இலங்கை-கொழும்பில்
..........
மேலை நாடுகளில் பணி ஆற்றிய பின்னர் சுவாமி விவேகானந்தர் 1897, ஜனவரி 15-ஆம் நாள் பிற்பகலில் கொழும்பு வந்து சேர்ந்தார். அங்குள்ள இந்துப்பெரு மக்கள் அவரை அரச மரியாதையுடன் வரவேற்றனர்.
சுவாமிஜி தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் குறிப்பிட்டு, அது ஒரு சிறந்த அரசியல்வாதிக்கோ போர்வீரனுக்கோ செல்வந்தனுக்கோ தரப்படவில்லை. மாறாக, பிச்சையேற்று வாழும் ஒரு துறவிக்கு அளிக்கப் பட்டுள்ளது. இதுவே மதத்தைப் பொறுத்தவரை இந்துக்களின் மனப்போக்கைக் காட்டுவதாக அமைகிறது என்கிறார். நமது நாடு வாழ வேண்டுமானால் மதமே தேசிய வாழ்க்கையின் முதுகெலும்பாக அமைய வேண்டும் என்பதை வற்புறுத்தினார். தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, ஒரு கொள்கைக்குக் கிடைத்த வரவேற்பே தவிர, தனி மனிதனுக்கு அளிக்கப்பட்டது அல்ல என்பதையும் சுவாமிஜி கூறினார்.
மறுநாள் பிற்பகல் பிளோரல் மண்டபத்தில் அவர் உரையாற்றினார்.
வரவேற்புக்குப் பதிலுரை
-
என்னால் செய்யப்பட்ட ஏதோ சிறிதளவு பணி என்னுள் இருக்கும் ஆற்றலால் செய்யப் பட்ட தல்ல. மிகுந்த அன்பிற்குரியதும் மிகப் புனிதமானதும் பிரியமானதுமான இந்த நமது தாய் நாட்டிலிருந்து என்னைத் தொடர்ந்து வந்த உற்சாக மொழிகளாலும் நல்வாழ்த்துக்களாலும் ஆசிகளாலுமே செய்யப்பட்டது. சிறிது நற்பணி நடைபெற்றதுள்ளது. உண்மைதான், ஆனால் எனக்குத் தான் அதனால் அதிக நன்மை விளைந்துள்ளது. ஏனெனில், ஒருவேளை என் உணர்ச்சிப்பெருக்கின் விளைவாக இருந்த என் பணி இப்போது திடவுறுதி பெற்றுள்ளது. அதைச் செயல்படுத்துவதற்கான வலிமையும் திறமையும் இப்போது எனக்கு வந்துள்ளது.
ஒவ்வோர் இந்துவும் நினைப்பதைப்போல் இந்த நாடு புண்ணிய பூமி, கர்ம பூமி என்று நானும் முன்பு நினைத்திருந்தேன், அவ்வளவு தான், நமது அவைத்தலைவரும் சற்று முன்பு அதையே குறிப்பிட்டார். ஆனால் இன்று, இதோ இங்கே நின்றுகொண்டு, அது அப்படியே உண்மை என்று உண்மையின் உறுதிப்பாட்டுடன் சொல்கிறேன். இந்த இந்த உலகத்தில் புண்ணிய பூமி என்று சொல்லத்தக்க ஒரு நாடு இருக்குமானால், தங்கள் வினைப்பயன்களைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒவ்வோர் உயிரும் வந்தாக வேண்டிய ஓர் இடம் இருக்கிறது என்றால், கடவுளைத்தேடிச் செல்கின்ற ஒவ்வொரு ஜீவனும் வந்து சேர வேண்டிய கடைசி வீடு ஏதாவது இருக்கிறது என்றால்., மென்மையிலும் தாராள மனப்பான்மையிலும் புனிதத்திலும் அமைதியிலும் , இவையனைத்திற்கும் மேலாக அக நோக்கிலும் ஆன்மீகத்திலும் மனித சமுதாயம் உச்சத்தை அடைந்த நாடு ஏதாவது உண்டென்றால் அது பாரதத் திருநாடே.
எனவே தான் மிகப் பழஙை்காலத்திலிருந்தே ஆச்சாரிய புருஷர்கள் இந்தப் பூமியைப் புனிதமான, வற்றாத ஆன்மீக வெள்ளத்தால் மீண்டும் மீண்டும் நிறைத்திருக்கிறார்கள். அதனால் தான் இங்கிருந்து கிளம்பிய தத்துவப்பேரலைகள் கிழக்கு, மேற்கு, வடக்கு , தெற்கு என்று உலகின் எல்லா திசைகளிலும் பரந்துள்ளன. அதனால் தான் உலகாயக் கலாச்சாரத்தை ஆன்மீகமயமாக்கப் போகின்ற அலையும் இங்கிருந்து தான் எழுந்தாக வேண்டும். மற்ற நாடுகளிலுள்ள லட்சக்கணக்கான மக்களின் இதயத்தின் அடியாழங்களைச் சுட்டுப் பொசுக்குவதான உலகாயதப்பெருதீயைத் தணிக்கின்ற, வாழ்க்கை வளத்தை நல்குகின்ற நீர் இங்கே தான் உள்ளது. என்னை நம்புங்கள் நண்பர்களே, இது நடக்கத்தான் போகிறது.
இதை நான் காண்கிறேன். உங்களுள் மனித இனங்களின் வரலாற்றைப் படித்தவர்களுக்கு இந்த உண்மை தெரிந்திருக்கும். நமது தாய்த் திருநாட்டிற்கு இந்த உலகம் பட்டுள்ள கடன் அளவற்றது. ஒவ்வொரு நாடாகப் பாருங்கள். அமைதியான, சாதுவான இந்துவிற்குக் கடன்பட்ட அளவிற்கு உலகம் வேறெந்த இனத்திற்கும் கடன்பட்டதில்லை. சாதுவான இந்து”என்ற சொல் சிலவேளைகளில் குற்றம் சாட்டும் தொனியில் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் எந்தக் குற்றப் படுத்தலிலாவது அற்புதமான உண்மை ஒன்று எப்போதாவது மறைந்திருக்க முடியுமானால், அது, கடவுளின் ஆசீர்வதிக்கப் பட்ட பிள்ளையாக என்றென்றைக்கும் இருந்து வருகிறானே, அந்த இந்துவைக் குறிக்கின்ற, ”சாதுவான இந்து”என்னும் சொல்லில் தான் .
உலகின் மற்ற பகுதிகளில் கலாச்சாரங்கள் தோன்றியுள்ளன. வலிமையும் பெருமையும் வாய்ந்த இனங்களிலிருந்து மகத்தான சிந்தனைக் கிரணங்கள் அன்றும் இன்றும் எழுந்து பரந்துள்ளன. இனங்களுக்கிடையே அற்புதமான கருத்துக் கருவூலங்கள் அன்றும் இன்றும் பரிமாறப் பட்டுள்ளன. மகோன்னதமான உண்மை மற்றும் ஆற்றலின் விதைகள், முன்னேறி வருகின்ற தேசிய வாழ்க்கையின் பேரலைகளால் அயல்நாடுகளில் அன்றும் இன்றும் பரப்பப் பட்டுள்ளன.
ஆனால் நண்பர்களே, ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள். இவையனைத்தும் போர் முரசுகளின் காதைப் பிளக்கின்ற முழக்கங்களோடும் படைகளின் அணிவகுப்புகளோடுமே சாதிக்கப்பட்டன. ஒவ்வொரு கருத்தும் ரத்த வெள்ளத்தில் தோய்த்தே பரப்பப்பட்டது. லட்சக்கணக்கான நம் உடன் பிறந்தவர்களின் ரத்தத்தின் மீது நடந்து சென்றே ஒவ்வொரு சிந்தனையும் பரப்பப்பட்டது. வலிமைமிக்க அந்தக் கருத்துக்கள் சென்ற இடங்களில் எல்லாம், அவற்றைத்தொடர்ந்துலட்சக்கணக்கான நம் உடன் பிறந்தவர்களின் ரத்தத்தின்மீதே நடந்து சென்றே ஒவ்வொரு சிந்தனையும் பரப்பப்பட்டது. வலிமைமிக்க அந்தக் கருத்துக்கள் சென்ற இடங்களில் எல்லாம், அவற்றைத்தொடர்ந்து லட்சக்கணக்கானோரின் மௌன ஓலங்களும் அனாதைகளின் அழுகுரலும் விதவைகளின் கண்ணீரும் தான் எழுந்தன. மற்ற நாடுகள் முக்கியமாகத் தந்த பாடம் இது தான்.
ஆனால் இந்தியா ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அமைதியுடன் வாழ்ந்து வருகிறது. கிரீஷ் என்ற நாடு தோன்றும் முன்னேரே. ரோமப்பேரரசு கற்பனையில் கூட உதிக்கும் முன்னரே, இன்றைய இதே ஐரோப்பியரின் மூதாதையர் தங்கள் உடம்பு களில் நீல நிறச் சாயத்தைப் பூசிக்கொண்டு காடுகளில் வாழ்ந்த காலத்திலேயே இங்கே மிகச் சிறந்த வாழ்க்கை முறைகள் உருவெடுத்து விட்டன. அதற்கு முன்பு கூட, வரலாறு என்ற ஒன்று இருந்ததற்கு ச் சான்றுகள் இல்லாத காலத்திலிருந்தே, கடந்த காலத்தின் இருண்ட கருவறைக்குள் தங்கள் பார்வையைச் செலுத்தப் பாரம்பரியங்கள் அஞ்சி நிற்கின்ற அந்தக் காலத்திலிருந்தே இன்றுவரையில், ஒன்றன் பின் ஒன்றாகச் சிந்தனைப்பேரலைகள் இந்தியாவிலிருந்து அணிவகுத்து உலகெங்கும் சென்றுள்ளன. ஆனால் அந்த ஒவ்வொரு வார்த்தைகளும் உச்சரிக்கப் பட்ட போதெல்லாம், முன்னால் அமைதியும், பின்னால் ஆசிகளும் மட்டுமே விளைவாக இருந்தது. நாம் மட்டுமே பிற நாடுகளை வென்று அடிமைப்படுத்தாத இனமாக வாழ்கிறோம். அந்தப் பேராசிகளின் காரணமாகத் தான் நாம் இன்றும் வாழ்ந்து வருகிறோம்.
கிரேக்கப் படைகளின் அணிவகுப்பு முழக்கத்தைக்கேட்டு இந்தப் பூமியே அதிர்ந்த ஒரு காலம் இருந்தது. அந்தப் பழம்பெரும் நாடு இன்று அழிந்துவிட்டது. தனது பெருமையை எடுத்துச் சொல்வதற்குக் கூட ஒருவரின்றி பூமியிலிருந்தே மறைந்துவிட்டது. மதிப்பு வாய்ந்தவையாக இருந்த அனைத்தின் மீதும் ரோமானியர்களின் கழுகுக்கொடி உயர்ந்தோங்கிப் பறந்த காலம் ஒன்று இருந்தது. எங்கும் அதன் அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது. அந்த அதிகாரம் மனித குலத்தின் மீது சுமத்தவும் பட்டது. அதன் பெயரைக்கேட்டே இந்தப் பூமி நடுங்கியது. ஆனால் இன்று கேபிடோலின் குன்று உடைந்து சின்னாபின்னப் பட்டுக் கிடக்கிறது. சீசர்கள் ஆண்ட இடத்தில் சிலந்திகள் வலை பின்னுகின்றன. அது போலவே பல நாடுகள் பெரும் புகழுடன் எழுந்தன. செல்வச் செழிப்புடனும் மகிழ்ச்சிப் பேராரவாரத்துடனும் ஆதிக்க வெறியுடனும் கொடிய லட்சியங்களுடனும் வாழ்ந்தன. ஆனால் கண நேரத்திற்குத்தான், நீர் மேல் குமிழி போல் எல்லாம் மறைந்துவிட்டன. அவற்றின் அடையாளச்சுவடுகள் மட்டுமே இன்று மனித குலத்தின் நினைவில் நிழலாடுகிறது.
ஆனால் நாம் வாழ்கிறோம், மனு இன்று மீண்டும் வந்தால் கூட, தான் ஏதோ அன்னிய நாட்டிற்கு வந்துவிட்டதாக எண்ணி அவர் அஞ்சி நடுங்க வேண்டியிருக்காது. ஏனெனில் அவர் வகுத்த நியதிகளே இன்றும் உள்ளன. இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் அந்த நியதிகளைக் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஏதோ சிறிது மாற்றியிருக்கலாம். ஆனால் நமது சிந்தனை சக்தியின் விளைவாகக் காலங்காலமாக இருந்து வருகின்ற பழக்க வழக்கங்களும் நமது அனுபவங்களும் அழிவற்றவை போல் அப்படியே உள்ளன. காலப்போக்கில் துரதிஷ்டத்தின் எத்தனையோ பேரடிகள் ஒன்றன் பின் ஒன்றாக அவற்றின் மீது விழுந்தன. ஆனால் அந்த அடிகள் ஒவ்வொன்றும் அவற்றை மேலும் வலுவுடையவையாக, மேலும் நிரந்தரமானவையாகச் செய்தனவே தவிர, அவற்றைச் சற்றும் அசைக்கவில்லை. அவற்றின் மையப்பகுதி, அந்த இதயப் பகுதி, தேசிய வாழ்க்கையின் அடிப்படை ஆதார ஊற்று எங்கே உள்ளது என்பதை ஆராய்ந்து பார்த்தோமானால் அது இங்கே உள்ளது என்றே என் உலக அனுபவம் சொல்கிறது. இதை நம்புங்கள்! மற்ற நாடுகளுக்கு மதம் என்பது வாழ்க்கையின் எத்தனையோ அம்சங்களுள் ஒன்று. அரசியல் உள்ளது, சமுதாய வாழ்வின் சுகபோகங்கள் உள்ளன. பணத்தால் வாங்கக்கூடிய அதிகாரத்தால் சாதிக்கக்கூடிய எல்லாம் உள்ளன.புலன்களால் அனுபவிக்க முடிந்தவை எல்லாம் உள்ளன. இவற்றுக்கிடையே ஏற்கனவே சுக அனுபவங்களால் திகட்டிப்போன புலன்களுக்கு மேலும் கொஞ்சம் இன்பம் தருபவற்றைத்தேடுகின்ற தேடலுக்கு இடையே மதத்திற்கும் ஏதோ ஒரு சிறு இடம் உள்ளது அவ்வளவு தான்.
ஆனால் இங்கே இந்தியாவில் மதம் ஒன்று தான் வாழ்க்கை. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் நடந்தது பற்றி உங்களுள் எத்தனை பேருக்குத்தெரியும்? தெரிந்திருந்தாலும் அது ஏதோ ஒரு சிலருக்குத்தான். மேலை நாட்டின் சமுதாய அமைப்பை மாற்றுவதற்காக மகத்தான அரசியல் இயக்கங்களும் சோஷலிச இயக்கங்களும் முயற்சி செய்து வருவதைப் பற்றி உங்களுள் எத்தனை பேருக்குத் தெரியும்? நிச்சயமாக மிகச்சிலருக்கே. ஆனால் அமெரிக்காவில் சர்வமத மகாசபை ஒன்று கூடியது. அதில் கலந்து கொள்ள இந்துத் துறவி ஒருவர் அனுப்பப்பட்டார். இதை இங்கே ஒரு சாதாரணக்கூலியாள் கூட அறிந்திருப்பது எனக்குப் பிரமிப்பைத் தருகிறது. நமது பாதை எது, நமது தேசிய வாழ்க்கை எதை ஆதாரமாகக்கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. உலகைச்சுற்றி வருகின்ற, குறிப்பாக அன்னிய நாட்டு யாத்திரிகர்கள் எழுதிய நூல்களை நான் படிப்பதுண்டு. கீழை நாட்டு மக்களின் அறியாமையைப்பற்றி அவர்கள் ஏதேதோ எழுதியிருக்கிறார்கள். அதில் ஓரளவிற்கு உண்மை இருந்தாலும் பொய்யும் கலந்தே உள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் அல்லது ஜெர்மனியிலுள்ள ஒரு குடியானவனிடம், நீ எந்தக் கட்சியைச்சேர்ந்தவன்”என்று கேட்டால், தான் ரேடிகல் அல்லதுகான்சர்வேடிவ் கட்சியைச் சார்ந்தவன், இன்னாருக்கு ஓட்டளிக்கப் போகிறேன்” என்பதையெல்லாம் பளிச்சென்று கூறுவான். அமெரிக்கனாக இருந்தால், தான் ரிபப்ளிக் கட்சியைச் சார்ந்தவன் அல்லது டெமாக்ரடிக் கட்சியைச் சார்ந்தவன் என்பான். ஒரு வேளை வெள்ளிப் பிரச்சனையைப் பற்றி க்கூடச் சிறிது அறிந்திருப்பான். ஆனால், உன் மதம் எது? என்று கேட்டாலோ, ஏதோ ஒரு பிரிவின் பெயரைச்சொல்வான். தினமும் சர்ச்சுக்குப் போவதாகவும் கூறுவான். அவனுக்குத்தெரிந்தது அவ்வளவு தான். அது போதும் என்றே அவன் நினைக்கிறான்.
இந்தியாவை எடுத்துக்கொள்வோம். இங்குள்ள ஒரு குடியானவனிடம், உனக்கு அரசியலைப்பற்றி ஏதாவது தெரியுமா? என்று கேட்டுப்பாருங்கள். அது என்ன என்று கேட்பான் அவன். சோஷலிச இயக்கங்கள் பற்றியும் அவனுக்குத்தெரியாது முதலாளி- தொழிலாளி வர்க்கத்திற்கு இடையே உள்ள உறவு, அது இது என்பதெல்லாமும் அவனுக்குப் புரியாது. இவற்றைப் பற்றி அவன் கேள்விப்பட்டதும் இல்லை, அவன் கடினமாக உழைக்கிறான், வேண்டியவற்றைச் சம்பாதிக்கிறான் அவ்வளவு தான். ஆனால் அவனிடம், உனது மதம் எது? என்று மட்டும் கேட்டுப்பாருங்கள். நண்பா, அதை என் நெற்றியிலேயே இட்டிருக்கிறேன் பார், என்று தாமதமின்றிப் பதிலளிப்பான். மதத்தைப் பற்றி ஓரிரு விளக்கங்களைக்கூட அவனால் கொடுக்க முடியும். இது என் அனுபவம். இது தான் நமது தேசிய வாழ்க்கை முறை.
ஒவ்வொருவரும் சிலத்தனித்தன்மைகளைப்பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தான் வளர்வதற்கான ஒரு தனிப்பட்ட முறை உள்ளது. அவனது வாழ்க்கை கூட- இந்துக்களாகிய நாம் சொல்கிறோமே அது போல், முடிவற்ற தனது முற்பிறவிகளால் , வினைப்பயனால் நிர்ணயிக்கப்பட்ட- தனி வாழ்க்கையாகவே உள்ளது. கடந்த கால வினைகளின் மொத்தச் சுமையுடன் அவன் இந்த உலகிற்கு வருகிறான். முடிவற்ற அந்தக் கடந்த காலம் நிகழ்காலத்தை
நிர்ணயிக்கிறது. நிகழ்கால வாழ்க்கையை நாம் பயன்படுத்துகின்ற விதம் எதிர்காலத்தை உருவாக்குகிறது. இவ்வாறு இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு வருக்கும் தனிப் பாதை உள்ளது. அவன் எந்தத் திசையில் போக வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பது நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
தனி மனிதனின் விஷயத்தில் எது உண்மையோ அது ஓர் இனத்தைப்பொறுத்த வரையிலும் உண்மை. எனவே ஒவ்வோர் இனத்திற்கும் ஒரு தனிப்பண்பு உள்ளது. அது இருப்பதற்குத் தனிக் காரணம் உள்ளது. இந்த உலகத்தில் நடத்தி முடிக்க அதற்கென்று தனிப்பணியும் உள்ளது. தன் லட்சியத்தை அந்த இனமே முடிவு செய்ய வேண்டும். அது வே அதனைச் சாதிக்கவும் வேண்டும்.
அரசியல் மகோன்னதமோ ராணுவ அதிகாரமோ நம் இனத்தின் தனிச் செய்திஅல்ல. அப்படி இருந்ததும் இல்லை. இருக்கவும் இல்லை. என் வார்த்தையைக் குறித்துக்கொள்ளுங்கள்., இனி இருக்கப்போவதும் இல்லை. ஆனால் நமக்கென்று மற்றொரு லட்சியம் தரப்பட்டிருக்கிறது. அது, நம் இனத்தின் எல்லா ஆன்மீக சக்தியையும் ஒன்று திரட்டி, அதனைப் பாதுகாத்து அதை ஒரு ”டைனமோ”விற்குள் சேமிப்பது போல் சேமித்து, ஒருங்கிணைந்த அந்தச் சக்தியை, தகுந்த வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், உலகம் முழுவதும் வெள்ளம் போல் பெருக்கெடுக்கச் செய்வதாகும். பார சீகனும் கிரேக்கனும் ரோமானியனும் அரேபியனும் ஆங்கிலேயனும் படைகளைநடத்தட்டும். உலகை வெல்லட்டும், அதன் மூலம் வெவ்வேறு நாடுகளை இணைக்கட்டும். அந்த இணைப்புப் பாதையின் வழியாக இந்தியாவின் தத்துவமும் ஆன்மீகமும் உலக நாடுகளின் நாடிநரம்புகளுள் பாய்வதற்குத் தயாராக இருக்கும். மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் இந்துவின் அமைதியான மூளையும் தன் பங்கைக் கொடுத்தே ஆகவேண்டும். ஆன்மீக ஒளியே உலகிற்கு இந்தியாவின் நன்கொடையாகும்.
இவ்வாறே கடந்த காலங்களில் நடந்துள்ளது. எப்போதெல்லாம் உலகை வெல்லும் ஒரு நாடு தோன்றி பல்வேறு இன மக்களை வென்று, இந்தியாவை அவைகளோடு இணைத்ததோ, தனக்குள் ஆழ்ந்திருந்தது போலிருந்த இந்தியாவைத் தனிமையிலிருந்தும் ஒதுக்கிய நிலையிலிருந்தும் விலக்கி உலகத்தோடு ஒன்று சேரும்படி வைத்ததோ, அப்போதெல்லாம், அத்தகைய சூழல் உருவாக்கப்பட்ட போதெல்லாம் , அதன் விளைவாக உலக நாடுகள் முழுவதும் இந்திய ஆன்மீகம் பாய்ந்து சென்று பரவி இருக்கிறது.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெர்மனியின் சிறந்த தத்துவ ஞானியான ஷோபனேர் வேதங்களின் லத்தீன் மொழிபெயர்ப்பைப் படித்தார். அது முதலில் பாரசீக மொழியிலும் பின்னர் அதிலிருந்து பிரெஞ்சு இளைஞன் ஒருவனால் லத்தீனிலும் மொழிபெயர்க்கப் பட்டது. அவ்வளவு சிறப்பான மொழிபெயர்ப்பாக அதனைக் கருதுவதற்கில்லை. இருப்பினும் அதைப் படித்த பின் அவர், உபநிடதங்களைப்போல் நன்மையளிப்பதும் உன்னதமான நிலைக்கு அழைத்துச் செல்வதுமான நூல் எதுவும் இல்லை. அது என் வாழ்விற்கு அமைதியைத் தருவதாக உள்ளது. என் மரணத்திற்கும் அமைதியை அளிப்பதாக இருக்கும்“ என்று கூறியுள்ளார்.
இந்த மகத்தான ஜெர்மானியப் பேராசிரியர் முன்பே தீர்க்க தரிசனமாக, கிரேக்க இலக்கியங்களால் உலகச் சிந்தனையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியைவிட மிக ஆற்றல் வாய்ந்த, மிகவும் தீவிரமான சிந்தனை மறுமலர்ச்சி ஏற்படப்போவதை உலகம் காணப்போகிறது”என்று கூறினார். இப்போது அவரது வார்த்தைகள் உண்மையாகிக்கொண்டிருக்கின்றன. யாரெல்லாம் கண்களைத் திறந்து வைத்துள்ளனரோ, யாரெல்லாம் மேலைத் திசையில் உள்ள பல்வேறு நாட்டு மக்களின் மனப் போக்குகளைப் புரிந்து கொண்டார்களோ. யாரெல்லாம் பல்வேறு நாடுகளைப் பற்றிப் படிக்கின்ற சிந்தனையாளர்களோ, அவர்கள், மெதுவாக ஆனால் தொடர்ச்சியாக எல்லா இடங்களிலும் பரவிக்கொண்டிருக்கின்ற இந்த இந்தியச் சிந்தனைகளால் உலக இலக்கியங்களின் கண்ணோட்டமும் போக்கும் வழிமுறைகளும் வெகுவாக மாறி வருவதைக் காண்பார்கள்.
ஆனால் முன்பு நான்கோடிகாட்டியதுபோல் மற்றொரு விசித்திரம் இதில் உள்ளது. நாம் ஒரு போதும் நம் கருத்துக்களை வாள் மூலமோ பரப்பவில்லை. இந்தியா உலகிற்கு தந்த கொடையை விளக்குவதற்கு ஒரு சொல் ஆங்கில மொழியில் இருக்கிறதென்றால், இந்திய இலக்கியங்களால் மனித சமுதாயத்தில் ஏற்பட்ட விளைவுகளை விளக்குவதற்கு ஆங்கிலத்தில் ஒருசொல் இருக்குமானால் அது வசீகரம் என்பதே.அது திடீரென்று ஒருவரை அப்படியே பற்றிப் பிடித்துக்கொள்கின்ற கவர்ச்சி அல்ல. உணர முடியாத வகையில் ஒருவர் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற வசீகரம் அது.
இந்திய சிந்தனை. இந்தியப் பழக்க வழக்கங்கள், இந்திய தத்துவம், இந்திய இலக்கியம் முதலானவை எடுத்த எடுப்பில் பலருக்கு வெறுப்பைத் தருவதாக இருக்கும். ஆனால் அவர்கள் பொறுமையைக் கைக்கொள்ள வேண்டும்.தொடர்ந்து படிக்க வேண்டும். அந்தக் கொள்கையின் அடிஊற்றாக ஓடுகின்ற மகத்தான கருத்துக்களோடு நெருங்கிய தொடர்பு கொள்ளவேண்டும். அப்போது நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது பேரும் அதன் தாக்கத்தைப் புரிந்து கொள்வார்கள். அந்த வசீகரத்தை உணர்வார்கள். அதிகாலையில் மெதுவாக அமைதியாக உதிர்கின்ற பனித்துளிகளைக் காணவோ கேட்கவோ முடியாது. இருந்தாலும் அவை எத்தனை அற்புதங்களை நிகழ்த்தி விடுகின்றன. அமைதியான பொறுமையான, துயரத்தையே அனுபவித்து வந்துள்ள இந்த ஆன்மீக இனமும் அது போலவே உலகின் சிந்தனைப்போக்கில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு மீண்டும் திரும்பப்போகிறது. ஏனெனில் ஆற்றல் மிக்கவையாகவும் தகர்க்க முடியாதவை போலவும் தோன்றிய பழங்காலநம்பிக்கைகள் எல்லாம் இன்று நவீன விஞ்ஞானத்தின் கண்கூசுகின்ற ஒளி வெள்ளத்தில் வேருடன் சாய்க்கப் படுகின்றன. மனிதக் குலத்தின் கடமை இது தான் என்று பல்வேறு மதப் பிரிவுகளும் கவுத்தளித்த விசேஷ ஆணைகள் எல்லாம் அணு அணுவாகச் சிதறி, காற்றோடு காற்றாகக் கரைந்து மறைகின்றன. பழங்காலத்தைப் பற்றிய நவீன ஆராய்ச்சிகளின் கூர்மையான சம்மட்டி முனைகள் புராதனத்தின் குறுகிய கருத்துக்களை எல்லாம் பீங்கான் சில்லுகளைப்போல் நொறுக்கித் தூள் தூளாக்குகின்றன. மேலை நாட்டின் மதமோ அறிவற்றோரின் கைகளில் சிக்கிக் கிடக்கிறது. அதனால் அறிஞர்கள் மதத்தைச் சார்ந்த எதையும் வெறுப்போடு பார்க்கின்றனர். இந்த நிலையில் தான், இந்திய மனங்களின் மிகவுயர்ந்த ஆன்மீக லட்சியங்களின் வெளிப்பாடாக இருப்பதும், தத்துவ உண்மைகளின் சிகரங்களைத்தொடுகின்ற, அதே வேளையில் மக்களின் அன்றாட வாழ்வில் செயல்முறைப் படுத்தக் கூடியதாக இருப்பதும் ஆகிய இந்தியத் தத்துவ ஞானம் முன்னே வருகிறது. எல்லோரும் ஒன்றே என்னும் கருத்து, எல்லையில்லா தன்மை, அருவக்கொள்கை, மனிதனின் ஆன்மா அழிவற்றது என்னும் அற்புதக்கோட்பாடு, முன்னேற்றத்திலுள்ள தடையற்ற தொடர்ச்சி பற்றி கூறும் கொள்கை, முடிவேயில்லாத அண்ட சராசரங்களைப் பற்றிக் கூறும் கொள்கை- இவை அவர்களை மீட்பதற்குத் தாமதமாகவே வருகின்றன.
உலகத்தை ஒரு சிறிய சேற்றுக்குட்டை என்றும், காலம் என்பது சில நாட்களுக்கு முன் துவங்கியது என்றும் பழங்கால மதங்கள் நினைத்து வந்தன. ஆனால் நம் சாஸ்திரங்களில் , நம் சாஸ்திரங்களில் மட்டுமே, முடிவேயில்லாத, மகத்தான காலத்தையும் பிரபஞ்சத்தைப் பற்றியும், தோற்றங்களின் காரணம் பற்றியும், இவற்றுக்கு எல்லாம் மேலாக மதங்களின் தேடலுக்கு முக்கியப்பொருளான ஆன்மாவின், மனிதனின் எல்லையற்ற பெருமை பற்றியும் குறிப்பிடப் பட்டுள்ளது.
தற்காலத்தில் பரிணாமக்கொள்கை, ஆற்றல் மாறாகக்கொள்கை முதலியவை, குருட்டுத்தனமான மதக்கோட்பாடுகளுக்கு மரண அடி கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் மனித மனத்தின் மிகச்சிறந்த கண்டு பிடிப்பான, ஆண்டவனின் அற்புதக் குரலான வேதாந்தம் கூறுகின்ற மிகவும் ஆச்சரியகரமான, நம்பிக்கையைத் தருகின்ற மனத்தை விரிவுபடுத்தகின்ற மகத்தான கருத்துக்களைத் தவிர வேறு எது பண்பட்ட மனித சமுதாயத்தின் அன்பைப்பெறுவதாக இருக்க முடியும்.
இந்தியாவிற்கு வெளியே உள்ள நாடுகளில் நமது மதம் செயல்படுகிறது என்று கூறினேன். இங்கு தான் மதம் என்று குறிப்பிடுவது, மதத்தின் கோட்பாடுகளை அதன் பின்னணியை, எந்த அடிப்படை மீது மதம் கட்டப் பட்டுள்ளதோ அந்த அடிப்படையை மட்டுமே. பல்வேறு விளக்கங்களோ, சமுதாயத்தின் தேவைகளுக்காகப் பல நூற்றாண்டுகளாக ஏற்படுத்திக்கொண்ட நுட்பமான கருத்துக்களோ, சமுதாய நலனிற்காக பழக்க வழக்கங்களுக்குக் கொடுத்த காரணகாரிய விளக்கங்களோ அந்த மதத்தில் இடம் பெறாது.
இரண்டு தனித்தனியான உண்மைகளை நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒன்று, என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகள். மனிதனின் இயல்பு, ஆன்மாவின் இயல்பு, இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பு இறைவனின் இயல்பு, பூரணத்துவம் போன்றவற்றின் மீது எழுப்பப்பட்டவை இவை. மேலும் பிரபஞ்சத்தின் படைப்பு, சரியாகச் சொல்வதானால் பிரபஞ்சத்தின் வெளிப்பாடு, பிறப்பு இறப்பாகிய சுழற்சி பற்றிய அற்புதமான விதி- இவை போன்றவையும் இதில் அடங்கும். இவையெல்லாம் இயற்கையில் காணப்படுகின்ற பிரபஞ்சம் தழுவிய நிலையான நியதிகளின் மீது அமைக்கப்பட்டவை.
மற்றொரு பகுதி அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படுகின்ற சாதாரண விதி முறைகள், அவை பெரும்பாலும் புராணம், ஸ்மிருதி முதலிய பகுதிகளைச் சார்ந்தவை. வேதங்களைச்சேர்ந்தவையல்ல. இந்த விதிகள் முதல்வகை உண்மைகளுடன் சிறிதும் தொடர்புடையவை அல்ல. நமது நாட்டில் கூட இந்த விதிகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. ஒரு காலத்தின், ஒரு யுகத்தின் பழக்கங்கள், மற்றொரு காலத்தின் , யுகத்தின் பழக்கங்களாக இருக்காது. யுகங்கள் மாறிமாறி வருவதற்கு ஏற்ப அவையும் மாறிக்கொண்டே இருக்கும். மாபெரும் ரிஷிகள் தோன்றி அந்த யுகத்தின் சூழலுக்கும் இயல்பிற்கும் தேவையான புதிய பழக்க வழக்கங்களை உருவாக்கி நம்மை வழிநடத்திச்செல்வார்கள்.
மனிதனையும் கடவுளையும் உலகையும் பற்றிய இந்த ஆச்சரியகரமான, முடிவே இல்லாத, உன்னதமான , மிகப் பரந்த கருத்துக்களின் அடிப்படையாக விளங்குகின்ற மகத்தான கோட்பாடுகள் இந்தியாவில் தோற்றுவிக்கப் பட்டன. இந்தியாவில் மட்டும் தான் மனிதன் பல்வேறு குழுக்களின் தெய்வங்களுக்காக என் தெய்வம் தான் உண்மை, உன் தெய்வம் உண்மையல்ல, இதைக் குறித்து நாம் கடுமையாகச் சண்டைசெய்வோம்”என்று மற்றவனை அறைக்கூவி சண்டைக்கு அழைக்கவில்லை. அத்தகைய எண்ணங்கள் இங்கு ஏற்படவே இல்லை. இந்த மகத்தான அடிப்படைக் கோட்பாடுகள், மனிதனின் அழிவற்ற இயல்பின் மீது எழுப்பப் பட்டுள்ளதால், அவை ஆயிரமாயிரம்ஆண்டுகளுக்கு முன்பு போலவே, இன்றும் மனித இனத்தின் நன்மைக்காகச் செயல்படும் திறன் படைத்தவை. அவ்வாறே இந்தப் பூமி இருக்கும்வரை, கர்ம நியதி இருக்கும்வரை நமது கர்மங்களை நமது ஆற்றலினாலேயே வாழ்ந்து முடிப்பதற்காக நாம் தனி மனிதர்களாகப் பிறந்து கொண்டிருக்கும் வரை அவை நிலைத்து நிற்கவும் செய்யும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா உலகிற்குக் கொடுக்க வேண்டியது இது தான். பல்வேறு இனங்களில் மதம் தோன்றி வளர்ந்த வரலாற்றை நாம் கவனித்தால், ஆரம்பத்தில் ஒவ்வோர் இனத்திற்கும் சொந்தமாக ஒரு தெய்வம் இருப்பதைக் காணலாம். ஒன்றுக்கொன்று சுமுகமான உறவுள்ள இனங்களின் தெய்வங்களின் பெயர்களிலும் பொதுமை இருக்கும்.பாபிலோனிய தெய்வங்களின் பெயர்களைப் பார்த்தால் இது புரியும். யூதர்கள் பல்வேறு இனங்களாகப் பிரிந்தபோது, அவர்களின் தெய்வங்கள் மொலாக் என்ற பொதுப்பெயரைப் பெற்றனர். அது போல் தான் பாபிலோனியர்கள் பிரிந்தபோது அவர்களின் தெய்வங்கள் பால் என்ற பொதுப்பெயரைப் பெற்றனர். இவர்களுள் ஓர் இனம் மற்ற இனங்களைவிட, ஆற்றல் பெறும்போது அந்த இனத்தின் அரசனே எல்லா இனங்களுக்கும் அரசன் ஆவான். அது போலவே அந்த இனம் தங்கள் தெய்வத்தை மற்ற இனங்களுக்கும் தெய்வம் ஆக்குகிறது. இப்படித்தான் பாபிலோனியர் பால்- மெரோடக் தான் உயர்ந்த தெய்வம், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று சொன்னார்கள். மொலாக்-யாவே மற்ற எல்லா மொலோக் தெய்வங்களுக்கும் மேலானவர். இந்தப் பிரச்சனைகள் போரின் வெற்றியால் தீர்மானிக்கப்பட வேண்டியிருந்தது.
இங்கேயும் இந்தப்போராட்டம் இருந்தது. இந்தியாவிலும் தெய்வங்கள் தங்கள் தலைமைக்காகப் போராடினர். ஆனால் இந்த நாட்டின் மகத்தான நற்பேற்றின் காரணமாகவும் உலகத் தின் நற்பேறு காரணமாகவும் அந்தச் கூச்சலுக்கும் குழப்பங்களுக்கும் இடையே ஒரு குரல் எழுந்து, ”ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி(இருப்பது ஒன்றே, மகான்கள் அதைப் பல பெயர்களால் அழைக்கிறார்கள்) என்று முழங்கியது. சிவன் விஷ்ணுவிற்கு மேலானவர், விஷ்ணு மட்டும் தான் எல்லா ஆற்றல்களையும் உடையவர். சிவபெருமான் ஒன்றுமே இல்லாதவர் என்பதெல்லாம் இல்லை. சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால் அழைக்கப் படுவது ஒரே கடவுள் தான். பெயர்கள் வேறு, ஆனால் இருப்பது ஒன்று தான். இந்தச் சின்னஞ்சிறு வாக்கியத்தில் இந்தியா முழுவதையும் படித்துவிடலாம்! வரலாறு முழுவதிலும் இந்த மையக்கருத்தே அற்புதமான மொழியில் மகத்தான ஆற்றலுடன் திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது. இந்தக் கருத்து நாட்டின் ரத்தத்தில் ஊறும் வரை, அதன் நாடி நரம்புகளில் ஓடுகின்ற ஒவ்வொரு சொட்டு ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்து துடிக்கும் வரை, உயிருடன் உயிராக மாறும்வரை, அது உண்டாக்கப் பட்டிருக்கிறதே, அந்தப் பொருட்களின் கூறுகள் அகைத்திலும் ஊடுருவும் வரை இந்தக் கருத்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வந்தது. அந்தக் காரணத்தால் நமது இந்தப் புராதனமான தாய்நாடு வியக்கத்தக்க பொறுமையின் உறைவிடமாக மாற்றப் பட்டு விட்டது. எல்லா மதங்களையும் எல்லா நெறிகளையும் தன்னிடம் வரவேற்கின்ற உரிமை பெற்றதாக விளங்குகிறது. இதற்கான நிரூபணத்தை, ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணானவைபோல் தோன்றுகின்ற மதப் பிரிவுகள் வியக்கத்தக்க சமரசத்துடன் நிலவுவதை இங்கே தான் காண முடியும். நீங்கள் துவைதியாக இருக்கலாம். நான் அத்வைதியாக
இருக்கலாம். நீங்கள் இறைவனின் நிலையான சேவகன் என்று உங்களை நம்பலாம். நான் என்னைக் கடவுளுடன் ஒன்றுபட்டவனாகக் கூறிக்கொள்ளலாம். என்றாலும் நாம் இருவரும் நல்ல இந்துக்களாகவே இருப்போம். இது எப்படி முடிகிறது? எகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி- இருப்பது ஒன்றே, மகான்கள் அதைப்பல பெயர்களால் அழைக்கிறார்கள். என்பது நம் மனத்தில் ஊறி இருப்பதால் தான். என் நாட்டு மக்களே! எல்லாவற்றுக்கும் மேலாக நாம் உலகத்திற்குப் போதிக்க வேண்டியது இந்த மகத்தான உண்மையைத்தான்.
பிற நாடுகளிலுள்ள பேரறிஞர்கள் கூட, நமது மதத்தை உருவ வழிபாடு என்று கூறித் தங்கள் மூக்குகளை 45 டிகிரி கோணத்தில் திருப்பிக் கொள்கிறார்கள். நான் நேரிலேயே அதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் தங்கள் மூளையில் எவ்வளவு மூட நம்பிக்கைகள் குவிந்து கிடக்கின்றன என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. கீழ்த் தரமான இந்தப் பிரிவினை வாதம் இன்னும் எல்லா இடங்களிலும் அப்படியே தான் இருக்கிறது.
தன்னிடம் இருப்பதே உயர்ந்தது, தகுதியானது, பணத்தையும் பண தேவதையையும் வணங்கி வாழ்கின்ற குறுகிய வாழ்க்கையே வாழத்தக்கது.தனதுசிறிய சொத்து மட்டுமே மதிப்பு வாய்ந்தது- வேறு எதுவும் தகுதியுடையதாக அவனுக்குத்தெரிவதில்லை. பயனற்ற ஏதோ ஒன்றைவெறும் களிமண்ணில் செய்து விடுவான். எந்திரம் ஒன்றைக் கண்டு பிடித்து விடுவான். அவ்வளவு தான், அதை மகத்தானதாக எல்லோரும் பாராட்ட வேண்டும் . இவ்வளவு அதிகமாகப் படிப்பும் சிந்தனையும் இருந்தும் உலகம் முழுவதும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. கல்வி என்பது இனி தான் வர வேண்டும். பண்பாடு- அது இதுவரை எங்கேயும் தோன்றவே இல்லை.99.9 சதவீத மக்கள் இன்றும் ஏறக்குறைய காட்டுமிராண்டிகள் போலவே உள்ளார்கள். விட்டுக் கொடுத்தல், மதங்களுக்கிடையே சகிப்புத்தன்மை என்றெல்லாம் புத்தகங்களில் படிக்கலாம்.- ஆனால் இதில் இம்மியளவுகூட உலகில் காணப்படவில்லை.- இது என் அனுபவம். நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேர் அது பற்றி நினைப்பது கூட இல்லை. நான் பார்த்த எல்லா நாடுகளிலும் மதத்தின் பெயரால் படுகொலைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. புதியனவற்றைக் கற்பதற்கும் கடுமையான தடைகள் முன்பு போலவே விதிக்கப் படுகின்றன.
மதங்களிடையே ஏதோ சிறிதளவு சகிப்புத்தன்மையும் ஏதோ சிறிது அனுதாபமுமாவது உலகில் காணப்படுகிறது என்றால், அது ஆரியர்களின் பூமியான இந்த இந்தியாவில் தான். வேறு எங்கும் இல்லை. இங்கே தான் இந்தியர்கள் முகமதியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கோயில்களைக் கட்டித் தந்திருக்கிறார்கள். வேறெங்கும் இல்லை. நீங்கள் வெளி நாடுகளுக்குச்சென்று அங்கு முகமதியர்களிடமோ மற்ற மதத்தினரிடமோ உங்களுக்காக ஒரு கோயிலைக் கட்டித் தரும்படி கேளுங்கள். அவர்கள் எப்படி உதவி செய்கிறார்கள் என்பதை அப்போது காண்பீர்கள். உங்களுக்காகக் கோயில் கட்டித் தருவதைவிட உங்கள் கோயில்களை இடிப்பதிலும் , முடிந்தால் உங்களையே தீர்த்துக் கட்டவும் தான் அவர்கள் முயல்வார்கள்.
உலகிற்கு இன்று மிக மிக த்தேவையானதும் , இந்தியாவிடமிருந்து அது கற்றுக் கொள்ள வேண்டியதுமான மகத்தான உண்மை சகிப்புத்தன்மை மட்டுமல்ல. அனுதாபமும் கூட, சிவ மஹிம்ன ஸ்தோத்திரம் கூறுவது, போல், பல்வேறு மலைகளிலிருந்து புறப்படுகின்ற ஆறுகள் நேராக ஓடினாலும், வளைந்து வளைந்து ஓடினாலும் இறுதியில் கடலையே சென்று அடைகின்றன. எனவே ஓ சிவபெருமானே! மனிதர்கள் தங்கள் மனநிலைக்கு ஏற்பத்தேர்ந்தெடுக்கின்ற பாதைகள் வெவ்வேறாகத் தோன்றினாலும் நேராகவே வளைந்தோ சென்றாலும் எல்லாம் உன்னை நோக்கியே வருகின்றன, பாதைகள் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் அனைவரும் செல்வது பாதையில் தான். சிலர் கொஞ்சம் வளைந்த பாதையில் செல்ல லாம். சிலர் நேரான பாதையில் செல்லலாம். எல்லோரும் ஒரே கடவுளிடம் தான் சென்று சேர்கின்றனர்.
சிவபெருமானை சிவலிங்கத்தில் மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் காணும்போது தான் அவரிடம் நீ கொண்ட பக்தி முழுமை பெறுகிறது. ஹரியை ஒவ்வொன்றிலும் , ஒவ்வொருவரிலும் யார் காண்கிறானோ அவனே ஹரியின் உண்மை பக்தன். நீ உண்மையான சிவ பக்தனாக இருந்தால் சிவனை ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரிலும் காணவேண்டும். வழிபாடுகள் எந்தப் பெயரில் இருந்தாலும் சரி, எந்த விதத்தில் இருந்தாலும் சரி, அவை அனைத்தும் ஒரே கடவுளுக்குச் செய்யப் படுகின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும். காபாவை நோக்கிப் பணிகின்ற, சர்ச்சில் முழந்தாளிடுகின்ற புத்தர் கோயிலில் மண்டியிடுகின்ற எல்லா கால்களும் , அவர் களுக்குத் தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி. அதை அவர்கள் உணர்ந்தாலும் சரி, உணராவிட்டாலும் சரி, அவை அந்த ஒரே இறைவனையே பணிகின்றன. எந்தெந்த வடிவங்களில், எந்தெந்தப் பெயர்களில் மலர்களை அர்ப்பித்தாலும், அவை அத்தனையும் அந்த ஒரே இறைவனின் திருவடிகளில் தான் இடப்படுகின்றன. ஏனெனில் எல்லோருக்கும் ஒரே தலைவர் அவரே, ஆன்மாக்களின் ஆன்மா அவரே, உலகிற்கு எது தேவையென்று உங்களையும் என்னையும் விட அவருக்கு மிக மிக நன்றாகவே தெரியும்.
வேற்றுமைகளே இல்லாமல் போவது என்பது முடியாத காரியம், அவை இருந்தேயாக வேண்டும். வேறுபாடுகள் இல்லையென்றால் வாழ்க்கையே இருக்காது. இந்த மோதல்தான், வேறுபட்ட இந்தக் கருத்துக்கள் தாம் தெளிவை உண்டாக்குகின்றன. எல்லாவற்றையும் இயக்குகின்றன. எல்லாவற்றையும் நடைபெறச்செய்கின்றன. வேற்றுமைகள் , முற்றிலும் முரணான வேற்றுமைகள் நிச்சயம் இருக்கவேண்டும். ஆனால் அதற்காக நாம் ஒருவரை ஒருவர் வெறுக்க வேண்டியதில்லை. ஒருவரோடு ஒருவர் போரிட வேண்டும் என்பதும் இல்லை.
எனவே இங்கே நமது தாய் நாட்டில் மட்டுமே போதிக்கப் பட்ட ஒரு சிறந்த மையக் கருத்தை நாம் மறுபடியும் கற்க வேண்டும். அது மறுபடியும் இந்தியாவிலிருந்து உலகத்திற்கு உபதேசிக்கப்பட வேண்டும் ஏன்? ஏனெனில் அது நம் நூல்களில் மட்டும் இருக்கின்றன என்பதில்லை. நம் தேசிய இலக்கியத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தேசிய வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அது உள்ளது. இங்கே, இங்கே மட்டும் தான் அது நாள் தோறும் நடைமுறையில் பின்பற்றப் பட்டது. கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு பார்க்கின்ற எந்த மனிதனும் அது இங்கு, இங்கு மட்டுமே நடைமுறையில் உள்ளதைக் காண்பான். இவ்வாறு நாம் உலகிற்கு மதத்தைப்போதித்தாக வேண்டும். இந்தியா போதிக்கத்தக்க மேலான வேறு போதனைகளும் உள்ளன. ஆனால் அவை அறிஞர்களுக்கு போதிக்கப் பட வேண்டியவை. சாதுத் தன்மை, மென்மை, மன்னிக்கும் குணம் சகிப்புத்தன்மை, அனுதாபம், சகோதரத்துவம் முதலியவற்றை ஜாதி மத இன வேறுபாடுகள் இல்லாமல் ஆண், பெண், குழந்தைகள் ,படித்தவர், பாமரர் என்று அனைவரும் கற்கலாம். இறைவா, உன்னை மக்கள் பல பெயரால் அழைக்கின்றனர் ஆனால் நீ ஒருவனே.!
..................
யாழ்ப்பாணத்தில்
-
கொமும்பிலிருந்து கண்டி அனுராதபுரம் ,வவுனியா வழியாக யாழ்ப்பாணம் சென்றார்சுவாமிஜி. வழியெங்கும் அவருக்கு விமரிசையான வரவேற்பு அழைக்கப்பட்டது. யாழ்ப்பாண இந்துக்கள் அளித்த வரவேற்புரைக்குப் பதிலளித்து , ஜனவரி 23-ஆம் நாள் மாலையில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் வேதாந்தம் என்னும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார் சுவாமிஜி. அதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.
-
வேதாந்தம்
-
விஷயமோ மிகவும் பெரியது, நேரம் மிகக் குறைவாகவே உள்ளது. ஒரு சொற்பொழிவில் இந்துக்களின் மதத்தைப் பற்றிய முழுமையான ஆராய்ச்சியை நடத்துவது என்பது முடியாதது. எனவேநமது மதத்தின் முக்கியக் கருத்துக்களை என்னால் இயன்ற அளவு எளிய மொழியில் உங்கள் முன் வைக்கிறேன்.
நம்மை நாம் இப்போது நாகரீகமாக அழைத்துக்கொள்கின்ற ஹிந்து என்ற வார்த்தை, அதன் முழுப்பொருளையும் இழந்துவிட்டது. ஏனெனில் இந்த வார்த்தை சிந்து நதிக்கு மறு பக்கத்தில் வாழ்ந்தவர்களைக் குறிப்பிடுகிறது. அவ்வளவு தான். சிந்து என்ற சொல் பழங்காலப் பாரசீகர்களால் சிதைக்கப்பட்டு ஹிந்து என்று ஆகியது. சிந்துநதிக்கு மறுபுறம் வாழ்ந்த அனைவரையும் அவர்கள் ஹிந்து என்றே அழைத்தார்கள். இவ்வாறு இந்தச்சொல் நம்மிடம் வந்தது. முகமதியர்கள் ஆட்சிக்காலத்தில் நாமும் இந்தப் பெயரை ஏற்றுக்கொண்டோம். இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதால் எந்தத் தீமையும் இல்லை. ஆனால் நான் முன்பே சொன்னது போல், அது தன் பொருளை இழந்து விட்டது. தற்காலத்தில் சிந்து நதிக்கு இந்தப் பக்கத்தில் வாழ்கின்ற எல்லா மக்களும் பழங்காலத்தைப்போல் ஒரே மதத்தைப் பின்பற்றவில்லை. எனவே இந்தச்சொல் தற்போது இந்துக்களை மட்டுமின்றி முகமதியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் என்று இந்தியாவில் வாழ்கின்ற அனைவரையும் குறிக்கிறது. அதனால் இங்கு இந்து என்ற சொல்லை நான்பயன்படுத்தப்போவதில்லை. அப்படியானால் எந்த வார்த்தையை உபயோகிப்பது? நாம் பயன்படுத்தத்தக்க வார்த்தைகள் இரண்டே. வைதீகர்கள், - வேதாந்தத்தைப் பின்பற்றுபவர்கள், அல்லது இதைவிட ச் சிறப்பாக வேதாந்திகள்- வேதாந்தத்தைப் பின்பற்றுபவர்கள்.
உலகின் சிறந்த மதங்களுள் பெரும்பாலானவை சில குறிப்பிட்ட நூல்களை ஆதாரமாகக்கொண்டுள்ளன. அவற்றுள் கூறப்பட்டுள்ளதை இறைவனின் வார்த்தைகள் என்றோ, இயற்கையைக் கடந்த சில தேவதைகளின் வாக்குகள் என்றோ அவர்கள் நம்புகிறார்கள். அவையே அவர்களது மதத்தின் அடிப்படையாக உள்ளன. இன்றைய மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துப்படி, இந்த நூல்களுக் மிகவும் பழமையானது இந்துக்களின் வேதங்களே. எனவே வேதத்தைப்பற்றிச்சிறிது அறிந்து கொள்வது அவசியமாகும்.
வேதங்கள் என்ற பெயரால் அழைக்கப் படுகின்ற நூற்களஞ்சியங்கள் மனிதர்கள் சொன்னவை அல்ல. அவற்றின் காலமும் நிர்ணயிக்கப்படவில்லை. நிர்ணயிக்கப் படவும் முடியாது. நம் கருத்துப்படி வேதங்கள் என்றுமே உள்ளவை. ஒரு முக்கிய விஷயத்தை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மற்ற மதங்கள் தங்கள் தோற்றத்திற்கு ஒரு தெய்வத்தையோ, பல மனிதர்களையோ, தேவதைகளையோ, இறைவனின் விசேஷ தூதர்களையோ காரணமாகக் காட்டி, குறிப்பிட்ட சிலர் மூலமாக அவர்கள் அந்த மதத்தை வெளிப்படுத்தியதாகக் கூறுகின்றன. இவ்வாறு தங்கள் அத்தாட்சியை நிலைநாட்டுகின்றன. ஆனால் இந்துக்களோ வேதங்களுக்கு அப்படியோர் அத்தாட்சியைக்கூறவில்லை. என்றென்றும் நிலையான இறைஞானத்தை அவை கூறுவதால் அவையும் அழிவற்றவை, அதனால் வேதங்களுக்கு வேதங்களே அத்தாட்சி என்று இந்துக்கள் கூறுகிறார்கள். அவை எந்தக் காலத்திலும் எழுதப்படவில்லை. காலங்காலமாக அவை இருக்கின்றன. எவ்வாறு படைப்பு தோற்றமும் முடிவும் இல்லாமல் எல்லையற்றதாகவும் நிரந்தரமாகவும் இருக்கிறதோ, அவ்வாறே இறையறிவும் தோற்றமும் முடிவும் இல்லாமல் என்றும் இருக்கிறது. இந்த அறிவுதான் வேதங்கள் (வித்- அறிதல்) என்று அழைக்கப்படுகிறது.
வேதாந்தம் என்ற பெயரால் அழைக்கப் படுவதான அறிவுக் களஞ்சியம், ரிஷிகளால் கண்டுபிடிக்கப்பட்டவை. ரிஷி என்றால் ”மந்த்ர த்ரஷ்டா அதாவது மந்திரத்தை, ஒரு சிந்தனையை நேரே கண்டவர் என்று கூறப்படுகிறது. அவர்கள் அந்தச் சிந்தனையைக் கண்டவர்களே தவிர, அந்தச் சிந்தனைகள் அவர்களுடையவை அல்ல. வேதாந்தத்தின் இன்ன பகுதி இன்ன ரிஷியிடமிருந்து வெளி வந்தது என்றால் அந்தப் பகுதியை அவர் எழுதினார் என்றோ, அவர் தம் மனத்திலிருந்து அதனை உருவாக்கினார் என்றோ நினைத்துக்கொள்ளாதீர்கள். ஏற்கனவே இருந்த சிந்தனையை அவர் கண்டார். அவ்வளவு தான், அது பிரபஞ்சத்தில் எப்போதும் இருக்கிறது. ரிஷி அதனைக் கண்டுபிடித்தவர். ரிஷிகள் ஆன்மீகக் கண்டுபிடிப்பாளர்கள்.
வேதங்கள் முக்கியமான க் கர்ம காண்டம், ஞான காண்டம், செயல் அல்லது சடங்குப்பகுதி, அறிவு அல்லது ஆன்மீகப்பகுதி- என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கர்ம காண்டம் பல்வேறு யாகங்களைப் பற்றிக் கூறுகிறது. தற்போதைய சூழ்நிலையில் செய்யப்பட முடியாதவை என்று அவற்றுள் பலவும் கைவிடப்பட்டுவிட்டன. எஞ்சியவை ஏதோ ஒரு விதத்தில் இன்றுவரை இருக்கவே செய்கின்றன. சாதாரண மனிதன், மாணவன், இல்லறத்தான், துறவி என்று வாழ்வின் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்கான கடமைகள் கர்மகாண்டத்தின் முக்கியக் கருத்துக்கள் ஆகும். இவை இன்றும் ஓரளவிற்கு வழக்கத்தில் உள்ளன.
நமது மதத்தின்ஆன்மீகப் பகுதி இரண்டாம் பகுதியான ஞான காண்டத்தில் உள்ளது. இதுவே வேதாந்தம், வேதங்களின் நிறைவு, வேதங்களின் சாரம், அதன் லட்சியம், வேதங்களின் சாரமான கருத்து வேதாந்தம் எனப்படுகிறது. இந்தப் பகுதியில் தான் உபநிடதங்கள் உள்ளன. துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்யம் என்று இந்தியாவிலுள்ள மதப்பிரிவுகள் எதுவாயினும், இந்து மதத்தின் ஒரு பிரிவாகத் தன்னைக் கூறத் துணிவுள்ள எந்த நெறியாயினும் அவை வேதங்களின் இந்த உபநிடதங்களைஏற்றுக் கொண்டாக வேண்டும். அவை அவற்றைத் தங்களுக்கு ஏற்றவாறு பொருள் கொள்ளலாம். ஆனால் உபநிடதங்களை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும். அதனால் தான் நாம் இந்து என்பதற்குப் பதிலாக வேதாந்தி என்ற சொல்லைப் பயன்படுத்த விரும்புகிறோம். இந்தியாவின் வைதீகத் தத்துவ அறிஞர்கள் அனைவரும் வேதாந்தத்தை ஏற்கத்தான் வேண்டும். தற்கால மதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றுள் சில வளர்ச்சி அடையாதவையாக இருக்கலாம். சில பயனற்றவை போலவே தோன்றலாம். ஆனால் அவற்றை ஆழ்ந்து படிப்பவர்கள், புரிந்து கொள்பவர்கள், அவையும் உபநிடதக்கருத்துக்களையே ஆதாரமாகக் கொண்டிருப்பதைக் காணலாம்.
இந்து மதத்தின் கீழ்நிலைப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் காணப்படுகின்ற சின்னங்களை ஆராய்ந்து பாருங்கள். அவற்றுள் பலவும் உபநிடதங்களில் உருவகமாகக் கூறப்பட்டிருப்பதைக்கண்டு ஆச்சரியமடைவீர்கள். இந்த உபநிடத உருவகங்களே காலப்போக்கில் சின்னங்களாக மாறின. அந்த அளவிற்கு ஆழமான உபநிடதங்கள் நம் இனத்தில் ஊறிப்போயிருக்கின்றன. உபநிடதங்களில் உள்ள உயர்ந்த ஆன்மீகச்சிந்தனைகளும் கருத்துக்களும் பல்வேறு சின்னங்களின் வடிவில் இன்றும் நம் வீடுகளில் வழிபடப்பட்டு நம்முடன் இருக்கின்றன. இவ்வாறு நாம் பயன்படுத்தி வருகின்ற சின்னங்கள் எல்லாமே வேதாந்தத்திலிருந்து வந்தவை தாம். வேதாந்தத்தில் அவை உருவகங்களாகக் கூறப்படுகின்றன. இவை நாடு முழுவதும் பரவி, இறுதியில் சின்னங்களாக ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றி விட்டன.
வேதாந்தத்திற்குப் பிறகு ஸ்மிருதிகள் வருகின்றன. இவையும் மகான்களால் எழுதப்பட்டவையே. ஆனால் அத்தாட்சியைப்பொறுத்தவரை இவை வேதாந்தத்திற்கும் அடுத்த படியில் உள்ளவை. மற்ற மதங்களுக்கு அவற்றின் சாஸ்திரங்கள் போல் நமது மதத்திற்கு உள்ளவை இவை. இந்த ஸ்மிருதிகள் சில குறிப்பிட்ட ரிஷிகளால் எழுதப்பட்டவை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இந்த நிலையில் தான் அவை பிற மத சாஸ்திரங்களைப்போன்றவை. ஸ்மிருதிகள் இறுதி அத்தாட்சி அல்ல. ஸ்மிருதிகள் வேதாந்தத்திற்கு மாறாக ஏதாவது இருக்குமானால் அதை ஒதுக்கி விட வேண்டும். அதன் அத்தாட்சி போய்விட்டது. இந்த ஸ்மிருதிகள் காலத்திற்குக் காலம் மாறிக்கொண்டே இருப்பதையும் நாம் காண்கிறோம். சத்திய யுகத்தில் இன்ன ஸ்மிருதி அத்தாட்சி பெற்றத. திரேதா யுகத்தில் இன்ன ஸ்மிருதி, அது போல் துவாபர யுகத்தில் சிலவும், கலியுகத்தில் சிலவும் அத்தாட்சி பெற்றிருந்தன என்றுநாம் படிக்கிறோம். ஸ்மிருதிகள் முக்கியமாக மக்களின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துபவை, காலத்திற்கேற்ப நாட்டின் அடிப்படைச் சூழல்கள் மாறி, வேறு சூழல்களின் ஆதிக்கம் ஏற்படும் போது, மக்களின் வாழ்க்கை முறை மாறுவதற்கு ஏற்றாற் போல் ஸ்மிருதிகளும் மாறும். இந்த விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
வேதாந்தக்கோட்பாடுகள் மாறாதவைஏன்? ஏனெனில் அவை மனிதனிலும் இயற்கையிலும் உள்ள மாறாத உண்மைகளின் அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ளவை. அவை ஒரு போதும் மாறாது. ஆன்மா பற்றிய உண்மைகள் மற்றும் சொர்க்கத்திற்குப்போவது போன்ற கருத்துக்கள் எப்போதுமே மாற முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அவை இருந்தது போலவே இன்றும் உள்ளன. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் இப்படியே தான் இருக்கும். ஆனால் சமுதாய நிலைகள், பரஸ்பரத்தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே முற்றிலும் அமைவதான சமயப்பழக்க வழக்கங்கள் சமுதாயம் மாறும்போது மாறியே தீரும். எனவே குறிப்பிட்ட ஒரு காலத்திற்குத்தான் நல்லவையாகவும் பொருத்த மானவையாகவும் அவை இருக்கும். மற்ற காலங்களுக்கு ஏற்புடையவையாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட உணவு ஒரு காலத்தில் உண்பதற்கு அனுமதிக்கப் பட்டது. அடுத்த கால கட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் அந்த உணவு பொருந்தவில்லை, கால நிலையும் மற்றச்சூழல்களும் மாறியது. வேறு பல சூழல்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. எனவே பிற்கால ஸ்மிருதிகள் உணவையும் பிறவற்றையும் மாற்றி விட்டன. இவ்வாறே காலத்திற்குக் காலம் மாறுதல்கள் ஏற்பட்டன. இன்றைய நமது சமுதாயம் ஏதாவது மாற்றங்களை விரும்பினால் அவற்றையும் செய்தாக வேண்டும். மகான்கள் தோன்றி அதனை எப்படிச்செய்வது என்பதைக் காட்டுவார்கள். ஆனால் நமது மதத்தின் கோட்பாடுகள் ஒரு துளி கூட மாறாது. அவை அப்படியே இருக்கும்.
பின்னர் வருபவை புராணங்கள் .புராணம் பஞ்ச லஷணம். புராணங்களை ஐந்து அடையாளங்களால் அறிந்து கொள்ளலாம். அவை வரலாறு, பிரபஞ்ச இயல், தத்துவக் கருத்துக்களுக்கு பல்வேறு உருவ விளக்கம் போன்றவை.வேதக்கருத்துக்களைப் பரப்புவதற்காக எழுதப்பட்டவை புராணங்கள்.வேதங்கள் எழுதப்பட்ட மொழி மிகவும் பழமையானது, அறிஞர்களுள் கூட ஏதோ சிலரால் தான் அந்த நூல்கள் எழுதப்பட்ட காலத்தைஅறிந்து கொள்ள முடியும். புராணங்கள் அக்கால மக்கள் பேசிய மொழியிலேயே எழுதப் பட்டுள்ளன. அந்தமொழியே இன்றைய நவீன சம்ஸ்கிருதம். அவை அறிஞர்களுக்காக எழுதப்பட்டவை அல்ல. சாதாரண மக்களுக்காக எழுதப்பட்டவை. சாதாரணமக்களால் தத்துவங்களை ப் புரிந்து கொள்ள முடியாது. அத்தகைய விஷயங்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மகான்கள், அரசர்கள் மற்றும் பிரபலமானவர்களின் வரலாறுகள் மூலமாகவும், அக்காலத்தில் அந்த இனத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்ச்சிகள் முதலியவற்றின் வாயிலாகவும் புராணங்களில் விளக்கப் படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு நிலையான தத்துவங்களை மகான்கள் புகட்டினார்கள்.
இவற்றைத் தவிர தந்திர நூல்கள் உள்ளன. இவை சில விஷயங்களில் புராணங்களைப்போலவே உள்ளன. இவற்றுள் சில கர்ம காண்டத்தில் உள்ள யாகம் பற்றிய பழைய கருத்துக்களைத் திரும்பவும் நடைமுறைக்குக்கொண்டு வருவதற்கான முயற்சி காணப்படுகிறது.
இந்த நூல்கள் அனைத்தும் சேர்ந்ததே இந்துக்களின் சாஸ்திரங்கள் . இவ்வளவு அதிகமான புனித நூல்கள் இருக்கின்ற ஒரு நாட்டில், தன் ஆற்றலின் பெரும் பகுதியை இத்தகைய தத்துவ நாட்டத்திலும் , ஆன்மீகச் சிந்தனைகளிலும் செலவிட்ட ஓர் இனத்தில்( எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக என்பது யாருக்கும் தெரியாது) அதிகமான இவ்வளவு மதப்பிரிவுகள் இருப்பது இயல்பானது. இன்னும் ஆயிரக்கணக்கில் இல்லாதது தான் ஆச்சரியம். அந்தப் பிரிவுகள் சில கோட்பாடுகளில் முற்றிலும் வேறுபடுகின்றன. அந்த வேறுபாடுகள் எல்லாவற்றையுமோ அவற்றின் ஆன்மீகக்கேட்பாடுகள் அகைத்தையுமோ அறிந்து கொள்ள நமக்கு நேரமில்லை. எனவே இந்தப் பிரிவுகள் அனைத்திற்கும் அடிப்படையானதும், ஒவ்வோர் இந்துவும் நம்பியே தீர வேண்டுவது மான சில கருத்துக்களை நான் பேச எடுத்துக்கொள்கிறேன்.
முதலாவது, படைப்பைப் பற்றியது, அதாவது இயற்கை பிரகிருதி, மாயை பற்றியது. மாயை எல்லையற்றது. தோற்றம் இல்லாதது. இன்ன நான் இந்த உலகம் உருவாக்கப் பட்டது.ஒரு கடவுள் வந்து இந்த உலகங்களைப் படைத்தார். அதன் பிறகு இன்றுவரை அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில்லை. ஏனெனில் அவ்வாறு நடக்க முடியாது. படைப்பாற்றல் இன்னும் இயங்கிக்கொண்டே தான் இருக்கிறது. கடவுள் எப்போதும் படைத்துக்கொண்டே இருக்கிறார். ஒருபோதும் ஓய்வு கொள்வதில்லை. நான் ஒரு கணம் ஓய்வெடுத்தாலும் இந்தப் பிரபஞ்சம் அழிந்துவிடும்” என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்வதை நினைவு கூருங்கள். நம்மைச்சுற்றி இரவும் பகலும் இயங்கிக்கொண்டே இருக்கின்ற
அந்தப் படைப்பாற்றல் ஒரு வினாடி நின்று போனாலும் எல்லாம் தரைமட்டமாகிவிடும். பிரபஞ்சம் முழுவதும் அந்தச் சக்தி இயங்காத நேரமே கிடையாது.
ஆனால் பிரளயம் அல்லது சுழற்சி நியதி என்பது உள்ளது. படைப்பிற்கான சம்ஸ்கிருதச்சொல்லை ச் சரியாக மொழிபெயர்த்தால் அது வெளிப்பாடு என்று பொருள்படுமே தவிர படைப்பு என்று பொருள் தராது. ஏனென்றால் ஆங்கில மொழியில் படைத்தல், என்ற சொல் சூன்யத்திலிருந்து ஏதோ ஒன்று தோன்றுதல், ஒன்றுமில்லாததிலிருந்து படைப்பு, இல்லாத ஒன்று இருப்பதாக மாறுதல் என்றெல்லாம், துரதிர்ஷ்டவசமாக, மிகவும் வேதனை தருகின்ற. முதிர்ச்சியற்ற பொருள்களைத் தருகிறது. இந்தக் கருத்தை நம்பும்படிக் கூறி உங்களை நான் இழிவுபடுத்த மாட்டேன். இதற்கு நம் சொல், வெளிப்பாடு என்பது. இந்த இயற்கை மொத்தமும் இருக்கிறது. பிறகு நுட்பமாகிறது, மறைகிறது. ஒரு குறிப்பிட்ட கால ஓய்விற்குப் பின்னர், வெளிப்படுவது போல் மீண்டும் எல்லா பொருட்களும் தோன்றுகின்றன. அதே சேர்க்கை, அதே பரிணாமம் , அதே வெளிப்பாடுகள் தோன்றுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலம் விளையாடல் நடைபெறுவது போல் தோன்றுகிறது. பின்னர், சேர்ந்த அனைத்தும் மீண்டும் சிதறி நுட்பமாகி, மேலும் நுட்பமாகி எல்லாம் மறைந்து விடுகிறது. மறுபடியும் வெளி வருகிறது. இவ்வாறு ஓர் அலையைப்போல் முன்னால் வருவதும் பின்னால் போவதுமாக காலங்காலமாக இந்த இயக்கம் நடைபெற்றுக்கொண்டேயிருக்கும்.
காலம், இடம், காரணம் எல்லாம் இந்த இயற்கைக்குள் தான் உள்ளன. எனவே இந்தப் பிரபஞ்சம் ஒரு காலத்தில் படைக்கப் பட்டது என்று சொல்வது சுத்த முட்டாள் தனம். அதன் தோற்றத்தைப் பற்றியோ முடிவைப்பற்றியோ எந்தக்கேள்வியும் எழ முடியாது. எனவே நம் சாஸ்திரங்களில் எங்கெல்லாம் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் முடிவு என்று வருகிறதோ அதனை ஒரு சுழற்சியின் தோற்றம் மற்றும் முடிவு என்று கொள்ள வேண்டும். இதுவே அதன் பொருள் வேறெதுவும் அல்ல.
எது இதனைப் படைத்தது? கடவுள், என்றும் இந்த ஆங்கிலச்சொல் மூலம் நான் எதைக் குறிப்பிடுகிறேன்? சாதாரணமாக அந்த வார்த்தை ஆங்கில மொழியில் கூறப்படும் பொருளில் அல்ல, நான் கொள்ளும் பொருளுக்கும் அதற்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது. அதனைக் குறிப்பதற்குப்பொருத்தமான வேறு ஆங்கிலச்சொல் எதுவும் இல்லை. எனவே பிரம்மம்” என்ற சம்ஸ்கிருதச் சொல்லையே பயன்படுத்துகிறேன். அவர் இந்த எல்லா வெளிப்பாடுகளுக்கும் பொதுக் காரணமாக இருக்கிறார்.
இந்த பிரம்மம் என்பது என்ன? அவர் என்றும் இருப்பவர். என்றும் தூய்மையானவர், என்றும் விழிப்போடு இருப்பவர். எல்லா ஆற்றலும் கொண்டவர், எல்லாம் அறிந்தவர், கருணை மயமானவர், எங்கும் நிறைந்தவர், உருவமற்றவர்.பிரிவு இல்லாதவர். அவர் இந்த ப் பிரபஞ்சத்தைப் படைக்கிறார். அவர் எப்போதும் படைத்துக்கொண்டும் காத்துக்கொண்டும் இருப்பதாகச்சொன்னால் இரண்டு சங்கடங்கள் எழுகின்றன.நாம் இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்றத் தாழ்வுகளைப் பார்க்கிறோம். ஒரு மனிதன் பிறந்ததிலிருந்தே மகிழ்ச்சியாக இருக்கிறான். மற்றொருவன் துயருறுகிறான். ஒருவன் பணக்காரனாக இருக்கிறான். மற்றொருவன் ஏழையாக இருக்கிறான். இது ஓர வஞ்சனையையே காட்டுகிறது. அதோடு படைப்பில் கொடூரம் இருக்கிறது. வாழ்க்கையின் நியதியே மரணமாக அல்லவா உள்ளது. ஒரு மிருகம் மற்றொரு மிருகத்தை நார்நாராகக் கிழிக்கிறது.ஒவ்வொருவனும் தன் சொந்த சகோதரனிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பறித்துக்கொள்ள முயல்கிறான். இந்தப்போட்டி, கொடூரம், பயங்கரம், ஏக்கப் பெருமூச்சுகள் எல்லாம் இரவும் பகலும் இதயங்களைக் கிழித்துக்கொண்டே இருக்கின்றன. இது தான் நமது உலகத்தின் நிலைமை, இது கடவுளின் படைப்பு என்றால், அந்தக் கடவுள் கொடூரத்தை விட மோசமானவர். மனிதனால் கற்பனை செய்ய முடிவதை விட மிகவும் பயங்கரமான பிசாசு அவர்.
ஆனால் இங்கே ஓரவஞ்சனை இருக்கிறது என்றால் போட்டி நிலவுகிறது என்றால் தேவறு கடவுள் மீது இல்லை என்கிறது வேதாந்தம். அப்படி என்றால் இவற்றை உண்டாக்குவது யார்? நாமே, மேகம் எல்லா நிலங்களின் மீதும் சமமாகவே மழையைப்பொழிகிறது.ஆனால் நன்றாக உழுது பண்படுத்தப்பட்ட நிலம் மட்டுமே அந்த மழையால்பலன் பெறுகிறது.பண்படுத்தப்படாத நிலமோ, நல்ல முறையில் கவனம் செலுத்தப்படாத நிலமோ மழையின் எந்தப் பலனையும் பெற முடியாது. அது மேகத்தின் குற்றம் அல்ல. அது போல் கடவுளின் கருணை நிரந்தரமானது. மாறாதது. நாம் தான் வேற்றுமைகளை உண்டாக்குகிறோம். ஆனால் பிறந்ததிலிருந்தே சிலர் மகிழ்ச்சியோடு இருப்பதையும், சிலர் துன்பத்தில் வாடுவதையும் எப்படி விளக்குவது? இந்த வேற்றுமையை உண்டாக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை. இந்தப் பிறவியில் ஒன்றும் செய்யவில்லை. உண்மைதான். ஆனால் சென்ற பிறவியில் செய்தார்கள். சென்ற பிறவியில் செய்தவை இந்தப் பிறவியின் நிலைமைக்கான காரணங்கள் என்பதே வேற்றுமைகளின் விளக்கம்.
எல்லா இந்துக்கள் மட்டுமின்றி, எல்லா பௌத்தர்களும் எல்லா சமணர்களும் ஏற்றுக் கொள்கின்ற இரண்டாவது கோட்பாட்டிற்கு இப்போது வருவோம்,நாம் எல்லோரும் வாழ்க்கை நிரந்தரமானது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஒன்றும் இல்லாததில் இருந்து இது வரவில்லை. அப்படி வரவும் முடியாது. அத்தகைய வாழ்க்கை வாழத் தகுந்ததும் அல்ல. காலத்தின் கட்டிற்குள் தோன்றுகின்ற எல்லாம் அதற்குள்ளேயே முடிந்தாகவேண்டும். வாழ்க்கை நேற்றுதான் துவங்கி இருக்குமானால் அது கட்டாயம் நாளை முடிவுக்கு வந்துவிடும். முழுமையான அழிவு தான் அதன் விளைவாக இருக்கமுடியும். வாழ்க்கை இருந்து கொண்டே இருக்கிறது. இதனை அறிந்து கொள்வதற்கு இன்று பிரமாதமான அறிவுக்கூர்மை தேவையில்லை. ஏனெனில் இன்றைய விஞ்ஞான முடிவுகள் எல்லாமே இந்த விஷயத்தில் நமக்குத் துணையாக உள்ளன. தூல உலகின் உதாரணங்களையே காட்டி அவை நமது சாஸ்திரங்களிலுள்ள கருத்துக்களை விளக்குகின்றன.
நாம் ஒவ்வொருவரும் முடிவற்ற கடந்த காலத்தின் விளைவு என்பது ஏற்கனவே உங்களுக்குத்தெரியும். கவிஞர்கள் கவிதைகளில் பாடி மகிழ்வார்களே, அவ்வாறு மின்னல் வெட்டுவது போல் இயற்கையின் கைகளிலிருந்து குழந்தை திடீரென உலகில் வந்து விடவில்லை. எல்லையற்ற கடந்தகாலம் என்னும் சுமை அவனிடம் உள்ளது. நல்லதற்கோ கெட்டதற்கோ, அவன் தன் கடந்தகாலக் கர்மங்களைக் கழிப்பதற்காக வந்துள்ளான். இந்தக் கர்மங்கள் தான் மக்களிடையே வேற்றுமையை உண்டாக்குகின்றன. இது கர்ம நியதி. நாம் ஒவ்வொருவரும் நமது சொந்த விதியை உருவாக்குபவர்களாக இருக்கிறோம். நமது வாழ்க்கையை வேறு யாரோ முன்பே வகுத்து வைத்திருக்கிறார்கள். விதிப்படிதான் எல்லாம் நடக்கும். என்றெல்லாம் கூறுவதை ஒரேயடியாக வீழ்த்திவிட்டு, இந்தக் கர்ம நியதி இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரே பாலமாகத் திகழ்கிறது.
நாம் துயருறுவதற்கு நாம்,நாமே தான் காரணம். வேறு யாரும் காரணம் அல்ல.நாமே விளைவுகள், நாமே காரணங்கள். எனவே நாம் சுதந்திரர்கள். நான் துன்பப்பட்டால் அது எனக்கு நானே உண்டாக்கிக்கொண்டது. நான் விரும்பினால் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதையும் இது காட்டுகிறது. நான் தூய்மையற்றவனாக இருந்தால் அதுவும் நான் செய்து கொண்டது தான். இதுவே, நான் விரும்பினால் தூயவனாக இருக்குமுடியும் என்பதையும் காட்டுகிறது. மனித சங்கல்பம் எல்லா சூழ்நிலைகளையும் கடந்து நிற்கிறது. அந்த வலிமையான, உறுதியான எல்லையற்ற சங்கல்பத்திற்கும் சுதந்திரத்திற்கும் முன்னால் எல்லா ஆற்றல்களும், இயற்கையின் ஆற்றல்கள் கூட, கட்டாயம் தலைவணங்கியே தீர வேண்டும். ஒடுங்கியாக வேண்டும், சேவகர்களாக வேண்டும். இது தான் கர்ம நியதியின் விளைவு.
இயல்பாகவே எழும் அடுத்த கேள்வி, ஆன்மா என்றால் என்ன என்பது தான். ஆன்மாவை அறியாமல் நமது சாஸ்திரங்கள் கூறுகின்ற கடவுளை நாம் புரிந்து கொள்ள முடியாது. புற இயற்கையை ஆராய்வதன் மூலம், அனைத்தையும் கடந்த பொருளைச் சிறிதாவது உணர்ந்து விடலாம் என்று அதற்கான முயற்சிகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடந்து வந்துள்ளன. இந்த முயற்சிகள் எவ்வளவு படுதோல்வியைத் தழுவ நேர்ந்தது என்பதை நாம் அறிவோம். இயற்கையைக் கடந்த பொருளைக் காண்பதற்குப் பதிலாக, நாம் எவ்வளவு அதிகமாக உலகப் பொருட்களை ஆராய்ந்தோமோ அந்த அளவிற்கு உலகியலின் வசப்பட்டு வருகிறோம். இந்த உலகத்தை அதிகமாகப் பயன்படுத்தும்போது நம்மிடம் இருக்கின்ற சிறிதளவு ஆன்மீகம் கூட மறைந்து போகிறது. எனவே இயற்கையை ஆராய்வது ஆன்மீகத்தை, இறைஞானத்தை அடைவதற்கான வழி அல்ல. அந்த வழி நிச்சயம் இதயத்தின் மூலம், மனித ஆன்மாக்களின் மூலம் வரவேண்டும். புற முயற்சிகள் எதுவும், அனைத்திற்கும் அப்பால் உள்ள எல்லையற்றப்பொருளைப் பற்றிநமக்கு எதையும் கற்பிக்காது. அக முயற்சிகள் மட்டுமே அதைச் செய்ய முடியும். எனவே ஆன்மாவின் மூலம், மனித ஆன்மாவை ஆராய்ச்சி செய்வதன் மூலம் மட்டுமே நாம் கடவுளை அறிய முடியும்.
மனித ஆன்மாவின் இயல்பு பற்றி இந்தியாவில் உள்ள பல்வேறு நெறிகளிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அவை எல்லாமே ஏற்றுக் கொள்கின்ற சில கருத்துக்கள் உள்ளன. ஆன்மாக்களுக்குத் தோற்றமும் முடிவும் இல்லை. அவை இயல்பாகவே அமரத்துவம் வாய்ந்தவை என்பதை நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். எல்லா சக்திகளும், ஆசீர்வாதங்களும், தூய்மையும் , எங்கும் நிறைந்த தன்மையும், எல்லாம் அறிகின்ற தன்மையும், ஒவ்வோர் ஆன்மாவிலும் உள்ளது என்பது நம் அனைவருக்கும் ஏற்புடைய கருத்து தான். இது நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஓர் அற்புதமான கருத்து. பலவீனமானது, வஞ்சகமானது, உயர்ந்தது, தாழ்ந்தது போன்ற வேறுபாடுகள் எதுவும் இன்றி ஒவ்வொரு மனிதனிலும் ஒவ்வொரு மிருகத்திலும், எங்கும் நிறைந்த எல்லாம் அறிகின்ற ஒரே ஆன்மா உறைகிறது. வேற்றுமை ஆன்மாவில் இல்லை, அதன் வெளிப்பாட்டிலே உள்ளது. எனக்கும் மிகச்சிறு பிராணிக்கும் உள்ள வேற்றுமை ஆன்மாவின் வெளிப்பாட்டிலே. ஆனால் அடிப்படையில் இருவரும் சமமே. அது என் சகோதரன். அதுவும் நானும் ஒரே விதமான ஆன்மாவைப்பெற்றிருக்கிறோம். இந்த மகத்தான உண்மையைத்தான் இந்தியா பிரச்சாரம் செய்தது. சகோதரத்துவம் பற்றிய பேச்சு இந்தியாவைப் பொறுத்த வரை உலகம் தழுவியசகோதரத்துவமாக உள்ளது.
பெரிய மிருகங்களிலிருந்து சிறிய எறும்புகள் வரை எல்லாமே நமது உடம்புகள் என்று கருதும் அளவிற்கு வளர்ந்து உள்ளது. இவ்வாறு எல்லா உடம்புகளிலும் ஒரே இறைவன் உறைகிறார் என்பதை அறிகின்ற மகான், எல்லா உடம்புகளையும் அவ்வாறே வழிபடுகிறார்.” என்றே நமது சாஸ்திரங்களும் கூறுகின்றன. அதனால் தான் இந்தியாவில் ஏழைகள், மிருகங்கள் என்று எல்லோரிடமும் எல்லாவற்றிடமும் கருணை காட்டும் போக்கு உள்ளது. ஆன்மாவைப் பற்றிய நமது அடிப்படைக் கருத்துக்களுள் இது ஒன்றாகும்.
இப்போது கடவுளைப் பற்றிய கருத்திற்கு வருகிறோம். அதற்கு
முன் ஆன்மாவைப் பற்றி ஒரு விஷயம். ஆங்கிலம் படித்தவர்கள் அடிக்கடி அதில் வரும் soul( ஆன்மா), mind( மனம்) என்ற சொற்களால் குழம்பியிருப்பீர்கள். ஆன்மா வேறு, மனம் வேறு. நாம் மனம் என்று எதைச்சொல்கிறோமோ, அதையே மேலை நாட்டினர் soul ( ஆன்மா) என்கிறார்கள்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன் சம்ஸ்கிருதத் தத்துவத்தின் வாயிலாக அறியும்வரை ஆன்மா என்ற ஒன்றைப் பற்றியே மேலை நாடுகள் அறிந்திருக்கவில்லை. உடம்பு இதோ இருக்கிறது. இதைக் கடந்து மனம் இருக்கிறது என்றாலும்் மனம் ஆன்மா அல்ல.மனம் நுண்ணுடல். சூட்சும சரீரம். மிக நுட்பமான பொருட்களால் ஆக்கப் பட்டது. பிறப்பிலிருந்து இறப்பு என்று தொடர்ந்து செல்கிறது. ஆனால் மனத்தையும் கடந்திருப்பது ஆன்மா, அதாவது மனிதனின் ஆன்மா. ஆன்மா என்னும் வார்த்தையை உயிர், மனம் என்றெல்லாம் எந்த வார்த்தையாலும் மொழிபெயர்க்க முடியாது. எனவே ஆன்மா என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும். அல்லதுமேலை நாட்டுத் தத்துவ அறிஞர்கள் பயன்படுத்தும் self என்ற வார்த்தையால் குறிப்பிட வேண்டும். எந்த வார்த்தையைப் பயன்படுத்தினாலும் சரி, ஆன்மா என்பது மனத்திலிருந்தும் உடம்பிலிருந்தும் வேறானது என்பதைத்தெளிவாகப் பரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஆன்மாதான் நுண்ணுடலாகிய மனத்துடன் சேர்ந்து பிறப்பு- இறப்பு சுழலில் சென்று கொண்டிருக்கிறது. உரிய காலத்தில் ஞானம் பெற்று, தனது பூரணத்துவத்தை வெளிப் படுத்துகிறது. அதன் பிறகு அதன் பிறப்பு- இறப்புச் சுழற்சி நின்று விடுகிறது. பின்னர் நுண்ணுடலாகிய மனத்தை வைத்துக்கொள்ள வேண்டுமா அல்லது அதை முற்றிலுமாக விட்டு விட்டுச் சுதந்திரமாக நிரந்தரமான முக்திப்பேற்றில் திளைக்க வேண்டுமா என்பது ஆன்மாவின் விருப்பம். ஆன்மாவின் லட்சியம் முக்தி. இது நமது மதத்திற்கு மட்டுமே உரிய ஒரு தனித்தன்மை ஆகும்.
நமக்கும் சொர்க்கங்களும் நரகங்களும் உள்ளன. ஆனால் அவை நிரந்தரமானவை அல்ல. அப்படி இருக்கவும் முடியாது. சொர்க்கங்கள் இருக்குமானால் அவை இந்த உலகத்தின் நகல்களாகவே இருக்கும்.-சற்று அதிக அளவில் மகிழ்ச்சியும், அதிகமான போகமும் அங்கே இருக்கலாம். ஆனால் இவை யாவும் ஆன்மாவிற்குக்கேடு விளைவிக்கக் கூடியவை. இத்தகைய சொர்க்கங்கள் பல உண்டு. பலனை எதிர்பார்த்து நற்செயல் புரியவர்கள், இறந்த பின் ஏதாவது சொர்க்கங்களில் இந்திரன் போன்ற தேவர்களாகப் பிறக்கிறார்கள். தேவர்கள் என்பது சிலகுறிப்பிட்ட நிலைகளையே குறிக்கிறது. அவர்களும் மனிதர்களாக இருந்தவர்கள் தாம். நல்ல காரியங்கள் செய்ததால் தேவர்களாகி இருக்கிறார்கள். மேலும்,மேலும், இந்திரன் போன்ற பெயர்களும் ஒரே நபரின் பெயர்கள் அல்ல.
ஆயிரக்கணக்கான இந்திரர்கள் இருப்பார்கள். நகுஷன் ஒரு பேரரசன். அவன் இறந்தபின் இந்திரன் ஆனான். அது ஒரு பதவி. ஒரு ஜீவன் உயர்ந்த நிலையை அடைந்ததும் இந்திர பதவியைப்பெறுகிறது. குறிப்பிட்ட காலம் வரை அந்தப் பதவியில் இருக்கிறது. பிறகு இறந்து மறுபடியும் மனிதனதகப் பிறக்கிறது. ஆனால் மனிதப் பிறவி தான் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த பிறவி. சொர்க்கத்திலும் கூட, சில தேவர்கள் அங்குள்ள இன்பங்களில் நாட்டம் கொள்ளாமல், அவற்றைத் துறந்து மேலே செல்ல முயலலாம். ஆனால் இந்த உலகத்தைப் போலவே அவர்களுள் பெரும்பாலோரை அங்குள்ள செல்வம், பதவிஈ போகம் முதலியவை மயக்கி விடுகின்றன. எனவே தங்கள் புண்ணிய பலனை அங்கே அனுபவித்து முடித்து விட்டு, மீண்டும் பூமியில் மனிதர்களாகப் பிறக்கிறார்கள். அதனால் தான் இந்த உலகம் கர்மபூமி என்று அழைக்கப்படுகிறது. இந்த உலகத்திலிருந்து தான் நாம் முக்தி பெற முடியும். எனவே சொர்க்கங்களும் கூட நாம் அடையத் தகுந்தவை அல்ல.
அப்படியானால் நாம் அடையத் தகுந்தது எது? முக்தி, சுதந்திரம். மேலான சொர்க்கங்களில் கூட நீங்கள் அடிமைகளாக இருக்கிறீர்கள் என்றே நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அங்கு இருபதாயிரம் ஆண்டுகள் அரசர்களாக இருந்தாலும் அதனால் என்ன பயன்? உடம்பு என்ற ஒன்று இருக்கும் வரை,மகிழ்ச்சிக்கு அடிமையாக நீங்கள் இருக்கும் வரை, காலம் உங்களைக் கட்டுப்படுத்தும்வரை, இடம் உங்களைக் கட்டுப்படுத்தும் வரை நீங்கள் அடிமைகளே. எனவே அக மற்றும் புற இயற்கைகளிலிருந்து விடுபடுவதே நமது நோக்கம். இயற்கை உங்கள் காலடியில் விழ வேண்டும். நீங்கள் அதைக்காலால் மிதித்து, அதற்கு அப்பால் சென்று சுதந்திரமாகவும் மகோன்னதமாகவும் இருக்க வேண்டும். அங்கு வாழ்வு இல்லை, மரணம் இல்லை. இன்பம் இல்லை. ஆகையால் துன்பமும் இல்லை. விளக்க முடியாத, அழிக்க முடியாத எல்லாவற்றையும் கடந்த பேரின்பம் அது. இங்கு நாம் மகிழ்ச்சி என்றும் நன்மை என்றும் எவற்றைச் சொல்கிறோமோ, அவை அந்த எல்லையற்ற பேரின்பத்தின் வெறும் துளிகள் மட்டுமே. அளவற்ற அந்தப் பேரின்பத்தை அடைவது தான் நமது லட்சியம்.
ஆன்மா பால்வேற்றுமை இல்லாதது. அது ஆணா பெண்ணா என்று நம்மால் கூற முடியாது. பால்வேற்றுமை உடலுக்கு மட்டுமே. உடலைப்பொறுத்த வரையில், ஆண், பெண் என்று பேசுவது சரி, ஆன்மாவை அவ்வாறு பாகுபடுத்துவது அறிவீனம். வயது விஷயத்திலும் அவ்வாறு தான். அதற்கு வயதாவதே இல்லை. பழமையான அது எப்போதும் மாறாததாகவே இருக்கிறது. அது எப்படி இந்த வாழ்க்கையில் கட்டுண்டது? இந்தக் கேள்விக்கு நமது சாஸ்திரங்களில் ஒரே ஒரு பதில் இருக்கிறது. அறியாமை தான் இந்தப் பந்தங்களுக்கெல்லாம் காரணம். அறியாமையில் தாம் நாம் கட்டுண்டோம். ஞானம் இந்தக் கட்டினை விலக்கி, நம்மை மறுகரைக்கு அழைத்துச்செல்லும். அந்த ஞானம் எப்படி வரும்? அன்பின் மூலம், பக்தியின் மூலம், கடவுளை வழிபடுவதன் மூலம், எல்லா உயிர்களையும் கடவுளின் கோயிலென்று அன்பு செலுத்துவதன் மூலம். ஏனெனில் எல்லோரிலும் கடவுள் இருக்கிறார். அந்தப் பேரன்பின் மூலம் ஞானம் வரும். அறியாமை மறைந்துபோகும். பந்தங்கள் அறுந்து போகும். ஆன்மா சுதந்திரம் பெறும்.
சாஸ்திரங்களில் கடவுளைப்பற்றி இரண்டு கருத்துக்கள் உள்ளன. ஒன்று சகுணம், மற்றொன்று நிர்குணம். சகுணக் கடவுளைப் பற்றியகருத்து என்னவென்றால், அவர் எங்கும் நிறைந்தவர், எல்லாவற்றையும் படைத்தவர், காப்பவர், அழிப்பவர், அண்டசராசரங்களின் நிலையான தந்தையும் தாயும் அவரே, நம்மிலிருந்தும் மற்ற உயிர்களிலிருந்தும் அவர் எப்போதும் வேறுபட்டவர். அவரை நெருங்குவதும் அவரில் வாழ்வதும் தான் முக்தி.
நிர்க்குணக் கடவுளைப்பற்றியகருத்துக்கள் அடுத்து வருகின்றன. சகுணக் கடவுளை விளக்கிய குணநலன்கள் எல்லாம் உண்மைக்குப் புறம்பானவை என்றும், பொருளற்றவை என்றும், இங்கே விலக்கப் படுகின்றன. அவர் உருவம் அற்றவர், எங்கும் நிறைந்தவர், அறிபவர் என்று அவரைக்கூற முடியாது. ஏனென்றால் அறிதல், அறிவு என்பவையெல்லாம் மனித மனத்தில் மட்டுமே நிகழக் கூடியவை. சிந்திப்பவர் என்று அவரைக் கூற முடியாது.ஏனென்றால் சிந்திப்பது பலவீனர்களின் வழி. அவரை ஆராய்பவர் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அது பலவீனத்தின் அடையாளம். படைப்பவர் என்று அவரைக் கூற முடியாது. ஏனென்றால் கட்டுண்டு இருப்பவர்கள் தாம் படைப்பார்கள். அவருக்கு என்ன தளை இருக்கிறது? ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மட்டுமே ஒருவர் செயல் புரிய வேண்டும். அவருக்கு என்ன ஆசை இருக்கிறது? சில தேவைகளைத் தீர்த்துக்கொள்வதற்காகத் தான் உழைக்க வேண்டும், அவருக்கு என்ன தேவை இருக்கிறது?
வேதங்களில் கடவுளைக் குறிப்பிடுவதற்கு அவன்” என்ற சொல் பயன்படுத்த வில்லை. அது” என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் ”அவன்” என்ற சொல் கடவுளை ஆண் என்று காட்டும். எனவே பால்வேற்றுமை இல்லாத ”அது” என்றும் சொல் பயன்படுத்தப்படுகிறது. ”அது” என்பதே உபதேசிக்கப் படுகிறது. இந்த நெறி அத்வைதம்.
இந்த நிர்க்குணப்பொருளுடன் நமது தொடர்பு என்ன?நாமே அவர். அவரும் நாமும் ஒன்றே. நாம் ஒவ்வொருவரும் குணமற்ற, எல்லா உயிர்களின் அடிப்படையாக இருக்கின்ற அந்த ஒன்றின் வெளிப்பாடே. அந்த எல்லையற்ற, நிர்க்குணப் பொருளிலிருந்து நம்மை வேறாக நினைப்பதால் தான் நாம் துன்பப்படுகிறோம். ஆச்சரியமான அந்த நிர்க்குணப்பொருளுடன் நாம் ஒன்றுபட்டவர்கள் என்பதை அறிவதில் தான் முக்தி இருக்கிறது. இது நமது சாஸ்திரங்களில் காணப்படுகின்ற கடவுள் பற்றிய சுருக்கமான இரண்டு கருத்துக்களாகும்.
இங்கே சில விஷயங்களைச்சொல்ல வேண்டும். நிர்க்குணக் கடவுள் கருத்தின் மூலம் தான், உங்களால் ஏதாவது நன்னெறிக்கோட்பாட்டினை உருவாக்க முடியும். பிறரையும் உங்களைப்போல் நேசியுங்கள். அதாவது மற்ற மற்றமனிதர்களையும் உங்களைப்போல் நேசியுங்கள்” என்று ஒவ்வொரு நாட்டிலும் மிகப் பழங்காலத்திலிருந்தே போதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலோ எல்லா உயிர்களையும் உங்களைப்போல் நேசியுங்கள், என்று உபதேசிக்கப்படுகிறது. மனிதர்கள், மிருகங்கள், என்று நாம் வேறுபாடு பார்ப்பது கிடையாது. ஆனால் நம்மைப்போல் பிறரையும் நேசிப்பது ஏன் நல்லது என்பதற்கான காரணத்தை யாரும் சொல்லவில்லை, யாருக்கும் தெரியவும் இல்லை. அந்தக் காரணம் நிர்க்குணக் கடவுள் கொள்கையில் உள்ளது. இந்த உலகம் முழுவதும் ஒன்று என்பதை நீங்கள் அறியும்போது, அதனைத் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள்- பிரபஞ்சத்தில் ஓர் ஒருமை உள்ளது- எல்லா உயிர்களும் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன.பிறரைத் துன்புறுத்தும் போது என்னையே நான் துன்பறுத்திக்கொள்கிறேன். யாரிடமாவது அன்பு செலுத்தினால் என்னிடமே நான் அன்பு செலுத்துகிறேன். பிறரை ஏன் துன்புறுத்தக்கூடாதுஎன்பதை இப்போது நாம் அறிந்து கொள்கிறோம். எனவே நன்னெறிக்கான காரணத்தை இந்த நிர்க்குணக் கடவுள் கருத்திலிருந்து மட்டுமே நாம் பெற முடியும்.
பிறகு இதில் சகுணக் கடவுளின் இடம் பற்றிய கேள்வி எழுகிறது. சகுணக் கடவுள் கருத்திலிருந்து பாய்ந்து வரும் அன்பு வெள்ளத்தை நான் புரிந்து கொள்கிறேன். பல்வேறு காலங்களின் தேவைகளுக்கு ஏற்ப மனிதனுக்குப் பயன்படக் கூடிய அதன் சக்தியையும் அடிப்படை ஆற்றலையும் நான் முழுக்க முழுக்க ஆமோதிக்கிறேன். ஆனாலும் நம் நாட்டில் நமக்கு இப்போது தேவையானதெல்லாம் சிறிதாவது வலிமையே அன்றி, அளவுக்கு அதிகமான அழுகை அல்ல. எல்லா மூட நம்பிக்கை களையும் தூர எறிந்து விட்டு, குணங்கள் அற்ற ஒன்று நான்” என்ற ஞானத்தோடு சொந்தக் கால்களிலேயே ஒருவனை நிற்கச்செய்கின்ற இந்த நிர்க்குணக் கடவுள் கொள்ளைதான் வலிமையின் எத்தகைய சுரங்கமாக இருக்கிறது! எது என்னைப் பயமுறுத்த முடியும்? நான் இயற்கையின் நியதிகளைக்கூட பொருட்படுத்த மாட்டேன். மரணம் எனக்கு ஒரு கேலிக்கூத்து! இங்கே மனிதன் நிரந்தரமான, எல்லையற்ற மரணமற்ற ஆன்மாவின்,, தன் சொந்த ஆன்மாவின் பெருமையில் திளைக்கிறான்.
அந்த ஆன்மாவை எந்த ஆயுதங்களாலும் வெட்ட முடியாது. எந்தச் சூட்டினாலும் உலர்த்த முடியாது. நெருப்பினால் எரிக்க முடியாது. நீரினால் நனைக்க முடியாது. அது எல்லையற்றது, பிறப்பற்றது, இறப்பற்றது, ஆரம்பமும் முடிவும் இல்லாதது. அதன் முன்னிலையில் சூரிய சந்திரர்களும் வான மண்டலங்களும் கூட கடலின் முன் சிறு துளி களாகத்தோன்றுகின்றன. அதன் பெருமைக்கு முன்னால் இடம் என்பது சூன்யத்தில் கரைகிறது. காலம் என்பது இல்லாமல் ஒடுங்கி விடுகிறது.
பெருமை மிக்க இந்த ஆன்மாவில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.அதிலிருந்து ஆற்றல் வரும். எதை நினைக்கிறீர்களோ , அதுவாக ஆவீர்கள். உங்களைப் பலவீனர்கள் என்று நினைத்தால் , பலவீனர்கள் ஆவீர்கள். வலிமையானவர்களாக நினைத்தால் வலிமை மிக்கவர்கள் ஆவீர்கள். தூய்மையற்றவர்களாக எண்ணினால் தூய்மையற்றவர்கள் ஆவீர்கள். தூய்மையானவர்களாக எண்ணினால் தூயவர் ஆவீர்கள்.
எனவே நம்மை பலவீனர் என்று நினைக்க வேண்டாம். நாம் வலிமை மிக்கவர்கள். எதையும் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள், எல்லாம் அறிந்தவர்கள் என்று நினைக்கும்படி இது போதிக்கிறது. நான் அதை இதுவரை வெளிப்படுத்தவில்லை என்றால், அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் அது என்னில் இருக்கிறது. எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா தூய்மையும் எல்லா சுதந்திரமும் என்னில் இருக்கிறது. அந்த அறிவை ஏன் என்னால் வெளிப்படுத்த முடியவில்லை? ஏனென்றால் அவை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் அதை நம்பினால் அவை வெளிப்பட்டே தீர வேண்டும். வெளிப்படவே செய்யும். இதைத்தான் நிர்க்குணக் கடவுள் கொள்கை போதிக்கிறது. உங்கள் குழந்தைகளைச் சிறுவயதிலிருந்தே வலிமை உடையவர்களாக ஆக்குங்கள். அவர்களுக்கு பலவீனத்தைச் சொல்லித் தராதீர்கள். வெறும் புறச் சடங்குகளைக் கற்றுத் தராதீர்கள். அவர்களை வலிமையானவர்களாக ஆக்குங்கள். அவர்கள், தங்களின் கால்களிலேயே நிற்கட்டும். தைரியமானவர்களாக, எல்லாவற்றையும் வெல்பவர்களாக எல்லா துன்பங்களையும் ஏற்பவர்களாக, அனைத்திற்கும் மேலாக, ஆன்மாவின் பெருமைகளை அறிபவர்களாக அவர்களை உருவாக்குங்கள்.
நீங்கள் அதை வேதாந்தத்தில், வேதாந்தத்தில் மட்டுமே பெற முடியும். பிற மதங்களிலுள்ள பக்தி, வழிபாடு போன்ற கருத்துக்களும், அவற்றைவிட மேலான வேறு பலவும் வேதாந்தத்தில் உள்ளது.ஆனால் அதிலுள்ள இந்த ஆன்மாவைப்பற்றிய கருத்து தான் உயிரோட்டம் தரும் சிந்தனையாக மிகவும் ஆச்சரியமானதாக உள்ளது அங்கே, அங்கே மட்டும் தான் உலகையே புரட்சிமயமாக்கப் போகின்ற, பௌதீக அறிவையும் ஆன்மீகத்தையும் இணைக்கப் போகின்ற மகத்தான கருத்து இருக்கிறது.
நமது மதத்தின் முக்கியமான கருத்துக்களை , கொள்கைகளை உங்கள் முன் கொண்டு வர நான் முயன்றேன். இப்போது அவற்றின் பயிற்சி மற்றும் செயல்முறை பற்றி சில வார்த்தைகள் சொல்லப் போகிறேன். இந்தியாவில் இப்போதுள்ள சூழ்நிலையில் பல மதப்பிரிவுகள் தோன்றத்தான் செய்யும் என்பதை ஏற்கனவே கண்டோம். அவ்வாறே தோன்றியிருப்பதையும் நாம் காண்கிறோம். அதே நேரத்தில் இவை ஒன்றுக்கொன்று போரிட்டுக்கொள்ளாத விசித்திரத்தையும் பார்க்கிறோம். ஒவ்வொரு வைணவனும் அழியப்போகிறான் என்று சைவர்கள் சொல்வதில்லை. எல்லா சைவர்களும் நாசமாய் போவார்கள் என்று வைணவர்கள் சொல்வதில்லை. இது என் பாதை. உங்களுக்கு உங்கள் பாதை இருக்கிறது. முடிவில் நாம் இரண்டுபேரும் சேர்ந்தேயாக வேண்டும்” என்று வைணவன் கூறுகிறான். இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் இது தெரியும். இதுவே இஷ்டதெய்வக்கொள்கை.
பல்வேறு விதங்களில் கடவுளை வழிபடுவது மிகப் பழங்காலத்திலேயே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. வெவ்வேறு மனநிலைகளுக்குப் பல்வேறான வழிபாட்டு முறைகள் தேவை என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டதே. நீங்கள் கடவுளிடம் வருகின்றவழி எனக்கு ஏற்ற வழியாக இல்லாமல் போகலாம். ஒரு வேளை அது என் மனத்தை உறுத்துவதாகக்கூட இருக்கலாம். எல்லோருக்கும் ஒரே வழி என்றும் கொள்கை அழிவைத் தருவதாகும். அது பொருளற்றது. முற்றிலுமாகத் தவிர்க்கப் பட வேண்டியது.
எல்லோரும் ஒரே மதக் கருத்தை ஏற்றுக் கொண்டு, ஒரே வழியைப் பின்பற்ற நேர்ந்தால் உலகிற்கே அழிவு தான். எல்லா மதங்களும் எல்லா சிந்தனைகளும் அழிக்கப்பட்டு விடும். வாழ்க்கையின் ஆதாரமே வேறுபாடுதான். அது முழுவதுமாக அழிந்தால் படைப்பே அழிந்து போகும். வேறுபட்ட சிந்தனைகள் இருந்தால் தான் நாம் வாழ்வோம். வேற்றுமைகள் இருக்கிறதே என்று நாம் சண்டையிடத்தேவையில்லை. உங்கள் வழி உங்களுக்கு நல்லது. எனக்கு அல்ல, ஒருவருக்கு உரிய தனிவழி சம்ஸ்கிருதத்தில் இஷ்டம் என்று அழைக்கப் படுகிறது.
உலகத்தில் உள்ள எந்த மதத்துடனும் நமக்கு விரோதம் இல்லை. நம் ஒவ்வொருவருக்கும் இஷ்டம், அதாவது தனி வழி உள்ளது. ஆனால் வெளி நாட்டிலிருந்து சிலர் வந்து, இது ஒன்றுதான் எல்லோருக்கும் வழி” என்று சொல்லி, அதையே பின்பற்றுமாறு நம்மை வற்புறுத்தும் போது நாம் அவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். உங்களைப் பார்த்துச் சிரிப்பு த்தான் வருகிறது. கடவுளைக் காண்பதற்கு, மாறுபட்ட ஒரு பாதையைப் பின்பற்றுவது போல் தோன்றுவதால் தங்கள் சகோதரர்களை அழிக்க விரும்புகின்ற இவர்களிடம் அன்பைப்பற்றிப் பேசுவது வீண். இவர்கள் காட்டும் அன்பையும் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தங்கள் வழியிலிருந்து மாறுபட்ட பாதையைப் பின்பற்றுபவர்களைக் கண்டால் பொறுக்க முடியாத இவர்களால் எப்படி அன்பைப்போதிக்க முடியும்? அது அன்பென்றால் பிறகு வெறுப்பு என்பது தான் என்ன?
உலகத்திலுள்ள எந்த மதத்துடனும் , அது ஏசுவையோ, புத்தரையோ, முகமதுவையோ அல்லது வேறு எந்த மகானையோ வழிபடச்சொன்னாலும் அவற்றுடன் நமக்குச் சண்டை கிடையாது. இந்து அவர்களைப் பார்த்து, வாருங்கள், சகோதரர்களே! நான் உங்களுக்கு உதவுகிறேன்! ஆனால் என் வழியில் நான் செல்ல நீங்களும் அனுமதிக்க வேண்டும். அது என் இஷ்டம். உங்கள் வழி மிகவும் நல்லது தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் எனக்கு அது அபாயமானதாக இருக்கலாம். எனக்கு எந்த உணவு நல்லது என்பதை என் அனுபவம் தான் எனக்குச்சொல்ல முடியும். ஒரு பெரிய டாக்டர் பட்டாளமும் அதைக் கூற முடியாது. எனவே எனக்கு எது மிக நல்லபாதை என்பதை நான் என் அனுபவத்திலிருந்தே அறிந்து கொள்கிறேன்” என்கிறான். அது தான் லட்சியம் அதுவே இஷ்டம், எனவே தான் கோயிலோ சின்னமோ அல்லது ஒரு திருவுருவோ, உன்னுள் இருக்கும் தெய்வீகத்தை நீ உணர்ந்து கொள்ள உதவுமானால், நீங்கள் அதனை வைத்துக் கொள்ளுங்கள் என்று நாம் சொல்கிறோம்.
நீங்கள் விரும்பினால் இருநூறு விக்கிரகங்களை வைத்துக்கொள்ளுங்கள். சில குறிப்பிட்ட விக்கிரகங்களும் வழிபாட்டு முறைகளும் நீங்கள் தெய்வீகத்தை உணர உதவி செய்யுமானால் அந்த வழியில் விரைந்துச்செல்லக் கடவுள் உங்களுக்கு வலிமை தரட்டும். உங்களைக் கடவுளுக்கு அருகே கொண்டு செல்லுமானால் , எந்த வடிவத்தையும் எந்தக்கோயிலையும் எந்த விதமான சடங்குகளையும் தாராளமாகப் பின்பற்றுங்கள். ஆனால் அது குறித்துச் சண்டையிடாதீர்கள் சண்டையிடத் தொடங்குகின்ற அந்தக் கணமே நீங்கள் கடவுளை நோக்கிச் செல்லவில்லை. மிருக நிலையை நோக்கிப் பின்னால் செல்கிறீர்கள்.
நமது மதத்தில் உள்ள சில கருத்துக்கள் இவை. இது எல்லோரையும் தன்னுள் அடக்கிக் கொள்கிறது. யாரையும் விலக்குவதில்லை. ஜாதிகளும் சமுதாய அமைப்புக்களும் மதத்துடன் தொடர்புள்ளது போல் தோன்றினாலும், அவை தொடர்பு உடையவை அல்ல. ஒரு நாடு என்ற வகையில் நம்மை இணைத்துக் காப்பதற்கு இந்தச் சமுதாய அமைப்புக்கள் தேவை. இந்தத்தேவை இல்லாமல் போகும் போது, இவை தாமாகவே அழிந்து விடும்.
ஆனால் எனக்குவயது ஏற, ஏற, காலங்காலமாகப் போற்றப்பட்டு வந்த இந்த அமைப்புக்களின் நன்மைகளை ஆழ்ந்து சிந்திக்கத் தோன்றுகிறது. இவற்றுள் பலவற்றைப் பயனற்றவை என்றும் நன்மையில்லாதவை என்றும் ஒரு காலத்தில் நினைத்தேன். ஆனால் நான் வளர வளர அவற்றுள் ஒன்றைப் பழிப்பதற்குக் கூட தைரியம் இல்லாதவனாக இருப்பதை உணர்கிறேன். ஏனெனில் அவை ஒவ்வொன்றும் பல நூற்றாண்டு கால அனுபவத்தின் திரட்சிகளாக உள்ளன.
நேற்றுப் பிறந்து நாளை மறுநாள் சாவதற்கு விதியால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு குழந்தை என்னிடம் வந்து, என் திட்டங்கள் அனைத்தையும் மாற்றச்சொல்கிறது. அந்தக் குழந்தையின் அறிவுரையைக்கேட்டு, அதன் கருத்திற்கு ஏற்ப என் திட்டங்களை நான் மாற்றிக்கொண்டால் , நான் தான் முட்டாளே தவிர வேறு யாரும் அல்ல.
பல்வேறு நாடுகளிலிருந்து நமக்கு வருகின்ற அறிவுரைகள் எல்லாம் இப்படிப்பட்டவை தான். தங்களை அறிவாளிகள் என்று காட்டிக் கொண்டிருக்கின்ற இந்த முட்டாள்களுக்குச் சொல்லுங்கள். முதலில் ஒரு நிலையான சமுதாயத்தை உனக்கென்று நீ ஏற்படுத்து. அதன் பிறகு நான் உன் உபதேசத்தை கேட்கிறேன். இரண்டு நாட்களால் உங்களால் ஒரே கருத்தை முற்றிலுமாகக் கைக்கொள்ள முடியவில்லை. அதற்குள் அடித்துக்கொண்டு அதை விட்டு விடுகிறீர்கள். மழைக்காலத்தில் தோன்றும் ஈசல்கள் போல் தோன்றி, அவற்றைப் போலவே ஐந்து நிமிடங்களுக்குள் செத்துப் போகிறீர்கள். நீர்க்குமிழிகளைப்போல் தோன்றுகிறீர்கள் அவற்றைப்போலவே உடைந்து அழிகிறீர்கள்.
முதலில் எங்களுடையது போல் ஒரு நிலையான சமுதாயத்தை அமையுங்கள். நூற்றாண்டுகள் பலவாகியும் ஆற்றல் குன்றாமல் நிலைத்திருக்கின்ற சட்டங்களையும் சமுதாய அமைப்புக்களையும் உண்டாக்குங்கள். அதன் பிறகு தான் உங்களோடு இதைப் பற்றிப் பேசுவதற்கான நேரம் , அது வரை, என் நண்பர்களே , நீங்கள் வெறும் குழந்தைகள்.
மதத்தைப் பற்றி நான் சொல்ல வேண்டியவற்றைச்சொல்லி விட்டேன். இன்றைக்கு மிகவும் தேவையான ஒன்றை உங்களுக்கு நினைவுபடுத்திவிட்டு என் பேச்சை முடித்துக் கொள்கிறேன். மகாபாரதம் எழுதிய மகத்தான ஆசாரியராகிய வியாசருக்குப் புகழ் எல்லாம் செல்வதாக! அவர் அதில், இந்தக் கலியுகத்தில் செய்ய வேண்டியது ஒரே ஒரு மகத்தான காரியம்தான் என்கிறார். மற்ற யுகங்களில் செய்யப்பட்ட கடினமான தவங்களும் யோகங்களும் இந்த யுகத்தில் பலன் தராது. இந்த யுகத்திற்குத்தேவையானது எதுவென்றால் கொடுப்பது, பிறருக்கு உதவி செய்வது, அதாவது தானம். தானம் என்பதன் பொருள் என்ன? தானங்களிலேயே மிகச் சிறந்தது ஆன்மீக ஞானத்தைத் தருவதாகும். அதற்கு அடுத்தது, பௌதீக அறிவைத் தருவது. அதற்கு அடுத்தது துன்பத்தில் காப்பது. கடைசியாக வருவது உணவும் நீரும் தருவது.
ஆன்மீக ஞானத்தை அளிப்பவன், பல பிறவிகள் எடுப்பதிலிருந்து உயிரைக் காப்பாற்றுகிறான். பௌதீக அறிவைத்தருபவன் ஆன்மீக ஞானத்தை நோக்கிச்செல்ல ஒருவனுடைய கண்களைத் திறந்து விடுகிறான். இதற்குக் கீழே தான் மற்ற தானங்களின் மதிப்பு வருகிறது. உயிரைக் காப்பாற்றுவது கூடக் கீழே தான் வருகிறது.ஆன்மீக ஞானத்தை அளிக்கின்ற செயலைவிடப் பிற செயல்கள் மதிப்புக் குறைந்தவை என்பதை அறிந்து கொள்வது அவசியம். மிகவுயர்ந்த மகத்தான உதவி ஆன்மீக ஞானத்தை அளிப்பது தான். ஆன்மீகத்தின் நிரந்தர நீரூற்று நம் சாஸ்திரங்களில் உள்ளது. துறவின் பெரும் பூமியான இந்த நாட்டில் அல்லாமல், செயல்முறை ஆன்மீகத்தின் இத்தகைய உன்னத எடுத்துக் காட்டுகளை உலகில் வேறெங்கும் காண முடியாது. எனக்கு ஏதோ சிறிது உலக அனுபவம் உண்டு. என்னை நம்புங்கள். மதத்தைப் பற்றி பிற நாடுகளில் அதிகமாகப்பேசப்படுகிறது. ஆனால் அதனைத் தன் அன்றாட வாழ்வில் செயல்படுத்தியவன் இங்கே. இங்கே மட்டுமே இருக்கிறான்.
வெறும் பேச்சு மதம் ஆகாது. கிளிகள் பேசலாம். இப்போதெல்லாம் எந்திரங்கள் பேசுகின்றன. ஆனால் துறவு வாழ்வை, ஆன்மீக வாழ்வை, துன்பங்களை ஏற்கும் வாழ்வை, எல்லையற்ற அன்பு மயமான வாழ்க்கை எனக்கு நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம். இத்தகைய வாழ்க்கை தான் ஓர் ஆன்மீகவாதியை அடையாளம் காட்டும். இத்தகைய கருத்துக்களும் அவற்றை வாழ்ந்து காட்டிய உன்னதமான வரலாறுகளும் நம் நாட்டில் உள்ளன.யோகியரின் மூளைகளிலும் இதயங்களிலும் செறிந்திருக்கின்ற இந்தக் கருவூலங்களை வெளியே கொண்டு வந்து ஏழை பணக்காரர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள ஒவ்வொருவரின் சொத்தாகும் படிச்செய்யாமல் இருப்பது ஆழ்ந்த பரிதாபத்திற்குரியது.
நாம் செய்ய வேண்டிய மகத்தான கடமைகளுள் இது ஒன்று. பிறருக்கு அதிகமாக உதவுகின்ற அளவிற்கு உங்களுக்கே நீங்கள் உதவி செய்து கொள்வதைக் காண்பீர்கள். நீங்கள் உங்கள் மதத்தை நேசிப்பது உண்மையானால், உங்கள் நாட்டை நேசிப்பது உண்மையானால் எழுந்து நின்று, உங்கள் சாஸ்திரங்களில் முடங்கிக் கிடக்கின்ற கருவூலங்களை வெளியே கொண்டு வந்து அதற்கு உரிமையான வாரிசுகளுடன் தரவேண்டும் என்ற ஒரே கருத்துடன் முனைந்து செயலாற்றுங்கள். இது தவிர்க்க முடியாத கடமையாகும். இவை அனைத்திற்கும் மேலாக ஒன்று அவசியம். காலங்காலமாக நாம் பயங்கரமான பொறாமையால் இறுகிப் போயிருக்கிறோம். ஒருவருக்கொருவர் பொறாமைப்பட்டபடியே இருக்கிறோம். இவனுக்கு ஏன் முன்னேற்றம், எனக்கு ஏன் கூடாது? கடவுளை வழிபடும்போது நமக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று எண்ணுகின்ற அளவிற்கு நாம் அடிமை நிலைக்குத் தாழ்ந்து விட்டோம். இது தவிர்க்கப் படவேண்டும்.
தற்போது இந்தியாவில் கொடிய பாவம் என்று ஒன்று உண்டென்றால் அது இந்த அடிமை மனப்பான்மை தான். கட்டளை இடவே எல்லோரும் விரும்புகிறார்கள். அடிபணிய யாரும் விரும்பவில்லை. இது பழங்காலத்தில் நம்மிடையே இருந்த அற்புதமான பிரம்மச்சரிய முறை அழிந்து போனதால் ஏற்பட்ட விளைவாகும். முதலில் பணியக் கற்றுக்கொள்ளுங்கள், ஆணையிடுகின்ற தகுதி தானே வரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எஜமான் ஆவதற்குரிய தகுதி பெறுவீர்கள், இந்தப் பொறாமையை நீக்குங்கள், செய்து முடிக்க வேண்டிய மகத்தான காரியங்களைச் செய்வீர்கள். நமது முன்னோர்கள் அற்புதமான காரியங்களைச்செய்தார்கள். அவர்கள் செய்தவற்றை ப் பெருமையோடும் மதிப்போடும் நாம் திரும்பிப் பார்க்கிறோம். நாமும் மகத்தான செயல்களைச்செய்யப்போகிறோம். நமக்குப் பின்வருபவர்கள் மகிழ்ச்சியோடும் பெருமையோடும் நம் செயல்களைத் தங்கள் முன்னோர்களின் காரியமாகப் போற்றட்டும்.
நம் முன்னோர்கள் எவ்வளவு தான் மகத்தானவர்களாகவும் பெருமைக்கு உரியவர்களாகவும் இருந்தாலும் அவர் களுடைய செயல்களை மங்கச் செய்யும் வகையில் நாம் ஒவ்வொருவரும் அதிகச் செயல்களை இறையருளால் செய்வோமாக!
பாம்பன் சொற்பொழிவு
-
யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக சுவாமி விவேகானந்தர் ஜனவரி 26-ஆம் நாள் பாம்பனுக்கு வந்து சேர்ந்தார். மேலை வெற்றிகளுக்குப் பிறகு பாரதத் திரு நாட்டில் அவர் திருவடி பதித்த முதல் இடம் இது. அங்கே ராமநாதபுர மன்னர் அவரை அன்புடன் வரவேற்றார். பாம்பன் மக்களின் சார்பில் வரவேற்புரை அளிக்கப் பட்டது. அதன் பின்னர் மன்னர் உணர்ச்சிபூர்வமானதொரு வரவேற்புரை நிகழ்த்தினார். அதற்கு சுவாமிஜி பதிலளித்தார்.
வரவேற்புக்குப் பதிலுரை
நமது புனிதமான தாய் த்திருநாடு ஆன்மீகமும் தத்துவமும் தழைத்த நாடு, ஆன்மீகச் செம்மல்களைப் பெற்ற நாடு, துறவின் உன்னத நாடு. இங்கு, இங்கு மட்டுமே மிகப் பழங்காலத்திலிருந்து மிக நவீன காலம் வரை, வாழ்வின் மிகவுயர்ந்த லட்சியம் மனிதனுக்குக் காட்டப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் நான் இருந்திருக்கிறேன், பல நாடுகளில் பயணம் செய்திருக்கிறேன், பல்வேறு இன மக்களுடன் பழகியிருக்கிறேன். ஒவ்வொரு நாடும் ஒவ்வோர் இனமும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்தைப் பெற்றிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. வாழ்க்கை நீரோட்டம் முழுவதிலும் அந்த லட்சியம் பாய்ந்து பரவுகிறது, தேசியவாழ்க்கையின் முதுகெலும்பாக அமைந்து இருக்கிறது. அரசியலோ, வாணிகத் தலைமையோ, தொழில் நுட்ப உயர்வோ, ராணுவ ஆற்றலோ இந்தியாவின் முதுகெலும்பாக இல்லை நாம் பெற்றதெல்லாம்,பெற விரும்புவதெல்லாம் மதம், மதம் மட்டுமே.ஆன்மீகம் என்பது இந்தியாவில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.உடல் வலிமையின் வெளிப்பாடுகள் மகத்தானவை. விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளிலும் எந்திரங்களிலும் காணப்படுகின்ற அறிவு வெளிப்பாடுகள் உன்னதமானவை. ஆனால் இவை எதுவும் ஆன்மீக சக்தியை விட அதிக ஆற்றல் கொண்டவை அல்ல.
நமது நாடு செயல்திறம் மிக்கதாக இருந்து வந்திருப்பதை நம் இனத்தின் வரலாறு காட்டுகிறது. நம்மை இன்னும் சரியாகப்புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்ற சிலர், இந்துக்கள் மந்தமானவர்கள் , உற்சாகமற்றவர்கள் என்று பறைசாற்றி வருகிறார்கள். மற்ற நாட்டு மக்களுக்கு இது ஏதோ பழமொழி போலவே ஆகிவிட்டது. இந்தியா ஒரு போதும் அவ்வாறு மந்தமாக இருந்ததில்லை என்று கூறி , நான் அவர்களின் கருத்தையே ஒதுக்குகிறேன். ஆசீவதிக்கப்பட்ட நமது இந்த நாட்டைப்போல் செயல்திறம் வேறெங்கும் இவ்வளவு வெளிப்படையாக இருந்ததில்லை. மிகப் புராதனமான பெருந்தன்மை வாய்ந்த நமது இனம் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பதே அதனை நிரூபிக்கிறது.வாழ்வது மட்டுமல்ல, ஆண்டுகள் செல்லச்செல்ல பெருமை மிக்க அதன் வாழ்வு புத்திளமை பெற்று அழியாமலும் அழிக்க முடியாமலும் இருந்து வருகிறது. செயல்திறம் இங்கே மதத்தில் வெளிப்படுகிறது.
ஆனால் மனித இயல்பின் ஒரு விசித்திரம் என்ன வென்றால், தன் சொந்தச் செயல்பாட்டின் அளவு கோலைக் கொண்டே பிறரையும் மதிப்பிடுவதாகும். செருப்பு தைப்பவனை எடுத்துக் கொள்வோம் . அவன் செருப்பு தைப்பதை மட்டுமே புரிந்து கொள்வான் செருப்பு தயார் செய்வதை விடச் சிறந்தது வாழ்க்கையில் வேறு எதுவுமே இல்லை என்று எண்ணுகிறான் அவன். கொத்த வேலை செய்பவனுக்கு அதைத் தவிர, வேறு எதுவும் தெரியாது. அதையே அன்றாடம் தன் வாழ்நாள் முழுவதும் செய்துகொண்டிருப்பான். இதை இன்னொரு காரணத்தின் வாயிலாகவும் விளக்கலாம். ஒளியின் அதிர்வுகள் மிகவும் அடர்த்தியாக இருந்தால் நம்மால் ஒளியைக்காண முடியாது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்த ஒளியைக் காண முடியாதவாறு நாம் ஆக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு யோகியால் அது முடியும். அவர் தமது ஆன்மீக உள்ளுணர்வின் துணையுடன் கீழ்நிலை மக்களின் உலகியல் திரையை ஊடுருவி அப்பால் காண்கிறார்.
உலகம் முழுவதன் கண்களும் ஆன்மீக உணவிற்காக இப்போது இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளன; எல்லா இனங்களுக்கும் இந்தியா அதைத் தந்தாக வேண்டும். மனித குலத்திற்கான மிகச் சிறந்த லட்சியம் இங்கு மட்டுமே உள்ளது. நமது சமஸ்கிருத இலக்கியங்களிலும் தத்துவங்களிலும் உள்ளதும், காலங்காலமாக இந்தியாவின் தனிப்பெரும் பண்பாகத் திகழ்வதுமாகிய இந்த லட்சியத்தைப் புரிந்துகொள்வதற்காக இப்போது மேலை நாட்டு அறிஞர்கள் அரும்பாடு பட்டுவருகின்றனர்.
வரலாறு தொடங்கியதிலிருந்து இந்து மதக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பரப்புவதற்கு இந்தியாவிற்கு வெளியே எந்தப் பிரச்சாரகரும் சென்றதில்லை. ஆனால் இப்போது நம்மிடம் ஓர் ஆச்சரியகரமான மாறுதல் ஏற்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தர்மம் குன்றிஅதர்மம் மேலோங்கும் போது உலகிற்கு உதவ நான் மீண்டும்மீண்டும் வருகிறேன் என்று கூறுகிறார். நம்மிடமிருந்து நீதி நெறிக் கோட்பாடுகளைப் பெறாத நாடே இல்லை என்ற உண்மையை மத ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஆன்மா அழிவற்றது என்பது போன்ற மேலான கருத்துக்கள் எந்த மதத்திலாவது காணப்பட்டால், அது நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மிடமிருந்து பெறப்பட்டதே ஆகும்.
இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் காணப்படுவதைப்போல், இதற்கு முன்பு இவ்வளவு அதிகமான கொள்ளைகளும், முரட்டுத்தனங்களும், பலமானவர்கள் பலவீனர்களுக்கு இழைக்கும் அடக்கு முறைகளும் உலக வரலாற்றில் இருந்ததில்லை. ஆசைகளை வெல்வதன் வாயிலாக மட்டுமே முக்தி கிட்டும் , ஜடப்பொருளின் தளையில் கட்டுண்ட எந்த மனிதனும் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதை ஒவ்வொரு வரும் அறிந்துகொள்ள வேண்டும். இந்த மகத்தான உண்மையை எல்லா நாடுகளும் மெல்லமெல்லப் புரிந்து கொள்ளவும் பாராட்டவும் தொடங்கி இருக்கின்றன. இந்த உண்மையைச் சீடன் புரிந்து கொள்ளும் நிலையை அடைந்ததும், குருவின் வார்த்தைகள் அவனது உதவிக்கு வருகின்றன. ஒருபோதும் தடை படாததும், எப்போதும் எல்லா இனங்களின் மீதும் பாய்ந்து கொண்டிருக்கின்ற தன் எல்லையற்ற கருணையைத் தன் சொந்தக் குழந்தைகளுக்கு அனுப்பி உதவு கிறான் இறைவன். நம் இறைவன் எல்லா மதங்களின் இறைவன். இந்தக் கருத்து இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானது, உலகின் வேறு சாஸ்திரங்கள் எதிலாவது இத்தகைய கருத்தைக் காட்ட முடியுமா என்று உங்களுக்குச் சவால் விடுகிறேன்.
கடவுளின் திருவுளத்தால் இந்துக்களாகிய நாம் இப்போது நெருக்கடியும் பொறுப்பும் மிக்க இடத்தில் வைக்கப்பட்டு இருக்கிறோம். ஆன்மீக உதவிக்காக மேலை நாடுகள் நம்மை நாடி வந்து கொண்டிருக்கின்றன. மனித வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளில் உலக மக்களுக்கு ஒளி காட்டுகின்ற தார்மீகப் பொறுப்பு பாரதத் தாயின் பிள்ளைகளிடம் உள்ளது. அதற்குத் தகுதி படைத்தவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.
ஒன்றை நாம் கவனிக்கலாம்.மற்ற நாடுகளின் மாமனிதர்கள், ஏதோ மலைக்கோட்டையில் வாழ்ந்து கொண்டு, அவ்வப்போது வெளிவந்து வழிப்போக்கர்களைக் கொள்ளையடித்து வாழ்க்கை நடத்திய கொள்ளையர் தலைவனின் வழி வந்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறார்கள். ஆனால் இந்துக்களாகிய நாமோ, மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்து, கிழங்குகளையும் கனிகளையும் உண்டபடி, இறைவனை தியானம் செய்து வந்த ரிஷிகளின், மகான்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுவதில் பெருமைப்படுகிறோம். நாம் இப்போது இழிவையும் பிற்போக்கையும் அடைந்திருக்கலாம். எவ்வளவுதான் இழிவையும் பிற்போக்கையும் அடைந்திருந்தாலும், நமது மதத்திற்காக, சரியான உற்சாகத்தோடு வேலை செய்யத் தொடங்கினால் மறுபடியும் மகத்தானவர்களாக ஆகிவிடுவோம்.
எனக்கு நீங்கள் தந்த மனம் நிறைந்த கனிவான வரவேற்பிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை ஏற்றுக் கொள்ளுங்கள். மேன்மை தங்கிய ராமநாதபுர மன்னர் என்னிடம் கொண்டிருக்கும் அன்பிற்கு வார்தைகள் மூலம் நன்றி செலுத்துவது என்பது முடியாத காரியம். என்னாலும் என் வாயிலாகவும் ஏதாவது நற்காரியம் செய்யப்பட்டு இருக்குமேயானால், அது இந்த மனிதரால் தான். இந்தியா இந்த நல்ல மனிதருக்குக் கடமைப் பட்டு இருக்கிறது. ஏனெனில் நான் சிகாகோ சர்வமத மகா சபைக்குப் போக வேண்டும் என்று நினைத்தவரே இவர்தான் . அந்த எண்ணத்தை என் மனத்தில் எழுப்பியவரும், நான் அங்கு நிச்சயம் சென்றாக வேண்டும் என்று இடைவிடாமல் வற்புறுத்தியவரும் இவர்தான். இப்போது என் பக்கத்தில் நின்று கொண்டு, முன்பு போலவே, உற்சாகத்துடன் மேலும் மேலும்நான் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அன்பான நமது தாய்நாட்டின் உயர்விற்காக ஆன்மீக வழியில் பாடுபட இவரைப்போல் இன்னும் ஐந்தாறு மன்னர்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
..................
ராமேசுவரம் செற்பொழிவு
-
27ஜனவரி 1897 அன்று ராமேசுவரம் கோயிலில் சுவாமி ஜி நடத்திய சொற்பொழிவு.
உண்மை வழிபாடு:
மதம் வாழ்வது அன்பில் , இதயத்தின் தூய்மையான உண்மையான அன்பில்தானே தவிர சடங்குகளில் அல்ல. உடலாலும் மனத்தாலும் தூய்மையாக இல்லாமல் ஒருவன் கோயிலுக்கு வருவதும் சிவ பெருமானை வழிபடுவதும் பயனற்றது. உடம்பாலும் மனத்தாலும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால் தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்து கொண்டு பிறருக்கு மத போதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியையே அடைகிறார்கள். புற வழிபாடு என்பது அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே. அக வழிபாடும் தூய்மையும்தான் உண்மையான விஷயங்கள். இவையின்றிச் செய்யப்படுகின்ற புற வழிபாடு பயனற்றது. இதனை மனதில் பதித்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
தாங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், பிறகு ஒரு தீர்த்தத் தலத்திற்குச் சென்றால் அந்தப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் அளவிற்குக் கீழான நிலைக்கு இந்தக் கலியுகத்தில் மக்கள் வந்துவிட்டனர். தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்கின்ற ஒருவன் ஏற்கனவே இருக்கின்ற தன் பாவங்களுடன் மேலும் ஒன்றைக் கூட்டுகிறான், புறப்பட்டபோது இருந்ததைவிட மோசமானவனாக வீடு திரும்புகிறான். தீர்த்தத் தலங்கள் புனிதமான பொருட்களாலும் மகான்களாலும் நிரம்பி இருப்பவை. மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோயில் எதுவும் இல்லையென்றாலும் ,அந்த இடங்கள் தீர்த்தத் தலங்களே. நூறு கோயில்கள் இருந்தாலும் அங்கே புனித மற்றவர்கள் இருப்பார்களானால் தெய்வீகம் மறைந்துவிடும். தீர்த்தத் தலங்களில் வாழ்வதும் மிகவும் கடினமான காரியம் . சாதாரண இடங்களில் செய்யப்படும் பாவங்களை எளிதாக நீக்கிக் கொள்ள முடியும். ஆனால் தீர்த்தத் தலங்களில் செய்யப்படும் பாவத்தை நீக்கவே முடியாது.
மனத் தூய்மை பிறருக்கு நன்மை செய்வது- இதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழையிடமும் பலவீனரிடமும் நோயுற்றோரிடமும் சிவ பெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். விக்கிரகத்தில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் உள்ளது. ஒரே ஓர் ஏழைக்காயினும், அவனது ஜாதி, இனம், மதம் போன்ற எதையும் பாராமல், அவனிடம் சிவபெருமானைக் கண்டு அவனுக்கு உதவிகள் செய்து தொண்டாற்றுபவனிடம் சிவ பெருமான் மிகவும் திருப்தி கொள்கிறார்; கோயிலில் மட்டுமே தம்மைக் காண்பவனைவிட , இவனிடம் அதிக மகிழ்ச்சி கொள்கிறார்.
ஒரு பணக்காரனுக்குத் தோட்டமொன்று இருந்தது. அதில் இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்கள். ஒருவன் சோம்போறி, வேலையே செய்ய மாட்டான். ஆனால் எஜமான் தோட்டத்திற்கு வந்தால் போதும், உடனே எழுந்து போய் கூப்பிய கைகளுடன் அவரிடம், ஓ ,என் எஜமானின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று புகழ்பாடி அவர் முன்னால் பல்லை இளித்துக் கொண்டு நிற்பான். மற்றவன் அதிகம் பேசுவதே இல்லை , ஆனால் கடினமாக உழைப்பான். பல வகையான பழங்களையும் காய்கறிகளையும சாகுபடி செய்து, நெடுந்தொலைவில் வசிக்கின்ற அந்த எஜமானின் வீட்டிற்கு ச்சுமந்து கொண்டு செல்வான் . இந்த இரண்டு தோட்டக்காரர்களுள் யாரை எஜமான் அதிகம் விரும்புவார் ? சிவபெருமான் தான் அந்த எஜமான். இந்த உலகம் அவரது தோட்டம். இங்கே இரண்டு வகையான தோட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ஒரு வகையினர் சோம்பேறிகள், ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் எதுவும் செய்வதில்லை; சிவபெருமானின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குணநலன்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஏழைகளான, பலவீனர்களான எல்லா மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவருடைய படைப்பு அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள் மற்றொரு வகையினர். இவர்களுள் யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? நிச்சயமாக அவரது பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே. தந்தைக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும். சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள் அவரது பிள்ளைகளாகிய இந்த உலகஉயிர்கள் அனைத்திற்கும் முதலில் சேவை செய்ய வேண்டும். கடவுளின் தொண்டர்களுக்குச் சேவை செய்பவர்களே அவரது மிகச் சிறந்த தொண்டர்கள் என்று சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை மனதில் கொள்ளுங்கள்.
மீண்டும் சொல்கிறேன்; மனத்தூய்மையுடன் இருங்கள், உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நற்கர்மம் இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மை (சித்தசுத்தி) பெறும். எல்லோரிலும் உறைகின்ற சிவ பெருமான் வெளிப்பட்டுத் தோன்றுவார். அவர் எல்லோரது இதயத்திலும் எப்போதும் இருக்கிறார். அழுக்கும் தூசியும் படிந்த கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்க்க முடியாது. அறியாமையும் தீய குணங்களுமே நம் இதயக் கண்ணாடியில் படிந்துள்ள தூசியும் அழுக்கும்.
நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம், பாவங்கள் அனைத்திலும் முதற்பாவமாகும். நானே முதலில் உண்பேன் . மற்றவர்களைவிட எனக்கு அதிகமான பணம் வேண்டும் , எல்லாம் எனக்கே வேண்டும், மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கத்தை அடைய வேண்டும் ”என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி. சுயநலமற்றவனோ, நான் கடைசியில் இருக்கிறேன். சொர்க்கம் செல்வதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் அதற்கும் தயாராக இருக்கிறேன்” என்கிறான். இத்தகைய சுயநலமற்ற தன்மையே மதத்திற்கான உரைகல்.சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மீகவாதி, அவனே சிவ பெருமானுக்கு அருகில் இருக்கிறான் . அவன் படித்தவனாக இருந்தாலும் படிக்காதவனாக இருந்தாலும் அவன் அறிந்தாலும் அறியவில்லை என்றாலும் அவனே மற்ற அனைவரையும் விட சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்ததாலும், சிறுத்தையைப்போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிவ பெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.
ராமநாதபுரம் சொற்பொழிவு
-
ஜனவரி 25-ஆம் நாள் மன்னர் வரவேற்புரை ஒன்று அளித்தார். சுவாமிஜி அளித்த பதிலின் சுருக்கம்.
மிக நீண்ட இரவு விலகுவதுபோல் தோன்றுகிறது ,மிகக்கடுமையான துன்பம் கடைசியாக முடிவுக்கு வந்துவிட்டது போல் தோன்றுகிறது, பிணம் போல் கிடந்த உடம்பு விழிப்பதுபோல் உள்ளது. இந்த நேரத்தில் ஒரு குரல் நம்மை நோக்கி வருகிறது- வரலாறும் மரபுகளும்கூட எட்டிப் பார்க்க முடியாத இருள்செறிந்த அந்தக் கடந்தகாலத்திலிருந்து புறப்பட்டு , ஞானம் பக்தி மற்றும் கர்மமாகிய எல்லையற்ற இமயச் சிகரங்கள் தோறும் எதிரொலிப்பது போல் நம் தாய் நாடாகிய இந்தியாவின் குரல் நம்மை நோக்கி வருகிறது. மெதுவாக ஆனால் உறுதியாக, மிகவும் தெளிவாக அது வருகிறது. நாளுக்கு நாள் அதன் ஒலி அதிகரித்துகொண்டே வருகிறது. தூங்கியவன் விழிக்கிறான் ! இமயத்திலிருந்து தவழ்ந்து வரும் தென்றல் காற்றைப்போல், அது ஏறத்தாழ உயிரிழந்த நிலையில் இருக்கின்ற எலும்புகளுக்கும் தசைகளுக்கும் உயிர்த் துடிப்பைத் தருகிறது. சோம்பல் நீங்கத் தொடங்குகிறது. நமது பாரதத்தாய் நீண்ட ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிக்கிறாள். அவள் விழித்து வருவதைக் குருடனும் குதர்க்கவாதிகளும் காண முடியாது. அவளை யாரும் தடுக்க முடியாது. இனிஅவள் தூங்கப் போவதுமில்லை. புற சக்திகள் எதுவும் அவளை அடிமைப்படுத்த முடியாது. ஏனெனில் அவளது காலடியில் எல்லையற்ற ஆற்றல் எழுந்து கொண்டிருக்கிறது.
ராமநாதபுர மன்னர் அவர்களே ! ராமநாதபுரத்தின் குடிமக்களே! நீங்கள் அன்போடும் கனிவோடும் எனக்கு அளித்த வரவேற்பிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் அன்பையும் கனிவையும் என்னால் உணர முடிகிறது. ஏனெனில் வாய்ச் சொற்களை விட இதயத்துடன் இதயம் பேசுவதே உயர்ந்த மொழி. உயிருடன் உயிர் கலந்து ஆழ்ந்த அமைதியில் அவை பேசுகின்ற அந்த மொழி சிறிதும் தவறில்லாத தூய மொழி. அதை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் உணர்கிறேன்.
மேன்மை தங்கிய ராமநாதபுர மன்னர் அவர்களே, மேலை நாடுகளில் நமது மதத்திற்காகவும் நம் தாய் நாட்டிற்காகவும் என்னால் ஏதாவது சிறிய வேலை செய்ய முடிந்தது என்றால், தங்கள் சொந்த வீடுகளிலேயே ஆழமாகப் புதைந்து கிடக்கின்ற விலை மதிப்பற்ற ரத்தினங்களை அறியாத நம் நாட்டு மக்களின் கவனத்தை அதன்மீது திருப்பி, அவர்களின் உணர்ச்சிகளை விழிக்கச் செய்ய முடிந்ததென்றால், அறியாமையாகிய குருட்டுத்தனத்தின் காரணமாக ,தாகத்தால் தவித்து வாடி , உயிர்பிழைக்கும் வழிதேடி எங்கோ உள்ள சாக்கடைத் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தவர்களை அழைத்து, தங்கள் சொந்த வீட்டிலேயே வற்றாமல் பொங்கிக் கொண்டிருக்கின்ற நிரந்தர ஊற்றுநீரைக் குடிக்குமாறு என்னால் செய்யமுடிந்தது என்றால் , நமது மக்களை விழிப்புணர்த்தி, செயல்படத் தூண்டி, எல்லாவற்றிலும் இந்தியாவின் உயிர்த்துடிப்பு மதம்,மதம் மட்டுமே என்பதைப் புரிய வைக்க முடிந்ததென்றால், அந்த உணர்வு இல்லாது போனால் எத்தனை அரசியல்கள் இருந்தாலும் ,எத்தனை சமூகச் சீர்திருத்தங்கள் இருந்தாலும், இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் தலைமீதும் குபேரனின் செல்வத்தைக் கொட்டிக் குவித்தாலும் இந்தியா அழிந்துவிடும் என்று நான் அவர்களுக்கு உணர்த்த முடிந்தது என்றால், இதற்காக இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் என்னால் ஏதாவது செய்ய முடிந்தது என்றால் அதற்கான பெருமை முக்கியமாக தங்களையே சாரும்.
ஏனெனில் நீங்கள்தான் எனக்கு முதன்முதலில் இந்த எண்ணத்தைத் தந்தீர்கள். நீங்கள்தான் இடைவிடாமல் என்னை இத்தகைய வேலையில் தூண்டிவந்தீர்கள். எதிர்காலத்தை உள்ளுணர்வால் புரிந்து கொண்டது போல் நீங்கள்தான் என் கைகளைப் பிடித்து அந்தப் பணிகளுக்கு அழைத்துச் சென்றீர்கள், எல்லா வழிகளிலும் உதவினீர்கள், ஒருபோதும் தயங்காமல் இந்தக் பணியில் என்னை உற்சாகப்படுத்தினீர்கள். எனவேதான் ,எனது வெற்றியில் மகிழ்கின்ற முதல் மனிதராக நீங்கள் இருக்கிறீர்கள். அதைக் காணவே நான் இந்தியாவிற்குத் திரும்பும் வழியில் உங்கள் அரசில் முதன்முதலில் இறங்க நேர்ந்தது போலும்!
மேன்மை தங்கிய மன்னரே, தாங்கள் ஏற்கனவே கூறியது போல் மகத்தான வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது; வியக்கத்தக்க ஆற்றல்கள் செயல் படுத்தப்பட வேண்டியுள்ளது. மற்ற நாடுகளுக்கு நாம் பலவற்றைப் போதிக்க வேண்டியுள்ளது. தத்துவத்தின், ஆன்மீகத்தின், பண்பின், இனிமையின், மென்மையின், அன்பின் தாயகம் இந்தப் பூமி. இந்தக் குணங்கள் இன்றும் இருக்கின்றன. பல நாடுகளுக்குச் சென்றதில் கிடைத்த என் அனுபவங்கள் எனக்கு இதையே அழுத்தமாகத் தெரிவிக்கின்றன. உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் இந்தக் குணங்கள் இன்றும் மிகச்சிறந்த அளவில் இருக்கிறது என்பதை உறுதியாக, தைரியமாக என்னால் சொல்ல முடியும்.
இந்த விந்தையைப் பாருங்கள். கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இங்கு எத்தனையோ அரசியல் மாற்றங்கள் நடந்துள்ளன. பல்வேறு நாடுகளில் உள்ள அமைப்புகளை அழிப்பதற்காகப் பெரிய இயக்கங்கள் வேலை செய்து வருகின்றன. மேலை நாடுகளில் அவை குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுவருகின்றன. இதைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டா என்று நம் மக்களைக் கேளுங்கள். ஒரு வார்த்தையும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் சிகாகோவில் சர்வ மத மகா சபை ஒன்று நடைபெற்றது, அதில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து ஒரு துறவி அனுப்பப்பட்டது, அவர் அங்கே மிகுந்த பாராட்டுபெற்றது, அப்போதிலிருந்து அவர் அங்கே பணியாற்றி வருவது போன்ற விவரங்கள் சாதாரண பிச்சைக் காரனுக்குக்கூடத் தெரிந்திருக்கிறது.
நம் மக்கள் மழுங்கிய மூளை உடையவர்கள், அவர்கள் கற்க விரும்புவதில்லை, எந்தச் செய்திகளையும் அறிந்து கொள்ள விரும்புவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில் நானும் அத்தகைய முட்டாள்தனமான கருத்தையே கொண்டிருந்தேன். ஆனால் உலகைச் சுற்றி வருகின்ற யாத்திரிகர்களும், மேலோட்டமாக விஷயங்களைப் புரிந்துகொள்கின்ற அவசர புத்திக்காரர்களும் எழுதுகின்ற நூல்களில் உள்ள கருத்துக்களைவிட, கற்பனைகளைவிட அனுபவமே சிறந்த ஆசானாக உள்ளது. நம் மக்கள் முட்டாள்கள் அல்ல, மந்தமானவர்கள் அல்ல, கதிரவனின் குடையின் கீழ் இந்த உலகத்தில் வாழ்கின்ற எல்லாமக்களைப் போலவே அவர்களும் செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வமும் தாகமும் உடையவர்களாக உள்ளனர் என்பதைத்தான் இந்த அனுபவம் எனக்குப் போதித்தது..
ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென்று தனிப் பங்கு உள்ளது. இயல்பாகவே ஒவ்வொரு நாடும் தன்னோடு பிறந்த, தனக்கென்றே உரிய விசித்திரங்களும் தனித்தன்மையும் கொண்டதாக உள்ளது. உலக நாடுகள் அனைத்தின் இந்த இயைபில் ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப் பங்கு உள்ளது. அதுவே அந்த நாட்டின் உயிரோட்டமாகவும் ஆதாரமாகவும் உள்ளது. அதுவே அந்த நாட்டு தேசிய வாழ்வின் முதுகெலும்பாகவும் அஸ்திவாரமாகவும் அசைக்க முடியாத அடித்தளப் பாறையாகவும் அமைந்துள்ளது.
நமது இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாட்டின் அடித்தளமாகவும் முதுகெலும்பாகவும் உயிர்நிலை மையமாகவும் இருப்பது மதம், மதம் மட்டுமே. மற்றவர்கள் அரசியலைப்பற்றிப் பேசட்டும், வியாபாரத்தின் மூலம் குவிகின்ற அளவற்ற செல்வத்தின் பெருமையைப் பேசட்டும், பரவி வருகின்ற வாணிப வளத்தைப்பற்றி ப்பேசட்டும், சுதந்திரத்தின் மகிமையைப்பற்றி பேசட்டும். இவைகளை எல்லாம் இந்துவின் மனம் புரிந்து கொள்ளாது. புரிந்து கொள்ளவும் விரும்பாது. ஆன்மீகம், மதம், இறைவன், ஆன்மா, எல்லையற்ற பரம் பொருள், முக்தி- இவை பற்றியெல்லாம் பேசிப்பாருங்கள்.பிற நாடுகளின் சிறந்த தத்துவ ஆசிரியர்கள் என்று கூறப்படுபவர்களைவிட நம்நாட்டில் உள்ள சாதாரண குடியானவன் இவற்றைப்பற்றி அதிகமாக அறிந்திருப்பான். இது உறுதி. அன்பர்களே , நாம் இந்த உலகத்திற்குப் போதிக்க வேண்டியவை சில உள்ளன என்று கூறினேன். ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு காலம் கொடுமையிலும் அன்னிய ஆதிக்கத்திலும் அவர்களின் தண்டனைகளின் கீழும் வாழ்ந்தும் இந்த நாடு அழியாமல் இருப்பதற்குரிய ஒரே காரணம், இந்த உலகத்திற்குப் போதிக்க வேண்டியதை அது பெற்றிருப்பது தான். இந்த நாடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் அது கடவுளையும் மதம் மற்றும் ஆன்மீகக் கருவூலங்களையும் கைவிடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது.
தற்போது அரசியல் பேராசைகளாலும் சமூகத்திட்டங்களாலும் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்ட, பாதி செத்துவிட்ட மேலை நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் புதிய வாழ்வையும் புதிய சக்தியையும் வெள்ளம் போல் பாய்ச்சுவதற்கான மதம் மற்றும் ஆன்மீகத்தின் ஊற்றுக்கள் இன்னும் இந்த நாட்டில் தான் இருக்கின்றன.
இந்தியச் சூழலை நிறைத்துக் கிளம்புகின்ற, இயைபானதும் மாறுபட்டதுமான பல்வேறு குரல்களுக் கிடையே மகத்தான, தனித்தன்மையான, முழுமையான ஒரு குரல் எழுகிறது; அது துறவு. துறந்துவிடு! இதுதான் இந்திய மதங்களின் அடிப்படையான கருத்து, இந்த உலகம் இரண்டு நாட்களுக்கு மட்டுமே இருக்கின்ற ஒரு மாயை . இப்போதைய வாழ்க்கையும் வெறும் ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே. இதற்குப் பின்னால், மாயையாகிய இந்த உலகத்திற்கு ப்பின்னால் எல்லையற்ற ஒன்று உள்ளது; அதனை நாம் தேடுவோம். முடிவில்லாதாகக் கருதப்படுகின்ற இந்தப் பிரபஞ்சம்கூட ஒரு சேற்றுக்குட்டை மட்டுமே என்று எண்ணுகின்ற ஆற்றல்மிக்க பரந்த மனங்களாலும் அறிவாலும் ஒளிபெறுகின்ற நாடு இது. இதற்குப் பின்னால், அதற்கும் பின்னால் அவர்கள் போகிறார்கள். காலம், எல்லையற்ற காலம்கூட அவர்களைப் பொறுத்தவரை வெறுமையே. காலத்திற்கும் அப்பால், வெகு அப்பால் அவர்கள் சொல்கிறார்கள். இடம் என்பது அவர்களுக்கு ஒன்றுமே இல்லை. அதையும் கடந்து செல்ல அவர்களுக்கு ஒன்றுமே இல்லை. அதையும் கடந்து செல்ல அவர்கள் விரும்புகிறார்கள். இப்படி,இந்த உலகம், காலம், இடம் அனைத்தையும் கடந்து செல்வதுதான் மதத்தின் ஆதாரம்.
எல்லாவற்றையும் கடந்து செல்வது தான், அனைத்தையும் கடந்து செல்வதற்கான இந்தப் போராட்டம்தான், எதனை இழக்க நேரினும், எந்த ஆபத்துக்களை எதிர் கொள்ள நேரினும் எல்லாவற்றிக்கும் அப்பால் இருக்கின்ற ஒன்றின் காட்சியைப் பெறுவதற்காக இயற்கையின் முகத்திரையைக் கிழிக்கின்ற தைரியம்தான் நமது நாட்டின் பண்பு. அதுவே நமது லட்சியம்.ஆனால் ஒரு நாட்டிலுள்ள எல்லோரும் முற்றிலுமாகத் துறந்துவிட முடியாது தான். அவர்களுக்கு உற்சாகமூட்ட விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கான வழி இதோஉள்ளது. உங்கள் அரசியல், சமூகச் சீர்திருத்தம், பணம் சம்பாதிப்பது, வாணிப வளம் - இவை பற்றிய உங்கள் பேச்சுக்கள் எல்லாம் வாத்தின் முதுகில்பட்ட தண்ணீர் போல் வழிந்து போய்விடும். பிறகு? நீங்கள் உலகிற்குப் போதிக்க வேண்டிய தெல்லாம் ஆன்மீகத்தை தான். நாம் வேறு ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டுமா? இந்த உலகத்திடமிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு ஏதாவது இருக்கிறதா? ஆம் ; உலகப் பொருட்களைப் பற்றிய அறிவு, நிறுவனங்களின் சக்தி, அதிகாரங்களைக் கை யாளும் திறமை, நிறுவனங்களை உருவாக்குகின்ற திறமை, குறைந்த சக்தியைச் செலவழித்து அதிக பலன்களை அடையும் -திறமை- இவற்றையெல்லாம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றை ஒரு குறிப்பிட்ட அளவு மேலை நாட்டிடமிருந்து ஒரு வேளை நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம்.
ஆனால் உண்பதும் உடுப்பதும் குடித்துக் களிப்பதுமான லட்சியத்தை இந்தியாவில் யாராவது உபதேசித்தாலும், உலகியல் வாழ்க்கையை ஆன்மீகத்திற்குள் புகுத்த நினைத்தாலும் அவன் பொய்யன். இந்தப் புனித பூமியில் அவனுக்கு இடமில்லை; அவனது பேச்சைக் கேட்கவும் இந்திய மனம் விரும்பாது. மேலை நாகரீகம் மினுமினுப்பும் பளபளப்பும் கொண்டதாக இருக்கலாம், நாசூக்கானதாக இருக்கலாம் , அதிகார ஆற்றல் மிக்கதாக இருக்கலாம் . ஆனால் அவை அனைத்தும் வீண் என்பதை இந்த மேடையில் நின்று கொண்டு அவர்களின் முகத்திற்கு நேராகச் சொல்கிறேன். அவை வெறும் டம்பமே.கடவுள் மட்டுமே வாழ்கிறார்.. ஆன்மா மட்டுமே வாழ்கிறது. ஆன்மீகம் மட்டுமே வாழ்கிறது.அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
என்றாலும், மிக உயர்ந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்கான பக்குவம் பெறாத சகோதரர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தீவிரம் குறைக்கப்பட்டச் சிறிது உலகாயதம் ஒருவேளை நன்மையை த்தரலாம். அவர்கள் மீது உயர் உண்மைகளை திணிக்கக்கூடாது. சமீப காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சமூகத்திலும் இந்தக் தவறே செய்யப்பட்டு வருகிறது. உயர் உண்மைகளை ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் இல்லாதவர்களிடமும் அவை திணிக்கப் படுகின்றன. இப்படித் திணிப்பது தவறு என்ற உண்மை நன்றாகப் புரிந்து கொள்ளப்படுகின்ற இந்தியாவில் மிகவும் வேதனை தருகின்ற அளவில் இது நடைபெறுகிறது. என் வழி உங்கள் வழியாக இருக்க வேண்டிய தில்லை. இந்து வாழ்க்கையின் லட்சியம் சன்னியாசம் என்பது உங்களுக்குத் தெரியும்; எல்லோரையுமே துறக்கும் படி நமது சாஸ்திரங்கள் கட்டாயப்படுத்துகின்றன. உலகியல் இன்பங்களை அனுபவித்த பிறகு வாழ்வின் இறுதிக்கட்டத்தில் ஒவ்வோர் இந்துவும் உலகைத் துறக்க வேண்டும். அப்படித் துறக்காதவன் இந்து அல்ல . அவன் தன்னை இந்து என்று கூறிக்கொள்ள உரிமையில்லை .உலக வாழ்வின் நிலையாமையைக் கண்ட பிறகு , வாழ்க்கையை அனுபவித்தபிறகு அதை விட்டு விட வேண்டும் . இதுதான் லட்சியம் என்பது நமக்குத் தெரியும் . போக வாழ்க்கை உள்ளீடற்றது, வெற்றுச் சாம்பல் என்பதை அறிந்ததும், அதைத் துறந்துவிடு, திரும்பிவிடு. மனம் புலன்களை நோக்கிச் சுழன்று செல்வது போலுள்ளது. அந்த மனத்தைப் பின்னால் திரும்பிச் சுழலச் செய்ய வேண்டும். பிரவிருத்தி நின்று போக வேண்டும்; நிவிருத்தி துவக்கப்பட வேண்டும். இதுதான் லட்சியம்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவு அனுபவம் ஏற்பட்ட பிறகே, அந்த லட்சியத்தை அடைய முடியும். துறவின் உண்மையை ஒரு குழந்தைக்குப் போதிக்க முடியாது. குழந்தை இன்பநோக்குடன் பிறக்கிறது; அதன் உலகம் புலன்களிலேயே உள்ளது; அதன் வாழ்க்கை முழுவதும் புலனின்பங்களில் உள்ளது; இந்தக் குழந்தையைப் போன்ற மனிதர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஓரளவு அனுபவம் வேண்டும், போகம் வேண்டும்; இவற்றின் மூலம் அவர்கள் உலகின் நிலையாமையை அறிந்து கொள்வார்கள். அதன்பிறகே அவர்களுக்குத் துறவு வரும். நமது சாஸ்திரங்களில் அத்தகையோருக்கான வழிகள் நிறைய உள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சன்னியாசிகளுக்குகான நியதிகளால் எல்லோரையும் கட்டுப்படுத்தும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. இது மிக பெரிய தவறாகும். இந்தத் தவறைத் தவிர்த்திருந்தால் இப்போது நீங்கள் இந்தியாவில் காண்கின்ற இவ்வளவு வறுமையும் துன்பமும் இருந்திருக்காது. சாதாரண ஏழையின் வாழ்க்கை கூட அவனுக்குச் சிறிதும் பயனில்லாத ஆன்மீக மற்றும் ஒழுக்க விதிகளால் கட்டி நெருக்கப்பட்டுள்ளது. உங்கள் கைகளை விலக்கிக் கொள்ளுங்கள் ! அவன் வாழ்க்கையை கொஞ்சம் அனுபவிக்கட்டும். அதன்பிறகு அவன் தன்னை உயர்த்திக் கொள்வான். தானாகவே அவனிடம் துறவு தோன்றும்.
மேலைநாட்டினர் இந்த வகையில் ஏதோ சிறிது நமக்குப் போதிக்கலாம். ஆனால் இவற்றைக் கற்றுக்கொள்வதில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனின் மேலைநாட்டுக் கருத்துக்களின் படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுள் பலரது வாழ்க்கை பெரும்பாலும் தோல்வியாகவே உள்ளது. இதைச் சொல்வதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.
இந்தியாவில் நமது பாதையில் இரண்டு தடைகள் உள்ளன. ஒன்று பழங்கால வைதீகம், மற்றொன்று தற்கால ஐரோப்பிய நாகரீகம். இரண்டுமே அளவை மீறினால் அபாயம் விளைவிக்கக் கூடியவை, ஒன்றை விட்டால் மற்றொன்றினால் நேரும் அபாயம் பெருகும். இந்த இரண்டுள் பழங்கால வைதீகத்தையே நான் தேர்ந்தெடுப்பேன் ஐரோப்பியமயமாகும் முறையை நான் விரும்பவில்லை. ஏனெனில் பழைய வைதீக மனிதன் அறிவிலியாக இருக்கலாம், முரடனாக இருக்கலாம்; ஆனால் அவன் மனிதன். அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது, வலிமை உள்ளது. அவன் சொந்த க்கால்களில் நிற்கிறான். ஐரோப்பியமயமானவனுக்கோ முது கெலும்பில்லை; பல்வேறு இடங்களிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திரட்டப்பட்ட, பொருந்தாத, ஜீரணிக்க முடியாத, ஒன்றுபடாத பல்வேறு கருத்துக்களின் ஒரு கூட்டுக் குழப்பமாக அவன் இருக்கிறான். அவன் சொந்தக் காலில் நிற்கவில்லை , அவனது தலை சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. அவனது செயல்களின் நோக்கம் எது தெரியுமா? ஆங்கிலேயர் சிலரிடமிருந்து பெறும்“ சபாஷ் “தான் அவனது சீர் திருத்தத்திட்டங்கள், ஏதோ சில சமுதாயத்தீமைக்களுக்கு எதிரான அவனுடைய வசைமாரிகள் - இவையெல்லாம் முக்கியமாகச் சில ஐரோப்பியர்களின் ஆதரவிலேயே நடக்கிறது. நமது சில பழக்கங்கள் கொடியவை என்று ஏன் அவன் சொல்கிறான் ? ஏனென்றால் ஐரோப்பியர்கள் அப்படிச் சொல்கிறார்கள், இதுதான் அவன் கூறும் காரணம். நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். உங்கள் வலிமையிலேயே எழுந்து நில்லுங்கள், உங்கள் வலிமையிலேயே இறந்து போங்கள். இந்த உலகத்தில் பாவம் என்று ஏதாவது இருக்கிறது என்றால் அது பலவீனம் மட்டுமே. எல்லா வகையான பலவீனங்களையும் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் பலவீனம் தான் பாவம், பலவீனம்தான் மரணம். தன் கால்களில் நிற்கின்ற அளவுகூடச் சமநிலை பெறாத இந்தப் பிராணிகள் இன்னும் எந்தப் பெயாராலும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆகவில்லை, அவர்களை என்னவென்று அழைப்பது - ஆண்கள் என்றா, பெண்கள் என்றா, மிருகங்கள் என்றா?
ஆனால் அந்தப் பழைய வைதீகர்கள் உறுதி வாய்ந்தவர்கள், அவர்கள் மனிதர்கள். அவர்களுள் சில சிறந்த உதாரண புருஷர்கள் இன்னும் இருக்கிறார்கள் அவர்களுள் ஒருவரை உங்கள் முன் காட்ட விரும்புகிறேன்.. அவர்தான் உங்கள் ராமநாதபுர அரசர் . இவரைப்போல் ஆர்வம் நிறைந்த ஒரு மனிதர் இந்த நாடு முழுவதிலும் இல்லை. இதோ இளவரசர் இருக்கிறார், இவரைப்போல் கீழை மற்றும் மேலை நாட்டு விவகாரங்களை அறிந்த , நல்லனவற்றை எல்லா நாடுகளிலிருந்தும் தன்னால் முடிந்த அளவிற்கு எடுத்துக் கொள்கின்ற வேறெந்த நாட்டு இளவரசரும் இல்லை. மிகக் கீழான ஜாதியில் பிறந்தவராயினும் அறிவால் உயர்ந்திருப்பின் அவரிடமிருந்து உயர் அறிவை மிகுந்த பக்தியுடன் கற்றுக் கொள். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவரிமிருந்து வருமானாலும் முக்திக்கு உரிய வழியை அவருக்குத் தொண்டுகள் செய்து அறிந்து கொள். -ஒருத்தி சிறந்தவளாக இருப்பாளானால், கீழான குலத்தில் பிறந்திருந் தாலும் அவளை மணந்து கொள்” - இவை நமது மகத்தான இணையற்ற சமுதாய விதி அமைப்பாளரான, தெய்வீக மனு அமைத்த சட்டங்கள். இது உண்மை. உங்கள் சொந்தக் காலிலேயே நில்லுங்கள். உங்களால் முடிந்தவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள், உங்களுக்குப் பயனுள்னவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்து என்ற வகையில் , அவை எல்லாம் நமது தேசியக் கொள்கைகளுக்கு அடுத்த படியிலேயே இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் நோக்கம் ஒன்று இருக்கிறது. இந்த நோக்கம், கணக்கில்லாத அவனது கடந்தகால கர்மங்களின் விளைவாகும். அது போல் உங்கள் பெருமைக்குரிய நாட்டின் முடிவில்லாத கடந்தகால வாழ்க்கையின் முழுமையான விளைவான மிகச் சிறந்த பாரம் பரியத்துடன் நீங்கள் ஒவ்வொருவரும் பிறந்திருக்கிறீர்கள். லட்சக்கணக்கான உங்கள் முன்னோர் உங்கள் ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. எனவே விழிப்போடு இருங்கள். ஒவ்வோர் இந்துக் குழந்தையும் எந்த நோக்கத்துடன் பிறக்கிறது?பிராமணன் எதற்காகப் பிறக்கிறான் என்பது பற்றிப் பெருமையுடன் மனு முழங்குவதை நீங்கள் படித்ததில்லையா? தர்மமாகிய புதையலைக் காப்பதற்கே என்றல்லவா அவர் கூறுகிறார். இது பிராமணனின் லட்சியம் மட்டுல்ல , இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பூமியில் பிறக்கின்ற ஆண் பெண் பேதமின்றி ஒவ்வொரு குழந்தையின் லட்சியமும் ‘தர்மமாகிய புதையலைக் காப்பதே” என்று நான் கூறுவேன். வாழ்க்கையின் மற்ற பிரச்சனைகள் எல்லாம் அந்த நோக்கத்திற்கு அடுத்த படியிலேயே வைக்கப்பட வேண்டும் . சங்கீதத்தில் தாளலயங்களின் இடத்தைப் போன்றதே இது.
அரசியலையே நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு நாடு இருக்கலாம். அங்கே மதம் முதலான மற்றவையெல்லாம் அந்த லட்சியத்திற்கு அடுத்தபடியாகத்தான் அமைய வேண்டும் . ஆனால் இந்த நாட்டின் மகத் தான வாழ்க்கை லட்சியம் ஆன்மீகமும் , துறவும்தான் இவர்களுடைய அடிப்படை முழக்கம்,‘ இந்த உலகமே வெறுமை” மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலைக்கும் மாயை; மற்ற எல்லாமே - விஞ்ஞானம் ஆகட்டும் அதிகார அனுபவம் ஆகட்டும் ,செல்வம், பெயர் ,புகழ் என்று எதுவும் ஆகட்டும் - அந்த மேலான லட்சியத்திற்கு அடுத்த நிலையில் தான் இருக்க வேண்டும் என்பதே. ஐரோப்பிய விஞ்ஞான அறிவு , கல்வி, செல்வம் அதிகாரம் பெயர் முதலிய அனைத்தையும், ஒவ்வோர் இந்துக் குழந்தையின் பிறப்புடனே அதனுடன் தோன்றிய ஆன்மீகம் மற்றும் அந்த இனத்தின் தூய்மை ஆகிய முக்கிய நோக்கத்திற்கு அடுத்த நிலையில் வைப்பதே ஓர் உண்மையான இந்துவினுடைய பண்பின் ரகசியம் ஆகும்.
ஆகையால் இந்த இரண்டுவகையான மனிதர்களுள் வைதீக மனிதன் தன் இனத்தின் வாழ்க்கை ஊற்றான ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளான். மற்றவன் முற்றிலுமாக மேலைநாட்டு போலி நாகரீகத்தின் பிடியிலுள்ளான் ; உயிரூட்டும் லட்சிய மான ஆன்மீகத்தில் அவனுக்குப் பிடிப்பில்லை. இந்த இருவருள் வைதீக மனிதனையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இங்குள்ள ஒவ்வொருவருமே ஏற்றுக் கொள்வீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஏனென்றால் அவனிடம் சிறிது நம்பிக்கைக்கு இடமிருக்கிறது ; அவனிடம் தேசியக் கொள்கை உள்ளது, பிடித்து நிற்க ஏதோ இருக்கிறது. எனவே அவன் உயிர் வாழ்வான், மற்றவனோ அழிந்து போவான். தனி மனித வாழ்க்கையில் வாழ்க்கையின் லட்சியம் தடைபடாமல் இருந்தால், உயிர்த்துடிப்பான அந்த லட்சியம் செயல்பட்டுக் கொண்டிருக்குமானால் மற்ற செயல்களுக்கு ஏற்படுகின்ற தடைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அந்தக் தடைகள் அவவை அழிக்காது. அதுபோலவே நமது வாழ்க்கையின் இந்த லட்சியம் தடைபடாதவரை எதுவும் நம் நாட்டை அழிக்க முடியாது. ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; அந்த ஆன்மீகத்தை விலக்குவீர்களானால், விலக்கி விட்டு மேலை நாட்டின் உலகியல் நாகரீகத்திற்குப் பின்னால் செல்வீர்களானால் மூன்று தலைமுறைகளுள் உங்கள் இனம் ஒன்றுமே இல்லாமல் அழிந்து போகும். ஏனெனில் நாட்டின் முதுகெலும்பு முறிந்துவிடும்; தேசிய மாளிகை எழுப்பப்பட்டுள்ள அஸ்திவாரம் தகர்க்கப்பட்டுவிடும் . அதனால் எல்லாம் அழிந்தே தீரும்.
எனவே அன்பர்களே , முதலும் மிக முக்கியமானதுமான நமது வேலை ,பரம்பரை பரம்பரையாக நமக்கு நமது முன்னோர்களால் அளிக்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத செல்வமான ஆன்மீகத்தை நிலையாக , உறுதியாகப் பற்றிக்கொள்வதே.மன்னர் பரம் பரையைச் சார்ந்தவர்கள், ஏழை யாத்திரிகர்களைக் கொள்ளையடித்து, புராதனமான கோட்டை கொத்தளங்களில் வாழ்ந்த ஏதோ அரச வம்சத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறுவதில் பெருமை கொள்ளாமல் காடுகளில் வாழ்ந்த அரை நிர்வாண சாதுக்களைத் தங்கள் முன்னோர்களாகக் கொண்டாட முயல்கின்ற பேரரசர்கள் வாழ்ந்த நாட்டைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அத்தகைய ஒரு நாடு இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அது இந்த நாடுதான். மற்ற நாடுகளின் மகத்தான மதவாதிகள் தங்கள் மூதாதையர்களாகச் சில அரசர்களைச் சொல்கிறார்கள். ஆனால் இங்கோ, பேரரசர்கள் தங்கள் பரம்பரையின் துவக்கத்தை ஓர் ஆன்மீகவாதியிடம் காண முயல்கிறார்கள்.ஆகையால் நீங்கள் ஆன்மீகத்தை நம்புகிறீர்களோ இல்லையோ, நம் தேசீய வாழ்விற்காகவாவது ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டு அதை ஒரு கையால் பற்றிக் கொள்ளுங்கள். பின்னர் மற்றொரு கையை நீட்டி, மற்ற இனங்களிடமிருந்து எதையெல்லாம் பெற முடியுமோ அவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அவை எல்லாமே உங்கள் வாழ்வின் ஒரே லட்சியமாகிய ஆன்மீகத்திற்கு அடுத்த படியில்தான் இருக்க வேண்டும். அத்தகைய ஆச்சரியமான, உன்னதமான வாழ்க்கையிலிருந்து எதிர்கால இந்தியா உருவாகும்.
இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் சிறப்புடன் அத்தகைய இந்தியா உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. பழங்கால ரிஷிகள்அனைவரைவிடவும் மகத்தான ரிஷிகள் தோன்றப் போகின்றனர். மற்ற உலகங்களில் வாழ்கின்ற உங்கள் முன்னோர்கள் தங்கள் வழித்தோன்றல்களாகிய உங்களின் புகழையும் கீர்த்தியையும் கண்டு திருப்தி மட்டும் அடையவில்லை, பெருமையும் அடைவார்கள் என்பதை நான் காண்கிறேன். என்சகேதரர்களே, நாம் எல்லோரும் கடுமையாக உழைப்போம். தூங்குவதற்கு இது நேரமில்லை . எதிர்கால இந்தியா நம்முடைய உழைப்பைப் பொறுத்தே அமையப் போகிறது. இப்போது இந்தியத் தாய் தயாராகக் காத்திருக்கிறாள். தூக்கத்தில் இருக்கிறாள் , அவ்வளவுதான். எழுந்திருங்கள், விழித்திருங்கள். அழியாத தன் அரியாசனத்தில் புத்திளமையோடும் முன்பு எப்போதும் இல்லாத பெருமையோடும் அவள் வீற்றிருப்பதைக் காணுங்கள்.
கடவுளைப் பற்றிய கருத்து நமது தாய்த்திருநாட்டில் வளர்ந்துள்ளது போல் வேறெங்கும் இவ்வாறு முழுமையாக வளரவில்லை. ஏனென்றால் கடவுளைப் பற்றிய இந்தக் கருத்து உலகில் வேறெங்கும் இருக்கவேயில்லை நான் இவ்வாறு உறுதியாகச் சொல்வதைக் கேட்டுநீங்கள் திகைக்கலாம். ஆனால் பிற மத சாஸ்திரங்கள் எவற்றிலேனும் கடவுளைப் பற்றிய நமது கருத்துக்களுக்குச் சமமான கருத்துக்கள் இருந்தால் காட்டுங்கள். அவர்களின் தெய்வங்கள் எல்லாம் ஒவ்வொரு குழுக்களுக்கு உரியவர்கள்; யூதர்களின் தெய்வம், அரேபியரின் தெய்வம் ,அந்த இனத்தின் தெய்வம் இந்த இனத்தின் தெய்வம் என்றிப்படி உள்ளவர்கள். சொந்த இனத்தவருக்காக மற்ற இனத்தவருடன் போரிடும் தெய்வங்கள். ஆனால் எல்லோருக்கும் நன்மை தருகின்ற, மிகுந்த கருனை வாய்ந்த ,நம் தந்தையாகவும் ,தாயாகவும், நண்பனாகவும், நண்பனுக்கும் உற்ற நண்பனாகவும் ஆன்மாவின் ஆன்மாவாகவும் உள்ள கடவுள் கருத்து இங்கு. இங்கு மட்டுமே உள்ளது. சைவர்களுக்கு சிவபெருமானாகவும் வைணவர்களுக்கு விஷ்ணுவாகவும், கர்ம நெறியினருக்கு கர்மமாகவும், பௌத்தர்களுக்கு புத்தராகவும், சமணர்களுக்கு அருகராகவும், கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் ஜெஹோவாவாகவும், முகமதியர்களுக்கு அல்லாவாகவும் , ஒவ்வோர் இனத்திற்கும் ஒவ்வொரு தெய்வமாகவும், வேதாந்திகளுக்கு பிரம்மமாகவும் இருக்கின்ற, அந்த ஒரே கடவுளே எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற உண்மையும் ,அந்த இறைவனின் பெருமையும் இந்த நாட்டிற்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். அவர் நம்மை ஆசீர்வதிப்பாராக, உதவுவாராக! இந்தக் கருத்தினைச் செயல்படுத்த அவர் வலிமையும் ஆற்றலும் தருவாராக. நாம் கேட்டவையும் படித்தவையும் நமக்குச் சக்தியைத் தரும் உணவாகட்டும், நமக்குள் வலிமையாக மாறட்டும். ஒருவருக்கொருவர் உதவி செய்யும் ஆற்றலாக மாறட்டும்! ஆச்சாரியரும் சீடனுமாகிய நாம் ஒருவருக்கொருவர் பொறாமையின்றி இருப்போமாக. ஓம் சாந்தி; சாந்தி;சாந்தி;ஹரி: ஓம்!
-
..............
பரமக்குடி சொற்பொழிவு
-
1. ராதநாதபுரத்திலிருந்து சுவாமிஜி பரமகுடி சென்றார். அவரைக் காண்பதற்காக ப் பெரும் கூட்டம் திரண்டு வந்தது. அங்கே அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்டு சுவாமிஜி பேசினார்.
வரவேற்புக்குப் பதிலுரை
நீங்கள் மிகுந்த அன்போடும் கனிவோடும் எனக்களித்த வரவேற்புக்கு நன்றி சொல்வது என்பது இயலாத காரியம். நீங்கள் அனுமதித்தால் நான் ஒன்று கூற விழைகிறேன் - நீங்கள் என்னைப் பேரன்புடன் வரவேற்றாலும் சரி அல்லது இந்த நாட்டைவிட்டு உதைத்துத் துரத்தினாலும் சரி,என் நாட்டின் மீது எனக்குள்ள அன்பு ஒன்று போலவே இருக்கும் . கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், வேலைக்காகவே வேலை செய்ய வேண்டும், அன்பிற்காகவே அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார். மேலை நாடுகளில் என்னால் செய்யப்பட்டிருக்கும் வேலை மிகவும் சிறியது. நான் செய்ததைப்போல் மேலை நாட்டில் நூறு மடங்கு வேலை செய்ய இங்குள்ள ஒவ்வொருவராலும் முடியும். இந்தியாவின் காடுகளிலிருந்து தோன்றிய, இந்திய மண்ணுக்கும் மட்டுமே சொந்தமான ஆன்மீகம் ,தியாகம் ஆகியவற்றை உலகம் முழுவதற்கும் தயாரான, வெல்ல முடியாத ஆன்மீக ஆற்றலோடு கூடிய மனிதர்கள் தோன்றும் நாளை நான் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன்.
உலக வாழ்வில் ஒருவிதமான சோர்வினால் பீடிக்கப்படுவது போன்ற சில காலகட்டங்களை உலக நாடுகள் ஒவ்வொன்றும் சந்திப்பதை மனிதகுல வரலாற்றில் நாம் காண்கிறோம். அப்போது அவர்களுடைய திட்டங்கள் எல்லாம் கைநழுவிப் போகின்றன, அவர்களுடைய சமுதாய அமைப்புகளும் முறைகளும் தூள்தூளாகிப் புழுதியில் வீழ்கின்றன, அவர்களுடைய நம்பிக்கையெல்லாம் இருண்டு போகின்றன, எல்லாமே சூன்யமாகின்றன.
சமுதாய வாழ்வை உருவாக்க இந்த உலகத்தின் இரண்டு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஓன்று , மதத்தை அடிப்படையாகக் கொண்டது..மற்றொன்று, சமுதாயத் தேவையை அடிப்படையாகக் கொண்டது ; ஒரு முயற்சி ஆன்மீகத்தின் மீது எழுப்பப்பட்டது; மற்றொன்று லௌகீகத்தின் மீது. ஒன்று அனைத்தையும் கடந்ததை ஆதாரமாகக்கொண்டது, மற்றொன்று காணும் இந்த உலகத்தை ஆதாரமாகக் கொண்டது. ஒன்று, போகப் பொருட்களால் ஆன இந்தச் சின்னஞ்சிறிய உலகத்திற்கு அப்பால் துணிச்சலாகப் பார்ப்பதும் அங்கேயும் அதற்கு அப்பாலும் வாழ்க்கையைத் துவக்குவதும் ஆகும்;மற்றொன்று, உலகப் பொருளிலேயே திருப்தி அடைந்து விடுவதும் அங்கேயே நிலைத்து வாழ நினைப்பதும் ஆகும். ஆச்சரியப்படும் வகையில் சில வேளைகளில் ஆன்மீகமும், சில வேளைகளில் லௌகீகமும் உச்சத்திற்கு வருகின்றன. இரண்டும் அலையலையாக ஒன்றையொன்று தொடர்வது போல் உள்ளது . ஒரே நாட்டில் இத்தகைய பல்வேறு அலைகள் நிலவும். ஒரு சமயம் லௌகீக அலை அடித்துப் பரவும்; அப்போது அதிக இன்பமும் அதிக உணவும் தருகின்ற செல்வம், அத்தகைய கல்வி போன்ற இந்த வாழ்க்கையைச் சேர்ந்த அனைத்தும் பெருமை பெறும். பின்னர் கீழான நிலைக்குச் சென்று இழிநிலையை அடைந்துவிடும். செல்வத்தின் வளர்ச்சியோடு மனித இனத்துடனேயே தோன்றிய எல்லா வகையான பொறாமைகளும் வெறுப்புகளும் உச்சநிலையை அடையும். அந்தக் காலகட்டத்தில் போட்டிகளும் இரக்கமற்ற கொடுமைகளும் நிலவியே தீரும். பிரபலமான ஆனால் அவ்வளவு சிறந்ததல்லாத ஓர் ஆங்கில பழமொழி கூறுவது போல், ஒவ்வொருவரும் தனக்காகவே வாழ்கிறார்கள், பின்னால் வருபவனைச் சாத்தான் பிடித்துவிட்டுப் போகட்டும் என்பது அந்த நாளின் நோக்கமாக அமையும். வாழ்க்கை முறையின் திட்டமே தோற்றுவிட்டது என்றே மக்கள் நினைப்பார்கள் . அப்போது ஆன்மீகம் வந்து , மூழ்குகின்ற அந்த உலகிற்கு உதவிக்கரம் நீட்டி அதனைக் காப்பாற்றவில்லை எனில் உலகமே அழிந்து போய்விடும்.
அதன்பிறகு உலகம் புதிய நம்பிக்கையைப் பெறும்; புதிய வாழ்க்கை முறைக்கான புதிய அடித்தளத்தைக் காணும். பிறகு மற்றோர் ஆன்மீக அலை வரும்; காலப் போக்கில் அதுவும் அழியத் தொடங்கும். பொதுவாகச் சொல்வதானால், சில விசேஷ ஆற்றல்களுக்குத் தனிப்பட்ட உரிமை கொண்டவர்களான ஒரு பிரிவினரை ஆன்மீகம் உருவாக்குகிறது. இதன் உடனடி விளைவு என்னவென்றால் லௌகீகத்தை நோக்கி மீண்டும் செல் லுதல். இது அந்தப் பிரிவினர் இன்னும் பல்வேறு தனிப்பட்ட உரிமைகளைப் பெற வழிவகுக்கும். காலப் போக்கில் அந்த இனத்தின் எல்லா ஆன்மீக ஆற்றல்கள் மட்டுமல்லாமல், பௌதீக அதிகாரங்களும் சலுகைகளும் அந்தச் சிலரின் ஆளுகைக்கு உட்பட்டுவிடும் . இந்தச்சிலர் பாமர மக்களின் தோள்மீது ஏறிக்கொண்டு அவர்களை அடக்கியாள விரும்புவார்கள். இப்போது சமூகம் தனக்கு த்தானே உதவிக் கொண்டாக வேண்டும் இந்த நிலையில் லௌகீகம் வந்து உதவிக்கரம் நீட்டும்.
நமது தாய்நாடான இந்தியாவை பார்த்தால் இத்தகையதொரு நிலைமையைத்தான் காண்கிறீர்கள் ஐரோப்பாவிற்குச் சென்று வேதாந்தத்தைப் போதித்த ஒருவனை இப்போது வரவேற்கிறீர்கள். ஐரோப்பாவில் பௌதீக வாழ்க்கை அதற்கான வழியைத் திறந்து விட்டிருக்காவிட்டால் என்னை நீங்கள் வரவேற்பதென்பது முடியாத காரியம். பௌதீகம் ஒருவிதத்தில் இந்தியாவைக் காப்பாற்றியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அது வாழ்க்கையின் கதவுகளை எல்லோருக்கும் திறந்து விட்டிருக்கிறது; ஜாதிச் சலுகைகளை அழித்திருக்கிறது. ; ஜாதிச் சலுகைகளை அழித்திருக்கிறது ;பயன்படுத்துவதற்கு மறந்துபோய் ஒரு சிலரிடம் மறைக்கப்பட்டுக் கிடந்த விலைமதிப்பற்ற புதையல்களை, விவாதிப்பதற்காகத் திறந்து வைத்திருக்கிறது.
இந்த நாட்டின் அருமையான ஆன்மீகப் புதையல்களுள் பாதி திருடப்பட்டுவிட்டது, நாம் அவற்றை இழந்துவிட்டோம்.மறு பாதியோ, தானும் தின்னாமல் பசுவையும் தின்ன விடாமல் வைக்கோற்போரைக் காவல் செய்யும் நாய்களைப் போன்ற சிலரிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது. இனி மற்றொரு புறம், ஜரோப்பாவில் பல காலமாக இருந்து வருவதும் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டும் குறைபாடுகளுடன் கூடியதாகவே இருப்பதுமான அரசியல் அமைப்புகளை இந்தியாவில் கொண்டு வரத் துடித்துக் கொண்டிருக்கிறோம். அரசியலோடும் அரசாங்கத்தோடும் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளும் வழிமுறைகளும் எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாகச் சோதித்துப் பார்க்கப்பட்டு, பயனற்றவை என்று ஒதுக்கப் பட்டுவிட்டன. எனவே செல்லும் திசையறியாமல் ஐரோப்பா குழம்பிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரக் கொடுங்கோன்மை அங்கே பயங்கரமாக உள்ளது.வேலை செய்யாத, ஆனால் லட்சக்கணக்கான மக்களின் உழைப்பை உறிஞ்சுகின்ற சில மனிதர்களின் கையில் நாட்டின் செல்வமும் அதிகாரமும் கட்டுண்டு கிடக்கின்றன. இந்த அதிகாரத்தின் மூலம் பூமி முழுவதையும் அவர்கள் ரத்த வெள்ளத்தில் நனைக்க முடியும். மதமும் மற்ற எல்லாமுமே அவர்களின் காலடியில் கிடக்கின்றன. அவர்களே ஆள்கிறார்கள் , எல்லாவற்றிக்கும் மேலானவர்களாகக் காட்சியளிக்கிறார்கள் . மேலை நாடுகள் ஒரு சில ஈட்டிக் காரர்களால் தான் ஆளப்படுகின்றன. சட்டரீதியான அரசாங்கம், சுதந்திரம் ,உரிமை பாராளுமன்றம் என் றெல்லாம் நீங்கள் கேள்விப்படுகிறீர்களே, அவையெல்லாம் வெறும் வேடிக்கைச் சத்தங்கள் மட்டுமே.
ஈட்டிக்காரர்களின் கொடுமையால் மேலை நாடுகள் துடிக்கின்றன. கீழை நாடுகள் பூஜாரிகளின் கொடுமையால் துடிக்கின்றன. இரண்டும் ஒன்றை ஒன்று தடுத்துக் காக்க வேண்டும். இவற்றுள் ஒன்று மட்டுமே உலகிற்கு உதவிசெய்ய வேண்டுமென்று நினைக்காதீர்கள் .பாரபட்சமற்றவரான இறைவன் தன் படைப்பில் ஒவ்வொரு துகளையும் கூட சமமாகவே படைத்திருக்கிறார். மிக மோசமான, அரக்கத்தனமான ஒருவனிடம், மகானிடம்கூடஇல்லாத உயர்ந்த குணங்கள் இருக்கலாம்.மிகச் சாதாரணமான புழுவிடம் மிக மேலான மனிதனிடம் இல்லாத சில உயர்ந்த குணங்கள் இருக்கலாம். ஏழைத் தொழிலாளி ஒருவனை எடுத்துக் கொள்ளுங்கள் அவனுக்கு வாழ்வில் இன்பம் மிகக் குறைவே. உங்களைப் போன்ற அறிவு அவனிடம் இல்லை, வேதாந்தத் தத்துவங்களை அவனால் புரிந்துகொள்ள முடியாது என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் உடம்பை அவனது உடம்போடு ஒப்பிட்டுப் பாருங்கள்.அவனது உடம்பு உங்கள் உடம்பைப்போல், அவ்வளவு சீக்கிரமாக நோய்க்கும் வலிக்கும் இடம் தருவதில்லை. அவனது உடம்பில் ஆழமான வெட்டுப்பட்டால்கூட அந்தக்காயம் உங்கள் உடம்புகளை விட விரைவில் ஆறிவிடுகிறது. அவனது வாழ்க்கை புலனின்பங்களில் இருக்கிறது. அவன் அவற்றின் மூலமே மகிழ்ச்சி அடைகிறான். அவனது வாழ்க்கை சமச்சீராக சமன்படுத்தப் பட்டதாக உள்ளது. லௌகீக அடிப்படையில் ஆகட்டும், அறிவு அல்லது ஆன்மீக அடிப்படையில் ஆகட்டும், இறைவன் பாரபட்சமின்றி, ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றை ஒவ்வொருவருக்கும் அளித்து எல்லோரையும் சமமாகவே வைத்திருக்கிறார். எனவே நாம் தான் உலகத்தைக் காப்பவர்கள் என்று நினைக்கத் தேவையில்லை. நாம் உலகத்திற்குப் பல நல்லவற்றைப் போதிக்கலாம். அதேவேளையில் ,நாமும் உலகத்திடமிருந்து நல்லவை பலவற்றைக் கற்றுக் கொள்ளமுடியும். உலகத்திற்கு எது தேவையோ அதைத்தான் நாம் கற்பிக்க முடியும். ஆன்மீக அடிப்படை மட்டும் இல்லாமல் போனால், மேலை நாகரீகம் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் தூள்தூளாகச் சிதறிவிடும். மனித குலத்தை வாளால் ஆள நினைப்பது முழுக்க முழுக்கப் பயனற்ற வீண் முயற்சி. அத்தகைய வன்முறையின் மூலம் உருவாக்கப்பட்ட அரசாங்கங்கள் எல்லாம் நாசமடைந்து , மிக விரைவில் தன் நிலையிழந்து உருத்தெரியாமல் மறைந்து போயிருப்பதை நீங்கள் காணலாம். பௌதீக ஆற்றலின் நிலைக்களனான ஐரோப்பா தன் நிலையை மாற்றி, ஆன்மீகத்தைத் தன் அடிப்படையாகக் கொள்ளாமல் போகுமானால் இன்னும் ஐம்பது ஆண்டிற்குள் அது நொறுங்கிச் சுக்கலாகச் சிதறிவிடும். அந்த ஐரோப்பாவை எது காக்க முடியும் தெரியுமா ? உபநிடதங்கள் கூறுகின்ற ஆன்மீகம் மட்டுமே.
பல்வேறு மதப் பிரிவுகளும் தத்துவங்களும் சாஸ்திரங்களும் இருந்தாலும் இவை அனைத்திற்கும் அடிப்படையாக ஒரு கருத்து, ஒரு கொள்கை உள்ளது. அது மனிதனின் ஆன்மாவில் நம்பிக்கை . இந்தக் கருத்தினால் உலகின் போக்கையே மாற்ற முடியும். ஆன்மா எல்லா சக்திகளும் நிறைந்தது என்ற கருத்து, இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் என்றில்லாமல் இந்தியா முழுவதுமே உள்ளது. ஆற்றலையோ, தூய்மையையோ, முழுமையையோ நீங்கள் வெளியேயிருந்து பெற முடியும் என்று இந்தியாவில் உள்ள ஒரு தத்துவம் கூடக்கூறவில்லை. இவையனைத்தும் உங்கள் பிறப்புரிமை, உங்கள் இயற்கை என்றே இந்தியத் தத்துவங்கள் கூறுகின்றன. இது உங்களுக்கு நன்றாகவே தெரியும். தூய்மையற்ற தன்மை என்பது நம் மீது தினிக்கப்பட்டது மட்டுமே, அதனால் உங்களுடைய உண்மை இயல்பு மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான நீங்கள் ஏற்கனவே முழுமையாகவும் வலிமை வாய்ந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். உங்களை ஆள்வதற்கு உங்களுக்கு எந்த உதவியும் வேண்டாம். உங்களை ஆள்கின்ற சக்தி ஏற்கனவே உங்களிடம் உள்ளது. அதை நீங்கள் அறியவில்லை, அவ்வளவுதான் அதை அறிவதிலும் அறியாமல் இருப்பதிலும்தான் வேற்றுமை உள்ளது. அந்த வேற்றுமை, அந்தச் சிரமம்தான் அவித்யை என்ற ஒரே வார்த்தையில் கூறப்படுகிறது.
மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில், மகானுக்கும் பாவிக்கும் இடையில் வேற்றுமையை உண்டாக்குவது எது? அவித்யை, அதாவது அறியாமை. மிக வுயர்ந்த மனிதனுக்கும் அவன் காலடியில் நெளிகின்ற சாதாரண புழுவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? அறியாமை. அதுதான் எல்லா வித்தியாசங்களையும் உண்டாக்குகிறது. நெளிகின்ற அந்தச் சிறு புழுவிற்குள் எல்லையற்ற ஆற்றலும் அறிவும் தூய்மையும் இறைவனின் எல்லையற்ற தெய்வீகமும் உள்ளது. அது இறைவனின் எல்லையற்ற தெய்வீகமும் உள்ளது. அது வெளிப்படவில்லை, அது வெளிப்பட வேண்டும்.
மகத்தான இந்த உண்மையைத்தான் இந்தியா உலகிற்குப் போதிக்க வேண்டும் . ஏனெனில் அது வேறெங்கும் இல்லை . அந்த உண்மையே ஆன்மீகம், ஆன்மாவை ப் பற்றிய உண்மை. ஒரு மனிதனை நிமிர்ந்தெழுந்து செயல்புரிய வைப்பது எது? பலம். பலமே நன்மை, பலவீனம்தான் பாவம். வெடிக்குண்டைப்போல் வெளிக்கிளம்பி, குண்டிலிருந்து பாயும் இரும்புச் சிதறல்கள் போல் அறியாமைத் திரள்கள் மீது பாயும் ஒன்று உபநிடதங்களில் இருக்குமானால், அது அச்சமின்மை என்னும் ஒரு சொல்லாகும். அச்சமின்மை என்பதே இப்போது போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம். உலக வாழ்விலும் சரி, மத வாழ்விலும் சரி அச்சம்தான் எல்லா அழிவுகளுக்கும் பாவங்களுக்கும் மறுக்க முடியாத காரணமாக இருக்கிறது. அச்சம்தான் துன்பத்தைக் கொண்டு வருகிறது. அச்சம் தான் சாவைக் கொண்டு வருகிறது. அச்சம்தான் தீமைகளைப் பெருக்குகிறது.
அச்சம் எதனால் உண்டாகிறது? நம் சொந்த இயல்பை அறியாததால்தான். நாம் ஒவ்வொருவரும் அரசர்களுக்கெல்லாம் பேரரசரின் வாரிசுகள். நாம் கடவுளின் அம்சமே, அல்ல அல்ல , வேதாந்தத்தின் படி நாம் கடவுளே. சிறிய மனிதர்களாக நம்மை நினைத்து, அதனால் சொந்த இயல்பை மறந்திருந்தாலும் நாம் கடவுளே. அந்த இயல்பு நிலையிலிருந்து நாம் வழுவி விட்டோம். அதனால் நான் உன்னைவிடச் சிறிது மேலானவன் அல்லது நீ என்னை விட மேலானவன் என்றெல்லாம் வேற்றுமைகளைக் காண்கிறோம். இந்த ஒருமைக் கருத்துதான் இந்தியா உலகிற்குத் தர வேண்டிய மகத்தான பாடம். நன்றாகக் கவனியுங்கள் ,இந்தக் கருத்தைப் புரிந்து கொண்டால் பொருட்களின் தன்மையையே இது மாற்றிவிடும். ஏனெனில் அப்போது நீங்கள் உலகத்தை இதுவரை பார்த்துவந்த கண்ணோட்டத்தில் இருந்து வேறான கண்ணோட்டத்தில் பார்ப்பீர்கள். பிறந்து பிறருடன் போராடி ,வலிமையானவன் வெல்லவும் ,வலிமையற்றவன் சாவதற்கும் அமைந்த போர்க்களம் அல்ல இந்த உலகம் என்பது அதன் பிறகு தெரியும் .அப்போது இந்த உலகம் ஒரு விளையாட்டு மைதானமாகிவிடும். சிறு குழந்தைபோல் இறைவன் அங்கே விளையாடுவார். நாம் அவருடைய விளையாட்டுத் தோழர்களாக அவருடன் ஆடிக்களித்துக் செயல்புரிவோம். எவ்வளவு பயங்கரமாகவும் கொடூரமாகவும் ஆபத்தானதாகவும் காணப்பட்டாலும், இவையாவும் வெறும் விளையாட்டே. அதன் உண்மையை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோம்.
ஆன்மாவின் இயல்பை அறியும்போது சிறிதும் வலிமையற்றவர்களுக்கும் , மிகவும் இழிவானவர்களுக்கும் , மிகவும் துன்பப்படும் பாவிகளுக்கும் கூட நம்பிக்கை வருகிறது. நம்பிக்கை இழக்காதீர்கள்” என்றே நம் சாஸ்திரங்களும் முழங்குகின்றன. நீ என்ன செய்தாலும் நீ நீதான் . உன் இயல்பை மாற்ற உன்னால் முடியாது. இயற்கையே இயற்கையை அழிக்க முடியாது. உங்கள் இயல்பு தூய்மை. அது லட்சக்கணக்கான யுகங்களாக மறைக்கப்பட்டு இருக்கலாம்.ஆனால் இறுதியில் அது வென்று மேலே வந்தேதீரும்.
எனவே அத்வைதம் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையைக்கொண்டு வருகிறது. நம்பிக்கையை இழக்காதீர்கள். அத்வைதம் அச்சத்தின் வழியைக் கையாண்டு போதிப்பதில்லை; நீங்கள் கொஞ்சம் ஏமாந்தால் உங்களைப் பிடித்துக் கொள்கின்ற பேய்களைப்பற்றி ஒன்றுமே இல்லை. உங்கள் விதி உங்கள் கைகளில் இருக்கிறது என்றுதான் அது கூறுகிறது. உங்களுடைய சொந்த வினை தான் உங்களுக்காக இந்த உடம்பை உற்பத்தி செய்திருக்கிறது. உங்களுக்காக இதை வேறு யாரும் செய்யவில்லை . எங்கும் நிறைந்த கடவுள் அறியாமை காரணமாக மறைந்துள்ளார். பொறுப்பு உங்களிடமே; உங்கள் விருப்பம் இல்லாமல் இந்த உலகத்திற்குக் கொண்டுவரப்பட்டு, இந்த பயங்கரமான இடத்தில் நீங்கள் விடப்பட்டு இருப்பதாக எண்ணாதீர்கள். நீங்களே உங்கள் உடம்பை உருவாக்கினீர்கள்; இப்போது உருவாக்கிக் கொண்டிருப்பதைப் போலவே சிறிதுசிறிதாக உருவாக்கினீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களே உண்கிறீர்கள், உங்களுக்காக வேறு யாரும் சாப்பிட முடியாது. உண்டதை நீங்களே செரிக்கிறீர்கள், வேறு யாரும் அதைச் செய்ய முடியாது. ரத்தம், தசை, உடம்பு முதலியவற்றை அந்த உணவிலிருந்து நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள், வேறு யாரும் அதை உங்களுக்காகச் செய்ய முடியாது. நீங்கள் தான் இவற்றை எப் போதும் செய்து வருகிறீர்கள். சங்கிலியில் உள்ள ஒரு வளையத்தைப் புரிந்து கொண்டால், எல்லையற்ற சங்கிலியையே தெரிந்துகொள்ளலாம். ஒருகணம் உங்கள் உடம்பை நீங்கள் உற்பத்தி செய்வது உண்மையானால், கடந்து சென்ற மற்றும் வரப்போகின்ற ஒவ்வொரு கணத்திற்கும் அது உண்மையே. நன்மை தீமைகளுக்கான எல்லா பொறுப்பும் உங்களுடையதே. இது மகத்தான நம்பிக்கையைத் தருகிறது. நான் ஒன்றைச் செய்தே னானால் அதை இல்லாமல் ஆக்கவும் என்னால் முடியும்.
அதேவேளையில் நமது மதம் கடவுளின் கருணையையும் மனித குலத்திலிருந்து அப்பால் எடுத்துச் சென்று விடவில்லை , அது எப்போதும் அங்கேயே இருக்கிறது. ஆற்றல் மிக்கதான நன்மை- தீமை ஓட்டத்தின் பக்கத்தில் கடவுள் நிற்கிறார். அவர் பந்தமில்லாதவர், எப்போதும் கருணைமயமானவர், நாம் மறு கரையை அடைய உதவுவதற்கு எப்போதும்தயாராக இருப்பவர். அவரது கருணை மகத்தானது., தூய இதயத்தில் அது எப்போதும் நிறைகிறது.
புதிய சமூக அமைப்பிற்கு உங்கள் ஆன்மீகம் ஒரு குறிப்பிட்ட வகையில் அடிப்படையாக அமைய வேண்டும். அத்வைதத்தின் சில முடிவுகளிலிருந்து மேலை நாடு இன்னும் எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. எனக்கு இன்னும் சிறிது நேரம் கிடைத்திருந்தால் அவற்றைப் பற்றியெல்லாம் கூறியிருப்பேன். பௌதீக விஞ்ஞான அறிவு வளர்நதுவிட்ட இந்தக்காலத்தில் சகுணக்கடவுள் -லட்சியம் எல்லாம் அதிகப்பயனைத் தராது. இருப்பினும் ஆரம்ப நிலையிலுள்ள மதத்தைச் சார்ந்த ஒருவன் கோயிலும் விக்கிரகங்களும் தேவை என்று கருதுவானானால், அவன் விருப்பம்போல் எத்தனை னேண்டுமோ அத்தனையும் வைத்துக்கொள்ளலாம். அவன் அன்பு செய்ய ஒரு சகுணக் கடவுள் தேவையானால் அது வேண்டிய அளவு இங்கு உள்ளது சகுணக் கடவுளைப் பற்றிய இத்தகைய மிக உன்னதமான கருத்துக்களை உலகத்தில் வேறு எங்குமே காண முடியாது. ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட ஒருவன் தன் அறிவைத் திருப்திப்படுத்த விரும்புவானானால் , அவனுக்கு நிர்க்குணக் கடவுளைப் பற்றி மிக ஆழ்ந்த கருத்துக்களும் இங்கே உள்ளன.
..............
சிவகங்கையிலும் மானாமதுரையிலும் சொற்பொழிவு
-
சிவகங்கை மற்றும் மானாமதுரை ஜமீன்தார்களாலும் மக்களாலும் மானாமதுரையில் சுவாமிஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
வரவேற்புக்குப்பதிலுரை
-
நீங்கள் எனக்களித்த இதமான வரவேற்புக்கான எனது ஆழ்ந்த நன்றியை வார்த்தைகளால் விளக்க முடியாது. நான் எவ்வளவு தான் விரும்பினாலும், துரதிர்ஷ்டவசமாக, மிகப் பெரிய சொற்பொழிவை நிகழ்த்தும் நிலையில் நான் இப்போது இல்லை. நமது சமஸ்கிருத நண்பர் மிகமிக அழகிய சொற்களால் என்னைப் பெருமைப்படுத்திக் கூறினார். என்னதான் முட்டாள் தனமாகத் தோன்றினாலும் எனக்கும் உடம் பொன்று உள்ளது.அது சில விதிகளையும் முறைகளையும் ஜடப் பொருட்களுக்குரிய சில நியதிகளையும் பின்பற்றவே செய்யும். எனவே களைப் பென்றும் சோர்வென்றும் சில விஷயங்கள் இந்த உடம்பையும் பாதிக்கவே செய்கிறது.
மேலை நாட்டில் என்னால் செய்யப்பட்ட சிறிய வேலை குறித்து நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மக்கள் தெரிவித்து வருகின்ற மகிழ்ச்சியும் பாராட்டும் காண்பதற்குப் பெருமை மிக்கக் காட்சியாக உள்ளது. எதிர்காலத்தில் வரப்போகின்ற மகான்களுக்கான வரவேற்பாகவே இதனை நான் காண்கிறேன். நான் செய்த்திருக்கும் இந்த மிகச்சிறிய வேலைக்கே இத்தகைய சிறப்பான வரவேற்பு கிடைக்கிறதென்றால், எனக்குப் பின்னால் வரப் போகின்ற, உலகத்தையே அசைக்கவல்ல ஆன்மீக வீரர்களுக்கு இந்த நாடு அளிக்க ப்போகும் வரவேற்பு எவ்வளவு மகத்தானதாக இருக்கும்!
இந்தியா ஆன்மீக பூமி. ஆன்மீகத்தை, ஆன்மீகத்தை மட்டுமே இந்து புரிந்து கொள்கிறான். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது கல்வி இந்த வழியில்தான் அமைந்துள்ளது. அதன் விளைவாக ஆன்மீகம் வாழ்வின் முக்கிய நோக்கமாக உள்ளது. இது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொருவரும் பெரிய வியாபாரியாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை; . ஒவ்வொருவரும் ஆசிரியர்களாக இருக்கவேண்டுமென்று கூட இல்லை. ஒவ்வொருவரும் போர்வீரராக இருக்கவேண்டுமென்ற அவசியமும் இல்லை . ஆனால் வெவ்வேறு நாடுகள் சேர்ந்து ஒருங்கிணைந்து இந்த உலகில் ஒருமித்ததொரு விளைவை ஏற்படுத்த முடியும்.
உலக ஒற்றுமையில் ஆன்மீகமாகிய இசையை எழுப்ப வேண்டுமென்று இறைவன் நம்மை விதித்துள்ளார் போலும். எந்த நாடும் பெருமைப்படத் தக்கவர்களான மேன்மைமிக்க நமது முன்னோர்கள் நமக்கு அளித்துள்ள பாரம்பரியச் சிறப்பினை இன்னும் நாம் இழந்து விடாதிருப்பது கண்ட நான் குதூகலம் அடைகிறேன். இது எனக்கு நம்பிக்கையைத் தருகிறது; நமது இனத்தினுடைய விதியின் மீது உறுதியான நம்பிக்கையை அளிக்கிறது. எனது உற்சாகம் எல்லாம், எனக்குத் தனிப்பட்ட முறையில் நீங்கள் அளித்த பெருமைக்காக அல்ல, ஆனால் இந்த நாட்டின் இதயம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது, அதன் வலிமை குன்றவில்லை என்பதை அறிந்ததற்காகத்தான்.
இந்தியா இன்றும் வாழ்கிறது, அது இறந்துவிட்டதாக யார்சொன்னது ? நாம் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் என்று மேலை நாடுகள் விரும்புகின்றன. ஆனால் அவர்கள் நம்மைப் போர்க்களத்தில் சுறுசுறுப்பாகக் காண விரும்பினால் ஏமாற்றமே அடைவார்கள். அது நமது களம் அல்ல, ஒரு ராணுவ நாடு ஆன்மீக மயமாக வேண்டும் என்று நினைத்தால் எப்படி நாம் ஏமாற்றம் அடைவோமோ அப்படித்தான் இதுவும் . அவர்கள் இங்கு வரட்டும், நாமும் அவர்களுக்கு இணையாக எப்படி த் துடிப்புடன் செயல்படுகிறோம், நம் நாடு எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறது, அன்று போலவே இன்றும் எப்படி உயிர்த் துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் காணட்டும். நாமெல்லாம் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டோம் என்ற கருத்தை மாற்றி அமைக்க வேண்டும். எவ்வளவு விரைவாக இதைச் செய்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது.
இப்பொழுது நான் சில கடினமான வார்த்தைக்களைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது.. நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.ஐரோப்பியர்களின் உலகியல் நம்மை ஏறக்குறைய முழ்கடித்துவிட்டது என்று சற்றுமுன் குற்றம் சாட்டினார்கள்.தவறு ஐரோப்பியர்களுடையது மட்டுமல்ல பெரும் பங்கு நம்முடையதே. வேதாந்திகள் என்ற நிலையில் நாம் எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும், அதன் உள்நோக்கத்தை, அடிப்படைத் தன்மையைக் கண்டறிய வேண்டும். வேதாந்திகள் என்ற நிலையில், நம்மை நாமே காயப்படுத்திக் கொண்டாலன்றி, பிரபஞ்சத்தில் உள்ள எந்தச் சக்தியும் நம்மைக் காயப்படுத்த முடியாது என்பது உறுதியாக நமக்குத் தெரியும். இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களாகி விட்டனர். அது போலவே அதற்கு முன்னால் மூன்றில் இரண்டு பங்கினர் பௌத்தர்களாகியுள்ளனர். இப்பொழுது ஐந்தில் ஒரு பங்கினர் முகமதியர்கள், ஒரு லட்சத்திற்கு மேல் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் உள்ளனர்.
இது யாருடைய தவறால் விளைந்தது? நம்முடைய வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர் மறக்க முடியாத மொழியில் கேட்கிறார்; நிரந்தர வாழ்க்கையாகிய நீரூற்று, அருகிலேயே பொங்கிப் பெருகிச் செல்லும்போது, இந்த ஏழை அப்பாவி பசியாலும் தாகத்தாலும் ஏன் செத்து மடிய வேண்டும் ? சொந்த மதத்தையே உதறிச் செல்பவர்களுக்காக நாம் என்ன செய்தோம் என்பதுதான் கேள்வி. அவர்கள் ஏன் முகமதியர்கள் ஆனார்கள்? நான் இங்கிலாந்தில் இருந்த போது இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டேன் - ஒரு நல்ல குடும்பத்துப் பெண், விலைமகளாக விரும்பினாள். மற்றொரு பெண் அவளைத்தடுத்த போது அவள் , ”அது ஒன்றுதான் நான் மற்றவர்களின் அனுதாபத்தைப் பெறுவதற்கு வழி. இப்போது எனக்கு உதவி செய்வார் யாருமே இல்லை. நான் வாழ்வு தவறி இழிவான பெண்ணானபின் , கருணையுள்ளம் கொண்ட பெண்கள் என்னைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, எனக்கு வேண்டியதைச் செய்ய ஒருவேளை முன்வரலாம் ”என்று சொன்னாள்.
பிற மதங்களுக்குப் போய்விட்ட நம் மக்களைக் குறித்து நாம் இப்போது அழுகிறோம். ஆனால் அவர்கள் மதம் மாறுவதற்கு முன் அவர்களுக்காக நாம் என்ன செய்தோம்? நாம் ஒவ்வொருவரும் நம்மையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். நாம் என்ன கற்றுக்கொண்டோம்? சத்திய ஜோதியை நாம் ஏந்தியுள்ளோமா? ஏந்தியுள்ளோம் என்றால், எவ்வளவு தொலைவு அதை எடுத்துச் சென்றோம்? இந்தக் கேள்வியை நாம் நம்மிடம் கேட்டே தீர வேண்டும். நாம் அப்போது அவர்களுக்கு உதவவில்லை. இது நாம் செய்த தவறு, நாம் செய்த வினை. எனவே இதற்காக யார்மீதும் பழி போட வேண்டாம். நம் சொந்த வினையையே குறை கூறிக் கொள்வோம் . நீங்கள் அனுமதிக்காமல், உலகாயதமோ, முகமதியமோ, கிறிஸ்தவமோ அல்லது வேறு எதுவுமோ உங்களை வெல்ல முடியாது. மோசமான உணவாலும் பட்டினியாலும் வெயிலாலும் மழையாலும் உடம்பு சிதைந்தும் சீர்குலைந்தும் போகாத வரை எந்தக் கிருமியும் அதனைக் தாக்க முடியாது. ஆரோக்கியமானவன் விஷக்கிருமிக் கூட்டத்தின் நடுவேகூட ஆபத்தின்றிச் சென்று வர முடியும்.
நமது வழிமுறைகளை மாற்றிக்கொள்வதற்கு இன்னும் அவகாசம் உள்ளது. முட்டாள்தனமான அந்தப் பழைய விவாதங்களையும், பொருளற்றவற்றைப் பற்றிய பழைய சண்டைகளையும் எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். கடந்த அறுநூறு எழுநூறு ஆண்டுகளாக நாம் எவ்வளவு இழிநிலையை அடைந்துள்ளோம் என்பதை எண்ணிப் பாருங்கள். தண்ணீரை வலது கையால் குடிக்க வேண்டுமா, இடது கையால் குடிக்க வேண்டுமா? கைகளை மூன்றுமுறை கழுவுவதா,, நான்குமுறை கழுவுவதா?வாயைக்கொப்பளிப்பது ஐந்து முறையா,, ஆறு முறையா? இவைதான் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது அறிவுஜீவிகளின் வாதப் பிரதிவாதமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய ஈடிணையற்ற வாதங்களில் ஈடுபடுவதிலும் இவற்றிக்கு அற்புதமான தத்துவ விளக்கங்களை எழுதுவதிலும் காலத்தைக் கழிக்கின்ற மனிதர்களிடமிருந்து, நீங்கள் வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்!
நமது மதம் சமயலறைக்குள் அடங்கிவிடுகின்ற ஆபத்து வந்துள்ளது. நாம் வேதாந்திகள் அல்ல, நம்மில் பெரும்பாலோர் பௌராணிகர்களும் அல்ல, தாந்திரிகர்களும் அல்ல; நாம் எல்லாம் வெறும் தீண்டாதே, தீண்டாதே என்ற மதத்தைச் சார்ந்தவர்கள். நமது மதம் சமையலறையில் இருக்கிறது. பானைதான் நமது கடவுள். என்னைத் தொடாதே, நான் புனிதமானவன் ” என்பதே நமது மதம். இது இன்னும் ஒரு நூறாண்டு காலம் இப்படியே சென்றால் நம்மில் பெரும்பாலோர் பைத்தியக்கார விடுதியில்தான் இருப்போம். நமது மூளை பலவீனமாகிவிட்டது என்பதற்கு அடையாளம் இது. நமது மனத்தால் வாழ்வின் உயர் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை;நமது தனித்தன்மையை நாம் இழந்து விட்டோம். மனம் எல்லா வலிமையையும் செயல் திறனையும் இழந்து, எதிரில்பட்ட சின்னஞ் சிறு பிரச்சனையைத் திரும்பத்திரும்பச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதே இதன் பொருள்.
இத்தகைய நிலைமையைத் தலைகீழாக மாற்ற வேண்டும். அதன் பின்னர் உறுதியோடு எழுந்து நிற்க வேண்டும்; செயல்திறனும் வலிமையும் மிக்கவர்களாக வேண்டும். அதன்பிறகுதான் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றதும், இன்று உலகம் முழுவதற்குமே தேவைப்படுவதுமான கருவூலத்தை ,அளவற்ற புதையலாகிய நம் பாரம்பரியத்தை நாம் அறிந்து கொள்வோம். இந்தச் செல்வம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்றால் உலகமே அழிந்து போகும். அதனை வெளியே கொண்டு வாருங்கள். எல்லோருக்கும் கொடுங்கள். உலகம் முழுவதற்கும் அதைப்பற்றிக் கூறுங்கள்.
தானம் ஒன்றுதான் கலியுகத்தில் செய்யக்கூடியது என்று வியாசர் கூறுகிறார். நம்மால் கொடுக்க முடிந்தவற்றுள் ஆன்மீக தானம்தான் மிக உயர்ந்தது. அதற்கு அடுத்ததாக லௌகீக அறிவு. அதற்கு,அடுத்து ஒருவரது உயிரைக் காப்பாற்றுதல். அதற்கு அடுத்து கடைசியாக, பசித்தவர்களுக்கு உணவைத் தரும் அன்னதானம.நாம் தேவையான அளவு அன்னதானம் செய்துவிட்டோம். வேறு எந்த நாடும் நம்மைப்போல் கொடையாளியாக இருந்ததில்லை. ஒரு பிச்சைகாரன்கூட, தன் வீட்டில் ஒருபிடிசோறு இருக்கும்வரை, அதில் பாதியைத் தானமாகக் கொடுக்கவே செய்வான் இத்தகைய விசித்திரத்தை இந்தியாவில் மட்டும் தான் காண முடியும். இது போதும். . இப்போது மற்ற இரண்டு தானங்களான ஆன்மீகம் மற்றும் லௌகீக அறிவை அளிப்போம். நாம் எல்லோரும் வீரர்களாக, உறுதி வாய்ந்த உள்ளம் படைத்தவர்களாக ,முழுக்கமுழுக்க உண்மை யானவர்களாக இருந்து, சக்கரம் சுழலத் தோள் கொடுப் போமானால் இருபத்தைந்து ஆண்டுகளில் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து போகும். அதன்பிறகு நாம் எதிர்த்துப் போரிட எதுவுமே இருக்காது. இந்தியா மீண்டும் ஆரிய நாடாகிவிடும்.
இப்போதைக்கு நான் உங்களிடம் சொல்ல வேண்டுவதெல்லாம் இவைதாம். எனது திட்டங்களைப் பற்றியெல்லாம் நான் அவ்வளவாக எதுவும் சொல்லவில்லை. சொல்வதைவிடச் செயலில் காட்டவே நான் விரும்புகிறேன். அதன் பின்னர் திட்டங்களைப்பற்றிப் பேசுகிறேன். எனக்கென்று திட்டங்கள் உள்ளன. இறைவன் திருவுளம் கொள்ளவும் எனக்கு நீண்ட ஆயுளை அளிக்கவும் செய்வாரானால் அவற்றைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளும் கிடைக்கவே செய்யும். இதில் நான் வெற்றி பெறுவேனா, மாட்டேனா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஓர் உயரிய லட்சியத்தை மேற்கொள்வதும், அதற்காகத்தன் வாழ்நாளை அர்ப்பணிப்பதும் ஒரு மகத்தான காரியமாகும். அப்படி இல்லாமல் உணர்வற்ற கீழான ஜட வாழ்க்கை வாழ்வதில் என்ன பெருமை இருக்கிறது ? ஓர் உயரிய லட்சியத்திற்கு அர்ப்பணிப்பதில் மட்டுமே வாழ்க்கை மதிப்புப் பெறுகிறது. இதுதான் இப்போது இந்தியாவில் செய்யப்பட வேண்டிய மகத்தான காரியம். தற்போதைய மத மறுமலர்ச்சியை நான் வரவேற்கிறேன். இரும்பு பழுத்திருக்கும்போதே அதை அடித்து நீட்டுவதற்கான வாய்ப்பை நழுவவிடுவது முட்டாள்தனம் அல்லவா?
--
மதுரையில் பேசியது
-
மானாமதுரையிலிருந்து பிப்ரவரி 2- ஆம் நாள் மதுரை வந்தார் சுவாமிஜி. அங்கே ராமநாதபுர மன்னரின் மாளிகை ஒன்றில் தங்கினார். மதுரை இந்துக்கள் சுவாமிஜிக்கு ஒரு வெல்வெட் உறையில் வரவேற்புரைப் பத்திரம் அளித்தனர்.
வணக்கத்திற்குரிய சுவாமி ஜி.
மதுரை இந்துக்களாகிய நாங்கள், புராதனமானதும் புண்ணியமிக்கதும் ஆகிய எங்கள் நகருக்கு உங்களை இதய பூர்வமாக வரவேற்கிறோம். உலகின் பந்த பாசங்களைத் துறந்து, மனித குலத்தின் ஆன்மீக முன்னேற்றத்தை மனத்தில் கொண்டு தியாக சீலத்துடன் விளங்குகின்ற நீங்கள் இந்து சன்னியாசிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறீர்கள். இந்து மதத்தின் உண்மையான சாரம் நியதிகளாலோ சடங்குகளாலோ கட்டுப்பட்டது அல்ல; மாறாக, துன்புற்றவர்களுக்கு எளியவர்களுக்கும் சாந்தியையும் சமாதானத்தையும் அளிக்கவல்ல ஒரு நுண்ணிய தத்துவம் அது என்பதை உங்கள் வாழ்விலேயே நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்.
ஒவ்வொருவரின் தகுதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப அனைவரையும் உயர்த்த வல்லதான தத்துவத்தையும் மதத்தையும் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் போதித்து அவர்களை வியப்படையச் செய்திருக்கிறீர்கள். தங்கள் உபதேசங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாடுகளில் நிகழ்ந்தன. அதேவேளையில் அவை இந்த நாட்டிலும் ஆர்வத்துடன் ஏற்கப் பட்டன; மேலை நாட்டிலிருந்து வந்து இங்கே வளர்ந்து வருகின்ற உலகாயதத்தின் வளர்ச்சியைப் பெரிதும் கட்டுப்படுத்தியுள்ளன. இந்தியா இன்னும் வாழ்கிறது, ஏனெனில் பிரபஞ்சத்தின் ஆன்மீக நியதியில் அதற்கென்று ஒரு செய்தி உள்ளது. கலியுகத்தின் இறுதியில் தங்களைப் போன்ற ஒரு மகான் தோன்றியுள்ளது. இன்னும் பல மேலோர்கள் தோன்றி இந்தப் பணியை நிறைவேற்றுவார்கள் என்பதையே குறிக்கிறது. கல்விக்குப் பெயர் பெற்றதும்,சுந்த ரேசுவரருக்கு உகந்த தலமும், யோகிகளின் துவாதசாண்ட சேத்திரமும் ஆகிய மதுரை, பிற நகரங்களுக்கு எவ்விதத்திலும் பின்தங்காத வகையில் தங்கள் திருப்பணிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறது. தங்களுக்கு நீண்ட ஆயுளும் எல்லா வல்லமையும் நன்மையும் கிடைக்கட்டும் என்று பிரார்த்திக்கிறோம்.
சுவாமிஜியின் பதிலுரை;
நான் உங்களோடு பல நாட்கள் தங்கி, உங்கள் அவைத்தலைவர் விரும்பியது போல், நான்கு ஆண்டுகளாக மேலை நாட்டில் நான் செய்த பணிகளையும் பெற்ற அனுபவத்தையும் விளைவுகளையும் உங்களிடம் கூறுவதற்கு எனக்கும் விருப்பம்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாதுக்களுக்கும் உடம்பு என்ற ஒன்று உள்ளது. கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடைபெறுகின்ற பயணம் மற்றும் சொற்பொழிவுகளின் காரணமாக, இந்த மாலையில் நான் உங்கள் முன் நீண்டதொரு சொற்பொழிவை நிகழ்த்த முடியாமல் போய்விட்டது. எனவே நீங்கள் மிகுந்த அன் போடு அளித்த கனிவான வரவேற்புக்கு நன்றி மட்டும் தெரிவித்துக்கொண்டு, மற்றவைகளை, வாய்ப்பும் கிடைத்து, என் உடல்நிலையும் நன்றாகுமானால் எதிர் காலத்தில் எப்போதாவது பேசுகிறேன். இப்போது சுருக்கமாகக் கூறுவதைவிட அப்போது பல விஷயங்களைப்பற்றி நாம் பேச முடியும்.
உங்களுக்கு நன்கு தெரிந்த வரும் சான்றோருமாகிய ராமநாதபுரம் அரசரின் விருந்தினனாக மதுரையில் தங்கியிருக்கின்ற என் மனத்தில் ஓர் எண்ணம் மேலெழுந்து தோன்றுகிறது. சிகாகோவிற்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தை முதன் முதலில் என் மனத்தில் எழுப்பியவரும் அதற்காகத் தம் இதயம் நிறைந்த உதவியையும் செல்வாக்கையும் எப்போதும் எனக்கு அளித்தவரும் மன்னரே என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.எனவே உங்கள் வர வேற்புரையில் என்னைப் பாராட்டிய பாராட்டுக்களில், கணிசமான பகுதி தென்னிந்தியாவின் அந்த உன்னத மனிதரையே சாரும். அவர் அரசராவதற்குப் பதிலாக ஒரு துறவியாகி இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்; அவர் அதற்கு முற்றிலும் தகுதியானவர்.
உலகத்தின் எந்தப் பகுதியிலாவது ஒரு பொருள் உண்மையாகத் தேவைப் படுமானால், அதை அளிக்கின்ற ஒன்று, வழியை அறிந்து, புதிய உயிருணர்வுடன் அதைக் கொண்டு வந்து தருகிறது. பௌதீக உலகத்திலும் அதைப் போலவே ஆன்மீக உலகத்திலும் இது உண்மையாக இருக்கிறது. உலகத்தின் ஒரு பகுதியில் ஆன்மீகம் தேவைப்பட்டு, அதே நேரத்தில் அது மற்ற எந்தப் பகுதியிலாவது இருக்கவும் செய்யுமானால், அதைப் பெறுவதற்கு நாம் மனப்பூர்வமாக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தேவைப்படுகின்ற இடத்தில் அது வந்துசேர்ந்து குலைந்த சமநிலையைச் சீர்செய்து விடுகிறது. மனித இன வரலாற்றைப் பார்த்தால், கடந்த காலத்தில் ஒரு முறை இருமுறை அல்ல, மீண்டும் மீண்டும் உலகத்திற்கு ஆன்மீகத்தை வழங்குவது இந்தியாவின் பணியாக இருந்து வந்துள்ளது.மிகப்பெரிய வெற்றிகளாலோ, வாணிப ஆதிக்கத்தாலோ உலகின் பல்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டு, மனித இனம் முழுவதும் ஒன்றுபடும்போது, ஒவ்வொரு நாடும் தன் பங்கைச் செலுத்த வேண்டியுள்ளது. அரசியல், சமுதாயம், ஆன்மீகம் என்று ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு உள்ளது.ஒட்டுமொத்த மனித அறிவிற்கு இந்தியாவின் பங்கு ஆன்மீகமும் தத்துவமும் ஆகும். இதைப் பாரசீக சாம்ராஜ்யம் தோன்றுவதற்கு மிக முன்பே ஒருமுறை இந்தியா வழங்கியது. இரண்டாவது முறையாக பாரசீக சாம்ராஜ்ய காலத்தின் போது வழங்கியது. மூன்றாவதாக, கிரேக்கப் பேரரசு உச்ச நிலையில் இருந்தபோது வழங்கியது. இப்போது நான்காவது முறையாக, ஆங்கிலேயர்கள் உச்ச நிலையில் இருக்கின்ற இந்தக் காலத்தில் மீண்டும் ஒரு முறை அதே காரியம் நிறைவேறப் போகிறது.
அமைப்புக்களை உருவாக்குதல் மற்றும் புற நாகரீகம் பற்றிய மேலை நாட்டுக் கருத்துக்கள் நம் நாட்டினுள் புகுந்து ஊடுருவிச் சென்றுள்ளது. அவைகளை நாம் ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷயம். அது போலவே இந்திய ஆன்மீகமும் தத்துவமும் மேலை நாடுகளிலிருந்து வருகின்ற ஒரு விதமான உலகாயதம் போன்ற அந்த நாகரீகத்தை நம்மால் தடுக்க முடியாததைப் போல், இந்தியா வின் ஆன்மீக வெள்ளத்தையும் மேலை நாட்டால் தடுக்க முடியாது. சிறிது உலகியல் நமக்கு நல்லது, அவ்வாறே மேலை நாட்டிற்குச் சிறிது ஆன்மீகம் நல்லது. இவ்வாறு சமநிலை பிறழாமல் காக்கப்படுகிறது.
மேலை நாடுகளிலிருந்தே நாம் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, மேலை நாட்டினர் ஒவ்வொன்றையும் நம்மிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ அல்ல. ஆனால் காலங்காலமாக இருந்து வருகின்ற, நாடுகளின் ஒருங்கிணைப்பு, லட்சிய உலகம் ஆகிய கனவுகளை நனவாக்குவதற்காக ஒவ்வொரு நாடும் தங்களிடம் உள்ளதை எதிர்கால சந்ததியருக்குக் கொடுத்தேயாக வேண்டும். இத்தகைய லட்சிய உலகம் எப்போதாவது உருவாகுமா என்பது எனக்குத் தெரியாது; சமுதாயம் என்றாவது நிறைநிலையை அடையுமா என்பதும் சந்தேகமே. அது வருகிறதோ இல்லையோ, ஆனால் நாம் ஒவ்வொருவரும் அது நாளைக்கே வரப் போகிறது, அது நம் உழைப்பால்
மட்டுமே வர முடியும் என்ற எண்ணத் தோடு உழைக்க வேண்டும் . எல்லோரும் தங்கள் பங்கைச் செய்துவிட்டார்கள், உலகம் நிறைநிலையை அடைவதற்கு எஞ்சியிருப்பது, நான் செய்ய வேண்டிய வேலை மட்டுமே என்று நாம் ஒவ்வொருவரும் நம்ப வேண்டும். நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு இதுவே.
தற்போது இந்தியாவில் மகத்தான மத மறுமலர்ச்சி தோன்றியுள்ளது. இதில் பெருமை இருப்பதைப் போலவே ஆபத்தும் உள்ளது.ஏனெனில் சில வேளைகளில் இந்த மறுமலர்ச்சி கொள்கைவெறியை வளர்க்கிறது, சில நேரங்களில் அந்த வெறி எல்லை கடந்து போய்விடுகிறது. மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்கள் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வருகிறது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மூட நம்பிக்கை நிறைந்த பழமையான வைதீகமாகிய மலைக்கும், உள்ளீடற்ற, சீர்திருத்தம் என்று சொல்லப்படுகின்ற, மேலை நாட்டு வளர்ச்சியின் அடித்தளம் முழுவதிலும் ஊடுருவிப் பாய்ந்திருக்கின்ற ஐரோப்பாவின் உலகாயதம் என்னும் ஆழ்கடலுக்கும் இடையே நமக்குரிய பாதையை நாம் கண்டாக வேண்டும்.
ஆன்மீகம், லௌகீகம் இரண்டையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் நம்மால் மேலை நாட்டினராக ஆக முடியாது. எனவே அவர்களைக் காப்பியடிப்பது பயனற்றது. ஒரு வேலை நீ அவர்களைக் காப்பியடிப்பதாகவே வைத்து கொள்வோம். அந்தக் கணமே நீ செத்து விடுவாய், அதன்பின் உனக்கு வாழ்கை என்பதே இல்லாமல் போவிடும். இரண்டாவதாக, அது முடியாத காரியமும் ஆகும். காலத்துடனேயே தோன்றி, யுகயுகங்களாக மனித வரலாற்றைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கின்றது ஆறு ஒன்று. அதனைத் தடுத்து நிறுத்தி, பின்னோக்கித் தள்ளிக் கொண்டு போய், இமாலயப் பனிப் படலங்களில் சேர்த்துவிட எண்ணுகிறீர்களா? ஒரு வேளை அதுகூட முடிகிற காரியமாக இருக்கலாம். ஆனால் உங்களால் ஐரோப்பியமயமாக முடியாது. சில நூற்றாண்டுகளாக மட்டுமே உள்ள தங்கள் நாகரீகத்தைத் தூக்கி எறிவது ஐரோப்பியர்களால் முடியாமலிருக்கும்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பிரகாசிக்கும் நமது பண்பாட்டைத் தூக்கி எறிவது சாத்தியம் என்றா நினைக்கிறீர்கள்? அது முடியாது.
ஒவ்வொரு சின்னஞ்சிறு கிராம தேவதைகளையும், மூடநம்பிக்கையில் தோய்ந்த சாதாரணமான பழக்க வழக்கங்களையும்தான் நாம் மதம் என்று அழைத்து பழக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. வட்டாரப் பழக்கங்கள் கணக்கற்றவை, ஒன்றுக்கொன்று முரணானவை. இவற்றுள் நாம் எதை ஏற்றுக் கொள்வது, எதை த்தள்ளுவது? உதாரணமாக, ஒரு பிராமணன் இறைச்சி உண்பதைக் கண்டால் தென்னிந்திய பிராமணன், குலைநடுங்கிப் போய்விடுவான், ஆனால் அதையே வட இந்திய பிராமணன் மிகவும் பெருமைக்குரியதாக, புனிதமானதாகக் கருதுகிறான் - யாகத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகளைப் பலியிடுபவன் அவன். இப்படி உங்கள் பழக்கம் சிறந்தது என்று நீங்கள் சொன்னால், தங்கள் பழக்கங்களே சிறந்தவை என்று காட்ட பலர் தயாராக உள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள பழக்க வழக்கங்கள் பல்வேறானவை. ஆனால் அவை வட்டார வழக்கங்களே. இந்த வட்டார வழக்கங்கள்தாம் நமது மதத்தின் சாரம் என்றே பாமர மக்கள் எண்ணிவருகிறார்கள். இது பெருந்தவறாகும்.
இதைக் கடந்து சென்றால் இன்னும் பெரிய பிரச்சினை உள்ளது. நமது சாஸ்திரங்கள் இரண்டு வகையான உண்மைகளைக் கூறுகின்றன. ஒன்று, மனிதனின் அழியாத இயல்பை அடிப் படையாகக் கொண்டது; இறைவன் ஆன்மா, இயற்கை - இவற்றுக்கிடையிலான மாறாத உறவைப்பற்றி ஆராய்கிறது. மற்றொன்று, வட்டாரச் சூழ்நிலைகள், காலச் சூழ்நிலைகள், குறிப்பிட்ட அந்தக் காலத்தின் சமுதாய அமைப்புகள் முதலியவற்றைப் பற்றிய தாக உள்ளது. முதல்வகை உண்மைகள் பெரும்பாலும் நமது சாஸ்திரங்களான .
வேதங்களில் கூறப்பட்டுள்ளன. இரண்டாவது வகை, ஸ்மிருதிகளிலும் புராணங்களிலும் கூறப்படுகின்றன.எல்லா காலங்களுக்கும் வேதங்களே இறுதியான லட்சியம், முடிவான அதிகாரம் உள்ளவை என்பவை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எதிலாவது புராணங்கள் வேதங்களிலிருந்து மாறுபடுமானால் புராணத்தின் அந்தப் பகுதியை இரக்கமின்றி ஒதுக்கிவிட வேண்டும்.
இந்த ஸ்மிருதிகள் அனைத்திலும் கூறப்படும் போதனைகள் வெவ்வேறாக உள்ளன என்பது நமக்குத் தெரியும். இது தான் வழக்கம், இந்த யுகத்தில் இதைத்தான் பின்பற்ற வேண்டும். என்று ஒரு ஸ்மிருதிகூறுகிறது. மற்றொரு ஸ்மிருதியோ இது தான் இந்த யுகத்தின் நடைமுறை என்கிறது. இது சத்திய யுகத்தில் பழக்க வழக்கங்களாக இருக்க வேண்டும், இது கலியுகத்தில் வழக்கங்களாக இருக்க வேண்டும் என்று இன்னொரு ஸ்மிருதி சாதிக்கின்றது.
மனிதனின் இயல்பை அடிப்படையாகக் கொண்ட இந்த நிரந்தர உண்மைகள் மகத்தான கொள்கைகளுள் ஒன்றாகும். மனிதனின் இயல்பை ஆதாரமாகக் கொண்டுள்ளதால் மனிதன் வாழும்வரை இந்த உண்மைகளும் மாறவே மாறாது. அவை எல்லா காலங்களுக்கும் உரியவை, எல்லா இடங்களுக்கும் பொதுவானவை, உலகம் தழுவியவை. ஆனால் ஸ்மிருதிகள் பொதுவாக வட்டாரச் சூழ்நிலைகளையும், அங்கு நிலவுகின்ற பல்வேறான சூழ்நிலைகளின் காரணமாக எழுகின்ற கடமைகளைப் பற்றியுமே கூறுகின்றன. இவை கால ஓட்டத்தில் மாறுதல்களுக்கு உள்ளாகின்றன. ஆனால் ஏதோ ஒரு சிறிய சமுதாய வழக்கம் மாறுவதால் உங்கள் மதமே அழிந்துவிடப் போவதில்லை, அப்படி ஒரு போதும் நடக்காது. இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.அந்தப் பழக்க வழக்கங்கள் ஏற்கனவே மாறிக் கொண்டிருப்பவை என்பதை மறக்காதீர்கள். மாட்டிறைச்சி தின்னாத பிராமணன், பிராமணனே அல்ல என்று கருதப்பட்ட காலம் ஒன்று முன்பு இதே இந்தியாவில் இருந்தது. சன்னியாசியோ அரசனோ அல்லது யாராவது மகானோ வீட்டுக்கு வந்தால் ஆடும் காளையும் கொல்லப்பட்ட விவரங்களையும், ஆனால் பயிர்த்தொழில் செய்யும் இன மாகிய நாம், மிகச்சிறந்த காளைகளைக் கொல்வது இறுதியில் நம் இனத்தின் அழிவிற்கே வழிவகுக்கும் என்பதைக் காலப்போக்கில் உணர்ந்து கொண்டதையும் நாம் வேதங்களில் படிக்கிறோம். எனவே பசு வதைக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன ; அந்த வழக்கம் நிறுத்தப்பட்டது. கொடிய வழக்கங்கள் என்று இப்போது நாம் கருதுகின்ற பல பழக்கங்கள் முன்பு சமுதாயத்தில் நிலவியதையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் பார்க்க முடிகிறது. காலப்போக்கில் வேறு விதிகளை உருவாக்க நேர்ந்தது. இந்த விதிகளும் காலப்போக்கில் மறையும். உடனே புதிய விதிகள் தோன்றவும் செய்யும்.எனவே வேதங்கள் எல்லா காலங்களிலும் ஒன்றே. அவை நிலையானவை ஸ்மிருதிகள் காலத்திற்குக் காலம் மாறுபவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
காலம் செல்லச்செல்ல ஸ்மிருதிகளில் கூறப்பட்ட விதிகள் மறைந்து கொண்டே போகும். மகான்கள் வருவார்கள்.அவர்கள் சமுதாயத்தை மாற்றி,இன்னும் நல்ல பாதைகளிலும் காலத்திற்குத் தேவையான கடமைகளிலும் வழிகளிலும் சமுதாயத்தைச் செலுத்துவார்கள். இத்தகைய நிலை இல்லையெனில் சமுதாயம் வாழ்வது என்பது முடியாமல் போய்விடும் . இவ்வாறு நம்முடைய வழியை இந்த இரண்டு ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இதன் பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கான போதிய பரந்த மனமும் அதே வேளையில் ஆழ்ந்த நம்பிக்கையும் இங்குள்ள ஒவ்வொருவரிடமும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன், எதையும் விலக்காமல் அனைத்தையும் ஏற்றுக்கொள்வது என்பதையே நான் குறிப்பிடுகிறேன். கொள்கைவெறியரின் தீவிரமும் லௌகீகரின் பரந்த நோக்கும் வேண்டுமென்று விரும்புகிறேன். கடல்போல் ஆழ்ந்து, எல்லையற்ற வானம் போல் விரிந்துள்ள இதயமே நமக்கு வேண்டும். உலகிலுள்ள வேறெந்த நாட்டினரைவிடவும் முற்போக்குடன் இருப்போம்; அதேவேளையில் நாம் நமது பரம்பரைப் பண்பில் நம்பிக்கையுடனும் பற்றுடனும் மாறாமல் நிலைத்திருப்போம். எவ்வாறு இப்படி இருப்பது என்பது இந்துக்களுக்குத் தான் தெரியும்.
இதை தெளிவான வார்த்தைகளில் சொல்வதென்றால், நாம் ஒவ்வொன்றிலும் முக்கியம் மற்றும் முக்கியமற்ற பகுதிகளுக்கு இடையிலுள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமானவை என்றும் இருப்பவை. முக்கியமற்றவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுபவை; அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நீக்கப்பட்டு, முக்கிய மானவற்றால் நிரப்பப்படவில்லை என்றால், கட்டாயமாக அவை ஆபத்தானவையாகிவிடும். உடனே நீங்க ளெல்லாம் எழுந்து நின்று, உங்கள் பழங்கால வழக்கங்களையும் அமைப்புகளையும் தூற்ற வேண்டும் என்று நான் சொல்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள்.நான் சொல்வது அது அல்லவே அல்ல. அவற்றுள் மிகவும் தீய ஒன்றைக் கூட நிந்திக்காதீர்கள், எதையும் தூற்றாதீர்கள். இன்று மிகக் கொடிய ஒன்றாகத் தோன்றுகின்ற பழக்கங்கள், கடந்த காலத்தில் வாழ்வை வளப்படுத்திய பழக்கங்களாக இருந்திருக்கும். அவற்றை நாம் நீக்க நேருமானால் கூட சபித்துக் கொண்டே நீக்கக் கூடாது. நம் இனம் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக, கடந்த காலத்தில் அவை செய்த மகத்தான காரியங்களுக்காக அவைகளை வாழ்த்தியும் அவைகளிடம் நன்றியுணர்வுடனும் நீக்க வேண்டும்.
நமது சமுதாயங்களின் தலைவர்கள் ஒரு போதும் படைத்தலைவர்களோ அரசர்களோ அல்ல, மாறாக ரிஷிகளே என்பதை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். ரிஷிகள் என்பவர் யார்? உபநிடதங்கள் ரிஷி என்று அழைக்கின்ற ஒருவர் சாதாரண மனிதர் அல்ல ;அவர் மந்த்ர த்ரஷ்டா; அவர் ஆன்மீகத்தை நேருக்கு நேர் காண்பவர். அவரைப் பொறுத்தவரை ஆன்மீகம் என்பது வெறும் புத்தகப் படிப்பல்ல; கற்பனைகளோ வாதங்களோ அல்ல; வெற்றுப் பேச்சும் அல்ல; மாறாக, புலன்களைக் கடந்த உண்மைகளை நேருக்கு நேர் காண்பது அதாவது உண்மை அனுபூதியே. இது தான் ரிஷித்தும் என்பது.
ரிஷித்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட யுகத்திற்கோ காலத்திற்கோ நெறிக்கோ ஜாதிக்கோ சொந்தமானதல்ல. உண்மை உணரப்பட வேண்டும் என்கிறார் வாத்ஸ்யாயனர். எனவே நீங்கள், நான் மற்றும் இங்குள்ள ஒவ்வொருவருமே ரிஷிகளாவதற்காக அழைக்கப்பட இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமக்கு நம்பிக்கை வேண்டும்.நாம் அனைவரும் உலகத்தை அசைப்பவர்களாக மாறியாக வேண்டும், ஏனெனில் எல்லாம் நம்மிடமே உள்ளது. ஆன்மீகம் என்பதை நாம் நேருக்கு நேராகக் கண்டாக வேண்டும், அனுபவிக்க வேண்டும், அதன் மூலம் அது பற்றிய நமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் ரிஷித்துவமாகிய அந்தப்பேரொளியில் திளைக்கும்போது, நாம் ஒவ்வொருவரும் மகத்தானவர்களாக இருப்போம். அப்பொழுது நம் உதடுகளிலிருந்து வெளிவருகின்ற ஒவ்வொரு வார்த்தையும் இணையற்ற பாதுகாப்பை அள்ளி வழங்குவதாக இருக்கும். அப்பொழுது யாரையும் நிந்திக்க வேண்டிய அவசியமே இல்லாமல், யாரையும் திட்ட வேண்டிய தேவையே இல்லாமல், இந்த உலகத்தில் யாருடனும் சண்டையிடும் அவசியமும் இல்லாமல் நம் முன்னர் தீமைகள் தாமாகவே மறைந்து போகும். சொந்த முக்திக்காகவும் பிறரது முக்திக்காகவும் இங்குள்ள ஒவ்வொருவரும் அத்தகைய ரிஷித்துவத்தை அடைய கடவுள் நமக்கு உதவுவாராக
கும்பகோணம் சொற்பொழிவு
-
3 பிப்ரவரி 1897 அன்று சுவாமிஜி கும்பகோணத்திற்கு வருகைபுரிந்து மூன்று நாட்கள் தங்கினார். அங்கு இந்து மாணவர்கள் அளித்த வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு.
வேதாந்தப் பணி:
மிகக் குறைந்த அளவே செய்யப்படுகின்ற மதப்பணி கூட மிகப் பெரிய விளைவைத் தருகிறது - கீதை கூறுகின்ற இந்த உண்மைக்கு விளக்கம் வேண்டுமானால் எனது எளிய வாழ்க்கையைப் பார்த்தால் போதும். அதன் நிரூபணத்தை நான் ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் கண்டு வருகிறேன். எனது பணி உண்மையில் மிகச் சாதாரணமானது .ஆனால் கொழும்புவிலிருந்து இங்கு வரை என் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குத் தரப்படுகின்ற மனமுவந்த, கனிவான வரவேற்புகள் எல்லா எதிர்பார்ப்புகளையும் மீறியவை; அதே நேரத்தில் இது நம் இந்துப் பாரம்பரியத்திற்குத் தகுதியானவை, நமது இனத்திற்கு தகுதியானவை. நம் இந்து இனத்தின் உயிர்ச் சக்தியும் வாழ்க்கைத் தத்துவமும் ஆதார நாடியும் மதத்தில்தான் இருக்கிறது. நான் கீழை மற்றும் மேலை நாடுகளில் பல்வேறு இன மக்களிடையே பயணம் செய்து, இந்த உலகத்தைக் கொஞ்சம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மகத்தான லட்சியம் இருப்பதை நான் கண்டேன்.அதுவே அந்த இனத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. சில நாடுகளில் இந்த தேசியப் பின்னணி அரசியலாக இருக்கிறது , சில நாடுகளில் சமுதாய கலாச்சாரமாக உள்ளது, மற்றும் சில நாடுகளில் அறிவுக் கலாச்சாரமாக உள்ளது. ஆனால் நமது தாய்நாட்டின், அடிப்படையாக வும் முதுகொலும்பாகவும் அதன் தேசியவாழ்க்கை முழுவதும் கட்டப்படுவதற்கான உறுதியான அடித்தளப்பாறையாகவும் மதமே உள்ளது.
சென்னை மக்கள் எனக்கு அமெரிக்காவில் அனுப்பிய அன்பான பாராட்டுரைக்கு நான் அனுப்பிய பதில் உங்களுள் பலரது நினைவில் இருக்கும். நம் நாட்டின் ஒரு குடியானவன், மேலை நாட்டிலுள்ள சீமான் ஒரு வனைவிடப் பல வழிகளில் சிறந்த மத அறிவு பெற்றவனாக உள்ளான் என்று அதில் நான் குறிப்பிட்டிருந்தேன். எனது அந்தச் சொற்கள் சந்தேகத்திற்கு இடமின்றிச் சரியாக இருப்பதை இன்று நான் காண்கிறேன். சாதாரண இந்தியர்கள் பல விஷயங்களை அறியாதவர்களாகவும் புதிய செய்திகளை அறிவதில் ஆர்வம் இல்லாதவர்களாகவும் இருப்பதைக்கண்டு, ஒரு காலத்தில் நான் வெறுப்படைந்தது உண்டு. ஆனால் இப்போது அவர்களின் போக்கிற்கான காரணம் எனக்குப் புரிந்துவிட்டது. அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, அதைப் பற்றிய செய்திகளை அறிவதில் , என் பயணத்தில் நான் கண்ட மற்ற நாட்டு மக்களைவிட அவர்கள் பேரார்வம் காட்டுகிறார்கள்.
ஐரோப்பாவின் பரபரப்பான அரசியல் மாற்றங்களையும் ஐரோப்பிய சமுதாயத்தில் நடைபெறும் எழுச்சிகளைப் பற்றியும் நம் குடியானவர்களைக் கேளுங்கள். அவர்களுக்கு அவை எதுவும் தெரியாது. தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு ஆர்வமும் கிடையாது. ஆனால் இந்தியாவிலிருந்து பல வழிகளிலும் பிரிக்கப்பட்ட, இந்திய வாழ்க்கை முறைகளிலிருந்து துண்டிக்கப்பட்ட இலங்கை விவசாயி - இலங்கை வயல்களில் உழைக்கின்ற அவர்கள்கூட, அமெரிக்காவில் ஒரு சர்வமத மகாசபை நடைபெற்றதையும் , அதற்கு இந்திய சன்னியாசி ஒருவர் சென்றதையும் ,அங்கு அவர் ஏதோ சிறு வெற்றி பெற்றதையும் தெரிந்து வைத்திருக்கிறான். எனவே தாங்கள் விரும்புவதை அறிந்து கொள்வதில் இவர்களும் பிற நாட்டினரைப் போல் ஆர்வம் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். மதம் ஒன்றுதான் இந்தியர்கள் முழு நாட்டம் கொள்ளக் கூடிய ஒன்றாகும்.
ஓர் இனத்தின் ஆதார சக்தி முழுவதும் மத லட்சியத்தில் இருப்பது நல்லதா அல்லது அரசியல் கொள்கைகளில் இருப்பது நல்லதா என்பது பற்றி இப்போது நான் பேசவில்லை . நல்லதற்கோ கெட்டதற்கோ, நமது ஆதார சக்தி முழுவதும் மதத்தில் தான் ஒருமுனைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு. இதை நீங்கள் மாற்ற முடியாது. அதை அழித்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு ஒன்றை வைக்க உங்களால் முடியாது. வளர்ந்துவிட்ட பெரிய மரத்தை ஓர் இடத்திலிருந்து பிடுங்கி மற்றோர் இடத்தில் நட்டு, உடனடியாக அது அங்கே வேர் பிடித்து வளரும்படிச் செய்ய உங்களால் முடியாது. நல்லதற்கோ கெட்டதற்கோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மத லட்சியம் நிறைந்து பரவிக் கொண்டிருக்கிறது . நல்லதற்கோ கெட்டதற்கோ இந்தியச் சூழ்நிலை மத லட்சியங்களால் நிரப்பப்பட்டு எத்தனையோ நூற்றாண்டுகளாக ஒளிவீசி வருகிறது. நல்லதற்கோ கெட்டதற்கோ நாம் இந்த மத லட்சியங்களின் நடுவிலே பிறந்து வளர்க்கப்பட்டு இருக்கிறோம், அவை நம் ரத்தத்தோடு கலந்து, ரத்தக்குழாயில் ஓடுகின்ற ஒவ்வொரு துளியிலும் சிலிர்ப்பை ஊட்டி, நம் உடம்போடு ஒன்றிப்போய் இருக்கிறது; நம் வாழ்வின் ஆதார சக்தியாக ஆகியிருக்கிறது.
அத்தகைய மதத்தை, எதிர்விளைவாக அதே அளவு சக்தியை எழுப்பாமல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கின்ற அந்தப் பேராறு தனக்கென்று உண்டாக்கிக் கொண்ட கால்வாயை நிரப்பாமல், உங்களால் விட்டுவிட முடியுமா ? கங்கை மீண்டும் பனி மலைகளுக்குள் திரும்பிச் சென்று புதிய பாதையில் பாய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அது கூட ஒருவேளை முடிகின்ற காரியமாக இருக்கலாம். ஆனால் தன் தனிப் பண்பான மத வாழ்க்கையை விட்டு விட்டு, அரசியல் அது போன்ற ஏதாவது ஒன்றைத் தன் பாதையாக ஏற்றுக் கொள்வது இந்தியாவால் முடியாத காரியம். நீங்கள் வேலை செய்ய வேண்டுமானால், இயன்ற அளவு எதிர்ப்பு குறைவாக இருக்க வேண்டும். இந்தியாவில் அத்தகைய ஒரு பாதை மதம்தான். இந்தியாவில் இதுதான் வாழ்க்கை வழி, இதுதான் வளர்ச்சிக்கான வழி. மதப்பாதையைப் பின்பற்றியே இந்தியா முன்னேற்றம் கண்டிருக்கிறது.
பிற நாடுகளைப் பொறுத்தவரை, வாழ்க்கையின் எத்தனையோ தேவைகளுள் மதமும் ஒன்று. நான் அடிக் கடிப் பயன்படுத்தும் ஓர் உவமையைக் கூறுகிறேன்; சீமாட்டியின் வரவேற்பறையில் பல்வேறு பொருட்கள் இருக்கும், ஐப்பானிய ஜாடி ஒன்றையும் வைப்பது இந்நாளில் ஒரு நாகரீகம் ஆயிற்றே! அதை அவள் வாங்கியே தீர வேண்டும், அது இல்லாமல் வரவேற்பறை நன்றாக இருக்குமா என்ன! அதைப்போல், அன்பர்களே, பிற நாட்டினருக்கு வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன; அதனை முழுமையாக்க மதம் என்பதும் கொஞ்சம் தேவையாக இருக்கிறது. அதற்காக அவர்கள் அதையும் சிறிது வைத்திருக்கிறார்கள். ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அரசியல், அதாவது சமுதாய முன்னேற்றம், அதாவது இந்த உலகம் தான் மேலை நாட்டினரின் லட்சியம். கடவுள், மதம் என்ப தெல்லாம் அந்த லட்சியத்தை அடைவதற்காக உதவுபவை, அவ்வளவுதான். அவர்களைப் பொறுத்தவரை, கடவுள் என்பவர் ந்த உலகைத் தூய்மை செய்வதற்ம் அலங்கரிப்பதற்கும் அவர்களுக்கு உதவுகின்ற ஒருவர், அவரது மதிப்பெல்லாம் அவ்வளவு தான்.அவர்களே இன்னும் கற்க வேண்டியுள்ளது, இதில் நம்மை விடத் தெரிந்தவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள். கடந்த நூறு இருநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்திய மதத்திற்கு எதிராக அவர்கள் கூறிவருவதெல்லாம் என்ன தெரியுமா ? நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு ஆவன செய்யவில்லை, அது நமக்கு காசு பணங்களைத் தரவில்லை, நம்மை மற்ற நாடுகளைக் கொள்ளை அடிப்பவர்களாக ஆக்கவில்லை, பலசாலிகளைப் பலவீனர்கள் மீது நின்றுகொண்டு அவர்களின் உயிர்ச் சக்தியை உறிஞ்சி , தங்களை வளமாக்கிக் கொள்ளச் சொல்லவில்லை என்பதுதான். நிச்சயமாக நமது மதம் இதைச் சொல்லவில்லை. தன் காலடியில் உலகையே நடுங்கச் செய்கின்ற படைகளை அனுப்பி, மற்ற இனங்களைச் சூறையாடி நாசப்படுத்த அதனால் முடியாது. எனவே அவர்கள், இந்த மதத்தில் என்ன இருக்கிறது, வாய்க்குத் தீனியும் உடலுக்குப் பலமும் அளிக்காத ஒரு மதத்தில் என்னதான் இருக்க முடியும் என்று கேட்கிறார்கள்.
நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு எதையும் செய்யவில்லை, என்ற அவர்களுடைய இந்த வாதத்தை வைத்துக் கொண்டே நாம் நமது மதத்தின் சிறப்பை உறுதி செய்யலாம் என்பதை அவர்கள் உணரவில்லை. நமது மதம் மட்டுமே உண்மையான மதம். ஏனெனில் மூன்று நாட்களே நிலைப்பதும் புலன்களால் உணரப்படுவதுமான இந்தச் சின்னஞ்சிறு உலகை வாழ்வின் அனைத்து மாகக் கொள்ளக் கூடாது, நமது மகத்தான லட்சியம் அதுவல்ல என்று நமது மதம்தான் கூறுகிறது. சில அடிகளுக்குள் அடங்கிவிடுகின்ற பூமியாகிய இந்தக் கோளம் ; நமது மதத்தின் காட்சியைக் கட்டுப்படுத்தவில்லை. நமது மதத்தின் லட்சியம் இவைகளுக்கு அப்பால், இன்னும் அப்பால் உள்ளது; புலன்களுக்கு அப்பால், இடத்திற்கு அப்பால், காலத்திற்கு அப்பால் இன்னும் அப்பால், ஆன்மாவின் கடல்போல் விரிந்த மகிமையில் இந்த உலகம் சூன்யமாகி, பிரபஞ்சமே ஒரு துளிபோலாகின்ற அந்த இடமே நமது லட்சியம்.
நமது மதம்தான் உண்மையான மதம். ஏனெனில், கடவுள் ஒருவரே உண்மையானவர், இந்த உலகம் பொய்யானது, கணம் தோன்றி மறைவது, உங்கள் காசு பணமெல்லாம் தூசியைத் தவிர வேறல்ல, அதிகார மெல்லாம் வரம்பிற்கு உட்பட்டது, வாழ்க்கை பல நேரங்களில் தீமையாகவே இருக்கிறது என்று அது கூறுகிறது. எனவேதான் நமது மதம் உண்மையானது.
நமது மதம் தான் உண்மையான மதம். ஏனெனில் எல்லாவற்றையும் விட மேலாக, அது துறவைப் போதிக்கிறது. காலங்காலமாகப் பெற்ற ஞானத்தோடு எழுந்து நின்று, இந்துக்களாகிய நம்மோடு ஒப்பிட்டால், நமது முன்னோர்களால் இங்கே இதே இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட பழுத்த பண்பட்ட ஞானத்தை உடையவர்களான நம்மோடு ஒப்பிட்டால், நேற்றுதான் பிறந்த வர்களாகத் தோன்றும் நாடுகளுக்குத் தெளிவான சொற்களில் அது கூறுகிறது; குழந்தைகளே, நீங்கள் புலன்களின் அடிமைகள். புலன்களுக்கு வரையறை இருக்கிறது, புலன்களில் அழிவு மட்டுமே உள்ளது. இரண்டொரு நாட்களே நிலைக்கின்ற இந்த ஆடம்பர வாழ்க்கை இறுதியில் அழிவைத்தான் கொண்டு வரும். இவை அனைத்தையும் விட்டுவிடுங்கள். புலன்களிடமும் உலகத்திடமும் கொண்டுள்ள பற்றை விடுங்கள்; அது தான் மதத்தின் வழி, போகத்தின் வழியாக அல்ல, துறவின் மூலமே லட்சியத்தை அடைய முடியும் . அதனால் நம்முடையது மட்டுமே உண்மையான மதம்.
வினோதமானதோர் உண்மையைப் பாருங்கள். ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ நாடுகள் உலக மேடைக்கு வந்து, ஒரு சில கணங்கள் தங்கள் பாத்திரங்களை ஆரவாரமாக நடித்துவிட்டு, காலப் பெருங் கடலில் நீர்க்குமிழி போல், ஏறக்குறைய எந்த அடையாளத்தையும் நிறுத்தாமல் அழிந்து போய்விட்டன, இங்கு நாமோ நிரந்தரமானது போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மிகப் பெரும் தகுதி பெற்றதே வாழும் என்பதைப் பற்றிய புதிய பல கொள்கைகளையெல்லாம் அவர்கள் பெரிதாகப் பேசுகிறார்கள் ; வாழ்வதற்கான மிகப் பெரும் தகுதியாக உடல் வலிமையையே கருதுகிறார்கள். அது உண்மையென்றால் பிற நாடுகளை ஆக்கிரமித்ததான பழைய நாடுகளுள் ஒன்றாவது இன்றும் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும், ஒருபோதும் எந்த இனத்தையோ நாட்டையோ வெல்லாத பலவீனமான இந்துக்கள் அழிந்திருக்க வேண்டுமே ! ஆனால் நாம் முப்பதுகோடி பேர் இன்னும் வலிமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.(ஒரு முறை ஆங்கிலப் பெண்ணொருத்தி, இந்துக்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் ஓர் இனத்தைக்கூட வெற்றி கொள்ளவில்லையே! என்று என்னைக் கேட்டாள்.)............
இனி, நமது ஆற்றல்கள் எல்லாம் செலவழிந்து விட்டன என்பதோ, நம் நாடு படிப்படியாக அழிந்து வருகிறது என்பதோ சிறிதும் உண்மை அல்ல. நம்மிடம் போதுமான வலிமை இருக்கிறது. தேவை ஏற்படும் போது சரியான நேரத்தில் அது வெள்ளமெனப் பொங்கியெழுந்து உலகை நிரப்பவே செய்கிறது.
மிகப் பழங்காலத்திலிருந்தே நாம் உலகத்திற்குச் சவால் விட்டுக்கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஒரு மனிதன் எவ்வளவு அதிகமாக வைத்துக்கொள்ள முடியும் என்ற பிரச்சனையைத் தீர்க்க மேலை நாட்டினர் முயன்று கொண்டிருக்கிறார்கள். இங்கோ ஒரு மனிதன் எவ்வளவு குறைவான உடைமைகளைக் கொண்டு வாழ முடியும் என்ற கேள்விக்கு விடைகாண முயன்று கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டமும் இந்த வேறுபாடும் பல நூற்றாண்டுகள் தொடரவே செய்யும். ஆனால் வரலாற்றில் ஏதாவது உண்மை இருக்குமானால், ஆருடங்கள் எப்பொழுதாவது உண்மையாகி இருக்கிறதென்றால், அது யார் குறைவான பொருட்களைக் கொண்டு வாழக் கற்றுக் கொள்கிறார்களோ, கட்டுப்பாட்டுடன் வாழ்கிறார்களோ அவர்களே முடிவில் வெல்கிறார்கள், யார் போகத்தின் பின்னாலும் ஆடம்பரத்தின் பின்னாலும் ஓடுகிறார்களோ அவர்களின் வாழ்க்கை எவ்வளவு பரப்பரப்பாக அந்த நேரத்தில் காணப்பட்டாலும் அவர்கள் அழிந்தே தீர வேண்டும், மாய்ந்தேயாக வேண்டும் என்பதுதான்.
மனித வாழ்க்கையில், ஏன், நாடுகளின் வரலாற்றில் கூட ஒரு வகையான களைப்பு, வேதனை தரத்தக்க வகையில் அதிகமாக நிலவுகின்ற சில நேரங்கள் உண்டு. அத்தகையதோர் அலை இப்போது மேலைநாடுகளில் மோதுவது போல் தோன்றுகிறது. அங்கும் மகத்தான சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். இப்படிப் பணம் ,பதவி என்று அவற்றின் பின்னால் ஓடுவது வெறுமையிலும் வெறுமை என்று அவர்களும் கண்டுபிடித்து விட்டார்கள். அங்குள்ள பலரும், ஏன், பண்பாட்டோருள் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் இந்தப் போட்டி, போராட்டம், வாணிப நாகரீகத்தின் காட்டு மிராண்டித்தனம் இவைகளால் ஏற்கனவே களைத்துப் போய்விட்டார்கள். மேலான ஒன்றை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே÷ வேளையில் ஐரோப்பாவின் தீமைகளுக்கெல்லாம் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களே ஒரே தீர்வுஎன்றும் சிலர் இன்னும் அங்கே பிடிவாதமாக நம்பிக் கொண்டுதான் இருக்கின்றனர் .
ஆனால் அங்குள்ள மகத்தான சிந்தனையாளர்களிடம் வேறு சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மனித வாழ்வில் எவ்வளவு தான் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் தீமைகளைத் தீர்க்க முடியாது என்பதை அவர்கள் கண்டு விட்டார்கள். அக வாழ்வில் ஓர் உறுதியான மாற்றம் மட்டுமே வாழ்க்கையின் தீமைகளை நீக்கும். படைகளோ அரசாங்கமோ சட்டக்கொடூரங்களோ எவ்வளவு தான் இருந்தாலும் ஓர்இனத்தின் நிலையை மாற்ற முடியாது. ஆன்மீகப் பண்பாடும் நீதிநெறிப் பண்பாடும் மட்டுமே மனித இனத்தின் தவறான போக்குகளை மாற்றி, அதை நல்ல வழியில் திருப்ப முடியும் ,எனவே மேலைநாட்டினர் ஏதாவது புதிய சிந்தனைகளையும் புதிய தத்துவங்களையும் பெறுவதற்காக ஆர்வத்தோடு இருக்கிறார்கள். அவர்களது மதமான கிறிஸ்தவம் பல விஷயங்களில் நல்லதாகவும் பெருமை மிக்கதாகவும் இருந்தாலும் அதனை அவர்கள் முழுமையாக உணரவில்லை; உணர்ந்தபோதோ அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. எனவே மேலை நாட்டின் அறிவுஜீவிகள், நம் பழைய தத்துவங்களில், அதிலும் குறிப்பாக வேதாந்தத்தில், தாங்கள் தேடிக் கொண்டிருக்கின்ற புதிய சிந்தனைத் துடிப்பையும் தங்கள் பசிக்கும் தாகத்திற்கும் ஏற்ற ஆன்மீக உணவையும் நீரையும் காண்கிறார்கள். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஒவ்வொரு மதத்திலும் உள்ள எத்தனை எத்தனையோ விந்தையான கருத்துக்களைக் கேட்பது எனக்குப் பழக்கமாகிவிட்டது. சிறிதுகாலத்திற்கு முன்பு கூட, கிறிஸ்தவ மதம் மட்டுமே உலகம்தழுவிய மதம் என்று என் சிறந்த நண்பரான டாக்டர் பரோஸ் உரிமை பாராட்டியதை நீங்கள் கேட்டிருக்கலாம் . இந்த விஷயத்தைப்பற்றிச் சிறிது சிந்திக்க விரும்புகிறேன். வேதாந்தம், வேதாந்தம் மட்டுமே உலகம் தழுவிய மதமாக முடியும்; வேறெந்த மதமும் அத்தகைய ஒன்றாக இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன். அதற்கான காரணங்களை இப்போது கூறுகிறேன்.
நமது மதத்தைத் தவிர, ஏறக்குறைய உலகின் மற்ற பெரிய மதங்கள் எல்லாமே அதைத் தோற்றுவித்த ஒருவர் அல்லது பலரது வாழ்க்கையோடு இணைக்கப்பட்டுள்ளன. அந்த மதங்களின் கொள்கைகளும் போதனைகளும் கோட்டுபாடுகளும் அற நெறிகளும் அவைகளைத் தோற்றுவித்தவர்களின் வாழ்க்கையைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. அவர்களின் வாழ்க்கையே அந்த மதங்களின் ஆதாரமாகவும் அதிகாரமாகவும் ஆற்றலாகவும் உள்ளது. விசித்திரம் என்னவென்றால் அத்தகைய மதங்களாகிய கட்டிடம் அவர்களது வாழ்க்கையின் வரலாற்று ஆதாரம் என்ற அஸ்திவாரத்தின் மீதுதான் முற்றிலும் கட்டப்பட்டுள்ளது. அந்த வரலாற்று ஆதாரத்தில் மட்டும் ஓர் அடி விழுமானால், பாறை போன்ற அஸ்திவாரம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்களே அது மட்டும் அசைக்கப்படுமானால், தூளாக்கப்படுமானால் முழுக்கட்டிடமுமே நொறுங்கிக் சுக்கல் சுக்கலாகி விடும். அவை மீண்டும் பழைய பெருமையைப் பெறுவதே இல்லை. இன்று அப்படித்தான் நடைபெறுகிறது. அத்தகைய மதங்களைத் தோற்றுவித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றில் பாதி நிச்சயமான உண்மை என்று நம்பப்படவில்லை; மீதிப் பாதியும் தீவிரமான சந்தேகத்திற்கு உரியதாகக் கருதப்படுகிறது.
நமது மதத்தைத் தவிர மற்ற பெரிய மதங்கள் அனைத்தும் இத்தகைய வரலாற்று மனிதர்கள் மீதே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது மதம் தத்துவங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. வேதங்களை உரு வாக்கியதாக எந்த ஆணோ பெண்ணோ உரிமைபாராட்ட முடியாது. அவை என்றும் அழியாத உண்மைகளின் திரண்ட வடிவமாகும். ரிஷிகள் அவற்றைக் கண்டுபிடித்தார்கள். வேதங்களில் அந்த ரிஷிகளின் பெயர்கள் வெறும் பெயர்கள் மட்டுமே ,இங்குமங்குமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் யார், என்ன செய்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. பலருடைய தந்தையின் பெயர் இல்லை ; அவர்கள் எப்போது எங்கே பிறந்தார்கள் என்ற குறிப்புகூட பெரும்பாலும் இல்லை. அவர்கள், அந்த ரிஷிகள் தங்கள் பெயரைப்பற்றிக் கவலைப்பட்டார்களா என்ன !அவர்கள் உண்மைகளைப் போதித்தார்கள். தாங்கள் போதித்த உண்மைகளுக்கு, தங்களால் இயன்ற அளவு உதாரணமாக விளங்கினார்கள்.
நமது கடவுள் சகுணமாகவும் அதே வேளையில் நிர்க்குணமாகவும் இருப்பதைப்போல் நமது மதமும் அழுத்தமான வகையில் தத்துவங்களின் மீது கட்டப்பட்ட ஒன்றாகவும், அதே நேரத்தில் மனிதர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப எண்ணற்ற விதங்களில் பின்பற்றுவதற்கு ஏற்ற விதமாகவும் அமைந்துள்ளது. நமது மதத்தை விட அதிகமான அவதார புருஷர்களை, மகான்களை, தீர்க்கதரிசிகளை வேறு எந்த மதம் தந்துள்ளது, இன்னும் எண்ணற்றோரைத் தருவதற்கும் தயாரக இருக்கிறது?
அவதாரங்கள் கணக்கற்றவை என்று பாகவதம் கூறுகிறது; நீங்கள் விரும்புகின்ற அளவு அதிகமாக இன்னும் வைத்துக்கொள்வதற்கு போதுமான வாய்ப்பைத் தந்துள்ளது. ஆகையால் நம் இந்திய மத வரலாற்றிலுள்ள அவதாரபுருஷர்களிலும் சரி, மகான்களிலும் சரி, ஒருவரோ பலரோ வாழ்வதற்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டாலும் அதனால் நம் மதத்திற்கு எந்தவித தீங்கும் இல்லை. அப்போதும் நம் மதம் எப்போதும் போல் உறுதியாகவே இருக்கும். ஏனென்றால் அது தத்துவங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளதே தவிர மனிதர்களை அல்ல. உலகிலுள்ள அனைவரையும் ஒரே மனிதரைச் சுற்றித் திரளும்படிச் செய்ய முயல்வது வீண். ஏன் உலகம்தழுவியதும், அழிவேயில்லாத உண்மைகளின் கீழும்கூட உலக மக்கள் எல்லோரையும் ஒன்றுசேர்ப்பது என்பது முடியாத ஒன்று.
மதம் என்ற துறையில் மனித இனத்தின் பெரும் பகுதியையேனும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கச் செய்ய வேண்டுமானால், அது தத்துவ உண்மைகளின் மூலம் தான் முடியுமே தவிர, மனிதர்களின் மூலம் முடியாது என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். நான் முன்பு கூறியதுபோல் நமது மதம் அதற்கு வேண்டிய அதிகாரத்தையும் ஆற்றலையும் மிகுதியாகப் பெற்றதாக உள்ளது. இஷ்ட தெய்வக் கொள்கை இருக்கிறதே, அது அற்புதமானது. உங்களுக்கு உகந்த மகான்களை நீங்கள் தேர்ந்துதெடுத்துக் கொள்வதற்கு முழுமையான சுதந்திரத்தை இது அளிக்கிறது. இவர்களுள் எந்த மகானையோ ஆச்சாரியரையோ உங்கள் வழிக்காட்டியாக, வழிபாட்டிற்கு உரியவராக நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், அது மட்டுமல்ல, நீங்கள் தேர்ந்தெடுப்பவரே மகான்களுள் மிக மேலானவர், அவதாரபுருஷர்களுள் மிக உயர்ந்தவர் என்று நினைக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதில் தவறில்லை. ஆனால் அதற்குப் பின்னணியாக உறுதியான, நிரந்தரமான தத்துவ உண்மைகள் இருக்க வேண்டும். ஓர் ஆச்சரியகரமான உண்மை என்னவென்றால் நமது அவதார புருஷர்களின் மதிப்பெல்லாம் அவர்களின் வாழ்க்கை வேத உண்மைகளுக்கு விளக்கமாக அமையும் போது மட்டுமே. ஸ்ரீகிருஷ்ணரின் பெருமை யெல்லாம், அவர் நமது சனாதன தர்மத்தின் கொள்கைகளை மிகச் சிறப்பாகப் போதித்தவர் என்பதிலும், இந்தியாவில் இதுவரை வாழ்ந்த வேதாந்த ஆச்சாரியர்களுள் மிகச் சிறந்தவர் என்பதிலும் தான் இருக்கிறது.
உலகத்தின் கவனத்திற்கு வேதாந்தம் விடுக்கின்ற இரண்டாவது கருத்து; உலக சாஸ்திரங்கள் அனைத்திலும் வேதாந்த போதனைகள் மட்டுமே, இக்கால விஞ்ஞானத்தின் புறவுலக ஆராய்ச்சி முடிவுகளோடு முழுக்கமுழுக்க இயைபு உடையதாக உள்ளது. அடிப்படை, பரஸ்பரத் தொடர்பு, மற்றும் உறவு இவற்றைப் பொறுத்தவரை ஒரே மூலத்தைக் கொண்டு இரண்டு மனங்கள் வரலாற்றின் மங்கலான கடந்தகாலத்தில் வெவ்வேறு பாதைகளில் புறப்பட்டன. ஒன்று புராதனமான இந்து மனம், மற்றொன்று புராதனமான கிரேக்க மனம். இந்துக்கள் அகவுலகத்தை ஆராய்வதன் மூலம் பயணத்தை தொடங்கினார், கிரேக்கர்கள் புறவுலகத்தை ஆராய்வதன் மூலம், அப்பாலுள்ள அந்த லட்சியத்தை நோக்கித் தங்கள் பயணத்தைக் தொடங்கினர். மனங்களின் பயண வரலாறுகள் எவ்வளவோ வேறுபாடுகளை உடையதாக இருந்தாலும், அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள அந்த லட்சியத்தின் ஒரே மாதிரியான எதிரொலிகளையே எழுப்புகின்றன; இதனை நாம் எளிதாக அறிய முடிகிறது . தற்கால விஞ்ஞானத்தின் முடிவுகள் வேதாந்திகள் அல்லது இந்துக்களின் மதத்தோடுதான் இயைபாகப் பொருந்துவதாகத் தோன்றுகிறது. தற்கால விஞ்ஞானம் தன் முடிவுகளை வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் வேதாந்தத்தின் முடிவுகளின் வாயிலாக ஆன்மீகத்தையும் நாடலாம் என்றே தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானத்தின் முடிவுகள் நெடுங்காலத்திற்கு முன் வேதாந்தம் கண்ட முடிவே என்றுதான் , நமக்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியில் விருப்பம் உள்ள அனைவருக்கும் தோன்றுகிறது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், இன்றைய விஞ்ஞானம் தூல மொழியில் எழுதப்பட்டுள்ளது.
தற்கால மேலை நாட்டறிஞர்களை வேதாந்தம் கவர்வதற்கான மற்றொரு காரணம், வேதாந்ததின் அற்புதமான பகுத்தறிவுக் கொள்கை . வேதாந்தத்தின் முடிவுகள் மிகவும் ஆச்சரியமான வகையில் அறிவுபூர்வமாக இருப்பதாக இன்றைய மிகச் சிறந்த மேலை நாட்டு அறிஞர்கள் பலர் என்னிடம் கூறினர். அவர்களுள் ஒருவரை எனக்கு நெருக்கமாகத் தெரியும். உண்பதற்கோ தன் ஆராய்ச்சிக்கூடத்தை விட்டு வெளியே செல்வதற்கோகூட நேரமில்லாத அவர் என் வேதாந்தச் சொற்பொழிவுகளைக் கேட்பதற்க்காக மணிக்கணக்கில் காத்திருப்பார். வேதாந்தம் மிகவும் அறிவுபூர்வமானது; காலத்தின் தேவையை முழுக்க முழுக்க அது பூர்த்தி செய்கிறது; தற்கால விஞ்ஞானம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன முடிவுகளுடன் அப்படியே இயைந்திருக்கிறது என்பார் அவர்.
மத ஒப்புமையிலிருந்து பெறப்பட்டுள்ள அத்தகைய இரண்டு விஞ்ஞான முடிவுகள் மீது உங்கள் கவனத்தைச் சிறிது திருப்ப விரும்புகிறேன்- ஒன்று, மதங்களின் சமரசம்; மற்றொன்று, எல்லாம் ஒன்றே என்னும் கொள்கை. பாபிலோனிய வரலாற்றிலும் யூத வரலாற்றிலும் ஒரு சுவையான விஷயத்தை நாம் காணலாம். பாபிலோனியர்களும் யூதர்களும் பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒவ்வொறு குழுவிற்கும் ஒரு தெய்வம் உண்டு. இந்தக் தெய்வங்கள் பெரும்பாலும் ஒரு பொதுவான பெயரைப் பெற்றிருந்தனர். பாபிலோனியர்களின் தெய்வங்கள் பால் என்று வழங்கப்பட்டனர். இவர்களுள் பால் மெரோடக் தலைமை தெய்வம். நாளடைவில் இந்தக் குழுக்களில் ஒன்று மற்றவற்றை வென்று, அவற்றைத் தன்னுடன் ஒன்று சேர்த்துவிட்டது. அதன் விளைவாக , வென்ற குழுவின் தெய்வம் எல்லா குழுக்களின் தெய்வங்களுக்கும் தலைமை தெய்வமாகிவிடுவார். இவ்வாறுதான், இன்று தம்பட்டம் அடித்துக் கொள்வதான, செமிட்டிக் இனத்தின் ஒரே கடவுள் கொள்கை உருவாகியது.
யூதர்களின் தெய்வங்கள் மொலாக் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். இவர்களுள் இஸ்ரேல் என்னும் குழுவிற்கு ச் சொந்தமானவர் மொலாக்-யஹ்வா அல்லது மொலாக் -யாவே என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் இஸ்ரேல் குழு அதே இனத்தைச் சேர்ந்த மற்ற குழுக்களை வென்று, அவர்களின் மொலாக்குகளை எல்லாம் அழித்துத் தங்கள் சொந்த மொலாக்தான் மொலாக்குகள் அனைவரிலும் உயர்ந்தவர் என்று அறிவித்தது. இத்தகைய ஒரு மத வெற்றிக்காகச் சிந்தப் பட்ட ரத்த வெள்ளங்களும், நடத்தப்பட்ட கொடுமைகளும், செய்யப்பட்ட கொடூரங்களும் எவ்வளவு என்பது உங்களுள் பலருக்கும் தெரியும். பிற்காலத்தில் பாபிலோனியர்கள் இஸ்ரேலியர்களின் மொலாக்- யஹ் வாவின் தலைமையை அழிக்க முயன்றார்கள், ஆனால் முடியவில்லை.
மத விஷயங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் நிகழ்த்திய இத்தகைய போராட்டம் இந்திய எல்லைக்குள்ளும் நடந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இங்கும் ஆரியர்களின் பல்வேறு இனங்களுக்குள் தங்கள் தெய்வங்களின் தலைமைக்காகக் கருத்து வேற்றுமைகள் நிலவியிருக்கலாம். ஆனால் இங்கு நிகழ்ந்தது வேறு. இந்திய வரலாறு யூதர்களின் வரலாற்றிலிருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டியிருந்தது. மற்ற நாடுகள் எதைவிடவும் சகிப்புத் தன்மைக்கும் ஆன்மீகத்திற்கும் இருப்பிடமான நாடாக இந்தியா மட்டுமே இருக்க வேண்டியிருந்தது. எனவே இனச் சண்டைகள் இங்கு நெடுங்காலம் நீடிக்கவில்லை.
வரலாறு எட்ட முடியாத, பாரம்பரியங்கள் தங்கள் பார்வையைச் செலுத்தத் துணியாத அளவிற்கு மிகத் தொலைவான, அடர்ந்ததான அந்தப் பழங்காலத்தில் இந்தியாவில் தோன்றிய மகத்தான ரிஷிகளுள் ஒருவர்,ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி - இருப்பவர் ஒருவரே, ரிஷிகள் அவரைப் பலவாறாக அழைக்கிறார்கள்” என்று கூறினார். இது, இதுவரை கூறப்பட்ட வாக்கியங்களுள் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்றும், இது வரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகத்தான உண்மைகளுள் மிகச் சிறந்த உண்மையும் ஆகும். இந்துக்களாகிய நமக்கு இந்த உண்மை, தேசிய வாழ்வின் முதுகெலும்பாக அமைந்துள்ளது. ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி என்கின்ற இந்த ஒரு கருத்து நமது தேசிய வாழ்வில் எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்து நம்மிடம் வந்துள்ளது; காலந்தோறும் அளவிலும் நிறைவிலும் புதிய வேகம் பெற்று இன்று அது நமது தேசிய வாழ்வில் இரண்டற ஒன்றுபட்டுள்ளது, ரத்தத்தில் ரத்தமாகக் கலந்து நம்மில் ஒன்றாகியுள்ளது. இந்த உண்மை நம் ரத்தகுழாய் தோறும் ஓடிக் கொண்டிருக்கிறது; நம் நாடு மத சகிப்புத்தன்மையின் மகத்தான நிலமாக ஆகிவிட்டது. இங்கே இந்த நாட்டில் மட்டுமே மக்கள் தங்கள் மதத்தையே இகழ வந்த மதங்களுக்கும் கோயில்களும் சர்ச்சுகளும் கட்டித் தருகின்றனர். இந்த மகத்தான ஒரு கருத்தைத்தான் உலகம் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
மேலை நாடுகளில் எந்த அளவிற்குச் சகிப்பற்ற தன்மை நிலவுகிறது என்பது பற்றி உங்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. அங்கேயே உயிரைவிட நேருமோ என்றுகூட நான் பலமுறை நினைக்கின்ற அளவிற்கு அங்கே மதச் சகிப்பின்மை தலைவிரித்தா டுகிறது. மதத்திற்காக ஒரு மனிதனைக் கொல்வது என்பது அங்கே சர்வ சாதாரணமான ஒன்று. தங்கள் நாகரீகத்தைப்பற்றிப் பெருமையடித்துக் கொள்கின்ற அவர்கள், அதையும் ஒரு நாகரீகமாகச் சொல்லி, இன்று இல்லா விட்டால் நாளைக்குச் செய்யலாம். மேலை நாட்டில், மேலை நாட்டில், நாடு ஏற்றுக் கொண்டுள்ள மதத்திற்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை சொன்னால் போதும், அவன் மிகக் கொடூரமான வகையில் சமுதாயத்தைக் விட்டு விலக்கப்படுவான். அவர்கள் நமது ஜாதி முறைகளைப் பற்றிச் சரளமாக அதே வேளையில் நயமாகக் குறை கூறுவார்கள். நீங்கள் மேலைநாடுகளுக்குச் சென்று என்னைப்போல் அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்து பாருங்கள். மிகப் பெரிய
பேராசிரியர்கள் என்று நீங்கள் கேள்விப்படுகின்ற சிலர்கூட மதத்தைப்பற்றித் தாங்கள் கொண்டுள்ள கருத்தில், நூற்றில் ஒரு பங்கைக்கூட வெளியே சொல்வதற்குத் தைரியமில்லாத வடிகட்டின கோழைகளாக இருப்பதைக் காண்பீர்கள்.
இந்தச் சகிப்புத்தன்மை என்னும் மகோன்னதமான கருத்திற்காக உலகம் காத்திருக்கிறது. நாகரீகத்திற்கு அது ஒரு மகத்தான செல்வமாக விளங்கும்; அது மட்டுமல்ல , இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் எந்த நாகரீகமும் நீண்ட காலம் வாழ முடியாது.வெறியும் ரத்த வெள்ளமும் கொடூரமும் நிறுத்தப்படாமல் எந்த நாகரீகமும் வளர முடியாது. மனிதர்கள் ஒருவருக்கொருவரை அன்புணர்வுடன் அணுகாதவரை எந்த நாகரீகமும் தலை நிமிர முடியாது. மிகவும் தேவையான அந்த அன்புணர்வின் முதல் படி, பிற மதக் கருத்துக்களை அன்போடும் கனிவோடும் பார்ப்பதாகும். அன்புணர்வுடன் இருந்தால் மட்டும் போதாது, , நமது மதக் கொள்கை களும் நம்பிக்கைளும் எவ்வளவுதான் வேறுபட்டதாக இருந்தாலும், அந்த மதங்களுக்கு ஊக்கத்துடன் உதவவும் வேண்டும். சற்றுமுன் நான் கூறியது போல் இந்தியாவில் அதையே இப்போது செய்து கொண்டிருக்கிறோம். இங்கே இந்தியாவில் தான் இந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளும், முகமதியர்களுக்கு மசூதியும் கட்டித் தந்தனர்; இன்றும் கட்டித் தருகின்றனர். அது தான் செய்யப்பட வேண்டிய காரியம். அவர்கள் நம் மீது காட்டுகின்ற வெறுப்பு,, கொடூரங்கள் அவர்களின் கொடுமைகள் ஆதிக்க வெறி இவற்றிற்கு இடையிலும் , நம்மைப்பற்றிப்பேசும் இழிவான பேச்சுக்களுக்கு இடையிலும், நாம் அவர்களை அன்பினால் வெற்றி கொள்ளும்வரை ,நிச்சயம் கிறிஸ்தவர்களுக்குச் சர்ச்சுகளையும் முகமதியர்களுக்கு மசூதிகளையும் கட்டிக் கொடுப்போம்; கொடுத்துக்கொண்டே இருப்போம். அன்பு மட்டுமே நிலைக்கக்கூடிய ஒன்று, வெறுப்பு அல்ல; மென்மைதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய வலிமையையும் பலனையும் தரவல்லது அன்றி, வெறும் காட்டுமிராண்டித்தனமோ உடம்பின் வலிமையோ அல்ல என்பதை உலகத்திற்கு நிரூபிக்கும் வரை நாம் இவ்வாறு செய்துகொண்டே இருக்க வேண்டும்.
நம்மிடமிருந்து இன்றைக்கு உலகம் பெற விரும்புகின்ற மற்றொரு மகத்தான கருத்து , உலகம் முழுமையின் ஆன்மீக ஒருமை ஐரோப்பாவின் சிந்தனையாளர்களுக்கு, இல்லை, இந்த உலகம் முழுவதற்கும் – உயர்ந்தோரைவிடத் தாழ்ந்த பிரிவினருக்கு,பண்பட்டோரை விடப் பாமரருக்கு, படித்தவர்களைவிடப் படிக்காதவர்களுக்கு, பலசாலிகளை விடப் பலவீனருக்கு- தேவையானது இந்தக் கருத்தே. மேலை நாட்டின் தற்கால ஆராய்ச்சிகள்,தூல உப கரணங்கள் மூலமே பிரபஞ்சத்தின் ஒருமைப்பாட்டையும், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள எல்லாமே ஒன்றையொன்று சார்ந்திருப்பதையும் நிரூபித்துள்ளது. ஜடப் பொருள் நிலையில், நீங்கள், நான், சூரியன், நட்சத்திரங்கள், எல்லாமே எல்லையில்லாத ஒரே ஜடப்பொருட்கடலில் , கடலில் சின்னஞ்சிறு அலைகளாகவோ அலைத் தொகுதிகளாகவோ இருக்கிறோம்; அது போலவே உடம்பும் மனமும் ஜடப்பொருளாகிய கடலில் சின்னஞ்சிறு அலைகளே, அதாவது பெயர் வேறுபாடே என்பதை நெடுங்காலத்திற்கு முன்பே இந்திய மன இயல் காட்டியுள்ளது. வேதாந்தம் இதற்கும் ஒரு படி மேலாகச் சென்று, இந்த ப் பிரபஞ்சத்தின் ஒருமைப் பாட்டுக் கருத்தின் பின்னணியில் மகத்தான, ஒன்றேயான உண்மை ஆன்மா இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறது. இவற்றை யெல்லாம் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளாகிய உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை . பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஓர் ஆன்மாதான் உள்ளது. இருப்பவை எல்லாம் ஒன்றே.
பிரபஞ்சம் முழுமையின் இந்த அடிப்படை ஒருமைப்பாட்டுக் கருத்து இந்த நாட்டில் கூடப் பலரைப் பயமுறுத்தி இருக்கிறது. இன்றும் சில நேரங்களில் அந்தக் கருத்தை ஆதரிப்பவர்களைவிட எதிர்ப்பவர்களே அதிகம் உள்ளனர். என்றாலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; புத்துயிர் அளிக்கின்ற இந்த ஒரு மகத்தான கருத்தைத்தான் இன்றைக்கு உலகம் நம்மிடம் வேண்டி நிற்கிறது. தங்கள் உரிமைக்காக குரல் எழுப்ப முடியாத பாமர மக்களின் விடிவிற்கு இந்தக் கருத்து தான் தேவை. அனைத்தின் இந்த ஒருமைப்பாட்டுக் கருத்தை நடைமுறையிலும் அன்றாட வாழ்க்கையிலும் செயல்படுத்தாமல் யாராலும் நமது நாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது.
எதையும் ஆராய்ச்சிக் கண்ணுடன் அணுகுகின்ற மேலைநாடு தன் தத்துவம், நீதிநெறி முதலிய அனைத்திற்கும் ஆதாரமான பகுத்தறிவை ஆர்வத்துடன் தேடுகிறது. எவ்வளவு மகத்தானவர்களாக இருந்தாலும் தெய்வீகமானவர்களாக இருந்தாலும், ஒரு தனிமனிதனின் ஒப்புதலினால் மட்டுமே நீதி நெறியை உண்டாக்க முடியாது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் . நீதிநெறிக்கு இத்தகைய ஆதாரத்தை உலகின் சிந்தனையாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீதி நெறியும் ஒழுக்க விதிகளும் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மனித ஆதாரத்தைவிடச் சற்று மேலான ஆதாரம் ஏதாவது வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். நிரந்தரமான சில உண்மைத் தத்துவம்.. இந்த நீதிநெறிக்கு ஆதாரமாக அமைய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். உங்களிலும், என்னிலும், எல்லோரின் மனத்திலும், உயிரிலும் உறைவதான அந்த எல்லையற்ற ஒரே உண்மையிலிருந்து அல்லாமல் ,அந்த நிரந்தர ஆதாரத்தை வேறு எங்கே காண முடியும்? ஆன்மாவின் எல்லையற்ற ஒருமையே எல்லா ஒழுக்க விதிகளின் ஆதாரமாகும். மனிதனின் முக்கிக்கான போராட்டத்தைப்பற்றிச் சொல்கின்ற ஒவ்வொரு நூலும் கூறி வந்துள்ளதே அது போல் நீங்களும் நானும் சகோதரர்கள் என்பது மட்டுமல்ல, உண்மையில் நீங்களும் நானும் ஒன்றே. இதுதான் இந்தியத் தத்துவத்தின் ஆணித் தரமான கருத்து. இந்த ஒருமைதான் எல்லா நீதி நெறிக்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படை. இது நமது பாமர மக்களுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவையோ, அவ்வுளவு அவசரமாக ஐரோப்பியர்களுக்கும் தேவைப்படுகிறது. இங்கிலாந்திலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் இன்று உருவாகி வருகின்ற நவீன அரசியல் மற்றும் சமுதாய மலர்ச்சிகளுக்கு, அவர்கள் அறியாமலே, இந்த மகத்தான கருத்துதான் அடிப்படையாக இருக்கிறது.
நண்பர்களே, நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். தனிமனித முக்திக்காகவும், சர்வ முக்திக்காகவும் மனிதனின் போராட்டதைப்பற்றிக் கூறுகின்ற எல்லா நூல்களிலும் இந்திய வேதாந்தக் கருத்துக்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றை எழுதியவர்களுள் சிலருக்கு த் தாங்கள் எழுதியுள்ளவற்றின் மூலகாரணம் எது என்பது தெரியவில்லை. சிலரோ அவை தங்கள் சொந்தக் கருத்துக்கள் போல் தோன்றுகின்ற அளவிற்கு எழுதியுள்ளனர். தைரியமும் நன்றியுணர்வும் கொண்ட ஒரு சிலர் மட்டுமே மூல நூலைக் குறிப்பிட்டுத் தங்கள் நன்றியைச் செலுத்தியுள்ளனர்.
நான் அளவுக்கு அதிகமாக அத்வைதத்தைப் போதிப்பதாகவும், பக்தியைப் பற்றிக் குறைவாகவே கூறுவதாகவும் குற்றம் சாட்டப்படுவதை அமெரிக்காவில் இருந்தபோது கேள்விப்பட்டேன். துவைத நெறிகளிலும் அதன் பக்திக்கொள்கைகளிலும் வழிபாட்டிலும் உள்ள பிரேம பக்தியும் பரவச நிலைகளும் அவை தருகின்ற எல்லையற்ற ஆனந்தமும் எனக்கு நன்றாகவே தெரியும். அவை எல்லாவற்றையுமே நான் அறிவேன். ஆனால் நமக்கு இது அழுவதற்கான நேரமல்ல. ஆனந்தக் கண்ணீர்கூட இப்போது கூடாது. போதுமான அளவு நாம் அழுதாயிற்று. மென்மையானவர்கள் ஆவதற்கு இது தருணம் அல்ல . மென்மை மென்மை என்று நாம் வெறும் பஞ்சுப் பொதிகளாகி விட்டோம், பிணங்களாக மாறிவிட்டோம். நமது நாட்டிற்கு இப்போது வேண்டுவது இரும்பாலான தசையும், எஃகாலான நரம்புகளும், அவற்றுடன் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளையும் ரகசியங்களையும் ஊடுருவிப் பார்க்கவும், அவசியமானால் அதற்காகக் கடலின் அடியாழம் வரை சென்று மரணத்தையும் நேருக்கு நேராகச் சந்திக்கக்கூடிய மகத்தான சக்தி வாய்ந்த, யாராலும் தடுக்க முடியாததான சங்கல்பமும் தான் நமக்கு இப்போது தேவை. நமக்குத் தேவையானது இது தான். இதனை உருவாக்கி நிலைநிறுத்தி பலப்படுத்த, எல்லாம் ஒன்றே என்பதான அந்த அத்வைத
லட்சியத்தை நன்குணர்ந்து, அதனை அனுபவத்தில் கொண்டு வருவதால்தான் முடியும்.
நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை, நம்பிக்கை ,இறைவனிடம் நம்பிக்கை இதுவே மனோன்னதத்தின் ரகசியம். உங்களுடைய புராண தெய்வங்கள் முப்பத்து முக்கோடிபேரிடமும், வெளிநாட்டினர் அவ்வப்போது உங்களிடம் திணிக்கின்ற அனைத்து தெய்வங்களிடமும் நம்பிக்கை வைத்து, அதே வேளையில் உங்களிடமே உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை. உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நம்பிக் கையை ஆதாரமாகக் கொண்டு எழுந்து நில்லுங்கள் வலிமை உடையவர்களாக இருங்கள். நமக்குத் தேவைப்படுவது இதுதான் ..
வருவோரும் போவோருமான ,விரல்விட்டு எண்ணக்கூடிய அன்னியர் சிலர் முப்பத்து மூன்று கோடி மக்களாகிய நம்மை மிதித்து அரசாளக் காரணம் என்ன? அவர்களுக்குத் தன்னம்பிக்கை இருந்து, நமக்கு இல்லை. மேலைநாட்டில் நான் என்ன கற்றுக்கொண்டேன்? மனிதன்பாவி, இழிந்தவன் என்று திருப்பித்திருப்பிச்சொல்கின்ற கிறிஸ்தவ மதப் பிரிவுகளின் வெற்று உபதேசங்களுக்குப் பின்னால் நான் கண்டது என்ன? மனிதர்கள் தங்களிடமே கொண்டுள்ள நம்பிக்கையாகிய மாபெரும் சக்தி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தேசிய நீரோட்டத்தின் மையத்தில் ததும்பி நிற்பது தான் எனக்குத் தெரிந்தது. நான் ஆங்கிலேயன் என்னால் எதையும் செய்ய முடியும் என்றே ஆங்கிலேயச் சிறுவன் ஒருவன் சொல்வான், அமெரிக்கச் சிறுவனும் இதையே சொல்வான், ஐரோப்பாவிலுள்ள எந்தச் சிறுவனும் இதையே தான் சொல்வான் . ஆனால் இங்குள்ள நம் சிறுவர்கள் இதைச் சொல்வார்களா ? மாட்டார்கள். சிறுவர்கள் ஏன் அவர்களின் தந்தையரே சொல்ல மாட்டார்கள். நாம் தன்னம்பிக்கையை இழந்து விட்டோம். எனவே தங்கள் சொந்த ஆன்மாவின் மகிமையை மக்களுக்குக் காட்டுவதற்கும் அவர்களுடைய இதயத்தில் உறைந்துள்ள ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்வதற்கும் ,வேதாந்தத்தின் அத்வைதக் கருத்தை உபதேசித்தேயாக வேண்டும், அதனால் தான் நான் அத்வைதத்தைப்போதித்தேன். வேதாந்த மதத்தைச் சார்ந்தவன் என்ற ஒரு பிரிவு மனப்பான்மையுடன் அதை நான் கூறவில்லை. அது மிகப்பரந்த அளவில் உலகம் முழுவதிலும் ஒப்புக்கொள்ளப்படுவதான ஒன்று என்பதால் தான் கூறினேன்.
துவைதியையோ விசிஷ்டாத்வைதியையோ வருத்த முறச் செய்யாமல் எளிதாக ஓர் இணைப்பு வழியைக் கண்டறிய முடியும். கடவுள் நம்முள் இருக்கிறார், எல்லாவற்றிலும் தெய்வீகம் உறைகிறது என்ற கொள்கை இல்லாத ஒரு நெறிகூட இந்தியாவில் இல்லை. தூய்மையும் பூரணத்துவமும் வலிமையும் எல்லாமே நம் ஆன்மாவில் முழுமையாக இருக்கிறது என்பதை எல்லா வேதாந்த நெறிகளும் ஏற்றுக் கொள்கின்றன. இந்தப் பூராணத்துவம் சில வேளைகளில் சுருங்குவது போலவும் சில நேரங்களில் விரிவது போலவும் ஆகிறது, ஆனாலும் அது இருக்கவே செய்கிறது என்று வேதாந்தத்தின் சில நெறிகள் கூறுகின்றன. அத்வைதத்தின்படி அது சுருங்குவதும் இல்லை விரிவதும் இல்லை; அவ்வப்போது மறைக்கப்படவும் , மீண்டும் மறைப்பு விலக்கப்படவும் செய்கிறது. ஏறக்குறைய விஷயம் ஒன்றுதான். ஒன்று மற்றொன்றை விடச் சற்று தர்க்கரீதியானதாக இருக்கலாம், ஆனால் விளைவும் நடைமுறை விளக்கங்களும் ஒன்றுபோலவே உள்ளன. இந்த ஒரு முக்கியக் கருத்தே இப்போது உலகத்திற்குத் தேவையாக உள்ளது; மற்ற இடங்களைவிட நம் நாட்டிற்குத்தான் இதன் தேவை அதிகமாக உள்ளது.
நண்பர்களே, வருத்தம் தரக்கூடிய சில உண்மைகளை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். நம் இந்தியன் ஒருவன் ஓர் ஆங்கிலேயனால் கொலை செய்யப்பட்டான் என்றோ கேவலமாக நடத்தப்பட்டான் என்றோ பத்திரிக்கையில் வருகிறது. உடனே நம் நாடு முழுதும் கூக்குரல்கள் எழுகின்றன . நானும் படிக்கிறேன், அழுகிறேன். அடுத்த வினாடியே இதற்கெல்லாம் யார் பொறுப்பு என்ற கேள்வி என் மனத்தில் எழுகிறது. ஒரு வேதாந்தி என்ற முறையில் எனக்குள்ளே இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க என்னால் முடியாது. இந்து தனக்குள் மூழ்குபவன். அவன் தனக்குள்ளும் தன் மூலமும், தன்னை அடிப்படையாகக் கொண்டுமே எதையும் பார்க்க விரும்புகிறான். எனவே என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன்- இதற்கு யார் பொறுப்பு? எனக்கு ஒவ்வொரு முறையும் கிடைக்கின்ற பதில் இதுதான்; ஆங்கிலேயர்கள் அல்ல, அவர்கள் பொறுப்பல்ல; நமது எல்லா துன்பங்களுக்கும் எல்லா இழிவுகளுக்கும் நாம், நாம் மட்டுமே பொறுப்பாளிகள்.
பிரபுத்துவ வெறி பிடித்த நமது முன்னோர்கள் இந்த நாட்டுப் பாமர மக்களைத் தங்கள் காலின் கீழிட்டு மிதித்துக் கொடுமைப்படுத்தினார்கள். பாவம் அவர்களுக்கு எந்த உதவியும் இல்லை. காலப்போக்கில் அந்த ஏழைகள் தாங்கள் மனிதர்கள் என்பதையே மறந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் பல நூற்றாண்டுகளாக அவர்கள் வெறும் விறகுவெட்டிகளாகவும் தண்ணீர் இறைப்பவர்களாகவுமே வாழ்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். விளைவு? அவர்கள் தங்களை ப் பிறவி அடிமைகள் என்றும் விறகு வெட்டவும் தண்ணீர் இறைக்கவும் மட்டுமே பிறந்தவர்கள் என்றும் நம்பவே தொடங்கி விட்டார்கள்.இன்றைய நவீனக் கல்வியைப்பற்றி இவ்வளவு பெருமையடித்துக் கொள்கிறோம். ஆனால் யாராவது அவர்களுக்குப் பரிந்து ஒரு வார்த்தை சொன்னாலும், தாழ்த்தப்பட்ட அந்த அப்பாவிகளைக் கைதூக்கி விடுவதான கடமையை விட்டுவிட்டு, நம் மக்கள் பின்வாங்குவதையே நான் காண்கிறேன். முட்டாள்தனமான சில பரம்பரைக் காரணங்கள், அவை போன்ற சில மேலை நாட்டு உளறல்கள் , இவற்றிலிருந்த சில காட்டுமிராண்டித்தனமான, , மிருகத்தனமான வாதங்கள்- இவையெல்லாம் அந்த ஏழைகளை மேலும் அடக்கி ஒடுக்குவதற்காக முன்வைக்கப்படுகின்றன.
தொடரும்....
தொடர்ச்சி....
....
அமெரிக்காவில் சர்வமத மகாசபையில் நீக்ரோ இளைஞன் ஒருவன் கலந்து கொண்டான். உண்மையான ஆப்ரிக்க நீக்ரோ அவன். அழகாகப் பேசினான். எனவே அவனிடம் பேச வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அவனிடம் அவ்வப்போது பேசினேன். ஆயினும் அவனைப் பற்றி எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை ஒரு முறை இங்கிலாந்தில் இருந்தபோது சில அமெரிக்கர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அவனைப்பற்றிக் கீழ்வரும் செய்திகளைச் சொன்னார்கள். அந்த இளைஞன் மத்திய ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஒரு நீக்ரோ இனத்தலைவனின் மகன். ஒருநாள் மற்றோர் இனத்தின் தலைவன் அந்த இளைஞனின் தந்தை மீது கோபம் கொண்டு அவனது தந்தையையும் தாயையும் கொன்று விட்டான் . கொன்றதுடன் தின்றும் விட்டான். குழந்தையையும் கொன்று சமைக்கக் கட்டளையிட்டான் அவன். ஆனால் சிறுவன் தப்பிவிட்டான். பல பயங்கரமாக இன்னல்களை அனுபவித்து, பல நூறு மைல்கள் பயணம் செய்து கடற்கரையை அடைந்தான். பின்னர் அமெரிக்கக் கப்பல் ஒன்றில் அமெரிக்கா கொண்டு வரப்பட்டான். அந்தப் பையன் தான் அவ்வளவு சிறப்பாக உரையாற்றினான். அதை கேட்ட பிறகு உங்கள் பரம்பரை வாதத்தைப்பற்றி என்னதான் எண்ண இருக்கிறது?
ஏ பிராமணர்களே, பரம்பரை காரணமாக பிராமணர்களுக்குக் கீழ் ஜாதியினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறது என்றால் ,பிராமணர்களின் படிப்பிற்காக எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள்; எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காகச் செலவிடுங்கள். உதவியற்றவர்களுக்குக் கொடுங்கள், ஏனெனில் அவர்களுக்குத்தான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது. பிராமணன் பிறவியிலேயே அறிவாளி என்றால் எந்த உதவியும் இல்லாமல் அவனே படித்துக்கொள்ள முடியும்.பிறவியிலேயே அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும் ஆசிரியர்களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்து கொண்ட நீதியும் பகுத்தறிவுமாகும்.
நமது ஏழைகளும் தாழ்த்தப்பட்ட இந்தப் பாமர ஜனங்களும்தான் உண்மையில் தாங்கள் யார் என்பதைக் கேட்கவும் அறிந்து கொள்ளவும் வேண்டியிருக்கின்றது . ஜாதி –குலம், பலம், பலவீனம் போன்ற எவ்விதப் பாகுபாடுமின்றி ஒவ்வோர் ஆணும் பெண்ணும் குழந்தையும் இதைக் கேட்கட்டும்; வலிமையானவர்- வலிமையற்றவர், உயர்ந்தவர் –தாழ்ந்தவர் என்று ஒவ்வொருவரின் உள்ளேயும் அந்த எல்லையற்ற ஆன்மா உள்ளது . மகத்தானவர்களாக ,மேலோர்களாக ஒவ்வொருவரும் மாறுவதற்கான எல்லையற்ற வாய்ப்பும் எல்லையற்ற ஆற்றலும் அந்த ஆன்மாவில் உள்ளது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும் . உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான் நிபோதத . எழுந்திருங்கள், விழித்திருங்கள், லட்சியத்தை அடையும்வரை நில்லாமல் செல்லுங்கள் என்று ஒவ்வொருவரிடமும் முழங்குவோம். விழித்திருங்கள் !பலவீனமாகிய இந்த மனவசியத்திலிருந்து விடுபட்டெழுங்கள். உண்மையில் யாரும் பலவீனர் இல்லை. ஆன்மா எல்லையற்றது, எல்லா ஆற்றலகளும் உடையது, எல்லாம் அறிந்து எழுந்து நில்லுங்கள், உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்களுள் உறைகின்ற இறைவனை வெளிப்படுத்துங்கள், அவரை மறுக்காதீர்கள்.
அளவுக்கு அதிகமான சோம்பல் ,அளவை மீறிய பலவீனம், ஆழ்ந்த மனவசியம் இவை நம் இனத்தின் மீது படிந்துள்ளது, படிந்தவண்ணம் உள்ளது. ஓ தற்கால இந்துக்களே, மனவசியத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழி உங்கள் சாஸ்திரங்களில் உள்ளது. அதைப் படியுங்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும் பெருமை வரும், நன்மை வரும் தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும். கீதையில் நான் விரும்பும் பகுதி ஏதாவது ஒன்று இருக்கிறது என்றால், அதன் சாரமாகவும் சுருக்கமாகவும் உள்ள கண்ணனின் இந்த இரண்டு சுலோகங்கள்தாம்- யார் எல்லா உயிர்களிலும் பரம்பொருள் சமமாக உறைவதைக் காண்கிறானோ, அழிகின்ற பொருட்களில் அழியாதவரான இறைவனைக் காண்கிறானோ அவனே உண்மையில் காண்கிறான். ஏனெனில் எங்கும் இறைவன் சமமாக உறைவதைக் காண்பவன் ஆன்மாவை ஆன்மாவால் அழிக்க மாட்டான். இவ்வாறு அவன் உயர் லட்சியத்தை அடைகிறான்.
இங்கும் இதர நாடுகளிலும் வேதாந்தத்தின் மூலம் பயனுள்ள காரியங்கள் செய்வதற்கு இவ்வாறு மகத் தான வாய்ப்பு உள்ளது. மனித இன வளர்ச்சிக்காகவும் மேன்மைக்காகவும் இந்த அற்புதக் கருத்தை, ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்பதான அற்புதக் கருத்தை இங்கும் பிற இடங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும். எங்கெல்லாம் தீமை இருக்கிறதோ, எங்கெல்லாம் அறியாமை நிலவுகிறதோ ,அஞ்ஞானம் உள்ளதோ அங்கெல்லாம் அவற்றிற்கு மூலகாரணமாகக் காணப்படுவது வேறுபாட்டு உணர்ச்சிகளே. சமத்துவம், பொருட்களின் அடிப்படையாகத் திகழ்கின்ற சமநிலை மற்றும் ஒருமைப்பாடு - இவற்றின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்தே எல்லா நன்மைகளும் பிறக்கின்றன. நம் சாஸ்திரங்கள் இவ்வாறே கூறுகின்றன. என அனு பவமும் இதையே சொல்கிறது இதுவே வேதாந்தத்தின் மகத்தான லட்சியம். ஒரு லட்சியத்தைக் கொள்வது என்பது ஒன்று, அதனை அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நடைமுறையில் கடைபிடிப்பது என்பது முற்றிலும் வேறான ஒன்று . ஒரு லட்சியத் தைக் காட்டுவது, மிகவும் நல்லதுதான், ஆனால் அதை அடைவதற்கு உரிய செயல்முறை எங்கே இருக்கிறது?
பல நூற்றாண்டுகளாகவே நம் மக்களின் மனத்தை ஆக்கிரமித்திருப்பவையும் வெறுப்படையச் செய்து. வருபவையுமான ஜாதி மற்றும் சமூகச் சீர்திருத்தம் பற்றிய கடினமான சில கேள்விகள் இந்த இடத்தில் இயல்பாகவே எழுகின்றன. நான் ஜாதிகளை உடைப்பவனோ, வெறும் சமூகச் சீர்திருத்தவாதியோ அல்ல என்பதை வெளிப்படையாக உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் ஜாதிகளிலோ சமூகச் சீர்த்திருத்தத்திலோ நேரடியாக எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள் ஜாதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் அதற்காக ஏன் மற்றொருவனை, மற்றொரு ஜாதியை நீங்கள் வெறுக்க வேண்டும்? நான் போதிப்பது அன்பு, அன்பு ஒன்றை மட்டுமே. பிரபஞ்சம் முழுவதன் ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்ற மகத்தான வேதாந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் நான் பிரச்சாரம் செய்கிறேன்.
ஏறக்குறைய கடந்த நூறு ஆண்டுகளாக நமது நாடு சமூகச் சீர்திருத்தவாதிகளாலும் பல வகையான சமுதாயச் சீர்திருத்தத் திட்டங்களாலும் மூழ்கடிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சீர்திருத்தவாதிகளிடம் என்னால் தவறு எதையும் காண முடியவில்லை . அவர்களுள் பெரும்பாலானோர் நல்லவர்கள், தெளிவான சிந்தனையுடையவர்கள், சில விஷயங்களில் அவர்களது நோக்கங்கள் கூடப் பாராட்டத் தக்கவையாகவே உள்ளன அதேவேளையில், இந்த நூறு ஆண்டுகளின் சமுதாயச் சீர்த்திருத்தம் உருப்படியான, பாரட்டத்தக்க, நிலையான எந்த விளைவையும் இந்த நாட்டில் எங்குமே தோற்று விக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆயிரக்கணக்கானோர் மேடையில் முழங்குகிறார்கள். அப்பாவியான இந்து இனத்தின் மீதும் அதன் நாகரீகத்தின் மீதும் மூட்டை மூட்டையாகக் கண்டனங்கள் சுமத்தப்படுகின்றன. ஆனாலும் நடைமுறையில் எந்த நல்ல பலனையும் காணோம். ஏன் ?இதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அது அவர்களின் கண்டனத்திலேயே உள்ளது. நான் முன்பு கூறியது போல், முதலில் காலங் காலமாக நாம் பெற்று வந்துள்ள நமது நாட்டின் பண்பைக் பாதுகாக்க முயல வேண்டும் . பிற நாடுகளிலிருந்து பல விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், வெளியிலிருந்து பல பாடங்களை நாம் கற்றாக வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பெரும்பாலான நமது நவீனச் சீர்த்திருத்த இயக்கங்கள் சிறிதும் சிந்திக்காமல் மேலை நாடுகளின் வேலை முறைகளைக் காப்பியடிப்பவைகளாக உள்ளன. இது இந்தியாவிற்கு ஏற்றதல்ல என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதனால்தான் நமது சமீப காலச் சீர்த்திருத்த இயக்கங்கள் எதுவும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை
இரண்டாவதாக, கண்டனம் ஒருபோதும் நன்மை செய்வதற்கான வழியல்ல. நம்முடைய சமூகத்தில் சில கேடுகள் இருக்கின்றன, இதை ஒரு குழந்தையாலும் காண முடியும். எந்தச் சமூகத்தில்தான் தீமைகள் இல்லை? என் நாட்டு மக்களே, நான் பார்த்த பல்வேறு இன மற்றும் நாட்டு மக்களோடு, நம் மக்களை ஒப்பிட்டபின் நான் கண்ட முடிவை இந்த வேளையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அது என்னவென்றால், நம் மக்களே எல்லோரையும் விட மிகவும் ஒழுக்கம் வாய்ந்தவர்கள், மிகவும் தெய்வீக மானவர்கள். நமது சமுதாய அமைப்புக்களே மனித குலத்தை மகிழ்ச்சிகரமாக்க, அமைப்பிலும் நோக்கத்திலும் மிகவும் பொருத்தமானவை. எனவே நான் எந்த சீர்திருத்தத்தையும் விரும்பவில்லை. எனது லட்சியம் வளர்ச்சி, விரிவு, தேசியப் பாதையில் முன்னேற்றம். நம் நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது, இந்த உலகம் முழுவதிலும் எந்த நாடும் இதைப்போல மனித மனத்தின் வளர்ச்சிக்காக அதிகமான காரியங்களைச் செய்யவில்லை என்பதை நாம் காண முடியும். எனவே என் நாட்டை நிந்திக்கும் எந்த வார்த்தையும் என்னிடம் இல்லை. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், நீங்கள் நன்றாகச் செய்திருக்கிறீர்கள், இன்னும் நன்றாகச் செய்ய முயலுங்கள்” என்பது தான். இந்த நாட்டில் மகத்தான காரியங்கள் கடந்த காலத்தில் செய்யப்பட்டுள்ளன. அதைவிடச் சிறப்பான காரியங்களைச் செய்வதற்கான நேரமும் வாய்ப்பும் இப்போது உள்ளது. எதுவும் செய்யாமல் நம்மால் இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும் என்பது உறுதி. எதுவும் செய்யாமலிருந்தால் செத்துப்போவோம். ஒன்று நாம் முன்னே செல்ல வேண்டும் அல்லது பின்னே செல்ல வேண்டும்; முன்னேற வேண்டும் அல்லது வீழ்ச்சி அடைய வேண்டும். கடந்த காலத்தில் நம் முன்னோர்கள் மகத்தான காரியங்களைச் செய்தார்கள். நாமும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, அவர்கள் செய்ததை விட மகத்தான காரியங்களைச் சாதிக்க வேண்டும் . இந்த நிலையில் நம்மால் எப்படிப் பின்னே சென்று நம்மையே
இழிவுபடுத்திக் கொள்ள முடியும்? அது முடியாது, அப்படிச் செய்யவும் கூடாது. பின்னால் செல்வது என்பது இந்த நாட்டை நாசத்திற்கும் மரணத்திற்குமே அழைத்துச் செல்லும். எனவே முன்னேறிச் செல்வோம் ,மகத்தான காரியங்களைச் செய்வோம். நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது இதுதான்.
அவ்வப்போதைய தேவைகளை மட்டும் நிறை வேற்றுவதான சமூகச் சீர்த்திருத்தத்தைப் போதிக்கின்ற பிரச்சாரகன் அல்ல நான். தீமைகளை நீக்குவதற்கும் நான் முயலவில்லை , ஆனால் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக நமது முன்னோர்கள் மிகவும் சிறப்பாக வகுத்துத் தந்துள்ள திட்டத்தைச் செயல்படுத்த முனைந்து முன் செல்ல வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். மனிதனின் சார்புத்தன்மை மற்றும் அவனது தெய்வீக இயல்பு போன்ற வேதாந்த லட்சியத்தை உணர்ந்துகொள்ளப் பாடுபட வேண்டும் என்று மட்டும்தான் கூறுகிறேன்.
எனக்கு நேரம் இருந்திருந்தால், நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைச் சட்டங்களை வகுத்துத் தந்த நமது முன்னோர்கள் எப்படி பல்லாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளார்கள், நமது தேசிய அமைப்புக்களில் இதுவரை நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் இனி வரப் போகின்ற மாற்றங்களையும் எப்படி அன்றே உணர்ந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் மகிழ்ச்சியுடன் எடுத்துச் சொல்லியிருப்பேன். அவர்களும் ஜாதியை ஒழிக்கவே விரும்பினார்கள். ஆனால் அவர்கள் தற்கால மனிதர்களைப் போன்றவர்கள் அல்ல. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்காக, நகர மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் திரண்டு, எல்லோரும் மதுவும் மாட்டிறைச்சியுமாக விருந்துண்டுகளிக்க வேண்டும்; முட்டாள்களும் பைத்தியங்களும், அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்துகொண்டு இந்த நாட்டை ஒரு பைத்தியக்கார விடுதியாக மாற்ற வேண்டும் என்றெல்லாம் அவர்கள் கூறவும் இல்லை. எத்தனை விதவைகளுக்குக் கணவன் கிடைத்திருக்கிறான் என்பதை வைத்தே ஒரு நாட்டின் வளத்தைக் கணக்கிட வேண்டும் என்று அவர்கள் நம்பவும் இல்லை. அவ்வாறு வளம் பெற்ற ஒரு நாட்டை நான் இனிதான் காண வேண்டும்.
நம் முன்னோர்களின் லட்சிய மனிதனாகத் திகழ்ந்தவன் பிராமணன். . நம் சாஸ்திரங்களிலும் இந்த பிராமண லட்சியம் சிறப்பாகக் காணப்படுகிறது. ஐரோப்பாவின் கார்டினல் பிரபு தன் முன்னோர்கள் மேன்மையானவர்கள் என்பதை நிரூபிக்க எவ்வளவே சிரமப்பட்டு ஆயிரமாயிரம் பணத்தைச் செலவழிக்கிறார். இறுதியில் அந்த முன்னோர்கள் ஏதோ ஒரு மலையில் வாழ்ந்து, வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் யாத்திரிகர்களைக் கொள்ளையடித்து வாழ்ந்த சில கொடுங்கோலர்கள் என்பதை அறியும்வரை அமைதி அடையமாட்டார். மேலை நாட்டின் மேன்மை மிக்க முன்னோர்களின் தொழில் இதுதான். ஆனால் கார்டினல் பிரபுவுக்கோ இவர்களிலிருந்தே தன் பரம்பரை வந்துள்ளது என்பதை அறிந்தால் தான் திருப்தி. மாறாக இந்தியாவிலோ, கோவணம் அணிந்து, காடுகளில் வாழ்ந்து, கிழங்குகளை உண்டு, வேதங்களை ஓதிய ஏதோ ஒரு ரிஷியின் சந்ததியாக இருப்பதையே பேரரசர்களும் விரும்புவார்கள். அங்கு தான் இந்திய மன்னர்கள் தங்கள் பாரம்பரியத்தைத் தேடினார்கள். உங்கள் பரம்பரை ஒரு ரிஷியிடமிருந்து தொடங்குமானால் தான் நீங்கள் உயர்ந்த ஜாதியினர், இல்லை யென்றால் உயர்ந்த ஜாதியினர் அல்ல.
எனவே உயர்குலப் பிறப்பைப் பற்றிய நமது லட்சியம் மற்றவர்களிலிருந்து வேறானது. ஆன்மீகப் பண்பாடும் துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம். பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம். பிராமணன் சட்டத்திற்குக் கட்டுபட்டவனல்ல அவனுக்கு சட்டமே இல்லை, அவன் அரசனுடைய ஆளுகைக்கு உட்பட்டவனல்ல, அவனை யாரும் துன்புறுத்தக் கூடாது என்றெல்லாம் நமது நீதி நூல்கள் கூறுவதை நீங்கள் கேட்டதில்லையா? அது முற்றிலும் உண்மை . சுயநலமிக்க முட்டாள்களின் விளக்கத்தின்படி இதனை நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது, வேதாந்தத்தின் உண்மையான ஆதாரபூர்வமான விளக்கத்தின்படி புரிந்துகொள்ள வேண்டும் .
அறிவையும் அன்பின் ஆற்றலையும் பெறுவதிலும், அதைப் பரப்புவதிலும் முனைந்து ஈடுபடுபவனாகவும், சுயநலம் என்பதே இல்லாதவனாகவும் இருப்பவனே பிராமணன் என்றால் ,,சுயநலமும் ஆன்மீகமும் நல்லொழுக்கமும் நற்பண்புகளும் மிக்க இத்தகைய ஆண்களும் பெண்களுமாகிய பிராமணர்கள் மட்டுமே ஒரு நாட்டில் வாழ்வார்கள் என்றால், அந்த நாட்டைச் சட்டங்களுக்குக் கட்டுப்படாததாகவும் , சட்டங்களைக் கடந்ததாகவும் கருதுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? அவர்களை ஆள போலீசோ ராணுவமோ எதற்கு? அவர்களை ஏன் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டும்? அவர்கள் ஏன் ஒரு அரசாங்கத்தின் கீழ் வாழ வேண்டும்? அவர்கள் நல்லவர்கள், சான்றோர்கள், மனித தெய்வங்கள். இவர்கள்தான் நமது லட்சிய பிராமணர்கள்.
சத்திய யுகத்தில் ஒரே ஒரு ஜாதிதான் இருந்ததாகவும் அந்த ஒரே ஜாதி பிராமண ஜாதியே என்றும் சாஸ்திரங்களில் நாம் படிக்கிறோம். ஆரம்பக் காலத்தில் உலகம் முழுவதிலும் பிராமணர்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் இழிவடைய ஆரம்பித்த பின்னரே பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்தனர், இந்தச் சுழற்சி ஒரு சுற்று முடியும்போது எல்லோரும் மீண்டும் பிராமணர்களாகி விடுவர் என்று மகாபாரதத்தில் படிக்கிறோம். இந்த யுகச் சுழற்சி இப்போது ஒரு சுற்றை நிறைவு செய்யும் நிலையில் உள்ளது. இந்த விஷயத்தில் நீங்கள் கவனம் கொள்ளுமாறு வேண்டுகிறேன். எனவே உயர்ந்த நிலையில் இருப்போரைக் கீழ்நிலைக்கு இழுப்பதோ, குடித்துக் கும்மாளம் அடிப்பதோ, அதிக போகத்தை நாடி எல்லை மீறிக் குதிப்பதோ ஜாதிப் பிரச்சனைக்கான நமது தீர்வு அல்ல நாம் ஒவ்வொரு வரும் ஆன்மீகத்தை நாட வேண்டும் . வேதாந்த மதத்தின் நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும், லட்சிய பிராமணர்களாக வேண்டும். ஜாதிப் பிரச்சனைக்குத் தீர்வு இவ்வாறுதான் ஏற்பட முடியும்.
நீங்கள் ஆரியர்களோ, ஆரியர் அல்லாதவர்களோ ரிஷிகளோ, பிராமணர்களோ, மிகவும் தாழ்த்தப்பட்ட ஜாதியினரோ யாராக இருந்தாலும், இந்த நாட்டில் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் முன்னோர்கள் ஒரு நியதியை வகுத்து வைத்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் நியதி, ஆணை ஒன்றுதான் - மிக உயர்நிலை மனிதனிலிருந்து மிகவும் கீழான நிலையில் இருப்பவன்வரை இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முயன்று, நில்லாமல் முன்னேறி லட்சிய பிராமணன் ஆக வேண்டும். இந்த வேதாந்தக் கருத்து நமது நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே ஏற்புடைய ஒன்றாகும். அஹிம்சையில் வேரூன்றிய, அமைதியான, உறுதியான வணங்கத்தக்க, தூய்மையான, தியான நிலையில் திளைக்கின்ற ஓர் ஆன்மீக மனிதன் என்ற உயர் லட்சியத்திற்க்கு மனித குலத்தையே நிதானமாகவும் மென்மையாகவும் உயர்த்துவதே ஜாதி பற்றிய நமது லட்சியமாகும். இந்த லட்சியத்தில் இறைவன் குடி கொள்கிறார்.
இவற்றையெல்லாம் செய்வது எப்படி? சபிப்பதாலும் கேவலப்படுத்துவதாலும் நிந்திப்பதாலும் எந்த நல்ல விளைவையும் கொண்டுவர முடியாது என்பதை நான் உங்களுக்கு அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். இந்த வழிகளில் எல்லாம் ஆண்டுக்கணக்காக முயற்சி செய்தாகிவிட்டது. குறிப்பிடத்தக்க எந்த விளைவும் கிடைக்கவில்லை. அன்பு, கனிவு இவற்றின் மூலமே நன்மை உண்டாக முடியும். இது ஒரு மகத்தான விஷயம். இது சம்பந்தமான எனது திட்டங்களையும் இது பற்றி என் மனத்தில் நாள்தோறும் தோன்றிக் கொண்டிருக்கின்ற கருத்துக்களையும் உங்களிடம் சொல்வதென்றால் அதற்குப் பல சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டியிருக்கும்.
எனவே ஓர் உண்மையை மட்டும் நினைவுபடுத்தி, எனது சொற்பொழிவை நிறைவு செய்கிறேன். இந்துக்களே, நமது நாடாகிய இந்தக் கப்பல் காலங்காலமாக நமக்கு எவ்வளவோ நன்மை செய்தபடி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்று ஒரு வேளை அதில் ஓர் ஓட்டை விழுந்திருக்கலாம், ஒரு வேளை கொஞ்சம் பழுதுபட்டிருக்கலாம். இந்த நிலையில் ஓட்டைகளை அடைத்து தண்ணீர் உள்ளே செல்வதைத் தடுப்பதுதான் நீங்கள், நான் என்று நாம் ஒவ்வெருவரும் செய்ய வேண்டிய வேலை. நம் நாட்டு மக்களுக்கு ஆபத்தை எடுத்துச் சொல்வோம்; அவர்கள் விழித்தெழட்டும், விழித்து நமக்கு உதவட்டும். மக்களுக்கு நிலைமையை எடுத்துக்கூறி அவர்களின் கடமையை உணர்த்துவதற்காக, நான் இந்த நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று, உரத்த குரலில் அவர்களை அழைக்கப் போகிறேன்! என் குரலை அவர்கள் கேட்காமல் போகலாம். என்றாலும் அவர்களைப்பற்றி ஒரு நிந்தனைச் சொல்லோ ஒரு சாபமோ என் வாயிலிருந்து வராது. கடந்த காலத்தில் நாம் அரிய காரியங்களைச் சாதித்திருக்கிறோம்.. எதிர்காலத்தில் அத்தகைய காரியங்களைச் செய்யமுடியாமல் போனால், கடந்த காலத்தில் செய்திருக்கிறோம் என்ற ஆறுதலுடன் அனைவரும் ஒன்றாக மூழ்கி, அமைதியாக இறப்போம்.
நாட்டுப்பற்று உடையவர்களாக இருங்கள். கடந்த காலத்தில் இவ்வளவு மகத்தான காரியங்களைச் செய்த இந்த இனத்தை நேசியுங்கள். என் நாட்டு மக்களே உங்களை மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிட்டு நோக்குந் தோறும் உங்களை அதிகமாக நான் நேசிக்கிறேன். நீங்கள் நல்லவர்கள், தூயவர்கள், மென்மையானவர்கள். நீங்கள் எப்போதும் அடக்குமுறைக்கே ஆளாகியிருக்கிறீர்கள், இந்த ஜடவுலக மாயையின் கொடுமை அது. அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். காலப்போக்கில் உணர்வுப் பொருளே வெற்றி பெறும். இதற்கிடையே நாம் உழைப்போம், நம் நாட்டைக் குறை கூறாதிருப்போம். காலத்தின் கடுமைகளைத் தாங்கி உழைப்பால் களைத்துத் தேய்ந்து கொண்டிருக்கின்ற நமது புனிதமிக்க நாட்டின் அமைப்புகளைச் சபிக்கவோ பழிக்கவோ வேண்டாம். மூட நம்பிக்கைகள் மலிந்த, அறிவுக்குப் பொருந்தாத அமைப்புகளைக்கூட நிந்திக்காதீர்கள். ஏனென்றால் கடந்தகாலத்தில் அவை ஏதோ நன்மை செய்திருக்கும், நம் நாட்டு அமைப்புகளைவிட உண்மையிலேயே சிறந்த நோக்கங்களையும் முடிவுகளையும் கொண்ட அமைப்புகள் உலகில் வேறு எங்குமே இல்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
ஏறக்குறைய உலகின் எல்லா நாடுகளிலுமே ஜாதிகள் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் அவற்றின் திட்டமும் நோக்கமும், நம் நாட்டைப்போல் வேறெங்கும் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஜாதி என்பது தவிர்க்க முடியாதது என்றால், பணத்தால் உருவாகின்ற ஜாதியை விட, தூய்மை, பண்பாடு, தன்னலமின்மை இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஜாதியையே நான் விரும்புகிறேன். எனவே ஒரு கண்டனச் சொல்கூட வேண்டாம். உதடுகளை மூடிக்கொள்ளுங்கள், உங்கள் உள்ளங்கள் திறக்கட்டும் உங்கள் ஒவ்வொருவரின் தோள்மீதுதான் முழுப் பொறுப்பும் இருப்பதாக எண்ணி, இந்த நாட்டின் மற்றும் உலகம் முழுவதன் நற்கதிக்காகப் பாடு படுங்கள். வேதாந்தத்தின் ஒளியையும் வழியையும் ஒவ்வொரு வாயிலுக்கும் ஏந்திச் செல்லுங்கள். ஒவ்வோர் ஆன்மாவிலும் மறைந்துள்ள தெய்வீகத்தை விழித் தெழச் செய்யுங்கள். இதன்பிறகு எந்த அளவிற்கு உங்களுக்கு வெற்றி கிடைத்தாலும், நீங்கள் ஒரு மகத்தான லட்சியத்திற்காக வாழ்ந்தீர்கள், உழைத்தீர்கள் என்ற மனநிறைவோடு இறந்து போகலாம். எப்படியானாலும் இந்த லட்சியத்தின் வெற்றியைப் பொறுத்தே இப்போதும் இனி வரும் காலத்திலும் மனித குலத்தின் கதிமோட்சம் நிர்ணயிக்கப்படும்.
--
வரவேற்பு
.............
சுவாமிஜி வந்த ரயில் பிப்ரவரி 6-ஆம் நாள் காலை 7.00 மணிக்கு, சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கே சுவாமிஜிக்கு விமரிசையான வரவேற்பு அளிக்கப் பட்டது. 24- வரவேற்புப் பத்திரங்கள் அளிக்கப் பட்டன. சுவாமிஜி சென்ற வண்டியிலிருந்து குதிரைகள் அவிழ்த்து விட்டு விட்டு இளைஞர்களே அதனை இழுத்துச்சென்றனர். மெரீனா கடற்கரையில் காஸில் கெர்ன்(, இது ஐஸ் ஹவுஸ் என்றும் அழைக்கப் பட்டது. தற்போதைய விவேகானந்தர் இல்லம்) என்ற மாளிகையில் சுவாமிஜி ஒன்பது நாட்கள் தங்கினார். சென்னையில் அவர் ஏழு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
பிப்ரவரி 7-ஆம் நாள் அவருக்கு விக்டோரியா ஹாலில் வரவேற்பு அளிக்கப் பட்டது. பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கூட்டம் உள்ளும் புறமும் நிரம்பி வழிந்தது. திறந்த வெளியில் அவர் பேச வேண்டும் என்று மக்கள் குரல் எழுப்பியவண்ணம் இருந்தனர்.
வரவேற்புரைகளை வாசித்து முடிவதற்குள், ஹாலுக்கு வெளியே இருந்தோர், திறந்த வெளியில் சுவாமிஜி பேச வேண்டும். என்று கோஷமிடத் தொடங்கினர். அதற்கு மேலும் பொறுக்க முடியாத சுவாமிஜி விருட்டென்று எழுந்து, நான் மக்களுக்காக வந்தவன். வெளியில் இருப்போரையும் நான் சந்தித்தாக வேண்டும். என்று கூறிவிட்டு வெளியே வந்தார். அவருக்காகக் காத்திருந்த ”கோச்” வண்டியின் மீது ஏறி நின்றார். அங்கே பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. சுவாமிஜியால் சிறிய உரை மட்டுமே நிகழ்த்த முடிந்தது. இன்னொரு நாள் நீண்ட சொற்பொழிவு நிகழ்த்தலாம் என்று தெரிவித்தார் அவர். சுவாமிஜியின் உரை வருமாறு.
1.வரவேற்புக்குப் பதிலுரை;
நாம் ஒன்று நினைக்கிறோம். தெய்வம் மற்றொன்று நினைக்கிறது. இந்த வரவேற்பும் சொற்பொழிவும் ஆங்கில முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடவுளோ அதனை வேறு வகையில் நடத்தத் திருவுள்ளம் கொண்டுள்ளார்- சிதறிக் கிடக்கின்ற இந்த மக்கள் கூட்டத்தில் இதோ இந்த ரதத்திலிருந்து கீதை பாணியில் பேசுகிறேன். இப்படித்தான் நடந்திருக்க வேண்டும், எனவே அதற்கு நமது நன்றி. இது சொற்பொழிவிற்கு ஓர் உத்வேகத்தை கொடுக்கும். நான் உங்களுக்குச் சொல்லப் போகின்றவை எல்லாம் வலிமையுடன் வெளிவரும். என் குரல் அனைவருக்கும் கேட்குமா என்பது சந்தேகமே. எனினும் இயன்ற அளவு முயற்சி செய்கிறேன். திறந்த வெளியில் இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் இதுவரை பேசியதில்லை.
கொழும்பிலிருந்து சென்னைவரை என்னிடம் மக்கள் காட்டி வருகின்ற அற்புதமான கனிவும், ஊக்கமும் உற்சாகமும் உறுதியும் நிறைந்த வரவேற்பும். எனது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் கடந்ததாக உள்ளது. இந்தியா முழுவதும் இப்படி இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. இது எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது. ஏனெனில் இது, கடந்த நாட்களில் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்ததை மெய்ப்பிப்பதாகவே உள்ளது- ஒவ்வொரு நாட்டிற்கும், அதற்கே உரிய பாதை ஒன்று உண்டு; அது போலவே ஒவ்வொரு நாட்டிற்கும் உயிர்நாடியான லட்சியமும் ஒன்று உள்ளது; இந்திய மனத்தின் வளர்ச்சி மதத்தைப் பொறுத்தே அமைகிறது.
பிற நாடுகளில் மதம் என்பது வாழ்க்கையின் எத்தனையோ அம்சங்களுள் ஒன்று; உண்மையைச் சொல்வதானால், அது மிகச் சாதாரண அம்சமே. எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியே மதம். ஆங்கில சர்ச் , ஆளும் வர்க்கத்தினரின் உடைமை. எனவே மக்கள் தாங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் தங்களுடைய சர்ச் என்று கருதி அதை ஆதரிக்கிறார்கள். கனவான்களும் சீமாட்டிகளும் சர்சைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். பெரிய மனிதத்தனத்திற்கு அது அடையாளம். இவ்வாறுதான் இதர நாடுகளிலும் அரசியல், அறிவுத் தேடல்கள், போர்க்கலை, வாணிபம் என்று ஏதாவது ஒன்று மகத்தான தேசிய ஆற்றலாகத் திகழ்கிறது. அதுவே அந்த நாட்டின் இதயமாகத் துடிக்கிறது. இரண்டாம்பட்ச மான எத்தனையோ அலங்காரங்களுள் மதம் என்பதும் ஒன்று, அவ்வளவுதான்.
இங்கே இந்தியாவிலோ நாட்டின் இதயமே மதத்தால்தான் உருவாகியுள்ளது. இதுவே முதுகெலும்பு,இதுவே அடிப்படை, இந்த அஸ்திவாரத்தின் மீதுதான் நமது தேசிய வாழ்வாகிய கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. அரசியல், அதிகாரம், ஏன், அறிவுகூட இரண்டாம் பட்சமே ; மதம் ஒன்றே முக்கியமானதாக இங்குக் கருதப்படுகிறது. நமது நாட்டுப் பாமர மக்கள் எதுவும் தெரியாதவர்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் ஒருமுறையல்ல, நூறுமுறை கேட்டிருக்கிறேன். அது உண்மைதான். கொழும்புவில் வந்து இறங்கியது முதல் அதையே நான் காண்கிறேன் . ஐரோப்பாவில் நடை பெறுகின்ற அரசியல் கிளர்ச்சிகள் பற்றியோ, மாற்றங்கள் பற்றியோ அல்லது மந்திரிசபைகளின் வீழ்ச்சி பற்றியோ அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை ; சோஷலிசம் , அனார்க்கிசம் என் பவைப்பற்றியோ ஐரோப்பாவின் பிற அரசியல் மாற்றங்கள் பற்றியோ அவர்களுள் ஒருவர்கூட கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் சர்வசமயப் பேரவைக்கு இந்திய சன்னியாசி ஒருவர் அனுப்பப்பட்டது பற்றியும், அவர் அங்கு ஏதோ ஒரு வகையில் வெற்றி பெற்றார் என்பது பற்றியும் இலங்கையில் உள்ள ஆண், பெண், சிறுவர் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது அப்படியானால் மக்கள் எதுவும் தெரியாதவர்களா, இல்லை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்களா? இரண்டும் இல்லை. அவர்களின் பண்புடன் எது ஒத்துப் போகுமோ, எது அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுள் ஒன்றாக இருக்குமோ அதைப்பற்றி அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அரசியலும் பிறவும் வாழ்க்கைத் தேவைகளாக இந்தியாவில் ஒரு போதும் இருந்ததில்லை. இந்திய வாழ்க்கை வாழ்ந்ததும் வளம் பெற்றதும் மதம், ஆன்மீகம் என்ற அடிப்படைமீது மட்டுமே; இனியும் அவ்வாறே அது வாழும், வளம் பெறும்
உலக நாடுகளின் முன் இரண்டு பிராச்சினைகள் உள்ளன. இவற்றிற்குத் தீர்வு காண இந்தியா ஒருபுறமும், பிற நாடுகள் மறுபுறமுமாக நின்று முயற்சியில் ஈடுபடுகின்றன. பிரச்சினை இதுதான் -யார் வாழ வேண்டும்? ஒரு நாட்டை வாழவைப்பதும் பிற நாடுகளை அழிய வைப்பதும் எது? வாழ்க்கைப் போரில் வெற்றி பெற வேண்டுவது எது- அன்பா, பகையா? போகமா, துறவா ? ஜடமா உணர்வா? வரலாறு காணாத அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் என்ன எண்ணினார்களோ அவ்வாறே நாமும் சிந்திக்கிறோம். எந்தப் பரம்பரையும் தலைநீட்ட முடியாத அந்தத் தொலைநாளில், மேன்மை மிக்கவர்களாகிய நமது முன்னோர்கள் இந்தப் பிரச்சினையில் தங்கள் பக்கத்தை எடுத்துக்கொண்டு, உலகிற்கே சவால் விட்டுள்ளனர் நமது தீர்வு துறவு, விட்டுவிடுதல், அச்சமின்மை, அன்பு. இவையே வாழத் தக்கவை. புலனின்பங்களை விடுவது ஒரு நாட்டை வாழச் செய்யும். இதற்கு வரலாறே சான்று .ஏறக்குறைய ஒவ்வொரு நூற்றாண்டிலும் காளான்கள் போல் எத்தனையோ நாடுகள் தோன்றிமறைகின்றன. சூன்யத்திலிருந்து அவை எழுகின்றன ஏதோ சில காலம் ஆர்ப்பரிக்கின்றன, பின்னர் மறைந்தும் விடுகின்றன. ஆனால் நமது மாபெரும் நாடோ இதுவரை எந்த நாட்டிற்கும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டிராத அளவிற்கு பெரும் சோதனைகள், ஆபத்துக்கள் ,சூழ்நிலை மாற்றங்கள் என்று எத்தனையோ துரதிர்ஷ்டங்களைத் தாங்கியுள்ளது; இருந்தும் பிழைத்திருக்கிறது. ஏன்? ஏனெனில் அது துறவு என்ற பக்கத்தை எடுத்துள்ளது. துறவு இல்லாவிட்டால் மதம் ஏது ? ஆனால் ஐரோப்பியநாடுகளோ பிரச்சினைக்கு மறுபக்கத் தீர்வை எடுத்துள்ளன - நல்ல வழியோ, தீய வழியோ ஒருவன் எவ்வளவு அதிகம் பொருள் சேர்க்கலாம், எவ்வளவு அதிகமாக அதிகாரம் இருக்க வேண்டும் போட்டி -இதுவே ஐரோப்பியச் சட்டம். ஆனால் நமது சட்டமோ ஜாதியாகும். போட்டியை முறியடிப்பதாகும்., போட்டியின் ஆற்றல்களைத் தடுப்பதாகும், அதன் கொடுமைகளைக் குறைப்பதாகும், புதிரான இந்த வாழ்க்கைப் பாதையில் மனிதனின் பயணத்தை மென்மையாக்குவதாகும்.
இந்த வேளையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போயிற்று. சொற்பொழிவு காதில் விழவில்லை. எனவே பின்வருமாறு கூறி முடிந்தார் சுவாமிஜி.
நண்பர்களே! உங்கள் உற்சாகம் கண்டு மகிழ்கிறேன். மிகவும் மகிழ்ச்சி. எனக்கு உங்கள் மீது வருத்தம் என்று எண்ணி விடாதீர்கள். மாறாக , உங்கள் ஆர்வம் எனக்கு எல்லையற்ற திருப்தியையே அளிக்கிறது. அளவு கடந்த உற்சாகமே நமக்குத் தேவை.ஆனால் இது நிலையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். தீ அணையாமல் இருக்கட்டும். இந்தியாவில் நாம் மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு உங்கள் உதவி தேவை. இத்தகைய உற்சாகம் வேண்டும். இனியும் இந்தச் சொற்பொழிவைத் தொடர முடியாது.. ஆர்வ மிக்க உங்கள் கனிவான வரவேற்புக்கு நன்றி. அமைதியான வேளையில் இன்னும் சிறப்பான கருத்துக்களையும் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்வோம். நண்பர்களே, இப்போதைக்கு விடைபெற்றுக் கொள்கிறேன்.
நீங்கள் எல்லோரும் கேட்கக்கூடிய வகையில் பேச முடியாது. எனவே இன்றைக்கு என்னைப் பார்த்தவரையில் திருப்தியடையுங்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் சொற்பொழிவு நிகழ்த்துவேன். உற்சாகம் மிக்க உங்கள் வரவேற்புக்கு நன்றி.
நம் முன் உள்ள பணி:
9 பிப்ரவரி 1897 அன்று காலை திருவல்லிக்கேணி இலக்கிய சங்கத்தில் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு.
காலம் போகப்போக வாழ்க்கை என்னும் பிரச்சினை ஒவ்வொரு நாளும் ஆழமானதாகவும் அகன்றதாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அதன் உண்மையும் சாரமும் எது என்பது வேதாந்த உண்மை முதலில் கண்டுபிடிக்கப் பட்ட அந்த நாளிலேயே போதிக்கப்பட்டது - அது ஒருமை, வாழ்க்கையின் ஒருமை. பிரபஞ்சத்திலுள்ள ஓர் அணுக்கூடத் தனியே இயங்க முடியாது, அது தன்னுடன் இந்த உலகம் முழுவதையும் இழுத்துக்கொண்டு தான் இயங்க வேண்டும். உலகம் முழுவதும் தொடர்ந்து வராமல் எந்த முன்னேற்றமும் ஏற்பட முடியாது. நாடு, இனம் போன்ற குறுகிய கண்ணோட்டத்தில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பது ஒவ்வொரு நாளும் தெளிவாகிக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு கருத்தும் விரிந்துவிரிந்து உலகம் முழுவதையும் தன்னுள் கொள்ளத்தக்க அளவு விரிய வேண்டும். ஒவ்வொரு லட்சியமும் விரிந்து மனித குலம், இல்லை இல்லை, உயிர்க்குலம் முழுவதையும் உள்ளடக்கும் படி விரிய வேண்டும். அப்படி இல்லாததால் தான் நம் நாடு கடந்த சில நூற்றாண்டுகளாகத் தன் பண்டைய பெருமையை இழந்துவிட்டிருக்கிறது. இந்த இழிநிலைக்கான காரணங்களுள் ஒன்று நமது குறுகிய கண்ணோட்டமாகும்; நமது செயல்களின் எல்லை குறுகிவிட்டதாகும்.
ஒரே இனத்திலிருந்து இரண்டு விசித்திரமான நாடுகள் எழுந்தன. அவை நிலைபெற்றது வெவ்வேறான சூழ்நிலையிலும் இயற்கை அமைப்பிலும் ஆகும். வாழ்க்கை ப் பிரச்சினைகளையும் அவை தங்களுக்கே உரிய தனி வழிகளிலேயே தீர்க்க முனைந்தன. புராதனமான இந்து மற்றும் கிரேக்க இனங்களையே நான் குறிப்பிடுகிறேன். வடதிசையில் பனி படர்ந்த இமயமலை, சம நிலத்தில் பொங்கும் கடல்போல் சுற்றிலும் பாய்ந்த நன்னீர் ஆறுகள், உலகின் எல்லை வந்துவிட்டதோவென நீண்டு பரந்து கிடந்த அடர்ந்த காடுகள்- இவையெல்லாம் நாற்புறமும் கட்டுப்படுத்தியபோது இந்திய ஆரியனின் பார்வை அகமுகமாகியது. இதனுடன் அவனது இயல்பான உள்ளுணர்ச்சி, கூர்த்த நுண்ணறிவு, அவனைச் சுற்றிச் சூழ்ந்து கிடந்த இயற்கையழகு- இவையெல்லாம் சேர்ந்து அவனைத் தனக்குள்ளேயே மூழ்குகின்ற சிந்தனையாளனாக மாற்றின. சொந்த மனத்தை ஆராய்வது இந்தோ- ஆரியனின் மகத்தான நோக்கமாக இருந்தது. மாறாக, கிரேக்கர்கள் இயற்கை எழில் கொஞ்சித் தவழும் கிரேக்கத் தீவுகளில் குடியேறினார்கள். சூழ்ந்து கிடந்த இயற்கை, அவர்கள் மனத்தில் நுண்ணுணர்வுகளைவிட அழகுணர்ச்சியையே தட்டியெழுப்பியது; அது எல்லையற்றுப் பரந்து கிடந்தாலும் எளிமை நிரம்பியதாக இருந்தது. எனவே அவர்கள் மனம் புறத்தை நாடியது, புறவுலகை ஆராய விழைந்தது.
இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக இந்தியாவிலிருந்து, பகுத்தறிவும், விஞ்ஞானங்களும், கிரீஸிலிருந்து பொதுமைப்படுத்தும் விஞ்ஞானங்களும் தோன்றின. இந்துவின் மனம் தன் சொந்த வழியிலேயே சென்று அற்புதமான பலன்களைக் கண்டது. இன்றும்கூட இந்துவின் வாதத் திறமையும் அவனது மூளையின் மாபெரும் ஆற்றலும் ஈடிணையற்றதாகவே உள்ளன. போட்டி என்று வருமானால் நம் இளைஞர்கள் உலகிலுள்ள எந்த இளைஞர்களையும் வெல்வார்கள் என்பது நமக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் இந்தத் தேசிய வலிமை இன்று ஒடுங்கிவிட்டது. ஒரு வேளை முகமதியர் இந்தியாவை வெல்வதற்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த வீழ்ச்சி நேர்ந்திருக்கலாம். அப்போது நமது இந்தத் தேசியப் பண்பைக் குறித்து அவ்வளவு ஆரவாரம் செய்யப்பட்டது, அதுவே அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.
அந்த வீழ்ச்சியின் அடையாளங்களை, இந்தியாவின் கலை, இசை, விஞ்ஞானம் என்று ஒவ்வொன்றிலும் நாம் இன்றும் காண முடிகிறது. இன்றைய கலையில் பரந்த நோக்கு இல்லை, ஒழுங்கு இல்லை, நுண்ணுர்வுகளின் வெளிப்பாடு இல்லை, வெறும் பகட்டும் ஆடம்பரமும் மேலோங்கிய ஒரு நிலைமை தற்போது உள்ளது. இந்த இனத்தின் தனித்தன்மை அழிந்துபோய் விட்டதைப் போல் தோன்றுகிறது. இசையிலும் அதுபோலவே. புராதன இசைமரபில் இருந்தது போன்ற, ஆன்மாவைக் கிளர்ந்தெழச் செய்கின்ற கருத்துக்கள் இல்லை, தன் சொந்த அமைப்பில் நின்று அற்புதமான இசைவு எழுப்பக்கூடிய ராகங்கள் இல்லை. ஒவ்வொரு ராகமும் தன் தனித்தன்மையை இழந்துவிட்டது. தற்கால இசை, ராகங்களின் வெறும் கலப்படமாகவும் குழப்பக் கலவையாகவுமே உள்ளது. இசையின் தரம் தாழ்ந்து விட்டதையே இது காட்டுகிறது. உங்கள் லட்சியக் கருத்துக்களை ஆராய்ந்தால் அங்கும் இதே நிலைமைதான் - தனித்தன்மையை இழந்து, வெறும் வார்த்தை ஜாலங்களாக மாறிவிட்ட நிலைமை. உங்கள் சிறப்புத் துறையான மதத்திலோ மிகவும் பயங்கரமான வீழ்ச்சியே தென்படுகிறது. தண்ணீரை வலது கையால் குடிப்பதா, இடது கையால் குடிப்பதா என்பன போன்ற அதிமுக்கியமான பிரச்சினைகளை விவாதிப்பதில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சுறு சுறுப்பாக ஈடுபட்டிருந்த ஓர் இனத்திடமிருந்து வேறு நாம் எதைத்தான் எதிர்பார்க்க முடியும்? நாட்டின் மிகச் சிறந்த மேதைகள், நூற்றாண்டுகளாகச் சமையலறையைப் பற்றியும், நான் உங்களைத் தொடலாமா, நீங்கள் என்னைத் தொடலாமா, அப்படித் தொட்டுவிட்டால் என்ன பிராயச்சித்தம் என்பது பற்றியும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அந்த இனத்திற்கு அதைவிடப் பெரிய சீரழிவு வேறென்ன வேண்டும். வேதாந்தக் கருத்துக்களும், இதுவரை பூமியில் போதிக்கப்பட்டவற்றுள் நிகரற்றவையான இறைவன், ஆன்மா பற்றிய அதிநுண்மையான மகத்தான கோட்பாடுகள் ஏறக்குறைய தொலைந்துவிட்டது போல்தான். ஏதோ காடுகளில் முடங்கி, ஒரு சில துறவியரால் அவை காக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் மீதிப் பகுதியினர், ஒருவரை ஒருவர் தொடுவது, உடை, உணவு போன்ற அதிமுக்கியமான விஷயங்களை விவாதிப்பதில் காலத்தைக் கழிக்கின்றனர்.
மிகக் கீழானவனும் மிக உயர்ந்தவனுக்குச் சிலவற்றைக் கற்பிக்க முடியும். முகமதியர்களின் ஆக்கிரமிப்பு சந்தேகமின்றி, நமக்குப் பல நல்லவற்றைத் தந்துள்ளது, ஆனால் நம் இனத்திற்கு அதனால் உத்வேகத்தைத் தர முடியவில்லை. நல்லதற்கோ கெட்டதற்கோ அதன்பிறகு ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்தனர். ஆக்கிரமிப்பு என்பதே கெட்டதுதான். ஏனெனில் ஆக்கிரமிப்பு ஒரு தீமை, அன்னிய அரசாங்கம் ஒரு தீமை. இதில் சந்தேகமே இல்லை. ஆனால் சிலவேளைகளில் தீமைமூலமும் நன்மை வரவேசெய்கிறது. ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பினால் விளைந்த நன்மை இதுதான்; இங்கிலாந்து, இல்லை இல்லை, ஐரோப்பா முழுவதுமே இப்பொழுது பெற்றிருக்கின்ற நாகரீகத்திற்காக கிரீஸிற்கு நன்றி சொல்ல வேண்டும். ஐரோப்பாவிலுள்ள ஒவ்வொன்றின் மூலமும் கிரீஸ்தான் பேசுகிறது. ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு பொருளும் கீரீஸின் முத்திரையையே கொண்டுள்ளது. ஐரோப்பியர்களின் விஞ்ஞானமும் கலையும் கிரேக்கர்களுடையதே. இன்று புராதன கிரேக்கன் புராதன இந்துவை இந்திய மண்ணில் சந்திக்கிறான். இவ்வாறு நிதானமாக அமைதியாக உத்வேகம் மிக்கச் சூழ்நிலை வந்து சேர்ந்துள்ளது. இந்தச் சக்திகள் ஒன்றுசேர்ந்துதான், நாம் நம்மைச் சுற்றிக் காண்கின்ற விசாலமானவையும், உயிர்த் துடிப்பைத் தருபவையுமான மறுமலர்ச்சி இயக்கங்கள் அனைத்தையும் உருவாக்கியுள்ளன. வாழ்வு பற்றிய மேலும் தாராளமான விரிந்த கருத்து நம் முன் உள்ளது. முதலில்நாம் சற்று குழம்பி, எல்லாவற்றையும் குறுக்கிக் கொள்ள முயன்றோம். ஆனால் இன்று நம்மைச் சுற்றி இயங்கி வருகின்ற மறுமலர்ச்சி இயக்கங்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய பரந்த கோட்பாடுகள் எல்லாமே நமது பழைய நூல்களில் உள்ள கருத்துக்களைத் தர்க்க ரீதியில் வெளிப்படுத்தும் முயற்சியே என்பதை அறிந்து விட்டோம். நம் சொந்த முன்னோர்கள் கொண்டிருந்த அடிப்படைக் கருத்துக்களைக் கட்டுக்கோப்பான தர்க்க ரீதியில் வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளே அவை. பரந்த மனப்பான்மை பெறுவது, பிற நாடுகளுக்குச் செல்வது, மற்றவர்களோடு கலப்பது, நம் கருத்துக்களை உலகம் தழுவியதாக அமைப்பது இவையே நம் லட்சியத்தின் எல்லை. ஆனால் எப்போதுமே நாம் நமது சாஸ்திரங்களின் திட்டங்களுக்கு மாறாக, நம்மை மேலும் மேலும் சிறு சிறு கூட்டமாக ஆக்கிக் கொள்வதற்கே முயன்று கொண்டிருக்கிறோம்; மற்றவர்களோடு பழகுவதிலிருந்து விலகி வருகிறோம்.
இதனால் பல அபாயங்கள் நேர்ந்துள்ளன. நாம் தான் உலகத்திலேயே சிறந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே, அது அவற்றுள் மிக மோசமான ஒன்று. நான் இந்தியாவை நேசிக்கிறேன், தேசப் பற்றுடையவன் நான், முன்னோர்களிடம் மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனாலும் நாம் பிற நாடுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை எவ்வளவோ உள்ளன என்று நினைப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. பிறருடைய காலடியில் அமர நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் நமக்கு மகத்தான பாடங்களைப் போதிக்க முடியும். இதை மறக்கக் கூடாது.
நமது சமுதாயச் சட்டங்களை அமைத்தவராகிய மனு, இழிந்த குலத்தில் பிறந்தவரிடமிருந்தாயினும் சிறிது நல்லறிவு பெற்றுக் கொள்ளுங்கள். மிகத் தாழ்ந்த பிறவியாளருக்கும் சேவை செய்து சொர்க்கம் செல்லும் பாதையை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறார். எனவே மனுவின் உண்மையான பிள்ளைகளான நாம் அவரது கட்டளைக்குப் பணிந்து, இந்த வாழ்வு மற்றும் மறு வாழ்வு பற்றிய பாடங்களை நமக்கு போதிக்க கூடிய யாரிடமிருந்தேனும் கற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உலகத்திற்கு மகத்தானதொரு பாடத்தை நாம் போதிக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. இந்தியாவிற்கு வெளியே உள்ள உலகின் தொடர்பு இல்லாமல் நாம் வாழ முடியாது; வாழ முடியும் என்று நினைப்பது முட்டாள்தனம். அதற்கான தண்டனையாகத்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த அடிமை வாழ்வை அனுபவிக்கிறோம்.
நாம் எதையும் பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக வெளியே செல்லவில்லை, நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளைக் கவனிக்கவில்லை.- இந்திய மனத்தின் வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கியக் காரணம். அதற்கான தண்டனையை நாம் பெற்றுவிட்டோம், இனியும் அவ்வாறு இருக்க வேண்டாம். இந்தியர்கள் வெளியே போகக் கூடாது என்பது போன்ற முட்டாள்தனமான கருத்துக்கள் சிறுபிள்ளைத் தனமானவை. அத்தகைய கருத்துக்களின் தலையில் ஓங்கி அடிக்க வேண்டும். நீங்கள் பிற நாடுகளில் எந்த அளவிற்குப் பயணம் செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்கு நல்லது, உங்கள் நாட்டிற்கும் நல்லது. இதை நீங்கள் கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால், இன்று நீங்கள் உங்களை ஆள விரும்பும் ஒவ்வொரு நாடுகளுக்கும் அடிமையாக அவைகளின் கால்களில் வீழ்ந்து கிடக்கமாட்டீர்கள். வாழ்வின் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற முதல் அடையாளம் - விரிவடைதல். நீங்கள் வாழ வேண்டுமானால் கட்டாயம் விரிவடைய வேண்டும். நீங்கள் விரிவடையாமல் நிற்கின்ற அந்தக் கணமே மரணம் உங்கள் தலைக்கு வந்துவிட்டது; ஆபத்து அருகில் வந்துவிட்டது.
நான் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் சென்றேன். அதற்காக நீங்கள் என்னைக் கனிவுடன் பாராட்டினீர்கள்.நான் போகத்தான் வேண்டும் ஏனெனில் அதுதான் நம் தேசிய வாழ்வினுடைய விரிவின், மறு மலர்ச்சியின் முதல் அடையாளம், தன்னுள் விரிந்து மலர்ந்த இந்தத் தேசிய வாழ்க்கை, இங்கிருந்து என்னை வெளிநாடுகளுக்குத் தூக்கி எறிந்தது.ஆயிரக்கணக்கானோர் இவ்வாறே தூக்கி எறியப்படுவர். என் வார்த்தையைக் குறித்துக் கொள்ளுங்கள் - இந்த நாடு வாழ்ந்தாக வேண்டுமென்றால் இது நடந்தாக வேண்டும். தேசிய வாழ்வின் மகத்தான மறுமலர்ச்சியின் அடையாளமான விரிவின் மூலமாக, அதாவது நம் மனம் இவ்வாறு விரிவடைந்து, நாம் மேலைநாடுகளுக்குச் செல்வதன் மூலமாக, மனித சமுதாயத்தின் பொதுவான வளர்ச்சிக்கு நமது பங்கை அளிக்க முடியும், உலகின் பொதுவான வளர்ச்சிக்கு நமது கொடையை வழங்க முடியும்.
வாழ வேண்டுமானால் ஒவ்வொரு நாடும் நிச்சயம் எதையாவது கொடுத்தேயாக வேண்டும். உயிர் கொடுத்தால் உயிர்பெறலாம். நீங்கள் ஒன்றைப் பெற்றால் மற்றவர்க்கு வழங்குவதன் மூலம் அதற்கான விலையை அளிக்க வேண்டும். நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம் என்பது நிதரிசனமான உண்மை. அது எப்படி? அறிவிலிகள் எதையாவது நினைத்து விட்டுப் போகட்டும், நாம் வாழ்ந்து வருவதற்கான காரணம் நாம் வெளியுலகிற்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். மதம், தத்துவம் , ஞானம், ஆன்மீகம் இவையே உலகிற்கு இந்தியா வழங்கும் கொடை. மதம் பிற நாடுகளுக்குச் செல்வதற்கான வழியை ஏற்படுத்தப் படைகளின் அணிவரிசைகள் தேவையில்லை. ரத்த வெள்ளங்கள் மூலம் ஞானமும் தத்துவமும் எடுத்துச் செல்லப்பட வேண்டியதில்லை ரத்தம் பீறிடக் கிடக்கின்ற மனித உடம்புகளின் மீது அணிவகுத்து ஞானமும் தத்துவமும் செல்வதில்லை. வன்முறையின் துணையோடு அவை செல்வதில்லை அமைதி, அன்பு ஆகிய இறகுகளை விரித்தே அவை செல்கின்றன. எப்போதும் இப்படித்தான் நடந்து வந்துள்ளது. மேலும் இது புதிதான ஒரு விஷயமும் அல்ல. இந்துக்கள் எப்போதும் தங்கள் நாடாகிய நான்கு சுவர்களுக்குள்ளேயே இருந்தார்கள் என்று உங்களுள் யாராவது நினைத்தால் அது முற்றிலும் தவறானதாகும். நீங்கள் பழைய நூல்களைப் படிக்கவில்லை, இந்த நாட்டு மக்களின் வரலாற்றைச் சரியாகப் படிக்கவில்லை.
எனவே நாம் கொடுத்தாக வேண்டியிருந்தது. நான் லண்டனில் இருந்தபோது ஓர் ஆங்கிலேய இளம்பெண் என்னிடம், இந்துக்களாகிய நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? ஒரு நாட்டைக்கூட நீங்கள் இதுவரை வெல்ல வில்லையே? என்று கேட்டாள். வீரமும் தீரமும் உடைய க்ஷத்திரியர்களான ஆங்கிலேயர்களுக்கு இந்தக் கேள்வி சரிதான். ஒருவனை மற்றவன் வெல்வதுதான் அவர்களைப் பொறுத்தவரை பெருமைக்கு உரியது. இது அவர்களின் கண்ணோட்டத்தில் சரியானது. ஆனால் நம் கண்ணோட்டம் இதற்கு மாறானது. இந்தியாவின் பெருமைக்கான காரணம் என்னவென்று என்னையே நான் கேட்டுக்கொண்டால், நாம் எப்போதும் யாரையும் வெல்லாததே , என்றுதான் பதில் சொல்வேன். அதுதான் நமது பெருமை. சிலவேளைகளில் அரைகுறை ஆசான்கள் சிலர், நமது மதத்தைப்பற்றி, அது பிறரை வெல்கின்ற மதமாக இல்லை என்று குறை கூறுவதை நீங்கள் தினமும் கேட்கிறீர்கள். அவர்கள் கூறுகின்ற குறைதான் என்னைப் பொறுத்தவரையில் நமது நிறை. நமது மதம் பிற மதங்களைவிட உண்மையாக இருப்பதற்கான காரணம், அது எப்போதும் யாரையும் வெற்றி கொள்ளவில்லை.அது ஒருபோதும் ரத்தம் சிந்தவில்லை; அதன் உதடுகளிலிருந்து வாழ்த்துச் சொற்களே, அமைதியும் அன்பும் கனிவும் நிறைந்த வார்த்தைகளே எப்போதும் வந்தன. இங்கு, இங்கு மட்டும் தான் சகிப்புத் தன்மைபற்றிய லட்சியங்கள் முதலில் பிரச்சாரம் செய்யப்பட்டன. இங்கு மட்டும்தான் சகிப்புத் தன்மை, அனுதாபம் முதலியவை செயல்படுத்தப்பட்டன. மற்ற எல்லா நாடுகளிலும் இவை வெறும் கொள்கை அளவில்தான் இருக்கின்றன. இங்கு, இங்கு மட்டுமே இந்துக்கள் முகமதியர்களுக்கு மசூதிகளையும், கிறிஸ்தவர்களுக்குச் சர்ச்சுகளையும் கட்டுகிறார்கள்.
எனவே நம்முடைய செய்தி பலமுறை வெளியுலகிற்குச் சென்றிருக்கிறது. ஆனால் நிதானமாக அமைதியாக பிறர் தெரிந்து கொள்ளாதவகையில் சென்றிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொன்றும் இவ்வாறே நடைபெறுகிறது. இந்திய சிந்தனையின் ஒரு பண்பு அதன் மௌனம், அதன் அமைதி. அதே வேளையில் வன்முறையின் மூலம் ஒருபோதும் வெளிப்படுத்த முடியாத மாபெரும் ஆற்றல் அதன் பின்னால் இருக்கிறது. அமைதியாகப் பிறர் மனத்தை வசீகரிப்பதே எப்போதும் இந்தியச் சிந்தனையின் தன்மை.
வெளிநாட்டினர் நம் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினால், முதலில் அவர்களுக்கு அது சலிப்பை அளிப்பதாக உள்ளது. பிற நாட்டு இலக்கியங்களைப் போல், உடனடியாக மனத்தை எழுச்சி பெறவோ கிளர்ச்சி பெறவோ செய்யும் தன்மை அவற்றில் இல்லை. ஐரோப்பாவின் சோக காவியங்களை நமது சோக காவியங்களுடன் ஒப்பிடுங்கள். முன்னது முழுக்கமுழுக்கச் செயல் வேகம் நிறைந்தது, படிக்கும்போது உங்கள் கிளர்ச்சியைத் தூண்டுகிறது. ஆனால் படித்து முடித்த மறுகணமே எல்லாம் போய்விடுகிறது. உங்கள் மூளையிலிருந்து மொத்தமாகக் கழுவப்பட்டுவிடுகிறது. இந்தியச் சோக இலக்கியங்களோ ஒருவித மயக்கும் சக்தி உடையது, அமைதியானது, இதமானது; நீங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால் , உங்களை அவை அப்படியே வசீகரித்துவிடும், உங்களால் நகர முடியாது, நீங்கள் கட்டப்படுவீர்கள். நம் இலக்கியங்களைத் தைரியமாகத் தொடுபவர்கள் அந்தப் பந்தத்தை உணர்கிறார்கள்; என்றென்றைக்குமாக அதில் கட்டப்பட்டு விடுகிறார்கள்.
மெல்லென பனி பெய்கிறது, அதை யாரும் காண்பதில்லை, கேட்பதுமில்லை எனினும் அழகிய ரோஜாக்களை அது எவ்வளவு அற்புதமாக மலரச் செய்து விடுகிறது! ! சிந்தனையுலகத்திற்குத் தன் நன்கொடையையை இந்தியா வழங்கியதும் இவ்விதமே. மௌனம் யாரும் அறிய முடியாததுதான், எனினும் விளைவுகளைத் தருவதில் எல்லாம் வல்லது. உலகச் சிந்தனையையே அது மாற்றி உள்ளது. ஆனால் இது எப்போது நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. இந்திய சாஸ்திரங்களை எழுதியவர்களின் பெயர்களை உறுதி செய்வது எவ்வளவு கடினமாக இருக்கிறது ! என்று என்னிடம் ஒரு முறை சொன்னார்கள் .அதுதான் இந்தியாவின் கொள்கை என்று நான் சொன்னேன். பிறர் எழுதியதிலிருந்து தொண்ணூறு சதவீதத்தைத் திருடி, பத்து சதவீதம் சொந்தக்கருத்தையும் சேர்த்து, முன்னுரையில் மட்டும், இவை என் சொந்தக் கருத்துக்கள் என்று எழுதுகின்ற தற்கால எழுத்தாளர்கள் போன்றவர்கள் அல்ல, பழங்கால இந்திய எழுத்தாளர்கள்.. மனித குலத்தின் இதயத்தில் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகின்ற அந்த மாபெரும் சிந்தனையாளர்கள். தங்களை ஆசிரியர் என்று அறிவித்துக் கொள்ளாமல் நூல்களை மட்டும் எழுதுவதில் திருப்தி கண்டார்கள். அந்த நூல்களைச் சந்ததிக்கு விட்டுவிட்டு அமைதியாக மறைந்து போனார்கள். நமது தத்துவங்களை எழுதியவர் யார்? நமது புராணங்களை எழுதியவர்கள் யார் ? யாருக்குத் தெரியும்? அத்தனைபேரும் பொதுப் பெயர்களான வியாசர், கபிலர் போன்ற பெயர்களின் கீழ் மறைந்து போனார்கள் . அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் உண்மையான குழந்தைகள், அவர்கள் கீதையை உண்மையாகப் பின் பற்றுபவர்கள்; வேலை செய்வதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு, அதன் பலனில் இல்லை” என்ற மகத்தான ஆணையை நடைமுறையில் வாழ்ந்து காட்டியவர்கள்.
இவ்வாறு இந்தியா உலகின் மீது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு நிபந்தனை நிறைவேற்றப்பட வேண்டும். கருத்துக்கள் எவ்வாறு பரவும் ? வியாபாரத்திற்கான சரக்குகள்போல், அவையும் மற்றவர்களால் உண்டாக்கப்பட்ட வழியில்தான் செல்ல முடியும். சிந்தனைகளும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வதற்குப் பாதைகள் அமைக்கப்பட வேண்டும். எப்போதெல்லாம் உலக வரலாற்றில் பெரியசாம்ராஜ்யங்கள் தோன்றி, உலக நாடுகளை வென்று அவற்றை இணைக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த இணைப்புப் பாதை வழியாக இந்தியக் கருத்துக்கள் பாய்ந்து, ஒவ்வோர் இனத்தின் ரத்தத்திலும் கலந்துள்ளது. பௌத்தர்கள் தோன்று முன்னரே, இவ்வாறு இந்தியச் சிந்தனைகள் உலக நாடுகளுள் ஊடுருவிச் சென்றதற்கான ஆதாரங்கள் ஓவ்வொரு நாளும் கிடைத்தவண்ணம் உள்ளன. புத்த மதத்திற்கு முன்னாலேயே சீனா, பாரசீகம் மற்றும் கீழைத் தீவுகளில் வேதாந்தம் பரவி இருந்திருக்கிறது. பின்னர் கிரீஸின் மகத்தான சிந்தனைகள் கீழ்த்திசை உலகின் பல்வேறு பகுதிகளை இணைத்த போது இந்தியச் சிந்தனைகள் மறுபடியும் பரவத் தொடங்கின. இன்று தன் நாகரீகத்தைப் பற்றி இவ்வளவு பெருமையடித்துக் கொள்கின்ற கிறிஸ்தவ மதம், இந்தியச்சிந்தனைகளுடைய சின்னஞ்சிறு துணுக்குகளின் சேர்க்கையே தவிர வேறல்ல. நமது மதம் எவ்வளவு மகிமை வாய்ந்தது தெரியுமா! எவ்வளவோ பெருமை வாய்ந்த புத்த மதம் இருக்கிறதே, அது நம் மதத்தின் வெறும் ஒரு துடுக்குக் குழந்தை மட்டுமே! கிறிஸ்தவமதமோ நமது சில சிந்தனைத் துனுக்குகளை இணைத்து ஒட்டுபோடப்பட்ட ஒரு போலி மட்டுமே.
இந்தச் சுற்றுக்களில் ஒன்று மறுபடியும் வந்துள்ளது. இங்கிலாந்தின் மகத்தான ஆற்றல் உலகத்தின் பல்வேறு பகுதிகளை இணைத்திருக்கிறது. ஆங்கிலேயரின் பாதைகள் ரோமப் பேரரசின் பாதைகளைப்போல் நிலங்களில் ஓடுவதுடன் மட்டும் திருப்தி அடைய வில்லை, அவர்கள் கடலின் உள்ளேயும் எல்லா திசைகளிலும் நுழைந்துள்ளார்கள். எல்லா கடல்களிலும் இங்கிலாந்தின் பாதைகள் செல்கின்றன. உலகத்தின் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியோடு இணைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் புதிய தூதனைப்போல் மிக அற்புதமான காரியங்களைச் செய்கிறது.
இந்தச் சூழ்நிலையிலும் இந்தியா மீண்டும் உணர்ச்சி பெற்றெழுந்து, உலக நாகரீகத்தின் வளர்ச்சிக்குத் தன் பங்கைத் தரத் தயராக இருப்பதைக் காண்கிறோம். அதன் விளைவாகத்தான், ஏதோ இயற்கையே வற்புறுத்தி அனுப்பியதுபோல் நான் அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் சென்று பிராச்சாரம் செய்ய நேர்ந்தது. காலம் கனிந்திருப்பதை உணர வேண்டும். ஒவ்வொன்றும் நல்ல சகுனமாகவே காணப்படுகிறது. இந்தியத் தத்துவம் மற்றும் ஆன்மீகச் சிந்தனைகள் மீண்டும் வெளியே சென்று உலகை வெல்ல வேண்டும். எனவே நம் முன் உள்ள பிரச்சினை பரிமாணத்தில் நாளுக்குநாள் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. நாம் நமது நாட்டை மறுமலர்ச்சி பெறச் செய்தாக வேண்டும், அது ஒன்றும் பெரிய காரியம் அல்ல; நான் ஒரு கற்பனாவாதி, இந்து இனம் உலகம் முழுவதையும் வெல்ல வேண்டும் என்பதே என் ஆவல்.
பிற நாடுகளை வென்று ஆட்சிபுரிந்த எத்தனையோ பேரரசுகள் இருந்தன. நாம் கூட எத்தனையோ நாடுகளை நம் குடையின் கீழ் ஆண்டிருக்கிறோம். ஆனால் நமது வெற்றியை மதம் மற்றும் ஆன்மீகத்தின் வெற்றி என்றே வர்ணிக்கிறார் மாமன்னரான அசோகர். இந்தியா மீண்டும் உலகை வெல்ல வேண்டும். இதுவே என் வாழ்க்கைக் கனவு. இங்கே எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் இத்தகைய கனவைக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்தக் கனவு நனவாகும்வரை ஓயாதீர்கள்.
முதலில் நமது நாட்டைச் சரி செய்வோம், பிறகு உலகைச் சீர்படுத்த முயற்சிக்கலாம் என்று உங்களிடம் சிலர் கூறலாம். ஆனால் நான் தெளிவான மொழியில் உங்களுக்குச் சொல்கிறேன்: பிறருக்காக வேலை செய்யும்போது தான் நீங்கள் சிறப்பாக வேலை செய்கிறீர்கள். உங்களுக்காக நீங்கள் சிறப்பாகப் பணியாற்றியது எப்போது? எப்போது நீங்கள் பிறருக்காக உழைத்தீர்களோ, அப்போதுதான்; உங்கள் கருத்துக்களைக் கடல்களுக்கு அப்பாலும் எடுத்துச்சென்று அன்னிய மொழிகளிலும் பரப்புவதற்கு முயன்றபோதுதான். மற்ற நாடுகளுக்கு ஒளியைத் தருகின்ற அத்தகைய முயற்சி எந்த அளவிற்கு உங்கள் நாட்டிற்கும் உதவும் என்பதற்கு, இங்கே கூடியுள்ள கூட்டமே சான்று. நான் இங்கிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் போகாமல் என் கருத்துக்களை இந்தியாவிற்குள் மட்டும் கூறியிருந்தால், இப்போது ஏற்பட்டுள்ளதில் நாலில் ஒரு பங்கு பலன்கூட விளைந்திருக்காது. நம் முன் உள்ள மகத்தான லட்சியம் இது. ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். உலகம் முழுவதையும் இந்தியா வெல்ல வேண்டும், அதற்குக் குறைந்த எதுவும் நம் லட்சியமல்ல. நாமெல்லாம் அதற்குத் தயாராவோம், அதற்காக நம் நரம்புகள் ஒவ்வொன்றையும் முறுக்கேற்றுவோம்.
அன்னியர் வரட்டும், படைகளைக் கொண்டுவந்து குவிக்கட்டும். பொருட்படுத்த வேண்டாம். இந்தியாவே நீ எழு!
உன் ஆன்மீகத்தின் மூலம் உலகத்தை வெற்றிகொள்! ஆம், இந்த மண்ணில் முதலில் முழங்கியதைப் போல், அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும். பகை பகையை வெல்ல முடியாது. உலகாயதத்தையும் அதன் விளைவான எல்லா துன்பங்களையும் உலகாயதத்தால் வெற்றிக்கொள்ள முடியாது. படைகள் படைகளை வெல்ல முயலும்போது துன்பங்கள் பெருகுவதும் மனித சமுதாயம் மிருக நிலைக்குப் போவதும்தான் நிகழ்கின்றது. ஆன்மீகம் மேலை நாடுகளை வென்றாக வேண்டும்.
தாங்கள் ஒரு தேசிய இனமான நிலைநிற்க வேண்டுமானால், அதற்குத் தேவையானது ஆன்மீகம் என்பதைப் பிற நாட்டினர் மெல்ல மெல்ல அறிந்து வருகிறார்கள். அதற்காக அவர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது யார்? இந்தியாவின் மகத்தான ரிஷிகள் விட்டுச்சென்ற செய்திகளை உலகத்திலுள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று பரப்புவதற்கான மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்? இந்தச் செய்தி உலகின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைவதற்காகத் தங்கள் அனைத்தையும் தியாகம் செய்யக்கூடிய மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்? உண்மையைப் பரப்புவதற்கு அத்தகைய துணிச்சலான பெருமக்கள்தாம் தேவை. வீரமிக்க அத்தகைய செயல் வீரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் வேதாந்தத்தின் மகத்தான உண்மைகளை அங்கே பரப்புவதில் உதவ வேண்டும். இது உலகின் தேவை, இதைச் செய்யாவிடில் உலகம் அழிந்துபோகும். மேலை உலகம் முழுவதுமே எரிமலையின் மீது உள்ளது, அது நாளைக்கே வெடிக்கலாம், நாளைக்கே சிதறிக் தூள் தூளாகலாம். அவர்கள் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் தேடினார்கள், ஆனால் நிம்மதி கிடைக்க வில்லை. இன்பக் கோப்பையின் அடிவரை குடித்துப் பார்த்தார்கள், அது வெறுமை என்பதைக் கண்டுவிட்டார்கள். இந்தியாவின் ஆன்மீகக் கருத்தக்கள் மேலை நாடுகளில் ஆழமாக ஊடுருவும்படி நாம் வேலை செய்ய வேண்டிய தருணம் இதுதான். அதனால் சென்னை இளைஞர்களே! இதை நினைவில் கொள்ளுமாறு நான் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்கிறேன். நாம் வெளியே சென்றாக வேண்டும், உலகை ஆன்மீகத்தாலும் தத்துவத்தாலும் வென்றாக வேண்டும். இதைச் செய்வோம் அல்லது செத்து மடிவோம்; வேறு வழியில்லை. இந்தியச் சிந்தனைகளால் உலகை வெல்ல வேண்டும். நம் தேசிய வாழ்வுக்கு, விழிப்புற்ற சக்தி பெற்ற தேசிய வாழ்விற்கான நிபந்தனை இதுவே.
ஆனால் ஆன்மீகச் சிந்தனைகளால் உலகை வெல்ல வேண்டும் என்று நான் கூறியதன் உண்மையான பொருளை மறந்துவிடக் கூடாது. உயிருணர்வு அளிக்கக் கூடிய கோட்பாடுகளையே நான் ஆன்மீகச் சிந்தனைகள் என்று குறிப்பிட்டேன். அவற்றை வெளியுலகில் பரப்ப வேண்டுமே தவிர, நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப் பிடித்துக் கொண்டிருக்கின்ற மூட நம்பிக்கைகளை அல்ல.அந்த மூட நம்பிக்கைகளை ஒரேயடியாக இந்த மண்ணிலிருந்தே பிடுங்கி ஏறிய வேண்டும். அவை மீண்டும் தலையெடுக்கவே கூடாது. இந்த மூட நம்பிக்கைகள்தான் நம் இனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம், நம் மூளையைப் பலவீனப்படுத்துவதும் இவைதான். உயரிய கருத்துக்களைச் சிந்திக்கும் திறனற்ற, சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலை இழந்த, சுறுசுறுப்பை இழந்த, கண்டகண்ட மூடநம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்துத் தன்னைத்தானே பாழ்படுத்திக் கொள்கின்ற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இங்கே இந்தியாவில் பல்வேறு அபாயங்கள் நம் கண்முன் உள்ளன. அவற்றுள் ஒன்று வடிகட்டின உலகாயதம்; மற்றொன்று அதற்கு நேர் எதிரான வடிகட்டின மூட நம்பிக்கை. இரண்டையும் நாம் தவிர்த்தாக வேண்டும். இன்றைய மனிதன் மேலைநாட்டு அறிவு பெற்றவுடனே தன்னை எல்லாம் தெரிந்தவனாக எண்ணிக்கொள்கிறான்; நமது புராதன ரிஷிகளைப் பார்த்து கேலிச் சிரிப்புச் சிரிக்கிறான். அவனுக்கு இந்துச் சிந்தனை எல்லாம் வெறும் குப்பை, தத்துவம் எல்லாம் குழந்தையின் வெறும் உளறல், மதம் என்பது முட்டாள்களின் மூட நம்பிக்கை.
இதற்கு மாறாக இன்னொருவன் இருக்கிறான். அவன் கல்வியறிவு பெற்றவன். ஆனால் ஒன்றைப் பற்றிக்கொண்டு அதுதான் சரி என்று சாதிப்பவன் அவன் . சகுனத்திற்கும் கூட அது இது என்று விளக்கங்கள் தருகின்ற மற்றோர் எல்லையை நோக்கி ஓடுகிறான் அவன். விசித்திரமான தனது இனம் ஆகட்டும், விசித்திரமான தனது குட்டி தேவதைகள் ஆகட்டும். விசித்திரமான தனது கிராம வழக்கம் ஆகட்டும் - இவை பற்றிய ஒவ்வொரு மூட நம்பிக்கைக்கும் தத்துவ விளக்கம் தேவையா, இல்லை உவமான உவமேயங்களுடன் விளக்கம் தேவையா, எல்லாம் அவனிடம் உண்டு. இன்னும் என்னென்ன விளக்கங்கள் வைத்திருக்கிறானோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஒவ்வொரு சின்னஞ்சிறு கிராமத்தின் மூட நம்பிக்கையும் அவனுக்கு வேத விதி. அவனைப் பொறுத்தவரை, அவைகளைப் பின்பற்றுவதைச் சார்ந்து தான் தேசிய வாழ்க்கையே இருக்கிறது. இத்தகையவர்களிடமும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை உடைய முட்டாள்களாக இருப்பதைவிட நீங்கள் நாத்திகர்களாக இருப்பதையே நான் விரும்புகிறேன். ஏனென்றால் நாத்திகனிடம் உயிர்த்துடிப்பு இருக்கிறது, அவனிடம் நீங்கள் ஏதாவது நல்லதை உருவாக்க முடியும். ஆனால் மூட நம்பிக்கை மட்டும் நுழைந்து விடுமானால் சிந்திக்கும் திறன் போய்விடுகிறது, மூளை மழுங்கி விடுகிறது. வாழ்க்கை சீரழிவுப் பாதையில் போக ஆரம்பித்து விடுகிறது. இந்த இரண்டையும் தவிர்த்து விடுங்கள். துணிச்சலான வீரம் மிக்கவர்களே இப்போதுநமக்குத் தேவை. நமது தேவையெல்லாம் ரத்தத்தில் வேகம், நரம்புகளில் வலிமை, இரும்பை ஒத்த தசைகள், எஃகை ஒத்த நரம்புகள். பலவீனப் படுத்துகின்ற வளவளகொளகொள கருத்துக்கள் எதுவும் நமக்குத் தேவையில்லை. இவை எல்லாவற்றையும் தவிர்த்து விடுங்கள்.
ரகசிய வித்தைகளை எல்லாம் தவிர்த்து விடுங்கள். மதத்தில் மர்மத்திற்கு இடமில்லை. வேதாந்தத்திலோ,வேதங்களிலோ, சம்ஹிதைகளிலோ, புராணங்களிலோ, மர்மமாக ஏதாவது இருக்கிறதா? மதத்தைப் போதிக்க பழங்கால ரிஷிகள் எந்த ரகசிய சங்கங்களை வைத்திருந்தார்கள்? மகத்தான உண்மைகளை மனித குலத்திற்கு அளிப்பதற்காக அவர்கள் மாய ஜாலமோ மந்திர ஜாலமோ செய்ததாக எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா? மர்ம வித்தைகளை நாடுவதும் சரி, மூட நம்பிக்கைகளும் சரி இரண்டுமே பலவீனத்தின் அடையாளங்கள். சீரழிவின் அடையாளங்கள்; மரணத்தின் அடையாளங்கள். அவற்றை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வலிமையாக இருங்கள், உங்கள் சொந்தக் கால்களில் நில்லுங்கள். மகத்தான, மிகவும் அதிசயப்படத்தக்க விஷயங்கள் இருக்கின்றன. இயற்கையைப் பற்றிய நமது கருத்துக்கள் செல்கின்றவரை, அவைகளை நாம் இயற்கையைக் கடந்தவை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அவற்றுள் எதுவுமே மர்மமானதில்லை. மத உண்மைகள் மர்மமானவை என்றோ, பனி மூடிய இமயத்தில் இருக்கின்ற ஏதோ ரகசிய சங்கங்களின் சொத்துக்கள் என்றோ இந்த மண்ணில் ஒரு போதும் உபதேசிக்கப் பட்டதில்லை. நான் இமயமலைகளில் இருந்திருக்கிறேன், நீங்கள் அங்கே இருந்ததில்லை. இங்கிருந்து அது பல நூறு மைல்கள் தொலைவில் உள்ளது. நான் ஒரு துறவி, கடந்த பதினான்கு ஆண்டுகளாக பயணம் செய்தபடியே இருக்கிறேன். இத்தகைய ரகசிய சங்கங்கள் எதுவும் அங்கு எங்குமே இல்லை. இந்த மூட நம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள். அதைவிட நீங்கள் உறுதியான நாத்திகர்களாகி விடுங்கள், அது உங்களுக்கும் நல்லது, உங்கள் இனத்திற்கும் நல்லது. ஏனென்றால் அதன் மூலம் நீங்கள் வலிமை பெறுவீர்கள். ஆனால் இவையோ, சீரழிவையும் மரணத்தையும் தவிர எதுவுமல்ல. வலிமை வாய்ந்த மனிதர்கள் இந்த மூட நம்பிக்கைகளில் காலம் கழிப்பதும், கேடுகெட்ட இந்த மூட நம்பிக்கைகளை விளக்குவதற்குக் கதைகளைக் கண்டுபிடிப்பதில் நேரம் முழுவதையும் செலவழிப்பதும் மனித குலத்திற்கே அவமானம் ! தைரியமாக இருங்கள், எல்லாவற்றையும் இப்படி விளக்க முயலாதீர்கள். நம் உடம்பில் புண்களும் ரணங்களும் இருக்கலாம். இவற்றை அகற்ற வேண்டும், வெட்ட வேண்டும், அழித்துவிட வேண்டும். அதுபோல் நம்மிடம் பல மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்பது உண்மை. அவை நமது மதத்தையோ ,நமது தேசிய வாழ்க்கையையோ, நமது ஆன்மீகத்தையோ அழித்துவிடாது. மதத்தின் ஒவ்வொரு கோட்பாடும் பாதுகாப்பாகவே இருக்கிறது. இந்த ரணங்களை எவ்வளவு சீக்கிரம் அகற்றுகிறோமோ, அந்த அளவுக்கு இந்தக் கோட்பாடுகளும் மகத்தான பெருமையோடு ஒளி வீசும். அந்தக் கோட்பாடுகளை உறுதியாகப் பற்றுங்கள்..
ஒவ்வொரு மதமும் தன்னை உலகம் தழுவிய மதம் என்றே உரிமை பாராட்டுவதை நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் நான் சொல்கிறேன்- அப்படி ஒன்று இருக்கவே முடியாது. அப்படி ஒன்று இருந்து அத்தகைய உரிமை கொண்டாட இயலும் என்றால், அது நமது மதமாக மட்டுமே இருக்கமுடியும், வேறு எந்த மதமாகவும் இருக்க முடியாது. ஏனென்றால் மற்ற மதங்கள் ஒவ்வொன்றும் மனிதர்களை, ஒருவரையோ சிலரையோ நம்பியிருக்கிறது. அந்த மதத்தினர் வரலாற்று மனிதராகக் கருதுகின்ற ஒருவரைச் சுற்றியே அந்த மதங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தங்கள் மதத்திற்கு வலிமை என்று அவர்கள் நினைக்கின்ற அது உண்மையில் பலவீனமாகும். ஏனென்றால் வரலாற்று மனிதராகத் கருதப்படுபவர் வரலாற்று மனிதர் அல்ல என்று நிரூபித்துவிட்டால் போதும், அவரைச் சுற்றி எழுப்பப்பட்ட மதம் அப்படியே சிதறிப்போகும். இந்த மதங்களை உருவாக்கியவர்களின் வாழ்க்கையில் இப்பொழுதே பாதி உடைந்து நொறுங்கி விட்டன., மறுபாதியை ப் பற்றியோ தீவிரமான சந்தேகங்கள் நிலவுகின்றன. இந்த நிலையில் இவர்களின் வார்த்தைகளை மட்டுமே அத்தாட்சியாகக் கொண்ட அந்ந மத உண்மைகள் எல்லாம் காற்றில் கரைந்து மறைகின்றன.
நமது மதத்தில் அவதார புருஷர்கள் எண்ணற்றோர் உள்ளனர். ஆனாலும் நமது மத உண்மைகள் அவர்கள் யாரையும் நம்பி இருக்கவில்லை. கிருஷ்ணரின் பெருமை அவர் கிருஷ்ணராக இருந்தார் என்பதில் இல்லை, வேதாந்தத்தின் மகத்தான ஆச்சாரியராக இருந்தார் என்பதிலேயே உள்ளது. அவர் அப்படி வேதாந்த ஆச்சாரியராக இல்லாதிருந்தால், புத்தரின் பெயர் இந்தியாவிலிருந்து மறைந்து போனதைப்போல் அவரது பெயரும் அழிந்திருக்கும். இவ்வாறு நமது சார்பு எப்போதும் கோட்பாடுகளிடமே தவிர தனி மனிதர்களிடம் அல்ல.
அவதார புருஷர்கள் என்பவர்கள் கோட்பாடுகளின் திரண்ட வடிவமாக அவற்றை வாழ்ந்துகாட்ட வருபவர்களே தவிர வேறல்ல. கோட்பாடுகள் இருக்குமானால், பின்பற்ற ஆயிரக்கணக்கானோர், லட்சக்கணக்கானோர் வருவார்கள். கோட்பாடு பாதுகாப்பாக இருக்குமானால் புத்தரைப் போன்றோர் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் பிறப்பார்கள். கோட்பாடுகள் அழிந்து போகுமானால், மறக்கப்படுமானால், வரலாற்று மனிதர் என்று சொல்லப்படுகின்ற ஒருவரைப் பற்றிக் கொண்டு தேசிய வாழ்க்கை முழுவதுமே இயங்க நேருமானால் அந்த மதத்தின் நிலை, அந்தோ பரிதாபம்! அதற்கு ஆபத்தே வந்து சேரும்.
நமது மதம் ஒன்றுதான் தனி மனிதர்களைச் சார்ந்திருக்கவில்லை. அதே வேளையில், லட்சக்கணக்கான மனிதர்களுக்கு அதில் இடமும் உண்டு, இன்னும் எத்தனையோ பேரை நுழைப்பதற்குப் போதுமான இடமும் நமது மதத்தில் உள்ளது. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் கோட்பாடுகளின் விளக்கமாக இருக்க வேண்டும். இதை நாம் மறக்கக் கூடாது. நமது இந்தக் கோட்பாடுகள் பத்திரமாக உள்ளன; அதைப் பத்திரமாகப் பாதுகாப்பதும் காலங்காலமாக அதில் சேரும் மலினங்களிலிருந்து அதைப் பேணுவதும் நம் ஒவ்வொருவரின் தலையாய கடைமையாகும்.
திரும்பத்திரும்ப எத்தனையோ முறை நமது இனம் சீரழிவுகளுக்கு உள்ளானபோதும் இந்த வேதாந்தக் கோட்பாடுகள் ஒரு சிறிதும் மாசுபடாமல் இருப்பது ஆச்சரியம்தான். எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும் யாருக்கும் அவைமீது சேற்றை வாரி இறைக்கும் துணிச்சல் இல்லை. உலகிலேயே மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டவை நமது சாஸ்திரங்களே, பிற மத நூல்களுடன் ஒப்பிடும்போது இவைகளில் இடைச் செருகல்கள் இல்லை, மூலப்பாடத்தை மாற்றும் சித்திர வதைகள் இல்லை, முக்கியக் கருத்துக்களின் சாரத்தை அழிக்கும் வேலையும் இல்லை. தோன்றிய காலத்தில் இருந்ததைப்போல் அப்படியே இருந்தவாறு, அது மனித மனங்களை லட்சியத்தை நோக்கி , குறிக்கோளை நோக்கி ச்செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நூல்களுக்கு பல்வேறு உரையாசிரியர்கள் உரை எழுதியிருக்கிறார்கள், மகத்தான ஆச்சாரியர்கள் உரை எழுதியிருக்கிறார்கள், மகத்தான ஆச்சாரியர்கள் பிரச்சாரம் செய்துள்ளார்கள். இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல நெறிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
ஒன்றுக்கொன்று முரணானவைபோல் தோன்றுகின்ற கருத்துக்களையும் இந்த வேதங்களின் காணலாம். சில பகுதிகள் முற்றிலுமாக துவைதக் கருத்தைக் கூறுகின்றன, மற்றவை அத்வைதத்தைக் மட்டுமே கூறுகின்றன. துவைத உரையாசிரியர்கள் வேறு வழி தெரியாமல், அத்வைதப் பகுதிகளை அப்படியே அமுக்க விரும்புகிறார்கள். மத போதகர்களும் புரோகிதர்களும் அவைகளுக்கு துவைதப் பொருள் கூற விரும்புகின்றனர். அத்வைத உரையாசிரியர்களோ துவைதப் பகுதிகளை அதுபோல் செய்ய விரும்புகின்றனர். இது வேதங்களின் தவறு அல்ல. வேதங்கள் முழுவதுமே துவைதபரமானவை என்று நிரூபிக்க முயல்வது முட்டாள் தனம். வேதங்கள் முழுவதையும் அத்வைதமாகக் காட்ட முயல்வதும் அதைப் போன்ற முட்டாள் தனமே. வேதங்கள் துவைதமாகவும் அத்வைதமாகவும் உள்ளன.
புதிய கருத்துக்களின் துணையில் அதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அவை இறுதியான லட்சியத்திற்கு அழைத்துச் செல்கின்ற இருவேறு கொள்கைகள். மனத்தின் படிப்படியான வளர்ச்சிக்கு துவைதம், அத்வைதம் இரண்டும் தேவை. அதனால் தான் வேதங்கள் இரண்டையும் உபதேசிக்கின்றன.மனித இனத்தின் மீது கொண்ட கருணையின் காரணமாக வேதங்கள் உயர் லட்சியத்தை அடைய பல்வேறு படிகளைக் காட்டியுள்ளன. குழந்தைகளைக் குழப்புவதற்காக வேதங்கள் பயன்படுத்துகின்ற ஒன்றுக்கொன்று முரணான வீண் வார்த்தைகள் அல்ல அவை. அவை குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்தவர்களுக்கும் தேவையானவையே.
நமக்கு உடம்பு இருக்கும்வரை, உடம்பும் நாமும் ஒன்றே என்ற கருத்தில் நாம் மயங்கியிருக்கும் வரை,நமக்கு ஐம்புலன்கள் உள்ளதுவரை, அவற்றால் வெளியுலகை உணரும்வரை சகுணக் கடவுள் அவசியமே. இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருக்கும் வரை, மகத்தான ஆச்சாரியரான ராமானுஜர் நிரூபித்ததுபோல், இறைவன்,இயற்கை, ஜீவாத்மா போன்ற கருத்துக் களையும் ஏற்றேயாக வேண்டும். முக்கோணத்தின் ஒரு பக்கத்தை ஏற்றால், அதை முழுவதுமாக ஏற்றுக்கொண்டே தீர வேண்டும்; நம்மால் அதைக் தவிர்க்க முடியாது. எனவேபுறவுலகைக் காணும்வரை சகுணக் கடவுளையும் ஜீவாத்மாவையும் மறுக்க முயல்வது சுத்தப் பைத்திக்காரத்தனம்.
ஆனால் ரிஷிகளின் வாழ்வில் சில வேளைகளில், மனம் தன் எல்லைகளைக் கடந்து சென்றது போலாகிறது, மனிதன் இயற்கைக்கு அப்பால் செல்கிறான், அதை அடைய முடியாமல் வார்த்தைகளும் மனமும் எந்த இடத்திலிருந்து திரும்புகின்றனவோ என்று சுருதிகள் சொல்கின்றதே, வார்த்தைக்கும் மனத்திற்கும் எட்டாதது” அந்த இடத்தையும் கடந்து செல்கிறான். அங்கே கண்கள் பார்க்க முடியாது, காதுகள் கேட்க முடியாது, அதை அறிந்தோம் என்றும் சொல்ல முடியாது. அறியவில்லை என்றும் சொல்ல முடியாது , அங்கே மனித ஆன்மா எல்லா எல்லைகளையும் கடக்கிறது. அப்பொழுது, அப்பொழுது மட்டுமே மனித ஆன்மாவில் அத்வைத உணர்வு ஒளிர்கிறது . நானும் பிரபஞ்சம் முழுவதும் ஒன்று, நானும் பிரம்மமும் ஒன்றே. இந்த நிலையை ஞானத்தாலோ தத்துவத்தாலே மட்டும்தான் நாம் அடைய முடியும் என்பதல்ல. அதன் சில அம்சங்களை பக்தியின் வலிமை யாலும் பெற முடியும். பாகவதத்தில் இதற்கு சான்று உள்ளது. கோபியரைவிட்டு கண்ணன் பிரிந்து சென்று விட்டான் அவனுடைய பிரிவுத் துயரால் கோபியர் துடிக்கின்றனர், கண்ணனைப் பற்றிய நினைவு அவர்கள் மனத்தில் அவ்வளவு ஆழமாகப் பதிந்த ,அவர்கள் தங்கள் உடம்பையே மறந்துவிட்டார்கள், அவர்கள் ஒவ்வொருவரும் தாங்களே கிருஷ்ணன் என்று நினைத்து, தங்களையே கிருஷ்ணனாக அலங்கரித்துக் கொண்டு, கிருஷ்ணன் விளையாடுவதைப்போல் விளையாடினார்கள். எனவே ஒன்றாகும் இந்த நிலை பக்தியின் மூலமாகவும் வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
பழைய காலத்தில் பாரசீக சூஃபி கவிஞர் ஒருவர் இருந்தார். அவர் தமது பாடல் ஒன்றில் கூறுகிறார்:
நான்என் காதலியிடம் வந்தேன், கதவு மூடியிருந்தது.
நான் கதவைத் தட்டினேன், உள்ளிருந்து ஒரு குரல் வந்தது-
யார் அங்கே?
நான்தான் என்றேன், கதவு திறக்க வில்லை.
மறுமுறை கதவைத் தட்டினேன். அதே குரல்,யார் அங்கே? என்று கேட்டது.
நான் இன்னார் என்று சொன்னேன். கதவு திறக்கப்படவில்லை
மூன்றாவது முறையும் நான் கதவைத் தட்டினேன்
அதே குரல் கேட்டது: யார் அங்கே?
என் அன்பே, நீயேதான் நான் என்றேன்,
கதவு திறந்தது.
எனவே பல படிகள் இருக்கின்றன. பழைய உரையாசியர்களுக்கு இடையே சச்சரவுகள் இருந்தாலும், நாம் சண்டையிட வேண்டியதில்லை. அந்த உரையாசிரியர்கள் அனைவரும் நம்மால் மதிக் கப்பட வேண்டியவர்கள். அறிவிற்கு எல்லை எதுவும் இல்லை. முற்காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி எல்லாம் அறிகின்ற தன்மை என்பது யாருக்கும் தனிப்பட்ட சொத்தாக இருக்கவில்லை. அன்று மகான்களும் ரிஷிகளும் இருந்தார்கள் என்றால், இன்றும் பலர் இருந்தாக வேண்டும். அன்று வியாசர்களும் வால்மீகிகளும் சங்கரர்களும் இருந்தார்கள் என்றால், நீங்கள் ஒவ்வொருவரும் ஏன் ஒரு சங்கரராகக் கூடாது ? இது நமது மதத்தின் நினைவில்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியக் கருத்தாகும். பிற எல்லா மத சாஸ்திரங்களுக்கும் தெய்வப் பேருணர்வே பிரமாணமாகக் கூறப்படுகிறது, ஆனால் இந்தப் பேருணர்வு ஏதோ சிலருக்கு மட்டுமே ஏற்படும், உண்மைகள் அவர்களின் மூலம் தான் சாதாரண மக்களுக்கு வந்தன. மற்ற அனைவரும் அதற்கு அடிபணிந்தாக வேண்டும். நாசரேத்தின் ஏசுவிற்கு அவ்வாறு உண்மை உதித்தது, நாம் அனைவரும் அவருக்கு அடிப்பணிய வேண்டும். மந்திரத்தைத் தரிசித்த, சிந்தனைகளை நேரில் கண்ட இந்திய ரிஷிகளிடம் உண்மை மலர்ந்தது. அந்த உண்மைகள் எதிர்காலத்தில் எல்லா ரிஷிகளிடமும் தோன்றும். வாய்ச்சொல் வீரர்களிடமோ, புத்தகப் புழுக்களிடமோ, பண்டிதர்களிடமோ, மொழி வல்லுனர்களிடமோ அந்த உண்மை தோன்றுவதில்லை. சிந்தனைகளை நேரில் காண்கின்ற ரிஷிகளிடம் மட்டுமே அது தோன்றும். அதிகமான பேச்சாலோ மிகவுயர்ந்த அறிவாலோ சாஸ்திரங்களைப் படிப்பதாலோ ஆன்மாவை அடைய முடியாது . பாருங்கள் இதை நம் சாஸ்திரங்களே கூறுகின்றன . உலகத்தில் உள்ள வேறு எந்த மதத்தின் சாஸ்திரத்திலாவது, நமது சாஸ்திரங்கள் சொல்வது போல் இவ்வளவு தைரியமாக அந்த சாஸ்திரங்களையே படிப்பதால் கூட, நீங்கள் ஆன்மாவை அடைய முடியாது என்று கூறப்பட்டுள்ளதா? மனம் திறந்து சொல்லுங்கள்.
சர்ச்சுக்குப் போவதோ, நெற்றியில் சின்னங்களை இட்டுக் கொள்வதோ, விசித்திரமாக உடை அணிந்து கொள்வதோ மதம் ஆகிவிடாது. வானவில்லின் அத்தனை வண்ணங்களையும் நீங்கள் உங்கள் மீது தீட்டிக் கொள்ளலாம்; ஆனால் உங்கள் இதயம் திறக்கவில்லை என்றால், நீங்கள் கடவுளை உணரவில்லை என்றால் எல்லாமே வீண். அக வண்ணம் மட்டும் ஒருவனுக்கு இருக்குமானால் அவனுக்குப் புற வண்ணங்கள் எதுவும் தேவையில்லை. உண்மையான ஆன்மீக அனுபூதி என்பது இதுதான் . மதச் சின்னங்கள் மற்றும் அது போன்ற எல்லாம் நமக்கு உதவுமானால் அந்த அளவிற்கு நல்லது,அந்த அளவிற்கு அதை வரவேற்கலாம். நாம் இதை மறக்க க்கூடாது. ஆனால் அவை வீழ்ச்சி அடையக்கூடியவை. உதவுவதற்குப் பதிலாக நம்மைச் சீரழிக்கவும் செய்யும்.பொதுவாக மனிதன் இந்தப் புறச் சடங்குகளையே மதமாகக் கொள்கிறான். கோயிலுக்குப் போவது ஆன்மீக வாழ்வாகி விடுகிறது, புரோகிதருக்கு ஏதோ கொடுத்துவிட்டால் அதுவும் ஆன்மீக வாழ்வு. இத்தகைய எண்ணங்கள் ஆபத்தானவை, அழிவை விளைப்பவை; அவை உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். புறப் புலன்களால் பெறும் அறிவுகூட மதம் ஆகாது என்று நம் சாஸ்திரங்கள் திரும்பத்திரும்பக் கூறுகின்றன.
மாறாக ஒன்றை நாம் உணருமாறு எது செய்கிறதோ, அதுதான் மதம். ஒவ்வொருவருக்குமான மதம் அதுவே. யார் மனத்தைக் கடந்த உண்மையை உணர்கிறாரோ, தன் சொந்த இயல்பிலேயே யார் ஆன்மாவை உணர்கிறாரோ, யார் கடவுளை நேருக்கு நேர் காண்கிறாரோ, எல்லாவற்றிலும் கடவுளை மட்டுமே காண்கிறாரோ அவரே ரிஷி. நீ ஒரு ரிஷியாகாதவரை, உனக்கு ஆன்மீக வாழ்க்கை இல்லை. நீங்கள் ரிஷியான பிறகே உங்களுக்கு ஆன்மீகம் என்பது ஆரம்பமாகிறது. இப்போது செய்வதெல்லாம் அதற்குத் தயார்படுத்துவதற்கான முயற்சிகளே. அதன் பிறகே உங்களிடம் ஆன்மீகம் என்பது தோன்றுகிறது. இப்பொழுது நீங்கள் செய்வதெல்லாம் அறிவுப் பயிற்சியும் உடம்பை வதைக்கின்ற முயற்சிகளுமே.
எனவே முக்தியை விரும்புகின்ற ஒவ்வொருவரும் ரிஷிநிலை வழியாகச் சென்றாக வேண்டும், மந்திரத்தை நேருக்கு நேர் தரிசிக்க வேண்டும், கடவுளைக் காண வேண்டும் என்பதைக் தெளிவாக, ஆணித்தரமாக நமது மதம் கூறியிருக்கிறது. இதுவே முக்தி. நமது சாஸ்திரங்கள் இட்டுள்ள கட்டளை இதுவே. இந்த நிலையை அடைந்துவிட்டால் சாஸ்திரங்களின் கருத்துக்களை நாமாகவே எளிதில் அறிந்துகொள்ள முடியும் ; அவற்றின் பொருளை நாமே புரிந்துகொள்ள முடியும்; நமக்கு எது தேவையோ அதை ஆராய்ந்து, நாமே உண்மையைப் புரிந்துகொள்ள இயலும். இதுதான் செய்யப்பட வேண்டியது.
அதேவேளையில் பழங்கால ரிஷிகள் செய்துள்ள பணிகளுக்காக அவர்களுக்கு உரிய மரியாதையை நாம் அளிக்க வேண்டும். அவர்கள், அந்தப் புராதன ரிஷிகள் மகத்தானவர்கள். நாம் அவர்களை விட மகத்தானவர்களாக வேண்டும். அவர்கள் கடந்த காலத்தில் மாபெரும் காரியங்களைச் செய்தார்கள். நாம் அவர்களைவிட மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும். பழங்கால இந்தியாவில் நூற்றுக்கணக்கான ரிஷிகள் இருந்தார்கள், நம்மிடையே லட்சக்கணக்கான ரிஷிகள் வேண்டும்; நிச்சயமாக வரத்தான் போகிறார்கள். இதை நீங்கள் எவ்வளவு விரைவாக நம்புகிறீர்களோ, அந்த அளவிற்கு இந்தியாவிற்கும் நல்லது, உலகத்திற்கும் நல்லது.
நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். நீங்கள் உங்களை வீரர்கள் என்று நம்பினால் வீரர்கள் ஆவீர்கள், ரிஷிகள் என்று நம்பினால் நாளைக்கே ரிஷிகளாவீர்கள். உங்களை எதனாலும் தடுக்க முடியாது. ஒன்றுக்கு ஒன்று முரணானவை போலவும் சண்டையிடுபவை போலவும் தோன்றுகின்ற நமது மதப் பிரிவுகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு கோட்பாடு இருக்குமானால், அது, எல்லா பெருமையும் ஆற்றலும் தூய்மையும் ஆன்மாவில் ஏற்கனவே இருக்கிறது என்பதுதான். ராமானுஜர் மட்டுமே இந்த ஆன்மா அவ்வப்போது சுருங்கவும் விரியவும் செய்கிறது என்கிறார். சங்கரரின் கருத்துப்படி, இந்த ஆன்மா மாயைக்கு உட்படுகிறது.
இந்த வேறுபாடுகளைப் பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள். ஆன்மாவில் ஆற்றல் இருக்கிறது என்ற உண்மையை எல்லோரும் ஏற்றக்கொள்கிறார்கள்; அது வெளிப்படாதிருக்கலாம், வெளிப்பட்டிருக்கலாம், ஆனால் அது அங்கே இருக்கிறது இதை எந்த அளவு விரைவாக நம்புகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நல்லது. எல்லா ஆற்றல்களும் உங்களுள் இருக்கிறது. உங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள்.நீங்கள் பலவீனர்கள் என்று எண்ணாதீர்கள். இப்போது நம்மில் பெரும்பாலானோரும் எண்ணிக் கொண்டிருப்பது போல், நீங்கள் அரைப் பைத்தியங்கள் என்று நம்பாதீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் செய்ய முடியும், யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் உங்களால் எதையும் செய்ய முடியும். எல்லா ஆற்றலும் ஆன்மாவில் இருக்கிறது. எழுந்திருங்கள்! உங்கள் உள்ளிருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துங்கள்.
******************
எனது போர்முறை
....
கூட்ட மிகுதியால் அன்று நம்மால் சொற்பொழிவைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. எனவே சென்னை மக்கள் எனக்கு அளித்த அன்புமயமான வரவேற்புக்கு இப்போது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வரவேற்புரையில் அழகிய சொற்கள் பல கூறப்பட்டன. மனம்திறந்து பாராட்டப்பட்ட அந்தக் கனிவான சொற்களுக்குத் தகுதியானவனாக என்னை ஆக்குமாறு எம்பெருமானைப் பிரார்த்திப்பதையும், நமது மதத்திற்காகவும் நமது தாய்நாட்டின் சேவைக்காகவும் என் வாழ்நாள் முழுவதம் பாடுபடுவதையும் தவிர வேறு எப்படி என் நன்றியுணர்வைத் தெரிவிப்பது என்பது எனக்குத் தெரியவில்லை. அந்தப் பாராட்டுரைகளுக்கு தகுதி படைத்தவனாக இறைவன் என்னை ஆக்குவாராக!
என்னிடமுள்ள எல்லா குறைபாடுகளுடன் , என்னிடம் சிறிது தைரியம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தியாவிலிருந்து மேலை நாட்டிற்குத் தருவதற்கான செய்தி ஒன்று என்னிடம் இருந்தது. தைரியமாக அதை அமெரிக்கர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் அளித்தேன். இன்றைய தலைப்பை எடுத்துக் கொள்ளுமுன் சில வார்த்தைகளைத் தைரியமாக உங்களிடம் கூற விரும்புகிறேன். என்னை நிலைகுலையச் செய்யவும், என் வளர்ச்சியைத் தடுக்கவும், முடியுமானால் என்னையே நசுக்கி எறிந்துவிடவும் சில சூழ்நிலைகள் என்னைச் சுற்றி உருவாகியது உண்டு. அத்தகைய முயற்சிகள் எப்போதும் தோல்வி அடைவதைப்போல் இவையும் தோல்வியையே தழுவின. அதற்காகக் கடவுளுக்கு நன்றி. ஓரளவுக்குத் தவறான அபிப்பிராயமும் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவிவருகிறது. அன்னிய நாட்டில் இருந்தவரை ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அமைதி காத்தேன் . ஆனால் இப்பொழுது , என் தாய்நாட்டு மண்ணின்மீது நின்று கொண்டு சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன் இதன் விளைவு என்ன என்பதைப்பற்றி நான் கவலைபடவில்லை. அந்தச் சொற்கள் உங்களிடம் எத்தகைய உணர்ச்சியை எழுப்பும் என்பதையும் நான் பொருட்படுத்தவில்லை; அது எனக்கு ஒரு பிரமாதமான விஷயமல்ல ; ஏனெனில் நான் ஒரு துறவி. ஒரு தடியோடும் கமண்டலத்தோடும் நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்குள் நுழைந்த அதே சன்னியாசியாகவே நான் இப்போதும் இருக்கிறேன். விரிந்து பரந்த உலகம் என் முன் இருக்கவே செய்கிறது. முன்னுரையை மேலும் நீட்டாமல் விஷயத்திற்கு வருகிறேன்.
முதன்முதலில் தியாசஃபிகல் சொசைட்டியைப் பற்றி நான் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் . அவர்கள் நம் நாட்டிற்கு நல்லது செய்திருக்கிறார்கள் என்பதை நான் எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. அதற்காக ஒவ்வோர் இந்துவும் அவர்களுக்கு, அதிலும் குறிப்பாக அன்னிபெசன்ட் அம்மையாருக்கு நன்றியுடையவனே. அவரைப்பற்றி எனக்கு அதிகமாக எதுவும் தெரியாது. ஆனால் நான் அறிந்ததிலிருந்தே அவர் நமது தாய்நாட்டிடம் உண்மையான அனுதாபம் உள்ளவர், நம் நாட்டை உயர்த்துவதற்காகத் தமது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்து வருபவர் என்பதை என்னுள் ஆழமாக உணர்ந்து கொண்டேன்.அதற்காக உண்மையான ஒவ்வோர் இந்தியனும் நிரந்தரமாக அவருக்கு நன்றிக்கடன்பட்டவன். அவர்மீதும் அவரைச் சேர்ந்தவர்கள் மீதும் எல்லா ஆசிகளும் என்றென்றைக்கும் பொழியட்டும்!
ஆனால் அது ஒரு விஷயம், அந்த சொசைட்டியில் சேர்வது என்பது மற்றொரு விஷயம். மதிப்பும் மரியாதையும் அன்பும் கொள்வது ஒரு விஷயம்; ஒருவர் எதைச் சொன்னாலும் அதனை அலசி ஆராயாமல் பகுத்தறியாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது மற்றொரு விஷயம். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் நான் சாதித்த ஏதோ அந்தச் சிறிய வெற்றிக்கு தியாசஃபிகல் சொசைட்டியினர் எனக்கு உதவியதாக இங்கெல்லாம் பேசப்படுகிறது. அந்த ஒவ்வொரு சொல்லும் தவறு , ஒவ்வொரு சொல்லும் பொய், என்பதை வெளிப்படையாக உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும்.
தாராளமயமான சிந்தனைகள், மாறுபட்ட கருத்துக்களிடமும் பெருந்தன்மை என்றெல்லாம் பெரிய பேச்சுக்களைக் கேட்கிறோம். மிக நல்லது. நிஜ வாழ்க்கையிலோ, இந்தத் தாராளம், பெருந்தன்மை எல்லாம் ஒருவன் சொல்வதை அப்படியே நம்பும்வரைதான். சிறிது மாறுபட்டால் போதும் பெருந்தன்மை பறந்துவிடும் அன்பு மறைந்துவிடும். இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கென்று சுயநலப் பாதைகளும் உள்ளன. அவர்களின் பாதையில் ஏதாவது தடை குறுக்கிட்டால் போதும், அவர்களின் இதயங்கள் எரியும், வெறுப்பு கொப்புளித்து வெளிப்படும், என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியாது.
இந்துக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்ய முயன்றால், இந்தக் கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு வந்த த்துன்பம் என்ன? இந்துக்கள் தங்களையே சீர்திருத்த முனைந்தால் பிரம்ம சமாஜத் தினருக்கும் மற்ற சீர்திருத்த அமைப்புகளுக்கும் நேர்ந்த தொல்லைதான் என்ன? அவர்கள் ஏன் எதிராக நிற்க வேண்டும்? ஏன் இந்த இயக்கங்களின் பெரிய பகைவர்களாக வேண்டும்? நான் கேட்கிறேன், ஏன்? ஏன் என்றோ, எப்படியென்றோ கேட்கக் கூடாத அளவிற்கு அவர்களது வெறுப்பும் பொறாமையும் கடுமையாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
வசதியற்ற,யாருக்கும் தெரியாத, நண்பர்களோ அறிமுகமோ இல்லாத ஒரு சன்னியாசியாக, கடல் கடந்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றேன். அங்கே சென்று தியாசஃபிகல் சொசைட்டியின் தலைவரைச் சந்தித்தேன். அவர் ஓர் அமெரிக்கர், இந்தியாவை நேசிப்பவர். ஒரு வேளை அவர் அங்குள்ள யாருக்காவது ஓர் அறிமுகக் கடிதம் தருவார் என எண்ணினேன். அவரோ என்னிடம், நீங்கள் எங்கள் சொசைட்டியில் சேர்வீர்களா? என்று கேட்டார். முடியாது, எப்படி முடியும்? உங்கள் கொள்கைகளுள் பெரும்பாலானவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை” என்றேன் நான் . இதைக் கேட்டதும் அவர் , பொறுக்க வேண்டும், என்னால் உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது” என்று கூறிவிட்டார். இது எனக்குப் பாதை வகுத்துத் தரும் வழியல்லவே!
சென்னை நண்பர்கள் சிலரின் உதவியால் நான் அமெரிக்கா சென்றது உங்களுக்குத் தெரியும். அவர்களுள் பெரும்பாலோர் இங்கே உள்ளார்கள். நான் மிகுந்த நன்றிக் கடன்பட்டிருக்கும் நீதிபதி திரு. சுப்பிரமணிய ஐயர் மட்டும் இல்லை. ஒரு மேதையின் உள்ளுணர்வு பெற்றவர் அவர், எனது மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவர், ஓர் உண்மை நண்பர், இந்தியாவின் உண்மையான ஒரு குடிமகன்.
சர்வ மத மகாசபை கூடுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். பணம் மிகக் குறைவாகத்தான் என்னிடம் இருந்தது, அதுவும் விரைவில் செலவாகிவிட்டது. குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது, என்னிடமோ வெயில் காலத்திற்குரிய மெல்லிய ஆடைகளே இருந்தன. உறையச் செய்கின்ற அந்தக் குளிரில் என்ன செய்வ தென்றே எனக்குத் தெரியவில்லை. தெருக்களில் பிச்சையெடுத்தாலோ சிறையில்தான் இடம் கிடைக்கும். சில டாலர்களைத் தவிர எல்லாம் கரைந்துவிட்டன. சென்னை நண்பர்களுக்குத் தந்தி கொடுத்தேன். என் நிலை தியாசபிக் சொசைட்டியினருக்குத் தெரியவந்தது. அவர்களுள் ஒருவர் எழுதினார்-அந்தப் பிசாசு ஒழியப் போகிறது. நமக்கு இறைவன் அருள்புரிந்துவிட்டார், இதுதான் எனக்குப் பாதை அமைத்துத் தருவதா?
இதையெல்லாம் இப்போது சொல்லியிருக்க மாட்டேன். நம் நாட்டு மக்கள் விரும்பியதால் கூற வேண்டியதாயிற்று . கடந்த மூன்று ஆண்டுகளாக இதைப்பற்றி நான் வாயைத் திறந்ததே இல்லை. மௌனமே என் குறிக்கோளாக இருந்தது. ஆனால் இன்று வெளியே வந்துவிட்டது. விஷயம் அத்துடன் முடியவில்லை. தியாசபிக் சொசைட்டியினர் சிலரை நான் சர்வசமயப் பேரவையில் பார்த்தேன், அவர்களோடு பேசவும் கலந்து பழகவும் விரும்பினேன். அப்போது அவர்கள் முகத்தில் தோன்றிய வெறுப்பு இன்னும் என் நினைவில் இருக்கிறது, தேவர்கள் கூடும் இடத்தில் இந்தப் புழுவிற்கு என்ன வேலை? என்று கேட்பதைப்போல் இருந்தது அது. சர்வ மத மகாசபையில் நான் பெயரும் புகழும் பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு பணிகளும் வந்தன. ஆனால் ஒவ்வொரு படியிலும் தியாசஃபிகல் சொசைட்டியினர் என்னைச் சிறுமைப்படுத்தவே முயன்றனர். என் சொற்பொழிவுகளுக்கு வர வேண்டாம் என்று தியாசஃபிகல் சொசைட்டியினர் தடுக்கப்பட்டனர். நான் பேசுவதைக் கேட்டால் அவர்களுக்கு இந்த சொசைட்டியிடம் நம்பிக்கை போய்விடும் என்ற பயம் தான் காரணம், குறிப்பிட்ட சிலர் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய அவர்களின் நியதிகளும் அதையே கூறுகின்றன- அங்கு சேர்பவர்கள் குதுமி மற்றும் மொரியாவிடமிருந்தும், அவர்களின் பிரதிநிதிகளான திரு. ஜட்ஜ் மற்றும் திருமதி. அன்னிபெசன்டின் மூலமே உபதேசங்களைக் கேட்க வேண்டும் . இந்த சொசைட்டியில் சேர்வது என்பது ஒருவர் தன் சுதந்திரத்தையே அடகு வைப்பதாகும். இப்படிப்பட்ட ஒருகாரியத்தை நிச்சயமாக என்னால் செய்ய முடியாது. அப்படிச் செய்கின்ற ஒருவனை இந்து என்று அழைக்கவும் என்னால் இயலாது. திரு. ஜட்ஜிடம் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அவர் உயர்ந்தவர், திறந்த மனம் படைத்தவர் நாணயமானவர் எளிமையானவர் தியாசஃபிகல் சொசைட்டியின் இதுவரையிலான பிரதிநிதிகளுள் மிகவும் சிறந்தவர். இவரும் திருமதி. பெசன்டும் தங்கள் மகாத்மாக்களே சரியானவர்கள் என்று அடித்துக் கொள்கிறார்கள், இதை குறை கூற எனக்கு எந்த உரிமையும் இல்லை . வினோதம் என்னவென்றால் இரண்டு பேரும் உரிமை கொண்டாடுவது ஒரே மகாத்மாவையே, உண்மை, கடவுளுக்குத்தான் வெளிச்சம். அவரே நீதிபதி, இரண்டு பக்கமும் சமமாக இருக்கும்போது நீதி வழங்க யாருக்கும் அதிகாரம் இல்லை . இப்படியெல்லாம்தான் அவர்கள் அமெரிக்கா முழுவதும் என் வளர்ச்சிக்கான வழி வகுத்தார்கள்!
அங்கே என்னை எதிர்ப்பவர்களான கிறிஸ்தவப் பாதிரிகளுடன் வேறு சேர்ந்து கொண்டனர். எனக்கு எதிராக இந்தப் பாதிரிகளின் கற்பனையில் தோன்றாத ஒரு பொய்கூடக் கிடையாது. நண்பர்களோ பணமோ யாரும் இல்லாத ஒருவனாக ஓர் அன்னிய நாட்டில் நான் உள்ளேன். என் நடத்தையைப்பற்றிக் கேவலமாக நகரம் தோறும் பரப்பினார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் என்னைத் துரத்தியடிக்க முயன்றார்கள், எனக்கு நண்பர்களான ஒவ்வொருவரையும் பகை வனாக்க முயன்றார்கள். என்னைப் பட்டினிபோட்டுச் சாகடிக்க முயன்றார்கள், இதில் என் சொந்த நாட்டினர் ஒருவரும் எனக்கு எதிராகச் செயல்பட்டார் என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். அவர் இந்தியாவிலுள்ள சீர்திருத்தக் கட்சி ஒன்றின் தலைவர் , ஏசு இந்தியாவிற்கு வந்திருக்கிறார்” என்று அவர் ஒவ்வொரு நாளும் முழங்குகிறார். . ஏசு இந்தியாவிற்கு வரும் வழி இதுதானா? இதுதான் இந்தியாவைச் சீர்திருத்துகின்ற வழியா? இளமைப் பருவத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். என் சிறந்த நண்பர்களுள் ஒருவராக இருந்தவர். அன்னிய நாட்டில் நெடுநாட்களாக நம் நாட்டினர் யாரையும் காணாமலிருந்து அவரைக் கண்டபோது மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த பரிசு இது. என்று என்னை சர்வ மத மகாசபை ஆரவாரம் செய்து வரவேற்றதோ, என்று நான் சிகாகோவில் பிரபலம் ஆனேனோ அன்றிலிருந்து அவரது போக்கு மாறிவிட்டது. என்னைத் துன்புறுத்துவதற்குத் தன்னால் இயன்ற அனைத்தையும் திரைமறைவில்.செய்தார். இந்த வழியாகத்தான் ஏசு இந்தியாவிற்கு வரப் போகிறாரா? கிறிஸ்துவின் காலடியில் இருப்பதைந்து ஆண்டுகள் உட்கார்ந்து அவர் கற்றுக்கொண்ட பாடம் இதுதானா? கிறிஸ்தவ மதமும் கிறிஸ்தவ சக்தியும்தான் இந்திய மக்களைக் கைதூக்கிவிடப் போகிறது என்று நமது மகத்தான சீர்திருத்தவாதிகள் முழங்குகிறார்கள், அதைச் செய்கின்ற வழி இதுதானா? அவர் தான் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றால், அது நம்பிக்கைக்குரிய ஒன்றாகத் தோன்றவில்லை.
இன்னும் ஒரு வார்த்தை , சமுகச் சீர்த்திருத்தவாதிகளின் பத்திரிகை ஒன்றில் ,என்னைச் சூத்திரன் என்று எழுதி, சன்னியாசி ஆவதற்கு எனக்கு என்ன உரிமையிருக்கிறது என்று சவால் விடப்பட்டிருந்ததை நான் படித்தேன். அதற்கு என் பதில் ; ஒவ்வொரு பிராமணனும் ,யமாய தர்மராஜாய சித்ரகுப்தாய வை நம” என்று ஓதிக்கொண்டு ,யாருடைய திருவடிகளில் மலர்களை அர்ப்பிக்கிறானோ, தூய க்ஷத்திரியர்கள் யாருடைய வழியில் தோன்றியவர்களோ, அவரது பரம்பரையில் தோன்றியவன் நான் . நீங்கள் உங்கள் புராணங்களையும் சாஸ்திரங்களையும் நம்புபவர்களானால் , என் ஜாதி கடந்த காலத்தில் செய்திருக்கும் பல சேவைகளுடன், பாதி இந்தியாவைப் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தும் இருக்கிறது என்பதைச் சீர்திருத்தவாதிகள் என்று அழைக்கப்படுகின்ற இவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும், எனது ஜாதி ஒதுக்கப்படுமானால் இன்றைய இந்திய நாகரீகத்தில் என்ன மிஞ்சும்? வங்காளத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; இந்தியாவின் மகத்தான தத்துவ அறிஞர், மகத்தான கவிஞர், மகத்தான வரலாற்று அறிஞர், மகத்தான தொல் பொருள் ஆய்வாளர், மகத்தான சமய போதகர் என்று ஒவ்வொருவரும் என் ஜாதியைச் சேர்ந்தவர்களே. இக்கால விஞ்ஞானிகளுள் மகத்தான விஞ்ஞானி ஒருவரை இந்தியாவிற்கு அளித்துள்ளதும் என் ரத்தமே. உண்மையைத் திரித்துக் கூறுகின்ற இவர்கள் நம் வரலாற்றைப் பற்றிச் சிறிதாவது அறிந்திருக்க வேண்டும் ; பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று ஜாதியினருமே சன்னியாசத்திற்குச் சம உரிமை படைத்தவர்கள் என்பதை ப் படித்திருக்க வேண்டும் ; மூன்று ஜாதியினரும் வேதம் படிக்கச் சம உரிமை பெற்றவர்கள்.
சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே இதை யெல்லாம் சொன்னேன். ஆனால் அவர்கள் என்னைச் சூத்திரன் என்று அழைப்பதால் நான் எந்த வகையிலும் வேதனைப்படவில்லை. எனது முன்னோர்கள் ஏழைகளுக்கு இழைத்த கொடுமைகளுக்கு இது ஒரு சிறிய பிராயச்சித்தமாகவே இருக்கும். நான் தாழ்ந்த குலத்தினனாக இருந்தால் மகிழ்ச்சியே அடைவேன். ஏனென்றால் பிராமணர்களுக்கெல்லாம் பிராமணராக இருந்து கொண்டு, ஒரு தாழ்ந்த குலத்தினனின் வீட்டைச் சுத்தம் செய்ய விரும்பிய ஒருவரது சீடன் நான். அவன் இதை அனுமதிக்க மாட்டான்; ஒரு பிராமண சன்னியாசி தன் வீட்டிற்கு வந்து வீட்டைச் சுத்தம் செய்வதை அவன் எப்படி அனுமதிப்பான் ? எனவே இந்த மனிதர் நள்ளிரவில் விழித்தெழுந்து, யாருமறியாமல் அவனது வீட்டிற்குள் நுழைந்து கழிவறைகளைச் சுத்தம் செய்து, தம் நீண்ட தலைமுடியால் அந்த இடத்தைத் துடைக்கவும் செய்வார். எல்லோருக்கும் சேவகனாகத் தம்மை ஆக்கிக்கொள்வதற்காகப் பல நாட்கள் இவ்வாறு செய்தார். அவரது திருப்பாதங்களை என் தலைமீது தாங்கிக் கொண்டிருக்கிறேன். அவரே என் தலைவர், அவரது வாழ்க்கையைப் பின்பற்றவே நான் முயல்வேன்.
எல்லோருக்கும் சேவகனாக இருப்பதன் மூலம் தான் ஓர் இந்து தன்னை உயர்த்திக்கொள்ள வழிதேடுகிறான். பாமரர்களைக் கைதூக்கிவிட இப்படித்தான் இந்துக்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர, எந்த வெளி நாட்டுச் செல்வாக்கையும் எதிர்பார்த்து அல்ல, மேலை நாகரீகத்தின் விளைவைப் பாருங்கள். இருபது ஆண்டுகள் அதன் ஆதிக்கத்தில் வாழ்ந்ததால் தன் சொந்த நண்பனையே அன்னிய நாட்டில் பட்டினிபோட விரும்பிய அந்த மனிதரின் நினைவுதான் எனக்கு வருகிறது. அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?நண்பன் பிரபலமாகி விட்டான், தான் பணம் சம்பாதிப்பதற்குக் குறுக்கே நிற்கிறான், அவ்வளவுதான் காரணம். அதேநேரத்தில், வைதீக இந்து சமயம் என்ன செய்கிறது என்பதற்கு, சொந்த நாட்டில் என் குருதேவரின் வாழ்க்கை ஓர் உதாரணம். நமது சீர்திருத்தவாதிகளுள் யாராவது தாழ்ந்த குலத்தினனுக்கும் சேவை செய்யத் தயாராக இருந்து, அந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டட்டும்; அப்போது நான் அவர்களின் காலடியில் அமர்ந்து கற்றுக் கொள்கிறேன், அதற்கு முன்னால் அல்ல. ஒரு துளி செயல் இருபதாயிரம் வெற்றுப் பேச்சுக்களை விடச் சிறந்தது.
இப்போது சென்னையிலுள்ள சீர்திருத்தச் சங்கங்களுக்கு வருகிறேன். அவர்கள் என்னிடம் கனிவு காட்டினார்கள், அன்போடும் பேசினார்கள். தங்களுக்கும் வங்காள சீர்திருத்தவாதிகளுக்கும் வேறுபாடு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார்கள். நானும் மனமுவந்து அதனை ஏற்றுக் கொள்கிறேன். சென்னை மிக அழகிய நிலையில் உள்ளது என்று நான் அடிக்கடிச் சொல்வது உங்களுள் பலருக்கு நினைவிருக்கும் ஒன்றைச் செய்வது ,உடனே அதற்கு எதிராக இன்னொன்றைச் செய்வது- வங்கச் சீர்திருத்தவாதிகளின் இந்த விளையாட்டை சென்னை இன்னும் பின்பற்றவில்லை. இங்கு எல்லாவற்றிலும் நிதானமான அதேவேளையில் உறுதியான முன்னேற்றம் காணப்படுகிறது. இங்கே வளர்ச்சி உள்ளது, எதிர்ச்செயல் இல்லை. வங்காளத்தில் பல விஷயங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால்சென்னையில் மறுமலர்ச்சி இல்லை; வளர்ச்சி, இயற்கையான வளர்ச்சி காணப்படுகிறது. எனவே இந்த இரண்டு இனங்களுக்கும் இடையே இருப்பதாகச் சீர்திருத்தவாதிகள் சுட்டிக் காட்டுகின்ற வேறுபாடுகளை நான் முற்றிலுமாக ஏற்றுக்கொள்கிறேன்; ஆனால் இவர்கள் புரிந்து கொள்ள முடியாத வேறுபாடும் ஒன்று உள்ளது.
இந்த சொசைட்டிகளுள் சில, தங்களோடு சேர்ந்து கொள்ளுமாறு என்னைப் பயமுறுத்துகிறார்களோ என்று தோன்றுகிறது. இது ஒரு விபரீத முயற்சி. பதினான்கு வருடங்கள் பட்டினியை நேருக்கு நேராகச் சந்திக்க ஒருவனை, அடுத்த வேளைக்கான உணவும் படுக்க இடமும் எங்கே கிடைக்கும் என்று தெரியாத ஒருவனை அவ்வளவு சுலபமாகப் பயமுறுத்திவிட முடியாது. பூஜ்யத்திற்குக் கீழே முப்பது டிகிரி என்று வெப்பமானி காட்டுகின்ற பிரதேசத்தில், ஏறக்குறைய உடைகளே இல்லாமலும், அடுத்தவேளை உணவு எங்கிருந்து வரும்
என்று தெரியாமலும் வாழத் துணிந்த ஒருவனை இந்தியாவில் பயமுறுத்துவது என்பது அவ்வளவு சுலபமல்ல. நான் அவர்களுக்கு முதலில் சொல்வது இதுதான் - எனக்கென்று ஒரு சுயேச்சை உள்ளது, எனக்கென்று சிறிது அனுபவமும் இருக்கிறது, உலகிற்குத் தர என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது, அதை அச்சமின்றியும் எதிர்காலத்தைப்பற்றிக் கவலைப் படாமலும் நான் கொடுக்கவே செய்வேன். அவர்களை விடப் பெரிய சீர்திருத்தவாதி நான் என்பதையும் இந்தச் சீர்திருத்தவாதிகளுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் விரும்புவது அங்கொன்றும் இங்கொன்றுமான சீர்திருத்தத்தை; நானோ அடிமுதல் முடிவரையிலான மொத்தச் சீர்த்திருத்தத்தை விரும்புகிறேன். அந்தச் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வழியில் தான் இருவரும் வேறுபடுகிறோம். அவர்களுடையது அழிவுப்பாதை; என்னுடையது ஆக்கப் பாதை. நான் மறுமலர்ச்சியை நம்பவில்லை, வளர்ச்சியையே நம்புகிறேன். என்னைக் கடவுள்நிலையில் வைத்துக்கொண்டு, இந்த வழியில் தான் நீங்கள் போக வேண்டும், இந்த வழியில் போகக் கூடாது” என்று சமுதாயத்திற்குக் கட்டளையிட நான் துணிய மாட்டேன். ராமர் பாலம் கட்டும்போது, தன் பங்காக ஏதோ கொஞ்சம் மணலைப் போட்ட அந்தச் சிறிய அணிலைப்போல் இருக்கவே நான் விரும்புகிறேன். அதுதான் என் நிலை.
அற்புதமான இந்தக் தேசிய எந்திரம் காலங்காலமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. தேசிய வாழ்க்கை என்னும் இந்த ஆச்சரியமான ஆறு நம் முன் ஓடிக் கொண்டிருக்கிறது. இது நல்லதா, எந்த வழியாக இது செல்லும் என்பது யாருக்குத் தெரியும்? அதைச் சொல்லும் தைரியம்தான் யாருக்கு இருக்கிறது? ஆயிரக்கணக்கான சூழ்நிலைகள் அதைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு தனிப்பட்ட சில உணர்வுகளைக் கொடுத்து, அதைச் சிலகாலத்தில் நிதானமாகவும் மற்ற காலங்களில் வேகமாகவும் ஓடச்செய்கின்றன. அதன் இயக்கத்தைப்பற்றிக் கட்டளையிட யாருக்குத் தைரியம் உள்ளது? கீதை சொல்வது போல் , நம்முடையதெல்லாம் பலன்களை எதிர்பார்க்காமல் வேலை செய்வது ஒன்றுதான்.
தேசிய வாழ்க்கைக்குத் தேவையான உணவைக் கொடுங்கள், ஆனால் வளர்ச்சி அதைப் பொறுத்தது. அது வளர்வதற்கு யாரும் கட்டளையிட முடியாது,நம் சமூகத்தில் தீமைகள் அதிகமாக உள்ளன, ஆனால் அதுபோல் மற்ற ஒவ்வொரு சமூகத்திலும் தீங்குகள் இருக்கவே செய்கின்றன. இங்கு பூமி, சிலவேளைகளில் விதவைகளின் கண்ணீரால் நனைகிறது என்றால் ,அங்கே மேலை நாட்டின் காற்று திருமணமாகாத பெண்களின் ஏக்கப் பெருமூச்சால் நிறைந்துள்ளது. இங்கு வறுமை வாழ்க்கையின் ஒரு பெரிய சாபமாக இருக்கிறது, அங்கே ஆடம்பரக் களைப்பு அந்த இனத்தின் சாபமாக உள்ளது. இங்கே மனிதர்கள் தற்கொலையை நாடுகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு உண்ண எதுவும்இல்லை. அங்கே உணவு குவிந்து கிடப்பதால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தீமை எல்லா இடத்திலும் இருக்கிறது. அது தீராத வாத நோய் போன்றது. அதைக் காலிலிருந்து விரட்டுங்கள். தலைக்குப்போகும். அங்கிருந்து துரத்துங்கள், வேறு எங்காவது போகும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் என்று ஒவ்வோரிடமாகத் துரத்தலாம், அவ்வளவுதான்.ஆனால் குழந்தைகளே, தீமையை ஒழிப்பதுதான் உண்மையான வழி.
தீமையும் நன்மையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல் எப்போதும் சேர்ந்தே உள்ளன என்று நம் தத்துவம் போதிக்கிறது. ஒன்று வேண்டுமென்றால் மற்றதை ஏற்றாக வேண்டும். கடலில் ஓரிடத்தில் அலை எழுந்தால் மற்றோர் இடத்தில் பள்ளம் உண்டாகியிருக்கிறது. ஏன், வாழ்க்கையே தீமைதான். உயிரைக் கொல்லாமல் மூச்சுக்கூட விட முடியாது. யாரிடமிருந்தோ பறிக்காமல் ஒருபிடி சோறுகூட உண்ண முடியாது. இதுதான் நியதி, இதுதான் தத்துவம். எனவே தீமைகளை எதிர்ப்பதற்காகச் செய்யப்படுகின்ற பணிகள்யாவும் எந்தப் புற அளவுகோலாலும் அளக்கப்படக் கூடியவையல்ல, அவை அகம் சம்பந்தப்பட்டவை, மனிதனுக்கு மனிதன் வேறுபடக்கூடியவை என்பதைப் புரிந்துகொள்வது மட்டுமே நாம் செய்யக் கூடியது. எவ்வளவோ பெரியவை என்றெல்லாம் நாம் பேசினாலும் அத்தகைய பணிகள் சொந்தப் படிப்பினைக்காகவே தவிர, அவற்றால் தீமைகள் எல்லாம் உடனே அழிந்துவிடப் போவதில்லை.
தீமைக்கு எதிரான வேலையைப் பற்றிய முதல் கருத்து இதுதான்- அது நம்மை மேலும்மேலும் அமைதியானவர்களாக ஆக்க வேண்டும், கொள்கை வெறியை நம் ரத்தத்திலிருந்து அகற்ற வேண்டும். கொள்கை வெறியுடன் செய்யப்பட்ட சீர்த்திருத்தங்கள் எல்லாம் தங்கள் தோல்வியைத் தாமாகவே தேடித் கொண்டன என்பதை உலகின் வரலாறு நமக்குக் காட்டுகிறது. உரிமையையும் சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்காக நடைபெற்ற புரட்சிகளுள், அமெரிக்காவின் அடிமை முறை ஒழிப்புப் போரைவிடப் பெரிய ஒன்றைக் கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாது. உங்கள் எல்லோருக்கும் அதைப்பற்றித் தெரியும். ஆனால் அதன் விளைவுகள் என்ன? இன்றைக்கு அந்த அடிமைகள், அடிமைமுறையை ஓழிப்பதற்கு முன்னால் இருந்ததை விட நூறு மடங்கு மோசமான நிலையில் உள்ளனர் அடிமை முறையை நீக்குவதற்கு முன்பு இந்த அப்பாவி நீக்ரோக்கள் சிலருடைய சொத்துக்களாகவேனும் இருந்தார்கள் . சொத்துக்கள் அழிந்து போய்விடக் கூடாது என்ற அளவில் பராமரிக்கப்பட்டும் வந்தார்கள். இன்றைக்கோ அவர்கள் யாருடைய சொத்தும் இல்லை ,அவர்களுடைய உயிருக்கு மதிப்பே இல்லை. ஏதேதோ சாக்குப்போக்குகளைக் காரணம் காட்டி அவர்கள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள். அவர்களைச் சுட்டுக் கொல்கின்ற கொலைகாரர்களைத் தண்டிக்க எந்தச் சட்டமும் இல்லை . ஏனென்றால் அவர்கள் நீக்ரோக்கள் அவர்கள் மனிதர்கள் அல்ல, ஏன் ,அவர்கள் மிருகங்கள் கூடஅல்ல. சட்டத்தின் மூலமோ கொள்கை வெறியின் மூலமோ பலாத்காரமாகத் தீமையை நீக்க முற்பட்டால் விளைவு இது தான். நல்லது செய்வதற்கேயானாலும் கொள்கை வெறியுடன் செயல்பட்ட ஒவ்வோர் இயக்கத்தையும் வரலாறு நமக்கு இவ்வாறு தான் இனம் காட்டுகிறது. என் அனுபவமும் அதுவே. எனவே கண்டனக்குரல் எழுப்புகின்ற எந்த இயக்கத்திலும் என்னால் சேர முடியாது.
ஒவ்வொரு சமுதாயத்திலும் தீமைகள் உள்ளன. எல்லோருக்கும் இது தெரியும். இன்றைய குழந்தைகள் ஒவ்வொன்றும் இதை அறியும். அதுகூட மேடையேறி இந்து சமுதாயத்தில் நிலவுகின்ற பயங்கரத் தீமைகளைப்பற்றி ஒரு பெரிய சொற்பொழிவு நிகழ்த்த முடியும். இந்தியாவிற்கு வருகின்ற, கல்வியறிவற்ற மேலைநாட்டு யாத்தரிகன் ஒவ்வொருவனும் ஒரு ரயில் பயணத்திலேயே ஏதோ இந்தியாவையே எடை போட்டவன் ஆகிவிடுகிறான், பின்னர் இந்தியாவிலுள்ள பயங்கரத் தீமைகளைப்பற்றிப் பிரமாதமான சொற்பொழிவுகளையும் பொழிந்து விடுகிறான். தீமைகள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். தீமையை இனம்காட்டவும் எல்லோராலும் முடியும். ஆனால் பிரச்சனையிலிருந்து விடுபட வழி காண்பவன் அல்லவா மனித குலத்தின் நண்பன்! நீரில் முழ்கிக் கொண்டிருக்கின்ற சிறுவனும் தத்துவ அறிஞரும் போல்- தத்துவ அறிஞர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். தண்ணீரில் தத்தளித்த சிறுவனோ, முதலில் என்னைத் தண்ணீரிலிருந்து கரையேற்றுங்கள்” என்று கதறினான். அப்படித்தான் நமது மக்களும், நாங்கள் வேண்டிய அளவு சொற்பொழிவு கேட்டு விட்டோம், போதுமான அளவு சங்கங்களையும் பத்தரிகைகளையும் பார்த்துவிட்டோம். எங்களைக் கரையேற்றுவதற்குக் கைகொடுக்கும் மனிதன் எங்கே இருக்கிறான்? எங்களை உண்மையாகவே நேசிக்கும் மனிதன் எங்கு இருக்கிறான்? எங்களிடம் கருணை காட்டும் மனிதன் எங்கு இருக்கிறான் ? என்று கதறுகிறார்கள். அந்த மனிதன் தான் தேவைப்படுகிறான்.
இந்த இடத்தில்தான் நான் இந்தச் சீர்திருத்த இயக்கங்களிலிருந்து முற்றிலுமாக வேறுபடுகிறேன். ஒரு நூறு ஆண்டுகளாக அவர்கள் இங்கே இருக்கிறார்கள்.. மிக மோசமாக வசைமாரி பொழிகின்ற, மிகக் கேவலமாக நிந்தனை செய்கின்ற நூல்களைத் தோற்றுவிப்பதைத் தவிர இவர்களால் வேறு எந்த நன்மை செய்ய முடிந்தது? இறையருளால் இவை இல்லாமலிருந்தால் எவ்வளவோ நல்லதாயிருக்கும் ! இவர்கள் வைதீகர்களைக் கேலி செய்தார்கள், வெறுத்தார்கள், தூற்றினார்கள். வைதீகர்கள் இவர்களது போக்கைப் புரிந்து கொண்டதும் பதிலுக்குப் பதில் அதே பாணியில் திருப்பிக் கொடுத்தார்கள். விளைவு? நமது இனத்திற்கே வெட்கக்கேடான, நமது நாட்டிற்கே மானக்கேடான இலக்கியங்கள் நமது நாட்டின் ஒவ்வொரு மொழிகளிலும் உருவாயின. இதுவா சீர்திருத்தம்? இதுவா நாட்டைப் பெருமையின் பாதையில் அழைத்துச் செல்வது? யாருடைய தவறு இது?
நாம் சிந்திக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயமும் உள்ளது. இந்தியாவில் நாம் எப்போதும் அரசர்களாலேயே ஆளப்பட்டு வருகிறோம். அவர்களே நமது சட்டங்கள் அனைத்தையும் இயற்றினார்கள். இப்போது அரசர்கள் இல்லை, அவர்களுக்குப் பின்னர் அதைச் செய்வதற்கு யாரும் இல்லை. அரசாங்கத்திற்கு அந்தக் துணிவு இல்லை. ஏனெனில் பொதுமக்களின் கருத்து வளர்ச்சிக்கு ஏற்பவே அது தன் பாதைகளை வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தன் பிரச்சினைகளைத் தானே தீர்த்துக்கொள்ளத்தக்க ஆரோக்கியமான, ஆற்றல் மிக்கதான பொதுமக்கள் கருத்தை உருவாக்க நீண்ட, மிக நீண்ட காலமாகும். அதுவரையில் நாம் காத்திருக்கத்தான்வேண்டும். எனவே சமூகச் சீர்திருத்தம் என்ற பிரச்சினையை அணுகிப் பார்த்தோமானால் அது, சீர்த்திருத்தம் தேவைப்படுபவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்வியில்தான் முடியும். அவர்களை முதலில் உருவாக்குங்கள். அவர்கள்எங்கே இருக்கிறார்கள்? சிறுபான்மையினரின் அடக்கு முறையே உலகம் கண்டவற்றுள் மிகவும் கொடியது. ஏதோ சிலவற்றைத் தீமை என்று நினைக்கின்ற ஒரு சிலரால் நாட்டை முன்னேற்ற முடியாது. அந்த நாடு ஏன் முன்னேறக் கூடாது? முதலில் நாட்டு மக்களுக்குக் கல்வியை அளியுங்கள். பிறகு உங்கள் சட்டசபையை உருவாக்குங்கள். அதன்பிறகே உங்கள் சட்டம் தயாராக வேண்டும். முதலில் அதிகாரத்தை உருவாக்குங்கள் . அதிலிருந்து சட்டத்திற்கான ஆதரவு தானாகவே கிடைக்கும். மன்னர்கள் போய்விட்டார்கள். மக்கள்சக்தி என்ற அந்தப் புதிய ஆற்றல் எங்கே? புதிய அதிகாரம் எங்கே? அதைக் கொண்டுவாருங்கள். ஆகையால் சமுதாயச் சீர்த்திருத்தத்திற்குக் கூட முதலில் செய்ய வேண்டிய கடமை மக்களுக்குக் கல்வி அளிப்பதுதான். அந்தக் காலம் வரும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.
கடந்த நூற்றாண்டில் ஆர்ப்பரித்த சீர்திருத்தங்கள் எல்லாம் வெறும் ஆரவாரம் மட்டுமே. இந்த ஒவ்வொரு சீர்திருத்தமும் முதல் இரண்டு ஜாதிகளை மட்டுமே தொடுகிறது, மற்றவைகளைத் தொடுவதில்லை. விதவைத் திருமணப் பிரச்சினை இந்தியப் பெண்களுள் எழுபது சதவீதத்தினரைத் தொடுவதே இல்லை.இத்தகைய பிரச்சினைகள் எல்லாம் பாமர மக்களின் பணத்தால் கல்வியறிவு பெற்ற, உயர்ஜாதிப் பெண்களுக்காகவே பேசப்படுகிறது. இதைக் கவனத்தில் வையுங்கள். ஒவ்வொரு முயற்சியும் அவர்களின் சொந்த நன்மைக்காகவே செய்யப்படுகிறது. இது சீர்திருத்தம் ஆகாது. பிரச்சினையின் அடிமட்டத்திற்கு,அதன் வேருக்கே நீங்கள் செல்ல வேண்டும். இதையே நான் முற்றிலுமான, நுனி வரையிலான சீர்திருத்தம் என்று சொல்கிறேன். நெருப்பை அடியில் மூட்டுங்கள், அது மேல்நோக்கி எரியட்டும். அதிலிருந்து இந்திய நாடு உருவாகட்டும்,பிரச்சனைக்கான தீர்வு காண்பது அவ்வளவு சுலபமல்ல, ஏனெனில் அது பெரிது, பரந்தது. அவசரப்படாதீர்கள். பல நூறுஆண்டுகளாக இந்தப் பிரச்சனைகள் இருந்தே வருகின்றன.
புத்த மதத்தைப் பற்றியும் அதன் ஆஜ்ஞேய வாதத்தைப் பற்றியும் பேசுவது இப்போதெல்லாம் குறிப்பாக தென்னிந்தியாவில் ஒரு நாகரீகமாக இருக்கிறது. இன்று நம் நாட்டில் நிலவுகின்ற இழிநிலை ,புத்த மதம் விட்டுச் சென்றதுதான் என்பதுபாவம், அவர்களுக்குச் சிறிதும் தெரியவில்லை. புத்த மதம் நமக்கு விட்டுச் சென்ற பாரம்பரியம் இதுதான். புத்த மதம் பரவியதற்குக் காரணம் அதன் அற்புதமான நல்லொழுக்கக் கோட்பாடும் கௌதம புத்தரின் அற்புதமான ஆளுமைத் தன்மையுமே என்று நீங்கள் நூல்களில் படிக்கலாம். இந்த நூல்கள் எழுதியவர்களோ புத்த மதத்தின் எழுச்சி வீழ்ச்சி இவைப்பற்றிச் சிறிதும் படித்தறியாதவர்கள். பகவான் புத்தரிடம் எனக்கு அளவற்ற மதிப்புண்டு, பக்தியும் உண்டு. ஆனால், நான் சொல்வதைக் குறித்துக் கொள்ளுங்கள்: புத்த மதம் பரவியதன் காரணம் அதன் கொள்கைகளைவிட புத்தரின் ஆளுமையைவிட, கட்டப்பட்ட கோயில்களும், நிறுவப்பட்ட சிலைகளும், நாட்டு மக்களுக்கு முன் வைக்கப்பட்ட ஆடம்பரமான சடங்குகளும், விழாக்களுமே ஆகும். இவ்வாறுதான் புத்த மதம் வளர்ந்தது. மக்கள் தங்கள் வீடுகளில் ஆஹுதி அளித்து வந்த சிறிய ஹோம குண்டங்கள் புத்த மதத்தின் ஆடம்பரமான கோயில்கள் மற்றும் சடங்குகளின் முன் நிற்க முடியவில்லை. ஆனால் பின்னாளில் எல்லாமே இழிநிலையை அடைந்தன, கோடுகளின் மொத்த உருவமாயின. அதைப் பற்றி இங்கு என்னால் பேச முடியாது. அவைகளைப் பற்றி அறிய விரும்புவர்கள் தென்னிந்தியாவின் சிற்பங்கள் நிறைந்த அந்தப் பிரம்மாண்டமான கோயில்களில் ஏதோ சிறிது காணலாம். இதுதான் பௌத்தர்களிடமிருந்து நாம் பெற்ற பாரம்பரியம்.
அதன்பிறகு மகத்தான சீர்திருத்தவாதியாகிய சங்கராச்சாரியாரும் அவரது சீடர்களும் தோன்றினர். அன்றிலிருந்து இன்றுவரை இந்தியாவின் பாமர ஜனங்கள் வேதாந்த மதத்திற்கு, அது ஆரம்பத்திலிருந்த புனித நிலைக்கு மெள்ளமெள்ளத் திரும்பி அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சமூகத்திலிருந்த எல்லா தீமைகளையும் இந்தச் சீர்திருத்தவாதிகள் முழுமையாக நன்றாக அறிவார்கள், என்றாலும் அவர்கள் எதையும் நிந்திக்கவில்லை: உங்களிடம் இருப்பவை அனைத்தும் தவறானவை. அவைகளை வீசி எறிந்தே தீர வேண்டும் ”என்று சொல்லவில்லை. ஒருபோதும் அப்படி நடக்கவும்முடியாது.
இன்னும் முன்னூறு ஆண்டுகளுள் கிறிஸ்தவ மதம் ,ரோமானிய மற்றும் கிரேக்க மதங்களின் தாக்கத்தை விலக்கிவிடும் என்று என் நண்பரான டாக்டர் பரோஸ் கூறியிருப்பதைப் படித்தேன். ஐரோப்பாவையும் கிரீசையும் ரோமையும் பார்த்த ஒரு மனிதனின் பேச்சு அல்ல அவை. ரோமானிய , கிரேக்க மதங்களின் செல்வாக்கு இருக்கவே செய்கிறது; ப்ராடஸ் டென்ட் நாடுகளில்கூட அப்படியே உள்ளது; பெயர்கள் மாற்றப்படுகின்றன பழைய தெய்வங்களுக்குப் புதிய பெயர்கள் சூட்டப்பட்டுப் புதிய முறையில் வழிபடப்படுகின்றன, அவ்வளவுதான். அவர்கள் பெயரை மாற்றி இருக்கிறார்கள், பெண் தெய்வங்கள் மேரிகளாக ஆகியுள்ளனர்,ஆண் தெய்வங்கள் புனிதர்களாக ஆகியுள்ளனர். சடங்குகள் புதியதாக மாறியுள்ளன. பழைய பட்டமாகிய போன்டிபக்ஸ் மேக்ஸிமஸ் கூட இன்னும் இருக்கிறது.
எனவே திடீரென்று எந்த மாற்றமும் நிகழ முடியாது. சங்கராச்சாரியார் இதை அறிந்திருந்தார், ராமானுஜருக்கும் இது தெரியும்.அவர்களுக்கு இருந்த ஒரே வழி , இருக்கின்ற மதத்தை மெள்ளமெள்ள உயர்நிலைக்குக் கொண்டுவருவது ஒன்றே. இதைத் தவிர வேறு ஏதாவது முறையைப் பின்பற்றியிருந்தால் அவர்கள் ஏமாற்றுக் காரர்களாகி இருப்பார்கள். ஏனெனில் அவர்களது நெறியின் அடிப்படைக் கொள்கையே பரிணாமம்தான், அதாவது இத்தகைய பல்வேறு படிகள் மற்றும் நிலைகளின் வழியாக ஆன்மா உயர் லட்சியத்தை நோக்கிச் செல்கிறது என்பதுதான்.எனவே இந்தப் பல்வேறு படிகள் எல்லாம் தேவையானவை, உதவிகரமானவை. அவற்றை நிந்திக்க யாருக்குத் தைரியம் இருக்கிறது?
உருவ வழிபாடு தவறானது என்று கூறுவதைக் கேட்டுக்கேட்டுப் புளித்து விட்டது. இன்று இதைக் கேள்விப்படுகின்ற எல்லோருமே அதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமலே ஏற்றுக் கொள்கிறார்கள், நானும் ஒரு காலத்தில் அப்படிதான் நினைத்தேன் அதற்குத் தண்டனைபோல், எல்லாவற்றையும் உருவ வழிபாட்டின் மூலமே பெற்ற ஒருவரின் காலடியில் அமர்ந்து கற்க வேண்டிதாயிற்று. இங்கே நான் ராமகிருஷ்ண பரமஹம்சரைத்தான் குறிப்பிடுகிறேன். உருவ வழிபாட்டின் மூலம் இத்தகைய ராமகிருஷ்ண பரமஹம்சர்கள் உருவாகலாம் என்றால் உங்களுக்கு எது வேண்டும் ? சீர்திருத்தவாதியின் கொள்கையா அல்லது கணக்கற்ற உருவங்களா? பதில் சொல்லுங்கள். உருவ வழிபாட்டின் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சர்களை உங்களால் உருவாக்க முடியுமானால் இன்னும் ஆயிரக்கணக்கான உருவங்களைவைத்துக் கொள்ளுங்கள். அதற்கான ஆற்றலை உங்களுக்கு இறைவன் அருள்வாராக! உங்களால் முடிந்த எந்த வழியிலேனும் அவரைப் போன்ற மேலோரை உருவாக்குங்கள்.
என்றாலும் உருவ வழிபாடு நிந்திக்கப்படுகிறது. ஏன்? யாருக்கும் தெரியாது. ஏனென்றால் சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஏதோ யூதர்கள் சிலர் அதை நிந்தித்தார்கள் என்பதாலா? தங்கள் சொந்த விக்கிரகங்களைத்தவிர மற்ற எல்லோருடைய திருவுருவங்களையும் கண்டனம் செய்வது அவர்களுக்கு வழக்கமான ஒன்று. கடவுள் அழகியதோர் வடிவமாகவோ, அடையாள வடிவிலோ குறிக்கப்பட்டால் அது மிகவும் மோசமானது, அது பாவம் என்பான் யூதன்; அது பாவம். ஆனால் இரு புறமும் இரண்டு தேவதைகள் அமர்ந்திருக்க, மேலே மேகங்கள் பரவி நிற்க, கடவுளை ஒரு பெட்டியாக உருவகம் செய்தால் அது புனிதமானவை அனைத்திலும் புனிதமானது. கடவுள் ஒரு புறாவின் வடிவில் வந்தால் அது புனிதமானது; ஆனால் அவரே பசுவின் வடிவில் வந்தால் அது முட்டாள்களின் மூட நம்பிக்கை, அதைக் கண்டிக்க வேண்டும்! இதுதான் உலகின் போக்கு. அதனால்தான் ஒரு கவிஞர், மனிதர்களாகிய நாம் எவ்வளவு முட்டாள்கள்! என்றார் .அடுத்தவனின் கண்ணோட்டத்தில் உலகைப் பார்ப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது! அப்படிப் பார்க்க முடியாததுதான் மனித குலத்தின் சாபக்கேடாக உள்ளது. வெறுப்பு, பொறாமை, சண்டை, சச்சரவு அனைத்திற்கும் அதுதான் மூலக்காரணம்.
சிறுவர்களே, மீசை முளைத்த குழந்தைகளே, சென்னையைத் தாண்டிச் செல்லாத நீங்கள் எழுந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியத்தையுடைய முப்பது கோடி மக்களின் பின்னால் நின்றுகொண்டு அவர்களுக்குக் கட்டளையிட விரும்புகிறீர்கள்! வெட்கமாக இல்லை ?அத்தகைய அதர்மச் செயலிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் படிக்க வேண்டியவற்றை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்! மரியாதையற்ற சிறுவர்களே, வெறுமனே தாளில் சில வரிகளைக் கிறுக்கி, சில முட்டாள்களின்மூலம் அவற்றைப் பிரசுரித்துவிட்டால் ,நீங்கள் உலகிற்கே போதகராகிவிட்டீர்கள் என்று எண்ணமா? நீங்கள் சொல்வதுதான் இந்தியப் பொதுமக்களின் கருத்து என்றா நினைக்கிறீர்கள்! இதுவா உங்கள் எண்ணம்?
சென்னையின் சீர்திருத்தவாதிகளுக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும். நான் அவர்களிடம் பெருமதிப்பும் அன்பும் கொண்டிருக்கிறேன். அவர்களது பரந்த உள்ளத்திற்காகவும், தங்கள் நாட்டிடமும் ஏழைகளிடமும் தாழ்த்தப்பட்டவர்களிடமும் அவர்கள் கொண்டுள்ள அன்பிற்காகவும் நான் அவர்களை நேசிக்கிறேன். சகோதர பாசத்துடன் நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம் அவர்களுடைய வழி தவறு என்பதுதான். நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு, தோல்வி கண்ட வழி அது. நாம் ஏதாவது புதிய வழியை முயற்சி செய்வோமே!
இந்தியாவில் எப்போதாவது சீர்திருத்தவாதிகளுக்குக் குறைவு இருந்ததுண்டா? இந்தியாவின் வரலாற்றை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ராமானுஜர் யார்? சங்கரர் யார்? நானக் யார்? சைதன்யர் யார்? கபீர் யார்?தாதுயார்? ஒளி மிகுந்த நட்சத்திரக் கூட்டங்களின் வரிசைகள்போல், ஒருவர் பின்னால் ஒருவராக வந்த இந்த முதல்தர
ஆச்சாரியர்கள் எல்லாம் யார்? தாழ்ந்த குலத்தினரை எண்ணி ராமானுஜர் உருகவில்லையா? மிகவும் தாழ்ந்த குலத்தினரைத் கூடத் தமது நெறியில் அனுமதிப்பதற்கு அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபடவில்லையா? முகமதியர்களையும் தமது நெறியில் சேர்த்துக்கொள்ள அவர் முயலவில்லையா? இந்துக்களுடனும் முகமதியர்களுடனும் உறவாடி ,ஒரு புதிய நிலையைக் கொண்டுவர நானக் முயல வில்லையா? அவர்கள் எல்லோரும் முயன்றார்கள், அவர்களுடைய பணி இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது. வித்தியாசம் இதுதான்: அவர்கள் இன்றைய சீர்திருத்தவாதிகளைப்போல் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை ; இன்றைய சீர்திருத்தவாதிகளைப் போல் யாரையும் சபிக்கவில்லை. வாழ்த்துக்களை மட்டுமே அவர்களுடைய உதடுகள் மொழிந்தன. அவர்கள் ஒருபோதும் நிந்திக்கவில்லை. நம் இனம் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் மக்களிடம் கூறினார்கள். அவர்கள் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தார்கள்; பின்னர் மக்களை நோக்கி, இந்துக்களே, இதுவரை நீங்கள் செய்தவை எல்லாம் நல்லதே. ஆனால் என் சகோதரர்களே, அதைவிட இன்னும் நல்லவற்றைச் செய்வோம்” என்றே கூறினர். நீங்கள் தீயவர்களாக இருந்தீர்கள், இப்போது நல்லவர்களாவோம்”என்று அவர்கள் சொல்லவில்லை. . நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள். இப்போது மேலும் நல்லவர்கள் ஆவோம் என்றே கூறினார்கள். எவ்வளவு பெரிய வித்தியாசம்!
நம் இயல்பிற்கு ஏற்பவே நாம் வளர வேண்டும். வெளிநாட்டுச் சங்கங்கள் நம்மீது திணித்துள்ள செயல் முறைகளைப் பின்பற்ற முயல்வது வீண், அவ்வாறு நடக்கவும் முடியாது. அப்படி முடியாததற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். வளைத்து நீட்டி, கொடுமைப்படுத்துவதன் மூலம் நம்மை மற்ற நாடுகளின் அமைப்பில் உருவாக்க முடியாது. மற்ற இனங்களின் சமூக அமைப்புகளை நான் நிந்திக்கவில்லை; அவை அவர்களுக்கு நல்லது, நமக்கு அல்ல . அவர்களுக்கு இறைச்சியாக இருப்பது நமக்கு விஷமாகலாம். கற்க வேண்டிய முதல் பாடம் இது. தங்கள் பல்வேறு அறிவியல், மற்ற அமைப்புக்கள் மற்ற மரபுகளின் பின்னணியில் தற்போதைய அமைப்பு முறையை அவர்கள் பெற்று இருக்கிறார்கள், நமது பாரம்பரியத்திற்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் செயல்களின் பின்னணியில் அமைந்த, நமக்குச் சொந்தமான முறையில்தான் நாம் இயல்பாகச் செல்ல முடியும். நமது சொந்தப் பாதையில்தான் சுலபமாகச் செல்ல முடியும். அதை நாம் செய்தாக வேண்டும்.
எனது திட்டம்தான் என்ன? பழங்காலத்தின் மகத்தான ஆச்சாரியர்களுடைய கருத்துக்களைப் பின்பற்றுவதே. நான் அவர்களது செயல்களைப் படித்தேன். அவர்கள் மேற்கொண்ட பணிகளின் போக்கை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. அவர்கள் சமூகத்தின் மகத்தான ஆரம்பகர்த்தாக்கள். அவர்கள் மாபெரும் வலிமையும் தூய்மையும் வாழ்வும் தந்தவர்கள். அவர்கள் மிக அற்புதமான செயல்களைச் செய்தார்கள். நாமும் அற்புதமான வேலைகளைச் செய்தாக வேண்டும். சூழ்நிலைகள் கொஞ்சம் மாறியுள்ளன. எனவே நமது செயல்முறையும் சிறிது மாற வேண்டும் அவ்வளவுதான்.
வாழ்வில் ஒரு தனி மனிதன் கொண்டிருப்பது போல் ஒவ்வொரு நாடும் ஒரு தனிப் பண்பைப் பெற்றிருப்பதைக் காண்கிறேன். அதுவே அதன் மையம், அதுதான் ஆதார சுருதி, அதைச் சுற்றியே பல்வேறு இசையும் இயைபுடன் கலந்து இனிய பண் ஆகிறது. இங்கிலாந்தைப் போன்ற நாட்டில் அரசியல் அதிகாரம் ஆதாரமாக உள்ளது. மற்றொரு நாட்டில் கலை வாழ்க்கை முக்கியமாக உள்ளது. இப்படியே ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது. இந்தியாவில் மத வாழ்வே மையமாக, தேசிய வாழ்வு என்னும் பண்ணின் ஆதார சுருதியாக அமைந்துள்ளது. பரம்பரைபரம்பரையாக நூற்றாண்டுகளைக் கடந்து வந்த அந்தக் சொந்தத் தேசிய ஆதாரத்தை எந்த நாடாவது உதறிவிட முயலுமானால், அதன் போக்கிலிருந்து விலக முயலுமானால், அந்த முயற்சியில் வெற்றி காணுமானால் அந்த நாடு அழிந்துவிடும். எனவே மதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அரசியலையோ சமுதாயத்தையோ மற்ற எதையோ உங்கள் மையமாக உங்கள் தேசிய வாழ்வின் ஆதாரமாகக் கொண்டீர்களானால், நீங்கள் மறைந்துபோய் விடுவதுதான் அதன் விளைவாக இருக்கும். இதைத் தடுக்க வேண்டுமானால் உங்கள் எல்லா வேலைகளையும் மதம் என்ற அடிப்படையின் மூலமாகச் செய்யுங்கள். மதம் என்ற முதுகெலும்பின் வழியாக உங்கள் அனைத்து நரம்புகளும் அதிரட்டும்.
சமுதாய வாழ்வில் அதன் செயல்முறை விளைவைக் காட்டாமல் அமெரிக்கர்களிடம் மதத்தைப் போதிக்க முடியாது என்பதை நான் கண்டேன்.வேதாந்தம் கொண்டுவரக்கூடிய அற்புதமான அரசியல் மாற்றங்களைக் காட்டாமல் என்னால் இங்கிலாந்தில் மதத்தைப் பிராச்சாரம் செய்ய முடியவில்லை. அது போலவே இந்தியாவில் சமூகச் சீர்திருத்தம்கூட, அது ஒருவரது வாழ்வைக் எவ்வாறு மேலும் ஆன்மீகமயமாக்கும் என்பதை விளக்கித்தான் போதிக்கப்பட வேண்டும்; அரசியலைப் போதிக்க வேண்டுமானால், தேசம் வேண்டுகின்ற ஒரே விஷயமான ஆன்மீகத்தை அது எவ்வளவு தூரம் வளப்படுத்தும் என்பதை விளக்கிக் காட்டுவதன் மூலமே செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டியதைத், தானே தேர்ந்தெடுக்க வேண்டும். அதைப் போலவே ஒவ்வொரு நாடும். பல காலத்திற்கு முன்பே நாம் நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுத்துவிட்டோம், அதை நாம் பின்பற்றியாக வேண்டும். அதோடு, நாம் தேர்ந்தெடுத்தது ஒன்றும் மோசமானது அல்ல. ஜடப் பொருள் அல்லாமல் ஆன்மாவை, மனிதன் அல்லாமல் இறைவனைச் சிந்திக்க விரும்பியது அத்தனை மோசமான ஒன்றா? மறுவுலகத்தில் திடநம்பிக்கை, இந்த உலகத்தில் தீவிர வெறுப்பு, துறவின் அபரிமித ஆற்றல் கடவுளிடம் அசையா நம்பிக்கை.. அழியா ஆன்மாவில் மாறா நம்பிககை. - எல்லாம் உங்களிடம் உள்ளது. உங்களுள் யாராலாவது அதை மறுத்து விலக்க முடியுமா? நான் சவால் விடுகிறேன், உங்களால் முடியாது. சில மாதங்கள் உலகாயதம்பற்றிப் பேசுவதன் மூலம் நீங்கள் ஓர் உலகாயதவாதியாக மாறிவிட்டதாக என்னை நம்பவைக்க முயலலாம். ஆனால் உண்மையில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் உங்கள் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றால், சிறந்த ஆத்திகர்களாக என்னைத் தொடர்ந்து வருவீர்கள். உங்கள் சொந்த இயல்பை நீங்கள் எப்படி மாற்ற முடியும்?
இந்தியாவில் ஒவ்வொரு முன்னேற்றமும் மத எழுச்சியைத் தொடர்ந்தே வர முடியும். சமுதாயக் கருத்துக்களாலோ, அரசியல் கருத்துக்களாலோ மூழ்கடிக்குமுன் இந்தியாவை ஆன்மீகக் கருத்துக்களால் நிரப்புங்கள். நமது உபநிடதங்களிலும், நமது சாஸ்திரங்களிலும், நமது புராணங்களிலும் புதைந்து கிடைக்கின்ற அற்புதமான உண்மைகளை அந்த நூல்களிலிருந்து கொண்டுவர வேண்டும், ஆசிரமங்களிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும், காடுகளிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும், குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கத்திலிருந்து கொண்டு வர வேண்டும். அந்த உண்மைகள் வடக்கிலிருந்து தெற்குவரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை, இமயம் முதல் குமரிவரை, சிந்து முதல் பிரம்ம புத்திராவரை நெருப்பைப்போல் பரவுமாறு நாடு முழுவதும் அவற்றைப் பறைசாற்ற வேண்டும். இதுவே நாம் கவனம் செலுத்த வேண்டிய முதல் வேலை. ஒவ்வொருவரும் அதை அறியவேண்டும். ஏனெனில் இது முதலில் கேட்கப்பட வேண்டும் , பிறகு சிந்திக்கப்பட வேண்டும், பிறகு தியானிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் முதலில் கேட்கட்டும், தங்கள் சொந்த சாஸ்திரங்களிலேயே உள்ள மகத்தான உண்மைகளை மக்கள் கேட்பதற்கு உதவுபவர்களுக்கு அதை விடச் சிறந்த புண்ணியச் செயல் இன்று வேறில்லை.
இந்தக் கலியுகத்தில் செய்வதற்கு ஒரு செயல்தான் உள்ளது. யாகங்களாலும் கடின தவங்களாலும் இன்று எந்தப் பலனும் இல்லை. எஞ்சியுள்ள ஒரு செயல் தானம்தான் என்கிறார் வியாசர். ஆன்மீகத்தையும் ஆன்மீக ஞானத்தையும் அளிப்பது தானங்களுள் மிகவுயர்ந்தது, அடுத்தது உலக அறிவை அளிப்பது, அடுத்தது உயிரைக் காப்பது. நான்காவதாக வருவது உணவைத் தருவது. தானசீலம் மிக்க இந்த அற்புதமான இனத்தைப் பாருங்கள். ஏழையான மிக ஏழையான, இந்த நாட்டில் செய்யப்படுகின்ற வகைவகையான தானங்களைப் பாருங்கள். வடக்கிலிருந்து தெற்கிற்குப் பயணம் செய்கின்ற ஒருவன் பெறும் உபசாரத்தைப் பாருங்கள். நாட்டின் மிக நல்லது அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. அவனை ஒவ்வொருவரும் முற்றிலும் நண்பனைப் போலவே நடத்துகிறார்கள். எங்காவது ஒருபிடி உணவு இருக்கும்வரை ஒரு பிச்சைக்காரன்கூடப் பட்டினியால்சாக மாட்டான்.
தானசீலம் மிக்க இந்த நாட்டின் முதல் தானமான ஆன்மீக ஞானத்தை அளிப்பதை முதலில் மேற்கொள்ள வேண்டும். அந்தத் தானம் இந்தியாவின் எல்லைக்குள் மட்டுமே அடங்கிவிடக் கூடாது. அது உலகம் முழுவதும் பரவ வேண்டும். இதுதான் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்தியச் சிந்தனைகள் இந்தியாவைத் தாண்டி ஒருபோதும் சென்றதில்லை என்று சொல்பவர்களும் சரி, வெளிநாடுகளுக்குப் பிராச்சாரம் செய்வதற்காகச் சென்ற முதல் சன்னியாசி நான்தான் என்று கூறுபவர்களும் சரி, தங்கள் சொந்த இனத்தின் வரலாற்றை அறியாதவர்கள்.
இது திரும்பத்திரும்ப நடந்துள்ளது. உலகில் தேவை ஏற்பட்டபோதெல்லாம் வற்றாத இந்த ஆன்மீகப் பெருவெள்ளம் பொங்கிப் பாய்ந்து சென்று உலகை நிரப்புகிறது. போர்ப்பறையின் முழக்கங்களோடும் படைகளின் அணிவகுப்போடும் அரசியல் அறிவு தரப்படலாம் . நெருப்பு மற்றும் வாளின் துணையுடன் உலக அறிவும் சமுதாய அறிவும் தரப்படலாம். ஆனால் ஆன்மீக ஞானமோ, பிறர் காணாமல் எவ்வித ஓசையின்றி மெல்லெனப் பெய்தாலும் ரோஜா மலர்களை மலர்ந்து விகசிக்கச் செய்கின்ற பனித்துளிபோல், அமைதியான முறையில் மட்டுமே தர முடியும். திரும்பத் திரும்ப உலகத்திற்கு இந்தியா தந்து வந்துள்ள தானம் இதுவாகும்.
ஒரு மகத்தான இனம் உலகை வென்று, நாடுகளுக்கிடையே பாதைகளையும் பயணத்தையும் ஏற்படுத்தி, அவற்றை இணைக்கும் போது இந்தியா எழுந்து, ஒருங்கிணைந்த உலகத்தின் முன்னேற்றத்தில் தன் பங்கான ஆன்மீக சக்தியை அளித்து வருகிறது. புத்தர் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இது நிகழ்ந்தது. அதற்கான சாட்சியங்கள் சீனா, ஆசியா மைனர் மற்றும் மலாயா தீவுகளின் மையங்களில் இன்றும் காணப்படுகின்றன. கிரேக்கப் பெருவீரனான அலெக்சாண்டர், தன்வெற்றியால் ,,அன்று அறியப்பட்ட உலகின் நான்கு எல்லைகளையும் இணைத்தபோது இது நிகழ்ந்தது. அப்போது இந்திய ஆன்மீகம் உலகம் முழுவதிலும் பாய்ந்து பரந்தது..இன்று பெருமையடித்துக் கொள்கின்ற மேலைநாட்டு நாகரீகம் இப்படிச் சென்றதில் எஞ்சிய பகுதிதான் . அத்தகைய வாய்ப்பு இப்போது மீண்டும் வந்துள்ளது. இங்கிலாந்தின் அதிகாரம் உலக நாடுகளை, இதற்குமுன் எப்போதும் இல்லாத வகையில் இணைத்திருக்கிறது. ஆங்கிலேயர்களின் சாலைகளும் தொடர்பு வசதிகளும் உலகின் ஒரு மூலையிலிருந்து மறுமூலைவரை பரவியுள்ளது. ஆங்கிலேய அறிவுத்திறனின் காரணமாக இன்றைக்கு உலகம் இதுவரை கண்டிராத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.மனித வரலாறு கண்டிராத அளவிற்கு இன்று வியாபார மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அறிந்தோ அறியாமலோ இந்தியா உடனடியாக எழுகிறது. தனது ஆன்மீகச் செல்வங்களை மழையெனப் பொழிகிறது. அந்தப் பெருவெள்ளம் இந்தப் பாதைகளின் வழியாகப் பாய்ந்துசென்று உலகின் மறுகோடியை அடைகிறது.
நான் அமெரிக்கா சென்றது என் செயல் அல்ல, உங்கள் செயலும் அல்ல. இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற இறைவன்தான் என்னை அனுப்பினார்; என்னைப் போன்ற நூற்றுக்கணக்கானோரை எல்லா நாடுகளுக்கும் அனுப்பப் போகிறார். உலகின் எந்தச் சக்தியாலும் இதைத் தடுக்க முடியாது. இதையும் செய்தாக வேண்டும். உங்கள் மதத்தைப் பிராச்சாரம் செய்வதற்காக, நீங்கள் நாட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டும். சூரியனின் கீழ் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மனிதரிடமும் அதைப் பிரச்சாரம் செய்தாக வேண்டும். நாம் செய்ய வேண்டிய முதல் வேலை இதுதான். ஆன்மீக ஞானத்தைப் போதித்தால், அதன்பின்னர் உலக அறிவும் நீங்கள் விரும்புகின்ற மற்ற எல்லா அறிவும் உங்களைத் தொடர்ந்து வரும். ஆனால் மதத்தை விலக்கிவிட்டு வேறு எந்த அறிவைப் பெற நீங்கள் முயன்றாலும் இந்தியாவில் உங்கள் முயற்சி வீண் என்பதைக் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். அது மக்களிடம் எந்தக் தாக்கத்தையும் ஒரு போதும் ஏற்படுத்தாது. மகத்தான பௌத்த இயக்கத்தின் தோல்விக்குக்கூட இதுவும் ஒரு காரணம்.
எனவே என் நண்பர்களே, நம் சாஸ்திர உண்மைகளை இந்தியாவிலும் வெளியிலும் பிரச்சாரம் செய்ய நமது இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக இந்தியாவில் சில இயக்கங்களைத் துவக்குவதுதான் என் திட்டம். மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள்தான் தேவை. மற்ற எல்லாம் தயாராகிவிடும். ஆற்றல் மிக்க தீவிரமான, நம்பிக்கையுள்ள, மனசாட்சிக்கு மாறாக நடக்காத இளைஞர்கள் இத்தகைய நூறு பேர் போதும். உலகையே புரட்டி விடலாம். எல்லாவற்றைவிடவும் சங்கல்பம் வலிமை வாய்ந்தது. அதன்முன் எல்லாம் அடிபணிந்தே ஆக வேண்டும், ஏனெனில் அது கடவுளிடமிருந்து மட்டுமே வருகிறது. தூய, ஆற்றல் மிக்க சங்கல்பம் எல்லாம் வல்லது. உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லையா?
பரப்புங்கள், உங்கள் மதத்தின் மகத்தான உண்மைகளை உலகம் முழுவதும் பரப்புங்கள். உலகம் அவற்றிற்காகக் காத்திருக்கிறது. மக்களை இழிந்தவர்களாக்கும் கொள்கைகளே பல நூற்றாண்டுகளாகப் போதிக்கப்பட்டு வந்துள்ளன. மக்கள் எதற்குமே உதவாதவர்கள் என்று போதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதுமே, பாமரர்கள் என்றால் அவர்கள் மனிதர்களே அல்ல என்றுதான் அவர்களிடம் கூறப்பட்டு வந்துள்ளது. பல நூற்றாண்டுகளாகப் பயமுறுத்தி பயமுறுத்தியே அவர்கள் ஏறக்குறைய மிருகங்களாகிவிடும் நிலைக்குச் சென்றுவிட்டனர். ஆன்மா என்ற ஒன்றைப்பற்றிக் கேள்விப்பட அவர்கள் அனுமதிக்கப் படவே இல்லை. அவர்கள் ஆன்மாவைப்பற்றிக் கேள்விப்படட்டும்- தாழ்ந்தவருள் தாழ்ந்தவரிலும் ஆன்மா உள்ளது, அது இறப்பதோ பிறப்பதோ இல்லை , அந்த ஆன்மாவை வாள் வெட்ட முடியாது; நெருப்பு எரிக்க முடியாது. அது தோற்றமும் முடிவும் இல்லாதது, முற்றிலும் தூய்மையானது, எல்லாம் வல்லது, எங்கும் நிறைந்தது.
தொடரும்...
தொடர்ச்சி...
..
முதலில் உங்களிடமே உங்களுக்கு நம்பிக்கை வேண்டும். உங்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன? தங்கள் மதம், கடமை என்றெல்லாம் அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அந்த வித்தியாசம் என்னவென்று தெரிந்துவிட்டது. அது இதுதான்; ஆங்கிலேயன் தன்மை நம்புகிறான், நீங்கள் உங்களை நம்பவில்லை. தான் ஆங்கிலேயன், எனவே, தான் விரும்புகின்ற எதையும் தன்னால் செய்ய முடியும் என்பதை அவன் நம்புகிறான். அது அவனுள் இருக்கும் தெய்வீக சக்தியை வெளிப்படுத்துகிறது, அவனும் தான் விரும்பியதைச் செய்து முடிக்கிறான். ஆனால் உங்களால் எதுவுமே செய்ய முடியாது என்று தான் உங்களுக்குச் சொல்லப்படுகிறது, போதிக்கப்படுகிறது. நீங்களும் நாளுக்குநாள் எதற்குமே பயனற்றவர்களாகி வருகிறீர்கள். நமக்குத் தேவை வலிமையே; எனவே உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்.
நாம் பலவீனர்களானோம், அதனால்தான் ரகசியவாதங்களும் ரகசிய வித்தைகளுமாகிய அற்ப விஷயங்கள் எல்லாம் நம்மிடம் வந்தன. அவைகளில் சிறந்த உண்மைகூட இருக்கலாம். ஆனால் அவை ஏறக்குறைய நம்மை அழித்தேவிட்டன. உங்கள் நரம்புகளை வலிமையாக்கிக் கொள்ளுங்கள். இரும்பாலான தசையும் எஃகாலான நரம்புகளுமே நமக்குத் தேவை. காலங்காலமாக அழுதுவிட்டோம். இனியும் அழுகை கூடாது. சொந்தக் காலில் நில்லுங்கள், மனிதர்கள் ஆகுங்கள். மனிதனை உருவாக்குகின்ற ஒரு மதமே நமக்குத் தேவை. மனிதனை உருவாக்குகின்ற கொள்கைகளே நமக்குத் தேவை. எல்லா வகையிலும் மனிதனை உருவாக்கும் கல்வியே நமக்க வேண்டும். உண்மையை அறிந்து கொள்வதற்கான சோதனை இதோ இதுதான்: ஏதாவது ஒன்று உங்கள் உடலை ,அறிவை, ஆன்மீக உணர்வைப் பலவீனமாக்குமானா ல் அதனை விஷமென ஒதுக்குங்கள், அதில் உயிர்த் துடிப்பில்லை, அது உண்மையாக இருக்க முடியாது. உண்மையே வலிமை தரும். உண்மையே தூய்மை. உண்மையே எல்லா அறிவும். உண்மையே வலிமை தருவதாக இருக்கும், அறிவை ஒளிரச் செய்வதாக இருக்கும் அக ஆற்றலை வளர்ப்பதாக இருக்கும்.
இந்த ரகசிய வித்தைகளுள் ஏதோ சிறிய அளவில் உண்மை இருக்கலாம். ஆனாலும் அவை பொதுவாகப் பலவீனத்தையே வளர்க்கின்றன. அதில் நீண்டகால அனுபவம் உடையவன் நான். நான் சொல்வதை நம்புங்கள். அதிலிருந்து நான் பெற்ற ஒரே முடிவு அது பலவீனத்தைத் தருகிறது என்பதே. நான் இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறேன், ஏறக்குறைய இங்குள்ள எல்லா குகைகளிலும் தேடியிருக்கிறேன், இமயமலையில் வசித்திருக்கிறேன். தங்கள் நாள் முழுவதும் அங்கு வசித்தவர்களை எனக்குத் தெரியும். நான் என் நாட்டை நேசிக்கிறேன். இப்போதிருப்பதை விடத் என் நாட்டை நேசிக்கிறேன். இப்போதிருப்பதைவிடத் தாழ்ந்தவர்களாக, பலவீனர்களாக நீங்கள் மாறுவதை என்னால்பார்க்க முடியாது. உங்களுக்காகவும் உண்மையின் பொருட்டும் நான் கடமைப்பட்டுள்ளேன். ஆகவேதான் என் இனம் இழிநிலையை அடைவதை எதிர்த்து, ‘போதும், போதும் ”என்று கதறுகிறேன்.
பலவீனப்படுத்துகின்ற இந்த ரகசிய வித்தைகளை விட்டுத் தள்ளுங்கள். வலிமை உடையவர்களாகுங்கள். ஒளி வீசுகின்ற, வலிமை தருகின்ற, மேலான தத்துவமாகிய உங்கள் உபநிடதங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள். இந்த எல்லா ரகசிய வித்தைகளிலிருந்தும் எல்லா பலவீனப் பொருட்களிலிருந்தும் விலகிவிடுங்கள். உபநிடதத் தத்துவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மகத்தான உண்மைகள் மிகவும் எளிமையாகவே இருக்கின்றன. நீங்கள் உயிர் வாழ்வதுஎன்பது எவ்வளவு எளிமையான உண்மை! அதுபோல்தான் உபநிடத உண்மைகள் உங்கள் முன்னால் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். அப்போது இந்தியாவின் கதிமோட்சம் உறுதி.
இன்னும் ஒரு வார்த்தை, அத்துடன் என் சொற்பொழிவை முடித்துக் கொள்கிறேன். எல்லோரும் தேசப்பற்றைப்பற்றிப் பேசுகிறார்கள். நானும் தேசப்பற்றில் நம்பிக்கை உள்ளவன், தேசப்பற்றைப்பற்றி எனக்கென்று சொந்தக் கருத்தும் உண்டு. எந்த மகத்தான சாதனைகளுக்கும் மூன்று விஷயங்கள் அவசியமானவை. முதலில் இதயபூர்வமான உணர்ச்சி. அறிவிலும் ஆராய்ச்சியிலும் என்ன இருக்கிறது? அது சில அடிகள் செல்லும், பிறகு நின்றுவிடும் ஆனால் இதயத்தின் மூலம்தான் உத்வேகம் பிறக்கிறது. திறக்க முடியாத கதவுகளை எல்லாம் அன்பு திறக்கிறது. பிரபஞ்சத்தின் எல்லா ரகசியங்களுக்கும் வாசல் அன்புதான்.
எனவே உணர்ச்சி கொள்ளுங்கள், என் எதிர்கால சீர்திருத்தவாதிகளே, வருங்கால தேச பக்தர்களே நீங்கள் உணர்ச்சி கொள்கிறீர்களா? தேவர்கள் மற்றும் ரிஷிகளின் பரம்பரையில் வந்த கோடானுகோடி பேர் மிருகங்களுக்கு அடுத்த நிலையில் வாழும் கொடுமையை உணர்கிறீர்களா? பட்டினியால் இன்று லட்சக்கணக்கானோர் வாடுவதையும் , காலங்காலமாக லட்சக்கணக்கானோர் பட்டினியால் துடிப்பதையும் உணர்கிறீர்களா? இந்த நாட்டின்மீது ஒரு கரிய மேகம் போல் அறியாமை கவிந்துள்ளதை உணர்கிறீர்களா? இந்த உணர்ச்சி உங்களை அமைதியிழந்து தவிக்கச் செய்கிறதா? இந்த உணர்ச்சி
உங்களைத் தூக்கம் கெட்டு வாடச் செய்கிறதா? இந்த உணர்ச்சி உங்கள் ரத்தத்தில் கலந்து, உங்கள் நாடிநரம்புகள் தோறும் ஓடி, உங்கள் இதயத்துடிப்புடன் கலந்து துடிக்கிறதா? இது உங்களை ஏறக்குறைய பைத்தியமாகவே ஆக்கிவிட்டதா? அழிவுத்துன்பம் என்ற ஒரே கருத்து உங்களைப் பற்றிப்பிடித் துள்ளதா? உங்கள் பெயர், உங்கள் புகழ், உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள், உங்கள் சொத்து, ஏன் ,உங்கள் உடம்புபோன்ற எல்லாவற்றையும் மறந்து விட்டீர்களா? இதை நீங்கள் செய்துவிட்டீர்களா? இதுதான் தேசப் பற்று உடையவன் ஆவதற்கு முதற்படி, வெறும் முதற்படி இது.
சர்வ மத மகாசபையில் கலந்துகொள்வதற்காக வென்று நான் அமெரிக்கா போகவில்லை, உங்களுள் பலரும் இதை அறிவீர்கள். என்னுள், என் உயிரில் நிலவிய இந்த உணர்ச்சி என்ற பூதம் என்னை ஆட்டிப் படைத்தாலேயே நான் செல்ல நேர்ந்தது, என் நாட்டு மக்களுக்காக உழைப்பதற்கான வழி தேடி பன்னிரண்டு ஆண்டுகள் இந்தியா முழுவதும் அலைந்தும், வழி யேதும் கிடைக்காததால் தான் அமெரிக்கா சென்றேன் அப்பொழுது என்னை அறிந்த பெரும்பாலோருக்கு இது தெரியும். இந்த சர்வசமயப் பேரவையைப்பற்றி இங்கு யாருக்கு அக்கறை? என் தசையாகவும் ரத்தமாகவும் இருக்கின்ற மக்கள் இங்கே ஒவ்வொரு நாளும் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக யார் கவலைப்பட்டார்கள்? இதுதான் என் முதல்படி.
நீங்கள் உணரலாம். ஆனால் வெட்டிப்பேச்சில் உங்கள் ஆற்றல்களை வீணாக்குவதற்குப் பதிலாக ஏதாவது வழி கண்டுபிடித்தீர்களா? அவர்களை நிந்திப்பதற்குப் பதிலாக உதவி செய்வதற்கு, அவர்களின் துன்பங்களைத்தணிக்கின்ற சில இதமான வார்த்தைகளைக் கூறுவதற்கு, அவர்கள் நடைப்பிணங்களாகிக் கிடக்கும் கேவல நிலையிலிருந்து மீட்க ஏதாவது செயல்முறை வழி கண்டீர்களா?
அதோடும் தேசப்பற்று முடிந்து விடுவதில்லை. மலைகளையொத்த எதிர்ப்புகளை வெல்வதற்கான மனவுறுதி உங்களிடம் இருக்கிறதா? கைகயில் வாளுடன் இந்த உலகம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும், நீங்கள் சரி என்று நினைப்பதைச் செய்து முடிக்கின்ற தைரியம் உங்களிடம் இருக்கிறதா? உங்கள் மனைவியும் பிள்ளைகளும் எதிர்த்தாலும், உங்கள் பணம் எல்லாம் கரைந்து போனாலும், உங்கள் பெயர் அழிந்து செல்வம் எல்லாம் மறைந்தாலும் அதையே உறுதியாகப் பற்றி நிற்பீர்களா? அதையே உறுதியாகத் தொடர்ந்து, உங்கள் லட்சியத்தை நோக்கிச் செல்வீர்களா? பர்த்ருஹரி மன்னர் கூறியது போல், மகான்கள் பழிக்கட்டும் அல்லது புகழட்டும் அதிர்ஷ்ட தேவியான மகாலட்சுமி வரட்டும் அல்லது அவள் விரும்புகின்ற இடத்திற்குச் செல்லட்டும் , மரணம் இன்று வரட்டும் அல்லது நூறு ஆண்டுகள் கழித்து வரட்டும்- எது நேர்ந்தாலும் சத்தியத்தின் பாதையிலிருந்து அங்குலம்கூட விலகாதவனே உண்மை மனிதன் . இத்தகைய உறுதி உங்களிடம் இருக்கிறதா? உங்களிடம் இந்த மூன்று விஷயங்களும் இருக்குமானால் நீங்கள் ஒவ்வொருவரும் பிறர் பிரமிக்கத்தக்க செயல்களைச் செய்வீர்கள். செய்தித்தாள்களில் எழுத வேண்டியதில்லை, மேடையேறி பிரசங்கம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் முகமே ஒளி வீசித்துலங்கும். நீங்கள் ஒரு குகையுள் வாழலாம்; ஆனால் உங்கள் சிந்தனைகள் அந்தப் பாறைச் சுவர்கள் வழியாக ஊடுருவி வந்து உலகம் முழுவதுமே நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அதிர்ந்து பரவிக் கொண்டிருக்கும். என்றாவது அவை ஏதாவதொரு மூளையில் புகுந்து செயல்படும். உண்மையான, தூய்மையான லட்சியத்தைக் கொண்ட சிந்தனையின் ஆற்றல் அத்தகையது.
உங்களை நெடுநேரம் காக்க வைக்கிறேனோ என்று நான் அஞ்சுகிறேன். இன்னும் ஒரு வார்த்தை. என் நாட்டு மக்களே, என் நண்பர்களே, என் குழந்தைகளே, நம் நாடாகிய இந்தக் தேசியக் கப்பல் லட்சக்கணக்கானோரை வாழ்க்கைப் பெருங்கடலைக் கடத்தி அழைத்துச் சென்றிருக்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகளாக இது நல்ல முறையில் இந்தக் கடலைக் கடந்து வந்துபோய்க் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக லட்சோபலட்சம்பேர் பேரின்பமாகிய கரைக்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றனர். ஆனால் இன்றோ, ஒருவேளை உங்கள் சொந்தத் தவறின் காரணமாக இந்தக் கப்பல் சிறிது பழுதடைந்துள்ளது, ஓட்டைகள் விழுந்திருக்கிறது. அதற்காக அதைச் சபிப்பீர்களா? இந்த உலகத்தில் வேறு எதைவிடவும் அதிகமாக உழைத்துள்ள இந்த தேசியக் கப்பலின்மீது சாப மழையைப் பொழிவது உங்களுக்குத் தகுதியானதா? தேசியக் கப்பலில், நம் சமூகமாகிய அந்தக் கப்பலில் ஓட்டைகள் இருந்தாலும் நாம் அதன் பிள்ளைகள் அல்லவா! நாம் சென்று அந்த ஓட்டைகளை அடைப்போம். நம் இதய ரத்தத்தைக் கொட்டி, மகிழ்சியோடு அந்தக் காரியத்தைச் செய்வோம். முடியவில்லை என்றால் எல்லோரும் இறப்போம். நம் மூளைகளைக் கொண்டு அடைப்பான் செய்து அந்த ஓட்டைகளை அடைப்போம். ஆனால் அதை ஒரு போதும் நிந்திக்க வேண்டாம். இந்தச் சமூகத்திற்கு எதிராக ஒரு கடின வார்த்தைகூடப் பேசாதீர்கள், நான் அதை அதன் கடந்தகால மகோன்னதத்திற்காக நேசிக்கிறேன். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் தெய்வங்களின் குழந்தைகள், மேன்மை மிக்க முன்னோர்களின் குழந்தைகள். நான் எப்படி உங்களைச் சபிக்க முடியும்? ஒரு போதும் முடியாது.
எல்லா ஆசிகளும் உங்கள் மீது பொழிவதாக! என் குழந்தைகளே, என் திட்டத்தைச் சொல்வதற்காக உங்களிடம் வந்திருக்கிறேன். நீங்கள் அவற்றை ஏற்றுக்கொண்டால் நானும் உங்களோடு சேர்ந்து பணி புரியத்தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் அதைக் கேட்காமல் என்னை உதைத்து இந்தியாவிற்கு வெளியேதுரத்தினால் கூட நான் மறுபடியும் உங்களிடம் வருவேன். வந்து, நாம் எல்லோரும் மூழ்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்வேன். உங்களோடு ஒரு வனாகக் கூடியிருக்கவே நான் வந்திருக்கிறேன். மூழ்கத்தான் வேண்டுமென்றால், நான் எல்லோருமே சேர்ந்து மூழ்குவோம். ஆனால் நம் உதடுகளிலிருந்து சாபங்கள் வராமல் இருக்கட்டும்!
...
இந்திய ரிஷிகள்
-
பிப்ரவரி 11 விக்டோரியா ஹால்.
-
இந்திய ரிஷிகளைப்பற்றிப் பேச நினைக்கும் போது, என் மனம் ,வரலாறுகளில் எழுதப்படாத, மரபுகள் அதன் ரகசியங்களை அறிய முயன்று முடியாமல் போய்விட்ட அந்த அடர்ந்த கடந்தகாலத்தைநோக்கிச் செல்கிறது . இந்தியாவின் ரிஷிகள் கணக்கற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ரிஷிகளைத் தோற்றுவிப்பதைக் தவிர இந்த இந்து நாடு வேறு எதைத்தான் செய்து கொண்டிருக்கிறது? எனவே நான் அவர்களுள், சகாப்தத்தை உருவாக்கிய மகத்தான சிலருடைய வாழ்க்கை வரலாற்றை உங்களிடம் கூற விரும்புகிறேன், சரியாகச் சொல்வதென்றால், நான் அறிந்தவற்றை உங்கள்முன் வைக்கிறேன்.
அதற்கு முதற்படியாக நாம் நமது சாஸ்திரங்களைப் பற்றிச் சிறிது அறிந்துகொள்ள வேண்டும். நம்முடைய சாஸ்திரங்களில் உண்மையின் இரண்டு விதமான கோட்பாடுகள் உள்ளன; ஒன்று, நிரந்தரமானது; மற்றொன்று, அவ்வளவு அதிகாரபூர்வமானதல்ல, என்றாலும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகள், காலங்கள் மற்றும் இடங்களில் நம்மைக் கட்டுப்படுத்தக் கூடியவை.. நிரந்தரமான கோட்பாடுகள் ஆன்மாவின் இயல்பு, கடவுளின் இயல்பு, கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள உறவுகள் பற்றிக் கூறுகின்றன. இந்தக் கருத்துக்கள், நாம் சுருதிகள் என்று அழைக்கின்ற வேதங்களில் உள்ளன. அடுத்ததான கோட்பாடுகள் ஸ்மிருதிகள் என்று அழைக்கப்படுகின்றன. மனு, யாஜ்ஞவல்கியர் மற்றும் பலர் எழுதிய நூல்களிலும் புராணங்கள் மற்றும் தந்திரங்களிலும் இவை உள்ளன. இந்த ஸ்மிருதிகள் சுருதிகளுக்கு அடுத்த படியில் உள்ளவை. அவை சுருதிகளோடு ஏதாவது ஒருகருத்தில் மாறுபட்டால், சுருதிகளின் கருத்தைதான் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுவே நியதி. அதாவது மனிதனின்விதி, அவனது லட்சியம் போன்ற எல்லாமே வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றின் செயல்முறை விளக்கங்கள் ஸ்மிருதிகளிலும் புராணங்களிலும் உள்ளன.
சாதாரண வழிகாட்டுதலுக்கு வேதங்களே போதுமானவை. ஆன்மீக வாழ்வைப் பொறுத்தவரையில் அதில் உள்ளதைவிட அதிகமாகச் சொல்லவும் முடியாது, அதிகமாக அறிந்து கொள்ளவும் முடியாது. அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் அங்கே சொல்லப்பட்டுள்ளன. ஆன்மா நிறைநிலையை அடைவதற்குத் தேவையான உபதேசங்கள் அனைத்தும் சுருதிகளில் முழுமையாக உள்ளன. அவற்றின் விளக்கங்களைக் காலத்திற்குக்காலம் ஸ்மிருதிகள் தருகின்றன.
சுருதிகளில் உள்ள உண்மைகளைக் குறித்து வைத்த ரிஷிகளுள் பெரும்பாலானோர் ஆண்கள், சில பெண்களும் இருக்கிறார்கள்; இது சுருதியின் மற்றொரு சிறப்புத்தன்மை. அவர்கள் எப்போது பிறந்தார்கள் என்பன போன்ற விவரங்கள் மிகக் குறைவாகவே நமக்குத் தெரியும். ஆனால் அவர்களுடைய மிகச் சிறந்த சிந்தனைகள், மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் எல்லாம் நம் நாட்டின் புனித இலக்கியமான வேதங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன, மாறாக, ஸ்மிருதிகளில் தனிப்பட்டவர்களின் பல விவரங்கள் உள்ளன. அவற்றைப் படிக்கும்போது பிரமிக்க வைக்கின்ற, மகோன்னதமான, மனத்தில் பதிகின்ற, உலகையே அசைக்கவல்ல மனிதர்கள் நம் கண்முன் அப்படியே நிற்பது போலுள்ளது. சில இடங்களில் அவர்களது உபதேசங்களை விட அவர்களே நம் மனத்தில் விசுவரூபம் எடுத்து நிற்கின்றனர்.
நமது மதம் அருவ -உருவக் கடவுளைப் போதிக்கிறது - இது நாம் புரிந்துகொள்ள வேண்டியதொரு வினோதமாகும். உருவமற்ற ஒன்றைப் பற்றிய எண்ணற்ற விதிகளையும் அதே வேளையில் எண்ணற்ற உருவங்களைப் பற்றியும் போதிக்கிறது, ஆனால் நம் மதத்தின் அடிப்படை ஊற்று சுருதிகளிலேயே, வேதங்களிலேயே உள்ளது. அவை முழுக்கமுழுக்க நிர்க்குண நிலையைக் கூறுகின்றன. மகத்தான அவதார புருஷர்கள், தேவ தூதர்கள் போன்ற அனைவரும் ஸ்மிருதிகளிலும் புராணங்களிலும்தான் வருகிறார்கள்.
நமது மதத்தைத் தவிர, உலகின் பிற மதங்கள் ஒவ்வொன்றும் அதை உருவாக்கிய ஒருவரது அல்லது சிலரது வாழ்க்கையையே நம்பியிருக்கின்றன. கிறிஸ்தவ மதம் ஏசுவின் வாழ்க்கையின் மீது கட்டப்பட்டுள்ளது; இஸ்லாம் முகமதுவின் வாழ்விலும், புத்த மதம் புத்தரின் வாழ்வின்மீதும், சமண மதம் ஜீனர்களின் வாழ்க்கைமீதும் கட்டப்பட்டுள்ளது. இப்படியே எல்லா மதங்களும், இந்த மாமனிதர்களுக்கான வரலாற்று ஆதாரங்கள் என்று அவர்கள் கூறிக்கொள்கின்ற கூற்றுக்களை ஒட்டி, இந்த மதங்களுக்குள் வேண்டிய அளவு சண்டைசச்சரவுகள் நிலவவே செய்யும்; அது எதிர்பார்க்கக் கூடியதுதான். என்றாவது இந்த மனிதர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள்ஆட்டம் காணுமானால், அந்த மதங்களும் வீழ்ந்து தூள்தூளாகிவிடும்.
இத்தகையதொரு விதியிலிருந்து நாம் தப்பித்துக் கொண்டோம். ஏனெனில் நமது மதம் மனிதர்களை அல்லாமல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது,நாம் நமது மதத்திற்குக் கட்டுப்படுகிறோம் என்றால் அதன் காரணம், அது ஒரு மகானின் அதிகாரத்திலிருந்து வந்தது என்பதனால் அல்ல, ஏன் , ஓர் அவதார புருஷரின் அதிகாரத்திலிருந்து வந்தது என்பதால்கூட அல்ல. ஸ்ரீகிருஷ்ணர் வேதங்களுக்கு அதிகாரி அல்ல ,வேதங்களே ஸ்ரீகிருஷ்ணருக்கு அதிகாரி. என்றென்றைக்கும் நிலைத்திருப்பவையான வேதங்களின் மகத்தான பிரச்சாரகர் என்பதே ஸ்ரீகிருஷ்ணரின் பெருமை. இதே நிலைதான் மற்ற அவதாரங்களுக்கும், மற்ற நமது ரிஷிகளுக்கும்.
நமது முதல் கோட்பாடு, மனிதன் நிறைநிலையை அடைவதற்கும் முக்தி பெறுவதற்கும் தேவையான அனைத்தும் வேதங்களில் உள்ளன என்பதாகும். புதிதாக நீங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியாது. எல்லா அறிவுக்கும் லட்சியமானதொரு முழு ஒருமைக்கு அப்பால் உங்களால் போக முடியாது. வேதங்களில் அந்த ஒருமை ஏற்கனவே அடையப்பட்டுவிட்டது. அந்த ஒருமையைக் கடந்து செல்வது என்பது முடியாத காரியம். தத் த்வம் அஸி(நீ அதுவாக இருக்கிறாய்) என்பது எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதே மத அறிவு முழுமை பெற்று விட்டது, இது வேதங்களில் தான் உள்ளது.காலம், இடம் பல்வேறான சந்தர்ப்பங்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மக்களுக்கு அவ்வப்போது வழிகாட்ட வேண்டியது மட்டுமே எஞ்சியிருந்தது. பழைய அதே புராதன வழியில் மக்களை வழிகாட்டிச் செல்ல வேண்டியிருந்தது. அதற்காகவே இந்த மகத்தான ஆச்சாரியர்களும் மாபெரும் ரிஷிகளும் வந்தார்கள், ஸ்ரீகிருஷ்ணரின் அந்தப் பிரபலமான சொற்கள் இதைத் தெளிவாக விளக்குகின்றன; எப்போதெல்லாம் தர்மம் குன்றி அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம், , தர்மத்தைக் காப்பதற்காக என்னை நானே படைத்துக் கொள்கிறேன், எல்லா ஒழுக்கக் கேடுகளையும் ஒழிப்பதற்காக அவ்வப்போது நான் வருகிறேன். இதுதான் இந்தியக் கருத்து.
தொடர்வது என்ன? ஒருபுறம், எந்தக் காரணத்தையும் சாராமல், அதைவிடக் குறைவாக, எவ்வளவுதான் மகத்தானவர்களாக இருந்தாலும் எந்த ரிஷிகளையோ, எவ்வளவு அறிவுத்திறம் மிக்கவர்களாக இருந்தாலும் எந்த அவதார புருஷர்களையோகூட அதிகாரத்திற்காக நம்பி இருக்காமல், தன் சொந்த அடித்தளத்தின் மீது நிலைத்து நிற்கின்ற நிரந்தர உண்மைகள் உள்ளன. இது இந்தியாவில் ஒரு தனிப்பெரும் நிலை என்று நாம் துணிந்து கூற முடியும். நாம் உறுதியாகச் சொல்வதெல்லாம், வேதாந்தம் மட்டுமே உலகம் தழுவிய மதமாக இருக்க முடியும், ஏற்கனவே இருக்கின்ற உலகம் தழுவிய மதம் அது ஒன்றே என்பதுதான். ஏனெனில் அது தனி மனிதர்களை அல்ல, உண்மைகளையே போதிக்கிறது. தனி மனிதன் மீது எழுப்பப்பட்ட மதம் எதுவாக இருந்தாலும் அது மனிதகுலம் முழுமைக்குமான ஒரு மதமாக இருக்க முடியாது, நம் சொந்த நாட்டிலேயே எத்தனையோ மாமனிதர்களைக் காண்கிறோம். ஒரு சிறிய நகரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். பல்வேறு மக்கள் தங்கள் மன அமைப்பிற்கு ஏற்ப பலரைத் தங்கள் தலைவராகக் கொண்டாடுவதைக் காணலாம். அப்படியிருக்க முகமது ஆகட்டும்,, புத்தர் ஆகட்டும்,, ஏசு ஆகட்டும்- ஒரு மனிதரை உலகம் முழுவதற்கும் மாதிரி மனிதராக எப்படிஏற்றுக்கொள்ள முடியும்?? அந்த ஒருவரிடமிருந்து, ஒரு மனிதரிடமிருந்து மட்டும் வந்தால் தான் நல்லொழுக்க நியதி, நீதிநெறி, ஆன்மீகம், மதம் எல்லாமே உண்மையாக இருக்கஇயலும் என்று எப்படிக் கொள்ள முடியும்? வேதாந்த மதத்திற்கும் இத்தகைய தனிப்பட்ட மனிதர்களின் அத்தாட்சி தேவையில்லை; மனிதனின் அழியா இயல்பே அதன் அத்தாட்சி, அவனதுநிலையான ஆன்மீக ஒருமையை அடிப்படையாகக் கொண்டதே அதன் நீதிநெறி, அவை ஏற்கனவே இருப்பவை, ஏற்கனவே அடையப்பட்டவை.
இனிமறுபுறம், மக்களுள் மிகப் பெரும் பாலோருக்கு ஒரு லட்சிய மனிதன் தேவை என்பதை அன்றே நம் மகான்கள் உணர்ந்திருந்தனர். அவர்களுக்கு ஏதாவது ஓர் உருவக் கடவுள் கண்டிப்பாக வேண்டும். உருவமற்ற கடவுளை எதிர்த்து முழக்கம் செய்த அதே புத்தர் மறைந்து ஐம்பதுஆண்டுகளுக்குள், அவரது சீடர்கள் அவரையே ஒரு கடவுளாக ஆக்கிவிட்டார்கள், உருவக்கடவுள் அவசியம். ஆனால் உருவக் கடவுள்களை வழிபடுவதற்குப் பதிலாக, ஏன், அதைவிடச் சிறப்பான ஒன்று, இந்த உலகத்தில் அவ்வப்போது தோன்றி நம்மிடையே உலவுகின்ற நடமாடும் தெய்வங்களை வழிபடுவது. ஏனெனில் வீண் கற்பனைகளான இந்த உருவக் கடவுளருள் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் பேரும் வழிபடத் தகுதியற்றவர்களே. ஆனால் எந்த கற்பனைக் கடவுளையும் விட, நமது கற்பனைப் படைப்புகளைவிட, அதாவது, நம்மால் கற்பனையில் உருவாக்க முடிந்த எந்தக் கருத்தையும்விட இந்த நடமாடும் தெய்வங்கள் வழிபடத் தகுந்தவர்கள். நீங்களோ நானோ கற்பனையில் உருவாக்க முடிகின்ற எந்தக் கருத்தையும்விட ஸ்ரீகிருஷ்ணர் மகத்தானவர். நீங்களோ நானோ சிந்தித்து உருவாக்க முடிகின்ற எந்த லட்சியத்தையும் விட புத்தர் என்பது மிகவுயர்ந்த, உயிர்த்துடிப்பு மிக்க, நிதரிசனமானதொரு கருத்து. எனவே கற்பனைக் கடவுள்களை விலக்கி வைத்து விட்டுக்கூட, மனித குலம் அவர்களைப் போற்றி வழிபடுகிறது.
இதை நமது ரிஷிகள் அறிந்திருந்தார்கள். எனவே இந்த மாமனிதர்களையும் அவதார புருஷர்களையும் இந்தியர்கள் அனைவரும் வழிபட அவர்கள் அனுமதித்திருந்தனர்.. அவதாரங்களுள் மிகச் சிறந்தவராகிய ஸ்ரீகிருஷ்ணர் இன்னும் ஒருபடி மேலேசெல்கிறார்; எந்த மனிதனிடமாவது அசாதாரணமான ஆன்மீக சக்தி வெளிப்படுமானால், நான் அங்கே இருக்கிறேன் என்பதை அறிந்துகொள். என்னிடமிருந்தே அந்தச் சக்தி வெளிப்படுகிறது; என்கிறார் அவர். உலகம் முழுவதிலும் உள்ள அவதார புருஷர்களையும் இந்துக்கள் வணங்குவதற்கான கதவை இந்தக் கருத்து திறந்துவிடுகிறது.
எந்த நாட்டில் வேண்டுமானாலும் தோன்றிய எந்த மகானையும் ஓர் இந்து வழிபட முடியும். கிறிஸ்தவர்களின் சர்ச்சுக்கும் முகமதியர்களின் மசூதிக்கும் சென்று நாம் வழிபடுகிறோம். இது நல்லது. ஏன் வழி படக் கூடாது ? நான் முன்பே சொல்லியது போல் நம் முடையது உலகம் தழுவிய மதம். எல்லா கருத்துக்களையும் தன்னுள் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு அது பரந்தது. தற்போது உலகில் காணப்படுகின்ற மத லட்சியங்கள் அனைத்தையும் அதில் உடனேயே சேர்த்துக் கொள்ளலாம்.அது மட்டுமின்றி, எதிர்காலத் தில் வரப்போகின்ற லட்சியங்களையும் சேர்த்து அணைத்துக்கொள்வதற்கு நம்மால் அமைதியாகக் காத்திருக்கவும் முடியும். ஏனெனில் வேதாந்த மதத்தின் கரங்கள் எண்ணற்றவை.
இதுதான் ஏறக்குறைய ரிஷிகள் மற்றும் அவதாரம் பற்றிய நமது கருத்தாக உள்ளது. இவர்களுக்கு அடுத்த நிலையிலும் சிலரை நாம் காண்கிறோம். வேதங்களில் ரிஷி என்ற சொல் திரும்பத்திரும்ப ப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்தச் சொல் மிகவும் பரவலாக உள்ளது. இந்த ரிஷிகள் மிகுந்த அத்தாட்சியை உடையவர்கள். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ரிஷி என்பதற்கு ‘மந்த்ர த்ரஷ்டா ” அதாவது மந்திரத்தைக் கண்டவர் என்பது பொருள். மதம் உண்மை என்பதற்கு நிரூபணம் என்ன? மிகப் பழங்காலத்திலேயே இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. புலன்களால் அதை நிரூபிக்க முடியாது என்பதே பதில்.யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ - லட்சியத்தை அடையாமல் எங்கிருந்து சொற்களும் எண்ணமும் திரும்பி வருகிதோ, ந தத்ர சக்ஷீர்கச்சதிநேவாக்கச்சதி நோ மன: அங்கே கண்கள் போக முடியாது, மனம் போக முடியாது, எந்தப் புலன்களும் போக முடியாது, இதுதான் காலங்காலமாகச் சொல்லப்ட்டு வந்த பதில்.
ஆன்மா உள்ளது, கடவுள் இருக்கிறார், அழிவற்ற வாழ்க்கை , மனிதனின் லட்சியம் இவை போன்ற எதற்கும் புற இயற்க