடைத்ததில் திருப்தி கொண்டு, எப்போதும் தன்னிலேயே ஆழ மூழ்கியபடி தந்தையின் வீட்டில் வாழ்ந்து வந்தாள் அவள்.
உடல் அங்கே இருந்தாலும் மனம் மட்டும் தட்சிணேசுவரத்தில் குருதேவரின் திருவடிகளில் சஞ்சரித்தது. அவரைக் காண வேண்டும்.அவரது அருகில் அமர வேண்டும் என்ற பேராவல் அவ்வப்போது அவளது உள்ளத்தில் பொங்கி எழும்.
மிகவும் முயற்சி செய்து அதனைக் கட்டுப்படுத்திக் கொள்வாள். முதல் சந்திப்பின்போது இத்தனை அன்பு காட்டி நேசித்த அவர் என்னை ஒரு போதும் மறக்கமாட்டார்.
உரிய காலம் வரும்போது தன்னிடத்தில் அழைத்துக்கொள்வார் என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்வாள். ஒன்றன்பின் ஒன்றாக நாட்கள் கழிந்தன. அவளும் நம்பிக்கையை உறுதியாகப்பற்றிக்கொண்டு குருதேவர் தன்னை அழைத்துக்கொள்ளும் அந்த நன்னாளை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.
ஆண்டுகள் நாக்கு உருண்டோடின.
சாரதையின் உள்ளத்திலிருந்த நம்பிக்கையும் ஆசையும் மட்டும் எள்ளவும் குறையாமல் ஒரே சீராகப்பாய்ந்து கொண்டிருந்தன.
ஆனால் உடல் என்னவோ, மனத்தைப்போல அப்படியே மாற்றங்களின்றி இருக்கவில்லை. நாட்கள் செல்லச்செல்ல அது பரிணமித்து
1872-ஆம் ஆண்டு வந்தபோது அவளை ஒரு பதினெட்டு வயது மங்கையாக மாற்றியிருந்தது.
கடவுளுக்கு ஒப்பான தன் கணவரின் முதல் சந்திப்பு தந்த பேரானந்தத்தின் காரணமாக அவள் வாழ்வின் இன்ப துன்பங்களைக்கடந்து நின்றாள் என்பது உண்மை தான்.ஆனால் தடையற்ற இன்பம். என்பது இவ்வுலகில் ஏது? கணவன் பைத்தியக்காரன், ஆடையை அவிழ்த்து எறிந்து விட்டு ஹரி,ஹரி என்று அரற்றிக் கொண்டிருக்கிறான் என்றெல்லாம் ஆண்கள் பேசும் போதும், சமவயதுப் பெண்கள் பைத்தியகாரனின் மனைவி என்று தன்னைக்கேலி செய்து அனுதாபப் பார்வையை வீசும்போதும் அவர்களை எதிர்த்து சாரதை எதுவும் பேசவில்லையாயினும் உள்ளுக்குள் மனம் வெதும்பி வாடினாள்.
அப்படியானால் நான் முன்பு பார்த்தது போல் அவர் இப்போது இல்லையா?இவர்கள் சொல்வது போல் அவர் உண்மையிலேயே பைத்தியம் ஆகிவிட்டாரா? இறைவனின் சித்தம் அதுவானால் நான் இங்கு இருப்பது சரியல்ல. அவரது அருகில் இருந்து சேவை செய்வது தான் என் கடமை என்று எண்ணியது அவள் உள்ளம்.ஆழமாகச் சிந்தித்துப் பார்த்த பின், தானே தட்சிணேசுவரத்திற்குச் சென்று, ஊரார் சொல்வது உண்மை தானா என்று நேரில் கண்டறிந்து, அதன் பின் தேவையானதைச்செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
பங்குனி மாதப்பௌர்ணமி ஸ்ரீசைதன்யர் அவதரித்த நன்னாள்.அந்த நாளில் வங்கத்தின் தொலைதூரப்பகுதிகளிலிருந்து பலர் புனித கங்கையில் நீராடுவதற்காகக் கல்கத்தா வருவார்கள். அந்த வருடம் சாரதையின் உறவுப்பெண்கள் சிலர் கல்கத்தா செல்ல முடிவு செய்திருந்தனர்.
தானும் உடன் செல்ல விழைவதை அவர்களிடம் தெரிவித்தாள் சாரதை. தந்தையின் அனுமதியின்றி அவளைத் தங்களுடன் அழைத்துச்செல்வது முறையாகாது என்பதற்காக அவர்கள் ராமசந்திரரிடம் கேட்டனர்.
அவர் இதைக்கேட்டவுடனேயே மகள் கல்கத்தா செல்ல விழைவதன் காரணத்தை உய்த்துணர்ந்து அவளைத்தாமே அழைத்துச் செல்லத்தேவையான ஆயத்தங்களைச் செய்யலானார்.
ரயில் போக்குவரத்து வாய்ப்புகள் வளர்ந்துள்ள இந்த நாளில் கல்கத்தாவுக்கும், நெடுந்தொலைவில் உள்ள காசி, பிருந்தாவனம் போன்ற இடங்களுக்கும் உள்ள இடைவெளி மிகவும் குறைந்தது போலாகி விட்டது.
ஆனாலும் காமார்புகூர் மற்றும் ஜெயராம்பாடியிலிருந்து கல்கத்தாவுக்கு உள்ள தொலைவு என்னவோ அப்படியே தான் இருந்தது.
இப்போது கூட இந்த நிலை என்றால் அந்த நாளைப் பற்றி சொல்லத்தேவையில்லை! அந்த நாட்களில் விஷ்ணுபூர் அல்லது தாரகேசுவரர் வழியாக ரயில் வசதியில்லை.
காடால் வழியாக நீராவிப்படக வசதியும் ஏற்படவில்லை.ஆகவே காமார்புகூர், ஜெயராம்பாடி ஆகிய சிற்றூர்களின் மக்கள் கல்கத்தாவுக்குப் பல்லக்கில் தான் செல்லவேண்டும் அல்லது நடந்து செல்லவேண்டும்.ஜமீன்தார்களும் செல்வந்தர்களும் மட்டுமே பல்லக்கில் செல்ல முடிந்தது.
மற்றவர்கள் நடக்கதான் வேண்டும். மகளுடனும் பிறருடனும் ராமசந்திரர் நடந்தே நீண்ட பயணத்தைத் தொடங்கினார். முதல் இரண்டு நாட்கள் பயணம் இன்பகரமாக இருந்தது.பசுமையான வயல்வெளிகளும் அங்கங்கே தெரிந்த தாமரைத் தடாகங்குளம், சாலையோரத்தில் வளர்ந்து நிழல் பரப்பி நின்ற ஆல் அரச மரங்களும், மனத்திற்கு இதத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.நெடுந்தொலைவு நடந்து பழக்கமில்லாத காரணத்தாலும், பயணக் களைப்பாலும் சாரதைக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.
ராமசந்திரர் கவலை கொண்டார். பயணத்தை மேலும் தொடர இயலாத நிலையில் அவர்கள் ஒரு சத்திரத்தில் தங்கினர்.
உடலில் தோன்றிய நோய் சாரதையின் உள்ளத்தை எவ்வளவு வாட்டியிருக்கும் என்பதை எடுத்துச்சொல்ல முடியாது. ஆனால் அந்த வேளையில் அவள் பெற்ற அற்புதமான காட்சி, அவளது உடலிற்கும் உள்ளத்திற்கும் ஒருங்கே இதமளித்தது. அந்தக் காட்சியைப் பற்றிப் பிற்காலத்தில் அன்னை பக்தைகளிடம் கீழ்கண்டவாறு சொன்னார்.
அளவுக்கு மீறிய காய்ச்சலால் நான் சுயநினைவை இழந்து விட்டேன், ஆடைகூடக் கலைந்த நிலையில் அப்படியே கிடந்தேன். அப்போது பெண்ணொருத்தி என் அருகில் வந்து அமர்ந்தாள். அவள் கரிய நிறத்தினளாக இருந்தாலும், அப்படிப்பட்ட அழகிய பெண்ணை நான் கண்டதே இல்லை. என் அருகில் அமர்ந்த அவள் தன் கையினால் என் தலை மற்றும் உடல் முழுவதும் தடவிவிட்டாள்.
அந்தக் கைதான் எத்தனை மென்மை, எத்தனை தண்மை! அவளது கை பட்டதும் என் காய்ச்சல் தணியத் தொடங்கியது. நான் அவளிடம் நீ எங்கிருந்து வருகிறாயம்மா? என்று கேட்டேன்.
அதற்கு அவள் ”தட்சிணேசுவரத்திலிருந்து” என்றாள். நான் திகைப்புற்று, தட்சிணேசுவரத்திலிருந்தா? நான் அங்குச் சென்று அவரைப் பார்க்கவேண்டும். அவருக்குச் சேவை செய்யவேண்டும் என்றெல்லாம் எண்ணியிருந்தேன்.
இந்தக் காய்ச்சல் வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது, என்று சொன்னேன். அப்போது அவள், ஏன், நீ தட்சிணேசுவரத்திற்குக் கட்டாயமாகப் போவாய், உடல்நிலை சரியாகி நீ அங்குச் சென்று அவரைக்காணவே போகிறாய். உனக்காக அல்லவா நான் அவரை அங்கு வைத்துள்ளேன், என்றாள்.
உண்மையாகவா?அப்படியானால் நீ எங்களுக்கு என்ன வேண்டும், சொல்லம்மா?என்று ஆவல் பொங்கக்கேட்டேன் நான்.அதற்கு அவள், நான் உன் சகோதரி என்றாள்.ஓகோ! அதனால் தான் நீ வந்திருக்கிறாய்” என்றேன் நான் . இவ்வாறாக பேசிக்கொண்டே உறங்கிவிட்டேன்.
மறுநாள் காலையில் ராமசந்திரர் எழுந்தபோது மகளின் காய்ச்சல் தணிந்திருந்தது. எந்த உதவியுமின்றி நடுவழியில் இவ்வாறு தங்கியிருப்பதை விட மெதுவாக பயணத்தைத் தொடர்வதே மேல்என்று கருதினார் அவர்.
இரவில் பெற்ற காட்சியினால் உற்சாகமுற்ற சாரதையும் தந்தையின் கருத்தை ஏற்றாள்.பயணம் தொடர்ந்தது. சிறிது தொலைவு சென்றதும் பல்லக்கு ஒன்று கிடைத்தது. சாரதைக்கு மீண்டும் காய்ச்சல் வந்தது. ஆனால் இந்த முறை அவ்வளவு தீவிரமாக இல்லை. எனவே அதனைப் பொறுத்துக்கொண்டாள்.
யாரிடமும் தெரிவிக்கவில்லை. அவர்கள் தட்சிணேசுவரத்தில் குருதேவரின் இருப்பிடத்தை அடைந்தபோது இரவு மணி ஒன்பது.
காய்ச்சலால் சாரதை அவதிப்படுவதை அறிந்த குருதேவர்,வேறு இடத்தில் படுத்தால் குளிரின் காரணமாகக் காய்ச்சல் அதிகமாகலாம் என்று எண்ணி, தம் அறையிலேயே தனிப்படுக்கை ஏற்பாடு செய்தார்.
இந்த ஏற்பாட்டினால் அவர் மனம் திருப்தியுறவில்லை, இறுதியில், இப்போது வந்துள்ளாய். அந்தோ , என் மதுர்கூட இல்லை, அவர் இருந்திருந்தால் உன்னை எவ்வளவு நன்றாகக் கவனித்துக்கொள்வார்! என்று திரும்பத் திரும்பக்கூறினார். நல்ல மருந்துகள் , உணவு மற்றும் தேவையான அனைத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததால் சாரதையின் உடல்நிலை மூன்று நான்கு நாட்களில் சரியாயிற்று.
அந்த நாட்களில் சாரதையைத் தம் அறையிலேயே தங்கச்செய்து, தாமே கவனித்துக்கொண்டார் குருதேவர். அதற்குப் பின்னர் சாரதை நகபத்தில் தம் தாயுடன் தங்குவதற்கு ஏற்பாட செய்தார்.
வதந்திகளால் சாரதையின் மனத்தில் ஏற்பட்டிருந்த மனக்கவலைகள் நீங்கின. அவளத நம்பிக்கையாகிய சூரியனை மறைத்திருந்த சந்தேகமாகிய மெகம் கலைந்து மறைந்தது.
குருதேவர் அவள் மீது செலுத்திய கவனமும் அன்பும் காட்டிய ஈடுபாடும் குருதேவர் முன்பு போல் தான் உள்ளார் என்ற நம்பிக்கையை அவளிடம் வலுக்கச்செய்தது.
வெறும் உலகியல் மக்கள் பரப்பிய வதந்திகள் யாவும் பொய், தம் இதய தெய்வமாகிய குருதேவர் முன்பு போலவே உள்ளார் என்பதை சாரதை அறிந்து கொண்டாள்.
தாம் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய அவள் தாமதிக்க வில்லை.நகபத்தில் தங்கி மிகுந்த உற்சாகத்துடன் குருதேவருக்கும் மாமியாருக்கும் மனமுவந்து சேவை செய்வதில் ஈடுப்டாள்.
மகள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு மிகவும் களிப்புற்றார் ராமசந்திரர்.அங்கு ஒருசில நாட்கள் தங்கிவிட்டு சொந்த ஊருக்குப்புறப்பட்டார்.
குருதேவர் 1867-இல் காமார்புகூரில் தங்கியிருந்தபோது சாரதையின் வருகையைப் பற்றி அவர் மனத்தில் ஏற்பட்ட எண்ணத்தைப் பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம்.
பிரம்மத்தை உணர்ந்த ஒருவரிடம் ஆண்பெண் வேறுபாடு தோன்றுவதில்லை என்று தோதாபுரி கூறியதைத் தம் வாழ்வில் சோதித்துக்கொள்ளவும், மனைவிக்குத் தாம் ஆற்றவேண்டிய கடமையைச் செய்யவும், சாரதையின் வருகையைப் பயன்படுத்திக் கொண்டார் குருதேவர்.
ஆனால் அப்போது முயற்சியின் ஆரம்பவேளையிலேயே கல்கத்தாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று.இப்போது மீண்டும் அந்த முயற்சிகளில் ஈடுபடலானார்.
முன்னதாகவே மனைவியை தட்சிணேசுவரத்திற்கு அழைத்துவந்து, இந்தச் சோதனைகளில் ஏன் ஈடுபட்டிருக்கக்கூடாது என்ற வினா எழலாம்.
சாதாரண மனிதன் அவ்வாறுதான் செய்திருப்பான்.குருதேவர் சாதாரண மனிதர் அல்லர். அதனால் அவரது வழியும் வேறுபட்டதாக இருந்தது.
இறைவனை முற்றிலும் சரணடைந்து வாழ்பவர்கள் எந்தச் செயலையும் தாங்கள் முனைந்து ஆரம்பிப்பது இல்லை.
தன் நலனுக்காகட்டும், பிறரது நன்மைக்காகட்டும், எதற்கும் அவர்கள் நம்மைப்போல எல்லைக்குட்பட்ட . சிறிய அறிவின் உதவியை நாடுவதில்லை. இறைவனின் பரந்த அறிவையும் ஆணைகளையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.
தாங்களாக அவர்கள் எந்த சோதனையிலும் ஈடுபடுவதில்லை.அதே வேளையில் இறைவனின் திருவுளப்படி, தொடர்ந்து தங்கள் வாழ்வைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது அத்தகைய சோதனைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு வருமானால், அதில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு அதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அதனால் தான் குருதேவரும் தமது பிரம்மஞானத்தின் ஆழத்தை அறிய தாமாகவே முயலவில்லை. காமார்புகூரில் தம்மிடம் மனைவி வந்தபோது அந்தச்சோதனையைச்செய்ய முனைந்தார். இறைவனின் திருவுளத்தால் அவர் கல்கத்தாவிற்குத் திரும்ப வேண்டியிருந்ததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.அதன் பின் தாமாக அத்தகைய ஒரு வாய்ப்பினை உருவாக்கிக்கொள்ள அவர் முயலவில்லை. சாரதை தானாக தட்சிணேசுவரத்திற்கு வரும் வரை குருதேவர் அவளை அழைக்கவில்லை.
ஆகவே நம் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் பார்த்தால் கூட குருதேவர் நடந்து கொண்டது சரியாகவே தோன்றுகிறது. அவ்வாறு நடந்து கொள்வது தான் இறைவனின் திருவுள்ளம் என்பதை அவர் தமது யோக திருஷ்டியின் மூலம் அறிந்திருந்ததையும் நாம் உணர முடிகிறது.
மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை, தம்மைச் சோதித்துக்கொள்வது ஆகியவற்றிற்கான தருணம் மீண்டும் ஒரு முறை தமக்கு வந்திருப்பதை குருதேவர் உணர்ந்தபோது இறைவன் அளித்த இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாரானார்.
வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அவர் சாரதைக்கு வாழ்க்கையின் குறிக்கோளைப் பற்றியும் கடமைகளைப்பற்றியும் போதிப்பார். இந்த நாட்களில் தான் ஒரு முறை அவர் சாரதையிடம், அதே போல இறைவனும் அனைவருக்கும் உரியவர, அவரிடம் பிரார்த்திக்க எல்லோருக்கும் உரிமையுண்டு.
யார் பிரார்த்திக்கிறார்களோ அவருக்கு அவர் காட்சியளிப்பது உறுதி, நீ பிரார்த்தித்தால் நீயும் அவரைக் காண்பாய், என்று கூறியதாகச்சொல்லப்படுகின்றன.
வெறுமனே உபதேசிப்பது மட்டுமல்ல அவரது வழி. முதலில் சீடனை அருகிலேயே வைத்துக்கொண்டு அவன் மீது அன்பினைப்பொழிந்து அவனைத்தன்னுடையவனாக்கிக் கொள்வார். பின்னர் அவனுக்கு போதனை அளிப்பார்.
அத்துடன் நின்றுவிட மாட்டார்.தாம் கூறியதைச்சீடன் எவ்வளவு தூரம் பின்பற்றிச் செயல்முறைப்படுத்துகிறான் என்று கூர்ந்து கவனித்து வருவார். அவன் வழிதவறும்போது அதனைச்சுட்டிக்காட்டி அவனைத்திருத்துவார்.
சாரதைக்கு போதனை செய்வதிலும் இதே முறையைப் பின்பற்றினார். சாரதையிடம் எவ்வாறு அன்புகாட்டித் தமக்கு உரியவராக ஆக்கிக்கொண்டார் என்பது அவரை ஆரம்பத்தில் தம் அறையில் தங்கச் செய்ததில் இருந்து உடல் நிலை சரியான பின் தினமும் இரவில் தம் படுக்கையில் படுத்துக்கொள்ள அனுமதித்ததிலிருந்தும் தெளிவாகத் தெரிகின்றன.
அந்தச் சமயத்தில் சாரதையிடம் குருதேவர் கொண்டிருந்த தெய்வீகமான தொடர்பினைப் பற்றி வேறோர் இடத்தில் விரிவாகக்கூறியிருக்கிறோம்.
ஓரிரு செய்திகளை மட்டும் இங்கு கூறுகிறோம்.
ஒரு நாள் குருதேவரின் பாதங்களைப்பிடித்து விட்டுக் கொண்டிருந்தபோது சாரதை அவரிடம், நீங்கள் என்னை எவ்வாறு கருதுகிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு குருதேவர் , கோயிலில் எந்த அன்னை எழுந்தருளியிருக்கிறாளோ, அவளே இந்த உடம்பைக்கொடுத்தாள். அவளே தற்சமயம் நகபத்தில் வசித்துக் கொண்டிருக்கிறாள். அதே அன்னைதான் இப்போது என் பாதங்களை நீவிக் கொண்டிருக்கிறாள்.
அந்த ஆனந்தமயியின் வடிவமாகவே நான் எப்போதும் உன்னைக் காண்கிறேன்” என்று கூறினார்.
வேறொரு சமயத்தில் தம் அருகில் சாரதை உறங்கிக்கொண்டிருந்தபோது , குருதேவர் தம் மனத்திடம், ஓ! மனமே! இதோ இது தான் பெண்ணின் உடல் என்பது . மனிதர்கள் இதனை இன்பநுகர்ச்சிக்கான மிகவும் கவர்ச்சியான ஒரு பொருளாகக் கருதுகின்றனர்.
இதை அனுபவிப்பதற்காகத் துடிக்கின்றனர். ஆனால் ஒன்று இதனை நாடினால் இதிலேயே கட்டுப்பட்டவனாகத்தான் வாழ முடியும்.
அதற்கு மேல் சென்று சச்சிதானந்த மயமான இறைவனை உணர முடியாது.
ஓ, மனமே! உணர்வு வீட்டில் திருட்டுக்கு இடம் கொடுக்காதே, உள்ளே ஒன்று, புறத்தே வேறொன்று என்றிருக்காதே, உண்மையைச்சொல், உனக்கு உடம்பு வேண்டுமா? உடம்பு வேண்டுமென்றால் இதோ உன் முன்னர் இருக்கிறது, அனுபவித்துக்கொள்” என்று கூறியபடியே சாரதையின் உடலைத் தீண்ட எத்தனித்தார்.
மறுகணமே அவரது மனம் ஆழ்ந்த சமாதியில் மூழ்கிற்று. இரவு முழுவதும் அவருக்குப்புற நினைவு திரும்பவேயில்லை. அடுத்த நாள் காலையில் பலமுறை அவரது செவிகளில் இறைவனின் திருநாமத்தைச்சொல்லி மிகுந்த முயற்சியுடன் தான் அவரைப்புற நினைவு பெறச் செய்ய முடிந்தது.
இவ்வாறு இளமைப் பருவத்தினரான குருதேவரும் அன்னையும் வாழ்ந்த தெய்வீகப் பெருவாழ்வினைப் பற்றி குருதேவரே எங்களிடம் கூறியதுண்டு. உலக ஆன்மீக வரலாற்றில் எந்த ஒரு மகானின் வரலாற்றிலும் இது காணக் கிடைக்காததாகும்.
மனித இதயங்கள் இயல்பாகவே இவர்களின் தெய்வீகத்தில் நம்பிக்கைகொள்ளும், பக்தி சிரத்தையுடன் இவர்களின் பாதத் தாமரைகளில் தங்களை அர்ப்பணிக்க விழையும்.
உடல் உணர்வே அற்றவராகியகுருதேவர் பொதுவாக இந்தக் காலகட்டத்தில் எல்லா நாட்களிலும் இரவு முழுவதும் சமாதி நிலையில் ஆழ்ந்திருந்தார். ஒரு வேளை சற்று புறவுணர்வு வந்தாலும், சாதாரண மனிதர்களைப்போல சிறுகணம் கூட அவர் மனத்தில் உடல் நினைவு எழவில்லை.
இவ்வாறு நாட்கள், மாதங்கள் என்று ஓராண்டு கழிந்துவிட்டது. அந்த அற்புத தம்பதியரிடையே நிலவிய சுயக்கட்டுப்பாடு சிறிதும் தளரவில்லை. மறந்துபோய்க்கூட அவர்களிடையே ஒரு கணமேனும் உடலின்ப எண்ணம் எழவில்லை.
அந்த நாட்களைப் பற்றி குருதேவர்,அவள் அத்தனை தூயவளாக இல்லாதிருந்து தன்னையும் மீறி என்னைத் தூண்டியிருந்தால் நானும் என் கட்டுப்பாட்டை இழந்து உடவின்ப நாட்டம் கொண்டிருக்க மாட்டேன் என்பது என்ன நிச்சயம்?
திருமணம் முடிந்த பின்னர் நான் அன்னை காளியிடம் , அம்மா, என் மனைவியின் மனத்திலிருந்த காமத்தை வேருடன் களைந்துவிடு, என்று மிகவும் வேண்டி பிரார்த்தித்தேன். என் வேண்டுகோளை அன்னை காளி நிறைவேற்றினாள். என்பதை நான் சாரதையுடன் வாழ்ந்த காலத்தில் அறிந்து கொண்டேன். என்று சில வேளைகளில் சொல்வதுண்டு.
ஓர் ஆண்டுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னும் அவர்கள் மனத்தில் ஒரு வினாடி கூட எந்த வித வகையான உடல் நினைவும் எழவில்லை.
தன் மனைவியை அன்னை காளியின் அம்சம் அல்லது சச்சிதானந்த ஆன்மா அல்லது பிரம்மம் என்பதைத் தவிர வேறு எந்த எண்ணத்திலும் குருதேவரால் பார்க்க முடியவில்லை.
இந்தக் கரணங்களால் தாம் மேற்கொண்ட சோதனையில் முழுவெற்றிக் கிட்டும் படி அன்னைக் காளி அருள்புரிந்துவிட்டாள்.
அவளது திருவருளால் தாம் திவ்ய நிலையை எட்டி, அதில் இயல்பாக எப்போதும் நிலைத்திருக்க முடியும் என்று உணர்ந்தார் குருதேவர்.
மேலும் அவளது திருவருளால் தமது சாதனைகள் நிறைவுற்று விட்டன என்றும் தம் மனம் அன்னைக் காளியின் மலரடிகளில் முற்றிலும் ஒன்றிவிட்டதாகவும், இனிமேல் அன்னையின் விருப்பத்திற்கு மாறாக எந்த வகையான ஆசையும் அறிந்தோ, அறியாமலோ அந்த மனத்தில் எழாது என்பதையும் அவர் இப்போது அறிந்து கொண்டார்.
இதன் பின்னர் அன்னையின் திருவுளப்படி அவரது மனத்தில் ஓர் அசாதாரணமான ஆவல் எழுந்தது.உடனடியாக அதனை நிறைவேற்றுவதில் ஈடுபட்டார்.
அது 1873-ஆம்ஆண்டு, மே மாதக் கடைசியில் அல்லது ஜீன் மாத ஆரம்பத்திலாக இருக்கலாம்.
பலஹாரினி காளிதேவியின் வழிபாட்டிற்கு உகந்த அமாவாசை நாள். அன்று தட்சிணேசுவரக் காளி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். குருதேவரும் அன்னை காளியை பூஜிக்க விசேஷ ஆயத்தங்கள் செய்திருந்தார்.
இந்த ஆயத்தங்கள் கோயிலில் செய்யப்படாமல் அவரது அறையில் செய்யப்பட்டன. மாலை வேளை ஆயிற்று. அமாவாசை மையிருட்டு மெள்ளமெள்ள எங்கும் கவியலாயிற்று. ஹிருதயர் கோயிலில் காளிபூஜை செய்ய வேண்டியிருந்ததால், அறையில் குருதேவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து விட்டுக்கோயிலுக்குச் சென்றுவிட்டார்.
ராதா கோவிந்தர் ஆலயத்தில் இரவு நேரம் பூஜையைமுடித்துக்கொண்டு , அந்தக்கோயிலின் பூஜாரியான தீனு குருதேவருக்கு உதவி செய்ய வந்திருந்தான். ஆயத்தங்கள் யாவும் செய்து முடிக்கப்பட்டபோது இரவு மணி ஒன்பது .பூஜையில் கலந்து கொள்ள வரும்படி குருதேவர் சாரதைக்குச் சொல்லியிருந்தார்.
சாரதை குருதேவரின் அறைக்கு வந்து சேர்ந்தாள்.கோலங்கள் வரைந்து அழகு செய்யப்பட்டிருந்த மணை ஒன்று தேவியின் ஆசனமாக பூஜாரியின் வலப்புறம் இடப்பட்டது.குருதேவர் தமது ஆசனத்தில் அமர்ந்தார். பூஜை ஆரம்பமாயிற்று.
பூஜை பொருட்கள் மந்திரங்களால் தூய்மைப்படுத்தப்பட்டன.ஆரம்ப சடங்குகள் நிறைவுற்றதும், குருதேவர் சாரதையிடம் அந்த மணையில் அமருமாறு சைகை செய்தார்.
பூஜையை கவனித்துக்கொண்டிருந்த சாரதை, ஏற்கனவே புறவுலக நினைவை இழந்து பரசவ நிலையில் ஆழ்ந்து கொண்டிருந்தாள்.
தாம் என்ன செய்கிறோம் என்றே புரியாமல் ஏதோ மந்திரத்தால் கட்டுண்டது போல், மெல்ல எழுந்து அந்த மணையின் மீது குருதேவருக்கு வலப்புறமாக வடக்கு நோக்கி அமர்ந்தார்.
சாஸ்திர விதிகளுக்கு ஏற்ப குருதேவர் தம் முன்னால் வைக்கப் பட்டிருந்த கலசத்திலிருந்து, மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட நீரை அன்னையின் மீது தெளித்து மந்திரங்களை ஓதி பின்வருமாறு பிரார்த்தித்தார்.
ஓ! அன்னையே, எல்லா ஆற்றல்களுக்கும் தலைவியான திரிபுரசுந்தரியே! முழுநிறைவாம் கதவினைத் திறப்பாய்! இவளது(சாரதையின்) உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்துவாய்.! இவளில் எழுந்தருளி அருள்பாலிப்பாய்!
அதன் பின்னர் குருதேவர் அன்னையின் உடலில் மந்திரங்களை உருவேற்றி, அவளை சாட்சாத் தேவியாக எண்ணி பதினாறு வகையான பொருட்களால் பூஜித்தார். பின்னர் நைவேத்தியம் செய்து, தம் கைகளால் அன்னையின் வாயில் ஊட்டினார்.
சாரதை புறவுலக நினைவை இழந்து சமாதி நிலையை அடைந்துவிட்டிருந்தாள். குருதேவரும் புறவுணர்வு இழந்த நிலையில் மந்திரங்களை ஓதியவாறே சமாதியில் ஆழ்ந்தார்.சமாதிநிலையில் ஆழ்ந்துவிட்ட தேவியுடன், சமாதி நிலையில் இருந்த பூஜாரியும் ஒருவரோடு ஒருவர் இரண்டறக் கலந்து ஆன்ம நிலையில் ஒன்றுபட்டனர்.
நீண்ட நேரம் சென்றது,இரவின் இரண்டாம் யாமத்தின் பெரும்பகுதி சென்றுவிட்டது.
தன்னில் தானாகக் கரைந்திருந்த குருதேவரிடம் புறநினைவு வருவதற்கான அறிகுறிகள் தோன்றலாயின. ஓரளவு நினைவு திரும்பியதும், அவர் தம்மை தேவியிடம் அர்ப்பணித்துக்கொண்டார்.
தமது சாதனையின் பயன்கள், தமது ஜபமாலை மற்றும் தம் அனைத்தையும் தேவியின் திருவடிகளில் அர்ப்பணித்தார்., மந்திரங்களை ஓதியவாறே தேவியை வணங்கினார்.
மங்கலமாம் அனைத்தினுக்கும் மங்கலமானவளே, அனைத்து ச் செயல்களுக்கும் மூலகாரணியே, அடைக்கலம் தருபவளே, முக்கண்ணியே , சிவபெருமானின் நாயகியே கௌரீ, நாராயணீ, உன்னை வணங்குகிறேன்., உன்னை வணங்குகிறேன்.
பூஜை நிறைவுற்றது. வித்யா ரூபிணியான அன்னை அகிலாண்டேசுவரியை சாரதையிடம் எழுந்தருளச் செய்து வழிபட்ட இந்த நிகழ்ச்சியுடன் குருதேவரின் சாதனைகள் நிறைவுற்றன. அவரது-தெய்வ மனித நிலை எல்லா நிலைகளிலும் முழுமைபெற்றதாயிற்று.
ஷோடசி பூஜைக்குப்பின் அன்னை குருதேவருடன் ஏறக்குறைய ஐந்து மாதங்கள் தங்கினார்.முன்னைப்போலவே அப்போதும் குருதேவருக்கும் அவரது தாயாருக்கும் பணிவிடைகள் செய்து வந்தார்.
பகற்பொழுதை நகபத்தில் கழித்து விட்டு, இரவை குருதேவருடன் அவரது அறையிலே கழித்தார். குருதேவர் தொடர்ந்து இரவும் , பகலும் சமாதி நிலையிலேயே இருந்தார். சிலவேளைகளில் நிர்விகல்ப சமாதி நிலையை அடைந்து மரண அறிகுறிகள் கூடத்தோன்றும்.
எந்த நேரத்தில் இந்த நிலை தோன்றும் என்பதை அறிய இயலாத அச்சத்தால் அன்னையால் சரிவர இரவில் உறங்க இயலவில்லை.
ஒரு நாள் சமாதி நிலையிலிருந்த குருதேவருக்கு நீண்டநேரம் புறநினைவு திரும்பாத போது அன்னை மிகவும் அஞ்சி என்ன செய்வது என்று அறியாது ஹிருதயரையும் மற்றவர்களையும் உறக்கத்திலிருந்து எழுப்பி விட்டார்.
ஹிருதயர் வந்து குருதேவரின் செவிகளில் நீண்ட நேரம் இறைவனின் திருப்பெயரை ஓதியபின் அவர் புறநினைவு பெற்றார். சமாதி நிலை நீங்கிய பின், அனைத்தையும் அறிந்த குருதேவர், அன்னையின் உறக்கம் கெடுவதை அறிந்து நகபத்தில் தம் தாயுடன் அவர் உறங்குவதற்கான ஏற்பாடு செய்தார். இவ்வாறு ஓர் ஆண்டும் நான்கு மாதங்களும் தட்சிணேசுவரத்தில் குருதேவருடன் வசித்துவிட்டு சாரதை 1873, அக்டோபர் மாதவாக்கில் காமார்புகூருக்குத் திரும்பினார்.......
ஷோடசி பூஜையுடன் குருதேவரின் சாதனைவேள்வி நிறைவுற்றது. கடவுட் பித்து என்னும் புனித அக்கினி அவரது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்து, தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் சிறிது கூட ஓய்வின்றி, அவரைப் பல்வேறு சாதனைகளில் ஈடுபடுத்தியது.அந்த அக்னிப் பிழம்பு ஷோடசி பூஜை என்னும் பூர்ணாஹீதியைப்பெற்று அடங்கத்தொடங்கிற்று.
அதற்குப் பின்னரும் எதற்காக அது எரிய வேண்டும்?
குருதேவரின், மனஏக்கத்தையும் ஆவலையும் கண்ட அன்னை, முதலில் தன் அருட்காட்சியை அவருக்கு அளித்தாள். பின்னர் அருங்குணங்கள் கொண்ட ஆன்றோர் பலருடன் அவரைத்தொடர்பு கொள்ளச்செய்து அவர்களின் துணையுடன் பல்வேறு நெறிகளைப்பின்பற்றச்செய்து அவற்றின் மூலம் பெற்ற அனுபவங்களை அந்த அருட்காட்சியுடன் ஒப்பிட்டு நோக்குவதற்கான வாய்ப்பினை அளித்தாள். இனிமேல் அவர் அன்னையிடம் கேட்க என்னதான் உள்ளது?
அறுபத்துநான்கு தாந்திரிக முறைகளின் சாதனைகளைச்செய்தாகிவிட்டது.வைணவம் கூறுகின்ற ஐந்து பாவனைகளிலும் பரம்பரை முறைப்படி ஈடுபட்டாகி விட்டது. வேத நெறிப்படி துறவு பூண்டு, அன்னையின் குணங்களற்ற உருவமற்ற காட்சியைப்பெற்றாகிவிட்டது.
சிந்தனைக்கு எட்டாத திருவிளையாடல் புரிகின்ற அன்னையின் திருவுளப்படி , அன்னைிய மதமான இஸ்லாமிய சாதனைகளிலும் ஈடுபட்டு வெற்றி கண்டாகிவிட்டது.
இனி அன்னையிடம் தனக்கு அருளும் படி வேண்டுவதற்கு வேறு எது தான் உள்ளது?
ஓராண்டுக்குப்பின்னர் இன்னொரு சாதனையின் மூலம் அன்னையின் அருட்காட்சியைப்பெற குருதேவர் விழைந்தார்.
அப்போது சம்புசரண்மல்லிக் என்பவரிடம் அவருக்குப் பழக்கம் இருந்தது. சம்பு குருதேவருக்கு பைபிளைப் படித்துச்சொல்வதுண்டு. அதன் மூலம் ஏசுவின் புனித வாழ்வைப்பற்றியும் அவரால் தோற்றுவிக்கப்பட்ட மதத்தைப்பற்றியும் அறியும் வாய்ப்பு குருதேவருக்குக் கிடைத்தது.
அந்த நெறியில் சாதனை செய்யவேண்டும் என்ற ஆவல் அவர் உள்ளத்தில் எழுந்தது. மறுகணம் அந்த சாதனையின் நிறைவை வியத்தகு முறையில் காட்டி அருள்புரிந்தாள் அன்னை.
எனவே அந்த நெறியில் சாதனை என்ற தனியான முயற்சி எதுவும் செய்யவேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படவில்லை.
குருதேவரே கூறிய அந்த நிகழ்ச்சி வருமாறு
-
யதுலால் மல்லிக் என்பவரின் தோட்டவீடு தட்சிணேசுவரக்கோயிலுக்குத்தெற்கே அமைந்திருந்தது.உலவுவதற்காக அவ்வப்போது குருதேவர் அங்கு சென்று வருவதுண்டு.
குருதேவரைமுதன்முறை பார்த்ததிலிருந்தே யதுலாலுக்கும் அவரது தாய்க்கும் அவர் மீது மிகுந்த பக்தி உண்டாயிற்று.
அதனால் அவர்களிருவரும் வீட்டில் இல்லாதபோது கூட, குருதேவர் அங்குசெ்சென்றால் வேலைக்காரர்கள் வரவேற்பறையைத்திறந்து அங்கு அமர்ந்து ஓய்வெடுக்கும் படி அவரைக்கேட்டுக்கொள்வார்கள். வரவேற்பறையின் சுவரில் அழகிய பல சித்திரங்கள் மாட்டப்பட்டிருந்தன.
அவற்றுள் ஒன்று, குழந்தை ஏசு தன் தாயின் மடியில் அமர்ந்திருக்கும் காட்சியாகும். ஒருநாள் குருதேவர் அந்தச் சித்திரத்தைக் கூர்ந்து நோக்கியவாறே ஏசுவின் சீரிய வாழ்வைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தார்.
திடீரென அந்தச்சித்திரம் உயிர்பெற்று ஒளிர்வது போலாயிற்று.
சித்திரத்திலிருந்த அந்த அற்புத அன்னை, பிள்ளை இருவரின் உடலிலிருந்து ஒளிக்கதிர்கள் வெளிவந்து குருதேவருள் புகுந்து அவரது மனபாவனையை அடியோடு மாற்றிவிட்டது. பிறப்பிலிருந்து தமது உள்ளத்தில் பதிந்திருந்த இந்து சம்ஸ்காரங்கள் அனைத்தும் உள்ளத்தில் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டு வேறான ஏதோ சம்ஸ்காரங்கள் மனத்துள் உதயமாவதை அவர் உணர்ந்தார்.
அவற்றைக்கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றார்.இயலாத நிலையில் அன்னையிடம், அம்மா என்னை என்ன செய்கிறாய்? என்று கதறினார்.
எந்த பயனும் இல்லை. வேறுபட்ட அந்த எண்ண அலைகள் தீவிர வேகத்துடன் எழுந்து இந்து சம்ஸ்காரங்களை அவரது உள்ளத்திலிருந்து ஒரேயடியாக அகற்றிவிட்டன. இதன் பலனாக இந்து தெய்வங்கள் மீது அவருக்கிருந்த அன்பும்,பக்தியும் எங்கேயோ மறைந்து , ஏசுவிடமும் அவர் காட்டிய நெறியிலும் ஆழ்ந்த நம்பிக்கையும் மதிப்பும் தோன்றின. சர்ச்சில் ஏசுவின் திருவுருவின் முன் கிறிஸ்தவ பாதிரிகள் தூபமும் மெழுகுவர்த்தியும் சமர்ப்பிப்பதும் மனமுருகிப் பிரார்த்தனை செய்வதும் அவர் கண்முன் தோன்றின.
தட்சிணேசுவரக்கோயிலுக்குத் திரும்பி வந்த பின்னரும் குருதேவரின் மனம் அந்த நினைவுகளில் ஆழ்ந்திருந்தது. கோயிலுக்குச்சென்று அன்னை காளியைப் பார்ப்பதைக்கூட அடியோடு மறந்துவிட்டார்.
அந்தப்புதிய பாவனை அலைகள் தொடர்ந்து மூன்றுநாட்கள் அவரை ஆட்கொண்டிருந்தன.
மூன்றாவது நாள் பஞ்சவடியில் உலவிக்கொண்டிருந்தார்.
அப்போது கண்களைக் கவர்கின்ற வெண்ணிறம் கொண்ட அற்புதமான தேவ மனிதர் ஒருவர் தம்மை உற்றுநோக்கியபடி வருவதைக்கண்டார்.
அவரைப்பார்த்தவுடன் அவர் ஓர் அன்னிய நாட்டினர், அன்னிய இனத்தினர் என்பதை அறிந்து கொண்டார் குருதேவர்.
சாந்தம் குடிகொண்டிருந்த அந்த தேவ மனிதரின் கண்கள் அவருக்குச்சிறப்பான அழகைக்கொடுத்தன. மூக்கு சிறிது தட்டையாக இருந்தபோதிலும் அது அவரது அழகை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அமைதியான அவரது முகத்தில் மிளிர்ந்த தெய்வீக ஒளியால் கவரப்பட்ட குருதேவர் அவர் யாராக இருக்கக்கூடும் என்று சிந்தித்தார்.
அந்த தேவமனிதர் அதற்குள் குருதேவரை நெருங்கி விட்டிருந்தார். அப்போது குருதேவரின் உள்ளம், ஏசு கிறிஸ்து மனித குலத்தின் துயரைத் தீர்ப்பதற்காக யார் தனது இதயத்தின் உதிரத்தைச் சொரிந்தாரோ மனிதகுலம் இழைத்த இன்னல்கள் அனைத்தையும் தாங்கிக்கொண்டாரோ, அந்த இறைமகன், உயர்ந்த யோகி, அன்பு வடிவமான ஏசு கிறிஸ்து என்று கூவியது.
ஏசு கிறிஸ்துவும் குருதேவரை நெருங்கி வந்து அவரைத் தழுவியபடியே அவர் உடலினுள் கலந்துவிட்டார்.
பரவச நிலையை அடைந்த குருதேவர் புற நினைவிழந்த நிலையில் சகுண பிரம்மத்தில் ஒன்றி விட்டார்!
இவ்வாறு ஏசுவின் காட்சி பெற்ற குருதேவர் அவர் ஓர் அவதார புருஷர், என்பதில் ஐயம் நீங்கப்பெற்றார்.
இந்த நிகழ்ச்சி நடந்து பலகாலம் சென்ற பின்னர் நாங்கள் குருதேவரைக்காணச் சென்றிருந்த போது, ஏசுவைப்பற்றிய பேச்சை அவர் தொடங்கி, நல்லது, நீங்களெல்லாம் பைபிள் படித்திருக்கிறீர்கள் அல்லவா? ஏசுநாதரின் உடல் அமைப்பைப்பற்றி அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது. அவரது தோற்றம் எவ்வாறு இருந்தது? என்று கேட்டார். அதற்கு நாங்கள் , பைபிளின் எந்தப் பகுதியிலும் இதைப்பற்றிச்சொல்லியிருப்பதாக எங்களுக்குத்தெரியவில்லை.
யூதராகப் பிறந்ததால் நல்ல வெள்ளைநிறம் கொண்டவராக இருந்திருக்கவேண்டும். நீண்ட விழிகளும் கூரிய மூக்கும் இருந்திருப்பது உறுதி என்று சொன்னோம். நாங்கள் இவ்வாறு கூறியதும், குருதேவர், ஆனால் அவரது மூக்கு சிறிது தட்டையாக இருந்ததை நான் பார்த்தேனே!
ஏன் அவ்வாறு தெரிந்ததோ, யாருக்குத்தெரியும்? என்று கூறினார். நாங்கள் எதுவும் சொல்லவில்லை. எனினும் பரவச நிலையில் பார்த்த ஏசுவின் உருவமும் உண்மை உருவமும் எவ்வாறு ஒத்திருக்க முடியும், யூதர்கள் அனைவருக்கும் இருப்பதைப்பொன்றே ஏசுவிற்கும் மூரிய மூக்குதான் இருந்திருக்கும் என்று நினைத்தோம்.
ஆனால் ஏசுவின் உடலமைப்பைப்பற்றி மூன்று வகையான விளக்கங்கள் இருந்தன என்பதும் அவற்றுள் ஒன்று ஏசுவின் மூக்கு சற்று தட்டையாக இருந்ததாகத்தான் விவரித்திருந்தது என்பதும் குருதேவர் மகாசமாதி அடைந்த சில காலத்திற்குப் பின்னர் எங்களுக்குத்தெரியவந்தது.
உலகின் முக்கியமான மத சாதனைகள் அனைத்திலும் நிறைவு எய்தியிருந்த குருதேவர், புத்தரைப்பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை வாசகர்கள் அறிய விரும்பலாம்.
இது பற்றி எங்களுக்குத்தெரிந்த செய்திகளை இங்குக் குறிப்பிடுகிறோம்.
பொதுவாக இந்துக்கள் புத்தரை எப்படிக்கருதுகிறார்களோ, அவ்வாறே குருதேவரும் நம்பினார்.
அதாவது புத்தரைக்கடவுளின் அவதாரமாக வழிபட்டார். அவரது அருள் இன்றும் புரி ஜகன்னாதத்தில் எழுந்தருளியுள்ள ஜகன்னாதர் , சுபத்ரா, பலராமர் என்ற மும்மணிகள் மூலம் வெளிப்படுகிறது என்று நம்பினார்.
ஜகன்னாதரின் திருவருளால் அந்தப் புண்ணியத் தலத்தில் ஜாதி வேறுபாடுகள் எதுவும் அறவே இல்லை. என்பதை அறிந்த குருதேவர் அந்தப்புனித இடத்திற்குச்செல்ல விழைந்தார்.
இங்குச்சென்றால் அதன்பின் தம் உடல் நிலைக்காது என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது.
அன்னையின் திருவுளமும் தான் அங்கு செல்வதற்கு எதிராகவே உள்ளது என்பதையும் தமது யோக திருஷ்டி மூலமாக அறிந்து கொண்டதால் அங்குப்போகும் எண்ணத்தைக்கைவிட்டார்.
நீர் வடிவாக இருக்கும் பிரம்மமே கங்கை என்று குருதேவர் திடமாக நம்பியது பற்றி முன்பே கூறியுள்ளோம்
புரி ஜகன்னாதருக்கு நைவேத்தியம் செய்யப் பெற்ற அன்னப் பிரசாதத்தை உட்கொள்ளும் ஒருவரின் மனம் உலகப் பற்றுகளிலிருந்து விடுபட்டு தூய்மையடைந்து ஆன்மீக உணர்வுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெறுகின்றது என்பதையும் அவர் இதயபூர்வமாக நம்பினார்.
உலகியல் மக்களுடன் சிறிது நேரம் இருக்க நேரிட்டால் கங்கையின் புனித நீரையும் ஜகன்னாதருக்குப் படைக்கப்பட்ட அட்கே” மகாபிரசாதத்தையும் உட்கொள்வார். சீடர்களையும், அவ்வாறு செய்யச்சொல்வார்.
பகவான் புத்தர் சம்பந்தமாக மேற்கூறியவற்றுடன் வேறொரு நிகழ்ச்சி பற்றியும் எங்களுக்குத்தெரியவந்தது. குருதேவரிடம் ஆழ்ந்த பக்திகொண்ட பெரிய கவிஞரான கிரிஷ் சந்திரகோஷ் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்கியபோது அதைப்பற்றிக்கேள்விப்பட்ட குருதேவர், புத்தர் கடவுளின் அவதாரம், என்பது உறுதி . அவர் நிறுவிய சமயமும் வைதீகஞான நெறியும் ஒன்றே! என்று கூறினார்.
யோக திருஷ்டியால் தான் குருதேவர் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
சமண மதத்தை நிறுவிய தீர்த்தங்கரர்களைப் பற்றிச் சமணர்களிடமிருந்தும், சீக்கிய சமயத்தை நிறுவிய குருநானக் முதல் குருகோவிந்தர் ஈறான பத்து குருமார் களைப் பற்றிச் சீக்கியர்களிடமிருந்தும் குருதேவர் தம் வாழ்க்கையின் பிற்பகுதியில் தெரிந்துகொண்டார்.
அதிலிருந்து அவர்களிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டார். அவரது அறையில் இந்து தெய்வங்களின் படங்களுடன் ஏசுநாதர் படமும் மகாவீர தீர்த்தங்கரின் கற்சிலையும் இருந்தன.
மற்ற படங்களுக்குச்செய்வது போலவே, நாள்தோறும் காலையும், மாலையும் ஏசுவின் படத்திற்கும், மகாவீரரின் திருவுருவத்திற்கும் அவர் சாம்பிராணி, தூபம் காண்பிப்பது உண்டு.
இவ்வாறு தமது பக்தியையும் மதிப்பையும் வெளிப்படுத்தினாலும் தீர்த்தங்கரர்களையோ, சீக்கிய குருமார்களையோ கடவுளின் அவதாரம் என்று அவர் கூறி நாங்கள் கேட்டதில்லை. சீக்கிய குருமார்களைப் பற்றிக்கூறும்போது, அவர்கள் அனைவரும் ஜனகமகரிஷியின் மறு அவதாரங்கள்.
ராஜரிஷியான ஜனகர் முக்தி பெறும்முன்னர் அவர் மனத்தில் இவ்வுலக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற பேராவல் எழுந்தது.
ஆகவே அவர் குருநானக் முதல் குருகோவிந்தர் ஈறாக பத்து முறை பிறந்து சீக்கிய மதத்தை நிறுவிய பின் பரப்பிரமத்துடன் என்றும் பிரியா நிலையில் ஒன்றிவிட்டதாக சீக்கியர்கள் என்னிடம் கூறினர்.
சீக்கியர்கள் சொன்னது உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்றார்.
அனைத்து சாதனைகளிலும் வெற்றி கண்டகுருதேவருக்குச் சில அசாதாரணமான அனுபவங்கள் உண்டாயின. அவற்றுள் சில அவரைப்பற்றியவை, மற்றவை பொதுவான ஆன்ம அனுபவங்கள். சில அனுபவங்களைப்பற்றி முன்னரே குறிப்பிட்டிருப்பினும் சிறப்பான சிலவற்றைப் பற்றி இங்குக்கூறுகிறோம். சாதனைகளின் நிறைவில் அன்னையுடன் இணைபிரியா நிலையாகிய பாவமுக நிலையில் இருந்த போது தான் அவர் அந்த ஆன்ம அனுபவங்களின் பொருளைத்தெளிவாகப்புரிந்து கொண்டார் என்றே நாங்கள் எண்ணுகிறோம்.
இவற்றை யோக காட்சியின் மூலம் அவர் கண்டிருந்தாலும், சாதாரண மனித அறிவிற்கு எட்டிய அளவு விவரிக்க நாங்கள் இங்கு முயல்கிறோம்.
முதலாவதாக தாம் இறைவனின் அவதாரம். ஓர் ஆதிகாரிக புருஷர், தமது சாதனை தவம் அனைத்தும் பிறரது நன்மைக்காகவே என்பதில் குருதேவருக்கு உறுதியான நம்பிக்கை ஏற்பட்டது.
தமது வாழ்க்கையைப் பிற சாதகர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்த்தபோது இரண்டிற்கும் இடையில் பெருத்த வேறுபாடு இருப்பதைக் கண்டார் அவர்.
சாதாரண சாதகன் ஏதாவது ஒரு பாவனையைக் கடைபிடித்து வாழ்க்கை முழுவதும் முயற்சி செய்து அதன்மூலம் இறைக்காட்சி பெற்று அமைதியுறுகிறான்.
குருதேவரின் நிலை அப்படி இருக்கவில்லை. பல்வேறு சமயசாதனைகளில் ஈடுபட்டு அனைத்திலும் வெற்றி பெறாதவரை அவரது உள்ளம் அமைதி பெறவில்லை.
மேலும் ஒவ்வொன்றிலும் வெற்றி பெற மிகக்குறுகிய காலமே அவருக்குத்தேவையாக இருந்தது. காரணம் இன்றிக்காரியம் இல்லை.தமது சாதனைகளையும் குறுகிய காலத்தில் பெற்ற வெற்றிகளையும் உயர்ந்த யோக நிலையில்நின்று பார்த்தபோது தான் குருதேவர் மேற்கண்ட முடிவுகளுக்கு வந்தார்.
தாம் சுத்த புத்த முக்த இயல்பினரும் எல்லாம் வல்லவரும் ஆன இறைவனின் சிறப்பாக அவதாரம்,
ஆதலால் தான் இவ்வாறு நடைபெற்றது என்றும் தமது சாதனைகள் ஆன்மீக உலகிற்குப் புதியதோர் ஒளியைக்கொடுத்துள்ளது என்றும், அது மட்டுமின்றி அவை சொந்தத் திருப்திக்காக அல்லாமல், உலக மக்களின் நன்மைக்காகவே செய்யப்பட்டது என்பதையும் உயர்ந்தார் குருதேவர்.
இரண்டாவதாக, பிற உயிர்கள் முக்தி பெறுவது போல தமக்கு முக்தி கிடையாது. என்பதை அவர் அறிந்தார்.
இதனை நாமும் எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.
இறைவனுடன் என்றும் பிரியாமல் இணைந்திருக்கின்ற ஒருவருக்கு இறைவனின் சிறப்பம்சமாக விளங்குகின்ற ஒருவருக்கு முக்தி எதற்கு?
அவரே சுத்த புத்த முக்த இயல்பினர். அவருக்கு எந்தத்தேவையும் இல்லை. எவ்விதத் தளையும் இல்லை, முக்தி பெறுவது என்பது அவரைப்பொறுத்தவரை பொருளற்றதே அல்லவா?
மனிதகுல நன்மையை இறைவன் நாடுகின்றவரையுகந்தோறும் அவர் அவதரித்தே தீர வேண்டும் .
அவருக்கு எப்படி முக்தி கிடைக்கும்? ஜமீன்தார் ஒருவர் தம் நிர்வாகத்தின் கீழுள்ள பகுதியில் எங்கே குழப்பம் நிலவினாலும், அங்கே விரைந்தேயாக வேண்டும் என்று குருதேவர் சொல்வதுண்டு. யோகக்காட்சியின் மூலம் அவர் அறிந்து கொண்டது இது மட்டுமன்று .
வடமேற்குத் திசையைச்சுட்டி காட்டி, தாம் அடுத்த முறை அந்தப் பகுதியில் அவதரிக்க வேண்டியிருக்கும் என்று அடிக்கடி கூறுவார். தாம் மறுபடியும் அவதரிக்க இருக்கும் காலத்தைக்குறிப்பிட்டு அடுத்த இருநூறுஆண்டுகளுக்குப்பின்னர் வர வேண்டியிருக்கும்
அப்போது பலர் முக்தி பெறுவர். அப்போது முக்தி பெற இயலாதவர்கள் பலகாலம் காத்திருக்க வேண்டும், என்று சொன்னதாக எங்களுள் சிலர் கூறினர்.
மூன்றாவதாக தாம் இவ்வுலகை நீத்துவிடும் காலத்தையும் வெகுகாலம் முன்பே யோகக்காட்சியில் அறிந்திருந்தார் குருதேவர்.
தட்சிணேசுவரத்தில் ஒரு முறை அவர் உயர்ந்த பரவச நிலையில் இருந்தபோது அன்னை சாரதாதேவியிடம்,எப்போது இவர் அவர் என்றில்லாமல் எல்லோரிடமிருந்தும் நான் உணவு பெற்றுப்புசிப்பதையும், கல்கத்தாவில் இரவு நேரங்களைக் கழிப்பதையும், வேறாருவர் உண்டபின் எஞ்சிய உணவை உண்பதையும், நீ காண்கிறாயோ, அப்போது என் அந்திமக்காலம் நெருங்கி விட்டது என்பதை அறிந்துகொள் என்று கூறினார்.
குருதேவரின் இந்தச்சொற்கள் நூற்றுக்கு நூறு உண்மையாயின.
இன்னொரு சமயம் அவர் பரவச நிலையில் அன்னையிடம், என் இறுதிநாட்களில் கஞ்சியைத்தவிர வேறெதுவும் உட்கொள்ளமாட்டேன் என்று கூறினார். இதுவும் எவ்வாறு உண்மையாயிற்று என்பதை வேறோர் இடத்தில் கூறியுள்ளோம்.
குருதேவரின் அனுபவங்கள் அவரைப் பற்றியவற்றை இதுவரை பார்த்தோம். இனி அவரது பொதுவான ஆன்மீக அனுபவங்களைப்பற்றிப்பார்ப்போம்.
முதலாவதாக அனைத்துமத சாதனைகளிலும் வெற்றி பெற்றபின் குருதேவர், எல்லா மதங்களும் உண்மையே, எத்தனை மதங்களோ அத்தனை வழிகள்” என்பதை உறுதியாக உணர்ந்தார்.
யோக அறிவு, சாதாரணஅறிவு இரண்டினாலும் இதனை குருதேவர் உணர்ந்தார் எனலாம்.ஏனெனில் எல்லா சமய சாதனைகளையும் செய்ததன் மூலம் அவை ஒவ்வொன்றின் இறுதிப்பயனையும் தமது வாழ்க்கையில் உணர்ந்திருந்தார்.
சமய சமத்துவம் என்ற இந்தமேலான கொள்கையைப்போதித்து, உலகில் நிலவுகின்ற சமயப் பூசல்களை ஒழித்து, அறத்தினை நிலைநாட்டவே யுகாவதார புருஷராகிய குருதேவர் அவதரித்துள்ளார்.
குருதேவருக்கு முன் வேறு எந்த அவதார புருஷரும் இந்த உண்மையை சாதனைகள் மூலம் தங்கள் வாழ்வில் உணர்ந்து உலகிற்கு போதித்ததில்லை.
தாங்கள் கொண்டிருந்த சமயக்கொள்கைகளின் பரந்த மனப்பான்மையின் அடிப்படையில் அசதார புருஷர்களின் இடத்தை நிர்ணயித்தோமானால் எந்த வகையான ஐயத்திற்கும் இடமின்றி முதலிடம் குருதேவருக்குத்தான் அளிக்கப்படவேண்டும்.
இரண்டாவதாக துவைதம், விசிஷ்டாத்வைதம் , அத்வைதம் என்னும் கோட்பாடுகள் சாதகர் ஒருவரின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஏற்ப வந்தமைகின்றன. அதாவது அவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல அவை ஒவ்வொன்றும் மனித மன இயல்புகளுக்கு ஏற்ப ஒவ்வொரு நிலையில் உள்ளவை என்று கண்டார் குருதேவர்.
அவர் கண்டறிந்த இந்த உண்மை, சாஸ்திரங்களை அறிந்து கொள்வதில் எவ்வளவு உதவியாக அமையும் என்பதைச்சற்று சிந்தித்தாலே நாம் இதனைப்புரிந்து கொள்ளமுடியும்.
நமது முனிவர்கள் கண்டறிந்த இந்த மூன்றுகோட்பாடுகளும் வேத, உபநிடதங்களில் குறித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மூன்றையும் புரிந்து கொள்ளாமல் குழப்பியதால் ஆன்மீகப்பாதையே எந்த அளவுக்குச் சிக்கலாகிவிட்டது என்பதை விவரிக்கச்சொற்கள் இல்லை.
முனிவர்கள் இந்த மூன்றுவித அனுபவங்களையும் கருத்துக்களையும் சரிவரப்புரிந்து கொள்ள முடியாதவர்கள். வேத உபநிடதங்கள் ஒரு கோட்பாட்டை மட்டுமே கூறுகின்றன.என்று கொண்டு, அதனை உறுதி செய்யும் முயற்சியில் சாஸ்திரங்களையே சிதைக்கத்துணிந்து விட்டனர்.
விளக்கவுரை ஆசிரியர்கள் இவ்வாறு செய்ததால் சாஸ்திரங்கள் என்றாலே மக்கள் ஐயமும் அச்சமும் கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
அச்சத்தினால் சாஸ்திரங்களில் அவநம்பிக்கை தோன்றலாயிற்று.
இதுவே இந்தியாவில் ஆன்மீக வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
அதனால் யுகாவதார புருஷரான குருதேவர், மேற்கூறிய மூன்று கோட்பாடுகளின் உண்மையையும் தம் வாழ்க்கையில் உணர்ந்து, அவற்றின் அற்புதமான ஒருமைப்பாட்டினை வலியுறுத்த வேண்டியதாயிற்று.
சாஸ்திரங்களை ப் புரிந்து கொள்வதற்கு குருதேவரின் இந்தக் கருத்தினை மனத்தில் கொள்வது தான் ஒரே வழி.இது நம்பந்தமாக குருதேவர் கூறிய ஒரு சிலவற்றை இங்கு தருகிறோம்....
அத்வைத உண்மையே இறுதிநிலை. மனமும் மொழியும் கடந்தநிலை அது.
மனம், புத்தி ஆகியவற்றின் உதவியுடன் விசிஷ்டாத்வைத நிலை, வரை மட்டுமே விளக்கவும் புரிந்து கொள்ளவும் முடியும். அந்த நிலையில் முழுமுதற் பொருளும் இந்தப் பிரபஞ்சமும் இரண்டுமே உண்மையானவை.
இறைவன் அவனது திருநாமம் அவன் இருப்பிடம் மூன்றுமே தூய அறிவுமயமானவை.
உலகியலில் உழலும் சாதாரண மக்களுக்கு துவைத பாவனை பொருத்தமானது. நாரத பாஞ்சராத்திரத்தில் கூறியுள்ளதுபோல் இறைவனின் திருப்பெயரையும் புகழையும் பாடுவது உகந்ததாகும்.
செயல்புரிவது சம்பந்தமாகவும், இத்தகைய வரம்புகளை வகுத்திருந்தார் குருதேவர். சத்வகுண மனிதனிடம் செயலில் ஈடுபடும் எண்ணம் இயல்பாகவே குறைந்து விடுகின்றன.முயன்றாலும் அவனால் செயல்புரிய முடிவதில்லை.
செயலில் ஈடுபட அவனைக்கடவுள் அனுமதிப்பதில்லை என்றும் கூறலாம். எடுத்துக்காட்டாக மருமகளின் மகப்பேற்றுக்கான காலம் நெருங்க நெருங்க, அவள் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதை மாமியார் குறைத்து விடுகிறாள். குழந்தை பிறந்த பின்னர் அதை வளர்ப்பதைத் தவிர வேறு வேலையில் அவள் ஈடுபடுவதில்லை. சத்வ குண நிலையை எட்டாத பிறர் பணக்காரர் வீட்டுப் பணிப்பெண்ணைப்போல கடவுளைச் சரணடைந்து செயல்களில் ஈடுபடவேண்டும். இவ்வாறு செய்வது தான் கர்மயோகம், இயன்றஅளவு இறைவனின் திருநாம ஜபம், தியானம், மேலே கூறியது போலச்செயல்புரிதல், இதுவே வழி.
மூன்றாவதாக, அன்னை காளியின் கரங்களில் தாம் ஒரு கருவியே என்றும் சொந்த வாழ்வில் உணர்ந்த சமய ஒருமைப்பாடு என்ற கோட்பாட்டிற்குப்பொருந்திய வகையில் புதியநெறி ஒன்றைத்தாம் நிறுவ வேண்டும் என்றும் உணர்ந்தார் குருதேவர்.
மதுர்பாபு உயிருடன் இருக்கும்போதே இது சம்பந்தமான முதல் அனுபவத்தை குருதேவர் பெற்றார். ஆத்மானுபூதி பெற தம்மிடம் பக்தர்கள் பலர் வருவார்கள், என்று அன்னை கூறியதாக குருதேவர் மதுரிடம் சொன்னார். இது பின்னர் உண்மையாயிற்று என்பதைக்கூற வேண்டுவது இல்லை.
ஒரு சமயம் காசிப்பூர்தோட்டத்தில்தம் புகைப்படத்தைப் பார்த்து குருதேவர் எங்களிடம் இந்தப் படம் மிகவும் யோக நிலையில் எடுக்கப்பட்டது. காலப்போக்கில் வீடுகள் தோறும் இந்தப்படம் வைத்துப் பூஜிக்கப்படும் என்று கூறினார்.
நான்காவதாக யார், யாருக்கு இது கடைசிப்பிறவியோ அவர்கள் (ஆத்மானுபூதி பெற) தம்மிடம் வருவார்கள் என்பதைத் தம் யோக சக்தியால் அறிந்து அதனை உறுதியாக நம்பினார். குருதேவர்.
-
குருதேவரின் சாதனைக்காலத்தில் மூன்று முக்கியமான கட்டங்களில் சிறந்த சாதகரும் பண்டிதரும் ஆன மூவர் அவரிடம் வந்து, அவரது ஆன்மீக நிலையை நேரில்கண்டு அவை பற்றி விவாதிக்கும் வாய்ப்பு பெற்றனர்.
தாந்திரிக சாதனையில் குருதேவர் முழுமை பெற்ற பின்னர் பண்டித பத்மலோசனர். அவரைக் கண்டார்.
வைணவ சாதனையில் வெற்றி பெற்றபின் பண்டித வைஷ்ணவசரண் வந்தார். சாதனைகள் அனைத்தும் நிறைவுற்ற பின்னர் அவரைக் காணும் பேறு பெற்றவர் கௌரிபண்டிதர்.
குருதேவரிடம் பத்மலோசனர் தங்களில் இறைவனின் அம்சத்தையும் சக்தியையும் நான் காண்கிறேன்.என்று சொன்னார்.
வைஷ்யவசரண் குருதேவர் பரசவ நிலையிலிருந்த போது அவரைக்கண்டு , அவர் கடவுளின் அவதாரம் என்பதாக வர்ணித்து சமஸ்கிருதப் பாடல் ஒன்று இயற்றிப்பாடினார்.
இதே போன்று கௌரியும் குருதேவரிடம் உயர்ந்த ஆன்மீக நிலைகள் என்று சாஸ்திரங்களில் நான் கற்றவை யாவும் தங்களிடம் மிளிர்கின்றன.
அவற்றில் குறிப்பிடப் படாத பல நிலைகளும் தங்களிடம் வெளிப்படுவதைக் காண்கிறேன். தங்கள் நிலை வேத வேதாந்தங்கள் மற்றும் சாஸ்திரங்கள் அனைத்திலும் கூறப்பட்டுள்ள ஆன்மீக நிலைகள் எல்லாவற்றையும் கடந்து விட்டது.
தாங்கள் மனிதர் அல்லர், எந்தவொரு பேருண்மையினின்று அவதாரங்கள் தோன்றுகின்றனவோ அந்தப் பேருண்மையே தங்களிடம் உள்ளது. என்று கூறினார். குருதேவரின் வாழ்க்கையைப் பற்றியும் அவரது அற்புதமான அனுபவங்களைப்பற்றியும் படித்தறியும் நாம் மேற்கூறிய சாதக பண்டிதர்கள் மூவரும் அவரைப்பற்றிக்கூறிய வை வெறும் பகட்டுரைகள் அல்ல. என்பதைப்புரிந்து கொள்ளலாம்.
அந்த மூன்று அறிஞர்களும் தட்சிணேசுவரத்திற்கு வந்த காலத்தைக் கீழ்கண்டவாறு வரையறுக்கலாம்.“
முதன்முதலில் அன்னை சாரதாதேவி தட்சிணேசுவரத்தில் தங்கியிருந்தபோது கௌரிபண்டிதரைக்கண்டார்.
மதுர்பாபு உயிருடனிருந்த போது கௌரி தட்சிணேசுவரத்திற்கு வந்தார். என்று குருதேவர் எங்களிடம் கூறியுள்ளார்.
ஆகவே 1871- ஆம் ஆண்டில் அவர் தட்சிணேசுவரத்திற்கு வந்து 1873-ஆம் ஆண்டுவரை குருதேவருடன் தங்கியிருக்க வேண்டும்.
சாஸ்திர அறிவு பெற்று, அதனைத்தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த விழைகின்ற பண்டித சாதகர்களைக்காணும் ஆவல் குருதேவரிடம் எப்போதும் இருந்தது.
ஸ்ரீகௌரி காந்த தர்க்க பூஷண் பட்டாச்சார்யா இந்த வகை சாதகர் என்பதால் குருதேவர் அவரைக்காண விரும்பினார்.
எனவே மதுர்பாபு மூலம் அவரை தட்சிணேசுவரத்திற்கு வரவழைத்தார். கௌரி பண்டிதர் காமார்புகூருக்கு அருகில் இருந்த இந்தோஷ் கிராமத்தைச்சேர்ந்தவர். ஹிருதயரின் சகோதரர் ராம்ரதன் மதுர்பாபுவின் கடிதத்தை எடுத்துச் சென்று கௌரி பண்டிதரிடம் காண்பித்து அவரை தட்சிணேசுவரக்கோயிலுக்கு அழைத்து வந்தார்.
சாதனைகளின் மூலம் கௌரி பண்டிதர் பெற்றிருந்த அற்புத சக்தி, தட்சிணேசுவரத்திற்கு வந்து குருதேவரைக் கண்டபின் வைராக்கியம் பெற்று துறவு பூண்டது போன்ற விவரங்களை வேறோர் இடத்தில் கூறியுள்ளோம்.
அன்னமேரு விழா,1864-ஆம் ஆண்டில் நடைபெற்றதாக ராணிராசமணியின் வாழ்க்கைவரலாறு, என்ற (வங்க) நூல் குறிப்பிடுகின்றது.
அந்த விழாவில் பத்மலோசனரை அழைத்து வந்து அவருக்கு வெகுமதிகள் வழங்க மதுர் ஆவல் கொண்டதாக குருதேவர் கூறினார். ஆகவே வேதாந்த வித்தகர் ஸ்ரீபத்மலோசன் தர்க்காலங்கார் பட்டாச்சர்யர் தட்சிணேசுரத்திற்கு வந்தது 1864-ஆம் ஆண்டில் என்று கொள்ளலாம்.
ஸ்ரீஉத்சவானந்த கோசுவாமியின் மகனான பண்டித வைஷ்ணவசரண் தட்சிணேசுவரத்திற்கு வந்த காலத்தை எளிதில் கணக்கிடலாம்.
ஏனெனில் குருதேவரின் தெய்வத்தன்மையைப்பற்றி அவர் முதலில் பைரவி பிராம்மணியான யோகேசுவரியுடனும், பின்னர் கௌரி பண்டிதருடனும் விவாதித்தது பற்றி குருதேவர் கூறியுள்ளார்.
பைரவியைப் போலவே வைஷ்ணவசரணும் , குருதேவரின் மனத்திலும் உடலிலும் வைணவ நூல்கள் கூறுகின்ற மகா பாவனைக்குரிய அனைத்து அறிகுறிகளும் இருப்பதைக்கண்டார்.
அதனால் வியப்பில் ஆழ்ந்து,ஸ்ரீசைதன்யரே மீண்டும் குருதேவரின் உருவில் வந்துள்ளார் என்று பிராம்மணி கூறியதை ஒப்புக்கொண்டார்.
குருதேவரின் கூற்றின்படி, மதுர பாவனையில் குருதேவர் முழுமை பெற்றபின் 1865-ஆம் ஆண்டில் வைஷ்ணவசரண் அவரிடம் வந்திருக்கக்கூடும்.
1873-ஆம் ஆண்டு வரையிலும் அவ்வப்போது தட்சிணேசுவரத்திற்கு வந்து சென்றிருக்க வேண்டும்.
மேற்கூறிய அனுபவங்களைப்பெற்றபின் இறைவனின் திருவுளத்தால் குருதேவரின் உள்ளத்தில் ஓர் ஆவல் தீவிரமாக எழுந்தது.
அதாவது தமது யோகக் காட்சியில் கண்ட பக்தர்களைக்காண வேண்டும். தமது ஆன்ம சக்திகளை அவர்களுக்குக்கொடுக்க வேண்டும் என்று ஏங்கினார் குருதேவர்.அந்த ஆவலுக்கு எல்லையில்லை, பகற்பொழுதில் எப்படியோ ஆர்வத்தைக்கட்டுப்படுத்திக்கொள்வேன். உலகியல் ஆசைகள் கொண்ட மக்களின் பயனற்ற பேச்சுக்கள் விஷம் போல என்னை வதைக்கும் அப்பொதெல்லாம் பக்தர்கள் என்னிடம் வந்தால் அவர்களிடம் நான் கடவுளைப்பற்றி ப்பேசி என் மனத்தைச் சாந்தப்படுத்திக்கொள்வேன். என் ஆன்ம அனுபவங்களை அவர்களிடம் எடுத்துச்சொல்லி என் இதயச்சுமையைக்குறைத்துக் கொள்வேன்” என்றெல்லாம் எண்ணிக்கொள்வேன்.
இவ்வாறு எப்போதும் அவர்களின் வருகையைப்பற்றிய எண்ணமே என்னிடம் நிறைந்திருந்தது. யாருக்கு என்ன கொடுக்கவேண்டும், யாரிடம் என்ன பேசவேண்டும் என்றெல்லாம் என்னை நான் ஆயத்தப்படுத்திக்கொள்வேன். இப்படியெல்லாம் பகற்பொழுது கழிந்துவிடும். மாலை வந்துவிட்டால் என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். இன்னும் ஒரு நாள் சென்றுவிட்டதே, இன்னமும் யாரும் வரவில்லையே, என்ற எண்ணம் என்னுள் எழுந்து ஆர்ப்பரிக்கும்.
கோயில்களில் மணிகளும் சங்குகளும் ஒலிக்கும் போது நான் மதுரின் மாளிகை மேல்தளத்திற்குச்சென்றுவிடுவேன்.
என் இதயத்தில் எழும் ஆவலை அடக்க இயலாதவனாய் கண்களில் நீர் நிறைய, என் குழந்தைகளே, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?
வாருங்கள்! உங்களைப்பார்க்காமல் இனிமேல் என்னால் இருக்க முடியாது” என்று கதறுவேன். எனது அந்த வேதனைக்குரல் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்து அடங்கும்.குழந்தைகளைக் காண்பதற்காக ஒரு தாய் அத்தனை ஏக்கக் கதறல் எழுப்பியிருப்பாளா என்பது ஐயமே! பிரிந்த நண்பர்களிடமும், காதலர்களிடமும் கூட, ஒன்றுபட இத்தகைய ஒருவேட்கையும் பரபரப்பும் உண்டாகுமா என்பது ஐயத்திற்குரியதே! அத்தனை தாகம்! அத்தனை தவிப்பு! அதன் பின்னர் சில நாட்கள் கழித்து ஒருவர் பின் ஒருவராக பக்தர்கள் வரலாயினர்.
பக்தர்கள் தட்சிணேசுவரத்திற்கு வருவதற்கு முன் குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகள் நடந்தன.
இப்பகுதிக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இல்லாதால் அவற்றை இந்தப்பகுதியின் பிற்சேர்க்கையாகத் தருகிறோம்.
ஷோடசி பூஜைக்குப்பின்னர் பக்தர்கள் வரும் வரை குருதேவரின் வாழ்க்கையில் நடந்த குறிப்பிடத்தக்க நிக்ச்சிகள்
ஷோடசி பூஜை நிறைவுற்ற பின்னர் 1873- அக்டோபர் மாதம் அன்னை காமார்புகூருக்குத் திரும்பிய செய்தியை முன்னரே கூறியிருக்கிறோம். காமார்புகூருக்கு அவர் வந்த சிலநாட்களில் ராமேசுவரர் காலமானார்.
குருதேவரின் தந்தைவழி வந்த அனைவரின் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு முறையில் ஆன்மீகம் வெளிப்பட்டிருந்தது. இது தொடர்பாக ராமேசுவரரின் வாழ்க்கையில் நாங்கள் அறிந்த நிகழ்ச்சிகளை இப்போது குறிப்பிடுகிறோம்.
ராமேசுவரர் ஈகை உள்ளம் படைத்தவர். துறவிகளும் பக்கிரிகளும் வாசலில் வந்து ஏதேனும் கேட்டால் போதும், அந்தப் பொருள் வீட்டில் இருக்குமானால் அதை அப்படியே கொடுத்துவிடுவார்.
சமையல் பாத்திரம் வேண்டும் என்று ஒருவர் , செம்பு வேண்டுமென்று இன்னொருவர், போர்வை வேண்டுமென்று மற்றொருவர் , இவ்வாறு அவர்கள் கேட்கும்போது அவை வீட்டிலிருந்தால் எடுத்துக்கொடுத்துவிடுவார் என்று அவரது உறவினர்கள் கூறினர். இதற்கு யாராவது மறுப்புத் தெரிவித்தால் அவர், அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும், தடுக்காதீர்கள். இது போல எத்தனையோ நமக்குவரும், கவலை எதற்கு? என்று அமைதியாகக்கூறுவார். அவருக்குச் சிறிது சோதிட அறிவும் இருந்தது.
ராமேசுவரர் கடைசிமுறையாக தட்சிணேசுவரத்திலிருந்து சொந்தஊருக்குப் புறப்பட்ட போது, மீண்டும் அவர் தட்சிணேசுவரத்திற்குத் திரும்பி வரமாட்டார். என்பதை அறிந்திருந்த குருதேவர், பரசவ நிலையில் அவரிடம், நீ வீட்டிற்குப்போகிறாய், போ, ஆனால்உன் மனைவியுடன் சேராதே, சேர்ந்தால் நீ பிழைப்பது அரிது, என்று அறிவுறுத்தினார்.
இதைப்பற்றி குருதேவர் சொல்லியதை எங்களுள் ஒருவர் கேட்டிருக்கிறார்.
ராமேசுவரர் ஊருக்குத்திரும்பிச்சென்ற சில நாட்களில் அவருக்கு உடல்நிலை சரியில்லை. என்று செய்தி வந்தது. அப்போது குருதேவர் ஹிருதயரிடம் , ”நான் கூறியதை அவர் மதிக்கவில்லை. அவர் பிழைப்பதுசந்தேகம், என்று கூறினார். ஐந்தாறு நாட்களில் ராமேசுவரர் காலமானார்.
மகன் இறந்த செய்தி வயதான தாய்க்கு மிகவும் அதிர்ச்சியைத்தரக்கூடும் என குருதேவர் அஞ்சினார். அதனால் அவர் கோயிலுக்குச்சென்று அன்னை காளியை வழிபட்டு, அந்த முதிய தாயின் சோகத்தை நீக்குமாறு வேண்டிக்கொண்டார்.
பின்னர் தாயிடம் சென்று செய்தியை கூறி அவரை ஆறுதல் படுத்த நகபத்திற்குச்சென்றார். இந்தச் செய்தியைக்கேட்டால் ஒரேயடியாக மூர்ச்சையடைந்து விடுவார். அதற்குப் பின் அவரால் உயிர் வாழ முடியுமா என்பது கூட ஐயமே, என்றெல்லாம் எண்ணினேன். ஆனால் அங்கு நடந்ததோ முற்றிலும் வேறு. நான் செய்தியைக்கூறியதும் அவர் சிறிது வருத்தமுற்றார்.
பின்னர் நான் அவரைத்தேற்றுவதற்குப் பதிலாக , அவர் என்னைத்தேற்றத்தொடங்கி” இந்த உலகம் நிலையற்றது. எல்லாரும் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். அதற்கு வருந்துவது பயனற்றது” என்றெல்லாம் கூறலானார்.
தம்புராவின் சுருதியை உச்சத்திற்கு ஏற்றினாற்போல என் தாயின் மனதிடத்தையும் மிகவும் உச்சத்திற்கு ஏற்றி அருள் புரிந்திருந்தாள் அன்னை காளி. அதனால் உலகியல் கவலை எதுவும் அவரை அணுகவில்லை. இதைக்கண்ட நான் மீண்டும் மீண்டும் அன்னை காளியை வணங்கி என் கவலையை மறந்தேன்” என்று கூறினார் குருதேவர்.
தனது மரணத்தை ஐந்தாறு நாட்களுக்கு முன்பே ராமேசுவரர் அறிந்திருந்தார்.
அதைப்பற்றி உறவினர்களிடம் சொல்லி தகனத்திற்கும் இறுதிச்சடங்கிற்கும் வேண்டிய ஆயத்தங்களைச்செய்ய சொன்னார்.
வீட்டிற்கு முன்புறமிருந்த மாமரம் ஒன்று வெட்டப்படுவதைப் பார்த்த அவர், நல்லது, அது என் உடலை தகனம் செய்யப் பயன்படும் என்று சொன்னார்.
கடைசிநேரம் வரை அவர் ஸ்ரீராமரின் திருநாமத்தைச்சொல்லிக்கொண்டே இருந்தார்.
பின்னர் சுயநினைவை இழந்து, ஒரு சில வினாடிகளுள் உயிர் நீத்தார்.
இறப்பதற்கு முன் அவர் சற்றத்தாரிடம், தம் உடலை மயானத்தில் தகனம் செய்ய வேண்டாம் என்றும், அருகிலிருந்த சாலையில் செய்யும்படியும்கேட்டுக் கொண்டார். அதற்கான காரணத்தைக்கேட்டபோது அவர், அந்த சாலை வழியாக எத்தனையோ சாதுக்கள் நடந்து செல்கிறார்கள், அவர்களின் பாததூளி படுவதால் எனக்கு நல்ல கதி கிட்டும்” என்று கூறினார். ராமேசுவரர் நள்ளிரவில் காலமானார்.
அந்த கிராமத்தைச்சேர்ந்த கோபால் என்பவரும் ராமேசுவரரும் நீண்ட நாளைய நண்பர்கள், பின்வரும் நிகழ்ச்சி கோபால்கூறியது.
ராமேசுவரர் காலமான அதே நேரத்தில் கோபாலின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. யார் என்று கோபால் கேட்டபோது, நான் தான், ராமேசுவரன், கங்கை நீராடச்செல்கிறேன், வீட்டில் ஸ்ரீரகுவீரர் இருக்கிறார். நான் போவதால் அவரது பூஜை எந்த வகையிலும் தடைபடாமல் பார்த்துக்கொள் என்றுமறுமொழி வந்தது.
குரல்கேட்டுக் கதவைத் திறக்க கோபால் முயன்றபோது, மீண்டும் அதே குரல் , நண்பா, நான் உடலை நீத்துவிட்டேன். கதவைத்திறந்தாலும் நீ என்னைப்பார்க்க முடியாது என்று கூறியது.
இருப்பினும் கோபால் கதவைத்திறந்தார். அங்கு யாரும் இல்லை. உண்மையை அறிய கோபால் ராமேசுவரரின் வீட்டிற்குச்சென்றார். ராமேசுவரர் காலமாகிவிட்டிருந்தார்.
ராமேசுவரர் 1873-ஆம் ஆண்டில் இறுதியில் 48-ஆம் வயதில் காலமானார்.என்று அவரது மூத்த மகனான ராம்லால் கூறினார்.
தந்தையின் அஸ்தியைச்சேகரித்துக்கொண்டு கல்கத்தாவிற்கு அருகிலிருந்தவைத்யபாடி என்ற அடத்தில் அதனை கங்கையில் கரைத்தார் அவர்.
அங்கிருந்து தட்சிணேசுரத்திற்குகுருதேவரிடம் வர படகுமூலம் கங்கையைக்கடந்தார்.
கங்கையைக் கடக்கும் போது பாராக்பூரில் மதுர்பாபுவின் மனைவி ஜகதம்பாவின் சார்பில் அன்னபூரணி தேவிக்காகக் கட்டப்பட்ட கோயில் முற்றுப்பெறாமல் இருப்பதைப்பார்த்தார்.
அந்தக்கோயில் கட்டப்பட்டு 1875-ஏப்ரல் 12-ஆம் நாள் அதில் தேவியின் திருவுருவம் நிறுவப்பெற்றது. ராமேசுவரர் காலமானபின் ராம்லால் தட்சிணேசுவரக்கோயில் பூஜைப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
மதுரின் மறைவுக்குப்பின் கல்கத்தாவின் சிந்துரியா பட்டியைச்சேர்ந்த சம்புசரண் மல்லிக்குருதேவருடன் தொடர்பு கொண்டு, அவர் மீது அன்பும் மதிப்பும் கொண்டார்.
குருதேவரைக்காணும் முன்பு பிரம்ம சமாஜத்தில் சம்பு மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ,ஈகை உள்ளத்தின் காரணமாக அவர் கல்கத்தா மக்களிடம் பிரபலமாக இருந்தார்.
குருதேவரிடம் அவர் கொண்ட அன்பும் பக்தியும் நாளுக்கு நாள் வளர்ந்தது. சில வருடங்கள் அவரும் மதுர்பாபுவைப் போன்றே குருதேவருக்குப் பணிவிடை செய்யும் பேறு பெற்றார்.
குருதேவருக்கும் அன்னை சாரதாதேவிக்கும் ஏதாவது தேவைப்படுவதாக சம்பு அறிந்தால் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் அளித்து வந்தார். குருதேவரை சம்பு, குருஜி” என்று அழைப்பார்.
அதற்காகச் சிலவேளைகளில் குருதேவர் அவரைக்கடிந்து கொள்வதுண்டு, யார் யாருக்கு குரு? நீ தான் என் குரு என்று சொல்வார்.
அதனைப்பொருட்படுத்தாமல் வாழ்நாள் முழுவதும் அவரை குருஜி” என்றே அழைத்து வந்தார் சம்பு.
இவ்வாறு அழைத்ததிலிருந்து, குருதேவரின் தெய்வீகத்தொடர்பால், அவர் ஆன்மீக வாழ்வில் பெற்ற ஒளியையும் முன்னேறத்தையும் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
சம்புவின் மனைவியும் குருதேவரைக் கடவுளாகவே எண்ணி பக்தி செலுத்தினாள். அன்னை சாரதாதேவி தட்சிணேசுவரத்தில் தங்கியிருந்தால் செவ்வாய்க்கிழமை தோறும் அவரைத்தமது வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவரது புனித மலரடிகளை பதினாறு வகை உபசாரங்களுடன் வழிபடுவாள். அந்தப்பெண்மணி.
ஏறக்குறைய 1874-ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அன்னை சாரதாதேவி இரண்டாம் முறையாக தட்சிணேசுவரத்திற்கு வந்திருக்க கூடும். முன்பு போலவே அப்போதும் அவர், குருதேவரின் தாயுடன் நகபத்தில் தங்கியிருந்தார்.
அந்தச் சிறிய அறையில் வாழ்வது வசதிக்குறைவாக இருக்கும் என்பதை அனுமானித்த சம்பு, தட்சிணேசுவரக்கோயிலுக்கு அருகில் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு இடம்ஒன்றை வாங்கி, அந்த இடத்தில் வீடு கட்ட எண்ணினார்.
அந்தச் சமயத்தில் நேபாள அரசின் அலுவலரான கேப்டன் விசுவநாத உபாத்தியாயர் குருதேவரிடம் அடிக்கடி வந்து சென்றதுடன் அவரிடம் மிகுந்த பக்தியும் கொண்டிருந்தார். சம்பு வீடு கட்டப்பொகிறார் என்பதை அறிந்த அவர் அதற்கான மரத்தைத்தாமே அளிப்பதாகக்கூறினார்.
நேபாள அரசின் சால் மர விற்பனையை அவர் கவனித்து வந்தார். எனவே வீட்டிற்கான மரத்தை அளிப்பது அவருக்கு ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை.
பணி தொடங்கியதும் கங்கையின் மறுகரையிலிருந்த பேலூரிலுள்ள தமது மரத் தொழிற்சாலையிலிருந்து, மூன்று பெரிய சால் மரக்கட்டைகளை விசுவநாதர் அனுப்பிவைத்தார்.
அன்றிரவு கங்கையில் வெள்ளப்பெருக்கின் வேகம் மிகுந்திருந்ததால் அவற்றுள் ஒரு கட்டை அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதனால் மிகவும் அதிருப்தியுற்ற ஹிருதயர், அன்னையை ”துரதிஷ்டசாலி” என்று சொல்லும் அளவுக்குச்சென்றுவிட்டார். மரக்கட்டை கங்கையில் அடித்துச் செல்லப்பட்டதை அறிந்த கேப்டன் மேலும் ஒன்றை அனுப்பி வைத்தார்.
வீடு கட்டி முடிக்கப்பட்டது. அந்த வீட்டில் அன்னை சுமார் ஓராண்டு காலம் தங்கியிருந்தார். அன்னையுடன் தங்கவும் வீட்டு வேலைகளில் அவருக்கு உதவவும் ஒரு பெண் அமர்த்தப்பட்டாள்.
நாள்தோறும் அன்னை உணவு சமைத்து தட்சிணேசுவரக்கோயிலுக்கு எடுத்துச்சென்று குருதேவருக்கு அளித்து, அவர் உண்டபின் திரும்புவார். அன்னையின் மகி்ச்சிக்காகவும் அவருக்குப் பல விஷயங்களைக் கற்பிக்கவும் , குருதேவரும் அவ்வப்போது பகல் நேரங்களில் அந்த வீட்டிற்கு வந்து, சிறிது நேரம் தங்கிவிட்டுக்கோயிலுக்குத் திரும்புவார்.
இந்த நடைமுறையில் ஒரு நாள் மாறுதல் ஏற்பட்டது. அன்று பிற்பகலில் குருதேவர் அன்னையின் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் கடுமையான மழை பிடித்துக்கொண்டது.
நள்ளிரவுவரை விடவில்லை. குருதேவர் அங்கேயே தங்க நேரிட்டது. அன்னை அவருக்குச்சோறும் குழம்பும் தயார் செய்து உணவளித்தார்.
அன்னை அந்த வீட்டில் தங்கியிருந்தபோது அவருக்குக் கடுமையான வயிற்றுக்கடுப்பு நோய் தோன்றியது.
அன்னையை குணப்படுத்த சம்பு மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டார். பிரசாத் என்கின்ற மருத்துவரை அழைத்துவந்து சிகிச்சை அளித்தார்.
உடல் சிறிது தேறியதும் ஜெயராம்பாடிக்குச்சென்றார் அன்னை. அது 1876, அக்டோபர் மாதமாக இருக்கலாம். ஊருக்கு வந்து சேர்ந்ததும் மீண்டும் அந்தநோய் தோன்றிற்று. படிப்படியாக அது கடுமையாகி படுத்த படுக்கையானார் அன்னை .அதிலிருந்து அவர் மீள்வாரா என்று ஐயமுறும் அளவுக்கு நோய் கடுமையாகியது.
அன்னையின் தந்தை அப்போது இந்த உலகில் இல்லை. தாயும் சகோதரர்களும் தங்களால் இயன்றவரை கவனித்துக்கொண்டனர்.
அன்னையின் நோயைப்பற்றிக்கேள்வியுற்ற குருதேவர் ஹிருதயரிடம் ஹிருதூ, வெறுமனே இறக்கத்தான் அவள் பிறந்தாளா, மானிடப்பிறவியின் லட்சியத்தை அடையாமலேயே போய்விடுவாளா? என்று கூறி வருத்தப்பட்டார்.
எந்த வழியிலும் நோய் தீராததைக்கண்ட அன்னை, தேவியின் திருமுன்னர் ஹத்யா விரதம் மேற்கொள்ளத் தீர்மானித்தார். இதனை அறிந்தால் தாயும் சகோதரர்களும் தடுப்பார்கள் என்பது தெரிந்த அவர், அவர்கள் அறியாமல் சிம்மவாஹினி கோயிலுக்குச்சென்று அங்கு உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
ஆனால் தேவி கருணைகொண்டு நோய் நீங்குவதற்குரிய மருந்தை விரைவில் அறிவித்து விட்டாள்.
தேவி குறித்த மருந்தினை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே அன்னை நோய் நீங்கப்பெற்றார். படிப்படியாக உடம்பும் தேறியது.
இவ்வாறு அன்னை நோய் நீங்கப்பெற்றபின் அந்த வட்டார மக்கள் சிம்மவாஹினியை விழிப்புற்ற தேவதையாகக்கொண்டாடி வழிபடலாயினர்.
குருதேவருக்கும், அன்னைக்கும் ஏறக்குறைய நான்காண்டு காலம் சேவை செய்து வந்த சம்பு நோய்வாய்பட்டார்.
அப்போது ஒருநாள் குருதேவர் அவரைப்பார்க்கச்சென்றார். பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, சம்புவின் விளக்கில் எண்ணெய் இல்லை, என்றுகூறினார்.
அவரது வாக்கு பொய்க்கவில்லை. சில நாட்களில் நீரழிவு நோய் முற்றிக்காலமானார் சம்பு.
சம்புபாபு மிகுந்த ஈகைப் பண்பும் தைரியமும் பக்தியும் கொண்டவர். நோயுற்றிருந்தாலும் அவரது உற்சாகம் ஒருபோதும் குறைந்ததில்லை.
காலமாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் அவர் ஹிருதயரிடம் ”சாவதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலை இல்லை. நான் என் மூட்டை முடிச்சுக்களைக் கட்டி வைத்துக்கொண்டு இறுதிப்
பயணத்திற்கு ஆயத்தமாகவே இருக்கிறேன். என்று உற்சாகத்துடன் கூறினார்.
சம்பு பாபு அறிமுகமாவதற்குப் பலகாலம் முன்பே குருதேவர் பரவச நிலையில் இருந்தபோது அன்னைகாளி சம்புவை அவரது இரண்டாவது பொறுப்பாளராகக் காட்டியிருந்தாள். சம்புவைப்பார்த்த உடன் அன்னை காளி காட்டியவரே இவர் என்று அடையாளம் கண்டு கொண்டார் குருதேவர்.
தாயின் மறைவு
அன்னை சாரதாதேவி நோய்வாய்ப்பட்டு ஜெயராம்பாடி சென்றிருந்தபோது குருதேவரின் வாழ்க்கையில் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
1876-ஆம் ஆண்டு அவரது தாய் சந்திர மணி தமது எண்பத்தைந்தாம் வயதில் காலமானார்.
அன்று குருதேவரின் பிறந்தநாள் என்று தெரியவருகிறது.
அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னரே, முதுமையின் காரணமாக அவரது மனமும் புலன்களும் பெரிதும் வலுவிழந்திருந்தன.
அவர் காலமான சம்பவம் பற்றி ஹிருதயர் கூறியதை இங்கு தருகிறோம்.
சந்திரமணிதேவி காலமாவதற்கு நான்கு நாட்களுக்கு முன், ஹிருதயர் விடுப்பு எடுத்துக்கொண்டு வீடு செல்லவிருந்தார்.
ஆனால் இன்னதென்று கூற இயலாத ஏதோ அச்சத்தால் அவரது மனம் அமைதியிழந்து தவித்தது.
குருதேவரைத் தனியாக விட்டுச் செல்ல மனம் சிறிதும் இடம் கொடுக்கவில்லை. இதனை குருதேவரிடம் தெரிவித்தபோது அவர், அப்படியானால் போவது நல்லதல்ல என்று கூறினார்.
ஹிருதயரும் வீட்டுக்குப்போகின்ற எண்ணத்தை விட்டுவிட்டார். மூன்று நாட்கள் அமைதியாகக் கழிந்தன.
குருதேவர் தினமும் சிறிது நேரம்தாயிடம் சென்று அவருக்குத் தம்மால் முடிந்த சேவைகளைச்செய்து வருவதுண்டு.
ஹிருதயரும் சேவை செய்து வந்தார். பணிப்பெண்ணான காளியின் தாய், அந்த மூதாட்டியுடன் பகல் முழுவதும் இருந்து வேண்டியவற்றைக்கவனித்துக் கொண்டாள்.
ஏனோ ஹிருதயரைக் கண்டால் சந்திரமணிக்குப் பிடிப்பதில்லை. அட்சயனின் மரணத்திற்குப் பின் தான் அவரிடம் இத்தகைய மாற்றம் ஏற்பட்டது.
அட்சயனைக்கொன்றது ஹிருதயனே, அது மட்டுமின்றி குருதேவரையும் அவரது மனைவியையும் கூட அவன் கொல்ல முயன்று வருகிறான் என்ற எண்ணம் எப்படியோ அந்த மூதாட்டியிடம் தோன்றிவிட்டிருந்தது.
சிலவேளைகளில் அவர் குருதேவரிடம் கூட, ஹிருதயன் சொல்வதை நம்பாதே” என்று கூறி எச்சரிப்பதுண்டு.
முதுமையின் காரணமாகத்தோன்றுகின்ற மனக்குழப்பம் அவரிடம் பல நேரங்களில் வெளிப்பட்டன.
எடுத்துக்காட்டாகக் கீழ் கண்ட நிகழ்ச்சியைக்கூறலாம்.
ஆலம்பஜார் சணல் ஆலை தட்சிணேசுவரத்தோட்டத்திற்கு அருகில் இருந்தது.
அந்த ஆலையின் தொழிலாளர்களுக்கு நண்பகலில் அரைமணிநேர ஓய்வு வேளை முடிவதை அறிவிக்கச் சங்கொலி எழுப்பப்படும்.ஆனால் இந்தச் சங்கொலி வைகுண்டத்தில் எழுப்பப்படுகின்ற சங்கநாதமே என்று கருதினார் சந்திராதேவி. அந்தச் சங்கொலி கேட்கும் வரை அவர் உணவு கொள்ளமாட்டார்.
அவரிடம் சொன்னால், இப்போதே நான் சாப்பிடுவதா? லட்சுமி நாராயணருக்கு இன்னமும் நைவேத்தியம் நடைபெறவில்லையே! வைகுண்டத்தின் சங்கொலி இன்னும் கேட்கவில்லை. அதற்கு முன் ஒருவர் சாப்பிடலாமா? என்பார்.
விடுமுறை நாட்களில் அந்த ஆலையில் சங்கொலி கேட்காது. அந்த நாட்களில் அவரை உண்ணச் செய்வது பிரம்மப் பிரயத்தனம் தான்.
அதற்காக குருதேவரும் ஹிருதயரும் பற்பல வழிகளைக் கையாள வேண்டியிருக்கும்.
நான்காம் நாள் வந்தது. அன்றும் மூதாட்டியிடம் உடல்நலக்குறைவிற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அன்று இருள் கவிந்த பின் குருதேவர் அவரிடம் சென்று கடந்தகால நிகழ்ச்சிகளைப் பற்றியெல்லாம் கூறி அவருக்கு மகிழ்ச்சியூட்டினார்.
அவரை உறங்கச் செய்துவிட்டுத் தம் அறைக்குத் திரும்பிய போது நள்ளிரவு ஆகிவிட்டிருந்தது.
அடுத்த நாள் காலை எட்டு மணி. சந்திராதேவி வெளியில் வரவில்லை.நகபத்தின் முதல் மாடியிலிருந்த அந்த அறைக்கதவின் அருகில் சென்று பலமுறை அழைத்துப் பார்த்தாள்.
காளியின் தாய். மறுமொழி ஏதும் இல்லை.ஐயத்துடன் அவள் கதவின் மீது காதை வைத்து உற்றுக்கேட்டபோது, அந்த மூதாட்டியின் தொண்டையிலிருந்து ”கரகர” என்ற ஒலி வந்து கொண்டிருந்தது.
உடனே விரைந்து சென்று குருதேவரிடமும், ஹிருதயரிடமும் சொன்னாள். ஹிருதயர் சென்று கதவின் உட்புறத்தாழைத்திறந்து பார்த்தபோது, நினைவிழந்த நிலையில் படுத்திருந்தார் சந்திராதேவி. உடனே ஆயுர்வேத மருந்து ஒன்றைக்கொண்டு வந்து புகட்டியதுடன், பாலும் கங்கை நீரும் கலந்து துளித்துளியாக அருந்துமாறு செய்தார்.
இந்த நிலையிலேயே மூன்று நாட்கள் சென்றன. இறுதிநேரம் வந்தது. புனித கங்கைக்கு அவரை எடுத்துச்சென்றனர். அவரது திருவடிகளில் மலர்களும் சந்தணமும் துளசி இலைகளும் சமர்ப்பித்தார்.
குருதேவர் துறவி அவர் இறுதிச் சடங்குகள் செய்யக்கூடாது. ஆகையால் ராம்லால் தகனக் கிரியைகளைச்செய்தார்.
தீட்டு நாட்கள் கழிந்த பின்னர் குருதேவரின் கட்டளைப்படி ராம்லால், சாஸ்திர விதிகளுக்கு இணங்க பசுவை தானமளித்து சிராத்தச் சடங்கை நிறைவு செய்தார்.
சாஸ்திரங்கள் துறவு நெறிக்கு அளித்துள்ள உயர்ந்த இடத்தைப்போற்றிப்பேணிய குருதேவர் தாயின் ஈமக்கிரியை களிலும் அதைத்தொடர்கின்ற எந்த சடங்குகளிலும் பங்கெடுக்கவில்லை.
தீட்டு முதலானவற்றையும் கடைபிடிக்கவில்லை.
இதனால் தாய்க்குச்செய்யவேண்டிய கடமைகளை ஒருவேளை புறக்கணிக்கிறோமோ என்று எண்ணிய அவர், ஒருநாள் தாய்க்குத் தர்பணம் செய்ய ஆயத்தமானார்.
ஆனால் கைகளில் நீரை எடுத்ததுதான் தாமதம், அவரை ஒருவித பரவச நிலை ஆட்கொண்டது. கைவிரல்கள் உணர்விழந்தன. இணைந்திருந்த விரல்கள் தாமாகப் பிரிந்தன. தர்ப்பணம் செய்ய எடுத்த நீர் முழுவதும் கீழே சிந்தியது. பலமுறை முயன்றும் அவரால் தர்பணம் செய்ய இயலவில்லை.
மேலுலகம் சென்ற தாயிடம் மனவேதனையுடன் அழுதவாறே தம் இயலாமையை முறையிட்டார்.
கர்மங்கள் புரிகின்ற நிலையைக்கடந்த ஒருவரிடம் மட்டுமே இத்தகைய உயர்நிலையைக்காண இயலும்.
அதாவது உயர் ஆன்மீக நிலையை அடைந்து விட்ட ஒருவரிடமிருந்து செயல்கள் இயல்பாகக் கழன்று விடுகின்றன என்றும் இத்தகைய ஒருவர் சாஸ்திரங்கள் கூறுகின்ற நியமங்களைக்கடைபிடிக்காவிட்டாலும் அவரைப்பாவம் அனுகுவதில்லை என்றும் பண்டிதர் ஒருவர் குருதேவரிடம் பின்னாளில் கூறினார்.
சந்திரமணி காலமாவதற்கு ஓராண்டிற்கு முன்னர் அம்பிகையின் திருவுளப்படி , குருதேவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியொன்று நடைபெற்றது.
இந்திய பிரம்ம சமாஜத் தலைவராக இருந்த கேசவசந்திர சேன் என்பவரை அவர் சந்தித்ததே அந்த நிகழ்ச்சி.
ஒருநாள் குருதேவர் பரவச நிலையில் இருந்தபோது அதற்கான அருளாணையை அவர் அன்னையிடமிருந்து பெற்றார்.
அது 1875-மார்ச் மாதம், கல்கத்தாவிற்கு வடக்கே சில மைல் தொலைவில் பெல்கேரியா என்றஇடத்தில் ஜெயகோபால் என்பவரின் தோட்ட வீட்டில் கேசவர் தம் சீடர்களுடன் ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருப்பதாக குருதேவர் அறிந்தார். உடனே ஹிருதயருடன் அவரைக்காணப் புறப்பட்டார்.
ஹிருதயர் கூறினார், கேப்டன் விசுவநாதரின் வண்டியில் நாங்கள் சென்றோம். அந்த இடத்தை அடையும் போது பிற்பகல் ஏறக்குறைய ஒரு மணி.குருதேவர் அன்று சிவப்புக் கரையிட்ட வேட்டி கட்டியிருந்தார். வேட்டியின் கீழ்ப்பகுதி மடிப்புகளாக மேலே தூக்கப்பட்டு இடது தோளின் மீது போடப்பட்டிருந்தது. அந்த மடிப்புகள் அவரது முதுகில் அசைந்து கொண்டிருந்தன.
வண்டியை விட்ட இறங்கிய ஹிருதயரும் கேசவரும் அவரது சீடர்களும் தோட்டத்தின் குளக்கரையில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
நேராக கேசவரை அணுகி, என் மாமா இறைவனின் பெருமையையும் புகழையும் பாடுவதையும் பேசுவதையும் கேட்பதில் பெரிதும் விருப்பம் கொண்டவர். அவற்றைக்கேட்கும் போதே சமாதி நிலையை அடைந்துவிடுவார்.
தங்களைப்பற்றிக்கேள்விப்பட்ட அவர் தாங்கள் இறைவனைப் பற்றிப் பேசுவதைக்கேட்பதற்காக இங்கே வந்துள்ளார்.
தாங்கள் அனுமதித்தால் அவரை நான் இங்கு அழைத்து வருகிறேன் என்று கூறினார்.கேசவரும் அதற்கு இசைந்தார்.
ஹிருதயர் குருதேவரிடம் சென்று அவர் வண்டியிலிருந்து இறங்குவதற்கு உதவி செய்து அவரைக்கேசவரிடம் அழைத்துச்சென்றார்.
கேசவரும் பிறரும் குருதேவரைக்காண மிகவும் ஆவலோடு இருந்தனர். அவரைக் கண்டபோதோ அவர் ஒரு சாதாரண மனிதர் தான் என்ற முடிவுக்கு வந்தனர்.
குருதேவர் கேசவரிடம் சென்று, ஐயா, நீங்கள் அனைவரும் கடவுளின் காட்சி கிடைக்கப்பெற்றவர்களாமே,அந்தக் காட்சியின் தன்மையை அறிய விரும்பியே நான் உங்களிடம் வந்துள்ளேன். என்றார்.
இவ்வாறு உரையாடல் தொடங்கிற்று. குருதேவர் கேட்டதற்குக் கேசவர் என்ன சொன்னார் என்பது தெரியாது ஆனால் அன்று குருதேவர், ராமபிரசாதர் இயற்றிய ”அன்பே உருவாம்” அன்னை காளியை அறிந்தவர் யாரோ உலகந்தனிலே, ஆறாம் வேத தரிசனம் எவையும் அவளை விளக்கும் திறனற்றனவே........ என்ற பாடலைப் பாடியவாறே சமாதியில் ஆழ்ந்துவிட்டார் என்று ஹிருதயர் கூறினார்.
குருதேவரின் பரவச நிலையைக் கேசவரும் பிறரம் ஓர் உயர்ந்த ஆன்மீக நிலை என்று கருதவில்லை. அது வெறும் நடிப்புஅல்லது மூளைக்கோளாறு என்றே எண்ணினார். குருதேவரைப் புறநினைவிற்குக் கொண்டு வர ஹிருதயர் அவரது செவிகளில் பிரணவத்தை ஓதினார்.
பிரணவ மந்திரம் செவிகளில் புகுந்ததும் குருதேவரின் முகத்தில் புன்னகை அரும்பி மலர்ந்தது.
ஓரளவு புறநினைவு பெற்றபின் அவர் மிக உயர்ந்த ஆன்மீகக் கருத்துக்களை மிகவும் எளிய மொழியில் சாதாரண எடுத்துக்காட்டுகளுடன் விளக்கத் தொடங்கினார்.
அனைவரும் வியப்பு மேலிட குருதேவரின் முகத்தையேபார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
நேரம் சென்று கொண்டே இருந்தது. குளிப்பதற்கும் உண்பதற்குமான நேரம் கடந்து, அடுத்த வழிபாட்டிற்கான நேரமும் நெருங்கிவிட்டது. அதனை யாரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை.
அவர்களின் நிலையைக்கண்ட குருதேவர், பசுமந்தையுள் வேறு ஏதாவது விலங்கு புகுந்தால் எல்லா பசுக்களும் சேர்ந்து அதனைக்கொல்ல முயற்சிக்கும்.ஆனால் நுழைந்தது ஒரு பசுவாக இருக்கட்டும், எல்லப் பசுக்களும் அதனை அன்புடன் நெருங்கி வாஞ்சையுடன், நக்கிக்கொடுக்கும். நம் நிலையும் இன்று அப்படித்தான் உள்ளது. என்றார்.
பின்னர் கேசவரிடம்” உங்கள் வால் விழுந்து விட்டது” என்று சொன்னார். அதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளாத கேசவரின் சீடர்கள் ஆத்திரம் கொண்டனர்.
குருதேவர் தாம் கூறியதன் உட்பொருளை விளக்கி அவர்களின் சினத்தைப்போக்கிய துடன் தம்பால் கவர்ந்தும் விட்டார்.
இதோ பாருங்கள் வால் இருக்கும் வரை தவளை நீரினுள் மட்டும் தான் வாழமுடியும், நிலத்திற்கு வரமுடியாது. வால் விழுந்த பின்னரே நீரிலும் நிலத்திலும் அதனால் வாழ முடிகின்றது. அதைப்போலவே மனிதனுக்கும் அறியாமை என்ற வால் இருக்கும் வரை அவனால் உலகியல் வாழ்க்கை என்ற நீரில் மட்டுமே வாழ முடியும். அறியாமை வால் மறையும்போது இவ்வுலகிலும் சச்சிதானந்தப்பேருலுகிலும் வாழமுடியும்.
கேசவரே, உங்கள் மனம் தற்போது அந்த நிலையை அடைந்துவிட்டது. நீங்கள் இந்த உலகிலும் சச்சிதானந்த உலகிலும் வாழமுடியும் என்று சொன்னார்.
இவ்வாறுபல கருத்துக்களைப் பற்றி நீண்ட நேர உரையாடலுக்குப்பின் குருதேவர் தட்சிணேசுவரம் திரும்பினார்.
குருதேவரைச் சந்தித்ததிலிருந்தே கேசவரின் மனம் அவரிடம் மிகவும் ஈடுபாடு கொண்டது. குருதேவரின் தெய்வீக கூட்டுறவு தமக்குக் கிடைத்ததைத் தாம் பெற்ற பேறாக வும் பெருமையாகவும் கேசவர் கருதினார்.
குருதேவரைச் சந்திப்பதற்காக அவர் அடிக்கடி தட்சிணேசுவத்திற்குச் சென்று வந்ததுடன், அவ்வப்போது கல்கத்தாவிலிருந்த கமல்குடீர் என்ற தன் வீட்டிற்கும் அழைத்துச்செல்வதுண்டு.
ஒருவரையொருவர் சில நாட்கள் பார்க்காமல் இருந்தால் கூடக் கவலையடையும் அளவுக்குக் கேசவருக்கும் குருதேவருக்கும் இடையில் உறவு ஆழமாயிற்று.
ஒருவரையொருவர் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் வரும் போது குருதேவர் கல்கத்தாவிற்குச் செல்வார். அல்லது கேசவர் தட்சிணேசுவரத்திற்கு வருவார்.
பிரம்மசமாஜத்தின் ஆண்டு விழாவில் ஒரு பகுதியாக கேசவர் தன் நண்பர்களுடன் சென்று குருதேவருடன் பேசிக்கொண்டிருப்பதை அல்லது அவரை அழைத்துவந்து நாள் முழுவதம் அவருடன் அளவளாவுவதை வழக்கப்படுத்திக்கொண்டார்.சென்றபடியே அவரது அமுத மொழிகளைக்கேட்டு மகிழ்ந்ததுண்டு.
கேசவர் குருதேவரைப்பார்ப்பதற்கு என்றுமே வெறுங்கையுடன் சென்றதில்லை. சாஸ்திரவிதிகளின் படி, பழம், முதலானவற்றைக்கொண்டு வந்து குருதேவரின் முன் வைத்து வணங்கி, பணிவான சீடர் போல் அவரது திருவடிகளுக்கு அருகில் அமர்ந்து பேசுவார். ஒரு சமயம் குருதேவர் அவரிடம் கேலியாக கேசவரே, நீங்கள் உங்கள் சொற்பொழிவுரையால் பலரைக் கவர்கிறீர்களே? இங்கும் ஏன் ஏதேனும் பேசக்கூடாது? என்று கேட்டார்.
அப்போது கேசவர் பணிவுடன், ”ஐயா” கொல்லன் தெருவில் ஊசி விற்பதா? நீங்கள் சொல்லுங்கள். நான் கேட்கிறேன். உங்கள் சொற்கள் ஓரிரண்டை நான் மக்களிடம் சொன்னாலே போதும், அவற்றால் ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். என்று சொன்னார்.
தட்சிணேசுவரத்தில் ஒரு நாள் குருதேவர் கேசவரிடம் பிரம்மத்தை ஏற்றுக்கொள்பவர் பிரம்ம சக்தியையும் ஏற்கவேண்டும்.பிரம்மமும் அதன் சக்தியும் என்றென்றும் ஒன்றே என்பதை விளக்கினார். கேசவரும் இதனை ஏற்றுக் கொண்டார். அதன் பின் பிரம்மத்தையும் அதன் சக்தியையும் எவ்வாறு பிரிக்க இயலாதோ, அதே போல பாகவதம் (சாஸ்திரங்கள்) பக்தன், பகவான், ஆகிய மூன்றும் பிரிக்க முடியாதவை. என்றென்றும் இணைபிரியாதவை, பாகவதம் பக்தன் பகவான் மூன்றும் ஒன்றே,ஒன்றே மூன்றும் என்பதை விளக்கினார்.
கேசவர் இதனையும் புரிந்து ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் குருகிருஷ்ணர், வைஷ்ணவர்(பக்தர்) மூவரும் ஒருவரே, ஒருவரே மூவராகவும் உள்ளனர்.இதனை இப்போது விளக்குகிறேன் என்று கூறி மேலும் விளக்கினார்.
கேசவர் இதைக்கேட்டு சற்று நேரம் சிந்தனையில்ஆழ்ந்தார். அவர் மனத்தில் என்ன தோன்றியதோ நமக்குத்தெரியாது. பின்னர் மிகுந்த பணிவுடன்,ஐயா,நீங்கள் முன்னர் சொன்னவற்றை விட அதிகமாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.
ஆதலால் இது பற்றி ய பேச்சைத் தொடர்வது அவசியம் இல்லையென்று கருதுகிறேன், என்று கூறினார்.
அதற்கு, குருதேவர் , மிகவும் நல்லது இத்துடன் முடித்துக்கொள்வோம் என்றார். மேலைநாட்டுக்கொள்கைகளாலும் கருத்துக்களாலும் கவரப்பட்ட கேசவரின் மனம் குருதேவரின் தெய்வீகத் தொடர்பால் தெளிவு பெற்றது .
நாளாக நாளாக வேத நெறி காட்டும் கருத்துக்களை நன்கு புரிந்து கொண்டு அவர் சாதனையில் மூழ்கலானார். அவரது கருத்துக்களில் படிப்படியாக தோன்றிய மாற்றம் இதனை நமக்கு விளக்குகிறது.
துன்பம் வந்தாலன்றி மனிதமனம் உலகப் பற்றுக்களிலிருந்து விடுபட்டு கடவுளிடம் செல்லாது. குருதேவருடன் தொடர்பு ஏற்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின் கேசவர் தன் மகளை கூச்பிகார் இளவரசருக்குத் திருமணம் செய்துவைத்தார்.
இந்தத் திருமணம் அவருக்குப்பெரும் அதிர்ச்சியைத் தருவதாக அமைந்து விட்டது. இந்தத் திருமணம் பிரம்ம சமாஜத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமாஜம் இரண்டாகப் பிரிந்தது.கேசவரை எதிர்த்தவர்கள் தனியாகப் பிரிந்து சாதாரண பிரம்ம சமாஜம்” என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை நிறுவினர்.
அற்ப விஷயத்திற்காக இரு பிரிவுகளும் பூசலில் இறங்கியிருப்பது குறித்து குருதேவர் மிகவும் அதிர்ச்சியுற்றார். திருமணத்திற்குரிய பெண்களின் வயதை நிர்ணயிக்கின்ற பிரம்ம சமாஜத்தின் சட்டதிட்டங்களைப் பற்றிக்கேள்வியுற்ற அவர், பிறப்பு, இறப்பு, திருமணம் இவையெல்லாம் முற்றிலும் இறைவனின் திருவுளப்படி நடப்பவை. அவற்றைக் கட்டுப்படுத்திச் சட்ட திட்டங்களுக்குள் கொண்டுவர இயலாது. அதனை வரையறுக்கக் கேசவர் ஏன் முன்றார்? என்று கூறினார்.
கூச்பிகார் திருமணத்தைப்பற்றிக் கூறி யாராவது கேசவரைக் கண்டித்து பேசத் தொடங்கினால் குருதேவர் , அதற்கு கேசவரை எவ்வாறு குறை கூற முடியும்? அவர் இல்லறத்தில் இருப்பவர்.பிள்ளைகளுக்கு நல்லது என்று தெரிவதை அவர் செய்யாமலிருக்க முடியுமா? குடும்பப்பொறுப்பு என்ற பாரத்தை சுமந்து கொண்டிருக்கும் ஒருவர் நற்பண்பு என்ற பாதையை விட்டுவிலகாமல் செய்யும் செயலை எவ்வாறு கண்டிக்க இயலும்? எந்த வகையிலும் சமயத்திற்கோ நீதிக்கொ முரண்பட்டு கேசவர் எதையும் செய்யவில்லை. ஒரு நல்ல தந்தையின் கடமையை அவர் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும், என்று கூறுவார்.
இல்லற தர்மம் என்ற நோக்கில் குருதேவர் எப்போதுமே கேசவரின் செயலைக் கண்டனத்திற்குரிய ஒன்றாகக் கருதவில்லை. கூச்பிகார் திருமண நிகழ்ச்சியினால் விளைந்த அதிர்ச்சியின் காரணமாகக் கேசவரின் மனம் அகமுகப்பட்டு ஆன்மீக நெறியில் செல்லத்தொடங்கிற்று. இதில் எவ்வித ஐயமும் இல்லை.
குருதேவரின் பேரன்பைப்பெற்ற போதிலும் அவரைப் பலமுறை பார்க்கின்ற பேறு பெற்றிருந்த போதிலும், மேலைநாட்டுக் கருத்துக்களில் தோய்ந்திருந்த கேசவர் குருதேவரை முழுமையாகப் புரிந்து கொண்டாரா என்பது ஐயத்திற்குரியதே.
ஏனெனில் ஒரு புறம் அவர் குருதேவரை ஆன்மீகத்தின் திருவுருவமாகக் கருதி அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று தம் படுக்கையறை உணவறை, தாம் தனியே அமர்ந்து பிரம்ம சமாஜத்தின் நன்மையைப் பற்றிச் சிந்திக்கும் இடம் ஆகியவற்றைக் காண்பித்து, தாம் எங்கிருந்தாலும் தம் மனம் கடவுளைப் பற்றி ச் சிந்திக்கவும் உலகப் பொருட்களை மறக்கவும் அருள்புரியுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் தாம் தியானம் செய்யும் இடத்திற்கு குருதேவரை அழைத்துச்சென்று அவரது திருவடிகளில் மலர்களைச் சமர்பித்து வணங்கினார்.
தட்சிணேசுவரத்திற்கு அவர் வரும் போதெல்லாம் குருதேவரை (நவ) விதானத்திற்கு வெற்றியுண்டாகுக! என்று கூறி வணங்குவார்.
அதே வேளையில் மறுபடியும், குருதேவர் கூறுகின்ற ”எல்லா மதங்களும் உண்மையே” எத்தனை மதங்களோ அத்தனை வழிகள் போன்ற கருத்துக்களை முழுவதம் ஏற்றுக்கொள்ள கேசவரின் மனம் இடம் கொடுக்கவில்லை.
இதற்குப் பதிலாக, அவர் ஒவ்வொரு மதத்திலிருந்தும் சாரத்தை எடுத்துக்கொண்டு பயனற்ற கருத்துக்களை நீக்கி ”நவ விதானம்” என்ற புதிய நெறியை உருவாக்க முயன்றார்.
கேசவருக்கும் குருதேவருக்கும் தொடர்பு ஏற்பட்ட சிறிது காலத்திற்குப் பின்னரே இது நடைமுறைக்கு வந்ததால் குருதேவரின் சர்வசமய சமரசக் கருத்துக்களில் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டு அதனைக்கேசவர் பரப்பினார் என்று எண்ணத் தோன்றுகிறது.
மேலைநாட்டுக் கல்வி, பண்பாடு ஆகியவற்றின் ஆற்றல், மிக்க அலைகள் இந்தியாவுக்குள் வந்து, அதன் ஆன்மீக, சமுதாயக் கருத்துக்களில் அடியோடு மாறுதலை ஏற்படுத்தத் தொடங்கியபோது, இந்தியாவின் திறமைமிக்க ஒவ்வொருவரும் மேலை, கீழை நாடுகளின் கல்வி, பண்பாடு ஆகியவற்றுக்கிடையே ஓர் ஒருமைப்பாட்டினைக்கொண்டுவர முயற்சித்தனர்.
வங்கத்தின் ராம்மோகன் ராய்,மகரிஷி தேவேந்திரநாதர் , கேசவர் ஆகியோர் இதற்காக முயன்றதைப்போல், நாட்டின் பிற பகுதிகளிலும் ஆன்றோர்கள் தொன்றி இதற்கான பணிகளில்ஈடுபட்டனர்.
ஆனால் குருதேவருக்கு முன் யாராலும் இதனை முழுமையாகச் சாதிக்க முடியவில்லை.
-
குருதேவர் இந்தியாவின் அனைத்து மதங்களிலும் சாதனைப்புரிந்து வெற்றி கண்டதன் மூலம் இந்தியாவின் வீழ்ச்சிக்கு அதன் சமயம் காரணம் அல்ல. அதற்கு வேறு காரணம் இருக்க வேண்டும். என்பதைக் கண்டறிந்தார்.
இந்தியாவின் சமூகஅமைப்பு, வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு அனைத்தும் ஆன்மீகத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் ஆன்மீகமே பழங்காலத்தில் அதற்குப் பெருமையும் செழிப்பும் சேர்த்தது. அந்த ஆற்றல் இன்றும் சிதைவுறாமல் அப்படியே இருக்கின்றது. நாமும் நம் முயற்சிகளையும் பணிகளையும் ஆன்மீகத்தின் அடிப்படையில் மேற்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இல்லையென்றால் தோல்விதான் என்பதையும் உணர்ந்தார்.
ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வை குருதேவர் தாமே வாழ்ந்து காட்டி, மனித குலத்திற்கு அதனை ஒரு முன்மாதிரியாக வைத்துள்ளார். உலகியல் வாழ்வை எவ்வாறு ஆன்மீக வாழ்வாக மாற்றுவது, வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் மதத்தை எப்படி அடிப்படையாகக் கொள்வது என்பதனை அவர் மேலைநாட்டுக் கருத்துக்களால் கவரப் பட்டிருந்த தம் சீடர்களுக்கு குறிப்பாக சுவாமி விவேகானந்தருக்கு ஆன்மீக சக்தியைச்செலுத்தி உணர வைத்தார்.
இந்தியாவில் அந்தக் காலகட்டத்தில் இருந்த சிக்கலான பிரச்சனைக்கு இவ்வாறு தீர்வு கண்டார் குருதேவர்.
பல்வேறு சமய சாதனைகள் புரிந்து அவற்றில் முழுமை பெற்று அவை ஒவ்வொன்றும் உண்மையானவை என்பதை நிறுவியது போலவே, இந்து சமயத்தின் உட்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் சாதனைகள் செய்து, அவை ஒவ்வொன்றும் உண்மையானவை என நிரூபித்து, அவற்றிற்கு இடையே இருந்த பசல்களை நீக்கினார். இவ்வாறு பழங்காலத்தில் நம் தேசியத்திற்கு உண்மையான அடிப்படையாக இருந்த, எதிர்காலத்தில் அடிப்படையாக அமைய இருந்த ஆன்மீக வாழ்வை அவர் வாழ்ந்து காட்டினார்.
-
குருதேவருக்குக் கேசவரிடம் தனிப்பட்ட அன்பு இருந்தது. 1884-ஆம் ஆண்டு கேசவர் காலமானபோது குருதேவர் அடைந்த மனவருத்தத்திலிருந்து இதனை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
அதைப் பற்றி அறிந்ததும் மூன்று நாட்கள் என்னால் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவே முடியவில்லை. என் அங்கங்களில் ஒன்று செயலிழந்து விட்டது போல் உணர்ந்தேன் என்று கூறினார் குருதேவர்.
மந்திர சக்திபோல் மனத்தைக் கவர்ந்திழுத்து உருகச் செய்வதாக ஸ்ரீசைதன்யரின் சங்கீர்த்தனத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் ஒரு முறை குருதேவரிடம் எழுந்தது. அவரது ஆவலை அன்னை காளி கீழ்கண்டவாறு நிறைவேற்றி வைத்தாள்.
குருதேவர் தம் அறைக்கு வெளியே நின்றிருந்தார்.அப்போது சங்கீர்த்தனத்தின் இனிய நாத அலைகள் பஞ்சவடியிலிருந்து எழுந்து தட்சிணேசுவரத்தோட்டத்தில் மிதந்து, முக்கிய வாசல் வழியாகத் தவழ்ந்து, மரங்களுக்கிடையில் கரைந்து மறைவதை உணர்ந்தார்.அந்தத்திசை நோக்கித் திரும்பினார். அங்கே நவத்வீபத்தின் முழுநிலவான ஸ்ரீசைதன்யர் தம்மை மறந்து பாடியவாறே மெல்ல ஆடிக்கொண்டு, இருபுறமும் நித்யானந்தரும் அத்வைதரும் நடந்துவர, ஏராளமான பக்தர்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தார்.
அனைவரும் பக்திப்பெருக்கில் ஆழ்ந்திருந்தனர். சிலர் அருள் வெள்ளத்தில் மூழ்கி தம் நினைவிழந்த நிலையில் இருந்தனர். சிலர் பரவச நிலையில்ஆடிக்கொண்டிருந்தனர்.
எத்தனையோ பேர் எண்ண இயலாத அளவுக்கு பக்தர்கள் திரளாக வந்து கொண்டிருந்தனர். அற்புதமான அந்த சங்கீர்த்தன கூட்டத்தில் கண்ட சிலருடைய முகங்கள் குருதேவரின் மனத்திரையில் ஆழமாக ப்பதிந்துவிட்டன.
சில காலத்திற்குப் பின்னர் தம்மிடம் வந்த சில பக்தர்களைக் கண்டபோது , அவர்கள் அந்தக் காட்சியில் கண்டிருந்த, முற்பிறவியில் சைதன்யரிடம் சீடர்களாக இருந்தவர்கள் என்று தெரிந்து கொண்டார் குருதேவர்.
இந்தக்காட்சி பெற்ற சில காலத்திற்குப் பிறகு காமார்புகூருக்கும் ஹிருதயரின் ஊரான சிகோருக்கும் சென்றார் குருதேவர்.புலூரி-சியாம் பஜார் பகுதி சிகோரிலிருந்து சில மைல் தொலைவில் இருந்தது. அங்கு தினமும் சங்கீர்த்தனம் நடைபெறுவதாகவும் வைணவ பக்தர்கள் பலர் கலந்துகொண்டு அங்கு ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்தோடச் செய்கின்றனர் என்பதையும் அறிந்த குருதேவர் அங்குச் செல்ல விரும்பினார்.
பெல்டே என்ற சிற்றூர் சியாம்பஜாருக்கு அருகில் இருந்தது. அந்த ஊரைச்சேர்ந்த நட்வர் கோசுவாமி என்பவர் குருதேவரை முன்னரே சந்தித்திருந்தார். குருதேவர் தம் வீட்டிற்கு வந்து புனிதப்படுத்தவேண்டும் என்று அவர் வேண்டியிருந்தார்.
ஆகவே அப்போது குருதேவர் ஹிருதயருடன் கோசுவாமியின் வீட்டிற்குச்சென்று ஏழுநாட்கள் அங்குத் தங்கியிருந்து சியாம்பஜார் வைணவ பக்தர்களின் சங்கீர்த்தனத்தைக்கேட்டு அதில் மூழ்கித் திளைத்தார்.
அந்த ஊரிலுள்ள ஈசான் சந்திரமல்லிக் என்பவரும் குருதேவரைப்பற்றி அறிந்து அவரைத் தம் வீட்டிற்கும் வந்து சங்கீர்த்தனத்தில் கலந்து கொள்ளும் படிக்கேட்டுக் கொண்டார்.
சங்கீர்த்தனத்தின் போது குருதேவரிடம் தோன்றிய அற்புதமான நிலைகளைக்கண்ட வைணவர்கள் அவரிடம் மிகவும் ஈர்க்கப்பட்டனர். இந்தச்செய்தி சியாம்பஜார் பகுதியில் மட்டுமின்றி ராம்ஜீவன் பூர் , கிருஷ்ணாகஞ்ச் மற்றும் அருகிலும் தொலைவிலும் இருந்த பல சிற்றூர்களிலும் பரவிற்று.
அந்த ஊர்களைச் சேர்ந்த சங்கீர்த்தனக் குழுவினரும் அங்கு வந்து குருதேவருடன் ஆடிப்பாடி தெய்வீகப் பேரானந்தத்தில் திளைத்தனர். அந்தச் சிற்றூர், மக்கள் கூட்டத்தால் நிரம்பிற்று.
இரவு பகல் ஓய்வின்றி சங்கீர்த்தனம் நிகழ்ந்தது. ஒரு கணம் இறப்பதும், ஒரு கணம் வாழ்வதுமாக இருக்கின்ற பக்தர் ஒருவர் வந்துள்ளார் என்ற பேச்சு எங்கும் பரவியது!
உணவும், உறக்கமும் மறந்து மக்கள் அவரைக் காண்பதற்காக மரங்களின் மீதும் வீடுகளின் மீதும் கூட ஏறத் தயங்கவில்லை. இவ்வாறு அங்கு ஏழு நாட்கள் இரவும் பகலும் ஆனந்தப்பெருவெள்ளம் கரைபுரண்டோடியது.
குருதேவரின் திருவடிகளில் பணிவதற்காக மக்கள் அலையலையாக வந்தனர். குளிக்கவும், உணவு கொள்ளவும் கூட அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.
இறுதியில் ஹிருதயர் அவரை யாருக்கும் தெரியாமல் சிகோருக்கு அழைத்துச்செல்ல வேண்டியதாயிற்று.
அந்த ஆனந்தச் சந்தையும் கலைந்தது, ஈசான் சௌத்ரி, நட்வர்கோசுவாமி,ஈசான்மல்லிக், ஸ்ரீநாத் மல்லிக் ஆகியோரும் சியாம்பஜாரைச்சேர்ந்த பிறரும் அவர்களின் வழிவந்தவர்களும், இன்றும் இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டு, குருதேவரிடம் தங்களுக்கு இருக்கும், அன்பையும் மதிப்பையும் நினைவுகூர்ந்து மகிழ்கின்றனர்.
கிருஷ்ணாகஞ்ச் பகுதியைச்சேர்ந்த பிரபல மிருதங்க வித்வானான ராய்சரண் தாஸ் என்பவரும் குருதேவருக்கு அறிமுகமானார். அவர் மிருதங்கத்தை வாசிக்கத் தொடங்கினால் போதும், குருதேவர் பரவச நிலையை அடைந்துவிடுவார்.
இந்த நிகழ்ச்சியைப்பற்றி குருதேவரும் ஹிருதயரும் கூறினார். இந்தநிகழ்ச்சியின் காலத்தை கீழ்கண்டவாறு வரையறுக்கலாம்.
கேசவர் 1875-ஆம் ஆண்டில் குருதேவரைச் சந்தித்த பின்னர், ஆலம்பஜாரைச்சேர்ந்த மகேந்திரலால் என்ற மருத்துவர் குருதேவரைச் சந்தித்தார்.
சிகோரிலிருந்து குருதேவர் திரும்பிவந்த பிறகே தாம் அவரைச் சந்தித்ததாகவும் அப்போது அவர் புலூயி- சியாம்பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தம்மிடம் கூறியதாகவும் மகேந்திரநாத் லால் தெரிவித்தார். ஆகவே குருதேவரின் நெருங்கிய பக்தர்கள் அவரிடம் வரத் தொடங்கிய ஆண்டான 1879-ஆம் ஆண்டிற்குப் பின்னரே இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கவேண்டும்.
தட்சிணேசுவரக்கோயிலுக்கு மிக அருகில் வசித்துவந்த சுவாமி யோகானந்தர் மட்டும் இந்த நிகழ்ச்சிக்குச் சிறிது காலத்திற்கு முன்னர் குருதேவரிடம் வந்திருக்க கூடும்.
1881-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் குருதேவரிடம் வந்தார்.
1881-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜகதம்பா காலமானார். இதற்கு சுமார் ஆறுமாதங்களுக்குப் பின் ஹிருதயர் முட்டாள் தனமாக மதுர்பாபுவின் பேத்தியான மிகவும் இளம்வயதுப் பெண்ணிற்குப் பாத பூஜை செய்தார். அதனால் தன் மகளுக்கு ஏதேனும் தீங்கு நேரும் என்று அஞ்சிய அவளது தந்தை, ஹிருதயரை காளிக்கோயில் பணியிலிருந்து விலக்கி விட்டார்.
புலூயி-சியாம்பஜார் பகுதிக்கு குருதேவர் சென்றபோது ஹிருதயர் அவருடன் இருந்தார். ஆகவே இந்த நிகழ்ச்சி 1879-ஆம் ஆண்டிற்குச் சிறிதுகாலம் முன்பு நடந்திருக்கக்கூடும்.
பிரம்ம சமாஜத்தில் குருதேவரின் செல்வாக்கு
....
பிரம்ம சமாஜத்தின் தலைவரான கேசவசந்திர சேனரை குருதேவர் சந்தித்தபின்னரே கல்கத்தாவாசிகளுக்கு குருதேவரைப் பற்றித் தெரியவந்தது. பிறர் குணம் பாராட்டத் தெரிந்த கேசவர்,முதலில் சந்திப்பிலேயே குருதேவரால் கவரப்பட்டார் என்பதை ஏற்கனவே கூறியுள்ளோம். மேலைக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும், உண்மையில் அவரது மனம் இறையன்பால் நிறைந்திருந்தது.ஆனால் அழுதமயமான பக்திரசத்தை, தான் மட்டும் பருகுவது அவருக்கு இயலவில்லை.குருதேவரை தரிசித்து அவரது அழுதமொழிகளைக்கேட்டு அதன் மூலம் தனது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு புதிய ஒளியைப்பெற்றார் அவர்.
தாம் பெற்ற திருப்தியையும் ஆனந்தத்தையும் சாதாரண மக்களுக்கும் எடுத்துக் கூறி, அவர்களும் தம்மைப்போன்று அவற்றை அனுபவிக்க வேண்டும், என்ற ஆர்வத்துடன் அவர்களை அழைத்தார். அதனால் இப்போதிலிருந்து பிரம்ம சமாஜத்தினரின் ”சுலப் சமாசார்” ”சண்டே மிரர்” ”தீயிஸ்டிக் குவாட்டர்லி ரிவியு” முதலிய வங்காள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் குருதேவரின் வாழ்க்கை, பொருள் செறிந்த அவரது அமுத மொழிகள்.,ஆன்மீகம் பற்றிய அவரது கருத்துக்கள் எல்லாம் விரிவாகப் பிரசுரிக்கப் பட்டன. பிரம்ம சமாஜப் பிராத்தனைக் கூட்டத்தில், சொற்பொழிவு கூட்டுப் பிரார்த்தனை இவற்றிற்குப் பின் ஆசாரியர் ஒருவர் மேடையில் அமர்ந்து அறிவுரைகள் வழங்குவார். அத்தகைய வேளைகளில் கேசவசேனரும் பிற தலைவர்களும் குருதேவரின் அமுத மொழிகளை எடுத்துக் கையாண்டனர்.நேரம் கிடைத்தபோது அவர்கள் சிலவேளைகளில் நெருங்கிய ஓரிரு பக்தர்களுடனும், சில வேளைகளில் உறுப்பினர்கள் அனைவருடனும் தட்சிணேசுவரம் சென்று குருதேவருடன் சிறிது நேரம் ஆன்மீக விஷயங்களைப் பற்றி பேசினார்.
பிரம்ம சமாஜத் தலைவர்களின் ஆன்மாதாகம், பக்தி, இறைக்காட்சி பெற ஏக்கம் இவற்றைக்கண்ட குருதேவர், அவர்கள் எந்த சாதனைக் கடலில் மூழ்கினால், இறைக்காட்சி என்னும் முத்தைப் பெறுவார் களோ. அந்த நெறியைக் காட்டுவதில் முனைந்து ஈடுபட்டார். அவர்களுள் இறைவனின் புகழ் பாடுவதிலும், பேசுவதிலும் குருதேவருக்கு மிகவும் ஆர்வம் இருந்தது. இதற்காகக் கேசவரின் வீட்டிற்கு அழைக்காமலே கூட அவர் செல்வதுண்டு. இவ்வாறு பிரம்ம சமாஜ உறுப்பினர்கள்பலருடன் குருதேவருக்குப் படிப்படியாக நெருங்கிய உறவு ஏற்பட்டது. கேசவரின் வீட்டிற்கு மட்டுமன்றி, பிற உறுப்பினர்களின் வீட்டிற்கும் அவ்வப்போது குருதேவர் செல்வார். எடுத்துக் காட்டாக மணிமோகன் மல்லிக், ஜெயகோபால் சேன், வேணி மாதவ பால், காசீசுவர மித்ரர் போன்றவர்களின் வீடுகளுக்கு விழாக்காலங்களிலும் சாதாரண காலங்களிலும் அவர் போவதைக் கூறலாம். சில வேளைகளில் கேசவர் பிரம்ம சமாஜத்தில் மேடை மீது அமர்ந்து அறிவுரைகள் வழங்கி கொண்டிருக்கும்போது குருதேவர் திடீரென்று அங்கு ச் சென்றுவிடுவார். அப்போது கேசவர் உபதேசங்களை முடிக்காமலே இறங்கி வந்து, அவரை அன்புடன் வரவேற்பார். பின்னர் குருதேவரின் அமுதமொழிகளைக்கேட்பதிலும் அவருடன் கீர்த்தனைகள் பாடுவதிலும் அன்றைய கூட்டம் நிறைவுறும்.
ஒரே நெறியைச்சேர்ந்தவர்கள் மட்டுமே ஒருவருக்கொருவர் தாராளமாகப் பழகி மகிழ முடியும். தங்களுடன் குருதேவர் இயல்பாகக் கலந்து உறவாடுவதைக் கண்ட பிரம்ம சமாஜத்தினர் அவர் தங்கள் நெறியைச் சார்ந்தவர், தங்களோடு ஒத்த கருத்தை உடையவர் என்றே முடிவு செய்தனர். இதில் வியப்பில்லை தான். இந்து மதத்தின் பிரிவினரான சாக்தர்கள். வைணவர்கள் போன்றோரும். தங்களுடன் அவர் சகஜமாகக் கலந்து மகிழ்ந்தபோது அவர் தங்களைச் சார்ந்தவர் என்றே எண்ணினார். எல்லா கருத்துக்களும் பிறப்பிடமும் சமரச தளமும் ஆகிய பாவமுகத்தில் அவர் எப்போதும் திளைத்திருந்ததால் தான் இது அவருக்கு சாத்தியமாயிற்றுஎன்று அப்போது யாருக்குத் தெரியும்?ஆனால், தங்களுடன்உருவமில்லாத அதே வேளையில் குணங்களுடன் கூடிய பிரம்ம தியானத்தில் ஈடுபடுவதும் சரி, கீர்த்தனைகளில் கலந்து கொள்ளும் போதும் சரி, அவர் அதில் மூழ்கி, தங்களைவிட அதிக ஆனந்தம் பெறுகிறார். தாங்கள் காரிருளை மட்டுமே காண்கின்ற இடத்தில், அவர் அசாதாரணமான ஒளியைக் காண்கிறார் என்பதில் பிரம்ம சமாஜத்தினருக்கு ச் சற்றும் சந்தேகம் ஏற்படவில்லை. அவரைப்போன்று அனைத்தையும் கடவுளிடம் அர்ப்பணித்து விட்டு அவனில் கரைந்தாலன்றி அத்தகைய ஆனந்தமும் தெய்வீக ஒளியும், தங்களுக்குக் கிடைக்காது என்பதையும் அவர்கள் அறிந்தனர்.
-
குருதேவர் சமாஜத்தினரை சாதனையில் முன்னேறச்செய்தல்
..............
உண்மையை உணர்வதற்கான ஆர்வம், தியாகம், ஆன்ம தாகம் ஆகிய நற்பண்புகளை பிரம்ம சமாஜ உறுப்பினர் பலரிடமும் குருதேவர் கண்டார். அதனால் அவர்கள் தங்கள் நெறியில் முன்னேறி வாழ்க்கை லட்சியத்தை அடைவதில் உதவ முயன்றார். பக்தர்கள் எந்த நெறியினரானாலும் அவர்களைத் தமக்கு நெருங்கியவர்களாகக் கருதி, அவர்கள் தத்தம் பாதையில் முன்னேறி நிறைவு அடைவதற்கான அனைத்தையும் செய்தார். சொல்லப்போனால் பக்தர்கள் அனைவரையும் ஒரு தனிவகுப்பினர் என்றே குருதேவர் வகைப்படுத்துவார். அவர்களுடன் சேர்ந்து உண்பதற்குத் தயங்க மாட்டார். அதனால் கேசவர் மற்றும் அவரைச் சார்ந்த விஜய கிருஷ்ண கோசுவாமி, பிரதாப் சந்திர மஜும்தார், சிரஞ்சீவ சர்மா, சிவநாத சாஸ்திரி, அமிருதலால் போஸ் போன்றோருடன் அவர் அன்புடன் பழகியதிலும் அவர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவியதிலும் வியப்பு எதுவுமில்லை. மேலைக் கல்வியாலும் கருத்துக்களாலும் அவர்கள் நமது ஆன்மீக லட்சியத்தை விட்டு விலகிச் செல்கின்றனர். சமூக சீர்திருத்தத்தையே ஆன்மீக சாதனை என்று கருதுகின்றனர் என்பதை குருதேவர் எளிதில் புரிந்து கொண்டார். அதனால் அவர்களிடம் உண்மையான ஆன்மீக சாதனையில் ஈடுபாட்டை ஊட்டினார். சமாஜம் முழுவதும் அவர்களுடன் அதே பாதையில் செல்வதைப் பற்றியோ, செல்லாமலிருப்பதைப் பற்றியோ அவர் கவலைப்படவில்லை. இறையனுபூதியே வாழ்க்கையின் லட்சியம் என்பதை அவர்களுக்குப் புரியவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதன் காரணமாகக்கேசவரும் பிறரும் குருதேவர் காட்டிய வழியில்முன்னேறினர். இறைவனை இனிமையாக ”அம்மா” என்று அழைப்பதும் அன்னையாக வழிபடுவதும் பிரம்மசமாஜத்தில் இடம் பெற்றன. சமாஜத்தின் இலக்கியங்களிலும் பாடல்களிலும் குருதேவரின் கருத்துக்கள் நுழைந்து அவற்றின் இனிமையைக் கூட்டின. அது மட்டுமல்ல, இந்துக்களின் எந்த லட்சியங்களையும் நெறிமுறைகளையும் அறியாமை என்றும் தீயவை என்றும் சமாஜம், கருதி தன்னை அவற்றிலிருந்து பிரித்துக் கொண்டதோ அவற்றுள் கூடச் சிந்திப்பதற்கும் கற்றுக் கொள்வதற்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன என்பதையும் குருதேவரின் வாழ்க்கையைப் பார்த்ததிலிருந்து அதன் தலைவர்கள் புரிந்து கொண்டனர்.
-
தாம் கூறுபவற்றுள் வாலையும் தலையையும் நீக்கிவிட்டு ஏற்றுக் கொள்ளுமாறு சமாஜத்தினரிடம் கூறியதன் காரணம்.-
............
மேலைக் கருத்துக்களில் ஊறியிருந்த கேசவரும் சமாஜத்தினரும் தமது கருத்துக்கள் எல்லாவற்றையும் சரியாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். புரிந்து கொண்ட சிலவற்றுள்ளும் எல்லா கருத்துக்களும் அவர் களுக்குப் பிடித்தவையாக இருக்காது என்பதை குருதேவர் அறிந்திருந்தார். அதனால் அவர் களுக்கு அறிவுரைகள் வழங்கும் போதெல்லாம் ”நான் எனக்குத்தோன்றியவற்றை எல்லாம் சொல்கிறேன்”. நீங்கள் அதில் ” வாலையும் தலையையும் நீக்கிவிட்டு ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பார். சமாஜத்தினர் பலரைப் பொறுத்தவரையில் சமூகச் சீர்திருத்தமும் சுகபோகமுமே வாழ்க்கையில் லட்சியமாக விளங்கின. அதையும் விரைவில் குருதேவர் கண்டு கொண்டார். இதனைப் பலவேளைகளில் குத்தலாகவும் வேடிக்கையாகவும் கூறுவார்.
கேசவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கே அவர்களின் கூட்டுப் பிரார்த்தனையைக் கண்டேன். இறைவனின் மகிமைகளைப் பற்றி நீண்ட நேரம் புகழ்ந்து விட்டு, இப்போது நாம் அவரை (இறைவனை) தியானிப்போம்” என்றார். இவர்கள் எவ்வளவு நேரம் தியானத்தில் மூழ்கப்போகிறார்களோ தெரியவில்லையே என்று சிந்தித்தேன். அப்பப்பா, கண்களை மூடிய இரண்டு நிமிடத்தில் தியானம் முடிந்து விட்டது! இத்தகைய தியானத்தில் கடவுளை அடைய முடியுமா? அவர்கள் தியானம் செய்தபோது அவர்களின் முகங்களைப் பார்த்தேன். பின்னர் கேசவரிடம் சொன்னேன். உங்களில் பலரது தியானத்தைப் பார்த்ததும் எனக்கு என்ன தோன்றியது தெரியுமா? தட்சிணேசுவரத்தின் சவுக்குத்தோப்பிலுள்ள குரங்குக் கூட்டம் சிலவேளைகளில் மிகவும் அமைதியாக ஒன்றும் தெரியாத அப்பாவிகளைப்போல் அமர்ந்திருக்கும். அவையா அப்பாவிகள்? அப்படி அசையாதிருக்கின்ற அவற்றின் மனம் என்ன நினைத்துக் கொண்டிருக்கும் தெரியுமா? எந்த வீட்டுக் கூரையில் வெள்ளரிக்காய், பரங்கிக்காய் காய்த்துக் கிடக்கிறது, எந்த தோட்டத்தில் வாழைப்பழம் பக்குவமாக இருக்கிறது, எங்கே கொய்யாப்பழம் உள்ளது- என்பது போன்ற சிந்தனைகள் அவற்றின் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கும் எல்லாம் சிறிது நேரம் தான். அதற்குள் ஒரே தாவலில் அங்கே போய் அவற்றைப் பறித்துத் தங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்ளும். பலரது தியானம் அச்சாக இது போலவே இருந்தது” இதைக்கேட்டு அவர்கள் சிரித்தார்கள்.
இவ்வாறு வேடிக்கையாக எங்களுக்கும் குருதேவர் போதிப்பதுண்டு.ஒரு நாள் சுவாமி விவேகானந்தர் குருதேவர் திருமுன்பு பாடிக் கொண்டிருந்தார். அப்போது சுவாமிஜி சமாஜத்திற்குச் செல்வது வழக்கம். தினமும் காலையும் மாலையும் சமாஜ முறைப்படி தியானம் , பிரார்த்தனை எல்லாம் செய்வார். அன்று ”களங்கமற்ற” (அந்த) ஒரே புருஷனில் உன் மனத்தைச்செலுத்துவாய்” என்ற சமாஜப் பாடலை மனமுருகிப் பாடினார். இறைவனின் பஜனையிலும் சாதனைகளிலும் எப்போதும் ஈடுபட்டிரு” என்பது அதில் ஒரு வரி. இந்த வரி சுவாமிஜியின் மனத்தில் ஆழப் பதிய வேண்டும் என்பதற்காக குருதேவர் வேடிக்கையாக இல்லை, இல்லை. இறைவனின் பஜனையிலும் சாதனையிலும் தினமும் இரு முறை ஈடுபட்டிரு என்று பாடு. நீ செய்யாத ஒன்றை எதற்கு வீணாகக் கூறவேண்டும்.? என்றார். அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டார்கள். சுவாமிஜிக்குச் சங்கடமாகி விட்டது.
இறைவனின் மகிமையைப்பற்றி நினைப்பதனால் அவனை நம்முடையவனாக்க முடியாது என்று சமாஜத்திருக்கு போதித்தல்-
................
மற்றொரு சமயத்தில் கேசவரிடமும் சமாஜத்தினரிடமும் அவர்களின் கூட்டுப் பிரார்த்தனையைப் பற்றி குருதேவர் கூறினார். நீங்கள் இறைவனின் மகிமைகளைப் பற்றி ஏன் இவ்வளவு விவரிக்க வேண்டும்? ஒரு பிள்ளை தந்தையின் முன் அமர்ந்து, ” என் அப்பாவுக்குத்தான் எத்தனை வீடுகள்” எத்தனை குதிரைகள், எத்தனை மாடுகள், எத்தனை தோப்புதுரவுகள்” என்று எண்ணிக் கொண்டிருப்பானா? அல்லது தந்தை எவ்வளவு தூரம் தன்னை அவருடையவனாகக் கருதுகிறார், தன்னிடம் எவ்வளவு அன்பாக இருக்கிறார் என்பதையெல்லாம் நினைத்து மகிழ்வானா? தந்தை பிள்ளைக்கு உணவு, உடை முதலியவற்றைக் கொடுக்கிறார். உண்மை தான். அதனால் என்ன? நாம் எல்லோரும் அவனுடைய (இறைவனின்) பிள்ளைகள். அதனால் அவன் இவற்றை நமக்கு அளித்திருக்கிறான். பெரிதுபடுத்த அதில் என்ன இருக்கிறது? உண்மைபக்தன் இப்படி எல்லாம் நினைப்பதை விட்டு விட்டு எப்படி அவனைத் தன்னுடையவனாக ஆக்கிக்கொள்வது, எப்படிக் குழந்தைப் போன்ற பிடிவாதத்துடன் அவனை அதிகாரம் செய்வது என்றெல்லாம் எண்ணுவான். உன்னிடம் நான் கேட்டு விட்டேன், என் பிரார்த்தனையை நிறைவேற்றியே தீர வேண்டும், நீ காட்சி அளித்தேயாக வேண்டும்” என்று உரிமையுடன் வற்புறுத்துவான். இறைவனின் மகிமைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், அவன் தன் அருகில் இருக்கிறான், அவன் தன்னுடையவன் என்று எண்ண முடியாது. அவனிடம் அதிராகம் செய்ய இயலாது. அவன் எவ்வளவு பெரியவன், நம்மிடமிருந்து எவ்வளவோ தூரத்தில் இருக்கிறான் என்ற எண்ணங்களே மேலிடும். இறைவனை உன்னுடையவனாகக் கருது. அப்போது தான் நீ அவனை அடைய முடியும்.
இறையனுபூதி பெற சாதனை தேவை, தியாகம் வேண்டும் என்பதை அறிந்ததுடன் சமாஜத்தினர் குருதேவரிடமிருந்து வேறு ஒன்றையும் தெரிந்து கொண்டனர். மேலை நாட்டு மதப்பிரசாரகர்களிடம் இருந்தும், ஆங்கில நூல்களிலிருந்தும் கடவுளுக்கு உருவம் இருக்க முடியாது என்றே அவர்கள் கற்றிருந்தனர். விக்கிரகங்களில் கடவுளை வழிபடுவது பெரிய பாவம் என்பது அவர்களின் கருத்து. உருவமற்ற தண்ணீர் குளிரில் உறைந்து, உருவமுள்ள பனிக்கட்டி ஆவது போல, உருவமற்ற சச்சிதானந்தப் பரம்பொருளும் பக்தியினால் உறைந்து உருவம் பெறுகிறது.தக்கையால் செய்யப்பட்ட பழத்தைப் பார்க்கும்போது உண்மையான பழம் நினைவிற்கு வருகிறது. அது போல விக்கிர வழிபாட்டின் மூலம் கடவுளின் உண்மை இயல்பை அறிய முடியும். என்றெல்லாம் குருதேவர் உருவ வழிபாடு பற்றிக் கூறும்போது அவர்கள் அதனை ”பொம்மை வழிபாடு” என்று ஆரம்பத்தில் ஒதுக்கி விட்டனர். ஆனால் அறிவுக்குப் பொருந்தாத என்று கருதிய அதில், அறிந்து கொள்வதற்கும் சிந்திப்பதற்கும் விஷயம் இருப்பதை இப்போது உணர்ந்தனர். தீயும், அதன் சுடுகின்ற தன்மையும் போன்று பிரம்மமும் பிரம்ம சக்தியும் வேறுபட்டவையன்று. அதன் வெளிப்பாடே இந்தப் பிரபஞ்சம்” என்று குருதேவர் கூறியதைக்கேட்ட நாளிலிருந்து கேசவரும் சமாஜத்தினரும் உருவ வழிபாட்டைப் புதிய கோணத்திலிருந்து பார்க்கத் தொடங்கினர்.கடவுளுக்கு உருவம் இல்லை, ஆனால் குணங்கள் உண்டு என்று கூறுவது அவர் இயல்பின் ஓர் அம்சத்தையே குறிக்கும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். கடவுள் உருவம் உடையவர் மட்டுமே என்று கூறுவது எவ்வளவு தவறோ, அதைப்போல் அவர் உருவமற்றவர் ஆனால் குணங்களுடன் கூடியவர் மட்டுமே என்பதும் தவறானதே என்று அவர்களுக்குத் தெரிந்தது.எனெனில் ஒரே கடவுள் தான் உருவ நிலையில் பிரபஞ்சமாக வெளிப்படுகிறார், உருவமற்ற ஆனால் குணங்களுடன் கூடிய பிரம்ம நிலையில் பிரபஞ்சத்தை ஆள்பவராக உள்ளார். அனைத்து குணங்களையும் கடந்த நிலையில் உயிர்கள், உலகம் அனைத்திற்கும் ஆதாரமாக என்றென்றும் இரக்கிறார். கடவுளின் இயல்பை இப்படித்தான் என்று வரையறுத்து விட முடியாது- அவர் உருவம் உடையவர். அவரே உருவம் அற்றவர்( குணங்களுடன் கூடியவர்) இன்னும் அவர் எப்படியெப்படி இருக்கிறார் என்பதை யாரால் அறிந்து கூற முடியும்.? என்றார் குருதேவர். கேசவரும் மற்றவர்களும் குருதேவரின் சாதாரண வார்த்தைகளில் இருந்த ஆழ்ந்த பொருளை க் கண்டு வியப்பு அடைந்தனர்.
-
பிரம்ம சமாஜத்தில் பிளவு-
...........
குருதேவரை 1875- மார்ச் மாதத்தில் கேசவர் சந்தித்தார். அதன் பின் மூன்றாண்டுகளுக்குச் சற்று அதிக காலம் அவர் நடத்திய பிரம்ம சமாஜம், மேலை நாட்டு மோகத்திலிருந்து நாளுக்கு நாள் விடுபட்டு புதிய வடிவெடுத்தது. சமாஜத்தினர் பலர் ஆன்மீக சாதனைகளில் காட்டிய ஆர்வம் பொதுமக்களை கவர்ந்தது. 1878, மார்ச் 6-ஆம் நாள் கேசவர் தன் மகளை கூச்பிகார் மன்னருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். பெண்களின் திருமண வயதான சமாஜம் நிர்ணயித்திருந்த வயதை விட மணப் பெண்ணின் வயது குறைவாகஇருந்தது.அதனால் சமாஜத்தில் குழப்பம் ஏற்பட்டது. மேலை நாட்டு ப் பாணியிலுள்ள சமூகச் சீர்திருத்தத்தில் மோகம் கொண்டிருந்த சமாஜத்தினர், பாரத பிரம்ம சமாஜம்” சாதாரண பிரம்ம சமாஜம்” என்று இரண்டாகப் பிரிந்தனர்.ஆனால் சமாஜத்தின் மீது குருதேவரின் தாக்கம் இதனால் பாதிக்கப் படவில்லை. அவர் இரண்டு பிரிவினரையும் சமமாகவே பாவித்து அன்பு காட்டினார். இரு பிரிவிலும் ஆன்மீக நாட்டம் உடையவர்கள் முன்போலவே குருதேவரிடம் வந்து பயன் பெற்றார்கள்.
-
குருதேவரின் உபதேசங்களில் சிறிதளவை ஏற்று கேசவர் ”நவவிதான்” தோற்றுவித்தலும் அதனைப் பரப்புதலும்“-
..............
பாரத பிரம்ம சமாஜத்தின் தலைவரான கேசவர் இப்போதிலிருந்து ஆன்மீக சாதனையில் விரைவாக முன்னேறினார்.குருதேவரின் அருளால் அவரது ஆன்மீக வாழ்க்கை உன்னதமான நிலைகளை எட்டியது. ஹோமம், அபிஷேகம், முடியை மழித்துக்கொள்வது, காவியுடை அணிவது போன்ற புறச் சடங்குகளின் உதவியால் மனம் உயர்ந்த நுட்பமான ஆன்மீக நிலைகளை அடைய முடிகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கேசவரும் அவற்றுள் பெரும் பாலானவற்றைப்பின்பற்றினார் . புத்தர் , சைதன்யர், ஏசு போன்ற மகான்கள் உயர்வுமயமான சரீரத்தில் நிலையாக வாழ்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஆன்மீக உணர்வுகளின் மையமாக விளங்குகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட அவர் அந்த உணர்வு நிலைகளை அடைவதற்காக, அந்த மகான்களை ஆழ்ந்து தியானிப்பார். குருதேவர் பல்வேறு நெறிகளைப் பின்பற்றி சாதனைகள் புரிந்தார் என்பதைக்கேள்விப்பட்டதால் தான் கேசவரும் அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
குருதேவர் தமது சாதனைகளின் பலனாக கண்டு பிடித்த ”எத்தனை மதங்களோ அத்தனை வழிகள்” என்ற கோட்பாட்டில் கேசவர் எவ்வளவு புரிந்து கொண்டாரோ, அதையே கூச்பிகார் திருமணத்திற்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ப் பின்னர் ”சவ விதான்” என்ற பெயரிட்டு பொதுமக்களிடையே பரவச்செய்தார். கேசவர் குருதேவரை நவலிதான் கொள்கைகளின் உருத்தரித்த மூர்த்தியாகக் கருதி அவரிடம் எவ்வித ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்தார் என்பது விவரணைக்கு அப்பாற்பட்டது. தட்சிணேசுவரத்திற்கு அவர் வரும்போது ”ஜெய் நவவிதானுக்கு ஜெய்” என்று கூறிக் கொண்டே குருதேவரின் பாததூளியைத் தலையில் தரித்துக்கொள்வதை நாங்கள் கண்டிருக்கிறோம்.நவ விதானை உருவாக்கிய நான்கு ஆண்டுகளுள் அவர் உயிர் நீத்துவிட்டார். அவ்வளவு விரைவில் இறக்காமல் இருந்திருந்தால் அவரது ஆன்மீக வாழ்க்கை எவ்வளவோ உன்னதங்களைக் கண்டிருக்கலாம்.
-
குருதேவர் கேசவரை எந்த அளவிற்கு த் தம்முடைய வராகக் கருதினார்.-
...............
கேசவரை தமக்கு மிகவும் நெருங்கியவராக குருதேவர் எண்ணினார். ஒரு முறை கேசவருக்கு உடல்நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டு அன்னை காளிக்கு இளநீரும் சீனியும் படைப்பதாக குருதேவர் வேண்டிக்கொண்டார்.கேசவர் நோயுற்றிருந்தபோது அவரைப் பார்க்கச் சென்றார். அவரது பலவீனமான நிலையைக் கண்டு கண்ணீர் வடித்தார். பின்னர் தோட்டக்காரன் அவ்வப்போது ரோஜாச் செடியின் கிளைகளை வெட்டுகிறான். சிலவேளைகளில் அதை வேரோடு பிடுங்கி வேரில் சூரிய ஒளியும் பனியும் படும்படிச் செய்கிறான். அப்பொழுது தான் அந்தச் செடி பெரிய பூக்களைக் கொடுக்கும். இந்தக் காரணத்திற்காகத் தான் இறைவன் என்னும் தோட்டக்காரன் இத்தகைய நிலையை உங்கள் உடலுக்கும் கொண்டு வந்துள்ளான் என்று கூறினார். 1884, ஜனவரியில் கேசவர் மறைந்தார். அதனைக்கேள்விப்பட்ட குருதேவர் மூன்று நாட்கள் யாருடனும் பேசாமல் படுத்தே இருந்தார். கேசவரின் மரணத்தைக்கேள்விப்பட்டபோது என் அங்கம் ஒன்றை இழந்து விட்டது போல் உணர்ந்தேன். என்று பின்னர் கூறினார். கேசவரின் குடும்பத்தினர் அனைவரும் குருதேவரிடம் மிகவும் பக்தி கொண்டிருந்தனர். அவர்கள் சிலவேளைகளில் குருதேவரைத் தங்கள் கமலகுடீர் என்னும் வீட்டிற்கு அழைத்துச் சென்றும், சிலவேளைகளில் தட்சிணேசுவரம் சென்றும் அவரது அமுதமொழிகளைக்கேட்டு மகிழ்வதுண்டு. கேசவர் உயிர் வாழ்ந்த காலம் வரை, சமாஜத்தின் வருடாந்தர விழாவான மாசிமாத விழாவில் குருதேவரை ஒரு நாள் அழைத்துச்சென்று, அன்று முழுவதும் அவருடன் கீர்த்தனையிலும் உரையாடலிலும் அனைவரும் மகிழ்வது நவலிதானின் வழக்கமாக இருந்தது. அவ்வப்போது கேசவர் சமாஜத்தினருடன் படகில் தட்சிணேசுவரத்திற்கு வருவார்.சிலவேளைகளில் குருதேவரைக் கூட்டிக்கொண்டு கங்கை நதியில் நீராவிக் கப்பலில் பயணம் செய்வார். குருதேவரின் பாடலும் அமுதமொழிகளுமாக பயணம் ஓர் ஆனந்த விருந்தாகி விடும்.
குருதேவரின் கூட்டுறவால் விஜயரின் கொள்கையில் மாற்றமும் அவர் சமாஜத்திலிருந்து விலகுதலும்-
-
கூச்பிகார் திருமணத்தின் காரணமாக பிரம்ம சமாஜத்தினர் இரண்டாகப் பிரிந்த பின், விஜய கிருஷ்ண கோசுவாமியும் சிவநாத் சாஸ்திரியும் சாதாரண சமாஜத்தின் ஆசாரியர்களாக விளங்கினர். விஜயர் சத்திய நிஷ்டையில் தீவிரமானவர். சாதனையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதனால் கேசவர் அவரிடம் மிகவும் அன்பு கொண்டிருந்தார். குருதேவரைச் சந்தித்தபின் கேசவரைப்போன்று விஜயருக்கும் சாதனையில் ஈடுபாடு அதிகரித்தது.குறுகிய காலத்தில் சாதனைப்பாதையில் முன்னேறி, பல்வேறு ஆன்மீக அனுபூதி களைப் பெற்றார் அவர். இறைவனின் பல்வேறு உருவங்களில் அவருக்கு நம்பிக்கை உண்டாயிற்று. சம்ஸ்கிருத கல்லூரியில் பயில்வதற்காகவே விஜயர் முதன் முதலில் கல்கத்தாவிற்கு வந்தார். அப்போது பெரிய குடுமி வைத்திருந்தார். பூணூல் அணிந்திருந்தார். பல தாயத்துக்கள் கட்டியிருந்தார். சத்தியத்தை தேடிய அவர் ஒரு நாள் இவை அனைத்தையும் களைந்து விட்டு பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தார். சத்திய நாட்டத்தினால் தான், கூச்பிகார் திருமணத்திற்குப் பிறகு குருவுக்கு நிகரான கேசவரை விட்டு விலகினார். இப்போது அதே சத்திய நாட்டத்தின் காரணமாகத்தான், தனது உருவக் கடவுள் நம்பிக்கையை மறைக்க முடியாமல் பிரம்ம சமாஜத்திலிருந்து விலகினார். இதனால் அவரது வருவாய் குறைந்து, சிறிது காலம் அவதிப்பட நேர்ந்தது.
ஆனால் அவர் மனம் தளரவில்லை. குருதேவரிடமிருந்து ஆன்மீக உதவி பெற்றதையும் அற்புதமான முறையில் குருதேவரின் காட்சி பெற்றதையும் பற்றி அவர் அவ்வப்போது எங்களிடம் கூறியுள்ளார்.ஆனால் குருதேவரை உபகுருவாகவோ வேறு எந்த முறையிலோ கருதி பக்தி செலுத்தினாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் கயையில் ஆகாச கங்கைப் பகுதியிலுள்ள மலை ஒன்றிலிருந்த ஒரு துறவி தமக்கு அவரது யோக வலிமையினால் சமாதி நிலையைக் கொடுத்ததாகவும், தாம் அவரை குருவாக ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் விஜயர் கூறியிருந்தார். அவர் குருதேவரைப் பற்றி மிக உயர்ந்த மதிப்பு கொண்டிருந்தார். என்பதில் ஐயமில்லை. இதனைப் பற்றி அவர் கூறியவற்றைத்தொகுத்து வேறோரிடத்தில் தந்துள்ளோம்.
-
பிரம்ம சமாஜத்திலிருந்து விலகிய பின் விஜயரின் ஆன்மீக வாழ்க்கை நாளுக்கு நாள் ஆழ்ந்து முன்னேறியது.கீர்த்தனை வேளைகளில் அவரது பரவச நடனத்தையும் ஆழ்ந்த சமாதி நிலைகளையும் கண்டு மக்கள் ஈர்க்கப் பட்டனர். அவரது உயர்ந்த நிலையைப் பற்றி குருதேவர், சாதனைப் பாதையில் நிறைநிலைக்கான நுழைவாயிலின் பக்கத்தில் போய்ச்சேர்ந்து விட்டார். விஜயர், இறையனுபூதியின் கதவைத்தட்டி க் கொண்டிருக்கிறார் என்று கூறுவார். ஆன்மீகத்தில் நன்றாக முன்னேறிய பின் விஜயர் பலருக்கு மந்திர உபதேசம் செய்து சீடர்கள் ஆக்கினார். குருதேவரின் பூதவுடல் மறைந்து சுமார் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் புரியில் தம் உடலை உகுத்தார்.
கூச்பிகார் திருமணத்திற்குப் பின் பாரத பிரம்ம சமாஜம் மற்றும் சாதாரண பிரம்ம சமாஜங்களின் இடையே கருத்து வேறுபாடு வலுத்தது. பேச்சு வார்த்தை கள் கூட முறிந்து போயிற்று. ஆனால் இரு பிரிவினரிடையேயும் உள்ள உண்மையான சாதகர்கள் முன்போலவே தட்சிணேசுவரத்திற்கு வந்து சென்றார்கள். இதை முன்பே கூறியுள்ளோம். அந்தச் சமயத்தில் ஒரு முறை எதேச்சையாக விஜயரும் கேசவரும் தத்தம் அன்பர்களுடன் ஒரே நாளில் தட்சிணேசுவரத்திற்கு வர நேர்ந்தது. ஒரு பிரிவினர் வரப்போவது மற்ற பிரிவினருக்குத் தெரியாததால் தான் இவ்வாறு நடந்திருக்க வேண்டும். தங்கள் பூசலை எண்ணி கேசவர் விஜயர் இருவரும் நாணியது கண் கூடாகத் தெரிந்தது. இருவரிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக குருதேவர் கூறினார். இங்கே பாருங்கள்! ஒரு முறை சிவனுக்கும் ராமனுக்கும் இடையே பூசல் ஏற்பட்டு போர் ந்க்கும் அளவிற்குச் சென்றது. சிவனுடைய குரு ராமர். ராமரின் குரு சிவன். இது எல்லாரும் அறிந்ததே. ஆதலால் போர் ஓய்ந்ததும் இருவருக்கிடையில் சமாதானமும் ஏற்பட்டு விட்டது. ஆனால் சிவ பெருமானின் பூதகணங்களுக்கும் ராமரின் வானரங்களுக்கும் இடையே அதன்பின் ஒற்றுமையே ஏற்படவில்லை. அவை சண்டையிட்டுக்கொண்டே இருந்தன.(கேசவரும் விஜயரையும் பார்த்து) நடக்க வேண்டியது. நடந்தாகி விட்டது. இனிமேலும் உங்களுக்குள் விரோதம் கூடாது. அது பூதகணங்கள் மற்றும் வானரங்களுக்கு இடையே இருந்துவிட்டுப்போகட்டும். அதன் பிறகு கேசவரும் விஜயரும் மீண்டும் பேச்சுவார்த்தை வைத்துக்கொண்டனர்.
தமது ஆன்மீக முன்னேற்றத்தின் காரணமாக விஜயர் சாதாரண பிரம்ம சமாஜத்தை விட்டு நீங்கினார். அவரிடம் நம்பிக்கை கொண்டிருந்த வர்களும் அவருடன் விலகினார்கள். அதன் காரணமாக, சாதாரண பிரம்ம சமாஜம் நலிவுற்றது. அந்த நிலையில் ஆசாரிய சிவநாத சாஸ்திரி தவைவராகி சமாஜத்தைக் காத்தார்.முன்பே சிவநாதர் குருதேவரிடம் பலமுறை வந்திருக்கிறார்.குருதேவரின் பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்தார். குருதேவரும் சிவநாதரை மிகவும் நேசித்தார். ஆனால் விஜயர் சமாஜத்தை விட்டு விலகியது. சிவநாதரை மிகவும் பாதித்தது.குருதேவரின் உபதேசங்களால் விஜயரின் கருத்து மாறி அவர் சமாஜத்தை விட்டு விலகினார் என்று கருதினார் அவர்.
எனவே தாம் குருதேவரிடம் செல்வதை நிறுத்திவிட்டார். இதற்குச் சிறிது காலத்திற்கு முன்புதான் நரேந்திரர் சாதாரண பிரம்ம சமாஜத்தில் சேர்ந்திருந்தார். சிவநாதர் மற்றும் பிற பிரம்ம சமாஜத்தினரின் விசேஷ அன்பிற்குப் பாத்திரமானவராக இருந்தார் அவர். சாதாரண பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தாலும் அவர் அவ்வப்போது கேசவரையும் குருதேவரையும் சந்திப்பதுண்டு. அப்போது குருதேவரிடம் செல்லாததற்குரிய காரணத்தை சிவநாதரிடம் வினவினார். அதற்கு சிவநாதர், தாம் அடிக்கடி சென்றால் தம்மைப் பார்த்து மற்ற உறுப்பினர்களும் அவ்வாறு செய்வார்கள். அதனால் சமாஜம் மேலும் பிளவுற நேரும் என்று பதில் கூறினாராம். அது மட்டுமின்றி, குருதேவரின் பரவச நிலை போன்ற அனைத்தும் நரம்புத் தளர்ச்சியின் விளைவாகத்தோன்றியவை. தீவிர சாதனையின் காரணமாக அவரது மூளை கலங்கி விட்டது. என்று கூறி சுவாமிஜி செல்வதையும் தடுத்தாராம்! இதை குருதேவர் கேள்விப் பட்டு சிவநாதரிடம் கூறியதை வேறோர் இடத்தில் கூறியுள்ளோம்.
-
பிரம்ம சமாஜத்தில் குருதேவரின் தாக்கம் பற்றி ஆசாரிய பிரதாப் சந்திரரின் கருத்து-
................
நவவிதானம் மற்றும் சாதாரண சமாஜம் இருபிரிவிலும் உள்ள சாதகர்கள் குருதேவரின் தொடர்பால் இறையனுபூதிக்கான பாதையில் முன்னேறும் விதத்தில் வாழ்க்கையைத் திருத்தியமைக்கத் தொடங்கினர்.
ஒரு முறை பிரதாப் சந்திர மஜும்தார், தட்சிணேசவரத்திற்கு குருதேவரைக்காணவந்தார். அப்போது நாங்கள் அவரிடம் குருதேவரின் கூட்டுறவினால் சமாஜஉறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி வினவினோம். அதற்கு அவர் கூறினார். இவரைப் பார்ப்பதற்கு முன் ஆன்மீகம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டிருந்தோமா? வெறும் ஆரவாரம் செய்து கொண்டிருந்தோம். இவரைக்கண்ட பின்பு தான் உண்மையான ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டுள்ளோம். அதே வேளையில் ஆசாரிய சிரஞ்சீவ சர்மாவும்( திரைவோக்யநாத சன்யால்) உடனிருந்தார்.
-
சாதாரண பிரம்ம சமாஜத்தில் குருதேவரின் தாக்கம்-
....................
நவ விதானத்தில் குருதேவரின் தாக்கம் வெளிப் படையாகத் தெரிந்தது. சாதாரண சமாஜத்தின் ஆசாரியராக விஜயர் இருந்த வரையில் அங்கும் குருதேவரின் கருத்துக்கள் ஊடுருவவே செய்தன. ஆனால் விஜயரும் உண்மையான சாதகர்களும் விலகியபின் அங்கேஆன்மீகம் குறைந்தது. சமூகச் சீர்திருத்தம் தேசத் தொண்டு போன்றவை அவர்களின் லட்சியம் ஆகியது.ஆனாலும் ஆன்மீகம் ஒரேயடியாக மறைந்து விட்டது என்று கூறிவிட முடியாது. ஏனெனில் சில உறுப்பினர் யோகப் பயிற்சி வேதாந்தசிவாரம், ஆவியின் தொடர்பு போன்றவற்றில் ஈடுபடவே செய்தார்கள். கர்த்தா பஜர நெறியினரின் வைதீக நெறியையும் சிலர் பின்பற்றினர். சிலர் தியானத்தின் உதவியால் நோய்களைக் குணமாக முயன்றனர்.
நவவிதானத்தின் ஆசாரியரான சிரஞ்சீவ சர்மா, சமாஜ இசையை மிகவும் வளர்த்தார். ஆனால் குருதேவரின் பல்வேறு காட்சிகள், பரசவ நிலை, சமாதி முதலியவற்றைப் பற்றித்தெரிந்து கொண்ட பின்னரே மிக உயர்ந்தகருத்துக்கள் நிறைந்த பாடல்களை அவர் எழுதினார். அவர் இயற்றிய சில பாடல்களின் முதல் வரியை இங்கே குறிப்பிடுகிறோம்.
1.ஓ அன்னையே! உனது உருவமற்ற அழகு காரிருளில் பிரகாசிக்கிறது.
2. எல்லையற்ற, முடிவற்ற ஆழ்ந்த சமாதி என்ற கடல்.
3. ஞான வானில் பிரேமையெனும் நளிர்வெண் முழுமதி
4.ஞானக் கடலில் பிரேம ஆனந்தத்தின் அலைகள்.
5. பித்தனாக்கிட வேண்டும் அம்மா இந்தப்பேதையை...
இத்தகை ய அருமையான பாடல்களை இயற்றியதன் மூலம் சிரஞ்சீவ சர்மா வங்க மக்கள் மற்றும் எல்லா சாதகர்களின் மனத்தில் நீங்கா இடம் பெற்றுவிட்டார். அவர்கள் அவருக்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளார்கள். அவரது குரலும் வளம் மிக்கதாக இருந்தது. அவர் பாடும்போது குருதேவர் பரவச நிலையில் ஆழ்வதை நாங்கள் கண்டிருக்கிறோம்.
இவ்வாறு பிரம்ம சமாஜத்தில் குருதேவரின் ஆன்மீகக் கருத்துக்கள் நிறைந்தது. அவர்களின் உருவமற்ற இறைவனின் வழிபாடு பழுக்காத வகையைச்சேர்ந்தது என்று குருதேவரி கூறுவார் என்றாலும் இறையனுபூதி பெறவேண்டும் என்று உண்மையான ஆர்வத்துடன் ஒருவன் அதைப் பின்பற்றினால் அவன் வெற்றி பெறுவான் என்பதையும் அவர் வலியுறுத்தினார். கீர்த்தனைகளின் முடிவில் இறைவனையும் எல்லா நெறியைச் சார்ந்த பக்தர்களையும் வணங்குவது குருதேவரின் வழக்கம். அப்போது தற்கால பிரம்ம ஙானிகளுக்கு வணக்கம் என்று கூறி பிரம்ம சமாஜத்தினரையும் வணங்க அவர் மறப்பதில்லை. மற்ற நெறிகயைப்போல பிரம்ம சமாஜமும் இறைவனை அடைவதற்கான பாதைகளுள் ஒன்று என்று அவர் நம்பியது இதிலிருந்து தெரிகிறது. ஆனால் அவர்கள் மேலை நாட்டு மோகத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு உண்மையான ஆன்மீக வழியில் செல்லவேண்டும் என்று அவர் மிகவும் விரும்பினார். அதற்காக முயற்சியும் செய்தார்.சமூக சீர்திருத்தம் மட்டுமே மனித வாழ்க்கையின் லட்சியம் என்று கருதுவதில் உள்ள அபாயத்தைப் பற்றி அடிக்கடி அவர்களிடம் கூறுவார். சமூகச் சீர்திருத்தம் முதலியவை தேவை. அவை போற்றுதற்குரியவை தான். ஆனால் அதற்காக இறையனுபூதிக்கான சாதனைகள் தாழ்ந்தவை எனக் கருதக் கூடாது என்று அவர்களை எச்சரித்தார்.
பிரம்ம சமாஜத்தினர் தாம் முதன்முதலாக குருதேவரின் அசாதாரணமான, உன்னதமான ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாக விவாதித்தவர்கள். அதன் வாயிலாக கல்கத்தாவாசிகளின் கவனம் குருதேவர் பால் திரும்பியது.குருதேவரின் திருவடிகளின் கீழ் அமர்ந்து ஆன்மீக சக்தியையும் அமைதியையும் பெற்றவர்கள் அனைவரும் நவவிதானத்திற்கும் சாதாரண சமாஜத்தினருக்கும் என்றென்றும் கடமைப்பட்டவர்கள். இந்த நூலில் ஆசிரியரும் பிரம்ம சமாஜத்திடம் கடைமைப்பட்டவர்தான். அவர் மாணவப் பருவத்தில் பிரம்ம சமாஜத்தின் உறுப்பினராக இருந்தார். இளமையில் மிக உயர்ந்த லட்சியங்களை அவருக்குப் போதித்தது பிரம்ம சமாஜம் தான். சமாஜத்தையும் அதன் மூன்று ரத்தினங்களாகிய பிரம்மம், பிரம்ம சமாஜம், பிரம்ம பக்தர்கள், அனைவரையும் மிகுந்த நன்றியுணர்வுடனும் மரியாதையுடனும் திரும்பத்திரும்ப வணங்குகிறோம், பிரம்மம், சமாஜம், பிரம்ம பக்தர்கள் இந்த மூன்றும் உண்மையில் ஒன்றே. பிரம்ம சமாஜ உறுப்பினர்களுடன் குருதேவர் மிகுந்த ஆனந்தத்தை அடைந்த இரு சிறப்பான நிகழ்ச்சிகளைப் பற்றி இப்போது கூறப்போகிறோம்.
அந்தக் குளிர் காலத்தின் தொடக்கம் நன்றாக நினைவில் உள்ளது. வெயிலின் வெம்மையில் காய்ந்து கிடந்த இயற்கையன்னை அப்போது தான் பெய்த மழையில் நனைந்து, சற்றே குளிர் என்றும் முகப் பூச்சணிந்து போர்வையை இழுத்துப்போர்த்தியிருந்தாள். அந்த நாட்களில் நடந்த நிகழ்ச்சி இது. குருதெவரின் சிறந்த பக்தரான பலராம்பாபு, வழக்கம்போல் தமது பஞ்சாங்கத்தில் இந்த நிகழ்ச்சியைக் குறித்து வைத்திருந்தார். அதனால் தான் நிகழ்ச்சி நடந்த நாளைத்தெரிந்து கொள்ள முடிந்தது. அது 1883, நவம்பர் 26, திங்கட்கிழமை.
அப்பொழுது நாங்கள் கல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தோம். இரண்டு மூன்றுமுறை மட்டுமே தட்சிணேசுவரத்தில் குருதேவரைப் பார்த்திருந்தோம். அன்று விடுமுறை. வரத சுந்தர்பால், ஹரி பிரசன்னர் முதலியோருடன் அன்று மாலை தட்சிணேசுவரம் செல்வதென முடிவு செய்தோம். படகில் சென்று கொண்டிருந்தபோது தட்சிணேசுவரத்திற்குப்போகின்ற வேறு ஒருவரையும் சந்தித்தோம். அவரும் எங்களைப்போல் சிறிது நாட்களாக குருதேவருக்கு அறிமுகமானவர் என்று தெரிந்ததும் அவருடன் பேசிக்கொண்டே சென்றோம். அவர் வைகுந்தநாத சன்யால், படகில் ஒருவர் குருதேவரின் பெயரைக்கேட்டவுடன் மிகவும் கேலியாகப்பேசியதும், வைகுந்தர் சினத்துடன் ஓரிரு வார்த்தைகள் கூறியதும், உடனே அவர் அடங்கி விட்டதும் நினைவில் உள்ளது. நாங்கள் தட்சிணேசுவரத்தை அடைந்தபோது மணி இரண்டு அல்லது இரண்டரை.
குருதேவரின் அறையினுள் நுழைந்து அவரை வணங்கினோம். உடனே அவர், இன்று நீங்கள் வந்திருக்கிறீர்கள், சிறிது தாமதமாக வந்திருந்தால் பார்த்திருக்க முடியாது. கல்கத்தா செல்கிறேன். வண்டி கொண்டு வரப்போயிருக்கிறார்கள். இன்று பிரம்ம சமாஜவிழா. போகட்டும் ஏதோ சந்திக்க முடிந்ததே, அந்த வரையில் நல்லது தான். உட்காருங்கள். பார்க்காமல் திரும்பும் படி நேர்ந்திருந்தால் மனம் வேதனையுற்றிருக்கும்” என்று கூறினார்.
-
பாபுராமுடன் முதன்முறையாக எங்கள் அறிமுகம்-
-
அறையில் விரித்திருந்த பாயில் அமர்ந்தோம். ஐயா, நீங்கள் செல்லும் இடத்தில் எங்களை அனுமதிப்பார்களா? என்று குருதேவரிடம் வினவினோம். அதற்கு அவர் ஏன் மாட்டார்கள்? நீங்கள் விரும்பினால் தாராளமாக வரலாம். சிந்தூரியா பட்டியில் மணிமல்லிக்கின் வீட்டில் விழா நடைபெறுகிறது” என்றார். அந்தச் சமயத்தில், சிவந்த ஆடையணிந்த கொஞ்சம் ஒல்லியான இளைஞர் ஒருவர் அறையினுள் நுழைந்தார். குருதேவர் அவரிடம், மணிமல்லிக் வீட்டு விலாசத்தை இவர்களுக்குக் கொடு” என்றார்.” 81, சித்பூர் ரோடு, சிந்தூரியா பட்டி” என்றார் அந்த இளைஞர். அவரது பணிவையும் அமைதியான பண்பையும் கண்ட நாங்கள், அவர் அந்தக்கோயிலில் உள்ள யாராவது அர்ச்சகரின் மகனாக இருப்பார் என்று எண்ணினோம். ஓரிரு மாதங்களுக்குப்பின் அவர் பல்கலைக் கழகதேர்வுக் கூடத்திலிருந்து வெளிவருவதைக் காண நேர்ந்தது. அவரிடம் பேசியபோது எங்கள் ஊகம் தவறு என்று தெரிந்தது. அவரது பெயர் பாபுராம். ஆன்ட்பூரைச்சேர்ந்தவர். கல்கத்தாவில் கம்புலியாபட்டியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவ்வப்போது குருதேவருடன் தங்குவார். பிற்காலத்தில் இவர் சுவாமி பிரேமானந்தர் என்ற துறவியானார்.
சற்று நேரத்திற்குப் பின் வண்டி வந்தது. துண்டு, மசாலாப்பை, உடைகள் முதலியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளும் படி பாபுராமிடம் குருதேவர் கூறினார். பின்பு அன்னை காளியை வணங்கிவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டார். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பாபுராமும் வண்டியுள் மறுபுறம் அமர்ந்து கொண்டார். குருதேவருடன் வேறு ஒருவரும் சென்றார். விசாரித்ததில் அவர் பிரதாப் சந்திர ஹாஸ்ரா என்று தெரியவந்தது.
குருதேவர் சென்றவுடனேயே அதிர்ஷ்டவசமாக எங்களுக்கும் ஒரு படகு கிடைத்தது.படா பஜாரில் இறங்கினோம். மாலைப்பொழுதில் தான்விழா நடக்கும் என்று நினைத்து நண்பர் ஒருவரின் வீட்டில் காத்திருந்தோம். புதிய நண்பரான வைகுந்த நாதர், விழா நடக்கும் இடத்தில் மாலையில் சந்திப்பதாகச்சொல்லிவி்ட்டு வேலை நிமித்தமாகச் சென்று விட்டார்.
மாலை நான்கு மணிக்கு மணிமல்லிக்கின் வீட்டிற்குப் போய்ச்சேர்ந்தோம்.குருதேவரைப் பற்றி விசாரித்தபோது ஒருவர் மாடிக்கு வழிகாட்டினார். விழாவிற்காக அங்கு ஒரு பெரிய அறை மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. பக்தர்கள் சிலர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். நண்பகல் கூட்டு வழிபாடும் கீர்த்தனையும் முடிந்து விட்டன. என்றும் மாலையில் மீண்டும் கீர்த்தனை நடைபெறும் என்றும் கேள்விப்பட்டோம். பக்தைகளின் வேண்டுகோளுக்கிணங்கி குருதேவரை உட்பக்கம் அழைத்துச் சென்றிருந்தனர்.
-
மணிமல்லிக் வீட்டு முற்றத்தில் அற்புதமான சங்கீர்த்தனம்.
வழிபாடு தொடங்க சிறிதுநேரம் ஆகும் என்று கேள்விப்பட்டதும் நாங்கள் வெளியே சென்றுவிட்டு அந்திவேளையில் திரும்பி வந்தோம்.வீதியில்நுழையும்போதே பாடலும் மிருதங்கத்தின் இனிய நாதமும் காதுகளில் விழுந்தன.கீர்த்தனை தொடங்கி விட்டதை அறிந்ததும் விரைந்து சென்றோம். அங்கே நாங்கள் கண்ட காட்சி விவரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.கூடத்தின் உள்ளும் புறமும் மக்கள் கூட்டம். கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைய முடியவில்லை. வெளியில் நின்றிருந்தோர் எப்படியோ தலையைமட்டும் நுழைத்து, கண்களை இங்கும் அங்கும் திருப்பாமல் பக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அருகில் யார் இருக்கிறார்கள், யார் இல்லை என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை. முன்கதவு வழியாக உள்ளே நுழைய முடியாது என்று கண்டதும் சுற்றிக்கொண்டு வடக்குக் கதவருகே வந்தோம். அங்கே அவ்வளவு கூட்டம் இல்லை. நாங்களும் நெருக்கி யடித்துக்கொண்டு தலையை நுழைத்தோம்.
ஆகா, என்னவோர் அற்புதக்காட்சி! அங்கே தெய்வீகப்பேரானந்தத்தின் அலைகள் பொங்கித் தவழ்ந்து கொண்டிருந்தன. அனைவரும் கீர்த்தனையில் தங்களை இழந்தவர்களாக சிரித்தார்கள். அழுதார்கள், பரவச நிலையில் ஆடினார்கள். தங்களைக் கட்டுப்படுத்த இயலாமல் பலர் கீழே விழுந்தனர். உணர்ச்சிவசப்பட்ட அவர்கள் பித்தர்களைப்போல் நடந்து கொண்டார்கள். அந்தக் கூட்டத்தின் நடுவே குருதேவர் இசைக்குத் தகுந்தாற்போல் ஆடிக்கொண்டிருந்தார். தாளத்துடன் இயைந்து வேகமாக ஆடியவாறே முன்புறம் சென்றபோது அந்தப் பகுதியில் நின்றவர்கள் விலகி வழிகொடுத்தனர். அவ்வாறே பின்புறம் சென்றபோதும் நடந்தது. அவர் எந்தப் பக்கம் சென்றாலும் அங்கு நின்றோர் மந்திரத்தில் கட்டுண்டது போல் அவரது நடனத்தில் மயங்கினர். புன்முறுவல் தவழ்ந்த அவரது முகத்திலிருந்து அற்புதமான தெய்வீகப்பேரொளி வீசிக் கொண்டிருந்தது. மென்மையும் இனிமையும் அழகும் அதே வேளையில் சிங்கத்தின் கம்பீரமும் அவரது ஒவ்வோர் அங்கத்திலிருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. ஆகா, என்ன அற்புதமானதொரு நடனம் அது. அதில் ஆடம்பரம் இல்லை, கட்டுக்கடங்காத துள்ளல் இல்லை. செயற்கைதனமான அங்க அசைவுகள் இல்லை. இருந்ததெல்லாம் இயற்கையும் இனிமையும் இணைந்து பொலிந்த ஆனந்தத்தின் உச்சநிலை. அந்தப்பேரானந்தம் அவரது உடல் முழுவதிலிருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பெரிய குளத்தில் நீந்துகின்ற மீனின் நிலைமையைப்போன்றிருந்தது அவரது நிலை. மீன் சிலசமயம் வேகமாகவும் சில சமயம் மெதுவாகவும் எல்லா திசைகளிலும் நீந்தி, தன் ஆனந்தத்தைப்பல வழிகளில் வெளிப்படுத்தும். குருதேவரின் நடனமும் அப்படியே இருந்தது. பிரம்மம் என்னும் பெருங்கடலில் ஆழ அமிழ்ந்து மூழ்கி, தன்னுள் பொங்கிப்பெருகும் ஆனந்தத்தை அள்ளியெடுத்து, தன் ஒவ்வோர் அங்கத்தின் வழியாகவும் வெளியே தெளிப்பது போலிருந்தது அந்த நடனம். இவ்வாறு நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போது சில சமயம் உலக உணர்வை இழந்துவிடுவார். சிலவேளைகளில் இடுப்பிலிருந்து ஆடை நழுவிவிடும். மற்றவர்கள் இறுக்கமாகக் கட்டி விடுவார்கள். சிலவேளைகளில் உணர்ச்சிவயப்பட்டு உணர்வை இழப்பவர்களின் நெஞ்சைத் தடவிக்கொடுத்து அவர்களை உணர்வு நிலைக்குக்கொண்டு வருவார். அவரிடமிருந்து தெய்வீகப்பேருணர்வின் ஆனந்த அலைகள் பொங்கி எங்கும் பரவி உண்மையான பக்தர்களுக்கு இறைக்காட்சியும் உலகியல் பற்றுக் கொண்டவர்களுக்குப் பற்றின்மையும், மந்தமான இயல்புடையவர்களுக்கு ஊக்கத்துடன் ஆன்மீகப் பாதையில் முன்னேற வல்லமையும் அளித்தபடியே பாய்ந்து சென்றது போலிருந்தது. உலகியலில் ஆழ்ந்து மூழ்கியவர்களின் மனத்திலிருந்து கூட ஒரு கணத்திற்கு அந்தப்பேரலை உலகப் பற்றைத் துடைத்ததுபோல் தோன்றியது. அந்த உணர்வுப்பேரலைகளில் எல்லோரும் மூழ்கிவிட்டார்கள். அவரது புனிதத்தின் பேரொளியால் அனைவரின் மனமும் ஆன்மீகத்தின் உச்சத் தளத்தை எட்டியது போலிருந்தது. பிரம்ம சமாஜ பக்தர்களுள் பலர் பரவச நிலையை அடைந்து புறவுலக நினைவை இழந்தார்கள். விஜய கிருஷ்ணரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சிரஞ்சீவ சர்மாவோ தனது இனிய குரலில், சுற்றிச் சுற்றி நடனமாடுங்கள், ஆனந்த வடிவினளின் குழந்தைகளே” என்பது போன்ற பாடல்களைப் பாடியவாறே, அதில் லயித்து தன்னுள் மூழ்கினார். இவ்வாறு இரண்டு மணிநேரம் கழிந்தது. பின்னர் ”இத்தகைய மதுரமான ஹரிநாமத்தை இந்த உலகிற்குக் கொணர்ந்தது யார்? என்ற பாட்டு பாடப்பட்டது. முடிவில் எல்லா நெறிகளுக்கும் ஆசாரியர்களுக்கும் வணக்கம் கூறப்பட்டு அன்றைய கீரத்தனை நிறைவுற்றது.
கீர்த்தனை முடிந்து அனைவரும்அமர்ந்தனர். அப்போது ஆசாரிய நகேந்திர நாதசட்டோபாத்யாயரிடம் ”ஹரிநாம மது குடித்து மனம் போதையில் மூழ்கியதே” என்ற பாடலைப் பாடும் படிக் கூறினார். அவரும் ஆழ்ந்த உணர்ச்சியுடன் அந்தப் பாடலை ஓரிரு முறை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
புலனின்பங்களிலிருந்து மனத்தை விலக்கி இறைவனிடம் சமர்ப்பித்தால் தான் மனிதன் அமைதியை அடைய முடி யும். என்பது பற்றி குருதேவர் பல விஷயங்களைக் கூறினார். பக்தைகள் கிழக்குப்புறத்தில், திரையின் பின்பக்கம் அமர்ந்திருந்தனர். அவர்களும் பல கேள்விகளைக் கேட்டனர். குருதேவரின் பதில் கள் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போது, கேட்போரின் மனத்தில் அந்தக் கருத்துக்களைப் பதிய வைப்பதற்காக ராமபிரசாதர், கமலா காந்தர் போன்ற பக்த சாதகர்கள் அன்னையின் மீது இயற்றிய பாடல்களையும் குருதேவர் பாடினார்.
இவ்வாறு குருதேவர் பாடிக் கொண்டிருக்கும்போது விஜயர் பக்தர்கள் சிலருடன் வேறோர் அறைக்கு ச்சென்று, துளசி ராமாயணத்தைப் படித்து அதற்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். மாலை வழிபாட்டிற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அவர் குருதேவரை வணங்கி வழிபாட்டைத் தொடங்குவதற்காக குருதேவர் இருந்த அறைக்குத் திரும்பினார். விஜயரைக் கண்டதும் குருதேவர் வேடிக்கையாகப்பேசலானார். இப்போதெல்லாம் விஜயர் சங்கீர்த்தனத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்.ஆனால் அவர் நடனமாடினால் மாடி எங்கோ இடிந்து விழுந்து விடுமோ என்று அச்சத்தில் என் மனம் படபடக்கிறது.(அனைவரும் சிரித்தனர்).ஆமாம். உண்மையாகவே எங்கள் ஊர்ப்பக்கம் இத்தகைய நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அங்கெல்லாம் மரம், மண் ஆகியவற்றைக் கொண்டு தான் மாடியைக் கட்டுவார்கள். கோசுவாமி ஒருவர் தம் சீடரின் அத்தகையதொரு வீட்டிற்குச் சென்றார். மாடியில் கீர்த்தனை நடந்தது. சிறிது நேரத்தில் கீர்த்தனை விறுவிறுப்படைந்து எல்லாரும் ஆடத் தொடங்கினார்கள். அந்த கோசுவாமி( விஜயரைக் காண்பித்து) உங்களைப் போன்று சிறிது பருமனானவர் சிறிது நேரம் அவர் ஆடினார். அவ்வளவு தான். மாடி இடிந்து கீழே கிடந்தார். அதனால் தான் எங்கே உங்கள் ஆடல் அப்படியொரு நிகழ்ச்சியில் முடிந்து விடக்கூடாதே என்று நான் அஞ்சுகிறேன். அனைவரும் சிரித்தார்கள். விஜயர் காவியுடை உடுத்தியது பற்றி குருதேவர் மேலும் கூறினார், இப்போதெல்லாம் இவருக்கு காவியுடையில் ஒரு கவர்ச்சி ஏற்பட்டுள்ளது. பொதுவாக வேட்டி , துண்டுஆகியவற்றைத்தான் காவியில் போடுவார்கள், ஆனால் விஜயரோ வேட்டி, துண்டு, சட்டை செருப்பு என்று அனைத்திற்கும் காவி போட்டுவிட்டார். நல்லது தான். ஒரு நிலையில் அவ்வாறு செய்யத்தோன்றும். அந்த நிலையில் காவியைத் தவிர வேறு எந்த உடையையும் அணிய விருப்பமிருக்காது. காவி தியாகத்தின் அடையாளம் அல்லவா? இறையனுபூதி பெறுவதற்காக அனைத்தையும் துறக்க தான் எடுத்துள்ள விரதத்தை அது சாதகனுக்கு நினைவூட்டுகிறது. அப்போது விஜயர் குருதேவரை வணங்கினார். குருதேவர் மகிழ்ச்சியுடன் , ஓம் சாந்தி, சாந்தி உங்களுக்குப் பூரண அமைதி கிட்டுவதாக” என்று அவரை வாழ்த்தினார்.
குருதேவர் பாடிக்கொண்டிருந்தபோது மற்றொரு நிகழ்ச்சி நடந்தது. எப்போதும் உள்முகமாகத் திரும்பியிருந்தாலும் அவரது மனம் எவ்வளவு தூரம் புற விஷயங்களைக் கூர்ந்து கவனிக்கும் என்பதை அது விளக்கியது. பாடிக் கொண்டிருந்த போது அவர் பாபுராமைப் பார்த்தார். அவர் பசியோடிருப்பதைத் தெரிந்து கொண்டார். தாம் உண்பதற்கு முன் பாபு ராம் எதுவும் உண்ணமாட்டார் என்பதை அறிந்திருந்த அவர், தமக்காக இனிப்புப் பண்டமும் நீரும் கொண்டு வரச் செய்தார். பின்னர் அதில் சிறிதை உண்டு விட்டு, சிறிதை பாபுராமிடம் கொடுத்தார். அதிகமான பகுதியை மற்ற பக்தர்கள் பிரசாதமாக உண்டனர்.
விஜயர் குருதேவரை வணங்கி மாலைவழிபாட்டிற்காகக் கீழே வந்ததும் உணவு அருந்துவதற்காக குருதேவரை உள்ளே அழைத்துச் சென்றார். மணி ஒன்பதுக்குமேல் இருக்கலாம். விஜயரின் வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக நாங்களும் கீழே வந்தோம். பிரம்ம சமாஜ பக்தர்கள் கூடியிருந்தனர். ஆசாரியரான விஜயர் வடபுறத்தில் உள்ள மேடையில் அமர்ந்து, ஸ்த்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம” என்பன போன்ற வேத மந்திரங்களை ஓதி பிரம்மத்தின் மகிமையை நினைவுகூர்ந்தார். பக்தர்கள் அதனைத் திருப்பிக் கூறினர். வழிபாடு நடந்து கொண்டிருக்கும்போது குருதேவர் அங்கு வந்து அதில் கலந்து கொண்டார். பத்துபதினைந்து நிமிடங்கள் அமர்ந்திருந்தார். பின்னர் தரையில் வீழ்ந்து வணங்கினார். மணி பத்துக்குமேல் ஆகிவிட்டதைக் கண்டதும் தட்சிணேசுவரம் செல்வதற்காக வண்டி கொண்டு வரும்படிக் கூறினார். சட்டையையும் செருப்பையும் அணிந்து கொண்டார். ஜலதோஷம் பிடித்து விடாதிருக்கக் காலுறை மற்றும் காதுகளை மறைக்கும் படியான தொப்பியும் அணிந்து கொண்டார். பாபுராமும் மற்றவர்களும் உடன் வரமிக மெதுவாக அங்கிருந்து நடந்து சென்று வண்டியில் ஏறிக்கொண்டார். அப்போது விஜயர் மேடையிலிருந்து சமாஜவிதிப்படி பேசிக்கொண்டிருந்தார். நாங்களும் வீட்டிற்குப் புறப்பட்டோம்.
பிரம்ம சமாஜ பக்தர்களுடன் குருதேவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார் என்பதை எங்களால் அன்று காண முடிந்தது. எந்த அளவிற்கு மணிமோகன் பிரம்ம சமாஜத்தில் ஈடுபாடு உடையவர் என்பது எங்களுக்குத்தெரியாது.ஆனால் அவரது குடும்பத்தினர் அனைவரும் பிரம்ம பக்தர்களாக இருந்தனர். சமாஜ முறைப்படி பிரார்த்தனை முதலியவற்றைச்செய்து வந்தார். அவர் குடும்பத்தில் உள்ள ஒருத்திக்கு பிரார்த்தனையின் போது மனம் ஒரு முகப்படவில்லை. இதனை அறிந்த குருதேவர் அவளிடம், அந்தவேளையில் உனக்கு யார் நினைவு குறுக்கிடுகிறது? என்று கேட்டார். தான் வளர்த்து வந்த சகோதரனின் குழந்தை நினைவு தான் வந்து கொண்டிருப்பதாகக் கூறினாள். அந்தப் பெண். உடனே குருதேவர் அந்தக் குழந்தையையே பாலகோபாலனாக பாவித்து, அந்தக் குழந்தைக்கு ஆசவை செய்யும் படிக் கூறினார்.குரதேவரின் சொற்படி நடந்து கொண்ட அவளுக்குச் சிறிது காலத்திலேயே பாவசமாதி அனுபவம் கிடைத்தது. இதை வேறோர் இடத்தில் விளக்கி யுள்ளோம்.
மற்றொரு சமயம் குருதேவர் பிரம்ம சமாஜத்தினர் சிலருடன் கூட்டுறவில் ஆனந்தம் அடைந்ததையும் கண்டோம். அதனை அடுத்ததாகக் கூறுகிறோம்.
ஜெயகோபாலின் வீட்டில் குருதேவர்
.................
சிந்தூரியா பட்டியிலுள்ள மணிமோகனின் வீட்டில் நடந்த கீர்த்தனையின் போது குருதேவருக்கு ஏற்பட்ட பரவச நிலையையும் ஆனந்த அனுபவங்களையும் கண்டு எங்களுக்குப் புதியதோர் ஆன்மீகக் கண்ணோட்டம் உண்டாயிற்று. எங்கள் ஆனந்தம் கரை கடந்ததாக இருந்தது. இந்த அனுபவம் எங்களுக்கு மட்டும் தான் கிடைத்தது என்பதல்ல, எங்கள் நண்பர் வரத சுந்தரும் இத்தகைய ஆன்மீகப்பேரானந்தத்தைச் சுவைத்தார். குருதேவர் எப்போது மீண்டும் இதுபோன்ற விழாக்களுக்கு வருவார் என்று அவர் விசாரித்தார். கூடியவிரைவில் அவரது விருப்பம் நிறைவேறியது. இரண்டு நாட்களுக்குப் பின், நவம்பர் 28, புதன் கிழமை காலையில் வரதரைச் சந்தித்தபோது அவர் கேட்டார்.கேசவரைக் காண குருதேவர் இன்று பிற்பகல் கமலகுடீருக்கு வருகிறார். மாலையில் மாதாகஷா பகுதியில் வசிக்கும் ஜெயகோபாலைக் காணச்செல்கிறார். அவரைப் பார்க்கப் போகிறாயா?
கேசவருக்கு அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அறிமுகமில்லாத நாங்கள் அந்த நிலையில் கமலகுடீருக்குச் செல்வது தொந்தரவாக இருக்கும் என்பதற்காக மாலையில் ஜெயகோபாலின் வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தோம்.
மாதாகஷா பகுதி படாபஜாரில் எங்கோ இருக்க வேண்டும். என்று முதலில் அங்குச் சென்றோம். விசாரித்துக்கொண்டே கடைசியாக ஜெயகோபாலின் வீட்டை அடைந்தோம். அப்போது மாலைவேளையாகி விட்டிருந்தது மணிமோகன் வீட்டில் திருவிழா நடந்த அன்று மழை பெய்தது போல் இங்கும் மாலையில் தூறல் இருந்தது. ஏனெனில் வீதியில் நிறைந்து கிடந்த சேற்றில் தட்டுத் தடுமாறி ஜெயகோபாலின் வீட்டை அடைந்தது நினைவில் இருக்கிறது. அவரது வீடும் மணிமோகனின் வீட்டைப்போன்று மேற்கே பார்த்த வண்ணம் இருந்தது. மேற்குக் கதவு வழியாகத்தான் நாங்கள் உள்ளே சென்றோம். அங்கிருந்த ஒருவரிடம் குருதேவர் வந்து விட்டாரா என்று விசாரித்தோம். அவர் எங்களை அன்புடன் வரவேற்று தெற்குப் புறத்தில் உள்ள படி வழியாக மாடியிலுள்ள பெரிய கூடத்திற்குச் செல்லும்படிக் கூறினார். கூடம் மிகவும் தூய்மையாக இருந்தது.நன்றாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. தரையில் கம்பளம் விரித்திருந்தனர். பிரம்ம சமாஜத்தினர் சிலருடன் குருதேவர் அமர்ந்திருந்தார்.நவவிதானின் இரண்டு ஆசாரியர்களான சிரஞ்சீவ சர்மாவும் அமிர்தலால் போஸும் குருதேவருடன் இருந்தனர். ஜெயகோபாலும் அவரது சகோதரரும் அக்கம் பக்கத்திலுள்ள இரண்டு மூன்று பேரும் குருதேவருடன் வந்திருந்த ஓரிரு பக்தர்களும் அங்கிருந்தனர். குருதேவர் ஹுட்கோ என்று அழைக்கின்ற இளைய கோபாலும் இருந்தார். குருதேவருடன் பத்துப் பன்னிரண்டு பேரை மட்டும் கண்டபோது அன்றைய நிகழ்ச்சி மணிமல்லிக்கின் வீட்டு நிகழ்ச்சிபோல் எல்லோருக்கும் உரியது அல்ல, நாங்கள் வந்தது தவறு என்று கருதினோம். எனவே உணவிற்குச் சற்றுமுன் அங்கிருந்து நழுவி விட முடிவு செய்தோம்.
உள்ளே சென்றதும்குருதேவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினோம். இங்கு எப்படி வந்தீர்கள்? என்று கேட்டார் அவர். இன்று நீங்கள் இங்கு வருவதாகக்கேள்விப்பட்டோம் அதனால் உங்களைப் பார்க்க வந்தோம்” என்று கூறினோம். இந்தப் பதிலால் அவர் மகிழ்ச்சி அடைந்தது போன்றிருந்தது. எங்களை அமரும்படிக் கூறினார். நாங்களும் கவலை நீங்கி அமர்ந்தோம். மற்றவர்களைக் கவனித்தவாறே அவரது அமுதமொழிகளைக்கேட்டுக்கொண்டிருந்தோம்.அண்மையில் தான் நாங்கள் குருதேவரை முதன் முதலாகச் சந்தித்திருந்தோம் முதல் சந்திப்பிலேயே அவரது அமுத மொழிகள் எங்களை மிகவும் கவர்ந்திருந்தன. அப்போது அதன் காரணம் எங்களுக்குப் புரியவில்லை. அவருடைய சிறப்பு வாய்ந்த போதிக்கும் முறை இப்போது புரிகிறது . அவரது பேச்சில் ஆடம்பரம் இல்லை, தர்க்கவாதம் இல்லை, அடுக்கு மொழிகளோ வார்த்தை ஜாலங்களோ இல்லை. எளியக் கருத்துக்களை அலங்காரச் சொற்களால் பெருதுபடுத்தித் தரும் போலித்தனம் இல்லை.அதே வேளையில் சூத்திரங்களைப்போல மிகக் குறைந்த எழுத்துக்களில் பெரிய தத்துவங்களை எடுத்துரைக்கின்ற முயற்சியும் இல்லை. தாம் கூறுகின்ற கருத்துக்களின் உருவமாக விளக்கினார் குருதேவர். அவர் தம் கருத்துக்களை வெளியிடும் போது மொழியில் கவனம் செலுத்தினாரா என்பது நமக்குத் தெரியாது. அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகளைக்கொண்டே தம் கருத்துக்களை விளக்குவதன் மூலம், நம் மனக் கண்முன் அவற்றைப் படம்பிடித்துக் காட்டிவிடுவார்.கேட்போருக்குத் தெரிந்த நிகழ்ச்சிகளைக் கூறி, கருத்தை மனத்தில் பதிய வைப்பார். அவரது பேச்சை ஒரு முறை கேட்டவர்கள் கூட இதனை நன்கு அறிவார்கள். கேட்போருக்கு அவர் சொல்பவை கண்முன் நடப்பது போல் தோன்றி அவர்களுடைய ஐயங்கள் முழுவதையும் நீக்கிவிடும். அவரது சொற்களில் உள்ள உண்மை கேட்போருக்கு மனநிறைவை நல்கும்.
அதற்குத் தகுந்த எடுத்துக் காட்டுக்கள், எவ்வாறு உடனுக்குடன் அவரது மனத்தில் தோன்றுகின்றன. என்று ஆராய்ந்து பார்த்தால் அவருக்கிருந்த அசாதாரணமான நினைவாற்றல் , தெளிவான நோக்கு, கிரகிக்கும் தன்மை, அறிவுக்கூர்மை ஆகியவையே காரணம் என்பது தெரியவரும். ஆனால் குருதேவரோ எல்லாவற்றிற்கும் அன்னை பராசக்தியின் அருள் தான் காரணம் என்றே எப்போதும் கூறுவார். யார் அன்னையிடம் முற்றிலுமாகச் சரணடைந்து அவளையே சார்ந்து வாழ்கிறாரோ, அவரது இதயத்தில் அமர்ந்து கொண்டு அவர் என்ன சொல்லவேண்டும் என்பதை, தவறாத தனது சைகைகளால் தெரிவிக்கவோ கூறவோ செய்கிறாள். அவள் இவ்வாறு அளிப்பதால் அவரது ஞானப் பொக்கிஷம் ஒருபோதும் குறைவதில்லை.ஒருபோதும் குறையாத ஞானக்குவியலை அவள் அவருள் நிரப்பிக்கொண்டே இருக்கிறாள். அவர் எவ்வளவு செலவழித்தாலும் சரி, அது குறைவதே இல்லை என்பார் அவர். ஒரு நாள் இதனை விளக்க ஒரு நிகழ்ச்சியைக் கூறினார்.
காளிக்கோயிலின் வடபுறம் அரசுக்குச் சொந்தமான வெடிமருந்துக் கிடங்கு ஒன்று இருந்தது. அதனைக் கண்காணிப்பதற்காக அங்கு சிலபோர் வீரர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் குருதேவரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள். சிலவேளைகளில் அவரைத் தங்கள் இருப்பிடத்திற்குக் கூட்டிச்சென்று தங்கள் ஆன்மீக சந்தேகங்களைப்போக்கிக் கொள்வார்கள். குருதேவர் கூறினார். ஒரு நாள் அவர்கள், உலகில் எப்படி வாழ்ந்தால் ஒருவர் இறையனுபூதி பெற முடியும்? என்று கேட்டார்கள்.உடனே என் மனக்கண் மன் உரல் ஒன்று தோன்றியது. உலக்கை விழும் இடத்தில் ஒருத்தி மிகவும் கவனமாக நெல்லைத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள். அதைக் கண்டதும், ஒருவர் அது போல் கவனமாக உலகில் வாழவேண்டும் என்று அன்னை எனக்கு போதிப்பதாக உணர்ந்தேன். உலக்கை தன் கைமீது விழுந்து விடாதிருக்க எச்சரிக்கையாக இருக்கிறாள், கடமைகளைச் செய்யும்போது அவை தன்னைப் பிணைத்து விடாதிருக்குமாறு கவனமாகச்செயல்படவேண்டும். அந்தச் செயல்கள் எதுவும் உண்மையில் தன்னுடையவை அல்ல என்று உணர வேண்டும். அப்போது தான் ஒருவர் சம்சாரபந்தத்தில் சிக்கி அழியாதிருக்கமுடியும். உரலின் வடிவம் தெரிந்ததுமே அன்னை இவ்வளவு விஷயங்களையும் எனக்கு உணர்த்தி விட்டாள். இதையே அவர்களிடம் கூறினேன். அவர்களுக்கு மிகவும் திருப்தி. நான் பக்தர்களிடம் பேசும்போது இவ்வாறு பல விஷயங்கள் என் கண்முன் தோன்றுவதுண்டு.
குருதேவரின் உபதேச முறையில் இன்னொரு சிறப்பம்சம் உண்டு-எதேதோ தேவையற்றதைப்பேசி, கேட்போர் மனத்தை அவர் குழப்புவதில்லை, கேள்வியின் தன்மையையும் நோக்கத்தையும் புரிந்துகொண்டு நேரடியாக விடைக்கு வந்துவிடுவார்.நாம் முன்னர் கண்டதுபோல் தமது அசாதாரணக் காட்சிகள் மூலம் உணர்ந்தவற்றை மட்டுமே அந்த உதாரணங்களுடன் கூறுவார். அவரது இந்த விசேஷ உபதேச முறையை ”அறுதி முடிவு” என்று குறிப்பிடுவோம்.ஏனெனில் கேட்கப் பட்ட கேள்விக்கு அவர் எதை ஞானக் காட்சியில் கண்டு உண்மை என்று உணர்ந்திருக்கிறாரோ அந்த பதிலை மட்டுமே கூறுவார். அந்தக்கேள்விக்கு வேறுவிதமான பதில் எதுவும் இருக்கமுடியாது. அவரது ஆழ்ந்த நம்பிக்கையின் ஆற்றலால் அது கேட்போரின் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்து விடும். முந்திய கல்விமுறை மற்றும் சம்ஸ்காரங்களின் காரணமாக யாராவது அவரது முடிவுகளைஏற்றுக்கொள்ளத் தயங்கினாலோ, தர்க்கம் செய்ய முற்பட்டாலோ அவர் எனக்குத் தெரிந்ததைச்சொன்னேன். நீங்கள் வாலையும் தலையையும் நீக்கிவிட்டு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்களேன்” என்று கூறி பேச்வை முடித்து விடுவார். யாருடைய சுதந்திரத்திலும் குறுக்கிட்டு அவர்களது கருத்தைக்குலைக்க மாட்டார். கேட்பவரின் மனநிலையில் இறையருளால் உணர்வு ஏற்படாதவரை உண்மையான பதிலை ஒருவரால் புரிந்து கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொண்டதால் தான் அவர் பேசாமல் இருந்து விடுகிறாரா? அப்படித்தான் இருக்கவேண்டும்.
மேலும் தமது அறுதி முடிவுகளை மற்றவரின் மனத்தில் பதியுமாறு செய்ய, மேற்கூறியவாறு எடுத்துக் காட்டுக்களையும் நிகழ்ச்சிகளையும் சித்தரித்துக் காட்டுவதுடன் நின்றுவிட மாட்டார். அந்த விஷயம் பற்றி வேறு பல புகழ் பெற்ற சாதகர்கள் கூறிய முடிவுகளை எடுத்துக் காட்டுவார். அவர்கள் இயற்றிய பாடல்களைப் பாடுவார். சிலவேளைகளில் சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள் காட்டியும் விளக்குவார். கேட்போரின் மனத்தில் அதன் பின் எவ்வித ஐயத்திற்கும் இடம் இருக்காது. குருதேவரின் பதிலில் திட நம்பிக்கை கொண்டு தங்கள் வாழ்க்கையை அதன்படி அமைத்துக் கொள்ள அவர்கள் முற்படுவர்.
இறையனுபூதி பெறாதோரின் வெறும் பேச்சைக்கேட்டு குருதேவரின் வெறுப்பு.
-
இன்னொன்றும் சொல்லவேண்டியது அவசியமாகிறது. ஒருவன் பக்தி நெறியில் செல்லலாம் அல்லது ஞான நெறியில் செல்லலாம். இருவரும் முடிவில் தனது வழிபாட்டிற்குரிய பொருளும் தானும் ஒன்று என்பதை உணர்ந்து அத்வைத ஞானத்தில்நிலைபெறுகிறான் என்பதை குருதேவர் திரும்பத் திரும்பக் கூறுவார்.தூய பக்தியும், தூய ஞானமும் ஒன்றே, அங்கே (இறுதி நிலையில்) எல்லா நரிகளும் ஒரே போல் தான் ஊளையிடுகின்றன. (அனுபூதியைப்பற்றி எல்லோரும் ஒரே வகையாகத்தான் பேசியுள்ளனர்) என்றெல்லாம் அவர் கூறுவதை அதற்கு உதாரணமாக க்கூறலாம். அத்வைத ஞானமே அறுதி உண்மை என்பது அவரது கருத்தாக இருந்தாலும், உலகியல் ஆசைகளில் மூழ்கிக் கிடக்கின்ற மக்களுக்கு விசிஷ்டாத்வைதக் கருத்தையே போதித்தார். துவைத நிலையில் இறைவனிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதையும் அடிக்கடிச் சுட்டிக்காட்டினார். உள்ளே இறைவனிடம் ஆழ்ந்த அனுராக பக்தியோ, உயர்ந்த ஆன்மீக அனுபவங்களோ இன்றி அத்வைதம் அல்லது விசிஷ்டாத்வைதம் போன்ற பெரிய பேச்சுக்களைப் பேசுபவர்களைக் கண்டால் குருதேவருக்குப் பிடிக்கவே செய்யாது. அவர்களை கடின வார்த்தைகளால் கண்டிக்கவும் அவர் தயங்குவதில்லை. ஒரு நாள் அவர் எங்கள் நண்பரான வைகுந்த நாதரிடம், பஞ்சதசி” அது இது என்றுஏதாவது படித்திருக்கிறாயா? என்று வினவினார். அதற்கு வைகுந்தர் , ஐயா, அது யாருடைய பெயர்? எனக்கு எதுவும் தெரியாது” என்று அப்பாவித்தனமாகக் கூறினார். இதைக்கேட்ட குருதேவர் நிம்மதியுடன், அப்பாடா, பிழைத்தேன். எத்தனையோ பேர் அது போன்ற நூல்களையெல்லாம் படித்துவிட்டு வருகிறார்கள். ஆனால் செயல் முறையில் எதுவும் செய்யாமல் என் உயிரை எடுப்பார்கள்”என்று கூறினார்.
இதையெல்லாம் ஏன்கூறுகிறோம் என்றால் அன்றும் ஜெயகோபாலின் வீட்டில் ஒருவர் குருதேவரிடம், எவ்வாறு இவ்வுலகில் வாழ்ந்தால் இறைவனின் கருணையைப்பெற முடியும்? என்று கேட்டார். குருதேவர் அவருக்கு விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை விளக்கினார். மேலும் அந்தக் கருத்தைப் பதியச்செய்ய அன்னை பராசக்தியின் மீது சில பாடல்களைப்பாடினார். குருதேவர் கூறியதன் சாரம் பின்வருமாறு.-
உலகம் நிலையற்றது என்பதை அறிந்தாலும் அதனை என்னுடையது” என்று கருதவும் அவ்வாறே வாழவும் செய்தால் ஒருவன் சம்சாரத்தில் கட்டுப்பட்டு துன்பப்படுகிறான். அவன் விரும்பினாலும் அதிலிருந்து விடுபடும் வழி அவனுக்குத் தெரிவதில்லை. இவ்வாறு கூறிவிட்டு குருதேவர் பாடினார்.
அதனால் இந்த நிலையற்ற உலகை இறைவனுடன் தொடர்புபடுத்தியே பார்க்க வேண்டும். அவ்வாறே செயல்படவும்வேண்டும்ஒரு கையினால் இறைவனுடைய திருவடிகளைப் பிடித்துக்கொண்டு மற்ற கையால் உலகச் செயல்களைச் செய்யவேண்டும். உலகிலுள்ள எல்லா உயிர்களும் பொருட்களும் இறைவனுடையவை, தன்னுடையவை அல்ல என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். இப்படி ஒருவன் வாழ்ந்தால் அவன் மாயையால் துன்பப்பட வேண்டியதில்லை, தாம் செய்வதெல்லாம் இறைவனின் செயல்கள் என்ன எண்ணம் மனத்தில் தோன்றும், மனமும் இறைவனை நோக்கிச்செல்லும்.
இந்தக் கருத்துக்கள் மனத்தில் பதிய வைப்பதற்காக குருதேவர் பாடினார்.
பாடல் முடிந்ததும் அவர் கூறினார். இவ்வாறு இறைவனைத் தஞ்சமடைந்து வாழும்போது எல்லாப்பொருட்களும் உயிர்களும் இறைவனின் அம்சம் என்ற உணர்வு படிப்படியாகத்தோன்றும். அப்போது பெற்றோரை இறைவனாகவும் இறைவியாகவும் கருதி ஒருவன் சேவை செய்வான். பிள்ளைகளை பாலகோபாலனாகவும் பராசக்தியின் வடிவமாகவும் பார்ப்பான். மற்றவர்கள் நாராயணனின் அம்சம் என்பதை அறிந்து அவர்களிடம் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வான். இத்தகைய உணர்வுடன் வாழ்பவன் லட்சிய இல்லறத்தான் ஆகிறான். அவன் மனத்திலிருந்து மரண பயம் ஒரேயடியாக நீங்கிவிடும். இப்படிப்பட்டவர்களைக் காண்பது அரிது தான் எனினும் அறவே இல்லை என்று கூறிவிட இயலாது.
பின்னர் அத்தகைய லட்சியத்தை அடையும் வழியை குருதேவர் சுட்டிக்காட்டினார்.ஒருவன் விவேகத்துடன் செயல்படவேண்டும். அவ்வப்போது இந்த உலகின் அமளிதுமளிகளிலிருந்து விலகி தனிமையில் சாதனைகள் புரிந்து இறைவனை அடைய முயலவேண்டும். அப்போது முன்கூறியது போல் லட்சிய இல்லறத்தானாக ஒருவன் பரிணமிக்க முடியும். அதற்குரிய வழிமுறைகளைக் காட்டுவதற்காக ராமபிரசாதரின் பாடலைப் பாடினார்.
பின்னர் விவேகம் என்பதை விளக்கினார். விவேகத்தின் உதவியினால் தான் கடவுளே நிலையானவர், அனைத்திற்கும் சாரமானவர், ஐம்புலன்களால் உணரப்படுகின்ற இந்த உலகம் நிலையற்றது, உள்ளீடற்றது என்பதை சாதகன் அறிந்து அந்த உலகைத் துறக்கிறான். ஒருவன் இறையனுபூதி பெற்றபின் அந்த விவேகம் அவனுக்கு, எல்லையற்றவனாக இருக்கின்ற அந்த இறைவனே உயிர்களாகவும் உலகமாகவும் ஆகியிருக்கிறான் என்ற பாடத்தைப் புகட்டுகிறது. இவ்வாறு இருவிதமாகவும் அவரை அறிந்து அனுபவிக்கிறான் சாதகன்
பின்னர் சிரஞ்சீவ சர்மா ஏக்தாரா சுருதியுடன் பாடத்தொடங்கினார்.
அனைவரும் அவரைத்தொடர்ந்து பாடினர். கீர்த்தனம் தொடங்கியதும் குருதேவர் பரவச நிலையடைந்து எழுந்து நின்றார். மற்றவர்கள் அவரைச் சுற்றிக்கொண்டு ஆடினார்கள். அந்தப் பாட்டு முடிந்தவுடன் சிரஞ்சீவ மீண்டும் பாடினார்.
பாட்டிற்கு ஏற்றாற்போல் நீண்டநேரம் நடனமாடினார்கள். அதன் பின்பு இறைவனையும் பக்தர்களையும் வணங்கி கீர்த்தனையை நிறைவு செய்தனர். எல்லோரும் குருதேவரின் பாததூளியைத் தலையில் தரித்துக் கொண்டு அமர்ந்தார்கள். அன்றும் குருதேவர் நளினமாக ஆடினார்.ஆனால் மணிமல்லிக் வீட்டைப்போல அவ்வளவு உயர்ந்த பரவச நிலை இல்லை. நீண்ட நேரம் ஆடவும் இல்லை. கீர்த்தனம் முடிந்தபின் குருதேவர் சிரஞ்சீவ சர்மாவிடம் கூறினார். உங்கள் பாடலை முதன்முறையாகக்கேட்டபோது பேரொளியுடன் முழுமதி உதயமாவதைக்கண்டேன். எனக்குப் பரவச நிலை உண்டாகி விட்டது. அப்பப்பா எவ்வளவு பெரிய சந்திரன் அது?
ஜெயகோபாலும் சிரஞ்சீவரும் கேசவரின் உடல் நிலையைப் பற்றிப்பேசிக்கொண்டிருந்தார்கள். ராக்காலுக்கு உடல்நிலை சரியில்லை என்று குருதேவர் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். ஜெயகோபால் பிரம்ம சமாஜத்தைச் சார்ந்தவரா என்பது தெரியாது. ஆனால் அவருக்கு கேசவரிடம் மிகுந்த மரியாதையும் அன்பும் இருந்தது. அவர் பிரம்ம சமாஜ பக்தர்களை நேசித்தார் என்பதில் ஐயமில்லை. கேசவர் தம் கூட்டத்தினருடன் கல்கத்தாவின் அருகில் பெல்கேரியா என்ற இடத்திலிருந்த ஜெயகோபாலின் தோட்டத்திற்குச்சென்று சாதனைபஜனைகளில் ஈடுபடுவார். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் தான் முதன் முறையாக குருதேவரை அங்கு சந்தித்தார்.அந்தச் சந்திப்பு கேசவரின் வாழ்க்கையில் ஆழப்பதிந்து அவரது ஆன்மீக உணர்வினைத் தட்டியெழுப்பியது.காலப்போக்கில் அதுவே நவவிதானமாக மலர்ந்தது. அன்றுமுதல் ஜெயகோபாலும் குருதேவரிடம் மிகுந்த பக்தி பூண்டார். அவ்வப்போது அவர் தட்சிணேசுவரத்திற்கு வருவார். சிலவேளைகளில் குருதேவரைத் தம் வீட்டிற்கு அழைத்துச்சென்று மகிழ்வார். குருதேவர் கல்கத்தாவிற்கு வந்து செல்வதற்குரிய வண்டி வாடகையின் பெரும்பகுதியை ஜெயகோபால் தான் கொடுத்ததாகக்கேள்விப்பட்டோம். அவரது குடும்பத்தினரும் குருதேவரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர்.
நன்றாக இருட்டிவிட்டது. குருதேவரிடம் விடைபெற்று வீடு திரும்பினோம்..
பக்தர்களின் வருகை
-
பிரம்ம சமாஜத்திலிருந்து குருதேவரும் சிலவற்றைக் கற்றுக் கொண்டார்.-
குருதேவரின் தரிசனத்தாலும் கூட்டுறவாலும் பிரம்ம சமாஜத்தின் முக்கிய தலைவர்களான கேசவர், விஜயர், பிரதாப் சந்திரர், சிவநாதர், சிரஞ்சீவர், அமிருதலால், கௌரகோவிந்தர், போன்றோர் பயனடைந்தது பற்றி முன்பே கூறினோம். லட்சியத்தில் குருதேவர் கொண்டிருந்த ஈடுபாடு, இறைவனுக்காக அனைத்தையும் உதறிய அவரது துறவு மனப்பான்மை ஆகிய பண்புகள் அவர்களைப் பண்படுத்தின. ஆனால் பிரம்ம ஞானம் பெற்று எப்போதும் பாவ சமாதியில் நிலைத்திருந்த குருதேவர், கேசவர் முதலான பிரம்ம சமாஜத்தினரிடமிருந்து எந்தப் பயனையாவது அடைந்தாரா என்றகேள்வி எழுகிறது. இதற்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் பெரும்பான்மையான பக்தர்கள் இல்லை. என்ற பதிலையே தயக்கமின்றி அளிப்பார்கள். ஆனால் கொடுக்கல் வாங்கல் நியதியை அல்லவா நாம் எங்கும் காண்கிறோம். அறிவற்ற சிறுவனுக்குப் பாடம் புகட்டினால் கூட அவனிடமிருந்து பல விஷயங்களை நாம் கற்றுக்கொள்கிறோமே! அறிவு குறைந்த சிறுவர்களுக்கு எந்த முறையில் போதிப்பது நல்லது. புரிந்து கொள்ளும் தன்மையைப் பழைய சம்ஸ்காரங்கள் எந்த அளவுக்குப் பாதிக்கின்றன. அந்த த் தடைகளை நீக்கும் வழிமுறைகள் என்எனன்ன-போன்றவற்றை நாம் தெரிந்து கொள்கிறோம். எனவே மேலை நாட்டுக் கொள்கையின் அடிப்படையில் நிறுவப்பட்ட பிரம்ம சமாஜத்தினருடன் ஏற்பட்ட தொடர்பினால் குருதேவர் ஒன்றும் கற்றுக் கொள்ளவில்லை என்று கூறுவது பொருந்தாது. எங்கள் கருத்து வேறு. குருதேவர் தம் சாதனைகளின் மூலம் பெற்ற ஞானத்தை பிரம்ம சமாஜத்தினருக்கு வழங்கியபோது அவரும் அவர்களிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார். அவற்றைப் பற்றி இங்கே சிறிது பார்ப்போம்.
பிரம்ம சமாஜத்தினருடன் தொடர்பு ஏற்படுவதற்கு முன் குருதேவர் மேலைக் கருத்துக்களிலிருந்தும் மேலைக் கல்வியின் தாக்கத்திலிருந்தும் விலகியே இருந்தார். அது வரை குருதேவரிடம் வந்தவர்கள் எல்லோரும் நற்பணிகள் மூலம் தனக்கும் சமுதாயத்திற்கும் நன்மை தேடிக் கொள்பவர்களாக இருந்தார்கள். அல்லது இந்தியாவின் அழியா லட்சியமான, த்யாகேனைகே அம்ருதத்வ மானசு, தியாகத்தின் மூலமே மரணமிலாப் பெருவாழ்வு அடையப்படுகிறது. என்ற கோட்பாட்டைப் பின்பற்றி அதற்கேற்ப வாழ்பவர்களாக இருந்தார்கள். மதுர் பாபு ஒருவர் தான் அதற்கு விதிவிலக்காக விளங்கியவர். அவர் மட்டுமே மேலைக் கல்வியின் மூலம் மற்றவர்களினின்று சற்று மாறுபட்டிருந்தார். இருப்பினும் மேலைக்கல்வி முறையால் பாரத நாட்டு மக்களின் வாழ்க்கை எவ்வாறு விபரீதமான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது என்பதைக் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.ஏனெனில் மதுர்பாபுவின் இயல்புகளும் குருதேவரின் தொடர்பால் மிக விரைவாக மாறியமைந்து விட்டன. அதனால் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமே அவருக்கு ஏற்படவில்லை. பிரம்ம சமாஜத்தினருடன் தொடர்பு ஏற்பட்டபின்குருதேவரால் இதனைக் காண முடிந்தது. அவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபட்டாலும் பாரதத்தின் புராதன லட்சியமான தியாகப் பாதையிலிருந்து விலகிச்சென்றார்கள். அதன் காரணத்தை ஆராய்ந்தபோது மேலைநாட்டுக் கல்வியும் கருத்துக்களும் இந்திய மக்களின் வாழ்க்கையில் எவ்வாறு விபரீத எண்ணங்களைப் பகுத்தியுள்ளது என்பதை குருதேவர் கண்டார்.
தமது வாழ்க்கையுடன் தாம் கண்ட ஆன்மீக உண்மைகளுடனும் கொள்கின்ற தொடர்பினால் கேசவரும் பிரம்ம சமாஜஉறுப்பினர்களும் விரைவில் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் என்று குருதேவர் கருதினார். நாட்கள் உருண்டோடின. அவருடன் அவர்களுக்கிருந்த தொடர்பு வலுபெற்றது.ஆனால் மேலைநாட்டுக் கொள்கைகளின் பிடியை விட்டு விட்டு அவரது ஆன்மீக அனுபவங்களை அவர்களால் முழுமையாக நம்ப முடியவில்லை. அப்போது தான் அவர்கள் மீது மேலைநாட்டுக்கொள்கைகளின் தீவிர ஆதிக்கத்தை அவரால் புரிந்து கொள்ள மடிந்தது. மேலை நாட்டு அறிஞர்களும் சிந்தனையாளர்களும் அவர்களுடையஉள்ளத்தில் குருவின் இடத்தைப் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களின் கருத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல், தங்களில் நிறைவு கண்ட பாரத ரிஷிகளின் ஆன்மீக அனுவங்களை உண்மை என்று இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை குருதேவர் அறிந்தார். அதனால் அவர்களிடம் குருதேவர் பேசும்போது , மனத்தில் தோன்றியதை எல்லாம் நான் சொல்கிறேன். நீங்கள் வாலையும் தலையையும் நீக்கிவிட்டுஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவார். அவர்களின் எண்ண ஓட்டத்தைத் தடுக்காமல் அவர்களுக்கு முழுவுரிமை கொடுத்ததால் தான் அவர்கள் அவரது கருத்துக்களையும் அனுபவங்களையும் இயன்ற அளவாவது ஏற்றுக் கொண்டார்கள்.
ரிஷிகளின் கருத்துக்களுடைய திரண்ட உருவமாகத் திகழ்ந்த குருதேவர். இந்த நிகழ்ச்சிகளுக்காக வருந்தவில்லை. இதுவும் அன்னை பராசக்தியின் திருவுளப்படிதான் நடைபெறுகிறது என்பதை அவர் உணர்ந்தார். எந்தச் சூழ்நிலையானாலும் அவளது ஆணையைப் பெற்று அதன்படியே வாழப் பழகியிருந்தார் அவர்.உலகின் எந்த நிகழ்ச்சியும் அவரை நிலைகுலையச்செய்ததில்லை. நிகழ முடியாததையும் நிகழ்த்திக் காட்டுகின்ற தெய்வீக சக்தியான மாயை தன் உண்மை இயல்பைக் காட்டி தன்னை ப் புரியவைத்து அவருக்கு நித்திய சாந்தியை அளித்திருந்தாள். அன்னையின் திருவுளப்படியே மேலைநாட்டுக் கருத்துக்களும் கொள்ளைகளும் இந்தியாவில் புகுந்திருப்பதையும் பிரம்ம சமாஜத்தினரைப்போன்ற கற்றறிந்தோர் கூட அவற்றின் கைப்பாவைகளாக விளங்குவதையும் உணர்ந்து கொண்ட அவரால் அவர்களின் பலவீனத்தைக்கண்டு சினம் கொள்ளவோ, தம் அன்பைப் பொழியாமலோ எவ்வாறு இருக்க முடியும்? எனவே அவர்களால்முடிந்த அளவிற்கு ரிஷிகளின் அனுபவ ஞானத்தை ஏற்றுக் கொள்ளட்டும், காலப்போக்கில் அன்னை அதனைமுழுமையாக ஏற்றுக் கொள்பவர்களை அழைத்து வருவாள் என்பதை உணர்ந்து கலக்கமின்றி இருந்தார்.
-
சமாஜத்தினர் பிரம்மத்தைப் பற்றிய முழுமையான அறிவை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதைக் கண்டு குருதேவர் செய்தது.-
-
தாம் கூறுபவை அனைத்தும் பிரம்ம சமாஜத்தினரால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அறிந்தும் குருதேவர் தம் ஆன்மீக அனுபவங்கள் அனைத்தையும் அவர்களிடம் கூறினார். இறைவனுக்காக அனைத்தையும் துறந்தாலன்றி ஒருவனுக்கு இறைக்காட்சி ஒருபோதும் கிடைக்காது. எத்தனை மதங்களோ அத்தனை வழிகள் ஒவ்வொரு நெறியின் முடிவிலும் வழிபடுபவன்” வழிபடு பொருளுடன் ஒன்றுகின்ற அனுபவம் பெறுகிறான். மனமும் வாக்கும் ஒன்றுபடச்செய்வது, முழு நம்பிக்கையுடன் இறைவனைச் சார்ந்திருந்து உண்மை- உண்மையில்லாதது என்பதைப் பகுத்தறிந்து, ஆசைகளினின்று விடுபட்டு, உலகக் கடமைகளைச் செய்வதே இறைவனைநோக்கிச் செல்வதற்கான வழி” என்பன போன்றஆன்மீக உண்மைகளைத் தயக்கமின்றி போதித்தார். உடல்,மனம், வாக்கு ஆகிய மூன்றாலும் பிரம்ம சரியத்தை க் கடைபிடிக்காவிட்டால் உடல் மீது கொண்டுள்ள பற்றினை முழுமையாக விலக்க முடியாது.ஆன்மீக உலகத்தின் உயர்ந்த உண்மைகளை ஒருபோதும் அறியமுடியாது என்பதைக்கேசவருக்கும் வேறு சிலருக்கும் கூறி அவர்களை நெ்த நெறியில் சொல்ல வைத்தார்.
பல முறை விளக்கியும் அவர்களால் ஏதாவது ஒன்றைப் புரிந்து கொள்ள முடியாதபோது, அவர்களின் மனம் சம்ஸ்காரங்களின் பிடியில் சிக்கியிருப்பதைத் தெரிந்து கொள்வார். சம்ஸ்காரங்களின் வேகம் தீவிரமாக இருக்கும்போது புதுக் கருத்துக்களைப் புகுத்துவது என்பது இயலாத செயலாகும். கழுத்தில் நிறவளையம் தோன்றிய பிறகு கிளிக்கு ராதாகிருஷ்ணன்” என்றெல்லாம் பேசக் கற்பிப்பது பொதுவாக வீண்வேலை தான். மேலைநாட்டுக் கருத்துக்களின் காரணத்தாலாகட்டும் இல்லை, வேறெந்த காரணத்தால் ஆகட்டும், புலனின்ப நாட்டத்தில் தீவிரப் பற்றுக்கொண்டவர்கள், பாரதத் திருநாட்டின் பாரம்பரியப் பண்பான தியாகத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ முடியாது. அதனால் தான் குருதேவரின் இதயத்தில், அம்மா, தியாக மனப்பான்மை படைத்த உன் பக்தர்களை இங்கே கூட்டி வா, அவர்களிடம் என் இதயத்தைத் திறந்து உன்னைப் பற்றிபேசி மகிழ்வேன். என்ற ஏக்கப் பிரார்த்தனைஎழுந்தது. அதாவது ஆழமான சம்ஸ்காரப் பதிவுகள் ஏற்படாத இளைஞர்களின் மனம் தான் தமது கருத்துக்களையும் உணர்வுகளையும் முற்றிலுமாக ஏற்றுக்கொண்டு, அவற்றின் உண்மையை உணர்வதற்காக அவர்களை உறுதியாக முன்னேறச்செய்யும் என்பதை குருதேவர் இப்போதிலிருந்து உணர ஆரம்பித்தார்.
கல்கத்தாவாசிகள் பிரம்ம சமாஜத்தினர் மூலமாக குருதேவரிடம் ஈர்க்கப் பட்டனர்.ராமும் மனமோகனும் வரல்-
-
பிரம்ம சமாஜத்தின் தலைவர்களான கேசவர் போன்றோர் குருதேவரின் புதிய கருத்துக்களை எவ்வளவு தூரம் ஏற்றுக் கொண்டனர். அது அவர்களிடம் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதையெல்லாம் அறிந்து கொள்ள கல்கத்தாவாசிகளுக்கு அதிக காலம் தேவைப்படவில்லை. அவர்கள் தங்கள் பத்திரிகைகளில் அவரது கருத்துக்களின் தனிப்பெரும் சிறப்பு மற்றும் அமுத மொழிகளுள் சில பகுதிகளைப் பிரசுரித்த போது கல்கத்தாவாசிகள் குருதேவரிடம் கவரப்பட்டு, அவரை தரிசிக்க தட்சிணேசுவரம் வரத் தொடங்கினர். குருதேவர் தம் காட்சியில் கண்டிருந்த பக்தர்களும் அவ்வாறுதான் படிப்படியாக வந்தனர்.கேசவர் குருதேவரைச் சந்தித்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பத்திரிகை வாயிலாக குருதேவரைப் பற்றி அறிந்த ராம்சந்திர தத்தர்,மனமோகன் மித்ரர் என்ற இல்லற பக்தர்கள் இருவர் குருதேவரிடம் 1879-ஆம் ஆண்டு இறுதியில் வந்தனர்.குருதேவரின் தொடர்பினால் தங்கள் வாழ்வில் தோன்றிய மாற்றங்களை ராமசந்திரர் ”ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு” என்ற தமது நூலில் விவரிதுள்ளார். அதனைச் சுருக்கமாக இங்கே தருகிறோம்.
இறையனுபூதி பெறுவதற்குக் காம- காஞ்சனத்தை த் துறக்கவேண்டும் என்ற குருதேவரின் கருத்தை அவர்களால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், குருதேவரிடம் கொண்ட பக்தி மற்றும் நம்பிக்கையின் ஆற்றலால் அவர்கள் துறவு நெறியில் ஆழ்ந்து முன்னேறினர்.கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் செல்வத்தை நல்வழியில் எவ்வளவு தூரம் ஓர் இல்லறத்தான் செலவழிக்கிறானோ, அதுவே அவனது பக்திக்கும் நம்பிக்கைக்கும் அளவுகோலாகிறது.ராமசந்திர தத்தர் குருதேவரை ஆரம்பத்தில் தம் குருவாகக் கொண்டார்.நாட்கள் செல்லச்செல்ல தன் இஷ்ட தெய்வமாகவே வழிபட்டார். குருதேவரையும் அவரது பக்தர்களையும் சிம்லாவிலுள்ள தன் வீட்டிற்குப் பலமுறை அழைத்து வந்து விழா கொண்டாடி ஏராளமான பணம் செலவழித்தார். இது அவரது நம்பிக்கை, பக்தி ஆகியவற்றின் ஆழத்தைக் காட்டுகிறது. அவரைப் பற்றி குருதேவர் அவ்வப்போது கூறுவார். இப்போது ராம் மிகவும் தாராளமாக இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள் . ஆனால் முதன் முதலில் இங்கு வந்தபோது மிகவும் கருமியாக இருந்தார். நான் ஒரு முறை அவரிடம் ஏலக்காய் கொண்டு வரச் சொன்னேன். அதற்குஅவர் ஒரு பைசாவுக்கு உலர்ந்து போன ஏலக்காய் வாங்கிவந்து என் முன் வைத்து வணங்கினார். இப்போது எவ்வளவு மாறிவிட்டார் என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்!
-
குருதேவரின் அற்புதமான காட்சியும் ராக்காலின் வருகையும்
-
குருதேவர் தமது எல்லையற்ற கருணையால் தங்களை ஏற்றுக்கொண்டு அனைத்து அச்சங்களிலிருந்தும் விடுவித்த போது ராமசந்திர தத்தரும் மனமோகன் மித்ரரும் தங்களை எவ்வளவு பேறு பெற்றவர்களாக க் கருதியிருக்க வேண்டும்! தங்களுக்கு இப்படியொரு முழு அடைக்கலம் கிடைக்கும். என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. எனவே தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் அவரிடம் அவர்கள் கூட்டிச்சென்றதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? அவர்கள் குருதேவரைச் சந்தித்த ஓர் ஆண்டிற்குள் அவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் குருதேவரை தரிசிக்க வரத் தொடங்கினர். இவ்வாறாக, குருதேவரின் திருவிளையாடலில் பங்கு கொள்ளவிருக்கும் தியாக பக்தர்கள் ஒவ்வொருவராக 1881- ஆம் ஆண்டுமுதல் வரத் தொடங்கினர். சுவாமி பிரேம்மானந்தரே முதன்முதலாக குருதேவரிடம் வந்தார். என்று கேள்விப்பட்டோம். இவரது இயற்பெயர் ராக்கால் சந்திர கோஷ். மனமோகனின் சகோதரியைத் திருமணம் செய்திருந்தார். அதன் பின்னர் தான் குருதேவரைப்பற்றிக்கேள்விப்பட்டு குருதேவரிடம் வந்தார். ராக்காலைப் பற்றி குருதேவர் கூறினார். ராக்கால் வருவதற்குச் சிலநாட்கள் முன்பு எனக்கு ஒரு தெய்வீக க் காட்சி கிடைத்தது. அன்னை பாராசக்தி ஓர் ஆண்குழந்தையை மடியில் அமர்த்தி, இவன் உன் மகன்” என்று என்னிடம் கூறினாள். அதைக்கேட்ட நபன் அதிர்ச்சியுடன், என்ன, எனக்கு மகனா? என்று கேட்டேன். அதற்கு அனனை சிரித்துக் கொண்டே, ”உலகியல் ரீதியிலுள்ள மகன் அல்ல, ஆன்மீக மகன்” என்று கூறினாள். அன்னையின் பதிலைக்கேட்ட பிறகு தான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது. ராக்கால் என்னிடம் வந்ததும் இவன் அவன் தான் என்று புரிந்து கொண்டேன்.
ராக்காலைப் பற்றி மற்றொரு சமயத்தில் குருதேவர் எங்களிடம் கூறினார், அந்தக் காலகட்டத்தில் மூன்று நான்கு வயதுப் பையனின் இயல்பு கொண்டிருந்தான் அவன். என்னைத் தன் தாயாக கருதினான். எவ்வித வெட்கமும் இன்றி, பால்குடிக்கின்ற குழந்தைபோல் என் மடியில் அமர்ந்து கொள்வான். இங்கிருந்து ஓரடி கூடநகர மாட்டான். வீட்டிற்குப்போவது பற்றிய பேச்சே இல்லை, போகாவிட்டால் அவன் இங்கே வருவதையே அவனது தந்தை தடுத்துவிடுவாரோ என்று அஞ்சி, அவனை அவ்வப்போது வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்புவேன். அவனது தந்தை ஒரு ஜமீன்தார். பெரிய செல்வந்தர். ஆனால் கருமி. ராக்கால் இங்கு வருவதை த் தடுக்க பல வழிகளில் முயன்றார். இங்கே பல செல்வந்தர்களும் அறிஞர்களும் வருவதைக் கண்ட பின்னரே தடுப்பதை நிறுத்தினார். சில வேளைகளில் அவர் அவனைப் பார்ப்பதற்காக இங்கு வருவார். ராக்காலின் பொருட்டு அவரை நான் நன்றாகக் கவனித்துக் கொள்வேன்.
-
ராக்காலின் மனைவி
-
மாமனார் குடும்பத்தில் ஒருவரும் ராக்கால் இங்கு வருவதைத் தடுக்கவில்லை. ஏனெனில் மனமோகனின் தாய், மனைவி, சகோதரிகள், அனைவரும் அடிக்கடி இங்கே வருவது வழக்கம். ராக்கால் இங்கு வரத்தொடங்கிய சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் மனமோகனின் தாய் ராக்காலின் மனைவியுடன் இங்கு வந்தாள். என் ராக்காலின் பக்திக்கு இடையூறாக அவன் மனைவி இருப்பாளோ என்ற கவலை எனக்குத்தோன்றியதால் , நான் அவளை இங்கே அழைத்து வரும்படிக் கூறியிருந்தேன். உச்சி முதல் பாதம் வரை அவளது உடற்கூற்றைக் கூர்ந்து கவனித்தேன். என் கவலைக்குக் காரணம் ஒன்றுமில்லை என்ற நம்பிக்கை ஏற்பட்டது. தெய்வீகப் பாங்குடையவளாக இருந்தாள் அவள். கணவனின் ஆன்மீகப் பாதையில் இடையூறாக இருக்கமாட்டாள் என்பது தெரிந்தது. மகிழ்ச்சியுடன் நகபத்திற்கு ( அங்கு வசித்து வந்த சாரதாதேவியிடம்) அவளை அனுப்பினேன். ஒரு ரூபாயை அன்பளிப்பாகக் கொடுத்து முகத்திரையை விலக்கி மருமகளின் முகத்தைக்காணும்படியும் சொல்லி அனுப்பினேன்.
என்னைப் பார்த்தாலே ராக்கால் எப்படி குழந்தை போலாகிவிடுவான் என்பதை விவரிக்க முடியாது. அவனை அப்போது பார்ப்பவர்கள் வியப்பில் ஆழ்ந்து விடுவார்கள். நானும் பரவசத்தில் ஆழ்ந்து அவனுக்குப் பால் வெண்ணெய், முதலியவற்றை ஊட்டுவேன். அவனுடன் விளையாடுவேன். எத்தனையோ முறை அவனை என் தோள் மீது தூக்கிக்கொண்டுள்ளேன். அது கூட அவனிடம் எவ்வித தயக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் வளர்ந்து மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் இந்தக் குழந்தை இயல்பு போய்விடும் என்று கூறினேன்.
-
குருதேவர் ராக்காலைக் கடிந்துகொள்ளல்-
-
அவன் தவறு செய்யும்போது கண்டிப்பேன், ஒரு நாள் பசியாக இருக்கிறதென்று காளி கோயிலிலிருந்து வந்த பிரசாத வெண்ணெயை எடுத்து உண்டு விட்டான். எவ்வளவு பேராசைக்காரன் நீ” ஆசையைக் கட்டுப் படுத்துவதை நீ இங்கிருந்து கற்றுக் கொள்ளவேண்டும். அதைச் செய்யாமல் வெண்ணெய் எடுத்து உண்டு விட்டாய். என்று கண்டித்தேன். அவன் பயந்து நடுங்கிவிட்டான். அதன் பின் அவ்வாறு செய்வதில்லை.
-
ராக்காலின் பொறாமையும் குருதேவரின் பயமும்-
-
சிறு பையனைப்போன்று பொறாமையும் அவனிடம் இருந்தது. அவனைத் தவிர வேறு யாரிடமாவது நான் அன்பு செலுத்தினால் அவனால் பொறுத்துக்கொள்ள முடியாது. பொறாமையால் வெந்து விடுவான். அன்னை பராசக்தி இங்கு அழைத்து வருபவர்களிடம் பொறாமை கொள்வதன் மூலம் அவன் தனக்குத் தீங்கைத்தேடிக்கொள்ளக் கூடாதே என்றுநான் கவலைப்பட்டேன்.
-
ராக்கால் பிருந்தாவனம் செல்லுதல்-
-
ராக்கால் என்னிடம் வரத்தொடங்கி- சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின் நோய்வாய்ப்பட்டபோது பலராமுடன் பிருந்தாவனம் சென்றான். அதற்குச் சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு காட்சி கிடைத்தது. அதில், அன்னை பராசக்தி அவனை என்னிடம் இருந்து பிரிக்கப்போவது போல் கண்டேன். எனவே மனமுருகி, அம்மா, அவன் சிறுவன் அவனுக்கு ஒன்றும் தெரியாது. அதனால் தான் பொறாமைப்படுகிறான். உன் பணியின் பொருட்டு அவனைச் சிறிது காலத்திற்கு அப்புறப்படுத்த விரும்பினால், ஒரு நல்ல இடத்தில் ஆனந்தமான மனநிலையில், அவனை வைத்திருப்பாயாக! என்று அன்னையிடம் பிரார்த்தித்தேன். அதன்பின் தான் அவன் பிருந்தாவனத்திற்குச் சென்றான்.
பிருந்தாவனத்தில் இருக்கும்போது அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதைக்கேள்விப்பட்டு நான் கொண்ட கவலையைச்சொல்லி முடியாது. ஏனெனில் அவன் முற்பிறவியில் பிருந்தாவனத்தில் இருந்த இடைச்சிறுவன் என்பதை அன்னை எனக்கு தெய்வீகக் காட்சியில் காட்டியிருந்தாள். எங்கிருந்து தோன்றினானோ அங்கே அவன் சென்றுள்ளதால், முற்பிறவி நினைவு வந்து அவன் உடல் வீழ்ந்து விடுமோ, என்று எனக்குக் கவலையாயிற்று. மனமுருகி அன்னையிடம் பிரார்த்தித்தேன். அவள் எனக்கு ஆறுதல் தந்தாள். அப்போது அவனைப் பற்றி பல செய்திகளை அன்னை எனக்கு க்காட்டினாள். அவற்றுள் பலவற்றை வெளியே சொல்லக்கூடாது என்பது அன்னையின் ஆணை.
-
ராக்காலின் எதிர்காலம்-
-
தாம் முதலில் பெற்ற பால பக்தனைப் பற்றி குருதேவர் எவ்வளவோ கூறியுள்ளார். ராக்காலைப்பற்றி அன்னை குருதேவருக்குக் காட்டியவை அனைத்தும் பின்னாளில் எழுத்துக்கு எழுத்து உண்மை ஆயிற்று. பாலகனாக இருந்த அவர் வயது ஏற ஏற தீவிர சாதகராகி, படிப்படியாக இறைவனுக்காக அனைத்தையும் துறந்தார். பிற்காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ண சங்கத்தின் தலைவராகவும் மலர்ந்தார்.
-
முதன் முறையாக சுவாமி பிரம்மானந்தர் குருதேவரிடம் வந்து மூன்று நான்கு மாதங்களுக்குப் பின் பு சுவாமி விவேகானந்தர் குருதேவரிடம் வந்தார். இப்போது அவரது வாழ்க்கையைப் பார்ப்போம்.--
திவ்ய நிலையிலிருந்த குருதேவரின் மனநிலை-
-
பிரம்மத்தை அறிந்தவன் அனைத்தும் அறிந்தவனாகிறான். என்று வேதங்களும் பிற சாஸ்திரங்களும் கூறுகின்றன. நிலைப்பெற்றிருந்த குருதேவரின் இந்தக் கால செயல்களையும் நடமுறைகளையும் கவனிக்கும்போது, மேற்கூறியது முற்றிலும் உண்மை என்பதை நாம் அறியலாம்.ஏனெனில் அவர் பிரம்மத்தின் நிர்க்குண நிலை, சகுண நிலை மற்றும் பிரம்மசக்தியான மாயை ஆகிய அனைத்துடனும் தொடர்பு கொண்டு எவ்வித சந்தேகமோ களங்கமோ அற்றநிலையில் பேரானந்தத்தில் திளைத்திருந்தார் என்பது மட்டுமல்ல, எப்போதும் பாவமுகத்தில் நிலை பெற்றிருந்ததால், மாயை காட்டும் எந்த மர்மத்தையும் அவரால் விரும்பிய கணமே புரிந்து கொள்ள முடிந்தது. நுண்பார்வை மிக்க அவரது மனக்கண்களினின்று மாயையினால் தன் உண்மை இயல்பினை மறைக்க இயலவில்லை. அப்படித்தான் இருக்கவும் முடியும். ஏனெனில் இந்த உலகம் தோன்றி வெளிப்படுவதும் ஒடுங்கும் இடமுமான மாயையின் தலைவனாகிய இறைவனின் பிரபஞ்ச மனமும் பாவமுகமும் ஒன்றே தான். தனது சிறிய- நான் என்பதைக் கடந்து அதனைப் பிரபஞ்ச மனத்துடன் ஒன்றுபடுத்த முடிந்தவர்களுக்கு, அந்தப் பிரபஞ்ச மனத்தில் உதயமாகும் அனைத்து கருத்துக்களும் தெளிவாகத்தெரியும். அத்தகைய நிலையை அடைந்திருந்ததால் தான் தமது பக்தர்கள் வருவதற்கு முன்பே அவர்களின் முற்பிறவிகளைப் பற்றி குருதேவர் அறிய முடிந்தது. பிரபஞ்ச மனத்தின் ஏதேவொரு நோக்கத்தைச் செயல்படுத்தத்தான் தாம் பிறந்திருப்பதையும் குருதேவர் அறிந்துகொண்டார். அந்தப் பணியில் பெருமைசேர்ப்பதற்காக மிக உயர்ந்த நிலையிலுள்ள சாதகர்கள் சிலர் பிறந்துள்ளனர். அவர்களுள் யார் அதிகமாக மற்றும் யார் குறைவாக அந்தப் பணியில் பங்கேற்பார்கள், யார் யார் அந்தப் பணியின் பயனைமட்டும் அனுபவிக்கப்போகிறார்கள் என்பதெல்லாம் அவருக்குத் தெரிந்திருந்தது. அத்தகையவர்கள் வரும் காலம் நெருங்கிவிட்டதை அறிந்து அவர்களின் வரவிற்காக ஆவலுடன் காத்திருந்தார். மாயையின் ஆதிக்கத்தினுள் இருந்து கொண்டே, அதன் ரகசியங்கள் அனைத்தையும் அறிந்தவர்களை ”எல்லாம் தெரிந்தவர்” என்று கூறாமல் வேறென்ன சொல்வது?
திவ்ய நிலையில் நிலைபெற்றிருந்த குருதேவர் தாம் அடையாளம் செய்திருந்த பக்தர்கள் வருவதற்குரிய காலம் நெருங்கி விட்டதை அறிந்து, அவர்களுடைய வருகைக்காக எவ்வளவு ஆர்வத்துடன் காத்திருந்தார் என்பதை அவரிடம் சுவாமி விவேகானந்தர் முதன் முதலில் வந்த நிகழ்ச்சியைக்கேட்டால் அறிந்து கொள்ளலாம். தாம் வந்த காலத்தில் தான் சிம்லாவைச்சேர்ந்த சுரேந்திரநாத மித்ரரும் தட்சிணேசுவரம் வந்து குருதேவரைச் சந்தித்தார் என்று சுவாமி பிரம்மானந்தர் கூறினார். முதல் சந்திப்பிலேயே அவர் குருதேவரிடம் மிகவும் கவரப்பட்டார். சிறிது காலத்திற்குள் குருதேவரைத் தம் வீட்டிற்குக் கூட்டிச்சென்று விழாக்கொண்டாடும் அளவுக்கு நெருங்கிய பக்தராகிவிட்டார். அப்படி ஒரு முறை குருதேவர் அங்குச் சென்றிருந்தார். பாடகர் ஒருவரும் கிடைக்காமல் போகவே, பக்கத்து வீட்டில் வசிக்கின்ற விசுவநாத தத்தரின் மகனான நரேந்திரரை வந்து, குருதேவருக்காகப் பாடும்படி அழைத்தார். இவ்வாறு தான் குருதேவருக்கும் அவரது தெய்வீகப் பணியில் சிறப்பாகப் பங்கேற்கவிருந்த நரேந்திரருக்கும் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அது 1881- நவம்பர் மாதமாக இருக்கலாம். நரேந்திரருக்கு வயது பதினெட்டு. கல்கத்தா பல்கலைக் கழகத்தில் எஃப்.ஏ படித்துக் கொண்டிருந்தார்.
நரேந்திரரை ப் பார்த்தவுடனேயே குருதேவர் அவர்பால் மிகவும் கவரப்பட்டதாக சுவாமி பிரம்மானந்தர் கூறினார்.ஏனெனில் உடனடியாக முதலில், சுரேந்திரரையும் பின்பு ராமசந்தி ர தத்தரையும் கூப்பிட்டு, இனிமையாகப் பாடிய இளைஞரைப் பற்றிய விவரங்களை முடிந்த அளவு விசாரித்துத்தெரிந்து கொண்டார்.ஒரு நாள் அவரைத் தட்சிணேசுவரத்திற்குக் கூட்டி வரும்படியும் அவர்களிடம் கூறினார். பாட்டு முடிந்ததும் அவரிடம் சென்றார். அவரது அங்க அமைப்புக்களைக் கூர்ந்து கவனித்தார். பின்னர் , அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினார். தாமதமின்றி ஒரு நாள் தட்சிணேசுவரம் வரும் படி அழைத்தார்.
இந்த நிகழ்ச்சி நடந்த சில வாரங்களுக்குப் பின்பு தான் எஃப், எ தேர்வு முடிந்திருந்தது.நரேந்திரரின் தந்தை கல்கத்தாவில் உள்ள ஓர் உயர்ந்த குடும்பத்துடன் நரேந்திரரின் திருமணப்பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். பெண் சற்று கறுப்பாக இருந்ததால் அவளது தந்தை பத்தாயிரம் ரூபாய் வரதட்சணை கொடுக்கத் தயாராக இருந்தார். விசுவநாத தத்தரின் தூண்டுதலின் பேரில் ராமசந்திர தத்தரும் மற்ற உறவினர்களும் இந்தத் திருமணத்திற்கு இசையும் படி நரேந்திரரை வற்புறுத்தினர்.ஆனால் நரேந்திரர் வளைந்து கொடுக்காததால் திருமணம் நடைபெறவில்லை.ராமசந்திர தத்தர் விசுவநாத தத்தரின் வீட்டில் வளர்ந்தவர் . அவரது உதவியுடன் படித்து மருத்துவரானவர். நெருங்கிய உறவினர். ஆன்மீக லட்சியங்களின் காரணமாக நரேந்திரர் திருமணம் செய்து கொள்ள மறுப்பதை அறிந்த அவர் நரேந்திரரிடம், ”உனக்கு இறையனுபூதி பெறவேண்டும் என்று உண்மையான ஆர்வம் இருக்குமானால், பிரம்ம சமாஜம் போன்ற இடங்களில் அலைவதை விட்டு விட்டு தட்சிணேசுவரத்தில் குருதேவரிடம் செல், என்று கூறினார். அந்தச் சமயத்தில் ஒரு நாள் அண்டை வாசியான சுரேந்திரரும், நரேந்திரரைத் தம்முடன் தட்சிணேசுவரத்திற்கு வருமாறு அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நரேந்திரர் தம் இரண்டு மூன்று நண்பர்களுடன் தட்சிணேசுவரம் சென்றார்.
நரேந்திரரைப் பார்த்ததும் தம் மனத்தில் என்னென்ன தோன்றின என்பதை ஒரு நாள் பேச்சின் நடுவே எங்களிடம் குருதேவர் சுருக்கமாகக் கூறினார். முதல் நாள் நரேந்திரன் (கங்கையைப் பார்த்தபடியுள்ள) மேற்குப்புறக்கதவு வழியாக இந்த அறைக்குள் வந்தான். அவன் தன் உடம்பைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தலைமுடியும் ஆடையும் கலைந்து கிடந்தன. அவனுக்கு எந்தப் பொருளும் ஒரு பொருட்டாகத்தெரியவில்லை. எதனுடனும் அவன் ஒட்டாததுபோல் தோன்றியது. மனத்தில் பெரும்பகுதி வற்புறுத்தி உள் முகமாகத் திருப்பப் பட்டிருந்ததை அவனது கண்கள் காட்டின, உலகியல் மாந்தர் மலிந்த கல்கத்தாவில் சத்வ குணம் படைத்த இப்படி ஒருவன் வாழ்வது சாத்தியமா, என்று வியந்தேன்.
தரையில் பாய் விரிக்கப் பட்டிருந்தது. அதில் உட்காரும் படி அவனிடம் கூறினேன். அங்கே கங்கை நீர் ஜாடியிருக்கிறதே அதனருகில் அமர்ந்தான். நண்பர்கள் சிலரும் அன்று அவனுடன் வந்திருந்தனர். அவர்களின் இயல்பு அவனது இயல்பிற்கு நேர்மாறாக இருந்தது. அவர்கள் சாதாரண இளைஞர்களைப்போல் சுகபோக நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
பாடும் படிக் கூறியபோது அவன் அப்போது தான் ஓரிரு வங்காளப் பாடல்களைக் கற்றுக்கொண்டது தெரியவந்தது. அவற்றைப் பாடும் படிக் கூறினேன். அவன் மனமே மீண்டும் உன் வாழ்விடம் செல்வாய்” என்ற பிரம்ம சமாஜப்பாடலைப்பாடினார். முற்றிலுமாக மனம் ஒன்றி தியான நிலையைப்போன்ற நிலையிலிருந்து அவன் பாடினான். என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. நான் பரவச நிலையில் ஆழ்ந்தேன்.
அவன் சென்ற பின் அவனைக்காண வேண்டுமென்று என் இதயம் துடித்த துடிப்பை விளக்க இயலாது. ஈரத்துண்டை இறுக்கிப் பழிவதைப்போன்ற வேதனை அவ்வப்போது என் இதயத்தில் தோன்றும். கட்டுப்படுத்திக்கொள்ள இயலாமல் போகும் போது, ஜனங்கள் அவ்வளவாகச் செல்லாத தோட்டத்தின் வடக்குப் பக்கத்திலுள்ள சவுக்குத்தோப்பிற்கு ஓடிச்சென்று ஏங்கி ஏங்கி அழுவேன். ஓ! என் குழந்தாய்! வந்து விடு, உன்னைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது” என்று என் ஏக்கம் வார்த்தைகளாக வெடிக்கும். சிறிது நேரம் அழுதபின் தான் மனம் சற்று அமைதியாகும். இப்படி ஆறுமாதம் இருந்தது. இங்கே வரும் வேறு சில இளைஞர்களுக்காகவும் மனத்தில் சில வேளைகளில் ஏக்கம் எழுவதுண்டு. ஆனால் நரேந்திரனுக்காக ஏங்கியதுடன் ஒப்பிடும்போது அவை ஒன்றுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.நரேந்திரரை முதன் முறையாக குருதேவர் தட்சிணேசுவரத்தில் சந்தித்தபோது தம்மிடம் தோன்றிய உணர்வுகள் மற்றும் எண்ணங்களுள் பலவற்றை மறைத்துத்தான் எங்களிடம் கூறினார் என்பது தெரியவந்தது. ஏனெனில் ஒரு நாள் இந்த நிகழ்ச்சியைப் பற்றி நரேந்திரர் எங்களிடம் கூறினார்.
நான் பாட்டை முடித்தேன். குருதேவர் எழுந்து என் கையைப் பிடித்துக்கொண்டு வடக்குப் பக்கம் உள்ள வராந்தாவிற்கு வந்தார். அப்போது குளிர்காலம் . அறைக்குள் குளிர்காற்று வராமல் இருப்பதற்காக வராந்தாவில் நின்ற தூண்களுக்கு இடையே தட்டி வைக்கப் பட்டிருந்தது. வராந்தாவில் வந்து அறைக்கதவை மூடி விட்டால் அறைக்குள் இருப்பவர்களுக்கோ வெளியில் உள்ளவர்களுக்கோ அங்கு நடப்பது எதுவும் தெரியாது. வராந்தாவில் நுழைந்தவுடன் குருதேவர் கதவை மூடிவிட்டார். தனிமையில் எனக்கு ஏதோ உபதேசம் செய்யப்போகிறார் என்று நான் எண்ணினேன். ஆனால் அவர் சொன்னதும் செய்ததும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. திடீரென்று என் கையைப் பிடித்துக்கொண்டு தாரை தாரையாகக் கண்ணீர் விட்டார். முன்பே அறிமுகமானவரிடம் பேசுவதைப்போன்று மிகுந்த அன்புடன், இவ்வளவு காலம் தாழ்த்தி நீ வருவது சரியா?
நான் உனக்காக எப்படிக் காத்திருக்கிறேன் என்பதை ஒரு முறையாவது நீ எண்ணிப் பார்க்க வேண்டாமா? உலகியல் மக்களின் பொருளற்ற பேச்சினைக்கேட்டு க்கேட்டு என் காதுகள் வெந்துபோகும் நிலைக்கு வந்து விட்டன. உள்ளத்தின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒருவருமில்லாமல் என் இதயம் வெடித்து விடும் நிலையிலிருக்கிறது என்று அழுதவாறு கூறினார். அடுத்த கணமே என் முன்னால் நின்று, கைகளைக் கூப்பிக்கொண்டு ஒரு தெய்வத்துக்குரிய மரியாதையை எனக்கு அளித்து, பிரபோ! எனக்குத்தெரியும். நீஅதே பண்டைய ரிஷி. மனிதவடிவில் வந்த நாராயணன், மக்களின் துயரைத் துடைப்பதற்காக மீண்டும் உடல் தாங்கி வந்துள்ளாய், என்றெல்லாம் கூறினார்.
அவரது செயல்பாடுகளைக் கண்ட நான் வியப்பால் வாயடைத்து நின்றேன். போயும் போயும் யாரைப் பார்க்க வந்திருக்கிறேன்? இது ஒரு முழுப்பைத்தியம். இல்லாவிடில் விசுவநாத தத்தரின் மகனாகிய என்னிடம் இப்படிப்பேசுவாரா, என்ன? என்று என் மனத்தில் தோன்றியது. எதுவும் பேசாமல் இருந்தேன். அந்த அற்புதப் பைத்தியம் தமக்குத்தோன்றியதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் என்னை அங்கே காத்திருக்கும் படிக் கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தார்.வெண்ணெய், கற்கண்டு, இனிப்பு போன்றவற்றைக்கொண்டு வந்து தம் கைகளினாலேயே எனக்கு ஊட்டத்தொடங்கினார். என்னிடம் கொடுங்கள்”. நண்பர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்று பலமுறை கூறியும், அவர் அதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் பின்னர் உண்பார்கள், நீ சாப்பிடு” என்று கூறிவிட்டு எல்லாவற்றையும் எனக்கே ஊட்டினார். அதன் பின்னர் தான் அமைதியுற்றார். பின்னர் என் கையைப் பிடித்துக்கொண்டு, விரைவில் என்னைப் பார்க்கத் தனியாக வருவதாக வாக்களி” என்று கேட்டார். அந்த அன்பான வேண்டுகோளை மறுக்க முடியாமல் நானும் ஒத்துக்கொண்டேன். பின்னர் அவருடன் அறைக்குள் வந்து நண்பர்களின் அருகில் அமர்ந்தேன்.
அமர்ந்து அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பல எண்ணங்கள் என்னுள் எழுந்தன. மற்றவர்களுடன் அவர் சாதாரணமாகவே நடந்து கொண்டார். பைத்தியத்தின் சாயலே இல்லை. அவரது பேச்சையும் பரவச நிலையையும் கண்டபோது, இவர் இறைவனுக்காக உண்மையாகவே அனைத்தையும் துறந்தவர், எதனை உபதேசிக்கிறாரோ அதன் படி நடப்பவர் என்று தோன்றியது. உங்களைப் பார்ப்பதைப்போல் உங்களுடன் பேசுவதைப்போல், கடவுளைப் பார்க்கலாம்.பேசலாம். ஆனால் யார் அதை விரும்புகிறார்கள்! மனைவி, மக்களின் சோகத்தில், மக்கள் குடம் குடமாகக் கண்ணீர் விடுகிறார்கள். பணத்திற்கும் சுகபோகங்களுக்காகவும் அழுது புரள்கிறார்கள். ஆனால் இறைவனை அடையவில்லையே என்று யார் அழுகிறார்கள்? இறைவனைக் காணவேண்டும் என்று ஏங்கிய மனத்துடன் அவனைக் கூவி அழைத்தால் அவன் கண்டிப்பாகக் காட்சி தருவான்” என்றெல்லாம் அவர் கூறியதைக்கேட்டபோது, மற்ற மதபோதகர்களைப்போல இவர் கற்பனையில் தோன்றியதைப்பேசவில்லை, இறைவனுக்காக உண்மையிலேயே அனைத்தையும் துறந்து, அவனை முழுமனத்துடன் அழைத்து, இறையனுபூதி பெற்று, அந்த அனுபவத்தையே பேசுகிறார் என்பதைத்தெரிந்து கொண்டேன். சற்று நேரத்திற்கு முன்பு அவர் என்னிடம் நடந்து கொண்ட முறையையும், இப்போது அவர் பேசியவற்றையும், தொடர்புபடுத்திப் பார்த்தபோது அபர்க்ரோம்பி போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் கூறும் அரைப்பைத்தியமாக இருப்பார் என்ற முடிவிற்கு வந்தேன். அந்த முடிவிற்கு வந்தாலும் அவரது உயர்ந்த தியாக மனப்பான்மையை மறக்க முடியவில்லை, பைத்தியமாக இருக்கலாம். ஆனால் இறைவனுக்காக இப்படி அனைத்தையும் துறப்பவர்களைக் காண்பது அரிதினும் அரிது. இந்தக் காரணத்திற்காகவே அவர் பைத்தியமாக இருந்தாலும் இவர் புனிதர். மேலான துறவி, அதனாலேயே மனித குலத்தால் போற்றி வழிபடத் தகுந்தவர்” என்று எண்ணிக்கொண்டு அவரது திருவடிகளில் வணங்கி விடைபெற்று கல்கத்தாவிற்கு திரும்பினேன்.
இத்தகைய அசாதாரணமான உணர்வுகளை குருதேவரின் மனத்தில் தோற்றுவித்த நரேந்திரரைப் பற்றி அறிவதற்கு வாசகர்கள் விரும்புவது இயற்கையே. அவரைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுகிறோம்.
அப்போது நரேந்திரர் ஏட்டுக் கல்வியும இசையும் பயில்கின்ற மாணவராக மட்டும் இருக்கவில்லை. ஆன்மீக உணர்வுகளின் தூண்டுதலால் தீவிர பிரம்மசரியம் கடைசிப்பிடித்து தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். சைவ உணவு உண்டு, வெறும் தரையிலோ அல்லது ஒரு விரிப்பு மட்டும் விரித்தோ தான் படுப்பார், அவரது தந்தையின் வீட்டிற்கு அருகில் , தாய் வழிப் பாட்டியின் வாடகை வீடு ஒன்றி ருந்தது. நுழைவுத்தேர்விற்குப் பின் அந்த வீட்டின் மாடியில் உள்ள ஓர் அறையில் தான் பெரும்பாலும் தங்கி வந்தார். ஏதேனும் காரணத்தால் அங்கே தங்க முடியாவிட்டால் அருகிலுள்ள வீட்டில் ஓர் அறையை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு அதில் தங்குவார். இவ்வாறு தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர் களிலிருந்து விலகி வாழ்ந்து தன் குறிக்கோளை அடைவதற்காகப் பாடுபட்டார். வீட்டில் படிப்பதற்கு வசதி இல்லாததால் தனியாக வசிப்பதாகத்தான் அவரது தந்தையும் குடும்பத்தினரும் நினைத்தார்கள்.
பிரம்ம சமாஜத்துடன் தொடர்பு-
-
அக்காலத்தில் பிரம்ம சமாஜத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் நரேந்திரர். அவர்களைப்போல் உருவமற்ற ஆனால் குணங்களுடன் கூடிய பிரம்மக் கொள்கையை நம்பினார். அந்த தியானத்தில் அதிக நேரத்தைச்செலவிட்டார். உருவமற்ற பிரம்மம் என்ற ஒன்று உள்ளது என்பதை அறிவுபூர்வமாக ஏற்றுக்கொண்டு மற்றவர்களைப்போன்று அவரால் திருப்தி அடைந்து விட முடியவில்லை. கடவுள் என்று ஒருவர் இருப்பாரேயானால் , தன்னை உண்மையாக நாடுபவர்களிடமிருந்து தன் இயல்பை அதிக காலம் மறைக்க மாட்டார் என்று நரேந்திரரின் உள் மனம், முற்பிறவி சம்ஸ்காரங்களின் தூண்டுதலால் சதா கூறிக்கொண்டிருந்தது. தன்னை அடைவதற்கான வழியை இறைவனே காட்டுவார் என்பதை உறுதியாக நம்பினார் அவர் இறையனுபூதி அல்லாத ஓர் லட்சியத்துடன் வாழ்வது வீண் என்று கருதினார் அவர் எங்களிடம் ஒரு முறை கூறினார்.
-
நரேந்திரரின் அற்புதமான இரு சிந்தனைகள்-
-
வாலிபப் பருவம் முதலே, நான் இரவில் படுக்கச்சென்றவுடன் இரண்டு சிந்தனைகள் என்முன் தோன்றும் . ஒன்றில் நான் எல்லையற்ற செல்வமும் அந்தஸ்தும் உடையவனாக சமுதாயத்தில் பெரிய மனிதர்கள் எனப்படுபவர்களிடையே தலைமை நிலையில் இருப்பதாகத்தோன்றும் அதற்கான ஆற்றலும் என்னிடம் இருப்பதாகவே உணர்ந்தேன். மறுகணமே இன்னொரு சிந்தனை விரியும். அதில் நான் கடவுளுக்காக அனைத்தையும் துறந்து , அவரையே சரணடைந்து, கோவணம் மட்டும் அணிந்து கிடைக்கும் உணவை உண்டு, மரத்தடியில் இரவைக் கழிப்பதாக என்னைக்காண்பேன். நான் விரும்பினால் இத்தகையதொரு ரிஷி போன்ற வாழ்க்கையையும் என்னால் வாழ முடியும் என்ற நம்பிக்கை எழும். இவ்வாறு முற்றிலும் மாறுபட்ட இரு கற்பனைக் காட்சிகள் என் முன் தோன்றும். முடிவில் இரண்டாவது காட்சி தான் என் மனத்தை முழுமையாக ஆட்கொள்ளும். இந்த வாழ்க்கையில் தான் மனிதன் பேரானந்தத்தை அடைய முடியும், நான் இப்படித்தான் வாழ்வேன் என்று எண்ணிக்கொள்வேன், அத்தகையதொரு வாழ்வு தரும் இன்பத்தை எண்ணியெண்ணி, இறை நினைவில் ஆழ்ந்து தூங்கிவிடுவேன். ஆச்சரியம் என்னவென்றால் இந்த சிந்தனைக் காட்சிகள் ஒவ்வோர் இரவும் நீண்ட காலம் தொடர்ந்து வந்தது.
-
நரேந்திரருக்கு இயற்கையாகவே அமைந்த தியான இயல்பு-
-
இறையனுபூதிக்கு மிகச் சிறந்தவழி தியானம் தான் என்பதை அந்த இளம் வயதிலேயே உணர்ந்திருந்தார் நரேந்திரர்.முற்பிறவி சம்ஸ்காரங்கள் தான் இதற்குக் காரணமாக இருந்திருக்கவேண்டும். அவருக்கு நான்கு ஐந்து வயதிருக்கும்போது சீதாராமர், சிவ பெருமான் போன்ற தெய்வங்களின் மண்பொம்மைகளை வாங்கிக் கொண்டு வந்து மலர் மற்றும் அணிகலன்களால் அலங்கரித்து அவர்களுக்கு முன் தியானம் செய்வதைப்போன்று கண்மூடி, ஆடாமல், அசையாமல் அமர்ந்து கொள்வார். ரிஷிகளும் முனிவர்களும் நீண்ட நெடுங்காலம் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்களின் முடி நீண்டு வளர்ந்து,மரங்களின் வேர்போல் பூமியைப் பிளந்து உள்ளே செல்லும் என்று பாட்டிகள் சொல்லியக் கதைகளைக்கேட்டிருக்கிறார். அதனால் அவ்வப்போது கண்களைத் திறந்து தன் தலையிலிருந்து சடைமுடி வளர்ந்து நிலத்தினுள் செல்கிறதா என்றும் பார்த்துக் கொள்வார். ஒரு நாள் வீட்டின் ஒதுக்குப்புறமான அறையில் தன் நண்பனான ஹரியுடன் நுழைந்து உள்ளே தாளிட்டுக்கொண்டு இவ்வாறு தியானத்தில் ஈடுபட்டார். வீட்டில் உள்ளோர் யாருக்கும் இது தெரியாது. நீண்ட நேரம் ஆயிற்று. நரேந்திரரைக் காணவில்லையென்று அனைவரும் அங்குமிங்குமாகத் தேடினர். எங்கோ வெளியில் சென்று பாதையைத் தவறவிட்டு விட்டார் என்றே முடிவு கட்டினர். நீண்ட நேரம் தேடிய பின் குறிப்பிட்ட அந்த அறை உட்பக்கம் தாளிடப் பட்டிருப்பதைக் கண்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார்கள். அங்கே நரேந்திரர் ஆடாமல் அசையாமல் தியானத்தில் அமர்ந்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியை அவரது அன்னை எங்களிடம் கூறினார். நரேந்திரரின் இந்தச் செயல் குழந்தைத்தனமான கற்பனையாக இருக்கலாம். ஆனால் அவர் எத்தகைய அற்புதமான சம்ஸ்காரங்களுடன் பிறந்திருக்கிறார் என்று இந்த நிகழ்ச்சி நன்றாகக் காட்டுகிறது. நாம் கூறும் இந்தக் காலத்தில் அவர் நாள்தோறும் தியானம் பழகி வந்தார் என்பது அவரது உறவினர் யாருக்கும் அவ்வளவாகத்தெரியாது.ஏனெனில் எல்லோரும் படுக்கப்போன பின் அவர் தம் அறையைத் தாளிட்டுக்கொண்டு தியானம் செய்ய அமர்வார். சில நாட்களில் அவர் தியானத்தில் ஆழ்ந்து இரவு முழுவதும் அப்படியே கழிவதும் உண்டு.
-
மகரிஷி தேவேந்திர நாதரின் அறிவுரையினால் தியானத்தில் ஆர்வம் அதிகரித்தல்.-
-
இதற்குச் சற்று முனன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் காரணமாக தியானத்தில் நரேந்திரரின் ஆர்வம் அதிகமாயிற்று. ஒரு நாள் அவர் தன் நண்பர்களுடன் ஆதி பிரம்ம சமாஜத்தின் ஆச்சாரியரான மகரிஷி தேவேந்திர நாதரைக் காணச்சென்றார். மகரிஷி மிகுந்த அன்புடன் அந்த இளைஞர்களைத் தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு பல உபதேசங்களை அளித்தார். நாள்தோறும் தியானம் பழகும்படிக்கேட்டு க்கொண்டார். நரேந்திரரிடம் யோகியின் அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவர் தியானம் பழகினால் யோக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள பலன்களை விரைவில் அடையலாம் என்றும் கூறினார். மகரிஷியின் தூய வாழ்வின் காரணத்தால் அவரிடம் நரேந்திரருக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. அதனால் மகரிஷியின் சொற்படி நரேந்திரர் தன் மனத்தை முன்னைவிட மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுத்தினார்.
-
நரேந்திரரின் பல்வேறு திறமைகள்-
-
இளமைப் பருவத்திலேயே நரேந்திரர் பல்வேறு துறைகளில் திறமை பெற்றவராக இருந்தார். ஐந்து வயதாகும் முன்பே முக்தபோதம் என்னும் வடமொழி இலக்கண நூலின் சூத்திரங்கள் அனைத்தும் அவருக்கு மனப்பாடமாகி இருந்தன. முதிய உறவினர் ஒருவர் அவரை தினமும் மாலைவேளையில் மடிமீது அமர்த்திக்கொண்டு மூதாதையர்களின் பெயர்ப்பட்டியல், தெய்வங்களின் மீது சுலோகங்கள், மேலேகூறிய இலக்கண சூத்திரங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பார்.ஆறாவது வயதில் ராமாயணப் பாடல்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்துவிட்டார். எங்காவது ராமாயணப் பாடல்கள் பாடப்பெற்றால் தவறாமல் அந்த இடங்களுக்குச் செல்வார். ஒரு நாள் அவரது வீட்டிற்கு அருகில் ராமாயணப் பாடல் நிகழ்ச்சி ஒன்று கடைபெற்றது. நிகழ்ச்சியின் இடையில் பாடகர் பாட்டை மறந்துவிட்டார். அப்போது அங்கிருந்த நரேந்திரர் அந்தப் பகுதியை அவருக்கு நினைவுபடுத்திக்கொடுத்து, அந்த பாடகரின் அன்பையும் சிறிது இனிப்பையும் பரிசாகப்பெற்றார். ராமாயணத்தைக்கேட்டுக் கொண்டிருக்கும்போதே ஸ்ரீராமரின் தொண்டனான அனுமன், அந்தப் பாடகர் கூறியதுபோல், அங்கே பாடலைக்கேட்டுக் கொண்டிருக்கிறாரா என்று சுற்று முற்றும் பார்த்துக் கொள்வாராம். அவரது நினைவாற்றலும் அபாரமானது. எதுவானாலும் ஒரு முறை கேட்டால் போதும், அப்படியே அது மனத்தில் பதிந்து விடும். மறக்கவே மாட்டார். இளமை முதற்கொண்டே அவர் படிக்கும் முறை மற்றச் சிறுவர்களின் முறையிலிருந்து வேறுபட்டிருந்தது. அவரைப்பள்ளியில் சேர்த்த பின்னர் மாலையில் பள்ளிப் பாடங்களைக் கற்பிப்பதற்காக ஆசிரியர் ஒருவர் அமர்த்தப் பட்டார்.நரேந்திரர் கூறுவார், அவர் வீட்டிற்கு வந்தவுடன் நான் என் ஆங்கிலம் மற்றும் வங்காளி பாட நூல்களைக்கொண்டு சென்று, அன்று படிக்க வேண்டிய பகுதியை அவரிடம் காட்டிவிட்டு அமைதியாகப் படுத்துக்கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ இருப்பேன். அவர் அந்தப் பகுதியில் உள்ள சொற்களின் உச்சரிப்பையும் பொருளையும், இரண்டு மூன்று முறை தாமே அந்தப் பாடத்தைக் கற்பதுபோல் படிப்பார். அது எனக்குப்போதுமானது. எல்லாம் மனப்பாடமாகிவிடும். வளர்ந்த பிறகும் தேர்வுக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் தான் தேர்வுக்கான பாடங்களைப் படிக்கத் தொடங்குவார்.மற்ற நேரங்களில் தமக்கு விருப்பமுள்ள வேறு நூல்களைப் படிப்பார். இவ்வாறாக நுழைவுத்தேர்வுக்கு முன்பு ஆங்கில, வங்க மொழிகளில் உள்ள முக்கிய நூல்களையும் வரலாற்று நூல்களையும் படித்துவிட்டார். தேர்வுக்கு ச் சில நாட்கள் முன்பு மட்டுமே பாடங்களைப் படிப்பதனால் சில வேளைகளில் அவர் சிரமப்பட்டு படிக்க வேண்டியிருக்கும். இது பற்றி அவர் ஒரு நாள் கூறினார், நுழைவுத்தேர்வுக்கு இரண்டு மூன்று நாட்கள் தான் இருக்கும். வரை கணிதப் பகுதியைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. எனவே இரவு முழுவதும் கண்விழித்துப் படிக்க ஆரம்பித்தேன்.இருபத்துநான்கு மணி நேரத்தில் வரைகணிதத்தின் நான்கு புத்தகங்களையும் படித்துத் தயார் செய்து தேர்வுக்குச் சென்றேன். இறையருளால் திடகாத்திரமான உடலும் நல்ல நினைவாற்றலும் இருநததால் தான் அவரால் இவ்வாறு செய்ய முடிந்தது.
பாடத்தைத் தவிர மற்ற புத்தகங்களையும் நரேந்திரர் படித்தார் என்று கூறியதால் அவர் நாவல்களையும் நாடகங்களையும் படித்து தன் நேரத்தை வீணாக்கினார் என்று எண்ணிவிடக் கூடாது.குறிப்பிட்ட காலத்தில் சில குறிப்பிட்ட கருத்தைப் பற்றிய நூல்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் தோன்றும். உடனே முடிந்த அளவு அந்த கருத்து பற்றி அனைத்து நூல்களையும் திரட்டி அவற்றைப் படிப்பார். எடுத்துக் காட்டாக 1879-ஆம் ஆண்டு அவர் நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய வருடத்தில் அவருக்கு இந்திய வரலாறு படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடனே மார்ஷ்மான், எல்ஃபின்ஸ்டன் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய அனைத்து நூல்களையும் படித்தார்.எஃப். ஏ , படித்துக்கொண்டிருந்த காலத்தில் நியாய சாஸ்திரம் பற்றி ஒயிட்லி, ஜெவன்ஸ், மில் போன்றோர் எழுதிய நூல்களைப் படித்தார். பி.ஏ. படித்து கொண்டிருக்கும்போது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய வரலாறுகள், மேலை நாட்டு தத்துவம் எல்லாம் அறிந்து கொள்ளவேண்டும் என்று விரும்பினார். அவரது இயல்பு இத்தகையதாக இருந்தது.
-
வேகமாய் படிக்கும்ஆற்றல்-
-
இவ்வாறு பல நூல்களை ப் படித்ததால் நரேந்திரர் விரைவாகப் படிக்கும் ஆற்றல் மிக்கவரானார். அவர் கூறினார். அப்போதிலிருந்து நான் எந்த நூலையும் வரிவரியாகப் படிக்க வேண்டியிருக்கவில்லை. பாராவின் முதல் வரியையும் கடைசி வரியையும் படித்தாலே ஆசிரியர் கூற வந்த கருத்தினை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. படிப்படியாக அந்த ஆற்றல் மேலும் வளர்ந்தது. அதன் பின்னர் பாராக்களையும் படிக்க வேண்டியிருக்கவில்லை. ஒரு பக்கத்தில் முதல் வரியையும் கடைசி வரியையும் படித்தாலே அதில் சொல்லப் பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது. குறிப்பிட்ட ஒரு கருத்தினைத் தர்க்கரீதியாக ஆசிரியர் விளக்க முற்படும் போதும் சரி, மேற்கோள்களைக் காட்டும்போதும் சரி, அது நாலைந்து பக்கங்கள் இருந்தால் கூட தர்க்கத்தின் ஆரம்பத்தைப் படித்த உடனேயே ஆசிரியரின் சிந்தனை ஓட்டத்தைப் புரிந்து கொள்வேன்.
நரேந்திரரின் வாதத் திறமை
-
நிறையப் படித்தாலும், ஆழ்ந்து சிந்தித்ததன் விளைவாகவும் வாதம் செய்ததில் நரேந்திரருக்கு மிகுந்த ஈடுபாடுஏற்பட்டது. ஆனால் அவர் குதர்க்க வாதங்கள் செய்வதில்லை. தாம் உண்மை என்று அறிவு பூர்வமாக உணர்ந்ததை மட்டுமே ஆதரித்துப் பேசுவார். அதற்கு மாறாக கருத்தை யாராவது கூறினால் பேசாமல் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார். அனுகூலமான பல மேற்கோள்களைக் காட்டி, தர்க்கம் செய்து, எதிராளியை அடக்கி விடுவார், அவரது வாதத் திறமைக்குப் பணியாதவர்களே இல்லை எனலாம். அவரிடம் தோற்றவர்கள் அவரிடம் நட்பு பாராட்டியிருக்க மாட்டார்கள் என்பதைச்சொல்ல தேவையில்லையே! எதிராளியின் ஓரிரு சொற்களைக்கேட்ட உடனேயே அவர் எவ்வாறு வாதம் செய்யப்போகிறார் என்பது அவருக்குப் புரிந்து விடும். எனவே அதனை முறியடிக்கக் கூடிய விடையை அப்போதே ஆயத்தம் செய்து விடுவார். இது பற்றி ஒரு முறை கேட்ட போது அவர் கூறினார். அப்படி எத்தனை புதிய கருத்துக்கள் தாம் உலகில் உள்ளன? உள்ள ஓரிரண்டைத் தெரிந்து கொண்டு அதற்கு அனுகூலமானதும் பிரதிகூலமானது மான வாதங்களை அறிந்தால் போதும். அதற்கு மேல் எதிராளி யின் வாதத்தைக்கேட்டு ச் சிந்தித்து விடை கூற வேண்டியதில்லை. அவர் எப்படிக் கூறினாலும் அது நமது எல்லைக்குள்ளே இருக்கும். புதிய கருத்துக்களையும் எண்ணங்களையும் உலகிற்கு வழங்கக் கூடியவர்கள் அரிதாகவே பிறக்கிறார்கள்.
அறிவுக் கூர்மை, அசாதாரண புத்தி, ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றைப் பிறவியிலேயே கொண்டிருந்ததால் நரேந்திரர் மிக விரைவாக அனைத்திலும் தேர்ச்சிப்பெற்றார். அதனால் விளையாடுவதற்கும் நண்பர்களுடன் பொழுது போக்குவதற்கும் நேரம் இருந்தது. இப்படி அவர் காலம் கழிப்பதைக் கண்டவர்கள் அவருக்குப் படிப்பில் நாட்டம் இல்லை என்றே முடிவு கட்டினர். ஓரிரு மாணவர்கள் அவரைப்போன்று இருப்பதாக எண்ணிக்கொண்டு படிப்பில் அக்கறை காட்டாமல் வாழ்ந்து வாழ்க்கையைக்கெடுத்து க்கொண்டனர்.
-
உடற்பயிற்சியில் இருந்த ஈடுபாடு
-
அறிவைப் பெருக்குவதில் ஆர்வத்தைப்போலவே உடற்பயிற்சியிலும் நரேந்திரருக்கு ஈடுபாடு இருந்தது. அவர் குழந்தையாக இருந்தபோது அவரது தந்தை சிறிய குதிரை ஒன்று வாங்கிக்கொடுத்திருந்தார். அதனால் வளர்ந்த போது குதிரையேற்றத்தில் நல்ல தேர்ச்சிப்பெற்றார். உடலுக்கு வலுவையும் உரத்தையும் தருவதான சிலம்பம், மற்போர், குத்துச்சண்டை, வாட்போர், நீச்சல் போன்ற பல்வேறுகலைகளிலும் விதவிதமான உடற்பயிற்சிகளிலும் அவர் சிறந்து விளங்கினார். நவகோபால் மிஸ்ரர் தொடங்கி வைத்த இந்துத் திருவிழாவில் இவற்றிற்கான போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவதுண்டு அதில் நரேந்திரர் சிலவேளைகளில் கலந்து கொண்டதாகவும் கேள்விப்பட்டோம்.
-
நண்பர்களிடம் பரிவும் தைரியமும்-
-
இளமையிலிருந்தே நண்பர்களிடம் பரிவும் அளவற்ற தைரியமும் உடையவராக விளங்கினார் நரேந்திரர். மாணவப் பருவத்திலும் பின்னரும் அவர் ஒரு தலைவராக உயர்ந்ததில் இந்த இரு பண்புகளும் மிகவும் துணை நின்றன. ஏழெட்டு வயதாக இருக்கும்போது ஒரு முறை அவர் தம் நண்பர்களுடன் மேடேபுரூஸ் என்ற இடத்திலுள்ள மிருகக் காட்சி சாலைக்குச்சென்றார். லக்னௌவின் காலஞ்சென்ற நவாப் ஆஸித் அலி சாகிப்புக்குச் சொந்தமானது. அந்த மிருகக்காட்சி சாலை. சிறுவர்கள் தங்களுக்குள் பணம் வசூல் செய்து கொண்டு அங்கே சென்று வருவதற்காகப் படகு ஒன்றை அமர்த்திக்கொண்டார்கள். திரும்பி வரும்போது ஒரு சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு படகினுள் வாந்தியெடுத்து விட்டான். படகோட்டி ஒரு முஸ்லீம், அவன் மிகவும் சினம் கொண்டான். படகு கரையை அடைந்ததும் படகை அவர்கள் சுத்தம் செய்யாவிட்டால் படகிலிருந்து ஒருவரையும் இறங்கவிடப்போவதில்லை என்று அச்சுறுத்தினான். வேறு யாரையாவது வைத்துப் படகைக் சுத்தப்படுத்திக்கொள்ளும் படியும் அதற்குரிய பணம் தந்துவிடுவதாகவும் சிறுவர்கள் கூறியும் அவன் இசையவில்லை. பேச்சு வாய்ச்சண்டையாக மாறி கைகலக்கும் நிலை வந்தது. அங்கேயிருந்த படகோட்டிகள் அனைவரும் சேர்ந்து கொண்டு சிறுவர்களை அடிக்கச்சென்றனர். சிறுவர்கள் பயந்து போய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். அவர்களுள் நரேந்திரன் தான் வயதில் சிறியவன். இந்த ஆரவாரத்திற்கிடையில் அவன் மெதுவாக படகிலிருந்து இறங்கினான். மிகவும் சிறுவனாகஇருந்ததால் படகோட்டி தடுக்கவில்லை.கரைக்குக்சென்ற அவன் சண்டை வலுப்பதைக் கண்டான். எப்படி நண்பர்களைக் காப்பாற்றுவது என்று எண்ணிக்கொண்டிருந்தபோது இரண்டு ஆங்கிலேயப் படை வீரர்கள் அருகிலுள்ள மைதானத்தில் உலவிக் கொண்டிருப்பதைக் கண்டான். உடனே விரைந்து அவர்களிடம் சென்று வணங்கி, அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு தனக்குத்தெரிந்த ஆங்கிலச் சொற்களை உபயோகித்தும் சைகை மூலமும் நிலைமையை அவரிடம் எடுத்துக் கூறியபடியே படகு இருந்த இடத்தை நோக்கி அவர்களை இழுத்தான். வசீகரமான அந்தச் சிறுவனின் நடத்தையைக்கண்டு மகிழ்ந்த அவர்களும் அவனுடன் வந்தனர். விஷயத்தைப்புரிந்து கொண்டதும் தங்களை கையில் இருந்த பிரம்பைச் சுழற்றியபடியே படகோட்டியிடம், சிறுவர்களைப்போக அனுமதிக்கும் படிக் கட்டளையிட்டனர். வீரர்களைக் கண்டதும் மற்ற படகோட்டிகள் நழுவி, தங்கள் படகுகளுக்குச்சென்றுவிட்டனர்.நரேந்திரனின் நண்பர்களும் விடுதலை பெற்றனர். நரேந்திரனின் தைரியம் வீரர்களை மிகவும் கவர்ந்தது, அவர்கள் அவனைத் தங்களுடன் நாடகம் பார்க்க அழைத்தனர். நரேந்திரன் அந்த அழைப்பைப் பணிவுடன் மறுத்து விட்டு அவர்களுக்கு நன்றிகூறி விடைபெற்றுக்கொண்டான்.
-
சிராபிஸ் என்ற போர்க்கப்பலைக் காண சாதுரியமாக அனுமதி பெறல்-
-
நரேந்திரரின் இளமைப்பருவ நிகழ்ச்சிகள் பலவற்றை அவரது தைரியத்திற்கு உதாரணமாக க் கூறமுடியும். ஓரிரண்டை இங்கே காண்போம். நரேந்திரனுக்குப் பத்துப் பன்னிரண்டு வயது இருக்கும். வேல்ஸ் இளவரசராக இருந்த ஏழாம் எட்வர்டு மன்னர் அப்போது இந்தியாவிற்கு வந்திருந்தார். அந்தச் சமயம் ஆங்கிலேயர்களின் பெரிய போர்க்கப்பலான சிராபிஸ் கல்கத்தாவிற்கு வந்திருந்தது. அனுமதிச் சீட்டு பெற்று கல்கத்தா மக்கள் பலர் கப்பலைப் பார்த்து வந்தார்கள். நரேந்திரன் தன் நண்பர்களுடன் செல்ல விரும்பினான். விண்ணப்பம் ஒன்றை எழுதிக் கொண்டு சௌரங்கி தெருவிலுள்ள அலுவலகத்திற்குச்சென்றான். அங்கு நின்றிருந்த வாயிற்காப்போன் பெரிய மனிதர்களைத் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே கதவருகே நின்று கொண்டு, அந்த வாயிற்காப்போனை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தபடியே அனுமதி வாங்கிக்கொண்டு வருபவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவர்கள் எல்லோரும் இரண்டாவது மாடியில் உள்ள வராந்தாவிற்குச் சென்றனர். அங்கு தான் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டான். வேறு எந்த வழியிலாவது அங்குப்போக முடியுமா என்று பார்த்த அவன் கண்களில் அந்தக் கட்டிடத்தின் பின்புறத்தில் இருந்த ஒரு குறுகிய இரும்புப் படிக்கட்டு தென்பட்டது. அதைப் பொதுவாக ஆங்கிலேய அதிகாரியின் சிப்பந்திகள் பயன்படுத்தினர். அந்தப் படிக்கட்டு வழியாகச்செல்வதை யாராவது பார்த்தால் திட்டிவிரட்ட நேரும் என்பது தெரிந்தும், துணிந்து அந்தப் படிகள் வழியாக மாடிக்குச்சென்று அதிகாரியின் அறைக்குள் நுழைந்தான். அவரைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் இருந்தது. அவர் தலைத்தூக்கமலே அந்த விண்ணப்பங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார். நரேந்திரனும் வரிசையில் அனைவருக்கும் பின்னால் நின்று கொண்டான். அவனது முறை வந்தபோது அதிகாரியை வணங்கி அவரிடம் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு மற்றவர்களைப்போல் முன் பக்கப் படிக்கட்டின் வழியாக வெளியே வந்தான்.
சிம்லா பகுதியில் கார்ன் வாலிஸ் தெருவில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றிருந்தது. இந்துத் திருவிழாவை ஆரம்பித்த நவகோபால் மிஸ்ரர் தான் இதையும் நிறுவினார். வீட்டிற்கு மிக அருகில் இருந்ததால் நரேந்திரர் அங்கு நாள்தோறும் நண்பர்களுடன் சென்று உடற்பயிற்சி செய்வதுண்டு. அவர்கள் நவகோபாலுக்கு த் தெரிந்தவர்களாக இருந்ததால் அவர்களிடமே அந்த உடற்பயிற்சி கூடத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார் அவர். ஒரு நாள் ட்ரபீஸ் விளையாட்டிற்காக கனத்த மரக்கட்டை ஒன்றைத் தூக்கி நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. அவர்களால் இயலவில்லை. மக்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவரும் உதவ முன்வரவில்லை. அந்தக் கூட்டத்தில் ஓர் ஆங்கிலேய மாலுமி நின்றிருந்தார். உதவிக்காக அவரை நரேந்திரர் அழைத்தார். அவர் மகிழ்ச்சியுடன் வந்தார். கயிற்றைக் கட்டி மரக்கட்டையை மேலே இழுத்தார்கள். மாலுமி அதனைப்பொருத்தி வைப்பதற்காக உதவிக்கொண்டிருந்தபோது கயிறு அறுந்து, அந்த மரக்கட்டை மாலுமியின் தலையில் விழுந்து விட்டது. அவர் மயங்கிக் கீழே விழுந்தார். அவரது தலையிலிருந்து ரத்தம் பீறிட்டது, அவ்வளவு தான், அங்கு நின்ற அனைவரும் அவர் இறந்து விட்டார் என்று எண்ணி, போலீஸ் மற்றும் கோர்ட் விவகாரங்களுக்கு அஞ்சி, ஒரே ஓட்டமாக ஓடி விட்டனர். எஞ்சியது நரேந்திரரும் அவரது நெருங்கிய ஓரிரு நண்பர்களும் மட்டுமே, அவர்கள் உடனடியாக முதலுதவியில் ஈடுபட்டார்கள். நரேந்திரர் தம் வேட்டியைக் கிழித்து அடிபட்ட இடத்தில் மாலுமியின் தலையில் கட்டினார். பின்னர் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, விசிறி அவரை நினைவிற்குக்கொண்டு வர முயன்றனர். அவருக்கு மயக்கம் தெளிந்ததும், அருகில் இருந்த ”டிரெயினிங் அகாடமி” பள்ளிக்கு அவரைத் தூக்கிச்சென்று படுக்க வைத்தனர். பின்னர் நவகோபாலுக்குச் சொல்லி அனுப்பி, டாக்டர் ஒருவருடன் வரும்படிக்கூறினர். டாக்டர் வந்து சோதித்துப் பார்த்துவிட்டு, ஆழமான காயம் இல்லையென்றும் ஒரு வாரம் சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என்றும் கூறினர். நரேந்திரரின் சேவையிலும் மருந்துகளாலும் பத்திய உணவாலும் குறித்த காலத்தில் மாலுமி குணமடைந்தார். பின்னர், அந்தப் பகுதியில் வசித்திருந்த முக்கியஸ்தர்கள் சிலரிடமிருந்து நரேந்திரரும் நண்பர்களும் பணம் வசூலித்து மாலுமியின் வழிச்செலவிற்குக்கொடுத்து அனுப்பினர். இவ்வாறு விபத்துக்களையும் அவர் அமைதியாக எதிர் கொண்ட பல இளமைப்பருவ நிகழ்ச்சிகளைப் பற்றிக்கேள்விப் பட்டிருக்கிறோம்.
நரேந்திரரின் சத்திய நிஷ்டை
-
சிறுவயதிலிருந்தே நரேந்திரர் சத்திய நிஷ்டை உடைய வராக விளங்கினார். வாலிபரான போது அந்த நிஷ்டையில் ஈடுபாடு பெருகியது. பொய் பேச நேருமே” என்பதற்காக நான் குழந்தைகளிடம் பேய்பிசாசு கதைகள் கூறி அவர்களை அச்சுறுத்துவதில்லை. அவ்வாறு செய்பவர்களையும் கண்டிப்பேன். ஆங்கிலக் கல்வி பயின்ற தாலும் பிரம்ம சமாஜத்திற்கு அடிக்கடிச்சென்று வந்ததாலும், எனக்கு வாய்மையில் அவ்வளவு ஈடுபாடு இருந்தது” என்று பின்னாளில் அவர் கூறினார்.-
-
வேடிக்கை வினோதங்களில் நரேந்திரரின் ஈடுபாடு-
-
வலிமையான உடல், அறிவுக் கூர்மை, அற்புதமான புத்தி, மனத்தூய்மை ஆகியவற்றுடனேயே பிறந்ததால் நரேந்திரரால் , எப்போதும் ஆனந்தமாக இருக்க முடிந்தது. உடற்பயிற்சி சங்கீதம், வாத்தியங்கள் வாசித்தல், நடனம், நண்பர்களுடன் சேர்ந்து பிறருக்குத் துன்பம் விளைவிக்காத வேடிக்கை வினோதங்களில் ஈடுபடல் இவையனைத்திலும் அவர் கைதேர்ந்தவராக இருந்தார். அவரைக் கவனிப்பவர்கள் அவரது ஆனந்த நிலையின் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் அவரைக் குறை கூறினர். ஆனால் ஆண்மைமிக்க நரேந்திரர் யாருடைய புகழ்ச்சியையோ இகழ்ச்சியையோ பொருட்படுத்த வில்லை. அவர்கள் கூறுகின்ற ஆதாரமற்ற நிந்தைமொழிகளைத் தவறு என்று நிரூபிக்க அவரது உரம் வாய்ந்த மனம் ஒரு போதும் முயன்றதில்லை.
-
ஏழைகளிடம் நரேந்திரரின் பரிவு-
-
ஏழைகளிடம் பரிவு என்பது நரேந்திரரின் வாழ்நாள் முழுவதும் அவருடன் ஒன்றியிருந்த குணமாகும். சிறுவயதில் வீட்டிற்கு யாராவது பிச்சைக்காரர்கள் வந்தால் துணிமணி, பாத்திரம், என்று அவர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் கொடுத்து விடுவார். வீட்டினர் கண்டால் அதைத் தடுத்து பிச்சைக்காரனிடமிருந்து அவற்றைத் திரும்ப வாங்கி விட்டு ஏதாவது பணம் கொடுத்து அனுப்புவார்கள். இப்படிச் சில முறை நடந்த பின் ஒரு நாள் அவருடைய தாய் மாடியில் உள்ள ஓர் அறையில் அவரைப் பூட்டி வைத்து விட்டார். அந்தச் சமயத்தில் ஒருவன் வந்து பிச்சைப்போடும் படி உரக்கக் கூறினான். உடனே நரேந்திரர் அந்த அறையில் இருந்த தன் அன்னையின் விலை உயர்ந்த ஆடைகளை ஜன்னல் வழியாகப் பிச்சைக்காரனுக்காக எறிந்தார்.
-
நநே்திரின் கோபம்.
-
நரேந்திரரின் அன்னை கூறுவார், நரேந்திரரிடம் இளமையிலிருந்தே ஒரு குறைபாடு இருந்தது. கோபம் வந்தால்போதும், அவன் தன்னையே மறந்து விடுவான். கண்ணில் கண்ட பொருட்களை எல்லாம் போட்டு உடைத்து சின்னாபின்னப்படுத்தி விடுவான். பிள்ளைவரம் கேட்டு காசி வீரேசுவரரிடம் விசேஷவேண்டுதல்கள் செய்தேன். வீரேசுவரரோ தன் பூதகணங்களில் ஒன்றை எனக்கு அனுப்பி விட்டார்போலும்! இல்லையென்றால் கோபம் வந்தால் அவன் ஏன் இப்படி சமநிலை குலைந்து பூதம்போல் நடந்து கொள்ள வேண்டும்? எப்படியோ அவரது கோபத்தைத் தணிக்க நல்லவழி ஒன்று கண்டு பிடித்தார் அவரது அன்னை. எந்த வழியிலும் அவரைச் சமாதானப்படுத்த முடியாதபோது, வீரேசுவரப்பெருமானை நினைத்துக்கொண்டு ஓரிரு குடம் குளிர்ந்த தண்ணீரை அவரது தலையில் கொட்டி விடுவார். அவரது சினம் அப்படியே அடங்கி விடும்! குருதேவரைச் சந்தித்த சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் நரேந்திரர் எங்களிடம் கூறினார். சாதனை அது இது என்று செய்து நான் வேறு எதுவும் பெறாமல் போயிருக்கலாம். ஆனால் கோபம் கொள்ளும் என் பொல்லாத குணத்தை இறையருளால் கட்டுபடுத்தி விட்டேன். முன்பெல்லாம் கோபம் வரும்போது எனக்குக் கண்மண் தெரியாது. பிறகு அதற்காக மிகவும் வருந்துவேன். ஆனால் இப்போது யாராவது எந்தக் காரணமுமின்றி எனக்கு துரோகம் செய்தாலும் , என்னை அடித்தாலும் கூட அவ்வளவு கோபம் வருவதில்லை.
-
நரேந்திரரின் அறிவும் உள்ளமும் சமமாக வளர்ந்திருந்தது.
-
அறிவும் உள்ளமும் சம அளவில் வளர்ச்சி பெற்றவர்களைக் காண்பது அரிது. அத்தகையோர் தான் மனித சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். ஆன்மீக உலகில் தங்கள் அசாதாரண இயல்பை வெளிப்படுத்து பவர்களிடம் அறிவு, உள்ளம் இந்த இரண்டுடன் இளமை முதற்கொண்டே கற்பளை வளமும் மிகுந்திருப்பதைக் காணலாம். நரேந்திரரின் வாழ்க்கையை ஊன்றிப் படித்தால் இந்த உண்மை புரியும். ஓரிரு எடுத்துக் காட்டுகளால் இதனை சாவகர்கள் அறிந்து கொள்ளலாம்.
-
ராய்பூருக்குச் செல்லும் வழியில் நரேந்திரர் முதன் முறையாக தியானத்தில் ஆழ்தல்-
-
நரேந்திரரின் தந்தை தன் வேலை நிமித்தமாக மத்தியப் பிரதேசத்திலுள்ள ராய்ப் பூரில் வசிக்க வேண்டியிருந்தது. நீண்ட காலம் தங்க வேண்டும் என்பதால் குடும்பத்தினரையும் ராய்ப்பூருக்கு அழைத்துக்கொள்ள அவர் முடிவு செய்தார். நரேந்திரரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். அப்போது நரேந்திரருக்குப் பதினான்கு வயது தான் இருக்கும். அந்தக் காலத்தில் மத்தியப் பிரதேசத்தில் ரயில் வசதி இல்லை. விலங்குகள் நிறைந்த அடர்ந்த காடு வழியாக பதினைந்து நாட்களுக்குமேல் மாட்டுவண்டியில் பயணம் செய்தாகவேண்டும். பல சிரமங்கள் இருந்தாலும் வனத்தின் அந்த வரையில்லா அழகு அவற்றை மறக்கச்செய்து விட்டதாக நரேந்திரர் கூறினார். யாரும் கேட்காமலே பூமியை இப்படிப் பல்வேறு வழிகளில் அலங்கரித்து வைத்திருந்த அந்தப் பரம்பொருளின் எல்லையற்ற ஆற்றலையும் அனப்பரிய அன்பையும் முதன் முறையாக உணர்ந்த நரேந்திரரின் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்தது. அவர் கூறினார், நான் அந்தக் காட்டு வழியாகச்சென்றபோது கண்டதும் அனுபவித்ததும் என் மனத்தில் அழியாச் சித்திரங்களாகப் பதிந்து விட்டன. அதிலும் முக்கியமாக ஒரு நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது. அன்று விந்திய மலை அடிவாரம் வழியாக நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்தோம். இருபுறமும் மலைச் சிகரங்கள் வானளாவ உயர்ந்து நின்றன. வண்ண மலர்களும், செடிகொடிகளும், காய் கனிகளும் மரங்களும் செறிந்து அந்த மலைக்கு ஒரு தனியழகைக்கொடுத்தது. மெல்லிய பல்வேறு த்வனிகளால் திசையெங்கும் நிறைத்துக்கொண்டு பறவையினங்கள் இங்குமங்குமாகப் பறந்தன. சில பறவைகள் உணவு தேடுவதற்காகத் தலையில் இறங்கின.
இந்த அற்புதக் காட்சிகளையெல்லாம் கண்டு மனம்ஏதோவொரு விளக்க முடியாத அமைதியால் நிறைந்தது. மெள்ள மெள்ளச் சென்று கொண்டிருந்த வண்டி, இரண்டு மலைச் சிகரங்கள் ஒன்றையொன்று அன்பினால் நெருங்கி அணைத்துக் கொள்வதைப்போன்று காட்சியளித்த ஓரிடத்தை அடைந்தது. அந்த மலைச் சிகரங்களை உற்று கவனித்தேன். அவற்றுள் ஒரு மலையில் அடி முதல் முடிவரை ஒரு பெரிய பிளவு. அந்தப் பிளவை நிரப்புவது போல் ஒரு பெரியதேன் கூடு! எத்தனைப் பெரியது! எத்தனைக் கால உழைப்பின் பலன் அது! பிரமிப்புடன் அதைப் பார்த்துக் கொண்டேயிருந்த என்னுள் இந்தத்தேனீக்கள் எங்கிருந்து வந்தன என்ற கேள்வி எழுந்தது. அந்த ரீதியில் சிந்தித்துக் கொண்டே இருந்தபோது இதையெல்லாம் படைத்த இறைவனின் எல்லையற்ற ஆற்றலில் என் மனம் ஆழ்ந்து மூழ்கியது. சிறிது நேரம் புற உலக உணர்வு முற்றிலுமாக இல்லை. எவ்வளவு நேரம் அவ்வாறு சுயநினைவிழந்து மாட்டுவண்டியில் இருந்தேன் என்பது தெரியாது. நினைவு வந்த பொழுது அந்த இடத்தைக் கடந்து வெகு தொலைவு வந்து விட்டிருந்தோம். அந்த வண்டியில் நான் மட்டுமே இருந்ததால், நிகழ்ந்த எதுவும் மற்றவர்களுக்குத் தெரியாது. கற்பனைத் திறனின் துணையால் தியானத்தில் மூழ்கி அதில் முழுமையாகக் கரைந்து விடுகின்ற இத்தகைய நிலை நரேந்திரரின் வாழ்வில் இதுவே முதன் முறை என்று தோன்றுகிறது.
நரேந்திரரின் முன்னோர்களைப் பற்றிச் சுருக்கமாகக் கூறி இந்த அத்தியாயத்தை முடித்துக்கொள்வோம். கல்கத்தாவில் நெடுங்காலமாக வசித்துவரும் குடும்பங்களுள் தத்தர் குடும்பம் ஒன்று. அது பல பிரிவுகளைக்கொண்டது. செல்வாக்கு, சமூக அந்தஸ்து, மற்றும் கல்விகேள்விகளில் இந்த காயஸ்த குடும்பம் சிறந்து விளங்கியது. நரேந்திரரது பாட்டனாரின் தந்தை ராம்மோகன் தத்தர் . அவர் வழக்கறிஞராக இருந்து நிறையப்பொருள் ஈட்டினார். சிம்லா பகுதியில் கௌர்மோகன் முகர்ஜித் தெருவிலுள்ள சொந்த வீட்டில் பெரிய குடும்பத்துடன் வசித்தார். அவருடைய மகன் துர்காசரணுக்குத் தந்தைவழிச்சொத்து அதிகம் இருந்தும், அவர் இளமையிலேயே உலகப்பற்றை விட்டுத் துறவறத்தை மேற்கொண்டார். சிறுவனாக இருக்கும்போதே துர்காசரண் சாதுக்களிடமும் துறவிகளிடமும் மிகுந்த அன்பு காட்டினார். சாஸ்திரங்கள் படிப்பதில் ஆர்வம் மிகக்கொண்டு குறுகிய காலத்தில் பண்டிதராகி விட்டார்.திருமணமானவராக இருந்தும் அவருக்கு உலகப் பற்று இல்லை. தன் தோட்டத்தில் சாதுக்களுடன் அதிக நேரத்தைக் கழித்தார். சாஸ்திரங்கள் கூறுவதன்படி, ஒரு குழந்தை பிறந்தவுடன் துர்காசரண் வீட்டை விட்டு ஒரேயடியாகச் சென்று விட்டதாக சுவாமி விவேகானந்தர் கூறினார்.
வீட்டைவிட்டுச்சென்றாலும் இறைவனின் திருவுளத்தால் குறுகிய காலத்தில் இருமுறை துர்காசரண் தன் மனைவியையும் உறவினர்களையும் சந்திக்க நேர்ந்தது. மகன் விசுவநாத தத்தருக்கு இரண்டு அல்லது மூன்று வயதிருக்கும்போது அவரது மனைவியும் உறவினர்களும் அவரைத்தேடி காசிக்கு வந்து சிலகாலம் தங்கியிருந்தார்கள். ரயில் வசதி இல்லாததால் உயர் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் படகில் தான் வருவார்கள். துர்காசரணின் மனைவியும் அவ்வாறே வந்தார். வழியில் ஓரிடத்தில் குழந்தை விசுவநாதன் கங்கைநதியில் விழுந்து விட்டான்.தாயும் உடனே கங்கையில் குதித்தாள். மிகவும் சிரமப்பட்டு அவளைக் கண்டுபிடித்து சுய உணர்வை இழந்த நிலையில் படகில் ஏற்றினர். அவளுடன் குழந்தையும் இருந்தது. அந்த உணர்வற்ற நிலையிலும் அவள் தன் குழந்தையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தார். எல்லையற்ற தாயன்பு அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியது.
துர்காசரணின் மனைவி காசியில் நாள்தோறும் விசுவநாதப்பெருமானை தரிசிக்கச்செல்வார். ஒரு நாள் மழை காரணமாக வழி மிக வழுக்கலாக இருந்தது. அதனால் அவர் கோயிலின் முன்னால் வழுக்கி விழுந்து விட்டார். அந்தப் பக்கம் போய்க்கொண்டிருந்த துறவி ஒருவர் இதனைக்கண்டு வேகமாக வந்து அவளைத் தூக்கிக்கோயிலின் படிக்கட்டில் அமர்த்தி, காயம் ஏதாவது பட்டிருக்கிறதா என்று பார்த்தார். நான்கு கண்கள் சந்தித்த போது தான் அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர். அந்தத் துறவி துர்காசரண்தான். உடனே துர்காசரண் எழுந்து அவளைத் திரும்பி ப் பார்க்காமல் அந்த இடத்திலிருந்து சென்று விட்டார்.
துறவியாக வீட்டைவிட்டுச்சென்று பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஒருவர் ”சுவர்க்கத்தை விட மேலான” தன் பிறந்த ஊருக்குச்செல்லலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது.துர்காசரணும் அவ்வாறு ஒரு முறை கல்கத்தாவிற்கு வந்தார். நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கிவிட்டு தாம் வந்திருப்பதை வீட்டாருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளும் படி அந்த நண்பரிடம் கேட்டுக்கொண்டார். உலகியல் மனிதரான அந்த நண்பர் அந்த வேண்டுகோளைக் காதில் போட்டுக் கொள்ளாமல் ரகசியமாக அவரது வீட்டினரிடம் விவரத்தை கூறிவிட்டார். அவர்கள் கூட்டமாக வந்து துர்காசரணை வற்புறுத்தி வீட்டிற்குக் கூட்டிச்சென்றனர். அவர் வீட்டிற்குச்சென்றார். ஆனால் யாரிடமும் ஒரு வார்த்தைகூடப்பேசவில்லை. ஒரு மூலையில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மரக்கட்டையைப் போன்று அசையாதிருந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் இரவும் பகலும் அதே நிலையில் அமர்ந்திருந்தார்என்று சொல்லப் படுகிறது. பட்டினி இருந்தே தம்மை மாய்த்துக் கொண்டு விடுவாரோ என்று அஞ்சிய அவர்கள் அறையின் கதவைத் திறந்து விட்டார்கள். அடுத்த நாள் காலையில் அவர் அங்கிருந்து யாருமறியாமல் சென்றுவிட்டார்.
நரேந்திரரின் தந்தை விசுவநாதர்-
-
துர்காசரணின் மகன் விசுவநாதர் வளர்ந்த பின் பாரசீகம் மற்றும் ஆங்கில மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றார். கல்கத்தா உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருந்த அவர் தாராள குணம் உடையவராகவும் நண்பர்களை மிகவும் நேசிப்பவராகவும் இருந்தார். எனவே ஏராளம் பொருள் ஈட்டியும் அவரிடம் எதுவும் மிஞ்சவில்லை. தன் தந்தையிடமிருந்தே அவர் இந்த இயல்பைப்பெற்றிருக்க வேண்டும். சாதாரண மக்களின் இயல்பினின்று விசுவநாதரின் குணம் மிகவும் வேறுபட்டிருந்தது. அடுத்த நாளைப் பற்றி அவர் எண்ணியதில்லை. தகுதி பாராமல் அனைவருக்கும் உதவி செய்தார். எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர். ஆனால் குடும்பத்தை விட்டுத் தொலைவில் வசித்துவந்தபோது உறவினரைப் பற்றி நீண்ட நாட்களுக்கு எந்தச் செய்தியையும் சேகரிக்க முயற்சி செய்ய செய்யவில்லை. இவ்வாறு அவரைப் பற்றி பல விஷயங்கள் சொல்லலாம்.
-
விசுவநாதரின் இசை நாட்டம்-
-
விசுவநாதர் அறிவுக் கூர்மையும் புலமையும் மிக்கவர். இசையிலும் மற்றக் கலைகளிலும் அவருக்கு நல்ல ஆர்வம் இருந்தது. அவருக்கு மிக இனிமையான குரல் இருந்தது என்று சங்கீதத்தை முறையாகக் கற்காவிட்டாலும் நிது பாபுவின் கீதங்களை நன்கு பாடக்கூடியவர் என்று சுவாமி விவேகானந்தர் கூறுவார். அந்தக் காலத்தில் இசை பயில்வது தாழ்வாகக் கருதப்பட்டு வந்தபோதிலும் சமுதாயக் கருத்திற்கு மாறுபட்டு, முற்போக்காக தன் மகன் நரேந்திரனைக் கல்வியுடன் இசையும் பயில ஏற்பாடு செய்தார். அவரது மனைவி புவனேஸ்வரியும் பக்திப் பாடல்களை இசையுடனும் தாளத்துடனும் நன்றாகப் பாடக்கூடியவர். வைணவ சாதுக்களும் தெருப் பாடகர்களும் பாடுவதை ஒரு முறை கேட்டுவிட்டு அந்தப் பாடல்களை அப்படியே பாடுவார்.
பைபிளிலும். பாரசீகக் கவிஞர் ஹபீஸின் பாடல்களிலும் விசுவநாதர் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.ஏசுநாதரின் வாழ்க்கையின் ஓரிரு அத்தியாயங்களையும், ஹபீஸின் பிரேமை மிகுந்த கீதங்களையும் நாள்தோறும் படிப்பார். சில சமயம் மனைவி மக்களுக்கு படித்துக் காண்பிப்பார். முகமதியர் அதிகம் வாழ்ந்த லக்னோ, லாகூர், போன்ற இடங்களில் சிறிது காலம் வசித்ததால் அவர்களின் சில பழக்க வழக்கங்களினால் கவரப் பெற்றார். சில முகமதிய உணவு வகைகள் அவர் வீட்டில் தினமும் சேர்க்கப் பட்டிருந்தன.
-
விசுவநாதரின் வேடிக்கை நாட்டம்-
-
விசுவநாதர் எவ்வாறு கண்டிப்பு மிக்கவராக இருந்தாரோ அவ்வாறே வேடிக்கை வினோதங்களிலும் ஈடுபாடு உடையவர். பிள்ளைகள் தவறு செய்தால் அவர்களைக் கண்டித்து க் கடுமையாக நடந்து கொள்ளாமல் வேடிக்கையாக அது அவர்களுடைய நண்பர்களுக்குத் தெரியும் படி செய்வார். அதனால் தவறு செய்பவர்கள் அவமானமடைந்து அந்தத் தவற்றை மீண்டும் செய்ய மாட்டார்கள். எடுத்துக் காட்டாக நிகழ்ச்சி ஒன்றைக் காண்போம். ஒரு நாள் நரேந்திரர் ஏதோ காரணத்திற்காகத் தாயிடம் கடுமையான ஓரிரு சொற்களைக் கூறிவிட்டார். விசுவநாதர் அவரைக்கோபித்துக்கொள்ளவில்லை. ஆனால் நரேந்திரர் தன் நண்பர்களுடன் அமர்ந்து பேசும் அறையின் கதவில் கரித்துண்டால் பெரிய எழுத்தில் நரேந்திரன் தன் தாயிடம் இப்படிப்பட்ட சொற்களைப் பேசினான் என்று எழுதி வைத்துவிட்டார். நரேந்திரரும் அவருடைய நண்பர்களும் அந்த அறையில் நுழையும்போது முதலில் அவர்கள் கண்களில் படுவது இந்தச் சொற்கள் தாம். நீண்ட நாட்கள் நரேந்திரர் தன் குற்றத்திற்காக வருத்தப் பட்டார்.
-
விசுவநாதரின் பரந்த உள்ளம்-
-
உறவினர் பலருக்கு விசுவநாதர் ஆதரவளித்து வந்தார். ஏராளமாக அன்னதானம் செய்வார். அவரது ஆதரவு இருந்ததால் தூரத்து உறவினர்கள் சிலர் மிகவும் சோம்பேறித்தனமான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் இன்னும் சிலர் தங்கள் துயரத்தைப்போக்க குடி,போதைப்பொருள் என்று வாழ்ந்தனர். நரேந்திரர் வளர்ந்த பின்பு, தகுதியற்ற இத்தகையோரிடம் தாராளமாக இருப்பது தவறு என்று கூறி தந்தையைத் தடுத்தார். அதற்கு விசுவநாதர், மனித வாழ்க்கை எவ்வளவு துன்பம் நிறைந்தது என்பது இப்போது உனக்கு எங்கே புரியும்? துன்பத்தின் பிடியிலிருந்துகணநேரமாவது விடுபடத்தான் அவர்கள் குடி மற்றும் போதை பொருளை நாடுகிறார்கள் என்பதை நீ புரிந்து கொள்ளும் போது அவர்களைக் கருணைக் கண்ணுடன் பார்ப்பாய் என்று கூறினார்.
-
விசுவநாதரின் மறைவு-
-
விசுவநாதருக்கு பல பெண்களும் பிள்ளைகளும் இருந்தனர். அவர்கள் அனைவரும் நற்பண்புகள் மிக்கவர்கள். பெண்களில் பலர் இளமையிலேயே இறந்துவிட்டனர்.மூன்று நான்குப் பெண்களுக்குப் பிறகு நரேந்திரர் பிறந்ததால் பெற்றோர் அவரிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். 1883-ஆம் ஆண்டு நரேந்திரர்பி.ஏ தேர்வு எழுத இருந்தபோது அவரது தந்தை திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது மரணத்திற்குப் பின்னர் குடும்பம் வறுமையில் வாட நேர்ந்தது.
-
நரேந்திரரின் தாய்
-
நரேந்திரரின் தாய் புவனேசுவரி தேவியின் சிறப்பைப்பற்றி நாங்கள் மிகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். புவனேசுவரி அழகிய தோற்றம் கொண்டவர். பக்தி மிக்கவர். அவற்றுடன் அறிவுக்கூர்மையும் செயல்திறமும் மிக்கவராக இருந்தார். அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பு அவரையே சார்ந்திருந்தது. அதனை மிக எளிதாக வும் தியமையுடனும் செய்ததால், தையல் போன்ற பல கலைகளில் ஈடுபடுவதற்கான நேரம் அவருக்கு இருந்தது. அவர் மிகவும் படித்தவரல்லர். ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களைப் படிக்குமளவிற்கு மட்டுமே அவரது நூலறிவு இருந்தது. ஆனால் தன் பிள்ளைகள் மற்றும் கணவரிடமிருந்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்டார். அந்த விஷயங்களைப் பற்றி அவர் பேசுவதைக்கேட்பவர்கள் அவரைப் படித்தவராகவே கருதுவார்கள். அவரது நினைவாற்றலும் கிரகிப்புத் திறனும் அபாரமாக இருந்தது.ஒரு முறை கேட்டாலே அவரால் எதையும் நினைவில் வைத்துக்கொண்டு திருப்பிச் சொல்ல முடியும். நீண்ட நாட்களுக்குமுன் நடந்த நிகழ்ச்சிகளையும் நேற்று நடந்தது போல் அவரால் விவரிக்க முடியும். கணவரின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட சோதனைகளில் அவரது தைரியம், ஆற்றல் அனைத்தும் சிறப்பாக வெளியாயிற்று. மாதம் ஆயிரம் ரூபாய் செலவு செய்தது போய் கணவரின் மறைவிற்குப் பிறகு முப்பது ரூபாயில் எல்லாச் செலவையும் அடக்கவேண்டியிருந்தது.ஆயினும்ஒரு நாள் கூட அவர் வருத்தமாக இருந்ததை யாரும் கண்டதில்லை. குடும்பச் செலவுகளை அந்தச் சிறு தொகையில் சமாளித்தார். அவர் சமாளித்த வகைளைக் கண்டவர்கள் அவர் மிக அதிகமாகச் செலவழிப்பதாகவே எண்ணினர். எதிர்பாரா வகையில் கணவர் காலமானதால் புவனேசுவரிதேவிக்கு ஏற்பட்ட நிலை பயங்கரமானது. நிரந்தர வருமானம் எதுவும் இல்லை. இது வரை செல்வச் செழிப்பால் வாழ்ந்து வந்த வயதான தாய் மற்றும் பிள்ளைகளின் உணவு, கல்வி இவற்றை எப்படிச் சமாளிப்பது? கணவரின் உதவியாலும் தாராள மனப்பான்மையினாலும் நல்ல நிலையில் இருந்த உறவினர்கள் புவனேசுவரிக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அது பெரிய விஷயமில்லை. அவரிமிருந்து கிடைத்ததைச் சுருட்டவே அவர்கள் முற்பட்டனர். மூத்த மகன் நரேந்திரன் எவ்வளவோ முயன்றும் எந்த வேலையும் கிடைக்காததால் விரக்தியுற்று உலகைத் துறக்க எண்ணும் அளவுக்குச்சென்றுவிட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் புவனேசுவரி தேவி வாழ்க்கையை எதிர்கொண்ட விதத்தைப் பார்க்கும்போது அவரிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கிறது. குருதேவருக்கும் நரேந்திரருக்கும் இடையேயுள்ள தொடர்பைப் படிக்கும் போது,குடும்பச் சூழ்நிலையைப் பற்றி இன்னும் காணப்போகிறோம். அதனால் இங்கே அதனை விவிவாகக் கூறாமல் நரேந்திரர் குருதேவரிடம் இரண்டாம் முறையாக வந்ததைப் பற்றி வாசகர்களுக்குக் கூறுவோம்.
நரேந்திரரின் இரண்டாவது மூன்றாவது சந்திப்புகள்-
................
குருதேவர் ஓர் உண்மையான பக்தர் என்று முடிவு செய்தும் நரேந்திரர் மீண்டும் அவரைக் காணத் தாமதமாகச்சென்றதன் காரணம்-
-
நிலையான லட்சியத்தை ஏற்றுக்கொண்டு விடாமுயற்சியுடன் செயல்படுவோர் பிறரது மேன்மையை உவந்து ஏற்றுக் கொள்கிறார்கள்.
உள்ளார்ந்த மகிழ்ச்சியடைகிறார்கள், யாரிடமாவது அந்த மேன்மையை இது வரை எங்கும் காணாத விதத்தில் காணும் போதோ அவர்கள் சிறிது காலம் திகைப்புடன் அதில் ஆழ்ந்து விடுகிறார்கள். ஆனால் அந்த அனுபவம் அவர்களின் சொந்தப் பாதையை எந்த வகையிலும் பாதிப்பதில்லை. அத்தகைய மேன்மை பொருந்தியோருடன் நெருங்கி,அவர்களுடன் ஓர் அன்புப் பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களின் வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளைக் கூர்ந்து ஆராய்ந்து ஒரு முடிவு காணுமுன் அவர்களைப் பின்பற்றவும் எண்ணுவதில்லை. முதன்முறையாக குருதேவரை தட்சிணேசுவரத்தில் சந்தித்த பின்னர் நரேந்திரரின் நிலை இப்படித்தான் இருந்தது.குருதேவரின் அற்புதமான தியாகச் சிந்தனை, சிந்தனையும் சொல்லும் மாறுபடாத தன்மை இவற்றால் நரேந்திரர் கவர்ந்திழுக்கப் பட்டாலும் அவரைத் தன் வாழ்க்கையின் லட்சியமாக ஏற்றுக் கொள்ள அவரது உள்ளம் இடம் தரவில்லை. வீடு திரும்பியபின், சில நாட்களுக்கு குருதேவரின் அருமையான பண்பும் நடத்தையும் அவரது மனத்தில் திரும்பத்திரும்ப எழுந்தன. ஆனாலும் தான் அவரிடம் கூறியபடி மீண்டும் தட்சிணேசுவரம் செல்லும் விஷயத்தைத் தள்ளி வைத்து விட்டு த் தனது கடமைகளில் ஈடுபடலானார்.
அவர் கற்றமேலைக் கல்வி குருதேவரை அரைப்பைத்தியம் என்று ஒதுக்கவே உதவி செய்தது. இது நாம் புரிந்து கொள்ளத் தக்கது தான். தியான பயிற்சி. கல்லூரிப் பாடங்கள் இவை தவிர தினமும் இசைவகுப்பு மற்றும் உடற்பயிற்சியிலும் அவர் ஈடுபட்டிருந்தார். இவற்றுடன், வயதொத்த நண்பர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக அவர்களை பிரம்ம சமாஜத்தில் ஈடுபடுத்தி,ஆங்காங்கே அழைத்துச்சென்று பிரார்த்தனை. கலந்துரையாடல் போன்ற கூட்டு நிகழ்ச்சிகள் நடத்திவந்தார். இவ்வாறு பற்பல அலுவல்களில் மூழ்கிக் கிடந்த அவரது மனத்தில், தட்சிணேசுவரம் செல்லவேண்டும் என்ற எண்ணம் அமுங்கி விட்டதில் வியப்பென்ன இருக்க முடியும்? மேலைக் கல்வி, மற்றும் தினசரிக் கடமைகளின் காரணமாக அவர் தட்சிணேசுவரம் செல்லாதிருந்தாலும் அவரது நினைவும் சத்திய நிஷ்டையும், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தனிமையில் தட்சிணேசுவரம் செல்வதாக அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றும்படி தூண்டிக்கொண்டேயிருந்தன. எனவே ஒரு மாதத்திற்குப் பின்னர் இரண்டாம்முறை தனியாக தட்சிணேசுவரம் சென்றார். அன்று நடந்த நிகழ்ச்சிகளை நரேந்திரர் எங்களுக்குக் கூறினார் . அவற்றை அவர் சொற்களிலேயே காண்போம்.
-
இரண்டாம்முறை நரேந்திரர் தட்சிணேசுவரம் சேன்றபோது குருதேவரின் ஆற்றலால் கிடைத்த அற்புத அனுபவங்கள்-
-
தட்சிணேசுவர காளி கோயிலுக்கு நடந்து சென்றேன். கல்கத்தாவிலிருந்து அது அவ்வளவு தொலைவில் உள்ளது. என்று எனக்குத் தெரியாது. முன்பு வண்டியில் சென்றிருந்தேன். வராக நகரில் உள்ள தாசரதி சன்யால், சாத்கடி லாஹிரி முதலிய நண்பர்களைச் சந்திக்கப் பலமுறை போயிருக்கிறேன். இவர்களின் வீட்டருகே தான் ராணி ராசமணியின் தோட்டம் இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் நடக்க நடக்க, பாதை நீண்டு கொண்டே இருந்தது. பலரிடம் விசாரித்துக் கொண்டு தட்சிணேசுவரத்தை அடைந்தேன். நேராக குருதேவரின் அறைக்குச்சென்றேன். அவர் தூங்கும் கட்டிலின் அருகிலுள்ள சிறிய கட்டிலில் தனக்குள் தானாக அமர்ந்திருந்தார். வேறு யாரும் இல்லை என்னைப் பார்த்தும் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னை அழைத்து அதே கட்டிலின் ஒரு பக்கத்தில் அமரும்படிக் கூறினார். நான் அமர்ந்தேன்,அவர் ஏதோ விந்தையான மனநிலையில் ஆழ்ந்தார். தெளிவின்றி ஏதோ முணு முணுத்துக்கொண்டு என்னைக் கூர்ந்து பார்த்தபடியே என்னை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வந்தார். பைத்தியம் தொடங்கி விட்டது. அன்றுபோல் இன்றும் வினோதமாக ஏதாவது செய்யப்போகிறார் என்று நினைத்தேன். இதற்குள் அவர் என்னை நெருங்கி வந்துதன் வலது பாதத்தை என் தேகத்தின் மீது வைத்தார். அந்தக் கணமே எனக்கு அற்புத அனுபவம் உண்டாயிற்று. கண்கள் திறந்தே இருக்க நான் கண்டது என்ன தெரியுமா? அறையில் இருந்த எல்லாப்பொருட்களும் சுவர்களும் சுழன்று எங்கோ கரைந்தன.பிரபஞ்சமே அதனுடன் எனது நான்- உணர்வும் எல்லாமே மகா சூன்யத்தில் கரையப்போவதைபோன்றதோர் உணர்வு என்னுள் ஏற்பட்டது. சொல்ல முடியாத பேரச்சம் என்னைக்கௌவிக்கொண்டது. நான்- உணர்வின் அழிவுதான் மரணம். அந்த மரணம் இதோ நிற்கிறது. என் கண்முன் நிற்கிறது. என்று தோன்றியது! என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆ! நீங்கள் என்னை என்ன செய்கிறீர்கள்? எனக்குப் பெற்றோர் இருக்கிறார்கள்” என்று நான் அலறினேன். அதைக்கேட்டு அந்த அற்புத பைத்தியக்காரர் கலகலவென்று உரக்க சிரித்தபடியே என் மார்பைத் தன் கையால் தொட்டு, அப்படியானால், இது போதும் ஒரேயடியாக வேண்டாம். உரிய காலத்தில் எல்லாம் நடக்கும். என்று கூறினார். அவர் அவ்வாறு கூறித் தொட்டது தான் தாமதம். அந்தக் கணமே என் அற்புத அனுபவம் மறைந்து விட்டது. நான் இயல்பான நிலையை அடைந்தேன். அறையின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பொருட்கள் முன்போலவே இருந்ததைக் கண்டேன்.
.-
இந்த அனுபவத்தின் காரணத்தை அறிய நரேந்திரர் விழைவதும் இனி அவரது ஆற்றலுக்கு வசப்படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவதும்.
-
இந்த நிகழ்ச்சியை விவரிக்க இவ்வளவு நேரம் ஆயிற்று.ஆனால் இவையனைத்தும் மிகக் குறுகிய காலத்துள் நடந்து முடிந்து விட்டன. இந்த நிகழ்ச்சி என் மனத்துள் பெரிய புரட்சியை உண்டாக்கியது. என்ன நடந்தது என்று பிரமிப்புடன் யோசித்தேன். அந்த விந்தை மனிதரின் ஆற்றலினால் நொடிப்பொழுதில் இந்த இனுபவம்ஏற்பட்டு அதே வேகத்தில் மறைந்தும் விட்டிருந்தது. மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் பற்றிப் படித்திருக்கிறேன். இது அதைப்போல் ஏதாவது இருக்கலாமோ என்று யோசித்தேன். ஆனால் அதை ஏற்க என் மனம் மறுத்தது. ஏனெனில் உறுதியற்ற மனங்களின் மீது மட்டுமே மன ஆற்றல் மிக்கவர்கள் ஆதிக்கம் செய்து இத்தகைய நிலைகளை உண்டாக்க முடியும். நான் அப்படிப்பட்டவன் அல்லன். சொல்லப்போனால், இது வரை என் மனவலிமையிலும், அறிவுக் கூர்மையிலும் மிகுந்த பெருமை கொண்டிருப்பவன். சாதாரண மனிதர்கள் தான் உயர்ந்தோரின் குணநலன்களால் கவரப்பட்டு, அவர்களின் கைப்பொம்மைகளாக இருப்பார்கள். நான் அவரிடம் அப்படி ஆகவேயில்லை.மாறாக, ஆரம்பத்திலிருந்தே அவரை அரைப்பபைத்தியம் என்று தான் முடிவு செய்திருந்தேன். அப்படியிருக்கையில் திடீரென்று எனக்கு எப்படி இந்த நிலை ஏற்பட்டது?ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தேன். எந்த முடிவிற்கும் வர முடியவில்லை. என் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. கவிஞர் கூறிய சொற்கள் என் நினைவிற்கு வந்தன.” உன் தத்துவ ஆராய்ச்சிகள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பல விஷயங்கள் மண்ணிலும் விண்ணிலும்உள்ளன. இது வும் அதில் ஒன்று என்று நினைத்துக்கொண்டேன். இவ்வாறெல்லாம் ப மண்டையைக் குழப்பி, இறுதியில் இதைப் புரிந்து கொள்ள முடியாது என்ற முடிவிற்கு வந்தேன். இனி இந்த அற்புதப் பைத்தியக் காரர் தன் சக்தியால் என் மனத்தைக் கட்டுப்படுத்தி, இத்தகையதொரு நிலையை உருவாக்க விடக்கூடாது என்றும் திடப் படுத்திக் கொண்டேன்.
-
குருதேவரைப் பற்றி நரேந்திரரின் எண்ணங்கள்-
-
உறுதியான மனமும் திட சங்கல்பமும் உடைய என் போன்றவர்களின் மனங்களையும் உடைத்து, தூள் தூளாகச் செய்து, களி மண்ணைப்போன்று பிசைந்து தான் வேண்டிய உருவம் கொடுக்கவல்ல இவரைப் பைத்தியம் என்று எப்படிக் கூறுவது என்ற எண்ணமும் எழுந்தது. ஆனால் நான்முதன் முறை சென்றபோது என்னைத் தனியாகக் கூட்டிச்சென்று எப்படி அழைத்தார், என்ன பேசினார் என்பதை நினைத்தால் அவரைப் பைத்தியம் என்று அல்லாமல் வேறு என்ன சொல்வது? மேலே கூறிய என் அனுபவத்தின் காரணத்தைக் கண்டு பிடிக்க முடியாததைப்போன்று, குழந்தையைப்போல் புனிதமும் எளிமையும் பெற்ற அந்த மனிதரைப் பற்றி திடமான எந்த முடிவிற்கும் என்னால் வர முடியவில்லை. ஒரு பொருளைப் பற்றியோ மனிதரைப் பற்றியோ கண்டு, கேட்டு அறிவு பூர்வமாக ஆராய்ந்து பார்த்த பிறகும் என் புத்திக்கு எட்டாத எந்தக் கருத்தையும் நான் ஏற்றுக் கொள்வதோ நிராகரிப்பதோ இல்லை.ஆனால் அன்று எனது அந்த இயல்பிற்கு பலமான அடி விழுந்தது. மனம் சொல்லொணா வேதனையில் ஆழ்ந்தது. அதன் காரணமாக அந்த விந்தை மனிதரின் இயல்பையும் ஆற்றலையும் எப்படியாவது ஆராய்ந்து உண்மையைக் கண்டு பிடித்து விடுவது என்ற உறுதியான முடிவிற்கு வந்தேன்.
-
குருதேவர் நரேந்திரரிடம் ஏற்கனவே அறிமுகமானவர் போல் பழகுதல்-
-
வ்வாறு பலவித எண்ணங்களும், தீர்மானங்களுமாக என் பொழுது கழிந்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் குருதேவர் முற்றிலுமாக மாறுபட்டவர்போல் இருந்தார். மிகுந்த அன்புடன் எனக்கு உணவு ஊட்டினார். நீண்ட நாள் பழகியவரைப்போன்று நடந்து கொண்டார். நீண்ட பிரிவிற்குப் பின்னர் நெருங்கிய நண்பர்களையோ உறவினர்களையோ சந்தித்தால் எவ்வாறு நடந்து கொள்வோமோ, அது போன்றே இருந்தது குருதேவரின் செயல்பாடுகள். எனக்கு உணவு அளித்து, என்னிடம் பேசி வேடிக்கை வினோதங்கள் செய்து எப்படியெல்லாமோ என் மீது அவருக்கிருந்த அன்பினை வெளிப்படுத்தியும் அவருக்குத் திருப்தியே இல்லை. அவரது இந்த நடவடிக்கைகளைக் கண்டு எனக்கேற்பட்ட பிரமிப்பு கொஞ்சமல்ல. மெல்ல மெல்ல அந்தி வேளை நெருங்கியதைக் கண்ட நான் அவரிடமிருந்து விடை பெற்றேன். குருதேவர் மிகவும் வேதனையுற்றது போல் தோன்றியது. ”மீண்டும் விரைவில் வருவாயா” சொல்” என்று மீண்டும் பிடித்துக்கொண்டார். அன்றும் முன்னைப்போலவே வருவதாக வாக்களிக்க வேண்டியதாயிற்று. அதன் பின் வீடு திரும்பினேன்.
-
நரேந்திரர் மூன்றாம் முறை செல்லல்-
-
எவ்வளவு நாட்கள் கழித்து மூன்றாம் முறையாக நரேந்திரர் தட்சிணேசுவரம் சென்றார். என்பது தெரியவில்லை. ஆனால் குருதேவரின் மகத்தான சக்தியைப்பற்றித்தெரிந்த பின், அதை அறிய வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது. எனவே அதிகம் தாமதித்திருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. அந்த ஆர்வம் அவரை விரைவில் குருதேவரிடம் கூட்டி வந்தது. கல்லூரி நாட்கள்ஆதலால் ஒருவேளை ஒரு வாரம் கழித்து அவர் சென்றிருக்கலாம். ஏதேனும் ஒன்றை அறியும் ஆர்வம் ஏற்பட்டு விட்டால் உணவு, உடை, ஓய்வு எதிலும் அவரது கவனம் செல்லாது. அதை அறியும் வரை அவரது மனம் அமைதி கொள்ளாது. குருதேவரைப் பற்றி அறியவேண்டும் என்று தோன்றியபோதும், அவரது மனம் அவ்வாறே, அமைதி இழந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இரண்டாம் முறை ஏற்பட்டது போன்று இம்முறையும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியுடனும் எச்சரிக்கையுடனும் அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால் நடந்த தென்னவோ சிறிதும் எதிர் பாராதது. இது குறித்து அவரும் குருதேவரும் கூறியதை இங்கே தருகிறோம்.
அன்று தட்சிணேசுவரத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ குருதேவர் நரேந்திரரை அருகிலுள்ள யது மல்லிக்கின் தோட்டத்திற்கு அழைத்துச்சென்றார். யது மல்லிக்கும் அவரது தாயும் குருதேவரிடம் அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவர்கள் அங்கு இல்லாதபோதும் குருதேவர் வந்தால் அவர் அமர்வதற்கு கங்கையை நோக்கியிருக்கும் அறையைத் திறந்து விட வேண்டுமென்று பணியாளர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்யது மல்லிக். அன்றும் அந்தத்தோட்டத்தில் சிறிது நேரம் நரேந்திரருடன் நடந்த படியே பல விஷயங்களைப்பேசினார் குருதேவர். பின்னர் அந்த அறையில் வந்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் பரவச நிலையில் ஆழ்ந்தார். சற்று தள்ளியிருந்த படியே அதனைக் கவனித்துக் கொண்டிருந்தார் நரேந்திரர். அந்த வேளையில் முந்தைய நாளைப்போல் பரவச நிலையிலேயே வந்து திடீரென்றுநரேந்திரரைத் தொட்டார். நரேந்திரர் எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தும்அந்த சக்தி வாய்ந்த ஸ்பரிசத்தால் தன் வசம் இழந்தார்.முந்தைய அனுபவங்களைப் போலன்றி இம்முறை அவர் புறவுலக உணர்வ அடியோடு இழந்தார். சிறிது நேரத்திற்குப் பின் அவருக்கு நினைவு வந்த பொழுது குருதேவர் புன்முறுவலுடன் அவரது மார்பின் மீது கையால் தடவிக் கொண்டிருந்ததைக் கண்டார். புறவுலக உணர்வை இழந்த பின் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி நரேந்திரர் எதுவும் கூறவில்லை. அது ரகசியம் என்பதால் ஒரு வேளை எங்களிடம் சொல்லவில்லை என்று எண்ணினோம். ஆனால் ஒரு நாள் குருதேவர் எங்களிடம் இது பற்றி க் கூறியதிலிருந்தே இந்த அனுபவத்தைப் பற்றி நரேந்திரருக்கு ஒன்றும் தெரியாது என்பது தெரிய வந்தது. குருதேவர் கூறினார்.
அந்த நிலையில் குருதேவர் நரேந்திரரிடம் பல கேள்விகள் கேட்டல்-
-
நரேந்திரன் அன்று புறவுணர்வை இழந்தவேளையில் நான் அவனிடம் அவன் யார், எங்கிருந்து வந்திருக்கிறான். எதற்காக வந்துள்ளான். (பிறந்துள்ளான்) இங்கே (பூமியில்) எவ்வளவு காலம் இருப்பான். என்பன போன்ற பல கேள்விகளைக்கேட்டேன். அவனும் தன்னுள் மூழ்கி, பொருத்தமான பதில்களைச் சொன்னான். அந்தப் பதில்கள் நான் அவனைப் பற்றிக் கண்டவற்றையும் எண்ணியவற்றையும் ஊர்ஜிதப் படுத்தின. அவை எல்லாவற்றையும் வெளியில் சொல்லக் கூடாது. அவற்றிலிருந்து ஒன்று தெரிந்து கொண்டேன். தான் யார் என்பதை அவன் அறிந்து கொண்டால் அதன் பின் இவ்வுலகில் இருக்கமாட்டான்.திட சங்கல்பத்துடன் அன்றே யோகத்தில் தன் உடலை உகுத்து விடுவான். நரேந்திரன் தியான சித்தன், மகா புருஷன்.
நரேந்திரரைப் பற்றி இதற்கு முன்பு தாம் கண்ட காட்சிகளுள் சிலவற்றை ஒரு முறை எங்களிடம் கூறினர். வாசகர்களின் வசதிக்காக அதை இங்குக் கூறுகிறோம். நரேந்திரர் தட்சிணேசுவரத்திற்கு வருமுன்பே குருதேவருக்கு இந்தக் காட்சிகள் கிடைத்திருந்தன!குருதேவர் கூறினார், ஒரு நாள் சமாதியில் என் மனம் ஒளிப்பாதை வழியாக மேலே சென்றது. சந்திரன், சூரியன், நட்சத்திரங்களுடன் கூடிய தூல உலகை விரைவாக க் கடந்து, எண்ணங்களால் ஆக்கப் பட்ட நுண்ணுலகில் நுழைந்தது. இந்த உலகில் மனம் ஆழ்ந்து செல்லச் செல்ல பாதையின் இரு புறங்களிலும் பல்வேறு தேவ தேவியர் உணர்வு திரண்ட உருவங்களுடன் நின்றிருந்தனர். மனம் படிப்படியாக அந்தப் பகுதியின் இறுதியை அடைந்தது. அங்கே பகுக்கவொண்ணாப் பகுதியிலிருந்து பகுபடும் பகுதியை ஒரு ஒளிவேலி பிரித்தது. அந்த வேலியைத்தாண்டி மனம் சிறிது சிறிதாக பகுக்க வொண்ணாத பகுதியில் நுழைந்தது. அங்கே உருவங்களோ வேறு எதுவுமோ இல்லை. ஒளியுடல்களுடன் கூடிய தேவ தேவியரும் கூட அந்தப் பகுதியில் நுழைய அஞ்சியது போல மிகவும் கீழ்ப்பகுதிகளிலேயே தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். ஆனால் தெய்வீக ஒளியினாலான உடலைப் பெற்றிருந்த ஏழு ரிஷிகள் அங்கே சமாதி நிலையில் அமர்ந்திருந்ததைக் கண்டேன். ஞானம், புனிதம், தியாகம், அன்பு என்று எல்லாவற்றிலும் அவர்கள் தேவதேவியரை விஞ்சியவர்களாக இருந்தனர். மனிதர்களுடன் ஒப்பிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. வியப்பு மேலிட, அவர்களைப் பற்றியும் அவர்களின் மகிமையைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கையில் , அந்தப் பகுக்கவொண்ணாப் பொருளின் ஒரு பகுதி சற்றே விலகி, அந்த ஒளித்திரள் இறுகி ஒரு குழந்தையாக உருவெடுத்தது. அந்த தெய்வக் குழந்தை அங்கு அமர்ந்திருந்த ரிஷிகளுள் ஒருவரிடம் வந்து தன் மென்மையான கைகளால் அவரது கழுத்தைக் கட்டிக்கொண்டது. பின்னர் வீணையை மிஞ்சும் அமுதக் குரலால் அவரை அழைத்து சமாதியிலிருந்து அவரை எழுப்ப முயன்றது. இந்த மென்மைமிக்க அன்பின் அணைப்பினால் சமாதி கலைந்த ரிஷி அந்த அதிசயக்குழந்தையைத் தன் பாதி மூடிய கண்களினால் இமைக்காமல் பார்த்தார். அவரது முகமலர்ச்சியைக் கண்டபோது, அந்தக் குழந்தை அவருடைய இதயப்பொக்கிஷம் , நீண்ட காலம் முன்பே தொடர்புடையது என்று தோன்றியது. அந்த தெய்வக் குழந்தை பேரானந்தத்துடன் அந்த ரிஷியிடம், நான் போகிறேன்” நீ என்னுடன் வர வேண்டும், என்று கூறியது. இந்த வேண்டுகோளுக்கு ரிஷி பதில் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் கருணைமயமானஅவரது கண்கள் இதயபூர்வமான இசைவினை வெளிப்படுத்தின. அந்தக் குழந்தையை அன்புடன் நோக்கியவாறே ரிஷி மீண்டும் சமாதியில் ஆழ்ந்தார். அப்போது ரிஷியின் உடல் மற்றும் மனத்தின் ஒரு பகுதி ஒளியுருப்பெற்று கீழே பூமியை நோக்கி விரைந்தது. நரேந்திரரைக் கண்டதும் அவனே அந்த ரிஷி என்பதை அறிந்து கொண்டேன்.
-
தமக்குக் கிடைத்த காட்சிகள் காரணமாக குருதேவரைப்பற்றி நரேந்திரர் கொண்ட கருத்து-
-
குருதேவரின் அற்புத சக்தியால் மீண்டும் தாம் இத்தகைய நிலையில் ஆழ்த்தப் பட்டதை எண்ணி நரேந்திரர் திகைத்துப்போயிருப்பார் என்பதில் ஐயமில்லை.குருதேவரின் தெய்வீக சக்தியுடன் ஒப்பிடும் போது தன் மனவலிமையும் அறிவும் எவ்வளவு சிறியது என்பதை அவர் உணர்ந்தார். குருதேவர் ஓர் அரைப்பைத்தியம் என்பதான அவரது கருத்து இப்போது மாறியது. ஆனால் முதன் முறை அவர் தட்சிணேசுவரம் வந்த பொழுது குருதேவர் தனியாக அழைத்துச் சென்று சொன்னதை எல்லாம் புரிந்து கொண்டாரா என்பது தெரியாது.குருதேவர் தெய்வீகசக்தி பெற்ற மகா புருஷர். தன்னைப்போன்ற ஒருவனின் மனத்தைத் தம் விருப்பம்போல் மாற்றி, உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்லக் கூடியவர். அவரது திருவுளம் இறைவனின் திருவுளத்துடன் முற்றிலும் ஒன்று பட்டிருந்ததால் தான் எல்லோரிடமும் தன்னிடம் நடந்து கொண்டது போல், செய்வதற்கான விருப்பம் அவர் மனத்தில் தோன்றவில்லை- என்பதையெல்லாம் புரிந்து கொண்டார். இத்தகைய தெய்வபருஷர் தாம் கேட்காமலேயே தன்னிடம் கருணை கொண்டது, தான் பெற்றபேறு என்பது அவருக்கு விளங்கியது.
மேலே கூறிய முடிவிற்குத்தான் நரேந்திரர் வரவேண்டியிருந்தது. அது மட்டுமின்றி அவரது பல முடிவுகளையும் மாற்ற நேரிட்டது. தன்னைப்போன்ற சாதாரணமான பலவீனமான ஒருவரை குருவாகவோ ஆன்மீக வழிகாட்டியாகவோ ஏற்றுக்கொண்டு, ஆராயாமல் அவருக்குக் கீழ் படிந்து, அவர் சொல்வதை யெல்லாம் பின்பற்றுவதில் நரேந்திரருக்கு உடன்பாடில்லை. அவர் பிரம்மசமாஜத்தில் சேர்ந்த பொழுது இந்த எண்ணம் மேலும் உறுதிப்பட்டது. மேற்கூறியதுபோல், இரு முறை அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் அவரது இந்த முடிவு ஆட்டம் கண்டது. அப்படிப்பட்ட உயர்ந்த மகான்கள் இருப்பது அரிது என்றாலும் இவ்வுலகில்தோன்றவே இல்லை என்று சொல்லி லிட முடியாது. எல்லைக்குட்பட்ட சிறிய மனத்தினாலும் அறிவினாலும் சாதாரண மனிதர்கள் கணிக்கும் இறைவனை விட அந்த மகான்கள் தங்கள் தியாகம், தவம், அன்பு, புனிதம் ஆகிய பண்புகளால் பல படி உயர்ந்தவர்கள். அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டால் சாதாரண மனிதன் நன்மை பெறுகிறான்- என்பதை யெல்லாம் நரேந்திரர் புரிந்துகொண்டார்.குருதேவரை குருவாக ஏற்றுக் கொள்ள நரேந்திரர் தயாராக இருந்தார். ஆனால்அவர் கூறுவதை ஆராயாமல் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
-
குருதேவரின் தொடர்பால் நரேந்திரரிடம் தியாகமும் பற்றின்மையும் வளர்ந்தது.
-
துறவின்றி இறையனுபூதி இல்லை.பூர்வ சம்ஸ்காரங்களின் விளைவாக நரேந்திரரிடம் இந்தக் கருத்து இளமைப்பருவம் தொட்டே இருந்தது. பிரம்ம சமாஜத்தின் உறுப்பினராக இருந்தும் அவர்களுடைய திருமண சீர்திருத்தக் கூட்டங்களில் அவர் கலந்து கொள்வதில்லை. அனைத்தையும் துறந்த குருதேவரைச் சந்திக்கும் பேறு கிடைத்ததாலும், அவரது அசாதாரண ஆற்றலை உணர்ந்ததாலும் துறவைப்பற்றிய கருத்து நரேந்திரரின் மனத்தில் நன்றாக வேர்விட்டது.
குருதேவர் கூறும் எதையும் சோதிக்காமல் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று நரேந்திரர் முடிவு செய்தல்-
-
ஆனால் ஓர் எண்ணம் நரேந்திரரின் சிந்தனைக்கு உரியதாயிற்று. இத்தகைய சக்திமிக்க மகானின் தொடர்பு கிடைக்கும்போது, பொதுவாக மனிதர்கள் அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். சிலவேளைகளில் அவற்றை ஏதோ அரை குறையாக ஆராய்கிறார்கள். பல நேரங்களில் ஆராய்வதே இல்லை. அத்தகைய ஓர் நிலைக்குத் தன் வாழ்வில் இடம் கொடுக்கக் கூடாது. எனவே முந்தைய இரண்டு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட மேற்கூறிய அனுபவத்தின் காரணமாக குருதேவரின் பால் நரேந்திரருக்கு பக்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டாலும், குருதேவரின் காட்சிகள், அனுபவங்கள் எதனையும் நன்கு ஆராய்ந்து அறியாமல் ஏற்றுக் கொள்வதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டார். குருதேவருக்கு அது பிடிக்கவில்லையென்றாலும் அது பற்றித் தனக்கு க் கவலையில்லை என்றும் முடிவு செய்தார். எனவே அவர் ஒருபுறம் ஆன்மீக உலகின் புதிய உண்மைகளை ஏற்றுக் கொள்ளத் தன் மனத்தைத் தயாராக வைத்திருந்தார். மறுபுறம் குருதேவரின் காட்சிகளையும் நடவடிக்கைகளையும் நன்கு ஆராயத் தொடங்கினார்.
-
இதையடுத்து நரேந்திரரின் செயல் முறை-
-
முதன் முறையாக குருதேவரைச் சந்தித்த பொழுது அவரை அரைப்பைத்தியம் என்றே நரேந்திரர் கருதினார்.ஆனால் அவரை ஓர் அவதார புருஷராக ஏற்றுக் கொண்டால் மட்டுமே, அன்று அவர் பேசியவற்றுக்கு ஆழ்ந்த பொருள் இருப்பது விளங்கும். அவரது பகுத்தறிவு மிக்க, சத்திய நாட்டம் கொண்ட மனம் திடீரென்று இதனை எப்படி ஏற்றுக் கொள்ளும்,? அந்தச் சொற்களின் பொருளைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை இறைவன் கொடுத்தால் அப்பொழுது அதைப் பற்றி யோசிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து இந்தப் பிரச்சனையை மனத்தின் ஒரு மூலையில் தள்ளி விட்டார். எவ்வாறு இறையனுபூதியைப்பெற்று வாழ்க்கையின் லட்சியத்தை அடையலாம்.என்று குருதேவரிடம் சென்று கற்பதற்கும் அவருடன் விவாதிப்பதற்கும் தொடங்கினார்.
முன்பிருந்த நம்பிக்கையைப் புறக்கணித்து விட்டுப்புதிய உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் சமயத்தில், உள்ளிருந்த ஏதோ ஒன்று அதனைத் தடுப்பதனை ஆற்றல் மிக்க ஒவ்வொரு மனமும் உணர்கிறது. நரேந்திரர் அந்த நிலையில் தான் இருந்தார். குருதேவரின் அளப்பரிய ஆற்றலைப்பற்றி அறிந்திருந்தும் அவரால் குருதேவரை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்பால் ஈர்க்கப் பட்டாலும் அவரிடமிருந்து விலகியிருக்க முயன்றார். நரேந்திரரின் இந்த மனோபாவத்தின் காரணமாக நிகழ்ச்சிகள் எந்த வடிவெடுத்தன என்பதனை இப்போது பார்ப்போம்.
குருதேவரின் தன்னலமற்ற அன்பும் நரேந்திரரும்
-
இளமைப்பருவத்தில் நரேந்திரருக்கு ஏற்பட்ட அசாதாரண அனுபவங்கள். தூங்குமுன் ஒளிக் காட்சி.
-
மேலான புண்ணிய சம்ஸ்காரங்களுடன் பிறந்தவர் நரேந்திரர் என்று முன்பே கூறினோம். குருதேவரிடம் வருமுன்பே அவருக்கு அசாதாரண அனுபவங்கள் கிடைத்திருந்தன. அவற்றுள் சிலவற்றை இங்கு தருகிறோம்.
நரேந்திரர் கூறினார்- தினமும் நான் தூங்குவதற்காகக் கண்கள் மூடியதும் என் புருவங்களுக்கிடையே ஓர் அற்புத ஒளிவட்டம் தோன்றும் அதில் ஏற்படும் மாறுதல்களை ஒரு மித்த மனத்துடன் கவனிப்பேன். அதைப் பார்க்க வசதியாக இருக்கும் என்பதற்காக, தலை தரையில் வீழ்ந்து வணங்குவோமே, அது போல் படுத்துக்கொள்வேன். அந்த ஒளிவட்டம் பல வண்ணங்களாக மாறும். விரிந்து கொண்டே போய் ஒரு பந்தினைப்போலாகும். இறுதியில் அந்த ஒளிப்பந்து வெடித்து என் கால் முதல் தலைவரை வெண்பனி போன்ற பேரொளியில் முழுக்காட்டும். அப்படியே நான் உணர்விழந்து தூங்கிவிடுவேன். எல்லோரும் இப்படித்தான் உறங்குவார்கள் என்று நீண்ட காலம் எண்ணியிருந்தேன். நான் வளர்ந்து தியான பயிற்சி செய்யத் தொடங்கியபோது, கண்களை மூடியவுடன் அந்த ஒளி என் கண் முன்தோன்றும். அதில் தான் மனத்தை ஒருமுகப்படுத்துவேன். அந்த நாட்களில் மகரிஷி தேவேந்திர நாதரின் அறிவுரைப்படி நண்பர்கள் சிலருடன் தினமும் தியானம் பழகி வந்தேன். தியான வேளையில் கிடைத்த காட்சி, அனுபவம் ஆகியவற்றை எங்களுக்குள் பேசிக்கொள்வோம். அப்போது தான், அவர்கள் இது போன்ற ஒளிக்காட்சி எதுவும் பெற்றதில்லை. என் அனுபவம் போன்ற அனுபவத்துடன் உறங்குவதும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.
-
சில மனிதர்களின் இடங்களும் பொருட்களும் அவரிடம் முன் நினைவை ஏற்படுத்துதல்-
-
மேலும் சிறுவயதிலிருந்தே சில இடங்களையும், பொருட்களையும், மனிதர்களையும் பார்க்கும்போது அவர்களை முன்பே பார்த்திருக்கிறேன்., பழகியுள்ளேன் என்ற உணர்வு சிலவேளைகளில் ஏற்படுவதுண்டு. நினைவுபடுத்த முயல்வேன். எவ்வளவு முயன்றாலும் ஞாபகம் வராது.அதே வேளையில் அவர்களை அதற் கு முன் பார்த்ததில்லை என்றும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவ்வப்போது நிகழும். நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பேன். திடீரென யாரோ ஒருவனது ஏதோ ஒரு வார்த்தை என் நினைவைத் தூண்டி விடும்- இதே விஷயத்தைப் பற்றி இவர்களுடன் இதே வீட்டில் முன்னரும் பேசியிருக்கிறேன். இந்த நண்பனே அப்பொழுதும் இதே கருத்தைச்சொன்னான் என்று தோன்றும். ஆனால் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் எங்கே, எப்போது என்பது மட்டும் நினைவு வராது. முற்பிறவி க்கொள்கையைப் பற்றி அறிந்தபோது, இந்த இடங்களையும் இந்த மனிதர்களையும் முற்பிறவிகளில் சந்தித்திருக்கலாம். அந்த நினைவுகளே அவ்வப்போது சிறிது வருகிறது. என்று கருதினேன். ஆனால் இந்த முடிவு அறிவுக்குப் பொருந்தியதாக இருக்கவில்லை என்பது பின்னர் தெரிந்தது. ஆனால் இப்போது நான் இந்தப் பிறவியில் யார் யாருடன் எங்கே, எப்போது எப்படி சந்திக்கப் போகிறேன், பழகப்போகிறேன் என்பதை நான் பிறருக்கு முன்னரே ஓவியக் காட்சிபோல் கண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த நினைவு தான் அவ்வப்போது மனத்தில் எழுகிறது.
குருதேவரின் புனிதமான வாழ்க்கை மற்றும் பரவச நிலையைப் பற்றிக்கேள்விப்பட்டே நரேந்திரர் அவரைக் காண வந்தார். அவரைக் கண்ட பின் தன் நிலை மாறும் என்றோ, அற்புத அனுபவங்கள் கிடைக்கும் என்றோ அவர் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால் அவர் நினைக்காதது நடந்தது. குருதேவரிடம் ஓரிரு முறை வந்ததற்குள் கிடைத்த அனுபவங்களுடன் ஒப்பிட்டால் அது வரை பெற்றிருந்தவை அவருக்கு அற்பமானவையாகத்தோன்றின. அவரைச்சோதித்துப் பார்க்கச்சென்ற நரேந்திரரின் கூர்மையான அறிவு தோல்வியே கண்டது. குருதேவரைச்சோதிக்க முயன்ற அவர் சிக்கலில் மாட்டிக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவரது தெய்வீக ஆற்றலின் காரணமாகத்தான் தனக்கு இத்தகைய உயர்ந்த அனுபவங்கள் கிடைத்தன என்பது அவருக்கு ஐயமறத் தெரிந்தது அதை எண்ணி யெண்ணி வியந்தார்.
-
ஆன்மீக வாழ்வில் நரேந்திரரின் தகுதி
-
நரேந்திரருக்கு திடீரென்று கிடைத்த அற்புத அனுபவத்தை நினைத்தால் யாரும் வியப்படையாமலிருக்க முடியாது. நீண்ட கால தியாகம் மற்றும் தவத்தின் விளைவாகவே சாதாரண மனிதனுக்கு இத்தகைய அனுபவம் கிடைக்கும். அப்படிக் கிடைத்து விட்டால் அவன் தன் குருவிடம் இறைவனின் வெளிப்பாட்டைக் கண்டு அவரிடம் கவரப்பட்டு, அவரை ஏற்றுக்கொள்வான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் நரேந்திரர் அப்படி எதுவும் செய்யாதது சாதாரண வியப்புக்குரிய விஷயமா, என்ன! அவரது அசாதாரண ஆன்மீகத் தகுதியே அதற்குக் காரணம். அந்தத் தகுதியால் தான் அவர் அந்த அனுபவத்தின்போது ஒரேயடியாகத்தன்னை இழந்து விடாமல் இருந்தார். தம்மைக்கட்டுப்படுத்திக்கொண்டு குருதேவரின் அமானுஷ்யப் பண்புகளையும் செயல்பாட்டையும் நீண்ட காலம் சோதிக்க அவரால் முடிந்தது. முழுமையாக சரணடையாவிட்டாலும் குருதேவரிடம் நரேந்திரர் ஈர்க்கப் பட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.
முதல் சந்திப்பிலேயே குருதேவரும் நரேந்திரரால் கவரப்பட்டார் . பிரம்மானுபூதி பெற்ற குரு. தகுதி வாய்ந்த சீடனைக் கண்டதும் தன் ஆன்மீக அனுபவங்களைக் கொடுக்கத் துடிக்கிறார். அந்த ஆர்வத்தின் வேகத்தை அளவிட இயலாது. அது பயன் கலுதாதது. சிறிதும் தன்னலம் அற்றது. தன்னை முழுமையாகக்கட்டுப் படுத்திய, தன் ஆன்மாவில் இன்பம் காண்கின்ற குருமார்களின் இதயத்தில் தெய்வ சங்கல்கத்தால் மட்டுமே தோன்றக்கூடியது. உலகிற்கே குருக்களாக விளங்கும் சான்றோர் அத்தகைய ஆர்வம் காரணமாகத் தான் தகுதி வாய்ந்த சீடனைக் கண்டதும், அவருக்கு பிரம்ம ஞானம் அளித்து, ஆசைகள் என்ற கட்டினின்று அவனை விடுவித்து அவனுக்கு நிறைநிலையை அளிக்கிறார்கள்.
-
முதல் சந்திப்பிலேயே குருதேவர் நரேந்திரருக்கு பிரம்ம ஞானத்தை அளிக்க முயற்சி செய்தது.-
-
தட்சிணேசுவரத்திற்கு தனியாக வந்த அன்றே நரேந்திரருக்கு பிரம்ம ஞானத்தை அளிக்க குருதேவர் விரும்பினார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. மூன்றுநான்கு ஆண்டுகளுக்குப் பின் நரேந்திரர் தம்மை முழுமையாக குருதேவரிடம் ஒப்புவித்தார். அதன் பின் ஒரு நாள், தனக்கு நிர்விகல்ப சமாதி அனுபவம் அருளும் படி குருதேவரை வற்புறுத்தினார். அப்போது இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு குருதேவர் வேடிக்கையாக எங்கள் முன்னிலையில் நரேந்திரரிடம் ஏன்? உனக்குப்பெற்றோர்கள் இருப்பதாகவும் அவர்களுக்குச்சேவை செய்ய வேண்டும் என்றும் நீ தானே அன்று கூறினாய்? என்று கேட்டார். மற்றொரு சமயம் குருதேவர் கூறினார், இறந்து பேயான ஒருவன் துணை கிடைக்காமல் நீண்டகாலம் தனிமையில் வாடினான். எனவே தனக்கு ஒரு துணை வேண்டுமென்று நாலாப்பக்கங்களிலும் தேடத்தொடங்கினான். யாராவது இறந்ததாகக்கேள்விப்பட்டால் அந்த இடத்திற்கு விரைவான். அங்கே போனாலோ, இறந்தவன், கங்கைநீரைத் தெளித்தன் மூலமோ அல்லது ஏதாவது பரிகாரச் சடங்குகள் மூலமோ நற்கதி அடைந்திருப்பான். இதனால் அந்தப்பேய் ஏமாற்றம் அடைந்து, முன்போலவே தனியாக வாழ நேர்ந்தது. தனக்குத் துணை வேண்டும் என்ற அந்தப்பேயின் ஆசை நிறைவெறவே இல்லை. என் நிலையும் அப்படித்தான் ஆகிவிட்டது. உன்னைக் கண்டதும், இந்தத்தடவை எனக்கு ஒரு நண்பன் கிடைக்கப்போகிறான் என்று நினைத்தேன். ஆனால் நீயும் பெற்றோர்கள் இருப்பதாகச் சொல்லி விட்டாய். எனக்கும் நண்பன் கிடைக்கவில்லை. இவ்வாறு முதல் நாள் அனுபவத்தைக் குறிப்பிட்டு குருதேவர் அவ்வப்போது நரேந்திரரைக்கேலி செய்வார்.-
நரேந்திரரின் முதல் மற்றும் இரண்டாம் சந்திப்புக்களில் ஏற்பட்ட அனுபங்கள் வேறுபட்டவை-
-
அன்று சமாதி அனுபவத்தை அடையும் நிலையில் நரேந்திரர் மிகவும் பயந்து விட்டதைக்கண்ட குருதேவர் மேலும் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. நரேந்திரர் பயந்து விட்டதால், தாம் சிநிது காலத்திற்கு முன் அவர் சம்பந்தமாகக் கண்ட காட்சிகளைப் பற்றியே குருதேவருக்குச் சிறிது சந்தேகம் எழுந்திருக்க வேண்டும். அதனால் தான் நரேந்திரர் மூன்றாம் முறை தட்சிணேசுவரம் வந்தபோது தமது சக்தியால் அவரை அகமுகமாக்கி, அவருடையவாழ்க்கையின் ரகசியங்களை அவரிடமிருந்தே குருதேவர் தெரிந்து கொண்டதாகத் தோன்றுகிறது. அவை தமது காட்சிகளுடன் ஒத்திருந்ததைக் கண்ட பிறகே அவர் நிம்மதி அடைந்தார்.மேலே கண்ட நமது ஊகம் சரியாக இருக்குமானால் நரேந்திரரின் முற்கூறிய இரண்டு சமாதி அனுபவங்கள் ஒரே வகையானவை இல்லை என்பது நிச்சயம். அந்த இரு நாட்கள் அவருக்கு இரண்டு விதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
-
நரேந்திரரைப் பற்றி குருதேவரின் கவலை-
-
இவ்வாறு நரேந்திரரைச்சோதித்தபின் குருதேவரின் கவலை நீங்கியது என்றாலும் முழுமையான நிச்சயம் ஏற்பட்டதா என்பது சந்தேகமே. பல பண்புகளும் ஆற்றல்களும் ஒரு பங்கு இருப்பதால் மட்டுமே மனிதன் சாதாரண ஜனங்களின் மீது ஆதிக்கம் செலுத்துகிறான். அத்தகைய ஆற்றல்கள் பதினெட்டு பங்கு முழுமையான நிலையில் நரேந்திரரிடம் இருப்பதை குருதேவர்கண்டார். இறைவன், உலகம் மற்றும் வாழ்வின் லட்சியமான உண்மை இவற்றை அடைந்து, அந்த ஆற்றல்களைத் திரட்டி ஆன்மீகப் பாதையில் அவர் செலுத்தாவிடில் விளைவு விபரீதமாகிவிடும். என்பது குருதேவருக்குத் தெரிந்தது. குருதேவர் கூறினார், அப்படி ஏதாவது நடக்குமானால் நரேந்திரனும் பிற தலைவர்களைப்போல் ஒரு புதிய பிரிவைத்தோற்றுவிப்பான். ஒரு புதிய இயக்கத்தை உருவாக்கி உலகப் புகழ் பெறுவான். ஆனால் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய, எந்தப் பரந்த ஆன்மீக உண்மையை அறியவேண்டுமோ, பிரப்ப வேண்டுமோ, அதை அவனால் செய்ய முடியாது. அந்த உண்மையை நிலைநாட்டுவதில் உதவி செய்து உலகிற்கு உண்மையான நன்மை புரிவதில் துணை நிற்க மாட்டான். எனவே நரேந்திரர் சுயவிருப்பத்துடன் முற்றிலுமாகத் தம்மைப் பின் பற்றவேண்டும். தம்மைப்போன்று எல்லா ஆன்மீக உண்மைகளையும் உணரவேண்டும் என்று குருதேவரின் உள்ளத்தில் தீவிர ஆவல் எழுந்தது. பாய்ந்து செல்லாமல் குளங்களிலும் குட்டைகளிலும் தேங்கிக் கிடக்கின்ற தண்ணீரில் பாசிகளும் செடிகளும் முளைப்பது போல், அரைகுறை உண்மையை, உண்மை உன்று எண்ணி மனிதன் விவேகம் இழந்து வாழும்போது தான் ஆன்மீக உலகில் பல்வேறு பிரிவுகளும் இயக்கங்களும் தோன்றுகின்றன. என்று குருதேவர் அடிக்கடிக் கூறுவார். அசாதாரணமான புத்தித் தெளிவும் மன வலிமையும் படைத்த நரேந்திரர் , வழி நெறி இப்படி ஏதாவது செய்து விடுவாரோ என்று கவலை கொண்டு தான் குருதேவர், அவரை முழு உண்மையை அடையத் தகுதி வாய்ந்தவராக்க முயன்றார். என்ன விந்தை! இப்படிப்பல காரணங்களால் குருதேவருக்கு முதல் சந்திப்பிலேயே நரேந்திரரிடம் தீவிரக் கவர்ச்சி ஏற்பட்டது.
-
நரேந்திரரிடம் குருதேவர் கொண்டிருந்த அசாதாரணமான கவர்ச்சிக்குக் காரணம்-
-
மேற்கூறியது போல் வழிதவறிப்போகும் வாய்ப்பு நரேந்திரருக்கு இல்லை என்ற எண்ணம் அவரது மனத்தில் உறுதி பெறும் வரையில், அந்தக் கவர்ச்சி குறையவில்லை. அதற்கான காரணங்களுள் சில, நரேந்திரரைப் பற்றி, அவருக்குக் கிடைத்த தெய்வீகக் காட்சிகள். அதே வேளையில் நவீன காலப்போக்கின் தூண்டுதலினால் மனைவி, செல்வம், புகழ் முதலியவற்றிற்கு ஆசைப்பட்டு, தன்னை உலகப் பற்றில் ஆழ்த்திக் கொண்டு, வாழ்க்கையின் இறுதி லட்சியத்தில் சிறிதாவது அடையாமல் போய்விடுவாரோ என்ற கவலையும் ஒரு காரணமாக இருந்தது.
-
அந்தக் கவர்ச்சி இயற்கையானதும் தேவையானதும் ஆகும்-
-
நீண்ட காலத் தியாகம் மற்றும் தவத்தின் விளைவாக, சிறிய நான் , எனது, என்பவற்றைத்துறந்து, உலகின் காரணப்பொருளுடன் தம்மை குருதேவர் ஐக்கியப் படுத்திக்கொண்டார். அதனால் இறைவனின் பணியாகிய உலக நன்மை என்பதைத் தம்முடையதாகக் கருத அவரால் முடிந்தது. இன்று தர்மத்திற்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தடுத்து மீண்டும் நிலை நாட்டுகின்ற பெரும் பணியில் இறைவன் தன்னைக் கருவியாகப் பயன்படுத்தப்போகிறான். இதனாலேயே நரேந்திரன் தன்னல சுகபோகங்களுக்காகப் பிறக்கவில்லை. இறைவனிடம் அன்புபூண்டு, மேற்கூறிய உலக நன்மை என்னும் பணியில் தமக்கு உதவ வந்துள்ளான். இவற்றையும் குருதேவர் புரிந்து கொண்டார். எனவே தன்னலமற்ற நித்திய முக்தரான நரேந்திரரை குருதேவர் தம்முடையவனாகக் கருதியதிலும் அவர்பால் கவர்ந்திழுக்கப் பட்டதிலும் என்ன வியப்பு இருக்க முடியும்? மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கவர்ச்சி வியப்பை அளிக்கலாம். சற்று சிந்தித்துப் பார்த்தால், இந்த ஈடுபாடு இயற்கையானதும் தவிர்க்க முடியாததும் ஆகும் என்பது புரியும்.
-
குருதேவருக்கு நரேந்திரரிடம் இருந்தது உலகியல் அன்பு அல்ல.-
-
முதல் சந்திப்பிலிருந்தே குருதேவர் எந்த அளவு நரேந்திரரைத் தம்முடையவராகக் கருதினார். அவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார். என்பதைச் சிறிதளவும் எடுத்துக் கூறுவது நம்மால் முடியாதது என்று தான் தோன்றுகிறது. சாதாரணமாக மக்கள் எந்த நோக்கத்துடன் மற்றவர்களைத் தங்களுடையவர்களாகக் கருதி அன்பு செலுத்துகிறார்களோ அத்தகைய அன்பின் நிழல் கூட இங்கு இல்லை. ஆனால் நரேந்திரரைக் காணும்போது குருதேவர் கொள்ளும் மகிழ்ச்சி, அவரது பிரிவால் அடையும் துயரம்- இதன் ஒரு சிறுதுளியைக் கூட வேறெங்கும் நாங்கள் காணவில்லை. தன்னல நோக்கமின்றி இவ்வாறு ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த முடியும் என்பதையே நாங்கள் அது வரை அறிந்திருக்கவில்லை. மனிதனிடம் இறைவனின் வெளிப்பாட்டைக்கண்டு, காலப்போக்கில் மனிதனுக்கு மனிதன் இவ்வாறு தன்னலமற்ற அன்பு செலுத்துவான் என்பதை குருதேவர் நரேந்திரரிடம் செலுத்திய அன்பைக் கண்ட பின் தான் நாங்கள் தெரிந்து கொண்டோம்.
நரேந்திரர் வந்த சில நாட்களுக்குப் பிறகு சுவாமி பிரேமானந்தர் குருதேவரிடம் வந்தார். நரேந்திரர் ஒரு வாரமாக தட்சிணேசுவரம் வர இயலவில்லை. நரேந்திரரைப் பார்க்காததால் குருதேவர் பட்ட வேதனை பிரேமானந்தருக்குப் பெருவியப்பை அளித்தது. அது பற்றி அவர் எங்களிடம் கூறினார்.
ஒரு முறை தட்சிணேசுவரம் செல்வதற்காக நானும் சுவாமி பிரம்மனந்தரும் படகுத் துறைக்குச் சென்றபோது ராம்தயாள் பாபுவைக்கண்டோம். அவரும் அங்கு போகவே வந்திருந்தார். எனவே ஒரே படகில் சென்றோம். காளிகோயிலை அடையும் போது மாலையாகி விட்டது. குருதேவரின் அறைக்குச்சென்றோம். அவர் அன்னைக் காளியை வழிபடுவதற்காகக்கோயிலுக்குச் சென்றிருந்தார். என்னை அங்கேயே இருக்கும் படிச் சொல்லிவிட்டு, பிரம்மானந்தர் குருதேவரை அழைத்து வருவதற்காகக்கோயிலுக்குச்சென்றார். சிறிது நேரத்தில் குருதேவரை கவனமாகத் தாங்கிப் பிடித்தபடி , படி உள்ளது, ஏறுங்கள், இப்போது கீழே இறங்குகள்” என்றெல்லாம் கூறி வழிகாட்டியவாறு வந்தார். குருதேவரின் பரவச நிலை, வெளியுணர்வை இழத்தல் போன்றவற்றைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தேன். எனவே குடிகாரனைப்போன்று தள்ளாடிக்கொண்டு வருவதைக்கண்டபோது அவர் பரவச நிலையில் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். இந்த நிலையிலேயே அவர் அறையில் நுழைந்து கட்டிலில் அமர்ந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவருக்கு உலக நினைவு திரும்பியது. என்னைக் கண்டவுடன் என்னைப்பற்றிய விவரங்களைக் கேட்டார். பின்னர் கணுக்கால் முதல் கைவிரல் வரை அங்கம் அங்கமாக ஆராய்ந்தார். தன் கையில் என் கையைத் தாங்கி கையின் எடையைப் பார்த்தார். எல்லா ஆராய்ச்சிகளும் முடிந்து ”பேஷ்” என்றார். இதற்கெல்லாம் என்ன பொருள் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்! அதன் பின் ராம் தயாளிடம் நரேந்திரரின் நலனைப் பற்றி விசாரித்தார். அவர் நன்றாக இருக்கிறார் என்று ராம் தயாள் கூறியதும் குருதேவர், அவன் இங்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. அவனைக் காண மிகவும் ஆசைப் படுகிறேன். ஒரு முறை வரும்படிச்சொல்” என்றார்.
இரவு முழுவதும் குருதேவரின் ஏக்கத்தைக் கண்டு பிரேமானந்தர் நினைத்தது.
-
ஆன்மீக ப் பேச்சுக்களில் சில மணிநேரம் மகிழ்ச்சியாகக் கழிந்தது. இரவு பத்து மணிக்கு உணவு அருந்தி விட்டு குருதேவரின் அறைக்குக் கிழக்கு வராந்தாவில் படுத்தோம்.குருதேவருக்கும் பிரம்மானந்தருக்கும் அறைக்குள் படுக்கைகள் விரிக்கப் பட்டன. ஒரு மணி நேரம் கூடச் சென்றிருக்காது. அப்போது குருதேவர் ஒரு பாலகனைப்போல் தாம் உடுத்தியிருந்த துணியை அக்குளில் இடுக்கிக்கொண்டு எங்கள் படுக்கையருகே வந்தார்.ராம்தயாளிடம் வந்து, உறங்கி விட்டாயா? என்றுகேட்டார். நாங்கள் இருவரும் திடுக்கிட்டு படுக்கையிலிருந்து எழுந்து, ”இல்லை” என்றோம். அதைக்கேட்டதும் அவர், இதோ பார், நரேந்திரனுக்காக என் மனம் துடிக்கிறது. ஈரத்துணியை இறுக்கிப் பிழிவதைப்போன்ற வேதனையை நான் அனுபவிக்கிறேன். அவனை ஒரு முறை இங்கு வந்து போகச்சொல். அவன் சத்வ குணமே வடிவெடுத்தவன். சாட்சாத் நாராயணன். அவ்வப்போதாவது அவனைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது” என்று உணர்சிப் பூர்வமாகக் கூறினார்.
ராம் தயாள்பாபு, சிறிது காலமாக தட்சிணேசுவரத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்.குருதேவரின் குழந்தை உள்ளத்தை அவர் அறிவார். இப்போது அவர் பரவச நிலையில் இருப்பதை ராம்தயாள் பாபு புரிந்துகொண்டார். பொழுது விடிந்ததும் நரேந்திரரிடம் சென்று விவரம் தெரிவிப்பதாகச்சொல்லி குருதேவரை அமைதிப்படுத்தினார். ஆனால் குருதேவரின் அந்த மனநிலை இரவு முழுவதும் நீடித்தது. எங்கள் தூக்கம் கெட்டுப்போவதைக் கண்டு அவ்வப்போது உள்ளே சென்று படுப்பார். ஆனால் மறுகணமே எங்கள் தூக்கத்தை மறந்து விட்டு, மறுபடியும் வந்து நரேந்திரரின் உயர்ந்த பண்புகளைப் பற்றி பேசுவார். அவர் பல நாட்களாக வராததால் தாம் படுகின்ற வேதனையை ஏக்கத்துடன் சொல்வார். அவரது ஏக்கத்தையும் அவரை வந்து காணாதிருக்கும் நரேந்திரரையும் எண்ணிய நான், பின்னவர் கல் நெஞ்சக் காரராகத் தானிருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இவ்வாறாக இரவு கழிந்தது. காலையில் கோயிலுக்குச்சென்று, அன்னையை வணங்கி, குருதேவரையும் பணிந்து விடைபெற்று, கல்கத்தாவுக்குத் திரும்பினோம்.
1883- ஆம் ஆண்டு எங்கள் நண்பரான வைகுந்த நாத சன்யால் தட்சிணேசுவரம் வந்திருந்தார். பல நாட்களாக நரேந்திரர் வரவில்லை என்பதால் குருதேவர் மிகுந்த கவலையுடன் இருந்தார். வைகுந்த நாதர் கூறினார், அன்று குருதேவரின் மனம் நரேந்திரரின் நினைவால் நிறைந்திருந்தது. அவரது உயர் குணங்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசவே இல்லை. என்னிடம், நரேந்திரன் சுத்த சத்வ குணம் படைத்தவன்” அவன் அகண்ட (பிரிக்கொணாத) நிலையைச்சேர்ந்த நால்வருள் ஒருவன். சப்த ரிஷிகளுள் ஒருவன். அவனது உயர்வுக்கு எல்லையே இல்லை” என்று கூறினார். அவரது தவிப்பை என்னவென்று சொல்வது! குழந்தையைப் பிரிந்த தாயைப்போன்று அவரது கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது! அவரால் தம்மை அடக்கிக்கொள்ளவே இயலவில்லை. நான் என்ன நினைப்பேன் என்றும் அவர் எண்ணியிருக்க வேண்டும். எனவே தம் அறைக்கு வடக்குப் புறமுள்ள வராந்தாவிற்கு வேகமாகச்சென்றார். அங்கும் அவரது அழுகை நிற்கவில்லை. அம்மா, அவனைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. என்று கூறியபடியே தேம்பித்தேம்பி அழுதது எங்களுக்குக்கேட்டது. பின்பு தம்மைச் சிறிது கட்டுப் படுத்திக்கொண்டு அறைக்குத் திரும்பி வந்து, எங்கள் அருகில் அமர்ந்தார்.
மிகவும் நெகிழ்ந்து போன குரலில் ”நான் எவ்வளவோ அழுதுவிட்டேன்” ஆனால் அவன் வரவில்லை. அவனை ஒரு முறை பார்க்கவேண்டும் என்று என் உள்ளம் துடிக்கிறது. இதயத்தை யாரோ இறுக்கிப் பிழிவதைப்போலுள்ளது. இந்த வேதனையை அவன் புரிந்து கொள்ளவே இல்லை” என்று கூறினார். சொல்லிக் கொண்டிருக்கும்போதே மீண்டும் உருகத் தொடங்கினார். வெளியே சென்றார், சிறிது நேரம் கழித்து வந்து, இப்படி ஒரு கிழம் அவனுக்காக அழுவதையும் ஏங்குவதையும் காண்பவர்கள் என்ன நினைப்பார்கள்? நீங்கள்் என்னைச் சார்ந்தவர்கள்! உங்களுக்கு முன்னால் இப்படி அழுவது வெட்கமாக இல்லை, ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? ஆனால் எந்த வழியிலும் என்னைக் கட்டுப்படுத்தவே முடியவில்லையே” என்று கூறினார். தாங்கள் பேச்சிழந்து நின்றோம். இந்த நரேந்திரன் ஒரு தெய்வப் பிறவியாக இருக்கவேண்டும். இல்லையெனில் ஏன் குருதேவர் இவ்வாறுஈர்க்கப் படவேண்டும் என்று தோன்றியது. குருதேவருக்கு அறுதலாக இருக்கட்டும்” என்று எண்ணி அவரிடம் நாங்கள், ஆம்ஐயா, இது சரியில்லை, தாம் வராததால் நீங்கள் படும் வேதனை தெரிந்தும் நரேந்திரர் வராதது தவறு” என்று கூறினோம்.
இந்த நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் நரேந்திரரை குருதேவர் எனக்கு அறிமுகப்படுத்தினார். நரேந்திரர் வராததால் எந்த அளவு கவலையும் வேதனையும் உண்டாயிற்றோ, அதே அளவு அவரைக் கண்டபோது அவர் குதூகலித்தார். மேற்கண்ட நிகழ்ச்சிக்குச் சில நாட்களுக்குப் பின் குருதேவரின் பிறந்த நாள் வந்தது.நான் தட்சிணேசுவரம் சென்றிருந்தேன். அன்று பக்தர்கள் புத்தாடை, சந்தனம், மாலை முதலியவற்றைால் குருதேவரை அலங்கரித்திருந்தார்கள்.தோட்டத்திற்கு அருகே அவருடைய அறைக்குக் கிழக்கு வராந்தாவில் கீர்த்தனை நடைபெற்றது. பக்தர்களுடன் அதைக்கேட்டுக்கொண்டிருந்த குருதேவர் பரவச நிலையில் ஆழ்ந்தார். சில வேளைகளில் அவரே ஓரிரு வரிகளைச்சேர்த்து, கீர்த்தனையை விறு விறுப்பாக்கினார். ஆனால், நரேந்திரர் வராததால் முழுமையான ஆனந்தத்தை அவரால் அனுபவிக்க முடியவில்லை. அவ்வப்போது சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு எங்களிடம், நரேந்திரன் வரவில்லையே” என்றார். பிற்பகல் இரண்டு மணி ஆயிற்று. அப்போது நரேந்திரர் வந்தார். பக்தர்களின் நடுவே வீற்றிருந்த குருதேவரின் திருவடிகளை வணங்கினார்.நரேந்திரரைக் கண்டதும் ஆனந்தத்தால் குதித்த குருதேவர் அப்படியே அவரது தோளின் மீது அமர்ந்து ஆனந்தப் பரவச நிலையில் மூழ்கினார். உணர்வு திரும்பியதும் அவரிடம் பேசினார். உணவு ஊட்டினார். அதன் பின் அவர் கீர்த்தனையைக்கேட்கவில்லை.-
-
குருதேவரின் ஆழ்ந்த அன்பிற்குப் பாத்திரமாகியும் நரேந்திரர் பாதிக்கப் படாதது அவரது உயர்நிலையைக்கா ட்டுகிறது.
-
நரேந்திரரிடம் குருதேவர் காட்டிய, தேவர்களுக்கும் கிட்டாத அன்பைக் கண்டு வியப்புதான் தோன்றுகிறது.ஆனால் அதனால் பாதிக்கப் படாமல் உறுதியாக இருந்து கொண்டு, உண்மையை அடைவதற்காக குருதேவரை ஒவ்வொரு படியிலும் சோதித்துப் பார்த்தது நரேந்திரரது சத்திய நாட்டத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது. குருதேவரும் நரேந்திரரின் நடத்தையால் சற்றும் வருந்தாமல், அவரது நன்மைக்காக சோதனைகளை ஏற்றுக்கொண்டுஅவர் ஆன்மீக உண்மைகயை அடையும் படிச் செய்வதில் ஈடுபட்டார். குருதேவரின் பெருந்தன்மையும் ஆணவமின்மையும் நம்மைப்பெருவியப்பில் ஆழ்த்துகிறது. இவ்வாறு குருதேவருக்கும், நரேந்திரருக்கும் உள்ள உறவைப் பார்க்கப் பார்க்க , ஒரு பக்கம் பரிசோதனை செய்வதும், மறுபக்கம் பரிசோதனைகளை ஏற்றுக்கொண்டு ஆன்மீக உண்மைகளை போதிப்பதுமாகத் திகழ்கின்ற தன்மையைக்கண்டு பேரானந்தம் கொள்கிறோம். உயர் தகுதியுடைய சீடனின் மனநிலையைக் காத்து, உண்மை குரு எவ்வாறு போதிக்கிறார், இறுதியில் அவனது இதயத்தில் என்றும் அழியாத இடம் பெற்று, வழிபடப்பெறுகிறார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
குருதேவர்-நரேந்திரரின் தெய்வீக உறவு-
-
குருதேவரின் தெய்வீக உறவினை அனுபவிக்கும் வாய்ப்பு நரேந்திரருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு கிடைத்தன. அவர் தொடர்ந்து தட்சிணேசுவரத்தில் குருதேவருடன் தங்கி இருந்தார் எ ன்று வாசகர்கள் எண்ணக் கூடும். அப்படியில்லை. மற்ற பக்தர்களைப்போன்று இவரும் கல்கத்தாவில் தம் வீட்டில் இருந்து கொண்டு அவ்வப்போது குருதேவரிடம் வந்தார். ஆரம்பத்திலிருந்தே குருதேவரின் தனிப்பட்ட அன்பிற்குப் பாத்திரமான இவர் அடிக்கடி குருதேவரிடம் வந்தார் என்பது உறுதி.பின்னர் படிப்படியாக வாரத்திற்கு ஓரிரு முறை சென்றார். நேரம் கிடைக்கும் போது சில வேளைகளில் தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் அங்கேயே தங்குவது நரேந்திரரின் வாழ்வில் முக்கிய ஒன்றாக மாறியது. இதில் மாற்றமே நேரவில்லை. என்றும் சொல்ல முடியாது. இருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே அவரிடம் அளப்பரிய அன்பு கொண்டிருந்த குருதேவர் இந்த நியமம் பெரிதாகக் குலையாமல் பார்த்துக் கொண்டார். நரேந்திரர் தொடர்ந்து ஒரு வாரம் தட்சிணேசுவரம் வராமல் இருந்தால் துடித்து விடுவார். அவருக்குச் சொல்லியனுப்பி அவரை வரவழைப்பார். அல்லது தாமே கல்கத்தாவிற்குச் சென்று அவருடன் சில மணிநேரத்தைக் கழித்து விட்டு த் திரும்புவார். ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் இந்த நியமம் குலையவில்லை என்றே எங்களுக்கும் தோன்றுகிறது. 1884-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நரேந்திரரின் பி.ஏ தேர்வுக்குப் பின்னர் அவரது தந்தை திடீரென்று காலமானார். குடும்பச்சுமை அவர் மீது விழுந்தது. அப்போது இந்த நியமத்தின் படி அவரால் நடந்து கொள்ள முடியவில்லை. இந்த ஐந்து ஆண்டுகளில் குருதேவர்-நரேந்திரர் உறவை ஆராய்ந்தால் ஐந்து நிலைகளைக்காணலாம்.
-
குருதேவர்- நரேந்திரர் உறவின் ஐந்து நிலைகள்
-
முதலாவதாக, ஆன்மீக உலகில் நரேந்திரரைப்போன்ற உயர் தகுதி பெற்றோர் அரிது என்பதை ஆரம்பத்திலேயே குருதேவர் தம் தீர்க்கதரிசனத்தால் தெரிந்து கொண்டார். காலம் காலமாக சனாதன தர்மத்தில் படிந்து விட்ட கறைகளை நீக்கி, அதைக் காலத்திற்கு ஏற்ற ஒரு சாதனைமுறையாக்கி நிலைநிறுத்தும் பணியில் அன்னை தம்மை ஈடுபடுத்தியிருக்கிறாள். அதில் உதவவே நரேந்திரர் பிறந்திருக்கிறார்.
இரண்டாவதாக எல்லையற்ற அன்பினாலும் நம்பிக்கை யினாலும் நரேந்திரரைத் தம்முடன் நிரந்தரமாகப் பிணைத்துக்கொண்டார்.
மூன்றாவதாக நரேந்திரரைப் பல வழிகளில் சோதித்துப் பார்த்து, தாம் தெய்வீகக் காட்சிகள் வாயிலாக அவரது வாழ்வின் லட்சியம் மற்றும் அவரது வாழ்க்கையைப் பற்றிக் கண்டவை உண்மையே என்று உறுதிகொண்டார்.
நான்காவதாக, நரேந்திரரைப் பல வழிகளில் பயிற்றுவித்து அந்த உரிய லட்சியத்திற்குத் தகுந்த கருவியாக மாற்றி அமைத்தார்.
ஐந்தாவதாக, பயிற்சி முடிவடைந்து பிரம்ம ஞானம் பெற்றுத் தயாராக இருந்த நரேந்திரருக்கு தர்மத்தை நிலைநிறுத்தும் பணியில் எவ்வாறு ஈடுபடுவது என்று போதித்தார். பின்னர் இந்தப் பணியையும், தமது இயக்கத்தின் பொறுப்பையும் நரேந்திரரிடம் ஒப்படைத்தார்.
-
நரேந்திரரிடம் குருதேவரின் நம்பிக்கையும் அன்பும் தெய்வீகக் காட்சியின் காரணமாகவே-
-
நரேந்திரர் தட்சிணேசுவரம் வருமுன்பே குருதேவர்அவரைப் பற்றிய பல காட்சிகள் பெற்றிருந்தார் என்று முன்பே கூறினோம். அவற்றின் காரணமாக நரேந்திரரிடம் ஆரம்பத்திலிருந்தே எல்லையற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்டார். அன்புக் கயிற்றால் அவர் நரேந்திரரை என்றென்றைக்குமாகத் தம்மிடம் பிணைத்துக் கொண்டார். அன்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது நின்று கொண்டு தான் குருதேவர் நரேந்திரருக்கு போதித்தார். சிலவேளைகளில் சோதிக்கவும் செய்தார்.
யோகக் காட்சியினால் நரேந்திரரின் உயர்வையும் லட்சியத்தையும் தெரிந்து கொண்ட பின்னும் குருதேவர் ஏன் அவரைச்சோதித்தார் என்ற கேள்வி எழலாம். சாதாரண மனிதர்கள் இருக்கட்டும், குருதேவரைப் போன்ற தெய்வீக மனிதர்கள் கூட மாயையின் ஆட்சிக்குட்பட்டு உடல் தரித்து விட்டால் சற்றேனும் பிரமைவசப்படவே செய்கிறார்கள். அவர்களின் காட்சியிலும், தவறுகள் நேரலாம். எனவே தான் இத்தகைய பரிசோதனைகள்! இதை விளக்கும்போது குருதேவர், கலப்பு உலோகம் சேராமல் எதையும் உருவாக்க முடியாது” என்பார். அதாவது சுத்த தங்கத்துடன் செம்பு சேர்க்காமல் அணிகலன்கள் செய்ய முடியாது. அதே போன்று அவதார புருஷர்களே ஆயினும், அவர்களுடைய உடலையும் மனத்தையும் ஞானமயமான சத்வ குணத்தால் மட்டுமே உருவாக்க முடியாது. அதில் சிறிது ரஜோ குணமும் தமோ குணமும் சேர்க்கப் பட வேண்டும். சாதனைக் காலத்தில் அன்னையின் அருளால் குருதேவருக்குப் பல காட்சிகள் கிடைத்தன. அவை உண்மையானவையா என்ற ஐயம் ஏற்பட்டதும், அவற்றைச்சோதித்த பின்னர் முற்றிலுமாக ஏற்றுக் கொண்டதும் பற்றி ஏற்கனவேகண்டோம்.அதனால் நரேந்திரரைப் பற்றிக் கண்ட அற்புதக் காட்சிகளையும் சோதித்துப் பார்த்த பின்ஏற்றுக்கொண்டதில் வியப்பு என்ன இருக்கிறது?
குருதேவர்-நரேந்திரர் உறவில் ஐந்து நிலைகள் இருந்ததாக ஏற்கனவே கூறினோம்.ஆனால் அவை ஒவ்வொன்றிலும் அன்புடன் கூடிய நம்பிக்கை, சோதித்தல், போதித்தல் ஆகிய மூன்றும் கலந்தே இருந்தன. இவற்றுள் முதலாவதான அன்பு மற்றும் நம்பிக்கை பற்றி முன்பே சுருக்கமாகக் கூறி விட்டோம். பின்னால் கூறவும் வேண்டும். ஏனெனில் இப்போதிலிருந்து குருதேவரின் வாழ்க்கை நரேந்திரரின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது போல வேறு எந்த பக்தருடனும் இணையவில்லை. ஏசு, தன் சீடர் ஒருவரைப் பார்த்ததும், திட நம்பிக்கையுள்ள, இவனது அசைக்க முடியாத வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு, நான் ஆன்மீகக் கோயிலை அமைப்பேன்” என்று கூறியதாகச் சொல்லப் படுகிறது. நரேந்திரரைப் பார்த்த அளவிலேயே, குருதேவரின் மனத்திலும் இறைவனின் திருவருளால் இத்தகைய எண்ணம் தோன்றியது. நரேந்திரன் தன் மகன், நண்பன், தன் கட்டளையை நிறைவேற்றப் பிறந்தவன், என்றென்றும் பிரிக்க முடியாத அன்புக் கயிற்றினால் தன்னுடன் பின்னிப்
பிணைக்கப் பட்டிருப்பவன் என்று குருதேவர் கண்டார்.ஆனால் இந்த அன்பு மிகவுயர்ந்த தெய்வீகமானது. அத்தகைய அன்பில், அன்பு செய்யப்படுபவர், அன்பு செய்பவரிடம் என்றென்றைக்குமாகப் பிணைக்கப் பட்டிருப்பார்.ஆனால் முன்னவர் முழு சுதந்திரத்துடன் இருப்பார். பின்னவர் தன்னிடமுள்ள அனைத்தையும் முன்னவருக்காகக் கொடுக்க விரும்புவார். திருப்பி எதனையும் எதிர்பார்க்க மாட்டார். முன்னவரின் திருப்தி மட்டுமே நோக்கமாக இருக்கும். குருதேவர் –நரேந்திரர் இடையே இருந்த உயர்ந்த அன்பினைப்போன்று தன்னலமற்ற அன்பை உலகம் கண்டிருக்கிறதா என்பது ஐயத்திற்குரியது. அதன் பல பரிமாணங்களை விளக்கும் தகுதி எங்களிடம் இருக்கிறதா என்ன? இருப்பினும் உண்மையைக் கூறவேண்டும் என்ற ஆர்வத்தினால் அதனைப் பற்றிச் சிறிது கூற நினைக்கிறோம். அதன் பின் குருதேவர்-நரேந்திரர் சம்பந்தமான பிற தொடர்புகளைப் பார்ப்போம்.
முதல் சந்திப்பிலேயே குருதேவரின் ஒரு முகப் பட்ட மனம், துறவு, மனம் ஆகியவற்றைக் கண்டு அவர் பால் நரேந்திரர் ஈர்க்கப் பட்டார்.குருதேவரும் நரேந்திரரின் அளப்பரிய தன்னம்பிக்கை ஆண்மை, சத்திய நாட்டம் முதலியவற்றைக் கண்டு மகிழ்ந்து அவரைத் தம்முடையவராகக் கருதினார். நரேந்திரரின் உயர்வைப் பற்றியும் அவரது ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றியும் குருதேவர் கண்ட யோகக் காட்சியை ஒதுக்கிவிட்டு, அவர்களுக் கிடையே இருந்த அன்புப் பிணைப்பின் காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் மேலே கூறப்பட்டது தான் உண்மை என்பது புரியும். அகநோக்கு அற்ற சாதாரண மனிதர்கள் நரேந்திரரின் தன்னம்பிக்கையை ஆணவம் என்றும், ஆண்மைத் திறத்தை திமிர் என்றும், சத்திய நிஷ்டையை அரைவேக்காட்டு அறிவு அல்லது அறிவு இருப்பது போல் தம்பட்டம் அடித்துக் கொள்வது என்றும் தான் கருதினார்கள். அவர் புகழ்மொழிகளைப் பொருட்படுத்தாதிருப்பதும் யாரைக் கண்டும் பயந்து எதையும் மறைக்காமல் அப்படியே பேசுவதும், சுதந்திரமான போக்கும் தான் அவர்களை இந்த முடிவுக்கு வரத் தூண்டியிருக்க வேண்டும். நரேந்திரரிடம் எங்களுக்குப் பழக்கம் ஏற்படுவதற்கு முன்பு இப்படித்தான் அவரது அண்டை வீட்டுக்காரர் ஒருவர் கூறினார். அந்த வீட்டில் இளைஞன் ஒருவன் இருக்கிறான். அவனைப்போல் திமிர் பிடித்த ஒருவனை நான் கண்டதில்லை. பி.ஏ. தேறி விட்டதால் இந்த உலகமே அவன் காலடியில் கிடப்பது போல் நடக்கிறான். தந்தை மற்ற பெரியவர்களின் முன்பாக தபேலாவை அடித்துப் பாடுகிறான். மூத்தோரின் முன் சுருட்டு பிடித்துக்கொண்டு நடக்கிறான். எல்லா விஷயங்களிலும் இப்படித்தான்.
குருதேவர் நரேந்திரரைப் புகழ்வதை இந்த நூலாசிரியர் கேட்டது.-
-
இதற்குச் சில நாட்களுக்குப் பின் இரண்டாவதோ மூன்றாவது முறையோ தட்சிணேசுவரம் வந்தபோது நாங்கள் நரேந்திரரைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்தை குருதேவர் கூறக்கேட்டோம். யது மல்லிக்கின் தோட்ட வீட்டில் முக்கிய வேலையாளுடன் பேசிக்கொண்டிருக்கையில் குருதேவர் எங்களைக் காட்டிக் கூறினார், இந்த இளைஞர்கள் மோசமில்லை, இதோ இவன் ஒன்றரை பாஸ் செய்துள்ளான். ( அந்த வருடம் எஃப், ஏ தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தோம்) நல்லவன். அமைதியானவன். ஆனால்ஆனால் நரேந்திரனைப்போன்ற இன்னொருவனைப் பார்க்கவில்லை- பாடுகிறான், இசைக்கருவிகளை வாசிக்கிறான். படிப்பிலும் கெட்டிக்காரன் , பேச்சாற்றல் மிக்கவன், ஆன்மீகத்திலும் உயர்ந்தவன். இரவு முழுவதும் தியானம் செய்கிறான். தியானம் நிறைவுறும் பொழுது விடிந்து விடுகிறது. அப்போது புறநினைவை முற்றிலும் இழந்து விடுகிறான். என் நரேந்திரன் கலவையில்லா சுத்த நாணயம்-சுண்டிப் பார்த்தால் டங்டங் என்ற ஒலி எழுகிறது! மற்ற இளைஞர்கள் மிகவும் சிரமப்பட்டு எப்படியோ ஓரிரண்டில் தேறி விடுகிறார்கள். அவ்வளவு தான், எல்லாம் முடிந்து விடுகிறது. அதற்குள் தங்கள் சக்தி முழுவதும் இழந்தது போலாகி விடுகிறார்கள்.ஆனால் நரேந்திரன் அப்படியல்ல. சர்வசாதாரணமாக அவன் எல்லாவற்றையும் செய்து விடுகிறான். தேர்வில் வெற்றி பெறுவது அவனுக்கு ஒருபெரிய விஷயமே இல்லை. பிரம்ம சமாஜத்திற்குப்போகிறான். அங்குப் பாடுகிறான். ஆனால் மற்ற பிரம்ம சமாஜத்தினரைப்போன்றவன் அல்லன். அவன் உண்மையில் பிரம்ம ஞானி. தியானத்தில் அமரும்போது ஜோதி தரிசனம் பெறுகிறான். ஒன்றுமில்லாமலா அவனை இவ்வளவு நேசிக்கிறேன்.
அவர் கூறியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அந்த நரேந்திரப் பா்க்க வேண்டும் என்ற ஆவலில் குருதேவரிடம், நரேந்திரர் எங்கு வசிக்கிறார்? என்று கேட்டோம். அதற்கு குருதேவர், அவன் விசுவநாத தத்தரின் மகன். வீடு ”சிம்லாவில் உள்ளது” என்றார். பின்பு நாங்கள் கல்கத்தாவுக்குத் திரும்பினோம். விசாரித்தபோது அன்று எங்கள் நண்பர் யாரைத் திமிர் பிடித்தவன் என்று வசைப் பாடினாரோ அந்த இளைஞர் தான், குருதேவர் இவ்வளவு புகழ்ந்த நரேந்திரர் என்பது தெரியவந்தது.திகைப்பாக இருந்தது. சாதாரணச்செயல்களை வைத்து, சிலவேளைகளில் மனிதர்களை எவ்வளவு தவறாக எடை போட்டு விடுகிறோம்.
இது சம்பந்தமாக இன்னொரு நிகழ்ச்சியையும் காண்போம்.
குருதேவரிடமிருந்து நரேந்திரன் பெருமைகளைக்கேட்பதற்குச் சில மாதங்களுக்கு முன் ஒருநாள் நரேந்திரரைக் காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. நண்பர் ஒருவரின் வீட்டில் அவரைப் பார்த்தோம்.முன்பே கொண்டிருந்த தவறான கருத்தின் காரணமாக நாங்கள் அவருடன் பேச முயலவில்லை.ஆனால் அன்று அவர் பேசியவை எங்கள் மனத்தில் ஆழப்பதிந்து விட்டன. பல ஆண்டுகள் கழிந்த பின்பும் நேற்று தான் கேட்டது போலிருக்கிறது . எந்தச் சூழ்நிலையில் அவரது வார்த்தைகளைக்கேட்டோம். என்று விவரித்து விட்டு, பின்னர் அவர் கூறியதைப் பார்க்கலாம். இல்லையெனில் எங்கள் தவறான கருத்திற்குக் காரணம் புரியாமல் போய்விடும்.
எங்கள் நண்பர் ஒருவர் வீட்டில் முதன் முறையாக நரேந்திரரைச் சந்தித்ததாகக் கூறினோம். அவர் நரேந்திரரின் வீட்டிற்கு முன்னால் உள்ள மாடி வீடு ஒன்றில் வாடகைக்குத் தங்கி இருந்தார். நண்பரும் நாங்களும் பள்ளியில் நாலைந்து வருடங்கள் சேர்ந்து படித்தோம். நுழைவுத்தேர்வுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் மேலை நாடு செல்ல இருந்தார். பம்பாய்வரை போகவும் செய்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் கடல் கடந்து செல்ல அவரால் இயலவில்லை. பின்னர் செய்தித்தாள் ஒன்றின் ஆசிரியரானார். அவ்வப்போது வங்க மொழியில் கட்டுரையும் கவிதையும் எழுதி நூல்களும் வெளியிட்டார். சில நாட்களுக்கு முன்பு தான் அவரது திருமணம் நடைபெற்றிருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அவரது வாழ்க்கை மாறுமாறாகி விட்டதாகவும், குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிப்பதாகவும் பலர் கூறக்கேள்விப்பட்டோம். அதன் உண்மையைக் கண்டறியவே அன்று நாங்கள் அவர் வீட்டிற்குச் சென்றோம்.
நாங்கள் வந்திருப்பதை அவருக்கு ஒரு பணியாளரின் மூலம் சொல்லியனுப்பி விட்டு முன்னறையில் அமர்ந்தோம். அப்போது அந்த வீட்டில் ஏற்கனவே அறிமுகமானவன் போன்ற ஓர் இளைஞன் அந்த அறைக்குள் வந்து, ஒரு திண்டில் சாய்ந்து கொண்டு மிகவும் நிதானமாக இந்திப்பாடல் ஒன்றை முணுமுணுக்கத் தொடங்கினான். அது கண்ணனைப்பற்றியது என்று எண்ணுகிறோம். ஏனெனில் கண்ணா” புல்லாங்குழல்” என்ற இரு சொற்கள் எங்கள் காதில் தெளிவாக விழுந்தன. நாகரீகமானதல்ல எனினும் சுத்தமான உடை, வாரிவிடப்பட்ட முடி, புறவுலகைப்பற்றிக் கவலைப் படாமல் பாடிய பாட்டு இவற்றுடன் நெறி தவறிய நண்பனுடன் அவனது தொடர்பு எல்லாம் சேர்ந்து அவனை ஒரு நல்லவனாக எங்களுக்குக் காட்டவில்லை. நாங்கள் இருப்பதையே கண்டு கொள்ளாமல் அவன் நடந்து கொண்டதையும் பின்னர் புகை பிடித்ததையும் கண்ட நாங்கள் அவன் எங்கள் நண்பரை அப்படியே பின்பற்றுபவன், இத்தகையோருடன் பழகித்தான் எங்கள் நண்பரும் தீய வழியில் சென்றுவிட்டார் என்ற முடிவிற்கு வந்தோம் . அவன் எங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன்போக்கில் இருந்ததால் நாங்களும் எங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளவில்லை.
சிறிது நேரத்தில் எங்கள் நண்பர் வெளியில் வந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நாங்கள் அவரைச் சந்திக்கிறோம். இருப்பினும் எங்களிடம் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு அந்த இளைஞனிடம் பல்வேறுவிஷயங்களைப் பேசுவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அவரது போக்கு எங்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. உடனே விடைபெற்றுச்செல்வது பண்பற்ற செயல் என்று எண்ணி நாங்கள் அங்கு அமர்ந்து அவர்களது பேச்சைக்கேட்போம்.
ஆங்கிலம் மற்றும் இலக்கியங்களைப் பற்றி அவர்கள் பேசினர். உயர்தரமான இலக்கியம் மனித உணர்வுகளை யதார்த்தமாக வெளிப்படுத்துகிறது என்பதைப் பற்றி அவர்களிடம் ஓரளவு கருத்து ஒற்றுமை இருந்தது. ஆனால் இலக்கியம் என்பது மனிதனின் எல்லா வகையான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவது என்று நண்பர் கூறியதை அந்த இளைஞனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓர் இலக்கியம் நல்லதையோ கெட்டதையோ யதார்த்தமாக வெளியிட்டாலும், அது உயர்ந்த பண்பாட்டையும் லட்சியத்தையும் அடிப்படையாகக் கொள்ளா விடில், அதை உயர்தரமான இலக்கியமாகக் கருத முடியாது என்று வாதிட்டான் அந்த இளைஞன். தன் வாதத்தை நிலைநாட்ட சாஸரிலிருந்து தொடங்கி வங்க மற்றும் ஆங்கில இலக்கிய ஆசிரியர்களின் நூல்களை மேற்கோள் காட்டி, அவர்களின் இலக்கியத்தில் உயர்ந்த குறிக்கோள் இருப்பதால் தான் அவை இன்னும் மறக்காமல் போற்றப் படுகின்றன. என்று கூறினான். இறுதியாக நல்ல உணர்ச்சிகள், தீய உணர்ச்சிகள் ஆகிய இரண்டும் மனிதனிடம் இருந்தாலும், அவன் தன் மனத்தில் குறிப்பிட்ட ஒரு லட்சியத்தையே வெளிப்படுத்த முயல்கிறான். அந்தலட்சியத்தை அறிந்து கொள்வதிலும் வெளிப்படுத்துவதிலும் தான் மனிதர்களில் வேறுபாடு உள்ளது. சாதாரண மனிதன் ஐம்புலன்களின் வாயிலாக நுகரப்படும் சுவை, காட்சி முதலியவற்றை நிலையானவை, உண்மையானவை என்று எண்ணி புலனின்பம் தான் வாழ்க்கையின் லட்சியம் என்று கருதி, கவலையின்றி வாழ்கிறான், அப்படிப்பட்ட மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே வேறுபாடு இல்லை என்றே சொல்லலாம். அவர்களால் மிக உயர்ந்த இலக்கியத்தைப் படைக்க முடியவே முடியாது. மற்றொரு வகையான மக்கள் இருக்கிறார்கள். நிலையானவைபோல் தோன்றுகின்ற சுகபோக அனுபவங்களால் மனநிறைவு பெற இவர்களால் இயலாது. அவர்கள் தங்களுக்குள் உயர்ந்த, மிகவுயர்ந்த லட்சியங்களை உணர்ந்து, அதற்கு ஏற்றாற்போல் புறவுலக விஷயங்களையும் மாற்றி அமைக்க தீவிர முயற்சி செய்வார்கள். இத்தகைய மனிதர்கள் தான் உண்மையான இலக்கியத்தைப் படைக்கிறார்கள். அவர்களிலும் யார் மிக உயர்ந்த லட்சியத்தை நாடி, அதனைத் தங்கள் வாழ்க்கையில் அடைய எண்ணுகிறார்களோ, அவர்கள் பொதுவாக உலக வாழ்க்கையைவிட்டு ஒதுக்கி விட நேர்கிறது. தட்சிணேசுவரத்தில் வசிக்கும் பரமஹம்சர் ஒருவர் மட்டுமே அத்தகைய லட்சியத்தை அடைந்தவர். அதனால் தான் நான் அவரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன்” என்றான்.
அந்த இளைஞனின் உணர்ச்சிபூர்வமான பேச்சும் புலமையும் எங்களை மிகவும் கவர்ந்தன. அவன் எங்கள் நண்பருடன் தொடர்பு கொண்டிருந்தாலும் அவனது பேச்சும் செயல்களும் வேறுபட்டவை. அவனது வாழ்க்கை இதனால் எவ்விதத்திலும் பாதிக்கப் படவில்லை என்பதைக் கண்டு கூனிக் குறுகினோம்.பின்னர் விடைபெற்றுத் திரும்பினோம். சில மாதங்கள் கழித்து குருதேவர் நரேந்திரரைப் பற்றி மிக உயர்வாகப்பேசுவதைக்கேட்க நேர்ந்தது. எனவே அவரைக் காணும் ஆவலினால் அவரது வீட்டிற்குச் சென்றோம். குருதேவரால் மிகவும் புகழப்பட்ட நரேந்திரர் வேறு யாருமல்லர். எங்கள் நண்பர் வீட்டில் பார்த்த அதே இளைஞன்! நாங்கள் திகைத்து நின்றோம்.
பலர் போன பாதையில் மட்டுமே நடக்க முடிந்த சாதாரண மனிதன் நரேந்திரரின் புறச்செயல்களைக் கண்டு அவரைத்திமிர் பிடித்தவன். அகங்காரி, ஆசாரம் அற்றவன், என்று கருதி விடுவான்.ஆனால் குருதேவர் ஒருபோதும் அப்படி எண்ணியதில்லை. நரேந்திரரிடமிருந்த இறுமாப்பும் கர்வமும் அவனுக்குள் இருந்த அசாதாரண மன ஆற்றல்களின் விளைவான தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்பதை ஆரம்பத்திலேயே கண்டு கொண்டார். தனது இயல்பான புலக்கட்டுப்பாட்டின் காரணமாக அவன் சுதந்திரமான போக்குடையவனாக இருந்தான். பெயர், புகழைப்பற்றிய எண்ணம் சிறிதும் இல்லாததால் தன்னிலேயே திருப்தியுற்றிருந்தான். காலப்போக்கில் அவனிடமிருந்த அசாதாரண இயல்புகள் ஆயிரம் இதழ்த் தாமரையைப்போல் நன்கு மலர்ந்து, ஒப்பிட இயலாத சொந்த உயர்விலும் புகழிலும் வேரூன்றி நிற்கும். துன்பத்தால் துடிக்கின்ற மாந்தர்களின் துயரைக் காணும்போது அவனது கர்வம் எல்லையற்ற கருணையாகப் பரிணமிக்கும். நொறுங்கிப்போன இதயங்களுக்கு மீண்டும் நம்பிக்கையின் ஒளியை ஊட்டும். அவனது சுதந்திரமான போக்கு எப்போதும் ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருந்து, உண்மையான சுதந்திரத்தை அடைய அது ஒன்றே வழி என்பதைக்காட்டும். இவற்றையெல்லாம் குருதேவர் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்.
அதனால் தான் முதல் சந்திப்பிலேயே குருதேவர் நரேந்திரரை வாயாரப் புகழ்வதைக் காண்கிறோம். பிறர் முன்பு புகழப்படும்போது பலவீன மனம், அகங்காரம், தலைக்கேறி அழிவுப் பாதையில் போகிறது. இது தெரிந்தும் குருதேவர் நரேந்திரரைப் புகழ்ந்தார்.ஏனெனில் நரேந்திரரின் மனம் இந்தப் பலவீனங்களுக்கு அப்பாற்பட்டது. மிக உர்ந்தது என்பதை அவர் அறிந்திருந்தது தான். ஓரிரு நிகழ்ச்சிகளைக் கூறினால் வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.
கேசவ சந்திரசேன், விஜய கிருஷ்ண கோசுவாமி போன்ற பிரபலமான பிரம்ம சமாஜத்தலைவர்கள் ஒரு நாள் குருதேவரின் அறையில் கூடியிருந்தனர். நரேந்திரரும் அங்கு அமர்ந்திருந்தார். பாவமுகத்தில் இருந்த குருதேவர் கேசவரையும் விஜயரையும் மலர்ந்த முகத்துடன் பார்த்தார். பின்னர் நரேந்திரரைப் பார்த்ததும் அவரது மனத்திரையில் நரேந்திரரின் எதிர்காலம் ஒளிமிக்க ஓவியம்போல் தோன்றியது. கேசவர் போன்றோரின் வளர்ச்சி பெற்றுவிட்ட வாழ்க்கையுடன், நரேந்திரரின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்த அவர் எல்லையற்ற கனிவுடன் நரேந்திரரைப் பார்த்தார். கூட்டம் நிறைவுற்றபின் குருதேவர் கூறினார், எந்தச் சக்தியால் கேசவர் உலகப் புகழ் பெற்று விளங்குகிறாரோ, அதைப்போன்று பதினெட்டு ஆற்றல்கள்நரேந்திரரிடம் நிறை நிலையில் உள்ளதைக் கண்டேன். கேசவரிடமும், விஜயரிடமும், ஞான ஒளி ஒரு தீபம் போல் தான் பிரகாசிக்கிறது. நரேந்திரனைப்பார்த்தாலோ, அவன் உள்ளத்தில் !ஞான சூரியனே உதித்து ஒளிர்கிறான். அந்த ஒளி, மாயையின் சுவடு கூட அவனிடம் இல்லாமல் துடைத்து விட்டது. உள்ளொளி இல்லாத பலவீனன், குருதேவரின் திருவாயினின்று இப்படி யொரு புகழ்மொழிக்கேட்டால் அகங்காரத்தால் பூரித்து தன்னையே மறந்து விடுவான். ஆனால் நரேந்திரரிடம் இந்த வார்த்தைகள் முற்றிலும் வேறுவிதமான விளைவை ஏற்படுத்தியது. அசாதாரணமான உள்நோக்குடைய அவரது மனம் உள்ளே ஆழ்ந்து, கேசவர் மற்றும் விஜயரின் எண்ணற்ற நற்பண்புகளுடன் தனது அப்போதைய நிலையை ஒப்பிட்டுப் பார்த்தது. அத்தகைய புகழ்ச்சிக்குத்தான் தகுதியற்றவன் என்பதை அதன் மூலம் கண்டு கொண்ட நரேந்திரர் குருதேவரின் சொற்களை த் தீவிரமாக எதிர்த்தார். என்ன சொல்கிறீர்கள்? இதைக்கேட்டால் மக்கள் உங்களைப் பைத்தியம் என்று சொல்வார்கள். உலகப் புகழ் பெற்ற கேசவர் எங்கே? மகாத்மாவான விஜயர் எங்கே? ஒன்றுமில்லாத பள்ளிச் சிறுவனான நான் எங்கே? அவர்களுடன் என்னை ஒப்பிட்டு தயவுசெய்து இனிமேல் இப்படிப் பேசாதீர்கள்? ஆனால் நரேந்திரரின் மறுப்பு குருதேவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. அன்புடன் அவர் கூறினார். அப்பா! நான் என்ன செய்யட்டும்? நான் கூறினேன் என்றா நீ நினைக்கிறாய்? அன்னை எனக்கு இவற்றையெல்லாம் காட்டினாள், அதை நான் சொன்னேன், அவள் சத்தியத்தைத் தவிர வேறொன்றையும் காட்டியதில்லை. அதனால் தான் அவ்வாறு பேசினேன்.
அன்னை காட்டினாள், சொன்னாள், என்று குருதேவர் கூறியதால் நரேந்திரர் விட்டுவிடுவாரா என்ன? உண்மையை மறைக்காமல் பேசுகின்ற தைரியம்மிக்க அவர் குருதேவரின் காட்சிகளிலேயே ஐயம்கொண்டுபலமுறை, அன்னை தான் காட்டுகிறாளா, இல்லை உங்கள் மூளைக்கோளாறோ யாருக்குத் தெரியும்? எனக்கு இப்படிப்பட்ட காட்சிகள் கிடைத்தால், கட்டாயமாக நான் அவற்றை என் மூளைக்கோளாறு என்றுதான் எடுத்துக்கொள்வேன். கண்போன்ற புலன்கள் நம்மைப் பலவேளைகளில் ஏமாற்றுகின்றன என்பதை மேலை விஞ்ஞானமும் தத்துவங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துவிட்டன. அதுவும் குறிப்பாக, ஆன்மீகக் காட்சிகள் பெறவேண்டும் என்ற ஆசை சதா நம் மனத்தில் இருக்குமானால், சொல்லவே வேண்டாம், அத்தகைய காட்சிகளை ஒவ்வொரு படியிலும் நம் புலன்கள் காட்டி ஏமாற்றும், நீங்கள் என்னிடம் அன்பு வைத்திருக்கிறீர்கள். என்னை எல்லா விதத்திலும் சிறந்தவனாக உயர்ந்தவனாகக் காண விரும்புகிறீர்கள். அதனால் அப்படிப்பட்ட காட்சிகள் உங்களுக்குத்தோன்றுகின்றன” என்று கூறுவார்.-
இவ்வாறு நரேந்திரர் அவ்வப்போது குருதேவரிடம் மேலை விஞ்ஞானம் மற்றும் மனோதத்துவ ஆராய்ச்சிகளின் துணையுடன் இத்தகைய காட்சிகள் பிரமை என்று விளக்குவார். குருதேவரின் மனம் உயர்ந்த தளத்தில் இருக்கும்போது நரேந்திரர் கூறுபவற்றைக் குழந்தைத்தனமானவை என்று ஒதுக்கிவிடுவார். அவை அவரது சத்திய நிதிஷ்டையின் வெளிப்பாடு என்று மகிழ்வார்.ஆனால் சாதாரண நிலையில் மனம் இருக்கும்போது, குழந்தை போன்ற இயல்புடைய அவர் நரேந்திரரின் கூர்மையான வாதங்களால் நிலைகுலைந்து விடுவார். குழப்பமும் கவலையும் மேலிட, உண்மை தானே! மனம், வாக்கு, காயத்தால் சத்தியத்தைக் கடைப்பிடிப்பவன் நரேந்திரன். அவன் பொய் சொல்ல மாட்டான். அவனைப்போல் சத்தியத்தில் நிலை பெற்றிருப்பவர்களின் மனத்தில் சத்தியத்தைத் தவிர வேறு கருத்துக்கள் தோன்றாது என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் எனது காட்சிகள் பிரமையின் விளைவா? என்று எண்ணுவார். உடனே,ஆனால் என்னுடைய காட்சிகளை நான் பலவிதங்களில் சோதித்துள்ளேன். சத்தியத்தைத் தவிர அன்னை எதையும் எனக்குக் காட்டியதில்லை. அவளே அதைத் திருவாய் மலர்ந்து கூறி என்னைத்தேற்றியும் இருக்கிறாள், அப்படியிருக்கையில் சத்தியமே வாழ்க்கையாகக்கொண்ட நரேந்திரன் எப்படி இந்தக் காட்சிகளை மூளைக்கோளாறு என்று சொல்கிறான்? நான் சொன்னவுடன் , அவை உண்மை என்று அவனது மனம் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? என்ற எண்ணம் அவருள் எழும்.
இவ்வாறு குழம்புகின்ற குருதேவர் இறுதியில் விஷயத்தை அன்னையிடமே விட்டுவிடுவார், நீ ஏன் அவனுடைய சொற்களுக்குச் செவிசாய்க்கிறாய்? கூடிய விரைவில் அவன் இவற்றையெல்லாம் உண்மையென்று ஏற்றுக் கொள்வான். என்று அவள் கூறுவது கேட்டு, கவலை நீங்கி அமைதி பெறுவார், ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டாகக் கூறுவோம்.
கூச்பிகார் திருமணத்தின் காரணமாக பிரம்ம சமாஜம் இரண்டாகப் பிளவுபட்டு சாதாரண பிரம்ம சமாஜம் உருவாகி, அப்போது சில வருடங்கள் கழிந்திருந்தன. நரேந்திரர் அவ்வப்போது கேசவரைச்சென்று சந்தித்தாலும் சாதாரண பிரம்ம சமாஜக் கூட்டங்களுக்குத் தவறாமல் போவார். ஞாயிற்றுக்கிழமை நடக்கின்ற கூட்டுப் பிரார்த்தனையின்போது பாடவும் செய்வார். இந்தச் சமயத்தில் ஓரிரு வாரங்கள் தொடர்ந்து, நரேந்திரரால் குருதேவரைக்காண தட்சிணேசுவரம் செல்ல இயலாமல் போயிற்று. நாள்தோறும் குருதேவர் அவரது வரவைஎதிர்பார்த்துக் காத்திருந்தார். இறுதியாக தாமே கல்கத்தா சென்று அவரைக்காண முடிவு செய்தார். அன்று ஞாயிற்றுக்கிழமை என்ற நினைவு அவருக்கு வந்தது. யாரையாவது பார்க்க அவன் வெளியே போயிருக்கலாம். எனவே கல்கத்தா சென்றாலும் அவனைப் பார்க்க முடியாமல் போகலாம் என்று எண்ணினார். பின்னர் சாதாரண பிரம்ம சமாஜத்தின் கூட்டுப் பிரார்த்தனையில் அவன் ஞாயிற்றுக் கிழமை பாடுவான். எனவே அங்குச்சென்றால் கட்டாயம் அவனைச் சந்திக்க முடியும் என்ற முடிவிற்கு வந்தார். ஆனால் இவ்வாறு திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் போய் நின்றால் பிரம்ம சமாஜத்தினர் அதைத்தொல்லையாகக் கருதிவிடுவார்களோ என்ற ஐயமும் அவருள் எழுந்தது. ஆனால் அடுத்த நிமிடமே, ஏன் கருத வேண்டும்? இப்படி எத்தனையோ முறை கேசவரின் கூட்டத்திற்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். விஜயர் , சிவநாதர் போன்ற சாதாரண பிரம்ம சமாஜத் தலைவர்கள் கூட அப்படி எத்தனையோ முறை தட்சிணேசுவரத்திற்கு வந்திருக்கிறார்கள். என்று தமக்குத்தாமே சமாதானமும் கூறிக் கொண்டார்.ஆனால் ஒன்றை அவரது குழந்தை உள்ளம் மறந்து விட்டது.
குருதேவரிடம் தொடர்பு ஏற்பட்ட பின், விஜயர், கேசவர் ஆகியோரின் ஆன்மீகக் கருத்துக்களில் பலவகையான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைக் கண்ணுற்ற சிவநாதர் முதலான சாதாரண பிரம்ம சமாஜ உறுப்பினர்களுள் பலர்அவரிடம் வருவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டார்கள் என்பது அவரது கவனத்திற்கு வரவில்லை. கவனிக்காததும் இயற்கையே. ஏனெனில் இறைநெறியில் முன்னேறுந்தோறும் இறையருளால் மனிதனின் ஆன்மீகக் கருத்துக்கள் மாறியமையத்தானே செய்யும். இதை அவர் தன் வாழ்விலே எவ்வளவு தூரம் உணர்ந்திருக்கிறார்! பிரம்ம சமாஜத்தினரும் சத்தியத்தை நிலை நாட்டுவதற்காகவே போரிடுகின்றனர். ஆகவே இயற்கையாக ஏற்பட்ட மாறுதல்களுக்குத் தம்மை ஒரு காரணமாக்கி அவர்கள் வேறு பாதையை நாடுவார்கள் என்பதை குருதேவர் தான் எவ்வாறு அறிவார்.
அப்போது மாலைவேளை நூற்றுக் கணக்கான பிரம்ம சமாஜத்தினர் கூடி, ஸ்த்யம், ஞானம், அனந்தம், ப்ரஹ்ம முதலான மந்திரங்களைக்கூறி இறைவனின் திருவடித் தாமரைகளைச் சிந்தித்துக்கொண்டிருந்தனர். பிரார்த்தனையும் தியானமும் நிறைவுற்றன. அதன் பின் ஆசாரியர் மேடை மீது அமர்ந்து இறையன்பும் ஆன்மீக நிஷ்டையும் எவ்வாறு வளரும் என்பதைப் பற்றிப்பேசினார். அந்தச் சமயத்தில் அரையுணர்வு நிலையில் அங்கே வந்த குருதேவர் நேராக ஆசாரியர் அமர்ந்திருந்த மேடையை நோக்கிச்சென்றார். அங்கிருந்தோரில் பலர் அவரை முன்பே பார்த்திருக்கிறார்கள். அதனால் அவரது வரவைப் பற்றிய செய்தி கூட்டத்தில் விரைவாகப் பரவி விட்டது. அவரை முன்பு பார்த்திராத சிலர் எழுந்து நின்று கொண்டும் சிலர் பெஞ்சின் மீது ஏறிக் கொண்டும் பார்க்க முயன்றனர். அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. ஆசாரியர் தம் பேச்சை நிறுத்தினார். நரேந்திரர் பாடுவோரின் கூட்டத்தில் இருந்தார். குருதேவர் எதிர் பாராமல் வந்ததன் காரணத்தை அறிந்து கொண்ட அவர் குருதேவரின் அருகில் வந்தார். பிரம்ம சமாஜத்தின் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாட்டிற்குக் காரணகர்த்தா குருதேவர் என்று ஆசாரியரும் வேறு சில முக்கிய உறுப்பினர்களும் முடிவு செய்திருந்தால் அவர்கள் குருதேவரை வரவேற்கவில்லை. ஏன், சாதாரண விருந்தாளிக்குக் காட்டும் மரியாதையைக் கூட காட்டவில்லை.
குருதேவர் எதையும் பார்க்காமல் நேராக மேடைக்கு அருகில் வந்து சமாதியில் ஆழ்ந்தார். அவரது இந்த நிலையைக் காண்பதற்கான ஆர்வம் கூட்டத்தினருக்கு ஏற்பட்டதால் கூச்ச லும் குழப்பமும் மிகுந்தன. அதைச் சமாளிக்க முடியாது என்று தோன்றிய போது கூட்டத்தைக் கலைக்கும் நோக்கத்துடன் ஆவி விளக்குகளை அணைத்தனர். விளைவு விபரீதமானது. இருள் சூழ்ந்ததும் முண்டியடித்துக்கொண்டு வெளியே போக எல்லோரும் கதவை நோக்கி ஓடியதால் ஒரே அமளி துமளியாகி விட்டது!
குருதேவரை வரவேற்க யாரும் முன்வராததைக்கண்ட போதே நரேந்திரர் சுதாரித்து விட்டார். குழப்பம் மிகுந்ததும் அவரை எப்படி வெளியே கூட்டி வருவது என்ற கவலை தோன்றியது. குருதேவரின் பரவச நிலை முடிந்ததும் மிகுந்த சிரமத்துடன் பின்பக்க வழியாக அவரை வெளியே கூட்டி வந்தார். பின்னர் அவரை ஒரு வண்டியில் தட்சிணேசுவரம் அழைத்துச்சென்றார். அதைப் பற்றி பின்னாளில் நரேந்திரர் கூறினார். அன்று எனக்காக அவர் அடைந்த அவமானத்தை எண்ணி நான் பட்ட வேதனையைச் சொல்லி முடியாது . அவரது செயலுக்காக அன்று நான் அவரை எவ்வளவு கடிந்து கொண்டேன் தெரியுமா, ஆனால் அவர் வேதனை கொள்ளவும் இல்லை, என் வார்த்தைகளுக்குச் செவி சாய்க்கவும் இல்லை.
என்னிடம் கொண்ட அன்பின் காரணமாக அவர் தம்மைப்பற்றிக் கவலைப்படாததைக்கண்ட நான் மிகவும் கடுமையாகப்பேசினேன். பரத மன்னன்மானை எண்ணியெண்ணியே மாண்டதால் மானாகப் பிறக்க நேரிட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. அது உண்மையானால், நீங்கள் இவ்வாறு என்னையே நினைத்துக் கொண்டிருப்பதன் விளைவை எண்ணிப்பார்த்து ஜாக்கிரதையாக இருங்கள்” என்று கூறினேன். குழந்தை உள்ளம் படைத்த குருதேவர் என் பேச்சை கேட்டு மிகுந்த கவலை கொண்டார். சரியாகத் தான் சொல்கிறாய். உண்மைதானே! அப்படி நடந்தால் என்னவாவது? ஆனால் என்னால் உன்னைப் பார்க்காமல் இருக்கமுடியாது” என்றுகூறிவிட்டு அச்சத்துடனும் வேதனையுடனும் இந்த விஷயத்தைப் பற்றி அன்னை காளியிடம் சென்று முறையிட்டார். சிறிது நேரம் கழித்து மகிழ்ச்சியுடன் திரும்பிவந்து சிரித்தபடி என்னிடம் கூறினார். போக்கிரிப் பயலே! நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன். நீ அவனை நாராயணனாகக் காண்பதால் தான் அவனிடம் அன்பு செலுத்துகிறாய், என்று அவனிடம் நாராயணனைக் காண மாட்டாயோ அன்று முதல் நீ அவன் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாய்” என்று அன்னை சொன்னாள். இவ்வாறு எனது எல்லா மறுப்புகளையும் வாதங்களையும் அன்று ஒரேயடியாக ஒதுக்கி விட்டார்.
குருதேவர்- நரேந்திரரின் தெய்வீக உறவு
-
நரேந்திரரின் பெருமை குறித்து குருதேவர் கூறியது
-
நரேந்திரரின் தூய உள்ளம் எப்போதும் மிக உயர்ந்த குறுிக்கோளைக் கடைபிடிக்க விரும்புவதை குருதேவரின் கூரிய பார்வை, அவரைக் கண்ட முதல் நாளிலேயே கண்டு பிடித்து விட்டது. அதனால் அவர் நரேந்திரருடன் நடந்து கொண்டதே ஒரு தனி விதமாக இருந்தது.பக்தியில் இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக உணவு, உறக்கம், ஓய்வு, தியானம், பிரார்த்தனை, ஜபம் ஆகிய அனைத்திலும் பலவித நியமங்களை குருதேவர் தாமும் கடைப்பிடித்து பக்தர்களும் பின்பற்றுவதற்கு ஊக்கப் படுத்து வார். ஆனால் இத்தகைய விதிகளைக் கடைபிடிக்கா விட்டாலும் நரேந்திரரைப் பொறுத்தவரை எந்த விதத் தீங்கும் ஏற்படாது என்பதை அவர் எல்லோர் முன்னிலையிலும் திரும்பத் திரும்பக் கூறுவார்.நரேந்திரன் நித்திய சித்தன்- தியான சித்தன்” அவனுள் ஞானத்தீ எப்போதும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. உணவு மற்றும் அனைத்திலுள்ள தோஷங்களையும் அது எரித்துச் சாம்பலாக்கிவிடும். அதனால் அவன் யாரிடம் இருந்தும் எங்கிருந்தும் எந்த உணவையும் எந்த இடத்திலும் உண்ணலாம். அவன் மனம் கெடாது. அமைதி குலையாது. மேலும், ஞானம் என்ற வாளைக்கொண்டு அவன் மாயையின் கட்டுக்களை அறுத்து எறிந்து விட்டதால் மகா மாயை அவனைத் தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முடியவில்லை” என்றும் கூறுவார். இப்படி நரேந்திரரின் பெருமைகளை குருதேவர் கூறுவதைக்கேட்டு நாங்கள் வியந்திருக்கிறோம்.
-
மார்வாரி பக்தர்கள் கொண்டு வந்த உணவை நரேந்திரருக்கு கொடுத்தல்-
-
குருதேவரைக் காண வரும் மார்வாரி பக்தர்கள் கற்கண்டு, பிஸ்தா, பாதாம் பருப்பு, கிஸ்மிஸ் போன்றவற்றைக்கொண்டு வருவதுண்டு.குருதேவர் இவற்றுள் எதையும் உண்பதில்லை. எல்லா பக்தர்களுக்கும் அவற்றைக்கொடுக்கவும் மாட்டார். அவர்களுக்கு (மார்வாரிகள்) பிரதிபலனை எதிர்பாராமல் எதையும் கொடுக்கத் தெரியாது. சாதுவுக்குக் கொடுக்கின்ற ஒரு வெற்றிலைச் சுருளில் கூட பலவிதமான ஆசைகளை இணைத்தே கொடுப்பார்கள். இத்தகைய உணவு இடையூறு விளைவிக்கும் என்பார். அந்தப் பொருட்களை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது” இவற்றை நரேந்திரரிடம் கொடுத்து வா” அவனுக்கு இவற்றால் எந்த விதமான கெடுதியும் உண்டாகாது” என்றார் குருதேவர்.
ஒரு நாள் நரேந்திரர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்து குருதேவரிடம், ஐயா இன்று நான் கொதுவாக மக்கள் விலக்கப்பட்ட உணவு என்று கூறுகின்ற ஓர் உணவை ஹோட்டலில் சாப்பிட்டு வந்துள்ளேன்” என்றார். தனது பெருமையைப் பறைசாற்றுவதற்காக நரேந்திரர் அவ்வாறு கூறவில்லை.தேவைப்பட்டால் தம்மையோ, அறையிலுள்ள தண்ணீர்ப்பானை, குவளை ஆகியவற்றைத் தொடுவதையோ தடுக்கலாம் என்று கருதி தான் கூறினாரே தவிர, ஆணவத்தால் அல்ல என்பதை குருதேவர் புரிந்து கொண்டார். உடனே , இதனால் உனக்கு எந்தக்கேடும் வராது. பன்றிறைச்சியோ மாட்டிறைச்சியோ சாப்பிட்டாலும் சரி, இறைவனிடம் மனத்தை நிலைநிறுத்த ஒருவனால் முடியுமானால், அது ஹவிஷ்யான்னத்திற்கு சமமாகிவிடும். மாறாக சைவ உணவை உண்டும், உலகியல் ஆசைகளில் மூழ்கிக் கிடந்தால் அது பன்றியிறைச்சியோ மாட்டிறைச்சியோ உண்பதைக் காட்டிலும் எவ்விதத்திலும் உயர்ந்ததல்ல. எனவே விலக்கப்பட்ட உணவை நீ சாப்பிட்டது தவறாக எனக்குப் படவில்லை. ஆனால் (மற்றவர்களைக் காட்டி) இவர்களுள் யாராவது வந்து இப்படிக் கூறியிருந்தால், என்னால் அவனைத் தொடக் கூட முடியாமல் போயிருக்கும்” என்று கூறினார்.
இவ்வாறு முதன் முறை பார்த்ததிலிருந்து நரேந்திரர் குருதேவரிடம் எத்தகைய அன்பு, புகழ் , உரிமை ஆகியவற்றைப்பெற்றிருந்தார் என்பது வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்று. சீடனிடம் பொதிந்து கிடக்கின்ற ஆற்றலை மதித்து, அதற்கேற்ப எல்லா விஷயங்களிலும் நடந்து கொள்வதை உலகிற்கு குருவாக வந்தவர்களின் வரலாற்றில் எங்காவது காண இயலுமா என்பது சந்தேகத்திற்குரியது. மனத்தில் தோன்றும் அனைத்தையும் நரேந்திரரிடம் கூறாமல் குருதேவருக்கு அமைதி ஏற்படாது. எல்லா விஷயங்களிலும் அவரைக் கலந்தாலோசிப்பார். மற்ற பக்தர்களின் அறிவுத் திறனையும் நம்பிக்கையும் சோதிப்பதற்காகச் சிலகாலம் அவர்களை நரேந்திரருடன் வாதம் செய்யும்படிக் கூறுவார். எதையும் நன்கு சோதிக்காமல் உண்மை, என்று ஏற்றுக் கொள்ளாதிருக்கும் படியும் கூறுவார். குருதேவரின் இத்தகைய நடவடிக்கைகள் நரேந்திரரின் தன்னம்பிக்கை, சுய முயற்சி, சத்திய நாட்டம், பக்தி சிரத்தை ஆகியவற்றைக் குறுகிய காலத்தில் பன் மடங்கு பெருக்கியது. அதே வேளையில் குருதேவர் நரேந்திரரிடம் கொண்ட அளப்பரிய நம்பிக்கையும் அன்பும் சுதந்திரப்போக்கு கொண்ட நரேந்திரரைச் சுற்றி ஒரு பிளக்க முடியாத கோட்டை போல் விளங்கி, அவர் மறந்து போய்க்கூட உலகியல் ஆசையில் சிக்காமல் எப்போதும் காத்தது. இவ்வாறாக, சந்தித்த ஓராண்டிற்குள் குருதேவரின் பேரன்பில் நரேந்திரர் தன்னை இழந்தார்.அனால் அந்த அன்புப் பிரவாகம் தன்னை அந்தப் பாதையில் எவ்வளவு தூரம் முன்னோக்கி இழுத்துச்சென்றது என்பதை அன்று அவர் அறிந்திருந்தாரா? இல்லை என்று தான் தோன்றுகிறது. குருதேவரின் தெய்வீக அன்பு அவரது இதயத்தை இது வரை அனுபவித்தறியாத ஆனந்தத்தால் நிறைத்தது. ஆனால் இந்தப்பேரன்பு அரியதும், தேவர்களும் பெறத் துடிக்கின்றதுமான ஒன்று என்பதை அவர் அறியவில்லை. தன்னலமும் கடினமும் நிறைந்த உலகில் அல்லவா அவர் பிறந்துள்ளார். எனவே குருதேவரின் அன்பை இன்னும் அவரால் முற்றிலும் பிரித்தறிய முடியவில்லை. சில எடுத்துக் காட்டுகளின் மூலமாக இதனை விளக்குவோம்.
குருதேவரிடம் நரேந்திரர் வரத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பின்னர் 1882, பிப்ரவரி மாதம் ”ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்” நூலின் ஆசிரியரான ஸ்ரீம- தட்சிணேசுவரத்திற்கு வந்து குருதேவரை தரிசிக்கும் பேறுபெற்றார். வராக நகரில் வசித்ததால் எப்படி அடிக்கடி குருதேவரிடம் வர முடிந்தது. எவ்வாறு குருதேவரின் கேலியான அதே வேளையில் அறிவாழம் மிக்க ஓரிரு சொற்கள் தன் கல்விச் செருக்கை நீக்கி என்றென்றைக்குமாக தன்னைப்பணிவு மிக்கவராக மாற்றியமைத்தது என்பதை அந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.நரேந்திரர் கூறினார். ஒரு நாள் தட்சிணேசுவரத்தில் குருதேவருடன் இரவு தங்கியபோது பஞ்சவடியில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது குருதேவர் திடீரென்று அங்குவந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டு, இன்று உன்னுடைய அறிவுக் கூர்மையும் படிப்பாற்றலும் சோதிக்கப் படும். நீ இரண்டரை தான் பாஸாகியுள்ளாய். மூன்றரை பாஸ் செய்துள்ள ஆசிரியர் ஒருவர் வந்திருக்கிறார் வா, வந்து அவருடன் பேசு, என்று சிரித்தவாறே கூறினார். நான் குருதேவருடன் போகும்படிஆயிற்று. குருதேவரின் அறையை அடைந்தேன். அறிமுகத்திற்குப் பின்பு ம-வுடன் பல விஷயங்களைப்பற்றிப்பேசினேன். குருதேவர் அமைதியாக அமர்ந்து எங்கள் உரையாடலைக்கேட்டுக்கொண்டும் அவ்வப்போது என்னைப் பார்த்துக்கொண்டும் இருந்தார். விடை பெற்றுச்சென்றதும், தேர்வுகளில் தேறிப்பயன் என்ன? பெண்களைப்போல் வெட்கப் படுகிறான். அவனால் பேச முடியவில்லையே! என்றார். இவ்வாறு என்னை மற்றவர்களோடு வாதாடும்படி ச்செய்து ரசிப்பார்.
குருதேவரின் இல்லற பக்தர்களுள் ஒருவர் கோதார் நாத் சட்டோபாத்யாயர் . நரேந்திரர் தட்சிணேசுவரம் வரத் தொடங்குவதற்குச் சிறிது காலம் முன்பே அவர் குருதேவரிடம் வந்துபோய்க் கொண்டிருந்தார். கிழக்கு வங்காளத்தில் உள்ள டாக்காவில் வேலைபார்த்து வந்ததால் பூஜை போன்ற விடுமுறைகளில் தான் குருதேவரைக் காண அவரால் வர இயலும், கோதார் ஒரு பக்த சாதகர். வைணவ தந்திரங்கள் கூறுகின்ற பாவனை சாதனைகளைப் பழகிவந்தார். பக்திப் பாடல்களைக்கேட்கும்போது அவரது கண்களில் கண்ணீர் பெருகும். அதனால் குருதேவர் அவரைப் பிறர் முன்னிலையில் போற்றுவார். கேதாரின் பக்தியைக்கண்டு டாக்காவிலுள்ள பலர் அவரிடம் மரியாதையும் பக்தியும் கொண்டிருந்தனர். பலர் அவரது அறிவுரையின்படி ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறினர். குருதேவரிடம் மிக அதிக அளவில் மக்கள் வரத் தொடங்கியபோது , எல்லோரிடமும் பேசிப்பேசி சில வேளைகளில் குருதேவர் களைத்துவிடுவார். ஒருநாள் அவர் பரவச நிலையில் அன்னையிடம், அம்மா என்னால் இவ்வளவு அதிகமாகப் பேச முடியாது. கேதார் , ராம், கிரீஷ், விஜயர் முதலியவர்களுக்கும் சிறிது ஆற்றலைக்கொடு. மக்கள் முதலில் அவர்களிடம் போகட்டும். சிறிது கற்றுக்கொண்ட பிறகு, இங்கே( என்னிடம்) வரட்டும். இங்கே வந்த பின் ஓரிரு சொற்களில் ஆன்மீக விழிப்பு உண்டாகும்படி இருக்கட்டும், என்று பிரார்த்தித்தார். ஆனால் இது மிகவும் பின்னால் வரவேண்டிய விஷயம்.
-
கேதாரின் வாதத் திறமையும் நரேந்திரருடன் முதல் சந்திப்பும்-
-
சில நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு கேதார் கல்கத்தாவிற்கு வந்தார். குருதேவரை அவ்வப்போது வந்து சந்தித்தார். பக்த சாதகரான கேதாரைக்கண்ட குருதேவரும் மகிழ்ந்து அவருடன் பேசவும் மற்ற பக்தர்களை அவருக்கு அறிமுகப் படுத்தவும் செய்வார். அந்தச் சமயத்தில் ஒரு நாள் நரேந்திரர் குருதேவரிடம் வந்தபோது கேதாரைச் சந்தித்தார் . தாம் பாடும் போது கேதார் பரவச நிலை அடைவதையும் கண்டார். பின்னர் குருதேவர் நரேந்திரரைக் கேதாருடன் வாதிடும் படிக் கூறினார். கேதார் வாதத் திறமை மிக்கவர். எதிராளியின் சொற்கெளிலுள்ள பொருளற்ற தன்மையை அவ்வப்போது சுட்டிக்காட்டி கேலியும் செய்வார். ஒரு தடவை அவர் எதிராளியை எதுவும் பேச முடியாமல் திணறடித்து விடுவதை குருதேவர் மிகவும் ரசித்தார். யாராவது இதைப்போன்ற கேள்வியை குருதேவரிடம் கேட்டால், இந்தக்கேள்விக்கு கேதார் இப்படிப் பதிலளிப்பார் என்று கூறி கேதாரை மேற்கோள் காட்டுவார். ஒரு முறை ஒருவர், கடவுள் உண்மையிலேயே கருணை உள்ளவராக இருந்தால், அவரது படைப்பில் ஏன் இவ்வளவு துன்பமும் துயரமும் அக்கிரமும் அநீதியும் உள்ளது. பஞ்சத்தாலும் பட்டினியாலும் ஏன் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகிறார்கள்? என்று கேதாரிடம் கேட்டார். அதற்கு கேதார், கருணைப் பேராளனாயிருந்தும் படைப்பில் துன்பம், வேதனை, துர்மரணம், போன்றவற்றை வைப்பது பற்றி முடிவெடுத்த மீட்டிங்கிற்குக் கடவுள் என்னை அழைக்க வில்லை. அதைப் பற்றி நான் உனக்கு எப்படிக் கூற முடியும்? என்று பதிலளித்தார். ஆனால் நரேந்திரரின் கூரிய அறிவின் முன் கேதாரின் வாதம் எடுபடவில்லை.கேதார் சென்ற பிறகு குருதேவர் நரேந்திரரிடம் கேட்டார், நல்லது, கேதாரைப் பற்றி என்ன நினைக்கிறாய்? அவரது பக்தியைக் கவனித்தாயா? இறைவனின் நாமத்தை உச்சரித்த அளவிலேயே அவரது கண்களிலிருந்து நீர் வழிகிறது! ஹரியின் பெயரைக்கேட்டு கண்ணீர் பெருக்குபவன் ஜீவன் முக்தன். கேதார் உயர்ந்தவர் இல்லையா? ஆன்மீகம் ஆகட்டும் அல்லது வேறு எதற்காகவும் ஆகட்டும், ஆண் உடலைப்பெற்ற ஒருவன் பெண்களைப்போல் நடந்துகொள்வதை தூய உள்ளமும் ஆண்மையும் மிக்க நரேந்திரர் வெறுத்தார். திட சங்கல்பத்துடனும் முயற்சியுடனும் முன்னேறுவதை விட்டுவிட்டு, அழுதழுதே இறைவனை நாடுவது ஆண்மையை அவமதிப்பதாகும் என்று நரேந்திரர் கருதினார். முழுக்க முழுக்க இறைவனைச் சார்ந்திருந்தாலும் ஆண் எப்போதும் ஆணாக இருக்க வேண்டும். ஆண்மகனைப் போன்று வீரத்துடன் தன்னை இறைவனிடம் ஒப்புவிக்க வேண்டும் நரேந்திரருடைய கருத்து. அதனால் குருதேவர் கூறியதைப் பூரணமாக ஏற்றுக்கொள்ள அவரால் முடியவில்லை. எனவே ஐயா! எனக்கு எப்படித்தெரியும்? ( மக்களுடைய இயல்பு) உங்களுக்குப் புரியும். நீங்கள் சொல்ல முடியும் . கண்ணீர் சிந்துவதை வைத்து ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை அறிந்து கொள்ள முடியாது. சிறிது நேரம் ஒன்றையே கூர்ந்து நோக்கினால் கூடத் தான் கண்ணீர் கொட்டும்! ராதையின் விரகதாபத்தை விளக்கும் பாடல்களைக்கேட்டு அழுபவர்களுள் பெரும்பாலோர் தங்கள் மனைவியைப் பிரிந்ததை எண்ணி அழுகிறார்கள். அல்லது தங்களை அந்த நிலையில் வைத்துக்கொண்டு அழுகிறார்கள். இதில் சந்தேகம் இல்லை. அதைப் பற்றிய அனுபவம் இல்லாத என்னைப்போன்றவர்கள் விரக கீதங்களைக்கேட்டாலும் பிறரைப்போல் எளிதில் அழுது விடுவதில்லை என்று கூறினார். நரேந்திரரிடம் கருத்தைக்கேட்டால் தான் சரி என்று கருதியதை குருதேவரிடம் அஞ்சாமல் கூறுவார்.குருதேவரும் மகிழ்ச்சி அடைவார். ஒரு போதும் வெறுப்பு அடைவதில்லை.ஏனெனில் சத்தியத்தை உயிராகக்கொண்டிருந்த நரேந்திரரின் உணர்வு வீட்டில் திருட்டு” என்பதே இல்லை என்பதை குருதேவர் அறிவார்.
குருதேவரைச் சந்திப்பதற்கு சில காலம் முன்புதான் நரேந்திரர் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்திருந்தார். உருவமற்ற இரண்டற்ற கடவுளை நம்பினார். அவரையே வழிபட்டார். தியானித்தார், இதனை பிரம்ம சமாஜத்தின் உறுப்பினராகும் போது விண்ணப்பத்தில் எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்திருந்தார். ஆனால் அதன் விதி முறைகளைக் கடைப் பிடித்து முழுமையாக ஓர் அங்கத்தினராக வேண்டும் என்ற எண்ணம் அவருக்குச் சிறிதும் ஏற்படவில்லை. முன்பே ராக்காலுக்கு நரேந்திரரைத்தெரியும். நீண்ட நேரம் அவருடன், செலவழிப்பதும் உண்டு. ராக்கால் குழந்தையைப்போன்று மென்மையான இயல்பு படைத்தவர்.அவர் நரேந்திரரின் அன்பினால் கவரப்பட்டு, எல்லா விஷயங்களிலும் அவரது திடமான சங்கல்பத்தினால் வழி நடத்தப் பட்டது வியப்புக்குரியதல்ல. அவ்வாறே, பிரம்ம சமாஜத்தின் விண்ணப்பத்திலும் நரேந்திரர் சொன்னதும் கையெழுத்திட்டார். சில நாட்களுக்குப்பின் ராக்கால் குருதேவரைச் சந்தித்த பின், அவரது போதனையால் ராக்காலின் உள்ளத்தில் உறங்கிக் கிடந்ததான உருவ வழிபாட்டில் ஈடுபாடு விழித்தெழுந்தது. அதற்குச் சில மாதங்களுக்குப் பின் நரேந்திரர் குருதேவரிடம் வந்தபோது ராக்காலை அங்குக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் ஒருநாள் ராக்கால் குருதேவருடன் கோயிலுக்குச்சென்று தெய்வ உருவங்களை வணங்குவதை அவர்காண நேர்ந்தது. சத்தியத்தில் உறுதி கொண்ட நரேந்திரருக்கு இது ஆத்திரத்தை மூட்டியது. முந்தைய நிகழ்ச்சியை நினைவூட்டி அவரிடம், பிரம்ம சமாஜத்தின் படிவத்தில் கையொப்பம் இட்டுவிட்டு கோயிலுக்குச் சென்று வணங்குவது எவ்வளவு தவறு. இது பொய்யொழுக்கம் அல்லவா? என்று கடிந்து கொண்டார்.
ராக்கால் அப்போது பேசாதிருந்து விட்டார். ஆனால் மென்மையான உள்ளம் கொண்ட அவர், அதன் பின்னர் சிறிது காலம் நரேந்திரரைப் பார்க்க அஞ்சினார். குருதேவருக்கு இது தெரிய வந்தபோது அவர் நரேந்திரரிடம் கனிவுடன், இங்கே பாரப்பா, ராக்காலைத் திட்டாதே. அவன் உன்னைக்கண்டு பயந்து நடுங்குகிறான். அவனுக்கு இப்போது உருவக்கடவுளிடம் நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அவன் என்ன செய்வான். எடுத்தவுடனே எல்லோரும் உருவமற்ற கடவுளைப் புரிந்து கொள்ள முடியுமா என்ன? என்றெல்லாம் கூறி ப் புரிய வைத்தார். அதன் பின்னர் நரேந்திரரும் ராக்காலைக் கடிந்து கொள்வதை விட்டு விட்டார்.
தகுதி வாய்ந்த ஒரு பாத்திரமாக நரேந்திரர் இருப்பதைக்கண்ட குருதேவர், ஆரம்பத்திலிருந்து அவருக்கு அத்வைதக்கொள்கையில் நம்பிக்கையூட்ட முயன்றார். நரேந்திரர் தட்சிணேசுவரம் வந்தால் உடனே அஷ்டாவக்ர சம்ஹிதை போன்ற நூல்களைக்கொடுத்துப் படிக்கச் சொல்வார். உருவமற்ற ஆனால் குணங்களுடன் கூடிய பிரம்ம வழிபாட்டை ஏற்றுக் கொண்டிருந்த நரேந்திரரின் கண்களில் இத்தகைய நூல்கள் நாத்திக நூல்களாகவே தோன்றின. குருதேவரின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சிறிது நேரம் படிப்பார். உடனே பொறுக்க முடியாமல், இதற்கும் நாத்திகத்திற்கும் என்ன வேறுபாடு? படைக்கப் பட்ட ஜீவன், படைத்தவனாகத் தன்னை எண்ணுவதா? இதைவிடப்பெரிய பாவம் வேறென்ன இருக்க முடியும்? நான் கடவுள், நீ கடவுள், பிறந்து இறப்பவை எல்லாம் கடவுள்- இதைவிடப் பகுத்தறிவிற்குப் பொருந்தாத வேறு ஏதாவது இருக்க முடியுமா? இந்த நூல்களை எழுதிய ரிஷி முனிவர்களுக்குக் கட்டாயம் மூளைக்குழம்பிப்போயிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் இப்படி எழுதியிருப்பார்களா? என்று வெடிப்பார்.
நரேந்திரர் இப்படி வெளிப்படையாகப் பேசுவதை குருதேவர்மகிழ்ச்சியுடன் வரவேற்பார். அவரது போக்கைத் திடீரென்று தாக்காமல், நீ இதை இப்போது ஏற்றுக் கொள்ளாது இருக்கலாம். அதற்காக ரிஷிகளையும் முனிவர்களையும் ஏன் குறை கூறுகிறாய்? ஏன் இறைவனின் இயல்பிற்கு எல்லை வகுக்கிறாய்? சத்தியப்பொருளான இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இரு. அவன் தன் எந்த வடிவத்தை உனக்குக் காட்டியருள்வானோ அதில் நம்பிக்கை வை” என்பார். ஆனால் நரேந்திரர் இதைப் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில் பகுத்தறிவினால் நிலைநாட்டப்படாத எதுவும் அவருக்குப் பொய்யாகத்தோன்றியது. பொய் எதுவானாலும் அதை எதிர்த்து நிற்பதுதான் அவருடைய இயல்பு. அதனால் சிலவேளைகளில் குருதேவரைத் தவிர பிறரிடம் கூட அத்வைதக்கொள்கையை எதிர்த்து வாதம் செய்வதும் கேலியாகப்பேசுவதும் உண்டு.
பிரதாப் சந்திர ஹாஸ்ரா அப்போது தட்சிணேசுவரத்தில் வசித்து வந்தார். அவரது செல்வ நிலை முன்பு போல் செழிப்பாக இல்லை. அதனால் அவர் ஆன்ம அனுபூதிக்காக முயன்ற போதிலும் மனத்தில் அவ்வப்போது பணத்தாசை தோன்றிவிடும். அவரது ஆன்மீக சாதனைகள் ஆசைவசப்பட்டதாகவே இருந்தன. அவர் அதை மிகவும் ரகசியமாக வைத்துக்கொண்டு, வெளியில் தன்னலமற்ற சேவை, அதுஇது என்று பெரிய பேச்சுக்களைப்பேசி புகழ்,பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். அது மட்டுமல்ல, ஆன்மீகம், லௌகீகம், என்று ஒவ்வொரு படியிலும் சொந்த லாபம், புகழ் இவற்றை எதிர்பார்த்தே எதையும் செய்வார். ஜப தவங்களால் சில அற்புத சக்திகளைப்பெற்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை கூட அவர் மனத்தில் இருந்தது என்று தான் தோன்றுகிறது.
குருதேவர் ஆரம்பத்திலேயே இதைத்தெரிந்து வைத்திருந்தார். இத்தகைய உள்நோக்கங்களை விட்டுவிட்டு, இறைவனிடம் பிரார்த்தைனை செய்யும்படி அறிவுரையும் கூறினார். பலவீனமான மனம் படைத்த ஹாஸ்ரா இதனை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல, கர்வத்தாலும் தன்னலத்தாலும் மதி மயங்கி, குருதேவரைக் காண வருபவர்களிடம், தான் குருதேவருக்கு எந்த விதத்திலும் குறைந்த சாது அல்லர், என்று தம்பட்டம் அடிந்தும் வந்தார். ஆனால் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையான ஆர்வமும் மனத்தின் ஒரு பகுதியில் சிறிது இருக்கவே செய்தது.ஏனெனில் ஹாஸ்ராவின் நடவடிக்கைகளை குருதேவர் அறிந்திருந்தாலும், அதற்காகச்சில சமயம் அவரைக்கடிந்து கொண்டாலும் அவரை அங்கிருந்து வெளியேற்றவில்லை. அவருடன் மிகவும் நெருங்கிப்பழக வேண்டாம் என்று எங்களுள் சிலரை எச்சரித்திருந்தார்குருதேவர்.ஹாஸ்ராவிடம் கணக்குப் பார்க்கும் புத்தி உள்ளது. அவன் சொல்வதை கேட்காதீர்கள்” என்பார் அவர்.
மேலே கூறியவற்றுடன் ஹாஸ்ராவிடம் இருந்த இன்னொரு குணம் சந்தேக மனப்பான்மை. எதையும் எளிதில் நம்பிவிட மாட்டார் அவர். சாதாரணக் கல்வி பயின்றவர்களுடன் ஒப்பிட்டால், அவரது அறிவுத் திறனும் அவ்வளவு மோசமாக இருக்கவில்லை. எனவே ஆங்கிலக் கல்வி பயின்ற நரேந்திரர் போன்றவர்கள் மேலை நாட்டின் கடவுள் மறுப்புக் கொள்கைகளை விவாதிக்கும் போது அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறிது புரிந்து கொள்வார். இதனால் நரேந்திரருக்கு அவரைப் பிடிக்கும். தட்சிணேசுவரத்திற்கு வரும்போதெல்லாம் ஹாஸ்ராவுடன் ஓரிரு மணிநேரம் பேசிக்கொண்டிருப்பார். நரேந்திரரின் அறிவுத் தெளிவிற்கு முன்பு ஹாஸ்ராவும் தலை வணங்கியே தீர வேண்டும். நரேந்திரர் கூறுவதை மிகவும் கவனத்துடன் ஹாஸ்ரா கேட்டுக்கொள்வார். அவ்வப்போது நரேந்திரர் புகைபிடிப்பதற்கு வேண்டியவற்றைத் தயார் செய்தும் கொடுப்பார். எனவே எங்களுள்பலர் ஹாஸ்ரா நரேந்திரரின் ஃபெரண்ட் என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு.
நரேந்திரரைக் கண்ட அளவிலேயே பொதுவாக குருதேவர் சமாதி நிலையை அடைந்து விடுவார். சிறிது உணர்வு திரும்பியதும் அவருடன் பேரானந்தத்துடன் ஆன்மீக விஷயங்களை நீண்ட நேரம் பேசுவார்.அப்படிப்பட்ட சமயங்களில் சொல்லாலும் செயலாலும் நரேந்திரரின் மனத்தில் உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புகுத்த முயல்வது போலிருக்கும். அவ்வப்போது பாடல்களைக்கேட்க விரும்புவார் குருதேவர். ஆனால் நரேந்திரரின் இனிமையான குரலைக்கேட்டவுடன் மீண்டும் சமாதி நிலையில் ஆழ்ந்து விடுவார். அதன் காரணமாக நரேந்திரரின் பாடல் நின்றுவிடாது. அவர் அதில் ஆழ்ந்து போய், சில மணிநேரம் ஒன்றன்பின் ஒன்றாகப் பல பாடல்களைப் பாடுவார். சிறிது உணர்வு வரும்போது குருதேவர் நரேந்திரரிடம் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பாடலைப் பாடும்படிக்கேட்பார். இறுதியில் ”இருப்பவை அனைத்தும் நீயே” என்ற பாடலை நரேந்திரர் பாடும்வரை குருதேவருக்குப் பூரண திருப்தி இருக்காது. அதன் பின் அத்வைதக் கொள்கையில் உள்ள பல நுண்ணிய உண்மைகளான ஜீவ- ஈசுவர வேற்றுமை, ஜீவன் மற்றும் பிரம்மத்தின் உண்மை இயல்பு, பிரம்மத்தின் வடிவம் போன்ற நுட்பமான கருத்துக்களைப் பற்றிப்பேசுவார். இவ்வாறாக நரேந்திரர் தட்சிணேசுவரத்திற்கு வரும்போதெல்லாம் அங்கு ஓர் ஆனந்தப் புயலே வீசி ஓயும்.
அத்வைதக்கொள்கையின் படி ஜீவனும் பிரம்மமும் ஒன்று என்பதை ஒருநாள் குருதேவர் நரேந்திரரிடம் விளக்கினார். நரேந்திரர் கவனமாகக்கேட்டுக்கொண்டார். ஆனால் எதையும் அவரால் உணர முடியவில்லை. குருதேவர் பேசி முடித்ததும் ஹாஸ்ராவிடம் சென்றார். புகைபிடித்துக்கொண்டே அந்தக் கருத்துக்களை அவரிடம் கூறினார். இப்படிக்கூட இருக்க முடியுமா? என்ன. பானையும் கடவுள்,, குவளையும் கடவுள், நாம் பார்ப்பன அனைத்தும் கடவுள், நாம் அனைவரும் கடவுள், இதென்ன கூத்து! பிறகு இருவரும் இதைப்பற்றிக்கேலியாகப்பேசியவண்ணம் விழுந்து விழுந்து சிரித்தனர். அப்போது குருதேவர் அரையுணர்வு நிலையில் இருந்தார். நரேந்திரர் சிரிப்பதைக்கேட்ட அவர், ஒரு சிறுவனைப்போன்று, உடுத்தியிருந்த துணிகளை அக்குளில் இடுக்கிக்கொண்டு, சிரித்தவாறே வெளியில் வந்தார். நேராக அவர்களிடம் வந்து, என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? என்று அன்புடன் கேட்டவாறே நரேந்திரரைத்தொட்டு விட்டு சமாதியில் ஆழ்ந்தார்.
இதைக் குறித்து நரேந்திரர் பிறகு கூறினார். அன்று குருதேவர் என்னைத் தொட்ட அளவில் மனத்தில் ஒரு புரட்சியே ஏற்பட்டது.இந்தப் பிரபஞ்சத்தில்கடவுளைத்தவிர வேறு எதுவுமில்லை என்பதைக்கண்டேன் நான்! எவ்வளவு நேரம் இந்த நிலை நீடிக்கும் என்று அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று முழுவதும் அந்த உணர்வு என்னைவிட்டு நீங்கவில்லை. வீடு திரும்பினேன். அங்கும் அதே உணர்வு! பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற அவரே நிறைந்திருந்தார். சாப்பிட அமர்ந்தேன்....... உணவு, தட்டு, பரிமாறியவர், உணவை உட்கொள்ளும் நான் அனைத்தும் அவரேயன்றி வேறில்லை! ஓரிரு வாய் உண்டு விட்டு, ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருந்தேன். ஏன் இப்படி இருக்கிறாய்? சாப்பிடு, என்று என் அன்னை கூறிய பின்னரே மீண்டும் உண்ணத் தொடங்கினேன். இவ்வாறாக ஊண், ஓய்வு, கல்லூரிக்குச்செல்லும்போது என்று எப்போதும் அதே காட்சி. ஏதோ ஒருவிதமான விவரிக்க இயலாத போதை உணர்வு எப்போதும் என்னை ஆட்கொண்டிருந்தது. சாலையில் போய்க் கொண்டிருந்தேன். வண்டிகள் வந்தன.ஆனால் மற்ற நேரங்களைப்போல், ஒதுங்க வேண்டும் என்று தோன்றவில்லை! அந்த வண்டி எதுவோ அதுவே நானும் என்று தோன்றியது. என் கைகால்கள் உணர்வற்றது போலிருந்தன. உணவில் சற்றும் திருப்தி இல்லாமல் போய் விட்டது. வேறு யாரோ சாப்பிடுவது போல் தோன்றும். சில வேளைகளில் சாப்பிடும் போதே தரையில் சாய்ந்து விடுவேன், எழுந்து அமர்ந்து மறுபடியும் சாப்பிடுவேன். சில நாட்களில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விடுவேன். ஆனால் அது எனக்கு எந்தவிதமான கெடுதலையும் உண்டாக்கவில்லை. என் அன்னை பயந்து விட்டாள். உளக்கு ஏதோ பயங்கரமான நோய் இருப்பது போல் தோன்றுகிறது.” என்பாள். சில சமயம், இனி அவன் பிழைக்க மாட்டான்” என்று கூறுவாள். அந்த உணர்வு சிறிது குறைந்த போது உலகம் ஒரு கனவு போல் தோன்றியது!ஹேதுவா குளத்தின் கரையில் நடந்து கொண்டிருந்தேன். அதன் நாலு பக்கமும் அமைந்திருந்த இரும்புவேலி உண்மையா அல்லது கனவா என்றறிய அவற்றில் தலையை மோதிப் பார்த்தேன். கைகால்களில் உணர்ச்சி இல்லாமல் போய் விட்டதால் பக்கவாதம் வந்து விட்டதோ என்று தோன்றியது. இப்படிச் சில நாட்களுக்கு அந்த உணர்வின் தீவிரமான ஆதிக்கத் திலிருந்து என்னால் விடுபட முடியவில்லை.இயல்பான நிலை ஏற்பட்ட போது இது தான் அத்வைத அனுபவம் என்று எண்ணினேன். அப்படியானால் சாஸ்திரங்களில் எழுதப் பட்டிருப்பது பொய்யல்ல என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதன் பின் அத்வைத தத்துவத்தின் முடிவுகளை என்னால் சந்தேகிக்க முடியவில்லை.
வேறு ஓர் அதிசயமான நிகழ்ச்சியைப் பற்றி நரேந்திரர் எங்களிடம் கூறினார். அது இந்தச் சமயத்தில் நடந்திருக்கக் கூடம் என்று அதை இங்குத் தருகிறோம்.
1884- ஆம் ஆண்டு குளிர் காலத்தில் நாங்கள் அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித் திருந்தோம். ஒரு முறை அவரது வீட்டிற்குச் சென்றிருந்தோம்.அது பிற்பகல் என்று தோன்றுகிறது. இரவு பதினொரு மணி வரை அவருடன் இருந்தோம். அன்று ராமகிருஷ்ணானந்தரும் எங்களுடன் இருந்தார். நரேந்திரரைச் சந்தித்ததிலிருந்து நாங்கள் அவரால் கவரப் பட்டிருந்தோம். அது அன்றைய தினம் ஆயிரம் பங்கு வளர்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முன் குருதேவர் கடவுளை அறிந்த ஒரு மனிதர் அதாவது சித்த புருஷர் என்று மட்டுமே எண்ணியிருந்தோம். ஆனால் அன்று குருதேவரைப் பற்றி நரேந்திரர் சொன்னது எ எங்கள் இதயத்தைத் தொட்டு, ஒரு புதிய ஒளியையே தந்துவிட்டது .
சைதன்யர், ஏசுபோன்ற மகான்களின் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படுகின்ற சில அசாதாரணமான நிகழ்ச்சிகளைப் படித்திருந்தாலும் எங்களுக்கு அவற்றில் நம்பிக்கை வரவில்லை. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் குருதேவரின் வாழ்க்கையில் நாள்தோறும் நடைபெறுவதை அறிந்தோம். குருதேவர் தம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்களைத் தொடுவதன் மூலமே, அவர்களின் சம்ஸ்காரங்களை அழித்து பக்தியை நல்கினார். சமாதி நிலையை அருளி அவர்களைப்பேரானந்தத்திற்கு உரியவர் ஆக்கினார். அல்லது அவர்களுடைய வாழ்க்கையின் போக்கை மாற்றி ஆன்மீக வழியில் திருப்பி, அவர்கள் விரைவில் இறையனுபூதி பெற்றுப் பிறவிப்பெருங்கடலைக் கடக்கும் படிச்செய்தார். குருதேவரின் கருணையினால் தமக்குக் கிடைத்த தெய்வீக அனுபவங்களைப் பற்றிக் கூறியவாறே அன்று நரேந்திரர் ஹேதுவா களக்கரையில் எங்களுடன் உலாவினார். மாலை வேளை, பின்னர் சிறிது நேரம் தம்மில் தாமே மூழ்கி மௌனமாக இருந்தார். அதன்பின் தம் உள்ளத்து ஆனந்தத்தை வெளிப்படுத்துவது போல் இனிமையாகப் பாடினார்.
பாடி முடித்ததும் தம்முள் பேசி க் கொள்வதைப் போன்று மிக மெதுவாக நரேந்திரர் கூறினார். ஆம், உண்மையிலேயே அவர் அளிக்கிறார். வாரி வழங்குகிறார். அன்பு, பக்தி, ஞானம், முக்தி என்று எது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கிறார்! என்ன அற்புத சக்தி, (சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு மீண்டுமு்) இரவில் என் அறைக் கதவை உள்ளே தாழிட்டுப்படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று அவர் என்னை கவர்ந்திழுத்தார்.இந்த உடலில் வசிப்பவன் யாரோ, அவனை தட்சிணேசுவரத்திற்கு இழுத்துக்கொண்டார். பல உபதேசங்களைத் தந்த பின்னரே நான் திரும்பி வர அனுமதித்தார். அவரால் எல்லாம் முடியும். தட்சிணேசுவரத்து சைதன்யரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்?
மாலை மயங்கி இருள் பரவ ஆரம்பித்து ஒருவரை ஒருவர் பார்க்க இயலவில்லை. பார்க்க வேண்டிய தேவையும் இருக்க வில்லை நரேந்திரரின் ஒளி மயமான ஆன்மீக உணர்வு எங்கள் உள்ளத்தில் நுழைந்து, அங்கோர் அபூர்வப் பிரகாசம் வீசத் தொடங்கியிருந்தது. அந்தப்பேருணர்வு தந்த போதையில் எங்கள் உடலே மிதப்பது போன்றிருந்தது. இது வரை உண்மையாகத்தெரிந்த உலகம், கனவு போல் கரையத்தொடங்கியது. மாசற்ற கருணையின் காரணமாக எல்லையில்லா இறைவன் எல்லைக்குட்பட்ட மனிதராக வருகிறார், ஆயிரக்கணக்கான உயிர்களின் சம்ஸ்காரங்களை அழிக்கிறார். தர்மச் சக்கரத்தை மீண்டும் சுழல வைக்கிறார். பெரும்பாலோக்குக் கற்பனையாகத்தோன்றுகின்ற இவையெல்லாம் அன்று எங்களுக்கு மிகத்தெளிவாகப் புரிந்தது.நேரம் எப்படிக்கழிந்தது என்றே தெரியவில்லை. திடீரென்று கடிகாரத்தில் ஒன்பது மணி அடித்தது. பிரிந்து செல்ல விருப்பமேயில்லை. அப்போது நரேந்திரர், வா, போகலாம். சிறிது தூரம் உன்னுடன் வருகிறேன், என்றார் . மீண்டும் சுவையான கருத்துக்களைப்பேசியவாறே நடந்தோம். சிறிது நேரத்தில் அதில் மூழ்கி விட்டோம். சம்பாதோலா வந்தபோது தான் நரேந்திரரை இவ்வளவு துரம் வரும்படி செய்த எங்கள் அறிவீனத்தை உணர்ந்தோம். எனவே அவரை எங்கள் வீடடிற்கு அழைத்துச் சென்று உணவளித்து, அவர் வீட்டில் கொண்டு போய்விட்டு விட்டுத் திரும்பினோம். அன்று நடந்த இன்னொரு நிகழ்ச்சியும் நன்றாக நினைவில் உள்ளது. எங்கள் வீட்டில் நுழைந்ததும் நரேந்திரர் திகைத்துப்போய் சிலைபோல் நின்றார். பின்னர், இந்த வீட்டை நான் இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன்” எந்த வழியாக எங்கே போக வேண்டம, எந்த அறை எங்கே உள்ளது என்று எல்லாமே எனக்குத் தெரிந்துள்ளன, ஆச்சரியம்! என்று கூறினார். நரேந்திரரின் இத்தகைய அனுபவத்தையும் அதைப் பற்றி அவர் கூறியதையும் வேறோர் இடத்தில் ஏற்கனவே விவரித்து விட்டோம். எனவே இங்கு மீண்டும் கூறவில்லை.
-
குருதேவர் பக்தர்களைச்சோதிக்கும் அற்புத முறை
-
நரேந்திரர் ஓர் தகுதி வாய்ந்த பாத்திரம் என்பதை முதல் சந்திப்பிலேயே புரிந்து கொண்ட குருதேவர் தன்னலமற்ற அன்பினால் அவரைப் பிணைத்தார். பின்னர் அவ்வப்போது சிறுசிறு சோதனைகள் வைத்து ஆன்மீகத்தின் பல்வேறு விஷயங்களைப் போதித்தார். இவற்றையெல்லாம் முன்னரே கூறினோம். இங்கே அந்த சோதனைபற்றிக் கூற விழைகிறோம்.
கூச்பிகார் திருமணத்தின் காரணமாக பிரம்ம சமாஜம் பிளவு பட இருந்த சமயத்தில் குருதேவர் கேசவரிடம், உங்கள் சமாஜ உஞப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக, ஆராய்ந்து பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக் கொள்கிறீர்கள். எனவே சமாஜம் பிளவுபடுவதில் என்ன வியப்பு இருக்க முடியும்? பரிசோதித்து பார்க்காமல் நான் யாரையும் ஏற்றுக்கொள்வதில்லை” என்றார். உண்மை தான். வரும் பக்தர்களை அவர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ விதங்களில் குருதேவர் சோதித்துப் பார்ப்பார். நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கற்றறிவு இல்லாதவர் என்று தான் அவர் கருதப் பட்டார். ஆனால் பிறரது குணநலனைச்சோதித்துப் பார்க்க நாம் இது வரை கண்டிராத கேட்டிராத முறைகளை எங்கிருந்து கற்றார்! முற்பிறவிகளில் சேர்க்கப்பட்ட அறிவின் வெளிப்பாடா? அல்லது ரிஷிகளைப்போன்று சாதனைகள் செய்து , புலன்கடந்த காட்சி பெற்றதன் பலனாகக் கிடைத்த எல்லாம் அறிந்த நிலையின்விளைவா? அல்லது அந்திரங்க பக்தர்களிடம் தம்மை அவதார புருஷராக அறிமுகப் படுத்தியுள்ளாரே, அந்தச் சிறப்பின் காரணமாக இத்தகைய அறிவொளி அவருக்குக் கிடைத்ததா? இப்படிப் பல்வேறு கேள்விகள் மனத்தில் எழுந்தாலும் பதிலை நாம் இப்போது ஆராயப்போவதில்லை. இயன்றவரை நிகழ்ச்சிகளை அப்படியே தருகிறோம். முடிவை வாசகர்களிடம் விட்டு விடுகிறோம்.
மக்களின் குணநலனை அறிய குருதேவர் செய்த சோதனை முறைகளைச்சில நிகழ்ச்சிகளின் வாயிலாக வாசகர்கள் அறிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கு முன், அதைப் பற்றிய சில கருத்துக்களைத் தெரிந்து கொள்வது அவசியம். யாராவது வந்தால் குருதேவர் அவர்களை ஒரு தனிப்பட்ட விதமாகக் கூர்ந்து பார்ப்பார். இதன் மூலம் அவரது மனம் அந்த நபரிடம் சிறிதாவது கவரப்படுமானால் ஆன்மீகம் பற்றி பொதுவாகப்பேசத் தொடங்குவார். அவ்வப்போது வந்து போகும் படிக் கூறுவார். அவர் வரும்போதெல்லாம் அவர் அறியாமல் அவரது அங்க அபை்புகள், மன இயல்பு, காம-காஞ்சன ஆசை, சுகபோக நாட்டம், அவரிடம் தன் மனம் எவ்வளவு தூரம் எவ்வாறு ஈர்க்கப் பட்டது, ஈர்க்கப் படுகிறது. அவரது நடவடிக்கைகள், பேச்சுவார்த்தை எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கவனிப்பார். இவ்வாறு அந்த மனிதரிடம் பொதிந்துள்ள ஆன்மீகம் முதலியவற்றைப்பற்றி ஒரு உறுதியான முடிவுக்கு வருவார். நாலைந்து நாட்கள் ஒருவரைப் பார்த்தவுடனே அவரது குணநலன்களைப் பற்றி நன்றாக அறிந்து விடுவார். பிறகு அவரது மனத்தின் அடித்தளத்தில் புதைந்துள்ள எதைப் பற்றியாவது அறிய வேண்டிய தேவை ஏற்பட்டால் தமதுயோக சக்தியின் உதவியினால் தெரிந்து கொள்வார். இது பற்றி ஒருநாள் எங்களிடம், இரவில் தனியாக இருக்கும்போது உங்கள் நலனைப் பற்றிச் சிந்திப்பேன். அப்போது உங்களுள் யார் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறார், யாருடைய முன்னேற்றப் பாதையில் எது தடையாக உள்ளது போன்ற அனைத்தையும் அன்னை எனக்குக் காட்டி அருள்வாள்” என்று கூறினார். அப்படிப்பட்ட நேரங்களில் மட்டும் தான் அவரது யோக சக்தி விழிப்படையும் என்று வாசகர்கள் எண்ணிவிட வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் உயர்ந்த உணர்வுத் தளங்களுக்குச் சென்று அவரால் அத்தகைய காட்சியைப்பெற முடியும் என்று பல முறை அவர் கூறியுள்ளார். எடுத்துக் காட்டாக ஒன்று, கண்ணாடி அலமாரியின் உள்ளே அனைத்துப்பொருட்களையும் தெளிவாகக் காண்பது போல், நான் ஒருவரைப் பார்த்தவுடன் அவரது எண்ணங்கள், சம்ஸ்காரங்கள் போன்ற அனைத்தையும் காண்கிறேன்.
பொதுவாக மக்களின் இயல்பைப் புரிந்து கொள்ள குருதேவர் பின்பற்றிய முறை இது. ஆனால் அந்தரங்க பக்தர்களைப் பொறுத்தவரை அவர் இந்த முறையிலிருந்து சற்று வேறுபடுவதைக்காண லாம். தெய்வ சங்கல்பத்தால் அவர்களை அவர் உயர்ந்த மிகவுயர்ந்த உணர்வுத்தளங்களில் இருந்துகொண்டே முதன் முறை சந்தித்தார். தீவிர சாதனைகளின் வாயிலாக அவரது உடலும் உள்ளமும் ஆன்மீக ஆற்றலைச்சேகரித்து வைப்பதற்கும் பிறரது ஆன்மீகத் தகுதியை அறிவதற்கும் ஏற்ற உபகரணமாக அமைந்தது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம். இது முற்றிலும் உண்மை. குறிப்பிட்ட ஆன்மீக மனநிலையுடைய ஒருவரைப்பார்த்ததும் குருதேவரின் மனத்தில் தெய்வீக சங்கல்பத்தால் அந்த பாவனை தோன்றுவதை நாங்கள் அடிக்கடி பார்த்திருக்கிறோம். அந்த நபர் வந்ததும் அந்த தெய்வீக சங்கல்பம் குருதேவரின் மனத்தையும் அந்த நபரின் உணர்வுத் தளத்திற்குக்கொண்டு சென்று,அவரது முற்பிறவி வினைப்பயன்கள் மற்றும் சம்ஸ்காரங்களின் விளைவாக அவர் ஆன்மீகத்தில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளார் என்பதைக் காட்டிவிடும். நரேந்திரர்முதன் முறையாக தட்சிணேசுவரம் சென்ற போது, குருதேவர் கண்ட முன்பு கூறிய உண்மைகளை நினைவு கூர்ந்தால் இது புரியும்.
அதற்காக சாதாரண மனிதர்களைப்போல் அந்தரங்க பக்தர்களைச் சாதாரண முறைகளில் சோதிக்க மாட்டார் என்பதில்லை. சாதாரண உணர்வு நிலையில் இருக்கும்போது அவர்களது பேச்சுவார்த்தை, நடத்தை போன்றவற்றை சாதாரண பக்தர்களைப்போல் கவனிக்கவே செய்வார். அவர்களைச்சோதித்து அறியும்வரை ஓயமாட்டார். நரேந்திரரே இதற்கு விதி விலக்கில்லை என்றால் பிறரைப்பற்றி ச்சொல்ல வேண்டியதே இல்லை. எனவே இதனைப் பற்றி விளக்குவது அவசியமாகிறது. பக்தர்களைப் பரிசோதித்த முறைகளை முக்கியமாக நான்காகப்பிரிக்கலாம் இதைப் பற்றி ஏற்கனவே பொதுவாகக் கூறியுள்ளோம். இப்போது ஒவ்வொன்றையும் எடுத்துக் காட்டின் வாயிலாக விளக்குவோம்.
முதலாவதாக, வருபவர்களின் அங்க அமைப்புக்களைப் பார்த்து அவர்களின் சம்ஸ்காரங்களை அறிந்து கொள்வார்.
மனத்தின் தெளிவான எண்ணங்கள் ஒவ்வொன்றும் செயல்வடிவம் பெறும்போது, அவை மூளையிலும் உடலிலும் குறிப்பிட்ட இடத்தில் ஒவ்வொரு பதிவை ஏற்படுத்துகின்றன. நவீன உடலியலும் உளவியலும் இந்தக் கூற்றை அனேகமாக உறுதிப்படுத்தி, நமது நம்பிக்கையைத் திடமாக்குகின்றன. வேதம் போன்ற சாஸ்திரங்கள் இதைக்காலம் காலமாகச் சொல்லி வந்துள்ளன. இந்துக்களின் வேதம், ஸ்மிருதி, புராணங்கள், தரிசனங்கள், என்று எல்லா சாஸ்திரங்களும் மனமே இந்த உடலை உருவாக்குகிறது. என்று ஒரே குரலில் முழங்குகின்றன. மனிதனைப்பொறுத்து எண்ணப் பிரவாகம் நல்ல அல்லது தீய வழிகளில் செல்கிறது. அதற்கேற்ப அவனது உடலும் மாறி அமைகிறது. அங்க லட்சணங்களைப் பார்த்து ஒருவரது குணங்களை அறிந்து கொள்வது பற்றிய பல பழமொழிகள் நம்மிடையே நிலவி வருகின்றன. திருமணத்தின் போது மணப் பெண்ணின் அங்க அமைப்புக்களையும் மந்திர தீட்சைக்கு முன்பு சீடனின்அங்க லட்சணங்களையும் ஆராய்ந்து பார்ப்பது மிக முக்கியமாக கடமையாக இன்றுவரை கருதப் பட்டு வருகிறது.
எல்லா சாஸ்திரங்களிலும் நம்பிக்கையுடைய குருதேவர் தம் சீடர்களின் அங்க அமைப்புக்களைக் கவனித்ததில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் எப்போதாவது இதைப் பற்றி அவர் விலாவாரியாக விளக்கும்போது, அவர் எப்படி இவ்வளவு தெரிந்து கொண்டார், என்று நாங்கள் திகைத்து நிற்போம். பழைய காலத்தில் இது சம்பந்தமான ஏதோ நூல் இருந்து, அதைப்படித்தோ , சொல்லக்கேட்டோ தான் இவற்றையெல்லாம் அறிந்திருப்பாரோ? ஆனால் அப்படி ஒரு நூல்இருப்பதாக இது வரை நாம் பார்த்ததும் இல்லை, கேட்டதுமில்லை. எனவே ஆண் மற்றும் பெண்ணுடலில் உள்ள ஒவ்வொரு அங்கமும் புலனும் எவ்வாறு நம் அன்றாட அனுபவத்திற்குள்ளாகும் ஏதாவது பொருளுடன் ஒத்திருக்கிறது. இப்படியிருந்தால் ஏற்படும் நல்ல மற்றும் தீய பலன்களை அவர் கூறுவதைக்கேட்டுக்கொண்டிருப்போம்.
எடுத்துக்காட்டாக சிலருடைய கண்கள் தாமரை இதழைப்போல, சிலருக்கு காளையின் கண்களைப்போல, சிலருக்கு யோகியின், கண்களைப்போன்றிருக்கும் . அவற்றைப் பற்றி அவர் கூறுவார். தாமரை இதழைப்போன்ற கண்களை உடையவனிடம் உயர்ந்த குணங்கள் இருக்கும். காளையின் கண்களைப்போன்ற கண்களையுடையவன் காமம் மிகுந்தவனாக இருப்பான். யோகியின் கண்கள் சிவந்து மேல்நோக்கிய பார்வையுடன் இருக்கும். தெய்வீகக் கண்கள் அவ்வளவு பெரிதாக இருக்காது. ஆனால் காதைத்தொடுவது போல் நீண்டிருக்கும். பேசும்போது கண்களை இடுக்கிக்கொண்டே அல்லது கடைக் கண்ணாலோ பார்க்கும் பழக்க முள்ளவன் சாதாரண மக்களைவிட அறிவுக் கூர்மையுடையவனாக இருப்பான்.
பொதுவாக அங்க அமைப்புக்களைப் பற்றியும் கூறுவார். பக்தர்களின் உடல் மென்மையாக இருக்கும். கை கால் மூட்டுக்கள் எளிதாத் திரும்பக் கூடியனவாக இருக்கும் . உடல் மெலிந்து இருந்தாலும் எலும்புகளோ தசைகளோ துருத்திக்கொண்டு விகாரமாகத் தெரியாது. ஒருவனை அறிவாளி என்று முடிவு செய்த பின்னர் அவனது அறிவு நல்ல வழியில் செல்கிறதா இல்லை, தீய வழியில் செல்கிறதா என்பதை அறிவதில் ஈடுபடுவார். அதற்காக அவனது முன்கையைத் தம் கையால் தூக்கி எடை பார்ப்பார். அப்பொழுது கைகளைத் தளர்வாக வைத்துக் கொள்ளும்படிக் கூறுவார். பொதுவாக ஒரு சாதாரண மனிதனது கைகளின் எடையை விடக் குறைவாக இருந்தால் அவனை நல்லறிவு பெற்றவன் என்றும், கூடுதலாக இருந்தால் தீய அறிவு பெற்றவன் என்றும் கூறுவார். சுவாமி பிரேமானந்தர், முதன்முறையாக தட்சிணேசுவரம் வந்தபோது இவ்வாறு அவரை குருதேவர் சோதித்தது பற்றி முன்பே கூறினோம். ஆனால் ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது பற்றி எங்களிடம் எதுவும் கூறாததால் நாங்களும் இது குறித்து ஒன்றும் விளக்கிக் கூற இயலவில்லை.ஆனால் மற்றொரு சமயத்தில் நடந்த நிகழ்ச்சியிலிருந்து தான் அது மேற்கண்ட விஷயத்திற்காக என்பதை அறிந்தோம். அந்த நிகழ்ச்சி வருமாறு.
காசிப்பூர்த்தோட்டத்தில் குருதேவர் தொண்டைப்புண் சிகிச்சைக்காகத் தங்கியிருந்தபோது ஒரு நாள் இந்நூலாசிரியரின் சகோதரரான காலம் சென்ற சாரு சந்திர சக்கரவர்த்தி குருதேவரைக்காண வந்தார். அவரைக் கண்டு குருதேவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவரைத் தம் அருகில் அமர்த்தி அன்புடன் விசாரித்தார். ஆன்மீக போதனைகள் அளித்தார். நூலாசிரியர் அங்கு சென்றதும் குருதேவர், இவன் உன் தம்பியா? என்று கேட்டார்.ஆம், என்று கூறியதும், நல்லவன் உன்னைவிட அறிவாளியாகவும் இருக்கிறான். ஆனால் நல்லறிவா, தீய அறிவா என்று பார்க்கிறேன். என்று கூறி அவனது வலக்கையின் முன் பகுதியை கையில் ஏந்தி எடை பார்த்தவாறே, நல்லறிவு தான் என்றார். பின் நூலாசிரியரைப் பார்த்து, இவனையும்( உலகைத் துறக்கச்செய்து இறைவன் பால்) இழுக்கட்டுமா? என்ன சொல்கிறாய்? என்று கேட்டார். அப்படியே செய்யுங்கள், அதுமிக நல்லது” என்றார் நூலாசிரியர். சிறிது நேரம் சிந்தித்துவிட்டு குருதேவர் , இல்லை. அவ்வாறு செய்யக் கூடாது. ஒருவனை எடுத்துக் கொண்டு விட்டேன்.
இன்னொருவனையும் எடுத்தால் உன் பெற்றோர்கள், குறிப்பாக உன் தாய் மிகவும் வேதனைப் படுவாள்.நான் என் வாழ்க்கையில் பல சக்திகளை ( தாயார்களை) வேதனைப் படுத்தி விட்டேன். இனி வேண்டாம்” என்றார். பின்னர் அவனுக்குச்சில சாதாரண உபதேசங்களை அளித்து விட்டு, சற்று மிதவுணவும் கொடுத்து அனுப்பி வைத்தார்.
இதனையொட்டிய நிகழ்ச்சி ஒன்றை குருதேவர் விவரித்தார். மதுர்பாபுவின் காலத்தில் தட்சிணேசுவரக்கோயிலின் காவலராக அனுமான்சிங் என்பவர் இருந்தார். காவலர் பலர் இருந்தாலும் இவரை அனைவரும் மதித்தார்கள். ஏனெனில் இவர் சிறந்த பயில்வான் என்பதுடன் உண்மையான ஆத்ம சாதகராகவும் இருந்தார்.மஹாவீர் (ஆஞ்சநேயர்) மந்திரத்தை உபாசித்து வந்தார். அவரை வீழ்த்திவிட்டு அவரது இடத்தைப் பிடிக்க வேண்டும்என்ற நோக்கத்துடன் வேறொரு வீரர் தட்சிணேசுவரம் வந்து அவரை மற்போருக்கு அழைத்தார். வந்தவரின் பலத்தையும் திடகாத்திரமான உடலையும் கண்டும் அவரதுசவாலை அனுமான்சிங் ஏற்றுக்கொண்டார். போட்டி நாள் குறிக்கப் பட்டது. மதுர் பாபு போன்றோர் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர்.
புதிய மற்போர் வீரர்போட்டிக்கு ஒரு வாரம் முன்னதாகவே தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்ள ஆரம்பித்து விட்டார். சத்துள்ள உணவை நிரம்பச் சாப்பிட்டார். உடற்பயிற்சிகளைச்செய்தார். மாறாக அனுமான் சிங் காலையில் குளித்து எப்பொழுதும் போல் தன் இஷ்ட மந்திரத்தை நாள் முழுவதும் ஜபித்தார். மாலையில் ஒரு வேளை மட்டும் உண்டார். அவர் பயந்து போய் தாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை இழந்து விட்டதாகவே அனைவரும் எண்ணினார். குருதேவருக்கு அனுமான்சிங் மீது அன்பிருந்தது. போட்டிக்கு முந்தினநாள் அவர் அனுமான்சிங்கிடம், உடற்பயிற்சி செய்தும் நல்லசத்துள்ள உணவை உண்டும் நீ உன்னைப்போட்டிக்குத் தயார்படுத்திக்கொள்ளவில்லையே, இந்தப்போட்டியில் நீ அந்தப் புதிய மற்போர் வீரனை வெல்ல முடியுமா?என்று கேட்டார். அதற்கு அனுமான்சிங் குருதேவரை பக்தியுடன் வணங்கி, உங்கள் அருள் இருந்தால் நிச்சயமாக வெற்றி பெறுவேன், நிறைய உணவை உண்பதால் உடலுக்குவலிமை வந்து விடுவதில்லை. அந்த உணவை ஜீரணிக்க வேண்டும். ஜீரணிக்க முடியாத அளவிற்கு அவன் சாப்பிடுகிறான், என்று கூறினார். இறுதியாக போட்டியில் அனுமான்சிங் தான் வென்றதாக குருதேவர் கூறினார்.
அங்க அமைப்பைக் கவனித்து மனிதனின் இயல்பை அறிந்து கொள்வதைப் பற்றி குருதேவர் எங்களிடம் கூறியவற்றிற்கு எல்லையே இல்லை. மனிதனின் குணநலனைத்தெரிந்து கொள்வதற்கான வழி முறைகளில் இதனை மிகச்சிறந்த ஒன்றாகக் கருதினார் அவர். நரேந்திரர் மற்றும் பிற எல்லா பக்தர்களையும் அவர் இந்த முறையிலேயே சோதித்தார். இவ்வாறு நரேந்திரரின் அங்க அமைப்புக்களைக் கண்டு மகிழ்ந்த குருதேவர் ஒருநாள், உன் உடலின் எல்லாப் பகுதிகளும் நன்றாக அமைந்துள்ளன. ஆனால் ஒரே ஒரு குறை உள்ளது. தூங்கும்போது நீ வெளிவிடும் மூச்சின் வேகம் அதிகமாக இருக்கிறது. இப்படி மூச்சு வி்ட்டால் ஆயுள் குறைவதாக யோகிகள் கூறுகிறார்கள்” என்றார்.
ஒருவன் செய்யும் சாதாரணச் செயல்களில் வெளிப்படும் மனோ பாவனையை வைத்து மனிதனின் இயல்பைக் கணிப்பது குருதேவர் கையாண்ட இரண்டாவது முறையாகும். அவனிடம் இருக்கும் காம- காஞ்சனப் பற்றைக்கொண்டு அவனுடைய இயல்பைக் கணிப்பது மூன்றாவது வழியாகும். புதிதாக வருகின்ற ஒருவரை மேற்கண்ட விஷயங்களில் ஆரம்பத்தில் அவர் அமைதியாகச் சிறிதுகாலம் கவனிக்க மட்டுமே செய்வார். பின்னர் அவரைத்தம் வட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ள முடிவு செய்தால், பல வித உபதேசங்களின் மூலமும், தேவையேற்பட்டால் சற்று கடிந்து பேசியும் அவனிடமுள்ள குறைகளைப்போக்க முயல்வார். அவரைத் துறவற வழி நடத்துவதா, இல்லை இல்லற பக்தனாக வாழச்செய்வதா என்பதையும் ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிடுவார். எனவே அங்கு வருபவர் திருமணமானவரா, சாதாரண உணவுக்கும், உடைக்கும் வேண்டிய வருமானம் அவருக்கு உள்ளதா, அப்படியில்லாமல் அவர் உலகைத் துறக்க நேர்ந்தால் குடும்பப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய நெருங்கிய உறவினர் யாராவது உள்ளனரா என்றெல்லாம் விசாரிப்பார்.
மாணவர்களிடம் குருதேவருக்கு மிகுந்த அன்பு இருந்தது. மனம் இன்னும் மனைவி- மக்கள் , பெயர்-புகழ் போன்றவற்றில் மூழ்கவில்லை (தேவையான பயிற்சி கிடைத்தால்) அவர்கள் தங்கள் பதினாறணா மனத்தையும் முழுமையாக இறைவனிடம் திருப்ப முடியும்” என்பார் அவர். அவர்களிடம் ஆன்மீகச் சிந்தனையைப் புகுத்த பெருமுயற்சி எடுத்துக்கொள்வார். மேற்கூறிய கருத்தைப் பல எமுத்துக் காட்டுக்களின் மூலம் விளக்குவார். அவர் கூறுவதுண்டு, மனம் கடுகு மூட்டையைப்போன்றது. கடுகு கொட்டிவிட்டால் மீண்டும் ஒன்று சேர்ப்பது முடியாத காரியம் என்றே சொல்லி விடலாம். கழுத்தைச் சுற்றி நிற வளையம் தோன்றிவிட்டால் , கிளியை ராதா கிருஷ்ணா என்றெல்லாம் பேசவைக்க முடியாது. சுடப்படாத செங்கல் மீது மாடு கால் வைத்து விட்டால் குளம்புப் பதிவை எளிதாக நீக்கிவிடலாம். ஆனால் செங்கல்லைச் சுட்டு விட்டால் அந்தப் பதிவை நீக்க முடியாது, உலகியல் பற்றி அறியாத மாணவர்களிடம் அவர் பல்வேறு கேள்விகள் கேட்டு அவர்களின் இயல்பு இல்லறத்தை நோக்கியா, இல்லை துறவறத்தை நோக்கியா என்று புரிந்து கொள்வார். தகுதி வாய்ந்தவர்கள் என்று கருதுபவர்களைத் துறவற நெறியில் ஈடுபடுத்துவார்.
இவ்வாறு பேச்சுவாக்கில் பல கேள்விகளைக்கேட்டு ஒருவரது இயல்பை அறிந்து விட்டு, பின்னர் சும்மா இருந்து விட மாட்டார். அவன் எவ்வளவு தூரம் கள்ளங்கபட மற்றவன், சத்திய நிதிஷ்டை உடையவன், ஒவ்வொரு செயலையும் விவேகத்துடன் செய்கிறானா, தாம் கூறியதை எவ்வளவு தூரம் புரிந்து கொண்டிருக்கிறான், அவற்றை எவ்வளவு தூரம் செயல் படுத்துகிறான் என்பவற்றையெல்லாம் துருவித் துருவி ஆராய்ந்து வருவார். சில எடுத்துக் காட்டுக்களைக்கூறினால் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
சில நாட்களாக தட்சிணேசுவரத்திற்கு இளைஞன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். ஒரு நாள் திடீரென்று குருதேவர் அவனிடம், நீ ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்று கேட்டார். அதற்கு அவன், ஐயா மனம் இன்னும் என் கட்டுப் பாட்டிற்குள் வரவில்லை. இப்போது திருமணம் செய்து கொண்டால் மனைவி மீது பற்று கொண்டு, நல்லது கெட்டதை ஆய்ந்தறியும் பகுத்தறிவை இழக்க நேரிடும். காமத்தை வெல்ல முடியுமானால் நான் திருமணம் செய்து கொள்வேன்” என்றான். உள்ளே பற்றுதல் இருந்தாலும் அவனது மனம் துறவற நெறியில் ஈடுபாடு கொண்டுள்ளது என்பதை குருதேவர் புரிந்து கொண்டார். சிரித்தபடியே அவனிடம், காமத்தை நீ வெல்லும்போது திருமணத்திற்கு அவசியமே இல்லாமல் போய்விடும்” என்று கூறினார்.
இன்னொரு நாள் மற்றோர் இளைஞனிடம் பேசிக்கொண்டிருந்தார் குருதேவர். அப்போது, என்னால் துணி உடுக்க முடிவதில்லை, எப்போது அவிழ்ந்து விழும் என்பது கூட எனக்குத் தெரிவதில்லை. இது என்ன நிலைமை, சொல் பார்க்கலாம். இந்தக் கிழவயதில் நிர்வாணமாக நடக்க வேண்டியிருக்கிறது.ஆனால் அதற்காக வெட்கமும் தோன்றுவதில்லை. யாராவது பார்ப்பார்களே என்ற உணர்வு கூட ஆரம்பத்தில் இருந்ததில்லை. இப்போது பார்க்கின்றவர்கள் வெட்கப்படக் கூடாதே என்பதற்காக மடியில் ஒரு துணியைப்போட்டுக்கொள்கிறேன். உன்னால் என்னைப்போல் பிறர் முன்னால் இருக்க முடியுமா? என்று கேட்டார். அதற்கு அவன், ஐயா, உறுதியாகச் சொல்ல முடியாது. நீ ங்கள் சொன்னால் ஆடைகளைக் களைகிறேன்” என்றான். உடனே, குருதேவர், எங்கே ஆடைகளைத் தலையில் சுற்றிக் கொண்டு கோயில்வரைக் போய் வா, பார்க்கலாம். என்றுகூறினார். அதற்கு அவன் ”அது முடியாது”. உங்கள் முன்னால் மட்டும் வேண்டுமானால் என்னால் துணியின்றி இருக்க முடியும்” என்றான். இதைக்கேட்டு விட்டு குருதேவர் கூறினார், பலர் இதே போன்று ”உங்கள் முன்னால் ஆடைகளைக் களைந்து விட்டு நிற்பதற்கு வெட்கமாக இல்லை, ஆனால் பிறர் முன்னிலையில் அது முடியாது” என்று சொல்கிறார்கள்.
இதனையொட்டி இன்னொரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. நிலவொளி பரவிக் கிடந்த இரவு அது. பௌர்ணமி கழிந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம். நாங்கள் படுக்கச் சென்ற சிறிது நேரத்தில் கங்கையில் நீரேற்றம் ஏற்பட்டது. குருதேவர் படுக்கையிலிருந்து எழுந்து, ஓடி வாருங்கள், நீரேற்றத்தைப் பாருங்கள்” என்று கூறியபடியே கங்கை நதிக்கரையை நோக்கி ஓடினார். பொதுவாகத் தெளிவாக சலனமின்றி ஓடுகின்ற நீர், அலையடித்து உயர்ந்து நுங்கும் நுரையுமாக, பித்து ப் பிடித்தது போன்ற வேகத்துடன் பெருகிக் கரைகளை உடைத்து விடுவது போல் மோதியபடியே எதிர் திசையில் பிரவகித்துக்கொண்டிருந்தது. இதனைக் கண்டு சிறுவனைப்போன்று குதித்துக் களித்தார் குருதேவர். அவர் எங்களைக் கூறி அழைத்ததும் அவசர அவசரமாக எழுந்து, தூக்கக் கலக்கத்தில் ஆடைகளைச் சரி செய்துகொண்டு செல்லச் சிறிது நேரமாகிவிட்டது. அதற்குள் நீரேற்றம் வடிந்து விட்டது. சிலரால் ஏதோ பார்க்க முடிந்தது.பலரால் பார்க்க முடியவில்லை. குருதேவர் ஆனந்தத்தில் களித்துக் கொண்டிருந்தார். நீரேற்றம் அடங்கியதும் எங்கள் பக்கம் திரும்பி, என்ன, பார்த்தீர்களா? என்று கேட்டார். ஆடைகளைச் சரி செய்து கொண்டு வருவதற்குள் நீரேற்றம் அடங்கிவிட்டது. என்று நாங்கள் கூறினோம். உடனே அவர், சீ முட்டாள் கூட்டமே,நீங்கள் ஆடைகளை அணிந்து கொள்ளும்வரை நீரேற்றம் காத்திருக்கவா செய்யும்? என்னைப் பாருங்கள், இது போன்று ஆடையை விட்டு விட்டு ஓடி வந்திருக்கலாமே! என்று கூறினார்.
திருமண ஆசை உள்ளதா? இல்லையா? வேலை பார்க்கப்போகிறாயா, இல்லையா?- என்பது போன்ற கேள்விகளை குருதேவர் கேட்கும்போது எங்களுள் சிலர், திருமணத்தில் விருப்பமில்லை, ஆனால்நான் வேலைபார்க்க வேண்டும்” என்பார்கள். சுதந்திர நாட்டமுடைய குருதேவருக்கு இத்தகைய பதில்கள் பொருத்தமற்றவையாகத்தோன்றும். நீ திருமணம் செய்து கொண்டு இல்லறக் கடமையைச் செய்யப்போவதில்லை எனில், வாழ்நாள் முழுவதும் இன்னொருவனுக்கு வேலைக் காரனாக ஏன் இருக்க வேண்டும்? என்று கேட்பார். முழுமனத்தையும் இறைவனிடம் சமர்பித்து அவனை வழிபடு, உலகில் பிறந்த மனிதனுக்கு அதைனைவிடச் சிறந்தது வேறு ஒன்றுமில்லை. இந்த லட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் திருமணம் செய்துகொள் ஆனால் இறையனுபூதி பெறுவதே வாழ்க்கையின் மிக மேலான குறிக்கோள் என்பதை நினைவில் இருத்தி, நல்வழியில் இல்லறத்தானாக வாழ்ந்து வா- இதுவே குருதேவரின் முடிவாக கருத்தாக இருந்தது. அதனால் அவர் ஆன்மீக வாழ்வில் உயர்தர மற்றும் இடைத்தரத் தகுதி வாய்ந்தவன் என்று பிரித்து வைக்கின்ற இளம் சீடர்களுள் யாராவது திருமணம் செய்து கொண்டார்கள். என்றோ, முக்கியமான எந்தக் காரணமும் ன்றி சாதாரண மக்களைப்போல் பொருள் ஈட்டுவதற்காக வேலை பார்த்து, பெயர்- புகழை விரும்பி உலகியலில் ஆற்றலை வீணாக்குவதைப் பார்த்தால் குருதேவர் படும் வேதனை சொல்லொணாததாக இருக்கும். அவரது இளம் சீடர் நிரஞ்ஜன் வேலையில் சேர்ந்திருப்பதைக்கேள்விப் பட்ட போது அவரிடம், உன் வயதான தாயைக் காப்பாற்றுவதற்காக, வேலையில் சேர்ந்துள்ளாய், இல்லையென்றால் என்னால் உன் முகத்தைக் கூடப் பார்க்க முடிந்திருக்காது” என்று கூறினார்.
இளைய நரேன் என்கின்ற இளம் சீடர் ஒருவர் மணம் செய்து கொண்டு குருதேவரைக் காணக் காசிப்பூர்த்தோட்டத்திற்குவந்தார். அப்போது குருதேவர் மகனை இழந்து வருந்திக் தவிக்கும் தந்தையைப்போல், இளைய நரேனின் கழுத்தில் கையைப்போட்டுக்கொண்டு கண்ணீர் உகுத்தபடியே கடவுளை மறந்து ஒரேயடியாக உலகியலில் மூழ்கிவிடாதே, என்று திரும்பத் திரும்பக் கூறினார்.
நம்பிக்கை இல்லாமல் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற முடியாது. என்பதை ஆரம்ப நிலை சாதகர்கள் தவறாகப் புரிந்துகொண்டு, எதையும் யாரையும் நம்பத் தொடங்கி விடுகின்றனர்.குருதேவரின் கூரிய பார்வையில் இது தென்பட்டு விட்டால், உடனே அவர்களை எச்சரிக்கை செய்வார். நம்பிக்கையின் துணையுடன் ஆன்மீகப் பாதையில் முன்னேறும் படி, அவர் கூறியது உண்மையே, ஆனால் அதற்காக உண்மை- உண்மையற்றதைப் பகுத்தறியும் விவேகத்தைக் கைவிடும் படி அவர் ஒரு போதும் கூறியதில்லை. அந்தப் பகுத்தறிவை அடிப்படையாகக்கொண்டே ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதும், வேண்டியது வேண்டாதவை விவேகத்துடன் ஆய்ந்தறிந்தே உலகியல் செயல்களையும் செய்ய வேண்டும் என்பதும் தான் அவரது கருத்து என்று எண்ணுகிறோம்.யோகின் ஒரு நாள் வாணலி வாங்கச்சென்றார். அவர் கடைக்காரனிடம் சென்று, அறவழியினின்று விலகினால் துன்பப்பட நேரும், என்றெல்லாம் கடைக்காரனிடம் எடுத்துக் கூறிவிட்டு, அவன் கொடுத்த வாணலியை அப்படியே வாங்கி வந்து விட்டார். வீட்டுக்கு வந்து பார்த்தால் வாணலியில் விரிசல், குருதேவர் இதனை அறிந்தபோது மிகவும் வெறுப்புற்றார்.பக்தன் என்பதற்காக முட்டாளாக இருக்க வேண்டுமா? கடைக்காரன் அறவழியைப்போதிக்கவா கடை விரித்திருக்கிறான்? அதனால் தான் நீ அவனை நம்பி ஒரு முறை கூடச்சோதித்துப் பார்க்காமல் வாங்கி வந்து விட்டாயா? இனிமேல் இது போல் ஒரு போதும் செய்யாதே.எது வாங்கவேண்டியிருந்தாலும் நாலைந்து கடைகளில் ஏறி இறங்கி, உரிய விலையை அறிந்து கொள், பின்னர் பொருளை நன்கு சோதித்து எடு. வாங்கிய பின் கொசுறையும் விட்டு விடாதே. என்று சற்று கடுமையாகவே அவரிடம் கூறினார்.
ஆன்மீக வாழ்க்கையைத் தொடங்குகின்ற சிலரிடம் தோன்றுகின்ற தயை என்ற பண்பு அவர்களுக்கே பந்தமாகி விடுகின்றன. அவர்களை ஆன்மீகப் பாதையிலிருந்து விலகச்செய்து விடுகிறது. மெல்லியல்பு படைத்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் தான் இந்த நிலைக்கு ஆளாகின்றனர். அத்தகையோர் உறுதியை வளர்த்துக்கொள்ளும்படி குருதேவர் அறிவுரை கூறுவார். அதே வேளையில் முரட்டு, இயல்பினரை மென்மையாக இருக்குமாறு கூறுவார். யோகின் மிகவும் மென்மையானவர், தகுந்த காரணம் இருந்தால் கூட அவருக்குக்கோபம் வந்தோ, கடினச்சொற்களைப் பயன்படுத்தியோ நாங்கள் பார்த்ததில்லை. திருமணம் தன் இயல்பிற்கு எதிராக இருந்தும், துளி க்கூட அதில் ஆசை இல்லாதிருந்தும் தன் தாயின் கண்ணீரைக்காணப் பொறுக்காமல் அந்த பந்தத்திற்குள் தன்னை பிணைத்துக்கொண்டார் அவர். குருதேவரின் அடைக்கலமும் ஆறுதல் வாக்கும் தான் அந்தச் சமயத்தில் அவரை வேதனையிலிருந்தும் பச்சாதாபத்தில் ஆழ்ந்து விடாமலும் காத்தது. இப்படிப்பட்ட அளவுக்கதிகமான தயையையும் மென்மையையும் அடக்கி, எந்தச் செயலையும் அவர் சிந்தித்துச்செய்யுமாறு ஊக்குவித்தார் குருதேவர். சிறிய விஷயங்களின் மூலம் இதனை குருதேவர் அவருக்கு எவ்வாறு போதித்தார் என்பதை ஓரிரு நிகழ்ச்சிகள் மூலமாகக் காணலாம். ஒரு நாள் குருதேவரின் துணிப் பெட்டியில் கரப்பான் பூச்சி ஒன்று கூடு கட்டி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. யோகினிடம், கரப்பான் பூச்சியைப் பிடித்து வெளியே கொண்டு போய்க் கொன்றுவிடு” என்றார் குருதேவர். யோகினும் அவ்வாறே கரப்பான் பூச்சியைப் பிடித்து எடுத்துச்சென்றார். ஆனால் கொல்லாமல் வெளியில் விட்டு விட்டுத் திரும்பி வந்தார். வந்த உடனே, என்னப்பா, கலப்பான் பூச்சியைக்கொன்று விட்டாயா, என்று கேட்டார் குருதேவர். யோகின் திடுக்கிட்டு, இல்லை ஐயா, வெளியே விட்டு வந்தேன்” என்று கூறினார். அதைக்கேட்டதும் குருதேவர் சற்று கோபத்துடன், கொல்லும்படி உன்னிடம் சொன்னேன். ஆனால் நீ விட்டு விட்டாய். நான் சொல்வதை அப்படியே செய். இல்லையென்றால் மிக முக்கியமான விஷயங்களிலும் உன் விருப்பப்படித்தான் நடப்பாய். பின்பு இதற்காகவருத்தப்பட வேண்டியிருக்கும்” என்று கடிந்து கூறினார்.
ஒரு நாள்யோகின் படகில் தடசிணேசுவரம் வந்து கொண்டிருந்தபோது சக பிரயாணி ஒருவர், எங்கே போகிறாய்” என்று கேட்டார். ராணி ராசமணியின் காளிக்கோயிலில் குருதேவரைக் காணச்செல்வதாக இவர் பதில் கூறினார். அதைக்கேட்டவுடன் அந்த சக பிரயாணி, அவர் வெறும் வேடதாரி. நல்ல சாப்பாடு, மெத்தையில் தூக்கம், ஆன்மீகம் அது இது என்று இளைஞர்களைக் கெடுக்கிறார் என்றெல்லாம் கூறினார். இதைக்கேட்ட யோகினுக்கு மிகுந்த மனவேதனை உண்டாயிற்று. பதிலுக்குத் தாமும் ஏதாவது கூற எண்ணினார். ஆனால் அடுத்த வினாடியே தமது மென்மையான இயல்பின் காரணமாக மௌனமானார். குருதேவரைப் புரிந்து கொள்ளச் சிறிதும் முயலாமல் எத்தனையோ பேர் என்னென்னவோ எண்ணுகிறார்கள், தாழ்வாகப்பேசுகிறார்கள். நான் என்ன செய்ய முடியும். என்று தனக்குள் எண்ணிக்கொண்டு எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமர்ந்திருந்தார். பின்னர் குருதேவரிடம் வந்து அந்த நிகழ்ச்சியைப்பற்றி விவரமாகக் கூறினார்
குருதேவர் புகழ்ச்சியாலோ இகழ்ச்சியாலோ பாதிக்கப் படாதவர் . அதனால் சிரித்துக்கொண்டே இதையும் உதறி விடுவார் என்று தான் யோகின் எண்ணியிருந்தார். ஆனால் நடந்ததென்னவோ தலைகீழ், குருதேவர் அந்த நிகழ்ச்சியை முற்றிலும் வேறு கோணத்திலிருந்து பார்த்து, காரணமின்றி அவன் என்னை நிந்தித்திருக்கிறான். நீ அதைக்கேட்டுக்கொண்டு சும்மா இருந்தாய்! சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன. தெரியுமா? குருவை நிந்திப்பவனின் தலையை வெட்டிவிடு. அல்லது அந்த இடத்தை விட்டு அகன்று விடு. வெறும் பொய்யைத் தம்பட்டம் அடித்தவனை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வந்து விட்டாயே! என்று கூறினார்.
சீடர்களின் மனப் பாங்கிற்கு ஏற்ப எவ்வாறு குருதேவரின் போதனைமுறை இருந்தது என்பதனை வேறு ஒரு நிகழ்ச்சியை இங்கே குறிப்பிட்டால் புரிந்து கொள்ளலாம். நிரஞ்சன் இயல்பாகவே சற்று முரட்டுத்தனம் மிக்கவர். இப்படித்தான் அவரும் ஒரு நாள் படகில் தட்சிணேசுவரத்திற்கு வந்து கொண்டிருந்தார். இங்கும் சக பிரயாணிகள் காரணமின்றி குருதேவரைத் தவறாக பேசினர். நிரஞ்சன் முதலில் அதனைத் தீவிரமாக எதிர்த்துப்பேசினார். ஆனால் அவர்களின் நிந்தனை நிற்கவில்லை. அவரது கோபம் கட்டுக் கடங்காமல் போயிற்று. அவ்வளவு தான். படகையே கவிழ்த்து பழி வாங்கத் தயாராகி விட்டார் அவர். நிரஞ்சன் மிகவும் வலுவானவர். நன்றாக நீந்தவும் தெரியும்.
சினத்தினால் கனலாகச் சிவந்த முகத்துடன்அவரைக்கண்ட அனைவரும் நடுங்கிவிட்டனர். நிந்தை பேசியோர் பணிந்து அவரிடம் மன்னிப்பு கேட்ட பிறகே படகைக் கவிழ்க்கின்ற முயற்சியை அவர் கைவிட்டார். குருதேவருக்கு இது தெரிய வந்ததும் நிரஞ்ஜனைக் கடிந்து கொண்டார். கோபம் பொல்லாதது, அதன் வசப்படுவதா? சான்றோரின் கோபம் நீர்மேல் எழுத்துப்போன்றது. துஷ்டர்களின் பொருளற்றபிதற்றல்களை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு வம்பை வளர்ப்பதென்றால், வாழ்நாள் முழுவதையும் அதற்குத்தான் செலவழிக்க வேண்டி வரும். அத்தகையோரைப் புழுவிற்குச் சமமாகக் கருது. அவர்களின் வார்த்தைகளைப் பொருட்படுத்தாதே. கோபத்தின் காரணமாக எவ்வளவு பெரிய தவறைச்செய்ய இருந்தாய், நினைத்துப்பார். துடுப்புப்போடுபவர்கள், உனக்கு என்ன தீங்கு செய்தார்கள்? அந்த ஏழை மக்களுக்கும் அபராதம் செய்யத் துணிந்து விட்டாயே! என்று கூறினார் அவர்.
பக்தர்களுக்கு போதிப்பதைப்போன்று பக்தைகளுக்கும் அவர்களின் மன இயல்பைப் புரிந்தே குருதேவர் போதிப்பார். இவ்வாறு தான் மிக மென்மையான இயல்பு கொண்ட பக்தை ஒருத்தியை எச்சரித்தது எங்கள் நினைவில் உள்ளது. உளன்னுத் தெரிந்த ஒருவர் உனக்காக மிகவும் சிரமம் எடுத்துக் கொண்டு எல்லா விதத்திலும் உதவி செய்கிறார் என்று வைத்துக்கொள், ஆனால் பலவீன மனத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் உன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார். அவரிடம் தயை காட்ட வேண்டுமா அல்லது கடுமையாக நடந்து கொண்டு அவரைவிட்டு நிரந்தரமாக விலகி விடுவது உசிதமா? எனவே எல்லோருக்கும், எப்போதும் எல்லா சூழ்நிலையிலும் தயை காட்ட முடியாது என்பதைத்தெரிந்து கொள். தயை காட்டுவதற்கும் ஓர் எல்லையுண்டு. நேரம், இடம், பாத்திரம், பார்த்தே தயை காட்ட வேண்டும்.
மற்றொரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது, ஹரீஷ் திடகாத்திரமான இளைஞர். அழகிய மனைவி, மக்கள், சாப்பாட்டுக்கும், குறைவில்லை. குருதேவரிடம் சில முறை வந்ததுமே அவரிடம் வைராக்கியம் தோன்றத் தொடங்கியது. அவரது எளிமை, உறுதிப்பாடு, அமைதியான இயல்பு,ஆகியவற்றைக்கண்டு குருதேவரும் மகிழ்ந்து, அவருக்கு அடைக்கலம் அளித்தார். அதன் பிறகு ஹரீஷ் குருதேவருக்குச்சேவை செய்வதிலும் ஜபம், தியானம் போன்ற சாதனைகளிலும் ஈடுபட்டு தட்சிணேசுவரத்திலேயே பெரும்பகுதியாக நேரத்தை க் கழித்து வந்தார். பெற்றோரின் வற்புறுத்தல், மாமனார் வீட்டினரின் வேண்டுகோள். மனைவியின் அழுகை எதுவும் அவரை அசைக்கவில்லை. யார் பேச்சையும் காதில் போட்டுக்கொள்ளாமல் அவர் மௌன விரதம் பூண்டு தன் வழியில் முன்னேறினார். அவருடைய அமைதி, உறுதிப்பாடு போன்ற இயல்புகளை நாங்கள் கவனிப்பதற்காக குருதேவர்சிலவேளைகளில் எங்களிடம், யார் மனிதனோ அவன் வாழும்போதே, இறந்தவனுக்கு ஒப்பாக இருக்க வேண்டும்- ஹரீஷைப்போல” என்பார்.
இவ்வாறு ஹரீஷ் வீட்டு விவகாரங்களை அடியோடு விட்டு, சாதனை வாழ்வில் ஈடுபட்டு தட்சிணேசுவரத்தில் வசித்தார். அவரது பிரிவால் வீடு வேதனையில் மூழ்கிறது. மனைவி அவரது பிரிவு தாங்காமல் உணவையே விட்டு விட்டதாகச்செய்தி வந்தது. இதைக்கேட்டும் ஹரீஷ் எந்தச் சலனமும் இன்றி முன்போலவே இரந்தார். அவரது மனத்தை அறிவதற்காக குருதேவர் அவரைத் தனியாக அழைத்துச் சென்று, ஏனப்பா, உன் மனைவி இவ்வளவு வேதனைப் படுகிறாள். ஒரு முறை வீட்டிற்குத் தான் போய் வாயேன், அவளைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. அவளிடம் சிறிது தயை காட்டுவதால் என்ன தீங்குவந்து விடப்போகிறது” என்று கேட்டார். அதற்கு ஹரீஷ் பணிவாக, ஐயா, தயை காட்டும் இடம் இதுவல்ல. இங்கு தயை காட்டப்போனால் மாயா மோகத்தில் மயங்கி, வாழ்க்கையின் முக்கிய லட்சியமே மறந்து போவது தான் பரிசாக இருக்கும். இப்படியான ஒரு கட்டளையை எனக்கு இடாதீர்கள்“ என்று கூறினார். குருதேவர் மிகவும் மகிழ்ந்தார். அவர் சொன்னதை அவ்வப்போது எங்களிடம் கூறி அவரது பற்றற்ற தன்மையைப் புகழ்வார் குருதேவர்.
இவ்வாறு எங்கள் அன்றாடச்செயல்களைக் கூர்ந்து கவனித்து, எங்கள் மனத்தின் நிறைகுறைகளை குருதேவர் அறிவது குறித்து பல எடுத்துக் காட்டுக்களைக் கூறலாம். நிரஞ்சன் நிறைய நெய் சாப்பிடுவதைக் கண்டு, இவ்வளவு நெய் சாப்பிடுகிறாயே! என்ன எல்லா பெண்களையும் கடத்திச்செல்லப்போகிறாயா? என்று கேட்டார். ஒருவர் அதி கநேரம் தூங்குவதைக் கண்டு அவனிடம் சில காலம் தமது அதிருப்தியைக் காட்டினார். மருத்துவ நூல்களைப் படிப்பதில் அளவுக்கு அதிகமான ஆர்வம் கொண்டு அதில் மூழ்கிய ஒருவரை, என்ன இது, ஒவ்வோர் ஆசையாக விட்டுவிட வேண்டும். அதற்குப் பதிலாக நீயோ ஆசைகளை அதிகரித்துக்கொண்டு போகிறாள், நீ எவ்வாறு ஆன்மீகத்தில் முன்னேற முடியும்? என்று கேட்டு எச்சரித்தார். இப்படிப்பட்ட பல நிகழ்ச்சிகளை முன்பே அவ்வப்போது கூறியுள்ளோம். அதனால் இங்கேயும் கூறுவது அவசியமில்லை.
தம்மைச் சரணடைந்தவர்களின் இயல்புகளை மேற்கூறியது போல் அறிந்து கொள்கின்ற குருதேவர் அவர்களது குறைகளை மெள்ள மெள்ளத் திருத்தும் முயற்சியுடன் மட்டும் நின்று விடுவதில்லை. அதில் அவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறார்கள் என்பதை க் கவனிப்பார். ஒருவரின் ஆன்மீக முன்னேற்றத்தை அறிய அவர் ஒரு தனி முறையைப் பின் பற்றினார். மூன்று வழிகளை முன்பே கூறியுள்ளோம்.இனி சொல்லப்போவது நான்காவது வழி.
தம்மிடம் வந்த பின் ஒருவரது பக்தியும் சிரத்தையும் நாள்தோறும் வளர்ந்து வருகிறா என்பதைக் கவனிப்பார் குருதேவர். அதற்காக தமது ஆன்மீக நிலை மற்றும் செயல்பாடுகளை அவர் எப்படி எவ்வளவு தூரம் புரிந்துள்ளார். என்று கேட்பார். அல்லது தமது சொற்களில் அவர் முழு நம்பிக்கை வைத்துள்ளாரா என்பதைக் கவனிப்பார். அல்லது ஒத்த இயல்புள்ளவர்களிடம் அவரை நெருங்கிப் பழகச்செய்து ஆன்மீகத்தில்்்் மேலும் ஆழ்ந்து செல்லச்செய்வார். தம்மை மிகவுயர்ந்த ஆன்மீக லட்சியமாக அவர் இயல்பாகவே ஏற்றுக் கொள்ளும்வரை அவர் ஓயமாட்டார்.......
மேற்கூறிய முறையில் ஒருவரின் ஆன்மீக முன்னேற்றத்தை அறிவது குருதேவருக்கு எளிதாக இருந்தது ஏன்?
மேற்கூறிய விஷயங்கள் வாசகர்களுக்கு வியப்பை அளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. சிறிது சிந்தித்துப் பார்த்தால் இதில் வியப்படைய எதுவுமில்லை. மாறாக, குருதேவரைப்பொறுத்தவரை இதுதான், பொருத்தமாகவும் எளிதாகவும் இருப்பது தெரியவரும். உலகம் காணாத ஆன்மீக வெளிப்பாட்டை அவர் தம்முள் உணர்ந்தால் அவரால் வேறு எந்த வகையிலும் நடந்திருக்க முடியாது. கடுந்தவம், தியானம், முதலிய சாதனைகளை நீண்ட காலம் புரிந்தால் ஆணவம் என்பது அவரிடம் அறவே இல்லாமல் போய்விட்டது என்பதை வேறோர் இடத்தில் கூறினோம். அதனால் அவரிடம் பிரமை என்பதே நீங்கி விட்டிருந்தது. எல்லையற்ற நினைவாற்றலும் ஞானமும் குடி கொண்டன. இது வரை எங்கும் எப்போதும் மனித சமுதாயம் கண்டறியாத ஆன்மீக லட்சியம் தம்மிடம் வெளிப்படுவதை அந்த ஞானம் அவருக்கு உணர்த்திக்கொண்டேயிருந்தது. எனவே இதனைச் சரியாகப் புரிந்துகொண்டு, அந்த லட்சியத்துடன் தங்கள் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்பவர்கள் தான் எளிதாக ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியும் என்பது அவர் மனத்தில் திடமாக வேரூன்றியிருந்தது. எனவே தம்மிடம் வருபவர்கள், தாம் காட்டிய பரந்த கொள்கையில் தங்கள் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ள முயல்கிறார்களா என்பதை அவர் கூர்ந்து கவனித்ததில் வியப்பொன்றும் இல்லை.
மேலே கூறப்பட்டுள்ள தமது முடிவைக் குருதேவர் பல விதங்களில் எங்களிடம் கூறியுள்ளார். அவர் கூறுவார், நவாப் காலத்து நாணயம் பாதுஷா காலத்தில் செல்லாது, நான் சொல்வது போல் சென்றால், சேரவேண்டிய இடத்தை நேராக அடைவாய். யாருக்கு இது கடைசிப் பிறவியோ, யாருக்கு மீண்டும் பிறந்து இறக்கின்ற சம்சாரக் சுழல் முடிவுற்று விட்டதோ அவன் தான் இங்கு வருவான் . இந்த இடத்தின் கொள்கையை ஏற்றுக்கொள்வான். உன் இஷ்ட தெய்வம்(தம்மைக் காட்டி) இதனுள் உள்ளார். இதனை நினைத்தால் அவரை நினைப்பது போலாகும்.
தம்மிடம் வந்தவர்கள், மேற்கூறிய கருத்தை எவ்வளவு தூரம் நம்புகிறார்கள் என்பதை குருதேவர் அறிந்து கொள்ளும் விதத்தைச்சில நிகழ்ச்சிகளின் மூலம் விளக்குவோம்.
என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்? என்று பக்தர்களிடம் குருதேவர் கேட்பதுண்டு. அவரை தரிசித்து அவரது பெருங்கருணையைப் பெற்ற ஒவ்வொருவருக்கும் இது தெரியும். சில நாட்கள் வந்து போய், ஒருவர்தம்முடன் சற்று நெருங்கிப் பழகிய பின்னரே அவர் பொதுவாக இந்தக் கேள்வியைக்கேட்பார்.ஆனால் முதல் சந்திப்பிலோ கூடிய விரைவிலோ கேட்க மாட்டார் என்று கூறிவிட முடியாது. தாம் முன்னரே யோகக் காட்சியில் கண்டிருந்த பக்தர்கள் வரும்போது, சிலர் வந்தவுடன் கூட, அவர் இவ்வாறு கேட்டது எங்களுக்குத்தெரியும். இதற்குப் பலரும் பல விதமாக பதில்அளிப்பார்கள். நீங்கள் உண்மையான சாது, உண்மையான பக்தர், உயர்ந்த மகான், சித்த புருஷர், இறையவதாரம், ஸ்ரீசைதன்யரே நீங்கள், சாட்சாத் சிவபெருமான்” பகவான்” என்றெல்லாம் பதில்கள் வரும். எல்லாவற்றையும் இங்கே கூற முடியாது. அவதாரக்கொள்கையை நம்பாத பிரம்ம சமாஜ அங்கத்தினர்கள், கிருஷ்ணர், புத்தர், ஏசு, சைதன்யர், போன்ற முதனிலை பக்தர்களுக்கு நிகரான பக்தர் நீங்கள் என்றனர். வில்லியம்ஸ் என்கின்ற கிறிஸ்தவர். அழிவற்ற பேருணர்வு வடிவினரான பரம பிதாவின் திருக்குமாரனான ஏசு” என்றார். இவர்கள் அவரை எந்த அளவு புரிந்து கொண்டார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அதன் மூலம் இறைவனைப் பற்றியும் குருதேவரைப் பற்றியும் தாங்கள் கொண்டிருந்த கருத்தினை வெளியிட்டார்கள் என்பது உறுதி. குருதேவரும் அவர்களது பதிலை மேற்கூறிய நோக்கில் ஏற்றுக்கொண்டு, அவர்களின் ஆன்மீக நிலைக்குத் தக்கவாறு அவர்களுக்குப்பேதித்தார். அவர்களிடம்நடந்து கொண்டார். பாவனைகளின் திரண்ட உருவான அவர் யாருடைய நம்பிக்கையும் குலைக்காமல் வளர்த்து, சத்திய வடிவினனும் காலம், இடம் கடந்தவனுமாகிய இறைவனை அடையும் பாதையில் ஒவ்வொருவரையும் வழி நடத்தினார். ஆனால் அவர்கள் தாங்களாகவே இவ்வாறு கூறுகிறார்களா, இல்லை பிறர் சொல்வதைக்கேட்டுச் சொல்கிறார்களா என்பதை அவர் கவனிக்கத் தவறுதில்லை.
பூர்ணன் முதன் முதலாக குருதேவரிடம் வந்தபோது மிகவும் சிறியவர். பதின் மூன்று வயது இருக்கலாம். வித்யாசாகர் நிறுவிய சியாம்பஜார் பள்ளியில்
குருதேவரின் பக்தரான மகேந்திரர் அப்போது தலைமை ஆசிரியராக இருந்தார். இயல்பாகவே பக்திமிக்க மாணவர்களை அவர் குருதேவரிடம் அழைத்து வருவதுண்டு. இவ்வாறு வந்தவர்களே பாக்பஜாரைச்சேர்ந்த தேஜ்சந்திரர், நாராயணர், ஹரிபாதர், வினோத், இளையநரேன், பிரமதர் போன்றோர் அதனால் எங்களுள் சிலர் வேடிக்கையாக, அவரை ” பிள்ளைபிடிக்கும் மாஸ்டர்” என்று கூறுவதுண்டு. குருதேவரும் இதனைக்கேட்டு சிரித்தவாறே, அவனுக்கு இது பொருத்தமே” என்று கூறினார். மூன்றாம் வகுப்பில் ஒருநாள் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது பூர்ணனின் அருமையான இயல் பும், இனிய பேச்சும் மகேந்திரரைக் கவர்ந்தன. அதன் பின் விரைவில் அவனை குருதேவருக்கு அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்தார். பஸ்ரீர்ணனின் உறவினர்கள் முரடர்கள் என்பதால் இதனை ரகசியமாகச்செய்ய வேண்டியிருந்தது. அவர்களுக்குத் தெரிய வந்தால் பூர்ணன், மகேந்திரர் இருவருக்குமே தொல்லைதான். எனவே பூர்ணன் வழக்கம்போல் பள்ளிக்கு வந்து, பின்பு அங்கிருந்து வாடகை வண்டியில் தட்சிணேசுவரம் சென்று பள்ளிவேளை முடிவதற்குள் பள்ளிக்குத் திரும்பி விடுவான். உரிய நேரத்தில் வீட்டிற்கும் போய்விடுவான்.
பூர்ணனைக் கண்டு குருதேவர் மிகவும் மகிழ்ந்தார். மிகுந்த அன்புடன் உணவு கொடுத்தார். உபதேசம் செய்தார். அவன் திரும்பும்போது, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வா. வண்டியில்வா, வாடகைக்கு இங்கே ஏற்பாடு செய்யலாம்” என்று கூறினார். பின்பு எங்களிடம் சொன்னார். பூர்ணன் நாராயணனின் அம்சம். சத்வ குணத்தில் நிலைபெற்றவன். நரேந்திரனுக்கு அடுத்த நிலையில் இவன் இருக்கிறான், இங்கு வந்து ஆன்மீக அனுபூதி பெறுவார்கள் என்று நான் ஏற்கனவே கண்டிருந்த, இந்தவிதமான பக்தர்களின் வரவு பூர்ணனுடன் நிறைவுறுகிறது. இனி மேல் இந்தப் பிரிவைச்சேர்ந்தவர்கள் யாரும் வர மாட்டார்கள்.
அன்று பூர்ணனின் மனநிலையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து விட்டிருந்தது. குருதேவருடனான பழைய உறவின் நினைவு அவனிடம் எழுந்தது, அவனது மனம் உள்முகமாகத் திரும்பியது. கண்களினின்று ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. உறவினர் பயத்தின் காரணமாகத் தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு மாலை வீடு திரும்பினான். அதன் பின் அவனைக் காணவும் அவனுக்கு உணவு ஊட்டவும் குருதேவரின் மனத்தில் தீவிர ஆவல் தோன்றியது. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பலவிதமான தின்பண்டங்களை அவனுக்கு அவர் அனுப்பி வைப்பார். வீட்டினருக்கு இது தெரிய வந்தால் அவனைத்தொந்தரவு செய்வார்கள் என்பதற்காக, யாரும் அறியாமல் அவனிடம் கொடுக்குமாறு, மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி அனுப்புவார்.
பூர்ணனைக்காண வேண்டும் என்ற ஏக்கத்தினால் குருதேவர் கண்ணீர் விடுவதை நாங்கள் பலவேளைகளில் கண்டிருக்கிறோம். நாங்கள் வியந்து நிற்பதைக்கண்ட அவர் ஒருநாள், பூர்ணனைக் காண நான் தவிப்பதைக்கண்டு நீங்கள் திகைத்து நிற்கிறீர்கள், நரேந்திரனுக்காக ஆரம்பத்தில் நான் ஏங்கியதைக் கண்டிருந்தால் நீங்கள் எவ்வளவு வியப்பு அடைந்திருப்பீர்களோ, என்னவோஎன்று கூறினார். பூர்ணனைக்காணும் ஆவல் ஏற்பட்டால் நண்பகலில் அவர் கல்கத்தா செல்வார். பலராம் பாபுவின் வீட்டிற்கோ அந்தப் பகுதியில் உள்ள பக்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று அவனைப் பள்ளியிலிருந்து கூட்டிவரும்படிச்செய்வார். இவ்வாறு தான் குருதெவரை இரண்டாம் முறையாகப் பார்க்கும் வாய்ப்பு பூர்ணனுக்குக் கிடைத்தது. இம்முறை அவன் தன்னை முழுவதுமாக இழந்து விட்டான். அன்று குருதேவர் தாய்போல் அவனுக்குத் தம் கையாலேயே உணவு ஊட்டினார். பின்பு அவனிடம், என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்? சொல் பார்க்கலாம்.” என்று கேட்டார். இதயம் பக்தியால் விம்ம பூர்ணன் தன்னை மறந்து, நீங்கள் பகவான், சாட்சாத் இறைவனே! என்று கூறினான்.
பார்த்தவுடனேயே தம்மை மிகவுயர்ந்த ஆன்மீக லட்சியமாக பூர்ணன் ஏற்றுக் கொண்டது குருதேவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும் வியப்பையும் அளித்தது. இதயபூர்வமாகஅவனை ஆசீர்வதித்தார். சக்திமிக்க மந்திர தீட்சை அளித்து ஆன்மீக சாதனைகளைப் பற்றிக் கூறினார். பின்னர் தட்சிணேசுவரத்திற்கு வரும்போது எங்களிடம் திரும்பத் திரும்ப அது சரி, பூர்ணன் சிறுவன். இன்னும் அறிவு முதிர்ச்சி பெறாதவன். அவன் எவ்வாறு இதைப் புரிந்து கொண்டான். தெய்வீகத் தூண்டு தலால் வேறு பலரும் இத்தகைய பதிலைக் கூறியுள்ளனர். பழைய சம்ஸ் காரங்களின் காரணமாகத் தானிருக்க வேண்டும். இவர்களின் தூய சத்வ குணம் மிக்க உள்ளத்தில் இவ்வாறு உண்மை இயல்பாக முழுமையாக மலர்கிறது” என்று கூறினார்.
சூழ்நிலையின் காரணமாகப் பூர்ணன் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் வாழ நேரிட்டது. ஆனால் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் அவரது திட நம்பிக்கை கடவுளைச் சார்ந்திருத்தல், சாதனையில் ஈடுபாடு, அகங்காரமற்ற தன்மை, தன்னலமற்ற இயல்பு ஆகிய அனைத்தையும் அறிவார்கள்.
தம்மிடம் வருபவர்களிடம் குருதேவர் இவ்வாறு கேட்பதைப் பற்றிய மற்றொரு நிகழ்ச்சி. தட்சிணேசுவரக்கோயிலில் உள்ள குருதேவரின் அறையில் சைதன்யர் சங்கீரத்தனம் செய்து கொண்டிருப்பது போன்ற படம் ஒன்று மாட்டப்பெற்றிருந்தது. எங்களுக்கு மிகவும் தெரிந்தவரான வைகுந்தரிடம் குருதேவர் இந்தப் படத்தைக் காட்டி, இவர்கள் அனைவரும் எவ்வாறு தெய்வீக உணர்வின் வயப் பட்டிருக்கிறார்கள், பார்த்தாயா? என்று கேட்டார்.
வைகுந்தர்- அவர்கள் அனைவுரம் தாழ்ந்தவர்கள்.
குருதேவர்- அது என்ன பேச்சு? அப்படிச் சொல்லலாமா.?
வைகுந்தர்- ஆம், ஐயா. நான் நதியாவைச்சேர்ந்தவன். இந்த வைணவர்கள் தாழ்ந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும்.
குருதேவர்- நீ நதியாவைச்சேர்ந்தவனா? அப்படியானால் இதோ உனக்கு இன்னும் ஒரு வணக்கம். நல்லது, ராமும் மற்றவர்களும்( தம்மைக்காட்டி) இதனை அவதாரம் என்று கூறுகிறார்கள். நீ என்ன நினைக்கிறாய்? சொல் பார்க்கலாம்.
வைகுந்தர்- உங்களை அப்படிக் குறைத்தா சொல்கிறார்கள்?
குருதேவர்- என்ன , குறைத்துச் சொல்கிறார்களா? இறைவனின் அவதாரம் என்கிறார்கள். நீ என்னடாவென்றால் அதைக் குறைவு என்கிறாய்!
வைகுந்தர்- ஆம், அவதாரம் என்பது இறைவனின் அம்சம் மட்டுமே. எனக்குத் தாங்கள் சாட்சாத் சிவபெருமானாகவே தோன்றுகிறீர்கள்.
குருதேவர்- நீ என்ன சொல்கிறாய்?
வைகுந்தர்- எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. நான் என்ன செய்யட்டும். சொல்லுங்கள் . சிவபெருமானை தியானிக்கும்படி என்னிடம் கூறினீர்கள். ஆனால் நாள்தோறும் முயன்றும் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. அமர்ந்ததும் உங்களுடைய மலர்ந்த முகம்தான் என் முன் ஒளிர்கிறது. அதனை விலக்கிவிட்டு சிவபெருமானைக்கொண்டு வர முடியவில்லை. அப்படிச்செய்ய விருப்பமும் இல்லை. அதனால் உங்களையே சிவபெருமானாக எண்ணுகிறேன்.
குருதேவர்( சிரித்துக்கொண்டே)- நீ என்னனென்னவோ சொல்கிறாய்? ஆனால் எனக்குத் தெரிவது என்ன தெரியுமா? நான் உன் உடம்பிலுள்ள சிறிய முடியைப்போன்றவன். (இருவரும் சிரிக்கிறார்கள்) எப்படியோ போகட்டும்! உன்னைப் பற்றிய கவலை இருந்தது. இன்று நீங்கிவிட்டது.
கவலை நீங்கிவிட்டது” என்று குருதேவர் ஏன் கூறினார் என்பது அப்போது வைகுந்தருக்குப் புரிந்ததா என்பதைச்சொல்ல முடியாது. இப்படிப்பட்ட நேரங்களில் குருதேவர் மகிழ்வது கண்டு நாங்களும் மகிழ்வோம். அவ்வளவு தான். அவர் கூறுவதன் உட்பொருளைப் புரிந்து கொள்ள நாங்கள் முயன்றதில்லை. வைகுந்தர் குருதேவரை மிகவுயர்ந்த ஆன்மீக லட்சியமாக ஏற்றுக் கொண்டு விட்டார், என்பதை அறிந்ததால் தான் குருதேவர் இவ்வளவும் பேசியிருக்க வேண்டும் என்பது இப்போது புரிகிறது.
பக்தர்கள் தமது நடவடிக்கைகளைக் கூரை்ந்து கவனித்து, ஆராய்ந்து அதன் பின்பு தம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் குருதேவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் குருதேவர்வற்புறுத்துவார்.
சாதுவைப் பகலில் கவனி. இரவில் கவனி, அதன் பின்பு அவரை நம்பு, என்று அவர் எங்களிடம் அடிக்கடிக் கூறுவதுண்டு. தாங்கள் உபதேசிப்பதன் படி சாதுக்கள் வாழ்கிறார்களா என்பதைக் கூர்ந்து கவனிக்குமாறும் கூறுவார். சொல்- செயல், எண்ணம்- சொல்- இவை ஒன்றுபடாதவரை ஒரு போதும் நம்பலாகாது என்று அவர் கூறுவார். இதனை விளக்க அவர் கூறும் கதையொன்றும் உண்டு.
ஒரு சிறுவன் அஜீரணத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். அவனது தந்தை அவனை ஒரு பிரபலமான கிராம வைத்தியரிடம் அழைத்துச் சென்றார். வைத்தியர் அந்தச் சிறுவனைச்சோதித்து நோய் என்ன என்றுகண்டு பிடித்தார். ஆனால் அன்று மருந்தைக்கொடுக்காமல் மறுநாள் வருமாறு கூறினார்.அது போல் அவர்கள் மறுநாள், வந்ததும் வைத்தியர் சிறுவனிடம், நீ வெல்லம் சாப்பிடுவதை விட்டுவிடு. நோய் குணமாகிவிடும். வேறு எந்த மருந்தும் வேண்டாம், என்று கூறினார். இதைக்கேட்டதும் அந்தத் தந்தை, வைத்தியரே, இதனை நீங்கள் நேற்றே கூறியிருக்கலாமே, நாங்கள் இன்று இவ்வளவு தூரம் வர வேண்டிய அவசியம் இருந்திருக்காது” என்றார். அதற்கு வைத்தியர்., இன்று ஏன் சொன்னேன் தெரியுமா? நேற்று இங்கே ஜாடிகளில் வெல்லப்பாகு இருந்தது. நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நேற்று உங்கள் மகனிடம் வெல்லம் சாப்பிடக் கூடாது என்று நான் கூறியிருந்தால் அவன், இந்த வைத்தியர் கெட்டிக்காரர், அவர் இவ்வளவு வெல்லம் சாப்பிடுகிறார், ஆனால் என்னை மட்டும் சாப்பிடக்கூடாது என்று தடுக்கிறார்.. என்று எண்ணியிருப்பான். என் சொற்களில் நம்பிக்கை அவனுக்கு வந்திருக்காது. கண்டிப்பாக நான் சொல்வதன்படி கேட்டிருக்கமாட்டான். அதனால் அந்த ஜாடிகளை இங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு முன்பு நான் அதைச்சொல்லவில்லை” என்றார்.
குருதேவரின் அறிவுரையால் தூண்டப்பட்டு நாங்களும் அவரது செயல்களைக் கூர்ந்து கவனித்தோம். சிலர் அவரைச்சோதிக்கவும் தயங்கவில்லை. எங்கள் நம்பிக்கையையும் பக்தியையும் திடப் படுத்துவதற்காக, இப்படி சோதனை என்ற பெயரில் நாங்கள் செய்த அதிகப் பிரசங்கித்தனங்களை எல்லாம் அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். இதனைவிளக்கும் நிகழ்ச்சியொன்றினை இங்குக் கூறுகிறோம்.
சுவாமி யோகானந்தரைப் பற்றி முன்பே கூறியுள்ளோம். இந்த நிகழ்ச்சி அவரைப் பற்றியது. அவரே எங்களிடம் கூறவும் செய்தார். நிகழ்ச்சியைக் கூறுமுன், அவரைப்பற்றிச்சிறிது தெரிந்து கொள்வோம். அவரது பிள்ளைத் திருநாமம் யோகீந்தரநாத் ராய் சௌதுரி. மிகவும் புகழ்பெற்ற சாவர்ண சௌதரி குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை நவீன் சந்திரர் ஒரு காலத்தில் செல்வச் செழிப்புமிக்க ஜமீன்தாராக விளங்கினார். பரம்பரை பரம்பரையாக அவர்களின் குடும்பம் தட்சிணேசுவரத்தில் வசித்து வந்தது. யோகீந்திரரின் இளமைப் பருவத்திலும் அதற்கு முன்னும் அவரது வீட்டில் ராமாயணம், மகாபாரதம், மற்றும் பாகவத பாராயணம், ஹரிகதை,பூஜை, கீர்த்தனை என்று எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருக்கும். தமது சாதனைக் காலத்தில் அவர் களின் வீட்டிற்குப் பலமுறை சென்று ஹரிகதை கேட்டிருப்பதாக குருதேவர் கூறினார். அப்போது அந்த வீட்டிலுள்ள சிலரிடம் அவர் பழகி உள்ளார். யோகினின் இளமைப்பருவம், முடிந்தும் முடியாமலும் இருக்கும்போது குடும்பச்சண்டை யாலும் வேறு காரணத்தாலும் சொத்தில் பெரும் பகுதியை அவர்கள் இழந்து நாளுக்குநாள், ஏழ்மையை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள்.
யோகின் மிகவும் சாந்தமானவர், மென்மையானவர், இனிமையான இயல்பு மிக்கவர். மேலான பல நற்பண்புகளுடன் அவர் பிறந்திருந்தார். தன்னைத்தனியான ஒரு மனிதனாக உணரத் தொடங்கியபோதே, தான் இந்த உலகத்தைச்சேர்ந்தவன் அல்லன், தனது உறைவிடம் இதுவல்ல, தான் மிக உயரத்தில் உள்ள ஏதோ ஒரு