ஆன்ம அனுபூதி
-
உபநிடதங்களுள் மிகவும் எளிமையானதும், மிகவும் கவிதைநயம் செறிந்ததாகவும் நான் கருதுகின்ற கடோபநிடதத்திலிருந்து ஒரு பகுதியைப் படித்துக் காட்டுகிறேன். சர் எட்வின் ஆர்னால்ட் கடோபநிடதத்தை, மரணத்தின் ரகசியம் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அதை உங்களுள் சிலர் படித்திருக்கலாம்.
உலகம் முதலில் எப்படித் தோன்றியது என்று ஆரம்பித்து, பிரபஞ்சத்தின் படைப்புவரை சென்ற ஆராய்ச்சி, புற நோக்கில் திருப்திகரமான பதில் கிடைக்காததால், எவ்வாறு அகமுகமாகத் திரும்பியது என்பதைப் பற்றி முந்தைய சொற்பொழிவில் பார்த்தோம். கடஉபநிடதம் மனஇயல் ரீதியாக இந்தப் பிரச்சினையை அணுகி, மனிதனின் அக இயற்கையைப்பற்றி அறிய முயல்கிறது.
புறவுலகை யார் படைத்தது, அது எப்படி உருவாகியது, என்பதே முதலில் கேள்வியாக இருந்தது. பிறகு கேள்வி வேறாக மாறியது: மனிதனை வாழவும் இயங்கவும் வைப்பது எது? அவன் இறக்கும்போது அது என்ன ஆகிறது? என்பதே அந்தக் கேள்வி.
முதலில் தோன்றிய தத்துவ மேதைகள் பவுதீக மூலக்கூறுகளை ஆராய்ந்து அதன்மூலமாக அதன் இறுதி உண்மையைக் கண்டுபிடிக்க முயன்றார்கள். கடைசியில், இந்தப் பிரபஞ்சத்தை ஆள்கின்ற பெரும் சக்திகொண்ட ஆட்சியாளர் ஒருவர் இருக்கிறார் என்ற எல்லைவரையே அவர்களால் செல்ல முடிந்தது. அந்த ஆட்சியாளர் மிகப்பேராற்றல் படைத்த ஒரு மனிதன் மட்டுமே என்ற ரீதியில்தான் அவர்களின் முடிவு இருந்தது. ஆனால் அது முழு உண்மையாக இருக்க முடியாது, மிஞ்சிப் போனால் அதில் ஓரளவு உண்மை இருக்கிறது எனலாம். இந்தப் பிரபஞ்சத்தை நாம் மனித நிலையிலேயே பார்க்கிறோம். எனவே நம் கடவுளும் நமக்கு மனித உருவாகத் தோன்றுகிறார்.
ஒரு பசு தத்துவம் பேசுவதாகவும் அதற்கு மத உணர்வு இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். அதன் பிரபஞ்சம் பசுப் பிரபஞ்சமாகவும், பிரச்சினைக்கு உரிய தீர்வு பசு சம்பந்தமான தீர்வாகவுமே இருக்கும். நாம் காண்கின்ற கடவுளை அதனால் காண முடியாது. பூனைகள் தத்துவ ஞானிகளானாலும் இது போல்தான் ஆகும்; அதாவது, பூனைப் பிரபஞ்சம், பூனைத் தீர்வு, பூனைக் கடவுள்! ஆகவே பிரபஞ்சத்தைப் பற்றிய நம்முடைய விளக்கம், முழு உண்மையாக இருக்க முடியாது என்பது தெரிகிறது. அது மட்டுமல்ல. நம் கருத்து பிரபஞ்சம் முழுவதையும் தழுவியதாகவும் இல்லை. பிரபஞ்சம் முழுவதையும் தழுவாத கருத்து சுயநலக் கருத்தே ஆகும். அத்தகைய சுயநலக் கருத்தை ஏற்றுக்கொள்வது மாபெரும் தவறு.
பிரபஞ்சத்தைப்பற்றி புறத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் கருத்தில் குறைபாடு உள்ளது. முதலாவது, நாம் பார்க்கும் பிரபஞ்சம் நமது பிரபஞ்சம்; உண்மையைப் பற்றிய நமது நோக்கு அது. ஆனால் உண்மையை புலன்களின் மூலம் நாம் அறிய முடியாது; புரிந்துகொள்ள முடியாது. ஐம்புலன்களைக் கொண்ட உயிர்களின் நோக்கில்தான் நாம் பிரபஞ்சத்தை அறிகிறோம். நமக்கு இன்னுமொரு புலன் கிடைக்குமானால், நம்மைப் பொறுத்தவரை பிரபஞ்சமே மாறிவிடும். நமக்குக் காந்தசக்திப் புலன் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நம்புலன்களால் இப்போது உணர முடியாத கோடிக்கணக்கான சக்திகளை அப்போது நாம் ஒருவேளை உணரக்கூடும். நமது புலன்கள் எல்லைக்கு உட்பட்டவை; மிகவும் குறுகிய எல்லைக்கு உட்பட்டவை. இந்த எல்லைகளுக்குள்தான் நாம் பிரபஞ்சம் என்று சொல்வது இருக்கிறது. அந்தப் பிரபஞ்சப் பிரச்சினைக்கு, நம்முடைய சிற்றறிவுக்கு எட்டிய கடவுள்கருத்துதான் சமாதானமாக இருக்கிறது. ஆனால் முழுப் பிரச்சினைக்கும் அது தீர்வாகாது.
மனிதன் அந்த நிலையிலேயே நின்றுவிட முடியாது. அவன் ஒரு சிந்தனை ஜீவி. எல்லா பிரபஞ்சங்களையும் முற்றிலுமாக விளக்குவதான ஒரு தீர்வையே அவன் விரும்புகிறான். மனிதர்கள், கடவுள், மற்றுமுள்ள உயிர்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஓர் உலகத்தைக் காணவும், எல்லா நிகழ்ச்சிகளையும் விளக்குகின்ற ஒரு தீர்வைப் பெறவும்தான் அவன் விரும்புகிறான்.
முதலில் வேண்டுவது, எல்லா பிரபஞ்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பிரபஞ்சத்தைக் கண்டடைவதே. அதைப் புலன்களால் உணர முடிந்தாலும் இல்லையென்றாலும், இருப்பின் இந்த எல்லா நிலைகளின் ஊடேயும் ஊடுருவிச் செல்வதான, தன்னளவில் தனிப்பொருளான ஒன்றை நாம் கண்டுபிடிக்க வேண்டும். கீழுலகம் மற்றும் மேலுலகங்கள் அனைத்திற்கும் பொதுவான ஒன்றை நாம் கண்டுபிடித்து விட்டால் நமது பிரச்சினை தீர்ந்துவிடும். எல்லா இருப்புக்கும் அடிப்படை ஒன்று உண்டு என்பதை வெறும் தர்க்கரீதியாக நாம் புரிந்துகொள்ள முடிந்தாலும்கூட இந்தப் பிரச்சினைக்கான தீர்வை ஓரளவு நெருங்கிவிடுவோம். ஆனால் இந்தத் தீர்வு, நாம் காண்கின்ற, அறிகின்ற இந்த உலகின் வழியாகவே மட்டும் கிடைக்க முடியாது. ஏனெனில் நாம் காணும் உலகம் எல்லைக்கு உட்பட்டதே அல்லவா!
இன்னும் ஆழ்ந்து சிந்திப்பதன் மூலமே, நாம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். மையத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக வேறுபாடுகளும் மாறுபாடுகளும் தோன்றுகின்றன என்பதையும், மையத்தை நெருங்கநெருங்க ஒருமையை நெருங்குவதையும் ஆரம்பச் சிந்தனையாளர்கள் கண்டுபிடித்தார்கள். ஒரு வட்டத்தின் மையத்தை நெருங்க நெருங்க, ஆரங்கள் ஒன்றுசேரும் இடமும் நெருங்குகிறது. மையத்திலிருந்து விலகவிலக, ஆரங்களின் இடைவெளியும் அதிகரித்துக் கொண்டே போகிறது. புறவுலகம் மையத்திலிருந்து வெகுதூரத்தில் இருப்பதால், எல்லா நிகழ்ச்சிகளும் ஒன்றுசேர்வதற்கான ஒரு பொது இடம் அதில் இல்லை. மிஞ்சிப்போனால் புறவுலகம் என்பது நிகழ்ச்சிகளில் ஒரு பகுதி என்று மட்டும்தான் சொல்ல முடியும். இருப்பின் பல்வேறு நிலைகளான மன உலகம், அற உலகம், அறிவு உலகம் என்று வேறு பகுதிகளும் இருக்கின்றன. இவற்றுள் ஒன்றை மட்டும் ஆராய்ந்து, பிரச்சினைக்கு முழுத் தீர்வையும் காண முயல்வது என்பது முடியாத காரியம்.
எனவே வாழ்க்கையின் எல்லா நிலைகளும் எந்த மையத்திலிருந்து கிளம்புகின்றனவோ, அந்த மையத்தில் நின்று கொண்டு, பிரச்சினைக்குத் தீர்வு காண முயல வேண்டும். அதுதான் சரி. அந்த மையம் எங்கே இருக்கிறது? அது நம்முள்தான் இருக்கிறது. பழங்கால ரிஷிகள் ஆழமாக, இன்னும் ஆழமாக ஆராய்ந்து, கடைசியில், மனித ஆன்மாவின் மையம்தான் பிரபஞ்சத்தின் மையமும் ஆகும் என்று கண்டறிந்தனர். எல்லா நிலைகளும் மனித ஆன்மா என்ற அந்த ஒரு மையத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. அதுதான் பொது இடம், அங்கே நின்றுகொண்டுதான் பொதுவான தீர்வை நாம் காண முடியும்.
ஆகவே இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தது யார் என்ற கேள்வி, தத்துவரீதியாகப் பொருளற்றது. அந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதிலும் பயனற்றதாகவே இருக்கிறது.
இந்தப் பிரச்சினையைக் கடோபநிடதம் உருவகம் மூலம் விளக்கியிருக்கிறது. பழங்காலத்தில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அவன் ஒரு யாகம் செய்தான். அந்த யாகத்தில் அவன் தனது உடைமைகளையெல்லாம் தானம் செய்ய வேண்டியிருந்தது. அவன் மனப்பூர்வமாக இந்த யாகத்தைச் செய்யவில்லை. புகழையும் பெருமையையும் அடைவதற்காக மட்டுமே செய்தான். அதனால் தனக்குப் பயனில்லாதவற்றை அவன் தானம் செய்தான்; அதாவது, குருடான, நொண்டியான, மலடான, வயதான பசுக்களையே தானமாகக் கொடுத்தான்.
அந்தப் பணக்காரனுக்கு நசிகேதன் என்றொரு மகன் இருந்தான். தன்னுடைய தந்தை நியாயமற்றதைச் செய்வதையும், தாம் எடுத்துக்கொண்ட விரதத்தை மீறுவதையும் அவன் கண்டான். ஆனால் தந்தையிடம் என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. இந்தியாவில், குழந்தைகளுக்கு அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். ஆகவே நசிகேதன் மிகுந்த மரியாதையுடனும் பணிவுடனும் தந்தையை அணுகி, அப்பா, உங்கள் யாகத்தில் நீங்கள் எல்லாவற்றையுமே தானமாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. என்னை யாருக்குத் தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டான்.
இந்தக் கேள்வியால் மிகவும் வெறுப்படைந்த தந்தை, மகனே, நீ என்ன சொல்கிறாய்? தந்தை, மகனைத் தானமாகக் கொடுப்பதா? என்று கேட்டான். நசிகேதன் விடாமல் மேலும் இரண்டு முறை அதே கேள்வியைத் திரும்பத்திரும்பக் கேட்டான். அதனால் கோபமடைந்த தந்தை, உன்னை நான் எமனுக்குக் கொடுக்கிறேன் என்று பதிலாளித்தான். நசிகேதன் மரண தேவனான எமனிடம் போனான் என்று கடோபநிடதத்தில் கதை தொடர்கிறது.
முதலில் மரணமடைந்த மனிதனே எமன் ஆனான். அவன் சொர்க்கத்திற்குச் சென்று, பித்ருக்களுக்கு அதிபதியானான். நல்லவர்கள் இறந்தபின் எமனிடம் சென்று அவனுடன் நீண்ட காலம் வாழ்கிறார்கள். எமன் என்ற பெயருக்குத் தகுந்தாற்போல் அவன் மிகவும் தூய்மை, புனிதம், ஒழுக்கம் எல்லாம் நிறைந்த நல்லவன்.
நசிகேதன் எமனுலகம் சென்றான். தேவர்களும் சில வேளைகளில் வெளியே போவதுண்டு. எனவே நசிகேதன் மூன்று நாட்கள் காத்திருக்க நேர்ந்தது. மூன்று நாட்களுக்குப் பின் எமன் திரும்பி வந்தான். நசிகேதன் காத்திருப்பதைக் கண்ட அவன், அறிவில் சிறந்த, மதிப்பிற்குரிய விருந்தாளியான நீ உணவொன்றும் இல்லாமல் மூன்று நாட்களாக இங்கே காத்துக் கொண்டிருக்கிறாயே! ஓ பிராமணனே! உனக்கு என் நமஸ்காரங்கள்; எனக்கு நன்மை உண்டாகட்டும். நீ வந்த சமயம் நான் இங்கே இல்லாததற்கு மிகவும் வருந்துகிறேன். அதற்குப் பரிகாரம் செய்துவிடுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு வரமாக மூன்று நாட்களுக்கு மூன்று வரங்கள் உனக்குத் தருகிறேன்; கேள் என்று அன்போடு நசிகேதனிடம் கூறினான். நசிகேதனும், என் தந்தைக்கு என் மீதுள்ள கோபம் மறைய வேண்டும், நீங்கள் என்னை இங்கிருந்து போக அனுமதித்தவுடன் அவர் என்னை அன்புடன் வரவேற்க வேண்டும்; இதுவே என் முதல் வரம் என்று கேட்டான். எமன் இந்த வரத்தை முழுவதும் அளித்தான்.
மனிதர்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு யாகத்தைப்பற்றி அறிய வேண்டும் என்பதே நசிகேதனின் இரண்டாவது வரமாக இருந்தது. வேதங்களின் சம்ஹிதைப் பகுதியில் காணப்படும் மிகப் பழைய கருத்து சொர்க்கத்தைப் பற்றியதே என்பதைக் கண்டோம். அந்தச் சொர்க்கத்தில் உள்ளவர்கள் ஒளிபொருந்திய உடலுடன் பித்ருக்களோடு வாழ்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் இன்னும் பல்வேறு கருத்துக்கள் வந்தன. அவையும் திருப்தி அளிப்பனவாக இல்லை. இன்னும் உயர்ந்த ஏதோ ஒன்று தேவையாக இருந்தது. சொர்க்க வாழ்க்கை இந்த உலக வாழ்க்கையிலிருந்து அதிகம் வேறுபட்டதாக இருக்காது. மிஞ்சிப்போனால், சொர்க்க வாழ்க்கை என்பது ஆரோக்கியமான செல்வந்தன் ஒருவனுடைய வாழ்க்கையைப் போல்தான் இருக்கும். அங்கே அளவற்ற புலனின்பங்களும் நோய் அறியாத திடமான உடலும் எல்லோருக்கும் கிடைக்கும். அவ்வளவுதான். அது நமது இந்த உலகம் போலவே தான் இருக்கும்; இன்னும் கொஞ்சம் நேர்த்தியானதாக இருக்கும். ஜடமான புறஉலகம் பிரச்சினையைத் தீர்க்காது என்பது நாம் அறிந்த விஷயம். ஆகவே எந்தச் சொர்க்கத்தாலும் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. ஜடப்பொருள் என்பது இயற்கையின் மிகமிகச் சிறிய ஒரு பகுதியே என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே இந்த உலகத்தால் தீர்க்க முடியாத பிரச்சினையை, இந்த உலகத்தைப் போல் பன்மடங்கு உலகங்களாலும் தீர்க்க முடியாது. நமக்குத் தெரிந்த இயற்கையின் மிக அதிகமான பகுதி ஜடப்பொருள் அல்ல.
உதாரணமாக, புற உலகின் ஜடப்பொருட்களோடு ஒப்பிட்டால், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் நம்முடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் அல்லவா பெரும் பங்கு வகிக்கின்றன! இப்படித் தீவிரமாகச் செயல்படும் இந்த உள்ளுலகம் எவ்வளவு பிரம்மாண்டமானது! இதனுடன் ஒப்பிடும்போது புலனுலகம் மிகவும் சிறியது! தொடு உணர்ச்சி, சுவை, காட்சி என்று புலனின்பமே எல்லாம் என்று சாதிப்பதுதான் இந்தச் சொர்க்க கருத்தின் தவறு. ஆகவே சொர்க்கத்தைப் பற்றிய இந்தக் கருத்து எல்லோருக்கும் முழுத் திருப்தியை அளிக்கவில்லை. உண்மை இப்படி இருந்தாலும், மனிதர்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு யாகத்தைப்பற்றித் தெரிந்து கொள்வதையே நசிகேதன் இரண்டாவது வரமாகக் கேட்டான். இப்படிப்பட்ட யாகங்கள் தேவர்களைத் திருப்திப்படுத்தி, இவற்றைச் செய்யும் மனிதர்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற கருத்து வேதங்களில் இருந்தது.
எல்லா மதங்களையும் ஆராய்ந்து பார்த்தால், பழமையானது என்றால் அது புனிதமானது என்ற கருத்து அவை எல்லாவற்றுள்ளும் பரவி நிற்பதைக் காணலாம். உதாரணமாக, இந்தியாவில் எங்கள் முன்னோர்கள் எழுவதற்குப் பூர்ஜ மரத்தின் மெல்லிய பட்டைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். காலப்போக்கில் காகிதம் செய்யக் கற்றுகொண்டார்கள். ஆனால் இன்னும் பூர்ஜ பட்டைகள் புனிதமாகவே கருதப்பட்டு வருகின்றன. பழங்காலத்தில் சமைக்க உபயோகித்த பாத்திரங்கள் பல மாறுதல்களை அடைந்தபோது, பழைய பாத்திரங்கள் புனிதமானவை ஆகிவிட்டன. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இந்த எண்ணம் இவ்வளவு இல்லை. உலர்ந்த மரக் குச்சிகளை ஒன்றோடொன்று உரசித் தேய்த்து நெருப்பை உண்டாக்கும் பழக்கம் பல்லாயிரம் வருடங்களுக்கும் முற்பட்டது. இருந்தாலும், யாகங்கள் செய்வதற்குத் தீ உண்டாக்க இன்றும் இந்த முறையைத் தவிர வேறு முறைகளைப் பயன்படுத்துவதே இல்லை.
ஆசிய ஆரியரின் மற்றொரு கிளையினரும் இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டவர்களாகவே இன்றும் இருக்கிறார்கள். ஆசிய ஆரியர்கள் மின்னலில் இருந்து நெருப்பை உண்டாக்குவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இந்தப் பழக்கத்தைக் காட்டுவதற்காக, இவர்களுடைய தற்காலச் சந்ததியினர் இன்னும் இதே முறையில் நெருப்பு உண்டாக்குவதையே விரும்புகின்றனர். பல புதுப் பழக்கங்களை அவர்கள் கற்றுக் கொண்டாலும், பழைய பழக்கங்களை அப்படியே வைத்திருக்கிறார்கள், அவை புனிதமாகி விடுகின்றன. ஹீப்ருக்களின் விஷயமும் இப்படியே. அவர்கள் பாடம்செய்யப் பெற்ற மிருகத் தோலில் எழுதிக் கொண்டிருந்தார்கள். இப்போது காகிதத்தில் எழுதுகிறார்கள். ஆனாலும் மிருகத்தோலை மிகவும் புனிதமாக நினைக்கிறார்கள். எல்லா நாடுகளுமே இப்படித்தான்.
இப்போது நாம் புனிதமாக நினைக்கும் ஒவ்வொரு சடங்கும் வெறும் பழைய பழக்கம்தான். வேத யாகங்களும் இந்த வகையைச் சேர்ந்தவையே. காலப்போக்கில் புதிய வாழ்க்கை முறைகளைக் கண்டுபிடித்ததால் கருத்துக்களில் மிகவும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும் பழைய பழக்கங்கள் போகவில்லை. அவ்வப்போது மக்கள் அவற்றைச் செய்து வந்தனர், அவை புனிதம் வாய்ந்தவை ஆயின.
நாளடைவில், ஒரு குழுவினர் இந்த யாகங்களை நடத்துவதைத் தங்கள் தொழிலாகக் கொண்டனர். இவர்களே பு÷õரகிதர்கள். இவர்கள் யாகத்தைப்பற்றிச் சிந்தித்தனர். அவர்களுக்கு யாகமே எல்லாமாக இருந்தது. தேவர்கள் இந்த யாகங்களின் நறுமணங்களை நுகர்வதற்காக வந்தனர், யாகங்களின் சக்தியால் இந்த உலகில் எதையும் சாதிக்க முடியும் என்று கருதப்பட்டது. சில குறிப்பிட்ட ஆஹுதிகளை அளிப்பதாலும், சில தோத்திரங்களை ஓதுவதாலும், குறிப்பிட்ட வகையில் ஹோம குண்டங்களை அமைப்பதாலும் தேவர்கள் எல்லாவரங்களையும் அளிப்பார்கள். ஆகவே எந்த வகையான யாகத்தைச் செய்வதன் மூலம் ஒருவன் சொர்க்கத்தை அடைய முடியும் என்று நசிகேதன் கேட்டான். இந்த இரண்டாவது வரத்தையும் எமன் உடனடியாக அளித்தான். அத்துடன், அந்த யாகம் அதற்குப் பின்னர் நசிகேதனின் பெயராலேயே வழங்கும் என்ற வாக்குறுதியையும் அளித்தான்.
இப்போதுதான் மூன்றாவது வரம் வருகிறது. இங்கிருந்துதான் சரியாக உபநிடதம் ஆரம்பிக்கிறது. எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை; மனிதன் இறந்தபின் சிலர், அவன் இருக்கிறான் என்கிறார்கள், வேறு சிலர், அவன் இல்லை என்று கூறுகிறார்கள், இதை உங்களிடமிருந்து இதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று கேட்டான் நசிகேதன். எமனைப் பயம் பிடித்துக்கொண்டது. மற்ற இரண்டு வரங்களையும் அவன் மிகவும் சந்தோஷமாகவே அளித்தான். ஆனால் இப்போதோ நசிகேதனிடம், நசிகேதா, பண்டைய தேவர்களாலேயே இந்த ரகசியத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த நுண்ணிய ரகசியம், புரிந்துகொள்வதற்கு அவ்வளவு சுலபமானதல்ல. வேறு ஏதாவது கேள்; இந்த விஷயத்தில் என்னை வற்புறுத்தாதே, விட்டுவிடு என்று வேண்டினான்.
நசிகேதன் இந்த விஷயத்தில் மிகவும் உறுதியாக இருந்தான். காலதேவனே! இந்த விஷயத்தில் தேவர்களுக்கே சந்தேகம் இருக்கிறது; இதைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமல்ல என்று நீங்கள் கூறுவது உண்மைதான். ஆனால் இந்த விஷயத்தைத் தெளிவாக உபதேசிப்பதற்கு உங்களைவிட வேறு யாரும் எனக்குக் கிடைக்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வரத்திற்கு ஈடான வேறு வரமும் இல்லை என்று அவன் எமனிடம் கூறினான்.
அதற்கு எமன், நசிகேதா, நூறு வருடங்கள் வாழக்கூடிய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், பசுக்கள், யானைகள், குதிரைகள், தங்கம் இவை எல்லாவற்றையும் கேள். பூலோகத்தில் சக்கரவர்த்தியாக இருந்து, விரும்பும் காலம்வரை வாழ வேண்டும் என்று கேள். செல்வத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் இணையாக நீ நினைக்கும் எந்த வரத்தை வேண்டுமானாலும் கேள். இந்தப் பரந்த பூமியில் ஓர் அரசனாக இரு. உனது எல்லா ஆசைகளையும் நான் நிறைவேற்றிக் கொள்ளமுடியாத ஆசைகளை நிறைவேற்றும்படிக் கேள். சாதாரண மனிதனால் பெற முடியாத இந்த தேவகன்னிகள், இந்த ரதங்கள் , தேவ கானங்கள் எல்லாவற்றையும் நீ பெறுமாறு செய்கிறேன். நசிகேதா, இவற்றையெல்லாம் அடைந்து இன்புறுவாய்; மரணத்திற்குப் பின் என்ன ஆகிறது என்பதை மட்டும் கேட்காதே என்று வேண்டினான்.
நசிகேதன் அதற்கு விடையாக, ஓ மரண தேவனே, இந்த இன்பங்கள் எல்லாம் புலன்களின் சக்தியை அரித்து விடுகின்றன. நீண்ட ஆயுள் என்பதுகூட மிகக் குறுகிய காலந்தான். இந்தக் குதிரைகள், ரதங்கள், கானங்கள், நாட்டியங்கள் எல்லாம் உங்களிடமே இருக்கட்டும். செல்வத்தால் மட்டுமே மனிதன் திருப்தி அடைய மாட்டான். சாகும்போது செல்வம் கூடவா வருகிறது? எங்கள் ஆயுளின் அளவு நீங்கள் விதித்தபடிதான். எனவே நான் கேட்ட வரத்தையே நான் வேண்டுகிறேன். என்று தீர்மானமாகக் கூறினான்.
இந்தப் பதிலால் எமன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். நசிகேதா, பூரணத்துவம் வேறு, இன்பங்களை அனுபவிப்பது வேறு. இவை இரண்டும் வெவ்வேறு லட்சியங்கள் உடையவை. ஆகவே மனிதர்களை வெவ்வேறு பாதைகளில் இவை செலுத்துகின்றன. பூரணத் துவத்தைத் தேர்ந்தெடுப்பவன் தூய்மை அடைகிறான். இன்பங்களை நாடுபவன் உண்மையான லட்சியத்தை இழக்கிறான். மனிதனின் முன் பூரணத்துவம், இன்பம் ஆகிய இரண்டு லட்சியங்களும் வருகின்றன. அறிவொளி இரண்டையும் ஆராய்ந்து, ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தி அறிகிறான். இன்பத்தைவிடப் பூரணத்துவமே உயர்ந்தது என்று அறிந்து, பூரணத்துவத்தையே அவன் தேர்ந்தெடுக்கிறான். முட்டாளோ உடல்சுகத்தை விரும்பி, இன்பத்தைத் தேர்ந்தெடுக்கிறான். வெளிப்பார்வைக்கு மட்டுமே விரும்பத் தக்கவையாகத் தோன்றும் பொருட்களைப்பற்றி யோசித்து, புத்திசாலித்தனமாக அவற்றை நீ ஒதுக்கிவிட்டாய் என்று நசிகேதனைப் பாராட்டினான். பிறகு நசிகேதனுக்கு உபதேசிக்க ஆரம்பித்தான்.
துறவு மற்றும் வைதீக தர்மம் பற்றிய மிகவும் வளர்ச்சியடைந்த கருத்து இங்கே நமக்குக் கிடைக்கிறது. இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசைகளை வெற்றி கொள்ளாமல் உள்ளத்தில் உண்மை பிரகாசிக்காது. புலனின்பங்கள் ஒவ்வொரு கணமும் ஆர்ப்பரித்து, நம்மை வண்ணங்கள், சுவை, தொடுஉணர்ச்சி போன்ற இந்தப் பயனற்ற புலனின்பங்கள் மற்றும் புறப் பொருட்களுக்கு அடிமையாக்கி, புறவுலகிற்கு இழுத்துச் செல்கின்றன. இவற்றிற்கு நாம் அடிமையாகாதது போல் எவ்வளவு பாசாங்கு செய்தாலும், இவற்றை நம்மால் விட முடிவதில்லை. இந்த நிலை நீடிக்கும்வரை நம் உள்ளங்களில் உண்மை எவ்வாறு பிரகாசிக்க முடியும்? எமன் கூறினான்: செல்வங்களின் மயக்கத்தில் முட்டாள்தனமாக மூழ்கியிருக்கும் அறிவிழந்தவனின் மனத்தில், எல்லாவற்றிற்கும் அப்பாலுள்ளதன் சிந்தனை எழாது. இந்த உலகம் இருக்கிறது; மறு உலகம் இல்லை என்று எண்ணியவாறு அவர்கள் மீண்டும்மீண்டும் என்கீழ் வருகின்றனர். இந்த உண்மை, புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானது. இடைவிடாமல் கேட்டாலும் பலரால் இதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதைப் புரிந்துகொள்வதற்கு, சொல்பவனும் சிறந்தவனாக இருக்கவேண்டும், கேட்பவனும் சிறந்தவனாக இருக்க வேண்டும். குருவும் சிறந்தவராக இருக்கவேண்டும். சீடனும் தகுதி படைத்தவனாக இருக்க வேண்டும். இது உணர வேண்டிய உண்மையே தவிர, வாதப் பிரதிவாதங்களுக்கு இங்கே இடமில்லை. ஆகவே வீண் தர்க்கத்தால் மனத்தைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
ஒவ்வொரு மதமும் நம்பிக்கையை வற்புறுத்துகிறது என்பது நாம் அறிந்ததே. கண்மூடித்தனமாக நம்பு என்றே நமக்குப் போதிக்கப்படுகிறது. இந்தக் கண்மூடித் தனமான நம்பிக்கை, சந்தேகமில்லாமல் ஆட்சேபத்திற்கு உரியதுதான். ஆனால் இதை ஆராய்ந்து பார்த்தால், இதற்குப் பின்னால் ஒரு மகத்தான உண்மை மறைந்திருப்பது நமக்குத் தெரிய வருகிறது. அந்த உண்மையைப் பற்றித்தான் இப்போது இந்த உபநிடதத்தில் நாம் படிக்கப் போகிறோம்.
வீண் தர்க்கங்கள் கடவுளை அறிய நமக்கு உதவி புரிவதில்லை. ஆகவே வீண் தர்க்கங்களால் மனத்தைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அவர் உணரக் கூடியவரே தவிர, தர்க்கங்களால் அறியக் கூடியவர் அல்ல. வாதம், தர்க்கம் எல்லாம் சில அனுபவங்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இந்த அனுபவங்கள் இல்லாமல் தர்க்கம் இருக்க இடமில்லை. நாம் ஏற்கனவே அனுபவித்த சில உண்மைகளை ஒப்பிடுவதே தர்க்கம். இப்படி அனுபவித்த இந்த உண்மைகள் ஏற்கனவே இல்லையென்றால் தர்க்கத்திற்கு இடமில்லை. புற விஷயங்களைப் பொறுத்தவரையில் இது உண்மையானால் அக விஷயங்களிலும் இது ஏன் உண்மையாகக் கூடாது? வேதியியல் நிபுணர், சில ரசாயணப் பொருட்களைக் கலந்து, சில முடிவுகளைக் காண்கிறார். இது ஓர் உண்மை. நாம் இதைப் பார்க்கிறோம், உணர்கிறோம். ரசாயண சம்பந்தமான நம்முடைய தர்க்கங்களுக்கு இதையே அடிப்படையாகவும் பயன்படுத்திக் கொள்கிறோம். பவுதீகமும் மற்ற விஞ்ஞானங்களிலும்கூட இதே முறைதான் பின்பற்றப்படுகிறது.
சில உண்மைகளை அனுபவிப்பதே, உணர்வதே எல்லா அறிவுக்கும் அடிப்படையாக இருக்கிறது. இந்த அடிப்படையின் மீதுதான் நாம் நமது தர்க்கங்களையும் வாதங்களையும் அமைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் பெரும்பாலோர், குறிப்பாக தற்காலத்தில், ஆன்மீக விஷயங்களில் அத்தகையதோர் அனுபவ அடிப்படை சாத்தியமில்லை, வீண் தர்க்கங்களால்தான் ஆன்மீகத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். விந்தையான விஷயம்!
ஆன்மீகம் என்பது அனுபவித்தறிய வேண்டிய உண்மையே தவிர, வெறும் வார்த்தை ஜாலமல்ல. நாம் நமது ஆன்மாவை ஆராய்ந்து உண்மை என்ன என்பதைக் காண வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொண்டதை அனுபவத்தில் உணரவும் வேண்டும். அதுவே ஆன்மீகம். எவ்வளவு பேசினாலும் அது ஆன்மீகம் ஆகாது. கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா, இல்லையா என்பதைத் தர்க்கத்தால் நிரூபிக்க முடியாது. ஏனெனில் இரு பக்கத்திற்கும் சம அளவில் வாதங்கள் உள்ளன. ஆனால் கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் நம்முடைய இதயங்களில்தான் இருக்கிறார். நீங்கள் எப்போதாவது அவரைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த உலகம் இருக்கிறதா இல்லையா என்ற பிரச்சினையே இன்னும் தீர்ந்தபாடில்லை. லட்சியவாதிகளுக்கும் பிரத்தியட்சவாதிகளுக்கும் இடையே இந்த விஷயத்தைப் பற்றி நடக்கும் வாக்குவாதம் முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. இருந்தாலும், உலகம் இருக்கிறது என்பதும், அது இயங்கிக் கொண்டே இருக்கிறது என்பதும் நமக்குத் தெரிகிறது. நாம் வெறும் வார்த்தை ஜாலங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறோம்.
ஆகவே வாழ்க்கையைப் பொறுத்தவரை, எல்லா விஷயங்களிலும் உண்மையைப் பார்க்கவே நாம் முயல வேண்டும். விஞ்ஞானத்தில் உள்ளதுபோல், ஆன்மீகத்திலும் உள்ள உண்மைகளை நாம் உணர வேண்டும், அவற்றை அடிப்படையாக வைத்துத்தான் மதவுணர்வை நாம் உருவாக்க முடியும். ஒரு மதத்திலுள்ள எல்லா கொள்கைகளையும் நம்ப வேண்டும் என்று கண்மூடித்தனமாக வற்புறுத்துவது மனித குலத்தையே இழிவு படுத்துவதாகும். எல்லாவற்றையும் நம்பும்படி, நம்மை வற்புறுத்தும் ஒரு மனிதன் தன்னை இழிவுப்படுத்துவதுடன், அப்படி நாம் நம்பினால், நம்மையும் இழிவுபடுத்துகிறான்.
தங்கள் மனத்தை ஆராய்ந்து, உண்மைகளைக் கண்டதைப்பற்றிக் கூற மட்டுமே உலகிலுள்ள ஞானியருக்கு உரிமை உள்ளது. நாமும் அதுபோல் ஆராய்ச்சி செய்து அந்த உண்மையைக் கண்டால் அவர்கள் சொல்வதை நம்புவோம்; அதற்குமுன் அல்ல. மதம் என்பதன் உண்மை இதுதான். ஆனால் மதங்களைத் தாக்கிப் பேசுவோரில் 99.9 சதவீதம் பேர் சுயஆராயச்சி செய்யவோ, உண்மைகளை உணரவோ எந்த முயற்சியும் செய்யாதவர்கள். இதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இவர்கள் சொல்வதெல்லாம், சூரியனை நம்பும் நீங்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று ஒரு குருடன் சொல்வதைப்போல் இருக்கிறது. ஆகவே இவர்கள் சொல்வது மதத்தை எந்த விதத்திலும் பாதிக்க முடியாது.
அனுபூதி என்ற இந்தக் கருத்து, நாம் புரிந்துகொள்ள வேண்டியதும் எப்போதும் மனத்தில் கொள்ள வேண்டியதுமான ஒன்றாகும். ஆன்மீகம் என்பது சாஸ்திரங்களிலும் கோயில்களிலும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளும் போதுதான் மதங்களிடையே நிலவுகின்ற சண்டைகளும் பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் மறையும். அது ஓர் நிஜமான அனுபவம். கடவுளை, ஆன்மாவைக் கண்ட ஒருவனுக்கு மட்டுமே ஆன்மீகம் என்பது உள்ளது. சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்துத் தலைகீழாக ஒப்பிக்கக்கூடிய பண்டிதர்களுக்கும், சுகபோகங்களில் மூழ்கித் திளைக்கும் அறிவற்ற மூடனுக்கும் இடையே உண்மையில் எந்த வித்தியாசமும் இல்லை. நாம் எல்லோரும் நாத்திகர்களே. இதை ஒப்புக்கொள்வோம்! வெறும் மதப் புலமை நம்மை ஆன்மீகவாதிகள் ஆக்காது. கிறிஸ்தவர்கள், முகமதியர்கள் அல்லது வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஏசு கிறிஸ்துவின் மலை உபதேசத்தின் உண்மையான அனுபவத்தில் உணர்ந்த ஒருவன் உடனே பூரணனாகிறான்; தெய்வமாகிறான். உண்மை இப்படியிருக்க, உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் இருப்பதாக வேறு சொல்லிக் கொள்கிறார்கள். மலை உபதேசத்தின் உண்மையை உணர்ந்து கொள்ள மனிதகுலம் எப்போதாவது முயலும் என்பதே இதன் பொருள். உண்மையில் பார்த்தால் கோடியில் ஒருவன் கூட உண்மையான கிறிஸ்தவன் கிடையாது.
இதைப் போலவே இந்தியாவில் முப்பது கோடி வேதாந்திகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் ஆன்ம அனுபூதி பெற்றால் கூட, இந்த உலகம் சீக்கிரமே பெரிய மாறுதலை அடையும். நாம் எல்லோரும் நாத்திகர்களே. ஆனாலும், நான் நாத்திகன் என்று ஒப்புக்கொள்பவனோடு நாம் சண்டைபோடுகிறோம். நாம் எல்லோரும் அஞ்ஞான இருளில் மூழ்கியிருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரையில் ஆன்மீகம் என்பதெல்லாம் வெறும் சாஸ்திர அறிவு, வெறும் வாய் ஜம்பம், வெறும் வெறுமை மட்டுமே. ஒருவனுக்கு நன்றாகப் பேசத் தெரிந்தால் போதும், அவனை ஆன்மீகவாதி என்று கூறிவிடுகிறோம். இது ஆன்மீகமும் அல்ல, மதமும் அல்ல. வார்த்தைகளை அற்புதமாக ஒன்றுசேர்க்கும் திறமை, பேச்சாற்றல், புத்தகங்களுக்குப் பலவிதங்களில் விளக்கங்கள் எழுதும் ஆற்றல் இவை எல்லாம் பண்டிதர்களுக்கு மகிழ்ச்சி தரமட்டுமே பயன்படும்; ஆனால் இவை மதம் ஆகாது.
உண்மையான ஆன்ம அனுபூதி ஆரம்பிக்கும்போது தான் மதம் தொடங்குகிறது. அதுதான் மதத்தின் உதயம். அப்போதுதான் நாம் அறநெறியில் ஒழுக முடியும். நாம் இப்போது மிருகங்களைவிட ஒன்றும் அதிக ஒழுக்கமாக இல்லை! சமூகத்தின் சாட்டை ஒன்றுதான் நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. திருடுவதற்குத் தண்டனை கிடையாது என்று சமூகம் இன்று சொல்லட்டும், அவ்வளவுதான், ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய சொத்துக்களின்மீது அப்படியே பாய்ந்து விடுவோம்! நம்மை ஒழுக்கம் உடையவர்களாக வைத்திருப்பவர்கள் போலீஸ்காரர்களே! சமூகத்தின் கருத்துக்களே நம்மை ஒழுக்கம் உடையவர்களாக வைத்திருக்கின்றன. உண்மையில், மிருகங்களைவிட நாம் எந்தவிதத்திலும் உயர்ந்தவர்கள் அல்ல. இது எவ்வளவு அப்படியே உண்மை என்பது நம் உள்மனத்திற்குத் தெரியும். ஆகவே நாம் ஆஷாடபூதிகளாக இருக்க வேண்டாம். நாம் மதவாதிகள் அல்ல, மற்றவர்களைக் கேவலமாக மதிக்க நமக்கு உரிமை கிடையாது என்ற உண்மையை ஒப்புக் கொள்வோம். நாம் அனைவரும் சகோதரர்கள். ஆன்ம அனுபூதி அடைந்த பின்தான் நாம் உண்மையான ஒழுக்கத்தோடு வாழ முடியும்.
நீங்கள் ஒரு நாட்டைப் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் அதைப் பார்க்கவில்லை என்று சொல்லச் சொல்லியாராவது உங்களை வற்புறுத்தினாலும்கூட, உங்கள் உள்மனத்தில் அதைப் பார்த்த உணர்வு அப்படியே இருக்கும். இந்த உலகத்தை நீங்கள் எந்த உணர்வோடு பார்க்கிறீர்களோ, அதைவிட அழுத்தமான உணர்வோடு கடவுளை நீங்கள் உணர்ந்திருந்தால் உங்கள் நம்பிக்கையை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது. அப்போதுதான் உங்கள் நம்பிக்கை உண்மையானதாக ஆகிறது. கடுகளவு நம்பிக்கை உள்ளவன்கூட என்று பைபிளில் சொல்லியிருப்பது இந்தப்பொருளில்தான். அப்போது நீங்கள் உண்மை உருவாகவே ஆகிவிடுவதால் நீங்கள் உண்மையை அறிவீர்கள்.
ஆன்மீகத்தை உணருங்கள், வெறும் பேச்சால் பயனில்லை என்பதுதான் வேதாந்தத்தின் அடிப்படைக் கருத்து. ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல. ஒவ்வொரு மனித இதயத்தின் அடியாழங்களில் உறைகின்ற அந்தப் பழம்பொருளான இறைவன், அணுவிற்குள் தன்னை மறைத்துக்கொண்டிருக்கிறான். அகத்தினுள் ஆழ்ந்ததால் பெற்ற ஆற்றலின் மூலம் ரிஷிகள் அவனை உணர்ந்திருக்கிறார்கள். அவனை உணர்வதன் மூலம் அவர்கள் இன்ப-துன்பங்கள், பாவ-புண்ணியங்கள் என்று நாம் சொல்லும் செயல்கள், நன்மை-தீமைகள், இருப்பு-இல்லாமை எல்லாவற்றையும் கடந்துவிட்டார்கள். அவனை உணர்ந்தவன் உண்மையைக் கண்டவனே. அப்படியானால் சொர்க்கம் என்ன ஆயிற்று? துன்பங்களற்ற இன்பமே சொர்க்கக் கருத்தாகும். அதாவது, இந்த வாழ்க்கையின் துன்பங்கள் இல்லாமல் அதன் இன்பங்களை மட்டுமே விரும்புகிறோம் என்பதே பொருள். இது சந்தேகமில்லாமல் நல்ல கருத்துதான். இயற்கையாகவே நம் மனத்தில் இது எழுகிறது. ஆனால் இந்தக் கருத்து அடியோடு தவறானது. ஏனெனில்முழுமையான நன்மை அல்லது முழுமையான தீமை என்று எதுவுமே இல்லை.
ரோமாபுரிப் பணக்காரனைப் பற்றி நீங்கள் எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன் சொத்தில் பத்து லட்சம் பவுன்களே எஞ்சியிருந்தன என்பதை ஒருநாள் அவன் கண்டான்; நாளைக்கு என்ன செய்வது? என்று திகைத்துப்போய்த் தற்கொலை செய்து கொண்டான். பத்து லட்சம் பவுன்கள்கூட அவனுக்கு ஏழ்மைதான். எனவே எது இன்பம்? எது துன்பம்? இவற்றின் மதிப்பு எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது, வண்டி ஓட்டுபவனாக, எப்போதும் வண்டியை ஓட்டிக்கொண்டு திரிவதுதான் என்னை இன்பத்தின் உச்சிக்குக்கொண்டு செல்லும் என்று நான் நினைத்ததுண்டு. ஆனால் இப்போது அப்படி நினைக்கவில்லை. நாம் எந்த இன்பத்தை நிலையாகப் பற்றிக்கொள்ள முடியும்? இந்த ஓர் அம்சத்தை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் நம்மை விட்டு இறுதியாக அகன்று செல்லும் மூடநம்பிக்கைகளில் ஒன்றும் ஆகும்.
இன்பத்தைப்பற்றி எல்லோருக்கும் ஒரே மாதிரி கருத்து இருப்பதில்லை. எனக்கு ஒரு மனிதனைத் தெரியும். ஓர் உருண்டை அபினை விழுங்காத நாளெல்லாம் அவனுக்கு இன்ப நாளே அல்ல. எங்கும் அபின் நிறைந்த சொர்க்கத்தையே அவன் கனவு காண்பானோ என்னவோ! ஆனால் அந்தச் சொர்க்கம் எனக்கு மிகவும் துன்பம் அளிப்பதாக இருக்கும். ஆறுகள் ஓடும் அழகான தோட்டங்கள் நிறைந்த சொர்க்கத்தைப்பற்றி அரபுக்கவிதைகளில் அடிக்கடிச் சொல்லியிருப்பதைக் காணலாம். அளவுக்கு அதிகமான நீர் நிறைந்த ஒரு நாட்டில் நான் என் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்திருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் பல கிராமங்கள் வெள்ளக்காடாகின்றன; ஆயிரக் கணக்கான உயிர்கள் பலியாகின்றன. எனவே என்னுடைய சொர்க்கம் ஆறுகள் ஓடும் தோட்டங்கள் நிறைந்ததாக இருக்காது. என்னுடைய சொர்க்கம் மிகக் குறைவான மழையுள்ள பூமியாக இருக்கும். இன்பங்களைப் பற்றிய நமது கருத்து எப்போதும் மாறிக் கொண்டே இருக்கிறது. இளைஞன் சொர்க்கத்தைப்பற்றிக் கனவு காண்பானானால், அங்கே தனக்கு ஓர் அழகான மனைவி இருப்பதாகக் காண்பான். அவனுக்கே வயதான பின் மனைவி தேவையில்லை.
நம்முடைய தேவைகளே நமது சொர்க்கங்களை உருவாக்குகின்றன. நம் தேவைகளின் மாறுதலுக்கேற்ப நமது சொர்க்கங்களும் மாறுகின்றன. புலனின்பத்தையே வாழ்க்கையின் எல்லாமாகக் கொண்டவர்கள் விரும்புகின்ற சொர்க்கத்தைப் போன்ற சொர்க்கம் நமக்கு இருந்தால், நாம் முன்னேறவே முடியாது. ஆன்மாவிற்கு நாம் கொடுக்கும் மிகப் பெரிய சாபம் அதுவாகத்தான் இருக்கும். நாம் அடையக்கூடியது இவ்வளவுதானா? சிறிதுகாலம் கதறுகிறோம்; சிறிதுகாலம் கேளிக்கைகளில் ஈடுபடுகிறோம். கடைசியில் கேட்பாரற்று ஒரு நாயைப்போல் சாகிறோம். இந்த அற்ப விஷயங்களுக்காக ஏங்கும்போது மனித குலத்திற்கே ஒரு பெரிய சாபக்கேட்டை உண்டாக்கி விடுகிறோம்! உலக இன்பங்களை நாம் துரத்திக் கொண்டு போகும்போது, நாம் இதைத்தான் செய்கிறோம். ஏனென்றால் உண்மையான இன்பம் எது என்று நமக்குத் தெரியாது.
இன்பத்தை விட்டுவிடச் சொல்லி தத்துவம் நம்மை வற்புறுத்துவதில்லை; மாறாக உண்மையான இன்பத்தை அறிந்து கொள் என்றே அது வற்புறுத்துகிறது.
நார்வே நாட்டினரின் சொர்க்கம் ஒரு மிகப் பெரிய போர்க்களமாக இருக்கும். அங்கே எல்லோரும் ஓடின் என்ற தெய்வத்தின் முன்னால் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் வேட்டையாட ஒரு காட்டுப் பன்றி இருக்கும். போருக்குச் சென்று தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டி மாய்த்துக் கொள்வார்கள். ஆனால் சண்டை முடிந்த சிறிது நேரத்திற்குள் இறந்தவர்களெல்லாம் எப்படியோ பிழைத்துக் கொள்வார்கள். பிறகு அவர்கள் ஒரு விசாலமான கூடத்திற்குள் செல்வார்கள். அங்கே பன்றியைச் சுட்டு வைத்திருப்பார்கள். எல்லோரும் சேர்ந்து அதை உண்டு களிப்பார்கள். அதன்பிறகு அந்தக் காட்டுப் பன்றிக்கு உயிர் வந்து, மறுபடியும் வேட்டையாடப்படுவதற்குத் தயாராக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இதே கதைதான். இது ஏறக்குறைய எங்கள் சொர்க்கத்தைப்போல்தான் உள்ளது; துளியும் மாறுதலில்லை. எங்கள் கருத்துக்கள் வேண்டுமானால் சற்று நாகரீகமாக இருக்கலாம். காட்டுப் பன்றி வேட்டையாடப்பட்டு, சாப்பிடப்பட்டு, ஒவ்வொரு நாளும் மறுபடியும் உயிர் பெற்று, இதே கதையைத் தொடர்வதாக அவர்கள் கற்பனை செய்வதுபோல், நாமும் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்கும், எப்போதும் புலனின்பம் கிடைத்துக் கொண்டே இருக்கும் சொர்க்கத்திற்குப் போவதற்கும் விரும்புகிறோம்.
எப்போதும் மாறாத இன்பம் ஒன்று உள்ளது என்றுதான் தத்துவ சாஸ்திரம் வற்புறுத்துகிறது. அந்த இன்பம், நாம் உலக வாழ்க்கையில் பெறும் சுகங்களையோ, அனுபவிக்கும் இன்பங்களையோ போன்றதல்ல. உலக வாழ்க்கையின் இன்பங்களெல்லாம், அந்த உண்மையான இன்பத்தின் மிகச் சிறு துளி என்று வேதாந்தம் கூறுகிறது. ஏனென்றால் உண்மையில் உள்ளது அந்த இன்பம் மட்டுமே. அந்த இன்பம் மூடப்பட்டு, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, கேலிக்கு உட்பட்டிருந்தாலும், ஒவ்வொரு கணமும் நாம் உண்மையில் அந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். எந்த இடத்தில் ஓர் ஆசியோ ஆனந்தமோ இன்பமோ இருந்தாலும்சரி- அது திருடனுக்குத் திருடுவதில் கிட்டும் இன்பமாகக்கூட இருக்கலாம்-அது அந்தப் பேரின்பத்தின் வெளிப்பாடே. ஆனால் அது மாயையால் மறைந்து, பல்வேறு புறச் சூழ்நிலைகளால் பலவகையாகக் குழம்பியதுபோல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். அதைப் புரிந்துகொள்ள, அது அல்லாத மற்றவற்றை விலக்குவதால்தான் முடியும். அதன் பிறகுதான், இதுதான் என்று உணரும் முயற்சி ஆரம்பிக்கிறது. அறியாமையையும் பொய்யையும் விட்டொழித்த பின்தான், உண்மை நமக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறது.
உண்மையை உணர்ந்த பின்னர், நாம் அதுவரை விலக்கியிருந்த பொருட்கள், புதிய உருவம் பெற்றுவிடும்; தெய்வீகத்தன்மை பெற்றுவிடும். அவற்றை நாம் புதிய கோணத்திலிருந்து பார்க்க ஆரம்பித்துவிடுவோம். அவை புனிதத்தன்மை பெற்றுவிடும். அப்போதுதான் நாம் அவற்றின் உண்மையைப் புரிந்து கொள்வோம். ஆனால் அவற்றைப் புரிந்துகொள்வதற்கு, உண்மையின் சிறு அளவையாவது முதலில் அறிந்துகொள்ள வேண்டும். முதலில் அவற்றை விட்டுவிடுகிறோம். பிறகு அவை தெய்வீகத் தன்மை பெற்று நம்மிடமே திரும்பி வருகின்றன. நம்முடைய துன்பம், துக்கம், நமது அற்பச் சந்தோஷங்கள் எல்லாவற்றையும் விடவேண்டும்.
வேதங்கள் எல்லாம் எதைப்பற்றிப் பேசுகின்றனவோ, தவத்திற்கெல்லாம் குறிக்கோளாக இருப்பது எதுவோ, எதை அடைவதற்காக மனிதர்கள் துறவு பூண்கிறார்களோ, அதை நான் ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறேன், அதுதான் ஓம். வேதங்களில் ஓம் என்ற இந்த வார்த்தை மிகவும் உயர்த்திப் பேசப்படுகிறது. மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
உடல் இறந்தபின் மனிதன் என்ன ஆகிறான்? என்ற கேள்விக்கு எமன் இப்போது பதிலளிக்கிறான். ஞான பரமான அந்த ஆன்மா இறப்பதில்லை, பிறப்பதும் இல்லை. அது எதிலிருந்தும் தோன்றுவதில்லை; அதிலிருந்தும் எதுவும் தோன்றுவதில்லை. பிறப்பற்ற, நிரந்தரமான, எப்போதும் நிலைத்திருக்கின்ற அந்த ஆன்மா, உடல் அழிந்த பின்னும் அழிவதில்லை. ஆன்மா கொல்வதுமில்லை; கொல்லப்படுவதுமில்லை. ஆகவே கொல்பவன், தான் கொல்வதாகவும், கொல்லப்படுபவன், தான் கொல்லப்படுவதாகவும் நினைத்தால், அவர்கள் இருவரும் உண்மையை அறியாதவர்களே. என்னவொரு மகோன்னதமான நிலை!
முதல் வரியிலுள்ள ஞானபரமான என்ற வார்த்தைக்கு உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். எல்லா ஞானமும் எல்லா தூய்மையும் ஆன்மாவில் ஏற்கனவே இருக்கின்றன. ஆனால் அவை சில வேளைகளில் மங்கலாக, சிலவேளைகளில் பிரகாசமாக வெளிப்படுகின்றன. அவ்வளவுதான் வேறுபாடு. இது வேதாந்தத்தின் அடிப்படை கருத்து என்பதைப் போகப்போக நாம் புரிந்துகொள்வோம். மனிதர்களுக்கு இடையேயும், படைப்பிலுள்ள எல்லாவற்றிற்கும் இடையேயும் உள்ள வேறுபாடு அளவில்தானே தவிர, தன்மையில் இல்லை.
எப்போதும் நிலைத்திருக்கின்ற, எப்போதும் ஆனந்த மயமான, எப்போதும் தூய்மையான, எப்போதும் முழுமையான பரம்பொருளே எல்லாவற்றிற்கும் பின்னணியாகவும், எல்லாவற்றின் உண்மை வடிவாகவும் இருக்கிறது. புண்ணியவான்கள், பாவிகள், இன்பம் அனுபவிப்பவர்கள், துன்பம் அனுபவிப்பவர்கள், அழகானவர்கள், அழகற்றவர்கள், மனிதர்கள், மிருகங்கள் என்று எல்லாவற்றிலும் இருக்கும் ஒரே பொருள் ஆன்மா தான். அது ஒளி மயமானது. வெளிப்பாட்டு ஆற்றலினால் தான் வேறுபாடு தோன்றுகிறது. சிலவற்றில் இந்த வெளிப்பாடு அதிகமாகவும், சிலவற்றில் குறைவாகவும் காணப்படுகிறது. இது ஆன்மாவை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. ஆடை அணிவதில், ஒருவனைவிட மற்றொருவன் தன் உடலை அதிகமாக வெளிக்காட்டினால், அந்த வெளிப்பாடு அவர்கள் உடலில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்துவதில்லை. ஆடையில்தான் வித்தியாசம் இருக்கிறது.
வேதாந்தத் தத்துவம் முழுவதிலுமே, நன்மையைவேறாக, தீமையை வேறாகச் சொல்வதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவை இரண்டும் வெவ்வேறானவை அல்ல. ஒரே பொருள் நல்லதாகவோ தீயதாகவோ இருக்கிறது. வேறுபாடு, அளவில்தான் இருக்கிறது. இன்பமளிப்பதாக இன்று நான் கருதுவது சிறப்பான நாளைய சூழ்நிலையில் துன்பமளிப்பதாக மாறிவிடலாம். இதமளிக்கும் அதே நெருப்பு நம்மை அழிக்கவும் செய்யலாம். அது நெருப்பின் குற்றமல்ல. அதேபோல் ஆன்மா தூய்மையானது, முழுமையானது. தீமை செய்பவன் தனது இந்த இயல்பை உணராமல், தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான். கொலையாளியிடம்கூடத் தூய ஆன்மா இருக்கிறது. அது இறப்பதில்லை. அதை மூடி மறைத்து, வெளிப்படாமல் செய்தது அவனுடைய தவறு. தான் கொலை செய்யப்பட்டதாக நினைக்கும் மனிதனிலும் ஆன்மா அழிவதில்லை. அது என்றென்றும் உள்ளது. அதைக் கொல்லவோ அழிக்கவோ ஒருபோதும் முடியாது. அணுவிலும் அணுவாக, பெரியதிலெல்லாம் பெரியதாக உள்ள இந்த இறைவன் எல்லா மனித இதயங்களின் ஆழத்திலும் இருக்கிறார். துன்பங்களைக் கடந்தவர்கள், மாசற்றவர்கள், சோகமற்றவர்கள் அவரது கருணையால் அவரைக் காண்கிறார்கள். உடல் இல்லாத ஆனால் உடலுள் உறைகின்ற, இடத்தைக் கடந்த ஆனால் இடத்தை நிறைந்திருக்கின்ற, எல்லையற்ற, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தபொருளே ஆன்மா என்பதை உணர்கின்ற ரிஷிகள் என்றும் துன்பம் அடைவதில்லை.
இந்த ஆன்மாவைப் பேச்சாற்றல் மூலமோ, பரந்த அறிவின் மூலமோ, வேதங்களைப் படிப்பதன் மூலமாகவோகூட உணர முடியாது. இவை மிகவும் தைரியமான வார்த்தைகள். ரிஷிகள் துணிவுமிக்க சிந்தனையாளர்கள் என்று நான் ஏற்கனவே சொன்னேன் அல்லவா! அவர்கள் எதற்கும் தயங்கவில்லை.
கிறிஸ்தவர்கள் பைபிளுக்கு அளிக்கும் இடத்தை விட மேலானதோர் இடம் இந்தியாவில் வேதங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அருளுணர்வு வெளிப்பாடு என்றால், இறைவன், ஒருவனின் உள்ளத்தில் மேலான உணர்வை, மேலான ஞானத்தை வெளிப்படுத்துகிறார், அதனால் அவர் அதனை எழுதினார் என்பதுதானே உங்கள் கருத்து! ஆனால் இந்தியாவிலோ, எல்லா பொருட்களும் இருப்பதற்குக் காரணமே அவை வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன என்பதால்தான். எல்லா படைப்புமே வேதங்களிலிருந்தும் வேதங்களின் மூலமாகவும் தான் வந்திருக்கின்றன. அறிவு என்று சொல்லப்படுபவை அனைத்தும் வேதங்களில் உள்ளன.
அவற்றிலுள்ள ஒவ்வொரு வார்ததையும் புனிதமானது. ஆன்மாவைப்போல் நிரந்தரமானது, ஆதி அந்தமற்றது. படைத்தவரின் மனமே வேதங்களில் உள்ளது என்று சொல்லலாம். இதுதான் வேதங்களைப் பற்றிய கருத்தாக இருக்கிறது. ஒரு செயலை ஏன் ஒழுக்கம் என்று சொல்கிறோம்? வேதம் சொல்வதால். மற்றொன்றை ஏன் தீயொழுக்கம் என்று சொல்கிறோம்? வேதங்கள் சொல்வதால்தான். இப்படியிருந்தும் வேதங்களை அதிகம் படிப்பதால் உண்மையை அடைந்துவிட முடியாது என்று தீர்மானமாகக் கூறிய ரிஷிகளின் துணிச்சலைப் பாருங்கள். இறைவன் யாரிடம் அருள் கொள்கிறாரோ அவருக்கே தம்மை வெளிப்படுத்துவார். இவ்வாறு சொல்வது, இறைவன் பாரபட்சம் காட்டுபவர் என்றல்லவா ஆகும் என்று சொல்லலாம். அதனை எமன் விளக்குகிறான்: தீய காரியங்களைச் செய்தவர்களால், மனம் அமைதி பெறாதவர்களால் ஒருபோதும் உண்மையின் ஒளியைக் காண முடியாது. யாருடைய இதயத்தில் உண்மை இருக்கிறதோ, செயலில் தூய்மை இருக்கிறதோ, புலன்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ அவர்களுக்குத்தான் ஆன்மா தன்னை வெளிப்படுத்தும்.
தொடரும்...
தொடர்ச்சி...
.
இதோ ஓர் அற்புதமான உருவகம்! உடலைத் தேராகவும், ஆன்மாவைச் சவாரி செய்பவராகவும், புத்தியைத் தேரோட்டியாகவும், மனத்தைக் கடிவாளமாகவும், புலன்களைக் குதிரைகளாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். யாருடைய குதிரைகள் நன்கு பழக்கப்பட்டு இருக்கின்றனவோ, கடிவாளம் உறுதியாக உள்ளதோ, தேரோட்டி அதை நன்றாகப் பிடித்திருக்கிறானோ, அவனே எங்கும் நிறைந்திருக்கின்ற நிலையான தன் குறிக்கோளை அடைவான். யாருடைய குதிரைகள் அடக்கப்படாமலும், கடிவாளம் உறுதியாகப் பிடிக்கப்படாமலும் இருக்கின்றனவோ, அவன் அழிவை நோக்கிப் போகிறான். எல்லாவற்றிலும் உள்ள இந்த ஆன்மா, கண்களுக்கோ புலன்களுக்கோ புலனாவதில்லை. ஆனால் தூய்மையுற்ற, பக்குவம் பெற்ற மனம் உடையவர்கள் அவரை உணர்கிறார்கள். ஒலி, ஒளி, உருவம், சுவை, தொடுஉணர்ச்சி அனைத்தையும் கடந்து, இயற்கையையும் கடந்து, தனிப்பொருளாக, எல்லையற்றதாக, ஆதி அந்தம் இல்லாததாக, மாறுதலே அடையாததாக உள்ள பரம்பொருளை உணர்பவனே, மரணத்தின் பிடியிலிருந்து விடுதலை பெறுகிறான். இது மிகவும் கடினம்; கத்தி முனையில் நடப்பதைப் போன்றதே ஆகும். பாதை, நீண்டதும் அபாயங்கள் நிறைந்ததுமாகும். ஆனால் போராடுங்கள், மனம் தளராதீர்கள். எழுந்திருங்கள், விழித்திருங்கள், குறிக்கோளை அடையும்வரை முயற்சியை நிறுத்தாதீர்கள்.
எல்லா உபநிடதங்களின் ஊடேயும் இழைகின்ற மையக் கருத்து, அனுபூதி என்பதுதான். அவ்வப்போது கேள்விகள் பல எழுகின்றன. தற்காலத்தில் அதிகமாக எழுகின்றன. இதனால் என்ன பயன், என்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன. இந்தக் கேள்விகள் எல்லாமே நமது பழைய தொடர்புகளால் தூண்டப்பட்டே எழுகின்றன என்பதைக் காண்கிறோம். கருத்துக்களின் தொடர்பு, மனத்தின்மீது அளவில்லாத ஆதிக்கம் செலுத்துகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே சகுணக் கடவுள்கருத்தையும், மனத்தின் தனித்தன்மையையும் பற்றியே கேள்விப்பட்டு வந்தவர்களுக்கு, இந்த வேதாந்தக் கருத்துக்கள் கடினமானவையாக, புரியாதவையாகத் தோன்றுகின்றன. ஆனால் அவர்கள் இந்தக் கருத்துக்களை உன்னிப்பாகக் கேட்டு, அவற்றைச் சிந்தித்து வந்தால், அவை அவர்களது வாழ்க்கையுடன் ஒன்றிவிடும்; அதன்பின் அவர்களைப் பயமுறச் செய்யாது.
சாதாரணமாக எழும் பெரிய கேள்வி தத்துவத்தின் பயன் என்ன என்பதுதான். அந்தக் கேள்விக்கு ஒரேயொரு பதில்தான் இருக்க முடியும். பயன்நோக்கு வாதத்தின்படி, இன்பம் தேடுவதே மனிதர்களுக்கு நல்லது என்றால், மத விஷயங்களில் இன்பம் காண்பவர்கள், ஏன் அவற்றை நாடிப் போகக் கூடாது? புலனின்பங்கள் பலருக்கு மகிழ்ச்சியைத் தருவதால் அவர்கள் அவற்றை நாடிப் போகிறார்கள். ஆனால் புலனின்பங்களில் நாட்டம் இல்லாமல், அவற்றைவிட உயர்ந்த இன்பங்களை நாடிச் செல்பவர்கள் இருக்கிறார்கள். உண்பதிலும் குடிப்பதிலும் தான் ஒரு நாய் இன்பம் அடைகிறது. எல்லாவற்றையும் துறந்து, ஒருவேளை ஏதோ மலை உச்சியில் அமர்ந்து, வானத்திலுள்ள நட்சத்திரங்களை ஆராயும் விஞ்ஞானியின் இன்பத்தை நாயால் புரிந்துகொள்ள முடியாது. அவன் ஒரு பைத்தியம் என்று நினைத்து அந்த நாய் சிரிக்கலாம். ஒருவேளை திருமணம் செய்துகொள்வதற்குக் கூட அந்த விஞ்ஞானியிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். அவன் மிக எளிய வாழ்க்கை வாழ்கிறான். நாய் அவனைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கலாம். ஆனால் விஞ்ஞானி அதைப் பார்த்து, அன்புள்ள நாயே, நீ அனுபவிக்கும் புலனின்பத்தைப்பற்றி மட்டுமே உனக்குத் தெரியும். அதற்கு அப்பாலுள்ள இன்பத்தைப்பற்றி உனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு இதுதான் மிகவும் இன்பம் தரும் வாழ்க்கை. உன் வழியில் இன்பம் தேட உனக்கு உரிமை இருந்தால், அதே உரிமை, என் வழியில் இன்பம் தேட எனக்கும் இருக்கிறது என்று கூறுகிறான்.
நம்முடைய சிந்தனையைப்போல்தான் உலகிலுள்ள அனைவரின் சிந்தனையும் இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நம் மனத்தையே பிரபஞ்சத்தில் உள்ள அனைவரின் மனத்திற்கும் அளவுகோலாகக் கொள்கிறோம். இது நாம் செய்யும் தவறு. உங்களைப் பொறுத்தவரை புலனின்பமே மிகப் பெரிய இன்பமாக இருக்கலாம். ஆனால் என் இன்பமும் அப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் அதை வற்புறுத்தினால் நான் உங்கள் கருத்திலிருந்து வேறுபடுகிறேன். பயன்நோக்குவாதிக்கும், ஆன்மீகவாதிக்கும் உள்ள வேற்றுமை இதுதான். நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன், பார். எனக்குப் பணம் கிடைக்கிறது. மதத்திற்காக நான் மண்டையை உடைத்துக்கொள்ளப் போவதில்லை. அது அறிவதற்கு எளிதான ஒன்றல்ல. மதம் இல்லாமலேயே நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று பயன்நோக்குவாதி சொல்கிறான். சரி, நல்லதுதான்; பயன் நோக்குவாதிகளைப் பொறுத்தவரை இது நல்லதுதான். ஆனால் இந்த உலகம் பயங்கரமானது. தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்குக் கஷ்டம் உண்டாகாமல் ஒருவன் இன்பம் அடைய முடியுமானால், கடவுள் அவனுக்குத் துணை நிற்கட்டும்! ஆனால் அவன் என்னிடம் வந்து, நான் செய்வதைப் போல்தான் நீயும் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நீ முட்டாள் என்று சொன்னால் நான் அவனைப் பார்த்து, நீ சொல்வது தவறு. ஏனெனில் உனக்கு இன்பமளிக்கும் பொருட்கள் என்னைத் துளியும் கவர்வதில்லை. கையளவு பணத்திற்காக அலைவேனானால் என் வாழ்க்கை பயனற்றது. அதைவிட நான் இறப்பதேமேல் என்று சொல்வேன். ஆன்மீகவாதி அளிக்கும் பதில் இதுவாகத்தான் இருக்கும். உண்மை என்னவென்றால், இந்தக் கீழான புலனின்பங்களை அனுபவித்து ஒழித்தவனுக்குத்தான் மத உணர்வு உண்டாகும். நாம் அனுபவிக்க வேண்டியதையெல்லாம் அனுபவித்தாக வேண்டும், முழுமையாக அனுபவித்துத் தீர்க்க வேண்டும். அதன் பின்னரே அடுத்த உலகக் கதவு திறக்கிறது.
புலனின்பங்கள் சிலவேளைகளில் உருமாறி வருகின்றன. இது அபாயமானது, ஆசையைத் தூண்டுவது. பழங்கால மதங்கள் எல்லாவற்றிலுமே ஒரு பொதுவான கருத்தைக் காணலாம். இந்த வாழ்க்கையின் துன்பங்கள் எல்லாமே மறைந்து, இன்பங்களே மிஞ்சும் ஒரு காலம் வரும், அப்போது இந்தப் பூமியே சொர்க்கமாக மாறி விடும் என்பதே அந்தக் கருத்து. எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. இந்த உலகம் எப்போதும் இப்படியேதான் இருக்கும். நான் சொல்வது பயங்கரமான விஷயம்தான். ஆனால் சொல்லாமல் வழியில்லை. உலகின் துன்பம், குணப்படுத்த முடியாத மூட்டுவாதம் போன்றது. உடம்பில் ஓர் இடத்தில் இதைக் குணப்படுத்தினால் வேறிடத்திற்குச் செல்லும். அங்கிருந்து துரத்துங்கள், வேறு ஓர் இடத்தில் அதை உணர்வீர்கள். என்ன செய்தாலும், அது இடத்திற்கு இடம் தாவிக்கொண்டே இருக்குமே தவிர உடம்பை விட்டுப் போகாது.
மிகப் பழங்காலத்தில் மனிதர்கள் காடுகளில் வாழ்ந்தார்கள்; ஒருவரை ஒருவர் சாப்பிட்டார்கள். இன்று அவர்கள் ஒருவரை ஒருவர் சாப்பிடுவதில்லை, ஆனால் ஏமாற்றிக்கொள்கிறார்கள். நாடுகளும் நகரங்களுமே இதனால் அழிந்து போகின்றன. இது ஒருமுன்னேற்றமாகத் தெரியவில்லை. இந்த உலகில் முன்னேற்றம் என்று நீங்கள் சொல்வதெல்லாம், ஆசைகளைப்பெருக்கிக் கொள்வதே தவிர வேறெதுவுமாக எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெளிவாகத் தெரிவதெல்லாம் ஆசைகளே துன்பம் அனைத்தையும் கொண்டு வருகின்றன என்பதுதான். இந்த நிலை, எப்பொழுதும் எதையாவது யாசித்துக் கொண்டிருக்கும் பிச்சைக்காரனின் நிலைதான். பார்ப்பதையெல்லாம் சொந்தமாக்கிக் கொள்ள அவன் விரும்புகிறான். அந்த விருப்பம் இல்லாமல் அவனால் எதையும் பார்க்க முடியாது. இன்னும் அதிகம் வேண்டும் என்று ஏங்குகிறான். நம் ஆசைகளைத் திருப்திப்படுத்தும் சக்தி கூட்டல் விகிதத்தில் அதிகரித்தால், ஆசைகளின் சக்தி பெருக்கல் விகிதத்தில் அதிகரிக்கிறது. உலகிலுள்ள இன்ப துன்பங்களின் மொத்த அளவு அதிகரிக்கவோ குறையவோ செய்யாமல் எப்போதும் அப்படியேதான் இருக்கிறது. கடலில் ஓர் இடத்தில் அலை எழுந்தால் அது மற்றோரிடத்தில் பள்ளத்தை உண்டாக்குகிறது. ஒருவனுக்கு இன்பம் வந்தால், மற்றொருவனுக்கோ, ஒருவேளை மற்றொரு பிராணிக்கோ துன்பம் வருகிறது. மனிதர்களின் தொகை பெருகிறது, ஆனால் சில மிருகங்களின் தொகை குறைகிறது. நாம் அந்த மிருகங்களைக்கொன்று, அவை வசிக்கும் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறோம். நாம் வாழ்வதற்கான வழிகளை அவற்றிடமிருந்தே பெறுகிறோம். உலகில் இன்பம் அதிகரிக்கிறதென்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? வலிமைமிக்க இனங்கள் எளிய இனங்களை அழித்தே வாழ்கின்றன. ஆனால் இந்த வலிமைமிக்க இனம் சந்தோஷமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல ஆரம்பித்து விடுவார்கள். நடைமுறையில் இந்த உலகம் எப்படிச் சொர்க்கமாக முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. நடவடிக்கைகள் அதற்கு எதிராகவே இருக்கின்றன. கொள்கையளவில்கூட இது நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
நிறைநிலை என்பது எப்போதும் எல்லையற்றதாகவே இருக்கிறது. நாம் ஏற்கனவே இந்த எல்லையற்றதாகத்தான் இருக்கிறோம். அதை வெளிப்படுத்தவே முயன்று கொண்டிருக்கிறோம். நீங்களும், நானும், ஏன், எல்லா உயிர்களுமே அதற்காகத்தான் முயன்று கொண்டிருக்கின்றன. இந்த அளவில் இது சரிதான். ஆனால் இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு, சில ஜெர்மானியத் தத்துவவாதிகள், ஒரு விசித்திரமான கொள்கையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த வெளிப்பாடு மேன்மேலும் உயர்ந்துகொண்டே போய் இறுதியில் நாம் முழுமை பெற்றுவிடுவோம், பூரணத்துவம் அடைந்து விடுவோம் என்பதுதான் அது. முழுமையான வெளிப்பாடு என்பது என்ன? முழுமையடைவது என்றால் எல்லையற்றதாக ஆவது, வெளிப்பாடு என்றால் எல்லைக்கு உட்படுவது. ஆகவே நாமெல்லோரும் எல்லைக்கு உட்பட்ட எல்லையற்றதாகி விடுவோம் என்றாகிறது. இது முன்னுக்கப்பின் முரணானது. இத்தகைய கருத்து குழந்தைகளுக்குச் சந்தோஷம் அளிக்கலாம். அதே வேளையில் அவர்களின் மனங்களில் அது பொய் என்ற விஷயத்தையும் செலுத்துகிறது. மத உணர்வுக்கு இது மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது. ஆனால் இந்த உலகம் இப்போது இருக்கும் நிலை, அதன் உண்மை நிலையிலிருந்து தாழ்வடைந்த நிலைதான் என்பதும், கடவுள் நிலையிலிருந்தும் வீழ்ச்சியடைந்தவனே மனிதன் என்பதும், ஆதாம் தன்னுடைய நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்து விட்டான் என்பதும் நமக்குத் தெரியும். மனிதன் தன் உன்னத நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்தவனே என்று போதிக்காத ஒரு மதம்கூட இன்று உலகில் கிடையாது. நாம் மிருகநிலைக்கு வீழ்ச்சியடைந்து, மறுபடியும் உயர்ந்து, இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற முயன்று கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லையற்றதை முழுமையாக வெளிப்படுத்த இங்கே நம்மால் முடியாது. நாம் கடுமையாகப் போராடலாம். ஆனால் புலன்களுக்குக் கட்டுப்பட்டிருக்கின்ற நிலையில், இங்கே நிறைநிலை அடையமுடியாது என்பதை நாம் உணரும் காலம் வந்தே தீரும். அப்போது நமது பழைய, உண்மையான, எல்லையற்ற நிலைக்குத் திரும்பிப் போகின்ற பயணத்தை ஆரம்பிப்போம்.
இதுதான் துறவு. நாம் உள்ளே வந்த பாதையிலேயே திரும்பி மேலே போக ஆரம்பிப்பதுதான் துன்பத்திலிருந்து விடுபடும் வழியாகும். அப்போதுதான், ஒழுக்கம் மற்றும் அறநெறிக் கோட்பாடுகள் உருவாகத் தொடங்கும். எல்லா நீதிநெறிக் கோட்பாடுகளுக்கும் நிரந்தர அடிப்படை எது? நானல்ல, நீயே என்பதுதான். இந்த நான் என்பது, எல்லாவற்றையும் கடந்த எல்லையற்ற பரம்பொருள், தன்னைப் பிரபஞ்சத்தில் வெளிப்படுத்திக் கொள்ளச் செய்யும் முயற்சியே ஆகும். அதன் பலன்தான் இந்தச் சிறிய நான். இது திரும்பிப் போய், தன் உண்மை நிலையாகிய எல்லையற்ற தன்மையை அடைய வேண்டும். சகோதரா! நான் முக்கியமல்ல, நீதான் முக்கியம் என்று நாம் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவ்வாறு திரும்பிச் செல்வதற்கு முயல்கிறோம். நான்தான், நீயல்ல என்று நாம் சொல்லும் ஒவ்வொரு முறையும், இந்தப் புலனுலகின் மூலம் எல்லையற்ற பரம்பொருளை வெளிப்படுத்த முயல்வதான தவறான பாதையில் அடியெடுத்து வைக்கிறோம். இதுதான் உலகில் போராட்டங்களையும் தீமைகளையும் ஏற்படுத்துகிறது. ஆனால் சில காலத்திற்குப் பின் நிலையான துறவு வந்தே தீரும். சிறிய-நான் இறந்து, அழிந்து விடுகிறது. இந்த அற்பமான வாழ்விற்காக ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும்? இங்கும் சரி, மறு உலகங்களிலும் சரி, இந்த வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்ற வீணான ஆசைகள் மரணத்திலேயே கொண்டுபோய்விடும்.
மிருகங்களின் பரிணாம வளர்ச்சிதான் நாம் என்றால், மிருகங்கள் என்பவை வீழ்ச்சிபெற்ற மனிதர்களாக இருக்கலாம். அப்படி இல்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? மிகவும் எளிய முறையில் அமைந்த உடல்களிலிருந்து, மிகவும் சிக்கலான முறையில் அமைந்த உடல்கள்வரை, கீழிருந்து மேலே போகும் அமைப்புத்தான் பரிணாமக் கொள்கையின் நிரூபணம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை மட்டும் வைத்துக்கொண்டு, இந்த அமைப்பு கீழிருந்து மேலேதான் போகிறது, மேலிருந்து கீழே வருவதில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? இரண்டு பக்கங்களுக்கும் ஆதாரமாக வாதங்கள் இருக்கின்றன. இந்தக் கொள்கையில் ஏதாவது உண்மை இருக்குமானால்-இருக்கும் என்றே நான் நம்புகிறேன்- இந்த அமைப்பு மாறி மாறி மேலேயும் கீழேயும் போய் வருகிறது என்பதே உண்மை. ஒடுக்கம் இல்லாமல் விரிவு எப்படி இருக்க முடியும்? உயர்ந்த நிலைக்கான நமது போராட்டம், நாம் உயர்ந்த நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்தவர்கள் என்பதையே காட்டுகிறது. உண்மை அப்படித்தான் இருக்க வேண்டும். விவரங்கள் வேண்டுமானால் வேறுபடலாம்.
ஏசுவும் புத்தரும் சொல்வதும் வேதாந்தம் சொல்வதும் நாம் எல்லோரும் ஒருநாள் நிச்சயமாக நிறைநிலையை அடைவோம், ஆனால் முழுமையடையாத இந்த நிலையை விட்டால்தான் அது முடியும், என்பதுதான். நான் அந்தக் கருத்தைத்தான் எப்போதும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன். இந்த உலகம் ஒன்றுமே இல்லை. மிஞ்சிப் போனால், இது ஓர் அருவருப்பான கேலிச் சித்திரம், உண்மையின் நிழல், அவ்வளவுதான். நாம் உண்மையை நோக்கித்தான் போக வேண்டும். துறவு அங்கு நம்மை அழைத்துச் செல்லும். நமது உண்மையான வாழ்க்கையின் அடிப்படையே துறவுதான். நாம் நம்மைப் பற்றி எண்ணாத நேரங்களில் மட்டுமே நன்மையையும், உண்மையான வாழ்க்கையையும் அனுபவிக்கிறோம். நம்முடைய சிறிய-நான் அழிய வேண்டும். அப்போதுதான், நாம் உண்மைப் பொருள், அந்த உண்மையே கடவுள், அதுதான் நமது உண்மையான இயல்பு, அது எப்போதும் நமக்கு உள்ளேயும் நம்மோடு கூடவேயும் இருக்கிறது என்பதை உணர முடியும். நாம் அவரிலேயே வாழ்வோம், அவரிலேயே நிற்போம். அந்த நிலை ஒன்றுதான் இன்பமான நிலை. ஆன்ம நிலையில் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை. நாம் எல்லோரும் அந்த அனுபூதி நிலையை அடைவதற்கு முயல்வோமாக!
ஆன்ம சுதந்திரம்
-
நாம் இப்போது சாந்தோக்கிய உபநிடதத்தைப் பற்றிப் பார்ப்போம். நாம் இதுவரை பார்த்த கடோபநிடதம் சாந்தோக்கிய உபநிடதத்திற்கு மிகவும் பிற்காலத்தது. கடோபநிடதத்தின் மொழியில் புதுமையும், சிந்தனையில் ஒழுங்குமுறையும் காணப்படுகிறது. பழைய உபநிடதங்களின் மொழி, வேதங்களிலுள்ள பாடல் பகுதிகளைப் போல் மிகவும் பழமையானதாக இருக்கிறது. அவற்றின் முக்கியக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதற்குள், சிலவேளைகளில், எவ்வளவோ தேவையற்ற பகுதிகளைக் கிளற வேண்டியிருக்கிறது. வேதங்களின் இரண்டு பகுதிகளுள் ஒன்று சடங்குகளைப்பற்றி விரிவாகச் சொல்கிறது என்பதை ஏற்கனவே கூறினேன். இதனுடைய மணம் சாந்தோக்கிய உபநிடதத்தில் அதிகமாக வீசுகிறது. இந்த உபநிடதத்தில் பாதிக்குமேல் சடங்குகள் சம்பந்தப்பட்ட தாகவே இருக்கிறது. எது எப்படியானாலும் சரி, பழைய உபநிடதங்களைப் படிப்பதில் ஒரு பெரிய லாபம் இருக்கிறது. அதன்மூலம், ஆன்மீகக் கருத்துக்களுடைய வளர்ச்சியின் வரலாற்றை நாம் காண முடிகிறது.
மிகவும் அண்மைக்கால உபநிடதங்களில் ஆன்மீகக்கருத்துக்களை ஒன்றுசேர்த்து, ஒரே இடத்தில் மொத்தமாகக் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, உபநிடதங்களில் கடைசியானது என்று ஒரு வேளை நாம் சொல்லக்கூடிய பகவத்கீதையில் சடங்குகளைப் பற்றிய பேச்சே இல்லை. உபநிடதங்களிலிருந்து திரட்டிய ஆன்மீக உண்மைகளாகிய அழகிய மலர்களால் ஆன செண்டு தான் பகவத்கீதை. ஆனால் ஆன்மீகக் கருத்துக்களின் வளர்ச்சியையோ தோற்றுவாயையோ கீதையிலிருந்து ஒன்றுமே அறிய முடியாது. அவ்வாறு அறிய வேண்டுமானால், பலர் சொல்லியிருப்பதுபோல், வேதங்களைத்தான் ஆராய வேண்டும். வேதங்கள் எப்போதும் புனிதத்துடன் இணைத்தே மதிக்கப்பட்டு வந்தன. இதனால் அவை உலகின் வேறு எந்த நூல்களையும்விட கேடுறாதவையாக இன்றும் இருந்து வருகின்றன. வேதங்களில் மிக உயர்ந்த சிந்தனைகளும் மிகத் தாழ்ந்த சிந்தனைகளும், முக்கியமான சிந்தனைகளும் முக்கியமற்ற சிந்தனைகளும் உள்ளன. சாதாரணமாக விளக்கங்களும் மகோன்னதமான கருத்துக்களும் ஒன்றையடுத்து மற்றொன்றாக இருப்பதை நாம் வேதங்களில் காணலாம். அவற்றில் மாற்றம் செய்வதற்கு யாருக்கும் இதுவரை தைரியம் ஏற்படவில்லை. விளக்கவுரை ஆசிரியர்கள் வந்தார்கள், அவர்கள் அந்தக் கருத்துக்களைச் சற்று எளிமைப்படுத்தி, அவற்றிலிருந்து புதிய கருத்துக்களை உருவாக்கிக் கொடுக்க முயன்றார்கள். மிகச் சாதாரணமான பகுதிகளிலிருந்தும்கூட ஆன்மீகக் கருத்துக்களைக் கண்டுபிடிக்க முயன்றார்கள். ஆனாலும் மூலப்பகுதிகள் எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருந்தன. அற்புதமான ஆராய்ச்சிக் குறிப்பேடுகளாகப் பயன்படுகின்றன.
பிற்காலங்களின் ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப எல்லா மதங்களின் நூல்களிலும் மாற்றங்கள் செய்யப்படுவது நமக்குத் தெரியும். இங்கே ஒரு வார்த்தையை மாற்றுவது, அங்கே ஒரு வார்த்தையைச் சேர்ப்பது போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேத இலக்கியத்தில் இத்தகைய மாறுதல்கள் அனேகமாகச் செய்யப்படவே இல்லை. அப்படியே செய்யப்பட்டிருந்தாலும், அது கவனத்தை ஈர்க்கும் அளவிற்குரியதாக இல்லை. ஆகவே சிந்தனைகளின் உண்மையான ஆரம்ப முக்கியத்துவம் என்ன, அவை படிப்படியாக எவ்வாறு வளர்ந்தன, லவுகீகக் கருத்துக்கள் எவ்வாறு படிப்படியாக நுட்பமான ஆன்மீகக் கருத்துக்களாகப் பரிணமித்து, இறுதியில் வேதாந்தத் தத்துவத்தில் மகோன்னத நிலையை அடைந்தன. என்பதைப் பற்றியெல்லாம் நாம் அறிய முடிகிறது. இவ்வாறு ஆரம்பம் முதலே அறிவதற்கான வாய்ப்பு ஒரு பெரும் நன்மையாகும். பழங்காலப் பழக்கவழக்கங்களைப் பற்றிய சில விவரங்களும் வேதங்களில் உள்ளன. உபநிடதங்களில் அவற்றைப் பற்றிய அதிகமான பேச்சு இல்லை. அவற்றில் கையாளப்பட்டிருக்கும் மொழி சுருக்கமாக, எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய விதத்தில் உள்ளது.
இந்த நூல்களை எழுதியவர்கள், சில உண்மைகளை நினைவில் வைத்துக் கொள்வதற்கான வசதிக்காகச் சில குறிப்புகளை மட்டுமே எழுதி வைத்தார்கள். இந்த உண்மைகள் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்தவை என்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள், ஒரு விஷயத்தைச் சொல்லும்போது, அதைக் கேட்பவர்களுக்கு அந்த விஷயம் ஏற்கனவே தெரியும் என்ற முடிவுடனேயே சொல்கிறார்கள். ஆகவே இதில் ஒரு பெரிய சிரமம் வருகிறது. இப்போது பழைய வழக்கங்களெல்லாம் அனேகமாக மறைந்து, மீதி இருப்பவையும் மிகைப்படுத்தி சொல்லப்பட்டிருப்பதால், இந்தக் கதைகளின் உண்மையான அர்த்தங்கள் நமக்குத் தெரிவதில்லை. இந்தக் கதைகளுக்கெல்லாம் பல புதிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால் புராணங்களில் இவை வெறும் உணர்ச்சிப் பரவசப் பாடல்களாக மாறிவிட்டன.
மேலைநாடுகளின் அரசியல் வளர்ச்சியைப் பார்த்தால் சர்வாதிகாரத்தை அவர்களால் தாங்க முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு தனிமனிதன் தங்களை ஆட்சி செய்வதற்கு இடம் கொடுக்காமலிருக்கவே எப்போதும் அவர்கள் முயன்று வந்திருக்கிறார்கள். இவ்வாறு படிப்படியாக, அவர்களுடைய ஜனநாயக மற்றும் லவுகீக சுதந்திரக் கருத்துக்கள் முன்னேற்றம் பெற்று வந்திருக்கின்றன. இந்தியத் தத்துவத்தின் வளர்ச்சியிலும் அதைப் போலவே முன்னேற்றப் போக்குதான் தெரிகிறது. பல தெய்வக் கருத்து போய், ஒரேதெய்வக் கருத்து நிலைபெற்றது. உபநிடதங்களிலோ, அந்த ஒரே கடவுள் கருத்திற்கு எதிராகக்கூடப் புரட்சி நடந்திருக்கிறது.
பிரபஞ்சத்தின் தலைவிதியைப் பல ஆட்சியாளர்கள் நிர்ணயிக்கிறார்கள் என்ற கருத்து மட்டுமல்ல, ஒரே ஒருவர் ஆட்சி செய்கிறார் என்பதுகூட ஒப்புக்கொள்ளப் படவில்லை. இந்தக் கருத்துதான் முதலில் நம்மைக் கவர்கிறது. இது மேலும்மேலும் வளர்ந்து சிகரத்தையே எட்டி விட்டது. அனேகமாக எல்லா உபநிடதங்களிலும் இந்த உச்சக்கட்டம் கடைசியில் வருகிறது. அதாவது, பிரபஞ்சத்தை ஆளும் கடவுள் யாரும் இல்லை என்ற முடிவே அது. இங்கே சகுணக் கடவுள் மறைந்து நிர்க்குணப் பிரம்மத் தத்துவம் நிலைபெறுகிறது. கடவுள் பிரபஞ்சத்தை ஆள்கின்ற ஒருவர் அல்ல; எவ்வளவோ மேலான ஆற்றல் பெற்ற மானிடர் அல்ல; பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து ஒவ்வோர் உயிரினுள்ளும் உள்ள ஒரு தத்துவமே அவர் என்ற கருத்து நிலைபெற்றது. கடவுள்கருத்து, சகுணத்திலிருந்து நிர்க்குணத்திற்குச் செல்கின்ற அதே வேளையில் மனிதனை மட்டும் சகுணமாகக் கொள்வது தர்க்கரீதியாகத் தவறான ஒன்று. ஆகவே மனிதன் என்பவன் பெயரும் உருவமும் உடையவன் என்ற கருத்து அழிந்து, அவனும் ஒரு தத்துவமே என்ற கருத்து உருவாகி வளர்ந்தது. பெயரும் வடிவமும் தாங்கிய மனிதன் வெறும் தோற்றம் மட்டுமே, அந்தத் தோற்றத்திற்குப் பின்னாலிருக்கும் தத்துவமே உண்மை மனிதன். ஆகவே மனிதன், கடவுள் என்ற இரண்டு பக்கங்களிலுமே சகுணக்கருத்து மறைந்து, தத்துவக் கருத்தை அணுகுவதைக் காண்கிறோம். சகுணக் கடவுள் நிர்க்குணத் தத்துவம் ஆகிறது; பெயரும் வடிவமும் தாங்கியவன் மனிதன் என்ற கருத்து மறைந்து, அவன் ஒரு தத்துவம் என்ற கருத்து வளர்கிறது.
இதன்பிறகு நிர்க்குணப் பிரம்மக் கருத்தும், பெயர் மற்றும் வடிவமற்ற மனிதத் தத்துவக் கருத்தும் படிப்படியாக இணைந்து ஒரே தத்துவமாகப் பரிணமிப்பதைக் காண்கிறோம். இந்த இரண்டு கருத்துக்களும் எவ்வாறு படிப்படியாக இணைந்து, ஒரே கருத்தாகப் பரிணமிக்கின்றன என்பதை உபநிடதங்கள் விளக்குகின்றன. எல்லா உபநிடதங்களும் முடிவாகச் சொல்லும் கருத்து, நீயே அது என்பதுதான். நிலையான ஆனந்தப் பொருள் ஒன்றே தான். அதுவே பல்வேறாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
பிறகு தத்துவஞானிகள் தோன்றினர். உபநிடதங்களின் வேலை அந்த இடத்தில் நிறைவுற்றுவிட்டதாகத் தோன்றுகிறது. அடுத்தகட்ட வேலைகளைத் தத்துவ ஞானிகள் மேற்கொண்டார்கள். வடிவ அமைப்பை உபநிடதங்கள் கொடுத்துவிட்டன, இவர்கள் உள்விவரங்களை நிரப்ப வேண்டியிருந்தது. இங்குப் பல கேள்விகள் எழுவது இயல்பே. இருப்பது ஒரே நிர்க்குணத் தத்துவம், அதுவே பல்வேறாக வெளிப்படுகிறது என்றால், ஒன்று பலவாக ஆனது எப்படி? இது பக்குவமுறாத அந்தப் பழைய கேள்வியான தீமையின் மூல காரணம் என்ன என்பதன் வேறோர் உருவம்தான். உலகில் தீமை ஏன் இருக்கிறது, அதற்குக் காரணம் என்ன என்கின்ற அதே கேள்வி இப்பொழுது பண்பட்டதாகவும் தத்துவரீதியாகவும் கேட்கப்படுகிறது. நாம் ஏன் துன்பம் அடைகிறோம் என்று புலன்களின் அடிப்படையில் கேட்பது மறைந்து. இப்போது தத்துவ அடிப்படையில் அதே கேள்வியைக் கேட்க ஆரம்பித்திருக்கிறோம். ஒருமையான தத்துவம் எப்படிப் பன்மையாகியது? இந்தியா இந்தக் கேள்விக்கு மாயைத் தத்துவத்தின் மூலம் மிகச் சிறந்த பதிலைக் கொடுத்திருக்கிறது. அது உண்மையில் பன்மையாக ஆகவில்லை; தன் உண்மை இயல்பில் எதையும் அது இழக்கவும் இல்லை என்பதே அந்தப் பதில். பன்மை என்பது வெறும் வெளித்தோற்றம் மட்டுமே. மனிதன் வெளித்தோற்றத்திற்குத்தான் பெயரும் உருவமும் உடையவனாகத் தோன்றுகிறான். உண்மையில் அவன் நிர்க்குணப் பிரம்மமே. அதே போல், கடவுளும் வெளித் தோற்றத்திற்குத்தான் சகுணமாக இருக்கிறார்; உண்மையில் அவர் நிர்க்குணப் பிரம்மமே.
இந்தப் பதிலில்கூடத் தொடர்ச்சியான பல நிலைகள் இருந்திருக்கின்றன. தத்துவ ஞானிகள் இதைப்பற்றிய கருத்தில் வேறுபட்டிருக்கிறார்கள். எல்லா இந்தியத் தத்துவ ஞானிகளும் மாயாவதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. நிச்சயமாகப் பலர் ஒப்புக்கொள்ளவில்லை. பண்படாத துவைதக் கருத்துக்களைப் பின்பற்றும் துவைதிகள் இருக்கின்றார்கள். அவர்கள் இந்தக் கேள்வியை முளையிலேயே கிள்ளிவிடுகிறார்கள். இதைப் போன்ற கேள்வியைக் கேட்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை, இதற்கு விளக்கம் கேட்கவும் உங்களுக்கு உரிமையில்லை. அது கடவுளின் சித்தம். நாம் அமைதியாக அதற்குப் பணிந்தேயாக வேண்டும். மனித ஆன்மாவிற்குச் சுதந்திரமே இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும், நம்மிடம் என்ன இருக்கும், நமக்கு என்னென்ன இன்பதுன்ப அனுபவங்கள் வரப்போகின்றன என்பவையெல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டன. துன்பம் வந்தால், அதைப் பொறுமையோடு சகிப்பதுதான் நமது கடமை. அப்படிச் செய்யாவிட்டால் நமது தண்டனை மேலும் அதிகரிக்கும். ஆமாம், இதெல்லாம் எப்படித் தெரியும்? வேதங்கள் சொல்வதால்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு கூறுகின்ற சாஸ்திரங்களும், அவற்றிற்கு அவர்கள் தரும் விளக்கங்களும் உள்ளன. அவர்கள் தங்கள் கருத்துக்களைத் திணிக்க விரும்புகிறார்கள்.
வேறு சிலர் இருக்கிறார்கள். இவர்கள் மாயா வாதத்தை ஒப்புக் கொள்வதில்லை; ஆனால் துவைதத்திற்கும் அத்வைதத்திற்கும் இடையில் நிற்கிறார்கள். படைப்பு முழுவதுமே கடவுளுக்கு உடம்புபோல் அமைந்துள்ளது என்பது அவர்கள் கருத்து. கடவுள்தான் எல்லா ஆன்மாக்களுக்கும் அந்தராத்மா. இயற்கைக்கும் அவரே அந்தராத்மாவாக இருக்கிறார். தனி ஆன்மா தீமை செய்யும்போது சுருங்க ஆரம்பிக்கிறது. ஒருவன் பாவம் செய்தால், அவனுடைய ஆன்மா சுருங்க ஆரம்பிக்கிறது. அவனுடைய சக்தி சிறிதுசிறிதாகக் குறைந்துகொண்டே போகிறது. புண்ணியம் செய்யத் தொடங்கும்போது அது விரிவடைய ஆரம்பிக்கிறது.
இந்திய மதங்கள் எல்லாவற்றிலும், ஏன், உலக மதங்கள் எல்லாவற்றிலுமே தெரிந்தோ தெரியாமலோ, ஒரு பொதுவான கருத்து உள்ளது. என்னைப் பொறுத்த வரை, மனிதன் தெய்வீகத் தன்மை உடையவன் என்பதே அது. மனித ஆன்மா என்பது எதுவாக இருந்தாலும் சரி, அது எந்தவிதத்தில் கடவுளோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் சரி, புராணங்கள், உருவங்கள், தத்துவங்கள் என்று எதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும் சரி, அது இயல்பிலேயே தூய்மையானது, பூரணமானது என்ற கருத்தைக் கொள்ளாத ஒரு நெறியோ, ஓர் உண்மையான மதமோ உலகில் இல்லை. நன்மையும் ஆற்றலுமே ஆன்மாவின் உண்மை இயல்பு; பலவீனமோ துன்பமோ அல்ல. இந்தத் துன்பம் என்பதெல்லாம் எப்படியோ தோன்றி விட்டது. அது எப்படி வந்தது என்பதை விளக்குவதற்காக அதைத் தீமையின் உரு, பேய், அஹ்ரிமான் என்றெல்லாம் உருவகப்படுத்த, பண்படாத நெறிகள் பலவும் முயல்கின்றன. இனி சில நெறிகள், கடவுளும் பிசாசும் ஒருவரே, எந்தக் காரணமும் இல்லாமல் அவர் சிலருக்கு இன்பமும் சிலருக்குத் துன்பமும் கொடுக்கிறார் என்கின்றன. அதிகச் சிந்தனைத் திறனுடைய நெறிகளோ, மாயாவாதம் போன்ற கொள்கைகளால் இதை விளக்க முயல்கின்றன. ஆனால் ஓர் உண்மை தெளிவாகத் தெரிகிறது. நாம் ஆராய வேண்டியது அதைத்தான். பார்க்கப்போனால், இந்தத் தத்துவக்கருத்துக்கள், கோட்பாடுகள் எல்லாமே மனத்திற்கு ஒரு பயிற்சி, அறிவுக்கு ஒரு பயிற்சி, அவ்வளவுதான். உலகிலுள்ள எல்லா மதங்களுடைய மூடநம்பிக்கைகளின் ஊடேயும் எனக்குப் புலப்படுகின்ற ஓர் உன்னதமான கருத்து மனிதன் தெய்வீகமானவன், நமது இயல்பு தெய்வீகம் என்பதுதான்.
வேறு எந்தத் தன்மை வந்தாலும் அது வெறும் ஏற்றுச்செயலே என்கிறது வேதாந்தம். இருக்கின்ற ஒன்றின்மீது இல்லாத ஒன்று ஏற்றுப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். ஆனால் தெய்வீகத் தன்மை அழிவதில்லை. கொடுமையான பாவியிடமும் சரி, பெரிய மகானிடமும் சரி, இந்தத் தன்மை எப்போதும் இருக்கிறது. அதை விழிப்புணர்த்துவதுதான் நம் வேலை. அது தானாகவே வெளிப்பட்டு, தன்னைச் செயல்படுத்திக் கொள்ளும். நாம் அதை உணர்த்த வேண்டும். அது தானாகவே வெளிப்படும். சிக்கிமுக்கிக் கல்லிலும் விறகிலும் நெருப்பு இருப்பதும், அதை வெளிப்படுத்த உராய்வு அவசியம் என்பதும் பழங்கால மக்களுக்குத் தெரிந்திருந்தது. சுதந்திரமும் தூய்மையுமான நெருப்பு ஒவ்வோர் ஆன்மாவின் இயல்பு. இவை ஆன்மாவின் பண்பு அல்ல. ஏனெனில் பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ளவும் சேர்த்துக்கொள்ளவும் முடியும். எனவே அவற்றை இழக்கவும் வாய்ப்பு உண்டு. ஆன்மாவோ சுதந்திரத்துடன் ஒன்றுபட்டது; இருப்புடன் ஒன்றுபட்டது, அறிவுடன் ஒன்றுபட்டது. ஆனந்தம் ஆன்மாவின் இயல்பு, உரிமை. நாம் காண்பவை எல்லாம் அதன் மங்கலான அல்லது பிரகாசமான வெளிப்பாடுகளே. மரணம்கூட அந்த உண்மைப் பொருளின் வெளிப்பாடே. பிறப்பு-இறப்பு, வாழ்வு-சாவு, வீழ்ச்சி-புத்துயிர்ப்பு எல்லாமே அந்த ஒருமையின் பல்வேறு வெளிப்பாடுகள்தான்.
அறிவின்மையாகவோ அறிவாகவோ எப்படி அறிவு தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும், அது எல்லா அறிவின் சாரமான சித் என்பதன் வெளிப்பாடே. வேறுபாடு, அளவில்தானே தவிர, தன்மையில் இல்லை. நிலத்தில் ஊர்ந்து செல்லும் மிகத் தாழ்ந்த புழுவின் அறிவுக்கும், உலகின் மிக உயர்ந்த மேதையின் அறிவுக்கும், உள்ள வேறுபாடு அளவில்தானே தவிர, தன்மையில் இல்லை. வாழ்வின் இன்பங்களெல்லாம், அவை எவ்வளவு கீழ்த்தரமானவையாக இருந்தாலும்கூட, அவையெல்லாமே ஆன்மாவின் இயல்புகளில் ஒன்றான ஆனந்தத்தின் வெளிப்பாடுகளே என்று வேதாந்தி தைரியமாகச் சொல்கிறான்.
இந்தக் கருத்துதான் வேதாந்தத்தின் மிகவும் பிரபலமான கருத்து என்று தோன்றுகிறது. நான் முன்னரே சொன்னதுபோல், எல்லா மதங்களிலும் இந்தக் கருத்து இருப்பதாகத்தான் தெரிகிறது. இந்தக் கருத்து இல்லாத மதம் இருப்பதாக இதுவரையில் எனக்குத் தெரியவில்லை. உலகம் தழுவிய இந்தக் கருத்துதான் எல்லா மதங்களின் வாயிலாகவும் செயல்படுகிறது. பைபிளை எடுத்துக்கொள்வோம். முதல் மனிதனாகிய ஆதாம் முற்றும் தூய்மையானவனாக இருந்தான், பின்னர் தீய செயல்களால் தூய்மையை இழந்துவிட்டான் என்று அதில் உருவகமாகச் சொல்லப்பட்டிருப்பதைக்காண்கிறோம். ஆதி மனிதனின் இயல்பு தூய்மையாக இருந்ததாக நினைத்தார்கள் என்பதையே இந்த உருவகம் காட்டுகிறது. நாம் காணும் மாசுகளும், நாம் உணரும் பலவீனங்களும் அந்தத் தூய்மையான இயல்பின்மீது ஏற்றப்பட்டவை. மறுபடியும் மனிதன் தன் பழைய தூய்மையான நிலையை அடைவதற்கான வாய்ப்பு உண்டு, இல்லையில்லை, அடைய முடியும் என்று நம்புவதையே தொடர்கின்ற கிறிஸ்தவ மத வரலாறு காட்டுகிறது.
பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் இரண்டின் மொத்த வரலாறும் இதுதான். முஸ்லீம்களின் விஷயமும் இப்படித்தான். அவர்களும், ஆதாமையும் அவனுடைய தூய்மையையும் நம்பினார்கள். இழந்த அந்த நிலையை அடைவதற்கான வழியை முகமது அவர்களுக்குக் காட்டினார். பவுத்தர்கள் விஷயமும் இதுதான். இந்த உலகைக் கடந்துதான் நிர்வாணம் என்ற நிலையை அவர்கள் கூறுகிறார்கள். வேதாந்தத்தின் கூறும் பிரம்மம் என்பதே இந்த நிர்வாணம். இழந்த இந்த நிர்வாண நிலையைத் திரும்பவும் அடைய வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலேயே புத்தமதம் அமைந்துள்ளது. நமக்கு ஏற்கனவே உரிமை இல்லாத ஒன்றை நாம் பெற முடியாது என்ற கருத்தை எல்லா மத நெறிகளிலும் நாம் காண்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தில் யாருக்குமே நாம் கடன்பட்டவர்கள் அல்ல. ஒரு பெரிய வேதாந்தத் தத்துவஞானி தமது புத்தகம் ஒன்றின் தலைப்பில் கவிதைநயத்துடன், நமது பேரரசைப் பெறுதல் என்று சொல்லியிருப்பதுபோல், நாம் நம் பிறப்புரிமையைத்தான் கேட்கிறோம். அந்தப் பேரரசு நம்முடையது. அதை இழந்து விட்டோம்; திரும்பப் பெற்றாக வேண்டும். மாயாவாதியோ, பேரரசை இழந்ததாக நினைப்பதே பொய்த்தோற்றம், நாம் அதை இழக்கவே இல்லை என்கிறான். இரண்டு தரப்பு வாதங்களுக்கும் இதுதான் வேறுபாடு.
பேரரசு நம்முடையது, அதை இழந்துவிட்டோம் என்பதுவரை எல்லா மதங்களும் ஒப்புக்கொள்கின்றன. ஆனால் அதைத்திரும்பப் பெறுவது எப்படி என்பதற்குப் பல்வேறு வழிகளைக் கூறுகின்றன. சில சடங்குகளைச் செய்யுங்கள், சில தெய்வங்களுக்கு வேண்டுதல் செலுத்துங்கள், சில உணவுகளை உண்ணுங்கள், இன்னவிதமாக வாழ்க்கை நடத்துங்கள்; அப்போது அந்தப் பேரரசைத் திரும்பப் பெற முடியும் என்கிறது ஒரு மதம். இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திக்கு முன் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து, அழுது, கதறி, மன்னிப்புக் கேட்பதால் அந்தப் பேரரசைப் பெறலாம் என்று இன்னொரு மதம் உபதேசிக்கிறது. அத்தகைய ஒரு சக்தியிடம் மனமார அன்பு செலுத்துவதால் இதனைச் சாதிக்கலாம் என்று வேறொரு மதம் கூறுகிறது. இந்த எல்லா உபதேசங்களும் உபநிடதங்களில் இருக்கின்றன. போகப்போக நீங்கள் இதைப் புரிந்துகொள்வீர்கள்.
ஆனால் நீங்கள் அழுது கதறவே தேவையில்லை என்பதுதான் உயர்ந்ததும் இறுதியானதுமான உபதேசம். இந்தச் சடங்குகளையெல்லாம் செய்ய வேண்டாம், பேரரசை எப்படித் திரும்பப் பெறுவது என்ற எண்ணமே உங்களுக்குத் தேவையில்லை. ஏனெனில் நீங்கள் அதை இழக்கவே இல்லை. இழக்காத ஒன்றை ஏன் தேடிப் போக வேண்டும்? நீங்கள் ஏற்கனவே தூயவர்களாக இருக்கிறீர்கள், சுதந்திரமானவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்தால் அந்தக் கணமே சுதந்திரம் அடைகிறீர்கள். கட்டுண்டவர்கள் என்று எண்ணினால் கட்டுண்டவர்களாக இருக்கிறீர்கள். இவை மிகவும் தைரியமான வார்த்தைகள். முதலில் நான் சொன்னபடி, நான் துணிச்சலாகத்தான் பேசியாக வேண்டும். இது இப்போது உங்களுக்கு பயத்தைத் தரலாம். ஆனால் சிந்தித்து, இதை உங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும் போது என் வார்ததையின் உண்மை உங்களுக்குப் புலப்படும். சுதந்திரம் என்பது உங்கள் இயல்பு இல்லை என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்களால் சுதந்திரம் பெற முடியாது. சுதந்திரமாக இருந்தீர்கள், எப்படியோ அதை இழந்துவிட்டீர்கள் என்று சொன்னால், முதலிலும் நீங்கள் சுதந்திரராக இல்லை என்றுதான் ஆகும். நீங்கள் உண்மையில் சுதந்திரராக இருந்திருந்தால், அந்தச் சுதந்திரத்தை இழக்கச் செய்ய எதனால் முடிந்திருக்கும்? கட்டுப்படாத இயல்புள்ள ஒன்றைக் கட்டுப்படுத்தவே முடியாது. அது உண்மையில் கட்டுப்பட்டிருந்தால், அதன் சுதந்திரம் ஒரு பொய்த்தோற்றம்.
இந்த இரண்டுள் நீங்கள் எதை எடுப்பீர்கள்? ஆன்மா இயல்பாகவே தூய்மையாகவும் சுதந்திரமாகவும் உள்ளது என்று சொன்னால், பிரபஞ்சத்திலுள்ள எதனாலும் அதைக் கட்டுப்படுத்தவோ, எல்லைக்குள் அடக்கவோ முடியாது என்பதுதான் பொருள். ஆன்மாவைக் கட்டுப்படுத்தும் சக்தி ஒன்று இயற்கையில் இருந்தால், அப்போது ஆன்மா சுதந்திரமானது அல்ல. அது சுதந்திரமானது என்று நாம் கூறியது வெறும் மன மயக்கம். ஆகவே சுதந்திரம் அடைவது சாத்தியம் என்றால், ஆன்மா இயல்பாகவே சுதந்திரமானது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது. வேறுவிதமாக இருக்க முடியாது. சுதந்திரம் என்றால், வெளியிலுள்ள எதையும் சாராதது என்பதுதான் பொருள். அதாவது அதற்கு வெளியிலுள்ள எதுவுமே அதை மாற்றமடையச் செய்ய முடியாது.
ஆன்மா ஆதியந்தமற்றது. இந்தக் கருத்திலிருந்து தான் உயர்ந்த கருத்துக்கள் அனைத்தையும் நாம் பெற்றுள்ளோம். ஆன்மா இயல்பாகவே சுதந்திரமானது, அதாவது வெளியிலுள்ள எதுவும் அதைப் பாதிக்க முடியாது என்று வைத்துக்கொண்டால்தான் ஆன்மா மரணமற்றது என்பதை உறுதிப்படுத்த முடியும். ஏனெனில் மரணம் என்பதற்குப் புறக் காரணங்கள் அவசியம். நான் விஷத்தைக் குடித்தால் இறந்து விடுவேன். ஆகவே விஷம் என்ற புறப் பொருள் என் உடலைப் பாதிக்கிறது என்பது தெளிவாகிறது. ஆன்மா சுதந்திரமானது என்பது உண்மையானால் அதை எதுவும் பாதிக்க முடியாது. அதற்கு மரணமே இல்லை என்றுதான் ஆகிறது. இந்தக் காரணகாரிய விதியை, இந்த மாயையை, கடந்து நின்றால் தான், ஆன்மா சுதந்திரமானது, மரணமற்றது, ஆனந்தமயமானது என்பதெல்லாம் உண்மையாக முடியும். இந்த இரண்டுள் நீங்கள் எதை எடுப்பீர்கள்? முதலாவது உள்ளது மனமயக்கம் என்று சொல்லுங்கள், இல்லை இரண்டாவது உள்ளது மனமயக்கம் என்று சொல்லுங்கள். நான் இரண்டாவதையே சொல்வேன். எனது உணர்ச்சிகளுக்கு, நோக்கங்களுக்கு அதுதான் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது. நான் இயல்பாகவே சுதந்திரமானவன் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். இந்தத் தளைதான் உண்மை, எனது சுதந்திரம் மனமயக்கம் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
எல்லா தத்துவங்களிலும் இந்த விவாதம் ஏதாவது ஒருவிதத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மிகவும் அண்மைக் காலத் தத்துவங்களில்கூட இதே விவாதம் எழுவதைக் காண்கிறோம். இதில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஆன்மா என்பது இல்லை; உடல், மூளை என்று நாம் சொல்லும் பொருட்களை உருவாக்குகின்ற ஜடப்பொருளிலுள்ள மூலக்கூறுகளின் தொடர்ந்த சுழற்சியே ஆன்மா இருப்பதைப் போன்ற மனமயக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மூலக்கூறுகளின் அதிர்வும் இயக்கமும் இடைவிடாத சுழற்சியும்தான் சுதந்திரம் என்ற எண்ணத்திற்குக் காரணமாக இருக்கிறது என்று ஒரு பிரிவு சொல்கிறது. இதே கருத்துள்ள பவுத்த மதப் பிரிவுகள் சில இருந்தன. கீழ்க்கண்ட உதாரணத்தால் இந்தக் கருத்தை அவை விளக்கின: ஒரு தீப்பந்தத்தை வேகமாகச் சுழற்றினால் ஓர் ஒளிவட்டம் தோன்றுகிறது. தீப்பந்தம் கணத்துக்குக் கணம் இடம் மாறுவதால் ஏற்படும் தோற்றமே இது. மற்றபடி உண்மையாவ ஒளிவட்டம் ஒன்றும் இல்லை. நாம் எல்லோரும் நுண் மூலக்கூறுகளின் சேர்க்கை. அவற்றின் வேகமான சுழற்சியால் நிரந்தரமான ஆன்மா ஒன்று இருப்பது போன்ற மயக்கம் உண்டாகிறது.
மற்றொரு பிரிவு சொல்கிறது: எண்ணங்கள் தொடர்ந்து வேகமாக எழுவதால்தான் ஜடப்பொருள் இருப்பது போன்று தோன்றுகிறது. உண்மையில் ஜடப்பொருள் என்பதே இல்லை. ஆகவே ஒரு பிரிவு, ஆன்மா என்பது தோற்றம் என்றும், மற்றொரு பிரிவு, ஜடப்பொருளே தோற்றம் என்றும் சொல்வதைக் காண்கிறோம். நீங்கள் எந்தப் பக்கம்? நிச்சயமாக, ஆன்மா உண்மை, பொருட்கள் தோற்றம் என்று கூறுகின்ற பக்கம்தான்.
வாதங்கள் இரண்டு பிரிவுகளுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. ஆனால் ஆன்மா உண்டு என்கின்ற பிரிவின்வாதம், சிறிது அதிக வலுவுள்ளதாக இருக்கிறது. ஜடப்பொருள் என்பது என்ன என்பதை உண்மையில் யாரும் பார்த்ததில்லை. நாம் நம்மைத்தான் உணர்ந்துகொள்ள முடியும். தனக்கு வெளியே ஜடப்பொருளை உணரவல்ல ஒருவரைக்கூட நான் இதுவரை பார்த்ததில்லை. தன்னை விட்டு வெளியே குதிக்க யாராலும் இதுவரை முடிந்ததில்லை. எனவே ஆன்மா உண்டு என்று கூறும் பிரிவின்வாதம், சிறிது அதிக வலுவுள்ளதாகவே இருக்கிறது. இரண்டாவதாக, ஆன்மவாதம் பிரபஞ்சத்திற்கு விளக்கம் அளிக்கிறது. ஆனால் ஜடப்பொருள் வாதமோ அப்படிச் செய்வதில்லை. ஆகவே ஜடப்பொருள் வாதம் தர்க்கரீதியானது அல்ல.
எல்லா தத்துவங்களையும் அலசி ஆராய்ந்தால், அவை இந்த இரண்டு பிரிவுகளுள் ஏதாவது ஒன்றில் அடங்குவதைக் காண்போம். இயல்பான தூய்மை மற்றும் சுதந்திரம் பற்றிய கேள்விகள் இங்கேயும்எழுகின்றன. இங்கே, அது மேலும் சிக்கல் நிறைந்ததாக, மேலும் தத்துவரீதியாக உள்ளது. ஆன்மாவே தோற்றம் என்று ஒரு பிரிவும், ஜடப்பொருளே தோற்றம் என்று மற்றொரு பிரிவும் வாதிக்கின்றன. நாம் இரண்டாவது பிரிவையே ஆதரிக்கிறோம். நமது தளைகள் தாம் தோற்றம் என்று நாம் நம்புகிறோம்.
நாம் கட்டுப்படவே இல்லை. ஏற்கனவே நாம் சுதந்திரர்களாகத்தான் இருக்கிறோம் என்பதே இந்தப் பிரச்சினைக்கு வேதாந்தம் காணும் தீர்வு. அதுமட்டுமல்ல, நாம் கட்டுப்பட்டிருக்கிறோம் என்று சொல்வதும், ஏன், நினைப்பதும்கூட ஆபத்துதான். அதுபெரும் தவறு; அத்துடன் தன்னைத் தானே மனோவசியத்திற்கு உட்படுத்திக் கொள்வதும் ஆகும். நான் கட்டுண்டவன், நான் பலவீனன், நான் உதவியற்றவன் என்றெல்லாம் சொல்லும் அந்தக் கணமே நாம் நம் நிலையிலிருந்து தாழ்வடைகிறோம்; நம்மைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளின் எண்ணிக்கையில் ஒன்றை அதிகரிக்கிறோம். அவ்வாறு சொல்லாதீர்கள், அவ்வாறு நினைக்காதீர்கள்.
காட்டிலேயே வாழ்ந்து சிவோஹம்-நானே ஆனந்த மயமான ஆன்மா என்று இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருந்த ஒருவரைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருநாள் ஒரு புலி அவர்மேல் பாய்ந்து, அவரை இழுத்துக் கொண்டு போயிற்று. ஆற்றிற்கு அக்கரையில் இருந்தவர்கள் அதைப் பார்த்தார்கள். புலியின் வாயில் சிக்கி, மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோதும், குரல் இருந்ததுவரை சிவோஹம் என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தது அவர்கள் காதில் விழுந்தது. அத்தகையோர் பலர் இருந்திருக்கின்றனர். துண்டுதுண்டாகப் பகைவர்கள் வெட்டியபோதும் அவர்களை வாழ்த்திய மகான்கள் இருந்திருக்கிறார்கள். நானே அவன்; நானே அவன். அப்படியே நீங்களும். நான் தூயவன், பூரணமானவன். எனது எல்லா பகைவர்களும் அப்படியே. நீயும் அவனே, நானம் அவனே. அது தான் வலிமை என்பது.
துவைத நெறிகளிலும் சிறந்த, அற்புதமான கருத்துக்கள் இருக்கின்றன. இயற்கைக்கு அப்பால், நாம் அன்பு செலுத்தி, வழிபடும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்து எவ்வளவு சிறந்தது! சிலநேரங்களில் இந்தக் கருத்து இதமளிப்பதாக இருக்கிறது. ஆனால் இந்த இதமான நிலை, ஒரு போதைநிலை போன்றதே தவிர, இயற்கையானதல்ல என்று வேதாந்தம் கூறுகிறது. காலப்போக்கில் இது பலவீனத்தையே ஏற்படுத்தும். உலகத்திற்கோ முன்பு எப்போதையும் விட அதிகமாக இப்போது தேவைப்படுவது வலிமைதான். உலகில் காணப்படும் துன்பங்கள் அனைத்திற்கும் மூலகாரணம் பலவீனம்தான் என்று வேதாந்தம் சொல்கிறது . நாம் துன்புறுவதற்கு பலவீனம் தான் ஒரே காரணம். நாம் பலவீனர்களாக இருப்பதால் தான் துன்பமடைகிறோம். பலவீனர்களாக இருப்பதால் தான் பொய் சொல்கிறோம், கொள்ளை அடிக்கிறோம், கொலை செய்கிறோம், மற்ற குற்றங்களையும் செய்கிறோம். நாம் பலவீனர்களாக இருப்பதால்தான் துன்பப்படுகிறோம். நாம் பலவீனர்களாக இருப்பதால்தான் மரணம் அடைகிறோம். நம்மைப் பலவீனப்படுத்துவதற்கு எதுவும் இல்லாதபோது நமக்கு மரணமோ துன்பமோ இல்லை. மனமயக்கமே நமது துன்பங்களுக்குக் காரணம். அந்த மனமயக்கத்தை விடுங்கள். துன்பங்களெல்லாம் பறந்து விடும். இது மிகவும் தெளிவானது, எளிதானது. தத்துவவாதங்கள், அறிவு ஜாலங்கள் இவை எல்லாவற்றின் மூலமாக நாம் அடையும் முடிவான மதக்கருத்து, உலகிலேயே மிகவும் எளிய கருத்து இதுதான்.
உண்மையை வெளிப்படுத்துவதற்கான மிகவும் எளிய வழி அத்வைத வேதாந்தம். இந்தியாவிலும் வேறு எங்கேயும் துவைதத் தத்துவ உபதேசம் பெருந்தவறாகவே இருந்திருக்கிறது. ஏனெனில் மக்கள் அறுதித் தத்துவங்களை அறிய விரும்புவதில்லை; வழிகளை மட்டுமே மனத்தில் கொள்கிறார்கள். அந்த வழிகள் மிகவும் சிக்கலானவை என்பதில் சந்தேகமில்லை. வேதாந்தத்தின் சிக்கலான, தத்துவரீதியான, தர்க்கபூர்வமான விளக்கங்கள் பலருக்குப் பெரும் பயத்தையே அளித்தன. இந்தத் தத்துவ விளக்கங்கள் உலகம் தழுவியவையாக இருக்க முடியாது, தினசரி வாழ்க்கையில் இவற்றைப் பின்பற்ற முடியாது என்று மக்கள் நினைத்தார்கள். இந்தத் தத்துவம் மந்த நிலையை வளர்க்கும் என்றே அவர்கள் கருதினார்கள்.
ஆனால் அத்வைதக் கருத்துக்கள் தீயொழுக்கத்தையும் பலவீனத்தையும் தோற்றுவிக்கும் என்பதை நான் சிறிதும் நம்பவில்லை. மாறாக, ஒழுக்கமின்மைக்கும் பலவீனத்திற்கும் இந்தக் கருத்துக்கள் மட்டுமே பரிகாரமாக இருக்க முடியும் என்றே நான் நம்புகிறேன். அதற்கான காரணமும் இருக்கிறது. உண்மை இதுவானால், வாழ்க்கை என்னும் நல்ல நீரோடை அருகில் ஓடிக் கொண்டிருக்கும்போது, மக்கள் சாக்கடைத் தண்ணீரைக் குடிப்பதை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? எல்லோரும் தூயவர்களே என்பது உண்மையானால், அதை ஏன் இப்போதே உலகத்திற்குப் போதிக்கக் கூடாது? இடி போன்ற குரலுடன், அதை மகான்கள், பாவிகள், ஆண், பெண், குழந்தை என்று எல்லோருக்கும், தோட்டி முதல் தொண்டைமான் வரை அனைவருக்கும் ஏன் உபதேசிக்கக் கூடாது?
இது மிகப் பெரிய, அசாதாரணமான முயற்சி போல் இப்போது தோன்றுகிறது. பலருக்கு இது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்குக் காரணம் மூட நம்பிக்கையே தவிர வேறு எதுவுமில்லை. செரிக்க முடியாத, கண்ட உணவுகளைச் சாப்பிடுகிறோம், அல்லது முழுப்பட்டினி கிடக்கிறோம். இதனால் நல்ல உணவை உண்ணும் தகுதியை இழந்துவிடுகிறோம். குழந்தைப் பருவத்திலிருந்தே பலவீனமான வார்த்தைகளே நம் காதில் விழுந்து வருகின்றன. பேய்பிசாசுகளை நம்பவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் இருட்டு என்று வரும்போது அச்சத்துடன் அங்கு மிங்கும் பார்க்காதவர்கள் மிகச் சிலரே. வெறும் மூடநம்பிக்கை. எல்லாவிதமான மத மூடநம்பிக்கைகளும் இதுபோன்றவைதான். சாத்தான் என்ற ஒன்று கிடையாது என்று நான் சொன்னால், மதமே அழிந்துவிட்டதாகப் பதறுகின்ற சிலர் இந்த நாட்டில் இருக்கவே செய்வார்கள். சாத்தான் இல்லாமல் மதம் எப்படி இருக்க முடியும்? யாராலும் ஆளப்படாமல் நாம் எப்படி வாழ முடியும்? நம்மை யாராவது ஆள்வதே நமக்குப் பழக்கமாகி விட்டது. எனவே அப்படியே நடத்தப்பட விரும்புகிறோம். தினமும் யாரிடமாவது குட்டு வாங்காமல் இருந்தால், நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. அதே மூடநம்பிக்கை!
வேதாந்தக் கருத்து இப்போது பயங்கரமாகத் தோன்றலாம். ஆனால் ஒரு காலம் வரும். அப்போது நாம் ஒவ்வொருவரும் பின்னால் திரும்பிப் பார்த்து, அதுவரை நம்முடைய தூய நிலையான ஆன்மாவை மறைத்துக் கொண்டிருந்த மூடநம்பிக்கைகளை நினைத்துச் சிரிப்போம்; நான் சுதந்திரமானவனாக இருக்கிறேன், இருந்தேன், இருப்பேன் என்று மகிழ்ச்சியுடனும் உண்மையாகவும் புதிய பலத்துடனும் சொல்வோம். வேதாந்தத்திலிருந்து இந்த அத்வைதக் கருத்து புறப்பட்டு வெளிவரும்; நிலைத்து நிற்கத் தகுதியுள்ளது இந்த ஒரு கருத்து மட்டுமே. சாஸ்திரங்கள் நாளையே அழிந்துவிடலாம். இந்தக் கருத்து, முதலில் ஹீப்ருக்களின் மூளையில் தோன்றியதா, துருவப்பிரதேசங்களில் வசித்த மக்களின் மனத்தில் எழுந்ததா என்பதுபற்றி நமக்குக் கவலையில்லை. ஏனெனில் இதுதான் உண்மை. உண்மை அழிவற்றது. அது மட்டுமல்லாமல் உண்மை எந்தத் தனி மனிதனுக்கோ, நாட்டிற்கோ மட்டுமே சொந்தமல்ல என்பதை அதுவே போதிக்கிறது. மனிதர்கள், மிருகங்கள், தேவர்கள் எல்லோருக்கும் இந்த ஒரே உண்மை பொதுவானது. எல்லோரும் இதைப் பெறட்டும். வாழ்க்கையை ஏன் துன்பமயமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்? மக்கள் ஏன் எல்லா வகையான மூடநம்பிக்கைகளுக்கும் ஆட்பட வேண்டும்? இருபது பேர் தங்கள் மூட நம்பிக்கைகளை விட்டுவிடச் சம்மதித்தால் அதற்கு ஈடாக நான் பத்தாயிரம் தடவைகூட என் உயிரைவிடத் தயாராக இருக்கிறேன். இந்த நாட்டில் மட்டுமல்ல, வேதாந்தம் பிறந்த இந்திய மண்ணில்கூட, இந்த உண்மையை எடுத்துக்கூறினால் மக்கள் பயப்படுகிறார்கள். இந்தக்கருத்து, உலகத்தைத் துறந்து, காடுகளில் வசிக்கும் சன்னியாசிகளுக்கு உரியது. அவர்களுக்கு இது சரியாக இருக்கலாம். பலவீனமான இல்லறத்தார்களாகிய எங்களுக்குக் கடவுளிடம் பயம் இருக்க வேண்டும். சடங்குகள் வேண்டும் என்றெல்லாம் அவர்கள் சொல்கிறார்கள்.
துவைதக் கருத்துக்கள் வெகுகாலமாக உலகை ஆட்சி புரிந்துள்ளன. அதன் பலன் இதுதான். ஏன் ஒரு புதிய பரிசோதனையைச் செய்யக் கூடாது? அத்வைதக் கருத்தை உலகம் ஒப்புக்கொள்வதற்குப் பல யுகங்கள் ஆகலாம். ஆனால் அதை ஏன் இப்போதிலிருந்தே தொடங்கக் கூடாது? நம் வாழ்க்கையில் இருபது பேருக்காவது இந்தக் கருத்தை எடுத்துச் சொல்ல முடிந்தால், அதுவே ஒரு பெரும் சாதனையாகும்.
இந்தக் கருத்திற்கு எதிராக ஒரு வலுவான கருத்து இருக்கிறது. அது இதுதான்: நான் தூயவன், ஆனந்த மயமானவன் என்றெல்லாம் சொல்வது சுலபம்தான். ஆனால் நடைமுறையில் இவ்வாறு இருப்பது மிகவும் கடினம். இது உண்மை, இந்த லட்சியம் மிகவும் கடினமானதுதான். பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் ஆகாயம் என்பது தலைக்குமேல் வெகு தூரத்திலேயே உள்ளது. ஆனால் அதற்காக நாம் ஆகாயத்தையே பார்க்கக் கூடாது என்பது எப்படிச் சரியாகும்? மூட நம்பிக்கைகளின் மூலம் எல்லாவற்றையும் சீராக்கிவிட முடியுமா? அமுதம் கிடைக்கவில்லை என்பதற்காக விஷத்தைக் குடிக்கலாமா? உண்மையை உடனே உணர முடியவில்லை என்பதற்காக இருட்டில் உழன்றுகொண்டு, பலவீனத்திற்கும் மூட நம்பிக்கைகளுக்கும் அடிமையாவதால் ஏதாவது நன்மை விளையுமா?
துவைதத்தின் பல விஷயங்களில் எனக்கு ஆட்சேபம் இல்லை. அவற்றில் பலவற்றை எனக்குப் பிடிக்கும். ஆனால் பலவீனத்தை வளர்க்கும் எந்த முறையையும் நான் ஆட்சேபிக்கிறேன். உடல், மனம் மற்றும் ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்ற ஒவ்வோர் ஆண், பெண், மற்றும் குழந்தையிடமும் நான் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்: உன்னிடம் வலிமை இருக்கிறதா? வலிமையை நீ உணர்கிறாயா? ஏனெனில் உண்மை ஒன்றுதான் வலிமையைத் தர முடியும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உண்மை ஒன்றுதான் வாழ்க்கையைத் தர முடியும். உண்மையை நோக்கிச் சொல்வதுதான் நமக்கு வலிமை தர முடியும். வலிமை படைத்தவர்களாக ஆகும்வரை உண்மையை அறிய முடியாது. ஆகவே நமது மனத்தைப் பலவீனமாக்கி, மூட நம்பிக்கையில் ஆழ்த்தி, மந்தமானவர்களாக்கி, சாத்தியமில்லாதவற்றை ஆசையுறச் செய்பவர்களாகவும் அற்புதச் செயல்களை நம்புபவர்களாகவும் நம்மை ஆக்குகின்ற எந்த நெறியையும் நான் விரும்பவில்லை. அவற்றின் பலன் அபாயகரமானது. அத்தகைய நெறிகள் ஒருபோதும் நன்மை செய்வதில்லை. அவை மனத்தை மந்த நிலையில் ஆழ்த்தி காலப்போக்கில் உண்மையை உணர, உண்மைவழியில் வாழ முடியாத அளவுக்கு மனத்தைப் பலவீனப்படுத்தி விடுகின்றன.
வலிமையே தேவையான ஒன்று. உலகின் நோய்க்கு வலிமையே சரியான மருந்து. பணக்காரன் ஏழையைக் கொடுமைப்படுத்தும்போது ஏழைக்கு வேண்டிய மருந்து வலிமை. படித்தவன் பாமரனை நசுக்கும்போது பாமரனுக்கு வேண்டிய மருந்து வலிமை. பாவிகள், வேறு பாவிகளால் நசுக்கப்படும்போது, நசுக்கப்படுபவர்களின் மருந்து வலிமை. அந்த வலிமையை அத்வைதத்தைப்போல் வேறெந்த நெறியும் அளிப்பதில்லை. இந்தக் கருத்தைப் போல் வேறு எதுவும் மனிதனை நல்லொழுக்கம் உடையவனாக ஆக்குவதில்லை.
இங்கே எல்லா பொறுப்பையும் நாமே சுமக்க நேர்வதால் நாம் சிறந்த முறையில், நம்முடைய எல்லா சக்தியையும் திரட்டி இயங்குகிறோம். நம்மை இவ்வளவு சிறப்பாகச் செயல்பட வைக்க வேறெந்தக் கருத்தாலும் முடியாது. உங்கள் எல்லோருக்கும் நான் ஒரு சவால் விடுகிறேன். ஒரு சிறு குழந்தையை உங்கள் கையில் கொடுத்தால், நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்? அந்தக் கணநேரத்திற்கு உங்கள் வாழ்க்கையே மாறிவிடும். நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அந்த நேரத்திற்கு, சுயநலமற்றவர்களாக ஆகியே தீர வேண்டும். பொறுப்பு திணிக்கப்பட்டால் உங்கள் தீய எண்ணங்கள் எல்லாம் மறைந்துவிடும், உங்களுடைய குணம் முழுவதுமே மாறி விடும். பொறுப்பு முழுவதும் நம் தலையில் விழும்போது நமது சிறந்த தன்மைகளெல்லாம் வெளிப்படத் தொடங்கிவிடும். இருட்டில் தடுமாறிக்கொண்டு நாம் தேடிச் செல்வதற்கு ஒருவர் இல்லாதபோது, நாம் குற்றம் சாட்டுவதற்கு ஒரு சாத்தான் இல்லாதபோது, நம்முடைய சுமைகளைச் சுமப்பதற்கு ஒரு சகுணக் கடவுள் இல்லாதபோது எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பாளியாக இருக்கும் அந்த நிலையில்தான், நாம் மிக உயர்ந்த, மிகச் சிறந்த நிலைக்கு உயரத் தொடங்குவோம். என்னுடைய விதிக்கு நானே காரணமாகிறேன். எனக்கு நன்மையை நானேதான் தேடிக் கொள்ள வேண்டும். எனக்குத் தீமை விளைவித்துக் கொள்பவனும் நானேதான். நான் தூய்மையும் ஆனந்தமும் நிறைந்தவன். இதற்கு மாறான முடிவை வலியுறுத்தும் எண்ணங்கள் நாம் ஒதுக்கிவிட வேண்டும்.
எனக்கு மரணமோ பயமோ இல்லை; ஜாதிமத பேதமில்லை; தந்தை, தாய், சகோதர சகோதரிகள், நண்பன், பகைவன் என்று யாரும் எனக்கு இல்லை. நானே சச்சிதானந்த சொரூபம். நானே ஆனந்தமயமான ஆன்மா, நானே ஆனந்த மயமானவன். புண்ணியமோ பாவமோ இன்பமோ துன்பமோ என்னைக் கட்டப்படுத்துவதில்லை. தீர்த்த யாத்திரைகளுக்கோ சாஸ்திரங்களுக்கோ சடங்குகளுக்கோ நான் கட்டுப்பட்டவனல்ல. எனக்குப் பசியோ தாகமோ இல்லை. உடல் எனக்குச் சொந்தம் இல்லை. உடலைப் பாதிக்கும் கேடுகளுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ நான் கட்டுப்பட்டவனல்ல. நானே சச்சிதானந்த சொரூபம். நானே ஆனந்த மயமானவன்; நானே ஆனந்தமயமானவன்.
இந்த ஒரு பிரார்த்தனையை மட்டும்தான் நாம் செய்ய வேண்டும் என்று வேதாந்தம் சொல்கிறது. நாம் தெய்வீகமானவர்கள் என்று நமக்கும் மற்றவர்களுக்கும் உபதேசிப்பதன் மூலம்தான் நாம் குறிக்கோளை அடைய முடியும். இதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால் நமக்கு வலிமை வந்துவிடும். முதலில் தடுமாறுபவர்கள் சிறிதுசிறிதாக அதிக உறுதி பெறுவார்கள். உண்மை, நம் இதயத்தில் இடம்பிடித்து, ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்து, நம் உடல் முழுவதும் பரவும் வரையிலும் வலிமை அதிகரித்துக்கொண்டே போகும். ஒளியின் பிரகாசம் அதிகமாக அதிகமாக, மன மயக்கங்கள் மறைந்துவிடும். சுமை சுமையாக இருக்கும். நம் அறியாமை மறைந்துவிடும். அதன்பிறகு எல்லாமே மறைந்து, ஆன்மாவாகிய உண்மை மட்டுமே ஒளிரும் காலமும் வரும்.
ஆன்மா
-
பேராசிரியர் மாக்ஸ்முல்லரின் வேதாந்தத் தத்துவம் பற்றிய மூன்று சொற்பொழிவுகள் என்ற பிரபல நூலை உங்களுள் பலர் படித்திருப்பீர்கள். அதே விஷயத்தைப் பற்றி பேராசிரியர் டய்சன் ஜெர்மானிய மொழியில் எழுதிய நூலை சிலர் படித்திருக்கலாம். இந்திய மதச் சிந்தனையைப்பற்றி மேலை நாடுகளில் எழுதியும் கற்பித்தும் வருபவற்றுள் ஒரு நெறி முக்கியமாகக் கையாளப்படுகிறது. அது அத்வைதம். வேதங்களின் போதனைகள் முழுவதும் அந்த ஒரு நெறியிலேயே அடங்கி விட்டது என்றும் கருதப்படுகிறது. ஆனால் இந்தியச் சிந்தனையில் பல நிலைகள் இருக்கின்றன. மற்ற நிலைகளோடு ஒப்பிட்டால், அத்வைதம் சிறுபான்மை நெறி என்றே சொல்ல வேண்டும்.
மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தியச் சிந்தனையில் பல பிரிவுகள் இருந்திருக்கின்றன. இன்ன பிரிவினர் இன்ன கோட்பாட்டை நம்ப வேண்டும் என்றெல்லாம் வகுத்துத் தருவதற்கான அத்தாட்சி பெற்ற எந்தச் சங்கமோ அமைப்போ இல்லாததால், மக்கள் தங்களுக்குப் பிடித்த மதப் பிரிவைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தங்களுக்கென்று சொந்தமாக ஒரு தத்துவத்தையும் மதப்பிரிவையும் ஏற்படுத்திக் கொள்வதற்கும் சுதந்திரம் இருந்தது. எனவே மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தியா மதப் பிரிவுகளால் நிறைந்திருப்பதைக் காண்கிறோம். இப்போதுகூட எத்தனை நூறு மதப் பிரிவுகள் இந்தியாவில் இருக்கின்றன என்பதோ, ஆண்டுதோறும் எத்தனை புதிய பிரிவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன என்பதோ எனக்குத் தெரியாது. இந்தியாவின் மதப் பேரூற்று வற்றாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.
இந்தப் பல பிரிவுகளையும் இரண்டு தலைப்புகளின் கீழே கொண்டு வந்துவிடலாம். ஒன்று வைதீகம், மற்றொன்று அவைதீகம், அதாவது வைதீகம் அல்லாதது. இந்துமத சாஸ்திரங்களான வேதங்கள் நிலையான அருள் வெளிப்பாடுகள் என்று நம்பும் பிரிவுகள் வைதீகமானவை. வேதங்களை மறுத்து, வேறு பிரமாணங்களைக் கொள்கின்ற பிரிவுகள் அவைதீகமானவை. தற்கால அவைதீகப் பிரிவுகளில் முக்கியமானவை சமண மதமும் புத்த மதமுமே. வைதீகப் பிரிவினருள் சிலர், பகுத்தறிவைவிட வேதங்களே உயர்ந்த பிரமாணங்கள் என்கிறார்கள். வேறு சிலர், சாஸ்திரங்களில் அறிவுபூர்வமானவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவற்றை விட்டுவிட வேண்டும் என்கிறார்கள்.
வைதீகப் பிரிவுகளுள் சாங்கியம், நையாயிகம், மீமாம்சகம் என்பவை முக்கியமான மூன்று ஆகும். இவற்றுள் முதலிரண்டும் தத்துவங்களுடன் நின்று விட்டனவே தவிர எந்த நெறிகளையும் அவை படைக்கவில்லை. மீமாம்சகர் அல்லது வேதாந்திகளே இப்போது உண்மையில் இந்தியா முழுவதும் பரவியிருக்கின்ற ஒரே பிரிவினர். அவர்களுடைய தத்துவமே வேதாந்தம். இந்து மதத்திலுள்ள எல்லாத் தத்துவப் பிரிவுகளும் வேதாந்தம் அல்லது உபநிடதங்களிலிருந்தே தொடங்குகின்றன. ஆனால் அத்வைதிகள் தங்களுக்கு, அந்தப் பெயரை ஒரு சிறப்புப் பெயராக வைத்துக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் வேதாந்தத்தைத் தவிர வேறு எந்த அடிப்படையிலும் அமைக்க விரும்பவில்லை. காலப்போக்கில் வேதாந்தம் மட்டும் வேரூன்றிவிட்டது. இப்போது உள்ள இந்து மதப் பிரிவுகள் எல்லாமே வேதாந்தத்தின் ஏதாவது ஒரு நெறியுடன் தொடர்பு உடையனவாகவே இருக்கின்றன. இருந்தாலும் இந்தப் பிரிவுகளின் கருத்துக்களெல்லாம் ஒருமித்தமாக இல்லை.
வேதாந்தத்தில் நாம் மூன்று முக்கியமான வேறுபட்ட கோட்பாடுகளைக் காண்கிறோம். ஒரு விஷயத்தை அவர்கள் எல்லோருமே கடவுளை நம்புகிறார்கள். மேலும், வேதங்கள் இறைவனால் வெளியிடப்பட்டவை என்றும் நம்புகிறார்கள். ஆனால் இது கிறிஸ்தவர்களோ முஸ்லீம்களோ தங்கள் நூல்களைப் பற்றி நம்புவதுபோல் அல்லாமல், சற்று மாறுபட்ட, தனிப்பட்ட கருத்தாக இருக்கிறது. வேதங்கள் கடவுளைப் பற்றிய அறிவை வெளிப்படுத்துபவை. கடவுள் நிரந்தரமானவர், ஆதலால் அவரைப் பற்றிய அறிவும் அவரிடம் நிரந்தரமாக உள்ளது. எனவே வேதங்களும் நிரந்தரமானவை என்பது வேதாந்திகளின் கருத்து.
வேதாந்திகளிடம் மற்றொரு பொதுவான நம்பிக்கை இருக்கிறது. படைப்பு சுழற்சியாக நடைபெறுகிறது என்பதே அது. படைப்பு முழுவதுமே தோன்றி மறைகிறது. அது தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, சிறிதுசிறிதாகத் தூலத் தன்மை பெற்று, கணக்கிட முடியாத காலத்திற்குப் பிறகு, சிறிதுசிறிதாகநுட்பத்தன்மை அடைந்து, கடைசியில் மறைந்து ஒடுங்கிவிடுகிறது. அந்த ஒடுங்கிய நிலையிலேயே சிலகாலம் இருக்கிறது. பின்னர் மறுபடியும் இதே சுழற்சி நடைபெறுகிறது. ஆகாசம், பிராணன் என்ற இரண்டு தத்துவங்களை அவர்கள் கற்பித்துக் கொள்கிறார்கள். இதில் ஆகாசம் என்பது ஏறுக்குறைய விஞ்ஞானிகள் கூறும் ஈதர் போன்றது.. பிராணன் என்பது ஒரு சக்தி. இந்தப் பிராணனின் அதிர்வினால்தான் பிரபஞ்சம் தோன்றுகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். ஒரு சுழற்சி முடிந்தவுடனேயே, இயற்கையின் எல்லா வெளிப்பாடுகளும் சிறிதுசிறிதாக நுட்பத்தன்மை அடைந்து ஆகாசத்தில் கரைந்துவிடுகின்றன. ஆகாசத்தைப் பார்க்கவோ உணரவோ முடியாது. ஆனால் இந்த ஆகாசத்திலிருந்துதான் எல்லாமே தோன்றுகின்றன. இயற்கையின் பலவித சக்திகளான ஈர்ப்புசக்தி, கவர்ச்சி சக்தி, விலங்கு சக்தி, சிந்தனை, உணர்ச்சிகள், நரம்புகளின் இயக்கம் எல்லாமே பிராணனில் ஒடுங்குகின்றன. அப்போது பிராணனின் அதிர்வும் நின்றுவிடுகிறது. அடுத்த சுழற்சி ஆரம்பிக்கும் வரையில் பிராணன் அதே நிலையில் இருக்கிறது. மறுபடியும் பிராணன் அதிரத் தொடங்குகிறது. அந்த அதிர்வு ஆகாசத்தின்மீது செயல்படுகிறது. பிரபஞ்சத்திலுள்ள உருவங்கள் அனைத்தும் ஒழுங்குமுறையுடன் அதிலிருந்து வெளிவருகின்றன.
துவைதம் எனப்படுகின்ற வேதாந்தப் பிரிவைப் பற்றித் தான் நான் முதலில் உங்களிடம் பேசப் போகிறேன். பிரபஞ்சத்தைப் படைத்து அதை ஆள்பவரான கடவுள், இயற்கையிலிருந்தும் மனித ஆன்மாவிலிருந்தும் என்றென்றைக்குமாக வேறுபட்டவர் என்று துவைதிகள் நம்புகிறார்கள். கடவுள் என்றென்றும் இருப்பவர், இயற்கையும் என்றென்றும் இருப்பது, ஆன்மாக்களும் அப்படியே. இயற்கையும் ஆன்மாக்களும் தங்களை வெளிப்படுத்துகின்றன. மாற்றமடைகின்றன. ஆனால் கடவுள் மாறுவதில்லை; எப்போதும் ஒருபோலவே இருக்கிறார். கடவுள் சகுணமானவர்; குணங்கள் உள்ளவர், ஆனால் உடல் உள்ளவர் என்பதல்ல. அவருக்கு மனிதக் குணங்களெல்லாம் உள்ளன. அவர் கருணைமயமானவர், நியாயமானவர், சக்தி வாய்ந்தவர், சர்வ வல்லமை படைத்தவர், அவரை நாம் அணுக முடியும், பிரார்த்தனை செய்ய முடியும், அவரிடம் அன்பு செலுத்த முடியும், பிரதியாக அவரும் நம்மீது அன்பு செலுத்துகிறார் என்பனவெல்லாம் துவைதிகளின் கடவுள் பற்றிய கருத்துக்களாகும்.
ஒரே வார்த்தையில் சொல்லப்போனால், அவர் மனிதக் கடவுள். ஆனால் மனிதனைவிடப் பன்மடங்கு உயர்ந்தவர். மனிதர்களிடமுள்ள தீய குணங்கள் எதுவும் அவரிடமில்லை. எல்லையற்ற நற்குணக் களஞ்சியமே கடவுள் என்பதுதான் கடவுளைப்பற்றி துவைதிகளின் விளக்கம். மூலப் பொருட்கள் இல்லாமல் அவரால் படைக்க முடியாது. அந்த மூலப்பொருள் இயற்கை. அதைக்கொண்டே அவர் பிரபஞ்சம் முழுவதையும் படைக்கிறார்.
வேதாந்திகள் அல்லாத, அணுவாதிகள் என்ற சில துவைதிகள் இருக்கிறார்கள். இயற்கை முழுவதும் எல்லையற்ற அணுக்கூட்டமே தவிர வேறொன்றுமில்லை; இறைவனின் சங்கல்பம் இந்த அணுக் கூட்டத்தின்மீது செயல்படுவதால்தான் இந்தப் படைப்பு நிகழ்கிறது என்பது அவர்கள்கூற்று. வேதாந்திகள் இந்த அணுக்கொள்கையை மறுக்கிறார்கள். இந்த வாதம் அறிவு பூர்வமானதாக இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். பகுக்க முடியாத இந்த அணுக்கள், ஜியோமிதிப்புள்ளிகள் போன்றவை. அதாவது, அவற்றிற்குப் பகுதிகளோ பரிமாணங்களோ இல்லை. பரிமாணம் இல்லாதவற்றை எல்லையற்றமுறை பெருக்கினாலும் அவை முன்பிருந்தபடியேதான் இருக்கும். பகுதிகள் இல்லாத எதனாலும், பகுதிகள் உள்ள ஒன்றை ஆக்க முடியாது. எவ்வளவு பூஜ்யங்களைக் கூட்டினாலும் ஒரு முழு எண்ணைப் பெற முடியாது. அணுக்களுக்கும் பகுதிகளோ பரிமாணங்களோ இல்லையென்றால், இவற்றிலிருந்து பிரபஞ்சம் தோன்றுவது என்பது முடியாத காரியம். ஆகவே வேதாந்தத் துவைதிகளின் கருத்துப் படி, வேறுபாடில்லாமல், எங்கும் ஒரே போல் இருக்கும் இயற்கையிலிருந்துதான் கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார்.
இந்தியர்களில் பெரும்பான்மையோர் துவைதிகளே. சாதாரணமாக மனித இயல்பு உயர்ந்த எதையும் புரிந்து கொள்ளாது. மத நம்பிக்கை உள்ள உலக மக்களுள் நூற்றுக்குத் தொண்ணூறுபேர் துவைதிகளாக இருப்பதையே காண்கிறோம். ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளிலுள்ள எல்லா மதங்களுமே துவைத மதங்கள்தாம். அப்படித்தான் இருக்கவும் முடியும். நுட்பமானவற்றைச் சாதாரண மனிதனால் சிந்திக்க முடியாது. தன் அறிவுக்கு எட்டியவற்றைப் பிடித்துக் கொள்ளத்தான் அவன் விரும்புகிறான். அதாவது உயர்ந்த ஆன்மீக லட்சியங்களையும் தன்னுடைய நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம்தான் அவனால் புரிந்துகொள்ள முடியும். நுட்பமான கருத்துக்களைப் பவுதீக நிலைக்கு மாற்றினால்தான் அவன் புரிந்து கொள்வான். உலகம் முழுவதுமுள்ள சாதாரண மக்களின் மதம் இது தான். தங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, தங்களை அடக்கியாளும் வல்லமை படைத்த சக்கரவர்த்தி போன்ற ஒரு கடவுளே அவர்களுக்கு வேண்டும். அவரைப் பூமியிலுள்ள சக்கரவர்த்திகளை எல்லாம்விடத் தூயவர் ஆக்குகிறார்கள். எல்லா நற்பண்புகளையும் உடையவராக அவரைக் காண்கிறார்கள், தீய பண்புகளை அவரிடமிருந்து விலக்குகிறார்கள். ஆனால் நன்மையும் தீமையும் தனித்தனியாக இருப்பது சாத்தியமல்ல என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இருட்டைப் பற்றிய கருத்து இருக்க முடியும் என்று சொல்வதைப்போல் இருக்கிறது, அவர்கள் சொல்வது!
துவைதக் கருத்துக்கள் எல்லாவற்றிலுமே ஒரு பெரிய குறை இருக்கிறது. நற்குணக் களஞ்சியமாகவும், நீதியும் கருணையும் நிறைந்திருப்பவராகவும் இருக்கும் கடவுளின் ஆட்சிக்கு உட்பட்ட இந்த உலகில், இவ்வளவு தீமைகள் இருப்பது ஏன்? எல்லா துவைத நெறிகளிலும் இந்தக் கேள்வி எழுந்தது. ஆனால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்காக இந்துக்கள் எந்தச் சாத்தானையும் உருவாக்கவில்லை. ஒரேமனதாகக் குற்றத்தை மனிதனின் மீதே சுமத்தினார்கள் அது அவர்களுக்குச் சுலபமாகவும் இருந்தது. ஏன்? ஏனென்றால் நான் சற்றுமுன் சொன்னது போல், சூன்யத்திலிருந்து ஆன்மாக்கள் படைக்கப்பட்டதாக இந்துக்கள் நம்பவில்லை. நம்முடைய எதிர்காலத்தை நாமே உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதை இந்த வாழ்க்கையில் பார்க்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும், மறுநாளுக்கான ஏற்பாடுகளைச் செய்யவே முயன்று கொண்டிருக்கிறோம். இன்று, நாளைய விதியை நிர்ணயிக்கிறோம். நாளை, நாளைக்கு அடுத்த நாளின் விதியை நிர்ணயிப்போம். இவ்வாறே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இந்த வாதத்தை இறந்தகாலத்திற்குப் பொருத்திப் பார்ப்பது, நியாயமானதே. நாம் நமது செயல்களாலேயே நம் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்கிறோம் என்றால், அதே விதியை இறந்தகாலத்திற்கும் ஏன் பொருத்திப் பார்க்கக்கூடாது? ஓர் எல்லையற்ற சங்கிலித் தொடரில், ஒரே மாதிரியான சில சங்கிலிப் பிணைப்புகள் மாறி மாறி வந்து கொண்டிருந்தால், இந்த இணைப்புகளின் சேர்க்கையில் ஒரு பகுதியை மட்டும் ஆராய்வதன் மூலம், முழுச் சங்கிலியின் இயல்பையும் நம்மால் விளக்கிவிட முடியும். ஆகவே காலம் என்னும் எல்லையற்ற சங்கிலியில் ஒரு பகுதியை மட்டும் பிரித்து, அதைப் புரிந்துகொள்ள முடிந்தால், அத்துடன் இயற்கை எங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதும் உண்மையாக இருக்குமானால், காலம் என்னும் முழுச்சங்கிலியையும் நாம் விளக்கி விட முடியும். இந்தக் குறைந்த கால அளவில், இங்கே, நாமே நமது விதியை உருவாக்கிக் கொள்கிறோம் என்பது உண்மையானால், நாம் இப்போது காண்பதுபோல் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்பது உண்மையானால், இப்போது இருக்கும் நாம், நம்முடைய இறந்தகாலச் செயல்கள் முழுவதன் பலனே என்பதும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.
ஆகவே மனிதகுலத்தின் விதியை நிர்ணயிப்பதற்கு, மனிதனைத் தவிர வேறு யாருமே தேவையில்லை. உலகிலுள்ள தீமைகள் எல்லாவற்றிற்கும் நாம்தான் காரணம். தீய செயல்களின் பலனாகத் துன்பங்கள் வருவது நமக்குத் தெரிகிறது. எனவே இப்போது உலகில் காணப்படும் துன்பங்களுக்கு, மனிதன் முன்பு செய்த தீய செயல்கள்தாம் காரணமாக இருக்க வேண்டும். இந்தக் கருத்தின்படி, மனிதனே எல்லா துன்பங்களுக்கும் காரணம், கடவுள்மீது பழி சுமத்தக் கூடாது. அவர் எப்போதும் மாறாத கருணையுள்ள தந்தை. அவர்மீது குற்றம் சாட்டக் கூடாது. எதை நாம் விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.
ஒவ்வோர் ஆன்மாவும் முக்தியடைந்தே தீரும் என்பது துவைதிகளின் மற்றொரு வினோதமான கோட்பாடு. யாரும் இதற்கு விலக்கல்ல. சாதகமற்ற சூழ்நிலைகள் வழியாக, பல்வேறு இன்பதுன்பங்கள் வழியாகச் சென்று, கடைசியில் ஒவ்வொருவரும் வெளிவரத்தான் வேண்டும். எதிலிருந்து வெளிவர வேண்டும்? பிரபஞ்சத்தை விட்டு எல்லா ஆன்மாக்களும் வெளியேற வேண்டும் என்பது இந்து மதத்திலுள்ள எல்லா பிரிவுகளுக்கும் பொதுவான ஒரு கருத்து. நாம் பார்க்கின்ற உணர்கின்ற இந்தப் பிரபஞ்சமோ, அல்லது கற்பனை செய்துகொள்ளும் ஒரு பிரபஞ்சமோ, உண்மையான சரியான பிரபஞ்சமாக இருக்க முடியாது. ஏனென்றால் இரண்டிலுமே நன்மையும் தீமையும் கலந்துதான் இருக்கின்றன. துவைதிகளின் கருத்துப்படி, இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பால், நன்மையும் இன்பமும் மட்டுமே நிறைந்த ஓர் உலகம் இருக்கிறது. அந்த உலகை அடைந்துவிட்டால் பிறவி, மறுபிறவி, வாழ்வு, சாவு எதற்குமே அவசியமில்லை. இந்தக் கருத்து அவர்கள் மிகவும் விரும்புகின்ற ஒன்றாகும். அங்கே வியாதிகளோ மரணமோ இல்லை. அங்கே நிரந்தரமான இன்பம் இருக்கும். அந்த உலகை அடைபவர்கள் எப்போதும் கடவுளின் திருமுன்னர் இருந்துகொண்டு, அவரைக் கண்ணும் மனமும் குளிர தரித்துக் கொண்டிருப்பார்கள்.
சாதாரணமான புழுவிலிருந்து உயர்ந்த நிலையிலிருக்கும் தேவர்கள்வரை எல்லோருமே ஒருநாள் துன்ப மற்ற அந்த உலகை அடைந்தே தீர வேண்டும். ஆனால் இந்த உலகம் முடிந்து விடாது! எல்லையற்ற காலம்வரை இருந்துகொண்டேதான் இருக்கும். அதன் இயக்கம் அலை போன்றதாக, எழுவதும் வீழ்வதுமாக இருக்கும். அத்தகைய சுழற்சியான இயக்கமாக இருந்தாலும் அது முடிவதில்லை. காக்கப்பட வேண்டிய, முக்தி பெற வேண்டிய ஆன்மாக்களின் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை. சிலஆன்மாக்கள் செடிகொடிகளிலும், சில, தாழ்ந்த மிருகங்களிலும், சில, மனிதர்களிலும், சில, தேவர்களிலும் இருக்கின்றன. ஆனால் உயர்ந்த தேவர்கள் உட்பட அனைவருமே நிறை நிலையை அடையாதவர்கள், பந்தத்தில் கட்டுண்டவர்கள். அந்தப் பந்தம் எது? பிறப்பதும், இறந்தேயாக வேண்டும் என்ற அவசியமும்தான். அது. மிக உயர்ந்த தேவர்களுக்குக் கூட மரணம் உண்டு.
இந்தத் தேவர்கள் என்பது என்ன? அவை சில நிலைகள், சில பதவிகள். உதாரணமாக, தேவர்களின் அரசனாகிய இந்திரன் என்பது ஒரு பதவி; மிக உயர்ந்த நிலைக்குச் சென்றுவிட்ட ஓர் ஆன்மா. அது இந்தக் கல்பத்தில் அந்தப் பதவியை நிரப்புகிறது. இந்திரனாக இருந்தவன் இந்தக் கல்பம் முடிந்ததும் பூமியில் மனிதனாகப் பிறக்கிறான். இந்தக் கல்பத்தில் மிகவும் நல்லவனாக இருந்தவன் அடுத்த கல்பத்தில் அந்த இந்திரப் பதவியை நிரப்புகிறான். மற்ற தேவர்களின் நிலையும் கதியும் இதுதான். கோடிக்கணக்கான ஆன்மாக்கள் மாறிமாறி நிரப்பிய பதவிகளே இவை. அந்தப் பதவிகளை வகித்தபின் அவர்கள் பூமியில் மனிதர்களாகப் பிறக்கிறார்கள். சொர்க்கத்தை அடையும் எண்ணத்துடனேயோ, புகழ் பெறுவதற்காகவோ இந்த உலகில் நற்காரியங்கள் செய்பவர்கள் இறந்தபின் அந்த நற்செயல்களுக்கான பலனை அடைவார்கள். அவர்கள் இந்தத் தேவர்கள் ஆவார்கள். ஆனால் இது முக்தியல்ல. பலனை எதிர்பார்த்து வேலை செய்தால் முக்தி கிடைக்காது.
மனிதன் எதை விரும்பினாலும் அதைக் கடவுள் கொடுக்கிறார். அவன் அதிகாரத்தை விரும்புகிறான், கவுரவத்தை விரும்புகிறான், தேவர்கள் அனுபவிப்பது போன்ற இன்பங்களை விரும்புகிறான், அவை நிறைவேறவும் செய்கின்றன. ஆனால் எந்தச் செயலானாலும் அதன் பலன் நிரந்தரமானதல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தப் பலன் தீர்ந்துவிடும். தீர்வதற்குப் பல யுகங்கள் ஆகலாம்; ஆனால் அது தீரவே செய்யும். அப்போது தேவர்கள் மறுபடியும் பூமியில் மனிதர்களாகப் பிறந்து, முக்திக்கு வழி தேட மறுபடியும் ஒரு வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.
தாழ்ந்த மிருகங்கள் உயர்ந்து, மனிதர்களாகின்றன; பிறகு தேவர்கள் ஆகின்றன. ஒருவேளை மறுபடியும் மனிதர்களாகலாம் அல்லது மிருகங்களாகலாம். இன்பம் அனுபவிக்கும் ஆசையையும், வாழ்க்கை மீதுள்ள மோகத்தையும், நான், எனது என்ற பற்றுக்களைப் பிடித்துக் கொண்டிருக்கும் உடும்புப் பிடியையும் விடும்வரை இப்படியேதான் நடந்து கொண்டிருக்கும். நான், எனது என்பவைதான் எல்லா தீமைகளுக்கும் மூலகாரணமாகும். ஒரு துவைதியைப் பார்த்து, இந்தக் குழந்தை உன்னுடையதா? என்று கேட்டால், இல்லை, கடவுளுடையது; என் சொத்துக்களெல்லாம் எனக்குச் சொந்தம் அல்ல, கடவுளுக்கே சொந்தம் என்று அவன் சொல்வான். எல்லாவற்றையுமே கடவுளுக்குச் சொந்தமானதாகத்தான் கருத வேண்டும்.
இந்தியாவிலுள்ள இந்தத் துவைதப் பிரிவினர் எல்லோருமே சைவ உணவு உண்பவர்கள்; தீவிர அஹிம்சாவாதிகள். ஆனால் அவர்களுடைய கருத்து பவுத்தர்களின் கருத்திலிருந்து வேறுபட்டது. எந்த மிருகத்தையும் கொல்லக்கூடாது என்று ஏன் பிரச்சாரம் செய்கிறீர்கள்? என்று ஒரு பவுத்தனைக் கேட்டால், அவன், எந்தப் பிராணியையும் கொல்ல நமக்கு உரிமை இல்லை என்று சொல்வான். ஒரு துவைதியிடம் நீ எந்தப் பிராணியையும் ஏன் கொல்வதில்லை? என்று கேட்டால், அது கடவுளுக்குச் சொந்தமானதாக இருப்பதால்தான் என்று பதில் கூறுவான். ஆகவே, நான், எனது என்பதைக் கடவுளுடன், கடவுளுடன் மட்டுமே இணைத்துச் சொல்ல வேண்டும். நான், என்பது கடவுள் மட்டுமே. எல்லாமே அவருக்குத்தான் சொந்தம். நான், எனது என்ற எண்ணங்கள் அடியோடு இல்லாமல் போய் எல்லாவற்றையும் கடவுளுக்குச் சொந்தமாக்கி, எல்லோரிடமும் அன்பு செலுத்தி, பலனை எதிர்பார்க்காமல், ஒரு பிராணிக்காகத் தன் உயிரை இழக்கவும் தயாராக இருப்பவனுடைய இதயமே பரிசுத்தமானது. அத்தகைய இதயத்தில்தான் இறையன்பு தோன்றும்.
ஒவ்வோர் ஆன்மாவையும் தன்னை நோக்கிக் கவர்ந்துகொள்வது கடவுள்தான். களிமண்ணால் மூடியுள்ள ஊசியைக் காந்தத்தால் கவர முடியாது. களி மண்ணை நீக்கிவிட்டால் காந்தம் ஊசியைச் சுலபமாகக் கவர்ந்துவிடும் என்று துவைதி சொல்வான். கடவுளே காந்தம், ஆன்மாவே ஊசி. அதன் தீய செயல்களே அதை மூடிக்கொண்டிருக்கும் மண்ணும் தூசியும். ஆன்மா தூய்மையடைந்த உடனே, இயல்பாகவே அது கடவுளால் கவரப்பட்டு, அவரை அடைந்து, அவரோடு எப்போதுமே இருக்கும். ஆனால் அவரிடமிருந்து நிரந்தரமாக வேறுபட்டே நிற்கும்.
நிறைநிலையை அடைந்த ஆன்மா, தான் விரும்பினால், எந்த உருவத்தையும் எடுத்துக்கொள்ள முடியும்; நூறு உடல்களைக்கூட எடுத்துக்கொள்ள முடியும், எந்த உடலையுமே எடுத்துக்கொள்ளாமல் வேண்டுமானாலும் இருக்க முடியும். அது ஏறக்குறைய எல்லாம் வல்லதாக ஆகிவிடுகிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால் அதனால் படைக்க முடியாது. அந்தச் சக்தி கடவுளுக்கு மட்டுமே சொந்தமானது. எவ்வளவுதான் நிறைநிலையடைந்த ஆன்மாவாக இருந்தாலும் பிரபஞ்சத்தை நடத்த முடியாது. அந்த வேலை கடவுளுக்கு மட்டுமே சொந்தமானது. ஆனால் எல்லா ஆன்மாக்களும் நிறைநிலை அடைந்ததும் நிலையான பேரின்பத்தில் திளைக்கின்றன, நிரந்தரமாகக் கடவுளுடனேயே வாழ்கின்றன. இதுதான் துவைதிகளின் கருத்து.
துவைதிகள் இன்னுமொரு கருத்தையும் பிரச்சாரம் செய்கிறார்கள். இறைவா, எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று பிரார்த்திப்பதை அவர்கள் கண்டிக்கிறார்கள். அப்படிச் செய்வது தவறு என்று அவர்கள் நினைக்கிறார்கள். லவுகீக ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்ள விரும்பினால், தாழ்ந்த நிலையிலுள்ள தேவர்களையே பிரார்த்திக்க வேண்டும். தேவர்களில் ஒருவரிடமோ, ஒரு தேவதையிடமோ, நிறைநிலை பெற்ற ஒருவரிடமோதான் இதைப் போன்ற பிரார்த்தனைகளைச் செய்ய வேண்டும். கடவுளிடம் பக்தி மட்டுமே செலுத்த வேண்டும். இறைவா, எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று கேட்பது ஏறக்குறைய தெய்வ நிந்தனைதான். இந்தத் தேவர்களில் ஒருவரைப் பிரார்த்தனை செய்வதன்மூலம் தனக்கு வேண்டிய எதையும் ஒரு மனிதன் இன்றோ நாளையோ பெறுவான். ஆனால் முக்தி வேண்டுமென்றால் கடவுளைத்தான் வழிபட வேண்டும். இந்தியாவிலுள்ள சாதாரண மக்களின் மதம் இதுதான்.
வேதாந்தத் தத்துவம் உண்மையில் விசிஷ்டாத்வைதத்திலிருந்துதான் தொடங்குகிறது. காரியம், காரணத்திலிருந்து ஒருபோதும் வேறுபடுவதில்லை. காரணத்தின் வேறுபட்ட உருவமே காரியம். பிரபஞ்சம் காரியமாகவும் கடவுள் காரணமாகவும் இருந்தால், பிரபஞ்சம் என்பது கடவுளேதான்; வேறு எப்படியும் இருக்க முடியாது. கடவுளே பிரபஞ்சத்தின் உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் இருக்கிறார் என்ற உறுதிப்பாட்டுடன் தான் அவர்கள் தங்கள் வாதத்தை ஆரம்பிக்கிறார்கள். கடவுள்தான் படைப்பவர். பிரபஞ்சத்திற்குக் காரணமான மூலப்பொருளும் அவரே. (படைப்பு) என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை சமஸ்கிருதத்தில் இல்லை. ஏனெனில் மேலை நாடுகளில் நம்புவதைப்போல் சூன்யத்திலிருந்து எதையோ உருவாக்குவது என்ற கருத்தை இந்தியாவின் எந்த மதப் பிரிவினரும் நம்புவதில்லை. ஒரு காலத்தில் இதுபோன்ற எண்ணமுள்ள சிலர் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு வெகுசீக்கிரமே வாய்ப்பூட்டு போடப் பட்டுவிட்டது. தற்காலத்தில் இப்படி நம்பும் இந்திய மதப் பிரிவு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏற்கனவே இருக்கும் ஒன்றின் வெளிப்பாடுதான் படைப்பு என்பதே எங்கள் கருத்து. விசிஷ்டாத்வைதத்தின் கருத்துப்படி பிரபஞ்சம் என்பது கடவுளேதான். பிரபஞ்சத்திற்குக் காரணமான மூலப்பொருளும் அவர்தான். சிலந்தி தன் உடலிலிருந்தே நூலெடுத்து வலை பின்னுகிறது..., அது போல் கடவுளிடம் இருந்தே பிரபஞ்சம் முழுவதும் வெளிவந்திருக்கிறது. என்று நாம் வேதங்களில் படிக்கிறோம்.
காரணமே காரியமாகத் தோன்றியிருக்கிறது என்றால் ஜடப்பொருள் அல்லாத, நிரந்தரமான பேரறிவு படைத்த கடவுளிடமிருந்து, ஜடப்பொருளான மந்தமான அறிவற்ற பிரபஞ்சம் தோன்றியது எப்படி? காரணம், தூய்மையாகவும் முழுமையாகவும் இருக்கும்போது, காரியம் வேறுபட்டிருப்பது எப்படி? என்பதே கேள்வி. இதற்கு விசிஷ்டாத்வைதிகள் என்ன பதில் சொல்கிறார்கள்? அவர்களுடைய கொள்கை மிகவும் விசித்திரமானது.
கடவுள், இயற்கை, ஆன்மா ஆகிய மூன்றும் உண்மையில் ஒரே பொருள்தான் என்கிறார்கள் விசிஷ்டாத்வைதிகள். இயற்கையும் ஆன்மாக்களும் கடவுளின் உடம்பு போலவும் கடவுள்தான் ஆன்மா என்றும் கூறுகிறார்கள் அவர்கள். எனக்கு ஓர் உடலும் ஓர் ஆன்மாவும் இருப்பது போலவே, பிரபஞ்சமும் எல்லா ஆன்மாக்களும் சேர்ந்து கடவுளின் உடலாகவும் கடவுளே ஆன்மாக்களுக்கெல்லாம் ஆன்மாவாகவும் இருக்கிறார். இவ்வாறு கடவுள் பிரபஞ்சத்தின் உபாதான காரணமாக இருக்கிறார். உடல் மாறலாம்; இளமையாகவோ, முதுமையாகவோ, பலம் படைத்ததாகவோ, பலவீனமாகவோ ஆகலாம். அது ஆன்மாவை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. உடலின் மூலம் தன்னை வெளிப்படுத்தியவாறு ஆன்மா எப்போதும் நிரந்தரமாக இருக்கிறது. உடல்கள் வரும், போகும். ஆனால் ஆன்மா மாறுவதில்லை. அதேபோல் பிரபஞ்சம் முழுவதுமே கடவுளின் உடல்தான். அந்த விதத்தில் பிரபஞ்சம் கடவுளே. ஆனால் பிரபஞ்சத்தில் ஏற்படும் மாறுதல்கள் கடவுளை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. இந்த மூலப்பொருளிலிருந்தே அவர் பிரபஞ்சத்தைப் படைக்கிறார். ஒரு கல்பத்தின் முடிவில், அவரது உடல் நுட்பமானதாகி சுருங்கி விடுகிறது. அடுத்த கல்பத்தின் ஆரம்பத்தில் அது மறுபடியும் விரிவடைந்து, அதிலிருந்து பல்வேறு உலகங்களும் வெளிப்படுகின்றன.
ஆன்மா இயல்பாகவே தூய்மையானது; ஆனால் அதனுடைய செயல்களாலேயே அது தன் தூய்மையை இழந்துவிடுகிறது என்று துவைதிகள், விசிஷ்டாத்வைதிகள் இருவருமே ஒப்புக்கொள்கிறார்கள். அதனைத் துவைதிகளைவிட விசிஷ்டாத்வைதிகள் அழகாக வெளியிடுகிறார்கள். ஆன்மாவின் தூய்மையும் பரிபூரணத் தன்மையும் சுருங்கி, பின்னர் விரிகின்றன. அதன் பேரறிவு, தூய்மை, அதற்கே இயல்பான சக்தி எல்லாவற்றையும் மறுபடியும் வெளிப்படுத்தவே நாம் முயன்று கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆன்மாக்களுக்குப் பல குணங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவற்றிற்குச் சர்வ வல்லமையோ, எல்லாம் அறியும் தன்மையோ இல்லை. ஒவ்வொரு தீய செயலும் ஆன்மாவின் இயல்பைச் சுருக்குகிறது. ஒவ்வொரு நற்செயலும் அதை விரிவடையச் செய்கிறது. இந்த ஆன்மாக்கள் எல்லாம் கடவுளின் அம்சங்களே. கொழுந்துவிட்டெரியும் நெருப்பிலிருந்து, அதே இயல்புள்ள பல கோடிக்கணக்கான தீப்பொறிகள் சிதறுவதுபோல், எல்லையற்ற பரம்பொருளிடமிருந்து இந்த ஆன்மாக்கள் தோன்றியிருக்கின்றன. எல்லா ஆன்மாக்களுக்கும் குறிக்கோள் ஒன்றுதான்.
விசிஷ்டாத்வைதிகளின் கடவுளும் சகுணமானவரே. அவர் நற்குணக் களஞ்சியமாக விளங்குகிறார்; பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றிலும் ஊடுருவியிருக்கிறார்; எங்கும் எதிலும் அந்தர்யாமியாக இருக்கிறார். கடவுளே எல்லாமாக இருக்கிறார் என்று சாஸ்திரங்கள் சொல்லும் போது, அவர் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கிறார் என்பதே பொருள். கடவுளே சுவராக இருக்கிறார் என்பது அல்ல, கடவுள் சுவருள் இருக்கிறார் என்பதே பொருள். அவர் இல்லாத துகளோ அணுவோ பிரபஞ்சத்தில் இல்லை. ஆன்மாக்களுக்கு எல்லை உண்டு. அவை எங்கும் நிறைந்தவை அல்ல. அவற்றின் சக்தி விரிவடைந்து அவை நிறைநிலை பெற்றவுடன், பிறப்பு இறப்பு அற்றவை ஆகிவிடுகின்றன; என்றென்றைக்குமாகக் கடவுளுடன் வாழ்கின்றன.
இனி நாம் இறுதித் தத்துவமான அத்வைதத்திற்கு வருவோம். தத்துவம் மற்றும் மதம் என்னும் மலர்களுள், இதுவரை எந்த நாடும் எந்தக் காலத்திலும் உருவாக்கியவற்றுள் மிகச் சிறந்தது என்று இதனை நாம் கருதுகிறோம். இங்கே மனித சிந்தனை அதன் மிக உயர்ந்த சிகரத்தை எட்டுகிறது; ஊடுருவிச் செல்ல முடியாததைப்போல் தோன்றிய மர்மங்களையும் துளைத்து அப்பால் செல்கிறது. இதுதான் அத்வைத வேதாந்தம். புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாக, மிகவும் உயர்ந்த தத்துவமாக இருப்பதால் இது சாதாரண மக்களின் மதமாக இருக்க முடியவில்லை. அதன் பிறப்பிடமான இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாகத் தனியரசு செலுத்தி வந்தபோதிலும், சாதாரண மக்களிடம் நுழைய முடியவில்லை. எந்த நாட்டிலும் உள்ள ஆண்களிலும் பெண்களிலும் உள்ள மிகச் சிறந்த சிந்தனையாளர்களால்கூட அத்வைதத் தத்துவத்தைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்பதைப் போகப்போக அறிந்து கொள்வோம்.
நாம் நம்மை மிகவும் பலவீனர்களாக்கிக் கொண்டு விட்டோம்; நம்மை மிகவும் தாழ்த்திக் கொண்டுவிட்டோம். நாம் பெரிய சாதனைகளைப் புரிந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இயல்பாகவே நமக்கு யார் துணையாவது வேண்டியிருக்கிறது. எப்போதும் கொழுகொம்பை நாடுகின்ற பலவீனமான கொடிகளைப் போலவே நாம் இருக்கிறோம். வசதியான மதம் ஏதாவது இருக்கிறதா, என்று எத்தனை முறை என்னை எத்தனையோ பேர் கேட்டிருப்பார்கள்! உண்மை வேண்டும் என்று எண்ணுபவர்கள் வெகுசிலரே; அதை அறியும் தைரியமுள்ளவர்கள் இன்னும் குறைவு; உண்மையை உணர்ந்து எல்லா விதத்திலும் அதன்படி நடக்கும் தைரியம் உள்ளவர்களோ மிகமிகக் குறைவு. அது அவர்களது தவறு அல்ல; மூளையின் பலவீனமே. எந்தப் புதிய சிந்தனையும், குறிப்பாக, உயர்ந்த சிந்தனைகள் மூளையில் ஒரு புதிய பாதையை உருவாக்க முயல்வது போலுள்ளது. இந்த முயற்சி, நரம்பு மண்டலத்தையே உலுக்கி, மனிதர்களை நிலைகுலையச் செய்துவிடுகிறது. மனிதர்கள் பிறவியிலிருந்தே ஒருவகையான சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டு விடுகிறார்கள். அது மட்டுமல்லாமல், பழங்கால மூடநம்பிக்கைகள், பரம்பரை மூட நம்பிக்கைகள், இன மூட நம்பிக்கைகள், நகர மூட நம்பிக்கைகள், நாட்டு மூட நம்பிக்கைகள், இவற்றைத் தவிர மனிதனுக்குள்ளே இயற்கையாகவே ஊறிக்கிடக்கும் அளவில்லாத மூட நம்பிக்கைகள் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் அவன் விடுபட வேண்டியுள்ளது. ஆனாலும் உண்மையைப் புரிந்து கொண்டு அதை ஏற்று, வாழ்க்கையிலும் அதைக் கடைசி வரை பின்பற்றும் துணிவு மிக்க வீரர்களும் சிலர் இருக்கிறார்கள்.
அத்வைதம் தீர்மானமாகக் கூறுவது என்ன? கடவுள் என்று ஒருவர் இருப்பாரானால், பிரபஞ்சத்தின் நிமித்த காரணமும் உபாதான காரணமும் அவரே. படைப்பவர் மட்டுமல்ல, படைப்பும் அவரே. அவரே இந்தப் பிரபஞ்சம். அது எப்படி முடியும்? தூய, உணர்வுமயமான கடவுள் பிரபஞ்சமாக ஆனாரா? ஆம். அப்படித்தான் தோன்றுகிறது. அறியாமை மிக்கவர்கள் எதைப் பிரபஞ்சமாகப் பார்க்கிறார்களோ, அது உண்மையில் இல்லை. நீங்கள், நான், நாம் பார்க்கும் பொருட்கள் இவையெல்லாம் என்ன? எல்லாம் சுய மனோவசியம்தான். இருப்பது ஒன்றே. அது எல்லையற்றது; எப்போதும் ஆனந்தமயமானது. இருக்கின்ற அந்த ஒரு பொருளிலேயே நாம் இந்தப் பல்வேறு கனவுகளையெல்லாம் கண்டு கொண்டிருக்கிறோம்.
உள்ளது ஆன்மா ஒன்றுதான். அது எல்லாவற்றையும் கடந்தது, எல்லையற்றது. நாம் அறிந்த, அறியக்கூடிய எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அதிலேயே, அதன் மூலமாகவே நாம் பிரபஞ்சத்தைக் காண்கிறோம். இருக்கும் உண்மை அது ஒன்றுதான். இந்த மேஜை அதுதான். என் முன்னால் இருக்கும் கூட்டம் அதுதான். சுவரும் அதுதான். நாமரூபத்தை எடுத்துவிட்டால் எல்லாமே அதுதான். மேஜை என்ற பெயரையும் மேஜை உருவத்தையும் எடுத்து விட்டால் எஞ்சுவது அதுதான். வேதாந்தி அதை அவன் என்றோ அவள் என்றோ அழைப்பதில்லை. இவையெல்லாம் கட்டுக்கதைகள்; மனித மூளையின் மயக்கங்கள்.
ஆன்மாவில் பால்வேறுபாடு இல்லை. மன மயக்கத்திற்கு அடிமையாகி, மிருகங்கள்போல் ஆகிவிட்டவர்கள் தான் ஆணையோ பெண்ணையோ பார்க்கிறார்கள். மனித தெய்வங்கள் ஆணையோ பெண்ணையோ பார்ப்பதில்லை. எல்லாவற்றையும் கடந்தவர்களுக்குப் பால்வேறுபாடு பற்றிய எண்ணம் எப்படி வரும்? எல்லோருமே எல்லாமே ஆன்மாதான்; ஆண்பெண் பேதமற்ற, தூய்மையான, எப்போதும் ஆனந்தமயமான ஆன்மாதான். ஜடப்பொருட்களான பெயர், உருவம், உடல் இவைதான் இந்த வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன. பெயர், வடிவம் ஆகிய இரண்டு வேறுபாடுகளையும் நீக்கிவிட்டால், பிரபஞ்சம் முழுவதும் ஒன்றுதான்; இரண்டு என்பதே இல்லை; எங்குமே ஒன்றுதான். நீங்களும் நானும் ஒன்றே. இயற்கையோ கடவுளோ பிரபஞ்சமோ இல்லை. உள்ளது ஒன்றே. அது எல்லையற்றது. எல்லாமே நாம ரூபங்களால் அதிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளன. அறிபவனை அறிவது எப்படி? அது அறிய முடியாதது; அறிவுக்கு எட்டாதது. நமது ஆன்மாவை நாமே எப்படிப் பார்க்க முடியும்? அதைப் பிரதிபலிக்கத்தான் முடியும். ஆகவே நிரந்தரமான பரம்பொருளின் பிரதிபலிப்பே பிரபஞ்சம். இதைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளின் நல்ல மற்றும் தீய இயல்புக்கேற்ப பிரதிபலிப்பும் மாறுபட்டுத் தெரிகிறது. ஒரு கொலைகாரனில் பிரதிபலிக்கும்போது, ஆன்மா தூய்மையற்றது என்று பொருளல்ல; பிரதிபலிக்கும் கண்ணாடிக்கு அந்தத் தீய தன்மை இருக்கிறது என்பதே பொருள். ஒரு மகானில் பிரதிபலிக்கும்போது, கண்ணாடி தூய்மையாக இருப்பதால், பிரதிபலிப்பும் தூய்மையாக இருக்கிறது. ஆன்மா இயல்பாகவே தூய்மையாகத்தான் இருக்கிறது. சாதாரணமான புழுவிலிருந்து, மிக உயர்ந்த நிறைமனிதன் வரையிலும் தன்னைப் பிரதிபலித்துக் கொள்வது இந்த ஒன்றேயான ஆன்மாதான்.
பவுதீகரீதியாக, மனரீதியாக, தார்மீகரீதியாக, ஆன்மீக ரீதியாக இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே தனி ஒருமைதான். இந்த ஒன்றையே நாம் பலவாகக் கண்டு, அதன்மீது பலஉருவங்களைக் கற்பனை செய்து கொள்கிறோம். மனிதனாகத் தன்னை எல்லைப்படுத்திக் கொண்ட உயிருக்கு, இந்த உலகம் மனிதர்களின் உலகமாகத் தெரிகிறது. இன்னும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உலகம் சொர்க்கமாகத் தெரியலாம். பிரபஞ்சத்தில் இருப்பது ஒரே ஆன்மாதான்; இரண்டல்ல. அது வருவதுமில்லை, போவதுமில்லை. அது பிறக்கவுமில்லை, இறப்பதுமில்லை. அதற்கு மறுபிறவியும் இல்லை. அது எப்படிச் சாக முடியும்? அது எங்கே போக முடியும்? சொர்க்கங்கள், பூமிகள் என்று எல்லா இடங்களுமே மனத்தின் வீண் கற்பனைகள். அவை இல்லாதவை; அவை முன்பும் இல்லை, இப்போதும் இல்லை, இனி இருக்கவும் செய்யாது.
நான் எங்கும் நிறைந்தவன்; அழிவற்றவன். நான் எங்கே போக முடியும்? நான் ஏற்கனவே இல்லாத இடம் எது? நான் இயற்கை என்னும் இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பக்கத்தை முடிக்கிறேன். அந்தப் பக்கத்தைத் திருப்புகிறேன். அதனுடன் ஒரு வாழ்க்கைக் கனவும் முடிகிறது. வாழ்க்கையின் அடுத்த பக்கத்தைப் படிக்கிறேன், அடுத்த வாழ்க்கைக் கனவு வருகிறது, அதுவும் முடிகிறது. இப்படியே தொடர்ந்து செல்கிறது. புத்தகத்தைப் படித்து முடித்தவுடன், அதை ஒருபுறமாக வைத்துவிட்டு, நான் தனியாக விலகி நிற்கிறேன். பின்னர் புத்தகத்தை எறிந்துவிடுகிறேன். எல்லாம் முடிந்து விடுகின்றன.
அத்வைதி போதிப்பது என்ன? இதுவரை இருந்த, இனிமேல் இருக்கப் போகின்ற எல்லா தேவர்களையும் அவன் சிம்மாசனத்திலிருந்து இறக்கிவிடுகிறான். சூரியனை விட, சந்திரனைவிட, சொர்க்கங்களைவிட உயர்ந்த மனித ஆன்மாவை அந்தச் சிம்மாசனத்திற்கு அதிபதியாக்குகிறான். மனிதனாகத் தோன்றுகின்ற அந்த ஆன்மாவின் சிறப்பை எந்தப் புத்தகத்தாலும், எந்த சாஸ்திரத்தாலும், எந்த விஞ்ஞானத்தாலும் கற்பனைகூடச் செய்ய முடியாது. அந்த ஆன்மா ஒன்றுதான் என்றும் சிறப்பு வாய்ந்ததாக இருந்த ஒரே தெய்வம். முன்பு இருந்த, இப்போது இருக்கின்ற, இனிமேல் இருக்கப்போகின்ற ஒரே கடவுள் அதுதான். ஆகவே நான் வழிபட வேண்டியது என் ஆன்மாவைத் தவிர வேறு யாரையும் அல்ல. நான் என் ஆன்மாவையே வழிபடுகிறேன் என்று அத்வைதி கூறுகிறான். நான் யாருக்கு அடிபணிய வேண்டும்? எனது ஆன்மாவிற்கு மட்டுமே. உதவி தேடி யாரிடம் செல்வேன்? எல்லையற்ற ஆன்மாவாகிய எனக்கு யாரால் உதவி செய்ய முடியும்? இவையெல்லாம் முட்டாள்தனமான கனவுகள்! பொய்த் தோற்றங்கள். இதுவரை யாராவது யாருக்காவது உதவி செய்திருக்கிறார்களா? இல்லை.
ஒரு துவைதி, பலவீனமான மனிதன், விண்வெளிக்கு அப்பாலுள்ள ஏதோ ஒன்றிடமிருந்து உதவியை எதிர்பார்த்து, அழுது கதறுகிறான். தனக்குள்ளேயே அந்த விண்வெளி இருப்பதை உணராததாலேயே அவன் அவ்வாறு செய்கிறான். அவன் வானத்திலிருந்து உதவியை எதிர்பார்க்கிறான். உதவி வருகிறது. அது வருவது நமக்குத் தெரிகிறது, ஆனால் அது அவனுள்ளிருந்தேதான் வருகிறது. வெளியிலிருந்து வருவதாக அவன் தவறாக நினைத்துக் கொள்கிறான். படுக்கையில் கிடக்கின்ற நோயாளிக்கு யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. அவன் எழுந்து, கதவைத் திறக்கிறான், வெளியே யாரும் இல்லை. படுக்கையில் சென்று படுக்கிறான், மீண்டும் தட்டப்படும் சத்தம் கேட்கிறது. எழுந்து சென்று கதவைத் திறக்கிறான். அங்கே யாரும் இல்லை. கடைசியில் தன்னுடைய இதயத் துடிப்பையே, கதவு தட்டும் சத்தமாக நினைத்ததை அவன் உணர்கிறான். இவ்வாறு தனக்கு வெளியே பல தெய்வங்கள் இருப்பதாக நினைத்து, வீணாகத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மனிதன், எங்கே ஆரம்பித்தானோ அங்கேயே திரும்பி வருகிறான். அதுதான் மனித ஆன்மா. மலைகளிலும் காடுகளிலும் அருவிகளிலும் அவன் தேடிய, கோயில்கள்தோறும் தேடிய, சர்ச்சுகளில் தேடிய, சொர்க்கங்களில் அவன் தேடிய கடவுள், சொர்க்கத்தில் அமர்ந்துகொண்டு உலகை ஆள்வதாக அவன் கற்பனை செய்துகொண்டிருந்த கடவுள், உண்மையில், அவனுடைய ஆன்மாவேதான் என்பதை உணர்கிறான். நானே அவன்; அவனே நான் நானேதான் கடவுளாக இருந்தேன். அற்ப மனிதனான நான் எப்போதுமே இருக்கவில்லை.
அது சரி. அந்தப் பூரணப் பரம்பொருள் எப்படி மனமயக்கத்திற்கு உட்பட்டார்? அவர் மனமயக்கத்திற்கு உட்படவே இல்லை. பூரணப் பரம்பொருள் எப்படிக் கனவு காண முடியும்? அவர் கனவே காணவில்லை. உண்மை, கனவு காண்பதில்லை. இந்தப் பொய்த் தோற்றம் எங்கிருந்து எழுந்தது என்ற கேள்வியே அபத்தமானது. பொய்த் தோற்றம் பொய்த் தோற்றத்தில் இருந்தே எழுகிறது. உண்மையைக் காண்கிற அந்தக் கணமே பொய்த் தோற்றம் மறைந்துவிடுகிறது. பொய்த் தோற்றம் எப்போதும் ஆதாரமாகக் கொண்டிருப்பது பொய்த் தோற்றத்தைத்தான். கடவுள், அதாவது உண்மை, அதாவது ஆன்மா ஒருபோதும் பொய்த் தோற்றத்திற்கு இடமாவதில்லை. நாம் ஒருபோதும் மனமயக்கத்திற்கு உள்ளாகவில்லை. அந்த மயக்கம் நமக்கு உள்ளே, நமக்கு முன்னால் இருக்கிறது. ஒரு மேகத்தைப் பார்க்கிறோம்; வேறு ஒரு மேகம் வந்து அதைத் தள்ளிவிட்டு, அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறது. இன்னுமொரு மேகம் வந்து இதைத் தள்ளிவிடுகிறது. எப்போதும் நீலமான வானம் இருக்கிறது. பலநிறங்கள் கொண்ட மேகங்கள் அதன்முன் வருகின்றன. சிறிதுநேரம் இருக்கின்றன, பின்னர் விலகிச் செல்கின்றன. இவற்றால் எல்லாம் வானம் பாதிக்கப்படுவதே இல்லை. அதைப் போலவே, நாமும் எப்போதும் தூயவர்கள், எப்போதும் முழுமையானவர்கள். நாமே பிரபஞ்சத்தின் கடவுளர்கள், இல்லையில்லை, இரண்டு இல்லை, இருப்பதே ஒன்றுதானே! நீங்களும் நானும் என்று சொல்வதே தவறு; நான் என்றுதான் சொல்ல வேண்டும்.
கோடிக்கணக்கான வாய்களின் மூலமாக உண்பது நானே; எனக்குப் பசி ஏது? எண்ணற்ற கைகளின் மூலமாக வேலை செய்வது நானே; நான் எப்படிச் செயலற்று இருக்க முடியும்? இந்தப் பிரபஞ்சம் முழுவதன் வாழ்க்கை முழுவதிலும் வாழ்வது நானே; எனக்கு மரணம் ஏது? நான் எல்லா வாழ்வையும் கடந்தவன், எல்லா சாவையும் கடந்தவன். சுதந்திரத்தைத் தேடி நான் எங்கே போவது? நான் இயல்பாகவே சுதந்திரமானவன். பிரபஞ்சத்தின் கடவுளான என்னை யார் கட்டுப்படுத்த முடியும்? பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஒரே பொருளான எனது மகிமையை விளக்க முயல்கின்ற சிறுசிறு வரைபடங்களே இந்த உலகின் சாஸ்திரங்கள் எல்லாம். இந்தப் புத்தகங்களால் எனக்கு என்ன பயன்? இவ்வாறு சொல்கிறான் அத்வைதி.
உண்மையை அறிந்து, இந்தக் கணமே சுதந்திரமாக இரு. அப்போது இருளெல்லாம் விலகிவிடும். எப்போது மனிதன் தன்னைப் பிரபஞ்சத்தின் எல்லையற்ற பொருளுடன் ஒன்றாகக் காண்கிறானோ, எப்போது அவனிடம் வேறுபட்டு உணர்ச்சி இல்லாமல் போகுமோ, எப்போது ஆண்கள், பெண்கள், தெய்வங்கள், தேவதைகள், பிராணிகள், தாவரங்கள், ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே அந்த ஒருமையில் கரையுமோ அப்போது எல்லா பயமும் அவனிடமிருந்து அகல்கிறது. நான் என்னையே வருத்திக் கொள்ள முடியுமா? நான் என்னையே கொல்ல முடியுமா? நான் என்னையே காயப்படுத்த முடியுமா? யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்? நம்மைப் பார்த்தே நாம் பயப்பட முடியுமா? அப்போதுதான் எல்லா துன்பமும் மறையும். எனக்கு எது துன்பம் தர முடியும்? பிரபஞ்சத்தில் இருப்பது நான் மட்டுமே. அப்போது பொறாமைகள் எல்லாம் மறையும்; யாரைப் பார்த்துப் பொறாமைப்படுவது? என்னைப் பார்த்தேயா? அப்போது எல்லா தீய எண்ணங்களும் மறையும். யாருக்கு எதிராக என்னிடம் தீய எண்ணம் இருக்க முடியும்? எனக்கு எதிராகவா? பிரபஞ்சத்தில் இருப்பது நான் மட்டுமே.
ஞானம் பெற இதுதான் ஒரே வழி என்று வேதாந்தி கூறுகிறான். வேறுபாட்டை அழித்து ஒழியுங்கள். பன்மை உள்ளது என்ற மூட நம்பிக்கையை ஒழியுங்கள். பன்மை நிறைந்த உலகில் அந்த ஒன்றைக் காண்பவர் யாரோ, உணர்வற்ற இந்தப் பிரபஞ்சத்தில் அந்த ஒரே உணர்வுப் பொருளைக் காண்பவர் யாரோ, நிழல்கள் நிறைந்த இந்த உலகத்தில் சத்தியத்தைக் காண்பவர் யாரோ, அவனுக்கு மட்டுமே நிரந்தரமான அமைதி கிட்டுகிறது; வேறு யாருக்கும் இல்லை; வேறு யாருக்கும் இல்லை.
கடவுளைப் பற்றிய இந்திய மதச் சிந்தனையின் மூன்று முக்கியமான படிகளின் முக்கியமான அம்சங்கள் இவை. பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ள சகுணமான கடவுள் என்ற கருத்துடன் அது ஆரம்பித்தது. கடவுள், பிரபஞ்சத்திற்கு வெளியே இருக்கிறார் என்பதிலிருந்து, பிரபஞ்சத்தின் உள்ளே இருக்கிறார், எல்லா பொருட்களிலும் அந்தர்யாமியாக இருக்கிறார் என்ற கருத்திற்கு உயர்ந்தது. கடைசியில், கடவுளும் இந்த ஆன்மாவும் வெவ்வேறல்ல, ஒன்றே தான்; அதன் வெளிப்பாடுதான் பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு தோற்றங்கள் என்ற உயர்ந்த கருத்தில் நிறைவுறுகிறது. வேதங்களின் அறுதி வாக்கு இதுதான். துவைதமாக ஆரம்பித்து, விசிஷ்டாத்வைதமாகத் தொடர்ந்து, அத்வைதமாக முடிந்திருக்கிறது. உலகத்தில் மிகச் சிலரே இந்தக் கடைசி முடிவுக்கு வருவார்கள். அதிலும் சிலரே இதை நம்புவார்கள். மிகமிகச் சிலரே இதைப் பின்பற்றும் துணிவு உடையவர்களாக இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும்.
ஆனாலும் பிரபஞ்சத்திலுள்ள தார்மீகம், ஒழுக்கம், ஆன்மீகம் எல்லாவற்றிற்கும் விளக்கம் அத்வைதத்தில் உள்ளது. பிறருக்கு நன்மை செய்யுங்கள் என்று எல்லோரும் சொல்வது எதனால்? இதற்கு விளக்கம் என்ன? சான்றோர்கள் மனித குலத்தின் சகோதரத்துவத்தைப்பற்றி ஏன் பிரச்சாரம் செய்தார்கள்? இன்னும் மேலானோர் உயிர்கள் அனைத்தின் சகோதரத்துவத்தைப்பற்றி ஏன் பிரச்சாரம் செய்தார்கள்? ஏனெனில் அறிவுக்கு ஒவ்வாத, தனிப்பட்ட மூடநம்பிக்கைகளின் ஊடே, வேறுபாடுகளை மறுத்து, பிரபஞ்சமே ஒன்றுதான் என்பதை வலியுறுத்திய வண்ணம், ஆன்மப் பேரொளி தெரிந்தோ தெரியாமலோ அவர்களிடம் இடையீடற்றுப் பிரகாசித்துக் கொண்டிருந்ததுதான் காரணம்.
இனி, அத்வைதம் நமக்கு ஒரே பிரபஞ்சக் கருத்தைத் தருகிறது. புலன்களின் மூலமாகப் பார்க்கும்போது ஜடப்பொருளாகவும், அறிவின் மூலமாகப் பார்க்கும்போது ஆன்மாக்களாகவும், உணர்வின் வழியாகப் பார்க்கும் போது கடவுளாகவும் அதுவே தெரிகிறது. தீமை என்று உலகம் சொல்கின்ற முகமூடியைப் போட்டுக் கொண்டவனுக்குப் பிரபஞ்சம் பயங்கரமான இடமாகத் தெரிகிறது. இன்பத்தை நாடுகின்ற மனிதனுக்கு அது உருமாறி, சொர்க்கமாகத் தெரிகிறது. நிறைநிலையை அடைந்தவனுக்கோ எல்லாம் மறைந்து அது அவனது ஆன்மாவாக விளங்குகிறது.
இப்போது சமுதாயம் இருக்கும் நிலையில், இந்த மூன்று நிலைகளுமே அவசியம். இவற்றில், ஒன்று மற்றொன்றிற்கு முரண்பாடானது அல்ல; ஒன்று மற்றொன்றை நிறைவு செய்கிறது. அத்வைதியோ விசிஷ்டாத்வைதியோ துவைதம் தவறு என்று சொல்வதில்லை. அது சரியான கருத்துதான்; ஆனால் சற்று தாழ்ந்த கருத்து. அதுவும் உண்மையை நோக்கித்தான் போகிறது. ஒவ்வொருவரும் தங்கள் கருத்துப்படி இந்தப் பிரபஞ்சத்தைக் கற்பனை செய்து கொள்ளட்டும். யாரும் மற்றவர்களுடைய கருத்துக்களை மறுத்து, அவர்களைப் புண்படுத்த வேண்டாம். மனிதனை அவனிருக்கும் நிலையிலேயே ஏற்றுக்கொள்ளுங்கள். முடிந்தால் அவர்கள் மேல்நிலைக்கு உயர உதவுங்கள். ஆனால் அவர்களைப் புண்படுத்தாதீர்கள், அழிக்க முயற்சிக்காதீர்கள். எல்லோருமே காலப்போக்கில் உண்மையை அடைவார்கள். இதயத்தில் உள்ள எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டால், அழியும் தன்மை உள்ள நாம் அழியாத் தன்மை பெறுவோம். அப்போது மனிதனே கடவுளாகி விடுவான்.
ஆன்மாஅதன் தளையும் முக்தியும்
-
அத்வைத வேதாந்தத்தின் கருத்துப்படி, பிரபஞ்சத்தில் உண்மையாக இருப்பது ஒன்றே. அதைப் பிரம்மம் என்று அத்வைத வேதாந்தம் குறிக்கிறது. மற்ற எதுவுமே உண்மையற்றவை, மாயையின் சக்தியால் பிரம்மத்திலிருந்து வெளிப்படுவை, உருவாக்கப்படுபவை. அந்தப் பிரம்மத்தை மீண்டும் அடைவதே நமது குறிக்கோள். நாம் ஒவ்வொருவரும் அந்தப் பிரம்மமாகிய உண்மையும் இந்த மாயையும் கலந்த கலவைதான். மாயை அல்லது அறியாமையிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால், நாம் உண்மையில் யாரோ அதுவாக ஆவோம். இந்தத் தத்துவத்தின்படி, ஒவ்வொரு மனிதனும் மூன்று பகுதிகளால் ஆனவன்-உடல், அந்தக்கரணம் அல்லது மனம், அதன் பின்னால் ஆன்மா. இந்த ஆன்மாவின் புறப் போர்வை உடல், அகப் போர்வை மனம். உண்மையில் ஆன்மாவோ எல்லாவற்றையும் உணர்ந்து அனுபவிக்கிறது. உடலில் உறைவது ஆன்மாவே. இதுவே அந்தக்கரணமான மனத்தின்மூலம் உடலை இயக்குகிறது.
மனித உடலில் ஜடப்பொருள் அல்லாதது இந்த ஆன்மா ஒன்றுதான். ஜடப்பொருளாக இல்லாததால் அது கூட்டுப்பொருளாக இருக்க முடியாது. கூட்டுப்பொருள் அல்லாததால் அது காரணகாரிய விதிகளுக்கு உட்பட்டதல்ல. ஆகவே அது அழிவற்றது. அழிவற்ற ஒன்றிற்கு ஆரம்பம் இருக்க முடியாது. ஏனென்றால் ஆரம்பம் உள்ள எதற்கும் முடிவும் இருந்தேயாக வேண்டும். அத்துடன், ஆன்மா உருவம் இல்லாதது என்றும் ஆகிறது. ஜடப்பொருள் அல்லாத எதற்கும் உருவம் இருக்க முடியாது. உருவம் உள்ள எதற்குமே ஆரம்பமும் முடிவும் இல்லாத உருவம் எதையும் யாருமே பார்த்திருக்க முடியாது. சக்தியும் ஜடப்பொருளும் இணைந்தே உருவம் உண்டாகிறது. இந்த நாற்காலிக்கென்று ஒரு தனிப்பட்ட உருவம் இருக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட ஜடப்பொருளின்மீது ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி செயல்பட்டு அதை இந்தக் குறிப்பிட்ட உருவமாக்கியிருக்கிறது. பொருள், சக்தி இரண்டின் சேர்க்கையால் உண்டாவதுதான் உருவம். இந்தச் சேர்க்கை நிரந்தரமானதாக இருக்க முடியாது. ஒவ்வொரு சேர்க்கையும் பிரிந்து போகின்ற காலம் வந்தே தீரும். எனவே எல்லா உருவங்களுக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு.
நமது உடல் அழிந்துவிடும் என்பது நமக்குத் தெரியும். அதற்கு ஓர் ஆரம்பம் இருப்பதால் முடிவும் உண்டு. ஆனால் ஆன்மா உருவமற்றதாக இருப்பதால், ஆரம்பம், முடிவு என்ற விதிகளுக்கு அது கட்டுப்படுவதில்லை. அது எல்லையற்ற காலம்முதல் இருந்துவருகிறது. எப்படிக் காலம் நிரந்தரமானதோ அதேபோல் ஆன்மாவும் நிரந்தரமானது. இரண்டாவதாக, ஆன்மா எங்கும் நிறைந்ததாகத் தான் இருக்க வேண்டும். உருவமுள்ளதைத்தான் இடம் கட்டுப்படுத்துகிறது. உருவமற்றதை இடத்தால் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே அத்வைத வேதாந்தத்தின் கருத்துப்படி, உங்களுள், என்னுள் என்று எல்லோருள்ளேயும் உள்ள ஆன்மா எங்கும் நிறைந்தது. நாம் பூமியில் எப்படி இருக்கிறோமோ, அதேபோல் சூரியனிலும் இருக்கிறோம். நீங்கள் அமெரிக்காவில இருக்கிறீர்கள், அது போலவே இங்கிலாந்திலும் இருக்கிறீர்கள். ஆனால் உடல் மற்றும் மனத்தின்மூலமே ஆன்மா செயல்படுகிறது. ஆகவே உடலும் மனமும் இருக்கும் இடத்திலெல்லாம் ஆன்மாவின் செயல் வெளிப்படையாகத் தெரிகிறது.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் நம் மனத்தில் ஒரு பதிவை உண்டாக்குகிறது. அதை சம்ஸ்கிருதத்தில் சம்ஸ்காரம் என்கிறார்கள். இந்தச் சமஸ்காரங்களின் கூட்டுப்பலனே குணம் என்று சொல்லப்படுகின்ற மிகப் பெரும் சக்தி. ஒவ்வொரு மனிதனும் தன் குணத்தைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். அவன் தன் வாழ்க்கையில் மனத்தாலும் உடலாலும் செய்த செயல்களின் பலனே குணம். மரணத்திற்குப் பின், ஒரு மனிதன் போகுமிடத்திற்கு வழிகாட்டுவது, அவனது சம்ஸ்காரங்களின் கூட்டுப்பலனே. ஒருவன் இறக்கிறான். உடல் வீழ்ந்து பஞ்சபூதங்களுடன் கலந்துவிடுகிறது. அப்போது சம்ஸ்காரங்கள் அழிவதில்லை. அவை மனத்துடன் சேர்ந்திருக்கின்றன. மனம் மிக நுட்பமான பொருளால் ஆக்கப்பட்டிருப்பதால், அது அவ்வளவு விரைவில் அழிவதில்லை. ஏனென்றால் ஒரு பொருள் எவ்வளவு நுட்பமான பொருளால் ஆக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவிற்கு அது நிலைத்ததாகவும் இருக்கிறது. காலப்போக்கில் மனமும் அழிந்து விடுகிறது. அதற்காகத்தான் நாம் போராடுகிறோம்.
இந்த வேளையில் எனக்குத் தோன்றும் சிறந்த உதாரணம் சுழல்காற்றைப் பற்றியதுதான். பல திசைகளிலிருந்து வரும் பல காற்றோட்டங்கள் ஓரிடத்தில் சந்தித்து, ஒன்றுசேர்ந்து, சுழல ஆரம்பிக்கின்றன. அவ்வாறு சுழலும்போது காகிதம், வைக்கோல் போன்றவற்றைத் தங்களுக்குள் இழுத்துக்கொண்டு புழுதிப்புயலாக மாறுகின்றன. வேறோரிடத்தில் அவற்றை உதறிவிட்டு, வேறு பொருட்களை இழுத்துக் கொள்கின்றன. இவ்வாறே, தங்கள் வழியில் இருக்கும் பொருட்களைக்கொண்டு, பலவிதமான புழுதிப் படலங்களை உருவாக்கியவாறே செல்கின்றன. அதைப் போலவே, சம்ஸ்கிருதத்தில் பிராணன் என்று சொல்லப்படும் சக்திகள் ஒன்றுசேர்ந்து ஜடப்பொருளிலிருந்து உடலையும் மனத்தையும் உருவாக்குகின்றன. பிறகு உடல் விழும்வரை சுழன்று செல்கின்றன. விழுந்ததும்,மறுபடியும் வேறு பொருட்களிலிருந்து வேறு உடலையும் மனத்தையும் உருவாக்குகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. ஜடப்பொருள் இல்லாமல் சக்தியால் பயணம் செய்ய முடியாது. எனவே உடல் வீழ்ந்தவுடன் மனமாகிய பொருள் எஞ்சி நிற்கிறது. பிராணன் சம்ஸ்கார வடிவில் மனத்தின்மீது செயல்படுகிறது. பிறகு பிராணன் வேறோரிடத்திற்குப் போய் புதிய பொருட்களிலிருந்து புதிய உடலை உருவாக்கிக்கொண்டு மறுபடியும் இதேபோல் செயல்படுகிறது. இப்படியே, தன்னுடைய சக்தி முழுவதும் செலவழியும்வரை, இடத்திற்கு இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதன்பிறகு தான் அது கீழே விழுகிறது. அதன் செயலும் முடிகிறது. ஆகவே மனம் அழிந்து தூள் தூளாகச் சிதறி, சம்ஸ்காரங்களையும் விட்டுவைக்காமல் போகும்போதுதான், நாம் பரிபூரண சுதந்திரம் அடைவோம். அதுவரை நாம் கட்டுப்பட்டேதான் இருப்போம். அதுவரை ஆன்மா மனத்தின் சுழற்சியால் மூடப்பட்டிருக்கிறது; தான் இடம்விட்டு இடம் மாறுவதாகக் கற்பனையும் செய்து கொள்கிறது. சுழல் அழிந்தவுடன், தான் எங்கும் நிறைந்திருப்பதை ஆன்மா உணர்கிறது. அது இப்போது, தான் விரும்பும் இடத்திற்குப் போக முடியும். அது முழுச் சுதந்திரம் பெற்றுவிடுகிறது; தான் விரும்பும் அளவுக்கு, உடல்களையும் மனங்களையும் படைத்துக் கொள்ளும் சக்தி அதற்கு வந்துவிடுகிறது. ஆனால் அதுவரையில் அது சுழலுக்குள்தான் சிக்கியிருக்க வேண்டும். இந்தச் சுதந்திரம் அல்லது முக்தியாகிய குறிக்கோளை நோக்கியே நாமெல்லோரும் போய்க் கொண்டிருக்கிறோம்.
இந்த அறையில் ஒரு பந்து இருப்பதாக வைத்துக் கொள்வோம். நாம் ஒவ்வொருவரும் ஒரு மட்டையால் அந்தப் பந்தைப் பல திசைகளிலிருந்தும் அடிக்கிறோம். அது அங்குமிங்கும் ஓடி, கடைசியில் அறையை விட்டு வெளியே பறந்து செல்கிறது. அது எந்தத் திசையில், எவ்வளவு சக்தியோடு வெளியே போகும் என்பது, இந்த அறையில் அந்தப் பந்தின்மேல் செயல்பட்ட சக்திகளுக்கு ஏற்பவே அமையும். நாம் கொடுத்த ஒவ்வோர் அடியும் அதன் பலனைக் கொடுக்கும். மனத்தாலும் உடலாலும் நாம் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் அந்த அடியைப் போன்றவை. மனித மனம்தான் அடிபடும் அந்தப் பந்து. உலகமாகிய இந்த அறையில் நாம் அடைபட்டு அடிபட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த உலகத்திலிருந்து நாம் விடுபடுவது, நாம் வாங்கும் அடிகளின் சக்தியைப் பொறுத்தே இருக்கிறது. மேலே சொன்ன இரண்டு நிகழ்ச்சிகளிலுமே, பந்து வாங்கும் அடிகளே அதன் வேகத்தையும் திசையையும் நிர்ணயிக்கின்றன. ஆகவே இந்த உலகில் நாம் செய்யும் செயல்களே நமது அடுத்த பிறவியை நிர்ணயிக்கின்றன.
நம்முடைய இப்போதைய பிறவி முற்பிறவியின் பலனே. இதோ ஓர் உதாரணம்! நான் உங்களிடம் ஒரு முடிவில்லாத சங்கிலித் தொடரைக் கொடுப்பதாகவும், அதில் கறுப்பு மற்றும் வெள்ளை வளையங்கள் ஒன்றன் பின் ஒன்றாக, மாறிமாறி அமைந்திருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். அந்தச் சங்கிலிக்கு ஆரம்பமோ முடிவோ இல்லை. அந்தச் சங்கிலியின் இயல்பைப்பற்றி நான் உங்களைக் கேட்கிறேன். இரண்டு முனைகளிலும் சங்கிலி முடிவில்லாததாக இருப்பதால், அதன் இயல்பைக் கண்டு பிடிப்பதில் முதலில் உங்களுக்குச் சிறிது சிரமம் இருக்கும். ஆனால் அது ஒரு சங்கிலி என்பதை நீங்கள் மெதுவாகத் தெரிந்து கொள்வீர்கள். இந்த எல்லையற்ற சங்கிலி மாறி மாறி, கறுப்பு, வெள்ளை வளையங்களால் ஆனது, இந்த வளையங்களை எல்லையில்லாமல் பொருத்தியதால் ஆனதே இந்தச் சங்கிலி என்பதையும் கண்டுபிடித்து விடுவீர்கள். சங்கிலியிலுள்ள ஒரு வளையத்தின் இயல்பு தெரிந்துவிட்டால், முழுச்சங்கிலியின் இயல்பும் தெரிந்து விடும். ஏனெனில் முற்றிலும் ஒரே வகையான அமைப்பைத் திரும்பத்திரும்பக் கொண்டதே இந்தச் சங்கிலி.
நமது முற்பிறவி, இந்தப் பிறவி, மறுபிறவி எல்லாம் சேர்ந்து, தொடக்கமும் முடிவும் இல்லாத ஒரு சங்கிலித் தொடரைப்போல் இருக்கிறது. அந்தச் சங்கிலியின் ஒவ்வொரு வளையமும் பிறப்பு, இறப்புக்கு இடையிலுள்ள ஒரு பிறவியாகும். அந்த இணைப்பின் இரண்டு முனைகளே பிறப்பும் இறப்பும் ஆகும். இந்தப் பிறவியில் நம்முடைய இயல்பும் செயல்களும் சிறிது மாறுபாடுகளுடன் மீண்டும்மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த இரண்டு வளையங்களின் இயல்பையும் நாம் அறிந்து விட்டால், நாம் இந்த உலகத்தில் கடந்து செல்ல வேண்டிய வழிகளைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ளலாம். ஆகவே நாம் கடந்துவந்த வழிகளே இப்போது நாம் கடந்து கொண்டிருக்கும் வழியைத் தீர்மானித்துள்ளன. அதைப்போல் நம்முடைய செயல்களாலேயே நாம் இந்த உலகத்தில் இருக்கிறோம். நாம் இந்த உலகத்தை விட்டு வெளியே போகும்போது, நம் செயல்களின் கூட்டுப் பலனை நம்மோடு எடுத்துச் செல்வதைப்போல், இந்தப் பிறவியை எடுக்கும்போது, முற்பிறவியில் செய்த செயல்களின் கூட்டுப் பலனோடு இவ்வுலகிற்குள் வருகிறோம். நம்மை எது வெளியே எடுத்துச் செல்கிறதோ, அதுவேதான் நம்மை உள்ளேயும் கொண்டுவருகிறது.
நம்மைப் பிறக்கச் செய்வது எது? நமது முன் வினைகள். நம்மை இவ்வுலகிலிருந்து வெளியே கொண்டு போவது எது? இங்கே நாம் செய்யும் செயல்கள். இவ்வாறே தொடர்ந்து நடைபெறுகிறது. பட்டுப்புழு தன் வாயிலிருந்து வெளிப்படும் நூலைக்கொண்டே கூட்டைப் பின்னி, அதற்குள் அகப்பட்டுக் கொள்வதைப்போல் நாமும் நமது செயல்களாகிய வலையை நாமே பின்னி அதற்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம். காரணகாரிய விதியை நாம் தொடங்கி வைத்துவிட்டோம். அதிலிருந்து விடுபடுவது நமக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. சக்கரத்தைச் சுழற்றிவிட்டு விட்டோம். இப்போது அதுவே நம்மை நசுக்குகிறது. ஆகவே, நல்லதும் கெட்டதும் ஆகிய நம்செயல்களால் நாம் ஒருபோலவே கட்டுப்பட்டிருக்கிறோம் என்று இந்தத் தத்துவம் நமக்குப் போதிக்கிறது.
ஆன்மாவிற்குப் போக்கும் வரவும் இல்லை. அதற்குப் பிறப்போ இறப்போ இல்லை. இயற்கைதான் ஆன்மாவின் முன்னால் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தின் பிரதிபலிப்பு ஆன்மாவில் தெரிகிறது. ஆன்மா, அறியாமை காரணமாக, தான் இயங்குவதாகவும் இயற்கை நிலையாக இருப்பதாகவும் நினைத்துக் கொள்கிறது. அவ்வாறு நினைக்கும்போது அது பந்தப்பட்டுவிடுகிறது. தான் இயக்கமற்றிருப்பதையும், எங்கும் நிறைந்திருப்பதையும் அது உணரும்போது சுதந்திரம் அடைகிறது. தளையில் கட்டுண்ட ஆன்மாதான் ஜீவன். ஆகவே ஆன்மா வருகிறது போகிறது என்றெல்லாம் சொல்வது, சுலபமாகப் புரிந்து கொள்வதற்காகத்தான். சூரியன் பூமியைச் சுற்றுவதில்லை என்பதே உண்மையானாலும், வான இயலைப் படிக்கும் போது அது பூமியைச் சுற்றுவதாகப் பாவித்துக் கொள்வதைப் போன்றதே இது. அதுபோலவே ஜீவாத்மா உயர்ந்த நிலைகளுக்கோ தாழ்ந்த நிலைகளுக்கோ செல்கிறது. மறுபிறவி பற்றிய பிரபலமான விதி இது. படைப்பு அனைத்திற்கும் இந்த விதி பொருந்தும்.
மனிதன் மிருகத்திலிருந்து தோன்றினான் என்ற கருத்தைப் பயங்கரமானதாக நினைக்கிறார்கள் இந்த நாட்டு மக்கள். ஏன்? கோடிக்கணக்கான இந்த மிருகங்களின் கதி என்ன? அவை என்ன பயனற்றவையா? நமக்கு ஆன்மா உண்டு என்றால் அவற்றிற்கும் உண்டு. அவற்றிற்கு ஆன்மா இல்லை என்றால் நமக்கும் இல்லை. மனிதனுக்கு மட்டுமே ஆன்மா உண்டு, மிருகங்களுக்கு இல்லை என்று சொல்வது அபத்தம். மிருகங்களைவிடக் கேவலமான மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன்.
சம்ஸ்காரங்களின் பலனுக்கு ஏற்ப, ஆன்மா உயர்ந்த மற்றும் தாழ்ந்த பிறவிகளை எடுத்துக்கொண்டே இருக்கிறது; ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுகிறது. மனிதன் என்ற உயர்ந்த பிறவியில்தான் அது சுதந்திரத்தை அடைய முடியும். தேவதைகளைவிட மனித நிலைதான் உயர்ந்தது. எல்லா பிறவிகளிலும் உயர்ந்தது மனிதப் பிறவி. மனிதப் பிறவியில் மட்டுமே ஜீவன் சுதந்திரம் பெற முடிவதால், மனிதன்தான் படைப்புக்களிலேயே மிகச் சிறந்தவன்.
பிரபஞ்சம் முழுவதுமே பிரம்மத்தில்தான் இருந்தது. அதிலிருந்து வெளிப்பட்டது. அது எங்கிருந்து வெளிப்பட்டதோ, அதற்குள் அடங்குவதற்காகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. டைனமோவிலிருந்து வெளிப்படும் மின்சக்தி ஒரு சுற்றை முடித்துக்கொண்டு, மீண்டும் டைனமோவில் அடங்குவது போன்றதே இது. ஆன்மாவின் விஷயமும் இப்படித்தான். அது பிரம்மத்திலிருந்து வெளிப்பட்டு, பல்வேறு வகையான தாவரங்களாக, மிருகங்களாகப் பிறந்து, கடைசியில் மனிதனாகப் பிறக்கிறது. மனிதப் பிறவிதான் பிரம்மத்தை மிகவும் நெருங்கிய நிலையாகும். நாம் எந்தப் பிரம்மத்திலிருந்து வெளிப்பட்டோமோ அந்தப் பிரம்மத்தை அடைவதற்கான முயற்சி தான் வாழ்க்கையின் பெரிய போராட்டம். நாம் அதை அறிந்திருக்கிறோமோ இல்லையா என்பது பெரிய விஷயம் அல்ல. பிரபஞ்சத்தில் நாம் காணும் எல்லா இயக்கங்களும் , தாதுப் பொருட்கள், தாவரங்கள், மிருகங்கள் என்று எல்லாவற்றிலும் நாம் காணும் போராட்டங்களும் மையத்திற்குத் திரும்பிச் சென்று அமைதி பெறுவதற்கான முயற்சிகளே.
முதலில் ஒரு சமநிலை இருந்தது. அது கலைந்து விட்டது. எல்லா பகுதிகளும் எல்லா அணுக்களும் எல்லா மூலக்கூறுகளும் இழந்த தங்கள் சமநிலையைத் திரும்பப் பெறவே போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டத்தில், அவை ஒன்றுசேர்ந்து, பல்வேறு உருவங்களைப் படைத்து, இயற்கை என்றும் இந்த அற்புதக் கோலத்தை விரிக்கின்றன. தாவர உலகிலும் மிருக உலகிலும் எங்கும் உள்ள போராட்டங்கள், போட்டிகள், சமுதாயப் போராட்டங்கள், போர்கள் எல்லாமே, அந்தச் சமநிலையைத் திரும்ப அடைவதற்கான இடையீடற்ற போராட்டத்தின் வெளிப்பாடுகளே.
பிறப்பிலிருந்து இறப்புவரையிலான இந்த வாழ்க்கை, இந்தப் பயணம் தான் சம்ஸ்கிருதத்தில் சம்சாரம் அதாவது பிறப்பு-இறப்புச் சுழல் எனப்படுகிறது. இந்தச் சுழலில் சுழன்று கொண்டிருக்கும் படைப்புகள் எல்லாமே, என்றோ ஒருநாள் நிச்சயமாகச் சுதந்திரம் அடைந்தே தீரும். எல்லோரும் சுதந்திரம் அடைவோம் என்றால் அதற்காக நாம் ஏன் போராட வேண்டும்? எல்லோரும் சுதந்திரம் அடைந்தே தீருவோம் என்றால் அமைதியாக அமர்ந்து, போராடாமல் காத்திருக்கலாமே! இன்றோ நாளையோ எல்லோரும் சுதந்திரம் அடைந்தே தீருவோம் என்பது உண்மைதான். யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. எதுவும் அழிய முடியாது. எல்லாமே மேலே வரத்தான் வேண்டும். அப்படியானால் நமது போராட்டத்தின் பயன் என்ன? முதலில், போராட்டம்தான் நம்மை மையத்திற்குக் கொண்டு செல்லும் ஒரே வழி. இரண்டாவதாக, நாம் ஏன் போராடுகிறோம் என்பதே நமக்குத் தெரியாது. நாம் போராட வேண்டும், அவ்வளவுதான். ஆயிரக்கணக்கானோரில் ஏதோ சிலருக்கே தாங்கள் சுதந்திரம் அடைந்து விடுவோம் என்ற விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது. மிகப்பெரும்பாலோர் லவுகீக விஷயங்களிலேயே திருப்தி அடைகின்றனர். சிலருக்குத்தான் தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பிப் போக வேண்டும், இந்த விளையாட்டு போதும் என்ற விழிப்புணர்ச்சி உண்டாகிறது. இவர்கள் உணர்வுபூர்வமாகப் போராடுகிறார்கள்; மற்றவர்கள் உணராமல் போராடுகிறார்கள்.
வேதாந்தத் தத்துவத்தின் முதலும் முடிவுமாக உள்ளது உலகைத் துறந்துவிடு; உண்மையற்றதை விலக்கி, உண்மையை ஏற்றுக்கொள் என்பதுதான். உலகத்தை விட்டு வெளியேறி எல்லாவற்றிற்கும் மையத்தை அடைய ஏன் முயல வேண்டும்? நாம் எல்லோரும் கடவுளிடமிருந்து தோன்றியவர்களாகவே வைத்துக் கொள்வோம், ஆனால் இந்த உலகம் இன்பமயமானதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருக்கிறதே! எனவே மேன்மேலும் உலக இன்பங்களை ஏன் நாடக்கூடாது? இதிலிருந்து வெளியே போக ஏன் முயல வேண்டும்? என்று லவுகீகர்கள் கேட்கலாம். நாளுக்கு நாள் உலகில் காணும் அற்புத முன்னேற்றங்களைப் பாருங்கள். என்னென்ன வசதிகள் தினந்தோறும் உருவாக்கப்படுகின்றன! இது மிகவும் இன்பம் தரக்கூடியதாக இருக்கிறது. இதைவிட்டு வெளியே போய், இது அல்லாத வேறொன்றை அடைய ஏன் முயல வேண்டும்? என்று அவர்கள் கேட்கிறார்கள்.
அதற்கு விடை இதோ: இந்த உலகம் நிச்சயமாக அழிந்துவிடும்; தூள்தூளாகச் சிதறிவிடும்; பலமுறை நாம் திரும்பத்திரும்ப ஒரே மாதிரி இன்பங்களை அனுபவித்திருக்கிறோம். நாம் பார்க்கும் எல்லா உருவங்களும் மறுபடியும் மறுபடியும் வெளிப்பட்டுக்கொண்டே இருப்பவைதாம். நாம் வாழும் இந்த உலகமும் இதற்கு முன் பலமுறை இங்கே இருந்திருக்கிறது. நான் இங்கே உங்கள் முன், இதற்கு முன்பு பலமுறைகள் பேசியிருக்கிறேன். இது இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். நீங்கள் இப்போது கேட்டுக் கொண்டிருப்பதுபோல் இதற்கு முன் பலமுறை கேட்டிருக்கிறீர்கள். இன்னும் பலமுறை இப்படியேதான் நிகழும். ஆன்மாக்கள் என்றும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கின்றன. உடல்கள் மட்டுமே அழிந்து, மறுபடியும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இரண்டாவதாக, இந்த விஷயங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும்மீண்டும் நடந்துகொண்டே இருக்கின்றன. நம்மிடம் மூன்று நான்கு பகடைக் காய்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவற்றை உருட்டினால் 5,4,3,2 என்று விழுவதாகவும் வைத்துக் கொள்வோம். உருட்டிக்கொண்டே இருந்தால், இந்தச் சேர்க்கை மறுபடியும் எப்போதாவது வந்தே தீரும். உருட்டிக்கொண்டே இருங்கள். எவ்வளவு முறை உருட்டிய பிறகு இந்தச் சேர்க்கை மறுபடியும் வரும் என்று கணிக்க முடியாது. இதுதான் தற்செயல் விதி.
ஆன்மாக்கள் மற்றும் அவற்றோடு தொடர்பு உடையவைகளின் விஷயமும் இதுதான். கால வித்தியாசம் எவ்வளவு இருந்தாலும், ஒரே மாதிரி சேர்க்கைகளும் அழிவுகளும், மறுபடியும்மறுபடியும் தோன்றிக்கொண்டேதான் இருக்கும். அதே பிறவி, அதே போல் உண்பதும், உறங்குவதும், பிறகு அதேபோன்ற சாவு இவை சுழன்றுசுழன்று வந்துகொண்டே இருக்கின்றன. உலகிலுள்ள இன்பங்களைவிட உயர்ந்த எதுவும் இருப்பதாக சிலர் நினைப்பதே இல்லை. ஆனால் உயர் நிலைகளை அடைய விரும்புபவர்கள், புலனின்பங்களே எல்லாம் என்று நினைப்பதில்லை. அவை அந்த உயர்ந்த நிலைக்குப் போகும் வழியில் இருப்பவை என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.
சாதாரணமான புழுவிலிருந்து மனிதன் வரையிலுள்ள எல்லா உருவங்களுமே, முன்பு நாம் கண்டது போல் தொடர்ந்து சுற்றிக் கொண்டேயிருக்கும் ரங்க ராட்டினத்திலுள்ள தொட்டில்களைப் போன்றவை. உட்காருபவர்கள்தாம் மாறுகிறார்கள். ஒரு மனிதன் ஒரு தொட்டிலில் உட்கார்ந்து, சுற்றிவிட்டு, இறங்குகிறான். ஆனால் ரங்கராட்டினம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ஓர் ஆன்மா ஓர் உருவத்தை எடுக்கிறது; அதில் சிலகாலம் வசிக்கிறது; பின்னர் அதை விட்டுவிட்டு, வேறு உருவங்களுக்குத் தாவுகிறது. ராட்டினத்தை விட்டு விடுதலை பெற்று வெளியே வரும்வரை இந்தச் சுழற்சி நடந்து கொண்டே இருக்கிறது.
மனித வாழ்க்கையின் இறந்தகாலம் மற்றும் எதிர்காலங்களை அறிந்து சொல்லும் வியக்கத்தக்க சக்தியுள்ளவர்கள் எல்லா நாட்டிலும் எல்லா காலங்களிலும் இருந்திருப்பதாகத் தெரிகிறது. ஆன்மா இயல்பாகவே சுதந்திரமானது. ஆன்ம சுதந்திரம் அடைந்தவர்களிடம், ஆன்மா காரணகாரிய விதிகளிலிருந்து விடுபட்டு, தன் சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதிலிருந்து இது தெரிய வருகிறது. ஆனாலும் ஜீவாத்மா என்ற நிலையில் இருக்கும்வரையில் அதன் செயல்பாடுகள் பொதுவாக காரணகாரிய விதிகளைச் சார்ந்தே இருக்கின்றன. ஆகவே காரணகாரிய விதிகளின் பலனை முன்கூட்டியே அறியும் திறன் உள்ளவர்களுக்கு, இறந்தகாலம் மற்றும் எதிர் காலங்களைப்பற்றித் துல்லியமாகச் சொல்ல முடிகிறது.
ஆசைகளும் தேவைகளும் இருக்கிறது என்றால் அது முழுமையடையாத நிலையையே குறிக்கிறது. நிறைநிலையும் சுதந்திரமும் அடைந்த எதற்கும் ஆசை இருக்க முடியாது. கடவுள் எதையும் விரும்ப முடியாது. விரும்பினால் அவர் கடவுளாக இருக்க முடியாது; அவர் நிறை நிலையை அடையாதவராகத்தான் இருப்பார். கடவுள் இதனை விரும்புகிறார், அதனை விரும்புகிறார், கோபம் அடைகிறார், மகிழ்ச்சி கொள்கிறார் என்றெல்லாம் சொல்வது வெறும் குழந்தைப் பேச்சு. அதற்குப் பொருளே இல்லை. ஆகவேதான் எதற்கும் ஆசைப்படாதீர்கள்; ஆசைகளையெல்லாம் துறந்துவிட்டு, பரிபூரணத் திருப்தியோடு இருங்கள் என்று எல்லா மகான்களும் போதித்திருக்கிறார்கள்.
ஒரு குழந்தை இந்த உலகத்தில் பிறக்கும்போது, ஊர்ந்துகொண்டும் பல் இல்லாமலும் பிறக்கிறது. அவன் கிழவனாகி இறக்கும்போதும் ஊர்ந்துகொண்டும் பல் இல்லாமலும் உலகை விட்டு வெளியேறுகிறான். இரண்டு எல்லைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. ஆனால் குழந்தைக்கு வாழ்க்கை அனுபவம் இல்லை. கிழவனோ வாழ்ந்து அனுபவித்து முடித்துவிட்டான். ஆகாசத்தின் அதிர்வுகள் மிகவும் குறைவாக இருக்கும்போது நமக்கு வெளிச்சம் தெரிவதில்லை, நாம் இருளில் இருக்கிறோம். அதிர்வுகள் மிகவும் அதிகமாக இருக்கும்போது இருள்தான் இருக்கிறது. இரண்டு எல்லைகளும் பொதுவாக ஒன்று போலவே தெரிகிறது. ஆனால் இரண்டிற்கும் இடையே இரு துருவங்களுக்கிடையே உள்ள தூரம் உள்ளது. சுவருக்கு ஆசை இல்லை; நிறைநிலை பெற்ற மனிதனுக்கும் ஆசை இல்லை. சுவருக்கு, ஆசைப்படுவதற்கான அறிவு இல்லை. நிறைநிலை பெற்ற மனிதனுக்கோ ஆசைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆசையே இல்லாத முட்டாள்கள் உலகில் இருக்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்கள் மூளையிலுள்ள குறைபாடுதான். அதேவேளையில் ஆசையற்ற நிலையே மிக உயர்ந்த நிலை. ஆனால் இரண்டும் ஒரே நிலையின் எதிர் துருவங்கள், ஒன்று மிருகநிலைக்கு அருகில் உள்ளது, மற்றது தெய்வ நிலைக்கு அருகில் உள்ளது
உண்மையான மனிதனும் தோன்றும் மனிதனும்
-
நாம் இங்கே இருக்கிறோம், சிலவேளைகளில் நமது பார்வை வெகுதூரம் ஊடுருவிச் செல்கிறது. சிந்திக்க ஆரம்பித்த நாளிலிருந்து மனிதன் இதைச் செய்து கொண்டிருக்கிறான். எப்போதும் அவன் முன்னோக்கியே பார்க்கிறான். உடல் அழிந்தபின், தான் எங்கே போவோம் என்பதை அறிய விரும்புகிறான். இந்தப் பிரச்சினைக்கு விளக்கம் கூறும் வகையில் பல கொள்கைகள் தோன்றியிருக்கின்றன. பல கோட்பாடுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில ஒதுக்கப்பட்டன. சில ஏற்றுக் கொள்ளப்பட்டன. மனிதன் உலகில் இருக்கும்வரையில் அவனுக்குச் சிந்தனைச் சக்தி இருக்கும்வரையில் இப்படித் தான் நடந்து கொண்டிருக்கும். இந்தக் கொள்கைகள் ஒவ்வொன்றிலும் சிறிது உண்மை இருக்கிறது. கணிசமான அளவு உண்மை அல்லாத கொள்கைகளும் இருக்கின்றன. அவ்வப்போது இந்தியத் தத்துவ ஞானியரிடமிருந்து எழுந்த இந்தக் கருத்துக்கள் பலவற்றையும் இயைபுபடுத்தி உங்கள் முன் வைக்க முயல்கிறேன். மனஇயல்வாதிகள், தத்துவ மேதைகள், இவர்களின் சிந்தனையோடு, முடிந்தால், நவீன விஞ்ஞானிகளின் சிந்தனையையும் இணைத்து விளக்க முயல்கிறேன்.
வேதாந்தத் தத்துவத்தின் ஒரே குறிக்கோள் ஒருமையைத் தேடுவதுதான். குறிப்பான ஒன்றை இந்து மனம் நாடுவதில்லை; பொதுவான ஒன்றை, இல்லையில்லை, பிரபஞ்சம்தழுவிய ஒன்றை மட்டுமே அவர்கள் சிந்திக்கிறார்கள். எந்த ஒன்றை அறிந்து கொள்வதால், மற்ற எல்லாவற்றையும் அறிய முடியும்? இதுதான் வேதாந்தத்தின் ஒரே குறிக்கோள். ஒரு களிமண் கட்டியின் இயல்பை அறிவதால், களிமண்ணால் ஆன பொருட்கள் அனைத்தின் இயல்பையும் அறிய முடிவதைப் போல், எனதை அறிவதன்மூலம், முழுப் பிரபஞ்சத்தையுமே அறிய முடியும்? வேதாந்திகள் தேடுவது அது ஒன்றையே.
பிரபஞ்சம் முழுவதுமே ஒரே பொருளால் ஆக்கப்பட்டது என்பது இந்துத் தத்துவ அறிஞர்களின் கருத்து. அதனை அவர்கள் ஆகாசம் என்கிறார்கள். நாம் நம்மைச் சுற்றிக் காண்கின்ற, உணர்கின்ற, தொடுகின்ற, சுவைக்கின்ற எல்லாமே இந்த ஆகாசத்தின் வெவ்வேறு வெளிப்பாடுகள்தாம். அது எங்கும் நிறைந்தது; நுட்பமானது. திடம், திரவம், வாயு, உருவம், உடல், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்று நாம் சொல்பவை எல்லாமே இந்த ஆகாசத்தால் ஆனவை.
இந்த ஆகாசத்தின்மீது செயல்பட்டு அதிலிருந்து பிரபஞ்சத்தைப் படைக்கும் சக்தி எது? ஆகாசத்தோடு கூடவே பிரபஞ்ச சக்தி ஒன்று இருக்கிறது. ஆற்றலாக, கவர்ச்சி சக்தியாக, ஏன், எண்ணமாகக்கூட வெளிப்படுகின்ற சக்திகள் எல்லாமே, இந்துக்கள் பிராணன் என்று சொல்கின்ற அந்த ஒரே சக்தியின் வெளிப்பாடுகளே. இந்தப் பிராணன் ஆகாசத்தின்மீது செயல்பட்டு பிரபஞ்சத்தைப் படைக்கிறது. ஒரு கல்பத்தின் ஆரம்பத்தில், இந்தப் பிராணன், எல்லையற்ற பெருங்கடலான ஆகாசத்தில் தூங்குவது போலுள்ளது. அது ஆரம்பத்தில் அசைவற்று இருந்தது. பிறகு பிராணனின் செயலால் ஆகாசத்தில் இயக்கம் ஏற்படுகிறது. பிராணன் இயங்க ஆரம்பித்ததும், ஆகாசப் பெருங்கடலிலிருந்து பல்வேறு வான மண்டல்ஙகள், சூரியர்கள், சந்திரர்கள், நட்சத்திரங்கள், பூமி, மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள் என்று பல்வேறு சக்திகளின் வெளிப்பாடுகளும் இயற்கை நிகழ்ச்சிகளும் தோன்றுகின்றன.
வேதாந்திகளின் கொள்கைப்படி, சக்தி எந்தவிதமாக வெளிப்பட்டாலும் அது பிராணன்; பொருள் எந்த உருவில் வெளிப்பட்டாலும் அது ஆகாசம். இந்தக் கல்பம் முடியும்போது, திடமெல்லாம் திரவமாகும்; திரவமெல்லாம் வாயுவாகும்; வாயுவெல்லாம் இன்னும் நுட்பமான, ஒரே மாதிரியான வெப்ப அலைகளாக மாறும். இறுதியில் எல்லாமே ஆகாசத்தில் ஒடுங்கிவிடுகின்றன. கவர்ச்சி சக்தி, விலக்கு சக்தி, இயக்கம் போன்ற எல்லாசக்திகளும் ஆதி பிராணனில் ஒடுங்குகின்றன. பிறகு இந்தப் பிராணன் ஒரு குறிப்பிட்ட காலம் தூங்குவதாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் விழித்துக்கொண்டு எல்லாவற்றையும் வெளிப்படுத்த ஆரம்பிக்கிறது. அந்தக் கல்பம் முடிந்தவுடன் மீண்டும் ஒடுக்கம். இவ்வாறு, படைப்பு என்பது அலையைப் போல், மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. தற்கால விஞ்ஞான மொழியில் சொல்வதானால், அது ஒரு காலத்தில் இயக்கம் அற்றும், மற்றொரு காலத்தில் இயக்கம் பெற்றும் இருக்கிறது. இவ்வாறு மாறிமாறி எல்லையற்ற காலமாக நடந்து வருகிறது.
இந்த ஆராய்ச்சியும் முழுமையானதல்ல. தற்கால பவுதீக விஞ்ஞானத்திற்குக்கூட இந்த அளவு தெரிந்திருக்கிறது. இதற்கு அப்பால் பவுதீக விஞ்ஞானம் செல்ல முடியாது. அதற்காக, இந்த ஆராய்ச்சி அங்கே நின்றுவிடுவதில்லை. எதை அறிவதன்மூலம் எல்லாவற்றையும் அறிய முடியுமோ, அதை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. பிரபஞ்சம் முழுவதையுமே ஜடப்பொருள், சக்தி என்ற இரு பகுதிகளாக நாம் பிரித்துவிட்டோம். பண்டைய இந்தியத் தத்துவ ஞானியரின் மொழியில் இவையே ஆகாசம் மற்றும் பிராணன். இந்த ஆகாசமும் பிராணனும் எதனுடைய வெளிப்பாடுகள் என்று கண்டுபிடிப்பதே அடுத்த படி. இந்த இரண்டையுமே இவற்றைவிட மேலான பிரபஞ்ச மனமாகிய மகத் என்பதில் அடக்கிவிடலாம். பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் எண்ண ஆற்றலான மகத்திலிருந்தே இந்த இரண்டும் தோன்றுகின்றன. எண்ணம் என்பது ஆகாசம், பிராணன் ஆகிய இரண்டையும்விட நுட்பமான வெளிப்பாடு. எண்ணமே தன்னை ஆகாசமாகவும் பிராணனாகவும் பிரித்துக் கொள்கிறது. ஆரம்பத்தில் பிரபஞ்சம்தழுவிய எண்ணம் இருந்தது. இது வெளிப்பட்டு, மாற்றம் அடைந்து, பரிணமித்து, ஆகாசமாகவும் பிராணனாகவும் ஆகியது. இவை இரண்டின் சேர்க்கையாலேயே பிரபஞ்சம் முழுவதும் தோன்றியிருக்கிறது.
அடுத்து நாம் மனஇயலுக்கு வருவோம். நான் உங்களைப் பார்க்கிறேன். அந்தப் புறஉணர்ச்சியைக் கண்கள் என்னிடம் கொண்டு வருகின்றன. அது உணர்ச்சி நரம்புகளின்மூலம் மூளையை அடைகிறது. கண்கள், பார்வைப் புலன்கள் அல்ல. அவை வெறும் வெறிப் பொறிகள் மட்டுமே. ஏனென்றால் மூளைக்கு உணர்ச்சிகளைக் கொண்டுபோகும் உண்மையான புலன்கள் அழிந்துவிட்டால், எனக்கு இருபது கண்கள் இருந்தாலும், என்னால் உங்களைப் பார்க்க முடியாது. என்னுடைய விழித்திரையில் உருவம் நன்றாக விழலாம், ஆனாலும் உங்களை நான் பார்க்க முடியாது. ஆகவே புலனும் அதன் பொறியும் வெவ்வேறாகும். பொறிகளாகிய கண்களுக்குப் பின்னால் பார்வைப் புலன் இருக்கவேண்டும். எல்லா உணர்ச்சிகளும் இதுபோல்தான். மூக்கு, வாசனையை அறியும் புலனல்ல, அது வெறும் பொறி; அதற்குப் பின்னால் வாசனைப் புலன் இருக்கிறது. ஒவ்வொரு புலன் உணர்ச்சியையும் நாம் அறிய, முதலில், பவுதீக உடலில் வெளிப்பொறிகள் இருக்கின்றன; அடுத்து, அதே உடலில் பொறிகளுக்குப் பின்னால் புலன்கள் இருக்கின்றன. இவையெல்லாம் போதாது.
நீங்கள் என் பேச்சை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எங்கிருந்தோ ஒரு மணியோசை கேட்கிறது. உங்களுக்கு அது ஒரு வேளை கேட்காமல் போகலாம். அந்தச் சத்தத்தின் ஒலி அலைகள் உங்கள் காதுகளை எட்டின, செவிப்பறைகளைத் தாக்கின, அந்தப் பதிவுகள் மூளைக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. மூளையை அடைவதுதான் கடைசிநிலை என்றால், சத்தம் ஏன் உங்களுக்குக் கேட்கவில்லை? எனவே வேறு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அது மனம். மனம் அந்தப் புலனோடு ஒட்டவில்லை. மனம் புலனிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டிருக்கும்போது புலன் என்ன உணர்ச்சியைக் கொண்டு வந்தாலும் அது அவற்றை ஏற்காது. அது புலனோடு தொடர்பு கொள்ளும்போதுதான் அதனால் புலணுணர்ச்சிகளை ஏற்றுக்கொள்ள முடியும். இப்போதும் விஷயம் முடியவில்லை.
பொறிகள் உணர்ச்சிகளை வெளியிலிருந்து கொண்டு வரும். புலன்கள் அவற்றை உள்ளே எடுத்துச் செல்லும். மனமும் புலனுடன் தொடர்பு கொண்டிருக்கும். ஆனாலும் நாம் எதையும் உணராமல் போகலாம். நாம் உணர்வதற்கு மற்றோர் அம்சம் அவசியம். அது அகத்தின் எதிர்ச்செயல். எதிர்ச்செயலைத் தொடர்ந்துதான் அறிவு தோன்றுகிறது. வெளியே இருப்பவை என் மூளைக்குச் செய்தி அனுப்புகின்றன. புத்தி முந்தைய அனுபவங்களோடு அதை ஒப்பிட்டு, எதிர்ச் செயல் புரிகிறது. அந்த எதிர்ச் செயலுக்குப் பிறகுதான் உணர்ச்சி முழுமையடைகிறது. இங்கே சங்கல்பமும் உள்ளது. எதிர்ச்செயல் புரியும் மனநிலையே புத்தி, இப்போதும் விஷயம் முடியவில்லை.
இன்னொரு படி தேவைப்படுகிறது. என்னிடம் ஒரு காமிரா இருப்பதாக வைத்துக் கொள்வோம். திரையில் படத்தைக் காட்ட நான் விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒளிக்கதிர்களை அந்தக் கருவியின் மூலம் செலுத்திப் படம் திரையில் விழுமாறு செய்ய வேண்டும். அசையாத திரை இதற்குத் தேவைப்படுகிறது. அசைகின்ற ஒன்றின்மீது படம் தெரியுமாறு செய்ய முடியாது. ஏனென்றால், காமிராவின் மூலம் செல்லும் ஒளிக்கதிர்கள் அசைந்து கொண்டிருப்பவை. இவற்றை ஒன்றுசேர்த்து, குவித்து, ஓர் உருவத்தைக் காட்ட வேண்டுமானால் அசையாத திரை வேண்டும்.
நம் புலனுணர்ச்சிகளின் விஷயமும் இப்படித்தான். பொறிகள் புலன்களுக்கும், புலன்கள் மூளைக்கும், மூளை மனத்திற்கும், மனம் புத்திக்கும் இந்த உணர்ச்சிகளை அனுப்புகின்றன. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் பின்னால் அசையாத திரை போன்ற ஒன்று இருந்து கொண்டு, இந்த உணர்ச்சி அலைகளையெல்லாம் ஒருங்கிணைத்து, நாம் அந்த உணர்ச்சியைப் பெறுமாறு செய்ய வேண்டும். எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் நம் தன்மையை ஒருமைப்படுத்துவது எது? கணத்திற்குக் கணம் மாறிக்கொண்டே இருக்கும் நம் தன்மையை நிலைப்படச் செய்வது எது? நமது பல்வேறு உணர்ச்சிகளையும் ஒன்றாகச் சேர்த்து வைப்பது எது? நம் உணர்ச்சிகளெல்லாம் ஒன்றுசேர்ந்து, ஒரே உருவமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் எது? இந்தச் செயல்களுக்கெல்லாம் அடிப்படையாக ஏதோ ஒன்று இருந்தே தீர வேண்டும். உடலோடும் மனத்தோடும் ஒப்பிட்டால் அந்த ஏதோ ஒன்று அசைவற்றதாக இருக்க வேண்டும் என்பதும் தெரிகிறது. காமிரா மூலமாக வரும் ஒளிக் கதிர்களோடு ஒப்பிட்டால், உருவம் விழுகின்ற திரை அசைவற்றதாக இருக்கிறது. இல்லாவிட்டால் உருவம் திரையில் தெரியாது. அதாவது, உணர்ச்சிகளை உணர்பவர் தனிப்பொருளாக இருக்க வேண்டும். மனம், இந்த உருவங்களையெல்லாம் வரைகின்ற திரைதான், மனமும் புத்தியும் கொண்டு செல்கின்ற உணர்ச்சிகளெல்லாம் ஒன்றுசேர்க்கப்பட்டு, பகுக்கப்பட்டு, ஒருமைப்படுத்தப்பட்டு ஒரே உருவமாகத் தெரியும் இடம்தான் மனித ஆன்மா.
அகண்ட பிரபஞ்ச மனமே தன்னை ஆகாசமாகவும் பிராணனாகவும் பிரித்துக் கொள்கிறது என்பதைப் பார்த்தோம். மனத்தைக் கடந்தே நம்மில் ஆன்மா இருக்கிறது என்பதை அறிந்து கொண்டோம். பிரபஞ்சத்தில், பிரபஞ்ச மனத்திற்குப் பின்னால் ஓர் ஆன்மா இருக்கிறது என்பது தெரிகிறது. அதுவே கடவுள். அதுவே மனிதனில் ஜீவாத்மாவாக இருக்கிறது. பிரபஞ்சத்தில் பிரபஞ்ச மனம் ஆகாசமாகவும் பிராணனாகவும் பரிணமித்திருப்பதைப் போல், பரமாத்மா பிரபஞ்சமாகப் பரிணமிக்கிறது. தனி மனிதன் விஷயத்திலும் உண்மையில் இப்படித்தானா? மனம் உடலையும் ஜீவாத்மா மனத்தையும் படைக்கின்றனவா? அதாவது மனிதனின் உடல், மனம், ஆன்மா மூன்றும் தனித்தனி இருப்புகளா? அல்லது மூன்றும் ஒரே பொருளாகச் சேர்ந்திருக்கின்றனவா? அல்லது அவன மூன்றும் ஒரே பொருளின் வேறுபட்ட நிலைகளா?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குப் படிப்படியாக முயல்வோம். நாம் ஏறியுள்ள முதல்படி இதுதான்: தூல உடல் இதோ இருக்கிறது. தூல உடலுக்குப் பின்னால் புலன்கள், மனம், புத்தி, கடைசியில் ஆன்மா எல்லாம் இருக்கின்றன. உடல், மனம் இவற்றிலிருந்து வேறுபட்டது ஆன்மா என்பதை முதல் படியில் நாம் கண்டோம். மத உலகில், இந்த இடத்தில்தான் கருத்து வேற்றுமைகள் ஏற்படுகின்றன. அந்த வேறுபாடு இதுதான்: பொதுவாக, துவைதக் கருத்துக்கள் எல்லாமே, ஆன்மா குணங்களுடன் கூடியது, அதற்குப் பல்வேறு குணங்கள் உள்ளன, இன்ப துன்ப அனுபவங்களுக்கு எல்லாம் அது உட்படுகிறது என்று கூறுகின்றன. ஆன்மாவிற்குக் குணங்கள் உண்டு என்பதை அத்வைதிகள் மறுக்கிறார்கள். அது நிர்க்குணமானது என்பது அவர்களின் கூற்று.
முதலில் துவதிகளை எடுத்துக் கொள்வோம். ஆன்மா, அதன் கதி இவற்றைப் பற்றிய அவர்களுடைய கருத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்ல முயல்கிறேன். அடுத்ததாக அவர்களை எதிர்க்கின்ற நெறியைப் பார்ப்போம். கடைசியாக, அத்வைதம் நமக்கு அளிக்கும் சமரசத்தையும் காண்போம்.
இந்த ஜீவாத்மா உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் வேறுபட்டிருப்பதாலும், ஆகாசம், பிராணன் இவற்றால் ஆனதல்ல என்பதாலும் அது அழிவற்றதாகத்தான் இருக்க முடியும். ஏன்? அழிவு என்றால் என்ன? ஒரு பொருள் தன் மூலப்பொருட்களாகப் பிரிந்து போவது. பல மூலக்கூறுகள் சேர்ந்து உருவான பொருட்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இரண்டோ மூன்றோ பகுதிகளால் ஆன எதுவும், அதன் பகுதிகளாகப் பிரிந்தேயாக வேண்டும். சேர்க்கையால் ஆகாத ஒன்று மூலப் பொருட்களாகப் பிரிய முடியாது. ஆகவே அது அழிய முடியாது, அது அழிவற்றது. அது எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அது படைக்க படாதது. படைக்கப்பட்ட எதுவுமே கூட்டுப் பொருள்தான். சூன்யத்திலிருந்து எதுவும் படைக்கப்படுவதை யாரும் கண்டதில்லை. ஏற்கனவே இருக்கின்ற பொருட்கள் சேர்ந்து புதிய உருவங்களாவதுதான் படைப்பு-இதுதான் படைப்பைப் பற்றி நாமறிந்த உண்மை. உண்மை அப்படி இருப்பதாலும், மனிதனின் ஆன்மா தனிப் பொருளானதாலும் அது எப்போதும் இருந்திருக்க வேண்டும்; இனிமேலும் எப்போதுமே அது இருக்கும். உடல் அழிந்த பின்னும் ஆன்மா இருக்கிறது.
வேதாந்திகளின் கருத்துப்படி, இந்த உடல் கரைந்த பின்னர், மனிதனின் உயிர்ச்சக்திகள் மனத்திற்குத் திரும்பிப் போகின்றன. மனம் பிராணனில் ஒடுங்குகிறது. பிராணன் ஆன்மாவில் ஒடுங்குகிறது. நுண்ணுடல், மனவுடல், ஆன்மீகவுடல் என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற சூட்சும சரீரமாகிய சட்டையை அணிந்ததுபோல் ஆன்மா வெளியே வருகிறது.
இந்தச் சூட்சும சரீரத்தில்தான் மனிதனின் சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. சம்ஸ்காரம் என்பது என்ன? மனம் ஓர் ஏரியைப் போன்றது. ஒவ்வோர் எண்ணமும் அந்த ஏரியில் எழும் ஓர் அலை போன்றது. ஏரியில் அலைகள் எழுந்து அடங்கி மறைகின்றன. அதுபோல் மனமாகிய ஏரியில் எண்ண அலைகளும் இடைவிடாமல் எழுவதும் வீழ்வதுமாக உள்ளன. அவை வீழ்ந்தாலும் ஒரேயடியாக மறைவதில்லை; நுண்ணியவையாக மிக நுண்ணியவையாகவே மாறுகின்றன. ஆனாலும் வேண்டியபோது எழுவதற்குத் தயாராக அடங்கி இருக்கின்றன. நுட்ப உருவை அடைந்து விட்ட சில எண்ணங்களை, மறுபடியும் அலைபோல் எழுப்புவதைத்தான் நினைவு என்கிறோம். இவ்வாறு நாம் நினைத்த ஒவ்வோர் எண்ணமும், செய்த ஒவ்வொரு செயலும் மனத்தில் நுட்ப உருவில் இருக்கின்றன. மனிதன் இறக்கும்போது, இந்தப் பதிவுகளின் ஒட்டுமொத்தமும் மனத்தில் இருக்கும். அந்த மனம் சற்று நுட்பமான ஜடப்பொருளை ஆதாரமாகக் கொண்டு மீண்டும் செயல்படுகிறது. இந்தச் சம்ஸ்காரங்களையும் சூட்சும சரீரத்தையும் சட்டைகளாக அணிந்ததுபோல் ஆன்மா வெளியேறுகிறது. பல்வேறு சம்ஸ்காரங்களான பல்வேறு சக்திகளின் மொத்தப் பலனே, ஆன்மாவின் பாதையை நிர்ணயிக்கிறது. எங்கள் கருத்துப்படி, ஆன்மா செல்வதற்கு மூன்று பாதைகள் உள்ளன.
ஆன்மீக நெறியில் ஆழ்ந்து ஈடுபட்டவர்கள், மரணத்திற்குப் பின், சூரிய கிரணங்கள் வழியாகச் சந்திரலோகத்திற்குச் சென்று, அதன்மூலமாக மின்னல் உலகத்திற்குச் செல்கின்றனர். ஏற்கனவே இறையருளைப் பெற்ற ஒருவரை அங்கே சந்திக்கின்றனர். அவர் இந்தப் புதியவர்களை, எல்லாவற்றிலும் உயர்ந்த லோகமாகிய பிரம்மலோகத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கே இவர்களுக்கு எல்லாம் அறிகின்ற தன்மையும் எல்லா வல்லமையும் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட அவர்கள் கடவுளுக்குச் சமானமாக, எல்லாம் வல்லவர்களாக, எல்லாம் அறிகின்றவர்களாக ஆகின்றனர். துவைதிகளைப் பொறுத்தவரை அவர்கள் எப்போதும் அங்கேயே நிலைத்திருக்கின்றனர். அத்வைதிகளைப் பொறுத்தவரை, அந்தக் கல்பத்தின் முடிவில் அவர்கள் பரமாத்வோடு இரண்டறக் கலக்கின்றனர்.
அடுத்தபடியாக, சுயநல நோக்கத்துடன் நற்செயல்கள் செய்தவர்கள் மரணத்திற்குப்பின் தங்கள் புண்ணியத்தின் பலனாக, முதலில் சந்திரலோகத்தை அடைகிறார்கள். அங்கே பல சொர்க்கங்கள் இருக்கின்றன. அங்கே அவர்கள் நுட்பமான உடல்களை, தேவ உடல்களைப் பெறுகிறார்கள். தேவர்களாகி நீண்ட நெடுங்காலம் சொர்க்க போகங்களை அனுபவித்துக்கொண்டு, அங்கேயே வாழ்கிறார்கள். அந்தக் காலம் முடிந்ததும் பழைய வினைகளின் பாதிப்பால் பூமிக்குத் திரும்புகிறார்கள். வாயு மண்டலம், மேக மண்டலம் போன்ற பல மண்டலங்களைக் கடந்து, கடைசியாக மழைத் துளிகளின் வாயிலாக பூமியை அடைகிறார்கள். பூமியில், தங்களை ஏதாவது ஒரு தானியத்தோடு இணைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கான ஒரு புதிய உடலுக்கு வேண்டிய மூலப்பொருளைக் கொடுக்கும் தகுதியுள்ள ஒரு மனிதன், அந்தத் தானியத்தைச் சாப்பிடுகிறான்.
கடைசியாக கொடியவர்கள். இவர்கள் இறந்த பின்னர் பேய்பிசாசுகளாக மாறிவிடுகிறார்கள். சந்திரலோகத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள ஏதோ ஓர் உலகில் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுள் சிலர் மனித குலத்திற்குத் தொந்தரவு கொடுக்க முயல்கிறார்கள்; சிலர் நட்புறவோடு இருக்கிறார்கள். அங்கே சிலகாலம் வாழ்ந்த பிறகு, மறுபடியும் பூலோகத்திற்கு வந்து, மிருகங்களாகப் பிறக்கிறார்கள். சிலகாலம் மிருக உடம்பில் வாழ்ந்த பிறகு, அதிலிருந்து விடுபட்டு பின்னர் மனிதர்களாகப் பிறந்து, முக்தி அடைவதற்கு இன்னும் ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
கிட்டத்தட்ட நிறைநிலையை அடைந்து, பாவம் சிறிது மட்டுமே ஒட்டிக்கொண்டிருப்பவர்கள், சூரிய கிரணங்களின் மூலமாகப் பிரம்மலோகத்தை அடைகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். நடுத்தரமான மனிதர்கள், அதாவது சொர்க்கத்தை அடையும் ஆசையோடு நற்செயல் செய்தவர்கள் சந்திர லோகத்திலுள்ள சொர்க்கங்களை அடைந்து தேவஉடலைப் பெறுகிறார்கள். ஆனால் இவர்கள் மறுபடியும் மனிதர்களாகப் பிறந்து, முக்தி அடைவதற்கு மற்றொரு வாய்ப்பைப் பெறுகிறார்கள். கொடியவர்கள் பேய்பிசாசுகளாகிறார்கள். அதன்பின் அவர்கள் மிருகங்களாகவும் பிறக்க வேண்டியிருக்கிறது. பிறகு, மனிதர்களாகப் பிறந்து, முக்தியடைவதற்கு மற்றொரு வாய்ப்பைப்பெறுகிறார்கள்.
இந்தப் பூமியைக் கர்ம பூமி என்று சொல்கிறார்கள். இங்கே மட்டும்தான் மனிதன் புண்ணிய பாவங்களைச் செய்ய முடியும். சொர்க்கத்திற்குப் போக விரும்பி நற்செயல் செய்யும் மனிதன் தேவனாகிறான். அங்கே அவனுக்குப் பாவ கர்மங்கள் எதுவும் சேர்வதில்லை. பூமியில் அவன் செய்த நற்செயல்களின்பலனான சொர்க்க போகங்களை மட்டுமே அங்கே அனுபவிக்கிறான். புண்ணிய பலன் தீர்ந்ததும், அவன் முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களின் மொத்தப் பலன் அவனை மறுபடியும் பூமியில் பிறக்க வைக்கிறது. அதேபோல், பேய் பிசாசுகளாக மாறியவர்கள், புதிய பாவங்களைச் செய்வதில்லை. ஆனால் தாங்கள் முன்பு செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிக்கிறார்கள். பிறகு, பாவ புண்ணியங்கள் எதுவுமே செய்யாமல், ஒரு மிருக உடலில் சிலகாலம் இருக்கிறார்கள். அந்தக் காலம் முடிந்தவுடன் மறுபடியும் மனிதர்களாகப் பிறக்கிறார்கள். சொர்க்கத்திலும் நரகத்திலும் புதிய பாவ புண்ணியங்களைச் செய்ய முடியாது; அங்கே புண்ணிய பாவப் பலன்களை மட்டுமே அனுபவிக்கலாம்.
மிகச் சிறந்த புண்ணியமோ, மிகக் கொடுமையான பாவமோ கைமேல் பலன் அளிக்கிறது. உதாரணமாக, ஒருவன் தன் வாழ்க்கை முழுவதும் பாவங்களையே செய்து, ஒரே ஒரு புண்ணியம் செய்தாலும், அந்தப் புண்ணியத்திற்குக் கைமேல் பலன் கிடைத்துவிடும். அந்தப் புண்ணியபலன் தீர்ந்தபின் பாவங்களின் பலனை அவன் அனுபவித்தேயாக வேண்டும். சில பெரிய நற்காரியங்களைச் செய்த, ஆனால் அவ்வளவு முறையான வாழ்க்கையை வாழாத மனிதர்கள் தேவர்கள் ஆகிறார்கள். சிலகாலம் தேவ உடலில் வாழ்ந்து, போகங்களை அனுபவித்த பிறகு, அவர்கள் மறுபடியும் மனிதர்களாகப் பிறந்தேயாக வேண்டும். புண்ணிய பலன் தீர்ந்தவுடன் பாவத்தின் பலன் தலை காட்டத் தொடங்குகிறது. அதையும் அனுபவித்துத் தீர்க்க வேண்டும். கொடிய பாவம் செய்தவர்கள் பேய்பிசாசுகளாக இருந்தேயாக வேண்டும். அந்தப் பாவ பலன் தீர்ந்தவுடன், அவர்கள் செய்த சிறிதளவு புண்ணியம் அவர்களை மறுபடியும் மனிதர்களாகப் பிறக்க வைக்கிறது. பிரம்மலோகத்தை அடைந்துவிட்டால், அங்கிருந்து கீழே விழுவதோ பூமிக்குத் திரும்புவதோ இல்லை. அந்த உலகத்திற்குச் செல்லும் வழிக்குத் தேவயானம் என்று பெயர்; அதாவது, கடவுளை நோக்கிப் போகும் வழி. சொர்க்கத்திற்குப் போகும் வழிக்கு பித்ருயானம் அல்லது முன்னோர்களை நோக்கிப் போகும் வழி என்று பெயர்.
ஆகவே வேதாந்தத் தத்துவத்தின்படி, பிரபஞ்சத்தில் மிகவும் சிறந்த பிறவி மனிதப் பிறவிதான். கர்ம பூமியாகிய இந்த உலகம்தான் பிரபஞ்சத்திலேயே சிறந்த இடம். ஏனென்றால் இங்கேதான் மனிதன் நிறைநிலையை அடைவதற்கு மிகச் சிறந்த, மிக உயர்ந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தேவதைகள் ஆகட்டும், தேவர்கள் ஆகட்டும், நிறைநிலையை அடைய வேண்டுமானால், மனிதர்களாகப் பிறந்தே தீர வேண்டும். இந்த மனிதப் பிறவிதான், சிறந்த மையம், சிறந்த வாய்ப்பு
இப்போது நாம் தத்துவத்தின் வேறு கோணத்தைப் பார்க்கலாம். நான் இப்போது உங்களுக்குக் கூறிய ஆன்ம தத்துவத்தை முற்றிலுமாக மறுக்கின்ற பவுத்தர்கள் இருக்கிறார்கள். உடல், மனம் இவற்றிற்கு அடிப்படையாக, ஆதாரமாக ஏதோ ஒன்று இருப்பதாகக் கற்பித்துக் கொள்வதால் என்ன பயன்? நம் சிந்தனை ஓட்டத்தை நாம் ஏன் தடை செய்ய வேண்டும்? உடலாலும் மனத்தாலும் ஆன இந்த மனித உருவிற்கு அப்பால், ஆன்மா என்ற மூன்றாவதாகிய ஒன்றை எதற்காக ஒப்புக்கொள்ள வேண்டும்? அதனால் என்ன பயன்? இந்த மனிதப் பிறவியை விளக்க மனிதனே போதாதா? ஏன் மூன்றாவதான ஒன்றைப் புதிதாகப் புகுத்த வேண்டும்? என்று அவர்கள் கேட்கிறார்கள். இந்த வாதங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இந்தப் பகுத்தறிவு வாதம் உறுதியானது. புற ஆராய்ச்சியைப் பொறுத்தவரை தன்னைத்தான் விளக்கிக் கொள்ள மனிதனே போதும். நம்முள் பலர் இந்த விஷயத்தை இப்படித்தான் பார்க்கிறோம்.
அப்படியானால், மனமாகவோ உடலாகவோ இல்லாமல், அவை இரண்டிற்கும் அடிப்படை ஆதாரமான ஆன்மா என்ற ஒன்றை ஏன் கற்பித்துக்கொள்ள வேண்டும்? சரி, மனமும் உடலும் மட்டுமே இருப்பதாக வைத்துக் கொள்வோம். தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் ஜடப்பொருள் பிரவாகத்தின் பெயரே உடல். தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் சிந்தனை அல்லது எண்ணப் பிரவாகமே மனம். இவை இரண்டும் சேர்ந்திருப்பது போன்ற தோற்றத்தை அளிப்பது எது? உண்மையில் இந்த இணைப்பு இல்லை என்றே வைத்துக் கொள்வோம். ஒரு தீப்பந்தத்தை எடுத்து வேகமாகச் சுழற்றுவோம். ஒரு நெருப்பு வட்டம் தெரியும். உண்மையில் அத்தகைய ஒரு வட்டம் இல்லை. ஆனால் தொடர்ந்த சுழற்சி, வட்டம் ஒன்று இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையிலும் எந்த ஒருமையும் இல்லை. தொடர்ந்து பாய்ந்துக்கொண்டே இருக்கும் ஜடப்பொருள்பிரவாகமே இது. இந்த ஜடப்பொருள் தொகுதியை, நாம் வேண்டுமானால் ஓர் ஒருமை என்று சொல்லிக் கொள்ளலாம், அவ்வளவுதான். மனத்தின் விஷயமும் இப்படியேதான். ஒவ்வோர் எண்ணமும் மற்ற எண்ணங்களிலிருந்து தனித்தே நிற்கிறது. பிரவாகத்தின் தொடர்ச்சியும் வேகமுமே ஒருமை இருப்பதைப்போல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது. மூன்றாவது தேவையில்லை. பிரபஞ்சம் முழுவதிலுமே இருக்கின்ற உண்மையெல்லாம் உடலும் மனமும் மட்டுமே. இதற்குப் பின்னால் எதையும் கற்பனை செய்துகொள்ளத் தேவையில்லை.
தற்கால மதப் பிரிவினர் சிலர், இந்தப் பவுத்தச் சிந்தனையை எடுத்துக்கொண்டு தங்கள் சொந்தமான, தாங்களே கண்டுபிடித்த புதிய சிந்தனை என்று உரிமை கொண்டாடுகிறார்கள். இந்த உலகம் ஒன்றைக்கொண்டே நாம் எல்லாவற்றையும் விளக்கிவிடலாம் என்ற இந்தக் கருத்தே பவுத்தத் தத்துவத்தின் பல பிரிவுகளுடைய மையக் கருத்தாக இருக்கிறது. ஆதாரப் பொருள் எதுவும் தேவையில்லை. இருப்பதெல்லாம் புலனுக்குத் தென்படும் இந்த உலகம் மட்டுமே. இந்தப் பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக ஏதோ இருக்கிறது என்று நினைப்பதால் என்ன பயன்? எல்லாமே குணங்களின் சேர்க்கைதான். இந்தக் குணங்களுக்கு ஆதாரமான ஒரு கற்பனைப் பொருள் ஏன் இருக்க வேண்டும்? ஒரு பொருள் இருக்கிறது என்ற எண்ணம் வருவதற்குக் காரணம், குணங்களின் வேகமான மாற்றமே தவிர குணங்களுக்குப் பின்னால் இருக்கும் மாற்றமற்ற ஏதோ ஒன்று அல்ல.
இந்த வாதங்களில் சில, மிகவும் அற்புதமாக இருப்பதைக் காண்கிறோம். இவை மனிதர்களின் பொதுவான அனுபவத்திற்கு ஒத்து வருகின்றன. உண்மையில் சொல்லப்போனால் புலனறிவுக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர, உயர்ந்த எதையும் கோடியில் ஒருவரால்கூட நினைக்க முடியாது. இயற்கை என்பது எப்போதும் மாறிக்கொண்டும், சுழன்றுகொண்டும், ஒன்றோடொன்று சேர்ந்து கொண்டும் இருக்கும் நிலையற்ற பொருளாகத்தான் பலருக்குத் தோன்றுகிறது. இதற்குப் பின்னால் இருக்கின்ற அமைதியான கடலின் கணநேரக் காட்சிகூட மிகச் சிலருக்கே கிடைக்கிறது. அது எப்போதும் அலைகளாகச் சுழன்று புரண்டடித்துக் கொண்டிருப்பதுதான் நமக்குத் தெரிகிறது. இந்தப் பிரபஞ்சம் சுழன்றும் புரண்டும் எழுகின்ற அலைகள் நிறைந்த கடலாகவே நமக்குத் தோன்றுகிறது.
இவ்வாறு நாம் இரண்டு கருத்துக்களைப் பார்க்கிறோம். உடல், மனம் இரண்டிற்கும் அப்பால், அசைவோ மாற்றமோ அற்ற ஏதோ ஒன்று இருக்கிறது என்பது ஒன்று; அசைவோ மாற்றமோ அற்ற எதுவுமே பிரபஞ்சத்தில் இருக்க முடியாது என்பது மற்றொன்று. எல்லாமே மாற்றம்தான்; மாற்றத்தைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. இந்த வேறுபாட்டிற்குத் தீர்வு, சிந்தனையின் அடுத்த படியான அத்வைத வேதாந்தத்தில்தான் கிடைக்கிறது.
எல்லாவற்றிற்கும் பின்னால், அடிப்படையாக, மாற்றமே அற்ற ஏதா ஒன்று இருப்பதாக துவைதிகள் சொல்வது சரிதான். மாற்றமற்ற ஒன்றை அடிப்படையாகக் கொள்ளாமல், மாற்றத்தைப் பற்றி நம்மால் நினைக்க முடியாது. குறைவான மாற்றமுடைய ஒன்றை வைத்துத் தான், அதைவிட அதிகமான மாற்றமுடைய ஒன்றை நாம் நினைக்க முடியும். இதைவிடக் குறைவான மாற்றமுடைய ஒன்றோடு ஒப்பிட்டால், இது அதிகமான மாற்றம் உள்ளதாகத்தான் இருக்கும். இப்படியே நினைத்துப் பார்த்தால், கடைசியில், மாற்றமே அற்ற ஒரு பொருள் இருந்தேயாக வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொண்டே தீரவேண்டும். இப்போது நாம் காணும் வெளிப்பாடு எல்லாமே, முதலில் ஒடுக்க நிலையில் இருந்திருக்க வேண்டும். எதிர்ச் சக்திகளின் சமநிலையினால் ஏற்பட்ட அமைதியே அங்கு நிலவியிருந்திருக்க வேண்டும். அங்கே எந்தச் சக்தியும் இயங்கியிருக்க முடியாது. ஏனென்றால் சமநிலை தவறும் போதுதான் சக்திகளின் இயக்கம் ஆரம்பிக்கிறது. அந்தச் சமநிலையை மீண்டும் பெறுவதற்காகவே பிரபஞ்சம் விரைந்து கொண்டிருக்கிறது. சர்வ நிச்சயமான உண்மை என்று ஏதாவது உண்டென்றால் அவற்றுள் இதுவும் ஒன்று.
மாற்றமற்ற ஒன்று இருப்பதாக துவைதிகள் சொல்வது மிகவும் சரியே. ஆனால் இந்த ஏதோ ஒன்று, உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் மாறுபட்ட, அவற்றிலிருந்து தனிப்பட்டு நிற்கும் ஏதோ ஒன்று என்று அவர்கள் சொல்வதுதான் தவறு. பிரபஞ்சம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது என்று பவுத்தர்கள் சொல்வது சரியே. நாம் பிரபஞ்சத்திலிருந்து தனிப்பட்டு நின்று கொண்டு பார்க்கும்வரை, பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள் என்ற இரண்டு இருக்கும்வரை, பிரபஞ்சம் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பதாகவே தோன்றும். ஆனால் மாற்றம், மாற்றமின்மை இரண்டுமே பிரபஞ்சத்தில் இருக்கின்றன என்பதுதான் உண்மை. ஆன்மா, மனம், உடல் இவை மூன்றும் தனித்தனியானவை அல்ல. ஏனெனில் இந்த மூன்றாலும் செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுதான். ஒன்றேதான் உடலாகவும் மனமாகவும் இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டதாகவும் தோன்றுகிறது. ஆனால் அது ஒரே சமயத்தில் இவை எல்லாமாகவும் தோன்றுவதில்லை. உடலை மட்டுமே காண்பவனுக்கு மனம் தெரிவதில்லை. மனத்தை மட்டுமே காண்பவனுக்கு ஆன்மா தெரிவதில்லை. ஆன்மாவைக் காண்பவனுக்கோ உடலும் மனமும் ஒழிந்தேவிட்டன. இயக்கத்தைக் காண்பவனுக்குப் பேரமைதி தெரிவதில்லை. பேரமைதியைக் காண்பவனுக்கு இயக்கம் என்பதே இருப்பதாகத் தெரிவதில்லை, கயிற்றைப் பாம்பாகக் காண்பவனுக்குக் கயிறு தெரிவதில்லை. இந்த மனமயக்கம் மறைந்தவுடன் அவன் கயிற்றைக் காண்கிறான். பாம்பு மறைந்துவிடுகிறது.
ஆகவே இருப்பது, எல்லாம் தழுவிய ஒன்றுதான். அதுவே பலவாகத் தோன்றுகிறது. பிரபஞ்சத்தில் இருப்பது இந்த ஆன்மா ஒன்றுதான். ஆன்மாதான் அத்வைத மொழியில் பிரம்மம் எனப்படுகிறது. பிரம்மமே நாமரூபங்களின் காரணமாகப் பலவாகத் தோன்றுகிறது. கடலின் அலைகளைப் பாருங்கள். ஓர் அலைகூடக் கடலிலிருந்து வேறுபட்டதல்ல. அந்த அலைகளை வேறுபடுத்திக் காட்டுவது எது? நாமரூபங்களே. அலையின் உருவமும், நாம் அதற்கு வைத்திருக்கும் அலை என்ற பெயருமே, வேறுபாடு இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதுவே அலையைக் கடலிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. நாமரூபத்தை எடுத்துவிட்டால் அது அதே கடல்தான். கடலையும் அலையையும் உண்மையில் வேறுபடுத்திக் காண யாரால் முடியும்?
பிரபஞ்சமே அந்த ஒன்றேயான ஒருமைப் பொருள். பலவகை வேறுபாடுகளை உருவாக்கியது நாமரூபமே. லட்சக் கணக்கான நீர்த்துளிகள் தோறும் பிரதிபலிக்கின்ற சூரியனின் பிம்பம் ஒவ்வொன்றும் முழுச் சூரியனைப் போலவே தோன்றுகிறது. அதுபோலவே பல்வேறு நாமரூபங்களில் பிரதிபலிக்கும்போது பல்வேறாகத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அது ஒன்றேதான். அங்கு நான் இல்லை, நீ இல்லை. எல்லாம் ஒன்றே. எல்லாம் நான் அல்லது எல்லாம் நீ என்பதாகத்தான் இருக்க முடியும். இரண்டு என்ற இந்தக் கருத்தே முற்றிலும் தவறானது. நாம் பொதுவாக எப்படி பிரபஞ்சத்தைக் காண்கிறோமோ, அது இந்தத் தவறான கருத்தின் பலனே. மனிதன் விவேகம் பெற்று, இருப்பது இரண்டல்ல, ஒன்றே என்பதை உணரும்போது, தானே இந்தப் பிரபஞ்சம் என்பதை உணர்கிறான். தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சமாக இருப்பது நானே. எல்லா மாற்றங்களையும் எல்லா குணங்களையும் கடந்தவனாக, என்றென்றும் பரிபூரணனாக, என்றென்றும் ஆனந்தமாக இருப்பது நானே.
ஆகவே இருப்பது ஒரே ஆன்மாதான். அது என்றும் தூய்மையானது; என்றும் பூரணமானது; மாறாதது; மாற முடியாதது. அது ஒருபோதும் மாற்றம் அடைந்ததில்லை. பிரபஞ்சத்தில் காணப்படும் பல்வேறு மாற்றங்களும் அந்த ஒரே பிரம்பத்திலேயே தோன்றுகின்றன. அந்தப் பிரம்மத்தின் மீதான நாமரூபங்கள் இந்தக் கணவுகளையெல்லாம் வரைந்திருக்கின்றன. அலைகளைக் கடலிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது உருவமே. அலை அடங்கினால் அலை உருவம் நிலைத்திருக்குமா? இருக்காது, நிச்சயமாக மறைந்துவிடும். அலை முற்றிலும் கடலைச் சார்ந்ததாக இருக்கிறது. கடல் ஒருபோதும் அலையைச் சார்ந்திருக்கவில்லை. அலை இருக்கும்வரை அலை உருவமும் இருக்கும். அலை அடங்கியவுடன் அலை உருவமும் மறைந்துவிடும்.
இந்த நாமரூபம் மாயையால் ஏற்படும் தோற்றமே. ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தித் தனியாகக் காட்டுவது இந்த மாயையே, ஆனாலும் மாயை என்பது இருப்பதாகச் சொல்ல முடியாது. உருவம் என்பது இருப்பதாகச் சொல்ல முடியாது ஏனென்றால் அது மற்றொரு பொருளின் இருப்பைச் சார்ந்ததாக உள்ளது. அது இல்லை யென்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் நாம் காணும் வேறுபாடுகளெல்லாம் அதுவே காரணம். ஆகவே மாயை அல்லது அஞ்ஞானம் அல்லது நாமரூபம் அல்லது ஐரோப்பியர்கள் சொல்வதுபோல், காலம், இடம், காரண காரியம் என்பது இந்தப் பிரம்மத்திலிருந்து தோன்றி, பிரபஞ்சத்தைப் பல்வேறு நாமரூபங்களாகக் காட்டுகிறது.
உண்மையில் பிரபஞ்சம் ஒரே பொருளே. இரண்டு அறுதி உண்மைகள் இருப்பதாக நினைப்பவன் தவறு செய்கிறான். இருப்பது ஒன்றே என்று உணரும்போதுதான் அவன் சரியாக எண்ணுகிறான். இந்த உண்மை உடல் நிலையில், மனநிலையில் ஆன்மநிலையில் ஒவ்வொரு நாளும் நிரூபணமாகிறது. நான், நீங்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாமே ஜடப்பொருள் என்ற எல்லையற்ற கடலில் உள்ள பல்வேறு துணுக்குகளின் பல்வேறு பெயர்களே என்பதையும், இந்த ஜடப்பொருள் இடைவிடாமல் தன் அமைப்பை மாற்றிக்கொண்டே இருக்கிறது என்பதையும் இன்றைய விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றனர். சூரியனில் பல மாதங்களுக்கு முன்பிருந்த சக்தித்துணுக்கு இன்று மனிதனில் இருக்கலாம். நாளைக்கு அதுவே ஒரு மிருகத்திலும், அடுத்த நாள் ஒரு வாரத்திலும் இருக்கலாம். அது தொடர்ந்து வந்துபோய்க் கொண்டே இருக்கிறது. எல்லாமே, பிளவுபடாத எல்லையற்ற ஒரே ஜடப்பொருள்தான். பெயரும் உருவமுமே வேறுபாடுகளுக்குக் காரணமாக இருக்கின்றன. இந்தப் பொருளின் ஒரு துணுக்கைச் சூரியன் என்றும், மற்றொன்றைச் சந்திரன் என்றும், இன்னொன்றை நட்சத்திரம் என்றும், இன்னுமொன்றை மனிதன் என்றும், வேறொன்றை மிருகம் என்றும், இன்னும் வேறொன்றைத் தாவரம் என்றும் கூறுகிறோம். இந்தப் பெயர்கள் எல்லாம் கற்பனையானவை, அவற்றில் உண்மை இல்லை. ஏனெனில் எல்லாமே தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கின்ற ஒரே ஜடப்பொருளே.
இதே பிரபஞ்சம், வேறொரு கோணத்திலிருந்து பார்த்தால் எண்ணக் கடலாக இருக்கிறது. ஒவ்வொரு மனமும் இந்தக் கடலிலுள்ள ஒவ்வொரு துளியே ஆகும். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனம், நான் ஒரு மனம் என்று உலகிலுள்ள ஒவ்வொருவருமே ஒவ்வொரு மனம்தான். இதே பிரபஞ்சத்தை ஞானம் என்னும் கோணத்திலிருந்து பார்க்கும்போது, கண்கள் பொய்த்தோற்றத்தைப் பார்ப்பதை விடும்போதும், மனம் தூய்மையடையும்போது, அது, வேறுபாடே இல்லாத, எப்போதும் தூய்மையான, மாற்றமே அற்ற, அழிவே அற்ற தனிப்பரம்பொருளாகத் தோன்றுகிறது.
அப்படியானால் மரணத்திற்குப் பின் மனிதர்களின் மூவகைப் பயணங்களைப்பற்றி துவைதிகள் கூறிய கருத்து, அதாவது மனிதன் இறந்தபின் சொர்க்கத்திற்கோ வேறு உலகங்களுக்கோ போவதாகவும், தீயவர்கள் பேய் பிசாசுகளாகவும் மிருகங்களாகவும் ஆவதாகவும் கூறியவையெல்லாம் என்னாவது? யாரும் வருவதும் இல்லை, போவதும் இல்லை என்கிறான் அத்வைதி. நாம் எப்படி வரவோ போகவோ முடியும்? நாம் எல்லையற்றவர்கள்; நாம் எங்கே போக முடியும்?
ஒரு பள்ளியில் குழந்தைகளுக்குத் தேர்வு நடந்தது. ஆசிரியர் முட்டாள் தனமாகப் பல கஷ்டமான கேள்விகளைக் கேட்டார்; ஏன் பூமி கீழே விழுவதில்லை? என்பது அவற்றுள் ஒரு கேள்வி. ஈர்ப்புச் சக்தி அல்லது வேறு ஏதாவது சிக்கலான விஞ்ஞான உண்மையைப் பதிலாகப் பெற வேண்டுமென்பது அவரது நோக்கம். குழந்தைகளில் பலருக்கு அவரது கேள்வியே புரியவில்லை. ஆகவே பலர் தவறான பதில்களைச் சொன்னார்கள். ஆனால் ஒரு புத்திசாலிச் சிறுமி, பூமி எங்கே விழும்? என்ற எதிர்க்கேள்வியால் இந்தக் கேள்விக்குப் பதிலளித்தாள். ஆசிரியர் கேட்ட கேள்வியே பொருளற்றது. மேல்கீழ் என்பதெல்லாம் பிரபஞ்சத்தில் இல்லை. இந்தக் கருத்து வேறு ஒன்றைச் சார்ந்ததே.
ஆன்மாவின் விஷயமும் இப்படித்தான். ஆன்மாவைப் பொறுத்தவரை, பிறப்பு இறப்பு என்பவை எல்லாம் முட்டாள்தனம். யார் வருகிறார்கள்? யார் போகிறார்கள்? நாம் இல்லாத இடம் எது? நாம் ஏற்கனவே இல்லாத சொர்க்கம் எங்கே இருக்கிறது? மனிதனின் ஆன்மா எங்கும் நிறைந்தது. அது அங்கே போக முடியும்? எங்கே போகாதிருக்க முடியும்? அது எங்கும் இருக்கிறது. ஆகவே நிறைநிலை அடைந்தவனுக்கு, பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம் ஆகிய பொய்த் தோற்றங்களும் சிறுபிள்ளைத் தனமான கனவுகளும் உடனே மறைந்து விடுகின்றன. கிட்டத்தட்ட நிறைநிலை அடைந்தவனுக்கு, பிரம்மலோகம்வரை உள்ள எல்லா காட்சிகளும் தோன்றி, பிறகு மறைகின்றன. அறியாமையில் உழல்பவர்களுக்கு எல்லாம் தொடர்கின்றன.
சொர்க்கத்திற்குப் போவது, பிறப்பது, இறப்பது என்பவற்றை இந்த உலகமே நம்புகிறதே, அது எப்படி? நான் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பக்கமாகப் படித்துவிட்டுத் திருப்புகிறேன். மாறுவது யார்? வருவதும் போவதும் யார்? நானல்ல, புத்தகம் தான். ஆன்மாவின் முன்னிலையில் இயற்கை ஒரு புத்தகமாக உள்ளது. அதன் அத்தியாயங்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் படிக்கப்படுகின்றன, திருப்பப்படுகின்றன. அவ்வப்போது அந்தப் புத்தகத்தில் ஒரு காட்சி விரிகிறது. அது படிக்கப்பட்டு, திருப்பப்படுகிறது, உடனே புதியதொரு காட்சி வருகிறது. ஆனால் ஆன்மா மாறாமல் எப்போதும் நிலையாக இருக்கிறது. மாறுவது இயற்கையே; மனிதனின் ஆன்மாவல்ல. அது ஒருபோதும் மாறுவதில்லை. பிறப்பும் இறப்பும் இயற்கையில்தான் இருக்கின்றன. ஆன்மாவில் இல்லை. ஆனாலும் அறிவிலிகள் மனமயக்கத்தையே உண்மையென்று நம்புகிறார்கள். மனமயக்கத்தின் காரணமாக சூரியன் நகர்வது போலவும், பூமி நகராதிருப்பது போலவும் நாம் காண்கிறோம். அதுபோலவே இறப்பது நாம்தான், இயற்கை அல்ல என்று நினைக்கிறோம்.
இவையெல்லாம் பொய்த் தோற்றங்களே. ரயிலில் போகும்போது, நிலம் ஓடுவது போலவும், வண்டி ஓடாதது போலவும் தோன்றுவதுபோல், பிறப்பு, இறப்பு ஆகியவையும் பொய்யாகத் தோன்றுகின்றன. மனிதர்கள் ஒரே பிரபஞ்சத்தையே, ஒரு குறிப்பிட்ட மனநிலையில் பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்று பல நாமரூபங்களாகப் பார்க்கிறார்கள். அதே மனநிலையில் உள்ள எல்லோரும் அவற்றையே பார்க்கிறார்கள். அதே மனநிலையில் உள்ள எல்லோரும் அவற்றையே பார்க்கிறார்கள். உங்களுக்கும் எனக்கும் இடையில் பல்வேறு நிலைகளில் வாழும் பல உயிர்கள் இருக்கலாம். அவற்றால் நம்மைப் பார்க்கவே முடியாது. நம்மாலும் அவற்றைப் பார்க்க முடியாது. நம்முடைய மனநிலையிலும் இருப்புநிலையிலும் உள்ளவர்களை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். ஒரே சுருதியுள்ள இசைக் கருவிகளில் எழும் நாதம்தான் ஒத்துப் போகிறது. மனித அதிர்வு என்று சொல்லப்படும் அதிர்வுநிலை மாறிவிட்டால் இங்கே மனிதர்களைப் பார்க்க முடியாது. மனிதப் பிரபஞ்சம் முழுவதுமே மறைந்து, அதற்குப் பதிலாக வேறு காட்சிகள் தோன்றும். ஒருவேளை, தெய்வங்கள், தெய்வப் பிரபஞ்சம் இவையெல்லாம் தோன்றலாம். தீயவர்களின் கண்ணுக்குப் பேய்பிசாசுகளும் பேயுலகமும் தோன்றலாம். ஆனால் எல்லாமே ஒரே பிரபஞ்சத்தின் வேறுபட்ட தோற்றங்களே.
மனித நிலையிலிருந்து பார்க்கும்போது இதே பிரபஞ்சம் பூமி, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களாகத் தெரிகிறது. இதே பிரபஞ்சம் தீயவர்களின் கண்ணிற்கு நரகமாகத் தெரிகிறது. இதே பிரபஞ்சத்தைச் சொர்க்கமாகப் பார்க்க விரும்புபவர்களுக்கு, இது சொர்க்கமாகத் தெரிகிறது. ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சிபுரியும் கடவுள் ஒருவரின் பக்கத்தில் நின்று கொண்டு, எப்போதும் அவரைத் துதித்தபடியே இருப்பதை விரும்புபவர்கள் இறக்கும்போது, தங்கள் மனத்தில் இருப்பதைத் தோற்றங்களாகக் காண்கிறார்கள். அவர்கள் இறக்கும் தறுவாயில், சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் கடவுள், அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும் தேவதைகள் இவர்கள் நிறைந்த சொர்க்கமாக இதே பிரபஞ்சம் அவர்களுக்குத் தோன்றுகிறது.
இந்தச் சொர்க்கங்களெல்ல்õம் மனிதர்களின் கற்பனையே. துவைதி சொல்வது சரிதான், ஆனால் அவை அவனுடைய கற்பனை என்று அத்வைதி கூறுகிறான். சொர்க்கம், நரகம், பேய்பிசாசுகள், தேவர்கள், மறுபிறவிகள் எல்லாமே புராணக்கதைகள். மனித வாழ்வும் அப்படியே. இந்தவாழ்க்கை மட்டுமே உண்மை என்று மனிதர்கள் நினைப்பதுதான் அவர்கள் செய்யும் பெரிய தவறு. வேறு எதையாவது புராணம் என்று சொன்னால் உடனே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் தங்கள் நிலையும் அப்படியேதான் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்வதே இல்லை. நாம் கேட்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை, நாம் வெறும் உடல்கள் என்று சொல்வது அப்பட்டமான பொய். நாம் என்றுமே வெறும் உடல்களாக இருந்ததில்லை, இருக்கவும் முடியாது. நாம் வெறும் மனிதர்கள் என்று சொல்வது, பொய்களிலெல்லாம் மிகப்பெரிய பொய்.
இந்தப் பிரபஞ்சத்தின் கடவுளே நாம்தான். நாம் கடவுளை வழிபடும்போது, நம்முள் மறைந்திருக்கும் நமது ஆன்மாவையே வழிபடுகிறோம். நாம் பிறவியிலேயே பாவிகள், தீயவர்கள் என்று சொல்வதுதான் நீங்கள் சொல்ல முடிந்தவற்றுள் மிகப் பெரும் பொய். மற்றவர்களைப் பாவிகளாகப் பார்ப்பவர்களே உண்மையில் பாவிகள். ஒரு குழந்தை இங்கே இருப்பதாகவும், இங்கே உள்ள மேஜையின்மீது தங்கக் காசுகள் நிறைந்த ஒரு பையை வைப்பதாகவும் வைத்துக் கொள்வோம். ஒரு திருடன் வந்து, தங்கக் காசுகளைத் திருடிச் செல்கிறான். குழந்தையைப் பொறுத்தவரை, அதற்கு எந்த வேறுபாடுகளும் தெரிவதில்லை. அதன் உள்ளத்தில் திருடன் என்ற கருத்து இல்லாததால், வெளியிலும் அது திருடனைக் காணவில்லை. பாவிகளுக்கும் தீயவர்களுக்கும் உலகில் தீமையே கண்ணுக்குத் தெரிகிறது. நல்லவர்களுக்கு அப்படி இல்லை. ஆகவே தீயவர்களுக்கு இந்தப் பிரபஞ்சம் நரகமாக இருக்கிறது. ஓரளவு நல்லவர்களுக்கு இது சொர்க்கமாகத் தெரிகிறது.
ஆனால் நிறைநிலை பெற்றவர்களுக்கோ இந்தப் பிரபஞ்சம் கடவுளாகவே தெரிகிறது. கண்ணை மறைத்த திரை அப்போது, அப்போது மட்டுமே விலகுகிறது. தூய்மையடைந்த மனிதனுக்குக் காட்சி முழுவதுமே மாறி விடுகிறது. கோடிக்கணக்கான வருடங்களாக அவனைச் சித்திரவதை செய்து கொண்டிருந்த கெட்ட கனவுகள் எல்லாம் மறைகின்றன. தன்னை மனிதனாகவோ தேவனாகவோ பேயாகவோ நினைத்துக்கொண்டு, தான் பூமியிலோ நரகத்திலோ சொர்க்கத்திலோ வாழ்வதாக எண்ணிக் கொண்டிருந்தவன். தான் உண்மையில் எங்கும் நிறைந்தவன் என்பதை உணர்கிறான். தான் காலத்திற்குக் கட்டுப்பட்டவன் அல்ல, காலம் தனக்குக் கட்டுப்பட்டது என்பதை உணர்கிறான். எல்லா சொர்க்கங்களும் தனக்குள்ளேயே இருக்கின்றன, தான் எந்தச் சொர்க்கத்திலும் இல்லை என்பதை உணர்கிறான். மனிதன் வழிபட்ட தெய்வங்கள் எல்லாமே தனக்குள்ளேயே இருக்கின்றன. தான் எந்தத் தெய்வத்திற்கு உள்ளேயும் இல்லை என்பதை உணர்கிறான். தேவர்கள், பிசாசுகள், மனிதர்கள், தாவரங்கள், மிருகங்கள், கற்கள் எல்லாவற்றையும் படைத்தவன் தானேதான், தனது உண்மையான இயல்பு சொர்க்கத்தை விட உயர்ந்தது, இந்தப் பிரபஞ்சத்தைவிட முழுமையானது, எல்லையற்ற காலத்தைவிட எல்லையற்றது, எங்கும் நிறைந்த ஆகாசத்தைவிட எங்கும் நிறைந்தது என்பதை உணர்கிறான்.
இவ்வாறு மட்டுமே மனிதன் அச்சம் அற்றவனாகவும் சுதந்திரனாகவும் ஆகிறான். அப்போது எல்லா பொய்த் தோற்றங்களும் துன்பங்களும் மறைகின்றன; என்றும் பயமற்ற நிலையை அவன் அடைகிறான். அவனுக்குப் பிறப்பு இல்லை, இறப்பு இல்லை; துன்பமும் இல்லை, அதனுடன் இன்பங்களும் இல்லை; பூமி இல்லை, சொர்க்கங்களும் இல்லை; உடலும் மனமும் இல்லை. அவனுக்குப் பிரபஞ்சம் முழுவதுமே மறைந்தது போலாகிவிடுகிறது. இந்தத் தேடல், ஓடல், ஆற்றல்களின் இந்த இடையறாத போராட்டம் எல்லாம் நின்று விடுகின்றன. எந்தப் போராட்டமும் அவனுக்கு இல்லை. சக்தியாக, ஜடப்பொருளாக, இயற்கையின் போராட்டங்களாக, இயற்கையாக, சொர்க்கங்களாக, பூமிகளாக, தாவரங்களாக, மிருகங்களாக, மனிதர்களாக, தேவதைகளாக இதற்குமுன் தோன்றியவை இப்போது, வேறுபடாத, மாற்றமற்ற எல்லையற்ற ஒன்றாக அவனுக்குத் தெரிகிறது. இவ்வாறு அனுபவம் பெற்றவன், அந்த ஒன்று, தானே என்பதை உணர்கிறான்.
பல வண்ண மேகங்கள், ஆகாயத்தில் தோன்றி, சிறிதுநேரம் இருந்துவிட்டு மறைகின்றன. அதுபோல் பூமிகள், சொர்க்கங்கள், சந்திரன், தேவர்கள், இன்ப துன்பங்கள் எல்லாம் காட்சிகள் போல் ஆன்மாவின் முன் தோன்றுகின்றன. மேகங்கள் மறைந்ததும் என்றும் மாற்றமடையாத, எல்லையற்ற ஒரே நீல வானம் வெளிப்படுகிறது. வானம் மாறுவதே இல்லை; மேகங்களே மாறுகின்றன. வானம் மாறுகிறது என்று நினைப்பதே தவறு. நாம் தூய்மை அற்றவர்கள், எல்லைக்கு உட்பட்டவர்கள், தனித்தனியானவர்கள் என்றெல்லாம் நினைப்பது தவறு. உண்மை மனிதன் ஒன்றேயான பரம்பொருள்.
இப்போது இரண்டு கேள்விகள் எழுகின்றன. இதை உணர்வது சாத்தியமா? இதுவரை இது கோட்பாடாக, தத்துவமாக இருந்தது. ஆனால் இதை உண்மையில் உணர முடியுமா? என்பதே முதல் கேள்வி. நிச்சயம் முடியும். மாயையின் பிடியிலிருந்து நிரந்தரமாக விடுபட்ட மனிதர்கள் இன்றும் உலகில் இருக்கிறார்கள். இந்த அனுபூதி வந்தவுடனேயே அவர்கள் இறந்து விடுகிறார்களா என்ன? நாம் நினைப்பதுபோல் அவ்வளவு சீக்கிரம் அவர்கள் இறப்பதில்லை. ஒரே அச்சில் இணைந்த இரு சக்கரங்கள் ஒன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு, ஒரு கோடாரியால், அச்சை நான் வெட்டிவிடுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். நான் பிடித்துக் கொண்டிருக்கும் சக்கரம் நின்றுவிடுகிறது. ஆனால் மற்றொரு சக்கரம், ஏற்கனவே உள்ள உந்துசக்தியால் சிறிது தூரம் ஓடி, பிறகு கீழே விழுகிறது.
தூய்மையானதும் முழுமையானதுமான இந்த ஆன்மா ஒரு சக்கரம். பொய்த் தோற்றங்களான உடலும் மனமும் இன்னொரு சக்கரம். இவை இரண்டையும் கர்மவினை என்ற அச்சு பிணைக்கிறது. ஞானமே இந்தப் பிணைப்பைத் துண்டிக்கும் கோடரி. ஆன்மாவாகிய சக்கரம் உடனே நின்றுவிடும். தான் வருவதாகவும் போவதாகவும், வாழ்வதாகவும் சாவதாகவும், தான் இயற்கையே என்று நினைப்பதையும் தனக்குத் தேவைகளோ ஆசைகளோ இருப்பதாக நினைப்பதையும் அது நிறுத்திவிடும். தான் முழுமையானதும், ஆசையற்றதுமான ஒன்றே என்பதை அது உணர்ந்துகொள்ளும். ஆனால் உடலும் மனமுமாகிய மற்றொரு சக்கரத்திலோ, கர்மவினையின் உந்து சக்தி இன்னும் ஓயவில்லை. எனவே அது தீரும்வரை வாழ்ந்து, கர்ம வினையைத் தீர்த்துவிட்டுப் பிறகு நின்று விடுகிறது; உடலும் மனமும் வீழ்கிறது, ஆன்மா விடுதலை அடைகிறது.
இதற்குப் பின் ஏதோ ஒரு சொர்க்கத்திற்குப் போவதும் திரும்பி வருவதும் இல்லை. பிரம்மலோகத்திற்கும் வேறெந்த மிக உயர்ந்த உலகங்களுக்கும் போவதோ வருவதோ இல்லை. அவன் எங்கே போவது? எங்கிருந்து வருவது? இந்த உலகில் வாழும்போதே, ஒரு நிமிட நேரமாவது இந்த நிலையை அடைந்தவனுக்கு உலகின் சாதாரணத் தோற்றம் மறைந்து, உண்மை உள்ளபடி தெரிகிறது. அவன் ஜீவன் முக்தன் என்று அழைக்கப்படுகிறான். வாழும்போதே முக்தி பெறுகின்ற இந்த நிலைதான் வேதாந்திகளின் குறிக்கோள்.
ஒருமுறை மேற்கு இந்தியாவில் இந்துமகா சமுத்திரத்தின் கரையோரத்திலுள்ள ஒரு பாலைவனப் பிரதேசத்தில் நான் பயணம் செய்து கொண்டிருந்தேன். நாட்கணக்கில் அந்தப் பாலைவனத்தின் வழியாக நான் நடந்து சென்றேன். ஆச்சரியம் என்னவென்றால் அழகிய ஏரிகள் அங்கே தினமும் என் கண்களில் தென்படும். சுற்றிலும் மரங்கள் உயர்ந்து நிற்கும். அந்த மரங்களின் நிழல்கள், ஏரிகளில் தலைகீழாக அசைந்து கொண்டிருப்பதையும் நான் பார்த்தேன். ஆகா எத்தனை அற்புதமாக இருக்கிறது! இதைப் போய் பாலைவனம் என்கிறார்களே! என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இவ்வாறு அழகிய ஏரிகளையும் மரங்களையும் பார்த்தவாறே ஒரு மாதம் பயணம் செய்தேன். ஒருநாள் எனக்கு மிகவும் தாகமெடுத்தது. தண்ணீர் குடிப்பதற்காக இந்தத் தெளிந்த நீர் நிறைந்த அழகிய ஏரிகளுள் ஒன்றை நோக்கிச் சென்றேன். நான் அதை நெருங்கியபோதோ அது மறைந்துவிட்டது. ஆ, வாழ்நாள் முழுவதும் நான் கேள்விப்பட்ட கானல்நீர் இதுதான் என்று எண்ணிக் கொண்டேன். ஒரு மாதமாகத் தினந்தோறும் கானல்நீரையே பார்த்தும், அது கானல்நீர் என்று தெரியவில்லையே என்ற எண்ணம் தோன்றுகிறது. அடுத்தநாள் காலையில் மறுபடியும் பயணத்தைத் தொடங்கினேன். மறுபடியும் ஏரிகள் தெரிந்தன. ஆனால் அது வெறும் கானல்நீரே, ஏரியல்ல என்ற அறிவும் கூடவே தோன்றியது.
இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய விஷயமும் இப்படித் தான். கானல் நீராகிய இந்த உலகில் நாட்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக, அது கானல்நீர் என்று தெரியாமலேயே பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு நாள் இந்த தோற்றம் மறையும். ஆனால் மறுபடியும் வரும். வினைப்பயனின் சக்திக்குக் கட்டுப்பட்டே உடல் இயங்குகிறது. எனவே அது தீரும்வரை இந்தக் கானல்நீர் தோன்றவே செய்யும். முன்பிருந்தது போலவே ஆண், பெண், மிருகங்கள், தாவரங்கள், ஆசாபாசங்கள், கடமைகள் என்று எல்லாம் வந்துசேரவே செய்யும். ஆனால் இவையெல்லாம் முன்னைப்போல் அவ்வளவு சக்தி உடையவையாக இருக்காது. இந்தப் புதிய ஞானத்தால் கர்மவினையின் வலிமை முறிந்துவிடும்; விஷத்தன்மை மறைந்துவிடும். அது முற்றிலும் மாறிவிடும். ஏனென்றால், கானல்நீரைப் பார்க்கும்போதே, அதற்கும் உண்மைக்கும் உள்ள வேறுபாடு நமக்குத் தெரியும்.
இனி, இந்த உலகம் முன்னைப்போல் நம் கண்ணுக்குத் தென்படாது. இங்கே ஓர் ஆபத்து உள்ளது. எல்லா நாடுகளிலும் சிலர் இந்தத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, நான் தர்மம், அதர்மம் எல்லாவற்றையும் கடந்தவன். எந்த ஒழுக்கவிதியும் என்னைக் கட்டுப்படுத்தாது. நான் என் விருப்பம்போல் செய்வேன் என்று சொல்லித் திரிவதைக் காணலாம். நான் கட்டுப்பட்டவன் அல்ல. நானே கடவுள்; நான் எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று சொல்கின்ற பல முட்டாள்களை இந்த நாட்டிலும் காணலாம். பவுதீக, மன, ஒழுக்க விதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது ஆன்மா என்பது உண்மையாக இருந்தாலும், இவர்கள் சொல்வது சரியல்ல. விதிகளுக்குக் கட்டுப்பட்டது பந்தம், விதிகளுக்கு அப்பாற்பட்டது சுதந்திரம். சுதந்திரம் ஆன்மாவின் இயல்பு; அது ஆன்மாவின் பிறப்புரிமை என்பது உண்மைதான். அந்தச் சுதந்திரமே ஜடப்பொருள் என்னும் திரை வழியாக போலிச் சுதந்திரமாக ஒளிவிடுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நாம் சுதந்திரமானவர்கள் என்று உணர்கிறோம். அந்த உணர்வு இல்லாமல் நம்மால் ஒரு கணம்கூட வாழவோ, பேசவோ, மூச்சுவிடவோ முடியாது. அதேவேளையில், சிறிது சிந்தித்தாலே நாம் வெறும் எந்திரங்களைப் போல் தான் இருக்கிறோம், சுதந்திரமாக இல்லை என்பது விளங்கி விடும்.
அப்படியானால் எது உண்மை? சுதந்திரம் என்ற கருத்து வெறும் பிரமைதானா? ஆம், பிரமைதான் என்று ஒரு பிரிவு கூறுகிறது. இல்லை, பந்தம் என்ற கருத்துதான் பிரமை என்று மற்றொரு பிரிவு கூறுகிறது. இது எப்படி நடக்கிறது? மனிதன் உண்மையில் சுதந்திரனே; உண்மையான மனிதன் சுதந்திரனாகத்தான் இருக்க முடியும். மாயையின் இந்த உலகத்திற்குள் நுழைந்தவுடன் தான். நாமரூபத்திற்கு உட்படும்போதுதான் அவன் கட்டுப்படுகிறான். சுதந்திர சுயேச்சை என்பதே தவறு. சுயேச்சை ஒருபோதும் சுதந்திரமாக இருக்க முடியாது. அது எப்படி இருக்க முடியும்? உண்மையான மனிதன் பந்தத்திற்கு உள்ளாகும் போதுதான் சுயேச்சை தோன்றுகிறது; அதற்கு முன் இல்லை. மனிதனின் சுயேச்சை கட்டுப்பட்டது; ஆனால் அந்தச் சுயேச்சைக்கு அடிப்படையாக இருப்பது என்றென்றும் சுதந்திரமானது.
தொடரும்...
தொடர்ச்சி...
.
பூமியிலோ, சொர்க்கத்திலோ, மனித வாழ்க்கை அல்லது தேவ வாழ்க்கை என்று நாம் சொல்லும் கட்டுப்பட்ட நிலைகளிலோகூட, நமது தெய்வீக உரிமையான சுதந்திரத்தின் நினைவு நமக்கு இருந்துகொண்டேதான் இருக்கும். தெரிந்தோ தெரியாமலோ அதை அடைவதற்காகவே நாம் போராடுகிறோம். ஒரு மனிதன் தனக்கே உரித்தான சுதந்திர நிலையைப் பெற்றுவிட்டால், எந்த விதித்தான் அவனைக் கட்டுப்படுத்த முடியும்? இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்த நியதியும் அவனைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் இந்தப் பிரபஞ்சமே அவனுடையதுதான்.
அவனே பிரபஞ்சம். அவனே பிரபஞ்சம் என்றோ, அவனைப் பொறுத்தவரை பிரபஞ்சம் என்பது இல்லை என்றோ, எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். பால் வேறுபாடு, நாடு போன்ற குறுகிய கருத்துக்கள் அவனுக்கு எப்படித் தோன்ற முடியும்? நான் ஆண், நான் பெண், நான் குழந்தை என்று அவன் எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும்? அவை பொய்கள் அல்லவா? அவை பொய்களே என்பது அவனுக்குத் தெரியும். இவை ஆணின் உரிமைகள், இவை பெண்ணின் உரிமைகள் என்று எப்படிப் பிரித்துச் சொல்ல அவனால் முடியும்? யாருக்கும் உரிமைகள் இல்லை; தனித்தனியாக யாரும் இல்லை. ஆணோ பெண்ணோ இல்லை; ஆன்மாவிற்குப் பால்வேறுபாடே இல்லை. அது நிரந்தரமாகத் தூய்மையானது. நான் ஆண், நான் பெண், நான் இந்த நாட்டைச் சேர்ந்தவன், அந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். இந்த உலகம் முழுவதுமே எனது நாடு. இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே என்னுடையது. ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்தையே நான் என் உடலாகக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் சிலர் இந்தக் கோட்பாடுகளை ஒப்புக்கொள்கின்ற அதேவேளையில், கேவலமானவை என்று சொல்லத்தக்க செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டால், அது உங்கள் மனமயக்கமே தவிர, நான் தவறே செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். அவர்களைச் சோதித்தறிவது எப்படி? இதோ இப்படித்தான்:
தீமையும் நன்மையும் ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட வெளிப்பாடுகள். ஆனால் தீமை என்பது ஆன்மாவைச் சுற்றியிருக்கும் உறைகளுள் எல்லாவற்றிற்கும் வெளியில் இருக்கும் உறை; ஆன்மாவிற்கு மிகவும் அருகிலுள்ள உறை நன்மையே ஆகும். தீமையாகிய வெளியுறையைக் கிழித்துச் சென்றால்தான் உள்ளுறையாகிய நன்மையை அடைய முடியும். தீமை, நன்மை ஆகிய இரு உறைகளையும் கிழித்துச் சென்றால்தான் ஆன்மாவை அடைய முடியும். ஆன்மாவை அடைந்தவனுக்கு என்ன பந்தம் இருக்கிறது? ஏதோ சிறிது கர்மவினை, கடந்த பிறவியிலுள்ள உந்துசக்தியின் ஏதோ சிறு இயக்கம் அவ்வளவுதான். ஆனால் இது நல்ல கர்மவினை மட்டுமே. தீய வினைகளாகிய மாசுகள் முழுவதையும் எரித்து அழிக்காமல் யாராலும் உண்மையைக் காணவோ உணரவோ முடியாது. ஆகவே ஆன்மாவை அடைந்து, உண்மையை உணர்ந்தவனிடம் ஒட்டிக்கொண்டிருப்பதெல்லாம் நல்வினைகளின் மிச்சம் மட்டுமே.
இந்த உடலிலேயே அவன் வாழ்ந்து, இடையறாது வேலை செய்தாலும், அது நற்பணியாகவே இருக்கும். அவனது வாயிலிருந்து எல்லோருக்கும் ஆசீர்வாதமே வெளிவருகிறது. அவனுடைய கைகள் நற்பணியை மட்டுமே செய்கின்றன. அவனுடைய மனத்தால் நல்ல எண்ணங்களை மட்டுமே நினைக்க முடிகிறது. அவன் போகும் இடங்களெல்லாம் ஆனந்தம் நிறைவு பெற்றதாகிறது. அவன் ஆசிகளின் மொத்த உருவமாகத் திகழ்கிறான். அத்தகையவனின் திருமுன்னிலையில் மிகவும் கொடியவர்கள்கூட மகான்களாகி விடுகிறார்கள். அவன் வாய் திறந்து பேசாதிருந்தால்கூட, அவனுடைய சான்னியத்தியமே மக்களுக்குப் பெரும்பேறாக விளங்குகிறது. அத்தகையவன் தீமை செய்ய முடியுமா? கொடிய செயல்கள் செய்ய முடியுமா? வெறும் பேச்சும் ஆன்ம அனுபூதியும் இரண்டு துருவங்கள். எந்த முட்டாளாலும் பேச முடியும். கிளிகள் கூடப் பேசுகின்றன. பேசுவது வேறு, உண்மையை உணர்வது வேறு. தத்துவங்கள், கோட்பாடுகள், வாதங்கள், புத்தகங்கள், கொள்கைகள், கோயில்கள், மதப் பிரிவுகள் இவையெல்லாம் தத்தம் வழியில் சிறந்தவையே. ஆனால் அனுபூதி வரும்போது இவை விலகி விடுகின்றன.
உதாரணமாக, தேசப் படங்கள் பயனுள்ளவைதாம். ஆனால் நாட்டை நேரடியாகப் பார்த்துவிட்டு, அதன்பிறகு படத்தைப் பார்த்தால் எவ்வளவு வேறுபாடு தெரிகிறது! ஆகவே உண்மையை உணர்ந்தவர்களுக்கு, தர்க்கவாதத்தின் சிக்கலான முறைகளோ கடுமையான அறிவுப் பயிற்சிகளோ தேவையில்லை. உண்மை அவர்களுடைய ரத்தத்தோடு ரத்தமாக ஊறிவிட்டது. அவர்கள் உண்மையின் உருவமாகவே இருக்கிறார்கள். வேதாந்த ரிஷிகள் சொல்வது போல், உண்மை அவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இருக்கிறது. நீங்கள் எழுந்து நின்று இதோ இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அதேபோல், உண்மையை உணர்ந்தவர்கள், இதோ, ஆன்மா இருக்கிறது என்று தைரியமாகச் சொல்ல முடியும்.
நாம் அவர்களோடு வருடம் முழுவதும் வாதாடலாம். ஆனால் அவர்கள் நம்மைப் பார்த்துப் புன்னகை செய்வார்கள். நம்முடைய வாதங்களையெல்லாம் குழந்தையின் உளறலாகவே அவர்கள் மதிப்பார்கள். குழந்தைதானே, உளறட்டும் என்று விட்டுவிடுவார்கள். அவர்கள் உண்மையை உணர்ந்துவிட்டார்கள், நிறைநிலையை அடைந்துவிட்டார்கள். நீங்கள் ஒரு நாட்டைப் பார்த்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வேறொருவன் வந்து அப்படி ஒரு நாடே இல்லை என்று வாதாடுகிறான். அவன் தொடர்ந்து வாதாடிக்கொண்டே போகலாம், அவ்வளவுதான். உங்களைப் பொறுத்தவரை, அவன் ஒரு பைத்தியக்காரன் என்ற எண்ணம்தான் உறுதியாக இருக்கும். உலகில் மனிதர்கள் இந்தச் சிறிய மதங்களைப் பற்றியெல்லாம் பேசுவது வெறும் உளறலே; மதம் என்பதன் முழு சாரம் ஆன்ம அனுபூதிதான் என்று ஆன்ம ஞானி கூறுகிறான். ஆன்ம அனுபூதியை நாம் பெற முடியும். அதற்குத் தயாராக இருக்கிறீர்களா? அதை விரும்புகிறீர்களா? விரும்புவீர்களானால், நிச்சயம் அதனைப் பெறுவீர்கள்; உண்மையான ஆன்மீகவாதிகள் ஆவீர்கள். அனுபூதி பெறும்வரை உங்களுக்கும் நாத்திகர்களுக்கும் வித்தியாசமில்லை.,நாத்திகர்கள் வேஷம் போடுவதில்லை. ஆனால் ஆன்மீகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே, அதை அனுபூதியில் அடைய முயலாதவன் வேஷதாரிகளே.
அனுபூதிக்குப் பிறகு என்ன என்பதே அடுத்த கேள்வி. இந்தப் பிரபஞ்சத்தின் ஒருமையை, ஒன்றேயான எல்லையற்ற பரம்பொருள் நாமே, இருப்பது ஆன்மா ஒன்றுதான், பல்வேறு உருவங்களாக வெளிப்பட்டுத் தோன்றுவது அதுவே என்பதையெல்லாம் அனுபூதியில் நாம் உணர்ந்துவிட்டதாக வைத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு நமக்கு என்ன நேர்கிறது? நாம் செயலற்றுப் போய், ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு, அப்படியே இறந்து விடுவோமா? அதனால் உலகிற்கு என்ன நன்மை? அதே பழைய கேள்வி! முதலில் உலகிற்கு இது ஏன் நன்மை செய்ய வேண்டும்? இது உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்குக் காரணம் ஏதாவது இருக்கிறதா? இதனால் உலகிற்கு என்ன நன்மை? என்று கேட்பதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது? அதற்கு என்ன பொருள்?
ஒரு குழந்தைக்கு மிட்டாய் பிடிக்கிறது. நீங்கள் மின்சார சம்பந்தமான ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தக் குழந்தை, இதனால் மிட்டாய் கிடைக்குமா? என்று கேட்கிறது. கிடைக்காது என்று பதில் சொல்கிறீர்கள். அப்படியானால் உன் ஆராய்ச்சியால் என்ன நன்மை? என்று கேட்கிறது. குழந்தை. அனுபூதியினால் உலகிற்கு என்ன நன்மை? எங்களுக்கு இதனால் பணம் கிடைக்குமா? என்று கேட்பதும் அது போன்றதே. அதற்கு கிடைக்காது என்ற பதில்கிடைத்ததும்,, அப்படியானால், இதனால் என்ன நன்மை? என்று கேட்கிறார்கள். உலகிற்கு நன்மை செய்வது என்பதை இந்தப் பொருளில்தான் நினைக்கிறார்கள். ஆனாலும், ஆன்ம அனுபூதி உலகிற்குப் பெரும் நன்மை தருகிறது.
அந்த நிலையை அடைந்தால், இருப்பது ஒன்றே என்பதை அனுபூதியில் உணர்ந்தால் அன்பின் ஊற்றுக்கள் எல்லாம் வற்றிவிடும், வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விடுவோம், இந்த வாழ்க்கையில் மட்டுமல்லாமல், வரப்போகும் வாழ்க்கையிலும் தங்களுக்குப்பிடித்த எல்லாவற்றையும் இழந்துவிடுவோம் என்று மனிதர்கள் பயப்படுகிறார்கள். தங்களைப்பற்றி மிகச் சிறிதே நினைத்தவர்கள்தாம், உலகின் மிகப்பெரிய செயல்வீரர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை இவர்கள் ஒரு கணம்கூட நினைத்துப் பார்ப்பதில்லை.
தான் அன்பு செலுத்தும் பொருள், சாதாரணமான, சிறிய, அழியக் கூடிய பொருளல்ல என்று உணரும்போது தான் மனிதன் அன்பு செலுத்துகிறான். தான் அன்பு செலுத்தும் பொருள் ஒரு மண்கட்டியல்ல, கடவுளே என்று உணரும்போதுதான், ஒரு மனிதன் அன்பு செலுத்துகிறான். கணவன் கடவுளே என்று நினைத்தால் மனைவி கணவனை அதிகமாக நேசிப்பாள். மனைவியே கடவுள் என்று உணரும்போது கணவன் மனைவியை அதிகமாக நேசிப்பான். குழந்தைகள் கடவுளே என்று நினைக்கும் தாய் குழந்தைகளை அதிகமாக நேசிப்பாள். தன்னுடைய மிகப் பெரிய எதிரி கடவுளே என்று உணர்பவன் எதிரியையும் நேசிப்பான். ஒரு சாது கடவுளே என்று அறிபவன், அவரை மிகவும் நேசிக்கிறான். அதே மனிதன், மிகக் கொடிய பாவியையும் நேசிக்கிறான்; ஏனெனில் பாவியில் உறைவதும் கடவுளே என்பதை அவன் உணர்கிறான்.
அத்தகைய மனிதனால் உலகத்தையே அசைக்க முடியும். அவனிலுள்ள சாதாரண மனிதன் அழிந்து, அந்த இடத்தில் கடவுள் மட்டுமே நிற்கிறார். இந்தப் பிரபஞ்சமே அவனுக்கு முற்றிலும் மாறிவிடுகிறது. துன்பமான துயரமான எல்லாமே அழிந்துவிடுகின்றன; எல்லா போராட்டங்களும் மறைந்து விடுகின்றன. ஒரு கவளம் சோற்றிற்காகத் தினமும் ஈடுபடும் போராட்டங்களும் சண்டைகளும் நிறைந்த சிறைச்சாலையாக இல்லாமல், இந்தப் பிரபஞ்சம் ஒரு விளையாட்டு மைதானமாக மாறிவிடும். அப்போது இந்தப் பிரபஞ்சமே மிக அழகாக இருக்கும். அத்தகைய மனிதனுக்கு மட்டுமே, இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது! என்று சொல்ல உரிமை உண்டு. எல்லாம் நல்லனவாகவே இருக்கின்றன என்று சொல்லும் உரிமை அவனுக்கு மட்டுமே உண்டு.
இந்த அனுபூதியால் உலகிற்கு ஏற்படும் நன்மை இதுதான். அதாவது, சண்டையும் பூசலும் நிறைந்த இந்த உலகில், அந்த உயர்ந்த உண்மையின் ஒரு சிறு பகுதியையாவது மனிதகுலம் உணருமானால், உலகின் பார்வை முழுவதும் மாறி, சண்டையும் பூசலும் இருந்த இடத்தில், அமைதி ஆட்சி புரியும் என்பதே இந்த நன்மை. மற்றவர்களை முந்த வேண்டும் என்ற இந்த நாகரீகமற்ற, மிருகத்தனமான வேகம் அப்போது உலகிலிருந்து நீங்கி விடும். அதனுடன் எல்லா போராட்டங்களும் நீங்கும். எல்லா வெறுப்புகளும் விலகும், எல்லா பொறாமைகளும் நீங்கும், எல்லா தீமைகளும் திரும்பி வராமல் மறைந்துவிடும். இந்தப் பூமியில் தெய்வங்களே வசிப்பார்கள். பூமியே சொர்க்கமாகிவிடும். தெய்வங்களே தெய்வங்களோடு விளையாடும்போது, தெய்வங்களே தெய்வங்களோடு சேர்ந்து பணி புரியும்போது, தெய்வங்களே தெய்வங்களிடம் அன்பு செலுத்தும்போது என்ன தீமை இருக்க முடியும்? தெய்வீக அனுபூதியின் மிகப்பெரிய பயன் இதுதான்.
அப்போது சமுதாயத்தில் நீங்கள் பார்க்கும் எல்லாமே முற்றிலுமாக மாறிவிடும். தீயவன் என்று யாரையுமே நினைக்க முடியாது. இதுவே முதல் பெரிய லாபம். தவறு செய்தவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களை அவமதிக்க மாட்டார்கள். இரவில் தெருவில் நடக்கும் ஏழைத் தாசியைக்கூடப் பெண்கள் கேவலமாகப் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவளிடமும் கடவுளையே காண்பார்கள். பொறாமை, தண்டனை என்ற எண்ணங்களே எழாது. அவை எல்லாமே மறைந்துவிடும். அப்போது அன்பு, மிக உன்னதமான லட்சியமாகிய அன்பு மிகச் சக்தி வாய்ந்ததாகிவிடும். எனவே மனிதகுலத்தைச் சரியான பாதையில் செலுத்துவதற்குச் சாட்டையும் சவுக்கும் தேவையாக இருக்காது.
இந்த உலக மக்களுள் கோடியில் ஒரு பங்கு மனிதர்கள் ஓரிடத்தில் அமர்ந்து, ஓ மனிதர்களே, ஓ மிருகங்களே, ஓ உயிருள்ள பிராணிகளே, நீங்கள் எல்லோரும் வாழும் இறைவனின் வெளிப்பாடுகளே என்று சில நிமிடங்கள் சொன்னால் போதும். அரைமணி நேரத்தில் இந்த உலகமே மாறிவிடும். வெறுப்பாகிய வெடிகுண்டுகளை மூலைக்கு மூலை எறிவதற்குப் பதிலாக, பொறாமையை, தீமையை உலகில் பரப்புவதற்குப் பதிலாக, எல்லாம் அவனே என்று உலகம் முழுவதுமுள்ள மக்கள் நினைப்பார்கள்.
நீங்கள் பார்க்கின்ற, உணர்கின்ற எல்லாம் அவரே. உங்களுள் தீமை இல்லாமல் வெளியில் எப்படித் தீமையைப் பார்ப்பீர்கள்? உங்கள் இதயத்தில் எங்கோ மூலையில் திருடன் இல்லாவிட்டால் வெளியில் எப்படித் திருடனைப் பார்ப்பீர்கள்? நீங்களே கொலைக்காரர்களாக இல்லாவிட்டால் வெளியில் எப்படி கொலைக்காரர்களைப் பார்ப்பீர்கள்? நல்லவர்களாக இருங்கள், உங்களுக்குத் தீமை மறைந்துவிடும். இவ்வாறு பிரபஞ்சம் முழுவதுமே மாறி விடும். சமுதாயத்திற்குக் கிடைக்கும் மிகப் பெரிய லாபமும் இது. மனிதனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய லாபமும் இதுதான்.
இந்தியாவில், மிகப் பழங்காலத்தில், இந்த எண்ணங்களை ஆராய்ந்து, முறைப்படுத்தி வைத்திருந்தார்கள். போதிய ஆசிரியர்கள் இல்லாமை, அன்னியர் படையெடுப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இந்த எண்ணங்கள் பரவுவது தடைப்பட்டது. ஆனால் இவை மகோன்னதமான உண்மைகள். எங்கெல்லாம் இந்த உண்மைகள் கடைப்பிடிக்கப்பட்டனவோ அங்கெல்லாம் மனிதன் தெய்வம் ஆனான். இத்தகைய தெய்வ மனிதர் ஒருவரின் சேர்க்கையால் என் வாழ்க்கை முழுவதுமே மாறிவிட்டது. இந்தச் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவும் காலம் வந்து கொண்டிருக்கிறது. மடங்களிலும் ஏதோ சில பண்டிதர்கள் மட்டுமே படிக்கக்கூடிய தத்துவ நூல்களிலும், குறிப்பிட்ட பிரிவினருடையவும் பண்டிதர்களுடையவும் ஏகபோக உரிமையாகவும் மட்டுமே இல்லாமல், உலகம் முழுவதும் அவை பரவும். பாவி, புண்ணியவான், ஆண், பெண், குழந்தை, படித்தவன், பாமரன் எல்லோருடையவும் பொதுச் சொத்தாகி விடும். அதன்பின்னர் அவை உலகத்தின் சூழ்நிலையோடு கலந்து ஒன்றாகிவிடும். நாம் விடும் ஒவ்வொரு மூச்சும், நீயே அது என்று ஒலிக்கும். கோடிக் கணக்கான சூரிய சந்திரர்களைக் கொண்ட இந்தப் பிரபஞ்சம், எல்லாவற்றின் மூலமாகவும், ஒரே குரலில் நீயே அது என்றே சொல்லும்.
எங்கும் இறைவன்
-
நாம் எவ்வளவுதான் தடுத்தாலும் நமது வாழ்க்கையில் பெரும் பகுதி தீமை நிறைந்ததாகத்தான் இருக்கும். நடைமுறையில் இந்தத் தீமை ஏறக்குறைய எல்லையற்றதாக இருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். ஆதிகாலம் முதல் இதற்குப் பரிகாரம் காண்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது என்னவோ அப்படியேதான் இருக்கிறது. அதிகமாகப் பரிகாரங்களைக் கண்டுபிடிக்கின்ற அளவிற்கு மேன்மேலும் நுட்பமான தீமைகள் நம்மைச் சூழ்கின்றன.
இந்தத் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காகவே ஒவ்வொரு மதமும் ஒரு கடவுளைப் படைத்துள்ளது. இதையும் நாம் ஏற்கனவே கண்டோம். உலகம் எப்படித் தென்படுகிறதோ, அப்படியே அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று லவுகீக மக்கள் கூறுவது போல் செய்தால், தீமையைத் தவிர வேறு எதுவுமே உலகத்தில் இருக்காது என்று எல்லா மதங்களும் கூறுகின்றன.
இந்த உலகத்திற்கு அப்பால், ஏதோ ஒன்று இருக்கிறது என்று எல்லா மதங்களும் வற்புறுத்துகின்றன. ஐந்து புலன்களில் அடங்கும் வாழ்க்கையிலேயே, ஜடவுலக வாழ்க்கையிலேயே எல்லாம் முடிந்துவிடவில்லை. இது ஒரு பகுதி மட்டுமே, மேலோட்டமானது மட்டுமே. இதற்குப் பின்னால் எல்லாவற்றிற்கும் அப்பால், தீமையே இல்லாத எல்லையற்றது இருக்கிறது. சிலர் அதைக் கடவுள் என்றும் சிலர் அல்லா என்றும், சிலர் ஜெஹோவா என்றும், சிலர் யோவான் என்றும் பலவிதமாக வழங்குகிறார்கள். வேதாந்தி அதைப் பிரம்மம் என்று சொல்கிறான்.
மதங்களின் போதனைகளைப் பார்க்கும்போது முதலில் நமக்குத் தோன்றுவது, நாம் வாழ்க்கைக்கு முடிவுகட்டுவதே மேல் என்பதுதான். வாழ்க்கையின் தீமைகளுக்கு எப்படிப் பரிகாரம் காண்பது என்ற கேள்விக்கு, வாழ்க்கையை முடித்துவிடலாம் என்பதுதான் உடனே தோன்றும் பதிலாக இருக்கிறது. இது எனக்கு ஒரு பழைய கதையை நினைவூட்டுகிறது. ஒரு மனிதனின் தலையில் ஒரு கொசு உட்கார்ந்தது. கொசுவைக் கொல்ல விரும்பிய அவனுடைய நண்பன் ஒரு பலத்த அடி கொடுத்தான். கொடுத்த அடியில் கொசு, மனிதன் இரண்டு பேருமே காலி! தீமைக்குப் பரிகாரமும் இது போன்றதாகத்தான் தோன்றுகிறது. வாழ்க்கை தீமை நிறைந்தது, உலகம் தீமை நிறைந்தது. உலகைப்பற்றி அறிந்த அனுபவசாலிகள் யாரும் இதை மறுக்க முடியாது.
மதங்கள் இதற்குச் சொல்லும் பரிகாரம் என்ன? இந்த உலகம் பயனற்றது என்பதுதான். இந்த உலகிற்கு அப்பால் உண்மையான ஏதோ ஒன்று இருக்கிறது. இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. மதங்கள் சொல்லும் பரிகாரம், எல்லாவற்றையும் அழிப்பதாகவே தோன்றுகிறது. அழிவு எப்படி ஒரு பரிகாரமாக இருக்க முடியும்? அப்படியானால் வேறு வழியே இல்லையா? மதங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறது வேதாந்தம். மதங்களின் கருத்து தெளிவாக இல்லாததால் மக்கள் அவற்றைத் தவறாகப் புரிந்துகொள்ள நேர்கிறது.
அறிவு மற்றும் இதயத்தின் சங்கமம்தான் நமக்கு வேண்டும். இதயம் மிகவும் உன்னதமானதுதான். அதன் வழியாக வாழ்க்கையின் சிறந்த அகத் தூண்டுதல்கள் பிறந்துள்ளன. கருணையே இல்லாமல் அறிவு மட்டுமே நிறைய இருப்பதைவிட, அறிவே சிறிதும் இல்லாமல் கருணை சிறிதேனும் இருப்பதையே நான் விரும்புகிறேன். நெஞ்சில் ஈரமுள்ளவனுக்குத்தான் வாழ்க்கையும் முன்னேற்றமும் எல்லாம் உரியவை. அறிவு மிகுந்த , ஆனால் நெஞ்சில் ஈரமே இல்லாதவனின் வாழ்வே வறண்டு போய் அவன் அழிகிறான். அதேவேளையில் இதயத்தின் போக்கிலேயே செல்பவன் பல கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதும், அடிக்கடிச் சறுக்கி விழ நேரலாம் என்பதும் நமக்குத் தெரிகிறது. இதயமும் அறிவும் இணைந்த ஒரு நிலையே நமக்குத் தேவை. அறிவையும் கருணையையும் ஒன்றுக்கொன்று பணயம் வைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. எல்லையற்றுப் பரந்த இதயமும் உணர்ச்சியும் அதே வேளையில் எல்லையற்ற அறிவும் நமக்கு இருக்க வேண்டும்.
ஆசைக்கு ஓர் எல்லையிருக்கிறதா என்ன? உலகம் எல்லையற்றது அல்லவா? எல்லையற்ற உணர்ச்சிப் பெருக்கிற்கு இங்கே இடம் இருக்கிறது. அதே அளவு பண்பாட்டிற்கும் அறிவிற்கும் இடம் இருக்கிறது. கருணையும் அறிவும் இணைந்து அளவில்லாமல் நம்மிடம் இருக்கட்டும். இரண்டும் இணையாகச் செயல்படட்டும்.
அனேகமாக எல்லா மதங்களும் இந்த உண்மையைப் புரிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை எல்லாமே ஒரே விதமான தவறு செய்கின்றன. அதாவது கருணைக்கும் உணர்ச்சிகளுக்கும்தான் அவை மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றன. உலகம் தீமை நிறைந்தது, எனவே உலகத்தைத் துறுந்துவிடுங்கள் என்பது மிகச் சிறந்த போதனை, ஒரே போதனை- சந்தேகமில்லை. உலகத்தைத் துறந்துவிடுங்கள். உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமானால், உண்மையற்றதை விடவேண்டும் என்பதில் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. நன்மை வேண்டுமானால் நாம் எல்லோருமே தீமையை விட வேண்டும் என்பதிலும் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது. வாழ்க்கை வேண்டுமானால், மரணத்தை விட வேண்டும் என்பதிலும் கருத்து வேற்றுமை இருக்க முடியாது.
வாழ்க்கையை த் துறந்துவிடு என்ற கொள்கை இருக்கிறதே, அதன் பொருள் நமக்குத் தெரிந்த இந்தப் புலனின்ப வாழ்க்கையைத் துறந்துவிடுவது என்றால், நமக்கு என்ன மிஞ்சும்? இதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? வாழ்க்கை என்பதற்கு வேறு எனன்தான் பொருள்? இதைத் துறுந்தால் வேறு என்ன இருக்கிறது? வேதாந்தத்தின் இன்னும் ஆழ்ந்த தத்துவப் பகுதிக்கு வரும்போது, நாம் இதைப் பற்றி இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். வேதாந்தத்தில் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு அறிவு பூர்வமான தீர்வு இருக்கிறது என்பதை மட்டுமே இப்போது நான் சொல்ல விரும்புகிறேன். வேதாந்தம் போதிக்க விரும்புவதை மட்டுமே நான் இங்கே உங்கள் முன் குறிப்பிட முடியும். அது என்னவென்றால் உலகத்தையே தெய்வீகமாக்கி விடுவதுதான்.
உண்மையில் வேதாந்தம் உலகத்தைத் தாழ்த்திப் பேசவில்லை. துறவு லட்சியம், வேதாந்தப் போதனைகளில் உள்ளதுபோல் வேறெங்கும் இவ்வளவு உயர்ந்த நிலையை அடையவில்லை. ஆனால் வேதாந்தம் வறட்டு அழிவு போதனையைச் செய்யவில்லை. அது துறவு என்று கூறுவதன் உண்மைப் பொருள், உலகை தெய்வீகமாக்குதல். அதை எப்படி நாம் உணர்கிறோமோ, அது எப்படி நமக்குத் தோற்றமளிக்கிறதோ அதை விட்டுவிட வேண்டும்; அது உண்மையில் எதுவோ அதை அறிய வேண்டும் என்பதுதான் அதன் பொருள். உலகைத் தெய்வீகமாக்குங்கள். அது கடவுளே. பிரபஞ்சத்திலுள்ள அனைத்துமே இறைவனால் சூழப்பட வேண்டும் என்று மிகவும் பழைய ஓர் உபநிடத்தின் ஆரம்பத்தில் காண்கிறோம்.
அனைத்தையும் இறைவனால் மூட வேண்டும்; ஒருவகை போலியான இன்ப நோக்காகவோ இல்லை, துன்பங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் பாசாங்காகவோ அல்ல. உண்மையிலேயே எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பதன்மூலம் இதைச் செய்ய வேண்டும். இவ்வாறு உலகத்தைத் துறக்க வேண்டும். உலகத்தைத் துறுந்த பிறகு எஞ்சுவது என்ன? கடவுள்தான். இதன் பொருள் என்ன? நீ உன் மனைவியோடு வாழலாம்; அவளைக் கைவிட வேண்டும் என்பதல்ல. ஆனால் அவளிடம் கடவுளைக் காண வேண்டும். குழந்தைகளைத் துறந்து விடுங்கள். இதன் பொருள் என்ன? எல்லாநாடுகளிலும் சில மனித மிருகங்கள் செய்வதைப் போல் குழந்தைகளை வீட்டைவிட்டுத் துரத்திவிடுவதா? இல்லவே இல்லை. அது கொடுமை; அரக்கத்தனம். அது ஆன்மிக உணர்வு அல்ல. ஆனால் உங்கள் குழந்தைகளில் இறைவனைக் காணுங்கள். எல்லாவற்றிலும் இப்படியே. வாழ்விலும் சாவிலும் இன்பத்திலும் துன்பத்திலும் எல்லாவற்றிலுமே இறைவன் சமமாக நிறைந்திருக்கிறார். உலகம் முழுவதும் இறைவன்தான் நிறைந்திருக்கிறார். கண்களைத் திறவுங்கள், அவரைப் பாருங்கள். வேதாந்தம் இதைத்தான் போதிக்கிறது.
நாம் நமது கற்பனையால், நமது அனுமானத்தால் உருவாக்கிக் கொண்டிருக்கும் உலகத்தைத் துறந்துவிட வேண்டும். ஏனென்றால் இந்த அனுமானம் முழுமையற்ற அனுபவத்தை, ஆழமற்ற அறிவை நமது சொந்த பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் துறந்துவிடுங்கள். நாம் இதுவரை நினைத்துவந்த, எல்லோரும் உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்ற உலகம் நம்முடைய கற்பனையில் தோன்றிய பொய்யான உலகம். அதை விட்டுவிடுங்கள். நன்றாகக் கண்களைத் திறந்து பாருங்கள். இப்படிப்பட்ட ஓர் உலகம் எப்போதுமே இருக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அது ஒரு கனவு, மாயை. இருந்தது கடவுள் மட்டுமே. குழந்தையில், மனைவியில், கணவனில் எல்லாவற்றிலும் இருப்பவர் அவரே. நல்லவரில் இருப்பதும் அவரே, தீயவரில் இருப்பதும் அவரே, பாவத்தில் இருப்பதும் அவரே, பாவியாக இருப்பதும் அவரே. வாழ்விலும் அவரே இருக்கிறார். சாவிலும் அவரே இருக்கிறார்.
உண்மையிலேயே துணிச்சலான கருத்துதான். ஆனாலும் வேதாந்தம் இந்தக் கருத்தைத்தான் பிரச்சாரம் செய்ய, செயலில் காட்ட விரும்புகிறது, போதிக்க விரும்புகிறது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. இவ்வாறு நாம் வாழ்க்கையின் அபாயங்களையும் தீமைகளையும் விலக்குகிறோம்.
எதற்கும் ஆசைப்படாதீர்கள். நம்மைத் துன்புறச் செய்வது எது? நமது துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் ஆசையே. நாம் ஒன்றை விரும்புகிறோம்; அதை அடைய முடியவில்லை. விளைவு? துன்பம். ஆசை இல்லாவிட்டால் துன்பமும் இல்லை. இங்கேயும் நான் சொல்வதைத் தவறாகப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆகவே ஆசையைத் துறப்பது துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவது என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்பதை இங்கே விளக்குவது அவசியம்.
சுவர்களுக்கு ஆசை கிடையாது, அவை துன்புறுவதும் இல்லை. உண்மைதான். ஆனால் அவை வளர்ச்சி அடைவதும் இல்லை. இந்த நாற்காலிக்கு ஆசைகள் இல்லை; அது துன்பம் அடைவதில்லை. ஆனால் அது ஒரு நாற்காலியாகத்தான் எப்போதும் இருக்கிறது. இன்பத்தில் ஒரு மகிமை இருக்கிறது; துன்பத்திலும் ஒரு மகிமை இருக்கிறது. ஏன், தீமையினால் பயன்கூட இருக்கிறது என்று நான் துணிந்து சொல்வேன். துன்பத்தால் நாம் பெறும் பாடம் நம் எல்லோருக்கும் தெரிந்ததே. நாம் செய்யாமல் இருந்திருக்கக் கூடாதா என்று பின்னால் நாம் வருத்தப்படும் பலநூறு காரியங்களைச் செய்து விடுகிறோம். ஆனால் அந்தக் காரியங்கள் நமக்கு எத்தனை உயர்ந்த பாடங்களைக் கற்பிக்கின்றன.
என்னைப் பொறுத்தவரையில், நான் சில நல்ல காரியங்களைச் செய்திருக்கிறேன் என்பதில் மகிழ்கிறேன். பல தீய காரியங்களைச் செய்திருக்கிறேன் என்பதிலும் மகிழ்கிறேன். சில காரியங்களைச் சரியாகச் செய்ததற்காக மகிழ்கிறேன். அதே வேளையில் பல தவறுகள் செய்ததற்காகவும் மகிழ்கிறேன். ஏனென்றால், என் தவறு ஒவ்வொன்றும் ஓர் உயர்ந்த பாடத்தை எனக்குக் கற்பித்திருக்கிறது. நான் இதுவரை செய்த செயல்கள், எனது எண்ணங்கள் அனைத்தின் பலனே இப்போதைய நான். எனது ஒவ்வொரு செயலும் ஒவ்வோர் எண்ணமும் அவற்றின் பலனைத் தந்திருக்கின்றன. இந்தப் பலன்கள் அனைத்தின் ஒட்டுமொத்தமே என் முன்னேற்றமாக அமைந்தது.
ஆசைகள் தவறானவை என்பது நம் எல்லோருக்கும் புரிகிறது. ஆனால் ஆசைகளைத் துறப்பது என்றால் என்ன? ஆசையில்லாவிட்டால் வாழ்க்கை எப்படி நடைபெறும்? ஆசையை அழித்துவிடு-துன்பத்தைத் தீர்ப்பதற்கு இதுதான் வழி என்பது மனிதனையே கொன்று விடுவதற்குச் சமமாகும். தீர்வு இதுதான்: உங்களுக்குச் சொத்து கூடாது என்பதல்ல, உங்கள் தேவைக்குரியவற்றை வைத்துக்கொள்ளக் கூடாது என்பதல்ல. ஏன், ஆடம்பர மானவற்றைக்கூட அனுபவிக்கக் கூடாது என்பது அல்ல. வேண்டியதை வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு மேலேயும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் உண்மையை அறிந்து கொள்ளுங்கள், உணர்ந்து கொள்ளுங்கள். செல்வம் யாருக்கும் சொந்தமானது அல்ல. சொந்தக்காரர்கள், முதலாளிகள் என்ற கருத்தை கைவிட வேண்டும். நீங்களும் ஒன்றுமில்லை, நானும் ஒன்றுமில்லை, யாராயிருந்தாலும் வெறும் பூஜ்யமே. எல்லாம் இறைவனுக்கே சொந்தம். ஏனென்றால் முன்பு நாம் பார்த்த உபநிடதத்தின் ஆரம்ப மந்திரம் எல்லாவற்றிலும் இறைவனை வைக்கச் சொல்கிறது. நாம் அனுபவிக்கும் செல்வத்தில் இறைவன் இருக்கிறார். நம் மனத்தில் எழும் ஆசைகளில் அவர் இருக்கிறார். ஆசைகளைத் திருப்தி செய்வதற்காக நாம் வாங்கும் பொருட்களில் இருப்பதும் அவரே. நமது அழகான ஆடை அணிகளிலெல்லாம் இருப்பதும் அவரே. இப்படித்தான் நம் எண்ணம் இருக்க வேண்டும். இந்தக் கோணத்திலிருந்து உலகத்தைப் பார்க்க ஆரம்பித்தால், எல்லாமே வேறுவிதமாகத் தோன்றத் தொடங்கிவிடும். நமது ஒவ்வோர் அசைவிலும் ஒவ்வொரு பேச்சிலும் உருவத்திலும், ஏன், எல்லாவற்றிலுமே இறைவனை இணைத்துக் கொள்வோமானால் காட்சியே மாறிவிடும். உலகம் துன்பமும் துயரமும் நிறைந்த இடமாக இல்லாமல் சொர்க்கமாகத் தோன்ற ஆரம்பித்துவிடும்.
பரமண்டலம், உனக்குள்தான் இருக்கிறது என்று ஏசு கூறினார். அதையே வேதாந்தம் கூறுகிறது; ஒவ்வொரு மகான்களும் கூறியிருக்கிறார்கள். கண் இருப்பவர்கள் காணட்டும்; காது இருப்பவர்கள் கேட்கட்டும். நாம் காலங்காலமாகத் தேடிக் கொண்டிருக்கும் உண்மை எப்போதும் நமக்குள்தான் இருக்கிறது, எப்போதும் நம்முள்தான் இருந்தது என்பதை வேதாந்தம் நிரூபிக்கிறது. அறியாமை காரணமாக நாம் அதை இழந்துவிட்டதாக நினைத்து, அழுது, கதறி, உலகமெங்கும் அலைந்து திரிந்து, இந்த உண்மையைக் கண்டுபிடிப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தோம். ஆனால் அது எப்போதும் நம் இதயத்திலேயே இருந்திருக்கிறது. நம் இதயத்தில் மட்டுமே அந்த உண்மையை நாம் காண முடியும்.
உலகத்தைத் துறப்பது என்பதை, அதனுடைய பழைய வளர்ச்சியுறாத பொருளில் புரிந்துகொண்டால், அது இப்படித்தான் இருக்கும்: வேலை செய்யக் கூடாது; சோம்பேறிகளாக இருக்க வேண்டும்; எதையும் சிந்திக்காமல், எதையும் செய்யாமல், பிடித்துவைத்த களிமண் போல் இருக்க வேண்டும்; விதியின்மீது பாரத்தைப் போட்டுவிட வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதன் கைதியாக இருக்க வேண்டும்; இயற்கையின் விதிகளால் இடத்திற்கு இடம் பந்தாடப்பட வேண்டும். இதுதான் பொருள்.
உலகத்தைத் துறப்பது என்பதற்கு அது பொருளல்ல. நாம் வேலை செய்ய வேண்டும். பொய்யான ஆசைகளால் அலைக்கழிக்கப்படுகின்ற சாதாரண மனித குலத்திற்கு செயல் என்பதுபற்றி என்ன தெரியும்? உணர்ச்சிகளாலும் புலன்களாலும் ஆட்டி வைக்கப்படுகின்ற மனிதனுக்குச் செயல் என்பதுபற்றி என்ன தெரியும்? சொந்த ஆசைகளால் தூண்டப்படாதன்தான், சுயநலம் துளியும் இல்லாதவன் தான் செயல்புரிய முடியும். தனக்கென்று சுய நோக்கம் எதுவும் இல்லாதவன் தான் வேலை செய்ய முடியும். லாபம் கருதாதவன்தான் வேலை செய்ய முடியும்.
ஓவியத்தை ரசிப்பது யார்? விற்பவனா, பார்க்க வந்தவனா? விற்பவன், அந்தப் படத்தை விற்பதால் தனக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று கணக்கு வழக்குகளில் மூழ்கிக் கிடக்கிறான்; அதை ஏலத்திற்கு விடலாமா, விலை எப்படி ஏறுகிறது, எந்த இடத்தில் மூன்றாம் தரம் கூறினால் லாபம் அதிகமாகும் என்பதில் கவனமாக இருக்கிறான். அவனது மனம் முழுவதிலும் அந்த எண்ணமே நிறைந்திருக்கிறது. அந்தப் படத்தை வாங்கும் எண்ணமோ விற்கும் எண்ணமோ இல்லாமல் அங்கே போயிருக்கும் ஒருவன் தான் அந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க முடியும். அவனே அந்தப் படத்தை அனுபவிக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறான்.
இந்தப் பிரபஞ்சமே ஓர் ஓவியம். ஆசைகள் மறையும் போது மனிதன் உலகை அனுபவிக்கிறான். வாங்குவது, விற்பது, சொந்தம் கொண்டாடுவது போன்ற முட்டாள்தனமான கருத்துக்கள் எல்லாம் அப்போது மறைந்து விடுகின்றன. கடன் கொடுப்பவன், வாங்குபவன், விற்பவன் எல்லோரும் மறைந்து, உலகம் மட்டுமே ஒரு சித்திரமாக ஓர் அழகிய ஓவியமாக எஞ்சி நிற்கிறது.
கடவுள் ஒரு மகாகவிஞர்; புராதன கவிஞர். பிரபஞ்சம்தான் அவர் எழுதிய கவிதை; எதுகை மோனைகளுடன் எல்லையற்ற ஆனந்தத்தில் தோய்ந்து அவர் எழுதியிருக்கிறார். கடவுளைப்பற்றிய இதைவிட அழகிய கருத்தை நான் படித்ததில்லை.
ஆசைகளை ஒழித்தால்தான் இறைவனின் இந்த அழகிய பிரபஞ்சத்தை புரிந்துகொண்டு, அதில் நாம் ஆனந்தமாகத் திளைக்க முடியும். அப்போது எல்லாம் தெய்வீகமாகிவிடும். மூலைமுடுக்குகள் மற்றும் தீய, தூய்மையற்ற இடங்களும்கூட தெய்வீகமாகிவிடும். எல்லாமே அவற்றின் உண்மை இயல்பை வெளிப்படுத்தும். நமது அழுகையும் கதறலும் எல்லாமே குழந்தைத்தனமானவை. நாம் இவற்றிற்கெல்லாம் வெறும் சாட்சியாக மட்டுமே இருந்து வந்திருக்கிறோம் என்பதை அப்போது புரிந்துகொள்வோம், நம்மைப் பார்த்து நாமே சிரித்துக் கொள்வோம்.
ஆகவே உங்கள் வேலையைச் செய்யுங்கள் என்கிறது வேதாந்தம். எப்படி வேலை செய்வது என்பதை அது முதலில் போதிக்கிறது. எப்படி? துறப்பதன் மூலம், பொய்த் தோற்றமான இந்த உலகை விட்டுவிடுவதன்மூலம். இதன் பொருள் என்ன? எங்கும் இறைவனைக் காணல் என்பது தான். அப்படித்தான் நாம் செயல்புரிய வேண்டும். நூறுவருடங்களாக வாழ ஆசைப்படலாம். விரும்பினால் எல்லா உலக ஆசைகளுக்கும் நம் மனத்தில் இடம் கொடுக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் தெய்வீமாக்கி விடுங்கள், சொர்க்கமாக்கிவிடுங்கள், அவ்வளவுதான். பிறருக்கு உதவி செய்துகொண்டு ஆனந்தமான நீண்ட வாழ்க்கை வாழ வேண்டுமென்று நாம் ஆசைப்படலாம். இவ்வாறு செயல்புரிந்தபடிதான் முக்திக்கான வழியைத் தேட முடியும். இதைத் தவிர வேறு வழியே இல்லை.
உண்மையை அறிந்துகொள்ளாமல், ஒருவன் உலக போகங்களில் முட்டாள்தனமாக மூழ்கினால் அவ்ன வழிதவறிவிட்டான், அவனால் லட்சியத்தை அடைய முடியாது. இனி, உலகைச் சபித்துக்கொண்டு அதை விட்டு விட்டுக் காட்டிற்குப்போய், உடலை ஒடுக்கி, பட்டினியால் உடலை அணு அணுவாகக் கொன்று, நெஞ்சை ஈரமற்ற கல்லாக்கிக் கொண்டு, கடின சித்தமுள்ளவனாக ஆகின்றவனும் வழி தவறியவனே. இவை இரண்டும் இரண்டு துருவங்கள். இரண்டுமே தவறான நோக்குடையவை. இருவரும் வழி தவறியவர்களே. இருவரும் லட்சியத்தை அடைய முடியாது.
சிற்றண்டம்
-
மனித மனம் இயல்பாகவே புறத்தில் செல்ல விரும்புகிறது. பொறிகளாகிய பாதைகள் வழியாக உடலுக்கு வெளியே அது தொடர்பு கொள்ள விரும்புவது போலுள்ளது. கண் பார்க்க வேண்டும், காதுகள் கேட்க வேண்டும், மற்ற புலன்கள் புற உலகை உணர வேண்டும். இயல்பாகவே, இயற்கையின் அழகும் நுட்பமும்தான் முதலில் மனிதனின் கருத்தைக் கவர்கின்றன. மனித மனத்தில் புற உலகத்தைப் பற்றிய கேள்விகளே முதலில் எழுந்தன. வானம், நட்சத்திரங்கள், கிரகங்கள், பூமி, நதிகள், மலைகள், கடல் இவற்றின் மர்மத்திற்கெல்லாம் மனிதன் தீர்வு காண விரும்பினான். இருட்டில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த மனித மனம் முதலில் புற உலகத்தையே அறிய விரும்பியது என்பதற்கான ஆதாரங்களை உலகின் எல்லா பழைய மதங்களிலும் நாம் காணலாம். நதிதெய்வம், வானதெய்வம், மேகதெய்வம், மழைதெய்வம் என்று எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு தெய்வத்தையும் கற்பனை செய்துகொண்டான். இன்று நாம் இயற்கையின் சக்திகள் என்று சொல்பவை எல்லாவற்றையுமே பழங்கால மனிதன், தெய்வங்களாகவும் தேவர்களாகவும் உருவகப்படுத்திக் கொண்டிருந்தான்.
ஆராய்ச்சியின் ஆழம் அதிகமாக ஆக, இந்தப் புற வெளிப்பாடுகள் மனித மனத்திற்குத் திருப்தி அளிக்கவில்லை, கடைசியில், மனிதன் அகமுகமாகத் திரும்பினான். அவனது ஆன்மா பற்றியே கேள்விகள் கேட்கப்படலாயின. பேரண்டத்திலிருந்து ஆராய்ச்சி சிற்றண்டத்தை நோக்கித் திரும்பியது. புற உலகத்திலிருந்து ஆராய்ச்சி அக உலகத்தை நோக்கித் திரும்பியது. புற இயற்கையை ஆராய்வதிலிருந்து அக இயற்கையை ஆராய்வதில் அவன் இறங்கினான். இத்தகைய ஆராய்ச்சியின் பயனாக நாகரீகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தான். இயற்கையைப் பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெற்றான். வளர்ச்சியில் உயர்ந்த நிலையை அடைந்தான்.
இன்றைய சொற்பொழிவு இந்த அக மனிதனைப் பற்றியதுதான். அக மனிதனைப் பற்றிய இந்தப் பிரச்சினைபோல், மனிதனுக்கு இவ்வளவு நெருக்கமானதும் விருப்பமானதுமான பிரச்சினை வேறில்லை. எத்தனையோ நாடுகளில், எத்தனையோ கோடி தடவை இந்தக் கேள்வி எழுந்திருக்கிறது. ரிஷிகள், அரசர்கள், பணக்காரர்கள், ஏழைகள், புண்ணியவான்கள், பாவிகள் என்று ஒவ்வோர் ஆணும் ஒவ்வொரு பெண்ணும் அவ்வப்போது இந்தக் கேள்வியைக் கேட்டு வந்திருக்கிறார்கள்: நிலையற்ற இந்த மனித வாழ்க்கையில் நிலையான ஏதாவது உண்டா? இந்த உடல் அழிந்த பின்னும் அழியாமல் இருப்பது எதுவுமே இல்லையா? இந்த உடற்கூடு மாய்ந்து சாம்பலான பின்னும் ஏதோ ஒன்று வாழ்ந்து கொண்டிருப்பதில்லையா? உடலை எரித்துச் சாம்பலாக்கும் நெருப்பினால் பாதிக்கப்படாத ஏதோ ஒன்று இல்லையா? அப்படி ஒன்று இருக்குமானால் அது என்ன ஆகிறது? எங்கே போகிறது? அது எங்கிருந்து வந்தது? இந்தக் கேள்விகள் திரும்பத்திரும்பக் கேட்கப்பட்டன. இந்தப் படைப்பு இருக்கும்வரையில் இந்தக் கேள்விகளும் இருக்கத்தான் செய்யும்.
இவற்றிற்கெல்லாம் பதில் கிடைக்காமலும் இல்லை. ஒவ்வொரு முறையும் பதில் கிடைத்தது. காலம் செல்லச்செல்ல, பதில் மேலும்மேலும் உறுதிபெற்றது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு முடிவான பதில் கிடைத்துவிட்டது. அந்தப் பதிலே திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது, விளக்கப்படுகிறது, நமது அறிவிற்குத் தெளிவாகப் புரியும்படி எடுத்துக் கூறப்படுகிறது. நாம் இப்போது செய்ய வேண்டிய காரியமும் அதே பதிலைத் திரும்ப எடுத்துச் சொல்வதுதான். இந்த மிகப் பெரிய பிரச்சினைக்குப் புதிய தீர்வு காண்பதாக நாம் பாசாங்கு செய்வதில்லை. பழைய உண்மையைப் புதிய மொழியில் எடுத்துச் சொல்கிறோம். பழங்காலத்தினரின் சிந்தனையைத் தற்காலத்தினரின் மொழியில் சொல்கிறோம். தத்துவ ஞானிகளின் மொழியை மக்களின் மொழியில் சொல்கிறோம். தேவதைகளின் மொழியை மனிதனின் மொழியில் சொல்கிறோம். கடவுளின் மொழியைப் பாமர மக்களின் மொழியில் சொல்கிறோம். அப்போதுதான் மனிதனால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் இந்தக் கருத்துக்கள் எந்தத் தெய்வீக சக்தியிலிருந்து தோன்றினவோ அது எப்போதும் மனிதனில் இருக்கிறது. ஆகவே அவனால் இந்தக் கருத்துக்களை எப்போதும் புரிந்துகொள்ள முடியாது.
நான் உங்களைப் பார்க்கிறேன். பார்வைக்கு என்னென்ன தேவைப்படுகின்றன? முதலில் கண்கள். மற்ற எந்த விதத்திலும் குறையில்லாதிருந்தாலும் கண்கள் இல்லையென்றால், என்னால் உங்களைப் பார்க்க முடியாது. இரண்டாவது தேவை, உண்மையான பார்வைப் புலன். கண்கள், பார்க்கும் உறுப்புகள் அல்ல. அவை பார்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பொறிகளே. உண்மையான புலன் இந்தப் பொறிகளுக்குப் பின்னால் மூளையிலுள்ள நரம்பு மையமே. அந்தப் புலன் சேதப்படுமானால், மிகவும் தெளிவான கண்களை உடையவனால் கூட எதையும் பார்க்க முடியாது. எனவே இந்த மையம், இந்த உண்மையான பார்வைப்புலன் இருப்பது அவசியம். எல்லா புலன்களின் விஷயமும் இப்படித்தான்.
புறக் காதுகள் ஒலி அலைகளைக் கேள்விப்புலனுக்குத் தெரிவிக்கத்தான் பயன்படுகிறது. இதுவும் போதாது. நீங்கள் நூல்நிலையத்தில், ஒரு புத்தகத்தைப் படிப்பதில் உங்களை மறந்து ஈடுபட்டிருக்கிறீர்கள். அப்போது மணி அடிக்கிறது. அது உங்கள் காதில் விழுவதில்லை. சத்தம் எழுகிறது; அது காற்றில் பயணம் செய்து, காதுகளின்மூலம், கேள்விப்புலனையும் அடைகிறது. ஆனாலும் அதை நீங்கள் கேட்கவில்லை. எதில் குறைபாடு? மனம் அதில் ஈடுபடவில்லை. ஆகவே மூன்றாவதாக, மனத்தின் ஈடுபாடு அவசியம்.
முதலில் புறக் கருவிகள் அதாவது பொறிகள்; பின்னர் பொறிகள் உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கின்ற மையமாகிய புலன்; கடைசியாக, புலன்களோடு இணைந்த மனம் இவைமூன்றும் தேவை. மனம் புலனோடு இணைந்திருக்காதபோது, பொறிகளும் புலன்களும் உணர்ச்சிகளை ஏற்கலாம். ஆனாலும் நாம் அதை உணர மாட்டோம். மனமும் தாங்கிச் செல்லும் சாதனம் மட்டுமே, உணர்ச்சியை அது தாங்கிச் சென்று புத்தியின் முன்வைக்க வேண்டும். புத்திதான், தன் முன் வைக்கப்பட்டது என்ன என்பதைத் தீர்மானம் செய்கிறது. இதுகூடப் போதாது. புத்தி எல்லாவற்றையும் தாங்கிச் சென்று, உடலுக்குள், அதிபதியாக சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஆன்மாவாகிய அரசனின் முன் சமர்ப்பிக்க வேண்டும். இதைச் செய்யலாம், இதைச் செய்யக் கூடாது என்ற கட்டளைகள் அவரிடமிருந்தே பிறக்கின்றன. அந்தக் கட்டளை புத்தி, மனம், புலன்கள் என்று அதே வழியாகப் பொறியை அடைகிறது. அதன்பிறகுதான் செயல் முழுமையாகிறது.
பொறிகள் மனிதனின் புறவுடலில், தூல உடலில் இருக்கின்றன. மனமும் புத்தியும் அப்படியல்ல. அவை இந்துத் தத்துவத்தில் சூட்சும உடல் என்றும் கிறிஸ்தவ மதத் தத்துவத்தில் ஆன்ம உடல் என்றும் அழைக்கப்படுகின்ற உடலில் இருக்கின்றன. இந்தச் சூட்சும உடல், தூல உடலைவிட மிகவும் நுட்பமானது. ஆனால் இது ஆன்மாவல்ல. ஆன்மா, இவை எல்லாவற்றையும் கடந்தது. தூல உடல் சில வருடங்களில் அழிந்துவிடுகிறது. ஒரு சிறு காரணம்கூட அதை அழித்துவிடலாம். சூட்சும உடல் அவ்வளவு சுலபமாக அழியாது. ஆனாலும் சில வேளைகளில் அது சக்தியை இழக்கிறது. மற்ற வேளைகளில் வலிமையாக இருக்கிறது. வயதானவனின் மனம் பலவீனமடைகிறது; உடல் சுறுசுறுப்பாக இயங்கும்போது மனமும் சுறுசுறுப்பாக இயங்குகிறது; பல்வேறு மருந்துகளும் போதைப் பொருட்களும் மனத்தைப் பாதிக்கின்றன; வெளியில் இருக்கும் எல்லாமே அதைப் பாதிக்கின்றன; மனமும் வெளியுலகை எதர்கொள்கிறது-இவையெல்லாம் நமக்குத் தெரியும்.
உடலுக்கு இருப்பது போலவே மனத்திற்கும் எழுச்சியும் வீழ்ச்சியும் உண்டு. ஆகவே மனம் ஆன்மா வல்ல. ஏனெனில் ஆன்மாவுக்கு அழிவோ வீழ்ச்சியோ கிடையாது. அது எப்படி நமக்குத் தெரியும்? இந்த மனத்திற்கும் பின்னால் ஏதோ இருக்கிறது என்பது நமக்கு எப்படித் தெரியும்? சுய ஒளி படைத்த ஞானமும் அறிவின் அடிப்படையும், மந்தமான உணர்வற்றதான ஜடப்பொருளில் இருக்க முடியாது என்பதால்தான். அறிவே உருவான ஜடப்பொருள் என்ற ஒன்று இதுவரை இருந்ததில்லை. எந்த ஜடப்பொருளும் சுயமாக ஒளிர முடியாது. ஜடப்பொருளையெல்லாம் ஒளிரச் செய்வது அறிவுதான். இந்தப் பெரிய கூடம் இங்கே இருப்பதற்கு அறிவுதான் காரணம். ஏதோ அறிவுப் பொருள் இதைக் கட்டியிருக்காவிட்டால் இது இங்கே இருக்க முடியாது. உடலும் சுய ஒளி பெற்றதல்ல. அப்படி இருந்தால் இறந்துபோன உடலிலும் சுய ஒளி இருக்க வேண்டும். மனத்திற்கும் சூட்சும உடலிற்கும் கூடச் சுய ஒளி இல்லை. அவை அறிவின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. சொந்த ஒளி உடைய எதுவும் அழிய முடியாது. வேறு ஒன்றின் ஒளியைப் பெற்றுப் பிரகாசிக்கும் எதன் ஒளியும் நிலையானதல்ல. ஆனால் ஒளியாகவே இருப்பது என்றும் நிலையானது. அதனை வளரவும் தேயவும் செய்ய எதனால் முடியும்? நிலவு வளரவும் தேயவும் செய்கிறது ஏனெனில் அது சூரியனிடமிருந்து பெற்ற ஒளியினால் பிரகாசிக்கிறது. ஓர் இரும்புத் துண்டை நெருப்பில் போட்டால் அது சிவந்து ஜொலிக்கிறது. அந்த ஒளி சுய ஒளி இல்லை என்பதால் விரைவில் மறைந்துவிடும். ஆகவே வேறொன்றிலிருந்து பெற்றுப் பிரகாசிக்கும் ஒளிக்கு அழிவு உண்டு. சுய ஒளிக்கு அழிவில்லை.
எனவே உடலுக்கு, இந்தப் புறக்கூட்டிற்கு சுய ஒளி இல்லை என்பதையும், அதனால் அது தன்னையே அறிந்துகொள்ள முடியாது என்பதையும் நாம் உணர்கிறோம். மனத்தின் விஷயமும் இதுதான். ஏன்? ஏனெனில் மனம் வளரவும் தேயவும் செய்கிறது; சிலவேளைகளில் உற்சாகமாகவும் சிலவேளைகளில் பலவீனமாகவும் இருக்கிறது. எது வேண்டுமானாலும் மனத்தைப் பாதிக்க முடியும். ஆகவே மனத்திற்மூலம் வீசும் ஒளி அதன் சொந்த ஒளியல்ல. அப்படியானால் அந்த ஒளி யாருடையது? அது ஒளியுருவமான ஒன்றிலிருந்துதான் வர வேண்டும். அந்தப் பொருள், தேய்வோ அழிவோ இல்லாததாக, பிரகாசத்தில் கூடுதலோ குறைவோ இல்லாததாக, சொந்த ஒளி உள்ளதாக, ஒளியே உருவானதாகத்தான் இருக்க வேண்டும். ஆன்மாவிற்கு அறிவு இருக்கிறது என்று சொல்வது சரியல்ல; ஆன்மாவே அறிவு வடிவம். ஆன்மாவிற்கு இருப்பு உண்டு என்று சொல்ல முடியாது; ஆன்மாதான் இருப்பு. ஆன்மா ஆனந்தம் அடைகிறது என்று சொல்ல முடியாது; ஆன்மாதான் ஆனந்தம். ஆனந்தம் அடைவது எதுவுமே, அந்த ஆனந்தத்தை வேறு எங்கிருந்தோதான் பெற்றிருக்க வேண்டும். அறிவை உடைய எதுவும் அதை வேறு எங்கிருந்தோதான் பெற்றிருக்க வேண்டும். மற்றவற்றைச் சார்ந்திருக்கும் எதற்குமே சுய இருப்பு இல்லை. எங்கே குணங்கள் இருக்கின்றனவோ, அவை உண்மைப் பொருளின்மீது பிரதிபலிக்கப்பட்டவை. ஆன்மாவின் சாரமே அவை. அறிவு, இருப்பு, ஆனந்தம் என்பவற்றை ஆன்மா குணங்களாகப் பெற்றிருக்கவில்லை.
இது இப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஏன் நாம் முடிவு செய்ய வேண்டும்? அறிவு, இருப்பு, ஆனந்தம் எல்லாம் ஆன்மாவின் சாரம். இவற்றை அது வேறு எங்கிருந்தும் பெறவில்லை என்பதை நாம் ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்? உடலின் ஒளி, மனத்திலிருந்து பெறப்பட்டது போல், ஆன்மாவின் ஒளி, ஆன்மாவின் ஆனந்தம், ஆன்மாவின் அறிவு எல்லாம் வேறு எங்கிருந்தோ பெறப்பட்டது என்று ஏன் சொல்லக் கூடாது? இது போன்ற வாதங்களுக்கு முடிவே இல்லை. ஆன்மா தனது குணங்களை வேறோரிடத்திலிருந்து பெறுகிறது என்றால், அது எங்கிருந்து இவற்றைப் பெறுகிறது என்று இப்படியே முடிவில்லாமல் போய்க் கொண்டுதான் இருக்கும். கடைசியில், சுய ஒளி உள்ள ஒரு பொருளில் போய்தான் இந்த வாதம் முடிந்தாக வேண்டும். எனவே தர்க்கரீதியாக விஷயத்தை முடிப்பதற்கு, சுய ஒளி உள்ள பொருள் இருக்கிறது என்ற நிலை வந்தவுடன் வாதத்தை நிறுத்திக்கொள்வதுதான் ஒரே வழி.
ஆகவே மனிதன் என்பவன், முதலில் வெளிப்போர்வையாகிய தூல உடல்; இரண்டாவது மனம், புத்தி, நான்-உணர்வு இவற்றைக் கொண்ட சூட்சும உடல் இவற்றால் ஆக்கப்பட்டவன் என்பதைக் காண்கிறோம். இவற்றிற்குப் பின்னால்தான் மனிதனின் உண்மையான ஆன்மா இருக்கிறது. தூல உடலின் குணங்களும் சக்திகளும் மனத்திலிருந்து பெறப்பட்டவை. மனம், அதாவது சூட்சும உடல் சக்திகளையும் ஒளியையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மாவிடமிருந்து பெறுகிறது.
இந்த ஆன்மாவின் இயல்பைப் பற்றிய பல கேள்விகள் இப்போது எழுகின்றன. ஆன்மா சுய ஒளி பெற்றது; அறிவு, இருப்பு, ஆனந்தம் இவற்றைச் சாரமாகக் கொண்டது; அதாவது சச்சிதானந்த இயல்புடையது என்ற வாதத்திலிருந்து ஆன்மாவின் இருப்பு நிரூபிக்கப்பட்டால், ஆன்மா படைக்கப்பட்டதாக இருக்க முடியாது என்பது உறுதியாகிறது. சொந்த ஒளி உள்ள, பிற எதையும் சாராத எந்தப் பொருளும், வேறு எதிலிருந்தும் தோன்றியதாக இருக்க முடியாது. அது எப்போதும் இருந்தது. அது இல்லாத காலமே இல்லை. ஆன்மா இல்லையென்றால் காலம் எப்படி இருக்க முடியும்? காலம் ஆன்மாவில்தான் இருக்கிறது. ஆன்மா தனது சக்திகளை மனத்தின்மீது பிரதிபலிக்கச் செய்து, மனம் சிந்திக்கத் தொடங்கும் போதுதான் காலம் பிறக்கிறது. ஆன்மா இல்லையென்றால் நிச்சயமாக எண்ணம் எதுவும் இல்லை. எண்ணம் இல்லாமல் காலம் இல்லை. காலமே ஆன்மாவில் அடங்கியதாக இருக்கும்போது ஆன்மா காலத்தில் இருப்பதாக எப்படிச் சொல்ல முடியும்? ஆன்மா, பிறப்பு இறப்பற்றது. ஆனால் அது இந்தப் பல்வேறு நிலைகளின் வழியாகவும் செல்கிறது; தாழ்ந்த நிலையிலிருந்து சிறிதுசிறிதாகத் தன்னை வெளிப்படுத்தியவாறு உயர்ந்த நிலைக்குச் செல்கிறது; மனத்தின்மூலமாக உடலை இயக்கி, தன் மகிமையை வெளிப்படுத்துகிறது; உடலின் மூலமாக வெளி உலகத்தைப் புரிந்து கொள்கிறது; ஓர் உடலை எடுத்துக் கொண்டு அதைப் பயன்படுத்துகிறது; அந்த உடல் நலிந்து போகும்போது வேறோர் உடலை எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு இது நடந்து கொண்டிருக்கிறது.
இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுகிறது. பொதுவாக மறுபிறப்பு என்று சொல்லப்படுவதைப் பற்றியது அது. இந்தக் கருத்து, சிலவேளைகளில் மக்களை வெகுவாகப் பயமுறுத்துகிறது. இதைப் பற்றிய மூடநம்பிக்கைகளோ மிகவும் அதிகமாக இருக்கிறது. சிந்தனையாளர்கள்கூடத் தாங்கள் சூன்யத்திலிருந்து தோன்றியதாகவும், அதேவேளையில் இனிமேல் எப்போதும் நிலையாக இருப்போம் என்றும் தர்க்கம் செய்து நிரூபிக்க முயல்கிறார்கள். சூன்யத்திலிருந்து தோன்றியவர்கள் சூன்யத்திற்குத்தான் திரும்பிப்போக வேண்டும். நீங்களும் சரி, நானும்சரி, ஒருவருமே சூன்யத்திலிருந்து தோன்றவில்லை. சூன்யத்திற்குத் திரும்பிப் போகப் போவதும் இல்லை. நாம் எப்போதுமே இருக்கிறோம்; இருப்போம். பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் நம்மை அழித்து, சூன்யத்திற்கு அனுப்ப முடியாது. இந்த மறுபிறப்புக் கொள்கையைப் பார்த்து, நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அது மட்டுமல்ல, மனிதகுலத்தின் நீதிநெறியும் நல்லொழுக்கமும் நிலைப்பதற்கு இந்தக் கொள்கை மிகவும் அவசியம். சிந்திக்கும் திறன் படைத்தவர்கள் வர முடிந்த தர்க்கரீதியான முடிவு இது மட்டுமே.
இனிமேல் என்றென்றைக்கும் நாம் இருக்கப் போவது உண்மையானால், இதற்கு முன்னாலும் எப்போதும் நாம் இருந்திருக்க வேண்டும். வேறுவிதமாக இருக்க முடியாது. இந்தக் கொள்கையை எதிர்த்து எழும் சில ஆட்சேபங்களுக்கு நான் பதில் சொல்ல முயல்கிறேன். நம்மில் பலருக்கு இந்தக் கேள்விகளே முட்டாள்தனமாக இருக்கும். இருந்தாலும் அவற்றிற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால், சிலவேளைகளில், ஆழ்ந்த சிந்தனையாளர்களுக்கூட முட்டாள்தனமான கருத்துக்கள் எழுவதுண்டு. எவ்வளவு முட்டாள்தனமான, தவறான கருத்துக்களையும் ஆதரிக்கத் தத்துவ ஞானிகள் இருந்திருக்கிறார்கள் என்று யாரோ நன்றாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
நமக்கு ஏன் முற்பிறவி நினைவு வருவதில்லை என்பதே முதல் ஆட்சேபம். இந்த வாழ்க்கையிலேயே பல வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்கள் நினைவில் இருக்கின்றனவா? குழந்தைகளாக இருந்தபோது என்ன செய்தோம் என்பது நம்மில் எத்தனைபேருக்கு நினைவிருக்கிறது? நம்மில் யாருக்குமே நமது குழந்தைப் பருவம் நினைவில் இல்லை. நம்முடைய இருப்புக்கு நினைவே ஆதாரம் என்றால் இந்த வாதத்தின்படி நமக்குக் குழந்தைப் பருவமே இருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம் குழந்தைப் பருவம்தான் நம் நினைவில் இல்லையே! நம் இருப்புக்கு நம் நினைவே ஆதாரம் என்று சொல்வது கலப்படமற்ற முட்டாள்தனம். இறந்தகாலத்தை நாம் ஏன்தான் நினைக்க வேண்டும்? அந்தப் பழைய மூளை சிதறுண்டு போய்விட்டது. இப்போது நமக்கு இருப்பது புதிய மூளை. நமது கடந்தகால சம்ஸ்காரங்களின் மொத்தமே இந்தப் பிறவியில் புது மூளையாக உருவெடுத்திருக்கிறது. நமது மனம், இந்தப் புதிய மூளையுடன் தான் புதிய உடலை எடுத்திருக்கிறது.
என்னுடைய எல்லையற்ற முற்பிறவிகளின் பலனே இப்போது இங்கே நின்று கொண்டிருக்கும் நான். என் முற்பிறவிகளை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? உண்மையை நேருக்குநேர் கண்ட ஒரு பழங்கால ரிஷியோ, முனிவரோ ஏதாவது சொன்னால், உடனே தற்கால மக்கள், ஓ, அவர் ஒரு முட்டாள்! என்று கூறிவிடுவார்கள். பெயரை மட்டும் மாற்றுங்கள், ஹக்ஸ்லி சொன்னார், டிண்டால் சொன்னார் என்றால் அது உண்மையாகத் தான் இருக்க வேண்டும்; அது வேத வாக்கு. பழைய மூடநம்பிக்கைகளுக்குப் பதிலாகப் புதிய மூட நம்பிக்கைகள்; பழங்கால மத ஆச்சாரியர்களுக்குப் பதிலாக புதிய விஞ்ஞான ஆச்சாரியர்கள், அவ்வளவுதான். ஆகவே முற்பிறவி நினைவைப் பற்றிய ஆட்சேபம் பயனற்றது என்பது தெரிகிறது. மறுபிறவிக் கொள்கையை எதிர்த்து எழும் முக்கியமான ஆட்சேபம் இது ஒன்றுதான்.
முற்பிறவி நினைவுகள் இருக்க வேண்டும் என்பது மறுபிறவிக் கொள்கைக்கு அவசியமில்லை என்று கண்டோம். ஆனாலும் இந்த முற்பிறவி நினைவுகள் சிலவேளைகளில் வருகின்றன என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. எந்தப் பிறவியில் நாம் முக்தர்களாக ஆகிறோமோ, அந்தப் பிறவியில், நம்முடைய எல்லா முற்பிறவி நினைவுகளும் நம் ஒவ்வொருவருக்கும் வரும். அப்போதுதான் இந்த உலகமே ஒரு கனவு என்பதை நாம் உணர்வோம். அப்போதுதான் உலகமே ஒரு நாடகமேடை, நாமெல்லாம் அதில் நடிக்கும் நடிகர்கள் என்பதை நம் அந்தராத்மாவில் உணர்வோம். அப்போதுதான் பற்றின்மை என்ற கருத்து நம்மிடம் இடிபோல் உறுதியாக நிலைபெறும். அப்போது தான் வாழ்க்கையின் இன்பங்களுக்கான தாகம், உலகின் மீதும் வாழ்வின்மீதும் நமக்குள்ள மோகம் எல்லாம் என்றென்றைக்குமாக மறையும். இவற்றையெல்லாம் எத்தனைமுறை அனுபவித்திருக்கிறோம், எத்தனைகோடி தந்தையர், அன்னையர், மகன்கள், மகள்கள், கணவர்கள், மனைவிகள், உற்றார், உறவினர், பணம், பலம் எல்லாவற்றையும் பெற்று வாழ்ந்திருக்கிறோம் என்பது அப்போதுதான் வெட்டவெளிச்சமாகத் தெரியும். அவையெல்லாம் வந்துவந்து போய்க் கொண்டிருந்தன. எவ்வளவு தடவை நாம் வாழ்க்கை அலையின் உச்சியில் இருந்திருக்கிறோம்! எத்தனை தடவை நம்பிக்கையை இழந்து வாழ்க்கையின் முடிவுக்கே சென்றதுபோல் தவித்திருக்கிறோம். இதெல்லாம் நினைவு வரும்போதுதான் உலகம் நம்மை வெறுப்போடு பார்த்தாலும் நெஞ்சை நிமிர்த்தி நாம் புன்னகை செய்வோம். அப்போதுதான் தைரியமாக எழுந்து நின்று, மரணமே, உன்னைப்பற்றிக்கூட எனக்குக் கவலை கிடையாது, உன்னால் என்னைப் பயமுறுத்த முடியாது என்று கூறுவோம். இந்த நிலை எல்லோருக்கும் வரும்.
மறுபிறவிக் கொள்கையை அறிவுபூர்வமாக நிரூபிக்க முடியுமா? இதுவரை நாம் எதிர்மறையாக வாதம் செய்து வந்தோம். இந்தக் கொள்கையின் எதிர்வாதங்கள் பயனற்றவை என்று நிரூபித்துவிட்டோம். ஆனால் நேர்முகமான நிரூபணம் உண்டா? உண்டு. மிகவும் உறுதியான வாதங்கள் உண்டு. அறிவை வளர்த்துக் கொள்வதில், மனிதர்களுக்கிடையில் உள்ள வேறுபாட்டை இந்த மறுபிறவிக் கொள்கை மட்டுமே விளக்க முடியும். முதலில் நாம் அறிவைப் பெறும் வழிபற்றிப் பார்ப்போம். நான் தெருவில் போய்க் கொண்டிருக்கும்போது ஒரு நாயைப் பார்க்கிறேன், அது நாய் என்பது எனக்கு எப்படித் தெரியும்? நான் என் மனத்தில் அதைத் தேடுகிறேன். எனது கடந்தகால அனுபவங்களெல்லாம், தனித்தனி அறைகளில் வரிசைப்படுத்தப்பட்டது போல், மனத்தில் ஒழுங்காக வரிசைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்போது, உடனே அதை என் மனத்திலுள்ள பழைய அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இதே மாதிரி அனுபவம் ஏற்கனவே என் மனத்தில் இருந்தால், உடனே இரண்டையும் பொருத்திப் பார்த்துத் திருப்தியான முடிவுக்கு வருகிறேன். ஏற்கனவே உள்ள அனுபவங்களோடு புதிய அனுபவம் பொருந்துவதால், நான் பார்ப்பது நாய் என்பதை அறிகிறேன். புதிய அனுபவம் ஏற்கனவே உள்ள பழைய அனுபவம் எதனோடும் பொருந்தாவிட்டால், எனக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. பழைய, புதிய அனுபவங்கள் பொருந்தாததால் ஏற்படும் அதிருப்தி நிலையை அறியாமை என்கிறோம். இரண்டு அனுபவங்களும் பொருந்தும்போது ஏற்படும் திருப்தி நிலையை அறிவு என்கிறோம்.
ஓர் ஆப்பிள் கீழே விழுந்தபோது, மனிதன் திருப்தி அடையவில்லை. பிறகு, எல்லா பழங்களும் கீழே விழுகின்றன என்று படிப்படியாகக் கண்டறிந்து, அவ்வாறு செய்யும் சக்தியை புவியீர்ப்புச் சக்தி என்று அழைத்தான். ஆகவே பழைய அனுபவங்கள் இல்லாமல் புதிய அனுபவம் எதுவும் இருக்க முடியாது, ஏனெனில் புதிய அனுபவத்தைப் பொருத்திப் பார்ப்பதற்கு பழைய அனுபவங்கள் எதுவும் இல்லை. சில ஐரோப்பியத் தத்துவ மேதைகள் கூறுவதுபோல், ஒரு குழந்தை பழைய அனுபவம் எதுவுமே இல்லாமல் உலகில் பிறக்குமானால், அந்தக் குழந்தைக்கு அறிவு வளர்ச்சியே இருக்காது. ஏனென்றால் புதிய அனுபவம் எதையும் பொருத்திப் பார்ப்பதற்கு அதனிடம் பழைய அனுபவம் எதுவும் இல்லையே! அறிவு வளர்ச்சிக்கான ஆற்றல் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதைக் காண்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஏற்கனவே பெற்றுள்ள அனுபவ அறிவுடன்தான் பிறக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது.
அறிவை, அனுபவம் மூலமாக மட்டுமே பெற முடியும். வேறு வழியே இல்லை. இந்தப் பிறவியில் அந்த அனுபவத்தைப் பெற்றிருக்காவிட்டால், வேறு பிறவியில் பெற்றிருக்க வேண்டும். எங்கும் மரண பயம் காணப்படுகிறதே, அது எப்படி? முட்டையிலிருந்து கணநேரத்திற்கு முன்னர்தான் வெளிவந்த கோழிக்குஞ்சு, பருந்தைக் கண்டவுடன் பயந்து நடுங்கித் தாயிடம் ஓடுகிறது. இதற்குப் பழைய விளக்கம் ஒன்று இருக்கிறது. (விளக்கம் என்ற உயர்ந்த சொல்லை இதற்கு நான் பயன்படுத்துவதே தவறு). அதை இயல்புணர்ச்சி என்கிறார்கள். முட்டையிலிருந்து அப்போதுதான் வெளிவந்த கோழிக்குஞ்சுக்கு மரணபயம் ஏற்படச் செய்தது எது? கோழியால் அடைக்காக்கப்பட்டு, பொரித்து, அப்போதுதான் வெளிவந்த வாத்துக்குஞ்சு தண்ணீரைக் கண்டவுடன், அதில் குதித்து, நீந்தத் தொடங்குகிறதே, அது எப்படி? அது இதற்குமுன் நீந்தியதில்லை, வேறு ஏதாவது நீந்துவதையும் பார்த்ததில்லை. மனிதர்கள் அதை இயல்புணர்ச்சி என்கிறார்கள் . இது பெரிய வார்த்தைதான். ஆனால் இந்த வார்த்தை புதிதாக எதையும் நமக்கு விளக்கவில்லை.
இந்த இயல்புணர்ச்சி என்பதை நாம் சிறிது ஆராய்வோம். ஒரு சிறுமி பியானோ வாசிக்க ஆரம்பிக்கிறாள். முதலில் சிலகாலம் அவள் மிகவும் கவனமாக ஒவ்வொரு கட்டையிலும் கைவைத்துப் பழக வேண்டும். வருடக்கணக்காக வாசித்துப் பழகிய பிறகோ பியானோ வாசிப்பது ஏறக்குறைய அனிச்சைச் செயலாகி விடுகிறது; இயல்பாக வந்து விடுகிறது. முதலில் உணர்வுபூர்வமாகச் செய்ததை, பின்னர் எந்திரகதியில் செய்ய முடிகிறது. நிரூபணம் இன்னும் முழுமையாகவில்லை. ஒருபாதிக்கு விளக்கம் தேவைப்படுகிறது. அதாவது, அனிச்சையான இயல்புணர்ச்சிச் செயல்கள் எல்லாவற்றைமே மனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்பதே அது. உடம்பிலுள்ள ஒவ்வொரு தசையையும் சித்தத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். இது எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த விஷயம்தான். நாம் இயல்புணர்ச்சி என்று சொல்வது, மனத்திற்குக் கட்டுப்பட்ட செயல்களின் வீழ்ச்சியே என்பதை நாம் இரண்டு விதமாக நிரூபித்து விட்டோம். இதே கருத்தைப் படைப்பு முழுவதற்கும் பொருத்திப் பார்க்கும்போது, இயற்கை எங்கும் ஒரே சீராக இருக்குமானால், மனிதனிடமும் வேறு மிருகங்களிடமும் காணப்படும் இயல்புணர்ச்சி என்பது சுயேச்சையின் வீழ்ச்சியே என்பது தெளிவாகிறது.
ஒவ்வோர் ஒடுக்கத்திற்கும் முன்பு ஒரு விரிவு இருக்க வேண்டும், ஒவ்வொரு விரிவுக்கும் முன்பு ஓர் ஒடுக்கம் இருக்க வேண்டும் என்ற விதியை, பேரண்டம் என்ற தலைப்பின் கீழ் நாம் பார்த்தோம். அந்த விதியை இங்கே பொருத்திப் பார்த்தால், பகுத்தறிவின் ஒடுக்கமே இயல்புணர்ச்சி என்பதைக் காண்கிறோம். எனவே மனிதர்களிலோ மிருகங்களிலோ நாம் காணும் இயல்புணர்ச்சி என்பது மனத்திற்குக் கட்டுப்பட்ட செயல்களின் வீழ்ச்சியும் ஒடுக்கமுமே என்பது தெளிவு. இனி, அனுபவம் இல்லாமல் மனத்திற்குக் கட்டுப்பட்ட செயல்கள் இல்லை. அறிவுக்கு அனுபவமே காரணம். பிறக்கும்போதே எல்லா உயிர்களுக்கும் அந்த அறிவு இருக்கிறது. மரணபயம், வாத்துக் குஞ்சுக்குப் பிறந்தவுடனேயே நீந்தத் தெரிவது, மனிதர்களின் அனிச்சைச் செயல்கள் போன்ற எல்லா இயல்புணர்ச்சிகளும் முன் அனுபவத்தின் விளைவுகளே.
இதுவரை நாம் தெளிவாக ஆராய்ந்து வருகிறோம்; இதுவரை தற்கால விஞ்ஞானமும் நமக்கு ஒத்துப்போகிறது. ஆனால் இங்கே இன்னொரு பிரச்சினை எழுகிறது. தற்கால விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின்மூலம் புராதன ரிஷிகளின் கருத்துக்களுக்கே திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு வந்ததுவரை இரண்டு கருத்துக்களும் முற்றிலுமாக ஒத்துப்போகின்றன. ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு மிருகமும் முன் அனுபவத்துடனேயே பிறப்பதையும், மனத்தின் எல்லா இயக்கங்களுக்கும் முன் அனுபவமே காரணம் என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அந்த அனுபவம் ஆன்மாவிற்குச் சொந்தம் என்று சொல்வதில் என்ன பயன்? அது உடலுக்கு, உடலுக்கு மட்டுமே சொந்தம் என்று ஏன் சொல்லக்கூடாது? அது ஏன் பரம்பரைக் குணமாக இருக்கக்கூடாது? என்று அவர்கள் கேட்கிறார்கள். கடைசிக் கேள்வி இதுதான்! நாம் பிறக்கும்போது நம்முடன் பிறக்கும் அனுபவங்கள், நம் முன்னோர்களுடைய அனுபவங்களின் மொத்தப் பலனே என்று ஏன் சொல்லக் கூடாது? முதல் உயிரணுவிலிருந்து முழுமையடைந்த மனிதன் வரை பெற்ற அனுபவங்களின் மொத்தத் தொகுதி நம்முள் இருக்கிறது. அது பரம்பரையாக ஒவ்வோர் உடல்வழியாகவும் தொடர்ச்சியாக வந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்வதில் என்ன சிக்கல்?
கேள்வி நன்றாகத்தான் இருக்கிறது. பரம்பரை குணக்கருத்தை நாம் ஓரளவு ஒப்புக்கொள்ளவே செய்கிறோம். ஆனால் எதுவரை ஒப்புக்கொள்கிறோம்? மூலப்பொருள் அதாவது உடல் என்பது பரம்பரைகுணத்திற்கு உட்பட்டது என்பதுவரைதான். உடல்மட்டும்தான் பரம்பரையாக வருகிறது. அதாவது நம்முடைய முன்வினைப் பயனால், குறித்த ஓர் உடலில் நாம் பிறக்கிறோம். நம்முடைய ஆன்மாவைத் தங்கள் குழந்தையாகப் பெறுவதற்குத் தகுதியுள்ள பெற்றோர்கள் அந்த உடலுக்கான உருவத்தை மட்டுமே கொடுக்கிறார்கள்.
மன அனுபவம் ஜடப்பொருளில் பதிந்திருக்க முடியும், ஒடுங்கியிருக்க முடியும் என்று, நிரூபணமற்ற வினோதமான ஒரு கருத்தைப் பரம்பரைகுணக் கொள்கை நம் முன் வைக்கிறது. நான் உங்களைப் பார்க்கும்போது, என் மனமாகிய ஏரியில் ஓர் அலை எழுகிறது. பின்னர் அது அடங்கிவிடுகிறது; ஆனால் நுட்பமான உருவத்துடன் சமஸ்காரமாக என் மனத்தில் பதிகிறது. உடலாகிய பொருளில் ஒரு பவுதீகப் பதிவு இருக்க முடியும், அதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் அழியும் இயல்புடைய உடலில் மனப்பதிவு இருக்க முடியும் என்று எப்படி ஊகிக்க முடியும்? மனப்பதிவை எது எடுத்துச் செல்கிறது? சரி, மனப்பதிவு ஒவ்வொன்றும் உடலில் பதிந்திருக்க முடியும் என்றே வைத்துக் கொள்வோம். முதல் மனிதனிலிருந்து என் தந்தைவரை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட ஒவ்வொரு பதிவும் என் தந்தையின் உடலில் இருந்ததாகவும் வைத்துக் கொள்வோம். அது என் தந்தையிடமிருந்து எனக்கு எப்படி வந்தது? உயிரணுவின் மூலமாகவா? அது எப்படி இருக்க முடியும்? ஏனென்றால் தந்தையின் உடல் அப்படியே குழந்தைக்கு வருவதில்லை. ஒரே தாய்தந்தையருக்குப் பல குழந்தைகள் இருக்கலாம். அப்படியானால் பரம்பரைகுணக் கொள்கையின்படி பதிவும் பதிக்கப்பட்ட பொருளும் ஒன்று என்றால், ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் தங்கள் பதிவில் ஒரு பகுதியைப் பெற்றோர்கள் இழக்க வேண்டும். அல்லது, பெற்றோர்கள் தங்கள் பதிவுகள் முழுவதையும் முதல் குழந்தைக்குக் கொடுத்துவிட்டால் முதல் குழந்தை பிறந்தபிறகு பெற்றோர்களின் மனம் சூன்யப் பிரதேசமாகத் தான் இருக்க வேண்டும்.
சரி. இதுவரை கடந்து சென்ற எல்லா காலங்களின் பதிவுகளும் உயிரணுவில் இருந்தால், அது எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது? அது சாத்தியமில்லாத ஒன்று. அந்த உயிரணுவில், எங்கே, எப்படி அந்தப் பதிவுகள் இருக்கின்றன என்பதை உடலியல் வல்லுனர்கள் நிரூபிக்கும் வரையிலும், உடலிலுள்ள உயிரணுவில் மனப்பதிவு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்வதன் பொருள் என்ன என்பதை அவர்கள் விளக்கும்வரையிலும், அவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது. ஆகவே அனுபவப் பதிவு மனத்தில் இருக்கிறது, மனமே மறுபடியும் மறுபடியும் பிறக்கிறது, தனக்கு மிகவும் பொருத்தமான உடலை அது பயன்படுத்துகிறது. அத்தகைய ஓர் உடல் கிடைக்கும்வரை அது காத்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இதை நாம் புரிந்து கொள்கிறோம்.
ஆன்மாவிற்குப் பொருத்தமான உடலைக் கொடுக்கும்வரை, பரம்பரைகுணக் கொள்கை சரியாக இருக்கிறது. ஆனால் மனம் உடலுக்கு உடல் தாவிக்கொண்டே இருக்கிறது; அதன் பயணம் தொடர்கிறது. நான் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் செய்யும் ஒவ்வொரு செயலும் மனத்தில் நுட்பமான உருவங்களாகப் பதிந்திருக்கின்றன. வேளை வாய்க்கும்போது அவை வெளிவந்து புதிய உருவம் தாங்குகின்றன. நான் உங்களைப் பார்க்கும்போது என் மனத்தில் ஓர் அலை எழுகிறது. அது ஆழமாகப் பாய்ந்து சென்று மிகமிக நுட்பமாக மாறுகிறது; ஆனால் அழிவதில்லை. நினைவு வடிவாக மறுபடியும் எழுவதற்கு அது தயாராக இருக்கிறது. இந்தப் பதிவுகளெல்லாம் என் மனத்தில் இருக்கின்றன. நான் இறக்கும்போது இந்தப்பதிவுகளின் ஒட்டுமொத்தப்பலன் என்னில் எஞ்சி நிற்கும். இங்கே ஒரு பந்து இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் கையில் ஒரு மட்டையை எடுத்துக்கொண்டு இந்தப்பந்தை அடிப்பதாக வைத்துக் கொள்வோம். பந்து இந்த அறைக்குள் அங்குமிங்கும் பறக்கிறது, கதவை அடைந்துவிட்டால் வெளியே பறக்கிறது. அது தன்னுடன் எதை எடுத்துக் கொண்டு போகிறது? அது வாங்கிய அடிகளின் மொத்தப் பலனையே, பந்து எங்கே போக வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது இதுவே.
உடல் அழியும்போது ஆன்மாவிற்கு வழிகாட்டுவது எது? அது முதலிலிருந்தே செய்த செயல்கள், நினைத்த எண்ணங்கள் ஆகியவற்றின் மொத்தப் பலனே. இந்தப் பலன், மனம் இன்னும் அனுபவம் பெறுவதற்காகப் புதிய உடலை எடுக்கும் அளவுக்கு இருந்தால், அந்த உடலுக்குத் தேவையான மூலப்பொருளைத் தருவதற்குத் தயாராக இருக்கும் பெற்றோர்களை நாடிச் செல்கிறது. இவ்வாறு அது ஓர் உடலை விட்டு மற்றோர் உடலுக்குத் தாவுகிறது. சிலவேளைகளில் ஏதாவது ஒரு சொர்க்கத்திற்குப் போகிறது. திரும்பவும் உலகிற்கு வந்து, மனிதனாகவோ மிருகமாகவோ உருவெடுக்கிறது. இவ்வாறு, முழு அனுபவம் பெறும்வரையிலும் வட்டத்தை நிறைவு செய்யும் வரையிலும் ஆன்மா இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதன் பிறகுதான், அது உண்மை இயல்பை அறிகிறது தான் யார் என்பதை உணர்கிறது. அப்போது அதன் அறியாமை மறைகிறது; அதன் ஆற்றல்கள் வெளிப்படுகின்றன; அது நிறைநிலையை அடைகிறது.
அதன்பிறகு ஆன்மா தூல உடலின்மூலம் இயங்க வேண்டியதில்லை; சூட்சுமமான அல்லது மனம் போன்ற நுட்பமான உடல்கள் மூலமாக இயங்கும் அவசியமும் இல்லை. அது தன் ஒளியிலேயே ஒளிர்கிறது; பரிபூரண சுதந்திரம் பெற்றுவிடுகிறது. இனி அது பிறக்க வேண்டியதில்லை, இறக்கவும் வேண்டியதில்லை. இதைப் பற்றிய விளக்கங்களுக்கு நாம் இப்போது போக வேண்டாம்.
மறுபிறவி பற்றிய மற்றோர் அம்சத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். மனித ஆன்மாவின் சுதந்திர நிலையைப் பற்றிய கொள்கையே அது. சொந்த பலவீனங்கள் எல்லாவற்றையும் வேறொருவரின் மீது சுமத்துவது பொதுவான மனித இயல்பு. மறுபிறவிக் கொள்கை ஒன்றுதான் இந்தத் தவறைச் செய்வதில்லை. நாம் நம்முடைய தவறுகளைப் பார்ப்பதில்லை. கண்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள முடியாது, பிறர் ஒவ்வொருடைய கண்களையும் அதனால் பார்க்க முடியும். நமது குற்றங்களைச் சுமத்துவதற்கு வேறொருவர் இருக்கும் வரை நாம் நம்முடைய பலவீனங்களையும் தவறுகளையும் மெதுவாகத்தான் புரிந்து கொள்கிறோம். மனிதர்கள் பொதுவாகத் தங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதே தங்கள் குற்றங்களைச் சுமத்துகிறார்கள். அது முடியாவிட்டால் கடவுள்மீது சுமத்துகிறார்கள். அல்லது ஒரு பிசாசைக் கற்பனை செய்து, அதன்மீது சுமத்துகிறார்கள். இல்லாவிட்டால் விதி என்பார்கள். விதி எங்கே இருக்கிறது? விதியாக இருப்பது யார்? நாம் விதைத்ததைத்தான் நாம் அறுக்கிறோம். நம்விதிக்கு நாமே காரணம். பழியாகட்டும், புகழாகட்டும், அதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல.
காற்று வீசுகிறது; பாய்மரம் விரித்த கப்பல்கள் காற்றின் துணையுடன் முன்னேறுகின்றன. பாயைச் சுருட்டி வைத்திருக்கும் கப்பல்களுக்குக் காற்றின் துணை கிடைப்பதில்லை. அது காற்றின் குற்றமா? கடவுளின் கருணை என்னும் காற்று, இரவுபகலாக இடையீடின்றி வீசிக்கொண்டிருக்கிறது. அந்தக் கருணை அழிவற்றது. நம்மில் சிலர் சந்தோஷமும் சிலர் துன்பமும் அடைவது கடவுளின் குற்றமா? நாமே நம் விதியை உருவாக்குகிறோம். வலியவர், எளியவர் இருவருக்கும் இறைவனின் சூரியன் ஒரே மாதிரிதான் ஒளி வீசுகிறான். புண்ணியவான்களுக்கும் பாவிகளுக்கும் அவரது காற்று ஒரே மாதிரிதான் வீசுகிறது.
கடவுள் எல்லோருக்கும் தலைவர், எல்லோருக்கும் தந்தை. அவர் கருணை வடிவினர். பாரபட்சமற்றவர். எல்லாவற்றையும் படைத்து எல்லாவற்றிற்கும் அதிபதியாக இருக்கின்ற அவர் நமது வாழ்க்கையின் அற்ப விஷயங்களை நாம் பார்ப்பது போலவா பார்ப்பார்! கடவுளைப்பற்றிய என்ன அற்பத்தனமான கருத்து! நாம் சிறிய நாய்க்குட்டிகளைப்போல் வாழ்வு, சாவு என்ற போராட்டத்தில் இங்கே ஈடுபட்டிருக்கிறோம். கடவுளும் இந்தப் பிரச்சினைக்கு நம்மைப்போல் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார் என்று முட்டாள்தனமாக நினைக்கிறோம். நாய்க்குட்டிகளின் விளையாட்டைப்பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும்.
கடவுளின்மீது பழியைப் போட்டு, தண்டிப்பவராகவோ பரிசளிப்பவராகவோ அவரை உருவகப்படுத்துவதற்கான நமது முயற்சிகளெல்லாம் வெறும் முட்டாள்தனம். கடவுள் யாரையும் தண்டிப்பதும் இல்லை, யாருக்கும் பரிசளிப்பதுமில்லை. எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும், எந்தச் சந்தர்ப்பத்திலும், உறுதியாக, நிச்சயமாக எல்லோருக்கும் உதவக் காத்திருப்பது கடவுளின் கருணை. அதை எப்படித் துணைகொள்கிறோம், பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. மனிதர்களையோ கடவுளையோ வேறு யாரையுமோ பழி சொல்லாதீர்கள். துன்புற நேருமானால் பழியை நம் மீதே சுமத்திக் கொள்ள வேண்டும். நம்மை உயர்த்திக் கொள்ள முயல வேண்டும்.
பிரச்சினைக்கு இது ஒன்றுதான் தீர்வு. அந்தோ, பிறர்மீது பழி போடுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். பொதுவாக அவர்கள் துன்பப்படுபவர்களாக, நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய தவறுகளின் மூலமாகவே இந்தக் கஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆனால் பிறர்மீது பழிபோடுகிறார்கள். இது அவர்களின் நிலைமையை மாற்றுவதில்லை, அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லை, பிறர்மீது பழிபோட முயல்வது அவர்களை மேலும் பலவீனப்படுத்துகிறது. ஆகவே உங்கள் தவறுகளுக்குப் பிறரைப் பழி சொல்லாதீர்கள். சொந்தக் காலிலேயே நில்லுங்கள், பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
நான் அனுபவிக்கும் இந்தத் துன்பத்திற்கு நானே காரணம். ஆகவே நானேதான் இதற்குப் பரிகாரமும் தேடிக் கொள்ள வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நான் படைத்ததை நானேஅழிக்க முடியும். மற்றவர்கள் படைத்ததை என்னால் அழிக்க முடியாது. ஆகவே எழுந்திருங்கள், உறுதியுடனும் தைரியத்துடனும் இருங்கள். பொறுப்பு முழுவதையும் உங்கள் தோளிலேயே சுமந்துகொள்ளுங்கள். உங்கள் விதிக்கு நீங்களே காரணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்புகின்ற வலிமையும் உதவியும் உங்களுள்ளேயே இருக்கின்றன. உங்கள் எதிர்காலத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். போனது போகட்டும். எல்லையற்ற எதிர்காலம் உங்கள் முன்னே இருக்கிறது. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வோர் எண்ணமும் ஒவ்வொரு செயலும் அதற்கு ஏற்ற பலனை உண்டாக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். தீய செயல்களும் தீய எண்ணங்களும் புலிகளைப் போல் நம்மீது பாயத் தயாராக இருக்கின்றன. ஆனால் அதோடுகூடவே நல் எண்ணங்களும் நற்செயல்களும் பல்லாயிரக்கணக்கான தேவ தூதர்களைப் போல் நம்மைக் காப்பாற்ற எப்போதும் தயாராக இருக்கின்றன என்பதையும் நம்புங்கள். உத்வேகத்துடன் செயல்படுங்கள்.
பிரபஞ்சம் - பேரண்டம்
-
நாம் நம்மைச் சுற்றிக் காணும் மலர்களின் காட்சி எழில் நிறைந்தது. காலைக் கதிரவனின் உதயம் அழகு நிறைந்தது, இயற்கையின் வண்ணங்கள் எல்லாம் எழிலோவியங்களாக விளங்குகின்றன. பிரபஞ்சமே அழகு ததும்பித் திளைக்கிறது. மனிதன் உலகில் தோன்றிய காலந்தொட்டே இந்த அழகை அனுபவித்து வருகிறான். மலைகள், கடலைநோக்கி அடித்துப் புரண்டோடும் பெரிய ஆறுகள், திக்குத் தெரியாமல் பரந்து கிடக்கின்ற பாலைவனங்கள், விரிந்த பெருங்கடல், விண்மீன்கள் இறைந்து கிடக்கின்ற வானம் எல்லாமே எழில் மிக்கவை, நுட்பமானவை. ஆம், அவை எல்லாமே நுட்பானவையாக பயபக்தியை ஊட்டுபவையாக உள்ளன. இயற்கை என்று நாம் சொல்கின்ற இந்தப் பெரும் சக்தி, நினைவுக்கெட்டாத காலத்திலிருந்தே மனித மனத்தின்மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அது, மனித சிந்தனையையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. அந்தப் பாதிப்பினால் எழுந்தது தான் இவையெல்லாம் என்ன? எங்கிருந்து வந்தன? என்ற கேள்வி.
மனிதன் படைத்தவற்றுள் மிகமிகப் பழமையான வேதங்களில்கூட இதே கேள்வி எழுவதைக் காண்கிறோம்: இது எங்கிருந்து வந்தது? இருப்பு, இல்லாமை எதுவுமே இன்றி இருள் இருளில் மறைந்திருந்தபோது, இந்தப் பிரபஞ்சத்தை யார் படைத்தது? எப்படிப் படைத்தார்கள்? இந்த ரகசியம் யாருக்குத் தெரியும்?
இந்தக் கேள்விகள் இன்றும் நம்மிடையே கேட்கப் பட்டு வருகின்றன. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்குப் பலகோடி முயற்சிகள் நடந்திருக்கின்றன. இன்னும் பலகோடி முயற்சிகள் நடந்துகொண்டேயிருக்கும். ஒவ்வொரு பதிலும் பயனற்றது என்பது பொருளல்ல. இந்தக் கேள்விக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு பதிலும் உண்மையின் ஒருபகுதி இருந்தது. காலம் செல்லச்செல்ல இந்த உண்மை உறுதிப்பட்டுக்கொண்டே வருகிறது. இந்தியாவின் புராதனமான தத்துவ ஞானிகள் இந்தக் கேள்விக்கு அளித்த பதிலைத் தற்கால அறிவுடன் இணைத்து உங்கள் முன் வைக்க நான் முயல்கிறேன்.
கேள்விகளுக்கெல்லாம் முந்தியதான இந்தக் கேள்வியின் சில அம்சங்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளது. இருப்பு, இல்லாமை இரண்டுமற்ற காலம் ஒன்று இருந்தது என்பது முதல் அம்சம். அப்போது இந்த உலகம் இருக்கவில்லை. கடல்கள், சமுத்திரங்கள், ஆறுகள், மலைகள், நகரங்கள், கிராமங்கள், மனிதர்கள், மிருகங்கள், செடிகொடிகள், பறவைகள் இவற்றையெல்லாம் தன்னுள் அடக்கிய நமது அன்னை பூமி, கிரகங்கள், நட்சத்திர மண்டலங்கள், மற்றும் படைப்பின் எல்லையற்ற பல விசித்திரங்கள் எவையுமே அப்போது இருக்கவில்லை. இது நமக்கு நிச்சயமாகத் தெரியுமா? இந்த முடிவு எப்படி வந்தது என்பதை ஆராய முயல்வோம்.
ஒரு மனிதன் தன்னைச் சுற்றிக் காண்பது என்ன? ஒரு சிறிய செடியை எடுத்துக் கொள்வோம். மனிதன் ஒரு விதையைப் பூமியில் நட்டுத் தண்ணீர் விடுகிறான். சிறிது காலம் கழித்து, ஒரு சிறிய செடி பூமியிலிருந்து தலை நீட்டி, வளர்ந்து, பெரிய மரமாகிறது. பிறகு விதையை விட்டுவிட்டு அது அழிகிறது. விதையிலிருந்து முளைத்து, மரமாகி, மறுபடியும் விதையாகி, இப்படி ஒரு சுழற்சியை அது நிறைவு செய்கிறது.
ஒரு பறவையைப் பார்த்தால், அது முட்டையிலிருந்து பிறந்து, வளர்ந்து, எதிர்காலப் பறவைகளை உண்டாக்கும் விதைகளான முட்டைகளை இட்டுவிட்டு இறக்கிறது. மிருகங்கள், மனிதர்கள், ஆகிய அனைவரின் விஷயமும் இப்படித்தான்.
இயற்கையிலுள்ள எல்லாமே சில விதைகள், சில மூலப்பொருட்கள், சில நுட்பமான உருவங்கள் இவற்றிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன. சிறிதுசிறிதாகப் பருத்தன்மை அடைந்து, வளர்ந்து, சிலகாலம் அப்படியே தொடர்ந்து, பின்னர் மறுபடியும் பழைய நுட்பமான ஆரம்ப நிலையை அடைந்து, அடங்கிவிடுகின்றன. சூரிய கிரணங்கள் புகுந்து விளையாடும் மழைத்துளி, கடலிலிருந்து நீராவியாகி காற்றில் வெகுதூரம் மேலே போய், மறுபடியும் நீராக மாறி, பூமிக்கு மறைத்துளியாக வருகிறது. மறுபடியும் இதே சுழற்சி தொடர்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கையில் உள்ள எல்லாமே இந்தச் சுழற்சிக்குக் கட்டுப்பட்டவையே. பெரிய மலைகளைப் பனிப்பாறைகளும் ஆறுகளும் அரித்து, மெதுவாக ஆனால் நிச்சயமாக அவற்றை மணல்துகள்களாக மாற்றுகின்றன. இந்தத் துகள்கள் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டு, கடல் படுகையில் அடுக்கடுக்காக ஒன்றன்மேல் ஒன்றாகப் படிகின்றன. காலப்போக்கில் இறுகிப் பாறைகளாகி, எதிர்காலத்தில் மலைகளாக எழுகின்றன. இந்தச் சுழற்சி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. மணலிலிருந்து மலை தோன்றுகிறது; மலைமறுபடியும் மணலாகிறது.
இயற்கையின் இயக்கம் எங்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இதுவரை மனித அனுபவத்தில் இதற்கு மாறான கருத்து எழுந்ததில்லை என்பதும், ஒரு மணல்துகள்கள் உண்டாகும் அதே முறையில்தான் பிரம்மாண்டமான சூரியர்களும், நட்சத்திரங்களும் இந்தப் பிரபஞ்சத்தில் உண்டாகின்றன என்பதும், ஓர் அணு எப்படி அமைக்கப்பட்டிருக்கிறதோ, அதே முறையில்தான் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதும், பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே விதிதான் நிலவுகிறது என்பதும் உண்மையானால், ஒரு பிடி மண்ணை அறிந்துகொள்வதன் மூலம், இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா மண்ணின் இயல்பையும் நாம் அறிந்துகொள்ள முடியும் என்று வேதங்கள் கூறுவது சரியானதே ஆகும். ஒரு சிறிய செடியின் வாழ்க்கையை நாம் அறிந்துகொண்டால், இந்தப் பிரபஞ்சத்தை, அது உள்ளபடியே நாம் அறிய முடியும். ஒரு சிறு மணல்துகளின் இயல்பை நாம் அறிந்துகொண்டால், இந்தப் பிரபஞ்சத்தின் ரகசியம் முழுவதையும் நாம் புரிந்து கொள்வோம்.
இதே தர்க்கத்தை இயற்கை நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பொருத்திப் பார்த்தால், எல்லாவற்றிற்கும் ஆரம்பமும் முடிவும் ஒரேமாதிரி இருப்பதை நாம் காணலாம்.மலை, மணலிலிருந்து தோன்றி மறுபடியும் மணலாக மாறுகிறது. ஆறு, நீராவியிலிருந்து தோன்றி மீண்டும் நீராவியாக மாறுகிறது. தாவரம் விதையிலிருந்து தோன்றி விதையிலேயே முடிகிறது. மனித உயிர், மனித உயிரணுக்களிலிருந்து தோன்றி மனித உயிரணுக்களாக முடிகிறது. ஆறுகளும் நட்சத்திரங்களும் கிரகங்களும் நிறைந்த இந்தப் பிரபஞ்சம், முகிற்படல நிøலியலிருந்து தோன்றியிருக்கிறது. மறுபடியும் அதே நிலையைத்தான் அது அடைய வேண்டும்.
இதிலிருந்தெல்லாம் நாம் அறிவது என்ன? நுண்நிலை காரணம், தூலநிலை காரியம் என்பதுதான். அழிவு என்றால் காரண நிலையை அடைவதே என்பதை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, தத்துவ சாஸ்திரங்கள் அனைத்திற்கும் தந்தையான கபிலர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இதோ, இங்கே இருக்கும் மேஜையை உடைத்து, அழித்துவிட்டால், அது, நாம் மேஜை என்று சொல்லும் இந்த உருவத்தை அமைப்பதற்குக் காரணமாக இருந்த அதன் நுட்பமான துகள்களாகிய காரண நிலையை அடைந்துவிடுகிறது. மனிதன் இறக்கும்போது, அவனது உடலை உருவாக்கக் காரணமாக இருந்த மூலங்களின் நிலையை அடைகிறான். இந்தப் பூமி அழிந்தால், அதற்கு உருவம் அளித்த மூலகாரணத்தை அடைந்துவிடுகிறது. மூலகாரண நிலையை அடைவதையே நாம் அழிவு என்கிறோம்.
ஆகவே காரணமும் காரியமும் ஒன்றே, வேறு பட்டவை அல்ல என்பது தெரிகிறது. இரண்டும் உருவத்தில்தான் வேறுபடுகின்றன. இந்த டம்ளர் ஒரு காரியம்; இதற்கு ஒரு மூலகாரணம் இருக்கிறது. டம்ளர் என்ற உருவத்தில் அந்தக் காரணம் பொதிந்திருக்கிறது. டம்ளரின் மூலப்பொருள் ஒரு சிறிதளவும், அதற்கு உருவமளித்தவரின் கைகளிலிருந்த சக்தியுமே மூல காரணங்கள், அதாவது உபாதான மற்றும் நிமித்த காரணங்கள். இந்தக் காரணங்கள் இரண்டும் சேர்ந்து, டம்ளர் என்று நாம் சொல்கின்ற இந்த உருவத்தைப் படைத்திருக்கின்றன. டம்ளரைச் செய்தவரின் கையிலிருந்த சக்தியே, மூலப்பொருளின் துகள்கள், தூள் தூளாகப் பிரிந்து விழாமல் இணைக்கும் சக்தியாக டம்ளரில் இருக்கிறது. அதைத் தவிர, மூலப்பொருளும் இந்த டம்ளரில் இருக்கிறது. மூலக்காரணங்களின் புது புது உருவமே டம்ளர் என்னும் வெளிப்பாடு. இந்த டம்ளர் தூள்தூளாக உடைந்துவிட்டால், இணைப்புச் சக்தி அதனுடைய பிறப்பிடமான மூலப்பொருளுக்குப் போய்ச் சேர்ந்துவிடும். கண்ணாடித் துகள்களோ, புதிய உருவம் எடுக்கும்வரை அப்படியே இருக்கும்.
ஆகவே காரணம் காரியத்திலிருந்து வேறுபடுவதில்லை என்பதைக் காண்கிறோம். காரணம் இன்னும் அதிகமான தூலத் தன்மை அடைவதே காரியமாகும். மேலும், தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் என்று நாம் அழைக்கின்ற உருவங்கள் எல்லாமே முடிவில்லாமல் எழுவதும் விழுவதுமாகச் சுழன்று கொண்டிருப்பதை அறிகிறோம். விதை மரத்தை உண்டாக்குகிறது. மரம் விதையை உண்டாக்குகிறது. இப்படியே மாறிமாறி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முடிவே இல்லை. நீர்த்துளிகள், அருவிகளாக மலைகளிலிருந்து இறங்கி ஓடி, கடலில் கலக்கின்றன. அங்கிருந்து நீராவியாக மேலே போய், மறுபடியும் மழையாக மலை உச்சியில் பொழிகின்றன. இதுவும் மாறிமாறி நடந்து வருகிறது. இப்படி எழுவதும் விழுவதுமாக இந்தச் சுழற்சி நடந்துகொண்டே இருக்கிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமே இப்படித்தான் நடைபெறுகின்றன. நம்மால் காணமுடிந்த, உணரமுடிந்த, கேட்கமுடிந்த, கற்பனை செய்யமுடிந்த என்று நம் அறிவுக்கு உட்பட்ட எல்லாமே இப்படித்தான் நடைபெறுகின்றன. இது, மனிதர்கள் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவது போலிருக்கிறது. படைக்கப்பட்ட எல்லாமே இப்படித்தான் சுழன்று கொண்டிருக்கின்றன. அலை எழுகிறது, விழுகிறது. இவ்வாறே எல்லா செயல்களும் நடைபெறுகின்றன. ஒவ்வோர் உயர்வுக்கும் ஒவ்வொரு தாழ்வும், ஒவ்வோர் தாழ்வுக்கும் ஒவ்வொரு உயர்வும் உண்டு. பிரபஞ்சம் ஒரே திட்டத்தில் நடைபெறுவதால், இதே விதி பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றிற்கும் பொருந்த வேண்டும்.
இந்தப் பிரபஞ்சத்தை அதனுடைய காரணங்களாகப் பிரிக்க வேண்டும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பூமி, உடல், மனம் மற்றும் பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே மறைந்து, அழிந்ததுபோலாக வேண்டுமானால் தங்கள் நுட்பமான மூல காரணநிலையை அடைய வேண்டும். ஆனால் அவை மூல காரணங்களில் நுட்ப உருவத்துடன் இருக்கவே செய்யும். இந்த நுட்ப உருவங்களிலிருந்து மறுபடியும் அவை, புதிய பூமிகள், சூரிய சந்திரர்கள், மற்றும் நட்சத்திரங்களாகத் தோன்றுகின்றன.
இப்படி எழுவதையும் விழுவதையும் பற்றிய மற்றொரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். மரத்திலிருந்து விதை வருகிறது. அது உடனே மரமாக மாறுவதில்லை. அது சிலநாள் இயக்கமில்லாமல் இருக்கிறது. இதையே வேறுவிதமாகச் சொன்னால், வெளிப்படையாகத் தெரியாத ஒரு நுட்பமான இயக்கத்தில் அது ஈடுபட்டிருக்கிறது. விதை மண்ணுக்கு அடியில் தான் சிலகாலம் இயங்க வேண்டும். அங்கே அது பல துண்டுகளாக உடைந்து, சிதறி, அனேகமாக உருத்தெரியாமல் அழிகிறது. அந்த அழிவிலிருந்துதான், புத்துயிர் பெற்ற தாவரம் உற்பத்தியாகிறது.
பிரபஞ்சமும் ஆரம்பத்தில் சிலகாலம் இதேபோல் தான் நுட்பமான உருவத்துடன் வெளியில் தெரியாமலும் வெளிப்படாமலும் இயங்க வேண்டும். அந்த நிலையையே குழப்ப நிலை என்று சொல்கிறோம். அந்த நிலையிலிருந்துதான் புதிய படைப்பு தோன்றுகிறது. பிரபஞ்சம் நுட்பமான உருவத்துடன் சிலகாலம் இருந்து, பின்னர் வெளித் தோன்றும் இந்தக் கால அளவு சமஸ்கிருதத்தில் ஒரு கல்பம் அதாவது சுழற்சி என்று சொல்லப்படுகிறது.
அடுத்து, குறிப்பாகத் தற்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒரு கேள்வி எழுகிறது. நுட்பமான உருவங்கள் சிறிதுசிறிதாக வளர்ச்சியடைந்து தூலத்தன்மை பெறுகின்றன என்பதைக் காண்கிறோம். காரணமும் காரியமும் ஒன்றுதான், காரியம் காரணத்தின் வேறு உருவம் என்பதைக் கண்டோம். ஆகவே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் சூன்யத்திலிருந்து வெளிவந்திருக்க முடியாது. காரணமில்லாமல் எதுவும் தோன்ற முடியாது; காரணம் காரியத்தின் வேறு உருவம்.
அப்படியானால் எதிலிருந்து இந்தப் பிரபஞ்சம் தோன்றியது? அதற்கு முன்னால் இருந்த நுட்பமான பிரபஞ்சத்திலிருந்துதான். மனிதன் எதிலிருந்து தோன்றினான்? முன்னால் இருந்த நுட்பமான உருவத்திலிருந்துதான். மரம் எதிலிருந்து தோன்றியது? விதையிலிருந்துதான். மரம் முழுவதுமே விதைக்குள் இருந்தது. இப்போது அது வெளிவந்து, தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆகவே நுட்பமான உருவில் இருந்த பிரபஞ்சத்திலிருந்து தான் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே தோன்றியிருக்கிறது. அது இப்போது வெளிப்பட்டிருக்கிறது; பின்னர் தன்னுடைய நுட்பமான உருவத்திற்குத் திரும்பிச் சென்றுவிடும், மறுபடியும் வெளிப்படும். நுட்பமான உருவங்கள் வெளிப்பட்டுச் சிறிதுசிறிதாகத் தூலத் தன்மையை அடைகிறது. தூல நிலையிலேயே வளர்ந்து அந்தத் தன்மையின் எல்லையை அடைந்தவுடன், பின்னோக்கிப் போக ஆரம்பித்து, மறுபடியும் சிறிதுசிறிதாக நுட்ப நிலையை அடைகின்றன. நுட்ப நிலையிலிருந்து வெளிப்பட்டுத் தூலத் தன்மை அடைவதைத்தான், அதாவது பகுதிகளின் அமைப்பில் மாறுபாடு ஏற்படுத்திக் கொள்வதைத்தான் பரிணாமம் என்று தற்காலத்தில் சொல்கிறார்கள்.
இது உண்மை, நிச்சயமான உண்மை. நம் வாழ்க்கையிலேயே நாம் இதைக் காண்கிறோம். பகுத்தறிவுள்ள யாரும் பரிணாமத் தத்துவவாதிகளுடன் வாதிட முடியாது. ஆனால் நாம் இன்னும் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்னும் ஒரு படி மேலே போக வேண்டும். அது என்ன ? ஒவ்வொரு விரிவுக்கும் முன்னால் ஓர் ஒடுக்கம் உண்டு என்பதுதான் அது. விதைதான் மரத்திற்குத் தந்தை. அந்த விதைக்கு இன்னொரு மரம் தந்தையாக இருந்திருக்கிறது. விதை என்ற நுட்பமான உருவத்திலிருந்து தான் பெரிய மரம் வெளிவருகிறது, ஆனால் ஏற்கனவே வேறொரு பெரிய மரம் ஒடுங்கியதால் தோன்றியதுதான் இந்த விதை. இந்த விரிவான பிரபஞ்சம் முழுவதுமே நுட்பமான பிரபஞ்சத்திற்குள் ஒடுங்கியிருக்கிறது. பின்னால் மனிதனாகப் போகின்ற ஒரு சிறிய உயிரணு, உண்மையில், ஒடுங்கிய நிலையிலுள்ள மனிதனே. அது விரிவடைந்து முழு மனிதனாகிறது. இதை மட்டும் தெளிவாகப் புரிந்து கொண்டுவிட்டால், பரிணாமத் தத்துவவாதிகளுக்கும் நமக்கும் இடையே கருத்து வேற்றுமை இருக்காது. இந்த வாதத்தை அவர்கள் ஒப்புக் கொண்டால், மதத்தை அழிப்பவர்களாக இல்லாமல், மதத்தை ஆதரிப்பவர்களாக மாறிவிடுவார்கள்.
ஆகவே சூன்யத்திலிருந்து எதுவும் தோன்ற முடியாது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். எல்லாம் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது; இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் இயக்கம்தான் நுட்பத்திற்குச் செல்வதும், அதிலிருந்து தூலமாக வெளிப்படுவதும், மறுபடியும் நுட்பத்திற்குச் செல்வதுமாக, அலைபோல் எழுவதும் விழுவதுமாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. இந்த ஒடுக்கமும் விரிவும் இயற்கை முழுவதிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகவும் சிறிய உயிர் முதல் முழுமையடைந்த மனித வெளிப்பாடுவரை எல்லா பரிணாம வளர்ச்சியுமே, வேறு ஏதோ ஒன்றின் ஒடுக்கமாகவே இருக்க வேண்டும். எதனுடைய ஒடுக்கம்? எது ஒடுங்கியிருக்கிறது என்பதுதான் கேள்வி. அது கடவுள்தான் என்ற நம் கருத்து தவறு என்று பரிணாமத் தத்துவவாதிகள் கூறுவார்கள். ஏன்? ஏனெனில் கடவுள் அறிவு வடிவானவர் என்று நாம் சொல்கிறோம். ஆனால் பரிணாம வளர்ச்சியில் அறிவு மிகவும் தாமதமாக அல்லவா தோன்றுகிறது என்று பரிணாமவாதிகள் சொல்கிறார்கள். மனிதனிடமும் உயர்நிலையிலுள்ள மிருகங்களிடமும் தான் அறிவு காணப்படுகிறது, எனவே உயிர் தோன்றிப் பலகோடி வருடங்கள் கழிந்த பின்னரே, இந்த அறிவு தோன்றியிருக்கிறது என்றும் பரிணாமவாதிகள் சொல்கிறார்கள்.
நமது கொள்கையின் முன் பரிணாமவாதிகளின் ஆட்சேபம் அடிபட்டுப் போகிறது. மரம் விதையிலிருந்து தோன்றி, மறுபடியும் விதைக்குள்ளேயே ஒடுங்குகிறது. ஆரம்பமும் முடிவும் ஒன்றாகத்தான் இருக்கின்றன. பூமி அதன் காரணத்திலிருந்து வெளிவந்து அதற்குள்ளேயே ஒடுங்குகிறது. ஆரம்பம் தெரிந்தால் முடிவும் தெரிந்துவிடும் என்பது நமக்குத்தெரியும். அதேபோல், முடிவு தெரிந்தால் ஆரம்பமும் தெரிந்துவிடும். அப்படியானால், ஒரு முனையில் முதல் உயிரணுவும், மற்றொரு முனையில் நிறைநிலை அடைந்த மனிதனும் உள்ள பரிணாம வளர்ச்சித் தொடரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தொடர் முழுவதும் ஒரே உயிர்தான். பரிணாம வளர்ச்சியின் முடிவில் நிறைமனிதன் இருப்பதால், தொடக்கத்திலும் நிறைமனிதன்தான் இருந்திருக்க வேண்டும். ஆகவே மிக உயர்ந்த அறிவின் ஒடுக்கமே முதல் உயிரணுவாக இருக்க வேண்டும். நமக்கு அது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த ஒடுங்கிய அறிவு சிறிதுசிறிதாகத் தன்னை விரிவுபடுத்தி, கடைசியில் நிறைமனிதனாக வெளிப்படுத்துகிறது.
இதைக் கணித முறையில் நிரூபிக்க முடியும். சக்தியின் அளவு எப்போதும் மாறுவதில்லை என்ற நியதி உண்மையானால், முதலில் ஓர் எந்திரத்தில் எதையும் செலுத்தாமல் அதிலிருந்து எதையும் வெளிக்கொணர முடியாது. நீராவி எந்திரத்திற்குள் நீராகவும் நிலக்கரியாகவும் எவ்வளவு சக்தியைச் செலுத்துகிறோமோ, அதற்கு ஈடான வேலையைத்தான் அதிலிருந்து நாம் பெற முடியுமே தவிர, சிறிதுகூட அதிகமாகவோ குறைவாகவோ பெற முடியாது. காற்று, உணவு, மற்றும் பல பொருட்கள் மூலமாக என் உடலிற்குள் எவ்வளவு சக்தி சென்றிருக்கிறதோ, அதே அளவு வேலையைத்தான் நான் செய்ய முடியும். ஒரு வகைச் சக்தி, இன்னொரு வகைச் சக்தியாக மாறுதலடைந்து வெளிப்படுகிறது, அவ்வளவுதான். இந்தப் பிரபஞ்சத்திற்குள் ஏற்கனவே இருக்கும் சக்திக்கு மேல் சிறிதளவு சக்தியைக்கூடச் சேர்ப்பதோ, இருக்கும் பொருளுக்கு மேல் அணுவளவு பொருளைக்கூடச் சேர்ப்பதோ முடியாது. அல்லது, இருக்கும் பொருளிலிருந்து அணுவளவு பொருளை எடுப்பதோ முடியாத காரியம்.
அப்படியானால் இந்த அறிவு என்பது என்ன? ஏற்கனவே அது முதல் உயிரணுவுக்குள் ஒடுங்கி இருந்திருக்காவிட்டால், திடீரென்று சூன்யத்திலிருந்து தோன்றியிருக்க வேண்டும். இது அபத்தம். ஆகவே இயற்கையின் விதிகளைக் கடந்த, எல்லாவற்றையும் கடந்த, பிறப்புஇறப்பு அற்றவனான, பரிணாம வளர்ச்சிக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லாதவனான, நிறைமனிதனான சுதந்திரனான, தெய்வமனிதனான, கிறிஸ்து மனிதன், என்று கிறிஸ்தவர்களாலும், புத்த மனிதன் என்று பவுத்தர்களாலும், முக்தன் என்று யோகிகளாலும் அழைக்கப்படுவனான மனிதன், பரிணாம வளர்ச்சியாகிய சங்கிலியின் ஒரு முனையில் இருப்பவனான மனிதன், அந்தப் பரிணாமச் சங்கிலியின் மறுமுனையிலுள்ள முதல் உயிரணுவுக்குள் ஒடுங்கி இருந்திருக்கவே வேண்டும்.
இதே வாதத்தைப் பிரபஞ்சம் முழுவதற்கும் பொருத்திப் பார்த்தால், படைப்பிற்கு மூலகாரணமே அந்த அறிவுதான் என்பதைக் காண்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தைப்பற்றி மனிதன் கொண்டிருக்கும் மிக உயர்ந்த கருத்து என்ன? எல்லாமே அறிவுதான் என்பதும், பிரபஞ்சத்தின் பகுதிகள் எல்லாமே ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன என்பதும்தான். பழங்காலத்தில் இந்த அறிவின் வெளிப்பாட்டை ஒழுங்குமுறைக்கொள்கையின் மூலம் விளக்குவதற்கு முயன்றிருக்கிறார்கள். ஆகவே அறிவுதான் எல்லாவற்றிற்கும் ஆரம்பமாக இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் அந்த அறிவு ஒடுங்கியிருக்கிறது. முடிவில் அது முற்றிலும் விரிந்து நிற்கிறது. ஆகவே பிரபஞ்சத்தில் வெளிப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்ற அறிவு முழுவதுமே, பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணமான முதல்கருவில் அடங்கியிருந்த அறிவின் விரிவே ஆகும்.
பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்கும் இந்த அறிவைத் தான் கடவுள் என்கிறோம். வேறு எந்தப் பெயரால் வேண்டுமானாலும் அழையுங்கள். ஆரம்பத்தில் இருந்தது இந்த எல்லையற்ற அறிவுதான் என்பது நிச்சயம். பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இந்த அறிவு, முதல்கருவில் ஒடுங்கி நின்று, பின்னர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு விரிவடைந்து கடைசியில், கிறிஸ்துமனிதன், புத்தமனிதன் என்று நிறைமனிதனாகப் பரிணமிக்கிறது. பிறகு இந்த அறிவு, மூலகாரணத்திற்கு உள்ளேயே மறுபடியும் ஒடுங்கி விடுகிறது. அதானால்தான் எல்லா சாஸ்திரங்களும், நாம் வாழ்வது, இயங்குவது, இருப்பது எல்லாம் அவருள்தான் என்று சொல்கின்றன. நாம் கடவுளிடமிருந்து வந்தோம், கடவுளிடமே திரும்பிச் செல்கிறோம் என்று எல்லா சாஸ்திரங்களும் சொல்கின்றன.
தத்துவச் சொல்லங்காரங்களைக் கண்டு பயப்படாதீர்கள். வார்த்தைகளைக் கண்டு பயப்பட்டால், தத்துவ வாதிகள் ஆவதற்கு நாம் தகுதியற்றவர்கள். பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்திருக்கும் இந்த அறிவையே தத்துவவாதிகள் கடவுள் என்று சொல்கிறார்கள். கடவுள் என்று அந்தப் பழைய வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? என்று பலர் என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார்கள். ஏனெனில் அந்த வார்த்தைதான் நம் நோக்கத்திற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அதைவிடச்சிறந்த வார்த்தை நமக்குக் கிடைக்காது. மனித குலத்தின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆனந்தம் எல்லாமே அந்த வார்த்தையில் அடங்கியிருக்கின்றன. இப்போது அந்த வார்த்தையை மாற்றுவது முடியாத காரியம். இது போன்ற வார்த்தைகளை உண்டாக்கியவர்கள் பெரிய மகான்கள். அவர்கள் இத்தகைய வார்த்தைகளின் சக்தியையும் பொருளையும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் சமுதாயத்தில் இந்த வார்த்தைகள் பழக்கத்திற்கு வந்தபோது மூடர்களும் இதைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இதன் விளைவாக அவை தங்கள் உண்மைப் பொருளையும் மகிமையையும் இழந்துவிட்டன. கடவுள் என்ற வார்த்தை, நினைவுக்கெட்டாத காலத்திலிருந்தே பழக்கத்தில் இருந்து வருகிறது. பிரபஞ்சப் பேரறிவு, புனிதம், உன்னதம் போன்ற வார்த்தைகளால் குறிக்கப்படுகின்ற அனைத்துமே இந்த வார்த்தையில் அடங்கியிருக்கின்றன. யாரோ ஒரு முட்டாள் இந்த வார்த்தை சரியில்லை என்று சொன்னதற்காக அதைத் தூக்கி எறிந்துவிட வேண்டுமா என்ன? ஒருவன் வந்து, நான் சொல்லும் வார்த்தையைத்தான் உபயோகிக்க வேண்டும் என்று சொல்லலாம். மற்றொருவன் வந்து, நான் சொல்வதைத்தான் உபயோகிக்க வேண்டும் என்று சொல்லலாம். முட்டாள்தனமான வார்த்தைகளுக்கு முடிவே இருக்காது. பழைய வார்த்தையையே நாம் பயன்படுத்துவோம். ஆனால் அதை அதனுடைய உண்மையான பொருளில் பயன்படுத்த வேண்டும். அதைச் சார்ந்துள்ள மூடநம்பிக்கைகளை அகற்ற வேண்டும். அத்துடன் இந்தப் பழம்பெரும் வார்த்தையின் உண்மைப் பொருளை உணர வேண்டும். தொடர்பு விதியைப்பற்றி அறிந்திருந்தால், மிகவும் வலிமை வாய்ந்த, உன்னதமான பல கருத்துக்களோடு இந்த வார்த்தை இணைந்திருப்பதை நாம் உணரலாம்.
பலகோடி மக்கள் இத்தகைய வார்த்தைகளைப் பயபக்தியோடு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மிகவும் உன்னதமான, சிறந்த, அறிவுபூர்வமான, அன்புக்கு இலக்கான, ஏன், மனித இயற்கையிலேயே மிகவும் மேலான கருத்துக்களுடன் இவை இணைந்திருக்கின்றன. இந்த வார்த்தைகள் அந்தக்கருத்துக்களை நினைவூட்டுவனவாக இருப்பதால், அவற்றைக் கைவிட முடியாது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று மட்டுமே கூறி இந்தக் கருத்துக்களையெல்லாம் விளக்குவதற்கு நான் முயன்றிருந்தால், உங்களுக்கு என் பேச்சின் பொருள் விளங்கியே இருக்காது. ஆனாலும் இந்த எல்லா போராட்டங்களுக்கும் பிறகு அந்தப் புராதனப் பரம்பொருளை மறுபடியும் நாம் வந்து அடைந்துவிட்டோம்.
ஜடப்பொருள், எண்ணம், சக்தி, அறிவு மற்றும் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள பல்வேறு சக்திகளும் பிரபஞ்சப் பேரறிவின் வெளிப்பாடுகளே. இனிமேல் நாம் அந்தப் பேரறிவுப் பொருளை ஆண்டவன். என்று குறிப்பிடுவோம். நாம் பார்க்கின்ற கேட்கின்ற உணர்கின்ற எல்லாம், ஏன், பிரபஞ்சம் முழுவதும் அவருடைய படைப்பே; இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவரது வெளிப்பாடே, மேலும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவரே. சூரியனாக நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பதும், அன்னைபூமியாக இருப்பதும் அவரே; சமுத்திரம் அவரே; மென்மையான மழைத்தூறல் அவரே; நாம் சுவாசிக்கும் மென்காற்று அவரே; நம் உடலில் சக்தியாக இயங்குவது அவரே; பேச்சு, பேசும் மனிதன் எல்லாம் அவரே; இங்கே சொற்பொழிவைக் கேட்கக் கூடியிருக்கும் கூட்டம் அவரே. நான் நிற்கும் மேடை அவரே; உங்கள் முகங்களைப் பார்ப்பதற்கு எனக்கு உதவுகின்ற ஒளி அவரே; எல்லாம் அவரே. இந்தப்பிரபஞ்சத்தின் நிமித்த காரணமும் உபாதான காரணமும் அவரே; மிகச் சிறிய முதல் உயிரணுவுக்குள் ஒடுங்கி நின்று, பிறகு விரிந்து, கடைசியில் கடவுளாக வெளிப்படுவதும் அவரே; மிகச் சிறிய, தாழ்ந்த நிலையிலிருக்கும் அணுவாக ஒடுங்கி, பிறகு விரிந்து, தன்னையே போய் அடைவதும் அவரே; பிரபஞ்சத்தின் ரகசியம் இதுவே.
ஓ, பிரபுவே, ஆணும் நீயே; பெண்ணும் நீயே; இளமை மதர்ப்புடன் நடக்கும் வலிமை வாய்ந்த வாலிபனும் நீயே; ஊன்றுகோலுடன் தள்ளாடும் முதிர்ந்த கிழவனும் நீயே; எல்லாவற்றிலும் இருப்பதும் நீயே; எல்லாமாக இருப்பதும் நீயே. மனித அறிவைத் திருப்தி செய்கின்ற பிரபஞ்சத்தைப் பற்றிய கருத்து இது ஒன்று தான். ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் நாம் அவரிலிருந்தே தோன்றினோம். அவரிலேயே வாழ்கிறோம், அவரிடமே திரும்புவோம்.
பன்மையில் ஒருமை
-
புலன்களைப் புறநோக்கு உள்ளவையாகவே இறைவன் படைத்துள்ளார். அதனால் மனிதர்கள் புறமுகமாகப் பார்க்கிறார்கள். தங்களுக்கு உள்ளே பார்ப்பதில்லை. அவர்களுள் யாரோ ஒரு தீரன் மரணமிலாப் பெருநிலையை விரும்பி புலன்களை அகமுகமாகத் திருப்பி, உள்ளே ஆன்மாவை உணர்கிறான் நான் ஏற்கனவே கூறியது போல் நாம் வேதங்களில் காணும் முதல் ஆராய்ச்சி, புறப் பொருட்களைப் பற்றியதாக இருந்தது. பிறகு, புற உலகில் பொருட்களின் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாது; வெளியில் பார்ப்பதால் அல்ல, பார்வையை உள்ளே திருப்புவதால் மட்டுமே அது முடியும் என்ற கருத்துத் தோன்றியது.
ஆன்மாவைக் குறிக்கும் வார்த்தை மிகவும் பொருள் செறிந்தது. அகத்துள் போயிருப்பவர் (ப்ரத்யகாத்மா) என்பதே அந்த வார்த்தை. அவர் நமது உயிருக்கு உயிர், நம் இதய மையம், நமது அடிப்படை உண்மை, எல்லாம் எங்கிருந்து வருகின்றனவோ அந்த மையம். மனம், புலன்கள் மற்றும் நாம் பெற்றிருக்கும் எல்லாமே அந்த மையச் சூரியனிலிருந்து வெளிவரும் கிரணங்கள்தான்.
அறிவில் சிறியோரும் அஞ்ஞானிகளும் புற இன்பங்களைத் தேடி ஓடுகிறார்கள். விரிந்து கிடக்கும் மரண வலையில் அவர்கள் விழுகிறார்கள். அறிவாளிகள் மரணமிலாப் பெருநிலையைப் புரிந்துகொண்டு, எல்லைக்கு உட்பட்ட பொருட்களில் எல்லையற்றதைத் தேடுவதில்லை. முதலில் சொன்ன கருத்தே இங்கே தெளிவாக்கப்படுகிறது. எல்லைக்கு உட்பட்ட பொருட்கள் நிறைந்த இந்தப் புறவுலகில், எல்லையற்றதைக் காண்பது முடியாத காரியம். எல்லையற்றதை எல்லையற்றதில் மட்டுமே தேட வேண்டும். நம்மிடம் எல்லையற்றதாக இருக்கும் ஒரே பொருள் நம்முள் இருப்பதான நமது ஆன்மாதான். உடல், மனம், எண்ணங்கள், நம்மைச் சுற்றி நாம் காணும் உலகம் எதுவுமே எல்லையற்றது அல்ல. காண்பவன் அதாவது மனிதனின் ஆன்மாவிற்குத்தான் இவையெல்லாம் சொந்தம். மனிதனுக்கு உள்ளே எப்போதும் விழித்திருக்கின்ற அந்த ஆன்மா மட்டுமே எல்லையற்றது. பிரபஞ்சத்தின் தோற்றத்திற்குக் காரணமான எல்லையற்ற பரம்பொருளைத் தேட வேண்டுமானால் நாம் அங்குதான் தேட முடியும். எல்லையற்ற ஆன்மாவிலேயே அதை நாம் காண முடியும். இங்கே இருப்பது அங்கேயும் இருக்கிறது; அங்கே இருப்பதுதான் இங்கேயும் இருக்கிறது. பன்மையைக் காண்பவன் மரணத்திலிருந்து மரணத்திற்குப் போய்க் கொண்டே இருக்கிறான்.
சொர்க்கத்திற்குப் போகும் ஆசை முதலில் எவ்வாறு இருந்தது என்பதைப் பார்த்தோம். பழங்கால ஆரியர்கள், தங்களைச் சுற்றியுள்ள உலகில் அதிருப்தி அடைந்தவுடன், இறந்தபின் வேறு ஓர் உலகிற்குப் போவோம், அங்குத் துன்பமே இருக்காது, இன்பம் மட்டுமே நிறைந்திருக்கும் என்று இயற்கையாகவே நினைத்தார்கள். இந்த உலகங்களைத் தங்கள் கற்பனையில் பலவாகப் பெருக்கிக் கொண்டு, அவற்றைச் சொர்க்கங்கள் என்று அழைத்தார்கள். அங்கே எப்போதும் இன்பமே இருக்கும்; உடல், மனம் எல்லாமே பூரணத்துவம் பெற்றுவிடும்; பித்ருக்களோடு அங்கே வாழலாம் என்றெல்லாம் அவர்கள் நம்பினார்கள். ஆனால் தத்துவ சாஸ்திரம் தோன்றியவுடனேயே, இந்தக் கருத்து முட்டாள்தனமானது, சாத்தியமற்றது என்று உணர்ந்தார்கள். எல்லையற்ற இடம் என்ற கருத்தே முன்னுக்குப்பின் முரணானதாகும். ஏனெனில் இடம் என்பது காலத்தில் ஆரம்பித்து, காலத்திலேயே தொடர்ந்து இருப்பது. ஆகவே அவர்கள் அந்தக் கருத்தைக் கைவிட நேர்ந்தது. சொர்க்கத்திலுள்ள இந்தத் தேவர்களெல்லாம் ஒரு காலத்தில் பூமியில் மனிதர்களாக இருந்தவர்கள், தங்கள் நல்ல காரியங்களால் தேவர்களாக உயர்ந்தவர்கள். தேவத்துவம் என்பது உண்மையில் வெவ்வேறு நிலைகளே, வெவ்வேறு பதவிகளே. வேதங்களில் காணப்படும் தேவர்கள் யாருமே நிலையாக உள்ளவர்கள் அல்ல என்று கண்டார்கள்.
உதாரணமாக இந்திரன், வருணன் என்பவையெல்லாம் குறிப்பிட்ட சிலரின் பெயர்கள் அல்ல. அவை, பதவிகளின் பெயர்கள் மட்டுமே. முன்பு இருந்த இந்திரன் இப்போது உள்ள இந்திரன் அல்ல. பழைய இந்திரன் இறந்து, அந்தப் பதவி, பூமியிலிருந்த மனிதன் ஒருவனுக்குக் கிடைத்துவிட்டது. எல்லா தேவர்களின் நிலையும் இதுவே. தேவர்களின் நிலைக்குத் தங்களை உயர்த்திக்கொண்ட மனித உயிர்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வகித்து வரும் பதவிகளே இவை. இந்தத் தேவர்களுக்கும் மரணம் உண்டு. மரணமில்லாத நிலையை இந்தத் தேவர்களோடு தொடர்புபடுத்திப் பேசியிருப்பதைப் பழைய ரிக் வேதத்தில் நாம் காண்கிறோம். பின்னால் இந்தக் கருத்து முற்றிலுமாகக் கைவிடப்பட்டது. மரணமற்ற நிலை என்பது காலம், இடம் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. ஆகவே எவ்வளவு நுண்ணியதாக இருந்தாலும் பவுதீக உருவம் எதனுடனும் இந்த நிலையைத் தொடர்புபடுத்த முடியாது என்று அவர்கள் கண்டார்கள். பவுதீக உருவம் எவ்வளவு நுட்பமாக இருந்தாலும், அவை காலம், இடம் இவற்றிற்குக் கட்டுப்பட்டதே. ஏனென்றால் பவுதீக உருவத்தின் மூலக்கூறுகள் இடம் என்பதிலிருந்தே வர வேண்டும். இடத்திற்குள் கட்டுப்படாத உருவத்தைக் கற்பனை செய்து பாருங்கள். முடியாது. உருவத்தை உருவாக்கும் மூலப் பொருட்களில் இடமும் ஒன்றாகும். இதுவும் இடைவிடாமல் மாறிக்கொண்டே இருக்கிறது.
இடமும் காலமும் மாயையின் உள்ளேயே உள்ளதாகும். இங்கே இருப்பது அங்கேயும் இருக்கிறது என்ற வாக்கியம் இந்தக் கருத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. தேவர்கள் இருப்பார்களானால் அவர்களும் இந்த உலக விதிகளுக்குக் கட்டுபட்டேயாக வேண்டும். இனி, எல்லா விதிகளுமே மீண்டும்மீண்டும் அழிந்து தோன்றுவதை இயல்பாகக் கொண்டவை. இந்த விதிகள் ஜடப்பொருளை வெவ்வேறு உருவங்களாக வார்க்கின்றன, பின்னர் அழிக்கின்றன. பிறந்ததெல்லாம் இறக்கத்தான் வேண்டும். ஆகவே சொர்க்கங்கள் இருந்தால் அவற்றையும் இந்த விதிகள் கட்டுப்படுத்தவே செய்யும்.
இந்த உலகில், இன்பத்தைத் தொடர்ந்து அதன் நிழலாகத் துன்பம் வருவதைக் காண்கிறோம். வாழ்க்கையின் நிழல் மரணமாக உள்ளது. அவை சேர்ந்தே இருக்கும். ஏனெனில் அவை ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, தனித்தனியானவை அல்ல. வாழ்வு-சாவு, இன்பம்-துன்பம், நன்மை-தீமை இவை எல்லாமே ஒரே பொருளின் வேறுபட்ட வெளிப்பாடுகள் மட்டுமே. நன்மையும் தீமையும் தனித்தனியானவை என்பதும், இப்படியே காலவரம்பின்றி இவை இருந்து கொண்டிருக்கின்றன என்பதும் முற்றிலும் தவறானவை. அவை ஒரே உண்மையின் வேறுபட்ட வெளிப்பாடுகள்; ஒரு சமயத்தில் தீமையாகவும் மற்றொரு சமயத்தில் நன்மையாகவும் தெரிகிறது. வித்தியாசம் தன்மையில் இல்லை, அளவில்தான் இருக்கிறது. அளவின் தீவிரத்தில்தான் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுகிறது. ஒரே நரம்பு மண்டலம் தான் இன்ப உணர்ச்சிகள், துன்ப உணர்ச்சிகள் இரண்டையும் கொண்டு செல்கிறது என்பது நமக்குத் தெரிந்த உண்மை. அந்த நரம்புகள் சேதமடைந்தால் இரண்டையுமே நாம் உணர்வதில்லை. ஒரு குறிப்பிட்ட நரம்பு செயலற்றுவிட்டால், அதன்மூலம் கிடைத்து வந்த இன்ப அனுபவம் நமக்குக் கிடைப்பதில்லை; அதேபோல் துன்ப அனுபவமும் கிடைப்பதில்லை. அவை ஒருபோதும் இரண்டல்ல, ஒன்றுதான்.
ஒரே பொருள், வாழ்க்கையில், ஒரு சமயத்தில் இன்பமும் மற்றொரு சமயத்தில் துன்பமும் அளிப்பதாக இருக்கிறது. ஒரே நிகழ்ச்சி ஒருவருக்கு இன்பத்தையும் மற்றொருவருக்குத் துன்பத்தையும் அளிக்கிறது. இறைச்சியை உண்பவன் இன்பம் அடைகிறான். அந்த இறைச்சிக்காகக் கொல்லப்படும் பிராணி துன்பம் அடைகிறது. எல்லோருக்கும் ஒரேபோல் இன்பம் அளிக்கும் பொருள் என்று ஒன்று உலகத்தில் இல்லவே இல்லை. சிலருக்கு இன்பமும் வேறு சிலருக்குத் துன்பமும் கிடைக்கிறது. இப்படியேதான் நடந்து கொண்டிருக்கும். ஆகவே இரண்டு என்ற இந்த வேறுபாட்டிற்கே இடமில்லை. தொடர்வது என்ன? உலகில், தீமையே கலக்காத நன்மை மட்டுமே இருக்கும் காலம் என்றுமே வராது என்பதை இதற்கு முந்திய சொற்பொழிவில் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். இது உங்களில் சிலருக்கு ஏமாற்றத்தையும் பயத்தையும் அளித்திருக்கும். ஆனால் அதை நான் சொல்லாமல் இருக்க முடியாது. மாறான கருத்தை நிரூபித்தால் என் கருத்தை மாற்றிக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஆனால், மாறான அந்தக் கருத்து நிரூபணமாகி, நானும் அதை உண்மை என்று அறியாமல், என் கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன்.
என்னுடைய கருத்திற்கு எதிரான வாதம் வெளிப்பார்வைக்கு மிகவும் திருப்திகரமாகத்தான் தோன்றுகிறது. அந்த வாதம் இதுதான்: பரிணாம வளர்ச்சியில், நம்மைச் சுற்றி நாம் காணும் தீமைகள் குறைந்துகொண்டே வருகின்றன. இவ்வாறு கோடிக் கணக்கான வருடங்களுக்குக் குறைந்துகொண்டே போகுமானால், உலகில் தீமையே இல்லாமல் நன்மை மட்டுமே எஞ்சியிருக்கும் காலம் ஒன்று வரும். இது மிகவும் சிறந்த வாதமாகத்தான் தோன்றுகிறது. இது உண்மையாக இருக்குமானால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இந்த வாதத்தில் ஒரு குறை இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நன்மை தீமை இரண்டும் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கின்றன என்று நாம் கொள்வதுதான் இந்தக் குறைபாடு. குறிப்பிட்ட அளவு தீமையும், அதேபோல் குறிப்பிட்ட அளவு நன்மையும் ஏற்கனவே இருப்பதாகவும், தீமை நாளுக்குநாள் குறைந்துகொண்டே வந்து, கடைசியில் நன்மை மட்டுமே மிஞ்சி இருப்பதாகவும்தான் இந்த வாதம் சொல்கிறது.
இது உண்மையா? தீமை, நன்மை இரண்டுமே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவதாக அல்லவா உலக வரலாறு காட்டுகிறது! காட்டில் வசிக்கும் மிகத் தாழ்ந்த மனிதனை எடுத்துக் கொள்வோம். அவனுடைய இன்பமனுபவிக்கும் சக்தி மிகக் குறைவு. அதேபோல், துன்பமனுபவிக்கும் சக்தியும் மிகவும் குறைவுதான். அவனுடைய துன்பம் புலன்நிலைக்கு அப்பால் போவதில்லை. வயிறு நிறைய உணவு கிடைக்காவிட்டால் அவன் துன்பம் அடைகிறான். நிறைய உணவும், காட்டில் விருப்பம்போல் சுற்றி வேட்டையாடும் சுதந்திரமும் கிடைத்துவிட்டால் அவனைப்போல் இன்பம் அடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அவனுடைய இன்பம், துன்பம் இரண்டுமே புலனளவில்தான் இருக்கின்றன. அதே மனிதன், தன் அறிவை வளர்த்துக்கொண்டால், அவனது இன்ப அனுபவம் அதிகரிக்கிறது. அறிவுச் சுரங்க வாசல் அவனுக்குத் திறக்கிறது. அவனுடைய புலனின்பம் அறிவின்பமாக வளர்ச்சியடைகிறது. ஓர் அழகிய கவிதையைப் படிப்பதில் அவன் இன்பம் காண்கிறான். ஒரு கணிதப் பிரச்சினையில் அவன் தன்னை மறந்து ஈடுபடுகிறான். ஆனால் அதனுடன் கூடவே நுட்பமடைந்த நரம்புகள், மனத் துன்பத்திற்கு மிகவும் சுலபமாக அடிமைப் படுகின்றன. காட்டு மனிதனுக்கோ மனத்துன்பம் என்பதே இல்லை.
மிகவும் சாதாரணமான உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். திபெத்தில் திருமணச் சடங்கு இல்லை, அதனால் பொறாமையும் இல்லை. திருமணம் ஓர் உயர்ந்த நிலை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். கற்பு, பதிவிரதையான மனைவியால் ஏற்படும் இன்பம், பிறபெண்டிரை மனத்தாலும் நினைக்காத கணவனால் ஏற்படும் இன்பம் இவற்றைப் பற்றியெல்லாம் திபெத்தியர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்களால் இதை உணர முடியாது. அதைப் போலவே, கற்புள்ள மனைவி, கணவன் இவர்களுக்குத் தோன்றும் தீவிரமான பொறாமை உணர்ச்சி, இவர்கள் செய்யும் நம்பிக்கைத் துரோகம், இதனால் ஏற்படும் துன்பங்கள், மனப்புண் இவையெல்லாமும் திபெத்தியர்களுக்கு இல்லை. பின்னவர்கள், ஒரு பக்கத்தில் இன்பம் அடைகிறார்கள்; மறுபக்கத்தில் துன்பம் அடைகிறார்கள்.
உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடான உங்கள் நாட்டையே எடுத்துக்கொள்வோம். உங்கள் நாடு மற்ற நாடுகளைவிடப் போகம் மிகுந்தது. அதேவேளையில் இங்கே உள்ள துன்பத்தின் தீவிரம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதையும் பாருங்கள். மற்ற இனங்களோடு ஒப்பிட்டால், உங்கள் நாட்டில்தான் பைத்தியக்காரர்கள் அதிகம். ஆசைகள் தீவிரமாக இருப்பதுதான் இதற்குக் காரணம். இங்கே, மனிதன் தன் வாழ்க்கைத் தரத்தை மிகவும் உயர்த்திக்கொள்ள வேண்டும். இங்கே ஒருவன் ஒரு வருடத்தில் செலவழிக்கும் பணம், இந்தியாவிலுள்ள ஒரு மனிதனுக்கு ஒரு பெரும் சொத்தாகும். இங்கே உள்ளவனுக்கு, எளிய வாழ்க்கையைப்பற்றி உபதேசம் செய்ய முடியாது. ஏனெனில் இங்கே உள்ள சமுதாயம், மனிதனை ஆடம்பர வாழ்க்கைக்குத்தான் கட்டாயப்படுத்துகிறது. சமுதாயத்தின் சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கிறது. விதவைகளின் கண்ணீரையும் அனாதைகளின் அழுகையையும் அது பொருட்படுத்துவதில்லை. எங்கு பார்த்தாலும் இதே நிலைதான் இருக்கிறது. உங்களுடைய இன்பம் அனுபவிக்கும் உணர்ச்சி வளர்ச்சி அடைந்திருக்கிறது. மற்ற சில சமுதாயங்களைவிட உங்கள் சமுதாயம் மிகவும் அழகானதாகவும் இருக்கிறது. நீங்கள் அனுபவிப்பதற்கு மற்றவர்களைவிட அதிகமான விஷயங்கள் இருக்கின்றன.
உங்களைவிடக் குறைவான இன்பம் அனுபவிப்பவர்களுக்குத் துன்ப அனுபவமும் குறைவாகவே இருக்கிறது. இவ்வாறு வாதம் செய்துகொண்டே போகலாம். குறிக் கோள் உயர்ந்ததாக இருக்கும் அளவிற்கு இன்ப அனுபவம் அதிகமாக இருக்கும், அதேபோல் துன்ப அனுபவமும் அதிகமாக இருக்கும், ஒன்று மற்றொன்றின் நிழல்போல் இருக்கிறது. தீமைகள் குறைந்துகொண்டே வருகின்றன என்பது உண்மையாக இருக்கலாம். அது உண்மையானால் நன்மைகளும் குறைந்து கொண்டுதான் வரவேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த அளவில், நன்மைகள் குறைந்து கொண்டும், தீமைகள் வேகமாக அதிகமாகிக் கொண்டும் அல்லவா வருகிறது! நன்மை கூட்டல் விகிதத்தில் அதிகரித்தால், தீமை பெருக்கல் விகிதத்தில் அல்லவா அதிகரிக்கிறது! இதுதான் மாயை. இது இன்பநோக்குமல்ல; துன்பநோக்குமல்ல. உலகம் வெறும் துன்பமயமானது மட்டுமே என்பது வேதாந்தத்தின் கருத்தல்ல. அது உண்மையாக இருக்காது. அதே வேளையில் இன்பமும் வாழ்த்துக்களும் நிறைந்ததுதான் உலகம் என்று சொல்வதும் தவறாகும்.
ஆகவே இந்த உலகம் நன்மை நிறைந்தது, மலர்கள் பூத்துக் குலுங்குவது, பாலும், தேனும் ஆறாகப் பாய்வது என்று குழந்தைகளிடம் சொல்வதால் பயனில்லை. நாமும் அப்படித்தான் கனவு கண்டு வந்திருக்கிறோம். அதேவேளையில் ஒருவன் மற்றொருவனைவிட அதிகத் துன்பத்தை அனுபவிப்பதால், உலகமே தீமை நிறைந்தது என்று நினைப்பதும் தவறு. இந்த நன்மை தீமைகளாகிய இருமைகளின் விளையாடல்தான், நாம் அனுபவிக்கும் இந்த உலகத்தையே ஆக்குகின்றன. அதேவேளையில் நன்மையும் தீமையும் வெவ்வேறானவை, தனிப்பட்டவை என்று நினைக்காதீர்கள்; அவை ஒன்றேதான்; வெவ்வேறு அளவிலும், வெவ்வேறு வகையிலும் தோன்றி, ஒரே மனத்தில் வெவ்வேறு உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன என்று வேதாந்தம் கூறுகிறது.
ஆகவே புற உலகத்தில் ஒருமையைக் காண்பதுதான் வேதாந்தத்தின் முதல் காரியமாகும். அந்த ஒரே பொருள் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் வேறுபாடுகளைக் காட்டினாலும் அது ஒன்றேதான். பாரசீகர்களுடைய பழைய பண்படாத கொள்கையைப் பாருங்கள். இரு தெய்வங்கள் உலகைப் படைப்பதாகவும், நல்ல தெய்வம் நன்மையே செய்வதாகவும், தீய தெய்வம் தீமையே செய்வதாகவும் அது கூறுகிறது. இது அறிவுக்குப் பொருந்தாது என்பது வெளிப்படை. ஏனென்றால், உலகம் இவ்வாறு நடைபெற்றால், இயற்கையின் ஒவ்வொரு விதிக்கும் இரண்டு பகுதிகள் இருக்க வேண்டும்; அதில் ஒரு தெய்வம் ஒரு பகுதியில் நன்மை செய்துவிட்டுத் தன் வழியே போய்விடுவார். பின்னர் மற்ற தெய்வம் வந்து மறு பகுதியைக் கவனிக்க வேண்டும். ஆனால் இரண்டு தெய்வங்களும் ஒரே உலகத்தில் வேலை செய்கின்றனர். இந்த இரு தெய்வங்களும் ஒரு பகுதிக்குத் தீமையையும், மற்றொரு பகுதிக்கு நன்மையும் செய்தும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பதுதான் சிக்கலான பகுதி.
இது வாழ்க்கையின் இருமையைக் காட்டுகின்ற, பக்குவம் பெறாத முறையாகும். உலகத்தில் சிறிது நன்மை உண்டு, சிறிது தீமையும் உண்டு என்பது சிறிது முன்னேற்றமடைந்த கருத்து. முன்சொன்ன நிலையிலிருந்து பார்க்கும்போது இந்தக் கருத்தும் அறிவுக்குப் பொருந்தாததுதான். ஒருமை விதிதான் நமக்கு உணவு அளிக்கிறது; அதே விதிதான் விபத்துக்கள் மற்றும் ஆபத்துக்கள் மூலமாக எத்தனையோ பேரை மரணத்திலும் ஆழ்த்துகிறது.
ஆகவே உலகம் இன்பநோக்கு உடையதும் அல்ல. துன்ப நோக்குக் கொண்டதும் அல்ல. அது இரண்டும் கலந்த ஒன்று. அது மட்டுமல்ல இன்னும் ஆராய்ந்தால், மொத்தத் தவறும் இயற்கையில் இல்லை, நம்மிடம்தான் இருக்கிறது என்பதையும் நாம் உணர்வோம். இந்தச் சிக்கலிலிருந்து விடுபடும் வழியை வேதாந்தம் காட்டுகிறது. அந்த வழி தீமையை மறுப்பதல்ல. ஏனெனில் அது உண்மையை உள்ளபடியே துணிவுடன் ஆராய்கிறது, எதையும் அது மறைக்க முயல்வதில்லை. அது நம்பிக்கையை இழக்கவில்லை. கடவுளைப்பற்றிச் சந்தேகம் கொள்வதில் அது ஒரு பரிகாரத்தைக் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் அதனை உறுதியானதோர் அஸ்திவாரத்தின்மீது வைக்க விரும்புகிறது. குழந்தையின் கண்களையும் வாயையும் உண்மையல்லாத ஒன்றால் கட்டிவிட்டு எதையும் செய்ய வேதாந்தம் முயல்வதில்லை. ஏனெனில் குழந்தை சில நாட்களில் உண்மையை அறிந்துகொள்ளும் என்பது வேதாந்தத்திற்குத் தெரியும்.
நான் இளைஞனாக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. ஒரு வாலிபனின் தந்தை, சொத்தில்லாத நிலையில் பெரிய குடும்பத்தை அவன் தலையில் கட்டிவிட்டு இறந்துவிட்டார். அவனுடைய தந்தையின் நண்பர்கள், அவனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. தன் கஷ்டத்தை ஒரு மதப்பிரச்சாரகரிடம் அவன் சொன்னபோது, ஓ, எல்லாம் நன்மைக்கே, நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று அவர் உபதேசம் செய்தார். பழுத்த புண்ணின்மீது தங்க இலையை வைத்து மறைப்பது போன்ற பழைய பரிகாரம் இது. பலவீனத்தையும் முட்டாள்தனத்தையும் ஒத்துக்கொள்வதே இது. வாலிபன் அங்கிருந்து போய்விட்டான். ஆறுமாதத்திற்குப் பின்னால் அந்தப் பிரச்சாரகருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர் ஒரு விருந்து வைத்தார். அதற்கு அந்த வாலிபனையும் அழைத்திருந்தார். கடவுளின் கருணைக்கு நன்றி என்று அவர் பிரார்த்தனை செய்தார். வாலிபன் எழுந்து நின்று, நிறுத்துங்கள்; இதெல்லாம் துன்பம் என்று கூறினான். ஏன்? என்று அவர் கேட்டார். என் தந்தை இறந்தபோது, வெளிப்படையாகத் தீமையாகத் தோன்றினாலும் உண்மையில் அது நன்மையே என்று கூறினீர்கள். அதன் படி பார்த்தால் உங்களுக்குக் குழந்தை பிறந்திருப்பது தீமைதானே என்று வாலிபன் கூறினான். இதுதான் உலகின் துன்பத்தைத் துடைக்கும் வழியா? நல்லவர்களாக இருங்கள். துன்புறுவோருக்குக் கருணை காட்டுங்கள். அதை மூடி மறைக்க முயலாதீர்கள். அது இந்த உலகத்தின் துன்பத்தைத் தீர்க்காது. அதற்கும் அப்பால் செல்லுங்கள்.
நன்மையும் தீமையும் கலந்தது உலகம். நன்மை இருக்கும் இடமெல்லாம் தீமை தொடர்கிறது. இந்த வெளிப்பாடுகள், முரண்பாடுகள் அனைத்தையும் கடந்து, அனைத்திற்கும் அப்பால் ஒருமையை வேதாந்தம் காண்கிறது. தீமையை விடுங்கள், நன்மையையும் விடுங்கள் என்று அது கூறுகிறது. எஞ்சியிருப்பது என்ன? நன்மை, தீமை இரண்டிற்கும் பின்னால்தான், ஒவ்வொரு தீமைக்கும், அதுபோல் ஒவ்வொரு நன்மைக்கும் அப்பால்தான் உங்களுக்குச் சொந்தமான ஏதோ ஒன்று இருக்கிறது, உண்மையான நீங்கள் இருக்கிறீர்கள். நன்மையாகவும் தீமையாகவும் அந்த ஒன்றுதான் வெளிப்படுகிறது. அதை முதலில் அறிந்து கொள்வோம். அப்போது, அப்போது மட்டுமே நாம் உண்மையான இன்பநோக்குவாதிகள் ஆவோம், அதற்கு முன்னால் அல்ல. ஏனெனில் அப்போதுதான் நம்மால் எல்லாவற்றையும் அடக்கியாள முடியும். இந்த வெளித் தோற்றங்களை அடக்கியாளும் போது உண்மையான நாம் என்பதை வெளிப்படுத்துவதற்கு நமக்குச் சுதந்திரம் இருக்கும். முதலில் உங்களுக்கே நீங்கள் எஜமானர்களாக இருங்கள். எழுந்து நில்லுங்கள், சுதந்திரர்களாக இருங்கள். இயற்கையின் விதிகளுக்கு அப்பால் செல்லுங்கள். ஏனெனில் இந்த விதிகள் உங்களை ஒருபோதும் ஆளவில்லை. அவை உங்களில் ஒரு பகுதி மட்டுமே. முதலில் நாம் இயற்கையின் அடிமைகள் அல்ல என்பதை உணர்வோம். இயற்கையின் அடிமைகளாக நாம் இருந்ததுமில்லை; இருக்கப் போவதுமில்லை. இந்த இயற்கை எல்லையற்றது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது எல்லைக்கு உட்பட்டது. நமது ஆன்மா என்னும் கடலில் அது ஒரு துளி மட்டுமே. சந்திர சூரியர்களை, நட்சத்திரங்களை எல்லாம் கடந்தவர்கள் நாம். நமது எல்லையற்ற ஆன்மாவோடு ஒப்பிடும்போது, அவையெல்லாம் வெறும் நீர்க்குமிழி போன்றவை. இதை அறிந்தால், நன்மை, தீமை இரண்டையும் நம்மால் அடக்கியாள முடியும். அப்போது மட்டுமே காட்சி முழுவதும் மாறும். துடிப்புடன் எழுந்து நின்று, நன்மை எவ்வளவு அழகாக இருக்கிறது! தீமை எவ்வளவு அற்புதமாக இருக்கிறது! என்று கூறுவோம்.
வேதாந்தம் போதிப்பது இதுவே. புண்களைத் தங்க இலையால் மறைத்து, புண்கள் இன்னும் மோசமானவுடன், இன்னும் அதிகமான தங்க இலைகளால் மறைப்பதைப் போன்ற பொய்யான பரிகாரத்தை வேதாந்தம் கூறுவதில்லை. இந்த வாழ்க்கை ஒரு கடினமான உண்மை. அது வலிமை பெற்றதாக இருந்தாலும், அதன் மூலம் வழியைக் கண்டுபிடித்துத் தைரியமாகச் செல்லுங்கள். எதையும் பொருட்படுத்தாதீர்கள். ஆன்மா வலிமை வாய்ந்தது. சாதாரண தெய்வங்களின்மீது அது பொறுப்பைச் சுமத்துவதில்லை. நம்முடைய அதிர்ஷ்டங்களுக்கு நாமே காரணம். நாமே நம்முடைய துன்பங்களுக்கும் காரணம். நமது நன்மை தீமைகளை நாமே உண்டாக்கிக் கொள்கிறோம். நாமே நம் கைகளால் கண்களை மறைத்துக்கொண்டு, இருட்டாக இருக்கிறதே என்று கதறுகிறோம். கைகளை விலக்கிவிட்டு ஒளியைப் பாருங்கள். நீங்கள் ஏற்கனவே முழுமை பெற்றவர்கள், ஒளி பெற்றவர்கள். இங்கே பன்மையைப் பார்ப்பவன், மரணத்திலிருந்து மரணத்திற்குப் போய்க் கொண்டேதான் இருக்கிறான் என்ற பாடலின் பொருளை இப்போது நாம் உணர்கிறோம். அந்த ஒன்றைப் பாருங்கள், சுதந்திரர்களாக இருங்கள்.
அதை நாம் எப்படிக் காண்பது? பொய்த் தோற்றங்களால் ஏமாற்றப்பட்ட, பலவீனமான, எளிதாக ஏமாறக் கூடியதான மனம்கூட உறுதிபெற்று, அந்த ஒன்றேயான அறிவுப்பொருளின் கணநேரக் காட்சி பெறக்கூடும். அது ஒன்றுதான் நாம் மீண்டும்மீண்டும் மரணமடைவதிலிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும். மலை உச்சியில் பெய்யும் மழை, நாலா பக்கங்களிலும் வழிந்து ஓடுவது போல், இந்த உலகில் காணும் எல்லா சக்திகளும் அந்த ஒருமையிலிருந்துதான் பிறக்கின்றன. மாயைக்கு உட்பட்டு, அது பலவாகத் தோற்றமளிக்கிறது. பன்மையைப் பின்தொடர்ந்து ஓடக்கூடாது; ஒருமையை நோக்கியே போக வேண்டும். இயங்குவதில் எல்லாம் அவன் இருக்கிறான்; தூய்மையானவற்றில் எல்லாம் அவன் இருக்கிறான். பிரபஞ்சத்தில் நிறைந்திருப்பவன் அவனே; யாகத்தில் இருப்பது அவனே; விருந்தாளியும் அவனே; மனிதர்களில், நீரில், மிருகங்களில், சத்தியத்தில் எல்லாவற்றிலும் இருப்பவன் அவனே. அவனே மகத்தானவன். இந்த உலகிற்குள் வரும் நெருப்பு, பல்வேறு உருவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது போல் பிரபஞ்சத்தின் ஆன்மாவான, ஒன்றேயான இறைவனும் இந்தப் பல்வேறு உருவங்களாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார். இந்த உலகிற்குள் வரும் காற்று, பல்வேறு உருவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுபோல், எல்லா உயிரினங்களுக்கும் எல்லா ஆன்மாக்களுக்கும் ஒரே ஆன்மாவான இறைவன் பல உருவங்களாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்.
இந்த ஒருமையை உணரும்போதுதான், இந்த உண்மை நமக்கு உண்மையாகும். அதற்குமுன் அல்ல. அப்போது எல்லாமே இன்பநோக்குத்தான். ஏனென்றால் எங்கும் இறைவனே தெரிவான். அந்தத் தூய்மையான, ஒன்றேயான, எல்லையற்றதான பரம்பொருள்தான் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறார் என்றால், எவ்வாறு அவர் துன்பம் அனுபவிப்பதாக, துயரில் உழல்வதாக, தூய்மையற்றவராக ஆனார் என்பதுதான் கேள்வி. அவர் மாறவில்லை என்கிறது உபநிடதம். எல்லா உயிர்களின் பார்வைக்கும் சூரியனே காரணம். ஆனால் எந்தக் கண்களில் உள்ள குறைபாடும் சூரியனை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. அதைப் போலவே, உடல் படும் துன்பங்களாலோ சுற்றியுள்ள துயரங்களாலோ ஆன்மா பாதிக்கப்படுவதில்லை. வியாதி காரணமாக எனக்கு எல்லாமே மஞ்சளாகத் தோன்றலாம்; அதனால் சூரியனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
அவர் ஒன்றேயானவர், எல்லாவற்றையும் படைத்தவர், எல்லோரையும் ஆட்சி புரிபவர், எல்லா உயிர்களின் அந்தராத்மா அவர். அவர் தமது ஒருமையைப் பன்மையாக்குகிறார். இவ்வாறு இறைவனையே தங்கள் ஆன்மாவின் ஆன்மாவாக உணரும் ரிஷிகளுக்கே நிலையான அமைதி உரித்தாகும்; வேறு யாருக்கும் இல்லை, வேறு யாருக்கும் இல்லை. நிலையற்ற இந்த உலகத்தில் ஒருபோதும் மாறாமல் நிலையாக இருக்கும் ஒருவரை, மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில் ஒரே வாழ்க்கையாக இருப்பவரைக் காண்பவனுக்கு, பன்மையுள் ஒருமையைக் காண்பவனுக்கு, ஒருமையான அந்த இறைவனே தன் ஆன்மாவின் ஆன்மாவாக உணர்ந்தவனுக்கு மட்டுமே அமைதி உரித்தாகும்; வேறு யாருக்கும் அல்ல. வேறு யாருக்கும் அல்ல. இந்தப் புற உலகில் அவரை எங்கே காண்பது? சூரியர்களிலும் சந்திரர்களிலும் நட்சத்திரங்களிலும் அவரை எங்கே காண்பது? அங்கே சூரியனோ சந்திரனோ நட்சத்திரங்களோ மின்னலோ தங்கள் ஒளியை வெளிப்படுத்த முடியாது. சாதாரண நெருப்பைப்பற்றி என்ன சொல்வது? அந்த இறைவனின் ஒளியில்தான் எல்லாமே ஒளிபெறுகின்றன. எல்லாமே அந்த இறைவனிடமிருந்துதான் ஒளி பெறுகின்றன. எல்லாவற்றின் மூலமாகவும் ஒளிவீசுவது அந்தப் பரம்பொருள்தான்.
இதோ, மற்றோர் அருமையான உவமை. ஆலமரம் எப்படி ஒரே வேரிலிருந்து முளைத்து வெகுதூரம் பரவுகிறது என்பது, உங்களில் இந்தியாவுக்கு வந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இறைவன்தான் ஆலமரம் என்று வைத்துக்கொள்வோம். அனைத்தின் வேர் அவரே. பல கிளைகளாகப் பிரிந்து பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பது அவர்தான். எவ்வளவு தூரம் பரவினாலும், எல்லா கிளைகளும் விழுதுகளும் ஒன்றோடொன்று தொடர்பு உடையனவே.
வேதங்களில் பிராம்மணப் பகுதியில் பலவகையான சொர்க்கங்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆனால் உபநிடதங்களின் தத்துவக் கருத்துக்களில் சொர்க்கத்திற்குப் போவதைப் பற்றிய பேச்சே இல்லை. இன்பம் இந்தச் சொர்க்கத்திலோ அந்தச் சொர்க்கத்திலோ இல்லை; அது ஆன்மாவில் உள்ளது. இடங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.
அனுபூதியின் பலவகைகளைப்பற்றிப் பேசும் ஒரு பகுதியைக் காண்போம். மனிதன் கனவில் பொருட்களைக் காண்பதுபோல், பித்ருலோகத்தில் உண்மையைக் காண்கிறான். கனவில் பொருட்கள் தெளிவுற்று மங்கலாகத் தெரிவது போல்தான் பித்ருலோகத்தில் உண்மையைக் காண்கிறோம். கந்தர்வலோகம் என்னும் இன்னொரு சொர்க்கத்தில் இன்னும் மங்கலாகத் தெரிகிறது. தண்ணீரில் தோன்றும் பிம்பத்தைப்போல் அங்கே உண்மை தெரிகிறது. இந்துக்கள் கற்பித்துள்ள சொர்க்கங்களில் மிக உயர்ந்தது பிரம்மலோகம். இங்கே உண்மை இன்னும் தெளிவாக, ஒளியும் நிழலும்போல், தெரிகிறது. ஆனாலும் முற்றிலும் தெளிவாகத் தெரிவதில்லை. முகம் பார்க்கும் கண்ணாடியில், முகம் முழுமையாகத் தெளிவாகத் தெரிவதுபோல், நம் ஆன்மாவில்தான் மெய்ப்பொருள் தெளிவாக ஒளிவிடுகிறது.
ஆகவே மிக உயர்ந்த சொர்க்கம் நம்முடைய ஆன்மாவில்தான் இருக்கிறது. அனைத்து சொர்க்கங்களிலும் உயர்ந்ததாக, நாம் வழிபட வேண்டிய பெரும் கோயிலாக இருப்பது மனித ஆன்மாதான் என்று வேதாந்தம் கூறுகிறது. ஏனென்றால் இந்த வாழ்க்கையில், நம்முடைய ஆன்மாவில் போல் வேறு எந்தச் சொர்க்கத்திலும் உண்மையை அவ்வளவு தெளிவாகவும் சிறப்பாகவும் நாம் அறிந்துகொள்ள முடியாது. இடத்தை மாற்றிக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவில் இருந்தபோது, குகையில் வசித்தால் உண்மை தெளிவாகிவிடும் என்று நான் நினைத்தேன். அது தவறு என்று தெரிந்தது. பிறகு, காடுகள் அதை எனக்குத் தரும் என்று எண்ணினேன். பின்னர் காசியில் எல்லாம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் எல்லா இடங்களிலும் விஷயம் ஒரேபோல்தான் இருந்தது. ஏனெனில் நம் உலகத்தை நாம்தாம் உருவாக்கிக் கொள்கிறோம். நான் தீயவனாக இருந்தால் உலகமே என் கண்ணுக்குத் தீயதாகத் தெரியும். உபநிடதம் இதைத்தான் சொல்கிறது. இந்த உண்மை எல்லா உலகங்களுக்கும் பொருந்தும். நான் இறந்து சொர்க்கங்களுக்குப் போனாலும் என் நிலை இப்படியே தான் இருக்கும். நான் தூய்மை பெறும்வரை குகைகளுக்கோ, காடுகளுக்கோ, காசிக்கோ, சொர்க்கத்திற்கோ போவதால் பயனில்லை. ஆனால் கண்ணாடியைத் தூய்மையாக வைத்துக்கொண்டால், நான் எங்கு வாழ்கிறேன் என்பது முக்கியமல்ல; மெய்ப்பொருளின் தரிசனம் உள்ளது உள்ளதுபடியே அதில் தெரியும். ஆகவே இங்கும் அங்கும் ஓடி ஆற்றலை வீணாக்காமல், கண்ணாடியைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் ஆற்றலைச் செலவழிப்பதே மேலாகும். அதே கருத்தை மறுபடியும் பார்ப்போம். அவனை யாரும் பார்ப்பதில்லை. கண்களால் அவன் உருவத்தை யாரும் பார்ப்பதில்லை. மனத்தில் தூய மனத்தில்தான் அவன் காணப்படுகிறான். இவ்வாறுதான் மரணமில்லாப் பெருநிலை அடையப்படுகிறது.
ராஜயோகத்தைப் பற்றிய எனது கோடைக்காலச் சொற்பொழிவுகளைக் கேட்டவர்களுக்கு, அந்த யோகத்திற்கும் இந்த யோகத்திற்கும் வித்தியாசம் இருப்பது வியப்பைத் தரும். நாம் இப்போது விவாதித்துக் கொண்டிருக்கும் யோகம் முக்கியமாகப் புலனடக்கத்தைப் பற்றியதாக உள்ளது. புலன்கள், ஆன்மாவிற்கு அடிமையாகி, மனத்தை எந்த விதத்திலும் சலனப்படுத்த முடியாத நிலைக்குப் போகும்போதுதான் யோகி தன் குறிக்கோளை அடைந்தவன் ஆகிறான். மனத்தின் வீணான ஆசைகளை விட்ட பின்னர், மரணத்திற்கு உள்ளாகின்றவனான இந்த மனிதனே மரணமிலாப் பெருநிலையை அடைந்தவன் ஆகிறான். இந்த உலகத்திலேயே அவன் இறைவனுடன் ஒன்றுபடுகிறான். இதயத்தின் முடிச்சுகளெல்லாம் அறுபட்டால் மனிதன் மரணத்தை வென்றவன் ஆகிறான். அவன் இங்கேயே பிரம்மத்தை அனுபவிக்கிறான்; இங்கேயே, இந்தப் பூமியிலேயே அனுபவிக்கிறான், வேறு எங்கும் இல்லை.
இங்கே சில வார்த்தைகள் சொல்வது அவசியம் ஆகிறது. வேதாந்தமும் பிற கீழை நாட்டுத் தத்துவ சாஸ்திரங்களும் இந்த உலகிற்கு அப்பாலுள்ள ஒன்றைப் பற்றித்தான் பேசுகின்றனவே தவிர, இந்த வாழ்க்கையின் இன்பங்கள், போராட்டங்கள் இவற்றைக் கருத்தில் கொள்வதே இல்லை என்று பொதுவாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது முற்றிலும் தவறு. கீழைச் சிந்தனைகளைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களும் அவற்றின் உண்மையான போதனைகளைப் புரிந்துகொள்ளும் அளவிற்குப் புத்தி இல்லாதவர்களும்தான் இவ்வாறு சொல்கிறார்கள். இதற்கு மாறான கருத்தையே எங்கள் சாஸ்திரங்களில் படிக்கிறோம். எங்கள் தத்துவ ஞானிகள் மற்ற உலகங்களுக்குப் போக விரும்பவில்லை; அந்த உலகங்களில் மனிதர்கள், சிறிதுகாலமே அழுகையும் சிரிப்புமாக இருந்துவிட்டு, மரணத்தின் வாய்ப்படுகின்றனர் என்றே கருதுகிறார்கள். நாம் பலவீனமாக இருக்கும்வரை, இந்த அனுபவங்களையெல்லாம் நாம் பெற்றேயாக வேண்டும். ஆனால் உண்மையென்று ஏதாவது உண்டானால் அது இங்கேதான் இருக்கிறது, அதுவே மனித ஆன்மா. தற்கொலை செய்துகொள்வதால் நாம் எதையும் தவிர்க்க முடியாது; எதிலிருந்தும் தப்ப முடியாது என்பதையும் எங்கள் தத்துவ ஞானிகள் வலியுறுத்துகிறார்கள்.சரியான பாதையை அறிவதுதான் கடினம். மேலை நாட்டினரைப்போல் இந்துக்களும் நடைமுறை வாழ்க்கையில் வல்லவர்களே. வாழ்க்கையைப்பற்றிக் கொண்டுள்ள கருத்தில்தான் இருவருக்கும் வேறுபாடு உள்ளது. நல்ல வீடு, உடை, உணவு, அறிவு, பண்பாடு இவற்றையெல்லாம் பெறுவோம். இதுதான் வாழ்க்கை என்கின்றனர் மேலைநாட்டினர். அதையே நடைமுறையிலும் சிறப்பாகக் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் ஆன்மாவைப் பற்றிய அறிவு, தத்துவம் இவைதான் உலகத்தை உண்மையாகப் புரிந்து கொள்வதாகும் என்று இந்துக்கள் கருதுகிறார்கள். அந்த ஆன்மீக வாழ்க்கையை அனுபவிக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.
அமெரிக்காவில் சிறந்த ஆஜ்ஞேயவாதி ஒருவர் இருந்தார். அவர் பண்பாடு மிக்கவர், நல்லவர், சிறந்த பேச்சாளர். மதத்தினால் பயன் ஒன்றும் இல்லை என்று சொல்லிவந்தார். மற்ற உலகங்களைப் பற்றிச் சிந்தனை செய்து, நாம் ஏன் நம் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும், என்ற கருத்தை வலியுறுத்துவதற்குக் கீழ்க்கண்ட உவமையைப் பயன்படுத்தினார்; இதோ ஓர் ஆரஞ்சுப் பழம் இருக்கிறது. அதில் உள்ள சாறு முழுவதையும் பிழிந்தெடுக்க நாம் விரும்புகிறோம்.
நாம் அவரை ஒருமுறை சந்தித்தேன். அப்போது அவரிடம் சொன்னேன்: நீங்கள் சொல்வதை நான் முற்றிலுமாக ஒப்புக் கொள்கிறேன். என்னிடமும் பழம் இருக்கிறது. நானும் சாறு முழுவதையும் பிழிந்தெடுக்கவே விரும்புகிறேன். பழங்களைத் தேர்தெடுப்பதில்தான் நம்முடைய வேறுபாடு இருக்கிறது. நீங்கள் ஆரஞ்சை விரும்புகிறீர்கள்; நான் மாம்பழத்தை விரும்புகிறேன். இந்த உலகத்தில், சாப்பிட்டு, குடித்துச் சிறிதளவு விஞ்ஞான அறிவோடு வாழ்ந்தால் போதுமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் எல்லோருக்கும் இந்தக் கருத்து பிடிக்க வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. அத்தகைய கருத்து எனக்கு ஒன்றுமே இல்லை. ஓர் ஆப்பிள் எப்படித் தரையில் விழுகிறது, அல்லது ஒரு மின்னோட்டம் எப்படி என் நரம்புகளைப் பாதிக்கிறது என்பதைப்பற்றி மட்டுமே அறிய வேண்டுமென்றால், அதைவிட நான் தற்கொலை செய்துகொள்வேன். பொருட்களின் மையத்திற்குச் செல்லவே நான் விரும்புகிறேன்; அவற்றின் உட்கருத்தைத் தெரிந்துகொள்ளவே விரும்புகிறேன். வாழ்க்கையின் வெளிப்பாட்டை நீங்கள் ஆராய்ச்சி செய்கிறீர்கள். ஆனால் நானோ வாழ்க்கையையே ஆராய்கிறேன். அதைத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த உலகம் இருக்கிறது என்று எப்படிச் சொல்கிறோமோ, அதே பொருளில் சொர்க்கம், நரகம் போன்றவை இருக்கவே செய்தாலும், சொர்க்கம் நரகம் போன்ற எல்லா மூடநம்பிக்கைகளையும் மனத்திலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று எங்கள் தத்துவ சாஸ்திரம் வலியுறுத்துகிறது. இந்த வாழ்க்கையின் மையத்தை, அதன் சாரத்தை நான் அறிந்து கொள்ள வேண்டும். அது என்ன, எப்படி வேலை செய்கிறது, அதனுடைய வெளிப்பாடுகள் என்ன என்பன போன்ற எல்லாவற்றையுமே அறிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றின், ஏன் என்ற கேள்விக்கு நான் விடையறிய வேண்டும். எப்படி என்ற கேள்வியைக் குழந்தைகளுக்கு விட்டுவிட வேண்டும்.
நான் சிகரெட் பிடித்துக்கொண்டே ஒரு புத்தகம் எழுதினால், அது சிகரெட்டைப் பற்றிய விஞ்ஞானமாகத் தான் இருக்கும் என்று உங்கள் நாட்டுக்காரர் ஒருவர் சொல்லியிருக்கிறார். விஞ்ஞானபூர்வமான அறிவு பெற்றிருப்பது நன்மையும் பெருமையும் தரக்கூடிய விஷயம்தான். அதைத் தேடுபவர்களுக்குக் கடவுள் உதவி செய்யட்டும். வாழ்க்கையின் இன்றியமையாத விஷயத்தைப் பொருட்படுத்தாமல், வாழ்க்கை என்பதையே புரிந்து கொள்ளாமல், விஞ்ஞானமே எல்லாம் என்று ஒருவன் சொன்னால், அது முட்டாள் தனம். உங்கள் அறிவெல்லாம் ஆதாரமற்றது, பொருளற்றது என்று நான் தர்க்கம் செய்யலாம்.. வாழ்க்கையின் வெளிப்பாடுகளை ஆராய்ச்சி செய்கிறீர்கள், ஆனால் வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்டால் தெரியவில்லை என்கிறீர்கள். நீங்கள் உங்கள் ஆராய்ச்சியை நடத்துங்கள்; எங்களை, எங்கள் ஆராய்ச்சியை நடத்த விடுங்கள்.
நான் என் வழியில் செயல்முறைவாதி, சிறந்த நடைமுறைவாதி. ஆகவே மேலைநாட்டினர் மட்டுமே நடைமுறையில் சிறந்தவர்கள் என்ற உங்கள் கருத்து முட்டாள்தனமானது. நீங்கள் ஒருவிதத்தில் நடைமுறையில் சிறந்தவர்களென்றால், நாங்கள் மற்றொரு விதத்தில் சிறந்தவர்கள். உலகத்தில் பலவிதமான மனிதர்கள் உள்ளனர், மனங்கள் இருக்கின்றன. கீழை நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் போய், வாழ்நாள் முழுவதும் ஒரு காலிலேயே நின்று தவம் செய்தால் உண்மையை அறியலாம் என்று சொன்னால் அவர்கள் அதைத் தயக்கமின்றிப் பின்பற்றுவார்கள். மேலைநாடுகளில் உள்ளவர்களிடம் போய், நாகரீகம் தொடாத ஒரு நாட்டில், எங்கேயோ ஓரிடத்தில் தங்கச் சுரங்கம் இருப்பதாகக் கூறினால், உடனே அவர்கள் தங்கம் தேடுவதற்காக ஆயிரக்கணக்கில் கிளம்பி, எந்த ஆபத்தையும் சந்திக்கத் தயாராகிவிடுவார்கள்; அவர்களுள் யாராவது ஒருவன்
இந்த முயற்சியில் வெற்றி பெறலாம். அதே மனிதர்கள் தங்கள் ஆன்மாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள்; ஆனால் அதனைச் சர்ச்சின் கவனிப்பில் விடுவதுடன் திருப்தியடைந்து விட்டார்கள். கீழைநாட்டு மனிதன் காட்டுவாசிகளின் அருகில் போக மாட்டான். அவர்கள் ஆபத்தானவர்கள் என்று கூறி ஒதுங்கிவிடுவான். ஆனால் அதே மனிதனிடம் ஓர் உயரமான மலை உச்சியில் ஆன்ம ஞானத்தை உபதேசிக்கும் ஓர் அற்புதத் துறவி இருக்கிறார் என்று சொன்னால் போதும், உயிர் போனாலும் பரவாயில்லை என்று துணிந்து கிளம்பிவிடுவான்.
இருசாராரும் நடைமுறையில் வல்லவர்களே. வாழ்க்கை என்பதே இந்த உலகம் தான் என்று நினைப்பதில் தான் தவறு இருக்கிறது. உங்கள் வழி, புலனின்ப அனுபவங்கள் என்ற கானல் நீர். அது நிலையானதல்ல; மேன்மேலும் துன்பங்களையே அது கொண்டுவரும். ஆனால் எங்கள் வழி நிலையான அமைதியைத் தருவதாகும்.
உங்களுடைய நோக்கு தவறு என்று நான் சொல்லவில்லை. நீங்கள் அதைத் தாராளமாகப் பின்பற்றலாம். அது மிகவும் நன்மையையும் இன்பங்களையும் கொடுக்கிறது. ஆனால் அதற்காக என்னுடைய நோக்கு தவறு என்று சொல்லாதீர்கள். என்னுடைய நோக்கும் தன் போக்கில் நடைமுறைக்கு ஒத்ததுதான். நாம் நமது சொந்தத் திட்டங்களின்படியே உழைப்போம். இரண்டிலும் சம அளவில் நாம் செயல்முறை வழி காண கடவுள் அருள்புரிவாராக! விஞ்ஞானம், ஆன்மீகம் இரண்டு துறைகளிலுமே சமமான வல்லமை பெற்ற சில விஞ்ஞானிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களைப் போல் காலப்போக்கில் மனித குலம் முழுவதுமே ஆக வேண்டும் என்பது என் ஆழ்ந்த விருப்பம்.
ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கு நீர் கொதிநிலையை அடையும்போது கவனித்தால், முதலில் ஒரு குமிழி, பிறகு மற்றொன்று, என்று பல குமிழிகள் தோன்றி, கடைசியில் ஓர் அமர்க்களமே நடப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த உலகமும் கிட்டத்தட்ட அதைப் போன்றதுதான். ஒவ்வொரு மனிதனும் ஒரு குமிழி, நாடுகளெல்லாம் பல குமிழிகள். இந்த நாடுகளெல்லாம் சிறிதுசிறிதாக ஒன்று சேர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு இடையே இருக்கும் வேறுபாடுகளெல்லாம் மறைந்து, எந்த ஒருமையை நோக்கி நாம் எல்லோரும் போய்க் கொண்டிருக்கிறோமோ, அது தன்னையே வெளிப்படுத்திக் கொள்ளும் நாள்வரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
விஞ்ஞானம், ஆன்மீகம் ஆகிய இரு துறைகளிலும் ஒவ்வொரு மனிதனும் சமமான செயல்முறை அறிவு பெறும் நாள் வந்தே தீரும். அப்போது அந்த ஒருமையின் இயைபு உலகம் முழுவதும் பரவும். எல்லா மனிதர்களுமே ஜீவன்முக்தர்களாகி விடுவார்கள். அதாவது, இந்த வாழ்விலேயே முக்தி பெற்றவர்களாகி விடுவார்கள். நம்முடைய பொறாமை, வெறுப்பு, அன்பு, ஒற்றுமை இவற்றின் மூலமாக அந்த ஒரே குறிக்கோளை நோக்கித்தான் நாம் எல்லோரும் போராடியவாறே போய்க் கொண்டிருக்கிறோம். ஒரு பெரிய ஆறு, நம்மையெல்லாம் அடித்துக் கொண்டு கடலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. போகும் வழியில், வைக்கோல், காகிதம் இவற்றைப் போல் குறிக்கோளில்லாமல், ஆற்றின் போக்குப்படி இங்குமங்கும் அலைக்கழிக்கப் பட்டாலும்கூட, கடைசியில் சச்சிதானந்த நிலையாகிய அந்தப் பெருங்கடலை அடைந்தே தீருவோம்.
மதத்தின் தேவை
-
மனித இனத்தின் விதியை உருவாக்குவதற்காக செயலாற்றி வந்துள்ள, இன்னும் செயலாற்றி வருகின்ற சக்திகள் பலவாகும். இவற்றுள் மதம் என்று நாம் சொல்கிறோமோ, அந்த சக்தியை விட வலிமை வாய்ந்தது வேறொன்றுமில்லை. எல்லா சமூக இயக்கங்களும், பின்னால் இங்கே நின்று அவை இயங்க காரணமான இருப்பது மதம் என்ற இந்த தனிப்பட்ட சக்தியே. மனிதர்களை எல்லாம் ஒன்றாக இணைந்து வாழச்செய் உணர்வை தோற்றுவிக்கின்ற சக்திகளுள் மகத்தான சக்தி மதம் என்பதிலிருந்தே தோன்றியுள்ளது. இனம், தட்பவெப்பநிலை, ஏன், பாரம்பரியம் இவற்றின் காரணமாக மனிதர்களுள் ஏற்படும் பிணைப்புகளை விட மதத்தால் ஏற்படும் பிணைப்புகள் பல நேரங்களில் வலிமை மிக்கவையாக இருப்பது நமக்கு தெரிந்த விஷயம். ஒரே குலத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே, ஏன், சகோதரர்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமையை விட, ஒரே கடவுளை வழிபடுபவர்களுக்கு மற்றும் ஒரே மதத்தை சார்ந்தவர்களுக்கு இடையே காணப்படுகின்ற ஒற்றுமை உறுதி மிக்கதாகவும், நிலைத்து நிற்பதாகவும் இருக்கிறது என்பது எல்லோருக்கும் அறிந்த உண்மை.
மதம் எவ்வாறு தோன்றியது என்பதை அறிய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று நம்மிடம் வந்துசேர்ந்துள்ள பழமையான மதங்கள் எல்லாம் ஒரு விஷயத்தில் உரிமை கொண்டாடுவதை காண்கிறோம். அவை இயற்கைக்கு அப்பாற்பட்டவை. மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. மனித சக்திக்கு அப்பால், எங்கிருந்தோ தோன்றியவை என்பதே அந்த உரிமை. தற்கால அறிஞர்கள் இரண்டு கொள்கைகளை ஓரளவு ஒப்புக்கொள்கின்றனர். ஒன்று இறந்த முன்னோர்களை வழிபடுதல்; மற்றொன்று, எல்லையற்ற பரம்பொருள் கருத்தின் பரிணாம வளர்ச்சி. ஒரு சாரார் இறந்த முன்னோர் வழிபாடு தான் மதத்தின் தொடக்கம் என்று கருதுகிறார்கள். மற்றோர் சாரார், இயற்கை சக்திகளை உருவகப்படுத்தி வழிபட தொடங்கியதிலிருந்து தான், மதம் தோன்றியது என்கிறார்கள். உடல் அழிந்தாலும் அந்த உடலில் வாழ்ந்த உறவினர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பி அவர்களை மறக்காமல் இருக்க மனிதன் விரும்புகிறான. அவர்களுக்கு உணவளித்து ஏதோ ஒரு விதத்தில், வழிபடவோ, விழைகிறான். இதிலிருந்து தான் மதம் என்று அழைக்கின்ற ஒன்று மலரத்தொடங்கியது.
எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், சீனர்கள் மற்றும் அமெரிக்காவிலும் வேறு இடங்களிலும் உள்ள பல்வேறு இனத்தினரை பழமையான மதங்களை ஆராய்ந்தால் முன்னோர் வழிபாடே இந்த மதங்களின் தொடக்கமாக இருந்தது என்பதற்கு பல தெளிவான சான்றுகள் இருப்பது தெளிவாகிறது. பழங்கால எகிப்தியர்கள் ஆன்மாவைப்பற்றி கொண்டிருந்த முதல் கருத்து அதற்கு ஒரு நகல் உண்டு என்பதாகும். ஒவ்வொரு மனித உடலின் உள்ளேயும் அதைப்போன்ற நகல் ஒன்று இருக்கிறது; மனிதன் இறந்த பின் இந்த நகல் வெளியே சென்று தொடர்ந்து வாழ்கிறது; இறந்த உடல் கெடாமல் இருக்கும் வரை தான் இந்த நகலும் வாழ முடியும் என்று அவர்கள் நம்பினர். அதனால் தான், இறந்த உடலை சேதப்படாமல் பாது காக்க மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டனர். உடல்களை பாதுகாக்க மாபெரும் பிரமிடுகளை கட்டியதற்கு இதுவே காரணம். இறந்த உடலின் ஏதேனும் ஒரு பகுதி கேடு ஏற்பட்டால், நகலுக்கும் அதே கேடு ஏற்படும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது. தெளிவாக, இது முன்னோர் வழிபாடுதான்.
பழங்கால பாபிலோனியர்களிடம் நகலைப்பற்றிய இதே கருத்தை சிறிது வேறுபாட்டுடன் காண்கிறோம்; நகல் அன்புணர்ச்சியையே இழந்து விடுகிறது. தனக்கு உணவு, நீர் முதலியவற்றையும் மற்றும்பல உதவிகளையும் அளிக்க சொல்லி வாழ்பவர்களை பயமுறுத்துகிறது; தன் மனைவி குழந்தைகளிடம் கூட அது அன்பை இழந்து விடுகிறது. பண்டைய இந்துக்களிடையே கூட முன்னோர் வழிபாட்டின் சில சுவடுகளை நாம் காண்கிறோம். சீனர்களிடையேயும், இந்த முன்னோர் வழிபாடு தான் அவர்களது மதத்திற்கு அடிப்படையாக இருந்தது என்று கூறலாம். இன்றும் அந்த பரந்த நாட்டில் எங்கும் இந்த கருத்து ஊடுருவி நிற்கிறது. உண்மையில், சீனாவில் சிறந்து விளங்கும் ஒரே மதம் முன்னோர் வழிபாடு என்று கூட சொல்லலாம். ஆகவே, ஒரு பக்கம் பார்த்தால், முன்னோர் வழிபாடு தான் மதத்தின் ஆரம்பம் என்ற கருத்து உடையவர்களுக்கு வலிமையான ஆதாரங்கள் இருப்பது போல் தோன்றுகிறது.
அதற்கு மாறாக, மதத்தின் ஆரம்பம் இயற்கை வழிபாடுதான் என்பதற்கு ஆதாரங்கள் பழைய ஆரிய இலக்கியங்களில் இருப்பதாகச் சில அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் முன்னோர் வழிபாடு இருப்பதற்கு ஆதாரங்கள் இருந்த போதிலும் மிகப் பழைய இலக்கியங்களில் இந்தக் கருத்தின் சுவடே இல்லை. ஆரிய இனத்தின் மிகப் பழைய நூலாகிய ரிக்வேத சம்ஹிதையில் முன்னோர் வழிபாடு பற்றிய செய்தியே காணப்படவில்லை. இயற்கை வழிபாடுதான் அதில் காணப்படுவதாகத் தற்கால அறிஞர்கள் கருதுகின்றனர்.
இயற்கையின் திரைக்குப் பின்னால் இருப்பது என்ன என்று அறிவதற்கு மனித மனம் போராடி வருகிறது. சூரிய உதயம், அழகிய மாலை வேளை, கடும் சூறாவளி போன்ற இயற்கையின் மாபெரும் சக்திகளும், இயற்கையின் எழில் வண்ணங்களும் மனித உள்ளத்தை வியப்பில் ஆழ்த்திச் சிந்தனையைத் தூண்டி வந்துள்ளன. இயற்கையின் திரைக்கு அப்பால். இருப்பவற்றைப்பற்றிச் சிறிதாவது தெரிந்து கொள்வதற்கு மனித மனம் விரும்புகிறது. இந்தப் போராட்டத்தில் மனித மனம், இயற்கையின் இந்தச் சக்திகளை உருவாக்கப்படுத்துகிறது. அவற்றிற்கு ஆன்மாவும் உடலும் அளிக்கிறது. சிலசமயம் அவற்றை அழகு மிக்க தாகவும் சிலசமயம் அனைத்தையும் கடந்ததாகவும் பாவனை செய்கிறது. இவற்றை உருவத்துடனோ உருவமில்லாமலோ எப்படி சித்தரித்தாலும் இந்த முயற்சிகளின் முடிவுகள் எல்லாம் விவரிக்க முடியாத கருத்துக்களாகவே அமைகின்றன. புராதன கிரேக்கர்களிடையே இதைக் காண்கிறோம். அவர்களுடைய புராணங்களில் எல்லாம், இயற்கையைத் தத்துவமாக வழிபடும் செய்திகளைக் காண்கிறோம். இவ்வாறே, புராதன ஜெர்மானியர், ஸ்காண்டினேவியர் மற்றும் பிற ஆரிய இனங்களின் புராணங்களிலும் காண்கிறோம். ஆகவே இங்கும் இயற்கையின் சக்திகளை உருவகப்படுத்துவதே மதத்தின் தோற்றத்திற்கு ஆரம்பமாக இருந்தது என்ற கருத்திற்குப் பல வலு<வான ஆதாரங்களைக் காண்கிறோம்.
இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு உடையனவாகத் தோன்றுகின்றன. ஆனால் மதத்தின் தோற்றத்திற்கு உண்மையான வித்து என்று நான் கருதும் ஒரு மூன்றாவது கருத்தின்மூலம் இந்த இரு கருத்துக்களையும் இணைக்க முடியும். புலன்களின் வரையறையைக் கடந்து செல்வதற்கான போராட்டமே மதத்திற்கு வித்து என்று நான் கூறுவேன்.
இறந்த முன்னோர்களை இறந்தவர்களின் ஆவியை மனிதன் தேடுகிறான். அதாவது, உடல் மறைந்த பின், அப்பால் என்ன இருக்கிறது என்பதை ஒரு கணமாவது காண அவன் விரும்புகிறான். இயற்கையின் மாபெரும் தோற்றங்களுக்குப் பின்னால் இயங்கும் சக்தியைப் புரிந்து கொள்ள விரும்புகிறான். இந்தக் கருத்துக்களின் எதைப் பின்பற்றினாலும் ஒன்று மட்டும் உறுதி. அதாவது அவன் புலன்களின் வரையறையைக் கடந்து செல்ல விரும்புகிறான்.
புலன்களின் நுகர்ச்சியால் மட்டும் மனிதனுக்கு மன நிறைவு ஏற்படுவதில்லை. அவன் அவற்றைக் கடந்து போக விரும்புகிறான். இதன் விளக்கம் ஏதோ மர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கனவுகள் மூலமாகவே மதத்தைப் பற்றிய எண்ணம் முதன்முதலாகக் கிடைக்கிறது என்ற கருத்து இயல்பாக இருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. மரணமிலாப் பெருநிலையைப் பற்றிய எண்ணம் கனவுகள் மூலம்தான் மனிதனுக்கு முதலில் ஏற்பட்டிருக்கும். என்னவோர் அற்புதமான நிலை அது, அல்லவா? குழந்தைகளும் மன வளர்ச்சி அடையாதவர்களும் கனவிற்கும் நனவிற்கும் இடையில் பெரிய வேறுபாடு காண்பதில்லை என்பது நமக்குத் தெரியும். உடம்பு வெளிப்படையாக இயங்காத தூக்க நிலையிலு<ம் மனம் சிக்கலான பல வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது. எனவே உடம்பு மறைந்தபின்னும் மனம் தொடர்ந்து தன் வேலைகளைச் செய்துகொண்டேயிருக்கும் என்ற முடிவுக்கு மனிதன் வருவதில் என்ன வியப்பு இருக்க முடியும்? அது இயல்பான முடிவே அல்லவா! இந்தக் கனவு கருத்திலிருந்துதான் மனித மனம் மேலும்மே<லும் உயர்ந்த கருத்துக்களுக்குச் செல்கிறது என்பதுதான் என்னைப் பொறுத்தவரை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைப்பற்றிய இயல்பான விளக்கம். காலம் செல்லச் செல்ல, பலர் தங்கள் கனவுகள், நினவுநிலையோடு ஒத்திருக்கவில்லை. கனவுநிலையில் மனிதனுக்குப் புதியதொரு வாழ்க்கை எதுவும் அமைவதில்லை. நனவுநிலையின் அனுபவங்களே கனவில் பிரதிபலிக்கின்றன என்று கண்டார்கள்.
ஆனால் இதற்குள் தேடல் தொடங்கிவிட்டது. இந்தத் தேடல் அகவுலகிலாக இருந்தது. மனத்தின் பல்வேறு நிலைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் மனிதன் ஆழ்ந்தான். இந்த ஆராய்ச்சியின் பயனாக, கனவு மற்றும் நனவு நிலைகளைவிட உயர்ந்த நிலைகள் இருப்பதைக் கண்டுபிடித்தான், உலகின் முக்கிய மதங்களெல்லாம் இந்த நிலைகளை ஆனந்தப் பரவச நிலை அல்லது அக விழிப்புணர்வுநிலை என்று கூறுகின்றன.
சிறந்த மதங்களை நிறுவியவர்களும் சரி, அதன் தீர்க்கதரிசிகளும் மத ஆச்சாரியர்களும் சரி, நனவுநிலை, தூக்கநிலை இவை இரண்டுமற்ற மன நிலைகளை அடைந்ததாக எல்லா மதங்களிலும் சொல்லப்படுகிறது. அந்த நிலைகளில் ஆன்மீக உலகம் என்று கூறப்படுகின்ற உலகைப் பற்றிய புதயவற்றை அவர்கள் நேருக்குநேர் கண்டதாகவும் சொல்லப்படுகிறது. நம்மைச் சுற்றியுள்ள உண்மைகளை நனவுநிலையில் நாம் உணர்வதைவிட மிக மிக ஆழமாக, ஆன்மீக உண்மைகளை அவர்கள் அந்த நிலைகளில் உணர்ந்தார்கள்.
உதாரணமாக இந்து மதத்தை எடுத்துக் கொள்வோம். வேதங்களை ரிஷிகள் எழுதியதாகச் சொல்கிறார்கள். இந்த ரிஷிகள் சில உண்மைகளை உணர்ந்த முனிவர்கள் மந்திரங்களைக் காண்பவர் அதாவது வேத மந்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை உணர்ந்தவர்கள் என்பதுதான் ரிஷி என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள். இவர்கள் தாங்கள் சில உண்மைகளை உணர்ந்திருப்பதாக அறிவித்தார்கள். அதாவது புலன்களுக்கு அப்பாற்பட்ட தத்துவங்களை அறிந்து அந்த உண்மைகளை எழுதியும் வைத்தார்கள். யூதர்கள் கிறிஸ்தவர்கள் இவர்களுடைய மதங்களும் இவ்வாறே சொல்வதை நாம் காண்கிறோம்.
பவுத்தர்களை இதற்கு ஒரு விதிவிலக்கு எனலாம். உதாரணமாக புத்தமதத்தின் தென் பிரிவினர். இப்போது ஒரு கேள்வி எழலாம் கடவுள், ஆன்மா இவற்றை புத்த மதத்தினர் ஒப்புக் கொள்வதில்லை என்றால், அவர்களின் மதம் புலன்களுக்கு அப்பாற்பட்ட நிலையிலிருந்து எப்படித் தோன்றியிருக்க முடியும்?
ஆனால் புத்த மதத்தினரும் நிலையான அறநியதிக் கோட்பாடு ஒன்றை ஒப்புக்கொள்கின்றனர். இந்தக் கோட்பாடு நாம் கருதுகின்ற பகுத்தறிவால் உணரப்பட்டதல்ல. புத்தர் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் இருந்தபோதுதான் இந்தக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தார். புத்தரின் வாழ்க்கையைப் படித்தவர்களுக்கு, சுருக்கமாக, ஆசிய ஜோதி என்னும் அந்த அழகிய கவிதையிலாவது படித்தவர்களுக்கு புலன்களுக்கு அப்பாற்பட்ட அந்த நிலையை அடையும்வரை புத்தர் போதிமரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது நினைவிருக்கலாம். புத்தரின் உபதேசங்கள் அனைத்தும் புலன்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் பிறந்தவைதாம். அறிவால் ஆராய்ந்து தெளிந்தவை அல்ல.
இவ்வாறு மிக உன்னதமானதொரு கருத்தை எல்லா மதங்களும் வெளியிடுகின்றன. மனித மனம் சிலவேளைகளில் புலன்களின் எல்லைகளை மட்டுமல்லாமல், பகுத்தறிவின் ஆதிக்கத்தையும் கடந்து செல்கிறது என்பதுதான் அந்தக் கருத்து, அந்த நேரங்களில், புலன்களின் மூலமாகவோ ஆராய்ச்சி மூலமாகவோ உணர முடியாத பல பேருண்மைகளை மனித மனம் நேருக்குநேர் காண்கிறது. இந்த உண்மைகளே உலகின் எல்லா மதங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றன.
இந்த உண்மைகளை மறுத்துக் கூறவும், இவற்றைப் பகுத்தறிவின் மூலம் சோதிக்கவும் நமக்கு உரிமை உண்டு. மனித மனத்திற்குப் புலன்களையும் அறிவின் எல்லைகளையும் கடந்து செல்லும் விசித்திரமான இந்த ஆற்றல் உண்டு என்று உலகிலுள்ள எல்லா மதங்களும் உறுதியாகச் சொல்கின்றன இந்த ஆற்றலை அவர் ஓர் உண்மை வாக்குமூலமாகவே வெளியிடுகின்றன.
மதங்கள் கூறும் இந்தக் கருத்துக்கள் எவ்வளவு தூரம் உண்மை என்பது இருக்க, எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒரு பண்பு இருப்பதை நாம் காண்கிறோம். உதாரணமாக, இயற்பியல் கண்டுபிடித்துள்ள உண்மைகளெல்லாம் தூலமானவை. மதங்களின் இந்தக் கருத்துக்களோ எளிதில் புரிந்துகொள்ள முடியாதவை. மிகவும் மேம்பாடடைந்துள்ள மதங்களில் இந்தக் கருத்துக்களைக் கலப்பற்ற ஒரு தனிநிலைத் தத்துவமாகவே சொல்லியிருக்கிறார்கள். சிலர் சூட்சுமத் தத்துவமாக இதைக் கூறுகிறார்கள். சிலர் எங்கும் நிறைந்த ஒரு சக்தியாக இதைக் கருதுகிறார்கள். கடவுள் என்னும் சூட்சும உருவமாகச் சிலர் கூறுகிறார்கள். சிலர் அறநெறிக் கோட்பாடாகக் கருதுகிறார்கள். எல்லா பொருட்களின் உள்ளும் ஊடுருவி நிற்கும் சாரமாக வேறு சிலர் கூறுகிறார்கள்.
தற்காலத்திலு<ம்கூட, புலன்களுக்கு அப்பாற்பட்ட மனநிலையோடு தொடர்பு கொள்ளாமலேயே செய்யப்படும் மதப் பிரச்சாரத்தின் பலவித முயற்சிகளும், பழங்காலத்தினரின் தத்துவங்களையே வேறு பெயர்களில் சொல்வதாக அமைகிறது. அதாவது ஒழுக்கக் கோட்பாடு லட்சிய ஒருமை என்று பலவாறாகக் கூற வேண்டியிருக்கிறது. இந்தத் தத்துவங்கள் புலன்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை இவர்களின் இந்தச் செயல்கள் எல்லாம் காட்டுகின்றன.
நாம் யாரும் இதுவரை ஒரு லட்சிய புருஷனைப் பார்த்ததில்லை. ஆனாலும் அப்படிப்பட்ட ஒருவரை நம்பச் சொல்கிறார்கள், லட்சிய பூரண மனிதன் யாரையும் நாம் இதுவரை பார்த்ததில்லை. ஆனாலும் அத்தகைய ஒரு குறிக்கோள் இல்லாமல் நம்மால் முன்னேற முடியாது.
பல மதங்களின் கருத்துக்களிலிருந்து ஓர் உண்மை நமக்குப் புலப்படுகிறது. எல்லோருக்கும் குறிக்கோளாக இருக்க வேண்டிய ஒரு தத்துவம் இருக்கிறது. அதை உருவமுள்ளதாகவோ உருவமற்றதாகவோ, ஓர் அறநியதியாகவோல, ஒரு தோற்றமாகவோ அல்லது எல்லாவற்றுள்ளும் ஊடுருவி நிற்கும் சாரமாகவோ மதங்கள் நம்முன் வைக்கின்றன. இந்தக் குறிக்கோளை அடையவே நாம் எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறோம். யாராயிருந்தாலும் சரி, எங்கேயிருந்தாலும் சரி, எல்லையற்ற சக்தியே ஒவ்வொருவருக்கும் குறிக்கோளாக இருக்கிறது. எல்லையற்ற ஆனந்தமோ குறிக்கோளாக இருக்கிறது. எல்லையற்ற சக்திக்காகவோ எல்லையற்ற ஆனந்தத்திற்காகவோ நடக்கும் போராட்டமே, நம்மைச் சுற்றி நாம் காணும் பல செயல்களுக்கும் இயக்கங்களுக்கும் காரணமாக இருக்கிறது.
எல்லையற்ற சக்தியை அடையவே தாங்கள் போராடினாலும், புலன்களால் அதை அடைய முடியாது. என்பதைச் சிலர் விரைவில் அறிந்து கொள்கிறார்கள். எல்லையற்ற ஆனந்தத்தைப் புலன்கள் மூலமாக அடைய முடியாது. அதாவது, எல்லையற்றதை வெளிப்படுத்துவதற்கு, எல்லைக்குக் கட்டுப்பட்ட புலன்களாலும் உடலா<லும் முடியாது என்று அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். எல்லைக்குட்பட்ட ஒன்றின் மூலம் எல்லையற்றதை வெளிப்படுத்த முடியாது என்பதை உடனேயோ தாமதித்தோ அறிந்து, இத்தகைய முயற்சியைச் சீக்கிரமே மனிதன் கைவிட வேண்டியிருக்கிறது. இந்த முயற்சியை விட்டுவிடுவதே, துறப்பதே, நீதிநெறிக்கு அடிப்படையாக அமைகிறது. நீதிநெறியின் அடிப்படையே துறவுதான். துறவை அடிப்படையாகக் கொள்ளாத நீதிநெறியை இதுவரை யாரும் பிரச்சாரம் செய்ததில்லை. நான் அல்ல நீதான் என்றே நீதிநெறி எப்போதும் கூறுகிறது.
புலன்களின் மூலம் எல்லையற்ற சக்தியையும் ஆனந்தத்தையும் அடைவதற்கு மனிதன் முயலும்போது, தனித்துவத்தைப் பற்றிய கருத்துக்களைத் துறந்துவிட வேண்டும் என்று நீதிநெறி விதிகள் கூறுகின்றன. மற்றவர்களை முன்னால் வைத்து நீ பின்னால் இருக்க வேண்டும் நான்தான் முதலில் என்று புலன்கள் கூறுகின்றன. அறநெறியோ நான்தான் கடைசி என்று கூறுகிறது.
இவ்வாறு எல்லா நீதிநெறிக் கோட்பாடுகளும் துறவை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதாவது ஜடப்பொருள் நிலையில் நான் என்பதை அழித்துக் கொள்வதுதான் நன்நெறியே தவிர, வளர்த்துக் கொள்வதல்ல. எல்லையற்றது ஒருநாளும் ஜடப்பொருள் நிலையில் வெளிப்படாது. அது நடைபெற முடியாததும் நினைக்க முடியாததுமாகும். மனிதன் ஜடப்பொருள் நிலையைவிட்டு உயர்ந்த நிலைகளுக்குச் சென்றால்தான், எல்லையற்றதைப் பற்றிய அறிவு அவனுக்கு ஏற்படும். இந்த முறையைப் பின்பற்றியே எல்லா நீதிநெறிக் கோட்பாடுகளும் அமைந்துள்ளன. எல்லாவற்றின் மையக் கருத்தும் நிரந்தரமாகத் தன்னலத்தை விடுவதுதான். முழுமையான தன்னல மறுப்பே அறநெறியின் குறிக்கோளாகும்.
தனித்துவத்தைப்பற்றி நினைக்காமல் இருக்க வேண்டும் என்று சொன்னாலே மனிதர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். தங்கள் தனித்துவம் என்று அவர்கள் சொல்லிக் கொள்ளும் அந்த நிலையை இழப்பதற்கு மிகவும் பயப்படுகிறார்கள். அதே நேரத்தில், அவர்களே நீதிநெறியின் உயர்ந்த குறிக்கோள்களைச் சரி என்று ஒப்புக்கொள்கிறார்கள். அந்த நீதிநெறியின் நோக்கம், குறிக்கோள், கருத்து எல்லாமே தனித்துவத்தை அழிப்பதே தவிர, வளர்ப்பதல்ல என்பதை அவர்கள் கணநேரமும் நினைத்துப் பார்ப்பதில்லை.
பயன்கருதும் அளவுகோல்களைக் கொண்டு மனிதனின் நீதிநெறி உறவுகளை விளக்க முடியாது. முதலாவதாக, பயன்கருதும் நோக்கங்களை ஆதாரமாகக் கொண்டு, எந்த நீதிநெறி விதியையும் உருவாக்க முடியாது. இயற்கையைக் கடந்து ஒன்றின் அனுமதி இல்லாமல், அல்லது உணர்வுகடந்த நிலை என்று நான் கூறுகின்ற நிலையை அடையாமல் எந்த நீதிநெறியும் இருக்க முடியாது. எல்லையற்றதை நோக்கிச் செல்லும் போராட்டம் இன்றி, ஒரு குறிக் கோள் இருக்க முடியாது. மனிதர்களைத் தங்கள் சமுதாயக் கட்டுப்பாட்டிற்குள் சிறைப்படுத்தி வைக்க விரும்பும் எந்த நெறியாலும் மனித குலத்தின் நீதிநெறிக் கோட்பாடுகளை விளக்க முடியாது. எல்லையற்ற பொருளுக்கான போராட்டம், புலன்களுக்கு அப்பால் உள்ள நிலையை அடைவது இவையெல்லாம் நடக்காதது, அசட்டுத் தனமானது என்று கூறி அவற்றை விட்டுவிடும்படி நம்மிடம் சொல்கிறார்கள் பயன்கருதுவோர், அதே மூச்சில், நீதிநெறி முறைகளைப் பின்பற்றி சமுதாயத்திற்கு நன்மை செய்யுமாறும் கேட்கிறார்கள்.
நாம் எதற்காக நன்மை செய்ய வேண்டும்? நன்மை செய்வது இரண்டாம் பட்சமே. நமக்கு ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். நீதிநெறி நமது குறிக்கோள் அல்ல. அது நம் குறிக்கோளுக்கு உதவும் சாதனம் மட்டுமே. ஒரு குறிக்கோள் இல்லையென்றால் நீதிநெறி முறைகளை நாம் எதற்காகக் கடைப்பிடிக்க வேண்டும்? மற்றவர்களுக்கு நான் எதற்காக நம்மை செய்ய வேண்டும்? ஏன் அவர்களுக்குத் தீமை செய்யக் கூடாது? இன்பம்தான் மனித குலத்தின் குறிக்கோள் என்றால், மற்றவர்களைத் துன்புறுத்தி நான் ஏன் இன்பம் பெறக் கூடாது? எது என்னைத் தடுக்க முடியும்?
இரண்டாவதாக, பயன்கருதிச் செயல்புரிவதன் அடிப்படை மிகவும் குறுகியது. இப்பொழுது நடைமுறையிலுள்ள சமுதாயப் பழக்க வழக்கங்களெல்லாம், சமுதாயத்தின் தற்போதைய நிலையை ஆதாரமாகக் கொண்டவை. ஆனால் சமுதாயம் என்றென்றைக்கும் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானிப்பதற்கு, பயன்கருதுவோருக்கு என்ன உரிமை இருக்கிறது? பல காலத்திற்கு முன் சமுதாயம் இருக்கவில்லை. இன்னும் சில காலத்திற்குப் பின் இல்லாமலும் போகலாம். அனேகமாக, நாம் இன்னும் உயர்ந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பரிணாமப் பாதையில், நாம் இப்போது இருப்பது ஒரு படியாக இருக்கலாம்,. எனவே சமுதாய அடிப்படையில் மட்டுமே இயற்றப்படும் விதிகள் நிலையானவையாக இருக்க முடியாது. மனித இயல்பின் முழுப் பரிமாணத்தையும் தன்னுள் அடக்கிக்கொள்ள முடியாது. பயன்கருதும் கொள்கைகள், மிஞ்சிப் போனால் தற்போதைய சமுதாயச் சூழ்நிலையில் மட்டுமே செயல்பட முடியும். அதற்கு அப்பால் அவற்றிற்கு மதிப்பில்லை.
ஆனால் மதம், ஆன்மீகம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்த எந்த ஒழுக்கநெறியும் சரி, நீதிநெறிக் கோட்பாடுகளும் சரி எல்லையற்ற மனிதத் தத்துவம் முழுவதையுமே தனது எல்லையாகக் கொண்டுள்ளது. இது தனிமனிதனைக் கருத்தில் கொள்கிறது. ஆனால் அதன் தொடர்புகள் எல்லையற்றதுடன் உள்ளது. அது சமுதாயத்தையும் கருத்தில் கொள்கிறது. சமுதாயம் என்பது தனிமனிதர்கள் பலரின் சேர்க்கைதானே! தனிமனிதனுக்கும் அவனது நிலையான உறவுகளுக்கும் இந்த நீதிநெறி பொருந்துமானால் சமுதாயத்திற்கும் அது எந்த நிலையில் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பொருந்தும். ஆகவே மனித குலத்திற்கு என்றுமே ஆன்மீக மதம் அவசியமாக இருப்பதை நாம் காண்கிறோம். எவ்வளவுதான் இன்பம் தருவதாக இருந்தாலும், ஜடப்பொருட்களைப் பற்றியே மனிதன் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்க முடியாது.
ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபடுவது, நடைமுறை உறவுகளைக் குலைக்கிறது என்று சொல்லப்படுகிறது. சீன ஞானி கன்பூஷியஸ் வாழ்ந்த அந்தக் காலத்திலேயே, இந்த உலகைக் கவனிப்போம். இந்த உலவ விவகாரங்களை முடித்த பிறகு மறு உலகங்களைப்பற்றிக் கவனிப்போம் என்ற கருத்து இருந்தது. இந்த உலக விவரங்களைக் கவனிப்பது மிகவும் நல்லதே. ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபடுவது நம் நடைமுறை என்று சொல்லப்படுகின்ற உலக விவகாரங்களில் அதிகமாக ஈடுபடுவது இம்மை மறுமை இரண்டையுமே பாதிக்கும். அது நன்மை உலோகாயதர்களாக்கி விடும். ஏனெனில் மனிதன் இயற்கையைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டியவன் அல்ல, அதற்கும் மேலே போக வேண்டியவன்.
இயற்கையைக் கடந்து செல்லப் போராடிக் கொண்டிருக்கும் வரைதான் மனிதன் மனிதனாக இருக்க முடியும். இயற்கை என்பது அக இயற்கை, புற இயற்கை இரண்டையுமே குறிக்கிறது. நமது உடம்பிலும் அதற்கு வெளியேயும் உள்ள ஜடப்பொருளின் மூலக்கூறுகளை அடக்கி ஆள்கின்ற நியதிகள் மட்டுமல்ல, நம்முள் இருக்கும் நுண் இயற்கையும் இவற்றின் ஆளுகைக்கு உட்பட்டதே. இந்த நுண் இயற்கையே உண்மையில், புற இயற்கையை நடத்தும் சக்தியாகும். புற இயற்கையை செல்வது நல்லது, மிகவும் சிறப்பு வாய்ந்தது. அக இயற்கையை வெல்வது அதைவிடச் சிறந்தது. நட்சத்திரங்களையும் கிரகங்களையும் ஆள்கின்ற நியதிகளைப் பற்றித் தெரிந்துகொள்வது சிறப்பானது. நல்லது. ஆனால் மனித குலத்தின் ஆசைகள், உணர்ச்சிகள், மனம் இவற்றைப் பற்றிய நியதிகளைத் தெரிந்து கொள்வது கோடிமடங்கு நல்லதும் சிறந்ததுமாகும். இந்த அக மனிதனை வெல்வது , மனித மனத்தின் நுண்ணிய செயல்பாடுகளின் ரகசியங்களைத் தெரிந்து கொள்வது- இவை மதத்திற்கு மட்டுமே சொந்தமானவை.
மனித இயல்பு, அதாவது சாதாரண மனித இயல்பு பெரிய ஜட உண்மைகளையே அறிய விரும்புகிறது. சாதாரண மனிதனால் நுண்ணிய எதையும் புரிந்து கொள்ள முடியாது. பாமர மக்கள், ஆயிரம் ஆட்டுக் குட்டிகளைக் கொல்லு<ம் சிங்கத்தை வியந்து பாராட்டுகின்றனர். இது சிங்கத்திற்குக் கணநேர வெற்றி ஆனால் இறந்த ஆயிரம் ஆட்டுக் குட்டிகளைப்பற்றி அவர்கள் துளிகூடப் பச்சாதாபப்படுவதில்லை என்று சரியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. மக்கள் உடல் வலிமையின் வெளிப்பாடுகளில்தான் அதிக இன்பம் காண்கிறார்கள். சாதாரண மக்களிடம் நாம் இந்தத் தன்மையையே காண்கிறோம். புற விஷயங்களில்தான் அவர்கள் இன்பம் காண்கிறார்கள். அவற்றை மட்டுமே அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் புலன் இன்பத்தைப் பொருட்படுத்தாத சிலர் ஒவ்வொரு சமுதாயத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் புலன்களைக் கடந்தவற்றில் இன்பம் காண்கிறார்கள். ஜடத்தைவிட உயர்ந்ததன் கணநேரக் காட்சி இவர்களுக்கு அவ்வப்போது கிடைக்கிறது. அதை அடைய அவர்கள் போராடுகிறார்கள். இத்தகையோரின் எண்ணிக்கை பெருகும்போதுதான் ஒரு நாடு உயர்வடைகிறது. பயன்கருதுவோர் இதனை வீண் முயற்சி என்று சொன்னாலும் எல்லையற்றதை நோக்கிச் செல்லும் இந்த முயற்சிகள் நின்றுபோகும் போதுதான் ஒரு நாடு தாழ்வடைகிறது. சமுதாயங்களின் வரலாறுகளை ஊன்றிப் படித்தால் இந்த உண்மை புலனாகும். அதாவது, ஒவ்வோர் இனத்தின் வலிமைக்கும் ஆதார ஊற்று அதன் ஆன்மீகம் தான். ஆன்மீகம் தளர்ந்து, உலோகாயதம் வலுப்படும் போது அந்த இனத்தின் வீழ்ச்சி தொடங்குகிறது.
மதத்திலிருந்து உறுதியான தத்துவங்களையும் உண்மைகளையும் கற்றுக் கொள்கிறோம். மதத்தின் மூலம் பல வசதிகளைப் பெற்றுக் கொள்கிறோம். இது தவிர மதத்தை ஒரு விஞ்ஞானமாக, ஆராய்ச்சிக்கு உரியதாகக் கொண்டால், அது மனித மனத்திற்குக் கிடைக்கக் கூடிய உயர்ந்த, சிறந்த ஆரோக்கியமான பயிற்சியாகவும் அமையும். எல்லையற்றதை அடைவதற்கான இந்தத் தேடல், அதைப் பற்றுவதற்கான இந்தப் போராட்டம், புலன்களின் கட்டுப்பாடுகளைக் கடந்து செல்வதற்கான இந்த முயற்சி, அதாவது ஜடத்திலிருந்து ஆன்மீகமனிதனை உருவாக்குவது போன்ற இந்த முயற்சி, எல்லையற்றதை நம்மோடு ஐக்கியப்படுத்திக் கொள்வதற்காக அல்லும் பகலும் நடக்கும் இந்த முயற்சி இந்த முயற்சிதான் இந்தப் போராட்டம்தான் மனிதன் செய்கின்ற போராட்டங்களிலெல்லாம் மிகவும் பெருமையானதும் சிறப்பு மிக்கதுமாகும்.
உண்பதிலேயே சிலர் பேரானந்தம் அடைகின்றனர். அவர்கள் அவ்வாறு ஆனந்தம் அடையக் கூடாது என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை. குறிப்பிட்ட சில பொருட்களை உடைமையாகக் கொள்வதில் சிலர் மகிழ்ச்சி அடைகின்றனர். அதையும் தடுக்க நமக்கு உரிமையில்லை. அதேபோல் ஆன்மீகச் சிந்தனையில் மிகவுயர்ந்த ஆனந்தம் காணும் மனிதனைத் தடுக்க ம்றவர்களுக்கும் உரிமை இல்லை. பரிணாம வளர்ச்சியில் ஓர் உயிர் எவ்வளவு கீழ்மட்டத்தில் உள்ளதோ அவ்வளவு அதிகம் அது புலன்களில் இன்பம் காணும், நாயையோ ஓநாயையோ போன்று ஆர்வத்துடன் ஒருசில மனிதர்களால் மட்டுமே உண்ண முடியும். நாய் அல்லது ஓநாயின் இன்பமெல்லாம் புலன்களைப் பற்றிக்கொண்டுள்ளதுபோல் தோன்றுகிறது. எல்லா நாடுகளிலுமே, மனிதகுலத்தின் கீழ்ப்படிகளில் உள்ளவர்கள் புலன்களில்தான் இன்பம் காண்கின்றனர். படித்தவர்களும் பண்பட்டவர்களும் சிந்தனை, தத்துவம், கலை, அறிவியல் இவற்றில் இன்பம் காண்கின்றனர். அது எல்லையற்றதானதால் அதன் நிலையும் மிகவுயர்ந்தது; அதை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு அதில் கிடைக்கும் இன்பமும் மிகவுயர்ந்தது. ஆகவே மனிதன் இன்பத்தைத் தேட வேண்டும் என்ற பயன்கருதும் கொள்கைப்படி பார்த்தாலும் அவன் மதச் சிந்தனைகளை வளர்க்கவே வேண்டும். ஏனெனில் அதில்தான் மிகவுயர்ந்த இன்பம் உள்ளது. ஆகவே மத ஆராய்ச்சி மிகவும் அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது. அதிலிருந்து கிடைக்கும் பலன்களைக் கொண்டு இந்த உண்மையை அறியலாம்.
மனித மனத்தை முன்னேற வைப்பதற்கான தூண்டுசக்திகளுள் மிகவும் சிறந்தது மதம். ஆன்மீகம் நமக்குத் தரும் சக்தியைப் போன்று வேறு எந்த லட்சியமும் தருவதில்லை. மனித வரலாற்றைப் பார்ப்போமானால், இப்படித்தான் எப்போதும் இருந்து வந்திருக்கிறது என்பதும், ஆன்மீக சக்திகள் அழிந்துவிடவில்லை என்பதும் நமக்குத் தெரிய வரும். பயன்கருதும் கொள்கையின் அடிப்படையிலேயே மனிதர்கள் நல்லவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் இருக்க முடியும் என்பதை நான் மறுக்கவில்லை. பயன்கருதும் நோக்கத்தை மட்டுமே கடைப்பிடித்து, ஒழுக்கசீலர்களாகவும் நல்லவர்களாகவும் பலர் இந்த உலகில் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் உலகையே அசைப்பவர்கள், உலகம் முழுவதிலுமே ஒரு கவர்ச்சி சக்தியைப் பரவச் செய்வதுபோல் வாழ்ந்தவர்கள், யாருடைய சக்தி ஆயிரக்கணக்கானோரின் உள்ளங்களில் வேலை செய்கிறதோ அவர்கள், யாருடைய வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையில் ஆன்மீகத் தீயைக் கொழுந்துவிட்டெரியச் செய்கிறதோ அவர்கள்-இவர்கள் அனைவருடைய பின்னணியிலும் ஆன்மீகம் ஒளிர்வதை நாம் எப்போதும் காண்கிறோம். அவர்கள் இந்தத் தூண்டுசக்தியை மதத்திலிருந்து பெறுகிறார்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவும் பிறப்புரிமையாகவும் உள்ள எல்லையற்ற ஆற்றலை அடைய உதவுகின்ற மிக உன்னதமான தூண்டுசக்தி மதம். குணத்தை உருவாக்குவதிலு<ம், நல்ல சிறந்த அனைத்தையும் தருவதிலும், மற்றவர்களுக்கும் தனக்கும் அமைதியை அளிப்பதிலும் மிக உன்னதமான தூண்டுசக்தி மதமே. மதத்தை இந்த நோக்கிலிருந்துதான் ஆராய வேண்டும்.
முன்னைவிடப் பரந்த அடிப்படையில் மதத்தை நாம் ஆராய வேண்டும். மதத்தைப் பற்றிய குறுகிய, எல்லைக்கு உட்பட்ட, விவாதத்திற்குரிய கருத்துக்களை விட்டுவிட வேண்டும். மதப் பிரிவுகள் மற்றும் இனம், நாடு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட மதக் கருத்துக்களை நாம் கைவிட வேண்டும். ஒவ்வோர் இனமும் ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு தனிக் கடவுளை அமைத்துக் கொண்டு, மற்றவர்களின் கடவுள் தவறு என்று நினைப்பது கடந்த காலத்திற்கே உரிய மூட நம்பிக்கை. இதைப்போன்ற எல்லா கருத்துக்களையும் நாம் ஒதுக்கிவிட வேண்டும்.
மனித மனம் விரிடையுந்தோறும் அதன் ஆன்மீகமும் படிப்படியாக விரிவடைகிறது. உலகின் எல்லா மூலைமுடுக்குகளையும் சென்றடையாத ஒரு சிறு எண்ணத்தைக் கூட மனிதனால் நினைக்கவே முடியாத காலம் வந்து விட்டது. எந்திரங்கள்மூலம் உலகம் முழுவதோடும் நாம் தொடர்பு கொள்ளத் தொடங்கிவிட்டோம். ஆகவே உலகின் எதிர்கால மதங்கள் உலகம் முழுவதையுமே தழுவக் கூடியனவாகவும் பரந்த எண்ணங்கள் கொண்டவையாகவும் இருக்க வேண்டும்.
ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையனவாக மதங்கள் இருக்க வேண்டும். கடவுளைப் பற்றிய தங்கள் லட்சியங்கள் வேறுபட்டிருப்பதற்காக ஒன்றையொன்று வெறுப்புடன் பார்க்கக் கூடாது. கடவுள் நம்பிக்கையற்ற அதாவது நாம் கடவுள் என்றால் எப்படிப் புரிந்துகொள்கிறோமோ அப்படிப் புரிந்துகொள்ளாத், எத்தனையோ ஆன்மீகச் செம்மல்களையும் சான்றோர்களையும் நான் என் வாழ் நாளில் கண்டுள்ளேன். ஒருவேளை அவர்கள் நம்மைவிடச் சிறந்த முறையில் கடவுளைப் புரிந்து கொண்டிருக்கலாம்
கடவுளைப் பற்றிய சகுணக் கருத்துக்களான உருவமுடையவர், எல்லையற்றவர், அறநெறி, லட்சிய மனிதர் போன்ற எல்லாமே மதம் என்ற தலைப்பில் அடங்க வேண்டும். இவ்வாறு, மதங்களெல்லாம் விரிந்த கருத்துக்கள் உடையனவாகும்போது, நல்லது செய்யும் அவற்றின் ஆற்றலும் பல நூறு மடங்கு பெருகிவிடும். மாபெரும் சக்தி வாய்ந்தவையான மதங்கள், குறுகிய நோக்கத்தின் காரணமாகவும் குறுகிய கட்டுப்பாடுகளின் காரணமாகவும், உலகிற்கு நன்மையைவிடத் தீமையே அதிகம் செய்துள்ளன. தற்காலத்தில்கூட, ஏறக்குறைய ஒரேவிதமான கருத்துக்களைக் கொண்ட பிரிவுளும் சமுதாயங்களும் அந்தக் கருத்துக்களை ஒரேவிதமாக வெளியிடாததால், தம்முள் சண்டையிட்டுக் கொள்வதை நாம் பார்க்கிறோம். எனவே மதங்கள் இன்னும் விரிய வேண்டும். மதக் கருத்துக்கள் உலகம் தழுவுவனவாக, விரிந்து பரந்தனவாக, எல்லையற்றனவாக மாற வேண்டும். அப்போது தான் மதம் தன் முழு ஆதிக்கத்தையும் செலுத்த முடியும். ஏனெனில் மதத்தின் ஆற்றல் உலகத்தில் இப்போதுதான் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.
மதங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. ஆன்மீகச் சிந்தனைகள் மறைந்து கொண்டிருக்கின்றன என்று சிலவேளைகளில் சொல்லக் கேட்கிறோம்,. ஆனால் அவை இப்பொழுதுதான் வளர ஆரம்பித்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. விரிவபடுத்தப்பட்ட, தூய்மைப்படுத்தப்பட்ட மத சக்தி என்பது மனித வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவப் போகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரிடம் அல்லது புரோகிதர்களின் கைகளில் இருந்ததுவரை, மதம் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் புத்தகங்களிலும் கொள்கைகளிலும் விழாக்களிலும் உருவங்களிலும் சடங்குகளிலும் மட்டும் தான் அடங்கி இருந்தது. ஆனால் உண்மையான, ஆன்மீகமயமான, உலகம்தழுவிய கருத்துக்களை எய்தும் போது மட்டுமே மதம் உண்மையாக உயிர்த்துடிப்பு கொண்டதாக முடியும். அப்பொழுதுதான் மதம் நம் இயல்போடு ஒன்றும்; ஒவ்வொரு கணமும் நம்முடன் வாழும்; நம் சமுதாயத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஊடுருவி நிற்கும்; இதற்கெல்லாம் மேலாக, இதுவரை இருந்ததைவிட, நல்லது செய்வதற்கு எல்லையற்ற ஆற்றல் உடையதாக மாறும்.
வாழ்ந்தால் எல்லாம் வாழும். வீழ்ந்தால் எல்லாம் வீழும் என்கிற நிலைமை இருப்பதால் பல்வேறு மதங்களுக்கிடையே இப்போது தேவைப்படுவது நட்புறவுதான். இந்த நட்புறவு பரஸ்பர மதிப்பையும் மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த நட்புறவு, இப்போது பல மதங்களில் துரதிரிஷ்டவசமாகக் காணப்படுவதான, தாமே உயர்ந்தவை, மற்றவை தாழ்ந்தவை, தம் ஆதரவு அவற்றிற்குத் தேவைப்படுகிறது, என்பன போன்ற குறுகிய நோக்கங்களின் அடிப்படையில் உள்ள போலி நட்புறவாக இருக்கக்கூடாது. ஒருபுறம், மனத்தினுடைய செயல்பாடுகளின் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுந்த, துரதிர்ஷ்டவசமாக, மதம் என்ற பெயருக்கு இப்போதும் தாங்களே முழு உரிமை உள்ளவை என்று கூறுகின்ற மதக் கருத்துக்கள்; மறுபுறம் பூமியில் நின்றுகொண்டு, அதேவேளையில் வானத்தின் ரகசியங்களைத் தங்கள் அறிவால் ஆராய்கின்ற அதாவது பவுதீக விஞ்ஞானக் கருத்துக்கள். இவை இரண்டிற்கும் இடையேதான் இந்த நட்புறவு மிக அதிகமாகத் தேவைப்படுகிறது.
இந்த ஒற்றுமை உருவாவதற்காக, இருசாராரும் விட்டுக்கொடுக்க வேண்டும். இந்தத் தியாகங்கள் சில வேளைகளில் மிகப் பெரியதாகவும், சிலவேளைகளில் மிகவும் துன்பம் தருவனவாகவும் இருக்கக்கூடும். ஆனால் இந்தத் தியாகங்களின் மூலம் தங்கள் நிலை உயர்ந்திருப்பதையும், தாங்கள் உண்மையை நோக்கி நன்கு முன்னேறியிருப்பதையும் இவர்கள் அறிந்துகொள்ள முடியும். முடிவில், காலம் இடம் இந்த இரண்டு பரிமாணங்களின் ஆளுகைக்கு உட்பட்டு நிற்கும் அறிவானது, காலம் இடம், மனம், புலன்கள் இவற்றையெல்லாம் கடந்து நிற்கக்கூடிய முழுமையான, எல்லையற்ற, இரண்டற்ற ஒன்றாகிய தத்துவத்தை அடைந்து இரண்டறக் கலந்துவிடும்.
மரணமிலாப் பெருநிலை
-
மனித ஆன்மாவின் அழிவற்ற தன்மையைத் தவிர வேறு எந்தக் கேள்வி இவ்வளவு அதிகமாகக் கேட்கப்பட்டது? வேறு எந்தக் கருத்து மனிதனைப் பிரபஞ்சம் முழுவதிலும் தேடச் செய்திருக்கிறது? வேறு எந்தக் கேள்வி மனித இதயத்திற்கு இவ்வளவு நெருக்கமானதாகவும் பிரியமானதாகவும் இருக்கிறது? வேறு எந்தக் கேள்வி நம் வாழ்க்கையோடு இவ்வளவு பின்னிப் பிணைந்திருக்கிறது? கவிஞர்கள், ரிஷிகள், புரோகிதர்கள், தீர்க்கதரிசிகள் எல்லோரும் இந்தக் கருத்தை ஆராய்ந்தார்கள். முடி சூடிய மன்னர்கள் இதை விவாதித்தார்கள். பிடி சோற்றுக்குக் கையேந்தும் பிச்சைக்காரர்கள் இதைப் பற்றிக் கனவு கண்டார்கள். மனிதர்களுள் சிறந்தவர்கள் இதை நெருங்கியிருக்கிறார்கள்; சாதாரணமானவர்கள் இதை அடைய விரும்பினார்கள். இந்தக் கருத்தின் மீதுள்ள ஆர்வம் இன்னும் மறையவில்லை; மனிதகுலம் தன் இயல்பை இழக்காத வரையிலும் இது மறையவும் செய்யாது.
பலர் இந்தக் கேள்விக்குப் பலவிதமான பதில்களை அளித்திருக்கிறார்கள். வரலாற்றின் ஒவ்வொரு முக்கியமான காலகட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் இந்த விவாதத்தை விட்டுவிட்டதும் உண்டு. ஆனாலும் இந்தக் கேள்வி என்றும் புதியதாக எப்போதும் இருக்கிறது. நம் வாழ்க்கையின் போராட்டத்திலும் குழப்பத்திலும் நாம் அடிக்கடி இதை மறந்துவிடத் தலைப்படுகிறோம். திடீரென்று ஒருவர் இறந்துவிடுகிறார். அவர் ஒருவேளை நாம் இதயபூர்வமாக நேசித்து வந்தவராக இருக்கலாம்; இதயத்தோடு இதயமாக இருந்த ஒருவரை மரணம் நம்மிடமிருந்து பிரித்துவிடுகிறது. அப்போது நம்மைச் சுற்றியுள்ள உலகமும் அதன் குழப்பமும் போராட்டமும் ஒரு கணம் நின்றுவிடுகிறது. இதற்குப் பிறகு என்ன? ஆன்மா என்ன ஆகிறது? என்ற கேள்வியை மனம் எழுப்புகிறது.
மனித அறிவு எல்லாமே அனுபவத்திலிருந்தே தோன்றுகிறது. அனுபவத்திலிருந்து அல்லாமல் நாம் எதையும் அறிந்துகொள்ள முடியாது. நமது பகுத்தறிவு, பொதுமைப்படுத்தப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. அனுபவங்களை இணைத்துப் பார்ப்பதால் உண்டாவதே நமது அறிவு எல்லாம். நம்மைச் சுற்றி நாம் பார்ப்பது என்ன? தொடர்ந்து மாற்றத்தைத்தான். விதையிலிருந்து செடி வருகிறது, மரமாக வளர்கிறது, பின்னர் விதைக்குள்ளேயே ஒடுங்குகிறது. இவ்வாறு வட்டத்தை நிறைவு செய்கிறது. மிருகங்களும் இதேபோல்தான்; பிறக்கின்றன, சில காலம் வாழ்கின்றன, பின்னர் இறக்கின்றன; வாழ்க்கை வட்டத்தை முடித்துக் கொள்கின்றன. மனிதனின் விஷயமும் இதேபோல்தான். மெதுவாக ஆனால் நிச்சயமாக மலைகள் பொடியாகின்றன. ஆறுகள், மெதுவாக ஆனால் நிச்சயமாக வறண்டு போகின்றன. மழை, கடலிலிருந்து தோன்றி கடலுக்குள்ளேயே சங்கமமாகிறது. எங்கு பார்த்தாலும் பிறப்பு, வளர்ச்சி, முன்னேற்றம், அழிவு என்று துளிகூடப் பிசகாமல், ஒன்றையொன்று பின்பற்றி வட்டங்களாகச் சுழன்று கொண்டிருக்கின்றன.
இது நமது அன்றாட அனுபவம். வாழ்க்கை என்று நாம் சொல்லும் இந்தப் பெரிய விஷயம், பல கோடி உருவங்களையும் வடிவங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது. அதில்தான் எத்தனையெத்தனை வேறுபாடுகள்! அணு முதல் ஆன்மீகச் செம்மல்வரை, அனைத்தும், அனைவரும் இந்த வாழ்க்கைச் சுழலில் அடக்கம். இவை எல்லாவற்றின் ஊடேயும் ஓர் ஒருமைப்பாடு இழையோடுவதை நாம் காண்கிறோம். ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரிப்பதாக நாம் நினைத்திருக்கும் சுவர் நாளுக்கு நாள் உடைந்து சிதறிக்கொண்டே போகிறது. எல்லா பொருட்களும் மூலமான ஒரே பொருளின் பல்வேறு வெளிப்பாடுகளே, பல்வேறு தோற்றங்களே, இந்தப் பல்வேறு வெளிப்பாடுகளும் எல்லையற்று நீண்டுள்ள ஒரே தொடர்ச்சியின் பல்வேறு வளையங்களே, இவையனைத்தின் ஊடேயும் இழைவது ஒரே வாழ்வுதான் என்பதை இன்றைய விஞ்ஞானமும் ஒப்புக்கொள்ளத் தொடங்கிவிட்டது. இதைத்தான் பரிணாமம் என்கிறார்கள். இந்தக் கருத்து, மனித சமுதாயத்தைப் போல் அவ்வளவு பழமையானது. ஆனால் மனித அறிவின் முன்னேற்றத்திற்கு ஏற்ப இந்தக் கருத்தும் மெருகேறி வருகிறது.
பழங்காலத்தினர் இன்னும் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். தற்காலத்தவர்களின் சிந்தனையில் அது இன்னும் சரியாக எட்டவில்லை. அதுதான் ஒடுக்கம். விதைதான் செடியாகிறது, மணற்துகள் செடியாவதில்லை. தந்தைதான் குழந்தையாகிறான், ஓர் உருண்டைக் களிமண் குழந்தையாவதில்லை. இந்தப் பரிணாம வளர்ச்சி எதிலிருந்து வருகிறது என்பதுதான் கேள்வி. விதை என்பது என்ன? விதை என்பது மரம்தான். எதிர்கால மரத்தின் எல்லா சாத்தியக்கூறுகளும் அந்த விதைக்குள் இருக்கின்றன. எதிர்காலத்தில் மனிதனாவதற்குரிய சாத்தியக்கூறுகள் அனைத்தும் குழந்தையில் இருக்கின்றன. எதிர்கால உயிரினத்தின் குணங்களெல்லாம் உயிரணுவில் இருக்கின்றன. இது என்ன? இந்தியாவின் பண்டைய தத்துவ ஞானிகள் இதை ஒடுக்கம் என்றார்கள். ஆகவே ஒவ்வொரு விரிவிற்கும் முன்னால் ஓர் ஒடுக்கம் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது. ஏற்கனவே ஒடுங்கியிருக்காத ஒன்று விரிவடைய முடியாது. இங்கேயும் தற்கால விஞ்ஞானம் நம் உதவிக்கு வருகிறது. பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள சக்தியின் அளவு, எப்போதும் ஒரேபோல் இருக்கிறது என்பதைக் கணிதபூர்வமாக நாம் அறிந்திருக்கிறோம். ஓர் அணுவளவு ஜடப்பொருளையோ, ஒரு துளி சக்தியையோ நம்மால் பிரபஞ்சத்திலிருந்து எடுத்துவிட முடியாது. அதேபோல் ஓர் அணுவையோ துளி சக்தியையோ பிரபஞ்சத்தில் சேர்க்கவும் முடியாது.
எனவே பரிணாமம் அல்லது விரிவு சூன்யத்திலிருந்து வருவதில்லை. அப்படியானால் அது எங்கிருந்து வருகிறது? அதற்கு முந்திய ஒடுக்கத்திலிருந்துதான். மனிதனின் ஒடுக்கமே குழந்தை; குழந்தையின் பரிணாமமே மனிதன். மரத்தின் ஒடுக்கமே விதை; விதையின் விரிவே மரம். உயிரின் சாத்தியக்கூறுகளெல்லாம் உயிரணுவில் இருக்கின்றன. பிரச்சினை இப்போது சிறிது தெளிவாகிறது. உயிரின் தொடர்ச்சியான இருப்பைப் பற்றிய முதல் கருத்தை இதனுடன் சேர்த்துக் கொள்வோம். முதல் உயிரணுவிலிருந்து பரிபூரணத்துவம் அடைந்த மனிதன் வரையில் உண்மையில் ஒரே உயிர்தான் இருக்கிறது. ஒரு வாழ்க்கையில் பல்வேறு நிலைகளைப் பார்க்கிறோம். அது போல் இந்த ஒரே உயிரணுதான் குழந்தையாகி, வாலிபனாகி, கிழவனாவது போல், முதல் உயிரணுவிலிருந்து பரிபூரணத்துவம் பெற்ற மனிதன்வரை ஒரே உயிர்தான் பரிணமிக்கிறது. எல்லாம் ஒரே தொடர் சங்கிலிதான். இதுதான் பரிணாமம். ஆனால் ஒவ்வொரு விரிவுக்கும் முன்னால் ஓர் ஒடுக்கம் இருக்க வேண்டும் என்று நாம் பார்த்தோம். ஒரே உயிர்தான் தன்னைத்தானே நிதானமாக வெளிப்படுத்திக் கொள்கிறது. முதல் உயிரணுவிலிருந்து பரிபூரணத்துவம் பெற்ற மனிதன்வரை விரிவடைந்து, பூமியில் கடவுளின் அவதாரம்வரை வருகின்ற இந்தச் சங்கிலித் தொடர் முழுவதுமே ஒரே உயிர்தான். இந்த வெளிப்பாடு முழுவதுமே அந்த முதல் உயிரணுவுக்குள் ஒடுங்கியிருந்திருக்க வேண்டும். இந்த வாழ்க்கை முழுவதுமே, ஏன், இந்த மனிதக் கடவுள்கூட அதிலேயே ஒடுங்கியிருக்க வேண்டும்; அந்த ஒடுக்கத்தில் இருந்து மெதுவாக வெளிவந்து, மிகவும் மெதுவாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறது. மிக உயர்ந்த வெளிப்பாடும் அங்கே நுட்பமான வடிவில் இருந்திருக்க வேண்டும். எங்கும் நிறைந்துள்ள பிரபஞ்ச வாழ்வு என்பதன் ஒடுக்கமே இந்தத் தொடர் சங்கிலி முழுவதுமான அந்த ஒரே சக்தி. இந்தப் பேரறிவுதான் முதல் உயிரணுவிலிருந்து நிறைமனிதன் வரை நிதானமாக விரிவடைகிறது. அது வளர்கிறது என்பதில்லை. வளர்ச்சி என்ற கருத்தையே மனத்திலிருந்து நீக்கிவிடுங்கள். வளர்ச்சி என்றாலே எப்போதும் வெளியிலிருந்து வருகின்ற ஒன்றுடன் தொடர்புடையது. எல்லா உயிர்களுள்ளும் அடங்கியிருக்கும் எல்லையற்ற பொருள், புறத்திலுள்ள எதையும் சார்ந்ததல்ல என்ற உண்மையை, வளர்ச்சி என்ற கருத்து பொய்யாக்கிவிடும். அது வளரவே முடியாது. அது எப்போதும் இருக்கிறது; தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது, அவ்வளவுதான்.
காரணத்தின் வெளிப்பாடே காரியம். காரணத்திற்கும் காரியத்திற்கும் இடையில் அடிப்படை வித்தியாசம் எதுவுமில்லை. இந்த டம்ளரை எடுத்துக் கொள்வோம். டம்ளரின் மூலப்பொருளும், டம்ளரை உருவாக்கிய நிமித்த காரணமாகிய மனிதனின் சித்தமும் சேர்ந்து, அதனை உருவாக்கியிருக்கின்றன. இந்த இரண்டுமே டம்ளருக்குக் காரணம். அவை இந்த டம்ளரில் இருக்கின்றன. அவை எந்த உருவத்தில் டம்ளரில் இருக்கின்றன? இணைக்கும் சக்தியாக. இந்தச் சக்தி இல்லாவிட்டால் டம்ளர் தூள்தூளாகப் பிரிந்துவிடும். அப்படியானால் காரியம் என்பது என்ன? காரணத்தைப் போன்றதுதான் காரியமும்; ஆனால் வேறு உருவத்தில் இருக்கிறது, வேறு அமைப்பில் இருக்கிறது. காரணம் உருமாறி கால வரையறைக்குள் வரும்போது காரியமாகிறது. நாம் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தக் கருத்தை உயிர் பற்றிய நம் கருத்தோடு பொருத்திப் பார்த்தால், முதல் உயிரணுவிலிருந்து நிறை மனிதன்வரை உள்ள ஒரே உயிர்தான் பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு உயிர்களாகத் தோற்றம் அளிக்கிறது என்பதை உணரலாம். முதலில் அது ஒடுங்கி நுட்ப உருவாகியது. பின்னர், காரணமாகிய அந்த நுட்ப உருவிலிருந்து விரிவடைந்து, பரிணமித்தபடி, தூலமாக வெளிவருகிறது.
ஆனால் மரணமற்ற நிலைபற்றிய கேள்விக்கு நாம் இன்னும் ஒரு முடிவு காணவில்லை. இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எதற்குமே அழிவில்லை என்பதைப் பார்த்தோம். புதிதாக எதுவும் இல்லை, புதிதாக எதுவும் வராது. ஒரே சங்கிலித் தொடரான வெளிப்பாடுகள்தான் சக்கரம்போல் மேலும்கீழுமாகச் சுழன்று வருகின்றன. இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே அலைகள் போல் எழுவதும் விழுவதுமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. நுட்ப உருவங்களிலிருந்து புதுப்புது அமைப்புகள் தங்களை விரிவுப்படுத்திக் கொண்டு, தூல வடிவம் எடுத்து, மறுபடியும் கரைந்து, பழைய நுட்பநிலையை அடைகின்றன. மறுபடியும் இதே சுழற்சி நடைபெறுகிறது. எல்லா உயிர்களின் விஷயமும் இப்படித்தான். உயிரின் வெளிப்பாடு ஒவ்வொன்றும் விரிவதும்