ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-105
-
பலராம் பாபு வைணவக் குடும்பத்தை சேர்ந்தவன். சிறந்த வைணவர். இல்லறத்தில் இருந்தாலும் உலகியலில் பற்றற்றவராக, தியாகியாக வாழ்ந்தார் அவர். மிகுந்த செல்வம் இருந்தும் செருக்கு அற்றவராக இருந்தார். குருதேவரிடம் வரும்முன்பே தினமும் காலையில் நாலைந்து மணிநேரம் பூஜையிலும் பாராயணங்களிலும் செலவிட்டு வந்தார். புழு பூச்சிகளுக்குக் கூடத் தீங்கு இழைக்காத அளவுக்கு அகிம்சையைப் பின்பற்றி வந்தார். குருதேவர் முதன் முறையாக அவரைப் பார்த்ததும் நெருங்கிய ஒருவரை வரவேற்பதைப்போன்று அன்புடன் வரவேற்றார். இவர் ஸ்ரீசைதன்யரின் அந்தரங்க பக்தர். இந்த இடத்தைச்சேர்ந்தவர். அத்வைதர் மற்றும் நித்தியானந்தருடன் ஸ்ரீசைதன்யர் சங்கீர்த்தனத்தால் இறையன்பு வெள்ளப்பெருக்கு எடுத்தோடச்செய்து ஆண், பெண் குழந்தை என்று எல்லோரையும் பரவச நிலையில் ஆழ்த்திய காட்சியை நான் பரவச நிலையில் கண்டிருந்தேன். அந்தக் கூட்டத்தில் இவரையும் (பலராமை) கண்டேன். என்று குருதேவர் கூறினார்.
குருதேவரின் கூட்டுறவினால் பலராமிடம் உன்னதமான மாற்றங்கள் ஏற்பட்டன.ஆன்மீகத்தில் அவர் விரைந்து முன்னேறினார். குறுகிய காலத்தில் புற பூஜை போன்ற வைதீ பக்தி நிலையைக் கடந்து உண்மை, உண்மையற்றதைப் பிரித்தறிந்து இறைவனை முழுமையாகச் சார்ந்திருக்கின்ற நிலையை அடைந்தார். மனைவி, மக்கள், சுற்றம் , செல்வம் என்று அனைத்தையும் இறைவனின் திருவடிகளில் சமர்ப்பித்து, அவனது தொண்டனாக அவனது திருவுள விருப்பத்தை நிறைவேற்ற த் தயாராக இருப்பதும், இயன்றவரை குருதேவருடன் இருப்பதும் பலராம் பாபுவின் ஒரே குறிக்கோளாயிற்று.குருதேவரின் திருவுருளால் தாம் அமைதி பெற்றதுடன் திருப்தியடைய பலராம் பாபுவால் இயலவில்லை. தன் நண்பர்கள், உறவினர், தெரிந்தவர் என்று எல்லோரையும் அவர் குருதேவரிடம் அழைத்து வந்தார். இதனால் பலர் குருதேவரைச் சரணடையும் பெரும்பேறு பெற்றனர்.
புற பூஜை விஷயத்தில் ஏற்பட்ட து போன்று, பலராமின் அகிம்சைக் கொள்கையிலும் குறுகிய காலத்தில் மாறுதல் ஏற்பட்டது. பூஜை மற்றும் ஜபவேளைகளில் கொசு கடிப்பதால் மனம் ஒரு முகப்படாமல் போகின்ற நேரத்தில் கூட அதனை அடிக்க மாட்டார். இதனால் தன் தர்மம் குலைந்து போகும் என்று கருதினார் அவர். ஒரு நாள் திடீரென்று அவரது இந்தக் கருத்தில் மாற்றம் ஏற்பட்டது. சிதறிக்கிடக்கின்ற மனத்தை எப்படியாவது இறைவனிடம் நிலைநிறுத்துவது தான் தர்மம். தவிர அந்த மனத்தை கொசுவையும் புழு பூச்சிகளையும் காப்பதில் செலுத்துவது தர்மம் ஆகாது.ஓரிரு கொசுக்களை அடித்துக் கொல்வதால், இறைவனிடம் மனத்தை நிலைநிறுத்தமுடியும் என்றால் அப்படி அடிப்பது அதர்மம் ஆகி விடாது. சொல்லப்போனால் அது மிகுந்த நன்மையே தரும் என்று அவருக்குத்தோன்றியது. பலராம் கூறினார், எனது அகிம்சைக் கொள்கையில் இந்த எண்ணம் ஓர் அதிர்ச்சிமிக்க மாற்றமாக இருந்தாலும், என் மனத்திலிருந்து சந்தேகம் அடியோடு விலகவில்லை. எனவே இதைப் பற்றி குருதேவரிடம் கேட்பதற்காக தட்சிணேசுவரம் புறப்பட்டேன். போகும்வழியில், அவர் என்றாவது கொசுவைக் கொல்வதை நான் கண்டிருக்கிறேனா என்ற சந்தோம் எழுந்தது. இல்லை என்நே தோன்றியது. என்னைவிட தீவிர அகிம்சாவாதியாகவே அவரை என் நினைவு எனக்குக் காட்டியது. பசும்புல்லின் மீது ஒரு வன் நடந்து சென்றதைக் கண்டபோது தன் நெஞ்சின் மீது அவன் நடப்பது போன்று வேதனையைத் தாம் அனுபவித்ததாக அவரிடமிருந்தே கேட்டிருக்கிறேன். புல்லில் கூட உயிரையும் உணர்வையும் அவர் தெளிவாகக் கண்டிருந்தார். அவரிடம் போய்க்கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். என் மனம் தான் என்னைக் குழப்பி விட்டது. அது போகட்டும். அவரைச்சென்று பார்த்தால் மனம் தூயதாகும் போய்ப் பார்ப்போம் என்று எண்ணிக் கொண்டேன்.
தட்சிணேசுவரத்தை அடைந்து குருதேவரின் அறைக் கதவருகே சென்றேன். அங்கே அவர் செய்து கொண்டிருந்த செயலைக் கண்டு அப்படியே சிலையாக நின்றுவிட்டேன். தன் படுக்கையிலிருந்த மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து வெளியே கொண்டு வந்து அவற்றைக்கொன்று கொண்டிருந்தார் அவர். நான் சென்று அவரை வணங்கினேன். அவர் கூறினார், தலையணை ஒரே மூட்டைப் பூச்சி மயமாகி விட்டது. இரவு பகலாக க் கடித்து மனத்தை அலைக் கழிக்கின்றன. தூக்கமும் கெட்டு விடுகிறது. அதனால் தான் கொல்கிறேன்” நான் எதையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று. அவரது பேச்சாலும் செயலாலும் என் ஐயம் நீங்கியது. வியப்புடன் எண்ணலானேன். இரண்டு மூன்று ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறேன். பகலில் வருகிறேன். இரவில் திரும்புகிறேன். மாவையில் வந்து இரவு வெகுநேரம் கழித்துத் திரும்புகிறேன். இவ்வாறு வாரத்தில் மூன்று நான்கு முறையாவது வருகிறேன். ஆனால் அவர் இப்படிப்பட்ட செயலை செயலைச் செய்து இது வரை நான் கண்டதில்லை. இன்று மட்டும் ஏன் இப்படிச் செய்தார்? எனக்குப் புரிந்தது. அவர் இவ்வாறு செய்வதை நான் இதற்கு முன் கண்டிருந்தால் என் கருத்துக்கள் குலைந்திருக்கும். அவநம்பிக்கை தோன்றியிருக்கும். அதனால் தான் கருணைக் கடலான குருதேவர் இதற்குமுன் நான் காண இவ்வாறு செய்ததில்லை.
யோகக் காட்சியில் குருதேவர் கண்டிருந்த பக்தர்களை தவிர வேறு பலரும் இந்தக் காலக்கட்டத்தில் அவரைக் கண்டு மன அமைதி பெறுவதற்காக தட்சிணேசுவரம் வரத் தொடங்கினர். அவர்களையும் அவர் மிகுந்த அன்புடன் வரவேற்றார். சிலருக்கு உபதேசம் அளித்தார். பரவச நிலையில் சிலரைத்தொட்டு ஆசீர்வதித்தார்.நாட்கள் செல்லச்செல்ல அவரைச் சுற்றி பக்தர் கூட்டம் ஒன்று உருவாகியது. அவர்களுள் திருமணமாகாத வர்களையும் இளைஞர்களையும் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்டார். அதற்குரிய காரணத்தை அவர் பல வேளைகளில், பதினாறணா மனத்தைக்கொடுக்கவில்லை என்றால், இறைவனின் முழுக்காட்சியைப் பெற முடியாது. இளைஞர்களின் முழுமனமும் அவர்களின் வசமே உள்ளது. மனைவி, மக்கள், பெயர், புகழ்போன்ற உலகியல் விஷயங்களில் இன்னும் சிதறவில்லை. இப்பொழுதே முயன்றால் அவர்கள் முழுமனத்தையும் இறைவனிடம் திருப்பி அவனது திவ்ய தரிசனத்தைப்பெற முடியும். நான் மிகவும் ஆர்வம் காட்டுகிறேன்” என்று கூறியுள்ளார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களைத் தனியாக அழைத்துச் சென்று யோகம், தியானம் போன்ற மிகவுயர்ந்த சாதனைகளை உபதேசிப்பார். திருமணம் செய்துகொள்ளாமல் வழுவாத பிரம்மசரிய விரதம் காக்கும்படிக் கூறுவார். அவர்களின் தகுதிக்கேற்ப வெவ்வேறு சாதனை முறைகளைக் கூறுவார். சாந்தம், தாஸ்யம் போன்ற எந்த பாவனை எந்தக் குறிப்பிட்ட பக்தருக்கு ஏற்றது என்று கண்டறிந்து அதன்படி உபதேசிப்பார்.
பாகம்-106
-
இளைஞர்களுக்கு உபதேசிப்பதில் குருதேவர் ஆர்வம் காட்டினார் என்பதால் பிற இல்லற பக்தர்களிடம் அவர் குறைவான கருணை கொண்டிருந்தார் என்று எண்ணிவிடக் கூடாது. உயர்ந்த ஆன்மீக நெறிகளைக் கடைபிடித்து வாழ்வதற்கான நேரமும் ஆற்றலும் இல்லை என்பதற்காகத் தான் அவர் அவற்றை அவர்களுக்குக் கூறவில்லை. ஆனால் காம- காஞ்சனம் துறந்து, ஆசைகளை அடக்கி, படிப்படியாக பக்தி நெறியில் முன்னேறி இறையனுபூதி பெறுவதற்கான வழியில் அவர்களை நடத்திச்சென்றார். பணக்காரனின் வீட்டு வேலைக்காரியைப்போல், உலகில் வாழ்ந்து கடமைகளை ஆற்றும்படிக் கூறினார்.ஓரிரு குழந்தைகளுக்குப் பின் கணவனும் மனைவியும் தங்கள் மனத்தை இறைவனிடம் செலுத்தி, அண்ணன் தங்கை போல் வாழ வேண்டும் என்பார் அவர். இயன்றவரையில் பிரம்மசரியம் காக்குமாறு அவர்களை ஊக்குவித்தார். உண்மை வழியிலே செல்ல வேண்டும். கள்ளங்கபடமற்ற வாழ்க் கை வாழ வேண்டும். ஆடம்பரத்தைத் தவிர்த்து சாதாரண உணவிலும் உடையிலும் மன நிறைவுடன் இருக்க வேண்டும். எப்போதுமே் இறைவனிடம் சிந்தையைப் பதிக்கவேண்டும். காலையும் மாலையும் இறைவனை எண்ணி, பூஜை, தியானம், கீர்த்தனை, ஜபம் முதலியவை செய்யவேண்டும். என்றெல்லாம் போதிப்பார். இவற்றைச்செய்ய முடியாதவர்கள் மாலையில் தனிமையான இடத்தில் அமர்ந்து கைகளைக்கொட்டி இறைநாமத்தைச் சொல்ல வேண்டும், உறவினரையும் நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு இறைவனின் புகழ்பாட வேண்டும் என்று கூறுவார். பொதுவாக ஆண்களும் பெண்களுக்கும் உபதேசிக்கும்போது, கலியுகத்தில் நாரதர் காட்டிய பக்திநெறியே உகந்தது. இறைநாமத்தை உரக்கக் கூவினாலே மனிதன் காக்கப் படுவான். கலியுகத்தில் மக்களின் வாழ்க்கை உணவைச் சார்ந்திருக்கிறது. ஆயுளோ குறைவு, ஆற்றல் மிகக் குறைவு, அதனால் தான் இறையனுபூதிக்காக அவர்களுக்கு இந்தச் சுலபமான வழி சொல்லப் பட்டிருக்கிறது, என்று கூறுவார். யோகம், தியானம், போன்ற கடினமான சாதனைகளைக் கேள்வியுற்று அவர்கள் மனம் தளர்ந்து விடாமல் இருக்க அவர் கூறுவார், துறவறம் மேற்கொண்டவர்கள் பின்வருமாறு அவனிடம் பிரார்த்தித்தே தீர வேண்டும். அதற்காக அல்லவா, அவர்கள் உலகைத் துறந்தார்கள். அவர்கள் இவற்றைச்செய்வதில் என்ன சூரத்தனம் இருக்கிறது? ஆனால் தாய், தந்தை, மனைவி, மக்கள், என்று எத்தனையோ சுமைகளுக்கிடையே, ஒருவன் இறைவனை ஒரே ஒரு முறை நினைத்தாலும் அது இறைவனுக்குப்பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. தோள்களில் இத்தைனை சுமைகளைத் தாங்கிக்கொண்டு சிறிது நேரத்திற்காவது இவன் என்னைஅழைக்கிறானே, இவன் தான் வீர பக்தன்” என்று இறைவன் நினைக்கிறான்.
புதிதாக வந்த சாதாரண பக்தர்களுள் மட்டுமல்ல, யோகக் காட்சியில் தாம் கண்டிருந்த பக்தர்களுள்ளும் எப்படிப்பட்ட உயர்ந்த இடத்தை நரேந்திரருக்கு குருதேவர் அளித்திருந்தார் என்பதைச்சொல்ல இயலாது. அவர்களுள் சிலரை ஈசுவரகோடிகள் அதாவது இறைவனுடைய ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றுவதற்காகப் பிறந்தவர் என்று குறிப்பிடுவார். அந்த மிகச் சிலருடன் நரேந்திரரை ஒப்பிட்டு ஒருநாள் குருதேவர், நரேந்திரன் ஓர் ஆயிரம் இதழ்த் தாமரை மலர். இன்னும் வேறு சிலரைத் தாமரை என்று கூறலாம். ஆனால் அவர்களில் சிலர் பத்து இதழ், சிலர் பதினைந்து இதழ், மிக அதிகமாகப்போனால் இருபது இதழ் கொண்ட தாமரை அவ்வளவு தான் என்றார். மற்றொரு சமயத்தில் , பலர் இங்கு வருகிறார்கள். ஆனால் நரேந்திரரைப்போன்ற வேறொருவர் வரவில்லை” என்றார். குருதேவரின் செயல்பாடுகள் மற்றும் உபதேசங்களின் உட்பொருளை நரேந்திரரைப்போன்று வேறு யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அப்போதே குருதேவரின் சில உபதேசங்களுக்கு நரேந்திரர் கொடுக்கின்ற விளக்கங்களைக் கேட்டு நாங்கள் வியந்து நிற்பதுண்டு. நாமும் தான் அவர் கூறியதைக்கேட்டோம். ஆனால் அவற்றில் இவ்வளவு ஆழமான பொருள் பொதிந்திருப்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லையே! என்று எண்ணுவோம். ஒரு நிகழ்ச்சியை இதற்கு எடுத்துக் காட்டாகத் தருகிறோம்.
1884- ஆம் ஆண்டில் எங்கள் நண்பர் ஒருவர் குருதேவரைக் காண தட்சிணேசுவரம் வந்தார். பக்தர்கள் புடை சூழ குருதேவர் தம் அறையில் அமர்ந்திருந்தார். நரேந்திரரும் அங்கிருந்தார். பேச்சும் வேடிக்கை வினோதங்களுமாக நேரம் கழிந்து கொண்டிருந்தது. இடையே வைணவ நெறிபற்றிப்பேச்சு எழுந்தது. அதன் கொள்கையை குருதேவர் சுருக்கமாகக் கூறினார். இறைநாமத்தில் ஈடுபாடு, உயிர்களிடம் தயை, வைணவர்களை மதித்தல் ஆகிய மூன்றையும் மிகுந்த கவனமாகக் கடைபிடிக்குமாறு இந்த நெறி போதிக்கிறது. இறைவனும் அவன் நாமமும் ஒன்றே, அதில் எந்த வேறுபாடும் இல்லை என்பதை உணர்ந்து எப்போதும் ஆழ்ந்த அன்புடன் இறைநாமம்ஓதவேண்டும். பக்தனும் பகவானும் ஒன்றே, கிருஷ்ணனும் வைணவனும் ஒன்றே என்பதை உணர்ந்து சாதுக்களையும் பக்தர்களையும் போற்றி வணங்க வேண்டும். பிரபஞ்சம் முழுமையும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு உரியது என்ற திட நம்பிக்கையுடன் எல்லா உயிர்களிடமும் தயை( காட்ட வேண்டும்) எல்லா உயிர்களிடமும் தயை” என்று குருதேவர் கூறியதும் திடீரென்று சமாதி நிலையை அடைந்தார். சிறிது நேரத்தில் ஓரளவிற்குப் புறவுணர்வு ஏற்பட்டதும் உயிர்களிடத்தில் தயையா”? உயிர்களிடம் தயை அற்ப மானிடனே, கேவலம் புழுவுக்குச் சமம் நீ, நீ உயிர்களிடம் தயை காட்டப்போகிறாயா? தயை காட்ட நீ யார்? இல்லை, ஒரு போதும் இல்லை. மனிதனை சிவ வடிவில் கண்டு சேவை தான் செய்ய வேண்டும்” என்றார்.
பரவச நிலையில் குருதேவர் கூறியதை அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவற்றின் உட்பொருளை யாரும் புரிந்து கொள்ளவில்லை. நரேந்திரர் மட்டுமே குருதவரின் எண்ண ஓட்டத்தைச் சரியாக அறிந்து கொண்டார். வெளியே வந்ததும் அவர், இன்று குருதேவரின் வார்த்தைகளிலிருந்து என்னவோர் அற்புத ஒளியைப் பெற்றேன்! சாரமற்ற , கடூரமான, வறண்டதாகக் கூறப்படுகின்ற வேதாந்த ஞானத்தை , பக்தி நெறியுடன் இணைத்து என்னவோர் எளிய, இனிய, சாரமிக்க வழியைக் காட்டி விட்டார்! அத்வைத ஞானத்தைப்பெற வேண்டுமானால் உலகத்தையும் மக்களையும் முற்றிலுமாகத் துறந்து காட்டிற்குச் செல்ல வேண்டும், அன்பு , பக்தி, போன்ற மென்மையான உணர்வுகளை இதயத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்து விட வேண்டும் என்றெல்லாம் தான் கூறப்பட்டு வந்தது. விளைவு? அந்தப் பாதையில் செல்கின்றவன் உலகத்தையும் அதிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் தனது பாதையில் உள்ள தடையாகக் கருதி அவனை வெறுத்து தனக்குத் தானே அழிவைத்தேடிக்கொள்கிறான்.ஆனால் குருதேவர் இன்று தம் பரவச நிலையில் கூறியதிலிருந்து, காட்டில் இருக்கும் வேதாந்த ஞானத்தை வீட்டிற்குக் கொண்டு வரலாம். அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் அதைக் கடைபிடிக்கலாம் என்பது தெளிவாகிறது. செய்வதை ஒருவன் தொடர்ந்து செய்யட்டும். அதில் தீங்கில்லை. ஆனால் இறைவனே உயிர்களாகவும், உலகமாகவும் உள்ளான் என்ற எண்ணத்தை மட்டும் உறுதியாகக் கொண்டிருந்தால் போதும். வாழ்வில் ஒவ்வொரு கணமும் நாம் யாருடன் தொடர்பு கொள்கிறோமோ, அன்பு செய்கிறோமோ, மதிப்பும் மரியாதையும் அளிக்கிறோமோ, தயை காட்டுகிறோமோ, அவர்கள் அனைவரும் இறைவனின் அம்சமே. இவ்வாறு அனைவரையும் சிவ வடிவாகக் கருதும் பொழுது எவ்வாறு அவனால் மற்றவர்களை விடத் தன்னை உயர்வாகக் கருத முடியும்? மற்றவர்களிடம் கோபமும் வெறுப்பும் எப்படி கொள்ள முடியும்? எவ்வாறு தயை காட்ட இயலும்? இவ்வாறு மனிதனை இறைவனாகக் கண்டு அவனுக்குச்சேவை செய்யச்செய்ய அவனது இதயம் தூய்மையடைகிறது. விரைவில் அவன் தன்னைப்பேருணர்வு வடிவான இறைவனின் அம்சம், புத்த, சுத்த முக்த இயல்பினன் என்று உணர்கிறான்.
குருதேவரின் இந்த வார்த்தைகள் பக்தி நெறியிலும் புதிய ஒளியைத் தருகிறது. அனைத்து உயிர்களிலும் இறைவனைக் காணும் வரை சாதகன் உண்மையான பக்தி, அல்லது பராபக்தி என்றால் என்ன என்பதை உணர முடியாது. சிவபெருமான்அல்லது நாராயணனின் வடிவில் மக்களைக் கண்டு
அவர்களுக்குச் சேவை செய்யும்போது விரைவில் அவனால் எல்லோரிடமும் இறைவனைக் காண முடிகிறது. விரைவில் அவன் உண்மையான பக்தியைப்பெற்று லட்சியத்தை அடைகிறான். கர்மயோகம் மற்றும் ராஜயோகத்தைப் பின்பற்றும் சாதகர்களுக்கும் குருதேவரின் வார்த்தைகள் புதிய ஒளியைத் தருபவை. மனிதனால் ஒரு கணம் கூடச் செயலற்று இருக்க முடியாது. அப்படியானால் சிவ வடிவில் மக்களைக் கண்டு அவர்களுக்குச்சேவை செய்யும்போது மனிதன் குறிக்கோளை அடைகிறான் என்பது சொல்லாமலே விளக்கும். இறைவன் எனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால், இன்று கேட்ட இந்தப் பேருண்மையை நான் உலகெங்கும் முழுங்குவேன். பண்டிதர் பாமரர், செல்வந்தர், ஏழை, பிராமணர், பறையர் என்று அனைவருக்கும் எடுத்துக் கூறுவேன்.
இவ்வாறாக குருதேவர் சமாதிப்பேருலகில் எப்போதும் வாழ்ந்து ஞானம், பக்தி, யோகம் மற்றும் கர்ம நெறிகளில் இது வரை காணாத ஒளியைக் கொணர்ந்து வாழ்க்கை நெறியையே வளம் பெறச்செய்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டசாலிகளான எங்களால் அவரது வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த தெய்வீக வார்த்தைகளை அறிவுத் தெளிவு மிக்க நரேந்திரர் மட்டுமே, தம்மால் இயன்ற அளவு புரிந்து கொண்டார். அவ்வப்போது விளக்கி எங்களையும் வியக்க ச் செய்தார்.
பாகம்-107
-
பாணிஹாட்டி திருவிழா
-
குடும்பத்தினரின் கவலை தீர நரேந்திரர் இறுதியாக குருதேவரிடம் சரணடைந்ததையும் எளிய உணவிற்கும் உடைக்கும் துன்பப்பட மாட்டார்கள் என்று அவர் அருள் புரிந்ததையும் பார்த்தோம். அதன் பின் நரேந்திரரின் குடும்பச் சூழ்நிலை படிப்படியாக மாறியது. பணம் நிரம்பி வழியவில்லை என்றாலும் அவர்கள் முன்போல் வறுமையில் வாடவில்லை. இந்த நிகழ்ச்சிக்குப் பின் கல்கத்தாவில் சாம்பாதலா என்ற இடத்தில் மெட்ரோபாலிடன் வித்யாலயத்தின் கிளை ஒன்று திறக்கப் பட்டது. பண்டித ஈசுவர சந்திர வித்யாசாகரின் உதவியால் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் பதவி நரேந்திரருக்குக் கிடைத்தது. 1885- மே முதல் மூன்று நான்கு மாதங்கள் நரேந்திரர் அங்கு பணிபுரிந்தார்.
குடும்பச் சூழ்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும், உறவினரின் துரோகம், நரேந்திரருக்குத் தொல்லையாக இருந்தது. நேரம் பார்த்து அவர்கள் அவரது தந்தை வழி வீட்டையும் வேறு நல்ல வீடுகளையும் இடங்களையும் கைவசப்படுத்திக் கொண்டனர்.இதனால் சில நாட்களுக்கு அவர் தம் வீட்டை விட்டு விட்டு, ராம்தனு போஸ் தெருவிலிருந்த தாய்வழிப் பாட்டியின் விட்டில் வசிக்க நேர்ந்தது. வீட்டுரிமை கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து அதற்காக அலையவும் வேண்டியிருந்தது. அவரது தந்தையின் நண்பரும் வழக்கறிஞருமான நிமாய் சரண் போஸ் இந்த வழக்கில் நரேந்திரருக்கு மிகுந்த உதவி செய்தார். வழக்குத் தொடர்பான வேலைகள் அதிகம் இருந்தன. வரவிருக்கும் பி.எல் தேர்வுக்கும் படிக்க வேண்டியிருந்தது. அதனால் ஆகஸ்டு மாதத்திலேயே ஆசிரியர் தொழிலை விட்டு விட்டார். இதற்கு வேறொரு மிக முக்கியமான காரணமும் இருந்தது. அப்போது குருதேவருக்குத் தொண்டைப்புண் ஆரம்பித்திருந்தது. அது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் அவருடன் தங்கி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய நரேந்திரர் எண்ணினார்.
1885-ஆம் ஆண்டு கோடைக்காலம் மிகவும் கடுமையாக இருந்தது. குருதேவர் மிகவும் கஷ்டப்பட்டார். எனவே ஐஸ் பயன்படுத்தும்படி பக்தர்கள் குருதேவரிடம் வேண்டினர்.ஐஸ் சாப்பிடுவதால் அவருக்குச் சற்று நிம்மதி உண்டாவதைக் கண்ட பலர் தட்சிணேசுவரத்திற்கு வரும் பொழுது ஐஸ் வாங்கிவரத் தொடங்கினர். குருதேவரும் சர்பத் போன்றவற்றுடன் ஐஸ் கலந்து சாப்பிடுவதில் ஒரு சிறுவனைப்போல் ஆர்வம் காட்டினார். ஓரிரு மாதங்கள் இவ்வாறு கழிந்த பின் அவருக்குத் தொண்டையில் சற்று வலிக்கத் தொடங்கியது. அது ஏப்ரல் மாத நடுவில் என்று தோன்றுகிறது.
ஒரு மாதத் திற்கு மேலாகியும் வலி குறையவில்லை. ஜுன் மாதத்தில் அந்த வலி வேறு விதமாக உருவெடுத்தது. அதிகமாகப் பேசினாலோ சமாதியில் ஆழ்ந்தாலோ வலி அதிகரித்தது. ஜலதோஷத்தினால் ஏற்பட்ட சாதாரண தொண்டை வீக்கம் என்று ஆரம்பத்தில் சாதாரண சிகிச்சையே அளிக்கப் பட்டது. பல நாட்களுக்குப் பின்பும் ஒருவிதப் பயனும் ஏற்படாததைக் கண்ட பக்தர் ஒருவர், இத்தகைய வியாதிக்கான சிகிச்சையில் கைதேர்ந்த டாக்டர் ராக்காலை அழைத்து வந்தார். அவர் வந்து பரிசோதித்து விட்டு உட்கொள்வதற்கும் வெளிப்பூச்சுக்கும் மருந்து கொடுத்தார். சில நாட்கள் குருதேவர் அதிகம் பேசாமல் பார்த்துக்கொள்ளும்படியும், அடிக்கடி சமாதி நிலையில் ஆழ்ந்து விடாமல் கவனித்துக் கொள்ளுமாறும் கூறிச் சென்றார்.
ஆனி மாத சுக்லபட்ச திரயோதசி நாள் ஜுன் மாத இறுதியில் வந்தது. கல்கத்தாவிற்கு வடக்கே சிலமைல் தொலைவில் கங்கைக் கரையில் அமைந்துள்ள பாணிஹாட்டி என்னும் கிராமத்தில், வைணவத் திருவிழா ஒன்று நடைபெறும். சைதன்யரின் முக்கியச் சீடர்களுள் ஒருவர் ரகுநாத் தாஸ் கோசுவாமி. அவரது தியாகமும் வைராக்கியமும் என்றென்றும் நினைத்துப் போற்றத் தக்கவை. தந்தைக்கு ஒரே மகனான அவர் தன் அழகிய மனைவியையும் அளப்பரிய செல்வத்தையும் துறந்து சைதன்யரிடம் சரண்புகுவதற்காக சாந்திபூருக்குச் சென்றார். ஆனால் சைதன்யர் இந்த மர்க்கட வைராக்கியத்தை விட்டு விட்டு, வீட்டிற்குத் திரும்பிச் சென்று சில காலம் வாழும்படி அனுப்பி விட்டார். ரகு நாதரும் சைதன்யரின் வார்த்தைகளைச் சிரமேற்கொண்டு வீடு திரும்பினார். உலகைத் துறக்க வேண்டும் என்ற எண்ணத்தை உள்ளத்தில் அடக்கி வைத்துக் கொண்டு, சாதாரண மனிதனைப்போல் உலக விஷயங்களில் தந்தைக்கு உதவி செய்வது முதலான பணிகளை ஆற்றி வந்தார். வீட்டில் வசித்து வந்தாலும் அவ்வப்பொழுது சைதன்யரின் பக்தர்களைக் காணாதிருக்க அவரால் முடிய வில்லை. தந்தையின் அனுமதி பெற்று அவர்களுடன் ஓரிரு நாட்கள் தங்கித் திரும்புவார். இவ்வாறு நாட்கள் கழிந்தன. உலகைத் துறக்கும் காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார் அவர். அந்தச் சமயத்தில் சைதன்யர் சன்னியாச தீட்சை பெற்றுக்கொண்டு புரியில் வசிக்கலானார். அவரது முக்கியச் சீடரான நித்தியானந்தர் கங்கை க் கரையில் அமைந்திருந்த”கட்தா” என்ற கிராமத்தைத் தலைமையிடமாகக்கொண்டு வைணவ மதத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டார். இறைநாமத்தைப் பாடியவாறு வங்கத்தின் பல பகுதிகளுக்கும் சென்று பலரை வைணவ நெறியில் சேர்த்து வந்தார்.
ஒரு சமயம் நித்தியானந்தர் சீடர்களுடன் பாணிஹாட்டியில் தங்கி யிருந்தார். அப்போது ரகு நாதர் நித்தியானந்தரைக் காண அங்கு வந்தார். அவல், தயிர், பால், சீனி, வாழைப்பழம் முதலியவற்றை இறைவனுக்குப் படைத்து, தனக்கும் சீடர்களுக்கும் பிரசாதம் அளிக்கும் படி நித்தியானந்தர் அவரிடம் கூறினார். ரகுநாதர் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொண்டு நித்தியானந்தருக்கும் அவரது நூற்றுக் கணக்கான பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் உணவளித்து மகிழ்ந்தார். பின்னர் நித்தியானந்தரை வணங்கி விடைபெற்றபோது , நித்தியானந்தர் பரவச நிலையில் ரகுநாதரைத் தழுவிக்கொண்டு, காலம் கனிந்து விட்டது. நீ இப்போது உலகைத் துறந்து, புரியில் இருக்கும் ஸ்ரீசைதன்யரிடம் சென்றால் அவர் உன்னை ஏற்றுக்கொள்வார். உன் ஆன்மீகப் பயிற்சிக்காக உன்னை சனாதன கோசுவாமியின் பொறுப்பில் ஒப்படைப்பார் என்று கூறினார். ரகுநாதர் மகிழ்ச்சிப் பெருக்கால் ஆனந்தக் கூத்தாடினார். பின்னர் வீட்டிற்குச் சென்று, காலம் தாழ்த்தாமல் புரிக்குச் சென்றார். ரகுநாதர் சென்றுவிட்டாலும் வைணவ பக்தர்கள் அந்த நாளை இன்றும் நினைவு கூர்ந்து வருடந்தோறும் பாணிஹாட்டியில் கூடி, தங்களுக்கும் அது போன்ற அருள் கிடைக்க வேண்டும் என்று கருதி, சைதன்யர் மற்றும் நித்தியானந்தரின் பெயரில் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழா பாணிஹாட்டி அவல் திருவிழா” என்று அழைக்கப் படுகிறது.
குருதேவர் இந்த விழாவில் பல முறை கலந்துள்ளார் என்று முன்பே கூறியுள்ளோம். மேலைக் கல்வி பெற்ற பக்தர்கள் வரத் தொடங்கியபின் பல காரணங்களால் சில ஆண்டுகள் அவரால் போக முடியவில்லை. இந்த ஆண்டு பக்தர்களுடன் செல்ல விரும்பி எங்களிடம், அன்று அங்கே ஹரிநாத ஆனந்தச் சந்தை தான்.
நீங்கள்” யெங் பெங்கால்” அப்படிப்பட்ட காட்சியை இது வரை பார்த்திருக்க மாட்டீர்கள், சென்று பார்த்து வருகிறோம்” என்று கூறினார். ராமசந்திரர் போன்ற சில பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் வேறு சிலர் குருதேவரின் தொண்டை வலியைக் கருதி, அவர் போவதை த் தடுக்க முயன்றனர்.
அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக குருதேவர், அதிகாலையில் சிறிது உணவு அருந்தி விட்டுச் செல்கிறேன். அங்கு ஓரிரு மணிநேரம் இருந்துவிட்டுத் திரும்பி விடுவேன். அதனால் எந்த தீமையும் விளையாது. பரவச நிலை ஏற்பட்டால் தொண்டை வலி அதிகமாகும் என்பது உண்மை தான். இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருந்தால் போயிற்று” என்று கூறினார். இது எல்லா மறுப்புகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்து விட்டது. அவர் பாணிஹாட்டி செல்வதற்கான ஏற்பாடுகளில் பக்தர்கள் ஈடுபட்டனர்.
அன்று பாணிஹாட்டித் திருவிழா. இரண்டு படகில் சுமார் இருபத்தைந்து பக்தர்கள் காலை ஒன்பது மணி அளவில் தட்சிணேசுவரத்திற்கு வந்தார்கள். ஒரு சிலர் நடந்து வந்தனர். குருதேவருக்காகத் தனி படகு அமர்த்தப் பட்டிருந்தது. சில பக்தைகள் அதிகாலையிலேயே வந்திருந்தனர். அவர்கள் குருதேவருக்கும் பக்தர்களுக்கும் உணவைத் தயார் செய்வதில் அன்னை சாரதாதேவிக்கு உதவினர். அனைவரும் உணவருந்திவிட்டு பத்து மணிக்குள் புறப்படத் தயாராயினர்.
குருதேவர் உணவு அருந்தி முடிந்ததும் அன்னை சாரதா தேவி தாம் விழாவுக்கு வரலாமா என்று குருதேவரிடம் கேட்டு வருமாறு ஒரு பக்தையை அனுப்பினார்.அதற்கு குருதேவர், நீங்கள் எல்லோரும் வருகிறீர்கள் .விரும்பினால் அவளும் வரட்டும் என்று பதிலுரைத்தார். அன்னை இதைக்கேட்டதும் அவருடன் பலர் போகிறார்கள்” அங்கு கூட்டமும் இருக்கும். அந்தக் கூட்டத்தில் படகிலிருந்து இறங்கி திருவிழாவைக் காண்பது என்பது சிரமம். எனவே நான் வரவில்லை” என்று கூறி விழாவுக்குச்செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டார். குருவேருடன் செல்லவிருந்த ஓரிரு பக்தைகளுக்கு உணவளித்து அவர்களை குருதேவர் செல்லும் படகில் போகும் படிக் கூறினார்.
பாகம்-108
-
மதியம் சுமார் பன்னிரண்டு மணிக்குப் பாணிஹாட்டி போய்ச் சேர்ந்தார்கள். அங்கு கங்கை க் கரையில் உள்ள அரச மரத்தடியில் பக்தர்கள் பலர் கூடியிருந்தனர். அங்கே நாம சங்கீரத்தனம் செய்து பக்தர்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் பலர் அதில் முழுமையாக லயித்துப் பாடியதாகத் தெரியவில்லை. நாம சங்கீர்த்தனம் உயிரற்றதாக ஒலித்தது. நரேந்திரர், பலராம், கிரீஷ், ராமசந்திரர், மகேந்திரர் போன்ற பல பக்தர்கள் பாணிஹாட்டிக்கு வரும்போது ம், வந்த பின்பும் குருதேவரிடம் கீர்த்தனைக் கூட்டத்தை விட்டு விலகி இருக்கும்படி பலமுறை வேண்டிக் கொண்டனர். கலந்து கொண்டால் அவரால் பரவச நிலையைத் தவிர்க்க இயலாது, அது தொண்டை நோயை அதிகரித்து விடும்.
குருதேவர் படகிலிருந்து இறங்கி நேராக மணிசேனின் வீட்டிற்குச் சென்றார். மணிசேனின் வீட்டினர் மகிழ்ச்சியுடன் குருதேவரை வணங்கி, உளளே அழைத்துச் சென்று அமரச் செய்தனர். மேஜை, நாற்காலி, சோபா, கப்பளம், என்று வரவேற்பறை நாகரீகமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. பத்துப் பதினைந்து நிமிடங்கள் அங்கு ஓய்வெடுத்த பின் குருதேவர் பக்தர்களுடன் வீட்டிற்குள் இருந்த ராதாகாந்தர் கோயிலுக்குச்சென்றார்.
வரவேற்பறைக்கு அருகில் கோயில் இருந்தது. அறையில் ஒரு பக்கத்திலுள்ள கதவு வழியாகக்கோயில் மண்டபத்தை அடையலாம். ராதை, கிருஷ்ணர், இரு விக்கிரகங்களும் மிக அழகாக இருந்தன. குருதேவர் அரையுணர்வு நிலையிலேயே கும்பிட்டார். மண்டபத்திலிருந்து நான்கைந்து படிகள் இறங்கினால் விரிந்த முற்றம். முற்றத்திலிருந்து வெளியில் செல்ல வாசல் உள்ளது. திருக்கோயிலில் நுழைந்த வுடனேயே விக்கிரகங்களைப் பார்க்கும் விதத்தில் அந்த வாசல் அமைக்கப் பட்டிருந்தது.குருதேவர் வணங்கிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு குழுவினர் அந்த வாசல் வழியாக நுழைந்து பஜனை செய்யத் தொடங்கினார். எல்லா குழுவினரும் முதலில் அந்தக்கோயிலில் சிறிது நேரம் பாடிவிட்டு, பின்னர் தான் கங்கைக் கரை முதலிய இடங்களில் பாடச் செல்வார்கள் என்று தெரிந்தது. அப்போது அங்கு ஒருவர் வந்தார்- குடுமி வைத்திருந்தார். பூணூல் அணிந்திருந்தார். திலகம் மற்றும் சக்கர அடையாளம் தரித்திருந்தார். நெடிய திடகாத்திரமான உருவம் , வெள்ளை நிறம் , நடுத்தர வயது, தோளில் அங்க வஸ்திரம், நன்றாகச் சலவை செய்யப்பட்ட கரையில்லாத ”ரேலீஸ் 49” வெள்ளை வேட்டி, இடுப்பைச் சுற்றி ஒரு துணி, பார்த்தவுடனே அவர் ஒரு கோசுவாமி., இந்த திருவிழாவில் எப்படியாவது ஓரிரு காசு சம்பாதித்துவிடலாம் என்று வேடம்புனைந்து வந்திருப்பதாகத்தோன்றியது. அவரும் பஜனையில் கலந்து கொண்டார்கள். பஜனை செய்பவர்களை உற்சாகப் படுத்துவதற்கும் கூடியிருப்பவர்களிடம் தமது மகிமையைப் பறை சாற்றிக் கொள்வதற்காகவும் அவர்பரவச நிலை அடைந்ததைப்போன்று காட்டிக்கொண்டு ஹுங்கார நாதம் எழுப்பியவாறு, உடம்பை வளைத்து நடனமும் ஆடினார்.
குருதேவர் ராதாகாந்தரை வணங்கி விட்டு மண்டபத்தின் ஒரு புறம் நின்று கீர்த்தனையைக் கேட்டுக் கொண்டிருந்தார். கோசுவாமியின் உருவத்தையும் வேடத்தையும் போலியான பரவச நிலையையும் கண்டு சிரித்தவாறே நரேந்திரரிடமும் மற்ற பக்தர்களிடமும் மெதுவாக, பாசாங்கைப் பாருங்கள்” என்றார். அவரது கேலிப்பேச்சைக்கேட்ட அனைவரின் உதடுகளிலும் புன்சிரிப்பு தவழ்ந்தது. அவர் தம்மை மிகவும் கட்டுப் படுத்திக் கொண்டு பரவச நிலை அடையாமல் இருந்ததால் அனைவரும் கவலை நீங்கியிருந்தனர்.ஆனால் அடுத்தகணமே கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரே தாவலில் பஜனைக் குழுவின் நடுவில் போய் நின்றார் அவர்! எவ்வாறு எப்போது சென்றார் என்று திகைத்து நின்றனர் பக்தர்கள். அங்கே சென்ற அவர் பரவச நிலையில் புறவுணர்வை இழந்தார். உடனே பக்தர்கள் மண்டபத்திலிருந்து விரைந்து சென்று குருதேவரைச் சுற்றி நின்று கொண்டனர்.
அவர் சில சமயங்களில் அரை உணர்வு நிலையில் சிங்கத்தின் கம்பீரத்துடன் நர்த்தனமாடினார். சிலவேளைகளில் புற உணர்வை முழுவதும் இழந்து அசையாமல் நின்றார். பரவச நிலையில் தானத்துக்கேற்ப கால்களை முன்னும் பின்னுமாக வைத்து நகர்ந்தார். ஆனந்தப் பெருங்கடலில் துள்ளிக் குதித்து நீந்திக் களிக்கும் மீனைப்போன்று விளங்கினார் அவர். அவரது ஒவ்வோர் அங்க அசைவும் அந்த ஆனந்தத்தின் மென்மையையும் இனிமையையும் அள்ளித் தெளித்தது. அந்தக் காட்சி வர்ணனைக்கு அப்பாற்பட்டது. ஆண்களும் பெண்களும் ஆடிய எத்தனையோ அற்புத நடனங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் திவ்ய பரவச நிலையில் தம்மை இழந்து குருதேவர் ஆடிய தாண்டவ நடனத்தில் இருந்த கம்பீரமும் அழகும் ஒரு துளி கூட அவற்றில் இல்லை. தெய்வீகப்பேருணர்வின் வயப்பட்டு அசைந்தும் வளைந்தும் ஆடியதைப் பார்த்தபோது, அவரது உடல் தூல பொருட்களால் ஆனது தானா, என்ற ஐயப்பாடு அனைவரிடமும் எழுந்தது. ஆனந்தப் பெருங்கடலில் உயரமான அலைகள் எழுந்து வீழ்ந்து விரைந்து முன்னோக்கி வந்து, வழியில் வரும் அனைத்தையும் மிதக்கச் செய்வது போலவும், மிணு்டும் அதே கடலில் கரைந்து மறைந்து போவதையும் போன்று இருந்தது அவரது நடனம். உண்மைக்கும் போலிக்கும் இடையே உள்ள வேறுபாட்டினைப் பற்றி யாரும் விளக்க வேண்டியிருக்கவில்லை. கோசுவாமியின் பக்கம் ஒருவரும் திரும்பிக் கூடப் பார்க்க வில்லை, எல்லோரும் குருதேவரைச் சூழ்ந்து கொண்டு, புது உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் பாடத் தொடங்கினர்.
இவ்வாறாக அரை மணி நேரம் சென்றது. குருதேவருக்குச் சற்று உணர்வு திரும்பியது. பக்தர்கள் அவரைக் கீரத்தனை கூட்டத்திலிருந்து வெளியே கொண்டு வர முயன்றார்கள். அங்கிருந்து சற்று தூரத்தில் சைதன்யரின் சீடரான ராகவ பண்டிதரின் வீடு இருந்தது. அங்கே சென்று அவர் பூஜித்த ராதா கிருஷ்ண விக்கிரகங்களையும், சாள கிராமத்தையும் வணங்கிவிட்டுப் படகுக்குத் திரும்ப முடிவு செய்தார்கள். குருதேவரும் அதை ஏற்றுக்கொண்டு மணிசேனின் வீட்டுக்கோயிலிலிருந்து பக்தர்களுடன் புறப்பட்டார்.ஆனால் கீர்த்தனைக் கூட்டம் அவரை விடுவதாக இல்லை, உற்சாகத்துடன் பின் தொடர்ந்து சென்றது. ஓரிரு அடிகள் தான் எடுத்து வைத்திருப்பார், மீண்டும் பரவச நிலையில் ஆழ்ந்து அப்படியே நின்றார். சிறிது உணர்வு திரும்பியதும் பக்தர்கள் அவரை நடக்கும்படி வேண்டுவார்கள், மூன்று நான்கு அடிகள் நடப்பார். மறுபடியும் பரவச நிலை!இவ்வாறு திரும்பத்திரும்ப நிகழ்ந்து கொண்டே இருந்தது. எனவே மிக மெதுவாகவே போக முடிந்தது.
பரவச நிலையில் குருதேவரிடம் அன்று கண்டதைப்போன்ற தெய்வீகப்பேரெழிலை நாங்கள் என்றும் பார்த்ததே இல்லை, தெய்வ உடலின் அழகை விவரிக்க மனி த ஆற்றல் போதாது. பரவச உணர்வின் காரணமாகக் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு மனிதரது உடலில் இத்தகைய மாற்றம் தோன்றும் என்பது நாங்கள் கற்பனையில் கூட நினைக்க முடியாத ஒன்று. நாள்தோறும் நாங்கள் பார்க்கின்ற அந்த உயரமான உருவம் அன்று இன்னும் அதிகமான உயரமாகத்தோன்றியது. கனவில் காணும் உடலைப்போன்று அது லேசாகக் காட்சியளித்தது. சற்றே மாநிறம் கொண்ட அவர் அன்று வெண்ணிற உடலுடையவராகத்தோன்றினார். பரவச உணர்வினால் அவரது திருமுகத்தில் தோன்றிய ஒளி நாலாபக்கத்தையும் ஒளிரச்செய்தது. மகிமையும் கருணையும் அமைதியும் பெருகிய அந்த முகத்தில் உவமை சொல்ல முடியாத தெய்வீகப் புன்னகை தவழ்ந்தது. அதைக் கண்டு தன்வயமிழந்து மற்ற அனைத்தையும் மறந்து எல்லோரும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஆழ்ந்த காவித்துணியை அணிந்திருந்தார் அவர். அந்த நிறமும் அவரது மேனியழகும் இணைந்து, அவர் அக்கினி சுவாலைகளின் நடுவில் இரப்பதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.
மணிசேனின் கோயிலிலிருந்து வெளியே வீதிக்கு வந்ததும் அவரது தெய்வீக அழகையும் அழகிய நடனத்தையும் அடிக்கடி ஏற்படும் பரவச நிலையையும் கண்ட கீர்த்தனைக் குழுவினர் மிகுந்த உற்சாகத்துடனும் ஆனந்தத்துடனும் பாட ஆரம்பித்தனர்.
இறுதி வரியைப் பாடியபோது அவர்கள் தங்கள் விரல்களால் குருதேவரைச் சுட்டிக்காட்டி, மீண்டும் மீண்டும் , இதோ அன்பை அள்ளி வழங்கும் நமது நிதாய் என்று கூறியபடியே மிகுந்த ஆனந்தத்துடன் நடனமாடினர். அவர்களுடைய உற்சாகம் கூட்டத்தின் கவனத்தைக் கவர்ந்தது. அதனால் மக்கள் குருதேவர் இருந்த இடத்திற்குக் கூட்டமாக வரத் தொடங்கினர். குருதேவரைக் கண்டவர்கள் அப்படியே ஈர்க்கப் பட்டு உற்சாகத்துடன் கீர்த்தனையில் சேர்ந்து கொண்டனர். இல்லாவிடில் விவரிக்கவொண்ணா பரவசத்தை உள்ளத்தில் அனுபவித்து, ஆடாமல் அசையாமல் நின்று இமைகொட்டாமல் குருதேவரைப் பார்த்தபடியே பேசாது அவரைப் பின் தொடர்ந்தனர். கூட்டத்தினரின் உற்சாகம் , தொற்றுநோய் போல் சுற்றிலும் பரவத் தொடங்கியது. வேறு சில கீர்த்தனைக் குழுவினரும் இவ்வாறு கவரப்பட்டு இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். இவ்வாறாக பரவச நிலையிலிருந்த குருதேவரும் அவரைச் சூழ்ந்திருந்த பெருங்கூட்டமும் ராகவ பண்டிதரின் குடிலை நோக்கி மெதுவாக நகர்ந்தது.
கங்கை க் கரையிலுள்ள அரச மரத்தடியின் கீழே சைதன்யருக்கும் நித்தியானந்தருக்கும் சில பணியாரங்களைப் படைத்து, அதனை பக்தைகள் குருதேவருக்காகவும் கொண்டு வந்தனர். அவர்கள் ராகவ பண்டிதரின் வீட்டை அடைவதற்கு முன் அங்கே அருவருக்கத் தக்க உருவமுடைய போலி வைணவத் துறவி ஒருவர் திடீரென்று வந்து சேர்ந்தார். பக்தையின் கையிலிருந்து ஒரு பணியாரத்தைப் பறித்து, பரவச நிலையில் திளைப்பவர் போல் காட்டிக்கொண்டு பணியாரத்தை விண்டு, தன் கையினால் குருதேவரின் வாயில் போட்டு விட்டார். அப்போது குருதேவர் பரவச நிலையில் அசையாது நின்று கொண்டிருந்தார். அந்தத் துறவி தொட்டது தான் தாமதம், குருதேவரின் உடல் ஒரு முறை அதிர்ந்தது, அத்துடன் பரவச நிலையும் கலைந்தது. தன் வாயில்போட்ட பணியாரத்தைத் தூவென்று துப்பிவிட்டு வாயையும் கழுவினார். இதெல்லாம்அந்தப்போலித் துறவியால் நேர்ந்தவை என்பதை அறிய யாருக்கும் அதிக நேரம் பிடிக்கவில்லை. எல்லோரும் கோபத்துடனும் வெறுப்புடனும் அவரைப் பார்க்கத் தொடங்கியதும், அந்தத் துறவி அங்கிருந்து மெதுவாக நழுவினார். பிறகு குருதேவர் ஒரு பக்தரிடமிருந்து பிரசாதம் வாங்கிக்கொண்டார். அதில் சிறிதைத் தாம் எடுத்துக் கொண்டு மீதியை அவர்களிடம் கொடுத்தார்.
இவ்வாறு ராகவ பண்டிதரின் வீட்டை அடைய மூன்று மணிநேரம் ஆயிற்று. பின்னர் கோயிலுக்குச்சென்று வணங்கி வழிபாடு செய்து, சற்று ஓய்வெடுத்துக்கொண்டதில் அரைமணிநேரம் கழிந்தது. அவருடன் வந்த மக்கள் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர். கூட்டம் குறைந்ததைக் கண்டதும் பக்தர்கள் குருதேவரைப் படகிற்கு அழைத்து வந்தனர். அங்கும் அற்புதமான நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
பாகம்-109
-
திருவிழாவிற்கு குருதேவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட கொன்னகரைச்சேர்ந்த நவசைதன்ய மித்ரர் அவரைக் காண்பதற்கு அங்குமிங்கும் தேடிக் கொண்டிருந்தார். அப்போது தான் அவர் படகில் இருப்பதைக் கண்டார். படகு புறப்படப்போவதைப் பார்த்ததும் பைத்தியம் பிடித்தவர் போன்று ஓடி வந்து குருதேவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, அருள் புரியுங்கள்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறி அழுதார். அவரது பக்தியைக் கண்ட குருதேவர் பரவச நிலையில் அவரைத் தொட்டார். இந்த ஸ்பரிசத்தால் அவருக்கு எத்தகைய ஆன்மீகக் காட்சி கிடைத்தது என்பது தெரியாது. ஆனால் அடக்க முடியாத அவரது அழுகை மறுகணமே ஆனந்தமாக மாறியது. அவர் புறவுலக உணர்வை இழந்தவரைப்போன்று படகிலே குதித்து நடனமாடினார். பல தோத்திரங்களால் குருதேவரைத் துதித்தார். திரும்பத்திரும்ப அவரை வீழ்ந்து வணங்கினார். சிறிது நேரம் கழிந்ததும் குருதேவர் முதுகைத் தடவிக்கொடுத்தும் பல உபதேசங்கள் அளித்தும் அவரை அமைதிப்படுத்தினார். இதற்கு முன்பே நவசைதன்யர் பலமுறை குருதேவரை தரிசித்திருந்தாலும், இது வரை அவரது அருள் பெறவில்லை, இன்று அதனைப்பெற்றார். அதன் பிறகு அவர் உலக விவகாரங்களைத் தன் மகனிடம் ஒப்படைத்தார். கங்கைக் கரையில் தன் கிராமத்தில் உள்ள குடில் ஒன்றில் வான பிரஸ்தரைப்போல் வசிக்கத் தொடங்கினார். எஞ்சிய நாட்களை சாதனைகளிலும் இறைவன் புகழ்பாடுவதிலும் கழித்தார். அப்போதிலிருந்தே சங்கீர்த்தனத்தின்போது அவருக்குப் பரவச நிலை ஏற்படலாயிற்று. அவரது பக்தியும் பரமானந்தத்தையும் கண்டு பலர் அவரிடம் அன்பும் மரியாதையும் செலுத்தினர். இவ்வாறு குருதேவரின் கருணையால் அவர் பின்னாளில் பிறர் இதயத்தில் பக்தியை ஊட்டவும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் வல்லவர் ஆனார்.
நவ சைதன்யர் விடைபெற்றுச்சென்றதும் படகு புறப்படலாம் என்று குருதேவர் கூறினார். சிறிது நேரத்தில் இருட்டி விட்டது. தட்சிணேசுவரத்தை அடையும்போது மணி சுமார் எட்டரை . குருதேவர் அறைக்குச்சென்று அமர்ந்ததும் பக்தர்கள்அவரை வணங்கி விடைபெற்றுத் திரும்பினர். எல்லோரும் படகில் ஏறிக் கொண்டனர். அப்போது ஓர் இளைஞனுக்குத் தான் செருப்பை விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அதைக்கொண்டு வருவதற்காக அவன் குருதேவரின் அறைக்கு ஓடினான். அவன் திரும்பி வந்த காரணத்தை குருதேவர் கேட்டார். பின்னர், நல்ல வேளையாக, படகு கிளம்புவதற்கு முன்னால் அது நினைவுக்கு வந்தது. இல்லையென்றால் இன்றைய ஆனந்தஅனுபவம் எல்லாம் வீணாகியிருக்கும், என்று வேடிக்கையாகக் கூறினார். அந்த இளைஞன் சிரித்தான். பின்னர் குருதேவரை வணங்கிவிட்டுப் புறப்பட இருந்தபோது குருதேவர், ஆமாம், இன்று எப்படி இருந்தது? ஹரி நாமத்தின் ஆனந்தச் சந்தை கூடியது போன்றிருந்தது அல்லவா? என்று கேட்டார். அந்த இளைஞன் அதனை ஆமோதித்தான். பின்னர் திருவிழாவில் யார் யாருக்கு ப் பரவச நிலை தோன்றிற்று என்று குருதேவர் அவனிடம் குறிப்பிட்டு இளைய நரேனைப் பற்றிக் கூறினார். அந்தக் கறுப்பன் இருக்கிறானே, அவன் சிறிது காலமாகத் தான் இங்கு வருகிறான். அதற்குள் பரவச நிலையை அனுபவிக்கத் தொடங்கி விட்டான். இன்று அவனுடைய பரவச நிலை ஒரு முடிவிற்கே வரவில்லை. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அவனுக்குப் புறவுலக உணர்வே இல்லை.
இப்போதெல்லாம் அருவக்கடவுளில் தான் மனம் லயிப்பதாகக் கூறுகிறான். இளைய நரேன் நல்ல பையன் அல்லவா! நீ ஒரு நாள் அவன் வீட்டிற்குச்சென்று அவனுடன் பேசு, பேசுவாயா? என்று கேட்டார். அந்த இளைஞன் குருதேவர் கூறிய அனைத்திற்கும் சரி, என்று கூறிவிட்டு, ஆனால் ஐயா, நான் பெரிய நரேனை விரும்புவது போல் வேறுயாரையும் விரும்பவில்லை. எனவே இளைய நரேனின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை என்றான். அவ்வாறு கூறியதற்காக குருதேவர் அவனைக் கடிந்து கொண்டு, முட்டாளே, ஏன் இப்படி ஒரு தலைப் பட்சமாகப் பார்க்கிறாய்? இது கீழ்த்தரமானவர்களின் செயல். பலவகையான மலர்களால் இறைவனை அலங்கரிக்கிறோம். அது போல் அவருக்குப் பலவகையான பக்தர்களும் உள்ளனர். அனைவரிடமும் கலந்து பழகிக் களிக்காதது கீழான மனத்தின் அறிகுறி. நீ ஒரு நாள் இளைய நரேனிடம் செல்ல வேண்டும், செல்வாயா? என்று கேட்டார். வேறு வழியில்லாமல் அந்த இளைஞன் சரி, என்று ஒப்புக் கொண்டான். பின்னர் விடைபெற்றுச்சென்றான். குருதேவரின் அறிவுரைப்படி சில நாட்களிலேயே அவன் இளைய நரேனைச்சென்று சந்தித்தான். அவரிடம் பேசியதில் அவனது வாழ்வில் ஒரு சிக்கலான பிரச்சனைக்குரிய தீர்வு கிடைத்ததாம்.
அன்றிரவு படகு கல்கத்தாவை அடைந்தபோது பத்து மணியாகி விட்டிருந்தது.
பக்தைகள் அன்றிரவு அன்னை சாரதாதேவியுடன் தங்கினர். மறுநாள் ஸ்நான யாத்திரை தினம். காளி பிரதிஷ்டை நடந்த அந்த நாளில் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பான விழா நடைபெறும். அந்த விழாவைக்கண்டு களித்தபின் கல்கத்தா திரும்ப பக்தைகள் முடிவு செய்தனர். இரவு உணவு வேளையில் குருதேவர் அவர்களுள் ஒருவரிடம் பாணிஹாட்டி விழாவைப் பற்றிப் பேசலானார். அப்பப்பா என்ன கூட்டம்! பரவச நிலையின் காரணமாக அனைவரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவள்( அன்னை சாரதாதேவி) என்னுடன் வராதது நல்லதாயிற்று. அவளையும் சேர்த்துப் பாத்திருந்தால் ”ஹம்ஸரும் ஹம்ஸியும் வந்திருக்கிறார்கள்” என்று கேலியாக ப்பேசியிருப்பார்கள். அவள் மிக அறிவாளி.
அன்னையின் அறிவுக் கூர்மையைக் காட்டும் மற்றொரு நிகழ்ச்சியும் குருதேவர் கூறினார். லட்சுமி நாராயணன் என்னும் மார்வாரி பக்தர் ஒரு முறை எனக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க நினைத்தார். அதைக்கேட்டபோது என் தலையில் யாரோ ஓங்கி அடிப்பது போன்றிருந்தது. நான் அன்னை பராசக்தியிடம், அம்மா இவ்வளவு காலத்துக்குப் பின் மீண்டும் என்னை ஆசைக்காட்டி மயக்க வந்துள்ளாயா? என்று முறையிட்டேன். சாரதையின் மனத்தைச்சோதிப்பதற்காக அவளைக் கூட்டி வரச் செய்து அவளிடம், இஙே்கே பார்” இவர் பணம் கொடுக்க நினைக்கிறார். என்னால் ஏற்க முடியாது. என்றதும் உனக்குக் கொடுக்க நினைக்கிறார். என்ன வாங்கிக்கொள்கிறாயா? என்று கேட்டேன் . அதற்கு அவள், அதெப்படி முடியும்? நான் ஏற்றுக்கொண்டால் அது நீங்கள் ஏற்றுக் கொண்டதைப்போல் தான்.ஏனென்றால் அதை உங்கள்சேவைக்கும் பிற செலவுகளுக்கும் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. எனவே நீங்கள் அதை ஏற்றுக் கொண்டதாகவே ஆகும். உங்கள் துறவு மனப்பான்மைக்காகத்தான் மக்கள் உங்களை மதிக்கிறார்கள். பக்தி செய்கிறார்கள், அதனால் இந்தப் பணத்தை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாது. என்று கூறினாள். இதைக்கேட்டு அமைதிப் பெருமூச்சு விட்டேன்.
குருதேவர் உணவு அருந்தியபின் பக்தைகள் நகபத்தில் அன்னை சாரதாதேவியிடம் சென்று குருதேவர் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு அன்னை ”காலையில் நான் பாணிஹாட்டிக்குச்செல்வது குறித்து அவர் சொல்லி அனுப்பிய விதத்திலிருந்து நான் அங்கு வருவதை அவர் மனதார விரும்பவில்லை என்று புரிந்து கொண்டேன். இல்லையென்றால்” கட்டாயம்” அவள் வரட்டும்” என்று கூறியிருப்பார் அவர். அவள் விரும்பினால் வரட்டும் என்று கூறி, முடிவை என்னிடம் விட்டபோது, போக வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடுவது நல்லது என்று முடிவு செய்தேன்” என்று கூறினார்.
உடல் முழுவதும் ஏற்பட்ட எரிச்சல் காரணமாக அன்றிரவு குருதேவரால் உறங்க முடியவில்லை.திருவிழாவில் பலதரப்பட்ட மக்கள் அவரது தெய்வத் திருமேனியைத் தொட்டதன் விளைவாக இந்த எரிச்சல் தோன்றியிருக்கலாம். நோய் தீர வேண்டும் என்பதற்காகவோ, வேறு ஏதாவது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளவோ தூய்மையற்ற மனத்துடன் அவரைத் தீண்டினால் அவர் உடல் எரிச்சலால் வேதனைப்படுவதைப் பற்றிப் பலமுறை கூறியிருக்கிறோம். பாணிஹாட்டி திருவிழாவிற்கு மறுநாள் தட்சிணேசுவரத்தில் திருவிழா. நாங்கள் அன்று தட்சிணேசுவரம் செல்ல இயலவில்லை. அன்று நடந்தவற்றை பக்தைகளிடமிருந்து அறிந்தோம். அன்று குருதேவரைக் காண்பதற்காகப் பலர் வந்திருந்தனர். அவர்களுள் அ-வின் தாய் தன் சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்கு உதவுமாறு குருதேவரை வற்புறுத்தி அவருக்கு மிகவும் தொந்தரவு கொடுத்தாள். மதிய உணவு வேளையில் அவள் தன் அருகே அமர்ந்திருந்ததைக் கண்ட அவர் கோபத்துடன், ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. எப்போதும் போல் உணவும் அருந்தவில்லை. உணவு முடிந்தபின் கைகழுவுவதற்காக எங்களுக்குத் தெரிந்த பக்தை ஒருத்தி தண்ணீர் ஊற்றினாள். அப்போது குருதேவர் தனியாக அவளிடம், பக்தியையும் அன்பையும் பெறுவதற்காக மக்கள் இங்கு வருகிறார்கள். இவளுக்கு நான் எப்படி உதவ முடியும். சொல். இனிப்பு முதலானவற்றைக் கொண்டு வந்துள்ளாள். ஆனால் அதில் பொருளாசையும் கலந்துள்ளது. அதில் ஒன்றைக்கூட என்னால் தொட முடியவில்லை. இன்று ஸ்நான யாத்திரை நாள், கடந்த ஆண்டுகளில் இந்த நாளில் எனக்கு எத்தகைய பரவச நிலை ஏற்படும்! இரண்டு மூன்று நாட்கள் ஆழ்ந்த பரவசத்தில் திளைப்பேன்! இன்று எனக்கு ஒன்றுமே ஏற்படவில்லை. பல வகைப்பட்ட மக்கள் வந்துள்ளதால் உயர்ந்த நிலைகள்வர இயலாது” என்றார்.அ-வின் தாய் அன்றிரவும் அங்கே தங்கியதால் இரவிலும் குருதேவரின் வெறுப்பு தீரவில்லை. இரவு உணவுவேளையில் குருதேவர் ஒரு பக்தையிடம், ”அதிகமாகப் பெண்கள் இங்கு இருப்பது நல்லதல்ல மதுர்பாபுவின் மகன் திரைலோக்கியர் இங்கிருக்கிறார். அவர் என்ன நினைப்பார். ஓரிரு பெண்கள் வந்து ஏதோ ஓரிரு நாட்கள் தங்கினால் பரவாயில்லை. இங்கு என்னடாவென்றால் ஒரே பெண்கள் கூட்டம்! இவ்வளவு பெண்கள் கூட்டத்தை என்னால் தாங்க இயலாது. குருதேவரின் எரிச்சலான மனநிலைக்குத் தாங்கள் தாம் காரணம் என்று எண்ணிய பக்தைகள் மிகவும் வேதனை அடைந்தார்கள். பொழுது விடிந்ததும் அவர்கள் கல்கத்தாவிற்குச்சென்று விட்டனர். ஸ்நான யாத்திரை விழா, பூஜை மற்றும் யாத்ரா நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது.ஆனால் மேற்கூறிய காரணத்தினால் பக்தர்களால் ஆனந்தமாக இருக்க முடியவில்லை. உயர்ந்த நிலைகளில் திளைத்தாலும் அன்றாடச்செயல்களில் குருதேவர் எவ்வளவு கவனமாக இருப்பார், எவ்வாறு பக்தர்களின் சொந்த நன்மைக்காக அவர்களைக் கட்டுப்படுத்தி, நல்வழியில் நடத்திச்சென்றார் என்பதை மேற்கூறிய நிகழ்ச்சி காட்டுகிறது.
பாகம்-110
-
கல்கத்தாவிற்கு வருதல்-
-
பாணிஹாட்டி திருவிழாவிற்குப் பின் குருதேவரின் தொண்டைவலி அதிகரித்தது. நீண்டநேரம் அவர் மழையில் நனைந்தாலும் அந்த ஈரத்துடன் பரவச நிலையில் அதிகநேரம் கழித்ததாலும் தான் வலி அதிகரித்து விட்டது என்றும், மறுபடியும் இவ்வாறு நடக்குமானால் விளைவு, ஆபத்தாக இருக்கும் என்றும் டாக்டர்கள் எச்சரித்தார்கள். இனி விழிப்புடன் இருக்க பக்தர்கள் முடிவு செய்து கொண்டனர்.
குழந்தையுள்ளம் படைத்த குருதேவர் அன்றைய முழுநிகழ்ச்சிக்கும் ராமசந்திரதத்தர் போன்றோர் தான் காரணம் என்று பழி சுமத்தி, இவர்கள் மட்டும் இன்னும் சிறிது கண்டிப்பாகத் தடுத்திருந்தால் நான் பாணிஹாட்டிற்குச் சென்றிருப்பேனா? என்று கூறிவிட்டார். ராம்பாபு ஒரு டாக்டர். ஆனால் அவர் மருத்துவத்தொழில் செய்யவில்லை. அவருக்கு வைணவ மரபுகளில் நம்பிக்கை இருந்ததால் குருதேவரைப் பாணிஹாட்டிற்குச் செல்லும்படி அவர் மிகவும் உற்சாகப்படுத்தினார். அதனால் நடந்துவிட்ட தவறில், பெரும்பங்கை அவர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அந்த நாட்களில் ஒரு நாள் எங்கள் நண்பர் ஒருவர் குருதேவரைக்காண தட்சிணேசுவரம் வந்தார். அப்போது குருதேவர் தம் சிறிய கட்டிலில் அமைதியாக அமர்ந்திருந்தார். அவரது தொண்டையில் மருந்து தடவப்பட்டிருந்தது.
எங்கள் நண்பர் கூறினார், தவறு செய்த சிறுவர்களுக்குத் தண்டனையாக இந்த இடத்திலிருந்து அசையக்கூடாது” என்று கூறி ஓர் இடத்தில் உட்கார வைத்துவிட்டால் அவர்கள் எவ்வாறு வருத்தத்துடன் இருப்பார்களோ, அப்படி இருந்தார் குருதேவர். நான் அவரை வணங்கிவிட்டு விவரம் கேட்டேன். அதற்கு அவர் தொண்டையில் மருந்து தடவப் பட்டிருந்ததைக் காட்டி, மெல்லிய குரலில், இதோபார் வலி அதிகரித்துவிட்டது. நான் அதிகம் பேசக்கூடாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். என்று வருத்தத்துடன் கூறினார். நீங்கள் பாணிஹாட்டிற்குச் சென்றதால் தான் வலி அதிகரித்திருக்கும்” என்றேன் நான் . அதற்கு அவர் ஒரு சிறுவனைப்போன்று, என்னவென்று சொல்ல, அன்று கொட்டோ கொட்டென்று மழை, மேலே தண்ணீர், கீழே தண்ணீர். தெருவெல்லாம் சேறும் சகதியும் இந்த லட்சணத்தில்் என்னை அங்கே நாள் முழுவதும் ஆட வைத்து விட்டார் ராம். இத்தனைக்கும் அவர் ஒரு டாக்டர். அவர் மட்டும் கண்டிப்புடன் தடுத்திருந்தால் நான் அங்கு போயிருப்பேனா? என்று கூறினார். நானும், உண்மை தானே, அவர் செய்தது தவறு தான். ஏதோ நடந்தது நடந்து விட்டது. இனி சில காலம் நீங்கள் கவனமாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். என்று சொன்னேன். இதைக்கேட்ட போது அவர் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர், ஆனால்ஒரேயடியாக பேசாமல் இருக்க முடியுமா? எவ்வளவு தொலைவிலிருந்து நீ வந்திருக்கிறாய்? உன்னிடம் ஒரு வார்த்தைக்கூடப்பேசாமல் இருந்தால் எப்படி? என்று கேட்டார். அதற்கு நான், தங்களைப் பார்த்ததிலேயே எனக்கு முழு திருப்தி! நீங்கள் பேசாவிட்டால் தான் என்ன! அதனால் எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. உங்கள் உடல்நிலை குணமாகட்டும். பிறகு நான் எவ்வளவோ கேட்கலாம்” என்றேன். ஆனால் நான் சொன்னதைக்கேட்பது யார்? டாக்டர்கள் கூறியதையும் தம் வலிமையும் மறந்து முன்போலவே அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.
ஜுன், ஜீலை மாதங்கள் உருண்டோடின. ஒரு மாதத்திற்கு மேலாக குருதேவருக்குச் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. ஆனால் தொண்டைவலி குறையவில்லை. மற்ற நாட்களில் அவ்வளவாக இல்லையென்றாலும் அமாவாசை, பௌர்ணமி, ஏகாதசி போன்ற நாட்களில் வலி அதிகமாக இருந்தது. அந்தச் சமயங்களில் திட உணவையோ காய்கறிகளையோ அவரால் உண்ண முடியவில்லை. அத்தகைய நாட்களில் குருதேவர் பாற்கஞ்சியும் ரவைப் பாயசமும் மட்டுமே உண்டு வந்தார். டாக்டர்கள் பரிசோதித்துப் பார்த்துவிட்டு அது clergyman sore-throat என்று கூறினார். அதாவது இரவும் பகலும் அவர் மக்களுக்கு அறிவுரை வழங்கியதால் குரல்வளை க்கு ஓய்வே கிடைக்காமல் அந்தப் பகுதி புண்ணாகிவிட்டது. மதபோதகர்களுக்கு இத்தகைய நோய் வருவது பற்றி மருத்துவ நூல்கள் கூறுகின்றன. டாக்டர்கள் கூறிய மருந்தையும் பத்தியத்தையும் பெரும்பாலும் பின்பற்றினாலும் இரண்டு விஷயங்களில் அவர்களையே மீறியே அவர் நடந்தார். ஒன்று, பக்திவேகம் காரணமாக சமாதியில் ஆழ்வதை அவரால் தடுக்க இயலவில்லை. மற்றொன்று எல்லையற்ற கருணை காரணமாக சம்சார வெம்மையில் துடிக்கின்ற மக்களிடம் பேசுவதையும் தவிர்க்க முடியவில்லை. இறைவனைப் பற்றிய பேச்சு எழுந்தால் போதும், உடலை மறந்து முன்போலவே சமாதியில் ஆழ்ந்து விடுவார். அது போலவே அஞ்ஞான இருளில் மூழ்கி, சோகத்திலும் துயரத்திலும் துடித்து, உய்வதற்கான பாதையை நாடி, அமைதியைத்தேடி மக்கள் தம்மிடம் வரும்போது கருணையின் காரணமாகத் தம்மை மறந்து, முன்போல் அவர்களுக்கு அறிவுரைகள் கூறத் தொடங்கி விடுவார்.
இந்த நாட்களில் ஆன்ம தாகத்துடன் குருதேவரிடம் வந்தவர்களுக்கும் குறைவில்லை. வழக்கமாக வருகின்ற பக்தர்களுடன் நாள்தோறும் புதியவர்கள் ஐந்தாறு பேராவது வந்தார்கள். 1875- ஆம் ஆண்டு கேசவர் முதன் முதலாக குருதேவரிடம் வந்த சில காலத்திலிருந்தே இப்படித்தான் நாள்தோறும் நடந்தது. அன்று தொடங்கி கடந்த பதினாறு ஆண்டுகளாக இவ்வாறு ஆன்ம தாகத்துடன் வருபவர்களுக்கு இடையீடின்றி, உபதேசங்கள் செய்ததால் பல நாட்கள் அவரால் உணவு, குளியல், ஓய்வு போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கூட ஒழுங்காகச்செய்யவில்லை. மேலும் மகாபாவத்தின் காரணமாகதூக்கமும் அவருக்கு மிகக் குறைவு, தட்சிணேசுவரத்தில் அவருடன் வாழ்ந்த நாட்களில் எத்தனையோ முறை இதை நாங்கள் கண்டிருக்கிறோம். இரவு பதினாறு மணிக்குப் படுப்பார். சிறிது நேரத்திலேயே எழுந்து விடுவார். பரவச நிலையில் உலவுவார். சில சமயங்களில் மேற்குக்கதவையும் வேறு சில சமயங்களில் வடக்குக் கதவையும் திறந்து கொண்டு வெளியே செல்வார். சிலவேளைகளில் படுக்கையில் படுத்திருப்பார்.ஆனால் நன்கு விழித்துக் கொண்டிருப்பார். இவ்வாறு குறைந்தது மூன்றுநான்கு முறையாவது படுக்கையை விட்டு எழுந்தாலும் காலை நான்கு மணிக்கு விழித்துவிடுவார். இறைவனை நினைத்து அவனது பெருமையையும் புகழையும் பாடிக்கொண்டு பொழுது புலர்வதற்காகக் காத்திருப்பார். பிறகு எங்களை எழுப்புவார். பகலில் பலருக்கு உபதேசம், இரவில் தூக்கமின்மை என்று அளவுக்கு மிஞ்சிய சிரமத்தால் உடல் நலிவுற்றதில் என்ன வியப்பு இருக்க முடியும்?
உடல் நலம் குன்றிவருவதை குருதேவர் யாரிடமும் கூறவில்லை. ஆனால் அது விஷயமாக அவர் அன்னை பராசக்தியுடன் வாதிடுவதை அவ்வப்போது நாங்கள் கேட்டதுண்டு. ஆனால் அன்று எங்களுக்கு அது முழுமையாகப் புரியவில்லை.நோய்வாய்ப்படுவதற்கு சிலநாட்களுக்கு முன்பு எங்களுள் ஒருவர்தட்சிணேசுவரம் சென்றிருந்தார்.குருதேவர் பரவச நிலையில் சிறிய கட்டிலில் அமர்ந்து கொண்டு , ஒன்றுக்கும் உதவாதவர்களை எல்லாம் இங்கே கூட்டி வந்து விடுவாய், ஒரு படி பாலில் ஐந்து படி தண்ணீர் இந்த ஈர விறகுகள், எரிவதற்காக ஊதி ஊதி என் கண்கள் போய்விட்டன. எலும்புகள் நொறுங்கிவிட்டன. என்னால் இவ்வளவு செய்ய இயலாது. உனக்குவேண்டுமானால் நீயே செய்து கொள். ஓரிரு வார்த்தைகளில்( ஆன்மீக விழிப்பு) பெறக்கூடிய நல்லவர்களை மட்டும் இங்கு கூட்டிவா. என்று யாரிடமோ முறையிடுவது போல் தனக்குத்தானே கூறிக் கொண்டிருந்தார்.
மற்றொரு சமயத்தில் அவர் பக்தர்களிடம் கூறினார், இன்று அன்னையிடம் விஜயர், கிரீஷ், கேதார் ராம், மாஸ்டர் போன்ற சிலருக்குச் சிறிது சக்தியைக்கொடு. புதியவர்கள் முதலில் இவர்களிடம் சென்று ஓரளவு தயாரானபின் என்னிடம் வரட்டும் என்று வேண்டினேன். பிறருக்கு ஆன்மீக உபதேசங்கள் செய்வதில் இவ்வாறு உதவி பெறுவதைப்பற்றி குருதேவர் பக்தை ஒருத்தியிடம் கூறினார். நீ தண்ணீரை ஊற்று. நான் மண்ணைத் தயார் செய்கிறேன். ஆன்ம தாகம் கொண்டோர் கூட்டம் தட்சிணேசுவரத்தில் நாளுக்கு நாள் வளர்ந்தது. தொண்டை வலி, ஆரம்பித்த சில நாட்களுக்கப் பின்னர் ஒரு நாள் குருதேவர் பரவச நிலையில் அன்னை பராசக்தியிடம், இவ்வளவு பேரைக் கூட்டி வரவேண்டுமா? ஒரேயடியாக மக்களைக் கூட்டுகிறாய். சாப்பிடவோ, குளிக்கவோ, எனக்கு நேரம் கிடைக்கவில்லை.(தம் உடலைக் காட்டி) இது கிழிந்தமுரசு. இப்படி இரவும் பகலுமாக அடித்தால் எவ்வளவு நாளைக்குத் தாங்கும்? என்றார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-111
-
1884-ஆம் ஆண்டு இறுதியில் குருதேவரின் பரவச நிலை, பிரேம பக்தி, சமாதி மற்றும் அமுத மொழிகள் பற்றிக் கல்கத்தா முழுவதும் வாய்மொழி செய்தியாகவே பரவி விட்டது. இதனால் அவரைக்காண நாள் தோறும் கூட்டம் கூட்டமாக மக்கள் தட்சிணேசுவரத்திற்கு வரத் தொடங்கினர். ஒரு முறை அவரைப் பார்த்தவர்களுள் பலர் மீண்டும் மீண்டும் வந்தனர். 1885- ஜீலையில் குருதேவரின் தொண்டைப்புண் வருமுன் எவ்வளவு பேர் வந்தனர் என்பதை நிர்ணயிப்பது கடினம். ஏனெனில் ஒரே நாளில், ஒரே சமயத்தில் அவர்கள் எல்லோரும் ஒன்றாக ஒருபோதும் வரவில்லை. அதுவும் ஒரு வகையில் நல்லதாகத் தான் ஆயிற்று. ஏனெனில் தங்கள் அன்புக்குரிய குருதேவரிடம் பலர் அன்புகாட்டுகின்றனர். அவரை நாடே வழிபடத் தொடங்கி விட்டது என்று ஆரம்பத்தில் மகிழ்ந்திருந்த அந்தரங்க பக்தர்கள், கூட்டம் இப்படி அளவுக்கு மீறி ச்சென்ற போது பயமும் வருத்தமும் தான் கொள்ள நேர்ந்தது. ஏராளமான மக்கள் எப்போது இதனை (என்னை) தெய்வமாக மதித்து, பக்தியும் நம்பிக்கையும் செலுத்துகிறார்களோ அப்போது இது (உடல்) மறைந்து விடும்” என்று குருதேவரே அடிக்கடிக் கூறியிருந்தது தான் அவர்களின் பயத்திற்கான காரணம்.
தாம் உடலை உகுக்கப்போகும் காலத்தைப் பற்றி குருதேவர் அவ்வப்போது குறிப்புக் காட்டியிருந்தார். ஆனால் அவரது அன்பினால் குருடாகி விட்டிருந்த நாங்கள் அவற்றைக்கேட்டும் கேட்கவில்லை. புரிந்தும் உணரவில்லை, அவரது கருணையால் நான் எவ்வாறு உயர்ந்தேனோ, அவ்வாறே என் உறவினர், நண்பர், தெரிந்தவர் அனைவரும் அவர் கருணையைப்பெற்று அமைதி காண வேண்டும்” என்ற எண்ணமே எங்கள் உள்ளத்தில் மேலோங்கி இருந்தது. அதனால் அவரது மறைவைப் பற்றி நினைக்கத் தான் நேரம் எங்கே? தொண்டைப்புண் வருவதற்கு நாலைந்து வருடங்களுக்கு முன்பே குருதேவர் அன்னை சாரதாதேவியிடம், எப்போது பாகுபாடின்றி யார் தரும் உணவையும் உண்பேனோ, எப்போது இரவில் கல்கத்தாவில் தங்குவேனோ, எப்போது உணவின் ஒரு பகுதியை முதலில் மற்றவர்களுக்குக் கொடுத்து விட்டு மீதியை உண்பேனோ அப்போது நான் மறைந்து விடும் நாள் தொலைவில் இல்லை” என்பதைப் புரிந்து கொள்” என்று கூறியிருந்தார். தொண்டைப் புண் வருவதற்குச் சிலகாலம் முன்பிருந்து இப்படித்தான் நடக்கத் தொடங்கியது. கல்கத்தாவில் பல இடங்களில் பல பக்தர்களின் அழைப்பை ஏற்று அவர்கள் வீட்டிற்கெல்லாம் சென்ற குருதேவர், சாதத்தைத் தவிர மற்ற எல்லா வகையான உணவையும் எல்லோரிடமிருந்தும் உட்கொள்ளத் தொடங்கினார். எதிர்பாராத விதமாக அவ்வப்போது பலராமின் வீட்டில் இரவைக் கழிக்க நேர்ந்தது. ஒரு முறை நரேந்திரருக்கு அஜீரணக்கோளாறு ஏற்பட்டது. தட்சிணேசுவரத்தில் பத்திய உணவு கிடைக்காது என்றெண்ணி அவர் பல நாட்களாக தட்சிணேசுவரம் வரவில்லை. எனவே ஒரு நாள் காலையில் குருதேவர் அவரை வரவழைத்து தமக்காகச் சமைத்திருந்த சாதத்தை முதலில் அவருக்குக்கொடுத்தார். மீதியைத் தாம் உண்டார். அன்னை சாரதாதேவி இதனை தடுத்து தாம் மீண்டும்சமைத்துக்கொண்டு வருவதாகத் தெரிவித்தா். அதற்கு குருதேவர், முதலில் நரேந்திரருக்குக் கொடுப்பதில் என் மனத்தில் தயக்கம் ஏற்படவில்லை. அதில் குற்றமும் இல்லை. நீ மீண்டும் சமைக்க வேண்டாம்” என்று கூறிவிட்டார். குருதேவர் இவ்வாறு கூறினாலும் முன்பே அவர் கூறியிருந்ததை நினைத்து நான் அமைதி இழந்தேன்” என்று அன்னை பின்னாளில் கூறினார்.
பக்தர்களுக்கு போதனை செய்து செய்து உடல் நலிந்தாலும் குருதேவர் அதில் சிறிதும் தளர்வு காட்டவில்லை. தகுந்த ஒருவர் வந்தால் அது உடனே அவருக்குத் தெரிந்து விடமு். உடனே ஏதோவொரு தெய்வீக சக்தியின் தூண்டுதலினால் தம்மை மறந்து, வந்தவருக்கு உபதேசம் செய்தோ, அவரைத் தொட்டோ ஆன்மீகப் பாதையில் முன்னேறச்செய்வார். சிறிது நேரத்திற்கு, புதியவரின் ஆன்மீக மனோபாவமே குருதேவரின் உள்ளத்தில் பிரதிபலிக்கும். மற்ற மனோபாவங்கள் அவரைவிட்டு விலகிவிடும். பின்னர் புதியவர் ஆன்மீகப் பாதையில் எவ்வளவு தொலைவு முன்னேறியுள்ளார், ஏன் அவரால் அதற்குமேல் செல்ல முடியவில்லை என்பதைத் தமது ஞானக் கண்ணால் கண்டறிவார். புதியவரின் சாதனைப் பாதையிலுள்ள தடைகளை அகற்றி அவரை மேன்மேலும் உயர்ந்த உணர்வுத் தளங்களுக்கு எடுத்துச் செல்வார். இவ்வாறு தமது இறுதி மூச்சுவரை மனிதர்களைசிவனாகக் கண்டு அவர் சேவை செய்தார். தானங்களுள் சிறந்த தானம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்ற அச்சமற்ற உயர்பதவியை அளித்து, அந்த உணர்வொளியில் முழுக்காட்டி சிறுவர் முதல் முதியவர் வரை பலரது ஆன்ம தாகத்தைத் தணித்தார்.
பிறர் மனத்தில் உறைந்து கிடக்கும் எண்ணங்களையும் சம்ஸ்காரங்களையும் அறிந்து கொள்ளும் அற்றல் குருதேவரிடம் எப்போதும் அதிகமாக இருந்தது. உடலின் நலமோ கேடோ அவரது மனநிலையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதற்கு இது தக்கதொரு சான்றுஃ பிறரது மனோரகசியங்களை இவ்வாறு அவர் முற்றிலுமாக அறிந்திருந்தாலும் அவற்றை வெளியில் கூறி தமது ஆற்றலைக் காட்டிக்கொள்ள மாட்டார். எப்போது எவ்வளவு கூறினால் ஒருவருக்கு நன்மை பயக்குமோ, அப்போது அவ்வளவை மட்டும் கூறி அவருக்கு உயர்பாதையைக் காட்டுவார். நற்பேறு பெற்ற சிலருக்கு, அவர்கள் தம்மீது கொண்ட நம்பிக்கையைத் திடப்படுத்துவதற்காக தமது ஆற்றலை வெளிப்படுத்தவும் செய்வார். ஒரு சாதாரண எடுத்துக் காட்டைக் காண்போம்.
குருதேவரின் தொண்டைவலி அதிகரித்து விட்டது என்று கேள்விப்பட்ட எங்களுக்குத் தெரிந்த ஒரு பக்தை 1885- ஆகஸ்டில் குருதேவரைக் காணப் புறப்பட்டார். அந்தப் பகுதியில் வசித்த மற்றொரு பக்தை இதை கேள்விப்பட்டு அவளிடம், குருதேவருக்கு கொடுத்தனுப்ப இன்று வீட்டில் எதுவும் இல்லை” ஒரு செம்பில் பால் தருகிறேன்” எடுத்துச் செல்வீர்களா? என்று கேட்டாள். முன்னவள் மறுத்து, தட்சிணேசுவரத்தில் நல்ல பால் நிறைய கிடைக்கும். நாள்தோறும் பாலுக்கு ஏற்பாடு செய்திருப்பது எனக்குத் தெரியும். அது மட்டுமின்றி இங்கிருந்து எடுத்துச் செல்வதும் சிரமம். எனவே பாலை எடுத்துச் செல்லத்தேவையில்லை என்று கூறிச் சென்று விட்டாள்.
அந்த பக்தை தட்சிணேசுவரத்தை அடைந்தபோது தொண்டைவலியின் காரணமாக குருதேவர் பாற்கஞ்சியைத் தவிர வேறெதுவும் உண்ண முடியாத நிலையிலிருப்பதை க்டாள். அன்று ஏதோ காரணத்தால் பால்காரி தினசரி கொடுக்கின்ற பாலையும் கொடுக்கவில்லை. அதனால் அன்னை சாரதா தேவி மிகவும் கவலையுடன் இருந்தார். இதையெல்லாம் கண்ட அந்த பக்தை தான் பாலைக் கொண்டு வராமல் போய்விட்டோமோ என்று மிகவும் வருந்தினாள். எங்காவது பால் கிடைக்குமா என்று விசாரித்தபோது, கோயிலுக்கு அருகில்” பாண்டே பாட்டி” என்ற வட இந்தியப்பெண்ணிடம் பசுமாடு இருப்பதாகவும்அவள் பால் விற்பனை செய்வதாகவும் கேள்விப் பட்டாள். அங்குப்போனபோது அவளிடம் கால் லிட்டர் பால் தான் இருந்தது. மீதியெல்லாம் விற்று விட்டிருந்தது. அதையும் காய்ச்சி விட்டிருந்தாள் அந்தப் பெண். மிகவும் தேவை என்று கூறி பக்தை அந்தப் பாலை வாங்கி வந்தாள். அந்தப் பாலில் கஞ்சி காய்ச்சியே குருதேவர்உணவு கொள்ள நேர்ந்தது. உணவிற்குப் பின் குருதேவர் கைகழுவிக்கொள்ளத் தண்ணீர் ஊற்றிக்கொடுத்தாள் அந்த பக்தை. பின்னர் குருதேவர் அவளைத் தனியாக அழைத்து, தொண்டைவலி மிகுந்து விட்டது. ஏனம்மா, உனக்குத் தான் நோய் தீர்க்கும் மந்திரம் தெியுமே! அதை ஓதி, தொண்டையைச் சற்று தடவிக் கொடேன்” என்றார். அந்த பக்தைக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவர் விரும்பியது போலவே அவரது தொண்டையைத் தடவிக்கொடுத்தாள். பின்னர் அன்னை சாரதாதேவியிடம் வந்து, எனக்கு இந்த மந்திரம் தெரியும் என்பதை அவர் எப்படி அறிந்தார்? கோஷ்பாரா சமூகத்தைச்சேர்ந்த ஒரு பெண்ணிடமிருந்து உலகியல் ஆசைகளை நிறைவேற்ற உதவும் என்று கருதி,, நான் அதனைக் கற்றுக் கொண்டேன். பின்னர் , பயன் கருதாமல் இறைவனை வழிபடுவது தான் வாழ்க்கையின் மிக உயர்ந்த ஆசை என்பதை அறிந்து அந்த மந்திரத்தைப் பயன்படுத்தாமல் விட்டு விட்டேன். என் வாழ்க்கை முழுவதையும் அவரிடம் 4றியிருக்கிறேன். எங்கே, கர்ததாபஜா மந்திரத்தை ஏற்றுக்கொண்ட விஷயத்தைக்கூறினால் , அவர் என்னை ஒதுக்கிவிடுவாரோ என்று பயந்து இதை மட்டும் சொல்லாமல் வைத்திருந்தேன். எப்படி அவருக்கு இது தெரிந்தது” என்று கேட்டாள். அன்னை இதைக்கேட்டுச் சிரித்தவாறே, அவருக்கு எல்லாம் தெரியும். ஆனால் மனமும் மொழியும் ஒருங்கிணைந்து நல்ல நோக்கத்திற்காக ஒன்றைச் செய்கின்ற யாரையும் அவர் வெறுப்பதில்லை. குருதேவரிடம் வருமுன் நானும் உன்னைப்போன்றே அந்த மந்திரத்தைக் கற்றிருந்தேன். அதைத் தெரிவித்தபோது அவர் என்னிடம், மந்திரத்தை ஏற்றுக்கொண்டாய்” அதில் தவறில்லை. உன் இஷ்ட தெய்வத்தின் திருவடிகளில் சமர்ப்பித்து விடு” என்று கூறினார்.
ஆகஸ்டு கழிந்து செப்டம்பர் வந்து விட்டது. குருதேவரின் நோய் அதிகரித்ததே தவிர குறைய வில்லை. எவ்வளவோ யோசித்தும் பக்தர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்தச் சமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவர்களுக்கு ஒரு வழியைக் காட்டியது. பாக் பஜாரில் வசிக்கும் ஒரு பக்தை அன்று பக்தர்களைத் தன் வீட்டிற்கு விருந்துண்ண அழைத்திருந்தாள்.குருதேவரை அழைத்துவர அவளுக்கு ஆசைதான். அவரது உடல்நிலை கருதி அந்த எண்ணத்தை விட்டு விட்டாள். இருப்பினும் ஒரு முறை அவர் வீட்டிற்கு வந்துவிட்டுப்போனாலும் போதும் என்று கருதி பக்தர்ஒருவரை அது விஷயமாக தட்சிணேசுவரத்திற்கு அனுப்பினாள். இரவு ஒன்பது மணியாகியும் அவர் திரும்பவில்லை. எனவே விருந்தினர்களை மேலும் காக்க வைக்காமல் அவர்களுக்கு உணவு பரிமாறினாள். அந்தச் சமயத்தில் தட்சிணேசுரம் சென்றிருந்தவர் திரும்பி வந்தார். குருதேவருக்குத் தொண்டைப் பகுதியிலிருந்து ரத்தம் வெளியேறியதால் அவரால் வர இயலாது என்று தெரிவித்தார். இதனைக்கேட்ட நரேந்திரர், கிரீஷ், ராம் , தேவேந்திரர், மாஸ்டர் முதலிய அனைத்து பக்தர்களும் கவலையுற்றனர். தங்களுக்குள் கலந்தாலோசித்து குருதேவரைச் சிகிச்சைக்காகக் கல்கத்தாவிற்கு அழைத்து வருவது என்றும், அவர் தங்குவதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்துவது என்றும் முடிவு செய்தனர். நரேந்திரர் மிகவும் கவலையுற்றிருந்த தைக் கண்ட ஓர் இளைஞர் அதற்குரிய காரணத்தைக்கேட்டார். நம் அனைவரின் ஆனந்தத்திற்கும் ஊற்றாக விளங்குகின்ற அவர் இம்முறை நம்மைவிட்டு நீங்கப்போகிறார் என்று தான் தெரிகிறது. நான் என் மருத்துவ நண்பர்களுடன் பேசியும் மருத்துவ நூல்களைப் படித்தும் பார்த்ததில், இத்தகைய தொண்டைவலி புற்றுநோயாக முதிரும் என்பது தெரிய வருகிறது. அவரது தொண்டையிலிருந்து ரத்தம் வந்தது என்பதை க்கேட்டவுடன் அது புற்றுநோயாகத் தான் இருக்கும் என்ற ஐயம் எழுகிறது- புற்றுநோய்க்கான மருந்து இதுவரை கண்டுப் பிடிக்கப் படவில்லை என்றார். மறு நாள் காலையில் சற்று முதிய பக்தர்கள் சிலர் தட்சிணேசுவரத்திற்குச் சென்று குருதேவரிடம், சிகிச்சைக்காக அவர் கல்கத்தா செல்லவேண்டும் என்று வேண்டிக்கொண்ட போது குருதேவர் இசைத்தார். பாக்பஜாரில் தூர்க்காசரண் தெருவில் உள்ள சிறிய வீட்டின் மாடியில் இருந்து பார்த்தால் கங்கைத் தெரியும் என்பதற்காக அந்த வீட்டை வாடகைக்கு அமர்த்தி தாமதிக்காமல் குருதேவரை அங்கு அழைத்துச்சென்றனர். கங்கை கரையில் காளிக்கோயிலின் திறந்த வெளியில் தோட்டத்தின் காற்றை அனுபவித்த குருதேவர் அந்த சிறிய வீட்டிற்கும் நுழைந்ததுமே, தமக்கு அந்த இடம் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு, நடந்தே பலராமின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். குருதேவரை அன்புடன் வரவேற்ற பலராம் தகுந்த வீடு கிடைக்கும் வரை தம் வீட்டிலே தங்கிக்கொள்ளலாம் என்று கூறினார். குருதேவரும் அதற்குச் சம்மதித்தார். பக்தர்கள் வீடு தேடத் தொடங்கினர். அதே வேளையில், நேரத்தை வீணாக்காமல் கல்கத்தாவின் பிரபல மருத்துவர்களை வரவழைத்து குருதேவரின் நோயைப் பற்றி அவர்களின் கருத்தையும் கேட்டனர். கங்கா பிரசாத், கோபிமோகன், துவாரகானாத், நவகோபால், போன்ற மருத்துவர்கள் வந்து சோதித்துப் பார்த்துவிட்டு அது ரோகிணி எனப் படும் குணப்படுத்த முடியாத நோய் என்று முடிவு செய்தனர். கங்கா பிரசாதரை ஒருவர் ரகசியமாக விசாரித்தார். அதற்கு அவர் ரோகிணி எனப்படும் நோய் மேலை மருத்துவ உலகில் புற்றுநோய் என்று அழைக்கப் படுகிறது.
சாஸ்திரங்களில் இதற்கான சிகிச்சை முறை சொல்லப் பட்டிருப்பினும் இது குணப்படுத்தக் கூடிய நோய் அல்ல என்றே கருதப்படுகிறது, என்று கூறினார். அவர்கள் எந்த நம்பிக்கையும் கொடுக்கவில்லை. அதிகப்படியான குருதேவரின் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்பதால் ஹோமியோபதி சிகிச்சை அளிக்க பக்தர்கள் எண்ணினர். ஒரு வாரத்திற்குள் சியாம்புகூர் தெருவிலுள்ள கோகுல் சந்திர பட்டாசாரியரின் வீடு வாடகைக்கு அமர்த்தப் பட்டது. சிறிது காலம் பிரபல டாக்டர் மகேந்திர லால் சர்க்கார் சிகிச்சை செய்வதென்றும் முடிவு செய்யப் பட்டது.
குருதேவர் கல்கத்தாவிற்கு வந்திருக்கும் செய்தி நகரம் முழுவதும் பரவியது. தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அவரைக் காண கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். பலராமின் வீடே திருவிழாக்கோலம் பூண்டது.
மருத்துவர்களின் எச்சரிக்கையாலும், பக்தர்களின் வேண்டுகோளாலும் அவர் அவ்வப்போது பேசாமல் இருக்கவே செய்தார். ஆனால் பேசத் தொடங்கிய போது, அந்த ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கண்டால், அவர் இதற்காகத் தான் கல்கத்தாவிற்குவந்தாரோ என்று தோன்றும். தட்சிணேசுவரம் வரைசென்று என்னை எல்லோராலும் பார்க்க முடியாது, நானே உங்கள் வாசலுக்கு வந்து ஆன்மீகத்தை வழங்குகிறேன் என்று அறிவுறுத்துவதைப் போலிருந்தது அவரது செயல். ஒரு வாரகாலம் குருதேவர், பலராமின் வீட்டில் இருந்தார். தினசரி காலையிலிருந்து மதிய உணவு வரை, பின்னர் ஓரிரு மணிநேர ஓய்விற்குப் பிறகு இரவு உணவு முடிந்து படுக்கச் செல்லும்வரை அவர் எத்தனையோ பேரின் ஆன்மீகப் பிரச்சனைகளைத் தீரத்து வைத்தார். இறைவனைப் பற்றிய விஷயங்களைப்பேசி பலரை ஆன்மீகப் பாதையில் ஈர்த்தார். பாடல்களையும் பஜனைகளையும் கேட்டு சமாதி நிலையில் ஆழ்ந்து,ஆன்ம தாகம் கொண்ட பலருக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் அளித்தார். எல்லா நேரங்களிலும் அவருடன் இருக்கும்பேறு எங்களுள் யாருக்கும் கிடைக்கவில்லை. குருதேவருக்கும் பக்தர்களுக்கும் வேண்டிய வசதிகளைக் கவனிக்கும் பொறுப்பு காரணமாக பலராம் பாபுவிற்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அந்த வாரத்தில் நிகழ்ந்த அனைத்தின் முழுவிவரத்தையும் எங்களால் கூற இயலாது. குருதேவர் அங்கே எவ்வாறு நாட்களைக் கழித்தார் என்பதை விளக்கக் கூடிய நிகழ்ச்சி ஒன்றைக்கூறி நாம் மன நிறைவு கொள்வோம்.
அப்போது நாங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தோம். அதனால் வாரத்தில் ஓரிரு முறைதான் குருதேவரைக் காண நேரம் கிடைத்தது. ஒரு நாள் பிற்பகலில் அங்குச் சென்றோம். முதல் மாடியிலுள்ள பெரிய கூட்டம் முழுவதிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கிரீஷும் காளி பாதரும், ஓ! நிதாய்! என்னைப் பிடித்துக்கொள். என்ற பாடலைப் பாடிக் கொண்டிருந்தனர்.எப்படியோ மிகவும் சிரமப்பட்டு உள்ளே நுழைந்தோம். குருதேவர் பரவச நிலையில் கிழக்குத் திசையை நோக்கி அமர்ந்திருந்தார். அவரது முகத்தில் தெய்வீகப் புன்னகை தவழ்ந்தது. வலது காலைத் தூக்கி நீட்டி வைத்திருந்தார். அமர்ந்திருந்த பக்தர் ஒருவர் அதனை மிகுந்த சிரத்தையுடன் தன் நெஞ்சில் தாங்கிக் கொண்டிருந்தார். அந்த மனிதரின் மூடிய கண்களிலிருந்து பெருகிய கண்ணீர், கன்னங்களையும் மார்பையும் நனைத்தது. நிசப்தமான அந்த அறையில் ஒரு தெய்வீகச் சூழ்நிலை உறைந்திருந்தது. பாட்டு தொடர்ந்தது.
பாடல் நிறைவுற்றது. பின்னர் சிறிது புறவுணர்வு திரும்பியதும் தமக்கு முன்னால் அமர்ந்திருந்தவரிடம் ”ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்” என்று மூன்று முறை கூறும்படி குருதேவர் கூறினார். மீண்டும் மீண்டும் இவ்வாறு மும்முறை கூற வைத்தார். அதன்பின் சிறிது நேரத்தில் முழுமையாகப் புறவுணர்வு பெற்று பேசத் தொடங்கினார். குருதேவருக்கு முன்னால் அமர்ந்திருந்தவர் டாக்காவில் ஏதோ கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்து வந்த நித்ய கோபால் கோசுவாமி என்று விசாரித்து த் தெரிந்து கொண்டோம். குருதேவரின் உடல் நிலையைப் பற்றிக்கேள்விப்பட்டு அவரைக் காண வந்திருந்தார். நல்ல பக்தர். எடுப்பான தோற்றம் உடையவர்.
பாகம்-112
-
சியாம் புகூரில் குருதேவர்
-
குருதேவருக்காக அமர்த்தப்பட்ட வாடகை வீடு கிழக்கு மேற்காக அமைந்திருந்த சியாம்புகூர் தெருவில் வடக்குப் புறத்தில் இருந்தது. வீட்டிற்குள் நுழைந்ததும் இரண்டு பக்கங்களிலும் வராந்தாவும் ஒரு சிறு திண்ணையும் காணப்படும். அதைக் கடந்து சில அடிகள் முன்னே சென்றால், வலது பக்கத்தில் மாடிப் படிகளும் அதன்முன் ஒரு முற்றமும் உள்ளன. முற்றத்தின் கிழக்குப் பக்கம் இரண்டு மூன்று சிறிய அறைகள். படிகளின் வழியே மேலே சென்றால், வலது ப் பக்கத்தில் ஒரு நீண்ட கூடம் தெற்குவடக்காக இருந்தது. அது பொதுமக்களுக்காகப் பயன் படுத்தப் பட்டது. இடப்பக்கத்தில் ஒரு பாதை உள்ளது. இந்தப் பாதை கிழக்கிலும் மேற்கிலும் உள்ள அறைகளுக்கு நம்மை இட்டுச்செல்லும். அந்தப் பாதையில் முதலில் இருந்த ”வரவேற்பறை” என்று அழைக்கப் பட்ட அறையில் தான் குருதேவர் தங்கியிருந்தார். இந்த அறையின் வடக்கிலும் தெற்கிலும் வராந்தாக்கள். வடக்கு வராந்தா அகலமானது. இதன் மேற்கில் இரண்டு சிறிய அறைகள். அவற்றுள் ஒன்றில் பக்தர்கள் இரவு தங்குவார்கள். மற்றொன்றில் அன்னை சாரதாதேவி இரவில் தங்குவார். இவற்றைத் தவிர பொதுமக்களுக்கான கூடத்தின்மேற்கில் ஒரு குறுகிய வராந்தா இருந்தது. குருதேவரின் அறைக்குக் கிழக்கில் மொட்டை மாடிக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள் இருந்தன. மொட்டை மாடிக் கதவின் அருகே ஆறு அடிக்கு ஆறுஅடி கொண்டதும் மூடிக் கிடந்ததுமான மாடி அறை ஒன்று இருந்தது. அன்னை பகலில் அங்கு தான் தங்கி,குருதேவருக்கு வேண்டிய உணவைச் சமைப்பார்,
1885, செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் குருதேவர் பலராமின் வீட்டிலிருந்து இங்கு வந்தார். இங்கே அவர் மூன்று மாதங்களுக்குச் சற்று அதிகமாகத் தங்கினார். பின்னர் டிசம்பரில் காசிப் பூர்த்தோட்டத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.
சியாம்புகூர் வீட்டிற்கு வந்த ஓரிரு நாட்களுள் முன்பே முடிவு செய்தபடி பக்தர்கள் குருதேவரின் சிகிச்சைக்காக டாக்டர் மகேந்திரலால் சர்க்காரை வரவழைத்தனர். மதுர்பாபு உயிரோடிருந்த காலத்தில் அவரது குடும்பத்தினரின் சிகிச்சைக்காகச் சிலவேளைகளில் தட்சிணேசுவரத்திற்கு வந்தபோது, டாக்டர் மகேந்திரலால் குருதேவரை ஓரிரு முறை சந்தித்திருந்தார். ஆனால் அது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த ஒன்று. பிரபலமான ஒரு டாக்டருக்கு அது நினைவிருக்கும் என்று சொல்ல முடியாது. ஆகவே அவர் யாருக்குச் சிகிச்சை செய்யப்போகிறார் என்பதைத் தெரிவிக்காமலேயே பக்தர்கள் அவரை அழைத்து வந்தனர். ஆனால் அவர் குருதேவரைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார். பின்னர் குருதேவரை நன்றாகச்சோதித்து, நோயைக் கண்டறிந்து அதற்குரிய மருந்துகளையும் பத்திய உணவுகளையும் விவரித்தார். அதன் பின் சிறிது நேரம் தட்சிணேசுவர காளிகோயிலைப் பற்றியும், ஆன்மீக விஷயங்களையும் பேசிவிட்டு விடைபெற்றார். போகும்போது குருதேவரின் உடல்நிலை பற்றி நாள்தோறும் காலையில் தம்மிடம் தெரிவிக்கும்படிக் கூறிவிட்டு, பக்தர்கள் கொடுத்த கட்டணத்தையும் பெற்றுச் சென்றதாக நினைவில் உள்ளது. ஆனால் இரண்டாம் நாள் வந்தபோது பக்தர்கள் தான் குருதேவரை இங்கு சிகிச்சைக்காக அழைத்து வந்திருப்பதையும், எல்லாச் செலவுகளும் அவர்களுடையதே என்பதையும் பேச்சுவாக்கில் அவர் அறிய நேர்ந்தது. அவர்களின் குருபக்தியைக் கண்டு மகிழ்ந்த அவர் அதன்பிறகு பணம் வாங்க மறுத்து, பண்ம் வாங்காமல் அவருக்குச் சிகிச்சை செய்வதன் மூலம் என்னால் முடிந்த அளவு இந்தத் தொண்டில் உதவுகிறேன்” என்று கூறிவிட்டார்.
இவ்வாறு மிக்க அனுபவசாலியான டாக்டரின் உதவி கிடைத்ததும் பக்தர்களால் கவலையற்று இருக்க முடியவில்லை. குருதேவரின் பத்திய உணவைக் கவனமாக சமைப்பதற்கும் பகல்வேளையைப்போலவே இரவிலும் அவரைக்கவனித்துக் கொள்வதற்கும் ஆட்கள் தேவை என்பது சில நாட்களுக்குள் அவர்களுக்குப் புரிந்தது.
பணத்தைச் செலவழிப்பதனாலேயே இந்தத்தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாது என்பதை உணர்ந்தனர். எனவே உணவு சமைக்க அன்னை சாரதாதேவியை தட்சிணேசுவரத்திலிருந்து அழைத்து வருவது என்றும் பக்த இளைஞர்கள் இரவில் குருதேவருக்குச்சேவை செய்வது என்றும், முடிவு செய்யப் பட்டது. ஆனால் இதில் சில சிக்கல்கள் எழுந்தன. பெண்கள் வசிப்பதற்கானத் தனியான இடம் அந்த வீட்டில் எதுவும் இல்லை. எனவே அன்னை தனியாக அங்கே எவ்வாறு வசிப்பார், அது போலவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பக்த இளைஞர்கள் நாள்தோறும் அங்குவந்து தூக்கமில்லாமல் இரவைக் கழித்தால் அவர்களின் பெற்றோர் என்ன சொல்வார்கள்?
அன்னை சாரதாதேவி மிகுந்த கூச்ச சுபாவம் உடையவர். எனவே பக்தர்களுள் பலர், அவர் அங்கு வருவாரா என்று பெருத்த சந்தேகம் கொண்டனர். அன்னை இத்தனை வருடங்களாக நகபத்தில் தங்கியிருந்து, தினமும் குருதேவருக்கான சேவைகள் செய்து தான் வந்தார். ஆனால் குருதேவரே அறிமுகப் படுத்தி வைத்தஓரிரு பக்த இளைஞர்களைத் தவிர, வேறு யாரும் அவரை கண்டதோ அவருடன் பேசியதோ இல்லை. அந்தச் சிறிய அறையில் நாள் முழுவதும் தங்கி குருதேவருக்கும் பக்தர் களுக்கும் பலவகையான உணவை நாள்தோறும் இரண்டு வேளை சமைத்து அளிப்பதை யாருமே அறிந்திருக்கவில்லை. அதிகாலையில் மூன்று மணிக்கு பிறர் எழுமுன் எழுந்து, காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, கங்கையில் குளித்து விட்டு, நகபத்தினுள் சென்று விட்டால் பின்னர் அவர் வெளியே வருவதில்லை. ஆரவாரமின்றி விரைவாகத் தம் வேலைகளை முடித்துவிட்டு, ஜப தியானங்களில் ஈடுபடுவார். ஒரு நாள் அதிகாலை இருட்டில் கங்கையில் குளிக்கச்சென்றபோது படித்துறையில் கிடந்த முதலையை மிதிக்க இருந்தார். அதிர்ஷ்டவசமாக அன்னையின் காலடி ஓசையைக்கேட்டு அந்த முதலை நீரினுள் சென்றுவிட்டது. அன்று முதல் விளக்கு எடுத்துக் கொள்ளாமல் அவர் கங்கைக்குச்செல்வதில்லை.
இவ்வாறு இது வரை யார் கண்ணிலும் படாமல் வாழ்ந்து வந்த அன்னை, திடீரென்று கூச்சத்தை விட்டுவிட்டு, அந்த வீட்டில் ஆண்களுடன் நாள் முழுவதும் வசிக்க இயலும் என்பதை பக்தர்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க இயலவில்லை. வேறு வழியின்றி இது பற்றி குருதேவரிடம் பேசினார்கள். அன்னையின் இயல்பை அறிந்திருந்தஅவர், அவளால் இங்கு வந்து வசிக்க முடியுமா? அவளையே கேட்டுப் பாருங்கள். சூழ்நிலையை நன்றாகப் புரிந்து கொண்ட பின், அவள் இங்கே வர விரும்பினால் வரட்டும், என்றார். தட்சிணேசுவரத்திற்கு அன்னையிடம் ஆள் அனுப்பினார்கள்.
எப்போது எப்படியோ அப்போது அப்படி எங்கே எப்படியோ அங்கே அப்படி, யாரிடம் எப்படியோ அவரிடம் அப்படி” என்பார் குருதேவர். இடம் , பொருள், காலம் தகுதிக்கேற்ப வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி வாழ முடியாவிட்டால் அமைதி பெறுவதோ, இலக்கை அடைவதோ முடியாத காரியமாகி விடும். நாணம் என்னும் ஊடுருவ முடியாத திரைக்குப் பின்னால் எப்பேர்தம் அன்னை இருந்தபோதிலும் , குருதேவரின் மேற்கூறிய உபதேசத்திற்கு ஏற்பத் தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் படிப்பினையை ப் பெற்றிருந்தார். தேவைஏற்பட்டால், தமது பழைய வழக்கத்தையும் வாழ்க்கை முறையையும் உதறித்தள்ளிவிட்டு , விரும்பிய ஒன்றை அச்சமற்று ஏற்று நடக்க அன்னை எந்த அளவு தகுதியுடையவராக இருந்தார் என்பதை அவர் முதன் முறையாக தட்சிணேசுவரத்திற்கு வந்தபோது நடந்து கொண்டதிலிருந்தும் இங்கே விவரிக்கப்போகின்ற நிகழ்ச்சியிலிருந்தும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
பாகம்-113
-
சிக்கன இயல்பு உடையவராக இருந்தாலும் பணப் பற்றாக்குறையின் காரணமாகவும் , வேறு பல காரணங்களாலும் அன்னை பலமுறை ஜெயராம் பாடி மற்றும் காமார் புகூரிலிருந்து தட்சிணேசுவரத்திற்கு நடந்தே வரவேண்டியிருந்தது. இப்படி வரும் போது முதலில் ஜகானாபாத்தை (ஆரம்பாக்) அடைய வேண்டும். பின்பு எட்டு அல்லது பத்துமைல் பரப்புள்ள தேலோபேலோ வெட்ட வெளியைக் கடந்து தாரகேசுவரம் வரவேண்டும். அதன் பின் கைகலார் பரந்த வெளியைக் கடந்து வைத்தியவாடி வந்து, கங்கையைக் கடக்க வேண்டும். அந்த இரண்டு வெளிகளும் கொள்ளைக்காரர்களின் கூடாரமாக இருந்தது. காலை, பகல், மாலை என்று எந்த நேரமும் இவர்கள் கையில் சிக்கி வழிப்போக்கர்கள் கொலையுண்டதைப் பற்றி மக்கள் இப்போதும் பேசுகிறார்கள். தேலோ,பேலோ என்ற இரண்டு அண்டை கிராமங்களுக்கு சுமார் இரண்டு மைல் தொலைவில், அந்த வெட்ட வெளியின் நடுவில், பற்களை வெளியில் நீட்டியபடி ஒரு பயங்கரமான காளியின் திருவுருவம் உள்ளதை இன்றும் காணலாம்.அவளை தேலோபேலோவில் கொள்ளைக்காரர்களின் காளி” என்று அழைக்கின்றனர். கொள்ளைக் கூட்டத்தினர் இந்தக் காளியை வழிபட்டு விட்டுத்தான் கொள்ளை, கொலை போன்ற செயல்களில் ஈடுபடுவதாகச் சொல்லப் படுகிறது. அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த இரண்டு பகுதிகளிலும் மக்கள் கூட்டமாகவே செல்வார்கள்.
ஒரு முறை குருதேவரின் சகோதரரான ராமேசுவரரின் இளைய மகன், மகள் மற்றும் பலருடன் அன்னை காமார்புகூரிலிருந்து தட்சிணேசுவரத்திற்கு வந்தார். எல்லோரும் ஆரம்பாகை அடைந்தனர். இரவாக இன்னும் நேரம் உள்ளது. அதற்குள் தேலோபேலோ வெளியைக் கடந்து விடலாம். என்று அவர்கள் இரவில் ஜகானாபாத்தில் தங்காமல்மேலே நடக்க விரும்பினர். நடந்து நடந்து அன்னை மிகவும் சோர்வுற்றிருந்தார். ஆனாலும் எதுவும் கூறாமல் தொடர்ந்து நடந்தார். நான்கு மைல் செல்வதற்குள், நடக்க இயலாமல் பின் தங்க ஆரம்பித்தார். உடன் வந்தவர்கள் சற்றுக் காத்திருந்து அன்னை வந்து சேர்ந்ததும், விரைவாக நடக்கும்படிக் கூறிவிட்டு முன்போல் நடக்கலாயினர். அந்த வெளியின் நடுப்பகுதிக்கு வந்தபோது அன்னை மிகவும் பின் தங்கி விட்டார். அதைக் கண்ட அவர்கள் மீண்டும் அன்னைக்காகக் காத்திருந்து அவர் வந்ததும், இப்படி மெதுவாக நடந்தால் இருட்டுமுன் இந்த வெளியைக் கடக்க முடியாது. எல்லோரும் கொள்ளையர் கையில் சிக்கிக் கொள்வோம்” என்று கூறினர். பிறருக்குத் தொல்லையும் அச்சமும் உண்டாகத் தாம் காரணமாகி விட்டதை உணர்ந்த அன்னை அவர்களிடம், தனக்காகக் காத்திருக்க வேண்டாம் என்பதைத் தெரிவித்து விட்டு, நீங்கள்நேராக தாரகேசுவரம் சென்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். முடிந்தஅளவு விரைவில் அங்குவந்து உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்” என்று கூறினார். நேரமாகிக் கொண்டிருப்பதைக் கண்ட அவர்கள் அன்னை கூறியதை ஏற்று விரைந்து நடக்க ஆரம்பித்தனர். சிறிதுநேரத்தில் அன்னையின் கண்களிலிருந்து மறைந்தனர்.
அன்னை தம்மதல் இயன்றவரை வேகமாக நடந்தும் கூட, மிகுந்த உடற்களைப்பின் காரணமாக அவரால் விரைந்து செல்ல முடியவில்லை. வெளியில் நடுப்பகுதியை அடைந்து சிறிது நேரத்திற்குள் இருட்டத் தொடங்கிவிட்டது. என்ன செய்வது என்ற கவலையுடன அன்னை நடந்து கொண்டிருந்தபோது கன்னங்கரேலென்ற நெடிய மனிதன் ஒருவன் தோளில் ஒரு தடியுடன் தன்னை நோக்கி வேகமாக வருவதைக் கண்டார். அவனுக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் அவனது கூட்டாளிபோல் வேறோரு நபரும், வருவது போல் தோன்றியது. ஓடுவதோ, கூச்சலிடுவதோ சிறிதும் பயனளிக்காது என்று கண்ட அன்னை சற்றே படபடக்கும் மனத்துடன் அசையாமல் நின்று அவர்களின் வரவை எதிர்நோக்கினார்.
சிறிது நேரத்திற்குள் அந்த மனிதன் அன்னையின் அருகில் வந்து, ஏய், யாரது? இந்த நேரத்தில் இங்கே ஏன் நின்று கொண்டிருக்கிறாய்? என்று கரகரத்த குரலில் கேட்டான். அன்னை அவனையே தஞ்சம் அடைந்து அவனைத் தந்தையாக பாவித்து, அப்பா, என்னுடன் வந்தவர்கள் என்னை விட்டுவிட்டுச் சென்று விட்டார்கள். நான் வழியையும் தவற விட்டுவிட்டேன்” என்று தோன்றுகிறது. நீங்கள் என்னை அவர்களிடம்கொண்டு விட்டுவிடுங்களேன்! உங்கள் மருமகன் தட்சிணேசுரத்தில் ராணி ராசமணியின் கோயிலில் வசிக்கிறார். நான் அவரிடம் தான் சென்று கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை அங்கு அழைத்துச்சென்றால், அவர் மிகவும் மகிழ்வார்” என்று கூறினார். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே பின்னால் வந்தவரும் நெருங்கிவிட்டார். அது ஆண் அல்ல பெண். அந்த மனிதரின் மனைவி என்பதை அறிந்து கொண்டாள். ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் அன்னைக்கு ஆறுதல் உண்டாயிற்று. , சென்று அவளது கையைப் பிடித்துக்கொண்டு, அம்மா, நான் உங்கள் மகள் சாரதை, என்னுடன் வந்தவர்கள் என்னை விட்டுவிட்டுப்போய் விட்டார்கள். ஆபத்தில் விழ இருந்தேன். நல்லவேளை நீயும் அப்பாவும் இங்கு வந்தீர்கள், இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேனோ, தெரியாது என்று கூறினார்.
அன்னையின் எளிமை, கள்ளம் கபடமின்மை, முழுமையான நம்பிக்கை, இனியபேச்சு இவை கொள்ளைக் காரனையும் அவனது மனைவியையும் நெகிழச்செய்தது. சமுதாயக் கட்டுப்பாடு, ஜாதிவேறுபாடு, போன்றவற்றை மறந்து அவர்கள் அன்னையைத் தங்கள் சொந்த மகளாகவே கருதி ஆறுதல் கூறினார்கள். அன்னை களைத்துப்போயிருப்பதைக்கண்ட அவர்கள் மேலும் நடக்கவிடாமல், தேலோபேலோ கிராமத்தின் ஒரு சிறிய கடைக்கு அழைத்துச் சென்று இரவு அங்கு தங்குவதற்கு ஏற்பாடுகளைச்செய்தனர். கொள்ளைக்காரனின் மனைவி தன் துணி முதலியவற்றை விரித்துப் படுக்கை தயார் செய்தாள். கொள்ளைக் காரன் அவல்பொரி வாங்கி வந்து உண்ணக் கொடுத்தான். இவ்வாறு தாய் தந்தைபோல் மிகுந்த அன்புடன் கவனித்துக் கொண்டதுடன், அன்னையைத் தூங்கச் சொல்லிவிட்டு இரவு முழுவதும் காவலும் இருந்தனர். அதிகாலையில் அவரை எழுப்பிக் கூட்டிக்கொண்டு, பொழுது புலரும் வேளையில் தாரகோசுவரத்தை அடைந்தனர். அங்கே ஒரு கடையில் சிறிது ஓய்வு எடுக்கும்படியும் கூறினர். பின்னர் அந்தப் பெண் தன் கணவனிடம், என் மகள் நேற்றிரவு ஒன்றும் சாப்பிடவில்லை,. தாரகேசுவரரைக் கும்பிட்டுவிட்டு வரும்போது மீனம் காய்கறியும் வாங்கிவா, இன்று அவளுக்கு நல்ல உணவு கொடுக்க வேண்டும்” என்றாள்.
கொள்ளைக்காரன் சென்ற சிறிது நேரத்தில் , அன்னையுடன் வந்தவர்கள் தேடி த்தேடி அங்கு வந்து சேர்ந்தனர். அன்னை எவ்வித ஆபத்துமின்றி நலமாக வந்து சேர்ந்து விட்டதைக் கண்டு அவர்கள் மிகவும் மகிழ்ந்தனர். அப்போது அன்னை முந்தினநாள் தனக்குப் புகலிடம் கொடுத்த தாயையும் தந்தையையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இவர்கள் மட்டும் வந்து நேறிறிரவு என்னைக் காப்பாற்றியிராவிட்டால் நான் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியாது” என்றார். வழிபாடு, சமையல், உணவு எல்லாம் முடிந்த பின்பு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். பிறகு எல்லோரும் வைத்தியவாடியை நோக்கிப் புறப்பட்டனர். அன்னை அந்த தம்பதிகளிடம், தன் அளப்பரிய நன்றியைத் தெரியபடுத்தி விடை கொடுக்கும்படி வேண்டினார். பிற்காலத்தில் அன்னை கூறுவார், ஓர் இரவில் எங்களுக்குள் மிகுந்த நெருக்கமும் ஈடுபாடும் ஏற்பட்டு விட்டது. விடைபெறும்போது கண்ணீர்விட்டு அழுதேன். வாய்ப்பு கிடைக்கும் போது தட்சிணேசுவரத்திற்கு வந்துபோகும் படி திரும்பத்திரும்பக் கூறி, அவர்கள் சம்மதித்த பின்னரே அவர்களை விட்டு மிகவும் வேதனையுடன் பிரிந்தேன். அவர்களும் எங்களுடன் நீண்ட தூரம் வந்தார்கள். அந்தப்பெண் அருகிலிருந்த வயலிலிருந்து சிறிது பச்சைப் பட்டாணி யைப் பறித்து என் முந்தானையில் முடிந்துவிட்டு, அழுதவாறே என்னிடம், சாரதா, என் மகளே, இரவு பொரி சாப்பிடும்போது இதையும் சேர்த்துக்கொள்” என்று கூறினாள். கொடுத்த வாக்கையும் அவர்கள் காப்பாற்றினர். என்னைப் பார்க்க பல முறை இனிப்பு போன்ற பண்டங்களுடன் தட்சிணேசுவரத்திற்கு வந்தனர். அவரும்(குருதேவர்) என்னிடமிருந்து எல்லா விஷயங்களையும் கேள்விப்பட்டு அவர்கள் வரும்போது மிகவும் அன்புடன் அவர்களை வரவேற்று ஒரு மருமகனைப் பான்றே நடந்து கொண்டார். இப்போது அவர்கள் எளிமையானவர்களாகவும், நல்லவர்களாகவும் இருந்தாலம், என் கொள்ளைக்காரத் தந்தை ஒரு காலத்தில் பல கொள்ளைகளைச்செய்திருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.
டாக்டர் கூறியதுபோல் பத்திய உணவு சமைத்துக்கொடுக்க ஆள் இல்லாததால் குருதேவரின் நோய் அதிகரித்து விடக்கூடும் என்றுஅறிந்த அன்னை, தான் தங்குவது பற்றிய தொல்லைகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல் சியாம்புகூருக்கு வந்து மகிழ்ச்சியுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். முன்பின் அறியாத ஆண்கள் இருக்கின்ற வீட்டில் எல்லா வித அசௌகரியங்களையும் சகித்துக்கொண்டு மூன்று மாதங்கள் தங்கி, தனது கடமையை அவர் செய்தா நினைக்கும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை. அங்கே ஒரே ஒரு குளியல் அறைதான் இருந்தது. எனவே அதிகாலையில் மூன்று மணிக்கு முன்னால் எப்பொழுது எழுந்து குளியல் முதலானவற்றை முடிப்பார். முடிந்ததும் இரண்டாம் மாடியிலுள்ள மறைவிடத்திற்கு எப்போதும் போவார் என்பது யாருக்கும் தெரியாது. பகல் முழுவதும் அங்கேயே கழிப்பார். குறித்த நேரத்தில் குருதேவருக்குத்தேவையான உணவைச் சமைப்பார். பின்பு முதியவரான சுவாமி அத்வைதானந்தர் அல்லது அத்புதானந்தர் மூலம் கீழே சொல்லி அனுப்புவார். அந்தச் சமயத்தில் குருதேவருடன் இருப்பவர்கள் அங்கிருந்து போய்விட்டால், அவரே உணவை கீழே கொண்டு வந்து கொடுப்பார். இல்லையெனில் மற்ற பக்தர்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள். பின்னர் அன்னையும் சாப்பிட்டுவிட்டு அங்கேயே ஓய்வெடுத்துக்கொள்வார். அனைவரும் உறங்கிய பின்பு இரவு பதினொரு மணிவேளையில் கீழே வந்து அவருக்காக ஒதுக்கப் பட்டுள்ள அறையில் காலை இரண்டு மணிவரை உறங்குவார். குருதேவரின் நோய் குணமாகிவிட வேண்டும் என்ற ஒரே ஆசையுடன் அவர் ஒவ்வொரு நாளையும் இவ்வாறு கழித்தார். ஆனால் அங்கு நாள்தோறும் வருபவர்களள் பலரும் அப்படி ஒருவர் அங்கு வாழ்ந்து, குருதேவருக்கு மிக முக்கியமான சேவை செய்து வருவதையே அறிந்திருக்கவில்லை.
பத்திய உணவைச் சமைக்கும் பிரச்சனை தீர்ந்த பின் இரவில் குருதேவரை கவனித்துக்கொள்வது பற்றிய பிரச்சனை எழுந்தது. நரேந்திரர் அந்தப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு இரவில் அங்கு தங்கத் தொடங்கினார். அவரைக் கண்டு இளைய கோபால், காளி, சசி போன்ற சில இளைஞர்கள் இந்தப் பணியில் பங்கு பெறத் தாங்களாகவே முன் வந்தனர். குருதேவரின் உயர்ந்த தியாகத்தாலும் விழிப்புணர்வூட்டும் அழுத மொழிகளாலும் புனிதத் தொடர்பினாலும் அவர்கள் தங்கள் சுயநலத்தை முற்றிலுமாகத் துறந்து பூரண அன்புடன் அவரது சேவையிலும் , இறையனுபூதி என்ற லட்சியத்திலும் வாழ்க்கையை நடத்துவது என்று முடிவு செய்தனர். இந்த நோக்கத்தைப் புரிந்து கொள்ளும்வரை அவர்களின் பெற்றோர்கள் அவர்கள் சியாம்புகூருக்கு வந்து குருதேவருக்குச்சேவை செய்வதைத் தடுக்கவில்லை. ஆனால் குருதேவரின் நோய் முற்றமுற்ற அவர்கள் கல்லூரிக்குச் செல்வதையும், உணவிற்காக வீட்டிற்குச் செல்வதையும் விட்டுவிட்டு முழுமனத்துடன் குருதேவரின் சேவையில் ஈடுபட்டதைக் கண்டபோது பெற்றோர்களுக்குச் சிறிது ஐயம் ஏற்பட்டது. அது சிறிது சிறிதாக அதிகரித்து பயமாகியது. எனவே அவர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நியாய, அநியாய வழிகளில் எல்லாம் ஈடுபட்டனர். நரேந்திரரின் உற்சாகத்தையும் ஈடுபாட்டையும் கண்டு தான் மற்ற இளைஞர்கள் தங்களுக்கு வந்த தடைகளை எல்லாம் எதிர்த்து நின்று, மிகவுயர்ந்த கடமையில் அசைக்க முடியாத உறுதியுடன் இருந்தார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை, அல்லவா, இவ்வாறு சியாம்புகூரில் நாலைந்து பேருடன் தொடங்கிய அந்தப் பணி காசிப்பூர்த் தோட்டத்திற்கு குருதேவர் சென்றபோது நான்கு மடங்காக உயர்ந்தது.
பாகம்-114
-
சியாம்புகூரில் குருதேவர்
-
மருந்து, பத்திய உணவு, அல்லும் பகலும் சேவை ஆகியவற்றிற்குரிய ஏற்பாடுகளைச்செய்து முடித்தபின் பக்தர்களின் கவலை நீங்கிவிட்டது என்று சொல்வதற்கில்லை.ஏனெனில் கல்கத்தாவின் பரபல மருத்துவர்களின் கருத்துப் படி, குருதேவரின் தொண்டைப்புண் குணப்படுத்த இயலாதது இல்லை என்றாலும் மிகவும் சிரமத்தின் பேரில் தான் அதைச் சாதிக்க முடியும், அவர் ஆரோக்கியம் பெற நீண்ட காலம் ஆகும் என்பது அவர்களுக்குச் சந்தேகமின்றிப் புரிந்து விட்டது. அவர் முழுமையாக குணமடையும்வரை ஆகும் செலவினை எவ்வாறு சமாளிப்பது என்பதே அவர்களது இப்போதைய கவலை. இது இயற்கை தான். குருதேவரைக் கல்கத்தாவுக்கு அழைத்து வந்து அவரது சிகிச்சைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பலராம், சுரேந்திரர், ராமசந்திரர், கிரீஷ், மகேந்திரர் போன்றவர்களுள் யாரும் செல்வந்தர் இல்லை. தங்கள் வீட்டுச் செலவுகளுடன் குருதேவர் மற்றும் அவரது சேவகர்களின் செலவுகள், இதர செலவுகள் என்று அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவர்கள் யாரும் இல்லை.
குருதேவரின் தெய்வீக சான்னித்தியத்தால் அவர்களின் உள்ளத்தில் நம்பிக்கையின் ஒளியும், ஆனந்தமும், அமைதியும், நிரம்பி வழிந்தது. அவற்றின் தூண்டுதலையே ஆதாரமாகக்கொண்டு, எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதும் எண்ணிப் பார்க்காமல் அவர்கள் இந்தச் செயலில் இறங்கி விட்டார்கள்.
ஆனால் அந்தப் புனித பிரவாகம் என்றும் குறையாமல் பொங்கி எழுந்து கொண்டே இருக்கும் என்று நினைப்பது சரியாகாதே! எதிர்காலம் என்ற எண்ணம் தோன்றியபோது அந்தப் பிரவாகம் தடைபடவே செய்தது. அத்தகைய நேரங்களில் குருதேவரிடம் தோன்றுகின்ற புதுப்புது ஆன்மீக நிலைகள் அவர்களின் கவலைகளைப்போக்கி, உள்ளத்தைப் புத்துணர்ச்சியாலும் பது வேகத்தாலும் நிரப்பியது. அந்த ஆனந்தப் பிரவாகம், ஆராய்ந்து பார்க்கும் அறிவுத்தளத்திலிருந்து அவர்களை உயரே தூக்கி, ஒரு தெய்வீகப் பேரொளி உலகில் கொண்டு சென்றது. அந்த உணர்வு ப்பேரொளியின் வெளிச்சத்தில் பார்த்தபோது அவர்களுக்குத் தெரிந்தவை இவைதாம். தாங்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரே ஆதாரம் என் று கொண்டவர், மனித நிலையைக் கடந்த வெறும் மகான் மட்டுமல்ல, ஆன்மிக உலகின் ஆதாரமானவரும் உயிர்களின் ஒரே புகலிடமும் தெய்வ மனிதருமான நாராயணர், அவரது பிறப்பு, செயல்கள், தவம், உணவு, நடத்தை, நோயினால் ஏற்பட்ட வேதனை அனுபவம் என்று அனைத்தும் உலக மக்களின் நன்மைக்காகவே இல்லாவிடில் பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி, துக்கம் போன்றவற்றைக் கடந்த சத்திய வடிவினனான இறைவனுக்கு நோய் எப்படி வர முடியும்? அவருக்குச் சேவை செய்கின்ற ஒரு பேற்றை அளிப்பதற்காகவே இப்போது நோயாளியைப்போன்று இருக்கிறார். தட்சிணேசுவரம் வரை சென்று, தம்மைக் காண இயலாதவர்களின் உள்ளத்திலும் ஞான தீபத்தை ஏற்றுவதற்காகவே அவர் இங்கு வந்து தங்கியிருக்கிறார். மேலைக் கல்வியின் உலகாயக் கண்ணோட்டத்துடன், விஞ்ஞானத்தின் நிழலில் நின்றுகொண்டு, மனிதன் தன்னைப் பாது காப்பாக இருப்பவனாகவும் எல்லாம் அறிந்தவனாகவும் எண்ணிக் கொள்கிறான். சுகபோக நாட்டங்களைப் பூர்த்தி செய்வதே வாழ்க்கையின் லட்சியமாகக் கருதுகிறான். அவனுக்குஇறையனுபூதி என்ற தெய்வீக விஞ்ஞானத்தின் மிகவுயர்ந்த ஒளியைக் காட்டி, உண்மையிலேயே அவனால் எதுவும் செய்ய முடியாது என்பதை அவனுக்கு உணர்த்தி, அவனைத் தியாகத்தின் பாதையில் அழைத்துச் செல்லவே இப்போது குருதேவர் நோயாளியாக உள்ளார். இது தான் பக்தர்களின் நம்பிக்கை. இந்த நிலையில் பயம் எதற்கு? பணமில்லை என்றெல்லாம் வேண்டாதவற்றைப் பற்றிய கவலை எதற்கு? சேவை செய்யும் பேற்றினை நல்கியவரே அந்தச்சேவை முழுமையாக நிறைவேறுமாறும் பார்த்துக் கொள்வார் என்று அவர்கள் திடமாக நம்பினார்.
அளவுக்கு மிஞ்சிய கற்பனையாற்றலின் காரணமாகவே நாங்கள் இவ்வாறெல்லாம் கூறுவதாக வாசகர்கள் எண்ணிவிட வேண்டாம். குருதேவருடன் வாழ்ந்தபோது, பக்தர்கள் தினமும் பேசி, கலந்தாலோசித்த கருத்துக்களையே நாங்கள் மேலே கூறி உள்ளோம். பணத்தட்டுப்பாட்டின் காரணமாக குருதேவரின் சேவைக்கு இடையூறு வந்துவிடுமோ என்று பயந்த அவர்கள், மேற்கண்ட முடிவுடன் தங்களைச் சமாதானப்படுத்திக்கொள்வார்கள். அவர்களுள் ஒரு பக்தர் கூறினார், தமக்கு வேண்டியதை குருதேவர் தாமே செய்து கொள்வார். அப்படியே செய்யாவிடினும் அதனால் என்ன? (தன் வீட்டைச்சுட்டிக்காட்டி) வீடு இடிந்து விழாதிருக்கும்வரை ஒரு கவலையும் இல்லை. அதனை அடமானம் வைத்து அவரது சேவைகளைத் தொடர்ந்துசெய்யலாம். இன்னொருவர் கூறினார், என் பிள்ளைக்கோ பெண்ணுக்கோ, நோயோ திருமணமோ வந்து விட்டால் எப்படிச் செலவைச் சமாளிப்பேனோ அப்படியே இப்போதும் செய்யலாம். என் மனைவியின் கழுத்தில் ஓரிரு நகைகள் கிடக்கும்வரை என்ன கவலை? மற்றொருவர் எதுவும் பேசாமல் தன் வீட்டுச் செலவுகளைச் சுருக்கிக்கொண்டு குருதேவரின் சேவைச் செலவைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தன் உணர்ச்சியை வெளியிட்டார். இப்படித்தான் வீட்டு வாடகைச் செலவை சுரேந்திரர் ஏற்றுக்கொண்டார். பலராம், ராம் மகேந்திரர், கிரீஷ், முதலியோர் இணைந்து குருதேவருக்கும் கேசவர்களுக்குமான மற்ற எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டனர்.
பக்தர்கள் தங்களுக்குள் உணர்ந்திருந்த தெய்வீக ஆனந்தம் இப்போது குருதேவரை மையமாகக் கொண்டு அவர்களை அன்புக் கயிற்றால் இணைத்து ஸ்ரீராமகிருஷ்ண பக்தர் குழு என்ற பெருமரம் முளைவிட்டது. தட்சிணேசுவரத்தில் தான் என்றாலும் சியாம் புகூரிலும் காசிப்பூரிலும் தான் அது வளர்ந்து உருப்பெற்றது. இப்படி ஒரு குழு வளர்ந்து ஒரு பேரியக்கமாக மலர்வது தான் குருதேவரது நோயின் முக்கிய நோக்கம் என்று பக்தர்களுள் பலர் கருதினர்.
நாட்கள் செல்லச்செல்ல குருதேவரின் நோய்க்குக் காரணம் இந்தநோய் எப்போது குணமடையும் போன்ற விஷயங்கள் குறித்து, பலவித காரணங்களும் நம்பிக்கைகளும் பக்தர்களிடையே தோன்றி அவர்களைப் பல குழுக்களாகப் பிரித்தது. அவரது வரலாறு காணா வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்துத்தான் அவர்கள் இத்தகைய பல்வேறு முடிவுகளுக்கு வந்தனர் என்பது தெளிவு. யுகாவதார புருஷராகிய குருதேவரின் நோய் வெறும் நடிப்பு மட்டுமே, ஏதோ ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர் தெரிந்தே இதனை ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த நோக்கம் நிறைவேறியதும் அவர் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார் என்றெல்லாம் ஒரு சாரார் நினைத்தது மட்டுமல்ல, வெளிப் படையாக க் கூறவும் செய்தனர். நல்ல கற்பனைவளம் மிக்க கிரீஷ் இவர்களின் தலைவராக விளக்கினார்.
இன்னொரு சாரார் கூறினர், அன்னை பராசக்தியின் திருவுள்ளத்தை முற்றிலும் சார்ந்து வாழ்ந்து ஒவ்வொரு செயலையும் செய்பவர் குருதேவர். அந்த அன்னை, உலகிற்கு நன்மை செய்கின்ற, தன் ஏதோவொரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவரைச் சிறிது காலம் நோய்வாய்ப் பட்டிருக்கும்படிச் செய்திருக்கிறாள், அந்த நோக்கம் குருதேவருக்கே முற்றிலும் விளங்காதிருக்கலாம். அது நிறைவேறியதும் அவர் உடல் நலம் பெற்றுவிடுவார்.
மற்றொரு சாராரின் கருத்து இது. பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் போன்றவை உடலின் இயல்பான பண்புகள். உடல் என்ற ஒன்று இருந்தால் இவையனைத்தும் இருந்தே தீரும். அதற்கு ஒரு செயற்கைக் காரணத்தைக் கற்பித்து , குட்டையைப் குழப்ப வேண்டிய தேவை தான் என்னஃ நேரடியாக எங்கள் அறிவினால் ஆராயாமல் அவரைப் பற்றிய எந்த முடிவையும் ஏற்க நாங்கள் தயாராக இல்லை. அவரது நோய் குணமாவதற்கு எங்கள் உயிரைக் கொடுத்தும் சேவை செய்வோம். வாழ்க்கையின் எந்த உயர்ந்த லட்சியத்தை அவர் நம்முன் வாழ்ந்து காட்டினாரோ, அந்த அச்சில் எங்கள் வாழ்க்கையை வளர்த்துக்கொண்டு இயன்ற அளவு முயன்று சாதனைகளில் ஈடுபடுவோம்- இளம் சீடர்களின் பிரதிநிதியாக இந்த இறுதியான கருத்தைக் கூறியவர் நரேந்திரர் தான் என்பதைச்சொல்ல வேண்டியதில்லை , அல்லவா!
குருதேவரின் சீடர்கள் வேறுபட்ட இயல்புகளும் மாறுபட்ட கருத்துக்களும் கொண்டவர்கள். இருப்பினும் குருதேவரின் பரந்த கருத்துக்களின் படி வாழ்வதும், அவருக்கு மனமார சேவை செய்து அவரது அருளை ப்பெறுவதும் தங்களுக்கு மேலான நன்மையைத் தரும் என்பதை அனைவரும் திடமாக நம்பினர். எனவே தான் அவரை ஒரு சாரார் யுகாவதார புருஷர், இன்னொரு சாரார் குரு மற்றும் மகான், மற்றொரு சாரார் தெய்வமனிதர் என்றெல்லாம் நம்பினாலும் அவர்களுக்கிடையில் ஒரு பரஸ்பர நம்பிக்கையும் நல்லுறவும் நிலவியது.
குருதேவரின் ஆன்மீக சக்தியை வெளிப்படுத்துவதாக அந்தக் காலகட்டத்தில் நாங்கள் கண்ட சில நிகழ்ச்சிகளை இப்பொழுது பார்க்கலாம். குருதேவரின் பக்தர்களைத் தவிர அவரைக் காண வந்தவர்களும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கின்றனர்.
பாகம்-115
-
குருதேவரின் சிகிச்சைப்பொறுப்பை மகேந்திரலால் சர்க்கார் ஏற்றுக் கொண்டு அதில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டது பற்றி ஏற்கனவே கூறினோம். சில நாட்கள் காலை, பகல், மாலை என்று மும்முறை வந்து குருதேவரைப் பரிசோதித்து விட்டு வேண்டிய மருந்துகளையும் பத்திய உணவைப் பற்றியும் விவரிப்பார். சிகிச்சை முடிந்தபின் குருதேவருடன் ஆன்மீக விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார். அதன் விளைவாக குருதேவரின் பரந்த ஆன்மீகக் கொள்கையின் பால் ஈர்க்கப் பட்டார். எனவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து மூன்று நான்கு மணிநேரம் கழிக்கத் தொடங்கினார். பொன்னான தன் நேரத்தை அவர் அங்கு செலவழிப்பதைக் கண்டு, ஒரு நாள் குருதேவர் அவருக்கு நன்றி தெரிவித்தார். உடனே அவர் குருதேவரைத் தடுத்துவிட்டுக் கூறினார். உங்களுக்காகத்தான் நான் இங்கு இவ்வளவு நேரத்தைக் கழிக்கிறேன் என்றா நினைக்கிறீர்கள்? இதில் என் சுயநலமும் உள்ளது. உங்களுடன் பேசுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். முன்பே நான் தங்களைப் பார்த்திருந்தாலும் நெருங்கிப் பழகி உங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதைச்செய்ய வேண்டும், இதைச்செய்ய வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்தேன். ஒன்று சொல்லட்டுமா, உங்கள் சத்திய நிஷ்டையின் காரணமாகத்தான் உங்கள் மீது எனக்கு இவ்வளவு விருப்பம். உண்மை என்று நீங்கள் அறிந்ததிலிருந்து மயிரிழைகூட அங்கே இங்கே விலக உங்களால் முடியாது. சொல்வது ஒன்று செய்வது வேறொன்றைத்தான் நான் மற்ற இடங்களில் காண்கிறேன். என்னால் சிறிதும் சகித்துக் கொள்ள முடியாதது அது. தங்களை முகஸ்துதி செய்வதாக எண்ணி விடாதீர்கள். நான் அப்படிப் பட்டவன் அல்லன். தந்தைக்கே உற்ற மகனல்ல நான். அவர் கூட தவறு செய்தால் அவர் எதிரிலேயே சொல்லிவிடுவேன். அதனால் கூரிய நாக்கு கொண்டவன் என்று கூடப் பிரபலமாகி விட்டேன்.
அதற்கு குருதேவர் சிரித்துக் கொண்டே, ஆம், அதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு நாட்களாக நீங்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள். நான் அப்படி எதையும் காணவில்லையே” என்று கூறினார்.
டாக்டரும் சிரித்துக்கொண்டே, அது நம் இருவருடைய நல்ல காலம்! இல்லையெனில் ஏதாவது தவறுகளைக் கண்டால் சும்மா இருப்பவனல்ல இந்த மகேந்திர சர்க்கார். எப்படியோ போகட்டும், எனக்கு சத்திய நாட்டம் இல்லை என்று மட்டும் எண்ணி விடாதீர்கள், நான் உண்மை என்று அறிந்த வற்றை நிலைநிறுத்துவதற்காகத் தான் வாழ்நாள் முழுவதும் இந்த ஓட்டம் ஓடிக் கொண்டிருக்கிறேன். அதற்காகத் தான் ஹோமியோபதி சிகிச்சை செய்ய ஆரம்பித்தேன். அதற்காகத் தான் விஞ்ஞான விவாதங்களுக்கான அமைப்பு ஒன்றை நிறுவினேன். இது போலவே என் மற்ற வேலைகளும் என்றார்.
சத்தியத்தின் மீது டாக்டருக்கு நாட்டம் இருந்தது உண்மை. ஆனால் அவருக்கு அபரா(தாழ்ந்த) வித்யையைச் சேர்ந்த மாறக்கூடிய சத்தியத்தின் மீது தான் நாட்டம். ஆனால் குருதேவரோ மாறாத சத்தியத்திற்கு நம்மை விட்டுச்செல்கின்ற பரா வித்யையைத் தான் வாழ்நாள் முழுவதும் நாடினார். என்று எங்களுள் ஒருவர் அப்போது குறிப்பால் உணர்த்தியதாக நினைவில் உள்ளது.
உடனே டாக்டர் சிறிது ஆத்திரத்துடன் பின்னர் கூறினார். இது தான் உங்களிடமுள்ள பிரச்சனை – வித்யையில் இந்த உயர்வும் தாழ்வும் எங்கிருந்து வந்தன? உண்மையின் வெளிப்பாட்டில் உயர்ந்தது என்ன, தாழ்ந்தது என்ன? அப்படி ஒரு கற்பனை வேறுபாட்டை நீங்கள் காட்டினால் அபார வித்யையின் மூலமாகத் தான் பரா வித்யையைப் பெற முடியும் என்பதை ஒப்புக் கொள்ளத் தான்வேண்டும். விஞ்ஞான அறிவின் துணையுடன் நாம் அறிகின்ற உண்மைகளின் வாயிலாக, பிரபஞ்சத்தின் காரணமாகிய இறைவனைப் பற்றி இன்னும் சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும். நாத்திக விஞ்ஞானிகளை நான் இங்குக் கூறவில்லை. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதும் எனக்குப் புரிவதில்லை. அவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள். அதே வேளையில் முதலும் முடிவுமற்ற இறைவனை முற்றிலுமாகப் புரிந்து கொண்டிருப்பதாக யாராவது சொன்னால் அவன் ஏமாற்றுக் காரன், அவன் பொய்யன், பைத்தியக் காரவிடுதியே அவன் இருக்கத் தகுந்த இடமாகும்.
குருதேவர் மலர்ந்த முகத்துடன் டாக்டரைப் பார்த்துச் சிரித்தவாறே, நீங்கள் சொல்வது சரிதான். கடவுளை” இவர் தான்” என்று சுட்டிக்காட்ட நினைப்பவர்கள் அறிவற்றவர்கள் அவர்களுடைய பேச்சை என்னால் தாங்க முடியாது” என்று கூறினார்.
இவ்வாறு கூறிவிட்டு குருதேவர், மிகச் சிறந்த பக்தரான ராமபிரசாதரின், அன்பே உருவாம்” அன்னை காளியை அறிந்தவர் யாரோ உலகந்தனிலே என்ற பாடலைப் பாடும் படி எங்களுள் ஒருவரிடம் கூறினார். பாடலைக்கேட்டபடியே அந்தப் பாடலின் கருத்தை மெல்லிய குரலில் டாக்டருக்கு விளக்கினார். என் இதயம் அறிந்தது தாயாம் காளியை ஐயகோ, மனம் உணரவில்லையே! என்ற வரியைப் பாடும்போது குருதேவர் பாடுபவரைத் தடுத்து, ஆ! எல்லாம் தலைகீழ் என் மனம் அறிந்தது தாயாம் காளியை, ஐயகோ , இதயம் உணரவில்லையே” என்று வரவேண்டும். மனம் இறைவனை அறியச் சென்று விரைவில் புரிந்து கொள்கிறது- எதை? முதலும் முடிவுமற்ற இறைவனைத் தன்னால் புரிந்து கொள்ள முடியாது என்பதைத் தான் . ஆனால் இதயமோ இதை ஏற்க மறுத்து, எப்படி அவனைக் காண்பேன், என்று துடிக்கிறது” என்று கூறினார்.
குருதேவரின் பேச்சால் உணர்ச்சிவசப்பட்டு டாக்டர் கூறினார், செருக்காவது , ஒன்றாவது. நான் அறிந்ததும் புரிந்ததும் மிகவும் சாமானியமே. ஒன்றும் தெரியாது என்றே சொல்லிவிடலாம். கற்பதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கிறது . எனக்குத் தெரியாத பல விஷயங்கள் பலருக்குத் தெரிந்துள்ளது என்று எண்ணுகிறேன். எண்ணுவது என்ன, காணவே செய்கிறேன், அதனால் நான் யாரிடமிருந்தும் எதையும் கற்றுக்கொள்ள வெட்கப்படுவதே இல்லை( எங்களைக் காட்டி) இவர்களிடமிருந்து கூட நான் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் இருப்பதாகவே தோன்றுகிறது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நான் மற்றவர்களின் பாததூளியை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
குருதேவர் எங்களைச் சுட்டிக்காட்டி, நானும் இவர்களிடம், நண்பனே, வாழும் நாள் வரை கற்றுக் கொண்டே இருப்பேன்” என்று சொல்கிறேன். ( டாக்டரைக் காட்டி எங்களிடம்) என்ன பணிவு, பாருங்கள். அகத்தே சாரம் உள்ளது. அதனால் தான் இப்படி என்றார்.
இவ்வாறு பல வகையான உரையாடல்களுக்குப் பின் டாக்டர் விடைபெற்றார்.
இவ்வாறு நாளுக்கு நாள் டாக்டருக்கு குருதேவரிடம் நம்பிக்கையும் அன்பும் அதிகரித்தன. அதே போல் குருதேவரும் அவரை ஆன்மீகப் பாதையில் வழி நடத்திச் செல்வதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். சிறந்த குணங்கள் கொண்டோர் அத்தகையவர்களுடன் கலந்து பழக விரும்புவார்கள். இது தெரிந்திருந்த குருதேவர், மகேந்திரர் கிரீஷ், நரேந்திரர் போன்ற சீடர்களை அவ்வப்போது டாக்டரிடம் போய்ப்பேச ச்சொல்வார். கிரீஷீடன் பழக்கமான பின் அவருடைய புத்த சரிதம் நாடகத்தைக் கண்டு விட்டு மனதாரப் புகழ்ந்தார் டாக்டர். கிரீஷின் வேறு சில நாடகங்களையும் பார்த்தார். அதே போன்று நரேந்திரருடன் பேசுவதில் களிப்புற்று ஒரு நாள் அவரைத் தம் வீட்டிற்கு அழைத்துச்சென்று விருந்தளித்தார். அவர் இசையில் வல்லவர் என்பதை அறிந்து ஒருநாள் பாடிக் காட்டுமாறும் கேட்டுக் கொண்டார். சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் மதியம் அவர் குருதேவரைக் காண வந்தபோது நரேந்திரரும் இரண்டு மூன்று மணிநேரம் பாடினார். டாக்டர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அன்று விடைபெற்றுச் செல்வதற்கு முன் அவர் நரேந்திரரைத் தன் பிள்ளையைப்போல் அன்புடன் ஆசீர்வதித்துத் தழுவிக்கொண்டு முத்தமிட்டார். பின்னர் குருதேவரிடம், இவனைப்போன்ற இளைஞன் இறையனுபூதியை நாடி வந்துள்ளது கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். இவன் ஒரு மாணிக்கம். இவன் எதில் கைவைத்தாலும் அது சிறக்கும்” என்றார். குருதேவர் மகிழ்ச்சி நிறைந்த பார்வையை நரேந்திரர் பக்கமாகத் திருப்பி, அத்வைதரின் கூக்குரலைக்கேட்டுத்தான் சைதன்யர் நதியாவுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். அதுபோல் எல்லாம் அவனுக்காகவே (நரேந்திரனுக்காகவே) என்றார். அதன் பின் டாக்டர் குருதேவரைப் பார்க்க வரும்போது நரேந்திரர் அங்கிருந்தால் ஓரிரு பாடல்களைப் பாடச்சொல்லிக்கேட்காமல் விட மாட்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-116
-
இவ்வாறு மாதங்கள் ஒவ்வொன்றாகக் கடந்து அக்டோபரில் துர்க்கபூஜை நாட்கள் வந்தன. குருதேவரின் நோய் சில நாட்கள் அதிகரிப்பதும் சில சமயம் குறைவதுமாக இருந்தது. மருந்தினால் பெரிதாக எந்தப் பயனும் இல்லை. ஒரு நாள் டாக்டர் வந்து பார்த்தபோது நோய் அதிகரித்திருப்பதைக் கண்டு, நிச்சயமாக உணவு விஷயத்தில் ஏதோ தவறு நடந்துள்ளதென எண்ணுகிறேன். இன்று என்ன சாப்பிட்டீர்கள், சொல்லுங்கள்? என்று கேட்டார்.
வழக்கம்போல் காலையில் அரிசிக் கஞ்சி, சூப், பால், மாலையில் பார்லிக் கஞ்சி, பால் என்றார் குருதேவர்.
டாக்டர்-
ஆனால் ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது. ஆமாம், சூப்பில் என்னென்ன காய்கறிகள் சேர்க்கப் பட்டன?
குருதேவர்-
உருளைக் கிழங்கு, வாழைக்காய், கத்தரிக்காய், ஓரிருசிறிய காலிப்ளவரும் இருந்தன.
டாக்டர்-
என்ன, காலிப்ளவர் சாப்பிட்டீர்களா? இது தான் குழப்பத்திற்குக் காரணம். காலிப்ளவர் சூட்டை உண்டாக்கக் கூடியது. ஜீரணிப்பதும் கடினம். ஆமாம், எத்தனை துண்டு சாப்பிட்டிருப்பீர்கள்?
குருதேவர்- ஒரு துண்டு கூடச் சாப்பிடவில்லை. சூப்பின் நீர்ப்பகுதியை மட்டும் தான் குடித்தேன். ஆனால் சூப்பில் அதைப் பார்த்தேன்.
டாக்டர்- துண்டாகச் சாப்பிட்டீர்களோ இல்லையோ, அது முக்கியமல்ல. சூப்பில் காலிப்ளவரின் ரசம் இருக்கத்தானே செய்யும்! அதனால் ஜீரணக்கோளாறு ஏற்பட்டு நோய் அதிகமாகி விட்டது.
குருதேவர்- இதென்ன கூத்து! காலிப்ளவரை நான் சாப்பிடவில்லை, எனக்கு வயிற்றுக்கோளாறும் இல்லை. குடித்த சூப்பில் காலிப்ளவரின் ரசம் சிறிது கலந்திருந்ததால் நோய் அதிகரித்துவிட்டது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
குருதேவரின் அன்பு, எளிமையான இயல்பு, தெய்வீகம் ஆகியவை டாக்டரை நாளுக்குநாள் அவரிடம் எவ்வளவு நம்பிக்கை கொள்ள வைத்தது என்பதை அவரது பேச்சிலிருந்தும் செயல்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிந்தது. குருதேவரை மட்டும் என்றல்ல, அவரது பக்தர்களையும் டாக்டர் அன்புக் கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கினார். குருதேவரை வைத்துக்கொண்டு இவர்கள் ஏதோ கூத்தடிக்க முயற்சிக்க வில்லை என்பது அவருக்கு உறுதியாயிற்று. குருதேவர் மீது காட்டிய ஆழ்ந்த பக்தியையும் கொண்டிருந்த திட நம்பிக்கையும் அவர் எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தார் என்று கூற இயலாது. அவரைப் பொறுத்தவரை அது சற்று மிகையாகத்தான் தோன்றியிருக்கும். ஆனால் அதில் எந்த வகையான தன்னல நோக்கமோ பகட்டோ இல்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எனவேஇதை அவர் ஒரு புதிர் என்று நினைத்திருக்க வேண்டும். பக்தர்களுடன் நெருங்கிப் பழகி இந்தப் புதிருக்கான விடையை அறிய அவரது கூரிய அறிவு முயன்றாலும் விடை மட்டும் கிடைத்த பாடில்லை. ஏனெனில் அவர் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தும், அசாதாரண சக்தி வெளிப்படுகின்ற ஒருவரை குரு என்றோ அவதார புருஷர் என்றோ ஏற்றுவழிபடுவதை, மேலைக் கல்வியின் தாக்கத்தின் காரணமாக அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை. புரியாததால் அதற்கு எதிராக இருந்தார். அதற்குக் காரணம் அவதாரப்புருஷர்களாகப்போற்றிப் புகழப் பட்டவர்களின் சீடர் பரம்பரையினர் அவர்களின் பெருமையைப் பரப்புவதாக க் கூறிக்கொண்டு அறிவு மழுங்கிப்போய் சில நிகழ்ச்சிகளைப் பிறர் நம்ப முடியாத அளவுக்கு மிகைப் படுத்தி விட்டனர். அதன் விளைவாக அவர்களின் உண்மை வாழ்க்கை என்ன என்பதை இன்று அறிய முடியாமல் போய்விட்டது. இதனை ஒரு நாள் டாக்டர் வெளிப்படையாக குருதேவரிடம் கூறினார். இறைவன் பால் செலுத்தும் அன்பை, பக்தியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்த எல்லையற்ற இறைவன் மனிதனாக வருகிறான் என்று கூறும்போது தான் குழப்பம் . அவன் யசோதையின் மைந்தனாக மேரியின் மைந்தனாக , சசியின் மைந்தனாக வருகிறான் என்பதைப் புரிந்து கொள்வது கடினம். இந்த மைந்தர்களின் கூட்டம் தான் நாட்டையே பாழ்படுத்தி விட்டது” என்று கூறினார். அதற்கு குருதேவர் சிரித்துக் கொண்டே எங்களிடம், என்ன சொல்கிறார், கேட்டீர்களா! ஆனால் , பல நேரங்களில் குறுகிய நோக்குள்ள கொள்கை வெறியர்கள் தங்கள் குருவை உயர்த்திக் காட்ட இவ்வாறு செய்து விடுகின்றனர் என்பது உண்மை தான்” என்றார்.
அவதாரக்கொள்கை பற்றி டாக்டருக்கும் நரேந்திரர் மற்றும் கிரீஷ் ஆகியோருக்கிடையேயும் அவ்வப்போது வாக்குவாதங்கள் நடைபெறும். தம் கருத்துக்கு எதிராக அறிவு பூர்வமான பல வாதங்கள் இருக்க முடியும்? என்பதை டாக்டர் உணர்ந்து கொண்டார். அதன் காரணமாக தம் கருத்தைக் கூறுவதில் சற்று எச்சரிக்கையோடும் இருந்தார். ஆனால் வாதங்கள் சாதிக்க முடியாததை குருதேவரின் ஆழ்ந்த அன்பும் இனிமையான இயல்பும் அற்புதமான ஆன்மீக வெளிப்பாடும் சாதித்தன. டாக்டரின் கருத்துக்கள் படிப்படியாக மாறி அமைந்தன.
அந்த ஆண்டு நடந்த துர்க்காபூஜையின்போது குருதேவருக்கு அசாதாரணமான சமாதிநிலை திடீரென்று ஏற்பட்டது. அதனை நாங்கள் அனைவரும் கண்டோம். டாக்டருக்கும் அதனைக் காணவும் சோதிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அன்று அவரது நண்பரான மற்றொரு டாக்டரும் வந்திருந்தார். குருதேவருக்கு சமாதி நிலை ஏற்பட்டபோது டாக்டர் அவரது இதயத் துடிப்பு போன்றவற்றை ஆராய்ந்து பார்த்தார். அவரது நண்பர் குருதேவரின் திறந்த விழிகளில் விரலைவிட்டு கண்கள் இமைக்கின்றனவா என்று கூடச்சோதிக்கத் தயங்கவில்லை. பார்ப்பதற்கு இறந்தவரைப்போன்றே தோற்றமளிக்கும் குருதேவரின் இந்த சமாதி நிலையைப் பற்றி விஞ்ஞானம் சிறிது கூட விளக்க முடியாது என்பது இறுதியில் அவர்களுக்குத் தெரிந்தது. மேலைக் கல்வியறிவு இந்த நிலையை ஜடநிலை என்று கூறி ஒதுக்கி விடும். ஆனால் இது அதன் குறுகிய தன்மையையும், உலகமே எல்லாம் என்ற தன்மையையும், காட்டுவதாகவே அமையும். இறைவனது படைப்பின் எத்தனையோ புதிர்களைப் புரிந்து கொள்ள முடியாமல் கல்வியறிவும் விஞ்ஞானமும் திகைத்து நிற்கின்றன. எதிர் காரத்திலும் என்றாவது அந்தப் புதிர்களுக்கான விடைகள் கண்டு பிடிக்கப் படுமா என்று சொல்வதற்கில்லை. புறத்தில் சவம்போன்று காணப்படும் இந்த சமாதி நிலையில் குருதேவர் கண்ட காட்சிகளையும்,அது எழுத்துக்கு எழுத்து எப்படிச் சரியாக இருந்தது என்பதை பக்தர்கள் பார்த்ததையும் ஏற்கனவே சொல்லி விட்டதால் இங்கே மீண்டும் சொல்லவில்லை.
செப்டம்பர், அக்டோபர் என்று மாதங்கள் ஓடின. நவம்பரில் காளிபூஜை நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. குருதேவரின் உடல்நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. சிகிச்சையின் ஆரம்ப நாட்களில் இருந்த முன்னேற்றமும் மறைந்து , நோய் முற்றிக்கொண்டே வந்தது. ஆனால் குருதேவரின் ஆனந்தமும் களிப்பும் குறையவே இல்லை. அவை அதிகரித்ததாகவே பக்தர்களுக்குத் தெரிந்தது. முன்போலவே டாக்டர் சர்க்கார் தொடர்ந்து குருதேவரைக் காண வந்து கொண்டிருந்தார். மருந்துகளை மாற்றி மாற்றிக் கொடுத்துப் பார்த்தார். இருப்பினும் அவர் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை. ஒரு வேளை தட்பவெப்ப மாற்றத்தின் காரணமாகத்தான் இவ்வாறு நேர்ந்திருக்கும், அதனால் குளிர்காலம் போய் விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று அவர் எண்ணினார்.
துர்க்கா பூஜையைப்போன்று காளிபூஜை நாளிலும் குருதேவருக்கு அசாதாரணமான பரவச நிலை ஏற்படுவதை பக்தர்கள் கண்டுள்ளனர். காளிபூஜை நாளில் காளியைப் பிரதிமையில் வழிபடுவதாக தேவேந்திரர் ஒரு முறை முடிவு செய்திருந்தார். குருதேவர் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் அதைச் செய்தால், அது மிகுந்த ஆனந்தத்தைத் தரும் என்பதால் அவர் சியாம் புகூர் வீட்டில் அதனைச்செய்ய நினைத்தார்.ஆனால் பூஜையின் உற்சாகமும் எழுச்சியும் பரபரப்பும் குருதேவரின் உடல் நிலையை மேலும் பாதிக்கும் என்று கருதி மற்ற பக்தர்கள் அவரைத் தடுத்தனர். தேவேந்திரரும் அவர்கள் கூற்றிலிருந்த உண்மையை உணர்ந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.ஆனால் பூஜைக்கு முன்தினம் சில பக்தர்களிடம் குருதேவர் திடீரென்று, பூஜைக்குத் தேவையான பொருட்களைச் சேகரியுங்கள். நாளை காளிபூஜை செய்ய வேண்டும்” என்றார். அதைக்கேட்டு மகிழ்ந்த பக்தர்கள் அது விஷயமாக மற்றவர்களுடன் கலந்தாலோசித்தனர். ஆனால் மேலே கூறியதைத் தவிர வேறெதையும் அவர் கூறாததால் என்ன ஏற்பாடுகள் செய்வது என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. ஷோடசோபசார பூஜை செய்வதா, பஞ்சோபசார பூஜை செய்வதா, அன்ன நைவேத்தியம் செய்வதா, வேண்டாமா, யார் பூஜை செய்வது, போன்ற விஷயங்களில் அவர்களால் ஒரு முடிவிற்கும் வர இயலவில்லை. இறுதியாக சந்தனம், பூ, தீபம், தூபம், பழங்கள், இனிப்பு போன்றவற்றைத் தயாராக வைத்திருப்பது என்றும் பின்னர்குருதேவர் சொல்வது போல் செய்யலாம் என்றும் எண்ணினர்.
பூஜை நாளின் பிற்பகல் வரை குருதேவர் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.
பாகம்-117
-
மாலை மறைந்து 7 மணி ஆகிவிட்டது. அப்போதும் குருதேவர் பூஜையைப் பற்றி எதுவும் கூறவில்லை. வழக்கம்போல் கட்டிலில் அமைதியாக அமர்ந்திருந்தார். பக்தர்கள் அவருக்கு முன்னால் கிழக்குப் பக்கத்தில் தரையைக் கழுவி சுத்தம் செய்து, சேகரித்து வைத்திருந்த பொருட்களைக்கொண்டு வைத்தனர்.
குருதேவர் தட்சிணேசுவரத்தில் இருந்தபோது சில வேளைகளில் சந்தனம், பூ முதலியவற்றால் தம்மைத் தாமே பூஜை செய்வதுண்டு. சில பக்தர்கள் அதைக் கண்டிருக்கின்றனர். அன்றும் அது போல் தமது உடலையும் மனத்தையும் பிரதீகமாகக்கொண்டு பிரபஞ்சப்பேருணர்வும் பிரபஞ்ச சக்தியுமான காளியை வழிபடுவார், அல்லது அவளுடன் வேறுபாடற்று ஒன்றிச்செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்ற ஆத்ம பூஜை செய்வார் என்றெல்லாம் முடிவு செய்தனர். அதனால் தான் பூஜைக்குரிய பொருட்களை குருதேவரின் படுக்கையருகில் தயார் நிலையில் வைத்தனர். குருதேவரும் அதைத் தடுக்கவில்லை.
பூஜைக்கான எல்லா பொருட்களும் தயாராகி விட்டன. தீபம் ஏற்றி தபம் போட்டவுடன் அந்த அறையில் ஒளியும் நறுமணமும் நிறைந்தது. குருதேவர் இன்னமும் எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்ட பக்தர்கள் அவரது அருகே அமர்ந்தனர். சிலர் உத்தரவுக்காக ஒருமுக மனத்துடன் அவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். சிலர் அன்னை காளியை தியானித்த வண்ணம் இருந்தனர். இவ்வாறு அந்த அறை மௌனத்தில் மூழ்கிக் கிடந்தது. முப்பதுக்கும் அதிகமானவர் கூடியிருந்தும் யாருமே இல்லாதது போன்றிருந்தது. நேரம் கடந்தது. குருதேவர், தாம் பூஜை செய்யவும் எத்தனிக்கவில்லை. பூஜை செய்யும்படி எங்களிடம் சொல்லவும் இல்லை. அப்படியே அமர்ந்திருந்தார்.
பக்த இளைஞர்களுடன் வயதில் சற்று மூத்தவர்களான மகேந்திரர், ராமசந்திரர், தேவேந்திர நாதர், கிரீஷ் போன்றோரும் அறையில் இருந்தனர். பூஜை பற்றி குருதேவர் எதுவும் கூறாமல் இருந்ததைக் கண்டு அனைவரும் பிரமிப்புடன் அமர்ந்திருந்தனர். கிரீஷை ”பதினாறு அணாவுக்கு மேல் ஐந்தணா அதிக நம்பிக்கை உள்ளவன்” என்று குருதேவர் கூறுவார். அப்படி குருதேவர் மீது எல்லையற்ற நம்பிக்கை கொண்ட கிரீஷின் மனத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. குருதேவர் தமக்காக காளியை வழிபட வேண்டிய தேவையில்லை. சரி பக்தியின் காரணமாக அவருக்குப் பூஜை செய்ய வேண்டும் என்ற ஆவல் தோன்றியிருந்தால் ஏன் இப்படி மௌனமாக அமர்ந்திருக்க வேண்டும்? அதுவும் காரணம் இல்லை. அப்படியென்றால் உயிருள்ள தன் உடலாகிய பிரதிமையில் அன்னையை வழிபட்டு, பக்தர்கள் பெரும்பேறு அடையட்டும் என்பதற்காகத் தான் இந்தப் பூஜை ஏற்பாடா? கண்டிப்பாக அப்படித்தான் இருக்க வேண்டும்- இந்த எண்ணம் எழுந்ததும் கிரீஷின் ஆனந்தம் அளவு கடந்ததாயிற்று. அருகிலிருந்த மலர்களையும் சந்தனத்தையும் எடுத்து அன்னையே போற்றி என்று கூறியபடி யே குருதேவரின் திருவடிகளில் சமர்ப்பித்தார். குருதேவரின் உடல் ஒரு முறை அதிர்ந்தது. ஆழ்ந்த சமாதியில் மூழ்கினார் அவர். அவரது முகம் தெய்வீக ஒளியால் பொலிந்தது. உதடுகளில் தெய்வீகப் புன்னகை அரும்பியது.கைகள் இரண்டும் உயர்ந்து ஒன்று வரமளிப்பது போன்றும் மற்றொன்று அபயமளிப்பது போன்றும் காட்சியளித்தது. அவர் பரவச நிலையில் அன்னையுடன் ஒன்றியிருப்பதைக் காட்டியது. இவையெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்துள் நடந்து விட்டது.குருதேவர் சமாதி நிலையில் இருப்பதைக் கண்டு கிரீஷ் அவரது திருவடிகளில் மீண்டும் மீண்டும் மலரஞ்சலி செய்வதாகச் சில பக்தர்கள் எண்ணினர். சிறிது தள்ளி அமர்ந்திருந்த பக்தர்களுக்கோ, திடீரென்று குருதேவரின் உடலில் அன்னையின் ஒளி நிறைந்த உருவம் காட்சி அளிப்பதாகவே தோன்றிற்று.
பக்தர்களின் பேரானந்தத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. தட்டிலிருந்து ஒவ்வொருவரும் சந்தனத்தையும் மலரையும் எடுத்துக்கொண்டு, தங்களுக்குப் பிடித்த மந்திரத்தை ஓதி குருதேவரின் தாமரைத் திருவடிகளில் சமர்ப் பித்தனர். ஜெய், ஜெய், என்ற ஒலி அறை முழுவதும் எதிரொலித்தது. சிறிது நேரம் கழிந்தது. குருதேவரின் சமாதி நிலை கலைந்து ஓரளவிற்கு அவர் புறஉணர்வு பெற்றார். அப்போது பூஜைக்காக வைக்கப் பட்ட பழம், இனிப்பு போன்றவற்றை அவருக்கு உண்ணக் கொடுத்தனர். அவரும் ஒவ்வொன்றிலும் சிறிது உண்டார். பின்னர் பக்தர்களுக்கு பக்தியும் ஞானமும் அதிகரிக்குமாறு ஆசீர்வதித்தார். பக்தர்கள் அவரது பிரசாதத்தை எடுத்துக்கொண்டு இரவு வெகு நேரம் உற்சாகத்துடன் தேவியின் புகழையும் அவளது திருநாமங்களையும் பாடினர்.
இவ்வாறு அந்த ஆண்டு காளிபூஜையைப் புதுவிதமாக ச் செய்த பக்தர்கள் இது வரை உணர்ந்திராத ஆனந்தம் பெற்றனர். அந்த நினைவு அவர்கள் மனத்தில் என்றும் பசுமையாகப் பதிந்து விட்டது. துன்பமும் சோகமும் வந்து அவர்களை வாட்டும் போதெல்லாம் குருதேவரின் தெய்வீக ஒளியால் பொலிந்த முகமும், வரமும் அபயமும் அளிக்கின்ற திருக் கரங்களும் அவர்கள் முன்தோன்றி வாழ்நாள் முழுவதும் எங்கும் எப்போதும் தாங்கள் தெய்வத்தால் காக்கப் பட்டவர்கள்” என்பதை அவர்களுக்கு நினைவூட்டின.
சியாம் புகூரில் இருந்தபோது இத்தகைய விசேஷ நாட்களில் மட்டும் தான் குருதேவரிடம் தெய்வீகத்தின் வெளிப்பாட்டை பக்தர்கள் கண்டார்கள் என்பதில்லை. அவ்வப்போது இத்தகைய நிலைகளைக் கண்டு அவர் ஒரு தெய்வ மனிதர் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் அவர்களிடம் வளர்ந்தது. இதற்குமுன் கூறியது போல் இந்த நிலைகள் எல்லார் முன்னிலையில் வெளிப்பட வில்லை என்றாலும் இத்தகைய வெளிப் பாடுகளைக் கண்டவர்களுக்கு மேற்கண்ட நம்பிக்கை பிறந்ததுடன், அவர்களிடமிருந்து கேட்டவர்களுக்கும் அதே நம்பிக்கை பிறந்தது என்பதில் சந்தேகம் இல்லை. சில நிகழ்ச்சிகளைக் கூறினால் இது நன்கு புரியும்.
பலராம் பாபுவைப் பற்றி சில விஷயங்களை முன்பே கூறியுள்ளோம். அவரும் அவரது குடும்பத்தினரும் குருதேவர் பால் பக்தியும் மரியாதையும் கொண்டிருப்பதை அவரது உறவினர்களுள் சிலர் விரும்பவில்லை. வேண்டிய அளவு அதற்கான காரணமும் அவர்களிடம் இருந்தன. முதலாவதாக பலராம் குடும்பத்தினர் வைணவ நெறியைச் சார்ந்தவர்கள். அவர்களின் பயிற்சி முறையும் சாதனை முறைகளும் ஒரு தலைப் பட்ச மானவை. அவர்கள் புறச் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். எனவே எல்லா மதங்களும் உண்மை என்று உறுதியாக நம்புகின்ற, புறச் சின்னங்கள் மட்டுமே எல்லாம் என்பதை ஏற்றுக் கொள்ளாத குருதேவரை அவர்கள்புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்வதில் எந்த பயனும் இருப்பதாகவும் அவர்கள் எண்ணவில்லை. குருதேவரின் கூட்டுறவாலும் அருளினாலும் பலராம் பரந்தநோக்கமுடையவராக விளங்கியதை, மத சம்பிரதாயத்திலிருந்து விலகிச் செல்வதாக அவர்கள் கருதினார்கள்.
இரண்டாவதாக, இந்த உலகம் உயர்வாக மதிக்கின்ற செல்வம், மரியாதை, ஜாதி போன்றவை மனிதனிடம் அகங்காரத்தை வளர்க்கிறது. பலராமின் உறவினர் தாங்கள் புண்ணியவானான கிருஷ்ணராம் போஸின் பரம்பரையினர் என்று பெருமை கொண்டாடினர். ஆனால் பலராம், குடும்ப கௌரவத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு ஆன்மீகத்தைத்தேடி சாதாரண மனிதனைப்போன்று எப்போதும் வேண்டுமானாலும் தட்சிணேசுவரத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்று விடுகிறார். தாம் செல்வதுடன் மனைவி மக்களையும் தயங்காமல் அழைத்துச் செல்கிறார். இவையெல்லாம் குலப்பெருமைக்குக் களங்கம் விளைவிப்பவை என்று அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்ததில் வியப்பே இல்லையே! அதனால் பலராமை அதிலிருந்து தடுக்க அவர்கள் முடிவு செய்தனர்.
நேர்வழியில் ஒன்றைச் சாதிக்க இயலாதபோது குறுக்கு வழியைத்தேட அகங்காரிகளுக்கு அதிக நேரம் ஆவதில்லை. பலராமின் உறவினர்களுள் சிலர் அத்தகையவர்களாக இருந்தனர். கால்னாவின் பகவான் தாஸ் போன்ற வைணவ சாதுக்களின் உயர் பக்தியையும் நிஷ்டையையும் பலராமிடம் சொல்லிப் பார்த்தார்கள். குடும்ப கௌரவத்தை அவருக்கு நினைவூட்டினர். இவை எதனாலும் பலராம் குருதேவரிடம் செல்வதை நிறுத்த முடியாத போது அவர்களின் வெறுப்பு குருதேவர் பால் திரும்பியது. அவரை நிஷ்டை இல்லாதவர், ஆசாரமற்றவர், உணவில் கட்டுப் பாடற்றவர், துளசி மாலை, திலகம் போன்ற வைணவச் சின்னங்களை அணிந்து கொள்வதை எதிர்ப்பவர் என்றெல்லாம் தயக்கமின்றி தூற்றத் தொடங்கினர். யாரிடமோ கேள்விப்பட்டதை வைத்துத் தான் அவர்கள் இவ்வாறு நினைத்திருக்க வேண்டும். எப்படியோ இவை எந்த விதமான பயனும் அளிக்காததைக் கண்ட அவர்கள் பலராமின் தந்தைவழி சகோதரர்களான நிமாய் சரண்போஸ் மற்றும் ஹரிவல்லப போஸிடம் குருதேவரையும் பலராமையும் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லத் தொடங்கினர். பலராம் தயை, தியாகம், வைராக்கியம், ஆகிய உயர்ந்த பண்புகள் உடையவர் என்பதை முன்பே கூறியிருக்கிறோம். கருணையற்ற சில வழிகளில் ஈடுபடாமல் எஸ்டேட் போன்ற சொத்துக்களை நிர்வகிக்க முடியாது என்பதைக்கண்ட அவர், தன் சொத்துக்களைப் பராமரிக்கும் பொறுப்பை நிமாய் பாபுவிடம் விட்டு விட்டார். அவர் மாதா மாதம் கொடுக்கும் பணத்தை வைத்துத்தான் குடும்பத்தை நடத்தி வந்தார். அந்த வருவாய் பல நேரங்களில் தேவைகளுக்குப்போதுமானதாக இல்லையெனினும் எப்படியோ சமாளித்துக்கொள்வார். அவரது உடல் நிலையும் சொத்து, நிர்வாகம் போன்ற வேலைகளுக்கு ஏற்றதாக இல்லை. வாலிப நாளில் அஜீரணக்கோளாறு ஏற்பட்டு தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு சாதம் சாப்பிடாமல், பார்லிக் கஞ்சியும் பாலும் மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தார். உடல் நலத்தைத் திரும்பப்பெற பல ஆண்டுகள் அவர் புரியில் வசித்தார். அந்த நாட்களைக் கோயிலுக்கு செல்லுதல், பூஜை , ஜபம், பாகவத பாராயணங்களைக்கேட்டல், சாது சங்கம் என்றே கழித்தார். இதன் மூலம் வைணவ மரபில் உள்ள நல்லவை கெட்டவை அனைத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பின்னர் பல காரியங்களுக்காக அவர் கல்கத்தா வந்தார். சில நாட்களிலேயே குருதேவரை தரிசித்து அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் அவரது வாழ்க்கைநாளுக்கு நாள் எவ்வாறு மாறி அமைந்தது என்பதை முன்னரே கூறியுள்ளோம்.
மூத்த மகளின் திருமணத்தின் பொருட்டுச் சில வாரங்கள் அவர் கல்கத்தாவில் இருக்க நேர்ந்தது. இதற்கு முன் பதினொரு ஆண்டுகள் புரியில் வாழ்ந்த நாட்களில் அவரது நிம்மதி எந்த விதத்திலும் குலையவில்லை அவர் கல்கத்தாவுக்கு வந்து சிறிது காலத்தில் ஹரி வல்லபர், ராதா காந்த போஸ் தெருவிலுள்ள 57-ஆம் எண் வீட்டை வாங்கினார். சாதுக்களுடன் பலராம் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பைக் கண்ட அவரது தந்தையும் உறவினர்களும் எங்கே அவர் உலகைத் துறந்து விடுவாரோ என்று அஞ்சினர். எனவே அவர்கள் ரகசியமாகக் கலந்தாலோ சித்து அவரை இந்த வீட்டில் தங்கும்படிக் கூறினர். இதனால் தினந்தோறும் புரி ஜகன்னாதரின் தரிசனமும் சாது சங்கத்தையும் இழந்த பலராம் நொந்த மனத்துடன் கல்கத்தாவில் வசித்தார். அங்குச் சில நாட்கள் தங்கிவிட்டு,எப்படியாவது புரிக்குச் சென்றுவிட வேண்டும் என்று தான் அவர் எண்ணியிருந்தார். ஆனால் குருதேவரைப் பார்த்தபின் அந்த எண்ணத்தைக்கைவிட்டு கல்கத்தாவில் நிரந்தரமாகத் தங்க முடிவு செய்தார். இப்போது பயம் என்னவென்றால் ஹரிவல்லபவர் வீட்டைக் காலி செய்யச் சொல்லிவிடுவாரோ, இல்லை நிமாய் எஸ்டேட் விவகாரங்களைக் கவனிப்பதற்காகக் கோட்டாருக்கு வரச் சொல்லிவிடுவாரோ, அதனால் குருதேவரின் சத்சங்கத்தை எங்கே இழந்து விடுவோமோ என்பது தான். இந்த அச்சம் அவரை அவ்வப்போது வேதனையில் ஆழ்த்தியது.
எதிர்பாராத சில நேரங்களில் மனம் எதிர்கால நிகழ்ச்சிகளை சூசகமாக அறிவித்து விடுகிறது. பலராமின் வாழ்விலும் அவர் பயந்தது போல் சம்பவங்கள் நடந்தன. உறவினரின் ரகசியத் தூண்டுதலினால், அவரது போக்கு தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவரது சகோதரர்கள் இருவரும் கடிதம் மூலம் அவருக்குத் தெரிவித்தனர். சில முக்கிய விஷயங்களைத் தன்னுடன் கலந்தாலோசிப்பதற்காக ஹரிவல்லபர் விரைவில் கல்கத்தா வந்து சில நாட்கள் தங்கப்போகிறார் என்ற செய்தியும் பலராமிற்கு எட்டியது. எந்தத் தவறும் செய்யாததால் பலராம் பயப்படவில்லை என்றாலும், சூழ்நிலை எங்கே தம்மை குருதேவரிடமிருந்து பிரித்துவிடுமோ என்று கலங்கினார். பல்வேறு விதமான சிந்தனைப்போராட்டங்களுக்குப் பிறகு, பிறர்பேச்சை நம்பி சகோதரர்கள் தன்னைக் குற்றவாளியாகக் கருதினாலும், குருதேவர் நோய்வாய்ப்பட்டிருக்கின்ற இந்த வேளையில் அவரை விட்டுவிட்டு, தான் எங்கும் போகப்போவதில்லை என்றுமுடிவு செய்தார். அதந்தச் சமயத்தில்ஹரிவல்லபர் கல்கத்தா வந்து சேர்ந்தார். அவருக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருந்தார் பலராம். பின்னர் அச்சமோ கவலையோ இன்றி, வழக்கம்போல் நாள்தோறும் குருதேவரிடம் வந்து போய்க்கொண்டிருந்தார்.
அகத்தின்அழகு முகத்தில் தெரியும்.அன்று பலராம் குருதேவரிடம் வந்தபோதே அவருள் ஒரு பெரிய போராட்டம் நடந்து கொண்டிருப்பதை, அவரது முகத்தைப் பார்த்தே குருதேவர் புரிந்து கொண்டு விட்டார். அவர் பலராமை ஒரு விசேஷ முறையில் தம்முடையவராகக் கருதி வந்தார். பலராமின் வேதனையைக் கண்டு கவலையுற்ற அவர் பலராமை அருகில் அழைத்து விசாரித்து விஷயங்களைத் தெரிந்து கொண்டார். பின்னர் அவர் (ஹரிவல்லபர்) எப்படிப்பட்டவர்? அவரை ஒரு முறை நீ இங்குக் கூட்டி வர முடியுமா என்று கேட்டார்? அதற்கு பலராம், அவர் மிகவும் நல்லவர், படித்தவர், அறிவாளி, நற்குணமிக்கவர், பரோபகாரி, தானதர்மங்கள், ஏராளம் செய்பவர். பக்திமானும் கூட. பொதுவாக பணக்காரர்களிடம் இருக்கும் குறைபாடு இவரிடமும் உண்டு. யார் கூறுவதையும் அப்படியே பிடித்துக் கொள்வார். நான் இங்கு வருகிறேன் என்பதால் என்னிடம் மிகவும் வெறுப்பாக இருக்கிறார் . நான் சொன்னால் இங்கு வருவாரோ, மாட்டாரோ என்றார். அப்படியானால் நீ சொல்லி எதுவும் நடக்காது. கிரீஷைக் கூப்பிடு” என்றார். குருதேவர் கிரீஷ் வந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த வேலையை ஏற்றுக்கொண்டு , இளம் வயதில் ஹரிவல்லபரும் நானும் சிலகாலம் பள்ளித்தோழர்களாக இருந்தோம் . அவர் கல்கத்தா வரும்போதெல்லாம் நான் அவரைப் பார்க்கப்போவதுண்டு. எனவே இந்த வேலையைப் பொறுத்தவரை எனக்குச் சிரமமே இல்லை இன்றே போய் அவரை பார்க்கிறேன்” என்று கூறினார்.
பாகம்-118
-
மறுநாள் மாலை சுமார் ஐந்து மணிக்கு கிரீஷ் ஹரிவல்லபருடன் வந்தார், குருதேவரிடம் அவரை அறிமுகப் படுத்தி, இவர் என் இளமைக்கால நண்பரான ஹரிவல்லபர், கட்டத்தில் அரசாங்க வக்கீலாக இருக்கிறார். தங்களைப் பார்க்க வந்திருக்கிறார்” என்று கிரீஷ் கூறினார். குருதேவர் அவரை அன்புடன் வரவேற்று தம் அருகே அமர்த்திக்கொண்டு, உங்களைப் பற்றி பலரும் சொல்லக்கேள்விப்பட்டேன். உங்களைப் பார்க்க விரும்பினேன். ஒரு வேளை நீங்கள் எல்லாவற்றிற்கும் கணக்குப் பார்ப்பவரோ என்ற அச்சமும் இருந்தது. (கிரீஷிடம்) ஆனால் அப்படியில்லை.(ஹரிவல்லபரைக் காட்டி) சிறுவனைப்போன்று எளியவராக இருக்கிறார் இவர்.(கிரீஷிடம்) கண்களைக் கவனித்தாயா? பக்தி நிறைந்த இதயம் இல்லாவிடில் இத்தகைய கண்கள் இருக்க முடியாது. (திடீரென்று ஹரி வல்லபரைத் தொட்டு) ஏனோ நீங்கள் எனக்கு மிகவும் நெருங்கியவர்போல் தோன்றுகிறீர்கள். என் பயமெல்லாம் பறந்து விட்டது” என்றார். ஹரிவல்லபவர் அவரை வணங்கி அவரது பாதத்தூளியைத் தலையில் தரித்துக்கொண்டு எல்லாம் உங்கள் அருள்” என்றார்.
கிரீஷ் கூறினார், அவருக்கு பக்தி இருப்பது இயற்கைதான் அவரது பரம்பரை அப்படி. உயர்ந்த பக்தியின் காரணமாக கிருஷ்ணராம் போஸ், பக்தர்கள் தினமும் காலையில் நினைத்து போற்றுபவர்களுள் ஒருவராக உள்ளார். அவரது பரம்பரையில் வந்தோருக்கு பக்தி வரவில்லையெனில் வேறு யாருக்குத் தான் வரும்.
இவ்வாறு பக்தியைப் பற்றிய பேச்சு எழுந்தது. இறைவனிடம் நம்பிக்கை, பக்தி, முழு சரணாகதி-இவையே மனிதப் பிறவியின் இறுதி லட்சியம் என்று அனைவரிடமும் பேசியவாறே குருதேவர் பரவச நிலையை அடைந்தார். பின்னர் சிறிது புறவுணர்வை பெற்றபின் எங்களுள் ஒருவரிடம் பாடும்படி க் கூறினார். அந்தப் பாடலின் உட்பொருளை ஹரிவல்லபருக்கு மெல்லிய குரலில் விவரித்துக்கொண்டிருக்கும் போது ஆழ்ந்த சமாதி நிலையில் மூழ்கினார். பாட்டு முடிகின்ற வேளையில் இரண்டு, மூன்று பக்த இளைஞர்களும் பரவச நிலையை அடைந்திருந்தனர். குருதேவரின் ஆனந்த மயமான தோற்றமும் இதயத்தை வருடிச் செல்கின்ற அவரது அமுத மொழிகளும் ஹரிவல்லபரை அப்படியே ஆட் கொண்டன. அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. சூரியன் மறைந்து சிறிது நேரம் கழிந்தபின் அவர் குருவேரிடம் விடைபெற்றுச்சென்றார்.
புதிதாக வருபவர்களை, பேச்சிற்கு இடையே சிலவேளைகளில் குருதேவர் தொடுவதை நாங்கள் தட்சிணேசுவரத்தில் பார்த்திருக்கிறோம். குருதேவரை எதிர்த்து வாதம் செய்யத் தொடங்கினாலோ, இல்லை ஏதாவது காரணத்திற்காக அவரை தொடங்கினாலோ, இல்லை ஏதாவது காரணத்திற்காக அவரை எதிர்க்கின்ற நிலையில் இருந்தாலோ அவர்களை இவ்வாறு சாதுரியமாக குருதேவர் தொடுவார். அடுத்தகணமே அவர்கள் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வார். யாரைக் கண்டதும் அவருக்கு ஆனந்தம் ஏற்படுகிறதோ அவர்களை மட்டும் தான் தொடுவார். ஒரு நாள் அதற்குரிய காரணத்தை அவராகவே எங்களிடம் கூறினார். அகங்காரத்திற்கு அடிமைப்பட்டவர்களும் மற்றவர்களைவிடத் தாங்கள் எந்த வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்லர் என்ற எண்ணம் உடையவர்களும் பிறர் 4றுவதை எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.(தமது உடலைக் காட்டி) இதனுள் உறைபவரின் ஸ்பரிசம் பட்ட மாத்திரத்தில் , அவரது தெய்வீக சக்தியால் அவர்களின் அந்த மனோபாவம் மீண்டும் தலை தூக்க முடியாமல் போய் விடுகிறது. பாம்பு படமெடுத்து ஆடும் போது அதனை ஒரு மூலிகையினால் தொட்டால் அது தலையைத் தொங்கப் போட்டுக்கொள்ளும். அதே போல் அவர்களின் ஆணவமும் மீண்டும் தலைதூக்க முடியாமல் போய் விடுகிறது. அதனால் தான் பேசிக்கொண்டிருக்கும்போதே மெல்ல நான் அவர்களைத் தொடுகிறேன்.
அன்று ஹரிவல்லபர் குருதேவரிடம் விடைபெற்றபோது முற்றிலும் மனம் மாறியவராக சென்றதைப் பார்த்தபோது எங்களுக்கு குருதேவரின் மேற்கூறிய சொற்கள் தாம் நினைவுக்கு வந்தன. அதன் பின் பலராம் குருதேவரிடம் செல்வது தவறு என்ற எண்ணம் அவரது சகோதரர்களின் உள்ளத்தில் தோன்றவில்லை.
குருதேவர் சியாம் புகூரில் இருந்த காலத்தில் அவரது உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. அதே வேளையில் அவரை தரிசிக்கவும் அவரது அருளைப்பெறவும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. ஹரிஷ்சந்திர முஸ்தபி முதலிய பல இல்லற பக்தர்களும், பின்னாளில் திரிகுணா தீதானந்தர் என்ற பெயரில் துறவியான சாரதா பிரசன்ன மித்ரர், மணீந்திர கிருஷ்ண குப்தர் போன்ற பக்த இளைஞர்களும் வேறு பலரும் குருதேவரை இங்குதான் முதன் முறையாக தரிசித்தனர். பலர் குருதேவரை தட்சிணேசுவரத்தில் ஓரிரு முறை சந்தித்திருந்தாலும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இங்குதான் அவர்களுக்குக் கிடைத்தது. புதியவர்களின் இயல்பையும் பழைய சம்ஸ்காரங்களையும் பார்த்து அவற்றுக்கேற்ப பக்தி நெறி அல்லது !ஞானம் கலந்த பக்தி நெறி சாதனைகளை அவர்களுக்கு க் காட்டினார் குருதேவர். வாய்ப்புக் கிடைத்தால் தனிமையிலும் அவர்களுக்கு உபதேசம் அளித்து சாதனையில் முன்னேறும்படி ஊக்குவித்தார்.
இப்படி ஒரு நாள் ஓர் இளைஞருக்கு உருவம் மற்றும் அருவ தியான வேளையில் அமர வேண்டிய ஆசனங்களை அவர் கற்பித்ததைக்கண்டோம். பத்மாசனத்தில் அமர்ந்து இடது உள்ளங்கையின்மேல் வலது உள்ளங்கையை வைத்து, இரு கைகளையும் அப்படியே நெஞ்சில் வைத்துக்கொண்டு கண்களையும் மூடிக் கொள்ள வேண்டும். எல்லாவிதமான உருவ தியானத்திற்கும் இந்த ஆசனம் ஏற்றது. பத்மாசனத்தில் வலக்கையை வலது முழங்காலிலும் இடக்கையை இடது முழங்காலிலும் வைத்துக்கொண்டு, இரண்டு கைகளிலும் ஆள்காட்டி விரல் நுனியால் பெருவிரல் நுனியைத் தொட்டு மற்றவிரல்களை நேராக நீட்டிக்கொள்ள வேண்டும். பார்வையைப் புருவ மத்தியில் நிலை நிறுத்த வேண்டும்- இது அருவக் கடவுள் தியானத்திற்கு ஏற்ற ஆசனம். இதைக் கூறி முடித்ததும் குருதேவர் சமாதி நிலையில் ஆழ்ந்தார். சிறிது நேரத்திற்குப் பின் மனத்தை வலுக்கட்டாயமாகப் புறவுணர்விற்குக்கொண்டு வந்தார். அதன் பின் கூறினார். இதையெல்லாம் செய்து காட்ட முடியவில்லை. இப்படி அமர்ந்ததும் பரவசம் ஏற்பட்டு மனம் தன்னுள் மூழ்கி சமாதியில் ஆழ்ந்து விடுகிறது. பிராணன் மேலே செல்கிறது. தொண்டைப் பகுதிக்குச் செல்லும்போது வேதனை அதிகரிக்கிறது. அதனால் தான் சமாதி நிலை கூடாது என்று டாக்டர் வலியுறுத்தியுள்ளார். அந்த இளைஞர் வருத்தத்துடன், நீங்கள் ஏன் செய்து காட்டினீர்கள்?நான் கேட்கவில்லையே! என்றார். அதற்கு குருதேவர், அது உண்மைதான்.ஆனால் உங்களுக்கு ஓரிரு வார்த்தைகள் சொல்லாமலும் செய்து காட்டாமலும் இருக்க முடியுமா,என்ன? என்றார். குருதேவரின் அளவற்ற கருணையையும், அவரது மனம் மிக இயல்பான சமாதி நிலைக்குச்செல்லும் நிலையையும் கண்டு அந்த இளைஞர் மிகவும் வியப்படைந்தார்.
குருதேவரின் அன்றாடச்செயல்கள் ஒவ்வொன்றிலும் ஓர் இனிமையும் தனித்தன்மையும் இருக்கும். புதிதாக வருபவர்களில் பலர் அதைக் கண்டு வியந்து நிற்பதுண்டு. எடுத்துக் காட்டாக ஒரு நிகழ்ச்சியைக் கூறுவோம். இதை கிரீஷின் இளைய சகோதரரான காலம் சென்ற அதுல் வந்திர கோஷிடமிருந்து கேள்விப்பட்டோம். இயன்றவரை அதை அப்படியே தர முயற்சிக்கிறோம்.
உபந்திரர் என் நெருங்கிய நண்பர். வெளியூரில் உதவி நீதிபதியாக இருக்கிறார். நான் குருதேவரை தரிசித்த பின் ஒரு முறை அவருக்கு, நீங்கள் இந்தத்தடவை இங்கே வரும்போது உங்களுக்கு ஓர் அற்புதப் பொருளைக் காட்டுவேன்” என்று கடிதம் எழுதியிருந்தேன். அவர் விடுமுறையில் வந்தபோது அதனை எனக்கு நினைவூட்டினார். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரிடம் உங்களை அழைத்துப்போகலாம் என்று எண்ணினேன்.ஆனால் இப்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். பேசக் கூடாது என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். நீங்கள் புதியவர் எவ்வாறு உங்களைக் கூட்டிச்செல்ல முடியும்? என்று கேட்டேன் நான். அன்று கழிந்து விட்டது. மற்றொரு நாள் அவர் என் மூத்த அண்ணாவைக் (கிரீஷ்) காண வந்தார். அன்றும் குருதேவரைப் பற்றிய பேச்சு எழுந்தது. அண்ணா அவரிடம் ” ஒரு நாள் அதுலுடன் போய்ப் பார்த்து வாருங்களேன்” என்றார். அதற்கு உபேன், இவர் என்னை அழைத்துப்போகிறேன் என்று ஆறு மாதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்போது அதைச்சொன்னால், இயலாது என்கிறார்” என்றார். அதற்கு நான் அண்ணாவிடம், இந்த நாட்களில் நாம் கூட எப்போது வேண்டுமானாலும் போய்விட முடிவதில்லை. புதிய ஒருவரை எப்படிக் கூட்டிச்செல்ல இயலும்? என்று கேட்டேன். அதற்கு அண்ணா, எப்படியாவது ஒரு முறை கூட்டிச்செல். அதிர்ஷ்டம் இருந்தார் குருதேவர் இவரைப் பார்ப்பார், அருள் புரிவார்.” என்றார்.
ஒரு நாள் பிற்பகலில் நான் உபேனைக் கூட்டிச்சென்றேன்.குருதேவரின் அறையில் இரண்டு பெரிய விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன. அறை முழுவதும் பக்தர்கள் அமர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.படம் வரைவது ( ஏனெனில் சிறந்த ஓவியரான அன்னதாபாக்சி அன்று அங்கே இருந்தார்) பொற்கொல்லன் பொன்னை உருக்குவது என்று தேவையற்ற ஏதேதோ பேச்சுக்கள் நடந்தன. நீண்ட நேரம் அமர்ந்திருந்தோம். ஒருவர் கூட (இத்தகைய பேச்சைத் தவிர) நல்லதாக எதையும் பேசவில்லை. புதிய ஒருவரை இன்று கூட்டிவந்துள்ளேன். இன்று போய் இப்படிப் பயனற்ற பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றனவே! இவர் குருதேவரைப் பற்றி என்ன நினைப்பார்.? என்று எண்ணினேன். என் முகமே தொங்கிப்போய்விட்டது. ஒருவிதமான தயக்கத்துடன் அவ்வப்போது உபேனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் பார்த்தபோதெல்லாம் அவரது முகத்தில் மகிழ்ச்சியே தென்பட்டது. அந்த உரையாடல்கள் எல்லாம் அவர் ரசித்து மகிழ்வதைப்போன்றிருந்தது. ”போகலாம்” என்று அவருக்கு சைகை காட்டினேன். அதற்கு அவர், இன்னும் சற்று நேரம் இருப்போம்” என்று சைகை மூலம் தெரிவித்தார். இவ்வாறு இரண்டு மூன்று முறை சைகை செய்தபின் எழுந்து வந்தார். அவரிடம் நான், என்ன, இவ்வளவு நேரமாக எதைக்கேட்டுக் கொண்டிருந்தீர்கள்? இவற்றைக்கேட்கத்தான் வந்தீர்களா? இதனால் தான் உங்களை அப்பாவி என்று கூறுகிறோம். ” என்றேன். அவரது நெற்றியில் பச்சை குத்தியது போல் ஒரு தழும்பு இருந்ததால் தான் நாங்கள் அவரை அவ்வாறு அழைத்தோம். அவர் சொன்னார், இல்லையப்பா, கேட்பதற்கு நன்றாயிருக்கிறது.முன்பு(Universal love ( எல்லோரிடமும் ஒரே போல் அன்பு செய்தல்) பற்றிக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் யாரிடமும் அதைக் கண்டதில்லை. சாதாரணவிஷயங்களையும் எல்லோருடனும் பகிர்ந்து கொண்டு மகிழ்கின்ற இவரிடம் (குருதேவர்) தான் அதை முதன் முதலாகக் காண்கிறேன். இன்னொரு நாள் வரவேண்டும். அவரிடம் எனக்கு மூன்று கேள்விகள் கேட்க வேண்டும்.
மற்றொருநாள் காலையில் உபேனைக் கூட்டிச் சென்றேன். அன்று அதிகக் கூட்டம் இல்லை, ஓரிரு கேசவகர்களும் என் மைத்துனனான மல்லிக்கும் தான் இருந்தனர். கேட்க வேண்டியவற்றை நீயே அவரிடம் கேள். அப்போது தான் உனக்குரிய பதில் கிடைக்கும். வேறு யார் மூலமாகவும் கேட்காதே,என்று அங்கு போகுமுன் நான் உபேனிடம் திரும்பத் திரும்பக் கூறியிருந்தேன். ஆனால் அவர் சற்று கூச்சப்பேர்வழியாக இருந்தார். எனவே நான் கூறியும் அவர் மல்லிக் மூலம் தான் கேள்விகளைக்கேட்டார்.குருதேவர் பதிலளித்தார். ஆனால் உபேனின் முகத்திலிருந்தே, அவருக்கு வேண்டிய பதில் கிடைக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். உடனே நான் மெதுவாக அவரிடம், இப்படித் தான் நடக்கும். உங்களிடம் திரும்பத்திரும்பச் சொல்லியிருந்தேனே, நீங்களே ஏன் கேட்கக் கூடாது? மற்றொருவரின் பின்னால் ஏன் தொங்கப்போனீர்கள்? என்று கேட்டேன்.
அதன் பின்னர் அவர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு குருதேவரிடம் நேராக, ஐயா, இறைவன் உருவம் உடையவரா, அருவமானவரா, இரண்டுமே உண்டானால் எவ்வாறு இந்த முரண்பட்ட இயல்புகள் ஒரே சமயத்தில் இறைவனிடம் இருக்க இயலும்? என்று கேட்டார். அதற்கு குருதேவர் கூறினார், அவர் உருவம் உடையவர், உருவம் அற்றவர்- இரண்டும் அவரே, பனிக்கட்டியையும் தண்ணீரையும் போல, உபேந்திரர் கல்லூரியில் விஞ்ஞானம் படித்தவர். அதனால் குருதேவர் கூறிய எடுத்துக் காட்டு அவருக்கு உடனே புரிந்துவிட்டது. மிகவும் மகிழ்ந்தார் அவர். அந்த ஒரு கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு மற்ற இரண்டு கேள்விகளையும் கேட்காமல் வணங்கி விடைபெற்றுக்கொண்டார். வெளியில் வந்ததும் நான் அவரிடம், உபேன், என்ன, மூன்று கேள்விகள் கேட்கப்போவதாகச்சொன்னீர்கள், ஏன் ஒன்றை மட்டும் கேட்டு விட்டு எழுந்து வந்து விட்டீர்கள்? என்று கேட்டேன். அதற்குஅவர், புரியவில்லையா? அந்த ஒரே பதிலில் என் மூன்று கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டது” என்று கூறினார்.
அந்த நாட்களில் ராமசந்திரர் தினமும் அதிகாலையிலேயே சாப்பிட்டுவிட்டு அலுவலக உடைகளைப் பையில் எடுத்துக்கொண்டு அலுவலகம் செல்லும் வழியில் குருதேவரிடம் வந்து ஒரு மணிநேரம் இருந்துவிட்டு, உடை மாற்றிக்கொண்டு அலுவலகத்திற்கு செல்வது உனக்கு நினைவிருக்குமே! இன்று குருதேவர் உபேனுக்குபதில் சொல்லிக்கொண்டிருக்கும்போது அவர் திடீரென்று அறைக்குள் வந்து உடை மாற்றியவாறே அதைக்கேட்டார். நாங்கள் வெளியே வந்ததும் அவர், அதுல் அவரை(உபேனை) இங்குக் கூட்டிவா! குருதேவர் ரத்தினச் சுருக்கமாகப் பதில் கூறிவிட்டார். இதை அவர் புரிந்து கொள்வது கடினம். நான் எழுதிய தத்வப் பிரகாசிகாவைப் படித்ததால் தான் அவரால் புரிந்து கொள்ள முடியும்” என்றார். எனக்கு எரிச்சலாக இருந்தது. நான் தயங்காமல், என்ன ராம், நீ எங்களைவிட ஏழு ஆண்டுகளுக்கு முன்னாலே குருதேவரிடம் வந்து கொண்டிருக்கிறாய். குருதேவர் கூறியதிலிருந்து புரிந்து கொள்ளாததை உன் நூலைப் படிப்பதன் மூலம் புரிந்து கொள்வார் என்கிறாய். இதென்ன பேச்சு, உன் நூலைப் படிக்கக்கொடுக்க நினைத்தால் கொடு. அது வேறு விஷயம். ” என்று கூறிவிட்டேன். ராம் சிறிது துணுக்குற்றார். எப்படியோ நூலை உபேனுக்குக் கொடுக்கவே செய்தார்.
பாகம்-119
-
சியாம்புகூரில் குருதேவர்
-
குருதேவர் சியாம் புகூரில் வசித்து வந்தபோது ஒரு முறை அதிசயக் காட்சி ஒன்று பெற்றார். அதில் அவரது சூட்சும சரீரம் தூல சரீரத்திலிருந்து வெளிவந்து அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலவியது. அதன் கழுத்துப்பகுதி பின்புறம் புண்ணாகி இருந்தது. அந்தப் புண் எவ்வாறு வந்தது என்று அவர் வியப்புடன் யோசித்தார். அப்போது பலவகையான பாவங்களைச் செய்தவர்கள் வந்து தம்மைத்தொட்டு புனிதம் அடைகின்றனர். அவர்களின் பாவங்கள் தமக்கு மாற்றப்படுகின்றன. அதன் காரணமாகத்தான் புண் ஏற்பட்டுள்ளது” என்று அன்னை பராசக்தி அவருக்குப் புரியவைத்தாள். உயிர்களின் நன்மைக்காக லட்சக்கணக்கான முறை வேண்டுமானாலும் பிறந்து துன்பங்களை ஏற்றுக் கொள்ள தாம் தயாராக இருப்பதாக குருதேவர் தட்சிணேசுவரத்தில் இருந்தபோது கூறியதை நாங்கள் கேட்டிருக்கிறோம். எனவே அவர் மேற்கண்ட காட்சியால் சிறிதும் கவலைப்படாமல் அதனை எங்களுக்கு சந்தோஷமாகத் தெரிவித்ததில் வியப்பு ஒன்றுமில்லை. அவரது அளவற்ற கருணையை நினைப்பதிலும் பேசுவதிலும் பெருமகிழ்ச்சியே அடைந்தோம். ஆனால் குருதேவர் முன்னைப்போல் உடல்நலம் பெறும்வரை புதிதாக வருபவர்கள் அவரது பாதங்களைத் தொட அனுமதிக்கவேண்டாம்என்று பக்தர்கள் முடிவு செய்தனர். குறிப்பாக இளைஞர்கள் இந்த விஷயத்தில் தீவிரமாக இருந்தனர். பக்தர்களுள் சிலர் இளமைப்பருவத்தில் தாங்கள் வாழ்ந்த கட்டுப்பாடற்ற வாழ்க்கையை எண்ணி இனிமேல்குருதேவரின் திருவடிகளைத் தொடக்கூடாது என்று முடிவு செய்தனர். ஆனால் நரேந்திரர் போன்ற ஓரிருவர் குருதேவரின் இந்தக் காட்சியைப் பற்றிக்கேள்விப்பட்ட போது ஒருவர் செய்த கர்மங்களின் பலனை இன்னொருவர் தாமாக ஏற்று அனுபவிக்க முடியுமா என்று ஆராய முற்பட்டனர். இந்தக் கருத்து கிறிஸ்தவ மதத்திற்கும் வைணவ நெறிக்கும் மூல ஆதாரமாக உள்ளது. குருதேவரின் காட்சி இந்தக் கருத்தை நிரூபிப்பதாக இருப்பதைக் கண்ட அவர்கள் அதனைத் தீவிரமாக ஆராய்வதில் ஈடுபட்டனர்.
குருதேவரைக் காண வருகின்ற புதியவர்களைத் தடுப்பதற்கான முயற்சிகளைக் கண்ட கிரிஷ், தடுக்க முயற்சி செய்கிறீர்கள், செய்யுங்கள். ஆனால் பயனில்லை. ஏனெனில் அவர்( குருதேவர்) இதற்காகத் தான் உடல் தரித்திருக்கிறார்” என்று கூறினார். அப்படித்தான் நடக்கவும் செய்தது. சிறிதும் அறிமுகமில்லாத புதியவர்களைத் தடுக்க முடிந்தது.ஆனால் ஏற்கனவே அறிமுகமான புதியவர்களை த் தடுக்க முடியவில்லை. எனவே பக்தர்களுள் யாருக்குமே அறிமுகம் இல்லாதவர்களை குருதேவரின் அருகில் செல்லஅனுமதிக்கக் கூடாது என்றும், தெரிந்தவர்களும் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கக் கூடாது என்று முன்பே சொல்லி அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப் பட்டது. ஆனால் புதியவர்களாயிருந்தாலும், சிலரது ஆழ்ந்த பக்தியையும் மன ஏக்கத்தையும் கண்டு சில வேளைகளில் இந்த நியதியைத் தளர்த்த வேண்டியிருந்தது.
இந்த நியமத்தைச் செயல்படுத்தும்போது ஒரு நாள் வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்தது. குருதேவர் தட்சிணேசுவரத்தில் வாழ்ந்த போது சமயத் தொடர்பான ஒரு நாடகம் காண கிரீஷின் நாடகக் கொட்டகைக்கு ஒரு முறை சென்றிருந்தார். அதில் முக்கியப் பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகையை அவர் மிகவும் புகழ்ந்தார். நாடகம் முடிந்ததும் பக்தையாகிய அந்த நடிகை, பரவச நிலையில் இருந்த குருதேவரின் திருவடிகளை வணக்கும்பேறு பெற்றாள். அதிலிருந்து அவள் அவரை தெய்வமாகக் கருதி பக்தி செலுத்தினாள். அவரை மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். அவரது உடல் நிலையைப் பற்றி க்கேள்விப்பட்ட அவள் அவரைக் காணமிகவும் ஆவல் கொண்டாள். அவளுக்குக் காளிபாதரை நன்றாகத் தெரியும். எனவே குருதேவரைக் காண உதவுமாறு அவரிடம் வேண்டினாள். காளி பாதர் கிரீஷைப் பின்பற்றியே எதையும் செய்வார். குருதேவர் யுகாவதார புருஷர். எனவே தீய நடத்தையுடைய ஒருவர் தன் செயலுக்கு வருந்தி அவரது பாதங்களைத்தொட்டு விட்டால் அவரது நோய் அதிகரிக்கும் என்பதை கிரீஷால் நம்ப முடியவில்லை. அதனால் அந்த நடிகையை குருதேவரிடம் அழைத்துச் செல்வதற்கு அவருக்குத் தயக்கமோ அச்சமோ ஏற்படவில்லை. அவர்கள் ரகசியமாக கலந்தாலோசித்து அவளை மாறு வேடத்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். அந்த நடிகை கோட்- சூட் எல்லாம் அணிந்து ஓர் ஆணைப்போல் வேடமிட்டு, இருள் படரும் நேரத்தில் காளிபாதருடன் சியாம்புகூருக்கு வந்தாள். அவர் அவளைத் தன் நண்பர் என்று எங்களிடம் அறிமுகப்படுத்தி விட்டு, குருதேவரிடம் கூட்டிச்சென்று உண்மையைக் கூறியிருக்கிறார்.
அப்பொழுது நாங்கள் யாருமே குருதேவரின் அறையில் இல்லாததால் காளி பாதருக்கு எந்தத் தடையும் இல்லாது போயிற்று. எங்கள் கண்களில் அந்த நடிகை மண்ணைத் தூவி விட்டாள். என்பதை அறிந்து கொண்ட வேடிக்கைப் பிரியரான குருதேவர் விழுந்து விழுந்து சிரித்தார். அவளது தைரியத்தையும் திறமையையும் புகழ்ந்தார். பக்தியையும் நம்பிக்கையையும் கண்டு மனம் மகிழ்ந்தார். பின்னர் அவளுக்கு இறைநம்பிக்கை வளர சில உபதேசங்களைக் கூறி விடை கொடுத்து அனுப்பினார். அவளும் குருதேவரின் திருவடிகளில் தன் தலையை வைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். அதன் பின் காளிபாதருடன் சென்றாள். நாங்கள் பிறகு தான் இதை குருதேவரிடமிருந்து கேள்விப்பட்டோம். நாங்கள் ஏமாந்ததைக் கண்டு அவர் மகிழ்வதையும் வேடிக்கை செய்வதையும் கண்ட எங்களால் காளிபாதரைக் கடிந்து கொள்ள இயலவில்லை.
பாகம்-120
-
குருதேவரின் தொடர்பினாலும் அவருக்குச்சேவை செய்வதன் பலனாலும் பக்தர்களின் பக்தியும் நம்பிக்கையும் நாளுக்கு நாள் வளர்ந்தது. ஆனால் ஒரு விஷயத்தில் அவர்களின் மனம் அபாயமானதும் விபரீதமானதுமான பாதையில் செல்வதற்கான சாத்தியக் கூறுகள் தோன்றலாயின. தீவிர தியாகம், மிகுந்த சிரமத்தின் பேரில் மட்டுமே அடையக்கூடிய புலக் கட்டுப்பாடு போன்ற லட்சியங்களை விட, தற்காலிகமான சில உணர்ச்சியெழுச்சிகளில் அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டாயிற்று. தியாகம் மற்றும் புலக்கட்டுப் பாட்டை அடிப்படையாகக் கொண்டிராவிடில் அளவுக்கு மீறிய இத்தகைய உணர்ச்சி யெச்சிகள் ஆன்மீகத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் அவை காமம், கோபம், சினம் போன்ற பகைவர்களை வெற்றி கொள்வதற்குரிய ஆற்றலை ஒருவனுக்கு நல்காது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
இத்தகைய உணர்ச்சி யெழுச்சிகளுக்குப் பல வகையான காரணங்கள் உள்ளன. முதலாவதாக, சுலபமானதும் சிரமமின்றி அடையக் கூடியதுமான ஒன்றை விரும்புவது மக்களின் பொதுவான இயல்பு. அதனால் ஆன்மீக வாழ்க்கை என்று ஆரம்பித்தாலும் அவர்கள் உலகம் , இறைவன், போகம், தியாகம், இரண்டையுமே விடாமல் பிடித்துக் கொள்ள விரும்புகின்றனர். நற்பேறு பெற்றசிலர் மட்டுமே அவை இரண்டும், இருட்டும் வெளிச்சமும் போல் ஒன்றுக் கொன்று மாறுபட்டவை, இரண்டும் வேண்டுமானால் இறைவனுக்காகவே அனைத்தையும் துறத்தல் என்ற லட்சியத்திலிருந்து எவ்வளவோ கீழே வந்து தான் தீர வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு அத்தகையதொரு பிரமையில் வீழாது இருக்கின்றனர். போகம், தியாகம் இரண்டையும் பிடித்துக்கொள்ள விரும்புபவர்கள் சிறிதும் தாமதமின்றி தியாகம் என்ற லட்சியத்திலிருந்து இயன்றஅளவுவிலகி விடுவதே க்மை என்றெண்ணி, உலகியல் வாழ்வே எல்லை என்று முடிவு செய்து அங்கேயே நங்கூரமிட்டு நின்றுவிடுகின்றனர். அதனால் தம்மிடம் வருபவர்களை குருதேவர் உடனுக்குடன் பல வழிகளில் சோதித்து, அவன் இவ்வாறு நங்கூரமிட்டு விட்டு கவலையற்று இருப்பவனா என்று பார்ப்பார். அவன் அவ்வாறு உலகியலில் மூழ்கியவனாக இருந்தால், அவன் புரிந்து கொள்ளும் அளவிற்கு மட்டுமே தியாகம் என்கின்ற லட்சியத்தை ஆரம்பத்தில் கூறுவார். கேட்போரின் மனப் பக்குவதற்திற்கேற்ப அவருடைய உபதேசம் அமைவதானால், சாதனை விஷயத்தில் அவரது உபதேசம் இளம் சீடர்களுக்கு ஒரு வகையாகவும் இல்லறச் சீடர்களுக்கு வேறு வகையாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். ஹரி நாமத்தைப் பாடுவதும் நாரதர் காட்டிய பக்தி நெறியும் போது மானவை என்று அவர் சாதாரண மக்களுக்குக் கூறுவார். சாதாரண மக்கள் சாஸ்திரங்களைப் படிப்பது அதிதாகிவிட்டது. நாரதர் காட்டிய பக்தி நெறி” என்றால் என்ன என்பதை நூற்றில் ஒருவராவது புரிந்து கொண்டிருப்பாரா என்பதும் சந்தேகமே. அதிலும் இறைவன் மீது கொண்ட அன்பின் காரணமாக அனைத்தையும் துறக்க வேண்டும் என்பது முற்றிலுமாகப் புரிந்திருக்காது. எனவே அறியாமையில் உழல்கின்ற அந்த பக்தர்கள் தங்கள் பலவீனத்தின் காரணமாக உலகியல், ஆன்மீகம், இரண்டையும் பிடித்துக் கொள்ளலாம். என்ற பிரமையில் அவ்வப்போது மூழ்கியதும், சாதாரண உணர்ச்சியெழுச்சிகள் தான் ஆன்மீக அனுபவத்தின் இறுதி நிலை என்று எண்ணியதும் வியப்பிற்குரியதல்ல.
குருதேவரது வாழ்வில் ஈடிணையற்ற புலக் கட்டுப்பாடு, தீவிர தவம் இவை நிறைந்த சாதனைக்காலம் நாங்கள் அவரிடம் சொல்லுமுன்னரே முடிந்து விட்டது. எனவே அவரது உணர்ச்சியெழுச்சிகளும் பரவச நிலைகளும் அந்த உறுதியான அஸ்திவாத்தின் மீது நிலை நிற்கிறது என்பதை க் காண்கின்ற வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. பக்தர்களின் தவறான முடிவிற்கு இதுவும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. ஆனால் மிக முக்கியமான மற்றொரு காரணம் இருந்தது. குருதேவரைப் புகலடைந்திருந்த கிரீஷ் அவரை யுகாவதார புருஷர் என்று திடமாக நம்பினார். அதனை ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் அனைவரிடமும் கூறவும் செய்தார். பலருக்கு இந்த எண்ணம் இருந்தாலும் குருதேவர் தடுத்ததன் காரணமாக அவர்கள் வெளிப்படையாகக் கூறவில்லை. மேலும் , பலர் தம்மை அவதார புருஷராகக் கருதிப்போற்றத் தொடங்கும்போது தாம்உடலை உகுக்கும் காலம் நெருங்கி விட்டதாக அர்த்தம் என்று குருதேவர் பல முறை கூறியிருந்தார். பக்தர்கள் அதனை வெளிப்படையாகக் கூறாமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் கிரீஷின் மனநிலை முற்றிலும் மாறுபட்ட ஒன்று. நல்லதாகட்டும், கெட்டதாகட்டும் தான் செய்ய நினைத்த எதையும் அவரால் மறைக்க முடிந்ததில்லை. எனவே தான் இந்த விஷயத்திலும் அவர் குருதேவரின் தடையை மீற நேர்ந்தது. அவரது கூரிய அறிவு, மேடும் பள்ளமும் நிறைந்த விசித்திரமான வாழ்க்கை, அளவற்ற உற்சாகம், நம்பிக்கை இவற்றின் காரணமாக குருதேவரது தெய்வீக சக்தியின் எல்லையற்ற மகிமையைப் புரிந்து கொண்டதால் அவர் தம்மை முற்றிலுமாக குருதேவரிடம் ஒப்படைக்க முடிந்தது. ஆனால் இதனை மறந்துவிட்டு தாம் செய்துள்ளதைப்போன்று செய்யும்படி அனைவரையும் கூவியழைக்கத் தொடங்கினார். விளைவு? சாதனைகள், தியாகம், தவம் முதலியவற்றை யெல்லாம் விட்டு விட்டு , இறையனுபூதி என்பது மிக எளிதாக அடையக்கூடிய ஒன்று என்று கூறிக்கொண்டு, நான் வக்காலத்து கொடுத்து விட்டேன். ஆத்ம சமர்ப்பணம் செய்து விட்டேன்” என்றெல்லாம் பலரும் பிதற்றத் தொடங்கினார். குருதேவரிடம் அவர் கொண்ட அளவற்ற அன்பு, இப்படி பிரசாரம் செய்வதைத் தடுத்திருக்கும். ஆனால் அவரது அறிவு அதில் தவறில்லை என்றல்லவா புகட்டியது- காலம் காலமாக தர்மத்தின் படிந்துள்ள கறையைப்போக்கி மீண்டும் புதியதொரு தர்மச் சக்கரத்தைr் சுழல வைப்பதற்காக குருதேவர் உடல் தரித்துள்ளார். மூவகை த் துன்பங்களினாலும் துடிக்கும் உயிர்களுக்கோர் அடைக்கலம் கிடைப்பதற்காகவே அவர் பிறப்பு, மூப்பு போன்ற வேதனைகளைத் தாமாக ஏற்றுள்ளார். அந்தப் பணி நிறைவேறும் வரையில் அவர் உடலை உகுக்க மாட்டார் என்று தான் கிரீஷின் அறிவு அவருக்கு கூறியது. அதனால் மற்றவர்களும் தம்மைப்போன்று குருதேவரிடம் அடைக்கலம் புகுந்து அமைதியையும் பேரானந்தத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று கருதியே அவர் எல்லோரையும் அழைத்தார். இதில் அவரது குற்றம் எதுவும் இல்லை.
கிரீஷின் கூரிய அறிவு மற்றும் வாதத்திறமையின் முன்னால் ராமசந்திரர் போன்ற சற்று வயது முதிர்ந்த பக்தர்களின் அறிவு நிற்க முடியவில்லை. ராமசந்திரர் வைணவ குடும்பத்தில் பிறந்தவர் என்று ஏற்கனவே கூறினோம். அதனால் குருதேவரிடம் தெய்வீக சக்தியைக் கண்டபோது அவரைக் கிருஷ்ணராகவும் சைதன்யராகவும் நம்பிப்போற்றியதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் அவர் கிரீஷைப்போல் இதனை அதிகமாகப் பிரசாரம் செய்யாமலிருந்தார். இப்போது கிரீஷின் பக்கபலம் கிடைத்ததும் அவருக்கு உற்சாகம் பிறந்து விட்டது. குருதேவர் அவதார புருஷர் என்று சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் , இன்னும் ஒரு படி மேலே போய் கிருஷ்ண மற்றும் சைதன்ய அவதாரத்தில் அவருடன் வாழ்ந்தவர்கள் இப்போது யார் யாராகப் பிறந்துள்ளனர் என்றெல்லாம் ஆராயவும் பேசவும் தொடங்கி விட்டார். நாம் மேலே கூறிய தற்காலிக உணர்ச்சியெழுச்சிகளால் உடலில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டவர்களும், அவ்வப்போது புற உணர்வை இழப்பவர்களும் அவரது கணிப்பில் மிகவுயர்ந்த இடத்தைப்பெற்றார்கள் என்பதைச் சொல்லாமலே விளங்குமே!
இப்படி குருதேவர் ஓர் அவதார புருஷர் என்ற நம்பிக்கையின் உணர்ச்சிப் பிரவாகத்தில் பக்தர்கள்மிதந்து கொண்டிருந்த சமயம் வந்து சேர்ந்தார். விஜய கிருஷ்ண கோசுவாமி டாக்காவில் தன் அறையினுள் தியானம் செய்து கொண்டிருந்த போது குருதேவர் உயிருணர்வுடன் தன் முன் தோன்றியதாகவும் அப்போது குருதேவரின் உடலைத் தாம் தொட்டதாகவும் அவர் கூறியது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலாயிற்று. இந்தக் குழப்பத்துடன், ஓரிரு பக்தர்களுக்கு பக்திப் பாடல்களைக்கேட்கும்போது உடலில் சில மாற்றங்கள் தோன்றுவது, அவர்கள் புறவுணர்வைச் சிறிது இழப்பது இவற்றையெல்லாம் கண்டு சிலர் தங்கள் தெளிந்த அறிவு, விவேகம் முதலியவற்றை மொத்தமாக இழந்து விட்டனர். குருதேவரின் தெய்வீக சக்தியால் ஏதோ ஒரு திடீர் அற்புதம் எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் நிகழலாம். என்ற எண்ணத்துடன் , அவர்கள் கண் கொட்டாமல் அதனை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இத்தகைய உணர்ச்சி யெழுச்சிகள் தான் ஆன்மிகு வாழ்க்கையின் அறுதிநிலை என்று கருதி, பலர் வாழத் தலைப் பட்டது நரேந்திரரின் கவனத்திலிருந்து தப்பவில்லை. அவருக்கு பக்தர்களுள் முதலிடத்தை அளித் திருந்தார் குருதேவர். தியாகம், புலக்கட்டுப்பாடு , ஒரு முக ஈடுபாடு இவற்றுடன் ஒப்பிடும் போது இத்தகைய உணர்ச்சி யெழுச்சிகள் ஒரு காசுக்கும் உதவாதவை. இத்தகைய மனநிலைகளை முளையிலேயே கிள்ளாவிடில், எதிர்காலத்தில் பெரிய ஆபத்தில் போய் முடியும் என்பதை நரேந்திரரின் நுண்ணறிவு சுட்டிக் காட்டத் தவறவில்லை. உண்மையை விளக்கி அவர்களைக் காக்கும் முயற்சியில் முனைந்து ஈடுபட்டார் அவர். பக்தர்களின் ஆபத்திற்கான வாய்ப்பைக் கண்டும் குருதேவர் ஏன் வாளாவிருந்தார் என்ற கேள்வி எழலாம். ஆனால் அவர் உதாசீனமாக இருக்கவில்லை. செய்கைத் தனம் கலவாத உண்மையான உணர்ச்சி யெழுச்சியும் இறையனு பூதிக்கான ஒரு பாதை என்பதை அறிந்திருந்த அவர் அந்தப் பாதைக்குத் தகுதி வாய்ந்தவர்களை அதன் வழியே நடத்திச் செல்வதற்குரிய தருணத்திற்காகக் காத்திருந்தார்.ஏனெனில், நாம் எவ்வளவு விரும்பினாலும் திடீரென்று எதுவும் நடந்து விடாது. உரிய நேரத்தில் தான் எல்லாம் நடக்கும். அதாவது உரிய காலத்திற்காகக் காத்திருக்க வேண்டும்” என்று அவர் அடிக்கடி கூறுவதை நாங்கள் கேட்டிருக்கிறோம். ஒரு வேளை பக்தர்களின் இந்தத் தவற்றை நரேந்திரர் எப்படி நீக்குகிறார். அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் என்னென்ன என்பதை கவனித்துக் கொண்டு இருந்திருக்கலாம். அல்லது நரேந்திரரை ஒரு கருவியாகக்கொண்டே இந்தத் தவற்றைத் திருத்த நினைத்திருக்கலாம்.
திடகாத்திரமான உடலும் உறுதியான மனமும் படைத்திருந்த இளைஞர்கள் தன் கருத்தை எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்றுநினைத்தார் நரேந்திரர். எனவே அறிவுக்குப் பொருந்துகின்ற விதத்தில் அவர்களுக்கு எடுத்துரைத்தார். எந்த உணர்ச்சி, வாழ்க்கையில் ஒரு நிலையான மாற்றத்தை உண்டாக்க வில்லையோ, இந்தக் கணம் இறையனுபூதி பெ ற வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டி விடவும் மறுகணமே காமஸ்ரீ காஞ்சன ஆசையைத் தடுக்க முடியாமல் திணறவும் செய்கிறதோ, அந்த உணர்ச்சி ஆழமானதில்லை. எனவே அதன் மதிப்பு அற்பமே. அத்தகைய உணர்ச்சியெழுச்சியின் தூண்டுதலால் சிலர் கண்ணீர் உருக்கலாம், சிலருக்கு மயிர்க் கூச்செறியலாம். வேறுசிலருக்கு உடல் மாற்றங்களும் நிகழலாம். சிறிது நேரத்திற்குப் புற உணர்வையே இழக்கலாம். ஆனால் இவையனைத்தும் நிச்சயமாக நரம்புத் தளர்ச்சியின் விளைவுகள் என்பது உறுதி. மனசக்தியால் அதைக் கட்டுப்படுத்த இயலாவிட்டால் நல்ல சத்துள்ள உணவை உண்பதும் மருத்துவரின் உதவியை நாடுவதும் இன்றியமையாதது.
ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-121
-
கண்ணீர் வடித்தல், மயிர்க் கூச்செறிதல் போன்ற உடல் மாற்றங்கள் பல நேரங்களில் போலியானவை-.
.....................................
இவ்வாறாக உடல் மாற்றங்களும் புறவுணர்வை இழப்பதும் பல வேளைகளில் போலியாகவே உள்ளன.புலக்கட்டுப் பாடு என்ற அணைக்கட்டு எவ்வளவு உயரமாகவும் உறுதி வாய்ந்ததாகவும்உள்ளதோ, அந்த அளவிற்கு உண்மையான உணர்ச்சிகள் ஆழமானவையாக இருக்கும். மிகவும் அரிதாகச் சிலரிடம் தான் அந்த உணர்ச்சிகள் மிகுந்த ஆற்றலுடன் பேரலையாக எழுந்து, புலக் கட்டுப்பாடு என்ற அணையை மீறிக்கொண்டு உடல் மாற்றங்கள், புறவுணர்வை இழத்தல் போன்ற சிற்றோடைகளாக வெளிப்படுகின்றன. முட்டாள்கள் இதை அறியாமல் தலை கீழாகப் புரிந்து வைத்திருக்கின்றனர்! உடல் மாற்றங்கள், புறவுணர்வை இழத்தல் ஆகியவற்றின் மூலம் உணர்ச்சியின் ஆழம் அதிகரிக்கும் என்று கருதி, அவர்கள் அத்தகைய மாற்றங்கள் வேகமாகத்தங்களிடம் தோன்றுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். இப்படி ஆரம்பித்த முயற்சி படிப்படியாக ஒரு பழக்கமாக மாறிவிடுகிறது. நாளாக நாளாக அவர்களுடைய நரம்புகள் தளர்ச்சியடைந்து விடுகின்றன. உணர்ச்சி வசப்படுவதற்குரிய சூழ்நிலை சிறிது ஏற்பட்டாலும் உடனே அவர்களுக்கு கண்ணீர், மயிர் க் கூச்செறிதல் என்று உடல் மாற்றங்கள் தோன்றி விடுகின்றன. இதனைத் தடுக்காவிட்டால் அவன் தீரா நோயாளி யாகிறான். அல்லது சித்தப் பிரமை ஏற்படுகிறது. ஆன்மீகப் பாதையில் வர முயல்பவர்களுள் எண்பது சதவீதம் ஏமாற்றுக் காரர்கள், பதினைந்துசதவீதம் பைத்தியமாகி விடுகின்றனர். மீதியுள்ள ஐந்து சதவீதத்தினரே சத்தியப்பொருளை உணர்கிறார்கள். அதனால் எச்சரிக்கையுடன் இருங்கள்.
--
சில பக்தர்களின் நடத்தை நரேந்திரர் கூறியதை வலுப்படுத்தியது-
.......................................
நரேந்திரர் கூறியதை முதலில் நாங்கள் அப்படியே எற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் கண்ட சில நிகழ்ச்சிகளால் அதை உண்மையென ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. ஒருவர் தனியிடத்தில் அமர்ந்து உணர்ச்சியெழுச்சியை உண்டாக்கக் கூடிய பாடலை பாடிக்கொண்டு, அதற்கேற்ப உடல் மாற்றங்களைத் தன்னிடம் வரவழைக்க முயன்று கொண்டிருந்தார். சற்று புறவுணர்வு இழந்த நிலையில் ஒருவர் நடனமாடியதைக் கண்ட மற்றொருவர் அதைப்போல் ஆடிப்பழகத் தொடங்கினார். அதைக் கண்ட இன்னொருவரும் அப்படியே செய்தார். ஒருவருக்கு அடிக்கடி பரவச நிலை ஏற்படலாயிற்று. இதைக் கண்ட நரேந்திரர் அவரைத் தனிமையில் அழைத்துச்சென்று அவரது தவற்றைச் சுட்டிக்காட்டி, உணர்ச்சிகளை அடக்கப் பழகும் படியும் நல்ல சத்துள்ள உணவை உண்ணும் படியம் கூறினார். அவ்வாறே கடைபிடித்த அந்த பக்தர் இரண்டு வாரங்களிலேயே பேரளவிற்கு புலக்கட்டுபாடும் உடல் நலமும் பெற்றார். இப்படித் தங்கள் எதிரிலேயே ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்டபோது பலரும் நரேந்திரர் கூறியதை நம்பத் தொடங்கினர். தங்களுக்கு உணர்ச்சியெழுச்சியும் உடல் மாற்றங்களும் புறவுணர்வை இழக்கின்ற நிலையும் உண்டாகவில்லை என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் கவலை நீங்கப் பெற்றனர்.
-
உணர்ச்சிவசப் படுவதை நரேந்திரர் கேலி செய்தல்- முரடனும் தோழியும்-
..................................
வாதப் பிரதிவாதங்கள், தர்க்கம் ஆகியவற்றின் துணையுடன் உபதேசம் செய்வதோடு நரேந்திரர் நின்றுவிடவில்லை. யாராவது உணர்ச்சியெழுச்சி அது இது என்று சிறிதாவது போலித்தனம் காட்டினால் போதும், அதை மற்றவர்களின் முன்னிலையில் கேலி செய்து அவரை நாணச்செய்து விடுவார். வைணவ சாதனைகளில் பிரபலமான சகி( தோழி) பாவனை, அதாவது ஆண்கள் பெண்களைப்போல் நடந்து கொள்ளும் முறை எப்படி கேலிக் கூத்தாகி விடுகிறது என்பதை விலாவாரியாக விளக்கி பக்தர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும்படிச் செய்வார். எங்களுள் அத்தகைய முறையில் நாட்டம் உடையவர்களை தோழி- பக்தன்” என்று கூறி கேலி செய்வார். சுருங்கச் சொன்னால் ஒருவர் ஆன்மீகப் பாதையைத்தேர்ந்தெடுத்து விட்டதற்காக, தன் ஆண்மை, தன்னம்பிக்கை, வீரம் இவற்றை விட்டுவிட்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னைத் திணித்து, பெண்களைப்போல் நாணிக்கோணி, வைணவப் பாடல்களைப் பாடுவதும் ஆடுவதுமாக இருப்பதை ஆண் சிங்கமான நரேந்திரரால் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவேகுருதேவர் கூறுகின்றதும் ஆண்களால் ஏற்றுக் கொள்ளத்தக்கதுமான ஞானம் கலந்த பக்தியையே அவர் போற்றினார். இந்த பக்தர்களை அவர் ”சிவகணம்” அல்லது ”முரட்டு பக்தன்” என்று வேடிக்கையாகக் கூறுவார். இதற்கு மாறாக இயல்புடையவர்களை தோழி பக்தன்” என்பார்.
இவ்வாறு பகுத்தறிவுடன் கேலி செய்தும் வாதித்தும் உணர்ச்சியெழுச்சிகளின் குறுகிய தன்மையை உடைத்ததுடன் நரேந்திரர் ஓயவில்லை. ஒருவர் கொண்டுள்ள கருத்தை மாற்றுவதால் மட்டும் அவரது மனப்போக்கை மாற்றிவிட முடியாது. அவருக்கு ஒரு புதிய மனநிலையை, ஒரு கருத்தை அளித்து அதில் அவரை வேரூன்றச்செய்யாதது வரை எந்த நன்மையும் விளையாது. இது நரேந்திரருக்கு நன்றாகப் புரிந்திருந்தது. எனவே அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். நேரம் கிடைத்த போதெல்லாம் பக்த இளைஞர்களைத் திரட்டி, உலகின் நிலையாமை, வைராக்கியம், பக்தி போன்றவற்றைப் புகட்டும் பாடல்களை அவர்களுடன் சேர்ந்து பாடுவார். இவ்வாறு அவர்களின் உள்ளத்தில் தியாகம், வைராக்கியம், பக்தி இவற்றைக் கனன்று கொண்டேயிருக்கும்படிச்செய்தார். குருதேவரை தரிசிக்கச் செல்கின்ற பலரும் அவரது பாடல்களை மெய்மறந்து கேட்பதுண்டு.
பக்தியின் வேகத்தால் குருதேவர் செய்த பல்வேறு சாதனைகளைப் பற்றி அவர்களிடம் கூறி மகிழ்வார் நரேந்திரர். அது மட்டுமல்ல. ஏசுவைப் பின்பற்றுதல்” என்ற நூலிலிருந்து மேற்கோள் காட்டி, அவரை யார் உண்மையாக நேசிக்கிறார்களோ, அவர்களின் வாழ்க்கையும் அவரது வாழ்வைப் போன்றே மாறி அமையும். நாமும் குருதேவரை உண்மையாக நேசிக்கிறோமா இல்லையா என்பது இதன் மூலம் தெரியவரும்” என்பார். குருதேவர் கூறுகின்ற ”அத்வைத ஞானத்தை ஆடையின் மூலையில் முடிச்சுப்போட்டுக்கொள். பின்பு எது வேண்டுமோ அதைச் செய்” என்பதை நினைவூட்டி அந்த அத்வைத ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு தான் குருதேவரின் உணர்ச்சியெழுச்சிகளும் பரவச அனுபவங்களும் ஏற்படுகின்றன. எனவே பக்தர்கள் முதலில் அந்த அத்வைத ஞானத்தை ப்பெற முயல வேண்டும் என்று புரிய வைப்பார்.
தீர ஆலோசித்த பிறகே புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பக்தர்களை நரேந்திரர் வலியுறுத்துவார். தியானம் அல்லது மன ஒருமைப்பாட்டின் மூலமாக தன்னுடையவும் பிறருடையவும் நோயைக் குணப்படுத்தலாம் என்று கேள்விப்பட்ட ஒருநாள் அவர் எங்கள் எல்லோரையும் ஓர் அறையில் அழைத்து, குருதேவரின் நோயைக்குணமாக்குவதற்கு அவ்வாறு முயலும்படிச்செய்தார். அறிவுக்குப் பொருந்தாதவற்றினின்று பக்தர்கள் விலகியிருப்பதில் முயற்சி எடுத்துக் கொண்டார். கீழே கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி இதனை விளக்குவதாக உள்ளது.
பாகம்-122
-
மதிஜில் குளத்தின் தென் பகுதியும் காசிப்பூர்ரோடும் சந்திக்கும் இடத்திற்கு எதிராக மஹிமாசரண் சக்கரவர்த்தியின் வீடு இருந்தது. அவரிடம் பல நல்ல பண்புகளுடன் பெயருர்- புகழ் ஆசையும் இருந்தது. புகழ் வரும் என்றால் பொய்வழியை நாடவும் தயங்கமாட்டார். எப்படியாவது மக்கள் தன்னை ஒரு செல்வந்தர், பண்டிதர், அறிஞர், கொடைவள்ளல், அறச்செல்வர் என்றெல்லாம் அழைக்க வேண்டும் என்பதே அவரது ஒவ்வொரு செயலுக்கும் பின்னணியாக இருப்பது போல் தோன்றும். சிலவேளைகளில் இதற்காக அவர் பலரது ஏளனத்திற்கும் ஆளாவதுண்டு. ஒரு முறை மஹிமாசரணர் இலவசப்பள்ளி ஒன்றைத் தொடங்கினார். அதனை ”ப்ராச்ய ஆர்யசிஷா காண்ட பரிஷத்” என்று அழைத்தார். தன் ஒரே மகனுக்கு ”மருகாங்க மௌலி பூததுண்டி” என்று பெயர் சூட்டினார். வீட்டில் வளர்த்த மானை ”கபிஞ்ஜலா” என்று அழைத்தார். ஏன் தெரியுமா? அவரைப்போன்ற பண்டிதப்பெருமக்கள் சாதாரணப்பெயரை வைப்பது சரியல்ல என்பது அவரது எண்ணம். ஆங்கிலம் மற்றும் சம்ஸ்கிருத நூல்கள் பல அவரிடம் இருந்தன.ஒரு நாள் அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு நரேந்திரருடன் அவரது வீட்டிற்குச்சென்றோம். அந்த நூல்களைக்கண்டு அவரிடம், ஓ! நீங்கள் இவ்வளவு நூல்களையும் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டோம். மிகுந்த பணிவை வரவழைத்துக்கொண்டு அவர்” ஆம்” என்றார். அடுத்த கணமே நரேந்திரர் அதிலிருந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் பிரித்தார். அதில் உள்ள ஒட்டியிருந்த ஓரிரு பக்கங்கள் வெட்டப் படக்கூட இல்லை. நரேந்திரர் அதற்கான காரணத்தை வினவினார். அதற்கு மஹிமாசரணர், தம்பிகளே, அது என்ன தெரியுமா? நான் படித்த பிறகு யாராவது நூல்களை எடுத்துச்செல்வார்கள். ஆனால் திருப்பித் தரமாட்டார்கள். அதனால் அவற்றிற்குப் பதிலாக புதிய பிரதிகளை வாங்கி வைத்திருக்கிறேன். இப்போதெல்லாம் யாரும் புத்தகம் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை” என்றார். ஆனால் ஓரிரு நாட்களுள் அங்குள்ள எந்த நூலிலுமே பக்கங்கள் பிரிக்கப் படாமல் இருப்பதை நரேந்திரர் கண்டு பிடித்து விட்டார். பிறர் தம்மைப் புகழ்வதற்காகவும் ஓர் அலங்காரத்திற்காகவுமே அவர் அந்த நூல்களை வைத்திருக்கிறார் என்பது நரேந்திரருக்கு வெட்ட வெளிச்சமாகி விட்டது.
தாம் ஒரு ஞான நெறி சாதகன் என்று மஹிமா சரணர் எங்களிடம் கூறினார். கல்கத்தாவிலுள்ள பலரும் குருதேவரிடம் வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவர் குருதேவரிடம் வந்துபோய்க்கொண்டிருந்தார். சில முக்கிய நாட்ளில் அவர் காவியுடையும் ருத்திராட்சமும் அணிந்து, பஞ்சவடியில் புலித்தோல் ஆசனத்தை விரித்து, கையில் ஏக்தாரா வாத்தியத்தையும் வைத்துக்கொண்டு சாதனை செய்ய வென்று ஜம்பமாக அமர்ந்து கொள்வார். வீடு திரும்பும்போது அந்தப் புலித்தோல் ஆசனத்தைக் குருதேவரின் அறைச்சுவரில் ஓர் ஓரமாகத் தொங்கவிட்டுச்செல்வார். அவரைப் புரிந்துகொள்ள இது ஒன்றே போதுமானதாக இருந்தது. ஒருநாள் இந்த ஆசனம் யாருடையது என்று ஒருவர் கேட்டார். அதற்கு குருதேவர், மஹிமாசரணர் வைத்துள்ளார். ஏன் தெரியுமா? இதைப் பார்த்ததும் இது யாருடையது என்று பக்தர்கள் கேட்பார்கள். அவருடையது என்று நான் சொன்னால் அவரைப்பெரிய சாதகர் என்று அவர்கள் நினைத்துக்கொள்வார்கள் அல்லவா? என்று கூறினார்.
மந்திர தீட்சையைப் பற்றி பேச்சு வந்தால் உடனே மஹிமாசரணர், என் குருநாதரின் பெயர், ஆகமாசார்ய டமரு வல்லபர்” என்பார். வேறு சிலவேளைகளில் குருதேவரைப்போன்று , ஸ்ரீமத் பரமஹம்ச பரிவ்ராஜக ஆசார்ய தோதா புரியிடமிருந்தே தீட்சை பெற்றதாகக் கூறுவார்.மேற்கு இந்தியாவில் யாத்திரை சென்றிருந்த போது அவரைக் கண்டு தீட்சை பெற்றுக் கொண்டேன். அவர் குருதேவரிடம் பக்தி நெறியைப் பின்பற்றும்படிக்கூறினார். என்னை ஞான நெறி சாதனைகள் செய்யும்படிக்கூறினார்.” என்பார். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது அவருக்கும் அவரைப்படைத்த கடவுளுக்கும் மட்டுமே வெளிச்சம்!
சாதனை செய்து கொண்டிருக்கும்போது மஹமாசரணர் தமது ஏன்தாராவை மீட்டி, சுருதியுடன் பிரணவத்தை உச்சரிப்பார். திடீரென உத்தர கீதையிலிருந்து ஓரிரு சுலோகங்களைப் பாடுவார். இல்லாவிடில் ஹுங்கார த்வனி எழுப்புவார். இதற்கு இன்ன இடம் , இன்ன காலம் என்றெல்லாம் அவர் பார்ப்பதே இல்லை எங்காயினும் எப்போதாயினும் அவருக்குத் தோன்றும்போது பாடத் தொடங்கிவிடுவார். காலம் காலமாக வரும் ஞான நெறி சாதனை , இதுவே. இதைப் பின்பற்றினால் வேறு எந்த சாதனையும் தேவையில்லை. இந்தச் சாதனையினாலேயே குண்டலினி சக்தி விழித்தெழும், இறைக்காட்சி கிடைக்கும் என்பார். அவரது வீட்டில் அன்னபூரணி தேவியின் திருவுரு பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்தது. ஆண்டுதோறும் ஜகத்தாத்ரி பூஜையும் நடைபெற்றதாக ஞாபகம். இதிலிருந்து அவர் சாக்த குடும்பத்தில்பிறந்தவர் என்று தெரிகிறது. இறுதிக்காலத்தில் அவர் சாக்த நெறி சாதனைகளையே பின்பற்றியதாகத்தெரிகிறது. ஏனெனில் வண்டிகளில் செல்லும்போது அவ்வப்போது அவர், தாரா நீயே அது, அது நீயே” என்று அடிக்கடி உரத்த குரலில் கூறுவதைக்கேட்க முடியும். அவருக்குச் சிறிது சொத்து இருந்தது. அதிலிருந்து வந்த வருவாயின் மூலம் தான் குடும்ப நிர்வாகம் நடைபெற்று வந்தது.
குருதேவர் சியாம் புகூரில் இருந்த காலத்தில் இரண்டோ மூன்றோ தடவை மஹிமாசரணர் அங்கு வந்தார். குருதேவரிடம் நலம் விசாரித்த பிறகு பொதுவாக அனைவரும் அமர்வதற்கான அறையில்வந்து அமர்ந்து கொண்டு ஏக்தாரா சுருதியுடன் மந்திர சாதனையைத் தொடங்குவார்.ஆனால் இடையிடையே மற்றவர்களுடன் பேசிக்கொள்ளவும் செய்வார். காவி உடுத்திய அவரதுநல்ல திடகாத்திரமான தோற்றத்தாலும் சொல்லாற்றலாலும் கவரப்பட்ட பலர் அவரிடம் அப்போது ஆன்மீகம் சம்பந்தமான கேள்விகள் கேட்பதுண்டு. குருதேவரும் சிலவேளைகளில், நீங்கள் பெரிய பண்டிதர்” (பக்தர்களைக் காட்டி) இவர்களுக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்” என்பார். சில சீடர்களைச்சேர்த்துக்கொண்டு, தான் பெரிய ஆன்மீகப்போதகர் என்று பெயரெடுக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதை குருதேவர் அறியாமலா இருப்பார்.
பாகம்-123
-
ஒரு முறை மஹிமாசரணர் சியாம் புகூரில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தாம் பின்பற்றி வரும் சாதனைதான் மிகச் சிறந்தது, எளியது, மற்றவை அனைத்தும் தாழ்ந்தவை என்றெல்லாம் அளக்கத் தொடங்கினார். குருதேவரின் சீட இளைஞர்களும் இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தனர். நரேந்திரரால் பொறுக்க முடியவில்லை. உடனே மஹிமாசரணருடன் வாதித்து அவர் கூறுவதை தவறு என்று நிரூபிக்கலானார். பின்னர் அவரிடம், உங்களைப்போன்று ஏக்தாராவை மீட்டி மந்திரத்தை ஓதுவதால் ஒருவர் இறைக்காட்சியைப்பெறுவார் என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது? என்று கேட்டார்.
அதற்கு மஹிமாசரணர், நாதமே பிரம்மம். இந்த சுருதியுடன் மந்திரத்தை உச்சரித்தால் அதன் சக்தியால் இறைவன் தரிசனம் தந்தேதீர வேண்டும். வேறு எந்த சாதனையும் வேண்டாம் என்று கூறினார். உடனே, நரேந்திரர், கடவுள் உங்களிடம் எழுத்து மூலமாகஅப்படியொரு ஒப்பந்தம் செய்துக்கொண்டிருக்கிறாரா, என்னஃ இல்லை, ஒரு வேளை அவரும் பாம்பைப்போல் மந்திரத்திற்கும் மூலிகைக்கும் வசப்பட்டு, நீங்கள் சுருதியை மீட்டி ஹும்ஹாம் என்று கத்தியதும் அப்படியே நெகிழ்ந்து போய் உங்கள் முன் வந்து குதித்து விடுவாரா? என்று கேட்டார். நரேந்திரரின் விவாதம் காரணமாக அன்று மஹிமா சரணரின் பிரசாரப்பணி களைக்கட்ட வில்லை. எனவே அன்று அவர் விரைவாகவே விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
உண்மையான சாதகர்கள் எந்த நெறியினராயினும் அவர்களுக்குரிய மரியாதையை குருதேவரின் பக்தர்கள் கொடுக்க வேண்டும் என்பதில் நரேந்திரர் சிறப்பாகக் கவனம் செலுத்தினார். பொதுவாக பிறர் செய்வது போல் மற்ற நெறியைச் சார்ந்த சாதகர்களை இகழ்வதும், தங்களைச் சார்ந்தவர்களிடம் மட்டும் அன்பும் மரியாதையும் காட்டுவதும் குருதேவரின் கொள்கையான
” எத்தனை மதங்களோ அத்தனை வழிகள்” என்பதை அவமதிப்பதாகும். அதாவது குருதேவரையே அவமதிப்பது போலாகும் என்பார் அவர். சியாம் புகூரில் இதனையொட்டி நடந்த நிகழ்ச்சி ஒன்று எங்கள் நினைவிற்கு வருகிறது. ஒருநாள் கிறிஸ்தவ பாதிரியான பிரபு யாள் மிச்ரர் குருதேவரைக் காண வந்தார். அவர் காவி உடுத்தியிருந்ததால் முதலில் அவர் கிறிஸ்தவர் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. பேச்சிற்கிடையே அவர் அதைத் தெரிவித்தார். கிறிஸ்தவரான அவர் ஏன் காவியுடை அணிந்துள்ளார் என்று கேட்டோம். அதற்கு அவர், நான் பிராமண குலத்தில் பிறந்தவன். ஏதோ புண்ணியத்தால் ஏசுவிடம் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டு அவரை என் இஷ்டதெய்வமாக ஏற்றுக்கொண்டேன். அதற்காக என் மூதாதையர்களின் வழிவந்த பழக்கவழக்கங்களை விட்டு விட வேண்டுமா என்ன? நாக யோக சாஸ்திரங்களை நம்புகிறேன். ஏசுவை இஷ்டதெய்வமாகக்கொண்டு நாள்தோறும் யோகப் பயிற்சி செய்து வருகிறேன். ஜாதி வேறுபாட்டில் நம்பிக்கை இல்லை. ஆனால் யாரிடமிருந்து வேண்டுமானாலும் உணவு பெற்று உண்பது யோகப் பயிற்சிகளுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதை நம்புகிறேன். அதனால் தினமும் நானே ஹவிஷ்யான்னம் சமைத்து உண்கிறேன். எனவே நான் கிறிஸ்தனாக இருப்பினும் யோகப் பயிற்சியின் விளைவாக ஜோதி தரிசனம் போன்ற பல்வேறு பலன்களைப்பெற்றுவருகிறேன். பாரதத்தின் பக்த யோகிகள் நீண்ட காலமாக காவியுடையே உடுத்தி வருகின்றனர். இதை விட வேறு எந்த உடை எனக்குப் பிடித்ததாக இருக்க முடியும்? என்று பதிலுரைத்தார். நரேந்திரர் அவரிடம் பல கேள்விகள் கேட்டு அவரது கருத்துக்களை ஒவ்வொன்றாக வெளிக் கொணர்ந்தார். அவர் ஒரு சாதுவும் யோகியும் என்பதால் அவருக்கு மிகுந்த மரியாதை காட்டினார். எங்களையும் அவ்வாறே நடந்து கொள்ளும்படிக் கூறினார். எங்களுள் பலர் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினோம். பின்னர் அவருடன் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து குருதேவரின் பிரசாதப் பழங்கள் மற்றும் இனிப்புகளை உண்டோம். குருதேவரை எசுநாதராகத்தாம் கருதுவதாக அவர் எங்களிடம் கூறினார்.
-----
குருதேவரின் நோய் தீவிரம் அடைதலும் அவரைக் காசிப்பூருக்கு அழைத்து வருதலும்-
-----
இவ்வாறு நரேந்திரர் குருதேவரின் பக்தர்களை வழி நடத்திச் சென்றார். அதே வேளையில் குருதேவரின் நோய் நாளுக்குநாள் தீவிரமாகியது. முன்பு ஏ தோ சிறிதாவது பலனளித்து வந்த மருந்துகள் இப்போது பலனளிக்காததைக் கண்ட டாக்டர் சர்க்கார் மிகவும்கவலையுற்றார். கல்கத்தாவின் புழுதிமிக்க காற்றின் காரணமாகத்தான் இவ்வாறு நோய் தீவிரமாகிறது என்று முடிவு செய்தஅவர், நகரத்தை விட்டு ஏதாவது தோட்ட வீடடில் குருதேவரைக் கூட்டிச்செல்லும்படி அறிவுரை கூறினார். அப்போது கார்த்திகை மாதத்தின் பாதி கழிந்திருந்தது. மார்கழி மாதத்தில் வீடு மாற்றுவதை குருதேவர் விரும்பமாட்டார் என்பதை அறிந்திருந்த பக்தர்கள் கார்த்திகை மாதத்திற்குள் தகுந்த வீட்டைக் கண்டு பிடிப்பதில் முனைந்து ஈடுபட்டனர். விரைவில் வீடும் கிடைத்தது. அது காசிப்பூரிலுள்ள மதிஜில் குளத்தின் வடபகுதியும் வராக நகரின் கடைத்தெருவுக்குச்செல்கின்ற பெரிய பாதையும் சேர்கின்ற இடத்திற்கு எதிரில் அமைந்திருந்தது. ராணி காத்யாயனியின் மருமகனான கோபால் சந்திரகோஷ் என்பவருக்குச்சொந்தமானது. மாதம் ரூபாய் உண்பதிற்கு அந்தவீட்டை வாடகைக்கு அமர்த்தினார்கள். பரமபக்தரும் கல்கத்தா ஸிமுலியா பகுதியில் வசிப்பவருமான சுரேந்திர நாத மித்ரர் முழு வாடகை ப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
வீடு கிடைத்ததும் நல்லநாள் பார்த்து பொருட்களை சியாம்புகூரிலிருந்து காசிப்பூருக்கு மாற்றுதவற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. பின்னர் ஒரு சுபநாளில் மதியவேளையில் குருதேவரைக் காசிப்பூர்த்தோட்ட வீட்டிற்கு அழைத்து வந்தனர், மலர்களும் கனிகளும் நிறைந்த மரங்களும், நல்ல காற்றோட்டமும், மக்கள் சந்தடியற்றதுமான இந்த இ்த்தைக்கண்ட குருதேவர் மிகவும் மகிழ்ந்தார். அவரது மகிழ்ச்சியைக் கண்ட பக்தர்களும் உவகையால் உள்ளம் நிறைந்தனர்.
பாகம்-124
-
காசிப்பூர்த் தோட்ட வீட்டில் குருதேவர்-
...................................................
கல்கத்தாவின் வடக்கில் மூன்று மைல் தொலைவில் காசிப்பூர் வராக நகரையும் பாக்பஜார் பகுதியையும் இணைக்கின்ற நெடுஞ்சாலையில் காசிப்பூர் த்தோட்ட வீடு உள்ளது
காசிப்பூர்
...........................
பாக்பஜார் பாலத்தின் வடபகுதியில் தொடங்கி மேற்கண்ட தோட்ட வீட்டைக் கடந்து சற்று தெற்கு பகுதியிலுள்ள காசிப்பூர் நாற்சந்தி வரையில் வீதியின் இரு மருங்கிலும் ஏழை உழைப்பாளிகளின் குடிசைகளும், அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை விற்கும் ஓரிரு சிறிய கடைகளும் இருந்தன. அவற்றிற்கிடையில் சில சணல் ஆலைகள், தாஸ் கம்பெனியின் இரும்பு ஆலை ஒன்று, ராலி பிரதர்ஸ் லிமிடெட், ஓரிரு தோட்டங்கள், காசிப்பூர் நாற் சந்தியின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருந்த சில வீடுகள், காவல் நிலையம், தீயணைக்கும் நிலையம், இவை செங்கல் கட்டிடங்கள். மனித வாழ்விலுள்ள இந்த மேடு பள்ளங்களுக்கு சதட்சியாக இருப்பது போல் மேற்கில் சிறிது தூரத்தில் அமைந்திருந்தது பிரபலமான சர்வ மங்களாம்பிகையின் கோயில், சியால்தா ரயில் நிலையம் விரிவுபடுத்தப் பட்டு விட்டதால், தற்போது அந்தச் சாலையோரத்தில் தகரம் வேய்ந்த கடைகள் மதலியவை கட்டப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிறிது அழகையும் கெடுத்துவிட்டன. இவ்வாறு இந்தப் பழைய சாலை கண்களைக் கவர்வதாக இல்லாவிடினும், வரலாற்றுப் பார்வையில் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில் இந்தத்தெரு வழியாக முன்னேறித்தான் நவாப் சிராஸ் பிரிட்டிஷாரின் கோவிந்தபூர் கோட்டையைப் பிடித்தார் என்று சொல்லப்படுகிறது. மேலும் பாக்பஜாரிலிருந்து அரைமைல் தொலைவில் இந்தச் சாலையில் தான் வஞ்சகனான நவாப் மிர்ஜாபரின் அரண்மனை அமைந்திருந்தது.
பாக்பஜாரிலிருந்து காசிப்பூர் நாற்சந்தி வரையிலுள்ள சாலைப்பகுதி அழகற்று இருந்தாலும், அங்கிருந்து வராக நகர் பஜார் வரையிலுள்ள பகுதி அழகாக இல்லை என்று கூற முடியாது. அந்த நாற்சந்தியினின்று சிறிது வடக்கே சென்றால் மதிஜில் குளத்தின் தெற்குப் பகுதியைக்காணலாம். அதற்கு எதிரே தெருவின் கிழக்குப் புறத்தில் எங்கள் நெருங்கிய நண்பரான மஹிமாசரண் சக்கரவர்த்தியின் அழகிய வீடு இருந்தது.
அந்த வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தின் பெரும் பகுதியை ரயில்வே கம்பெனி இப்போது வாங்கி , அதன் வழியாக தனது கங்கைக்கரை கிளையை விரிவுப் படுத்தியுள்ளது. இதனால் அந்த வீட்டின் அழகு குலைந்து விட்டது. அங்கிருந்து சிறிது வடக்கே சென்றால் இடதுபுறம் மதிஜில் குளத்தின் வடபகுதி தெரியும். அதற்கு எதிரே சாலையின் கிழக்குப் பகுதியில் காசிப்பூர் த் தோட்டத்தின் இரும்புக் கதவுகளையும் உயர்ந்த மதிற்சுவரையும் காணலாம். மதிஜில் குளத்தின் மேற்கில் இந்தச் சாலையில் பல அழகிய தோட்டங்கள் கங்கை கரையில் அமைந்திருந்தன. அவற்றுள் மிக அழகியது மதிலால் ஸீலின் தோட்டம்.ஆனால் இப்போது கல்கத்தா மின்சாரக் கம்பெனி அங்கு அமைக்கப் பட்டு விட்டதால் அதன் அழகு கெட்டு சந்தடிமிக்க இடமாகி விட்டது. இந்தத் தோட்டத்தின் வடபுறம் கங்கைக்கரையோரத்தில் பஸாக் வம்சத்தினரின் இடிந்து போன வீடு ஒன்று இருந்தது. சாலையிலிருந்து இந்த வீட்டிற்கு வரும் வழியில் இரு மருங்கிலும் சவுக்கு மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. அங்கு வருபவர்களின் கண்களுக்கு அது ஓர் இனிய விருந்தாக விளங்கியது.
நாங்கள் குருதேவருடன் காசிப்பூர்த்தோட்டத்தில் வசித்த நாட்களில் அடிக்கடி ஸீலின் தோட்டத்தின் வழியாக கங்கைக்குக் குளிக்கச் செல்வோம். திரும்பி வரும் போது குருதேவருக்குப் பிடித்த பன்னீர் பூக்களைப் பறித்து வந்து அவருக்குக் கொடுப்போம். இரு புறமும் சவுக்கு மரங்கள் நிறைந்த சாலை வழியாகச்சென்று, பஸாக்குகளின் அந்தப் பாழடைந்த தோட்ட வீட்டின் பின்புறம் கங்கைக் கரையில் நாங்கள் அடிக்கடி அமர்வதுண்டு. அந்தத் தோட்டத்திற்குச்சற்று வடக்கில் பிராணநாத சௌதுரி கட்டிய பெரிய படித்துறை இருந்தது. அதற்கும் சற்று வடக்கே புகழ்பெற்ற லாலாபாபுவின் மனைவியான ராணி காத்யாயனியின் அழகிய கிருஷ்ணன் கோவில் ஒன்று உள்ளது. குளிப்பதற்கும் கிருஷ்ணனை வழிபடுவதற்கும் நாங்கள் சிலவேளைகளில் இந்த இடத்திற்கும் செல்வோம். காசிப்பூர்தோட்ட வீடு ராணி காத்யாயனியின் மருமகன் கோபால் சந்திர கோஷுக்கு ச்சொந்தமானது. பக்தர்கள் அந்த வீட்டை ஆறுமாதம் எண்பது ரூபாய் வாடகைக்கு முதலில் ஆறு மாதத்திற்கு அமர்த்தினர். அதன் பின் மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டித்துக்கொண்டனர். சுரேந்திரநாத மித்ரர் பணப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு வாடகைப் பத்திரங்களில் கையெழுத்திட்டார்.
காசிப்பூர்த் தோட்ட வீடு பரந்த இடமாக இல்லையெனினும் ரமணீயமானது. ஏறக்குறைய நான்கு ஏக்கர் பரப்பில் கிழக்கு மேற்காக நீள்சதுர வடிவில் அமைந்திருந்தது. சுற்றிலும் உயரமான மதிற்சுவர் உள்ளது. வடக்கேயுள்ள சுற்றுச்சுவரைத்தொடுவது போல் நடுப்பகுதியில் மூன்றுநான்கு சிறிய அறைகள் உள்ளன. இவை சமையலறை மற்றும் பண்டகசாலையாகப் பயன் படுகின்றன. இவற்றிற்கு எதிரேதோட்ட வழியின் மறுபுறம் மாடி வீடு ஒன்று இருந்தது. அதன் மாடியில் இரண்டு அறைகளும் கீழே நான்கு அறைகளும் இருந்தன. கீழே உள்ள அறைகளில் நடுவே அமைந்துள்ளது கூடம் என்று சொல்லத் தக்க பெரிய அறை. அதன் வடக்கில் இரு சிறிய அறைகள் அருகருகே அமைந்திருந்தன. அவற்றுள் மேற்கு அறையிலிருந்து மேலே செல்வதற்கு மரப்படிகள் அமைக்கப் பட்டிருந்தன.கிழக்கு அறையில் அன்னை சாரதாதேவி தங்கியிருந்தார். கூடம் கிழக்கு மேற்காக அமைந்திருந்தது. அதன் தென்பகுதியில் ஓர் அறை. அதன் கிழக்குப் பகுதியில் ஒரு சிறிய வராந்தா. இதனை குருதேவரின் சேவகர்களும் பக்தர்களும் உட்காருவதற்கும் தூங்குவதற்கும் பயன்படுத்தினர். கீழே உள்ள கூடத்தைப்போலவே மாடியில் ஓர் அறை இருந்தது. அதில் தான் குருதேவர் தங்கினார். அதற்குத் தெற்கே திறந்த மாடி. அதைச்சுற்றி சிறிய கைப்பிடிச்சுவர். இந்த மாடியில் குருதேவர் அவ்வப்போது உலாவவோ அமரவோ செய்வார். அதன் வடபகுதியில் மாடிப்படிக்கட்டின் அரகே, அன்னையின் அறைக்கு மேலே, அதே அளவில் ஓர் அறை உள்ளது. அது குருதேவரின் குளியல் முதலானவற்றிற்கும் சேவகர்களுள் ஓரிருவர் இரவில் தங்குவதற்கும் பயன்பட்டது.
அந்த வீட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களிலிருந்து கீழே உள்ள கூடத்திற்குள் நுழைவதற்குப் படிகளும், கீழே உள்ள பகுதியைச் சுற்றி வட்ட வடிவமான தோட்டப் பாதையும் இருந்தன. தோட்டத்தின் தென்மேற்கு மூலையில் காவல் காரனுக்குரிய சிறிய அறை ஒன்று இருந்தது. அதன் வடக்கில் இரும்பு வாசல் உள்ளது. வண்டி வரும் அளவிற்கு அகலமான ஒரு வாசல்உள்ளது. வண்டி வரும் அளவிற்கு அகலமான ஒரு தோட்டப்பாதை அரைவட்ட வடிவத்தில் வடகிழக்காகச்சென்று வீட்டைச் சுற்றியுள்ள வட்ட வடிவத்தோட்டப் பாதையுடன் இணைகிறது. வீட்டின் மேற்குப் பகுதியில் ஒரு சிறிய குளம் உள்ளது. சூடத்திற்கு வரும் மேற்குப் படிக்கட்டு களுக்கு எதிரே தோட்டப்பாதையின் மறுபுறத்தில் குளத்திற்குச்செல்லும் படிகள் உள்ளன.தோட்டத்தின் வடகிழக்கு மூலையில் மேலே கூறப்பட்ட குளத்தைப்போன்று நான்கைந்து மடங்கு பெரிய குளமும், அதன் வடமேற்கில் இரண்டு மூன்று சிறிய அறைகளும் உள்ளன. சிறிய குளத்திற்கு மேற்கில் செங்கற்களால் அமைந்திருந்த இரண்டு பாழடைந்த அறைகளைத் தோட்டக் காரர்கள் பயன்படுத்தி வந்தனர். தோட்டத்தின் மற்ற பகுதிகளில் மாமரம், பலாமரம், லீச்சி போன்ற பழமரங்கள் நிற்கின்றன.தோட்டப்பாதையின் இருபுறமும் அழகிய பூச்செடிகள் நடப்பட்டுள்ளன. குளத்தின் அரகே இருந்த இடத்தின் பெரும்பகுதியில் காய்கறிகளும் கீரையும் பயிரிடப்பட்டுள்ளது. மரங்களுக்கு இடையே விரிந்து கிடந்த பச்சைப் புல்வெளி எல்லா அழகிற்கும் அழகு சேர்ப்பதாக அமைந்திருந்தது.
பாகம்-125
-
1885, டிசம்பர் 11-ஆம் நாள் குருதேவர் இந்த வீட்டிற்கு வந்து 1886 ஆகஸ்ட் 15 வரை தங்கினார். இந்த எட்டு மாதங்களில் அவரது நோய் படிப்படியாக முற்றிக்கொண்டே வந்து நெடிய , உறுதி படைத்த அவருடையஉடலை வெறும் எலும்புக் கூடாக மாற்றி விட்டது. ஆயினும் கட்டுப் பாடுமிக்கஅவரது மனம் உடல்நோயையும் அதன் விளைவாக ஏற்பட்ட வலியையும் ஒதுக்கி விட்டது. தாம் ஏற்கனவே ஆரம்பித்த பணியை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று அவர் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது போல் தோன்றியது. ஒரு கணமும் இடையீடின்றி அவர் இங்கே சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் தேவைக்கேற்ப தனித்தனியாகவும் சிலவேளைகளில் கூட்டமாகவும் பயிற்சி அளித்தார். அது மட்டுமல்ல, தட்சிணேசுவரத்தில் வாழ்ந்த நாட்களில் தமது எதிர் காலத்தைப்பற்றி அவர் கூறியிருந்த அனைத்தையும் நிறைவேறியதை இங்கே கண்டோம். போகுமுன் ( உடலை உகுக்கு முன்) எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக்கி விடுவேன். (அதாவது நான் தெய்வ-மனிதர் என்பதை வெளிப்படுத்துவேன்) ஏராளமானோர் ( என் தெய்வீக இயல்பை) அறியும்போது அதைப் பற்றிப்பேசத் தொடங்கும்போது( தமது உடலைக்காட்டி) இந்த உறை வீழ்ந்து விடும். அன்னையின் திருவுளத்தால் அது உடைந்துவிடும். (பக்தர்களுள் ) யார் அந்தரங்க பக்தர்கள், யார் அவ்வளவு நெருக்கமில்லாதவர்கள் என்பதெல்லாம் அப்போது( தமது நோயின் போது) தெரிந்து விடும். இவையெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையாகியதை நாங்கள் கண்டோம்.
மேலும் நரேந்திரர் போன்றோரின் எதிர்காலம் பற்றி அவர் கூறியதையும் இங்கேதான் நாங்கள் புரிந்து கொண்டோம். அன்னை உன்னைத்( நரேந்திரர்) தன் பணிக்காக இவ்வுலகிற்கு இழுத்து வந்துள்ளாள். நீ என்னைப் பின்பற்றி வந்தே தீர வேண்டும். வேறெங்கு போவாய்? இவர்கள் (பக்த இளைஞர்கள்) எல்லோரும் ஹோமா பறவையின் குஞ்சைப்போன்றவர்கள். ஹோமா பறவை வானத்தில் மிக உயரத்தில் பறந்து அங்கே முட்டையிடும். அந்த முட்டைகள் மிகுந்த வேகத்துடன் நிலத்தை நோக்கி விழும். நிலத்தில் வீழ்ந்து இதோ நொறுங்கிச் சிதறிவிடும் என்று தோன்றும். ஆனால் அவ்வாறு நடக்காது. நிலத்தை நெருங்கும் முன்னரே முட்டை பொரித்து குஞ்சுகள் வெளிவந்து சிறகுகளை விரித்து மேல்நோக்கிப் பறக்கத் தொடங்கிவிடும். இவர்களும் சம்சார பந்தத்தில் அகப்படும் முன்னரே உலகைத் துறந்து இறைவனை நோக்கிச்செல்வார்கள். இவை தவிர, இங்கு குருதேவர் நரேந்திரரின் வாழ்க்கைக்கு ஓர் உருக் கொடுத்தார். பக்தர்களை, அதிலும் குறிப்பாக இளைஞர்களை நரேந்திரரின் பொறுப்பில் ஒப்படைத்தார், அவர்களை எப்படி வழிநடத்திச்செல்ல வேண்டும் என்பதை விளக்கினார். மொத்தத்தில் காசிப்பூர்த்தோட்டத்தில் குருதேவரின்பணி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
குருதேவர் தம் வாழ்க்கையில் மிக முக்கியமானசிறப்பு மிக்க செயலைச்செய்து முடித்த இடம் காசிப்பூர் தோட்டம் அந்தப் புனித நினைவுகளை வரும் சந்ததியினரின் உள்ளத்தில் நினைவூட்டி, அவர்களையும் பேரானந்தத்திற்கு உரியவர்களாக்க வேண்டுமானால் அந்த இடம் ஒரு நினைவுச் சின்னமாக மலர வேண்டும் என்று எல்லோர் நெஞ்சமும் துடிக்கிறது. ஆனால் ஐயோ, இன்று அதற்குத் தடை அல்லவா நேர்ந்துள்ளது! அந்தத் தோட்ட வீட்டை ரயில்வே கம்பெனியினர் சொந்தமாக்கிக் கொள்ளப்போவதாகக்கேள்விப் படுகிறோம். அப்படி நடக்குமானால் குருதேவரின் அற்புத லீலைகள் நடந்த இந்த புண்ணியத்தலம் உருமாறி ஒரு சணல் ஆலையாகவோ தெய்வீகம் இல்லாத வேறோர் இடமாகவோ அல்லவா மாறிவிடும்! இறைவனின் திருவுள்ளம் அது வானால் அற்ப மானிடர் நாம் என்ன செய்ய முடியும்! எனவே ”எல்லாம் அவன் இச்சைப்படி” என்பதை மனத்திற்கொண்டு இங்கு இதை நிறைவு செய்வோம்!
காசிப் பூரில் சேவை
...........................................................
மார்கழி மாதத்தில் வீடு மாற்றம் நல்லதல்ல என்பதற்காக கார்த்திகை முடிய இரண்டு நாட்களுக்கு முன்பே சியாம் புகூரிலிருந்து காசிப்பூர் த் தோட்டத்திற்கு வந்து விட்டதை முன்பே கூறினோம். மக்கள் நெருக்கம் மிகுந்த சாலையின் பக்கத்தில் இருந்ததால் சியாம்புகூர் வீடு ஆரவாரம் மிகுந்ததாக இருந்தது. அதை விடக் காசிப்பூர்த்தோட்டம் பரந்ததாக ஜனசந்தடி அற்றதாக இருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் பச்சைப்பசேலென்ற மரங்கள், வண்ணமலர்ச்செடிகள், பச்சைப் பட்டு விரித்தது போன்ற புல்தரை! தட்சிணேசுவரத்திலுள்ள காளிகோயிலின் அற்புத மான இயற்கை எழிலுடன் இதனை ஒப்பிட முடியாதது தான். எனினும் நான்கு மாதங்கள் தொடர்ந்து கல்கத்தாவில் வாழ்ந்த குருதேவருக்கு இந்த இடம் மிகவும் அழகாகத்தோன்றியது. தோட்டத்திற்குள் நுழைந்து அதன் திறந்த காற்றை சுவாசித்ததுமே அவர் பூரித்துப்போய், சுற்று முற்றும் மகிழ்ச்சியுடன் பார்த்தவாறு உள்ளே சென்றார். பின்னர் மாடியில் தமக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குத் தெற்கில் அமைந்துள்ள திறந்த மாடிக்கு வந்து நின்று கொண்டு தோட்டத்தின் அழகைச் சிறிது நேரம் கண்டு களித்தார். சியாம் புகூர் வீட்டில் அடைபட்டுக் கிடந்ததைப்போன்று இங்கு இருக்க வேண்டியது இல்லை. எனவே முன்னைப்போலன்றி, குருதேவருக்கு சிறப்பாகப் பணிவிடை செய்ய முடியும் என்பதை எண்ணி அன்னையும் மகிழ்ந்திருப்பார்.
இவர்கள் இருவரும் மகிழ்ந்தால் சேகவர்களின் மனமும் ஆனந்தத்தால் நிறைந்தது.
நாட்கள் செல்லச் செல்லத் தான் அந்தத்தோட்ட வீட்டின் அசௌகரியங்கள் புரியலாயின. சிறிதும் பெரிதுமான அந்த ப் பிரச்சனையைத் தீர்ப்பதில் சில நாட்கள் கழிந்தன. அவற்றைப் பற்றி நரேந்திரர் நன்கு யோசித்துப் பார்த்தார். குருதேவரை கவனித்துக்கொள்ளத் தாமாக முன்வந்தவர்கள் மற்றும் டாக்டர்களின் வீடு இங்கிருந்து அதிக தூரத்தில் இருந்ததால் அவர்கள் அங்கேயே தங்க நேரிட்டது. இதனால் செலவு அதிகமாகியது. எனவே முன்பைவிட அதிக பணமும் ஆட்களின் உதவியும் தேவைப்பட்டது.இந்த இரண்டு விஷயங்களையும் ஆரம்பத்திலேயே ஆலோசித்துச் செயல் படாவிட்டால், குருதேவரின் சேவைக்குக் குந்தகம் வருவதைத் தவிர்க்க முடியாது. இது வரை பணச்செலவை ஏற்றிருந்த பலராம், சுரேந்திரர், ராம் கிரீஷ், மகேந்திரர், போன்றவர்கள் இது பற்றி யோசித்து ஒரு முடிவு கண்டு விடுவார்கள். ஆனால் குருதேவரின் சேவைக்கான இளைஞர்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பை முன்புபோல் நரேந்திரரே கவனிக்க வேண்டியிருந்தது. அதனால் அவர் பெரும்பாலான நேரம் காசிப்பூரில் தங்க நேரிட்டது. அவர் இவ்வாறு வாழ்ந்து காட்டாவிடில் இளைஞர்களுள் பலரும் தங்கள் பெற்றோர்களின் கோபத்திற்குக் கட்டுப்பட்டு, வேலை போய் விடும் படிப்பு கெட்டு விடும் என்றெல்லாம் பயந்து காசிப்பூரில் தங்க முடியாமல் போக நேரும். குருதேவர் சியாம்புகூரில் தங்க முடியாமல் போக நேரும். குருதேவர் சியாம்புகூரில் தங்க முடியாமல் போக நேரும் . குருதேவர் சியாம் புகூரில் இருந்தபோது இந்த இளைஞர்கள் தங்கள் வீட்டில்சென்று உணவருந்தி விட்டு வந்து குருதேவருக்குச் சேவை செய்தனர். ஆனால் அது இப்போது இயலாத காரியம் ஆயிற்று.
நரேந்திரர் அந்த ஆண்டு சட்டத்தேர்வுக்கு (பி.எல்) ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். வீட்டுரிமையைப் பற்றிய வழக்கு அப்போது உயர்நீதி மன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்த இரண்டிற்காகவும் அவர் கல்கத்தாவில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாக இருந்தது. ஆனால் குருசேவைக்காக அவர் அவற்றை முற்றிலுமாக மனத்திலிருந்து ஒதுக்கித் தள்ளிவிட்டு நேரம் கிடைத்தால் படிக்கலாம் என்று சட்ட நூல்களை காசிப்பூர் தோட்டத்திற்குக்கொண்டுவந்தார். குருதேவருக்குச் சேவை செய்வதும் முடிந்த அளவு சட்டத்தேர்வுக்குத் தயார் செய்வதும் தான் நரேந்திரரின் உறுதியான முடிவாக இருந்தது. சட்டத்தேர்வில் தேர்ச்சி பெற்று, ஓரிருவருடங்கள் உழைத்து, தாய்க்கும் சகோதரர்களுக்கும் உணவுக்கும் துணி மணிக்கும் வேண்டிய ஏற்பாடு செய்து விட்டு, தருணம் வரும்போது இறையனுபூதிக்கான சாதனைகளில் மூழ்க வேண்டுமென்று எண்ணியிருந்தார் அவர். ஆனால் ஐயோ, நம்மில் பலரும் இப்படிப்பட்ட மேலான தீர்மானங்களைச் செய்கிறோம். எத்தனைபேர் வெற்றியடைகிறோம்? இப்போது உலகின் இழுப்புக் கு வளைந்து கொடுத்துப்போக வேண்டியது தான்.பின்னர் இந்தச் சூழலிலிருந்து விடுபட்டு ஆன்மீகப் பாதையில் செல்ல வேண்டும்” என்று எண்ணுகிறோம். ஆனால் நம்மில் எத்தனைபேர் இந்தச் சூழ்நிலையிலிருந்து விலகி, தங்களைக் காப்பாற்றிக்கொண்டு வெற்றியுடன் கரையை அடைகிறோம். மிகவுயர்ந்த தகுதி வாய்ந்தவர்களுள் முதலிடத்தில் இருப்பவர் நரேந்திரர், குருதேவரின் அளப்பரிய கருணையைப்பெற்றவர் . அவரது இந்தத் தீர்மானம் காலத்தின் கோலத்தில் உருமாறி விபரீதமாகி வேறு பாதையைத்தேடுமா? வாசகர்களே! பொறுமையாக இருங்கள். குருதேவரின் திருவுள்ளம் நரேந்திரரை எவ்வாறு லட்சியத்தை அடைய வைத்தது என்பதை விரைவில் காண்போம்.
பாகம்-126
-
குருதேவரின் சேவைக்காக பக்தர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பார்த்தோம். குருதேவர் தம் எல்லா தேவைகளுக்கும் பக்தர்களையே சார்ந்திருந்தாரா, என்ற கேள்வி எழுகிறது. வேத வேதாந்தத்திற்கும் அப்பாற்பட்ட சத்திய தரிசனம் பெற்றிருந்தவர் அவர். அதே வேளையில் தட்சிணேசுவரத்தில்
வாழ்ந்த காலத்தில் சிறுசிறு அன்றாட விஷங்களிலும், பக்தர்களின் ஆன்மீகநிலை, உலகியல் நிலை ஆகிய எல்லாவற்றிலும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். அப்படிப்பட்ட குருதேவர்இப்போது எல்லாவற்றிற்கும் பக்தர்களின் கையையே எதிர்பார்த்திருந்தாரா? இதற்குவிடை அவர் எப்போதும் யாரைச் சார்ந்திருந்தாரோ, எதிர் பார்த்திருந்தாரோ அந்த அன்னைப் பராசக்தியையே இப்போதும் சார்ந்திருந்தார் என்பதுதான். பக்தர்களிடமிருந்து அவர் ஏதோ பெற்றுக் கொண்ட சேவையும், அன்னையின் திருவுளத்தாலும் பக்தர்களின் நன்மைக்காகவும் என்பதை அவர் நன்றாக அறிவார்.குருதேவரின் வாழ்க்கையில் ஆழ்ந்து செல்லுந்தோறும் இந்த உண்மை நமக்கு மேன்மேலும் தெளிவாகும்.
பக்தர்கள் செய்கின்ற ஏற்பாடுகளில் ஏதாவது தமக்குப் பிடிக்காதிருந்தால் குருதேவர் அவற்றை மாற்றியமைப்பது உண்டு. ஒரு வேளை இந்த மாற்றங்கள் அவர்களுக்கு வேதனை தருமென்று அவர் கருதினால் அவர்கள் அறியாவண்ணம் அதைச் செய்வார். அவர் சிகிச்சைக்காக கல்கத்தாவரும்போது பலராமிடம், இதோ பாருங்கள்! நீங்கள் பத்துபேர் சேர்ந்து சந்தா வசூலித்து என் உணவிற்கு ஏற்பாடு செய்வதை நான் சிறிதும் விரும்பவில்லை. நான் இது வரை அப்படி வாழ்ந்ததில்லை எப்படி என்று நீங்கள் கேட்கலாம். தட்சிணேசுவரக் காளிக்கோயிலின் உரிமையாளர்கள் தனித்தனியாக வாழ்ந்தாலும் ஒன்றாகச்சேர்ந்து தானே கோயிலை நிர்வகித்து வந்தார்கள். அந்த நிலையில் பார்த்தால் நான் அங்கும் அவர்கள் ஒவ்வொருவரும் கொடுத்த பணத்தில் தான் வாழ்ந்தேன் என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் அப்படியில்லை. நான் பூஜை செய்துவந்தபோது எனக்கு மாதச் சம்பளம் ஏழு ரூபாய். நான் தட்சிணேசுவரத்தில் வாழும்வரை மாதா மாதம் அந்த ஏழு ரூபாயும் பிரசாதமும் எனக்குக் கொடுக்க வேண்டும் என்று ராணி ராசமணியின் காலத்திலிருந்தே, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேண்டுமானால் , நான் பென்சில் தொகையில் வாழ்ந்தேன் என்று சொல்லலாம். எனவே சிகிச்சைக்காக நான் எதுவரை தட்சிணேசுவரத்திற்கு வெளியில் வாழ்வேனோ அது வரை என் உணவிற்கான செலவை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
அது போலவே தோட்ட வீட்டிற்கு மாத வாடகை அதிகமாகக் கொடுக்க வேண்டியிருந்தது. பாவம், ஏழைகளான அந்த பக்தர்கள் எவ்வாறு அந்தச் செலவை சமாளிக்கப்போகிறார்கள் என்று குருதேவர் கவலை கொண்டார். இறுதியாக தன் பக்தரும் பஸ்ட் கம்பெனி முதலாளியுமான சுரேந்திரரைக் கூப்பிட்டு, இதோபாருங்கள் , இங்கே மற்ற உல்லோரும் பாவம் வெறும் கணக்கர்கள், சொந்த குடும்பத்தைக் காப்பாற்றுவதே சிரமம். இந்த நிலையில் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவார்கள்? அதனால் வாடகை முழுவதையும் தயவு செய்து நீங்களே கொடுத்து விடுங்கள்” என்று கூறினார். சுரேந்திரரும் மகிழ்ச்சியுடன் கைகளைக் கூப்பிக்கொண்டு, தங்கள் சித்தம்” என்று கூறி அதனை ஏற்றுக்கொண்டார்.
தம் உடல் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதால், கூடிய விரைவில் வெளியே சென்று இயற்கைக்கடன்களைக் கழிக்க இயலாத நிலை வரப்போகிறது என்று கருதேவர் ஒருநாள் கூறினார். குருதேவரின் இந்த வார்த்தைகள் பக்த இளைஞரான லாட்டுவை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. உடனே கைகளைக் கூப்பிக்கொண்டு, அதனால் என்ன, இதோ உங்கள் தோட்டி, நான் ஆஜர்” என்றார். அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் லாட்டு கூறியதைக்கேட்டு குருதேவர் உட்பட எல்லோரும் சிரித்தோம். இவ்வாறு சிறுசிறு விஷயங்களிலும் குருதேவர் பல ஏற்பாடுகளைத் தாமே செய்து பக்தர்களுக்கு சேவைப் பணியைச் சுலபமாக்கினார்.
----
எதிர்காலத் துறவியர் உருவாதல்- அவர்களிடையே அன்பும் சேவை மனப்பான்மையும் வளர்தல்-
...............................................
படிப்படியாக எல்லா ஏற்பாடுகளும் சரியாகின. பக்த இளைஞர்களும் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். குருதேவரின் சேவை நேரம் தவிர மற்ற நேரங்களில் நரேந்திரர் அவர்களை தியானம், பஜனை, பாராயணம், உயர் விஷயங்களைப்பேசுதல், சாஸ்திர ஆராய்ச்சி போன்றவற்றில் ஈடுபடுத்தி, நாட்கள் எப்படி ஓடுகின்றன என்பதையே உணராமல் ஆனந்தத்தில் திளைத்திருக்கச்செய்தார். ஒரு புறம் குருதேவரின் தன்னலமற்ற புனிதமான அன்பு. மறுபுறம் நரேந்திரரின் அற்புதமான தோழமை- இவை இரண்டும் அவர்களுக்கிடையில் இனிமையான, மென்மையான , அதே வேளையில் உறுதி வாய்ந்த, பிளவு பட முடியாத ஓர் அன்புப் பிணைப்பை ஏற்படுத்தியது. அவர்கள் ஒருவருக்கொருவர் சொந்த குடும்பத்தினரை விட நெருக்கமாக இருப்பதை உண்மையாகவே உணர்ந்தனர். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் யாராவது வீட்டிற்குச் செல்ல நேர்ந்தாலும் அன்று மாலையிலோ மறுநாள் காலையிலோ திரும்பி விடுவார்கள். அப்போது அவர்கள் பன்னிருவர் இருந்தனர். உலகைத் துறந்து இறுதிவரை அங்கேயே தங்கி குருதேவரின் சேவையில் ஈடுபடுவதாக அவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர். தங்கள் குருவை உயிருக்கு மேலாகப்போற்றுபவர்களாகவும் செயல்திறன் மிக்கவர்களாகவும் ஒவ்வொருவரும் விளங்கினர்.
பாகம்-127
-
குருதேவரின் உடல்நிலையில் சிறிது மாற்றம்-
..............................................
காசிப்பூருக்கு வந்த ஓரிரு நாட்களுள் குருதேவர் ஒருநாள் கீழே இறங்கிவந்து வீட்டைச்சுற்றி அமைந்திருந்த தோட்டப் பாதையில் சிறிது நேரம் நடந்தார். நாள்தோறும் இவ்வாறு சிறிது நேரம் நடந்தால் கூடிய விரைவில் அவரது உடல்நிலை தேறிவிடும் என்று பக்தர்கள் நம்பி மகிழ்ந்தனர்.ஆனால் வெளியிலுள்ள குளிர்காற்று பட்டதாலோ, இல்லை வேறு எந்தக் காரணத்தாலோ அவர் மறுநாள் மிகவும் பலவீனமாகிவிட்டார். எனவே சில நாட்களுக்கு அவரால் வெளியே வர முடியவில்லை. இரண்டு மூன்று நாட்களில் ஜலதோஷம் போய்விட்டது. ஆயினும் பலவீனம் நீடித்தது. எனவே டாக்டர்கள் அவரது பத்திய உணவை மாற்றிக்கொடுக்கச் சொன்னார்கள். அதன்படி செய்தபோது பலவீனம் பெரிதும் குறைந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இவ்வாறு பதினைந்து நாட்கள் தொடந்தது. ஒருநாள் அங்கு வந்த டாக்டர் மகேந்திரரும் இந்த முன்னேற்றத்தைக்கண்டு மிகவும் மகிழ்ந்தார்.
குருதேவரின் உடல் நிலையைப் பற்றி டாக்டரிடம் சொல்லவும், குருதேவரது பத்திய உணவை வாங்கி வரவும் தினமும் கல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. இந்த இரண்டு வேலையையும் முதலில் ஒருவரே செய்து வந்தார். பின்னர் அது இடைஞ்சலாக இருந்ததால் இருவர் செல்வது என முடிவாயிற்று. வேறு ஏதாவது வேலை இருந்தால் மூன்றாவது ஆள் போவார். வீட்டைச் சுத்தம் செய்வது, பொருட்கள் வாங்க வராக நகர் செல்வது, இரவு பகலாக குருதேவரின் அருகிலிருந்து சேவை செய்வது போன்ற வேலைகளை ஒருவர் பின் ஒருவராக இளைஞர்கள் எல்லோரும் செய்து வந்தார்கள். நரேந்திரர் அவர்களுக்கு வழிகாட்டியதுடன், எதிர் பாராமல் வரும் அவசர வேலைகளையும் கவனித்துக்கொண்டார்.
அன்னை சாரதாதேவி முன்போலவே குருதேவருக்கான பத்திய உணவைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மூத்த கோபால் போன்ற ஓரிரு பக்தரிடம் மட்டுமே அன்னை சற்றேனும் பேசுவார். எனவே பத்திய உணவைத் தவிர வேறு ஏதாவது சிறப்பானஉணவு தேவை என்று டாக்டர் கூறும்போது , அந்த உணவைத் தயாரிக்கும் பக்குவத்தை அவர்கள் மூலம் தெரிந்து கொண்டு சமைப்பார். சமைப்பதுடன் நாள்தோறும் நண்பகலுக்குச் சிறிது முன்பும் மாலைக்குச் சிறிது பின்பும் குருதேவருக்குத் தாமே உணவு கொடுத்து அவர் உண்டு முடிக்கும்வரை அவருடன் இருப்பார். அன்னைக்குத் துணையாக இருக்கவும் சமையல் போன்ற வேலைகளில் உதவவும் குருதேவரின் அண்ணன் மகளான லட்சுமிதேவியை அழைத்து வந்தனர். தட்சிணேசுவரத்திற்கு வருகின்ற சில பக்தைகளும் அவ்வப்போது இங்கு வந்து சில மணிநேரம், சில வேளைகளில் ஓரிரு நாட்கள் என்று தங்குவார்கள். இவ்வாறு ஒரு வாரத்திற்குள் எல்லாம் தடையின்றி நடக்கலாயின.
----
இல்லற பக்தர்கள்குறித்து ஆலோசித்தல்-
----
அந்தச் சமயத்தில் இல்லற பக்தர்களும் சும்மா இருக்கவில்லை. வசதி போல் ராமசந்திரரின் வீட்டிலோ கிரீஷின் வீட்டிலோ கூடி, குருதேவருக்கு எப்படி அதிக அளவில் சேவை செய்வது, எப்படி பணப் பிரச்சனையைச் சமாளிப்பது என்பது பற்றிக் கலந்து ஆலோசித்தனர். ஒவ்வொரு மாதமும் எல்லோராலும் ஒரே அளவில் பணம் கொடுத்து உதவ முடியாமல் போகக் கூடும். அதனால் முன்கூட்டியே ஆலோசித்து அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதற்காகத் தான் இவ்வாறு கூடினர்.
-----
ஆசைகளைவிட்டு இறையனுபூதிக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும்படி இளைஞர்களை நரேந்திரர் ஊக்குவித்தல்-
............................................
அனைத்தும் ஒழுங்காகும் வரை இளைஞர்களுள் பலர் தங்கள் வீட்டிற்குச் செல்லவேயில்லை.வேறு வழியில்லாமல் யாராவது போக நேர்ந்தாலும் சில மணிநேரத்திற்குள் திரும்பி விடுவர். குருதேவரின் உடல்நிலை சரியாகும்வரை தங்களால் வீட்டிற்கு ஒழுங்காக வர இயலாது என்பதையும் வீட்டில் வசிக்க இயலாது என்பதையும் வீட்டாருக்குத் தெரிவித்து விட்டனர். எந்தப் பெற்றோரும் இதை முழுமனத்துடன் ஏற்று அனுமதி அளிக்கவில்லை.ஆனால் அவர்களால் என்ன செய்ய இயலும்? பிள்ளைகளுக்கு மூளைக்குழம்பிப் போய்விட்டது. பொறுமையாக அவர்களை இதிலிருந்து மீட்காவிடில் விளைவு விபரீதமாகிவிடும், எனவே சில நாட்கள் பொறுமையாகத் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். ஆயினும் அதே வேளையில் அவர்களை எப்படித் தங்களிடம் வரச்செய்வது என்பதை யோசிக்கவும் செய்தனர்.
இவ்வாறு குருதேவருக்கு சேவை செய்வதென்று இல்லற பக்தர்களும் பக்த இளைஞர்களும் சேர்ந்து உறுதி பூண்டு,அனைத்தும் ஒழுங்காக நடந்து வந்த பின் தான் நரேந்திரர் கவலை நீங்கப் பெற்றார். இப்போது தன் சொந்தப் பிரச்சனைகளைப் பற்றி நினைப்பதற்கு நரேந்திரருக்கு நேரம் கிடைத்தது. விரைவில் ஓரிரு நாட்கள் வீடு செல்ல எண்ணினார். இதை ஒருநாள் இரவில் எங்களிடம் சொல்லிவிட்டு உறங்கச் சென்றார்.ஆனால் தூக்கம் வரவில்லை. சிறிதுநேரத்தில் எழுந்துவிட்டார். கோபாலும் வேறு ஓரிருவரும் வழித்திருப்பதைக்கண்ட அவர் அவர்களிடம், வாருங்கள், தோட்டத்தில் சிறிது நேரம் உலாவுவோம். புகை பிடிப்போம் என்று அழைத்தார். உலவியபடியே கூறினார். குருதேவர் மிகவும் ஆபத்தான நோயினால் துன்பப் படுகிறார். அவர் தன் உடலை உகுத்து விடுவது என்று முடிவு எடுக்கவில்லை என்று யாரால் கூற முடியும்? காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுங்கள். நம்மால் முடிந்தவரை சேவை, தியானம். பஜனை என்று ஆன்மீக வளர்ச்சிக்கு முயல்வோம். உடலை உகுத்த பின் நாம் மிகவும் வருந்த நேரும். இதைச் செய்தபின் இறைவனை நாடலாம். அதை முடித்தபின் சாதனைகள் செய்யலாம். இவ்வாறு தான் நாட்கள் கழிகின்றன. நாம் மேலும் மேலும் ஆசை வலைக்குள் சிக்கிக்கொள்கிறோம். இந்த ஆசைகளே நம்மை அழிவிற்கும் சாவிற்கும் கொண்டு செல்கின்றன. ஆசைகளை விடுங்கள். ஆசைகளை விடுங்கள்” என்றார்.
-----
துணி நெருப்பில் இளைஞர்கள் தங்கள் ஆசைகளை எரித்தல்
......................
அது குளிர் கால இரவு. அமைதியில் உறைந்து கிடந்தது. விரிந்து கிடந்த வானம், தன் ஆயிரமாயிரம் நட்சத்திரக் கண்களால் பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தது.தோட்டத்து மரங்களின் கீழே, சூரிய கிரணங்களால் காய்ந்த தரை அமர வசதியாக இருந்தது. நரேந்திரரின் மனம் இயல்பாகவே வைராக்கியம் நிறைந்தது. தியான இயல்புடையது. புறத்தே பரவிக்கிடந்த அமைதி அவருள்ளே புகுந்து, அவர் தன்னுள் மூழ்குவது போன்றிருந்தது. மேலும் நடக்காமல் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அருகே சருகுகளும் காய்ந்த புல்லும் சுள்ளிகளும் கிடப்பதைக்கண்டு, இதோ, இவற்றில் தீ மூட்டித்தான் சாதுக்கள் துனி வளர்த்து அதில் நம் ஆசைகளைப் பொசுக்குவோம்” என்று கூறினார். தீ மூட்டப்பட்டது. நாங்களும் எங்கள் ஆசைகளை நெருப்பில் இடுவதாக எண்ணிக்கொண்டு காய்ந்த சருகுகளையும் சுள்ளிகளையும் சேகரித்து அவற்றை நெருப்பில் இட்டோம். எங்கள் ஆனந்தம் விவரிக்க முடியாததாக இருந்தது. உண்மையிலேயே எங்கள் ஆசைகள் சாம்பலாகி, மனம் தூய்மையாகி அமைதியில் உறைவது போன்றிருந்தது. கடவுளின் அருகில் நாங்கள் சென்று விட்டது போல் உணர்ந்தோம். இதை ஏன் முன்பே செய்யாமல் விட்டோம்! இதிலே எத்தனை ஆனந்தம் உள்ளது! இனிமேல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் துனி மூட்ட வேண்டும். என்று எண்ணிக்கொண்டோம். இவ்வாறு இரண்டு மூன்று மணிநேரம் கழிந்தது. அதற்கு மேல் எரிப்பதற்குச் சுள்ளிகளும் சருகுகளும் கிடைக்க வில்லை. அதனால் அந்த நெருப்பை அணைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று படுத்துக் கொண்டோம். அப்போது அதிகாலை நான்கு மணிக்கு மேலாகி விட்டிருந்தது. மறுநாள் இதைப் பற்றி மற்றவர்கள் கேள்விப்பட்டபோது, தங்களால் இதில் கலந்து கொள்ள இயலவில்லையே, தங்களைக் கூப்பிட வில்லையே என்று மிகவும் வருந்தினார்கள். நரேந்திரர் அவர்களை ஆறுதல் படுத்தி, இது முன்னால் திட்டமிட்டுச் செய்ததல்ல. அதில் இவ்வளவு ஆனந்தம் கிடைக்கும் என்பதும் எங்களுக்குத் தெரியாது. இனிமேல் நேரம் கிடைக்கும் போது எல்லோரும் சேர்ந்து துனி வளர்ப்போம். கவலை வேண்டாம்” என்று கூறினார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி, காலையில் நரேந்திரர் கல்கத்தா சென்றார். ஒரு நாள் கழித்துச் சில சட்டப் புத்தகங்களுடன் காசிப்பூர் திரும்பினார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-128
-
அன்னை காளியின் மடியில்-
...........................................................
ஆம், குருதேவரின் பெருவாழ்வைப் படிக்கும்போது இது அப்படியே நிரூபணமாகிறது. அவரது தலைமையில் ஒரு தெய்வீகப் பாடகர் கூட்டம் வைந்து சுகராகம் இசைத்துச்சென்றது போலுள்ளது. அந்த இன்னிசைப் பாடலை சுவாமி சாரதானந்தர் கல்பதரு நாள் அதாவது 1886 ஜனவரி முதல் நாள் வரை பதிவு செய்வு வைத்தார். அந்தப் பாடலின் நிறைவையும் தலைமைப் பாடகரின் மறைவையும் அறிந்து கொள்ள நாம் வேறு நூல்களை நாட வேண்டியுள்ளது.குருதேவரின் இல்லறச் சீடர்கள் சிலரும் அவரைக் கண்ட வேறு பலரும் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியிருந்தனர். அவற்றிலிருந்து திரட்டி ராமகிருஷ்ண மிஷன் வெளியிட்ட பல நூல்களிலிருந்து மொழிபெயர்ந்து இந்தப் பகுதியைத் தொகுத்துள்ளோம்.
அன்னை காளியின் அருமைப் புதல்வனான குருதேவர் அன்னை காளியின் மடியில் மீளாத் துயிலில் ஆழ்ந்த சோகத்தைச் சொல்வதற்காக மட்டும் நாம் இந்தப் பகுதியை எழுதவில்லை. இன்று வளர்ந்து, உலகெலாம் நிழல் பரப்பி நிற்கின்ற ராமகிருஷ்ண மிஷன் என்ற பெருமரத்தின் விதை தட்சிணேசுவரத்தில் நடப்பட்டாலும் சியாம்புகூரிலும் காசிப்பூரிலும் அது முளைவிட்டது என்று கண்டோம். அது எப்படி முளைவிட்டது . வேலியிட்டு அதைக் காக்கின்ற பொறுப்பை எப்படி குருதேவர் நரேந்திரரிடம் ஒப்படைத்தார் என்பதையும் முக்கியமாகத் தெரிந்து கொள்வதற்காகத் தான் இந்தப் பகுதியை நாம் இணைத்துள்ளோம்.
ஜனவரி முதல் நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு குருதேவரின் உடம்பெங்கும் எரிச்சல் உண்டாயிற்று. கங்கை நீரைக்கொண்டு வரச்சொல்லி தம்மீது தெளித்துக்கொண்டார் அவர்.
இந்தக் காலகட்டத்தில் நரேந்திரிடம் ஆன்ம தாகம் கொழுந்துவிட்டு எரிந்தது. இறையனுபூதி பெறுவதில் அடங்காத ஆர்வம் அவரிடம் காணப்பட்டது. ஜனவரி முதல் நாளன்று அவர் குருதேவரிடம் சென்று, தங்கள் அருளால் எல்லோரும் ஏதேனும் ஒருவித உயர் அனுபவம் பெற்று விட்டார்கள். நானும் அனுபூதி பெற அருள் புரியுங்கள். எல்லோருக்கும் கிடைத்த பிறகு நான் மட்டும் ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு குருதேவர், உன் குடும்பத்திற்குச்செய்ய வேண்டியதைச்செய்துவிட்டு என்னிடம் வா. ஆமாம், உனக்கு என்ன வேண்டும்? என்றார். அதற்கு குருதேவர், நான் மூன்று நான்கு நாட்கள் ஒரேயடியாக சமாதியில் மூழ்கி இருக்க வேண்டும். சாப்பிட மட்டும் நினைவு திரும்பவேண்டும். அப்படி ஒரு நிலையை அருளுங்கள்” என்று கேட்டார். உடனே குருதேவர், வெட்கம், வெட்கம்! நீ ஓர் ஆலமரம் போல் வளர்ந்து சம்சார வெயிலில் வாடுகின்ற ஆயிரக் கணக்கானோருக்கு நிழல் அளிப்பாய் என்று எண்ணினேன். நீ என்னடா வென்றால் உன் முக்தியை நாடுகிறாய். நீ கேட்ட நிலையைவிட உயர்ந்த நிலை ஒன்றிருக்கிறது. இருப்பவை எல்லாம் நீயே” என்று நீதானே பாடினாய். உன் குடும்பத்திற்கு வேண்டிய ஏற்பாடு செய்து விட்டு வா. சமாதியை விட மிக உயர்ந்த அந்த நிலையை நீ அடையலாம்” என்றார்.
மறுநாள் காலையில் நரேந்திரர் தமது வீட்டுக்குச்சென்றார்.தேர்வு நெருங்கிய பிறகும் படிக்காமல் அலைந்து கொண்டிருப்பதற்காக வீட்டினர் அவரைக் கடிந்து கொண்டனர். பாட்டியின் வீட்டில் இருந்த தன் படிப்பறைக்குச்சென்றார். படிக்க புத்தகத்தை எடுத்தார். அவ்வளவு தான், படிப்பது ஏதோ பயங்கரமான ஒரு காரியம் போன்று ஒரு சொல்லொணாத பயம் அவரைப் பற்றிக்கொண்டது. அவரால் படிக்க முடியவில்லை.குடும்ப நிலைமையை எண்ணினால் படித்தே தீர வேண்டும். ஆனால் படிக்காதே என்று அச்சுறுத்துவது போன்று இந்த இனம் புரியாத பயம்! படிக்க வேண்டுமா! வேண்டாமா என்றும் மனப்போராட்டத்தின் மத்தியில் தவித்தார் அவர். எந்த முடிவுக்கும் வர முடியாதவராய் இதயமே வெடித்து விடுவது போல் அழுதார். இதற்கு முன் ஒருபோதும் அவர் அப்படி அழுததில்லை. அதன் பிறகு என்ன நடந்தது? அவரே சொல்கிறார். என் புத்தகம் முதலிய எல்லாவற்றையும் அங்கேயே விட்டு விட்டு வெறி பிடித்தவன்ப்போல் குருதேவரைத்தேடி காசிப்பூருக்கு ஓடினேன். வழியில் செருப்பு எங்கோ கழன்று தெறித்தது. ஒரு வைக்கோற்போரில் மோதி, வைக்கோல் துகள்கள் உடம்பில் ஒட்டிக்கொண்டன. கண்மண் தெரியாமல் ஓடினேன், ஓடினேன். காசிப்பூர்வரை ஓடியே சென்றேன்.
ஜனவரி நான்காம் நாள் காலை ஒன்பது மணி, நிரஞ்சன், சசி, மகேந்திரர் முதலியோர்குருதேவரின் அருகே அமர்ந்திருந்தனர். நோய் மிகவும் கடுமையாகி குருதேவர் வலியின் மிகுதியால் துடித்துக்கொண்டிருந்தார். அப்போதும் சுற்றி இருந்தவர் களிடம் மிகவும் மெதுவான குரலில் நரேந்திரரைப் பற்றிப்பேசினார். நரேந்திரனின் இப்போதைய அற்புதமான நிலையைப் பாருங்கள். நரேந்திரரின் இப்போதைய அற்புதமான நிலையைப் பாருங்கள். ஒரு காலத்தில் அவன் உருவக் கடவுளை ஏற்றுக்கொள்வதே இல்லை. இப்போது அந்தக் கடவுளை அடையத் தடிக்கிறான். பிறகு நரேந்திரர் தன் லட்சியத்தை விரைவிலேயே அடைவார் என்பதைக் குறிப்பால் கூறினார்.
குருதேவரின் உபதேசப்படி நரேந்திரர் பலவகையான சாதனைகளைப் பழகினார். ஆச்சரியப்படும் வகையில் எல்லாவற்றிலும் வெற்றி கண்டார். காசிப்பூர் நாட்களில் குருதேவர் அவரை எதிர்காலப் பணிக்காக முனைந்து பயிற்றுவித்தார். ஒருநாள் அவர் நரேந்திரரை அழைத்து மற்ற சீடர்களைக் காட்டி, இவர்களை உன் பொறுப்பில் தான் விட்டுச்செல்கிறேன். அவர்கள் சாதனைகளைப் பழகும் படி வீட்டிற்குத் திரும்பி விடாமலும் பார்த்துக் கொள்” என்று கூறினார். மிக அமைதியாக எல்லா இளைஞர்களையும் துறவுநெறியில் பயிற்றுவித்தார் குருதேவர். ஒருநாள் அவர்களிடம் தெருத்தெருவாகச் சென்று பிச்சையெடுத்து வரும்படிக்கூறினார். அவர்களுள் பலர் மிகவும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள், செல்வச் செழிப்பில் வளர்ந்தவர்கள். என்றாலும் குருதேவரின் இந்தக் கட்டளையை நிறைவேற்ற மிகுந்த மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். பிச்சையெடுத்துக் கிடைத்த அரிசியையும் காய்கறிகளையும் சமைத்து குருதேவரிடம் கொண்டு வந்தனர். அதிலிருந்து சிறிது எடுத்துத் தம் வாயில் போட்டுக்கொண்ட குருதேவர், நல்ல காரியம் செய்தீர்கள். இந்த உணவு மிகவும் தூய்மையானது” என்றார். அவருக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது.
நாளுக்கு நாள் குருதேவரின் வலி பொறுக்க முடியாததாக அதிகரித்தது. ஆனால் அவரோ புன்னகையோடு மெல்லிய குரலில், மனமே, நோயும் உடம்பும் ஒன்றை ஒன்று கவனித்துக் கொள்ளட்டும். நீ எப்போதும் ஆனந்தத்தில் ஆழ்ந்திரு” என்றார். மார்ச் 14.ஆம் நாள் இரவு மகேந்திரிடம், இதையெல்லாம் மகிழ்ச்சியோடு பொறுத்துக் கொண்டிருக்கிறேன். இல்லா விட்டால் நீங்கள் எல்லோரும் அழுவீர்கள். நீங்கள் அனைவரும், இந்தக் கொடிய சித்தரவதை வேண்டாம். உடம்பை விட்டு விடுங்கள்” என்று சொல்வீர்களானால் நான் மகிழ்ச்சியோடு இந்த உடம்பை விட்டு விடுவேன்” என்றார்.
மார்ச்- 15, ஆம் நாள் பொழுது விடிகின்ற நேரத்தில் கிரீஷ், டாக்டர்களான உபேந்திரருடனும் கவிராஜ் நவகோபாலருடனும் வந்தார். அவர்கள் குருதேவரின் உடல்நிலையைக் கவனித்து மருந்துகள் கொடுத்தனர். அதனால் உடல்நிலை கொஞ்சம் சுமாராகியது. தம் பக்கத்தில் இருந்த பக்தர்களிடம், இது உடம்பிற்கு வந்த நோய், உடம்பு என்று இருந்தால் நோய் நிச்சயமாக வரும். அது இயற்கை. இந்தஉடம்பு சிறு சிறு அணுக்களால் ஆக்கப் பட்டிருப்பதை நான் காண்கிறேன்” என்றார். பிறகு கிரீஷின் பக்கம் திரும்பி, நான் கடவுளின் பல்வேறு வடிவங்களைப் பார்க்கிறேன், அதில் இதுவும் (தாமும்) ஒன்றாக இருக்கிறது” என்று கூறினார்.
மார்ச்- 15 ஆம் நாள் குருதேவரின் உடல் நிலை சற்று தேறியது.
பாகம்-129
-
காலை 7 மணி இருக்கும். பக்தர்களுடன் மிக மெல்லிய குரலிலும் சில வேளைகளில் சைகை மூலமும் பேசினார். நரேந்திரர், ராக்கால், லாட்டு, மூத்தகோபால் மகேந்திரர் முதலானோர் அங்கிருந்தனர்.
குருதேவர்-
நான் இப்போது என்ன காண்கிறேன்? தெரியுமா? இறைவனே எல்லாமாக ஆகியிருக்கிறான். ஜீவராசிகள் எல்லாம் வெவ்வேறு தால் உறைகள் போலவும் இறைவனே அதனுள் உறைந்து கைகால்களையும் தலையையும் அசைப்பது போலவும் காண்கிறேன்.
சற்று நேரத்தில் சமாதியில் மூழ்கினார். பின்னர் சிறிது உணர்வுபெற்று, இப்போது எனக்கு எந்த வலியும் இல்லை. முன்போலாகிவிட்டேன்” என்றார்.
பின்னர் பக்தர்களைக் கனிவுடன் பார்த்தார். அவரது கருணை ஆயிரமாயிரம் நதிகளாகப்பெருக்கெடுத்து ஓடுவது போல் தோன்றியது. நரேந்திரர் மற்றும் ராக்காலின் கன்னங்களை ஒரு தாயின்வாத்சல்யத்துடன் வருடினார். சிறிதுநேரத்திற்குப் பின் மகேந்தரரிடம், இப்போது இந்த உடம்பு குணமடைந்து இன்னும் சிலகாலம் வாழ அனுமதிக்கப் பட்டால் பலர் ஆன்மீக விழிப்புப்பெறுவர்” என்றார்.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு கூறினார், ஆனால் அது நடக்காது. இம்முறை இந்த உடம்பு பிழைக்காது.
ராக்கால்-
உங்கள் உடம்பு இன்னும் சில காலம் இருக்குமாறு இறைவனிடம் கருணை கூர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.
குருதேவர்-
அது இறைவனின் திருவுளத்தைப் பொறுத்தது.
நரேந்திரர்- உங்கள் உள்ளமும் இறைவனின் சங்கல்பமும் ஒன்றாகி விட்டதே!
குருதேவர் சிறிது மௌனமாக இருந்தார் . பின்னர் அப்படியே நான் பிரார்த்தித்தாலும் எதுவும் நடக்காது. நானும் அன்னையும் ஒன்றாகி விட்டதை நான் காண்கிறேன்” என்றார்..
சிறிது நேரத்தில் மீண்டும் தொடர்ந்தார். இதில் இரண்டு பேர் இருக்கிறார்கள் ஒன்று, அன்னை( சிறிய இடைவெளிக்குப் பின் ) ஆம், ஒன்று அவள், மற்றொன்று அவளது பக்தன். கை ஒடிந்ததும், இப்போது நோயுற்றிருப்பதும் பக்தன் தான். உங்களுக்கு புரிகிறதா?
பக்தர்கள் மௌனமாக அமர்ந்திருந்தனர்.
குருதேவர்- ஐயோ, இதையெல்லாம் நான் யாரிடம் சொல்வேன்? யார் என்னைப் புரிந்து கொள்வார்?( சிறிது நேரம் கழித்து) கடவுள் மனிதனாகிறார், அவதரிக்கிறார். பக்தர்களுடன் பூமிக்கு வருகிறார். அவர் உலகை விட்டுச்செல்லும்போது பக்தர்களும் சென்று விடுகிறார்கள்.
ராக்கால்-
அதனால் தான் நீங்கள் எங்களை விட்டு விட்டுச்சென்றுவிடாதீர்கள் என்று கெஞ்சி க்கேட்கிறோம்.
குருதேவர் சற்று சிரித்துவிட்டு கூறினார். தெருப்பாடகர்கள். திடீரென வருகிறார்கள். ஆடுகிறார்கள். பாடுகிறார்கள். வந்தது போலவே திடீரென மறைந்தும் விடுகிறார்கள். அவர்கள் வந்தபோது அவர்களை யாரும் அறியவில்லை. போகும்போதும் அவர்கள் இன்னாரென யாருக்கு தெரிவதில்லை.
பல டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்தும் பயனில்லாததைக் கண்ட அன்னை சாரதாதேவி தெய்வீக சக்தியின் மூலம் குருதேவரின் உயிரைக் காக்க முடிவு செய்தார். கேட் போர்க்கெல்லாம் வரம் அருளும் தாரகேசுவர சிவபெருமான் கோயிலுக்குச்சென்று தன் கணவரைக் காப்பாற்ற ஒரு வழி கிடைக்கும் வரை உண்ணாவிரதம் பூண்டு சன்னிதியில் வீழ்ந்து கிடந்தார். முதல் நாள் கழிந்தது. இரண்டாம் நாள் பகலும் கழிந்தது. இரவு வந்தது. இரவில் அதிசயமான அனுபவம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது.ஏராளமான மண் பானைகளை ச்சேர்த்து யாரோ அடித்து நொறுக்குவதைப்போன்றதோர் ஓசை கேட்டது. அவரிடம் தீவிர வைராக்கியம் எழுந்தது. இந்த உலகத்தில் உறவு என்பது என்ன? வெறும் கனவு தானே! என்று எண்ணினார் அவர். காசிப்பூர் திரும்பினார். குருதேவர் அவரைப் பார்த்ததும், நல்லது, நீ போன காரியம் என்ன ஆயிற்று? என்று கேட்டார். அன்னை நடந்ததைக் கூறினார். குருதேவர் அந்தப் பதிலை எதிர்பார்த்தது போலிருந்தது.
ஒருநாள் மூத்தகோபால் சில காவி உடைகளையும் ருத்திராட்ச மாலைகளையும் மூட்டையாகக்கட்டி குருதேவரின் கொண்டு வந்தார். அவைகளைச் சிறந்த சன்னியாசிகளுக்குக் கொடுக்கப்போவதாகக் கூறினார். குருதேவர் தம்முன் இருந்த இளம் சீடர்களைக் காட்டி, இவர்களை விடச் சிறந்த சன்னியாசிகள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர்களுக்கே அவற்றைக் கொடு” என்றார். மூத்தகோபால் மூட்டையைக் கொண்டு வந்து குருதேவர் முன் வைத்தார். அவற்றை பக்த இளைஞர்கள் பன்னிருவருக்கு அளித்தார் குருதேவர். ஒரு காவித்துணியும் ருத்திராட்ச மாலை ஒன்றும் எஞ்சின. அதை கிரீஷுக்காக எடுத்து வைக்கும் படி கூறினார். துறவு மனப்பான்மையில் கிரீஷ் இந்த இளைஞர்கள் யாருக்கும் சளைத்தவர் அல்ல” என்றார். ஒரு நாள் மாலை சன்னியாசத்திற்கான சடங்கொன்றைச்செய்யச்சொல்லி ஊருக்குள் சென்று பிச்சையெடுத்துவரச்சொன்னார். இவ்வாறு குருதேவர் ராமகிருஷ்ண துறவியர் சங்கத்தை ஆரம்பித்துவைத்தார்.
நரெந்திரர் உண்மையை அடைவதில் அளவற்ற ஆவல் கொண்டிருந்ததையும் அதற்காக அல்லும்பகலும் அவர் எவ்வாறு பாடுபட்டார்என்பதையும் முன்பே கண்டோம். ஒரு நாள் மாலையில் அவர் தியானம் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று அவருக்கு அந்த நிலை கிடைத்தது. முதலில் அவரது தலைக்குப் பின்புறம் ஒளி ஒன்று தோன்றியது. பின்னர் அவர் சிறிது சிறிதாகத் தன் நினைவையும் உலக நினைவையும் இழந்து சமாதியில் கரைந்தார். புலன்களையும் மனத்தையும் உலகங்களையும் எல்லாவற்றையுமே கடந்து உணர்வு மயமான நிர்விகல்ப சமாதியில் மூழ்கினார். நெடுநேரம் கழித்து சமாதியிலிருந்து திரும்பியபோது அவருக்கு தலை இருக்கும் உணர்ச்சி மட்டும் தோன்றியது. உடல் இருப்பது தெரியவே இல்லை. எனவே என் உடம்பு எங்கே? உடம்பு எங்கே? என்று அலறினார். அவருடைய கதறலைக்கேட்டு, விரைந்து வந்த மூத்தகோபால் அவர் உடமை்பைக் காட்டி ., இதோ இருக்கிறது நரேன், இதோ இருக்கிறது” என்றார். கோபாலின் வார்த்தைகள் அவர் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. முன்போலவே கூச்சலிட்டார். பயந்து போன கோபால் மாடிக்கு ஓடி குருதேவரிடம் விவரத்தைக் கூறினார். கோபால் சொல்வதை அமைதியாகக்கேட்ட குருதேவர் சிரித்தபடியே, அதே நிலையில் அவன் இன்னும் கொஞ்சநேரம் இருக்கட்டும். இந்த நிலைக்காக அவன் நெடுங்காலம் என்னை மிகவும் தொந்தரவு செய்தான்” என்றார்.
நெடு நேரத்திற்குப் பிறகு நரேந்திரருக்கு உலக நினைவு திரும்பியது. கண்விழித்த அவர் தம்மைச் சுற்றிலும் சகோதரச் சீடர்கள் கவலையோடு அமர்ந்திருப்பதைக் கண்டார். இத்தனை நாட்கள் அவர் மனத்தில் சவீசிக் கொண்டிருந்த புயல் ஓய்ந்து ஆழ்ந்த அமைதி நிலவியது. பிறகு குருதேவரிடம் சென்றார். குருதேவர் மகிழ்ச்சியோடு அவரைப் பார்த்து, அன்னை காளி இப்போது உனக்கு எல்லாவற்றையும் காட்டி விட்டாள். ஆனால் இந்த அனுபவம் தற்காலிகமாக பூட்டி வைக்கப் படும். அதன் சாவி என்னிடம் தான் இருக்கும். நீ அன்னையின் பணிகளைச்செய்து முடித்ததும் இந்தப் புதையல் உனக்கு மறுபடியும் கிடைக்கும். நீ மீண்டும் எல்லாவற்றையும் உணர்வாய்” என்றார்.
இந்த நாட்களில் நடந்த ஒரு நிகழ்ச்சி நெஞ்சைத் தொடுவதாகும். குருதேவர் நரேந்திரரை எவ்வளவு தூரம் நேசித்தார் என்பதை விளக்குவதுடன் தமது எதிர் காலத்தை, எதிர் காலப் பணியை அவரிடம் ஒப்படைத்ததையும் கூறுகின்ற ஒரு முக்கிய நிகழ்ச்சி இது-
குருதேவருக்கும் அவரது சேவகர்களுக்குமான செலவை இல்லற பக்தர்கள் ஏற்று நடத்தி வந்தார்கள் என்பதை ஏற்கனவே கூறினோம். பக்த இளைஞர்கள் அதிகமாகச் செலவழிக்கிறார்கள் என்றுஅவர்கள் ஒரு முறை குற்றம் சாட்ட நேர்ந்தது. இது இருசாராருக்குமிடையில் மனக் கசப்பை உண்டாக்கியது. அது மெள்ள மெள்ள வளர்ந்து பகையாக மாறுவதைக் கண்ட நரேந்திரர் எல்லாவற்றையும் குருதேவரிடம் கூறினார். நரேந்திரரின் வருத்தத்தைக் கண்ட குருதேவர், ஓ என் நரேன், உன் தோள்களில் என்னை நீ எங்கே தூக்கிச்சென்றாலும் நான் அங்கு வந்து தங்குகிறேன், அப்பா” என்று நெகிழ்ந்துபோய் கூறினார்.
ஏப்ரல், மே, ஜுன், ஜுலை, மாதங்கள் கழிந்தன. குருதேவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியது. ஒரு நாள் குருதேவர் நரேந்திரருக்குத் தமது இஷ்ட மந்திரமாகிய ராமநாமத்தில் தீட்சை தந்தார்.நரேந்திரர் ஆனந்தப் பரவசத்தில் தம்மை மறந்து ராமா, ராமா, என்று கூவியபடியே வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தார். அவரது உயர்ந்த பரவச நிலையைக் கண்டவர்கள் அவரது அருகில் செல்வதற்கே அஞ்சினார்கள். ராமா, ராமா என்று கூறியவாறே மணிக்கணக்காக அவர் சுற்றுவதைக் கண்டு குருதேவரிடம் விவரத்தைக் கூறினார்கள். குருதேவர், அவன் அந்த நிலையிலேயே இருக்கட்டும், விரைவில் சரியாகி விடுவான்” என்றார். பல மணி நேரங்களுக்குப் பிறகு படிப்படியாக சுயநிலையை அடைந்தார் நரேந்திரர்.
துர்க்கா சரண் நாகமகா சயர் சில முறை காசிப்பூருக்கு வந்து குருதேவரை தரிசித்தார். குருதேவரிடம் அளவற்ற அன்புகொண்டவர் அவர். குருதேவர் படுகின்ற துன்பத்தைப் பார்க்கச் சகிக்காததால் அவர் அடிக்கடி வருவதில்லை. ஒரு சமயம் அவர் வந்தபோது குருதேவர் அவரைத் தம் கட்டிலுக்கு அருகே அழைத்தார், இதோ பார், துர்க்கா சரண் இந்த நோயைத் தீர்க்க தங்களால் முடியாது என்று டாக்டர்கள் கூறி விட்டார்கள். உன்னால் தீர்க்க முடியுமா? என்று கேட்டார். நாக மகாசயர் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்தார். பிறகு குருதேவரின் நோயை யோக சக்தியால் தன் உடம்பிற்கு மாற்றிக் கொள்ளத் தீர்மானித்தவராய், பணிவான குரலில் ஆம், உங்கள் நோயை எப்படித் தீர்ப்பது என்பது எனக்குத் தெரியும். தங்கள் கருணையினால் அதை இப்போதே நான் செய்து முடிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரை நெருங்கினார். உடனே குருதேவர் அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்டார். உடனே அவரைப் பிடித்து அப்பால் தள்ளிவிட்டு, உன்னால் முடியும் எனக்குத் தெரியும்”. உன்னால் இந்தநோயைத் தீர்க்க முடியும்” என்றார்.
குருதேவருக்கு வந்திருப்பது தொற்றுநோய் என்ற வதந்தி ஒருமுறை எழுந்தது. இதனால் சிலர்குருதேவரின் அருகில் செல்லவும் சேவைகள் செய்யவும் தயங்கினர். இதைக் கண்ட நரேந்திரர் அனைவரையும் குருதேவரின் அறைக்குள் கூட்டிச் சென்றார். அவர் குடித்து மீதியிருந்த கஞ்சியை எல்லோர் முன்னிலையிலும் குடித்து, அது தொற்றுநோயல்ல, என்பதை எல்லோருக்கும் தெரியப் படுத்தினார்.
ஒரு முறை குருதேவர் ஒரு காகிதத் துண்டில் ” ஜெய் ராதே ப்ரேம மயீ, நரேன் உலகிற்குப் போதிப்பான். எங்கும் சென்று (உண்மைகளைப்) பறை சாற்றுவான்” என்று எழுதிக் காண்பித்தார். நரேந்திர் அதனை மறுத்து, என்னால் அதெல்லாம் முடியாது” என்று கூறினார். அதற்கு குருதேவர் , நீ செய்தேயாக வேண்டும்” என்றார்.
ஒரு நாள் மாலை வேளை . நிரஞ்சன் முதலான பக்த இளைஞர்கள் தோட்டத்தின் ஒரு மூலையில் நின்ற பேரீச்ச மரத்திலிருந்து ரசம் குடிப்பதற்காக அதை நோக்கிச் சென்றனர். அப்போது குருதேவர் தமது படுக்கையில் படுத்திருந்தார். சுயமாக எழவோ, அமரவோ முடியாத அளவுக்கு அவர் பலவீனமாக இருந்த வேளை அது. திடீரென்று எழுந்து விர்ரென்று கீழே இறங்கி ஓடினார். அன்னை சாரதாதேவி தற்செயலாக அதைக் கண்டு விட்டார். குருதேவர் எழுந்து ஓடியதை நம்ப முடியாத அவர், எதற்கும் அவரது அறையில் போய்ப் பார்த்துவிடலாம் என்றெண்ணி அங்குச்சென்றார். அங்கே குருதேவர் இல்லை. ஆனால் சிறிது நேரத்தில் வந்து படுத்துக்கொண்டார். எல்லாவற்றையும் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த அன்னை குருதேவரிடம் சென்று விவரத்தைக்கேட்டார். அவரோ தாம் படுக்கையைவிட்டு எழுந்து சென்றதையே மறுத்து, நானாவது எழுந்து போவதாவது. எல்லாம் உன் மனப் பிரமை. அடுப்பாங்கரையில் எப்போதும் நின்று நின்று உன் மூளை கொதிப்படைந்து விட்டது” என்று கூறினார். ஆனால் அன்னை விடவில்லை. வற்புறுத்திக்கேட்டபோது, நிரஞ்ஜன் முதலானோர் சென்ற இடத்திலுள்ள பேரீச்சை மரத்தில் நல்லபாம்பு ஒன்று இருந்ததாகவும் அதை விரட்டவே தாம் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே அவர் முதலில் அதை மறுத்திருக்க வேண்டும்.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் குருதேவர் யோகினை அழைத்து பஞ்சாங்கம் கொண்டு வரச்சொன்னார். ஆகஸ்டு ஒன்பதாம் தேதியிலிருந்து வரிசையாக நாட்களையும் நட்சத்திரங்களையும் அதன் பலன்களையும் படித்துக்கொண்டே போகும்படிக்கூறினார். மாதத்தின் கடைசி நாள் வந்ததும் மேலும் படிக்க வேண்டாமென்று சைகை காட்டினார்.
இந்த நிகழ்ச்சி நடந்து நாலைந்து நாட்கள் கழிந்தன. ஒருநாள் குருதேவர் நரேந்திரரைத் தம் அருகே அழைத்தார். அப்போது அறையில் யாரும் இல்லை. அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். குருதேவர் நரேந்திரரைத் தம் எதிரே உட்காரச்சொல்லி அவரை உற்றுப் பார்த்தபடியே ஆழ்ந்த சமாதியில் மூழ்கினார். சிறிது நேரத்திற்குள் நரேந்திரர் தம் உடம்பில் மின்சாரம் போன்று ஒரு சக்தி பாய்ந்து செல்வதை உணர்ந்தார். சிறிது சிறிதாக அவரும் உலக நினைவை இழந்தார். தாம் எவ்வளவு நேரம் இப்படி சமாதியில் மூழ்கியிருந்தோம் என்பது அவருக்குத்தெரியவில்லை. உணர்வு திரும்பிக் கண்களைத் திறந்து பார்த்தபோது குருதேவர் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். நரேந்திரர் காரணம் கேட்டபோது, என்னிடமிருந்த எல்லாவற்றையும் இன்று உனக்குக் கொடுத்து விட்டு நான் பக்கிரியாகி விட்டேன். இந்த ஆற்றல் களின் மூலம் நீ உலகிற்கு மிகுந்த நன்மையைச் செய்வாய். அதன் பிறகு தான் நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்குத் திரும்புவாய்” என்று கூறினார். இவ்வாறு தமது ஆற்றலை நரேந்திரரிடம் செலுத்தியதன் மூலம் இருவரும் ஒரே ஆன்மாவாக இணைந்தனர். இந்த இணைப்பின் காரணமாக உலகம் பெற்ற நன்மைகளை நிகழ்கால வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது. எதிர்கால வரலாறு இன்னும் சொல்ல இருக்கிறது.
பாகம்-130
-
இரண்டு நாட்கள் கழிந்தன. தம்மை அவதாரம் என்று குருதேவர் சொல்லிக் கொள்வதைச்சோதனை செய்து பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் நரேந்திரருக்குத் தோன்றியது. அன்று மிகக் கடுமையான வலியால் குருதேவர் துடித்துக் கொண்டிருந்தார். உடம்பின் நோயால் இப்படித் துடிக்கும் இந்த நிலையிலும் அவர் தம்மை அவதாரப் புருஷர் என்று கூறுவாரானால் அவர் உண்மையில் அவதாரப்புருஷர் என்பதை நம்புவேன்” என்று நினைத்தார். நோயால் துடித்த படிபடுக்கையில் படுத்திருந்த குருதேவர் அந்த விநாடியே தம் ஆற்றல் முழுவதையும் திரட்டி எழுந்து உட்கார்ந்து மிகத் தெளிவான குரலில், நரேன், முன்பு யார் ராமராகவும் , கிருஷ்ணராகவும் வந்தாரோ அவரே இப்போது ராமகிருஷ்ணராக இந்த உடம்பிற்குள் இருக்கிறார். ஆனால் உன் வேதாந்தத்தின் கருத்துப்படி அல்ல” என்றார். எவ்வளவோ தெய்வீகக் காட்சிகளையும் ஆற்றலையும் அவரிடம் கண்ட பிறகும் தனக்கு இன்னும் சந்தேகம் நீங்காததற்காக நரேந்திரர் வெட்கமும் அவமானமும் அடைந்தார்.
ஆகஸ்ட் பதினைந்தாம் நாள். எந்த நாள் வரக் கூடாதென்று பக்தர்கள் கவலை கொண்டிருந்தார்களோ, அந்த நாள் பக்தர்களுக்கு ஆற்றொணா துயரில் ஆழ்த்திய நாள் வந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. குருதேவரின் நோய் இதுவரை இல்லாத அளவு மிகவும் பயங்கரமாக இருந்தது.அவரது நாடி ஒழுங்கற்று துடித்தது. யாருடைய நாடி பார்த்துச்சொல்லும் திறமையை குருதேவர் பெரிதும் புகழ்வாரோ, அந்த பக்தரான அதுல் குருதேவரின் நாடியைப் பார்த்ததும் அவரது உடல்நிலைமோசமாகி விட்டதை அறிந்தார். சுற்றியிருந்தவர்களிடம் அவர் இனி பிழைப்பது அரிது என்று கூறி மிகவும் எச்சரிக்கையோடு இருக்குமாறு கூறினார். சூரியன் மறைவதற்கு சிறிது நேரம் இருந்தது. குருதேவரால் சீராக மூச்சுவிட முடியவில்லை. மூச்சு இழுக்க ஆரம்பித்தது. பக்தர்கள் தேம்பித்தேம்பி அழத் தொடங்கினர். தங்கள் வாழ்வில் இது வரை எந்த ஒளி, இன்பத்தை நிறைத்து வந்ததோ அது அணைந்து விடப்போகிறது என்பதை உணர்ந்த எல்லோரும் குருதேவரைச் சூழ்ந்து கொண்டனர். சிறிது நேரத்திற்குப் பிறகு குருதேவர் தமக்குப் பசிப்பதாகக் கூறினார். சிறிது நீராகாரம் கொடுக்கப் பட்டது. அவரால் விழுங்க முடியவில்லை. மிகவும் துன்பப்பட்டு ச் சிறிது குடித்தார். வாயைக் கழுவி மெல்ல அவரைப் படுக்க வைத்தனர். இரண்டு கால்களையும் நீட்டித் தலையணையின் மீது வைத்தனர். இரண்டு பேர் விசிறினர். படுத்துக் கொண்டிருந்தவர் சிறிது நேரத்திற்குப் பின் திடீரென்று சமாதியில் மூழ்கினார். உடம்பு அசைவற்று சிலைபோல் ஆகியது. மூச்சு நின்றுவிட்டது. இத்தனை நாட்களாக இரவும் பகலும் உடனிருந்து சேவை செய்து வந்த சசிக்கு இந்த சமாதி நிலை வழக்கமாக அவருக்கு ஏற்படுகின்ற சமாதி போல் தோன்றவில்லை.ஏதோ பெரிய மாறுதல் இருப்பதாகத்தோன்றவே அழ ஆரம்பித்தார். நரேந்திரர், எல்லோரிடமும், ஹரி ஓம் தத்ஸத் ” என்று ஓதுமாறு கூறினார். நீண்ட நேரம் அதனை அனைவரும் ஓதினர். கல்கத்தாவிலிருந்து கிரீஷையும் ராமசந்திரரையும் அழைத்து வர ஆட்கள் விரைந்தனர்.
நள்ளிரவுக்குப் பிறகு குருதேவருக்கு நினைவு திரும்பியது. மிகவும் பசிப்பதாகக் கூறினார். மற்றவர்களின் உதவியோடு எழுந்து உட்கார்ந்தார். ஒரு கோப்பை நிறைய கஞ்சி கொடுக்கப் பட்டது. எல்லோரும் ஆச்சரியப் படும்படிக் கஞ்சி முழுவதையும் எளிதாகக் குடித்து முடித்தார். அவர் இவ்வளவு ஆகாரம் சாப்பிட்டு எத்தனையோ நாட்களாகி விட்டன. சாப்பிட்டு முடித்ததும் உடம்பு தெம்பாக இருப்பதாகச் சொன்னார். குருதேவர் தூங்குவது நல்லது என்று நரேந்திரர் கூறினார். வலியின் காரணமாக அருகில் இருப்பவரும் கேட்க முடியாத படி மிக மெதுவாகப்பேசுபவர், உரத்த குரலில் , அம்மா, காளி! என்று மூன்று முறை உரக்க அழைத்தார். பிறகு மெல்ல படுத்துக் கொண்டார். அதைக் கண்டதும் நரேந்திரர் ஓய்வெடுப்பதற்காக க் கீழே சென்றார்.
இரவு ஒரு மணி இரண்டு நிமிடம். கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த குருதேவரின் உடம்பில் திடீரென்றுபரவச உணர்ச்சி பாய்ந்தது. மயிர்கள் சிலிர்த்து நின்றன. பார்வை மூக்கு நுனியில் நிலைக்குத்தி நின்றது. உதடுகளில் புன்னகை அரும்பியது. குருதேவர் சமாதியில் மூழ்கினார். இது அவர் இத்தனை காலமாக மூழ்கி எழுந்திருந்த சாதாரணசமாதி அல்ல, மகா சமாதி. அன்னை காளியின் மடியில் அவரது அருமைச் செல்வன் என்றென்றைக்குமாகத் துயில் கொண்ட ஆழ்ந்த சமாதி! இந்த சமாதிக்குப் பிறகு அவரது உயிர் உடலுக்குள் திரும்பவே இல்லை. அது 1886, ஆகஸ்டு 16ஆம் நாள்.
சிறிது நேரத்தில் கிரீஷும் ராமும் வந்து சேர்ந்தனர். இந்த சோகச்செய்தி கல்கத்தா முழுவதும் பரவியது. காலையில் கேப்டன் விசுவநாதர் வந்தார். அவர் குருதேவரின் உடல் விறைப்பாக இருப்பதைப் பார்த்து, உடம்பில் சிறிது சூடு இருக்கிறது” என்று கூறி முதுகுத் தண்டை நன்றாகத்தேய்த்து விட்டார். இன்னும் எல்லாம் முடிந்து விட வில்லை, குருதேவர் சமாதியில் தான் இருக்கிறார் என்றும் இறுதிச் சடங்கை உடனடியாக ஆரம்பிக்க வேண்டாம் என்றும் கூறினார்.
பின்னர் டாக்டர் மகேந்திரலால் சர்க்கார் வந்தார். குருதேவரின் உடலை மிகவும் ஆழ்ந்து சோதித்துப் பார்த்துவிட்டு உயிர் பிரிந்து விட்டதாகக் கூறினார். அவரது கருத்து முடிவானதாக ஒப்புக் கொள்ளப் பட்டது.
விபரம் தெரிந்ததும் அன்னை சாரதாதேவி குருதேவரின் படுக்கையருகில் விரைந்து வந்து, அம்மா, காளீ, நீ எங்கே போய்விட்டாய்? என்று கதறினார். அனைவரின் இதயமும் கலங்கியது. அவரைக் கீழே அழைத்து வந்தனர். அன்றுமாலை அன்னை தமது சுமங்கலிக்கோலத்தைக் களைவதற்காக தாம் அணிந்திருந்த தங்க வளையல்களை அகற்ற முற்பட்டார். அப்போது அவர் முன் ஸ்ரீகுருதேவர் தோன்றி, நான் எங்கே போய் விட்டேன்? இதோ இங்கேயே இருக்கிறேன். ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குப்போயிருக்கிறேன். அவ்வளவு தான்” என்று கூறி அன்னை விதவைக்கோலம் பூணுவதைத் தடுத்தார். தொடர்ந்த நாட்களில் இரு முறை அன்னை வளையல்களை அகற்ற முயற்சித்தபோதும் குருதேவர் தோன்றி அவ்வாறே தடுத்தார். அதன் பின் அன்னை தமது இறுதிநாள்வரை அதைக் கழற்றாமல் சுமங்கலிக்கோலத்திலேயே வாழ்ந்தார்.
பாகம்-131
-
ஆகஸ்ட் 16, மாலை ஐந்து மணி. குருதேவரின் புனிதவுடல் மாடியிலிருந்து கீழே கொண்டு வரப் பட்டு கட்டிலின் மீது வைக்கப் பட்டது. காவி உடை போர்த்தப் பட்டு, சந்தனத்தாலும் மலராலும் அலங்கரிக்கப் பட்டது.ஆறு மணிக்கு காசிப்பூர் மயானத்திற்கு பக்திப் பாடல்கள் பாடியபடி எடுத்துச்செல்லப் பட்டது. மயானத்தை அடைந்ததும் அங்கு அடுக்கி வைக்கப் பட்டிருந்த சிதைமீது வைக்கப் பட்டது. திரைலோக்கிய நாத சன்யால் உள்ளத்தை உருக்கும் பாடல்கள் சில வற்றைப் பாடினார். சிதைக்கு நெருப்பு மூட்டப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
பக்தர்களின் மனத்தில் ஓர் ஆழ்ந்த அமைதி குடி கொண்டது. அவர்களின் துயருற்ற உள்ளங்கள் மென்மை அடைந்தன. குருதேவர் மறைந்துவிடவில்லை. தங்கள் ஆன்மாவிலேயே ஒன்றி விட்டார்” என்ற திட நம்பிக்கை அவர்களிடம் தோன்றியது. குருதேவரின் புனிதச் சாம்பலை ஒரு கலசத்தில் எடுத்துக்கொண்டு அவரைப் பற்றிய ஆயிரம் இனிய நினைவுகள் பொங்கும் காசிப்பூர் வீட்டிற்கு, ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா! என்று ஓதியபடியே வந்தனர்.
இப்போது அவர்களுக்கு எழுந்த பெரும் பிரச்சனை குருதேவரின் அஸ்தியை எங்கு வைத்து வழிபடுவது என்பது தான். பலவித கருத்துக்களுக்குப் பிறகு கல்கத்தாவிற்கு வெளியே காங்குர் காச்சிஎன்னுமிடத்தில் ராமசந்திரருக்குச் சொந்தமான தோட்டத்தில் வைத்துக்கோயில் எழுப்ப இல்லற பக்தர்கள் முடிவு செய்தனர். குருதேவர் ஒரு முறை இந்தத் தோட்டத்திற்கு வந்திருந்தது அவர்களின் இந்த முடிவிற்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் குருதேவரின் துறவிச் சீடர்கள் இதை விரும்பவில்லை.
இதை விரும்பவில்லை. அவர்கள் பெரும் பகுதியை பலராம் வீட்டிற்கு அனுப்பி அங்கே முறைப்படி வழிபாடு செய்துவரும் படிச்செய்தனர். அவர்களின் நோக்கம் பிற்காலத்தில் கங்கை கரையில் நிலம் வாங்கி அங்கே குருதேவருக்கான கோயிலை எழுப்ப வேண்டும் என்பதாகும்.மீதமுள்ள அஸ்தி ஸ்ரீகிருஷ்ண ஜெயந்திநாளன்று உரிய சடங்குகளோடு காங்குர்காச்சிக்கு எடுத்துச்செல்லப் பட்டது. சசிஇந்த அஸ்திக் கலசத்தை த் தம் தலையில் சுமந்து சென்றார். எல்லா துறவிச் சீடர்களும் பக்தர்களும் உடன் சென்றனர். காங்குர் காச்சியில் அதனை வைத்துகோயில் கட்டி முறைப்படி நாள்தோறும் வழிபாடுகள் நடைபெறராம் ஏற்பாடு செய்தார்.
குருதேவர் இருக்கும் போது சில சீடர்கள் நிலையான அவருடன் காசிப்பூர் வீட்டிலேயே தங்கி விட்டனர்.இப்போது வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலையில் எங்குச் செல்வது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. இல்லற பக்தர்கள் அவர்களுக்காகப் பணம் செலவு செய்யத் தயாராக இல்லை. சிலர், அவர்கள் தங்கள் வீடுகளுக்குச்சென்று படிப்பைத்தொடர்ந்து நல்ல பக்தர்களாக வாழுமாறு அறிவுரை கூறினர். ஆனால் துறவின் உருவமாக வாழ்ந்த குருதேவரிடம் பயிற்சி பெற்ற அந்த இளஞ்சீடர்களின் மனம் மீண்டும் உலக வாழ்க்கையை நாடவில்லை.
அந்த வேளைகளில் குருதேவரின் பக்தரான சுரேந்திரநாத மித்ரர்அவர்களின் துணைக்கு வந்தார். அவர் நரேந்திரரிடம், நரேன், நீங்கள் எல்லாம் எங்கே போவீர்கள்? ஒரு வீட்டை வாடகைக்குஎடுத்து அதில் தங்குங்கள். உலகியல் துன்பங்களில் உழன்று வாடும் நாங்களும் அவ்வப்போது அங்கு வருவோம். எங்கள் துயரங்களைப்போக்குகின்ற ஒரு புகலிடமாக அது இருக்கும். குருதேவரின் செலவிற்காக நான் ஏதோ என்னாலான சிறு தொகையைக்கொடுத்து வந்தேன். அதை இனி உங்களுக்குத் தருகிறேன் என்றார். அவரது உதவியால் வராக நகர் என்னுமிடத்தில் பாழடைந்த வீடு ஒன்று வாடகைக்கு அமர்த்தப் பட்டது. அதில் தங்கி, குருதேவரின் அருட் துணை ஒன்றையே பெருந்துணையாகக்கொண்டு அந்த இளஞ்சீடர்கள் பெருந்தவம் இயற்றினர். அது வே ராமகிருஷ்ண மிஷனின் முதல் மடமாகியது. அதுவே இன்று வானளாவி ஒரு பெருமரமாய் வளர்ந்து பாரெங்கும் தனது பசும் கிளைகளைப் பரப்பி, ஆன்மீக தாக முற்றோர்க்கும், வாழ்வெனும் தீயில் வெந்து உழல்பவர்களுக்கும் அருள் நிழலைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.