வேதாந்தமும் இந்திய வாழ்க்கையில் அதைச் செயல்முறைப் படுத்தலும்
-
பிப்ரவரி13 ,பச்சையப்பா ஹால்
நமது மக்களையும் நமது மதத்தையும் குறிப்பதற்கு சாதாரணமாக ஒரு சொல் பயன்படுத்தப்படுகிறது - இந்து. நான் வேதாந்தம் என்று எதைக் கூறுகிறேனோ அதைப் புரிந்துகொள்வதற்கு, இந்து என்ற சொல்லைச் சற்று விளக்க வேண்டியுள்ளது. பழங்கால பாரசீகர்கள் ஸிந்து நதியை ஹிந்து நதி என்று அழைத்தார்கள். சம்ஸ்கிருதத்தின்‘ ஸ” என்ற சப்தம் பழங்கால பாரசீகத்தில் ‘ஹ” என்று மாறிற்று. எனவே ‘ஸிந்து ””ஹிந்து ” வாயிற்று. கிரேக்கர்களுக்கு‘ஹ ”வை உச்சரிப்பது கஷ்டமாயிருந்தது. ஆதலால்‘ ஹ ”வையும் அவர்கள் விட்டுவிட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். எனவே ‘இந்தியர்”களானோம். சிந்து நதிக்கு மறுகரையில் வாழ்பவர்கள் ஹிந்து என்று அழைக்கப்பட்டனர். பழங்காலத்தில் அந்த வார்த்தையின் பொருள் எதுவாகவும் இருந்திருக்கலாம் ,ஆனால் இன்று அது தன் எல்லா வேகத்தையும் இழந்துவிட்டது. ஏனெனில் சிந்துநதிக்கு இக்கரையில் இன்று வாழ்பவர்கள் எல்லோரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; இந்துக்கள் உள்ளனர், அவர்களைத் தவிர முகம்மதியர்கள்,பார்சிகள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சமணர்கள் முதலியவர்களும் வசிக்கின்றனர். எனவே ஹிந்து என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டால் ,அது இவர்கள் அனைவரையும் குறிக்க வேண்டும், மதக்கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர்கள் அனைவரையும் ஹிந்து என்று சொல்ல முடியாது. எனவே நமது மதத்திற்கு ஒரு பொதுப் பெயர் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். பல்வேறு நெறிகள், பல்வேறு கருத்துக்கள், பல்வேறு சடங்குகள் ,பல்வேறு வழிபாட்டு முறைகள்- இவற்றின் ஒரு தொகுப்புபோல் உள்ளது நமது மதம். இந்தத் தொகுப்பிற்கென்று ஒரு தனித் தலைமை இல்லை, ஒரு தனி ப்பெயரில்லை, ஒரு தனி அமைப்பு எதுவும் இல்லை. . நமது மதப் பிரிவுகள் எல்லாம் ஒப்புக் கொள்ளும் விஷயம் ஒரு வேளை இது ஒன்றுதான் சாஸ்திரங்களாகிய வேதங்களை எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். வேதங்களை ஒப்புக் கொள்ளாதவர்களை இந்து என்று அழைக்கின்ற உரிமை ஒருவேளை இல்லை என்பது நிச்சயம்.
வேதங்கள் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். கர்ம காண்டம் பலவிதமான யாகங்களையும் சடங்குகளையும்பற்றிக் கூறுகிறது. தற்காலத்தில் அவற்றுள் பலவும் வழக்கத்தில் இல்லை. வேதங்களில் ஆன்மீக உபதேசங்கள் அடங்கிய பகுதியான உபநிடதங்களும் வேதாந்தமும் ஞான காண்டம் என்று அழைக்கப்படுகிறது. துவைதி, விசிஷ்டாத்வைதி, அத்வைதி என்ற வேறுபாடின்றி, நமது ஆச்சாரியர்கள், தத்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் இவற்றை மிகவுயர்ந்த பிரமாணமாக ஒப்புக் கொள்கின்றனர். எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களானாலும், எந்தத் தத்துவக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரும் உபநிடதங்களையே தங்கள் பிராமாண சாஸ்திரமாகக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளாத எந்தப் பிரிவும் வைதீகத்திற்குப் புறம்பாகி விடுகிறது. எனவே தற்காலத்தில் நாடு முழுவதுமுள்ள இந்துக்களை ஒரு பெயர்கொண்டு அழைக்கலாமெனில் , அது ஒருவேளை‘ வேதாந்தி ”அல்லது‘ வைதீகர்” என்பதாகத்தான் இருக்கும். இவற்றுள் எதை வேண்டுமானாலும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். வேதாந்தத் தத்துவம் அல்லது வேதாந்தம் என்ற வார்த்தைகளை இந்தப் பொருளில் தான் நான் பயன்படுத்துகிறேன்.
இந்தக் கருத்தை இன்னும் சிறிது தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏனெனில் சமீப காலங்களில் வேதாந்தத் தத்துவத்தின் அத்வைத நெறியைக் குறிக்கவே வேதாந்தம் என்ற சொல்லைப் பலரும் பயன்படுத்துகின்றனர், ஆனால் உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பல்வேறு தத்துவப் பிரிவுகளுள் அத்வைதமும் ஒன்று, அவ்வளவுதான் . இது நமக்குத் தெரியும். விசிஷ்டாத்வைதிகளும் அத்வைதிகளைப் போலவே உபநிடதங்களைப் போற்றுகின்றனர்; அத்வைதியைப்போல் வேதாந்தத்தையே பிரமாண சாஸ்திரமாகக் கொண்டுள்ளனர். துவைதிகளும் அப்படியே. அவ்வாறே இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும். ஆனால் வேதாந்தம் என்றாலே அத்வைதம் என்று தான் பொதுவாக மக்கள் நினைக்கின்றனர். ஒரு வேளை அதற்கு ஒரு காரணமும் இருக்கலாம். நமது சாஸ்திரங்களாக வேதங்கள் இருப்பினும் அவற்றின் கோட்பாடுகளை விளக்க ஸ்மிருதிகளும் புராணங்களும் ஏற்பட்டன, வேதங்களுக்கு உள்ள அதிகாரம் இவற்றிக்கு இல்லை. புராணங்களும் ஸ்மிருதிகளும் வேதங்களின் எந்தப் பகுதியிலிருந்தேனும் வேறுபடுமானால் வேதங்களையே பின்பற்ற வேண்டும். ஸ்மிருதியை விலக்கி விட வேண்டும் என்பது நியதி. மகத்தான அத்வைதத் தத்துவ போதகரான சங்கரரின் உரைகளிலும் அவரது தத்துவ விளக்கங்களிலும் பெரும்பாலும் உபநிடதங்களே பிரமாணமாக கொள்ளப்படுகின்றன. வேதங்களில் அரிதாகக் காணப்படுகின்ற ஏதோ ஓரிரு கருத்துக்களை விவரிப்பதற்கு மட்டுமே ஸ்மிருதி கையாளப்படுகிறது.மாறாக, மற்ற பிரிவினர் ஸ்மிருதி களை அதிக மாகவும் வேதங்களைக் குறைவாகவுமே ஆதாரமாகக் கொள்கிறார்கள். நாம் துவைத நெறிகளைப் பார்க்கப் பார்க்க அங்கே ஸ்மிருதிகள்தான் அளவுக்கு அதிகமாக மேற்கோள் காட்டப்படுவது தெரிகிறது: சில இடங்களிலோ ஒரு வேதாந்தியிடமிருந்து எதிர்பார்க்க முடியாத கருத்துக்கள் கூடக் காணப்படுகின்றன. இவ்வாறு துவைத நெறிகளில் புராணங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால்தானோ என்னவோ அத்வைதிகள் சரியான வேதாந்திகள் என்று கருதப்பட்டு வந்தார்கள் போலும்.
அது எப்படியிருந்தாலும் வேதாந்தம் என்ற சொல் இந்தியாவில் மத வாழ்க்கை முழுவதற்குமே பொருந்துவதாக இருக்க வேண்டும்.வேதாந்தம் என்பது வேதங்கள்தாம். இருப்பவற்றுள் மிகப் பழமையானவை வேதங்கள் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். தற்கால அறிஞர்களின் கருத்து எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் வேதங்களின் சில பகுதிகள் ஒரு காலத்திலும் பிற பகுதிகள் வேறு காலத்திலும் எழுதப்பட்டதாக ஒப்புக்கொள்ள இந்துக்கள் தயாராக இல்லை. அவை ஒரே சமயத்தில் உண்டாக்கப் பட்டவை என்ற தங்கள் கருத்தையே அவர்கள் நம்புகிறார்கள். வேறு விதமாகச் சொல்வதானால், அவை ஒருபோதும் உண்டாக்கப்படவில்லை, எப்போதும் இறைவனின் திருவுள்ளத்தில் அவை இருக்கின்றன என்பதே அவர்கள் கருத்து.
வேதாந்தம் என்பது இந்தியாவிலுள்ள துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் முதலிய அனைத்தையும் தன்னுள் கொண்டதாக இருக்கிறது. வேதாந்தம் என்ற சொல்லால் இதையே நான் குறிப்பிடுகிறேன். பௌத்தம், சமணம் போன்றவற்றின் சில பகுதிகளைக் கூட, அவர்கள் விரும்பினால் நாம் அதற்குள் இடம் கொடுக்கலாம். ஏனெனில் நம் இதயம் அதற்குப் போதுமான விசாலமானதாக இருக்கிறது. நாம் தயாராகத்தான் இருக்கிறோம், ஆனால் அவர்கள் வர மாட்டார்கள். தீவிரமாக ஆராய்ந்து பார்த்தால் பௌத்தத்தின் சாரம் முழுவதும் உபநிடதங்களிலிருந்தே எடுக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். ஏன், அவர்களின் நல்லொழுக்கக்கோட்பாடுகள், அற்புதமானவை, மகத்தானவை என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்களே, அந்த நல்லொழுக்கக் கோட்பாடுகள் கூட ஏதோவோர் உப நிடதத்தில் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருப்பதைக் காணலாம். அவ்வாறே, சில விசித்திரக் கொள்கைகள் தவிர, சமணர்களின் சிறந்த கோட்பாடுகள் அனைத்தும் உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டவையே.
இந்திய மதக் கருத்துக்களில் பிற்காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் முளை எல்லாமே உபநிடதங்களில் உள்ளன. தகுந்த ஆதாரம் எதுவும் இன்றியே, சில வேளைகளில், உபநிடதங்களில் பக்திக் கருத்துக்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் சொல்வது முற்றிலும் தவறென்பது உபநிடதங்களைப் படிப்பவர்களுக்குத் தெரியும். ஒவ்வோர் உபநிடதத்திலும் பக்திக்கருத்துக்கள் வேண்டிய அளவு உள்ளது . நீங்கள் சற்று தேடிப்பார்க்க வேண்டும், அவ்வளவுதான். பிற்காலத்தில் புராணங்களிலும் ஸ்மிருதிகளிலும் முழு வளர்ச்சியடைந்து காணப்படுகின்ற. சில கருத்துக்கள் உபநிடதங்களில் விதை நிலையில் உள்ளன. ஒரு குறிப்பு, ஒரு திட்டம் அங்கே உள்ளது. புராணங்களில் அவை விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இன்று முழுமையாக வளர்ச்சி பெற்றுள்ள எந்த இந்திய லட்சியத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அவை ஒவ்வொன்றும் உபநிடதங்களிலிருந்தே தோன்றியுள்ளன. உபநிடதங்களை ஒழுங்காகப் படிக்காமல், பக்திக் கருத்து வெளிநாட்டிலிருந்து வந்தது என்று நிலை நாட்டச்சிலர் முயல்கிறார்கள். அவர்களின் முயற்சியை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. இவையெல்லாம் தவறென்று நிரூபிக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியும். பிரேமை என்று பக்திக் கருத்துக்கள் என்னென்ன உண்டோ அவை எல்லாமே உபநிடதங்களில், உபநிடதங்களில் ஏன், சம்ஹிதைகளிலேயே உள்ளன. காலப்போக்கில் பக்தி லட்சியங்கள் வளர்ந்து வருகின்றன, அவ்வளவுதான் சம்ஹிதைகளில் அங்கங்கே பயமும் வேதனையும் நிறைந்த மதத்தின் சுவட்டைக் காண முடிகிறது. வருணம் அல்லது வேறு ஒரு தேவனின் முன்னால், வழிபடுபவர்கள் நடுங்கி நிற்பதை அங்கங்கே நாம் பார்க்கிறோம். பாவம் என்ற கருத்தின் காரணமாக அவர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாவதையும் அங்கே நாம் காண முடியும். ஆனால் இத்தகைய விஷயங்களை விவரிக்க உபநிடதங்களில் இடம் இல்லை, பயத்தை அடைப்படையாகக் கொண்ட மதம் உபநிடதங்களில் இல்லை. அங்குக் காணப்படும் மதம் அன்பை அடிப்படையாகக் கொண்டது, அறிவையும் அடிப்படையாகக் கொண்டது.
இந்த உபநிடதங்களே நமது சாஸ்திரங்கள். இவை பலவாறாக விளக்கப்பட்டுள்ளன. நான் முன்னரே கூறியதுபோல் வேதங்களுக்கும் தொடர்ந்து வந்துள்ள புராண இலக்கியங்களுக்கும் வேறுபாடு தோன்றுமானால், புராணங்கள் தான் வழிபட வேண்டும். ஆனால் இன்று நடைமுறையில் நாம் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு புராணங்களையும் பத்துப் பங்கு மட்டுமே வைதீக முறைகளையும் பின்பற்றி வருகிறோம். மிகவும் முரணான பல பழக்கவழக்கங்கள் நம்மிடையே நிலவுகின்றன. மதம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் தமது சமுதாயத்தில் உள்ளன. இவற்றுக் கெல்லாம் இந்து சாஸ்திரங்களின் சம்மதமும் இல்லை. இன்னும் சில பழக்க வழக்கங்கள் நம் நாட்டில் உள்ளன; அவற்றைப்பற்றிப் புத்தகங்களில் படிக்கிறோம், பார்க்கவும் வியப்பாக இருக்கிறது. இவற்றிற்கு வேதங்கள் ,ஸ்மிருதிகள்,புராணங்கள் எவற்றின் சம்மதமும் கிடையாது; இவை வெறும் வட்டார வழக்கங்கள். எனினும் அந்தச் சிறு வழக்கம் கூட அழிந்து போகுமானால், தான் ஓர் இந்துவாக நிலைக்க முடியாது என்றே ஒவ்வொரு பாமர கிராமவாசியும் நினைக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் வேதாந்தமும் ஒன்றுதான், அந்தச் சிறிய வட்டார வழக்கமும் ஒன்று தான். தான் செய்வதற்கு சாஸ்திர சம்மதம் இல்லை , அவற்றை விட்டுவிட்டால் தனக்கு எவ்விதத் தீங்கும்நேரிடாது; மாறாக தான் ஒரு சிறந்த மனிதனாவதற்கே அது துணை செய்யும் என்பதை சாஸ்திரங்களில் படித்தாலும் அவன் உணர்வதில்லை.
இரண்டாவதாக, இன்னுமொரு சிக்கல் இருக்கிறது. நமது சாஸ்திரங்கள் எண்ணற்றவை. சாம வேதத்திற்கு ஆயிரம் கிளைகள் இருந்ததாக இலக்கண நூலாகிய பதஞ்ஜலி மகா பாஷ்யத்தில் படிக்கிறோம். அவையெல்லாம் என்னவாயின ? யாருக்கும் தெரியாது ஒவ்வொரு வேதத்தின் விஷயமும் அப்படியே. இந்த நூல்களில் பெரும் பகுதி மறைந்து விட்டது, சிறிய பகுதிகளே நமக்குக் கிடைத்துள்ளன. குறிப்பிட்ட சில குடும்பங்கள் அவற்றைத்தங்கள் பொறுப்பில் பாதுகாத்து வந்தன. இந்தக் குடும்பங்கள் மரணத்தைத் தழுவின; அல்லது அன்னியர் கொடுமையின் கீழ் கொல்லப்பட்டன, அல்லது வேறு எந்த விதத்திலோஅழிய நேர்ந்தது. அவற்றுடன் அவை பாதுகாத்து வந்த வேதப் பகுதிகளும் அழிந்துவிட்டன.இந்த உண்மை நாம் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் புதிதாக ஒன்றைப் போதிக்க விரும்புபவர்களும் சரி, ஏதாவது ஒரு கொள்கையை நிலை நாட்ட விழைபவர்களும் சரி, ஏன் ,வேதங்களையே எதிர்க்கின்ற ஒரு கொள்கையை க்கூற எண்ணுபவர்களுக்கும் கூட இந்த உண்மை, இந்த வாதம் தான் ஒரு துருப்புச் சீட்டாக இருந்து வருகிறது. ஏதோவொரு வட்டார வழக்கத்திற்கும் வேதங்களுக்கும் முரண்பாடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு , அந்த வட்டார வழக்கம் வேதங்களுக்கு எதிரானது என்பது சுட்டிக்காட்டப்பட்டால் உடனே இந்த வாதம் தான் முன்வைக்கப்படுகிறது-அதாவது அவற்றிக்கிடையில் முரண்பாடு எதுவும் இல்லை, இந்தக் குறிப்பிட்ட வாதம்பற்றிக் காணப்பட்ட வேதப் பகுதி அழிந்து விட்டது, உண்மையில் காணப்பட்ட வேதப்பகுதி அழிந்துவிட்டது, உண்மையில் இந்த வழக்கமும் நிலவியே வந்தது என்று கூறிவிடுவார்கள்.
நமது சாஸ்திங்ரகளின் இத்தகைய மாறுபட்ட பாட பேதங்கள், விளக்கவுரைகள் இவற்றிக்கு நடுவில் இவை அனைத்தின் ஊடேயும் இவை அனைத்தையும் கோர்த்தபடிச் செல்கின்ற அடிப்படைக் கருத்தைக் கண்டுபிடிப்பது மிகச் சிரமமான காரியம்தான் . ஆனால் மாறுபட்ட இந்த எல்லா பிரிவுகளுக்கும் உட்பிரிவுகளுக்கும் அடிப்படையாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும். இந்தச் சிறுசிறு கட்டிடங்கள் அனைத்தும் ஒரு பொது அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்க வேண்டும். இவையனைத்துள்ளும் ஓர் இயைபு நிலவ வேண்டும், சீர் செய்ய முடியாதது போல் தோற்றம் அளிக்கின்ற, நாம் நமது மதம் என்று அழைக்கின்ற இந்தக் குழப்பக் குட்டைக்கு ஏதோவோர் அடிப்படை ஒழுங்கு இருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது. இல்லாவிடில் இது இவ்வளவு காலம் நிலைத்து நின்றிருக்க முடியாது; இவ்வளவு காலம் தாக்குப்பிடித்திருக்க முடியாது.
இனி நம் உரையாசிரியர்களிடம் வருவோம், அங்கேயும் ஒரு சிக்கல் தெரிகிறது. அத்வைத உரையாசிரியர் என்ன செய்கிறார்? அத்வைதப் பகுதி வரும் போது அதை அப்படியே வைத்துக் கொள்கிறார் ஆனால் துவைதப் பகுதி வருமானால் அதே உரையாசிரியர், அவரால் முடியுமானால், அந்தப் பகுதியைப் பிரித்தும் திரித்தும் மிகவும் அசம்பாவிதமாகப் பொருள் கூறுகிறார். பிறப்பற்றது ”சில இடங்களில் ‘ஆடு ”என்றாகிவிடுகிறது, இத்தகைய வினோத மாற்றங்களை எல்லாம் நாம் காண முடியும்..உரையாசிரியர் தமக்கு ஏற்றவாறு பொருள் தருவதற்காக, பிறப்பற்றது ”என்ற பொருள்தருகின்ற ‘அஜ; என்ற வார்த்தையை, பெண் ஆடு” என்று பொருள்படுகின்ற ‘அஜா” என்ற வார்த்தையாகத் கொள்கிறார்.
இதைவிட மோசமாக இல்லை யென்றாலும், இவ்வாறுதான் துவைத உரையாசிரியர்களும் வேதப் பகுதிகளைக் கையாள்கிறார்கள்.துவைதப் பொருள் கொடுக்கும் பகுதிகளை அப்படியே வைத்துக்கொண்டு, அத்வைதப் பொருள்வரும் பகுதியை விருப்பம்போல் திரித்துப் பொருள் தருகிறார்கள்.
சம்ஸ்கிருத மொழி அவ்வளவு நுட்பமானது, வேதங்கள் அவ்வளவு பழமை வாய்ந்தவை, சம்ஸ்கிருத இலக்கணம் அவ்வளவு முழுமையானது - ஒரு வார்த்தையின் பொருளைப்பற்றி யுகயுகமாக விவாதித்துக் கொண்டே இருக்கலாம். ஒரு பண்டிதர் நினைத்தால் வெறும் உளறலைக்கூட வாதத்திறமையால் மேற்கோள்களைக் காட்டியும் நியதிகளைக் கூறியும் சரியான சம்ஸ்கிருதமாகக் காட்டிவிட முடியும். உபநிடதங்களைப் புரிந்து கொள்வதில் உள்ள கஷ்டங்கள் இவை.
ஆனால் ஒரேசமயத்தில் தீவிர துவைதியாகவும் தீவிர அத்வைதியாகவும் தீவிர பக்தராகவும் தீவிர ஞானியாகவும் திகழ்ந்த ஒரு மகானுடன் வாழும் அரிய பேறு எனக்குக் கிடைத்தது. உபநிடதங்களையும் சாஸ்திரங்களையும் புரிந்து கொள்வதற்கு உரையாசிரியர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதைவிடச் சிறந்த சுதந்திரமான வழி அவரிடமிருந்தே எனக்கு முதலில் கிடைத்தது. எனது கருத்தும் எனது ஆராய்சிகளின் பலனாக நான் கண்ட முடிவும்இதுதான்- சாஸ்திரப் பகுதிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. எனவே அவற்றைத் திரித்துப் பொருள் கூற வேண்டுமே என்று பயப்பட வேண்டாம் ஆஹா! அந்தப் பகுதிகள் மிகவும் அழகு வாய்ந்தவை, மிகவும் அற்புதமானவை; அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல, மாறாக அவற்றிற்கிடையில் மிகவும் ஆச்சரியமான இயைபு காணப்படுகிறது, ஒரு கருத்திலிருந்து அடுத்த கருத்திற்குப் படிப்படியாக நம்மை அழைத்துச் செல்கின்ற ஒரு பாங்கு காணப்படுகிறது. எல்லா உபநிடதங்களும் வழிபாடு போன்ற துவைதக் கருத்துக்களில் ஆரம்பித்து உன்னதமான அத்வைதத்தில் முடிவடைகின்றன என்பது நான் கண்ட உண்மை.
எனவே இந்த மகானின் வாழ்க்கையின் வாயிலாகப் பார்க்கும் போது, துவைதிகளும் அத்வைதிகளும் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டிய அவசியமில்லை என்று எனக்குத் தெரிகிறது; இருவருக்கும் இடம் உள்ளது, தேசிய வாழ்க்கையில் மகத்தான இட மிருக்கிறது, துவைதி கட்டாயம் வேண்டும், அத்வைதியைப்போல் துவைதியும் நமது தேசிய மத வாழ்க்கையில் ஒன்று கலந்தவன் .ஒன்றில்லாமல் மற்றது இருக்க முடியாது . ஒன்று மற்றொன்றைப் பூர்த்தி செய்கிறது; ஒன்று கட்டிடம், மற்றொன்று மாடி; ஒன்று வேர், மற்றொன்று பழம். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எனவே உபநிடத வாக்கியங்களைத் திரித்துப் பொருள் கூற முயற்சிப்பது எனக்கு வேடிக்கையாகவே படுகிறது.
உபநிடதங்களின் மொழிமிகவும் அற்புதமாக இருப்பதை இப்போது நான் உணரத் தொடங்கியிருக்கிறேன். அவை மிகச் சிறந்த தத்துவம். அவை மனித குலத்திற்கு முக்தியின் பாதையைக் காட்டுகின்ற மிகச்சிறந்த கோட்பாடு , ஆனால் இந்த எல்லா சிறப்புக்களையும் விட, உபநிடத இலக்கியம் இருக்கின்றனவே, அவை நுண்மையைப் படம் வரைந்துகாட்டுவதில் மிகச் சிறந்த ஓவியமாகத் திகழ்கின்றன. மனித மனத்தின் தனித்துவம், இந்த மனத்தின் அகவயம் உள்ளுணர்வு இந்த நூல்களில் தான் முழுவேகத்துடன் வெளிப்பட்டுள்ளன.
பொதுவாக எல்லா நாட்டு இலக்கியங்களிலும் நுண்மையின் சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கவே செய்கின்றன. ஆனால் ஏறக்குறைய அவை எல்லாமே நுண்மையைப் புற இயற்கையில் தேட முயல்கின்றன. உதாரணமாக, மில்டன் தாந்தே, ஹோமர் போன்ற எந்த மேலைநாட்டுக் கவிஞர்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களின் கவிதைகளில் நயமான நுண்மைப் பகுதிகள் உள்ளன. ஆனால் எல்லையற்ற விரிவை, எல்லையற்ற வெளியைப் புலன்களால் உணரக்கூடிய, புற இயற்கை மூலமாகத் தெளிவுபடுத்துகின்ற முயற்சியையே அந்தக் கவிதைகளுள் நாம் காண்கிறோம். நம் சம்ஹிதைகளிலும் இத்தகைய முயற்சிகளைக் காண்கிறோம். படைப்பை விவரிக்கின்ற அந்த அற்புதமான ரிக்குகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். விரிவில் நுண்மையையும், வெளியில் எல்லையற்றதையும் வெளிப்படுத்துகின்ற முயற்சியில் உச்சங்களை எட்டியிருப்பதை அவற்றுள் நாம் காண்கிறோம்.
ஆனால் எல்லையற்ற ஒன்றை இந்த வழியில் அடைய முடியாது; தங்கள் மனங்களில் உருவாகத் துடித்துக் கொண்டிருக்கின்ற கருத்துக்களை எல்லையற்ற வெளி, எல்லையற்ற விரிவு, எல்லையற்ற புற இயற்கை - இவை எவற்றாலும் வெளிப்படுத்த முடியாது என்பதை அவர்கள் வெகுவிரைவிலேயே கண்டு கொண்டனர். எனவே அவர்கள் வேறு விளக்கங்களுக்குத் திரும்பத் தலைப்பட்டனர். உபநிடதங்களின் மொழி புதிய முறையில் ஆகிவிட்டது ; பெரும்பாலும் எதிர்மறையாக, சில இடங்களில் குழப்பமாக , சில நேரங்களில் நம்மைப் புலன்களுக்கு அப்பால் அழைத்துக்கொண்டுபோய், நம்மால் உணர்ந்துகொள்ள முடியாத ஒன்றைக் காண்பித்து, புரியாவிட்டாலும் அது இருக்கிறது என்ற நிச்சயத்தை நம் மனத்தில் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. . உலகின் எந்தக் கவிதை இதற்கு ஈடாகும் ? – ‘ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோsயமக்னி:? அங்கு சூரியன் ஒளிரச் செய்ய முடியாது; சந்திரனும் நட்சத்திரங்களும் மின்னலின் ஒளியும் பிரகாசத்தை அளிக்க இயலாது. அப்படியிருக்க இந்தச் சிறு நெருப்பு என்ன செய்யும்?
உலகின் தத்துவங்களில் மிகச் சிறந்ததும் முழுமைபெற்றதுமான வெளிப்பாட்டையும் ,இந்துக்களின் சிந்தனை சாரத்தையும் , முக்தி பற்றிய மனித குலத்தின் முழுக் கனவையும் வேறு எங்கு இவ்வளவு அழகிய
மொழியில் இத்தனை அற்புத உவமையுடன் சொல்லி இருப்பதைக் காண முடியும்?
ஒரு மரத்தில் அழகிய இறகுகள் கொண்ட இரண்டு பறவைகள் அமர்ந்திருக்கின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று மிகுந்த நேசம் பாராட்டுகின்றன. ஒன்று பழங்களைத்தின்கிறது. மற்றொன்று உண்ணாமல் கம்பீரமாக அமைதியாக உட்கார்ந்திருக்கிறது. கீழ்க்கிளையில் அமர்ந்திருக்கும் பறவை மாறிமாறி இனிப்பும் கசப்புமான பழங்களைத் தின்பதில் அதற்கேற்ப மகிழ்ச்சியும் வேதனையும் அடைகிறது , ஆனால் மேலே அமர்ந்திருக்கின்ற மற்ற பறவையோ அமைதியாக கம்பீரமாக அமர்ந்திருக்கிறது. அது இனிப்பையும் உண்ணவில்லை , கசப்பையும் தின்னவில்லை. எனவே சுகம் துக்கம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் மகிமையிலேயே ஆழ்ந்திருக்கிறது.
மனிதனின் நிலை இதுதான் வாழ்க்கை தரும் இனிப்பும் கசப்புமான பழங்களை உண்கிறான் , பணத்தை நாடி , புலனின்பங்களைத் தேடி ,வாழ்க்கையின் நிலையற்ற இன்பங்களைத் தேடி பைத்தியக்காரத் தனமாக, வெறித்தனமாக ,இடையீடின்றி ஓடிக் கொண்டிருக்கிறான். சில இடங்களில் ஆன்மாவைத் தேர்ப்பாகனுக்கும், புலன்களைக் கட்டுக்கடங்காத வெறி பிடித்த குதிரைகளுக்கும் உபநிடதங்கள் ஒப்பிடுகின்றன. குழந்தைகள் ஒளிமயமான இன்பக்கனவுகளில் மிதப்பதும் , பின்பு அவையனைத்தும் வீண், எனக் காண்பதும் , வயதானவர்கள் தங்கள் கடந்தகாலச் செயல்களை அசைபோடுவதும், எனினும் இந்த மாய வலையிலிருந்து வெளியேறிச் செல்ல முடியாமல் திண்டாடுவதும்- நிலையற்ற இன்பங்களை நாடிஓடுகின்ற மனிதனின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. இதுதான் உலகம். எனினும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பொன்னான கணங்கள் வரவே செய்கின்றன. ஆழ்ந்த கவலைகளின் நடுவில் , இல்லை இல்லை , பெருத்த மகிழ்ச்சியின் நடுவில் சில நேரங்கள் வருகின்றன: சூரிய ஒளியை மறைத்துக் கொண்டிருக்கும் மேகத்திரள் விலகுவது போல் அப்போது தோன்றுகிறது , அப்பால் உள்ள ஏதோ ஒன்றின் காட்சி நம்மையும் அறியாமல் கண நேரத்திற்கு நமக்குக் கிடைத்து விடுகிறது - அப்பால் புலனின்ப வாழ்க்கைக்கு அப்பால், , அப்பால் உலகின் நிலையற்ற சுக துக்கங்களுக்கும் அப்பால்,அப்பால் இயற்கைக்கு அப்பால், இவ்வுலக மறுவுலக இன்பங்களாகிய கற்பனைகளுக்கு அப்பால், புகழ், பணம், பெயர் ,சந்ததி முதலிய அனைத்து ஆசைகளுக்கும் அப்பால் உள்ள ஒளியைக் கண நேரம் பெறுகிறோம். இந்தக்காட்சியில் கண நேரம் திகைத்து நிற்கிறான் மனிதன், இனிப்பும் கசப்புமானபழங்களை உண்ணால் தன் மகிமையிலேயே திளைத்து, தனக்குத்தானே திருப்தியாக தன்னுள்ளேயே நிறைவு கண்டு , ஆனந்தமாக , அமைதியாக ,கம்பீரமாக வீற்றிருக்கும் அந்த மற்றொரு பறவையைப் பார்க்கிறான்..
கீதை கூறுவதுபோல், யார் ஆன்மாவின் மீது அன்பு செலுத்துபவனாய், ஆன்மாவைத் தவிர வேறொன்றும் வேண்டாதவனாய், ஆன்மாவிலேயே திருப்தி கொண்டவனாய் இருக்கிறானோ அவன்செய்வதற்கு என்ன வேலை இருக்கிறது ? ஏன் அடிமை போல் வேலை செய்ய வேண்டும் ? மனிதன் கண நேரம் அந்தக் காட்சி பெறுகிறான். ஆனால் அதை மறந்து விடு கிறான், வாழ்வின் இன்பதுன்பமாகிய பழங்களை உண்கிறான் சில காலத்திற்குப் பிறகு ஒரு வேளை மீண்டும் அந்தக் காட்சி அவனுக்குக் கிடைக்கிறது .அடிமேல் அடிகளை ப் பெற்ற பின்னர் கீழ்ப்பறவை மேற்பறவையை நோக்கிச் செல்கிறது. பலமான அடி பெறுவதற்குப் பேறு பெற்றிருந்தால் தனது உயிருக்குயிராகவும் நண்பனாகவும் இருக்கும் மேற்பறவையின் அருகில், மிக அருகில் செல்கிறது. அருகில் செல்லச் செல்ல, மேற்பறவையிலிருந்து கிளம்புகின்ற ஒளி தனது இறகுகளையும் முழுக்காட்டிச் செல்வதை அதுகாண்கிறது. அதனை இன்னும் நெருங்க நெருங்க ,ஆகா , மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் நெருங்கும் போது, தானே கரைந்து போவது போல் அது உணர்கிறது . மெள்ளமெள்ள அது முற்றிலுமாக மறைந்துவிடுகிறது உண்மையில் கீழ்ப்பறவை வேறல்ல; மேலே அசைந்து கொண்டிருக்கும் இலைகளுக்கு இடையில் அமைதியாக , கம்பீரமாக வீற்றிருந்த அந்தமேற்பறவையின் பிரதிபிம்பமே அது .எல்லாம் மேற்பறவையின் மகிமையே. அதன் மகிமையில் கலந்து இதுவும் பயமின்றி இருக்கிறது: பூரண திருப்தியும் அமைதியும் கம்பீரமும் பெறுகிறது இந்தச் சித்திரத் தின்மூலம் உபநிடதங்கள்நம்மை துவைதத்திலிருந்து அத்வைதத்தின் உச்சக் கருத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
இப்படி பல உதாரணங்களைக்காட்டலாம். ஆனால் அதற்கு நேரம் இல்லை. உபநிடதங்களின் கவித்துவம், நுண்மையை ச் சித்தரித்துக் காட்டும் நேர்த்தி, அவற்றில் நிறைந்துள்ள உன்னதக் கருத்துக்கள் -இவற்றையெல்லாம் விளக்கிக் கூறவும் நேரமில்லை. ஆனால் ஒரு விஷயத்தை நான் சொல்லியே தீர வேண்டும். உபநிடதங்கள் வாள்முனைபோல் உங்களை ஊடுருவுகிறது ; சம்மட்டியடிபோல் உங்கள் மீது விழுகிறது. அவற்றின் பொருளில் சிறிதும் குழப்ப மில்லை . அந்த இசையின் ஒவ்வொரு சந்தமும் முழு இனிமையுடன் உள்ளது, வீண் வார்த்தைகள் இல்லை. தேவையற்ற வாதங்கள் இல்லை. அறிவை ஆக்கிரமிக்கின்ற சொல் அடுக்குகள் இல்லை. இழி நிலையின் எந்த அடையாளமும் இல்லை , அளவுக்கு அதிகமாக உவமை காட்டுகின்ற முயற்சிகள் இல்லை. உயர்வு நவிற்சி அணிகளைக் கூறி, பொருளை மேலும் குழப்பி, அதன் கருத்தே தொலைந்து போகும் அளவிற்குக் கொண்டுபோய், அதிலிருந்து வெளிவர வழி தெரியாமல் மதிமயங்கித் திகைக்கின்ற அளவிற்குச் செய்யக்கூடிய எதுவும் அவற்றில் இல்லை. அப்படிப்பட்ட எதுவும் உபநிடதங்களில் இல்லை. அவை மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்குமானால் ,அவற்றை உண்டாக்கிய இனம் அளவற்ற தேசிய சக்தி உடையதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
வலிமை, வலிமை என்பதையே உபநிடதங்களின் ஒவ்வொரு பக்கமும் எனக்குக் கூறுகின்றன. நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் இது. நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட ஒரு பெரிய பாடம்,வலிமை வலிமை, ஓ மனிதா, பலவீனனாக இருக்காதே” என்பதுதான். மனித பலவீனங்களே இல்லையா என்று மனிதன் கேட்கிறான். உண்டு என்று பதிலளிக்கின்றன உபநிடதங்கள். ஆனால் அதிக பலவீனத்தால் பலவீனத் தைப் போக்க முடியுமா? அழுக்கால் அழுக்கைப் போக்க முடியுமா? .பாவத்தால் பாவம் தொலையுமா? பலவீனத்தால் பலவீனம் போகுமா? என்று கேட்கின்றன. ‘வலிமை, ஓ மனிதா ,வலிமையுடன் எழுந்து நில், வலிமை பெறு ” என்று அவை சொல்கின்றன. உலக இலக்கியங்களுள் இதில் மட்டுமே‘ அபீ” – பயமின்மை” என்ற வார்த்தை மீண்டும்மீண்டும் காணப்படுகிறது. வேறு எந்தச் சாஸ்திரத்திலும் கடவுளுக்கும் சரி , மனிதனுக்கும் சரி இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.
அபீ; - பயமின்மை ! என் மனத்தில் இப்போது கடந்த காலக் காட்சி ஒன்று விரிகிறது. மேலை நாட்டின் மாபெரும் சக்கரவர்த்தியான அலெக்சாண்டர் நம் சிந்து நதிக்கரையில் நின்று கொண்டிருக்கிறார். காட்டில் வசிக்கின்ற நம் துறவி ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். அவருடன் பேசிக்கொண்டிருக்கும் வயோதிகத் துறவி ஒரு வேளை எந்த உடையுமின்றி, நிர்வாணமாக ஒரு கல்லின் மீது அமர்ந்திருக்கிறார். அவரது ஞானத்தைக் கண்டு வியந்துபோன சக்கரவர்த்தி அவரை கிரீசுக்கு வருமாறு தூண்டுகிறார். அதற்காகப் பொன்னும பொருளும் தருவதாக ஆசை காட்டுகிறார். ஆனால் அந்த வயோதிகரோ அலெக்சாண்டரின் பொற்காசுகளைப் பார்த்தும், ஆசை வார்த்தைகளைக் கேட்டும் மென்மையாகச் சிரிக்கிறார், அவருடன் போக மறுத்து விடுகிறார். சக்கரவர்த்தியோ தான் அரசன் என்ற தோரணையில் நிமிர்ந்து நின்று, ‘ நீ வராவிடில் உன்னைக் கொன்று விடுவேன் என்கிறார். அவ்வளவுதான் அந்தத் துறவி கொல்லென்று சிரித்தபடியே , மன்னா, நீ உன் வாழ்நாளில் இது போன்றதொரு பொய்யைக் கூறியிருக்கவே முடியாது. யார் என்னைக் கொல்ல முடியும்? ஜடவுலகை ஆளும் சக்கரவர்த்தியே, நீயா என்னைக் கொல்லப் போகிறாய்? அது ஒரு நாளும் நடக்காது. ஏனெனில் நான் பிறப்பும் இறப்புமற்ற ஆன்மா. நான் பிறந்ததும் இல்லை, இறக்கப் போவதும் இல்லை .நான் எல்லையற்றவன் எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன். நீ என்னைக் கொல்கிறேன் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா! என்று கேட்கிறார்.
இதுவல்லவா வலிமை! இதுவல்லா வலிமை! நண்பர்களே , என் நாட்டு மக்களே, உபநிடதங்களை அதிகம் படிக்கப்படிக்க நான் உங்களுக்காக அதிகம் கண்ணீர் சிந்துகிறேன். வலிமை, வலிமை , நாம் வலிமை பெறுவதற்கான செயல்முறை வழி அவற்றுள் சொல்லப்பட்டிருக்கிறது. நமக்கு வேண்டுவது வலிமை வலிமைதான் .அதை யார் நமக்குத் தருவார்கள்? நம்மைப் பலவீனப்படுத்த ஆயிரக்கணக்கான விஷயங்கள் உள்ளன, கதைகள் வேண்டிய அளவு உள்ளன. உலகின் நூல்நிலையங்களுள் முக்கால் பங்கை நமது புராணக் கதைகளால் நிரப்பிவிடலாம். நம் இனத்தைப் பலீனப்படுத்துகின்ற அனைத்திற்கும் கடந்த ஆயிரம் வருடங்களாக நாம் இடம் கொடுத்துவிட்டோம் . எப்படி நமது தேசிய வாழ்க்கையை மேலும் மேலும் பலவீனப்படுத்துவது என்ற ஒரே நோக்கத்துடன் அந்தக் காலகட்டத்தில் நாம் செயல்பட்டிருப்பது போல் தோன்றுகிறது. அதன் விளைவாக, நம்மை மிதிக்கத் துணிந்த ஒவ்வொருவரின் கால்களின் கீழும் வெறும் புழுக்களாகவே ஆகிவிட்டோம்.
எனவே என் அருமை நண்பர்களே, உங்களுள் ஒருவனாகிய நான், உங்களுடனேயே வாழ்ந்து இறப்பவன் என்ற முறையில் உங்களுக்குச் சொல்கிறேன்; நாம் வேண்டுவது வலிமை, வலிமை ஒவ்வொன்றிலும் வலிமை வேண்டும். வலிமை தரும் பெரும் சுரங்கங்களாக உபநிடதங்கள் உள்ளன. .உலகம் முழுவதற்கும் வலிமை ஊட்டுவதற்கான சக்தி அவற்றில் இருக்கின்றன. அவற்றின்மூலம் உலகம் முழுவதற்கும் புத்துயிரும் புது சக்தியும், புது உணர்ச்சியும் அளிக்க முடியும். எல்லா நாடுகளிலும் , எல்லா மதங்களிலும் , எல்லா இனங்களிலும் உள்ள பலவீனர்களையும் துன்பத்தில் துடிப்பவர்களையும் தாழ்த்தப்பட்டடோரையும் அவை பேரிகை கொட்டி அழைத்து, சொந்தக் காலில் எழுந்து நின்று சுதந்திரம் பெறுமாறு பறைசாற்றுகின்றன.. சுதந்திரம், பௌதீக சுதந்திரம், மனசுதந்திரம்,ஆன்ம சுதந்திரம்- இவையே உபநிடதங்களின் மூல மந்திரங்களாகும்.
உலகத்திலேயே இந்த ஒரு சாஸ்திரம்தான் மீட்சியைப் பற்றிப் பேசாமல், சுதந்திரம் குறித்துப் பேசுகிறது. இயற்கையின் தளைகளிலிருந்து சுதந்திரம் பெறுங்கள் , பலவீனத்திலிருந்து விடுதலை அடையுங்கள்!இந்தச் சுதந்திரம் ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது என்பதையும் அது காண்பிக்கிறது . இது உபநிடத போதனைகளின் மற்றொரு சிறப்பாகும். நீ ஒரு துவைதியா? பரவாயில்லை. ஆன்மா இயல்பிலேயே பூரணத் தன்மையுடையது என்பதை ஒப்புக்கொள். குறிப்பிட்ட வினைப் பயன்களின் காரணமாக அந்த ஆன்மா சுருங்கியுள்ளது ராமானுஜரின் சுருங்குதல் மற்றும் விரிதல் கொள்கைகளைத்தான் அப்படியே தற்காலப் பரிணாமாவாதிகள் பரிணாம வாதம் மற்றும் ‘அட்டாவிசம்” என்று கூறுகிறார்கள். ஆன்மா பழைய நிலைக்குப்போய் சுருங்கியது போலாகிறது, அப்போது அதன் ஆற்றல்கள் அதனுள்ளேயே ஒடுங்கியிருக்கின்றன , நற்செயல்கள் மற்றும் நல்லெண்ணங்கள்மூலம் மீண்டும் விரிகிறது, தன் இயல்பான பூரணத்துவத்தை வெளிப்படுகிறது.
பரிணாமம் பிரகிருதிக்கு உண்டு என்பதைஅத்வைதி ஒப்புக்கொள்கிறானே தவிர, ஆன்மாவுக்கு இருப்பதாக் அவன் ஒப்புக்கொள்வதில்லை. இதுதான் ஒரு வித்தியாசம் .ஒரு திரையிருப்பதாக வைத்துக் கொள்வோம். அதில் துளை ஒன்று உள்ளது , நான் திரையின் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பெரிய கூட்டத்தைப் பார்க்கிறேன் . சில முகங்களை மட்டுமே நான் பார்க்க முடியும்,. துளைபெரிதாகப் பெரிதாகக் கூட்டத்தின் அதிகமான பகுதியைப் பார்க்கலாம். திரையே துளையாகிவிட்டால் கூட்டம் முழுவதையும் பார்ப்பேன். இதில் உங்களுக்கும் எனக்கும் இடையில் எதுவும் இல்லை நானும் மாறவில்லை, நீங்களும் மாறவில்லை, மாறுதல் அனைத்தும் திரையில்தான் ஆரம்பம் முதல் கடைசிவரை நீங்கள் நீங்களாகவே இருந்தீர்கள், மாறுதல் எல்லாம் திரையில்தான். பரிணாமத்தைப்பற்றி அத்வைதி சொல்வது இதுதான் -பிரகிருதியாகிய திரை நீங்குகிறது: உள்ளிருந்து ஆன்மா வெளிப்படுகிறது. ஆன்மா எக்காரணத்தாலும் சுருங்கவோ விரியவோ செய்யவில்லை, அது மாற்றம் அற்றது , எல்லையற்றது , ஒன்றேயானது. ஒரு திரையால் , மாயை என்னும் திரையால் அது மறைக்கப்பட்டது போலுள்ளது . இந்த மாயைத் திரையின் கனம் குறையக்குறைய ஆன்மாவின் இயல்பான மகிமை மேலும் மேலும் வெளிப்படுகிறது .இந்தச் சிறப்பானதொரு கோட்பாட்டை இந்தியாவிடமிருந்து அறிந்துகொள்ள உலகம் காத்திருக்கிறது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறட்டும், எப்படி வேண்டுமானாலும் பெருமையடித்துக் கொள்ளட்டும்; இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாமல் எந்தச் சமுதாயமும் நிலைத்து நிற்க முடியாது என்பதை அவர்கள் நாளடைவில் புரிந்து கொள்வார்கள்.
எல்லா விஷயங்களும் எப்படிப் புரட்சிகரமாக மாறிவருகின்றன என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? ஒன்று நல்லதென்று நிரூபிக்கப்படும் வரையில் அதைக் கெட்ட தென்றே கொள்வது- இது தானே வழக்கமாயிருந்தது! கல்வி முறையிலும் சரி, குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் சரி, பைத்தியக்காரர்களுக்குச் சிகிச்சை செய்வதிலும் சரி, சாதாரண நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் சரி, இது தானே பழைய நியதியாக இருந்தது! புதிய விதி என்ன! ஆரோக்கியமாயிருப்பது உடம்பின் இயல்பு, அது தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்கிறது. மிஞ்சிப்போனால் உடம்பிலிருக்கும் சக்தியைச்சேமிக்கத்தான் மருந்து உதவ முடியும், அவ்வளவு தான் என்கிறது புதியவிதி. குற்றவாளிகளைப் பற்றித் தற்காலச் சட்டம் என்ன சொல்கிறது? அவன் எவ்வளவு கேவலமானவன் ஆனாலும் அவனுள்ளும் தெய்வீகம் இருக்கிறது, அது மாறாதது, அதைக் கருத்தில் கொண்டே அவனை நடத்த வேண்டும் என்கிறது புதிய சட்டம். எல்லாமே மாறி வருகின்றன. சீர்திருத்தப் பள்ளிகளும் சீர்திருத்தச் சாலைகளும் கட்டப்படுகின்றன. எல்லா துறைகளிலும் இப்படித்தான்.
எல்லோரிலும் தெய்வீகம் உள்ளது என்ற இந்த இந்தியக் கருத்துபிற நாடுகளிலும் புகுந்து , அவர்கள் அறிந்தோ அறியாமலோ வேலை செய்தே வருகிறது . உங்கள் சாஸ்திரங்களில்தான் அதன் விளக்கம் உள்ளது. இதைப்பிற நாடுகள் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும் . ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நடந்துகொள்ளும் முறை முற்றிலுமாக மாறி அமைய வேண்டும். மக்களின் பலவீனத்தையே சுட்டிக் காட்டுகின்ற பழையகருத்துக்கள் ஒழி வேண்டும், இவையெல்லாம் இந்த நூற்றாண்டிற்குள்ளேயே மரண அடி வாங்கிவிடும் . இன்று பலர் எழுந்து நம்மைக் குறை கூறலாம். பாவம் என்கின்ற ஒன்றே இல்லை என்ற ஒரு காட்டுமிராண்டித் தனமான கருத்தை நான் பிரச்சாரம் செய்வதாக உலகின் ஓர் எல்லையிலிருந்து மற்றோர் எல்லைவரை என்னைத் தூற்றுகிறார்கள் அல்லவா ! மிகவும் நல்லது . நான் பாவத்தைப் போதித்தவன் அல்ல, தர்மத்தை உபதேசித்தவன் என்று இவர்களின் சந்ததியே என்னைப் போற்றப் போகிறது. நான் தர்மத்தைப் போதிப்பவனே தவிர , பாவங்களைப் போதிப்பவன் அல்ல, இருளையல்ல , ஒளியைப் போதிப்பவன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
உபநிடதங்களிலிருந்து பெறுவதற்காக உலகம் காத்திருக்கின்ற இரண்டாவது பெரிய கருத்து, பிரபஞ்சம் முழுவதிலும் ஓர் ஒருமை நிலவுகிறது என்னும் உண்மையாகும். நாடுகளைப் பிரித்திருந்த எல்லைகள் விரைவாக மறைந்து கொண்டிருக்கின்றன. மின்சாரமும் நீராவியும் உலக நாடுகளிடையே தொடர்பை உருவாக்கியுள்ளன. அதன் காரணமாக நம் நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் பேய்களும்பிசாசுளும்தான் வசித்துக் கொண்டிருக்கின்றன என்று இந்துக்களும் கூற முடியாது. அதுபோலவே கிறிஸ்தவநாட்டினரும் இந்தியாவில் காட்டுமிராண்டிகளும் காட்டு மனிதர்களுமே வாழ்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. நாம் வெளிநாடுகளுக்குச் சென்றால் , உதவிக்காக நீட்டிய வலுவான கரங்களுடனும் வாழ்த்துக்களைப் நீட்டிய வலுவான கரங்களுடனும், வாழ்த்துக்களைப் பொழிகின்ற உதடுகளுடனும் விரைகின்ற நமது சகோதரனைப் போலவே அங்கும் நாம் காண முடியும் , நம்நாட்டைப் போலவே, சில வேளைகளில் நம் நாட்டினரைவிட அவர்கள் நல்லவர்களாகவே உள்ளனர். அவர்கள் இங்கு வரும்போதும் அதே சகோதரத்துவம், அதே வரவேற்பு , அதே வாழ்த்துக்களையே காண்கிறார்கள்.
எல்லா துன்பங்களுக்கும் காரணம் அறியாமையே என்று நமது உபநிடதங்கள் கூறுகின்றன. சமுதாயம் ஆகட்டும், . ஆன்மீகம் ஆகட்டும் அல்லது மற்றெந்தத் துறை ஆகட்டும் இது முற்றிலும் உண்மை. அறியாமையின் காரணமாகத்தான் நாம் ஒருவரை ஒருவர் வெறுக்கிறோம். அறியாமையின் காரணமாகவே நாம் ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டதும் அன்பு பிறக்கிறது, பிறந்தேயாக வேண்டும். ஏனெனில் நாம் அனைவரும் உண்மையில் ஒன்றல்லவா? இப்படி ஒருமை உணர்வு தானாகவே உண்டாவதைக் காண்கிறோம். அரசியலிலும் சமுதாயத்திலும் கூட , இருபது வருடங்களுக்கு முன் தேசியப் பிரச்சினைகளாக மட்டுமே இருந்தவையானாலும் இன்று அவற்றிற்கு வெறும் தேசியக் கண்ணேட்டத்தில் தீர்வு காண முடியாது . இன்று அவை பெரிய அளவில் வளர்ந்துள்ளன, பெரிய பரிமாணங்களைப் பெற்றுவிட்டன, பரந்த நோக்குடன் சர்வதேச அளவில் அணுகினால் மட்டுமே அவற்றைத் தீர்க்க முடியும். சர்வதேசச் சங்கங்கள், சர்வதேச அமைப்புக்கள் , சர்வதேசச் சட்டங்கள் - இவையே இன்றைய அவசரத் தேவை. ஒருமை உணர்வையே இது காட்டுகிறது . விஞ்ஞானத்திலும் கூட , ஜடவுலகைப்பற்றி இத்தகையதொரு பரந்த முடிவுக்குத்தான் வந்து கொண்டிருக்கிறார்கள். ஜடப்பொருள் நிலையில் பிரபஞ்சம் முழுவதும் ஒரு மொத்தத் தொகுதியே; ஜடப்பொருளாகிய ஒரே கடல் ,அதில் நீங்கள் , நான், சூரியன் , சந்திரன் என்பதெல்லாமே பல்வேறு சிறிய சுழல்களின் பெயர்கள், அவ்வளவுதான் அதற்கு மேலில்லை. மனவுலக நிலையில் பார்த்தால் பிரபஞ்சம் தழுவியதோர் எண்ணக்கடலில் நீங்களும் நானும் அதுபோலவே சிறுசிறு சுழல்களாக இருக்கிறோம். ஆன்ம நிலையில் பார்த்தால் ஒன்றேயான , ,மாறுதலற்ற, இடையீடற்ற, ஒருமையேயான ஆன்மாவே அது.
நன்னெறியின் தேவை பற்றிய பிரச்சினையும் வருகிறது. அதுவும் நமது சாஸ்திரங்களில் உள்ளன. நற்பண்பின் ஊற்றான நல்லொழுக்கத்தின் விளக்கம் என்ன என்பதைப் பற்றியும் உலகம் அறிந்து கொள்ள விரும்புகிறது. அதுவும் இங்கு கிடைக்கும்.
இந்தியாவில் நமக்குத் தேவையானது எது? இவையெல்லாம் மேலை நாட்டினருக்குத் தேவையானால், நமக்கு அவை இருபதுமடங்கு அதிகம் தேவை. ஏனெனில் ஒப்பற்ற உபநிடதங்களைப் பெற்றிருந்தும், மகரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் என்று மார்தட்டிக் கொண்டாலும், மற்ற இனங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் பலவீனர்களாக, மிகமிகப் பலவீனர்களாக இருக்கிறோம். இதை நான் சொல்லியே தீர வேண்டும் .முதலில் நமது உடல் பலவீனம். நமது துன்பங்களுள் சுமார் மூன்றில் ஒரு பங்கிற்கு உடல் பலவீனமே காரணம். நாம் சோம்பேறிகள், நம்மால் உழைக்க முடிவதில்லை , நம்மால் சேர்ந்து வாழ முடிவதில்லை , நாம் ஒருவரை ஒருவர் நேசிப்பதில்லை, நம்மிடம் சுயநலம் நிறைந்திருக்கிறது. ஒருவருக்கொருவர் வெறுக்காமல், ஒருவருக்கொருவர் பொறாமைப்படாமல் நாம் மூன்று பேர் சேர்ந்தது வாழ முடிவதில்லை. ஒருங்கிணைக்க முடியாதபடி பிரிந்து கிடக்கின்ற கூட்டம். அளவற்ற சுயநலம்; சமயச் சின்னத்தை நெற்றியில் இப்படிப் போடுவதா, அப்படிப் போடுவதா என்பதைப்பற்றி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் சண்டை ;.ஒருவனின் திருஷ்டி பட்டால் உணவு கெட்டுவிடுமா, இல்லையா என்பது போன்ற அற்ப விஷயங்களைப்பற்றி புத்தகங்களுக்கு மேல் புத்தகங்களாக எழுதிக் குவிப்பது -இதுதான் நமது இன்றைய நிலைமை.
கடந்த சில நூற்றாண்டுகளாக இதைத்தான் நாம் செய்து வந்திருக்கிறோம். இத்தகைய அழகான, அற்புதமான பிரச்சினைகளிலும் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்ற ஓர் இனத்திடம் உயர்ந்த எதையும் எதிர்பார்க்க முடியாதுதான் . நம்மை எண்ணி நமக்கே அவமானம் வரவில்லையா? ஆம், சில வேளைகளில் வரத்தான் செய்கிறது.இவையெல்லாம் அற்பமானவை என்று நினைத்தாலும், நம்மால் அவற்றை விட முடிவதில்லை. நாம் என்னவெல்லாமோ நினைக்கிறோம். ஆனால் அவற்றைச் செய்வதில்லை -கிளிப்பிள்ளைகள் போல், நினைப்பதும் நினைப்பதைச் செய்யாதிருப்பதும் நமக்கு வழக்கமாகப் போய்விட்டது. இதற்குக் காரணம் என்ன? நமது உடல் பலவீனம். வலுவற்ற இத்தகைய மூளையால் எதையும் செய்ய முடியாது. அதைப் பலப்படுத்த வேண்டும்.
முதலில் நமது இளைஞர்கள் வலிமை பெற்றவர்களாக வேண்டும். மத உணர்ச்சி அதற்கு ப் பின்னரே வரும். என் வாலிப நண்பர்களே, வலிமை பெறுங்கள். இதுவே நான் உங்களுக்கு கூறும் அறிவுரை.நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்தாடுவதன் மூலம் சொர்க்கத்திற்கு மிக அருகில் செல்ல முடியும். இவை தைரியமான வார்த்தைகள் . இருப்பினும் இவற்றை நான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஏனெனில் நான் உங்களை நேசிக்கிறேன். பிரச்சினை எங்கு என்பது எனக்குத் தெரியும். எனக்குக் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. உங்கள் கை கால் தசைகளில் இன்னும் கொஞ்சம் வலிமை சேர்ந்தால் கீதையை இன்னும் நன்றாக ப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் ரத்தத்தில் வேகம் இருந்தால் ஸ்ரீகிருஷ்ணரின் மகத்தான ஆற்றலையும் மேதாவிலாசத்தையும் நீங்கள் இன்னும் சிறப்பாக அறிய முடியும். உங்கள் சொந்தக் கால்களில் நிமிர்ந்து நின்று, உங்களை மனிதன் என்று உணரும் போதுதான் நீங்கள் . உபநிடதங்களையும் ஆன்மாவின் மகத்துவத்தையும் நன்றாக அறிந்துகொள்ள முடியும். இப்படியே நமது தேவைகளுக்கு ஏற்றாற்போல் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நான் அத்வைதத்தை உபதேசிப்பதாகப் பலர் அதிருப்தி அடைகிறார்கள். அத்வைதத்தையோ துவைதத்தையோ உலகின் வேறு எந்தக் தத்துவத்தையுமோ நான் பிரச்சாரம் செய்ய விரும்பவில்லை. நமக்கு இப்போது வேண்டிய தத்துவமெல்லாம் ஆன்மா பற்றிய இந்த அற்புதக் கருத்துதான் -அதன் அழிவற்ற மகிமை. அதன் இணையற்ற ஆற்றல், அதன் எல்லையற்ற தூய்மை, அதன் குறைவற்ற பூரணத்துவம். எனக்கு ஒரு குழந்தை இருந்தால், பிறவியிலிருந்தே அதை, ‘ நீ அந்தத் தூய ஆன்மா என்று சொல்லியே வளர்ப்பேன். நமது புராணம் ஒன்றிலுள்ள ராணி மதாலசாவின் அற்புதமான கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள் . தனக்கு ஒரு குழந்தை பிறந்ததும் , அதைக் தொட்டிலில் இட்டுத் தாலாட்டி, ‘ நீ அந்தத் தூய ஆன்மா, நீ களங்க மற்ற, பாவமில்லாத , சர்வசக்தி வாய்ந்த , மகத்தான ஆன்மா நீ “என்று அவள் பாடினாளாம் . அதில் பெரிய கருத்து அடங்கியுள்ளது . உங்களை மேன்மையானவர்கள் என்று நினையுங்கள், அப்படியே ஆவீர்கள்.
உலகம் முழுவதிலுமிருந்தும் எனக்கு அனுபவமாக என்ன கிடைத்தது என்பது தான் கேள்வி . ஆங்கிலேயர்கள் பாவிகளைப்பற்றிப் பேசலாம். தாங்கள் பாவிகள் என்று அவர்கள் உண்மையாக நம்புவார்களானால் அவர்கள் மத்திய ஆப்பிரிக்க நீக்ரோக்களைவிட மேலானவர்களாக இருக்க முடியாது. ஆனால் அவர்கள் அவ்வாறு நம்பவில்லை , ஆண்டவன் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்! ஒவ்வோர் ஆங்கிலேயனும் தான் உலகையே ஆளப் பிறந்தவன் என்று நம்புகிறான்; தான் மேலானவன், தன்னால் எதையும் செய்ய முடியும் என்று நம்புகிறான். தான் விரும்பினால் சூரிய சந்திர மண்டலங்களுக்குக் கூடப் போக முடியும் என்று நம்புகிறான் அவன். இந்த நம்பிக்கைதான் அவனை மகத்தானவன் ஆக்குகிறது . அவன் இழிவான பாவி, மீளா நரகத்தில் பெருநெருப்பில் வாடப் போகிறான் என்று பாதிரிகள் கூறியதை அவன் நம்பியிருந்தால், இன்று இருக்கின்ற ஆங்கிலேயனாக அவன் இருந்திருக்க மாட்டான்.
இந்தப் புரோகிதர்களையும் மூட நம்பிக்கைகளையும் மீறி, மானுட வாழ்வில் தெய்வீகம் இருக்கவே செய்கிறது, அது தன்னை நிலைநாட்டத்தான் செய்கிறது - ஒவ்வொரு நாட்டிலும் நான் இதையே காண்கிறேன். நாம் நம்பிக்கையை இழந்துவிட்டோம். ஓர் ஆங்கிலேயனுக்கோ ஆங்கிலப் பெண்ணுக்கோ இருப்பதில் ஆயிரத்திலொரு பங்கு நம்பிக்கைகூட நம்மிடம் இல்லை என்று நான் சொல்வதை உங்களால் நம்ப முடியுமா? வருத்தம் தரக்கூடிய விஷயம்தான். ஆனால் சொல்வதை என்னால் தவிர்க்க முடியாது. ஆங்கிலேயனோ அல்லது ஆங்கிலப் பெண்ணோ நமது லட்சியங்களை ஏற்றுக்கொண்டால், அதில் மூழ்கி பைத்தியம் போலவே ஆகிவிடுகின்றனர். ஆளும் வர்க்கத்தினராக இருந்தும் , சொந்த நாட்டினரின் கோபத்தையும் கேலியையும் பொருட்படுத்தாமல் இந்தியாவிற்கு வந்து நம் மதத்தை நமக்கே போதிக்க அவர்கள் பாடுபடுவதை நீங்கள் பார்க்கவில்லையா? உங்களில் எத்தனை பேர் அவ்விதம் செய்ய முடியும் ? உங்களால் ஏன் அவ்வாறு செய்ய முடியாது? அது உங்களுக்குத் தெரியாததா? அவர்களைவிட உங்களுக்குத் அதிகம் தெரியும். ஆனால் உங்கள் நன்மைக்குத் தேவையானதைவிட அதிகம் தெரிந்துவிட்டது ! அதுதான் உங்கள் கஷ்டம் ! உங்கள் இயலாமைக்கு ஒரே காரணம் உங்கள் ரத்தம் வெறும் தண்ணீர், உங்கள் மூளை வலுவிழந்துவிட்டது, உடல் பலமற்றுள்ளது! நீங்கள் உடம்பை மாற்றிக்கொள்ள வேண்டும். உடலின் பலவீனம்தான் இதற்குக் காரணம் வேறொன்றும் அல்ல. சீர்த்திருத்தங்கள், லட்சியங்கள் போன்றவை பற்றியெல்லாம் கடந்த நூறு வருடங்களாக வெறும் பேச்சு ப்பேசி வந்திருக்கிறீர்கள் . ஆனால் செயல்முறைக்கான வேளை வரும்போது உங்களை எங்கும் காண முடியவில்லை. இதைக் கண்டு உலகமே உங்களை எள்ளி நகையாடுகிறது. சீர்திருத்தம் என்ற பெயரே கேலிக்கூத்தாகிவிட்டது ! இதற்கெல்லாம் காரணம் என்ன? காரணம் உங்களுக்குத் தெரியாததா என்ன? நன்றாகவே தெரியும். நீங்கள் பலவீனமாயிருப்பதே இவை அனைத்திற்கும் காரணம். பல வீனம் , பலவீனம் ,உங்கள் உடல் பலவீனமாக இருக்கிறது. உங்கள் மனம் பலவீனமாயிருக்கிறது. உங்களிடமே உங்களுக்கு நம்பிக்கையில்லை.
என் சகோதரர்களே! நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜாதிக் கொடுமையும்,மன்னர் கொடுங்கோன்மையும் அன்னியர் அரசாட்சியும் உங்கள் சொந்த மக்களே உங்களுக்கு இழைத்த கொடுமைகளும் சேர்ந்து உங்கள் பலத்தையெல்லாம் பிழிந்தெடுத்து விட்டன. உங்கள் முதுகெலும்பு உடைந்து, வெறும் புழுக்கள் போலாகிவிட்டீர்கள். யார் உங்களுக்கு வலிமை தருவார்கள்? வலிமை, வலிமை தான் நமக்கு இப்போது தேவை. வலிமை பெறுவதற்கான முதல் படி உபநிடதங்களை அடைந்து‘ நான் ஆன்மா” என்று நம்புவதுதான்.‘ என்னை வாள் வெட்டாது” , ஆயுதங்கள் துளைக்காது, நெருப்பு எரிக்காது, காற்று உலர்த்தாது , நான் எல்லாம் வல்லவன், நான் எல்லாம் அறிந்தவன்”- நம்மைக் காப்பாற்றக்கூடிய இந்த மங்கலமயமான வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். நம்மைப் பலவீனர்களென்று சொல்லாதீர்கள். நாம் எதையும் செய்ய முடியாது. நம்மால் எதைத்தான் சாதிக்க முடியாது! எல்லாமே நம்மால் முடியும். அந்த மகத்தான ஆன்மா நம் அனைவருக்குமே உள்ளது என்பதை நம்புவோம். நசிகேசன் கொண்டதைப் போன்ற நம்பிக்கை கொள்ளுங்கள். அவனது தந்தை செய்த யாகத்தின் போது அவனுக்கு நம்பிக்கை பிறந்தது. அத்தகைய நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவருக்கும் வர வேண்டுமென நான் விரும்புகிறேன் . அப்போது நீங்கள் ஒவ்வொருவரும் மகத்தான சக்தி பெற்று உலகத்தையே அசைக்கக்கூடிய பரந்த அறிவைப் பெறுவீர்கள்: எல்லா விதத்திலும் எல்லையற்ற கடவுளாகவே ஆவீர்கள். நீங்கள் அப்படி ஆக வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். இத்தகைய வலிமையே நீங்கள் உபநிடதங்களிலிருந்து பெறுவது, இத்தகைய நம்பிக்கையே உபநிடதங்கள் நமக்கு அளிப்பவை.
ஆனால் உபநிடதங்கள் துறவிகளுக்கு மட்டுமே அல்லவா உரியவை ! அவை ரகசியமானவை ஆயிற்றே! அவை துறவிகளின் கைகளில் அல்லவா உள்ளன! அவர்களும் காடுகளில் வசிக்கிறார்கள் !சங்கரர் ஏதோ சிறிது கருணை உடையவராக இருந்தார், இல்லறத்தார்களும் உபநிடதங்களைப் படிக்கலாம் ,அவை அவர்களுக்கு, நல்லதே செய்யும் ,தீங்கு செய்யாது என்றார் . ஆனாலும் அவை துறவின் வன வாழ்க்கையைப்பற்றி மட்டுமே சொல்கின்றன என்று தான் மக்கள் எண்ணினார்கள் . ஆனால் நான் முன்னர் உங்களுக்குக் கூறியதுபோல் தேவங்களுக்கு அதிகாரபூர்வமான ஒரே விளக்கத்தை, வேதத்தை ஊக்குவித்தவாரன ஸ்ரீகிருஷ்ண பகவானே எல்லா காலத்திற்குமாக , முடிந்த முடிவாகக் கீதையில் அருளியிருக்கிறார் . எந்தத் தொழில் செய்வவராயினும் எல்லோருக்கும் உபநிடதங்கள் பொதுவானவை. வேதாந்தத்தின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்தாக வேண்டும், காட்டில் மட்டும் இருந்தால் போதாது, குகைகளில் மட்டும் இருந்தால் அவை வெளிவந்து வழக்கறிஞர் சபைகளிலும், வழிபாட்டு மேடைகளிலும், ஏழையின் குடிசையிலும், மீன் பிடிக்கும் மீனவரிடமும், படிக்கின்ற மாணவரிடமும் செயல்பட்டாக வேண்டும். அவர்களின் தொழில் எதுவாகவும் இருக்கட்டும் , அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வசிக் கட்டும்; ஆண் பெண் குழந்தை என்று அவர்கள் அனைவரையும் அவை கூவி அழைக்கின்றன. பயம் எதற்கு?
மீனவர்களும் பிறரும் எப்படி இந்த உபநிடத லட்சியங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க முடியும்? அதற்கு வழி காட்டப்பட்டுள்ளது. அது எல்லையற்றது, மதம் எல்லையற்றது, அதைக் கடந்து யாரும் செல்ல
முடியாது. நீங்கள் சிரத்தையுடன் அதற்காக எதைச் செய்தாலும் அது உங்களுக்கு நன்மையே தரும். சிறு அளவில் ஆனாலும் சிரத்தையுடன் செய்தால், அது அற்புதமான பலன்களை அளிக்கும். ஆதலால் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு சிறிதேனும் முயற்சி செய்யட்டும். மீனவன் தன்னை ஆன்மாவென நினைத்தால் சிறந்த மீனவன் ஆவான். மாணவன் தன்னை ஆன்மாவென நினைத்தால் சிறந்த மாணவன் ஆவான் . வக்கீல் தன்னை ஆன்மாவென நினைத்தால் சிறந்த வக்கீலாவான். இவ்விதமே எல்லோரும். இதன் விளைவாக ஜாதிகள் என்பவை என்றென்றைக்கும் இருக்கும். சமுதாயத்தின் இயல்பே குழுக்களாகப் பிரிவதுதான். எனவே ஜாதிகள் இருக்கும். ஆனால் சில பிரிவினருக்கான தனிச் சலுகைகள் போய்விடும்!
ஜாதி என்பது இயல்பான ஒன்று. சமுதாய வாழ்வில் நான் ஒரு தொழில் செய்யலாம்: நீங்கள் வேறொன்று செய்யலாம். நீங்கள் அரசாளலாம், நான் செருப்பு தைக்கலாம். ஆனால் அதன் காரணமாக நீங்கள் உயர்ந்தவர் என்று சொல்ல முடியாது. ஏனெனில் உங்களால் செருப்புத் தைக்க முடியுமா?இல்லை என்னால்தான் நாட்டை ஆள முடியும்? நான் செருப்பு தைப்பதில் வல்லவனாய் இருக்கலாம், நீங்கள் வேதம் படிப்பதில் நிபுணனாக இருக்கலாம் , ஆனால் அதன் காரணமாக நீங்கள் என் மீது ஏறி மிதிக்க வேண்டும் ? ஒருவன் கொலை செய்தால் கூட அவனைப் புகழ வேண்டுமாம், மற்றொருவன் ஓர் ஆப்பிளைத் திருடினாலும் அவனை தூக்கிலிட வேண்டுமாம். இவை ஒழிய வேண்டும். ஜாதிகள் நல்லது. வாழ்க்கையை இயல்பாகக் கையாள்வதற்கான வழி அது ஒன்றுதான். மனிதர்கள் குழுக்களாகப் பிரிந்து தான் வாழ முடியும் அதை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் எங்கு சென்றாலும் ஜாதிகள் இருக்கவே செய்யும். ஆனால் அதன் காரணமாக யாருக்கும் தனிச் சலுகை இருக்க வேண்டும் என்பதில்லை. இந்தச் தனிச் சலுகைகளின் தலையிலடித்து அவற்றை ஒழிக்க வேண்டும். ஒரு மீனவனுக்கு வேதாந்தம் கற்பித்தோமானால் அவன் ,‘உன்னைப் போலவே நானும் நல்லவன், நான் மீன் பிடிப்பவன், நீ தத்துவவாதி. ஆனால் உன்னில் போலவே என்னிலும் கடவுள் இருக்கிறார்” என்று கூறுவான். யாருக்கும் தனிச் சலுகையில்லை, எல்லோருக்கும் சம வாய்ப்புக்கள்; இதுவே நமக்கு வேண்டும். தெய்வீகம் ஒவ்வொருவரின் உள்ளே இருக்கிறது என்பதை அவர்களுக்குக் கற்பியுங்கள். பின்னர் அவர்களே தங்கள் முக்திக்கு வழி தேடிக்கொள்வார்கள்.
சுதந்திரமே வளர்ச்சிக்கான முதல் நிபந்தனை . இந்தப் பெண் அல்லது அந்தக் குழந்தையின் முன்னேற்றத்திற்கு நான் வழி வகுப்பேன்” என்று யாராவது சொல்லத் துணிவானானால் அது தவறு . முற்றிலும் தவறு. விதவைகளின் பிரச்சினைபற்றியும், பெண்கள் நிலையைப் பற்றியும் எனது கருத்து என்ன என்று என்னை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள், அவற்றிற்கான பதிலை இப்போது ஒரேயடியாகக் கூறிவிடுகிறேன்- நான் என்ன விதவையா, பெண்ணா ?என்னிடம் இந்த அசட்டுக் கேள்விகளைத் திரும்பத் திரும்பத் கேட்கிறீர்களே! பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் யார் ? விதவைகளையும் பெண்களையும் ஆள்வதற்கு நீங்கள் என்ன எல்லாம்வல்ல கடவுளா? விலகி நில்லுங்கள் ! அவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வார்கள், கொடுங்கோலர்களே ,ஒருவருக்கு வேண்டிய அனைத்தையும் நீங்கள் செய்ய முடியுமென்று நினைக்கிறீர்களே! விலகி நில்லுங்கள்! இறைவன் எல்லோரையும் பார்த்துக்கொள்வார். எல்லாம் தெரியும் என்று நினைப்பதற்கு நீங்கள் யார் ?பொய்யர்களே , கடவுள் மீதும் அதிகாரம் செலுத்த முடியுமென்று நினைக்க எப்படித் துணிந்தீர்கள்? ..ஒவ்வொரு ஜீவனும் அந்தப் பரமாத்மாவின் அம்சம் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்கள் வேலையைப் பாருங்கள். உங்கள் கர்மங்களே கொட்டிக் கிடக்கின்றன, அதைத் தீர்ப்பதற்கான வழியைப் பாருங்கள் . உங்கள் நாடு உங்களை உயர்ந்த பீடத்தில் வைத்துப் பெருமைப்படுத்தலாம் , உங்கள் சமுதாயம் உங்களை வானளாவப் புகழலாம்; அறிவற்ற மூடர்கள் உங்களைப் பாராட்டலாம். ஆனால் ஆண்டவன் ஒரு போதும் உறங்குவதில்லை, இம்மையிலோ மறுமையிலோ வினைப்பயன் தொடர்ந்தே தீரும்.
ஆண், பெண் குழந்தை ஒவ்வொருவரையும் கடவுளாகப் பாருங்கள். நீங்கள் யாருக்கும் உதவி செய்ய முடியாது, சேவைதான் செய்ய முடியும். பகவானுடைய குழந்தைகளுக்குச் சேவை செய்யுங்கள். உங்களுக்கு அந்தப் பேறிருந்தால், அதன் மூலம் ஆண்டவனுக்கும் சேவை செய்தவர்கள் ஆவீர்கள். தன் குழந்தைகளுள் ஒருவருக்கேனும் உதவும் பேற்றை ஆண்டவன் உங்களுக்கு அளிப்பானானால் நீங்கள் அருள் பெற்றவர்கள்! உங்களைப்பற்றிப் பெரிதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்குக் கிடைக்காமல் இந்த வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தது பெரும் பேறு ! இந்தச் சேவையே இறைவனின் வழிபாடு எனச் செய்யுங்கள். ஏழைகளிடம் கடவுளைக் காணுங்கள் , உங்கள் முக்திக்காகவே அவர்களிடம் சென்று அவர்களை வழிபடுங்கள். ஏழைகளும் துன்பப்படுபவர்களும் நமது முக்திக்காகவே உள்ளனர். அதற்காகவே பகவானும் நோயாளியாக ,பைத்தியமாக, தொழுநோயாளியாக , பாவியாக நம் முன் வருகிறார். எனது வார்த்தைகள் தைரியமானவை. மீண்டும் சொல்கிறேன் - இந்த உருவங்களில் கடவுளை வழிபட நமக்கு வாய்ப்புக் கிடைத்தது பெறற்கரிய பேறாகும். பிறர்மீது அதிகாரம் செலுத்துவதன் மூலம் அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்ய முடியும் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். ஒரு செடிக்குச் செய்யக்கூடிய அளவுதான் நீங்கள் ஒருவருக்கு உபகாரம் செய்ய முடியும். விதை முளைத்து வளர்வதற்கான மண், தண்ணீர், காற்று முதலியவற்றை நீங்கள் கொடுக்கலாம். ஆனால் இவற்றை அது தன் இயல்பின் படிதான் ஏற்றுக்கொள்ளும், தன் இயல்பின் படியே ஜீரணித்து வளரவும் செய்யும்.
ஒளி! ஒளியைக் கொண்டு வாருங்கள். உலகின் மீது எல்லா ஒளியையும் பாய்ச்சுங்கள். ஒவ்வொருவரையும் இந்த ஒளி அடையட்டும்! ஒவ்வொருவரும் கடவுளை அடையும் வரை இந்தப் பணி முடிவடையாது . ஏழைகளுக்கு இந்த ஒளியை அளியுங்கள். அதைவிட அதிகமாக பணக்காரர்களுக்குக் கொடுங்கள் , ஏனெனில் அவர்களுக்கு இது ஏழைகளை விட அதிகமாகத் தேவை. கல்லாதவர்களுக்கு இந்த ஒளியை அளியுங்கள். அவர்களைவிட அதிகமாக , கற்றவர் களுக்குக் கொடுங்கள் , ஏனெனில் அவர்கள் தற்காலப் படிப்பினால் ஆணவம் தலைக்கேறிக் கிடக்கிறார்கள். இவ்விதம் எல்லோருக்கும் ஒளி கொடுங்கள் , மீதியை இறைவனிடம் விட்டு விடுங்கள். ஏனெனில் அதே இறைவன், ‘‘ வேலை செய்ய மட்டுமே உனக்கு உரிமை உள்ளது, பயன்களில் அல்ல ” என்றல்லவா கூறியுள்ளார் . உனது வேலை உனக்குப் பலனளிக்க வேண்டாம் . அதற்காக வேலை செய்யாமலும் இருக்காதே.
யுகயுகங்களுக்கு முன்னரே இத்தகைய மகத்தான கருத்துக்களை நம் முன்னோர்களுக்கு அளித்த அந்த இறைவன் , அவற்றை வாழ்க்கையில் செயல்படுத்துவற்கான ஆற்றலை நமக்கு அளிப்பானாக!
...
இந்தியாவின் எதிர்காலம்
-
பிப்ரவரி 14 மாலை, ஹார்ம்ஸ்டன் சர்க்கஸ் வளாகம்.
உலகில் வேறெந்த நாட்டையும் அறிவு என்பது தன் இருப்பிடமாகக் கொள்ளுமுன் குடிபுகுந்த தாயகம் நமது புராதன பாரதம். கடல்போல் பொங்கிப் புரண்டோடுகின்ற பேராறுகளும், அடுக்கடுக்காய் உயர்ந்தெழுந்த சிகரங்கள்மீது பனிமுடி தரித்து ,ஏதோ வானுலக ரகசியங்களைஎட்டிப்பார்க்க விழைவது போல் விண்முட்ட நிற்கின்ற நிலையான இமயமலைத் தொடர்களும் அதன் ஆன்மீக மாட்சிமையைப் புறத்தில் காட்டுவது போல் உள்ளது. இதுவரை வாழ்ந்தவர்களுள் மகத்தான ரிஷிகளின் திருப்பாதங்கள் இதோ இந்த பாரத மண்ணில்தான் நடைபோட்டன. மனிதனின் இயல்பு பற்றியும் அகவுலகம் பற்றியும் இங்கு தான் முதலில் ஆராய்ச்சிகள் தொடங்கின ஆன்மாவின் அமரத்துவம், அனைத்தையும் ஆட்சி புரிகின்ற கடவுள் ,இயற்கையிலும் மனிதனிலும் ஊடுருவி நிற்கின்ற இறைவன் போன்ற கோட்பாடுகள் இங்குதான் முதலில் எழுந்தன. இங்குதான் மதம் மற்றும் தத்துவத்திலுள்ள மிகவுயர்ந்த லட்சியங்கள் உச்ச நிலைகளை எட்டின ,. இந்த நாட்டிலிருந்துதான் ஆன்மீகமும் தத்துவமும் அலைபோல் மீண்டும் மீண்டும் பாய்ந்துசென்று உலகை ஆக்கிரமித்தது. நலிந்து கொண்டிருக்கின்ற மனித குலத்திற்கு உயிரையும் உத்வேகத்தையும் ஊட்டுவதற்கு இந்தப் பூமியில் இருந்துதான் மறுபடியும் அலைகள் புறப்பட்டுச் சென்றாக வேண்டும். நூற்றுக்கணக்கான அன்னியர் படையெடுப்புகளும் ,நூற்றுக்கணக்கான பழக்க வழக்கங்களின் காரணமாக எழுந்த புரட்சிகளும் பல நூற்றாண்டுகளாக ஏற்படுத்திய அதிர்ச்சிகளை ஏற்றும் நிலைகுலையாமல் நிற்பதும் அதே இந்தியா தான். என்றும் குன்றாக சக்தியுடன் , அழியாத வாழ்வுடன் உலகின் எந்தப் பாறையை விடவும் உறுதியாக இருப்பது அதே நாடுதான். ஆன்மாவைப்போல், நமது நாடும் தோற்றமும் முடிவும் இல்லாததாக நித்தியமானதாக உள்ளது. இத்தகைய நாட்டின் அருமைக் குழந்தைகள் நாம்.
இந்தியாவின் குழந்தைகளே சில செயல்முறை விஷயங்களைப்பற்றிப் பேசுவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். கடந்த காலப் பெருமைகளை உங்களுக்கு நான் நினைவுபடுத்துவதன் காரணம் இதுதான் . கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பது சீரழிவிற்கே வழிவகுக்கும், அது வெறும் வீண் வேலை ,எனவே நாம் எதிர்காலத்தைப்பற்றி எண்ண வேண்டும் என்று பலர் கூறக் கேட்டதுண்டு. உண்மைதான் . ஆனால் கடந்த காலத்திலிருந்து தான் எதிர்காலம் உருவாகிறது. எனவே உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு திரும்பிப் பாருங்கள். பின்னால் உள்ள வற்றாத அந்த ஊற்றுக்களிலிருந்து நன்றாக பருகுங்கள். அதன்பின்னர் முன்னே பாருங்கள் . .பீடுநடை போட்டுச் செல்லுங்கள். பாரதத்தை முன்பிருந்ததைவிட ஒளிமயமானதாக , சிறப்பானதாக, உன்னதமானதாக உருவாக்குங்கள். நம் முன்னோர்கள் மகத்தானவர்களாக இருந்தார்கள். முதலில் அதை நினைத்துப் பார்க்க வேண்டும் , நாம் எதனால் ஆக்கப்பட்டிருக்கிறோம், நமது ரத்தக் குழாய்களில் ஓடுகின்ற ரத்தம் எது என்பதை அறிய வேண்டும் ,அந்த ரத்தத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். பழங்காலத்தில் நமது முன்னோர் மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதிலும் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையிலிருந்தும் , பழம் பெருமையைப் பற்றிய உணர்விலிருந்தும் முன்னை விடச் சிறப்பான தொரு இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்.
வீழ்ச்சியும் அழிவும் உள்ளகாலகட்டங்களும் வரலாற்றில் இருக்கவே செய்தன, நான் அவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை ; அவை நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமும்தான் . அத்தகைய காலகட்டங்களும் தேவையாகவே இருந்தன. ஒரு பெரிய மரத்தில் அழகிய பழம் ஒன்று பழுக்கிறது . அந்தப்பழம் பூமியில் வீழ்ந்து கெட்டு அழுகுகிறது. அந்த அழுகலிலிருந்துதான் எதிர்கால மரத்திற்கான முளை வருகிறது. ஒருவேளை இந்த மரம் முதல் மரத்தைவிடப் பெரிதாகக் கூட இருக்கலாம். எனவே நாம் கடந்து வந்த வீழ்ச்சியும் அழிவும் நிறைந்த கால கட்டமும் மிகவும் தேவையே . இந்த வீழ்ச்சியிலிருந்து தான் எதிர்கால இந்தியா பிறக்கும். அது முளைவிட்டு கொண்டிருக்கிறது, அதன் முதல் தளிர்கள் ஏற்கனவே வெளிவந்துவிட்டன, ஒரு மாபெரும் மரமான ‘‘ஊர்த்வ மூலம் ” வளரத் தொடங்கி விட்டது. அதைப்பற்றித் தான் நான் இன்று உங்களிடம் பேச உள்ளேன்.
இந்தியாவில் பிரச்சினைகள் மற்ற எந்த நாட்டுப் பிரச்சினைகளைவிட மிகவும் சிக்கலானது ம் முக்கியமானதும் ஆகும். இனம், மதம், மொழி, அரசாங்கம் இவை எல்லாம் சேர்ந்து ஒரு நாட்டை உருவாக்குகின்றன. உலகத்தின் ஒவ்வோர் இனத்தையும் இந்த நாட்டுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் .அந்த நாடுகளை உருவாக்கிய அடிப்படைகள் இந்த நாட்டை உருவாக்கியவற்றைவிட மிகவும் குறைவாகவே இருக்கும் ஆரியர், திராவிடர், தார்த்தர் துருக்கியர், மொகலாயர், ஐரோப்பியர் என்று உலகத்தில் உள்ள எல்லா இனங்களின் ரத்தமும் இங்கே இந்தப் பூமியில் கலந்திருப்பதுபோல் தோன்றுகிறது . மொழிகளில் கூட இங்கே அற்புதமான கலப்பு உள்ளது. பழக்க வழக்கங்களைப் பொறுத்த வரை , இரு இந்திய இனங்களுக்கிடையே உள்ள வேறுபாடு ஐரோப்பியர்களுக்கும் கீழை இனங்களுக்கும் உள்ள வேறுபாடுகளைவிட அதிகமாக உள்ளன.
நமது பொதுவான அடிப்படை, நமது புனிதமான பாரம்பரியம் நமது மதம் தான். அது ஒன்றுதான் நமக்குப் பொதுவாக உள்ள அடித்தளம். அதன்மீதுதான் கட்டிடத்தை எழுப்ப வேண்டும். ஐரோப்பாவில் அரசியல் கொள்கைகள் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கின்றன. ஆசியாவில் மத லட்சியங்கள் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குகின்றன. எனவே எதிர் கால இந்தியாவிற்கு நிறைவேற்றப்பட வேண்டிய முதல் நிபந்தனை மத ஒற்றுமை. இந்த நாடு முழுவதும் ஒரேயொரு மதம் அங்கீகரிக்கப்பட்ட வேண்டும். ஒரு மதம் என்பதன் மூலம் நான் எதைக் குறிப்பிடுகிறேன்? கிறிஸ்தவர்களோ முகமதியர்களோ பௌத்தர்களோ கருதுகின்ற பொருளிலுள்ள ஒரு மதத்தை அல்ல. நம்மிடையே உள்ள மதப் பிரிவுகள் பல்வேறு விதமான முடிவுகளைக் கொண்டிருக்கின்றன, வேறுபட்ட உரிமைகளைக் கொண்டிருக்கின்றன. எனினும் அவை எல்லாவற்றிற்கும் பொதுவாகச் சில விஷயங்கள் உள்ளன. இந்தப் பொது விஷயங்களாகிய எல்லைக்குள் நமது மதம் அற்புதமான வேறுபாடுகளை அனுமதிக்கிறது ; நம் சொந்த வாழ்கையைச் சிந்திக்கவும் நடத்தவும் அளவற்ற சுதந்திரத்தை அளிக்கிறது. நமது மதத்தின், உயிரோட்டத்தை அளிப்பதான இந்தப் பொதுக் கருத்துக்களை வெளியே கொண்டுவர வேண்டும், ஆண் பெண், குழந்தை என்று இந்த நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொருவரும் அவற்றை அறிய வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும், புரிந்துகொண்டதைத் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் . இதுவே நாம் வேண்டுவது, இங்குள்ள நம் அனைவருக்கும், குறைந்த பட்சம் நம்முள் சிந்திக்கும் திறன் உள்ளவர்களுக்காவது இது தெரியும். இதுதான் முதற்படி, எனவே அதனை முதலில் செய்துமுடிக்க வேண்டும்.
ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் இனப் பிரச்சினைகள், மொழிப் பிரச்சினைகள் , சமுதாயப் பிரச்சினைகள் ,தேசியப் பிரச்சினைகள் எல்லாமே எவ்வாறு மதத்தின் ஒருங்கிணைக்கின்ற சக்தியின் முன்னால் மறைந்து விடுகின்றன என்பதை நாம் காண்கிறோம். இந்திய மனத்தைப் பொறுத்தவரை மத லட்சியங்களை விட உயர்ந்தது எதுவும் இல்லை, அதுவே இந்திய வாழ்வின் அடிப்படை அம்சம், அதன் மூலம்தான் மிகவும் குறைவான எதிர்ப்புக்களோடு நாம் வேலை செய்ய முடியும் . மத லட்சியமே மிகவுயர்ந்த லட்சியம் என்பது உண்மை மட்டுமல்ல , இந்தியாவைப் பொறுத்தவரையில் செயல் புரிவதற்கான ஒரே வழி இதுதான். இதை பலப்படுத்திக் கொள்ளாமல் மற்ற எந்த வழியிலாவது வேலை செய்து பாருங்கள், முடிவு விபரீதமாகவே இருக்கும்.
எனவே எதிர்கால இந்தியாவை உருவாக்குவதற்குகான முதல் முயற்சி, யுகயுகங்களாக உறுதியாக இருக்கின்ற அந்தப் பாறையைக் குடைந்து பெற வேண்டிய முதல் படி, மத ஒற்றுமை ஆகும். இந்துக்களாகிய நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று உண்டு. துவைதிகள் ,விசிஷ்டாத்வைதிகள் , அத்வைதிகள் ஆகட்டும், இல்லை மற்ற பிரிவுகளான சைவர்கள், வைணவர்கள், பாசு பதர்கள் என்று நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்துக்களாகிய நம் அனைவருக்கும் அடிப்படையான சில கருத்துக்கள் உள்ளன. நமது நன்மைக்காகவும் நம் இனத்தின் நன்மைக்காகவும் நம்மிடைய உள்ள சின்னஞ்சிறு சச்சரவுகளையும் வேற்றுமைகளையும் விடுவதற்கான வேளை வந்து விட்டது. இந்தச் சண்டைகள் எல்லாம் முற்றிலும் தவறானவை என்பதில் உறுதி கொள்ளுங்கள். அவை நம் சாஸ்திரங்களால் கண்டிக்கப்பட்டிருக்கின்றன, நம் முன்னோர்களால் தடுக்கப்பட்டிருக்கின்றன. எந்த மாமனிதர்களை நாம் நமது முன்னோர்கள் என்று உரிமை கொண்டாடுகிறோமோ, யாருடைய ரத்தம் நம் ரத்தக் குழாய்களில் ஓடுகிறதோ , அவர்கள், தங்கள் குழந்தைகளான நாம் சிறுசிறு வேற்றுமைகளுக்காக அடித்துக்கொள்வதைக் கண்டு நம்மை வெறுப்புடன் பார்க்கின்றனர்.
இந்தச் சண்டைகளை விட்டுவிட்டால் போதும், மற்ற எல்லா முன்னேற்றங்களும் வரும். ரத்தம் புஷ்டியாகவும் தூய்மையாகவும் இருக்குமானால் நோய்க் கிருமிகள் எதுவும் அந்த உடம்பில் வாழ முடியாது. நமது ஜீவ ரத்தம் ஆன்மீகம். அது தெளிவாக ஓடு மானால், புஷ்டியாக தூய்மையாக உத்வேகத்துடன் ஓடுமானால் எல்லாம் சரியாக இருக்கும். அந்த ரத்தம் தூய்மையாக இருக்குமானால் அரசியல், சமுதாயம், மற்ற பொருளாதாரக் குறைபாடுகள் எல்லாம் சீர் செய்யப்பட்டுவிடும், ஏன் ,நாட்டின் வறுமைகூடத் தீர்க்கப்பட்டுவிடும் . ஏனென்றால் நோய்க்கிருமி வெளியே எறியப்பட்டுவிடுமானால் , வேறெதுவும் ரத்தத்தில் கலக்க முடியாது.
தற்கால மருத்துவத்திலிருந்து ஓர் உவமையை எடுத்துக் கொள்வோம். நோய் உண்டாக இரண்டு காரணங்கள் இருந்தாக வேண்டும் : ஒன்று வெளியிலுள்ள நச்சுக் கிருமி , மற்றொன்று உடம்பின் நிலைமை. உடம்பு அந்தக் கிருமிகளை உள்ளே அனுமதிக்கும் நிலையில் இருக்காதவரை, உடம்பின் எதிர்க்கும் சக்தி குறைவாகி, அதனால் அந்தக் கிருமிகள் உடம்பினுள் நுழைந்து செழித்துப் பெருகுகின்ற ஒரு நிலை உருவாகாதவரை, எந்தக் கிருமிக்கும் உடம்பினுள் ஒரு நோயை உண்டாக்குகின்ற சக்தி இல்லை. உண்மையில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான கிருமிகள் உடம்பைப் பற்றிக் கொண்டு நோயை உண்டாக்குகின்றன , ஆனால் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்வரை அவற்றைப் பற்றிய உணர்வே ஏற்படுவதில்லை. உடம்பு பலவீனமாகும் போது மட்டுமே இந்தக் கிருமிகள் உடம்பைக் பற்றிக் கொண்டு நோயை உண்டாக்குகின்றன.தேசிய வாழ்வின் விஷயமும் இது போன்றது தான். தேசிய உடல் பலவீனமாக இருக்கும் போது தான் அரசியல் , சமுதாயம், கல்வி, அறிவு போன்ற எல்லா நிலைகளிலும் எல்லா வகையான நோய்க் கிருமிகளும் ஆக்கிரமித்து நோய்களை உண்டாக்குகின்றன. இதைக் குணமாக்க வேண்டுமானால் நோயின் வேருக்கே செல்ல வேண்டும், ரத்தத்திலுள்ள எல்லா அசுத்தங்களையும் நீக்க வேண்டும். நாம் செய்ய வேண்டுவதெல்லாம் மனிதனைப் பலப்படுத்தும், ரத்தத்தைத் தூய்மையாக்குவதும், வெளியேயிருந்து வருகின்ற விஷங்களை எதிர்த்து அவற்றை வெளியில் தள்ளவல்லதாக உடம்பை வலிமைபெறச் செய்வதும்தான்.
நமது பலமும் நமது உத்வேகமும் மட்டுமின்றி , நம் தேசிய வாழ்வும் மதத்தில்தான் இருக்கிறது என்பதைப் பார்த்தோம். இப்படி நாட்டின் ஆதாரமே மதத்தில் இருப்பது சரியா தவறா? காலப்போக்கில் அதனால் நன்மை விளையுமா விளையாதா என்பதைப் பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை . ஆனால் நல்ல தற்கோ கெட்டதற்கோ அது அங்கே இருக்கிறது. நீங்கள் அதிலிருந்து விலகி ஓட முடியாது .இன்றைக்கும் என்றென்றைக்குமாக நீங்கள் அதைப் பெற்றிருக்கிறீர்கள். எனக்கு நமது மதத்தில் உள்ளது போன்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லை என்றாலும் நீங்கள் அதனுடன்தான் வாழ்ந்தாக வேண்டும் .அதனுடன் நீங்கள் கட்டப்பட்டு இருக்கிறீர்கள், அதை விட்டுவிலகினால் தூள்தூளாகி விடுவீர்கள் . அதுதான் நம் இனத்தின் ஜீவாதாரம் ,அதை நாம் பலப்படுத்த வேண்டும். அந்த மதம் என்பதை மிகுந்த அக்கறையுடன் பேணிக்காத்ததால் தான் , வேறு எல்லாவற்றையுமே அதற்காகத் தியாகம் செய்ததால்தான் பல நூற்றாண்டுகளாக வந்தஅதிர்ச்சிகளை எல்லாம் உங்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது.
உங்கள் முன்னோர் அதைக் காப்பதற்கு எல்லா துன்பங்களையும், ஏன், சாவையும் கூடத் தைரியமாகச் சந்தித்தார்கள். அன்னியர் படைகள் நமது கோயில்கள் ஒவ்வொன்றையும் தரைமட்டமாக்கின. ஆனால் அந்த அலை ஓய்ந்ததுமே கோயில்களும் கோபுரங்களும் மீண்டும் எழுந்தன. தென்னிந்தியாவின் இத்தகைய சில புராதனமான கோயில்களும், குஜராத்தின் சோமநாதர் கோயில் போன்றவையும் எத்தனையெத்தனையோ விஷயங்களை உங்களுக்கு உணர்த்த முடியும் ; உங்கள் இனத்தின் சரித்திரத்தைப்பற்றி அடுக்கடுக்கான நூல்கள்கூறுவதை விட ஆழ்ந்த விஷயங்களைத் தர முடியும். நூற்றுக்கணக்கான தாக்குதல்களின் அடையாளங்கள் இந்தக் கோயில்களில் உள்ளன, நூற்றுக்கணக்கான முறையும் அவை புதுப்பிக்கப்பட்டன. தொடர்ந்து அவை அழிக்கப்பட்டன.
அந்த அழிவிலிருந்து மீண்டும் முன்னைவிடப் புதுமையோடும் வலிமையோடும் எழுந்து நின்றுள்ளன அந்தக் கோயில்கள்! இதுதான் நம் தேசிய சிந்தனை . தேசிய வாழ்க்கை நீரோட்டம், அதைப் பின்பற்றிச் செல்லுங்கள், அது உங்களைப் பெருமைக்கு அழைத்துச் செல்லும். அதை விடுங்கள், நீங்கள் அழிந்து விடுவீர்கள், சாவுதான் அதன் ஒரே விளைவு. வாழ்க்கை நீரோட்டத்தை விட்டு நீங்கள் விலகுகின்ற அந்தக் கணமே அழிவு உங்களைப் பற்றிக் கொள்ளும். மற்ற எதுவும் தேவையில்லை என்று நான் சொல்ல வில்லை : அதாவது அரசியலோ சமூக முன்னேற்றங்களோ தேவையற்றவை என்பதல்ல நான் சொன்னதன் பொருள். நான் சொல்வதெல்லாம், மதம் முதன்மையானது, மற்றவையெல்லாம், அதற்கு அடுத்தபடி என்பதுதான். இந்திய மனம் மற்ற எதைவிடவும் மதத்தைச் சார்ந்தது. எனவே அதை வலுப்படுத்தியாக வேண்டும் அதை எப்படிச் செய்வது?.
என் கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன். இந்தக் கருத்துக்கள் நெடுங்காலமாக, நான் சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்படும் முன்னரே என் மனத்தில் இருந்தன. நான் இங்கிலாந்திற்கும் அமெரிக்காவுக்கும் சென்ற தெல்லாம் இந்தக் கருத்துக்களைப் பரப்புவதற்காகவே . , சர்வமத மகா சபையைப்பற்றியோ வேறு எதைப் பற்றியோ எனக்கு அக்கறையி ல்லை, அது ஒரு வாய்ப்பாக இருந்தது, அவ்வளவுதான். ஆனால் உண்மையில் எனது இந்தக் கருத்துக்களே என்னை உலகம் முழுவதும் வலம்வரச் செய்தன.
என் எண்ணம் இது : நமது நூல்களில் புதைந்து கிடக்கின்ற, மடங்களிலும் காடுகளிலும் மறைந்தே விட்டதுபோல் ஏதோ சிலரின் சொத்தாக இருக்கின்ற ஆன்மீகப் பொக்கிஷங்களை முதலில் வெளியே கொண்டுவர வேண்டும். அந்த ஏதோ சிலரின் கைகளிலிருந்து மட்டுமல்ல, அவை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, அணுகமுடியாத கவசம் போலுள்ள அந்த மொழியிலிருந்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வளமை பெற்று வந்துள்ள சம்ஸ்கிருத வார்த்தைகளிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும். ஒரேவார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இந்தக் கருத்துக்களைப் பிரபலமாக்க வேண்டும். இந்தக் கருத்துக்களை வெளியே கொண்டுவர நான் விரும்புகிறேன். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ, இந்தக் கருத்துக்கள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுச் சொத்தாக வேண்டும். பெருமை மிக்க நமது சம்ஸ்கிருத மொழி இருக்கிறதே, அதுதான் வழித்தடையாக இருக்கிறது. இயலுமானால் நம் நாட்டிலுள்ள அனைவரும் சம்ஸ்கிருத வல்லுனராக வேண்டும் , அதுவரை இந்தக் தடையை நீக்க முடியாது.
சம்ஸ்கிருத மொழியை என் ஆயுள் முழுவதும் படித்து வருகிறேன். என்றாலும் ஒவ்வொரு புதிய நூலும் புரிந்துகொள்ள முடியாததாகவே எனக்கு உள்ளது. அவ்வளவு கடினமான மொழி அது. இப்படி இருக்கும்போது அந்த மொழியை முழுக்கப் படிப்பதற்கு நேரமில்லாத மக்களுக்கு இன்னும் எவ்வளவு கடினமாக இருக்கும் ? எனவே இந்தக் கருத்துக்களை மக்களின் மொழியில் போதிக்க வேண்டும். சம்ஸ்கிருதப் படிப்பும் அதோடு வளர வேணடும். ஏனென்றால் சம்ஸ்கிருத வார்த்தைகளின் ஒலியே நம் இனத்திற்கு ஒரு மதிப்பையும் ஆற்றலையும் வலிமையையும் தருகிறது.
மகத்தான ராமானுஜரும் சைதன்யரும் கபீரும் இந்தியாவின் தாழ்ந்த வகுப்பினரை முன்னேற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் மாபெரும் வெற்றியைக் கண்டன. ஆனால் அது அவர்கள் காலத்தில் மட்டுமே. அந்த மாபெரும் ஆச்சாரியர்கள் போதித்த உபதேசங்களின் வேகம், அவர்கள் மறைந்த ஒரு நூற்றாண்டிற்குள்ளாகவே மறைந்து விட்டன, அவை தோல்வியைத் தழுவின. ஏன்? அதன் காரணம் என்ன? அதை நாம் இங்கே விளக்கத்தான் வேண்டும். காரணம் இதுதான்: அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தினார்கள், அவர்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பினார்கள்: ஆனால் பாமர மக்களிடையே சம்ஸ்கிருதக் கல்வியைப் பரப்புவதற்கான முயற்சிகளைச் செய்யவில்லை மகத்தான புத்தர் கூட, சாதாரண மக்கள் சம்ஸ்கிருத மொழியைப் படிக்க வேண்டாம் என்று தடுத்தபோது ஒரு தவறான அடியையே எடுத்து வைத்தார். அவர் விரைவான உடனடியான விளைவுகளை விரும்பினார். அதனால் அன்றைய பேச்சுமொழியான பாலியில் மொழி பெயர்த்தே பிரச்சாரம் செய்தார். அது பெரிய விஷயம்: அவர் மக்களின் மொழியில் பேசினார், மக்கள் புரிந்து கொண்டார்கள். அது சிறப்பானது, அது கருத்துக்களை விரைவாகப் பரப்பியது. நெடுந்தொலைவில் உள்ளவர்களையும் அவரது கருத்துக்கள் சென்றடைந்தன. ஆனால் அதனுடன் சம்ஸ்கிருதமும் பரப்பப்பட்டிருக்க வேண்டும். அங்கே அறிவு வந்தது, ஆனால் பெருமைவரவில்லை, பண்பாடு வரவில்லை. பண்பாடுதான் அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொள்ள முடியும், எவ்வளவு தான் ஆனாலும் அறிவினால் அது முடியாது.
உலகிற்கு நீங்கள் அறிவுரையைப் பொழியலாம் . அதனால் பெரிய நன்மை எதுவும் விளைந்துவிடப் போவதில்லை. ரத்தத்தில் பண்பாடு வர வேண்டும் .தற்காலத்தில் கல்வியில் உன்னத வளர்ச்சி கண்ட பல நாடுகளை நாம் அறிவோம். அதனால் என்ன! அவர்கள் புலிகளைப்போல் உள்ளார்கள், காட்டுமிராண்டிகளைப் போல் இருக்கிறார்கள், ஏனெனில் அங்கே பண்பாடு இல்லை. நமது நாகரீகத்தைப் போலவே அறிவும் அங்கே தோலை மட்டும் தொட்டுள்ளது, சிறு சிராய்ப்பு போதும், பழைய காட்டுமிராண்டித்தனம் வந்துவிடும். இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இது தான் ஆபத்து. சாதாரண மக்களுக்கு அவர்களுடைய தாய்மொழியில் போதியுங்கள். கருத்துக்களைக் கொடுங்கள், அதனால் அவர்கள் விஷயங்களை அறிந்து கொள்வார்கள், ஆனால் அதை விட மேலான ஒன்று அவர்களுக்குத் தேவை , பண்பாட்டை அளியுங்கள். அவர்களுக்கு அதைக்கொடுக்காத வரையில் அந்த உயர்த்தப்பட்ட நிலையில் அவர்களால் நிலையாக இருக்க முடியாது. அப்போது சம்ஸ்கிருத மொழியால் மேன்மை பெற்ற ஒரு தனி ஜாதி உருவாகவே செய்யும், அவர்கள் மற்றவர்களைவிட உயர்ந்து மற்றவர்களை அடக்கியாளவே செய்தார்கள்.
உங்களுள் தாழ்ந்த ஜாதியினரிடம் சொல்கிறேன்: உங்களுக்கு ஒரே வழி, உங்கள் நிலை உயர ஒரே உபாயம் சம்ஸ்கிருதம் படிப்பதே. உயர்ந்த ஜாதியினருடன் சண்டையிடுவதும் எழுதுவதும் நிந்திப்பதும் வீண். அது எந்த நன்மையையும் தராது. துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே பிளவுபட்டிருக்கும் நமது இனம் மேலும் பிளவுபடவே இந்தச் சண்டைகள் வழிவகுக்கும். ஜாதிகளுக்கிடையே சமத்துவம் நிலவுவதற்கான ஒரே வழி, மேல் ஜாதியினரின் வலிமைக்குக் காரணமான கல்வியறிவையும் பண்பாட்டையும் எல்லோருக்கும் பொதுவாக்குவதே. அதைச் செய்துவிட்டால் நீங்கள் விரும்பியதைப் பெறுவீர்கள்.
இது தொடர்பாக, சென்னை சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய விஷயத்தை நான் பேச விரும்புகிறேன்.தென்னிந்தியாவில் திராவிடர் என்ற இனத்தினர் இருந்ததாகவும், அவர்கள் வட இந்தியாவில் வாழ்ந்த ஆரியர் என்ற இனத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டடவர்கள் என்றும் தென்னிந்திய பிராமணர்கள் மட்டுமே வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்கள் என்றும், பிற தென்னிந்தியர்கள் எல்லாம் இந்தப் பிராமணர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஜாதியையும் இனத்தையும் சார்ந்தவர்கள் என்றும் ஒரு கொள்கை நிலவுகிறது. திருவாளர் மொழியியல் அறிஞரே, உங்கள் கருத்தை மறுப்பதற்கு என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் கருத்து முற்றிலும் ஆதாரமற்றது. ஆதாரத்திற்காக ஒரே ஒரு நிரூபணம் காட்ட முடியும் என்றால் அது வட நாட்டிற்கும் தென்னாட்டிற்கும் இடையே மொழியில் அமைந்துள்ள வேற்றுமை மட்டுமே, வேறு எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை.
இங்கே நாங்கள் வட இந்தியர்களும் பலர் இருக்கிறோம். எங்களுள் யார் வட இந்தியர், யார் தென்னிந்தியர் என்று பிரிக்குமாறு இங்கே இருக்கும் என் ஐரோப்பிய நண்பர்களிடம் நான் சொல்கிறேன். அவர்களால் முடியாது. வேற்றுமை எங்கே? மொழியில்தான் ஏதோ சிறு வேறுபாடு இருக்கிறது. ஆனால் இங்குள்ள பிராமணர்கள் சம்ஸ்கிருதம் பேசிய இனத்திலிருந்து வந்தவர்கள் ஆயிற்றே! அவர்களுக்கு எப்படி சம்ஸ்கிருதம் தெரியாமல் போயிற்று ! அவர்கள் இங்கு வந்ததும் திராவிட மொழியைப் பேசத் துவங்கி சம்ஸ்கிருதத்தை மறந்து விட்டார்களாம். மற்ற ஜாதியினர் விஷயத்திலும் ஏன் அப்படி நடந்திருக்கக் கூடாது? வட இந்தியாவிலிருந்து ஒருவர்பின் ஒருவராக வந்த மற்ற எல்லா ஜாதியினரும் திராவிட மொழியைப் பேசத் தொடங்கியதால் ஏன் சம்ஸ்கிருதத்தை மறந்திருக்கக் கூடாது? எனவே இந்த வாதத்தை இரண்டு பக்கமிருந்தும் பேசலாம். பொருளற்ற இத்தகைய பேச்சுக்களை நம்பாதீர்கள். திராவிடர்கள் இங்கே இருந்திருக்கலாம்: ஆனால் அவர்கள் காலப்போக்கில் மறைந்திருக்க வேண்டும். எஞ்சியிருந்த ஏதோ சிலர் காடுகளிலும் மற்ற இடங்களிலும் வாழ்ந்திருக்க வேண்டும், அவர்களின் மொழியை இங்குள்ளவர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் இங்குள்ள அனைவரும் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களே. இந்தியா முழுவதிலும் இப்போது இருப்பவர்கள் ஆரியர்களே, வேறுயாருமில்லை.
மற்றொரு கருத்தும் இங்கே நிலவுகிறது - சூத்திரர்கள் எல்லாம் ஆதிவாசிகளாம் ! அவர்கள் யார்? அடிமைகள்! வரலாறு திரும்புகிறது என்கின்றனர். எப்படி? அமெரிக்கர் , ஆங்கிலேயர், டச்சுக்காரர், போர்ச்சுகீசியர் ஆகிய அனைவரும், அப்பாவி ஆப்பிரிக்கர்களைப் பிடித்துக் கொண்டுவந்து கடினமாக வேலை வாங்கினார்கள். அவர்கள் இறந்தபிறகு அவர்களுக்குப் பிறந்த கலப்பின் மக்களையும் நெடுங்காலம் வரை அதே நிலையில் அடிமைகளாக வைத்திருந்தார்கள். அந்த விசித்திரமான உதாரணத்தைப் படித்த இவர்களின் மூளையில், இங்கேயும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதே போன்ற செயல் நடந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. ஒரு காலத்தில் இந்தியா முழுவதுமே கறுப்புக் கண்களோடு கூடிய ஆதிவாசிகளால் நிறைந்திருந்தது என்று கனவு காண்கிறார் நம் தொல்பொருள் ஆய்வாளர். சிவந்த நிற முடைய ஆரியர்கள் பின்னால் வந்தனராம்! எங்கிருந்து? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
சிலருடைய கருத்துப்படி அவர்கள் மத்திய திபெத்திலிருந்து வந்தார்கள். மற்றும் சிலரே, அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். சிவப்புத் தலைமயிரை உடையவர்கள் எல்லாம் ஆரியர்கள் என்று நினைக்கின்ற,தேச பக்தர்களான சில ஆங்கிலேயர்களும் இருக்கிறார்கள். தங்கள் கருத்தை வைத்துக் கொண்டு சிலர் அவர்கள் கறுப்பு நிறத் தலைமயிரை உடையவர்கள் என்று நினைக்கிறார்கள். எழுதியவர் கறுப்பு முடியள்ள மனிதராக இருந்தால், ஆரியர்கள் எல்லாரும் கறுப்பு முடியுள்ளவர்கள்.
இனி ஆரியர்கள் சுவிட்சர்லாந்தின் ஏரிக்கரைகளில் வாழ்ந்தார்கள் என்று நிரூபிப்பதற்கான முயற்சிகளும் சமீப காலத்தில் தோன்றியுள்ளன. இத்தகைய கொள்கைகளுடன் அவர்களும் சேர்ந்தே அந்த ஏரியில் மூழ்கினால் கூட எனக்கு வருத்தமில்லை. ஆரியர்கள் வட துருவத்தில் வாழ்ந்ததாக இப்போது சிலர் கூறுகின்றனர். ஆரியர்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் கடவுள் ஆசீர்வதிப்பராக!
இந்தக் கொள்கைகளில் உண்மை இருக்கிறதென்றால் நம் சாஸ்திரங்களில் அது பற்றிய ஒரு சிறு குறிப்பாவது இருக்க வேண்டுமே! ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியேயிருந்து வந்தார்கள் என்று கூறுகின்ற ஒரு வார்த்தைகூட நமது சாஸ்திரங்களில் இல்லை .பழங்கால இந்தியா ஆப்கானிஸ்தானமும் சேர்ந்த பகுதியாகும், அவ்வளவுதான். அதுபோலவே சூத்திரர்கள் எல்லாம் ஆரியர் அல்லாதவர்கள், அவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகமானவர்கள் என்ற கொள்கையும் தர்க்கரீதியானதோ அறிவு பூர்வமானதோ அல்ல. ஒருசில ஆரியர்கள் வந்து குடியேறி லட்சக்கணக்கான அடிமைகளை அடக்கியாண்டார்கள் என்பது அந்தக் காலத்தில் நடக்கக்கூடிய ஒன்றா என்ன! அப்படி அடக்கி ஆண்டிருந்தால், அந்த அடிமைகள் அவர்களை ஐந்தே நிமிடத்தில் சட்னி, செய்து சாப்பிட்டிருப்பார்கள்.
ஒரே ஒரு விளக்கம் மகாபாரதத்தில் காணப்படுகிறது; சத்திய யுகத்தின் ஆரம்பத்தில் பிராமணர்கள் என்ற ஒரு ஜாதியினரே இருந்தார்கள். அதன்பிறகு பல்வேறு தொழில்களைச் செய்ததன் காரணமாக அவர்கள், தங்களுக்குள் பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்தார்கள். இது தான் ஜாதிப் பிரச்சினைக்கு உண்மையான, அறிவுபூர்வமான ஒரே விளக்கம், இனி வரப்போகின்ற சத்திய யுகத்திலும் ஜாதிகள் எல்லாம் சிறிதுசிறிதாக மாறி முதலில் இருந்த நிலைக்குச் செல்ல வேண்டும். இந்தியாவில் உள்ள ஜாதிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி இது தானே தவிர, உயர்ந்த ஜாதியினரைக் கீழ் நிலைக்குக் கொண்டுவருவதோ பிராமணர்களை நசுக்குவதோ அல்ல.
பிராமணத்துவம்தான் இந்திய மக்களின் லட்சியம் என்பதை சங்கரர் தமது கீதை விளக்கவுரையின் முன்னுரையில் அற்புதமாக விளக்கியுள்ளார்; ஸ்ரீகிருஷ்ணர் உபதேசகராக வந்ததன் காரணத்தைக் கூறும்போது, இந்த பிராமணத்துவத்தை, பிராமண நிலையை நிலை நிறுத்தவே அவர் அவதரித்தார் என்று கூறுகிறார். அது தான் மகத்தான லட்சியம் .இறை மனிதனான, பிரம்மத்தை அறிந்தவனான, லட்சியமனிதனான, நிறை மனிதனான இந்தப் பிராமணன் கட்டாயம் இருக்க வேண்டும் . அவன்மறைந்து போகக் கூடாது. இன்று அந்த ஜாதி சீர்கெட்டுப் போயிருக்கலாம். இருப்பினும்பிற எல்லா ஜாதியினரையும் விட, பிராமண ஜாதியிலிருந்தே உண்மை பிராமணத்துவம் கொண்ட அதிகம் பேர் தோன்றியுள்ளனர். இந்த மதிப்பை பிராமணர்களுக்குக் கொடுக்க மற்ற எல்லா ஜாதியினரும் தயாராக இருக்க வேண்டும். அது உண்மை. பிற எல்லா ஜாதியினரிடமிருந்தும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையுள்ள மதிப்பு அது. அவர்களுடைய குறைகளைப்பற்றிப் பேச தைரியமும் துணிச்சலும் படைத்தவர்களாக நாம் இருக்க வேண்டும் . அதே வேளையில் அவர்களுக்கு உரிய பெருமைகளையும் தரவேண்டும். ”ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கு உரியதைக் கொடுங்கள் ”என்னும் ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். எனவே நண்பர்களே, ஜாதிகளுள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் ஒரு பயனுமில்லை. அது என்ன நன்மை செய்யும்? நமக்குள் இன்னும் அதிகமான பிளவுகளை உண்டாக்கும். நம்மை மேலும் பலவீனப்படுத்தும், மேலும் இழிநிலையில் ஆழ்த்தும், அவ்வளவுதான்.
தனிச் சலுகைகள் மற்றும் தனி உரிமைகளின் காலம் மலையேறிவிட்டது . அவை இந்திய மண்ணிலிருந்து ஒரேயடியாகப் போய்விட்டன . இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியால் விளைந்த மகத்தான நன்மைகளுள் இதுவும் ஒன்று. தனிச் சலுகைகளை ஒழித்ததான பெரும் பணிக்காக நாம் முகமதியர் ஆட்சிக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். முகமதிய ஆட்சிகூட அப்படியொன்றும் முற்றிலுமாகத் தீயதல்ல. செல்லப்போனால் எதுவுமே முற்றிலும் நல்லதும் அல்ல, முற்றிலும் கெட்டதும் அல்ல. முகமதியர்கள் இந்தியாவை வெற்றி கொண்டது, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் கதிமோட்சமாக அமைந்தது. அதனால் தான் நம் மக்களுள் ஐந்தில் ஒரு பங்கினர் முகமதியர் ஆனார்கள் எல்லாவற்றையுமே வாள் மட்டுமே சாதித்தது என்பதில்லை. வாளாலும் நெருப்பாலும் மட்டுமே இந்த அனைத்து வேலைகளும் நடைபெற்றதாக நினைப்பது பைத்தியக்காரத்தனத்தின் உச்சக்கட்டம். இனி நீங்கள் எச்சரிக்கையாக இல்லை என்றால், உங்கள் சென்னை மக்களுள் ஐந்தில் ஒரு பங்கினர், ஏன் பாதிபேர் கிறிஸ்தவர்களாகி விடுவார்கள், நான் மலபாரில் பார்த்ததைவிட மடத்தனம் உலகில் வேறு எங்காவது இருக்க முடியமா? பாவம்! கீழ்ஜாதியினர் மேல் ஜாதியினர் நடக்கும் தெருக்களில்கூட நடக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அவனே தன் பெயரை தாட்பூட்டென்று ஓர் ஆங்கிலப் பெயராக மாற்றிக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் , முகமதியப் பெயரை வைத்துக்கொண்டாலும் போதும், எல்லாம் சரியாகி விடும்! அந்த மலபார்வாசிகளைப் பைத்தியங்கள் என்று நினைப்பதைத் தவிர, அவர்களின் வீடுகளையெல்லாம் பைத்தியக்கார விடுதிகள் என் பதைத் தவிர வேறு என்னவென்று நினைப்பது? அவர்கள் தங்கள் பழக்கங்களை மாற்றிக்கொண்டு , நல்ல வழியில் நடக்கும் வரைஇந்தியாவில் உள்ள ஒவ்வோர் இனத்தினரும் அவர்களை வெறுப்பாக நடத்த வேண்டும் என்பதை தவிர வேறு எந்த முடிவுக்கு வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த முடிவுக்கு வருவது ? இத்தகைய கொடூரமான , மிருகத்தனமான பழக்கங்களை அனுமதித்திருக்கிறார்கள். சொந்தக் குழந்தைகளே பட்டினியில் சாகுமாறு விட்டுவிடுகிறார்கள்., ஆனால் அவர்கள் மதம் மாறி விட்டார்களானால் சாப்பாடு போடுகிறார்கள். என்ன வெட்கக்கேடு!ஜாதிகளிடையே இனியும் சண்டை இருக்கக் கூடாது.
உயர்ந்ததைத் தாழ்த்துவதல்ல, தாழ்ந்ததை உயர்த்துவதே தீர்வு . இதுதான் நமது நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் மார்க்கம். சொந்த சாஸ்திர அறிவும், முன்னோர்களின் மகத்தான திட்டங்களைப் புரிந்து கொள்வதற்கான திறனும் சுத்த சூன்யமாக இருக்கின்ற சிலர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் . அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் மூளையுள்ளவர்களுக்கு , புத்திக்கூர்மை உடையவர்களுக்கு நம் முன்னோர்களின் செயல்திட்டத்தின் முழுப் பரிமாணமும் விளங்கும் . , அவர்கள் தனியாக நின்று பல நூற்றுண்டுகளாகத் தொடர்ந்து வருகின்ற அந்த அற்புதமான தேசிய வாழ்வைப் பின்பற்றுவார்கள். பழைய மற்றும் புதிய நூல்களைப் படிப்படியாக ஆராய்ந்து அவர்களால் அதனைக் கண்டறிய முடியும்.
அந்தத் திட்டம்தான் என்ன? ஒரு கோடியில் பிராமண லட்சியம் உள்ளது.. மற்றொரு கோடியில் உள்ளது சண்டாள லட்சியம் . நமது வேலையெல்லாம் சண்டாளனைப் பிராமண நிலைக்கு உயர்த்துவதுதான் . சிறிதுசிறிதாக அதிகமான சலுகைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதை நீங்கள் காணலாம். சில நூல்கள் இருக்கின்றன , அவற்றில் சூத்திரன் வேதத்தைக் கேட்டால் அவனது காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள்: ஒரு வரிகூட நினைவில் வைத்திருந்தால் அவனது நாக்கை வெட்டுங்கள். பிராமணனைப் பார்த்து ‘ஏ! பிராமணா” என்று அவன் அழைத்தால் அவனுடைய நாக்கை வெட்டி விடுங்கள் என்பன போன்ற கொடூரமான கருத்துக்கள் இருக்கின்றன இவை மிருகத்தனமான பழங்காலக் காட்டுமிராண்டித்தனம். அதில் சந்தேகமே இல்லை இதை யாரும் சொல்ல வேண்டியதும் இல்லை. அதற்காக விதிமுறைகளை எழுதியவர்களைப் பழிக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் அப்போது சமுதாயத்தின் ஏதோ ஒரு பகுதியில் நடைமுறையில் இருந்ததை அப்படியே குறித்து.வைத்தார்கள் .அவ்வளவுதான். முன்னோர்களுள்ளும் சிலவேளைகளில் இத்தகைய பிசாசுகள் தோன்றவே செய்தன. அத்தகைய பிசாசுகள் பெரும்பாலும் எங்கும் எல்லா காலங்களிலும் இருந்தே வருகின்றன.
இந்தக் கொடுமைக்குரலின் வேகம் பிற்காலத்தில் சிறிது குறைந்திருப்பதைக் காணலாம்: உதாரணமாக சூத்திரர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். ஆனாலும் உயர்ந்த கருத்துக்களை அவர்களுக்குப் போதிக்காதீர்கள்” என்ற கருத்து வருகிறது. பின்னர் படிப்படியாக பிற்கால ஸ்மிருதிகளில், குறிப்பாக இன்றும் முழுமையாகப் பின்பற்றப்படும் ஸ்மிருதிகளில் , சூத்திரர்கள் பிராமணர்களின் நடைமுறைகளையும் , பழக்க வழக்கங்களையும் பின்பற்றினால், அது நல்லது. அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்- இது போன்ற கருத்துக்களைக் காண்கிறோம். அதன் போக்கு அப்படி ப்போகிறது.
இந்த விஷயங்களையோ அவற்றை எங்கெல்லாம் தேடிக் காணலாம் என்பதையோ விவரிப்பதற்கு எனக்கு நேரமில்லை. ஆனால் இன்றைய உண்மை நிலையைப் பார்க்கும்போது, எல்லா ஜாதிகளும் மெல்லமெல்லவே உயர வேண்டியிருப்பதை நாம் காணலாம். ஆயிரக்கணக்கான ஜாதிகள் உள்ளன. அவற்றுள் சில பிராமணத் துவத்தினுள் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் காண்கிறோம். தங்களைப் பிராமணர்கள் என்று ஒரு ஜாதியினர் அறிவித்துக் கொள்வதை யார் தடுக்க முடியும்?
இவ்வாறாக ஜாதி அதனுடைய எல்லா வேகத்தோடும் தோற்றுவிக்கப்பட்டது. இங்கே ஒவ்வொரு ஜாதியிலும் பத்தாயிரம் பேர் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இவர்கள் ஒன்றுசேர்ந்து, தங்களைப் பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வதாகத் தீர்மானித்தால் எதுவும் அவர்களைத் தடுக்க முடியாது. இதை என் வாழ்விலேயே கண்டிருக்கிறேன். சில ஜாதிகள் வலிமைபெற்றுவருகின்றன, அவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டால், கூடாது என்று யார் சொல்ல முடியும்? ஏனென்றால் ஒவ்வொரு ஜாதியும் மற்ற ஜாதிகளிலிருந்து விலகியே இருக்கிறது.ஒன்று மற்றதன் செயல்களில் தலையிடுவது இல்லை. ஏன் ,ஒரே ஜாதியில் பல பிரிவுகள்கூட ஒன்று மற்றொன்றின் விஷயத்தில் தலையிடுவது இல்லை. மாபெரும் சாகப்தத்தையே உருவாக்கியவர்களான சங்கராச்சாரியரும் பிறரும்தான் ஜாதிகளையும் உருவாக்கியவர்கள். அவர்கள் கட்டிவிட்ட வினோதக் கதைகளை எல்லாம் உங்களுக்குச் சொல்ல முடியாது , சொன்னாலும் உங்களுள் சிலருக்குக் கோபம் வரலாம். எனது பயணங்ளின்மூலமும் அனுபவங்களின் வாயிலாகவும் அவைகளைக் கண்டுபிடித்து, ஆச்சரியமான முடிவுக்கு வந்திருக்கிறேன். சில வேளைகளில் அவர்கள் பலுசிஸ்தானத்தின் நாடோடிக் கும்பல்களைப் பிடித்து, க்ஷத்திரியர்கள் ஆக்குவார்கள். மீனவர்களைப் பிடித்து பிராமணர்கள் ஆக்குவார்கள் . அவர்கள் ரிஷிகள், மகான்கள். அவர்களின் நினைவிற்கு நாம் அஞ்சலி செய்ய வேண்டும். நீங்களும் ரிஷிகள் ஆகுங்கள், மகான்கள் ஆகுங்கள், அதுதான் ரகசியம். மொத்தத்தில் நாம் ரிஷகளாக வேண்டும்.
ரிஷி என்றால் என்ன? தூயவர். முதலில் தூயவர் ஆகுங்கள்,நீங்கள் ஆற்றலைப் பெறுவீர்கள். வெறுமனே ‘நான் ரிஷி ”என்று சொல்லிப் பயனில்லை நீங்கள் ரிஷி என்றால் மற்றவர்கள் தாமாகவே உங்களைப் பணிவார்கள். அமானுஷ்யமான ஏதோ ஒன்று உங்களிடமிருந்து வெளிப்படும் அது அவர்கள் உங்களைப் பின்பற்றும்படிச் செய்யும்; உங்கள் பேச்சைக் கேட்கும் படி செய்யுங்கள். தங்களை அறியாமலே தங்கள்விருப்பத்திற்கு மாறாகக்கூட உங்கள் திட்டங்களை நிறைவேற்றும்படிச் செய்யும் . அதுதான் ரிஷி நிலை.
இவற்றிக்கான விளக்கங்களைப் பொறுத்தவரை , அவை பல தலைமுறைகளாகச் செய்து முடிக்க வேண்டிய ஒன்று. நான் இப்போது கூறியவை, ஜாதிச் சண்டைகள் தீர வேண்டும் என்பதற்கான ஒரு ஆலோசனை மட்டுமே. குறிப்பாக இந்த நவீன காலத்தில் ஜாதிகளுக்கிடையே இவ்வளவு சச்சரவுகள் இருப்பது குறித்து நான் வருந்துகிறேன். இது நிறுத்தப் பட்டே தீர வேண்டும். இந்தச் சண்டை இரு தரப்பினருக்கும், குறிப்பாக உயர்ந்த ஜாதியினரான பிராமணர்களுக்குப் பயனற்றது. ஏனென்றால் இன்று தனிச் சலுகைகளும் தனி உரிமைகளும் பறிபோய்விட்டன. தங்கள் கல்லறையைத் தாங்களே தோண்டிக்கொள்வது தான் ஒவ்வோர் உயர்ந்த பிரிவினருடையவும் கடமை. எவ்வளவு சீக்கிரம் அதைச்செய்கிறார்களோ அந்த அளவிற்கு நல்லது . காலம் நீடிக்கநீடிக்க அவை கெட்டுக் குட்டிச்சுவராகி மிக மோசமான முடிவைப் பெறநேரும்.
எனவே பிராமணர்களின் முதல் கடமை இந்தியாவிலுள்ள மற்ற சமுதாயத்தினரின் நன்மைக்காகப் பாடு படுவதுதான் . அவன் அதைச் செய்வானானால் , அதைச் செய்யும் காலம் வரையில் , அவன் பிராமணன் . அதைச் செய்யாமல் பணம் சம்பாதிக்கத் திரிபவன் பிராமணன் அல்ல. நீங்களும் உண்மையில் தகுதியுடைய பிராமணனுக்கு மட்டுமே உதவ வேண்டும். அது உங்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். தகுதி இல்லாத ஒருவனுக்குக் கொடுக்கப்படும் தானம் சிலவேளைகளில் நரகத்திற்கு இழுத்துச் செல்கிறது என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லௌகீகத்தொழில் செய்யாமல் இருப்பவன் மட்டுமே பிராமணன். லௌகீகத் தொழில் பிராமணர்களுக்கு அல்ல மற்ற ஜாதியினருக்குத்தான். பிராமணர்களை நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்குத் தெரிந்ததைக் கற்பிப்பதன் மூலமும் நூற்றுக்கணக்கான வருடங்களாகப்பெற்றுச் சேமித்திருக்கும் பண்பாட்டை அளிப்பதன் மூலமும் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுங்கள். உண்மை பிராமணத்துவம் என்ன என்பதை நினைத்துப் பார்ப்பது இந்தியப் பிராமணர்களின் முக்கியக் கடமை. மனு சொல்வதைப் போல், எல்லா சலுகைகளும் பெருமைகளும் பிராமணனுக்குக் கொடுக்கப்பட்டது ஏனென்றால் அவனிடம் ‘தர்மம்” என்னும் கருவூலம் இருக்கிறது. அவன் அந்தக் கருவூலத்தைத் திறந்து, அதில் உள்ள மதிப்பு வாய்ந்த பொருட்களை உலகிற்கு வழங்க வேண்டும். அவன் இந்திய இனங்களுக்கு முதல் போதகன் என்பது உண்மைதான். தியாகம் என்ற கருத்தைப் பிறர் அடைவதற்கு முன்னரே , வாழ்க்கையின் மிகவுயர்ந்த நிலையை அடைவதற்காக எல்லாவற்றையும் முதலில் துறந்தவன் அவன் என்பதும் உண்மையே . பிற ஜாதியினரைவிட அவன் அதிக முன்னேற்றம் அடைந்தால் அது அவனுடைய தவறு அல்ல. உண்மையைப் புரிந்து கொண்டு மற்ற ஜாதியினரும் ஏன் அவனைப்போல் செல்லக் கூடாது? அவர்கள் சோம்பேறியாக இருந்து கொண்டு ,பந்தயத்தில் பிராமணர்களை ஏன் முன்னேற விட்டார்கள்?
ஆனால் முன்னேற்றம் அடைவது என்பது வேறு அதைத் தீய செயல்களுக்காகப் பாதுகாத்து வைப்பது என்பது வேறு . அதிகாரம் தீமைகளுக்காகப் பயன்படுத்தபடும்போது அது மிருகத்தனமாகி விடுகிறது, அது நல்லதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். காலங்காலமாகச் சேர்ந்து வைக்கப்பட்டுள்ளன பண்பாட்டிற்கு காவலனாக இருப்பவன் பிராமணன். அவன் இப்போது அதை எல்லா மக்களுக்கும் வாரி வழங்க வேண்டும் . அப்படி அவன் கொடுக்காததால் தான் முகமதியர்கள் நம்மை ஆக்கிரமிக்க முடிந்தது. ஆரம்பக் காலத்திலிருந்தே இந்தக் கருவூலத்தை மக்கள் அனைவருக்குமாக அவன் திறந்து விடவில்லை . அதனால் தான், இந்தியாவிற்கு வந்தவனின் காலிலெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நாம் மிதிபட்டுக் கொண்டிருக்கிறோம்.
எனவே நமது பொது முன்னோர்கள் சேமித்து வைத்திருக்கின்ற அரும் பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள அறையை உடைத்துத் திறக்க வேண்டும் , அவற்றை வெளியே கொண்டு வரவேண்டும், அனைவருக்கும் வாரி வழங்க வேண்டும். பிராமணனே இதை முதலில் செய்ய வேண்டும். கடித்த பாம்பே விஷத்தை உறிஞ்சி விடுமானால் கடிபட்டவன் பிழைத்துக் கொள்வான் என்ற பழைய நம்பிக்கை வங்காளத்தில் நிலவுகிறது. அதுபோல் பிராமணன் செலுத்திய விஷத்தை பிராமணனே உறிஞ்ச வேண்டும்.
பிராமணர் அல்லாத நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்பும் சில விஷயங்கள் உண்டு. கொஞ்சம் பொறுமையாக இருங்கள், அவசரப்படாதீர்கள் .பிராமணர்களோடு சண்டையிடுவதற்காக ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த முயற்சிக்காதீர்கள். உங்கள் தவறுகளாலேயே நீங்கள் துன்பப்படுகிறீர்கள் என்பதை நான் முன்னரே எடுத்துக்காட்டி விட்டேன். ஆன்மீகத்தையும் சம்ஸ்கிருதம் கற்பதையும் அலட்சியம் செய்யும் படி உங்களிடம் யார் சொன்னார்கள்? இவ்வளவு காலமாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? எதற்கு இந்த பொறுப்பற்ற தன்மை ? இன்று மற்றவர்கள் உங்களைவிட அதிக அறிவும் ஆற்றலும் திறமையும் உள்ளவர்களாக இருப்பதைப் பார்த்து ஏன் எகிறிக் குதிக்கிறீர்கள் ? பத்திரிகைகளில் வாதங்களையும் சண்டைகளையும் வளர்ப்பதில் உங்கள் ஆற்றலை வீணாக்குவதற்குப் பதிலாக , உங்கள் வீடுகளிலேயே சண்டையும் சச்சரவும் செய்துகொண்டு இருப்பதற்குப் பதிலாக , இந்தப் பாவச் செயல்களுக்குப் பதிலாக, பிராமணர்கள் பெற்றிருக்கும் பண்பாட்டைப் பெற உங்கள்எல்லா ஆற்றலையும் பயன்படுத்துங்கள், அப்போது உங்கள் காரியம் கைகூடிவிடும் ஏன் நீங்கள் சம்கிருத பண்டிதர்கள் ஆகக் கூடாது? இந்தியாவில் உள்ள எல்லா ஜாதியினரும் சம்ஸ்கிருதம் படிப்பதற்காகச் சில லட்சங்களை நீங்கள் ஏன் செலவழிக்கக் கூடாது? இதுதான் கேள்வி. இவற்றை யெல்லாம் செய்கின்ற அந்தக் கணமே நீங்கள் பிராமணர்களுக்குச் சமமாகி விடுவீர்கள். இந்தியாவில் ஆற்றலின் ரகசியம் இதுவே. இந்தியாவில் சம்ஸ்கிருதமும் மதிப்பும் கைகோர்த்துச் செல்கின்றன. அது இருந்தால் போதும், உங்களுக்கு எதிராக எதையும் சொல்கின்ற தைரியம் யாருக்கும் வராது. அதுதான் பெரிய ரகசியம். எனவே அதைக் கற்கத் தொடங்குங்கள்.
அத்வைதியின் ஒரு பழைய உவமையின் மூலம் சொல்வது என்றால், தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு மயக்க நிலையிலேயே இந்த உலகம் முழுவதும் உழல்கிறது. சங்கல்பம்தான் பலம். வலுவான சங்கல்பம் படைத்தவன் தன்னைச் சுற்றிலும் ஓர் ஒளியை வெளிப்படுத்துகிறான் என்று தான் சொல்ல வேண்டும் . தன் மனம் எந்த நிலையில் இருக்கிறதோ, அந்த நிலைக்கு அவன் பிறரையும் கொண்டு வருகிறான். அத்தகைய மாபெரும் மனிதர்கள் தோன்றவே செய்கிறார்கள். இதன் பொருள் என்ன? ஆற்றல் மிக்க ஒருவர் தோன்றும்போது, அவரது ஆளுமை அவரது எண்ணங்களை நம்முள் செலுத்துகிறது, நமக்கும் அதே எண்ணங்களை நம்முள் செலுத்துகிறது, நமக்கும் அதே எண்ணங்கள் எழுகின்றன, இவ்வாறு நாமும் ஆற்றல்மிக்கவர்கள் ஆகிறோம். இயக்கங்கள் இவ்வளவு ஆற்றல்மிக்கவையாக இருப்பது ஏன்? இயக்கம் ஜடப்பொருள் என்று சொல்ல வேண்டாம், அவை அப்படிஇல்லை. பிரபலமான ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நான்கு கோடி ஆங்கிலேயர்கள் இங்கே முப்பது கோடி மக்களை ஆட்சி செய்கிறார்கள். அது ஏன்? இதற்கான மன இயல் விளக்கம் என்ன? அந்த நான்கு கோடி பேரும் தங்கள் சங்கல்பத்தை ஒன்றாகக் குவிக்கிறார்கள். அதனால் எல்லையற்ற சக்தி உண்டாகிறது. ஆனால் முப்பது கோடி மக்களான உங்கள் சங்கல்பங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கின்றன. எனவே மகத்தானதோர் எதிர்கால இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், அதற்கான ரகசியம் முழுவதும் இயக்கங்களை உருவாக்குவதிலும் ஆற்றலைச் சேர்ப்பதிலும், சங்கல்பங்களை இணைப்பதிலும்தான் இருக்கிறது.
அதர்வ வேத சம்ஹிதையில் உள்ளதோர் அற்புத மானபாடல் என் நினைவில் வருகிறது – ‘‘நீங்கள் எல்லோரும் ஒரே மனத்தவராக இருங்கள். நீங்கள் எல்லோரும் ஒரே எண்ணம் உடையவர்களாக இருங்கள். ஒரே மனத்துடனிருந்த காரணத்தால்தான் தேவர்கள் ஆஹுதிகளைப் பெற முடிந்தது. ஒரே மனத்தவராக இருப்பதால்தான் மனிதர்களால் அவர்களை வழிபட முடிந்தது . ஒரே மனத்தவராக இருப்பது சமுதாயத்தின் ரகசியம்.‘‘ திராவிடன் ” ஆரியன் ” முதலான அற்ப விஷயங்கள் பற்றியும் பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்றெல்லாமும் நீங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்குந் தோறும் எதிர்கால இந்தியாவை உருவாக்குவதற்கான ஆற்றலையும் சக்தியையும் சேமிப்பதிலிருந்து மேலும் மேலும் விலகிப் போகிறீர்கள். நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் -எதிர்கால இந்தியா முற்றிலும் அதையே சார்ந்திருக்கிறது. சங்கல்ப ஆற்றலைச் சேமித்தல், அவற்றை ஒருங்கிணைத்தல் அவை அனைத்தையும் ஒரே மையத்தில் திரட்டுதல்- இதுதான் ரகசியம்.
ஒன்வொரு சீனனும் தான் விரும்புகின்ற வழியில் சிந்திக்கிறான் . ஆனால் எண்ணிக்கையில் குறைந்த ஜப்பானியரோ அனைவரும் ஒரே வழியில் சிந்திக்கின்றனர். விளைவு உங்களுக்கே தெரியும். உலக வரலாறு முழுவதும் இவ்வாறே நடந்துள்ளது . கட்டுக்கோப்பான சிறிய நாடுகளே கட்டுப்பாடற்ற, பெரிய நாடுகளை எப்போதும் ஆள்கின்றன. இது இயல்பானதுதான். ஏனெனில் சிறிய கட்டுக்கோப்பான நாடுகளுக்குத் தங்கள் கருத்துக்களை ஒரே மையத்தில் குவிப்பது எளிதாக உள்ளது அதன்மூலம் அவை வளர்ந்து விடுகின்றன. ஒரு நாடு எந்த அளவுக்குப் பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்குக் கட்டுப்பாடற்றதாக இருக்கிறது. கட்டுப்பாடற்றவர்கள்போல் பிறந்த அந்த மக்களால் ஒன்றாகச் சேரவும்முடிவதில்லை. இந்தக் கருத்துவேற்றுமைகள் எல்லாம் விலகியே தீர வேண்டும்..
மற்றொரு குறைபாடும் நம்மிடம் உள்ளது பெண்கள் என்னை மன்னிக்க வேண்டும் - பல நூற்றாண்டுகளின் அடிமை வாழ்வின் காரணமாக நாமெல்லாம் பெண்களைப் போலவே ஆகிவிட்டோம்..இந்த நாட்டிலும் சரி, வேறு எந்த நாட்டிலும் சரி மூன்று பெண்கள் ஐந்து நிமிடங்களுக்கு மேல் சேர்ந்திருக்க முடியாது, அதற்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் பெரிய சங்கங்களை உருவாக்குவார்கள், பெண்சக்தி முதலியவை பற்றியெல்லாம் பெரிய அறிக்கைகளை வெளியிடுவார்கள், அவ்வளவுதான், அதற்குள் சண்டை வந்துவிடும் . பின்னர் ஆண்கள் வந்து அவர்களை அடக்கியாள நேரும். இன்னும் உலகம் முழுவதிலும் அவர்களை ஆள்வதற்கு ஆண்கள் தேவைப்படுகிறார்கள். நாம் அவர்களைப் போலவே இருக்கிறோம். நாம் பெண்களே. பெண்களை நடத்திச் செல்ல ஒரு பெண் முன்வந்தாலோ, எல்லோருமாகச் சேர்ந்து விமர்சித்து, கிழி கிழியென்று கிழித்து அவளை ஒதுக்கி விடுவார்கள். ஆனால் ஆண் ஒருவன் வரட்டும் , அவன் அவர்களை அவ்வப்போது திட்டியதும் சற்று கடினமாக நடத்தியதும் எல்லாம் . அவர்கள் அத்தகைய மயக்க நிலைக்குப் பழகிவிட்டார்கள். இந்த உலகம் முழுவதும் அத்தகைய மயக்க நிலைக்கு உட்பட்டவர்களே இருக்கிறார்கள். நம் நாட்டிலும் நம்மவருள் ஒருவர் எழுந்து மகத்தானவராக மாற முயற்சிப்பாரானால், உடனே நாம் எல்லோரும் சேர்ந்து அவரை அமுக்க முயற்சிப்போம், ஓர் அன்னியன் வந்து நம்மை எட்டி உதைத்தால் கூட அது பரவாயில்லை. நாம் இப்படியே பழக்கப்பட்டு விட்டோம் இல்லையா! அடிமைகள் சிறந்த எஜமானர்கள் ஆகு வேண்டும். எனவே அடிமையாக இருப்பதை விட்டுவிடுங்கள்.
...தொடரும்...
தொடர்ச்சி.....
..
இனிவரும் ஐம்பது ஆண்டுகளுக்கு நமது ஆதார சுருதி இதுவே- ஈடிணையற்ற நமது இந்தியத் தாய். அதுவரை மற்ற எல்லா வீண் தெய்வங்களும் நம் மனத்திலிருந்து மறைந்து விடட்டும். நமது சொந்த இனம்- இது ஒன்று மட்டுமே விழிப்புற்ற தெய்வம் ‘ எங்கும் அவரது கைகள், , எங்கும் அவரது கால்கள், எங்கும் அவரது செவிகள் , அவரே அனைத்திலும் வியாபித்திருக்கிறார். மற்ற எல்லா தெய்வங்களும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் .. நம்மைச் சுற்றிலும் காண்கின்ற விராட் தெய்வத்தை வழிபடாமல் வேறு வீண் தெய்வங்களை நாம் தேடிச் செல்ல வேண்டுமா? இந்த தெய்வத்தை முதலில் வணங்கினால், பிற எல்லா தெய்வங்களையும் வணங்கும் திறன் பெறுவோம். அரை மைல் ஊர்ந்து செல்லவே முடியவில்லை , அதற்குள் அனுமனைப்போல் கடலைத் தாண்ட விரும்புகிறோம். அதுமுடிகிற காரியமில்லை. எல்லோரும் யோகியாக முடியுமா? எல்லோரும் தியானம் செய்ய முடியுமா? அது நடக்காது. நாள் முழுவதும் உலக வாழ்க்கையில் கர்ம காண்டத்துடன் அல்லாடுகிறோம் . மாலையில் உட்கார்ந்து மூக்கின் வழியாகக் காற்றை இழுத்து விட்டால் எல்லாம் ஆயிற்றா? இல்லை , நீங்கள் மூன்று முறை மூக்கைப் பிடித்துக்கொண்டு காற்றை இழுத்தவுடன் ரிஷிகள் எல்லோரும் காற்றில் பறந்து உங்களிடம் வர வேண்டுமா? என்ன வேடிக்கை இது! சுத்த முட்டாள்தனம்.
தேவை சித்த சுத்தி , இதயத் தூய்மை. அது எவ்வாறும் வரும்? முதலில் விராட்டை அதாவது உங்களைச் சுற்றி இருப்பவர்களை வழிபடுங்கள். வழிபடுங்கள், வழிபாடு - அதுதான் அந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்குச் சரியான பொருள். வேறு எந்த வார்த்தையும் பொருந்தாது. மனிதர்கள், மிருகங்கள் எல்லாமே நம் தெய்வங்கள். நாம் வணங்க வேண்டிய முதல் கடவுள் நம்நாட்டு மக்கள் .ஒருவரோடு ஒருவர் பொறாமை கொண்டு சண்டையிடுவதற்குப் பதிலாக, இவர்களை நாம் வழிபட்டாக வேண்டும் . கொடிய தீவினைப் பயனால்தான் நாம் துன்பப்படுகிறோம்: என்றாலும் நம் கண்கள் திறக்கவில்லையே!
நல்லது, நாம் இன்று எடுத்துக் கொண்டிருக்கும் விஷயமோ மிகப் பெரியது. எங்கே நிறுத்துவது என்றே எனக்குத் தெரியவில்லை. எனவே சென்னையில் நான் செய்ய விரும்புகின்ற சில திட்டங்களை உங்களிடம் கூறிவிட்டு , என் பேச்சை நிறைவு செய்கிறேன். நமக்கு நாட்டின் ஆன்மீகக் கல்வி மீதும் லௌகீகக் கல்வி மீதும் நல்ல பிடிப்பு இருக்க வேண்டும் . நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் அதைக் கனவு காண வேண்டும். அதைப்பற்றிப் பேச வேண்டும் , அதைச் சிந்திக்க வேண்டும் , அதைச்செய்து முடிக்கவும் வேண்டும். அதுவரை நம் இனத்திற்குக் கடைத்தேறும் வழியே இல்லை.
தற்போதைய கல்வியில் சில நன்மைகள் உள்ளன. ஆனால் மிக அதிகமான தீமைகள் இருக்கின்றன. மிக அதிகமான அந்தத் தீமைகள் கொஞ்சமான நன்மையைக் கீழே அமுக்குகின்றன. முதலாவதாக ,அது மனிதனை உருவாக்குகின்ற கல்வி அல்ல. அது முழுக்க முழுக்க வெறும் எதிர்மறையான கல்வி, எதிர்மறைக்கல்வியும் சரி, அல்லது எதிர் மறை உணர்ச்சியை உண்டுபண்ணும் எந்தப் பயிற்ச்சியும் சரி அது சாவை விடக் கொடியது. குழந்தையை ப்பள்ளிக்கு அனுப்பு கிறோம். அங்கே அவன் முதலில் படிப்பது, தன் தந்தை ஒரு முட்டாள், இரண்டாவது தன் பாட்டன் பைத்தியக்காரன் ; மூன்றாவாதாக , தன் ஆசிரியர்கள் அனைவரும் பாசாங்குகாரர்கள் , நான்காவதாக, எல்லா சாஸ்திரங்களும் பொய் . இப்படித்தான் அவனதுபடிப்பு உள்ளது. அவனுக்குப் பதினாறு வயதாகும்போது அவன் உயிரற்ற, உணர்வற்ற, எதிர்மறை உணர்ச்சிகளின் ஒரு பிண்டம் போலாகிறான். விளைவு ? ஐம்பது ஆண்டுகளாக இருக்கும் இத்தகைய கல்வி, இந்தியாவின் மூன்று முக்கிய மகாணங்களிலும் சுயசிந்தனையுள்ள ஒருவனைக்கூட தோற்றுவிக்கவில்லை . அத்தகைய தனித்தன்மை வாழ்ந்தாக இங்கு இருக்கின்ற ஒவ்வொருவனும் வேறு எங்கோ கல்வி பெற்றவனாக இருக்கிறான், இந்த நாட்டில் படித்தவனாக இல்லை , அல்லது நம் நாட்டில் இன்னும் ஏதோ சில இடங்களில் இருக்கின்ற பழைய பல்கலைக்கழகங்களில் மேலும் ஒருமுறை கற்று, மூட நம்பிக்கைகளிலிருந்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டவனாக இருக்கிறான்.
வாழ்நாள் முழுவதும் உங்களால் ஜீரணிக்க முடியாமல் உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணிப்பது அல்ல கல்வி. வாழ்க்கையை வளப்படுத்துகின்ற, மனிதனை உருவாக்குகின்ற ,குணத்தை மேம்படுத்துகின்ற , கருத்துக்களை ஜீரணம் செய்யத்தக்க கல்வியே நாம் வேண்டுவது . நீங்கள் ஐந்தே ஐந்து
கருத்துக்களை நன்கு கிரகித்து ,அவை உங்கள் வாழ்க்கையாக, நடத்தையாகப் பரிணமித்து நிற்கச் செய்ய முடியுமானால், ஒரு புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்தவனை விட நீங்கள் அதிகமான கல்வி பெற்றவர்.‘ யதா கரச்சந்தன பாரவாஹீ பாரஸ்ய வேத்தாநது சந்தனஸ்ய - கட்டுக்கட்டாகச் சந்தனக் கட்டைகளைச் சுமந்து செல்லும் கழுதை அதன் பாரத்தை மட்டுமே உணர்கிறது, மதிப்பை அறிவதில்லை. செய்திகளைச் சேகரிப்பதுதான் கல்வி என்றால், நூல் நிலையங்கள் அல்லவா மாபெரும் மகான்கள் ! கலைக் களஞ்சியங்கள் அல்லவா ரிஷிகள் ! எனவே நம் நாட்டின் ஆன்மீகம் மற்றும் லௌகீகக் கல்வி எல்லாமே நம் சொந்தக் கைகளில் இருக்க வேண்டும் . முடிந்தவரை அது தேசிய வழியிலும் தேசிய அமைப்புகளின் மூலமும் தரப்பட்ட வேண்டும்.
இது மிகப்பெரிய விஷயம், மிகப் பெரிய திட்டம் தான். இதை என்றைக்காவது செயல்படுத்த முடியுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் வேலையை நாம் கட்டாயம் தொடங்கியாக வேண்டும் . ஆனால் எப்படி? உதாரணத்திற்குச் சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு அவசியம் ஒரு கோயில் வேண்டும். ஏனெனில் இந்துக்களைப் பொறுத்தவரை முதலில் வேண்டியது மதம், அப்படி என்றால் பிற நெறியினர் அதுபற்றிச் சண்டையிடுவார்களே என்று நீங்கள்சொல்லாம். ஆனால் நாம் அதை எந்த நெறியும் சாராத கோயிலாகக் கட்டுவோம். எல்லா பிரிவினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய‘ ஓம்” மட்டுமே அங்கே சின்னமாக இருக்கும் . எந்தப் பிரிவாவது ‘ஓம்” என்பதைச் சின்னமாக வைப்பதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கருதுமானால் , தன்னை இந்து என்று அழைத்துக் கொள்ளும் உரிமை அதற்குக் கிடையாது. தங்கள் நெறியின் கருத்துக்களுக்கு ஏற்ப இந்து மதத்தை விளக்க எல்லோருக்கும் உரிமைஉண்டு. ஆனால் கட்டாயமாக நமக்கு பொதுக் கோயில் வேண்டும். நீங்கள் விரும்புகின்ற விக்கிரகங்கள் மற்றும் சின்னங்கள் எல்லாவற்றையும் மற்ற இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் கொள்கையிலிருந்து மாறுபடுபவர்களுடன் அதைச் குறித்து இங்கே சண்டையிடக்கூடாது . இங்கே நமது பல்வேறு நெறிகளுக்கும் பொதுவான அடிப்படைகள் போதிக்கப்பட வேண்டும். அதே வேளையில் வெவ்வேறான நெறியினர் எல்லோருமே இங்கே வந்து தங்கள் கோட்பாடுகளைப் போதிப்பதற்கு முழுமையான சுதந்திரம் வேண்டும். இருக்க வேண்டிய ஒரே கட்டுப்பாடு, எந்தப் பிரிவும் மற்றொன்றுடன் சண்டையிடக் கூடாது என்பது மட்டுமே. நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள் உலகத்திற்கு அது தேவை. ஆனால் நீங்கள் பிறரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கேட்க உலகத்திற்கு நேரமில்லை, அதை நீங்களே வைத்துக் கொள்ளலாம்.
இரண்டாவதாக, அந்தக் கோயிலோடு தொடர்புடைய ஒரு பயிற்சி நிலையம் இருக்க வேண்டும். நம் மக்களுக்கு மத போதனை செய்யவும் பொதுக் கல்வியை அளிக்கவும் ஆசிரியர்களுக்கு அதில் பயிற்சி அளிக்க வேண்டும் . அவர்கள் இரண்டையுமே கற்பிக்க வேண்டும். நாம் ஏற்கனவே வீடுகள் தோறும் சென்று மதக் கல்வி அளித்தே வருகிறோம். அதனுடன் பொதுக் கல்வியையும் எடுத்துச் செல்வோம். இதை எளிதாகச் செய்ய முடியும் . பிறகு இந்த ஆசிரியர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் மூலம் இந்த வேலை விரிவடையும். இத்தகைய கோயில்களை மற்ற இடங்களிலும் நிறுவ வேண்டும் . படிப்படியாக இந்தியா முழுவதும் இது போன்ற கோயில்கள் உருவாக வேண்டும். இதுதான் என் திட்டம். இது மாபெரும் ஒன்றாகத் தோன்றலாம் . ஆனால் இது மிகவும் தேவையான ஒன்று. இதற்கான பணம் எங்கே என்று நீங்கள் கேட்கலாம், பணம் தேவையில்லை பணம் என்பது ஒன்றுமே இல்லை . கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அடுத்தவேளை உணவு எங்கிருந்து வரும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குத் தேவையான பணமும் மற்ற எல்லாமே என்னிடம் வந்து கொண்டுதான் இருக்கிறது . ஏனென்றால் அவை என் அடிமைகள், நான் அவைகளின் அடிமை அல்ல. பணமும் பிறவும் கட்டாயம் வரும், கட்டாயம் -இதுதான் வார்த்தை. ஆனால் மனிதர்கள் எங்கே? இதுவே கேள்வி.
சென்னை இளைஞர்களே, என் நம்பிக்கை உங்களிடம்தான் இருக்கிறது. உங்கள் நாட்டின் அழைப்பிற்குச் செவிசாய்ப்பீர்களா? என்னை நம்புவதற்கான துணிவு உங்களிடம் இருக்குமானால் உங்கள் ஒவ்வொரு வருக்கும் பொன்னான எதிர்காலம் இருக்கும். குழந்தையாக இருந்தபோது நான் கொண்டிருந்த நம்பிக்கை, இப்போது நான் செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற நம்பிக்கை -அதுபோன்ற அசைக்க முடியாதநம்பிக்கையை உங்களிடம் நீங்கள் கொள்ளுங்கள். அத்தகைய மகத்தான நம்பிக்கையை, ஒவ்வோர் ஆன்மாவிலும் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது என்ற நம்பிக்கையை நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டீர்களானால். இந்தியா முழுவதையும் நீங்கள் புதுப்பித்து விடலாம். ஆகா! அதன்பிறகு சூரியனின் கீழ் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் நாம் போவோம் . உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் உருவாக்குகின்ற பல சக்திகளுள் ஒன்றாக நமது கருத்துக்களும் விளங்கும். இந்தியாவிலும் வெளியிலும் இருக்கின்ற ஒவ்வோர் இனத்தின் வாழ்க்கையிலும் நாம் புகு வேண்டும் . இதற்காக இப்போது நாம் பாடுபட்டாக வேண்டும்.
அதற்காக எனக்கு இளைஞர்கள் தேவை‘ இளமையும் வலிமையும் ஆரோக்கியமும் கூர்மையான அறிவும் உள்ளவர்களே இறைவனை அடைய முடியும் என்று வேதங்கள் கூறுகின்றன. எதிர்காலத்தைப்பற்றி முடிவுசெய்ய ஏற்ற தருணம், உங்களிடம் இளமைத் துடிப்பு ததும்புகின்ற இந்த நேரம்தான் , களைத்து ஓய்ந்து போகும் போது அல்ல. இளமையின் வேகமும் உற்சாகமும் இருக்கும் இந்த நேரம்தான் உங்கள் எதிர் காலத்தைத் தீர்மானிப்பதற்கு உரிய நேரமாகும். வேலை செய்யுங்கள் , அதற்கான நேரம் இதுதான் புத்தம் புதிய, தொடப்படாத, முகரப்படாத மலர்கள் மட்டுமே இறைவனின் திருவடிகளில் சமர்பிக்கப்படும் ,. அத்தகைய மலர்களையே அவர் ஏற்றுக்கொள்கிறார். எனவே கிளர்ந்தெழுங்கள். வாழ்க்கை குறுகியது. வழக்கறிஞர்களாகி, சண்டைசச்சரவுகளில் ஈடுபடுவது போன்ற வேலைகள் விட, நாடுவதற்கான மகத்தான வேலைகள் பல உள்ளன. உங்கள் இனத்தின் நன்மைக்காக , மனித சமுதாயத்தின் நன்மைக்காக நீங்கள் உங்களைத் தியாகம் செய்து கொள்வது அவற்றைவிட எவ்வளவோ உயர்ந்த வேலை!
இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது ? நீங்கள் இந்துக்கள். வாழ்க்கை நிலையானது என்பதில் இயல்பானதொரு நம்பிக்கை உங்களிடம் இருக்கும் . .சில நேரங்களில் இளைஞர்கள் சிலர் என்னிடம் வந்து நாத்திகம் பேசுகிறார்கள், ஓர் இந்து, நாத்திகன் ஆவான் என்பதை நான் நம்பவில்லை. அவன் ஐரோப்பிய புத்தகங்களைப் படிக்கலாம், தன்னை ஓர் உலகாயதனாகக் கருதவும் செய்யலாம் . ஆனால் அவையெல்லாம் குறுகிய காலத்திற்குத்தான். நாத்திகம் உங்கள் ரத்தத்தில் இல்லை. உங்கள் அமைப்பில், உங்களுள் இல்லாத ஒன்றை உங்களால் நம்ப முடியாது. அப்படி நீங்கள் நம்ப முயல்வது ஒரு பயனற்ற வேலை . அத்தகைய காரியங்களைச் செய்ய முயலாதீர்கள். நான் இளைஞனாக இருந்தபோது ஒரு முறை நானும் இந்த முயற்சியில் இறங்கினேன். ஆனால் முடியவில்லை, வாழ்க்கை குறுகியது: ஆன்மா அழியாதது, என்றும் இருப்பது . ஒன்று மட்டும் நிச்சயம் -அது மரணம். எனவே உயர்ந்ததோர் லட்சியத்தைக் கைக்கொள்வோம். அதற்காக நம் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிப்போம். இது நமது தீர்மானமாக இருக்கட்டும். ‘ தன் மக்களின் மோட்சத்திற்காக மீண்டும் மீண்டும் வருகின்ற இறைவன்-” இவை நமது சாஸ்திரங்களின் வார்த்தைகள்! - மகத்தான அந்த ஸ்ரீகிருஷ்ணர் நம்மை ஆசீர்வதிப்பாராக, நம் லட்சியங்கள் நிறைவேறும் பாதையில் அழைத்துச் செல்வாராக!
வங்காளம்
..........................
கல்கத்தாவில்
......................................
சுவாமிஜி பிப்ரவரி 19-ஆம் நாள் கல்கத்தாவை அடைந்தார். வரவேற்பு விழா ஒரு வாரத்திற்குப் பின்னர் பிப்ரவரி 28-ஆம் நாள் நடைபெற்றது. தலைவரின் சுருக்கமான அறிமுகத்திற்குப் பின்பு வரவேற்புரையை வாசித்து, வெள்ளிப்பேழையில் வைத்து சுவாமிஜியிடம் கொடுத்தனர். அதன் பிறகு சுவாமிஜி பேசினார்.
வரவேற்புக்குப் பதிலுரை
...............................................................
ஒருவன் அண்டசராசரங்களில் தன் தனித்தன்மையை இழக்க விரும்புகிறான். ஒருவன் துறந்து செல்ல விரும்புகிறான், ஒருவன் பறந்து போக விரும்புகிறான். உடலுடனும் கடந்த காலத்துடனுமான எல்லா தொடர்புகளிலிருந்தும் தன்னை விலக்கிக் கொள்ள விரும்புகிறான். ஒருவன், தான் ஒரு மனிதன் என்பதைக்கூட மறப்பதற்காகத் தீவரமாக உழைக்கிறான். எனினும் அவனது இதய ஆழங்களில் ஒரு மெல்லோசை எழுகிறது. ஓர் இழை அதிர்கிறது. ஒரு மென்குரல் கேட்கிறது. மேலை நாடோ கீழை நாடோ சொந்த வீடு தான் மிகச் சிறந்தது என்று அது அவனிடம் கூறுகிறது. ஆங்கிலப் பேரரசின் தலைநகர் மக்களே! உங்கள் முன்னால் நான் நிற்கிறேன். ஒரு துறவியாக அல்ல, ஒரு மத போதகனாகவும் அல்ல. ஒரு கல்கத்தா சிறுவனாக, முன்பு உங்களிடம் எப்படிப்பேசிக் கொண்டிருந்தேனோ, அதே சிறுவனாக உங்கள் முன் வந்து நிற்கிறேன். ஆகா, இந்த நகரத்தின் தெருப் புழுதியில் நான் உட்கார விரும்புகிறேன். உட்கார்ந்து, என் சகோதரர்களே, பிள்ளைப்பருவத்தில் சுதந்திரத்தோடு என் மனத்தில் உள்ளதை யெல்லாம் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன், எனவே ”சகோதரன்” என்ற இணையற்ற வார்த்தையால் என்னை அழைத்தற்காக என் இதயம் நிறைந்த நன்றிகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஆம், நான் உங்கள் சகோதரன், நீங்கள் என் சகோதரர்கள், நான் மேலை நாட்டிலிருந்து இந்தியா புறப்படும்போது ஓர் ஆங்கிலேய நண்பர் என்னிடம், சுவாமி” நான்கு ஆண்டுகள் ஆடம்பரமான சிறப்பான சக்திவாய்ந்த மேலை நாடுகளில் பழகிய நீங்கள், இப்போது உங்கள் நாட்டைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். இந்தியாவை விட்டு வந்தபோது நான் அதை நேசித்தேன். ஆனால் இப்போது அதன் தூசி கூட எனக்குப் புனிதமானதாகிவிட்டது, அங்கு வீசும் காற்று எனக்குப் புனிதமானது. அது இப்போது எனது புனித பூமி, புண்ணியத்தலம் தீர்த்தத்தலம்” என்று மட்டுமே அதற்கு என்னால் பதில் கூற முடிந்தது.
கல்கத்தா நகர மக்களே! என் சகோதரர்களே! என் மீது நீங்கள் காட்டிய கருணைக்கு என்னால் நன்றி கூற இயலாது. அதோடு நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டியது இல்லையே, ஏனென்றால் நீங்கள் என் சகோதரர்கள் அல்லவா! ஒரு சகோதரன், ஓர் இந்துச் சகோதரன் செய்ய வேண்டிய கடமையைத் தான் நீங்கள் செய்தீர்கள். ஆகா, இத்தகைய குடும்பப் பிணைப்பு, இத்தகைய உறவு முறைகள், இத்தகைய அன்பு எல்லாம் நம் தாய் நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் எங்குமே இல்லை.
சர்வ மத மகாசபை ஒரு பெரிய நிகழ்ச்சி, சந்தேகமே இல்லை. அந்தக் கூட்டத்தை நடத்தியவர்களுக்கு நமது நாட்டின் பல நகரங்களிலிருந்தும் நாம் நன்றி செலுத்தினோம், நம்மிடம் அவர்கள் காட்டிய கனிவிற்கு நமது எல்லா நன்றிகளும் பொருத்தமானதே. ஆனால் அது பற்றிய சில உண்மைகளைக் கூற என்னை அனுமதியுங்கள். ஏறி சவாரி செய்ய அவர்களுக்கு ஒரு குதிரை வேண்டியிருந்தது.கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களைச் சற்றே தலைகுனியச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக அந்த மாநாட்டைப் பயன்படுத்த அங்குள்ள சிலர் விரும்பினர். ஆனால் விதியோ அது வேறுவிதமாக நடக்க வேண்டும் என்றிருந்தது.அப்படி நடக்காமலிருக்கவும் முடியாது. அவர் களுள் பலரும் கனிவுடன் தான் பழகினார்கள். அவர்களுக்கு வேண்டிய அளவு நன்றி கூறிவிட்டோம்.
அமெரிக்காவில் எனது செய்தியும் சர்வமத மகாசபைக்காக இருக்கவில்லை. அந்தச்சபை என்பது வழியில் வந்து சேர்ந்த ஒன்று, அது ஓர்ஆரம்பம், ஒரு வாய்ப்பு மட்டுமே. அதற்காக அந்தப் பேரவையின் உறுப்பினர்களுக்கு நமது மனமார்ந்த நன்றி! ஆனால் நாம் உண்மையில் நன்றிக்கடன் பட்டிருப்பது என்னவோ கனிவுமயமான இதயம் கொண்ட விருந்தினரை உபசரிக்கின்ற உள்ளம் கொண்ட அமெரிக்காவின் மகத்தான மக்களுக்குத்தான். மாபெரும் நாடாகிய அந்த அமெரிக்காவில் தான் உலகில் வேறு எந்த நாட்டையும் விட சகோதரத்துவம் வளர்ந்திருக்கிறது. ஓர் அமெரிக்கன் உங்களுடன் ரயிலில் ஐந்து நிமிடம் பயணம் செய்தால் போதும் அவன் உங்களுக்கு நண்பனாகிவிடுவான். அடுத்த நிமிடம் உங்களைத்தன் வீட்டில் விருந்திற்குஅழைப்பான். தன் வாழ்வின் ரகசியங்களை உங்களிடம் திறந்து விடுவான். இது அமெரிக்க இதயத்தின் குணம். நாமும் வெகுவாகப் பாராட்டுகிறோம். அவர்கள் என்னில் காட்டிய கனிவை வார்த்தைகளால் விளக்க முடியாது. அவர்கள் என்னை எவ்வளவு அன்பாக, இதமாக நடத்தினார்கள் என்பதை நான் சொல்லத் தொடங்கினால் முடிவதற்குப் பல ஆண்டுகள் ஆகும்.
அது போலவே அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மறுகரையில் உள்ள மற்ற நாட்டிற்கும் நம் நன்றிகள் உரித்தாகுக. ஆங்கிலேயர்களிடம் எனக்கு இருந்ததைவிட அதிக வெறுப்புடன் ஒருவர் அந்த ஆங்கில மண்ணில் காலடி வைத்திருக்க முடியாது. இந்த மேடையில் அமர்ந்திருக்கின்ற என் ஆங்கிலேய நண்பர்களே அதற்குச் சாட்சி. ஆனால் அவர்களுடன் அதிக நாள் வாழவாழ, அந்த நாட்டின் தேசிய வாழ்க்கையாகிய எந்திரம் வேலை செய்கின்ற விதத்தைப் பார்த்தபோது அவர்களிடம் கலந்து பழகியபோது, அந்த நாட்டின் இதயத்துடிப்பு எங்கே இருக்கிறது என்பதை நான் அறிந்தபோது மிக அதிகமாக அவர்களை நேசிக்க ஆரம்பித்தேன். என் சகோதரர் களே!இப்போது இங்கே என்னைவிட ஆங்கிலேயர்களை அதிகமாக நேசிப்பவர்கள் யாரும் இருக்க முடியாது.
அங்கே என்ன நடக்கிறது என்பதை ப் பார்க்க வேண்டும், அவர்களோடு கலந்து பழகவேண்டும். நம் தேசியத் தத்துவமான வேதாந்தம், எல்லா கஷ்டங்களுக்கும் எல்லா துன்பங்களுக்கும் ஒரே காரணத்தைச் சுருக்கமாக அறியாமை என்று கூறுகிறது. இங்கேகூட நமக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கும் முக்கியக்காரணம் இந்த அறியாமை தான். அவர்களை நாம் அறிந்து கொள்ளவில்லை, நம்மை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை என்பது தான்.
துரதிர்ஷ்டவசமாக, மேலை நாட்டினருக்கு ஆன்மீகம், ஏன், ஒழுக்கம் கூட, எப்போதும் உலக ஆதாயத்துடன் தொடர்பு கொண்டதாகவே உள்ளது. ஆங்கிலேயனோ அல்லது வேறெந்த மேலைநாட்டைச் சார்ந்தவனோ நம் நாட்டிற்கு வரும்போது இங்கே வறுமையும் துன்பமுமே அவனுக்குத்தெரிகிறது. எனவே இங்கே மதமோ, ஏன், ஒழுக்கமோ கூட இருக்க முடியாது என்று உடனே முடிவுகட்டி விடுகிறான். அவனுக்கு அவனது அனுபவம் உண்மையே. கடுமையான குளிர் போன்ற காலநிலைகளின் காரணமாகவும், மற்றும் பல சூழ்நிலைகளின் காரணமாகவும் ஐரோப்பாவில் வறுமையும் பாவமும் ஒன்றோடொன்று சேர்ந்தே உள்ளன. ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல. இந்தியாவில் ஒருவன் எந்த அளவுஏழையோ அந்த அளவிற்கு ஒழுக்கம் நிறைந்தவனாக இருப்பதையே நான் காண்கிறேன்.
இதைப்புரிந்து கொள்ள காலம் ஆகும். இந்திய தேசிய வாழ்வின் ரகசியமான இதனைப்புரிந்து கொள்வதற்காகச் சற்று நின்று நிதானிக்கின்ற வெளி நாட்டினர் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இந்த நாட்டை ஆராய்வதற்கும் அறிந்து கொள்வதற்குமான பொறுமை மிகச் சிலரிடமே உள்ளது. இங்கு, இங்கு மட்டுமே, இந்த ஓர் இனத்தில் மட்டுமே வறுமை என்பது குற்றமாக இல்லை, வறுமை என்பது ஒரு பாவமாக இல்லை. இந்த ஓர் இனத்தில் மட்டும் தான் வறுமை என்பது குற்றமாக்கப் படாதது மட்டுமல்ல, வறுமை தெய்வீகமாக்கப் பட்டுள்ளது. இந்த நாட்டில் தான் பிச்சைக்காரனின் உடை மிகச் சிறந்த உடையாகக் கருதப்படுகிறது.
அது போலவே மேலை நாட்டின் சமுதாய அமைப்புகளையும் பொறுமையோடு ஆராய்ந்து பார்க்க வேண்டுமே தவிர, அவசரப்பட்டுப் பைத்தியக்காரத்தனமான முடிவுகளுக்கு வந்துவிடக்கூடாது. ஆண்களும் பெண்களும் நெருங்கிப் பழகுதல் போன்ற அவர்களின் பல்வேறு பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் போன்ற அனைத்திற்கும் அவர்களைப்பொறுத்தவரை பொருள் உள்ளது. மகத்தான சிறப்புகள் உள்ளன. பொறுமையாக ஆராய்ந்தால் அவைகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதற்காக நாம் அவர்களின் பழக்க வழக்கங்களை ஏற்க வேண்டும் என்றோ, அல்லது அவர்கள் நமது பழக்கங்களை ஏற்கவேண்டும் என்றோ நான் கூறவில்லை. ஒவ்வோர் இனத்தின் பழக்க வழக்கங்களும் நடைமுறைகளும் அந்த இனத்தின் நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் பொறுமையான வளர்ச்சியால் தோன்றியவை. அவை ஒவ்வொன்றும் ஆழமான பொருள் பொதிந்தவை. எனவே நாம் அவர்களின் பழக்க வழக்கங்களைக்கேலி செய்ய வேண்டாம். அவர்களும் நமது பழக்க வழக்கங்களைக்கேலி செய்ய வேண்டாம்.
இந்தக் கூட்டத்தில் மற்றொரு கருத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். அமெரிக்காவைவிட இங்கிலாந்தில் என்வேலை மிகவும் திருப்திகரமாக உள்ளது. ஆங்கிலேயர்கள் துணிவுள்ளவர்கள், தைரியம்வாய்ந்தவர்கள், உறுதியானவர்கள், அவர்களில் தலை ஓடு- இந்த வார்த்தையை நான் பயன்படுத்த முடியுமானால் –ஆம் அவர்களின் தலை ஓடு மற்றவர்களுடையதைவிடச் சிறிது கனமாக இருக்கிறது. அவன் ஒரு முறை அதற்குள் ஒரு கருத்தைப்போட்டுவிட்டால், அது வீணாவதே இல்லை. அந்த இனத்தின் அளவற்ற செயல்முறைத்திறனும் ஆற்றலும் அந்தக் கருத்தை முளைக்கச்செய்து விரைவிலேயே பலனளிக்கச் செய்கிறது. வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை- அந்த அளவற்ற செயல்முறை த் திறன், அந்த அளவற்ற வீர்யம்- இவற்றை நீங்கள் வேறெங்கும் காண முடியாது. அவர்களிடம் கற்பனைவளம் குறைவு. ஆனால் செயல்திறன் அதிகம். இந்த ஆங்கிலேய இதயத்தின் ஆழத்தை அதன் முக்கியப் பரவாகத்தை யார் அறிவார்கள்? அங்கே தான் எத்தனை கற்பனை வளம், எத்தனையெத்தனை உணர்ச்சிகள்! அது வீரர்களின் நாடு. அவர்கள் தான் உண்மையான ஷத்திரியர்கள். அவர்கள் கற்பது உணர்ச்சிகளை மறைத்துக்கொள்ளவே, ஒரு போதும் வெளியே காட்டுவதற்காக அல்ல, அதற்கான கல்வியே குழந்தைப் பருவத்திலிருந்து அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆங்கிலேயன், ஆண்,ஏன், ஆங்கிலேயப்பெண் கூட, உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதை எளிதில் நீங்கள் பார்க்க முடியாது. தைரியம் மிகுந்த வங்காளியைக் கூடத் தடுமாற வைக்கின்ற வேலைகளை ஆங்கிலப்பெண்கள் சர்வ சாதாரணமாகச் செய்வதையும் கடினமான காரியங்களை நிர்வகிப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆங்கிலேய இதயத்தின் வீரம், என்றும் இத்தகைய புறத்தோற்றத்திற்குள், தீரம் என்ற போர்வைக்குப் பின்னால் அதன் ஆழத்தில் உணர்ச்சிப்பேரூற்று இருக்கவே செய்கிறது. அதை எப்படி அடைவது என்பதை மட்டும் நீங்கள் அறிந்து கொண்டால், நீங்கள் அவர்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டு கலந்து பழகினால் அவர்கள் தங்கள் இதயத்தைத் திறப்பார்கள், என்றென்றைக்குமாக உங்கள் நண்பர்களாகி விடுவார்கள். உங்கள் வேலையாட்களாகி விடுவார்கள். எனவே என் கருத்துப்படி, என் வேலை வேறு எங்கேயும் விட இங்கிலாந்தில் தான் மிகுந்த மன நிறைவைத் தருவதாக உள்ளது. நான் நாளையே இறந்து போனாலும் இங்கிலாந்திலுள்ள பணி அழிந்துபோகாது. மாறாக வளர்ந்து கொண்டே போகும், என்பதில் எனக்கு உறுதி உள்ளது.
சகோதரர்களே! என் இதய ஆழத்திலுள்ள மற்றொரு பகுதியைத்தொட்டு விட்டீர்கள். என் இதய ஆழங்களின் மிகவும் உணர்ச்சிமயமான பகுதி அது. வாழ்வில் என் ஆச்சாரியர், என் குரு, என் தலைவர், என் லட்சியம், என் கடவுள் எல்லாமுமாகிய ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி நீங்கள் இங்கே குறிப்பிட்டதே அது. எண்ணங்களாலோ வார்த்தைகளாலோ செயல்களாலோ என்னால் இந்த உலகத்தில் ஏதாவது சாதிக்கப் பட்டிருக்கிறது என்றால், இந்த உலகத்தில் உள்ள ஒருவரையாவது காப்பாற்றக்கூடிய ஒரு வார்த்தை என் வாயிலிருந்து பிறந்தது என்றால், அதில் எனக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. எல்லாம் அவருடையவை. ஆனால் என் நாவிலிருந்து சாபங்கள் வந்திருக்குமானால், என்னிடமிருந்து வெறுப்பு வெளிப்பட்டிருக்குமானால், அவையெல்லாம் என்னுடையவை, அவருடையவை அல்ல,பலவீனமான அனைத்தும் என்னுடையவை, உயிர்த்துடிப்பைத் தருபவை, வலிமையைத் தருபவை, தூயவை, புனிதமானவை, அனைத்தும் அவர் தந்த உத்வேகத்தால் வந்தவை, அவரது வார்த்தைகள். ஆம் என் நண்பர்களே! அவரை இந்த உலகம் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. உலக வரலாற்றில் தீர்க்கதரிசிகளைப்பற்றியும் அவர்களுடைய வரலாறுகளையும் நாம் படித்திருக்கிறோம், பல நூற்றாண்டுகளாக அவர்களுடைய சீடர்கள் எழுதிய நுஸல்களின் மூலமாகவும் அந்தச் சீடர்களின் பணிகள் மூலமாகவும், அவை நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. அந்த மாபெரும் தீர்க்கதரிசிகளின் மகத்தான வரலாறுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சீரமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டே நம்மை அடைந்துள்ளன. ஆனால் யாருடைய வாழ்க்கையை நான் என் கண்களால் கண்டேனோ, யாருடைய நிழலில் நான் வளர்ந்தேனோ, யாருடைய திருவடிகளில் அமர்ந்து நான் அனைத்தையும் கற்றேனோ அந்த ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சரின் அருள் பிரகாசத்திற்கு யாரும் ஈடாக மாட்டார்கள். நண்பர்களே-
பரத குலத்தில் உதித்தவனே, எப்போதெல்லாம் தர்மம் குன்றி, அதர்மம் மேலெழுகிறதோ, அப்போதெல்லாம் நான் உடல் தரிக்கிறேன், நல்லர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகந்தோறும் நான் அவதாரம் செய்கிறேன், என்ற பிரபலமான சுலோகங்கள் நீங்கள் அறிந்ததே.
இன்னொன்றையும் நீங்கள் புரிந்து கொண்டாக வேண்டும். அத்தகையோர் அவதாரம் இன்று நம்முன் நிகழ்ந்திருக்கிறது. ஆன்மீகத்தின் இத்தகைய பேரலையொன்று வருமுன் ஆற்றல் குறைந்த பல்வேறு சிறிய சுழிகள் சமுதாயத்தில் அங்கங்கே தோன்றுகின்றன. அந்தப் பேரலை கிளம்பும்போது முதலில் யாருக்கும் தெரிவதில்லை. யாராலும் உணரப்படுவதில்லை.யாருடைய சிந்தனைக்கும் எட்டுவதில்லை. பின்னர் அது பரிமாணத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி, சிறு சிறு சுழிகள் அனைத்தையும் விழுங்குவது போல் தன்னுள் அடக்கிய படி, மிகவும் பெரிதாகி, மாபெரும் அலையாக எழுந்து, யாராலும் எதிர்க்க முடியாத ஆற்றலோடு சமுதாயத்தின் மீது வீழ்ந்து பரவுகிறது. அத்தகைய நிகழ்ச்சி இப்போது நம் கண்முன் நடந்து கொண்டிருக்கிறது. உங்களுக்குக் கண்கள் இருந்தால் நீங்கள் காண்பீர்கள். உங்கள் இதயம் திறந்திருந்தால், நீங்கள் அதைப் பெறுவீர்கள், உண்மையைத்தேடுபவர்களாக இருந்தால் அதைக் காண்பீர்கள். இன்றைய அந்த அறிகுறிகளைக் காணாதவன் குருடன், குருடனே,
ஆகா, ஓர் ஏழை பிராமண குலத்தில் பிறந்த இந்தச் சிறுவனை உங்களுள் மிகச் சிலரே கேள்விப்பட்டிருக்கக் கூடிய எங்கோ ஒதுக்குப்புறத்திலிருக்கும் ஒரு குக்கிராமத்தில் பிறந்த இந்தச் சிறுவனை, இந்த நாட்டின் வழிபாட்டை, எல்லாம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் தூற்றிக் கொண்டிருந்த நாடுகள் எல்லாம் வழிபடுகின்றன. யாருடைய சக்தி இது? என் சக்தியா, உங்கள் சக்தியா? இங்கே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சராக வெளிப்பட்ட சக்தியே இது, அதைத்தவிர வேறு எதுவும் இல்லை.ஏனெனில் நீங்கள் , நான், மகரிஷிகள்,தீர்க்க தரிசிகள், ஏன் அவதார புருஷர்கள், பிரபஞசம் மற்றும் எல்லாமே ஒரு சக்தியின் ஏறக்குறைய தனிப்படுத்தப் பட்ட, ஏறக்குறைய குவிக்கப்பட்ட வெளிப்பாடுகளே தவிர வேறல்ல. இப்போது தோன்றியிருப்பது அளவற்ற சக்தியின் வெளிப்பாடு. அதனுடைய செய்ல்பாடுகளில் வெறும் ஆரம்பத்தையே நாம் இப்போது காண்கிறோம். இந்தத் தலைமுறை முடிவதற்கு முன், நீங்கள் அந்த ஆற்றலின் அதியற்புதமான செயல்பாடுகளைக் காண்பீர்கள்.
இந்தியாவின் மறுமலர்ச்சிக்கான தகுந்த தருணத்தில் அது வந்திருக்கிறது. ஏனென்றால் எந்த ஆதார சக்தி இந்தியாவை எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கச் செய்யுமோ அதை நாம் அவ்வப்போது மறந்து விடுகிறோம்.
ஒவ்வொரு நாடும் செயல்படுவதற்கு தனக்கென்று தனிப்பட்ட வழியைக்கொண்டிருக்கிறது. சில நாடுகள் அரசியல் மூலம் வேலை செய்யும். சில, சமுதாயச் சீர்த்திருத்தத்தின் மூலம் வேலை செய்யும். சில, வேறு வழிகளில் வேலை செய்யும். நம்மைப் பொறுத்த வரை நாம் செயல்படுவதற்கான ஒரே வழி மதம். மதத்தைக் கூட அரசியலின் மூலம் தான் ஆங்கிலேயர்கள் புரிந்து கொள்வார்கள். அமெரிக்கர்களோ, ஒரு வேளை சமுதாய சீர்திருத்தத்தின் மூலம் தான் மதத்தையே புரிந்து கொள்வார்கள். ஆனால் அரசியலைக் கூட மதத்தின் வாயிலாகக் கொடுத்தால் தான் இந்துவால் புரிந்து கொள்ள முடியும்.சமூக இயலும் மதத்தின் வழியே தான் வரவேண்டும். எல்லாமே மதத்தின் மூலமாகத்தான் வந்தாக வேண்டும். ஏனென்றால் அது தான் ஆதார சுருதி. மற்றவையெல்லாம் நம்தேசிய சங்கீதத்தின் பல்வேறு ராகங்கள். அவ்வளவு தான். அதற்கே அபாயம் வந்துவிட்டது.நமது தேசிய வாழ்க்கையின் இந்த ஆதாரசுருதியையே மாற்றிவிடப் போகிறோமோ என்று தோன்றியது. நமது இருப்பிற்கே முதுகெலும்பு போன்ற ஆன்மீகத்தை மாற்றிவிட்டு, அதற்குப் பதிலாக அரசியலை முதுகெலும்பாகக் கொள்ள முயற்சி செய்வது போல் தோன்றியது. அந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால் முழு நாசமே அதன் விளைவாக இருந்திருக்கும். ஆனால் அப்படி நடப்பது விதியாக இருக்கவில்லை. அதனால் தான் இந்தச் சகதி வெளிப்பட்டிருக்கிறது.
இந்த மாபெரும் ரிஷியை நீங்கள் எந்த வகையில் புரிந்து கொள்ளப்போகிறீர்கள் என்ற கவலை எனக்குக் கிடையாது. நீங்கள் அவருக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கப் போகிறீர்கள் என்பதும் பெரிய விஷயம் அல்ல.ஆனால் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் இல்லாதவகையில் ஓர் அற்புதமான சக்தி இப்போது இங்கே வெளிப்பட்டிருக்கிறது என்ற உண்மையை உங்களிடம நேருக்குநேர் கூறிச் சவால் விடுகிறேன். சக்தியை ஆராய்வதும் , இந்தச் சக்தியின் மூலமாக இந்தியாவின் மறுமலர்ச்சிக்கும் நன்மைக்கும், அதே போல் மனிதகுலம் முழுவதன் நன்மைக்கும் என்னென்ன நடந்துள்ளன என்பதை அறிவதும் இந்துக்கள் என்ற நிலையில் உங்கள் கடமை.ஆகா, உலகம் தழுவிய மதம் பல்வேறு பிரிவுகளிடையே சகோதரத்துவம் பற்றிய கருத்துக்களைபற்றிச் சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்கும் வெகு காலத்திற்கு முன்பே, இங்கே இந்த நகரத்தின் அருகிலேயே, தமது வாழ்க்கையை ஒரு மத மகாசபையாக அமைந்திருந்த ஒரு மனிதர் வாழ்ந்தார்.நமது சாஸ்திரங்களில் உள்ள மிகவுயர்ந்த லட்சியம் உருவமற்ற கடவுள் கருத்தாகும். ஆனால் இங்கே இருக்கும் ஒவ்வொரு வரும்கடவுளை உருவமற்ற நிலையில் உணரும் அளவிற்கு உயர்ந்தவர்களாக இருந்திருந்தால் அது வேறு விஷயம். ஆனால் அது நடக்க முடியாது. பெரும்பான்மையான மக்களுக்கு உருவக் கடவுள் லட்சியம் முற்றிலும் அவசியமான ஒன்று. வாழ்வின் இத்தகைய மாபெரும் லட்சியங்களில் ஒன்றின் கீழ் ஆர்வத்துடன் திரளாமல் எந்த நாடும் முன்னேற முடியாது. மகத்தான நாடாக முடியாது. செயல்படக்கூட முடியாது. அரசியல் லட்சியங்கள், அரசியல் லட்சியங்களின் பிரதிநிதிகளான தலைவர்கள், ஏன் சமுதாய லட்சியங்கள் மற்றும் பொருளாதார லட்சியங்கள் எதற்குமே இந்தியாவில் எந்த ஆற்றலும் கிடையாது. நமக்கு நம் முன்னால் வேண்டுவது ஆன்மீக லட்சியங்கள், மகத்தான ஆன்மீகச்செம்மல்களைச் சுற்றியே நாம் ஒன்று சேர விரும்புகிறோம்.
நமது தலைவர்கள் நிச்சயம் ஆன்மீகவாதிகளாகவே இருக்க வேண்டும். அத்தகைய தலைவராக நமக்கு அளிக்கப்பட்டவரே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். என் வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்.- இந்த நாடு எழுச்சி பெற வேண்டுமானால், அது அவர் பெயரின் கீழ் உற்சாகத்தோடு திரள வேண்டும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைப் பிரச்சாரம் செய்வது நீங்களா, நானா, அல்லது வேறு யாராவதா என்பது பெரிதல்ல. ஆனால் நான் அவரை உங்கள் முன் வைக்கிறேன், எடைபோட வேண்டியவர்கள் நீங்களே.நம் இனத்தின் நன்மைக்காக , நம் நாட்டின் நன்மைக்காக, அதை இப்போதே செய்யுங்கள். வாழ்வின் இந்த மாபெரும் லட்சியத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை உடனடியாகத் தீர்மானியுங்கள். ஒருவிஷயம், அவரது வாழ்க்கை, இதுவரை நீங்கள் கண்ட , இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், நீங்கள் இதுவரை படித்த மகா புருஷர்களின் வாழ்க்கைகளை எல்லாம் விட மிகமிகத்தூய்மையானது. உங்களால் படிக்க முடிந்த, ஒருவேளை உங்களால் பார்க்க முடிந்த ஆன்மசக்தி வெளிப்பாடுகள் எதை விடவும் இது மிகமிகச் சிறப்பானது. மகோன்னதமானது. உங்கள் முன் அந்த உண்மை இருக்கிறது. அவர் மறைந்த பத்தே ஆண்டுகளுள் இந்தச் சக்தி உலகையே வலம் வந்து விட்டது. அந்த உண்மை உங்கள் முன்னே தெரிகிறது. கடமையால் உந்தப்பட்டு, நம் இனத்தின் நன்மைக்காக, நமது மதத்தின் நன்மைக்காக அந்த மகத்தான ஆன்மீக லட்சியத்தை நான் உங்கள் முன் வைக்கிறேன்.
என்னை வைத்து அவரை எடைபோடாதீர்கள். நான் வெறும் ஒரு பலவீனமான கருவி. என்னைப் பார்த்து அவரது குணநலனை எடைபோடாதீர்கள். நானும் சரி, மற்ற அவரது எந்தச் சீடர்களானாலும் சரி, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் செலவழித்தாலும் அவரது உண்மைத்தன்மையில் லட்சத்தில் ஒரு பங்கைக்கூட வாழமுடியாது. அவரது வாழ்க்கை அவ்வளவு மகத்தானது. ஆதலால் நீங்களே அவரை எடைபோடுங்கள். உங்கள் இதய ஆழங்களினுள் நித்திய சாட்சியான பரம்பொருள் வீற்றிருக்கிறார். அந்த இறைவன், அதே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் நம் நாட்டின் நன்மைக்காகவும், நமது நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் மனித குலத்தின் நன்மைக்காகவும் உங்கள் இதயத்தை மலரச் செய்யட்டும்.
இதிலிருந்து அந்தக் கருத்து விரிவடைகிறது. நீங்கள் குறிப்பிட்டதைப்போல் , நாம் உலகை வெல்ல வேண்டும், வென்றேயாக வேண்டும். அதைவிடக் குறைவானது எதுவும் என் லட்சியமல்ல. இது மிகப்பெரியதாக இருக்கலாம். உங்களுள் பலரையும் பிரமிக்க வைக்கலாம். ஆனால் இதைச் செய்தேயாக வேண்டும். உலகை நாம் வெல்ல வேண்டும். அல்லது சாகவேண்டும். வேறுவழியில்லை. வாழ்க்கையின் அறிகுறி விரிவடைதல். நாம் வெளியே சென்றாக வேண்டும். விரிவடைய வேண்டும். வாழ்க்கையைக் காட்டுவோம், அல்லது அழுகிச் சீரழிந்து சாவோம். வேறு எந்த வழியும் இல்லை. இந்த இரண்டு ள் ஒன்றைத்தேர்ந்தெடுங்கள்-வாழ்வு அல்லது சாவு.
நம் நாட்டில் நம்மிடையே நிலவுகின்ற அற்பத்தனமான பொறாமையையும், சண்டைச்சச்சரவுகளையும் பற்றி நமக்குத்தெரியும். என் வார்த்தையை நம்புங்கள்.-உலகம் முழுவதுமே இதே கதை தான். அரசியலைத்தங்கள் வாழ்வாகக் கொண்டுள்ள நாடுகள் தங்களைக் காத்துக்கொள்ள அயல்நாட்டுக்கொள்கைகளை வைத்துள்ளன. உள்நாட்டுச் சண்டை சச்சரவுகள் அளவை மீறும்போது, சண்டையிடுவதற்காக அயல் நாடுகளில் சிலரை அவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள். அப்போது உள்நாட்டுச்சண்டை நின்றுவிடுகிறது. இப்படி எந்த அயல்நாட்டுக்கொள்கையும் நம்மிடம் இல்லாததால் நமது சண்டைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. நமது சாஸ்திரங்களில் உள்ள உண்மையான உலக நாடுகளுக்கு உபதேசிப்பதே நமது நிலையானஅயல்நாட்டுக்கொள்கையாக இருக்கவேண்டும். உங்களுள் அரசியல் சார்புள்ளவர்களைக்கேட்கிறேன்,-இந்தக்கொள்கை நம்மை ஓர் இனமாக ஒருங்கிணைக்கும் என்பதற்கு வேறு ஏதாவது நிரூபணம் உண்டா? இங்கு திரண்டுள்ள கூட்டமே போதிய சாட்சியாக இல்லையா?
இரண்டாவதாக, இத்தகைய சுயநல விஷயங்களை விட்டு விட்டால் சுயநலமற்ற மேன்மையான உயிரோட்டமுள்ள உதாரணங்கள் நமக்குப் பின்னால் நிலைகொண்டுள்ளன. இந்தியாவின் துன்பத்திற்கும் வீழ்ச்சிக்குமான முக்கிய காரணங்களுள் ஒன்று, அது தன்னைக் குறுக்கிக்கொண்டதாகும். முத்துச்சிப்பி தன் வாயை இறுக்கமாக மூடிக் கொள்வது போல், தன்னிடமுள்ள செல்வங்களையும் பொக்கிஷங்களையும் பிற இனத்தினருக்குத் தர மறுத்ததாகும். ஆரிய இனத்திற்கு வெளியில் தாகத்தால் தவிக்கின்ற பிற நாடுகளுக்கு , உயிர்ச் சக்தியளிக்கின்ற, உண்மைகளைத் தர மறுத்ததாகும். நாம் வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை, சென்று பிற இனங்களையும் நம்மையும் ஒப்பிட்டுப் பார்க்கவும் இல்லை- நமது வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணம்.
தற்போது இந்தியாவில் ஏதோ காணப்படுகின்ற சிறிய விழிப்புணர்ச்சியும் உயிர்த்துடிப்பும், இப்படி தனிமைப்பட்டு நின்ற நிலையை உடைத்து ராஜாராம் மோன்ராய் வெளியேறிய நாளிலிருந்து தொடங்கியதாகும். இது நீங்கள் அறிந்ததே. அந்த நாளிலிருந்து இந்திய வரலாற்றில் ஒரு திருப்பம் உண்டாயிற்று.அது இப்போது நாள்தோறும் அதிவிரைவாக வளர்ந்து வருகிறது. கடந்த காலத்தில் நம்மிடம் சிறு ஓடைகளே ஓடிக் கொண்டிருந்தன என்றால் இப்போது பெருவெள்ளமே வரப்போகிறது. யாராலும் அதைத்தடுக்க முடியாது.
எனவே நாம் வெளி நாடுகளுக்குச் செல்ல வேண்டும். கொடுத்தலும் வாங்கலுமே வாழ்க்கையின் ரகசியம். நாம் எப்போதும் வாங்கிக்கொண்டு தான் இருக்க வேண்டுமா? மேலை நாட்டினரின் காலடியில் உட்கார்ந்து எல்லாவற்றையும் மதத்தைக்கூட அவர்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டுமா? எந்திரங்கள் பற்றி அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம், வேறு பலவற்றையும் அவர்களிடமிருந்து கற்க லாம். நாமும் அவர்களுக்குச் சிலவற்றைக் கற்றுத்தர வேண்டும், அது நமது மதம், நமது ஆன்மீகம்
முழுமையானதொரு நாகரீகத்திற்காக உலகம் காத்துக்கொண்டிருக்கிறது. அதற்கான அருஞ்செல்வங்கள் இந்தியாவிலிருந்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கின்றன. இந்த இனத்தின் ஈடிணையற்ற பாரம்பரியமான ஆன்மீகத்திற்காக உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.நூற்றுக்கணக்கான ஆண்டுகள் துன்பங்களையும் சீரழிவுகளையும் சந்தித்த பின்னரும் நம் நாடு நெஞ்சோடு அணைத்துக் காப்பாற்றிக்கொண்டிருக்கின்ற அந்தப் புதையலுக்காக உலகம் காத்துக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர்கள் விட்டுச்சென்றுள்ள அற்புதப் புதையலுக்காக வெளிநாடுகள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கின்றன என்பது உங்களுக்குத்தெரியாது. இங்கோ நாம் வெறும் பேச்சுக்களிலும் சண்டைச்சச்சரவுகளிலும் புனிதமானவற்றை ஏளனம் செய்வதிலும் கேலி செய்வதிலும் காலத்தை வீணடிக்கிறோம். புனிதமானவற்றை க்கேலி செய்வது என்பது ஏறக்குறைய நமது தேசியத்தீமையாகவே மாறிவிட்டது. இந்தியாவில் நமது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருக்கின்ற அழுதத்தின் ஒரு சிறு துளியைப் பருகுவதற்காக நம் நாட்டின் எல்லைக்கு வெளியே லட்சக்கணக்கானோர் எவ்வளவு பசித்துடிப்புடன், எவ்வாறு கைகளை நீட்டிக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி நாம் சிறிதே அறிவோம்.
எனவே நாம் வெளிநாடுகளுக்குச்சென்றாக வேண்டும். அவர்கள் தரக்கூடிய ஏதாவதைப் பெற்றுக்கொண்டு, பதிலாக நாம் அவர்களுக்கு ஆன்மீகத்தை அளிக்கவேண்டும். ஆன்மீகத்தின் அற்புத சாம்ராஜ்யத்தை அவர்களுக்கு அளித்து, அதற்குப் பதிலாக லௌகீகத்தின் அற்புத சாம்ராஜ்யத்தை நாம் பெற்றுக்கொள்வோம். நாம் எப்போதுமே மாணவர்களாக இருக்கக்கூடாது, ஆசிரியர்களாகவும் இருக்க வேண்டும். சமத்துவம் இல்லாமல் நட்பு இல்லை. ஒருவர் எப்போதும் ஆசிரியராகவும் மற்றொருவர் எப்போதும் அவர் காலடியில் அமர்ந்தபடியும் இருந்தால் சமத்துவம் ஏற்பட முடியாது. ஆங்கிலேயர்கள் அல்லது அமெரிக்கர்களோடு நீங்கள் சமமாக இருக்க விரும்பினால், அவர்களிடம் கற்றுக்கொள்வதைப்போல் நீங்கள் அவர்களுக்குக் கற்றுத்தரவும் வேண்டும். வரப்போகின்ற நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு உலகத்திற்குக் கற்றுத்தரவும் நம்மிடம் ஏராளமாக உள்ளன. இதைச் செய்தாக வேண்டும்.
நம் ரத்தத்தில் வேகமும் உற்சாகமும் வேண்டும். வங்காளிகளாகிய நாம் கற்பனைவளம் மிக்கவர்கள் என்று பாராட்டப்படுகிறோம் , அது நமக்கு உண்டென்றே நானும் நம்புகிறேன்.கற்பனை ஆர்வம் கொண்டதும் உணர்ச்சி வசப்படுகின்றதும் ஆனதோர் இனம் என்று நாம்கேலிக்கு உள்ளாகி வருகிறோம். நண்பர்களே, நான்சொல்வதைக் கேளுங்கள் . உண்மைதான். அறிவு என்பது மகத்தான து தான். ஆனால் அது குறிப்பிட்ட சில எல்லைக்குள் நின்றுவிடுகிறது. ஆழ்ந்த உணர்ச்சிகளின் மூலம் தான் மிக உயர்ந்த ஆன்மீக ரகசியங்கள் அடையப்படுகின்றன. எனவே உணர்ச்சிவசப் படுகின்றவனான வங்காளி தான் இந்தப் பணியைச்செய்ய வேண்டும்.
உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான் நிபோதத. எழுந்திருங்கள், விழித்திருங்கள். விரும்பிய லட்சியத்தை அடையும் வரை நில்லாது செல்லுங்கள். கல்கத்தா இளைஞர்களே எழுந்திருங்கள், விழித்திருங்கள். காலம் கனிந்துள்ளது. நம் முன்னர் எல்லா வழிகளும் திறக்கின்றன. தைரியசாலியாக இருங்கள். பயப்படாதீர்கள் . நம்முடைய சாஸ்திரங்களில் மட்டுமே கடவுளுக்கு அபீ, அபீ- பயமற்றவர்” என்ற அடைமொழி தரப்பட்டுள்ளது. நாமும் அபீ- பயமற்றவர்கள் ஆகவேண்டும். அப்போது நமது காரியம் நிறைவேறிவிடும். எழுந்திருங்கள்! விழித்திருங்கள். ஏனெனில் தாய்நாட்டிற்கு இந்த மகத்தான தியாகம் தேவைப்படுகிறது. இளைஞர்களால் தான் இதைச்செய்யமுடியும் இளமைத்துடிப்பு நிறைந்த, ஆற்றல்மிக்க, வலிமை வாய்ந்த, உரமேறிய உடல் கொண்ட, அறிவு நிறைந்த- இவர்களுக்கே இந்தப்பணி. அத்தகைய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கல்கத்தாவில் உள்ளனர். நீங்கள் குறிப்பிட்டது போல், நான் எதையாவது சாதித்திருப்பது உண்மையானால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நான் கல்கத்தா தெருக்களில் விளையாடிக்கொண்டிருந்த, ஒன்றுக்கும் உதவாததொரு சிறுவனே நான், நானே இவ்வளவு செய்திருக்கிறேன் என்றால், நீங்கள் இன்னும் எவ்வளவு செய்ய முடியும்? எழுந்திருங்கள்! விழித்திருங்கள். உலகம் உங்களை அழைக்கிறது.
இந்தியாவின் மற்ற பகுதிகளில் அறிவு இருக்கிறது. பணம் இருக்கிறது. ஆனால் உற்சாகம் என் தாய்பூமியில் மட்டும் தான் இருக்கிறது. அது வெளிவர வேண்டும். எனவே கல்கத்தா இளைஞர்களே ரத்தத்தில் உற்சாகம் கொப்பளிக்க எழுந்திருங்கள். நீங்கள் ஏழைகள், நண்பர்கள் யாரும் இல்லாதவர்கள் என்று நினைக்காதீர்கள். ஆ, பணம் மனிதனை உண்டாக்குவதை யார் கண்டது! மனிதனே பணத்தை உருவாக்குகிறான். இந்த உலகமே மனிதனின் ஆற்றலால் தான் உருவாக்கப்பட்டுள்ளது. உற்சாகத்தின் ஆற்றலால், நம்பிக்கையின் ஆற்றலால்தான் உருவாக்கப்பட்டுள்ளது.
உபநிடதங்களில் மிகவும் இனிய ஒன்றாகிய கடோப நிடதத்தைப் படித்தவர்களுக்குத்தெரியும். மன்னன் ஒருவன் ஒரு பெரிய யாகம் செய்யத் துவங்குகிறான். நல்ல பொருட்களைத்தானம் செய்வதற்குப் பதிலாக அவன் பயனிழந்த பசுக்களையும் குதிரைகளையும் கொடுக்கிறான். அப்போது அரசனின் மகனாகிய நசிகேதனின் இதயத்தில் சிரத்தை நுழைகிறது.என்று அந்த நூல் அழகாகக் கூறுகிறது.. சிரத்தை என்னும் வடமொழிச்சொல்லை நான் உங்களுக்கு மொழிபெயர்க்கவில்லை. மொழிபெயர்த்தால் அது தவறாகவே இருக்கும். புரிந்து கொள்ள வேண்டியதோர் அற்புதமான சொல் அது. பல விஷயங்கள் அதைச் சார்ந்தே இருக்கின்றன. அது எப்படி வேலை செய்கிறது என்பதைப்பார்ப்போம்.
சிரத்தை இதயத்தில் நுழைந்தவுடனே நசிகேதன் தனக்குள், நான் பலரை விட உயர்ந்தவன், சிலரைவிடத் தாழ்ந்தவன், ஆனால் எதிலும் நான் கடைசியானவன் அல்ல, என்னாலும் சில காரியங்கள் செய்ய முடியும், என்று கூறிக் கொள்வதை நாம் காண்கிறோம்.அவனது தைரியம் வளர்கிறது. மனத்தில் நெடுங்காலமாக இருந்து வருகின்ற கேள்விக்கு, அதாவது மரணம் பற்றிய கேள்விக்கு விடை காண விரும்புகிறான் அவன். எமலோகம் சென்றால் தான் இந்தக்கேள்விக்கு விடை கிடைக்கும். எனவே அங்கு சென்றான். தைரியசாலியான அவன், அங்கே எமனுடைய வீட்டில் மூன்றுநாட்கள் காத்திருந்தான். விரும்பியதை அவன் எப்படிப்பெற்றான் என்பது உங்களுக்குத்தெரியும்.
இந்தச் சிரத்தைதான் நமக்குத்தேவை.ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது இந்தியாவிலிருந்து ஏறக்குறைய மறைந்தே விட்டது. அதனால் தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம். மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் எது வேறுபாட்டை உண்டாக்குகிறது என்றால் இந்தச் சிரத்தை தான், வேறு எதுவும் இல்லை. ஒருவனை மகத்தானவனாகவும் மற்றொருவனைப் பலவீனனாகவும் கீழானவனாகவும் எது ஆக்குகிறது என்றால் இந்தச் சிரத்தை தான். யார் தன்னைப் பலவீனன் என்று நினைக்கிறானோ அவன் பலவீனனாகவே ஆவான் என்பார் என் குருதேவர், உண்மை தான். இந்தச் சிரத்தை உங்களுள் நுழைந்தாக வேண்டும். மேலை நாட்டினரிடம் வெளிப்பட்டிருக்கின்ற பௌதீக சக்திகள் அனைத்தும் இதன் விளைவு தான். அவர்கள் தங்கள் தசைகளின் ஆற்றலில் நம்பிக்கை வைத்தார்கள். நீங்கள் உங்கள் ஆன்மாவில் அத்தகைய நம்பிக்கை வைத்தால் அதன் விளைவு இன்னும் எவ்வளவு மகத்தானதாக இருக்கும்! எல்லையற்ற ஆன்மாவில், எல்லையற்ற ஆற்றலில் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் சாஸ்திரங்களும் உங்கள் ரிஷிகளும் ஏகோபித்த குரலில் போதிப்பது அதையே. ஆன்மாவை எதுவும் அழிக்க முடியாது. அதில் எல்லையற்ற ஆற்றல் உள்ளது. வெளிப்படுவதற்காகக் காத்திருக்கிறது. இந்தியத் தத்துவங்களுக்கும் மற்ற எல்லா தத்துவங்களுக்கும் உள்ள பெரியவேறுபாடு இது தான்.
துவைதியாகட்டும், விசிஷ்டாத்வைதியாகட்டும் , அத்வைதியாகட்டும்,ஆன்மாவில் எல்லாமே இருக்கிறது என்பதை அனைவரும் உறுதியாக நம்புகின்றனர். அது வெளியே வர வேண்டும், வெளிப்பட வேண்டும். அவ்வளவு தான். அந்தச் சிரத்தைத்தான் இப்போது எனக்கும், நம் எல்லோருக்கும் தேவைப்படுவது. இந்தத் தன்னம்பிக்கையைப் பெறுவது தான் நாம் செய்ய வேண்டிய பெரிய பணி. நம் தேசியரத்தத்தில் படர்ந்து வருகின்றதே ஒரு நோய்- எல்லாவற்றையும் கேலி செய்வதும், பொறுப்பின்மையுமான அந்தப் பயங்கர நோயை விட்டு விடுங்கள். அறவே அகற்றுங்கள், வலிமை பெறுங்கள், சிரத்தை பெறுங்கள், பெற்றுவிட்டீர்களானால் எல்லாம் உங்களைத் தொடர்ந்தே தீர வேண்டும்.
நான் இது வரையில் எதுவுமே செய்யவில்லை நீங்கள் தான் செய்ய வேண்டும். நான் நாளை இறந்து போனாலும் அந்தவேலை ஓயாது. இந்தப் பணியைச்செய்ய சாதாரண மக்களிலிருந்தே ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்டு வருவர் என்று நான் மனதார நம்புகிறேன். நம்பிக்கை மயமான என் கற்பனையில் தெரிவதைவிட அவர்கள் அந்தப் பணியை ச் சிறப்பாக நிறைவேற்றுவார்கள்.
என் நாட்டிடம் எனக்கு நம்பிக்கை உள்ளது. குறிப்பாக என் நாட்டு இளைஞர்களிடம் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. மற்றவர்களை விட வங்காள இளைஞர்களுக்கு இதில் அதிகமான பொறுப்புஉள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நான் இந்தியா முழுவதம் பயணம் செய்திருக்கிறேன். இந்தியாவை மறுபடியும் அதனுடைய புராதனமாக ஆன்மீகப் பெருமைக்கு உயர்த்துவதற்கான ஆற்றல் வங்காள இளைஞர்களிடமிருந்தே பிறக்கும் என்பது என் உறுதியான கணிப்பு. ஆகா, ரத்தத்தில் உணர்ச்சியும் உங்சாகமும் பொஞ்குகின்ற வங்க இளைஞர்களிடமிருந்து தான் விரர்கள் எழுவார்கள். நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அழிவற்ற ஆன்மீக உண்மைகளைப் பூமியின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிவரை அவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். போதிப்பார்கள். உங்கள் முன் இருக்கும் மகத்தான வேலை இது.
எனவே எழுந்திருங்கள்” விழித்திருங்கள்!விரும்பிய லட்சியத்தை அடையும்வரை நில்லாது செல்லுங்கள்” என்பதை மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நினைவுபடுத்தி என்பேச்சை நிறைவு செய்கிறேன். பயப்படாதீர்கள். ஏனெனில் மனிதவரலாறு முழுவதையும் நீங்கள் பார்த்தாலும், மகத்தான சக்திகள் எல்லாம் மக்களிடமே இருந்துள்ளதைக் காண்பீர்கள். சாதாரண மக்களிடமிருந்தே மாபெரும் மனிதர்கள் எல்லோரும். தோன்றியிருக்கிறார்கள். சரித்திரம் திரும்பியே தீரும். எதைக் கண்டும் அஞ்சாதீர்கள். நீங்கள் மகத்தான காரியங்களைச்செய்வீர்கள். பயம் தோன்றினால் அந்தக்கணமே நீங்கள் ஒன்றுமில்லாதவர்கள் ஆகிவிடுவீர்கள். பயமெ உலக துன்பங்களுக்குக் காரணம். மூட நம்பிக்கைகள் அனைத்திலும் கொடியது பயமே. இந்த பயம் தான் நம் துயரங்களுக்கு எல்லாம் காரணம். பயமின்மை ஒரு நொடியில் சொர்க்கத்தையே நமக்கு அளிக்கவல்லது. எனவே எழுந்திருங்கள்” விழித்திருங்கள்” லட்சியத்தை அடையும் வரையில் நிற்காதீர்கள்.
அன்பர்களே உங்கள் எல்லா வரவேற்பிற்கும் பாராட்டுக்களுக்கும் மறுபடியும் நான் நன்றி கூறுகிறேன். என் ஆழ்ந்த உண்மையான விருப்பம் எதுவென்றால், உலகத்திற்கும், அதற்கும் மேலான என் நாட்டிற்கும் என் மக்களுக்கும் என்னாலான சேவையை நான் செய்ய வேண்டும் என்பது தான்
வேதாந்தமும் அதன் சகல அம்சங்களும்
-
மார்ச் 4, ஸ்டார் தியேட்டர்
-
குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோ கூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் சன்னமானதோர் ஒளி நிலையாக பிரகாசித்துத் திளைக்கிறது. சூழ்நிலைகளின் காரணத்தால் சிலவேளைகளில் அது மங்கியது. சில வேளைகளில் சுடர்விட்டது. ஆனால் ஒருபோதும் அணையாமல் சீராகவே ஒளி வீசியது. அந்த ஒளி இந்தியாவில் மட்டுமல்ல, சிந்தனை உலகம் முழுவதிலும் படர்ந்தது. அதிகாலையில் மெல்லென வீழ்கின்ற பனித்துளி யாரும் காணாமல், யாரும் அறியாமல் அழகிய ரோஜா மொட்டுகளை மலரச் செய்வது போல், அந்த ஒளியும் தன் ஆற்றலால் அமைதியாக, யாரும் அறியாமல், மென்மையாக அதே வேளையில் பெரும் சக்தி வாய்ந்ததாக சிந்தனை உலகெங்கும் ஊடுருவியது. அந்த ஒளியே உபநிடதச்சிந்தனைகள், வேதாந்தத்தத்துவம். அது இந்திய மண்ணில் தழைக்கத்தொடங்கிய காலம் எது என்பது யாருக்கும் தெரியாது. ஊகங்கள், முக்கியமாக மேலை நாட்டினரின் ஊகங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதால் கால வரையறை செய்தல் இயலாததாக உள்ளது. ஆயினும் இந்துக்களாகிய நாம், நமது ஆன்மீக நோக்கில், அவற்றிற்கு ஆரம்பம் என்று எதுவும் இல்லை என்கிறோம். இந்த உபநிடதக் கருத்துக்களாகிய வேதாந்தம் தான் ஆன்மீக விஷயத்தில் மனித குலத்திற்கு வழங்கப்பட்ட முதலும் முடிவுமான கருத்து என்பதை நான் துணிவுடன் கூறுவேன்.
இந்த வேதாந்தப்பெருங்கடலிலிருந்து ஒளியலைகள் எழுந்து அவ்வப்போது மேற்கிலும் கிழக்கிலும் பரவிச்சென்றுள்ளன. பண்டைய நாளில் அவை மேற்கு நோக்கிப் பரந்து, ஏதென்சிலோ அலெக்சாண்டிரியாவிலோ ஆன்டியாக்கிலோ வாழ்ந்த கிரேக்கர்களின் சிந்தனையைத் தூண்டிக் கிளர்ந்தெழச்செய்தன. பண்டைய கிரேக்கர்களின் உள்ளத்தில் சாங்கியத்தத்துவம் பெரிதும் பதிந்தது என்பது உறுதி. சாங்கியத் தத்துவமும் பிற தத்துவங்களும் உபநிடதங்களை, வேதாந்தத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்தியாவில் கூட ஒன்றுக்கொன்று அடித்துக்கொள்கின்ற எத்தனையோ மதப் பிரிவுகள் இருந்தன. இன்றும் இருக்கின்றன. இவை அனைத்தின் அடிப்படையும் உபநிடதங்களே , வேதாந்தமே. நீங்கள் துவைதியோ , விசிஷ்டாத்வைதியோ , அத்வைதியோ, சுத்த அத்வைதியோ, வேறு எந்த அத்வைதியோ, வேறு எந்த துவைதியோ, அல்லது வேறு எப்படி உங்களை அழைத்துக்கொண்டாலும், உங்களுக்கு ஆதார நூலாக உங்கள் சாஸ்திரங்களாக, உங்கள் புனித நூல்களாக உங்களுக்குப் பின்னால் நிற்பது உபநிடதங்களே. உபநிடதங்களைப் பின்பற்றாத எந்த இந்திய மதமும் வைதீகமதமாகக் கருதப்படுவதில்லை. சமண மற்றும் புத்த மதங்கள் கூட இந்தியாவிலிருந்து விலக்கப் பட்டதன் காரணம், அவை உபநிடதங்களை ஏற்க மறுத்ததே.
நமக்குத் தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் இந்திய நாட்டு மதப்பிரிவுகள் அனைத்திலும் வேதாந்தம் ஊடுருவியுள்ளது. இந்து மதம் என்று நாம் அழைக்கின்ற, அந்த எண்ணிறந்த கினைகளும் விழுதுகளும் கொண்ட மாபெரும் ஆலமரம் வேதாந்தத்தின் ஆதிக்கத்தால் முற்றிலும் ஊடுருவப்பட்டிருக்கிறது. அறிந்தோ அறியாமலோ நாம் வேதாந்தத்தையே நினைக்கிறோம், வேதாந்தத்திலேயே வாழ்கிறோம். வேதாந்தத்தையே சுவாசிக்கிறோம். வேதாந்தத்திலேயே இறக்கவும், செய்கிறோம். ஒவ்வோர் இந்துவும் இதையே செய்கிறான். எனவே இந்தியாவில் இந்தியர்களுக்கு வேதாந்தம் போதிப்பது என்பது முரணான ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. எனினும் போதிக்கப்பட வேண்டியது அது ஒன்றுதான். அதைப்போதிக்க வேண்டியது தான் காலத்தின் தேவையாகவும் உள்ளது. ஏனெனில் நான் கூறியதுபோல், இந்திய மதப்பிரிவுகள் அனைத்தும் உபநிடதங்களையே பிரமாணமாகக்கொள்ள வேண்டும்ஃ இந்த உட்பிரிவுகளிடையே முரண்பாடுகள் இருப்பது போல் தோன்றுகிறது. சிலவேளைகளில் பண்டைய ரிஷிகளுள் பலரால் கூட உபநிடதங்களில் நிலவிய இயைபை அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்களும் கூட தம்மில் சண்டையிட்டனர். மாறுபட்ட கருத்தில்லாத ரிஷிகளே இல்லை என்ற கூற்றுக்கு இலக்காயினர். உபநிடதங்களுள் துவைதப் பகுதியோ, விசிஷ்டாத்வைதப் பகுதியோ, அத்வைதப் பகுதியோ, எந்தப் பகுதியானாலும் அவற்றின் அடிப்படையில் நிலவுகின்ற இந்த இயைபிற்கு இன்னும் சிறந்த விளக்கம் தரப்படவேண்டும். என்பது காலத்தின் தேவையாக உள்ளது. அதை உலகின் முன் வைக்க வேண்டும். வெளி நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் இது தேவை .
இத்தகைய ஒரு விளக்கமாக யாருடைய வாழ்வு விளங்கியதோ அவரது திருவடிகளில் அமர்வதற்கான பெரும் பேறு இறையருளால் எனக்குக் கிடைத்தது. அவரது பெருவாழ்வு அவரது போதனைகளைவிட ஆயிரம் மடங்கு மேன்மை பெற்றது. அது உபநிடதங்களின் உயிர்ததும்பும் விளக்கவுரை யாகத் திகழ்ந்தது. உண்மையில் அவர் உபநிடதங்களின் சாரமே மனிதவுருப்பெற்றது போல் விளங்கினார். ஒரு வேளை அந்த இயைபில் ஒரு சிறிதை நான் பெற்றிருக்கலாம். ஆனால் அதை எடுத்துச் சொல்லும் ஆற்றல் என்னிடம் உள்ளதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதுவே எனது முயற்சி. வேதாந்த நெறிகள் ஒன்றுக்கொன்று முரணானவையல்ல, ஒன்றுக்கு மற்றொன்று தேவையானவை, ஒன்றை மற்றொன்று நிறைவு செய்கிறது. லட்சியமான ”தத்வமஸி” என்னும் அத்வைத நிலையை அடைவதற்கான படிகள் போலவே ஒவ்வொன்றும் விளங்குகின்றன என்பதைக் காட்டுவதே வாழ்வில் எனது நோக்கம்.
இந்தியாவில் கர்ம காண்டம் ஆட்சி செய்த காலம் ஒன்று இருந்தது. வேதத்தின் அந்தப் பகுதியில் பெருமைமிக்க கொள்கைகள் இருக்கவே செய்தன. அதில் சந்தேகம் இல்லை. இன்றும் நாம் செய்யும் தினசரி வழிபாடுகள் சில, அந்தக் கர்மகாண்டப் பகுதியைப் பின்பற்றி எழுந்தவையே. இவையெல்லாம் உண்மையானாலும் அவை இந்தியாவிலிருந்து ஏறக்குறைய மறைந்து விட்டன. நமது இன்றை வாழ்வில் கர்ம காண்டத்தின் ஆதிக்கம் சிறிதும் இல்லை எனலாம். இன்றைய நமது தினசரி வாழ்வில் நாம் பெரும்பாலும் புராணங்களையும் தந்திர சாஸ்திரங்களையும் பின்பற்றுபவர்களாக உள்ளோம். சில பிராமணர்கள் வேத மந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றை அவர்கள் உபயோகிக்கின்ற முறைகள் வேதங்களுக்கு ஏற்ப இல்லை, அவை தத்திரங்களையும் புராணங்களையும் ஒட்டியவையாகவே உள்ளன. இந்த நிலையில், வேதத்தின் கர்ம காண்டத்தைப் பின்பற்றுபவர்கள் என்னும் கருத்தில் நம்மை நாம் வைதீகர் என்று அழைத்துக் கொள்வது முறையல்ல என்றே நான் கருதுகிறேன்.ஆனால் நாம் நம்மை வேதாந்தி என்று அழைப்பது பொருத்தமாகிறது. தங்களை இந்து என்று அழைத்துக்கொள்பவர்கள், வேதாந்தி என்று கூறிக் கொள்வது அதைவிட நல்லது. ஏனெனில் துவைதி, விசிஷ்டாத்வைதி முதலிய எல்லா நெறியினரும் வேதாந்தி என்ற அந்த ஒரு பெயருள் அடங்குவார்கள்.
இன்று இந்தியாவில் உள்ள நெறிகள் எல்லாமே பொதுவாக துவைதம், அத்வைதம், என்ற இரண்டு பெரும் பிரிவுகளுள் அடங்கிவிடும். இந்தப் பிரிவுகளைச்சேர்ந்த சிலர், மிகவும் சாமானியமான ஏதோ சில வேறுபாடுகளைப் பிடித்துக்கொள்வதும், அவைகளின் அடிப்படையில் தங்களை சுத்தாத் வைதிகள், விசிஷ்டாத்வைதிகள் என்றெல்லாம் அழைத்துக்கொள்வதும் பெரிய விஷயமல்ல. பிரிவுகள் என்ற நிலையில் பார்த்தால் அவர்கள் துவைதிகள் அல்லது அத்வைதிகள். இனி, இன்றுள்ள நெறிகளுள் பல மிகவும் புதியவை, எஞ்சியவையோ பழைய நெறிகளின் நகல்களாகத்தோன்றுகின்றன. இவற்றுள் ஒரு பிரிவை ராமானுஜரின் வாழ்வு மற்றும் தத்துவத்தின் வாயிலாகவும் .மற்றொன்றை சங்கரரின் வாயிலாகவும் உங்கள் முன் வைக்கிறேன்.
பிற்கால இந்தியாவின் துவைத ஆச்சாரியர்களுள் முன்னணியில் இருப்பவர் ராமானுஜர். பின்னால் வந்த துவைதிகள் அனைவரும் தங்கள் உபதேசங்களுக்கு அடிப்படையாகவும், தங்கள் நெறிகளை ஓர் இயக்கமாக உருவாக்குவதிலும், இயக்கம் பற்றிய சில நுட்பமான கருத்துக்களிலும் கூட நேரடியாகவோ மறைமுகமாகவோ ராமானுஜரையே பின்பற்றுகின்றனர். இந்தியாவிலுள்ள இதர துவைத வைணவ நெறிகளை ராமானுஜருடனும் அவரது பணியுடனும் ஒப்பிட்டுப்பார்த்தால் அவை அமைப்பு முறையிலும் கருத்திலும் செயல்படுமுறையிலும் பேரளவிற்கு ஒத்திருப்பது ஆச்சரியத்திற்குரிய ஒன்று. தென்னிந்தியாவில் மற்றொரு மாபெரும் ஆச்சாரியர் மத்வ முனிவர். அவரைத்தொடர்ந்து , வங்கத்தின் மகத்தான சைதன்யர் மாத்வர்களின் கோட்பாடுகளையே வங்கத்தில் பிரச்சாரம் செய்தார். இனி விசிஷ்டாத்வைத சைவ ப் பிரிவுகள் போன்ற வேறு சில பிரிவுகளும் தென்னிந்தியாவில் உள்ளன. தென்னிந்தியாவின் சில பகுதிகள்,, இலங்கை முதலிய இடங்கள் நீங்கலாக இந்தியாவில் உள்ள சைவர்கள் பொதுவாக அத்வைதிகளே. ஆனால் அந்த விசிஷ்டாத்வைத சைவர்களும் முழுக்க முழுக்கராமானுஜ சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள் என்று தான் சொல்லவேண்டும். விஷ்ணுவுக்குப் பதிலாக சிவனை வணங்குகிறார்கள். அவ்வளவு தான்- ஆன்மா பற்றிய கோட்பாட்டில் மட்டுமே வேறுபாடு உள்ளது.
ராமானுஜரைப் பின்பற்றுபவர்கள் ஆன்மா ஓர் அணு, மிகச்சிறியது என்று கூறுகிறார்கள். ஆனால் சங்கரரைப் பின்பற்றுபவர்கள் ஆன்மா என்பது விபு, எங்கும் நிறைந்தது என்கிறார்கள் அத்வைதப் பிரிவுகள் பல இருக்கின்றன. முற்காலத்தில் இன்னும் பல இருந்தன. சங்கரரின் இயக்கம் அவற்றையெல்லாம் அப்படியே தன்னுள் ஈர்த்து அணைத்துக்கொண்டு விட்டிருக்க வேண்டும். சில விளக்கவுரைகளுள், குறிப்பாக விஞ்ஞான பிட்சுவின் விளக்கவுரையில் சங்கரருக்கு எதிராகக்கூட உறுதியான சில கருத்துக்களைக் காண முடியும். இந்த விஞ்ஞான பிட்சு ஓர் அத்வைதி. எனினும் அவர் சங்கரரின் மாயாவாதத்தை முறியடிக்க முயற்சிக்கிறார். மாயாவாதத்தை ஏற்காத நெறிகளும் அந்தக் காலத்தில் இருந்தன என்றே தோன்றுகிறது. மாயாவாதம் பௌத்தர்களிடமிருந்து வேதாந்த சம்பிரதாயத்தில் புகுத்தப் பட்டது என்பது அவர்களின் கருத்து. எனவே சங்கரரை அவர்கள் பிரச்சன்ன பௌத்தர் அதாவது மறைமுக பௌத்தர் என்று அழைக்கும் அளவுக்குச் சென்றுள்ளார்கள். அது எப்படியானாலும் இன்று அத்வைதிகள் அனைவருமே சங்கரரின் பின்னால் தான் அணிதிரண்டு நிற்கின்றனர். தென்னாட்டிலும் வட நாட்டிலும் சங்கரரின் சங்கரரும் அவரது சீடர்களுமே சிறந்த அத்வைதப் பிரச்சகர்களாக இருந்திருக்கிறார்கள். நமது வங்காளம், மற்றும் பஞ்சாப், காஷ்மீர் முதலிய இடங்களில் தான் சங்கரரின் செல்வாக்கு அதிகம் பரவவில்லை. தென்னிந்திய ஸ்மார்த்தர்கள் அனைவரும் சங்கரரைப் பின்பற்றுபவர்கள். காசியை மையாகக்கொண்டு ,, வடஇந்தியாவில் பல இடங்களில் அவரது ஆதிக்கம் மகத்தானது. மிகப்பெரியது.
சங்கரரும் சரி, ராமானுஜரும் சரி தாங்கள் எதையும் புதிதாகக் கூறுவதாக உரிமை கொண்டாட வில்லை. போதாயனரின் விளக்கவுரையையே தாம் பின்பற்றுவதாக மிகத் தெளிவாகச்சொல்கிறார் ராமானுஜர். தமது விளக்க வுரையாகிய ஸ்ரீபாஷ்யத்தின் தொடக்கத்தில் அவர் பின்வருமாறு கூறுகிறார். ”
பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்மஸுத்ர வ்ருத்திம் பூர்வாசார்யா, ஸஞ்சிஷிபு, தன் மதானுஸாரேண ஸுத்ராஷராணி வ்யாக்யாஸ்யந்தே!-”முற்காலத்தில் தோன்றிய ஆச்சாரியர்கள், பகவான் போதாயனரின் பிரம்ம சூத்திர மகாபாஷ்யத்தைச் சுருக்கினார்கள். அவர்களது கருத்தை அடியொற்றி சூத்திர விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. அந்தக் கருத்துக்களை சுருக்கமாக எடுத்தாண்டியிருக்கிறார் ராமானுஜர். அதுவே நாம் இன்று காணும் ஸ்ரீபாஷ்யம்.போதாயன பாஷ்யத்தைக்காணும் வாய்ப்பு இது வரை எனக்குக் கிடைக்கவில்லை. வியாச சூத்திரங்களுக்கு போதாயனர் அளித்த விளக்கவுரையைத்தவிர ஏனையவற்றை எல்லாம், காலம் சென்ற சுவாமி தயானந்த சரஸ்வதி புறக்கணிக்க விரும்பினார். ராமானுஜரைக் கண்டிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு எதையும் அவர் விடவில்லை. எனினும் போதாயன பாஷ்யத்தைக் காட்ட அவரால் இயலவில்லை. போதாயனரின் அந்த விளக்கவுரை நூலை நான் இந்தியா முழுவதும் தேடிவிட்டேன். கிடைக்கவில்லை. ராமானுஜர் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். போதாயனரின் விளக்கவுரையிலுள்ள கருத்துக்களையே தாம் சுருக்கமாகக் கொடுப்பதாகவும் சில இடங்களில் அப்படியே சில பகுதிகளைக் கையாண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார். இது வே இன்றைய ராமானுஜ பாஷ்யம்.
சங்கரரும் இவ்வாறு செய்துள்ளதாகத்தான் தெரிகிறது. அவரது விளக்கவுரையில் சில இடங்களில் பல பழைய
விளக்கவுரைகள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அவரது குருவும் குருவின் குருவும் இதே வேதாந்தக் கருத்து உடையவர்களாக இருந்தனர். அது மட்டுமின்றி, அவர்கள் சில இடங்களில் இன்னும் அடியாழம் வரை செல்கிறார்கள். சிலகருத்துக்களை விளக்கும்போது சங்கரரைவிடத் துணிவாக இருக்கிறார்கள். எனவே சங்கரரும் புதிதாக எதுவும் சொல்லவில்லை என்பது தெளிவு. போதாயனரின் கருத்துக்களைக்கொண்டு ராமானுஜர் விளக்கவுரை எழுதியது போலவே சங்கரரும் ஏதோ ஒரு விளக்கவுரையின் உதவியுடனேயே தமது உரையை எழுதியிருக்க வேண்டும்.
நீங்கள் கண்டும் கேள்வியுற்றும் இருக்கின்ற தத்துவங்கள் எல்லாம் உபநிடதங்களை அடிப்படையாகக்கொண்டவை. வேதங்களை மேற்கோள் காட்டும் இடங்களில் எல்லாம் அவர்கள் உபநிடதங்களையே குறிப்பிடுகிறார்கள். உபநிடதங்களைப் பின்பற்றி எழுந்த தத்துவங்களுள் எதுவும் வியாசருடையது போல் இந்தியாவில் நிலைத்து நிற்கவில்லை. இனி, வியாசரின் தத்துவம் அதற்கு முந்திய ஒன்றான சாங்கியத் தத்துவத்தின் விரிவேயாகும். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் ஒவ்வொரு தத்துவப் பிரிவும் ஒவ்வொரு நெறியும் கபிலருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. இந்தியாவின் மன இயல் மற்றும் தத்துவ வரலாற்றில் கபிலரின் பெயர் உன்னதமான இடத்தை வகிக்கிறது. அவரது தாக்கம் உலகம் முழுவதும் காணப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட சிந்தனை முறை எங்கோ உள்ளதோ, அங்கே கபிலரின் தாக்கத்தைக்காணலாம். அது ஆயிரமாயிரம் ஆண்டுகள் முந்தியதாக இருக்கலாம். இருப்பினும் கபிலர் அங்கே பெருமையுடன் மகிமையுடன் ஒளிவீசித் திகழ்வார் . அவரது மன இயலும், அவர் வகுத்த தத்துவத்தில் பெரும் பகுதியும் இந்தியாவின் எல்லா பிரிவினராலும் ஏதோ சிறு மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்ளப் படவே செய்கின்றன.
இந்தியாவின் தத்துவ உலகில் நமது வங்கத்தின் நையாயிக தத்துவ அறிஞர்கள் அதிக செல்வாக்கு ப் பெறவில்லை. ஏனெனில் அவர்கள் சாமான்யம், விசேஷம் என்றெல்லாம் முக்கியத்துவம் இல்லாத விஷயங்களில் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தனர். போதாக்குறைக்கு, ஆயுட்காலம் முழுவதும் செலவிட்டால் மட்டுமே படித்துணரக்கூடிய சிக்கலான சொற்றொடர்கள் வேறு! இவ்வாறு அவர்கள் தர்க்கத்தில் மூழ்கி, தத்துவத்தை வேதாந்திகளுக்கு விட்டு விட்டனர். ஆனால் தற்கால தத்துவப் பிரிவுகள் ஒவ்வொன்றும் வங்க நையாயிகர் களின் தர்க்கச் சொற்றொடர்களை ஏற்கின்றனர். ஜகதீசர், கதாதரர், சிரோமணி முதலிய பெயர்கள் நதியாவைப்போலவே மலபாரின் சில நகரங்களிலும் பிரபலமாக உள்ளன.
ஆனால் வியாசரின் தத்துவமாகிய வியாச சூத்திரங்கள் நிலைத்துவிட்டன. தத்துவத்தின் வைதீக மற்றும் வேதாந்தப் பக்கத்தை மனிதர்களுக்குக்கொடுப்பதே அதன் நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தில் அது வெற்றியும் பெற்றுவிட்டது. அங்கு தர்க்க அறிவு முற்றிலுமாக வேதங்களுக்கு அடுத்தபடியிலேயே வைக்கப் பட்டன. சங்கரர் கூறுவது போல், வியாசர் தர்க்க அறிவில் நேரத்தைச்செலவிடவே இல்லை. வேதாந்தக் கருத்துக்களை எல்லாம் ஒரே நூலில் மாலையாகத் தொடுப்பதே அவர் சூத்திரங்களை எழுதியதன் நோக்கமாக இருந்தது. உபநிடதங்களின் பிரமாணத்திற்கு உட்படும்வரை மட்டுமே அவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அதற்கு மேல் அல்ல.
நான் முன்னரே கூறியதுபோல், இந்தியாவிலுள்ள மதப்பிரிவுகள் எல்லாம் இப்போது வியாச சூத்திரங்களையே தங்கள் பிரமாணமாகக் குறிப்பிடுகின்றன. புதிதாகத்தோன்றுகின்ற பிரிவு ஒவ்வொன்றும், தனது கருத்திற்கு ஏற்ப வியாச சூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதுவதில் தான் ஆரம்பிக்கின்றன. இந்த உரைகள் சிலவற்றுக்கிடையில் வேறுபாடு பெரிதாகக் காணப்படுகிறது. சில இடங்களில் அவர்கள் மூலபாடத்தை த் திரித்து விளக்கும்போது அருவருப்பாகிவிடுகிறது. வியாச சூத்திரங்கள் பிரமாணம் ஆகும். புதிய நெறியை ஏற்படுத்த விரும்புகின்ற யாரும் வியாச சூத்திரங்களுக்கு ஒரு புதிய விளக்கவுரை எழுதாமல் தங்கள் நெறியை நிலைநாட்ட முடியாது.
அடுத்த பிரமாணமாக விளங்குவது பிரபலமான கீதை. கீதையைப்போதித்ததே சங்கரரின் மகத்தான பெருமைக்குக் காரணம். போதித்தது மட்டுமல்லாமல், அதற்கு ஒரு மாபெரும் விளக்கவுரையும் எழுதினார் அவர். இதுவே அவரது மேலான வாழ்வில் அவர் சாதித்த மாபெரும் செயல்கள் பலவற்றுள் உயர்ந்த ஒன்று. இந்தியாவில் வைதீக நெறிகைளைத்தோற்றுவிக்கின்ற ஒவ்வொருவருக்கும் அவரைப் பின்பற்றி கீதைக்கு விளக்கவுரைகள் எழுதியுள்ளனர்.
உபநிடதங்கள் பல. அவை நூற்றெட்டு என்று கூறப்படுகின்றன. இன்னும் அதிகம் என்று சிலர் சொல்கிறார்கள். அவற்றுள் சில, காலத்தால் மிகவும் பிற்பட்டவை என்பது தெளிவு. உதாரணமாக அல்லோபநிடதம். இதில் அல்லா புகழப்படுகிறார், ராஜசுல்லா என்று அழைக்கப்படுகிறார் முகமது. இந்துக்களையும் முகமதியர்களையும் ஒன்றுபடுத்த அக்பர் காலத்தில் எழுதப்பட்ட உபநிடதம் இது என்று நான் கேள்விப்பட்டேன்.சம்ஹிதையில், அல்லா என்றோ இல்லா என்றோ ஏதோ ஒரு சொல்லைக் கண்டு பிடித்து, அதை வைத்து ஓர் உபநிடதத்தை உண்டாக்கிவிட்டார்கள். இந்த அல்லோபநிடதத்தில் ராஜசுல்லா என்று முகமது அழைக்கப் படுகிறார். அதன் பொருள் எதுவோ, என்னவோ!
இது போன்ற பிரிவினைவாத உபநிடதங்கள் பல உள்ளன. அவை தற்காலத்தில் தோன்றியவை என்பது உறுதி. இவ்வாறு எழுதுவதும் மிக எளிது. இதற்கு இலக்கணம் வேண்டுவது இல்லை. ஏனெனில் வேதத்தின் சம்ஹிதைப் பகுதிகளும் மிகமிகப் புராதனமானவை, ஆதலால் இலக்கணம் இன்றியே உள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்பு நான் தீவிர ஆவலுடன் வேத இலக்கணம் படிக்க முயன்றேன். பாணினி சூத்திரங்களையும் மஹாபாஷ்யத்தையும் படிக்கத் தொடங்கினேன்.ஆனால் வேத இலக்கணத்தின் சிறந்த பகுதி முழுவதும் விதிவிலக்குகளாகவே இருந்ததைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து போனேன். ஒரு விதி சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து ”இது விதிவிலக்கு” என்று வருகிறது. எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது பாருங்கள். யார் வேண்டுமானாலும் , எது வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம். யாஸ்கரின் நிகண்டு என்ற ஒரே ஒரு கவசம் இருந்ததால் பிழைத்தோம். ஆனால் அங்கும் பெரும்பகுதியில் ஒரே பொருளுக்குப் பல சொற்கள் கூறுவதையே காண முடிகிறது. இதையெல்லாம் பார்த்தால் நீங்கள் விரும்புவது போல் எத்தனையோ உபநிடதங்களை எழுதித் தள்ளலாம்! புராதன காலச்சொற்கள்போல் தோன்றுகின்ற சொற்கள் சிலவற்றை உருவாக்குகின்ற அளவுக்குச் சிறிது சம்ஸ்கிருதம் தெரிந்தால்போதும். இலக்கணம் பற்றிய கவலை தான் இல்லவே இல்லை. நீங்கள் விரும்புகின்ற ஒரு ராஜசுல்லாவை யோ வேறு எந்த சுல்லாவையோ அதில் புகுத்தி விடுங்கள். இவ்வாறு தான் எத்தனையோ உபநிடதங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இப்பொழுதும் எழுதப்பட்டு வருகின்றன என்று அறிகிறேன். இந்தியாவில் பல்வேறு மதப்பிரிவுகள் இது போன்று உபநிடதங்களை உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றன என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஆனால் இவற்றுக்கிடையில் சில உபநிடதங்கள் உள்ளன. இவை உண்மையானவை என்று முகத்திலேயே எழுதி ஒட்டப்பட்டதுபோல் அவை திகழ்கின்றன. அவற்றிற்கே மாபெரும் ஆச்சாரியர்கள், குறிப்பாக சங்கரரும் அவரைத் தொடர்ந்து ராமானுஜரும் பிறரும் விளக்கவுரைகள் எழுதினர்.
cபநிடதங்களைப் பற்றி இன்னும் ஓரிரு கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். அவையோ அறிவுப்பெருங்கடல். இந்த உபநிடதங்களைப் பற்றிப்பேசுவதற்கு என்னைப்போன்ற தகுதியற்ற ஒருவனுக்குப் பல ஆண்டுகள் தேவை. ஒரு சொற்பொழிவு நிச்சயமாகப் போதாது. எனவே இரண்டொரு கருத்துக்களை உங்கள் கருத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். முதலாவதாக, இவை உலகிலேயே மிகச்சிறந்த கவிதைகள், வேதங்களின் சம்ஹிதைப் பகுதியை நீங்கள் படிப்பீர்களானால், எழில் கொஞ்சித் ததம்பும் அற்புதமான பகுதிகளைக் காண்பீர்கள். உதாரணமாக பிரளய வர்ணனையை பாருங்கள்- தம ஆஸீத் தமஸா கூடமக்ரே- இருள் இருளில் மறைந்திருந்தபோது”....... இவ்வாறு சொல்கிறது கவிதை. இதைப்படிக்கும்போது நுட்பமான கவிதைநயத்தை உணர்கிறோம்.
இந்தியாவிற்கு வெளியிலும் இந்தியாவிலும் நுண்மையைச்சொல்லில் வடிப்பதற்காக நடைபெற்ற முயற்சிகளைக் கவனித்திருக்கிறீர்களா? வெளி நாடுகளில் இந்த முயற்சி எப்போதும் புற இயற்கையின் எல்லையற்றத் தன்மையைப் பற்றிய வர்ணனையாகவே இருக்கும்- எல்லையற்ற புற இயற்கை- எல்லையற்ற ஜடவுலகம், எல்லையற்ற வெளி என்றெல்லாம் தான் வர்ணனைகளைக் காணமுடியும்.ஐரோப்பாவின் முற்காலக் கவிஞர்களான மில்டன், தாந்தே அல்லது வேறுயாராகவும் இருக்கட்டும். இல்லை, தற்காலக் கவிஞர்களாக இருக்கட்டும், எல்லையற்ற ஒன்றைச் சித்தரிக்க விரும்பினால் உடனே அவர்கள் எங்கோ தூர தூர ஆகாசத்தில் பறக்க முயன்று, எல்லையற்ற புற இயற்கையின் ஏதோ பகுதியை உங்களுக்குக் காட்ட முயல்கிறார்கள்.
அதே முயற்சி இங்கும் நடைபெற்றுள்ளது. புற இயற்கையின் எல்லையற்ற சிரிவை, வேறு எங்கும் காண முடியாத வகையில், மிகவும் வியக்கத்தக்க விதத்தில் சம்ஹிதைகள் சித்தரிப்பதை நாம் காண முடியும். தம ஆஸீத் தமஸா கூடம்” என்ற வரியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இப்போது மூன்று கவிஞர்கள் இருளை எவ்வாறு வர்ணிக்கின்றனர் என்று பாருங்கள். நமது காளிதாசரை எடுத்துக்கொள்வோம்- ஊசி நுனி நுழைந்து ஊடுருவுகின்ற இருள்” என்கிறார் அவர். மில்டன், ஒளியில்லை, மாறாக, காணத்தக்கதான இருள்” என்கிறார். இப்போது உபநிடதத்திற்கு வாருங்கள்- இருளை இருள் மூடியிருந்தது” இருள் இருளில் மறைந்திருக்கிறது- வெப்பப் பகுதியில் வாழ்பவர்களான நாம் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும். மழைக்காலம் சட்டென்று வரும், கணநேரத்தில் அடிவானம் இருளும், கருமேகத் திரள்கள் எழும், சற்று கரிய மேகக் கூட்டங்கள் அதைவிடக் கரிய மேகங்களால் மூடுவதும் எழுவதுமாக ஓர் அற்புதக்கோலம் விரியும். இவ்வாறு செல்கிறது சம்ஹிதை. சம்ஹிதைகளின் இந்தப் பகுதியில் நாம் காணும் இந்த முயற்சிகள் எல்லாம் புறம் சம்பந்தப் பட்டவையே.
வாழ்க்கையின் பெரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சி பிற நாடுகளில் எவ்வாறு புறத்தே நிகழ்ந்ததோ, அவ்வாறே இங்கும் நடந்தது. கிரேக்க மனமும் நவீன ஐரோப்பிய மனமும் வாழ்க்கைப் பிரச்சனைகளையும், பரம்பொருள் பற்றிய புனிதப் பிரச்சனைகளையும் தீர்க்கப் புறவுலகத்தை நாடியது, போலவே நமது முன்னோர்களும் செய்தனர். ஐரோப்பியர்கள்தோல்வி கண்டது போலவே இவர்களும் தோல்வியுற்றனர். ஆனால் மேலை நாட்டினர் மேற்கொண்டு முயலவில்லை. அங்கேயே நின்று விட்டனர். பிறப்பு இறப்பு போன்ற வாழ்க்கையின் பெரும் பிரச்சனைகளுக்கு விடை காணப் புறவுலகை நாடிய அவர்கள், தோல்வியுற்றதும் உறைந்துபோய் அங்கேயே நின்று விட்டனர். நமது முன்னோர்களும் அந்த முயற்சி பயனற்றது என்றே கண்டனர். எனினும் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண்பதில் புலன்கள் ஒரு சிறிதும் பயனற்றவை என்பதைத் துணிவுடன் கூறினர். இதனை உபநிடதங்கள் கூறுவதைவிட வேறு எங்கும் இவ்வளவு சிறப்பாகவும் விளக்கமாகவும் காண முடியாது.-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ- மனத்துடன் வாக்கும் எங்கிருந்து திரும்புகிறதோ” ந தத்ர சஷீர்கச்சதி ந வாக்கச்சதி- அங்கே பார்வை செல்லாது, வாக்கும் செல்லாது” புலன்களின் இயலாமையை விளக்குகின்ற வாக்கியங்கள் எத்தனையோ அங்குள்ளன.ஆனால் அவர்கள் அவ்வளவில் நிற்கவில்லை, திரும்பி, மனிதனின் அக இயல்பை ஆராயப் புகுந்தார்கள். தங்கள் ஆன்மாவிடமே விடை காண விரும்பினார்கள். அகமுகமானவர்கள், புற இயற்கை பயனற்றது, ஏனெனில் அங்கு எதுவும் செய்ய இயலாது. அங்கிருந்து எந்த நம்பிக்கையோ விடையோ கிடைக்காது என்பதை உணர்ந்தார்கள். மந்தமான ஜடப் பொருளால் உண்மையைக் காட்ட முடியாது என்று தெளிந்தார்கள். ஒளி படைத்த மனித ஆன்மாவை நோக்கி திரும்பினார்கள். விடை கண்டார்கள்.
தமேவைகம் ஜானத ஆத்மானம், அன்யா வாசோ விமுஞ்சத- ஆன்மாவை மட்டுமே அறி, பிற வீண் சொற்கள் அனைத்தையும் விடு, வேறு எதையும் கேட்கவே கூடாது” என்று முழங்கினர். அனைத்திற்கும் விடையை அவர்கள் ஆன்மாவில் கண்டனர், அந்த முயற்சியிலேயே பிரபஞ்சத்தின் தலைவனான பரமாத்மாவைக் கண்டனர். பரமாத்மாவுக்கும் ஜீவான்மாவாகிய நமக்கும் உள்ள தொடர்பு, அவருக்கு நமது கடமை, அதன் மூலம் மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு ஆகியவை பற்றியெல்லாம் அறிந்தனர். உலகத்தின் அதி நுண்மையான கவிதைநயத்தை நீங்கள் இங்கே காணலாம். ஜடப் பொருளை வர்ணிக்கின்ற சொற்களால் ஆன்மாவை விளக்க முயற்சிப்பது இனி இல்லை. இது தான் என்று சொற்களால் சுட்டிக் காட்டுவதற்கான முயற்சியும் இல்லை, எல்லாவற்றையும் விட்டு விட்டனர். எல்லையற்றதைப் புலன்களால் விளக்கும் முயற்சியே இல்லை. இனிமேல் புறம் சம்பந்தமான, மந்தமான, உயிரற்ற ஜடப் பொருளான புற வெளி, புற இயற்கை எதுவும் இல்லை.
மிகச்சிறந்ததான கடோபநிடதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பூர்த்தியின் நேர்த்திதான் என்ன அற்புதமாக உள்ளது! எத்தகைய கலை மணம் கமழும் கவிதை! எவ்வளவு அழகாகத்தொடங்குகிறது. சிறுவனிடம் சிரத்தை நுழைகிறது. எமனைக் காண்பதில் ஆர்வம் கொள்கிறான் அவன். ஆச்சாரியர்களில் சிற்தவரான எமதர்மனே பிறப்பு இறப்பு பற்றி அவனுக்கு உபதேசம் செய்கிறார்! அந்தச் சிறுவன் அறிய விரும்பிய உண்மை தான் என்ன? மரணத்தின் மர்மம் என்ன என்பது தான்!
நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம் உபநிடதங்களின் யாரையும் சார்ந்திருக்காத அற்புதத் தன்மை. அங்கே எவ்வளவோ பெயர்கள் காணப்படுகின்றன. கூறுவோர் பலர் உள்ளனர். எத்தனையோ ஆச்சாரியர்கள் இருக்கின்றனர். எனினும் அவர்களுள் ஒருவர் கூட உபநிடதங்களுக்குப் பிரமாணமாக விளங்கவில்லை. யாருடைய வாழ்வையாவது அடிப்படையாகக்கொண்ட ஒரு வரிகூட அதில் இல்லை. இவர்கள் அனைவரும் பின்னணியில் இயங்கும் நிழற்படங்கள், அவ்வளவு தான். அவர்கள் உணரப்படுவதில்லை. காணப்படுவதில்லை, அறியப்படுவதும் இல்லை. அந்த அழகிய அற்புதமான, உன்னதமான முற்றிலும் சார்பற்று விளங்குகின்ற உபநிடத பாடங்களே உபநிடதங்களின் உண்மையான சக்தியாகத் திகழ்கிறது. யாஜ்ஞவல்கியர்கள் இருபது பேர் வந்தால் என்ன, வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன! உபநிடதங்கள் அங்கேயே இருக்கின்றன.
அதே வேளையில் அவை எந்தத் தனி மனிதனுக்கும் எதிரானவையும் அல்ல, உலகில் இது வரை தோன்றியுள்ளவர்கள், இனித்தோன்ற இருப்பவர்கள் அனைவரையும், அணைத்துச் செல்லத்தக்க விரிவு படைத்தவை உபநிடதங்கள். மனிதர்களையோ அவதாரப் புருஷர்களையோ ரிஷிகளையோ வழிபடுவதை அவை எதிர்க்கவில்லை. மாறாக ஆதரிக்கின்றன. அதே வேளையில் எதையும் சிறிதுகூடச் சாராமலும் இருக்கின்றன. உபநிடதங்கள் போதிக்கின்ற கடவுள் எதையும் சாராதவர். அவையும் அது போல் எதையும் சாராமல் இருப்பதுஅற்புதமான விஷயம். எந்த
நவீன விஞ்ஞானியும் எவ்வாறு எதிலும் சாராத ஒன்றை விரும்புகின்றானோ, அவ்வாறே இந்த உபநிடதக்கருத்துக்கள், ரிஷிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் தத்துவ ஞானிகளுக்கும் ஏற்றவையாக விளங்குகின்றன. இவையே நமது சாஸ்திரங்கள்.
கிறிஸ்தவர்களுக்கு பைபிள், முகமதியர்களுக்கு குரான், பௌத்தர்களுக்கு திரிபிடகம், பார்சிகளுக்கு ஜென்ட் அவஸ்தா, போல் நமக்கு உபநிடதங்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இவை, இவை தாம் நமது சாஸ்திரங்கள். வேறு எவையும் அல்ல. புராணங்களும் தந்திரங்களும் பிறவும் வியாச சூத்திரங்களும் கூட இரண்டாவதோ மூன்றாவதோ நிலையில் உள்ள பிராமணங்கள், தலையாயவை வேதங்கள் மட்டுமே. மனுதர்மமும் புராணங்களும் பிற சாஸ்திரங்களும் எல்லாமே உபநிடதங்களை அனுசரித்துப்போகும் வரையில் தான் ஏற்கத் தக்கவை, உபநிடதங்களிலிருந்து மாறுபடும் போது இரக்கமின்றி அவற்றை ஒதுக்கிவிட வேண்டும். இது எப்போதும் நம் நினைவில் இருக்கவேண்டும்.
ஆனால் துரதிஷ்டவசமாக, இந்தியாவில் தற்போது இதை நாம் மறந்து விட்டோம். உபநிடதக்கருத்துக்களை விட, வட்டார வழக்கங்களே ஏதோ உண்மை அதிகாரம் பெற்றவைபோல் விளங்குகின்றன. வங்காளத்தின் ஒதுக்குப்புறத்திலுள்ள ஏதோ ஒரு குக்கிராமத்தில் நிலவுகின்ற ஓர் அற்பக் கருத்து வேதங்களைப்போல் , சிலவேளைகளில் அவற்றிற்கும் மேலான பிரமாணமாகக் கொள்ளப் படுகிறது. வைதீகம் என்ற ஒரு சொல் இருக்கிறதே, அதற்குத் தான் எத்தனை செல்வாக்கு! காம கண்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் பின்பற்றுவது தான் ஒரு கிராமவாசிக்கு ”வைதீகத்தின் உச்ச நிலை”. யாராவது ஒருவன், அதனைப் பின்பற்றாதிருக்கட்டும், அடே, போய்விடு, நீ இந்துவே அல்ல, என்று அவனிடம் கூறிவிடுவார்கள். துரதிர்ஷ்ட வசமாக எனது தாய் பூமியிலும் அப்படித்தான். ஏதாவது ஒரு தந்திர சாஸ்திரத்தைப் பின்பற்றுபவர்கள் அதைக் காட்டி இதன் படி நடக்க வேண்டும் என்பார்கள். அதை மீறி நடப்பவன் வைதீகன் அல்ல என்பது அவர்களின் கருத்து. உபநிடதங்களே நமக்கு முதன்மையான ஆதாரம் என்பதை நினைவில் கொள்வது நல்லது. கிருஹ்ய சூத்திரங்களும் சிரௌத சூத்திரங்களும் கூட வேதங்களுக்கு அடுத்த படியிலுள்ள பிரமாணங்களே.
வேதங்கள் நமது முன்னோர்களாகிய ரிஷிகளின் வார்த்தைகள். நீங்கள் இந்துவாயிருக்க விரும்பினால் அவற்றை நம்பியே ஆக வேண்டும். நீங்கள் இறைவனைப் பற்றிய எந்த விசித்திரக் கொள்கையை வேண்டுமானாலும் நம்புபவர்களாக இருக்கலாம்,ஆனால் வேதங்களை ஒப்புக் கொள்ளா விடில் நீங்கள் நாத்திகர்களே. கிறிஸ்தவ மற்றும் பௌத்த நூல்களுக்கும், நமது சாஸ்திரங்களுக்கும் உள்ள வேற்றுமை இதுவே. அவர்களது நூல்கள் வெறும் புராணங்கள். சாஸ்திரங்கள் அல்ல. ஏனெனில் அவை பிரளயத்தைப் பற்றியும் அரசர்களின் பரம்பரை பற்றியும் அரச குடும்பங்களைப் பற்றியும் மாமனிதர்களின் வரலாறுகளையுமே குறித்து வைத்துள்ளன. ஆனால் இது புராணங்களின் வேலை ஆயிற்றே! போகட்டும், வேதங்களுக்கு ஒத்துப் போகிறவரையில் அவை நல்லவை. பைபிளும் சரி, மற்ற நாட்டு சாஸ்திரங்களும் சரி, வேதங்களுக்கு ஒத்துப்போகிற வரையில் அவை மிகச் சரியானவை.ஆனால் மாறுபடும் போது அவற்றை ஏற்கக்கூடாது.
குரானைப்பொறுத்த வரையும் அப்படியே. இவற்றுள் நல்லொழுக்கக்கோட்பாடுகள் பல உள்ளன. வேதங்களுக்கு முரண்படாத வரையில் இவற்றைப் புராணங்களுக்கு ஒப்பான பிரமாணமாகக்கொள்ளலாம். அதற்கு மேல் அல்ல, வேதங்கள் ஒருபோதும் எழுதப்பட்டவை அல்ல ஒரு போதும் தோன்றியவை அல்ல- இது தான் விஷயம். தங்கள் மத நூல்களில் சரித்திரக் காலத்திற்கு உட்பட்ட மனிதர் ஒருவர் இருக்கிறார். எனவே அவை உண்மையானவை என்று கிறிஸ்தவப் பாதிரி ஒருவர் என்னிடம் கூறினார். அவரிடம் ”நான், எங்கள் மத நூல்கள் சரித்திர வரையறை அற்றவை” அதனால் தான் உண்மையானவை, உங்களுடையவை சரித்திர வரையறைக்கு உட்பட்டவை. எனவே நிச்சயமாக அவை இன்றோ நேற்றோ ஒரு மனிதனால் ஆக்கப் பெற்றவை. உங்கள் சாஸ்திரங்கள் மனிதர்களால் உருவாக்கப் பட்டவை. எங்களுடையவை அத்தகையவை அல்ல. சரித்திர வரையறைக்கு உட்படாமலிருப்பது தான் எங்கள் நூல்களின் வலிமை! என்று கூறினேன். மற்ற மத நூல்களுடன் ஒப்பிடும் போது நமது வேதங்களின் பெருமை இதுவே.
...தொடரும்....
தொடர்ச்சி...
இப்போது உபநிடதங்கள் போதிப்பது என்ன என்பதைப் பார்ப்போம். பல்வேறு பகுதிகள் உள்ளன. சில முற்றிலும் துவைதக் கருத்துக்கள், சில அத்வைதக்கருத்துக்கள். ஆனால் இந்தியாவின் எல்லா நெறியினருமே ஏற்றுக் கொள்கின்ற சில கோட்பாடு களும் உள்ளன. முதலாவதாக வருவது சம்சாரக்கோட்பாடு அதாவது மறுபிறவி. இரண்டாவதாக, மன இயலைப்பொறுத்தவரை எல்லோரும் ஒத்த கருத்து உடையவர்களாக இருக்கிறார்கள். முதலில் தூல உடல், அதன் பின்னால் சூட்சும உடல் எனப்படும் மனம். அதற்கும் அப்பால் உள்ளது ஜீவன். இதுவே இந்தியா மற்றும் மேலை நாட்டு மன இயல்களுக்கு இடையேயுள்ள பெரும் வேற்றுமை. மனமே ஜீவன் என்று தான் மேலை மனஇயல் வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால் இங்கே அவ்வாறு அல்ல, மனம் என்பது அந்தக் கரணம், ஜீவனின் கையில் இது ஒரு கருவி மட்டுமே, இதன் மூலமே ஜீவன் உடலிலும் புறவுலகிலும் இயங்குகிறது. இதை இங்குள்ள நெறியினர் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆன்மா, ஜீவான்மா என்று பல்வேறு பிரிவினரால் பலவிதமாக அழைக்கப் படும் ஜீவன் என்று முள்ளது. முதலும் முடிவும் அற்றது. பரிபூரண விடுதலை கிடைக்கும் வரை பிறவிகள் தோறும் வந்து போய்க் கொண்டிருக்கிறது- இதையும் எல்லோரும் ஏற்கின்றனர்.
மிக முக்கியமான மற்றொரு அடிப்படைக் கருத்தையும் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். இதுவே இந்திய மனத்தையும் மேலை நாட்டு மனத்தையும் மிகத்தெளிவாக, மிக விளக்கமாக த் தனித்தன்மையுடன் வேறுபடுத்திக் காட்டுகிறது.- ஆன்மாவிலேயே அனைத்தும் இருக்கிறது என்னும் கோட்பாடே அது. புறத்திலிருந்து எதுவும் ஆன்மாவைத் தூண்டத்தேவையில்லை. உண்மையைச்சொல்வதானால், தூண்டும் சக்தி எல்லாமே ஆன்மாவின் உள்ளிருந்து தான் வெளிப்படுகிறது. ஆற்றல்கள் அனைத்தும், தூய்மை அனைத்தும், பெருமைகள் அனைத்தும் ஆன்மாவிலேயே உள்ளன. உண்மையில் அனிமா, லகிமா முதலான சித்திகள் அடையப்பட வேண்டியவை அல்ல. அவையனைத்தும் ஏற்கனவே ஆன்மாவில் உள்ளன என்கிறான்யோகி. நாம் செய்ய வேண்டுவதெல்லாம் இவற்றை வெளிப்படுத்துவதே. யோகியின் அஷ்டமா சித்திகள், காலடியில் நெளியும் புழுவில் கூட உள்ளன என்கிறார் பதஞ்சலி. வேற்றுமையை உண்டாக்குவது உடல். ஏற்ற உடலைப்பெற்றதும் இந்த ஆற்றல்கள் வெளிப்படுகின்றன. ஆனால் ஆற்றல்கள் ஏற்கனவே அதில் உள்ளன. நல்ல செயல்களோ தீய செயல்களோ இயற்கையின் மாறுதலுக்கான நேரடிக் காரணங்கள் அல்ல. ஆனால் அந்தச் செயல்கள் இயற்கையின் பரிணாமங்களுக்கு, மாறுதல்களுக்குத் தடையாக உள்ளவற்றை நீக்குகின்றன. அவ்வளவே! நீரின் பாதையிலுள்ள தடைகளை மட்டுமே உழவன் நீக்குகிறான். நீர் தன் இயல்பின் படி தானாகவே பாய்கிறது. அது போல்” எங்கோ இருக்கின்ற ஏரி நீரைக்கொண்டு வந்து வயல்களுக்கு உழவன் பாய்ச்சுவதான பிரபல உதாரணத்தை இங்கே தருகிறார் பதஞ்சலி. ஏரியில் நீர் நிறைந்துள்ளது. கண நேரத்தில் அது வயலில் பாய்ந்து விடும். ஏரிக்கும் வயலுக்கும் இடையில் இருப்பது ஒரு மண்கரை மட்டுமே. அந்தக் கரை உடைந்தால் போதும், தண்ணீர் தன் சொந்த ஆற்றலாலும் வேகத்தின் காரணமாகவும் பொங்கியோடி வரும்.
இவ்வாறு ஆற்றலும் தூய்மையும் நிறைநிலையும் ஆன்மாவில் ஏற்கனவே உள்ளன. ஆனால் தடுத்து நிற்பது அதை மூடியுள்ள ஆவரணமே, திரையே. திரையை நீக்கிவிட்டால் ஆன்மா தன் சொந்தத் தூய்மையை அடைகிறது. அதன் ஆற்றல்கள் வெளிப்படுகின்றன. இதுவே கீழை மற்றும் மேலை நாட்டுச் சிந்தனைகளுக்கு இடையே உள்ள பெரிய வேறுபாடு. இதனை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.நாம் எல்லோரும் பிறவியிலேயே பாவிகள் என்றெல்லாம் கேலிக்கூத்தான கருத்துக்களைச் சிலர் பரப்புவதை நீங்கள் காண்கிறீர்கள். இத்தகைய கோட்பாடுகளில் நம்பிக்கை வைக்காததால் நாம் கொடியவர்களாகப் பிறந்து விட்டோமாம்! இயல்பாகவே நாம் கொடியவர்களானால், நாம் ஒரு போதும் நல்லவர்களாகவும் முடியாது என்பதை அவர்கள் சற்றும் எண்ணிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள். ஏனெனில் இயல்பு எவ்வாறு மாற முடியும்? மாறுமானால் அது தனக்குத்தானே முரண்பாடுடைய ஒன்றாகிவிடும். அது இயல்பாகாது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள துவைதிகளும் அத்வைதிகளும் மற்ற எல்லோருமே இதில் ஒத்த கருத்துடைய வர்களாக இருக்கின்றனர்.
அடுத்தபடியாக இந்தியாவிலுள்ள எல்லா பிரிவினரும் நம்புகின்ற ஒரு கருத்து கடவுள். கடவுளைப் பற்றிய அவர்களது கருத்துக்கள் வெவ்வேறு தான். சகுணக் கடவுளை, சகுணக் கடவுளை மட்டுமே நம்புகிறான் துவைதி. சகுணம் என்ற சொல்லை இன்னும் சிறிது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சகுண க் கடவுள் என்றால் அவருக்கு ஓர் உடல் உண்டு. எங்கோ ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து அவர் இந்த உலகை ஆள்கிறார் என்பது பொருள் அல்ல. சில குணங்களுடன் கூடியவர் அவர் என்பதே அதன்பொருள். சகுணக் கடவுளைப் பற்றிய பல்வேறு விளக்கங்கள் உள்ளன. அவர் இந்த ப் பிரபஞ்சத்தை ஆள்பவர். இதனைப்படைத்து , காத்து, அழிப்பவர் என்பதை எல்லா பிரிவினரும் நம்புகின்றனர். அத்வைதிகள் இன்னும் ஒரு படி மேலே சென்று, சகுணக் கடவுளின் சற்று உணர்ந்த நிலையான சகுண- நிர்க்குணம் என்ற நிலையில் நம்பிக்கை கொள்கிறார்கள். குணங்கள் எதுவுமற்ற ஒன்றை எந்த அடைமொழிகளாலும் விவரிக்க முடியாது. அத்வைதிகளும், அவருக்கு சத்-சித்- ஆனந்தம், அதாவது உண்மை- அறிவு- இன்பம் என்ற மூன்று குணங்களைத் தவிர வேறுஎதையும் கொடுக்கவில்லை. சங்கரர் செய்தது இதுவே. ஆனால் இன்னும் சிறிது ஊடுருவி முன்னே செல்வதை உபநிடதங்களிலேயே நீங்கள் காண முடியும். நேதி, நேதி இது வல்ல, இது வல்ல. என்பதை தவிர அதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது என்று அவை கூறுகின்றன.
இந்தியாவின் பல்வேறு பிரிவினரும் இதனை ஏற்றுக்கொள்கின்றனர். துவைதிகளை எடுத்துக்கொள்வோம். இந்தியாவின் துவைத எடுத்துக் கொள்வோம். இந்தியாவின் துவைத நெறிகளுக்கு ஒரு சிறந்த நவீன பிரதிநிதியாக மாபெரும் துவைதியான ராமானுஜரை நான் எடுத்துக் கொள்கிறேன். இந்தியாவின் பிற பகுதிகளில் தோன்றிய மாபெரும் ஆச்சாரியர்களைப் பற்றி வங்க மக்கள் மிகச் சிறிதே அறிந்திருப்பது வருத்தத்திற்கு உரியது.முகமதியர் காலத்தில் சைதன்யர் ஒருவரைத்தவிர, மற்ற மகத்தான ஆச்சாரியர்கள் அனைவரும் தென்னிந்தியாவில் தான் தோன்றியுள்ளனர். தற்போது தென்னிந்தியாவின் அறிவுதான் இந்தியாவை உண்மையில் ஆள்கிறது. ஏனெனில் சைதன்யர் கூட தென்னாட்டு நெறிகளுள் ஒன்றான மாத்வ நெறியைச்சேர்ந்தவரே.
ராமானுஜரின் கருத்துப்படி கடவுள், ஆன்மா, இயற்கை-இந்த மூன்றுமே என்றும் உள்ளவை.ஆன்மாக்கள் என்றும் இருப்பவை. என்றென்றும் தனித்தே இருப்பவை. எப்போதும் தங்கள் தனித்தன்மையுடன் விளங்குபவை. உங்கள் ஆன்மாவும் எனது ஆன்மாவும் என்றென்றும் வேறானது என்கிறார் ராமானுஜர். இயற்கையும் இத்தகையதே, ஆன்மாவும் கடவுளும் இருப்பது எவ்வாறு உண்மையோ, அவ்வாறே இயற்கையின் இருப்பும் உண்மையே. அதுவும் என்றென்றைக்கும் இருக்கும். ராமானுஜரின் கருத்துப்படி இறைவன் இவற்றில் ஊடுருவி யுள்ளார். ஆன்மாவின் சாரமாக இருக்கிறார் . அவர் அந்தர்யாமி, இந்தப் பொருளில் கடவுளை ஆன்மாவுடன் ஒன்றுபட்டவராகவும், ஆன்மாவின் சாரமாகவும் ராமானுஜர் சிலவேளைகளில் கருதுகிறார். பிரளய காலத்தில் இயற்கை முழுவதுமே, ”சங்குசித” நிலைக்கு உள்ளாகிறது. அதாவது சுருங்குகிறது. அப்போது இந்த ஆன்மாக்களும் சுருங்கி நுண்மையாகின்றன. அதே நிலையில் சில காலம் இருக்கின்றன. அடுத்த யுக ஆரம்பத்தில் மீண்டும் வெளிப்பட்டு முன் வினைகளுக்கு ஏற்ப பயன்களை அனுபவிக்கின்றன. ஆன்மாவின் இயல்பான தூய்மையையும் நிறைநிலையையும், சுருங்கச்செய்கின்ற செயல் ஒவ்வொன்றும் தீய செயல், அதை வெளிப்படச்செய்து விரியச்செய்கின்ற செயல் ஒவ்வொன்றும் நற்செயல் என்கிறார் ராமானுஜர். ஆன்மாவை விகாச நிலைக்குக் கொண்டு வருகின்ற எல்லாமே நல்லது. அதை சங்குசித நிலைக்குக் கொண்டு வருகின்ற அனைத்துமே தீயது. இவ்வாறு ஆன்மா தன் செயல்களின் மூலம் சுருங்கியும் விரிந்தும் இயங்கிக்கொண்டிருக்கிறது. இறுதியில் ஆண்டவனின் அருளால் முக்தி பெறுகிறது. தூயதான, இந்த அருளை வேண்டி நிற்கின்ற எல்லா ஆன்மாக்கள் மீதும் இந்த அருள் பொழிகிறது, என்கிறார் ராமானுஜர்.
சிறப்பான சுலோகம் ஒன்று வேதங்களில் உள்ளது. ”ஆஹார சுத்தௌ ஸத்வசுத்தி, ஸத்வசுத்தௌ த்ருவா ஸ்ம்ருதி”- உணவு தூய்மையாக இருக்குமானால் சத்வம் தூய்மையாகிறது. சத்வம் தூய்மையானால் நினைவு- பரம்பொருள் நினைவு. அல்லது அத்வைதிகளின் கூற்றுப்படி நமது சொந்த நிறைநிலையின் நினைவு- மேலும் உண்மையாகிறது. உறுதியாகிறது. நிறைவெய்துகிறது. இங்கே தான் பெரிய பிரச்சனை எழுகிறது. முதலில்சத்வம் என்பது என்ன? சாங்கியத் தத்துவத்தின் படி, நமது உடல் மூவகைப் பொருட்களால் ஆனது. அவை சத்வம், ராஜசம், தாமசம் இதை எல்லா பிரிவினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த மூன்றும் குணங்கள் என்னும் கருத்தே பொதுவாக நிலவி வருகிறது.
அது சரியல்ல. இந்த மூன்றும் குணங்களே அல்ல. அவை மூன்று விதமான பொருட்கள். எந்தப் பொருட்களால் பிரபஞ்சம் ஆக்கப் பட்டுள்ளதோ அந்த மூலப் பொருட்கள். எனவே ஆஹார சுத்தியால், அதாவது உணவுத் தூய்மையால் இந்த சத்வப்பொருள் தூய்மையாகிறது. இந்த சா்வத்தைப்பெறுவதே வேதாந்தம் வலியுறுத்துகின்ற ஒன்று.நான் ஏற்கனவே கூறியது போல், ஆன்மா ஏற்கனவே தூய்மையானது, பூரணமானது. வேதாந்தம் கூறுவதுபோல், ராஜச, தாமசத் துகள்கள் அதை மூடியுள்ளன. சத்வத் துகள்கள் மிகவும் ஒளிர்பவை. கண்ணாடி வழியாக ஒளி எளிதாக ஊடுருவுவதுபோல் இந்த சத்வத்துகள்கள் வழியாக ஆன்மப் பிரகாசம் சுலபமாக ஊடுருவிச்செல்கின்றன. அந்த நிலையில் ராஜச, தாமசத்துகள்கள் விலகி சத்வத்துகள்கள் எஞ்சியிருக்குமானால் ஆன்மாவின் சக்தியும் தூய்மையும் வெளிப்படும். ஆன்மா நன்றாகத்துலங்கி நிற்கும்.
எனவே இந்தச் சத்வத்தைப்பெறுதல் அவசியம், ஆஹாரம் தூய்மையாக இருக்குமானால்” என்று சுலோகத்தில் வருகிறது.ஆஹாரம் என்ற சொல்லுக்கு உணவு என்று பொருள் கூறுகிறார் ராமானுஜர். இதனைத் தமது தத்துவத்தின் முக்கியமான திருப்பு முனைகளுள் ஒன்றாக்கியும் விட்டார் அவர். அது மட்டுமல்ல, அதன் தாக்கம் இந்தியா முழுவதிலும் எல்லா பிரிவுகளிலும் உள்ளது. எனவே இதை நாம் நன்கு புரிந்து கொள்வது இன்றியமையாதது. உயவில் தூய்மை நம் வாழ்வில் தலையாய ஒன்று என்பது ராமானுஜர் கருத்து.
உணவைத் தூய்மை இழக்கச் செய்பவை எவை? மூவகை தோஷங்கள் என்கிறார் ராமானுஜர்.-ஜாதி தோஷம், ஆச்ரய தோஷம், நிமித்த தோஷம். உணவு எந்தப் பிரிவைச்சேர்ந்ததோ அந்தப் பிரிவுக்கு இயல்பாகவே உள்ளது ஜாதி தோஷம். உதாரணமாக வெங்காயம், பூண்டு, முதலியலற்றின் வாசனை இருக்கிறதே அது போல். அடுத்தது ஆச்ரய தோஷம். அதாவது உணவு யாரிடமிருந்து
பெறப்படுகிறதோ அவரது தோஷம். தீயவர்களிடமிருந்து பெறும் உணவு உங்கள் தூய்மையைக் கெடுக்கும். பெரிய மகான்கள் பவர் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக, மிகவும் கண்டிப்பாக இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். ஆனால் ஒன்று, உணவைக்கொண்டு வந்தவர் எத்தகையவர், அதனைத்தொட்டவர் எத்தகையவர் என்பதை அறிவதற்கான ஆற்றல் அவர்களிடம் இருந்தது. இதனை ஒரு முறை அல்ல, நூறு முறை என்வாழ்வில் நான் பார்த்திருக்கிறேன். அடுத்தது நிமித்த தோஷம். அசுத்தமான பொருட்களோ அத்தகைய ஆதிக்கமோ உணவில் சேர்வதால் வரும் தோஷம். இதனைச் சற்று விரிவாகப் பார்ப்போம். தூசியோ அழுக்கோ முடியோ விழுந்தாலும் பொருட்படுத்தாமல் அந்த உணவை உண்பது இந்தியாவில் சர்வ சாதாரணமான ஒன்று.
இந்த மூன்று தோஷங்களிலிருந்தும் விலக்கப்பட்ட உணவை உட்கொண்டு விட்டால் சத்வசுத்தி உண்டாகிறது. சத்வம் தூய்மையாகிறது. இப்படி மட்டும் இருந்தால் மதம் எவ்வளவு எளிதான ஒன்றாகத்தெரிகிறது.! தூய உணவை உட்கொண்டால் மட்டும் போதும் என்றால், ஒவ்வொருவரும் ஆன்மீகவாதிகளாகி விடலாமே! இந்த தோஷங்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இயலாத அளவுக்குப் பலவீனமான, அதற்குத் தகுதியில்லாத ஒருவர் இந்த உலகில் இருப்பார் என்று நான் நினைக்கவில்லை.
இந்த நிலையில் வருகிறார் சங்கரர். மனத்தில் சேர்ந்துள்ள எண்ணமே ஆஹாரம் என்கிறார் அவர். எண்ணம் தூய்மை பெறும்போது சத்வமும் தூய்மை பெறுகிறது. அதற்கு முன்பு தூய்மை ஆவதில்லை. நீங்கள் எது வேண்டுமானாலும் உண்ணலாம். உணவு ஒன்றே சத்வத்தைத் தூய்மையாக்குமானால், ஒரு குரங்கிற்கு அதன் ஆயுள் முழுவதும் பாலும் சோறும் கொடுங்கள். அது யோகியாகிவிடுமா? அப்படியானால் பசுவும் மானும் பெரிய யோகிகளாக வேண்டுமே. பல முறை நீராடுவதால் சொர்க்கம் கிடைக்குமானால் மீன்கள் அல்லவா முதலில் சொர்க்கம் செல்ல வேண்டும். காய்கறிகளை உண்பதால் ஒருவன் சொர்க்கம் செல்ல முடியுமானால் பசுவும் மானும் அல்லவா முதலில் அங்கே சென்றிருக்க வேண்டும்- என்றல்லவா சொல்லப்பட்டிருக்கிறது.
இதற்கு தீர்வுதான் என்ன? ஆஹாரம் என்பதற்கான விளக்கங்களும் தேவை. சங்கரரின் விளக்கமே அடிப்படை. அதே வேளையில் தூய உணவு தூய எண்ணங்களுக்கு உதவுகிறது என்பதிலும் சிறிதும் சந்தேகமில்லை. இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டும் தேவை. ஆனால் நவீன இந்தியாவில் வாழ்கின்ற நாம் சங்கரரின் உபதேசத்தை மறந்து, ” உணவுத்தூய்மை” ஒன்றையே பிடித்துக்கொண்டது தான் தவறு. அதனால் தான் நான் நமது மதம் சமையலறையில் புகுந்து கொண்டது என்று சொல்லும்போது சிலருக்குப்பொறி கலங்கிவிடுகிறது. நீங்கள் மட்டும் என்னுடன் சென்னையில் இருந்திருந்தால், நான் சொல்வதிலுள்ள உண்மையை உணர்ந்திருப்பீர்கள். இந்த விஷயத்தில் வங்காளிகள் பரவாயில்லை. உணவை யாராவது பார்த்து விட்டால் கூட சென்னை வாசிகள் அதை த்தூர எறிந்து விடுகிறார்கள். இவ்வளவிருந்தும் அவர்கள் பெரிதாக முன்னேறியதாகவும் தெரியவில்லை. இத்தகைய உணவை அல்லது அத்தகைய உணவை உண்பதால் மட்டுமோ, இந்த மனிதன் அல்லது அந்த மனிதனின் பார்வையிலிருந்து அதை மறைத்துவிடுவதாலோ ஒருவர் நிறைநிலை எய்திவிட முடியுமானால், அவர்கள் அனைவரும் நிறை மனிதர்களாக இருக்க வேண்டுமே! ஆனால் அப்படி ஒன்றும் இல்லை!
ஒரு முழுமை, ஒரு நிறைவு வேண்டுமானால் இந்த இரண்டும் சேர வேண்டும். இரண்டும் இணையவேண்டும். ஆனால் குதிரைக்கு முன்னே வண்டியைப் பூட்டுவது கூடாது. இந்த உணவு, அந்த உணவு என்றெல்லாமும் வர்ணாசிரமம் பற்றியும் இன்று எங்கும் கூக்குரல்கேட்கிறது. இதில் பெரும் கூச்சலிடுபவர்கள் வங்காளிகளே.
ஆமாம், உங்கள் ஒவ்வொருவரையும் கேட்கிறேன். வர்ணாசிரமம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நான் கு ஜாதிகள் இன்று எங்கே உள்ளன. பதில் சொல்லுங்கள். நான்கு ஜாதிகளை நான் காணவில்லையே! நமது வங்கப் பழமொழி உள்ளதே- தலையே இல்லை, தலைவலி உள்ளது” என்று. அத்தகைய வர்ணாசிரமத்தை இங்கு உருவாக்குவதா உங்கள் விருப்பம். இங்கு நான்கு ஜாதிகளே இல்லை. பிராமணர்களையும் சூத்திரர்களையும் மட்டுமே நான் காண்கிறேன். ஷத்திரியர்களும் வைசியர்களும் இருந்தால் அவர்கள் எங்கே? ஒவ்வோர் இந்துவும் செய்ய வேண்டிய முறைப்படி, பூணூல் அணிந்து வேதங்களைப் படிக்குமாறு அவர்களுக்கு நீங்கள் பிராமணர்கள் ஏன் கட்டளையிடக் கூடாது?வைசியர்களும் ஷத்திரியர்களும் இல்லாமல் பிராமணர்களும் சூத்திரர்களும் வசிக்கிறார்கள் என்றால், சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா? சூத்திரர்கள் மட்டுமே வாழும் நாட்டில் பிராமணர்கள் வசிக்கவே கூடாதாம். எனவே மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறுங்கள்! கடந்த ஆயிரம் ஆண்டுகளாகமிலேச்சர்களின் அரசில் வாழ்ந்து, அவர்களின் உணவை உட்கொள்ளும் உங்களைப்போன்றவர்களைப் பற்றி சாஸ்திரங்கள் என்னசொல்கின்றன தெரியுமா? அதற்காக நீங்கள் செய்ய வேண்டிய பிராயசித்தம் என்ன தெரியுமா? உங்களை நீங்களே எரித்துக் கொள்வதே பிராயசித்தம். ஆச்சாரியர்கள்என்று கூறிக்கொண்டு வேடதாரிகளாக நடக்க விரும்புகிறீர்களா? உங்கள் சாஸ்திரங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால் முதலில் தீக்குளித்து உயிர்விடுங்கள். அலெக்சாண்டருடன் சென்ற பிராமணன் ஒருவன், தான் மிலேச்ச உணவு உட்கொண்டதாகக் கருதித் தீயில் விழுந்து உயிர் விட்டானே அந்த மாதிரிச்செய்யுங்கள். அதுபோல் செய்யுங்கள், இதே நாடே உங்கள் காலடியில் கிடக்கும். உங்கள் சாஸ்திரங்களில் உங்களுக்கே நம்பிக்கையில்லை, ஆனால் பிறர் அதை நம்பவேண்டும் என்று விரும்புகிறீர்கள். வங்க பிராமணர்களே! இந்தக் காலத்தில் உங்களால் அதைச்செய்ய முடியாது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் இயலாமையை ஒப்புக்கொள்ளுங்கள். அதே போல் பிறர து இயலாமையையும் மன்னியுங்கள். பிற ஜாதியினரைத் தூக்கி விடுங்கள். கைகொடுத்து உதவுங்கள், வேதம் பயிலச்செய்யுங்கள், உலகத்திலிருக்கும் பிற ஆரியர்போல் ஆகச் செய்யுங்கள். நீங்களும் அதுபோன்ற ஆரியராகுங்கள்.
தியாகம் செய்ய இயலுமானால் உங்களுக்கு ஆன்மீகம் உண்டு. இல்லாவிட்டால் பயனில்லை. நீங்கள் உலகிலுள்ள நூல்கள் எல்லாவற்றையும் கற்கலாம், கிழக்கிலிருந்து மேற்கு வரையுள்ள நூல் நிலையங்களிலுள்ள நூல்களை எல்லாம் கரைத்துக் குடித்து மகா பண்டிதராகலாம். ஆனால் கர்ம காண்ட அளவில் மட்டுமே நின்று விட்டீர்களானால் நீங்கள் வெறும் பூஜ்யம் , உங்களுக்கு ஆன்மீகம் கிடையாது. தியாகத்தின் மூலமே மரணமிலாப் பெருநிலையை அடையவேண்டும். அதுவே சக்தி, மாபெரும் சக்தி. உலகையே துரும்பென மதிக்கும் சக்தி. அப்போது தான் இந்த பிரபஞ்சமே ஒரு பசுவின் கால்குளம்பு பதிந்த சிறு பள்ளம்போல் ஆகிறது.
தியாகம்! அதுவே கொடி. இந்திய நாட்டின் அடையாளக்கொடி, உலகின் மீது பறக்கும் கொடி. மடிந்து கொண்டிருக்கும் மனித குலத்திற்கு ஓர் எச்சரிக்கையாக, எல்லா கொடுங்கோன்மைக்கும் ஓர் எச்சரிக்கையாக , உலகின் தீமைகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இந்தியா மீண்டும் மீண்டும் அனுப்பி வருகின்ற அழியாத கருத்து இது.ஓ! இந்துக்களே! அந்தக் கொடியின் மீது உங்களுக்குள்ள பிடியை விடாதீர்கள். அதை உயர்த்திப் பிடியுங்கள். உங்கள் வலிமை குறைந்ததாக இருந்தாலும் உங்களால் தியாகம் எதுவும் செய்ய முடியாவிட்டாலும், லட்சியத்தைத் தாழ்த்தாதீர்கள். ”நான் பலவீனன், என்னால் உலகை விட முடியாது” என்று சொல்லிக்கொள்ளுங்கள். வெறும் வேத வாக்கியங்களைத் திரித்து , விதண்டாவாதம் செய்து பாமர மக்களின் கண்களில் மண்ணைத் தூவ முயற்சி செய்யாதீர்கள். உங்கள் பலவீனத்தை ஒப்புக் கொள்ளுங்கள். ஏனெனில் தியாகம் என்னும் கருத்து மிக உயர்ந்த ஒன்று. கோடிக்கணக்கானோர் தோல்வியுறலாம், பத்து பேர் அல்லது வெறும் இருவரே அந்த முயற்சியில் வெற்றி பெறலாம். அப்படித்தான் இருக்கட்டுமே! உயிரிழந்த கோடிக்கணக்கானவர்களும் புண்ணியவான்கள்! அவர்கள் சிந்திய ரத்தத்தால் அல்லவா வெற்றி கிடைத்தது! பம்பாய் மாகாணத்தில் உள்ள வல்லபாச்சாரியரின் நெறியைத் தவிர பிற வைதீக நெறியினர் அனைவரும் தியாகம் என்ற இந்த லட்சியத்தை ஏற்றுக் கொள்கின்றனர். தியாகம் இல்லாத இடத்தில் என்ன நிகழும் என்பது உங்களுள் பலருக்கும் தெரிந்ததே.
நமக்கு வைதீகம் வேண்டும். அதிதீவிரமான வைதீகம் வேண்டும். உடம்பு முழுவதுமே சாம்பலைப் பூசிக்கொள்பவர்களும், கைகளைத் தூக்கியே நின்று தவம் செய்பவர்களும் நமக்குத்தேவை. ஆம், அவை விசித்திரமான முறைகளாக இருந்தாலும், அவையும் விட்டுவிடுதல் என்ற கருத்தையே கட்டி நிற்கின்றன. நமது ஆதார சக்திகளை அரித்துத் தின்று, நம் இனத்தை ஒரு கபடதாரிகளின் இனமாக மாற்றியவாறே இந்தியாவில் நுழைந்து முன்னேறி வருகின்ற ஆண்மையற்ற சுக போகங்களின் வசப்பட்டு அழியாதீர்கள் என்று ஓர் எச்சரிக்கை யாக அவர்கள் நிற்கிறார்கள். நமக்குத் தவம் என்ற ஒன்று கண்டிப்பாகத்தேவை. தியாகம் தான் பழம்பெரும் நாட்களில் இந்தியாவை வெற்றி கொண்டிருந்தது. இனியும் அதுவே வெற்றி கொள்ளும். லட்சியங்களுள் எல்லாம் மிக உயர்ந்ததாக, மிகச் சிறப்பானதாக இன்றும் விளங்குவது அதுவே. புத்தரும், ராமானுஜரும், ராமகிருஷ்ணபரமஹம்சரும் தோன்றிய பூமி. தியாக பூமி இது. பண்டைய காலத்திலிருந்தே கர்ம காண்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த பூமி இது. எல்லாவற்றையும் துறந்து ஜீவன் முக்தர்களாக நூற்றுக் கணக்கானோர் இன்றும் வாழ்ந்து வருகின்ற பூமி இது. இந்தப் பூமி, தனது லட்சியத்தைக் கைவிடுமா? விடாது. ஒருபோதும் விடாது. மேலை நாட்டின் சுகபோக லட்சியங்களைக்கண்டு மதிமயங்கிய சிலர் இருக்கலாம். மேலை நாட்டின் சாபக்கேடான இந்தச் சுகபோகத்தில் மூழ்கியவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கலாம். உலகத்தின் சாபக்கேடான இந்தப் புலனின்பங்களில் மூழ்கியவர்கள் லட்சக்கணக்கில் இருக்கலாம்.ஆனாலும் மதத்தையே தங்கள் வாழ்வாகக்கொண்டு, எத்தகைய விளைவுகளையும் பொருட்படுத்தாமல், தேவையானால் எல்லாவற்றையும் விட்டுவிடக் கூடியவர்களும், ஆயிரக்கணக்கில் இதோ எனது பாரத பூமியில் இருக்கவே செய்கின்றனர்.
இன்னும் ஒன்று, வங்காளத்தில் குலகுரு முறை என்னும் வினோதமான வழக்கம் இருந்து வருகிறது.- எனது தந்தை உனக்குக் குருவாயிருந்தார். இப்போது நான் உனக்கு குருவாயிருக்கிறேன்., என் தந்தை உன் தந்தைக்கு குருவாயிருந்தார், எனவே இப்போது நான் உனக்குக் குருவாயிருக்கிறேன்”” என்பது. குரு யார்? வேதங்களைப் பார்ப்போம். குரு என்பவர் ”வேதங்களின் ரகசியத்தை உணர்ந்தவர்” புத்தக ப் பூச்சியல்ல. இலக்கணப் பண்டிதர் அல்ல. சாதாரண பண்டிதரும் அல்ல. பொருள் உணர்ந்தவரே குரு.
சந்தனக் கட்டைகளைச் சுமக்கின்ற கழுதைக்கு அதன் எடைதான் தெரியுமே தவிர- அதன் சிறப்பு தெரியாது.” இந்தப் பண்டிதர்களும் இத்தகையவர்களே. இத்தகைய பண்டிதர்கள் நமக்கு வேண்டாம். அனுபூதியில் அறியாதவர்கள் எதைப்போதிக்க முடியும்? நான் இளைஞனாக இருந்த போது ஆன்மீகத்தைத்தேடி இந்தக் கல்கத்தாவெங்கும் சுற்றினேன். பெரிய பெரிய சொற்பொழிவுகளைக்கேட்டேன். சொற்பொழிவு முடிந்த பின்னர் அந்தச் சொற்பொழிவாளர்களிடம், நீங்கள் கடவுளைக்கண்டதுண்டா? என்று கேட்டேன். அவர்களோ கடவுளைக்காண்பது என்ற பேச்சைக்கேட்டதும் வெலவெலத்து விட்டார்கள். ” ஆம் நான் கண்டிருக்கிறேன்” என்று கூறியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒருவரே”. அது மட்டுமல்ல, கடவுளைக்காணும் வழியில் உன்னையும் அழைத்துச்செல்வேன்” என்றும் அவர் கூறினார். மூலப்பாடங்களைத் திரித்துப்பொருள் கூறுபவர் குரு அல்ல. விதவிதமான வார்த்தை ஜாலங்கள், சாஸ்திரங்களுக்குப் பலவிதமான பொருள் கூறுதல், இவையெல்லாம் பண்டிதர் களின் களிப்பிற்கு உரியவை. ஆனால் முக்திக்கு வழியல்ல.
ச்ரோத்ரிய- வேதங்களின் ரகசியத்தை அறிந்தவர். அவ்ருஜின- பாவம் அற்றவர். அகாமஹத- ஆசையால் துளைக்கப்பெறாதவர். கற்பிப்பதன் மூலம் சம்பாதிக்க விரும்பாதவர். அவரே சாது, அவரே குரு. அவர் வசந்தம்போல் வருகிறார். வசந்தம் வந்தால் மரம் செடி கொடிகள் துளிர் விடுகின்றன. அரும்புகின்றன. மலர்கின்றன. இவற்றிடமிருந்து பிரதியாக எதையாவது வசந்தம் வேண்டுகிறதா? எதிர்பார்க்கிறதா? இல்லை. ஏனெனில் நன்மை செய்வதே அதன் இயல்பு. நன்மை செய்கிறது. அத்துடன் நின்று விடுகிறது . இத்தகையவரே குரு.சம்சாரப்பெருங்கடலைத் தாண்டியவர் யாரோ, எவ்விதச்சுய லாபமும் இன்றி மற்றவர்களும் அந்தப் பெருங்கடலைக்கடக்க உதவுகிறவர் யாரோ” அவரே குரு. வேறு யாரும் குரு ஆக முடியாது. இதைக் குறித்துக்கொள்ளுங்கள். தாங்களே அறியாமையில் மூழ்கிக்கிடக்கின்ற மூடர்கள், அகங்காரத்தின் காரணமாகத் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணிக்கொண்டு, பிறருக்கு உதவத்துடிக்கிறார்கள். அந்த முட்டாள்கள் கோணல் வழிகளில் தட்டுத் தடுமாறித் தள்ளாடியவாறே முன்னும் பின்னும் செல்கிறார்கள். குருடன் குருடனுக்கு வழி காட்டியது போல் இருவரும் குருட்டாட்டமாடி குழியில் விழுகிறார்கள். இவ்வாறு வேதங்கள் சொல்கின்றன. இப்போதுள்ள உங்கள் பழக்கத்தை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் வேதாந்திகள், நீங்கள் வைதீகர்கள், இல்லையா? நீங்கள் பெரிய இந்துக்கள். பரம வைதீகர்கள். நான் செய்ய விரும்புவதெல்லாம். உங்களை மேலும் சிறந்த வைதீகர்கள் ஆக்குவதையே. நீங்கள் எந்த அளவிற்கு வைதீகர்களாக இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு அறிவாளிகளாக இருப்பீர்கள். தற்கால வைதீகம் பற்றி நீங்கள் நினைக்க நினைக்க முட்டாள்கள் ஆவீர்கள். உங்கள் பழைய வைதீகத்திற்குச் செல்லுங்கள். ஏனெனில் அன்று வேதங்களிலிருந்து புறப்பட்ட அந்த உவ்வோர் ஒலியும், ஒவ்வொரு துடிப்பும் வலிமையான, உறுதியான, உண்மையான இதயத்திலிருந்து தோன்றியவை. ஒவ்வொன்றும் உண்மையானவை. பிறகே வீழ்ச்சி ஏற்பட்டது. கலை, விஞ்ஞானம், மதம் அனைத்திலும் சீரழிவு கண்டு நாடே வீழ்ச்சியுறத் தொடங்கியது. இந்த வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்க இப்போது நமக்கு நேரமில்லை. எனினும் அந்தவேளையில் எழுதப்பட்ட நூல்கள் எல்லாம் தேசிய வீழ்ச்சி என்னும் கொள்ளை நோயின் நச்சுக் காற்றையே வெளியிடக் காண்கிறோம்.வீரத்திற்குப் பதிலாக அழுகைக் குரல்களையே கேட்கிறோம். திரும்பச் செல்லுங்கள். பொன்னான பழங்காலத்திற்குத் திரும்பிச்செல்லுங்கள். வலிமையும் வீரியமும் நிறைந்த அந்தக் காலத்திற்குச்செல்லுங்கள். மீண்டும் ஒரு முறை வலிமை பெறுங்கள். பண்டைய ஊற்று நீரை நன்றாகப் பருகுங்கள். அதுவே இந்தியாவில் வாழ்விற்குரிய ஒரே நியதி.
அத்வைதிகளின் கருத்துப்படி, இப்போது நம்மிடம் காணப்படுகின்ற இந்தத் தனித்தன்மை இருக்கிறதே அது ஒரு பிரமை. இதைப் புரிந்துகொள்ள உலகமே திணறுகிறது. நீ ஒரு தனிமனிதன் அல்ல என்று ஒருவனிடம் சொல்லிப்பாருங்கள். தனது தனித்துவம் என்று அவன் என்ன புரிந்து கொண்டானோ என்னவோ, ஆனால் அதை இழந்து விடப் போகிறோமே என்று பயந்து நடுங்குகிறான். ஆனால் அத்வைதியோ தனித்துவம் என்பது ஒரு காலத்திலும் இருந்ததில்லை என்கிறான். வாழ்வின் ஒவ்வொரு கணமும் நீ மாறிக்கொண்டே இருக்கிறாய். நீ குழந்தையாக இருந்தாய். அப்போது உன் எண்ணங்கள் ஒரு விதமாக இருந்தன. இப்போது வாலிபனாக இருக்கிறாய். இப்போது இன்னொரு விதமாகச் சிந்திக்கிறாய். கிழவனாவாய், அப்போது வேறொரு விதமாகச் சிந்திப்பாய். ஒவ்வொருவரும் மாறுகின்றனர். அப்படியானால் உனது தனித்துவம் எங்கே? உடலிலோ மனத்திலோ சிந்தனையிலோ நிச்சயமாக இல்லை. இவற்றிற்குஅப்பால் உள்ளது உன் ஆன்மா. இந்த ஆன்மா பிரம்மமே என்கிறான் அத்வைதி. இரண்டு எல்லையற்றவை இருக்க முடியாது. ஒரே ஒரு தனித்துவம் தான் உள்ளது. அதுவே எல்லையற்றது. தெளிவாகச் சொல்வதானால் நாம் விவேகிகள், எதையும் ஆராய்ந்து பார்க்க விரும்புகிறோம்.
ஆராய்ச்சி என்பது என்ன? பகுத்து அறிதல் என்று சொல்லலாம். இதற்கு மேல் போக முடியாது என்னும் நிலை வரை பகுத்து அறிதல். எல்லையற்ற ஒன்றுடன் சேரும்போது மட்டுமே எல்லையுள்ள ஒன்று முழு அமைதி பெற முடியும். எல்லையுள்ள, ஒன்றை எடுத்து பகுத்து ஆராயப் புகுந்தால் இறுதியாக எங்கே போய் நிற்பீர்கள்? எல்லையற்ற ஒனறில் போய் தான் நிற்பீர்கள். அந்த எல்லையற்ற ஒன்றே உள்ளது என்கிறான் அத்வைதி. மற்றவை அனைத்தும் மாயை. உண்மையாக இருப்பவை அல்ல. தூலமான பொருளாகக் காட்சியளிக்கும் அனைத்தும் இந்த பிரம்மமே. நாமும் பிரம்மமே. அதன் பல்வேறு உருவங்களும் பிறவும் மாயை. உருவத்தையும் வடிவத்தையும் விலக்குங்கள். நீங்களும் நானும் எல்லாம் ஒன்று. ஆனால் ”நான்” என்ற சொல் இருக்கிறதே, அதனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நானே பிரம்மமாக இருந்தால் இதை ஏன் செய்யக் கூடாது. அதை ஏன் செய்யக் கூடாது? என்று பொதுவாகச் சொல்கிறார்கள். இது அந்தச் சொல்லை வேறு கருத்தில் உபயோகிப்பதாகும்.நீ கட்டுப் பட்டிருப்பதாகக் கருதிவிட்டால் , நீ பிரம்மமே அல்ல. பிரம்மத்திற்கு எதுவும் தேவையில்லை. அதன் ஒளியும் இன்பமும் மகிழ்ச்சியும் உள்ளேயே இருக்கிறது. தன்னுள்ளேயே முழுத் திருப்தியுற்று இருப்பது அது. அதற்கு வேண்டியது எதுவுமில்லை. அது எதிர்பார்ப்பது எதுவுமில்லை. அது சிறிதும் பயமில்லாதது. சுதந்திரமானது. அதுவே பிரம்மம். அதில் நாம் எல்லோரும் ஒன்றே.
துவைதிகளுக்கும், அத்வைதிகளுக்கும் இடையிலுள்ள பெரிய கருத்து வேறுபாடு இது என்று தோன்றுகிறது. சங்கரர் போன்ற மாபெரும் உரையாசிரியர்கள் கூட சில மூலப்பாடங்களுக்குச் சில வேளைகளில் நியாயமற்ற முறையில் பொருள் கூறுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. ராமானுஜரும் சில இடங்களில் தெளிவின்றியே பொருள் கூறுகிறார். துவைதம், அத்வைதம் ஆகிய இரண்டில் ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும். மற்றது தவறு என்றே பண்டிதர்களும் கருதுகின்றனர். துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் இவற்றுள் ஒன்றுதான் சரியானது என்றே இவர்கள் கருதுகின்றனர். காசிக்குச்சென்றுஏதாவது படித்துறையில் ஐந்து நிமிடம் உட்காருங்கள். நான் சொல்வதன் உண்மையைப் புரிந்து கொள்வீர்கள். பல்வேறு பிரிவினரின் மல்யுத்தத்தையே நீங்கள் அங்கே காண முடியும்.
இந்த நிலைமையில் தான், இந்திய நாட்டின் சமயப்பிரிவுகள் அனைத்திற்கும் பின்னணியாக உள்ள சமரசத்தின் செயல்முறை விளக்கமாக யாருடைய வாழ்க்கை விளங்கியதோ அவர் தோன்றினார். நான் குறிப்பிடுவது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைத்தான். இந்த இரண்டு நெறிகளுமே அவசியமானவை என்பதை அவரது வாழ்வு விளக்குகிறது. இவை இரண்டும் வான இயலில் வரும் பூமிக் கொள்கை. சூரியக்கொள்கை போன்றவை. ஒரு சிறுவனுக்கு வான இயல் கற்பிக்கும்போது முதலில் பூமிக்கொள்கை சொல்லிக் கொடுக்கப் படுகிறது. பின்னர் அதனை ஒத்த கருத்துக்கள் கற்பிக்கப் படுகின்றன. அவன் வானஇயல் நுணுக்கங்களைப் படிக்க முயலும் போது தான் சூரியக் கொள்கை அவசியம். அப்போது மட்டுமே அவனால் அதை நன்கு புரிந்து கொள்ள முடியும். துவைதம் என்பது புலன்களின் இயல்பான போக்கில் செல்வது, புலனறிவுக்கு அடங்கி வாழும் வரை சகுணக் கடவுளை, சகுணக் கடவுளை மட்டுமே நாம் காண முடியும். உலகம் எப்படிக் காட்சியளிக்கிறதோ, அப்படித்தான் அதை அறிய முடியும். ராமானுஜர் கூறுகிறார். இந்தஉடல் தான் நீ. இந்த மனமே நீ, ஜீவனே நீ என்று கருதும் வரையில், எதையும் அறிவதற்காக நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஆன்மா, இயற்கை, இந்த இரண்டிற்கும் காரணமான ஒன்று- இந்த மூன்றையும் நீ காண்பாய். ஆனால் அதே வேளையில் மனம் ஒடுங்கி ஒடுங்கி நுண்ணியதாகும் போது உடல் நினைவு கூட அற்றுப்போகும். பிறகு மனமும் ஏறக்குறைய மறைந்துவிடும். அப்போது நம்மைப் பயமுறுத்துகின்றவை, பலவீனப்படுத்துகின்றவை, நம்மை உடலுடன் பந்தப் படுத்துகின்றவை எல்லாமே மறையும். அப்போது தான் மிகப் பழம்பெரும் அந்த உபதேசத்தின் உண்மையை ஒருவன் காண்பான்.
யாருடைய மனம் எல்லாவற்றினுடையவும் சமத்துவத்தில் நிலை பெற்றிருக்கிறதோ, அவர் பிறப்பு இறப்பாகிய சக்கரத்தை இந்தப் பிறவியிலேயே வெல்கிறார். ஏனெனில் கடவுள் தூய்மையானவர், எல்லோருக்கும் சமமானவர். எனவே கடவுள் தூய்மையானவர், எல்லோருக்கும் சமமானவர். எனவே அவர் இறைவனில் வாழ்பவர் எனப்படுகிறார்.
இவ்வாறு ஒரே இறைவனை எல்லா இடத்திலும் காண்கின்ற, அந்தரிஷி ஆன்மாவால் ஆன்மாவைத் துன்புறுத்துவதில்லை. எனவே மிகவும் உயர்ந்ததான லட்சியத்தை அடைகிறார்.
உத்திரபிரதேசம் அல்மோராவில்
சுவாமிஜி மே11-ஆம் நாள் அல்மோராவை அடைந்தார். அப்போது அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியில் வரவேற்புரை வழங்கப்பட்டது.
1- வரவேற்புக்குப் பதிலுரை
இது நம் முன்னோர்களின் கனவுமயமான பூமி. இதில் தான் இந்தியத்தாயான பார்வதி பிறந்தாள். இந்தியாவின் ஆன்மீக சாதகர் ஒவ்வொருவரும் இறுதிநாளைக் கழிக்க , தன் வாழ்க்கையின் கடைசிப்பகுதியை நிறைவு செய்ய விரும்புகின்ற புனித பூமி இது. ஆசீர்வதிக்கப்பட்ட புனிதமான இந்தப் பூமியின் மலையுச்சிகளில், இங்குள்ள குகைகளின் இருள்திரளில், பொங்கிப்பாய்ந்து செல்லும் இந்த நதிகளின் கரையில் தான் அற்புத சிந்தனைகள் பல உருப் பெற்றன. அந்தச் சிந்தனை வெள்ளத்தின் சிறு துளிகள் தான் மேலை நாட்டில் இவ்வளவு அதிகமான போற்றுதலைப் பெற்றுள்ளது. ஈடிணையற்றவை என்று தகுதி வாய்ந்த அறிஞர்களால் முடிவு செய்யப் பட்டுள்ளது.
என் வாழ்நாளைக் கழிக்க வேண்டுமென்று இளம் வயதிலிருந்தே நான் கனவு கண்டு கொண்டிருக்கும் பூமி இது. இங்கு வாழ நான் பலமுறை முயன்றேன். இது உங்களுக்கும் தெரியும். ஆனால் அதற்கான வேளை வரவில்லை. நான் செய்ய வேண்டிய பணி உள்ளது. அதற்காக இந்தப் புனித பூமிக்கு வெளியில் நான் சுழன்று கொண்டிருக்கிறேன். எனினும் ரிஷிகள் வாழ்ந்ததும், தத்துவங்கள் பிறந்ததும், மலைகளின் தந்தையுமான இந்தப் பூமியிலேயே என் இறுதி நாட்களைச்செலவிடுவேன் என்பது என் நம்பிக்கை. ஆகா, அந்த அமைதியும், யாரும் என்னை அறியாத அந்த நாட்களும் மீண்டும் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் எவ்வளவு விரும்புகிறேன்! ஆனால் நண்பர்களே, நான் திட்டமிட்டிருப்பது போல் நடக்க முடியாமல் போகலாம். எனினும் என் வாழ்நாளில் கடைசி நாட்கள் உலகத்தின் எந்த இடத்தை விடவும் இங்கே கழிய வேண்டும் என்று நான் உண்மையாகப் பிரார்த்தனை செய்கிறேன், நம்புகிறேன்.
நான் மேலை நாட்டில் செய்த சிறியதொரு பணிக்காக, இந்தப் புனித பூமியில் வாழும் நீங்கள் வழங்கிய கனிவான பாராட்டுக்களுக்கு என் நன்றியை ஏற்றுக்கொள்ளுங்கள். கீழை நாட்டிலோ மேலை நாட்டிலோ நான் செய்துள்ள பணிகளைப் பற்றி பேச என் மனம் விரும்பவில்லை. இந்த மலைத்தந்தையின் சிகரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக என் பார்வையில் விழுந்தோறும், இத்தனை ஆண்டுகளாக என் மனத்தில் பொங்கிக்கொண்டிருந்த, பணிகள் செய்வதற்கான வேகம் அப்படியே தணிவது போல் தோன்றுகிறது. இது வரை செய்ததையும் இனி செய்யப்போவதையும் பற்றிய பேச்சில் என் நாட்டம் குறைகிறது. மாறாக இந்த இமயமலை எப்போதும் நமக்குப் போதித்து வருகின்ற அந்த அழிவற்ற கருத்தில் என் மனம் நிலைகொள்கிறது. அந்தக் கருத்தே இந்தச் சூழல் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. சுழித்துப் பாய்கின்ற நீரோடைகளின் சன்னமான சலசலப்பில் எல்லாம் நான் அந்தக்கருத்தின் முணு முணுப்பையே கேட்கிறேன்- அந்தக் கருத்துதான் துறவு. இந்த வாழ்க்கையின் எல்லாமே அச்சம் நிறைந்ததாக உள்ளது. துறவு மட்டுமே ஒருவனை அச்சமற்றவனாக ஆக்கும். ஆம், இது துறவின் பூமி.
என் மனத்தில் உள்ளதையெல்லாம் முழுமையாகப்பேசுவதற்கான நேரமோ, அதற்குரிய சூழ்நிலையோ இப்போது இல்லை. எனவே அந்தத்துறவு என்ற ஒன்றையே இமயமலை நமக்கு உணர்த்தியவாறு நிற்கிறது. அந்த மகத்தான கருத்தையே மனித சமுதாயத்திற்கு நாம் போதிக்க வேண்டும் என்பதை மட்டும் கூறி, என்பேச்சை நிறைவு செய்ய வேண்டியவனாக இருக்கிறேன். நம் முன்னோர்கள் தங்கள் இறுதிக்கால வாழ்வில் இந்த மலையால் கவரப்பட்டார்கள். அது போலவே, ஆன்ம பலம் வாய்ந்தோர் பூமியின் எல்லா பகுதிகளில் இருந்தும் எதிர்காலத்தில் இந்த மலையரசனால் கவரப் படுவார்கள். இங்கே மதத்தின் பல பிரிவுகளுக்கு இடையேயுள்ள சண்டைகளும் கொள்கை வேற்றுமைகளும் மறக்கப் பட்டுவிடும். என் மதத்திற்கும் உன் மதத்திற்கும் சண்டைகள் முழுமையாக மறைந்து போகும். அழியாத மதமாக ஒன்றே ஒன்றுதான் இந்த உலகில் உள்ளது. உள்ளிருக்கும் தெய்வீகத்தை உணர்வதே அது. மற்றவையெல்லாம் பயனற்றவை என்பதை மனித சமுதாயம் புரிந்து கொள்ளும். உலகம் வெறும் வீண் பகட்டு என்பதை உணர்ந்து, இறைவனை வழிபடுவது ஒன்றைத் தவிர, மற்ற எதுவுமே பயனற்றவை என்பதைப் புரிந்து கொண்ட ஆர்வம் மிக்கோர் இங்கே வருவார்கள்.
நண்பர்களே, இந்த இமயமலையில் ஒரு மடம் தொடங்க வேண்டும் என்ற எனது கருத்தை நீங்கள் கனிவோடு போற்றினீர்கள். இந்தஉலகம் தழுவிய மதத்தைப் போதிப்பதற்கான ஒரு பெரிய மையத்தை அமைப்பதற்கு, மற்ற எல்லா இடங்களையும் விட இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பதைப் பற்றிப்போதிய அளவு விளக்கி விட்டதாக நினைக்கிறேன்.
இந்த மலைகள் நம் இனத்தின் மிகச்சிறந்த நினைவுகளுடன் தொடர்பு உடையவை. நமது மத வரலாற்றிலிருந்து இமய மலை விலக்கப்படுமானால் எஞ்சுவது மிகக்குறைவே. எனவே இங்கு ஒரு மடத்தை நிறுவியேயாகவேண்டும், வெறும் பணிகளுக்காக மட்டுமல்ல, அதற்கும் மேலாக மௌனத்தின் , தியானத்தின், அமைதியின் ஒரு மையமாக அது விளங்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு நாள் என்ஆவல் நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். உங்களைச் சந்தித்து, இன்னும் சிறப்பாக உங்களுடன் பேசுவதற்கான வாய்ப்பு மீண்டும் கிடைக்குமென்று நம்புகிறேன். இப்போது நீங்கள் என்னிடம் காட்டிய கனிவுக்கும் மீண்டும் என் நன்றி. இந்த வரவேற்பு தனிமனிதன் என்ற முறையில் எனக்குத்தரப்பட்டதாக நான் கொள்ளவில்லை. நமது மதத்தின் ஒரு பிரதிநிதி என்ற அளவில் எனக்குத் தரப்பட்டதாகவே நான் கருதுகிறேன். அது நமது நெஞ்சங்களை விட்டு நீங்காமல் இருப்பதாக! நான் இப்போதைப்போலவே எப்போதும் தூய்மையாகவும் ஆன்மீகத்தில் ஆர்வம் உடையவர்களாகவும் இருப்போமாக!
பஞ்சாப்
சியால்கோட்டில்
பஞ்சாப் மற்றும் காஷ்மீரிலிருந்து வந்த அழைப்புகளை ஏற்று சுவாமிஜி அங்கே சென்றார். காஷ்மீரில் ஒரு மாதத்திற்கும்மேலாகத் தங்கினார். அவரது பணியை மன்னரும் மன்னரின் சகோதரர்களும் வெகுவாகப் பாராட்டினர். பின்னர் அவர் முர்ரி, ராவல்பிண்டி, ஜம்மு முதலான இடங்களுக்குச்சென்றார். அங்கெல்லாம் சொற்பொழிவுகள் ஆற்றினார். அக்டோபர் 31-ஆம் நாள் சியால்கோட்டிற்குச் சென்றார். அங்கே ஆங்கிலத்தில் ஒன்றும் இந்தியில் ஒன்றுமாக இரண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இந்திச்சொற்பொழிவின் சுருக்கம் கீழே வருகிறது.
பக்தி
.
உலகின் பல்வேறு மதங்களும் வழிபாட்டு முறையில் வேறுபட்டாலும் உண்மையில் அவை ஒன்றே. சில இடங்களில்கோயில்களைக் கட்டி அங்கே வழிபடுகிறார்கள். சில இடங்களில் நெருப்பை வழிபடுகிறார்கள். பலர் திருவுருவங்கள் முன்பு வீழ்ந்து வணங்குகிறார்கள். கடவுளையே நம்பாத பலரும் உள்ளார்கள். இவை எல்லாமே உண்மையானவைதாம். ஏனெனில் அவற்றின் உண்மையாக சாரத்தை, உண்மை மதத்தை, அவைகூறும் உண்மைகளைப் பார்த்தால் எல்லாம் சமமாகவே உள்ளது. சில மதங்களில் கடவுள் வழிபடப்படுவதில்லை. ஏன், அவர் இருப்பதையே நம்புவதில்லை. ஆனால் நல்லவர்களும் தகுதி வாய்ந்தவர்களும் கடவுளைப்போல் வழிபடப்படுகிறார்கள். இதற்குச் சிறந்த உதாரணம் புத்த மதம். கடவுளிடம் செலுத்தட்டும், அல்லது உன்னதமான மனிதர்களிடம் செலுத்தட்டும். ஆனால் பக்தி என்பது எல்லா இடங்களிலும் இருக்கவே செய்கிறது.
பக்தியின் வடிவத்தில் உபாசனை என்பது எல்லா இடங்களிலும் உள்ளது. ஞானத்தைவிட, அடைவதற்கு எளிதானது பக்தி. ஞானம் பெறுவதற்குச் சாதகமான சூழ்நிலைகளும் கடினமான பயிற்சிகளும் தேவை. யோகமும் அப்படித்தான். உடல் நலத்தோடும் உலகப்பற்றுகளிலிருந்து விடுபட்டும் இருந்தால் அன்றி, யோகத்தைச் சரியான முறையில் பயிற்சி செய்ய முடியாது. ஆனால் வாழ்க்கையில் எந்த நிலையில் உள்ள மனிதனாலும் பக்தியைச் சுலபமாகக் கடைபிடிக்க முடியும்.
பக்தியைப்பற்றி எழுதிய சாண்டில்ய மகரிஷி, இறைவனிடம் கொள்ளும்பேரன்பே பக்தி என்று கூறுகிறார். பிரகலாதனும் இதையே கூறுகிறார். மனிதனுக்கு ஒருநாள் உணவு இல்லையென்றால் துன்பப்படுகிறான். மகன் இறந்து விட்டாலோ அவன் துன்பத்தில் துடிக்கிறான். உண்மையான பக்தனின் இதயம் கடவுளுக்காக ஏங்கும்போது அத்தகைய துயரத்தை அனுபவிக்கிறது. பக்தியின் மகத்தான பண்பு என்னவென்றால் அது மனத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்பது தான். மனத்தைத் தூய்மையாக்க, பகவானிடம் உறுதியாக நிலைபெற்ற பக்தி ஒன்றே போதுமானது.ஓ! பகவானே! உனது திருநாமங்கள் எண்ணற்றவை. ஆனால் அவை ஒவ்வொன்றிலும் உன் சக்தி வெளிப்படுகிறது. உனது ஒவ்வொரு திருநாமமும் ஆழமான, மகத்தான பொருள் பொதிந்ததாக உள்ளது.நாம் கடவுளை எப்போதும் நினைக்க வேண்டும் . காலத்தையோ இடத்தையோ எதிர்பார்க்கக் கூடாது.
பல்வேறு விதங்களில் கடவுள் வழிபடப்படும்போது அவற்றுக்கிடையில்வேற்றுமை இருப்பது போல் தெரிகிறது. தான் வழிபடும் முறை மிகவும் பலனளிக்கக்கூடியது என்று ஒருவர் நினைக்கலாம். மற்றொருவரோ தனது வழிபாட்டு முறையே முக்தி பெறுவதற்குச் சிறந்த பாதை என்று கருதலாம். ஆனால் அவை அனைத்தின் அடிப்படையையும் பார்த்தால் ஒன்றாகவே இருக்கிறது.
சைவர்கள் சிவபெருமானை மிகுந்த ஆற்றல் வாய்ந்தவர் என்று கூறுகிறார்கள். வைணவர்கள் எல்லா சக்தியும் விஷ்ணுவுக்கே என்கிறார்கள். தேவி உபாசகர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் தேவியே சர்வ வல்லமை பெற்றவள் என்ற கருத்திலிருந்து சிறிதும் பின் வாங்குவது இல்லை. நிலையான பக்தி வேண்டுமானால் இத்தகைய தீய எண்ணங்களை ஒதுக்கி விடுங்கள். வெறுப்பு என்பது பக்தியின் வளர்ச்சியைப் பெருமளவு தடுக்கின்ற ஒரு தடையாகும். வெறுப்பவர்கள் யாரும் கடவுளை அடைய முடியாது.
ஆனால் ஒருவனுக்கு இஷ்டதெய்வத்திடம் பக்திதேவை. விஷ்ணுவும் ராமரும் ஒருவரே என்பது எனக்குத்தெரியும்.ஆனால் தாமரைக் கண்ணனான ராமன் தான் என் விலைமதிப்பற்ற புதையல் என்று அனுமன் கூறினார். ஒருவன் எத்தகைய இயல்புடன் பிறந்தானோ அது அவனிடம் நிலைபெற்றுவிடுகிறது. ஒரே ஒரு மதம் மட்டுமே இருக்க முடியாது என்பதற்கு இது தான் ஒரே காரணம். அப்படி ஒரே மதம் ஆகாமல் இருக்க இறைவன் அருளட்டும். அப்படி ஆகுமானால் இந்த உலகம் உலகமாக இருக்காது. குழப்பக்குட்டை ஆகிவிடும்.
தனக்கே உரித்தான இயல்பின் படி தான் ஒருவன் நடக்க வேண்டும். அவனுடைய வழியிலேயே அவனை ஊக்குவித்து உதவி செய்ய ஓர் ஆசிரியர் கிடைத்தால் அவன் முன்னேறுகிறான். அந்த மனப்பாங்கை வளர்க்க வேண்டும். தான் விரும்புகின்ற பாதையிலேயே செல்ல ஒருவனை அனுமதிக்க வேண்டும். வேறு வழியில் போகுமாறு அவனை நாம் வற்புறுத்தினால், இதுவரை தான் பெற்ற வளர்ச்சியை அவன் இழப்பான். எதற்கும் பயனற்றவனாகவும் ஆகி விடுவான். ஒருவனது முகம் மற்றொருவனின் முகத்திலிருந்து வேறுபட்டிருப்பதைப்போல், ஒவ்வொருவரின் இயல்பும் வெவ்வேறாக இருக்கிறது. அவனது இயல்பின் படி செல்ல நாம் அவனை ஏன் அனுமதிக்கக் கூடாது?ஓர் ஆறு ஒரு குறிப்பிட்ட திசையில் பாய்ந்து கொண்டிருக்கிறது.அதே திசையில் செல்வதற்கு நீங்கள் உதவினால் அதன்வேகம் அதிகரிக்கும். ஆற்றலும் அதிகரிக்கும். அதன் போக்கிலிருந்து மாற்ற முயற்சி செய்யுங்கள். விளைவைக் காண்பீர்கள். நீரின் அளவும் குறையும். வேகமும் தணிந்து விடும். வாழ்க்கை மிகவும் முக்கியமானது. எனவே சொந்த இயல்பு ஒருவனை எந்தத் திசையில் தூண்டுகிறதோ, அந்தத் திசையிலேயே அவனுக்கு வழிகாட்ட வேண்டும்.
இந்தியாவில் மதங்களுக்குள் பகை இருந்ததில்லை. எந்த மதமும் துன்புறுத்தப் படாமல் தனித்து வளரவிடப் படுகிறது. அதனால் மதங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன. தன் மதம் மட்டுமே உண்மை. அதைப் பின்பற்றாதவர்கள் முட்டாள்கள். என் மதத்தைப் பின்பற்றாதவர்கள் எல்லாம் அயோக்கியர்கள். இத்தகைய எண்ணங்களால் மட்டுமேமதச் சண்டைகள் உண்டாகின்றன. என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எல்லோரும் ஒரே மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று கடவுள் விரும்பியிருந்தால் இத்தனை மதங்கள் ஏன்தோன்றின? அனைவர் மீதும் ஒரே மதத்தைத் திணிப்பதற்காக எத்தனையோ முயற்சிகள் நடந்தன. அத்தனையும் தோல்வியையே தழுவின. எல்லோரையும் ஒரே மதத்தைப் பின்பற்றச் செய்வதற்காக வாளையே தூக்கியபோது கூட என்ன நடந்தது! ஒன்றிற்குப் பதிலாக பத்து மதங்கள் தோன்றின என்பதையே வரலாறு காட்டுகிறது. அனைவருக்கும் ஒரே மதம் பொருந்தாது. செயல், எதிர்ச்செயல் இந்த இரண்டு சக்திகளின் விளைவே மனிதன். இந்த இரண்டுமே அவனைச் சிந்திக்க வைக்கின்றன. இத்தகைய சக்திகள் மனத்தில் செயல்படவில்லை என்றால் மனிதன் சிந்திப்பதற்கே முடியாதவனாகி விடுவான். மனிதன் சிந்திக்கின்ற ஜீவி, மனத்தை உடையவன் மனிதன். இந்த மனம் போய் விட்டால், அவனது சிந்தனைஆற்றல் அகன்றுவிட்டால் அவன் மிருக நிலைக்குச்சென்று விடுகிறான். அத்தகையவனை யார் விரும்புவார்கள்? இந்தியர்களுக்கு அத்தகைய எந்த நிலையும் வராமல் கடவுள் தடுப்பாராக! மனிதன் மனிதனாக இருக்கவேண்டுமானால் ஒருமையில்வேறுபாடுகள் தேவை. எல்லாவற்றிலும் வேறுபாடுகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வேறுபாடுகள் இருக்கும் வரை தான் உலகம் நிலைக்கும். வேறுபாடு என்பதற்கு ஒருவர் சிறியவாகவும் மற்றொருவர் பெரியவராகவும் இருக்கவேண்டும் என்பது மட்டும் பொருள் இல்லை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தங்கள் நிலையில் இருந்து கொண்டே தங்கள் பங்கை ஒரே போல் திறம்பட வகித்தாலே வேறுபாடு காப்பாற்றப்பட்டு விடும்.
நற்பண்பும் திறமையும் மிக்கவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். தாங்கள் இருப்பதன் மூலமே தங்கள் மதத்தைப் பிறருடைய மரியாதைக்கு உரியதாக ஆக்குகிறார்கள். இத்தகையோர் ஒவ்வொரு மதத்திலும் இருப்பதால், எந்தப் பிரிவிடமும் வெறுப்பு கூடாது.
அப்படியானால் தீமையைப்போதிக்கின்ற மதத்தை மதிக்க வேண்டுமா என்ற கேள்வி எழலாம். அதற்கான விடை உறுதியாக, கூடாது என்பது தான். அது மட்டுமல்ல, அத்தகைய மதத்தை உடனடியாக ஒதுக்கிவிட வேண்டும்.ஏனென்றால் அது தீமையையே உருவாக்கும். எல்லா மதங்களும் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். தனி மனித ஒழுக்கம் என்பது தர்மத்தைவிட உயர்ந்ததாகக் கொள்ளப் படவேண்டும்.
இப்போது ஆசாரம் என்பதன் பொருளைத் தெரிந்து கொள்வோம். ஆசாரம் என்பது அறிமுகமும் புறமுகமும் தூய்மையாக இருத்தல் ஆகும். சாஸ்திரங்கள் கூறுகின்ற குளித்தல் முதலியவற்றால் புறத்தூய்மை உண்டாகும். பொய் பேசாதிருத்தல், மது அருந்தாதிருத்தல், ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யாதிருத்தல் முதலியவற்றாலும் பிறருக்கு நன்மை செய்வதாலும் அகத்தூய்மை உண்டாகிறது. பாவம் செய்யாமல், பொய் சொல்லாமல், மது அருந்தாமல், சூதாடாமல், திருடாமல், இருப்பது நல்லது. ஆனால் இவையெல்லாம் உங்கள் கடமைகள் மட்டுமே. இப்படி நல்லவர்களாக இருப்பதற்காக உங்களைப் பாராட்ட முடியாது. சிறிது பரோபகாரமும் செய்ய வேண்டும். உங்களுக்கு நீங்கள் நன்மை செய்து கொள்வது போல் பிறருக்கும் நன்மை செய்தேயாக வேண்டும்.
உணவு விதிகளைப்பற்றியும் கொஞ்சம் நான் இங்கே சொல்ல வேண்டும். உணவைப் பற்றிய பழைய வழக்கங்கள் எல்லாமே மறைந்து போய்விட்டன. இவனுடன் சாப்பிடக்கூடாது, அவனுடன் சாப்பிடக்கூடாது, இவை போன்ற சில தெளிவற்ற கருத்துக்கள் மட்டுமே நம் மக்களிடம் எஞ்சியுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட நல்ல நியமங்களுள் எஞ்சிய ஒரேயொரு அடிப்படைக்கருத்து, தொடுவதன் மூலம் சுத்தம் வரும் என்பது தான்.
மூவகை உணவை சாஸ்திரங்கள் தடை செய்கின்றன. முதலில் ஜாதி தோஷம்- இயல்பாகவே குறையுடைய உணவுகள், பூண்டு, வெங்காயம் போன்றவை . அவைகளை அதிகமாகச் சாப்பிட்டால் அது அதிக ஆசையை எழுப்புகிறது. மனிதனுக்கும் கடவுளுக்கும் வெறுப்பான தீயொழுக்கத்தில் ஈடுபடுமாறு அவளைத் தூண்டுகிறது. இரண்டாவது, அசுத்தமான இடங்களில் உண்பது. தூய்மையான, ஆரோக்கியமான இடங்களிலேயே உணவு கொள்ள வேண்டும். மூன்றாவது, தீயவர்களால் தொடப்படுகின்ற உணவைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய உணவு நம் மனத்தில் தீய எண்ணங்களை எழுப்புகிறது.பிராமணனின் மகனாக இருந்தாலும், நெறி தவறியவனானால் அவன் கையிலிருந்து உணவு கொள்ளக் கூடாது. ஆனால் இத்தகைய ஆசாரங்களின் அடிப்படை தற்போது மறைந்தே விட்டது. ஒருவர் மிகச்சிறந்த ஞானமும் புனிதமும் பெற்றிருந்தாலும், உயர்ந்த ஜாதியில் பிறக்காதவர் என்றால் அவரிடமிருந்து சாப்பிடக்கூடாது. என்பதெல்லாம் தான் எஞ்சியிருக்கிறது.
உணவு பற்றிய அந்தப் பழைய நியமங்கள் எப்படி முற்றிலுமாகப் பின்பற்றப்படாமல் போய்விட்டது என்பதற்கு மிட்டாய்க்கடைகளைப் பார்த்தால் போதும். கடை முழுவதும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும், தெருவில் உள்ள தூசி எல்லாம் அந்தப் பண்டங்களின் மீது தான். கடைக்காரன் உடுத்தியிருக்கும் துணி கூட அழுக்கு படிந்ததாக ,தூய்மையற்றதாக உள்ளது. இனிப்புகள் எல்லாம் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப் பட்டாலன்றி அவற்றை வாங்க மாட்டோம் என்று வாங்குபவர்கள் எல்லோருமே குரலெழுப்ப வேண்டும். அப்படிச்செய்தால், ஈக்கள் மொய்த்து, காலராவும் பிளேக்கும் அந்த இனிப்புகள் மூலம் மக்களிடையே பரவாமல் தடுக்க முடியும்.
நாம் முன்னேற வேண்டும் , நாமோ, முன்னேறுவதற்குப் பதிலாக பின்னோக்கிச்சென்று கொண்டிருக்கிறோம். ”தண்ணீரில் எச்சில் துப்பக் கூடாது” என்கிறார் மனு. ஆனால் நாமோ எல்லா வகையான குப்பைகளையும் ஆறுகளில் தான் கொட்டுகிறோம். இதையெல்லாம் பார்க்கும்போது தான் புறத்தூய்மை எவ்வளவு அவசியமானது என்பது தெரிகிறது. சாஸ்திரங்களை எழுதியவர்கள் இதை நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனர். தற்போது உணவுத்தூய்மை என்பதன் சாரம் போய்விட்டது. வெறும் சக்கை மட்டுமே எஞ்சியுள்ளது. நமது ஜாதியினர் திருடர்களாக, குடிகாரர்களாக, குற்றவாளிகளாக இருக்கலாம், பரவாயில்லை. ஆனால் நல்ல மேன்மையான மனிதன் ஒரு தாழ்ந்த ஜாதிக்காரனுடன் உண்ணட்டும். அந்த கீழ்ஜாதிக்காரன் எவ்வளவு தான் நல்லவனாக இருந்தாலும், அவனுடன் உண்டவன் ஜாதியை விட்டே விலக்கப் படுகிறான். இது நம் நாட்டின் சாபக்கேடு. எனவே பாவிகளின் தொடர்பால் பாவம் வருகிறது. நல்லவர்களின் தொடர்பால் மேன்மை வருகிறது. தீயவர்களிடமிருந்து விலகி இருப்பதே புறத்தூய்மை என்பனவற்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
அகத்தூய்மை இன்னும் கடினமான ஒன்று. உண்மை பேசுவது, ஏழைகளுக்குச்சேவை செய்வது, தேவைப்படுபவர் களுக்கு உதவுவது முதலியவற்றால் அகத்தூய்மை உண்டாகிறது. நாம் எப்போது உண்மை பேசுகிறோமோ? நடைமுறையில் அது இல்லை. சொந்த அலுவல்களுக்காகப் பணக்காரனை நாடிச்செல்கிறார்கள். அந்தப் பணக்காரன் தன் வீட்டிற்கு வரும் ஏழையின் கழுத்தை அறுப்பவனாக இருந்தாலும் அவனை ஏழைகளின் இதய தெய்வம் என்று முகஸ்துதி செய்கிறார்கள். இது என்ன? பொய்யைத் தவிர வேறில்லை. இது தான் மனத்தைக் கெடுக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகள் எந்தத் தீய நினைப்பும் இல்லாமல் இருந்து அகத்தூய்மை பெற்றவன் என்ன சொன்னாலும் பலிக்கும் என்று அதனால் தான் சரியாகக் கூறப்பட்டுள்ளது. இது உண்மையின் சக்தி.
இவ்வாறு அகமும் புறமும் தூய்மை பெற்றவர்களே பக்திக்குத் தகுதி வாய்ந்தவர்கள். இதில் சிறப்பு என்ன வென்றால் பக்தியே பெருமளவில் மனத்தைத் தூய்மைப்படுத்தி விடுகிறது. யூதர்களும் முகமதியர்களும் கிறிஸ்தவர்களும் இந்துக்களைப்போல் அளவுக்கு அதிகமாக புறத்தூய்மையை வற்புறுத்த வில்லை என்றாலும், ஏதாவது ஒருவகையில் வற்புறுத்தவே செய்கிறார்கள். அது மிக முக்கியமானது என்பதை அவர்களும் அறிந்தே இருக்கிறார்கள்.
யூதர்களும் உருவ வழிபாட்டைக் கண்டிப்பவர்கள் என்றாலும் அவர்களுக்கும் கோயில் இருந்தது. அதில் அவர்களுடைய மதச் சட்டங்களை ஒரு பெட்டியில் வைத்துப் பாதுகாக்கிறார்கள். சிறகுகளை விரித்த நிலையிலுள்ள தேவ தூதர்களின் படம் அந்தப் பெட்டிக்கு மேல் உள்ளது. அவர்களுக்கு இடையே தெய்வீகம் ஒரு மேகத்தின் வடிவில் இருப்பதாக அவர்கள் கொள்கின்றனர். அந்தப் பழைய கோயில் நெடுங்காலத்திற்கு முன்பே அழிக்கப்பட்டு விட்டது. அதே அமைப்பில் புதிய கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. பெட்டியில் மத நூல்கள் வைக்கப் பட்டுள்ளன.
ரோமன் கத்தோலிக்கர்களிடமும், கிரேக்கக் கிறிஸ்தவர்களிடமும் உருவ வழிபாடு ஏதோ சில விதங்களில் இன்னும் இருக்கவே செய்கிறது. ஏசு மற்றும் அவரது தாயின் திருவுருவங்கள் வழிபடப்படுகின்றன. புரோட்டஸ்டன்ட்களிடையே உருவவழிபாடு இல்லை என்றாலும் , அவர்கள் கடவுளைச் சிறப்பான மனித வடிவில் வழிபடுகிறார்கள். இதுவும் ஒருவகையில் உருவ வழிபாடுதானே. பாரசீகர்களிடமும் ஈரானியர்களிடமும் அக்கினி வழிபாடு மிகப் பரவலாக உள்ளது. முகமதியர்கள் இறைத்தூதர்களையும் மகான்களையும் வழிபடுகிறார்கள். காபா இருக்கும் திசையை நோக்கியே பிரார்த்தனை செய்கிறார்கள். மத வளர்ச்சியின் முதற்கட்டத்தில் மனிதன் சிலப் புறப் பொருட்களின் துணையை நாட வேண்டியுள்ளது. அகத்தூய்மை பெற்ற பின்னரே குணங்கள் எதுவுமற்ற கருத்து நிலைக்குச் செல்கிறார்கள் என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன.
ஜீவனை பிரம்மத்துடன் இணைப்பதற்கான முயற்சி உயர்தரமானது. தியானம் இடைத்தரமானது, ஜபம் கடைத்தரமானது. உருவ வழிபாடு கடைத்தரத்திலும் கடைத்தரமானது.ஆனால் உருவங்களை வழிபடுவது பாவம் அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தன்னால் இயன்றதையே ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அதை நாம் தடுத்தால் , தான் விரும்புவதை அடைய அவன் வேறு ஏதாவது வழியை நாடுவான். எனவே உருவங்களை வழிபடுபவனை நாம் இழிவாகப்பேசக் கூடாது. வளர்ச்சியின் அந்தப் படியில் தான் அவன் இருக்கிறான். அவனுக்கு உருவங்கள் வேண்டும். அவன் முன்னேறுவதற்கு, மேலான நிலையை அடைவதற்குச் சான்றோர்கள் உதவ வேண்டும். இத்தகைய பல்வேறு வழிபாட்டு முறைகளைப் பற்றிச் சண்டையிட்டுக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.
சிலர் செல்வத்திற்காக கடவுளை வணங்குகிறார்கள. இன்னும் சிலர் மகன்வேண்டும், என்று அவரை வணங்குகிறார்கள். இவர்கள் தங்களைப் பக்தர்களென்று எண்ணிக்கொள்கிறார்கள். இது பக்தியல்ல. அவர்கள் உண்மையான பக்தர்களும் அல்ல, சாது ஒருவர் வந்து தன்னால் பொன்னைஉண்டாக்க முடியும் என்று சொன்னால் அவர் பின்னால் ஓடுகிறார்கள். இருந்தாலும் தங்களை பக்தர்களாகக் கருதிக்கொள்கிறார்கள். மகன்வேண்டுமென்று கடவுளை வழிபடுவது பக்தியல்ல. பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையால் கடவுளை வழிபடுவது பக்தியல்ல. சொர்க்கத்திற்குச் செல்லவேண்டும் என்ற ஆசையோடு வழிபடுவது பக்தி அல்ல. நரகத்தின் வேதனைகளிலிருந்து காப்பாற்றப்படவேண்டும் என்ற ஆசையோடு வழிபடுவது ம் பக்தியல்ல. பய உணர்ச்சியிலிருந்தோ, பேராசையிலிருந்தோ தோன்றுவது பக்தியே அல்ல.ஓ பகவானே! எனக்கு அழகான மனைவி வேண்டாம், ஞானமோ முக்தியோ வேண்டாம். நான் நூற்றுக்கணக்கான முறை பிறப்பேனாக! நான் வேண்டுவதெல்லாம், அந்தப் பிறவிகள் அனைத்திலும் உனக்கு எப்போதும் சேவை செய்கின்ற பேறு ஒன்றையே பெறுவேனாக! என்று சொல்பவன் தான் உண்மையான பக்தன். இந்த நிலையில் தான், அதாவது கடவுளை எல்லாவற்றிலும், எல்லாவற்றையும் கடவுளிலும் காணும் போது தான் அவன் முழுமையான பக்தியை அடைந்தவனாகிறான். அதன் பிறகு தான் அவன் அணு முதல் பிரம்மாவரை ஒவ்வொன்றையும் விஷ்ணு வடிவமாகக் காண்கிறான். அதன் பிறகுதான் கடவுளே உலகில் ஒவ்வொன்றாக ஆகியிருப்பதையும் காண்கிறான். அதன் பிறகு தான் உலகத்தில் கடவுளைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதை உணர்கிறான்.அதன் பிறகு மட்டுமே, அவன் தன்னை எல்லா உயிர்களுக்கும் தாழ்ந்தவனாகக் கருதி ஓர் உண்மை பக்தனின் நிலையில் இருந்து கடவுளை வழிபடுகிறான். அந்த நிலையில் அவன் புண்ணிய தீர்த்தங்களுக்குச் செல்வதை விட்டு விடுகிறான். புற வழிபாடுகளைத் தாண்டிச் செல்கிறான். ஒவ்வொரு மனிதனையும் முழுமை பெற்ற கோயிலாகக் காண்கிறான்.
சாஸ்திரங்களில் பக்தி பல வழிகளில் விவரிக்கப் பட்டுள்ளது. நாம் கடவுளை நம் தந்தை என்கிறோம். இதைப்போலவே தாய் என்றும், மற்றும் பலவாறாகவும் அழைக்கிறோம். நம்மிடம் உள்ள பக்தியை வலுப்படுத்துவதற்காகவும் அவரை நமக்கு மிக நெருங்கியவராக, அன்பானவராக உணர்வதற்காகவும் இந்த உறவு முறைகள் ஏற்படுத்தப் பட்டன. எனவே அவரது திருநாமங்கள் எல்லாம் ஒருவிதத்தில் நியாய மானவையே. அதாவது அவை ஒவ்வொன்றும் அன்பை வெளிப்படுத்துகின்றன. உண்மையான பக்தன் இறைவனிடம் கொள்கின்ற அன்புப் பிணைப்பின் வெளிப்பாடுகள் இந்த உறவு முறைகள்.
ராசலீலையிலுள்ள ராதை மற்றும் கிருஷ்ணனின்கதையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த க் கதை ஒரு பக்தனின் உண்மையான உணர்வை அப்படியே சித்தரிக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள அன்பை விட மேலான அன்பு இந்த உலகில் எதுவுமில்லை. அத்தகைய ஆழ்ந்த அன்பு எங்கே இருக்கிறதோ அங்கே அச்சம் இல்லை. பிரிய முடியாத படி, ஒருவருக்குள் ஒருவர் ஐக்கியமாகின்றவாறு அந்த இருவரையும் இணைக்கின்ற பந்தம் ஒன்றைத் தவிர அதில் வேறு எந்தப் பற்றும் இல்லை. ஆனால் பெற்றோர்கள் விஷயத்தில் நமக்கு அவர்களிடம் மரியாதை இருப்பதால் அவர்களிடம் நாம் காட்டும் அன்பு பயம் கலந்ததாகவே இருக்கும்.
கடவுள் எதையாவது படைத்தாரா இல்லையா என்பதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அவரே நம்மைக்காப்பவர் என்ற உண்மையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன செய்யப்போகிறோம்? நமது அன்பிற்குரியவர் அவர் மட்டுமே. பயத்தைத் தரும் எல்லா எண்ணங்களையும் விலக்கிவிட்டு அவரைப்போற்றுவோம். வேறு எந்த ஆசையும் இல்லாதபோது, வேறு எதையும் நினைக்காத போது, அவரிடம் பித்துப்பிடிக்கும் போது மட்டுமே மனிதன் கடவுளை விரும்புகிறான். காதலன் காதலியிடம் கொள்கின்ற அன்பு ஒன்று மட்டுமே. ஒரு பக்தன் கடவுளிடம் கொள்ள வேண்டிய பக்திக்கு உதாரணமாக விளங்க முடியும். கிருஷ்ணர் கடவுள், ராதை அவரை நேசித்தாள். இந்தக் கதையைக்கூறும் நூல்களைப் படியுங்கள். அதன் பிறகே கடவுளிடம் எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பதை உங்களால் ஊகித்துப் பார்க்க முடியும். ஆனால் எத்தனை பேர் இதனைப் புரிந்து கொள்வார்கள்? நாடி நரம்புவரை மலினப் பட்டு, ஒழுக்கமென்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எப்படி இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியும்? மனத்தில் உள்ள எல்லா வித உலகியல் எண்ணங்களையும் விரட்டி விட்டு, தூய்மையான , ஒழுக்கம் நிறைந்த, ஆன்மீகமயமான சூழலில் வாழும்போது, கற்றறிவு இல்லாத வர்கள் கூட மிக நுண்ணிய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இத்தகையோர் மிகக்குறைவாக அல்லவா இருக்கிறார்கள்!
மனிதனின் புரட்டுக்கு இடமாகாத மதம் ஒன்றுகூட இல்லை. உதாரணமாக ஆன்மாவேறு , உடல் வேறு என்று அவன் நினைத்துக் கொள்ளலாம். ஏனெனில் உடலால் பாவம் செய்தால் அது ஆன்மாவைப் பாதிக்காது அல்லவா! மதங்கள் உண்மையாகப் பின்பற்றப்படுமானால் இந்து, முகமதியன், கிறிஸ்தவன் என்று யாராக இருந்தாலும் முற்றிலும் தூய்மையால் நிறையப்பெறாத ஒருவன் கூட இருக்க மாட்டான். ஆனால் மனிதர்கள் தங்கள் இயல்பான நல்ல அல்லது கெட்ட குணங்களால் வழிநடத்தப்படுகிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. இறைவனைப்பற்றிக்கேட்கும்போது இறையுணர்வு போதையில் ஆழ்கின்ற, இறைவனைப் பற்றிப்படிக்கும்போது கண்ணீர் சிந்துபவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள். அத்தகையவர்களே உண்மை பக்தர்கள்.
ஆன்மீக முன்னேற்றத்தின் ஆரம்ப நிலையில் ஒருவன் கடவுளை எஜமானனாகவும் தன்னை அவரது ஏவலனாகவும் நினைக்கிறான். தன் அன்றாடத்தேவைகள் போன்றவற்றை அளிப்பதற்காக அவரிடம் நன்றியுணர்ச்சி கொள்கிறான். இத்தகைய எண்ணங்களை எல்லாம் ஒதுக்கி வையுங்கள். எல்லா வற்றையும் கவரக்கூடிய சக்தி ஒன்றே உள்ளது. அது தான் கடவுள். அந்தச் சக்திக்கு அடங்கியே சூரியனும் சந்திரனும் மற்ற எல்லாமே இயங்குகின்றன. இந்த உலகிலுள்ள நல்லதானாலும் , கெட்டதானாலும் ஒவ்வொன்றும் கடவுளுக்கே சொந்தம். நம் வாழ்க்கையில் நல்லதோ தீயதோ எது நடந்தாலும் அது நம்மைக் கடவுளிடமே கொண்டு செல்கிறது.
ஒருவன் சுயநலம் காரணமாக மற்றொருவனைக் கொல்கிறான். ஆனால் அதன் பின்னணியிலும் அவன் தன்னிடமோ பிறரிடமோ கொண்ட அன்புதான் இருக்கிறது. நாம் நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அதைத் தூண்டுகின்ற சக்தியாக அன்பே இருக்கிறது. தானோ, தன் குட்டிகளோ பசியாக இருப்பதால் தான் புலி எருமையைக்கொல்கிறது.
கடவுள் அன்பே வடிவானவர். எல்லாவற்றிலும் வெளிப்பட்டுத்தோன்றுபவர் அவரே. தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருவரும் அவரிடம் இழுக்கப் படுகிறோம். பெண்ணொருத்தி கணவனை நேசிக்கும்போது அவனிடம் உறைகின்ற தெய்வீகமே தன்னை அவனிடம் ஈர்க்கின்ற மகாசக்தி என்பதை அறிவதில்லை. நாம் வழிபடவேண்டியது அன்பு வடிவாகிய கடவுள் ஒருவரையே. படைப்பவராகவும் காப்பவராகவும் மட்டும் அவரைக் கருதும்வரையில் புற வழிபாட்டில் மட்டுமே ஈடுபட முடியும். ஆனால் அவற்றைக் கடந்து, அவரை அன்பின் உருவமாகக் கருதும்போது, எல்லாவற்றிலும் அவரையும், அவரில் எல்லாவற்றையும் காணும்போது மட்டுமே மிக மேலான பக்தியை அடைகிறோம்.
லாகூரில்
சுவாமிஜி லாகூருக்கு நவம்பர் 5-ஆம் நாள் வந்தார். ஆரிய சமாஜம் மற்றும் சனாதன தர்ம சபையின் தலைவர்கள் அவருக்கு மாபெரும் வரவேற்பு அளித்தனர். லாகூரில் தங்கியிருந்த குறைந்த காலத்தில் சுவாமிஜி மூன்று சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். முதல் சொற்பொழிவு தியான சிங் என்பவரின் மாளிகையில் நடைபெற்றது. அவர் பேசியது-
1-இந்து மதத்தின் பொது அடிப்படைகள்.
புனிதமான ஆர்யாவர்த்தத்தில் மிகப் புனிதமான இடமாகக் கருதப்படுவது இந்த இடம். நமது மகத்தான ரிஷியாகிய மனு குறிப்பிடுகின்ற பிரம்மாவர்த்தம் இது தான். ஆன்மாவை அடைவதற்கான பெரும் துடிப்பு. ஆம், வரலாறு காட்டுவது போல் எதிர்காலத்தில் உலகத்தையே நிறைத்துப் பரவப்போகின்ற அந்தப் பேரார்வம் இந்தப் பூமியிலிருந்து தான் எழுந்தது. பெரு நதிகளைப்போல், ஆன்மீகப்பேரார்வங்கள் பொங்கியெழுந்து , ஒன்று சேர்ந்து, வலிமை பெற்று உலகம் முழுவதிலும் பயணம் செய்து, இடிபோன்ற குரலில் தங்களை அறிவித்துக்கொண்ட பூமி இது தான். இந்தியாவிற்குள் நுழைந்த எல்லா ஊடுருவல்களையும் படையெடுப்புகளையும் முதன்முதலில் தாங்கிக்கொண்ட பூமி இது தான். வெளியிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த காட்டுமிராண்டிகளின் ஒவ்வொரு தாக்குதலையும் தன் நெஞ்சில் முதலில் தாங்கிய வீர பூமி இது தான். அத்தனை துன்பங்களுக்குப் பிறகும் தன் பெருமையையும் வலிமையையும் முழுவதுமாக இழந்துவிடாமல் இருக்கும் பூமி இது தான். இங்கே தான்சாந்தமான நானக் தமது மகத்தான உலகம் தழுவிய அன்பை பிற்காலத்தில் போதித்தார். இங்குதான் அவரது விசாலமான இதயம் திறந்தது. உலகம் முழுவதையும் அணைத்துக்கொள்ள- இந்துக்களை மட்டுமல்ல, முகமதியர்களையும் தழுவிக்கொள்ள-அவரது கைகள் நீண்ட இடம் இது தான். நமது இனத்தின்கடைசி வீரர்களுள் ஒருவரும் மங்காப்புகழ் பெற்றவர்களுள் ஒருவருமான குரு கோவிந்த சிங், தம்முடையவும், தமது அன்பிற்குரியவர்கள் மற்றும் நெருக்கமானவர்களுடையவும் ரத்தத்தை மதத்திற்காகச் சொரிந்தார். யாருக்காக ரத்தம் சிந்தினாரோ அவர்களால் புறக்கணிக்கப் பட்ட பின்னரும் தமது நாட்டிற்கு எதிராக ஒரு வார்த்தையும் சொல்லாமல், ஒரு முணு முணுப்பும் இல்லாமல், நெஞ்சில் அடிபட்டுக் காயமுற்ற சிங்கம்போல், மரணத்தை எதிர்நோக்கித் தென்னாடு செல்வதற்காக அவர் பின் வாங்கியது இந்தப் பூமியில் தான்.
ஐந்து நதிகள் பாயும் நாட்டின் குழந்தைகளே, இங்கே நமது இந்தப் புராதன பூமியில் உங்கள் முன்னால் நான் நிற்கிறேன்-ஆசிரியனாக அல்ல, ஏனெனில் கற்பிப்பதற்காக எனக்குத் தெரிந்தது மிகவும் சொற்பமே. மேற்கில் வாழும் சகோதரர்களுக்குத் தன் வாழ்த்துக்களைச் சொல்வதற்காக, அவர்களுடன் தன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக, கிழக்கிலிருந்து வருகின்ற ஒருவனாக மட்டுமே இங்கு நிற்கிறேன். நமக்குள் நிலவும் வேறுபாடுகளைக் கண்டறிய நான் இங்கு வரவில்லை. நாம் எங்கு ஒன்றுபடுகிறோம் என்பதைக் காணவே வந்திருக்கிறேன். எந்த அடிப்படையில் நாம் எப்போதும் சகோதரர்களாக இருக்க முடியும். அனாதி காலம் முதல் பேசி வருகின்ற குரல் எந்த அடிப்படையில் வளர்ந்து நாளுக்கு நாள் வலிமை காண முடியும் என்பதை அறியவே நான் முயல்கிறேன். அழிவு வேலைகளை அல்ல, ஆக்க வேலைகளை உங்கள் முன் வைக்கவே நான் வந்திருக்கிறேன். விமர்சித்துக் கொண்டிருப்பதற்கான நாட்கள் கழிந்து விட்டன. ஆக்க வேலைகளுக்காக நாம் காத்திருக்கின்ற வேளை இது. விமர்சனம், ஏன், கடுமையான விமர்சனம் கூடச் சிலவேளைகளில் உலகிற்குத் தேவை தான். ஆனால் அது அப்போதைக்கு மட்டுமே.. எல்லா காலத்திற்கும் தேவைப்படுவது வளர்ச்சியும் ஆக்கமுமே, தவிர குறை கூறுவதும் அழிவும் அல்ல. ஏறக்குறைய கடந்த நூறு ஆண்டுகளாகவே நமது நாட்டில் விமர்சன வெள்ளம் கரை புரண்டு தான் ஓடிக் கொண்டிருக்கிறது.நமது குறை பாடுகளின் மீது மேலை விஞ்ஞானம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்தக் குறைபாடுகளும் மலினங்களும் மற்ற எல்லாவற்றையும் விட வெளிப்பட்டுத்தெரிகின்றன.
எனவே இயல்பாகவே நம் நாட்டின் எல்லா இடங்களிலும் மகத்தான அறிவுஜீவிகள் தோன்றினார்கள். அவர்களின் இதயங்களில் சத்திய நாட்டமும் நியாய உணர்ச்சியும் நாட்டுப்பற்றும் குடிகொண்டிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாகத் தங்கள் மதத்தின் மீதும் தெய்வத்தின் மீதும் அவர்களுக்கு ஆழ்ந்த அன்பு இருந்தது. இந்த மாமனிதர்களின் உள்ளத்து உணர்ச்சிகள் மிகவும் ஆழமானதாக இருந்தன. அவர்களின் அன்பு மிகவும் ஆழ்ந்ததாக இருந்தது. எனவே தாங்கள் எதையெல்லாம் தவறு என்று நினைத்தார்களோ அதையெல்லாம் விமர்சித்தார்கள். கடந்த காலத்தின் இந்த மகத்தான உள்ளங்களுக்குப் பெருமைகள் சேர்வதாக! அவர்கள் எவ்வளவோ நன்மையைச் செய்தார்கள்.ஆனால் இன்றைய குரல் நம்மிடம் ”போதும்” என்று சொல்லியவாறு வருகிறது. போதிய அளவிற்கு விமர்சனம் செய்தாகிவிட்டது. குற்றம் கண்டுபிடித்தலும் போதிய அளவிற்குச் செய்தாகிவிட்டது. இப்போது புதுப்பிக்கவும் புனரமைப்பதற்குமான காலம் வந்திருக்கிறது. சிதறிக் கிடக்கின்ற நம் சக்திகளையெல்லாம் திரட்டி, ஒரு மையத்தில் குவித்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஏறக்குறைய தடைபட்டுப்போய்விட்ட இந்த நாட்டின் முன்னேற்றப் பயணத்தை அதன் மூலம் வழி நடத்துவதற்கான காலம் வந்திருக்கிறது. இந்த வீடு சுத்தமாக்கப் பட்டு விட்டது.இனி இதில் புதிதாகக் குடியேறலாம், பாதை சீரமைக்கப்பட்டு விட்டது. ஆரியர்களின் குழந்தைகளே, முன்னேறிச்செல்லுங்கள்.
பெரியோர்களே. இந்த நோக்கம் தான் என்னை உங்களிடம் வரச் செய்தது. நான் எந்தக் கட்சியையோ எந்தப் பிரிவையோ சேர்ந்தவன் அல்ல என்பதை முதலிலேயே உங்களிடம் தெளிவாகக் கூறிவிடுகிறேன். என்னைப் பொறுத்தவரை அவையெல்லாம் மகத்தானவை, பெருமை மிக்கவை. அவற்றிலுள்ள நல்லவற்றையும் உண்மையானவற்றையும் நான் என் வாழ்நாள் முழுவதும் தேடி வருகிறேன். இன்றிரவு இது சம்பந்தமான சில கருத்துக்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். எந்தக் கருத்தில் நாம் இணைய முடியும் என்பதைக் கண்டறிவதும் முடியுமானால் இணைவதற்கான ஓர் அடிப்படையைக் காண்பதும் இறையருளால் அத்தகைய அடிப்படையைக் கண்டிறிய முடிந்தால் அதை ஏற்றுக்கொண்டு, கொள்கையளவிலிருந்து அதைச் செயல்முறை நிலைக்குக்கொண்டு வருவதும் தான் என் திட்டம்.
நாம் இந்துக்கள். இந்து என்ற வார்த்தையை மோசமான பொருளில் நான் பயன்படுத்தவில்லை. அந்தச் சொல்லிற்கு மோசமான பொருள் இருக்கிறது என்று கூறுபவர்களின் கருத்தையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பழங்காலத்தில் அந்தச் சொல் சிந்து நதியின் மறுகரையில் வாழ்பவர்கள் என்று பொருள் பட்டது. நம்மை வெறுப்பவர்களுள் பலர் தற்போது மோசமான பொருள் கூறலாம்.ஆனால் பெயரில் ஒன்றுமே இல்லை. இந்து என்ற சொல், எவையெல்லாம் பெருமை மிக்கதோ, எவையெல்லாம் ஆன்மீகமோ அவற்றைக் குறிக்கிறதா அல்லது வெட்கப்படத்தக்க ஒன்றின் பெயராக, தாழ்த்தப்பட்ட பயனற்ற நம்பிக்கையற்ற ஒன்றைக் குறிக்கின்ற ஒன்றாகத் தான் நிலைபெறுமா என்பது நம்மைப்பொறுத்து தான் உள்ளது.
இன்று இந்து என்ற சொல் மோசமான எதையாவது குறிப்பதாக இருக்குமானால் அதைப் பற்றிக் கவலைவேண்டாம். நம் செயல்கள் மூலம் அந்த வார்த்தையை உலகில் உள்ள எந்த மொழியும் உருவாக்க முடியாத உயர்ந்த வார்த்தையாக மாற்றுவோம்.நமது முன்னோர்களைக் குறித்து அவமானம் கொள்ளக் கூடாது என்பது என் வாழ்க்கைக் கோட்பாடுகளுள் ஒன்றாக உள்ளது. இது வரை பிறந்துள்ள கர்வம் மிக்கவர்களுள் நான் ஒருவன், உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன்- இந்தக் கர்வம் என் பெருமையின் காரணமாக அல்ல, எனது பாரம்பரியத்தின் பெருமைக்காகவே ஆகும். கடந்த காலத்தைப் பற்றி நான் அதிகமாகப் படிக்குந்தோறும் , நான் பின்னோக்கிப் பார்க்குந்தோறும் இந்தக் கர்வம் என்னிடம் மேலோங்குகிறது. அது எனக்கு வலிமையைத் தருகிறது. ஆழ்ந்த நம்பிக்கை நிறைந்த தைரியத்தைத் தருகிறது. பூமியின் தூசியிலிருந்து என்னை உயர்த்துகிறது. நமது அந்த மகத்தான முன்னோர்கள் வகுத்துச் சென்றுள்ள சீரிய திட்டங்களைச் செயல்படுத்த வைத்திருக்கிறது. அந்தப் புராதன ஆரியர்களின் குழந்தைகளே! நீங்களும் அத்தகைய கர்வம் கொள்ளுங்கள்! உங்கள் முன்னோர்களிடம் அத்தகைய நம்பிக்கை உங்கள் ரத்தத்தில் பொங்கட்டும், அது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் கலந்து பரவட்டும். உலகின் கதிமோட்சத்திற்காக அது செயல்படட்டும்.
நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்வதான தனியொரு கருத்தைக் கண்டுபிடிக்கு முன் நமது தேசிய வாழ்வின் பொது அடிப்படையை நினைவு கூர வேண்டியது அவசியம். ஒவ்வொரு மனிதனிடமும் தனித்துவம் இருப்பது போல் நாடுகளுக்கும் தனித்துவம் இருக்கிறது. ஒருவன் சில விஷயங்களில் மற்றவனிடமிருந்து வேறுபடுவதைப்போல், அவனுக்கென்று சில தனி குணங்கள் இருப்பதை ப்போல், ஓர் இனமும் மற்றோர் இனத்திலிருந்து சில குறிப்பிட்ட பண்புகளில் வேறுபடுகிறது. இயற்கையின் திட்டத்தில் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பங்கை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. அதற்காக அவனது முன்வினை அவனுக்கென்று ஒரு குறிப்பிட்ட வழியை வகுத்துக்கொடுக்கிறது.நாடுகள் விஷயமும் அப்படியே. ஒவ்வொரு நாடும் நிறைவேற்றுவதற்கென ஒரு லட்சியம் உள்ளது. ஒவ்வொரு நாடும் அளிப்பதற்கென ஒரு செய்தி உள்ளது. ஒவ்வொரு நாடும் சாதிப்பதற்கான ஒரு பணியும் உள்ளது. எனவே நம் இனத்தின் பணி எது, நிறைவேற்ற வேண்டிய லட்சியம் எது. நாடுகளின் அணிவகுப்பில் அதன் இடம் எது. இனங்களின் ஒற்றுமைக்காக அது அளிக்க வேண்டிய பங்கு எது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது.
சில நாகங்களின் தலையில் மாணிக்கம் இருக்கும் என்றும், அது இருக்கும் வரை அதை யாராலும் கொல்ல முடியாது என்றும் கதை சொல்வதை நாம் குழந்தைப் பருவத்தில் கேட்டிருக்கிறோம். அரக்கர்களின் கதையும் உள்ளது. அவர்களின் உயிர் சில சிறிய பறவைகளின் உடம்பில் இருக்கும். அந்தப் பறவைகள் பத்திரமாக இருக்கும் வரை அந்த அரக்கர்களைக்கொல்ல முடியாது. துண்டு துண்டாக வெட்டினாலும், என்ன தான் செய்தாலும் அவர்களைச் சாகடிக்க முடியாது. நாடுகளின் விஷயமும் அதுபோல் தான். ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் தேசிய வாழ்வு, மையம் கொண்டிருக்கின்ற ஓர் இடம் உள்ளது. அங்கு தான் அந்த நாட்டின் வாழ்க்கை இருக்கிறது. அதைத் தொடாத வரை அந்த நாடு அழியாது.
இந்த விளக்கத்தின் கண்ணோட்டத்தில் , உலக வரலாறு காட்டும் அதிசயத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். நமது இந்தப் பொன்னாட்டின் மீது காட்டுமிராண்டிகளின் படையெடுப்புகள் அலை அலையாக புரண்டு வந்தன.”அல்லாஹு அக்பர்” என்னும் ஒலி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வானையே நிறைத்துப்பரவியது. தன் உயிர் எந்தக் கணம் போகுமோ என்பது தெரியாமல் ஒவ்வோர் இந்துவும் உறைந்து போயிருந்தான். சரித்திரப் பிரசித்தி பெற்ற உலக நாடுகளில் மிகஅதிகமான துன்பங்களுக்கு உள்ளானதும், மிக அதிகமான முறை கீழடக்கப் பட்டதுமான நாடு இது. என்றாலும் நாம் ஏறக்குறைய அப்படியே. அதே இனமாக, தேவையானால் அத்தகைய துன்பங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறோம். அது மட்டுமல்ல, நாம் வலிமையோடு இருப்பதுடன் வெளி நாடுகளுக்குச் செல்லவும் தயாராக இருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகள் சமீப காலத்தில் தெரியவும் செய்கின்றன. ஏனென்றால் விரிவடைவது தானே வாழ்வின் அறிகுறி.
நமது லட்சியங்களும் சிந்தனைகளும் முன்பு போல் நம்நாட்டு எல்லைக்குள் அடங்கிக் கிடக்கவில்லை என்பதை இன்று காண்கிறோம். நாம் விரும்புகிறோமோ இல்லையோ அவை அணிவகுத்து வெளியே செல்கின்றன. பிற நாடுகளின் இலக்கியங்களில் ஊடுருவுகின்றன. மற்ற நாடுகளில் தனக்குரிய இடத்தைப்பெறுகின்றன. சில நாடுகளில் அதிகார பீடத்தில் கூட இடம் பிடித்திருக்கின்றன. இதற்கான விளக்கம் என்ன வென்றால், உலகின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு இந்தியாவின் பங்களிப்பு மகத்தானது, மேன்மையானது, மனிதனின் மனத்தை ஆக்கிரமிக்க முடிந்தவற்றுள் மிக மிக நுண்மையானது. அது தத்துவமும் ஆன்மீகமும் ஆகும். நம் முன்னோர்களும் பல வழிகளில் முயன்றார்கள். இது நமக்குத்தெரியும். மற்ற நாட்டினரைப்போல் புறவுலக ரகசியங்களை அறிய முற்பட்டார்கள். ஈடிணையற்ற அறிவு வளம் கொண்டவர்களான நமது மகத்தான இனத்தினர், அதில், உலகம் கற்பனையில் கூடக் காண இயலாத அதிசயங்களை நிகழ்த்தி இருப்பார்கள். ஆனால் அதைவிட உயர்ந்த ஒன்றிற்காக அந்த முயற்சியைக்கைவிட்டு விட்டார்கள். அந்த உயர்ந்தவை தான் வேதங்களில் எதிரொலிக்கின்றன. யார் மாறாமல் இருக்கிறாரோ அவரை நாம் அறியச் செய்வது தான், அனைத்திலும் மகத்தான அறிவு! மாறக்கூடிய நிலையற்ற இயற்கையைப்பற்றி, மரணமும் துன்பமும் நிறைந்த உலகைப் பற்றிய அறிவியல் மகத்தானது. மகத்தானது தான். ஆனால் நம் முன்னோர்களின் கருத்துப்படி மாற்றமே இல்லாத ஆனந்தமயமான இறைவனைப் பற்றிய அறிவுதான் அனைத்திலும் நுண்மையான அறிவியல். அதில் மட்டுமே நிலையான வாழ்வு உள்ளது. அதில் மட்டுமே அமைதி உள்ளது. அதில் மட்டுமே முழுமை உள்ளது. அதில் மட்டுமே துன்பங்கள் எல்லாம் ஒழிகின்றன.
மிஞ்சிப்போனால் அறிவியல்கள் நமக்கு உடை உணவும் தரலாம். பிறர் மீது செலுத்துவதற்கான அதிகார பலம் தரலாம். சக மனிதர்களை எப்படி வெல்வது, எப்படி ஆள்வது, பலவீனர்களைப் பலமானவர்கள் எப்படி அடக்குவது என்பதையெல்லாம் கற்றுத்தரலாம். நமது முன்னோர்கள்
விரும்பியிருந்தால் கட்டாயமாக இத்தகைய அறிவியல்களைக் கண்டு பிடித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அவற்றை நாடாததற்காக நாம் இறைவனைப்போற்றுவோம். அந்த அறிவியல்களை நாடாமல் அவற்றைவிட மேன்மையான, அளவற்ற மடங்கு உன்னதமான, அளவற்ற மடங்கு ஆனந்தம் தருகின்ற மறுபக்கத்தை அவர்கள் பிடித்துக்கொண்டார்கள். இன்று அது தேசியப் பண்பாகிவிட்டது. தந்தையிடமிருந்து மகனுக்கு என்ற ரீதியில் பரம்பரைபரம்பரையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து இன்று அது நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. நம் வாழ்வோடு வாழ்வாகியுள்ளது. நம் நரம்புகளில் ஓடுகின்ற ரத்தத்தில் கலந்து ஒவ்வொரு துளியிலும் அதிர்ந்து, நம் இயல்பாகவே ஆகிவிட்டது. அதன் காரணமாக மதம், இந்து-இந்த இரண்டும் ஒரே பொருளைத் தருகின்ற சொற்களாகி விட்டன.
இது தான் நமது தேசியப்பண்பு, இதை யாரும் அசைக்க முடியாது. வாளுடனும் நெருப்புடனும் வரும் காட்டுமிராண்டிகளும் சரி, மிருகத்தனமான மதங்களைப் பரப்ப வரும் காட்டுமிராண்டிகளும் சரி, இவர்களில் யாராலும் அந்தச் சாரத்தை அந்த ” மாணிக்கத்தைத் தொடமுடியாது. இந்த இனத்தின் உயர் இருக்கின்ற ”பறவை”யைக் கொல்லும்“ ஆற்றல் யாருக்கும் இல்லை. இதுவே இந்த இனத்தின் உயிர்நாடி. இந்த உயிர் நாடி இருக்கும் வரை சூரியனின் கீழ் உள்ள எந்தச் சக்தியாலும் இந்த இனத்தை அழிக்க முடியாது. உலகின் எல்லா சித்திரவதைகளும் துன்பங்களும் நம்மை வருத்தாமல் கடந்து சென்றுவிடும்.நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்றவை அனைத்திலும் மகோன்னதமான ஆன்மீகத்தை நாம் பற்றிக்கொண்டிருக்கும் வரை நாமும் பிரகலாதனைப்போல் அக்கினியில் குளித்தெழுந்து வெளிவந்து விடுவோம்.
ஓர் இந்து ஆன்மீக உணர்வின்றி இருப்பானானால், அவனை நான் இந்து என அழைக்க மாட்டேன். பிற நாடுகளில் மனிதனுக்குப்பெரும்பாலும் அரசியல் தான் முதன்மையான தாக இருக்கும், அதனுடன் ஏதோ சிறிது மதமும் இருக்கிறது.ஆனால் இந்தியாவில் நமது வாழ்க்கையின் முதற்கடமை, முக்கியக்கடமை ஆன்மீகம்தான். அதற்குப் பிறகு நேரம் இருந்தால் மற்றவை இடம் பெறும்.இதை மனத்தில் கொண்டால், நம் நாட்டு நலனிற்காக நாம் கடந்த காலங்களில் செய்ததும், இனிவரும் காலங்களில் செய்ய வேண்டுவதும் நம் இனத்தின் எல்லா ஆன்மீக சக்திகளையும் கண்டு பிடிப்பதே என்பது ஏன் என்று தெளிவாக அறிந்து கொள்ள முடியும். சிதறிக் கிடக்கின்ற ஆன்மீக சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டைக் கொண்டு வர முடியும். ஆன்மீகம் என்ற ஒரே ராகத்திற்கு ஏற்ப இசைந்து துடிக்கின்ற இதயம் கொண்டவர்களின் சங்கமத்தால் தான் இந்த நாட்டை உருவாக்க முடியும்.
இந்த நாட்டில் போதிய அளவு மதப் பிரிவுகள் உள்ளன. தற்காலத்தில் போதுமானவை உள்ளன. எதிர்காலத்திலும் போதுமானவை தோன்றும். இது நமது மதத்தின் சிறப்புத் தன்மையாகும். நமது மதத்தின் நுண் தத்துவங்கள் நம் தலைகளுக்கு மேல் விரிந்து கிடக்கும் வானம்போல் பரந்தவை. இயற்கையைப்போல் நிலையானவை.அவற்றின் மீது எத்தனையெத்தனையோ விளக்கங்கள் எழுதுகின்ற அளவிற்குப் பரந்த போக்கு கொண்டவை. எனவே இங்கே மதப் பிரிவுகள் இயல்பாக இருந்தே தீரும். ஆனால் இருக்கத்தேவையற்றது எது என்றால் அவற்றுக்கிடையே சண்டை. பிரிவுகள் இருந்தேயாக வேண்டும். ஆனால் பிரிவினைவாதம் கூடாது. பிரிவனைவாதத்தால் இந்த உலகம் முன்னேறப்போவதில்லை. ஆனால் பிரிவுகள் இல்லையென்றால் உலகிற்கு முன்னேற்றம் இல்லை. ஏதோ ஒரு கூட்டத்தினர் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. உலகம் முழுவதும் ஏறக்குறைய எல்லையற்றுப் பரந்திருக்கும் சக்தியை ஏதோ சிலரால் கையாள முடியாது. எனவே அந்த வேலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நாம் உள்ளாகிறோம். இதுவே பல பிரிவுகள் உண்டாக ஏதுவானது. ஆன்மீக சக்திகளைப் பயன்படுத்துவதற்காக மதப் பிரிவுகள் இருக்கட்டும்.ஆனால் இந்தப் பிரிவுகள் , இந்தவேறுபாடுகள் வெறும்தோற்றம் மட்டுமே. இந்த எல்லா வேறுபாடுகளுக்கு இடையிலும் சமரசத்தின் ஓர் இழைஊடுருவி நிற்கிறது. ஓர் அழகிய ஒருமைப்பாடு அனைத்துள்ளும் நிலவுகிறது என்று நமது சாஸ்திரங்கள் முழங்கும்போது மதச்சண்டைகள் தேவைதானா?”ஏகம் ஸத்விப்ரா, பஹுதா வதந்தி- உள்ளது ஒன்றே, ரிஷிகள் அதனைப் பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள் என்று தான் புராதன நூல்கள் கூறுகின்றன. எனவே எல்லா மதப்பிரிவுகளையும் மதிக்கின்ற நமது நாட்டில், அவற்றுக்கிடையே பிரிவனைவாதப் போராட்டங்களும் சண்டைகளும் இருக்குமானால், பொறாமையும் வெறுப்பும் நிலவுமானால் அது நமக்குத்தான் இழிவு. மேன்மைமிகு முன்னோர்களின் வழித்தோன்றல்கள் என்று நம்மை அழைத்துக்கொள்ளத் துணிந்த நமக்கு இது அவமானமே தவிர வேறல்ல.
வைணவர், சைவர், சாக்தர், காணபத்யர் முதலிய யாராலும் , புராதன வேதாந்தியானாலும் நவீனப் பிரிவுகளைச் சேர்ந்தவரானாலும், பழங்காலத்தின் கடுமையானப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ஆனாலும், நவீன சீர்திருத்தப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ஆனாலும், குறிப்பிட்ட சில கோட்பாடுகளை ஏற்றுக் கொள்பவர்கள் என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றே என்று நான் கருதுகிறேன். இந்து என்று தங்களை அழைத்துக்கொள்கின்ற எல்லோரும் இந்தக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வார்கள்.
இந்தக்கோட்பாடுகளை விளக்குவதிலும் விரித்துரைப்பதிலும் வேறுபாடுகள் இருக்கலாம் அந்த வேறுபாடுகள் இருந்தேயாக வேண்டும். அவை அனுமதிக்கப்படவே வேண்டும். ஏனெனில் எல்லோரையும் நமது நிலையுடன் சேர்த்துக் கட்டிப்போடுவதல்ல நமது அளவுகோல். எல்லா மனிதர்களும் நமது கருத்துக்களின் படி வேலை செய்ய வேண்டும். நமது வழிமுறைகளின் வாழ வேண்டும் என்று வற்புறுத்துவது பாவம். மத ரகசியங்களின் அழைிவற்ற உபதேசங்களே வேதங்கள் என்ற முதல் கருத்தை இங்குள்ள அனைவரும் ஒரு வேளை ஏற்றுக் கொள்ளலாம்.
இந்தப் புனித இலக்கியங்கள் இயற்கையைப்போலவே தோற்றமும் முடிவும் இல்லாதவை என்பதை நாம் அனைவரும் நம்புகிறோம். இந்தப் புனித நூல்களின் சன்னதியில் நிற்கும் போது நமது மத வேற்றுமைகளும் மதப் போராட்டங்களும் ஒழிந்து விடும் என்றும் நாம் நம்புகிறோம். மத வேற்றுமைகளை எல்லாம் முறையீடு செய்யும் இறுதி இடமான உயர்நீதி மன்றம் இந்த வேதங்களே என்பதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். இந்த வேதங்கள் என்றால் என்ன என்பதைப் பற்றி நாம் பல்வேறு கருத்துக்களைக்கொள்ளலாம். அதன் ஒரு பகுதியை மற்றப் பகுதியை விட மேலானதாக ஒரு பிரிவு கருதலாம். ஆனால் வேதங்களின் திருமுன்னர் நாம் அனைவரும் சகோதரர்கள். இந்த வழிபாட்டிற்குரிய , நிலையான அற்புதமான வேதங்களிலிருந்தே இன்று நாம் பெற்றிருக்கும் நல்லதும் புனிதமானதும் தூய்மையானதும் ஆகிய அனைத்தும் வந்திருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும் போது, அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் அல்ல.
நல்லது, நாம் இவை எல்லாவற்றையும் நம்புவதனால் முதன் முதலில் இந்தக் கருத்து நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை பரப்பப்படட்டும். இது உண்மை என்றால் வேதங்கள் அவற்றிற்கு எப்போதும் உரியதான, நாமும் நம்புவதான தலைமை இடத்தைப்பெறட்டும் ஆகையால் முதலில் வேதங்கள்.
நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற இரண்டாவது கருத்து கடவுள். படைப்பவர் அவர். அண்டங்கள் அனைத்தையும் காக்கின்ற சக்தி அவர். குறிப்பிட்ட காலங்களில் அவரிடமே அவை ஒடுங்குகின்றன. மற்றக் காலங்களில் அவரிடமிருந்தே வெளிவந்து பிரபஞ்சம் எனப்படும் இந்த அற்புதக்கோலமாக வெளிப்பட்டு நிற்கிறது. கடவுள் பற்றிய விளக்கத்தில் நாம் வேறுபடலாம். ஒருவர் முற்றிலும் சகுணமான கடவுளை நம்பலாம். மற்றொருவர் கடவுளின் குணங்களை ஏற்றுக் கொண்டு உருவத்தை நம்பாமல் போகலாம். இன்னொருவர் முழுக்க முழுக்க நிர்குணமான கடவுளை நம்பலாம். இவர்கள் எல்லோருமே வேதங்களிலிருந்து தான் அத்தாட்சி பெறுகிறார்கள். அவையெல்லாம் இருந்தும் நாம் அனைவரும் கடவுளை நம்புபவர்கள். அதாவது எதிலிருந்து எல்லாம் வந்ததோ, எதில் எல்லாமே வாழ்கிறதோ, இறுதியில் எல்லாம் எங்கே திரும்பியே தீர வேண்டுமோ, அந்த மாபெரும் அற்புதமான எல்லையற்ற சக்தியிடம் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் அவனை இந்து என்றே அழைக்க முடியாது. இது சரியென்றால் இந்தக் கருத்தை நாடு முழுவதும் பரப்ப முயற்சிப்போம்.
நீங்கள் விரும்புகின்ற கோட்பாட்டைப் பரப்புங்கள், அதில் நமக்கென்றும் கருத்து வேற்றுமை இல்லை, அதைப் பற்றி நாம் சண்டையிடப் போவதும் இல்லை. ஆனால் நீங்கள் பரப்புவது கடவுளைப்பற்றிய கோட்பாடாக இருக்கட்டும். அது ஒன்றுதான் நாம் வேண்டுவது. ஒரு கோட்பாடு மற்றதைவிட மேலானதாக இருக்கலாம். ஆனால் அவற்றுள் எதுவும் தீமையானது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒன்று நல்லது, மற்றொன்று அதைவிட நல்லது. இன்னொன்று அதைவிட நல்லது. ஆனால் கெட்டது என்ற ஒரு சொல்லே நமது மத அகராதியில் இடம் பெறவில்லை. எனவே இறைவனின் திருநாமத்தைத் தாங்கள் விரும்பும் வழியிலேயே போதிக்கின்ற அனைவரையும் எம்பெருமான ஆசீர்வதிப்பாராக. அவர் அதிகமாகப் போதிக்கப் படுகின்ற அளவு நம் இனத்திற்கு நல்லது.நம் குழந்தைகள் இந்தக் கருத்துடன் வளர்க்கப் படுவார்களாக! இறைவனின் திருநாமம், ஏழைகள் மற்றும் தாழ்ந்தவர்கள், அது போலவே, பணக்காரர்கள் மற்றும் உயர்ந்தவர்களின் வீடுகளில் எல்லாம் நுழையட்டும்.
நான் உங்களிடம் கூறப்போகும் மூன்றாவது கருத்து இது. பிற இனத்தினர் கூறுவதுபோல், இந்த உலகம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் படைக்கப் பட்டது. ஒரு குறிப்பிட்ட நாளன்று இது என்றென்றைக்குமாக அழியப்போகிறது என்பதை நாம் நம்புவதில்லை. அதைப்போலவே , இந்தப் பிரபஞ்சத்துடன் மனித ஆன்மாவும் வெறும் சூன்றத்திலிருந்து படைக்கப்பட்டது என்பதையும் நாம் நம்புவதில்லை. இங்கே நாம் எல்லோருமே ஏற்றுக் கொள்கின்ற மற்றொரு கருத்து இருப்பதாகத் தோன்றுகிறது.
இயற்கை ஆதியும் அந்தமும் இல்லதது, இந்தப் புறவுலகம் எதனால் ஆக்கப்பட்டுள்ளதோ அந்த ஜடப்பொருள் குறிப்பிட்ட சில காலக்கட்டங்களில் அதன் நுண் நிலைக்குத் திரும்புகிறது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை அந்த நிலையிலேயே இருக்கிறது. அதன் பிறகு வெளித்தோன்றி, நாம் இயற்கை என்று அழைக்கின்ற இந்த எல்லையற்ற காட்சியை விரிக்கிறதுஎன்பதை நாம் நம்புகிறோம். அலைபோன்றதான இந்த இயக்கம், காலம் என்ற ஒன்று தொடங்கும் முன்னரே காலங்காலமாக நடந்து வருகிறது. இனியும் எல்லையற்ற காலத்திற்கு நடந்து கொண்டேயிருக்கும்.
அடுத்ததாக, மனிதன் வெறும் ஜடப் பொருளாலான உடம்பு அல்ல என்பதை எல்லா இந்துக்களும் நம்புகிறோம். இந்த உடம்பிற்குள் மனம் என்னும் நுண்ணுடல் உள்ளது என்பதை மட்டும் அல்ல, அதற்கு அப்பாலும் ஏதோ மகத்தான ஒன்று இருக்கிறது என்பதையும் நாம் நம்புகிறோம். உடம்பு மாற்றத்திற்கு உள்ளாகிறது. மனமும் மாறுகிறது. இவற்றிற்கு அப்பாலுள்ள ஏதோ ஒன்றான ஆன்மா மாறாதது. ஆன்மா என்ற சொல்லை என்னால் மொழிபெயர்க்க முடியாது, ஏனெனில் எந்த வார்த்தையை ப் பயன்படுத்தினாலும் அது தவறானதாக இருக்கும். அந்த ஆன்மா நுண்ணுடலான மனத்திற்கும் அப்பால் இருக்கிறது. அதற்கு ஆதியோ அந்தமோ கிடையாது. மரணம் என்பது என்னவென்று அதற்குத் தெரியாது. இந்த ஆன்மா பல்வேறு உடல்களைத் தரிக்கிறது. மீண்டும் உடல் தரிக்கும் விருப்பம் இல்லாமல் போகும்போது அது சுதந்திரமாகிறது. அதற்குமேல் அது பிறப்பதில்லை. இந்த ஆன்மக்கோட்பாடு மற்ற எல்லா இனத்தவரின் கருத்திலிருந்து மாறுபட்ட மகத்தான ஒன்று. ஆம், நமது சாஸ்திரங்கள் போதிக்கின்ற சம்சாரக்கோட்பாடு மற்றும் அழிவற்ற ஆன்மாக்களைப் பற்றிய கோட்பாடுகளைத்தான் இங்கே நான் குறிப்பிடுகிறேன். நாம் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற மற்றொரு கருத்து இது.
ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய கருத்தில் வேறுபாடு இருக்கலாம். ஆன்மா என்றென்றைக்கும் இறைவனிலிருந்து தனித்தே நிற்பதாக ஒரு பிரிவினர் கூறலாம். மற்றொரு பிரிவினரின் கருத்துப்படி , இறைவன் என்ற எல்லையற்ற நெருப்புப் பிழம்பில் ஆன்மா, ஒரு பொறி என்பதாக இருக்கலாம். இன்னொரு பிரிவினர், ஆன்மாவை எல்லையற்ற அந்த ஒன்றுடன் இணைந்ததாகக் கொள்ளலாம். ஆனால் ஆன்மா என்பது வரையறையற்றது. படைக்கப் படாதது. ஆதனால் மரணமில்லாதது. பல்வேறு உடம்புகளைத் தரித்து மனித உடம்பில் நிறைநிலையை அடையும் வரை பரிணமித்துக்கொண்டே இருக்க வேண்டும். என்ற அடிப்படைக் கருத்தை நாம் விடாதிருக்கும்வரை இந்த வேறுபட்ட விளக்கங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இந்த ஆன்மக்கோட்பாட்டிலும் நாம் அனைவரும் ஒன்றுபடுகிறோம்
அடுத்து வருவது தான் மிகவும் வேறுபட்டது மகோன்னதமானது, ஆன்மீக உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அனைத்திலும் மிகவும் அற்புதமான கருத்து. உங்களுள் மேலை நாட்டுச் சிந்தனைகளைப்படித்துள்ளவர்கள்,மேலை மற்றும் கீழைச் சிந்தனைகளை ஒரே வீச்சில் வேறுபடுத்திக் காட்டுகின்ற ஒரு முக்கிய வேறுபாட்டைக் கண்டிருப்பீர்கள். நாம் சாக்தர் களோ,சௌரர்களோ, வைணவர்களோ அல்லது பௌத்தர்களோ,, சமணர்களோ, யாராக இருந்தாலும், ஆன்மா இயல்பாகவே தூய்மையானது. முழுமையானது, சக்தியிலும் ஆனந்தத்திலும் எல்லையற்றது என்ற கருத்தை இந்தியாவில் உள்ள அனைவருமே ஏற்றுக் கொள்கிறோம். துவைதிகளின் கருத்துப் படி,, ஆன்மாவின் இந்த இயல்பான பேரின்பம் முற்பிறவிகளின் தீவினையால் சருங்கிப்போகிறது. இறையருளால் மீண்டும் விரிவுற்று நிறைநிலையை அடைகிறது. அத்வைதிகளின் கருத்துப்படி, ஆன்மா சுருங்குகிறது என்பது கூட ஒருவகையில் தவறுதான், மாயை என்னும் திரை தான் ஆன்மா தன் ஆற்றல்களை இழந்து விட்டதாக நம்மை நினைக்கச்செய்கிறது. ஆனால் அங்கே எல்லா ஆற்றலும் முழுமையாக வெளிப்பட்டே நிற்கிறது.
வேறுபாடுகள் இப்படியிருக்க நாம் மையக்கருத்திற்கு வருகிறோம்.மேலை மற்றும் கீழை நாட்டுச்சிந்தனைகள் ஒருங்கிணைய முடியாத ஒரு வேறுபாட்டைக் காண்கிறோம்.
சிறந்தவை மற்றும் நல்லவை அனைத்தையும் கீழை நாட்டுச்சிந்தனை அகத்தில் தேடுகிறது. நாம் வழிபடும் போது கண்களை மூடி நமக்குள் தான் கடவுளைக்காண முயல்கிறோம். மேலை நாட்டினர் தங்கள் கடவுளை வெளியில் தேடுகிறார்கள். மேலை நாட்டினரின் மத நூல்கள் புறத்திலிருந்து அவர்கள் பெற்ற கருத்துக்களால் உருவாக்கப் பட்டவை. நமது நூல்களோ உள்ளிருந்து எழுந்த கருத்துக்களால் உருவானவை. மூச்சுக் காற்றைப்போல் இறைவனின் மூச்சாக வெளிப்பட்டவை. ”மந்த்ர த்ரஷ்டா ”க்களாகிய ரிஷிகளின் இதயங்களிலிருந்து எழுந்தவையே நமது நூல்கள்.
என் நண்பர்களே, என் சகோதரர்களே! நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு மகத்தான கருத்து இருக்கிறது. எதிர்காலத்தில் இது நாம் மிகவும் வலியுறுத்த வேண்டிய கருத்தாகும். இந்தக் கருத்தில் நான் அவ்வளவு உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறேன்.இதை நீங்கள் மனத்தில் கொள்ள வேண்டும் என்று உங்களைக்கெஞ்சிக்கேட்டுக் கொள்கிறேன். தான் எதற்கும் உபயோகமற்றவன் என்று இரவு பகலாக எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவனிடமிருந்து எந்த நன்மையும் பிறக்காது. நான் வேதனைக்குரியவன், கீழானவன், எதற்கும் பயனற்றவன் என்று இரவும் பகலும் நினைத்துக் கொண்டிருந்தால், அவன் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவனாகத்தான் ஆகிறான்.ஆம், என்னால் எதுவும் முடியும்” என்று நீங்கள் நினைத்தால் அத்தகைய ஒருவர் ஆவீர்கள்” . மாறாக நான்
ஒன்றுக்கும் உதவாதவன்” என்று கூறியவாறு அல்லும்பகலும் அதையே உருப்போட்டுக் கொண்டிருந்தால் அப்படியே எதற்கும் பயனற்றுப் போய்விடுவீர்கள். நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதொரு பேருண்மை இது.நாம் எல்லாம் வல்ல இறைவனின் பிள்ளைகள். எல்லையற்றதான தெய்வீக நெருப்புப் பிழம்பின் பொறிகள் நாம். நாம் எப்படி பூஜ்யங்கள் ஆக முடியும்? நாமே எல்லாம். எதைச் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். நம்மால் எதையும் செய்ய முடியும். மனிதன் எல்லாவற்றையும் செய்தாக வேண்டும்.
இத்தகைய தன்னம்பிக்கை நம் முன்னோர்களின் இதயங்களிலிருந்து இருந்தது. அவர்களின் இந்தத் தன்னம்பிக்கைதான் அடிப்படை சக்தியாக இருந்து அவர்களை நாகரீகத்தின் அணிவகுப்பில் மேலும்மேலும் முன்னணியில் உந்தித்தள்ளியது இப்போது இழிவு நேர்ந்திருக்கிறது என்றால் வீழ்ச்சி நேர்ந்திருக்கிறது என்றால் நம் மக்கள் தங்களிடம் இந்தத் தன்னம்பிக்கையை என்று இழந்தார்களோ அன்றுதான் இந்த வீழ்ச்சி ஆரம்ப மாகியது. இந்த வார்த்தைகளைக் குறித்து க்கொள்ளுங்கள்.
ஒருவன் தன்னிடம் நம்பிக்கை இழக்கிறான் என்றால் இறைவனிடமே நம்பிக்கை இழக்கிறான் என்பது பொருள். உங்களுக்கு உள்ளும் உங்கள் மூலமாகவும் செயல்படுகின்ற அந்த எல்லையற்ற சக்தியை நீங்கள் நம்புகிறீர்களா? எங்கும் நிறைந்துள்ள, அந்தர்யாமியான ஒவ்வோர் அணுவினுள்ளும் இருக்கின்ற, சம்ஸ்கிருத வார்த்தை சுட்டுவது போல் ”ஓத-ப்ரோத”மாக, அதாவது ஊடும்பாவும் போல் உங்கள் உடம்பிலும் மனத்திலும் ஆன்மாவிலும் ஊடுருவி நிற்கின்றதான அந்தச் சக்தியில் உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால் நீங்கள் எப்படி நம்பிக்கை இழக்க முடியும்? நான் சிறியதொரு நீர்க்குமிழியாக இருக்கலாம், நீங்கள் மலையளவு உயரமானஅலையாக இருக்கலாம், அதைப்பொருட்படுத்தவே வேண்டாம். எனக்கும் உங்களுக்கும் பின்னணியாக அந்த எல்லையற்ற கடல்தான் இருக்கிறது. வாழ்க்கை, ஆற்றல், ஆன்மீகம்- இவற்றின் அந்த எல்லையற்ற பெருங்கடல் தான் உங்களைப்போல் எனக்கும் அடிப்படையாக இருக்கிறது. நான் ஏற்கனவே என்னை அதில் இணைத்துக் கொண்டு விட்டேன். நான் பிறந்ததிலிருந்து வாழ்ந்து வருகிறேன் என்பதால் அந்த எல்லையற்ற வாழ்வுடனும் எல்லையற்ற நன்மையுடனும் எல்லையற்ற சக்தியுடனும் யோகத்தில் உள்ளேன். அதாவது இணைந்துள்ளேன். நீங்கள் மலையளவிற்கு உயர்ந்திருக்கலாம். ஆனால் நானும் உங்களைப்போலவே அந்த எல்லையற்றதுடன் இணைந்திருக்கிறேன்.
எனவே சகோதரர்களே, இந்த உயிரூட்டுகின்ற மகத்தான மேன்மையான, மகோன்னதமான உண்மைகளை உங்கள் குழந்தைகள் பிறந்ததிலிருந்தே அவர்களுக்குச் சொல்லித் தாருங்கள். அவர்களுக்கு நீங்கள் அத்வைதத்தைச்சொல்லித் தரத்தேவையில்லை.துவைதத்தையோ நீங்கள் விரும்பும் வேறு ஏதாவது ஒரு கோட்பாட்டையோ சொல்லித்தாருங்கள். ஆனால் இந்தியா முழுவதற்கும் ஆன்மா பற்றிய இந்தக் கோட்பாடுதான் பொதுவாக இருப்பதை நாம் காண்கிறோம். ஆன்மாவின் பூரணத்துவத்தைப்பற்றிய கோட்பாட்டை எல்லா பிரிவுகளும் நம்புகின்றன.
நமது மகத்தான தத்துவ ஞானியான கபிலர் சொல்வதைப்போல், தூய்மை என்பது ஆன்மாவின் இயல்பான இல்லாத பட்சத்தில், அது பின்னர் ஒருபோதும் தூய்மை பெற முடியாது.ஏனென்றால் இயல்பாகவே எது நிறைநிலை பெற்றதில்லையோ, அது நிறைநிலையை அடைந்தாலும் அந்த நிலை மறுபடியும் போய்விடும். தூய்மையின்மை மனிதனின் இயல்பாக இருக்குமானால் அவன் ஒருவேளை ஏதோ ஐந்து நிமிட நேரத்திற்குத் தூயவனாக இருக்க நேர்ந்தாலும், மறுபடியும் தூய்மையற்றவனாகத்தான் என்றென்றைக்கும் இருக்க நேரும். அந்த ஐந்து நிமிடத்தூய்மை கலைந்து போகின்ற., மறைந்து போகின்ற நேரம் வரவே செய்யும். அப்போது மறுபடியும் பழைய இயல்பான தூய்மையின்மை அவனை ஆட்கொண்டு விடும். அதனால் தான், நன்மையே நமது இயல்பு, பூரணத்துவமே நமது இயல்பு. பூரணமின்மையோ பரிசுத்தமின்மையோ நமது இயல்பு அல்ல. என்று நம் தத்துவ ஞானியர் அனைவரும் கூறியிருக்கின்றனர். அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தாம் செய்த எல்லா மகத்தான காரியங்களையும், சிந்தித்த மகத்தான சிந்தனைகளையும் நினைவு கூரும் படி தமது மரண வேளையில் கூறிய அந்த மாபெரும் ரிஷியின் அற்புத உதாரணத்தை நினைவுப்பாருங்கள். தமது பலவீனங்களையும் குற்றங்களையும் நினைக்கும்படி அங்கே அவர் சொல்லாததை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.குறைகள் இருக்கலாம், பலவீனங்கள் இருக்கவே செய்யும். ஆனால் எப்போதும் உங்கள் உண்மை இயல்பை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். பலவீனங்களை விலக்க, குற்றங்குறைகளைப்போக்க அது ஒன்றே சிறந்தவழி.இந்தச் சில கருத்துக்கள் இந்தியாவின் பல்வேறுபிரிவுகளுக்கும் பொதுவானவை என்றே தோன்றுகிறது. எதிர்காலத்தில் ஒருவேளை இத்தகைய பொதுமேடையில் சமய சனாதிகளும் மிதவாதிகளும், பழைய பிரிவைச்சேர்ந்தவர்களும் புதிய பிரிவைச் சேர்ந்தவர்களும் கைகுலுக்க நேரலாம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று உண்டு. அதைத்தான் நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அது தான் மதம் பற்றிய நமது கருத்து. இந்தியாவைப்பொறுத்தவரை மதம் என்றால் அது அனுபூதியையே குறிக்கும். அதற்குக் குறைந்தது எதுவும் ஆகாது.இந்தக் கொள்கையை நம்புங்கள். நீங்கள் பத்திரமாக இருப்பீர்கள்” என்றெல்லாம் நமக்கு இனிமேல் யாரும் உபதேசிக்க முடியாது.ஏனென்றால் நாம் அதை நம்புவதில்லை. உங்களை எப்படி நீங்கள் உருவாக்குகிறீர்களோ அப்படியே உருவாவீர்கள். இறையருளாலும் உங்கள் முயற்சியாலும் தான் நீங்கள் இப்போது இருக்கின்ற நிலைமையை அடைந்துள்ளீர்கள். வெறுமனே சில கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்புவது பெரிதாக உங்களுக்கு எந்த உதவியும் செய்யாது . இந்தியாவின் ஆன்மீக வானிலிருந்து வருகின்ற ஒரு மகத்தான வார்த்தை அனுபூதி. அதாவது நேரடி அனுபவம். கடவுளை நேராகக் காண வேண்டும்” என்று திரும்பத் திரும்பக் கூறுபவை நமது சாஸ்திரங்கள் மட்டுமே. உண்மையிலேயே அவை தைரியம் மிக்க வார்த்தைகள். வீர மொழிகள்! ஆனால்ஆணிவேர் வரை உண்மையானவை. அதன் ஒவ்வோர் எழுத்தும், ஒவ்வொரு துடிப்பும் உண்மையானவை. மதம் என்றால் அது அனுபவிப்பதற்கு உரியது. வெறுமனே கேட்பதற்கு மட்டுமல்ல. கிளிப்பிள்ளையைப்போல் சில கோட்பாடுகளை மனப்பாடம் செய்வதுமதம் ஆகாது. அறிவில் உயர்வதும் மதம் ஆகாது. அறிவு என்பது வெறும் பூஜ்யம். மதம் என்பது நம் உள்ளே வர வேண்டிய ஒன்றாகும்.
எனவே இறைவன் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு மிகச் சிறந்த நிரூபணம் நம் அறிவு அப்படிச்சொல்கிறது என்பது அல்ல, நம் முன்னோர்களும் இன்றுள்ளவர்களும் இறைவனைக் கண்டார்கள் என்பதே ஆகும். நாம் ஆன்மாவை நம்புகிறோம். அது உள்ளது என்பதை நிரூபிக்கத் தகுந்த காரணங்கள் இருப்பதால் மட்டுமல்ல, அதற்கும் மேலாக, இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் முற்காலத்தில் அதை அனுபவித்து அறிந்திருந்தார்கள். இன்றும் பலர் அனுபவிக்கிறார்கள். எதிர்காலத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் ஆன்மாவைக்கண்டு அனுபவிக்கப்போகிறார்கள் என்பதற்காகவே நாம் ஆன்மாவை நம்புகிறோம். எனவே கடவுளைக் கண்டுணரும் வரை, தன் சொந்த ஆன்மாவை அறிந்துணரும் வரை மனிதனுக்கு முக்தியே கிடையாது. அனைத்திற்கும் மேலாக இதை நாம் புரிந்து கொள்வோம். எவ்வளவு அதிகமாகப் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு இந்தியாவில் பிரிவினைவாதம் குறையும். ஏனென்றால் கடவுளை உணர்ந்தவனே, கண்டவனே மதவாதியாக இருக்க முடியும். அவனது முடிச்சுக்கள் வெட்டப் படுகின்றன. அவனுக்கு மட்டுமே சந்தேகங்கள் அகல்கின்றன. நெருங்கியவற்றைவிட நெருங்கியவராகவும், தொலை தூரத்தில் இருக்கின்ற அனைத்தையும்விட தூரத்தில் இருப்பவராகவும் உள்ள இறைவனைக் கண்டவன் மட்டுமே வினைப் பயன்களிலிருந்து விடுபட முடியும்.
வெறும் பிதற்றல்களை மத உண்மைகளாகவும் , பண்டித விளக்கங்களை ஆன்மீகப்பேரனுபூதியாகவும் தவறாக நாம் நினைத்துக் கொள்கிறோம். விளைவு? பிரிவினைவாதம், தொடர்வது, சண்டைகள். அனுபூதி என்பது தான் ஒரே மதம் என்பதை நாம் ஒரு முறை புரிந்து கொண்டால் போதும். இதயத்திற்குள்ளேயே ஆழ்ந்து பார்க்க முற்படுவோம். மத உண்மைகளை நாம் எவ்வளவு தூரம் அனுபவித்து உணர்ந்திருக்கிறோம் என்று அறிந்து கொள்வோம். நாமே இருளில் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலைமையில் பிறகும் அதே இருளில் உழல வழிகாட்டுகிறோம் என்பது அப்போது தான் நமக்குத்தெரியவரும். அதன்பிறகு பிரிவினைவாதம், சண்டை சச்சரவுகள் போன்றவற்றிலிருந்து விடுபடுவோம். யாராவது மதச் சண்டைகளில் ஈடுபட விரும்பினால் அவனிடம், ”நீகடவுளைக் கண்டிருக்கிறாயா? ஆன்மாவைக் கண்டிருக்கிறாயா? இல்லையென்றால் இறைவனின் திருநாமத்தைப் பிரச்சாரம் செய்ய உனக்கு என்ன உரிமை இருக்கிறது? இருட்டிற்குள் தட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கும் நீ என்னையும் அதற்குள் இழுத்துச்செல்ல விரும்புகிறாய். குருடனைக் குருடன் வழிநடத்தி இருவரும் குழியில் விழ வேண்டுமா? என்று கேளுங்கள்.
எனவே பிறரது குற்றங்களைக் கண்டுபிடிக்கச்செல்வதற்கு முன்னால் சற்று நின்று நிதானமாகச் சிந்தனை செய்யுங்கள். தங்கள் இதயங்களிலேயே உண்மையைக் காண்பதற்காக அவர்கள் போராடுகிறார்கள் என்கின்ற பட்சத்தில், அனுபூதிக்கான அவரவர் பாதையைப் பின்பற்றட்டும், பரந்த , தெளிவான உண்மையைக் காணும்போது, இந்தியாவின் ரிஷிகள் ஒவ்வொருவரும் அனுபூதி பெற்ற ஒவ்வொருவரும் அனுபவித்த அந்த அற்புதப்பேரின்பத்தை இவர்களும் உணர்வார்கள். அந்த இதயத்திலிருந்து அன்பான வார்த்தைகள் மட்டுமேவெளிவரும். ஏனென்றால் அன்பின் சாரமான ஒன்றால் அது தொடப்பட்டிருக்கிறது! அதன் பிறகு மட்டுமே எல்லா பிரிவுச் சண்டைகளும் தீரும். அப்போது தான் இந்து என்ற சொல்லையே, இந்து என்ற சொல்லால் அழைக்கப் படுகின்ற ஒவ்வொருவரையுமே, இதயத்தில் ஏற்றுக்கொண்டு, ஆரத்தழுவி அன்பு பாராட்ட முடியும். நான் சொல்வதைக்குறித்துக்கொள்ளுங்கள்.
எப்போது இந்து என்ற சொல்லே உங்களுள் வலிமையின் மின்னதிர்வுகளைப் பரப்புமோ அப்போது, அப்போது மட்டுமே நீங்கள் இந்துக்கள் ஆவீர்கள்.
எந்த நாட்டைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும், நமது மொழியில் பேசினாலும் வேறெந்த மொழியில் பேசினாலும் இந்து என்ற பெயரைத் தாங்கியவர்களாக இருந்தால், அவர்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு மிக நெருங்கியவர்களாக மிகுந்த அன்பிற்கு உரியவர்களாக என்று தோன்றுகிறதோ, அன்று, அன்று தான் நீங்கள் இந்துக்கள் ஆவீர்கள்.
இந்து என்ற பெரைத் தாங்கிய யார் துன்பப்பட்டாலும் அந்தத் துன்பம் உங்கள் இதயத்தில் நுழைந்து, உங்கள் சொந்த மகனின் துன்பத்தைப்போல் உங்களைத் துடிக்கச் செய்யுமானால், அப்போது , அப்போது மட்டுமே நீங்கள் இந்துக்கள் ஆவீர்கள்.
எனது சொற்பொழிவின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டது போன்ற மகத்தான உதாரணமாகிய குரு கோவிந்த சிம்மனைப்போல் என்று அவர்களுக்காக எல்லாவற்றையும் சகிக்கத் தயாராவீர்களோ, அன்று தான் நீங்கள் இந்துக்கள் ஆவீர்கள். அவர் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப்போரிட்டார். இந்து மதத்திற்காக ரத்தம் சிந்தினார். போர்க்களத்தில் தம் குழந்தைகளே மடிவதையும் கண்டார். அந்தோ! யாருக்காகத் தம் ரத்தத்தையும் தமது உற்றார் உறவினரின் ரத்தத்தையும் சிந்தினாரோ அவர்களாலேயே கைவிடப்பட்டார். அந்த அடியுண்ட சிங்கம் இறுதியில் போர்க்களத்திலிருந்து விலகி மரணத்தை அமைதியாக எதிர்கொள்வதற்காகத் தென்னாடு சென்றார். ஆ, அந்த நிலையிலும் தம்மைக்கைவிட்ட நன்றியில்லாத மக்களுக்கு எதிராக ஒரு கடுஞ்சொல் கூட அவரது வாயிலிருந்து வெளிப்படவில்லை.ஆகா, என்னவோர் உதாரணம் அந்த மகா குருவின் வாழ்க்கை.
என் வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்- நீங்கள் உங்கள் நாட்டிற்று நன்மை செய்ய விரும்பினால், நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங் ஆக வேண்டும். உங்கள் மக்களிடம் நீங்கள் ஆயிரம் குறைகளைக் காணலாம். ஆனால் அவர்களுடையது இந்து ரத்தம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களைத் துன்புறுத்துவதற்கான எல்லாவற்றையும் அவர்கள் செய்தாலும் நீங்கள் வழிபட வேண்டிய முதல் தெய்வங்கள் அவர்களே, அவர்கள் ஒவ்வொருவரும் உங்கள் மீது சாபங்களைப்பொழிந்தாலும். நீங்கள் அவர்களுக்கு அன்பு வார்த்தைகளையே அளியுங்கள். அவர்கள் உங்களை வெளியே துரத்தினால் அந்தச் சீரிய சிங்கமான கோவிந்தசிம்மனைபபொல் அமைதியாக மரணத்தை எதிர்கொள்வதற்காகச் சென்று விடுங்கள். அத்தகையவன் தான் இந்து என்னும் பெயருக்குத் தகுதியானவன். அத்தகையதொரு லட்சியம் எப்போதும் நம் கண்முன் இருக்க வேண்டும். சண்டைச் சச்சரவுகளை எல்லாம் புதைத்துவிடுவோம். இந்த ஆழ்ந்த அன்புணர்வை எங்கும் பரப்புவோம்.
இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றி யாரும் வேண்டுமானாலும் பேசட்டும்.ஆனால் வேலை செய்து கொண்டிருப்பவன் என்ற முறையில், அல்லது குறைந்தபட்சம் வேலை செய்ய முயல்பவன் என்ற வகையில் நான் சொல்ல விரும்புவது இது தான். நீங்கள் ஆன்மீகத்தைக் கைக்கொள்ளாத வரை இந்தியாவிற்கு முன்னேற்றம் கிடையாது.
அது மட்டுமல்ல. உலகின் நன்மையே அதைத்தான் சார்ந்துள்ளது.ஏனென்றால் மேலைநாட்டு நாகரீகம் அஸ்திவாரம் வரை ஆட்டம் கண்டு விட்டது என்பதை நான் வெளிப்படையாக உங்களிடம் சொல்லியே ஆக வேண்டும். உலகாயதம் என்ற வெறும் மணல் அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்பட்ட கட்டிடங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஒரு நாள் சரிந்தே தீரும். என்றாவது தரைமட்டமாகியே தீரும். உலக வரலாறு இதற்குச் சாட்சியாக உள்ளது. உலகாயதப் பெருமையைத் தன் அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ நாடுகள் எழுந்தன். மனிதன் வெறும் ஜடப்பொருளே என்று முழங்கின.ஆம், மரணம் அடைவது மேலைநாட்டு மொழியில், உயிரை விட்டு விடுதல் என்று கூறப்படுகிறது. நமது மொழியில் உடம்பை விட்டுவிடுதல் என்றே நாம் கூறுகிறோம்.மேலைநாட்டைப் பொறுத்தவரை மனிதன் என்பவன் உடம்பு, அவனுக்கு ஆன்மா உள்ளது. நமக்கோ மனிதன் என்பவன் ஆன்மா,அவனுக்கு உடம்பு உள்ளது. இங்குதான் பெரிய வித்தியாசம். எனவே உலக போகம் முதலான மணல் அடித்தளத்தின் மீது காலம் மட்டுமே வாழ்ந்து, ஒன்றன் பின் ஒன்றாக உலகிலிருந்து மறைந்து விட்டன.
ஆனால் இந்திய நாகரீகமும், அதன் காலடியில் அமர்ந்து கற்கவும் கவனிக்கவும் உடன்பட்ட நாடுகளான ஜப்பான், சீனா, முதலியவற்றின் நாகரீகங்களும் இன்றும் வாழ்ந்து வருகின்றன. மேலும் வளர்வதற்கான அறிகுறிகளும், அவைகளிடம் தென்படுகின்றன. ஆயிரம் முறை அழிக்கப் பட்டாலும் மறுபடியும் மேலும் பெருமையோடு வெளிவரத் தயாராக இருக்கின்ற
ஃபினிக்ஸ் பறவையைப்போல் உள்ளது அவைகளின் வாழ்க்கை.ஆனால் உலகாய நாகரீகம் ஒரு முறை வீழ்ந்து பட்டால் மீண்டும் அதனால் எழ முடியாது. ஒரு முறை அந்தக் கட்டிடம் தரைமட்டமாக்கப் பட்டுவிட்டால் என் றென்றைக்குமாக நொறுங்கி சுக்கல்சுக்கலாகி விடுகிறது. எனவே பொறுமையுடன் காத்திருங்கள். எதிர்காலம் நம்முடையதாகத்தான் ஆகப்போகிறது.
அவசரப் படாதீர்கள், மற்றவர்களைக் காப்பியடிக்காதீர்கள். நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான பாடம்இது. காப்பியடிப்பது ஒருபோதும் நாகரீகம் ஆகாது. நான் அரசனுடைய உடை தரிக்கலாம், ஆனால்
அது என்னை அரசனாக்கிவிடுமா? சிங்கத்தோல் போர்த்தாலும் கழுதை எந்தக் காலத்திலும் சிங்கம் ஆக முடியாது.காப்பியடித்தல், கோழைத்தனமான இந்தப்போலித்தனம் ஒருபோதும் முன்னேற்றத்தைத் தராது. இது மனிதனின் கேவலமான வீழ்ச்சி யின் தெளிவான அடையாளம்.ஆம், ஒருவன் தன்னையே வெறுக்கத் தொடங்கி விட்டானானால், அவனுக்கு இறுதி மணி அடித்து விட்டது என்று அர்த்தம். ஒருவன் தன் முன்னோர்களைக் குறித்து வெட்கப் பட ஆரம்பித்து விட்டானானால் அவனுக்கு முடிவுக்காலம் வந்து விட்டது.
இதோ நான் இருக்கிறேன். இந்து இனத்தின் மிகச் சாதாரணமானவன் நான். என்றாலும் என் இனத்தைப் பற்றியும் என் முன்னோர்களைப் பற்றியும் பெருமைப்படுகிறேன். என்னை ஓர் இந்து என்று அழைத்துக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். உங்கள் தகுதியில்லாத வேலைக்காரர்களுள் ஒருவன் என்பதில் பெருமைப்படுகிறேன். உங்கள் நாட்டினன் என்பதில் பெருமைப்படுகிறேன். நீங்கள் மகான்களின் வழி வந்தவர்கள். இந்த உலகம் இதுவரை கண்டவர்களுள் மாபெரும் ரிஷிகளின் வழித்தோன்றல்கள். எனவே உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் முன்னோர்களைக் குறித்து அவமானப்படாதீர்கள். அதற்குப் பதிலாகப் பெருமைப் படுங்கள். ஒருபோதும் போலித்தனமாக நடிக்காதீர்கள். காப்பியடிக்காதீர்கள்! நீங்கள் பிறருடைய கையசைவிற்குக் கட்டுப்பட்டு இருக்கும்வரை உங்கள் சுதந்திரத்தை இழக்கிறீர்கள். ஆன்மீக விஷயத்தில் கூட மற்றவர்களின் கட்டளைக்குப் பணிந்து நீங்கள் செய்யும்வரை சிறிது சிறிதாக உங்கள் சிந்தனைத் திறனை இழந்து விடுகிறீர்கள். உங்கள் உள்ளிருப்பதை உங்கள் சொந்த உழைப்பின் மூலம் வெளியே கொண்டு வாருங்கள். உங்களை எப்படி உருவாக்க முடியுமோ, அப்படி உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனால் பிறரைக் காப்பியடிக்காதீர்கள். என்றாலும் மற்றவர்களிடம் நல்லவற்றையெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள். பிறரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். விதையை நிலத்தில் போடுகிறீர்கள். அது வளர ஏராளமான மண்ணையும் காற்றையும் தண்ணீரையும் அளிக்கிறீர்கள். விதை கள்றாகவும் பிறகு பெரிய மரமாகவும் வளர்கிறது. அந்த விதை மண்ணாக மாறியதா, காற்றாக மாறியதா, நீராகத்தான் மாறியதா? அது தனக்கு அளிக்கப்பட்ட எல்லாவற்றையும் ஏற்ஞறுக்கொண்டு தன் இயல்பிற்கு ஏற்றவாறு செடியாகிறது. பெரிய மரமாக வளர்ந்தது. உங்கள் நிலையும் அப்படி இருக்கட்டும்.
நாம் பிறரிடமிருந்து கற்கவேண்டியவை உண்மையிலேயே ஏராளம் உள்ளன. பிறரிடமிருந்து கற்றுக்கொள்ள மறுப்பவன் செத்தவனே.நம் மனு (2.238) கூறுகிறார், ஆததீத பராம் வித்யாம் ப்ரயத்னாதவராதபி, அந்த்யாதபி பரம் தர்மம் ஸ்த்ரீ ரத்னம் துஷ்குலாதபி- உத்தமப் பெண் கீழ் ஜாதியில் பிறந்திருந்தாலும் அவளை மனைவியாக ஏற்றுக் கொள். ஞானி தாழ்ந்த குலத்தில் பிறந்தவராக இருந்தாலும் அவருக்குச்சேவை செய்து உயர் ஞானத்தைப்பெறு. சண்டாளன் ஆனாலும் அவருக்குப் பணிவிடைகள் செய்து முக்திக்கு வழிதேடு, நல்லவற்றை மற்றவர்களிடமிருந்து ம் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அவைகளை உங்கள் இயல்பிற்கு ஏற்பக் கிரகித்துக்கொள்ளுங்கள். மற்றவர்களாக மாறாதீர்கள். இந்திய வாழ்க்கையிலிருந்து வெளியே இழுக்கப் பட்டவர்களாகி விடாதீர்கள். இந்தியர்கள் மற்ற இனத்தவரைப்போல் உடையுடுத்தி, உண்டு வாழ்ந்தால் இந்தியாவிற்கு நன்மை விளையும் என்று ஒரு கணம் கூட நினைக்காதீர்கள்.
சில ஆண்டு பழக்கத்தையே விடுவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தச் சிறப்பான தேசிய வாழ்க்கை எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக உங்கள் ரத்தத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது கடவுளுக்கே தெரியும். எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட வழியில் ஓடிக்கொண்டிருக்கிறதோ கடவுளே அறிவார்.கடலை நெருங்கி விட்ட அந்த மாநதி திரும்பி இமயத்தின் பனி மூடிய சிகரத்தை அடையும் என்றா நீங்கள் சொல்கிறீர்கள்? அது முடியாதது! அதற்கு முயன்றால் அழிவே பலனாக இருக்கும். ஆகையால் நாட்டின் தேசிய நீரோட்டத்திற்கு வழிவிடுங்கள். அந்த மாநதியின் போக்கிற்கு இடையூறாக உள்ள தடைகளை அகற்றுங்கள். பாதையைச் செப்பனிடுங்கள். குண்டு குழிகளைச் சரி செய்யுங்கள். அது தன் சொந்தப்போக்கிலேயே பொங்கிப்பாயும் முன்னேற்றப் பாதையில் மேன்மையுடன் நாடு செல்லும்.
இந்தியாவின் ஆன்மீகப் பணிகளுக்காக முக்கியமான யோசனைகள் இவை. இன்னும் எத்தனையோ முக்கியமான பிரச்சனைகள் உள்ளன. நேரம் இல்லாத காரணத்தால் அவற்றை இன்றிரவு உங்களிடம் சொல்ல இயலவில்லை. உதாரணமாக ஜாதிப்பிரச்சனை, அதன் நன்மை, தீமை எல்லாவற்றையும் என் வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து வருகிறேன்.ஏறக்குறைய இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் இதைக் குறித்து ஆராய்ந்திருக்கிறேன். இந்த நாட்டில் உள்ள ஏறக்குறைய எல்லா ஜாதியினருடனும் கலந்து பழகியிருக்கிறேன்.ஆனால் அதன் முக்கியத்துவத்தை அறிய எண்ணும்போது என் மனம் திகைப்பில் ஆழ்ந்து விடுகிறது. அதிகமாக ஆராயும் அளவு பிரமிப்பு அதிகரிக்கிறது. என்றாலும் கடைசியாக என் முன் மங்கலான சிறிய ஒளி தென்படுகிறது.அதன் முக்கியத்துவம் இப்போது தெரியத்தொடங்கியுள்ளது.
இது உண்பது, அருந்துவது குறித்த பெரிய பிரச்சனை உள்ளது. உண்மையிலேயே அது ஒரு பெரிய பிரச்சனைதான், ஆனால் நாம் பொதுவாக நினைப்பது போல், பயனற்ற பிரச்சனை அல்ல. நான் கண்டுள்ள முடிவு இது. உண்பது, பருகுவது குறித்து இப்போது நாம் காட்டுகின்ற கண்டிப்பு மிகவும் வினோதமானது. இந்தக் கண்டிப்பு, சாஸ்திரங்களுக்கு எதிரானது. அதாவது உண்கின்ற உணவு மற்றும் நீரின் உண்மையான தூய்மையான அசட்டை செய்ததால் தான் நாம் அவல நிலையை அடைந்துள்ளோம். அதன் உண்மையான சாரத்தை இழந்து விட்டோம்.
மேலும் சில பிரச்சனைகள், அவைகளுக்கு எப்படித் தீர்வு காண்பது. இந்த லட்சியங்களை எப்படிச் செயல்முறைப் படுத்துவது என்பது பற்றியெல்லாம் உங்களிடம் பேச வேண்டுமென்ற ஆவல் எனக்கு உண்டு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்தக் கூட்டம் ஆரம்பிக்கும் போதே மிகவும் காலதாமதமாகி விட்டது. இனியும் உங்களைக் காக்கவைக்க நான் விரும்பவில்லை. எனவே ஜாதி மற்றும் பிற விஷயங்களில் என் கருத்தை மற்றொரு சமயம் கூறுகிறேன்.
இன்னொரு வார்த்தை மட்டும் கூறி எனது இந்த ஆன்மீகக் கருத்துக்களை நிறைவு செய்கிறேன். நெடுங்காலமாக இந்தியாவில் மதம் தேக்க நிலையில் உள்ளது. அதைச் செயல்நிலைக்குக் கொண்டு வருவதே நாம் செய்ய வேண்டியது. ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் அதனைக்கொண்டு வர வேண்டும்.என்று நான் விரும்புகிறேன். கடந்த காலத்தில் போல், மதம் என்பது மன்னர்களின் மாளிகையிலும் அது போலவே நாட்டின் ஏழை விவசாயியின் குடிசையிலும், நுழைய வேண்டும். அனைவருடையவும் பொதுச்சொத்தான, இனத்தின் பிறப்புரிமையான மதம் என்பது ஒவ்வொருவரின் வாசற்படிக்கும் இலவசமாகக்கொண்டு செல்லப் பட வேண்டும். இந்தியாவில் மதம் என்பது, கடவுள் தந்தக் காற்றைப்போல் சுதந்திரமாகவும் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் ஆக்கப்பட வேண்டும். இந்தியாவில் நாம் தொடங்க வேண்டியது இத்தகைய வேலையையே. சிறிய சிறிய மதப் பிரிவுகளை ஏற்படுத்தியும், அவற்றுக்கிடையே உள்ள வேற்றுமைகளைப் பற்றிச் சண்டையிட்டும் செய்ய வேண்டியது அல்ல இது. எல்லோரும் ஏற்றுக் கொள்வதைப் பிரச்சாரம் செய்வோம்.வேற்றுமைகள் தங்களைத் தாங்களே சீர்செய்து கொள்ளும்படி விட்டு விடுவோம். நான் இந்திய மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி வந்துள்ளது போல், பல நூறு ஆண்டுகளாக இருள் மூடிக் கிடக்கின்ற ஓர் அறை, அந்த அறையின் அருகே சென்று. ஓ! இது இருட்டாக இருக்கிறது. இருட்டாக இருக்கிறது” என்று அழுதால் இருள் விலகுமா என்ன! ஒளியை உள்ளே கொண்டு வாருங்கள். அந்தக் கணமே இருள் மறைந்து விடும். மனிதனைச் சீர்திருத்துவதன் ரகசியம் இது தான்.
மக்களுக்கு உயர்ந்தவற்றைப் பற்றிச் சொல்லுங்கள். முதலில் மனிதனை நம்புங்கள். மனிதன் இழிந்தவன், தாழ்ந்தவன் என்ற நம்பிக்கையோடு ஏன் தொடங்க வேண்டும்? மிக மோசமான மனிதனிலும் என் நம்பிக்கை ஒருபோதும் தளர்ந்ததில்லை. எங்கெல்லாம் மனிதனிடம் நான் நம்பிக்கை வைத்தேனோ, அங்கெல்லாம் ஆரம்ப நிலைமை நன்றாக இல்லை என்றாலும் காலப்போக்கில் அது வெற்றிபெறவே செய்தது.
ஒருவன் நன்கு படித்தவனாகத்தோன்றினாலும் , படிக்காத வனாக இருந்தாலும் அவனிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்.தேவதூதனாகத் தோன்றினாலும் , சாத்தானாகவே தோன்றினாலும், அவனிடம் நம்பிக்கை வையுங்கள். முதலில் மனிதனிடம் நம்பிக்கை வையுங்கள். அவனிடம் குற்றங்குறைகள் இருந்தால், அவன் தவறுகள் செய்தால், வளர்ச்சியுறாதமோசமான கொள்கைகளை அவன் பின்பற்றினால், அதற்குக் காரணம் அவனது இயல்பே தாழ்ந்தது என்பதல்ல, உயர்ந்த லட்சியங்களை அவன் அறியாததே உண்மையான காரணம் என்பதை நம்புங்கள். ஒருவன் தவறை நோக்கிப்போகிறான். என்றால் , அதன் காரணம் சரியானது அவனுக்குக் கிடைக்க வில்லை என்பதே. எனவே தவறிலிருந்து ஒருவனைத் திருத்த வேண்டும் என்றால் அவனுக்கு உண்மையைக் காட்டுங்கள். இதைச் செய்யுங்கள். அவன் சீர் தூக்கிப் பார்க்கட்டும். அவனுக்கு உண்மையைக் கொடுங்கள். அதோடு உங்கள் வேலை முடிந்து விட்டது. அவன் தன் மனத்துள், ஏற்கனவே அங்கே இருப்பதுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கட்டும். என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையாகவே உண்மையைக் கொடுத்திருந்தால் பொய் மறைந்தே தீர வேண்டும் வெளிச்சம் இருளைத் துரத்தியே தீரும். உண்மை நன்மையை வெளியே கொண்டு வந்தே தீரும்.
ஆன்மீக வழியில் நாட்டைச் சீர்திருத்த வேண்டுமானால் இது தான் வழி. சண்டையிடுவது அல்ல, மக்கள் செய்வதெல்லாம் தவறு என்று அவர்களிடம் சொல்வதும் அல்ல. நல்லதை அவர்கள் முன் வையுங்கள். எவ்வளவு ஆர்வத்துடன் அவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள், மனிதனில் என்றென்றும் உறைகின்ற, ஒருபோதும் அழியாத தெய்வீகம் விழித்தெழுந்த நல்லதையும் மகத்தானதையும் ஏற்றுக் கொள்ளத் தனது கைகளை நீட்டுவதைக் காண்பீர்கள்.
படைப்பவராகவும், காப்பவராகவும் நம் இனத்தின் காப்பாளராகவும், நம் முன்னோர்களின் கடவுளாகவும், விஷ்ணு, சிவன், கணபதி , சக்தி முதலிய பல பெயர்களால் அழைக்கப் படுபவராகவும் , சகுணமாகவோ நிர்குணமாகவோ வழிபடப்படுபவரும் , உருவம் உடையவராகவோ உருவம் அற்றவராகவோ வழிபடப் படுபவரும் நம்முடைய முன்னோர்கள் யாரை அறிந்து ”, ”ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி”- உள்ளது ஒருவரே. மகான்கள் அவரைப் பல்வேறான பெயர்களில் அழைக்கிறார்கள்” என்று யாரைக் குறிப்பிட்டார்களோ, அந்த இறைவன் மகத்தான அன்போடு நம்முள் புகுவாராக. தமது ஆசிகளை நம்மீது பொழிவாராக. நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் படிச் செய்வாராக. உண்மையான அன்போடு, நாம் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்யுமாறு செய்வாராக. உண்மையின் மீதுள்ள ஆழ்ந்த அன்போடு, நம் சொந்தப் புகழில் சிறிது கூட ஆர்வம் இல்லாமல், நம் சொந்த மரியாதையைப் பெரிதாகக் கருதாமல், சொந்த நன்மையை நினைக்காமல் இந்தியாவின் ஆன்மீக மறுமலர்ச்சியான இந்த மகத்தான பணியைச் செய்வதில் நன்மை ஈடுபடுத்துவாராக!
லாகூர்
பக்தி
நவம்பர் 9-ஆம் நாள் மாலை 6 மணிக்கு ”க்ரேட் பொங்கால் சர்க்கஸ்” வளாகத்தில் நடைபெற்ற சொற்பொழிவு இது. ”டிரிபியூன்” பத்திரிகையில் வெளிவந்த அதன் சுருக்கம் இங்கே தரப்படுகிறது.
-
எங்கோ வெகு தூரத்தில் ஓர் ஒலி கேட்கிறது. தூரத்து எதிரொலிபோல் அது உள்ளது. உபநிடதங்கள் என்னும் பிரவாகத்தினுடைய முழக்கத்தின் ஊடே அது கேட்கிறது. சிலவேளைகளில் எழுச்சி மிகுந்து கேட்கிறது. மற்றொரு நேரம் எழுச்சி குன்றிக்கேட்கிறது. வேதாந்த இலக்கியம் முழுவதும் அதன் குரலைக்கேட்கிறோம். அது தெளிந்த குரல் தான். ஆயினும் மெல்லிய குரல். நுண்மையின் சாரத்தையும் சித்திரத்தையும் நம் முன் வைப்பதே உபநிடதங்களில் முக்கியமான கடமை என்று தோன்றுகிறது. ஆனால் இந்த நுண்மைக்குப் பின்னால் அங்கங்கே சில கவிதை நயமான காட்சிகளையும் சந்திக்கிறோம். ந தத்ர ஸுர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி?- அங்கே சூரியன் ஒளிர்வதில்லை. சந்திரன் ஒளிர்வதில்லை. நட்சத்திரங்கள் ஒளிர்வதில்லை. அப்படி இருக்கும்போது இந்த அக்கினியையைப் பற்றி என்ன சொல்வது? இதயத்தை வருடும் அற்புதமான இந்தக் கவிதை வரிகளைக்கேட்கும் போது நாம் ஏதோ புலனுலகிற்கு அப்பால், அறிவுலகிற்கும் அப்பால், இன்னதென்று அறிய முடியாத, அதே வேளையில் எப்போதும் நம்முடனே இருந்து வருகின்ற ஓர் உலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது போல் உணர்கிறோம்.
இந்த நுண்மைக்குப் பின்னால் மற்றொரு கருத்து இதன் நிழலைப்போல் தொடர்ந்து வருகிறது. மனித குலத்திற்கு இன்றும் ஏற்புடையதான லட்சியம் அது, அன்றாட வாழ்க்கைக்குப் பயன் தர வல்லது அது, மனித வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் நுழைய வேண்டியது அது. இது பிற்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டு, புராணங்களில் முழுமையான, உறுதியான மொழியில் கூறப்படுகிறது. இதுவே பக்தி- லட்சியம் பக்திக் கருத்துக்கள் ஏற்கனவே அங்கு உள்ளன. சம்ஹிதைகளில் முளைகளாக உள்ளன, உபநிடதங்களில் சற்று வளர்ச்சி பெற்றுள்ளன. ஆனால் முழுமையாக வளர்ந்துள்ளது புராணங்களில் தான்.
எனவே பக்தியைப் புரிந்து கொள்வதற்கு நாம் நமது புராணங்களை அறியவேண்டும்.அவை ஆதாரபூர்வமான வையா இல்லையா என்பதைப் பற்றிச் சமீப காலங்களில் பெரிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பொருள் தெளிவற்ற பல பகுதிகள் விமர்சிக்கப் படுகின்றன. பல இடங்களில் அதன் கருத்துக்கள் இன்றைய விஞ்ஞான ஒளிக்கு முன்னால் நிற்க முடியாதவை என்றெல்லாம் காட்டப் படுகின்றன. இந்த விவாதங்களும் புராணக் கருத்துக்களின் விஞ்ஞானபூர்வமான அத்தாட்சியும் ஒரு புறம் இருக்கட்டும். அவற்றின் புவியியல் மற்றும் வானவியல் கருத்துக்கள் உண்மையா இல்லையா என்ற இந்த விஷயங்களும் ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் இந்தப் புராணங்கள் ஒவ்வொன்றிலும் தெளிவாக நிச்சயமாக விவரிக்கப் பட்டுள்ளது பக்திக்கோட்பாடு. மகான்கள் மற்றும் மன்னர்களின் வாழ்வில் இது மீண்டும் மீண்டும் சித்தரிக்கப் படுவதைக் காணலாம். மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் படுவதைக் காணலாம்.
இந்த அழகிய உன்னதமான பக்தி லட்சியத்திற்கு விளக்கங்களாக இருப்பதே புராணங்களின் கடமையோ என்று தோன்றுகிறது. நான் ஏற்கனவே சொல்லியது போல் இது சாதாரண மனிதனுக்கு மிகவும் நெருங்கிய லட்சியம் ஆகும்.வேதாந்தப்பேரொளியின் முழுப் பிரகாசத்தின் மகிமையை அறியவும் ஆமோதிக்கவும் வல்லவர்கள் சிலரே, அதிலேயே வாழவும் செயல்படவும் வல்லவர்கள் இன்னும் சிலரே, ஏனென்றால் ஒரு பூரண வேதாந்தி வைக்க வேண்டிய முதல் அடி அபீ, அச்சமின்மை. ஒருவன் வேதாந்தி ஆவதற்குத் துணியுமுன் அவனிடமிருந்து பலவீனம் போய்விட வேண்டும். இது எவ்வளவு கடினம் என்பது நமக்குத் தெரியும். உலகத்தோடு எல்லா தொடர்புகளையும் விட்டு, தங்களைக் கோழைகள் ஆக்கவல்ல மிகக் குறைவான பந்தங்களையே கொண்டிருப்பவர்கள் கூட, சில சந்தர்ப்பங்களில் தங்கள் மன ஆழங்களில் எந்த அளவு பலவீனத்தை உணர்கிறார்கள். சிலவேளைகளில் எவ்வளவு மிருதுவாகி விடுகிறார்கள். எவ்வளவு தளர்ந்து போகிறார்கள்! இந்த நிலையில் அதிகமான பந்தங்களுடன் , தங்களுக்கு உள்ளும் புறமும் உள்ள ஆயிரக் கணக்கான பொருட்களுக்கு அடிமைகளாக இருக்கின்ற கட்டாயத்திற்கு உள்ளான, வாழ்க்கையில் ஒவ்வொருகணமும் அடிமைத்தனத்தால் இழுத்துச் செல்லப்படுபவர்களைப் பற்றிச்சொல்லவும் வேண்டுமா? அத்தகையவர்களுக்கு, புராணங்கள் பக்தி என்ற மகோன்னதமான செய்தியுடன் வருகின்றன. மென்மையும் கவிதைகளும் அவர்களுக்காக விரித்து வைக்கப் பட்டுள்ளன. துருவன், பிரகலாதன் மற்றும் ஆயிரக்கணக்கான மகான்களின் அற்புதமான கதைகளும் சொல்லப் படுகின்றன. இந்தக் கதைகள் எல்லாம் பக்தி லட்சியத்தை நடைமுறைப் படுத்துவதற்காகவே.
புராணங்கள் விஞ்ஞான பூர்வமானவை என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அதில் காணப்படுகின்ற பிரகலாதன், துருவன் அல்லது மற்ற மகத்தான மகான்களின் கதைகளின் தாக்கம் இல்லாதவர்கள் இங்கே ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். இன்று புராணங்களுக்கு இருக்கும் செல்வாக்கை நாம் ஏற்றுக் கொள்வது மட்டும் போதாது. நலிவுற்ற பிற்கால புத்த மதம் நம்மைக்கொண்டு சேர்க்கவிருந்த ஒரு மதத்தைவிட, தெளிவான சிறந்த எளிய மதத்தை அன்று தந்ததற்காகவும் நாம் அவற்றிற்கு நன்றி செலுத்த வேண்டும்.
இந்த எளிய, சரளமான பக்தி என்னும் கருத்து பலமுறை எழுதி சித்தரித்துக் காட்டப்பட்டு விட்டது. அது மட்டுமல்ல. அதை நாம் அன்றாட வாழ்வில் கைக்கொள்ளவும் வேண்டும். அவ்வாறு செய்யச்செய்ய பக்தி அன்பின் சாரமாக மலர்கிறது. தனிமனிதர் மீது கொள்கின்ற அன்பு, பொருட்கள் மீது வைக்கின்ற அன்பு- இவையெல்லாம் இருக்கின்ற வரையில் நம்மால் புராணங்களின் உபதேசங்களைக் கடந்து போக முடியாது.சார்ந்து கொள்வதற்கு யாருடைய துணையாவது வேண்டும் என்ற மனித பலவீனம் இருக்கும் வரையில் ஏதாவது ஒரு வகையில் இந்தப் புராணங்கள் இருந்தேயாக வேண்டும்ஃ நீங்கள் அதன் பெயர்களை மாற்றலாம். ஏற்கனவே இருக்கும் அவைகளை உதறித்தள்ளலாம், ஆனால் உடனடியாக மற்றொரு புராணத்தை எழுதுகின்ற கட்டாயத்திற்கு உள்ளாவீர்கள். இந்தப் பழைய புராணங்கள் வேண்டாம் என்கின்ற ஒரு மகான் நம்மிடையே தோன்றினார் என்றால், அவரது சீடர்கள், அவர் மறைந்த இருபது ஆண்டுகளுக்குள் அவருடைய வாழ்க்கையையே மற்றொரு புராணமாக எழுதுவதைக் காணலாம். மாற்றமெல்லாம் இவ்வளவு தான். புராணங்கள் மனித இயல்பிற்கு அவசியமானவை.மனித பலவீனங்கள் யாவும் நீங்கப் பெற்ற, உண்மையான பரமஹம்சருக்கான தகுதி பெற்ற, வீரமும் தீரமும் மிக்க, மாயையின் கட்டுக்களை வெட்டியெறிந்த, இயற்கையின்தேவைகளைக் கூட கடந்த வெற்றி வீரர்களுக்கு, மனித தெய்வங்களுக்கு மட்டுமே புராணங்கள் தேவையில்லை.
ஆனால் சாதாரண மனிதன் சகுணக்கடவுள் இல்லாமல் வழிபட முடியாது. இயற்கையில் உள்ள ஒரு கடவுளை அவனால் வழிபட முடியவில்லை என்றால் மனைவி வடிவிலோ, குழந்தை வடிவிலோ, அல்லது தந்தை , நண்பன், குரு என்று ஏதாவது ஒரு வடிவிலோ அவன் வழிபட்டே தீர்வான். ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தத்தேவை இன்னும் அதிகமாக உள்ளது.
ஒளியின் அலைகள் எல்லா இடத்திலும் இருக்கலாம். இருண்ட இடங்களிலும் அது இருக்கலாம். பூனை முதலான விலங்குகள் அதை உணர்கின்றன. நமக்கோ அந்த ஒளியலைகள் நாம் காணத்தக்க அதிர்வு நிலையில் இருந்தால் தான் அவற்றைக் காண முடியும். அது போலவே உருவமற்ற கடவுள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் பேசலாம். ஆனால் நாம் சாதாரண மனிதனாக இருக்கும் வரை கடவுளை மனிதனிடம் மட்டுமே காண முடியும். எனவே கடவுளைப்பற்றிய நமது கருத்தும் இறைவழிபாடும் இயல்பாகவே மனித நிலையில் அமைந்துள்ளது. இந்த உடம்பு உண்மையிலேயே இறைவனின் மிகப்பெரும் திருக்கோயில். இவ்வாறு காலங்காலமாக மனிதர்கள் வழிபடப் பட்டு வருவதைக் காண்கிறோம். இயல்பாகவே அதைத் தொடர்ந்து வருபவையான அளவுக்கு மீறிய சில விஷயங்களை நாம் கண்டிக்கலாம்.விமர்சிக்கலாம். ஆனால் அதன் இதயம், அதன் சாரம் பாதுகாப்பாகவே இருக்கிறது. அளவுக்கு மீறிய விஷயங்களும் எல்லை கடந்த செயல்களும் இருந்தாலும் போதிக்கப் படுகின்ற கோட்பாட்டில் ஓர் உண்மையான, உறுதியான சாரம் இருக்கிறது, ஒரு முதுகெலும்பு இருக்கிறது.
இப்படிச் சொல்வதால் உடனே எந்தப் பழங்கதைகள் ஆனாலும், அறிவியலுக்கு ஒத்துவராத புதிர்க்கூட்டங்கள் ஆனாலும் ஆராயமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நான் சொல்லவில்லை. துரதிர்ஷ்டவசமாக நமது புராணங்களில் நுழைந்துள்ள எல்லா விதமான வாமாச்சார விளக்கங்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்று நான் சொல்லவில்லை. நான் சொல்வதெல்லாம்.புராணங்களில் ஒரு சாரம் இருக்கிறது. புராணங்கள் இருப்பதற்கு ஓர் அறிவுபூர்வமான காரணம் இருக்கிறது. அதை நாம் இழந்து விடக்கூடாது என்பது தான். அந்த அறிவுபூர்வமான காரணம் பக்தியை உபதேசிப்பது, மதத்தைச் செயல்முறைப்படுத்துவது, உயர்ந்த தத்துவ நிலையில் உள்ள மதத்தைச் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்வில் கொண்டு வருவது என்பது தான்.
இனிவருவது பத்திரிகைக் குறிப்பு. பக்தியில் உலகப்பொருட்களின் துணையை நாடுதை ஆதரித்துப் பேசினார் சுவாமிஜி.
மனிதன் தற்போது எந்த நிலையில் இருக்கிறானோ, இறையருளால்அந்த நிலையில் இல்லாதிருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். ஆனால் இருக்கின்ற உண்மைநிலையை எதிப்பது பயனற்றது. ஆன்மீகம் போன்றவற்றைக் குறித்து அவன் எப்படித்தான் பேசினாலும் அவன் உலகாயதச் சார்பு உடையவனே. எனவே இந்த உலகாயதச் சார்புடைய மனிதனை ஏற்றுக் கொண்டு, அவனைச் சிறிது சிறிதாக ஆன்மீக நிலைக்கு உயர்த்த வேண்டும் இந்தக் காலத்தில் தொண்ணூற்றொன்பது சதவீதம் பேரால் ஆன்மீகத்தைப் புரிந்து கொள்வதே கடினம். அதை எடுத்துக்கூறத்தெரிந்தவர் இன்னும் குறைவே. நம்மை முன்னோக்கி உந்தும் சக்திகள். நாம் அடையவிரும்பும் பயன்கள் எல்லாம் உலகாயதச் சார்புடையவையாகவே இருக்கின்றன.
ஹெர்பர்ட் ஸ்பென்சர் கூறுவது போல், எதிர்ப்பு குறைவாகவுள்ள வழியில் தான் நாம் வேலை செய்ய முடியும். அவ்வாறு வேலை செய்வதற்கான நல்லெண்ணமும், பொது அறிவும் புராணங்களுக்கு உண்டு. புராணங்கள் பெற்ற வெற்றி மகத்தானதும் இணையற்றதும் ஆகும். பக்தி லட்சியம் ஆன்மீகமானது தான். ஆனால் அதன் வழி உலகாயதச் சார்புடையது, அது தவிர்க்க முடியாதது. எனவே ஆன்மீகத்தை அடைய இந்த ஜடவுலகில் எவையெல்லாம் ஏற்றதாக இருக்கிறதோ, அவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவைகளைப் பயன்படுத்தி மனிதனை ஆன்மீகத்திற்கு உயர்த்த வேண்டும்.
வேதங்களைப் பயிலும் உரிமையை ஆண், பெண் ,ஜாதி, மத, இன வேறுபாடுகள் இல்லாமல் எல்லோருக்கும் கொடுத்தவாறு தான் நமது சாஸ்திரங்கள் தொடங்குகின்றன. கோயில் கட்டுகிறான் ஒருவன், அது இறைவனை மேலும் நேசிக்க உதவுமானால் வரவேற்கத்தக்கதே. இறைவனின் திருவுருவை வடிக்கிறான் ஒருவன். அன்பு என்னும் லட்சியத்தை அடைவதற்கு அது உதவுமானால் இறைவன் அவனுக்கு அருள்வாராக, தேவையானால் இருபது திருவுருவங்களை அவனுக்குக் கொடுங்கள்!ஆன்மீக லட்சியத்தை அடைவதற்கு எது உதவுமானால் இறைவன் அவனுக்கு அருள்வாராக! தேவையானால் இருபது திருவுருவங்களை அவனுக்குக்கொடுங்கள்! ஆன்மீக லட்சியத்தை அடைவதற்கு எது உதவியாயிருந்தாலும், அது நன்னெறிக்கு உட்பட்டதாக இருக்கும் வரையில் அது வரவேற்கத்தக்கதே. ஏனென்றால் நன்னெறிக்கு உட்படாத எதவுமே உதவ முடியாது. அது தடையாகவே அமையும்.
இந்தியாவில் உருவ வழிபாட்டைக் கண்டித்தவர்களுள் கபீரும் ஒருவர். மாறாகச் சகுணக் கடவுள் இருப்பதையே நம்பாத, அதே வேளையில் உருவ வழிபாட்டைக் கண்டிக்காத மகத்தான தத்துவ ஞானியரும் மத ஸ்தாபகர்களும் இந்தியாவில் இருந்தனர். தங்கள் கருத்துக்களை அவர்கள் தைரியமாக மக்களுக்குப் போதிக்கவும் செய்தனர். அவர்கள் அதிகமாக அதைப் பற்றிச்சொன்னதெல்லாம், அது மிகவுயர்ந்த வழிபாடு அல்ல என்பது தான். மிகவுயர்ந்த வழிபாடு அது என்று புராணங்களும் சொல்லவில்லை.
வரலாற்றை ஆராய்ந்தால் யூதர்களும் உருவ வழிபாடு செய்திருப்பது தெரிகிறது. ஜெஹோவா ஒரு பெட்டியில் உறைகிறார் என்று அவர்கள் நம்புவதாகத்தெரிவித்த சுவாமிஜி, உருவ வழிபாடு தவறு என்று யாரோ கூறியதற்காக அதைக் கண்டிப்பது முறையாகாது என்றார்.
ஒரு சிலையோ உருவமோ ஒருவன் ஆன்மீகத்தை அடைய உதவும் என்றால் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதே வேளையில் உருவ வழிபாடு தாழ்ந்தது என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறாத எந்த நூலும் நமது மதத்தில் இல்லை. ஏனென்றால் அது ஜடப்பொருள் மூலம் செய்யப்படும் வழிபாடே அல்லவா! உருவ வழிபாட்டை எல்லோர் மீதும் திணிப்பதற்காக இந்தியா முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைக் கண்டிப்பதற்கு ப்போதிய சொற்கள் அகப்படவில்லை என்றார் அவர். ஒருவர் எதை வழிபடுவது, எதன் மூலம் வழிபடுவது என்பதையெல்லாம் கூறவும் வற்புறுத்தவும் உரிமையில்லை. ஒருவர் எவ்வாறு முன்னேறுவார் என்பதை இன்னொருவர் எவ்வாறு கூற முடியும்? சிலர் உருவ வழிபாட்டின் மூலம், மற்றவர் அக்கினி வழிபாட்டின் மூலம்,ஏன், சிலர் ஒரு தூணை வழிபடுவதன் மூலம் கூட முன்னேறலாம். சொந்த குருவும் குரு-சிஷ்ய உறவும் மட்டுமே இந்த விஷயத்தில் நமக்கு வழிகாட்டவும் நம்மை வழிநடத்திச்செல்லவும் முடியும்!
இஷ்டதெய்வம் பற்றி பக்தி இலக்கியங்கள் கூறுகின்ற நியமம் மேற்சொன்னதை விளக்குகிறது. அதாவது ஒவ்வொரு வரும் தனக்குரிய தனியான வழிபாட்டு முறையையும் இறைவனை நாடிச் செல்வதற்கான சொந்த வழியையும் தானே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவன் தேர்ந்தெடுக்கும் இறைவடிவமே அவனது இஷ்டதெய்வம். அவன் மற்ற வழிபாட்டு முறைகளை மதித்துப்போற்ற வேண்டும். அதே வேளையில் அடைய வேண்டிய லட்சியத்தை அடையும் வரை, புறப் பொருட்களின் அவசியம் தேவையில்லாமல் போகின்ற மையத்தை அடையும் வரை, அவன் தன் இஷ்டதெய்வ வழிபாட்டிலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
இதைப்பற்றி ச் சொல்லும்போது, இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள குலகுரு முறை என்னும் ஒரு விதமான பரம்பரை அமைப்பு பற்றி நான் சிறிது எச்சரிக்க விரும்புகிறேன்.யார் குருவாக இருக்க முடியும் என்பதைப் பற்றி சாஸ்திரங்களில் நாம் படிக்கிறோம்.-வேதங்களின் சாரத்தை அறிந்தவர், பாவமற்றவர், பணத்திற்காகவோ வேறு எதற்காகவோ கற்பிக்காதவர், காரணம் இல்லாமல் கருணை காட்டுபவர், நல்லது செய்வது ஒன்றையே இயல்பாகக்கொண்டு, செடி கொடிகளிலிருந்து எதையும் எதிர்பாராமல் , அவற்றிற்கு மொட்டு, மலர், இலைகளைக்கொடுத்து வாழ்வளிக்கின்ற வசந்தம்போல், தமக்கென்று எந்தத்தேவையுமின்றி தம் வாழ்க்கையை மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காக மட்டுமே கொண்டவர்- அத்தகைய வரையே குரு என்று அழைக்க முடியும். வேறு யாரையும் அல்ல.
இதில் மற்றோர் ஆபத்தும் இருக்கிறது. குரு என்பவர் வெறும் ஆசிரியர் மட்டுமல்ல. ஆசிரியர் என்பது, குரு தன்மையில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. குரு, ஆன்மீகத்தைச் சீடர்களிடம் பாய்ச்சுவதாக இந்துக்கள் நம்புகிறார்கள். சாதாரண உலக உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம்.நோயைத் தடுக்கின்ற நல்ல நுண்கிருமிகளை உடம்பில் ஏற்றாவிட்டால்,தீய, கேடு விளைவிக்கக்கூடிய நுண்கிருமிகள் தொற்றிக்கொள்கின்ற அபாயம் உள்ளது. அதுபோல் தீய குருவால் போதிக்கப்படும்போது கெட்டவற்றைக் கற்க வேண்டிய அபாயம் நேர்கிறது. எனவே குரு குல முறை என்பது இந்தியாவை விட்டுக் கட்டாயமாக மறைய வேண்டிய ஒன்றாகும். குரு நிலை என்பது ஒரு வியாபாரமாக ஆகிவிடக் கூடாது. அதைத் தடுத்தேயாகவேண்டும். இது சாஸ்திரங்களுக்கே முரணானது. தன்னை குரு என்று அழைத்துக் கொள்கின்ற யாரும் குல குரு முறை என்ற பெயரில் இன்று நடைபெற்று வருகின்ற செயல்களுக்குத் துணைபோக் கூடாது.
உணவைப்பற்றி சுவாமிஜி பேசும்போது, இன்றைய நடைமுறையில் உள்ள கடினமான கட்டுப்பாடுகள் பெருமளவிற்கு மேலோட்டமானவை என்றும் எதற்காக ஆரம்ப காலத்தில் அமைக்கப் பட்டதோ அந்த நோக்கத்திலிருந்து அவை மாறுபட்டு விட்டன என்றும் கூறினார். குறிப்பாக, உணவைத்தொடுவதற்கு மற்றவர்களை அனுமதிப்பது பற்றிப்பேசினார். அதன் ஆழமான மனோதத்துவ முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார். ஆனால் சாதாரண மனிதன் அன்றாட வாழ்க்கையில் இதில் கவனமாக இருப்பது கடினம். ஏன், முடியாத ஒன்று என்றும் கூறினார். இங்கும் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் பொருந்தக் கூடிய விதி, பொதுவிதியாக மாற்றப்பட்ட தவறு நேர்ந்துள்ளது. முழுக்கமுழுக்கத் தங்கள் வாழ்வை ஆன்மீகத்திற்கே அர்ப்பணித்தவர்களுக்கென வகுக்கப்பட்ட விதிகள். உலகியல் ஆசைகளை இன்னும் அனுபவித்துத் தீர்த்துக்கொள்ளாத பெருவாரியான மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை அனுபவிக்காத வரையில் அவர்கள் மீது ஆன்மீகத்தைத் திணிப்பது பயனற்றது.
பக்தர்களுக்காக விதிக்கப்பட்ட வழிபாடுகளுள் மிகவும் உயர்ந்தது மனித வழிபாடாகும். உண்மையாகவே ஏதாவது வழிபாடு நடைபெற வேண்டுமென்றால் உங்கள் வசதிக்குத் தக்கவாறு ஏழைகள் ஒருவரையோ இருவரையோ சிலரையோ உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து, நாராயணனாகக் கருதி அவர்களுக்குச்சேவை செய்யுங்கள்.
சுவாமிஜி பல நாடுகளில் தானம் நடைபெறுவதைக் கண்டுள்ளார். அவை வெற்றி பெறாததன் காரணம் நல்ல மனப்பான்மையோடு செய்யாதது தான் என்றார். இங்கே வா, இதை எடுத்துக்கொள், வெளியே போ. இது தானம் அல்ல, இது கர்வத்தை வெளிப்படுத்துவது, பாராட்டு பெறவும். இவர்கள் கொடையாளிகள் என்பதை உலகம் அறிந்து கொள்ளவும் செய்யப்படுவதே இது.
வாங்குபவனைவிடக் கொடுப்பவன் கீழானவனே என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன. ஏனென்றால் வாங்குபவன் அந்த நேரத்திற்குக் கடவுளே. இதனை இந்துக்கள் அறிந்து கொள்வது அவசியம். ஆகையால் சில ஏழை நாராயணர்களை, பார்வையற்ற நாராயணர்களை, பசித்த நாராயணர்களை, ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு அழைத்து வந்து, திருவுருவங்களுக்கு இறைவழிபாடு செய்வது போல் அவர்களுக்கு உணவு, உடையளித்துச்சேவை செய்ய வேண்டும் என்று சுவாமிஜி சொன்னார். அவர் எந்த வழிபாட்டு முறையையும் கண்டிக்கவில்லை. இன்றைய இந்தியாவின் நிலைக்குத்தேவையானதும் மிகவுயர்ந்ததுமான வழிபாடு மேற்கண்ட நாராயண வழிபாடுதான் என்பதே அவர் குறிப்பிட்டதாகும்.
சொற்பொழிவின் முடிவில், பக்தியை ஒரு முக்கோணத்திற்கு அவர் ஒப்பிட்டார். அதில் முதல் கோணம், அன்பு என்பது எதையும் வேண்டாதது. இரண்டாவது கோணம், அன்பு பயத்தை அறியாதது. பிரதிபலனை எதிர்பார்த்தோ, ஏதாவது சேவைகளுக்கு ஆசைப்பட்டோ அன்பு செலுத்துவது பிச்சைக்காரனின் மதம், வியாபாரியின் மதம். அதில் உண்மையான மதம் மிகமிகக் குறைவாகவே உள்ளது. பிச்சைக்காரர்களாக ஆகாதீர்கள்!ஏனென்றால் பிச்சைகேட்பது முதலில் நாத்திகத்தின் அறிகுறி. ”கங்கைக்கரையில் வாழ்ந்து கொண்டே குடிநீருக்காகச் சிறிய கிணற்றைத்தோண்டுபவன் உண்மையிலேயே முட்டாள் தான். இறைவனிடமும் உலகப் பொருட்களுக்காகக் கையேந்துபவனும் அப்படிப்பட்டவன் தான். தைரியமாக எழுந்து நின்று, இறைவா உன்னிடமிருந்து எனக்கு எதுவும் தேவையில்லை. என்னிடமிருந்து உனக்கு ஏதாவது தேவையிருந்தால் தர நான் தயாராக இருக்கிறேன்” என்று சொல்வதற்கு பக்தன் தயாராக இருக்கவேண்டும். அன்பிற்குப் பயமே தெரியாது. பலவீனமான மெலிந்த பெண் ஒருத்தி தெருவில் தனியே போய்க்கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு நாய் அவளைப் பார்த்து க்குரைக்கிறது. அவ்வளவு தான், ஒரே பாய்ச்சலில் பக்கத்து வீட்டிற்கு ஓடி விடுகிறாள். இன்னொரு நாள் அதே பெண் தெருவில் தன் குழந்தையை மார்போடு அணைத்தபடிச் செல்கிறாள். அவள் மீது ஒரு சிங்கம் பாய்கிறது. அப்போது அவள் எங்கே ஓடுவாள்? சிங்கத்தின் வாயில் தான். தன் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக அந்தச் சிங்கத்தின் வாய்க்குள்ளேயே தன்னைக்கொடுத்து விடுவாள்.
இறுதியாக அன்பு அன்பிற்காகவே, அன்பே இறைவன் வேறொன்றும் அல்ல என்ற நிலைக்கு பக்தன் இறுதியாக வருகிறான்.
கடவுள் இருப்பதை நிரூபிக்க மனிதன் எங்கு செல்லவேண்டும்? காணக் கூடியவற்றுள் மிகவும் தெளிவாகக் காணக் கூடியது அன்பு. இந்த அன்பின் ஆற்றல்தான் சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் இயங்கச்செய்கிறது.ஆண்களிலும் பெண்களிலும் மிருகங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா பொருட்களிலும் தன்னை வெளிப்படுத்தி நிற்கிறது. இந்த ஆற்றலே பௌதீக நிலையில் புவியீர்ப்பு முதலிய சக்திகளாகச் செயல்படுகிறது. இது எங்கும் இருக்கிறது. ஒவ்வோர் அணுவிலும் இருக்கிறது. எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது. இந்த எல்லையற்ற அன்பே பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியாகவும் எல்லா இடங்களிலும் காணும் சக்தியாகவும் உள்ளது. இந்தச் சக்திதான் கடவுள்
வேதாந்தம்
........................
12 நவம்பர்
இரண்டு உலகங்களிலும் நாம் வாழ்ந்து வருகிறோம். ஒன்று புறம், மற்றதுஅகம். பழங்காலத்திலிருந்தே இந்த இரண்டு உலகங்களிலும் மனிதனின் முன்னேற்றம் ஏறக்குறைய இணையாக இருந்து வருகிறது.ஆராய்ச்சி, முதலில் புறவுலகில் ஆரம்பித்து, முக்கியமாக , பிரச்சனைகளின் தீர்வுகளை முதலில் புற இயற்கையிலிருந்து பெற விரும்பினான் மனிதன். அழகின் மீதும் நுண்மைமீதும் தான் கொண்ட தாகத்தைத் தணிப்பதற்காக தன்னைச் சூழ்ந்திருப்பவற்றை நாடினான்.தன்னையும் தன்னுள்ளே உள்ள அனைத்தையும் தூல மொழியில் வெளிப்படுத்த முயன்றான். அவனுக்கு கிடைத்த பதில்களும் கம்பீரமாகவே இருந்தன. கடவுளையும் வழிபாட்டையும் பற்றிய உன்னதமான கருத்துக்களையும் அழகின் அதி அற்புதமான ஆனந்த வெளிப்பாடுகளையும் அவன் பெற்றான். நுண்ணிய கருத்துக்கள் புறவுலகிலிருந்து கிடைத்தன என்பது உண்மை தான். ஆனால், சற்று பின்னர் , மனித குலத்திற்காக விரித்த அகவுலகமோ இன்னும் நுண்மையான, இன்னும் அழகான, எல்லையற்ற மடங்கு பரந்ததுமானதொரு பிரபஞ்சத்தை அவன் முன் விரித்தது.
வேதங்களின் கர்மகாண்டப் பகுதியில் மதத்தைப் பற்றிய அற்புதமான கருத்துக்களும், பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிக்கும் கடவுளைப்பற்றிய அதி அற்புதமான கருத்துக்களும் இதயத்தைத் தொட்டுணர்த்தும் விதத்தில் அழகாகச் சொல்வப்பட்டிருக்கின்றன. படைப்புக்கு முந்தைய நிலையை விவரிக்கின்ற ரிக்வேத சம்ஹிதையின் அந்த அழகிய சுலோகம் உங்களுள் பலருக்கு ஞாபகமிருக்கலாம், இது வரை எழுதப் பட்டவற்றுள் ஒருவேளை நுண்மையின் மிகச் சிறந்த வர்ணனை அதுவாகத் தானிருக்கும். ஆனால் அது புறவுலகம் பற்றிய நுண்மையின் சித்திரம் மட்டுமே, அது தூலமே, ஜடவுலகின் நிழல் இன்னும் அதில் ஒட்டிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். எல்லையற்ற எல்லைக்குட்பட்ட மொழியின் மூலம், ஜடவுலகின் மூலம் தெரிவிக்கவே அதில் முயற்சி செய்யப் பட்டிருக்கிறது. அது எல்லையற்ற புற இயற்கையைப் பற்றியதே தவிர அக இயற்கையைப் பற்றியதல்ல. எல்லையற்ற புற வெளியைப் பற்றியதே தவிர எல்லையற்ற எண்ணங்களைப் பற்றியதல்ல.
அதனால் இரண்டாம் பகுதியாகிய ஞான காண்டத்தில் முற்றிலும் மாறுபட்டதொரு வழிமுறையைக் காண்கிறோம். முதலாவது, பிரபஞ்ச உண்மைகளை அறிவதற்கான புற இயற்கையை ஆராய்ந்த ஒரு முயற்சி, வாழ்க்கையின் முக்கியப் பிரச்சனைகளுக்கு ஜடவுலகிலிருந்து தீர்வு காண்பதற்கான ஒரு முயற்சி அது. இமய மலைகள் யாருடைய புகழை விளக்குகின்றனவோ- இந்தக் கருத்து சிறந்தது தான், ஆனால் நம் நாட்டின் பெருமைக்கு ஏற்ற அளவு சிறந்ததாக இல்லை. எனவே இந்தியர்களின் மனம் பின்வாங்க வேண்டியதாயிற்று. அவர்களின் ஆராய்ச்சி முற்றிலும் புதிய திசையில் செல்லத் தொடங்கியது. புறவுலகிலிருந்து அகவுலகிற்கு , ஜடத்திலிருந்து மனவுலகிற்குத் திரும்பியது. மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்தது. அஸ்தீத்யேகே நாயமஸ்தீதி சைகே- அவன் இருக்கிறான். என்று சிலரும் அவன் போய்விட்டான் என்று பிறரும் கூறுகிறார்கள். ஓ மரணதேவனே, எது உண்மை? இங்கு முற்றிலும் வேறான வழிமுறையைக் காண்கிறோம். புறவுலகிலிருந்து என்னென்ன கிடைக்க முடியுமோ அவை அனைத்தும் இந்திய மனத்திற்குக் கிடைக்கவே செய்தன. ஆனால் அவற்றில் அது திருப்தியடையவில்லை. இன்னும் ஆராய விழைந்தது. எனவே சொந்த ஆன்மாவில் மூழ்கியது. அங்கே இறுதி விடைகிடைத்தது.
வேதங்களின் இந்தப் பகுதிக்கு உபநிடதங்கள் அல்லது வேதாந்தம் அல்லது ஆரண்யகங்கள் அல்லது ரகசியங்கள் என்பது பெயர். இங்கே மதம் என்பது எல்லாவிதமான புறச் சடங்குகளிலிருந்து விடுபட்டிருப்பதை எடுத்த எடுப்பிலேயே காணலாம். ஆன்மீக விஷயங்கள் தூல மொழியில் சொல்லப்படாமல், நுண்ணிய தான உணர்வின் மொழியில், நுண்ணுணர்வின் மொழியில் சொல்லப் பட்டிருப்பதையும் ஆரம்பத்திலேயே காணலாம். தூலம் சிறிது கூட அதில் கலக்கவில்லை. உலகம்சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக ச் சிறிதளவு கூட விட்டுக்கொடுக்கவும் இல்லை. உபநிடத ரிஷிகளின் மகத்தான மனம் தைரியமும் துணிவும் மிக்கது. இன்றைக்குநம்மால் நினைத்துப் பார்க்கவே முடியாதது. மனித இனத்திற்கு இதுவரை எடுத்துக் கூறப்பட்ட உண்மைகளுள் மிகச் சிறந்தவற்றை , எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல், சிறிதும் பயமின்றி அவர்கள் முழங்கியிருக்கிறார்கள். என் நாட்டு மக்களே, இவற்றையே உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். வேதங்களின் ஞான காண்டம் ஒரு கடல் தான். அதில் ஒரு துளியை அறிவதற்குக் கூட ப் பல பிறவிகள் தேவை. உபநிடதங்களே வேதங்களின் சிரசாகவும் தோள்களாகவும் கிரீடமாகவும் விளங்குகின்றன. என்று ராமானுஜர் சரியாகவே கூறியிருக்கிறார். உண்மை தான், உபநிடதங்கள் தற்கால இந்தியாவின் பைபிளாகி விட்டது.வேதங்களின் கர்ம காண்டப் பகுதியை இந்துக்கள் மிகவும் மதித்துப்போற்றுகிறார்கள். ஆனால் நடைமுறையைப் பொறுத்தவரையில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, சுருதி என்றால் உபநிடதங்கள், உபநிடதங்கள் மட்டுமே மனத்தில் கொள்ளப் படுகிறது. வியாசர், பதஞ்சலி, கௌதமர் போன்ற நமது மாபெரும் தத்துவ ஞானியரும் , தத்துவ ஞானத்தின் தந்தை என்று போற்றப்படும் கபிலரும் கூட எழுதியவற்றிற்கு அத்தாட்சித்தேவைப்பட்ட போதெல்லாம், அதனை அவர்கள் பெற்றது உபநிடதங்களிலிருந்து தான், வேறெங்கிருந்தும் அல்ல. ஏனெனில் உபநிடதங்களில் மட்டுமே என்றும் அழியாத உண்மைகள் உள்ளன.
சில உண்மைகள் ஒரு குறிப்பிட்ட துறையில், ஒரு குறிப்பிட்ட வகையில், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் , குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே உண்மையாக இருக்கின்றன. இவை அக்காலத்தின் அமைப்புகளை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப் பட்டவை. இனி, மனிதனின் இயல்பை அடிப்படையாக் கொண்ட வேறு சில உண்மைகள் உள்ளன. இவை மனிதன் இருக்கும் வரையிலும் நிலைத்து நிற்கும். இந்த உண்மைகள் மட்டுமே உலகம் தழுவியதாக இருக்கமுடியும். நமது சமுதாய அமைப்புகள் , உடை அணிதல், உணவுப் பழக்கம், வழிபாட்டு முறைகள் என்று இந்தியாவில் எல்லாவற்றிலுமே மாற்றங்கள் வந்தபோதிலும், சுருதிகளின் இந்த உலகம் தழுவிய உண்மைகள், இந்த அற்புத வேதாந்தக் கருத்துக்கள் , தங்கள் நுண்மையில் அசைக்க முடியாதவையாக, வெல்ல முடியாதவை யாக, அழிவற்றவையாக, அமரத்துவம் பெற்றவையாக நிலைத்து நிற்கின்றன. உபநிடதங்களில் விவரிக்கப் பட்டிருக்கின்ற இந்த எல்லா கருத்துக்களுடையவும் முளைகள் கர்ம காண்டத்தில் ஏற்கனவே சொல்லப் பட்டுள்ளன. வேதாந்தத்தைப் பின்பற்றும் அனைவரும் ஒப்புக் கொள்கின்ற பிரபஞ்சக் கருத்தும், இந்தியத் தத்துவ சாஸ்திரங்கள் அனைத்திற்கும் பொது அடிப்படையாக இருக்கின்ற மனஇயலும் ஏற்கனவே கண்டு பிடிப்பப் பட்டு உலகின் முன் வைக்கப் பட்டுவிட்டது. எனவே வேதாந்தத்தின் ஆன்மீகப் பகுதியைப் பற்றிக் கூறுவதற்கு முன்னர் கர்ம காண்டத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும். முதலில் வேதாந்தம் என்ற சொல்லை நான் எந்தப் பொருளில் பயன்படுத்துகிறேன் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
வேதாந்தம் என்பது அத்வைத நெறியையே குறிப்பதாக தற்காலத்தில் இந்தியாவில் பொதுவாகக் கருதப்படுகிறது. இது முற்றிலும் தவறு. இன்று இந்தியாவிலுள்ள மதப் பிரிவுகளுள் எதைப் படிப்பதிலும் மூன்று பிரஸ்தானங்களும் சம முக்கித்துவம் உடையதாகவே கருதப்படுவதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். முதலில் அருள் வெளிப்பாடுகளாகிய சுருதிகள். இங்கு சுருதிகள் என்று கூறும்போது உபநிடதங்களையே குறிப்பிடுகிறேன். இரண்டாவதாக வியாசசூத்திரங்கள், இது. அதற்கு முன்னால் இருந்த பல்வேறு தத்துவப் பிரிவுகளில் தொகுப்பாக இருப்பதால் நமது தத்துவங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மதிக்கப் படுகிறது. இந்தப் பல்வேறு பிரிவுகள் ஒன்றுக்கொன்று முரணானவையல்ல. மாறாக, ஒன்றையொன்று சார்ந்துள்ளன. படிப்படையாக இவை ஒவ்வொன்றிலும் விரிகின்ற கருத்து வியாச சூத்திரங்களில் நிறைநிலையை அடைகிறது. இனி, உபநிடதங்களுக்கும் , வேதாந்தத்தின் அற்புத உண்மைகளை நெறிப்படுத்துபவையான வியாச சூத்திரங்களுக்கும் இடையே வருகிறது வேதாந்தத்திற்கு தெய்வீக விளக்கவுரையான கீதை.
தங்கள் பிரிவு வைதீகமானது என்ற அத்தாட்சி பெற விழைகின்ற ஒவ்வொரு பிரிவினரும், அவர்கள் துவைதி, விசிஷ்டாத்வைதி, அத்வைதி என்று யாராக இருந்தாலும் சரி, உபநிடதங்கள், வியாச சூத்திரங்கள், கீதை இவற்றை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இவர்கள் அனைவருக்கும் இந்த மூன்று பிரஸ் தானங்களுமே பிரமாணமாக உள்ளன. புதிய பிரிவை உருவாக்க வந்தவர்களான சங்கரர், ராமானுஜர், மத்வர், வல்லபர், சைதன்யர், அனைவருமே இந்த மூன்று ப்ரஸ்தானங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. விளக்கவுரையை மட்டும் அவர்கள் புதியதாக எழுதிக்கொண்டனர். எனவே உபநிடதங்களிலிருந்து
தோன்றிய பல பிரிவுகளுள் ஒன்றை மட்டும் வேதாந்தம் என்று குறிப்பிடுவது தவறு. வேதாந்தம் என்பது இந்த எல்லா நெறிகளையுமே குறிக்கும். அத்வைதிகளைப் போலவே விசிஷ்டாத்வைதிகளுக்கும் தங்களை வேதாந்திகள் என்று அழைத்துக்கொள்ள சம உரிமை உண்டு. உண்மையில், நான் இன்னும் முன்னே சென்று, இந்து என்ற சொல்லால் எதைக் குறிப்பிடுகிறோமோ அதுவும் வேதாந்தி என்ற சொல்லும் ஒன்று தான் என்றே சொல்வேன். இந்த மூன்று நெறிகளும் மிகப் பழங்காலந்தொட்டே இந்தியாவில் இருந்து வந்திருக்கின்றன. சங்கரர் அத்வைத நெறியைக் கண்டு பிடிக்கவில்லை. அவர் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அது இருந்தது, அதன் கடைசி பிரதிநிதிகளுள் ஒருவர் சங்கரர். விசிஷ்டாத் வைதமும் அது போலவே. ராமானுஜர் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அது இருந்தது. ராமானுஜர் எழுதிய விளக்கவுரைகளிலிருந்தே இது நமக்குத் தெளிவாகிறது. இவ்வாறே துவைத நெறியும் மற்ற நெறிகளுடன் இணையாகவே இருந்து வந்திருக்கிறது. என் சிற்றறிவைக்கொண்டு, அவை ஒன்றுக் கொன்று முரணானவையல்ல என்ற முடிவுக்கே நான் வந்திருக்கிறேன்.
நமது ஆறு தரிசனங்களும் மகத்தான கோட்பாடுகளின் படிப்படியான விரிவாக அமைந்துள்ளன. அவற்றின் சங்கீதம் மிக முன்பே தாழ்ந்த மெல்லிய சுரங்களில் தொடங்கி, இடியேறு போல் முழங்குகின்ற அத்வைதத்தில் நிறைவுகிறது. அவ்வாறே இந்த மூன்று நெறிகளிலும், மனித உள்ளத்தைப் படிப்படியாக உயர் லட்சியங்களுக்குக் கொண்டு சென்று, அத்வைத நெறியில் அடையப் படுவதான அந்த அதி அற்புத ஒருமை நிலையில் எல்லாவற்றையும் சங்கமிக்கச்செய்யும் பாங்கினையும் காண்கிறோம். எனவே இவை ஒன்றுக் கொன்றுஎதிரானவை அல்ல. இந்த விஷயத்தில் பலர் தவறு செய்திருக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லாமல் இருக்க முடியாது. அத்வைத ஆச்சாரியர் அத்வைதப்பொருள் கொடுக்கும் பகுதிகளை அப்படியே வைத்துக்கொண்டு, துவைத மற்றும் விசிஷ்டாத்வைதப்பொருள் கொடுக்கும், சுலோகங்களை அத்வைதப்பொருள் கொடுக்குமாறு விளக்க முயல்கிறார். இவ்விதமே துவைத ஆச்சாரியர்கள் அத்வைதப் பொருள் கொடுக்கும் சுலோகங்களுக்கு துவைதப்பொருள் கூற முயல்கிறார்கள். நமது குருமார்கள் எல்லாருமே மகத்தானவர்கள், ஆனால் “குருவுடையதே ஆயினும் தவறுகளை எடுத்துக் கூற வேண்டும்” என்ற பழமொழி ஒன்று உண்டு. பொருள் கூறுவதற்கான இந்த முயற்சியில் மட்டுமே அவர்கள் தவறியதாக நான் நினைக்கிறேன் நாம் வாக்கியங்களைச் சிதைத்துப்பொருள் கூற வேண்டியதில்லை.நேர்மை தவறி நடக்க வேண்டியதில்லை. பொருளற்ற இலக்கணக் குழப்பங்களை நாட வேண்டியதில்லை. நமது சொந்தக் கருத்துக்களைத் திணித்து, அந்த வாக்கியங்களுக்கு இல்லாத பொருளை அவற்றின் மீது சுமத்த வேண்டியதும் இல்லை. மாறாக அதிகாரபேதம் என்ற கோட்பாட்டை நீங்கள் புரிந்து கொண்டால் வேலை தெளிவாகவும் எளிதாகவும் ஆகிவிடும்.
உண்மை தான், கஸ்மின்னு பகவோ விஜ்ஞாதே ஸர்வ மிதம் விஜ்ஞாதம் பவதி- எதை அறிந்தால் நாம் எல்லாவற்றையும் அறிய முடியும்? இந்த ஆராய்ச்சியையே உபநிடதங்கள் தங்கள் ஒரே கருத்தாகக் கொண்டிருக்கின்றன. தற்கால மொழியில் சொல்வதானால் , பொருட்களின் ஓர் அறுதி ஒருமையைக் காண்பதே உபநிடதங்களின் நோக்கம். அறிவு என்பது வேறுபாடுகளுக்குள் ஒருமையைக் காண்பதே தவிர வேறல்ல. எல்லா விஞ்ஞானமும் இந்தக் கருத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. மனித அறிவு எல்லாமும் இந்த வேறுபாடுகளுள் ஒருமையைக் காண்பதைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. விஞ்ஞானங்கள் என்று நாம் கூறுபவையெல்லாம் மனித அறிவின் சிறு துணுக்குகளே. இவற்றின் வேலையே இந்தச் சிறு வேறுபாடுகளுக்கிடையில் ஒருமையைக் காண்பது என்றால், அற்புதமான வேறுபாடுகள் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், பெயர், உருவம், ஜடம், உணர்வு என்று ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட சிந்தனைகளும் உருவங்களும் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் ஒருமையைக்காண்பது எவ்வளவு கடினமான வேலை! இந்தப் பல்வேறு தளங்களையும் முடிவற்ற உலகங்களையும் ஒருங்கிணைத்து, அந்த எண்ணற்ற வேறுபாடுகளுக்கிடையே ஒருமை காண்பதே உபநிடதங்களின் நோக்கம்.
மறுபுறம் அருந்ததி நியாயத்தை நாம் துணைகொள்ள வேண்டும். அருந்ததி நட்சத்திரத்தை ஒருவருக்குக் காட்ட வேண்டுமானால், முதலில் அதற்கு அருகிலிருக்கின்ற பெரியதும் ஒளி மிகுந்ததுமான நட்சத்திரம் ஒன்றைக்காட்டி, அதன் மீது அவனது பார்வை பதியுமாறு செய்யவேண்டும். பின்னர் சிறிய நட்சத்திரமான அருந்ததியைக்காண்பிப்பது எளிதாகி விடும். நமது வேலையும் இது தான். எனது கருத்தை நிரூபிக்க நான் உபநிடதங்களைக் காட்டினால் மட்டும் போதும், எனது கருத்தின் உண்மையை நீங்களே காண்பீர்கள்.
ஏறக்குறைய எல்லா அத்தியாயங்களுமே துவைத உபதேசமான உபாசனையில் தான் ஆரம்பமாகிறது. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, இறுதியில் தம்முள்ளே ஒடுக்கிக்கொள்பவரே இறைவன் என்று முதலில் கற்பிக்கப்படுகிறது.புற, அக இயற்கையை
வழிநடத்துபவரும் ஆள்பவரும் அவரே, இயற்கைக்கு வெளியில் இருப்பவர்போல் அவர் தோன்றுகிறார். எனவே அவரை வணங்க வேண்டுமென்று கற்பிக்கப்படுகிறது. அடுத்தபடியில், அவர் இயற்கைக்கு வெளியில் இல்லை.ஆனால் அதில் அந்தர்யாமியாக, அதாவது ஊடுருவிக் கலந்திருக்கிறார் என்று அதே ஆசிரியர் போதிக்கிறார். இறுதியில் இந்த இரண்டு கருத்துக்களுமே விடப்பட்டு, உண்மையானவை எல்லாம் அவரே, வேறுபாடு என்பதே இல்லைஎன்ற கருத்து வருகிறது. தத்வமஸி ச்வேதகேதோ- சுவேதகேது , அது நீயே. அனைத்துள்ளும் அந்தர்யாமியாக இருக்கின்ற அந்த ஒரே பொருள் தான் மனித ஆன்மாவின் உள்ளும் இருக்கிறது எனத் தெளிவுபடுத்தப்படுகிறது. இங்கு எதற்காகவும் விட்டுக்கொடுத்தல் இல்லை, பிறருடைய அபிப்பிராயங்களைப் பற்றிய பயம் இல்லை. உண்மை, தைரியமான உண்மை கூறப்படுகிறது. இன்று அந்த உண்மையை அதே வீர மொழியில் எடுத்துரைக்க நாம் அஞ்ச வேண்டியதில்லை. இறையருளால் நான் அத்தகைய தொரு துணிவுமிக்க தைரியமான போதகனாக இருப்பதாக நம்புகிறேன்.
தொடங்கிய விஷயத்திற்குத் திரும்புவோம். முதலில் இரண்டு விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.முதன் முதலில் வேதாந்த நெறிகள், அனைத்திற்கும் பொதுவாக இருக்கும் மன இயல் உண்மைகள், இரண்டாவது அவை கூறும் பிரபஞ்சக் கருத்து. இரண்டாவதை முதலில் எடுத்துக் கொள்கிறேன். தற்கால விஞ்ஞானத்தின் அற்புதக் கண்டுபிடிப்புகள் இடிபோல் நம்மீது இறங்குகின்றன. நாம் கனவு கூட காண முடியாத அதிசயங்களை எல்லாம் அது நம் முன் விரிக்கிறது. ஆனால் இவற்றுள் பலவும் பல யுகங்களுக்கு முன்னர் அறியப் பட்டவைதாம்., இன்று மீண்டும் கண்டு பிடித்துள்ளார்கள். வேறுபட்ட பல ஆற்றல்களுக்கு இடையில் ஒற்றுமை இருக்கிறது என்பதை ஏதோ சிறிது காலத்திற்கு முன்புதான் விஞ்ஞானம் கண்டு பிடித்தது. வெப்பம், காந்தம், மின்சாரம் என்று அழைக்கப்படுகின்ற வேறுபட்ட ஆற்றல்கள் அனைத்தும் அடிப்படையில் ஒன்றே என்றும் இவை அனைத்தையும் அந்த அடிப்படைச் சக்தியாக மாற்ற முடியும் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்தஅடிப்படைச் சக்தியை எப்படி வேண்டுமானாலும் நாம் அழைத்துக்கொள்ளலாம். ஆனால் இந்தக் கருத்து நமது சம்ஹிதைகளிலேயே சொல்லப் பட்டு விட்டது. பழையதும் புராதனமானதுமாக இருந்தாலும், அதில், ஆற்றல் என்று நான் குறிப்பிட்ட அதே கருத்தை நாம் காணலாம். புவியீர்ப்பு ஆற்றல், ஈர்ப்பாற்றல், விலக்கும் ஆற்றல் என்று நீங்கள் எப்படி அழைத்தாலும் சரி, அது வெப்பம் ,மின்சாரம், காந்த சக்தி என்று எப்படி வெளிப்பட்டாலும் சரி, எல்லா ஆற்றல்களும் அந்த அடிப்படை ஆற்றலின் மாறுபாடுகளே தவிர வேறல்ல. மனித னின் அகக் கருவிகளாகிய அந்தக் கரணங்களிலிருந்து பிரதிபலிக்கின்ற எண்ணமாக இருந்தாலும் சரி, அல்லது புற உறுப்புகளின் செயல்களாக வெளிப்பட்டாலும் சரி, எல்லாமே ”பிராணன்” எனப்படும் அடிப்படை சக்தியிலிருந்தே பிறக்கின்றன.
பிராணன் என்பது என்ன? பிராணன் என்பது ஸ்பந்தனம் அதிர்வு. இந்தப் பிரபஞ்சம் எல்லாம் ஒடுங்கி, முன்பிருந்த நிலையை அடையும்போது இந்த அளவற்ற ஆற்றல் என்ன ஆகிறது? அது அழிந்துவிடுகிறதென்றா நினைக்கிறீர்கள்? இல்லை, அழிவதில்லை. அவை அழிந்து விட்டால் அடுத்த அலை எங்கிருந்து தோன்ற முடியும்? இயக்கம் என்பது அலைகளைப்போல் எழுவதும் விழுவதுமாக அல்லவா உள்ளது! எழுகிறது, விழுகிறது, மீண்டும் எழுகிறது. இவ்வாறு அல்லவா நடைபெறுகிறது.
இனி பிரபஞ்சம் வெளிப்படுவதைக் குறிக்கின்ற சொல் லான சிருஷ்டி என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தச் சொல்லின் பொருள் படைப்பு என்பதல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைக்கு இணையாக ஆங்கிலத்தில் வார்த்தை இல்லை. சம்ஸ்கிருத வார்த்தைகளை என்னால் இயன்றவரை தான் மொழி பெயர்க்க முடியும். அது, படைப்பு அல்ல. சிருஷ்டி, தோற்றத்திற்கு வருதல் ஒரு கல்பத்தின் முடிவில் எல்லாமே நுண்மையாகி, மேலும் நுண்மையாகி சிருஷ்டிக்கு முன்பிருந்த நிலையை அடைகின்றன. மறுபடியும், வெளிப்படத் தயாராக இருந்த நிலையிலேயே அமைதியாக இருக்கின்றன. மீண்டும் அதிலிருந்து வெளிப்படுவதே சிருஷ்டி, தோற்றத்திற்கு வருதல், அந்த அமைதி நிலையில் எல்லா சக்திகளும் அதாவது எல்லா பிராணன்களும் என்னவாகின்றன? அவை ஆதி பிராணனுடன் ஒடுங்கி விடுகின்றன. இந்தப் பிராணன் ஏறக்குறைய இயக்கமற்றதாகி விடுகிறது. முற்றிலுமாக இயக்கமற்று விடுவதில்லை. இதைத்தான் வேத ஸுக்தம் ஆனீதவாதம்- அது அதிர்வுகளின்றி அதிர்ந்தது என்று கூறுகிறது. உபநிடதங்களில் பல இடங்கள் புரிந்து கொள்ளக் கடினமானவை, குறிப்பாக கலைச்சொற்கள் பயன்படுத்தப் படுகின்ற இடங்கள் மிகவும் கடினமானவை. உதாரணமாக ”வாதம்” என்ற வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். பல இடங்களில் அது வாயு என்ற பொருளிலும், பல இடங்களில் இயக்கம் அதாவது அசைவு என்ற பொருளிலும் பயன்படுத்தப் படுகிறது. பலர் ஒன்றுக்கொன்று மாறாகப்பொருள் செய்து கொண்டு குழப்பிக்கொள்கிறார்கள். இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
ஜடம் என்று நாம் அழைக்கின்ற பொருள் என்னவாகிறது? ஜடத்திலெல்லாம் சக்திகள் வியாபித்திருக்கின்றன. அவைஆகாசத்தில் ஒடுங்குகின்றன. அதிலிருந்தே மீண்டும் வெளிவருகின்றன. முதலில் வருவது ஆகாசமே. ஆகாசத்தை ஈதர் என்றோ வேறு எப்படியோ மொழி பெயர்த்தாலும் சரி, இந்த ஆகாசமே ஜடப்பொருளின் ஆதி நிலை என்பது தான் கருத்து.பிராணனின் இயக்கத்தால் ஆகாசம் அதிர்கிறது. அடுத்த சிருஷ்டி ஆரம்பிக்கும்போது இந்தஅதிர்வு விரைவாகிறது, அப்போது ஆகாசம் அலையாகத் திரண்டடித்து, சூரியர்கள், நட்சத்திரர்கள் என்றெல்லாம் நாம் அழைக்கின்ற இந்த உருவங்கள் ஆகின்றன.
யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நிஃஸ்ருதம்- இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் பிராணனின் அதிர்வால் தோற்றத்திற்கு வருகின்றன”என்று சொல்லப்பட்டிருக்கிறது.”ஏஜதி” என்ற வார்த்தையைக் கவனிக்க வேண்டும். அது ”ஏஜ” என்ற மூலத்திலிருந்து வருகிறது. அதன் பொருள் அதிர்தல் என்பது ”நி-ஸ்ருதம்” என்றால் தோற்றத்திற்கு வருதல், ”யகிதம் கிஞ்ச” என்றால் , இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் என்று பொருள்.
பிரபஞ்சக் கருத்தின் ஒரு பகுதி இது. இதில் இன்னும் பல விவரங்கள் இருக்கின்றன. உதாரணமாக இது எப்படி நடைபெறுகிறது?முதலில் ஆகாசமும் அதிலிருந்து மற்றப்பொருள்களும் எப்படி உண்டாகின்றன? ஆகாசம் எவ்வாறு அதிரத்தொடங்குகிறது? அதிலிருந்து எப்படி வாயு உண்டாகிறது? இதில் முக்கியமான கருத்து என்னவென்றால் சூட்சுமத்திலிருந்து தான் தூலம் பிறக்கிறது. தூலமாகிய ஜடம் தான் கடைசியாகத்தோன்றுகிறது. இது தான் மிகவும் புறத்திலும் உள்ளது. தூல ஜடப்பொருளுக்கு முன்னால் சூட்சும ஜடப் பொருள் உள்ளது. எல்லாமே இரண்டாகப் பிரிக்கப் பட்டிருப்பதை க் காண்கிறோம். ஓர் அறுதி ஒருமையை இன்னும் எட்டவில்லை. ஆற்றல்களின் ஒருமை உள்ளது- அது பிராணன். தூல ஜடத்தின் ஒருமை உள்ளது- அது ஆகாசம். இனி இவை இரண்டிற்கும் அடிப்படையாக ஏதாவது ஒருமை இருக்கிறதா? இவற்றைச்சேர்த்து ஒன்றாக்க முடியுமா? தற்கால விஞ்ஞானத்தில் இந்தக்கேள்விக்குப் பதிலில்லை. இதற்குப் பதில் காணும் ஆற்றலை அவை பெறவில்லை. அந்த ஆற்றலைப்பெற வேண்டுமானால், பழைய கருத்துக்களாகிய பிராணன், ஆகாசம் போன்றவற்றை அவை இப்போது மெள்ள மெள்ளக் கண்டுபிடித்து வருகின்றனவே, அந்த வழியாகத் தான் செல்ல வேண்டும்.
அடுத்த ஒருமை எங்கும் நிறைந்த நிர்க்குணப்பரம்பொருள். புராணங்களில் நான்குதலைகள் கொண்ட பிரம்மாவாகவும் மன இயலில் மகத் என்று சொல்லப் படுவதும் இந்த ஒருமையையே. இங்குதான் அந்த இரண்டும் ஒருமைப்படுகின்றன. நம் மூளையால் கட்டுப்பட்டிருக்கின்ற மகத்தின் ஒரு சிறிய பகுதியையே நாம் மனம் என்று சொல்கிறோம்.பல மூளைகளிலும் கட்டுண்ட எல்லா மனமும் சேர்ந்து சமஷ்டி,ஒட்டு மொத்தம், பிரபஞ்சம் தழுவிய மனம். ஆராய்ச்சி முடியவில்லை. தொடர்கிறது, நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிண்டம், உலக மொத்தத்தையும் சேர்த்தால் அது அண்டம், பிண்டத்தில் நிகழ்வதே அண்டத்திலும் நிகழ்கிறதென்று நாம் ஊகித்தால் அது தவறாகாது. அதாவது நமது சொந்த மனத்தை ஆராய்ந்தறிய நம்மால் முடியுமானால், இங்கு போலவே பிரபஞ்ச மனத்திலும் நடைபெறுகின்றதென்று நாம் நிச்சயமாக முடிவு செய்யலாம்.
மனம் என்றால் என்ன என்பது தான் கேள்வி. மேலை நாடுகளில் தற்காலத்தில் விஞ்ஞானம் வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. கூடவே உடலியல், பழைய மதங்களின் ஒவ்வொரு வலிமையான பிடியையும், படிப்படியாகவென்று வருகிறது. எங்கே காலூன்றி நிற்பதென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர் மேலை நாட்டினர்.ஏனெனில் இன்றைய உடலியல் அவர்களின் திகைப்பை இன்னும் அதிகரிப்பதைப்போல் ஒவ்வொரு படியிலும் மனத்தையும் மூளையையும் சமப்படுத்தியே பேசி வருகிறது. ஆனால் இந்தியாவில் இது என்றோ நமக்குத்தெரிந்த விஷயம். மனமும் ஜடப் பொருளே, ஆனால் சற்று நுண்ணியது என்பதையே ஒவ்வோர் இந்துச் சிறுவனும் முதல் பாடமாகக் கற்கிறான். இந்த உடல் தூலமானது. இதற்குப் பின்னால் நாம் சூட்சும சரீரம் என்று அழைக்கின்ற நுண்ணுடல், அல்லது மனம் இருக்கிறது, இதுவும் ஜடப் பொருள் தான். சற்று நுண்ணியது. ஆனால் மனம் ஆன்மா அல்ல.
ஆன்மா என்றும் வார்த்தையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாது. ஏனெனில் அந்தக் கருத்து ஐரோப்பாவில் இல்லை. தற்கால ஜெர்மன் தத்துவ அறிஞர்கள் அதை self என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். ஆனால் இந்த வார்த்தையை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளும் வரை நாம் பயன்படுத்த முடியாது. எனவே self என்றோ வேறு எப்படியோ குறிப்பிடுங்கள். அது ஆன்மாவே, பின்னாலிருக்கும், உண்மையான மனிதன் இந்த ஆன்மாவே. இந்த ஆன்மா ஜடப்பொருளான மனத்தைத் தனது கருவியாக, அல்லது மனத்தை மனவியல் குறிப்பிடுவது போல் தனது அந்தக்கரணமாக, அகக்கருஇயாகப் பயன்படுத்துகிறது. மனம் பல்வேறு அகக் கருவிகளின் மூலம் உடலுறுப்புகளை இயக்குகிறது. இந்த மதம் என்பது என்ன? நாம் எதையும் உணர்வதற்குப் புற உறுப்புகள் மட்டுமே காரணம் அல்ல என்பதை மேலைத்தத்துவ அறிஞர்கள் நேற்று தான் கண்டுபிடித்தனர். பார்வைக்கான உண்மையான கருவி கண்கண் அல்ல. இது போலவே மற்ற உறுப்புகளும். இவற்றிற்குப் பின்னால் இந்திரியங்கள் எனப்படும் வேறு கருவிகள் உள்ளன. இவையே அவற்றைச்செய்கின்றன. இந்திரியங்கள் கெட்டுவிட்டால், இந்திரனைப்போல் ஆயிரம் கண்களிருந்தாலும் ஒருவனால் எதையும் பார்க்க முடியாது.ஆனால் பார்ப்பது என்றால் அது புறப் பார்வையைக் குறிக்காது என்ற அடிப்படையில் தான் நமது தத்துவம் தொடங்கவே செய்கிறது. உண்மையாகப் பார்ப்பது அகக் கருவிகளே.மூளையிலுள்ள சில மையங்களே. நீங்கள் எந்தப் பெயரிட்டு வேண்டுமானாலும் அழையுங்கள்.ஆனால் கண்களோ, மூக்கோ, காது களோ இந்திரியங்கள் அல்ல. இந்த எல்லா இந்திரியங்களின் மொத்தமும் அதனுடன் புத்தி, சித்தம், அகங்காரம் இவை அனைத்தும் சேர்ந்த ஒன்றையே ஆங்கிலத்தில் mind என்ற சொல்லால் அழைக்கிறார்கள். எனவே நவீன உடலியல் வல்லுனர் உங்களிடம் வந்து, மனம் என்று அழைக்கப்படுவது மூளையே என்றும், மூளை என்பது பல்வேறு கருவிகளால் ஆக்கப்பட்டது என்றும் கூறினால் நீங்கள் கலங்க வேண்டியதில்லை. உங்கள் தத்துவ ஞானிகள் இதை என்றோ தெரிந்து விட்டிருந்தார்கள். உங்கள் மதத்தின் முதற்கோட்பாடே இது தான் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.
இனி, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் சித்தத்தை எடுத்துக்கொள்வோம். எதனால் மனம் ஆக்கப் பட்டிருக்கிறதோ அதுவே சித்தம். அது மகத்தின் ஓர் அம்சம். மனத்தின் பல்வேறு நிலைகளின் பொதுப்பெயரே சித்தம். கோடைக்கால மாலையில் அலைகளற்ற, சலனமில்லாத, அமைதியான ஏரி ஒன்றின் கரையில் நீங்கள் நிற்கிறீர்கள். ஒருவன் ஒரு கல்லை எறிகிறான், என்ன நடக்கிறது? முதலில், ஒரு செயல்- அந்த நீர்ப்பரப்பில் ஓர் அடி,, இரண்டாவதாக, நீர் எழுந்து கல்லை நோக்கி ஓர் எதிர்ச்செயலை அனுப்புகிறது. அந்த எதிர்ச்செயல் ஓர் அலையின் உருவம் எடுக்கிறது. முதலில் தண்ணீர் சிறிது அதிர்கிறது.உடனடியாக ஓர் அலையின் உருவத்தில் ஓர் எதிர்ச்செயலைத் திருப்பியனுப்புகிறது. சித்தத்தை இந்தக் குளத்திற்கு ஒப்பிடுவோம். புறப்பொருட்களே அதற்குள் எறியப் படும் கற்கள். இந்திரியங்களின் வாயிலாக ஏதாவது புறப்பொருளுடன் சித்தத்திற்குத் தொடர்பு ஏற்பட்டவுடனே- அந்தத் தொடர்பை ஏற்படுத்த, அதாவது புறப் பொருட்களை உள்ளே கொண்டு செல்ல இந்திரியங்கள் இருந்தேயாக வேண்டும்.-ஓர் அதிர்வு உண்டாகிறது. இன்னதென்று நிச்சயமாகாத இந்த அதிர்வே மனம். இந்த அதிர்வுக்கு எதிர்ச்செயல் ஏற்படுகிறது. தீர்மானிக்கின்ற இந்தச் சக்தியே, புத்தி. இந்தப் புத்தியுடன் கூடவே நான்- உணர்வும் புறப்பொருளும் பளிச்சிடுகின்றன. ஒரு கொசு என்கையின் மீது உட்காருவதாக வைத்துக்கொள்வோம், இந்த உணர்ச்சி என் சித்தத்திற்குக்கொண்டு செல்லப்பட்டு, சித்தம் மெள்ள அதிர்கிறது. மன இயலின்படிச் சொல்வதானால் இது தான் மனம். தொடர்ந்து எதிர்ச்செயல் உண்டாகிறது. உடனடியாக, என் கையின் மீது ஒரு கொசு உட்கார்ந்திருக்கிறது என்றும் அதை நான் துரத்த வேண்டுமென்றும் எண்ணம் தோன்றுகிறது. இவ்வாறு எத்தனையோ கற்கள் குளத்தில் எறியப் படுகின்றன. குளத்தைப்பொறுத்தவரை கற்கள் அதாவது அடிகள் புறத்திலிருந்து வருகின்றன.ஆனால் இந்தச் சித்தமாகிய குளத்திற்கு அடிகள் புறவுலகிலிருந்தும் வரலாம், அகவுலகிலிருந்தும் வரலாம். இவையனைத்தும் சேர்ந்தது தான் அந்தக் காரணம்.
இன்னொரு விஷயத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். பின்னால் அத்வைத நெறியைப் புரிந்து கொள்ள அது உதவியாக இருக்கும். நீங்கள் எல்லோரும் முத்துச் சிப்பிகளைப் பார்த்திருப்பீர்கள். முத்து எப்படி உண்டாகிறது என்பதைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு மணற்துகள் அந்த முத்துச் சிப்பிக்குள் போய்விடுகிறது. அதனால் உறுத்தல் உண்டாகிறது. அதைத் தணிப்பதற்காக சிப்பி எதிர்ச்செயலை உண்டாக்குகிறது. தன் உடலிலிருந்து உண்டாகும் ஒருவிதத் திரவத்தால் மணற்துகளை மூடுகிறது. அந்த மணற்துகளே கெட்டியாகி முத்தாக மாறுகிறது. பிரபஞ்சமே இப்படித்தான் , நம்மால் உருவாக்கப்பட்ட முத்தே அது. புறவுலகிலிருந்து நாம் பெறுபவை வெறும் அடிகள் மட்டுமே. அவற்றை உணர வேண்டுமானால் கூட நாம் உள்ளிருந்து எதிர்ச்செயல் புரிந்தாக வேண்டும். அப்படி எதிர்ச்செயல் புரியும்போது, உண்மையில் நமதுமனத்தின்
ஒரு பகுதியை அந்த அடியை நோக்கிச் செலுத்துகிறோம். அதை நாம் அறியும்போது, அந்த அடியால் உருவாக்கப் பெற்றது உண்மையில் நமது சொந்த மனமே என்பதை அறிந்து கொள்கிறோம். எனவே புறவுலகம் என்பதுமுழுக்க முழுக்க உண்மையானது என்று நம்புபவர்களும் ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டே தீர வேண்டும். உடலியல் எவ்வளவோ வளர்ந்துள்ள இந்த நாளில் அவர்களால் இதனை ஏற்காமலும் இருக்க முடியாது. அந்த விஷயம் இது தான்-புறவுலகை ”அ” என்று வைத்துக்கொள்வோம். நாம் அறியும் புறவுலகம் அமனம் ஆகும். இந்த மனப்பகுதி ஆற்றல் வாய்ந்ததாக இருப்பதால், அது ”அ” வை முழுமையாக மூடி விடுகிறது. அதனால் ”அ” அறியப் படாததாகவும் அறிய முடியாததாகவுமே எப்போதும் இருக்கிறது. எனவே புறவுலகம் என்ற ஒன்று இருந்தால் கூட அது அறியப் படாதது. அறியவும் முடியாதது. நாம் அறியும் புறவுலகம், நமது மனத்தால் உருவாக்கப் பட்டு, வடிவம் கொடுக்கப்பட்டு, அழகுப்படுத்தப் பட்டது.
அகவுலகிற்கும் இதே நியதி தான். நமது சொந்த ஆன்மாவிற்கும் இது பொருந்தும்.ஆன்மாவை அறிய வேண்டுமானாலும் அதை மனத்தின் மூலமாகவே அறிய முடியும். எனவே ஆன்மாவைப்பற்றி அறிந்திருக்கின்ற ஏதோ சிறிதும் ஆன்மாவும் மனமும் சேர்ந்ததேயாகும். அதாவது மனத்தால் மூடப்பட்ட உருவம், கொடுக்கப்பட்ட , சித்தரிக்கப்பட்ட ஆன்மாவையே நாம் அறிகிறோம் அதற்கு மேலான எதையும் அல்ல. இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். சிறிது நேரத்தில் மீண்டும் இந்த விஷயத்திற்குத் திரும்பி வருவோம்.
அடுத்ததாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. இந்த உடல் என்பது ஜடப்பொருளின் தொடர்ந்த பிரவாகம் ஆகும். இதில் ஒவ்வொரு கணமும் சில மூலப் பொருட்கள் சேர்க்கப் படுகின்றன. ஒவ்வொரு கணமும் சில மூலப்பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. தொடர்ந்து ஓடுகின்ற ஓர் ஆற்றை பே்போன்றது இது. நீர் இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. என்றாலும் இவை எல்லாவற்றையும் மனத்துள் ஒன்றுசேர்த்து அதை அதே ஆறு என்று கூறுகிறோம்.ஆறு என்று எதை நாம் அழைக்கிறோம்? தண்ணீர் மாறிக்கொண்டிருக்கிறது, சுற்றுப்புறமும் மாறிக்கொண்டிருக்கிறது, அப்படியானால் ஆறு என்பது என்ன? தொடர்ச்சியான இந்த மாறுதல்களின் பெயர்தான் அது.
மனத்தைப் பொறுத்தவரையிலும் அவ்வாறே. இதைத்தான் ஷணிக விஞ்ஞான வாதம் என்று கூறுகிறார்கள். புரிந்து கொள்ள மிகவும் கடினமான இது, பௌத்தத் தத்துவத்தில் தீவிரமாக, தர்க்கரீதியாக ஆராயப் பட்டுள்ளது. இந்தியாவிலும் வேதாந்தத்தின் ஒரு பகுதியை எதிர்ப்பதற்காக இந்த வாதம் எழுந்தது. இதற்குப் பதில் சொல்ல வேண்டியிருந்தது. , இதற்குச் சரியான மறுப்பை அத்வைதத்தின் மூலம் மட்டுமே கொடுக்க முடியும் என்பதைப் பின்னால் காண்போம். மக்கள் அத்வைதத்தைப் பற்றி சிவித்திரமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். பலர் அத்வைதம் என்றாலே மிரள்கிறார்கள். ஆனால் அது தான் உலகிற்கே கதிமோட்சமானது. ஏனெனில் அது மட்டுமே காரணகாரியங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. துவைதமும் அது போன்ற நெறிகளும் வழிபாட்டிற்கு ஏற்றவையாக, மனத்திற்கு இதமானவையாக இருக்கின்றன என்ற விதத்தில் மிக நல்லவையே. மனத்தை உயர்நிலைக்கு எடுத்துச் செல்வதிலும் அவை துணை செய்யலாம். ஆனால் அறிவுபூர்வமாக மதத்தைப் பின்பற்ற வேண்டுமென்றால் அத்வைதம் ஒன்றே புகலிடம்.
நாம் எடுத்துக்கொண்டே விஷயத்தை இப்போது ஆராய்வோம். மனமும் இவ்வாறே ஆறுபோல் ஒரு பக்கம் நிறைந்துகொண்டும் மற்றொரு பக்கம் வடிந்து கொண்டும் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் நாம் ஆன்மா என்று அழைக்கின்ற அந்த ஒருமை எங்கே இருக்கிறது? விஷயம் இது தான். உடம்பு இடைவிடாமல் மாறுதல் அடைந்து கொண்டிருக்கிறது. மனமும் இடைவிடாது மாறிக்கொண்டு இருக்கிறது. எனினும் மாறாத ஒன்று நம்முள் இருக்கிறது. பொருட்களைப் பற்றிய நமது கருத்துக்களுக்கு மாற்றமில்லாதது போல் தோன்றச்செய்வது இதுவே. பல்வேறு திசைகளிலிருந்து வருகின்ற ஒளியின் கிரணங்கள் ஒரு திரை அல்லது சுவர் அல்லது மாறாத ஏதோ ஒன்றின் மீது விழும் போது மட்டுமே அவை ஓர் ஒருமையை உருவாக்க முடியும். அவை ஒன்றுசேர்ந்து ஒரு முழுமையான உருவம் ஆக முடியும். இத்தகைய ஒருமை மனிதனின் உறுப்புகளில் இருக்க முடியுமா? அவற்றின் மீது பல்வேறு எண்ணங்கள் விழும்போது அவை ஒன்று சேர்ந்து ஒரு முழுமையாக முடியுமா? முடியாது. அது நிச்சயமாக மனமாகவும் இருக்க முடியாது. ஏனெனில் அதுவும் மாறுதல் அடைந்து கொண்டே இருப்பதை நாம் காண்கிறோம்.ஆதலால் உடலையும் மனத்தையும் தவிர மாறாத, நிலையான ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அதன் மீது தான் நமது எண்ணங்களும் உணர்ச்சிகளும் பட்டு ஓர் ஒருமையை, ஒரு முழுமையை உருவாக்கிக்கொண்டிருக்க வேண்டும்.அதுவே ஆன்மா, மனிதனின் ஆன்மா,ஜடப் பொருள் எல்லாமே-அதை நீங்கள் சூட்சும ஜடம் என்று அழைத்தாலும் சரி மனம் என்று அழைத்தாலும் சரி-மாறுகிறது.அதனுடன் ஒப்பிடும் போது, தூலப்பொருள் அதாவது புறவுலகமும் மாறுகிறது. இதைப் பார்க்கும்போது, மாறாத அந்தப் பொருள் ஜடப் பொருளால் ஆன ஒன்றாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. ஜடப்பொருள் இல்லையென்றால், அது சைதன்யமாகவே , உணர்வுப் பொருளாகவே இருக்க வேண்டும். அது ஜடப்பொருள் அல்லாதது, அழியாதது, மாறாதது.
இனி வேறொரு கேள்வி பிறக்கிறது. புறவுலகைப் படைத்தது யார்?ஜடப் பொருட்களைப் படைத்தது யார்? ஜடவுலக நிலையில் தான் இந்தக்கேள்விகள் எழ முடியும் என்றெல்லாம் இந்தக்கேள்விகளுக்கு அனுகூலமாகப் பதில் சொல்லிவிடலாம். இந்த வாதங்களை ஒதுக்கிவிட்டாலும் கேள்விகள் எழத்தான் செய்கின்றன. மனிதனின் அக இயல்பிலிருந்து மட்டுமே உண்மையை அறிய வேண்டும் என்பதே இங்கு நோக்கம். ஆன்மாவைப்பற்றி எழும் கேள்வியைப்போலவே இந்தக்கேள்வியும் எழுகிறது.
மனமும் உடலும் அல்லாத, மாறாத ஆன்மா ஒன்று ஒவ்வொருவரிடமும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் எண்ணத்திலும் உணர்ச்சியிலும் இந்த ஆன்மாக்கள் அனைத்திற்குள்ளும் ஒருமை இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். என் ஆன்மா உங்கள் ஆன்மாவின் மீது எப்படிச் செயல்படமுடிகிறது? எதன் மூலம் அது அவ்வாறு வேலை செய்கிறது? உங்கள் ஆன்மாவைப் பற்றிய அனுபவத்தை நான் எப்படி உணர முடிகிறது? நம் இருவரின் ஆன்மாவையும் இணைத்து வைப்பது எது? எனவே மற்றோர் ஆன்மாவை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் தத்துவரீதியாகவே ஏற்படுகிறது. அது பல்வேறு ஆன்மாக்களுடன் தொடர்பு கொண்டு, ஜடத்திலும் ஜடத்தின் ஊடேயும் செயல்பட வேண்டும். எண்ணற்ற ஆன்மாக்களில் எல்லாம் வியாபித்து நிற்க வேண்டும். அந்த ஆன்மாவிலும் அதன் ஊடேயும் தான் மற்ற ஆன்மாக்கள் வாழவும், அனுபவிக்கவும் , அன்பு காட்டவும். ஒருவருக்கொருவர் துணையாக செயல்படவும் வேண்டும். பிரபஞ்சம் தழுவிய இந்த ஆன்மாவே பரமாத்மா, பிரபஞ்சத்தின் தலைவரான இறைவன், இனி, ஆன்மா ஜடப் பொருளால் ஆக்கப் பட்டதல்ல, அது உணர்வுமயமானது. எனவே ஜடப் பொருட்களை க் கட்டுப்படுத்தும் விதிகளுக்கு அது கட்டுப்பட வேண்டியதில்லை. ஜடப் பொருளின் நியமங்கள் மூலம் அதை நிர்ணயம் செய்யவும் முடியாது. எனவே அது வெல்ல முடியாதது. பிறப்பும் இறப்பும் இல்லாதது. மாறுதல் இல்லாதது.
இந்த ஆன்மாவை ஆயுதங்கள் துளைக்க முடியாது. நெருப்பு எரிக்க முடியாது. தண்ணீர் நனைக்க முடியாது. காற்று உலர்த்த முடியாது. இந்த மனித ஆன்மா மாறாதது. எங்கும் நிறைந்தது. அசைவற்றது , அசைக்க முடியாதது. நித்தியமானது, இந்த ஜீவாத்மாவும் விபு அதாவது எங்கும் நிறைந்தது என்று கீதையும் வேதாந்தமும் கூறுகின்றன. அது எங்கும் வியாபித்திருப்பது என்று கபிலர் கூறுகிறார்.ஆன்மா அணு போன்றது என்று கூறும் மதப் பிரிவினரும் இந்தியாவில் உள்ளனர், வெளிப்பாட்டில் அது அணுவே தவிர, அதன் உண்மை இயல்பு விபு அதாவது எங்கும் நிறைந்திருப்பது என்பது அவர்களின் கருத்து.
இப்போது வேறு ஒரு கருத்திற்கு வருகிறோம். ஒருவேளை இது திடுக்கிட வைக்கின்ற கருத்தாக இருக்கலாம்.ஆனால் இது முழுக்க முழுக்க இந்தியக் கருத்து. நம் எல்லா நெறிகளுக்கும் பொதுவாக ஏதாவது கருத்து இருக்கிறதென்றால் அது இது தான். இந்தியாவில் அனைத்திற்கும் அடிப்படையே இது தான்.ஆதலால் இதை நீங்கள் கவனமாகக்கேட்க வேண்டும். அது இது தான். மேலை நாட்டில் ஜெர்மன் மற்றும் ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் பரிணாமத்தைப் பற்றிச் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் எல்லா உயிர்களின் உடலும் அடிப்படையில் ஒன்றே, நாம் காண்கின்ற வேறுபாடுகள் எல்லாம் ஒரே தொடர்ச்சியின் வெளிப்பாட்டு வேற்றுமைகளே,. சாதாரணப் புழுவிலிருந்து மிக உயர்ந்த மகான்வரை அவர்களின் உள்ளிருப்பது ஒன்றே. ஒன்று மற்றொன்றாக மாறிமாறிப் படிப்படியாக உயர்ந்த நிலையை அடைந்து பூரணத்தைப் பெறுகின்றன என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்த க் கருத்து நம்மிடமும் இருந்தது.”ஜாத்யந்தர பரிணாம, ப்ரக்ருத்யா பூராத்” என்று பதஞ்சலி கூறுகிறார். ஓர் இன உயிர் மற்றோர் உயிராக மாறுகிறது. இது தான் பரிணாமம். ஜாதி என்றால் இனம், பரிணாமம் என்றால் ஒன்று மற்றொன்றாக மாறுதல்- ஓர் இனம் மற்றொன்றாக மாறுவதைப்போல், நாமும் ஐரோப்பியர் களும் எங்கு வேறுபடுகிறோம்? பதஞ்சலியின் கருத்துப்படி, ப்ரக்ருத்யாபூராத்- இயற்கையின் உள் நிறைவு மூலம், பரிணாமம் ஏற்படுகிறது. போட்டியும், இயல்பான பாலியல் சம்பந்தமான தேர்ந்தெடுப்பும் தான் ஓர் உடல் மற்றோர் உடலை எடுக்கும்படிச் செய்கிறது என்று மேலை நாட்டு அறிஞர்கள் சொல்கிறார்கள்.ஆனால் பதஞ்சலி முனிவரின் கருத்து இதைவிடச் சிறந்த ஆராய்ச்சியாக, இதைவிட ஆழமாக, கருத்தினுள் செல்வதாக உள்ளது.
இயற்கையின் உள் நிறைவின் மூலம்” என்றுஅவர் கூறிய தன் பொருள் என்ன? அமீபாவும் படிப்படியாக உயர்நிலைகளை அடைந்து கடைசியாக புத்தர் நிலையை அடைகிறது என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். அதே வேளையில் இன்னொன்றும் சர்வ நிச்சயம். அதாவது, எந்திரம் ஒன்றிற்கு எந்த வகையிலாவது எவ்வளவு ஆற்றலை அளிக்கிறோமோ அந்த அளவு தான் அது வேலை செய்யும். அதனுள் செலுத்தும் சக்தியும் வெளிப்படும் சக்தியும் வெவ்வேறாக இருந்தாலும் மொத்த ஆற்றலின் அளவு மாறாமல் இருக்கிறது. ஒரு பயன் உங்களுக்கு வேண்டுமானால், அதற்கு வேண்டிய ஆற்றலை அதே அளவில் ஏதாவதொரு விதத்தில் நீங்கள் அளித்தேயாக வேண்டும். எனவே புத்தர் வேண்டுமானால் . அமீபா, புத்தரை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்அமீபா, புத்தரை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.அமீபாவே புத்தராக ப் பரிணமிக்கிறது என்றால் அந்த அமீபாவுக்குள் புத்தர் இருந்திருக்க வேண்டும்! ஏறக்குறைய எல்லையற்ற ஆற்றலின் வெளிப்பாடே இந்தப் பிரபஞ்சம் என்றால், ஒடுங்கிய நிலையில் பிரபஞ்சம் இருக்கும்போதும் அந்த ஆற்றல் இதற்குள் தான் இருந்திருக்க வேண்டும், இல்லாதிருக்க முடியாது.
இதன் படிப் பார்த்தால் ஒவ்வோர் ஆன்மாவும் எல்லையற்றது என்றாகிறது. நம் காலடியில் ஊர்ந்து செல்லும் மிகத்தாழ்ந்த புழுவிலிருந்து மிக உயர்ந்த மகான்வரை எல்லா உயிர்களிலும் எல்லையற்ற ஆற்றலும், எல்லையற்ற தூய்மையும் எல்லையற்ற அளவில் எல்லாமுமே இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தும் அளவில் தான் வேற்றுமை எல்லாம். புழு மிகச்சிறிய அளவை வெளிப்படுத்துகிறது, நீங்கள் அதைவிட அதிகமாக வெளிப்படுத்தலாம். ஒரு தெய்வ மனிதர் இன்னும் அதிகமாக வெளிப்படுத்தி இருப்பார். வேற்றுமை இது தான். அந்த எல்லையற்ற ஆற்றல் அனைவரிடமும் உள்ளது.”தத ஷேத்ரிகவத்-உழவன் தன் வயலுக்கு நீர் பாய்ச்சுவது போல் என்று பதஞ்சலி சொல்வார். எங்கோவுள்ள குளத்திலிருந்து உழவன் தன் வயலுக்கு ஒரு மூலை வழியாக நீர் பாய்ச்சுகிறான். சிறு அடைப்பு ஒன்று தண்ணீரைப்பாய விடாமல் தடுக்கலாம். அவன் தண்ணீர் பாய்ச்ச விரும்பும்போது அந்த அடைப்பை மட்டும் தான் விலக்க வேண்டும். தண்ணீர் தன்னியல்பாகவே மளமளவென்று வயலில் பாய்ந்துவிடும். அந்தத் தண்ணீருக்கு ப் பாயும் சக்தியை கொடுக்க வேண்டியதில்லை. அந்தச் சக்தி ஏற்கனவே அதில் இருக்கிறது. நாம் அனைவரும் அந்த நிலையில் தான் இருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வோர் உயிருக்கும் பின்னணியாக அத்தகைய எல்லையற்ற வலிமை, எல்லையற்ற ஆற்றல், எல்லையற்ற தூய்மை, எல்லையற்ற ஆனந்தம், எல்லையற்ற உண்மை எல்லாம் இருக்கின்றன. நாம் உண்மையில் யாரோ, அதனை முழுமையாக வெளிப்படுத்த முடியுமானால் அடைப்புகளாகிய இந்த உடல்கள் தடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த உடல் நுண்மையான நுண்மையான குணம் ரஜோ குணமாக மாறமாற, ரஜோ குணம் சத்வ குணமாக மாறமாற தூய்மையும் ஆற்றலும் அதிகமாக வெளிப்படும்.
இதனால் தான் நம் முன்னோர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள். திருமணம், பற்றிய விஷயங்களில் எவ்வாறு நமது பழைய உட்கருத்துக்கள் மறைந்து விட்டனவோ, அவ்வாறே உணவுப் பழக்கவழக்கங்களிலும் அதன் உண்மையான அடிப்படை மறைந்துவிட்டதாகச் சொல்லலாம். நமது கருத்திற்குத்தொடர்பில்லை எனினும் திருமணம் பற்றிய உதாரணம் ஒன்றை எடுத்துக் கொள்கிறேன். வேறு சந்தர்ப்பம் கிடைத்தால் விரிவாகப்பேசுகிறேன். ஆனால் திருமணத்தைப்பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துக்களே, மனித இனத்திற்கு உண்மையாக நாகரீகம் தரக்கூடியவை என்பதை மட்டும் இப்போது சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தனது சுகத்திற்காக, தனது மிருக இச்சையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் விரும்புபவரை, மனைவி அல்லது கணவனாக ஏற்றுக்கொள்ளும் சுதந்தரத்தை அளித்தால் தீமையே அதன் விளைவாக இருக்கும். அத்தகைய திருமணத்தின் பயனாகப் பிறக்கும் குழந்தைகள் தீயவர்களாக, கொடியவர்களாக, அசுரத்தனம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். ஒவ்வொரு நாட்டிலும் மனிதன் ஒரு புறம் இத்தகைய மிருகத் தனமான குழந்தைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறான்.மறுபுறம் இவர்களை அடக்கியாள போலீஸ்படையை அதிகரித்துக் கொண்டிருக்கிறான். பிரச்சனை, தீமையை எப்படி அழிப்பது என்பதல்ல, எப்படி தீமையே உண்டாகாமல் தடுப்பது என்பது தான், நீங்கள் சமுதாயத்தில் இருக்கும்வரை, உங்கள் திருமணம் சமுதாயத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் நிச்சயமாகப் பாதிக்கவே செய்யும். எனவே நீங்கள் யாரை மணக்க வேண்டும், யாரை மணக்கக் கூடாது என்று சட்டம் செய்ய சமுதாயத்திற்கு அதிகாரம் இருக்கிறது. நமது திருமண அமைப்பிற்குப் பின்னால் இது போன்ற மிகவுயர்ந்த கருத்துக்கள் இருக்கின்றன. இவையே ஜோதிட சாஸ்திரம் ”ஜாதி” அதாவது பொருத்தம் என்று அழைக்கிறது. காமபோகத்தின் விளைவாகப் பிறக்கின்ற குழந்தை ஆரியன் அல்ல என்பது மனுவின் கருத்து என்பதையும்
உங்களுக்குத்தெரிவிக்க விரும்புகிறேன். வேத முறைகளின் படி கருவுற்று வாழ்ந்து இறப்பவனே ஆரியன்.ஆம், ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய குழந்தைகள் மிகக்குறைவாகவே பிறக்கிறார்கள். அதன் பயனாகவே இன்று நாம் கலியுகம் என்று கூறும் இவ்வளவு கெடுதல்கள் உலகில் இருக்கின்றன.
இந்த லட்சியங்கள் அனைத்தையும் நாம் இழந்து விட்டோம். இன்று இந்தக் கருத்துக்களை முழுவதுமாகப் பின்பற்ற முடியாது என்பது உண்மை. அந்த உன்னத லட்சியங்களுள் சிலவற்றை இன்று வெறும் கேலிச் சித்திரங்களாக்கியுள்ளோம். என்பது உண்மையே. தற்கால தாய் தந்தையரும் முன்போல் இல்லை, சமுதாயமும் அன்றிலிருந்தது போலன்றி கல்வியறிவில் மிகத்தாழ்ந்த நிலையில் உள்ளது. மக்களும் முன்போல் ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாக இல்லை என்பது வருத்தம் தரக்கூடிய உண்மை. ஆனால் இந்த கருத்துக்கள் எவ்வளவு தான் தவறான முறைகளில் கடைபிடிக்கப் பட்டாலும் அந்தக்கோட்பாடுகள் அப்பழுக்கற்றவை. அதன் செயல்முறை தவறாகி விட்டால், ஒரு வழி தோற்றுவிட்டால், கோட்பாட்டை எடுத்துக்கொண்டு, இன்னொரு வழியைக் கடைப்பிடித்து நன்றாகச் செய்ய முயலவேண்டும். வழிகளில் தவறிருந்தால் அதற்காகக்கோட்பாட்டை விட்டுவிடுவது எப்படி நியாயமாகும்.
இந்த மாதிரி உணவு விஷயமும். உணவு விஷயத்தில் இப்போது நாம் கடைபிடித்து வரும் முறை மிக மிக மோசமானது. ஆனால் நாம் உண்ணும் உணவு தூய்மையாக இருக்கவேண்டும் என்ற உயர்ந்த நிரந்தரமான கோட்பாட்டை அது பாதிக்கவில்லை. அந்தக்கோட்பாட்டை வைத்துக்கொண்டு, அதன் செயல்முறையைச் சீர்திருத்தி, புதியதாக மாற்றி, பின் பற்றுங்கள்.
ஆன்மா பற்றிய இந்த மாபெரும் கருத்தை நாட்டின் எல்லா நெறிகளும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். தீவனை காரணமாக ஆன்மா சங்குசிதமாகி விட்டதாகவும், அதாவது அதன் இயல்பும் ஆற்றல்களும் சுருங்கி விட்டதாகவும், நல்வினைகளின் பயனாக அது மறுபடியும் விரியும் என்றும் துவைதிகள் சொல்கிறார்கள். அத்வைதிகளோ, ஆன்மா சுருங்குவதோ விரிவதோ கிடையாது, அவை வெறும் தோற்றமே என்கிறார்கள். வேறுபாடு இது தான். ஆனால் ஆன்மாவில் ஏற்கனவே எல்லா ஆற்றல்களும் இருக்கின்றன. வெளியிலிருந்து எந்தச் சக்தியும் அதனுள் வருவதில்லை. வான வெளியிலிருந்து ஏதோ அதனுள் நுழைவதில்லை என்ற கருத்து எல்லோருக்கும் பொதுவானது. வேதங்கள் கூட நமக்கு அருளப்பட்டவை அல்ல, வெளியில் எங்கிருந்தோ வந்தவை அல்ல, மாறாக அவை உள்ளிருந்து வெளி வந்திருக்கின்றன. ஒவ்வோர் ஆன்மாவிலும் குடிக் கொண்டிருக்கும் நிரந்தர உண்மைகளே வேதங்கள். இதனை நன்றாக நினைவில் வையுங்கள். எறும்பின் ஆன்மாவிலும் வேதங்கள் உள்ளன, தேவனின் ஆன்மாவிலும் வேதங்கள் இருக்கின்றன. எறும்பு படிப்படியாகப் பரிணமித்து ரிஷியாக வேண்டும். அப்போது வேதங்கள், அந்த நிரந்தர உண்மைகள் தாமாகவே வெளிப்படும். இந்தச் சிறந்த கருத்தை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அனைத்து ஆற்றல்களும் நம் முள்ளே இருக்கின்றன. நமது முக்தியும் ஏற்கனவே நம்முள் இருக்கிறது.ஆன்மா சுருங்கியுள்ளது. அல்லது மாயையாகிய திரையால் மறைக்கப் பட்டிருக்கிறது என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். கருத்து இது தான்- மிகத் தாழ்ந்தவர் முதல் அனைவரிடமும் புத்தர் ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதை நீங்கள் நம்பியே தீர வேண்டும். ஆன்மா பற்றிய கோட்பாடு இது தான்.
இதற்கு மேல் ஒரு பெரியசண்டை வருகிறது. உடலும் மனமும் ஜடப் பொருளின் பிரவாகங்கள். ஆனால், அதற்காக ஆன்மா என்ற ஒன்று தேவையில்லை. ஆன்மா என்ற ஒன்று இருக்கிறதென்ற முடிவுக்கு வர வேண்டியதில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.பண்புகளை ஒப்புக் கொண்டுவிட்டு, அவை சார்ந்திருக்கின்ற ஒருபொருயையும் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? எங்களைப்பொறுத்தவரை பண்புகள், பண்புகள் மட்டுமே போதும். ஒரு பொருளை விளக்கஒரு காரணமே போதுமானதாக இருக்க, இன்னொரு காரணத்தை ஏற்றுக் கொள்வது அறிவுக்குப்பொருந்தாத ஒன்று- இவ்வாறு பௌத்தர்களின் வாதங்கள் தொடர்கின்றன. பொருள் அதாவது ஆன்மா பற்றிய கருத்துக்கள் அனைத்தையும் அவர்கள் ஒரேயடியாக முறியடித்து விட்டார்கள். உங்களுக்குத் தனிஆன்மா, எனக்குத் தனியாக ஆன்மா, அவ்வாறே ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஆன்மா இருக்கிறதென்றும், இந்த ஆன்மா ஒவ்வொன்றும் தனித்தனியானவை என்றும், அவை உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் வேறுபட்டவை என்றும் கூறி, பொருளையும் அதன் பண்புகளையும் ஏற்பவர்களுக்குத் தொடர்ந்த வீழ்ச்சி உண்டாயிற்று.
தொடரும்...
தொடர்ச்சி...
இது வரை பார்த்ததில் துவைதக் கருத்தில் பிரச்சனை எதுவும் இல்லை- உடல் ஒன்று உள்ளது. அதற்கடுத்து ஒரு நுண்ணுடல் அதாவது மனம், அதன் பிறகு ஓர் ஆன்மா, இந்த எல்லா ஆன்மாக்களின் உள்ளும் புறமும் நிறைந்த ஒரு பரமாத்மா” அதாவது கடவுள். பிரச்சனை இங்கே தான் எழுகிறது. ஆன்மா, பரமாத்மா, இரண்டுமே வஸ்துக்கள், பொருட்கள், உடலும், மனமும் நாம் பொருட்கள் அல்லது வஸ்துக்கள் என்று அழைக்கின்ற பிறவும் பல்வேறு பண்புகளைப்போல் இவற்றைப் பற்றிநிற்கின்றன. ஆனால் யாரும் வஸ்துவைக் கண்டதில்லை, கருத்தில் கொள்ளவும் முடியாது. அத்தகைய ஒன்றைப் பற்றி ஏன் நினைக்க வேண்டும்?ஏன் ஷணிக வாதத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் கூறுவது போல் , இருக்கும் அனைத்தும் மனப் பிரவாகங்களின் தொடர்ச்சியே தவிர, வேறல்ல என்று கூறக் கூடாது? இந்தப் பிரவாகங்கள் ஒன்றை ஒன்று பற்றி நிற்பதில்லை, சேர்ந்து ஒன்றாவதில்லை. கடலின் அலைகளைப்போல் ஒன்றை மற்றொன்று தொடர்ந்து வருகிறதே தவிர அவை முழுமை பெறுவதும் இலை,சேர்ந்து முழுமையான ஒன்றாக மாறுவதும் இல்லை. அலைகளின் தொடர்ச்சியே மனிதன். ஒன்று போகும் போது அது மற்றொன்றை உருவாக்குகிறது. இந்த அலைகள் ஓய்வது தான் நிர்வாணம். இந்த வாதத்தின் முன்னால் துவைதம் மௌனமாகிவிடுகிறது. எந்த எதிர் வாதத்தையும் அதனால் கொண்டு வர முடியாது. துவைத கடவுளையும் இங்கே நிலைநிறுத்த முடியாது. ஒரு கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றாலும் அவர் ஒருவர், அவர் கைகளில்லாமல் உலகைப் படைக்கிறார், கால்கள் இல்லாமல் நடக்கிறார். குயவன் பானை செய்வது போல் உலகைப் படைக்கிறார் என்றெல்லாம் சொல்வது குழந்தைத்த
னமாக இருக்கிறது என்று பௌத்தர்கள் கூறுகிறார்கள். இப்படி ஒரு கடவுள் இருப்பாரானால், தாங்கள் அவரை வழிபடப்போவதில்லை. எதிர்க்கவே விழைவதாக அவர்கள் சொல்கிறார்கள். துக்கம் நிறைந்தது உலகம். இதனைப்படைத்தது கடவுள் என்றால் அவரை எதிர்க்கவே வேண்டும் என்கிறார்கள். இத்தகைய ஒரு கடவுள் கருத்து அறிவுபூர்வமானது அல்ல. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை நீங்களும் அறிவீர்கள். இந்தப் படைப்புக்கொள்கையின் குறைபாடுகளுக்கு நாம் போக வேண்டியதில்லை. நமது ஷணிகவாதிகள் அவற்றைத்தெளிவாகக் காட்டி விட்டார்கள். இவ்வாறு உருவக் கடவுள் கொள்கை முறியடிக்கப் பட்டது.
உண்மையை, உண்மையை மட்டுமே பின்பற்ற வேண்டும். என்று அத்வைதி சொல்கிறான். ”ஸ்தயமேவ ஜயதே நான்ருதம் , ஸத்யேனைவ பந்தா விததோ தேவயான- வாய்மையே வெல்லும், வாய்மையற்றது அல்ல.தேவயானத்திற்கான பாதை வாய்மையின் வழியாகவே செல்கிறது.” ஒவ்வொருவரும் இந்தக் கொடியின் கீழ் தான் முன்னேறுகிறார்கள். ஆம்,
ஆனால் அதன் நோக்கமெல்லாம் பலவீனனை அடக்கி அவனைத் தன்கீழ் கொண்டுவருவது தான். நீங்கள் துவைதியாக இருக்கலாம். உருவத்தை வழிபடும் ஓர் அப்பாவியைக் கண்டால், நீங்கள் மிகவும் புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு, அவனிடம் வாதித்து, அவன் மனத்தில் குழப்பத்தை உண்டாக்குவீர்கள்.ஆனால் அவன் திரும்பி, நீங்கள் வழிபடும் சகுணக் கடவுள் கருத்தைத் தவறென்று நிரூபித்தால் உங்கள் கதி என்னவாகும்? நம்பிக்கை தான் முக்கியம் என்றெல்லாம் சொல்வீர்கள், அல்லது உங்களுக்கு எதிராக வாதம் செய்பவர்கள் நாத்திகர்கள் என்று கூறுவீர்கள். வாதத்தில் தோற்றுவிட்டால் எதிர்த் தரப்பினரை நாத்திகர்கள் என்று கூறிவிடுவது பலவீனன் கடைப் படிக்கின்ற பழைய விஷயம் தானே! நீங்கள் அறிவுபூர்வமாகஇருக்க விரும்பினால் இறுதிவரை அறிவுபூர்வமாகவே இருங்கள். அப்படி இருக்க முடியா விட்டால் நீங்கள் எதிர்பார்க்கின்ற சலுகைகளைப் பிறருக்கும் அளியுங்கள்.
கடவுள் இருப்பதை நீங்கள் எப்படி நிரூபிப்பீர்கள்? மாறாக, அவரை ஏறக்குறைய மறுத்தே விடலாம். அவர் இருக்கிறார் என்று நிரூபிப்பதற்கு சாட்சிகளின் சாயல் கூட இல்லை. மறுப்பதற்கோ உறுதியான பல வாதங்கள் இருக்கின்றன. கடவுள் அவரது குணங்கள், வாஸ்துக்களாகிய எண்ணற்ற ஆன்மாக்கள், ஒவ்வோர் ஆன்மாவும் தனித்தனியானவை- இப்படியெல்லாமான ஒரு கடவுளை நீங்கள் எப்படி நிரூபிப்பீர்கள்? எந்த விஷயத்தில் நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள்? நீங்கள் உடம்பு என்ற முறையில் உங்களுக்குத் தனித்தன்மை இல்லை, பண்டைய பெளத்தர்களை விட இன்று இது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.நேற்று சூரியனிடத்திலிருந்த ஜடப் பொருள் இன்று உங்கள் உடலில் இருக்கலாம். நாளை அது ஒரு செடியில் போய்ச்சேரலாம். இவ்வாறு உடம்பு ஓயாமல் மாறிக் கொண்டிருக்கையில், உங்களை இன்னார் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய உங்கள் தனித்துவம் எங்கே,? மனமும் இவ்வாறு தான். எங்கே உங்கள் தனித்துவம்? இன்றிரவு ஒன்றை நினைக்கிறீர்கள், நாளை வேறொன்றை நினைக்கிறீர்கள். குழந்தைகளாக இருந்தபோது நினைத்ததுபோல் இப்போது நினைப்பதில்லை. இளைஞர்களாக இருந்தபோது நினைத்ததைப்போல் வயதான பின் நினைப்பதில்லை. அப்படியானால் உங்கள் தனித்துவம் எங்கிருக்கிறது? உணர்ச்சியினுள் அல்லது அகங்காரத்தினுள் என்று சொல்லாதீர்கள்.ஏனெனில் நம் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே அது வியாபித்திருக்கிறது. நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். இப்போது என் அவயவங்கள் எல்லாம் வேலை செய்து கொண்டிருக்கின்றன, ஆனால் நான் அதனை உணரவில்லை. உணர்ச்சி தான் அவை இருப்பதற்கு முடிவான சாட்சியம் என்றால், அவைபற்றி எனக்கு உணர்வில்லாததால், அவை இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்ஃ உருவக் கடவுளைப் பற்றிய கொள்கைகள் உங்களை எங்கு கொண்டு போய் விடுகின்றன என்று பார்த்தீர்களா? இத்தகைய கடவுளை நீங்கள் எப்படி நிரூபிக்க முடியும்?
இத்தகையகடவுள் ஒருவர் இருக்கிறார் என்பது அறிவு பூர்வமாக இல்லை என்பது ஒரு புறமிருக்க, இந்தக் கருத்தைப் பரப்புவது கூட நன்னெறிக்கு விரோதமானது, என்று பௌத்தர்கள் அடித்துச் சொல்கிறார்கள். வெளியிலிருந்து எந்த உதவியும் மனிதனுக்கு வருவதில்லை என்பது உண்மையாக இருக்க,ஏன் அவனைப் புறவுதவியை நாடும்படிச்செய்து கோழையாக்க வேண்டுமென்று அவர்கள் கேட்கிறார்கள். இதோ இந்தப் பிரபஞ்சம் உள்ளது. இது மனிதனால் உண்டாக்கப் பட்டது. அப்படியிருக்க, யாரும் பார்த்திராத, அறிந்திராத, யாரும் எந்த உதவியும் பெற்றிராத ஒரு கடவுளைப் புறத்தேயிருப்பதாக க் கற்கனை செய்து, ஏன் அவரைச் சார்ந்திருக்க வேண்டும்? ஏன் உங்களையே நீங்கள் கோழைகளாக்கிக் கொள்கிறீர்கள்? நாய் போல் ஒருவரிடம் பணிந்து நிற்பது தான், ஒரு கற்பனை உருவின் காலடியில் கிடைப்பது தான், உங்களையே பலவீனர்கள் என்றும் உலகிலேயே இழிந்த பாவிகள் என்றும் சொல்லிக்கொள்வது தான் மனிதனின் மிகவுயர்ந்த நிலை என்று ஏன் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறீர்கள்? இதனால் நீங்கள் பொய் சொல்வதுடன், உங்கள் குழந்தைகளுக்குப் பெருத்தீஙை்கையும் வினைவிக்கிறீர்கள். என்று பௌத்தர்கள் துணிவுடன் கூறுகிறார்கள். ஏனெனில் இந்த உலகே ஒரு மயக்குவித்தை போன்றது, அதை மறக்கக் கூடாது.
நீங்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறீர்களோ அதையே மெள்ளமெள்ள நம்பவும் தொடங்குவீர்கள். புத்த பகவான் ஏறக்குறைய முதலில் சொன்னது, நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதுவே நீங்கள். எதை நினைப்பீர்களோ அதுவாக ஆவீர்கள், என்பவைதான். இது உண்மையானால் நம்மால் எந்தப் பயனும் இல்லை. இங்கு வாழாமல் மேகங்களுக்கு மேல் வாழ்கின்ற ஒருவர் வந்து நமக்கு உதவினால் மட்டுமே நம்மால் ஏதாவது செய்ய முடியும் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்வதை விட்டுவிடுங்கள். இப்படி நீங்கள் நினைக்க நினைக்கப் பலவீனமே உங்களிடம் மிகும். நாங்கள் தூய்மையற்றவர்கள். இறைவா, எங்களைத் தூயவர்கள் ஆக்குவாய்? என்று தினந்தோறும் நீங்களே உங்களை ஒருவித சுய மயக்கத்திற்கு உட்படுத்திக்கொண்டு, எல்லா விதத் தீமைகளிலும் உழல்வீர்கள். ஆம், சமுதாயத்திலிருக்கும் நூற்றுக்குத் தொண்ணூறு தீமைகளுக்குக் காரணம் சகுணக்கடவுள்- கருத்து தான் என்று பௌத்தர்கள் கூறுகிறார்கள். இந்த அற்புதமான வாழ்க்கையின் முதலும் முடிவும் நிறைவும் ஒரு நாயைப்போல் ஆவதுதான் என்றால் அது பயங்கரமான ஒன்று. கடவுள் வாழும் இடமான வைகுண்டத்திற்குச் சென்று, அங்கு அவர் முன்னிலையில் என்றென்றும் கைகட்டி வாய் புதைத்து நிற்பது தான் வாழ்க்கையின் லட்சியமும் குறிக்கோளும் நோக்கமும் என்றால், அதைவிடத் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்று வைணவனைப் பார்த்து பௌத்தன் சொல்கிறான். இதிலிருந்து தப்புவதற்காகத்தான் நிர்வாணம் அல்லது சூன்யம் என்னும் கருத்தை உருவாக்கியுள்ளதாகவும் கூட அவர்கள் சொல்லலாம்.
அத்வைதக் கருத்துக்கள் ஒழுக்கக்கேட்டை உண்டாக்கும் என்று இப்போதெல்லாம் சொல்லப் படுகிறது. எனவே அதன் மறுபக்கம் எப்படியிருக்கும் என்பதை உங்களுக்குக் காட்டவே பௌத்தர்களின் நிலையிலிருந்து இந்தக் கருத்துக்களை உங்கள் முன் வைத்தேன். இரண்டு பக்கத்தைப் பற்றியும் துணிவுடனும் தைரியமாகவும் தெரிந்து கொள்வோம்.
சகுணக் கடவுள் ஒருவர் உலகைப் படைத்தார் என்பது போன்ற கருத்துக்களை நிரூபிக்க முடியாது என்பதை முதலில் நாம் கண்டோம். குயவன் பானை செய்வது போல் கடவுள் இந்த உலகை உண்டாக்கி இருக்கிறார் என்று சொன்னால், தற்காலத்தில் ஒரு குழந்தைகூட அதனை ஒப்புக்கொள்ளாது, அப்படியானால் குயவனும் கடவுள் தான், கைகாலில்லாமல் ஒரு குயவன் பானை செய்கிறான் என்று உங்களிடம் ஒருவன் சொன்னால், அவனை நீங்கள் பைத்தியக்கார விடுதிக்கு அல்லவா கொண்டு செல்வீர்கள்!
இந்த உலகை ஆக்கியதாக நீங்கள் சொல்லும் இந்தக் கடவுளிடம் உங்கள் ஆயுள் முழுவதும் அழுது கொண்டிருக்கிறீர்களே, அவர் எப்போதாவது உங்களுக்கு உதவி செய்திருக்கிறாரா என்று இன்றைய விஞ்ஞானம் அடுத்த சவாலுடன் வருகிறது. நீங்கள் பெற்ற உதவியெல்லாம் உங்கள் உழப்பின் காரணமாகவே கிடைத்தது. அது மட்டுமல்ல, அழுவதிலும் கெஞ்சுவதிலும் உங்கள் சக்தியை வீணாக்காமலிருந்தால் , இன்னும் அதிகப் பயனைப் பெற்றிருக்கலாம் என்று அவர்கள் நிரூபிக்கவும் செய்வார்கள்.
இனி சகுணக்கடவுள் கருத்துடன் கூடவே புரோகிதர் களின் கொடுமைகளும் இருந்து வந்திருக்கின்றன என்பதும் நமக்குத்தெரியும். சகுணக் கடவுள்கருத்து இருக்கும் இடங்களில் எல்லாம் புரோகிதர்களின் கொடுமையும் இருந்து வந்திருக்கின்றன. எனவே இந்தப் பொய்க் கருத்தின் தலையில் அடித்து அதை ஒடுக்காத வரையில் இந்தக் கொடுமைகளையும் ஒழிக்க முடியாது என்று பௌத்தர்கள் கூறுகிறார்கள். இயற்கையை மீறிய ஒரு சக்திக்கு, தான் அஞ்சி நடுங்க வேண்டும் என்று மனிதன் எண்ணிக்கொண்டிருக்கும் வரை, சலுகைகளும் உரிமைகளும் கோருவதற்குப் புரோகிதர்களும் இருக்கத்தான் செய்வார்கள், அவர்கள் மக்களைத் தங்கள் முன் மண்டியிட வைப்பார்கள். இந்தப் பாமர மக்களும் அவர்களிடம் சென்று தங்களுக்காக அந்தச் சக்தியிடம் பரிந்து பேசும்படிக் கேட்கத்தான் செய்வார்கள். நீங்கள் பிராமணனை ஒழித்து விடலாம். அப்படி ஒழிப்பவர்கள் தங்களை பிராமணர்களின் இடத்தில் இருத்திக்கொள்வார்கள். நினைவில்வையுங்கள்- இவர்கள் பிராமணனைவிட மோசமாக இருப்பார்கள்.ஏனெனில் பிராமணனிடம் சிறிதாவது பெருந்தன்மை இருக்கும். ஆனால் இவர்கள் கொடுமைகளின் உச்சிக்கே போய்விடுவார்கள். பிச்சைக்காரனுக்குச்செல்வம் கிடைத்துவிட்டால் அவன் உலகையே ஒரு துரும்பாக நினைத்துக் கொள்கிறான். எனவே சகுணக் கடவுள்- கருத்து இருக்கும்வரை புரோகிதர்கள் இருந்தே தீருவார்கள். பெரிய நன்னெறி எதையும் சமுதாயத்தில் எதிர்பார்க்கவும் முடியாது.புரோகிதமும் கொடுமையும் இணைந்தே செல்பவை. இது எவ்வாறு உருவாகியது? பழங்காலத்தில் பலசாலிகள் சிலர் மக்களை அடக்கி, எனக்கு அடங்காவிடில் உங்களை அழித்துவிடுவோம், என்றனர். இதுவே அது தோன்றிய கதை. ”மஹத்பயம் வஜ்ரமுத்யதம்” தனக்கு அடங்காதவர்களையெல்லாம் அழித்து விடும் கொடுங்கோலனின் கருத்து இது.
பௌத்தனின் வாதங்கள் தொடர்கின்றன. எல்லாம் வினையின் பயனாக ஏற்பட்டது என்று சொல்கிறீர்கள். அது அறிவு பூர்வமாக ஒப்புக்கொள்ள க் கூடியதாக இருக்கிறது. ஆன்மாக்கள் எண்ணற்றவை. பிறப்பு இறப்பு அற்றவை என்று நம்புகிறீர்கள், இதுவும் முற்றிலும் நியாயமானது தான். காரணமின்றிக் காரியம் இருக்க முடியாது. தற்கால நிலைமைக்கு இறந்தகாலம் காரணமாக இருந்தது. நிகழ்காலத்தின் காரணம் கடந்த காலத்தில் இருந்தே தீர வேண்டும். அதன் விளைவு எதிர் காலத்தில் தோன்றியே தீர வேண்டும்.
ஆனால் கர்மம் என்பது ஜடம், சைதன்யம் அல்ல. எனவே இந்தக் காரணம் காரியமாக மலர ஒரு சைதன்யம் தேவை என்கிறான் இந்து.
அப்படியா, ஒரு செடி வளர்ந்து பலன் தர சைதன்யம் தேவையா? விதையை நட்டுத் தண்ணீர் விட்டால் செடி தானாக வளர்கிறது. அதற்கு சைதன்யம் தேவையில்லை, என்பான் பைளத்தன். அதனுள் இயல்பாகவே சிறிது சைதன்யம் இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் ஆன்மாக்களே சைதன்யம் என்னும் போது, வேறு எதுவும் தேவையில்லை. மனித ஆன்மா தன்னிடமே சைதன்யத்தைப் பெற்றிருக்குமானால், ஒரு கடவுளின் தேவையென்ன? சமணர்கள் அப்படித்தானே! அவர்கள் பௌத்தர்களைப்போலன்றி ஆன்மாக்கள் உண்டென்றுநம்புகிறார்கள்.ஆனால் கடவுளை ஏற்றுக் கொள்வதில்லை.
உங்கள் நியாயம் எங்கே,? உங்கள் நன்னெறி எங்கே? அத்வைதத்தை விமர்சிக்கவும் , அது தீயொழுக்கத்தை வளர்க்கும் என்று அஞ்சவும் செய்கின்ற நீங்கள், துவைதப் பிரிவுகள் இந்தியாவில் என்னென்ன செய்துள்ளன என்பதைச் சற்று படித்துப் பாருங்கள். அத்வைத நெறியில் இருபதாயிரம் போக்கிரிகள் இருந்தால், துவைதிகளில் அதை விட அதிகமாக உள்ளனர். பொதுவாகப் பார்க்கப் போனால் துவைதப் பிரிவுகளில் தான் அவர்கள் அதிகம் சொல்ல வேண்டும். ஏனெனில் அத்வைதத்தைப் புரிந்து கொள்ள சற்று பக்குவப்பட்ட மனம் வேண்டும். அது மட்டுமின்றி அவர்களை எளிதில் அச்சுறுத்தவும் முடியாது. இந்துக்களே, உங்களிம் மிஞ்சுவது என்ன? பௌத்தர்களின் பிடியிலிருந்து விடுபட உங்களுக்கு எந்த வழியும் இல்லை. நீங்கள் உங்கள் வேதங்களை மேற்கோள் காட்டலாம். அவர்கள் அதைஏற்றுக் கொள்ளப்போவதில்லை. மாறாக, எங்கள் திரிபிடகங்கள் வேறுவிதமாக அல்லவா சொல்கின்றன எங்கள் திரிபிடகங்களும் ஆரம்பமோ முடிவோ இல்லாதவை, புத்தர் கூட எழுதியவை அல்ல.ஏற்கனவே உள்ள அவற்றை த் தாம் எடுத்துக் கூறுவதாகவே புத்தர் குறிப்பிடுகிறார். அவை என்றென்றும் இருப்பவை, அவைதான் உண்மையான வேதங்கள். உங்கள் வேதங்கள் பொய், பிராமணப் புரோகிதர்களால் உண்டாக்கப் பட்டவை. அவற்றை விட்டுவிடுங்கள்” என்பார்கள். இவர்களின் வாதங்களிலிருந்து எப்படித் தப்பப் போகிறீர்கள்.
அதற்குவழி அத்வைதத்தில் உள்ளது. பௌத்தர்களின் முதல் வாதத்தை எடுத்துக் கொள்வோம் வஸ்து அல்லது பொருள் வேறு, அதன் குணங்கள் வேறு என்பது அவர்களின் கூற்று. அப்படியில்லை என்கிறான் அத்வைதி. பழைய உதாரணம் உங்களுக்கு ஞாபகம் இருக்குமே! கயிறு பாம்பாகத் தெரிகிறது. பாம்பைக் காணும்போது கயிறு தெரிவதில்லை. முற்றிலுமாக மறைந்து விடுகிறது. அது போலவே எதையும் பொருள், அதன் குணங்கள் என்று பாகுபடுத்துவது தத்துவ ரீதியானது. அது தத்துவ அறிஞர்களின் மூளையில் நடக்கிறதே தவிர, வெளியில் அவ்வாறு பிரித்து அறிய முடியாது. சாதாரண மனிதன் வெறும் குணங்களைப் பார்க்கிறான்.யோகி அடிப்படையான பொருளைப் பார்க்கிறான்.ஆனால் இரண்டும் ஒரே சமயத்தில் காணப்படுவதில்லை.
எனவே பௌத்தர்களே, பொருள். மற்றும் குணம் பற்றிய உங்கள் வாதம் தவறானது, உண்மையற்றது. பொருள் குணங்கள் எதுவுமற்றது என்றால், ஒரே ஒரு பொருள் தான் இருக்க முடியும். குணங்களை ஆன்மாவிலிருந்து பிரித்து, அவை மனத்திற்குச் சொந்தமானவை, ஆன்மாவிற்குச் சொந்தமானது போல் தெரிந்தது வெறும் தோற்றம் மட்டுமே என்று காட்டமுடியுமானால் அங்கு இரண்டு ஆன்மாக்கள் இருக்கவே முடியாது.ஏனெனில் குண வேறுபாடுகள் தான் இது ஓர் ஆன்மா, அது மற்றோர் ஆன்மா என்று பிரித்துக் காட்டுகிறது. ஓர் ஆன்மா மற்றொன்றிலிருந்து வேறுபட்டது என்று எப்படி நீங்கள் அறிகிறீர்கள்? சில அடையாளங்களால் , சில குணங்களால், குணங்களே இல்லாதபோது வேறுபாடு எங்கிருந்து வரும்? எனவே ஆன்மாக்கள் இரண்டு அல்ல, ஒன்றே. நீங்கள் கூறும் பரமாத்மா தேவையில்லை.ஆன்மாவே பரமாத்மா. ஜீவாத்மா என்றும் பரமாத்மா என்றும் இன்னும் பலவாறாகவும் அழைக்கப் படுவது இந்த ஒன்றைத்தான்.
சாங்கியர் முதலான பல்வேறு துவைதிகளே! ஆன்மா விபு, எங்கும் நிறைந்தது என்றெல்லாம் சொல்கிறீர்கள்! அதே வேளையில், எல்லையற்றவை இரண்டு என்றும் கூறுகிறீர்களே, அது ஒன்றே ஒன்று தான் இருக்க முடியும். மற்றொன்று எப்படியிருக்க முடியும்? அந்த ஒன்று தான். ஒன்றேயான எல்லையற்ற ஆன்மா, மற்றவை அனைத்துட் அதன் வெளிப்பாடுகளே.
இந்த இடத்தில் பௌத்தன் நின்றுவிடுகிறான். ஆனால் விஷயம் இத்துடன் நிற்பதில்லை. அத்வைதி, மற்றவர்களின் வாதங்களை விமர்சிப்பதுடன் மட்டும் நின்றுவிடுகின்ற, பலவீனமான ஒரு நிலையில் இருப்பவன் அல்ல. யாராவது தன்னை மிகவும் நெருங்கும்போது மட்டுமே அவன் அவர்களை விமர்சிக்கிறான். அவர்களது வாதங்களைச் சுலபமாக முறியடிக்கிறான்.ஆனால் அவன் தனக்கென ஒரு நிலையை, ஓர் இடத்தை உருவாக்கி வைத்துள்ளான். அத்வைதி ஒருவன் தான் வெறும் விமர்சனத்துடனும் சாஸ்திர மேற்கோள்களுடனும் நிற்காமல் தொடர்ந்து அறிவுபூர்வமாக ஆராய்ச்சி செய்கிறான்.
அவன் சொல்கிறான். இந்தப் பிரபஞ்சம் இடையீடற்று இயங்கிக் கொண்டேயிருக்கிறது என்று நீங்கள் (பௌத்தர்கள்) சொல்கிறீர்கள். நல்லது, தனி நிலையில் நீங்கள் , நான் , இந்த மேஜை என்று எல்லாமே தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறோம். இது சம்சாரம்- எங்குமே இயக்கம் தான். இது ஜகத்-தொடர் இயக்கம். எனவே ஜகத்திற்கென்று ஒரு தனித்துவம் இருக்க முடியாது. ஏனெனில் தனித்துவம் என்றால் மாறாத ஒன்று. மாறுகின்ற தனித்துவம் என்பது முன்னுக்குப் பின் முரணானது. ஜகத்தில் நமது இந்தச் சின்னஞ்சிறிய உலகில் தனித்துவம் என்பது கிடையாது. எண்ணங்கள், உணர்ச்சிகள், மனம், உடல், மனிதர்கள், மிருகங்கள் அனைத்தும் இடைவிடாமல் மாறிக் கொண்டிருக்கின்றன.ஆனால் பிரபஞ்சத்தையே ஒரு முழுப்பொருளாக எடுத்துக் கொண்டால், அது இயங்க முடியுமா அல்லது மாற முடியுமா? முடியவே முடியாது. ஏனெனில் இயக்கம் என்பதை, அதைவிடக் குறைந்த வேகத்துடன் இயங்குகின்ற அல்லது முற்றிலும் இயங்காத ஒன்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தே அறிய முடியும். எனவே பிரபஞ்சத்தை முழுமையாக எடுத்துக்கொண்டால் அது மாறாதது. இயங்காதது. ஆதலால் நீயே முழுமையாக ஆகும்போது, அதாவது ”நானே பிரபஞ்சம்” என்ற அனுபூதி பெற்றவர்களுக்கு. அனுபூதி பெற்றவர்களுக்கு மட்டுமே தனித்துவம் இருக்க முடியும். அதனால் தான் இரண்டு என்பது இருக்கும் வரை பயம் அகலாது என்று வேதாந்திகள் சொல்கிறார்கள்! ஒருவர் மற்றொருவரை பார்க்கும்போது , மற்றொருவரை உணராதபோது, எல்லாமே ஒன்றாகும்போது- அப்போது மட்டுமே பயம் அகலும், மரணம் மறையும், சம்சாரம் ஒழியும்.
எனவே பிரபஞ்சத்துடன் ஒன்றுபட்டிருக்கும்போது தான் மனிதன் தனித்துவம் பெற்றவன் ஆகிறான். தனிமனிதனாக இருப்பதில் அவனுக்குத் தனித்துவம் இல்லை என்று அத்வைதம் போதிக்கிறது. முழுமையானதாக இருக்கும்போது மட்டுமே நீங்கள் அமரத்துவம் பெற்றவர்கள் ஆகிறீர்கள். நீங்களே பிரபஞ்சமாக இருக்கும்போது மட்டுமே உங்களுக்கு பயம் இல்லை. மரணமும் இல்லை. பிரபஞ்சம் என்று நாம் குறிப்பிடுவது தான் இறைவன், அதுவே ஸத் அல்லது இருப்பு, அதுவே முழுமை. ஸத்தாகிய , பிரிவற்றதான ஒன்றையே நாமும் நம்மைப்போன்ற சாதாரண மனநிலையில் உள்ளவர்களும் வேறுபாடுகள் நிறைந்த உலகமாக க் காண்கிறோம். சிறிது நற்செயல்கள் புரிந்து சற்று உயர்ந்த மனநிலை பெற்றவர்கள், மரணத்திற்குப் பின் அதையே சொர்க்கமாகக் காண்கிறார்கள். அங்கே இந்திரனையும் பிறரையும் தரிசிக்கிறார்கள். இன்னும் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் அதை பிரம்மலோகமாகக் காண்கிறார்கள். ஆனால் நிறைநிலையை அடைந்தவர்கள். இந்த உலகையோ சொர்க்கங்களையோ பிரம்ம லோகத்தையோ காண்பதில்லை. அவர்களுக்கு இந்தப் பிரபஞ்சமே மறைந்து விடுகிறது. பிரம்மம் மட்டுமே உள்ளது.
இந்தப் பிரம்மத்தை நாம் உணர முடியுமா? இந்த எல்லையற்ற பரம்பொருளை சம்ஹிதைகள் எவ்விதம் சித்தரிக்கின்றன.என்பதை நான் கூறியிருக்கிறேன். இங்கு அதன் மறுபக்கம், அதாவது எல்லையற்ற அகவுலகை விவரித்திருப்பதைக் காணலாம். அங்கே எல்லையற்ற புறவுலகம், இங்கே எல்லையற்ற அகவுலகம், அதாவது எண்ணத்தின் எல்லையற்ற தன்மை. எல்லையற்றதை அங்கு உடன்பாட்டு முறையில் சொல்ல முயன்றார்கள். அந்த முயற்சி தோல்வியுற்றது. எனவே எதிர்மறையில் சொல்ல முயன்றார்கள். இதோ இந்தப் பிரபஞ்சம் உள்ளது, இதுவே பிரம்மமென்று ஒப்புக் கொண்டாலும் , அதை நாம் அறிய முடியுமா? முடியாது! முடியவே முடியாது! இதனை நீங்கள் மிகத்தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரபஞ்சம் பிரம்மம். ஆனால் நாம் எப்படித் தெரிந்து கொள்வது என்ற சந்தேகம் மீண்டும் மீண்டும் எழுகிறது. ”விஜ்ஞாதாரமரே கேன விஜானீயாத்- அறிபவரை எதனால் அறிவது? அறிபவரை அறிவது எப்படி? அனைத்தையும் கண்கள் காண்கின்றன. அவை தம்மைத்தாமே பார்க்க முடியுமா? முடியாது. அறிவு என்பதே தாழ்ந்தது. ஆரியர்களின் குழந்தைகளே? இதனை நீங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் ஒரு பெரிய விஷயமே உள்ளது.
நீங்கள் காண்கின்ற மேலைநாட்டுக் கவர்ச்சிகள் அனைத்திற்கும், தத்துவரீதியிலான அடிப்படை ஒன்றுதான்.புலன்களின் மூலம் வரக்கூடிய அறிவைவிட உயர்ந்தது வேறொன்றுமில்லை என்பது தான் அது. ஆனால் இந்த அறிவு, வஸ்து அல்லது பொருளைவிடத் தாழ்ந்ததே என்று கீழைநாட்டில்நமது வேதங்கள் கூறுகின்றன. ஏனெனில் அறிவு என்பதே ஓர் எல்லை தான் என்பது நம் கருத்து. நீ ஒரு பொருளை அறிய முற்பட்ட உடனேயே அது உன் மனத்தின் எல்லைக்கு உட்படுத்தப் பட்டுவிடுகிறது. முத்துச்சிப்பி முத்தை உண்டாக்கும் உதாரணம் உங்களுக்கு நினைவிருக்கும். அதைச் சற்று நினைவு கூர்ந்தால், அறிவு எப்படி எல்லையாகிறது என்பது புரியும். ஒரு பொருளைத்தேர்ந்து, அதனை நாம் உணர்வின் எல்லைக்குள் கொண்டு வருகிறோம். இது அதனை முழுமையாக அறிவது ஆகாது. அறிவுகள் எல்லாம் இத்தகையதே. எல்லையற்றதைப் பற்றிய நமது அறிவும் இப்படிப்பட்டதே என்றில்லாமல் போகுமா? எல்லா அறிவுகளின் சாரமாகவும் சாட்சியாகவும், எல்லா அறிவும் உண்டாவதற்குக் கட்டாயமாகத்தேவையான வரும், குணங்கள் அற்றவரும், பிரபஞ்சத்திற்கே சாட்சியாகவும் , எல்லா உயிர்களிலும் சாட்சியாகவும், இருக்கின்ற பரம்பொருளை இவ்வாறு எல்லைப்படுத்த முடியுமா? எப்படி நீ அறியமுடியும்? எதன் மூலம் அவரைக் கட்டுப்படுத்த முடியும்? உலகம் முழுவதும் ஒவ்வொன்றும் அப்படிக் கட்டுப்படுத்துவதற்கான வீண் முயற்சியே.
எல்லையற்ற இந்த ஆன்மா தன் முகத்தையே பார்க்க விழைவதுபோல் உள்ளது. மிகத் தாழ்ந்த மிருகங்களிலிருந்து மிகவுயர்ந்த தேவர்கள் வரை எல்லாமே அவனைப் பலிக்கும் கண்ணாடிகளாக இருக்கின்றன. இவை போதாதென்று உணர்ந்து, இன்னும் பலவற்றைஅவன் கைக்கொள்கிறான். இறுதியாக மனித உடம்பிற்கு வருகிறான். அதுவும் எல்லைக்கு உட்பட்டது. எல்லாமே எல்லைக்கு உட்பட்டவை, எல்லைக்கு உட்பட்டதில் எல்லையற்றது வெளிப்பட முடியாதென்று அப்போது உணர்கிறான். அந்த இடத்தில் தொடங்குகிறது பின்னோக்கிய பயணம்.இதுவே துறவு. வைராக்கியம் எனப்படுவது.புலன்களிலிருந்து திரும்புங்கள். புலன் வாழ்க்கையிலிருந்து திரும்புங்கள் என்பதே வைராக்கியத்தின் அடிப்படை நியதி. எல்லா ஒழுக்கத்திற்கும் எல்லா நன்மைகளுக்கும் இதுவே அடிப்படை . தவத்தினாலும் துறவினாலும் தான் அனைத்தும் உண்டாக்கப்பட்டிருப்பதாக நமது நூல்கள் கூறுவதை மறந்து விடாதீர்கள். இவ்வாறுநீங்கள் பின்னோக்கிச்செல்லுந்தோறும் பல்வேறு உருவங்கள் உங்கள் முன் வெளிப்படும். அவை அனைத்தையும் விட்டுவிட்டுச்செல்ல வேண்டும். இறுதியில் நீங்கள் உண்மையில் எதுவோ அதுவாக இருப்பீர்கள். இதுவே மோட்சம் அல்லது முக்தி.
விஜ்ஞாதாரமரே கேன விஜானீயாத்- அறிபவனை எப்படி அறிவது? இந்தக் கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அறிபவரை நாம் அறிய முடியாது. அறிய முடியுமானால் அறிபவன் என்று அவனைக் கூற முடியாது. உங்கள் கண்களை ஒரு கண்ணாடியில் பாருங்கள். அங்கு தெரிகின்ற பிம்பம் கண்கள் அல்ல,அவை வேறு ஏதோ, வெறும் பிரதிபிம்பம் மட்டுமே. இனி நாமாகிய இந்த ஆன்மா, அதாவது எங்கும் நிறைந்த எல்லையற்ற இந்தப் பரம்பொருள், சாட்சி மட்டுமே என்றால் அதில் பயனென்ன? அது நம்மைப்போல் வாழ முடியாது,போய்வர முடியாது. அகுபவிக்க முடியாதே. ஓ, இந்தக்கோட்பாட்டை அதாவது நாம் சாட்சிகள் என்றகோட்பாட்டை மேற்கொண்டதன் காரணமாகவே இந்துக்களாகிய நீங்கள் சோம்பேறிகளாகவும் பயனற்றவர்களாகவும் ஆகிவிட்டீர்கள் என்று கூறுகிறார்கள். சாட்சியாக இருப்பவர் எப்படி இன்பம் அனுபவிக்க முடியும்என்பது சாதாரண மக்களுக்குத்தெரியாது. சாட்சியாக இருப்பவர்களால் தான் நன்றாக அனுபவித்து மகிழ முடியும். குத்துச்சண்டை நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை யார் அதிகம் அனுபவிக்கிறார்கள்? அந்தச் சண்டையில் கலந்து கொள்பவர்களா அல்லது அதைக் காண வந்திருப்பவர்களா? சாட்சியாக இருக்கும் தன்மையை அதிகம் பெறப்பெற நீங்கள் அதிகம் அனுபவிப்பீர்கள். அது தான் உண்மை ஆனந்தம். சாட்சியாக இருந்து உலகம் முழுவதையும் பார்க்கும் தன்மையைப் பெற்றால் தான் நீங்கள் எல்லையற்ற ஆனந்தத்தைப்பெற முடியும். அப்போது மட்டுமே நீங்கள் முக்த புருஷர்கள். சாட்சியாக இருப்பவர்கள் மட்டுமே எந்தவிதமான ஆசைகளும் இன்றி சொர்க்கம்போகும் எண்ணம் இன்றி, இகழ்ச்சி-புகழ்ச்சி போன்ற கருத்துக்கள் இன்றி வேலை செய்ய முடியும். அவர்கள் மட்டுமே இன்பம் அனுபவிக்கிறார்கள். மற்றவர்கள் அல்ல.
அத்வைதத்தின் நன்னெறிக் கருத்திற்கு வருவோம். அத்வைதத்தின் தத்துவப் பக்கத்திற்கும் , நன்னெறிப் பக்கத்திற்கும் இடையில் ஒரு கொள்கை உள்ளது. அதுவே மாயாவதம். அத்வைதத்தின் இந்தக் கொள்கைகள் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ளப் பல வருடங்களாகும். எடுத்துச்சொல்ல மாதங்கள் பலவாகும். எனவே அவற்றைக்கோடி காட்ட மட்டும் செய்வதற்கு என்னை மன்னியுங்கள். மாயாவதம் என்ற இந்தக்கொள்கையைச் சரியாகப் புரிந்து கொள்வது எப்போதுமே கடினமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இது வெறும் கொள்கையே அல்ல என்பதை உங்களுக்கு முதலில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தேச-கால- நிமித்தம் ஆகிய மூன்று கருத்துக்களின் சேர்க்கையே அது. இந்த தேச, கால, நிமித்தம், மேலும் நாம ரூபங்களாகச் சுருக்கப் பட்டிருக்கின்றன. கடலில் ஓர் அலை எழுவதாக வைத்துக்கொள்வோம்.நாமரூபத்தில் அதாவது பெயர் மற்றும் வடிவத்தில் மட்டுமே அது கடலிலிருந்து வேறாகத்தோன்றுகிறது. இந்தப் பெயரும் வடிவமும் உண்மையில் அலையிலிருந்து வேறுபட்டு இருக்க முடியாது. அலையுடன் கூடவே தான் அவை இருக்கும். அலை அடங்கலாம், ஆனால் தண்ணீரின் அளவு மாறாமலே இருக்கிறது. அலையின் பெயரும் வடிவமும் நிரந்தரமாக அழிந்துபோனாலும் கடலுக்கு எந்தவித மாற்றமும் நிகழ்வதில்லை. இவ்வாறு உங்களுக்கும் எனக்கும், மனிதனுக்கும் மிருகத்திற்கும், மனிதனுக்கும் தெய்வத்திற்கும் வேற்றுமைகளை உண்டாக்குவது தான் மாயை.ஆன்மா கட்டுண்டது போலவும், கோடிக்கணக்கான நாமரூபங்களைத் தாங்கி ஒன்றுக்கொன்று வேறுபாடாகத் தெரிகின்ற உயிர்களாக உள்ளது போலவும் தெரிவது இந்த மாயையினால் தான். அவற்றை விட்டுவிட்டால் இந்த நாமரூபங்களை விலக்கிவிட்டால் எல்லா வேறுபாடுகளும் என்றென்றைக்குமாக மறைந்துபோகும். நீங்கள் உண்மையில் யாரோ அவராக இருப்பீர்கள். இது தான் மாயை.
இது ஒரு கொள்கையல்ல, இது நிஜங்களின் சித்திரம். இதோ இந்த மேஜை இருக்கிறது என்று உண்மைவாதி சொல்லும்போது அதன் பொருள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது இந்த மேஜை, பிரபஞ்சத்திலுள்ள வேறு எந்தப்பொளையும் சார்ந்திருக்க வில்லை, சுயமாகவே இருக்கிறது. பிரபஞ்சம் முழுவதுமே அழிந்தாலும் இந்த மேஜை மட்டும் இப்போது இருப்பது போல் அப்படியே இருக்கும். கொஞ்சம் ஆலோசித்துப் பார்த்தால் கூட இது தவறு என்பது விளங்கிவிடும். புலன்களால் அறியப் படுகின்ற இந்த உலகில் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதாகவும் ஒன்றையொன்று சார்ந்துமே இருக்கிறது.
எனவே ஒரு பொருளை நாம் அறிவதில் மூன்று படிகள் உள்ளன. முதலாவதாக, ஒவ்வொரு பொருளும் தனியானது, மற்ற ஒவ்வொன்றிலிருந்தும் வேறுபட்டது. இரண்டாவதாக, அவற்றுள் ஒரு தொடர்பை, ஒன்றுக் கொன்று ஒரு தொடர்பிருப்பதை உணர்வது, மூன்றாவது படியில், ஒரே பொருளையே நாம் பலவாகக் காண்கிறோம் என்பதை அறிவது. கடவுள் விஷயத்திலும் இப்படியே. முதலில் அவர் எங்கோ பிரபஞ்சத்திற்கு வெளியில் இருப்பதாகப் பாமரன் நினைக்கிறான். கடவுளைப்பற்றிய அவனது கருத்து பெருமளவிற்கு மானுடமாகவே உள்ளது. மனிதன் செய்வதையே அவரும் செய்கிறார். சற்று பெரிய அளவில் செய்கிறார். அவ்வளவு தான். இத்தகைய கடவுள் கருத்து அறிவுபூர்வமானதாக இல்லை. போதுமானதாக இல்லை என்பதை ஏற்கனவே எளிதாக நிரூபித்து விட்டோம்.
அடுத்ததாக நாம் காண்பது எங்கும் வெளிப்பட்டுத் துலங்கும் சக்தியைப் பற்றிய கருத்து.இது தான் தேவீ மாஹாத்மியத்தில் நாம் காணும் உருவக்கடவுள். இந்தக் கடவுள் நற்குணங்களுக்கு மட்டும் இருப்பிடமானவர் அல்ல என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். கடவள் என்றும் சாத்தான் என்றும் இருவருக்கு இடமில்லை, ஒருவர் மட்டுமே இருக்கமுடியும். நன்மை மற்றும் தீமைகளின் வடிவில் அவரைப்போற்றவும் உங்களுக்குத் துணிவிருக்க வேண்டும். ஒரு கடவுளை மட்டுமே கொள்ளுங்கள், அதனால் வந்தே தீர்கின்ற விளைவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள், தாயே எல்லா உயிர்களிலும் சாந்த வடிவில் உறைபவளே, உன்னை வணங்குகிறேன். அம்மா, எல்லா உயிர்களிலும் தூய்மை வடிவில் உறைபவளே, உன்னை வணங்குகிறேன். என்றே தேவீ மாஹாத்மியம் கூறுகிறது. எல்லா உயிர்களிலும் அவள் இருக்கிறாள் என்று நாம் சொல்வதிலிருந்து ஏற்படக் கூடிய பயனையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ”ஓ கார்க்கி, இதெல்லாம் ஆனந்தம், எங்கெங்கு ஆனந்தம் இருக்கிறதோ அங்கெல்லாம் தெய்வீகம் இருக்கிறது. அதை நீங்கள் விருப்பம் போல் உபயோகிக்கலாம். இதோ என் முன்னால் இங்கும் இந்த விளக்கு வெளிச்சத்தில் நீங்கள் ஓர் ஏழைக்கு நூறு ரூபாய் கொடுக்கலாம். வேறொருவன் இதில் உங்கள் கையொழுத்தைப்போட்டு மோசடி செய்யலாம். வெளிச்சம் இருவருக்கும் ஒன்று தான். இது இரண்டாவது நிலை.
மூன்றாவதாக, கடவுள் இயற்கைக்கு வெளியிலோ இயற்கைக்கு உள்ளேயோ இல்லை, மாறாக கடவுள், இயற்கை, ஆன்மா, பிரபஞ்சம் எல்லாமே ஒன்றுதான். நீங்கள் இரண்டைக் காண்பதே இல்லை. தத்துவவாதிகளின் பெரிய வார்த்தைகள் உங்களை அவ்வாறு நினைக்கும்படிக் குழப்பியிருக்கின்றன. நீங்கள் உடல் என்றும், உங்களுக்கு ஆன்மா இருக்கிறது என்றும், இரண்டும் சேர்ந்தே நீங்கள் என்றும் நினைக்கிறீர்கள். இது எப்படி முடியும்? யோசனை செய்து பாருங்கள். உங்கள் மத்தியில் யோகி ஒருவன் இருந்தால், அவன் தன்னைச் சைதன்யமென உணர்வான், அவனுக்கு உடல் மறைந்துவிட்டது. சாதாரண மனிதனோ தன்னை உடல் என்று நினைக்கிறான். அவனுக்குச் சைதன்யம் அல்லது உணர்வு பற்றிய எண்ணம் இல்லை. மனிதனுக்கு உடலும் ஆன்மாவும் உள்ளது போன்ற தத்துவக் கருத்துக்கள் இருப்பதால் தான், அவை எல்லாமே ஒரே நேரத்தில் இருக்க முடியும் என நாம் எண்ணுகிறோம். ஒரு நேரத்தில் ஒன்று, ஜடப்பொருளை உணரும்போது கடவுளை
உணர முடியாது. அப்போது காரியத்தை, காரியத்தை மட்டுமே காண்கிறீர்கள். காரணத்தைக் காணவில்லை. காரணத்தைக் காண்கின்ற அந்தக் கணமே காரியம் மறைந்துவிடும். அப்போது உலகம் எங்கே போனது? யார் அதை மறைந்தது?
ஓ அறிவார்ந்த ரிஷியே, எப்போதும் உணர்வுமயமான தனிப்பேரானந்தமான, எல்லைகளைக் கடந்ததான, உவமைகளைக் கடந்ததான, எல்லா குணங்களையும் கடந்ததான, எப்போதும் சுதந்திரமான, ஆகாசம் போல் எல்லையற்றதான, பகுதிகள் அற்றதான, தனியான, பூரணமான பிரம்மம் சமாதியில் ஆழ்ந்திருக்கும் ஞானியின் இதயத்தில் பிரகாசிக்கிறது.
ஓ அறிவார்ந்த ரிஷியே, இயற்கையின் மாறுபாடுகள் அனைத்தும் நிரந்தரமாக ஓயும்போது, எண்ணங்கள் எல்லாம் கடந்த எண்ணமாக, எல்லாவற்றிற்கும் சமமாக ஆனால் தனக்கு இணை இல்லாத, அளக்க முடியாத, வேதங்கள் பறைசாற்றுகின்ற நமது இருப்பின் (அதாவது நமது) சாரமாக, பூரணமாக விளக்குகின்ற பிரம்மம் சமாதியில் ஆழ்ந்திருக்கும் ஞானியின் இதயத்தில் பிரகாசிக்கிறது.
ஓ! அறிவார்ந்த ரிஷியே,பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டதாக, எல்லையற்றதாக, ஒன்றேயானதாக, ஒப்பற்றதாக, ஆனால் பிரபஞ்சம் அனைத்தையும் மூழ்கடிக்கும் மகாபிரளய வெள்ளம்போல்- மேலே வெள்ளம், கீழே வெள்ளம், எல்லா திக்கிலும் வெள்ளம், ஆனால் மேற்பரப்பில் அலையோ குமிழியோ இல்லாமல்- சாந்தமானதாக, அமைதியானதாக, எந்தக் காட்சிகளும் அற்றதாக, சண்டைகளும் சச்சரவுகளும் ஓய்ந்ததாக, முட்டாள்கள் மற்றும் ஞானியின் போர் என்றென்றைக்குமே அற்றதாக, விளங்குகின்ற பிரம்மம்சமாதியில் ஆழ்ந்திருக்கும் ஞானியின் இதயத்தில் பிரகாசிக்கிறது.
இந்த அனுபவம் வரும்போது உலகம் முற்றிலும் மறைந்துவிடும்.
இது சத்தியப் பரம்பொருள் அறியப்படாதது. அறிய முடியாதது. இதை நான் ஆஜ்ஞேயவாதி சொல்லும் பொருளில் சொல்லவில்லை. அவரை அறிய முடியும் என்று கூறுவது அபசாரம்,ஏனெனில் நீங்களே அவர். பிரம்மம் இந்த மேஜை அல்ல. ஆனாலும் மேஜைதான், நாம ரூபங்களை எடுத்துவிட்டால் எஞ்சியிருக்கும் உண்மைப்பொருளே பிரம்மம், அனைத்திலும் உள்ள உண்மை அதுவே- இவற்றையெல்லாம் ஏற்கனவே நாம் கண்டோம்.
நீயே பெண், நீயே ஆண், நீயே இளைஞன், நீயே யுவதி, நீயே தடியை ஊன்றி நடக்கும் கிழவன், நீயே பிரபஞ்சத்தின் அனைத்துமாக இருக்கிறாய், அத்வைத்தின் கருத்து இதுவே. இன்னும் ஓரிரு வார்த்தைகள், பொருட்களின் சாரம் என்பதன் விளக்கம் இதில் தான் உள்ளது என்பதை நாம் காணலாம். இங்கு மட்டுமே தர்க்கங்களையும் விஞ்ஞான ஆராய்ச்சிகளின் தாக்குதல்களையும் எப்படி நாம் உறுதியாக எதிர்கொள்ள முடியும் என்பதை நாம் கண்டோம். இறுதியாக இங்குதான் ஆராய்ச்சிக்கு ஓர் உறுதியான அஸ்திவாரம் கிடைத்தது. ஆனால் இந்திய வேதாந்தி தான் ஏறிவந்த படிகளைச் சபிப்பதில்லை. அவற்றைத் திரும்பிப் பார்த்து ஆசீர்வதிக்கிறான். அவை எல்லாம் உண்மையானவை.ஆனால் தவறுதலாகக் காணப்பட்டு, தவறான மொழியில் கூறப்பட்டவை என்பதை அவன் உணர்கிறான். அவை அதே உண்மைதான். ஆனால் மாயை என்னும் கண்ணாடி மூலம் பார்க்கப் பட்டவை, அவ்வளவு தான். எனினும் அவை உண்மை, முற்றிலும் உண்மையே. எந்தக் கடவுளை, பாமரன் இயற்கைக்கு வெளியில் காண்கிறானோ, கொஞ்சம் அறிவுள்ளவன் பிபஞ்சத்தில் வியாபித்திருப்பதாகக் காண்கிறானோ, ரிஷி தமது சொந்த ஆன்மாவாக, பிரபஞ்சம் அனைத்துமாகக் காண்கிறாரோ, எல்லாமே அந்த பரம் பொருள்தான். பல்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்ட ஒரே பொருள் தான், மாயையென்னும் பல்வேறு கண்ணாடிகள் வழியாகப் பார்க்கப் படுகின்றன. பலவகைப்பட்ட மனத்தினரால் உணரப் படகின்றன. இதன் காரணமாகத்தான் இந்த வேறு பாடுகள் எழுந்தன.
அது மட்டுமல்ல, இவை ஒன்று மற்றொன்றுக்கு அழைத்துச் செல்பவையாக உள்ளன. விஞ்ஞானத்திற்கும் சாதாரண அறிவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? இருட்டில் வெளியே செல்லுங்கள். அங்கு அசாதாரண நிகழ்ச்சி ஒன்று நடந்து விட்டதென்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்குக் காரணம் என்னவென்று வழிப்போக்கர்களிடம் கேளுங்கள். பத்துக்கு ஒருவர் பேயைத் தான் காரணம் காட்டுவார்கள். அவர்கள் எப்போதுமே பேய் பிசாசு என்று வெளியிலேயே காரணம் தேடுகிறார்கள். காரியத்திற்கு வெளியில் காரணத்தைத்தேடுவது அறியாமையின் இயல்பு. ஒரு கல் விழுந்தால் போதும். அதை எறிந்து ஒரு பேய் என்பான் அறிவிலி.ஆனால் விஞ்ஞானம் தெரிந்தவனோ அது இயற்கை நியதி, புவியீர்ப்பு விசையால் நேர்ந்தது என்பான்
உலகெங்கும் விஞ்ஞானத்திற்கும் மதத்திற்கும் உள்ள சண்டை என்ன? புறத்தை ஆதாரமாகக் கொண்ட விளக்கக் குவியல்களால் மதங்கள் நிறைந்து கிடக்கின்றன. சூரியன் ஒரு தேவனின் ஆதிக்கத்தின் கீழ், சந்திரன் இன்னொருவரின் கீழ் என்று எல்லாமே ஒவ்வொரு தேவனின் ஆதிக்கத்தில் உள்ளன. மாறுதல்கள் எல்லாவற்றையும் உண்டாக்குவது ஒரு பூதம். இவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வது ஒரு கருத்தை- அதாவது இந்தப் பூதங்கள் எல்லாமே, இயற்கைக்கு வெளியில் உள்ளன என்பதைத்தான். விஞ்ஞானமோ ஒரு பொருளின் காரணத்தை அதன் இயல்பிலேயே ஆராய வேண்டும் என்று சொல்கிறது. விஞ்ஞான ஆராய்ச்சிகள் முன்னேற முன்னேற இந்த இயற்கை நிகழ்ச்சிகளுக்குக் காரணம் இந்தப் பூதங்களும் தேவர்களும் அல்ல என்பது கண்டுபிடிக்கப் பட்டது. தூல விஷயங்களில் விஞ்ஞானம் செய்த வேலையை, அத்வைதம் உலகில் செய்திருக்கிறது. அதனால் தான் அத்வைதம் அறிவுபூர்வமான மிகச்சிறந்த விஞ்ஞான நெறியாக இருக்கிறது. இந்த உலகம் அதற்கு வெளியிலுள்ள ஒரு தெய்வத்தாலோ அறிவில் சிறந்த வேறு யாராலோ உண்டாக்கப் பட்டதல்ல. தானே உண்டாகி, தானே வெளிப்பட்டு . தானே அழிகின்ற எல்லையற்ற பரம்பொருளே அது.” தத்வமஸி ச்வேதகேதோ ஓ சுவேதகேது , நீயே அது.
எனவே அத்வைதம், அத்வைதம் மட்டுமே விஞ்ஞான நெறியாக இருக்க முடியும். வேறு எதுவும் அல்ல என்பதை நீங்கள் காண்கிறீர்கள். அரைகுறையாகத் தற்காலப் படிப்பைப் பெற்றுவிட்டு, பலர் இன்று இந்தியாவில் விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் பற்றியும், நமது மதம் அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்றும் பலவாறாகப் பிதற்றி வருவதை நான் தினமும் கேட்கிறேன். நீங்கள் எல்லோரும் திரளாக முன்வந்து அத்வைதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். புத்தர் பெருமான் கூறியிருப்பது போல்,பஹு ஜன ஹிதாய பஹு ஜன ஸுகாய- பலரின் நன்மைக்காகவும், பலரின் மகிழ்ச்சிக்காகவும் ” இதனை உலகிற்கு எடுத்துரைப்பதற்கான துணிவு உங்களுக்கு இருக்கிறதா? இல்லையானால் நீங்கள் கோழைகள் என்றேநான் சொல்வேன். உங்கள் கோழைத் தனத்தைப்போக்கிக்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லையென்றால், உண்மையை ஏற்றுக் கொள்ள ப் பயந்து அதனை ஒரு சாக்குப்போக்காக வைத்திருக்கிறீர்கள் என்றால் இந்தச் சுதந்திரத்தைப் பிறருக்கும் அளியுங்கள். உருவத்தை வழிபட்டு வரும் அப்பாவிகளிடம் சென்று அவர்களின் நம்பிக்கையைக் குலைக்காதீர்கள். அவர்களைப்பேய் என்று அழைக்காதீர்கள், உங்கள் கருத்திற்கு ஒத்துவராத கருத்து உடையவர்களிடம் சென்று உங்கள் கருத்தைப்போதிக்காதீர்கள். நீங்கள் கோழைகள் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள், நீங்களே சமுதாயத்திற்குப் பயப்படுகிறீர்கள். பழைய மூடநம்பிக்கைகளுக்கு அஞ்சுகிறீர்கள் என்றால் இந்த மூடநம்பிக்கைகள் பாமரர்கள் மனத்தில் இன்னும் எத்தகைய பயத்தை உண்டாக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்.
இது தான் அத்வைதியின் நிலை. அனைவரிடமும் இரக்கம் கொள்ளுங்கள். உலகில் அனைவரும் கொள்கையளவில் மட்டுமல்லாமல், அனுபூதியிலும் அத்வைதிகளாக இருக்கும்படி, இறைவன் அருள் புரிவாரானால் , ஆகா, அது எவ்வளவு நன்றாக இருக்கும். அது நடக்காது என்றால் அதற்கடுத்த நல்ல காரியத்தைச்செய்வோம். கல்வியறிவு அற்றவர்களை , அவர் களால் இயன்ற அளவு படிப்படையாக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வோம். இந்தியாவில் மத வளர்ச்சிக்காக நாம் வைக்கும் ஒவ்வோர் அடியும் முன்னேற்றப் பாதையிலேயே நம்மை அழைத்துச்செல்கிறது. அந்த முன்னேற்றம் தீமையிலிருந்து அழைத்துச்செல்கிறது. அந்த முன்னேற்றம் தீமையிலிருந்து நன்மைக்கல்ல, நன்மையிலிருந்து மேலான நன்மைக்குச் செல்வதே.
ஒழுக்க நெறிபற்றி மேலும் சில வார்த்தைகள் சொல்ல வேண்டியது அவசியம். அத்வைதம் மக்களை ஒழுக்க நெறியிலிருந்து பிறழச் செய்கிறதென்று நமது இளைஞர்கள் உளறுகிறார்கள். இதை அவர்கள் எங்குதான் கற்றார்களோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்! நாம் அனைவரும் ஒன்று, நாமேகடவுள் என்றால் நல்லொழுக்கம் என்ற ஒன்று அவசியமா என்ன? இது அவர்கள் கூறுவது. முதலில் இது காட்டுமிராண்டித்தனமான வாதம்., சவுக்கடியால் அடக்கி வைக்க வேண்டியவர்களின் பேச்சு. நீங்கள் அத்தகைய மிருகங்கள் என்றால் தற்கொலை செய்துகொள்வதே உங்களுக்கு நல்லது. சவுக்கால் கட்டுப்படுத்த வேண்டிய நீங்கள் மனிதர்கள் என்ற பெயரில் உலவுவதைவிட அது எவ்வளவோ மேல். சவுக்கு இல்லாவிட்டால் நீங்களெல்லாம் அசுரர்கள் ஆகிவிடுவீர்கள்! அது தான் நிலைமை என்றால் உங்களைக்கொன்று தான் போடவேண்டும். உங்களுக்கு எந்த உதவியும் வராது. நீங்கள் என்றுமே சாட்டை மற்றும் கம்பின் கீழ் தான் வாழவேண்டும். உங்களுக்குக் கதிமோட்சமே கிடையாது. நீங்கள் தப்பவே முடியாது.
இரண்டாவதாக அத்வைதம் மட்டுமே நன்னெறிக்கு விளக்கம் தருகிறது. பிறருக்கு நன்மை செய்வதே நன்னெறியின் சாரம் என்று எல்லா மதங்களும் போதிக்கின்றன. அது ஏன்?.சுயநலமற்றிரு. ஆம் என்றால், அவர் என் கடவுள் அல்லவே! சில சாஸ்திரங்கள் கூறுகின்றன என்பதற்காகவா? அவை சொல்லட்டும். எனக்கென்ன வந்தது? அவை நன்றாகச்சொல்லட்டும். அவை சொன்னால் எனக்கென்ன, அவனவன் சொந்த காரியத்தைப் பார்த்துக் கொள்ளவேண்டும். பலவீனர்கள் எப்படி வேண்டுமானாலும் தொலையட்டும்- இது தான் இன்றைய உலகில், பலருடைய நன்னெறியாக இருக்கிறது. நாம் ஏன் நன்னெறியைக் கடைபிடிக்க வேண்டும்?கீதை சொல்கின்ற உண்மையைத் தவிர வேறு எதன் மூலமும் அதை நீங்கள் விளக்க முடியாது- யார் எல்லா உயிர்களையும் தன்னிலும், தன்னை எல்லா உயர்களிலும் காண்கிறானோ, இவ்வாறு க்வுள் எல்லா உயிர்களிலும் இருப்பதாகக் காண்கின்றஅந்த ஞானி தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ள மாட்டான். யாரைத் துன்புறுத்தினாலும் நீங்கள் உங்களையே துன்புறுத்திக் கொள்கிறீர்கள். ஏனெனில் அவை எல்லாமே நீங்கள் தாம் என்று அத்வைதம் கூறுகிறது. நீங்கள் அறிந்தாலும் அறியாவிட்டாலும், எல்லா கைகள் மூலமாகவும் நீங்களே வேலை செய்கிறீர்கள். எல்லா கால்கள் மூலமாகவும் நீங்களே நடக்கிறீர்கள். அரண்மனையில் வாழ்ந்து இன்பம் அனுபவிக்கும் அரசனும், தெருவில் பிச்சையெடுத்துத் துயருறும் ஏழையும் நீங்களே. பாமரனிலும் பண்டிதனிலும் நீங்களே இருக்கிறீர்கள். பலவீனனிலும் பலசாலியிலும் நீங்கள் இருக்கிறீர்கள்! இதனை அறிந்து இரக்க மனம் கொள்ளுங்கள். இதனால் தான் நாம் ஒருவருக்கும் தீங்கிழைக்கக் கூடாது. இதனால் தான் நான் பட்டினி கிடந்தாலும் அதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அதே வேளையில் லட்சக்கணக்கான வாய்கள் மூலம் சாப்பிடுவதும் நானே அல்லவா! அந்த வாய்கள் அனைத்தும் என்னுடையவையே அல்லவா! எனவே எனக்கும் சரி எனது உடமைகளுக்கும் சரி என்ன நேர்ந்தாலும் , நான் அதற்காகக் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் இந்தப் பிரபஞ்சமே என்னுடையது தானே! எல்லா இன்பங்களையும் நானே அனுபவிக்கிறேன். என்னையும் சரி, பிரபஞ்சத்தையும் சரி, யார் அழிக்க முடியும். ? இங்கு தான் நன்னெறி உள்ளது. அத்வைதத்தில் மட்டுமே நன்னெறி விளக்கப் படுகிறது. மற்ற நெறிகள் போதிக்கலாம்ஆனால் காரணம் காட்ட அவைகளால் முடியாது. விளக்கங்களை இங்கே நிறுத்துவோம்.
இதனால் வரும் பலன் என்ன? வலிமை தான். உலகின் மீது நீங்கள் போர்த்தியிருக்கும் மனமயக்கம் என்ற திரையை அகற்றுங்கள். மனித இனத்தில் பலவீனமான எண்ணங்களையும் வார்த்தைகளையும் பரப்பாதீர்கள். எல்லா பாவங்களையும் எல்லா தீமைகளையும் பலவீனம் என்ற ஒரே வார்த்தையில் அடக்கிவிடலாம். எல்லா தீங்குகளுக்கும் காரணம் பலவீனம் மட்டுமே. எல்லா சுயநலங்களுக்கம் காரணம் பலவீனமே பலவீனத்தின் காரணமாகத் தான் ஒருவன் மற்றவனைத் துன்புறுத்துகிறான். பலவீனம் தான் ஒருவனைத் தன் உண்மை நிலையை விட்டு, வேறொருவனாகக் காட்டுமாறு செய்கிறத. தாங்கள் யார் என்பதை எல்லோரும் உணரட்டும். ஸோஹம்- நானே அவன்”- இந்த வலிமைக் கருத்தைக் குழந்தைகள் தாய்ப் பாலுடனேயே குடித்து வளரட்டும்-நானே அவன், நானே அவன். இந்தக் கருத்து தான் முதலில் கேட்கப்பட வேண்டும். பின்னர் அதை ஆழ்ந்து சிந்திக்கட்டும்.. இந்த நிலையிலிருந்து இந்த இதயத்திலிருந்து உலகம் இதுவரை கண்டிராத செயல்கள் பல பிறக்கும்.
தொடர்ச்சி...
.
நாம் செய்ய வேண்டுவது என்ன? அத்வைதம் செயல் முறைப்படுத்த முடியாதது என்று சிலர் சொல்கிறார்கள். அதாவது தினசரி வாழ்க்கையில் அந்தக் கருத்துக்களைப் பின்பற்ற முடியாது என்கிறார்கள். அவர்கள் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. வேதங்கள் கூறுவது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஓமித்யேகாஷரம் ஜ்ஞாத்வா யோ யதிச்சதி தஸ்ய தத் –
ஓம் , இதுவே பரம ரகசியம்.ஒம், இதுவே மேலான செல்வம். யார் ஓம் என்பதன் ரகசியத்தை உணர்வானோ, அவன் விரும்பிய அனைத்தையும் பெறுகிறான். எனவே இந்த ஓம் என்பதன் ரகசியத்தை முதலில் உணருங்கள். நீங்களே அந்த ஓம் என்பதை அறியுங்கள். இந்த ”தத்வமஸி” என்பதன் ரகசியத்தை உணருங்கள். அப்போது, அப்போது மட்டுமே நீங்கள் விரும்புபவை உங்களை வந்து சேரும். லௌகீகப் பெருமை பெற விரும்பினால், அந்தப் பெருமை உங்களிடம் இருக்கிறது என்று முதலில் நம்புங்கள். நான் சிறிய குமிழியாக இருக்கலாம். நீங்கள் மலையளவு பெரிய அலையாக இருக்கலாம். ஆனால் இருவருக்கும் அடிப்படை அந்த எல்லையற்ற கடலே. நமது, சக்தியின் , நமது ஆற்றலின் ஆதாரம் அந்த எல்லையற்ற பரம்பொருள் தான். நீர்க்குமிழியான நானும் மலையளவு பெரிய அலையான நீங்களும் இருவருமே அதிலிருந்து வேண்டிய அளவு பெற முடியும். எனவே முதலில் உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அத்வைத ரகசியம் இது தான்- முதலில் உங்களை நம்புங்கள்- பிறகு எதை வேண்டுமானாலும் நம்புங்கள்.
தங்களிடமே நம்பிக்கை கொண்ட நாடுகள் மட்டுமே வலிமையும் பெருமையும் அடைந்திருக்கின்றனஎன்பதை உலக வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. தன்னம்பிக்கை நிறைந்தவர்களே பலம் பெற்றுச் சிறப்பெய்தி இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு நாட்டின்
வரலாற்றிலும் காண முடியும். இந்தியாவிற்கு ஓர் ஆங்கிலேயன் வந்தான். அவன் ஒரு குமாஸ்தா மட்டுமே. வறுமையாலோ, வேறு எந்தக் காரணத்தாலோ தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்ய அவன் இரண்டு முறை முயன்றான். இரண்டு முறையும் தவறியபோத அவனுக்குத் தன்னம்பிக்கை பிறந்தது. தான் ஏதோ அரிய காரியங்களைச் செய்வதற்குப் பிறந்திருப்பதாக ஒரு நம்பிக்கை அவன் மனத்தில் உண்டாயிற்று. அந்த மனிதனே இந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அடிகோலிய கிளைவ் பிரவு. பாதிரிகள் கூறுவதை நம்பி, ஓ! கடவுளே, நான் பலவீனன், நான் தாழ்ந்தவன் என்று வாழ்நாள் முழுவதும் கூனிக்குறுகியபடி கதறிக் கொண்டிருந்தால் என்னவாகியிருப்பான்? பைத்தியக்கார விடுதிக்குத்தான் சென்றிருப்பான். இத்தகைய தீய போதனைகள் உங்களையும் பைத்தியக்காரர்களாக ஆக்கியுள்ளன. பணிந்து கிடக்கச் செய்கின்ற இந்தப் பலவீன போதைனைகள் மனித இனத்திற்கு எவ்வளவு தீமைகளை விளைக்கின்றன என்பதை நான் உலகம் முழுவதிலும் பார்த்திருக்கிறேன். இவ்வாறு வளர்க்கப் படும் நம் குழந்தைகள் அரைப் பைத்தியங்களாவதில் ஆச்சரியம் ஏதும் உண்டா என்ன?
செயல்முறைப் பகுதிக்கான பாடம் இது.எனவே உங்களை நம்புங்கள். செல்வம் வேண்டுமானால் , அதற்காக ப் பாடுபடுங்கள், அது உங்களை வந்துசேரும். அறிவாளிகளாக விரும்பினால் அறிவுநிலையில் பாடுபடுங்கள். நிச்சயமாக உயர்ந்த அறிவாளிகள் ஆவீர்கள். முக்தியை விரும்பினால் ஆன்மீக நிலையில் பாடுபடுங்கள். நிச்சயமாக முக்தி பெறுவீர்கள். நிர்வாணத்தை அடைவீர்கள். பேரின்பம் பெறுவீர்கள். அத்வைதத்திலுள்ள ஒரு குறை. இது வரை அது ஆன்மீகத் துறையில் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்தது தான். வேறு எங்கும் அதுபின்பற்றப்படவில்லை. அதனைச்செயல்முறைப்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது. இனிமேலும் அது ரகசியமாக இருக்கக் கூடாது. இமய மலைகளின் காடுகளிலும் குகைகளிலும் வசிக்கும் துறவியரிடம் மட்டுமே அவை இருக்கக் கூடாது. சாதாரண மக்களின் தினசரி வாழ்க்கையிலும் அவை புகுந்து வேலை செய்ய வேண்டும். மன்னனின் அரண்மனையிலும், முனிவரின் குகைகளிலும் ஏழையின் குடிசையிலும் , தெருவில் திரியும் பிச்சைக்காரனிடமும் எல்லா இடங்களிலும் , எல்லா மக்களாலும் அது பின்பற்றப்பட வேண்டும்.நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி,சூத்திரராக இருந்தாலும் சரி, பயம் வேண்டாம். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அருளியிருப்பது போல் இந்தப் பாதை மகத்தானது. சிறிதளவு இதைப் பின்பற்றினால் கூட அது மகத்தான பயனை அளிக்கும்.
ஆதலால் , ஆரியர்களின் அருமைக்குழந்தைகளே! சோம்பியிருக்காதீர்கள். விழித்திருங்கள். எழுந்திருங்கள். நோக்கம் கைகூடும் வரை நிற்காதீர்கள். அத்வைதத்தைத் தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய காலம் இது. அதை விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்குக்கொண்டு வருவோம். இது தான் இன்றைய செய்தி.ஆம், விண்ணிலிருந்து அதனை மண்ணிற்குக்கொண்டு வரவேண்டும் என்ற இந்தச் செய்தியையே நமது முன்னோர்களின் குரலும் நமக்குக் கூறுகின்றன. உங்கள் போதனைகள் உலகை வியாபிக்கட்டும். சமுதாயத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்று அடையட்டும், எல்லோருடைய பொது உடைமையாகட்டும், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் புகட்டும், நரம்புகளில் நுழைந்து ஒவ்வொரு துளிரத்தத்திலும் கலந்து துடிக்கட்டும்.
அமெரிக்க மக்கள் நம்மைவிட ச் சிறந்த செயல்முறை வேதாந்திகள் என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். நான் நியூயார்க் கடற்கரையில் நின்று கொண்டு, பல நாடுகளிலிருந்தும் அமெரிக்காவிற்குக் குடியேற வரும் மக்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் வரும்போது மொத்துண்டு, மனம் தளர்ந்து, நம்பிக்கை இழந்து, யாரையும் நிமிர்ந்து பார்க்கவும் தைரியம் அற்றவர்களாக, சிறிய துணி மூட்டை ஒன்றையே தங்கள் மொத்த உடைமையாகக்கொண்டு, கந்தலை உடுத்திக்கொண்டு வருவார்கள்.போலீசைப் பார்த்தாலே நடுங்கி நடைபாதையின் அந்தப் பக்கம் சென்று விடுவார்கள்.அனால் அது ஆறு மதங்களுக்குத்தான். அதற்குள் அவர்களிடம் பெரிய மாறுதல் ஏற்பட்டு விடும். நிமிர்ந்த நடை, நல்ல உடை, எவரையும் முகத்தைப் பார்த்து பேசும் தைரியம் என்று மாறிவிடுகிறார்கள். ஆச்சரியமான இந்த மாறுதலைச் செய்தது எது? அவன் அர்மீனியாவையோ,வேறெந்த இடத்தையோ சேர்ந்தவன் என்று வைத்துக்கொள்வோம். அங்கு அவன் சொல்லொணாத அளவிற்கு நசுக்கப் பட்டான். அடிமையாகப் பிறந்த அவன் அந்தத் தாழ்ந்த நிலையிலேயே ஆயுள் முழுவதும் இருக்கவேண்டும் என்றே அனைவரும் கூறினார்கள். தன்னை உயர்த்திக்கொள்ள அவன் செய்த ஒவ்வொரு முயற்சியும் ஒடுக்கப் பட்டது.” அடிமையே , நீ ஓர் அடிமை”. அப்படியே இரு. இழிந்தவனாகப் பிறந்தாய். அப்படியே இரு” என்றே ஒவ்வொன்றும் அவனிடம் கூறியது போலிருந்தது. வீசிய காற்றும் கூட, உனக்குக் கதியே கிடையாது. நீ அடிமையாகவே , திக்கற்றவனாகவே இருக்க வேண்டியது தான்” என்று முணுமுணுத்துச்சென்றதுபோலிருந்தது. பலசாலிகள் அவனது வாழ்க்கையை கசக்கிப் பிழிந்தார்கள். ஆனால் நியூயார்க் தெருக்களில் அவன் நடந்து சென்றபோது, மிடுக்கான கனவான் ஒருவர் அவனிடம் கைகுலுக்குகிறார்.அவன் கந்தல் உடுத்தியிருந்தான். அவர் நல்ல உடை அணிந்திருந்தார். அது எந்த வேற்றுமையையும் ஏற்படுத்தவில்லை. சிறிது தூரம் சென்றதும் உணவு விடுதி ஒன்றிற்குச் செல்கிறான். அங்கு நல்ல உடை அணிந்திருக்கும் கனவான்களுடன் அதே மேஜையில் அவனுக்கும் உணவு கொடுக்கப் பட்டுஉணவு பரிமாறப்படுகிறது. இவ்வாறு பல இடங்களுக்குச் சென்றதில் அவன் புதிய வாழ்க்கை ஒன்றையே கண்டடைந்தான். மனிதர்களுக்கிடையே அவனையும் ஒரு மனிதனாக நடத்தப் படுகின்ற ஓர் இடம் அவனுக்கு க் கிடைத்து விட்டது. ஒருவேளை அவன் வாஷிங்டனுக்குச்சென்றால் அமெரிக்க அதிபர் அவனுடன் கைகுலுக்கி இருக்கலாம். தூரத்திலுள்ள பல கிராமங்களிலிருந்து சாதாரண உடை அணிந்து வந்திருந்த குடியானவர்க