சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்
எல்லா ஆச்சாரியர்களுமே தீமையை எதிர்க்காதீர்கள். அஹிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று உபதேசித்து இருக்கிறார்கள் இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து தூள் தூளாகிவிடும். அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் வாழ்க்கையையும் பறித்துக்கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள்.
இத்தகைய அஹிம்சை சமுதாயத்தில் ஒரேயொரு நாள் கடைப்பிடிக்கப்பட்டாலும்கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும். இது மிகவுயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது என்றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும். அது மட்டுமல்ல, தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அது அவர்களைப் பலவீனப்படுத்துகிறது.
எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கி விட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதற்கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான் ஏனெனில் நாம் முன்னேற வேண்டும் பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும். தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒருபோதும் நம்பிக்கை வைக்க முடியாது.
தீமையை எதிர்ப்பது என்பது எல்லா வேளைகளிலும தவறாகிவிட முடியாது, அது தன்னளவில் தவறானதல்ல. அது மட்டுமல்ல, சில சூழ்நிலைகளில் தீமையை எதிர்க்க வேண்டியது ஒருவனது கடமையாகவும் அமையக்கூடும்.
எந்த விஷயத்திலும் இரண்டு கோடிகளும், அதாவது இரண்டு எல்லைகளும் ஒன்றுபோலவே தோன்றும் என்பது நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு பெரிய பாடமாகும். இருக்கின்ற எல்லையும் இல்லாத எல்லையும் எப்போதும் ஒன்றுபோலவே உள்ளது. அதிர்வுகள் மிகக் குறைவாக இருந்தாலும் நம்மால் ஒளியைக் காண முடியாது. மிக விரைவாக, அதிகமாக இருந்தாலும் நம்மால் அதைக் காண முடியாது. அதுபோல்தான் ஒலியும் மிகமித் தாழ்வான சுவரத்தில் இருந்தால் நம்மால் ஒலியைக் கேட்க முடியாது, மிக அதிகமாக இருந்தாலும் கேட்க முடியாது.
எதிர்ப்பதற்கும், எதிர்க்காதிருப்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசம் இதுதான், ஒருவன் தனது பலவீனத்தால், சோம்பலால் இயலாமையால் எதிர்க்காது இருக்கிறான்; எதிர்க்கக் கூடாது என்பதற்காக அல்ல. இன்னொருவன், தான் நினைத்தால் யாரும் தடுக்க முடியாத அளவிற்குத் தன்னால் எதிர்க்க முடியும் என்பது தெரிந்தவன். இருந்தாலும் அவன் பகைவர்களை அடிக்கவில்லை; மாறாக, வாழ்த்துகிறான்.
பலவீனம் காரணமாக எதிர்க்காமல் இருந்தவன் பாவம் செய்தவனாகிறான். அதனால் அஹிம்சை அல்லது எதிர்க்காமலிருத்தலின் விளைவாக வருகின்ற எந்தப் பலனையும் அவன் அடைய முடியாது. மற்றவனின் விஷயத்திலோ அவன் எதிர்த்திருப்பானானால் அவனும் பாவம் செய்தவனாகிறான்.
புத்தர் தமது சிம்மாசனத்தைத் துறந்தார். தமது பதவியைத் துறந்தார். அது உண்மையான துறவு! ஆனால் துறப்பதற்கு எதுவும் இல்லாத பிச்சைக்காரன் ஒருவனிடம் துறவு என்ற பேச்சே எழ முடியாது.
அஹிம்சை, அன்பு முதலியவற்றைப் பற்றிப் பேசும்போது உண்மையில் நாம் எதைக் குறிப்பிடுகிறோம். என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்ப்பதற்கான வலிமை நம்மிடம் இருக்கிறதா இல்லையா என்பதை மனதில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆற்றல் இருந்தும் அதைப் பயன்படுத்தவதில்லை என்ற உறுதியுடன் எதிர்க்காதிருந்தோமானால் அது மகத்தான அன்பின் விளைவாக எழுந்த செயல்.
நம்மால் எதிர்க்கவே முடியாத நிலையில் இருந்து கொண்டு, மேலான அன்பின் காரணமாகத்தான் அப்படி எதிர்க்காமல் இருக்கிறோம் என்று எண்ணி நம்மை நாமே ஏமாற்றி கொள்வது அஹிம்சைக்கு முற்றிலும் எதிரான ஒன்று.
தனக்கு எதிராகப் பெரிய படையைப் பார்த்த அர்ஜுனன் கோழையாகிவிட்டான். அந்த அன்பு காரணமாக நாட்டிற்கும் அரசனுக்கும் தான் ஆற்ற வேண்டிய கடமையை மறந்தான். அதனால்தான் ஸ்ரீகிருஷ்ணர் அவனைக் கபடன் என்று கூறினார். நீ புத்திசாலி போல் பேசுகிறாய். உன் நடத்தையோ உன் கோழைத்தனத்தைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. எனவே எழுந்து நில். போரிடு.
இதுதான் கர்மயோகத்தின் மையக்கருத்து, அஹிம்சையே மிகவுயர்ந்த லட்சியம். அதேவேளையில் அப்படி எதிர்க்காதிருத்தல் என்பது நடைமுறை வாழ்வில் மாபெரும் சக்தியின் வெளிப்பாடு. அது மட்டுமல்ல, தீமையை எதிர்ப்பது என்பது அஹிம்சை என்னும் ஒரு மாபெரும் சக்தி வெளிப்பாட்டை அடைவதற்கான பாதையில் ஒரு படி என்ற உண்மையை அறிபவனே கர்மயோகி
அஹிம்சை என்ற இந்த உயர்ந்த லட்சியத்தை அடையும் வரையில் தீமையை எதிர்ப்பதே ஒருவனின் கடமை.-
அவன் செயலில் ஈடுபடட்டும், அவன் போராடட்டும், முடிந்த அளவு ஆற்றலுடன் எதிர்க்கட்டடும். அப்போது மட்டுமே, எதிர்க்கின்ற ஆற்றலைப் பெற்ற பிறகு மட்டுமே அஹிம்சை ஒரு நற்பண்பாக அமைய முடியும்.
நான் சொன்னதன் பொருள் என்னவென்றால் செயல்நிலையைக் கடந்து பூரண அமைதியை அடைய வேண்டுமானால், ஒருவன் ஆர்வத்துடன் செயலில் ஈடுபட வேண்டும். செயலற்றிருப்பதை எல்லா வகையிலும் தவிர்க்க வேண்டும். செயல்திறன் என்றாலே எதிர்த்தல் என்பது தான் எப்போதும் பொருள். மனம் மற்றும் உடல் சம்பந்தமான எல்லா தீமைகளையும் எதிர்த்துப் போரிடு. எதிர்ப்பதில் வெற்றி பெற்ற பின்னரே அமைதி வரும்.
யாரையும் வெறுக்காதே, தீமையை எதிர்க்காதே என்றெல்லாம் சொல்வது மிகவும் எளிது. ஆனால் பொதுவாக அதைப் பின்பற்றினால் எப்படியிருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே. சமுதாயத்தின் கண்கள் நம்மீது இருக்கும்போது நாம் பெரிய அஹிம்சாவாதி போல் நடிக்கலாம். ஆனால் அந்த நேரம் முழுவதும் நமது இதயம் அரித்துக் கொண்டிருக்கும். அஹிம்சையின் விளைவாக வருகின்ற அமைதியை ஒருசிறிதுகூட நாம் அனுபவிக்கவில்லை. இதைவிட எதிர்ப்பது நல்லதென நமக்குத் தோன்றுகிறது.
போராடு, படவேண்டிய வேதனைகளையெல்லாம் படு. இன்பங்களையெல்லாம் அனுபவி. அதன் பிறகே துறவு வரும், அதன்பிறகே அமைதி வரும். எனவே பதவி, ஆசை, அதுஇது என்று எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள். அவை எல்லாம் மிகமிகச் சாதாரணமானவை என்பதை நீ புரிந்துகொள்ளும் காலம் அதன்பின்னர் வரும். அதன்பிறகே அமைதி,சாந்தம்,சரணாகதி எல்லாம் வரும்
அமைதி, துறவு போன்ற கருத்துக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உபதேசிக்கப்பட்டு வந்துள்ளன. குழந்தைப் பருவத்திலிருந்தே எல்லோரும் அதைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த நிலையை அடைந்துள்ளவர்கள் மிகச் சிலரே
எந்தச் சமுதாயத்தை எடுத்துக் கொண்டாலும் அதிலுள்ள ஆண் பெண் அனைவரும் ஒரேபோன்ற மனமும், திறமையும், செயல்புரியும் ஆற்றலும் பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வெவ்வேறு லட்சியங்கள் வேண்டும். எந்த லட்சியத்தையும் கேலி செய்ய நமக்கு உரிமை கிடையாது. தன் லட்சியத்தை அடைய ஒவ்வொருவரும் இயன்றவரையில் முயல வேண்டும்.
உனது அளவுகோலால் என்னை முடிவு செய்வதும், என் அளவுகோலால் உன்னைப் பற்றித் தீர்மானிப்பதும் சரியானதல்ல. வேறுபாடுகளுக்கிடையே ஒருமை என்பதுதான் படைப்பின் திட்டம். மனிதர்களுக்கிடையே எவ்வளவு தான் வேறபாடுகள் இருந்தாலும், அனைவருக்கும் பின்னால் ஒருமை உள்ளது.
பலதரப்பட்ட மனிதர்களும் பல்வேறு இனங்களும் படைப்பில் இயல்பாக அமைகின்ற வேறுபாடுகளே, எனவே எல்லோரையும் ஒரே அளவுகோலால் அளக்கவோ எல்லோருக்கும் ஒரே லட்சியத்தை வைக்கவோ கூடாது. அப்படிச் செய்வது இயல்பிற்கு மாறுபட்ட வாழ்க்கைப் போராட்டத்தை உருவாக்குவதாகும். அதன்விளைவாக மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்குகிறான்,. அறநெறியிலும் நற்செயல் புரிவதிலிருந்தும் தடுக்கப்படுகிறான்.
ஒவ்வொருவரும் உன்னதமான தங்கள் சொந்த லட்சியத்தை அடைவதற்காக நடத்தும் போராட்டத்தில் அவர்களை ஊக்கப்படுத்துவதும், அதேவேளையில் முடிந்தவரையில் அந்த லட்சியம் சத்தியத்தை ஒட்டியிருக்கும்படி அமைத்துத் தருவதுமே நமது கடமை. மிகப்பழங்காலத்திலிருந்தே இந்த உண்மையை இந்து மத நீதிநெறிக் கோட்பாடு ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்துமத சாஸ்திரங்களும் நீதிநூல்களும் இல்லறத்தார் துறவியர், பிரம்மசாரிகள் என்று வெவ்வேறு நிலையில் இருப்பவர்களுக்கு வெவ்வேறு நியதிகளைக் கூறுகின்றன. மனிதகுலம் முழுவதற்கும் பொதுவான கடமைகளைத் தவிர ஒவ்வொரு மனிதனுக்கும் சில தனிக் கடமைகளும் இருப்பதாக இந்துமத சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்து, தன் வாழ்க்கையை ஒரு மாணவனாகத் தொடங்குகிறான், பின்னர் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தானாகிறான். வயதான காலத்தில் குடும்பக் கடமைகளிலிருந்து விடுபடுகிறான். இறுதியில் குடும்ப வாழ்வைத் துறந்து துறவியாகிறான். வாழ்வின் இந்த ஒவ்வொரு நிலைக்கும் தனிக்கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.