ராஜ யோகம் சொற்பொழிவுகள்
…
முன்னுரை
…
நமது அறிவு எல்லாமே அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அனுமான அறிவிற்கும் அனுபவமே அடிப்படை. அனுமான அறிவில், நாம் சாதாரண அறிவிலிருந்து பொது அறிவிற்கோ பொது அறிவிலிருந்து விசேஷ அறிவிற்கோ செல்கிறோம். நிச்சய விஞ்ஞானம் என்று அழைக்கப்படுபவற்றுள் உள்ள உண்மையை மக்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம். ஏனெனில் அது ஒவ்வொருவருடைய தனி அனுபங்களை ஒத்திருக்கிறது. தான் கூறும் எதையும் நம்புமாறு விஞ்ஞானி சொல்வதில்லை. அவன் தனது சொந்த அனுபவங்களிலிருந்து சில முடிவுகளைக் கண்டறிந்துள்ளான். ஆராய்ந்த பின்னரே அவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு அவன் கூறுகிறான். அவனது முடிவுகள் உலகம் முழுவதிலுள்ள மனித அனுபவங்களுடன் ஒத்திருக்கின்றன. நிச்சய விஞ்ஞானம் ஒவ்வொன்றிலும் மனிதகுலம் முழுமைக்கும் பொதுவான அடிப்படை ஒன்ற உள்ளது. எனவே அதிலிருந்து பெறப்பட்ட முடிவுகள் சரியா தவறா என்பதை நாம் உடனடியாகக் காண முடியும். மதத்திற்கு இத்தகைய ஓர் அடிப்படை உண்டா இல்லையா என்பதுதான் கேள்வி. அதற்கு ஆம் என்றும் இல்லை என்றும் நான் விடை தர வேண்டியுள்ளது.
உலகம் முழுவதும் பொதுவாக உபதேசிக்கப்பட்டு வருவதான் மதம் என்பதன் அடிப்படை நம்பிக்கை, முழு நம்பிக்கை என்று கூறப்படுகிறது. பல மதங்கள் வெறும் பல்வேறு கொள்கைளை மட்டுமே கொண்டவையாக உள்ளன. அதனால்தான் மதங்களுக்கிடையே பூசலை நாம் காண்கிறோம். இந்தக் கொள்கைகளும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவையே. மேகங்களுக்கு மேலே அமர்ந்து பிரபஞ்சம் முழுவதையும் ஆள்கின்ற ஒரு மாபெரும் தெய்வம் இருப்பதாக ஒருவர் கூறுகிறார். தாம் கூறுவதை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, நானும் அதை நம்ப வேண்டும் என்று என்னிடம் சொல்கிறார். எனக்கும் அதுபோலவே சொந்தக் கருத்துக்கள் இருக்கலாம். அவற்றை நம்புமாறு மற்றவர்களைக் நானும் கூறலாம். அதற்கு யாராவது காரணம் கேட்டால் எந்தக் காரணத்தையும் என்னால் கொடுக்க முடியாது. இதனால்தான் தற்காலத்தில் மதமும் தத்துவ ஞானமும் கெட்ட பெயரைச் சம்பாதித்து வருகின்றன. ஓ இந்த மதங்களில் வெறும் கொள்கைகள் மட்டுமே மூட்டைமூட்டையாக உள்ளன இவற்றை நிர்ணயிக்க ஓர் அளவுகோலும் இல்லை. ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த கருத்துக்களைப் பரப்புகிறார்கள். என்றே பிடித்தவர்கள் கூறுவதுபோல் தோன்றுகிறது. ஆனால் மதத்திலுள்ள உலகம்தழுவிய நம்பிக்கைக்கு ஓர் அடிப்படை உள்ளது. அந்த அடிப்படையே, வெவ்வேறு கொள்கைகளையும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளின் வேறுபட்ட கருத்துக்களையும் கட்டுப்படுத்துகிறது. அவற்றை அலசிப் பார்த்தால், அவை உலகம்தழுவிய அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளதாக் காணலாம்.
உலகிலுள்ள பல்வேறு மதங்களை ஆராய்ந்தால் அவை சாஸ்திரங்கள் உடையவை. சாஸ்திரங்கள் இல்லாதவை என்று இருவகைப்படும். சாஸ்திரங்கள் உடையவை வலிமை மிக்கவை. அவற்றைப் பலர் பின்பற்றவும் செய்கின்றனர். சாஸ்திரங்கள் இல்லாதவை அனேகமாக மறைந்துவிட்டன. புதிதாகத் தோன்றிய ஏதோ சில மதங்களைச் சிலர்தான் பின்பற்றுகின்றனர். ஆனாலும் அவை அனைத்திலும் ஒரு விஷயத்தில் கருத்து ஒற்றுமையைக் காணலாம்; தாங்கள் போதிக்கும் உண்மைகள், குறிப்பிட்ட மனிதர்களின் அனுபவங்களின் விளைவுகள் என்று அவை எல்லாமே கூறுகின்றன. கிறிஸ்தவ மதத்தை எடுத்துக்கொண்டால், கிறிஸ்துவிடமும், கிறிஸ்து கடவுளின் அவதாரம் என்பதிலும், கடவுளிடமும், ஆன்மாவிலும் ஆன்மாவிற்கு இதைவிடச் சிறந்த நிலை உண்டு என்பதிலும் நம்பிக்கை கொள்ளுமாறு கிறிஸ்தவர்கள் உங்களிடம் கூறுகின்றனர். அதற்கான காரணம் கூறுமாறு அவரிடம் கேட்டால், தாங்கள் அவற்றை நம்புவதாகச் சொல்கின்றனர். ஆனால் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை அமைப்பை ஆராய்ந்தால், அது அனுபவத்தின்மீதே அமைந்துள்ளதைக் காண்போம். தாம் கடவுளைக் கண்டதாக ஏசு கூறினார். அவரது சீடர்களோ தாங்கள் கடவுளை உணர்ந்ததாகக் கூறினர். இவ்வாறே ஒவ்வொருவரின் அனுபவங்களும் உள்ளன. இதுபோல் பவுத்த மதத்தில் புத்தரின் அனுபவம் ஆதாரமாக உள்ளது. புத்தர் சில உண்மைகளை அனுபவித்தார். அவற்றைக் கண்டார். அவற்றுடன் தொடர்புகொண்டார். அவற்றை உலகிற்குப் போதித்தார். இந்துக்களும் இவ்வாறே கூறுகின்றனர். இந்துக்களின் சாஸ்திரங்களை எழுதியவர்கள் ரிஷிகள். இவர்களும் தாங்கள் சில உண்மைகளை அனுபவித்ததாகவும் அவற்றையே உபதேசிப்பதாகவும் கூறினார்கள். ஆகவே உலகிலுள்ள மதங்கள் எல்லாமே, நம் அறிவு அனைத்திற்கும் அடிப்படையானதும் உலகம் தழுவிய தும் உறுதிமிக்கதுமான அனுபூதி அல்லது நேரடி அனுபவத்தின்மீதே அமைக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது.
மனத்தின் ஆற்றல்களை எல்லாம் ஒருமுகப்படுத்தியதால்தானே உலகிலுள்ள அறிவை மனிதன் பெற்றான், எவ்வாறு தட்ட வேண்டும், தேவையான உந்துதலை எப்படி அளிப்பது என்பது மட்டும் நமக்குத் தெரியுமானால் உலகம் தனது ரகசியங்களை அளிக்கத் தயாராக இருக்கிறது. அதற்கான வலிமையும் வேகமும் ஒருமைப்பாட்டின் மூலமே கிடைக்கிறது. மனித மனத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. எவ்வளவுக்கு அதை ஒருமைப்படுத்துவீர்களோ, அந்த அளவிற்கு ஆற்றலை ஒரு மையத்தில் குவிக்க உங்களால் முடியும். இதுதான் ரகசியம்.
மனத்தைப் புறப்பொருட்களின்மீது குவிப்பது எளிது. இயல்பாகவே மனம் வெளிநோக்கு கொண்டது. ஆனால் மத ஆராய்ச்சி, மனஇயல், தத்துவம் இவற்றில் அவ்வாறு இல்லை. ஏனெனில் இங்கே அறிபவனும் அறியப்படும் பொருளும் ஒன்றே. அறியப்படும் பொருளான மனம் உள்ளே இருக்கிறது. இந்த மனத்தை ஆராயவும் மனம்தான் வேண்டும். மனமே மனத்தை ஆராய்கிறது. மனத்திற்குத் தன்மையே நோக்கும் தன்மை உண்டு என்பது நமக்குத் தெரியும் நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். அதேவேளையில் ஏதோ ஓர் இரண்டாம் மனிதனைப்போல் தனியாக நின்று, நான் பேசுவதை அறியவும் கேட்கவும் செய்கிறேன். ஒரே நேரத்தில் நீங்கள் வேலை செய்யவும் சிந்திக்கவும் செய்கிறீர்கள். அப்போது மனத்தின் ஒரு பகுதி விலகி நின்று நீங்கள் சிந்திப்பதை நோக்குகிறது. மனத்தின் ஆற்றல்களைக் குவித்து அதன் மீதே திருப்ப வேண்டும். அப்போது எவ்வாறு கதிரவனின் கதிர்களின் முன்னால் காரிருள் தன் ரகசியங்களை வெளிப்படுத்துகிறதோ, அவ்வாறு இந்த ஒருமுகப்பட்ட மனமும் தன் ஆழங்களிலுள்ள ரகசியங்களில் ஊடுருவிச் செல்கிறது. இவ்வாறு நாம் நம்பிக்கையின் அஸ்திரவாரத்திற்கு, உண்மையான, சரியான மதவுணர்விற்கு வருகிறோம். நமக்கு ஆன்மா உண்டா, இல்லையா? வாழ்வு என்பது ஐந்து நிமிடத்திற்கா அல்லது என்றென்றைக்குமா? பிரபஞ்சத்தில் ஒரு கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்பவற்றையெல்லாம் நமக்கு நாமே உணர்ந்துகொள்வோம். அவையெல்லாம் நமக்கு வெளிப்படுத்தப்படும். இதைக் கற்பிக்கிறது ராஜயோகம். எப்படி மனத்தை ஒருமைப்படுத்துவது, நமது சொந்த மனங்களின் அடியாழத்திலுள்ள அறைகளை எப்படிக் கண்டுபிடிப்பது, பிறகு அங்குள்ள எண்ணத் திரள்களைப் பொதுமைப்படுத்தி அவற்றிலிருந்து எப்படி நமக்கென்று முடிவுகளைக் காண்பது என்பவற்றைக் கற்பிப்பதே ராஜயோகத்தின் நோக்கம். ஆதலால் அது நமது மதத்தைப் பற்றியோ, நாம் ஆத்திகர்களா, நாத்திகர்களா, கிறிஸ்தவர்களா, யூதர்களா, பவுத்தர்களா என்றெல்லாம் கேட்பதில்லை. நாம் மானிடர், அது போதும் , மதத்தைத் தேடும் உரிமையும் ஆற்றலும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. காரணம் என்ன என்று கேட்கும் உரிமையும், விடையைத் தானே காணும் <உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் அதற்காக அவன் சிறிது பாடுபட வேண்டும்.
இதுவரை நாம் பார்த்ததிலிருந்து ராஜயோகப் பயிற்சிக்கு எந்தவிதமான நம்பிக்கையும் தேவையில்லை என்பது தெளிவாகிறது. நீங்களே கண்டறியாததுவரை எதையும் நம்பாதீர்கள். இதுதான் ராஜயோகம் போதிப்பது. உண்மை நிலைநிற்க எந்த ஊன்றுகோலும் தேவையில்லை. நமது விழிப்புநிலை உண்மைகளை நிரூபிக்கக் கனவுகளோ கற்பனைகளோ தேவையா என்ன? நிச்சயமாக இல்லை! ராஜயோகத்தைப் பயில நீண்ட காலமும் நீடித்த பயிற்சியும் சார்ந்தது. ஆனால் பெரும்பகுதி மனத்தைச் சார்ந்தது. மனம் எந்த அளவிற்கு நெருக்கமாக உடலுடன் தொடர்புள்ளது என்பதைப் பின்னர் காண்போம்.
மனம் என்பது உடலின் ஒரு நுண்பகுதி மட்டுமே என்பதையும் மனம் உடலின்மீது செயல்படுகிறது என்பதையும் நாம் நம்புவதானால் உடலும் மனத்தின்மீது செயல்படுகிறது என்று கொள்வது நியாயமானது. உடல் நோயுற்றால் மனமும் சஞ்சலமடைகிறது. உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனமும் நலமாக வலிமையாக இருக்கிறது. கோபம் வரும்போது மனம் சஞ்சலமடைகிறது. அது போலவே மனம் கலங்கினால், உடல்நலமும் கெடுகிறது. மக்களுள் பெரும்பாலோரைப் பொறுத்தவரை மனம் ஏறக்குறைய உடலின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அவர்களின் மனம் மிகக்குறைவாகவே வளர்ச்சி அடைந்திருக்கிறது. அவர்கள் விலங்குகளிலிருந்து மிகச் சிறிது மட்டுமே வேறுபட்டுள்ளனர். அது மட்டுமல்ல. அவர்களுள் பலருக்கும் கட்டுப்பாட்டு ஆற்றல், தாழ்ந்த விலங்குகளைவிடச் சிறிதளவே அதிகமாக உள்ளது. நமக்கு நம் மனத்தின்மீது மிகச் சிறிதளவே கட்டுப்பாடு உள்ளது. அந்தக் கட்டுபாட்டைக் கொண்டுவருவதற்கு, உடலையும் மனத்தையும் கட்டுப்படுத்துவதற்கு உடலைச் சார்ந்த சில உதவிகள் வேண்டும். போதிய அளவிற்கு உடம்பை அடக்கியபின், மனத்தை வசப்படுத்த முயலலாம். மனத்தை வசப்படுத்தினால் அது நமது கட்டுப்பாட்டிற்குள் வரும். அதன்பின்னர் நாம் விரும்புவதுபோல் அதனை வேலை செய்ய வைக்கலாம். அதைக் கட்டாயப்படுத்தி, நாம் விரும்புவதுபோல் அதன் ஆற்றல்களை ஒருமைப்படுத்தலாம்.
அகவுலகம் அல்லது நுண்ணுலகின் தூல வடிவமே புறவுலகம் என்கிறான் ராஜயோகி. சூட்சுமமாக இருப்பது தான் எப்போதும் காரணமாகவும்
தூலம் எப்போதும் காரியமாகவும் இருக்கும். எனவே புறவுலகம் காரியம்; அகவுலகம் காரணம். அதுபோலவே அகத்தில் உள்ள நுண்ணிய சக்திகளின் தூலப் பகுதிகளே புறசக்திகள், இந்த அகசக்திகளைக் கண்டுபிடித்து அவற்றைக் கையாள்வது எப்படி என்று அறிந்துகொண்டவனுக்கு இயற்கை முழுவதுமே வசமாகும். பிரபஞ்சம் முழுவதையும் கட்டுப்படுத்த முனைகிறான் யோகி. அதற்குக் குறைந்த எதையும் அவன் நாடுவதில்லை. இயற்கைநியதிகள் என்று நாம் அழைக்கிறோமே, அவை தன் மீது எந்த ஆதிக்கமும் செலுத்தாத, அவை அனைத்தையும் கடந்த ஒரு நிலையை அடைய அவன் விரும்புகிறான். அக மற்றும் புற இயற்கை அனைத்திற்கும் அதிபதியாக விழைகிறான். மனித இனத்தின் முன்னேற்றம். நாகரீகம் என்பதெல்லாம் இயற்கையை அடக்கி ஆள்வதைத்தான் குறிக்கும்.
இயற்கையை ஆள வெவ்வேறு இனத்தினர் வெவ்வேறு வழிகளில் முயன்றனர். ஒரு சமுகத்தில் சிலர் புற இயற்கையையும், வேறு சிலர் அக இயற்கையையும் அடக்கியாள முயல்வதுபோல் இனங்களுள்ளும் சிலர் புற இயற்கையையும் சில அக இயற்கையையும் கட்டுப்படுத்த விரும்புகின்றனர். அக இயற்கையையும் கட்டுப்படுத்தவதால் அனைத்தையும் கட்டுப்படுத்தலாம் என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்களோ புற இயற்கையைக் கட்டுப்படுத்துவதால் நாம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர். இரண்டு கூற்றுகளின் எல்லைவரை சென்றோமானால் இரு சாரார் கூறுவதும் சரியே, ஏனெனில் இயற்கையில் அகம், புறம் என்ற பாகுபாடு இல்லை. இவை கற்பனையில் மட்டுமே காணப்படுகின்ற பொய்யான வரம்புகள். தத்தம் ஞானத்தின் எல்லையை அடையும் போது இரு சாராரும் ஒரு மையத்தில் சந்தித்தே தீர வேண்டும். ஒரு பவுதீக விஞ்ஞானி வெளியுலக விஞ்ஞான அறிவை அதன் கடைசி எல்லைக்குக் கொண்டு போகும்போது அது தத்துவத்தில் கரைவதைக் காண்கிறான். அதேபோல், உள்ளது ஒன்றே, மனம் என்றும் ஜடப்பொருள் என்றும் அவன் கருதுகின்ற வேறுபாடு உண்மையில் இல்லாதது என்பதையும் காண்கிறேன்.
எந்த ஒன்றிலிருந்து பல தோன்றினவோ, எந்த ஒன்று பலவாக இருக்கின்றதோ, அந்த ஒன்றை அந்த ஒருமையைக் காண்பதே எல்லா சாஸ்திரங்களின் முடிவான நோக்கம், ராஜயோகம் அகவுலகில் ஆரம்பிக்கிறது. அக இயற்கையை ஆராய்கிறது. அதன் மூலம் அகம், புறம் இரண்டையும் கட்டுப்படுத்த முயல்கிறது. இந்த முயற்சி மிகவும் தொன்மையானது. இந்தியா அதன் சிறப்பிடமாக இருந்து வருகிறது. மற்ற நாட்டினரும் இந்த முயற்சியில் ஈடுபடவே செய்தனர். மேலை நாடுகளில் இது ஒரு ரகசிய முறையென கருதப்பட்டது. இதனைப் பயின்றவர்கள் சூனியக்காரிகள், மந்திரவாதிகள் என்று கருதப்பட்டு எரிக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர் இந்தியாவிலோ பல காரணங்களால் இது யாருடைய கைகளில் அகப்பட்டதோ அவர்கள் அதில் தொண்ணூறு சதவீதத்தை அழித்தனர். எஞ்சியதைப் பரம ரகசியம் என்று மறைத்து விட்டனர்.
இந்தக் காலத்தில் மேலைநாட்டில் பலர் யோக ஆசிரியர்களாகப் புறப்பட்டுள்ளனர். இவர்களுடைய கதை இந்தியாவில் உள்ளவர்களைவிட மோசம். இந்தியர்களுக்காவது ஏதோ கொஞ்சம் தெரியும். இந்த நவீன ஆசிரியர்களுக்கோ ஒன்றும் தெரியாது.
ரகசியம் என்றோ அற்புதம் என்றோ யோக நெறியில் ஏதாவது சொல்லப்படுமானால் அதை உடனே நீக்கி விட வேண்டும். வலிமையே வாழ்வில் சிறந்த வழிகாட்டி. மற்ற விஷயங்களில் போலவே மதத்திலும் உங்களைப் பலவீனப்படுத்துகின்ற அனைத்தையும் விலக்கிவிடுங்கள். அவற்றுடன் உங்களுக்கு எந்தத் தொடர்பும் வேண்டியதில்லை. ரகசியங்களை நாடுவது மூளையைப் பலவீனப்படுத்துகிறது. சாஸ்திரங்களுள் மிகச் சிறந்த ஒரு விஞ்ஞானமான யோகத்தை அது ஏறக்குறைய அழித்தே விட்டது. நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் அது கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே நன்றாக விவரிக்கப்பட்டு, அமைக்கப்பட்டு, போதிக்கப்பட்டு வருகிறது. இதில் தெளிவாகத் தெரியும் ஓர் உண்மை என்னவென்றால் உரையாசிரியர் எந்த அளவிற்கு நவீன காலத்தைச் சேர்ந்த வராக இருக்கிறாரோ, அந்த அளவிற்கு அதிகம் தவறுகள் செய்கிறார். எந்த அளவிற்கு காலத்தால் முந்தியவரோ அந்த அளவிற்கு அவர் அறிவுபூர்வமானவராக இருக்கிறார். நவீன உரையாசிரியர்களுள் பலர் பலவகைப்பட்ட ரகசிய முறைகளைப்பற்றிப் பேசுகின்றனர். இவ்வாறு ஒரு சிலரின் கையில் யோக சாஸ்திரம் அகப்பட்டுக்கொண்டது. அவர்கள் அதன்மீது பகல் வெளிச்சமும் அறிவாராய்ச்சியின் முழுஒளியும் படாமல் செய்து அதனை ரகசிய வித்தையாக்கி விட்டனர். தங்களுக்கே ஆற்றல்கள் எல்லாம் சொந்தமாக வேண்டும் என்பதே அவர்கள் அவ்வாறு மறைத்ததன் நோக்கம் ஆகும்.
இங்கு நான் முதலில் சொல்ல வேண்டுவது நான் கற்பிப்பதில் ரகசியம் எதுவும் இல்லை என்பதுதான். எனக்குத் தெரிந்த ஏதோ சிறிதை உங்களுக்குச் சொல்கிறேன். எனது அறிவால் ஆராய்ந்து தெளிவுபடுத்த முடிந்த அளவு அதைச் செய்வேன். எனக்குத் தெரியாதது என்று வரும்போது சாஸ்திரங்கள் சொல்வதை அப்படியே சொல்வேன். குருட்டுத்தனமாக நம்புவது தவறு. உங்கள் அறிவையும் உங்கள் ஆராய்ச்சித் திறனையும் பயன்படுத்த வேண்டும். பயிற்சி செய்ய வேண்டும். பின்னர் இவையெல்லாம் நிகழ்கின்றனவா இல்லையா என்று பார்க்க வேண்டும், வேறு எந்த விஞ்ஞானத்தையும் கற்பது போலவே இந்த விஞ்ஞானத்தையும் நீங்கள் பயில வேண்டும். இதில் ரகசியமோ அபாயமோ எதுவும் இல்லை. இதில் உண்மை என்று இருப்பதைப் பொதுத் தெருவில் பட்டப்பகல் வெளிச்சத்தில் போதிக்கலாம். இதில் எதையாவது ரகசிய விந்தையாக்க முயன்றால் அது ஆபத்திலேயே முடியும்.
தொடர்ந்து போகுமுன் ராஜயோகத்திற்கு அடிப்படையாகிய சாங்கியத் தத்துவத்தின்படி ஒரு காட்சி அல்லது பிரத்தியட்ச ஞானம் உண்டாகும் முறை இதுவே. புறப் பொருட்களின் தூண்டுதல்கள் புறப்பொறிகள் வாயிலாக மூளையில் அவற்றிற்கு உரிய மையங்களுக்கு அல்லது புலன்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. புலன்கள் இந்தத் தூண்டுதல்கள் மனத்திற்குக் கொண்டு செல்கின்றன. மனம் புத்தியிடம் சேர்க்கிறது. புத்தியிலிருந்து புருஷன்(அல்லது ஆன்மா) அதை ஏற்றுக் கொள்கிறான். அப்போது காட்சி உண்டாகிறது. பின்னர் புருஷன் ஆணையிடுவதுபோல் கட்டளைகள் பிறப்பிக்கிறான். அவற்றிற்கேற்ப கர்மேந்திரியங்கள் செயல்புரிகின்றன. புருஷனைத் தவிர மற்றவை அனைத்தும் ஜடப் பொருட்கள். ஆனால் மனம் புறப்பொருட்களைவிட மிக நுண்ணிய ஜடப்பொருள் ஆகும், மனம் எந்த மூலப்பொருளால் ஆக்கப்பட்டுள்ளதோ அதே பொருளால் தான் நுண்ஜடப் பொருளான தன்மாத்திரைகளும் ஆக்கப்பட்டுள்ளன. இவையே தூலமாகி புறப்பொருட்கள் ஆகின்றன. இதுவே சாங்கியம் கூறும் மன இயல் ஆகும்.
புறத்தேயுள்ள தூலப்பொருளுக்கும் புத்திக்கும் உள்ள வேறுபாடு என்பது தூலம் அல்லது சூட்சுமம் என்ற அளவில் மட்டுமே. ஜடப்பொருள் அல்லாதவன் புருஷன் மட்டுமே. மனம் ஆன்மாவின் கைகளில் ஒரு கருவிபோல் செயல்படுகிறது. இந்தக் கருவியின் மூலம் ஆன்மா புறப்பொருட்களுடன் தொடர்பு கொள்கிறது. மனம் தொடர்ந்து மறுபடியும் ஊசலாடியபடியும் உள்ளது. அதைப் பக்குவப் படுத்தினால், ஒரு புலனுடனோ, பல இந்திரியங்களுடனோ அது தன்னை இணைத்துக்கொள்ள இயலும். எதையும் பற்றாமல் இருக்கவும் அதனால் முடியும். உதாரணமாக ஒரு கடிகாரத்தில் மணியடிப்பதை நான் கூர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும்போது என் கண்கள் திறந்திருந்தாலும் ஒருவேளை நான் எதையுமே பார்க்கமாட்டேன். கேட்கும் புலனை மனம் பற்றியிருப்பதால், காணும் புலனை அது பற்றவில்லை என்பதை அது காட்டுகிறது. ஆனால் எல்லா புலன்களையும் ஒருங்கே பற்றியிருக்கின்ற தன்மை பக்குவப்பட்ட மனத்திற்கு உண்டு அது தன் ஆழங்களைத் தானே உள்நோக்கிக் காணும் சக்தியை உடையது. இத்தகைய அகநோக்கை அடையவே யோகி முயல்கிறான். மனத்தின் ஆற்றல்களைக் குவித்து, அதனை உள்ளே திருப்பி, உள்ளே என்ன நிகழ்கிறதென்று அறிய அவன் விரும்புகிறான். இதில் வெறும் நம்பிக்கை என்ற பேச்சே இல்லை. தத்துவ ஞானிகளுள் சிலர் கண்டறிந்த முடிவு இது.
கண்கள் காட்சிப் புலன் அல்ல என்றும் மூளையில் உள்ள நரம்பு மையங்களுள் ஒன்றே அந்தப் புலன் என்றும் நவீன உடலியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். மற்றப் புலன்களும் இவ்வாறே, மூளை எந்தப் பொருளினால் ஆக்கப்பட்டுள்ளதோ அதே பொருளினால் தான் இந்த மையங்களும் ஆக்கப்பட்டுள்ளன. என்பது அவர்களின் கருத்து, சாங்கியர்களும் இதையே கூறுகின்றனர். முந்தியது பவுதீகப் பொருள் தொடர்பான முடிவு, பிந்தியது மன இயல் தொடர்பான முடிவு. ஆனால் இரண்டும் ஒன்றே. நமது ஆராய்ச்சிக்களமோ இதற்கு அப்பால் உள்ளது.
அந்த முறையைப் பின்பற்றியே அந்த விஞ்ஞானத்தை நாம் அறிய முடியும். ராஜயோகத்திற்கும் அவ்வாறே.
உணவு பற்றிய சில கட்டுப்பாடுகள் உள்ளன. மனத்தை மிகவும் தூய்மையாக்கும் உணவையே நாம் உட்கொள்ள வேண்டும். மிருகக் காட்சிச்சாலைக்குச் சென்றால் இதன் உண்மையை நீங்கள் உடனடியாக அறியலாம். யானை பெரிய மிருகமாக இருந்தும், அமைதியாக சாதுவாக இருக்கிறது. சிங்கம், புலி இருக்கும் கூண்டுகளின் அருகில் சென்றாலோ அவை சஞ்சலத்துடன் அலைந்து கொண்டிருப்பதைக் காண முடியும். உணவு எத்தகைய வேறுபாட்டை உண்டாக்கியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. உடலில் செயல்படும் சக்திகள் எல்லாம் உணவிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றன. நாம் ஒவ்வொரு நாளும் அதை அனுபவிக்கிறோம். பட்டினியாக இருந்தால் முதலில் உடல் பலவீனம் அடையும். பின்னர் பவுதீக சக்திகள் பாதிக்கப்படும், சில நாட்களுக்குப் பின் மன ஆற்றல்கள் தளரத் தொடங்கும். முதலில் ஞாபக சக்தி குறையும். பிறகு எதையும் சிந்திக்க முடியாத நிலை வரும், எதையாவது ஆராய்வது என்ற பேச்சே இல்லை. எனவே ஆரம்பத்தில் நாம் என்ன உண்கிறோம் என்பதில் கவனம் வேண்டும். போதிய வலிமை பெற்றபின், நமது முயற்சி நன்றாக முன்னேறிய பின் இந்த விஷயத்தில் அவ்வளவு எச்சரிக்கை வேண்டியதில்லை. இளம் பயிராக இருக்கும்போது தீங்கு ஏற்படாதபடி வேலியிடுவது அவசியம். அது வளர்ந்து மரமானபின் வேலி தேவையில்லை. தாக்குதல்களைச் சமாளிப்பதற்கான ஆற்றலை அது பெற்றுவிடும்.
அதிக சுகபோகம், கடின தவம் ஆகிய இரண்டு எல்லைகளையும் யோகி விலக்க வேண்டும். அவன் பட்டினி கிடக்கக் கூடாது. உடலையும் துன்புறுத்தக் கூடாது. அப்படிச் செய்பவன் யோகியாக இருக்க முடியாது என்கிறது கீதை: பட்டினி கிடப்பவன், விழித்தே இருப்பவன், அதிகம் தூங்குபவன், ஒரு வேலையும் செய்யாமல் இருப்பவன்-இவர்களுள் யாருமே யோகியாக முடியாது.
பிராணன்:
…
பலர் நினைப்பதுபோல், பிராணாயாமம் என்பது சுவாசத்தைப் பற்றியது அல்ல. சுவாசத்திற்கும் பிராணாயாமத்திற்கும் தொடர்பு இருந்தாலும் அது மிகக் குறைவே. உண்மையான பிராணாயாமத்தை நாம் சென்றடைவதற்கான பல பயிற்சிகளுள் சுவாசமும் ஒன்று, அவ்வளவுதான். பிராணாயாமம் என்றால் பிராணனைக் கட்டுப்படுத்துதல். இந்தியத் தத்துவ ஞானிகளின் கொள்கைப்படி, பிரபஞ்சம் இரண்டு பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று ஆகாசம். இது எங்கும் வியாபித்து அனைத்தையும் ஊடுருவியுள்ளது. உருவம் உள்ள அனைத்தும், சேர்க்கையால் விளைந்த அனைத்தும் ஆகாசத்திலிருந்தே வெளிப்பட்டுள்ளன. ஆகாசமே காற்றாகவும், திரவப் பொருளாகவும், திடப் பொருளாகவும், ஆகியுள்ளது. சூரியனாக, சந்திரனாக, பூமியாக, நட்சத்திரங்களாக, வால் நட்சத்திரங்களாக ஆகியுள்ளதும் ஆகாசமே. மனித உடல், பிராணி உடல், தாவரங்கள் அனைத்தும், நாம் காண்கின்ற, நாம் உணர்கின்ற அனைத்தும், இருப்பவை அனைத்துமாக இருப்பதும் ஆகாசமே. அதை உணர முடியாது. சாதாரணமாக எந்த விதத்திலும் நாம் உணர முடியாத அளவிற்கு அது நுண்ணியதாக உள்ளது. அது தூலமாகிய உருவம் பெறும்போதுதான் அதை நாம் காண முடியும். படைப்பின் துவக்கத்தில் இந்த ஆகாசம் மட்டுமே இருந்தது. ஒரு கல்பம் முடியும் போது திடப்பொருட்கள், திரவங்கள், வாயுக்கள் எல்லாமே கரைந்து மீண்டும் ஆகாசமாகிவிடுகின்றன. மறுபடியும் ஆகாசத்திலிருந்து அடுத்த படைப்பு தோன்றுகிறது.
எந்தச் சக்தியால் இந்த ஆகாசம் பிரபஞ்சமாகிறது? பிராண சக்தியினால்தான். பிரபஞ்சத்திற்கு எல்லையற்ற எங்கும் நிறைந்த மூலப்பொருளாக ஆகாசம் இருப்பது போல், பிராண சக்தி, எல்லையற்ற எங்கும் நிறைந்த வெளிப்படு சக்தியாக உள்ளது. கல்பத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் எல்லா பொருட்களும் ஆகாசமாகின்றன; பிரபஞ்சத்திலுள்ள எல்லா சக்திகளும் பிராணனில் மீண்டும் ஒடுங்குகின்றன. அடுத்த கல்பத்தில் அந்தப் பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கின்ற, நாம் சக்தி என்று அழைக்கின்ற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவீயிர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. உடல் இயக்கங்களாக, நாடி ஒட்டங்களாக, எண்ணச் சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. எண்ணம் முதல் மிகச் சாதாரண சக்திவரை எல்லாம் பிராணனின் வெளிப்பாடுகளே. பிரபஞ்சத்திலுள்ள மன சக்திகள், பௌதீக சக்திகள், அனைத்தின் ஒட்டுமொத்தமும் அதன் மூலநிலைக்கு மீண்டும் செல்லும்போது பிராணன் என்று அழைக்கப்படுகிறது. இருப்பு, இல்லாமை, இரண்டுமற்று இருளை இருள் மூடியிருந்தபோது என்ன இருந்தது? அந்த ஆகாசம் அசைவின்றி இருந்தது. அப்பொழுது பிராணனின் பௌதீக இயக்கம் நின்றிருந்தது; ஆனால் பிராணன் இருக்கவே செய்தது. பிரபஞ்சத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சக்திகள் எல்லாம் கல்பத்தின் இறுதியில் அமைதியடைந்து ஒடுங்கிவிடும். அடுத்த கல்பம் தொடங்கும்போது அவை எழுந்து ஆகாசத்தில் மோதுகின்றன; ஆகாசம் இந்தப் பல்வேறு வடிவங்களாகப் பரிணமிக்கிறது. ஆகாசம் மாறும்போது பிராணனும் பல்வேறு சக்திகளாக வெளிப்படுகிறது. இந்தப் பிராணனை அறிவதும் அதைக் கட்டுப்படுத்துவதும்தான் பிராணாயாமம் என்பதன் உண்மையான பொருளாகும்.
எல்லையற்ற ஆற்றலின் கதவை இது நமக்குத் திறந்துவிடுகிறது. உதாரணமாக ஒருவன் ஒருவேளை பிராணனை முற்றிலுமாக அறிந்து அதைக் கட்டுப்படுத்திவிட்டால் உலகில் எந்தச் சக்திதான் அவனுடையது ஆகாது? அவன் சூரியனையும் நட்சத்திரக் கூட்டங்களையும் அவர்களின் இடத்திலிருந்து பெயர்த்துவிட முடியும். அணுவிலிருந்து மிகப் பெரிய சூரியர்கள் வரை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் அவனால் அடக்கியாள முடியும். ஏனெனில் அவன் பிராணனைக் கட்டுப்படுத்துகிறான். இதுவே பிராணாயாமத்தின் முடிவும் குறிக்கோளும் ஆகும். யோகி நிறைநிலை எய்தும்போது அவனது ஆணைக்கு உட்படாத எதுவும் இயற்கையில் இருக்காது. தேவர்களாகட்டும், ஆவிகள் ஆகட்டும், அவன் அழைத்தால் வந்துவிடுவர். இயற்கையின் சக்திகள் அனைத்தும் அடிமைகள் போல் அவன் ஆணைக்குக் கீழ்ப்படியும். இத்தகைய ஆற்றல்களை யோகியிடம் காண்கின்ற சாதாரண மனிதன் அவற்றை அற்புதங்கள் என்பான்.
இந்து மனத்திற்கு விசேஷப் பண்பு ஒன்று உள்ளது முடிந்த அளவு கடைசிப் பொதுமையை முதலில் காண்பது, விளக்கங்களைப் பின்னால் விவரிப்பது. எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறியலாமோ, அது என்ன? என்ற கேள்வி வேதங்களில் எழுப்பப்படுகிறது. எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறியலாமோ அதை நிர்ணயிப்பதற்காக மட்டுமே எல்லா நூல்களும் எல்லா தத்துவங்களும் ஏற்பட்டன. இந்தப் பிரபஞ்சத்தைச் சிறிது சிறிதாக ஒருவன் அறிய விரும்பினால், அவன் ஒவ்வொரு மணல் துகள்களையும் அறிய வேண்டும். எல்லையற்ற காலம் கிடைத்தாலும் அவனால் எல்லாவற்றையும் அறிய இயலாது. அப்படியானால் அறிவு எவ்வாறு உண்டாகும்? விசேஷ அறிவின் மூலம் எப்படிஎல்லா அறிவையும் பெறமுடியும்? இதற்கு யோகி, ஒவ்வொரு விசேஷப் பண்பின் பின்னாலும் ஒரு பொதுமை உள்ளது என்கிறான். எல்லா விசேஷக் கருத்துக்களின் பின்னாலும் ஒரு பொதுவான கருத்து உள்ளது. அதைப் பற்றிக்கொள்ளுங்கள், அனைத்தையும் கிரகித்தவர் ஆவீர்கள். வேதங்களில் பிரபஞ்சம் முழுவதும் ஒன்றேயான, தனியான இருப்பு என்று பொதுமைப்பட்டுள்ளது. அந்த இருப்பை அறிந்தவன் பிரபஞ்சம் முழுவதையும் அறிந்தவன் ஆவான். அதுபோல் பிரபஞ்சத்திலுள்ள ஆற்றல்கள் யாவும் பிராணன் என்று பொதுமைப்பட்டுள்ளது. பிராணனைஅறிந்தவன், பிரபஞ்சத்திலுள்ள மனம் மற்றும் பௌதீக சக்திகள் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான். பிராணனை வசப்படுத்துபவன் தனது மனத்தையும் மற்ற மனங்களையும் அடக்கி ஆளும் திறன் பெறுகிறான். அதேபோன்று பிராணனை வசப்படுத்துபவன் தனது உடலையும் வேறு எல்லா உடல்களையும் அடக்கி ஆள்கிறான். ஏனெனில் பிராணன் என்பது சக்திகள் அனைத்தின் அனைத்தின் பொது வெளிப்பாடாகும்.
பிராணனை எப்படி வசப்படுத்துவது என்பதே பிராணாயாமத்தின் ஒரே நோக்கம். எல்லா பயிற்சிகளும் சாதனைளும் அதற்காகவே. ஒவ்வொருவனும் தான் இருக்கும் இடத்திலிருந்தே தொடங்க வேண்டும்; தனக்கு மிக அருகில் உள்ளவற்றை வசப்படுத்துவது எப்படி என்பதை அறிய வேண்டும். புறவுலகில் உள்ளவற்றுள் எதை விடவும் நமக்கு மிக அருகில் உள்ளது நமது உடல். மனமும் பிற அனைத்தையும்விட வெகு அருகில் உள்ளது. இந்த மனத்தையும் உடலையும் செயல்படுத்தும் பிராணன், உலகில் உள்ள எல்லா பிராணன்களையும்விட நமக்கு மிக அருகில் உள்ளது. பிராணனாகிய எல்லையற்ற கடலின் அலைகளில் மிக அருகில் இருப்பது நமது மனம் மற்றும் பௌதீக சக்தி வடிவிலுள்ள சிறு அலையே. இந்தச் சிறிய அலையை அடக்கி ஆள்வதில் வெற்றி பெற்றால்தான், பிராணன் முழுவதையும் அடக்கி ஆள முயலலாம். இதனைச் செய்து முடித்த யோகி நிறைநிலையை அடைகிறான்; இதன்பின் அவன் வேறு எந்தச் சக்தியின் கட்டுப்பாட்டிலும் இல்லை. அவன் ஏறக்குறைய எல்லாம் வல்லவனாகவும் ஏறக்குறைய எல்லாம் அறிந்தவனாகவும் ஆகிறான்.
பிராணனன வசப்படுத்த முயன்ற மதப் பிரிவினரை நாம் எல்லா நாடுகளிலும் காணலாம். இந்த நாட்டிலும் கூட மன வைத்தியர்கள், நம்பிக்கை வைத்தியர்கள், ஆவிகளுடன் தொடர்பு கொள்பவர்கள், கிருஸ்தவ விஞ்ஞானிகள், மனவசியக்காரர்கள் முதலியவர்கள் உள்ளனர். இந்தப் பிரிவுகளை ஆராய்ந்து பார்த்தால், தெரிந்தோ தெரியாலோ இந்தப் பிராணனை வசப்படுத்துவதுதான் அவர்களுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பதைக் காணலாம். அவர்களுடைய கொள்கைகளின் சாரம் அதுவே. அந்த ஒரே சக்தியையே அவர்களும் கையாள்கின்றனர்.அதை அறியாமல் அவர்கள் பயன்படுத்துகிறார்கள், அவ்வளவுதான். எதேச்சையாக அவர்களிடம் ஒருசக்தி கிடைத்தது, அதன் இயல்பை அறியாமலே, அது என்னவென்று தெரியாமலே பயன்படுத்தவும் செய்கிறார்கள். பிராணனிலிருந்து இதே சக்தியைத் தான் யோகியும் பயன்படுத்துகிறான். பிராணனின் மிக நுண்ணிய, மிகவுயர்ந்த செயல்பாடு எண்ணம். ஆனால் எண்ணமே எல்லாம் ஆகிவிடாது. செயல்பாடுகளில் மிகவும் கீழ்த் தளத்திலுள்ளதும் உணர்வுமனத்தை எட்டாததுமான எண்ணம் உள்ளது. இது இயல்புணர்ச்சி என்று அழைக்கப்படுக்கிறது. ஒரு கொசு கடித்தால் நம்மை அறியாமலே கை தானாகவே சென்று அதை அடிக்கிறது. இது எண்ணத்தின் ஒருவகையான வெளிப்பாடு. எதிர்ச்செயல்களாக உடலில் நிகழ்பவை எல்லாமே எண்ணத்தின் இந்தத் தளத்தால் சேர்ந்தவைதாம். இனி, உணர்வுத் தளத்தைச் சேர்ந்த எண்ணங்கள் உண்டு, நான் ஆராய்கிறேன் நான் தீர்மானிக்கிறேன், நான் நினைக்கிறேன், சில விஷயங்களில் பகுத்தறிவைப் பயன்படுத்துகிறேன்; ஆனால் அதுவே எல்லாம் அல்ல. சிந்தனை சக்தி எல்லைக்கு உட்பட்டது. ஒரு குறிப்பிட்ட தூரம்வரை மட்டுமே அது செல்ல முடியும். அதற்குமேல் போக முடிவதில்லை. அது இயங்க முடிந்த வட்டம் மிகமிகச் சிறியதுதான். இருந்தாலும் அதனுள் எத்தனையோ எண்ணங்கள் முட்டி மோதுகின்றன. ஆனால் சிலவேளைகளில் வால் நட்சத்திரங்கள் வருவது போன்று சில விஷயங்கள் இந்த வட்டத்திற்குள் வருகின்றன. அவை அந்த வட்டத்தின் எல்லைக்கு வெளியிலிருந்தே வருகின்றன என்பது நிச்சயம். நமது பகுத்தறிவுக்கோ அந்த எல்லையைக் கடந்து அப்பால் போகவும் முடியாது. இவ்வாறு வந்து நுழைகின்ற விஷயங்களுக்கான காரணங்கள் அந்த எல்லைக்கு வெளியிலேயே உள்ளன.
உணர்வு நிலைக்கு மேலான நிலைக்குச் செல்லவும் மனத்தால் முடியும், அது சமாதி நிலை முழு ஒருமைப்பாடாகிய, உணர்வு கடந்த இந்தச் சமாதி நிலையை மனம் அடையும்போது, அது பகுத்தறிவு எல்லையைத் தாண்டிச் செல்கிறது; இயல்புணர்ச்சியாலோ பகுத்தறிவாலோ அறிய முடியாத பல விஷயங்களை அது நேருக்குநேராக அறிகிறது. உடலிலுள்ள பல நுண்ணிய, சக்திகளின் செயல்பாடுகளையும் அதாவது பிராணனின் பல்வேறு வெளிப்பாடுகளையும் பயிற்சியின் மூலம் பண்படுத்தினால், அது மனத்தை உந்தி, மனம் உயர்நிலைகளுக்குச் செல்லவும், உணர்வு கடந்த நிலையை அடையவும் உதவி செய்யவும். அங்கிருந்துகொண்டு மனம் செயல்படும்.
இந்தப் பிரபஞ்சத்தில் ஸத் அல்லது இருப்பின் ஒவ்வொரு தளத்திலும் இடையீடின்றித் தொடர்ச்சியான ஒரு பொருள் இருக்கிறது. பௌதீக நிலையில் இந்தப் பிரபஞ்சம் ஒன்றுதான்; உங்களுக்கும் சூரியனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. வேறுபாடு காண்பது வெறும் பிரமை, மயக்கம் என்பான் விஞ்ஞானி, இந்த மேஜைக்கும் எனக்கும் உண்மையில் எந்த வேறு பாடும் இல்லை. ஜடப் பொருள் தொகுதியில் ஒரு புள்ளிமேஜை , மற்றொரு புள்ளி நான். எல்லையற்ற ஜடப்பொருள் கடலில் ஒவ்வோர் உருவமும் ஒவ்வொரு சுழி போல் உள்ளன. இனி, இவற்றில் எந்தச் சுழியும் நிலையானது இல்லை. ஓடி வருகின்ற ஆற்றில் பல்லாயிரக்கணக்கான சுழிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் உள்ள நீர் ஒவ்வொரு கணமும் வேறாக உள்ளது. சுழியில் கணநேரம் நீர் சுழன்றுவிட்டு வெளியே செல்கிறது. உடனே புதிய நீர் அங்கு வருகிறது. அதுபோல் பிரபஞ்சம் முழுவதுமே இடையீடின்றி மாறிக் கொண்டிருக்கும் ஒரே ஜடப்பொருள் தொகுதிதான்; இருக்கின்ற எல்லா உருவங்களும் அதில் நீர்ச்சுழிகள் போன்றவை. மனித உடம்பு என்ற ஒருசுழியை எடுத்துக் கொள்வோம். ஒரு ஜடப்பொருள் தொகுதி இதில் சிறிதுகாலம் இருக்கிறது. பின்னர் மாறுதல் அடைந்து வெளியே சென்று, மற்றொரு சழியில் புகுகிறது; அத பிராணி உடலாக இருக்கலாம்.
சில வருடங்களுக்குப் பின் அது உலோகக் கட்டியான சுழிக்குள் புகக்கூடும். மாறுதல் தொடர்ந்து நடக்கிறது. ஓர் உடல்கூட மாறுதலற்று அப்படியே இருப்பதில்லை. எனது உடல், உனது உடல் என்ற வேறுபாடெல்லாம் பேச்சளவில் தானே தவிர உண்மையில் இல்லை. ஒரு பெரிய ஜடப்பொருள் தொகுதியில் ஒரு புள்ளி சூரியன், மற்றொன்று சந்திரன், ஒரு புள்ளி பூமி, மற்றொன்று மனிதன், ஒன்று தாவரம், மற்றொன்று உலோகம். ஒன்றுகூட அப்படியே இருப்பதில்லை. எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. ஜடப் பொருள் சேர்வதும் பிரிவதும் இடையீடின்றி நடந்து கொண்டிருக்கிறது. மனமும் அப்படித்தான். ஜடப்பொருளாக வெளிப்பட்டிருப்பது ஆகாசமே. பிராணனின் செயல்பாடு மிகமிக நுண்ணியதாக நுண் அதிர்வு நிலையில் இருக்கும். போது, இந்த ஆகாசமே மணமாகிறது. அங்கேயும் அது, பிரிக்க முடியாத ஒரு தொகுதியாகவே இருக்கும். அந்த நுண் அதிர்வுகளினால் ஆக்கப்பட்டிருப்பதைக் கண்டு உணர முடியும். நாம் புலனுலக நிலையில் இருக்கும்போதே சிலவேளைகளில் சில மருந்துகள் நம்மை அந்த நிலைக்குக் கொண்டு செல்லும் சக்தியுடையவை. ஸர் ஹம்பரி டேவியின் பரிசோதனை உங்களுக்கு நினைவிருக்கலாம். சொற்பொழிவின்போது அவர் சிரிப்பு வாயுவினால் தாக்குண்டு அசைவற்று உறைந்தவர் போலாகிவிட்டார். அதிலிருந்து விழித்தபோது, பிரபஞ்சம் முழுவதும் எண்ணங்களால் ஆனவை என்றார். குறிப்பிட்ட அந்த நேரத்தில் தூல அதிர்வுகள் அடங்கி, அவர் எண்ணங்கள் என்று குறிப்பிட்ட நுண் அதிர்வுகள் மட்டுமே அவரது அனுபவத்திற்கு எட்டியதுபோல் ஆகிவிட்டது.
அவர் தம்மைச் சுற்றி நுண் அதிர்வுகளை மட்டுமே கண்டார். எல்லாமே எண்ணங்களாகி விட்டன. பிரபஞ்சமே எண்ணக் கடலாகக் காட்சி தந்தது. அவரும் மற்றவர்களும் எல்லாருமே சிறுசிறு எண்ணச் சுழிகளாக அவருக்குத் தெரிந்தன. இவ்வாறு எண்ணப் பிரபஞ்சத்தில்கூட நாம் ஒருமையைக் காண்கிறோம். இதையும் கடந்தால் ஆன்மாவை அடைகிறோம். அந்த ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும் என்பது நமக்குத் தெரியும். தூல மற்றும் சூட்சும நிலையிலுள்ள ஜடப்பொருளின் அதிர்வுகளுக்கு அப்பால், இயக்கங்களுக்கு அப்பால் இருப்பது ஒன்றே. இயக்கத்தின் வெளிப்பட்ட நிலையிலும் ஒருமையே உள்ளது. இந்த உண்மைகளை இனிமேலும் நாம் மறுக்க முடியாது. பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளின் கூட்டுத் தொகை எப்போதும் ஒரே அளவில்தான் இருக்கிறதென்று தற்கால இயற்பியலும் நிரூபித்துள்ளது. இந்த மொத்த சக்தியும் இரண்டு நிலைகளில் உள்ளன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அது அமைதியான, செயல்படாத ஒடுக்க நிலையில் இருந்து, பின்னர், பலவித சக்திகளாக வெளிப்படுகிறது. மறுபடியும் செயலற்ற நிலைக்குச் செல்கிறது. மீண்டும் வெளிப்படுகிறது. இப்படி வெளிப்படுவதும் ஒடுங்குவதும் இடைவிடாது நடந்துகொண்டே இருக்கிறது. முன்பு கூறியதுபோல், இந்தப் பிராணனை அடக்கியாள்வதே பிராணாயாமம்.
மனித உடலில் இந்தப் பிராணனின் நன்கு புலனாகும். வெளிப்பாடு நுரையீரல்களின் இயக்கமாகும். அது நின்று விட்டால் உடலில் உள்ள மற்ற சக்தி வெளிப்பாடுகள் எல்லாம் உடனே நின்றுவிடுகின்றன. இந்த இயக்கம் நின்றாலும் உயிர் வாழ்வதற்கான பயிற்சி பெற்ற சிலர் இருக்கின்றனர். பூமியில் தங்களைப் புதைத்துக் கொண்டு, சுவாசிக்காமலே பல நாட்கள் வாழ்பவர்கள் உள்ளனர். சுட்சுமத்தை அடைய தூலத்தின் உதவி வேண்டும். இவ்வாறு மெள்ளமெள்ளச் சென்று மிக நுண்ணியதை அடைய வேண்டும். உண்மையில் நுரையிரல்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் பிராணாயாமம். இந்த இயக்கம் சுவாசத்துடன் சம்பந்தப்பட்டது. மூச்சு, இயக்கத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, அந்த இயக்கமே மூச்சை உண்டாக்குகிறது. இந்த இயக்கம் ஓர் உறிஞ்சு குழாய் போல் செயல்பட்டு காற்றை உள்ளே இழுக்கிறது. பிராணன் நுரையிரல்களைச் செயல்படுத்துகிறது, நுரையிரல்களின் இயக்கம் காற்றை உள்ளிழுக்கிறது. எனவே பிராணாயாமம் என்பது மூச்சு விடுவதல்ல; நுரையிரல்களை இயக்கும் தசைகளை அடக்கி ஆள்வதாகும். நரம்புகள் வழியாக தசைகளுக்கும், அங்கிருந்து நுரையீரல்களுக்கும் சென்று அவற்றை ஒரு குறிப்பிட்ட வகையில் இயங்கச் செய்யும் தசை சக்தியே பிராணன். இந்தப் பிராணனையே நாம் பிராணாயாமப் பயிற்சியால் கட்டுப்படுத்த வேண்டும் பிராணன் கட்டுப்படுத்தப்பட்டதும் உடனடியாக உடலில் உள்ள பிராணனின் மற்றச் செயல்களும் மெல்லமெல்லக் கட்டுப்பாட்டின் கீழ் வருவதைக் காணலாம். ஏறத்தாழ உடலில் உள்ள எல்லா தசைகளையும் அடக்கி ஆள்பவர்களை நானே கண்டிருக்கிறேன். அது ஏன்தான் முடியாது? சில தசைகளைக் கட்டுப்படுத்த முடியுமானால் மற்ற தசைகளையும் நரம்புகளையும் ஏன் கட்டுப்படுத்த முடியாது? அதில் முடியாதது என்று என்ன இருக்கிறது? இப்பொழுது அந்தக் கட்டுப்பாட்டை நாம் இழந்திருக்கிறோம், அதனால் அந்த இயக்கம் தானாக நடைபெறுகிறது. விருப்பம்போல் காதுமடலை நாம் அசைக்க முடியாது, விலங்குகளால் முடியும் என்பது நமக்குத் தெரியும். நாம் அந்த ஆற்றலைப் பயன்படுத்தவில்லை, ஆதலால் இழந்துவிட்டோம். இதுவே குணங்கள் மீண்டுவரல் என்று சொல்லப்படுகிறது.
ஒய்ந்திருக்கும் சில இயக்கங்களைப் புதுப்பிக்கலாம். என்பது நமக்குத் தெரியும். உடலில் முற்றிலுமாக இயங்காமல் நிற்கின்ற சில இயக்கங்களைக் கடின உழைப்பாலும் பயிற்சியாலும் மீண்டும் இயங்கச் செய்து கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு நாம் ஆராய்ந்து பார்த்தால் உடலில் கட்டுப்படுத்த முடியாத ஒரு பாகமே இருக்க முடியாது; எல்லாவற்றையும் கண்டிப்பாகப் கட்டுப்படுத்த முடியும். யோகி இதைப் பிராணாயாமத்தின் மூலம் செய்கிறான். பிராணாயாமத்தில் மூச்சை உள்ளே இழுக்கும்போது உடலின் ஒவ்வொரு பகுதியையும் பிராணனால் நிரப்ப வேண்டும். என்று உங்களுள் சிலர் படித்திருக்கலாம். ஆங்கில மொழிபெயர்ப்புகளில் பிராணனை மூச்சு என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே மூச்சுக்காற்றால் உடலை நிரப்புவது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்புதான் இது மொழிபெயர்ப்பாளரின் தவறு. உடல் முழுவதையும் நாம் பிராணனால், இந்த ஆதார சக்தியால் நிரப்ப முடியும். அதைச் செய்தால் உடம்பு முழுவதையுமே நாம் அடக்கியாள முடியும். உடலில் ஏற்படும் வியாதியையும் துன்பத்தையும் நாம் அப்போது கட்டுப்படுத்தலாம். அது மட்டுமல்ல, மற்றவர்களின் உடலையும் கட்டுப்படுத்தலாம்.
நல்லதோ கெட்டதோ இவ்வுலகில் எல்லாமே தொற்றும் தன்மையேப் பெற்றிருக்கிறது. உங்கள் உடல் ஒருவித அழுத்தநிலையில் இருக்குமானல் அது மற்றவர்களிடமும் அதே நிலையை உண்டாக்கும் போக்கு உடையதாக இருக்கும். நீங்கள் நலமாகவும் பலமாகவும் இருந்தால் .உங்கள் அருகில் இருப்பவர்களுக்கும் அவ்வாறே நலமாகவும் பலமாகவும் இருப்பதற்கான ஓர் இயல்பு ஏற்படுகிறது. நீங்கள் நோயுற்று துன்புற்று இருந்தால் சூழ இருப்பவர்களிடமும் அதே துன்பம் வருவதற்கான தன்மை ஏற்படுகிறது.மற்றவனைக் குணப்படுத்த முயல்கின்ற ஒருவன் தன் சொந்த ஆரோக்கியத்தை மற்றவனிடம் மாற்றுவதுதான் முதற்கருத்தாக உள்ளது. இது குணப்படுத்தலைக் குறித்த பண்டைய கொள்கை. தெரிந்தோ தெரியாமலோ ஒருவரின் உடல்நலத்தை மற்றவருக்கு அளிக்க முடியும். மிகவும் வலிமையான ஒருவன் தன்னோடு இருக்கும் வலிமையற்றவனைச் சிறிது வலிமையுள்ளவனாகச் செய்யலாம். வலிமையற்றவனுக்கு இது தெரியலாம், தெரியாமலும் இருக்கலாம். இதை உணர்வு பூர்வமாகச் செய்தால் பலன் விரைவாகவும் சிறப்பாகவும் இருக்கும். அடுத்தபடியாக, அதிக அரோக்கியம் இல்லாத ஒருவன்கூட மற்றவனிடம் உடல்நலத்தை உண்டாக்க முடியும். இவன் சற்று அதிகமாகப் பிராணனைக் கட்டுப்படுத்தியவன்; அந்த நேரத்திற்குத் தன் பிராணனை எழுப்பி மற்றவனுக்கு அதனை அளிக்கிறான் என்று சொல்லலாம்.
தூரத்தில் உள்ளவர்களை இவ்வாறு குணப்படுத்திய நிகழ்ச்சிகள் உண்டு. இடைவெளி என்ற பொருளில் தூரம் என்ற ஒன்று உண்மையில் இல்லை. முற்றிலும் தொடர்பில்லாத தூரம் என்ற ஒன்று எங்கே இருக்கிறது? சூரியனுக்கும் உங்களுக்கும் இடைவெளி இருக்கிறதா என்ன? எல்லாம் ஜடப்பொருள் தொகுதியின் ஒரே தொடர்ச்சியே. அதில் சூரியன் ஒரு பகுதி, நீங்கள் மற்றொரு பகுதி. ஆற்றின் ஒரு பகுதிக்கும் மற்றொருக்கும் இடைவெளி என்ற ஒன்று உள்ளதா? அதேபோல் சக்தியும் ஏன் எங்கும் சஞ்சரிக்கக் கூடாது? கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. தூரத்திலிருந்து கொணடு குணப்படுத்துமும் முற்றிலும் உண்மையே. குணப்படுத்தும் முறை நாம் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதானதல்ல. பிராணனை நீண்ட தூரத்திற்குச் செலுத்த முடியும். ஆனால் இதைச் செய்வதில் நேர்மையானவர் ஒருவர் இருந்தால் ஏமாற்றுப் பேர்வழிகள் நூறு பேர் இருப்பார்கள். சாதாரணமாக அவர்கள் மனித உடலின் இயற்கையான ஆரோக்கியமான நிலையை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். காலரா கண்டவனுக்கு ஆங்கில டாக்டரும் மருந்து கொடுத்து குணப்படுத்துகிறார். ஹோமியோபதி டாக்டரும் தனது மருந்துகளைக் கொடுக்கிறார்; ஆனால் இவர் முன்னையதைவிட ஒருவேளை விரைவாகக் குணப்படுத்திவிடுகிறார். ஏனெனில் அவர் தன் மன சக்தியைப் பயன்படுத்தி நோயாளியிடம் நம்பிக்கையை ஊட்டி, அவனிடம் தூங்கிக்கிடக்கின்ற பிராணனை எழுப்புகிறார்.
நம்பிக்கை நேரடியாக ஒரு மனிதனை குணமடையச் செய்கிறது என்று நம்பிக்கை வைத்தியர்கள் நினைக்கிறார்கள். அது தவறு. நம்பிக்கையால் மட்டுமே எல்லாம் நடந்து விட முடியாது. சில வியாதிகள் உள்ளன. அவற்றின் மிக மோசமான அறிகுறி என்னவென்றால் நோயாளி தனக்கு நோய் இருப்பதாக நினைப்பதே இல்லை. அசைக்க முடியாத அவனது நினைப்பே, நம்பிக்கையே வியாதியின் ஓர் அறிகுறி. பொதுவாக, இவ விரைவில் அவன் இறந்து விடுவான் என்பதையே காட்டுகின்ற ஒன்று. நம்பிக்கை அவனைக் குணப்படுத்தும் என்றால், இவன் குணமடைந்திருக்க வேண்டும். உண்மையில் பிராணனே அவர்களைக் குணப்படுத்துகிறது. பிராணனைக் கட்டுப்படுத்திய தூய மனிதன், அதைக் குறிப்பிட்ட அதிர்வு நிலைக்குக் கொண்டு வந்து, அதைப் பிறரிடம் செலுத்தி அவர்களிடம் அதுபோன்ற அதிர்வுகளை எழுப்புகிறான். இதை நாம் அன்றாடச் செயல்களிலும் காண்கிறோம். நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.
உண்மையில் நான் என்ன செய்ய முயற்சிக்கிறேன்? என் மனத்தை ஒரு குறிப்பிட்ட அதிர்வு நிலைக்குக் கொண்டு வருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். நான் எவ்வளவு வெற்றிகரமாக அந்த நிலைக்கு மனத்தைக் கொண்டு வருகிறேன். என்று தான் சொல்ல வேண்டும். நான் எவ்வளவு வெற்றிகரமாக அந்த நிலைக்கு மனத்தைக் கொண்டு வருகிறேனோ, அவ்வளவு தூரம் என் பேச்சின் தாக்கம் உங்களிடம் மிகும். நான் ஊக்கத்துடன் பேசும்போது நீங்களும் என் பேச்சை மகிழ்ந்து அனுபவிப்பீர்கள். நான் சற்று ஊக்கம் குன்றிப் பேசினால் உங்களுக்கும் கேட்பதில் விருப்பம் இருப்பதில்லை. இது உங்களுக்குத் தெரிந்ததே.
உலøயே அசைக்கின்ற மாபெரும் சங்கல்ப வலிமை பெற்ற தீரர்கள் உலகில் தோன்றுகின்றனர். அவர்கள் தங்கள் பிராணனை மிகவுயர்ந்த அதிர்வு நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். அது கணத்தில் மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்ற அளவிற்கு ஆற்றலும் வேகமும் உடையதாக இருக்கிறது, ஆயிரக்கணக்கானோர் அவர்பால் ஈர்க்கப்படுகின்றனர், உலகில் பாதிப்பேர் அவர்கள் நினைப்பதுபோலவே நினைக்கின்றனர். உலகின் மாபெரும் தீர்க்க தரிசிகள் பிராணனை அற்புதமாக வசப்படுத்தியிருந்தனர். இது அவர்களுக்கு மிகுந்த சங்கல்பத்தை அளித்தது. அவர்கள் தங்கள் பிராணனை இயக்கத்தின் மிகவுயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்ததால் உலகையே அசைக்கவல்ல ஆற்றல் பெற்றனர். பிராணனை வசப்படுத்துவதால் எல்லா ஆற்றல்களும் கிடைக்கின்றன. இந்த ரகசியத்தை மனிதன் அறியாதிருக்கலாம். ஆனால் இதுதான் விளக்கம்.
சிலவேளைகளில் உங்கள் உடலில் பிராணன் ஒரு பகுதியில் அதிகமாகவோ குறைவாகவோ செல்கிறது. அப்போது சமநிலை குலைகிறது. சமநிலை குலையும்போது, நோய் என்று நாம் அழைக்கின்ற ஒன்று உண்டாகிறது. பிராணன் அதிகமான இடத்திலிருந்து அதை எடுக்கவோ, குறைந்த இடத்தில் நிரப்பவோ செய்யும்போது நோய் குணமாகிறது. உடலின் எந்தப் பகுதியிலாவது தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ பிராணன் உள்ளதா என்பதை அறிவதும் பிராணாயாமத்தால்தான். பிராணாயாமத்தால், உணரும் சக்தி மிக நுட்பமாகி, அதன்மூலம் கால் விரலிலோ அல்லது கை விரலிலோ உடலின் எந்தப் பகுதியில் பிராணன் குறைந்துள்ளது என்பதை அறிவதற்கும் அங்கு அதைச் செலுத்துவதற்கான ஆற்றலை மனம் பெற்றிருக்கும். பிராணாயாமத்தின் பல்வேறு செயல்பாடுகளுள் இதுவும் ஒன்று. இவற்றை மெதுவாக, படிப்படியாகப் பயில வேண்டும். பிராணனைப் பல தளங்களில் கட்டுப்படுத்துவதும் கையாள்வதும் எப்படி என்பதைக் கற்பிப்பது ராஜயோகத்தின் முழு நோக்கம். ஒரு மனிதன் தன் ஆற்றல்களை ஒருமுகப்படுத்தும்போது, தன் உடலிலுள்ள செய்யும்போது அவனும் பிராணனையே ஒருமுகப்படுத்துகிறான்.
கடலில் மலையளவு பெரிய அலைகளும், சிறிய அலைகளும், இன்னும் சிறியனவும், சிறுசிறு குமிழிகளும் உள்ளன. ஆனால் இவையனைத்திற்கும் ஆதாரமாக எல்லையற்ற கடல் உள்ளது. ஒரு முனையில் சிறு குமிழி மற்றொரு முனையில் பெரிய அலை என்று அவை கடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே ஒருவன் மிகப் பெரியவனாக இருக்கலாம், மற்றொருவன் சிறு குமிழியாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும், வாழும் உயிர்கள் ஒவ்வொன்றின் பொதுப் பிறப்புரிமையாகிய அந்த எல்லையற்ற ஆற்றல்கடலுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். எங்கெங்கு உயர் உள்ளதோ, அங்கு அவற்றின் பின்னால் அளப்பரிய சக்திக் களஞ்சியம் உள்ளது. ஊனக்கண்ணிற்குத் தெரியாத மிகமிக நுண்ணிய அமீபாவாக தனது பயணத்தைத் தொடங்குகின்ற உயிர், அந்த எல்லையற்ற ஆற்றல் களஞ்சியத்திலிருந்து தொடர்ந்து சக்தியை எடுத்தவாறு, தாவரமாக, விலங்காக, மனிதனாக மெதுவாக, படிப்படியாக உருமாறி இறுதியில் கடவுளாகவும் ஆகிறது. இந்தப் பரிணாமத்திற்குப் பல கோடியுகங்களாகலாம். ஆனால் காலம் என்பதுதான் என்ன? வேகத்தை அதிகரியுங்கள், முயற்சியைக் கூட்டுங்கள், கால இடைவெளியைக் கடந்துவிடலாம். இயல்பாக நீண்ட காலத்தில்தான் நிறைவேற்ற முடிந்த ஒரு செயலை அதன் தீவிரத்தை அதிகரிப்பதன் மூலம் விரைவில் முடித்து விடலாம் என்கிறான் யோகி. இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையற்ற சக்திக் களஞ்சியத்திலிருந்து ஒருவன் சிறிது சிறிதாக சக்தியைக் கிரகிப்பதாக வைத்துக் கொள்வோம். அவன் ஒரு தேவனாக மாற ஒரு லட்சம் ஆண்டுகள் தேவைப்படலாம். இன்னும் சற்று உயர்ந்த நிறைநிலையை அடைய ஐந்து லட்சம் ஆண்டுகள் ஆகலாம். நிறைநிலையை அடைய ஒரு வேளை ஐம்பது லட்சம் ஆண்டுகள் பிடிக்கலாம். வளர்ச்சி விரைவாக இருந்தால் காலத்தைக் குறைக்கலாம். போதிய முயற்சியினால் இதே நிறைநிலையை ஆறு மாதங்களிலோ ஆறு வருடங்களிலோ ஏன் அடைய முடியாது? இவ்வளவு காலம் என்று அதற்கு ஓர் எந்திரம் குறிப்பிட்ட அளவு நிலக்கரியை உபயோகித்து மணிக்கு இரண்டுமைல் ஒடுவதாக வைத்துக் கொள்வோம். அதிகக் கரியைப் பயன்படுத்தினால் அதே தூரத்தைக் குறைந்த நேரத்தில் அந்த எந்திரம் கடக்கும். அதேபோல், ஆன்மா தனது செயலைத் துரிதப்படுத்தி, இந்தப் பிறவியிலேயே ஏன் நிறைநிலையை அடையக் கூடாது? எல்லா உயிரினங்களும் இறுதியில் அந்த நிலையை அடையும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் கோடிக்கணக்கான யுகங்களாக யார் காத்திருப்பது? இதே உடலில், இந்த மானிட உருவிலேயே, எல்லையற்ற ஞானமும் எல்லையற்ற வலிமையும் இப்பொழுதே ஏன் நான் பெறக் கூடாது?
அடிமேல் அடி வைத்து மெதுவாக முன்னேறி மனித இனம் முழுவதும் நிறைநிலையை அடையும் வரை காத்திராமல் அதிக சக்தியை ஏற்றுக் கொள்வதற்கான ஆற்றலை வளர்த்து, நிரைநிலையை அடைவதற்குரிய காலத்தைச் சுருக்குவது எப்படி என்பதைப் போதிப்பதே யோகியின் லட்சியம், யோகத்தின் நோக்கம். உலகில் பிறந்த பெரிய தீர்க்கதரிசிகளும் மகான்களும் ரிஷிகளும் என்ன செய்தனர்? தங்கள் வாழ்க்கைக் காலத்திலேயே, மனித குலம் முழுமையின் வாழ்வையும் வாழ்ந்து விட்டனர். சாதாரண மனிதன் நிறைநிலையை அடைவதற்கு ஆகின்ற காலம் முழுவதையும் அவர்கள் ஒரு பிறவிலேயே கடந்து விட்டனர்; ஒரு பிறவிலேயே தங்களைப் பூரணமாக்கிக் கொண்டுவிடுகின்றன. அவர்களுக்கு வேறு எதைப் பற்றியும் எண்ணமில்லை. ஒருகணம்கூட அவர்கள் வேறு எந்த லட்சியத்திற்காகவும் வாழ்வதில்லை. இவ்வாறு அவர்களது பாதையின் தூரம் குறுகிவிடுகிறது. சக்தியை ஏற்றுக்கொள்ளும் திறனை அதிகரித்து, அதன்மூலம் காலத்தைச் சுருக்குவதே ஒருமைப்பாடு. ஒருமைப்பாட்டு ஆற்றலைப் பெறுவது எப்படி என்பதைக் கற்பிக்கின்ற விஞ்ஞானமே ராஜயோகம்.
பிராணாயாமத்திற்கும் ஆவி நெறிக்கும் தொடர்பு என்ன? ஆவி நெறியும் பிராணாயாமத்தின் ஒரு வெளிப்பாடே. இரண்டிற்கும் தொடர்பு உண்டு. ஆவிகள் இருக்கின்றன. நம்மால் காணத்தான் முடியவில்லை என்பது உண்மையானால் அவை நூற்றுக்கணக்கில் லட்சக்கணக்கில் நம்மைச் சூழ்ந்தும் இருக்கலாம் என்று ஊகிப்பதில் தவறில்லை. அவற்றை நம்மால் காணவோ உணரவோ தொடவோ முடியவில்லை, அவ்வளவுதான். நாம் தொடர்ந்து அவற்றின் உடல்கள் வழியாகப் புகுவதும் வெளிவருவதுமாக இருக்கிறோம் என்பது உண்மையாக இருக்கலாம். அவை நம்மைக் காண்பதோ உணர்வதே இல்லை. இது ஒரு வட்டத்திற்குள் வட்டம்; பிரபஞ்சத்தினுள் பிரபஞ்சம். நமக்கு ஐந்து புலன்கள் உள்ளன, நாம் பிராணனின் ஒருவித அதிர்வு நிலையில் வாழ்கிறோம். அதே அதிர்வு நிலையில் இருக்கின்ற பிராணிகள் ஒன்றை ஒன்று காண முடியும். ஆனால் அதைவிட உயர்ந்த அதிர்வு நிலையில் பிராணிகள் இருக்குமானால் அவற்றைக் காண முடியாது. ஒளியின் ஆற்றலை அதிகரித்து அதிகரித்து அதை நாம் காண முடியாத நிலைக்குக் கொண்டு போக முடியும். ஆனால் அத்தகைய ஒளியையும் காணத்தக்க ஆற்றல் படைத்த கண்கள் கொண்ட பிராணிகள் இருக்கலாம். அதுபோலவே ஒளியின் அதிர்வு மிகக் குறைவாக இருந்தாலும் அதை நாம் காண முடியாது. ஆனால் பூனை, ஆந்தை போன்ற சில பிராணிகள் அதனைக் காண முடியும். பிராணனின் அதிர்வுகளுடைய ஒரு தளத்தை மட்டுமே நாம் காண இயலும். வாயுமண்டலத்தை ஆராய்வோம். அது அடுக்கடுக்காக உள்ளது. பூமிக்கு அருகே உள்ள அடுக்குகள் மேலே உள்ளவற்றைவிட அடர்த்தியாக உள்ளன. மேலே செல்லச் செல்ல வாயுமண்டலத்தின் அடர்த்தி குறைந்துகொண்டே போகிறது. கடலை எடுத்துக் கொள்வோம். ஆழத்தில் போகப்போக, நீரின் அழுத்தம் அதிகரிக்கிறது. கடலின் அடிமட்டத்தில் வசிக்கும் பிராணிகள் மேலே வரவே முடியாது,மேலே வந்தால் அவை தூளாகிவிடும்.
பிரபஞ்சத்தை ஓர் ஆகாசக் கடலாகக் கொள்வோம். பிராணனின் செயல்பாட்டினால் வேறுபட்ட அதிர்வுகள் உள்ள பல அடுக்குகள் அதில் இருப்பதாகக் கொள்வோம். மையத்திலிருந்து விலகியுள்ள அடுக்கில் அதிர்வு குறைவாக இருக்கும். மையத்தின் அருகில் வரவர அதன் அதிர்வு விரைவாக இருக்கும். ஒரேவிதமான அதிர்வு உள்ள பகுதி ஒரு தளம் ஆகிறது. இந்த அதிர்வு அடுக்குகள் ஒவ்வொன்றும் லட்சம் மைல் பரப்புடையனவாக ஒன்றின் மீது ஒன்றாக இருப்பதாகக் கொள்வோம். ஒரேவித அதிர்வு நிலை பெற்ற அடுக்கில் வசிப்பவர்கள் ஒருவரை ஒருவர் காண முடியும். ஆனால் அதற்கு அடுத்து உள்ள அடுக்கில் உள்ளவர்களைக் காண முடியாது. ஆனால் தொலை நோக்கியாலும் உருப் பெருக்கியாலும் நமது பார்வையின் எல்லைகளை விவரிக்க முடிவதுபோல், யோக சக்தியால் மற்றோர் அடுக்கின் அதிர்வு நிலையைப் பெறவும் அங்கு நிகழ்வதைக் காணவும் முடியும். இந்த அறை முழுவதும் நம்மால் காண முடியாத உயிரினங்கள் இருப்பதாகக் கொள்வோம். அவர்கள் ஒரு வகை அதிர்வு நிலையுடன் கூடிய பிராணனைப் பெற்றிருப்பார்கள்; நாம் வேறு அதிர்வு நிலையைப் பெற்றிருப்போம். அவர்கள் விரைவான அதிர்வுநிலையில் இருக்கலாம். நாம் அதற்கு எதிர் நிலையில் இருக்கலாம். ஆனால் அவர்களும் சரி, நாமும் சரி ஆக்கப்பட்டிருப்பது பிராணன் என்னும் ஒரு பொருளினால்தான். எல்லோரும் பிராணன் என்னும் ஒரே கடலின் பகுதிகளே, வேறுபடுவது அதிர்வின் விகிதத்தில் மட்டுமே. நான் என்னை விரைவான அதிர்வு நிலையில் கொண்டுபோனால், மறுகணமே இந்த உலகம் எனக்கு மாறி விடும்: உங்களை நான் காண மாட்டேன், நீங்கள் மறைந்து விடுவீர்கள். அவர்கள் தோன்றுவார்கள். இதன் உண்மையை உங்களுள் சிலர் ஒருவேளை அறிந்திருக்கலாம். இவ்வாறு மனத்தை உயர்ந்த அதிர்வு நிலைகளுக்குக் கொண்டு வருவதெல்லாம் யோக சாஸ்திரத்தில் சமாதி என்ற சொல்லில் அடங்கிவிடுகிறது. இந்த உயர் அதிர்வு நிலைகள், மனத்தின் உயர் உணர்வு அதிர்வுகள் எல்லாமே இந்த சமாதி என்ற சொல்லில் அடங்கியுள்ளது. கீழ்நிலைச் சமாதிகளில் இத்தகைய உயிர்களின் காட்சி கிடைக்கிறது. மிகவுயர்ந்த சமாதியில் நாம் உண்மைப் பொருளைக் காண்கிறோம்; பல்வேறு உயிர் வகைகள் எல்லாம் எந்த மூலப் பொருளால் ஆக்கப்பட்டுள்ளதோ அந்தப் பொருளைக் காண்கிறோம். அந்த ஒருபிடி களிமண்ணை அறிந்தால், உலகில் உள்ள களிமண் அனைத்தையும் அறிந்தவர் ஆகிறோம்.
இவ்வாறு பிராணாயாமத்தில் ஆவி பற்றிய உண்மைகள் கூட அடங்கியுள்ளது அதுபோலவே சித்திகளைப் பெற முயல்பவர்களும் சரி, ரகசியத்தையோ மறைபொருட்களையோ தேட முயல்பவர்களும் சரி, பிராணனை அடக்க முயற்சிப்பதையே அதாவது இந்த யோகத்தையே செய்கின்றனர். எங்காவது அசாதாரணமான ஆற்றல் காணப்பட்டால் அது பிராணனின் வெளிப்பாடுதான் என்பதைக் காணலாம். பௌதீக விஞ்ஞானங்களைக்கூட பிராணாயாமத்தில் அடக்கிவிடலாம். நீராவி எந்திரத்தை இயக்குவது எது? நீராவி மூலம் செயல்புரியும் பிராணனே. மின்சக்தி முதலிய எல்லாமே பிராணன் அன்றி வேறென்ன? பௌதீக விஞ்ஞானம் என்பது என்ன? புறக்கருவிகள் மூலம் செய்யப்படுகின்ற பிராணாயாமமே. மனச்சக்தியாக வெளிப்படும் பிராணனை மனத்தின் மூலம்தான் கட்டுப்படுத்த முடியும். பிராணனின் பௌதீகச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும். பிராணனின் பௌதீகச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பிராணøõயாமம், பௌதீக விஞ்ஞானம். பிராணனின் மன ஆற்றல்களை, மனத்தைக் கொண்டு அடக்கி ஆளும் நெறியே ராஜயோகம்.
சித்துப் பிராணன்
யோகிகளின் கருத்துப்படி முதுகுத்தண்டில் பிங்கலை, இடை என்ற இரண்டு நாடிகள் இயங்குகின்றன. முதுகுத் தண்டின் வழியாக உள்ளே கழுமுனை என்ற ஒரு நாளம் செல்கிறது. சுழுமுனையில் கீழ் நுனியில் யோகிகள் கூறுகின்ற குண்டலினிக் கமலம் உள்ளது. அது முக்கோண வடிவமாக இருப்பதாகவும், அதில் குண்டலினி சக்தி சுருண்டு இருப்பதாகவும் யோகிகள் உருவகமாகக் கூறுவார்கள். குண்டலினி விழித்து எழும் போது, அது கழுமுனை வழியாக ஒரு பாதையை உருவாக்கி மேலே செல்ல முயல்கிறது. அது படிப்படியாக மேலெழும்போது மனத்தின் திரைகள் ஒன்றன் பின் ஒன்றாக விலகுவது போலாகின்றன. பல்வேறு காட்சிகளும் அற்புதமான ஆற்றல்களும் யோகிக்குக் கைகூடுகின்றன குண்டலினி சக்தி மூளையை அடையும் போது யோகி, உடல் மற்றும் மனத்திலிருந்து முற்றிலுமாகப் பிரிந்தவனாகிறான்; ஆன்மா, சுதந்திரமாக இருப்பதை உணர்கிறது.
முதுகுத்தண்டு ஓர் அதிசயமான வகையில் அமைந்திருப்பதை நாம் அறிவோம். எட்டு என்ற எண்ணை சமதள நிலையில் எழுதினால் (8) அதில் இரண்டு பகுதிகள் உள்ளன, அவை நடுவில் இணைந்துள்ளன, இத்தகைய எட்டுகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக்கொண்டே போனால், அதன் சேர்க்கை முதுகுத்தண்டு போல் தோன்றும். இடது பக்கம்இடை, வலதுபக்கம் பிங்கலை. முதுகுத்தண்டின் ஊடே செல்லும் நாளம் சுழுமுனை. முதுகுத்தண்டின் கீழ்ப் பாகம் முடிகின்ற இடத்தில் எலும்பில் ஒரு மிக நுண்ணிய நரம்பின் வழியாகவும் சுழுமுனை நாடி செல்கிறது; அது மிகமிக நுட்பமானது. சுழுமுனையின் கீழ்நுனியின் துளை மூடியிருக்கும். அது மூலக்கிரந்தி என்ற நரம்பு மண்டலத்திற்கு அருகில் உள்ளது. தற்கால உடலியல் வல்லுனர்கள் அது முக்கோண வடிவத்தில் உள்ளது என்று கூறுகின்றனர். முதுகுத் தண்டில் உள்ள வெவ்வேறு நரம்பு மண்டல மையங்களை, யோகி கூறும் வெவ்வேறு தாமரை களோடு ஒப்பிடலாம்.
அடியிலுள்ள மூலாதாரத்தில் தொடங்கி மேலே மூளையிலுள்ள ஆயிரம் இதழ்த் தாமரையாகிய சகஸ்ரா ரத்தில் முடிவு பெறும் முதுகுத்தணடில் பல சக்கரங்களாகிய மையங்களை யோகி உணர்கிறான். இந்த நரம்பு மண்டல மையங்கள் தாமரைகளைக் குறிக்கின்றன என்று கொண்டால், யோகியின் கருத்தை நவீன உடலியல் வல்லுனர்களின் மொழியில் எளிதில் புரிந்துகொள்ளலாம். இந்த நரம்புகளில் இருவகைச் செயல்கள் நடைபெறுவது நமக்குத் தெரியும். ஒன்று உள்முகமாகச் செல்வது, மற்றொன்று வெளிமுகமாகச் செல்வது; ஒன்று ஞானேந்திரியத்தின் வழிப்பட்டது; மற்றது கர்மேந்திரியத்தின் வழிப்பட்டது; ஒன்று மையத்தை நோக்கிச் செல்வது, மற்றது மையத்திலிருந்து விலகிச் செல்வது; ஒன்று உணர்ச்சிகளை மூளைக்கு எடுத்துச் செல்வது. மற்றது மூளையிலிருந்து வெளி உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வது. இறுதியில் இந்த அதிர்வுகளெல்லாம் மூளையோடு இணைக்கப்பட்டுள்ளன.
இனி வரும் விளக்கங்களைப் புரிந்துகொள்வதற்கு முன் பல உண்மைகளை நினைவுகூர வேண்டியுள்ளது. முதுகுத்தண்டு, மூளையிலல் ஒருவகைக் குமிழ் வடிவம் கொண்ட முகுளம் என்ற பகுதியில் முடிவடைகிறது. முகுளம் மூளையோடு ஒட்டிக்கொண்டு இல்லை, மூளையிலுள்ள ஒரு திரவத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. தலையில் ஏதாவது அடிபட்டால், அந்த வேகம் திரவத்தால் சமன் செய்யப்பட்டுவிடும்; முகுளத்தைத் தாக்காது. இது நாம் நினைவில்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை.
அடுத்ததாக எல்லா மையங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக மூன்றை நினைவில் கொள்ள வேண்டும். அவை மூலாதாரம் (அடியிலிருப்பது), சகஸ்ராரம் (மூளையிலுள்ள ஆயிரம் இதழ்த் தாமரை), மணிபூரகம் (தொப்புளிலுள்ள தாமரை).
அடுத்து இயற்பியலிலிருந்து ஓர் உண்மையை எடுத்துக் கொள்வோம். மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல சக்திகளைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் மின்சாரம் என்றால் என்ன என்பது யாருக்கும் தெரியாது. தெரிந்ததெல்லாம் அது ஒரு வகையான இயக்கம் என்பது மட்டுமே. பிரபஞ்சத்தில் வேறு பலவித இயக்கங்களும் உள்ளன. அவற்றிற்கும் மின்சாரத்திற்கும் என்ன வேறுபாடு? இந்த மேஜை எதனால் ஆக்கப்பட்டிருக்கிறதோ அந்த மூலக்கூறுகள் எல்லாம் வெவ்வேறு திசைகளில் இயங்குகின்றன. அவற்றை ஒரே திசையில் இயங்கச் செய்ய வேண்டுமானால் அது மின்சாரத்தின் வழியாகத்தான் முடியும். மின்னியக்கம் ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளை ஒரே திசையில் இயங்கச் செய்கிறது. ஓர் அறையிலுள்ள எல்லாக் காற்று மூலக்கூறுகளையும் ஒரே திசையில் இயங்கச் செய்தால், அந்த அறை ஒரு பெரிய மின்சாரக் கொள்கலனாகிவிடும். அடுத்து, உடலியலிலிருந்து ஒரு கருத்தை எடுத்துக் கொள்வோம். சுவாச உறுப்புக்களை ஒழுங்குப்படுத்தும் மையம், நரம்பு மண்டலம் முழுவதையுமே ஒருவிதமாக அடக்கியாளும் ஆற்றல் பெற்றுள்ளது.
சுவாசப் பயிற்சி ஏன் அவசியம் என்பதை இப்போது பார்ப்போம். முதலாவதாக, லயத்துடன் கூடிய சுவாசத்தினால் உடலிலுள்ள மூலக்கூறுகள் எல்லாம் ஒரே திசையில் இயங்கத் தலைப்படுகின்றன. மனம் சுயேச்சையாக மாறும்போது நாடி இயக்கங்கள் மின்சக்தியைப் போன்றதோர் இயக்கமாக மாறுகின்றன. மின்னோட்டத்தின் கீழ், நரம்புகளின் இருமுனைப் பகுதிகளிலும் எதிர் சக்திகள் உருவாகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சங்கல்பம், நரம்பு இயக்கமாக மாறும்போது அது மின்சக்தி போன்ற ஒன்றாக மாறுகிறது என்பதையே இது காட்டுகிறது. உடலின் இயக்கங்கள் எல்லாமே பரிபூரண லயத்துடன் செயல்படும்போது உடலே சங்கல்பத்தின் ஒரு மாபெரும் கொள்கலன்போல் ஆகிவிடுகிறது. அபரிமிதமான இந்தச் சங்கல்பமே யோகி வேண்டுவது. இது சுவாசப் பயிற்சியின் ஓர் உடலியல் விளக்கம். உடலில் ஒரு லயத்துடன் கூடிய செயல்பாட்டை உருவாக்க இது தலைப்படுகிறது; சுவாச மையம் வழியாக, உடலின் வேறு மையங்களைக் கட்டுப்படுத்த நமக்கு உதவுகிறது. சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வதே.
காண்பது கற்பனை செய்வது, கனவு காண்பது எல்லாவற்றையுமே ஆகாசத்தில் தான் செய்ய வேண்டும். சாதாரண வெளியாகிய இது மஹாகாசம் அல்லது பூதாகாசம். ஒரு யோகி மற்றவர்களின் எண்ணங்களை அறியும்போது, புலன் கடந்தவற்றை உணரும்போது அவற்றை மற்றொருவிதமான வெளியில் அதாவது சித்தாகாசத்தில், மனவெளியில் அதாவது சித்தாகசத்தில், மனவெளியில் காண்கிறேன். காட்சியானது தனக்கு விஷயமாகிய பொருளற்றிருக்கும் போது, ஆன்மா தனது சொந்த இயல்பில் பிரகாசிக்கும் போது அது சிதாகாசம் அல்லது அறிவுவெளி என்று அழைக்கப்படுகிறது. குண்டலினி விழித்தெழுந்து சுழுமுனை நாடியில் நுழையும்போது காட்சிகள் எல்லாம் மனவெளியில் உண்டாகின்றன. மூளையில் விரிவதான சுழுமுனையின் மறுமுனையை அது அடையும்போது அறிவு வெளியில் உருவமற்ற காட்சி உண்டாகிறது. இங்கே மின்சாரத்தின் உவமையை எடுத்துக் கொள்வோம். மனிதன் கம்பி மூலமாகத்தான் மின்சாரத்தை அனுப்ப முடியும். ஆனால் தனது பிரம்மாண்டமான சக்திகளை அனுப்ப இயற்கைக்குக் கம்பிகள் எதுவும் தேவைப்படவில்லை. எனவே கம்பி அவசியமில்லை. கம்பியின்றிச் செயல்பட முடியாத காரணம்தான், அதை உபயோகிக்கும்படி நம்மைக் கட்டாயப்படுத்துகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இதேபோல், உடலின் உணர்ச்சிகள், இயக்கங்கள் எல்லாமே நரம்புகளாகிய கம்பிகள் மூலமாக மூளைக்கு அனுப்பப்படுகின்றன, மூளையிலிருந்து திருப்பி அனுப்பப்படுகின்றன. முதுகுத் தண்டிலுள்ள ஞானேந்திரிய மற்றும் கர்மேந்திரிய நரம்புத் திரள் தான் யோகிகள் கூறும் இடை, பிங்கலை என்பவை. உணர்ச்சியும், அவற்றிற்குப் பதில் செய்தியும் இவை வழியாகவே செல்கின்றன. கம்பி இல்லாமல் மனம் ஏன் செய்திகளை அனுப்பக் கூடாது? கம்பியின்றி செய்திகள் ஏன் மனத்தை அடையக் கூடாது? இயற்கையில் இது நிகழ்வதை நாம் காண்கிறோம். இதை நீங்கள் செய்ய முடிந்தால், நீங்கள் ஜடப் பொருட்களின் பிடியிலிருந்து விடுபட்டவர்கள் என்கிறான் யோகி. இதை எப்படி செய்வது? தண்டிலுள்ள சுழுமுனை நாளம் வழியாகச் சக்தியைச் செலுத்த முடியுமானால் காரியம் கைகூடி விட்டது. மனம்தான் இந்த நரம்பு மண்டலப் பின்னலை உண்டாக்கியுள்ளது. மனமே அதை அறுக்க வேண்டும். அதன்பின் செயல்பட கம்பி தேவைப்படாது. அப்போதுதான் எல்லா அறிவும் நமக்கு கிடைக்கும். உடலாகிய தளையே அதன்பின் இருக்காது. அதனால்தான் நாம் சுழுழுனை மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும். மனப் பிரவாகத்தை, நரம்புகளாகிய கம்பியின் உதவியின்றி இந்த நாளம் வழியாகச் செலுத்த முடியுமானால் பிரச்சனை தீர்ந்தது, இதை நாம் சாதிக்கவும் முடியும் என்கிறான் யோகி.
சாதாரண மனிதர்களிடம் இந்தச் சுழுமுனையின் கீழ்முனை மூடி இருக்கிறது; இதன் வழியாக எந்தச் செயல்பாடும் நடைபெறுவதில்லை. அதைத் திறந்து, அதன் மூலமாக நரம்பு ஓட்டம் செல்வதற்கான ஒரு பயிற்சியைக் கூறுகிறான் யோகி. ஓர் உணர்ச்சி, ஒரு மையத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது எதிர்விளைவு உண்டாகிறது. தானியங்கி மையங்களில் இந்த எதிர்விளைவைத் தொடர்ந்து அசைவு உண்டாகிறது. உணர்வுள்ள மையங்களில் முதலில் காட்சியும், பிறகு அசைவும் உண்டாகிறது. பிரத்தியட்ச அறிவு எல்லாமே வெளியிலிருந்து வரும் செயலுக்கு எதிர்விளைவுதான். ஆனால் கனவில் எப்படிக் காட்சிகள் உண்டாகின்றன! புறத்திலிருந்து வரும் செயல்கள் எதுவும் அங்கு இல்லையே. அப்படியானால் ஏற்கனவே உள்ளே வந்தவை எங்கேயோ சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, நான் ஒரு நகரத்தைப் பார்க்கிறேன். நகரத்திலுள்ள பொருட்கள் உண்டாக்கிய உணர்ச்சியின் எதிர்விளைவாக எழுந்ததுதான் நான் காணும் காட்சி அதாவது புறப்பொருட்கள் உணர்ச்சி நரம்புகளில் ஓர் இயக்கத்தை உண்டாக்குகின்றன. அதனை நரம்புகள் உள்ளே எடுத்துச் சென்று மூளையின் மூலக் கூறுகளில் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை உருவாக்குகிறது. இப்பொழுது நீண்ட நாட்களுக்குப் பிறகும் நான் இந்த நகரத்தை நினைவுகூர முடியும். இந்த நினைவும் முன்பு கூறப்பட்டதுபோல்தான். ஆனால் அதன் வேகம் சற்று குறைவு, ஆனால் அவ்வளவுதான். அப்படி வேகம் குறைந்ததானாலும் மூளையில் சம அதிர்வுகளை உண்டாக்கிய செயல் எங்கிருந்து வந்தது? கட்டாயமாக புறபொருள்- உணர்ச்சி நரம்புத் தொடர்பால் அல்ல. அப்படியானால் இந்த உணர்ச்சிகள் எங்கேயோ சுருட்டி வைக்கப் பட்டிருக்க வேண்டும். இவற்றின் செயலினால், வேகம் குறைந்த எதிர்ச் செயல் உண்டாகிறது. அதைத்தான் கனவுக்காட்சி என்று கூறுகிறோம்.
இந்த உணர்ச்சிகள் சேமித்து வைக்கப்படுவதுபோல் வைக்கப்பட்டுள்ள இடமே மூலாதாரம். அங்கு சுருண்டு கிடக்கும் சக்தியே குண்டலினி. செயல்படும் சக்தியும் இங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது என்று நாம் கொள்வது சரியே. ஏனெனில் வெகுநேரம் படித்த பிறகு அல்லது தியானம் செய்த பிறகு உடலில் மூலாதாரப்பகுதி வெப்பமடைவதை உணரலாம். சுருண்டு கிடக்கின்ற குண்டலினி சக்தியை விழித்தெழச் செய்து, செயல் நிலைக்குக் கொண்டுவந்து சுழுமுனை நாளத்தின் வழியே உணர்வுபூர்வமாகச் செலுத்த வேண்டும். அது ஒவ்வொரு மையத்தினூடே சென்று செயல்படும்போதும் ஓர் அளப்பரிய எதிர்ச் செயல் உண்டாக்கிறது. சிறிதளவு சக்தி நரம்பு வழியே சென்று சக்கரங்களில் எதிரியக்கம் உண்டாகும் போதுதான் கனவு அல்லது கற்பனை உண்டாகும். ஆனால் சேமித்து வைக்கப்பட்ட சக்தி வெகுநேர அகதியானத்தின் மூலம் சுழுமுனை நாளம் வழியே அதிக அளவில் சென்று சக்கரங்களைத் தாக்கும்போது உண்டாகும் எதிரியக்கம் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கும். அது கனவு, கற்பனை, இவற்றைவிட மிகவும் சிறந்த எதிரியக்கம்; பொறிகளின் உணர்வைவிட மிகவும் தீவிரமானது. இது புலன்கடந்த உணர்வாகும். அது எல்லா உணர்ச்சிகளுக்கும் தலைமை நிலையமாக இருக்கும் மூளையை அடையும்போது, மூளை முழுவதும் எதிரியங்குவது போலாகிறது. அதனால் அனுபூதிப் பேரொளி உண்டாகிறது; ஆன்ம தரிசனம் கிடைக்கிறது. குண்டலினி சக்தி மேலே ஒவ்வொரு சக்கரத்தின் வழியே செல்லும்போதும்,, மனத்தின் ஒவ்வோர் அடுக்குகள் திறக்கப்பட்டது போலாகிறது. அப்போது பிரபஞ்சத்தை அதன் நுட்பமான காரண நிலையில் யோகி காண்கிறான். அப்போது மட்டுமே பிரபஞ்சத்தின் காரணங்களை, உணர்ச்சி மற்றும் எதிர்ச்செயல் என்ற இருநிலைகளிலும் அமைந்துள்ள காரணங்களை அவற்றின் உண்மை நிலையில் அவன் அறிந்துகொள்கிறான். அதனால் எல்லா அறிவும் அவனுக்குக் கிடைக்கிறது. காரணங்களை அறிவதால் காரியங்கள் அதாவது விளைவுகளைப் பற்றிய அறிவும் அவனுக்குப் புலப்படுகிறது.
தெய்வீக ஞானத்தை, உணர்வுகடந்த நிலையை, ஆன்ம ஞானத்தை, அடைவதற்கு ஒரே வழி இவ்வாறு குண்டலினியை எழுப்புவதே. பகவானிடம் தூய பக்தி, நிறைநிலை எய்திய மகான்களின் அருள், தத்துவ ஞானியின் விவேக வலிமை என்று பல வழிகளில் அது விழித்தெழலாம். அனுமாஷ்யமானது என்று பொதுவாகக் கூறப்படுகின்ற சக்தியோ அறிவோ எங்காவது காணப்படுமானால் அங்குச் சிறிது குண்டலினி சக்தி சுழுமுனை நாடி வழியாகச் சென்றிருக்க வேண்டும். ஆனால் இத்தகைய சம்பவங்களுள் பெரும்பான்மையிலும் சாதகர்கள் ஏதேச்சையாக ஏதோ சில சாதனைகளைச் செய்து அதன் விளைவாக ஒருசிறிது குண்டலினி சக்தியைச் சுழுமுனை நாடியில் செலுத்தியிருக்க வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ எல்லா வழிபாடுகளும் இந்த இடத்திற்கே அழைத்துச் செல்கின்றன. தனது பிரார்த்தனைக்குப் பதில் இறைவனிடமிருந்து வருகிறதென்று கருதுபவன், தனது சொந்த இயல்பிலிருந்தே அந்தப் பதில் வந்தது என்பதை, தன்னிடமே அடங்கியுள்ள எல்லையற்ற சக்தியின் ஒரு சிறு பகுதியைப் பிரார்த்தனைக்குரிய மனநிலையின் மூலம் எழுப்புவதில் தான் வெற்றியடைந்திருக்கிறோம் என்பதை அறிவதில்லை. பயத்தாலும் கவலையாலும் மனிதன் அறிவிழந்து வெவ்வேற பெயரிட்டு வழிபடுவது உண்மையில் ஒவ்வொரு வரிடத்தும் சுருண்டுக் கிடக்கின்ற, நிரந்தர ஆனந்தத்தின் அன்னையாகிய அந்தச் சக்தியையே என்று யோகி முழுங்குகிறான். அவளை அணுகுவது எப்படி என்பது மட்டும் தெரிந்திருக்க வேண்டும், அவ்வளவுதான். மதத்தின் விஞ்ஞானமே ராஜயோகம்; அதாவது எல்லா வழிபாடுகள், எல்லா பிராத்தனைகள், வடிவங்கள் சடங்குகள், அற்புதச் செயல்கள் என்று எல்லாவற்றினுடையவும் பகுத்தறிவுத் தத்துவமே ராஜயோகம்.
சித்துப் பிராணனைக் கட்டுப்படுத்துதல்
இப்போது பிராணாயாமத்திலுள்ள பயிற்சிகளைப் பார்ப்போம். யோகிகளைப் பொறுத்தவரை நுரையிரல்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதுதான் முதற்படி. உடலிலுள்ள நுண்ணிய இயக்கங்களை உணர்வதே நாம் செய்ய வேண்டுவது. நமஆ மனம் புறமாகிவிட்டது. அகத்தில் நிகழ்கின்ற நுண்ணிய இயக்கங்களை உணரும் தன்மையை இழந்துவிட்டது. அவற்றை உணரத் தொடங்குவோமானால் அடக்கி ஆளவும் தொடங்குவோம். நரம்புகள் உடல் முழுவதும் பரவிச் சென்று ஒவ்வொரு தசைக்கும் ஊக்கமும் சக்தியும் ஊட்டுகின்றன. ஆனால் அவற்றை நாம் உணர்வதில்லை. அவற்றை உணர்வதற்கு நாம் பழகலாம் என்கிறான் யோகி. எப்படி? நுரையீரல்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் தான், போதிய காலம் நாம் அதைச் செய்தோமானால் உடலில் நுட்பமான இயக்கங்களை அடக்கி ஆளலாம்.
இப்போது பிராணாயாமத்திலுள்ள பயிற்சிக்கு வருகிறோம். நேராக நிமிர்ந்து அமருங்கள்; உடம்பு நேராக இருக்க வேண்டும். முதுகுத்தண்டு முதுகெலும்புடன் சேர்ந்திராவிட்டாலும் அதனுள் இருக்கிறது. வளைந்து அமர்ந்தால் முதுகுத்தண்டிற்கு இடைஞ்சல் செய்கிறீர்கள். எனவே அது சுதந்திரமாக இருக்குமாறு அமருங்கள். வளைந்து உட்காந்து தியானம் செய்யும்போதெல்லாம் உங்களுக்கு நீங்களே தீங்கு செய்துகொள்கிறீர்கள். மார்பு, கழுத்து தலை இவை மூன்று அங்கங்களும் எப்போதும் நேர்கோட்டில் அமைய வேண்டும். சிறிது பயிற்சிக்குப் பின்னர் இது மூச்சு விடுவதைப்போல் எளிதாகி விடுவதைக் காணலாம்.
இரண்டாவதாக, நரம்புகளை வசப்படுத்துதல். சுவாச உறுப்புகளை ஆளும் நரம்பு மையம் மற்ற நரம்புகளையும் ஒருவிதமாக அடக்கி ஆள்கிறது, எனவே லயத்துடன் கூடிய சுவாசம் தேவை என்பதை முன்பே கூறினோம். பொதுவாக நாம் மூச்சுவிடுவதை மூச்சுவிடுதல் என்றே சொல்வதற்கில்லை.23. அது சிறிதும் ஒழுங்கற்றது. மேலும் ஆண்களும் பெண்களும் மூச்சுவிடுவதில் இயற்கையான சில வேறுபாடுகள் உள்ளன.
அளவாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடக் கற்றுக் கொள்வதுதான் முதல் பாடம். இது உடலை இயைபுப்படுத்தும். சிறிதுகாலம் இதைப் பயிற்சி செய்த பின் ஒம் அல்லது வேறு ஏதாவது மந்திரத்தையும் சேர்த்து ஜபிப்பது நல்லது. சாதாரணமாக இந்தியாவில் நாங்கள் ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்வதற்குப் பதிலாகச் சில உருவகச் சொற்களை பயன்படுத்துவது வழக்கம். அதனால்தான் பிராணாயாமத்துடன் ஓம் அல்லது வேறு ஏதாவது மந்திரத்தை ஜபிக்கும்படிக் கூறினேன். சுவாசத்துடன் இந்த மந்திரரமும் கலந்து லயத்துடன், இயைபுடன் உள்ளே சென்று வெளிவரட்டும். அப்போது உடல் முழுவதுமே ஒரு லயத்திற்கு வசப்பட்டு விடுவதைக் காணலாம். ஓய்வு என்றால் என்ன என்பது அப்போதுதான் உங்களுக்குத் தெரியவரும். அதனுடன் ஒப்பிடும்போது தூக்கம் ஓர் ஓய்வே அல்ல. இந்த ஓய்வு மட்டும் கிடைத்து விட்டால் மிகவும் களைப்புற்றிருந்த நரம்புகள் அமைதி பெறும். இதற்கு முன்பு நீங்கள் உண்மையில் ஓய்வையே அனுபவித்ததில்லை, அப்போது உணர்வீர்கள்
இந்தப் பயிற்சியின் முதல் விளைவை முகத்திலேயே காண முடியும்; முகபாவம் மாறும், அழகற்ற மடிப்பு மறைந்துவிடும். அமைதியான சிந்தனையுடன் முகம் சாந்தமாகப் பொலிந்து தோன்றும். அடுத்து வருவது இனிமையான குரல். கரகரப்பான குரலுடைய யோகியை நான் பார்த்ததே இல்லை. இந்த அறிகுறிகள் சிலமாதப் பயிற்சியிலேயே தோன்றிவிடும். மேலே கூறிய சுவாசப் பயிற்சியைச் சில நாட்கள் செய்த பிறகு, சற்று உயர்ந்த பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும். இடை வழியாக, அதாவது இடது நாசி வழியாக நுரையிரல்களைக் காற்றினால் மெள்ள நிரப்புங்கள். அதே வேளையில் நரம்பு ஓட்டத்தின் மீது மனத்தை ஒருமுகப்படுத்துங்கள். அந்த நரம்பு ஒட்டத்தை நீங்கள் முதுகுத் தண்டு வழியாக கீழே அனுப்பி, அங்கே குண்டலினியின் இருப்பிடமான, முக்கோண வடிவமான மூலாதாரத் தாமரையை அது வலிமையாகத் தாக்குவதாக நினையுங்கள். பிறகு நரம்பு ஓட்டத்தை அங்கு சிறிது நேரத்திற்கு நிறுத்தி வையுங்கள். பிறகு அந்த நரம்பு ஒட்டத்தை மேலே பிங்கலை வழியாகக் காற்றை வெளியில் அனுப்புங்கள். இது உங்களுக்குச் சற்று சிரமமாக இருக்கும். மிக எளிதான வழி கைவிரல்களைப் பயன்படுத்திக் கொள்வதுதான். வலது நாசித்துளையைப் பெருவிரலால் மூடிவிட்டு, இடது நாசி வழியாக மூச்சை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும். பின்னர் பெருவிரலாலும் சுட்டுவிரலாலும் இரண்டு நாசிகளையும் மூடிவிட்டு, ஓட்டத்தைக் கீழே அனுப்பிச் சுழுமுனையின் அடிப்பகுதியைத் தாக்குவதாக நினையுங்கள். பின்னர் பெருவிரலை விலக்கி, மூச்சை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள். அடுத்து, அதே நாசி வழியாக மூச்சை உள்ளிழுங்கள். அப்போது இடது நாசி, சுட்டுவிரலால் மூடியபடியே இருக்கட்டும். பின்னர் முன்புபோல் இரண்டு நாசிகளையும் மூடுங்கள். இந்துக்கள் பழகுவது போல், இந்த நாட்டிலுள்ள உங்களால் இதைச் சுலபமாகப் பழக முடியாது. ஏனெனில் அவர்கள் சிறுவயதிலிருந்தே இதைப் பழகிவருகின்றனர். அவர்களது சுவாசப்பைகள் இதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. நான்கு வினாடிகளாக ஆரம்பித்து, மெதுவாக அதிகரிப்பது நல்லது. நான்கு வினாடி உள்ளிழுங்கள், பதினாறு வினாடி வெளி விடுங்கள். இது ஒரு பிராணாயாமம். இந்தச் சமயத்தில் முக்கோண வடிவத்திலுள்ள மூலாதாரத் தாமரையை நினைத்து மனத்தை அந்த மையத்தில் குவியுங்கள். மனோ பாவனை உங்களுக்கு பேருதவியாக இருக்கும்.
அடுத்த பிராணாயாமத்தில் சிறிது வித்தியாசம் உள்ளது. இதில் மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, உடனே மெதுவாக வெளியேற்றிவிட வேண்டும். மூச்சை வெளியில் நிறுத்த வேண்டும். முந்திய முறைக்குரிய அதே எண்ணிக்கைகளைப் பயன்படுத்த வேண்டும். வித்தியாசம் எல்லாம், முதல் வகையில் மூச்சு உள்ளே நிறுத்தப்பட்டது, இரண்டாம் வகையில் வெளியில் நிறுத்தப்படுகிறது. இரண்டாவதுதான் சுலபமானது. மூச்சை சுவாசப்பையில் நிறுத்தி வைக்கின்ற பிராணாயாமம் அதிகமாகச் செய்யக் கூடாது. காலையில் நான்கு முறையும் மாலையில் நான்கு முறையும் செய்யுங்கள். பிறகு மெதுவாக நேரத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம். அதற்குரிய ஆற்றல் உங்களுக்கு இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். அப்படி ஆற்றல் இருப்பதாக நீங்கள் உணரும்போது கவனமாக, எச்சரிக்கையாக நான்கிலிருந்து ஆறாக உயர்த்தலாம். ஒழுங்கீனமான பயிற்சி உங்களுக்குக் கேட்டை விளைவிக்கும்.
நாடிகளைச் சுத்தப்படுத்துவதுவதற்காகக் கூறிய மூன்று வகைப் பிராணாயாமங்களுள் முதல் வகையும் மூன்றாம் வகையும் எளியவை; ஆபத்து ஏதும் இல்லாதவை. முதல் வகையை எவ்வளவு அதிகமாகச் செய்கிறீர்கயளா அந்த அளவு அமைதியில் நிலைபெறுவீர்கள். ஓம் என்ற மந்திரத்தை நினையுங்கள். வேலை செய்து கொண்டிருக்கும்போதுகூட நீங்கள் இதைச் செய்யலாம். எல்லா விதத்திலும் அது உங்களுக்கு நல்லது. தீவிர முயற்சியுடன் பயிற்சி செய்தால் ஒருநாள் குண்டலினி எழும், தினந்தோறும் ஓரிருமுறை பயிற்சி செய்பவர்களுக்கு உடலும் உள்ளமும் சிறிது அமைதி பெறும்; குரல் இனிமை பெறும், மேலும் தொடர்ந்து செய்பவர்களுக்கு மட்டுமே குண்டலினி சக்தி விழித்தெழும். அவர்களுக்கு இயற்கை முழுவதுமே மாறத் தொடங்கும். அறிவுப் பொக்கிஷம் தானாகத் திறக்கும். அதன் பிறகு அறிவைத் தேடி நூல்களை நாட வேண்டியதில்லை. உங்கள் சொந்த மனமே எல்லையற்ற அறிவை உடைய நூலாகிவிடும். முதுகுத் தண்டின் இருபுறமும் செல்கின்ற நாடிகளைப் பற்றியும் தண்டுவடத்தின் வழியாகச் செல்லும் சுழுமுனையைப் பற்றியும் ஏற்கனவே கூறினேன். இவை மூன்றும் எல்லா பிராணிகளிலும் உண்டு; முதுகெலும்பு உள்ள பிராணிகள் எல்லாவற்றிற்கும் இவை உண்டு; சாதாரண மனிதனிடம் இந்தச் சுழுமுனை மூடியிருக்கிறது என்கிறான் யோகி, அதன் செயல்பாடு புலப்படுவதில்லை. மற்ற இரண்டு நாடிகளும் சக்தியை உடலின் பல பாகங்ளுக்கு எடுத்துச் செல்கின்றன.
யோகிக்கு மட்டுமே சுழுமுனை திறக்கப்பட்டுள்ளது. சுழுமுனைப் பாதை திறந்து குண்டலினி மேலே செல்லத் தொடங்கும்போது நாம் புலன்களைக் கடந்து செல்கிறோம். நமது மனங்கள் புலன்களைக் கடந்தவையாகின்றன, உணர்வு கடந்தவையாகின்றன, அறிவு எட்ட முடியாத நிலையை, புத்திக்கும் அப்பாலுள்ள நிலையை அடைகிறோம். சுழுமுனையைத் திறப்பதே யோகியின் முதல் நோக்கம். அவனது கருத்துப்படி சுழுமுனை வழியில்தான் இந்த மையங்கள், அல்லது உருவக மொழியில் கூறுவதனால், தாமரைகள் வரிசையாக உள்ளன. அடியில் தண்டுவடத்தின் கீழ்நுனியில் உள்ளது மூலாதாரம், அடுத்து சுவாதிஷ்டானம், மூன்றாவது மணிபூரகம், நான்காவது அனாஹதம், ஐந்தாவது விசுத்தம், ஆறாவது ஆஜ்ஞை. கடைசியாக மூளையில் இருப்பது சஹஸ்ராரம் அல்லது ஆயிரம் இதழ்த் தாமரை. இப்போது நாம் கவனிக்க வேண்டியது கீழே உள்ள மூலாதாரமும், மேலே உள்ள சஹஸ்ராரமும்தான். எல்லா சக்தியும் அதன் இருப்பிடமான மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.
உடலில் உள்ள எல்லா சக்திகளுள்ளும் உயர்ந்தது ஓஜஸ் என்கிறான் யோகி. இந்த ஓஜஸ், மூளையில் சேமித்து வைக்கப்படுகிறது. ஒரு மனிதனின் தலையில் எந்த அளவிற்கு ஓஜஸ் அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவன் ஆற்றல் மிக்கவனாகவும், அதிக புத்திசாலியாகவும், ஆன்மிக வலிமை பெற்றவனாகவும் இருப்பான். ஒருவன் அழகான கருத்துக்களைக் கூறலாம், அவற்றை அழகான மொழியில் எடுத்துச் சொல்லலாம். ஆனால் அவை பிறரைக் கவராமல் போகலாம். இன்னொருவனோ இனிய மொழியிலும் பேசுவதில்லை, சிறந்த கருத்துக்களைச் சொல்வதும் இல்லை. ஆயினும் அவனது சொற்கள் பிறர் உள்ளத்தை வசீகரிக்கின்றன. அவனது ஒவ்வோர் அசைவும் வலிமை உடையதாக இருக்கிறது. இதுதான் ஓஜஸின் ஆற்றல்.
குறைவாகவோ அதிகமாகவோ ஒவ்வொரு மனிதனிடமும் ஓஜஸ் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. உடலில் செயல்படுகின்ற எல்லா ஆற்றல்களும் அவற்றின் மிக உயர்ந்த நிலையில் ஓஜஸாக மாறுகின்றன. ஒரு சக்திதான் இன்னொரு சக்தியாக மாறுகிறது என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். மின்சாரமாக, காந்த சக்தியாகச் செயல்படுகின்ற அதே சக்திதான் அகச் சக்தியாக மாறுகிறது. தசைச் சக்தியாகச் செயல்படுபவைதாம் ஓஜஸாக மாறுகிறது. பாலுறவு சக்தியாக, பாலுணர்ச்சியா வெளிப்படும் மனித ஆற்றல் தடுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டால் எளிதில் ஓஜஸாக மாறுகிறது என்று யோகி கூறுகிறான். இந்தக் காம சக்தி முழுவதையுமே சேகரித்து ஓஜஸாக மாற்ற அவன் முயற்சிக்கிறான். ஒழுக்கமுடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே ஒஜஸை மேலே எடுத்துச் சென்று மூளையில் சேமிக்க முடியும். அதனால் தான் பிரம்மச்சரியம் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது. பிரம்மச்சாரியத்திலிருந்து வழுவினால் ஒருவனிடமிருந்து ஆன்மீகம் நீங்கிவிடுவதையும், மன வலிமையையும் ஒழுக்க வீரியத்தையும் அவன் இழந்து விடுவதையும் உணர முடியும். இந்தக் காரணத்தினால் தான், பெரிய ஆன்மீக வீரர்களைத் தந்துள்ள எல்லா மதங்களும் சிறிதும் வழுவாத பிரம்மச்சாரியத்தை எப்போதும் வற்புறுத்துவதைக் காண்கிறோம். இதே காரணத்தினால்தான், திருமணம் செய்து கொள்ளாத துறவியர் தோன்றினர். எண்ணம், சொல், செயல் அனைத்திலும் அப்பழுக்கற்ற பிரம்மச்சரியம் அவசியம். அப்படி இல்லாமல் ராஜயோகம் பயில்வது ஆபத்தில் முடியும்; ஒருவனைப் பைத்தியக்காரனாகக்கூட ஆக்கி விடலாம். ராஜயோகத்தையும் பின்பற்றிக் கொண்டு, அதே வேளையில் தூய்மையற்ற வாழ்வும் வாழ்ந்தால் ஒருவன் யோகி ஆக முடியுமா என்ன?
அடுத்த படி பிரத்யாஹாரம். அது என்ன? பிரத்தியட்ச அறிவு எப்படி ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். முதலில் புறக் காரணங்கள் உள்ளன. அடுத்தப்படியாக மூளை மையங்கள் மூலமாக உடலில் செயல்படுகின்ற அகக் காரணங்கள் உள்ளன. அடுத்ததாக மனம் உள்ளது. இவையெல்லாம் ஒன்றுசேர்ந்து ஏதாவது புறப்பொருளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும்போது அந்தப் பொருளை நாம் அறிகிறோம்.அந்த வேளையில், மனத்தைக் குவித்து ஒரு பொறியுடன் மட்டும் இணைந்திருக்கச் செய்வது மிகவும் கடினமான ஒன்று. மனம் ஓர் அடிமை.
நல்லவனாக இரு, நல்லவனாக இரு நல்லவனாக இரு என்று திரும்பத் திரும்ப உலககெங்கும் போதிக்கப்படுவதைக் கேட்கிறோம். திருடாதே, பொய் சொல்லாதே என்று அறவுறுத்தப்படாத ஒரு குழந்தைகூட உலகின் எந்த நாட்டிலும் இருக்க முடியாது. ஆனால் அப்படிச் செய்யாமல் இருப்பது எப்படி என்பதை யாரும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. வெறும் வாய்ப் பேச்சினால் அவனுக்குப் பயனில்லை. அவன் ஏன் திருடனாகக் கூடாது? திருடாமல் இருப்பது எப்படி என்று அவனுக்கு நாம் கற்றுக் கொடுப்பதில்லை திருடாதே என்று மட்டும் அவனிடம் வெறுமனே சொல்கிறோம். மனத்தை அடக்கியாளக் கற்றுக் கொடுக்கும்போதுதான் உண்மையில் அவனுக்கு உதவுகிறோம்.
பொறிகள் எனப்படுகின்ற சில குறிப்பிட்ட மையங்களுடன் மனம் தன்னை இணைத்துக் கொள்ளும்போது தான் அக மற்றும் புறச் செயல்கள் எல்லாமே நிகழ்கின்றன. மனம் உடன்பட்டாலும் சரி உடன்படாவிட்டாலும் சரி, இந்த மையங்களுடன் இணைவதற்காக இழுக்கப்படுகிறது. இதனால்தான் மனிதன் முட்டாள் தனமாக காரியங்களைச் செய்துவிட்டு, பின்னால் துன்பப்படுகிறான். மனம் மட்டும் அவன் வசம் இருந்திருந்தால் அவற்றை அவன் செய்திருக்கவே மாட்டான். மனத்தை அடக்குவதால் ஏற்படும் பலன் என்ன? அது பொறிகளோடு சேர்ந்துகொள்ளாது. அதனால் எண்ணங்களும் செயல்களும் இயல்பாகவே கட்டுப்பாட்டில் இருக்கும். இதுவரை புரிகிறது. ஆனால் இது முடியாக்கூடியதா? ஆம், கண்டிப்பாக முடியும். இன்று அதை நீங்கள் காணவும் செய்கிறீர்கள், துன்பம், கவலை, தீமை என்பவை இல்லையென்று மறுத்து விடும்படி நம்பிக்கை வைத்தியர்கள் மக்களுக்குக் கற்பிக்கின்றனர். அவர்களின் வழி சற்று சுற்றுவழிதான். ஆனால் தங்களுக்குத் தெரியாமல் அவர்கள் எப்படியோ யோக நெறியின் ஒரு பகுதியையே பயன்படுத்துகின்றனர். ஒருவனது துன்பத்தை மறுப்பதன் மூலம் அவனது துன்பத்தை நீக்குவதில் வெற்றி காணும்போது உண்மையில் அவர்கள் பிரத்யாஹாரத்தின் ஒரு பகுதியையே பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் புலன்களைப் புறக்கணிக்கத் தக்க வலிமையை அவனது மனத்திற்கு உண்டாகச் செய்கிறார்கள் அவர்கள். மனவசியக்காரர்களும் இதை முறையையே கையாண்டு, தங்கள் சமிஜ்ஞைகள் மூலம் நோயாளியிடம் ஒரு வகையான பிரத்யாஹாரத்தைத் தற்காலிகமாகச் சிறிது நேரத்திற்கு உண்டாக்குகிறார்கள். மனோ வசியம் என்று கூறப்படுகின்ற இது, பலவீனமான மனத்தின் மீதுதான் செயல்புரிய முடியும். வசியம் செய்பவன் தன் நிலைத்த பார்வையின் மூலமோ அல்லது வேறுவழிகளிலோ நோயாளியின் மனத்தை ஒருவித மந்தமான முடக்க நிலைக்குக் கொண்டுவருவதில் வெற்றி பெறாமல் தனது சமிஜ்ஞைகளை, ஆதிக்கத்தை அவன்மீது செயல்படுத்த முடியாது.
மனவசியத்தின் மூலமும் சரி, நம்பிக்கை வைத்தியத்தின் மூலமும் சரி, நோயாளியின் நரம்பு மையங்களைக் கட்டுப்படுத்துவது ஆட்சேபணைக்குரியது. அது அவனை அழிவிலேயே சேர்க்கும். உண்மையில் இது, ஒருவன் தன் சொந்த சுயேச்சை பலத்தால் மூளை மையங்களை வசப்படுத்துவதல்ல; மற்றொருவனின் சுயேச்சை, நோயாளியின் மனத்தைத் திடீரெனத் தாக்கி நிலைகுலையச் செய்வது போன்ற செயலே இது. வெறிபிடித்துப் பாய்ந்தோடும் குதிரைகளைக் கடிவாளத்தாலும் கை வலிமையாலும் பிடித்து இழுத்து நிறுத்தாமல், இன்னொருவனை அழைத்து அவற்றின் தலையில் ஓங்கி அடிக்கச் செய்து நிலைகுலைய வைத்து, அந்த நேரத்திற்கு அவைகளைச் சாதுவாகச் செய்தலாகும். இந்த முறைகள் ஒவ்வொன்றிலும் அவற்றிற்கு ஆட்படும் ஒருவன் தனது மன ஆற்றல்களைச் சிறிதுசிறிதாக இழக்கிறான். கடைசியில், மனம் முழுக் கட்டுப்பாட்டு ஆற்றலைப் பெறுவதற்குப் பதிலாக, வலிமையிழந்த, உருவமிழந்த பிண்டமாக ஆகிவிடுகிறது. அவனது இறுதிப் போக்கிடம் பைத்தியக்கார விடுதி மட்டுமே.
சொந்த மனத்தின் மூலம் சுயமாக மனத்தை அடக்க வேண்டும். அவ்வாறில்லாத எந்த முயற்சியும் அழிவை உண்டாக்கும் என்பது மட்டுமல்ல, குறிக்கோளை அடைய விடாமலும் செய்துவிடும். ஒவ்வோர் ஆன்மாவின் குறிக்கோளும் சுதந்திரம், பிரபுத்துவம், ஜடப்பொருள் மற்றும் எண்ணங்களின் அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம்பெறல், புற மற்றும் அக இயற்கைகளின் தலைவனாதல். இந்தக் குறிக்கோளை நோக்கி அழைத்துச் செல்வதற்குப் பதிலாக பிறருடைய சுயேச்சையின் ஒவ்வொரு வெளிப்பாடும், அது எந்த முறையில் இருந்தாலும்- நமது பொறிகளை நேர்முகமாக அடக்கினாலும் சரி, அல்லது அதைச் செயலிழக்கச் செய்து, நாமே கட்டுப்டுத்தும்படி தூண்டினாலும் சரி- அது ஏற்கனவே நம்மைப் பிணைத்துள்ள பழைய எண்ணங்கள், பழைய மூடநம்பிக்கைகள் என்ற தடித்த சங்கிலிக்கு இன்னொரு வளையமாக அமைந்துவிடுகிறது. எனவே பிறர் உங்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். எதிர்பாராத விதமாக நீங்கள் பிறருக்கு அழிவை உண்டாக்குவது பற்றியும் எச்சரிக்கையாக இருங்கள். இதன் மூலம் சிலர் பலரது எண்ணங்களுக்கு ஒரு புதுப் பாதையைக் காட்டி சிறிது உதவி செய்யலாம் என்பது உண்மை தான். அதே வேளையில் அவ்வாறு செய்யும்போது, தாங்கள் அறியாமலே வெளிப்படுத்துகின்ற சமிஜ்ஞைகளால் ஆயிரக்கணக்காண மக்களின் மனத்தில் ஒருவகை செயலற்ற நிலையை, மந்த நிலையை, மயக்க நிலையை உண்டாக்கி, அதன் காரணமாக அவர்களை ஏறக்குறைய ஆன்மாவையே இழந்தவர்கள்போலாக்கி விடுகின்றனர். எனவே கண்னை மூடிக்கொண்டு அப்படியே நம்பும்படி யாரிடமாவது ஒருவன் கூறினாலோ அல்லது வலிமையான தனது சுயேச்சையின் ஆற்றலால் தன்னைப் பின்பற்றச் செய்தாலோ, அவன் மனப்பூர்வமாக இல்லாவிடிலும் மனித குலத்திற்குத் தீங்கையே விளைவிக்கிறான்.
எனவே உங்கள் மனத்தையே பயன்படுத்துங்கள் உங்கள் உடலையும் மனத்தையும் நீங்களே அடக்கி ஆளுங்கள். நீங்கள் நோயுறாதவரை எந்த வெளிச் சக்தியும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதையும் அப்படியே குருட்டுத்தனமாக நம்பும்படி உங்களிடம் சொல்பவனை, அவன் எவ்வளவு உயர்ந்தவனாக நல்லவனாக இருந்தாலும் சரி, அவனைத் தவிர்த்து விடுங்கள். குதிப்பதும், ஆடிப்பாடி உரக்கக் கத்துவதுமான நெறிகள் உலகம் முழுவதுமே உள்ளன. அவர்கள் ஆடிப்பாடிப் பிரச்சாரம் செய்யத் தொடங்கும் போது அது தொற்று வியாதிபோல் பரவவும் செய்கிறது. அவர்களும் ஒருவகை மனவசியக்காரர்களே. உணர்ச்சி வசப்படுகின்ற இயல்புடையோர் மீது அவர்கள் தற்கலிகமாக ஒருவகையான கட்டுப்பாட்டை உண்டாக்குகின்றனர். அந்தோ, காலப்போக்கில் அனேகமாக இவர்கள் மக்கள் கூட்டத்தையே இழிநிலைக்கு ஆளாக்கிவிடுகின்றனர்.
மனத்தை மந்தநிலையில் ஆழ்த்திச் செயலிழக்கச் செய்யும் இத்தகைய புறச் சக்திகளுக்கு ஆளாகி, நல்லவர் போல் தோன்றுவதைவிடத் தீயவராக இருப்பது தனி மனிதனுக்கும் சரி இனத்திற்கும் சரி நல்லது. நல்லெண்ணம் உடையவர்களாக இருந்தாலும் பொறுப்பற்றவர்களான இத்தகைய கொள்கை வெறியர்கள், மக்கள் குலத்திற்குச் செய்யும் கொடுமையின் பரிமாணத்தை எண்ணும்போது மனம் வேதனையில் மூழ்குகிறது. பாட்டு மற்றும் பிரார்த்தனையுடன் கூடிய அவர்களது சமிஜ்ஞையின் காரணமாக, திடீரென்று ஆன்மீக எழுச்சிக்குள்ளாகின்ற மனங்கள் உண்மையில் சக்தியிழந்து, சோர்ந்து மயக்க நிலையே அடைகின்றன என்பதை அவர்கள் உணர்வதில்லை. மேலும் அத்தகைய மனங்கள் எந்தத் தீய சமிஜ்ஞையின் காரணமாக, தீடீரென்று ஆன்மிக எழுச்சிக்குள்ளாகின்ற மனங்கள் உண்மையில் சக்தியிழந்து, சோர்ந்து மயக்க நிலையையே அடைகின்றன என்பதை அவர்கள் உணர்வதில்லை. மேலும் அத்தகைய மனங்கள் எந்தத் தீய சமிஜ்ஞையையும் பெறுவதற்கான வழியைத் திறந்து வைத்தவைபோலாகி விடுகின்றன. மேகமண்டலத்திற்கு மேல் இருந்துகொண்டு ஏதோ ஒரு கடவுள் தங்கள் மீது பொழிகின்ற சக்தியின் காரணமாகவே தாங்கள் மனித உள்ளங்களை மாற்ற முடிகிறது என்று தங்கள் அற்புத ஆற்றலைப் புகழ்ந்துகொள்கின்றன இந்த அறிவிலிகள், இந்த முட்டாள்கள் தாங்கள் இதன்மூலம் எதிர்காலத்தின் அழிவிற்கான, பாவச் செயல்களுக்கான, பைத்தியக்காரத்தனத்திற்கான, மரணத்திற்கான விதைகளை விதைக்கிறோம் என்பதைக் கனவிலும் நினைப்பதில்லை. ஆகவே உங்கள் சுதந்திரத்தைப் பறிப்பது எதுவாயினும் அதைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள். அது ஆபத்தானது என்பதை உணருங்கள். உங்களிடமுள்ள சக்தி முழுவதையும் பயன்படுத்தி அதைத் தவிர்த்து விடுங்கள்.
மனத்தைத் தன் விருப்பப்படி நரம்பு மையங்களுடன் இணைக்கவோ பிரிக்கவோ செய்வதில் வெற்றி பெறுபவன் பிரத்யாஹாரத்திலும் வெற்றி பெறுகிறான். பிரத்யாஹாரம் என்பது மனத்தின் ஆற்றல்களைப் புறத்தில் போகாமல் தடுத்து, புலன்களின் பிடியிலிருந்து அதனை விடுவித்து, உள்ளே குவித்தல் ஆகும். இதைச் செய்ய முடிந்த பின்தான் நாம் உண்மையில் நற்குணம் என்பதைப் பெறுகிறோம், அதன்பின்தான் முக்திப் பாதையில் ஒரு நீண்ட அடியெடுத்து வைக்கிறோம். அதற்குமுன் நாம் வெறும் எந்திரங்களே.
மனத்தை அடக்குவதுதான் எவ்வளவு கடினமானது! பித்துப் பிடித்தக் குரங்கோடு மனத்தை ஒப்பிடுவது பொருத்தமானதுதான். குரங்குகள் இயற்கையாகவே சஞ்சல மனம் படைத்தவை. அத்தகைய குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு நிறைய கள்ளைக் குடிக்கக் கொடுத்தான் ஒருவன். அதன் பரபரபப்பு அதிகமாகியது. அது போதாதென்று தேள் ஒன்று அதனைக் கொட்டியது. தேள் கொட்டினால் மனிதனே நாள் முழுவதும் குதிப்பான். குரங்கின் நிலையைச் சொல்லவா வேண்டும்! அதன் போதாத காலத்தைப் பூரணமாக்க ஒரு பேயும் அதைப் பிடித்துக் கொண்டது. அந்தக் குரங்கின் அடக்க முடியாத சஞ்சலத்தையும் படபடப்பையும் விளக்க வார்த்தைகள் எங்கே உள்ளன? மனித மனம் அந்தக் குரங்கின் நிலைக்கு நிகரானது. இயற்கையாகவே அது சஞ்சல இயல்பு நிகரானது. இயற்கையாகவே அது சஞ்சல இயல்பு படைத்தது. ஆசை என்னும் கள் குடித்ததனால் அதன் சஞ்சலமும் வெறியும் அதிகரிக்கிறது. ஆசை குடி கொண்ட பிறகோ பிறர் வெற்றியைக் கண்டு பொறாமை கொள்கின்ற குணமாகிய தேள் கொட்டியது. முடிவாக கர்வம் என்ற பேயும் மனத்தினுள் புகுந்து எல்லா பெருமையும் தனக்கே என்று நினைக்கச் செய்கிறது. இத்தகைய மனத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம்!
எனவே முதல் பாடமாக வருவது இது: சிதுநேரம் அமர்ந்து மனத்தை அதன் போக்கிலேயே அலையவிடுங்கள். அது எப்போதும் குமுறிக் கிளம்பிய வண்ணமே உள்ளது. குரங்கு குதித்துத் தாவுவது போன்றது அது. எவ்வளவு வேண்டுமானாலும் அது குதிக்கட்டும். நீங்கள் பொறுமையாக அதைக் கவனிக்க மட்டும் செய்யுங்கள். அறிவே வலிமை என்பது பழமொழி. அது உண்மை. மனம் என்ன செய்கிறது என்பதை அறியாமல் அதைக் கட்டுப்படுத்த முடியாது. கடிவாளத்தை விட்டுப்பிடியுங்கள். தீய எண்ணங்கள் பல அதில் எழலாம். அத்தகைய எண்ணங்கள் உங்கள் மனத்தில் இருந்ததைப்பற்றி நீங்களே திகைப்படைவீர்கள். நாள் செல்லச்செல்ல மனத்தின் வெறித்தனமான போக்கு குறைவதையும், அது மெள்ள மெள்ள அமைதி பெறுவதையும் காண்பீர்கள்.
ஆரம்பத்தில் சில மாதங்கள் மனத்தில் பல எண்ணங்கள் எழுவதைக் காண்பீர்கள். பிறகு தொடர்ந்து குறைந்துகொண்டே போகும். கடைசியாக மனம் பூரணக் கட்டுப்பாட்டில் வந்துவிடும். ஆனால் தினமும் பொறுமையுடன் பயிற்சி செய்ய வேண்டும். நீராவியைத் திறந்து விட்டால் எந்திரம் இயங்கியே தீரும். அதுபோல் கண்முன் பொருட்கள் இருந்தால் அவை நமக்குப் புலப்பட்டே தீரும். தான் எந்திரம் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமானால் ஒருவன், தான் எதன் கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதைக் காட்ட வேண்டும். இவ்வாறு மனத்தைக் கட்டுப்படுத்தி புலன்களின் மையங்களுடன் அது தொடர்பு கொள்ளாமல் தடுப்பதே பிரத்யாஹாரம். இதைச் செய்வது எப்படி? இது ஒரு பெரிய வேலைதான், ஒரு நாளில் செய்து முடிக்கின்ற வேலையல்ல. பொறுமையாக தொடர்ந்து வருடக்கணக்காகப் பயிற்சி செய்தால் நாம் வெற்றி பெற முடியும்.
பிரத்யாஹாரத்தைச் சிறிதுகாலம் பயிற்சி செய்த பின் அடுத்த படியாகிய தாரணையை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில இடங்களில் மனத்தை நிறுத்தி வைப்பது என்றால் என்ன? உடலில் சில பகுதிகளை மற்றவற்றிலிருந்து பிரித்து அவற்றை மனம் உணரும்படிச் செய்தல். உதாரணமாக, மற்ற உறுப்புகளை விட்டுவிட்டுக் கையை மட்டும் உணர முயலுங்கள். இவ்வாறு சித்தத்தை ஓரிடத்தில் எல்லைப்படுத்தி நிறுத்துவதே தாரணை. தாரணை பலவகைப்படும். இத்துடன் சிறிது கற்பனையையும் சேர்த்துக் கொள்வது நல்லது. உதாரணமாக இதயத்தில் ஒரு புள்ளியின் மீது மனத்தைச் செலுத்துங்கள். இது மிகவும் கடினமானது. எளிதான வழி அங்கு ஒரு தாமரை இருப்பதாக நினைப்பதுதான். அந்தத் தாமரை ஒளிமயமாக, பேரொளிமயமாக பிரகாசித்துக் கொண்டிருப்பதாக நினையுங்கள். மனத்தை அங்கே நிறுத்துங்கள். அல்லது உச்சந்தலையிலுள்ள தாமரை தாமரை ஜோதிமயமாக ஒளிர்வதாக எண்ணுங்கள். அல்லது நாம் ஏற்கனவே கூறிய சுழுமுனை நாடியிலுள்ள பல மையங்களையும் நினைக்கலாம்.
யோகி தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். அவன் தனியாக வாழ முயல வேண்டும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பு மனத்தைச் சஞ்சலமுறச் செய்கிறது. அவன் அதிகம் பேசக் கூடாது, ஏனெனில் பேசுவது மனத்தைச் சிதறும்படிச் செய்யும். அதிகம் வேலை செய்யவும் கூடாது; ஏனெனில் அதிக வேலை மனத்தை அலைவுறச் செய்கிறது. நாள் முழுவதும் கடுமையாக உழைத்த பிறகு மனத்தை அடக்க முடியாது. மேற்கண்ட நியதிகளைக் கடைப்பிடிப்பவன் யோகி ஆகிறான். யோக சாதனைகளை மிகச் சிறிதளவு கடைப்பிடிப்பவன்கூடப் பெரும் பயன் அடைகிறான்; யோகத்தின் ஆற்றல் அத்தகையாது. அது யாருக்கும் தீங்கு செய்யாது; மாறாக எல்லோருக்கும் நன்மையே செய்யும். முதன்முதலாக அது நாடி நரம்புகளின் பதற்றத்தைத் தணிக்கும், அமைதியை அளிக்கும், எதையும் நாம் முன்பைவிடத் தெளிவதக அறியும்படிச் செய்யும், மன இயல்பு நன்றாகும், ஆரோக்கியம் வளரும். சிறந்த ஆரோக்கியமும் இனிய குரலும் முதல் அறிகுறிகளுள் அடங்கும். குரலின் குறைபாடுகள் மறைந்துவிடும். வரப்போகின்ற பல்வேறு பலன்களுள் இது முதலாவதாகும். முயன்று பயிற்சி செய்தால் வேறு அறிகுறிகளும் உண்டாகும். சில வேளைககளில் தூரத்தில் அடிக்கின்ற மணி நாதங்கள் ஒன்றுசேர்ந்து தொடர்ந்து காதில் விழும். சிலவேளைகளில் ஒளிப்புள்ளிகள் மிதப்பது போல் தோன்றி பெரிதாகிக் கொண்டே போகும். இவையெல்லாம் தோன்றும்போது நீங்கள் விரைந்து முன்னேறுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
யோகிகள் ஆகவும், தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபடவும் விரும்புபவர்கள் முதலில் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அன்றாட அலுவல்களுடன் ஏதோ சிறிது பயிற்சி மட்டும் செய்ய எண்ணுபவர்கள் விரும்பிய உணவை உண்ணலாம். ஆனால் மிதமாக உண்ண வேண்டும், அவ்வளவுதான். விரைவாக முன்னேற விரும்புபவனுக்கு, கடினமாகப் பயிற்சி செய்ய விழைபவனுக்கு உணவில் கட்டுப்பாடு கண்டிப்பாக வேண்டும். சில மாதங்களுக்கு பாலும், பயிறு, பருப்பு வகைகளும் மட்டுமே உட்கொள்வது அனுகூலமாக இருக்கும். உடலும் மனமும் நுட்பமாகுந்தோறும், ஆரம்பத்தில் உணவில் சில ஒழுங்கீனம்கூட ஒருவனது சமநிலையைக் குலைத்து விடும். முழுமையாக கட்டுப்பாடு உண்டாகும்வரை, ஒரு பிடி உணவு அதிகமாகவோ குறைவதகவோ இருந்தால் போதும், அது மொத்தமாக எல்லாவற்றையும் பாதிக்கும். கட்டுப்பாடு வந்த பிறகு ஒருவன் விரும்புவதை உட்கொள்ளலாம்.
மனத்தை ஒருமுகப்படுத்த ஆரம்பிக்கும் காலத்தில் ஒரு குண்டூசி கீழே விழுந்தாலும் மூளையை இடியே தாக்கிச் செல்வதுபோல் இருக்கும். புலன்கள் நுட்பமாகுந்தோறும் உணரும் சக்தியும் நுண்மையாகிறது. இவை நாம் கடக்க வேண்டிய படிகள். விடாமுயற்சி உடையவர்கள் வெற்றி பெறுவார்கள். வீண்வாதங்களைழும் மனத்தைக் குழப்புபவற்றையும் விட்டுவிடுங்கள். வறட்டு அறிவினாலும் சொல்வண்ணங்களாலும் என்ன பயன்? மனத்தின் சமநிலையைக் குலையச் செய்து அதைப் பதற்றமுறச் செய்வது ஒன்றே அதனால் வரும் பலன். நுண்ணுலகங்களில் உள்ளவற்றை உணர வேண்டும்? எனவே பயனற்ற பேச்சுக்களை விடுங்கள். அனுபூதி பெற்றவர்கள் எழுதிய நூல்களை மட்டுமே படியுங்கள்.
முத்துச் சிப்பிபோல் இருங்கள். அதைப்பற்றி இந்தியாவில் அழகிய கதை ஒன்று உண்டு: சுவாதி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது மழை பெய்து, அதில் ஒரு துளி முத்துச் சிப்பியினுள் விழுந்தால், அது முத்தாகுமாம். முத்துச் சிப்பிகளுக்கு இது தெரியும். எனவே அந்தச் சுவாதி நட்சத்திரம் பிரகாசிக்கும்போது அவை நீரின் மேற்பரப்புக்கு வந்து, மழை நீரின் அபூர்வமான அந்தத் துளியைப் பெறுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும். துளி விழுந்தவுடன் தங்கள் ஓடுகளை மூடிக்கொண்டு கடலின் அடித்தளத்திற்குச் சென்றுவிடும். அங்கே பொறுமையாகக் காத்திருந்து அந்தத் துளியை முத்தாக்குமாம். நாமும் அப்படி இருக்க வேண்டும். முதலில் கேட்க வேண்டும், பிறகு புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் எல்லா சுஞ்சலங்களையும் விட்டு, புற ஆதிக்கங்கள் எதுவும் வராதவண்ணம் மனத்தை மூடி, உங்களுள் உள்ள உண்மையை ஒளிரச் செய்வதில் ஈடுபடுங்கள்.
ஓர் அபாயம் உள்ளது. புதுமை என்பதற்காக மட்டும் ஒரு லட்சியத்தை ஏற்றுக்கொள்வது, பின்னர் அதைவிடப் புதுமையான ஒன்றைக் கண்டதும் பழையதை விட்டு விடுவது-இது உங்கள் ஆற்றல்களைச் சிதறடித்துவிடும். ஒன்றை எடுங்கள், அதைப் பின்பற்றுங்கள், முடிவு காணும் வரை அதை விடாதீர்கள். அந்த லட்சியத்திலேயே வெறியாக இருப்பவன் மட்டுமே ஒளியைக் காண்கிறான். இங்கொன்றும் அங்கொன்றுமாக நுனிப்புல் மேய்ந்து திரிபவர்கள் ஒருபோதும் எதையும் அடைய மாட்டார்கள். கணநேரம் புலன்களுக்கு ஏதோ சுகம் கிடைக்கலாம், ஆனால் அத்துடன் எல்லாம் முடிந்துவிடும். அவர்கள் எப்போதும் இயற்கைக்கு அடிமைகளே, அவர்களால் ஒருபோதும் புலன்களைக் கடந்து செல்ல முடியாது.
உண்மையிலேயே யோகியாக விரும்புபவர்கள் நுனிப்புல் மேய்வதை அடியோடு விட்டுவிட வேண்டும். ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதையே உங்கள் வாழ்க்கையாகக் கொள்ளுங்கள். அதையே நினையுங்கள், அதையே கனவு காணுங்கள், அந்த லட்சியத்திற்காகவே வாழுங்கள். மூளை, தசைகள், நரம்புகள் என்று உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியும் அந்த லட்சியத்தால் நிறையட்டும். பிற கருத்துக்கள் அனைத்தையும் அடியோடு விட்டுவிடுங்கள். வெற்றிக்கு வழி இதுவே. ஆன்மிகச் செம்மல்கள் உருவாக்கப்பட்ட வழி இதுவே. மற்றுள்ளவர்கள் வெறும் பேசும் எந்திரங்கள் மட்டுமே.
நாமும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகிய மற்றவர்களையும் அத்தகையவர்கள் ஆக்க உண்மையில் விரும்புவோமானால் ஆழ்ந்து மூழ்க வேண்டும். மனத்தைப் பதற்றமுறாமல் வைத்துக்கொள்வது முதல்படி. சஞ்சலப்படுத்துகின்ற கருத்துடையவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. சில மனிதர்கள், சில இடங்கள், சில உணவு போன்றவை நம்மை வெறுப்புடன் ஒதுங்கச் செய்வது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அவற்றை ஒதுக்கி விடுங்கள். இனி, மிகவுயர்ந்த நிலையை அடைய விருமகபுவோர் எல்லா சேர்க்கையையும் நல்நோர், தீயோர் இரு வகையினரின் சேர்க்கையையும் தவிர்த்தேயாக வேண்டும். கடினமாகப் பயிற்சி செய்யுங்கள். வாழ்ந்தாலும் சரி செத்தாலும் சரி, அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். பலனைப்பற்றி எண்ணாமல் பயிற்சியில் மூழ்குங்கள். நீங்கள் போதிய அளவு தைரியசாலியாக இருந்தால் ஆறே மாதங்களில் பூரண யோகி ஆகிவிடலாம். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக எல்லாவற்றையும் பிடித்துக் கொள்பவர்கள் எந்த முன்னேற்றமும் அடைய மாட்டார்கள். பாடங்களைக் கேட்பதால் மட்டும் எந்தப் பயனும் விளையாது.
தமோ குணம் நிறைந்தவர்களான மந்தமான அறிவிலிகளுக்கு, எந்த லட்சியத்திலும் மனம் ஒன்றாதவர்களுக்கு, வேடிக்கைக்கு ஏதாவது வேண்டும் என்று ஏங்குபவர்களுக்கு மதம், தத்துவம் எல்லாமே வெறும் பொழுதுபோக்குகளே. அவர்களிடம் இடைவிடாத முயற்சி என்பது கிடையாது. ஒரு சொற்பொழிவைக் கேட்பார்கள், ஆ! மிக நன்றாக இருக்கிறது என்பார்கள். வீட்டிற்குப் போய் அப்படியே மறந்தும் விடுவார்கள். வெற்றி வேண்டுமானால் இடைவிடாத முயற்சியும் தீவிர சங்கல்பமும் உங்களிடம் வேண்டும். நான் கடலையே குடித்துவிடுவேன். எனது சங்கல்பத்தால் மலைகளை துளாகிவிடும் என்கிறான் இடையீடின்றிப் பாடுபவன். அத்தகைய ஆற்றலை, சங்கல்பத்தைப் பெறுங்கள். கடினமாக உழையுங்கள், லட்சியத்தை அடைவீர்கள்.
தியானமும் சமாதியும்
மன ஒருமைப்பாடு என்ற லட்சியத்திற்கு ராஜயோகம் நம்மை அழைத்துச் செல்கிறது. அதிலுள்ள நுட்பமான விஷயங்களைத் தவிர பல்வேறு படிகளை ஓரளவிற்குப் பார்த்தோம். மானிடர் என்ற நிலையில் நமது பகுத்தறிவு எல்லாம் உணர்வைச் சார்ந்தே இருக்கிறது. இந்த மேஜையும் நீங்களும் இங்கிருப்பதை நான் உணர்வதால்தான் நீங்களும் மேஜையும் இங்கே இருப்பதை நான் அறிய முடிகிறது. அதே வேளையில் என்னில் மிகப் பெரும் பகுதியை நான் உணர்வதில்லை. உடலின் உள்ளே உள்ள பல உறுப்புகள், மூளையின் பல பகுதிகள்-இவற்றையெல்லாம் யாரும் உணர்வதில்லை.
நான் சாப்பிடும்போது, அதை உணர்ந்து உண்கிறேன். ஆனால் அது செரிக்கும்போது, அதை நான் உணராமலே செய்கிறேன். உணவு ரத்தமாக மாறும்போது நம்மை அறியாமலேயே அது நிகழ்கிறது. அந்த ரத்தத்தால் என் உடலின் பல உறுப்புகள் சக்தி பெறுகின்றன. இதுவும் என் உணர்வின்றியே நடக்கிறது. ஆனாலும் இதையெல்லாம் செய்பவன் நான்தான். இந்த ஓர் உடலில் இருபது இருபது பேர் இருக்க முடியாது. நான்தான் செய்கிறேன். வேறு யாரும் அல்ல என்பது எனக்கு எப்படித் தெரியு? உணவை உண்டு, அதைச் செரிப்பது என்னுடைய வேலை, அந்த உணவிலிருந்து உடலுக்கு வலுவைக் கொடுப்பபது வேறு ஒருவராக இருக்கலாமே என்று சொல்லலாம், அப்படி நடக்க முடியாது. ஏனெனில் இப்போது நாம் உணர்வின்றிச் செய்யும் ஒவ்வொரு செயலையும் உணர்வு நிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டலாம். இதயம் நமது கட்டுப்பாடின்றித் துடிப்பது போல்தான் தோன்றுகிறது. இங்கிருக்கின்ற நம்முள்யாராலும் இதயத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அது தன் வழியில் செயல்படுகிறது. ஆனால் பயிற்சியின் மூலம் மனிதன் இதயத்தையும் கட்டுப்படுத்த முடியும். அதை மெதுவாக அல்லது வேகமாகத் துடிக்கும்படியோ ஏறக்குறைய நிறுத்தவோ முடியும். ஏறக்குறைய உடலின் எல்லா உறுப்புகளையும் நாம் கட்டுப்படுத்தலாம். இது எதைக் காட்டுகிறது? உணர்வுக்குப் புலப்படாத செயல்களையும் நாம்தான் செய்கிறோம், ஆனால் உணர்வின்றிச் செய்கிறோம், அவ்வளவுதான்.
ஆகவே மனித மனம் இரண்டு நிலைகளில் செயல்படுவது தெரிய வருகிறது. முதலில் உணர்வு நிலை. இதில் ஒவ்வொரு செயலும் நான்- உணர்வோடு நிகழ்கின்றன. அடுத்தது உணர்வு நிலை. இங்கு எல்லா செயல்களும் நான்-உணர்வின்றி நடைபெறுகின்றன. இவ்வாறு உணர்வின்றி நடைபெறும் மனத்தின் செயல்பாடுகள், உணர்வறு செயல் என்றும், உணர்வுடன் நிகழ்பவை உணர்வுச் செயல் என்றும் அழைக்கப்படுகின்றன. கீழ்நிலைப் பிராணிகளிடம் இந்த உணர்வுறு செயல் இயல்புணர்ச்சி எனப்படுகிறது. உயர்நிலைப் பிராணிகலும் மிகவுயர்ந்த பிராணியாகிய மனிதனிலும் உணர்வுச் செயலைக் காண்கிறோம்.
விஷயம் இத்துடன் முடியவில்லை. இதைவிட உயர்ந்த ஒரு நிலையிலும் மனம் செயல்பட முடியும். அது உணர்வையும் கடந்து செல்ல முடியும். உணர்வுறும் செயல்கள் உணர்வுநிலைக்குக் கீழே இருப்பதுபோல், வேறொரு வகையான செயல் உணர்வுநிலைக்கு மேலே இருக்கிறது, இதிலும் நான்- உணர்வு இல்லை. நான்-உணர்வு இருப்பது எல்லாம் அந்த நடுநிலையில்தான். மனம் இந்த நிலைக்கு மேலோ கீழோ இறுக்கும்போது நான்-உணர்வு கிடையாது. இருப்பினும் மனம் செயல்படுகிறது. மனம் இந்தத் தண்ணுணர்வு நிலையைக் கடந்து செல்லும்போது அது சமாதி அல்லது உணர்வுகடந்த நிலை எனப்படுகிறது. சமாதி நிலையிலிருக்கும் ஒருவன் உணர்வுநிலையின் கீழே போகவில்லை அதாவது, அவன் தன்னை உயர்த்திக் கொள்ளவதற்குப் பதிலாக, தன்னைத் தாழ்த்திக் கொள்ளவில்லை என்று எப்படி நமக்குத் தெரியும்? ஏனெனில் இந்த இரண்டு நிலைகளிலும் நிகழும் செயல்கள் நான்-உணர்வுடன் சம்பந்தப்படவில்லை. இந்தக் கேள்விக்கு விடை இதுவே: அந்த் செயல்கள் தரும் பயனிலிருந்து, அதனுடைய விளைவுகளிலிருந்து, எது கீழானது எது மேலானது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். ஆழ்ந்த தூக்கத்தில் ஒருவன் உணர்வுநிலைக்குக் கீழேயுள்ள ஒரு நிலைக்குச் செல்கிறான். அப்போது அவனது உடலில் செயல்கள் நிகழ்கின்றன. அவன் மூச்சு விடுகிறான்; ஒரு வேளை உடலைக்கூட அசைப்பான். ஆனால் இலையெல்லாõம் நான்-உணர்வின்றியே நிகழ்கின்றன. அவன் உணர்வுறு நிலையில் இருக்கிறான். யார் தூங்கச் சென்றானோ, அவனே தூக்கத்திலிருந்து விழிப்புநிலைக்?குத் திரும்பியும் வருகிறான். அவன் தூங்குவதற்கு முன் அவனிடமிருந்த மொத்த அறிவும் அதன் பின்னரும் அப்படியேதான் இருக்கிறது. அது அதிகரிக்கவே இல்லை. ஆனால் ஒரு மனிதன், சமாதி நிலையை அடையும்போது, மூடனாகச் செல்கிறான். ஞானியாக வெளிவருகிறான்.
இந்த வேறுபாட்டைஉண்டாக்குவது எது? ஒரு நிலையில், உள்ளே சென்றவன் அப்படியே வெளிவருகிறான். மற்றொரு நிலையிலோ, அனுபூதி பெற்றவனாக, ஒரு முனிவராக, ஒரு தீர்க்கதரிசியாக, ஒரு ஞானியாக, வாழ்க்கையே மாறப் பெற்றவனாக, ஒளி பெற்றவனாக வெளிவருகிறான். இவைதான் இருவகையான விளைவுகள். விளைவுகள் வேறுபட்டிருந்தால் காரணங்களும் வேறுபட்டதாகவே இருக்க வேண்டும். சமாதியிலிருந்து திரும்பி வரும்போது ஒருவனுக்கு இருக்கின்ற ஞானம் உணர்வறு நிலையில் கிடைக்கும் அறிவைவிட, உணர்வு நிலையில் ஆராய்ச்சியால் பெறும் அறிவைவிட மிகவும் உயர்வானது. எனவே அந்த நிலை உணர்வைவிட உயர்ந்ததாக இருக்க வேண்டும். சமாதி நிலையே உணர்வுகடந்த நிலை எனப்படுகிறது.
இதுவே சமாதியைப் பற்றிய சுருக்கமான விளக்கம். அதனால் பெறும் பயன் என்ன? அது இதோ: ஆராய்ச்சி அறிவு ஆகட்டும், மனத்தின் உணர்வுச் செயல்கள் ஆகட்டும், அது குறுகிய எல்லைக்குட்பட்டது. மனித அறிவு சிறு வட்டத்திற்குள்ளேயே செயல்பட முடிகிறது; அதைக் கடந்து போக முடியாது; அதைக் கடந்து செல்வதற்கான ஒவ்வொரு முயற்சியும் பயனற்றுப் போகிறது. ஆனால் அறிவாகிய இந்த வட்டத்திற்கு அப்பால்தான் மனித குலத்திற்கு மிகவும் பிரியமானவை எல்லாம் உள்ளன. அழிவற்ற ஆன்மா உள்ளதா? கடவுள் இருக்கிறாரா? இந்தப் பிரபஞ்சத்தை வழிநடத்திச் செல்கின்ற மேலான சக்தி ஏதேனும் உண்டா? இத்தகைய கேள்விகள் எல்லாமே பகுத்தறிவு வட்டத்திற்கு அப்பாற்பட்டது. நமது சாதாரண அறிவால் இந்தக் கேள்விகளுக்கு விடை காண முடியாது. அறிவு என்ன சொல்கிறது? நான் நம்பிக்கையற்றவன் ஆம் என்றோ இல்லை இல்லை என்றோ எனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறது அது.. ஆனால் இந்தக் கேள்விகள் நமக்கு மிகவும் முக்கியமானவை. இவற்றிற்குச் சரியான விடை கிடைக்காவிட்டால் மனித வாழ்க்கை பயனற்றதாக ஆகிவிடும். நமது நீதிநெறிக் கொள்கைகள், நல்லொழுக்கங்கள் மட்டுமல்ல, மானிட வாழ்வில் நல்லதாக, சிறந்ததாக உள்ள அனைத்துமே அந்த அறிவு வட்டத்திற்கு அப்பால் இருந்து கிடைத்த விடைகளிலிருந்து உருவாக்கப்பட்டவையே. எனவே இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பது மிகவும் அவசியம்.
வாழ்வு ஒரு சிறு நாடகமாகவோ அல்லது இந்தப் பிரபஞ்சம் அணுக்களின் எதிர்பாராத சேர்க்கையால் உண்டானதாகவோ மட்டும் இருக்குமானால், நான் ஏன் மற்றவனுக்கு நன்மை செய்ய வேண்டும்? கருணை, நியாயம், சகோதர மனப்பான்மை இவையெல்லாம் ஏன் இருக்க வேண்டும்? இந்த உலகில் மிகவும் நல்ல காரியம் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது அல்லவா! ஒவ்வொருவனும் தனக்காக வாழ்வதுதான் சிறந்தது. எந்தப் பயனும் இல்லாவிட்டால் நான் ஏன் என் சகோதரனை நேசிக்க வேண்டும்? ஏன் அவனது கழுத்தை வெட்டக் கூடாது? அப்பால் எதுவும் இல்லையானால், சுதந்திரம் என்ற ஒன்று இல்லையானால், இருப்பதெல்லாம் உயிரற்ற கடினமான நியதிகளே என்றால் இவ்வுலகில் நான் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவே பாடுபட வேண்டும். ஒழுக்கத்தின் அடிப்படை? பயன் கருதும் கொள்கையே என்று தற்காலத்தில் பலர் கூறுவதைக் காணலாம். அது என்ன அடிப்படை? அதிக மக்களுக்கு மிக அதிக இன்பம் கிடைக்கும்படிச் செய்வதே. ஆனால் இதை நான் ஏன் செய்ய வேண்டும்? அதிக மக்களுக்கு அதிகத் துன்பத்தை விளைவிப்பதன் மூலம் என் காரியத்தைச் சாதித்துக் கொள்ள முடியுமானால் நான் ஏன் அதைச் செய்யக் கூடாது? பயன் கருதும் கூட்டத்தினர் இதற்கு என்ன விடை கொடுப்பார்கள்? எது சரி, எது தவறு என்று உனக்கு எப்படித் தெரியும்? இன்பம் வேண்டும் என்ற ஆசை என்னைத் தூண்டுகிறது. நான் அதை நிறைவேற்றிக் கொள்கிறேன். அது என் இயல்பு. அதற்குமேல் எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு இந்த ஆசைகள் இருக்கின்றன. அதை நான் நிறைவேற்றுகிறேன். அதற்கு என்னை ஏன் குற்றம் சொல்கிறீர்கள்? மனத வாழ்வு, ஒழுக்கம், அழிவற்ற ஆன்மா, இறைவன், அன்பு, இரக்கம், நன்னை செய்தல், இவற்றிற்கெல்லாம் மேலாக சுயநலமின்மை போன்ற உண்மைகளெல்லாம் எங்கிருந்து வந்தன?
எல்லா நீதிநெறிகளும், எல்லா மனிதச் செயல்களும், எல்லா எண்ணங்களும் சுயநலமின்மை என்ற ஒரே கருத்தைத்தான் சார்ந்திருக்கின்றன. மனித வாழ்வு முழுவதையுமே சுயநலமின்மை என்ற ஒரு வார்த்தையில் அடக்கிவிடலாம். நாம் ஏன் சுயநலமில்லாதிருக்க வேண்டும்? நான் தன்னலமற்று இருக்கவேண்டிய தேøண்ண்ண்ண்ண்ண்வ, அதற்கான ஆற்றல், வலிமை இவை எங்கிருந்து வருகின்றன? உங்களைப் பகுத்தறிவுவாதிகள்,பயன் கருதுவோர் என்றெல்லாம் கூறிக்கொள்கிறீர்கள். நான் தன்னலமற்று இருப்பதால் என்ன பயன் என்பதை எனக்குக் காட்டா விடில் நீங்கள் பகுத்தறிவுவாதிகள் அல்ல என்றுதான் சொல்வேன். நான் ஏன் சுயநலக்காரனாக இருக்கக் கூடாது என்பதற்குக் காரணம் காட்டுங்கள். நீங்கள் சுயநலமற்று இருங்கள் என்று ஒருவரிடம் கூறுவது கவிதை காரணம் ஆகாது. எனக்கு ஒரு காரணத்தைக் காட்டுங்கள். நான் ஏன் சுயநலமற்றவனாக இருக்க வேண்டும்? நான் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்? இன்னாரும் இன்னாரும் அப்படிக் கூறியிருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வதை நான் பொருட்படுத்தமாட்டேன். நான் சுயநலமற்று இருப்பதால் என்ன பயன்? பயன் என்ற சொல்லுக்கு அதிக இன்பம் பெறுவது என்பதுதான் பொருளானால் சுயநலத்துடன் இருப்பது தான் நான் அடையும் பயன். இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? பயன்கருதுவோர் இதற்குப் பதில் தர முடியாது. ஆனால் இதற்குப் பதில் இருக்கிறது. இந்த உலகம் என்பது எல்லையற்ற கடலில் ஒரே ஒரு துளி மட்டுமே, எல்லையற்ற சங்கிலியில் ஒரு வளையம் மட்டுமே. இதுதான் பதில். சுயநலமின்மை என்பதை விளக்கி மனித குலத்திற்கு உபதேசித்தவர்கள் அந்தக் கருத்தை எங்கிருந்து பெற்றனர்? இது இயல்புணர்ச்சியாக இருக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் இயல்புணர்ச்சி உள்ளவையான விலங்களுக்கு இது தெரியாது. இது தர்க்க அறிவுக்கு உட்பட்டதும் அல்ல. தர்க்க அறிவுக்கு இத்தகைய கருத்துக்களைப்பற்றி எதுவும் தெரியாது. பின்னர் இவை எங்கிருந்து வந்தன?
வரலாற்றைப் படிக்கும்போது உலகின் மத ஆச்சாரியர்கள் அனைவரும் பொதுவான ஓர் உண்மையை ஒப்புக் கொள்வதைக் காண்கிறோம். அவர்கள் எல்லோருமே உண்மைகளை எங்கோ அப்பாலிருந்து பெற்றதாகவே கூறுகின்றனர்; பலர் அவை எங்கிருந்து வருகின்றன என்பதை மட்டுமே அறியவில்லை. உதாரணமாக, சிறகுகளுடன் கூடிய ஒரு தேவதை மானிட உருவில் கீழே இறங்கி வந்து, ஓ மனிதா! கேள், இதுதான் செய்தி என்று சொன்னதாக ஒருவர் கூறுவார். மற்றொருவர் ஒளிபொருந்திய ஒரு தேவன் தன் முன் தோன்றியதாகக் கூறுவார். மூன்றாமவரோ, முன்னோர் ஒருவர் தன் கனவில் தோன்றிச் சில விவரங்களைக் கூறினார் என்பார். அதற்கு மேல் வேறொன்றும் தெரியாது. ஆனால் இந்த அறிவு அப்பாலிருந்தே வந்தது, தங்கள் ஆராய்ச்சி அறிவினால் வந்ததல்ல என்பதை மட்டும் எல்லோரும் கூறுகின்ஞூறனர். யோக விஞ்ஞானம் என்ன கூறுகிறது? இந்த அறிவு தர்க்க அறிவு மூலம் அல்ல, அதற்கு அப்பாலிருந்து வருகிறது என்று ஆச்சாரியர்கள் கூறியது சரி; ஆனால் வந்தது எங்கிருந்தோ அல்ல, உள்ளிருந்தே வந்தது என்கிறது யோக சாஸ்திரம்.
மனத்திற்கே ஓர் உயர்ந்த நிலை உண்டு; அது பகுத்தறிவைக் கடந்த உணர்வுகடந்த நிலை. மனம் அந்த உயர்ந்த நிலையை அடையும்போது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட இந்த அறிவு, மனிதனை வந்தடைகிறது என்கிறான் யோகி. தத்துவ அறிவும் அனைத்தையும் கடந்த அறிவும் அவனை வந்தடையும். இவ்வாறு பகுத்தறிவைக் கடந்துசக செல்கின்ற, சாதாரண மனித இயற்கையைக் கடந்து செல்கின்ற நிலை, சிலவேளைகளில் அதன் அடிப்படை உண்மையை அறியாதவனுக்கும் எதிர்பாராத விதமாகக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தடுக்கி விழுவதுபோல், திடீரென்று அந்த நிலை அவனுக்கு வாய்க்கிறது. அப்படி எதிர்பாராமல் கிடைக்கின்ற அந்த அறிவை அவன் எங்கேயோ வெளியிலிருந்து வந்தது என்றுதான் சாதாரணமாகக் கூறுகிறான். அக விழிப்புணர்வு அல்து அனைத்தையும் கடந்த அறிவு எல்லா நாடுகளிலும் ஒன்றாகவே இருந்தாலும் ஒருநாட்டில் அது தேவதைகள் மூலமாக வந்ததாகவும், மற்றொரு நாட்டில் ஒரு தேவனிடமிருந்து வந்ததாகவும், மூன்றாவது நாட்டில் அது கடவுளிடமிருந்து வந்ததாகவும் கருதப்படுவது ஏன் என்பதையே இது விளக்குகிறது. இதன் பொருள் என்ன? மனம் இந்த அறிவைத் தன் இயற்கையிலிருந்தே கொண்டு வந்தது. ஆனால் யார் மூலமாக அது வெளிவந்ததோ அவர் தன்னுடைய நம்பிக்கை, கல்வி இவற்றிற்கு ஏற்ப அதற்கு விளக்கம் கொடுத்தார். உண்மை என்னவென்றால் இவர்கள் எல்லோருமே அந்த உணர்வுகடந்த நிலையின்மீது தடுக்கி விழுந்தனர். அதாவது எதிர்பாராமல் அடைந்தனர் என்பதுதான்.
இவ்வாறு எதிர்பாராத விதமாக இந்த நிலையை அடைவதில் பேராபத்து உள்ளது என்கிறான். யோகி பலரது விஷயத்தில், மூளை கலங்கிவிடக்கூடிய அபாயம் கூட உள்ளது. இந்த உணர்வுடகடந்த நிலையில், அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலே தடுக்கி விழுந்தவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் சரி, இருட்டில் தடுமாறியவர்களாக, பொதுவாகத் தங்கள் அறிவுடன் சில மூடநம்பிக்கைகளையும் சேர்த்தே வெளிப்படுத்தியிருப்பதைத் தவறாமல் காண முடிகிறது. அவர்கள் மனமயக்கக் காட்சிகளுக்கு இடமளித்தனர். தாம் ஒரு குகையில் இருந்தபோது தேவதூதனான கப்ரியேல் ஒருநாள் வந்து, தம்மை ஹாரக் என்ற ஒரு தேவலோகக் குதிரைமீது ஏற்றி தேவலோகங்களுக்கு அழைத்துச் சென்றதாக முகமது நபி கூறினார். ஆனால் இவை எல்லாவற்றுடனும் அவர் சில பேருண்மைகளையும் கூறியுள்ளார். நீங்கள் குரானைப் படித்தால், பேருண்மைகள் மூட நம்பிக்கைகளுடன் கலந்திருப்பதைக் காணலாம். இதை எவ்வாறு விளக்குவது? அவர் அக விழிப்புணர்வு பெற்றவர்தான், அதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் அந்த விழிப்புணர்வின்மீது தடுக்கி விழுந்தவர். அவர் பயிற்சி பெற்ற யோகி அல்ல. தான் என்ன செய்கிறோம் என்பதன் பொருள் அவருக்குத் தெரியவில்லை. முகமது நபி உலகுக்குசக செய்த நன்மையையும், அதே சமயத்தில் அவரது மதவெறியால் ஏற்பட்ட பெரும் தீமையையும் நினைத்துப் பாருங்கள். அவருடைய தவறான உபதேசங்களின் காரணமாக எத்தனை லட்சக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்! அன்னையர் குழந்தைகளை இழந்தனர், குழந்தைகள் அனாதைகளாயின, தேசங்கள் அழிக்கப்பட்னை. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்!
முகமது நபி போன்ற மகான்களின் வாழ்க்கையைப் படிக்கும்போது இத்தகைய அபாயங்களைக் காண்கிறோம். அதேவேளையில் அவர்கள் எல்லாருமே அக விழிப்புணர்வு பெற்றவர்களாக இருந்ததையும் காண்கிறோம். ஒரு மகான் உணர்ச்சிவசப்படுகின்ற தன் இயல்பை உயர்நிலைக்குக் கொண்டு செல்வதன் மூலம் உணர்வுகடந்த நிலையை அடைந்திருந்தாரானால், அவர் அந்த நிலையிலிருந்து சில உண்மைகøளை மட்டும் கொண்டு வருவதில்லை, அவற்றுடன் கொள்கைவெறியைக் கொண்டு வருகிறார்; அவருடைய உபதேசங்கள் உலகிற்கு எவ்வளவு நன்மை செய்ததோ அந்த அளவிற்குப் பெரும் தீங்கையும் விளைவிக்கின்ற மூட நம்பிக்கையையும் கொண்டு வருகிறார்.
மனித வாழ்வு என்று நாம் அழைக்கின்ற இந்தப் பொருந்தாதவற்றின் கூட்டத்தில் பகுத்தறிவு என்று ஏதாவது வேண்டுமானால் நமது தர்க்க அறிவைக் கடந்தேயாக வேண்டும்; ஆனால் அதை விஞ்ஞானபூர்வமாகச் செய்ய வேண்டும்; மெதுவாக, ஒழுங்கான பயிற்சியின் மூலம் செய்ய வேண்டும் மூட நம்பிக்கைகளையெல்லாம் விட்டொழிக்க வேண்டும். மற்ற விஞ்ஞானத்தைப் போலவே இந்த உணர்வுகடந்த நிலையைப் பற்றிய படிப்பையும் அணுக வேண்டும். பகுத்தறிவின்மீது நமது அடிப்படை அமைய வேண்டும். எவ்வளவு தூரம் முடியுமோ அதுவரை அறிவின் துணையுடன் போக வேண்டும். மேற்கொண்டு செல்ல முடியாத நிலை வரும்போது அந்த அறிவே உயர்ந்த நிலைக்கு வழிக் காட்டும். நான் அக விழிப்புணர்வு பெற்றவன் என்று கூறிக்கொண்டு, அதே வேளையில் அறிவுக்குப் பொருந்தாத வண்ணம் ஒருவன் பேசுவானானால் அதைப் புறக்கணித்து விடு. ஏன்? ஏனெனில் இயல்புணர்ச்சி, பகுத்தறிவு, உணர்வுகடந்த நிலை, அல்லது உணர்வுறுநிலை, உணர்வுநிலை, உணர்வுகடந்தநிலை- இந்த மூன்று வகை மனங்கள் உள்ளன. என்பதல்ல; மனத்தின் ஒருநிலை மற்றொரு நிலையைப் பரிணமிக்கிறது. இயல்புணர்ச்சி பகுத்தறிவாகிறது, பகுத்தறிவு அனைத்தையும் கடந்த உணர்வாகப் பரிணமிக்கிறது. எனவே இவற்றுள் எந்த நிலையும் மற்ற நிலையுடன் முரண்பாடாக இருக்க முடியாது. உண்மையான அக விழிப்புணர்வு பகுத்தறிவுக்கு விரோதமாக இருக்க முடியாது, மாறாக அதன் நிறைவாகவே அமைகிறது. நான் எதையும் அழிக்க வரவில்லை. நிறைவு செய்யவே வந்துள்ளேன் என்று மாபெரும் தீர்க்கதரிசிகள் கூறுவது போல், அக விழிப்புணர்வு எப்போதும் பகுத்தறிவை நிறைவு செய்கிறது, அதனுடன் இயைந்திருக்கிறது. யோகத்திலுள்ள பல படிகளின் நோக்கம் நம்மை உணர்வுகடந்த நிலைக்கு அதாவது சமாதி நிலைக்கு விஞ்ஞான பூர்வமாக இட்டுச் செல்வதே. மேலும் அக விழிப்புணர்வு என்பது மகான்களிடம் இருந்தது. போலவே ஒவ்வொருவரின் இயற்கையிலும் அமைந்துள்ளது என்பது நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை. இந்த மகான்கள் ஏதோ தனிவகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதில்லை. அவர்களும் உங்களையும் என்னையும் போன்ற மனிதர்களே. அவர்கள் சிறந்த யோகிகளாக இருந்தனர். அவர்கள் சமாதிநிலையை அடைந்தது போல் நீங்களும் நானும் அடைய முடியும் அவர்கள் தனி வகுப்பினர் அல்ல. ஒருவன் அந்த நிலையை அடைந்துள்ளான் என்ற உண்மையே மற்றவர்களும் அதனை அடைய முடியும் என்பதை நீருபிக்கிறது. அடைய முடியும் என்பது மட்டுமல்ல ஒவ்வொருவரும் கடைசியாக அந்த நிலையை அடைந்தே தீர வேண்டும். அதுதான் மதம். அனுபவம் மட்டுமே நமக்குள்ளே ஒரே ஆசிரியர்.
நாம் வாழ்நாள் முழுவதும் பேசி வாதம் செய்யலாம். ஆனால் நாமே அனுபவிக்காதவரை உண்மையைப் பற்றிய எந்த அறிவும் நமக்கு விளங்காது. வெறுமானே சில புத்தகங்களைக் கொடுப்பதால் மட்டும் ஒருவனை டாக்டராக்க முடியாது. ஒரு தேசத்தைக் காண வேண்டும் என்ற எனது ஆவலை, தேசப்படத்தைக் காட்டி நீங்கள் தணிக்க முடியாது. எனக்கு உண்மையான அனுபவம் வேண்டும். இன்னும் மேலான நிறைவான அறிவு வேண்டும் என்ற ஆவலையே தேசப்படம் தூண்ட முடியும். அதற்குமேல் அதனால் எந்தப் பயனும் இல்லை. புத்தகங்களை மட்டும் நம்பியிருப்பது மனித மனத்தைத் தாழ்த்திவிடுகிறது. இறைவனைப் பற்றிய அறிவு அனைத்துமே இந்தப் புத்தகத்திலோ அந்தப் புத்தகத்திலோ அடங்கியுள்ளது. என்று கூறுவதைவிட தெய்வநிந்தனை வேறு ஏதாவது இருக்க முடியுமா? இறைவனை எல்லையற்றவன் என்று கூறிக்கொண்டு அதே சமயம் அவனைச் சிறு நூலின் அட்டைகளுக்கிடையில் அடைத்து வைக்கத் துணிந்த மனிதனின் அறிவீனத்தை என்னவென்று சொல்வது? நூல்கள் கூறியதில் நம்பிக்கை வைக்காததன் காரணமாக, இறையறிவு முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட நூலில் உள்ளது என்பதை நம்பாததன் காரணமாக எத்தனை லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்! இன்று இந்தக் கொலையும் கொடூரங்களும் ஓய்ந்துவிட்டன, உண்மைதான். ஆனால் உலகம் இன்னும் புத்தகங்களில்தான் பயங்கரமாகக் கட்டுண்டு கிடக்கிறது.
விஞ்ஞானபூர்வமாக சமாதி நிலையை அடைவதற்கு நான் கற்பித்து வருகின்ற நாஜயோகத்தின் பல படிகளைக் கடந்து செல்வது அவசியம். பிரத்யாஹாரம், தாரணை என்ற படிகளை அடுத்தது தியானம். வெளியிலோ உள்ளேயோ மனத்தை ஓரிடத்தில் நிலைநிறுத்திப் பயிற்சி அளித்துவிட்டால், இடையீடற்றுப் பாயும் நீரோட்டம் போல் அது அந்த இடத்தை நோக்கித் தொடர்ந்து செல்லும் ஆற்றல் பெறுகிறது. இந்த நிலைதான் தியானம். தியானிக்கப்படும் பொருளின் புறப்பொருளை விட்டு அகப்பொருளாகிய கருத்தை மட்டும் தியானிக்கத் தக்க வண்ணம் தியான சக்தியைத் தீவிரமாக்கினால் அந்த நிலைதான் சமாதி. தாரதண, தியானம், சமாதி- இந்த மூன்றும் சேர்ந்தால் சம்யமம். அதாவது முதலில் மனம் ஒருபொருளின்மீது குவிய வேண்டும், பிறகு குவிந்த அந்த நிலையிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும். அதை அடுத்து, இவ்வாறு தொடர்ந்த ஒருமைபப்பாட்டின் காரணமாக, அந்தப் பொருளின் உள்ளே ஊடுரவ, அது காரியமாக இருப்பதற்குள்ள காரணத்தில் மட்டும் நிலைத்து நிற்க வேண்டும். அப்போது, அத்தகைய மனத்திற்கு எல்லாம் வசமாகிறது
இத்தகைய தியான நிலைதான் வாழ்வில் மிகவுயர்ந்த நிலை. ஆசை இருக்கும்வரை உண்மையான இன்பம் வர முடியாது. தியான நிலையில் இருப்பவர்களே, சாட்சி நிலையில் இருந்து பொருட்களின் உண்மையை உணர்பவர்களே உண்மையான ஆனந்தத்தையும் இன்பத்தையும் பெறுகின்றனர். விலங்குகளுக்குப் புலன்களில் இன்பம். மனிதனுக்கு அறிவில் இன்பம். தேவர்களுக்கு ஆன்மீக தியானத்தில் இன்பம். இந்தத் தியான நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே இந்த உலகம் உண்மையிலேயே அழகாக இருக்கும். எதையும் விரும்பாமல் எதனுடனும் ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும் ஒருவனுக்கு இயற்கையின் பல்வேறு மாற்றங்களும் அழகு மற்றும் நுண்மையின் ஓர் அற்புத வெளிப்பாடாகவே இருக்கும்.
இவையெல்லாம் தியானத்தில் அறியப்பட வேண்டியவை. நாம் ஓர் ஒலியைக் கேட்கிறோம். முதலில் புற அதிர்வு உண்டாகிறது. இரண்டாவதாக மனத்திற்கு அதை எடுத்துச் செல்கின்ற நரம்பியக்கம். மூன்றாவதாக மனத்தின் எதிர்ச்செயல்; அதனுடன் கூடவே அந்தப் பொருளைப் பற்றிய அறிவும் பளிச்சிடுகிறது. அதிர்வுகளில் தொடங்கி மனத்தின் எதிர்ச்செயல் வரையிலான பல்வேறு மாறுதல்களின் புறக்காரணமே அந்தப் பொருளைப் பற்றிய அறிவாகும். இந்த மூன்றும் யோக நெறியில் சப்தம்(ஒலி), அர்த்தம்(கருத்து) ஞானம்(அறிவு) என்று கூறப்படுகிறது. இயற்பியலிலும் உடலியலிலும் இந்த மூன்றும் ஆகாச அதிர்வு, நரம்பியக்கம், மனத்தின் எதிர்ச்யெல் என்று அழைக்கப்படுகின்றன. இவை தனித்தனியாக நடைபெற்றாலும், பிரித்தறிய முடியாதபடிபிணைந்துள்ளன. உண்மையில் இப்போது நாம் இவற்றைத் தனித்தனியாக அறிவதில்லை. அவற்றின் ஒன்றுசேர்ந்த விளைவைத்தான் வெளிப்பொருளாக உணர்கிறோம். ஒவ்வொன்றை உணர்வதிலும் இந்த மூன்றும் கலந்தே உள்ளது. ஆனால் இவற்றைப் பிரித்தறிய முடியாது என்று சொல்வதற்குக் காரணம் இல்லை.
முந்தைய பயிற்சிகளின் மூலம் மனம் வலிமையுடையதாகவும் வசப்பட்டதாகவும் ஆகி நுண்ணியவற்றைக் காணும் ஆற்றல் பெற்ற பின்னர் அதனை தியானத்தில் செலுத்த வேண்டும். தியானத்தை முதலில் சாதாரண தூலப் பொருட்களில் ஆரம்பித்து, மெள்ளமெள்ள நுண்ணிய பொருட்களைத் தியானிக்க வேண்டும். இறுதியில் பொருளில்லாமல் தியானம் பழக வேண்டும். உணர்ச்சிகளின் புறக் காரணங்களை உணர்வதில் முதலில் மனத்தை ஈடுபடுத்த வேண்டும், பின்னர் அக இயக்கங்களில், அதன் பின்னர் அதன் எதிர்ச் செயலில் செலுத்த வேண்டும். உணர்ச்சிகளின் புறக் காரணங்களை வேறுபடுத்தி அறிவதில் மனம் வெற்றி பெறுமானால் மிக நுண்ணிய ஜடப் பொருட்களையும், எல்லா நுண்ணுடல்களையும், உருவங்களையும் காணும் ஆற்றல் பெறுகிறது. இவ்வாறு அக இயக்கங்களைப் பிரித்தறிய முடியும்போது, தன்னிடமும் பிறரிடமும் தோன்றுகின்ற எல்லா எண்ண அலைகளையும் அவை பவுதீக சக்தியாக மாறும் முன்பே கட்டுப்படுத்தும் ஆற்றலை மனம் பெறுகிறது. இனி, மனத்தின் எதிர்ச் செயலைத் தனியாக உணரும் தன்மை பெறும் போது யோகிக்கு எல்லா அறிவும் கிடைக்கும். ஏனெனில் உணர முடிந்த ஒவ்வொரு பொருளும் ஒவ்வோர் எண்ணமும் மனத்தின் எதிர்ச் செயலில் விளைவே அல்லவா? இந்த நிலையில் அவன் தனது மனத்தின் அடித்தளத்தையே காண்கிறான். அது முற்றிலுமாக அவனது கட்டுப்பாட்டில் இருக்கும். யோகிக்குப் பல சித்திகள் வந்து சேர்கிறது. இவற்றுள் ஏதேனும் ஒன்றின் கவர்ச்சிக்கு ஆட்பட்டாலும் போதும், அவனுடைய முன்னேற்றம் தடைப்பட்டுவிடும். சுகபோகங்களின் பின்னால் ஓடுவது அவ்வளவு ஆபத்தானது. ஆனால் இந்த அற்புத சித்திகளைப் புறக்கணிக்கும் வல்லமை அவனிடம் இருக்குமானால் அவன் யோகத்தின் குறிக்கோளை அடைவான். மனக் கடலின் அலைகளை அடியோடு நிறுத்திவிடுவான். அப்போது ஆன்மாவின் பெருமை, மனத்தின் அலைவுகளாலோ உடலின் காசிக்கும். அப்போது யோகி தன்னை உணர்கிறான்; தான் எப்போதுமே அறிவின் சாரமாகவும் மரமற்றவனாகவும் எங்கும் நிறைந்தவனாகவும் இருப்பதை அறிகிறான்.
சமாதி நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் உரியது, இல்லையில்லை, ஒவ்வொரு பிராணிக்கும் உரியது. மிகக் கீழான பிராணியிலிருந்து மிகவுயர்ந்த தேவதூதன்வரை அனைவரும் என்றாவது ஒருநாள் இந்த நிலைக்கு வந்தேயாக வேண்டும். அதன்பிறகு அதன்பிறகு மட்டுமே உண்மையான மதம் என்பது அவனுக்குத் தோன்றும். அதுவரை நாம் எல்லோரும் அந்த நிலையை அடையப் பாடுபடுகிறோம். அவ்வளவுதான். மத வாசனையே இல்லாதவனுக்கும் நமக்கும் இப்போது எவ்வித வேறுபாடும் இல்லை. ஏனெனில் நமக்கும் அனுபூதியில்லை. அனுபூதியைத் தராவிட்டால் ஒருமைப்பாட்டினால் என்ன பயன்? சமாதி நிலையை அடைவதற்கான ஒவ்வொரு படியும் ஆராய்ந்து, முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டு, விஞ்ஞானப்பூர்வமானதாக அமைக்கப்பட்டுள்ளது. நாம் நம்பிக்கையோடு பயிற்சி செய்தால் அவை கண்டிப்பாக நம்மை லட்சியத்திற்கு இட்டுச் செல்லும் அதன்பின் எல்லா துன்பங்களும் நீங்குகின்றன. எல்லா கவலைகளும் பறந்து விடுகின்றன. கர்மத்திற்கான விதைகள் எரிந்து விடுகின்றன. ஆன்மா, தளைகளிலிருந்து நீங்கி என்றென்றைக்குமாக முக்தி பெறுகிறது.
ராஜயோகச் சுருக்கம்
இங்கே காணப்படும் ராஜயோகச் சுருக்கம் கூர்ம புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது. யோகமாகிய நெருப்பு மனிதனைச் சூழ்ந்துள்ள பாவக்கூட்டை எரித்துவிடுகிறது. அப்போது அறிவு தூய்மை பெறுகிறது. நிர்வாணம் நேரடியாக வாய்க்கிறது. யோகத்திலிருந்து ஞானம் வருகிறது. ஞானம் யோகிக்கு உதவுகிறது. யார் யோகத்தையும் ஞானத்தையும் இணைத்து கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு இறைவன் அருள்புரிகிறார். மஹாயோகத்தைத் தினமும் ஒருமுறை அல்லது இரண்டுமுறை அல்லது மூன்றுமுறை அல்லது எப்போதும் கடைப்பிடிப்பவர்கள் தேவர்களே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
யோகத்தில் இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று அபாவம், மற்றது மஹாயோகம். தனது ஆன்மாவைச் சூன்யமாக, குணமற்றதாக தியானிப்பது அபாவம். ஆன்மாவைப் பேரானந்தம் நிறைந்ததாக, நிர்மலமானதாக, இறைவனுடன் ஒன்றுபட்டு இருப்பதாகக் காண்பது மஹாயோகம். இந்த இரண்டின் மூலமாகவும் யோகி தன் ஆன்மாவை உணர்கிறான். மஹாயோகத்தில் யோகி தன்னையும் பிர பஞ்சம் முழுவதையும் இறைவனாகக் காண்கிறான். இது யோகங்கள் அனைத்திலும் உயர்ந்தது. மேலான இதனுடன் ஒப்பிடும்போது, நாம் படித்தும் கேட்டும் உள்ள பிற யோகங்கள், யோகம் என்று கூறத் தகுதியற்றவை.
யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்பவை ராஜயோகத்தின் அங்கங்கள். அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், அபரிக்கிரகம், பிரம்மச்சரியம், ஆகியவை யமம். இவை மனத்தை அதாவது சித்தத்தைத் தூய்மையாக்கும். மனத்தாலோ வாக்காலோ உடலாலோ எந்த உயிருக்கும் துன்பம் விளைவிக்காமல் இருப்பது அஹிம்சை. அஹிம்சையை விட மேலான தர்மம் ஒன்றில்லை. சத்தியத்தால் நாம் கர்ம பலன்களை அடைகிறோம். படைப்பிலுள்ள எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமலிருப்பதால் ஒருவனுக்குக் கிடைக்கின்ற ஆனந்தத்தைவிடமேலான ஆனந்தம் எதுவுமில்லை. சத்தியத்தால் அனைத்தையும் அடையலாம். சத்தியத்திலேயே அனைத்தும் நிலைபெற்றிருக்கின்றன. உள்ளதை உள்ளபடி கூறுதல்-இதுதான் சத்தியம். திருட்டுத் தனமாகவோ, வலிமையைப் பயன்படுத்தியோ பிறர் பொருளைக் கவராது இருத்தல் அஸ்தேயம். மனம், வாக்கு மற்றும் உடலால் எப்போதும் எல்லா நிலைகளிலும் தூயவனாக இருப்பது பிரம்மச்சரியம், எவ்வளவுதான் பயங்கரமாகத் துன்புற்றாலும்,பிறர் பொருளைத் தானமாக பெறாமலிருப்பது அபரிக்கிரகம். பிறரிடமிருந்து தானமாக ஒன்றைப் பெறுகின்ற ஒருவனின் உள்ளம் அசுத்தம் அடைகிறது. அவன் தாழ்ந்த நிலையை அடைகிறான். சுதந்திரத்தை இழக்கிறான். கட்டுண்டவனாகிறான், பற்றுக் கொண்டவனாகிறான்.
அடுத்து வருவது நியமம். அன்றாட ஆசாரங்களும் நியதிகளும் அடங்கியது இது. யோகத்தில் வெற்றி பெற இது உதவுகிறது. தபஸ்-தவம்; ஸ்வாத்யாயம்-கல்வி; ஸந்தோஷம்-திருப்தி; சவுசம்-தூய்மை; ஈசுவர ப்ரணி தானம்-இறைவழிபாடு-இவை நியமம். உண்ணாநோன்பின் மூலமோ வேறு வழிகளாலோ உடலை அடக்கியாள்தல் உடல் சம்பந்தமான தவம். வேதங்களையும் மற்ற மந்திரங்களையும் ஓதுவது ஸ்வாத்யாயம். இதனால் உடலில் உள்ள சத்வப் பகுதி தூய்மை அடைகிறது. மந்திரங்களை உச்சரிப்பது மூன்று வகைப்படும். வாசிகம், உபாம்சு, மானசம், வாசிகம் மிகத் தாழ்ந்தது. மானசம் மிகவுயர்ந்தது. உரக்க உச்சரித்தல் வாசிகம். உதடு அசைந்து ஒலி வராமல் உச்சரிப்பது உபாம்சு. வெளியில் கேட்காமல் மந்திரத்தை உச்சரித்து. அதனுடன் மந்திரத்தின் பொருளையும் சிந்திப்பது மானசம். இதுவே மூன்றிலும் உயர்ந்த முறை.
தூய்மை என்பது அகத் தூய்மை புறத் தூய்மை என இருவகைப்படுவதாக மகான்கள் கூறுகின்றனர். உடலை நீராலோ மண்ணாலோ வேறு பொருட்களாலோ தூய்மை செய்வது அதாவது குளித்தல் போன்றவை புறத்தூய்மை. வாய்மையாலும் மற்ற எல்லா நற்குணங்களாலும் மனத்தைத் தூய்மைப்படுத்துவது அகத்தூய்மை. இரண்டுமே தேவை. அகத்தில் தூய்மை, புறத்தில் அழுக்கு என்றால் அது சரியாகாது. இரண்டும் சேர்ந்து வாய்க்க முடியாதபோது அகத் தூய்மையை நாடுவது நல்லது. ஆனால் இருவகைத் தூய்மையும் இல்லாமல் ஒருவன் யோகியாக மாட்டான். தோத்திரம், சிந்தனை, பக்தி-இவைமூலம் இறைவனை வழிபட வேண்டும். யமம், நியமம்பற்றிக் கூறினோம். அடுத்தது ஆசனம். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் மார்பும் தோள்களும் தலையும் நேராக இருக்க வேண்டும். உடம்பு இறுக்கமின்றித் தளர்வாக இருக்க வேண்டும் என்பதுதான். அடுத்தது பிராணாயாமம், பிராணன் என்பது உடம்பில் உள்ள உயிர்ச்சக்திகள், ஆயாமம் என்றால் அடக்குதல், இதில் மூவகை உண்டு. சாதாரணமானது, நடுத்தரமானது, உயர்ந்தது, பிராணாயாமத்தில் மூன்று பகுதிகள் உண்டு. உள்ளிழுத்தல்(பூரகம்), அடக்கல்(கும்பகம்), வெளிவிடல் (ரேசகம்) பன்னிரண்டு நொடியுடன் ஆரம்பிப்பது சாதாரண வகை. இருபத்தி நான்கு நொடியுடன் ஆரம்பிப்பது நடுத்தரமானது. முப்பத்தாறு நொடியுடன் ஆரம்பிப்பது உயர்ந்த வகையானது. சாதாரண பிராணாயாமத்தில் உடல் வியர்க்கும். நடுத்தரமானதில் உடல் நடுங்கும். உயர்ந்த பிராணாயாமத்தில் உடல் ஆந்தரத்தில் மிதக்கும், பேரானந்தம் பிறக்கும்.
வேதங்களில் காயத்ரீ என்ற மந்திரம் உள்ளது. அது மிகப் புனிதமான மந்திரம். இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த பரம்பொருளின் மகிமையை நாம் தியானிப்போம். அவர் நமது மனங்களை ஒளி பெறச் செய்யட்டும். ஓங்காரத்தை இந்த மந்திரத்தின் முதலிலும் முடிவிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பிராணாயாமத்தில் மூன்று முறை காயத்ரியை உச்சரியுங்கள். பூரகம், கும்பகம், ரேசகம் என பிராணாயாமம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக எல்லா நூல்களும் கூறுகின்றன. புலன்களின் கருவிகளான இந்திரியங்கள் புறப்பொருட்களுடன் தொடர்புகொண்டு புற நாட்டம் கொள்கின்றன. அவற்றைச் சுயேச்சையால் கடடுப்படுத்துவது அல்லது அவற்றைத் தன்னை நோக்கிக் குவிப்பது பிரத்யாஹாரம்.
மனத்தை இதயக் கமலத்தில் அல்லது சஹஸ்ராரத்தில் நிறுத்தி வைப்பது தாரணை. மனம் ஓரிடத்தில் நிலைப்படும்போது அந்த இடத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட விதமான மன அலைகள் எழுகின்றன. இவை மற்ற மன அலைகளால் மூழ்கடிக்கப்படாமல் படிப்படியாக முன்னணிக்கு வருகின்றன. அப்போது மற்றவை பின்வாங்கி இறுதியில் மறைந்துவிடுகின்றன. பின்னர் இந்தப் பல்வேறு அலைகளும் ஒன்றாகி ஓர் அலை மட்டும் மனத்தில் எஞ்சும், இதுவே தியானம்.
அடிப்படை எதுவும் இல்லாமல், மனம் முழுவதும் ஒரே அலையாக, ஒரே வடிவமாக ஆவது சமாதி, சமாதியில் இடங்கள், மையங்கள் இவற்றின் எந்த உதவியும் இன்றி இடங்கள் மையங்கள் இவற்றின் எந்த உதவியும் இன்றி எண்ணத்தின் கருத்து மட்டுமே இருக்கும்.
மனத்தை ஒரு மையத்தில் பன்னிரண்டு நொடிகள் நிறுத்தினால் அது தாரணை, பன்னிரண்டு தாரணைகள் ஒரு தியானம். பன்னிரண்டு தியானங்கள் ஒரு சமாதி.
எங்கு நெருப்பு உள்ளதோ, எங்கு நீர் உள்ளதோ, எங்கு சருகுகள் சிதறிக் கிடக்கின்றனவோ, எங்கு எறும்புப் புற்றுகள் அதிகம் உள்ளனவோ, எங்கு காட்டு மிருகங்கள் உள்ளனவோ, எங்கு அபாயம் உள்ளதோ எங்கு நாற் சந்திகள் கூடுகின்றனவோ, எங்கு ஓசை மிகுந்து உள்ளதோ, எங்கு தீயவர்கள் பலர் உள்ளனரோ, அங்கு யோகம்பயிலக் கூடாது. இது குறிப்பாக இந்தியாவிற்குத்தான் பொருந்தும். உடல் மிகவும் சோம்பலாகவோ நோயுற்றோ மனம் துன்புற்றோ கவலையுற்றோ இருந்தாலும் யோகம் பழகக் கூடாது. மறைவானதும், மக்கள் வந்து உங்களைத் தொந்தரவு செய்யாததுமான இடத்திற்குச் செல்லுங்கள். அழுக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்காதீர்கள். மாறாக அழகிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடத்தையோ, உங்கள் வீட்டில் ஓர் அழகிய அறையையோ தேர்ந்தெடுங்கள். பயிற்சி செய்யும்போது முதலில் பண்டைய யோகிகள் எல்லோரையும் உங்கள் குருவையும் கடவுளையும் வணங்கிவிட்டு, அதன்பிறகு பயிற்சியைத் தொடங்குங்கள்.
இனி, தியானத்தைப்பற்றிக் கூறப்படுகிறது. தியானிப்பதற்குச் சில உதாரணங்களும் தரப்படுகின்றன. நிமிர்ந்து அமருங்கள், மூக்கின் நுனியைப் பாருங்கள். மனத்தை ஒருமுகப்படுத்த இது எவ்விதம் உதவுகிறது. காட்சி நரம்புகள் இரண்டையும் அடக்குவதால் மனத்தின் எதிர்ச் செயல்பகுதி பெருமளவிற்குக் கட்டுப்பட்டு அதன் மூலம் எவ்வாறு கயேச்சையும் கட்டுப்பாட்டில் வருகிறது என்பதையெல்லாம் போகப்போக அறிந்துகொள்ளலாம்.
தியானத்திற்கு உரிய சில வழிகள் இதோ-தலைக்கு மேல் பல அங்குல உயரத்தில் ஒரு தாமரை இருப்பதாக நினையுங்கள். தர்மம் அதன் மையம். ஞானம் அதன் தண்டு. தாமரையின் எட்டு இதழ்களும் யோகியின் அஷ்டமாசித்திகள். தாமரையின் எட்டு இதழ்களும் எட்டு சித்திகள். அதேவேளையில் உள்ளே உள்ள மகரந்த கேசரங்களும் சூல்பைகளும் தியாகம். புறத்திலிருந்து வருகின்ற சித்திகளைத் தியாகம் செய்தால் யோகி முக்தி அடைவான். தாமரையின் எட்டு இதழ்களும் எட்டு சித்திகள். அதேவேளையில் உள்ளே உள்ள மகரந்த கேசரங்களும் சூல்பைகளும் உயர்நிலை தியாகம். அதாவது இந்தச் சித்திகளைத் துறத்தல்,. தாமரையின் நடுவில் பொன்னொளி வீசுபவராக, சர்வ வல்லமை உள்ளவராக, அணுக அரியவராக, ஓங்காரம் என்னும் பெயரை உடையவராக, விளக்க முடியாதவராக, பேரொளியால் சூழப்பட்டவராக இறைவனை தியானம் செய்யுங்கள்.
மற்றொரு தியானமும் கூறப்படுகிறது. உங்கள் இதயத்தில் ஒரு வெளி இருப்பதாக நினையுங்கள். அதில் சுடர் ஒன்று ஒளிவிடுகிறது. அது உங்கள் ஆன்மா. அதனுள், உங்கள் ஆன்மாவிற்கு ஆன்மாவாகிய கடவுள் ஒரு பேரொளியாக இருப்பதாக எண்ணுங்கள். அதனை உங்கள் இதயத்தில் தியானம் செய்யுங்கள்.
பிரம்மச்சரியம், அஹிம்சை, மிகக் கொடிய எதிரியடமும் இரக்கம், உண்மை, இறை நம்பிக்கை இவை எல்லாம் வெவ்வேறான விருத்திகள், நீங்கள் இவற்றில் நிறைநிலை அடையவில்லையென்று அஞ்ச வேண்டாம். முயற்சி செய்யுங்கள் அனைத்தும் கைகூடும். எல்லா பற்றும், எல்லா பயமும், எல்லா கோபமும் விட்டவன், தன்னை முழுவதுமாக இறைவனுக்கே அர்ப்பணம் செய்து அவரிடமே சரண்புகுந்தவன். மனம் தூய்மையடையப் பெற்றவன். இவர்கள் எந்த ஆசையுடன் இறைவனை அணுகினாலுள் அதை அவர்களுக்கு அருள்கிறார் அவர். எனவே ஞானம், பக்தி அல்லது தியாகம் இவற்றால் அவரை வழிபடுங்கள்.
யாரையும் வெறுக்காதவன், அனைவரிடமும் நட்பு பூண்டவன். எல்லாவற்றிடமும் கருணை உடையவன். அகங்காரம் விட்டவன். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய்க் கருதுபவன். பொறுமையுடையவன். எப்போதும் திருப்தியுற்றவன். எப்போதும் யோகத்தில் நிலை பெற்றவனாய் செயல்புரிபவன், தன்னைக் கட்டுப்படுத்தியவன், திட சங்கல்பம் உடையவன். மனத்தையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பணம் செய்தவன். இத்தகையவனே எனது பக்தன்.
யார் பிறரைத் துன்புறுத்துவதில்லையோ, யாரைப் பிறரால் துன்புறுத்த முடியாதோ, யார் மகிழ்ச்சி, கோபம், பயம், மனக்கிளர்ச்சி இவற்றிலிருந்து விடுபட்டவனோ இத்தகையவனே எனக்குப் பிரியமானவன்.
எதையும் சார்ந்திருக்காதவன், தூயவன், சுறுசுறுப்பு உடையவன், துன்பமோ இன்பமோ எது வந்தாலும் பொருட்படுத்தாதவன். ஒருபோதும் துயரப்படாதவன், தனக்கான எல்லா முயற்சிகளையும் விட்டவன். புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாகக் கொள்பவன். அமைதியாக இருப்பவன். ஆழ்ந்த சிந்தனையுடையவன். சிறிதே கிடைத்தாலும் அதில் திருப்தி கொள்பவன். உலகே தன் வீடாக இருப்பதால் தனக்கென்று வீடு இல்லாதவன். தனது கொள்கைகளில் உறுதி படைத்தவன். இத்தகையவனே எனது அன்பிற்குரிய பக்தன். இத்தகையோரே யோகிகள் ஆவார்கள்.
நாரதர் என்ற தேவ முனிவர் ஒருவர் இருந்தார். மனிதர்களிடையில் பெரிய யோகிகளான முனிவர்கள் இருப்பதுபோல், தேவர்களிலும் யோகிகள் உள்ளனர், நாரதர் மிகப் பெரிய யோகி. அவர் எங்கும் சஞ்சரிப்பார். ஒருநாள் அவர் ஒரு காட்டின் வழியாகச் செல்லும்போது ஒருவனைக் கண்டார். வெகுகாலம் ஓரிடத்திலேயே அமர்ந்து தியானித்து தவம் செய்ததால், அவனது உடலைச் சுற்றிக் கறையான்கள் புற்று கட்டிவிட்டன. அவன் நாரதரை அழைத்து எங்கே போகிறீர்? என்று கேட்டான். நான் சொர்க்கத்திற்குச் செல்கிறேன் என்றார் நாரதர். அப்படியானால், ஆண்டவன் எனக்கு எப்போது அருள்புரிவார். எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் அவன். நாரதர் சிறிது தூரம் சென்றார். அங்கே ஒருவன் பாடிக் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் நாரதரைக் கண்டு நாரதரே! எங்கு செல்கிறீர்? என்று கேட்டான். அவனது குரலும் செயலும் சாந்தமாக இல்லை. நாரதர். நான் சொர்க்கத்திற்குப் போகிறேன் என்றார். அப்படியானால் எனக்கு எப்போது முக்தி கிடைக்கும் என்று கேட்டு வாருங்கள் என்றான் அவன். நாரதர் சென்றுவிட்டார்.
சிறிது காலத்திற்குப் பின் நாரதர் அந்தக் காட்டின் வழியாகத் திரும்பி வந்தார். உடலைச் சுற்றிப் புற்றி வளர்ந்திருந்த மனிதன், நாரதரே! என்னைப்பற்றி பகவானிடம் கேட்டீரா? என்றான், ஆம் என்றார் நாரதர். பகவான் என்ன சொன்னார்? என்று கேட்டான் அவன். நீ இன்னும் நான்கு பிறவிகளுக்குப் பின்னர் முக்தி அடைவாய் என்று பகவான் கூறினார் என்றார் நாரதர். அதைக் கேட்டதும் அவன் அழுது புலம்பி, என்னைச் சுற்றிப் புற்று மூடும்வரை இவ்வளவு காலம் தியானித்தேன் இன்னும் நான்கு பிறவிகளா? என்றான்.
நாரதர் மற்ற மனிதனிடம் சென்றார். பகவானிடம் கேட்டீரா, நாரதரே? என்றான் அவன் ஆம் கேட்டேன். அந்தப் புளியமரத்தைப் பார். அதில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகளுக்குப் பின்பு உனக்கு முக்தி கிட்டும் என்றார் பகவான். என்று நாரதர் கூறினார். அதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியால் குதித்தபடியே இவ்வளவு விரைவாக எனக்கு முக்தி கிடைக்கப் போகிறதே! என்று கூறனான். அப்போது ஒரு குரல்! மகனே! இந்தக் கணமே உனக்கு முக்தி அளிக்கிறேன் என்று கூறியது. அவனது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெகுமதி அது. அத்தனை பிறவிகளிலும் பாடுபட அவன் தயாராக இருந்தான். எதுவும் அவனைத் தளரச் செய்யவில்லை. ஆனால் முதல் மனிதனுக்கோ நான்கு பிறவிகள் கூட மிக நீண்ட காலமாகத் தோன்றியது. யுகயுகங்களாகவும் காத்திருக்கத் தயாராக இருந்த மனிதனிடம் இருந்தது போன்ற விடாமுயற்சி மட்டுமே பெரும் பேற்றை அளிக்கும்.
பதஞ்ஜலி யோக சூத்திரங்கள்
.
1.முன்னுரை
.
யோக சூத்திரங்களை விளக்குவதற்கு முன் ஒரு முக்கியமான விஷயத்தை விவாதிக்க விரும்புகிறேன். யோக நெறியின் கொள்கை முழுவதும் இதையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. நாம் இப்போது சார்பு நிலையில் உள்ளோம். ஆனால் இதற்கு முன்பு தனி நிலையில் இருந்தோம். இந்தத் தனி நிலையிலிருந்தே நாம் தோன்றியுள்ளோம். வெளிப்பட்டுள்ளோம். இப்போது மீண்டும் இந்தச் சார்பு நிலையிலிருந்து தனிநிலையை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருக்கிறோம். உலகின் மேதைகளும் பொதுவாக இதை ஒப்புக்கொள்வதாகத்தான் தோன்றுகிறது. தூல இயற்கை ஆராய்ச்சிகளும் இந்த உண்மையை ஏறக்குறைய தெளிவாக்கியுள்ளது. இதை ஒப்புக்கொண்டால் அந்தத் தனி நிலை சிறந்ததா, அல்லது இப்போதைய சார்பு நிலைதான் மிகவுயர்ந்தது என்று எண்ணுபவர்களுக்குக் குறைவில்லை. நாம் பிரிவுகளற்ற பரம்பொருளின் வெளிப்பாடுகள். பிரிவுகளுடன் கூடிய இந்த நிலையே தனி நிலையைவிட உயர்ந்தது என்று மிகச் சிறந்த சிந்தனையாளர்கள்கூடக் கருதுகிறார்கள். அந்தத் தனிநிலையில் எந்தப் பண்பும் இருக்க முடியாது; அந்த நிலை உயிரற்றதாக, உணர்ச்சியற்றதாக, மந்தமானதாகத்தான் இருக்க வேண்டும். இப்போதைய இந்த வாழ்வில்தான் நாம் சுகபோகங்களை அனுபவிக்க முடியும். எனவே அதைப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர்கள் கற்பனை செய்துகொள்கிறார்கள்.
முதலில் நாம் வாழ்க்கைப் பிரச்சினைக்கான மற்ற தீர்வுகளை ஆராய வேண்டியுள்ளது. பழைய தீர்வு என்ன வென்றால் மரணத்திற்குப் பின்னரும் மனிதன் அப்படியே வாழ்கிறான். அவனது தீய பக்கங்கள் ஒழிந்து நல்ல பக்கங்கள் மட்டும் என்றென்றும் நிலைநிற்கிறது என்பதுதான். தர்க்கரீதியாகச் சொல்வதானால் மனிதனின் லட்சியம் உலகமே. அதாவது இந்த உலக வாழ்வே சற்று உயர்ந்த நிலையில் அங்கும் நீட்டப்படுகிறது. தீமைகளற்ற அதைச் சொர்க்கம் என்ற பெயரால் அழைக்கிறார்கள். அவ்வளவுதான். இந்தக் கொள்கை முற்றிலும் தவறானது. சிறுபிள்ளைத்தனமானது என்பது தெளிவு. ஏனெனில் அப்படி ஒரு நிலை இருக்க முடியாது. தீமை கலவாத நன்மை இருக்க முடியாது. அதுபோல் நன்மை கலவாத தீமையும் இல்லை. தீமையே கலவாமல் நன்மையே நிறைந்துள்ள உலகில் வாழலாம் என்பது சம்ஸ்கிருத நியாயத் தத்துவவாதிகள் கூறுவதுபோல் ஆகாயக் கோட்டை தான்.
தற்காலத்தில் பல பிரிவினர் வேறொரு கொள்கையைக் கூறுகின்றனர். முன்னேறிக்கொண்டே இருப்பது, இலக்கை நோக்கிச் சென்றுகொண்டே இருப்பதுதான் மனிதனின் கதி. ஆனால் இலக்கை அடைவது என்பது மட்டும் கிடையாது. மிக நல்லதுபோல் தோன்றினாலும் இதுவும் தவறே. ஏனெனில் நேர்கோட்டு இயக்கம் என்ற ஒன்றே கிடையாது. ஒவ்வோர் இயக்கமும் வட்டத்தில்தான் நகர்கிறது. ஒரு கல்லை எடுத்து வானவெளியில் வீசுங்கள். அதற்குத் தடையொன்றும் இல்லாமலிருந்து, நீங்களும் போதிய காலம் வாழ்ந்திருந்தால் அந்தக் கல் சரியாக உங்கள் கைக்கே திரும்பி வந்துசேரும். நேர்கோடு எல்லையற்று நீட்டப்படும்போது வட்டமாகத்தான் அது நிறைவுறும். ஆகவே, முடிவின்றி முன்னேறிச் சென்று கொண்டிருப்பதுதான் மனிதனின் விதி என்ற கருத்து தவறானது.
நமது விஷயத்திற்குப் புறம்பாக இருந்தாலும் இங்கு ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். இந்தக் கருத்து, யாரையும் வெறுக்கக் கூடாது. அன்பு காட்ட வேண்டும் என்ற நீதிநெறிக் கோட்பாட்டை விளக்குவதாக உள்ளது எப்படியெனில் ஒரு டைனமோவிலிருந்து புறப்படுகின்ற மின்னோட்டம் கற்றை முடித்து முடிவில் டைனமோவை அடைகிறது என்கிறது நவீனக் கொள்கை. வெறுப்பும் அன்பும் அதுபோல்தான் புறப்பட்ட இடத்திற்கு அவை திரும்பி வந்தே தீர வேண்டும். எனவே யாரையும் வெறுக்காதீர்கள். ஏனெனில் உங்களிடமிருந்து புறப்பட்ட அந்த வெறுப்பு நாளடைவில் உங்களிடமே திரும்பி வரும். நீங்கள் அன்பு காட்டினால், அந்த அன்பும் சுற்றினை முடித்துவிட்டு உங்களிடம் திரும்பி வரும். ஒருவனது இதயத்திலிருந்து புறப்படுகின்ற வெறுப்பு முழுவேகத்தில் அவனிடம் திரும்பி வரவே செய்கிறது. இதை யாராலும் தடுக்க முடியாது. அதுபோலவே அன்பின் ஒவ்வொரு வெளிப்பாடும் அவனிடம் வந்து சேர்கிறது.
நடைமுறைக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் முடிவற்ற முன்னேற்றக் கொள்கை ஏற்கக்கூடியதாக இல்லை. ஏனெனில் உலகில் உள்ள ஒவ்வொன்றின் இலக்கும் அழிவாகவே உள்ளது. நமது முயற்சிகளும் நம்பிக்கைகளும் அச்சங்களும் இன்பங்களும் எல்லாம் நம்மை எங்கே இட்டுச் செல்கின்றன? மரணமே நம் அனைவருக்கும் முடிவு. அதைப்போல் சர்வ நிச்சயமானது வேறு எதுவுமில்லை. ஆகவே இந்த நேர்கோட்டு இயக்கம், முடிவற்ற முன்னேற்றம் எங்கே உள்ளது? சிறிது தூரம் சென்றுவிட்டுல புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்தாக வேண்டும். அண்டப் பிழம்புகளிலிருந்து சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் முதலியவை உருவாகின்றன. மீண்டும் அவை கரைந்து அண்டப் பிழம்பிற்கே திரும்பிச் செல்கின்றன. எங்குமே இவ்வாறுதான் நடைபெறுகிறது. செடி, நிலத்திலிருந்து சத்தை எடுத்து வளர்கிறது. பின்னர் நிலத்திலேயே சங்கமித்து, அதைத் திருப்பிக் கொடுக்கிறது. உலகில் உள்ள உருவம் ஒவ்வொன்றும் சூழ்ந்துள்ள அணுக்களிலிருந்து ஆக்கப்பெற்று இறுதியில் அணுக்களாகவே ஆகின்றன. ஒரே விதி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகச் செயல்பட முடியாது; ஒரே விதத்தில் தான் செயல்படும். இதைவிட நிச்சயமானது வேறொன்றும் இல்லை. இயற்கைக்கு இது விதியானால் எண்ணங்களும் இந்த விதி பொருந்தும். எழுகின்ற எண்ணங்களும் மாய்ந்து, கிளம்பிய இடத்திற்கே செல்லும், நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இறைவன் அல்லது பரம்பொருள் என்று அழைக்கப்படுகின்ற நமது மூலகாரணத்திற்கு நாம் திரும்பிச் சென்றேயாக வேண்டும் நாம் கடவுளிடமிருந்து வந்தோம். நாம் அவரிடம் திரும்பிச் சென்றேயாக வேண்டும். அவரைக் கடவுள் என்றோ, சுத்தப் பிரம்மம் என்றோ இயற்கை என்றோ கூறிக்கொள்ளுங்கள், உண்மை அதுவே யாரிடம் அவை திரும்பிச் செல்லுமோ இந்த உண்மை சர்வ நிச்சயமானது. இயற்கை ஒரே நியதியில் இயங்குகிறது. ஒரு கோளத்தில் நிகழும் செயல்பாடே லட்சக்கணக்கான பிற கோளங்களிலும் நடைபெறுகிறது. கிரகங்களைப் பொறுத்தவரை எது உண்மையோ, அதுவே பூமியைப் பொறுத்தவரை மனிதனைப் பொறுத்தவரை, அனைத்தையும் பொறுத்தவரை, உண்மை. ஒரு பெரிய அலை எண்ணிறந்த சிற்றலைகளின் தொகுதியாகும். உலகத்தின் வாழ்வு என்பது லட்சக்கணக்கான சிற்றுயிர்களின் வாழ்க்கைத் தொகுதி. உலகத்தின் அழிவு என்பது இந்த லட்சக்கணக்கான சிற்றுயிர்களுடைய அழிவின் தொகுதி.
இப்பொழுது கேள்வி எழுகிறது. கடவுளிடம் திரும்பிச் செல்வது உயர்ந்த நிலையா, இல்லையா? அது உயர்நிலையே என்று யோக நெறியின் தத்துவ அறிஞர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். மனிதனின் இப்போதைய நிலை ஒரு வீழ்ச்சி என்று அவர்கள் கூறுகின்றனர். அப்படியில்லை. மனிதனின் இப்போதைய நிலை ஓர் உயர்ச்சி என்று சொல்லக்கூடிய மதம் ஒன்று கூட உலகில் இல்லை. இதன் கருத்து என்னவென்றால் முதலில் அவன் பரிபூரணமானவனாக, தூயவனாக இருந்தான். பின்னர் வீழ்ச்சி அடையத் தொடங்கினான். இதற்குக் கீழே போக முடியாது என்ற நிலை வந்தால் மேல்நோக்கிப் படிப்படியாக முன்னேறி வட்டத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். வட்டம் பூர்த்தியாகியே தீரும். மனிதன் எவ்வளவுதான் கீழே சென்றாலும். இறுதியில் மேல்நோக்கி வந்து மூல காரணமாகிய இறைவனை அடைந்தேயாக வேண்டும். அவன் ஆரம்பத்தில் கடவுளிடமிருந்தே வந்தான். இடையில் மனிதன் ஆனான். இறுதியில் கடவுளிடமே திரும்பிப் போகிறான்,. இவ்வாறு துவைத நெறி அதனை விளக்குகிறது. அத்வைதத்தின்படி மனிதனே கடவுள் மறுபடியும் அவன் அவரை அடைகிறான்.
நமது இப்போதைய நிலை உயர்வானது என்றால், ஏன் இவ்வளவு அச்சமும் துயரமும்? அவற்றிற்கு ஏன் ஒரு முடிவு வரவில்லை? இந்த நிலை உயர்வானது என்றால் ஏன் இது முடிய வேண்டும்? நலிவதும் அழிவை நோக்கிச் செல்வதும் உயர்நிலை ஆகாது. ஏன் இந்த நிலை பயங்கரமாகவும் அதிருப்தியைத் தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும்? மேல்நோக்கிச் செல்ல வேண்டுமானால் இந்த நிலை வழியாகத்தான் சென்றாக வேண்டும். நாம் மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு இதைக் கடந்தே தீர வேண்டும் என்ற அளவில் இதனை ஏற்றுக்கொள்ளலாம். அவ்வளவுதான். ஒரு விதையை நிலத்தில் இட்டால் அது அழுகி, சில காலத்திற்குள் கரைந்துவிடுகிறது. அந்த அழிவிலிருந்தே அழகிய புதிய மரம் உண்டாகிறது. அதுபோல் கடவுளாக வேண்டுமானால் ஒவ்வோர் உயிரும் அழிந்தே தீர வேண்டும். எனவே மானிடம் என்று நாம் அழைக்கின்ற இப்போதைய நிலையிலிருந்து எவ்வளவு விரைவாக வெளியேறுகிறோமோ அவ்வளவுக்கு நல்லது. அதற்காகத் தற்கொலை செய்துகொள்வதா? அல்லவே அல்ல. அதனால் குழப்பமே மிகும். நம்மை வருத்தவதும், உஙலகைப் பழிப்பதும், அதிலிருந்து வெளியேறும் வழிகள் அல்ல. நம்பிக்கையே இல்லாத மனத்தளர்வு என்ற சதுப்பு நிலத்தினூடே நாம் சென்றாக வேண்டும். எவ்வளவு விரைவாக அதைக் கடக்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது. மனிதநிலைதான் மிகவுயர்ந்த நிலை என்பது அல்ல இதனை எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மிகவுயர்ந்த நிலை என்று கூறப்பட்ட இந்தத் தனி நிலை. சிலர் பயப்படுவதுபோல் கடற்பஞ்சு அல்லது கல் போன்ற ஒரு நிலை அல்ல என்பதைப் புரிந்துகொள்வது தான் இதில் உண்மையில் கடினமான பகுதி. அவர்களைப் பொறுத்தவரை இரண்டு நிலைகளே உள்ளன. ஒன்று கல் நிலை; மற்றது கருத்து நிலை. வாழ்வு என்பதை இந்த இரண்டு நிலைகளுக்குள் வரையறுக்க அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? கருத்து அல்லது எண்ணத்தைவிட எல்லையற்ற அளவு உயர்ந்த நிலை ஒன்று இல்லையா? ஒளியின் அதிர்வுகள் மிகக் குறைவாக இருக்கும்போது நாம் ஒளியைக் காண்பதில்லை. அதிர்வுகள் சற்று அதிகரிக்கும்போது ஒளி நம் கண்களுக்குப் புலனாகிறது. அவை இன்னும் அதிகரித்தாலும் நாம் ஒளியைக் காண முடிவதில்லை. அது நமக்கு இருளாகிவிடுகிறது. இறுதியில் நிலவிய இருளும் முதலில் நிலவிய இருளும் ஒரே மாதிரி யானவையா? இல்லவே இல்லை. இரண்டும் இரு துருவங்கள். கல்லின் எண்ணமற்ற நிலையும் கடவுளின் எண்ண மற்ற நிலையும் ஒன்றா? ஒருபோதும் இல்லை. கடவுள் சிந்திப்பதில்லை. அவர் ஆராய்வதில்லை. அவர் ஏன் ஆராய வேண்டும்? ஆனால் அவர் அறியாதது ஏதாவது உண்டா? அப்படி ஏதாவது இருந்தால் அல்லவா அவர் ஆராய்ந்து அறிய வேண்டும். கல் ஆராய முடியாது. கடவுள் ஆராய்வதில்லை. இதுதான் கல்லுக்கும் கடவுளுக்கும் உள்ள வேறுபாடு. தத்துவ அறிஞர்கள் எண்ணத்திற்கு அப்பால் செல்ல பயப்படுகின்றனர். எண்ணத்திற்கு அப்பால் அவர்கள் எதையும் காண்பதில்லை.
ஆராய்ச்சி அறிவிற்கு, தர்க்க அறிவிற்கு அப்பால் எவ்வளவோ உயர்ந்த நிலைகள் உள்ளன. உண்மையில் ஆன்மீக வாழ்க்கையின் முதற்படியே புத்திக்கு அப்பால் தான் இருக்கிறது. எண்ணத்தையும் புத்தியையும் ஆராய்ச்சியையும் கடக்கும்போதுதான் கடவுளை நோக்கி முதல் அடியை எடுத்து வைக்கிறீர்கள். அதுதான் வாழ்வின் ஆரம்பம். சாதாரணமாக நாம் வாழ்வு என்று கூறுவது வெறும் கருநிலையே.
எண்ணத்தையும் பகுத்தறிவையும் கடந்தநிலை தான் மிகவுயர்ந்த நிலை என்று கூறுவதற்கான நிரூபணம் எது என்ற கேள்வி எழுகிறது. முதலில், உலகின் மாமனிதர்கள் அனைவரும் வாய்ச்சொல் வீரர்களைவிட எவ்வளவோ உயர்ந்தவர்கள். அனைவரும் உலகையே அசைத்தவர்கள். அனைவரும் தன்னலத்தைக் கனவிலும் கருதாதவர்கள். அனைவரும் இந்த வாழ்வு இதற்கு அப்பாலுள்ள எல்லையற்ற நிலையை அடையும் வழியில் உள்ள ஒரு நிலை மட்டுமே என்று உறுதியாகக் கூறியுள்ளனர். இரண்டாவதாக, அவர்கள் கூறியதுடன் மட்டும் நிற்கவில்லை. தாங்கள் சென்ற வழியில் செல்வதற்கான பாதையை ஒவ்வொருவருக்கும் காட்டியுள்ளனர். தாங்கள் பின்பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு வேண்டிய சாதனங்களை விளக்கியுள்ளனர். மூன்றாவதாக, அவர்கள் காட்டிய பாதையைத் தவிர நமக்கு வேறு வழியும் இல்லை. வேறு விளக்கமும் எதுவும் இல்லை. இந்த உலக வாழ்வைவிட உயர்நிலை இல்லை என்று வைத்துக் கொண்டாலும், இந்த வட்டத்திற்குள்ளேயே நாம் ஏன் சுழன்று கொண்டிருக்கிறோம்? இந்த உலகைப் பகுத்தறிவு விளக்க முடியுமா? இந்த உலகை நாம் கடந்து செல்லாவிட்டால், உயர்ந்த எதையும் நாம் கேட்கக் கூடாது என்றால், புலன்களால் உணரக் கூடிய இந்த உலகமே நமது அறிவின் எல்லை என்று ஆகிவிடும். இது ஆஜ்ஞேய வாதம். ஆனால் புலன்களால் வரும் அறிவு சரியானது என்பதற்கு என்ன நிரூபணம் உள்ளது? ஒருவன் நடுவீதியில் அசையாமல் நின்று உயிரைவிடத் தயாராக இருப்பானானால் அவனையே உண்மையான சந்தேகவாதி என்று நான் கூறுவேன். பகுத்தறிவே எல்லாம் என்றால் சூன்யவாதத்தின் இந்தப் பக்கத்தைப் பற்றிக்கொண்டு நாம் எங்கும் நிற்க முடியாது. ஒருவன் தேடும் பணம், பெயர், புகழ் இவற்றைத் தவிர மற்றவற்றில் உண்மையில்லை என்று கூறினால் அவன் ஓர் ஏமாற்றுக்காரன். பகுத்தறிவு என்றழைக்கப்படுகின்ற உறுதியான சுவரை நம்மால் தாண்டிச் செல்ல முடியாது என்று கான்ட் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்திருக்கிறார். ஆனால் இந்தியத் தத்துவச் சிந்தனைகள் அடிப்படையாகக் கொள்கின்ற முதல் கருத்து இதுதான். இந்த அடிப்படையில் நின்றுகொண்டுதான் பகுத்தறிவைக் கடந்த ஒன்றைத் துணிந்து தேடவும், அதை அடைவதில் வெற்றி பெறவும் செய்துள்ளனர். அதில் மட்டுமே நமது இப்போதைய நிலைக்கான விளக்கத்தைக் காண முடியும். இந்த உலகிற்கு அப்பால் நம்மை இட்டுச் செல்வதான ஒன்றைப் படிப்பதன் பலன் இதுவே. நீயே எங்கள் தந்தை! அஞ்ஞானப் பெருங்கடலைத் தாண்டி அக்கரைக்கு எங்களை எடுத்துச் செல்வாயாக இதுவே மத விஞ்ஞானம் ஆகிறது வேறெதுவுமில்லை.
சமாதி பாதம்
சமாதி: அதன் ஆன்மீகப் பயன்கள்
..
1. அத யோகானுசாஸனம்
இனி யோகம் விளக்கப்படும்
2. யோகச்சித்த வ்ருத்தி நிரோத
சித்தம் பல்வேறு உருவங்களை எடுக்காமல், அதாவது பல்வேறு விருத்திகளாக மாறாமல் தடுப்பதே யோகம்.
இங்கு விரிவான விளக்கம் தேவைப்படுகிறது. சித்தம் என்றால் என்ன, விருத்திகள் என்றால் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். எனக்குக் கண்கள் உள்ளன. ஆனால் காண்பவை அவை அல்ல. அதற்குரிய மையத்தை மூளையிலிருந்து அகற்றி விடுங்கள் கண்கள் திறந்திருக்கும், பொருட்களின் பிம்பங்கள் விழித்திரையில் விழவும் செய்யும். ஆனாலும் கண்கள் காணாது. எனவே கண்கள் காட்சிப்பொறிகள் அல்ல. அவை வெறும் இரண்டாந்தரக் கருவிகளே. காட்சிப் பொறி மூளையிலுள்ள ஒரு நரம்பு மையத்தில் உள்ளது. பார்ப்பத்தற்குக் கண்கள் மட்டுமே போதாது. சிலவேளைகளில் மனிதன் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்குகிறான். ஒளி இருக்கிறது, படம் இருக்கிறது. ஆனால் மூன்றாவதாக ஒன்று தேவைப்படுகிறது. அதுதான் மனம். மனம் பார்வைக்கான பொறியுடன் இணைய வேண்டும். கண் புறக்கருவி; மூளை மையமும் அதனுடன் செயல்புரிய மனமும் தேவைப்படுகின்றன,. ஓசையுடன் ஒரு வண்டி தெரு வழியே செல்கிறது. நீங்கள் ஓசையைக் கேட்பதில்லை. ஏன்? உங்கள் மனம் கேட்கும் பொறியுடன் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. முதலில் கருவி, இரண்டாவது புலன், மூன்றாவது, மனம் இந்த இரண்டுடனும் இணைதல். மனம் பொருளின் பதிவை உள்ளே எடுத்துச் சென்று, இன்னதென்று தீர்மானிக்கின்ற புத்தியிடம் கொடுக்கிறது. புத்தியிலிருந்து எதிர்ச் செயல் வெளிப்படுகிறது. இந்த எதிர்ச் செயலுடன் கூடவே நான் உணர்வும் வெளிப்படுகிறது. பின்னர் செயல் மற்றும் எதிர்ச் செயலின் சேர்க்கை, உண்மை ஆன்மாவாகிய புருஷனிடம் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சேர்க்கையின் வழியாக ஆன்மா பொருளை உணர்கிறது.
இந்திரியங்கள், மனம், புத்தி, நான் உணர்வு-இவற்றின் தொகுதியே அந்தக்கரணம். இவை சித்தத்தின் வேறுபட்ட செயல்பாடுகள் மட்டுமே. சித்தத்தில் உள்ள எண்ண அலை விருத்தி(நேரடிப் பொருள்: சுழி) என்று அழைக்கப்படுகிறது.
எண்ணம் என்றால் என்ன? ஈர்ப்பு, சக்தி, விலக்கு சக்தி போன்ற ஓர் ஆற்றலே எண்ணம். இயற்கையின் எல்லையற்ற ஆற்றல் சேமிப்புக் கிடங்கிலிருந்து சிலவற்றைச் சித்தம் எடுத்து, தனக்குரியதாக்கி, எண்ணமாக வெளியே அனுப்புகிறது. உணவின் மூலமாக நமக்குச் சக்தி கிடைக்கிறது. உணவிலிருந்தே உடலின் இயக்கத்திற்கான சக்தி கிடைக்கிறது. மற்ற நுண் சக்திகளைச் சித்தம் எண்ணமாக வெளியே அனுப்புகிறது. இதிலிருந்து மனம் உணர்வுப் பொருளல்ல என்பது தெரிகிறது. இருப்பினும் உணர்வுடையதுபோல் தோன்றுகிறது. ஏன்? ஏனெனில் உணர்வுப் பொருளான ஆன்மா அதன் பின்னால் உள்ளது உணர்வுப் பொருள் நீங்கள் மட்டுமே. மனம் என்பது புறவுலகை அறிந்துகொள்வதற்கான ஒரு கருவி, அவ்வளவு தான். நீரில் ஒரு கல்லை எறிந்தால், அதற்கு எதிர்ச் செயலாக நீர் அலை வடிவில் எறியப்படுகிறது. அதுபோல், அறியப்பட முடியாத பொருளிலிருந்து வரும் சமிஜ்ஞை, மனத்தைத் தாக்குகிறது, மனம் புத்தகத்தின் வடிவை எதிர்ச் செயலாகத் தருகிறது. உண்மையில் பிரபஞ்சம் என்பது மனத்தில் எதிர்ச் செயலை உண்டாக்குகின்ற ஒரு நிமித்தம் மட்டுமே, புத்தக வடிவமோ, யானை வடிவமோ, மனித வடிவமோ புறத்தில் இல்லை. நாம் அறிவதெல்லாம் புறப் பொருட்களினால் மனத்தில் உண்டாகும் பிரதிச் செயலை மட்டுமே. ஜான் ஸ்டூவர்ட் மில் கூறியது போல் உணர்ச்சிகள் தருகின்ற நிரந்தர வாய்ப்பே ஜடப்பொருள் புறவுலகில் உள்ளது சமிஜ்ஞை மட்டுமே.
உதாரணத்திற்கு முத்துச் சிப்பியை எடுத்துக்கொள்ளுங்கள். முத்து எவ்வாறு உண்டாகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். நுண்ணுயிரி ஒன்று சிப்பியின் ஓட்டிற்குள் புகுந்து உறுத்தலை உண்டாக்குகிறது. உடனே சிப்பி அதைச் சுற்றி ஒரு திரவத்தைச் சொரிந்து அந்த நுண்ணுயிரியை மூடுகிறது. இந்தத் திரவமே முத்து ஆகிறது. நமது சொந்தப் பூச்சே நாம் அறிகின்ற இந்தப் பிரபஞ்சம், உள்ளே உள்ள நுண்ணுயிரி உண்மையான பிரபஞ்சம். சாதாரண மனிதன் இதைப் புரிந்துகொள்வதில்லை. ஏனெனில் புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது திரவத்தால் பூசி விடுவதால் அந்தப் பூச்சையே காண்கிறான். விருத்திகள் என்றால் என்ன என்பது இப்போது நமக்குத் தெரிகிறது. உண்மை மனிதன் மனத்திற்குப் பின்னால் இருக்கிறான். மனம் அவன் வசத்தில் உள்ள ஒரு கருவி. அவனது உணர்வே மனத்தின் வழியாக ஊடுருவி வெளிப்படுகிறது. நீங்கள் பின்னால் நிற்கும்போதுதான் மனம் உணர்வு மயமாகிறது. உணர்வுப் பொருளாகிய நீங்கள் மனத்தைக் கைவிட்டீர்களானால் அது சிதறி மறைகிறது. சித்தம் என்றால் என்ன என்பது நமக்குத் தெரிகிறது. அது மனத்தின் மூலப்பொருள். புறக் காரணங்கள் தூண்டுவதால் அதில் எழும் அலைகளும் சுழிகளுமே விருத்திகள். இந்த விருத்திகளே நமது பிரபஞ்சம்.
ஒரு குளத்தின் மேற்பரப்பை அலைகள் மூடியிருந்தால் அடியை நாம் காண்பதில்லை. அலைகள் அடங்கி, நீர்ப்பரப்பு அமைதியுற்றால் மட்டுமே அடிப்பகுதியைச் சிறிதாவது காண முடியும். நீர், சேறு கலந்ததாக இருந்தாலோ கலங்கியிருந்தாலோ அடியைக் காண முடியாது. நீர் தெளிந்து அலையற்று இருந்தால்தான் அடிப்பகுதியைக் காண முடியும். குளத்தின் அடியே உண்மையான நமது சொந்த ஆன்மா, குளமே சித்தம், அலைகளே விருத்திகள்.
மனத்திற்கு மூன்று நிலைகள் உண்டு; ஒன்று தமஸ் என்று அழைக்கப்படும். இது விலங்குகளிடமும் மூடர்களிடமும் காணப்படுவது. தீமை செய்ய மட்டுமே இது செயல்படுகிறது. இதைத் தவிர வேறு எந்த எண்ணமும் மனத்தின் இந்த நிலையில் எழுவதில்லை. அடுத்தது மனத்தின் செயல்படு நிலை. அதாவது ரஜோ குண நிலை, அதிகாரமும் இன்ப நுகர்ச்சியுமே அதன் முக்கிய நோக்கங்கள். நான் அதிகாரம் பெற்று, மற்றவர்களை அடக்கி ஆள்வேன் என்ற எண்ணம், மூன்றாவதாக, அமைதியும் சாந்தமும் நிறைந்த சர்வ நிலை உள்ளது. இங்கே அலைகள் ஓய்ந்துவிடுகின்றன. மனமாகிய குளத்தின் நீர் தெளிவாக இருக்கிறது. இது செயலற்ற நிலையல்ல, மாறாக தீவிர செயல்படு நிலையாகும். அமைதியாயிருப்பதே ஆற்றலின் மிகப் பெரிய வெளிப்பாடு, செயலில் ஈடுபடுவது எளிது. கடிவாளங்களை விட்டுவிட்டால் குதிரைகள் அவை விரும்பிய திசையில் உங்களை இழுத்துச் செல்லும். இதை எல்லோராலும் செய்ய முடியும். ஆனால் பாய்ந்தோடும் குதிரைகளை இழுத்துப் பிடித்து நிறுத்துபவனே வலிமையுடையவன். அவற்றின் போக்கில் விடுவது, அல்லது அடக்குவது, இரண்டில் எதற்கு அதிக பலம் வேண்டும்? மந்தமாக இருப்பவன் சாந்தமானவன் அல்ல மந்த நிலையையோ சோம்பலையோ தவறாக சத்வம் என்று எண்ணிவிடக் கூடாது. மனத்தின் அலைகளை அடக்கியாள்பவனே சாந்தமானவன். வலிமையின் கீழ் நிலை வெளிப்பாடே செயல். அமைதியோ அதன் உயர் நிலை வெளிப்பாடு.
சித்தம் தன்னியல்பாகிய தூய நிலைக்குத் திரும்பிச் செல்லவே எப்போதும் முயல்கிறது. ஆனால் புலன்கள் அதைப் புறத்தே இழுக்கின்றன. அதை அடக்குவது, புறத்தே செல்வதான அதன் போக்கைத் தடுப்பது. அதை உட்புறமாகத் திருப்பி உணர்வுமயமான புருஷனை நோக்கிச் செல்லும் பாதையில் செலுத்துவது இதுவே யோகத்தின் முதற்படி, ஏனெனில் இந்த வழியில்தான் சித்தம் அதற்குரிய சரியான பாதையில் போக முடியும்.
மிகத் தாழ்ந்தது முதல் மிகவுயர்ந்ததுவரை எல்லா பிராணிகளிலும் சித்தம் உள்ளது. ஆனால் மனிதனிடம் தான் அது புத்தியாக மிளிர்கிறது. சித்தம் புத்தி வடிவம் பெறாமல் இந்தப் படிகள் வழியாகச் செயல்பட்டு ஆன்மாவிற்கு முக்தியளிக்க அதனால் இயலாது. ஒரு பசுவுக்கோ நாய்க்கோ உடனடியாக முக்தி கிடைப்பது இயலாதது. ஏனெனில் அவற்றின் சித்தம் புத்தியாக மாற முடியாது.
சித்தம் கீழ்க்காணும் ஐந்து நிலைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அவை சஞ்சல நிலை (க்ஷிப்தம்), மந்த நிலை(மூடம்), பலமுக நிலை(விக்ஷிப்தம்) ஒருமுக நிலை(ஏகாக்ரம்). மூடுநிலை(நிருத்தம்) என்பன. சஞ்சல நிலையில் அது செயலில் ஈடுபடுகிறது. இன்ப துன்பங்களை வெளிப்படுத்தும் போக்குக் கொண்டதாக இருக்கிறது. மந்த நிலையில் அது மந்தமாக உள்ளது. தீமையை நாடுவதாக உள்ளது. இவற்றுள் முந்திய நிலை தேவர்களுக்கும் வானவர்களுக்கும், பிந்திய நிலை அசுரர்களுக்கும் இயல்பானது என உரையாசிரியர் கூறுகிறார். பலமுக நிலை என்பது சித்தம் ஒரு மையத்தில் தன்னை நிலைநிறுத்த முயலும் நிலையாகும். ஒருமுக நிலையில் அது ஒருமைப்பட முயல்கிறது. மூடுநிலை நம்மைச் சமாதி நிலையில் சேர்க்கிறது.
3. ததா த்ரஷ்டு ஸ்வரூபேஷவஸ்தானம்
அப்போது (மூடு நிலையில்) காண்பவன் (புருஷன்) தனது சொந்த(மாற்றமில்லாத) நிலையில் இருக்கிறான்.
அலைகள் அடங்கி, குளத்தின் நீர் அமைதி பெற்றவுடன் அதன் அடிப்பகுதியை நாம் தெளிவாகக் காண்கிறோம். மனமும் அது போலவே. அது அமைதியாகும் போது நமது சொந்த இயல்பு என்ன என்பதை நாம் காண்கிறோம். வேறு எதனுடனும் கலவாமல் நாம் நாமாகவே இருக்கிறோம்.
4. வருத்தி ஸாரூப்யமிதரத்ர
(மூடுநிலையில் அல்லாத) மற்ற வேளைகளில் புருஷன் சித்த விருத்திகளுடன் ஒன்றுபட்டிருக்கிறான்.
உதாரணமாக, ஒருவன் என்னை நிந்திக்கிறான். அது என் மனத்தில் ஒரு விருத்தியை உண்டாக்குகிறது. நான் என்னை அதனுடன் ஒன்றுபடுத்திக் கொள்கிறேன். பலன் துன்பமே.
5. வருத்தய: பஞ்சதய்ய க்லிஷ்டாஷக்லிஷ்டா
ஐந்து வகை விருத்திகள் உள்ளன(சில)துன்பம் தருபவை. (வேறு சில) துன்பம் அற்றவை.
6. ப்ரமாண விபர்யய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய
(அவை) சரியான அறிவு, தவறான அறிவு, சொல் மயக்கம், தூக்கம், ஞாபகம் என்பவையாகும்.
7. ப்ரத்யக்ஷõனுமானாகமா ப்ரமாணானி
நேரடி அறிவு, ஊகம், தகுதியான அத்தாட்சி என்பவை நிரூபணங்கள்.
நமது நேரடி அறிவில் இரண்டு, ஒன்றுக்கொன்று முரண்படாமல் இருக்குமானால் அதனை நாம் நிரூபணம் என்கிறோம். ஒன்றைப்பற்றிக் கேள்விப்படுகிறோம். அது நாம் ஏற்கனவே கேள்விப்பட்டதிலிருந்து முரண்படுமானால் அதனுடன் போராடத் தொடங்குகிறோம். அதை நாம் நம்புவதில்லை. மூன்றுவிதமான நிரூபணங்கள் உள்ளன. முதலில் நேரடி அறிவு, பிரத்தியட்சம், புலன்களை ஏமாற்றுவதான குறைகள் எதுவும் இல்லாதிருக்குமானால் நாம் காண்பவை, உணர்பவை எல்லாமே நிரூபணம்தான். இந்த உலகை நாம் காண்கிறோம். உலகம் இருப்பதற்கு அது போதிய நிரூபணம் ஆகிறது.
இரண்டாவது, ஊகம், அனுமானம், ஓர் உடையாளத்தைக் காண்கிறோம். அந்த அடையாளத்திற்குரிய பொருளை அதிலிருந்து ஊகித்தறிதல்.
மூன்றாவது பிரமாணம் ஆபத் வாக்கியம், உண்மையைக் கண்டவர்களான யோகிகள் நேரில் கண்டுணர்ந்தவை.
நாம் எல்லோரும் அறிவைப் பெறவே போராடுகிறோம். ஆனால் நீங்களும் நானும் நீண்டகாலம் கடுமையாகப் பாடுபட்டு, சிரமம் மிக்க அறிவாராய்ச்சிப் பாதை வழியாக அறிவைப் பெற வேண்டியுள்ளது. தூயவனான யோகியோ இவற்றைக் கடந்துவிட்டான். அவனது மனத்தின் முன் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே ஒன்றுதான். அவன் படிப்பதற்கான திறந்த ஒரு புத்தகம்தான். அறிவைப் பெறுவதற்காக அவன் நம்மைப் போல் சிரமமான பாதை வழியாகச் செல்ல வேண்டியது இல்லை. அவனது வார்த்தைளே நிரூபணமாக, பிரமாணமாக ஆகிவிடுகிறது. ஏனெனில் அவன் தன்னுள்ளேயே அறிவைக் காண்கிறான். நமது புனித சாஸ்திரங்களை எழுதியவர்கள் இத்தகையவர்களே. எனவே சாஸ்திரங்கள் பிரமாணர்களாகின்றன. அத்தகையோர் இப்போது இருப்பார்களானால் அவர்களது வார்த்தைகள் பிரமாணம் ஆகும்.
வேறு சில தத்துவ அறிஞர்களோ, ஆப்த வாக்கியங்களைப்பற்றி நீண்ட விவாதம் நிகழ்த்தி, யோகிகளின் வார்த்தைக்குப் பிரமாணம் எது என்று கேட்கின்றனர். யோகிகளின் நேரடி அனுபவமே அத்தாட்சி. ஏனெனில் கடந்தகால அறிவுக்கு முரண்படாமல் இருக்குமானால் நான் காண்பவை எல்லாமே பிரமாணம், நீங்கள் காண்பவையும் எல்லாமே பிரமாணம்தான். புலன்களைக் கடந்த அறிவு உள்ளது. அது விவேக புத்திக்கும், மனித குலத்தன் கடந்தகால அனுபவத்திற்கும் முரண்படாமல் இருந்தால் அந்த அறிவு பிரமாணம், ஒரு பைத்தியக்காரன் இந்த அறைக்குள் வந்து, தன்னைச் சுற்றிலும் தேவதூதர்களைக் காண்பதாகச் சொல்லலாம். அது பிரமாணம் ஆகாது. முதலில் அது உண்மையறிவாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, அது கடந்தகால அறிவிற்கு முரண்படக் கூடாது. மூன்றாவதாக அது சொல்பவனின் குணத்தைச் சார்ந்திருக்க வேண்டும். ஒருவனது குணத்தைப்பற்றி அவ்வளவு கவலைப்பட வேண்டியதில்லை. அவன் என்ன சொல்கிறான் என்பதுதான் முக்கியம், அவன் சொல்வது என்ன என்பதைக் கவனிக்க வேண்டும் என்று சிலர் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். இது மற்ற விஷயங்களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்கலாம், தீயவனாக இருக்கின்ற ஒருவன் வானியலில் ஓர் உண்மையைக் கண்டு பிடித்திருக்கலாம். ஆன்மீகத் துறையில் விஷயமே வேறு. தூயவன் அல்லாத ஒருவன் ஒருபோதும் ஆன்மீக உண்மைகளை அடையும் வல்லமை பெற மாட்டான்.
ஆகவே தன்னை ஆப்தன் என்று சொல்லிக் கொள்கின்ற ஒருவன் முற்றிலும் தன்னலமற்றவனாகவும் புனிதமானவனாகவும் இருக்கின்றானா என்று முதலில் பார்க்க வேண்டும். இரண்டாவதாக, அவன் புலன்களைக் கடந்தவனாக இருக்கிறானா என்று பார்க்க வேண்டும். மூன்றாவதாக, அவன் கூறுபவை மனிதகுலத்தின் கடந்தகால அறிவுடன் முரண்படாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை எதுவும் பழைய உண்மைக்கு மாறுபட்டதாக இருக்க முடியாது. மாறாக அதை அனுசரித்துப் போவதாகவே இருக்கும். நான்காவதாக, அந்த உண்மை சோதித்துப் பார்க்கத் தக்கதாக இருக்க வேண்டும். தான் ஒரு காட்சியைக் கண்டதாகவும், அந்தக் காட்சி மற்றொருவனுக்குக் கிடைக்காது என்றும் ஒருவன் கூறினால் அவனை நான் நம்ப மாட்டேன். அது ஒவ்வொருவரும் சோதிக்கத் தக்காத இருக்க வேண்டும். தன் அறிவை விற்கும் ஒருவன் ஆப்தன் அல்ல. முதலில் இந்த நிபந்தனைகள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும். முதலில் அவன் தூயவனா, சுயநல நோக்கம் எதுவும் இல்லாதவனா, பணத்திற்கோ புகழுக்கோ ஆசைப்படாதவனா என்பதைப் பார்க்கவேண்டும். இரண்டாவதாக, அவன் உணர்வுகடந்த நிலையை அடைந்தவனா என்பது தெளிவாக வேண்டும். நாம் நமது புலன்களால் அடைய முடியாததும் உலகிற்குப் பயன்படக் கூடியதாகவும் உள்ள ஒன்றை அவன் நமக்குத் தரவேண்டும். மூன்றாவதாக, அந்த உண்மை மற்ற உண்மைகளுக்கு முரண்படாததாக இருக்க வேண்டும்; விஞ்ஞான பூர்வமான மற்ற உண்மைகளுக்கு முரண்படுமானால் உடனடியாக அதனை விலக்கிவிட வேண்டும். நான்காவதாக, அவன் கூறுவது, தன் கொள்கை தனக்கு மட்டுமே சாத்தியம் என்ற ரீதியில் இருக்கக் கூடாது, எல்லோரும் பின்பற்றக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். ஆகவே நேரடியான புலனறிவு, ஊகம், ஆப்த வாக்கியம் என்பவை மூவகைப் பிரமாணங்கள்.
ஆப்தன் என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இயலாது. அருள் ஆவேசம் என்பதல்ல அந்த வார்த்தை, ஏனெனில் அருள் ஆவேசம் வெளியிலிருந்து வருவதாக நம்பப்படுகிறது. ஆனால், இந்த ஞானமோ மனிதனின் உள்ளிருந்து வருவது, அடையப் பெற்றவன் என்பது ஆப்தன் என்ற சொல்லின் பொருளாகும்.
8. விபர்யயோ மித்யா ஞானமதத்ரூப ப்ரதிஷ்ட்டம்
தவறான அறிவு என்பது பொய்யறிவு, அது உண்மை இயல்பில் நிலைபெறாது.
முத்துச்சிப்பியை வெள்ளியென்று எண்ணுவது போல் ஒன்றை மற்றொன்றாகப் பிழைபட எண்ணுவதால் எழும் விருத்திகள் அடுத்த வகையாகும்.
9. சப்தஜ்ஞானானுபாதீ வஸ்துசூன்யோ விகல்ப:
சொற்களால் (அவை சுட்டுகின்ற) பொருள் இல்லாத நிலையில் வருவது சொல் மயக்கம்.
விகல்பம் என்ற மற்றொரு வகை விருத்திகள் உள்ளன. ஒரு சொல்லைக் கேட்கிறோம், அதன் பொருளைப்புரிந்து கொள்ளக் காத்திருக்காமல் உடனே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம். இது சித்தத்தின் பலவீனத்திற்கு அறிகுறி. கட்டுப்பாடு என்பதன் உண்மையை இப்போது நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். ஒருவன் எவ்வளவுக்கு பலவீனனாக இருக்கிறானோ, அந்த அளவிற்கு கட்டுப்பாடு ஆற்றல் குறைந்தவனாக இருப்பான். எப்போதும் இந்த நியதிமூலம் உங்களைச் சோதித்துப் பாருங்கள். உங்களுக்குக் கோபம் அல்லது வருத்தம் வரும்போது, சில செய்திகள் எவ்வாறு உங்கள் மனத்தை விருத்திகளாக எழச் செய்கிறது என்பதை ஆராய்ந்து அறியுங்கள்.
10. அபாவப்ரத்யயாலம்பனா வ்ருத்திர்நித்ரா
சூன்ய உணர்ச்சியைத் தழுவி நிற்கும் விருத்தி தூக்கம்.
தூக்கமும் கனவும் அடுத்த வகை விருத்திகள். நாம் தூங்கினோம் என்பதை விழிக்கும்போது அறிகிறோம். அனுபவித்ததிலிருந்தே நினைவு வர முடியும். நாம் அனுபவிக்காததை நினைவிற்குக் கொண்டுவர முடியாது. ஒவ்வோர் எதிர்ச் செயலும் சித்தக் குளத்தில் எழும் ஒரு விருத்தியே. தூக்கத்தின்போது மனத்தில் விருத்திகள் எதுவும் இல்லையென்றால் அங்கு உடன்பாடாகவோ எதிர் மறையாகவோ எந்த அனுபவமும் இருக்காது. பின்னர் அவற்றை நாம் நினைவுகூரவும் மாட்டோம். தூங்கும்போது மனத்தில் ஒருவகை விருத்தி எழுவதன் காரணத்தால்தான் பின்னால் நாம் நினைவுகூர முடிகிறது. நினைவு மற்றொரு வகை விருத்தி. அதற்கு ஸ்மிருதி என்று பெயர்.
11. அனுபூத விஷயாஸம்ப்ரமோஷ: ஸ்ம்ருதி:
அபவித்த விஷயங்கள் (அதாவது விஷயங்களின் விருத்திகள்) நழுவிவிடாதிருப்பது (அத்துடன் சம்ஸ்காரங்களின் மூலம் திரும்ப உணர்வுக்கு வருவதும்) நினைவு ஆகிறது.
நேரடி அனுபவம், தவறான அறிவு, சொல் மயக்கம், தூக்கம் இவற்றிலிருந்தெல்லாம் நினைவு வர முடியும். சான்றாக ஒரு வார்த்தையை நீங்கள் கேட்கிறீர்கள். அந்தச் சொல் சித்தமாகிய குளத்தில் எறிந்த கல்லைப் போன்றது. அது ஓர் அலையை உண்டாக்குகிறது. அந்த அலை பல அடுக்குத் தொடர்களை எழுப்புகிறது. இதுவே நினைவு. தூக்கத்திலும் அவ்வாறே. தூக்கம் என்ற அலை சித்தத்தில் ஒரு நினைவு அலையை எழுப்புகிறது. இது கனவு. நனவு நிலையில் நினைவு எனப்படுகின்ற அலையின் மற்றோர் உருவமே கனவு.
12. அப்யாஸ வைராக்யாப்யாம் தன்னிரோத:
பயிற்சியாலும் பற்றின்மையாலும் அவற்றை அடக்கலாம்.
பற்றின்மை வேண்டுமானால் மனம் தெளிவாக, நன்மை நிறைந்ததாக, விவேகம் உடையதாக இருக்க வேண்டும். பயிற்சி ஏன் வேண்டும்? ஒவ்வொரு செயலும் நீர்ப்பரப்பில் எழுகின்ற அலைகளைப் போன்றவை. அலைகள் ஓய்ந்தபின் என்ன எஞ்சியிருக்கிறது? சம்ஸ்காரங்கள், பதிவுகள். இத்தகைய பல பதிவுகள் மனத்தில் ஏற்படும் போது அவை ஒருங்கிணைந்து பழக்கம் ஆகிறது. பழக்கம் என்பது இரண்டாம் இயல்பு என்பர், முதல் இயல்பும் அதுதான், மனிதனின் முழு இயல்பும் அதுதான். நாம் இப்போது எதுவெல்லாமாக இருக்கிறோமோ அது பழக்கத்தின் விளைவுதான். இது நமக்கு ஆறுதலாக இருக்கிறது. ஏனெனில் அது வெறும் பழக்கம் மட்டுமே என்றால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும், அதை உருவாக்கலாம் இல்லாமலும் செய்யலாம்.
மனத்தைக் கடந்து செல்கின்ற ஒவ்வொரு விருத்தியும் அதில் விட்டுச் செல்கின்ற விளைவே சம்ஸ்காரம். இந்தப் பதிவுகளின் ஒட்டுமொத்தமே நமது குணம். இதில் ஏதாவது ஒரு விருத்தி மேலோங்கும்போது அதற்கேற்ப ஒருவனது குணம் அமைகிறது. நல்லவை மேலோங்கினால் நல்லவன் ஆகிறான்; தீயவை மேலோங்கினால் தீயவன் ஆகிறான். மகிழ்ச்சியானவை மேலோங்கினால் மகிழ்ச்சி அடைகிறான். தீய பழக்கங்களை நீக்குவதற்கு ஒரே வழி நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்வதுதான். தீய சம்ஸ்காரங்கள் விட்டுச் சென்றுள்ள தீயபழக்கங்களை நல்ல பழக்கங்களால்தான் கட்டுப்படுத்த வேண்டும். தொடர்ந்து நற்செயல்களைச் செய்யுங்கள் ! புனித எண்ணங்களை எப்போதும் எண்ணுங்கள் ! தீய சம்ஸ்காரங்களை அடக்க இது ஒன்றுதான் வழி. திருந்தவே முடியாதவன் என்று ஒருவனை ஒருபோதும் கூறாதீர்கள். ஏனெனில் பல பழக்கங்களின் மொத்தமான ஒரு குணத்தையே அவன் வெளிப்படுத்துகிறான். இதனைப் புதிய நல்ல பழக்கங்களால் மாற்றிவிட முடியும். தொடர்ந்த பழக்கம் குணத்தை உருவாக்குகிறது. தொடர்ந்த பழக்கங்கள் மட்டுமே குணத்தை மாற்றியமைக்க முடியும்.
13. தத்ர ஸ்திதௌ யத்னோஷப்யாஸ:
அவற்றை (விருத்திகளை) முற்றிலுமாக அடக்கி வைப்பதற்கான தொடர்ந்த முயற்சியே பயிற்சி எனப்படுகிறது.
பயிற்சி என்பது என்ன? மனத்தை அலை வடிவமாக வெளியே போகவிடாமல் தடுத்து, சித்தவடிவமாக நிலை பெறவைக்கும் முயற்சியே.
14. ஸ து தீர்க கால நைரந்தர்ய ஸத்கார ஸேவிதோ த்ருடபூமி:
(அடைய வேண்டிய லட்சியத்தில் அன்புபூண்டு) நீண்ட காலமாக முயற்சிகள் செய்தால் அது உறுதியாக நடைபெறும்.
கட்டுப்பாடு என்பது ஒரே நாளில் வருவதில்லை. நீண்ட தொடர்ந்த பயிற்சியால் அது முடியும்.
15. த்ருஷ்டானுச்ரவிகவிஷயவித்ருஷ்ணஸ்ய வசீகார ஸம்ஜ்ஞா வைராக்யம்
பார்த்த அல்லது கேட்ட விஷயங்களின் மீதுள்ள ஆசையை விட்டவர்களிடம் எந்த மனநிலை வந்து சேர்கிறதோ, எந்த மனநிலையில் பொருட்களின் மீதுள்ள ஆசையெல்லாம் அவர்கள் அடக்க முடியுமோ அதுவே பற்றின்மை.
நமது செயல்களைத் தூண்டுவதற்கு இரு சக்திகள் உள்ளன: (1) நாமே காண்பது, (2) பிறரது அனுபவம். இந்த இரண்டு சக்திகளும் நமது மனமாகிய குளத்தில் பல்வேறு அலைகளை எழுப்புகின்றன. இந்தச் சக்திகளை எதிர்த்துப் போராடி, மனத்தை அடக்கி வைக்கும் ஆற்றல் பற்றின்மைக்கு உண்டு. அத்தகைய பற்றின்மையே நமக்கு வேண்டும். நான் ஒரு தெரு வழியே சென்று கொண்டிருக்கிறேன், ஒருவன் வந்து என் கைக்கடிகாரத்தைப் பிடுங்கிச் சென்றுவிடுகிறான். இது எனது சொந்த அனுபவம். நான் அதைப் பார்க்கிறேன். உடனே அது என் சித்தத்தைக் கோப வடிவ அலையாக எழுப்புகிறது. அதனை எழவிடாதீர்கள். அதை உங்களால் தடுக்க முடியாவிட்டால் நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள், தடுக்க முடியுமானால் உங்களிடம் வைராக்கியம் உள்ளது, பற்றின்மை உள்ளது. இனி, உலகியல் மனிதர்களைப் பார்க்கும்போது, புலனின்பங்களே மிகவுயர்ந்த லட்சியம் என்று நமக்குப்படுகிறது. இவை பலமான கவர்ச்சிகள். இவற்றை மறுத்துவிட்டு, மனம் அந்த ஆசை வடிவான விருத்தியாக எழாமல் அடக்குவது வைராக்கியம். நமது அனுபவங்கள் மற்றும் பிறரது அனுபவங்களால் வரும் இரண்டுவிதத் தூண்டுசக்திகளையும் அடக்கி, அவை சித்தத்தை அடக்கியாளதபடி செய்வது பற்றின்மை. நாம் அடக்கவேண்டுமே தவிர, அவை நம்மை அடக்கக் கூடாது. இத்தகைய மன வலிமையே பற்றின்மை. பற்றின்மை ஒன்றே முக்திக்கு வழி.
16. தத்பரம் புருஷக்யாதேர்குணவைத்ருஷ்ண்யம்
தீவிரப் பற்றின்மை என்பது பண்புகளில்கூடப் பற்றற்று இருத்தலாகும். இது புருஷனை (அதாவது புருஷனின் உண்மை இயல்பை) அறிவதால் ஏற்படுகிறது.
பண்புகளின் மீதுள்ள நமது கவர்ச்சியையும் அகற்ற வல்லதாகும்போது, அது வைராக்கிய ஆற்றலின் மிக உயர்ந்த வெளிப்பாடாகும். புருஷன் அல்லது ஆன்மா யார், குணங்கள் என்பவை என்ன என்பதை முதலில் அறிய வேண்டும். யோகத் தத்துவத்தின்படி, இயற்கை முழுவதும் மூன்றுவகை குணங்களால் அல்லது சக்திகளால் ஆக்கப்பட்டுள்ளன. அவை தமஸ், ரஜஸ், சத்வம் இந்த மூன்று குணங்களும் பவுதீக உலகில் இருள் அல்லது செயலற்ற நிலை, ஈர்ப்பு சக்தி அல்லது விலக்கும் சக்தி, இந்த இரண்டின் சமச்சீர் நிலை என்று மூன்று விதமாக வெளிப்படுகின்றன. இயற்கையிலுள்ள எல்லாமே இந்த மூன்று சக்திகளுடைய வெவ்வேறு விதமான சேர்க்கையின் வெளிப்பாடுகளே. சாங்கியத் தத்துவம் பிரகிருதியைப் பல்வேறு தத்துவங்களாகப் பிரிக்கிறது. ஆன்மா இவையனைத்தையும் கடந்தது, இயற்கையைக் கடந்தது. அது, தானே ஒளிர்வது, தூய்மையானது, பரிபூரணமானது. உணர்வுடையதாக இயற்கையில் காணப்படுகின்ற எல்லாமே இந்த ஆன்மாவின் மீதுள்ள பிரதிபலிப்பே. இயற்கை என்பது ஜடப்பொருள். இயற்கை என்ற சொல் மனத்தையும் உள்ளடக்கியது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மனம் இயற்கையில் உள்ளது, எண்ணம் இயற்கையில் உள்ளது. எண்ணம் முதல் மிகவும் தூலமான ஜடப்பொருட்கள் வரை அனைத்தும் இயற்கையில் உள்ளன. அனைத்தும் இயற்கையின் வெளிப்பாடே. இந்த இயற்கை, மனிதனின் ஆன்மாவை மறைத்துள்ளது. இயற்கை அந்தத் திரையை விலக்கியதும் ஆன்மா தன் மகிமையுடன் தோன்றி மிளிர்கிறது. பதினைந்தாம் சூத்திரத்தில் விளக்கியதுபோல் (பொருட்களை அல்லது இயற்கையையே அடக்குவதாகிய) பற்றின்மை தான் ஆன்மாவை வெளிப்படுவதில் மிகவும் உதவுகிறது. அடுத்த சூத்திரம் யோகியின் குறிக்கோளான சமாதியை விளக்குகிறது.
17. விதர்க்க விசாரானந்தாஸ்மிதானுகமாத் ஸம்ப்ரஜ் ஞாத:
ஆராய்ச்சி, விவேகம், இன்பம், நிர்க்குண அகங்காரம் இவற்றைத் தொடர்ந்து வருவது உணர்வுடன் கூடிய சமாதி.
சமாதி இருவகைப்படும். ஒன்று சம்ப்ரஜ்ஞாத சமாதி, உணர்வோடு கூடியது; மற்றது அசம்ப்ரஜஞாத சமாதி, உணர்வோடு கூடாதது. சம்ப்ரஜ்ஞாத சமாதியில் இயற்கையை வெல்லும் திறன்கள் எல்லாம் வந்து எய்துகின்றன. இது நான்கு வகைப்படும்.
முதல் வகை ஸவிதர்க்கம் எனப்படும்; மனம் ஒரு பொருளை வேறு பொருட்களிலிருந்து பிரித்து அதை மீண்டும்மீண்டும் தியானிப்பது ஸவிதர்க்கம். சாங்கியர்கள் கூறும் இருபத்தைந்து தத்துவங்களில் தியானத்திற்கு இருவகைப்பொருட்கள் உள்ளன: (1) இயற்கையில் உள்ள இருபத்து நான்கு ஜட தத்துவங்கள், (2) உணர்வுப் பொருளாகிய புருஷன். யோகத்தின் இந்தப் பகுதி முற்றிலும் சாங்கியத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதுபற்றி நான் ஏற்கனவே உங்களுக்குக் கூறியுள்ளேன். அகங்காரம், சுயேச்சை, மனம் - இவை மூன்றும் சித்தத்தையே பொது ஆதாரமாகக் கொண்டவை; சித்தத்திலிருந்து அவை உருவாக்கப்பட்டுள்ளன. சித்தம் இயற்கை சக்திகளை எடுத்து அவற்றை எண்ணமாக வெளியிடுகிறது.
சக்தியும் ஜடப்பொருளும் ஒன்றாக இருக்கின்ற ஒரு பொருள் இருந்தேயாக வேண்டும். இது அவ்யக்தம் என்று அழைக்கப்படுகிறது. படைப்பிற்கு முன், இயற்கையின் தோன்றாநிலை இது. ஒரு கல்பத்தின் இயற்கை முழுவதுமே அவ்யக்த நிலைக்குத் திரும்பிச் செல்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் தோன்றுகிறது. அதற்கு அப்பால் இருப்பது உணர்வின் சாரமாகிய புருஷன்.
அறிவே ஆற்றல். ஒரு பொருளைப் பற்றி அறியத் தொடங்கும்போதே அதை நாம் ஆதிக்கத்திற்குள் கொண்டு வருகிறோம். அதுபோல் இயற்கையிலுள்ள பல்வேறு விஷயங்களை மனம் தியானிக்கத் தொடங்கும்போதே அவற்றின்மீது அதற்கு ஆற்றல் உண்டாகிறது. புறத்தே உள்ள தூல பூதங்கள் தியானப் பொருட்களாக அமைகின்ற தியானமே ஸவிதர்க்கம். விதர்க்கம் என்றால் வினா. ஸவிதர்க்கம் என்றால் வினாவுடன் அமைந்தது என்று பொருள். இது, தூல பூதங்களை தியானிப்பவன், அவற்றிடம் தங்கள் உண்மைகளையும் சக்திகளையும் தனக்கு வெளிப்படுத்துமாறு கேட்பது போலாகும்.
இவ்வாறு சக்திகளைப் பெறுவதால் முக்தி கிடைக்காது, சக்திகளைப் பெறுவது என்பது சுகபோகங்களை நாடுகின்ற ஓர் உலகியல் தேடல் மட்டுமே. இந்த இன்ப நாட்டம் வீண். இது மிகப் பழைய பாடம். மனிதன் இதைப் புரிந்துகொள்வது மிகக் கடினமான விஷயம். இதைப் புரிந்துகொள்ளும்போது, அவன் பிரபஞ்சத்தை விட்டு வெளியேறி முக்தி பெறுகிறான். சித்திகளைப் பெறுவது என்பது உலகப் பற்றை அதிகரிப்பது மட்டுமே, முடிவில் துயரத்தை அதிகரிப்பது மட்டுமே. ஒரு விஞ்ஞானி என்ற ரீதியில், இந்த விஞ்ஞானம் சாதிக்க முடிந்தவற்றைப் பதஞ்ஜலி முனிவர் எடுத்துக்காட்டக் கடமைப்பட்டவர். ஆனாலும் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பிலும் அவற்றைக் குறித்து அவர் நம்மை எச்சரிக்கவே செய்கிறார்.
இதே தியானத்தில் காலத்தையும் இடத்தையும் தூல பூதங்களிலிருந்து விலக்கி, அவற்றை உள்ளது உள்ளபடி தியானிப்பது நிர்விதர்க்கசமாதி; அல்லது வினா அற்ற சமாதி.
தியானம் இன்னும் ஒரு படி மேலே சென்று, தன் மாத்திரைகளை அதாவது சூட்சும பூதங்களைத் தியானப் பொருளாகக் கொண்டு, அவை காலத்திலும் இடத்திலும் இருப்பதாகத் தியானிப்பது ஸவிசாரம் அல்லது விவேக சமாதி. இதே தியானத்தில் காலத்தையும் இடத்தையும் ஒதுக்கிவிட்டு, சூட்சும பூதங்களை அவை உள்ளது உள்ள படி தியானம் செய்வது நிர்விசாரம் அல்லது விவேகம் கடந்த சமாதி.
அடுத்தபடி, தூல மற்றும் சூட்சும பூதங்களை ஒதுக்கி விட்டு, அந்தக்கரணத்தையே தியானிப்பது, அதாவது தியானப் பொருளாகக்கொள்வது. செயல், சோம்பல் போன்ற குணங்கள் அற்றதாக அந்தக்கரணத்தைத் தியானிப்பது ஸானந்தம், ஆனந்த சமாதி.
அடுத்ததில் மனமே தியானப் பொருளாகிறது. இந்தத் தியானம் முதிர்ந்து நன்றாகக் குவிந்து, தூல மற்றும் சூட்சும ஜடப்பொருட்கள் பற்றிய எண்ணங்கள் போய், நான்- உணர்வின் சத்வநிலை மட்டும் மற்றப் பொருட்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு, எஞ்சியிருக்கின்ற நிலையே ஸாஸ்மித சமாதி. இந்த ஸாஸ்மித சமாதியை அடைபவன், வேதங்கள் கூறுகின்ற விதேகநிலையை அதாவது உடலற்ற நிலையை அடைகிறான். அவன் தனக்குத் தூல உடல் இல்லாததாக நினைக்கலாம்; ஆனால் சூட்சும உடலுடன் கூடியனவாக அவன் எண்ண வேண்டும். இந்த நிலையை அடைந்து, லட்சியத்தை அடையாமல் இயற்கையில்லயித்திருப்பவர்கள் பிரகிருதிலயர் எனப்படுவர். இந்த நிலையில் நின்றுவிடாமல் மேலே செல்பவர்கள் லட்சியத்தை அடைகிறார்கள், அதாவது முக்தி பெறுகிறார்கள்.
18. விராம ப்ரத்யயாப்யாஸ பூர்வ: ஸம்ஸ்கார சேஷ÷ஷான்ய:
மனத்தின் எல்லா செயல்பாடுகளையும் அடக்குவதைத் தொடர்ந்து பயிற்சி செய்வதால் மற்றொரு வகை சமாதி வாய்க்கிறது. இதை எய்தும்போது தோன்றா நிலையிலுள்ள சம்ஸ்காரங்கள் மட்டுமே சித்தத்தில் எஞ்சியிருக்கும்.
இதுதான் பூரணமாக உணர்வுகடந்த அசம்ப்ரஜ்ஞாத சமாதி. இது நமக்கு முக்தியை அளிக்கிறது. முதலில் கூறிய சம்ப்ரஜ்ஞாத சமாதி நமக்குச் சுதந்திரம் தருவதில்லை, ஆன்மாவை முக்தி பெறச் செய்வதில்லை. ஒருவன் எல்லா சக்திகளையும் பெறலாம், ஆனாலும் மீண்டும் வழுவிக் கீழ்நிலைக்குச் செல்ல வாய்ப்புண்டு. இயற்கையைக் கடந்து செல்லாதவரை ஒருவனுக்குப் பாதுகாப்பு இல்லை. அவ்வாறு கடந்து செல்வதற்கான வழி எளிதுபோல் தோன்றினாலும் உண்மையில் அது கடினம். மனத்தையே தியானம் செய்வதுதான் வழி. எண்ணம் ஏதாவது எழுமானால் உடனே அதை விரட்ட வேண்டும். மனத்திற்குள் எந்த எண்ணமும் வராமல் தடுத்து மனத்தை முழுவதும் வெறுமையாக்க வேண்டும், உண்மையிலேயே இவ்வாறு செய்ய முடியுமானால், அந்தக் கணமே நமக்கு முக்தி வாய்க்கிறது.
பயிற்சியும் தகுதியும் இல்லாதவர்கள் மனத்தை வெறுமையாக்க முயன்றால், அஞ்ஞான வடிவமான தமஸால் தங்களை மூடிக்கொள்வதில்தான் வெற்றி பெற நேரும். இது மனத்தை மந்தநிலையில், செயலற்ற நிலையில் ஆழ்த்தி, இதுதான் மனம் வெறுமையாகின்ற நிலை என்று அவர்களை எண்ணச் செய்கிறது. உண்மையில் மனத்தை வெறுமையாக்க மகத்தான வலிமையும், தீவிரமான கட்டுப்பாடும் வேண்டும்.
அசம்ப்ரஜ்ஞாத நிலையில் சமாதி,விதையற்றது ஆகிறது. அப்படி என்றால் என்ன? சம்ப்ரஜ்ஞாத சமாதியில் சித்தத்தில் உள்ள அலைகளை வசப்படுத்தி அடக்கி வைக்க மட்டுமே மனத்தால் முடிகிறது; அலைகள் சம்ஸ்காரங்களாக (விதைகளாக) அங்கு இருக்கவே செய்கின்றன. தருணம் வாய்க்கும்போது அவை மீண்டும் அலைகளாகின்றன. இந்த விதைகளை எல்லாம் அழித்து, மனமும் ஏறக்குறைய அழிந்துவிடும்போது சமாதி விதையற்றதாகிறது. அதன்பின் இந்த வாழ்க்கை என்னும் செடியை, ஓய்வின்றிச் சுழன்று வரும் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியை, மீண்டும்மீண்டும் உண்டாக்குவதற்கு வேண்டிய விதைகள் மனத்தில் இல்லாமல் போய்விடுகிறது.
மனமும் அறிவும் ஒழிந்த இந்த நிலை எத்தகையது என்று நீங்கள் கேட்கலாம். நாம் அறிவு என்று சொல்வது அறிவைக் கடந்த நிலைக்குக் கீழானது. எதிர்க்கோடிகள் ஒன்றுபோலவே தோன்றும். ஆகாசத்தின் மிகக் குறைந்த அதிர்வு இருளாயிருக்குமானால், இடைநிலை ஒளியாகிறது; மிக உயர்ந்த அதிர்வு மீண்டும் இருளாகும். அதுபோலவே அறிவின்மை என்பது மிகவும் கீழ்நிலை; அறிவு என்பது இடைநிலை; அறிவுக்கு அப்பால் உள்ளது மிகவுயர்ந்த நிலை. இரு கோடிகளும் ஒத்திருப்பதுபோல் தோன்றுகிறது. அறிவும் உற்பத்தி செய்யப்பட்ட கூட்டுப் பொருளே; அது உண்மைப் பொருள் அல்ல.
இந்த ஒருமைப்பாட்டின் உயர்ந்த சமாதியைத் தொடர்ந்து பழகுவதால் கிடைக்கும் பயன் என்ன? சஞ்சலம், சோம்பல் முதலான எல்லா பழைய சம்ஸ்காரங்களும் அழிந்து போகின்றன. அத்துடன் நல்ல சம்ஸ்காரங்களும் அழிகின்றன. பொன் தாதுவிலிருந்து மற்ற உலோகங்களையும் அழுக்கையும் அகற்றுவதற்காக அதனுடன் ரசாயனப் பொருட்களைச் சேர்ப்பது போன்றது இது. தாதுவை உருக்கும்போது, பிற உலோகங்களும் அழுக்கும் விலகுவதுடன், ரசாயனப் பொருட்களும் மறைந்துவிடுகின்றன. இவ்வாறு இடைவிடாது மனத்தை ஒடுக்கும் பயிற்சியின் ஆற்றலால் பழைய தீய சம்ஸ்காரங்கள் அழிகின்றன. இறுதியாக நல்ல சம்ஸ்காரங்களும் தீய சம்ஸ்காரங்களும் ஒன்றையொன்று அடக்கிவிடுகின்றன. பிறகு ஆன்மா மட்டும் நன்மை மற்றும் தீமைகளால் கட்டுப்படாததாய், எங்கும் நிறைந்ததாய், எல்லாம் வல்லதாய், எல்லாம் அறிந்ததாய் சுய ஒளியில் மிளிர்கிறது. அப்பொழுதுதான் மனிதன் தனக்குப் பிறப்பு இறப்பு எதுவும் இல்லை, விண்ணுலகோ மண்ணுலகோ எதுவும் வேண்டியதில்லை என்பதை அறிகிறான். தான் பிறந்ததும் இல்லை, இறக்கப் போவதும் இல்லை, எல்லாமே இயற்கையின் விளையாட்டு, அது ஆன்மாவில் பிரதிபலித்தது என்பதை அறிகிறான். கண்ணாடியில் பிரதிபலிக்கும் ஒளி சுவரில் நகருகிறது. ஆனால் சுவரோ முட்டாள்தனமாக தானே நகர்வதாக நினைக்கிறது. நம் விஷயமும் அவ்வாறே. சித்தம் தான் பல்வேறு உருவங்களாகி ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாமோ, இந்த உருவங்கள் எல்லாம் நாமே என்று நினைக்கிறோம். இந்த மயக்கங்கள் எல்லாம் மறைந்துவிடும். அந்தச் சுதந்திர ஆன்மா கட்டளையிடும் போது, ஆம், அது பிரார்த்திக்க வேண்டியதில்லை, கெஞ்ச வேண்டியதில்லை, அது கட்டளையிடுகின்ற அந்தக் கணமே அதன் விருப்பங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நினைத்ததை எல்லாம் அதனால் செய்ய முடியும்.
சாங்கியத் தத்துவப்படி, இறைவன் என்று ஒருவர் இல்லை. அப்படி ஒருவர் இருக்க முடியாது, இருந்தால் அவர் ஆன்மாவாகத்தான் இருக்க வேண்டும். ஆன்மா என்றால் அது கட்டுப்பட்டிருக்க வேண்டும் அல்லது சுதந்திரமாக இருக்க வேண்டும். இவ்வாறு இயற்கையில் கட்டுப்பட்ட, இயற்கையின் ஆதிக்கத்திலுள்ள ஆன்மா எவ்வாறு படைக்க முடியும்? அதுவே அடிமையாக அல்லவா இருக்கிறது ! மாறாக அது சுதந்திரமாக இருக்கிறது என்றால், ஏன் படைக்க வேண்டும்? ஏன் இதையெல்லாம் உருவாக்க வேண்டும்? அதற்கு ஆசைகள் இல்லை, எனவே படைப்பதற்கான தேவையும் இருக்க முடியாது.
இரண்டாவதாக, கடவுள் கொள்கை அவசியமில்லை என்கிறது சாங்கியத் தத்துவம். இயற்கையே எல்லாவற்றையும் விளக்குவதாக இருக்கும்போது கடவுள் என்ற ஒருவரால் என்ன பயன்? ஆனால் கபிலர் ஏறக்குறைய நிறைநிலை அடைந்த ஆன்மாக்கள் பலர் இருப்பதைப்பற்றிக் கூறுகிறார். எல்லா சக்திகளையும் அவர்களால் முற்றிலுமாகத் துறக்க முடியாததால் அவர்கள் நிறைநிலையை அடையவில்லை என்கிறார் அவர். அவர்களின் மனம் சிறிது காலம் இயற்கையில் லயித்திருக்கிறது, பிறகு அவர்கள் வெளிவந்து இயற்கையின்மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். அத்தகைய தெய்வங்களே உள்ளனர். நாமும் அத்தகைய தெய்வங்கள் ஆகலாம், வேதங்கள் கூறுகின்ற கடவுள் உண்மையில் இத்தகைய முக்த புருஷர்களுள் ஒருவரே. இவர்களைத் தவிர, எப்போதும் சுதந்திரமான, அருள்வடிவான, பிரபஞ்சத்தைப் படைத்த ஒருவர் இல்லை என்று சாங்கியம் கூறுகிறது.
மாறாக யோகிகளோ, ஒருபோதும் இல்லை. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். மற்ற எல்லா ஆன்மாக்களிலிருந்தும் வேறுபட்ட ஒருவர் இருக்கிறார். படைப்பின் நிரந்தரத் தலைவர் அவரே. அவர் என்றும் சுதந்திரர்; குருவுக்கெல்லாம் குரு என்கின்றனர். பிரகிருதிலயர் என்று சாங்கியர்கள் குறிப்பிடுகின்றவர்களும் உள்ளனர் என்பதை யோகிகள் ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் பூரணத்துவதிலிருந்து சிறிது குறைந்த நிலையில் உள்ளவர்கள், இல்க்கை அடையாதவர்கள். அவர்கள் பிரபஞ்சத்தின் சில பகுதிகளுக்கு அதிபதிகளாக இருப்பார்கள்.
19. பவ ப்ரத்யயோ விதேஹ ப்ரக்ருதி லயானாம்
(இந்தச் சமாதி தீவிரமான பற்றின்மையைத் தொடர்ந்ததாக இல்லாதபோது) தேவர்களும் பிரகிருதிலயர்களும் மீண்டும் பிறக்கக் காரணமாகிறது.
இந்திய நெறிகளின் தத்துவ சாஸ்திரத்தில் தேவர்கள் எனப்படுபவர்கள் குறிப்பிட்ட உயர் பதவிகளை வகிப்பவர்கள். ஒருவர்பின் ஒருவராகப் பல உயிர்கள் இந்தப் பதவிகளை வகிப்பர். இவர்களுள் யாரும் நிறைநிலை அடைந்தவர்கள் அல்ல.
20. ச்ரத்தா வீர்ய ஸ்ம்ருதி ஸமாதி ப்ரஜ்ஞா பூர்வக இதரேஷாம்
(இந்தச் சமாதி) நம்பிக்கை, ஆற்றல், ஞாபக சக்தி, மன ஒருமைப்பாடு, விவேகம் இவற்றின் மூலமாகவும் வேறு சிலருக்கு இவர்கள் தேவ பதவியையோ புவனங்களை ஆளும் பதவியையோ விரும்பாதவர்கள். இவர்கள் முக்தி பெறுகின்றனர்.
21. தீவ்ர ஸம்வேகானாமாஸன்ன:
தீவிர வேகத்துடன் முயல்வோருக்கு விரைவில் வெற்றி கிடைக்கிறது.
22. ம்ருதுமத்யாதி மாத்ரத்வாத் ததோஷபி விசேஷ:
பின்பற்றுகின்ற சாதனை மெதுவாகவும் நடுத்தரமாகவும் விரைவாகவும் இருப்பதற்கேற்ப யோகியரின் வெற்றியும் வேறுபடும்.
23. ஈச்வரப்ரணிதானாத்வா
அல்லது இறைவனிடம் பக்தி கொள்வதால்.
24. க்லேச கர்ம விபாகாசயைரபராம்ருஷ்டபுருஷவிசேஷ ஈச்வர:
துன்பம், செயல்கள், அதன் பலன்கள், ஆசைகள் இவற்றால் தீண்டப்படாத ஒரு விசேஷ புருஷன் ஈசுவரன் (எல்லாவற்றையும் ஆள்பவர்) எனப்படுகிறார்.
பதஞ்ஜலி முனிவரின் யோகத் தத்துவம் கபில முனிவரது சாங்கியத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை மீண்டும் நாம் நினைவுகூர வேண்டும். சாங்கியத்தில் கடவுளுக்கு இடமில்லை. யோகத் தத்துவத்தில் கடவுளுக்கு இடம் உண்டு; ஆனால் அவர் படைத்தல் போன்ற தொழில்கள் புரிவதாக அவர்கள் கூறுவதில்லை. யோகியர் ஈசுவரன் என்று குறிப்பிடுவர் உலகைப் படைப்பவரான கடவுள் அல்ல. வேதங்களின் படி இறைவன் பிரபஞ்சத்தைப் படைப்பவர்; பிரபஞ்சத்தில் ஓர் இயைபு நிலவுவதால் அது ஒருவரது சங்கல்பத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் யோகிகள் கடவுள் என்று ஒருவரை ஒப்புக்கொள்ள விரும்புகின்றனர். அவர்கள் அந்த முடிவிற்கு வரும் விதம் அலாதியாக இருக்கிறது. அவர்கள் கூறுகிறார்கள்:
25. தத்ர நிரதிசயம் ஸர்வஜ்ஞத்வ பீஜம்
உயிர்களிடம் விதை போன்று (மட்டும்) உள்ள, எல்லாம் அறிகின்ற தன்மை ஈசுவரனிடம் எல்லையற்றதாக உள்ளது.
மனம் எப்பொழுதும் இரண்டு எல்லைகளுக்கு இடையில் செயல் புரிய வேண்டியுள்ளது. எல்லைக்குட்பட்ட ஓர் இடத்தை நம் கருத்தில் கொள்ளலாம். ஆனால் அந்த எண்ணமே எல்லையற்ற ஆகாசத்தைப் பற்றிய எண்ணத்தையும் தருகிறது. கண்களை மூடுங்கள். ஒரு சிறிய வட்ட வெளியை நினையுங்கள். அதை நினைக்கும் போதே அதைச் சூழ்ந்து எல்லையில்லா வட்டவெளியையும் உணர்கிறீர்கள். காலமும் இதைப் போன்றதே. ஒரு நொடிப் பொழுதைச் சிந்திக்க முயலுங்கள். அதை உணரும் போதே எல்லையில்லா காலமும் உங்கள் சிந்தனையில் வருகிறது. அறிவும் இது போன்றதே. அது மனிதனிடம் சிறு விதையாக உள்ளது. அந்தச் சிற்றறிவைச் சுற்றியுள்ள எல்லையில்லா பேரறிவையும் நாம் எண்ண வேண்டியிருக்கிறது. எல்லையற்ற அறிவு இருக்கிறது என்பதை நமது மனத்தின் அமைப்பே காட்டுகிறது. அந்த எல்லையில்லா பேரறிவையே ஈசுவரன் என்று யோகிகள் அழைக்கின்றனர்.
26. ஸ பூர்வேஷாமபி குரு: காலேனானவச்சேதாத்
ஈசுவரன் காலத்தால் கட்டுப்படாததால் புராதன குருமார்களுக்கும் குரு அவர்.
எல்லா அறிவும் நம்முள் இருக்கிறது என்பது உண்மையே. அதை வெளிப்படுத்துவதற்கு மற்றோர் அறிவு வேண்டியிருக்கிறது. அறிவதற்கான திறமை நமக்குள் இருந்தாலும் அதை வெளிக்கொணர வேண்டும், அப்படி ஓர் அறிவை வெளிப்படுத்த மற்றோர் அறிவால் தான் முடியும் என்கிறான் யோகி. உயிரற்ற, உணர்ச்சியற்ற ஜடப்பொருள், அறிவை வெளிப்படுத்த முடியாது. அதற்கு மற்றோர் அறிவு வேண்டும் என்பது யோகியின் கருத்து. நம்முள் இருப்பதை விழிப்புணர்த்த குருமார்கள் நம்முடன் இருக்க வேண்டும். இத்தகைய குருமார்கள் எப்போதும் தேவை. அவர்கள் இல்லாமல் உலகம் ஒரு போதும் இருந்ததில்லை. அவர்கள் இல்லாமல் எந்த ஞானமும் வராது. கடவுளே குருமார்கள் அனைவருக்கும் குரு. ஏனெனில் மற்ற குருமார்கள், எவ்வளவு மேலானவர்களாக இருந்தாலும், தேவர்களாக இருந்தாலும், தேவதூதர்களாக இருந்தாலும் காலத்தால் கட்டுப்பட்டவர்கள். கடவுள் அவ்வாறு இல்லை.
யோகிகளின் இரண்டு சிறப்பான முடிவுகள் உள்ளன-
முதல் முடிவு எல்லைக்கு உட்பட்டதை நினைக்கும் போது மனம் எல்லை இல்லாததையும் நினைத்தே தீரும். அனுபவத்தின் ஒரு பகுதி உண்மையாக இருந்தால் மற்றப் பகுதியும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மனத்தின் அனுபவம் என்ற அளவில் இரண்டும் ஒரே தன்மை படைத்தவைதாம். மனிதனுக்குச் சிற்றறிவு உள்ளது என்பதே அறிவு எல்லையற்றதாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது. ஒன்றை ஏற்றுக்கொண்டால் மற்றதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? இரண்டையும் விடவேண்டும் என்றே அறிவும் வற்புறுத்துகிறது. சிற்றறிவுடன் மனிதன் என்ற ஒருவன் இருந்தால், அவனுக்கு மேல் பேரறிவுடன் ஒருவர் இருக்கிறார் என்பதையும் ஒத்துக்கொண்டேயாக வேண்டும்.
ஆசிரியர் இல்லாமல் அறிவு பெற முடியாது என்பது இரண்டாவது முடிவு. தற்காலத் தத்துவ அறிஞர்கள் கூறுவதுபோல் ஏற்கனவே அவனுள் இருக்கின்ற ஒன்று தான் வெளிப்படுகிறது, எல்லா அறிவும் மனிதனுள்ளேயே இருக்கிறது. உண்மைதான் ஆனால் அதை வெளியே கொண்டுவர, குறிப்பிட்ட சூழ்நிலைகள் வேண்டும். ஆசிரியர் இல்லாமல் நாம் எந்த அறிவையும் பெற முடியாது. ஆசிரியர் மனிதராகவோ தேவராகவோ தேவதூதராகவோ இருந்தாலும், அவர்களின் ஆற்றல் வரம்புக்கு உட்பட்டது. அவர்களுக்கு முன்னரே இருந்த ஆசிரியர் யார்? அவர் காலவரம்புக்கு உட்படாத கடவுளே; எல்லையற்ற ஞானம் படைத்த ஆதியந்தம் இல்லாத அந்த ஒரே ஆசிரியர்தான் கடவுள் என்ற முடிவை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டியுள்ளது.
27. தஸ்ய வாசக: ப்ரணவ:
அவரது சொல் வடிவமே ஓம்.
மனத்தில் கொள்ளும் ஒவ்வொரு கருத்துக்கும் இணையான ஒரு சொல் உண்டு. சொல்லும் கருத்தும் இணைபிரியாதவை. ஒரே பொருளின் புறப் பகுதி, சொல்; அகப் பகுதி, கருத்து. சொல்லையும் கருத்தையும் ஆராய்ச்சியின் மூலம் ஒருவராலும் பிரிக்க முடியாது. மொழியை மனிதன் உருவாக்கினான் என்றொரு கருத்து நிலவுகிறது; சிலர் கூடி உட்கார்ந்து மொழியை முடிவு செய்தனர் என்ற இந்தக்கருத்து தவறென்று நிரூபிக்கப்பட்டு விட்டது. மனிதன் தோன்றிய காலம் முதல் சொற்களும் மொழியும் இருந்துவருகின்றன. ஒரு கருத்திற்கும் சொல்லிற்கும் உள்ள தொடர்பு என்ன? சொல் எப்போதும் எண்ணத்துடன் தொடர்புடையதாக இருப்பதை நாம் காண்கிறோம். ஓர் எண்ணம் ஒரே சொல்லுடன்தான் இணைந்திருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஒரே கருத்தை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு சொற்களால் குறிப்பிடலாம். ஒவ்வொரு கருத்தைக் அந்தச் சொல் எல்லா நாடுகளிலும் ஒரே ஒலியுடன் இருக்க வேண்டியதில்லை. நாட்டிற்கு நாடு ஒலி வேறுபடுகிறது. எண்ணத்திற்கும் சொல்லிற்கும் உள்ள தொடர்பு முற்றிலும் இயற்கையானது என்றாலும் ஓர் ஒலிக்கு ஒரு கருத்துதான் இருக்க வேண்டும் என்ற கட்டாய நியதி எதுவுமில்லை என்று உரையாசிரியர்கள் கூறுகிறார். ஒலி வேற்றுமை இருந்தாலும் சொல்லுக்கும், அது குறிக்கும் கருத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு இயற்கையாய் அமைந்தது. ஒரு பொருளுக்கும், அதைக் குறிக்கும் சின்னத்திற்கும் இடையில் உண்மையான தொடர்பு இருந்தால், கருத்துக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பு பொருத்தமுடையதாகும் அதுவரை, அந்தச் சின்னம் ஒருபோதும் பழக்கத்திற்கு வராது. ஒரு சின்னம் ஒரு குறிப்பிட்ட பொருளை வெளிப்படுத்துகிறது. குறிப்பிட்ட பொருள் ஏற்கனவே இருந்தாலும் அந்தச் சின்னம் அந்தப் பொருளைப் பல தடவை வெளிப்படுத்துவதை நாம் அனுபவத்தில் உணர்ந்திருந்தோமானால் பொருளுக்கும் சின்னத்திற்கும் உண்மையான தொடர்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். அந்தப் பொருட்கள் கண்முன்னால் காணப்படாவிட்டாலும் அவற்றின் சின்னங்களின் மூலம் அவற்றைப் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் அறிந்துகொள்வார்கள். பொருளுக்கும் அதன் சின்னத்திற்கும் இயற்கையான தொடர்பு இருக்க வேண்டும்; அப்போது சின்னத்தைக் கேட்டவுடன் அது குறிக்கும் பொருள் நினைவிற்கு வரும்.
கடவுளின் சொல்வடிவம் ஓம் என்கிறார் உரையாசிரியர். இந்தச் சொல்லை அவர் ஏன் வற்புறுத்திக் கூற வேண்டும்? கடவுளைக் குறிக்க நூற்றுக்கணக்கான சொற்கள் உள்ளன. ஒரு கருத்தைக் குறிக்க ஆயிரக்கணக்கான சொற்கள் உள்ளன. கடவுள் என்ற கருத்தைக் குறிக்கவும் பல சொற்கள் உண்டு. ஒவ்வொன்றும் கடவுளைக் குறிக்கும் சின்னமாக உள்ளது. மிகவும் நல்லது. ஆனால் இந்தச் சொற்கள் அனைத்திற்கும் பொதுவான ஒன்று இருக்க வேண்டும்; இந்தச் சின்னங்கள் எல்லாவற்றிற்கும் ஓர் ஆதாரம், ஒருபொதுவான அடிப்படை இருக்க வேண்டும். அந்தப் பொதுச் சின்னமே எல்லாவற்றுள்ளும் சிறந்தது; உண்மையில் அது எல்லாவற்றையும் குறிப்பதாகவும் இருக்கும்.
ஒலியை எழுப்ப குரல்வளையையும் அண்ணத்தையும் அடிப்படையாகப் பயன்படுத்துகிறோம். எல்லா ஒலிகளும் பிறக்கக் கூடியதும், மிகவும் இயற்கையானதுமான ஓர் ஒலி இருக்கிறதா? ஆம், அத்தகைய ஒலி, ஓம் (அ+உ+ம்). எல்லா ஒலிகளுக்கும் ஆதாரமாக உள்ளது அதுவே. இதில் முதல் எழுத்தான அ மூல ஒலியாக, அடிப்படையாக உள்ளது. நாக்கையோ அண்ணத்தையோ தொடாமல் இது உச்சரிக்கப்படுகிறது. ம் என்ற ஒலி, மூடிய உதடுகளால் உச்சரிக்கப்படுகிறது; எழுத்துக்களின் வரிசையில் கடைசியாக உள்ளது இது. இடையிலுள்ள உ குரல்வளையிலிருந்து உதடுவரை உருண்டு செல்கிறது. இவ்வாறு ஓம் என்பது ஒலி உண்டாகும் முறையே முழுவதுமாகக் காட்டுகிறது. எனவே இதுதான் சின்னங்களுள் மிகவும் இயற்கையானதும், பல்வேறான ஒலி அனைத்திற்கும் அச்சும் ஆகும். உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுள்ள எல்லா வார்த்தைகளின் வரிசைகளையும் குறிப்பதாக உள்ளது இது.
இந்த ஊகங்களைத் தவிர இந்தியாவிலுள்ள பல்வேறு மதக் கருத்துக்கள் எல்லாமே இந்த ஓம் என்ற சொல்லை மையமாகக் கொண்டுள்ளன. வேதங்களிலுள்ள மதக்கருத்துக்களும் ஓம் என்ற சொல்லையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. இதனால் அமெரிக்காவிற்கோ இங்கிலாந்திற்கோ பிற நாட்டிற்கோ ஆவது என்ன? இதற்கு எளிய பதில் இதுதான்; இந்தியாவின் சமய வளர்ச்சியில் ஒவ்வொரு படியிலும் இந்தச் சொல் கையாளப்பட்டு வருகிறது. கடவுளைப் பற்றிய எல்லாவிதமான கருத்துக்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்வைதிகள், துவைதிகள், துவைதாத்வைதிகள், பேதாபேதவாதிகள், ஏன், நாத்திகர்கள் கூட இந்த ஓம் என்ற சொல்லை ஏற்றுக்கொள்கின்றனர். மனித இனத்தின் மிகப் பெரும்பாலனோரின் மதஉணர்வுக்கு இது ஒரே சின்னமாக இருக்கிறது. குட் என்ற ஆங்கிலச் சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். இது எல்லைக்கு உட்பட்ட செயல்பாட்டை மட்டுமே குறிக்கிறது. இன்னும் அப்பால் செல்லவேண்டுமானால் மேலும் விளக்கச் சொற்களைச் சேர்க்க வேண்டும்; அதாவது சகுணம், நிர்க்குணம், தனித்தது போன்ற சொற்களைச் சேர்க்க வேண்டும். மற்ற மொழிகளிலும் இவ்வாறே கடவுளைக் குறிக்கும் சொற்கள் இறை இயலின் சிறுபகுதியை மட்டும் விளக்குவதாக உள்ளன. ஆனால் ஓம் என்ற சொல் பல்வேறு கருத்துக்கள் பொதிந்தவையாக உள்ளது. ஆதலால் இதனை எல்லோரும் ஏற்றுக் கொள்வது நல்லது.
தொடரும்...
தொடர்ச்சி...
.
28. தஜ்ஜபஸ்ததர்த்தபாவனம்
(ஓம் என்ற சொல்லை) மீண்டும்மீண்டும் உச்சரிப்பதும், அதன் பொருளைச் சிந்திப்பதுமே வழி.
ஏன் மீண்டும்மீண்டும் உச்சரிக்க வேண்டும்? சம்ஸ்காரம் பற்றிய கோட்பாடு உங்களுக்கு நினைவிருக்கும். மனத்திலுள்ள பதிவுகளின் மொத்தமே சம்ஸ்காரங்கள். அவை மிகவும் சூட்சுமமாகி இருக்கலாம், ஆனாலும் அவை அங்கேதான் இருக்கின்றன. தக்கத் தூண்டுதல் ஏற்பட்டால், உடனே அவை வெளிப்படுகின்றன. மூலக் கூற்றின் அதிர்வுகள் ஒருபோதும் ஓய்வதில்லை. இந்தப் பிரபஞ்சம் ஒடுங்கும்போது பெரிய அதிர்வுகள் எல்லாம் மறைந்துவிடுகின்றன; சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், பூமி இவை கரைந்து மறைகின்றன. ஆனால் அணுக்களில் அதிர்வு இருக்கவே செய்கிறது. பெரிய உலகங்கள் செய்யும் செயல்களை ஒவ்வோர் அணுவும் செய்துகொண்டுதான் இருக்கும். ஆகவே சித்தத்தில் அதிர்வுகள் அடங்கினாலும் மூலக்கூறுகள் அதிர்ந்து கொண்டுதான் இருக்கும். தூண்டுதல் ஏற்படும்போது அவை வெளிப்படுகின்றன. மீண்டும்மீண்டும் உச்சரிப்பது என்பதை இப்போது நாம் புரிந்து கொள்கிறோம். ஆன்மீக சம்ஸ்காரங்களுக்குக் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய தூண்டுதல் இவ்வாறு மீண்டும்மீண்டும் சொல்வதே.
கணநேரமானாலும்கூட தூயவர்களுடன் கொள்ளும் தொடர்பு வாழ்க்கைப் பெருங்கடலைக் கடக்க உதவுகிறது. தொடர்பின் ஆற்றல் இத்தகையது. எனவே, ஓம் என்பதை மீண்டும்மீண்டும் உச்சரிப்பதும் அதன் பொருளைச் சிந்திப்பதும் உங்கள் மனத்துடனேயே நீங்கள் கொள்ளும் சிறந்த தொடர்பாகும். கற்றுக் கொள்ளுங்கள், கற்றதைச் சிந்தியுங்கள். இவ்வாறு நீங்கள் ஒளி பெறுவீர்கள். ஆன்மா வெளிப்பட்டுத் தோன்றும்.
ஓம் என்பதைச் சிந்திக்க வேண்டும், அதனுடன் அதன் பொருளையும் சிந்தியுங்கள். தீயவர்களின் தொடர்பை விலக்குங்கள். ஏனெனில் பழைய தழும்புகள் போல் தீய சம்ஸ்காரங்கள் ஏற்கனவே உங்களிடம் இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்துவதற்கான தூண்டுதலே தீயவர் சகவாசம். அதுபோலவே நல்லோர் தொடர்பு நம்மிடமுள்ள நல்ல சம்ஸ்காரங்களை வெளிப்படுத்தும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நல்லோர் தொடர்பைப் போல் புனிதமானது இந்த உலகில் வேறொன்றும் இல்லை. அது நல்ல சம்ஸ்காரங்களை மேலே கொண்டு வருகிறது.
29. தத: ப்ரத்யக் சேதனாதிகமோஷப்யந்தராயோ பாவச்ச
அதிலிருந்து அகக் காட்சி (பற்றிய அறிவு) உண்டாகிறது. தடைகள் அகல்கின்றன.
ஓங்கார ஜபத்தினாலும் அதனைச் சிந்தனை செய்வதாலும் முதலில் அகநோக்கு ஆற்றல் மேன்மேலும் வெளிப்பட்டு, மனத்தளவிலும் உடலளவிலும் ஏற்படும் தடைகள் எல்லாம் மறையத் தொடங்கும்.
யோகிக்கு வரக்கூடிய தடைகள் எவை?
30. வ்யாதிஸ்த்யான ஸம்சய ப்ரமாதாலஸ்யாவிரதி
ப்ராந்திதர்சனாலப்தபூமிகத்வானவஸ்திதத்வானி சித்த வி÷க்ஷபாஸ்தேஷந்தராயா
நோய், மனச்சோர்வு, சந்தேகம், ஊக்கமின்மை, சோம்பல், புலனின்பங்களில் பற்று, மதிமயக்கம், மனம் குவியாதிருத்தல், பெற்ற நிலையிலிருந்து வழுவுதல் இவை தடைகள்.
நோய்: வாழ்க்கை என்னும் பெருங்கடலில் நம்மை அக்கரைக்குக் கொண்டு சேர்க்கின்ற படகு உடல். இதனை நாம்பாதுகாக்க வேண்டும். ஆரோக்கியம் இல்லாதவர்கள் யோகிகளாக முடியாது.
மனச்சோர்வு: இதனால் யோகப் பயிற்சியில் ஊக்கம் குறைந்துவிடும். ஊக்கம் இல்லாவிடில் பயிற்சிக்கு வேண்டிய மனவுறுதியோ ஆற்றலோ இருக்காது.
சந்தேகம்: ஒருவன் அறிவால் எய்திய முடிவு எவ்வளவுதான் வலிமையுடையதாக இருந்தாலும் தூரத்தில் நிகழ்பவற்றைப் பார்த்தல், கேட்டல் முதலிய சந்தேகங்கள் வரும்வரை யோக சாஸ்திரத்தைப் பற்றிய சந்தேகங்கள் எழவே செய்யும். இந்த ஆற்றல்கள் மனத்தில் நம்பிக்கையை வளர்த்து, ஒருவனை முயற்சியில் ஈடுபடுத்துகின்றன.
பெற்ற நிலையிலிருந்து வழுவுதல்: ; நீங்கள் பயிற்சி செய்யும்போது, சில நாட்கள் அல்லது சில வாரங்கள் மனம் அமைதி அடைந்து, எளிதில் ஒருமுகப்பட்டிருக்கும் நீங்கள் விரைவில் முன்னேற்றம் அடைவதைக் காண்பீர்கள். ஆனால் திடீரென்று ஒருநாள் முன்னேற்றம் நின்று விடும். வழி தவறியதுபோல் திக்குத்தெரியாமல் நிற்பீர்கள். ஆனாலும் விடாமுயற்சியுடன் தொடருங்கள். எழுச்சியும் வீழ்ச்சியும் எல்லா வகை முன்னேற்றங்களிலும் உண்டு.
31.து:க்க தௌர்மனஸ்யாங்மேஜயத்வ ச்வாஸ ப்ரச்வாஸா வி÷க்ஷபஸஹபுவ:
துக்கம், மனக் கலக்கம், உடல் நடுக்கம், மூச்சுத் தடுமாற்றம், மன ஒருமைப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமை.
மன ஒருமைப்பாட்டைப் பழகும் ஒவ்வொரு முறையும் மனத்திற்கும் உடலுக்கும் பூரண ஓய்வு கிடைக்கிறது. ஆனால் முறைதவறிச் செய்தாலும், மனம் போதிய அளவு அடக்கப்படாமல் இருந்தாலும் இத்தகைய இடையூறுகள் ஏற்படுகின்றன. அப்போது ஓங்காரத்தை ஜபிப்பதும், இறைவனிடம் சரண்புகுதலும் மனத்தை வலுப்படுத்தி புதிய சக்தியைத் தரும். உடல் நடுக்கம் அனேகமாக அனைவருக்கும் வருவதே. அதைப் பொருட்படுத்தாமல் பயிற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள். பயிற்சியே இந்த இடையூறுகளை நீக்கி ஆசனத்தை உறுதியாக்கும்.
32. தத் ப்ரதிஷேதார்த்தமேகதத்வாப்யாஸ:
இதற்குப் பரிகாரம் மனத்தை ஒரு பொருளின்மீது ஒடுக்கிப் பழகுவதே.
சிறிது காலத்திற்கு ஒரு பொருளின் உருவை மனம் எடுக்கச் செய்வதால் இந்தத் தடைகள் நீங்கும். இது பொதுவான அறிவுரை. இனிவரும் சூத்திரங்களில் இது விரிவாகவும் தனித்தனியாகவும் கூறப்படும். ஒரே பயிற்சி எல்லோருக்கும் ஏற்றதாகாது. எனவே பல்வேறு முறைகள் கூறப்படும். அவற்றுள் எது யாருக்கு அதிகமாக உதவும் என்பதை அனுபவத்தால் அறிந்துகொள்ள வேண்டும்.
33. மைத்ரீ கருணா முதிதோபேக்ஷõணாம் ஸுக து:க்க
புண்யாபுண்யவிஷயாணாம் பாவனாதச்சித்த ப்ரஸா தனம்
இன்பம், துன்பம், புண்ணியம், பாவம் போன்ற விஷயங்களில் முறையே நட்பு, கருணை, மகிழ்ச்சி, அலட்சியம் இவற்றைக் கைக்கொள்வதால் சித்தம் அமைதியடைகிறது.
இந்த நான்குவிதக் கருத்துக்கள் நம்மிடம் இருக்க வேண்டும். எல்லோரிடமும் நட்புக்கொள்ள வேண்டும். துன்பப்படுபவர்களிடம் இரக்கம் காட்ட வேண்டும். பிறர் மகிழ்ச்சி அடைந்தால் நாமும் மகிழ வேண்டும். தீயவர்களிடம் அலட்சியமாக இருக்க வேண்டும். நம்முன் வரும் எல்லா விஷயங்களிலும் இந்த நான்கு வித மனப்பான்மைகளைக் கொள்ள வேண்டும். நல்ல பொருளாய் இருந்தால் நட்பும், துன்பத்தில் இரக்கமும், நல்ல விஷயத்தில் மகிழ்வும், தீய விஷயங்களில் அலட்சியமும் கொள்ள வேண்டும். நம்முன் வரும் விஷயங்களில் இத்தகைய மனப்பான்மைகளைக் கொள்வது மனத்திற்கு அமைதியைத் தரும். தினசரி வாழ்க்கையில் நமக்கு வரும் சிக்கல்களுள் பலவும் மனத்தை இந்த வழியில் நிறுத்த முடியாததால் ஏற்படுபவையே. உதாரணமாக ஒருவன் நமக்குத் தீமை செய்தால் உடனே நாமும் அவனுக்குத் தீமை செய்ய எண்ணுகிறோம். தீய எதிர்ச் செயல்கள் ஒவ்வொன்றும் சித்தத்தை நாம் அடக்கிப் பழகவில்லை என்பதையே காட்டுகிறது. சித்தம் வெளி வந்து அலைகளாகி புறப்பொருளை நோக்கிச் செல்லுந் தோறும் நாம் நமது வலிமையை இழக்கிறோம். வெறுப்பாகவோ தீய எண்ணமாகவோ வரும் ஒவ்வோர் எதிரியக்கமும் மனத்தின் ஆற்றலைக் குறைக்கிறது. வெறுப்பு மற்றும் தீமையாக வெளிப்படும் ஒவ்வோர் எதிர்ச் செயலும் மனத்திற்கு இழப்பாகிறது. ஒவ்வொரு தீய எண்ணமும் வெறுப்புச் செயலும், எதிர்ச் செயல் எண்ணமும், தடுக்கப்படும்போது மனத்திற்கு அனுகூலமாகிறது. நம்மை நாமே அடக்குவதால் நமக்கு இழப்பு ஒன்றும் இல்லை. மாறாக நாம் எதிர்பார்த்ததற்கு மேல் எல்லையற்ற மடங்கு நன்மையையே அடைகிறோம். ஒவ்வொரு முறை நாம் வெறுப்பையும் கோப உணர்ச்சியையும் அடக்கும்போது அந்த அளவிற்கு நல்ல ஆற்றலைச் சேமிக்கிறோம். அந்த ஆற்றல் உயர்ந்த சக்திகளாக மாற்றப்படுகின்றன.
34. ப்ரச்சர்தன விதாரணாப்யாம் வா ப்ராணஸ்ய
சுவாசத்தை வெளியே விடுவதாலும் அடக்குவதாலும்
பிராணன் என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது பிராணன் என்பதற்கு மூச்சு என்பது சரியான பொருள் அல்ல. பிரபஞ்சத்தில் நிலவும் சக்திக்குப் பிராணன் என்று பெயர். பிரபஞ்சத்தில் எவையெல்லாம் காணப்படுகிறதோ, எவையெல்லாம் இயங்குகிறதோ, செயல்புரிகிறதோ, உயிர் வாழ்கிறதோ அவை அனைத்தும் பிராணனின் வெளிப்பாடுகளே, பிரபஞ்சத்தில் காணப்படும் சக்திகளின் மொத்தமே பிராணன் என்று அழைக்கப்படுகிறது. கல்பம் ஆரம்பிக்குமுன் இந்தப் பிராணன் ஏறக்குறைய செயலற்ற நிலையில் இருக்கிறது. கல்பம் ஆரம்பிக்கும்போது வெளிப்பட ஆரம்பிக்கிறது. இந்தப் பிராணனே இயக்கமாக வெளிப்படுகிறது. மனிதனிலும் பிராணிகளிலும் நாடி நரம்புகளில் இயக்கமாக வெளிப்படுகிறது. எண்ணமாக வெளிப்படுவதும் இதே பிராணன்தான். பிரபஞ்சம் முழுவதும் பிராணன் மற்றும் ஆகாசம் இவை இரண்டின் சேர்க்கையால் ஆகியது. மனிதனின் உடலும் அவ்வாறு ஆகியதே. நாம் உணர்கின்ற, பார்க்கின்ற பொருட்கள் எல்லாமே ஆகாசத்திலிருந்து வருகின்றன. பலவகைச் சக்திகள் பிராணனிலிருந்து வருகின்றன.
இந்தப் பிராணனை வெளியே விடுவதும், உள்ளே நிறுத்தி வைப்பதும் பிராணாயாமம் எனப்படும். யோகத் தத்துவத்தின் தந்தையான பதஞ்சலி முனிவர் பிராணாயாமத்தைப் பற்றி அவ்வளவாக விவரிக்கவில்லை. ஆனால் அவருக்குப் பின் தோன்றிய யோகிகள் பிராணாயாமத்தைப் பற்றிய பல்வேறு விஷயங்களை விவரித்து அதை ஒரு பெரிய விஞ்ஞானமாக ஆக்கியுள்ளனர். பதஞ்சலி முனிவரைப் பொறுத்தவரையில் பல வழிகளுள் பிராணாயாமமும் ஒன்று. இதை அவர் அதிகம் விலியுறுத்த வில்லை. காற்றை வெளியேவிட்டு உள்ளிழுத்துச் சிறிது நேரம் அடக்குங்கள், இதனால் மனம் சற்று அமைதியடையும் என்று மட்டுமே கூறுகிறார். பிற்காலத்தில் இதிலிருந்து பிராணாயாமம் என்னும் தனி விஞ்ஞானமே உருவாகியதை நீங்கள் காண்பீர்கள். பிற்கால யோகிகள் கூறியதைச் சற்று பார்ப்போம்.
இவற்றுள் சிலவற்றை ஏற்கனவே நான் கூறியுள்ளேன். மீண்டும் சொல்வதால் மனத்தை அதில் ஈடுபடுத்த உங்களுக்கு உதவும். பிராணன் என்பது மூச்சல்ல என்பதை முதலில் நீங்கள் நினைவுகூர வேண்டும். சுவாசித்தலைத் தூண்டுவது எதுவோ, சுவாசத்தின் உயர்நாடியாக இருப்பது எதுவோ அதுவே பிராணன். பிராணன் என்ற சொல் புலன்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எல்லா புலன்களும் பிராணன் என்றே அழைக்கப்படுகின்றன. மனமும் பிராணன் என்று அழைக்கப்படுகிறது. எனவே பிராணன் என்பது ஒரு சக்தி என்பது நமக்குத் தெரிகிறது. எனினும் பிராணனை சக்தி என்று கூறுவதற்கில்லை. ஏனெனில் சக்தி என்பது பிராணனின் ஒரு வெளிப்பாடு மட்டுமே, சக்தியாகவும் பல்வேறு இயக்கங்களாகவும் வெளிப்படுவது பிராணன். சித்தம் ஓர் எந்திரம் போல் சுற்றுப்புறத்திலிருந்து பிராணனைத் தன்னுள் இழுத்துக்கொண்டு அதிலிருந்து வெவ்வேறு ஆதார சக்திகளை உண்டாக்குகிறது. உடலைப் பாதுகாக்கும் சக்தி, சிந்தனை சக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி முதலிய பல்வேறு சக்திகளும் இவ்வாறு தோன்றியவை. மேலே கூறியதான பிராணாயாமத்தால் உடலில் வெவ்வேறு இயக்கங்களையும் நரம்பு ஓட்டங்களையும் நாம் அடக்கி ஆளலாம், உடலில் செல்லும் உணர்ச்சி ஓட்டங்களையும் வசப்படுத்தலாம், முதலில் நாம் அவற்றை உணர்கிறோம். அதன்பின் மெள்ளமெள்ள அவற்றை அடக்குகிறோம்.
மனித உடலில் பிராணனின் மூன்று முக்கிய ஓட்டங்கள் இருப்பதாக இந்தப் பிற்கால யோகிகள் கருதுகின்றனர். அவற்றை இடை, பிங்கலை, சுழுமுனை என்று அழைக்கின்றனர். பிங்கலை முதுகெலும்புக்கு வலது பக்கத்திலும், இடை இடது பக்கத்திலும் உள்ளன. முதுகெலும்பின் நடுவில் வெறும் துளையாக உள்ளது சுழுமுனை. இடையும் பிங்கலையும் எல்லா மனிதர்களிலும் செயல்படுகின்றன. வாழ்க்கையின் செயல்பாடுகள் அனைத்தையும் நாம் இவை மூலமே செய்கிறோம். சுழுமுனை எல்லோரிலும் உள்ளது. செயல்படுவதற்கான சாத்தியக்கூறு இருந்தும் அது யோகியிடம் மட்டுமே செயல்படுகிறது.
யோகம் உடம்பில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பயிற்சி செய்துகொண்டே போகுந்தோறும் உங்கள் உடம்பு மாறுகிறது. உங்கள் இப்போதைய உடம்பு பயிற்சிக்கு முன்னிருந்த உடம்பு அல்ல. இப்படி நாம் விளக்கவும் முடியும். ஏனெனின் ஒவ்வொரு புது எண்ணமும் மூளையில் ஒரு புதிய பாதையை உண்டாக்குவது போலுள்ளது. மனித இயல்பு மாறாதிருப்பதன் காரணத்தை இது விளக்குகிறது. ஏற்கனவே உள்ள தடங்கள் வழியாக ஓடுவதையே மனித இயல்பு விரும்புகிறது. ஏனெனில் அது எளிது. மனத்தை ஓர் ஊசியாகவும், மூளையை ஒரு மிருதுவான பொருளாகவும் கருதுவோம். எண்ணுகின்ற ஒவ்வோர் எண்ணமும் மூளையில் ஒரு பாதையை அமைக்கிறது. மூளையில் உள்ள சாம்பல் நிறப்பொருள் இதை மூடிப் பாதுகாப்பதால் பாதை அழிவதில்லை. இந்தப் பாதைகள் பாதுகாக்கப்படாவிட்டால் ஞாபக சக்தி இருக்காது. ஏனெனில் பாதையில் திரும்பிச் செல்வது போன்று, எண்ணிய எண்ணத்தை மீண்டும் நினைப்பதே ஞாபகம் ஆகும்.
எல்லோரும் அறிந்த சில விஷங்களை எடுத்து அவற்றைச் சேர்த்தும் பிரித்தும் ஒருவன் பேசும்போது, அவனது கருத்தைப் பின்பற்றுவது நமக்கு எளிதாகிறது. ஏனெனில் இந்த எண்ணப் பாதைகள் எல்லோருடைய மூளையிலும் உள்ளன, ஆனால் புதிய கருத்து ஒன்றை ஒருவன் கூறும்போது புதிய பாதைகளை உருவாக்க வேண்டியிருப்பதால் அது உடனே புரிவதில்லை. அதனால்தான் புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கு மனிதன் அறியாமலே அவனது மூளை மறுத்துவிடுகிறது. மறுப்பது மூளையே தவிர மனிதன் அல்ல. அது மறுக்கிறது. புதிய பாதை அமைப்பதற்குப் பிராணன் முயற்சி செய்தாலும், மூளை அதை மறுக்கிறது. ஒருவன் பழைய முறையிலிருந்து மாற மறுப்பது இதனால்தான். ஏற்கனவே மூளையில் பழைய பாதைகள் குறைவாக இருந்து, ஊசி யாகிய பிராணன் பாதைகள் அமைப்பதும் குறைவாக இருக்குமானால் அந்த அளவிற்கு மூளை பழைமை முறையிலேயே ஆழ்ந்திருக்கும். புதிய எண்ணங்களை எதிர்க்கும் ஒரு மனிதனிடம் சிந்தனை சக்தி அதிகரிக்கும் அளவுக்கு, அவனது மூளையில் எண்ணப் பாதைகள் அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு அவன் புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்வான். புரிந்துகொள்வான். ஒவ்வொரு புதிய எண்ணத்தை எண்ணும்போதும் மூளையில் ஒரு பதிவை உண்டாக்குகிறோம். புதிய பாதையை உருவாக்குகிறோம் அதனால்தான் யோகப் பயிற்சியில் முதலில் மூளையிடமிருந்து அவ்வளவு எதிர்ப்பை நாம் காண்கிறோம். (ஏனெனில் அது முற்றிலும் புதிய கருத்துக்களாக, புதிய நோக்கங்களாக உள்ளது) அதனால்தான் மதங்களிலும் மனித இயற்கையின் லவுகீகப் பகுதியைத் தொடுகின்ற பகுதிகளை மக்கள் எளிதாக ஏற்றுக் கொள்கின்றனர். மறுபகுதியை அதாவது மனிதனின் அக இயல்பைப் பற்றிக் கூறுகின்ற தத்துவம், மன இயல் இவற்றைப் பொதுவாக மறுத்துவிடுகின்றனர்.
இனி நாம் வாழும் உலகத்தைப்பற்றி ஆராய்வோம். எல்லையற்ற இருப்பில் நம் உணர்வுக்குத் தோன்றுகின்ற பகுதிதான் உலகம் என்பது. எல்லையற்ற தன் ஒரு சிறுபகுதி நமது உணர்வில் தோன்றுகிறது. அதை நாம் நமது உலகம் என்கிறோம். எனவே அப்பால் ஓர் எல்லையற்றது உள்ளது. மதம் என்பது, நாம் உலகம் என்று அழைக்கின்ற சிறிய பகுதி, அப்பால் உள்ள எல்லையற்ற பகுதி இரண்டையும் ஆராய வேண்டியிருக்கிறது. இரண்டினுள் ஒன்றை மட்டும் ஆராய்கின்ற மதம் குறைபாடு உடையது. அது இரண்டையும் ஆராய வேண்டும். எல்லையற்றதன் ஒரு பகுதி உணர்வுநிலைக்குள் வரும் போது, உணர்வுநிலையால் கட்டப்பட்டது போலாகிவிடுகிறது. இவ்வாறு உணர்வுநிலையில் கட்டுப்பட்ட காலம், இடம், காரணகாரியம் என்ற கூண்டிற்குள் அடைபட்ட, எல்லையற்ற இருப்பின் லவுகீகப் பகுதியைப் பற்றிக் கூறுகின்ற மதக் கருத்துக்கள் நமக்கு நன்றாகத் தெரிந்தவையே. நாம் ஏற்கனவே அதில்தான் இருக்கிறோம். நினைவுக்கு எட்டாத காலம் முதல் இவ்வுலகைப் பற்றிய கருத்துக்கள் நம்மிடம் உள்ளன. அப்பாலுள்ள எல்லையற்றதைப் பற்றிய மதக் கருத்துக்கள் நமக்கு முற்றிலும் புதியவை. அவை நமது மூளையில் புதிய எண்ணப் பாதைகளை ஏற்படுத்தும்போது மொத்த அமைப்பும் நிலை குலைந்துவிடுகிறது. அதனால்தான் சாதாரண மக்கள் யோகப் பயிற்சியின் ஆரம்பத்தில் வழி தவறிவிட்டதாக உணர்கிறார்கள். இதுபோன்று இடையூறுகளை இயன்ற அளவு குறைப்பதற்காகவே பதஞ்ஜலி முனிவர் இத்தகைய வழிகளையெல்லாம் கூறுகிறார். அவற்றுள் நமக்கு மிகவும் பொருத்தமானதை நாம் பயிலலாம்.
35. விஷயவதீ வா ப்ரவ்ருத்திருத்பன்னா மனஸ: ஸ்திதி நிபந்தினீ
எத்தகைய சமாதி நிலைகள் அபூர்வமான புலன் அனுபவங்களை உண்டாக்குமோ அத்தகையவை மனத்தை நிலைநிறுத்தக் காரணமாக அமைகின்றன.
இது இயல்பாகவே தாரணையினால் அதாவது ஒருமைப்பாட்டினால் வருகின்றது. மூக்கு நுனியில் மனத்தைக் குவித்துப் பழகினால், சில நாட்களுக்குப் பிறகு ஒருவர் அற்புதமான நறுமணங்களை முகரலாம் என்று யோகிகள் கூறுகின்றனர். நாக்கின் அடிநுனியில் குவித்துப் பழகினால், சில ஒலிகளைக் கேட்கலாம். நாக்கின் நுனியில் குவித்தால், அரிய சுவைகளை உணரலாம். நாக்கின் நடுவில் குவித்தால், ஏதோ ஒன்றுடன் தொடர்பு கொள்வது போன்ற உணர்ச்சி ஏற்படும். அண்ணத்தில் குவித்தால் அற்புதமான பொருட்கள் தெரிய ஆரம்பிக்கும். யோகப் பயிற்சியில் ஈடுபட்டு, அதேவேளையில் அதன் உண்மையில் சந்தேகம் உள்ளவர்கள், இந்தப் பயிற்சிகளைச் செய்தால், அவர்களின் சந்தேகம் நீங்கப்பெற்று, அவர்கள் சாதனையில் மேலும் முயற்சியுடன் ஈடுபடுவார்கள்.
36. விசோகா வா ஜ்யோதிஷ்மதீ
அல்லது எல்லா துயரங்களுக்கும் அப்பால் உள்ள பேரொளியை (தியானிப்பதாலும்)
இது மற்றொரு வகை சமாதி, இதயத் தாமரையின் இதழ்கள் கீழ்நோக்கி இருப்பது போலவும், அதனூடே சுழுமுனை நாடி செல்வது போலவும் நினையுங்கள். மூச்சை உள்ளே இழுங்கள். அதை வெளிவிடும்போது தாமரையின் இதழ்கள் மேல்நோக்கித் திரும்புவதுபோல் பாவனை செய்யுங்கள். தாமரைக்குள்ளே பேரொளிப் பிழம்பான ஜோதி ஒன்று இருப்பதாக நினையுங்கள். அதைத் தியானியுங்கள்.
37. வீத ராக விஷயம் வா சித்தம்
அல்லது புலனின்பப் பொருட்களின் மீதுள்ள எல்லா பற்றுக்களையும் விட்டுவிட்ட இதயத்தைத்(தியானிப்பதாலும்)
நீங்கள் மதிக்கின்ற, போற்றுகின்ற, முற்றிலும் பற்றற்றவர் என்று நீங்கள் அறிந்த ஒரு மகானின் உள்ளத்தைச் சிந்தியுங்கள். அவரது உள்ளம் பற்றற்றிருக்கின்றது. அதைத் தியானம் செய்யுங்கள். அது உங்கள் மனத்தை அமைதி பெறச் செய்யும் இது முடியாவிட்டால் மற்றொரு வழி இருக்கிறது.
38. ஸ்வப்ன நித்ரா ஜ்ஞானாலம்பனம் வா
அல்லது கனவு மற்றும் தூக்கத்தில் ஏற்படும் அறிவைப்பற்றி தியானிப்பதாலும்.
தேவதைகள் வந்து பேசுவதாகவும், ஆனந்தப் பரவச நிலையில் இருப்பதாகவும், காற்றினிலே தவழ்ந்து வரும் இனிய கீதத்தைக் கேட்பதாகவும் சிலவேளைகளில் கனவு காணலாம். கனவில் அவன் பேரானந்தத்தில் திளைத்திருப்பான். விழித்த பிறகு அந்தக் கனவு அவனது மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும். அந்தக் கனவை உண்மை என்று நினைத்து, அதைத் தியானம் செய்யுங்கள். அது முடியாவிட்டால் உங்களுக்கு இனிமை தரும் ஏதாவது புனிதமான ஒன்றைத் தியானியுங்கள்.
39. யதாபிமதத்யானாத்வா
அல்லது உங்களுக்கு உகந்ததாக உள்ள ஒன்றைத் தியானிப்பதால்
உகந்தது என்பதற்காக இழிந்ததையும் நாடலாம் என்பது பொருளல்ல. உங்களுக்கு உகந்த ஆனால் நல்ல பொருள், நீங்கள் மிகவும் விரும்புகின்ற இடம், உங்களை மிகவும் கவர்ந்த இயற்கைக் காட்சி, உங்களை மிகவும் பாதித்த கருத்து அல்லது மனம் குவிதற்கான ஏதாவது நல்ல ஒன்றைத் தியானியுங்கள்.
40. பரமாணு பரம மஹத்வாந்தோஸ்ய வசீகார
இப்படித் தியானிக்கும் யோகியின் மனத்திற்கு அணு முதல் அண்டம் வரை அனைத்தின் மீதும் தடையற்ற ஆதிக்கம் ஏற்படுகிறது.
இந்தப் பயிற்சியின் மூலம், மிக நுண்ணிய பொருளையும் பிரம்மாண்டத்தையும் மனத்தால் எளிதாக தியானம் செய்ய முடிகிறது. இவ்வாறு மனத்தின் அலைகள் அமைதியடைகின்றன.
41. க்ஷீண வ்ருத்தேரபிஜாதஸ்யேவ மணேர்க்ரஹீத்ரு
க்ரஹணக்ராஹ்யேஷு தத்ஸ்த்தததஞ்ஜனதா ஸமா பத்தி
இவ்வாறு வலிமை குன்றிய (அடக்கப்பட்ட) விருத்திகளையுடைய யோகி, கொள்பவன், கொள்ளும் கருவி, கொள்ளப்படும் பொருள்(ஆன்மா, மனம், புறப்பொருட்கள்) இவற்றில் ஒருமைப்பாடும் சம பார்வையும் பெறுகிறான். (பல நிறப் பொருட்களின் முன்னே இருக்கும்) பளிங்கைப்போல்.
இடைவிடாத இந்தத் தியானத்தின் பயன் என்ன? முன்பு ஒரு சூத்திரத்தில் பதஞ்சலி முனிவர் பல்வேறு தியானங்களைப்பற்றிக் கூறியிருப்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். முதலில் தூலப் பொருள், பிறகு சூட்சுமப் பொருள், பின்னர் அதைவிட சூட்சுமமான பொருள் இவ்வாறு படிப்படியாக உள்ள தியானங்களை அவர் விவரித்திருந்தார். இப்படிச் செய்வதால் தூலப் பொருளைப் போலவே சூட்சுமப் பொருள் மீதும் எளிதில் தியானிக்க முடியும். கொள்பவன், கொள்ளப்படும் பொருள், கொள்ளும் கருவி, அதாவது, ஆன்மா, புறப்பொருள், மனம் என்ற மூன்றையும் இங்கு யோகி காண்கிறான். தியானத்திற்கு மூன்று பொருட்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. முதலில் உடல் மற்றும் ஜடப்பொருள் போன்ற தூலப் பொருள்; இரண்டாவது, சூட்சுமப் பொருளான மனம் அல்லது சித்தம்; மூன்றாவது குணங்களுடன் கூடிய புருஷன் அதாவது உண்மையான புருஷன் அல்ல, நான் உணர்வு. பயிற்சியின் மூலம் யோகி இந்த எல்லா தியானங்களிலும் நிலைபெறுகிறான். தியானிக்கும்போது மற்ற எண்ணங்கள் அனைத்தையும் புறக்கணித்து, தியானிக்கும் பொருளுடன் ஒன்றுபட்டு ஐக்கியமாகிறான். அவன் ஒரு பளிங்கு போல் ஆகிறான். பளிங்கின்ற முன் ஒரு மலரை வைத்தால் பளிங்கு அந்த மலருடன் ஏறக்குறைய ஒன்று பட்டு விடுகிறது. மலர் சிவப்பாக இருந்தால், பளிங்கும் சிவப்பாகத் தோன்றும். மலர் நீலமாக இருந்தால் பளிங்கும் நீலமாகத் தோன்றும்.
42. தத்ர சப்தார்த்த ஜ்ஞான விகல்பை ஸங்கீர்ணா ஸவிதர்க்கா ஸமாபத்தி
சொல், பொருள் அதன் விளைவான அறிவு இந்த மூன்றும் கலந்து நிற்பது வினாவோடு கூடிய சமாதி.
இங்கு சொல் என்பது அதிர்வைக் குறிக்கும். அதாவது அவற்றை உள்ளே எடுத்துச் செல்கின்ற நரம்பு ஓட்டங்கள் அதனால் வரும் எதிர்ச் செயலே அறிவு. இதுவரை கூறப்பட்ட தியானங்கள் எல்லாம் வினாவுடன் கூடியவை (ஸவிதர்க்கம்) என்கிறார் பதஞ்ஜலி முனிவர். உயர்வகைத் தியானங்களைப் பின்பு தருகிறார். வினாவுடன் கூடிய தியானத்தில், சொல், பொருள், அறிவு மூன்றின் சேர்க்கையின் விளைவாக தியானிப்பவன், தியானிக்கப்படும் பொருள் என்ற இருமை இருக்கிறது. முதலில் புற அதிர்வாகிய சொல். இது பொறி வழியாக உள்ளே எடுத்துச் செல்லப்படும் போது தோன்றுவது பொருள். இதன்பிறகு சித்தத்தில் எதிர்ச் செயலாகக் கிளம்பும் அலை அறிவு. நாம் பொதுவாக அறிவு என்று கூறுவது இந்த மூன்றும் கலந்து நிற்பதையே இதுவரை நாம் கண்ட தியானங்களில் எல்லாம் இந்தக் கலவையையே தியானப் பொருளாகக் கொண்டிருக்கிறோம். அடுத்த சமாதி இதைவிட உயர்ந்தது.
43. ஸ்ம்ருதி பரிசுத்தௌ ஸ்வரூபசூன்யேவார்த்த மாத்ர நிர்பாஸா நிர்விதர்க்கா
நினைவு தூய்மை பெறும்போதும் குணங்கள் அற்ற நிலையில் இருக்கும்போதும்,(தியானிக்கப்படும் பொருளின்) கருத்து மட்டும் எஞ்சியிருக்கும்போதும், வினாவற்ற சமாதி உண்டாகிறது.
சொல், பொருள், அறிவு ஆகிய மூன்றையும் கலந்து தியானிக்கும் பயிற்சியால் இந்த மூன்றும் ஒன்றுகூடாத நிலையை நாம் அடைய முடியும். நாம் இவற்றிலிருந்து விடுபட முடியும். முதலில் இந்த மூன்றைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள முயல்வோம். முதலில் பழைய உதாரணத்தை நினைவுகூர்வோம். சித்தம் ஒரு குளம், அதிர்வு அல்லது சொல் அல்லது ஒலியே அதில் எழும் அலை. உங்களுள் சித்தம் என்னும் அமைதியான குளம் உள்ளது. நான் பசு என்று சொல்கிறேன். இந்த ஒலி உங்கள் காது வழியாக உள்ளே சென்றதும் உங்கள் சித்தத்தில் ஓர் அலை உண்டாகிறது. அந்த அலை பசு என்ற கருத்தை, அதாவது அந்த உருவத்தின் பொருளை உண்டாக்குகிறது. நீங்கள் அறிகின்ற பசு என்ற தோற்றம் உண்மையில் புற மற்றும் அக ஒலி அதிர்வுகளுக்கு எதிர்ச் செயலாக சித்தத்தில் எழும் அலையே. சொல் அல்லது ஒலி மறைந்தவுடன் எண்ண அலையும் மறைகிறது. சொல்லின்றி உருவம் இருக்க முடியாது.
ஆனால் ஒலி கேட்காமல் பசுவை நினைக்கும்போது எவ்வாறு பசுத் தோற்றம் உண்டாகிறது என்று நீங்கள் கேட்கலாம். இங்கே நீங்கள் உங்களுக்குள்ளேயே ஒலியை எழுப்புகிறீர்கள். உங்கள் மனத்திற்குள்ளேயே மெதுவாக பசு என்கிறீர்கள், உடனே அலை எழுகிறது. இந்த ஒலிக் குறிப்பு இன்றி அலை எழ முடியாது. புறத்திலிருந்து வராவிடில் ஒலி அகத்திலிருந்து வரும், அவ்வளவுதான், ஒலி நீங்கினால் அலையும் நீங்கும். எஞ்சியிருப்பது எது எதிர்ச் செயலின் விளைவு, அதாவது அறிவு, பிரிக்க முடியாதபடி இந்த மூன்றும் நம் மனத்தில் கலந்திருக்கிறது. ஒலி எழுந்ததும் புலன்கள் அதிர்கின்றன. உடனே எதிர்ச் செயலான அலையும் உண்டாகிறது. இவை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து விரைவில் வருவதால் அவற்றைப் பிரித்தறிய முடியவில்லை. நீண்ட காலம் இந்தத் தியானப் பயிற்சி செய்தால், எண்ணப் பதிவுகள் அனைத்திற்கும் கொள்கலமான நினைவு தூய்மை அடைகிறது. அப்போது இவற்றைத் தனித்தனியாகப் பிரித்து, தெளிவாக அறிய முடியும். இது நிர்விதர்க்கம், வினாவற்ற சமாதி எனப்படும்.
44. ஏதயைவ ஸவிசாரா நிர்விசாரா ச ஸூக்ஷ்மவிஷயா வ்யாக்யாதா
இன்னும் நுண்மையான பொருட்களைத் தியானப் பொருளாகக் கொண்ட, ஆராய்ச்சியுடன் கூடிய(ஸவிசார) சமாதியும் ஆராய்ச்சி அற்ற(நிர்விசார) சமாதியும் இந்த (சமாதி) முறைகளைக் கொண்டே விளக்கப்படுகின்றன.
முன்பு கூறப்பட்டது போன்றதொரு முறை இங்கும் பயன்படுகிறது. ஆனால் தூலப் பொருட்களுக்குப் பதிலாக சூட்சுமப் பொருள் தியானத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
45. ஸூக்ஷ்ம விஷயத்வஞ்சாலிங்க பர்யவஸானம்
நுண் பொருட்கள் பிரதானத்தை முடிவாக உடையவை. பூதங்களும், அவற்றிலிருந்த உண்டான பொருட்களும் தூலப் பொருட்கள், நுண்பொருட்கள் தன் மாத்திரைகளிலிருந்து அல்லது நுண் மூலக்கூறுகளிலிருந்து ஆரம்பிக்கின்றன. பொறிகள், மனம் (அதாவது பொறிகளின் மொத்தம்) நான் உணர்வு, சித்தம்(எல்லா வெளிப்பாடுகளுக்கும் காரணமானது) என்பவையும் சத்வ, ரஜஸ், தமஸ் என்னும் குணங்கள் சமப்பட்டு நிற்கும் நிலையாகிய பிரதானமும் (முக்கியம்), பிரகிருதியும் (இயற்கை), அவ்யக்தமும் (தோன்றா நிலை) ஆகிய எல்லாம் நுண்பொருட்கள் என்னும் பிரிவில் அடங்கும். புருஷன் (ஆன்மா)மட்டுமே இதில் அடங்காதது.
46. தா ஏவ ஸபீஜ: ஸமாதி
இவை யாவும் விதையுடன் கூடிய சமாதிகள். இவை முன் வினைகளின் விதைகளை அழிப்பதில்லை. எனவே இவற்றால் முக்தியைத் தர முடியாது. இவை யோகிக்கு எதைக் கொடுக்கும் என்பது அடுத்த சூத்திரத்தில் கூறப்படும்.
47. நிர்விசார வைசாரத்யேத்யாத்ம ப்ரஸாத
விவேகம் கடந்த சமாதி தூய்மை அடையும்போது சித்தம் நிலை பெறுகிறது.
48. ருதம்பரா தத்ர ப்ரஜ்ஞா
அதில் உள்ள அறிவு உண்மையால் நிறைக்கப்பட்டது எனப்படும்.
அடுத்த சூத்திரம் இதனை விளக்குகிறது.
49. ச்ருதானுமான ப்ரஜ்ஞாப்யாமன்ய விஷயா விசேஷார்த்தத்வாத்
சான்றோர்களிடமிருந்து கேட்பதனாலும், அனுமானத்தினாலும் பெறும் அறிவு சாதாரணப் பொருட்களைப் பற்றியது. இப்போது கூறிய சமாதியிலிருந்து பெறும் அறிவு மிகவும் உயர் வகையானது. அனுமானமும் சான்றோர்களின் வாக்கும் செல்ல முடியாத இடத்திற்கும் ஊடுருவிச் செல்லவல்லது.
இதன் கருத்து என்ன? நேரடி அனுபவம், அனுமானம், தகுதி படைத்தோரின் கூற்று-இவற்றின் மூலமே சாதாரணப் பொருட்களைப்பற்றி நாம் அறிகிறோம். சாஸ்திரங்களாகிய வேதங்களில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளைக் கண்டறிந்த ரிஷகளையே தகுதியுடையவர்கள் என்று யோகிகள் குறிப்பிடுகிறார்கள். ரிஷிகளின் கூற்று ஆகையால்தான் சாஸ்திரங்களே அத்தாட்சி பெறுகின்றன என்கின்றனர் யோகிகள். ஆனால் சாஸ்திரங்களும் நம்மை அனுபூதி நிலைக்குக் கொண்டு போகாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். எல்லா வேதங்களையும் நாம் படிக்கலாம். ஆனாலும் நமக்கு மெய்யுணர்வு எதுவும் உண்டாகாது. அவர்களின் உபதேசங்களை நாம் பயிற்சி செய்வோமானால் வேதங்கள் கூறுவதை அனுபூதியில் நாம் அடையலாம். ஆராய்ச்சியோ, நேரடி அனுபவமோ, அனுமானமோ, ஆப்த வாக்கியங்களோ செல்ல முடியாத இடங்களுக்கும் அனுபூதி ஊடுருவிச் செல்கிறது. இதுவே இந்தச் சூத்திரத்தின் கருத்து.
சுய அனுபூதியே உண்மையான மதம். மற்றவை யெல்லாம் ஆயத்தம் மட்டுமே சொற்பொழிவுகளைக் கேட்பது, சாஸ்திரங்களைப் படிப்பது, ஆராய்ச்சி செய்வது இவையெல்லாம் நம்மை ஆயத்தப்படுத்துவதற்கு மட்டுமே. இவையெல்லாம் மதம் அல்ல. அறிவு உடன்படுவதோ மறுப்பதோ மதம் ஆகாது. புலன்களால் புறப் பொருளை நேரடியாக அறிவதுபோல் ஆன்மீக விஷயங்களை இன்னும் சிறப்பாக நேரடியாக அறியலாம் என்பது யோகிகளின் அடிப்படைக் கருத்து. மத உண்மைகளான இறைவன் மற்றும் ஆன்மாவைப் புலன்களால் அறிய முடியாது. நான் என் கண்களால் கடவுளைக் காண முடியாது, கைகளால் அவரைத் தொட முடியாது. புலன்களுக்கு அப்பால் உள்ள விஷயங்களை அறிவால் ஆராய்ந்தும் அறிய முடியாது என்பதும் நமக்குத் தெரியும். நிச்சயமற்ற ஓரிடத்தில் தர்க்க அறிவு நம்மை விட்டுவிடுகிறது. நாம் ஆயுட்காலம் முழுவதும் ஆராயலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக உலகில் இவ்வாறுதான் நடந்தும் வருகிறது. இதனால் எல்லாம் மத உண்மைகளை மெய்ப் பிக்கவோ மறுக்கவோ இயலாது என்பதே அதன் முடிவு. நேரில் அறிவதை ஆதாரமாகக் கொண்டு, அந்த அடிப்படையில் நாம் ஆராய்ச்சி செய்யலாம். எனவே ஆராய்ச்சி என்பது இந்த நேரடி அறிவு என்ற எல்லைக்குள் தான் நிற்க வேண்டும் என்பது தெளிவு. அதைக் கடந்து ஒரு போதும் அதனால் செல்ல முடியாது. புலனறிவைக் கடந்து, அதற்கு அப்பால்தான் அனுபூதியின் முழு சாம்ராஜ்யமும் உள்ளது. நேரடியான புலனறிவிற்கும் தர்க்க அறிவுக்கும் அப்பால் செல்லலாம் என்கிறான் யோகி. தன் புத்தியைக் கடந்து அப்பால் செல்லும் ஆற்றல் மனிதனிடம் உள்ளது. மனிதனிடம் மட்டுமல்ல. இந்த ஆற்றல் ஒவ்வொரு ஜீவனிலும் ஒவ்வொரு பிராணியிலும் உள்ளது. யோகப் பயிற்சியால் இந்த ஆற்றல் விழித்தெழுகிறது. அப்போது மனிதன் அறிவின் எல்லைகளைக் கடக்கிறான்; அறிவனைத்தையும் கடந்தவற்றை நேரில் உணர்கிறான்.
50. தஜ்ஜ ஸம்ஸ்காரோன்ய ஸம்ஸ்கார ப்ரதிபந்தீ
இந்தச் சமாதியால் உண்டாகும் சம்ஸ்காரம் மற்ற எல்லா சம்ஸ்காரங்களையும் தடுக்கிறது.
முந்திய சூத்திரத்தில் உணர்வுகடந்த நிலைக்குச் செல்வதற்கு ஒருமைப்பாடுதான் ஒரேவழி என்று கண்டோம். மனம் ஒருமைப்படத் தடையாயிருப்பவை கடந்தகால சம்ஸ்காரங்கள் என்பதையும் கண்டோம். மனத்தைக் குவிக்க முயற்சிக்கும் போது, எண்ணங்கள் அலைபாய்வதைக் கவனித்திருப்பீர்கள். நீங்கள் கடவுளைச் சிந்திக்க முற்படும் நேரம் பார்த்துதான் இந்தச் சம்ஸ்காரங்களும் வெளிப்படும். மற்ற நேரங்களில் அவை அவ்வளவாக செயல்படுவதில்லை. உங்களுக்கு அவை எப்போது வேண்டாமோ அப்போது நிச்சயமாக அவை அங்கே இருக்கும் முடிந்தவரை உங்கள் மனத்தை இன்னும் அதிகமாக ஆக்கிரமிக்கும். ஏன் அப்படி? தியானிக்கும்போது ஏன் மற்ற நேரங்களைவிடமிகுந்த ஆற்றலுடன் அவை வெளிப்படுகின்றன? ஏனென்றால், நீங்கள் அவற்றை வெளிவராம லிருக்கும்படி அமுக்குகிறீர்கள். எனவே அவை தங்கள் முழு ஆற்றலுடன் எதிர்க்கின்றன. மற்ற வேளைகளில் அவை எதிர்ப்பதில்லை. பாய வருகின்ற புலிபோல் காத்துக்கொண்டு சித்தத்தில் எங்கேயோ இருக்கின்றன. இந்தப் பழைய சம்ஸ்காரங்கள் தாம் எத்தனையெத்தனை? இவற்றையெல்லாம் அடக்க வேண்டும், அடக்கி, நாம் விரும்பும் எண்ணம் மட்டுமே மேலே எழுமாறு செய்ய வேண்டும். ஆனால் அவை எல்லாம் சேர்ந்து ஒரே வேளையில் மேலெழும்பப் போராடுகின்றன. இவை தாம் மனத்தை ஒருமுகப்படுத்த முடியாமல் தடுக்கும் சம்ஸ்காரங்களின் பல்வேறு ஆற்றல்களாகும். எனவே இப்போது கூறிய சமாதியைப் பயிற்சி செய்ய வேண்டும். அது சம்ஸ்காரங்களை அமுக்கிவிடும் ஆற்றல் பெற்றது. இத்தகைய ஒருமைப்பாட்டினால் எழுகின்ற சம்ஸ்காரம், பிற சம்ஸ்காரங்களைத் தடுத்து அவற்றை அடக்கி வைக்கின்ற ஆற்றல் பெற்றதாக இருக்கும்.
51. தஸ்யாபி நிரோதே ஸர்வநிரோதாந்நிர்பீஜ ஸமாதி
(மற்ற சம்ஸ்காரங்களைத் தடுக்கின்ற) இந்த சம்ஸ்காரத்தையும் தடுப்பதால், அனைத்தும் தடுக்கப்பட்டு விதையிலா சமாதி உண்டாகிறது.
ஆன்மாவை உணர்வதே நமது குறிக்கோள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். ஆன்மாவை நாம் உணர முடியவில்லை. ஏனெனில் அது இயற்கையுடனும் மனத்துடனும் உடம்புடனும் கலந்திருக்கிறது. மூடன் தனது உடம்பே ஆன்மா என்று நினைக்கிறான். படித்தவனோ மனம்தான் ஆன்மா என்று நினைக்கிறான். இவர்கள் இருவரின் எண்ணமும் தவறே. ஆன்மாவை இவற்றுடன் எல்லாம் கலந்திருக்கச் செய்வது எது? சித்தத்தில் பல்வேறு அலைகள் எழுந்து ஆன்மாவை மூடிக் கொண்டிருக்கின்றன. இந்த அலைகளின் ஊடே ஆன்மாவின் பிரதிபிம்பத்தில் சிறிதை நாம் காண்கிறோம். சித்தத்தில் கோப அலைகள் எழுந்தால் ஆன்மாவைக் கோபமுள்ள தாக நாம் காண்கிறோம்; நான் கோபமாக இருக்கிறேன். என்கிறோம். அன்பின் அலையாக இருந்தால் அதை அலையில் நாம் பிரதிபலிப்பதைப் பார்த்துவிட்டு நாம் அன்பாக இருப்பதாகச் சொல்கிறோம். பலவீன அலை எழுமானால் ஆன்மா அதில் பிரதிபலிப்பதைப் பார்த்துவிட்டு நாம் தளர்வுற்றிருப்பதாக எண்ணுகிறோம். ஆன்மாவை மூடிக் கொண்டிருக்கும் சம்ஸ்காரங்களிலிருந்தே இந்தப் பல்வேறு எண்ணங்களும் வருகின்றன.
சித்தமாகிய குளத்தில் ஓர் அலையேனும் இருக்கும் வரை ஆன்மாவின் உண்மை இயல்பை உணர முடியாது. அனைத்து அலைகளும் அடங்காமல் ஆன்மாவின் உண்மை இயல்பை அறிய முடியாது. ஆதலால் பதஞ்சலி முனிவர் முதலில் இந்த அலைகளைப்பற்றி விளக்கிக் கூறுகிறார். இரண்டாவதாக, அவற்றை அடக்குவதற்குரிய மிகச் சிறந்த வழியைக் காட்டுகிறார். மூன்றாவதாக நெருப்பு நெருப்பை விழுங்குவதுபோல், மற்ற எல்லா அலைகளையும் அடக்கும் மிக வலிமையான ஓர் அலை மட்டும் எஞ்சி நிற்கும்போது அதையும் அடக்குவது எளிது. இந்த ஓர் அலையும் அடக்கப்படும்போது எய்துவது விதையிலா சமாதி, அது எந்தப் பதிவையும் விடுவதில்லை. அங்கே ஆன்மா தன் மகிமையில் மிளிர்கிறது. ஆன்மா என்பது ஒரு கலவை அல்ல, பிரபஞ்சத்தில் உள்ள நித்தியமான தனிப் பொருள் அதுவே என்று அப்போதுதான் அறிகிறோம். ஆன்மா பிறப்பதில்லை. இறப்பதில்லை, என்றும் உள்ளது. அழிக்க முடியாதது, அதுவே என்றென்றும் உள்ளதான அறிவின் சாரம் என்பதை உணர்கிறோம்.
2. சாதனை பாதம்
ஒருமைப்பாடு: அதன் பயிற்சி
1. தப: ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி க்ரியா யோக
தவம், படிப்பு, செயலின் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்தல் இவை கிரியா யோகம்.
சென்ற பகுதியின் இறுதியில் நாம் கண்டசமாதிகளை அடைவது மிகவும் கடினம். அவற்றைப் படிப்படியாகத் தான் முயல வேண்டும். முதல்படி, ஆரம்பப்படி கிரியா யோகம், கிரியா என்பதற்குச் செயல் என்று பொருள், கிரியா யோகம் என்றால் யோகத்தை அடைவதற்கான செயல்.
புலன்களே குதிரைகள், மனம், கடிவாளம்; புத்தி, சாரதி, உடல், தேர், இவற்றின் தலைவனான, மன்னனான ஆன்மா தேரில் வீற்றிருக்கிறான். குதிரைகள் வலிமை மிக்கவையாக, கடிவாளத்திற்கு அடங்காதவையாக இருந்து, சாரதியான புத்திக்கு அவற்றை அடக்க முடியாமலும் போகுமானால் தேர் ஆபத்திற்கு உள்ளாகும், மாறாக, புலன்களாகிய குதிரைகளை, மனமாகிய கடிவாளத்தால், புத்தி என்ற சாரதி திறம்பட அடக்கி நடத்தினால் தேர் இலக்கை அடைகிறது.
எனவே இந்தத் தவம் என்பது என்ன? உடலையும் புலன்களையும் வழிநடத்தும்போது, மனம் என்ற கடிவாளத்தை உறுதியாகப் பிடித்து அவை இரண்டும் தாம் விரும்பும்படிச் செல்லவிடாமல் தடுத்து வைப்பது தவம் ஆகிறது.
படிப்பு இங்கே படிப்பு என்றால் என்ன? நாவல்களையோ புத்தகங்களையோ படிப்பதல்ல. ஆன்மாவின் முக்திக்கு வழிகாட்டும் சாஸ்திரங்களைக் கற்பதே தர்க்க நூல்களைக் கற்பதும் படிப்பு ஆகாது. வாதப் பிரதிவாதத்தில் ஈடுபடும் நிலையை யோகி கடந்திருக்க வேண்டும். அவன் போதிய வாதங்களைச் செய்து திருப்தியான முடிவுக்கு வந்துவிட்டான். இப்போதைய அவனது படிப்பு, தனது முடிவுகளை உறுதிப்படுத்தவே. வாதம், சித்தாந்தம் இவை இருவகையான சாஸ்திர அறிவாகும். வாதம் (தர்க்கம்) சித்தாந்தம்(முடிவு) ஒருவன் விஷயத்தை முற்றிலும் அறியாதிருக்கும்போது வாதம் என்ற முதல் பகுதியை எடுத்து விஷயத்திற்கு உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் தர்க்கம் செய்கிறான். பின்னர் இறுதியில் ஒரு முடிவுக்கு வருகிறான். ஒரு முடிவுக்கு வந்தால் மட்டும் போதாது. இந்த முடிவை உறுதிப்படுத்த வேண்டும். நூல்களோ எண்ணற்றவை. காலமோ மிகக் குறைவு. ஆகவே சாரத்தை மட்டும் கொள்வது அறிவை வளர்க்கும் ரகசியம்,. சாரத்தை எடுத்து அதன்படி வாழ்க்கையை நடத்த முயற்சி செய்ய வேண்டும்.
பழைய இந்தியக் கதை ஒன்று உண்டு. அன்னப் பறவையின் முன் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கலந்த பாலை வைத்தால் அது தண்ணீரைப் பிரித்துவிட்டு, பாலை மட்டும் பருகும். அதுபோல் அறிவிலும் பயனுள்ளதை எடுத்துக்கொண்டு பயனற்றதை விட்டுவிட வேண்டும்.
புத்தி சாதுரியங்கள் எல்லாம் ஆரம்பத்தில் தேவை. குருட்டுத்தனமாக எதையும் ஒப்புக்கொள்ளக் கூடாது. யோகி வாதம் செய்யும் நிலையைக் கடந்துவிட்டான், பாறையைப் போன்று அசைக்க முடியாத முடிவுக்கு வந்து விட்டான். இப்போது அவனுக்கு வேண்டியதெல்லாம் அந்த முடிவைத் தீவிரப்படுத்துவதே. யாராவது உங்களுடன் விவாதிக்க வந்தால் வாதிடாதீர்கள், மவுனமாக இருங்கள். வாதத்துக்கு விடையளிக்காமல் சென்று விடுங்கள் என்கிறான் யோகி, ஏனெனில் வாதங்கள் மனத்தில் சஞ்சலத்தை உண்டாக்கும். புத்தியைப் பயிற்றுவிப்பதே நாம் செய்ய வேண்டுவது; அதையே ஏன் காரணமின்றிக் குழப்ப வேண்டும்? புத்தி ஒரு பலவீனமான கருவி, புலன்களின் எல்லைக்கு உட்பட்ட அறிவையே அதனால் நமக்குத் தர முடியும். யோகியோ புலன்களுக்கு அப்பால் செல்ல விரும்புகிறான். ஆதலால் புத்தியால் அவனுக்கு எந்தப் பலனும் இல்லை. ஆகவே இதனை சர்வ நிச்சயமாகப் புரிந்திருக்கின்ற அவன் வாதம் புரிய மறுக்கிறான். மவுனமாக இருக்கிறான். ஒவ்வொரு வாதமும் மனத்தின் சமநிலையைக் குலைக்கிறது. சித்தத்தில் சஞ்சலத்தை எழுப்புகிறது. சஞ்சலம் என்பதே ஒரு குறைபாடு. வாதங்களும் ஆராய்ச்சித் தேடல்களும் வெறும் வழி மட்டுமே. அவற்றிற்கு அப்பால் உயர்ந்த பல விஷயங்கள் உள்ளன. பள்ளிச்சிறுவர்களைப்போல் சண்டையிடுவதற்கும் வாதப் போர்களுக்கும் உரியதல்ல வாழ்க்கை.
செயலின் பலன்களை இறைவனுக்கு அர்ப்பணித்தல் என்பது செயலின் பலனால் கிடைக்கும் புகழ்ச்சியையோ இகழ்ச்சியையோ நாம் ஏற்றுக்கொள்ளாமல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு அமைதியாக இருப்பதாகும்.
2. ஸமாதி பாவனார்த்த க்லேச தனூகரணார்த்தச்ச
(அது) சமாதியைப் பயிற்சி செய்வதற்கும், துன்பம் தரும் தடைகளைக் குறைப்பதற்கும் ஆகும்.
சலுகை கொடுத்து, பிழைபட வளர்த்த பிள்ளைகளைப்போல், மனத்தை அது விரும்பியபடியெல்லாம் செய்யுமாறு நம்மில் பலரும் விட்டுவிடுகிறோம். ஆகவே மனத்தை வசப்படுத்தி அடக்குவதற்கு, கிரியா யோகத்தை இடைவிடாது பயில வேண்டும். மனம் அடக்கப் படாததால்தான் யோகத்திற்குத் தடைகள் ஏற்பட்டு நமக்குத் துன்பம் நேரிடுகிறது. கிரியா யோகத்தின் மூலம் மனத்தைத் தடுத்து அடக்குவதால் மட்டுமே தடைகளை நீக்க முடியும்.
3. அவித்யாஸ்மிதா ராகத்வேஷாபிநிவேசா க்லேசா
அறியாமை, நான் உணர்வு, பற்று, வெறுப்பு, வாழ்வின்மீது மோகம் இவையே துன்பம் தரும் தடைகள்.
இந்த ஐவகைத் துன்பங்களும் நம்மைக் கட்டிக் கீழே இழுக்கின்ற தளைகள் ஆகும். இவற்றுள் அறியாமை என்பதுதான் காரணம் மற்ற நான்கும் விளைவுகள். நமது துன்பங்களுக்கு ஒரே காரணம் அறியாமையே. அதைத் தவிர வேறு எது நமக்குத் துன்பத்தைத் தர முடியும்? நித்திய ஆனந்தமே ஆன்மாவின் இயல்பு, அறியாமை, பொய்க் காட்சி, மயக்கம் இதைத் தவிர எது ஆன்மாவைத் துன்பத்திற்கு உள்ளாக்க முடியும்? ஆன்மாவின் துன்பம் எல்லாம் வெறும் மயக்கமே.
4. அவித்யா ÷க்ஷத்ரமுத்தரேஷாம் ப்ரஸுப்த தனு விச்சின்னோதாராணாம்
மந்தமாகவோ, உறைந்ததாகவோ, அமுக்கப்பட்டோ அல்லது தளர்ந்ததாகவோ, எந்த நிலையில் இருந்தாலும் இவை அனைத்திற்கும் அறியாமையே மூலகாரணம்.
நான்-உணர்வு, பற்று, வெறுப்பு வாழ்வின்மீது மோகம் இவற்றிற்குக் காரணம் அறியாமையே. இந்த சம்ஸ்காரங்கள் வெவ்வேறு நிலைகளில் உள்ளன. சில வேளைகளில் அவை மந்தநிலையில் உள்ளன குழந்தை போல் வெகுளித்தனம் என்று சொல்லப்படுவதை நீங்கள் அடிக்கடிக் கேட்கிறீர்கள். ஆனால் குழந்தையிடம் அசுர இயல்போ அல்லது தெய்வ இயல்போ புதைந்து கிடக்கிறது. அது படிப்படியாக வெளிவரும். முன்வினைகள் விட்டுச்சென்ற இந்த சம்ஸ்காரங்கள் யோகியிடம், உறைந்து போனதுபோல் அதாவது மிகவும் நுண் நிலையில் கிடக்கின்றன. யோகி அவற்றை அடக்கி, அவை எழாமல் தடுத்துவிட முடியும்.
அமுக்க நிலை என்றால் சிவவேளைகளில் சில சம்ஸ்காரங்கள், வலிமையுள்ள பிற சம்ஸ்காரங்களால் அமுக்கிவைக்கப்ட்ட நிலையில் இருக்கும். ஆனால் அமுக்கி வைத்திருந்த காரணம் நீங்கியவுடன் அவை வெளிப்படுகின்றன. இறுதியானது கிளர்ந்த நிலை. இதில் சம்ஸ்காரங்களுக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்படும்போது அவை வலிமை பெற்று நன்மையையோ தீமையையோ செய்ய முயல்கின்றன.
5. அநித்யாசுசி து:கானாத்மஸு நித்ய சுசி ஸுகாத்ம க்யாதிரவித்யா
நிலையற்றதை நிலையானதாகவும் தூய்மையற்றதைத் தூய்மையானதாகவும், துன்பத்தை இன்பமாகவும், ஆன்மா அல்லாததை ஆன்மாவாகவும் கொள்வதே அறியாமை
வேறுபட்ட சம்ஸ்காரங்கள் அனைத்திற்கும் மூல காரணம் அறியாமையே அறியாமை என்பது என்ன என்பதை முதலில் நாம் அறிய வேண்டும். தூய ஒளிமிக்க, எப்போதும் ஆன்ந்தமான ஆன்மாவை நாம் என்று நினைக்காமல், உடம்பே நான் என்று நினைக்கிறோம். இதுவே அறியாமை. உடம்பை மனிதன் என்று நினைக்கிறோம். மனிதனாகக் காண்கிறோம். இதுதான் பெரிய மயக்கம்.
6. த்ருக் தர்சன சக்தயோரேகாத்மதைவாஸ்மிதா
காண்போனையும் காண்பதற்கான கருவியையும் ஒன்றாகக் கருதுவதே நான் உணர்வு.
தூய என்றென்றும் புனிதமான, எல்லையற்ற, நித்தியமான ஆன்மாவே உண்மையில் காண்பவன். இது மனிதனின் உண்மையான ஆன்மா, கருவிகள் என்பவை எவை? சித்தம், புத்தி, மனம், புலன்கள் இவையே, புறவுலகை ஆன்மா காண்பதற்குரிய கருவிகள் இவைதாம். ஆன்மாவைக் கருவிகளுடன் கருதுவது நான் உணர்வின் அறியாமை. நானே மனம்; நானே எண்ணம்; நான் கோபம் கொள்கிறேன். நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்றெல்லாம் சொல்கிறோம், நான் எவ்வாறு கோபம் கொள்ள முடியும்? நாம் எவ்வாறு வெறுக்க முடியும்? மாறுபாடற்ற ஆன்மாவுடன் நம்மை நாம் ஒன்றாகக் கருத வேண்டும். ஆன்மா மாறுபாடு இல்லாதது என்றால், ஒரு கணம் இன்பமாகவும் மறுகணம் துன்பமாகவும் அது எப்படி இருக்க முடியும்? அது உருவமற்றது; எல்லையற்றது; எங்கும் நிறைந்தது. எது அதனை மாறுபாடு அடையச் செய்ய முடியும்? அது எல்லா நியதிகளையும் கடந்தது. எது அதனைப் பாதிக்க முடியும்? பிரபஞ்சத்தில் உள்ள எதுவும் அதன்மீது எந்த விளைவையும் ஏற்படுத்த முடியாது. ஆயினும் அறியாமையால் நாம் நம்மைச் சித்தத்துடன் ஒன்றாகக் கருதி, இன்ப துன்பங்களை அடைவதாக எண்ணுகிறோம்.
7. ஸுகானுசயீ ராக
இன்பத்தை நாடுவது பற்று. சில பொருட்களில் நாம் இன்பத்தைக் காண்கிறோம். பிரவாகத்தைப்போல் மனம் அவற்றிடம் ஓடுகிறது. இப்படி இன்ப மையத்தை நோக்கி ஓடும் மனப்பிரவாகத்தையே நாம் பற்று என்கிறோம். சில வேளைகளில் விசித்திரமான பொருட்களிலும் நாம் இன்பம் காண்கிறோம். இருந்தாலும், இன்பம் பெறும் இடத்தில் பற்று வைக்கிறோம் என்ற நியதிக்கேற்ப அவற்றிலும் பற்றுக் கொள்ளவே செய்கிறோம்.
8. து:க்கானுசயீ த்வேஷ
துன்பத்தைத் தொடர்வது வெறுப்பு.
எது துன்பம் தருகிறதோ அதிலிருந்து உடனே விலக முயல்கிறோம்.
9. ஸ்வரஸவாஹீ விது÷ஷாபிததாரூடோ பினிவேச
வாழ்க்கைமீது மோகம் என்பது இயல்பாகப் பிரவகிப்பதும், அறிவாளிகளிடமும்கூட அமைந்திருப்பதும் ஆகும்.
ஒவ்வொரு பிராணிக்கும் வாழ்வின்மீது மோகம் உண்டு. மக்கள் வாழ்க்கையை அவ்வளவு தீவிரமாக விரும்புவதால் மறுமை வாழ்க்கையும் உண்டு என்று கூறி மறுமைபற்றிய கொள்கையை நிறுவவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் இந்த வாதத்தில் அவ்வளவு உண்மை இல்லை என்பது சொல்லாமலே விளங்கும். இதில் ஒரு வினோதம் என்னவென்றால், இந்த வாதம் மனிதர்கள் விஷயத்தில் உண்மையாயிருக்கலாம். பிராணிகள் விஷயத்தில் சரியல்ல என்று மேலை நாட்டினர் கூறுவதுதான். இந்தியாவில் முற்பிறவி, பூர்வ சம்ஸ்காரங்கள் என்பவற்றை நிரூபிப்பதற்கான ஆதாரங்களுள் இந்த மோகம் என்பது ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. நமது அறிவு எல்லாமே அனுபவத்திலிருந்தே வந்துள்ளது என்பது உண்மையானால், நாம் அனுபவிக்காததை நம்மால் நினைக்கவோ அறியவோ முடியாது என்பது நிச்சயம். ஆனால் கோழிக்குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் உணவைக் கொத்தித் தின்னத் தொடங்குகின்றன. கோழியினால் அடைகாக்கப்பட்டுப் பொரித்தால்கூட வாத்துக்குஞ்சுகள் நீரை நோக்கி ஓடுகின்றன. அடைகாத்த கோழி, குஞ்சுகள் நீரில் மூழ்கி இறந்துவிடுமே என்று பயப்படுகிறது. அனுபவம் மட்டுமே அறிவின் ஆதாரம் என்றால் கோழிக்குஞ்சுகள் பொரித்தவுடன் உணவைக் கொத்தவும், வாத்துக் குஞ்சுகள் இயல்பாக நீரை நோக்கி ஓடவும் எங்கிருந்து கற்றன?அவை அந்தந்த உயிர்களின் இயல்புணர்ச்சி என்றால் அந்த விடை ஒன்றுமில்லை. அது வெறும் வார்த்தை மட்டுமே; விளக்கம் ஆகாது.
இந்த இயல்புணர்ச்சி என்றால் என்ன? நம்மிடம் பல இயல்புணர்ச்சிகள் உள்ளன. நீங்கள் பெண்களுள் பலர் பியானோ வாசிப்பீர்கள் அல்லவா! நீங்கள் கற்க ஆரம்பித்தபோது, விரல்களை வெள்ளை அல்லது கறுப்புக் கட்டைகள்மீது மிகவும் கவனமாக வைக்க வேண்டியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும், ஆனால் பல ஆண்டுகள் பழகிய பிறகு, இப்போது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே விரல்கள் எந்திரகதியில் பியானோவை வாசிக்கிறது. அது இயல்புணர்ச்சி ஆகிவிட்டது. நாம் செய்யும் எல்லா செயல்களும் இவ்வாறே, பழக்கத்தின் காரணமாக இயல்புணர்ச்சியாகிவிட்டது. அனிச்சையாக அது நிகழ்கிறது. அனிச்சைச் செயல் என்று நாம் இப்போது கருதுகின்ற ஒன்றை ஆரம்பத்தில் நாம் அறிவால் ஆராய்ந்தே செய்ய வேண்டியிருந்தது. இப்போது இயல்பாகிவிட்டது. இயல்புணர்ச்சி என்பது பகுத்தறிவின் படிப்படியாகச் சுருங்கிய நிலை என்கிறான் யோகி. முதலில் செயல் பகுத்தறிவோடு கூடி இருக்கிறது. நாளடைவில் பகுத்தறிவு பின்னால் ஒடுங்கி அனிச்சை சம்ஸ்காரங்கள் ஆகிவிடுகின்றன. எனவே இந்த இயல்புணர்ச்சியை, ஒடுங்கிய பகுத்தறிவு என்பது நியாயமானதே. அனுபவமின்றிப் பகுத்தறிவு வராது. ஆதலால் எல்லா இயல்புணர்ச்சிகளுமே பழைய அனுபவங்களின் விளைவு தான். கோழிக் குஞ்சுகள் பருந்துக்குப் பயப்படுகின்றன, வாத்துக் குஞ்சுகள் நீரை நாடுகின்றன. இவை இரண்டுமே பழைய அனுபவங்களின் விளைவுதான்.
இந்த அனுபவம் ஆன்மாவுக்கு உரியதா அல்லது உடலுக்கு உரியதா என்ற கேள்வி எழுகிறது. வாத்துக்கு வந்த அனுபவம் அதன் முன்னோர் மூலம் வந்த அனுபவமா? அல்லது, அதன் சொந்த அனுபவமா? நவீன விஞ்ஞானிகள் இந்த அனுபவம் உடலுக்குரியது என்கின்றனர். ஆனால் யோகிகள், இந்த அனுபவம் மனத்திற்கு உரியது, அது உடல்மூலம் வெளிப்படுகிறது என்று கூறுகின்றனர், இதுவே மறுபிறவிக் கொள்கை.
நேரடியறிவு, பகுத்தறிவு, இயல்புணர்ச்சி என்று நாம் எப்படி அழைத்தாலும், நமது அறிவு எல்லாமே அனுபவம் என்ற ஒரு பாதை வழியாகத்தான் வந்தாக வேண்டும் என்று கண்டோம். இப்போது இயல்புணர்ச்சியாக உள்ளது. ஏற்கனவே ஒடுங்கிய நிலையில் இருந்த பழைய அனுபவத்தின் விளைவே. அனுபவம் இயல்புணர்ச்சியாகிறது. இயல்புணர்ச்சி மீண்டும் பகுத்தறிவாகிறது. பிரபஞ்சம் முழுவதும் இவ்வாறே நடக்கிறது. இதுவே இந்தியாவின் மறுபிறவிக் கொள்கைக்கான முக்கிய ஆதாரங்களுள் ஒன்றாக இருக்கிறது. பல்வேறு அச்சங்கள் மீண்டும்மீண்டும் வருவதால் வாழ்க்கைமீது மோகம் ஏற்படுகிறது. பழைய துன்பத்தின் அனுபவம் குழந்தையின் மனத்தில் இருப்பதால்தான் அதற்கு இயல்பாகவே அச்சம் உண்டாகிறது. இந்த உடம்பு அழிந்துவிடும் என்பதை அறிந்து கவலை வேண்டாம், நமக்கு நூற்றுக்கணக்கான உடல்கள் வரும், ஆன்மா இறப்பதில்லை என்று கூறுகின்ற பண்டிதர்களிடமும்கூட, அவர்கள் தங்கள் அறிவினால் மோகமும் உள்ளது. ஏன்? ஏனெனில் அது இயல்புணர்ச்சி ஆகிவிட்டது. யோகிகள் தங்கள் மனஇயல் மொழியில் அது சம்ஸ்காரமாகிவிட்டது என்கிறார்கள். நுண்ணிய தான சம்ஸ்காரங்கள் சித்தத்தில் மறைந்திருக்கின்றன மரணத்தைப் பற்றிய பழைய அனுபவம் மற்றும் நாம் இயல்புணர்ச்சி என்று அழைக்கின்ற எல்லாமே சித்தத்தில் உணர்வு மட்டத்திற்குக் கீழ் சென்ற அனுபவங்கள், அவ்வளவுதான். சித்தத்தில் அவை செயலற்று இருக்கவில்லை. அங்கே வாழ்கின்றன, செயல்படுகின்றன.
தூலமான சித்த விருத்திகளை, எண்ண அலைகளை உணர முடியும், அவற்றை எளிதாக அடக்கவும் முடியும். சூட்சுமமான இயல்புணர்ச்சிகளை எவ்வாறு அடக்குவது? நான் கோபம் கொள்ளும்போது என் மனம் முழுவதுமே கோபத்தின் ஒரு பெரிய அலையாகிறது. நான் அதை உணர்கிறேன். காண்கிறேன். கையாள்கிறேன். அதை எளிதில் என்னால் வசப்படுத்த முடியும், அதனுடன் போராட முடியும். ஆனால் அடியாழத்திற்குச் சென்று அதன் மூலகாரணத்தை அறியாமல், என்னால் முழு வெற்றி பெற முடியாது. ஒருவன் என்னிடம் கடுமையாக ஏதோ சொல்கிறான். அதை நான் உணர்கிறேன். எனக்குச் சூடேறுகிறது. அவனோ மேலும் நிந்திக்கிறான். நான் முழுச் சினம்கொண்டு என்னை மறந்து சினத்துடன் ஒன்றுகிறேன். அவனை ஏசத் தொடங்கும்போது எனக்குக் கோபம் வருகிறது என்று நினைக்கிறேன். அப்போது கோபம் வேறு நான் வேறு. கடைசியில் கோப வசப்படும் போது நானே கோபமாகி விடுகிறேன். இந்த உணர்ச்சிகளை முளையிலே, வேரிலே சூட்சும நிலையிலே, அவை நம்மை ஆக்கிரமிக்கப் போகின்றன என்பதை நாம் உணரும் முன்னரே அடக்கிவிட வேண்டும். மக்களுள் பெரும்பாலானோருக்கு இந்த உணர்ச்சிகளின், இந்த ஆசைகளின் சூட்சும நிலையைப்பற்றி, ஆழ்மனத்திலிருந்து அவை வெளிவரும் நிலையைப்பற்றி எதுவுமே தெரியாது. குளத்தின் அடியிலிருந்து கிளம்புகின்ற குமிழி மேல் மட்டத்திற்கு வரும்வரை பார்க்க முடிவதில்லை. ஏறக் குறைய நீர்மட்டத்தை நெருங்கும்போது கூட நாம் அதைக் காண்பதில்லை. மேலே வந்து உடைந்து ஓர் அலையை உண்டாக்கும்போது தான் அதை நாம் அறிகிறோம். அலைகள் சூட்சும நிலையில் இருக்கும்போதே அடக்கினால் மட்டுமே வெற்றி கிடைக்கும், தூலமாவதற்கு முன் அடக்காவிட்டால் எந்த ஆசையையும் முற்றிலுமாக வெல்ல முடியாது. ஆசைகளை அடக்க வேண்டுமானால் அவற்றை வேரிலேயே கட்டுப்படுத்த வேண்டும், அப்போதுதான் அவற்றின் விதைகளையே பொசுக்க முடியும். வறுத்தெடுத்த விதை முளைக்காததுபோல் இந்த ஆசைகளும் ஒருபோதும் எழாது.
10. தே ப்ரதிப்ரஸவ ஹேயா ஸூக்ஷ்மா
சூட்சும சம்ஸ்காரங்களை அவற்றின் காரண நிலையில் ஒடுக்கி, வென்றுவிடலாம்.
சம்ஸ்காரங்கள் என்பவை நுண் பதிவுகள். அவையே பின்னர் தூலமாக உருவெடுக்கின்றன. இந்த சூட்சும சம்ஸ்காரங்களை எவ்வாறு அடக்குவது? காரியத்தைக் காரணத்திற்குள் ஒடுக்குவதன் மூலம்தான். சித்தம், காரியம், அஸ்மிதை அல்லது நான் உணர்வு காரணம், சித்தத்தை நான் உணர்வினுள் ஒடுக்கினால், அதனுடன் சூட்சும சம்ஸ்காரங்களும் அழிந்துவிடும். தியானத்தால் இவற்றை அழிக்க முடியாது.
11. தியானஹேயாஸ்தத்வ்ருத்தய
தியானத்தில் அவற்றின்(தூல) வடிவங்களை ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு எழும் அலைகளை அடக்க தியானம் ஒரு சிறந்த வழியாகும். தியானத்தினால், இந்த அலைகளை மனம் ஒழித்துவிடும்படிச் செய்ய முடியும். நாட்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக தியானம் செய்து, அது ஒரு பழக்கமாகி, நீங்கள் கருதாமல் இருக்கும்போதே தியான நிலை வருமானால், கோபம், வெறுப்பு போன்றவற்றை எளிதில் அடக்கித் தடுக்க முடியும்.
12. க்லேசமூல கர்மாசயோ த்ருஷ்டாத்ருஷ்ட ஜன்ம வேதனீய
வினைத் தொகுதியின் வேர் துன்பம்தரும் தடைகளில் ஊன்றியுள்ளது. இந்தப் பிறவியிலோ அல்லது இனி எடுக்கும் பிறவியிலோ அவற்றின் பலன் உண்டாகிறது.
வினைத் தொகுதி என்பது சம்ஸ்காரங்களின் மொத்தம். நாம் என்ன வேலை செய்தாலும் மனம் ஓர் அலையாக எழுகிறது. வேலை முடிந்தவுடன் அலைபோய் விட்டது என்று எண்ணுகிறோம். அது போகவில்லை. இருக்கிறது. சூட்சும நிலையில் இருக்கிறது. நாம் அந்த வேலையை நினைக்க முயலும்போது அது மீண்டும் அலையாக எழுகிறது. எனவே அங்கே அது இருக்கிறது. இல்லாவிட்டால் ஞாபகம் என்பது இருக்காது. நல்லதாகட்டும், தீயதாகட்டும், ஒவ்வொரு செயலும் ஒவ்வோர் எண்ணமும் இவ்வாறு நுண்ணியதாகி ஆழ்மனத்தில் சேமிக்கப்படுகிறது. இன்ப துன்பம் தரும் தடைகள் என்றே அழைக்கப்படுகின்றன. ஏனெனில், நாளடைவில் அவை துன்பத்தையே தரும் என்கிறான் யோகி. புலன்கள்மூலம் வரும் இன்பம் எல்லாம் முடிவில் துன்பத்தையே தரும். இன்ப நுகர்ச்சியால் மேலும் மேலும் இன்பம் அனுபவிக்க வேட்கை உண்டாகிறது. அதன் விளைவாகத் துன்பம் ஏற்படுகிறது. மனிதனின் ஆசைக்கு அளவில்லை. அவன் ஆசையைப் பெருக்கிக் கொண்டே இருக்கிறான். ஆசைகள் நிறைவேறாது என்ற ஒரு நிலை வரும்போது துன்பமே விளைவாகிறது. ஆதலால் நல்ல மற்றும் தீய சம்ஸ்காரங்கள், இரண்டுமே துன்பம் தரும் தடைகள். ஆன்மாவின் முக்கிப் பாதையில் இடையூறுகள் என்று யோகிகள் கருதுகின்றனர்.
நமது செயல்கள் அனைத்திற்கும் சூட்சும வேர்களான சம்ஸ்காரங்களின் விஷயமும் இப்படித்தான். இந்தப் பிறவியிலோ, வரும் பிறவிகளிலோ மீண்டும் பலனைத் தருவதற்கான காரணங்களே அவை. அசாதாரணமான சிலவேளைகளில் சம்ஸ்காரங்கள் மிகவும் வலிமையாக இருந்தால், பலன் விரைவில் கிடைத்துவிடும். மிகமிகக் கொடிய செயல்கள் அல்லது மிகமிக நல்ல செயல்கள் இந்தப் பிறவியிலேயே பலனளித்துவிடும்.
அளப்பரிய நல்ல சம்ஸ்காரங்களின் பலனை உடையவர்கள் இறக்கத் தேவையில்லை. அவர்கள் இந்தப் பிறவியிலேயே தங்கள் உடலைத் தேவ உடலாக மாற்றிக்கொள்ள முடியும் என்று யோகிகள் கூறுகின்றனர். அவர்களின் நூல்களில் இத்தகைய எத்தனையோ சான்றுகள் உள்ளன. இத்தகையோர் தங்கள் உடலின் மூலப்பொருளை மாற்றி அழைக்கின்ற ஒன்றோ வராத வண்ணம் அவர்கள் தங்கள் உடலின் மூலக்கூறுகளை மாற்றியமைக்கின்றனர். ஏன் அப்படியிருக்கக் கூடாது? உடலியலின்படி, உணவு என்பது சூரியனிடமிருந்து வரும் சக்தியைக் கிரகித்து ஏற்றுக்கொள்ளல். சூரிய சக்தி தாவரங்களில் சேமிக்கப் படுகிறது. பிராணிகள் தாவரங்களை உண்கின்றன. மனிதன் பிராணிகளை உணவாகக் கொள்கிறான். விஞ்ஞான மொழியில் சொல்வதானால், சூரியனிடமிருந்து நாம் சக்தியைப் பெற்று, நமது அங்கமாக்கிக் கொள்கிறோம். இந்த நிலையில் சக்தியைப் பெற ஏன் ஒரே ஒரு வழிதான் இருக்க வேண்டும்? தாவரங்கள் சக்தியை ஏற்கும் வழி வேறு; நாம் ஏற்கும் வழி வேறு; பூமி சக்தியை சேர்க்கும் விதம் நம்மிலிருந்து வேறுபட்டது. ஆனால் எல்லாமே ஏதோ ஒருவிதத்தில் சக்தியைக் கிரகிக்கவே செய்கின்றன. யோகிகளோ, தாங்கள் சாதாரண வழிகளைப் பயன்படுத்த வேண்டியதில்லை. தங்கள் மனவலிமையாலேயே தாங்கள் விரும்பும் அளவு சக்தியைப் பெற முடியும் என்று கூறுகின்றனர். சிலந்தி தன்னிடம் சுரக்கும் திரவத்தாலேயே வலை பின்னி அதிலேயே கட்டுண்டு, அந்த வலையின் இழைகள் வழியே தவிர மற்ற வழியில் செல்ல முடியாததாக இருக்கிறது. அதுபோல் நாமும் நமது தாதுப்பொருளாலேயே உடலில் நரம்புப் பின்னல்களை ஏற்படுத்தியுள்ளோம். இந்த நரம்புகள் வழியே தவிர, வேறு வழியாக நாம் செயல்புரிய முடியாது. அவ்வாறு நாம் நரம்புகளால் கட்டுண்டு இருக்க வேண்டியதில்லை என்கிறான் யோகி.
அதுபோல் மின்சாரத்தை உலகத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால் அதனைக் கம்பிகள் வழியாகவே அனுப்ப வேண்டியுள்ளது. இயற்கையோ பேரளவு மின்சக்தியைக் கம்பிகளின்றி அனுப்புகிறது. நாமும் ஏன் அவ்வாறு செய்ய முடியாது? மன மின்சாரத்தை நாம் அவ்வாறு அனுப்பலாம். நாம் மனம் என்று கூறுவதும் ஏறக்குறைய மின்சாரத்தை ஒத்ததே. நமது நரம்புப் பிரவாகத்தில் மின்சக்தி உள்ளது என்பது வெளிப்படை. ஏனெனில் அது துருவத் தன்மை காட்டுகிறது. மின்சாரத்தின் எல்லா தன்மைகளையும் உடையதாக இருக்கிறது. நாம் நமது மின்சாரத்தை இந்த நரம்புப் பிரவாகங்கள் வழியாக மட்டுமே அனுப்ப முடியும். இந்த உதவியின்றி மன மின்சாரத்தை ஏன் அனுப்பக் கூடாது? கட்டாயமாக அனுப்பலாம் என்கிறான் யோகி. அது முடியுமானால், நீங்கள் பிரபஞ்சம் முழுவதிலும் செயல்புரியலாம். நரம்பு மண்டலத்தின் உதவியின்றியே எங்கேயும் எந்த உடலுடனும் நீங்கள் செயல்படலாம். நரம்பு மண்டலத்தின் மூலம் ஒருவன் செயல் புரியும்போது அவன் உயிருடன் இருக்கிறான் என்றும், அவை ஓய்கின்றபோது அவன் இறந்துவிட்டதாகவும் கூறுகிறோம். நரம்பு மண்டலத்தின் உதவியின்றியே ஒருவன் செயல்பட முடியுமானால் அவனுக்கு பிறப்பு, இறப்பு என்பதெல்லாம் பொருளற்றுப் போய்விடுகின்றன. பிரபஞ்சத்திலுள்ள உடல்கள் எல்லாம் தன் மாத்திரகைளால் ஆனவை. அவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடு இந்தத் தன்மாத்திரகளின் அமைப்பில் உள்ள வேறுபாடே ஆகும். நீங்களே இந்தத் தன்மாத்திரைகளை அமைப்பவராக இருந்தால், உடலை எவ்வாறு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். இந்த உடலை உங்களைத் தவிர வேறு யார் உருவாக்குகிறார்கள்? யார் உணவை உண்கின்றார்? உங்களுக்காக வேறொருவர் சாப்பிட்டால் நீங்கள் நீண்ட காலம் வாழ முடியாது. உணவிலிருந்து யார் ரத்தத்தை உண்டாக்குகிறார்? நிச்சயமாக நீங்கள்தான். ரத்தத்தைத் தூய்மைப்படுத்தி ரத்தக் குழாய் வழியாக அனுப்புவது யார்? நீங்களே! உடம்பிற்குத் தலைவர்கள் நாமே. நாம் அதில் வாழ்கிறோம். அதை இளமையாக்கி, புத்துயிர் கொடுக்கும் அறிவை இழந்து விட்டோம். நாம் எந்திரமாகிவிட்டோம், கீழ்நிலைக்கு வந்துவிட்டோம். உடலின் மூலக்கூறுகளை அமைக்கும் முறையை மறந்துவிட்டோம். எனவே அனிச்சையாக, எந்திரத்தனமாகச் நாம் தலைவர்கள், மூலக்கூறுகளை நாமே அமைக்க வேண்டும். அதற்கு நம்மால் இயலும் போது நாம் விரும்புகின்ற இளமையைப் பெற முடியும். அப்போது நமக்கு பிறப்போ, நோயோ, இறப்போ இல்லாமல் போய்விடும்.
13. ஸதி மூலமே தத்விபாகோ ஜாத்யாயுர் போகா
மூலகாரணம் இருப்பதால் அதன் பலனாக பல்வேறு பிறவிகள், ஆயுள், இன்ப துன்ப அனுபவம் இவை உண்டாகின்றன.
வேர்களாகிய, மூலகாரணங்களாகிய சம்ஸ்காரங்கள் இருப்பதால் அவை பலன்களாக வெளிப்படுகின்றன. காரணம் அழிந்து காரியமாகிறது. இந்தக் காரியம் சூட்சுமமாகி அடுத்த காரியத்திற்குக் காரணமாகிறது. மரம் விதையை உண்டாக்குகிறது. இந்த விதை அடுத்த மரத்திற்குக் காரணம் ஆகிறது. இவ்வாறு தொடர்கிறது. இந்தப் பிறவியின் செயல்பாடுகள் எல்லாம் நமது முற்பிறவி சம்ஸ்காரங்களின் பலன்கள் ஆகும். இந்தச் செயல்கள் சம்ஸ்காரங்கள் ஆகி, இனி வருகின்ற பிறவிக்குக் காரணங்கள் ஆகும். இவ்வாறு தொடர்ந்து செல்கிறது. ஆகவே காரணம் இருப்பதால் காரியம் வந்தாக வேண்டும் என்று இந்தச் சூத்திரம் கூறுகிறது. காரணத்திற்கேற்ப ஓர் உயிர் மனிதன் ஆகும், மற்றோர் உயிர் தேவதை ஆகும். இன்னொன்று பிராணி ஆகும். மற்றொன்று அரக்கன் ஆகும். இனி, ஒரு பிறவியிலேயே கர்மத்திற்கேற்ப பலன்கள் வெவ்வேறாக இருக்கும். ஒருவன் ஐம்பது வருடங்கள் வாழ்வான். மற்றொருவன் நூறு ஆண்டுகள் வாழ்வான். இன்னொருவன் மேலும் வளராமல் இரண்டு வருடங்களில் இறந்துவிடுகிறான். வாழ்வில் நாம் காணும் இந்த எல்லா வேறுபாடுகளும் முன்வினைப் பயனாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. ஒருவன் வாழ்க்கையில் இன்பம் அனுபவிப்பதற்காகவே பிறந்தவன் போலிருப்பான்; அவன் காட்டிற்குச் சென்று தன்னை மறைத்துக் கொண்டாலும் இன்பம் அங்கேயும் அவனைத் தொடர்கிறது. மற்றொருவன் எங்குச் சென்றாலும் துன்பம் அவனைத் தொடர்கிறது. அவனுக்கு எல்லாமே துன்பமயம்தான். எல்லாம் முன்வினைப்பயன் யோகத் தத்துவத்தின்படி, நற்செயல்கள் இன்பம் பயக்கும். தீமை செய்பவன் அதன் பலனாகிய துன்பத்தை அனுபவித்தேயாக வேண்டும்.
14. தே ஹ்லாதபரிதாபபலா புண்யாபுண்ய ஹேதுத்வாத்
இவை புண்ணியம் மற்றும் பாவங்களைக் காரணமாகப் பெற்றிருப்பதால் முறையே இன்பதுன்பத்தையும் பலன்களாகத் தருகின்றன.
15. பரிணாம தாப ஸம்ஸ்கார துக்கைர் குணவ்ருத்தி விரோதாச்ச துக்கமேவ ஸர்வம் விவேகின
அனைத்தும் துன்பத்தையே விளைவாகக் கொண்டு வருகின்றன. இன்பத்தை இழந்துவிடுவோமோ என்ற பயம் உள்ளது, இன்ப அனுபவ சம்ஸ்காரங்களிலிருந்து எழுகின்ற புதிய ஆசைகள் உள்ளன இந்தத் துன்பங்களின் காரணமாகவும் குணங்களின் விருத்திகள் ஒன்றுக்கொன்று எதிராக இருப்பதாலும் விவேகிகளுக்கு எல்லாம் துன்பம்போல தோன்றுகின்றன.
யோகிகள் கூறுகின்றனர். நல்லறிவும் விவேகமும் உள்ளவன் இன்பம் மற்றும் துன்பம் என்று அழைக்கப்படுபவற்றை எல்லாம் ஊடுருவிப் பார்க்கிறான்; அவை இரண்டும் ஒன்றையொன்று தொடர்ந்து வருவதையும், ஒன்று மற்றொன்றுள் கரைவதையும் அறிகிறான். மனிதர்கள் வாழ்நாள் முழுவதும் கானல்நீரை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் அவர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை என்பதைக் காண்கிறான். கணந்தோறும் மக்கள் நம் கண்முன்னால் இறப்பதைக் காண்கிறோம். ஆனால் நாம் ஒருபோதும் இறக்கமாட்டோம் என்று எண்ணுகிறோம். என்ன விந்தை! என்று வியக்கிறார் மாமன்னரான தர்மபுத்திரர். சுற்றிலும் மூடர்கள் இருப்பதைக் கண்டும், நாம் மட்டும் அறிவாளிகள் என்று ஒவ்வொருவரும் நினைக்கிறோம். சுற்றிலும் நிலையற்ற அனுபவங்களைக் கண்டும் நமது அன்பு நிலையானது என்று நினைக்கிறோம். அது எப்படி? அன்பும் சுயநலமே. கணவன், மனைவி, குழந்தை, நண்பன் என்று அனைவரின் அன்பும் சிறிது சிறிதாகத் தேய்ந்து, இறுதியில் மறைவதைக் காணலாம் எனகிறான் யோகி. இந்த வாழ்க்கையில் அனைத்தும், அன்பும்கூட மின்னல்போல் மறைகின்ற போதுதான் மனிதன் திடீரென்று விழித்துக் கொள்கிறான். இந்த உலகம் கனவு போன்றது என்று காண்கிறான். அப்போது சிறிது வைராக்கியம் அடைந்து, அப்பால் உள்ள தன் கணநேரக் காட்சி பெறுகிறான். இந்த உலகைத் துறந்தால்தான் அந்த உலகம் கிடைக்கும்; இந்த உலகைப் பற்றிக்கொள்வதால் ஒருபோதும் கிடைக்காது. புலன் இன்பங்களை விட்டொழிக்காமல் வாழ்ந்து பெருமை பெற்ற மாமனிதர் ஒருபோதும் இருந்ததில்லை. துன்பத்தின் காரணம் இயற்கையின் பல சக்திகள் ஒன்றோடொன்று போராடுவதாகும். ஒன்று மனிதனை ஒருபுறத்திலும் மற்றொன்று மறுபுறத்திலும், பிடித்து இழுத்து அவனை நிலைத்த இன்பம் பெறாதபடிச் செய்துவிடுகின்றன.
16. ஹேயம் துக்கமனாகதம்
இதுவரை வராத துன்பத்தைத் தவிர்க்க வேண்டும்.
நமது வினைப்பயனில் ஒரு பகுதியை ஏற்கனவே அனுபவித்து விட்டோம். அதில் மற்றொரு பகுதியை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எஞ்சிய பகுதி எதிர்காலத்தில் பயன் தருவதற்காகக் காத்திருக்கிறது. முதற்பகுதி கழிந்து போய்விட்டது. இரண்டாம் பகுதியை நாம் அனுபவித்தேயாக வேண்டும். எதிர்காலத்தில் பலன் கொடுக்கக் காத்துக் கொண்டிருப்பதை மட்டுமே நாம் வென்று அடக்க முடியும். இந்த முயற்சியில் நமது ஆற்றல்கள் அனைத்தையும் செலுத்த வேண்டும். சம்ஸ்காரங்களை அவற்றின் காரண நிலைக்குக் கொண்டு சென்று வென்றுவிடலாம் என்று பதஞ்சலி முனிவர்(2.10) கூறிய தன் கருத்து இதுவே.
17. த்ரஷ்ட்ரு த்ருச்யயோ ஸம்யோகோ ஹேய ஹேது
காண்பவனுக்கும், காணப்படும் பொருளுக்கும் ஏற்படும் சேர்க்கையே விலக்கப்பட வேண்டிய துன்பத்திற்கான காரணம்.
காண்பவன் யார்? புருஷன் அதாவது மனிதனின் ஆன்மா. காணப்படும் பொருள் எது? மனம் முதல் ஜடப்பொருள்வரையிலான இயற்கை முழுவதும், புருஷனும் மனமும் சேர்வதாலேயே எல்லா இன்பதுன்பங்களும் உண்டாகின்றன. யோகத் தத்துவப்படி புருஷன் தூயவன் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். புருஷன் இயற்கையோடு சேரும்போது, இயற்கையில் பிரதிபலித்து, இன்ப துன்பங்களை அனுபவிப்பவன்போல் காணப்படுகிறான்.
18. ப்ரகாச க்ரியா ஸ்திதி சீலம் பூதேந்த்ரியாத்மகம் போகாபவர்கார்த்தம் த்ருச்யம்
காணப்படும் பொருள் பூதங்களாலும் இந்திரியங்களாலும் ஆக்கப்பட்டது. அது ஒளியையும் செயலையும் செயலற்ற தன்மையையும் இயல்பாகக் கொண்டது. (காண்பவனுக்கு) அனுபவமும் முக்தியும் கிடைப்பதற்காக அது உள்ளது.
காணப்படும் பொருள், அதாவது இயற்கை, பூதங்களாலும் புலன்களாலும் ஆக்கப்பட்டுள்ளது. பூதங்கள் என்றால் தூல மற்றும் சூட்சும பூதங்கள். புலன்கள் என்றால் ஐம்புலன்கள், மனம் முதலியவை ஆகும். ஒளி, சத்வம், செயல், ரஜஸ்; செயலற்ற நிலை, தமஸ் இந்த முக்குணங்களும் இயற்கையின் இயல்பு. இயற்கையின் பயன் என்ன? புருஷன் அனுபவம் பெறுவதே. புருஷன் தனது மகிமையை தெய்வத்தன்மையை மறந்ததுபோல் உள்ளான். இந்திரனைப் பற்றிய ஒரு கதை உண்டு.
ஒரு காலத்தில் தேவர்களின் அரசனான இந்திரன் பன்றியாகி சேற்றில் உழன்று கொண்டிருந்தான். பெண் பன்றியுடனும் குட்டிகளுடனும் இன்பமாக அவன் காலம் கழித்து வந்தான். சில தேவர்கள் அவனது பரிதாப நிலையைக் கண்டு அவனிடம் வந்து இந்திரனே! நீ தேவர்களுக்கெல்லாம் தலைவன் தேவர்கள் உன் ஆணைக்கு உட்பட்டவர்கள். நீ ஏன் இப்படி இங்கு உழல்கிறாய்? என்று கேட்டனர். அதற்கு இந்திரன், நீங்கள் எனக்காகக் கவலைப்படத் தேவையில்லை. நான் இங்கு இன்பமாகத்தான் இருக்கிறேன். இந்த என் மனைவியும் குட்டிகளும் இருக்கும்போது, எனக்குச் சொர்க்கத்தைப்பற்றிக் கவலை இல்லை என்று கூறிவிட்டான். தேவர்கள் திகைத்து நின்றனர். பிறகு பன்றிகள் அனைத்தையும் கொல்லத் தீர்மானித்தனர்,. அவ்வாறே கொல்லவும் செய்தனர். பன்றிகள் இறந்தபோது இந்திரன் அரற்றி அழுதான். இறுதியாக தேவர்கள் அவனது பன்றி உடலையும் கிழித்தனர். வெளியில் வந்த இந்திரன் உண்மையை உணர்ந்தான். பயங்கரக் கனவாயிருந்த தன் பன்றி வாழ்க்கையை நினைத்துச் சிரித்தான். தேவர்களின் அரசனான அவன், ஒரு பன்றியாக, பன்றி வாழ்வுக்கு நிகர் வேறொரு வாழ்வும் இல்லையென்று எண்ணியிருந்தான்! அதுமட்டுமா, பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களும் பன்றிகளாக வேண்டும் என்றும் விரும்பியது அவனது உள்ளம்!
புருஷன் தன்னைப் பிரகிருதியுடன் இணைத்துக் கொள்ளும்போது, தான் தூயவன், எல்லையில்லாதவன் என்பதை மறந்து விடுகிறான். புருஷன் அன்பு செலுத்துகிறான் என்பதில்லை, அவனே அன்பு. அவன் இருக்கிறான் என்பதல்ல அவனே இருப்பு. அவன் அறிவதில்லை. அவனே அறிவு. ஆன்மா அன்பு செலுத்துகிறது. இருக்கிறது, அறிகிறது என்றெல்லாம் கூறுவது தவறு. அன்பு, இருப்பு, அறிவு என்பவை புருஷனின் குணங்கள் அல்ல, புருஷனின் சாரமே அவை. அவை ஒரு பொருளின்மீது பிரதிபலிக்கும் போது, அவற்றை அந்தப் பொருளின் குணங்கள் என்று வேண்டுமானால் நீங்கள் கூறலாம். ஆனால் அவை குணங்கள் அல்ல; புருஷனின் பரமாத்மாவின், எல்லையற்ற பொருளின், பிறப்பு இறப்பு அற்றதன், தன் மகிமையிலேயே நிலைபெற்றுள்ளதன் சாரமே ஆகும். அது கீழ்நிலையை அடைந்தது போல் தோன்றுகிறது. அந்த நிலையில் அதனிடம் சென்று, நீ பன்றி இல்லை என்று சொன்னால் அது உறுமிக்கொண்டு, கடிக்க வருகிறது.
துன்பமும் அழுகையும் அரற்றலுமே சூழ்ந்த இந்தக் கனவுலகில், இந்த மாயையில் நாம் எல்லோர் நிலைமையும் அதுதான், சில பொன் பந்துகள் உருட்டப்படுகின்றன. அவற்றிற்காக அடித்துக்கொண்டு உலகம் அவற்றின் பின்னால் ஓடுகிறது. நீங்கள் ஒருபோதும் நியதிகளால் கட்டுப் பட்டிருக்கவில்லை. இயற்கை உங்களுக்கு ஒருபோதும் ஒரு தளையாக இருக்கவில்லை. யோகி சொல்வது இது தான். பொறுமையாக இதைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆன்மா பிரகிருதியோடு சேர்வதாலும், மனத்தையும் உலகத்தையும் தன்னுடன் ஒன்றாகக் கருதுவதாலும் துன்பத்தில் ஆழ்ந்திருப்பதாகப் புருஷன் நினைப்பதைக் காட்டுகிறான் யோகி. பின்னர் அனுபவத்தின் மூலமே இந்தத் தளையிலிருந்து விடுபட முடியும் என்பதையும் விவரிக்கிறான். இந்த அனுபவத்தை எல்லாம் பெற்று, அவற்றை விரைவில் அனுபவித்து முடித்துவிட வேண்டும். நாமே இந்த வலையில் மாட்டிக் கொண்டோம். நாம்தான் வெளியேற வேண்டும். இந்தப் பொறியில் நாமே சிக்கிக் கொண்டோம். இதிலிருந்து விடுதலை பெறவும் நாமே வழிவகுக்க வேண்டும். ஆதலால் கணவன், மனைவி, நண்பர் என்றுள்ள சிறுசிறு அன்பின் அனுபவங்களை எல்லாம் பெற்றுவிடுங்கள். இந்த அனுபவங்களின்போது நீங்கள் உண்மையில் யார் என்பதை மறவாதிருந்தால் விரைவில் இந்த வலையிலிருந்து விடுபடுவீர்கள். இவ்வுலக வாழ்க்கை கணநேரத்திற்கே, இதன் வழியாகவே நாம் போக வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். இன்ப துன்ப அனுபவமே நமக்கு குரு. ஆனாலும் அது அனுபவம் மட்டுமே என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். படிப்படியாகப் பொருட்கள் அனைத்துமே சிறியதாகி. புருஷன் பெரியதாகி, இந்தப் பிரபஞ்சமே கடலில் ஒரு துளிபோல் குறுகி, பின்பு சூன்யத்தில் கரைந்து மறைகின்ற நிலைக்கு அது நம்மை இட்டுச் செல்கிறது. இந்த எல்லா அனுபவங்கள் வழியாகவும் செல்ல வேண்டும். ஆனால் ஒருபோதும் குறிக்கோளை மறக்காமல் இருக்க வேண்டும்.
19. விசேஷாவிசேஷ லிங்கமாத்ரா லிங்கானி குண பர்வாணி
வரையறுக்கப்பட்டவை வரையறுக்கப்படாதவை, அடையாளம் மட்டும் உடையவை அற்றவை என்பவை குணங்களின் நிலைகள் ஆகின்றன.
யோக நெறி முற்றிலும் சாங்கியத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனை ஏற்கனவே கூறியுள்ளேன். சாங்கியர்களின் பிரபஞ்சத் தத்துவத்தை இங்கு மீண்டும் கூறுகிறேன். பிரபஞ்சத்திற்கு நிமித்த காரணமும் உபாதான காரணமும் பிரகிருதியே என்று சாங்கியத் தத்துவம் கூறுகிறது. இயற்கையில் சத்வம், ரஜஸ், தமஸ் என்று மூவகை அடிப்படைப் பொருட்கள் உள்ளன. இருளான, அறியாமை மிக்க, தூலமான அனைத்தும் தாமஸப் பொருட்கள், ரஜஸ் என்பது செயலோடு கூடியது. சத்வப் பொருள் அமைதியும் ஒளியும் பெற்றது. படைப்புக்குமுன் உள்ள பிரகிருதியின் நிலை அவ்யக்தம், அதாவது தோன்றா நிலை, விளக்கப்படாத வரையறுக்கப்படாத நிலை எனகிறார்கள் சாங்கியர்கள். அதில் நாமரூப வேறுபாடு கிடையாது. அந்தநிலையில் மூவகைப் பொருட்களும் சமச்சீர் நிலையில் உள்ளன. பின்னர் இந்தச் சமநிலை கலைகிறது. இந்தக் குணங்கள் வெவ்வேறு வகையில் ஒன்றுசேரத் தொடங்குகின்றன. அதன் விளைவாகப் பிரபஞ்சம் உண்டாகிறது. ஒவ்வொரு மனிதரிடமும் இந்த மூன்று பொருட்களும் உள்ளன. சத்வம் ஓங்கியிருக்கும்போது அறிவு உண்டாகிறது. ரஜஸ் ஓங்கியிருக்கும்போது மனிதன் செயலில் ஈடுபடுகிறான், தமஸ் ஓங்கியிருக்கும்போது அறியாமை இருளும் சோம்பலும் செயலற்ற நிலையும் உண்டாகின்றன.
சாங்கியக் கொள்கைப்படி இந்த மூன்று அடிப்படைப் பொருட்களால் அமைந்ததான பிரகிருதியின் மிகவுயர்ந்த வெளிப்பாடே மஹத் அல்லது புத்தி. அது பிரபஞ்ச புத்தி, ஒவ்வொரு மனிதனின் புத்தியும் அதில் ஒரு பகுதியாகும். சாங்கிய மன இயலின்படி, மனத்திற்கும் புத்திக்கும் நுண்ணிய வேறுபாடு உள்ளது. எண்ணங்களைச் சேர்த்து புத்தியின் முன் வைப்பதுமட்டுமே மனத்தின் வேலை, மஹத்தின் பகுதியாகிய புத்தியே அதை நிச்சயிக்கிறது. மஹத்திலிருந்து அகங்காரமும், அகங்காரத்திலிருந்து சூட்சுமப் பொருட்களும் வருகின்றன. சூட்சுமப் பொருட்கள் இணைந்து, தூலப் பொருளான பிரபஞ்சம் வெளியே தோன்றுகிறது. புத்தியிலிருந்து தொடங்கி கல் வரை உள்ள எல்லாமே ஒரே பொருளிலிருந்து தோன்றியவை; வேறுபாடுகள் எல்லாம் சூட்சும மற்றும் தூல நிலைகளில் மட்டுமே என்று சாங்கியத் தத்துவம் கூறுகிறது. சூட்சுமப் பொருள் காரணமாகவும், தூலப் பொருள் காரியமாகவும் இருக்கும். சாங்கியத் தத்துவப்படி, பிரகிருதிக்கு அப்பால் புருஷன் இருக்கிறான். அவன் ஜடப்பொருளால் ஆனவன் அல்ல. புத்தி, மனம், தன் மாத்திரைகள் அல்லது தூல ஜடப் பொருட்கள் எனவும் புருஷனுடன் ஒப்பிட முடியாது. அவன் இதுபோன்ற எதுவும் அல்ல. அவன் முற்றிலும் தனியானவன், இயல்பிலேயே வேறுபட்டவன். அவன் சேர்க்கையால் ஆனவன் அல்ல, எனவே அழிவற்றவனாகத்தான் இருக்க வேண்டும். சேர்க்கையால் வராதது அழிய முடியாது புருஷர்கள் அல்லது ஜீவான்மாக்களின் எண்ணிக்கை எல்லையற்றது.
இனி, குணங்களின் நிலைகள் வரையறுக்கப்பட்டவை, வரையறுக்கப்படாதவை, அடையாளம் மட்டும் உடையவை. அடையாளம் அற்றவை என்று சூத்திரம் கூறுவதைப் புரிந்துகொள்வோம். புலன்களால் அறியக் கூடிய தூல பூதங்கள் வரையறுக்கப்பட்டவை சாதாரண மக்களால் புலன்களால் அறியப்படாத சூட்சும பூதங்களான தன்மாத்திரைகள் வரையறுக்கப்படாதவை ஆனால் யோகப் பயிற்சியில் முன்னேறும்போது, அனுபவ சக்தி மிகவும் சூட்சுமமாவதால் தன்மாத்திரைகளையும் நீங்கள் உண்மையிலேயே காண முடியும் என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார். உதாரணமாக, ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஒருவகையான ஒளி வீசுவதாகக் கூறப்படுகிறது. உயிரினம் ஒவ்வொன்றும் இந்த ஒளியைச் சிந்துகின்றன. யோகியால் இதைக் காண முடியும் என்கிறார் பதஞ்சலி. நாம் அதைக் காண்பதில்லை. பூக்கள் தொடர்ந்து சூட்சுமத் துகள்களை வெளியே அனுப்பிக் கொண்டிருக்கின்றன். அவற்றின் காரணமாகத்தான் நாம் அவற்றின் வாசனையை நுகர முடிகிறது. அதுபோன்று நாம் அனைவரும் தன் மாத்திரைகளை வெளியில் அனுப்புகிறோம். நமது அன்றாட வாழ்வில் நல்ல மற்றும் தீய எண்ணங்களை வெளியில் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். நாம் எங்கு சென்றாலும் அங்கு இந்தத் தன்மாத்திரைகள் நிறைந்துள்ளன. அதனால்தான், காரணம் தெரியாவிட்டாலும் கோயில்களும் சர்ச்சுகளும் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தானாகவே மனித மனத்தில் தோன்றுகிறது. மனிதன் கடவுளை வழிபட ஏன் கோயிலைக் கட்ட வேண்டும்? எங்கு வேண்டுமானாலும் அவரை ஏன் வழிபடக் கூடாது? காரணம் தெரியாவிட்டாலும், பலர் வழிபடுகின்ற இடத்தில் நல்ல தன்மாத்திரைகள் நிறைந்துள்ளதை மனிதன் அறிகிறான். தினமும் கோயிலுக்குச் செல்லசெல்ல மனிதன் மேலும் புனிதனாகிறான். அந்த இடத்தின் புனிதமும் அதிகரிக்கிறது. அதிக சத்வ குணம் இல்லாதவனும் கோயிலுக்குச் சென்றால், அந்த இடமே அவன்மீது ஆதிக்கம் செலுத்தி, அவனிடம் சத்வ குணத்தை எழுப்பும், கோயில்கள் மற்றும் புனிதத் தலங்களின் முக்கியத்துவத்திற்கு இதுவே காரணம். ஆனால் அங்குள்ள புனிதம் அங்குச் செல்வபவர்களின்
புனிதத்தைப் பொறுத்தே அமையும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த உட்பொருளை மறந்து, மனிதன் குதிரைக்கு முன் வண்டியை நிறுத்துகிறான். இதுதான் பிரச்சினை மனிதனே இந்த இடங்களைப் புனிதமாக்கினான், பின்னர் அந்தக் காரியமே காரணமாகிறது. அதாவது அந்த இடமே மனிதனைப் புனிதப்படுத்துவதாகி விடுகிறது. தீயவர்கள் மட்டுமே அங்குச் செல்வதனால் அந்த இடமும் மற்ற இடங்களைப்போல் கெட்டுவிடும் கோயிலை உருவாக்குவது மனிதனே தவிர மாளிகைகள் அல்ல. ஆனால் இதைத் தான் நாம் எப்போதும் மறந்துவிடுகிறோம். அதனால்தான் அதிக சத்வத்தை உடைய ரிஷகளும் முனிவர்களும் அதை வெளியே அனுப்பி, இரவும் பகலும் தாங்கள் வாழும் சூழ்நிலையில் பேராதிக்கம் செலுத்துகின்றனர். தனது தூய்மை பிறருக்குப் புலப்படும் வண்ணம் ஒருவன் தூயவனாக முடியும்; அவனை அணுகுகின்ற அனைவரும் தூய்மை பெறுகிறார்கள்.
இனி, அடையாளம் மட்டும் உடையது என்பது புத்தி. இயற்கையின் முதல் வெளிப்பாடு இதுவே. இதிலிருந்தே மற்றவை எல்லாம் வெளிப்பட்டன. கடைசியாக வருவது அடையாளம் அற்றது இந்த விஷயத்தில் நவீன விஞ்ஞானத்திற்கும் மதங்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதுபோல் காணப்படுகிறது. பிரபஞ்சம் புத்தியிலிருந்து வெளிப்பட்டதாகவே எல்லா மதங்களும் கூறுகின்றன. இறைவன் நம்மைப்போல் ஒருவரா இல்லையா என்பன போன்ற கருத்துக்களை எல்லாம் விலக்கிவிட்டு, மனஇயல் நோக்கில் மட்டும் கடவுள் கொள்கையைப் பார்த்தோமானால் முதலில் படைக்கப்பட்டது புத்தி. நாம் தூலப் பொருட்கள் என்று கூறுகின்ற அனைத்தும் அதிலிருந்தே வந்தன. ஆனால் நவீனச் தத்துவவாதிகள், புத்தி கடைசியில் வந்தது என்கின்றனர். ஜடப் பொருட்களே படிப்படியாக உயிருள்ள பிராணிகளாகப் பரிணமித்தன, பிராணிகளிலிருந்து மனிதன் தோன்றினான் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
புத்தியிலிருந்து எல்லாம் வந்தது என்று கூறுவதற்குப் பதிலாக, எல்லாவற்றிற்கும் இறுதியில் புத்தி தோன்றியது என்று கூறுகிறார்கள். மதம் மற்றும் விஞ்ஞானம் இரண்டு கூற்றுகளும் ஒன்றுக்கொன்று எதிரானவைபோல் தோன்றினாலும் இரண்டும் உண்மையானவை. உதாரணமாக அ-ஆ-அ-ஆ என்ற முடிவற்ற தொடரை எடுத்துக் கொள்வோம். இதில் அ முந்தியதா, ஆ முந்தியதா? தொடரை அ-ஆ என்று ஆரம்பித்தால் அ முந்தியது. ஆ-அ என்று ஆரம்பித்தால் ஆ முந்தியது. அந்த விடை நாம் நோக்கும் முறையைப் பொறுத்தது. புத்தி வேறு பட்டு தூலப் பொருளாகிறது. பின்பு தூலப் பொருள் புத்தியில் கரைகின்றது. இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சாங்கியர்களும் பிற மதவாதிகளும் புத்தியில் ஆரம்பிக்கின்றனர். எனவே தொடரில் முதலில் புத்தியும் பின்னர் ஜடப்பொருளும் வருகிறது. விஞ்ஞானிகள் ஜடப்பொருளில் ஆரம்பிக்கின்றனர். இங்கு முதலில் ஜடப் பொருளும் பின்னர் புத்தியும் வருகிறது. இரு சாராரும் குறிப்பிடுவது ஒரு தொடரையே. இந்தியத் தத்துவமோ ஜடப் பொருள், புத்தி ஆகிய இரண்டுக்கும் அப்பால் சென்று புருஷன் அல்லது ஆன்மாவைக் காட்டுகிறது. ஆன்மா புத்திக்கு அப்பாற்பட்டது. ஆன்மாவிடமிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளியே புத்தி.
20. த்ரஷ்டா த்ருசிமாத்ர சுத்தோபி ப்ரத்யயானுபச்ய
காண்பவன் அறிவு வடிவினன். அவன் தூயவனாக இருந்தாலும், புத்தியின் தன்மைக்கு ஏற்பவே அதன் வழியாகக் காண்கிறான்.
இதுவும் சாங்கியத் தத்துவமே. இதே கொள்கையின் படி தாழ்ந்த பொருட்கள் முதல் புத்திவரை அனைத்தும் பிரகிருதியே, பிரகிருதிக்கு அப்பால், குணங்கள் அற்ற புருஷர்கள் உள்ளனர் என்று கண்டோம். ஆனால் ஆன்மா துன்பமாகவோ இன்பமாகவோ இருப்பதுபோல் தோன்றுகிறதே. அது எப்படி? பிரதிபலிப்பதால், தூய படிகத்திற்கு அருகில் சிவப்பு மலர் ஒன்றை வைத்தால் படிகம் சிவப்பாகத் தோன்றுகிறது அதுபோல் ஆன்மாவின் இன்ப துன்பங்களும் பிரதிபலிப்பே, ஆன்மாவிற்கு இவை எதுவும் இல்லை. அது பிரகிருதியிலிருந்து வேறுபட்டது. பிரகிருதி என்பது வேறு, ஆன்மா என்பது வேறு, இவை என்றென்றைக்குமாக வேறுபட்டவை, புத்தி ஒரு சேர்க்கைப் பொருள், அது வளரவும் தேயவும் செய்கிறது. உடம்பைப் போல் வளர்ந்து சுருங்கி மாற்றத்திற்கு உள்ளாகிறது. அது ஏறக்குறைய உடம்பைப் போன்றதே என்று சாங்கியர்கள் கூறுகின்றனர். உடலுக்கு விரல்நகம் எப்படியோ, அப்படியே புத்திக்கு உடல், நகம் உடலின் ஒரு பகுதிதான், ஆனால் அதை நூறு தடவை வெட்டி எறிந்தாலும் உடல் நிலைத்திருக்கிறது. அதுபோல் உடலை எத்தனை முறை களைந்தாலும் புத்தி காலங்காலமாக நிலை பெற்றிருக்கும். ஆனாலும் புத்தி நித்தியப் பொருளாகாது. ஏனெனில் அது வளர்வதும் தேய்வதுமாக மாறிக் கொண்டிருக்கிறது. மாறுகின்ற எதுவும் நித்தியமாக முடியாது. புத்தி என்பது நிச்சயமாக உருவாக்கப்பட்ட ஒன்றே. அதற்கு அப்பால் வேறொன்று இருக்க வேண்டும் என்பதை இந்த உண்மையே காட்டுகிறது. அது சுதந்திரமானதாக இருக்க முடியாது. ஜடப் பொருளுடன் தொடர்புடைய எதுவும் இயற்கையில்தான் இருந்தாக வேண்டும். எனவே அது என்றென்றைக்குமாகக் கட்டுப்பட்டதே. யார் சுதந்திரர்? அவர் கட்டாயமாக, காரணகாரியத் தொடர்புக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். சுதந்திரம் அல்லது முக்தி பற்றிய எண்ணம் ஒரு மயக்கம் என்று நீங்கள் கூறினால் தளையைப் பற்றிய எண்ணமும் மயக்கமே என்பேன் நான். தளை, முக்தி பற்றிய நமது எண்ணமாகிய இரண்டு உண்மைகளுமே நம் அறிவினுள் வருகின்றன. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. ஒன்றில்லாமல் மற்றது இல்லை. ஒரு சுவரை ஊடுருவி நாம் போக விரும்பினால், தலை சுவரில் மோதுகிறது. சுவரினால் தடுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அதேவேளையில் நமக்கு சுயேச்சை சக்தி ஒன்று இருப்பதை காண்கிறோம். அதை விரும்பிய இடத்தில் செலுத்தலாம் என்றும் எண்ணுகிறோம். இந்த முரணான எண்ணங்கள் ஒவ்வொரு படியிலும் நம்மிடம் வருகின்றன. நாம் சுதந்திரர்கள் என்று நாம் நம்ப வேண்டும், ஆனால் நாம் கட்டுண்டு இருப்பதை ஒவ்வொரு நிமிடமும் நாம் காண்கிறோம். இவற்றுள் ஒரு கருத்து மயக்கம் என்றால் மற்றதும் மயக்கமே; ஒன்று உண்மையென்றால் மற்றதும் உண்மை. ஏனெனில் இரண்டுமே அனுபவம் என்ற ஒரே ஆதாரத்தில் நிற்கின்றன. இரண்டு எண்ணங்களும் உண்மையே என்று யோகி கூறுகிறான். புத்தியைப் பொறுத்தவரையில் நாம் கட்டுப்பட்டவர்கள். ஆன்மாவைக் கருத்தில் கொண்டால் நாம் சுதந்திரர்கள். காரணகாரிய நியதிக்கு அப்பாற்பட்டதான ஆன்மா அல்லது புருஷன் என்பதுதான் மனிதனின் உண்மை இயல்பு. அதன் சுதந்திர இயல்பு ஜடப்பொருளின் பல்வேறு அடுக்குகளின் ஊடே ஊடுருவி, புத்தி, மனம் என்றெல்லாம் பல்வேறு உருவங்களை எடுக்கிறது. மற்றவற்றின் வழியாக ஒளிர்கிறது. புத்திக்குச் சுய ஒளி கிடையாது.
ஒவ்வொரு பொறிக்கும் மூளையில் ஒரு தனி மையம் உள்ளது. எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு மையம் என்று இல்லை. ஒவ்வொரு பொறியும் தனித்தன்மையானவை. அப்படியிருந்தால் எல்லா அனுபவங்களும் எவ்வாறு சமரசமடையும்? தங்கள் ஒருமையை அவை எங்கிருந்து பெறும்? மூளையில் என்று கூற வேண்டுமானால், கண் காது முதலிய பொறிகள் அனைத்திற்கும் அங்கு ஒரே மையம் இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி மையங்கள் இருப்பது நமக்குத் தெரியும். மனிதன் ஒரே நேரத்தில் பார்க்கவும் கேட்கவும் முடியும். எனவே புத்திக்குப் பின்னால் ஓர் ஒருமை இருக்க வேண்டும். புத்தி மூளையுடன் தொடர்புள்ளது. புத்திக்குப் பின்னால் ஒன்றேயான புருஷன் உள்ளான். அவனில்தான் வெவ்வேறு உணர்ச்சிகளும் அனுபவங்களும் இணைந்து ஒன்றாகின்றன. வெவ்வேறு அனுபவங்களும் குவிந்து ஒருமை அடைவது ஆன்மாவாகிய மையத்தில்தான். ஆன்மா சுதந்திரமானது. அதனுடைய சுதந்திரமே ஒவ்வொரு கணமும் நாம் சுதந்திரர்கள் என்ற எண்ணத்தைத் தந்து கொண்டிருக்கிறது. ஆனால் தவறாக, அந்தச் சுதந்திர எண்ணத்தைப் புத்தி அல்லது மனத்துடன் ஒவ்வொரு கணமும் இணைத்துக் கொண்டிருக்கிறோம் நாம். அந்தச் சுதந்திரம் புத்தியிலிருந்து வந்ததாகக் கருத முயற்சிக்கிறீர்கள். மறு கணமே புத்தி சுதந்திரமற்றது என்பதைக் காண்கிறீர்கள். உடம்பிலிருந்து வந்ததாகக் கருதத் தலைப்படுகிறீர்கள். நீங்கள் தவறிவிட்டீர்கள் என்பதை இயற்கை மறுகணமே உங்களுக்குக் காட்டிவிடுகிறது. இதனால்தான் முக்தி மற்றும் தளை பற்றிய எண்ணங்கள் ஒரே நேரத்தில் நம்மிடம் தோன்றுகின்றன. எது முக்தி நிலையில் உள்ளது, எது கட்டுப்பட்டுள்ளது என்று இரண்டையும் யோகி ஆராய்கிறான். அவனது அறியாமை அகல்கிறது. புருஷன் சுதந்திரமானவன், அறிவின் சாரம்; புத்தியின் வழியாகப் பிரகாசிக்கும்போது, அவனே அறிவாக ஒளிர்கிறான். அந்த நிலையில் அவன் கட்டுப்பட்டவன் என்பதை அறிகிறான்.
தொடரும்...
தொடர்ச்சி...
.
21. ததர்த்த ஏவ த்ருச்யஸ்யாத்மா
காணப்படுவதன் இயல்பு அவனுக்காக அமைந்துள்ளது.
பிரகிருதிக்குச் சுய ஒளி இல்லை. புருஷன் அதில் இருக்கும்வரை அது ஒளிபோல் தோன்றுகிறது. ஆனால் அந்த ஒளி கடன் வாங்கியது. சந்திரனின் ஒளிபோல் பிரதிபலிப்பு ஒளிதான். இயற்கையின் வெளிப்பாடுகள் எல்லாமே இயற்கை தனக்குத்தானே உண்டாக்கியவை. புருஷனைச் சுந்திரனாகச் செய்வதைத் தவிர இயற்கையின் இந்தச் செயலுக்கு வேறெந்த நோக்கமும் இல்லை என்று யோகிகள் கூறுகின்றனர்.
22. க்ருதார்த்தம் ப்ரதி நஷ்டமப்யநஷ்டம் ததன்ய ஸாதாரணத்வாத்
குறிக்கோளை அடைந்தவர்களுக்கு அது அழிந்தாலும், பொதுவாக இருப்பதால் அது மற்றவர்க்கு அழிவதில்லை.
பிரகிருதியின் செயல்கள் அனைத்துமே, ஆன்மா பிரகிருதியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை ஆன்மாவிற்கு உணர்த்துவதற்கே. ஆன்மா இதை அறியும் போது, இயற்கையின் கவர்ச்சிகள் அவனுக்கு இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் முக்தி அடைந்தவனுக்கு மட்டுமே இயற்கை முற்றிலுமாக மறைகிறது. எண்ணற்ற மற்றவர்கள் எப்போதும் இருப்பார்கள், இயற்கை அவர்களுக்காகத் தன் செயலைச் செய்து கொண்டேயிருக்கும்.
23. ஸ்வஸ்வாமி சக்த்யோ ஸ்வரூபோபலப்தி ஹேது ஸம்யோக
பிரகிருதி, அதன் தலைவன் இருவரின் சக்திகளை உணர்வதற்குக் காரணமாக இருப்பது சேர்க்கையே
பிரகிருதி, புருஷன் இரண்டும் சேரும்போதே இரண்டின் சக்திகளும் வெளிப்படுகின்றன என்று இந்தச் சூத்திரம் கூறுகிறது. அப்போதுதான் எல்லா வெளிப்பாடுகளும் உண்டாகின்றன. இந்தச் சேர்க்கைக்கு அறியாமையே காரணம். உடலுடன் நம்மை இணைத்துக் கொள்வதுதான் நமது இன்ப துன்பங்களுக்கு எப்போதும் காரணமாக இருக்கிறது என்பது நமது அன்றாட அனுபவம். நான் இந்த உடல் அல்ல என்று உறுதியாக என்னால் நினைக்க முடியுமானால் சூடு, குளிர் போன்ற எதைப் பற்றியும் நான் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த உடல் ஒரு கூட்டுப் பொருள். என் உடல் வேறு, உங்கள் உடல் வேறு, சூரியன் வேறு என்று எண்ணுவதெல்லாம் கற்பனையே, பிரபஞ்சம் முழுவதும் ஒரு ஜடப் பொருள் கடல். அதில் ஒரு துணுக்கு நான், ஒரு துணுக்கு நீங்கள், வேறொரு துணுக்கின் பெயர் சூரியன். இந்த ஜடப் பொருள் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கிறது என்று நமக்குத் தெரியும். இன்று சூரியனில் இருப்பது நாளை நம் உடலில் வந்து சேரக்கூடும்.
24. தஸ்ய ஹேதுரவித்யா
அதன் காரணம் அறியாமை
அறியாமையால் ஒரு குறிப்பிட்ட உடலுடன் நாம் நம்மை இணைத்துக் கொண்டு துன்பங்களுக்கு உட்படுகிறோம். உடலைப் பற்றிய இந்த எண்ணம் வெறும் முட்டாள் தனமானது. இந்த மூடத்தனம் தான் நம்மை மகிழ்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்துகிறது. அறியாமையால் விளைந்த இந்த மூடநம்பிக்கைதான் சூடு-குளிர், மகிழ்ச்சி- வேதனை என்று எல்லாவற்றையும் அனுபவிக்கச் செய்கிறது. இந்த மூடத்தனத்தை நாம் கடந்து செல்லவேண்டும். அதற்கு யோகி வழி காட்டுகிறான். சில குறிப்பிட்ட மன நிலைகளில், ஒரு மனிதனைத் தீயினால் சுட்டாலும் வலியை அவன் உணர்வதில்லை என்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பிரச்சினை என்னவென்றால் மனம் திடீரென்று சூறாவளிபோல் இந்த நிலைக்கு உயர்கின்றது! மறுகணமே மறைந்தும்விடுகின்றது.யோகப் பயிற்சிமூலம் இந்த நிலையை அடைந்தால் உடலையும் ஆன்மாவையும் பிரித்துணரும் நிலையை நிரந்தரமாகப் பெறலாம்.
25. ததபாவாத் ஸம்யோகாபாவோ ஹானம் தத்த்ருசே கைவல்யம்
அது (அறியாமை) இல்லாததால், விலக்கவேண்டிய சேர்க்கை நீக்கப்படுகிறது. அதுவே காண்பவனுடைய கைவல்யமாகும்.
யோகத் தத்துவப்படி அறியாமையின் காரணமாகவே பிரகிருதியுடன் ஆன்மா இணைந்தது. இயற்கை நம்மீது ஆதிக்கம் செலுத்துவதை அகற்றுவதே நோக்கம் எல்லா மதங்களின் நோக்கமும் இதுவே. ஒவ்வோர் ஆன்மாவும் உள்ளடங்கிய தெய்வீகம் நிறைந்தது. புற மற்றும் அக இயற்கையை அடக்குவதன்மூலம் இந்த அக தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே நோக்கம். செயல் அல்லது வழிபாடு அல்லது பிராணனைக் கட்டுப்படுத்தல் அல்லது தத்துவ ஆராய்ச்சி இவற்றுள் ஒன்றினாலோ பலவற்றினாலோ எல்லாவற்றாலுமோ இதனைச் செய்து சுதந்திரனாக இரு! இதுவே மதத்தின் முழு உண்மை. கொள்கைகளும் கோட்பாடுகளும், சடங்குகளும் நூல்களும், கோயில்களும் உருவங்களும் இரண்டாம் நிலையிலுள்ள விளக்கங்களே, பிராணனை வசப்படுத்தும் பயிற்சியின்மூலம் யோகி இந்த இலக்கை அடைய முயல்கிறான்.
இயற்கையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளாத வரை, நாம் அடிமைகளே. அதன் கட்டளைப்படியே நாம் நடக்க முடியும். மனத்தை வசப்படுத்துபவன் ஜடப்பொருளையும் வசப்படுத்தலாம் என்கிறான் யோகி. அக இயற்கை புற இயற்கையைவிட மிகவும் உயர்ந்தது. அதனுடன் போராடுவது கடினமானது. வசப்படுத்துவதோ அதைவிடக் கடினம், அதை அடக்குபவன் பிரபஞ்சத்தையும் அடக்கியாள்வான், அது அவனுக்கு அடிமையாகிறது. இயற்கையை வெல்வதற்கான முறைகளை ராஜயோகம் காட்டுகிறது. நாம் அறிந்த புறச்சக்திகளைவிட வலிமை மிகுந்த சக்திகளை நாம் வசப்படுத்த வேண்டும். இந்த உடல் என்பது மனத்திற்கு ஒரு புறக்கூடு மட்டுமே. அவை இரண்டு பொருட்கள் அல்ல, சிப்பியும் அதன் ஓடும் போன்றவை அவை. இரண்டும் ஒரே பொருளின் இரண்டு தோற்றங்கள் மட்டுமே. சிப்பியின் அகப்பொருள், புறத்திலிருந்து பொருளைப் பெற்று ஓட்டை உண்டாக்குகிறது. அதுபோலவே மனம் என்று நாம் அழைக்கின்ற அக நுண்சக்திகள் புறத்திலிருந்து தூலப் பொருளை எடுத்து, அதிலிருந்து புறக்கூடாகிய இந்த உடலை உண்டாக்குகிறது. எனவே அகத்தை அடக்க முடியுமானால் புறத்தை அடக்குவது மிக எளிதாகும்.
இனி, இந்தச் சக்திகளும் வேறானவையல்ல. சிலசக்திகள் பவுதீகமானவை. சில சூட்சுமமானவை என்பது கிடையாது. எப்படித் தூல உலகம் என்பது நுண் உலகத்தின் தூல வெளிப்பாடு மட்டுமோ, அப்படியே சூட்சும சக்திகளின் தூல வெளிப்பாடே பவுதீக சக்திகள்.
26. விவேகக்யாதிரவிப்லவா ஹானோபாய
விவேகத்தை இடைவிடாது பயில்வது அறியாமையை ஒழிக்கும் வழி.
எது உண்மைப்பொருள், எது உண்மையற்றது என்று பிரித்தறிவதே பயிற்சியின் உண்மையான நோக்கம். புருஷன் என்பது பிரகிருதி அல்ல, ஜடப்பொருள் அல்ல, மனமும் அல்ல. அது இயற்கை அல்ல. ஆதலால் புருஷனிடம் மாற்றங்கள் நிகழ முடியாது. சேர்வதும் பிரிவதும் மீண்டும் சேர்வதுமாகத் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பது இயற்கைதான். தொடர்ந்த பயிற்சியின்மூலம் விவேகத்துடன் நாம் பிரித்தறியத் தொடங்கும்போது அறியாமை அகல்கிறது. புருஷன் தன் உண்மை இயல்பில், எங்கும் நிறைந்த எல்லா சக்தியும் பெற்ற எல்லாம் அறிந்த நிலையில் ஒளிர ஆரம்பிப்பான்.
27. தஸ்ய ஸப்ததா ப்ராந்த பூமி: ப்ரஜ்ஞா
அவனது அறிவு ஏழு வகையான உன்னத பூமிகளை அடைகின்றது.
இந்த அறிவு வரும்போது, அது ஒன்றன்பின் ஒன்றாக ஏழு படிகளில் வருவது போலுள்ளது. அவற்றுள் ஒன்று வரத்தொடங்கும்போது, நாம் அறிவை அடைந்துகொண்டிருக்கிறோம் என்பதை அறிகிறோம்.
முதற்படியில், நாம் அறிய வேண்டியவற்றை அறிந்துள்ளோம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். இதனால் மனம் திருப்தியடைகிறது. நாம் அறிவை நாடி ஓடுவதை உணரும்போது இங்கும் அங்கும் தேடத் தொடங்குகிறோம், எங்கோ, ஏதோ உண்மை கிடைக்கும் என்று நினைத்தால் அங்கு ஓடுகிறோம். அங்கே கிடைக்காவிட்டால் அதிருப்தி அடைந்து வேறு வழியில் தேடுவோம். அறிவு நமக்குள்ளேயே இருக்கிறது, யாரும் நமக்கு உதவ முடியாது, நாமே நமக்கு உதவ வேண்டும் என்பதை உணரும்வரை நமது தேடல்கள் அனைத்தும் வீணே. நாம் விவேகத்தைப் பழகத் தொடங்கும்போது, நாம் உண்மையை நெருங்குகிறோம் என்பதற்கு முதல் அடையாளமாக நமது அதிருப்தி அகன்றுவிடும்; உண்மையைக் கண்டுவிட்டோம், அது உண்மையைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்று உறுதி நம்மிடம் உண்டாகும். அப்போது நமக்கு சூரிய உதயம் உண்டாகி விட்டது, விடியல் தோன்றிவிட்டது என்று நாம் அறிவோம். இந்த உறுதியுடன் குறிக்கோளை அடையும்வரை தைரியத்துடன் இடைவிடாது முயன்று முன்னேற வேண்டும்.
இரண்டாவது படி, துன்பங்கள் அனைத்தும் அகன்றுவிடுதல், அகத்திலோ புறத்திலோ உள்ள எதுவும் நமக்குத் துன்பம் தர முடியாது. மூன்றாவது படி, பூரண அறிவை, எல்லாம் அறிந்த நிலையை அடைவது ஆகும், நான்காவது படியில், விவேகத்தின் மூலம் நமது கடமைகள் எல்லாம் முற்றுப் பெற்ற நிலையை அடைகிறோம். ஐந்தாவது படியில், சித்தத்தின் சுதந்திரம் நமக்கு வாய்க்கிறது. எல்லா துன்பங்களும் போராட்டங்களும் எல்லா சஞ்சலங்களும் மலை உச்சியிலிருந்து வீழ்ந்த கல்லைப் போல் மீண்டும் வராத வகையில் ஒழிந்துவிட்டன என்பதை அறிவோம். ஆறாவது படியில்,நாம் விரும்பும் பொழுது, சித்தம் அதன் மூலகாரணங்களால் கரைந்து போவதைச் சித்தம் தானே உணரும்.
நாம் நமது ஆன்மாவில் நிலைத்திருக்கிறோம். பிரபஞ்சத்தில் நாம் தனித்துள்ளோம். உடலுக்கும் மனத்திற்கும் நம்முடன் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை, அவை நம்முடன் இணைந்திருக்கின்றன என்ற பேச்சிற்கே இடமில்லை என்பதையெல்லாம் புரிந்து கொள்கிறோம். அவை தம் போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அறியாமையால் நாம் நம்மை அவற்றுடன் இணைத்துக் கொண்டோம். ஆனால் எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எல்லா பேறும் பெற்றவர்களாகிய நாம் தனியாகவே உள்ளோம்; நமது ஆன்மா அவ்வளவு தூய்மையானது அவ்வளவு பரிபூரணமானது, நமக்கு வேறு யாரும் தேவைஇல்லை. நம்மை இன்புற்றிருக்கச் செய்ய வேறு யாரும் தேவை இல்லை. ஏனெனில் நாமே ஆனந்த வடிவினர். அறிவு வேறு எதையும் சார்ந்திருக்கவில்லை என்பதை நாம் அறிவோம். நமது அறிவின் முன் ஒளிபெறாத எந்தப் பொருட்களும் இந்தப் பிரபஞ்சத்திலேயே இருக்க முடியாது. இதுதான் கடைசி நிலை. இங்கு யோகி அமைதியை அடைகிறான். சாந்த நிலையில் திளைக்கிறான். இனிமேல் எந்தத் துன்பமும் அவனைத் தீண்டுவதில்லை. எந்த மயக்கமும் அவனைப் பற்றுவதில்லை. எந்தக் கவலையும் அவனை வாட்டுவதில்லை. தான் எப்போதும் பேறுபெற்றவன், எப்போதும் பரிபூரணமானவன், எல்லாம் வல்லவன் என்பதை அவன் அறிகிறான்.
28. யோகாங்கானுஷ்டானாதசுத்திக்ஷயே ஞான தீப்திராவிவேகக்யாதே
யோகத்தின் பல அங்கங்களைப் பயிற்சி செய்வதால் மலினங்கள் அகல்கின்றன. அறிவு ஒளிர்கிறது. அதன் இறுதி நிலை விவேகம்.
இப்போது பயிற்சியைப்பற்றிக் கூறப்படுகிறது. இது வரை நாம் கூறியது உயர்ந்த நிலை. அது நமது கைக் கெட்டாத தூரத்தில் இருந்தாலும் அதை அடைவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். முதலில் உடலையும் மனத்தையும் வசப்படுத்த வேண்டும். அப்போதுதான் இலக்கை அடைவது உறுதிப்படும். நோக்கம் தெளிவான பிறகு, அதை அடைவதற்கு வேண்டிய பயிற்சியைச் செய்ய வேண்டும்.
29. யம நியமாஸன ப்ராணாயாம ப்ரத்யாஹார தாரணா த்யான ஸமாதயோஷ்டாவங்கானி
யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்பவை யோகத்தின் எட்டு அங்கங்கள்.
30. அஹிம்ஸா ஸத்யாஸ்தேய ப்ரஹ்மசர்யாபரிக்ரஹாயமா
கொல்லாமை, உண்மை பேசுதல், களவு செய்யாமை, பிரம்மச்சரியம், தானம் ஏற்காமை ஆகிய ஐந்தும் யமம்.
பூரண யோகியாக இருக்க விரும்புபவன் காம உணர்வை விடவேண்டும். ஆன்மாவுக்குப் பால்வேறுபாடு இல்லை. காம உணர்வினால் தன்னை ஏன் அது இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும்? இந்த உணர்வை ஏன் விலக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பின்பு தெளிவாகக் காண்போம்.
தானமாக ஒன்றைப் பெறுபவனின் மனம், கொடுப்பவனின் மனத்தால் பாதிக்கப்படுகிறது. எனவே பெறுபவன் கீழ்நிலையை அடைய நேரலாம். தானம் பெறுவது மனத்தின் சுதந்திரத்தை அழிக்கிறது, நம்மை அடிமைகள் ஆக்குகிறது. ஆதலால் எதையும் தானமாகப் பெறாதீர்கள்.
31. ஏதே ஜாதி தேச கால ஸமயானவச்சின்னா ஸார்வபௌமா மஹாவ்ரதம்
இவை காலம், இடம், நோக்கம், ஜாதி நியமங்கள் இவற்றால் தடைபடாததால்(உலகம் தழுவிய) மகா விரதங்கள் ஆகும்.
கொல்லாமை, உண்மை பேசுதல், களவு செய்யாமை, பிரம்மச்சரியம், தானம் ஏற்காமை ஆகியவற்றை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் குழந்தையும் கடைப்பிடிக்க வேண்டும், தேச, கால, நிலை வேறுபாடின்றி ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
32. சௌச ஸந்தோஷ தப ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி நியமா
அக மற்றும் புறத் தூய்மை, திருப்தி, தவம், கற்றல், இறை வழிபாடு இவை நியமங்கள்
புறத் தூய்மை என்பது உடம்பைத் தூய்மையாக வைத்திருத்தல், அழுக்கானவன் ஒருபோதும் யோகியாக முடியாது. அகத் தூய்மையும் அவசியம். 1.33 இல் கூறப்பட்ட நற்பண்புகளைப் பின்பற்றுவதால் அதனை அடையலாம். புறத் தூய்மையைவிட அகத் தூய்மை முக்கியமானது. என்றாலும் இரண்டுமே அவசியம். அகத் தூய்மையின்றி புறத்தூய்மை பயனற்றது.
33. விதர்க்கபாதனே ப்ரதிபக்ஷபாவனம்
யோகத்திற்கு எதிரான எண்ணங்களைத் தடுக்க அவற்றிற்கு நேர்மாறான எண்ணங்களைக் கொண்டுவர வேண்டும்.
நற்பண்புகளைப் பழகுவதற்கு இதுவே வழி, உதாரணமாக மனத்தில் கோபம் பேரலையாகப் பொங்கி எழும்போது நாம் அதை எப்படி அடக்குவது? எதிரான ஓர் அலையை எழுப்புவதன் மூலம்தான். அன்பை நினையுங்கள். தாய் தன் கணவனுடன் கோபித்துக் கொள்கிறாள். அப்போது குழந்தை அவளிடம் வருகிறது. அவள் அதனை எடுத்து முத்தம் கொடுக்கிறாள். கோப அலை தணிந்துவிடுகிறது. குழந்தையின்மீது அன்பாகிய புதிய அலை எழுகிறது. இது பழைய அலையை அடக்கி விடுகிறது. அன்பு கோபத்திற்கு எதிரானது. இவ்வாறே திருடும் எண்ணம் வரும்போது களவு செய்யாமைபற்றி எண்ண வேண்டும். பிறரிடமிருந்து பொருளைப் பெறும் எண்ணம் வரும்போது அதற்கு எதிரான ஒன்றை எண்ண வேண்டும்.
34. விதர்க்கா ஹிம்ஸாதய க்ருதகாரிதானுமோதிதா லோப க்ரோத மோஹ பூர்வகா ம்ருதுமத்யாதி மாத்ரா துக்காஜ்ஞானானந்தபலா இதி ப்ரதிபக்ஷ பாவனம்
கொலை, பொய் முதலியவை யோகத்திற்குத் தடைகள், இவற்றைச் செய்வதோ செய்விப்பதோ ஆமோதிப்பதோ கூடாது. இந்தச் செயல்களின் காரணங்கள் வெறுப்பு, கோபம், அறியாமை என்பவையாகும். இவை குறைந்தோ நடுத்தரமாகவோ பெரிய அளவிலோ இருந்தாலும் முடிவில் அளவிலா அறியாமையையும் துன்பத்தையும் விளைவிக்கும். இதுவே எதிரான எண்ணத்தை எண்ணும் முறையாகும்.
நான் ஒரு பொய் சொல்கிறேன், அல்லது பொய் சொல்லும்படி மற்றொருவனைத் தூண்டுகிறேன். அல்லது ஒருவன் சொன்ன பொய்யை ஆமோதிக்கிறேன் இவையனைத்தும் சமமான பாவச் செயல்களே. குறைந்த பொய் ஆனாலும் அது பொய்தான். நீங்கள் எங்கேயோ மலைக்குகைக்குள் புகுந்து உங்களை அடைத்துக் கொள்ளலாம், ஆனால் அங்கே நீங்கள் எண்ணும் ஒவ்வொரு தீய எண்ணமும் ஒவ்வொரு வெறுப்புணர்ச்சியும் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்; பன்மடங்கு ஆற்றலுடன் ஏதோவொரு துன்பத்தின் வடிவில் ஒருநாள் உங்களிடமே திரும்பி வரும். நீங்கள் எழுப்புகின்ற வெறுப்பும் பொறாமையும் கூட்டுவட்டியுடன் உங்களிடமே திரும்பி வந்துசேரும். அவற்றை எந்த ஆற்றலும் தடுக்க முடியாது. அவை உங்களில் எழ ஒருமுறை இடமளித்து விட்டீர்களானால் விளைவை நீங்கள் தாங்கியே தீர வேண்டும். இதை நினைவில் கொள்வது, தீய செயல்களைச் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்கும்.
35. அஹிம்ஸா ப்ரதிஷ்டாயாம் தத் ஸன்னிதௌ வைரத்யாக
கொல்லாமையில் நிலைபெற்றவனின் முன்னிலையில் (பிறரது)பகைமை ஒழிந்துவிடும்.
ஒருவன் பிறரைக் கொல்லாமை என்ற லட்சியத்தை மேற்கொண்டால் அவன் முன்னிலையில் கொடிய இயல்புடைய மிருகங்களும் அமைதியாக இருக்கும். அந்த யோகிக்கு முன் புலியும் ஆட்டுக்குட்டியும் விளையாடிக் களிக்கும். அந்த நிலை வந்தால்தான் நீங்கள் கொல்லாமையில் நிலைபெற்றிருக்கிறீர்கள் என்பது உறுதியாகும்.
36. ஸத்ய ப்ரதிஷ்டாயாம் க்ரியா பலாச்ரயத்வம்
உண்மையில் நிலைபெற்ற யோகி செயல்புரியாமலேயே தனக்கும் பிறருக்கும் செயலின் பயனை விளைவிக்கும் ஆற்றலைப் பெறுகிறான்.
உண்மையில் இந்த ஆற்றல் உங்களிடம் நிலைபெறுமானால் கனவில்கூட நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள். மனம், வாக்கு, செயல் அனைத்திலும் நீங்கள் உண்மையாக இருப்பீர்கள். நீங்கள் சொல்பவை, அனைத்தும் உண்மையாகி விடும். நீ பேறு பெறுவாய் என்று ஒருவனிடம் நீங்கள் சொன்னால் அவன் பேறு பெற்றவனாவான். நோயுற்றவனை நோக்கி நீ நலம் பெறு என்று சொன்னால், உடனே அவன் நோய் நீங்கி நலம் பெறுவான்.
37. அஸ்தேய ப்ரதிஷ்டாயாம் ஸர்வரத்னோபஸ்த்தானம்
களவு செய்யாமையில் நிலைபெற்ற யோகிக்கு எல்லா செல்வமும் வந்து சேரும்
இயற்கையிலிருந்து எவ்வளவுக்கு விலகி ஓடுகிறீர்களோ அவ்வளவுக்கு அது உங்களைத் தொடரும். நீங்கள் அதைப் பொருட்படுத்தாவிட்டால் அது உங்களுக்கு அடிமையாகிவிடும்.
38. ப்ரஹ்மசர்ய ப்ரதிஷ்டாயாம் வீர்ய லாப
பிரம்மச்சரியத்தில் நிலைபெற்றவனுக்கு பிரம்மச்சரிய சக்தி உண்டாகிறது.
பிரம்மச்சரியம் உள்ளவனது மூளையின் ஆற்றல் அளப்பரியதாகிறது. அவன் மகத்தான சுயேச்சை உடையவன் ஆகிறான். பிரம்மச்சரியம் இல்லாமல் ஆன்மீக சக்தி வருவதில்லை. அது மக்களை வசப்படுத்தும் அற்புத சக்தியை அளிக்கிறது. பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தவர்களே ஆன்மீகத் தலைவர்களாக இருந்தனர். பிரம்மச்சரியமே அவர்களுக்கு ஆற்றலை அளித்தது. எனவே யோகிக்கு பிரம்மச்சரியம் அவசியமானது.
39. அபரிக்ரஹஸ்தைர்யே ஜன்மகதந்தா ஸம்போத
பிறரிடமிருந்து எதையும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதால் ஒருவன் முற்பிறவி நினைவைப் பெறுகிறான்.
பிறரிடமிருந்து எதையும் பெறாமல் இருக்கும்போது, மற்றவனுக்குக் கடமைப்படாதவனாக இருக்கிறான். சுதந்திரமாக இருக்கிறான். அவனது மனம் தூய்மை பெறுகிறது. ஒரு பொருளைத் தானமாகப் பெற்றால், கொடுப்பவனின் பாவத்தில் ஒரு பங்கையும் அதனுடன் பெற வேண்டும். ஆதலால் தானம் பெறாவிட்டால் அவனது மனம் தூய்மை அடைகிறது. அதன் விளைவாக முதலில் முற்பிறவி நினைவைப் பெறுகிறான். அதன்பிறகே யோகி தனது லட்சியத்தில் நிலைபெறுகிறான். தான் பல தடவை பிறந்து இறந்துகொண்டிருப்பதை அவன் உணர்கிறான். எனவே இந்த முறை முக்தி பெற்றே தீர வேண்டும். இனி மேலும் பிறந்திறக்கக் கூடாது. இயற்கையின் அடிமையாக இருக்கக் கூடாது என்று நிச்சயிக்கிறான்.
40. சௌசாத் ஸ்வாங்க ஜுகுப்ஸா பரைரஸம்ஸர்க
அக மற்றும் புறத் தூய்மையில் நிலைபெற்றவனுக்குத் தன் உடல்மீது வெறுப்பும் பிறருடன் உடல் தொடர்பின்மையும் உண்டாகும்.
அகமும் புறமும் உடல் உண்மையான தூய்மை பெற்ற பிறகு, உடலைப் புறக்கணிக்க நேர்கிறது. அதை அழகு படுத்த வேண்டும் என்ற எண்ணம் மறைகிறது. மிகவும் அழகிய முகம் என்று பிறர் கூறுகின்ற ஒரு முகம், அதில் அறிவு ஒளி வீசாவிட்டால், ஒரு விலங்கின் முகம் போலவே யோகிக்குத் தெரியும். ஆன்மீக ஒளி வீசுமானால், மற்றவர் மிகச் சாதாரண முகம் என்று சொல்லும் முகத்தையும் யோகி தெய்வீகமாகக் கொண்டாடுகிறான். உடலின் மீதுள்ள இந்த மோகம் மனித வாழ்க்கையில் ஒரு சாபக்கேடு எனவே தூய்மையில் நிலைபெற்றிருப்பதன் முதல் அறிகுறி, நீங்கள் உங்களை உடல் என்று எண்ணாமல் இருப்பதே. தூய்மை வரும்போதுதான் நாம் உடலுணர்வை விடமுடியும்.
41. ஸத்வ சுத்தி ஸெளமனஸ்யைகாக்ர்யேந்த்ரிய ஜயாத்மதர்சன யோக்யத்வானி ச
சத்வத் தூய்மை, மன உற்சாகம், மன ஒருமைப்பாடு, புலன்களை வெற்றி கொள்ளல், ஆன்ம அனுபூதிக்குத் தகுதி இவற்றை அடைகிறான்.
தூய்மையைப் பழகுவதால் சத்வப்பொருள் மேலோங்குகிறது. மனம் குவிந்து உற்சாகம் பெறுகிறது. நீங்கள் ஆன்மீகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு முதல் அடையாளம் உற்சாகம் பெறுவதே. முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பது அஜீரணத்தின் விளைவாக இருக்கலாம். அது ஆன்மீகம் ஆகாது. சத்வத்தின் இயல்பே ஆனந்த உணர்ச்சிதான். சாத்வீக மனிதனுக்கு எல்லாமே இன்பம் தருபவைதான். இந்த உணர்ச்சி வரும் போது நீங்கள் யோகத்தில் முன்னேறுகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். எல்லா துன்பமும் தமஸினால் ஏற்படுகிறது. எனவே நீங்கள் அதை விலக்க வேண்டும். கூம்பிய முகம் தமஸின் விளைவு. வலிமைமிக்க, திடகாத்திரமான, இளமைநலம் கொண்ட, ஆரோக்கியம் நிறைந்த, துணிவுடையவர்களே யோகியாகத் தகுதி உள்ளவர்கள். யோகிக்கு எல்லாம் ஆனந்தம். எல்லா மனித முகங்களும் அவனுக்கு உற்சாகத்தையே அளிக்கின்றன. இதுதான் நல்லவனின் அடையாளம். பாவத்தினால்தான் துன்பம் வருகிறது, வேறு எதனாலும் அல்ல. வாடிய முகத்தால் உங்களுக்கு ஆகப் போவதென்ன? அது பயங்கரமானது. உங்கள் முகம் வாட்டமுற்று இருக்குமானால் அன்று வெளியில் போகாதீர்கள். அறையை விட்டு வெளியில் வராதீர்கள். இந்த நோயை வெளியில் கொண்டு சென்று உலகில் பரப்புவதற்கு, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்குமானால், உடல் முழுவதுமே உங்கள் கட்டுக்குள் இருக்கும். இந்த எந்திரத்திற்கு நீங்கள் அடிமையாக இருப்பதற்குப் பதிலாக எந்திரம் உங்கள் அடிமையாகிவிடும். அப்போது இந்த எந்திரம் ஆன்மாவைக் கீழே இழுக்காமல் அதற்கு மிகப்பெரிய துணையாகிவிடும்.
42. சந்தோஷாதனுத்தம ஸுகலாப
திருப்தியினால் எல்லையற்ற ஆனந்தம் உண்டாகிறது.
43. காயேந்த்ரிய ஸித்திரசுத்திக்ஷயாத்தபஸ
புலன்களிலும் உடலிலும் உள்ள அழுக்குகளை அகற்றி, அவற்றிற்கு ஆற்றலைக் கொடுப்பதே தவத்தின் பயன்.
தவத்தின் பலன்கள் உடனே கிடைக்கின்றன. அதனால் தொலைவில் உள்ள காட்சியைக் காண்பது, தொலைவில் உள்ளவற்றின் ஓசைகளைக் கேட்பது முதலிய சித்திகள் கிடைக்கின்றன.
44. ஸ்வாத்யாயாதிஷ்ட தேவதா ஸம்ப்ரயோக
மந்திர ஜபத்தினால் இஷ்டதெய்வக் காட்சி கிடைக்கிறது.
எவ்வளவுக்கெவ்வளவு உன்னத நிலையில் உள்ள தேவதைகளின் காட்சி பெற விரும்புகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு கடினமாகப் பயிற்சி செய்ய வேண்டும்.
45. ஸமாதிஸித்திரீச்வரப்ரணிதானாத்
அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதால் சமாதி உண்டாகிறது.
இறைவனிடம் சரண்புகுவதால் சமாதி நிறைவு பெறுகிறது.
46. ஸ்திர ஸுகமாஸனம்
உறுதியாகவும் சுகமாகவும் இருப்பது ஆசனம்
இனி ஆசனம்பற்றிப் பார்ப்போம். உறுதியான ஆசனம் இல்லாமல், பிராணாயாமம் முதலிய பயிற்சிகளைச் செய்ய முடியாது. உறுதியான ஆசனம் என்றால், எந்த நிலையில் அமர்ந்தால் உடலைப் பற்றிய உணர்வே இல்லாமல் போகுமோ அந்த நிலை, அந்த ஆசனம். சாதாரணமாக, நாம் சில நிமிடங்கள் அமர்ந்தாலே உடலில் எத்தனையோ தொந்தரவுகள் உண்டாவதைக் காண்கிறோம். தூல உடலின் உணர்வைத் தாண்டி விட்டால் உடலைப் பற்றிய எண்ணமே இருக்காது இன்பத்தையோ துன்பத்தையோ உணர மாட்டீர்கள். மறுபடியும் உடலைப் பற்றிய எண்ணம் வரும்போது, அது எவ்வளவோ ஓய்வு பெற்றிருப்பதை உணரலாம். இவ்வாறு மட்டுமே நீங்கள் உடலுக்குப் பூரண ஓய்வு கொடுக்க முடியும். உடலுணர்வை வென்று உடலை உறுதியாக வைத்தால், உங்கள் பயிற்சி உறுதிப்படும். ஆனால் உடலில் வேதனை உண்டானால் நரம்புகள் பாதிக்கப்படும். மனமும் ஒடுங்காது.
47. ப்ரயத்ன சைதில்யானந்த ஸமாபத்திப்யாம்
மனத்தின் இயல்பான போக்கைக் (சஞ்சலத்தை)குழைத்து எல்லையற்றதைத் தியானிப்பதால்(ஆசனம் உறுதியாகவும் சுகமாகவும் ஆகும்)
எல்லையற்றதைச் சிந்திப்பதால் ஆசனத்தை உறுதியானதாக்க முடியும். உண்மைதான். எல்லையற்ற தனிப் பொருளைத் தியானிக்க நம்மால் முடியாது. ஆனால் எல்லையற்ற வானவெளியை நினைக்கலாம்.
48. ததோ த்வந்த்வானபிகாத
ஆசனத்தில் வெற்றி பெறுவதால், இருமைகள் தடைகளை ஏற்படுத்துவதில்லை.
பிறகு நன்மை-தீமை, சூடு-குளிர் போன்ற எந்த இருமைகளும் உங்களுக்குத் தொந்தரவு கொடுப்பதில்லை.
49. தஸ்மின் ஸதி ச்வாஸப்ரச்வாஸயோர்கதி விச்சேத ப்ராணாயாம
இதன் பிறகு வருவது உள்மூச்சு, வெளமூச்சு இவற்றை ஒழுங்குபடுத்துவதாகும்.
ஆசனத்தை உறுதிப்படுத்திய பிறகு பிராணனின் இயக்கத்தைத் தடுத்து வசப்படுத்த வேண்டும். இவ்வாறு நாம் உடலில் உள்ள ஆதார சக்திகளை அடக்குவதான பிராணாயாமத்திற்கு வருகிறோம். பிராணன் என்பது பொதுவாக மூச்சு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் அது மூச்சல்ல, பிரபஞ்சத்தில் உள்ள சக்திகன் தொகுதியே பிராணன், ஒவ்வோர் உடலிலும் உள்ள சக்தி இது. இந்தச் சக்தியின் மிகவும் புலப்படுகின்ற வெளிப்பாடு சுவாசப்பையின் இயக்கம். மூச்சை உள்ளே இழுக்கும்போதே இந்த இயக்கம் உண்டாகிறது. இந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்தவே பிராணாயாமத்தில் நாம் முயற்சிக்கிறோம் மூச்சை வசப்படுத்துவதன்மூலம் இதைத் தொடங்குகிறோம். பிராணனை வசப்படுத்த இதுவே மிகவும் எளிய வழி
50. பாஹ்யாப்யந்தர ஸ்தம்ப வ்ருத்தி தேசகால ஸங்க்யாபி
பரித்ருஷ்டோ தீர்க்க ஸூக்ஷ்ம
உள்ளிழுப்பது, வெளியே விடுவது, நிறுத்துவது என்று பிராணாயாமம் மூவகைப்படும். இவை காலம், இடம், எண்ணிக்கை என்பவற்றால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் நீண்டோ சுருங்கியதாகவோ இருக்கும்.
பிராணாயாமத்தில் மூவகைச் செயல்பாடுகள் உள்ளன. மூச்சை உள்ளிழுப்பது, வெளியே விடுவது, சுவாசப் பைகளின் உள்ளேயாவது வெளியேயாவது மூச்சை நிறுத்தி வைப்பது, காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப இவை வேறுபடவும் செய்யும். இடம் என்பது, பிராணனை உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைப்பதாகும் காலம் என்பது, பிராணனை ஒரு குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு நேரம் நிறுத்தி வைப்பது என்பதாகும். ஒவ்வொரு செயல்பாடும் எத்தனை வினாடிகளுக்கு நிகழ வேண்டும் என்பது தெரிய வேண்டும். இந்தப் பிராணாயாமத்தின் விளைவாக வருவது உத்காதம் அதாவது குண்டலினி சக்தியின் விழிப்பு.
51. பாஹ்யாப்யந்தர விஷயா÷க்ஷபீ சதுர்த்த
புறத்திலோ அகத்திலோ உள்ள பொருட்களைச் சிந்தித்துக் கொண்டு பிராணனை நிறுத்துவது நான்காவது வகைப் பிராணாயாமம்.
சிந்தனையோடு கூடிய நீண்ட பயிற்சியால் வருகின்ற கும்பகம், அதாவது நிறுத்தி வைத்தல் நான்காவது பிராணாயாமம் மற்ற மூன்றிலும் சிந்தனையின் பங்கு இல்லை.
52. தத க்ஷீயதே ப்ரகாசாவரணம்
இப்படிச் செய்வதால், சித்த ஒளியை மூடிக்கொண்டிருக்கும் மறைவு தேய்ந்து அகல்கிறது.
சித்தத்தில் இயல்பாகவே எல்லா அறிவும் உள்ளது. அது சத்வத்தால் ஆக்கப்பட்டது. ரஜஸும் தமஸும் அதை மூடிக் கொண்டிருக்கின்றன. பிராணாயாமத்தின் மூலம் இந்த மறைவு நீக்கப்படும்.
53. தாரணாஸுச யோக்யதா மனஸ தாரணைக்கு மனம் தகுதியாகிறது.
மறைவு நீக்கப்பட்ட பின்னர் மனத்தை நாம் குவிக்க முடியும்.
54. ஸ்வஸ்வவிஷயாஸம்ப்ரயோகே சித்தஸ்வரூபானு கார இவேந்த்ரியாணாம் ப்ரத்யாஹார
தத்தம் விஷயங்களை விட்டுவிட்டு, புலன்கள் சித்தத்தின் உருவத்தை அடைவதுபோல் தோன்றவது பிரத்யாஹாரம்
சித்தத்தின் வெவ்வேறு நிலைகளே இந்திரியங்கள். நான் ஒரு புத்தகத்தைப் பார்க்கிறேன். புத்தக வடிவம். புத்தகத்தில் இல்லை. அது மனத்தில் இருக்கிறது. வெளியில் உள்ள பொருள், மனத்தில் அந்த வடிவத்தை எழச் செய்கிறது. அதன் உண்மையான வடிவம் சித்தத்தில் உள்ளது நாடுகின்ற பொருட்களுடன் தங்களை ஒன்றுபடுத்திக் கொண்டு, அவற்றின் வடிவத்தை இந்திரியங்கள் ஏற்கின்றன. சித்தம் இவ்வாறாக பல்வேறு வடிவங்களாக ஆவதை நிறுத்திவிட்டால், மனம் அமைதியாக இருக்கும். இது பிரத்யாஹாரம்.
55. தத பரமா வச்யதேந்த்ரியாணாம்
அதனால் புலன்களின் மிகவுயர்ந்த அடக்கம் ஏற்படுகிறது.
புலன்கள் புறப் பொருட்களின் வடிவத்தைக் கொள்ளாமல் தடுத்து, அவற்றைச் சித்தத்துடன் ஒன்றுபடும் படிச் செய்துவிட்டால் புலன்கள் முழுமையாக அடங்கப் பெறும் நிலை வாய்க்கிறது. புலன்கள் பூரணமாக அடங்கினால், ஒவ்வொரு தசையும் நரம்பும் அடங்கும். ஏனெனில் எல்லா உணர்ச்சிகளுக்கும் எல்லா செயல்களுக்கும் இந்திரியங்கள் மையங்களாக உள்ளன. இந்த இந்திரியங்கள் கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் என இரு வகைப்படும். இந்திரியங்கள் வசப்பட்டால், எல்லா உணர்ச்சிகளையும் செயல்களையும் யோகியால் கட்டுப்படுத்த முடியும். உடம்பு முழுவதுமே அவனது கட்டுப்பாட்டில் இருக்கும். அந்த நிலையில் மட்டுமே ஒருவன் தான் பிறந்ததற்காக மகிழ்ச்சி அடைய ஆரம்பிக்கிறான். நான் மனிதனாகப் பிறந்தது பெரும் பேறு என்று அப்போதுதான் ஒருவன் உண்மையாகக் கூற முடியும். இந்திரியங்களை இவ்வாறு அடக்கும் ஆற்றல் பெற்றுவிட்டால், உண்மையில் இந்த உடம்பு எவ்வளவு அற்புதமானது என்பதை உணர்வோம்.
3. விபூதி பாதம்
யோக சித்திகள்
இந்த அத்தியாயத்தில் யோக சித்திகளைப்பற்றி விவரிக்கப்படுகிறது.
1. தேச பந்தச் சித்தஸ்ய தாரணா
குறிப்பிட்ட பொருளில் மனத்தை நிறுத்திவைப்பது தாரணை
உடலில் உள்ளேயோ வெளியேயோ உள்ள ஒரு பொருளின்மீது மனம் நிலைபெற்று அந்த நிலையிலேயே பொருந்தியிருப்பது தாரணை (ஒருமைப்பாடு)
2. தத்ர ப்ரத்யயைகதானதா த்யானம்
அறிவு அந்தப் பொருளை நோக்கி இடையீடற்றுப் பாய்ந்து செல்வது தியானம்.
மனம் ஏதாவது ஒரு பொருளை நினைக்கவோ, உச்சி, இதயம் முதலிய குறிப்பிட்ட பகுதியில் நிற்கவோ முயல்கிறது. உடம்பின் மற்றப் பகுதிகளின் வழியாக அல்லாமல் அந்தப் பகுதியின் வழியாக மட்டுமே எல்லா அனுபவங்களையும் பெறுவதில் மனம் வெற்றி அடையுமானால் அது தாரணை. மனத்தை அந்த நிலையில் சிறிதுநேரம் தொடர்ந்து வைத்திருந்தால், அது தியானம்.
3. ததேவார்த்தமாத்ரநிர்பாஸம் ஸ்வரூபசூன்யமிவ ஸமாதி
அந்த நிலையில் எந்த உருவங்களும் இல்லாமல் கருத்து மட்டும் இருக்குமானால் அது சமாதி.
தியானிக்கப்படும் பொருளின் வடிவம் அல்லது புறப்பகுதி விடப்படும்போது இந்த நிலை வாய்க்கிறது. நான் ஒரு புத்தகத்தைத் தியானிப்பதாக வைத்துக்கொள்வோம். மனத்தை அதன்மீது குவித்து, படிப்படியாக எந்த வடிவமும் இன்றி புத்தகம் என்னும் கருத்தை மட்டும் உணரும் நிலையை அடைந்துவிட்டால், தியானத்தின் அந்த நிலை சமாதி எனப்படும்.
4. த்ரயமேகத்ர ஸம்யம
ஒரு பொருளைக் குறித்து (இந்த)மூன்றையும் பழகுவது சம்யமம்.
மனத்தை ஒரு குறிப்பிட்ட பொருளின்மீது செலுத்தி, அங்கு நிறுத்தி, நெடுநேரத்திற்கு வைத்து, பொருளின் உருவத்தை விட்டுவிட்டு அதன் கருத்தை மட்டும் சிந்திப்பது ஸம்யமம், தாரணை, தியானம், சமாதி மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து பிறகு ஒருங்கிணைந்து நிற்பதே இது. பொருளின் வடிவம் மறைந்து, கருத்து மட்டும் மனத்தில் இருக்கிறது.
5. தஜ்ஜயாத் ப்ரஜ்ஞாலோக
இதில் வெற்றி பெற்றால் அறிவொளி உண்டாகும்.
இந்த சம்யமம் செய்வதில் வெற்றி பெற்றால், எல்லா ஆற்றல்களும் வந்து சேரும். இது யோகியின் பெரியகருவி, அறிய வேண்டிய பொருட்கள் எண்ணற்றவை. அவை தூலம், அதிதூலம், மகாதூலம், சூட்சுமம், அதிசூட்சுமம், மகாசூட்சுமம் என்று பாகுபடுத்தப்பட்டுள்ளன. முதலில் தூலப் பொருட்களில் சம்யமம் செய்ய வேண்டும். அவற்றின் அறிவை அடைய ஆரம்பித்த பின்னர், படிப்படியாக சூட்சுமப் பொருளில் சம்யமம் செய்ய வேண்டும்.
6. தஸ்ய பூமிஷு வினியோக
இதனைப் படிப்படியாகச் செய்ய வேண்டும்.
அதிகம் விரைந்து செல்லக் கூடாது என்று எச்சரிப்பதே இதன் கருத்து.
7. த்ரயமந்தரங்கம் பூர்வேப்ய
முன்னால் கூறியவற்றைவிட இந்த மூன்றும் அதிகமாக அகமுகமானவை.
முன்னால் கூறப்பட்டவை பிரத்யாஹாரம், பிராணாயாமம், ஆசனம், யமம், நியமம் என்பவை. இவை தாரணை, தியானம், சமாதி இவற்றின் புற அங்கங்கள். ஒருவன் இவற்றில் வெற்றி பெற்றால் எல்லா ஆற்றலும் எல்லா அறிவும் பெறுவான். ஆனால் அது முக்தி ஆகாது. மனத்தை நிர்விகல்பமாக்க, மாற்றங்கள் அற்றிருக்கச் செய்ய இவை போதாது. தாரணை முதலிய இவை கைவரப் பெற்றாலும், மீண்டும் பிறப்பதற்கான சம்ஸ்காரம் எஞ்சியிருக்கவே செய்யும். யோகி கூறுவதுபோல், இந்த விதைகளை வறுத்தெடுத்துவிட்டால் அவை முளைக்க வாய்ப்பே இல்லை. இந்தச் சக்திகளுக்கு விதையை வறுக்கும் ஆற்றல் இல்லை.
8. ததபி பஹிரங்கம் நிர்பீஜஸ்ய
இவையும் விதையற்ற சமாதிக்குப் புற அங்கங்களே
விதையற்ற சமாதியோடு ஒப்பிடும்போது இவையும் புறத்தே உள்ளவைதாம். மிக உயர்ந்ததான உண்மையான சமாதியை நாம் இன்னும் அடையவில்லை. கீழான ஒரு படியிலிருக்கிறோம். இந்த நிலையில் பிரபஞ்சம் நாம் காண்பதுபோல் இருக்கிறது. சித்திகளும் உலகிலேயே உள்ளன.
9. வ்யுத்தான நிரோத ஸம்ஸ்காயோரபிபவ ப்ராதுர்
பாவெள நிரோத க்ஷண சித்தான்வயோ நிரோத பரிணாம
சஞ்சல நிலையிலுள்ள சம்ஸ்காரங்கள் அடங்கி, அடங்கிய நிலையிலுள்ள சம்ஸ்காரங்கள் எழுந்து, மனம் அந்த அடங்கிய நிலையிலேயே தொடர்ந்து இருக்குமானால் அந்த நிலை நிரோத பரிணாமம் எனப்படுகிறது.
அதாவது சமாதியின் இந்த முதல் நிலையில் வேறுபட்ட சித்த விருத்திகள் அடக்கப்படுகின்றன. ஆனால் அவை முழுவதும் அடக்கப்படவில்லை. ஏனெனில் முழுவதும் அடங்கினால் சித்தத்தில் விருத்தியே இல்லாமல் போயிருக்கும். மனத்தில் ஒரு விருத்தி எழுந்து, புலன்கள் வழியாக வெளியே செல்லுமாறு மனத்தைத் தூண்டுமானால், யோகி அதை அடக்க முயலும்போது, அந்த அடக்கும் முயற்சியே ஒரு விருத்தியாகி விடுகிறது. ஓர் அலை மற்றோர் அலையால் அடக்கப்படுகிறது. ஆதலால் இது எல்லா அலைகளும் அடங்கக்கூடியதான உண்மைச் சமாதி ஆகாது. ஏனெனில் அடக்குதல் என்ற ஓர் அலை அங்கே உள்ளது. சஞ்சல நிலையிலுள்ள மனத்தைவிட, இந்தக் கீழ்நிலை சமாதி உயர்நிலை சமாதிக்கு வெகு அருகில் உள்ளது.
10. தஸ்ய ப்ரசாந்தவாஹிதா ஸம்ஸ்காராத்
பயிற்சியால் அதன் ஓட்டம் நிலைபெறுகிறது.
தினந்தோறும் தொடர்ந்து பயிற்சி செய்வதால் இத்தகைய மன அடக்கம் நிலைபெறுகிறது. மனம் நிலைத்த ஒருமைப்பாட்டைப் பெறுகிறது.
11. ஸர்வார்த்ததைகாக்ரதயோ க்ஷயோதயௌ சித்தஸ்ய ஸமாதி பரிணாம
பல பொருட்களை ஏற்றுக்கொள்வது இல்லாமல் போய் ஒரே பொருளில் மனத்தைக் குவிப்பதாகிய நிலை சித்தத்தின் சமாதி பரிணாமம் எனப்படும்.
மனம் வெவ்வேறு பொருட்களைப் பற்றுகிறது. பல்வேறு விஷயங்களின் பின்னால் ஓடுகிறது. இது கீழான நிலை. மனம் ஒன்றை மட்டும் பற்றிக்கொண்டு மற்றவற்றை எல்லாம் விட்டுவிடுகின்ற உயர்ந்த நிலை ஒன்று உண்டு. இதன் விளைவே சமாதி.
12. சாந்தோதிதௌ துல்யப்ரத்யயௌ சித்தஸ்யை காக்ரதா பரிணாம
எப்போது மனம் கடந்ததையும் நிகழ்வதையும் ஒன்றாக ஏற்கிறதோ அந்த நிலை சித்தத்தின் ஏகாத்ரதா பரிணாமம் எனப்படும்.
மனம் ஒருமைப்பட்டுவிட்டது என்பதை எவ்வாறு அறிவது? காலம் என்ற ஒன்றே மறைந்து போவதுதான் அதற்கு அறிகுறி, மனம் அறியாமல் எவ்வளவு அதிகமாகக் காலம் கழிகிறதோ அவ்வளவுக்கு மனம் குவிந்துள்ளது. அன்றாட வாழ்வை எடுத்துக் கொண்டால்கூட ஒரு புத்தகத்தை ஆர்வத்துடன் படிக்கும்போது நாம் நேரத்தைக் கவனிப்பதில்லை. புத்தகத்தைப் படித்து முடித்து நேரத்தைக் கவனிக்கும்போது இத்தனை மணி நேரம் கடந்து விட்டதே என்று வியப்பது நமது அனுபவம். காலம் என்பதே நிகழ்காலத்தின் ஒருகணத்தில் வந்து நிற்கும்போக்கு உடையது. இறந்தகாலமும் நிகழ்காலமும் ஒன்றுபட்டு இருக்கும்போது மனம் குவிந்துள்ளது என்று பொருள்.
13. ஏதேன பூதேந்த்ரியேஷுதர்ம லக்ஷணாவஸ்த்தா பரிணாமா வ்யாக்யாதா
இதன் மூலமாக தூல மற்றும் சூட்சும ஜடப்பொருளிலும் இந்திரியங்களிலும் உருவம், காலம், நிலை இவற்றினால் வரும் மூன்றுவித மாறுபாடுகள் விளக்கப்படுகின்றன.
உருவம், காலம், நிலை பற்றிய மூன்றுவித மாறுபாடுகள் சித்தத்தில் உண்டாகின்றன. இவற்றிற்கேற்ப தூல, சூட்சும ஜடப்பொருட்களிலும் இந்திரியங்களிலும் மாறுதல்கள் ஏற்படுவது விளக்கப்படுகிறது. உதாரணமாக தங்கக்கட்டி ஒன்றை எடுத்துக் கொள்வோம். இதைக் கைவளையாகவும் காதணியாகவும் மாற்றலாம். இது உருவமாறுபாடு. இதையே காலக் கண்ணோட்டத்தில் பார்த்தால் கால மாறுபாட்டை நமக்குக் காட்டும். இனி, கை வளை அல்லது காதணி பளபளப்பாகவோ மங்கலாகவோ கனமாகவோ மெல்லியதாகவோ இருக்கக்கூடும் இது நிலையில் மாறுபாடு. 9, 11 மற்றும் 12 ஆம் சூத்திரங்களை மனத்தில் கொண்டால், அங்கே சித்தம் விருத்திகளாக மாறுவது குறிப்பிடப்பட்டது. இது உருவத்தில் மாறுதல், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றில் சித்தம் மாறிமாறி அமைவது கால மாறுபாட்டைக் காட்டுகிறது. ஒரே காலத்தில், உதாரணமாக நிகழ்காலத்தில் விருத்திகளின் தன்மை வேறுபடுவது நிலைபற்றிய வேறுபாடு.
சித்தத்தில் உண்டாகும் மாறுபாடுகளை அறிந்து அவற்றை அடக்குவதற்கு, முன்னால் உள்ள சூத்திரங்களில் கூறப்பட்ட ஒருமைப்பாட்டு முறைகள் பயன்படும். அவ்வாறு சித்தத்தை அடக்குவதில் வெற்றி பெற்றால்தான் முன்னர்(3,4) கூறப்பட்ட ஸம்யமத்தைச் செய்ய முடியும்.
14. சாந்தோதி தாவ்யபதேச்ய தர்மானுபாதீ தர்மீ
கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நிகழும் மாறுதல்களால் பாதிக்கப்படுபவை எல்லாம் குணத்துடன் கூடியவை.
அதாவது, காலத்தாலும் சம்ஸ்காரங்களாலும் தாக்கப்பட்டு மாறுபாட்டை அடைந்து எப்பொழுதும் வெளிப்பட்டுத் தோன்றும் பொருள் குணத்துடன் கூடியது.
15. க்ரமான்யத்வம் பரிணாமான்யத்வே ஹேது
தொடர்ந்து வருகின்ற வேறுபாடுகளே பல்வேறு பரிணாமங்களுக்குக் காரணம்
16. பரிணாமத்ரய ஸம்யமாததீதானாகத ஜ்ஞானம்
மூன்றுவிதப் பரிணாமங்களின்மீது சம்யமம் செய்தால் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய அறிவு உண்டாகும்.
சம்யமம் என்றால் என்ன என்பதைப்பற்றி நாம் முதலில் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், பொருளின் புறக் குணங்களை அகற்றி, அதன் அகக் கருத்துடன் மனம் ஒன்றுசேர்ந்து நின்று, நீண்ட காலப் பயிற்சியால் அந்த நிலையில் உறுதியடைந்து, பிறகு வேண்டும்போது நொடிப் பொழுதில் அந்த நிலையை அடைவது சம்யமம் ஆகும். அந்த நிலையில் ஒருவன் கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும்பற்றி அறிய வேண்டுமானால் சம்ஸ்காரங்களின் மாறுதல்களில் சம்யமம் செய்ய வேண்டும் (3.13) இந்தச் சம்ஸ்காரங்களில் சில இப்போது செயல்படுகின்றன. சில செயல்பட்டு முடிந்துவிட்டன. சில எதிர்காலத்தில் செயல்படுவதற்காகக் காத்திருக்கின்றன. இந்தச் சம்ஸ்காரங்கள்மீது சம்யமம் செய்யும்போது, கடந்தகால அறிவையும் எதிர்கால அறிவையும் பெறலாம்.
17. சப்தார்த்த ப்ரத்யயானாமிதரேதராத்யாஸாத்
ஸங்கரஸ்தத் ப்ரவிபாக ஸம்யமாத் ஸர்வபூதருத ஜ்ஞானம்
பொதுவாகச் சேர்ந்திருப்பவையான சொல், பொருள், அறிவு இவற்றின்மீது சம்யமம் செய்வதால் பிராணிகளின் ஒலிகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகிறது.
சொல் என்பது புறக் காரணம். பொருள் என்பது இந்திரியங்கள் வழியாக மூளைக்குச் செல்லும் அக அதிர்வுகள். இதுவே புறப்பொருளின் பதிவை மனத்திடம் கொடுக்கிறது. மனத்தின் எதிர்ச் செயலே அறிவு. இதனுடன் அனுபவமும் வருகிறது. இந்த மூன்றும் கலந்து நமக்குப் புறப் பொருளை அறிவிக்கிறது. நான் ஒரு சொல் லைக் கேட்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். முதலில் புற அதிர்வு ஏற்படுகிறது. பிறகு, கேட்கும் இந்திரியம், அதனை மனத்திற்கு எடுத்துச் செல்லும் உணர்ச்சி ஓட்டம், இறுதியில் மனத்தின் எதிர்ச் செயல், இவ்வாறு நான் அந்தச் சொல்லை அறிகிறேன். ஆகவே, நாம் அறியும் சொல் என்பது அதிர்வு, உணர்ச்சி, எதிர்ச் செயல் என்ற மூன்றின் கலப்பு. பொதுவாக இந்த மூன்றும் பிரிக்க முடியாதவை. ஆனால் பயிற்சியின் மூலம் யோகியால் இதனைப் பிரிக்க முடியும். அவ்வாறு பிரித்துணரும் ஆற்றலை அடையும்போது ஒருவன் ஓர் ஒலியின் மீது சம்யமம் செய்தால், அந்த ஒலி மனிதனிடமிருந்தோ அல்லது வேறெந்தப் பிராணியிடமிருந்தோ வந்தாலும், அந்த ஒலியின் கருத்தை அறிந்து கொள்கிறான்.
18. ஸம்ஸ்கார ஸாக்ஷõத்கரணாத் பூர்வஜாதி ஜ்ஞானம்
சம்ஸ்காரங்களைத் தெரிந்து கொண்டால் முற்பிறவியைப் பற்றிய அறிவு உண்டாகிறது.
நாம் பெறுகின்ற ஒவ்வோர் அனுபவமும் சித்தத்தில் அலையாக வந்து, தணிந்து, ஒடுங்கி, சூட்சுமமாகி மேலும் சூட்சுமமாகிறது. ஆனால் அது அழிந்து போவதில்லை. நுண்ணிய வடிவில் இருக்கிறது. இந்த அலையை மீண்டும் நம்மால் எழுப்ப முடியுமானால் அது நினைவு ஆகிறது. எனவே கடந்தகால சம்ஸ்காரங்கள்மீது யோகி ஸம்யமம் செய்தால், அவன் தனது பழைய பிறவிகள் எல்லாவற்றையும் ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியும்.
19. ப்ரத்யயஸ்ய பரசித்த ஜ்ஞானம்
மற்றொருவனது உடலின் அடையாளங்கள்மீது ஸம்யமம்
செய்தால் அவனுடைய மனத்தைப் பற்றிய அறிவு உண்டாகிறது.
ஒவ்வொருவனின் உடலிலும் குறிப்பிட்ட அடையாளங்கள் இருக்கும். இந்த அடையாளங்கள் அவனை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. இந்த அடையாளங்கள்மீது ஒரு யோகி சம்யமம் செய்தால், அந்த மனிதனின் மனத்தின் தன்மையை அறிந்துகொள்கிறான்.
20. ந ச தத் ஸாலம்பனம் தஸ்யாவிஷயீபூதத்வாத்
ஆனால் அந்த மனத்தில் அடங்கியிருப்பவற்றைப் பற்றிய அறிவு வராது. ஏனெனில் அது சம்யமத்தின் விஷயம் அல்ல.
உடலின்மீது சம்யமம் செய்தால் அவனது மனத்தில் உள்ளவை தெரியாது. அதற்கு இரண்டு வகை சம்யமம் வேண்டும். முதலில் உடலின் அடையாளங்களின்மீதும் பின்னர் மனத்தின்மீதும் சம்யமம் செய்ய வேண்டும். அப்பொழுது யோகி மனத்திலுள்ள அனைத்தையும் அறிந்துகொள்வான்.
21. காயரூப ஸம்யமாத் தத்க்ராஹ்ய சக்தி ஸ்தம்பே சக்ஷú
ப்ரகாசா ஸம்யோகே அந்தர் தானம்
உடலின் வடிவத்தின்மீது சம்யமம் செய்து, அந்த வடிவத்தை உணராமல் தடுப்பதாலும், கண்களை அவற்றில் காணும் சக்தியிலிருந்து பிரிப்பதாலும் யோகியின் உடல், பார்வையிலிருந்து மறைந்துவிடுகிறது.
இந்த அறையின் நடுவில் இருக்கும் ஒரு யோகி திடீரென்று மறையக்கூடும். அவன் உண்மையில் மறைவதில்லை. ஆனால் மற்றவர்கள் அவனைக் காண முடியாது. உடலும் அதன் உருவமும் பிரிக்கப்பட்டது போலாகி விடுகின்றன. இவ்வாறு செய்வதற்கு, ஒரு பொருளையும் அதன் உருவத்தையும் பிரிக்கும் அளவிற்கு யோகி ஒருமைப்பாட்டு ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். பிறகு அவன் அதன்மீது சம்யமம் செய்கிறான். உருவமும் பொருளும் ஒன்றுபடுவதால்தான் அதைக் காண முடிகிறது. இங்கு அவை இரண்டும் பிரிக்கப்படுவதால், காண்பதற்கான ஆற்றல் தடைப்படுகிறது.
22. ஏதேன சப்தாத்யந்தர்தானமுக்தம்
இதனால் சொற்களின் மறைவும் பிறவும் விளங்கும்.
23. ஸோபக்ரமம் நிருபக்ரமம் ச கர்ம தத்ஸம்யமா தப
ராந்த ஜ்ஞானமரிஷ்டேப்யோ வா
விரைவில் பலனளிப்பது, தாமதமாகப் பலனளிப்பது என்று கர்மம் இருவகைப்படும். இவற்றின்மீது சம்யமம் செய்வதாலும், அரிஷ்டங்கள் அதாவது சகுனங்கள் மூலமும் யோகிகள் தாங்கள் உடலிருந்து பிரியும் சரியான நேரத்தை அறிகின்றனர்.
தனது வினைப்பயனின்மீது அதாவது இப்போது பலன் தருகின்ற மற்றும், இனி பலன் தரக் காத்திருக்கின்ற கர்மங்களின்மீது யோகி சம்யமம் செய்யும்போது, பலன் தரக் காத்திருக்கின்ற வினைப்பயனின் மூலமாக எந்தநாள், எந்தமணி, ஏன், எந்த நிமிடம் தன் உயிர் பிரியும் என்பதை அறிவான். மரணவேளையில் எழும் எண்ணத்தைப் பற்றிய விஷயத்தில் இந்துக்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஏனெனில் அந்தவேளையில் மனத்தில் எழும் எண்ணங்கள் அடுத்தப் பிறவியை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று கீதையில் கூறப்பட்டுள்ளது.
24. மைத்ரியாதிஷு பலானி
நட்பு, இரக்கம் முதலிய குணங்கள்மீது (1.33) சம்யமம் செய்வதால், யோகி அந்தந்தக் குணங்களைச் சிறப்பாகப் பெறுகிறான்.
25. பலேஷு ஹஸ்தி பலாதீனீ
யானை முதலிய விலங்குகளின் வலிமைமீது சம்யமம் செய்தால் யோகி அவற்றின் வலிமையைப் பெறுகிறான்.
இந்த சம்யமத்தை அடைந்த யோகி, வலிமை பெற எண்ணினால், யானையின் வலிமையில் சம்யமம் செய்து அதனை அடைகிறான். அளவற்ற வலிமை பெற எல்லோருக்கும் வாய்ப்பு உள்ளது. எப்படிப் பெறுவது என்ற வழி தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான். அதைப் பெறுகின்ற முறையை யோகி அறிந்திருக்கிறான்.
26. ப்ரவ்ருத்தயாலோக ந்யாஸாத் ஸூக்ஷ்ம வ்யவஹித விப்ரக்ருஷ்ட ஜ்ஞானம்
மஹாஜோதியின்மீது சம்யமம் செய்வதால் (1.36) சூட்சுமமானவை. மறைந்திருப்பவை மற்றும் தூரத்தில் இருப்பவை பற்றிய அறிவு உண்டாகும்.
இதயத்தில் உள்ள மஹாஜோதியின்மீது சம்யமம் செய்வதால் யோகி வெகுதூரத்தில் உள்ள பொருட்களைக் காண்கிறான். உதாரணமாக, மலைகளால் சூழ்ந்து மறைக்கப்பட்ட இடத்தில் நடக்கின்ற ஒன்று. சூட்சுமமான பொருட்களையும் அவன் காண முடியும்.
27. புவனஜ்ஞானம் ஸூர்யே ஸம்யமாத்
சூரியன்மீது சம்யமம் செய்வதால் உலகத்தைப் பற்றிய அறிவு(உண்டாகிறது)
28. சந்த்ரே தாராவ்யூஹ ஜ்ஞானம்
சந்திரனின்மீது சம்யமம் செய்வதால், நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றிய அறிவு(உண்டாகிறது)
29. த்ருவே தத்கதி ஜ்ஞானம்
துருவ நட்சத்திரத்தின்மீது சம்யமம் செய்தால், நட்சத்திரங்களின் இயக்கங்களைப் பற்றிய அறிவு(கிடைக்கிறது)
30. நாபிசக்ரே காயவ்யூஹ ஜ்ஞானம்
நாபி சக்கரத்தின்மீது சம்யமம் செய்தால் உடலின் அமைப்பைப் பற்றிய அறிவு (உண்டாகிறது)
31. கண்டகூபே க்ஷúத்பிபாஸா நிவ்ருத்தி
தொண்டைக் குழிமீது சம்யமம் செய்தால் பசி மறைகிறது.
ஒரு மனிதனுக்குப் பசி அதிகமிருந்தால், தொண்டைக் குழி மீது அவன் சம்யமம் செய்தால் பசி அடங்கிவிடுகிறது.
32. கூர்ம நாட்யாம் ஸ்தைர்யம்
கூர்ம நாடிமீது சம்யமம் செய்தால் உடல் உறுதிபெறும்.
பயிற்சி வேளையில் உடல் அசைவற்று உறுதி நிலையில் இருக்கும்.
33. மூர்த்த ஜ்யோதிக்ஷி ஸித்த தர்சனம்
உச்சந்தலையில் எழுகின்ற ஜோதியின்மீது சம்யமம் செய்வதால், சித்தர்களது காட்சி கிடைக்கிறது.
சித்தர்கள் என்பவர்கள் ஆவிகளுக்குச் சற்று மேல் நிலையில் இருப்பவர்கள். தலையின் உச்சியில் மனத்தை சம்யமம் செய்வதால் யோகி சித்தர்களைக் காண்கிறான். முக்தி பெற்றவர்களைச் சித்தர்கள் என்று பொதுவாகக் குறிப்பதுண்டு. இங்கே நாம் அந்தப் பொருளில் குறிப்பிடவில்லை.
34. ப்ராதிபாத்வா ஸர்வம்
அல்லது பிரதிபா சக்தியால் எல்லா அறிவும் பெறுகிறான்.
சம்யமம் எதுவும் இல்லாமலே பிரதிபையின் (தூய வாழ்வினால் தானாக எழும் அறிவுவிழிப்புணர்வு) வலிமையால் இவை எல்லாவற்றையும் பெற முடியும். பிரதிபையின் உயர்ந்த நிலைக்கு முன்னேறினால் அந்தப் பேரொளி வாய்க்கிறது. அதன்மூலம் அவனுக்கு எல்லாம் தெரிய வருகிறது. சம்யமம் இல்லாமலே அவனிடம் எல்லாம் இயல்பாக வருகிறது.
35. ஹ்ருதயே சித்த ஸம்வித்
இதயத்தில் (சம்யமம் செய்வதால் மனங்களைப்) பற்றிய அறிவு உண்டாகிறது.
36. ஸத்வ புருஷயோரத்யந்தா ஸங்கீர்ணயோ ப்ரத்ய யாவிசேஷாத் போக பரார்த்தத்வாத் ஸ்வார்த்த ஸம்யமாத் புருஷஜ்ஞானம்
சத்வமும் புருஷனும் முற்றிலும் வேறானவை. இவற்றைப் பிரித்து அறியாமல் இருப்பதால் சுக அனுபவம் உண்டாகிறது. ஏனெனில் சத்வம் இருப்பது புருஷனுக்காக தன் நிலையில் இருப்பதான ஒன்றை சம்யமம் செய்தால்
புருஷனைப் பற்றிய அறிவு உண்டாகிறது.
பிரகிருதியின் மாறுபாடுகளுள் ஒன்று சத்வம். ஒளியும் இன்பமும் அதன் பண்புகளாகும். சத்வத்தின் செயல்கள் எல்லாம் ஆன்மாவின் பொருட்டே. சத்வம் அகங்காரத்திலிருந்து விலகிய புருஷனுடைய சுத்த புத்தியால் ஒளிரும்போது அது தன்னிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏனெனில் அந்த நிலையில் அது எவ்விதத் தொடர்புகளையும் சாராமல் இருக்கிறது.
37. தத ப்ராதிபச்ராவண வேதனாதர்சாஸ்வாத வார்த்தா ஜாயந்தே
அதிலிருந்து பிரதிபா அறிவும், (அமானுஷ்யமான) ஒலி கேட்டல், தொட்டுணர்வு, சுவை, வாசனை முதலியவை உண்டாகின்றன.
38. தே ஸமாதாவுபஸர்கா வ்யுத்தானே ஸித்தய
இவை சமாதிக்கு இடையூறுகள் ஆனால் லௌகீக வாழ்வில் இவை சித்திகள்
புருஷனும் மனமும் சேர்வதால் யோகிக்கு லௌகீக சுகங்களைப் பற்றிய அறிவு வருகிறது. பிரகிருதியும் ஆன்மாவும் வெவ்வேறு என்று சம்யமம் செய்வதால், அவனுக்குப் புருஷனைப் பற்றிய அறிவு வருகிறது. இதிலிருந்து விவேகம் வருகிறது. விவேகம் பெற்றபின், மேலான அறிவாகிய பிரதிபையை அவன் பெறுகிறான். ஆனால் குறிக்கோளாகிய ஆன்மஞானத்தையும் முக்தியையும் பெற இந்தச் சித்திகள் தடைகளே. வழியில் இவற்றையெல்லாம் யோகி சந்திக்க வேண்டும். இவற்றைப் புறக்கணித்தால் மிகவுயர்ந்த நிலையை அடைவான். இந்தச் சித்திகளைப் பெற முயன்றால் அவனது முன்னேற்றம் தடைப்படும்.
39. பந்தகாரண சைதில்யாத் ப்ரசாரஸம்வேதனாச்ச சித்தஸ்ய பரசரீராவேச
சித்தத்தின் தளைகளுக்கான காரணங்கள் தளர்ந்து சித்தத்தின் செயலுக்கான பாதைகளைப் (நரம்புகளை)பற்றி அறியும்போது அவன் பிற சரீரத்தில் புக முடியும்.
யோகி தன் உடலில் செயல்புரிந்து கொண்டிருக்கும் போதே, இறந்துபோன ஓர் உடலில் புகுந்து அதை எழுந்து நடமாடச் செய்யலாம். உயிருள்ள ஒர் உடலினுள் புகுந்து, அந்த மனிதனின் மனத்தையும் புலன்களையும் வசப்படுத்தி அந்த உடல் வழியாகச் செயல்புரியலாம். புருஷன் வேறு, பிரகிருதி வேறு என்ற விவேக அறிவால் யோகி இதைச் செய்ய முடிகிறது. அவன் மற்றோர் உடலில் புக விரும்பினால். அந்த உடலின்மீது சம்யமம் செய்து அதில் புகுகிறான். ஏனெனில் தனது ஆன்மா மட்டுமின்றி, மனமும் எங்கும் நிறைந்தது என்று யோகி கூறுகிறான். தற்பொழுது இந்த உடலின் நரம்புகள் மூலம் மட்டுமே செயல்பட முடிகிறது. ஆனால் இந்த நரம்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதும் பிற பொருட்கள் வழியாகவும் அவன் செயல்படுகிறான்.
40. உதான ஜயாஜ்ஜலபங்ககண்டகாதிஷ்வஸங்க உத்க்ராந்திச்ச
உதானன் என்னும் நாடியை வெல்வதால், யோகி நீரின் மேலும் சேற்றின் மேலும், முள்ளின் மேலேயும் நடக்க முடியும். தான் விரும்பும்போது அவன் மரணமடையலாம்
உதானன் என்ற நாடி அல்லது நரம்பு ஓட்டம் சுவாசப் பைகளையும் உடலின் மேற்பகுதிகளையும் இயங்கச் செய்கிறது. இந்த நாடியை வசப்படுத்தும்போது, அவனது உடல்லேசாகிறது. அவன் நீரில் அமிழ்வதில்லை. முள்ளின் மேலும், வாட்களின் மீதும் நெருப்பின்மீதும் அவன் நடக்க முடியும். விரும்பும்போது இந்த வாழ்விலிருந்து அவன் விடைபெறவும் செய்யலாம்.
41.ஸமான ஜயாத் ப்ரஜ்வலனம்
சமானன் என்ற நாடியை வசப்படுத்துவதால், யோகியின் உடலைச் சுற்றி ஓர் ஒளி வீசுகிறது.
இந்தச் சித்தி பெற்ற யோகி விரும்பும்போது, அவனது உடலிலிருந்து ஒளி தோன்றுகிறது
42. ச்ரோத்ராகாசயோ ஸம்பந்த ஸம்யமாத் திவ்யம் ச்ரோத்ரம்
காதிற்கும் ஆகாசத்திற்குமுள்ள தொடர்பில் சம்யமம் செய்வதால், அமானுஷ்ய ஒலிகளைக் கேட்கும் ஆற்றல் வருகிறது.
ஆகாசமும், அதன் கருவியாகிய செவியும் உள்ளன. இவற்றின்மீது சம்யமம் செய்வதால், யோகி அமானுஷ்யமான ஒலிகளைக் கேட்கும் சக்தி பெறுகிறான். அவன் எல்லாவற்றையும் கேட்கிறான்; பல மைல்களுக்கு அப்பால் பேசப்படும் பேச்சையும் ஒலியையும் யோகியால் கேட்க முடியும்.
43. காயாகாசயோ ஸம்பந்த ஸம்யமால்லகுதூல ஸமாபத்தேச்சாகாச கமனம்
ஆகாசத்திற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பின்மீது சம்யமம் செய்வதால் உடம்பு பஞ்சுபோல் லேசாகிவிடுகிறது. இதைக் குறித்து தியானம் செய்வதால் யோகிக்கு வான் வழியாகச் செல்லும் ஆற்றல் கிடைக்கிறது.
இந்த உடல் ஆகாசத்தினால் ஆனது. ஆகாசமே ஒருவகையில் உருவெடுத்து உடலாயிற்று. யோகி உடலில் உள்ள ஆகாச மூலக்கூறின்மீது சம்யமம் செய்தால் உடல் ஆகாசம்போல் லேசாகிவிடுகிறது. அப்போது விரும்பிய இடத்திற்கு வான் வழியாக யோகி செல்ல முடியும். பிறவற்றுக்கும் இவ்வாறே.
44. பஹிரகல்பிதா வ்ருத்திர் மஹாவிதேஹா தத ப்ரகாசாவரணக்ஷய
உடலுக்கு வெளியே உள்ள மனத்தின் உண்மையான விருத்திகளுக்கு உடலற்ற மாபெரும் நிலை என்று பெயர் அதன்மீது சம்யமம் செய்வதால் ஆன்ம ஒளியை மறைக்கின்ற மறைப்பு விலகிவிடுகிறது.
இந்த உடலில் மட்டும்தான் செயல்புரிவதாக மனம் மூடத்தனமாக எண்ணுகிறது. அது எங்கும் பரந்ததானால் ஓர் உடலிலுள்ள நரம்புகளில் மட்டும் ஏன் கட்டுப்பட்டிருக்க வேண்டும்? நான் உணர்வை ஏன் இந்த ஓர் உடலில் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. விரும்பிய இடங்களில் எல்லாம் நான்-உணர்வை உணர்வதற்கு யோகி விரும்புகிறான். உடலில் நான்-உணர்வு இல்லாத நிலையில், மனத்தில் எழும் அலைகள் அகல்பித விருத்திகள் (உண்மையான விருத்திகள்) அல்லது மகாவிதேகம் (உடலற்ற மாபெரும் நிலை) என்று கூறப்படுகிறது. இந்த விருத்திகளின்மீது சம்யமம் செய்து வெற்றி பெற்றால், ஒளியை மறைக்கின்ற எல்லா மறைப்பும் அகன்று விடுகின்றன. எல்லா இருளும் அறியாமையும் விலகிவிடுகின்றன. ஒவ்வொன்றும் அறிவு மயமாக அவனுக்குத் தெரியும்.
45. ஸ்தூல ஸ்வரூப ஸூக்ஷ்மான்வயார்த்தத்வ ஸம் யமாத்பூதஜய
பூதங்களின் தூல மற்றும் சூட்சுமத் தன்மை, அவற்றின் முக்கியப் பண்புகள், அவற்றில் அடங்கியிருக்கும் தன்மை, ஆன்மாவின் அனுபவத்திற்குப் பொருட்டாயிருத்தல், இவற்றின் மீது சம்யமம் செய்வதால் பூதங்களை வெற்றிகொள்ள முடிகிறது.
ஐம்பூதங்களின்மீது முதலில் தூல நிலையிலும், பின்னர் சூட்சும நிலையிலும் யோகி சம்யமம் செய்கிறான், பவுத்தர்களில் ஒரு பிரிவினர் இத்தகைய சம்யமத்தில் அதிகமாக ஈடுபடுகின்றனர். முதலில் அவர்கள் களிமண்கட்டி ஒன்றை எடுத்து, அதன்மீது சம்யமம் செய்கின்றனர். பின்னர் படிப்படியாக, அது எந்த நுண்பொருட்களால் ஆக்கப்பட்டிருக்கிறதோ அவற்றைக் காண்கின்றனர். அவற்றை எல்லாம் கண்ட பிறகு அந்தப் பொருள் மீது அவர்களுக்கு ஆதிக்கம் உண்டாகிறது. இவ்வாறே யோகி எல்லா பூதங்களையும் வென்று அவற்றின்மீது ஆதிக்கம் செலுத்த முடிகிறது.
46. ததோணிமாதிப்ராதுர்பாவ காய ஸம்பத் தத்தர்மானபிகாதச்ச
அதிலிருந்து நுண்ணிய தன்மை, பிற சித்திகள், மகிமை பெற்ற உடல் உடலின் குணங்கள் அழியாமை எல்லாம் உண்டாகின்றன.
யோகி அஷ்டமா சித்திகளையும் அதாவது எட்டு சித்திகளையும் எய்திவிட்டான் என்பது இதனால் விளங்குகிறது. அவன் தன்னை அணு போன்று சிறியதாக்கிக் கொள்ளலாம். மலை போன்று பெரியதாக்கிக் கொள்ளலாம். பூமியைப் போன்று பளு உடையவனாகச் செய்யலாம். காற்றைப் போன்று லேசாக்கிக் கொள்ளலாம். எதை விரும்பினாலும் அதை அடையலாம். விரும்பியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தலாம். எல்லாவற்றையும் தன்வசமாக்கிக் கொள்ளலாம். சிங்கம்கூட ஆட்டுக்குட்டி போன்று அவன் காலடியில் அமர்ந்திருக்கும். அவன் விரும்பிய யாவும் நிறைவேறும்.
47. ரூபலாவண்ய பல வஜ்ரஸம்ஹனனத்வானி காய ஸம்பத்
இனிய உருவமும், அழகும், ஆற்றலும், வைரம் போன்ற உடல்கட்டும் காய சம்பத் (மகிமை பெற்ற உடல்) எனப்படும்.
அவனது உடல் அழிக்க முடியாததாகிவிடுகிறது. அதற்கு யாரும் எந்தத் தீங்கும்செய்ய முடியாது. அவன் விரும்பாமல் அவனது உடம்பை யாரும் அழிக்க முடியாது. காலம் என்னும் தடியை ஒடித்து எறிந்துவிட்டு பிரபஞ்சத்தில் தன் உடலோடு அவன் வாழ்கிறான். அவனுக்கு அதன்பின் நோயோ மரணமோ துன்பமோ இல்லை என்று வேதம் சொல்கிறது.
48. க்ரஹண ஸ்வரூபாஸ்மிதான்வயார்த்தத்வ ஸம் யமாதிந்த்ரிய ஜய
புலன்களின் புறச்சார்பு அதிலிருந்து உண்டாகும் அறிவு, இந்த அறிவால் வரும் நான்-உணர்வு இவற்றின் முக்குணங்கள், அவற்றினால் ஆன்மாவுக்கு வரும் அனுபவம் இவற்றின்மீது சம்யமம் செய்வதால் புலன்கள் வெல்லப்படுகின்றன.
புறப்பொருளனுபவத்தின் போது, புலன்கள் மனத்தில் தங்களுக்குரிய இடத்தை விட்டு அவற்றை நாடிச் செல்கின்றன. அதனால் அவற்றைப் பற்றிய அறிவு உண்டாகிறது. நான்-உணர்வும் இதில் ஈடுபட்டுள்ளது. இவற்றின் மீதும், படிப்படியாக மற்ற இரண்டின் மீதும் யோகி சம்யமம் செய்யும் போது, அவன் புலன்களை வெல்கிறான். நீங்கள் பார்க்கின்ற அல்லது உணர்கின்ற எந்தப் பொருளை வேண்டுமானாலும், உதாரணமாக ஒரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் மனத்தை அதன்மீது ஒருமுகப்படுத்துங்கள். பின்னர் புத்தக வடிவில் இருக்கின்ற அறிவின்மீதும், பிறகு புத்தகத்தைக் காண்கின்ற நான்-உணர்வின் மீதும் ஒருமுகப்படுத்துங்கள். இவை எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக சம்யமம் செய்தால் புலன்கள் அனைத்தையும் வெல்ல முடியும்.
49. ததோ மனோஜவித்வம் விகரணபாவ ப்ரதான ஜயச்ச
இதிலிருந்து உடலுக்கு மனத்தின் வேகத்தோடு இயங்கக் கூடிய ஆற்றலும், புலன்கள் உடலிலிருந்து பிரிந்து தனித்து நின்று செயல்புரியக்கூடிய ஆற்றலும், இயற்கையை வெல்கின்ற ஆற்றலும் உண்டாகின்றன.
பூதங்களை வெல்வதால், மகிமை பெற்ற உடல் கிடைப்பதுபோல் புலன்களை வெல்வதால் மேலே கூறிய சித்திகள் கிடைக்கின்றன.
50. ஸத்வ புருஷான்யதா க்யாதி மாத்ரஸ்ய ஸர்வ பாவாதிஷ்டாத்ருத்வம் ஸர்வஜ்ஞாத்ருத்வஞ்ச
சத்வத்திற்கும் புருஷனுக்கும் உள்ள வேறுபாட்டினைப் பிரித்தறிகின்ற விவேகத்தின்மீது சம்யமம் செய்வதால் எல்லா ஆற்றல்களும் எல்லா அறிவும் உண்டாகின்றன.
இயற்கையை வென்றபிறகு, புருஷனுக்கும் பிரகிருதிக்கும் உள்ள வேற்றுமையை உணர்ந்த பிறகு, அதாவது, புருஷன் அழிவற்றவன், தூயவன், பூரணன் என்பதை உணர்ந்த பிறகு எல்லாம் வல்ல தன்மையும் எல்லா அறிவும் வருகிறது.
51. தத் வைராக்யாதபி தோஷ பீஜக்ஷயே கைவல்யம்
இவற்றையும் விட்டுவிட்டால் தீமையின் விதைகளே அழிந்துவிடும். அதனால் கைவல்யம் கிடைக்கிறது.
அவன் தனிமை நிலையை அடைகிறான். எதையும் சார்ந்திராத நிலையை அடைகிறான். முக்தி பெறுகிறான். தான் எல்லா ஆற்றல்களும் எல்லா அறிவும் பெற்றவன் என்ற எண்ணத்தை ஒருவன் விட்டுவிடும்போது, புலன்களால் வரும் இன்பத்தையும், தேவர்களால் காட்டப்படும் இன்பங்களையும் அவன் ஒதுக்குகிறான். இந்த அற்புதச் சித்திகள் தன்னை வந்து அடைந்தும் அவற்றை யோகி விலக்குவானானால் அவன் தன் குறிக்கோளை அடைகிறான். இந்தச் சித்திகள் என்பவை என்ன? வெறும் தோற்றங்கள், கனவுகளைவிடச் சற்றும் உயர்ந்தவை அல்ல. எல்லா ஆற்றல்களையும் பெறுதல் என்பதுகூடக் கனவே தான். ஏனெனில் அது மனத்தைச் சார்ந்தது. மனம் இருக்கும்வரையே அது உணரப்படுகிறது. ஆனால் குறிக்கோளோ மனத்திற்கு அப்பால் உள்ளது.
52. ஸ்தான்யுபநிமந்த்ரணே ஸங்கஸ்மயாகரணம் புனரனிஷ்ட ப்ரஸங்காத்
தேவர்களின் தூண்டுதல்களால் யோகி மகிழவோ மயங்கவோ கூடாது. அதனால் தீமை ஏற்படுகின்ற அச்சம் உள்ளது.
வேறு ஆபத்துக்களும் உள்ளன தேவர்களும் மற்றவர்களும் அவனது ஆசைகளைத் தூண்டுவதற்காக வருகின்றனர். யாரும் முக்தி பெறுவதை அவர்கள் விரும்புவதில்லை. நம்மிடம்இருப்பது போன்று அவர்களிடமும் பொறாமை உண்டு. சில வேளைகளில் நம்மைவிட அதிகமாகவே பொறாமை கொள்கின்றனர். தங்கள் பதவி பறி போய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கு உண்டு. நிறை நிலையை அடையாத யோகிகள் மரணத்திற்குப் பின்னர் தேவர்கள் ஆகின்றனர். நேர்ப்பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்று இந்தச் சித்திகளைப் பெறுகின்றனர். அவர்கள் மீண்டும் பிறக்க வேண்டும். இந்தத் தூண்டுதல்களை மறுத்து, உறுதியுடன் நிற்க வல்லவன் நேராகக் குறிக்கோளை அடைந்து முக்தி பெறுகிறான்.
53. க்ஷண தத்க்ரமயோ ஸம்யமாத்விவேகஜம் ஜ்ஞானம்
ஒரு கணப்பொழுதின்மீதும், அதன் முன்னும்பின்னும் உள்ள காலத்தின்மீதும் சம்யமம் செய்வதால் விவேகம் உண்டாகிறது.
தேவர்களையும் சொர்க்கங்களையும் சித்திகளையும் நாம் எவ்வாறு புறக்கணிப்பது? விவேகத்தால் நல்லது எது? கெட்டது எது என்று பிரித்தறிவதால். ஆதலால் விவேகத்தைத் திடப்படுத்திக் கொள்வதற்கான சம்யமம் கூறப்படுகிறது. அது கணப்பொழுதின்மீதும் அதன் முன்னும் பின்னும் உள்ள காலத்தின்மீதும் சம்யமம் செய்வது ஆகும்.
54. ஜாதி லக்ஷண தேசைரன்யதானவச்சேதாத் துல்யயோஸ்தத ப்ரதிபத்தி
இனம், அடையாளம், இடம் இவற்றால் வேறுபடுத்தி அறிய முடியாதவற்றைகூட, மேலே கூறிய சம்யமத்தால் பிறக்கின்ற விவேகத்தால் அறிய முடியும்.
நாம் படும் துயரம் அறியாமையால் வருகிறது. உண்மையையும் உண்மையின்மையையும் வேறுபடுத்தி அறிய முடியாததால், விவேகமின்மையால் வருகிறது. நாம் எல்லோருமே தீமையை நன்மையாகவும் கனவை உண்மையாகவும் கருதுகிறோம். ஆன்மா ஒன்றே உண்மைப் பொருள். அதை நாம் மறந்துவிட்டோம். உடல் என்பது ஒரு பொய்க் கனவு, ஆனால் நாம் என்பது உடல்கள் என்று நினைக்கிறோம். இந்த விவேகமின்மையே துயரத்திற்குக் காரணம். இது அறியாமையால் ஏற்படுகிறது. விவேகம் வலிமையைத் தருகிறது. அப்போதுதான் உடல் சொர்க்கலோகங்கள், தேவர்கள் போன்ற எண்ணங்களை நாம் விட முடியும். இனம், அடையாளம், இடம் இவற்றை அடிப்படையாக வைத்து வேற்றுமை காண்பதால் தான் இந்த அறியாமை உண்டாகிறது. உதாரணமாக, இன வேறுபாட்டினால் தான் பசுவை நாயிலிருந்து வேறாகக் காண்கிறோம். பசுக்களுள் ஒரு பசுவை மற்றொரு பசுவிலிருந்து எவ்வாறு வேறுபடுத்திக் காண்கிறோம்? அடையாளங்களால், இனி அடையாளங்களில் இரண்டு பொருட்கள் முற்றிலும் ஒத்திருக்கும்போது, அவை வெவ்வேறு இடங்களில் இருக்குமானால், அந்த இட வேறுபாட்டால் வேறுபடுத்துகிறோம். இனம், அடையாளம், இடம் இவற்றின் துணையால்கூட பாகுபடுத்த முடியாதபடி பொருட்கள் கலந்து இருக்குமானால் மேலே கூறப்பட்ட பயிற்சிகளால் பெறுகின்ற விவேகத்தின் மூலம் அவற்றைப் பிரிக்க முடியும். புருஷன் தூயவன், பரிபூரணன், பிரபஞ்சத்தில் உள்ள ஒரே தனிப் பொருள் அவன் மட்டுமே. இந்த உண்மையையே யோகிகளின் மிகவுயர்ந்த தத்துவம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. உடலும் மனமும் சேர்க்கைப் பொருட்கள், எனினும் நாம் நம்மை அவற்றுடன் எப்போதும் ஒன்றுபடுத்திக் கொள்கிறோம். இவ்வாறு வேறுபாட்டை இழந்தது பெரிய தவறு. இந்த விவேகத்தைப் பெறும்போது, உலகுடனும் மனத்துடனும் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் கூட்டுப் பொருட்களே என்றும், அவை புருஷனாக முடியாது என்றும் மனிதன் அறிகிறான்.
55. தாரகம், ஸர்வவிஷயம் ஸர்வதா விஷயமக்ரமஞ்சேதி விவேகஜம் ஜ்ஞானம்
பொருட்கள் அனைத்தையும் அவற்றின் வேறுபாடுகளையும் ஒரே காலத்தில் ஏற்றுக்கொள்ளும் விவேக ஞானமே கரையேற்றும் ஞானமாகும்.
யோகியைப் பிறப்பு இறப்புக் கடலிலிருந்து கரையேற்றுவதால் இது கரையேற்றும் ஞானம் எனப்படுகிறது. தூல மற்றும் சூட்சுமமாகிய எல்லா நிலைகளிலும் பிரகிருதி முழுவதும் இந்த அறிவுக்கு எட்டுவதாகவே உள்ளது. ஒன்றன்பின் ஒன்றாக, முறையாக வரும் தன்மை இந்த அறிவில் இல்லை. இது அனைத்தையும் ஒரே நேரத்தில் பற்றுகிறது.
56. ஸத்வ புருஷயோ சுத்தி ஸாம்யே கைவல்யமிதி
சத்வத்தின் தூய்மையும் புருஷனின் தூய்மையும் ஒரே தன்மையானவை ஆகும்போது கைவல்யம் கிடைக்கிறது.
தேவர்கள் முதல் மிகச் சாதாரணமான அணுவரை இந்தப் பிரபஞ்சத்தில் எதனையும் ஆன்மா சார்ந்திருக்கவில்லை என்று அனுபவத்தில் அறியும்போது , அது நிறைநிலையாகிய கைவல்ய (தனித்திருத்தல்) நிலை எனப்படுகிறது. தூய்மையும் மலினமும் கலந்த சத்வத்தை(புத்தியை), புருஷனைப் போன்று தூய்மையாக்கும்போது கைவல்யம் கிடைக்கிறது, அப்போது குணமற்ற தூய்மையின் சாரத்தை மட்டுமே அதாவது புருஷனை மட்டுமே சத்வம் (புத்தி) பிரதிபலிக்கிறது.
4. கைவல்ய பாதம்
முக்தி
1. ஜன்மௌஷதி மந்த்ர தப ஸமாதிஜா ஸித்தய
பிறவி, ரசாயன மருந்துகள், மந்திர ஆற்றல், தவம், சமாதி, இவற்றின் மூலம் சித்திகள் கிடைக்கின்றன.
சிலவேளைகளில் ஒருவன் பிறக்கும்போதே சித்திகளுடன் பிறக்கலாம். இவை முற்பிறவிகளில் அடையப் பெற்றவை. அவற்றின் பயனை அனுபவிப்பதற்கேபோல் இந்த முறை அவர்கள் பிறக்கின்றனர். சாங்கியத் தத்துவத்தின் தந்தையாகிய கபிலமுனிவர் பிறவிச் சித்தர் என்று அழைக்கப்படுகிறார். சித்தர் என்ற சொல்லுக்கு வெற்றி அடைந்தவர் என்று பொருள்.
இந்தச் சித்திகளை ரசாயன முறைகளிலும் பெறலாம் என்று யோகிகள் கூறுகின்றனர். ரசாயன சாஸ்திரம் அதாவது வேதியியல் முதலில் ரசவாதத்தில் தொடங்கியது என்பது எல்லோருக்கும் தெரியும். பரிசமணி காயகல்பம் முதலியவற்றைத் தேடி மக்கள் அலைந்தனர். இந்தியாவில் ரசாயனர் என்று ஒரு பிரிவினர் இருந்தனர். லட்சியம், ஞானம், ஆன்மீகம், மதம் எல்லாம் வேண்டியது தான். ஆனால் இவற்றையெல்லாம் அடைவதற்கான ஒரே கருவி உடம்பு மட்டுமே என்பது இவர்கள் கூற்று. உடம்பு விரைவாக அழியுமானால் லட்சியத்தை அடைவதற்கான காலம் அதிகமாகும். உதாரணமாக, ஒருவன் யோகப் பயிற்சி செய்ய விரும்புகிறான். ஆன்மீக வாழ்வில் ஈடுபட விரும்புகிறான் என்று வைத்துக் கொள்வோம். சிறிது முன்னேறும் முன்பே இறந்துவிடுகிறான். மீண்டும் பிறக்கிறான். ஆரம்பிக்கிறான். இறக்கிறான். இவ்வாறு பிறப்பதிலும் இறப்பதிலுமே அதிகக் காலம் செலவழிந்துவிடும். எனவே உடம்பை அதிக வலிமையாகவும் திடமாகவும் செய்து, பிறப்பு, இறப்பு இல்லாமல் செய்ய முடியுமானால், ஆன்மீகத்தில் முன்னேற இன்னும் அதிகக் காலம் கிடைக்கும். ஆதலால் முதலில் உடலை உறுதியாக்குங்கள் என்று ரசாயனர்கள் கூறுகிறார்கள். உடம்பை அழிவில்லாமல் வைத்திருக்க முடியும் என்று அவர்கள் துணிந்து சொல்கிறார்கள். உடலை உண்டாக்குவது மனம் என்றால், ஒவ்வொரு மனமும் எல்லையற்ற ஆற்றல் வெளிப்படுகின்ற ஒரு வழி மட்டுமே என்பது உண்மையானால், அந்த ஒவ்வொரு வழியும் எல்லையற்றதிலிருந்து பெறும் சக்திக்கு ஓர் எல்லையே இருக்கக் கூடாது. நமது உடலை நாம் ஏன் எப்போதும் வைத்துக் கொள்ளக் கூடாது. நமது உடலை நாம் ஏன் எப்போதும் வைத்துக் கொள்ளக் கூடாது? நமக்கு உரிய எல்லா உடல்களையும் நாமே உருவாக்க வேண்டும். இந்த உடல் இறந்தால், உடனே மற்றொன்றைச் செய்ய வேண்டியுள்ளது. அப்போது நாம் செய்ய முடியுமானால், இப்போதே, இங்கேயே இந்த உடம்பிலிருந்து வெளியேறாமலேயே ஏன் செய்ய முடியாது? கோட்பாடு சரியாகத்தான் இருக்கிறது. இறந்த பிறகும், நாம் வாழவும் வேறு உடல்களை உருவாக்கவும் முடியுமானால், இந்த உடம்பை முற்றிலும் அழிக்காமலேயே, தொடர்ந்து சில மாற்றங்களை மட்டும் செய்வதன் மூலம் இங்கேயே ஏன் வேறு உடல்களைச் செய்யலாகாது என்று ரசாயனர்கள் கேட்கின்றனர். பாதரசத்திலும் கந்தகத்திலும் மிகவும் அற்புதமான ஆற்றல் உள்ளது எனவும், இவற்றிலிருந்து செய்யும் மருந்துகள் மனிதனின் உடலை அவன் விரும்பிய காலம்வரை அழியாமல் இருக்கச் செய்யும் என்றும் அவர்கள் நினைத்தனர்.
சில மருந்துகளை உண்பதால் ஆகாயத்தில் பறப்பது போன்ற ஆற்றல்கள் கிடைக்கும் என்று வேறு சிலர் நம்பினர். இக்காலத்திலுள்ள மிக அற்புதமான மருந்துகள் பலவும் குறிப்பாக மருந்தில் உலோகங்களைப் பயன்படுத்துவதும் ரசாயனர்கள் கண்டுபிடித்தவையே. தங்கள் குருமார்கள், பழைய உடலிலேயே வாழ்வதாக யோகிகளுள் ஒருசாரார் நம்புகின்றனர். யோக நெறியின் தந்தையான பதஞ்சலி முனிவரும் இதை மறுக்கவில்லை.
சொற்களின் வலிமை: மந்திரங்கள் எனப்படும் சில புனிதமான சொற்கள் உள்ளன. குறிப்பிட்ட நியதிகளைப் பின்பற்றி அவற்றை ஜபித்தால் அசாதாரண ஆற்றல்களைக் கொடுக்க வல்லவை அவை. இதுபோன்ற எத்தனையோ அற்புதங்களுக்கிடையில் இரவும்பகலும் நாம் வாழ்கிறோம். ஆனால் அவற்றை நாம் நினைப்பதே இல்லை. மனிதனின் ஆற்றலுக்கும் சொற்களின் வலிமைக்கும் மனத்தின் வலிமைக்கும் எல்லையே இல்லை.
தவம்: ஒவ்வொரு மதத்திலும் தவங்களும் விரதங்களும் கடைப்பிடிக்கப்படுவதை நீங்கள் காண்கிறீர்கள். இவற்றை மிகத் தீவிரமாக அனுஷ்டிக்கின்றனர். சிலர் வாழ்நாள் முழுவதும் கைகளை உயரே தூக்கி வைத்துக் கொண்டு நிற்கின்றனர். இறுதியில் கை உயிரற்று மரத்துப் போய்விடுகிறது. சிலர் இரவும்பகலும் தொடர்ந்து நிற்கின்றனர். இதன் விளைவாக கால் வீங்கி, கட்டைபோல் மரத்துப்போய்விடுகிறது. அதன்பிறகு அவர்கள் உயிர் வாழ்ந்தாலும் கால்களை மடக்க முடியாமல் வாழ்நாள் முழுவதும் நின்றுகொண்டே இருக்கின்றனர். ஒருசமயம் இவ்வாறு கைகளை உயர்த்தி வைத்திருக்கும் ஒருவரை நான் கண்டேன். இப்படிச் செய்வது ஆரம்பத்தில் எப்படி இருந்தது என்று நான் அவரிடம் கேட்டேன். அது ஒரு பயங்கர சித்திரவதை என்று அவர் பதில் அளித்தார்.வலி பொறுக்க முடியாமல், ஓர் ஆற்றில் சென்று நீரில் மூழ்கி இருந்தபின் அவருக்கு வலி சிறிது குறைந்ததாம். ஒரு மாதத்திற்குப் பின் தாம் அதிகம் துன்புறவில்லை என்று சொன்னார். இத்தகைய பயிற்சிகளால் சித்திகள் வருகின்றன.
சமாதி: ஒருமைப்பாடே சமாதி, உண்மையில் யோகம் என்பது இதுவே. இந்த விஞ்ஞானத்தின் உயர்தனிக் கொள்கையும் இதுதான். மிகச் சிறந்த வழியும் இதுவே. முன்பு கூறப்பட்டவை இரண்டாம் படியிலுள்ளவை. அவற்றின்மூலம் மிகவுயர்ந்த நிலையை அடைய முடியாது. மன நிலையில், ஒழுக்க நிலையில், ஆன்மீக நிலையில் நாம் எதை வேண்டுமானாலும் அடைவதற்கு வழி சமாதியே.
2. ஜாத்யந்தரபரிணாம ப்ரக்ருத்யா பூராத்
பிரகிருதி உட்புகுந்து நிறைப்பதால் ஓர் இனம் மற்றோர் இனமாக மாறுகிறது.
பிறப்பு, சிலவேளைகளில் மருந்துகள், தவம் இவற்றின் மூலம் ஒருவனுக்குச் சித்திகள் வாய்க்கும் என்கிறார் பதஞ்ஜலி. உடலை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்பதையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். இப்போது அவர் ஓர் இனத்திலிருந்து மற்றோர் இனமாக மாறுவதற்கான காரணத்தைக் கூறுகிறார். பிரகிருதி உட்புகுந்து நிரப்புவதால் என்கிறார் அவர். அடுத்த சூத்திரத்தில் இதைத் தெளிவுபடுத்துகிறார்.
3. நிமித்தமப்ரயோஜகம் ப்ரக்ருதீனாம் வரண பேதஸ்துதத ஷேத்ரிகவத்
இயற்கையின் மாறுபாட்டிற்கு நற்செயல்களும் தீயசெயல்களும் நேர்க்காரணங்கள் அல்ல. நீரின் போக்கிலுள்ள தடையை விவசாயி நீக்கும்போது அது தன் சொந்த இயல்பாலேயே பாய்வதுபோல், செயல்களும் இயற்கையின் பரிணாமத்திற்கான தடைகளை நீக்குகின்றன.
வயல்களுக்குப் பாய வேண்டிய நீர் ஏற்கனவே வாய்க்காலில் இருக்கிறது. மடைகளால் தடுக்கப்பட்டுள்ளது, அவ்வளவுதான், விவசாயி இந்த மடைகளைத் திறந்ததும், புவியீர்ப்பு விசையால் நீர் தானாகப் பாய்ந்து செல்கிறது. அதுபோல் எல்லா முன்னேற்றமும் ஆற்றல்களும் ஒவ்வொரு மனிதனிடமும் ஏற்கனவே உள்ளன; நிறைநிலை, மனிதனின் இயல்பிலேயே உள்ளது. அது தன் போக்கில் வெளிப்படுவது தடுக்கப்படுகிறது அவ்வளவுதான். யாராவது அந்தத் தடைகளை நீக்கினால் இயற்கை முன்னே பாய்கிறது; அவன் தன்னிடம் ஏற்கனவே உள்ள ஆற்றல்களை அடையப் பெறுகிறான்; தீயவர் என்று நாம் கருதுபவர்கள். தடை நீக்கப்பட்டு இயற்கை பாய்ந்தவுடன் மகான்களாகி விடுகின்றனர். நிறைநிலையை நோக்கி இயற்கையே நம்மை இட்டுச் செல்கிறது. உரிய காலத்தில் அது எல்லோரையும் அங்குக் கொண்டு சேர்க்கும். ஆன்மீகத்தில் முன்னேறுவதற்கான முயற்சிகளும் போராட்டங்களும் எல்லாம் தடைகளை நீங்குவதற்காகவே, தடைகள் நீங்கினால் மட்டுமே போதும், நமது பிறப்புரிமையாகிய நமது இயல்பாகிய நிறைநிலையின் வாசல்கள் திறக்கின்றன.
பண்டைய யோகிகளின் பரிணாமக் கொள்கை, தற்கால ஆராய்ச்சிகளின் வெளிச்சத்தில் நன்கு விளங்கும். ஆனாலும் பண்டைய யோகிகளின் விளக்கம் சிறந்தது. தற்கால விஞ்ஞானிகள் பரிணாமத்திற்கு இரண்டு காரணங்களைக் கூறுகின்றனர். ஒன்று, வாழ்க்கைத் துணை தேர்வு. இரண்டாவது, தகுதி மிக்கதே வாழ முடியும் என்ற கொள்கை ஆனால் இவை போதுமானவை அல்ல. உணவு தேடுதல், வாழ்க்கைத் துணை தேடுதல் ஆகிய இரண்டுமே தேவைப்படாத அளவிற்கு மானிட அறிவு முன்னேறிவிட்டதென்று வைத்துக்கொள்வோம். அப்போது பரிணாமமே நின்றுபோய், மனித முன்னேற்றமும் நின்றுபோய் உயிர்கள் அழிந்துபோகும் என்று நவீன விஞ்ஞானிகள் கூறுவார்கள். ஒவ்வொரு கொடியவனின் மனச்சாட்சிக்கு ஒரு தவறான சமாதானம் உண்டாவதுதான் இந்த வாதத்தின் விளைவு. கொடியவர்களையும் தகுதியற்றவர்களையும் (தகுதியைத் தீர்மானிக்கின்ற ஒரே நீதிபதிகளும் அவர்களே) கொன்று அழிப்பதன் மூலம் இனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டு தங்களையும் தத்துவ மேதைகளாகக் காட்டிக் கொள்பவர்களுக்கும் இங்கே பஞ்சமில்லை.
மகத்தான பண்டைய பரிணாமவாதியான பதஞ்ஜலியோ, ஒவ்வோர் உயிரிலும் ஏற்கனவே உள்ள நிறை நிலையை வெளிப்படுத்துவதுதான் பரிணாமத்தின் உண்மை ரகசியம் என்கிறார். இந்த நிறைநிலை தடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடைக்குப் பின்னால் உள்ள எல்லையற்ற அலை தன்னை வெளிப்படுத்துவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டங்களுக்கும் போட்டிகளுக்கும் காரணம் நமது அறியாமையே மடையைத் திறந்து, நீருக்கு வழிவிட நமக்குச் சரியான வழி தெரியவில்லை. பின்னால் உள்ள எல்லையற்ற அலை தன்னை வெளிப்படுத்த வேண்டும். இதுவே எல்லா வெளிப்பாடுகளுக்கும் காரணம்.
உயிர்வாழ்வதற்கும் காமத்தைத் தணித்துக் கொள்வதற்குமான போட்டிகள் வெறும் தற்காலிகமானவை. அவை தேவையற்றவை, அறியாமையால் ஏற்பட்ட புறவிளைவு. இந்தப் போட்டிகள் எல்லாமே நின்ற பின்பும் நாம் ஒவ்வொருவரும் நமது இயல்பான நிறைநிலையை அடையும்வரை, இந்தப் பூரணமான இயற்கை நம்மை முன்னே தள்ளிக் கொண்டு செல்லும், ஆதலால் முன்னேற்றத்திற்குப் போட்டி தேவை என்று எண்ணுவது நியாயமல்ல. மிருகத்திடம் மனித சக்தி அடக்கப்பட்டுக் கிடந்தது. கதவு திறந்ததும் அது வெளி வந்தது. அது போன்று மனிதனிடம் தெய்வம் தோன்றா நிலையில் உள்ளது. அறியாமையாகிய சிறையில் அது அடைபட்டுள்ளது. அறிவு சிறையை உடைத்துத் திறக்கும்போது தெய்வம் வெளிப்படுகிறது.
4. நிர்மாணசித்தான்யஸ்மிதாமாத்ராத்
நான் உணர்விலிருந்தே படைக்கப்பட்ட சித்தங்கள் வெளிவருகின்றன.
நாம் செய் நல்ல அல்லது தீய செயல்களாலேயே நாம் துன்புறுகிறோம் என்பது கர்மக் கோட்பாடு. மனிதன் தனது மகிமையை மீண்டும் பெறச் செய்வதே எல்லா தத்துவ சாஸ்திரங்களின் நோக்கம். அனைத்து சாஸ்திரங்களும் மனிதனுடைய ஆன்மாவின் பெருமையையே பாடுகின்றன. அதே மூச்சில் கர்மத்தைப் பற்றியும் போதிக்கின்றன. நற்செயலால் இது விளையும், தீய செயலால் அது விளையுமென்று கூறுகின்றன. ஆனால் இந்த நல்ல மற்றும் தீய செயல்களால் ஆன்மா பாதிக்கப்படுமென்றால் அது ஒன்றுமே இல்லை. புருஷனின் இயல்பு வெளிப்படுவதை தீய செயல்கள் தடுக்கின்றன. நம் செயல்கள் அந்தத் தடைகளை நீக்குகின்றன. புருஷனின் பெருமை வெளிப்படுகிறது. புருஷன் ஒருபோதும் மாறுபடுவதில்லை. நீங்கள் எது செய்தாலும் சரி, அது உங்கள் மகிமையை, உங்கள் சொந்த இயல்பை அழிப்பதில்லை. ஏனெனில் ஆன்மாவை எதனாலும் பாதிக்க முடியாது. ஒரு திரை மட்டுமே அதன் முன்னால் தொங்குகிறது. அது அதன் நிறைநிலையை மூட மட்டுமே செய்துள்ளது. அவ்வளவுதான்.
தங்கள் வினைப் பயன்களை விரைவில் தீர்ப்பதற்காக யோகிகள் காய வியூகங்களை அதாவது பல உடல்களைப் படைத்துக் கொள்கின்றனர். அவற்றின்மூலம் தங்கள் கர்மத்தை அனுபவிக்கின்றனர், இந்த எல்லா உடல்களுக்கும் வேண்டிய சித்தங்களை நான் உணர்விலிருந்தே அவர்கள் படைத்துக் கொள்கின்றனர். அவர்களது மூல சித்தத்திலிருந்து இவை வேறுபட்டிருப்பதால் இவை நிர்மாண சித்தங்கள், படைக்கப்பட்ட சித்தங்கள் எனப்படுகின்றன.
5. ப்ரவ்ருத்திபேதே ப்ரயோஜகம் சித்தமேகமனே கேஷாம்
வெவ்வேறு நிர்மாண சித்தங்களின் செயல்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும், யோகியின் மூல சித்தமே அவற்றை எல்லாம் அடக்கி ஆள்கிறது.
பல்வேறு உடல்களில் செயல்படுகின்ற வெவ்வேறான இந்தச் சித்தங்கள் நிர்மாண சித்தங்கள் எனவும், இந்த உடல்கள் நிர்மாண காயங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன; அதாவது படைக்கப்பட்ட சித்தங்கள் மற்றும் படைக்கப்பட்ட உடல்கள். ஜடப் பொருளும் மனமும் வற்றாத இரு களஞ்சியங்கள் நீங்கள் யோகிகளாகும்போது அவற்றை அடக்கி ஆளும் ரகசியத்தை அறிந்து கொள்ளலாம். அது எப்போதும் உங்களுடையதாகவே இருந்தது. நீங்கள் அதை மறந்துவிட்டீர்கள். யோகியானதும் நினைவிற்குக் கொண்டு வருகிறீர்கள். அதன்பின் அவற்றை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். விரும்பியவாறு பயன்படுத்தலாம். அண்டம் எந்தப் பொருளால் ஆக்கப்பட்டுள்ளதோ அந்தப் பொருளாலேயே, படைக்கப்பட்ட சித்தங்கள் ஆக்கப்பட்டுள்ளன. மனம் ஒரு பொருள், ஜடம் வேறு பொருள் என்று சொல்வதற்கில்லை. அவை ஒரே பொருளின் வேறுபட்ட நிலைகள்தான். யோகியின் நிர்மாண சித்தங்களும், நிர்மாண காயங்களும் ஸத்தின் சூட்சும நிலை அதாவது அஸ்மிதை அதாவது நான்- உணர்வினாலேயே ஆக்கப்பட்டுள்ளது. எனவே இயற்கையிலுள்ள இந்தச் சக்திகளின் ரகசியத்தை யோகி அறிந்தால், அஸ்மிதையிலிருந்து அவன் பல சித்தங்களையும் உடல்களையும் படைத்துக் கொள்வான்.
6. தத்ர த்யானஜமனாசயம்
பல்வேறு சித்தங்களுள் சமாதியின் மூலம் அடைந்த சித்தமே ஆசையற்றது.
வெவ்வேறு மனிதர்களிடம் நாம் காணும் வெவ்வேறு சித்தங்களுள் பூரண ஒருமைப்பாட்டு நிலையை, சமாதி நிலையை அடைந்த சித்தமே மிக உயர்ந்தது. மருந்து, மந்திரம், தவம் இவற்றால் சித்திகளைப் பெற்றவனுக்கு ஆசைகள் உண்டு. ஆனால் தியானத்தின் மூலம் சமாதி நிலை அடைந்தவனுடைய சித்தம் மட்டுமே ஆசைகள் அற்றது.
7. கர்மாசுக்லாக்ருஷ்ணம் யோகிநஸ்த்ரிவிதமித ரேஷாம்
யோகிகளுக்குச் செயல்கள் வெளுத்திருப்பதுமில்லை. கறுத்திருப்பதில்லை. மற்றவர்களுக்கு அவை வெளுத்தவை. கறுத்தவை, இரண்டும் கலந்தவை என்று மூவகைகளில் உண்டு. யோகி பூரண நிலையை அடைந்த பிறகு, அவனுடைய செயல்களும் அவற்றின் பலன்களும் அவனுக்குத் தளைகளை உண்டாக்காது. ஏனெனில் அவன் ஆசையால் தூண்டப் பெற்று அந்தச் செயல்களைச் செய்யவில்லை. அவன் செயல் புரிந்துகொண்டே போகிறான். நன்மை செய்ய விரும்புகிறான். அதனால் செயல்புரிகிறான். பலனைப்பற்றி எண்ணாததால் அவை அவனிடம் வருவதில்லை. அந்த உயர்நிலையை அடையாத சாதாரண மனிதனிடம் காணப்படும் செயல்கள் கறுப்பு(தீய செயல்), வெளுப்பு(நற்செயல்) இவற்றின் கலப்பு என மூவகைப்படும்.
8. ததஸ்தத்விபாகானு குணானாமேவாபி வ்யக்திர் வாஸனானாம்
இந்த மூவகைச் செயல்களிலிருந்து ஒவ்வொரு நிலையிலும் அந்த நிலைக்குப் பொருத்தமான ஆசை மட்டும் வெளிப்படும் (மற்றவை அந்த வேளைக்கு அடங்கி இருக்கும்)
நன்மை, தீமை, கலப்பு, ஆகிய மூவகைச் செயல்களை நான் செய்ததாக வைத்துக் கொள்வோம், நான் இறந்து சொர்க்கத்தில் தேவன் ஆகிறேன். அங்கே தேவ உடலில் இருக்கும்போது எழும் விருப்பங்கள், மனித உடலில் இருக்கும்போது எழும் விருப்பங்களைப்போல் இருக்காது. தேவ உடலுக்கு உணவும் பானமும் வேண்டியதில்லை உண்பது, பருகுவது போன்ற ஆசைகளை எழுப்புவதான எனது கடந்த கால கர்மங்கள், நான் அனுபவித்து முடிக்காத அந்தக் கர்மங்கள் அப்போது என்னவாகும்? நான் தேவனாகும்போது இந்தக் கர்மங்கள் எங்கே போகும்? இந்த விருப்பங்கள் அவற்றிற்குத் தகுந்த சூழ்நிலையில் மட்டும்தான் வெளிப்படும் என்பதே இதற்கு விடை. சூழ்நிலைக்குப் பொருத்தமான விருப்பங்கள் மட்டுமே வெளிப்படும். எஞ்சியவை சேர்த்து வைக்கப்படும். இந்த வாழ்க்கையில் நமக்குத் தேவ ஆசைகளும், மனித ஆசைகளும், விலங்கு ஆசைகளும் இருக்கலாம். தேவனின் உடலை எடுத்தால் நல்ல ஆசைகள் மட்டும் வெளிப்படும், சூழ்நிலை அந்த விருப்பங்களுக்கே பொருத்தமாக உள்ளது. விலங்கின் உடலை எடுக்கும்போது விலங்கின் விருப்பங்கள் வெளிப்பட்டுத் தோன்றும். அப்போது நல்ல விருப்பங்கள் காத்திருக்கும் வேண்டும். இது எதைக் காட்டுகிறது? சூழ்நிலையின் துணையினால் நாம் இந்த ஆசைகளை அடக்க முடியும் என்பதைத்தான். கர்மத்தையேகூட அடக்குவதற்கான வலிமை மிக்க ஒரு கருவி சூழ்நிலை என்பதையே இது காட்டுகிறது.
9. ஜாதி தேச கால வ்யவஹிதானாமப்யானந்தர்யம் ஸ்ம்ருதி ஸம்ஸ்காரயோரேக ரூபத்வாத்
பிறவி, இடம், காலம் இவற்றால் பிரிக்கப்பட்ட போதிலும், நினைவும் சம்ஸ்காரங்களும் ஒத்திருப்பதால் ஆசைகளுக்கிடையில் ஒரு தொடர்ச்சி உள்ளது.
அனுபவங்கள் நுண்ணியவையாகும்போது சம்ஸ்காரங்கள் ஆகின்றன. சம்ஸ்காரங்கள் மீண்டும் உணர்வு பெற்றெழும்போது நினைவு ஆகிறது. இங்கு நாம் நினைவு என்று சொல்லும்போது பழைய அனுபவ சம்ஸ்காரங்களும், இப்போதைய உணர்வுபூர்வமான செயல்களும் உணர்வறு நிலையில் ஒன்றுகூடும் நிலையையே குறிப்பிடுகிறோம். ஒவ்வோர் உடலிலும் இதற்குமுன் அதுபோன்ற உடல்களில் சேர்க்கப்பட்ட சம்ஸ்காரத் தொகுதி மட்டுமே செயல்புரிவதற்குக் காரணமாகிறது. வேறுவித உடல்களில் சேகரிக்கப்பட்ட அனுபவங்கள் அப்போது நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஆகவே ஒவ்வோர் உடலும் அதே மாதிரியுள்ள பல உடல்களின் சந்ததி போலவே செயல்புரிகிறது. ஆகையால் ஆசைகளின் தொடர்ச்சி விட்டுப் போவதில்லை.
10. தாஸாமனாதித்வம் சாசி÷ஷா நித்யத்வாத்
இன்ப நாட்டம் என்பது என்றென்றைக்கும் இருப்பதால் ஆசைகளும் ஆரம்பம் இல்லாதவையாக இருக்கின்றன.
இன்பம் வேண்டும் என்ற ஆசையிலிருந்தே எல்லா அனுபவங்களும் உண்டாகின்றன. அனுபவத்திற்கு ஆரம்பம் இல்லை. ஏனெனில் புதிய அனுபவம் ஒவ்வொன்றும் பழைய அனுபவங்களால் ஆக்கப்பட்ட சம்ஸ்காரங்களிலிருந்தே எழுகிறது. ஆதலால் ஆசைக்கு ஆரம்பம் இல்லை.
11. ஹேது பலாச்ரயாலம்பனை; ஸங்க்ருஹீதத்வா தேஷாமபாவே ததபாவ
காரணம், பலன், ஆதாரம், பற்றுகின்ற பொருட்கள் இவை ஒன்று கூடியிருப்பதால் இவையில்லாதபோது அதுவும் இல்லை.
காரண காரியங்களால் ஆசை ஒன்றுசேர்க்கப்பட்டிருக்கின்றன. ஓர் ஆசை தோன்றினால் அது விளைவை உண்டுபண்ணாமல் மறையாது. சித்தத்தில் எல்லா பழைய ஆசைகளும் சம்ஸ்காரங்களாகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவை செயல்பட்டு ஓயும்வரை அழிவதில்லை. மேலும், புலன்கள் புறப் பொருட்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வதால், புதிய ஆசைகளும் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. ஆகையால், ஆசைக்கான காரணம், பலன், ஆதாரம், பற்றுகின்ற பொருள் இவற்றை ஒழிக்க முடியுமானால் மட்டுமே ஆசை ஒழியும்.
12. அதீதானாகதம் ஸ்வரூபதோஸ்தயத்வ பேதாத் தர்மாணாம்.
கடந்தகாலமும் எதிர்காலமும் தங்கள் சொந்த இயல்பில் நிலைபெற்றுள்ளன. ஏனெனில் குணங்கள் வெவ்வேறு வழிகளை உடையதாயிருக்கின்றன.
அதாவது, இல்லாததிலிருந்து இருப்பது ஒரு போதும் வராது. கடந்தகாலமும் எதிர்காலமும் இப்போது வெளிப்பட்டுத் தோன்றாவிட்டாலும் அவை நுண்ணிய வடிவில் இருக்கவே செய்கின்றன.
13. தே வ்யக்த ஸூக்ஷ்மா குணாத்மான
அவை வெளிப்பட்டோ சூட்சுமமாகவோ உள்ளன; குணங்களின் தன்மையை உடையனவாக இருக்கின்றன.
சத்வம், ரஜஸ், தமஸ் இந்த மூன்று பொருட்களும் மூன்று குணங்கள். இவற்றின் தூல நிலையே நாம் உணர்கின்ற இந்தப் பிரபஞ்சம். இந்தக் குணங்கள் வெளிப்படுவதிலுள்ள வேறுபாட்டால், இறந்தகாலமும் எதிர்காலமும் எழுகிறது.
14. பரிணாமைகத்வாத் வஸ்து தத்வம்
பரிணாமத்திலுள்ள ஒருமையிலிருந்தே பொருட்களின் ஒருமை உண்டாகிறது.
குணங்கள் மூன்றாக இருந்தாலும் அவற்றின் வேறு பாடுகள் ஒருங்கிணைந்திருப்பதால் எல்லா பொருட்களிலும் ஒருமை நிலவுகிறது.
15. வஸ்துஸாம்யே சித்தபேதாத்தயோர்விபக்த பந்தா
ஒரே பொருளாக இருந்தாலும் அனுபவமும் ஆசையும் வேறுபட்டிருப்பதால், மனமும் பொருளும் வெவ்வேறு இயல்புடையனவாக உள்ளன.
நமது மனங்களைச் சாராமலிருக்கின்ற புறவுலகம் ஒன்றுள்ளது. இது பவுத்தர்களின் க்ஷணிக விஞ்ஞான வாதத்தின் எதிர்வாதமாகும். ஒரே பொருளை வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறாகப் பார்ப்பதால். அது ஒரு குறிப்பிட்ட ஒரு மனிதனின் வெறும் கற்பனையாக இருக்க முடியாது.
16. ததுபராகாபேக்ஷித்வாச்சித்தஸ்ய வஸ்து ஜ்ஞாதாஜ் ஞாதம்
காணப்படும் பொருள் சித்தத்தில் ஏற்படுத்தும் தன்மையையே சார்ந்து இருப்பதால், அது சித்தத்திற்குத் தெரியப் பட்டோ தெரியாமலோ இருக்கும்.
17. ஸதாஜ்ஞாதாச்சித்த வ்ருத்தயஸ்தத்ப்ரபோ புருஷஸ்யாபரிணாமித்வாத்
சித்தத்திற்குத் தலைவனான புருஷன் மாறுபாடு இல்லாதவனாக இருப்பதால் சித்தத்தின் நிலைகள் எப்போதும் அறியப்படும்.
பிரபஞ்சம் மனோமயமாகவும் ஜடப்பொருளாகவும் உள்ளது என்பதே இந்தக் கொள்கையின் முழு சாரம். இரண்டும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்தப் புத்தகம் என்பது என்ன?. தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும் சில மூலக்கூறுகளின் சேர்கையே சில மூலக்கூறுகள் வெளியே செல்கின்றன, சில உள்ளே வருகின்றன. இது ஒரு நீர்ச்சுழிபோல் உள்ளது. அதனை ஒருமைப்படுத்துவது எது? அதனை ஒரு புத்தகமாக்குவது எது? மாற்றங்கள் ஓர் ஒழுங்குமுறையில் நடைபெறுகின்றன. அவை சித்தத்தில் இயைபான, ஒழுங்கான பதிவுகளை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தொகுத்து புத்தகம் என்னும் பொருள் இருப்பதாக மனம் அறிகிறது. இதன் பகுதிகள் மாறினாலும் புத்தகம் என்ற தொகுதி மாறாமல் உள்ளது. மனமும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரே பொருளில் வெவ்வேறு வேகங்களில் இயங்குகின்ற இரண்டு படலங்கள் போன்று மனமும் உடலும் உள்ளன. ஒன்று வேகம் குறைந்தும், மற்றது வேகம் அதிகரித்தும் இருப்பதால் இரண்டு இயக்கங்களின் வேறுபாட்டை நாம் அறிய முடிகிறது. உதாரணமாக ஒரு ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு அருகில் மற்றொரு வண்டி செல்கிறது. இவை இரண்டின் இயக்கத்தையும் ஓர் அளவுக்கு மட்டுமே நாம் காண முடியும். ஆனால் இன்னும் ஏதோ தேவைப்படுகிறது. இயங்கும் ஒரு பொருளை, இயங்காத ஒன்றுடன் ஒப்பிட்டுத்தான் இயக்கத்தைத் தெரிந்து கொள்கிறோம். இரண்டு மூன்று பொருட்கள் இயங்குமானால், அவற்றுள் வேகமாகச் செல்வதை முதலில் காண்கிறோம். குறைந்த வேகத்தில் செல்பவற்றைப் பின்னரே காண்கிறோம். மனம் இயங்குவதைக் காண்பது எப்படி? அதுவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே அதைக் காண்பதற்கு மனத்தைவிட மெதுவாக இயங்கும் மற்றொன்று வேண்டும், அதை அறிய அதைவிட மெதுவான ஒன்று வேண்டும். இவ்வாறு ஒன்றைவிட மெதுவாக இயங்கும் மற்றொன்றைத் தேடிக்கொண்டிருப்பதற்கு ஒரு முடிவு இல்லை. எங்கேயாவது ஓரிடத்தில் நாம் நின்றாக வேண்டும். ஒருபோதும் இயங்காத ஒன்றை அறிந்து, இந்தத் தொடரை முடிக்க வேண்டும். முடியாத சங்கிலித் தொடராகிய இந்த இயக்கத்தின் பின்னால் மாறுதலற்ற, தூய, நிறமற்ற புருஷன் இருக்கிறான். மாய விளக்கிலிருந்து எழும் உருவங்கள் திரையைப் பாதிக்காமல் அதன்மீது தெரிவதுபோல், இந்தத் தோற்றங்களெல்லாம் புருஷனில் பிரதிபலிக்கின்றன.
18. ந தத் ஸ்வாபாஸம த்ரும்ச்யத்வாத்
மனம் ஒரு பொருள் ஆதலால் அது சுயஒளி உடையதல்ல.
இயற்கையில் எங்குமே அற்புதமான சக்திகள் வெளிப்பட்டுத் துலங்குகின்றன. எனினும் அது சுயஒளி பெற்ற தல்ல. இயல்பிலேயே அறிவுடையதும் அல்ல, புருஷன் மட்டுமே சுயஒளி உள்ளவன். அவன் தன் ஒளியை எல்லாவற்றிற்கும் கொடுக்கிறான். புருஷனின் ஆற்றலே ஜடப்பொருள் மற்றும் சக்திகளின் வழியாக ஊடுருவி நிற்கிறது.
19. ஏக ஸமயே சோபயானவதாரணம்
ஒரேவேளையில் இரண்டை அறிந்துகொள்ள முடியாததால்
மனம் சுயஒளி பெற்றிருந்தால் அது ஒரேவேளையில் தன்னையும் புறப் பொருட்களையும் விளக்க முடியும். ஆனால் அந்தச் சக்தி மனத்திற்கு இல்லை. புறப்பொருட்களைக் காணும்போதே தன்னையும் காணும் திறமை அதற்கில்லை. எனவே புருஷனே சுயஒளி உள்ளவன். மனம் அவ்வாறில்லை.
20. சித்தாந்தர த்ருச்யே புத்திபுத்தேரதிப்ரஸங்க ஸ்ம்ருதி ஸங்கரச்ச
ஒரு சித்தத்தை அறிவதற்கு மற்றொரு சித்தம் வேண்டும் என்றால், இரண்டாவதை அறிய மற்றொரு சித்தம் வேண்டும். இவ்வாறு சித்தங்களுக்கு முடிவே இருக்காது. ஞாபகக் குழப்பமே அதன் விளைவாக இருக்கும்.
சாதாரண மனத்தை அறிவதற்கு மற்றொரு மனம் இருப்பதாகக் கொள்வோம். இரண்டாவதை அறிவதற்கு மூன்றாவது மனம் வேண்டும். இந்தத் தொடருக்கு முடிவே இருக்காது. இதனால் நினைவில் குழப்பம் ஏற்படும். ஞாபகம் என்ற களஞ்சியமே இல்லாமல் போய்விடும்.
21. சிதேரப்ரதிஸங்க்ரமாயாஸ்ததாகாராபத்தௌ ஸ்வபுத்தி ஸம்வேதனம்
அறிவின் சாரமாகிய புருஷன் மாறுபாடு இல்லாதவன் சித்தம் புருஷனுடைய வடிவத்தை ஏற்கும்பொழுது, அது அறிவு மயமாக விளங்குகிறது.
அறிவு என்பது புருஷனின் ஒரு குணம் அல்ல என்பதைத் தெளிவாக்குவதற்காகப் பதஞ்ஜலி முனிவர் இதைக் கூறுகிறார். சித்தம் புருஷனின் அருகில் வரும்பொழுது, புருஷன் சித்தத்தில் பிரதிபலிப்பதுபோல் தோன்றுகிறது. அப்போது, அந்தவேளைக்கு அது அறியும் தன்மை பெற்று புருஷன்போல் தோன்றுகிறது.
22. த்ரஷ்டருத்ருச்யோபரக்தம் சித்தம் ஸர்வார்த்தம்
காண்பவனோடும் காணப்படும் பொருட்களோடும் கூடியிருப்பதால் அனைத்தையும் அறியும் தன்மை சித்தத்திற்கு வருகிறது.
சித்தத்தின் ஒருபுறம், காணப்படும் பொருளாகிய புறவுலகம் பிரதிபலிக்கிறது. மறுபுறம், காண்பவனாகிய புருஷன் பிரதிபலிக்கிறான். இவ்வாறுதான் அதற்கு அனைத்தையும் அறியும் ஆற்றல் ஏற்படுகிறது.
23. ததஸங்க்யேயவாஸனாபிஸ்சித்ரமபி பரார்த்தம் ஸம்ஹத்ய காரித்வாத்
சித்தம் எண்ணற்ற ஆசைகளால் பலதரப்பட்டு இருப்பினும், அது வேறொன்றிற்காகவே (புருஷனுக்காகவே) செயல்படுகிறது. ஏனெனில் சேர்ந்து இருக்கும்போதுதான் அது செயல்புரியும்.
சித்தம் பல்வேறு பொருட்களின் சேர்க்கையால் ஆனது. ஆதலால் அது தனக்காகச் செயல்புரிய முடியாது. இந்த உலகத்தில் எவையெல்லாம் சேர்க்கைப் பொருளாக இருக்கிறதோ அதன் சேர்க்கைக்கு வேறு காரணம் இருக்க வேண்டும் அதன் சேர்க்கை மூன்றாவது வேறொரு பொருளுக்காகத்தான் இருக்க வேண்டும், சேர்க்கைப் பொருளான சித்தத்தின் சேர்க்கை புருஷனுக்காக அமைந்துள்ளது.
24. விசேஷ தர்சின ஆத்மபாவ பாவனா நிவ்ருத்தி
விவேகிகள் சித்தத்தை ஆன்மாவாக எண்ணுவதில்லை. புருஷன் என்பது மனம் அல்ல என்பதை யோகி மனத்தின்மூலம் அறிந்து கொள்கிறான்.
25. ததா விவேகனிம்னம் கைவல்ய ப்ராக்பாவம் சித்தம்
அப்பொழுது விவேகத்துடன் கூடிய சித்தம் கைவல்யத்திற்கு (தனி நிலை) முந்திய நிலையை அடைகிறது)
இவ்வாறு யோகப் பயிற்சி நமக்கு விவேகத்தை அளிக்கிறது. அதனால் நமது காட்சி தெளிவாகிறது. கண்ணின் முன் உள்ள திரை நீக்கப்பெற்று, பொருட்களை நாம் உள்ளது உள்ளபடி காண்கிறோம்,. இயற்கை ஒரு சேர்கைப் பொருள். அது சாட்சியான புருஷனுக்காகவே தனது அழகிய காட்சிகளை விரிக்கிறது என்றும், இயற்கை தலைவன் அல்ல, அகத்திலே அரசனாக அமர்ந்துள்ள புருஷனுக்காகவே தனது சேர்க்கைகளையும் அற்புதங்களையும் காட்டுகிறதென்றும் அறிகிறோம். நீண்ட காலப் பயிற்சியால் விவேகம் வரும்போது, அச்சம் அகல்கிறது. சித்தம் கைவல்யம் பெறுகிறது.
26. தச்சித்ரேஷு ப்ரத்யயாந்தராணி ஸம்ஸ்காரேப்ய
அதற்குத் தடையாக எழும் எண்ணங்கள் சம்ஸ்காரங்களிலிருந்து வருபவை.
நாம் இன்புற்று இருக்க ஏதாவது புறப்பொருள் தேவை என்று நம்மை நம்பச் செய்கின்ற எண்ணங்கள் அனைத்துமே நிறைநிலையை அடைவதற்குத் தடையாக உள்ளவை. புருஷன் இயல்பாகவே இன்ப வடிவினன். நன்மை வடிவினன்; பழைய சம்ஸ்காரங்கள் இந்த அறிவை மறைத்துள்ளன. சம்ஸ்காரங்கள் செயல்பட்டு ஓய வேண்டும்.
27. ஹானமேஷாம் க்லேசவதுக்தம்
முன்னர் கூறியதுபோல் (2.10) அறியாமையையும் அகங்காரத்தையும் அழிக்கும் முறையாலேயே இவற்றையும் அழிக்கலாம்.
28. ப்ரஸங்க்யானேப்ய குஸீதஸ்ய ஸர்வதா விவேக க்யாதேர் தர்ம மேக ஸமாதி
தத்துவங்களின் உண்மைவிவேக அறிவுநிலையை அடைந்தபின், அதன் பலன்களைத் தியாகம் செய்பவனுக்குப் பரிபூரண விவேகத்தின் பயனாக தர்மமேகம் என்ற சமாதி உண்டாகிறது.
விவேகத்தின் இந்த நிலையை அடையும்போது முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட சக்திகள் எல்லாம் யோகியை அடைகின்றன. உண்மையான யோகி அவற்றை ஒதுக்கித் தள்ளுகிறான். அப்போது அவனுக்கு தர்மமேகம் என்ற புதுமையான சிறந்த ஒளி வந்து சேர்கிறது உலக வரலாற்றில் கூறப்பட்ட தீர்க்கதரிசிகள் அனைவரும் இதனை அடைந்தவர்கள். அறிவிற்கு ஆதாரம் அனைத்தையும் அவர்கள் தங்களுக்கு உள்ளேயே கண்டனர். மெய்ப்பொருள் அவர்களுக்கு உண்மையாயிற்று. சித்திகளைப் பற்றிய வீண் பெருமைகளை அவர்கள் விட்டுவிட்டதால் சாந்தியும் அமைதியும் முழுத் தூய்மையும் அவர்களது இயல்பாகியது.
29. தத் க்லேச கர்ம நிவ்ருத்தி
அதிலிருந்து துன்பமும் செயல்களும் நீங்குகின்றன.
அந்த தர்மமேக நிலை வந்துவிட்ட யோகிக்கு வீழ்ச்சி அடைவோம் என்ற அச்சம் வராது. எதுவும் அவனைக் கீழே இழுக்க முடியாது. அவனுக்குத் தீமை வராது. துன்பமும் இல்லை.
30. ததா ஸர்வாவரணமலாபேதஸ்ய ஜ்ஞான ஸ்யானந்த்யாஜ் ஜ்ஞேயமல்பம்
அப்பொழுது மறைப்புகளும் மலினங்களும் நீங்கிவிடுவதால், அறிவு எல்லையற்றதாகி, அறியப்படும் பொருள் சிறியதாகிறது.
திரைகள் நீங்குகின்றன, அறிவு மட்டும் இருக்கிறது. பவுத்த சாஸ்திரங்களுள் ஒன்று, புத்தர் (அது ஒரு நிலையின் பெயர்) என்பதை எல்லையற்ற அறிவு, ஆகாசத்தைப் போல் எல்லையற்றது என்று விளக்குகிறது. ஏசு அந்த நிலையை அடைந்துதான் கிறிஸ்து ஆனார். நீங்கள் அனைவரும் அந்த நிலையை அடைய முடியும். அறிவு எல்லையற்றதாகும்போது அறியப்படும் பொருள் சிறியது ஆகிறது. முழு பிரபஞ்சமும் அதிலுள்ள அறியப்படும் பொருட்களான அனைத்தும் சேர்ந்தாலும் புருஷனின் முன்னிலையில் அவை ஒன்றுமே இல்லை. அறியப்படும் பொருள் எல்லையற்றுத் தோன்றுவதால் சாதாரண மனிதன் தன்னைச் சிறியவனாக எண்ணுகிறான்.
31. தத க்ருதார்த்தானாம் பரிணாமக்ரம ஸமாப்திர் குணானாம்
குணங்கள் குறிக்கோளை அடையும்போது அவற்றின் பரிணாமக் கிரமமும் முற்றுப் பெறுகிறது.
இனம்தோறும் மாறுதலடைகின்ற குண வேறுபாடுகள் அனைத்தும் அப்போது நிரந்தரமாக நீங்கிவிடுகின்றன.
32. க்ஷணப்ரதியோகீ பரிணாமாபராந்த நிர்க்ராஹ்ய க்ரம
கிரமம் ஒவ்வொரு கணநேரங்களுடன் தொடர்புடையதும் ஒரு தொடரின் முடிவில் காணப்படுவதும் ஆகும்.
பதஞ்சலி முனிவர், கிரமம் என்பதை ஒவ்வொரு கணத்திலும் ஏற்படுகின்ற மாறுபாடுகள் என்று குறிப்பிடுகிறார். சிந்திக்கும் போது பல கணங்கள் கழிக்கின்றன. கணந்தோறும் கருத்துக்களும் மாறுகின்றன. ஆனால் சிந்தித்து முடித்தபிறகே இந்த மாற்றங்களை அறிகிறோம். இதுவே கிரமம். எங்கும் நிறைந்திருக்கின்ற நிலையை அடைந்த மனத்திற்குக் கிரமம் என்பது இல்லை. அதற்கு எல்லாமே நிகழ்காலம்தான். நிகழ்காலம் மட்டுமே அதற்கு இருக்கிறது, இறந்தகாலமும் எதிர்காலமும் அகல்கின்றன. அவன் முன்னர் காலம் நின்றுவிடுகிறது. அறிவு அனைத்தும் ஒரு கணத்துள் அவனுடையதாகிறது. மின்னல்போல் எல்லா அறிவும் அவனுள் உதிக்கிறது.
33. புருஷார்த்த சூன்யானாம் குணானாம் ப்ரதிப்ரஸவ
கைவல்யம் ஸ்வரூப ப்ரதிஷ்டா வா சிதி சக்தேரிதி
எந்த நோக்கமும் இன்றி, புருஷனுக்காக வேலை செய்ய வேண்டுமென்ற சிந்தனையும் நீங்கப்பெற்று குணங்கள் படிப்படியாக மேலே போய் ஒடுங்கிவிடுவது கைவல்யம்; அல்லது அறிவு வடிவான புருஷன் தன் சொந்த இயல்பில் நிலைபெறுவது கைவல்யம் எனப்படும்.
இயற்கையின் பணி முடிந்துவிட்டது செவிலித்தாய் போன்று சுயநலமற்ற பணியை மேற்கொண்ட இயற்கையின் பணி முடிந்துவிட்டது. அவள் தன் உண்மை இயல்பை மறந்த ஆன்மாவை அழைத்துச் சென்று பல காட்சிகளைக் காட்டி, பல அனுபவங்களைப் பெறச் செய்து, அவனைப் பல்வேறு உடல்கள் வழியாக உயரஉயர இதமாக அழைத்துச் செல்கிறாள். இறுதியாக அவன் இழந்த மகிமையைத் திரும்பப் பெறுகிறான், தனது சொந்த இயல்பை உணர்கிறான். பின்பு, அந்த அன்புத்தாய் தான் வந்த வழியே திரும்பிச் சென்று, வாழ்க்கைப் பாலைவனத்தில் திக்குத் தெரியாமல் அல்லல்படும் மற்ற உயிர்களை முன்னேறச் செய்கிறாள். இவ்வாறு ஆரம்பமும் முடிவும் இன்றி இடைவிடாது உழைக்கிறாள். இன்பம், துன்பம், நன்மை, தீமை இவற்றினூடே எண்ணற்ற உயிர்கள் ஆறு போன்று நிறைநிலை, ஆன்ம அனுபூதி என்ற கடலுள் போய்க் கொண்டிருக்கின்றன.
தங்கள் உண்மை இயல்பை எய்தியவர்கள் அனைவருக்கும் மாட்சிமை உண்டாகுக! அவர்களது அருள் நிறைந்த ஆசிகளை நாம் அனைவரும் பெறுவோமாக!
Copyright © 2020 hindumatham.in - All Rights Reserved.