இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்இந்துமதத்தின் தத்துவங்கள்

தியானம் - சுவாமி பஜனானந்தர்

தியானம் என்பது என்ன?

  

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இப்போதெல்லாம் தியானம் என்பது பற்றி மிகவும் பரவலாகப் பேசுகிறார்கள்

முன்பெல்லாம் பக்குவம் வாய்ந்த சிலர் மடடுமே பழகி வந்த அந்த ஆன்மீகப் பயிற்சி , தற்போது பலர் பின்பற்றுகின்ற ஒன்றாக மாறிவிட்டது. 

எனவே பலதரப்பட்ட , பலதிறன் உள்ள மக்களுக்கு  ஏற்ற வகையில் தியானம் தற்போது நவீனப் படுத்தப்பட்டு  வருகிறது.

இந்த நவீன தியானங்களை தியானம் என்று சொல்வதைவிட மன ஒருமைப்பாட்டுப் பயிற்சிகள் என்று குறிப்பிடுவது தான் பொருத்தமாக இருக்கும்.

தியானத்தின் பல விதமான வகைகளை இரண்டாகப் பிரிக்கலாம். 

உலகியல் தியானம், ஆன்மீக தியானம். 

தேக ஆரோக்கியத்திற்காகவும் மன நலனுக்காகவும் செய்யப்படுகின்ற மன ஒருமைப்பாட்டுப் பயிற்சிகள் அனைத்தும் உலகியல் தியானம். 

சில வகை தியானம் உடலை நலப்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மன அழுத்தத்தைத் தடுக்கிறது என்பதெல்லாம் விஞ்ஞான பூர்வமாகத் தற்போது நிரூபிக்கப் பட்டுள்ளது. 

உலகியல் நெருக்கடிகளில் சிக்கித் திணறும் எண்ணற்ற மனிதர்களுக்கு இவை வரப்பிரசாதமாக அமைகின்றன என்பதில் ஐயமில்லை.

குறிப்பாக மேலை நாடுகளில் இவற்றின் தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. இவற்றைப் பழகுவதிலும் தவறில்லை. 

ஆனால் இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பது மடடும் தான் தியானத்தின் குறிக்கோள் அல்லது தியானத்தால் இதை மட்டும் தான் சாதிக்க முடியும் என்று முடிவு செய்து விடக் கூடாது.. 

-

நாம் இப்போது அடுத்தப்பிரிவான ஆன்மீக தியானம் என்னும் பகுதியையே பார்க்கப்போகிறோம். 

இந்த ஆன்மீக தியானம் இருவகைப்படும் ஒன்று உருவ தியானம் இன்னொன்று உருவமற்ற அருவதியானம்

உருவதியானம் என்பது பக்தி நெறியில் பின்பற்றப்படுகிறது. 

இதில் பக்தன் இஷ்டதெய்வத்தின் உருவத்தை தியானம் செய்கிறான். 

அருவ தியானம் என்பது ஞானநெறியை பின்பற்றுபவர்களுக்கு உரியது

இதில் உருவமற்ற ஒளி, வெளி அல்லது இறைவனின் குணம் இவற்றின் மீது தியானம் செய்கிறார்கள்

இத்தகைய ஆன்மீக தியானத்திற்கு உயர்ந்த மன ஒருமைப்பாடும் மனப்பக்குவமும் வேண்டும். 

இத்தகைய தியானத்தில்  ஆரம்ப நிலையிலேயே மன அமைதியையும், உள்ளத்திற்கு ஓய்வையும் எதிர்பார்க்கக் கூடாது. 

பதஞ்ஜலி யோகசூத்திரம் யமம், நியமம், ஆசனம், பிராணாயாம, பிரத்தியாகாரம்,தாரணை, தியானம், சமாதி என்று வகைப்படுத்தி ஏழாவது படியில் தியானத்தை வைத்துள்ளது

அதாவது பிறவியிலேயே அமைதியான, தூய மனத்தைப் பெற்ற ஒரு சிலரே இத்தகைய தியானத்தைச் செய்ய முடியும். சாதாரணமானவர்களுக்கு இது கடினமான முயற்சி.. 

அடுத்து எது தியானம் என்று பார்ப்போம்

எது தியானம் என்பதில் வேண்டிய அளவு குழப்பம் தற்போது நிலவுகிறது. 

இதற்கு முக்கியக் காரணம் வெறும் மன ஒருமைப்பாட்டை தியானம் என்று நினைப்பது தான். 

எந்த மனிதனாலும் சரி அவனால் தன் மனத்தை ஏதாவது ஒரு பொருளில் நிலை நிறுத்த முடியும்.

இந்த நம்பிக்கையில் தான் பலர் தியானம் செய்யவும் முயல்கின்றனர். ஆனால் தோல்வி மேல் தோல்வி வரும் போது ” என்னால் ஏன் தியானம் செய்ய முடியவில்லை? என்று கேட்கின்றனர். 

உண்மை என்னவென்றால் வெறும் மன ஒருமைப்பாடு அதாவது மனத்தை ஏதாவது ஒரு பொருளில் நிலை நிறுத்துவது தியானம் ஆகாது. 

அடுத்து மன ஒருமைப்பாட்டிற்கும் தியானத்திற்கும் இடையிலுள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன என்று பார்ப்போம். 

மனத்தை ஏதாவது ஒரு புறப்பொருளில் குவிப்பது மன ஒருமைப்பாடு. 

மனத்தின் உண்மையான பிறப்பிடம் அல்லது மையத்தில் குவிப்பது தியானம்.

ஏதாவது ஒரு பொருளில் அல்லது மனத்தைக் குவிப்பது மன ஒருமைப்பாடு. 

இது நமக்கு தெரியாத ஒன்றல்ல. சிறு வயதிலிருந்தே நாம் ஏதாவது ஒரு விதத்தில் ஏதாவது ஒன்றில் மனத்தை ஒருமைப்படுத்தியே வருகிறோம். 

கதைப் புத்தகங்களைப் படிக்கும் போதும், திரைப்படத்தைப் பார்க்கும் போதும் பாடல்களை கேட்கும் போதும் நமது மனம் ஒருமைப்படுகிறது. கருத்தூன்றி ஒரு வேலையைச் செய்யும் போது சில வேளைகளில் நாம் சூழ்நிலையைக்கூட மறந்துவிடுகிறோம். எனவே புறப்பொருட்களில் மனத்தை நிலைநிறுத்துவது சாதாரணமான விஷயம் தான். 

புறப்பொருட்களில் மனத்தை நிலை நிறுத்துவது கடினமான காரியமல்ல. உண்மையான தியானம் இதற்கு நேர்மாறான முறை.அதாவது வெளிமுகமாக ஓடும் மனத்தை உள்முகமாக்கி அதன் பிறப்பிடத்தை நாடச் செய்வதே தியானம்.

இயல்பாகவே புறத்தில் பாய்ந்தோடும் மனத்தைத் திருப்பி உள்முகமாக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏன்? 

ஏனெனில் மனத்தைத் திருப்பி உள்ளே எந்த இடத்தில் ஒருமைப்படுத்த வேண்டுமோ, அந்த இடம் அல்லது அந்த மையம் இன்னும் நம்முள் உருவாகவில்லை. அந்த மையம் தான் இதயம் அல்லது இதயத்தாமரை. 

இது பலருக்குப் புதிராக இருக்கலாம். லப், டப், என்று துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தை நாம் ஒவ்வொருவரும் அறிவோம்.ஆனால் நாம் இங்கே குறிப்பிடும் இதயம் என்பது வேறு

நாம் தியானிக்க வேண்டியது ஆன்மீக இதயத்தில் அல்லது இதயத்தாமரையில். அங்கு மட்டுமே உண்மையாக தியானிக்க முடியும். பலரில் இந்த ஆன்மீக இதயம் மலரவில்லை 

அதற்கு ஜபம், பிராத்தனை, பிரம்மச்சரியம் போன்ற பயிற்சிகள் தேவை. 

இந்த ஆன்மீக மையத்தை அதாவது இதயத் தாமரையை கண்டுபிடிக்கும் வரையில் தியான வேளையில்  அவனது மனம் அலைந்து கொண்டு தான் இருக்கும். 

அவனைப்பொறுத்தவரையில் தியானம் என்பது வெறும் மனப்போராட்டமாகவே இருக்கும். 

இதில் இன்னும் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். மனத்தை உள்முகமாகத் திருப்பி அதன் பிறப்பிடத்தில் நிலைநிறுத்துவது தியானம் என்று கண்டோம். இதன் பொருள் , தறிகெட்டு அங்குமிங்குமாக ஓடும் மனத்தை அதன் பிறப்பிடத்திற்கு உந்தித் தள்ளுவது அல்ல தியானம், மாறாக உள்ளிருந்து ஏதோ ஒன்றால் இழுக்கப்பட்டு இயல்பாகவே மனம் உள்முகமாவது தான் தியானம். அதாவது காந்தம் இரும்புத்துண்டை கவர்வதுபோல மனம் உள்முகமாக கவரப்பட வேண்டும்

இது நடக்க வேண்டுமானால் இதயத்தாமரை மலர்ந்திருக்க வேண்டும். அப்போது தான் தியானம் இயல்பாக நடைபெற முடியும். 

தாரணையில் வெற்றி பெறாமல் தியானத்தில் வெற்றிபெற முடியாது

ஓய்வெடுப்பதற்காகத் தனது சொந்தக் கூட்டை அடைகின்ற பறவையைப்போல் மனமும் தனது பிறப்பிடத்தை அடைகின்ற இந்த ஓய்வு நிலை அல்லது மனத்தின் ஒருமுக நிலையே தாரணை. 

தாரணை இன்றி தியானம் செய்ய முடியாது. 

பிராத்தனை, ஜபம், பிரம்மச்சரியம் போன்ற சாதனைகளால் இதயத்தாமரையை மலரச் செய்த பின் மனம் அங்கே இயல்பாகக் குவிகின்ற நிலை தியானம்.

மன ஒருமைப்பாட்டிற்கும் தியானத்திற்கும் உள்ள ஒரு வித்தியாசம் என்வென்றால்

மன ஒருமைப்பாட்டில் எல்லாப்பொறிகளும் இயங்குகின்றன. தியான வேளையில் பிற பொறிகள் எல்லாம் அடக்கப்பட்டு மனம் மடடுமே இயங்குகிறது.

மன ஒருமைப்பாட்டில் பார்வை போன்ற பொறிகள் அடக்கப்படாமல் இயங்கிக்கொண்டிருக்கின்றன. புற உலகத்துடன் அவற்றின் தொடர்பு துண்டிக்கப்படவில்லை. 

தியானத்தின் போது மனம் மட்டுமே செயல்படுகிறது. பார்த்தல்,கேட்டல்,நுகர்தல் போன்றவை முற்றிலுமாக அடங்கி இருக்கும்

புற உலகத்துடன் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்கும் 

தியானம் செய்வதற்கு முன்னால் தாரணையிலும் பிரத்யாஹாரத்திலும் (மனத்தைப்பிற உலகினின்று பிரித்தல்) ஒருவன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


  

மனத்தின் அலை போன்ற இயக்கத்தையே நாம் எண்ணம் என்கிறோம். அலை எழுந்து விழுவது போல் மனமும், எழுவதும் விழுவதுமாக இயங்குகிறது. இது எண்ண அலை, விருத்தி அல்லது பிரத்யயம் எனப்படுகிறது. 

புறச் சூழ்நிலைகளால் தூண்டப்பட்டோ சமஸ்காரங்கள்(பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள எண்ணங்களின் தொகுப்பு) கிளர்ந்தெழுவதாலோ எண்ண அலைகள் எழுகின்றன. 

நாம் ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படிக்கும் போதோ அல்லதுஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும் போதோ ( அதாவது சாதாரண மன ஒருமைப்பாட்டில்) மனம் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இயங்குகிறது. ஏனெனில் இதில் பல பெயர்கள் , பல உருவங்கள்  . பல நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்டுள்ளன. எனவே பல எண்ண அலைகள் எழுகின்றன. 

ஆனால் தியானத்திலோ மனம் ஒரு புள்ளியில் குவிக்கப்பட்டது போலாகி விடுகிறது. ஒரே ஓர் எண்ண அலை மட்டுமே இங்கே இயங்குகிறது. இந்த நிலையில் மனம் ஓர் உருவம் அல்லது ஒரு பெயரில் நிலைநிறுத்தப்படுகிறது. மற்றப் பெயர்களும் வடிவங்களும் உணர்வுபூர்வமாக அடக்கப்பட்டு விடுகின்றன. 

சமஸ்காரங்கள் தொடர்ந்து கிளர்ந்து எண்ண அலைகளாக எழுந்து கொண்டேயிருந்தால் தியானம் செய்வது கடினம். அவ்வாறு சமஸ்காரம் கிளர்ந்தெழுந்து வெளிக்கிளம்பக் காரணம் நமது ஆசைகளே. 

எனவே ஆசைகளிலிருந்து சிறிதாவது விடுபட்டு நல்வழியில் வாழ்கின்ற ஒருவனால் மட்டுமே தியானத்தை வெற்றிகரமாகச் செய்ய முடியும்.

தீவிரமான சில ஆசைகளையும் உந்துவேகங்களையும் கட்டுப்படுத்தாதவரையில் தியானம் என்பது அகப்போராட்டமாகவே இருக்கும். 

புறப் பொருட்களில் பற்று காரணமாக ஏற்படுவது சாதாரண மன ஒருமைப்பாடு. தியானமோ பற்றின்மையால் உண்டாவது. 

தனக்கு விருப்பமான செயலில் ஆழ்ந்து ஈடுபட எல்லோராலும் முடியும். ஏனெனில் அங்கு ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் ஆசைகளை விட்டு பற்றின்மையின்மூலம் ஒன்றில் ஆழ்ந்து ஈடுபடுவது என்பது கடினம். ஆசைகளை வென்றவனால்தான் தியானம் செய்ய முடியும்

வெறுமனே புலன்களைப் புறவுலகிலிருந்து பிரிக்கின்ற பயிற்சி அல்ல தியானம். அத்தகைய பயிற்சி உண்மையிலிருந்து விலகி ஓட முயல்வதாகும். மாறாக தியானம் என்பது உண்மையைத்தேடுகின்ற தீவிர முயற்சி, இதயத்தின கரை காணா ஆழங்களில் இறைவனைத் தேடுகின்ற முயற்சி.

இருளில் உழல்கின்ற மனிதன் கைகளை அங்குமிங்குமாக நீட்டி, வெளியேறுவதற்கான வழியை எப்படித் தேடுகிறானோ அப்படியே சாதகனும்(தியானம் பழகுபவன்) தனது புத்தி அல்லது இதயத்தாமரையை மலரச் செய்து இறைவனைத்தன்னுள்ளே தேடுகிறான்.

தீவிர ஆன்ம தாகமும் அசையாத நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே இப்படி அறியா உண்மையை மனத்தின் தெரியா ஆழங்களில் தேட முடியும். எனவே புறப்பொருட்களிலுள்ள பற்றின் காரணமாக வருவது மன ஒருமைப்பாடு.பற்றின்மையாலும் தீவிர ஆன்ம தாகத்தாலும் நிகழ்வது தியானம்.

மனித மனத்திற்கு இரு ஆற்றல்கள் உள்ளன. அனுபவித்தல், படைத்தல் . 

நமது சாதாரண சிந்தனைகள் , இரண்டாவதான படைக்கும் ஆற்றலைச் சேர்ந்தவை.. 

புதிய பொருட்கள், புதிய உறவுகள், புதிய வழிகள், புதிய எண்ணங்கள் என்று புதிதாக ஏதாவதொன்றை நாம் எப்போதும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம். 

உண்மையான ஒன்றை நம்மால் உருவாக்க முடியாத போது உண்மையற்ற உலகை உருவாக்கி அந்தக் கனவுலகத்தில் வாழ முயற்சிக்கிறோம்.விஞ்ஞானம், தொழில் நுட்பம் , கலை, போன்ற துறைகளில் மனிதன் நிகழ்த்துகின்ற மாபெரும் சாதனைகளுக்கெல்லாம் காரணம் ஒருமைப்பட்ட இத்தகைய ஆக்கத்திறன்தான். ஏன் இப்படிப் புதிதுபுதிதாகப் படைப்பதில் மனிதன் ஈடுபடவேண்டும்.? ஏனெனில் அவனுக்குப் புதிய அனுபவங்கள் வேண்டும். ஆனால் இத்தகைய படைப்பு பலவிதமான முரண்பாடுகளையும் குழப்பங்களையும் உருவாக்குகிறது. என்பதை அவன் அறிவதில்லை. 

எனவே மனம் புதிதாக எதையும் படைக்க முயற்சிக்காமல் தடுத்து அனுபவ நாட்டம் கொள்ளாமல் செய்து, அதனை இறைவனைத் தேடுகின்ற முயற்சியில் ஈடுபடுத்துவதே தியானம். 

தியானம் என்பது ஒருமை, அமைதி இவற்றை நோக்கி ச்செல்லும் ஒரு பயணம்.

காலத்தைக் கடந்த நிலையில் வாழ்வதற்குச் செய்யப்படுகின்ற முயற்சி தியானம்

நமது சிந்தனைகள் அதிகமாகும் அளவிற்கு. காலச்சக்கரத்தில் நாம் சுழலும் அளவிற்கு நாம் இடையீடின்றிப் பாய்ந்து செல்லும் வாழ்க்கை நதியில் மேலும் மேலும் சிக்கிக் கொள்கிறோம். 


  

இரு வகையான காலங்கள் உள்ளன.ஒன்றுப் புறக்காலம். அதாவது சூரியன், பூமி, இவற்றின் சுழற்சியைக் கொண்டு நாம் கணக்கிடுகின்ற காலம். 

இரண்டாவது அகக்காலம், அதாவது நமக்குள்ளே ஓடுகின்ற எண்ண அலைகளால் நிர்ணயிக்கப்படுகின்ற காலம். 

சிறுக் குழந்தைகளில் இந்த இருக் காலங்களும் தனித்தனியாகச் செயல்படுகின்றன. வளரும் போது இந்த இரண்டும் இணைந்து விடுகின்றன. ஆனால் இந்த இணைப்பு ஆழ்ந்த தூக்கத்திலும் கனவிலும் துண்டிக்கப்பட்டு விடுகிறது. அங்கு நாம் முற்றிலும் மாறுபட்ட கால நிலையிலுள்ள ஓர் உலகில் வாழ்கிறோம். 

விழிப்பு நிலையில் இந்தப் புற , அகக் காலங்கள் குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் இணைந்து செயல்படுகின்றது. இந்த விகிதம் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது.உதாரணமாக ஒருவனுக்கு நேரம் பறக்கிறது, இன்னொருவனுக்கோ சிறிதும் நகராமல் உயிரை வாங்குகிறது.

காலத்தின் ஆதிக்கத்தில் தொடர்ந்து வாழ்வதும் அது சுழல்வதற்கேற்பச் சுழல்வதும் நமது நரம்புகளை மிகவும் பாதிக்கின்றன.எப்படியாவது இந்தக் காலத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட மனிதன் விரும்புகிறான். எனவே தான் ஓய்வெடுத்துக் கொண்டு நாவல்கள் படிப்பதிலும் திரைப்படங்கள் பார்ப்பதிலும் ஈடுபட்டு , தன்னை மறக்க முயற்சிக்கிறான். 

ஆனால் இந்த உத்தி எப்போதும் அவனுக்குக் கைகொடுப்பதில்லை. அவன் எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் காலம் அவனை நிழல் போல் தொடர்கிறது. அகக் காலத்தின் பிடியை மெல்லமெல்லத் தளர்த்தி , மனத்தைப் படிப்படியாக உயர்த்தி, காலமற்ற நிலைக்கு எடுத்துச்சென்று காலத்தின் கொடுமையில் இருந்து மனிதனை விடுவிக்கின்ற முயற்சி, தியானம். 

எனவே காலத்தின் ஆதிக்கத்தில் செய்யப்படுவது மன ஒருமைப்பாடு, 

காலமற்ற நிலையில் செய்யப்படுவது தியானம். 

இனி நாம் காணப்போவது தான் சாதாரண மன ஒருமைப்பாட்டிற்கும் தியானத்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு.

மன ஒருமைப்பாடு என்பது தன்னை மறந்த, உணர்வற்ற நிலை, தியானமோ தன்னுணர்வுடன் கூடிய தன்னால் இயக்கப் படுகின்ற ஒரு நிலை.

நாம் பேசுகிறோம், வேலை செய்கிறோம், நடக்கிறோம். அதே வேளையில் இவை அனைத்தையும் நாம் செய்கிறோம் என்பதை  நாம் உணர்வதில்லை. 

நமதுஆன்மாவுடன் நமக்குத் தொடர்பே இல்லாததால் நமது வாழ்வில் தன்னுணர்வு என்பது இல்லாமல் போய்விட்டது. உணர்வறு நிலையில் நாம் உழல நேரிடுகிறது. இந்த உண்மையை ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கபிலர் என்ற மகரிஷி கண்டு கூறியுள்ளார். 

அவரது சாங்கிய நெறிப்படி ஆன்மா ஒன்றைத் தவிர மனம் உட்பட அனைத்தும் தன்னுணர்வு அற்றவை. ஆன்மா ஒன்றே உணர்வுப் பொருள். மனம் எப்போதும் அலைகளாக எழுந்து சலனப்பட்டுக் கொண்டேயிருப்பதால் ஆன்மாவை நாம் உணர  முடிவதில்லை. இதனால் நாம் நமது சொந்த உணர்வு மையத்தை விட்டு விலக நேர்கிறது. ஆன்மாவுடன் தொடர்பை இழக்க நேரிடுகிறது. 

மனத்தின் இந்த அலைகள் அனைத்தையும் நிறுத்தி ஓர் அலையை மட்டும் நிலபெறச் செய்வதன் மூலம் தியானம் நமக்கு ஆன்மத் தொடர்பை உண்டாக்குகிறது. 

மன ஒருமைப்பாடு உணர்வறு நிலையில் நடைபெறுகிறது. தியானம் தன்னுணர்வு நிலையில் மட்டுமே நடைபெறமுடியும். 

ஒரு புத்தகம் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் , சூழ்நிலையை மறந்த நிலையில் மனம் ஒருமித்துப் படிப்பதாக வைத்துக் கொள்வோம். இதன் பொருள் என்ன? அந்தப் புத்தகம் விறுவிறுப்பாக மிகவும் உயிரோட்டமாக உள்ளது என்பது தான். நாம் ஒருமித்த மனத்துடன் படிக்கக் காரணமாயிருந்தது அந்தப் புத்தகம். அதாவதுபுத்தகம் என்னும் புறப்பொருள் மனத்தை ஒருமைப்படுத்தியது. 

ஆனால் தியானத்தில் புறப்பொருளுக்கு இடமே இல்லை. இங்கு ஆன்மாவே மனத்தைக் கட்டுப்படுத்துகிறது.மனத்தை அடக்க முடியும் என்பது  உண்மை தான். ஆனால் மனத்தை மனத்தால் அடக்க முடியாது. மனத்தைவிட உயர்ந்த ஒன்றாலேயே முடியும். அந்த உயர்ந்த ஒன்று தான் புத்தி அல்லது தீ” எனப்படுகிறது. 

இந்தப் புத்தியில் எழுகின்ற ஓர் அலை தான் மன அலைகளைக் கட்டுப்படுத்தி நமது உணர்வை தியானத்தில் ஈடுபடுத்துகிறது. உயர் மனமாகிய இந்த புத்தி எல்லோரிலும் உருவாகவோ , செயல்பட ஆரம்பிக்கவோ இல்லை. இது உருவாகி செயல்படும் வரை தியானம் மிகவும் கடினமான ஒரு பயிற்சியாகவே  இருக்கும். 

எனவே சாதாரண மன ஒருமைப்பாட்டில் புறப்பொருள் மனத்தைக் கட்டுப்படுத்துகிறது. தியானத்தில் ஆன்மா அல்லது புத்தி மனத்தைக் கட்டுப்படுத்துகிறது.

மன ஒருமைப்பாட்டில் அன்பு என்ற பிணைப்பு இல்லை. தியானத்தில் அன்புப்பிணைப்பே உயிர்நாடி.

இப்போது நாம் அடுத்த வேறுபாட்டிற்கு வருகிறோம்..

ஒரு மலரையோ படத்தையோ வெறித்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருப்பது போல் கண்களை மூடியபடி ஏதோ ஒன்றை மனத்தினுள் பார்த்துக் கொண்டிருப்பது தான் தியானம் என்று பலர் எண்ணுகின்றனர். இவ்வாறு ஏதோ ஒரு பொருளை ப் பார்த்துக் கொண்டிருப்பதல்ல தியானம். அந்தப் பொருளுடன் ஓர் அன்புப் பிணைப்பை ஏற்படுத்தும் முயற்சியே தியானம். 

அன்பு என்கின்ற இந்த முக்கியமான கருத்தை மறந்து விடுவது தான் தியான நெறியில் பலர் முன்னேறாததற்கு காரணம்.

இருவருக்கிடையில் அன்பு நிலவ என்ன தேவை? சில ஒத்த குணங்கள். அன்பு செய்பவருக்கும் செய்யப்படுபவருக்கும் இடையே சில அடிப்படை குணங்கள் ஒத்திருக்க வேண்டும். 

மனிதர்கள் அனைவரும் உண்மையில் தெய்வீகமானவர்கள் என்பதே வேதாந்தத்தின் முடிவு. அதாவது ஜீவான்மா பரமான்மாவின் ஓர் அம்சம். இந்த ஜீவான்ம பரமான்மத் தொடர்பை அறியும் முயற்சியே ஆன்மீக வாழ்க்கை. இந்த பந்தத்தை உணர வேண்டுமானால் முதலில் சாதகன் தான் யார் என்பதை உணர வேண்டும். 

தான் யார் தனது உண்மை நிலை என்ன, போன்றவை பற்றிய உண்மைகளை அவன் அறிய வேண்டும். தனது ஆன்மாவை, தெய்வீக மையத்தை அறிந்து, அங்கிருந்து, அங்கிருந்தபடி மட்டுமே அவன் பரமான்மா என்னும் பேரன்புடன் தொடர்பு கொள்ள முடியும். 

ஆன்ம ஒளி எப்போது பிரகாசிக்கும்? மன அலைகள் எல்லாம் அடங்கிய பிறகே ஆன்ம ஒளி வெளிப்படும். 

எனவே அமைதியான மன நிலை ஆன்மீக வாழ்வில் அவசியமான ஒன்றாகிறது. 

தியானம் என்பது வெறும் இந்த மன அமைதி அல்ல. இந்த மனஅமைதியை ஒரு கருவியாக்கி அதன்மூலம் பரமான்மாவாகிய இறைவனுடன் இணைவதே தியானம். அதனால் தான் நமது இந்து மத சாஸ்திரங்களில் எல்லாம் ஏதாவது ஒரு வகை தியானம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


  

மன ஒருமைப்பாடு நம்மை நமது தெய்வீக மையத்திலிருந்து விலக்குகிறது. 

தியானம் நம்மை அந்த தெய்வீக மையத்தில் சேர்ப்பதுடன் பரம்பொருளிடமும் இட்டுச் செல்கிறது.

பலன்களைப் பொறுத்த வரையில் கூட மன ஒருமைப்பாடும் தியானமும் பேரளவில் வேறுபடுகிறது. திறம்பட தியானம் செய்ய வல்லவர்கள் எந்த ஒரு காரியத்தையும் ஒருமித்த மனத்துடன் எளிதில் செய்ய முடியும். 

ஆனால் மனஒருமைப்பாட்டை வளர்த்தவர்கள் எல்லோராலும் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட இயலும் என்று சொல்ல முடியாது. 

சாதாரண வேலையானாலும் ஒருமித்த மனத்துடன் செய்யும் போது மனம் பயிற்சி பெறுகிறது. எனவே வேலைகளைத் திறம்படச் செய்ய முடிகிறது என்பதால் அதனை தியானத்தில் எளிதாக ஈடுபடுத்தி விடமுடியும் என்று எண்ணுவது தவறு. 

விவேகம், பறிறின்மை, சிறிதாவது பக்தி, அகமுகப்பட்ட மனம்- இவையன்றிச் செய்யப்படும் செயல்கள் நம்மை நமது உண்மை நிலையிலிருந்து , தெய்வீக மையத்திலிருந்து அப்பால் மேலும் அப்பால் இழுத்துச்செல்கின்றன. 

மன ஒருமைப்பாடு நம்மை மேலும் மேலும் பிரகிருதியின் உணர்வறு நீரோட்டத்தில் மூழ்க வைக்கும்.மாறாக தியானம் நேராக நம்மை உண்மைப் பரம்பொருளிடம் அழைத்துச் செல்கிறது. 

தியானம் என்பது பொதுவாக நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்பதைத் தெரிந்து கொண்டோம். 

பக்தி நெறியில், பிராத்தனை, பூஜை என்ற இரு படிகளுக்குப் பிறகே தியானம் வருகிறது. ஏற்கனவே பூஜையும் பிராத்தனையும் செய்தவர்களுக்கு தியானம் எளிதாக , இயல்பாகக் கைகூடுகிறது. 

பிராத்தனையும் பூஜையும் எப்படி ஒரு சாதகனின் தியானத்திற்குத் துணை புரிகின்றன? 

ஆழ்ந்து செய்யப்படும் பிரார்த்தனை இதயத்தாமரையை விரைவாக மலரச் செய்கிறது. 

ஆன்மீக வாழ்க்கையில் மன ஒருமைப்பாடு ஒருபோதும் முக்கியமல்ல, ஒருமைப்படுத்தப்பட்ட ஆற்றல்களுக்கு ஓர் உயர்ந்த நோக்கத்தைக் கொடுப்பது தான் முக்கியம். இது மிகவும் கடினமானதாகும். 

ஆரம்ப நிலையிலுள்ள சாதகன் இதனை வெறும் தியானத்தால் செய்து முடிக்க முடியாது. எனவே பிராத்தனை , பூஜை போன்றவற்றை அவன் நாடுவது நல்லது. ஒருமைப்படுத்தப்பட்ட அவனது மன ஆற்றல்களை உயர்ந்த நிலைகளுக்கு எடுத்துச் செல்ல இவை உதவுகின்றன. 

பலரது தியானம் மனத்தின் ஒரு சிறுபகுதியை மட்டும் அதுவும் மேலோட்டமாகவே பாதிக்கிறது. மற்றப்பகுதிகள், முக்கியமான ஆழ்மனப்பகுதிகள் எவ்வித மாற்றமும் இன்றி பழைய பாதைகளிலேயே செல்கின்றன.இத்தகைய தியானத்தில் வலிமை இருக்காது.பலன் இருக்காது. 

பிராத்தனையும், பூஜையும் ஆழ்மனப் பகுதிகளை விழித்தெழச் செய்து மனத்தின் எல்லாப் பகுதிகளையும் தூண்டி , ஒவ்வொரு பகுதியையும் தியானத்தின் பலனைப் பெறச் செய்கின்றன. இத்தகைய ஆற்றல் நிறைந்த தியானமே மாயையின் திரையைக்கிழித்துச் செல்ல வலிமை உடையதாகிறது. 

நமக்கும் கடவுளுக்கும் இடையில்ஓர் உண்மையான, உயிரோட்டமான பிணைப்பு இருந்தால் மட்டுமே உண்மையான தியானம் செய்ய முடியும். சிலர் பிறப்பிலேயே அத்தகைய ஒரு பிணைப்பைப் பெற்றிருக்கின்றனர். 

மற்றவர்கள் தொடர்ந்த பிராத்தனை , பூஜை போன்ற முறைகளால் பக்தியை வளர்த்துக் கொள்வது ஒன்றே வழி. 

பிராத்தனையும் பூஜையும் மற்றொரு விதத்திலும் துணை புரிகிறது. தியானம் செய்யாத போதும் செய்ய முடியாத போதும் அவை சாதகனின் மனம் கீழ் நிலைக்குச் செல்லாதவாறு காக்கின்றன. 

சில நாட்களில் எவ்வளவு தான முயன்றாலும் தியானம் செய்ய முடியாமல் போய்விடும். இந்த வேளைகளில் பலர் தியானம் தான் செய்ய முடியவில்லை, இப்படி நேரத்தை வீணாக்குவதற்கு ப் பதிலாக ஏதாவது பயனுள்ள வேலையாவது செய்யலாம் என்று தவறாக எண்ணி வேலைகளில் ஈடுபட்டு விடுகின்றனர். 

ஆனால் உண்மையான பக்தன் ஒருபோதும் அவ்வாறு நினைப்பதில்லை. ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் அவன் ஆழ்ந்த பிராத்தனையிலும் பூஜையிலும் தீவிரமாக இறங்கிவிடுவான். உண்மை பக்தன் ஒரு போதும் மனத்தளர்வு போன்ற குழப்பங்களால் துயருறுவதில்லை.அவனை பொறுத்த வரை தியானம் என்பது பிராத்தனை அல்லது பூஜையின் நுண்ணிய ஒரு தொடர்ச்சியே .

தியானத்திற்குத் துணை புரிகின்ற வேறு பல சாதனை முறைகளும் உள்ளன. இங்கு நாம் பக்தியை முக்கியமாக எடுத்துக் கொள்வதால் பிராத்தனைக்கும் பூஜைக்கும் முக்கிய இடம் தரப்படுகிறது.

தியானம் என்பது எளிதான ஒன்றல்ல என்பது நமக்கு ப் புலப்படுகிறது. அப்படியானால் பிராத்தனை பூஜை இவற்றில் தேர்ச்சி அடைந்த பின்னர் தாம் ஒருவன் தியானம் பழகத் தொடங்க வேண்டுமா? ஆம். அது தான் முறை. 

ஆரம்ப நிலையில் ஒரு சாதகன் பொறுமையுடன் சில மாதங்களோ வருடங்களோ பிராத்தனையும் பூஜையும் செய்து வந்தால் பின்னர் அவனுக்கு தியானம் எளிதாகவும் இயல்பாகவும் கைகூடும். அவன் ஆன்மீக வாழ்க்கையில் விரைவாக முன்னேறுவான். 

ஆனால் விரைவு மிகுந்த இந்த விஞ்ஞான யுகத்தில் இத்தகைய பொறுமையும் நம்பிக்கையும் இருப்பது அபூர்வம். எனவே ஆரம்ப நிலை சாதகர்களும் தியானத்தை முழுவதுமாக விட்டுவிடாமல் பிராத்தனை,பூஜை இவற்றுடன் பழகி வரலாம். 

சொந்த மனத்தைப்பற்றி அறிந்துகொள்ள ஆரம்ப நிலை தியானம் உதவுகிறது. ஆரம்ப நிலைகளில் தியானத்திற்காக அமர்கின்ற சாதகன் மனத்துள் மாபெரும் போர் ஒன்றை நிகழ்த்த வேண்டியிருக்கிறது.இந்தப் போரில் ஓரிரு மணி நேரங்கள் கழிந்து விட்டாலும் இந்த நேரம் உண்மையில் வீணாவதில்லை.இந்தப் போராட்டத்தால் மனத்தின் இயக்கங்கள்,சலனங்கள்,நுண்ணிய ஆசைகள், ஏக்கங்கள்,எதிர்பார்ப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.

தியானம் பழகுந்தோறும் மனம் உள்முகமாகி, சாதகனின் வாழ்க்கை அகமுகமாகத் தலைப்படுகிறது.இங்குக் கூறப்பட்ட நன்மைகள் எல்லாம் உடனடியாகத் தெரியாமல் போகலாம் ஆனால் நாட்கள் செல்லச்செல்ல மனம் சிரமமின்றி அடங்கி தானாகவே அகமுகமாவதை சாதகன் உணர முடியும்.

மனம் அலைந்து திரிந்தாலும் ஒரு குறிப்பிட்ட ஆசனத்தில் குறிப்பிட்ட நேரம் உட்கார்ந்து பழகுவது உடலுக்கும் நரம்பு மண்டலத்திற்கும் நன்மை பயக்கிறது. மனம் ஒருமுகப்பட்டு தியான நெறியில் முன்னேறும் போது இந்தப் பயிற்சி சாதனைகளைத் தொடர்வதில் மிகவும் கைகொடுக்கும்.

சிதறிக் கிடக்கின்ற வாழ்வை ஒருங்கிணைப்பதில் ஆரம்ப கால தியானம் உதவுகிறது. தியானம் பரிபூரணமாக கைகூடாமல் போனாலும் தியான வேளையில் மனம், உணர்ச்சிகள் எல்லாமே ஒரே விஷயத்தைச் சுற்றி உலவுவதால் வாழ்க்கை ஒரே சீராக அமைகிறது. வாழ்க்கை மட்டும் சீரான ஓட்டத்தைப் பெற்று விடுமானால் சாதகன் புறவுலகின் போராட்டங்களையும் மாற்றங்களையும் பொருட்படுத்த வேண்டியிராத நிலையை அடைந்து விடுகிறான்.

மேலே கண்டவை சாதகனின் ஆரம்ப நிலை தியானத்தால் வரும் நன்மைகள் . ஆனால் பயிற்சியில் சற்று முதிர்ச்சி பெறும் போது தியானம் ஆன்மீக அனுபவத்திற்கு நேரடி உதவியாக அமைந்து விடுகிறது. 

உண்மை தியானம் என்பது உள்ளக் கோயிலின் கதவை உவந்து தட்டுவதாகும்.இத்தகைய உண்மையான தியானம் தொடர்ந்து உறுதியாகச் செய்யப்படும் போது சாதகனின் உள்ளக்கதவு திறக்கிறது. ஞான ஒளியின் பிரகாசம் சொல்லொணா மகிமையுடன் விரிகிறது. உரை கடந்த பேரின்ப வெள்ளம் அங்குக்கரை புரண்டோடுகிறது.

image136

எது உண்மையான தியானம்?

ஐந்து நியதிகள்

  

உயர்ந்த ஓர் உணர்வு மையத்தில் குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி இடையீடின்றி, தன்னுணர்வுடன் எண்ணுவதே தியானம். சிந்திப்பது அல்லது எண்ணுவது 

எண்ணுவது என்றால் என்ன? எண்ணற்ற எண்ண அலைகளின் தொடர் நீரோட்டமே சிந்தனை. 

மனம் இரு வகைகளில் இந்த எண்ண அலைகளைச் செயல்படுத்துகிறது. சாதாரணமான மனம் ஓர் எண்ண அலையிலிருந்து இன்னொன்றிற்குத் தாவிய படியே இருக்கும். இப்படி மனம் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து பலவற்றிற்குத் தாவுகின்ற அல்லது பலவற்றை நினைக்கின்ற நிலை பலமுக நிலை(ஸர்வார்த்ததா) 

மனம் ஒரு பொருளையேப்பற்றி நிற்கின்ற நேரங்களும் உண்டு. மனம் இவ்வாறு ஏதாவது ஒன்றைப்பற்றி நிற்கின்ற நிலை ஒருமுகநிலை(ஏகாக்ரதா). 

மனத்தின் விசேஷமான ஒருமுக நிலையே (ஏகாக்ரதா).  தியானம்.


ஐந்து நியதிகள்


இந்த ஒருமுக நிலை மோட்சத்திற்கான ஒரு சாதனை முறையாக மாற வேண்டுமானால், அது ஐந்து நியதிகளை நிறைவேற்றுவதாயிருக்க வேண்டும் என்று பதஞ்ஜலி கூறுகிறார். 

முதலில் வருவது சிரத்தை , 

அதாவது ஆழ்ந்த நம்பிக்கை.

வாழ்க்கையின் மாபெரும் குறிக்கோளில் நம்பிக்கையும் அதை அடைந்தே தீர்வோம் என்பதில் அசையாத உறுதியும் வேண்டும். 

அடுத்து வீர்யம்

இந்த நம்பிக்கை செயல் வடிவம் பெற ஆற்றல் தேவை. இதுவே இரண்டாவது நியதியான வீர்யம் . வீர்யம் என்பது சுயேச்சையின் தொடர்ந்த பயிற்சியால் ஏற்படும் வலிமை. 

மூன்றாவது நியதி ஸ்ம்ருதி அல்லது நினைவு. 

நான்காவது நியதி சமாதி அல்லது ஆழ்ந்த ஒருமுக நிலை

ஐந்தாவது நியதி தன்னறிவு.

இந்த ஐந்து நியதிகளுள் நினைவு என்பது மிகவும் முக்கியமானது.ஒரே எண்ண அலையைத் தொடர்ந்து செலுத்துவதே தியானம் என்று கூறியதன் பொருள் இதுவே. அதாவது தொடர்ந்து நிலையான நினைவைக் கொள்ளுதல் தான் தியானம். 

அப்படியானால் சாதராணமாக நாம் பல பொருட்களை நினைப்பது போன்ற ஒன்று தான் தியானமா? இல்லை. இரண்டிற்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது. 

சாதாரணமாக ஒருவன் பலவற்றை நினைவில் வைத்திருக்கிறான். அதிலும் சிலரது நினைவாற்றல் வியக்கத்தக்க இருக்கிறது. ஆனால் தொடர்ந்து மனம் ஒரே பொருளை நினைக்கச் செய்வது கடினம். 

அதாவது பக்கம் பக்கமாய்ப் படித்து , அதனை ஒப்புவிப்பது எளிது. ஆனால் ஒரு பக்கத்திலுள்ள ஏதாவது ஒரு வார்த்தையை அல்லது ஒரு கருத்தைத் தொடர்ந்து நினைப்பது கடினம். இதைச் செய்ய முயலும் போது இந்த நுண்ணிய வேறுபாடு புலப்படும்.இப்படி ஒரே விஷயத்தைத் தொடர்ந்து நினைப்பதே தியானம்.

மேலும் கடந்த காலத்தில் மூழ்கித் திளைப்பதை, கடந்த கால அனுபவங்களை மீண்டும் சிந்தித்துப் பார்ப்பதையே, பொதுவாக நாம் நினைவு என்கிறோம். சாதாரண மனிதனின் வாழ்வில் பெரும் பகுதி கடந்த கால நினைவுகளில் அல்லது எதிர்காலக் கற்பனைகளிலேயே செலவிடப்படுகிறது. 

தியானம் என்பது கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருப்பதோ எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதோ அல்ல. ஆனால் நிகழ்கால நினைவைத் தொடர்ந்து கொண்டிருப்பது. அதாவது நிகழ்காலம் , கடந்த காலத்திற்குள் ,கடந்த காலத்தின் நினைவற்ற இருளில் நழுவிக்கலந்து விடாமல் தடுக்கின்ற ஒரு முயற்சியே தியானம். 

முழு நினைவையும் நிகழ்காலத்தில் நிலைநிறுத்துவதே உண்மை தியானம்.

வெறுமனே ஓர் உருவத்தை நினைவு கூர்தல் தியானம் அல்ல.இந்த உண்மையை ஆன்மீக சாதகர்கள் மறந்து விடுகின்றனர். 

தியானம் என்ற பெயரில் அவர்கள் செய்வதெல்லாம். இது தான். ஏதாவது ஒரு தெய்வத்தின் உருவப்படத்தைச்சிறிது நேரம் பார்ப்பது, பின்னர் கண்களை மூடிக்கொண்டு பார்த்த அந்தப்படத்தை நினைவு கூர்வது. சந்தேகமின்றி இது ஒரு புனிதமான செயல் தான். ஆனால் இதற்கும் சற்று முன் நாம் கூறியது போன்ற கடந்த காலத்தை நினைவு கூர்கின்ற செயலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. 

இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது தியானம் புத்துணர்ச்சியை இழந்து எந்திரத்தனமாகி விடுகிறது. மேலும் சாதகன் கடந்த காலத்தின் கதவுகளை மீண்டும் மீண்டும் தட்டித்திறக்கச் செய்வதால் , அங்கு மூட்டை மூட்டையாய் க் கட்டி வைக்கப்பட்டிருக்கின்ற நினைவுகள் எல்லாம் அவிழ்க்கப்பட்டு அவை முட்டி மோதிக்கொண்டு மனத்தளத்தில் படையெடுக்கின்றன. 

இவற்றைச்சமாளிப்பதிலேயே நேரம் முழுவதையும் வெலவிடநேர்கிறது. முடிவில் நரம்புகள் எல்லாம் களைத்து சோர்வு மேலிடுவதையே காண்கிறான். மாதக் கணக்கில் வருடக் கணக்கில் செய்தாலும் இத்தகைய தியானத்தால் என்ன பெரிய நன்மை ஏற்பட்டுவிட முடியும்? 


  

நிகழ்காலத்தில் நடைபெறும் ஜீவாத்ம-பரமாத்ம உறவே தியானம்

-

உயிருணர்வுள்ள திருவுருவத்துடன் நேராக நாம் உறவாடுவதே உண்மை தியானம். 

ஒருவரை நேரடியாகப்பார்த்துப் பழகும் போது நாம் நிகழ்காலத்தில் வாழ்கிறோம். தியானம் இது போன்ற உயிர்த்துடிப்பு மிக்கதாக வேண்டுமானால் இதய ஆழங்களில் அமிழ்ந்து அங்கு ஓர் உயிருணர்வு ததும்பும் திருவுருவை நேராகக் காண நம்மால் முடிய வேண்டும். 

முழு உணர்வையும் ஒன்று குவித்து இதய ஆழங்களில் செலுத்தும் போது அந்தத்தியானத் திருவுரு உயிர் பெற்று விளங்குவதை நாம் காணலாம். 

ஆரம்ப நிலை சாதகர்களுக்கு இது கடினமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.அதனால் தான் ஆரம்பத்தில் பிராத்தனை , பூஜை போன்றவை அவசியம் என்று கூறப்பட்டது. ஏனெனில் பிராத்தனையையும் பூஜையையும் கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ இருந்து கொண்டு நாம் செய்ய முடியாது. நிகழ்காலத்தில் இருந்துகொண்டு மட்டுமே செய்யமுடியும். 

பிராத்திக்கும் போது நமக்குத் தெரியாமல் பிராத்தனை கடந்த காலத்திற்குள் சென்று விட முடியாது. நிகழ்காலத்திலிருந்து நம்மை மறக்க ஆரம்பிக்கும் போது பிராத்தனை தடை ப்பட்டு நின்று விடுகிறது. நம்மை மறந்த நிலையில் எப்படி நாம் பிராத்தனை செய்ய முடியும்.? நிகழ்காலத்தில் நிற்கும் முயற்சியில் பிராத்தனை மிகவும் துணைபுரிகிறது. 

பிராத்தனை என்பது முன்பின் தெரியாத ஒருவரிடம் செய்யப்படுவதாக இருக்கலாம். ஆனாலும் அது நம்மை நிகழ்காலத்தில் வாழச்செய்கிறது. பூஜை அந்த முன் தெரியாதவரை இன்னும் நெருக்கமானவராக உண்மையானவராக ஆக்குவதுடன் , நம்மை நீண்ட நேரம் நிகழ்காலத்தில் வாழச்செய்கிறது.

இப்படி நிகழ்காலத்தில் ஆன்மாவும் இறைவனும் கொள்ளும் உறவு தீவிரமாகி , அகமுகப்படும் போது அதுவே தியானம் ஆகிறது. 

கடந்த காலத்தில் உழல்வது மனத்தின் இயல்பு. மனத்தின் இந்த இயல்பை எதிர்த்துச் செய்யப்படும். ஒரு செயல் தியானம். 

தியான வேளையில் என்ன நிகழ்கிறது? சலனமின்றித் தொடர்ந்து பாய்ந்து செல்லும் நீரோட்டம்போல் நமது உணர்வு நாம் தியானிக்கின்ற திருவுருவின் மீது செல்கிறது. இந்த உணர்வு நீரோட்டம் சலனப்படும் போது அல்லது அசையும் போது தியானிக்கப்படுகின்ற பொருளும் அசைகிறது. 

நாம் தியானிக்க முயலும் போது எண்ணற்ற நினைவுகள் எழுந்து மனத்தைச் சூழ்ந்து கொள்கின்றன. நம்மால் எதுவும் செய்ய முடிவதில்லை, தவிக்கிறோம். ஆனால் மனத்தை இப்படி அலைக்கழிப்பதும் நாம் தான் என்பதை நினைவிற் கொள்வது இன்றியமையாதது. 

உண்மையாக உறுதியாக நாம் விரும்புவோமானால் ,விரும்பிய பொருளின் மீது மனத்தை நிலை நிறுத்த நம்மால் முடியும். நாம் தியானிக்கின்ற உருவை முயற்சியாலும், பயிற்சியாலும் அசையாமல் செய்ய முடியும். 

எப்போது இந்த நிலையை நாம் அடைகிறோமோ, அதாவது எப்போது நமது தியானவுரு அசைவின்றி இருக்குமோ அப்போது நம் நினைவு நிகழ்காலத்தில் கட்டுப்பட்டு விட்டது. என்று பொருள் , இதுவே தியானம்.

தவறான கருத்தும் விளக்கமும்

-

முக்கியமான ஒன்று , தியானம் என்பது உருவ தியானத்தையே குறிக்கும். எந்த உருவங்களுமின்றி மனத்தை வெட்டவெளியாகச் செய்வதே தியானம், என்று பலர் எண்ணுகின்றனர்.இது தவறு. 

தியானம் என்றால் அங்கு உருவம் ஒன்று இருந்ததே தீர வேண்டும். ஏனெனில் நமது மனத்தில் எழுகின்ற எண்ண அலைகளுள் ஒன்றை நிறுத்தி மற்றவற்றை அடக்குவதுதானே தியானம்.

எல்லா எண்ண அலைகளும் ஓய்ந்து உருவங்கள் அனைத்தும் மறைகின்ற நிலை ஆழ்ந்த தூக்கத்திலும் சில வகை உயர் சமாதிநிலைகளிலும் ஏற்படுகிறது. ஆனால் மனத்தூய்மையும் ஆன்மீக ஆற்றலும் பெறாமல் ஒருவன் மனத்தைச் சூன்யமாக்க முயன்றால் விளைவது தூக்கம் அல்லது ஒரு வகை மயக்க நிலை. 

தகுந்த பயிற்சியும் ஆயுத்தமும் இன்றி மனத்தைச் சூன்யமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள்.அதில் வெறியடைவதில்லை என்பது மட்டுமல்ல, அஞ்ஞானப் பிண்டமாகிய தமோ குணத்தில் ஆழவும் செய்கிறார்கள். இது மன ஊக்கத்தைக் கெடுத்து அவர்களை மந்த நிலையில் ஆழ்த்துகிறது. 

இந்த மந்த நிலையை , சோர்வடைந்த நிலையை அவர்கள் எண்ணங்களற்ற உயர்ந்த நிலை என்று தவறாக எண்ணிக் கொள்கிறார்கள் 

சில வேளைகளில் மனம் அமைதியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கின்ற நிலை தானாகவே ஏற்படுவதுண்டு. அந்த நிலையில் ஆழ்ந்த உள்ளமைதியை சாதகன் உணர்கிறான். அப்போது மனம் ஒவ்வோர் எண்ணத்தின் ஓட்டத்தையும் ஆழ்ந்து கவனிக்கிறது. ஒவ்வோர் எண்ணமும், புதுமையானதாக, பொருள் பொதிந்ததாகத் தோன்றுகிறது. 

மனம் எந்த ஒரு குறிப்பிட்ட உருவத்தையோ எண்ணத்தையோ பற்றாமல், எழுகின்ற எண்ணங்கள் அனைத்தையும் சாட்சி நிலையிலிருந்து பார்க்கிறது. வானில் மேகக்கூட்டங்கள் மிதந்து செல்வது போல , ஆரவாரமற்ற நாட்டுப்புறத்தில் யாத்திரிகர்கள் சலனமின்றி நடந்து செல்வத போல எண்ணக்கூட்டங்கள் சலனமின்றி எழுந்து அடங்குவதை மனம் பார்க்கிறது. 

சாதகன் அப்போது நிகழ்காலத்தில் வாழ்கிறான். வாழ்க்கையின் அமைதியான ஓட்டத்தை அவன் விலகியிருந்துப் பார்க்கிறான். அந்த ஓட்டத்தில் அவன் அடித்துச்செல்லப்படுவதில்லை. 

இந்த நிலையில் ஆன்மா மனத்தின் செயல்பாடுகளை முழுமையாக அறிந்து கொள்கிறது. அதாவது மனத்தில் எழுகின்ற குறிப்பிட்ட ஓர் எண்ணம் உருவம் என்றில்லாமல் முழு மனத்தையும் அறிந்து கொள்கிறது. 

இத்தகைய ஒரு நிலை தானாக ஏற்படாமல் நாமாக உருவாக்கிக் கொள்ள முடியுமானால் மனம் தியானத்திற்கு ஏற்றதாகி விட்டது என்று பொருள். பக்தி நெறியில் அன்பினால் இத்தகைய ஓர் விழிப்புணர்வு அடையப்படுகிறது. 

பக்தன் தனது இஷ்டத்தெய்வத்தை மிகுந்த அன்புடன் ஆழ்ந்து நினைக்கிறான். அந்த ஒரே எண்ணத்தின் தீவிரத்தால் அவனது முழுமனமும் அதன் வயப்பட்டு விடுகிறது.மனத்தில் வேறெந்த எண்ணத்திற்கும் இடமில்லாமல் போகிறது. 

உயிருணுர்வுள்ள இஷ்டதெய்வத்தில் மனம் அசைவின்றி நின்று விடுகிறது. அதாவது நிகழ்காலத்தில் மனம் நிற்கிறது. உண்மையான தியானத்தில் மனம் இழுத்துக் கட்டப்பட்ட வீணையின் நரம்பு போல் ஆன்மாவுக்கும் தியானிக்கப்படும் பொருளுக்கும் இடையில் இருக்கிறது. 

உணர்வு நிலைகளின் புதுப்புது ராகங்களை நிகழ்காலத்தில் நின்று அது எழுப்புகிறது.


  

தியானத்தின் ஐந்து அடிப்படை நியதிகள்

-

மனத்தைவிட ஆச்சரியமான ஏதாவது ஒன்று இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான். பிரபஞ்ச ரகசியங்களின் மொத்த அறிவும் அதன் ஆழங்களில் அல்லவா புதைந்து கிடக்கிறது. தியானம் செய்ய விழைபவன் இந்த மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும்.

நாம் விரும்பிய படியெல்லாம் மனத்தை வளைக்க முடியாது. ஏனெனில் மனம் நாம் உருவாக்கிய கருவியல்ல. யாரோ உருவாக்கிய அது முற்றுப்பொருளாக நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. அது நம் மீது ஆதிக்கம் செலுத்தகிறது என்பதை நாம் அறியும் முன்னரே நம்மை ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விட்டது. 

நாம் என்மனம்” என்று குறிப்பிடும் மனம் உண்மையில் தனி மனமல்ல. அது தனித்து இயங்குவதில்லை.ஒவ்வொரு தனி மனமும் பரந்துபட்ட பிரபஞ்ச மனத்தின் ஒரு பகுதியாகும். 

குறிப்பிட்ட சில பிரபஞ்ச நியதிகளுக்குக் கட்டுப்பட்டே ஒவ்வொரு தனிமனமும் செயல்படுகிறது. பிரபஞ்ச சக்தியான “பிராணனே” ஒவ்வொரு மனத்தையும் இயக்குகிறது. 

ஒரு பிடி மணலை அறிந்தவன் பிரபஞ்சத்திலுள்ள மணல் முழுவதையும் அறிந்தவன் ஆகிறான். தன் மனத்தை அறிந்து அடக்குபவன் பிரபஞ்சத்திலுள்ள தனி மனங்கள் ஒவ்வொன்றைப் பற்றிய ரகசியத்தையும் அறிகிறான்.ஒவ்வொரு மனத்தையும் அடக்க வல்லவன் ஆகிறான் 

இயற்பியலும் வேதியலும் குறிப்பிட்ட நியதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது போல் மனமும் சில பிரபஞ்ச நியதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறது. இந்த நியதிகளைக் கண்டறிந்து உலகிற்கு அளித்த பெருமை கபில முனிவரைச் சாரும். புத்தரின் காலத்திற்கு முன்னரே இந்த நியதிகள் பாரத நாட்டில் அறியப்பட்டிருந்தன. 

பின்னர் பதஞ்ஜலி முனிவர் அந்த மன நியதிக் கோட்பாடுகளைத் தொகுத்தார். அதுவே இன்று யோக சாஸ்திரம் என்று உலகெங்கும் புகழ்பெற்று வருகிறது. 

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மனிதன் விஞ்ஞானத்தை விட யோக சாஸ்திரத்தில் அதிகமாக ஈடுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பலவிதத் தத்துவ ஆராய்ச்சிகளின் விளைவாக , கடந்த சில நூற்றாண்டுகளில் இந்த யோக சாஸ்திரத்தின் வளர்ச்சி இந்தியாவில் குறைந்துவருகிறது. ஏன் ஏறக்குறைய மறையும் நிலைக்கே வந்துவிட்டது.அதிஷ்டவசமாக அதன் முக்கியப்பகுதிகள் பல, வேதாந்தத்துடன் இணைக்கப்பட்டு இன்றும் வாழ்ந்து வருகிறது. 

தியான வாழ்வில் நுழைய விரும்புபவர்கள் யோக சாஸ்திரத்தின் ஐந்து அடிப்படை நியதிகளைத் தெளிவாக உணர்ந்திருப்பது அவசியம். 

இந்த ஐந்து நியதிகள் வேதாந்த தியானத்தின் அடிப்படை ஆகும்.

-

முதல் நியதி

-

உணர்வு என்பது மனிதனின் ஆன்மாவிற்குச் சொந்தமானது மட்டுமல்ல, ஆன்மாவின் இயல்பே உணர்வு தான்

பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அதாவது நாம் காணும் தூலப்பிரபஞ்சம்,தனி மனங்கள் எல்லாமே உணர்வற்றதான பிரகிருதிக்குச் சொந்தமானது. 

பிரகிருதி என்பது பிரபஞ்சம் போன்ற தூலப்பொருளோ மனம் போன்ற நுண் பொருளோ அல்ல.அது தோன்றா நிலையிலுள்ள முதல் மூலப் பொருள் . 

தூலப் பொருளான பிரபஞ்சமும் நுண் பொருளான மனமும் பிரகிருதியின் இரு வெளிப்பாடுகளாகும். 

பிரகிருதி உணர்வற்ற ஜடமாக இருந்தாலும், அது இறந்துபட்டதோ செயலற்ற மந்த நிலையில் இருப்பதோ அல்ல. அது இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் இயக்கி வருகின்ற உணர்வற்ற ஓர் ஆற்றல். 

அது சுயமாக ஒளிர்வதில்லை. ஆன்மாவின் ஒளி அதன்மீது செயல்படுகிறது.

ஆனால் ஆன்மா சுயம் ஜோதி, அதை ஒளிரச் செய்ய வேறு எதனுடைய உதவியும் தேவையில்லை. 

உணர்வையும் உணர்வின்மை அல்லது ஜடத்தன்மையும் வேறுபடுத்திக் காட்டியது. பாரத நாட்டின் சாதனைகளுள் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.. இந்த வேற்றுமை அறிவு ஆன்மீக வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. 

ஆன்மா மட்டுமே உணர்வுப்பொருள். ஆன்ம விழிப்பின்றி உடலாலோ மனத்தாலோ செய்யப்படும் செயல்கள் எல்லாம் தன்னுணர்வற்ற , தன்னறிவற்ற நிலையிலேயே நடைபெறுகின்றன. இந்த உண்மையைப் புரிந்து கொள்வது தியான வாழ்விற்கு மிகவும் அவசியமாகிறது.

இரத்த ஓட்டம். உணவு செரித்தல், செரித்த உணவு உடலெங்கும் பரவுதல் போன்ற செயல்கள் எல்லாம் நமது நினைவின்றி , நமது உணர்வின்றியே நடைபெறுகிறது. நமது மனத்தை, அதில் எழும் எண்ணங்களைக் கூர்ந்து கவனித்தால் அதன் பெரும்பகுதியும் நமது உணர்வின்றிச் செயல்படுவது புலப்படும். 

நாம் பேசுகிறோம்,படிக்கிறோம்,உண்கிறோம், நடக்கிறோம்,விளையாடுகிறோம் ஆனால் இதில் எத்தனை செயல்களை நாம் தன்னறிவுடன் செய்கிறோம்? மிகவும் குறைவானவற்றையே. எதையும் தன்னறிவுடன் செய்வதில்லை என்றே சொல்லிவிடலாம். 

தியானத்திற்கென அமரும்போது தியானமும் இவ்வாறே நம் உணர்வின்றி, உணர்வற்ற நிலையில் செய்யப்படுகிறது. நாளின் பெரும்பகுதியை உணர்வற்ற நிலையில் , மனத்தின் போக்கில் விட்டுவிடுகிறோம். ஆனால் தியான வேளையில் மட்டும் . அமர்ந்த உடனே மனத்தை அடக்கிவிட நினைக்கிறோம். இது எப்படி முடியும்? 


  

ஆன்மாவில் நமது சார்பு அதிகமாகும் அளவு நாம் தன்னுணர்வு மிக்கவர்களாவோம்.நாம் தன்னுணர்வுடன் செயல்படும் அளவிற்கு நமது எண்ணங்களையும் செயல்களையும் கட்டுபாட்டிற்குள் வைக்க முடியும்.

இத்தகைய தன்னறிவு அல்லது விழிப்புணர்வு ஞான நெறியைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமல்ல பக்தி நெறியில் செல்பவர்களுக்கும் இன்றியமையாதது. 

உணர்வின் இருப்பிடம் ஆன்மா ஆன்மாவிற்கு கதவுகளைத் திறந்து உணர்வு வெள்ளத்தை மனத்தின் செயல்கள் மீது மேலும்மேலும் பாயும் படிச் செய்ய ஆன்மீக சாதகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். 

ஆசைகளும் பிற மாசுகளுமே ஆன்மாவை மறைத்து நாம் உணர்வறு நிலையில் உழலும்படிச் செய்கின்றன. மனம் தூய்மை பெறப் பெற ஆன்ம ஒளி மேலும் மேலும் வெளிப்படுகிறது. ஆன்ம ஒளி நமக்குத் தன்னறிவையும் சுயக் கட்டுப்பாட்டையும் தருகிறது.

இரண்டாம் நியதி

அறிதல் அதாவது நாம் ஒரு பொருளை அறிதல் என்பது மனத்தின் உருமாற்ற விளைவு

எந்தப்பொருளை நாம் அறிய வேண்டுமோ, மனம் அந்தப் பொருளின் உருவை எடுக்கிறது.மனத்தின் இந்த உருமாற்றம் விருத்தி எனப்படுகிறது. 

உயிர் அல்லது ஆன்மாவுக்கும் புறப்பொருளுக்கும் இடையில் உள்ள தொடர்பு அறிவு எனப்படுகிறது. 

ஆன்மா நேரடியாக எந்தப் பொருளுடனும் தொடர்பு கொள்ள முடியாது. ஆன்மாவுக்கும் புறப்பொருளுக்கும் இடையில் மனம் ஒன்று வேண்டும்.

மேலும் மனம் இருந்தால் மட்டும் போதாது, புறப்பொருளின் வடிவை அது எடுக்க வேண்டும். 

ஆன்மாவின் ஒளி இந்த விருத்தி அல்லது எண்ண அலை மீது விழும் போது தான் அறிவு உதயமாகிறது. 

எண்ண அலைகள் பலவகைப்படும்.

நாம் ஒரு மரத்தை எப்படி அறிகிறோம்? மரத்தை நம் கண்கள் பார்க்கும் போது மனம் வெளியே சென்று அந்த மரத்ன் உருவை எடுக்கிறது. இவ்வாறு நாம் மரத்தை அறிகிறோம்.

பின்னர் வேண்டுமானால் கண்களை மூடிக்கொண்டு அந்த மரத்தின் வடிவை மீண்டும் நாம் நினைவுகூரமுடியும்.

நமது வாழ்க்கை என்பது உலகம் , உலகத்தினுள் இன்னோர் உலகம், அதனுள் மற்றோர் உலகம் என அடுக்கடுக்கான உலகங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது.

நாம் வாழும் புற உலகைப் போலவே தேவ தேவியர்,ஆவிகள் போன்றோர் வாழ்கின்ற நுண்ணிய அக உலகங்களும் இருக்கின்றன. 

மனத்தை அவற்றை நோக்கிச் செலுத்தினால் அவற்றைப்பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும் , 

மனத்தின் இந்த உருமாற்றங்கள் எல்லாமே விருத்திகள் தாம்.

விருத்திகளின்றி அறிவு உதயமாவதில்லை.

ஆழ்ந்த தூக்கத்தின் போது மனம் அஞ்ஞான இருளாகிய தமஸில் மூழ்கி கிடப்பதால், அது எந்த விருத்தியையும் உண்டாக்குவதில்லை.அதனால் தான் ஆழ்ந்த தூக்கத்தில் நாம் எதையும் அறிய முடிவதில்லை

தூங்கி எழுந்த பின்னர் ” எனக்கு எதுவுமே தெரியவில்லை என்று மட்டும் கூறுகிறோம். ஆனால் பதஞ்ஜலியும் அத்வைத நெறியின் சில பிரிவினரும் ஆழ்ந்த தூக்கத்தில் நித்திரை விருத்தி என்ற விருத்தி இருப்பதாகக் கூறுகின்றனர். 

உணர்வு கடந்த உயர்ந்த நிலையான நிர்விகல்ப சமாதி நிலையில் மனம் ஆன்மாவில் ஒடுங்கி விடுகிறது. ஆன்மா மட்டுமே இருக்கிறது. அந்த நிலை ” ஓர் அறிவு ” நிலையல்ல , அது வெறும் இருப்பு நிலையாகும். 

இரண்டற்ற நிலையான இந்த அனுபவ நிலை ஒன்றைத்தவிர பிற எல்லா அறிவு நிலைகளும் விருத்திகளாலே உண்டாகின்றன. 

மிகச்சாதாரண உணர்ச்சிகளானாலும் சரி, மகோன்னதமான ஆன்மீகக் காட்சிகளானாலும் சரி,அங்கு எண்ண அலைகள் இருந்தே தீரும்.

சரியான அறிவை ஏற்படுத்தும் எண்ண அலை, பிரமாணம் என்றும், தவறான அறிவைத்தருவது விபர்யயம் என்றும் வழங்கப்படுகிறது. 

பற்று . வெறுப்பு, பயம்,போன்ற உணர்ச்சிகள் எல்லாம் விபர்யய விருத்திகள் என்பது பதஞ்ஜலியின் கருத்து. 

இன்னொரு வகையான அறிவு இருக்கிறது.அது சரியான அறிவுமல்ல.தவறான அறிவுமல்ல. நன்மை, அழகு, எல்லையற்றதன்மை போன்ற தனிக்கருத்துகள் இந்த வகையுள் அடங்கும். 

அழகு என்ற ஒன்றை நாம் தனியாகக் காண முடியாது. அதே வேளையில் அழகு என்பதைத் தவறான அறிவென்று தள்ளி விடவும் முடியாது. ஏனெனில் அழகு சார்ந்த பொருட்களை நாம் காணவும் அனுபவிக்கவும் முடிகிறது. இத்தகைய அறிவை எழுப்பும் எண்ண அலை விகல்பம் எனப்படும்.

ஒரு தெய்வத்தின் உருவத்தை நினைக்க நாம் முற்படும் போது எழுகின்ற அறிவு உண்மை அறிவல்ல. ஏனெனில் நாம் இந்த தெய்வத்தை அப்போது நேரில் காண்பதில்லை. அதே வேளையில் அது தவறான அறிவுமல்ல. ஏனெனில் அது இல்லாத ஒன்றைப் பற்றிய கற்பனையல்ல. 

எனவே நமது ஆரம்ப கால தியானம் விகல்பப் பிரிவினுள் அடங்குகிறது. தொடர்ந்த முயற்சியாலும் பயிற்சியாலும் இஷ்டதெய்வத்தின்  காட்சி கிட்டும் போது விகல்பம் உண்மை அறிவான பிரமாணம் ஆகிறது. 


  

புலன் கடந்த உண்மையைப் பற்றிய உண்மை அறிவே சாட்சாத்காரம் , யோகி பிரத்யட்சம், அனுபூதி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. 

இதை அடைவது தான் தியானத்தின் லட்சியம். 

மனத்திற்குப்பல நிலைகள் அல்லது அடுக்குகள் உள்ளன. 

இந்த ஒவ்வொரு நிலைக்கும் குறிப்பிட்ட விருத்திகள் உள்ளன.

புற அடுக்குகளில் எழும் எண்ண அலைகள் தூலமானவை,புறப்பொருள் பற்றியவை. கவிதைத் திறனும் கற்பனை வளமும் தத்துவ நுட்பமும் உயர்ந்த அடுக்குகளிலிருந்து எழுகின்றன.

மனத்தின் ஆழ்நிலை அடுக்குகளில் நுண் விருத்திகள் உள்ளன.இந்த நுண் விருத்திகள்மூலம் ஆன்மீக உலகின் புலன் கடந்த உண்மைகள் அறியப்படுகின்றன.

மிகவும் தூல நிலையிலுள்ள எண்ணங்களை மட்டுமே நம்மில் பலரும் அறிவோம்.ஆனால் மனத்தைத் தூய்மைப்படுத்துவதன் மூலமும் தியானத்தின் மூலமும் மனத்தின் ஆழ்நிலைப் பகுதிகளுக்குச் செல்ல முடியும். அங்கு இத்தகைய நுண்ணிய எண்ண அலைகளுடன் தொடர்பு கொள்ள முடியும்.

ஆன்மீகப் பேருண்மைகளை அறிய முடியும். 

எண்ண அலை ஆன்ம ஒளியைப் பிரதிபலிக்கும் போது அறிவு உண்டாகிறது என்று கண்டோம். 

தூல விருத்திகள் மிகக் குறைந்த அளவே ஒளியைப் பிரதிபலிக்கின்றன. அதில் தன்னறிவும் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. 

நுண் விருத்திகள் அதிக ஒளியைப் பிரதிபலிக்கின்றன. அவை உருவாக்கும் உருவங்கள் ஒளி மிக்கவையாக இருக்கின்றன. மேலும் அந்த அறிவு தன்னறிவு மிக்கதாகவும் உள்ளது.

சாதகன் மன ஆழங்களில் மூழ்க மூழ்க ஆன்மாவை மேலும் மேலும் நெருங்குகின்றான். ஆன்ம ஒளியை அதிகமாகக் காண்கிறான்.

அனைவரிலும் ஆன்மா தான் உள்ளது. மனத்தில் எழும் விருத்திகள் வேறுபாடு தான் மனிதர்களுள் வேறுபாட்டிற்குக் காரணமாக அமைகிறது. 

அனைத்து ஆன்மாக்களும்“ தெய்வீகமானவை. ஆனால் தெய்வீகம் வெளிப்படுகின்ற அளவு மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. 

புனிதமானவர் மற்றும் தெய்வீகமானவர்களின் மனத்தில் தூய விருத்திகள் மிகுந்துள்ளன. அவை ஆன்ம ஒளியை மிகுந்த அளவில் பிரதிபலிக்கின்றன. 

தேவர்” என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு ஒளிர்பவர்”என்பது பொருள். தேவர்கள் தூய ஒளிமிக்க நுண்ணுடலைக் கொண்டவர்கள். அவர்களில் ஆன்ம ஒளி பிரகாசத்துடன் ஒளிர்கிறது.

உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவதாலும் தியானத்தாலும் ஒவ்வொருவரும் இந்த தேவ நிலையை அடைய முடியும். 

விருத்திகளைப் பற்றி நாம் ஏன் இவ்வளவு அறிந்து கொள்ள வேண்டும்.? சரியான விருத்தியை அல்லது எண்ண அலையை எழுப்புவதும் தங்கச்செய்வதும் தியானத்தின் அடிப்படைப்பிரச்சனை. 

குறிப்பிட்ட ஒரு தெய்வத்தைக் காண வேண்டுமானால் அந்த தெய்வத்தின் உண்மை இயல்பைக் காண்பிக்கும் தூய விருத்தியை எழுப்ப வேண்டும்.குறிப்பிட்ட அந்த விருத்தியை எழுப்புவதே தியானத்தின் நோக்கம்.இதில் வெற்றி பெறும் வரை தியானம் ஒரு கற்பனைச் செயலாகவே இருக்கும். 

எப்போது சரியான விருத்தியை உருவாக்க முடிகிறதோ அப்போது தியானம் நிறைவுற்று நேரடி அனுபவம் தொடங்குகிறது. 

புலன் கடந்த சரியான விருத்தி ஒன்றை எழுப்ப ஏன் இவ்வளவு சிரமம் என்ற கேள்வி இப்போது எழுவது இயல்பு. 

இந்தக் கேள்விக்கான விடையில் இரு முக்கியக் கோட்பாடுகள் அடங்கியுள்ளன.இந்த இரு கோட்பாடுகளும் யோக சாஸ்திரத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் அடிப்படை நியதிகளாக அமைகின்றன.


  

மூன்றாம் நியதி


வார்த்தைக்கும் பொருளுக்கும் இடையில் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது.

வார்த்தைகளின்றிச் சிந்திக்க முடியாது.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்து திடீரென விழிப்பதாக வைத்துக் கொள்வோம் .நம் முன் நிற்பது ” யாரோ ஒருவர்” என்பது முதலில் நம் கவனித்திற்கு வரும்.சிறிது நேரத்திற்குப் பின்னரே ” நம் அம்மா நிற்கிறார்”என்பது புரியும். 

முதல் நிகழ்ச்சி , புலனின் வெறும் புறத்தொடர்பு . இரண்டாம் நிகழ்ச்சி சிந்தனையின் விளைவு . அந்த ”யாரோ ஒருவர்” யார் என்று சிந்தித்த பின்னரே நமக்கு விடை கிடைத்தது.

வார்த்தைகளின்றிச் சிந்திக்க முடியாது.அம்மா” என்ற வார்த்தையைக் கேட்டாலோ உள்ளுக்குள் சொன்னாலோ அவரது உருவம் நம் மனத்துள் எழுகிறது. குழந்தைப்பருவத்திலிருந்தே நாம் உருவங்களையும் (ரூபம்) பெயர்களையும் (நாமம்) இவ்வாறு இணைத்துப் பழகி விட்டோம். 

இப்போது பெயரின்றி உருவத்தை நினைக்க முடியாத அளவிற்கு, அதாவது வார்த்தைகளின்றிச் சிந்திக்க முடியாத அளவிற்காகிவிட்டது.

மந்திரங்கள் எனப்படும் சில விசேஷச் சொற்களைப் பொதுவாக தியானத்தில் பயன்படுத்துகிறோம். சாதாரணச் சொற்களுக்கும் மந்திரங்களுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. ”

காண்டாமிருகம்” என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். படத்தின் மூலம் கூடக் காண்டாமிருகத்தை அறிந்திராத ஒருவர் அந்தச் சொல்லிலிருந்து எதையாவது புரிந்து கொள்ள முடியுமா? அவர் ஓரிடத்தில் அமர்ந்து ” காண்டாமிருகம், காண்டாமிருகம் என்று வாழ்நாள் முழுவதும் ஜெபித்தாலும் காண்டாமிருகத்தைக் காணவோ அறியவோ முடியாது. 

தியானத்தில் அமர்ந்து ஒரு மந்திரத்தை ஜெபிக்கும் போது நம் மனத்தில் வருவது கூட தெய்வத்தின் உருவம் மட்டுமே. ஆனால் அந்த மந்திரத்தை நம்பிக்கையுடனும் மனத்தூய்மையுடனும் ஜெபித்தால், அது மெள்ள மெள்ள தூய நுண் விருத்திகளை எழச் செய்து, அந்த மந்திரத்திற்குரிய தெய்வத்தின் நேரடிக் காட்சியைப் பெற வைக்கிறது. இதுவே சாதாரணச் சொல்லிற்கும் மந்திரத்திற்கும் உள்ள வேறுபாடு. இது நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான கோட்பாடு. இதை இன்னும் விளக்கமாகப் பின்னர் காணலாம்.

-

நாமம்,ரூபம் இரண்டுமின்றி நம்மால் சிந்திக்க முடியாது. என்பதை இப்போது நினைவிற் கொண்டால் போதுமானது.

எண்ண அலை இரு பகுதிகளை உடையது.

பொருளின் உருவம், அதன் பெயர். 

தியானம் என்பது ஒரே எண்ண அலையை மட்டும் தொடர்ந்து செயலாற்றச் செய்வது, அதாவது பிற நாம ரூபங்களை விலக்கி ஒரு ரூபத்தையும் ஒரு நாமத்தையும் நிலை நிறுத்துவது ஆகும்.


நான்காம் நியதி

-

ஒவ்வோர் அனுபவமும் மனத்தில் ஒரு பதிவை விட்டுச் செல்கிறது.இதுவே சமஸ்காரம்.

இந்த சமஸ்காரம் மீண்டும் அதே அனுபவத்தை நாடச் செய்கின்ற எண்ண அலையை எழுப்பும் ஆற்றல் வாய்ந்தது.

உணர்வு நிலைக்குக் கீழுள்ள நமது ஆழ்மனத்தில் எண்ணிறந்த சமஸ்காரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.இவை தொடர்ந்து ஆசைகளாக , உணர்ச்சிகளாக, நினைவுகளாக, எண்ணங்களாகக் கிளர்ந்தெழுந்து மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கினறன. 

இதனால் தான் தியான வேளையில் சரியான ஒரே விருத்தியைத் தொடர்ந்து செயலாற்றச் செய்ய முடிவதில்லை. 

தியான வாழ்வில் சமஸ்காரங்களின் இடத்தைப்பற்றிப் பின்னர் விரிவாகக் காண்போம். 

இப்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் இவ்வளவே-

விருத்திகள் சமஸ்காரங்களை உண்டாக்குகின்றன. சமஸ்காரங்கள் விருத்திகளை உண்டாக்குகின்றன. 

இந்தத்தொடர் சங்கிலியை எப்படித் துண்டிப்பது.?

ஒரே வழி சமஸ்காரங்களை அழிப்பது தான். சமஸ்காரங்களை உயர்ந்த ஆன்மப் பேரொளியால் மட்டுமே அழிக்க முடியும். 

ஆனால் மனத்தூய்மையாலும் நல்லொழுக்கப் பயிற்சிகளாலும் அவற்றின் வீரியத்தை அடக்கி, கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும். 

உள்ளத் தூய்மையின்றி உண்மை தியானம் என்பது முடியாது. 

ஐந்தாம் நியதி

மனம் தொடர்ந்து மாறிக்கொண்டே, அதாவது அலை பாய்ந்து கொண்டே தான் இருக்கும். அதனை முழுவதுமாக நிறுத்தவே முடியாது.

ஆன்மா ஒன்றைத் தவிர இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது இந்து மதத்தின் எல்லாப் பிரிவுகளுடையவும் ஒருமித்த கருத்து. 

மனத்தின் எண்ண அலைகள் இடையீடின்றி எழுவதும் மறைவதுமாக உள்ளன. மனம் சஞ்சலப்படும் போது பல எண்ண அலைகள் எழுந்து மடிகின்றன. மனம் ஒருமைப்படும் போது ஒரே எண்ண அலை தொடர்ந்து எழுவதும் மறைவதுமாக உள்ளது. 

ஆழ்ந்த தியான வேளையில் இஷ்டதெய்வத்தின் உருவம் சலனமின்றி நிலையாக இருப்பது போல் தோன்றும். ஆனால் உண்மையில் அந்த ஒரே விருத்தி, தொடர்ந்து சம இடைவெளியில் மீண்டும், மீண்டும் எழுந்து விழுந்த வண்ணமே உள்ளது. 

தியானம் என்பது எல்லா விருத்திகளையும் நிறுத்திவிடுவதல்ல. ஒரே விருத்தியை நீண்ட நேரம் ஒரே சீராக எழுந்து மறையும்படிச் செய்வது தான். 

மிக உயர்ந்த சில வகை சமாதி நிலைகளில் எல்லா விருத்திகளும் ஒடுங்கி விடுகின்றன. எனினும் மனம் ஒடுங்குவதில்லை. 

எல்லா விருத்திகளும் அடங்கி விட்டாலும் மனத்தின் ஆழங்களில் சமஸ்காரங்கள் மாறிக்கொண்டே இருப்பதாகப் பதஞ்ஜலி கூறுகிறார். 

சமஸ்காரங்களின் இந்த மாற்றமும் நின்றுவிட்டால் அதாவது முழுமனமும் ஒடுங்கிவிட்டால் அதன் பின் மனம் மனமாக இருப்பதில்லை.

தான் தோன்றிய தனது காரணமான பிரகிருதியில் அது லயித்து விடுகிறது.ஆனால் இறுதியாக முக்தி நிலையிலேயே இது நடைபெறுகிறது.

image137

மனத்தின் இரு பகுதிகள்

தன்னறிவின் தொடர்பறு நிலை

  

நாம் இதுவரை கண்ட யோக சாஸ்திரத்தின் ஐந்து அடிப்படை நியதிகளைச் சரியாகப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இது சாதகர்கள் தங்கள் மனம் செயல்படும் விதத்தை அறிந்து கொள்ளவும். அதனால் தியான வாழ்வைப் பலனுடையதாக ஆக்கிக் கொள்ளவும் உதவும். 


தன்னறிவின் தொடர்பறு நிலை

-

தியானத்திற்கென அமர்ந்து கண்களை மூடியதும் முதலில் நாம் உணர்வது என்ன? 

நாம் நாமாக இல்லாததை , நாம் பலராக இருப்பதை முதலில் உணர்கிறோம்.

அதாவது நமது தன்னறிவு ஒரே சீராக . ஒரே நிலையில் இருக்காமல், துண்டுபட்டுப் பிரிந்த .தொடர்பற்ற நிலையில் இருப்பதைக் காண்கிறோம். 

இதை மனநூல் வல்லுனர்கள் தன்னறிவின் தொடர்பறு நிலை என்று குறிப்பிடுகிறார்கள். 

பலவிதமான எண்ணங்களும் உருவங்களும் மனத்தில் எழுவதை இங்குக் குறிப்பிடவில்லை. மனமே பலவிதமான உணர்ச்சிப் பிரிவுகளாகப் பிரிந்து நாமும் அந்தப் பிரிவுகளுடன் இணைந்து பலராகச் செயல்படுவதையே இங்குக் குறிப்பிடுகிறோம். 

ஏன் இப்படி நடைபெறவேண்டும்? 

ஏன் நம் தன்னறிவு அல்லது நான் என்னும் உணர்வு துண்டாடப்பட வேண்டும்.? 

பல முகப்பட்ட நமது வாழ்க்கையே இதற்குக் காரணம் . 

சாதாரண மனிதன் தினசரி வாழ்வில் பல வேடங்கள் போட வேண்டியிருக்கிறது. மகன்,தந்தை,கணவன்,தொழிலாளி,வரிகட்டுபவன், குடிமகன், கலைஞன், சிந்தனையாளன்,என்று அவனது வேடங்கள் முடிவின்றி நீள்கின்றன. 

இந்த வேடங்கள் அனைத்தும் நான்” என்னும் உணர்வில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த உணர்வே அவனது அத்தனை வேடங்களையும் ஒருங்கிணைத்து. எல்லா அனுபவங்களையும் தொகுத்து, அவனை ஒரு தனி மனிதனாக வாழச் செய்கிறது. அவனது தனித்துவத்திற்கு முழுமையை அளிக்கிறது. 

சக்கரத்தின் மையஅச்சில் அதன் ஆரங்கள் இணைக்கப்பட்டுள்ளது போல் வாழ்க்கையின் மைய அச்சாகிய ”நான்” என்னும் உணர்வில் வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன.என்று உபநிடதம் கூறுகிறது. 

பிரச்சனைகளின் படையெடுப்பு,அவற்றிற்கு விடை காண முடியாத தவிப்பு,பலவித மனப்போராட்டங்கள், அவற்றால் ஏற்படும் மனத்தளர்வு- இவை சில வேளைகளில் எதிரெதிர் எண்ணங்களை உண்டாக்கி பயங்கரமான மனச்சிதைவுக்கு வழிவகுத்து விடுகிறது.

சில வேளைகளில் மீண்டும் இணைக்க முடியாதபடி, மனம் துண்டு துண்டாகி விடுகிறது. தன்னறிவின் தொடர்பறு நிலை மிகத்தீவிரமாகி விடுகிறது. இந்த நிலைமைக்கு ஆளான மனிதனின் ஆளுமை பிளவுபட்டு விடுகிறது. அவன் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பல்வேறு மனஉலகங்களில் வாழ நேரிடுகிறது. 

இந்த நிலைமை தீவிரமாகும் போது மூளைக்கோளாறு சில வேளைகளில் இன்னும் மோசமான நோய்கள் கூட ஏற்படலாம்.

தன்னறிவின் தொடர்பறு நிலை என்பது மனக்கோளாறுக்கான ஒரு காரணம் 

மிகவும் சிறிய அளவில் இந்தத் தொடர்பறு நிலை வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் நிகழ்கிறது. இந்த நிலை தியான வாழ்வில் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. 

தன்னறிவின் தொடர்பறு நிலை,அதன் இயல்பு, காரணம் இவை பற்றிய அறிவு தியான வாழ்வில் மிகவும் முக்கியமானது.


தொடர்பறு நிலைக்கான காரணம் என்ன?


ஏன் மனம் தொடர்பிழந்து சிதைகிறது? பலவிதமான தடைகளே இதற்குக்காரணம். 

தன்னறிவு தொடர்ந்து ஒருமுகமாக, தன்னிச்சையாகப் பாய்வதை இந்தத் தடைகள் தடுக்கின்றன. இதனால் தன்னறிவின் தொடர்பறு நிலை ஏற்படுகிறது. 

இந்த தடைகள் எவை? 

மேலை நாட்டு மனநூல் இந்தத் தடைகளை இயல்புணர்ச்சி,உந்து வேகங்கள், உணர்ச்சி வேகங்கள் , உள்ளுணர்ச்சிச் சிக்கல் என்றெல்லாம் பல பெயர்களில் கூறுகிறது. இந்திய மனநூல் இந்தத் தடைகளை சமஸ்காரங்கள் என்று கூறுகிறது. 

சமஸ்காரங்கள் முன் அனுபவங்களின் புதை பதிவுகள் ஆகும். முற்பிறவி அனுபவங்களும் இதில் அடங்கும். இந்த சமஸ்காரங்கள் செயல்திறனற்ற வெறும் மந்தப்பதிவுகள் அல்ல. அவை ஒவ்வொன்றும் மிகவும் சக்தி வாய்ந்த மன ஆற்றல் மண்டலங்களாகும். 

-ஓடுகின்ற நதி எப்படிப் பாறைகளாலும் மணல் திட்டுகளாலும் பல கிளைகளாக பிரிக்கப்படுகிறதோ, அப்படியே நமது எண்ண ஓட்டங்களும் சமஸ்காரங்களால் சிதைவுறுகின்றன.


மனத்தின் இரு பகுதிகள்


மனம் முழுவதும் நம் உயர்வாக்கத்தின் கீழில்லை ஒரு சிறுபகுதியின் செயல்பாடுகளை மட்டுமே நாம் உணர்கிறோம்.இது முதல் முடிவு நம் உணர்வாதிக்கத்தின் கீழில்லாத பகுதியை உணர்வது பகுதி என்றும், மற்ற பகுதியை உணர்வுப்பகுதி என்றும் அழைப்போம்.

உணர்ச்சி வேகங்கள் எப்படி நம்மை ஆட்டி வைக்கின்றன. என்பதைப் பொதுவாக நாம் அறிந்து கொள்வதில்லை. ஏனெனில் இவை மனத்தின் உணர்வுப்பகுதியில் செயல்படுவதில்லை. அதாவது உணர்வுப்பகுதிக்கு வராமல் இவை தடுக்கப் படுகின்றன. தடைபடுகின்ற இந்த நிகழ்ச்சி உணர்வறு தடை 

நமக்குக் கோபம் வருவதாக வைத்துக்கொள்வோம். அதை நாம் அடக்குகிறோம். இது நம் உணர்வுடன் நடக்கிறது.இது உணர்வுத்தடை.

இதே நிகழ்ச்சி மனத்தின் உணர்வறு பகுதியில் நடைபெறுமானால் அது உணர்வறு தடையாகிறது. 

ரிஷிகள் நம் மனம் முழுவதையும் உணர்வற்ற ஜடமாகக் கருதினார்கள். ஆன்மா மட்டுமே உணர்வுப்பொருள். அங்கிருந்தே உணர்வு வருகிறது. அந்த ஆன்மாவின் ஒளியால் ஒளிர்கின்ற பகுதியையே நாம் மனத்தில் உணர்வுப்பகுதி என்கிறோம்.

தமஸ் மேலோங்கிய எஞ்சிய பகுதி உணர்வறு பகுதி அல்லது சித்தம் எனப்படுகிறது. இந்த உணர்வறு பகுதியில் சமஸ்காரங்கள் புதைந்துள்ளன. 

இந்த இரு பகுதிகளைத் தவிரஉயர்ந்த பகுதி ஒன்று உள்ளது. சத்வம் மேலோங்கிய இந்தப் பகுதி புத்தி என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீகப் பேருணர்வுகள் புத்தியிலிருந்தே தோன்றுகின்றன. இதுவே ஆன்மா.


  

இரு வித சமஸ்காரங்கள்


கர்ம பீஜம், வாசனை என சமஸ்காரங்கள் இரு வகைப் படுவதாகப் பதஞ்ஜலி கூறுகிறார். 

கர்ம பீஜம் ஆசைகளையும் இயல்புணர்ச்சிகளையும் உணர்ச்சி வேகங்களையும் தூண்டுகிறது.வாசனை நினைவை எழுப்புகிறது. 

இந்த இரு வகை சமஸ்காரங்களும் மன வாழ்வில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. 

ஒவ்வொரு செயலும் மனத்தில் ஒரு சம்ஸ்காரத்தை உண்டாக்குகிறது. இது கர்ம பீஜம். 

இந்த சம்ஸ்காரங்கள் எழும் போது மீண்டும் அதே செயலைச் செய்ய நாம் தூண்டப்படுகிறோம். இந்தத் தூண்டுதலையே ஆசை, இயல்புணர்ச்சி, உந்துவேகம்,என்றெல்லாம் கூறுகிறோம். 

நாம் ஆயிரக்கணக்கான செயல்களைச் செய்கிறோம். எனவே நம் மனம் எத்தனையோ கர்ம பீஜங்களுக்கு இருப்பிடமாகி விடுகிறது. இந்தக் கர்ம பீஜங்களின் மொத்தத் தொகுதி கர்மயாசனம் எனப்படுகிறது. 

கர்மாசயமே மறுபிறப்புக்குக் காரணமாகிறதுஎன்று பதஞ்ஜலி கூறுகிறார். 

அடுத்த பிறவி,அதற்கேற்ற உடல், ஆயுள், அனுபவங்கள் அனைத்தையும் கர்மயாசமே முடிவு செய்கிறது. 

ஒவ்வொரு செயலும் ஓர் அனுபவத்தை உண்டாக்குகிறது.ஒவ்வோர் அனுபவமும் ஒரு சம்ஸ்காரத்தை மனத்தில் விட்டுச் செல்கிறது. இந்த சம்ஸ்காரம் வாசனை எனப்படுகிறது. 

நறுமண மலர்களைச் சிறிது நேரம் கையில் வைத்திருந்தால், அந்த நறுமணம் கையில் ஒட்டிக்கொண்டு விடும். அது போலவே சுகதுக்க அனுபவங்களும் மனத்தில் “-வாசனை”யை விட்டுச் செல்கின்றன. 

இந்த வாசனை மீண்டும் எழும் போது அந்த அனுபவங்களின் நினைவு வருகிறது.செயலும் அனுபவமும் ஒன்றோடொன்று இணைந்தவை. எனவே கர்மாசயமும் வாசனையும் இணைந்தே செயல்படுகின்றன. ஒன்று தூண்டப்பட்டால் மற்றொன்றும் தூண்டப்படுகிறது. 

வாசனை தூண்டப்பட்டால் அது நினைவை எழுப்புகிறது. நினைவு கர்மயாசத்தைத் தூண்டுகிறது. கர்மாசயம் ஆசைகளையும் உந்துவேகங்களையும் தூண்டிச் செயல்பட வைக்கிறது.

நாம் செயல்படுகிறோம் . மீண்டும் இந்த செயல் அனுபவங்களையும் அனுபவங்கள் வாசனையையும் உண்டாக்குகிறது. இவ்வாறு செயலும் அனுபவமும் கர்மாசயமும் வாசனையும் முடிவின்றிச் சுழலும் வட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. 

இந்தச் சுழற்சியை உடைப்பது ஆன்மீக வாழ்வின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று.

இரண்டிற்கும் இடையிலுள்ள வேறுபாடு

கர்மாசயத்திற்கும் வாசனைக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை ஆன்மீக சாதகர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்தல் அவசியம்.-

வெறும் படிப்பறிவல்ல, தங்கள் வாழ்வில் இதைச் செயல்படுத்தி செயல்முறை அறிவு பெற வேண்டும். 

நினைவு , உந்து வேகம் இந்த இரண்டிற்கும் இடையிலுள்ள வேறுபாடு . 

இந்த இரண்டையும் உண்டாக்கும் சமஸ்காரம் இவை பற்றிய தெளிவான அறிவு ஆன்மீக வாழ்வில் காணப்படும் குழப்பங்கள், கவலைகள்,போராட்டங்கள் அனைத்தையும் பேரளவிற்குக் குறைத்து விடும்.

கர்மம் அல்லது செயலின் விளைவு கர்மாசயம். இது ஆசைகளாகவும் உந்து வேகங்களாகவும் கிளர்ந்தெழுந்து மீண்டும் அதே செயலைச் செய்ய நம்மைத் தூண்டுகிறது. 

அனுபவத்தின் விளைவு வாசனை. இது நினைவுகளைத் தோற்றுவிக்கிறது.

-

தர்மம் அல்லது அதர்மம் செயலின் பண்பு. 

சுகம் அல்லது துக்கம் அனுபவத்தின் பண்பு. கர்மாசயம் மட்டுமே மறுபிறவிக்குக் காரணமாகிறது. 

வாசனை, நினைவை மட்டுமே எழுப்புவதால் நேரடியாகப் பிறவிக்குக் காரணமாவதில்லை. ஆனால் ஒவ்வொரு பிறவியிலும் கர்மாசயத்தைக் கிளறி ஒருவனின் வாழ்க்கைப் பாதையை நினைவுகளே தீர்மானிக்கின்றன. 

தனியாக எடுத்துக் கொண்டால் நினைவுகளால் எவ்விதத் தீமையும் இல்லை. நினைவுகள் உந்துவேகங்களுடன் சேரும் போது தான் பிரச்சனை உருவாகிறது. 

புகை பிடிக்கின்ற பழக்கத்திற்கு அடிமையான ஒருவனை எடுத்துக் கொள்வோம். புகை பிடிப்பதால் அனுபவிக்கும் இன்ப நினைவுகள் மனத்தில் எழுந்தவுடனே அவன் மீண்டும் புகை பிடிக்க எண்ணுகிறான்.சிகரெட்டைப் பற்றிய நினைவுகள் எழுந்தாலும் போதும், அவன் உடனே புகைபிடிக்கும்படி தூண்டப்படுகிறான். ஆனால் மருத்துவரின் அறிவுரையால் அல்லது புற்றுநோய் வந்து விடும் என்ற பயத்தால் புகைபிடிக்க வேண்டும் என்ற உந்து வேகத்தை அவன் கட்டுப்படுத்தி விட்டான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவன் புகைபிடிக்க வேண்டும் என்ற வேகமின்றி சிகரெட்டைப்பற்றி நினைக்க முடியும். 

இன்னுமோர் உதாரணம்-

பாபு, கோபுவிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக வைத்துக்கொள்வோம் . இதனால் கோபு, பாபுவை நினைக்கும் போதெல்லாம் கோப உணர்வும் கூடவே எழும். கோபு, பாபுவை மன்னித்து விட்டால், அப்போது பாபுவை நினைத்தாலும் கோபுவிடம் சினம் உண்டாவதில்லை. இயல்புணர்ச்சிகளாகிய இந்த வேகங்களும் நினைவுகளும் பிணைவது தான், அதாவது கர்மாசயமும் வாசனையும் இணைவதுதான் நமது பிரச்சனைகளுக்குக் காரணம்.

இந்தப் பிணைப்பு ஒருவிதப் பாய்ச்சல்போல் நடைபெறுகிறது . தரையை விட்டு விண்ணில் பாயம் ஏவுகணைகளைப் போல் இந்த உந்துவேகங்கள் மணத்தின் உணர்வறு பகுதியிலிருந்து நினைவகளின்மீது பாய்ந்து பற்றிக் கொண்டு உணர்வுப் பகுதியில் தோன்றிவிட்டன . 

இது நிகழ்ந்ததும் இதே செயலால் ஏற்பட்ட கடந்த கால அனுபவங்களையோ எதிர்கால விளைவுகளையோ பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் ஓர் அடிமைபோல் நாம் மீண்டும் செயல்பட்டு விடுகிறோம் . 

தொடர்ந்து பழக்க வசத்தால் ,கடந்த கால அனுபவங்களை அல்லது எதிர்கால விளைவுகளைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் திடீரென ஒரு பொருளைப் பற்றிக் கொள்வதே வாசனை என்கிறது யோக வாசிஷ்டம் . 

நினைவு உந்து வேகப் பிணைப்பைத் துண்டிப்பது தியான வாழ்வின் முதல் கட்டம்., முதல் போராட்டம். மனத்தைத் தூய்மைப்படுத்துதல் என்று கூறுவதன் பொருள் இதுவே. 

தூய்மைப்படுத்தப்பட்ட மனத்தின் இயல்புணர்ச்சிகளோ உந்து வேகங்களோ செயல்படுவதில்லை. 

பல உருவங்களாகவும் எண்ணங்களாகவும் எண்ணற்ற நினைவுகள் அதில் எழலாம். ஆனால் அவை உந்து வேகங்களுடன் பிணைபடுவதில்லை. 

நீல வானில் உலவும் மழைதரா வெண்மேகக் கூட்டங்கள் போல் இந்த நினைவுகளும் மனத்தின் உணர்வுப் பகுதியில் சிறிது நேரம் உலவிவிட்டு மறைந்து போகும்.

சமஸ்காரங்களை தூய்மைப்படுத்துதல் 

மனத்தைத் தூய்மைப்படுத்துவது என்பது உண்மையில் சமஸ்காரங்களைத் தூய்மைப்படுத்துதலே, அதாவது கர்மாசயத்திற்கும் வாசனைக்கும் இடையே உள்ள பிணைப்பை விலக்குதல் 

இதை எப்படிச் செய்வது? 

தவம் ஒரு வழி. 

உந்து வேகங்களுக்கு அடிமைப்படாமல் அது தூண்டும் செயல்களைச் செய்யாமலிருத்தல்,அந்தச் செயலைத் தவிர்த்தல் அந்தச் செயலைச் செய்ய வேண்டிய சூழ்நிலையிலிருந்து விலகல்,இப்படி த் தொடர்ந்து செய்வதன் மூலம் அந்த வேகங்களைப் பலவீனப்படுத்துதல். 

இன்னொரு வழி நற்கருமங்கள்,புரிதல், இதன்மூலம் மனத்தில் நல்ல சமஸ்காரங்கள் உருவாகின்றன. நல்ல சமஸ்காரங்கள் அதிகமாகும் போது தீய சம்ஸ்காரங்கள் தலைதூக்காமல் தடுக்கப்படுகின்றன. காலப்போக்கில் அவை வலுவிழக்கின்றன.

தவம் புரிதலும் நற்கருமங்கள் செய்வதும் தியான வாழ்வின் ஆரம்பக் காலத்தின் மிகவும் இன்றியமையாதவை. இந்த இரண்டு வழிகளுடனும் கடைபிடிக்கத்தக்கதான இன்னொரு வழியைப் பதஞ்ஜலி கூ றுகிறார். உந்து வேகங்களுக்கும்,மனத்தில் எழும் உருவங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பின் இயல்பை மாற்றுவதன் மூலம் கர்மாசயத்திற்கும் வாசனைக்கும் இடையிலுள்ள தொடர்பின்,இயல்பை மாற்றுவது தான் அந்த வழி.


  

மனத்தில் எழுகின்ற உருவங்கள் மனத்தை வெகுவாகப் பாதிக்கின்றன. தீய உந்து வேகங்கள் எழும் போது அவற்றை தெய்வீகமான மனிதர் ஒருவருடன் இணைத்தால் அந்த வேகங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.அது போலவே கெட்ட வேகங்கள் எழுந்ததும் அவற்றை நல்ல உணர்ச்சிகளுடன் இணைத்து விட்டால் அவை அடங்கும். இவ்வாறு மனத்தில் எழும் உருவங்களுக்கும், உந்து வேகங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பின் இயல்பை மாற்றுவது பிரதிபட்சபாவனம் எனப்படுகிறது. 

ஆனால் தகுந்த ஆன்ம ஆராய்ச்சியுடன் தான் இந்த பிரதிபட்ச பாவனம் செய்யப்பட வேண்டும்.பல தடவை செயல் முறையில் சோதித்துப் பார்த்த பின்னரே இந்த வழி பயன் தரும். 

நான்காவதாக ஒரு வழி உள்ளது. இது மிகவும் உயர்ந்தது. 

சுயேச்சையைப் பிரித்து விடுவதே அந்த வழி 

உருவங்களையும் உந்து வேகங்களையும் இணைக்கும் சக்தி எது? சுயேச்சை. 

இதனை விலக்கிவிட்டால் சம்ஸ்காரங்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும். இது அவ்வளவு எளிதல்ல. வேறு பல சாதனை முறைகளில் துணையுடன் மட்டுமே இதனைச் செய்ய முடியும். 

நாம் நமது உந்து வேகங்களைப் பொதுவாக மூன்று விதமாக வெளிப்படுத்துகிறோம்.ஒரு பொருளை நோக்கி எதிராக மற்றும் அந்தப் பொருளிலிருந்து விலகி விடுதல். இவை முறையே பற்று (ராகம்) , வெறுப்பு, (த்வேஷம்), அச்சம்(பயம்) ஆகின்றன. 

இந்த உந்து வேகங்களையும்  அவை தூண்டிச் செயல்படுத்துகின்ற செயல்களையுமே நன்மை. தீமை என்றெல்லாம் நாம் கூறுகிறோம். 

நினைவுகள் அதாவது நம் மனத்தில் எழும் பல்வேறு உருவங்கள் நடுநிலையானவை. அவை நல்லவையுமல்ல, தீயவையுமல்ல, உந்து வேகங்களுடன் சேரும் போது தான் அவை நல்ல அல்லது தீய நிறம் பெறுகின்றன. 

மனத்தைத் தூய்மைப் படுத்துவது என்பது உண்மையில் நினைவுகளை உந்து வேகங்களின் பிடியிலிருந்து விடுவிப்பது தான். 

இதையே பதஞ்ஜலி , ஸ்ம்ருதி பரிசுத்த அல்லது நினைவைத் தூய்மைப் படுத்தல் என்கிறார். 

எனவே கெட்ட எண்ணங்கள் மனத்தில் எழுந்தால் பயப்பட வேண்டியதில்லை, சோர்ந்து விட வேண்டியதில்லை. நிதானமாக, இந்த எண்ணங்களைக் கெட்ட உந்து வேகங்களிலிருந்து பிரிக்க வேண்டும். 

இதற்கு ஆன்ம ஆராய்ச்சி மிகவும் அவசியம். 

ஏனெனில் மனத்தில் எழும் இந்த உருவங்கள் ஆன்மாவுடன் கூடிய தொடர்பினாலேயே உயிரும் , உணர்வும் பெற்றவை போல் தோன்றுகின்றன. 

சுயேச்சையைப் பிரிப்பதன் மூலம் ஆன்மாவையும் மன உருவங்களையும் பிரித்து விட்டால் இந்த உருவங்கள் காற்று இழந்த பலூன் போலச்சுருங்கி, உயிரற்றவை போல் உணர்விழந்து மறைந்து விடுகின்றன. 

சம்ஸ்காரங்கள் செயலாற்றும் விதம்

-

பொதுவாக சம்ஸ்காரங்கள் எண்ண அலைகளாகிய பின்னரே நாம் அவற்றை அறிய முடிகிறது. 

நினைவுகளும் உந்து வேகங்களும் எண்ண அலையின் வேறு வடிவங்கள் ஆகும். 

இந்த உணர்ச்சிகள் முளையிலேயே கிள்ளப்படவேண்டும். வேரிலேயே வெட்டப்பட வேண்டும். அவை நம்மைத்தூண்டிச் செயல்பட வைக்குமுன்னர் அவற்றின் நுண்நிலையிலேயே கட்டுப்படுத்த வேண்டும். 

ஆழ்மனத்திலிருந்து இந்த உணர்ச்சிகள் எந்த நுண்நிலைகளில் கிளர்ந்தெழுகின்றன என்பதெல்லாம் மிகப்பலருக்குத் தெரியாது. ஏரியின் அடிமட்டத்திலிருந்து குமிழி எழும்போது நமக்குத் தெரிவதில்லை. நீர் பரப்புக்கு அருகில் வரும் போது கூட நாம் அதைக் காண்பதில்லை. நீர் மட்டத்திற்கு வந்து அந்தக் குமிழி உடையும் போது தான் அதைப் பார்க்கிறோம். என்கிறார் சுவாமி விவேகானந்தர். 

தொடர்ந்து செய்யும் தியானப் பயிற்சியாலும் மனத்தூய்மைப் பயிற்சியாலுமே மனத்தின் செயல்பாடுகளையும் சம்ஸ்காரங்கள் செயல்படும் விதத்தையும் அறிய முடிகிறது. 

சம்ஸ்காரங்கள் எப்படி எண்ண அலைகளாக மாறுகின்றன.? சம்ஸ்காரங்களை எது தூண்டி எழச்செய்கிறது. 

இதற்கு விடை காண ஒரு டேப் ரிக்கார்டர் இயங்கும் விதத்தை நினைவு கூர வேண்டும் ஒலி நாடாவில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள பாடல்களை மின்சாரம் பாய்ந்ததும் மீண்டும் ஒலிக்கின்றன. இது போலவே நம் மனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்ஸ்காரங்கள் , பிரபஞ்ச ஆற்றல் பாய்ந்ததும் செயல்படத் தொடங்குகின்றன.இந்தப் பிரபஞ்ச ஆற்றல் எது?

பிராணன்

-

நமது வேதங்களும் தந்திரங்களும் இந்தப் பிரபஞ்ச ஆற்றலைப் பிராணன் என்று கூறுகின்றன. 

பிராணன் என்றால் நாம் சுவாசிக்கும் காற்று அல்ல. இதை மிகத் தெளிவாகக் கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்.

பிரபஞ்சத்திலுள்ள தூல, சூட்சும சக்திகள் அனைத்தின் கூட்டுசக்தியும் தொடக்கத்தில் இருந்த நிலைக்கு மாறும் நிலையில் பிராணன் என்று அழைக்கப்படுகிறது. 

பிராணனின் இயக்கம் நமது உடலிலுள்ள இடகலை, பிங்கலை என்னும் இரு முக்கிய நுண்நாடிகளின் இயக்கத்தைப்பொறுத்து அமைவதாக யோகிகள் கூறுகின்றனர். 

இந்த நாடிகளைக் கட்டுபடுத்துவதற்கான பயிற்சி பிராணயாமம். இவற்றின் இயக்கம் கட்டுப்படுத்தப்படும் போது மனம் அமைதியாகிறது. 

ஆனால் மனத்தைக்கட்டுப்படுத்த பிராணயாமம் ஒரு நிலையான வழியல்ல.ஏனெனில் பிராணயாமம்,,சமஸ்காரங்களைக் கட்டுப்படுத்துமே தவிர அவற்றை அழிக்காது. 

எனவே பிராணாயாமத்தின் ஆற்றல் நீங்கியதும் சம்ஸ்காரங்கள் மீண்டும் முளைக்கின்றன. வாசனை,கர்ம பீஜம் இரண்டையும் பிராணன் தூண்டி செயல்படுத்துகிறது. 

நீரின் மேற்பரப்பில் தோன்றும் குமிழிகளைப் போல் வாசனை ஏற்படுத்தும் நினைவுகள் மனத்தின் மேற்பகுதியை மட்டுமே பாதிக்கின்றன. ஆனால் கர்மயாசம் உண்டாக்கும் ஆசைகளும் உந்து வேகங்களும் மனம் முழுவதையுமே ஆட்டி வைக்கின்றன. அது மட்டுமின்றி மனத்தைத் துண்டாடியும் விடுகின்றன. 

எனவே கர்மாசயம்தான் தன்னறிவின் தொடர்பறு நிலைக்குக் காரணமாக அமைகிறது. மனத்தின் மேற்பரப்பில் எழுகின்ற தூல விருத்திகளை மட்டுமே தியானத்தால் கட்டுபடுத்த முடியும் என்று பதஞ்ஜலி தெளிவாகக் கூறுகிறார். 

அப்படியானால் உணர்ச்சிப் போராட்டங்களால் துண்டாடப்பட்ட மனத்தை எப்படிச் சீராக்குவது? தன்னறிவின் தொடர்பறு நிலையை எப்படித் தவிர்ப்பது? 

அதற்கு ஒரே வழி கர்மாசயத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமே.

image138

சம்ஸ்காரங்களின் ஐந்து நிலைகள்

மனத்தின் செயல்பாடுகள்

  

சம்ஸ்காரங்களின் ஐந்து நிலைகள்

-

சம்ஸ்காரங்களை கட்டுப்படுத்த வேண்டுமானால் அவை செயலாற்றும் விதத்தை நாம் அறிந்திருக்க வேண்டும். 

எல்லா சம்ஸ்காரங்களும் ஒரே நிலையில் இருப்பதில்லை. அவை ஐந்து நிலைகளில் இருப்பதாகப் பதஞ்ஜலி கூறுகிறார்.

மந்த நிலை(ப்ரஸீப்தம்)

-

இந்த நிலையில் சம்ஸ்காரங்கள் முழுமை பெறாமல் இருக்கின்றன. 

பிறக்கும் போது நாம் எண்ணற்ற சம்ஸ்காரங்களுடன் பிறக்கிறோம். ஆனால் குழந்தையாக இருக்கும் போது சில சம்ஸ்காரங்களே செயல்படுகின்றன.மற்றவை மந்த நிலையில் இருக்கின்றன. நாம் வளரவளர இவையும் செயல்படத் தொடங்குகின்றன. 

இன்னும் ஒன்று-

எண்ணற்ற சம்ஸ்காரங்கள் மனத்தில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பிறவியில் எல்லா சம்ஸ்காரங்களும் செயல்படுவதில்லை. எந்த சம்ஸ்காரங்கள் செயல்படச் சூழ்நிலை உகந்ததாக இருக்கிறதோ அந்த சம்ஸ்காரங்கள் மட்டுமே செயல்படுகின்றன. மற்றவை மந்த நிலையிலேயே இருந்து விடுகின்றன. 

எனவே சம்ஸ்காரங்கள் செயல்படச் சூழ்நிலையும், முக்கியக் காரணம் என்பது தெரிகிறது.

நல்ல, ஏற்புடையதான வீட்டுச் சூழ்நிலையும் சமுதாயச் சூழ்நிலையும் மனிதனிலுள்ள நல்ல சம்ஸ்காரங்களைச் செயல்பட வைக்கின்றன

கிளர்ந்த நிலை(உதாரம்)

-

இந்த நிலையில் சம்ஸ்காரங்கள் கிளர்ந்தெழுந்து சுதந்திரமாகச் செயல்படுகின்றன. ஏற்றச் சூழ்நிலை உண்டாகும் போது நம்மிடம் மறைந்துள்ள மனப்பாங்குகள் எல்லாம் வெளிப்படுகின்றன.ஆனால் அவற்றுள் சமுதாயம் அங்கீகரிப்பவை மட்டுமே சுதந்திரமாகச் செயல்படுகின்றன. 

நம் மனத்தில் எழும் சின்னச்சின்ன ஆசைகள் இந்த நிலையில் இருப்பவை.

அமுக்க நிலை(விச்சின்னம்)

-

நம் ஒவ்வொருவருள்ளும்,சமுதாயம் அங்கீகரிக்காத தீவிரமான சில ஆசைகளும் உள்ளன. அவற்றை நம்மால் நிறைவேற்ற முடியாது.

இத்தகைய ஆசைகள் அப்படியே அமுக்கப்பட்டு, மனத்தின் உணர்வறு பகுதியில் அடைக்கப்பட்டு விடுகின்றன. இந்த நிலையே சம்ஸ்காரங்களின் மூன்றாவது நிலை. 

எரிமலை போன்ற நிலை இது. உள்ளே சம்ஸ்காரங்கள் குமுறிக் கொந்தளித்துப் போராடிக் கொண்டிருக்கின்றன. அதே வேளையில் அவற்றைவிட வலிமை மிக்க சம்ஸ்காரங்கள் அவற்றை வெளியேற விடாமல் அமுக்கிப் பிடித்திருக்கின்றன.

யோக சாஸ்திரம் அதைச் சரியாக விளக்குகிறது. அதாவது வலிமை மிக்க சம்ஸ்காரங்கள் வலிமை குறைந்த சம்ஸ்காரங்களை அடக்குகிறது என்கிறது யோக சாஸ்திரம். 

உதாரணமாக காமம் அல்லது பேராசை சம்ஸ்காரத்தை பய சம்ஸ்காரம் அடக்குகிறது. 

இவை அனைத்தும் உணர்வறு மனத்தின் ஆழங்களில் நடப்பதால் நாம் இவை எதையும் உணர்வதில்லை.

உணர்வறு பகுதியில் நடக்கும் இந்த அமுக்க நிலைப் போராட்டங்கள் ஏராளமான மன சக்தியை விரயம் செய்கின்றன. இதனால் மனம் ஆற்றலை இழந்து பலவீனமாகி தியானத்திற்குத் தகுதியற்று விடுகிறது.

மீண்டும் மீண்டும் மனத்தை ஆராய்வதன் மூலமும் மனத்தை எப்போதும் விழிப்பு நிலையில் வைத்திருப்பதன் மூலமும் சாதகன் இந்த அமுக்க நிலையைத் தவிர்க்க வேண்டும். 

உணர்வறு பகுதிகளில் நடக்கும் போராட்டங்களையும் அவற்றிற்கான காரணங்களையும் கண்டுபிடித்து அமுக்க நிலையிலிருந்து விடுபடவேண்டும்.

உறை நிலை(தனு)

-

ஆசைகளையும் உணர்ச்சி வேகங்களையும் நாம் நமது முயற்சியுடனும் உணர்வுடனும் அடக்கும் போது அந்த சம்ஸ்காரங்கள் வீரியத்தை இழந்து பலமற்று விடுகின்றன. அவை மனத்தின் உணர்வுப் பகுதிக்கு வருவதில்லை.உணர்வுவறு பகுதியின் மேற்பரப்பில் அதாவது உணர்வுப்பகுதிக்கு எட்டுகின்ற இடங்களிலேயே அவை உறை நிலையில் இருக்கின்றன. 

சமஸ்காரங்களை உறைநிலைக்கு மாற்றுவதற்குக் கடினமான சாதனைகளும் மனத்தூய்மைப்பயிற்சிகளும் அவசியம்.

அமுக்க நிலையில் சம்ஸ்காரங்கள் மிகுந்த ஆற்றலுடன் குமுறிக் கொண்டிருக்கின்றன. அமுக்க நிலை சம்ஸ்காரங்கள் உணர்வுப்பகுதியில் இல்லை. உணர்வுப் பகுதிக்கு எட்டுகின்ற இடத்திலும் இல்லை. உறை நிலையில் சம்ஸ்காரங்கள் தங்கள்வலிமையை இழந்து கிடக்கின்றன. அவையும் உணர்வறு பகுதியிலேயே உள்ளன. எந்த வேளையிலும் அவற்றை உணர்வுப்பகுதி அடக்கிவிட முடியும்.

பொதுவாக யோகிகளின் ஆசைகளும் உந்து வேகங்களும் உறை நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. இதனால் அவர்களது மனம் அமைதி நிலையில் உள்ளது. அவர்கள் புலனடக்கத்தால் வரும் இன்பமான சமசுகத்தை அனுபவிக்கிறார்கள். 

அமுக்க நிலை மிகவும் ஆபத்தானது.இதனால் மனக் கோளாறுகள் கூட ஏற்படலாம். ஆனால் நாமாக சம்ஸ்காரங்களை அடக்கி உறைநிலைக்கு மாற்றும் போது மன ஆற்றல் வளர்கிறது. 

சாதனையின் ஆரம்பகாலங்களில் இந்த முயற்சியில் போராட்டம் தவிர்க்க முடியாதது. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல சாதகன் உயர்ந்த உணர்வு நிலைகளை அடைய இந்தப் போராட்டம் உதவுகிறது.

வறுத்த விதை நிலை-(தக்த பீஜம்)

-

சம்ஸ்காரங்கள் உறைநிலையில் உள்ளது என்றால் அவை அழிந்து விட்டதாக பொருளில்லை. வெறுமனே நிலத்திலிட்ட விதை முளைப்பதில்லை. ஆனால் நீர் வார்க்கப்பட்டால் முளைக்கும்.அது போலவே உறை நிலை சம்ஸ்காரங்களும் தூண்டப்பட்டால் கிளர்ந்தெழுந்து செயல்படத் தொடங்கிவிடும். 

ஆனால் விதையை நெருப்பில் வறுத்து விட்டோமானால் அவை முளைக்குமா? எவ்வளவு நீர் விட்டாலும் முளைக்காது. அது போல் உயர் ஆன்மீக உணர்வு ஒளி பட்டு விட்டால் சம்ஸ்காரங்கள் மீண்டும் கிளர்வதில்லை. இதுவே சம்ஸ்காரங்களின் ஐந்தாவது நிலை

தொடர்ந்த ஆன்மீக அனுபவங்களின் மூலம் யோகி ஆசைகளையும் உந்து வெகங்களையும் சுட்டெரித்து விடுகிறான். 

இவ்வாறு எரிக்கப்பட்ட சம்ஸ்காரங்களின் வறுத்த விதை நிலைக்கு மாறி விடுகின்றன. இந்த நிலையில் மனம் புலன்வழிப் பொருட்களுடன் தொடர்பு கொண்டாலும் சம்ஸ்காரங்கள் முளைப்பதில்லை. சம்ஸ்காரங்களை முழுமையாக அழிக்க இது ஒன்றே வழி. 

ஆன்ம ஒளி பெற்ற மகான்களிடம் கர்மாசயம் முழுவதும் இவ்வாறு முளைக்க முடியாதவாறு செய்யப்பட்டு விடுகிறது.எனவே அவரிடம் ஆசைகளோ உந்து வேகங்களோ இல்லை.ஆனால் வாசனைகளால் ஏற்படுகின்ற நினைவுகள் அவரிடம் இருக்கவே செய்யும்.அதனால் எவ்விதத் தீங்கும் விளைவதில்லை. 

எரிந்த கயிறு பார்வைக்கு நல்ல கயிறு போல் தோற்றமளிக்கும்.ஆனால் அந்தக் கயிற்றால் எதையும் கட்ட முடியாது. அது போலவே மகான்களிடம் காணப்படுகின்ற ஆசைகள் வெறும் சாயல் மட்டுமே. 


  

தொடர்பறு நிலையும் உணர்வின் மூன்று நிலைகளும்

-

சம்ஸ்காரங்கள் எப்படி மனத்தைப் பல கூறாக்கி தொடர்பறு நிலையை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டோம். 

இன்னொரு விதமாகவும் இந்த நிலை ஏற்படலாம். இது மிகவும் இயல்பானது.ஆனால் மிகத் தீவிரமானதும் இதுவே.நமது உணர்வு மூன்று நிலைகளாகப் பிரிந்திருப்பதே அந்தத் தொடர்பறு நிலை. 

விழிப்பு நிலை(ஜாக்ரம்) , 

கனவு நிலை(ஸ்வப்னம்), 

தூக்க நிலை(சுஷீப்தி) என மூன்றாக நமது உணர்வு பிரிந்திருக்கிறது.

இந்தப் பிரிவு, சம்ஸ்காரங்களால் ஏற்பட்டதல்ல. வாழ்வின் முக்கியமான இந்தப் பிரிவு எப்படி ஏற்படுகிறது. என்பது இதுவரை கண்டு பிடிக்கப் படாத மர்மமாக உள்ளது. 

விழிப்பு,கனவு, தூக்கம் இந்த மூன்று நிலைகளும் ஒன்றுக்கொன்று மிகவும் மாறுபட்ட நிலைகள்.

இவை ஒவ்வொன்றும் தனி உலகங்களில் நிகழ்வது போல் உள்ளன. 

இடம்,காலம்,அனுபவிப்பவர் எல்லாமே வேறானவை. கனவு நிலை, விழிப்பு நிலையின் தொடர்ச்சியல்ல. அது போலவே ஆழ்ந்த தூக்க நிலை, கனவு நிலையின் தொடர்ச்சியல்ல.-இரண்டு நிலைகளுக்கும் இடையில் இடைவெளி உள்ளது. 

நமது உணர்வு தொடர்ந்து வெளிப்படுவதும், உள்வாங்குவதுமாகச் சுழன்று கொண்டே இருப்பது போல் தோன்றுகிறது. 

இந்த மூன்று நிலைகளிலும் தொடர்ச்சியாக இருப்பது ”நான்”என்னும் தன்னுணர்வு மட்டுமே. 

ஜீவான்மா அல்லது உயிருக்குப் பல பரிமாணங்கள் உள்ளன என்பதையே இது காட்டுகிறது. இந்தப் பரிமாணங்களுக்கு ஏற்றாற்போல் மனிதனின் ஆளுமையிலும் பல நிலைகள் அல்லது அடுக்குகள் உள்ளன.

பண்டை நாட்களில் இந்தியாவில் இந்த நிலைகளை மிகவும் ஆர்வத்துடன் படிக்கவும் ஆராயவும் செய்திருந்தனர். 

ஆன்மீக சாதகர்கள் இந்த நிலைகளைப் பற்றி தெளிவாக அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் தியான வாழ்வில் இந்த மூன்று நிலைகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. 

உண்மையான ஆன்மீக அனுபவம் என்பது இந்த மூன்று நிலைகளையும் கடந்தது. அந்த நிலையில் ஆன்மாவின் உண்மை இயல்பு வெளிப்படுகிறது. அது, பரமான்மாவுடனான தனது உறவை அறிகிறது.

இந்த அனுபவத்தின் பேரொளி, உலகியல் ஆசைகளைச் சுட்டெரிக்கிறது.

மற்ற அனுபவங்களைப் போலவே ஆன்மீக அனுபவமும் சம்ஸ்காரங்களை மனத்தில் விட்டுச் செல்கிறது. இந்த சம்ஸ்காரங்கள் உலகியல் சம்ஸ்காரங்களை அடக்கிக் கட்டுப் படுத்துகின்றன. 

கீழ் நிலை மற்றும் உயர்நிலை மனங்களை இணைக்கின்ற ஒரு பாலம் தியானம். 

அந்தப் பாலத்தின் வழியாக துன்பமும் ஆரவாரமும் நிறைந்த உலகிலிருந்து அமைதியும் ஆனந்தமும் நிறைந்த உலகிற்கு சாதகன் செல்கிறான். 

இருள் நிறைந்த உலகிலிருந்து ஒளி நிறைந்த உலகிற்குச் செல்கிறான். ஆரம்பக் கால ஆன்மீக சாதனைகள் அனைத்தும் தியான உணர்வில் தான் நிறைவுறுகின்றன. 

ஆரம்பக் கால ஆன்மீக சாதனைகளின் மூலம் சாதகன் கட்டுப்பாடின்றி அலைகின்ற மனத்தை மெள்ள மெள்ளக் கடக்கிறான். 

அங்கு அவன் எண்ணம் என்னும் தடையைச் சந்திக்க நேர்கிறது..

எண்ணங்கள் மிகமிகச் சாதாரணமானவை. உறுதியோ செறிவோ இல்லாதவை. ஆயினும் எண்ணங்களை எளிதில் கடக்க முடியாது. தியானத்தின் மூலம் மட்டுமே சாதகன் எண்ணத் தடையைக் கடக்க முடியும்.உயர்ந்த உள்ளுணர்வு நிலைகளை அடைய முடியும். 


  

மனத்தின் ஐந்து நிலைகள்

-

விழிப்பு,கனவு,ஆழ்ந்த தூக்கம் என்னும் மூன்று நிலைகள் வழியாக உணர்வு விரிந்து சுருங்குகிறது என்பதைக் கண்டோம். 

விழிப்பு நிலையில் கூட மனம் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. 

யோக சூத்திரங்களின் விளக்கவுரை ஆசிரியர்கள் மனம் ஐந்து நிலைகளில் இருப்பதாகக் கூறுகிறார்கள். 

அவை சஞ்சல நிலை(ஷிப்தம்), 

மந்த நிலை(மூடம்) , 

பல முகநிலை(விஷிப்தம்) 

ஒருமுக நிலை (ஏகாக்ரம்), 

மூடு நிலை(நிருத்தம்).

ஒவ்வொருவரிடமும் இவற்றுள் ஏதாவது ஒரு நிலை மேலாதிக்கம் பெற்றிருக்கும். அதுவே அவரது நடத்தையை நிர்ணயிக்கிறது., என்கிறார் போஜர். 

முதல் நான்கு நிலைகளிலும் மனம் மாறிமாறி இருப்பதை சாதகர்கள் உணர முடியும். 

தியான வாழ்வில் ஆரம்ப க் காலத்தில் இது ஒரு பெரும் பிரச்சனை. மனத்தின் இந்த ஐந்து நிலைகளைப் பற்றியும் சாதகர்கள் தெரிந்து வைத்திருத்தல் இன்றியமையாதது.

சஞ்சல நிலை

-

இந்த நிலையில் மனம் புலன்களின் இழுப்புக்கெல்லாம் இழுபடுகிறது. மலருக்கு,மலர் தாவும் வண்ணத்துப்பூச்சி போல் படபடக்கிறது. எதிலும் சிறிது நேரம் கூட நிலையாக அதனால் அமர முடிவதில்லை. பொதுவாக குழந்தைகளிடம் இந்த நிலையை நாம் காணமுடியும். வெறும் புலனின்ப வாழ்க்கை வாழ்பவர்களின் நிலையும் இதுவே.

இந்த நிலையில் ரஜோ குணம் மேலோங்கி நிற்கிறது.நெறியான செயல்கள், ஆழ்ந்த படிப்பு யோகப் பயிற்சிகள் போன்றவை மூலம் மனத்தின் சஞ்சல நிலையைக் கட்டுப்படுத்த முடியும். 

மந்த நிலை

-

இந்த நிலையில் மனத்தில் தமோ குணம் ஓங்கி நிற்கிறது. மனம் எப்போதும் சோம்பி இருக்கிறது. இதற்குக் காரணம் நோய் அல்லது உடற்களைப்பாக இருக்கலாம்.

ஆனால் மனப்போராட்டங்களும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளுமே மந்த நிலைக்கு முக்கியக் காரணம். 

எதிரெதிரான இரண்டு ஆசைகளின் காரணமாக மனப்போராட்டம் ஏற்பட்டு முடிவுக்கு வர முடியாமல் மனம் திணறும் போது அது களைத்து மயான அமைதி போன்ற அமைதியில் ஆழ்ந்து விடுகிறது. 

ஆனால் உணர்வறு தடைகளின் காரணமாக, மனப்போராட்டத்திற்கான காரணத்தை அறிய முடியாமல் போகுமானால் நிலைமை இன்னும் மோசமாகி விடுகிறது.

மனவாட்டம், மனத்தளர்வு,ஆன்மீக ச்சோர்வு போன்ற பிரச்சனைகளுக்குக் காரணம், மனத்தின் உணர்வறு பகுதியில் நடைபெறும் போராட்டங்களால் ஏற்படுகின்ற மன அழுத்தமே.

பலமுக நிலை

--

இந்த நிலையில் மனம் சோம்பி இருப்பதில்லை.அதே வேளையில் முதல் நிலையைப்போல் சஞ்சலப்பட்டு அலைபாய்வதும் இல்லை. பல கருத்துகளால் மனம் நிறைந்து இருக்கிறது. 

அதாவது பலமுகப்பட்டுநிற்கிறது. 

விஞ்ஞானிகள், கலைஞர்கள், தத்துவவாதிகள், அறிஞர்கள்,சமூகசேவகர்கள் போன்றவர்களின் மனம் இந்த நிலையில் இருக்கிறது. 

ரஜோ குணமும் சத்வ குணமும் ஏறக்குறைய சமமாக இருப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. 

இந்த நிலையில் மனம் இருக்கும் போது தான் நாம் மனஒருமைப்பாட்டுப் பயிற்சிகளைப் பழக முடியும்.

முதல் இரண்டு நிலைகளிலும் மன ஒருமைப்பாடு என்ற பேச்சிற்கே இடமில்லை. 

நெறியான செயல், படிப்பு, ஆழ்ந்த சிந்தனை- இவை மூலம் மனத்தைப்பலமுக நிலையில் வைத்திருக்கவாவது ஆன்மீக சாதகர்கள் பயில வேண்டும். 

ஒரு முக நிலை

-

இந்த நிலையில் தான் உயர்ந்த ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட முடியும். இந்த நிலையில் எந்தவிதப் போராட்டங்களோ ஆசைப்பிணைப்புகளோ இல்லை. 

உயர்மனமாகிய புத்தி அல்லது உள்ளுணர்வு விழித்திருக்கிறது. சத்வ குணம் மேலோங்கிய நிலை இது. 

முதல் மூன்று நிலைகளும் மனிதனுக்குப் புதியவையல்ல. இயல்பானவை. ஆனால் இந்த ஒருமுக நிலை சாதனைகளால் முக்கியமாக, பிரம்மசரியத்தால் அடையப்படவேண்டிய நிலையாகும். 

முழுமையான பிரம்மசரியம்,ஓஜஸ் என்றும் ஆன்மீக சக்தியை வளர்க்கிறது. இந்த சக்தி வளரும் போது மூளை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது. 

மின்னாற்றல் போன்றதோர் புதிய ஆற்றல் அங்கு உருவாகிறது. 

சாதகன் தனது நுண்ணுடலை ஒளியுடலாகக் காண்கிறான்.

இங்கே ஒரு முகநிலை எனக் கூறப்பட்டது, சாதாரண மன ஒருமைப்பாட்டை விட மிகவும் உயர்ந்த ஓர் உணர்வு நிலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

இந்த நிலை நிரந்தரமாக வேண்டுமானால் நமது மனமும் உடலும் தயாராக இருப்பது மிகவும் அவசியம்.

மூடு நிலை

-

முந்தைய நிலைகளில் விருத்திகள் அடக்க மட்டுமே செய்யப்பட்டன. உணர்வு கடந்த இந்த நிலையில் மனமே மூடப்பட்டு விடுகிறது. 

எண்ண அலைகள் எதுவும் மனத்தில் எழுவதில்லை. எனவே எந்த அனுபவமும் இல்லை. ஆனால் சம்ஸ்காரங்கள் மட்டும் உணர்வறு பகுதியில் இருக்கும். 

இந்த நிலையில் மனம் மனமாக இருப்பதில்லை என்கிறார் கௌடபாதர். 

இந்த நிலையை யோகிகள் அசம்ப்ரஜ்ஞாத நிலை அல்லது நிர்பீஜ நிலை என்கிறார்கள். வேதாந்திகள் நிர்விகல்ப நிலை என்கிறார்கள். 

நான்காவது நிலையில் நிரந்தரமாக இருக்க முடிந்த ஒருவரால் மட்டுமே இந்த உயர்ந்த நிலையை அடைய முடியும்.

ஹட யோகம் போன்ற பயிற்சிகளின் மூலம் செயற்கையாக மனத்தை மூட , அதாவது மனத்தின் செயல்பாட்டை நிறுத்த முயன்றால் வருவது மனமயக்கம். அதாவது ஹிப்னாடிசத் தூக்கம் போன்ற ஒரு நிலை. இது உணர்வு கடந்த நிலையல்ல, உணர்வற்ற நிலை. 


  

மனத்தின் செயல்பாடுகள்

-

மனம் என்றால் என்ன? இந்தக் கேள்விக்குச் சரியான பதில் சொல்வது கடினம். காற்றைக் காண முடியாது. வீசும் போது உணர மட்டுமே முடியும். அது போல மனம் பூரணமாக அமைதி நிலையில் இருக்கும்.போது அது இருப்பதைக் கண்டு பிடிக்க முடியாது. அது செயல்படும் போது அதன் செயல்பாடுகளை வைத்தே அது இருப்பதை அறிய முடியும்.

மனத்தின் செயல்பாடுகள் பலவற்றை முன்பே கண்டோம். தொடர்ந்து செல்லும் முன்னர் அவற்றைச் சுருக்கமாக இங்கு க்காண்போம். 

பண்டைய யோக ஆசிரியர்களுள் ஒருவரான பஞ்சசிகாவின் கூற்றுப்படி மனத்தின் செயல்பாடுகளை இருவிதமாகப் பிரிக்கலாம். 

அவை 1.உணரப்படக் கூடியவை(பரி-த்ருஷ்டா), 2.உணரப்பட முடியாதவை(அபரி-த்ருஷ்டா). 

பெயர், உருவம் . உணர்ச்சிகள் இவற்றை உண்டாக்கும் எண்ணங்கள் முதல் வகையைச் சேர்ந்தவை. இவற்றை நாம் உணர முடியும். 

இரண்டாவது வகை எண்ணங்களின் செயல்பாடுகளை உணர முடியாது. ஆனால் அவை ஏற்படுத்தும் விளைவுகளிலிருந்து அவற்றை உணர்ந்து கொள்ள முடியும். 

இவை ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப் படுகின்றன.

1.முதலாவதாக வருவது நிரோதம். 

-

இந்த நிலையில் மனம் எண்ணங்கள் எதுவுமின்றி இருக்கிறது. இரண்டு எண்ணங்களுக்கு இடையில் , அதாவது ஓர் எண்ண அலை மறைந்து அடுத்த அலை எழுமுன்னர் மனம் இந்த நிரோத நிலையில் இருப்பதை நாம் உணர முடியும். 

இந்த இடைவெளி மிகமிகச்சிறியதாக இருப்பதால் பொதுவாக நாம் இதை உணர்வதில்லை. பயிற்சியின் மூலம் இந்த இடைவெளியை நீட்ட முடியும்.

2.இரண்டாவது கர்மம், அதாவது கர்மாசயம். 

3.மூன்றாவது சம்ஸ்காரம்., அதாவது வாசனை. 

இந்த இரண்டையும் ஏற்கனவே நாம் விரிவாகப் பார்த்து விட்டோம். 

4.மனத்தின் நான்காவது செயல்பாடு பரிமாணம். அதாவது மனத்தின் பல்வேறு மாற்றங்கள் இதைப் பற்றிப் பின்னர் பார்ப்போம். 

அடுத்தது, 5.ஜீவனம்- வாழ்க்கையும் பிராணனின் இயக்கமும். –

மனம் பிராணனைக் கட்டுப்படுத்தவும் இயக்கவும் செய்கிறது. 

பிராணன் உடலை இயக்குகிறது. மனம் தான் உண்மையில் வாழ்க்கையை நடத்துகிறது. 

ஆறாவதாக வருவது 6.சேஷ்டை, அதாவது புலன்களை இயக்குதல். 

மனம் சேர்ந்து இயங்கினால் மட்டுமே புலன்கள் செயல்பட முடியும்.

மனம் ஏதோ ஒன்றில் பதிந்திருக்கும் போது நம் எதிரில் இருக்கும் பொருளைக்கூட நம்மால் காண முடிவதில்லை.

மனத்தின் ஏழாவது செயல் 7. சித்தி 

தொலை தூரத்தில் நடப்பவற்றைக் காணல், கேட்டல்,பிறர் நினைவை அறிதல் போன்ற சித்திகள். 

இவை சாதாரண மனிதர்களில் வெளிப்படாத நிலையில் உள்ளன. பதஞ்ஜலி இவற்றை விபூதிகள் என்று குறிப்பிட்டு யோக சூத்திரங்களில் விளக்குகிறார். 

மனத்தின் ”ஆற்றல்கள்” என்ற தமது சொற்பொழிவில் இந்த சித்திகளைப் பற்றியும் இவற்றை உடைய மனிதர்களைத் தாம் சந்தித்ததைப் பற்றியும் அவர்களைச் சோதித்தது பற்றியும் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

பொதுவாக இந்த அதிமன ஆற்றல்கள் அபாயமானவை என்று குறை கூறி ஒதுக்குவதுண்டு. 

இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தன்னளவில் இந்த ஆற்றல்கள் அபாயமானவை அல்ல. அபாயம் அல்லது தீமை அவற்றைப் பயன்படுத்தும் விதத்தில் தான் இருக்கிறது. 

எத்தனையோ மகான்கள் இந்த ஆற்றல்களை நல்ல முறையில் பயன்படுத்தி, துன்புறுகின்ற மனித குலத்திற்கு நன்மை செய்திருக்கிறார்கள். 

இந்த சித்திகள் யோகிகளுக்குத் தடையல்ல, ஆரம்ப சாதகர்களுக்குத் தான் தடையாக இருக்கின்றன என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

போராட்டங்களும், குழப்பமும் துன்பமும் பாவமும் நிறைந்ததாக மனத்தை நாம் எண்ண வேண்டியதில்லை. மனம் அளப்பரிய ஆற்றல்களின் சுரங்கம். பலவித தடைகளின் காரணமாக அதன் மிகச்சிறு பகுதியே சாதாரண வாழ்வில் வெளிப்படுகிறது. இந்த மிகச்சிறு பகுதி தான் விஞ்ஞானம். கலை போன்ற துறைகளுள் வியத்தகு எல்லைகளை எட்டியுள்ளது.

யோகி எப்போதும் தன் மனத்தை அளப்பரிய ஆற்றல்களின், அமைதியின் நன்மையின் இருப்பிடமாக க்கருதுகிறான். 

தூய மனம் மனிதனின் நண்பனாகவும் பண்படுத்தப்படாத மனம் எதிரியாகவும் செயல்படுவதாக கீதை கூறுகிறது. 

தன்னை ஒரு கோழை, பயனற்ற பாவி, பலவீனன் என்றெல்லாம் எண்ணுவதை ஒரு சாதகன் கட்டாயமாத் தவிர்க்க வேண்டும். 

தனது மனத்தில் புதைந்து கிடக்கின்ற எல்லையற்ற ஆற்றல்களை எப்போதும் அவன் நினைவு கூர வேண்டும். அவற்றைக் கண்டு வெளிப்படுத்த வேண்டும்.

இன்றைய நவீன உலகிற்கு சுவாமி விவேகானந்தர் விட்டுச் சென்ற செய்தியின் கரு இது தான். 

இத்தகைய யோகக் கண்ணோட்டம் தியான வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது.


  

சுயேச்சையும் அதன் செயல்பாடுகளும்

-

மனத்தின் எல்லா ஆற்றல்களும் பிரகிருதிக்கு உரியவை. பிரகிருதியினால் தான் மனம் செயல்படவும் செய்கிறது. ஆனாலும் பிரகிருதியின் ஆற்றல்கள் எல்லோரிடமும் ஒரே அளவில் வெளிப்பட்டுத் தோன்றுவதில்லை. 

அறிவு, ஆற்றல், திறமை,வலிமை, உணர்ச்சிகள், குணங்கள்- இவையெல்லாம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றன.ஏன்?

இதற்கான விடையைப் பதஞ்ஜலி இரண்டு முக்கியமான சூத்திரங்களில் கூறுகிறார். 

சுவாமி விவேகானந்தரின் கருத்துப்படி இந்த இரு சூத்திரங்களும் பரிணாமத் தத்துவத்தின் முழு அடிப்படையாக அமைகின்றன. 

அவை வருமாறு-

” உயிர்களின் பரிணாமம் பிரகிருதியின் உள்நிறைவால் ஏற்படுகிறது. வயலுக்கு நீர் பாய்ச்ச விழைகின்ற விவசாயி வரப்பிலுள்ள அடைப்பை அல்ரது தடையை மட்டும் நீக்குகிறான்.தண்ணீர் தானாக வயலில் பாய்கிறது. 

அது போல் பிரகிருதி வெளிப்படுவதில் உள்ள தடைகளை நீக்குவதற்கு மட்டுமே மனித முயற்சி தேவை. ஆற்றல்கள் தாமாக வெளிப்படுகின்றன.

இந்த சூத்திரங்களை விளக்கும் போது சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்,பாசனத்திற்கான நீர் வாய்க்காலில் ஏற்கனவே இருக்கிறது. ஆனால் தடை பட்டிருக்கிறது. தடையை நீக்கியதும் புவியின் ஈர்ப்பு ஆற்றலுக்கேற்ப வெள்ளம் தானாகப் பாய்கிறது. 

அது போலவே எல்லா ஆற்றல்களும் வாய்ப்புகளும் மனிதனுள் ஏற்கனவே உள்ளன. பூரணத்துவம் அல்லது நிறைநிலை என்பது மனிதனின் இயல்பு.இவை வெளிப்பட முடியாமல் தடுக்கப்பட்டிருக்கின்றன. தடையை நீக்குபவனிடம் பிரகிருதி நிறைந்து பாய்கிறது.

பிரகிருதியே எல்லா வேலைகளையும் செய்கிறது. பிரபஞ்சத்தில் நடைபெறும் மாற்றங்கள் அனைத்தும் பிரகிருதியின் வேலையே. பிரகிருதியின் செயல்பாட்டில் வரும் தடைகளை நீக்கவே மனித முயற்சி தேவை. 

தனி மனித முயற்சி எங்கிருந்து வரும்? 

அது பிரகிருதியிலிருந்து வர முடியாது என்று சாங்கியர்கள் கூறுகின்றனர்.ஏனெனில் அதுவும் பிரகிருதியிலிருந்து வருமானால் விவசாயியின் முயற்சி தேவையில்லை என்றாகி விடும். 

அப்படியானால் இந்த முயற்சி ஆன்மாவிலிருந்து வர முடியுமா? 

முடியாது. 

ஏனெனில் ஆன்மா உணர்வு வடிவானது. 

எனவே இந்த முயற்சி ஜீவான்மாவிலிருந்தே வர வேண்டும். ஜீவான்மா என்பது புத்தியில் பிரதிபலிக்கும்  ஆன்மாவின் பிம்பம்.

இந்த ஜீவான்மாவே கர்த்தா, கர்த்தாவின் முக்கிய குணம் தான் சுயேச்சை. ஆன்மாவின் உயர்ந்த நிலை சுயேச்சை.

ஸ்ரீ ராமானுஜரும் பிற துவைதவாதிகளும் ஆன்மா, ஜீவான்மா என்று இரண்டாக பிரிப்பதை ஒத்துக் கொள்வதில்லை. 

அவர்களைப் பொறுத்தவரை உணர்வு நிலையும் சுயேச்சையும் ஒரே ஆன்மாவின் இரு நிலைகள்- முன்னது அசையா நிலை,பின்னது இயக்க நிலை. 

அனைத்தையும் அறிகின்ற நிலையில் ஆன்மா உணர்வுப் பொருள் 

அனைத்தையும் செய்கின்ற நிலையில் ஆன்மா சுயேச்சை.

ஆனால் சுவாமிஜியின் கருத்து நாம் புரிந்து கொள்வதற்கு ஏற்றதாக உள்ளது. அவரது கூற்றுப்படி உணர்வுநிலையிலிருந்து தோன்றியது சுயேச்சை மற்றும் உணர்வு ஆற்றல் இரண்டுமே ஆன்மாவிடம் உள்ளது.

இங்கு ஆற்றல் என்று குறிப்பிடுவது எதையும் புதிதாக உருவாக்கும் ஆற்றலை அல்ல, தடைகளை நீக்கும் ஆற்றலையே. ஏனெனில் புதிதாக உருவாக்குகின்ற அதாவது படைக்கின்ற வேலையைப் பிரகிருதி செய்கிறது. 

நமது யோக சாஸ்திரங்கள் ஆன்மாவை சித்-சக்தி (உணர்வு- ஆற்றல்) என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது. 

யோக சூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதிய வியாசர் இந்த வார்த்தையையே கையாள்கிறார். 

மனத்தைக் கட்டுப்படுத்த மனத்தால் முடியாது. அதை விட உயர்ந்த ஒன்று வேண்டும். அதாவது ஆன்மாவால் தான் அது முடியும். 

ஆன்மா(ஜீவான்மா) சுயேச்சையின் மூலம் இதைச் செய்கிறது. ஆனால் இந்த சுயேச்சையே கட்டுப்பட்டிருக்குமானால் அது எப்படி மனத்தை அடக்கும்? 

சுயேச்சை சுதந்திரமாக இருக்கின்ற அளவிற்கு மனம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. யோகிகளிடம் மட்டுமே சுயேச்சை சுதந்திரமாக உள்ளது.

சுதந்திரமானவர்கள் மட்டுமே சுதந்திர சுயேச்சை உடையவர்களாக இருக்க முடியும். மற்ற அனைவரும் தளைகளில் சிக்கிக் கொண்டே இருக்கின்றனர் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.


  

ஆன்மா எப்போதும் சுதந்திரமானதாகவே இருக்கிறது. தளை அல்லது பந்தம் என்று கூறுவதெல்லாம் சுயேச்சைக்கு மட்டுமே. பந்தப்பட்டிருப்பது சுயேச்சை முக்தி என்று கூறுவது உண்மையில் சுயேச்சையின் சுதந்திரத்தையே.

அது எப்போது முக்தி அல்லது சுதந்திரம் பெறுகிறது? 

ஆன்மாவுடன் இரண்டறக் கலக்கும் போது 

”சுயேச்சை என்று நாம் கூறுவது உண்மையில் அதன் பின்னிற்கும் ஆன்மாவையே. 

ஆன்மா எப்போதும் சுதந்திரமாகவே இருக்கிறது என்கிறார் சுவாமி விவேகானந்தர். 

பெரும்பாலோரது சுயேச்சை நல்ல, தீய ஆசைகளால் பிணைக்கப் பட்டிருக்கிறது. 

சுதந்திர சுயேச்சை என்பது நல்ல, தீய ஆசைகளிலிருந்து விடுதலை பெற்று நிற்கிறது. அதாவது ஆன்மாவாக தன் உண்மை நிலையில் இருக்கிறது.

பொதுவாக சுயேச்சை சுதந்திரமாக இருக்கிறது என்றால் நாம் என்ன புரிந்து கொள்கிறோம். 

நாம் விரும்பியது போல் எல்லாம் செய்யலாம் என்று தானே! இது முற்றிலும் தவறு. 

ஏனெனில் சாதாரண மனிதர் ஒருவரின் அன்றாட வாழ்வில் சுதந்திரமான சுயேச்சை என்பது செயல்படுவதே இல்லை. 

நமது செயல்களுள் மிகப்பெரும் பகுதி நல்ல மற்றும் தீய ஆசைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

எப்படி தீயவன் ஒருவனின் சுயேச்சை தீய ஆசைகளால் ஆட்டுவிக்கப் படுகிறதோ, அது போல், நல்லவனின் சுயேச்சையும் நல்லாசைகளால் கட்டுப்படுத்தப் படுகின்றன. 

இது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

ஆனால் நமது சுயேச்சை எவ்வளவு கட்டப் பட்டிருக்கிறது என்பது தெரிய வேண்டுமானால் சற்று நேரம் தியானம் செய்ய முயன்று பாருங்கள். 

மனத்தை ஆன்மாவில் ஒருமுகப்படுத்த முடியுமானால் உங்கள் சுயேச்சை சுதந்திரமாக இருக்கிறது என்று பொருள். 

இதுவே சுதந்திரமான சுயேச்சைக்குரிய பரிசோதனை. 

எப்போது நாம் மனத்தை ஆன்மாவில் ஒருமைப்படுத்த முடியும்? 

முதலில் நல்ல மற்றும் தீய ஆசைகளிலிருந்து சுயேச்சை விடுபட வேண்டும். பின்னர் அந்த சுயேச்சை தனது மூலமான ஆன்மாவை நோக்கித் திரும்ப வேண்டும்.

மிக நல்லவர்களாக இருப்பவர்களும் கடவுளை நோக்கித் திரும்ப முடியாமல் போய் விடுவதுண்டு.

ஏனெனில் நல்ல ஆசைகளும் எண்ணங்களும் கூட சுயேச்சையைக் கட்டுபவை தானே!

அப்படியானால் சுயேச்சையை எப்படித்தான் விடுபடச்செய்வது? 

கம்பு ஒன்றில் கட்டப்பட்டுள்ள பசு கயிற்றின் அளவுக்கு உட்பட்ட பகுதி வரை சுதந்திரமாக வளைந்து வர முடியும்.அந்த வட்டத்திற்குள் அதனால் புல்மேய முடியும்

அது போல் சுயேச்சையை நாம் செயல்படுத்துவதில் ஒரு குறிப்பிட்ட சுதந்திரம் இருக்கிறது. 

இந்தச் சிறிய சுதந்திரத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி முழு விடுதலையையும் பெற வேண்டும். 

ஆன்ம ஆராய்ச்சி தொடர்ந்து விவேகப் பயிற்சி – இவை இதற்கு மிகவும் உதவுகின்றன. கடவுளிடம் மனமுருகிப் பிராத்தைனை செய்வது இன்னொரு வழி . 

பல வருட சுய முயற்சி சாதிக்க முடியாததை, இறையருள் குறுகிய காலத்தில் சாதித்து விடும். தீய சுயேச்சையை விட நல்ல சுயேச்சையால் கடவுளை நாடுவது எளிது. 

எனவே நற்செயல்கள் புரிவதன் மூலம் நல்ல சுயேச்சையைப் பெறுவது ஆன்மீக வாழ்வின் ஆரம்ப சாதனைகளுள் ஒன்று. 

சுயேச்சைக்கும் ஆசைக்குமுள்ள வேறுபாட்டை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். 

சுயேச்சை என்பது ஆன்மாவின் சக்தி. 

ஆசையோ மனத்தின் சக்தி,அதாவது மனம் சம்பந்தப்பட்டது. இது சமஸ்காரங்களால் உருவாக்கப்படுகிறது. 

சுயேச்சை ஆன்மா சம்பந்தப் பட்டதாகையால் புறவுலகுடன் அது நேரடியாக த் தொடர்பு கொள்வதில்லை. மனத்தின் மூலமே செயல்படுகிறது. 

சுயேச்சை ஒர் ஆசையுடன் பிணையும் போது சங்கல்பம் ஆகிறது. 

சாதாரண மனிதர்களின் செயல்கள் எல்லாம் இத்தகைய சங்கல்பங்களால் தான் உந்தப்படுகின்றன. 

ஆனால் யோகி ஆசைகளிலிருந்து விடுபட்டு சுதந்திர சுயேச்சையுடன் செயல்படுகிறான். சுயேச்சை உள்முகமாக ஆன்மாவை நோக்கிச் செலுத்தப்படும் போது அது தியானமாகிறது.

image139

மன ஒருமைப்பாட்டின் படிகள்

மனத்தின் மாறுபாடுகள்

  

மன ஒருமைப்பாட்டின் படிகள்

-

யோக நெறியில் மனஒருமைப்பாடு மூன்று படிகள் வழியாகச் செல்கிறது. 

தாரணை,தியானம், சமாதி என்ற மூன்று படிகளும் சேர்ந்து சம்யமம் என்று அழைக்கப்படுகிறது.

சாதாரண மனம் உந்துவேகங்களாலும் ஆசைகளாலும் அலைகழிக்கப் பட்டபடியே இருப்பதால்,ஏதேதோ எண்ணங்கள் எப்போதும் மனத்தை மூடியிருக்கிறது. தன்னறிவும் குழம்பி இருக்கிறது. இதற்குக் காரணம் சுயேச்சையின் சஞ்சலத்தன்மை. 

தன்னறிவு குழம்பாமல் நிலையாக இருக்க வேண்டுமானால் சுயேச்சை முதலில் ஆசைகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். 

பின்னர் உள்ளே உள்ள உயர் உணர்வு மையம் ஒன்றில் அதை நிலைக்கச் செய்ய வேண்டும். 

இப்படி சுயேச்சையை நிலைக்கச் செய்வது தாரணை. 

ஆனால் தாரணை பழகுமுன் அந்த உயர் உணர்வு மையம் மலர்ந்திருக்க வேண்டும். 

மனத்தூய்மை,பிராத்தனை,பூஜை முதலியவை மூலம் அந்த உணர்வு மையம் விழித்தெழுகிறது. 

தாரணை செய்ய இன்னும் எளிய வழி ஒன்று உள்ளது. புறப்பொருள் ஒன்றை மிகவும் கூர்ந்து நோக்கி அதில் மனத்தை ஒருமைப்படுத்துவதன் மூலம் எளிதாக தாரணை செய்ய முடியும். 

யோக நெறி, பௌத்த மதம், போன்றவை இத்தகைய மன ஒருமைப்பாட்டைப் போதிக்கின்றன. 

மண்டலம்,படிகம்,ஒரு புள்ளி போன்றவற்றில் மனத்தை ஒருமைப்படுத்தும் படி அவை கூறுகின்றன. 

இந்த வழிகளின் மூலம் மனம் எளிதில் ஒருமைப் படுவது உண்மைதான். ஆனால் இந்த ஒருமைப்பாட்டின் மூலம் சித்திகள் எனப்படுகின்ற அதிமன ஆற்றல்கள் சாதகனைச் சேர்கின்றன. 

இவை இறைநெறிக்கு உகந்தவை அல்ல. எனவே ஆன்மீக சாதகர்கள் அகமுக ஒருமைப்பாட்டைப் பழகுவதே சிறந்தது.

இரண்டாவது படி தியானம். 

இங்கு முக்கியமான கருத்து ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். 

பொதுவாக நாம் தியானம் என்று கூறுவது உண்மையில் தாரணையே. 

ஏனெனில் தியானம் என்பது ஒரு நெறி அல்லது பாதை அல்ல. அது ஒரு நிலை. 

மன ஒருமைப்பாட்டில் ஒரு படி. 

எனவே நமது முயற்சிகள் எல்லாம் தியானம் ஆகா. அவை சாதாரண முறைகள் .

ஏதாவது ஒரு தாரயை முறையைப் பழகி ஒரே எண்ண அலை மட்டுமே இருக்கும்படிச் செய்தால் அது தியானம். 

தாரணை முறைகள் வெவ்வேறாக இருக்கலாம்.தியானிக்கப்படும் பொருள் வேறுபடலாம். ஆனால் தியானம் ஒன்றே. அதன் அடிப்படையில் எவ்வித மாறுபாடுகளும் இல்லை. 

எந்த நெறி ஆனாலும் எந்த மதமானாலும் தியான நிலையில் எல்லா பிரிவுகளும் மறைந்துவிடுகின்றன. 

எனவே தியான நிலையில் மனம் செயல்படும் விதத்தை அறிவது மிகவும் இன்றியமையாதது.

மனத்தில் எழும் எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்ற முயற்சி தாரணை. 

தியானத்தில் இந்த முயற்சி இல்லை.

தியான வேளையில் ஒரே ஓர் எண்ணம் மட்டுமே நிற்கிறது. ஒற்றை நரம்பு வாத்தியம் போல், மனமாகிய நரம்பு தியானிக்கப்படுபவனுக்கும் தியானிக்கப்படும் பொருளுக்கும் இடையில் இழுத்துக்கட்டப்பட்டது போல் சலனமற்று நிற்கிறது. 

சுயேச்சை செயல்படுவதால் பிற எண்ணங்கள் அகற்றப்பட்டு விடுகின்றன. 

தியான வேளையில் மனத்தில் சிறிது பளுவான, இறுக்கமான நிலை இருப்பது உண்மைதான். ஆனால் இது சாதாரண வாழ்வில் மற்ற போராட்டங்களைப் போல் மனத்தை அலைக்கழிப்பதில்லை. 

தியான நிலையில் ஒரே ஓர் எண்ண அலை மட்டுமே இருக்கிறது. இப்படி ஒரே எண்ணத்தை ஏற்படுத்தும் முறைக்கு பிரத்யயம் என்று பெயர். 

இந்தப் பிரத்யயம் வெளியில் வாக்கியமாக வெளிப்படுகின்றது. 

எப்படி வார்த்தைகள் சேர்ந்து வாக்கியமாகின்றதோ அது போல் எண்ண அலைகள் சேர்ந்து பிரத்யயமாகின்றது. 


  

தியானத்தில் நிலவும் எண்ணம் அல்லது பிரத்யயத்திற்கு மூன்று பகுதிகள் உள்ளன. 

அவை அர்த்தம் (பொருள்), சப்தம்(பெயர்), 

ஞானம்(அறிவு) 

இந்த மூன்றும் மனத்தில் இணையும் போது தான் நாம் ஒரு பொருளை அறிய முடியும். 

திடீரென நாம் ஒரு பிராணியைப் பார்ப்பதாக வைத்துக் கொள்வோம். முதலில் மனம் அந்த உருவத்தை(அர்த்தம்) பதிவு செய்கிறது. 

நாமோ அல்லது வேறொருவரோ ”பசு” (சப்தம்) என்று சொன்ன உடனே எனக்கு இந்தப் பிராணியைத் தெரியும் என்ற அறிவு(ஞானம்) பிறக்கிறது. 

-சப்தம் சென்று ஆன்மாவை உரசி,அறிவு, என்ற தீப்பொறியை உண்டாக்குவது போல் உள்ளது இது. சப்தம் அல்லது வார்த்தை , பொருளைப் பற்றிய அறிவை ஆன்மாவிற்கு உணர்த்துகிறது.

வார்த்தைகளின்றி நாம் சிந்திக்க முடியாது. 

பொருள் ,வார்த்தை,அறிவு இந்த மூன்றுமே மூன்று வெவ்வேறு எண்ண அலைகளால் வெவ்வேறு காரணம் பற்றி உண்டாக்கப் படுகின்றன. 

சாதாரணமான நமது சிந்தனைகளில் இந்த மூன்றும் இணைந்து ஒரே பிரத்யயமாகி விடுகிறது. 

ஒரு தனிப் பிரத்யயத்தை நிலைபெறச் செய்வதே தியானம்.

மனத்தில் ஒரே பிரத்யயத்தை நிலைபெறச் செய்ய அதற்குரிய வார்த்தையைத் தொடர்ந்து சொல்ல வேண்டும். இல்லாவிடில் இன்னோர் எண்ணம் பிறந்து விடும். இதுவே தியானத்தில் மந்திரத்தின் பணி. 

இஷ்டதெய்வத்தின் உருவத்தை தியானிக்கும் போது மந்திரத்தையும் கூடவே ஜபிக்கச் சொல்வதன் காரணம் இது தான். ஆரம்பக் காலத்தில் இதை நாம் தெளிவாக உணர முடியும். 

மந்திர ஜபத்தை நிறுத்தியதும் இஷ்டதெய்வத்தின் உருவமும் மறைந்து விடும். வேறு வார்த்தைகள் பிற உருவங்களை மனத்தில் தோற்றுவிக்கும். 

தியானத்தில் முன்னேறும் போது ஜபத்தை நிறுத்தினாலும் உருவம் சிறிது நேரம் மனத்திரையில் தெரியும். அப்போது மந்திரம் எங்கோ மறைந்து விடவில்லை. அது உருவத்தில் கலந்து விடுகிறது.மந்திரம் எழுப்பிய எண்ண அலை இஷ்டதெய்வம் என்னும் பிரத்யயத்தில் கலந்து விடுகிறது.

இப்போது மன ஒருமைப்பாட்டின் மூன்றாவது படிக்கு வருகிறோம். 

சமாதி என்ற சொல் வெவ்வேறு சமயப் பிரிவுகளில் வெவ்வேறு பொருள் படுகிறது. பதஞ்ஜலி கொள்ளும் பொருள் மற்ற எல்லா விளக்கங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. நாம் அதையே இங்கு பின்பற்றுகிறோம்.

தூய மனம் ஆழ்ந்து ஒருமைப்படும் போது ஆன்மா ஒளிரத் தொடங்குகிறது. அந்த ஒளி தியானிக்கப்படும் இஷ்டதெய்வத்தின் திருவுருவில் படுகிறது. அப்போது அந்த த்திருவுருவம் மட்டும் மன வெளியில் ஒளிர்கிறது. இந்த நிலையில் மந்திரம் தேவையின்றிப் போகிறது. மந்திரம் உருவத்தில் கலந்து விடுகிறது. இதனால் எந்தக் குழப்பமுமின்றி நினைவு தெளிவாகிறது.(ஸ்மிருதி பரிசுத்தி). விழிப்புற்ற ஆன்மாவிலிருந்து சுயேச்சை வெளிப்படுகிறது. 

எனவே சமாதியில் சுய முயற்சி தேவையில்லை. நமது முயற்சியின்றியே நடைபெறுவதால் நான் தியானம் செய்கிறேன் என்ற உணர்வு சமாதி நிலையில் இருப்பதில்லை. 

கீழ் நிலை சமாதியில் “நான்” என்ற உணர்வு இருந்தாலும் அது அவ்வளவாகத் தெரிவதில்லை. ஏனெனில் தியானிக்கப்படும் பொருளுடன் அவ்வளவு ஒன்றி விடுகிறது.

இந்த நிலையை நாம் அடையாவிட்டாலும் தியானத்திற்கும் சமாதிக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நினைவில் வைத்திருப்பது நல்லது. 

தியானத்தில் தொடர்ந்து சுய முயற்சி தேவைப்படுகிறது.இந்த நிலையில் அர்த்தம், சப்தம்,ஞானம் மூன்றும் சேர்ந்து ஒரு பிரத்யயமாக மனத்தில் இருக்கிறது. 

சமாதியில் சுய முயற்சி தேவையில்லை. 

தானாகத் தோன்றுகின்ற ஒரு நிலை சமாதி.

இந்த நிலையில் தியானிக்கப்படும் பொருள் மட்டுமே உணர்வு வெளியில் ஒளிர்கிறது. 

நாம் மேலே கூறிய சமாதி நிலை சம்ப்ரஜ்ஞாத சமாதி என்று கூறப்படுகிறது. 

சமாதி இன்னும் உயர்ந்த நிலையை அடையும் போது ஒளிர்கின்ற இந்த தெய்வ உருவமும் மறைந்து விடுகிறது. மனம் தான் இப்போதே மறைந்த நிலையில் மூடப்பட்டு விடுகிறது. 

ஆன்மா மட்டுமே தன்னிலையில் தானாக இருக்கிறது. இந்த சமாதியே அசம்ப்ரஜ்ஞாத சமாதி.


  

மிக உயர்ந்த சமாதியில்  எண்ண அலைகள் எல்லாம் மறைந்து விட்ட போதிலும் உணர்வுப் பகுதியின் கீழ், மனம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. 

தனி மனம் என்பது பிரபஞ்ச மனத்தின் ஒரு பகுதி. எனவே அது எப்போதும் பிரபஞ்ச மனத்துடன் இணைந்தே செயல்படுகிறது. 

இந்த உலகமே தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கிறது. என்று சாங்கியமும் வேதாந்தமும் கூறுகின்றன. ஆன்மாவைத்தவிர அனைத்தும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கின்றன. என்கிறார் பஞ்சசிகா.

மனத்தின் இயக்கங்களை முழுவதுமாக நிறுத்த முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும்.


மனத்தின் மாறுபாடுகள்

-

மனத்தின் இந்த மாற்றங்கள் பரிணாமம் எனப்படுகின்றன. இவை பலவகைப் படுகின்றன. நாம் இங்குப் பார்க்கப் போவது மன ஒருமைப்பாட்டின் போது நிகழும் மாற்றங்களை மட்டுமே. 

இந்த மாற்றங்கள் மூன்று என்று கூறுகிறார் பதஞ்ஜலி. 

அவை 1.சமாதிப் பரிணாமம், 

2.ஏகாக்ரதா பரிணாமம், 

3.நிரோத பரிணாமம்.

சாதாரணமாக மனம் இரு நிலைகளில் செயல்படுவதை நாம் காண முடியும்.

பலவாறாகப் பிரிந்து சிதறிக் கிடக்கும் நிலை-ஸர்வார்த்ததா, 

ஒருமைப் பட்டு குவிந்த நிலை-ஏகாக்ரதா. 

மனம் இந்த இரு நிலைகளுக்கிடையில் ஊசலாடுவதை தாரணை முயற்சியில் ஈடுபடும் யாரும் அறிந்து கொள்ள முடியும். 

சில கணங்கள் மனம் ஒருமைப்பட்டுக் குவிகிறது. மறு கணம்ப் பரந்து ஓடுகிறது. 

மன ஒருமைப்பாட்டு ஆற்றல் அதிகரிக்கும் போது, சிதறுகின்ற பாங்கு குறைகிறது.

தியான வேளையில் நடப்பது இதுவே. இதுவே சமாதி பரிணாமம், அதாவது சமாதி நிலையை அடைவதற்கான ஒரு போராட்டம்.

தியானம் முதிரும் போது மனத்தின் பரந்து சிதறும் பான்மை முற்றிலும் கட்டுப்பட்டு ஒரே ஓர் எண்ணம் மட்டும் மனத்தில் நிலைபெறுகிறது. இஷ்டதெய்வத்தின் திருவுரு மட்டும் சலனமின்றி இருப்பது போல் தோன்றினாலும் உண்மையில் இந்த நிலையிலும் மனம் தொடர்ந்து மாறிக் கொண்டே யிருக்கிறது. நிகழ்வது என்னவென்றால், மிகவும் துரிதமாக ஒரே எண்ண அலை-இங்கே இஷ்டதெய்வத்தின் திருவுருவம்-எழவும் விழவும் செய்கிறது. 

இது மிகவும் துரிதமாக நடைபெறுவதால் நம்மால் இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. 

அந்த உருவம் சலனமில்லாமல் இருப்பது போல் நமக்குத் தோன்றுகிறது. 

இப்படித் தொடர்ந்து வருகின்ற எண்ண அலையின் எழுச்சியும் வீழ்ச்சியும் சரிசமமாக இருந்தால் அது ஏகாக்ரதா பரிணாமம். 

இது தியானத்தின் மிகவுயர்ந்த நிலைகளிலேயே நிகழும். 

இது சம்ப்ரஜ்ஞாத சமாதியின் மிக முக்கியப் பண்பு.

ஓர் எண்ண அலை விழுந்து அடுத்த அலை எழுமுன் ஒரு சிறிய இடைவெளி ஏற்படுகிறது. இந்த இரு எண்ணங்களுக்கிடையில் மனம் சிறிது நேரம் வெறுமையாக இருக்கிறது.இது மிகவும் குறுகிய நேரமாக இருப்பதால் இதை நாம் சாதாரணமாக உணர்வதில்லை. ஆனால் உயர்ந்த சமாதி நிலைகளில் இதை உணர முடிகிறது.

அப்போது பிற எல்லா எண்ணங்களும் மறைந்து ”நான்“ என்ற உணர்வு மட்டுமே இருக்கிறது. யோகி தான் தானாக தன்னிலையில் இருப்பதை சற்று இடைவெளியுடன் கூடிய அலைபோல் நான்...நான்...நான்.. என்று உணர்கிறான். அவனால் இரண்டு நான்.. களுக்கிடையில் உள்ள இடைவெளியை அதிகரிக்க முடியும். அப்போது இரு எண்ணங்களுக்கும் இடையில் உள்ள அந்த நீண்ட இடைவெளியில் மனம் வெறுமையாக இருக்கிறது. இதுவே அசம்ப்ரஜ்ஞாத சமாதி.

எண்ண அலைகள் இங்கு மடிந்து விட்டாலும் சம்ஸ்காரங்கள் இருக்கவே செய்கின்றன. 

மன ஆழங்களில் அவை மாறிக் கொண்டே இருக்கின்றன. 

உணர்வுப்பகுதியின் கீழே நடைபெறுகின்ற இந்த மாற்றம் நிரோதபரிணாமம்.

இந்த நிலையில் அமுக்கப்பட்ட சம்ஸ்காரங்கள் (நிரோத சம்ஸ்காரம்) வெளிக்கிளம்பும் சம்ஸ்காரங்களுடன் (வ்யுத்தான சம்ஸ்காரம்) போராடுகின்றன. 

முன்னது வலிமை பெற்றிருக்கும் வரை மனம் மூடிக்கிடக்கும்.சாதகன் சமாதியில் நிலைத்திருக்கிறான். பின்னது வலிமை பெற்றுவிட்டால் சாதகன் சமாதி கலைந்து உலக நினைவுக்கு வருகிறான்.

மனத்தின் இந்த மூன்று மாறுபாடுகளைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்வது சாதகர்களுக்கு மிகவும் உதவியாக அமையும். 

மேலும் பதஞ்ஜலியின் யோக சூத்திரங்களைப் புரிந்து கொள்ளவும் இவை பற்றிய அறிவு மிகவும் தேவை. மிகவும் உயர்ந்த அனுபவங்களைப் பெற யோகக் கண்ணோட்டத்துடனும் யோக அறிவுடனும் தியானம் செய்ய வேண்டும்.


  

பிராணனும் சம்ஸ்காரமும்

-

இரண்டு வழிகளில் நாம் அறிவு பெற முடியும். 

ஒன்று நேரடி அறிவு. 

இதில் புலன்கள் புற உலகுடன் தொடர்பு கொண்டு ஆற்றலைப் பெறுகின்றன. 

மற்றொன்று நினைவு 

கடந்த கால அனுபவங்கள் புதைபதிவுகளாக மன ஆழங்களில் உள்ளன. 

புதைபதிவுகள் அல்லது சம்ஸ்காரங்கள் முளைத்தெழுந்து நினைவுகளாகின்றன. 

இந்த நினைவுகளின் மூலமாகவும் நாம் அறிவைப் பெறுகிறோம். டேப் ரிக்கார்டரை இயக்கினால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலி வெளிவருகிறது. 

அது போல சம்ஸ்காரங்கள் தூண்டப்பட்டால் அவை மீண்டும் பழைய அனுபவங்களை உண்டாக்குகின்றன.

நமது எண்ணங்களுள் பெரும்பான்மையானவை நினைவுகளே . 

தியானம் என்பது நினைவுகளுடன் தொடர்புடையது. நினைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் நிலை நிறுத்துவதற்குமான ஒரு வழி தான் தியானம். 

எந்த வேலையைச் செய்ய வேண்டுமானாலும் ஆற்றல் தேவை. நினைப்பதும் ஒரு விதமான வேலை தான். சம்ஸ்காரங்களைத் தூண்ட ஆற்றல் தேவை. 

சம்ஸ்காரங்களைத் தூண்டுகின்ற ஆற்றல் எது? பிராணன். 

இந்தப்பிராணன் எங்கிருந்து வருகிறது? வற்றாத பெருஞ்சுரங்கமான மஹத் அல்லது பிரபஞ்ச மனத்திலிருந்து தான். 

சாதாரண வேலைக்கான ஆற்றலை நாம் தூலப் பிரபஞ்சத்திலிருந்து பெறுவது போல், பிராணனை மனப் பிரபஞ்சத்திலிருந்து பெறுகிறோம். 

இந்தப் பிராணனைப் பொறுத்தே ஒருவரின் மனம் அமைகிறது. இந்தப் பிராணன் தன்னுள் செயலாற்றுவதைக் கட்டுப்படுத்தி, நெறிப் படுத்துகின்ற பாங்கு தான் ஒருவரது மனநிலையை நிர்ணயிக்கிறது. 

மனத்தின் செயல்பாடுகளைப்பற்றி அறிய இரு விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். 

1) சம்ஸ்காரங்கள்.

2) அவற்றை இயக்கும் பிராணன்.

சம்ஸ்காரங்கள் நல்லவையாக இருந்தால் கூட, பிராணனின் இயக்கம் சீராக அமையாவிட்டால் மனம் சோர்வடைந்து விடுகிறது. அல்லது பதட்டம் அடைந்து விடுகிறது. எனவே தியானம் செய்ய முடியாத நிலை உருவாகிறது. 

அதே வேளையில் சம்ஸ்காரங்கள் தீயவையாக இருந்தால் , பிராணனைக் கட்டுப்படுத்துவது எந்தப் பலனையும் தராது. 

தியான வாழ்வில் இவை இரண்டுமே இன்றியமையாதவை.

சம்ஸ்காரங்கள் அவை எப்படி எண்ண அலைகளாக மாறுகின்றன. அதனால் மனம் எப்படி மாறுபாடு அடைகிறது என்பதையெல்லாம் கண்டோம். 

இனி பிராணனின் இயக்கத்தைப் பற்றிப் பார்ப்போம்.

பிராணனின் இயக்கம்

-

பிரபஞ்ச நிலை, 

தனி மனித நிலை 

என இரண்டு நிலைகளில் பிராணன் இயக்குகிறது. 

தனி மனித நிலையில் அது எவ்வாறு இயங்குகிறது என்பதையே நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

நமது நுண்ணுடலில் மூன்று முக்கிய நாடிகள் வழியாகப் பிராணன் இயங்குகிறது. 

1.இடகலை,

2.பிங்கலை,

3.சுழுமுனை 

அவற்றுள் சுழுமுனை நடுவிலும் மற்ற இரண்டு நாடிகளும் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. 

சுழுமுனை பெரியது. மற்றவை சிறியவை. நமது சாதாரண வாழ்வில் இடகலையும் பிங்கலையும் மட்டுமே செயல்படுகின்றன. 

ஒவ்வொரு முறை நாம் சிந்திக்க முற்படும் போது, ,சிறிது பிராணன் இந்த நாடிகள் வழியாகச் சென்று சம்ஸ்காரங்களைத் தூண்டுகிறது. தியானத்திலும் இந்த இரு நாடிகள் மட்டுமே செயல்படுகின்றன.

சாதாரணமாக நாம் சிந்திக்கும் போது சிறிதளவு பிராணனே செலவாகிறது. எஞ்சிய பிராணன் பயன்படுத்தப் படாமல் ஆற்றலாகச் சேமிக்கப்படுகிறது. இதுவே குண்டலி. 

இந்தக் குண்டலினி இயங்குவதற்காகத்தான் நடுநாடியான சுழுமுனை உள்ளது. மிகப் பலரில் இந்த நாடி செயல்படாமல் உள்ளது. எனவே பிராணனின் பெரும்பகுதி பயன்படுத்தப்படுவதில்லை. 

சுழுமுனையின் வழியாக ஆறு சக்கரங்கள் உள்ளன. இந்தச் சக்கரங்கள் அல்லது மையங்களை யோகிகள் தாமரைகளாக உருவகிக்கிறார்கள்.

மனத்திற்கும் உடலுக்கும் இடையில் ஓர் இணைப்புப் பாலம் போல் பிராணன் செயல்படுகிறது. 

பிராணனின் மூலமாக மனம் உடலைக் கட்டுபடுத்துகிறது. பல மன-உடல் நோய்களுக்கு பிராணனின் தவறான இயக்கமே காரணம். 

யோகிகள் ஹட யோகப் பயிற்சிகளால் பிராணனின் இயக்கத்தை நெறிப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கின்றனர்.


  

இனி பிராணனுக்கும் மனத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பார்ப்போம். 

-

சாதாரணமாக, இடகலை, பிங்கலை நாடிகளின் இயக்கத்தைப் பொறுத்து நமது மன வாழ்வு அமைகிறது. அவை இரண்டும் இயைந்து செயல்படும் போது மனம் விழிப்புடன் இருக்கும். 

அவை அளவுக்கு மீறிச் செயல்பட்டால் மனம் அலைவுறத் தொடங்கும். மெதுவாக இயங்கினால் மனம் மந்த நிலையில் ஆழும். 

இரு நாடிகளும் செயலற்று நின்றுவிட்டால் மனம் ஆழ்ந்த தூக்க நிலைக்குச் சென்று விடும். 

கனவு காணும் போது அந்த நாடிகள் மீண்டும் இயங்கும்.

நாம் சிந்திக்கும் போது சிறிது பிராணன் இந்த நாடிகள் வழியாகப் பாய்ந்து சம்ஸ்காரங்களைத் தூண்டுகிறது. 

இரு நாடிகளும் தடங்கலின்றி இயைந்து செயல்படும் போது மனம் அமைதியாக இருக்கிறது. 

எண்ணங்கள் தடையின்றித் தொடர்ந்து எழுகின்றன. இத்தகைய நிலை தியானத்திற்கு அவசியம். 

ஆனால் மனப்போராட்டங்கள் தீவிர ஆசைகள் மற்றும் வேறு புற,அகக் காரணங்களால் இந்த இரு நாடிகளும் இயைந்து செயல்படுவது தடைபடுகிறது. 

பொதுவாக ஏதாவது ஒரு நாடி மற்றொன்றை விட அதிகமாகச் செயல்படுகிறது. இடகலையும் பிங்கலையும் இயைந்து செயல்படாத போது எண்ணங்கள் தொடர்பின்றி எழுகின்றன. மனம் பதட்டமுறுகிறது. 

நமது உடலில் வெப்ப நிலை,ரத்த அழுத்தம், உணவு செரித்து ஆற்றலாக மாறுதல்.தூக்கம் போன்றவை எல்லாம் குறிப்பிட்ட சுழற்சி முறையில் நடைபெறகிறது. இவை பொதுவாக தினசரிச் சுழற்சியாக உள்ளன. சில செயல்கள் மாதச் சுழற்சியாகவும் உள்ளன. 

இந்தச் சுழற்சியின் படி தாவரங்களும் மிருகங்களும் வியக்கத்தக்க வகையில் இயங்குவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தச் சுழற்சிகள் மனத்தை வெகுவாகப் பாதிக்கின்றன.

சிலரால் காலையில் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். காலையில் மிகவும் விழிப்புடன் துடிப்பாகச் செயல்படும் அவர்களது மனம் நேரம் நேரம் செல்லச் செல்ல மந்தமடையத் தொடங்குகிறது. 

சிலர் மதிய வேளையிலிருந்து தான் விழிப்புடன் செயல்படுவார்கள். அவர்களால் நள்ளிரவு வரையிலும் சுறுசுறுப்பாக இயக்க முடியும். 

இந்தச் சுழற்சிகள் மனத்தைப் பாதிக்கும் விதத்தை உன்னிப்பாக கவனித்து, ஆராய்ந்த யோகிகள் இந்தச் சுழற்சிகளுக்கும், பிராணனின் இயக்கத்திற்கும் . இடகலை மற்றும் பிங்கலை நாடிகளின் செயல்பாட்டிற்கும் தொடர்பு இருப்பதைக் கண்டனர். 

சந்தியா வேளையில் இந்த நாடிகள் இயைந்து செயல்படுவதையும் இந்த வேளையில் மனம் இயல்பாக அமைதியடைவதையும் அவர்கள் கண்டறிந்தனர். 

அதனால் தான் காலை,மாலை வேளைகள் தியானத்திற்கு உகந்ததாகக் கூறப்படுகின்றன.

பிராணாயாமத்தின் மூலம் இந்த நாடிகளைக் கட்டுப்படுத்தவும் இயைந்து செயல்படும் படிச் செய்யவும் முடியும்.

நமது உடலின் சில பகுதிகள் இச்சைச் செயல் நரம்புகளாலும் சில பகுதிகள் அனிச்சைச் செயல் நரம்புகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. 

ஆனாலும் ஒரு சில உறுப்புகள் இரண்டினாலும் இயக்கப்படுகின்றன. அவற்றுள் நுரையீரல் ஒன்று. 

நுரையிரலின் இயக்கம் அனிச்சையாகச் செயல்பட்டாலும் நம்மால் அதைக் கட்டுப்படுத்த முடியும்.

மூச்சைக் கட்டுப்படுத்தும் போது அனிச்சை நரம்பு மண்டலம் நமது கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. 

இதன்மூலம் இடகலை,பிங்கலை நாடிகளை நாம் கட்டுப்படுத்த முடியும். அதனால் பிராணன் நம் வசமாகிறது. 

பிராணனைக் கட்டுப்படுத்தும் போது சம்ஸ்காரங்கள் தூண்டப்படுவது குறைகிறது. மனம் அமைதியடைகிறது.

தீவிர பக்தி, ஆன்ம விசாரம், ஜபம் இவற்றின் மூலமும் மனத்தை அமைதியுறச்செய்ய முடியும். 

ஒழுங்காகச் செய்யப்படும் ஜபம் ஒரு வகையில் பிராணாயாமம் போன்றே செயல்படுகிறது. பிராணயாமத்தைப் போல் விரைவான பலனை ஜபம் தருவதில்லை. எனினும் ஜபம் ஒரு பாதுகாப்பான பிராணாயாமம். 

ஜபம் செய்யும் போது மூச்சு மென்மையாகிறது.ஜபத்தின் மூலம் இயல்பாகவே பிராணன் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது, என்கிறார் சுவாமி பிரம்மானந்தர். 


  

பிராணன் இடகலை வழியாக மேலெழுவதும் பிங்கலை வழியாகக் கீழே வருவதுமாக இயங்குகிறது. 

யோகிகள் நாடிகளை முறையே, சந்திர நாடி அல்லது பெண்நாடி சூரிய நாடி அல்லது ஆண்நாடி என்று அழைக்கின்றனர் 

இடகலை எதிர் இயக்கம், பிங்கலை நேர் இயக்கம். 

சாதாரணமான நமது உணர்வுப்பகுதி மற்றும் உணர்வறு பகுதி மனங்கள் இந்த நேர்-எதிர் ஓட்டங்களால் வரும் ஆற்றலால் செயல்படுகின்றன. 

இந்த ஆற்றலின் ஒரு பகுதி நமது உடலை இயக்குகிறது. 

காமத்தால் பிராணன் மிகவும் செலவாகிறது. காமத்தை அடக்காதவரை மனத்தைக் கட்டுப்படுத்துவதும் ஆழ்ந்து தியானம் செய்வதும் கண்டிப்பாக முடியாத காரியம். 

பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கப்படும் போது பிராணன் அதிக அளவில் மூலாதாரத்தில் சேமிக்கப்படுகிறது. இதனால் மனம் உயர்ந்த எண்ணங்களைச் சிந்திப்பதற்குத் தேவையான அதிக ஆற்றல் கிடைக்கிறது. 

மூளைக்கும் அதிக ஆற்றல் கிடைக்கிறது. 

காமத்தைக் கட்டுப்படுத்துவதால் வரும் இந்த ஆற்றல் ஓஜஸ் எனப்படுகிறது. இந்த ஓஜஸ் சக்தி அதிகரிக்கும் போது மூளையில் மேதா என்றொரு புதிய ஆற்றல் உருவாகிறது. ஞாபக சக்தியும் எதையும் ஊடுருவி உட்கருத்தைப் புரிந்துகொள்ளும் திறனும் இதனால் அதிகரிக்கிறது.

அது மட்டுமின்றி சாதகனின் ஆன்மீக ஆற்றல் அதிகரிப்பதுடன் அவன் விரைவில் ஆன்மீக அனுபூதியும் பெறுகிறான்.

கிரந்திகள் அல்லது முடிச்சுகள்

-

இடகலையும் பிங்கலையும் தண்டுவடத்தின் கீழுள்ள மூலாதாரத்தின் இட, வலப் பக்கங்களிலிருந்து தொடங்கி ஒன்றையொன்று பின்னிக்கொண்டு ஒவ்வொரு சக்கரத்தைச் சுற்றியும் ஒரு வளையத்தை உண்டாக்கி மேலே செல்கின்றன.

மேலே அவை இணைவதில்லை. ஆனால் வழியில் மும்முறை இணைகின்றன. இவை இணைகின்ற இடங்களே கிரந்திகள் அல்லது முடிச்சுகள் . 

இந்த கிரந்திகள் பிராணனின் ஓட்டத்தைத் தடுக்கும் தடைகளாகச் செயல்படுகின்றன. 

இந்த மூன்று முடிச்சுகளும் மனத்தின் மூன்று நிலைகளைக் குறிக்கின்றன. 

முதலில் வருவது பிரம்ம கிரந்தி. 

இது தொப்புளுக்கு கீழே உள்ளது. பிராணன் இந்கு தடைபடும் போது மனம் ஆசைகளுக்கும் பசி தாகம் போன்ற உணர்ச்சி வேகங்களுக்கும் அடிமைப்படுகிறது. புலனின்ப நாட்டம் மேலோங்கி நிற்கிறது. 

இரண்டாவதான விஷ்ணு கிரந்தி 

இதயத்திற்குக் கீழே உள்ளது. இது உணர்ச்சி மையம். மனிதனது உணர்ச்சிகள் இங்கிருந்து தான் பொங்கிப் பெருகுகின்றன. 

மூன்றாவது ருத்ர கிரந்தி 

புருவ மத்திக்குக் கீழே உள்ளது. இது அறிவு மையம். 

புலனின்ப நாட்டமும் ஆசைகளும் மிகுந்திருக்கும் போது பிராணன் பிரம்மகிரந்தியுள் சுழல்கிறது. 

இந்த நிலையில் பிராணனின் மிகச்சிறு பகுதிதான் உயர் மையங்களுக்குச் செல்கிறது.

மனம் பரபரப்படையும் போது முதலில் கீழ் மையங்களைத் தூண்டிச் செயல்பட வைக்கிறது. 

ஒருவன் தானாகப் புலனின்பங்களில் ஈடுபடாமலிருந்தாலும் அவனது மனம் பரபரப்பாக இருக்குமானால் அந்த மனமே கீழ்மையங்களைத் தூண்டி அவனைப் புலனின்பங்களில் ஈடுபடச் செய்து விடும். முக்கியமாகக் காம எண்ணங்கள் எளிதில் தூண்டப்படுகின்றன. 

காமம் போன்ற தாழ்ந்த எண்ணங்கள் நம்மைத் தாக்காதிருக்க முதலில் மனத்தை அமைதியாக வைத்திருத்தல் அவசியம். 

அமைதியான மனம் கெட்ட எண்ணங்களால் தாக்கப்படுவதில்லை. 

இரண்டாவதாக உயர் மையங்களைச் செயல்பட வைக்க வேண்டும். 

தீவிரமான படிப்பு ஆழ்ந்த சிந்தனை போன்றவை உயர் மையங்களைத் தூண்டுகின்றன. 

பிராத்தனையும் தியானமும் செய்யும் போது இடகலை பிங்கலை வழியாக அதிகப்பிராணன் மேலிழுக்கப்பட்டு உயர் மையங்களுக்குச் செல்கிறது. இதனால் கீழ் மையங்கள் அதிகமாக தூண்டப்படாமல் தடுக்கப்படுகின்றன.

இந்த மூன்று கிரந்திகளும் மனித வாழ்வை மூன்று நிலைகளாகப் பகுக்கின்றன.

இயல்புணர்ச்சி வயப்பட்ட வாழ்வு, ஆன்மீக வாழ்வு என்பது இந்த மூன்று நிலைகளையும் கடந்தது. 

எனவே ஆன்மீக சாதகன் இந்த மூன்று முடிச்சுகளையும் தளர்த்தி, பிராணனை இடகலை, பிங்கலைகளில் சிரமமின்றிச் செயல்படவைப்பது மிகவும் இன்றியமையாதது. 

இயல்புணர்ச்சிகளும் உணர்ச்சிப் போராட்டங்களும் அறிவுப் போர்களும் அமைதியுற்ற பின்னரே இரண்டு நாடிகளிலும் பிராணன் தாராளமாகச் சென்று வர முடியும். இதன் பின்னர் தான் சுழுமுனை நாமியைக் கண்டுபிடிக்கவும் அறியவும் முடியும்.


  

சக்கரங்கள்

-

இரு பக்க நாடிகளும் சாதாரண மன வாழ்வைப்பற்றியவை. முக்கிய நாடியான சுழுமுனை புலன் கடந்த உணர்வு கடந்த அனுபவங்களைப்பற்றியது. 

இந்தச்சுழுமுனை நாடியின் வழியில் ஆறு சக்கரங்கள் உள்ளன. 

எண்ணிக்கையில் வேறுபட்ட இதழ்கள் கொண்ட தாமரைகளாக இவை உருவகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சக்கரமும் புலன் கடந்த உயர் உணர்வு மையமாகும். 

புதிய அனுபவங்களை விரிக்கின்ற உலகிற்கு ஒரு கதவு போல் ஒவ்வொரு சக்கரமும் அமைகிறது. 

தாமரையின் ஒவ்வோர் இதழும் இந்தச் சக்கரத்தில் உள்ள ஓர் அதிமன ஆற்றலை உணர்த்தி நிற்கிறது.

புலன்களால் உணரக்கூடிய இந்தக் அண்டத்தில் உலகத்தினுள் உலகமாகப் பல உலகங்கள் ஊடுருவி நிறைந்துள்ளன. 

இந்த உலகத்துள் எதையாவது நாம் அடைய வேண்டுமானால் , அதற்கான குறிப்பிட்ட உணர்வு நிலையைப்பெற வேண்டும். இந்தச் சக்கரங்கள் அத்தகைய உணர்வு நிலையை உணர்த்துகின்றன. 

குண்டலினி முழுவேகத்துடன் மோதும் போது இதன் கதவுகள் திறக்கின்றன. 

குண்டலினி விழித்தெழும் வரை இந்தச் சக்கரங்களையும் அவை விரிக்கின்ற புலன் கடந்த புதிய உலகங்களையும் நாம் அறிய முடியாது.

இந்த ஆறு சக்கரங்களும் வருமாறு

-

மூலாதாரம்(நான்கு இதழ்கள்), 

சுவாதிஷ்டானம்-( ஆறு இதழ்கள்) 

மணிபூரகம்(பத்து இதழ்கள்), 

அனாஹதம்( பன்னிரு இதழ்கள்) 

விசுத்தம்( பதினாறு இதழ்கள்) 

ஆஜ்ஞை( இரண்டு இதழ்கள்) 

இந்த ஆறு சக்கரங்களையும் வேதங்களில் கூறப்பட்டுள்ள பூ,புவ,ஸ்வ, மஹ, ஜன, தப,ஸத்யம் என்னும் ஏழு பூமிகளுக்கு ஒப்பிடுகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

உபநிடதங்கள் கூறும் பஞ்ச கோசங்களுடனும் இந்தச் சக்கரங்களை ஒப்பிடலாம். 

சுழு முனை விழித்துச் செயல்படும் முன்னர் இடகலை மற்றும் பிங்கலை நாடிகளைத் தூய்மைப்படுத்தி அவை இயைபுடன் செயல்படச் செய்திருக்க வேண்டும்.என்பதை முன்பே கண்டோம். 

அது மட்டுமின்றி ஆசை வேகங்களாலும் மன அலைச்சலாலும் ஆற்றல் விரயமாவதும் தடுக்கப்பட வேண்டும். 

பிராத்தனை வழிபாடு, தியானம் போன்ற ஆன்மீக சாதனைகள் மூலம் அதிகப் பிராணன் உயர் மையங்களுக்கு எடுத்துச் செய்யப்பட வேண்டும். 

இப்படி எடுத்துச் செல்லப்படும் ஆற்றலே ஓஜஸாக மாறி மூலாதாரத்தில் சேமிக்கப் படுகிறது.

இது தொடர்ந்து பல வருடங்கள் நடைபெறும் போது சுழுமுனை நாடி விழித்துச் செயல்பட ஆரம்பிக்கிறது.

யோகம் மற்றும் தந்திர நூல்களின் குண்டலினியை விரைவாக விழிக்கச் செய்வதற்கான பயிற்சிகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் மனம் தூய்மைப்படுத்தப்பட்டுத் தயாராக இல்லாதிருக்கும் போது குண்டலினி விழித்தெழுந்தால், உடல் கெடுவது மட்டுமின்றி மனக்கோளாறுகளும் உண்டாகின்றன. 

இந்தப் பயிற்சிகளைச் செய்வது அவ்வளவு தேவையானதும் அல்ல. ஏனெனில் இவற்றின் வாயிலாகக் கிடைப்பது போன்ற பலனைத் தருகின்ற பாதுகாப்பான வேறு வழிகள் இருக்கவே செய்கின்றன. 

ஆழ்ந்த பிராத்தனை ஒன்றாலேயே குண்டலினி சக்தியை எழுப்ப முடியும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுகிறார். 

வெறுமனே நூல்களைப் படிப்பதால் மட்டுமே ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுவதில்லை. பிராத்தனையும், தேவை. 

கடவுளை அடைய சாதகன் தீவிரமாக ஏக்கம் கொண்டால் குண்டலினி விழிப்படைகிறது என்கிறார் அவர். 

சுவாமி பிரம்மானந்தரின் கருத்துப்படி ஜபம், தியானம், இறைவனைப்பற்றிய தொடர்ந்த சிந்தனை இவையே ஆன்மீக விழிப்பிற்கு மிகவும் உகந்த வழிகள்.

image140

குண்டலினி

பிராணனும் மன ஒருமைப்பாடும்

  

சுழுமுனை திறக்கும் போது பிராணன் அதன் வழியாகச் செல்கிறது. 

ஆன்மீக விழிப்பின் உயர்நிலைகளில் இடகலை, பிங்கலை வழியாகப் பிராணன் இயங்குவதில்லை. 

அந்த நாடிகள் முற்றிலுமாகச் செயலற்று விடுகின்றன. இந்த நிலையில் சாதகன் முழுமையாக உடல் நினைவற்று விடுகிறான். 

பின்பு உடலியக்கங்களும் படிப்படியாகக் குறைந்து விடுகின்றன. தூக்கத்திலும் இவ்வாறே இடகலையும் பிங்கலையும் செயலற்று விடுகின்றன. 

அப்படியானால் தூக்கத்திற்கும் உயர் ஆன்மீக நிலைக்கும் வேறுபாடு இல்லையா? கட்டாயமாக உண்டு. உயர் ஆன்மீக நிலையில் சுழுமுனை திறந்துள்ளது. ஆனால் தூக்கத்தில் சுழுமுனை மூடியுள்ளது. இதுவே யோக நெறிப்படி தூக்கத்திற்கும் சமாதிக்கும் வேறுபாடு உள்ளது.


குண்டலினி 

-

உணர்வுக்கும்  குண்டலினிக்கும் உள்ள தொடர்பை அறிதல் அவசியம் . 

உணர்வு  சாட்சிப் பொருளான ஆன்மாவுக்கு உரியது. 

இந்த உணர்வு பிரகிருதியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று யோக நெறி கூறுகிறது. 

பிரகிருதியைச் செயல்படுத்தும் சக்தி பிராணன். 

அதே பிராணன் தான் நம் ஒவ்வொருவருள்ளும் உறங்கும் நிலையில் குண்டலினி என்று பெயர் பெறுகிறது.

இங்கு ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

குண்டலினி, மூன்று நாடிகள் போன்ற கருத்துகள் எல்லாம் நாம் நம் மனத்தை அறிந்து கொள்ள உதவும் எத்தனையோ வழிகளுள் ஒன்று, அவ்வளவு தான். 

மனத்தையும் அதன் செயல்பாடுகளையும் விளக்க இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளன. யோக சூத்திரங்களில் பதஞ்ஜலி மாமுனிவர் மனத்தையும் அதன் செயல்பாடுகளையும் மிகத் தெளிவாக விளக்குகிறார். 

ஆனால் அதில் அவர் குண்டலினியையோ நாடிகளையோ பற்றி குறிப்பிடக்கூட இல்லை. முக்கிய உபநிடதங்களோ கீதையோ குண்டலினியைப்பற்றிக் கூறவில்லை. 

எண்ணற்ற கீழை மற்றும் மேலை நாட்டு ஞானியரின் அனுபவக் குறிப்புகளிலும் குண்டலினியைப் பற்றி கூறப்படவில்லை.

இதனால் குண்டலினி என்னும் ஆற்றல் இல்லை என்று கூறுவதாகக் கொள்ள க்கூடாது. 

மின்சாரம் எப்படி உருவாக்கப்படுகிறது.எவ்வாறு கடத்தப்படுகிறது என்ற விவரங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமலேயே ஒருவர் மின்சாரத்தைப் பயன்படுத்தி எந்திரங்களை இயக்கலாம். அடுப்பெரிக்கலாம்.

விளக்கங்களைப் பற்றிய கவலையெல்லாம் மின்னியல் நிபுணர்களுடையது.

அது போலவே மனத்தையும் மறைந்திருக்கும் அதன் ஆற்றல்களை அறியாமலேயே கட்டுப்படுத்தி ஆள முடியும்.

அது மட்டுமின்றி குண்டலினி விழித்தெழும் போது ஏதோ ஏவுகணை சீறிப் பாய்வது போல் மேலே செல்வதில்லை. 

யோக நெறியைப் பின்பற்றுகின்ற சிலரைத் தவிர பிறர், குண்டலினி விழிப்பதை நேரடியாக அறிவதில்லை. ஆனால் அதனால் நேர்கின்ற சில அனுபவங்களிலிருந்து அதை உணர முடியும். 

தெய்வீக ஞானம் பெறுவதற்கும் உணர்வு கடந்த காட்சிக்கும் ,இறைவனை அடைவதற்கும் ஒரே வழி குண்டலினி சக்தியை எழுப்புவதே.

பல வழிகளால் குண்டலினி சக்தியை எழுப்ப முடியும். பகவானிடம் தூய பக்தி , பரி பூரண நிலை எய்திய முனிவர்களின் அருள், தத்துவ ஞான ஆராய்ச்சியின் வலிமை போன்றவை குண்டலினியை விழிக்கச் செய்வதற்கான சில வழிகள். 

அசாதாரணமான ஆற்றலோ ஞானமோ யாரிடமாவது காணப் பெறுமானால் அங்கு குண்டலினி சக்தியின் விழிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிது சக்தி சுழுமுனை நாடி வழியாகச் சென்றிருக்கிறது என்பது பொருள். 

ஆனால் பெரும்பான்மையான சாதகர்களைப் பொறுத்தவரை இது அவர்களை அறியாமல் நிகழ்கிறது, என்கிறார் சுவாமி விவேகானந்தர். 

குண்டலினி விழிப்பதை அறிந்தாலும் அறியாவிட்டாலும் ஆன்மீக உள்ளுணர்வு அடைவதே முக்கியம். 

உளவியல் அக்குபங்சர் போன்ற துறைகளின் சமீபகால ஆராய்ச்சி முடிவுகள் பிராணன், மூன்று நாடிகள் போன்ற கருத்துக்களின் உண்மையை நிரூபிப்பவனாக உள்ளன. 

குண்டலினியின் இருப்பிடத்தை அறிவது உண்மையிலே சிரமமான ஒன்று தான் மருத்துவ விஞ்ஞானத்தின் படி மூளையே உடலியக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. 

குண்டலினியோ தண்டுவடத்தின் கீழே மூலாதாரத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியை அறுவைச் சிகிச்சைமூலம் நீக்கி விடக்கூட முடியும். இதனால் உடலியக்கங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. 

ஆனால் முக்கியமான ஒன்று, கருப்பையில் வளரும் கருவின் உடலின் முக்கிய இயக்கங்களை இந்த மூலாதாரப் பகுதியே இயக்குகிறது. இந்தப் பகுதியிலிருந்து நரம்பு ஒன்று தொடங்கி குழாய் போல் வளர்ந்து மேலே மூளையில் சென்று விரிகிறது. 

ஆரம்பக் காலத்தில் மூலாதாரப் பகுதியின் ஆதிக்கத்தில் இருக்கும் உடலியக்கங்கள் பின்னரே மூளையின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.


  

பிராணனும் மன ஒருமைப்பாடும்

-

இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கங்களின் பின்னாலும் பிராணன் நின்று இயங்குவதை வேத ரிஷிகள் கண்டனர். 

பிராணனை அவர்கள் அக்னியாக உருவகித்தனர். 

வாழ்வின் இயக்கங்கள் அனைத்தையும் பிராணனே நடத்துகிறது என்பதை அவர்கள் கண்டனர். 

இதனால் தான் சாப்பிடுவதற்கு முன் பிராணா ஹீதி செய்யப்படுகிறது. அதாவது உணவு பிராணனுக்கு சமர்ப்பிக்கப் படுகிறது. 

குறைந்தது இரு வேளைகளாவது பிராணாயாமம் செய்யப்பட்டது. 

அது மட்டுமின்றி ஆன்மீக வாழ்விற்கு உடலே முதன்மையான உபகரணமாகக் கருதப்பட்டது. அதாவது ஆன்மீக வாழ்வைத் தனியாகப் பிரித்துப் பார்க்காமல் அன்றாட வாழ்வுடன் ஒருங்கிணைந்த வாழ்வாகக் கண்டனர் வேத ரிஷிகள். 

உடல் மற்றும் மன ஆற்றல்களை ஒருங்கிணைப்பது இந்திய ஆன்மீக வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும். 

ஆன்மீக வாழ்வில் முயற்சிகளும் போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை.இந்த ஆற்றல்களைப் பற்றிய சரியான அறிவு இருக்குமானால் பல போராட்டங்களைத் தவிர்க்க முடியும். 

தவறான அறிவு உடலைப் பற்றிய தவறான கருத்தை உருவாக்கி விடுகிறது. 

உடல் என்பது ஆசைகளின் பிண்டம். ஆன்மாவின் சுமை, இறை நெறியில் ஓர் இடறுதல்,எனவே உடலைப் பேணக் கூடாது,வாட்ட வேண்டும், தண்டிக்க வேண்டும். இத்தகைய தவறான எண்ணங்களும் கருத்துக்களும் நிலைமையை மேலும் சீர் குலைக்கின்றன. 

நமது சாதனை வாழ்வில் உடம்பிற்கு அதற்குரிய இடத்தைக் கொடுக்க வேண்டும். 

தேக ஆரோக்கியத்தைச் சீர்குலைக்காமல் எப்படி புலன்களைக் கடப்பது என்பதே நாம் கற்க வேண்டியது என்கிறார் சுவாமி விவேகானந்தர். இதையே யோக சாஸ்திரமும் போதிக்கிறது. 

மனிதனை உடல், மனம் ஆன்மா என்று பிரிக்காமல் மூன்றின் இயக்கங்களையும் ஒருங்கிணைக்க முயல்கிறது யோகம். 

யோகநெறியில் தேக ஆரோக்கியம் முதல் உணர்வு கடந்த அனுபவ நிலை வரை அனைத்திற்கும் உரிய இடம் அளித்துப் போற்றப்படுகிறது. 

பிராணனைக் கட்டுப்படுத்துவதால் உடல் மன ஆற்றல்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. 

உடல், உணர்வறு மனம், ஆழ்மனம்,உணர்வு மனம், என்றெல்லாம் பல அடுக்குகளால் நாம் ஆக்கப்பட்டிருந்தாலும் அனைத்தையும் பிராணன் என்ற ஒரே ஆற்றல்தான் இயக்குகிறது. 

அதனால் பிராணன் கோர்க்கும் நூல் எனப்படுகிறது. 

இவை அனைத்திற்கும் பின்னால் ஆன்மா இருக்கிறது. 

ஆன்மா அசையாத அஸ்திவாரமாக இருக்க பிராணன் அதன்மேல் இயங்குகிறது. 

பிராணன் ஆன்மாவிலிருந்து தோன்றியது. 

சக்கரத்தின் ஆரங்கள் எப்படி மைய அச்சுடன் இணைக்கப் பட்டிருக்கின்றனவோ அப்படியே பிராணனும் ஆன்மாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

பிராணனை உபயோகிக்கும் சிறந்த கருவி மனமே 

மனம் கருவி. மனத்தின் பின்னால் இருக்கும் ஆன்மா பிராணனைப் பற்றிக் கொள்கிறது. 

பிராணனே உலகத்தை இயக்கும் சக்தி.

ஒவ்வோர் உயிர் வடிவிலும் அதைக் காணலாம். 

இந்த உடல் நிலையற்றது, மனமும் அது போலவே. இரண்டும் கூட்டுப்பொருள், ஆதலால் அழிந்தே ஆக வேண்டும். இவற்றின் இவற்றின் பின்னால் நிற்கும் ஆன்மா அழிவதில்லை. 

பிராணனைக் கட்டுப்படுத்தி இயக்கும் சுத்த அறிவே ஆன்மா என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

உடல் மற்றும் மனங்களின் பிராணன் தடையின்றிச் சீராக இயங்கும் போது இரண்டும் ஆரோக்கியமாக இருக்கின்றன. 

இந்த இயக்கம் தடைப்படும் போது நாம் நோய் வாய்ப் படுகிறோம். 

சில வேளைகளில் உங்கள் உடலிலேயே சில இடங்களுக்குக் குறைவாகவும் பிராணன் சென்று விடுகிறது. இதனால் சமநிலை குலைகிறது. நோய் வருவது இதனால் தான் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

நம்பிக்கை மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறுவதெல்லாம் உண்மையில் பிராணனாலேயே நடைபெறுகிறது. 

நம்பிக்கை நேரடியாக ஒரு மனிதனை குணமடையச் செய்வதாக நம்பிக்கை வைத்தியர்கள் நினைக்கிறார்கள்.அது தவறு. உண்மையில் அவ்வாறு இல்லை. நம்பிக்கையால்மட்டுமே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. 

உண்மையில் பிராண சக்தியே நோயைக் குணப்படுத்துகிறது. பிராணனைத் தன் வசப்படுத்திய தூய மனிதன் அதை ஒரு குறிப்பிட்ட இயக்க நிலைக்குக் கொண்டு வந்து , அந்த இயக்கத்தைப் பிறரிடம் செலுத்தி அவர்களின் நோயைக் குணப் படுத்துகிறான் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

அன்பு கூட பிராணனின் வெளிப்பாடு தான். 

பிராணனின் உயரிய இறுதி வெளிப்பாடு அன்பு. 

பிராணனிலிருந்து அன்பைத் தோன்றச் செய்வதில் வெற்றி பெற்றுவிட்டால் அப்போதே நீ சுதந்திரனாகி விடுகிறாய். 

துன்பமும் துயரமும் அனுபவித்து நீங்கள் அடையும் பெரிய பேறு அதுவே என்கிறார் சுவாமிவிவேகானந்தர். 


  

மனித அன்பில் பிராணன் மனிதர்களை நோக்கி ச் செலுத்தப் படுகிறது. பக்தியில் பிராணன் கடவுளை நோக்கிச் செலுத்தப் படுகிறது. எப்படியானாலும் அன்பு என்பது வாழ்க்கையின் சாரத்தையே பங்கிடுவது போன்றது., கொடுப்பது போன்றது. 

மகான்களின் அன்பு பிராணனாக வெளிப்பட்டு எல்லா திக்குகளிலும் பரவுகிறது. தன் நிழலில் வருபவர்களின் மனங்களை எல்லாம் அது உயர்த்துகிறது.

நாம் அன்பு செய்யும் போது பிராணனைக் கொடுக்கிறோம். அன்பு செய்யப்படும் போது அன்பு செய்பவரின் பிராணனைப் பெறுகிறோம். 

நம்மிடம் அன்பு காட்டுபவர் நூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அவரது அன்பு நம்மைக் கட்டி காக்கும், வளப்படுத்தும். அன்பின் ஊற்று தடைபடும் போது துன்பம் சூழ்கிறது.உலகில் பாதி துன்ப துயரங்களாவது இவ்வாறு நேர்ந்தவையே. 

அன்பின் மூலம் கவலையை மறக்க மடியும். மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் மட்டுமல்ல தனி மனிதனின் அக வாழ்விலும் அன்பு சமரசத்தை ஏற்படுத்துகிறது.

அகத்தில் அமைதியும் இயைபும் இன்றி தியானம் செய்வது முடியாத காரியம். எனவே சாதகர்கள் அன்பு என்பதைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.

பிராணன் என்பது பிரபஞ்ச ஆற்றல் என்றும் அதுவே வாழ்வின் இயக்கங்கள் ஒவ்வொன்றையும் நடத்துகிறது என்றும் கண்டோம். 

பிராணனின் ஒரு பகுதி உடலியக்கங்களிலும் ஒரு பகுதி மன இயக்கங்களிலும் செலவாகிறது. மீதி சேமிக்கப்படுகிறது. இது குண்டலினி.

சாதாரண சாதகன் குண்டலினியைப் பற்றிய விவரங்களைத் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. பொதுவாக குண்டலினியைப் பற்றிய தகவல்கள் குழப்பமானவையாகவும் பலவாறாகவும் உள்ளன. 

ஆனால் பிராணனைப் பற்றிய அறிவு மிகவும் அவசியம். ஏனெனில் இதை அறியாதிருந்தால் தியான வாழ்வில் பல தடைகள் ஏற்படக்கூடும்.

தியானம் என்பது மனத்தின் ஏதோ ஒரு சிறு பகுதியில் நடைபெறும் பயிற்சியல்ல. முழு மனமும் அதனுடன் உடலும் எல்லாம் இணைந்து செய்ய வேண்டிய ஒன்று தியானம். 

மனத்தின் உணர்வுப் பகுதியை ஒருமைப்படுத்தும் போது அதன் விளைவை உணர்வறு பகுதி நரம்பு மண்டலம் என்று மனம் மற்றும் உடல் பகுதிகள் அனைத்திலும் நாம் உணர முடியும். இதிலிருந்து ஒருமைப்பாடு என்பது முழு ஆளுமையையும் பாதிக்கக் கூடியது என்பது தெரிகிறது. 

ஒருமைப்பாடு என்பது ஏதோ மிகவுயர்ந்த பொருட்களின் மீதுதான் இருக்க வேண்டும் என்பதல்ல. அப்படி இருப்பதுமில்லை. சினிமா பார்க்கும் போது பாடல் கேட்கும் போது அல்லது கோபம் ஆசை போன்ற உணர்ச்சிகளின் வசப்படும் போது மனம் மிகவும் ஒருமைப்படுகிறது. ஆனால் இத்தகைய கீழ்நிலை ஒருமைப்பாடுகளால் இரண்டு பிரச்சனைகள் எழுகின்றன. முதலில் அது பிராணனை விரயம் செய்கிறது.உடல் வேலைகளுக்கு உணவிலிருந்து பெறப்படும் ஆற்றல் செலவிடப்படுகிறது.ஆனால் கவலை, உணர்ச்சிகள்,சஞ்சலம் போன்றவை பிராமணனை விரயம் செய்கின்றன.

இரண்டாவது பிரச்சனை இன்னும் சற்றுச்சிக்கலானது. ஒவ்வொரு முறை மனத்தை ஒருமைப்படுத்தும் போதும் பிராணன் செல்ல ஒரு புதிய பாதை திறக்கப்படுகிறது. பிராணன் அது வழியாகச் செல்ல முயலும் போது ஒரு புதிய பழக்கம் உருவாகிறது.தவறான ஒருமைப்பாடுகளால் அதாவது வெறுப்பு,சுயநலம், ஆசை போன்றவற்றால் தோன்றுகின்ற புதிய வழிகள் நேராக இருப்பதில்லை.அவை உடலிலும், மனத்திலும் மடுக்களையும் சுழிகளையும் ஏற்படுத்தி பிராணனின் சீரான இயக்கத்தைத் தடுக்கின்றன.

தியானம் என்பது ஓர் உயர்ந்த ஒருமைப்பாடு-உடல் மற்றும் மனத்திற்கு அப்பாலுள்ள உண்மை. ஒன்றின் மீது மனத்தைக் குவிப்பது . அதன் ஆற்றலாலும், வல்லமையாலும் அது அகத்தில் இருக்கும் மடுக்களையும் சுழிகளையும் சமன் செய்கிறது. அது மட்டுமின்றி தியானம் ஒருவனை அவனது ஆழங்களுக்கே, அதாவது பிராணனின் மூல இடத்திற்கே எடுத்துச் செல்வதன் வாயிலாக பிராணன் செலவிடப் படுவதைத் தடுக்கிறது.

சுருங்கச் சொல்வதானால் நமது அன்றாட வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ நாம் தவறான ஒருமைப்பாடுகளால் உண்டாகும் தீய விளைவுகளை தியானம் சமன்படுத்துகிறது.


  

பலவகை தியானங்கள்

-

தியானத்தின் பல வகைகளைப்பற்றி அறியுமுன் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஒன்று.தியானம் என்பது சாதாரண மன ஒருமைப்பாடல்ல.மனத்தின் சிறப்பான அகமுக ஒருமைப்பாடாகும். இதை ஏற்கனவே நாம் விரிவாகக் கண்டோம்.

இரண்டாவது, தியானம் என்பது தனித்த எதையும் சாராத ஒரு சாதனை அல்ல. 

ஏறக்குறைய எல்லா ஆன்மீகப் பாதைகளிலும் மன ஒருமைப்பாட்டின் ஒரு படியாக தியானம் அமைகிறது.சாதனை முறைகளில் ஆரம்பம் வெவ்வேறாக இருக்கலாம்.ஆனால் எல்லா சாதனைகளிலும் தியானம் போன்றதொரு நிலை உள்ளது.

இந்த நிலையைப் பல சமயங்கள் பல விதமாக அழைக்கின்றன.எப்படி அழைத்தாலும் அவை தியான உணர்வையே குறிக்கின்றன.

பல நெறிகளில் தியானத்தின் இடம்

-

பதஞ்ஜலியின் யோக நெறி கூறும் சாதனை முறை யமம்,நியமம் என்னும் மனத்தூய்மைப் பயிற்சிகளில் ஆரம்பிக்கிறது.

பின்னர் ஆசனம்,பிராணாயாமம் மனத்தைப் புறப்பொருட்களிலிருந்து பிரிக்கின்ற பயிற்சியான பிரத்யாஹாரம், பிரித்த மனத்தை ஓரிடத்தில் குவித்தலாகிய தாரணை . இவற்றிற்கு அடுத்த படியாக வருகிறது தியானம்.

ஞான நெறியின் சாதனை முறையில் சாஸ்திரங்களைக் கேட்டல்(ச்ரவணம்) முதலில் வருகிறது. பின்னர் கேட்டவற்றைச் சிந்தித்தல் (மனனம்) தொடர்வது ஆராய்ச்சி (நிதித்யாஸனம்)- இது தியானத்தைப் போன்றதொரு நிலையாகும்.

பக்தி நெறியில் பிராத்தனை,இறைவனின் புகழ் பாடுதல், பூஜை என்று தொடங்கி பின்னர் வருகிறது தியானம்.

கர்ம நெறியில், செயல்புரியும் போது தன்னறிவுடன் செயல்படுவது இன்றியமையாதது.இதுவும் ஒரு வகை தியானமே. 

எல்லா மதங்களும் தியான நிலையைப் போதிக்கின்றன.ஆனால் புத்த மதம் தியானத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது.

பாதை எதுவானாலும் ஆரம்பத்தில் சாதகன் தியானம் செய்ய முயலும் போது அவனது மனத்தில் பல எண்ணங்கள் எழுகின்றன. நாளடைவில் இவை குறைந்து ஓர் எண்ணம் நிலைக்கிறது. இதுவே தியான உணர்வு நிலை. 

இறையனுபூதி பெற விழையும் சாதகர்கள் ஒவ்வொருவரும் இந்த நிலையைக் கடந்து சென்றேயாக வேண்டும்.இந்த நெடுஞ்சாலை முடியும் இடத்தில் ஆன்மாவின் ஒளி உலகம் விரிகிறது.

அப்படியானால் ஏன் இத்தனை வகை தியானங்கள்?

உண்மையில் இவையெல்லாம் தியானங்கள் அல்ல. இவை தாரணை முறைகள்.மனத்தை ஒரு குறிப்பிட்டமையத்தில் நிறுத்துவதற்கான பல வழிகள்.

ஒரே நெடுஞ்சாலையில் வந்து சேர்கின்ற பல பாதைகள். இந்த வழிகள் எல்லாம் தியானத்தை எப்படி ஆரம்பிப்பது என்பதைக் கூறுகின்றன, தியான உணர்விற்கான பல கதவுகளைத் திறக்கின்றன, அவ்வளவு தான்.

ஆனால் தியான உணர்வை எப்படி நிலைநிறுத்தவது என்பதை இவை கூறுவதில்லை.அதனை நாமே நமது பயிற்சியின் மூலமும்,அனுபவத்தின் மூலமும் தெரிந்துகொள்ளவேண்டும்.

-

தியானம் என்பது எல்லா சாதகர்களும் கடந்து செல்ல வெண்டிய பாதை என்று கூறியதன் பொருள்.எல்லோருடைய தியானத்தின் லட்சியமும் ஒன்றே என்பதல்ல. எந்தப்பாதையை அதாவது எந்த தாரணை முறையைத்தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்தது. 

ஒவ்வொரு தாரணைமுறையும் தியானத்தின் வழியாக ஒவ்வொரு விதமான அனுபவத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றன.

தியானத்தின் ஆரம்பமும், முடிவும் வெவ்வேறாக இருக்கின்றன.ஆனால் எல்லாப் பாதைகளிலும் தியானம் என்பது ஒன்று தான்.

ஏனெனில் தியானம் என்பது ஒரே ஓர் எண்ணத்தைத் தங்க வைப்பது தானே! அந்த எண்ணம் கூட ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். 

உதாரணமாக ஒருவர் சிவனை தியானிக்கலாம். இன்னொருவர் கிருஷ்ணர், மற்றொருவர் ஒளி, ஆகாயம்,சூரியன் என்றெல்லாம் தியானிக்கலாம்.எதுவாயினும் ஒரே ஓர் எண்ணத்தைத் தங்க வைத்துக் கொள்வது என்ற விதத்தில் தியானம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்.

இவ்வாறு தியானம் எல்லா ஆன்மீகப் பாதைகளும் சந்தித்து, சங்கமித்து, சிறிது தூரம் இணைந்து சென்று, பின்னர் தத்தவமஸி என்ற லட்சியம் நோக்கிப் பிரிந்து செல்லும் ஒரு சந்திப்பு மையமாக உள்ளது. 

தியானத்தை ஒரு நெடுஞ்சாலையுடனும் ஒப்பிடலாம். நெடுஞ்சாலையில் நடைபாதை தனியாக உள்ளது.சைக்கிள், பேருந்து போன்ற வாகனங்கள் செல்லத்தனித்தனிப் பாதைகள் உள்ளன.பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் எல்லா வாகனங்களும் செல்வது ஒரே சாலையில் தான். 

அது போல தியானிப்பவர்கள் வெவ்வேறு பொருளை தியானிக்கலாம். ஆனால் எல்லோரும் செல்வது தியானம் என்கின்ற ஒரே பாதையில் தான்.


  

உபாசனையும் நிதித்யாசனமும்

-

தியானம் இருவகைப்படுகிறது.

1.உபாசனை, 2.ஆன்ம விசாரம்.

முதல் வகை தியானத்தில் மனம் ஒரு பொருளின் மீது குவிக்கப் படுகிறது.அந்தப் பொருள் தெய்வத்திருவுரு,ஒளி,ஆகாசம் போன்றவையாக இருக்கலாம். அன்பு , கருணை, வலிமை போன்ற பண்புகளாக இருக்கலாம். 

சொந்த ஆன்மாவையே தியானப்பொருளாகக் கொண்டு அதன் மீது மனத்தைச் செலுத்தலாம். இந்த வகை தியானத்தில் சுயேச்சை சக்தியின் மூலம் தியானிக்கப்படுகின்ற பொருள் மீது உணர்வு செலுத்தப்படுகிறது. இது உபாசனை.

இரண்டாம் வகை தியானம் நிதித்யாசனம் அல்லது ஆன்ம விசாரம்.

இங்கு உணர்வு குவிதலோ சுயேச்சையின் முயற்சியோ இல்லை.இது உண்மையில் உணர்வின் மூலகாரணத்தைத் தேடுவதாகும்.

“நான்” என்ற உணர்வு எங்கிருந்து வருகிறது. என்று தேடி அதன் மூலக்காரணத்தை அடைவதே நிதித்யாசனம். 

பொதுவாக நமது “நான்” என்ற உணர்வு வெளியில் புறப் பொருட்களை நாடிச் சென்றபடி உள்ளது. ஆனால் நிதித்யாசனத்தில் அது தனது மூல காரணமாகிய ஆன்மாவை நோக்கித் திரும்பிச் செல்கிறது. மிகப்பலருக்கு இந்த நிதித்யாசனம் மிகக் கடினமானது.சிலர் இந்த முயற்சியில் சிறிதளவு வெற்றி பெறலாம். ஆனால் ஆழ்ந்து செல்ல வேண்டுமானால் பயிற்சியின் மூலம் குவிக்கப்பட்டு, பிரம்மச்சரியத்தின் மூலம் வலிமையாக்கப்பட்ட மனம் வேண்டும்.

உபாசனை, தேவையான பயிற்சியை மனத்திற்கு அளிக்கிறது. சில காலம் உபாசனை பழகிய பின்னர் நிதித்யாசனம் செய்வது எளிது. உபாசனைக்கும், நிதித்யாசனத்திற்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளன. இவற்றை நமது ஆசாரியர்களும், புத்த மத ஆசாரியர்களும் எடுத்துக் கூறியுள்ளனர்.

எனினும் இந்த இருவகை தியானங்களுக்கும் இடையில் மிக முக்கியமான ஒற்றுமையும் உள்ளது. இரண்டும் ஓர் உயர்ந்த உணர்வு மையத்தை வற்புறுத்துகின்றன. இரு வகை தியானங்களிலும் தியானிப்பவனின் உணர்வு இந்த மையத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிடாமல் தடுக்கப்படுகிறது. 

உபாசனையில் இந்தமையத்தைச் சுற்றி உணர்வு வட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு அதனுள் பிற எண்ணங்கள் வந்துஅலைமோதாமல் தடுக்கப்போராடுகிறோம். நிதித்யாசனத்தில் இத்தகைய போராட்டம் எதுவுமில்லை. இங்கே சாதகர்கள் தனது ”நான்” என்ற உணர்வைப் பற்றிக் கொள்கிறான்.

நிதித்யாசனத்தை நாம் தியானத்தின் ஒரு வகை என்று குறிப்பிட்டாலும் உண்மையில் அது தியானம் அல்ல. நிதித்யாசனம் என்பது ஆன்ம விசாரம் . இது ஞானநெறியைச் சேர்ந்தது.

இங்கு நாம் உபாசனை என்னும் முதல் வகை தியானத்தைப் பற்றியே பார்க்கப்போகிறோம்.

உபாசனை-நிதித்யாசனம் ஒருங்கிணைப்பு

உபாசனையும்,நிதித்யாசனமும் எதிரிடையானவை அல்ல, ஒன்றுக்கொன்று துணை செய்பவை. இந்த இரண்டையும் இணைத்து நாம் சாதனை பழக முடியும்.

பொதுவான தியான முறைகள் 

-

எல்லாமே உபாசனைகளாகும்.இந்த உபாசனை முறைகளுள் ஏதாவது ஒன்றில் ஒரு சாதகன் ஈடுபடுத்துவதை ”தீட்சை அளித்தல்” என்று கூறுகிறோம். 

பக்தி நெறியில் இந்த வகை தியானம் மட்டுமே பழகப்படுகிறது.

அத்வைத நூல்களைப் படிப்பவர்களும் கூட உண்மையில் ஆன்ம விசாரத்தில் ஈடுபடுவது அபூர்வமே.

பொதுவாக உபாசனை முறை தியானங்களிலேயே அவர்களும்ஈடுபடுகிறார்கள்.நிதித்யாசனம் பொதுவாக ஞானநெறியில் மட்டுமே பழகப்பட்டாலும் பக்தி நெறியில் அதை இணைத்துப் பழகுவதில் எவ்விதத் தவறுமில்லை. மாறாக இரண்டையும் இணைப்பதால்நன்மையே உண்டாகும். இந்த இரண்டின் ஒருங்கிணைப்பு ஓர் அவசியம் என்று கூடச் சொல்லலாம்.

இறைவனுடன் ஓர் உறவை ஏற்படுத்துவது உபாசனையின் நோக்கங்களுள் ஒன்று. உறவு என்றால் சாதாரண உறவல்ல. சுவாமி விவேகானந்தர் கூறுவது போல் ” அழியாத ஆன்மாவுக்கும் அழியாத இறைவனுக்கும் இடையில் உள்ள அழியாத உறவு” அது.

இப்போது ”நான்“ என்று நாம் எதைச் சொல்கிறோமோ, துன்பங்களுக்கு உறைவிடமான அது தொடர்ந்து மாறிக்கொண்டடேயிருப்பது, அழியக்கூடியது. 

நமது ஆன்மா மாறாதது. அழியாதது.

இதன் பொருள் என்ன? கடவுளுடன் உண்மையான அன்புறவு கொள்ள வேண்டுமானால் நாம் முதலில் ஆன்மாவை அறிய வேண்டும்.

ஆன்ம விசாரம் இதற்குத் துணை செய்கிறது. இந்த சாதாரண நான்” என்பதிலிருந்து நம்மை ஆன்மாவை நோக்கி அது அழைத்துச் செல்கிறது.

இந்த இணைப்பின் தேவைக்கு இன்னும் ஒரு காரணம் உள்ளது.

-

குறிப்பிட்ட ஓர் உணர்வு மையத்தில் தியானம் செய்யப்படுகிறது.இந்த உணர்வு மையத்தில் சாதகன் தனது ஆன்மாவை உணர்கிறான்.இந்த மையத்தில் முதலாவதாக மனத்தை நிலைநிறுத்த வேண்டும். பின்னர் அதில் இஷ்டதெய்வத்தை வழிபட வேண்டும். சாதகர்கள் பொதுவாக தாமரை ஒன்றையோ ஒளியையோ தங்கள் இதயத்தில் அல்லது ஸஹஸ்ராரத்தில் கற்பனை செய்து தியானிக்க முயல்வது வழக்கம். ஆனால் பலர் இதில் வெற்றிபெறுவதில்லை. 

இத்தகையவர்கள் சிறிது ஆன்ம விசாரம் செய்தால் உணர்வு மையத்தில் மனத்தை நிலைநிறுத்துவதிலும் தாமரை அல்லது ஒளியைப் பொருளுள்ளதாகவும் உண்மையானதாகவும் செய்வதிலும் எளிதில் வெற்றி பெற முடியும். image141

உபாசனையும் தியானமும்

உபாசனை

  

தியானம் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் சாதகன் சிறிது நேரம் ”நான்” என்ற உணர்வின் ஆரம்ப இடத்தைத் தேடுவதில் ஈடுபடவேண்டும். இது மனத்தைச் சரியான உணர்வு மையத்தில் நிலை நிறுத்த உதவுகிறது, தியானத்தை எளிதாக்குகிறது.

இந்த இணைப்பில் மற்றொரு நன்மை உள்ளது. நிதித்யாசனம் செய்வதால் எந்தச் சூழ்நிலையிலும் அமைதியாக இருக்கும் தன்மை நமக்கு உண்டாகிறது. 

உபாசனையால் மன ஒருமைப்பாட்டு ஆற்றல் வளர்கிறது. ஆனால் அதே அளவு புலக்கட்டுப்பாட்டு ஆற்றலும் வளரும் என்று சொல்ல முடியாது. இதனால் சாதகன் எப்போதும் சூழிநிலையால் பாதிக்கப்படுகிறான்.

பிற மனிதர்களின் தொடர்புகள் அன்றாட அலுவல்களின் பிரச்சனைகள் எல்லாம் அவனை அலைக்கழிக்கின்றன. நிதித்யாசனம் இதனை மாற்றி சாதகனைத் தனது உண்மையான உணர்வு மையத்தில் நிலைத்திருக்கச் செய்வதன் மூலம் எப்போதும் அமைதியாக இருக்கச் செய்கிறது.

இன்னும் ஒன்று, உபாசனையில் மட்டும் ஈடுபடுபவர்கள் பல கற்பனைகளையும் போலி மயக்கங்களையும் ஆன்மீக அனுபவங்கள் என்றெண்ணி ஏமாறுவதற்கு வாய்ப்பு உண்டு.

நிதித்யாசனத்தையும் இணைத்துச் செய்வதால் இது தடுக்கப்படுகிறது.

உண்மையான ஆன்மீக அனுபவம் ஒருவனது உணர்வை, வாழ்க்கைக் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கிறது. ஆன்மாவைப்பற்றிய அறிவை ஏற்படுத்துகிறது. இதனை உணர ஆன்ம விசாரம் தேவை. 

இறுதியாக உபாசனை நிதித்யாசனை இணைப்பு அறிவையும் உணர்ச்சியையும் ஒருங்கே திருப்திப் படுத்துகிறது.


உபாசனையும் தியானமும்

-

மனத்தை எந்தப் பொருளில் வேண்டுமானாலும் ஒருமைப்படுத்த முடியும். நமது அன்றாட வாழ்வில் கூட நாம், அவ்வப்போது ஏதாவது ஒரு பொருளில் மனத்தை ஒருமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இத்தகைய மன ஒருமைப்பாட்டால் எந்தப்பயனும் இல்லை. ஏனெனில் இது தன்னுணர்வின்றி ஆசைகளின் தூண்டுதலால் செய்யப்படுகிறது. 

தியானம் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. தியானம் என்பது ஆசைகளிலிருந்து விடுபட்ட சுயேச்சையை ஓர் உயர்ந்த உணர்வு மையத்தில் குவிப்பதாகும்.

மன ஒருமைப்பாட்டில் ஒரு நிலையே தியானம் என்பதையும் எல்லா ஆன்மீக நெறிகளுக்கும் அது பொதுவானது என்பதையும் பார்த்தோம். 

உபாசனை மற்றும் நிதித்யாசனம் பற்றியும் அறிந்து கொண்டோம்.

உபாசனை பொதுவாக யோக சாஸ்திரங்களில் தியானம் எனவும் வேதாந்த நூல்களில் உபாசனை எனவும் கூறப்படுகிறது. 

இந்த இரு சொற்களும் உபநிடதங்களில் காணப்படுகின்றன.ஆனாலும் யோக மற்றும் வேதாந்த தியானங்களுக்கிடையே சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

யோக தியானம் பிரிவின் நோக்கம் மனத்தின் செயல்பாடுகளை அறிவது. 

முக்கிய நோக்கம்.ஆன்மாவாகிய புருஷனைப் பிரகிருதியிலிருந்து பிரிப்பது . 

ஆனால் வேதாந்த தியானம் இணைப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டது. அதன் உடனடி நோக்கம் தியானிப்பவரை இஷ்டதெய்வத்துடன் இணைப்பது , முக்கிய நோக்கம் ஜீவாத்ம-பரமாத்ம ஐக்கியம்.

மேலும் யோக தியானத்தில் கடவுள் முக்கியமல்ல. எந்தப்பொருள் மீது வேண்டுமானாலும் தியானம் செய்யலாம் என்பது பதஞ்ஜலியின் கருத்து. 

ஆனால் வேதாந்த தியானம் கடவுளை மட்டுமே தியானிக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது.

மூன்றாவதாக யோக தியானம் பழகுவதற்கு உண்மையைப் பற்றிய எந்த முடிவுகளையும் முன்னரே,அறிந்திருக்க வேண்டியதில்லை.

ஆனால் வேதாந்த தியானமாகிய உபாசனை உண்மையைப்பற்றி வேதாந்தம் கூறும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது. நூலறிவை(பரோஷ ஞானம்) உண்மை அறிவாக (அபரோஷ ஞானம்) மாற்றுவதே தியானத்தின் வேலை.

காலம் செல்லச்செல்ல யோக மற்றும் வேதாந்த தியானங்கள் ஒன்றாக இணைந்து விட்டன. பிற்காலத்தில் எழுந்த தந்திரங்களும், தந்திரங்களின் தனிக்கண்டுபிடிப்பான மந்திரம்,குண்டலினி போன்ற கருத்துகளும் அதனுடன் கலந்தன. 

இந்த முச்சேர்க்கை இந்தியாவின் ஆன்மீக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்தது. இன்று நாம் காணும் தியானவகைகள் அத்தனையிலும் தந்திரங்களின் ஆதிக்கத்தைத் தெளிவாக க் காண முடியும்.


  

உருவம், பெயர் ,ஆன்மா

-

சின்னங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய இடம் வகிக்கின்றன.

உணர்வு ஒன்றைத் தவிர நம் சிந்தனைகள் அனைத்தும் சின்னங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. 

இந்தச்சின்னங்களை இரண்டு வகையாகப்பிரிக்கலாம். 

ஒன்று உருவம், மற்றொன்று பெயர்.

இந்த இரண்டுடன் ஆன்மாவும் சேரும் போது நாம் சிந்திக்கிறோம்.

மனித வாழ்வில் உணர்ச்சிகளுக்கு முக்கிய இடம் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அறிவைப்பொறுத்தவரை அவை முக்கியமல்ல. 

உணர்ச்சி வசப்பட்ட ஒருவனால் எந்த உண்மையையும் உணர முடிவதில்லை. கோபம், பொறாமை,பயம் போன்ற உணர்ச்சிகள் ஒருவனை ஆக்கிரமிக்கும் போது அவன் தவறான அறிவையே பெறுகிறான். அதனால் தான் உணர்ச்சிகளை தவறான அறிவு என்கிறார் பதஞ்ஜலி.

முக்கியமான இந்த உணர்ச்சிகள் ஆன்மீக வாழ்வில் பெரிய தடைகளாகின்றன.

தியானம் பழக ஆரம்பிக்கும் முன் ஒரு சாதகன் இந்த உணர்ச்சிகளை விரட்டியே தீர வேண்டும். 

உணர்ச்சிகளின் தொந்தரவு இல்லாதபோது, அதாவது மனம் உணர்ச்சிகளால் அலைகழிக்கப்படாத போது தான் மனத்தில் உண்மை அறிவு பிறக்க முடியும். 

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும்.உபாசனை நெறியில் மிகவும் துணைபுரிகின்ற பக்தி அல்லது கடவுளிடம் அன்பு என்பது ஓர் உணர்ச்சி அல்ல. எனவே கடவுளிடம் அன்பு கொள்வது ஆன்மிக வாழ்வில் ஒரு தடையாக இருக்காது.

உண்மை பக்தி என்பது ஆன்மாவின் ஒரு பண்பு. ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையத்துடிக்கின்ற ஏக்கமே பக்தி.

உணர்ச்சிகள். இயல்புணர்ச்சிகள் இவற்றின் பிடியிலிருந்து மனம் விடுபடும் போது மனத்தில் என்ன மிஞ்சும்?

மிஞ்சுவது ஒர் பொருளை அறிவதற்கான மூன்று விஷயங்களே.

அவை-1) உருவம்,2)பெயர், 3) ஆன்மா.

தியானம் செய்யும் போது இந்த மூன்று மட்டுமே செயல்புரிகின்றன. இந்த மூன்றையும் கையாளும் விதத்தில் சாதகர்கள் வேறுபடுகின்றனர்.

மனிதர்களிடையே வேறுபாட்டைப் பற்றிப் பேசும்போது பொதுவாக நம் உணர்ச்சி வேறுபாடுகளையே கூறுகிறோம். 

அன்புடையவர்கள், கொடூரமானவர்கள், முரடர்கள், கர்வம் பிடித்தவர்கள் பணிவானவர்கள் இப்படி எல்லாம் தான் நாம் மனிதர்களை வேறுபடுத்துகிறோம். 

இந்த வேற்றுமைகளைச் சமன்படுத்தி ஒவ்வொரு சாதகனையும் தூயவனாக அமைதி மிக்கவனாக மாற்றுவது தியான வாழ்வில் மிக முக்கியமான வேலையாகும்.

மூன்று வித மன அமைப்புகள்

-

.மன அமைப்பே மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. அதாவது பெயர் , உருவம்,ஆன்மா எல்லாம் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு விதமாகச் செயல்படுகிறது.

சிலரால் உருவங்களை எளிதில் நினைக்க முடியும்.அதே வேளையில் கணிதம் போன்றவற்றைக் கையாள அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள் . இவர்களது மனம் உருவச் சார்புடையது. எதையும் படம் பிடித்தாற்போன்று மனத்தில் பதித்துக் கொள்ளக்கூடிய நினைவாற்றல் கொண்டவர்கள் இவர்கள்.

வேறு சிலருக்கு உருவங்களை நினைவுகூர்ந்து மனத்திரையில் காணும் ஆற்றல் இருப்பதில்லை. ஆனால் இவர்கள் ஒலிக்குறிகளை எளிதில் நினைவு கூரும் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள். பொதுவாக சொற்பொழிவுகள் போன்றவற்றைக் கேட்பதில் இவர்கள் பயன் பெறுவார்கள். இவர்களது மனம் ஒலிச்சார்புடையது.

ஆனால் சிலருக்கு உருவம்(ஒளி) , பெயர்(ஒலி) இரண்டுமே நினைவு கூர்வதற்கு இயலாததாகி விடுகின்றன. இவர்கள் இரண்டையும் விரும்புவதில்லை.எப்போதும் ஆன்மாவிலேயே நிலைத்திருக்க விரும்புகிறார்கள். இவர்கள் ஆன்மத் தொடர்புடையவர்கள்.


  

மூவகை உபாசனைகள்


இந்த மூன்று விதமான மன அமைப்புடையவர்களின் தேவைக்கேற்ப மூன்று விதமான உபாசனைகள் ஏற்பட்டன. 

அவை, பிரதீக உபாசனை(உருவ தியானம்), 

நாம உபாசனை(ஒலிக்குறியீட்டு தியானம்), 

அஹம்கிரஹ உபாசனை( ஆன்ம தியானம்).

ஒவ்வொரு சாதகனும் தான் எத்தகைய மன அமைப்புடையவன்-உருவச் சார்புடையவனா அல்லது ஒலிக்குறியிட்டுச் சார்புடையவனா, ஆன்மச்சார்புடையவனா என்பதை அறிந்திருப்பது அவசியம். 

சிறிது தியானம் பழகுவதாலும் மன ஆராய்ச்சியாலும் இதனை எளிதில் உணர முடியும்.மன அமைப்பைப் பற்றித் தெரிந்த பிறகு அதற்கேற்ற உபாசனை முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சிலரால் எந்த உருவத்தையும் தியானிக்க முடியும்.அவர்கள் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தால் வெறுமை மட்டுமே மிஞ்சும்.

மன வெளியில் எந்த உருவமும் இல்லாமல் சில எண்ணங்கள் மட்டும் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருப்பதை அவர்கள் உணர்வார்கள்.இரவு நேரத்தில் சிறிய நீரோடையின் மெல்லிய சலசலப்பை மட்டும் கேட்பது போன்றது அது. அவர்களுக்கு மந்திர ஜபம் மிகுந்த பயன் அளிக்கும். 

சிலருக்கு மந்திர ஜபம் செய்வது மிகவும் சிரமமாகத் தெரியும்.

மிகப்பலர் மூன்று விதமான மன அமைப்பும் கலந்து அமையப் பெற்றவர்கள்.அவர்கள் தாங்கள் விரும்புவது போல் மனத்தை உருவத் தொடர்புடையதாகவோ ஒலிக்குறியீட்டுத் தொடர்புடையதாகவோ ஆன்மத் தொடர்புடையதாகவோ மாற்றிக் கொள்ள முடியும். 

சாதனையின் ஆரம்ப நாட்களில் இந்த மூன்றையும் இணைத்துச் செய்வது பலருக்கு எளிதாக இருக்கலாம். அவர்கள் ஏதாவது ஒரு முறையை முக்கியமாகப் பின்பற்றி மற்ற இரண்டையும் அதனுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். 

ஆரம்பக் காலத்தில் தியானம் என்பது மிகவும் கடினமானது தான். ஆனால் மன அமைப்பை உணர்ந்து செயல்படுவதன் மூலம் அதை எளிதாக்க முடியும்.ஒரு முறையில் வெற்றி பெற்ற சாதகன் மற்ற முறைகளையும் எளிதாகப் பின்பற்ற முடியும்.

பிரதீக உபாசனை

பிரதீகம் என்றால் சின்னம்.பிரதீகம் என்ற சொல்லுக்கு”ஒன்றை நோக்கிச் செல்வது” என்று பொருள். அதாவது மனத்தைக்குவிப்பதற்கான ஒரு பொருளே பிரதீகம். 

நாம் பேசும் வார்த்தைகளும் சின்னங்களே. பொதுவாக உருவங்கள் படங்கள், இயற்கைக்காட்சிகள் போன்றவையே சின்னங்களாகக் கருதப்படுகின்றன. 

வேத காலத்தில் அக்கினி, சூரியன்,காற்று. மனம் போன்றவை பிரம்மத்தைக் குறிக்கும் சின்னங்களாக வழங்கப்பட்டு வந்தன.


  

பிரம்மத்திற்கும், இந்தப்பிரதீகங்களுக்கும் உள்ள தொடர்பு எத்தகையது? 

இதனை இரண்டு வழிகளில் விளக்கலாம். 

சம்பத் உபாசனை, அத்யாச உபாசனை.

சம்பத் உபாசனை

இந்த உபாசனையில் பரம்பொருளைக் குறிக்க ஒரு சாதாரணப் பொருள் உபயோகப்படுத்தப் படுகிறது. அந்தப்பொருள் எதுவாகவும் இருக்கலாம். அது முக்கியமல்ல. தியானிப்பவன் பரம்பொருளின் குணங்களையே தியானிக்கிறான். அந்தக்குறியீட்டுப் பொருளை அல்ல. 

எடுத்துக்காட்டாக சாளக்கிராம வழிபாட்டைக் கூறலாம். சாளக்கிராமத்தை வழிபடுபவன் அது ஒரு கல் என்பதை மறந்து பேரொளி நிறைந்த மகாவிஷ்ணுவை நினைக்கிறான். இது சம்பத் உபாசனை.

அத்யாச உபாசனை

இதில் குறியீட்டுச் சின்னம் உயர்ந்த பொருளாக இருக்கும். அந்தப்பொருளில் இறைவனின் குணங்கள் ஏற்றப்படுகிறது.இந்த உபாசனையில் இறைவனுக்குரிய முக்கியத்துவம் குறியிட்டுச்சின்னத்திற்கும் உண்டு.

மிகவும் உன்னதமான உபாசனைகளுள் ஒன்றான சூரியஉபாசனை அத்யாச உபாசனைக்கு உதாரணமாகும். சூரியனே பிரம்மம்” இதுவே உபதேசம் என்று கற்பிக்கின்றன உபநிடதங்கள். 

பொன்னொளிக் கிரணங்களுடன் கூடிய கதிரவன் பிரம்மத்தை ஒத்திருப்பதால் அதனையே பிரம்மமாக தியானிக்கலாம்.அதாவது பிரம்மத்தின் பண்புகளை சூரியனில் இணைத்து,சூரியனையே எல்லையற்றதாக, உணர்வுப் பொருளாக ஆனந்தப் பொருளாக மூல காரணமாக தியானிக்க வேண்டும். 

வேதப் பாரம்பரியம் மறைந்த பின்னர் இந்தப்பிரதீக தியானங்களும் வழக்கிழந்துவிட்டன. அவற்றை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகவும் அவசியமாகும்.

தற்காலத்தில் பல தெய்வங்களும் சின்னங்களும் வந்து வேதப் பிரதீகங்களின் இடத்தைப் பிடித்துக் கொண்டன.

தற்காலப்பிரதீகங்களை இரு வகையாகப்பிரிக்கலாம்.

1.கருத்துப்பிரதீகம்.2.உருவப்பிரதீகம்

ஸ்ரீசக்கரம் போன்ற யந்திரங்கள், மண்டலங்கள், சாளக்கிராமம், சிவலிங்கம், கும்பம் போன்றவை கருத்துப் பிரதீகங்களுள் அடங்கும்.

இவை தியானத்தை விடப் பூஜைகளில் தான் அதிகமாகப் பயன்படுகின்றன. 

கருத்துப் பிரதீகங்கள்

உணர்வு மையம் அல்லது சக்கரங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் தாமரை, ஆன்மாவைக் குறிக்கும் சுடர்,ஆகாசத்தை அல்லது வெளியைக் குறிக்கின்ற ஆகாயம் போன்ற உருவமற்ற சின்னங்கள் போன்றவை கருத்துப் பிரதீகங்கள்.

உருவப் பிரதீகங்கள் என்பவை தெய்வங்களின் பிரதிமைகள். பிரதிமை என்பது காகிதம் அல்லது துணியில் வரையப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட படமாகவோ அல்லது கல்லாலோ உலோகத்தாலோ செய்யப்பட்டத் திருவுருவமாகவோ இருக்கலாம். 

பிரதீகம் என்பது பிரம்மத்தின் அடையாளச்சின்னம் மட்டுமே என்பதை பிரம்ம சூத்திரம் தெளிவாகக் கூறுகிறது. 

கடவுளை நாம் அடையாளச்சின்னங்களின் நிலைக்குத் தாழ்த்தக் கூடாது, மாறாக அடையாளச் சின்னங்களை இறைவனின் நிலைக்கு உயர்த்த வேண்டும். 

சுருங்கச் சொன்னால் பிரதிமை என்பதை ஒருமைப்பாட்டிற்கு உதவும் ஒரு சாதனமாக(த்ருஷ்டி சௌகர்யம்)மட்டுமே கொள்ள வேண்டும்.

இது தியானத்திற்கு மட்டுமே பொருந்தும். ஆனால் பூஜையைப்பொறுத்தவரை பிரதிமையின் இடம் இதுவல்ல. முறையாக நிறுவப்பட்டு தினமும் சரியான பூஜை செய்யப்படும் பிரதிமை ஆற்றல் பெறுகிறது. தெய்வீக அருளின் மையமாகிறது. இறைவனின் ஒரு வெளிப்பாடான அர்ச்சா,பிரதிமையில் இருப்பதாக ஸ்ரீராமானுஜர் கூறுகிறார்.


  

இங்கு நாம், இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.பிரதீகங்கள் என்பவை கடவுளின் அடையாளச் சின்னங்கள் என்று கூறியதன் பொருள்,இந்து சமயம் வழிபடும் தெய்வங்கள் வெறும் சின்னங்கள் மட்டுமே என்பதல்ல. எத்தனையோ மகான்கள் அந்த தெய்வங்களை நேரடியாக கண்டிருக்கின்றனர். 

ஒவ்வொரு தெய்வமும் உருவக் கடவுளின் ஒரு குறிப்பிட்ட அம்சமாக விளங்குகிறது. நாம் இருப்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்காவது அவையும் உண்மையே.

அடுத்த விஷயம், தியானத்தைப் பொறுத்தவரையில் பிரதீகங்கள் மன ஒருமைப்பாட்டுச் சாதனங்கள்தாம்.

ஆனால் பூஜை அல்லது வழிபாட்டின்நோக்கம்வெறும் மன ஒருமைப்பாடு மட்டும் அல்ல.எந்த தெய்வத்தைப் பிரதீகத்தின் மூலம் வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் நேரடிக் காட்சியேவழிபாட்டின் நோக்கம்.

பிரதீகம் என்பது ஓவியன் வரைந்த ஒவியமாகவோ,சிற்பி வடித்த சிலையாகவோ இருக்கலாம். ஆனால் உபாசனை என்பது கலைஞனின் கற்பனையை நம் மனத்துள் நிறுத்துவது மட்டும் அல்ல, வெளியில் கண்ட ஓவியம் அல்ல.சிலையை மனத்துள் நிறுத்திப் பழகும் வெறும் நினைவு ப்பயிற்சி அல்ல. இந்தப் பிரதீகங்களைக் கடந்து உணர்வின் ஆழங்களில்உண்மையான தெய்வத்தைக்காணும் முயற்சி. என்றென்றும் தனது அன்பு நாயகனாக இருப்பவனைச் சாதகன் தேடும் முயற்சியே உபாசனை. 

எனவே முதலில் உயிருணர்வுள்ள திருவுருவம் ஒன்றை இதயத்தின் ஆழத்தில் நிறுவ வேண்டும். உணர்வின் ஆழங்களில் இந்த உயிருணர்வுள்ள திருவுருவைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதே உண்மையான பிரதீக உபாசனை ஆகும். 

மன ஒருமைப்பாடு தீவிரமாகும் போது, இந்த திருவுரு மெல்ல, மெல்ல உணர்வின் ஆழங்களில் அமிழத்தொடங்குகிறது.அதனுடன் மனமும் மேலும் மேலும் உள்ளே இழுக்கப்படுகிறது.இவ்வாறு உள்ளே ஆழ்ந்து தூய உணர்வு நீரோட்டத்துடன் மனம் கலக்கும் போது சாதகன் பேரொளியைக் காண்கிறான்.

நாம உபாசனை

பிரதீக உபாசனையில் ஒரு பொருளை தியானம் செய்கிறோம். நாம உபாசனையில் ஒரு மந்திரம் அல்லது தெய்வத்தின் பெயராகிய ஒலிக்குறியீடு தியானத்திற்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த இரண்டு உபாசனைகளுக்கும் இடையில் பல முக்கிய வேறுபாடுகள் உள்ளன. இங்கு இந்த உபாசனையைப் பற்றிய ஓரிரு உண்மைகளை மட்டும் பார்ப்போம்.

ஒரு மந்திரம் அல்லது தெய்வத்தின் பெயரைத் திரும்பச் சொல்வது ஜபம். பல சொற்கள் இருக்க நேர்ந்தால் அது துதி, பஜனை,கீர்த்தனை என்றெல்லாம் கூறப்படுகிறது. இவை எல்லாம் ஒரு வித உபாசனைகள். முறையாகச் செய்யும் போது நம்முள் தியான உணர்வை இவை ஏற்படுத்துகின்றன.

எவ்வித உணர்ச்சியுமின்றி, எந்திரத்தனமாக ஒரு மந்திரத்தைத் திரும்பத்திரும்பச் சொல்வதை உபாசனை என்று கூற முடியாது.

உயிருணர்வுள்ள திருவுருளைப்பார்த்துக் கொண்டே இருப்பது உண்மையான பிரதீக உபாசனை. 

அது போல ”விழிப்புற்ற மந்திரத்தை” ஜபிப்பது உண்மையான நாம உபாசனை.

இதய ஆழங்களில் உள்ள உணர்வு நீரோட்டத்துடன் இணையும் போது மந்திரம் விழிப்புறுகிறது.

இன்னொரு முக்கியமான கருத்து,பொதுவாக பிரதீக உபாசனை தியானம் என்றும் நாம உபாசனை ஜபம் என்றும் வழங்கப்படுகிறது.ஆனால் இரண்டும்தியானங்களே. இந்த இருவகை தியானங்களையும் வேறுபடுத்த பிரதீக உபாசனையை ”பாவனை”(காணுதல்) என்று அழைக்கலாம்.

தந்திர சாஸ்திரங்களும் புத்த மதமும் தியானத்தை பாவனை என்றே குறிப்பிடுகின்றன. பொதுவாக நாம் ஜபத்தையும் பாவனையையும் சேர்த்தே செய்து வருகிறோம்.ஆனால் இந்து மதத்தின் பல பிரிவுகள் , குறிப்பாக சீக்கியர்கள் எந்த தெய்வ உருவத்தையும் தியானிப்பதில்லை. அவர்கள் நாம உபாசகர்கள் மட்டுமே. அவர்களைப் பொறுத்த வரை ஜபமே தியானம்.


  

அஹம்கிரஹ உபாசனை


அஹம்கிரஹ” என்ற சொல் ” தன்னைப் பிடித்தல்” என்று பொருள்படுகிறது. மேலே நாம் கண்ட இருவகை தியானங்களில் உள்ளது.போலவே இங்கும் மனம் ஒரு பொருளின் மீது குவிக்கப்படுகிறது. ஆனால் புறப்பொருள் மீதல்லாமல் தன் மீதே குவிக்கப்படுகிறது. 

முதல் வகைகளில் உள்ளது போல அஹம்கிரஹ உபாசனை என்பது வெறும் மன ஒருமைப்பாடு மட்டும் அல்ல. ஜீவான்மா பரமான்மாவுடன் ஒன்று பட விழையும் முயற்சி இது.

ஆனால் இதனை நிதித்யாசனம் என்று எண்ணக் கூடாது. ஆன்மாவை ஒரு ” பொருளாகக் கொண்டு தியானிக்க முடியாது. எனவே அதற்குச் சில சின்னங்கள் துணை கொள்ளப் படுகின்றன. எனவே இதுவும் மேலே கண்ட இருவகை தியானங்களைப் போன்றது தான்.

இது நிதித்யாசனம் அல்ல

அஹம்கிரஹ உபாசனைக்கும் நிதித்யாசனத்திற்கும் இடையில் இரண்டு முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

1.நிதித்யாசனத்தில் மனம் ஒரு பொருளின் மீது குவிக்கப்படுவதில்லை., எவ்விதச் சின்னங்களும் பயன்படுத்தப்படுவதில்லை. உண்மையில் அது ”நேதி”நேதி”(இது வல்ல, இது வல்ல) என்னும் எதிர்மறை நெறியாகும். 

இந்த முறையில் ஆன்மா தான் என்று இது வரை எண்ணி வந்த அனைத்தையும் உதறிவிட்டுத் தன்னுள் ஒடுங்குகிறது. 

சாதாரண மனத்திற்கு இந்த வேற்றுமை எளிதில் புலப்படுவதில்லை. ஆயினும் இந்த வேற்றுமையை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

2. ஆன்மாவை ஓர் ஒளிப் புள்ளியாக உருவகித்து,இந்த ஒளியே நான்” என்று எண்ணி தியானிப்பது மிகவும் எளிய அஹம்கிரஹ உபாசனை முறை. 

ஜீவாத்மா, பரமாத்மாவின் ஓர் அம்சம். எனவே பொதுவாக அஹம்கிரஹ உபாசனை என்பது ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை தியானிப்பது என்றே பொருள்படுகிறது.

மேலும் பரமான்மா எங்கும் நிறைந்திருக்கின்ற பொருள். எனவே அஹம்கிரஹ உபாசனை என்பது எல்லா உயிர்களின் தெய்வீகத்தன்மையை உணர்கின்ற உணர்வுமாகும். இவ்வாறு அஹம்கிரஹ உபாசனை என்பது ” இரு பொருள் தியானம்” ஆகிறது.

ஆன்மாவைப்பரமாத்மாவின் ஓர் அம்சமாக தியானித்தல், அந்த பரமாத்மாவை எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவராக தியானித்தல், இந்த இரண்டும் சேர்ந்ததே அஹம்கிரஹ உபாசனை.

வித்யைகள்

உபநிடதங்களில் காணப்படும் சில வித்யைகள் அஹம்கிரஹ உபாசனைக்கு எடுத்துக்காட்டுகளாகும். மிகவும் பிரபலமானவற்றுள் ஒன்று,பிரஹதாரண்யக உபநிடதத்தில் காணப்படுகின்ற அந்தர்யாமி வித்யை. இதில் அருணரின் மகனான உத்தாலகர் யாஜ்ஞவல்கிய முனிவரிடம் அந்தராத்மாவைப் பற்றிக் கேட்கிறார். அதற்கு யாஜ்ஞவல்கியர் பூமி, வானம், சூரியன் முதலிய எல்லாவற்றிலும் நிறைந்து நிற்கின்ற பிரம்மத்தைப் பற்றிக் கூறுகிறார்.

யார் பூமியில் உறைகிறாரோ, அதனுள் ஊடுருவி நிற்கிறாரோ,அதே வேளையில் யாரை இந்த பூமி அறியவில்லையோ, யாருடைய உடல் இந்த பூமியோ, உள்ளிருந்து யார் இந்த பூமியை நடத்துகிறாரோ அவரே அந்தராத்மா , அழியாத ஆன்மா.

யார் நீரில் உறைகிறாரோ

யார் நெருப்பில் உறைகிறாரோ

யார் வானில் உறைகிறாரோ

யார் சூரியனில் உறைகிறாரோ....

மற்றொரு முக்கியமான தியானம் சாண்டில்ய வித்யை. இது சாந்தோக்கிய உபநிடதத்தில் வருகிறது. 

இவை வெறுமனே படித்தறிவதற்காக மட்டும் அல்ல. மாறாக, செயல் முறையில் கடைப்பிடித்து அனுபவபூர்வமாக உணர்வதற்காக உள்ளவை. 

அத்வைத அனுபவம் என்பது திடீரென ஒரு நாளில் வருவதல்ல. முதலில் நமது உணர்வு விரிக்கப்படவேண்டும். அதற்கு உதவுபவை இந்த தியானங்கள். 

இந்த தியானங்களைச் செய்ய முயலும் போது தான் இவை எவ்வளவு கடினமானவை என்பது புரியும்.

அத்வைதத்தை வெறும் வாய்ச் சொல்லிற்கும் எழுத்து ஜம்பத்திற்குமாகக் குறுக்கியவர்களுக்கு இந்த தியானங்கள் பணிவு என்பதைக் கற்பிக்கும் பாடங்களாக அமைகின்றன.


  

இந்த வித்யைகளைத் தவிர இன்னும் எத்தனையோ அற்புதமான அம்சங்கள் உபநிடதங்களில் உள்ளன.

இவற்றையும் நாம் தியானத்திற்குப் பயன்படுத்த முடியும்.

”தத் த்வம் அஸி” (அது நீ ஆகிறாய்) அஹம் ப்ரஹ்மாஸ்மி” (நானே பிரம்மம்) போன்ற நான்கு மகா வாக்கியங்களையும் இந்த தியானத்திற்குப் பயன்படுத்த முடியும்.

மிகவும் தகுதி வாய்ந்த சாதகர்களுக்கு இதைக் கேட்ட மாத்திரத்திலேயே அனுபூதி வாய்ப்பதாகச் சொல்லப்படுகிறது.

இங்கு ஒன்று நினைவில் வைக்க வேண்டும். இந்த மகா வாக்கியங்கள் ஜபத்திற்குரியவை அல்ல.

ஜபித்தால் அது நாம் ஏற்கனவே கண்ட நாம உபசனையாகுமே தவிர அஹம்கிரஹ உபாசனையாகாது.

இவை அஹம்கிரஹ உபாசனைக்குரியவை.இந்துத் துறவியருக்குரிய சில சன்னியாச மந்திரங்களும் இந்த வகையைச் சேர்ந்தவை. 

இவை தவிர ஆதி சங்கரர் இயற்றிய ”பிராத ஸ்மரணம்“நிர்வாண ஷட்கம்” போன்ற பாடல்களும் அஹம்கிரஹ உபாசனைக்கு உரியவை.

இணைப்பின் அவசியம்

மேலே கண்ட மூன்று வகை உபாசனைகளையும் தனித்தனியாகச் செய்யலாம்.அவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. அவை ஒவ்வொன்றும் மனத்தின் ஓர் அம்சத்தைச் சுட்டி நிற்கின்றன. 

முறையாகப் பயிற்சி செய்யும் போது குறிப்பிட்ட உபாசனை, மனத்தின் அந்த அம்சத்தை வளப்படுத்துகிறது.இந்த மூன்றையும் இணைத்துச் செய்வதன் மூலம் நமது உணர்வு விரிந்து பரக்கிறது. 

நமது தினசரி சாதனையில் அஹம்கிரஹ உபாசனையைச் சேர்த்தக்கொள்வது மிகவும் அவசியம். 

அது நமது உண்மை இயல்பான ஆன்மாவை நமக்கு நினைவுபடுத்துகிறது. நம்முள் உறைகின்ற தெய்வீகத்தை நாம் உணரும் போது மட்டுமே இறைவனுடன் நாம் ஓர் ஆன்மீகத் தொடர்பை உருவாக்க முடியும். 

நமது உயர்ந்த நிலையை, ஆன்ம நிலையை உணர்வதன் மூலம் புற ஆதிக்கங்கள் பலவற்றிலிருந்து விடுபடுவதுடன் எப்போதும் இறைவனை நினைக்கவும் அவரது திருப்பெயரை எந்நேரமும் ஜபிக்கவும் முடிகிறது. 

உருவ வழிபாடு செய்யும் பக்தனும் அஹம்கிரஹ உபாசனை செய்யலாம். அந்தத் திருவுருவில் உறைகின்ற தெய்வமே தன்னுள்ளும் விளங்குகின்றது என்று எண்ணி இரண்டும் இணைவதாகத் தியானிக்கலாம்.

இத்தகைய தியானம் தந்திர சாதனையில் முக்கிய அம்சமாகும்.

இறுதியாக எல்லா ஆரம்ப சாதனைகளும் ஏதாவது ஒருவித தியான உணர்விலேயே நிறைகின்றன.

எல்லா தியான நெறிகளும் ஏதாவது ஒருவித ஆன்மீக அனுபூதியிலேயே சென்று சேர்கின்றன.

3.நிபந்தனைகளும் நிறைவும்

வெற்றிக்கான நிபந்தனைகள்

சில வகை தியானங்களைப் பார்த்தோம்.நாம் எத்தகைய தியானத்தைத் தேர்ந்தெடுத்தாலும் சரி.அது இறையனுபூதிக்கான ஒரு சாதனமாக அமைய வேண்டுமெனில் சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும்.

மணிக்கணக்காக தியானம் செய்யவேண்டியதில்லை. ஆனால் செய்வதை ஒழுங்காக முறையாகச் செய்ய வேண்டும். 

கவனமின்றி போதிய முன் பயிற்சிகளின்றி தியானம் செய்வது ஆன்மீக ஒளியைத் தராதது மட்டுமல்ல. தவறான முடிவுகளிலும் ஒருவனைக் கொண்டு சேர்த்துவிடும். 

குரு ஒர் பாதையை வகுத்துத் தருகிறார்.சீடன் அத்துடன் நின்றுவிடாமல் தனக்கேற்ற சில நிபந்தனைகளை உருவாக்கிக் கொண்டு பாதையில் தொடர்ந்து முன்னேற வேண்டும். அவரது உபதேசத்தைப் பயனுள்ளதாக்க வேண்டும்.

சுருங்க சொல்வதானால் தியானம் என்பது அன்றாட வாழ்வுடன் ஒன்ற வேண்டும். 

வாழ்வின் போராட்டங்கள். எதிர்பார்ப்புகள் அனைத்துடனும் பின்னிப்பிணைய வேண்டும்.

முழு வாழ்வையும் உள்ளடக்கியதே ஆன்மீக வாழ்வு. இந்த ஆன்மீக வாழ்வு தியானத்தை மையமாகக் கொண்டு அமைய வேண்டுமானால், முழு வாழ்வும் அதில் ஈடுபட வேண்டும். 

சாதாரணமாக நமது வாழ்வு ஏமாற்றங்களும் பிரச்சனைகளும் நிறைந்ததாக உள்ளது. எனவே அவை முதலில் சீர் செய்யப்பட வேண்டும். ஆன்மீக வாழ்வு என்றல்ல , எந்த முயற்சியானாலும் முழுவாழ்வும் ஈடுபடுத்தப்படும் போது மட்டுமே அதில் வெற்றி கிட்ட முடியும். 


  

நமது ஒவ்வொரு செயலையும் நமது வாழ்க்கை முறை பாதிக்கிறது. வாழ்க்கையில் தோல்விகள் நேரும் போது அதன் காரணத்தை உன்னிப்பாகக் கவனித்தோமானால் தோல்விக்கான காரணம் நாமே என்பது புரியும்.

நமது வாழ்க்கை முறை நாம் சிந்திக்கும் பாங்கு, செயல்படும் விதம் இவையே அந்த த் தோல்விக்கானக் காரணமாக அமைந்ததை நாம் அறியலாம். 

வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்கள் எல்லாம் அறிவில் சிறந்தவர்களாகவும் ஆற்றல் மிகுந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் கிடையாது. ஆனால் ஒன்று அவர்கள் வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து வைத்திருப்பார்கள். அவர்களது முயற்சியின் பின்னால் முழுவாழ்க்கையும் இணைந்து நிற்கும். எந்தத் துறையானாலும், அதில் வெற்றி பெற வேண்டுமானால் முழு ஆளுமையும் அதனை ஏற்க வேண்டும். அதில் இணைந்து அந்தத் துறையின் தேவைகளுக்கேற்பச் செயல்பட வேண்டும்.அப்போது வெற்றி நிச்சயம்.

சாதாரண வாழ்க்கையிலேயே வெற்றி பெற இது நியதி என்றால் ஆன்மீக வாழ்வில் இது இன்றியமையாத நிபந்தனை ஆகிறது. ஏனெனில் உலகியல் வாழ்க்கையின் வெற்றிகள் புறச் சூழ்நிலைகளைச் சார்ந்துள்ளது. 

ஆன்மீக வெற்றிகள் அப்படியல்ல. 

வியாபாரத் துறையினை எடுத்துக் கொள்வோம். பண்டப்பரிவர்த்தனையில் ஒர் சரிவு. சந்தையில் தேக்கம் அல்லது வரிமுறையில் ஒரு மாற்றம் போதும், வியாபாரம் முடங்கிவிடும்.

ஆன்மீக வாழ்வு இவ்வாறெல்லாம் நிலைகுலையக் கூடியதல்ல.மாறாக உலக வாழ்வின் தோல்விகள் பலரது வாழ்வில், ஆன்மீக நாட்டத்திற்கான ஏணிப்படிகளாக அமைந்துள்ளன. 

நாம் எவ்வாறு ஆன்மீகக் குறிக்கோளுக்காக வாழ்கிறோம், எவ்வாறு அதனுடன் நமது வாழ்வை இணைத்துச் செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்தே ஆன்மீக வாழ்வின் வெற்றி அமைகிறது. தியானத்தைப்பற்றி அதிகம் படிப்பதும், அறிந்து கொள்வதும் போதாது. இன்னும் சொல்லப்போனால், அதிகமாக தியானம் செய்வதும் கூடப் போதாது. 

இவையெல்லாம் வெறும் உதவிக் கிரியைகள் மட்டுமே, சாதகனின் முழுவாழ்வும் மாறிப் புதிய பாதையில் சென்றாலன்றி இவை அவனை முன்னேற்றப் பாதையில் வெகு தூரம் அழைத்துச் செல்வதில்லை.

ஆன்மீக வாழ்வில் போட்டிகள் இல்லை. உலகியல் வாழ்வில் தோல்வியுற்றவன் கூட ஆன்மீக வாழ்வில் வெற்றி பெற முடியும்.

ஆம், உலகியல் வாழ்வில் நான் தோற்றது உண்மைதான். ஆனால் ஆன்மீக வாழ்வில் வெற்றி பெறுவேன், என்று அவன் உறுதி கொள்ளட்டும். 

இதன் பொருள், ஆன்மீக வாழ்வு சுலபமானது என்பதல்ல. வெற்றிக்கெனக் குறுக்கு வழி எதையும் அது வகுத்துத் தருவதில்லை. இருப்பினும் எத்தனையோ பேர் அதனுள் புகுந்து குளறுபடிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். 

ஆன்மீக வாழ்விலும் வெற்றிக்கு நிபந்தனைகள் இருக்கின்றன. தியான வாழ்வின் வெற்றிக்கான நிபந்தனைகள் எவை?

ஆன்மீகத்தேடல்

தியான வாழ்விற்கான முதல் நிபந்தனை ஆன்மீகத் தேடல்

image142

தியானம் என்பது என்ன?

தியான வாழ்விற்கான நிபந்தனை

  

தியானம் என்பது தான் என்ன? 


உணர்வின் கரைகாணாத ஆழங்களில், காணாத கடவுளைத் தேடுவது தானே. 

பிராத்தனை செய்யும் போது இறைவன் நம்மிடம் வரவதற்கக் காத்திருக்கிறோம். 

இப்படிக்காத்திருப்பது தியான வாழ்வின் ஆரம்பத்தில் மிகவும் இன்றியமையாதது. இது நாம் இறைவனை நெருங்க நம்மைப்பயிற்றுவிக்கிறது. 

ஆனால் நமது பொறுமை எல்லை மீறும் காலம் ஒன்று வருகிறது. அப்போது மேலும் காத்திருக்க முடியாமல் ஆன்ம தாகத்துடன் தேடத் தொடங்குகிறோம். ஆன்மா தன் தலைவனை நோக்கிச் செல்கின்ற அந்த இயக்கமே தியானம்.

வெறுமனே மனத்தை அமைதிப் படுத்துவது தியானமாகிவிட்டது. மன அமைதி என்பது உள்ளத்துள் இறைவனைத் தேடுவதற்கான முன்னேற்பாடு மட்டுமே. இந்த அகத்தேடல் சாதாரண உலகப்பொருட்களைத் தேடுவது போல் புறவுலகில் இறைவனைத் தேடுவதல்ல. நமது உணர்வுள் தேடுவது, அதாவது உணர்வு மையத்தில் மனத்தைக் குவிப்பது. இறை உலகின் வாசல் இந்த உணர்வுமையத்தில் தான் மறைந்துள்ளது.

மன ஆற்றல்களை இந்த ரகசிய வாசலில் குவிப்பதால் அது திறக்கிறது.எனவே அகக் கோயிலின் கதவுகளைத் தட்டுவதே தியானம் ஆகிறது.

ஆன்மீக தேடல் என்பது மூன்று பண்புகளைக் கொண்டது.

முதல் பண்பு தீவிர ஆன்ம தாகம்

-

சாதகன் குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்ல வேண்டுமானால் இந்த ஆன்ம தாகம் எப்போதும் மனத்தில் தணியாமல் இருக்க வேண்டும்.ஆன்ம தாகம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாம் முன்னேறுகிறோம். 

ஆன்ம தாகமின்றிச் செய்யப்படுகின்ற தியானம் வெறும் மனப்பயிற்சி என்ற அளவிலேயே நின்று விடுகிறது. 

தியானம் செய்வது நல்லது என்று யாரோ சொன்னார்கள் என்பதற்காக சுய ஆன்ம தாகமின்றி வெறுமனே செய்யப்படுகின்ற தியானம் நம்மை ஒரு போதும் முன்னேற்ற ப்பாதையில் அழைத்துச் செல்லாது.

ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட விரும்புபவர்கள் அனைவரும் சந்தேகமின்றி உயர் வாழ்க்கையில் வேட்கை கொண்டவர்கள் தாம். ஒவ்வொருவரும் தாங்கள் இறையனுபூதி பெற விரும்புவதாகவே கூறுகிறார்கள். உண்மை தான்.அந்தப் பேரொளிப் பொருளைக்காணவும் எல்லையற்ற அந்த அமைதி இன்பத்தில் மூழ்கியிருக்கவும் யார் தாம் விரும்பமாட்டார்கள்.? 

ஆனால் இந்த ஆரம்ப சூரத்தனத்தை இறுதிவரைக் கட்டிக் காப்பது தான் பிரச்சனை. 

ஆன்ம தாகம் மட்டும் போதாது. அதைப் பேணுகின்ற தீவிரம் வேண்டும். அந்தத் தீவிரம் ஒரே சீராக அதிகரிக்கப்படவும் வேண்டும். இல்லாவிடில் ஒரு சமநிலை வாழ்க்கைக்கும், மனஅமைதிக்கும் மட்டுமே தியானம் உதவும். இறையனுபூதிக்கான ஒரு சாதனமாக அது அமையாது. 

தீவிர தாகமும், ஏக்கமுமே தியானத்தை இறையனுபூதிகான சாதனமாக மாற்றுகின்றன. நமது முயற்சியின் வேகத்தைக் கூட்டுவதன் மூலம் கால விரயத்தையும் ஆற்றல் விரயத்தையும் நாம் குறைக்க முடியும்.

நமது முயற்சிகளின் வேகத்தைத் தடுப்பது எது? 

முதலாவது, நமது சின்னச் சின்ன ஆசைகள்.

இந்த அற்ப ஆசைகளைக் கடந்து செல்ல நம்மால் முடிவதில்லை. 

மிக உயர்ந்த லட்சியத்தை அடைவதற்காக உடனடித் தேவைகள் சிலவற்றைக்கூட நம்மால் தியாகம் செய்ய முடிவதில்லை. இதனால் நமது வேகம் தடைபடுகிறது.

இரண்டாவது காரணம்- காரணமற்ற பயங்கள்.

உதாரணமாக, தீவிரமாக தியானத்தில் ஈடுபட்டால் பைத்தியம் பிடித்துவிடும்.என்று பலரும் அஞ்சுகின்றனர். 

ஒன்று யோசிக்க வேண்டும்.மன நோய் மருத்துவமனைகளிலும் வெளியிலும் ஆயிரக்கணக்கான பைத்தியங்கள் உள்ளன. இவர்களுள் எத்தனைபேர் தியானத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.? 

மன இயல் முன்னோடிகளுள் ஒருவரான யுங்க் என்பவரது கருத்தைப்பார்ப்போம். அவரது அறுபது வருட அனுபவத்தில், இறைநம்பிக்கையும் ஆன்ம பலமும் கொண்ட ஒருவர் கூட மனநிலை பாதிக்கப்பட்டு அவரிடம் வரவில்லையாம்.

மூன்றாவது காரணம், தவறான லட்சியம் நாம் எடுத்துக் கொள்கின்ற லட்சியம் நமது ஆசைகள், கற்பனைகள், கனவுகள் இவற்றின் நிறைவாக இருக்க வேண்டும். இல்லாவிடில் எப்படி நாம் அந்த லட்சியத்தை அடையத் தீவிர தாகமும் வேகமும் கொள்ள முடியும்? 

ஓர் லட்சியத்துக்காக வாழுங்கள். அது ஒன்றே உங்கள் நோக்கமாகட்டும்.

அதுவே உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் விட உயர்ந்ததாகட்டும்.

உறுதியுள்ளதாகட்டும். 

வேறு எதற்கும் இடமில்லாதவாறு மனத்துள் அந்த லட்சியமே நிறையட்டும். வேறு எதற்கும் மனத்தில் இடம் வேண்டாம். வேறு எதிலும் பொழுதைப் போக்க வேண்டாம். என்கிறார் சுவாமி விவேகானந்தர்.


  

ஆன்மீகத் தேடலின் இரண்டாவது பண்பு- நாம் நமது ஆன்மாவை அறிந்தவர்களாக, தன்னறிவுபெற்றவர்களாக இருக்க வேண்டும்.

பொதுவாக நம்மிடம் தனிப்பட்ட முறையில் உறவு கொள்பவர்களின் நட்பையே நாம் நாடுவோம்.ஒரு மித்த மனமும் பண்புகளும் உடையவர்களிடமே நிலைத்த அன்புறவு ஏற்படமுடியும்.அது போல் தன் ஆன்மாவில் தெய்வீகத்தை, தெய்வீக அன்பை ,தெய்வீக அழகைக் காண்பவனால் மட்டுமே உண்மையாகக் கடவுளைத் தேட முடியும்.

எனவே தான் சுவாமி விவேகானந்தர் சமயம் என்பதை” நமக்குள் ஏற்கனவே இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவது” என்று விளக்கினார். 

நமது வேதாந்த நூல்கள், காட்டில் வளர்ந்த ஓர் இளவரசனின் கதை மூலம் இந்த த்தேடல் என்றால் என்ன என்பதை விளக்குகின்றன. 

மிகச்சிறு வயதிலேயே அவன் அரண்மனையிலிருந்து கடத்தப்பட்டு விடுகிறான்.காட்டினுள் ஒரு காட்டுவாசியாக வளர்கிறான். அவன் ஒரு நாள் அவன் தான் அரசகுமாரன் என்பதை அறிகிறான். அதன் பின்னர் சிறிதும் தாமதிக்காமல் அரசனை நாடிச் சென்று விடுகிறான். 

மனம் தூய்மை பெறப் பெற சாதகன் தனது உண்டை இயல்பை, ஆன்ம அழகை மேலும்மேலும் அறிகிறான். 

பகுத்தறிவும் நல்லாரிணக்கமும் இதற்குத் துணை செய்கின்றன. தன்னறிவைப் பலப்படுத்துகின்றன.

தன்னை ஒரு பாவி என்று எண்ணுவது தியான வாழ்வில் ஒரு பெருந்தடையாகும். 

இத்தகைய மனோபாவம்ஒரு சில ஆரம்ப சாதகர்களுக்கு உதவக்கூடும். 

பிராத்தனை நெறியைக் கடைபிடிக்கின்ற சில சாதகர்களின் ஆரம்ப சாதனைகளில் இத்தகைய எண்ணம் ஆணவத்தைக் குறைக்கவும். இறைவனை மேலும் மேலும் சார்ந்து நிற்கவும் துணை செய்யும்.

தவறுகளை உணர்ந்து வடிக்கின்ற கண்ணீர் உலகக் கறைகளைக் கழுவிக் களைகின்றது என்கிறார்ஸ்ரீராமகிருஷ்ணர் . 

ஆனால் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பின்னர் இத்தகைய மனோபாவம் உதவாதது மடடுமின்றி, உண்மையான ஆன்மீகத் தேடலுக்குத் தடையாகவும் அமைந்து விடும்.

மேலும் இறைவனைச் சரணடைந்து வாழ வேண்டுமானால் நாம் நம்மைஒரு கதியற்ற பாவி என்று எண்ணித்தான் தீர வேண்டும் என்பதில்லை.

நாம் ஆன்மா என்பதில் நிலைத்து நின்று கொண்டே பரிபூரணமாக இறைவனைச் சரணடைந்தும் வாழ முடியும். 

ஸ்ரீராமானுஜர் போதிப்பது இதைத்தான். 

இறை என்னும் பேரெளியை அணுகுமுன்னர் ஆன்மா தனது அழுக்கேறிய முகத்திரைகளைக் கிழித்தெறிய வேண்டும். 

ஆன்மா தூய்மையாகும் அளவு இறைவனிடம் அதற்குள்ளு நெருக்கம் அதிகரிக்கும்.

ஆன்மீகத் தேடலின் மூன்றாவது பண்பு, சுயேச்சை.

இறைவனைத்தேட வேண்டுமானால் சுயேச்சை வேண்டும். 

உணர்ச்சிகளிலிருந்து சுயேச்சை விடுவிக்கப் பட வேண்டும். 

தீய உணர்ச்சிகளிலிருந்து மட்டுமல்ல, நல்லஉணர்ச்சிகளின் பிடியிலிருந்து சுயேச்சை சுதந்திரம் பெற வேண்டும். 

தியானம் அல்லது தியான உணர்வு நமது வாழ்வில் சகஜமாக வேண்டுமானால் சுயேச்சையை நல்ல மற்றும் தீய உணர்ச்சி வேகங்களிலிருந்து விடுவிக்க வேண்டும். 

இது ஒரு நாளில் செய்து முடிக்கக் கூடிய காரியம் அல்ல. சுயநலமற்ற பணி, பிராத்தனை போன்ற சாதனைகளைத் தொடர்ந்து செய்வதால் மட்டுமே சுயேச்சை சதந்திரம் பெறுகிறது


  

ஆளுமை ஒருங்கிணைப்பு

-

தியான வாழ்விற்கானஇரண்டாவது நிபந்தனை ஆளுமை ஒருங்கிணைப்பு

நாம் இறைவனை நாடி நிற்பது வெற்றி பெற வேண்டுமானால் நமது முழு ஆளுமையும்அதில் ஈடுபட்டிருக்க வேண்டும். 

சில வேளைகளில் நமது உணர்வு மனம் ஆன்மீக லட்சியத்தை ஏற்றிருக்கும். ஆனால் உணர்வறு மனமோ இதற்குச் சிறிதும் தொடர்பின்றி தனது பழைய வழிகளில் சென்று கொண்டிருக்கும்.

இந்த நிலையில் சாதகனால் முழு மனத்தையும் தியானத்தில் ஈடுபடுத்த முடியாது. தியானம் அவனது முழு ஆளுமையையும் பாதிக்க முடிவதில்லை.உணர்வறு மனத்தில் நடைபெறும் போராட்டங்களும் குழப்பங்களும் தியானத்தின் விளைவுகளைப் பயனற்றதாக்கி விடுகின்றன.

ஓர் இழை பிரிந்திருந்தால் கூட நூலை ஊசியில் கோக்க முடியாது. என்று சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர் 

அது போல இறையனுபூதி பெற வேண்டுமானால் முழு மனமும் இறைவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும். 

ஆராயும் அறிவு, சுயேச்சை உணர்ச்சிகள் போன்ற உணர்வுப்பண்புகளை எளிதில் ஒருங்கிணைத்து விடலாம்.

ஆனால் உணர்வறு ஆழங்களில் கிளர்ந்தெழும் ஆசைகளை அடக்குவது தான் பிரச்சனை. 

மனத்தின் உணர்வறு பகுதியை உணர்வுப்பகுதியுடன் இணைத்து ஒத்துழைக்கச்செய்யும் போது தான் மனம் ஒருமைப்படுகிறது. இதுவே ஆளுமை ஒருங்கிணைப்பு.

உணர்வறு மனம் பிரச்சனைகளுக்கு மட்டும் தான் இருப்பிடம் என்றில்லை. எல்லையற்ற மன ஆற்றலின் சுரங்கமும் அதுவே.

உணர்வு மனம் இந்த ஆற்றலின் இருப்பிடத்துடன் இணைக்கப்படும் போது தான் தியானம் சக்தி மிக்கசாதனமாகிறது. 

உணர்வறு மனத்தின் ஆதரவின்றிச் செய்யப்படும் தியானம் ஆற்றலற்றதாகி விடுவது மட்டுமின்றி பலனைக் கொடுக்க வருடக்கணக்கில் ஆகவும் செய்கிறது.

உணர்வறு மனம் தியான வாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது.

ஆன்மீக வாழ்வு என்னும் கட்டிடத்திற்கான தளக்கற்கள் அங்குதான் உள்ளன. 

அவற்றைத் திரட்டிச் செவ்வனே பணி செய்ய வேண்டுவது நம் வேலை. மன ஆற்றலின் ஊற்றுகளும் அங்கே தான் உள்ளன. ஊற்றுகளை அடைத்திருக்கும் குப்பைகளைக் களைந்து அந்த ஆற்றலை முறையாக உணர்வு மனத்தில் இணைக்க வேண்டும். 

நம்பிக்கையின் பிறப்பிடமும் அதுவே.

மலைகளையும் புரட்டிவிட வல்லநம்பிக்கைகள் உணர்வறு மனத்திலிருந்தே கிளம்புகின்றன.


  

நாம் அறியாதவாறு உணர்வறு மனம் நமது எதிர் காலத்தை உருவாக்குகிறது. 

புதியனவற்றைப் படைத்துப் புரட்சி செய்கின்ற மனிதர்கள் எல்லோரும் உணர்வறு மனத்துடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருக்கின்றனர்.

எந்தச் சாதகனின் உணர்வறு மனம் அவனுக்குச் சாதகமாக இருக்கின்றதோ, அவனுக்குப் பிற உதவிகளோ, தகுந்த சூழ்நிலையோ உரிய மனோபாவமோ பெரிய விஷயமில்லை. 

அவனது தியானம் சொந்த உதவியிலேயே நடைபெறுகிறது.

உணர்வறு மனத்தின் உதவியற்ற சாதகனுக்கு தியானம் செய்வதற்கான உற்சாகமோ ஆற்றலோ இருப்பதில்லை. அவன் நூல்களைப்படிப்பான். பெரியவர்களின் அறிவுரையைக் கேட்பான். ஆனால் சந்தேகமும் குழப்பமும் அவனைவிட்டு விலகுவதே இல்லை. 

அனைத்திற்கும் மேலாக அவன் தன்னிடமே நம்பிக்கையை இழந்து தவிப்பான். 

உணர்வறு மனத்தின் இருண்ட அறைகளில் உலவும் உருவங்களைக் கண்டு அவன் அஞ்சி நடுங்குவான். 

எந்தக் கணம் அவற்றின் ஆதிக்கத்தால் தான் தோற்றுவிட நேரிடுமோ என்று தவிப்பான்.

ஆரம்ப சாதனை நாட்களில் ஒருவன் தனது மனத்தை முற்றிலுமாக நம்ப முடியாதுதான். 

ஏனெனில் மனத்தின் செயல்பாடுகளை அவன் அப்போது அறியவோ, அடக்கவோ இல்லை. ஆனால் இந்த நிலைமையை இப்படியே  நீடிக்க விடக்கூடாது. மனப்பிரச்சனைகளை அறிவுபூர்வமாக அணுகிச் சமாளிப்பதுடன் உணர்வறு மனத்தின் உதவியையும் சாதகன் பெற்று க்கொள்ள வேண்டும். 

இது அவ்வளவு சுலபமானதல்ல. போராடியே தீர வேண்டும். 

எவ்வளவு தீவிரமாகப் போராடுகிறோமோ அவ்வளவு விரைவாக ப்பிரச்சனைகள் ஒழியும். 

உணர்வறு மனம் நண்பனாகிவிட்டால் நல்லொழுக்கம் நமது இயல்பாகிவிடும்.

பிரம்மசரியம் .அஹம்சை போன்ற நல்வழிகள் நமது வழியாக வேண்டுமானால் உணர்வறு மனம் உணர்வு மனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டே தீர வேண்டும்.

சுவாமி விவேகானந்தருக்குப் பிடித்த கருத்துக்களுள் ஒன்று வலிமை. 

அவர் வலிமையைப்பற்றிக் குறிப்பிடும் போது ஆன்ம பலத்துடன் உணர்வறு மனத்தின் வெளிப்படாத மன வலிமையையும் சேர்த்தே கூறுகிறார். 

நாம் விரும்பும் உறுதியும், உதவியும் நமக்குள்ளேயே இருக்கின்றன. நமது எதிர்காலத்தை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். போனது போகட்டும். எல்லையற்ற எதிர்காலம் நமக்கு முன்னே இருக்கிறது. உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் எண்ணமும் செயலும் உரிய பலனை உண்டாக்கியே தீரும். நமது தீய செயல்களும் கெட்ட எண்ணங்களும் புலிகளைப்போல நம் மீது பாயத்தயாராக இருக்கின்றன. ஆனால் அத்துடன் கூட நல்ல செயல்களும் தூய எண்ணங்களும் பல்லாயிரக்கணக்கான தேவதைகளின் ஆற்றலுடன் நம்மைக்காக்கத் தயாராக நிற்கின்றன என்பதை மறவாமல் என்றும் மகிழ்ந்திருப்பீர்களாக” என்று தமது ஞானயோக உரை ஒன்றில் குறிப்பிடுகிறார் அவர். 

உணர்வறு மனத்தைத் தூய்மையாக்குவது, பின்னர் அதனை முழுமையாக நம்புவது-இதுவே தியான வாழ்வின் வெற்றி ரகசியம். 

இதுவே நிறைவாழ்வின் இலக்கணம் 


  

இப்போது கேள்வி இதுவே-இந்த உணர்வறு மனத்தை எப்படித் துஸய்மைப்படுத்துவது? 

எவ்வாறு இதனை உணர்வு மனத்துடன் இயைந்து செயல்பட வைப்பது?

உண்மையில் இது கடினமான பணிதான். 

ஏனெனின் உணர்வறு மனத்தின் மிகுதியான செயல்பாடுகள் உணர்வு மனத்தை எட்டுவதே இல்லை. 

நாம் அவற்றை அறிய முடிவதும் இல்லை. 

சிலரது வாழ்வில் சுய முயற்சியின்றியே உணர்வறு மனம் திடீரென மாறிவிடுகிறது.

இது ”மனந்திரும்புதல்“ எனப்படுகிறது.

இத்தகைய நிகழ்ச்சியை துளசி தாசர், ஏக நாதர், புரந்த தாசர்,அருணகிரி நாதர், பட்டினத்தார் மற்றும் பல மகான்களின் வாழ்வில் நாம் காண்கிறோம்.

பலரது வாழ்வில் இது இவ்வளவு திடீரென நிகழாமல் மெல்ல மெல்ல நடைபெறுகிறது. 

திடீரென நிகழும் மனத்திரும்புதலில் பழைய வாழ்வு முற்றிலுமாக மறைந்து புதிய வாழ்வு தொடங்குகிறது. 

புதிய வாழ்க்கைக் கண்ணோட்டம், புதிய லட்சியம் என்று வாழ்வு ஒரு புதிய பாதையில் திரும்புகிறது. 

பழையவை அனைத்தும் தகர்ந்து வீழ்ந்து விடுகின்றன. புதிய வாழ்வு பிறக்கிறது. அவனது உலகப்பற்று நீங்குகிறது.அவனால் அந்தப் பழைய வாழ்க்கைப் பாதையை நினைத்துக் கூடப் பார்க்க முடிவதில்லை. 

இது எப்படி நடைபெறுகிறது என்பது ஒரு புதிர்.ஒரு வேளை சென்ற பிறவியில் ஆரம்பித்த மாற்றம் இப்போது நிறைவுற்றிருக்கலாம்.ஆனால் பக்தனைப் பொறுத்த வரை இது இறைவனின் அருளால் நடைபெறுகிறது என்று அவன் நம்புகிறான்.

இந்த மனத்திரும்புதல் நிகழாததாலேயே பலரது ஆன்மீக வாழ்வு போர்க்களமாக இருக்கிறது. அவர்களது வாழ்வில் இந்த மனமாற்றம் மந்தமாக நடைபெறுகிறது. 

ஆழ்ந்த பிராத்தனை செய்வதன் மூலமும். தொடர்ந்த ஆன்ம ஆராய்ச்சியின் மூலமும் உணர்வறு மனத்திற்குத் திரும்பத்திரும்ப உண்மையைச் சொல்லி உணர்த்துவதன் மூலமும் மனத்திரும்புதலை நாம் விரைவுபடுத்த முடியும்.

தனிமை மிகவும் உன்னதமான ஒரு துணை, தனிமை மனத்தை வெறுமையாக்குகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர் தமது இல்லறச் சீடர்களிடம் அவ்வப்போது தனிமையை நாடுமாறு கூறுவதுண்டு. தனிமை மனத்தை விரைவில் தூய்மையாக்குகிறது. 

தனியாக வைக்கப்பட்ட ஜாடியிலுள்ள நீர் சிறிதுசிறிதாக ஆவியாகி விடும். ஆனால் அதே ஜாடி நீரினுள் அமிழ்த்தி வைக்கப்பட்டால் அதிலுள்ள நீர் ஆவியாவதில்லை என்பார் அவர்.

தொடர்ந்து மந்திர ஜபம் செய்வதும் உணர்வறு மனத்தை வெகுவாகப் பாதித்து, பெரிய மாற்றங்களை உண்டுபண்ணுகிறது.

ஆனால் உணர்வறு மன மாற்றத்திற்கும், ஆளுமை ஒருங்கிணைப்பிற்கும் மிகச்சிறந்த வழி கர்மயோகம். 

செயல் நேரடியாக உணர்வறு மனத்தில் விளைவுகளை உண்டாக்குகிறது. முறையாகச்செய்யப்படுகின்ற கர்ம யோகம் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 

சொல்லப்போனால் மிகப்பல சாதகர்களின் தியான வாழ்விற்கு, கர்மயோகத்தைவிடச் சிறந்த வழி வேறில்லை. 

மனஒருமைப்பாடு. பற்றின்மை. சேவை மனப்பான்மை இவற்றுடன் செய்யப்படும் செயல் தியான வாழ்விற்கு உகந்த முதற்படியாக அமைகிறது.


  

தியான வாழ்விற்கான மூன்றாவது நிபந்தனை

-

வாழ்வுடன் இயைபு

-

நமது தனி வாழ்வு பிரபஞ்ச வாழ்வின் ஒரு பகுதியாகும். நாம் அமைதியும் பாதுகாப்புணர்வும் பெற வேண்டுமானால், நமது வாழ்வு நம்மைச் சுற்றியிருக்கும் உலக வாழ்வுடன், பிரபஞ்ச வாழ்வுடன் இயைந்திருக்க வேண்டும். 

தியானம் என்பது உணர்வைக் குவிப்பது, மனத்தைப் பக்குவமாக க்கையாள்வது. ஆனால் தனி ஆளுமை பிரபஞ்ச வாழ்விலிருந்து வேறுபடுமானால் இது கடினமாகிவிடும். 

தேக ஆரோக்கியம் முதல் மனப்பக்குவம் வரை எல்லா ஆற்றல்களும் பிரபஞ்ச வாழ்வில் உள்ளன. அவற்றைப்பயன்படுத்த வேண்டுமானால் எல்லையற்றதுடன் இயைந்து வாழத் தெரிந்திருக்க வேண்டும். 

சாதாரணமாகச் சொல்வதானால், சுற்றி வாழ்பவர்களுடன் அமைதியாக இயைந்து வாழத்தெரிந்திருக்க வேண்டும்.

சாதாரண மனிதனின் பாதி சக்தி எப்படி வீணாகிறது தெரியுமா? பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவதிலும் இத்தகைய பல ஆற்றல்களுடன் போராடுவதிலுமே. 

இந்தப் போராட்டங்கள் வீண் என்று தெரிந்தும் மனிதன் போராடுவதை விடுவதில்லை. விளைவு? ஆழ்ந்து தியானம் செய்ய ஆற்றல் எதுவும் மிஞ்சுவதில்லை. 

சாதகன் உலகைச் சீர்திருத்தும் முயற்சியை விட்டுவிட்டு, வாழ்க்கைப் புதரின் விடையைக் காண்பதற்கும் அதன் நியதிப்படி வாழ்வதற்குமான முயற்சியைக் கைக்கொள்ள வேண்டும்.

நன்மை-தீமை, இன்பம்-துன்பம் போன்ற இருமைகள் நிறைந்தது வாழ்க்கை. இந்த இணைகளுள் ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் பற்றி வாழ முயன்றால் பிரபஞ்ச வாழ்வுடன் இயைந்து வாழ முடியாது. 

நமது வாழ்வில் இயைபு வேண்டுமானால் இந்த இருமைகளை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். 

இவற்றால் பாதிக்கப்படாதிருக்க வேண்டும். பக்தர்கள் இறைவனைச் சரணடைவதன் மூலம் இதனைச் சாதித்து விடுகிறார்கள். 

உண்மை சரணாகதி என்பது பயங்கொள்ளித்தனம் அல்ல. அது பக்குவப்பட்ட வாழ்க்கைத் தத்துவம்.

இயைபுடன் வாழ்தலின் ரகசியம் நம்முள் உள்ளது. வெளியில் அல்ல. 

புறவுலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். அதைக் கட்டுப்படத்துவது கடினம். நாம் செய்யக் கூடியதெல்லாம் அகவுலகை ச் சீராக்குவது, அதாவது மனத்தைக் கட்டுப்படுத்துவது தியான வாழ்வில் புறச் சூழ்நிலையைவிட அகச் சூழ்நிலை முக்கியம். 

சூழ்நிலை பிடிக்கவில்லை என்றால் இடத்தை மாற்றிக்கொண்டு பதிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்கிறோம். அது போல் தன்னிடம் திருப்தி காணாத ஒருவன் தன்னைப் புதியவனாகப்படைத்துக் கொள்கிறான்

தன்னைப் புதியவனாக ப் படைத்துக் கொள்வதன் மூலம், மாற்றியமைப்பதன்மூலம் ஒருவன் இயைபுடன் வாழ முடியும். 

இங்கு நாம் மாற்றம் என்று கூறும் போது வளர்ச்சி , பக்குவம் இவற்றையே குறிப்பிடுகிறோம். பக்குவப்பட்ட ஒருவன் மட்டுமே வாழ்வில் இயைபு காண முடியும்.

வாழ்வின் இயைபுக்குப் பெருந்தடையாக இருப்பது அகங்காரம். 

இந்தியத் தத்துவத்தின்படி இந்த அகங்காரம் என்பது போலி ஆன்மா. ஆன்மாவின் நிழல். 

இதைப் ”பழுக்காத நான்” என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். 

உடல், புலன்கள், மனம் அனைத்தையும் தானே இயக்குவது போல் நடிக்கிறது இந்தப்போலி. ஆனால் உண்மையில் பிரபஞ்சப்பிராணன் அல்லது வாழ்க்கை நீரோட்டமே இவற்றிற்கான ஆற்றலை அளித்து இயக்குகிறது. 

ஆணவம் நமக்கு உதவாதது மட்டுமல்ல. உண்மை உதவி வருமிடத்திலிருந்து நம்மைப்பிரித்து வறியவர்களாகவும் ஆக்கி வீசி விடுகிறது. 

வெறுப்பு, போட்டி, பொறாமை போன்ற தவறான மனநிலைகள் ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்கின்றன. 

வாழ்வு” சில சிந்தனைகள் என்ற தமது நூலில் “ தீய குணங்களுள் பொய்பேசுதல், அவதூறு பேசுதல், ஏமாற்றுதல், தன்னலம் போன்றவை ஆன்மீக முன்னேற்றத்தை வெகுவாகத் தடை செய்கின்றன. தீமையிலும் வஞ்சனையிலும் ஆன்மா வளர முடியாது 


  

போட்டி தேவையில்லை. 


வாழ்க்கை பரந்தது. ஒருவரைப்போல் இன்னொருவர் இல்லை. 

ஒவ்வொருவரும் தனிப்பாதைகள் வகுத்துக்கொள்ள முடியும். 

யாரும் அடுத்தவரின் பாதையில் குறுக்கிட வேண்டியதில்லை. அடுத்தவனை அழிக்கவும் தேவையில்லை.

பெரும்பான்மையோர் இதைப்புரிந்து கொள்ள வெகுகாலமாகும். 

ஆன்மீக சாதகர்கள் எப்போதும் சிறுபான்மையினரே. அவர்கள் பெரும்பான்மையினரைப்போல் போட்டியிட வேண்டாம். அது தேவையுமில்லை. 

இவர்களின் பாதை வேறானது. வெற்றிக்காக நாம் ஏன் இப்படி நம்பிக்கையிழந்து தவிக்க வேண்டும்.? ஏன் இவ்வாறு தேவையற்ற போட்டிகளில் சிக்கி உழல வேண்டும்.? 

எல்லோரும் ஆடுவதைப்போல் ஒரு குறிப்பிட்ட மனிதன் ஆடாதிருக்கலாம். ஏனெனில் ஒரு வேளை அவன் வேறுபட்ட தாளத்தைக் கேட்டுக் கொண்டிருப்பான்.

தான் கேட்கின்ற தாளத்திற்கேற்பத்தான் அவன் ஆடட்டுமே! அது எந்தத்தாளமாக இருந்தாலும் சரி, எவ்லளவு தூரத்திலிருந்து வருகின்ற தானாலும் சரி அவன் அந்தத் தாளத்தைத் தான் தொடரட்டுமே! 

ஒரு போதும் உலகியல் வெற்றிகளைக் கொண்டு ஒரு சாதகன் வாழ்க்கையை எடை போடக்கூடாது. 

எப்போதும் உலகியல் வெற்றியையும் மகிழ்ச்சியையும் நாட வேண்டியதில்லை.

தோல்வியும் துயரமும் வாழ்வில் தவிர்க்க முடியாதவை. அவை நிலையானவை அல்ல. அவற்றால் நம்மை அழிக்க முடியாது. வாழ்க்கை நமக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லையென்றால் வேறு யாரோ ஒருவருக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறதென்று ஆறுதலடைய வேண்டும். 

பிறர் மகிழ்ச்சியில் இன்பம் காணுதல் , பிறர் துன்பத்தைப் பகிர்தல் இவற்றின் மூலமே சான்றோர்கள் வாழ்வின் இயைபை அடைகின்றனர். 

நாளடைவில் இத்தகையவர்களுக்கு தியானமே ஓர் உயர்நிலை இயல்பைக் காட்டுகிறது. எல்லா உயிர்களிலும் நின்று நிலவும் ஆன்ம ஒருமையை அவர்கள் அறிகின்றனர். 

ஆன்மீகத் தேடல், ஆளுமை ஒருங்கிணைப்பு, வாழ்வுடன் இயைபு

இவை மூன்றும் தியான வாழ்வின் வெற்றிக்கான முக்கிய நிபந்தனைகள். 

இவை மனிதனது சுய முயற்சியால் வருபவை. ஆனால் இறைவனிடம் உண்மையான பக்தி கொண்டவர்கள்., அவனையே சரணடைந்து வாழ்பவர்கள்இவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. 

அவர்களைப் பொறுத்த வரை ஆன்மீக வாழ்வின் துவக்கமும் முடிவும் எல்லாமே இறையருள் ஒன்று தான். 

யோகாசாரியரான பதஞ்ஜலி. இறைவனிடம் கொள்ளும் பக்தியால் சமாதி நிலையை அடையலாம் என்று கூறுகிறார். 

உண்மைபக்தியைப் பெறுவது எப்படி? இறைவனின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமாவது எவ்வாறு? 

இது தான் பக்தனைப் பொறுத்த வரை ஆன்மீக வாழ்வின் அடிப்படைப் பிரச்சனை. இதைச் சரிசெய்துவிட்டால் மற்ற நிபந்தனைகள் தாமாகவே நிறைவேறி விடுகின்றன.

image143

தியானத்தில் தடைகள்

தடைகள்

  

தியானத்தில் தடைகள்

-

தடைகள் இல்லாத வாழ்க்கைப் பாதை எதுவும் இல்லை. 

தடைகளைத் தாண்டாமல் எந்தத் துறையிலும் யாரும் வெற்றி பெற முடியாது.

ஒரே தாவலில் மேதைகள் ஆனவர்கள் ஒருவருமில்லை.பிறர் அயர்ந்து உறங்குகின்ற ஆழ்ந்த இரவுகளில் உயிரைக் கொடுத்து உழைத்தால் மட்டுமே அவர்கள் அந்த உயர்நிலைகளை எட்ட முடிந்தது 

உலகியல் வாழ்க்கையின் போராட்டங்களும் பிரச்சனைகளும் பலரை ஆன்மீக வாழ்வில் ஈடுபடச் செய்கின்றன. 

இந்த வாழ்வில் தடைகள் எதுவும் இன்றி உயர்ந்த அனுபூதியைப் பெற்று விடலாம் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.ஆனால் இங்கேயும் பூதங்கள் போல் தடைகள் எழும் போது அவர்கள் நிலை குலைந்து விடுகின்றனர். 

ஆன்மீக வாழ்வில் வெற்றி பெற்ற அனைவரும் தடைகளைத் தாண்டிச் சென்று தான் அதனைச் சாதித்தனர். புத்தர் போன்ற பெருமக்கள் கூட பல மயக்கங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.

மனிதனுக்கு நேர்கின்ற துன்பங்களை இந்திய ஆன்மீகம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறது.

முதலில் வருவது, ஆதி தைவிகம்

சாதகமில்லாத சூழ்நிலை,

திருப்திகரமில்லாத வேலை

, எதிர்பாராத பிரச்சனைகள், மனக்கோளாறுகள் போன்ற காரணம் காண முடியாத துன்பங்கள் இதில் அடங்கும்.

அடுத்து ஆதி பௌதிகம்

-

பிற மனிதர்களோ உயிரனங்களோ விளையும் துன்பங்கள்.

மூன்றாவது, ஆதியாத்மிகம்

தானே உருவாக்கிக் கொள்கின்ற தடைகள்.

இந்த மூன்றினும் முதலிரண்டும் ஏறத்தாழ சாத கனின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவை. 

அவனது வினைப்பயனால் விளைப்பவை. 

ஆனால் தவறான மனோபாவங்களாலும் தவறான செயல்களாலும் தானே உருவாக்கிக் கொள்கின்ற ஆத்யாத்மிகம் அவனது கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

இந்த மூன்றாவது வகைத் தடையே ஆன்மீக வாழ்வில் கருதற்குரியது.இந்த அகத்தடைகள் நீக்கப்பட்டால் புறத்தடைகள் ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும் வலிமையை இழந்து விடுகின்றன.

இந்த அகத்தடைகள் எவை? இந்தியாவின் ஒவ்வொரு சமய மரபும் இந்த அகத்தடைகளைக் குறிப்பிடுகின்ற ஒரு தனிப்பட்டியலைவைத்துள்ளன.

சாங்கிய காரிகை சிலதடைகளைக்கூறுகிறது. 

இவை விபர்யயம்(தவறான அறிவு), 

அசக்தி(வலிமையின்மை அதாவது பலவீனம்), 

துஷ்டி(திருப்தி) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

விபர்யயம் ஐந்து வகை,

அறியாமை, அகங்காரம், கவர்ச்சி, வெறுப்பு, வாழ்க்கையில் தீவிரப்பற்று.

அசக்திகள் இருபத்தெட்டு.

அவை பற்றிய அனைத்தையும் நாம் அறிய வேண்டியதில்லை. ஆனாலும் சொந்த பலவீனங்களையும் குறைபாடுகளையும் ஒவ்வொரு சாதகனும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

இதன் பொருள் பலவீனங்களை எண்ணியெண்ணிக் குமைந்து கலங்க வேண்டும் என்பதில்லை. 

உடல் வலுவுள்ளவன்,மனவலிமை பெற்றவனாக இருக்க வேண்டும் என்பதில்லை. 

அது போலவேஆன்ம வலிமை என்பது மன வலிமையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. 

உண்மையான ஆன்மீக அனுபவம் பெற இந்த ஆன்ம வலிமை வேண்டும். ஆன்ம வலிமை அற்றவர்கள் என்றால் முதலில் நாம் அதை உணர வேண்டும்.வெறுமனே உணர்ந்திருந்தால் மட்டும் போதாது, எல்லையற்ற வலிமையின் இருப்பிடமான இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டும்.

துஷ்டி என்பது சிறு சிறு இன்பங்களில் திருப்தி அடைந்து விடுவது. 

இங்கு நாம் குறிப்பிடுவது சாதாரணப் புலனின்பங்களை அல்ல. ஆன்மீக சாதகன் புலனின்ப நாட்டங்களைக் கடந்தவனாக இருக்க வேண்டும்.


  

சாங்கிய காரிகை ஒன்பது விதமான துஷ்டிகளைப் பற்றிப் பேசுகிறது. 

அவற்றுள் ஒன்று ஆரம்பகால ஆன்மீக முன்னேற்றத்திலும் மிகச்சிறிய ஆன்மீக அனுபவங்களிலும் திருப்தி அடைந்து விடுதல். இது ஆன்மீக வாழ்வில் மிகச் சாதாரணமாக நாம் காணும் ஒன்று. பெரும்பான்மையான சாதகர்கள் ஆரம்பத்தில் சில வருடங்கள் துடிப்புடன், தீவிரமான ஜபதியான சாதனைகளில் ஈடுபடுகிறார்கள். 

ஆனால் சிறிது தூய்மையும் மன அமைதியும் பெற்ற உடனேயே திருப்தி பெற்று விடுகின்றனர். அவர்களது வேகம் தடைபட்டு விடுகிறது.

சிலர் வெறும் புத்தக ஞானத்துடன் நின்று விடுகிறார்கள். பல புத்தகங்களைப் படிப்பதிலேயே அவர்கள் திருப்தி காண்கிறார்கள்.

இன்னும் சிலரோ சில புற மாற்றங்களால் திருப்தி அடைந்து விடுகின்றனர். 

கமண்டலம் வைத்துக் கொள்வது, காவி உடுப்பது, அறையில் அழகிய பூஜை மேடை அமைப்பது. ஏராளமான ஆன்மீக நூல்களை வைத்துக் கொள்வது பிரசாதம் உண்பது போன்றவை பலருக்குத் திருப்தி அளித்து விடுகிறது.

விதியின் மேல் பழியைப் போட்டு விட்டு, எதற்கும் காலநேரம் வர வேண்டும்.என்ற தவறான நம்பிக்கையுடன் இருப்பதில் திருப்தி பெற்று விடுகிறார்கள்.

சிலர்.உண்மைதான். ஆன்மீக முன்னேற்றம் காலத்தைப் பொறுத்துதான். ஆன்மீக அனுபூதி எப்போது எந்த நேரம் வரும் என்பதை யாராலும் கூறமுடியாது.

ஆனால் அதற்காக எல்லாம் நேரப்படி நடக்கும்? எதற்கும் அதிஷ்டம் வேண்டும் என்று சோம்பி இருப்பது கோழைத்தனம். 

இது வாழ்வை எதிர் கொள்ளாமல் தப்பி ஓடுவது ஆகும். இதனால் ஆன்மீக முன்னேற்றம் வெகுவாகத் தடைபடவும் செய்கிறது.

சாங்கிய காரிகை இன்னும் ஒருவிதமான திருப்தியைப் பற்றிக் கூறுகிறது. 

பக்குவமடையும் முன்னரே, தகுதி பெறு முன்னரே செயல்புரிவதைத் துறந்து விடுவதிலிருந்து வருகின்ற திருப்தியேஅது.

புறத்துறவும் பலவிதமான தவங்களும் மேற்கொள்ளப்படும் எதையோ சாதித்துவிட்ட எண்ணம் சிலரிடம் ஏற்படுகிறது.

ஆன்மீக வாழ்வு இவ்வளவு தான். இதற்கு மேல் எதுவும் தேவையில்லை என்ற தவறான முடிவுக்கு அவர்கள் வந்து விடுகின்றனர்.

இத்தகைய கீழ்நிலை திருப்திகளும் நிறைவுகளும் உண்மையான ஆன்ம தாகத்தை நீர்க்க செய்து விடுகின்றன.

image144