இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்இந்துமதத்தின் தத்துவங்கள்

Contact Us

SWAMI VIDYANANDA

please join our whatsapp group

Message us on WhatsApp

hindumatham.in

SWAMI VIDYANANDA TAMIL, Pulluvilai Road, Pulluvilai, Tamil Nadu 629601, India

97893 74109 vidyanandaswami@gmail.com

எனது வாழ்க்கை வரலாறு

சிறுவயது அனுவங்கள் - பாகம்-1

கலைச்செல்வன் என்பது எனது பெயர். சொந்த ஊர் கன்னியாகுமரி பக்கத்தில் உள்ளது. தற்போதும் நான் அதே ஊரில்தான் வசித்துவருகிறேன் என்பது மகிழ்ச்சியான தகவல்

-

சிறுவயதில் மற்றவர்கள் போல் இருந்தாலும் வளரவளர கலைகள்மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. தனிமையில் சென்று ஓவியம் வரைதல், கதை எழுதுதல்,டைரி எழுதுவது போன்ற பழக்கம் உண்டு.

இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் பிறக்கின்றன,சில காலம் வாழ்கின்றன,அதன் பிறகு இறந்துவிடுகின்றன. வாழ்க்கை என்பது இவ்வளவுதானா? நாம் இறந்தபின் எதுவுமே இல்லாமல் சூன்யமாகிவிடுவோமா போன்ற கேள்விகள் எனது மிகச்சிறிய வயது முதலே தோன்ற ஆரம்பித்துவிட்டன. வாழ்க்கையில் சில காலம் வாழ்ந்த பிறகு இறந்துவிடுவதுதான் நமது லட்சியம் என்றால் இப்போது ஏன் வாழவேண்டும்? இந்த உலகில் ஏன் துன்பப்படவேண்டும்?அதைவிட இப்போதே இறந்துவிடுவது மேல் என்று தோன்றும். 

-

18 வயது வந்தபிறகு பல கேள்விகள் வரத்தொடங்கின.

அதன் பிறகு பல்வேறு நூல்களை படிக்க ஆரம்பித்தேன். முக்தி என்ற ஒரு கருத்தை பற்றி தெரிந்துகொண்டேன்.முக்தி அடைபவர்கள் இறப்பதில்லை,அவர்கள் காலத்தை கடந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.முக்தியை அடைய வேண்டுமானால் இந்த உலகவாழ்வை துறந்து செல்ல வேண்டும் என்று அந்த நூல்களில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனது 19 வது வயதில் இந்த உலகத்தை விட்டுவிட்டு காடுகளில் சென்று தவவாழ்க்கை வாழ்வது என்று முடிவு செய்து கொண்டேன்.எங்கே செல்லாம் என்ற சிந்தனை எப்போதும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. 

-

அதன் பிறகு தான் சுவாமி விவேகானந்தரின் புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது சொற்பொழிவுகளில் கர்மயோகம் என்னை மிகவும் கவர்ந்தது. எனது மனதையும் அது மாற்றியது. அதில் நாம் மட்டும் முக்தி அடைவதைவிட மற்றவர்களும் முக்தி அடைவதற்காக பாடுபட வேண்டும். காடுகளில் மலைகளில் சென்று தவவாழ்க்கை வாழ்பவர்கள் மீண்டும் இந்த உலகத்திற்கு திரும்புவதில்லை. ஆனால் மக்களோடு மக்களாக வாழ்ந்து தனது முக்திக்காகவும் பிறரது முக்திக்காகவும் உழைப்பவன் உயர்ந்தவன். அவ்வாறு சொந்த முக்தியை மட்டும் கவனித்துக்கொண்டு உலகை துறந்து காட்டிற்கு செல்பவன் சுயநலவாதி என்று குறிப்பிட்டிருந்தார். இது எனது முடிவை மொத்தமாக மாற்றியது.

ஆனாலும் சொந்த முக்தி அடைந்த ஒருவன்தானே பிறரது முக்திக்காக பாடுபட முடியும்? நமது முக்திக்காக என்ன செய்வது என்ற எண்ணத்தில் ஆழ்ந்திருந்தபோது தான் ஸ்ரீராமகிருஷ்ணரின் புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறு வயதிலிருந்தே எங்கள் வீட்டிற்கு ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம் புத்தகம் வருவதுண்டு. அதில் வரும் சில கதைகளை படித்திருக்கிறேன். ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தை பார்த்திருக்கிறேன். ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடன் தான் விவேகானந்தர் என்பது தெரியாது. அன்னை சாரதாதேவி யாரோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதன் பிறகு தான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையும் உபதேசங்களும் படிக்க தொடங்கினேன். எனது 18 வயதில் நூல்நிலையத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். நூல்நிலையத்திலிருந்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை 3 புத்தகங்கள் வீதம் படிப்பதில் நேரத்தை செலவிட்டேன்.தினமும் 12 மணிநேரம் புத்தகங்களை படிப்பதிலேயே கழிந்தது. இவ்வாறு சுமார் 300 புத்தகங்கள் வரை ஒரு வருடத்தில் படித்துவிட்டேன்.அப்போதெல்லாம் ஏற்படாத ஈர்ப்பு ஸ்ரீராமகிருஷ்ணரின் புத்தகங்களை படித்த பிறகு அவர்மீது எனக்கு ஏற்பட்டது. எனவே இவர்தான் எனது குருவாக இருக்க முடியும் என்ற தெளிவு ஏற்பட்டது. 

-

ஸ்ரீராமகிருஷ்ண மடம் என்ற ஒன்று இருக்கிறது,அவர்கள் அங்கே துறவிகள் ஸ்ரீராமகிருஷ்ணரை குருவாக ஏற்று வாழ்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு எனது 20வது வயதில் துறவியாகும் எண்ணத்தில் அங்கு போய் சேர்ந்தேன். முதல் முறையாக அப்போது தான் மடத்தை பார்த்தேன்.அங்குள்ள துறவிகள் நான் எதிர்பார்த்தபடி இல்லை. மிகவும் பரபரப்பாக இருந்தார்கள். யாரை பற்றியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. குருவை சந்திக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டேன். குருவா? அப்படி யாரும் இங்கு இல்லை என்று கூறிவிட்டார்கள்.பெரியரை பார்க்க வேண்டுமானால் இரண்டு நாள் கழித்து வாருங்கள் என்று ஆங்கிலத்தில் கூறினார்கள்.அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. இந்த நிகழ்வு எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் தவறான இடத்திற்கு வந்துவிட்டதைபோல உணர்ந்தேன் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டேன்

--

நான் ஏற்கனவே மெக்கானிக்ல் துறையில் டிப்ளமோ படித்திருந்தேன்.ஆகவே சென்னையில் ஒரு கம்பெனியில் பணிபுரிய துவங்கினேன். அந்த கம்பெனியில் என்னுடன் பணிபுரிந்தவர்கள் என்னை சாமியார் என்றே அழைக்க தொடங்கிவிட்டார்கள். அந்த கம்பெனியில் புதிதாக ஒருவர் சேர்ந்திருந்தார்.அவர் என்னை பற்றி கேள்விப்பட்டு என்னிடம் பேச வந்தார். ராமகிருஷ்ண மடத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டவர் அவர் என்பதை தெரிவித்தார். அவர் மீண்டும் என்னை மடத்திற்கு அழைத்து சென்றார். அங்குள்ள சில துறவிகளிடம் அறிமுகப்படுத்திவைத்தார். அதன்பிறகு சுவாமி விவேகானந்தரின் இளைஞர் அமைப்பில் சேர்ந்தேன். வாரம் இரண்டு நாட்கள் அங்கே பணிபுரிவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு இரண்டு ஆண்டுகள் மடத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

-

image74

பாகம்-2

துறவு வாழ்க்கைக்கான ஆயத்தங்கள்

இந்த நாட்களில் துறவியாகவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.ஆனால் 22 வயதிற்கு முன்பு மடத்தில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் என்று துறவிகள் சிலர் கூறினார்கள்.ஆகவே 2 ஆண்டுகள் அங்கே தன்னார்வ தொண்டராக இருந்தேன். விவேகானந்தரின் இளைஞர் அமைப்பு மூலமாக பல பணிகளை செய்து வந்தோம். ஒரு கால கட்டத்தில் நான் பணிபுரிந்த கம்பெனி நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்ததால் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. பணியிலுள்ள அனைவரும் வேறு வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. வேறு வேலைக்கு ஏற்பாடு நடந்தது. முடிவில் மலேசியாவில் ஒரு பணி வாய்ப்பு வந்தது.3 ஆண்டுகள் அங்கே தங்கியிருக்க வேண்டும் என்ற ஒப்பந்த்திலும் கையெழுத்திட்டுவிட்டேன். இன்னும் 

ஒரு சில மாதத்தில் மலேசியா செல்ல வேண்டும் என்ற நிலை. இந்த காலகட்டத்தில் சென்னை மடத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் புதிய கோவில் பணிகள் நிறைவுற்று,கும்பாபிஷேகம் நடக்க இருந்தது. அதில் எனக்கு முக்கியமான பணி ஒதுக்கப்பட்டிருந்தது. 

-

வேறு வேலை இல்லை. கையில் பணம் இல்லை. பட்டினியை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆகவே சென்னையில் தங்கியிருக்க முடியாமல் சொந்த ஊர் திரும்பினேன். பல்வேறு இக்கட்டான சூழல் காரணமாக கும்பாபிஷேகத்திற்கு செல்ல முடியவில்லை.

--

மனரீதியாக இது என்னை மிகவும் பாதித்தது. ஒரு பக்கம் வெளிநாடு செல்ல வேண்டிய சூழல், இன்னொரு பக்கம் மடத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டநிலை. வெளிநாடு சென்றால் துறவியாக வாழ முடியாது என்ற எண்ணம் இருந்தது. துறவியாக முடியாவிட்டால் முக்தி கிடைக்காது. இத்தனை ஆண்டுகள் பாடுபட்ட எல்லாம் முடிந்துவிடும். மிகவும் தீவிரமான மனப்போராட்டத்திற்கு பிறகு முடிவில் துறவியாக வேண்டும் என்ற எண்ணத்தில் சுவாமி கௌதமானந்தரை பார்த்தேன். ஏற்கனவே என்னை பலமுறை அவர் பார்த்திருந்ததால் சந்தோசமாக மடத்தில் சேர்த்துக்கொண்டார். வாழ்க்கையில் இருந்த எல்லா கவலைகளும் எங்கோ மறைந்துபோய்விட்டது. இனிமேல் எந்த துன்பமும் இல்லை என்று உணர்ந்தேன். சொர்க்கம் என்ற ஒன்று இருந்தால் அது மடத்தில் சேர்ந்த காலமாகதான் இருக்கும். 

-

வீட்டில் இருப்பவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? வெளிநாடு செல்ல இருந்த ஒருவன் திடீரென மடத்தில் சேர்ந்து துறவியாகிவிட்டால் எந்த பெற்றோர்தான் சம்மதிப்பார்கள்? இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்தது எதற்காக துறவியாகி மற்றவர்களுக்கு சேவை செய்யவா? இயல்பாகவே எல்லா பெற்றோரும் இப்படித்தான் நினைப்பார்கள். ஆகவே மடத்திற்கு வந்து பெரிய கலவரைத்தையே உண்டுபண்ணிவிட்டார்கள். அதற்கு மேலும் என்னை மடத்தில் வைத்திருந்தால் நல்லதல்ல என்ற எண்ணத்தில் கௌதமானந்தர் உன் வீட்டில் உள்ளவர்களை சமாதானம் செய்து விட்டு வா என்று அனுப்பி வைத்தார். மிகவும் வேதனை. மீண்டும் நரக வாழ்க்கையா?

-

ஸ்ரீராமகிருஷ்ணர் கைவிடவில்லை. வீட்டிற்கு சென்ற பிறகு அவர்கள் பல்வேறு ஜோசியக்காரர்களிடம் என் ஜாதகத்தை காண்டினார்கள். அதில் அவன் துறவியாகதான் செல்வான் அவனை தடுக்க கூடாது. மடத்தில் இருப்பது அவனுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் நல்லது என்று கூறிவிட்டார்கள். கோவில்களிலும் பூ போட்டு பார்த்தார்கள்.அனைத்து கோவில் சாமிகளும் நான் துறவியாக வாழவேண்டும் என்றே கூறிவிட்டன. வேறு வழியில்லாமல் பாதி மனத்துடன் அவர்கள் என்னை மீண்டும் மடத்தில் அனுப்பி வைக்க சம்மதித்தார்கள்.

-

இவ்வாறு எனது துறவு வாழ்க்கை பல இன்னல்களுக்கு பிறகு ஆரம்பமானது. அப்போது எனக்கு வயது 22.

-

மடத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது? இனிமையாக இருந்தது. சுதந்திரமாக இருந்தது. சுவாமி விவேகானந்தர் ஏற்படுத்திவைத்த சட்டதிட்டங்கள் அங்கு பின்பற்றப்படுகின்றன. கிச்சன் இன்சார்ஜ், ஆடிட்டோரியம் இன்சார்ஜ் என்று முக்கியமான பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. இந்த நாட்களில்தான் நான் கம்பியூட்டரில் ஆடியோ,வீடியோ,போட்டோ எடிட்டிங் மற்றும் சில அனிமேசன் தொழில்நுட்பமும்,கம்பியூட்டர் சர்வீஸ் வேலைகளும் கற்றுக்கொண்டேன்.பின்நாட்களில் இதுதான் என்னை வாழவைத்தது.

-

இந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு பணிகள் காரணமாக ஓய்வு என்பதே இல்லாமல் இருந்தது. மூன்று ஆண்டுகளும் வேலை வேலை வேலை தியானமோ,ஜபமோ பழகவில்லை என்பதைவிட அவைகளில் ஆர்வம் ஏற்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். 

-

சென்னை ராமகிருஷ்ண மடத்தில் மூன்று ஆண்டுகள் கழிந்தது. இனிமையான மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 2 ஆண்டுகள் பயிற்சிக்காக கல்கத்தா ராமகிருஷ்ண மடத்திற்கு அனுப்பிவைத்தார்கள்.

-

கல்கத்தா பேலூர் மடத்தில் அருமையான ஓய்வு கிடைத்தது. தியானம் புரிவதற்குரிய மனநிலை கிடைத்தது.முழுவதும் ஜபம்,தியானம்,படிப்பு என்று முழுக்கமுழுக்க ஒரு ஆன்மீகமயமாகவே இருந்தது. சில நாட்களில் யாருடனும் பேசுவதில் விருப்பம் இருக்காது,சில நாட்கள் தியானத்திலிருந்து எழுந்துவர மனம் இருக்காது. மனத்தில் எப்போதும் ஜபம் ஓடிக்கொண்டே இருக்கும். ஒர் ஆனந்த அலையில் மிதந்துகொண்டிருந்த உணர்வு ஏற்பட்டது.

-

இந்த நாட்களில் எனக்கு சில ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டன.அப்போது டைரி எழுதும் பழக்கம் இருந்தது.அந்த நாட்களில் எனது மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள்.எனக்கு கிடைத்த ஆன்மீக அனுபவங்கள் போன்றவற்றை என்னுடைய டைரியில் குறித்துவைத்திருக்கிறேன். சில கசப்பான அனுபவங்களும் கிடைத்தன.அவைகள் மேலும்மேலும் ஆன்மீகத்தை நோக்கி செல்ல தூண்டுசக்தியாக அமைந்தது. ஒரு நாள் சமாதிநிலை அனுபவம் கிடைத்தது. ஸ்ரீராமகிருஷ்ணரின் கோவிலில் மாலை ஆரத்தி நடந்துகொண்டிருக்கும்போது அந்த அனுபவம் ஏற்பட்டது. உடல் மிகச்சிறியதாக சுருங்கி கடைசியில் ஒரு கடுகுபோல் சுருங்கிவிட்டது.அதே நேரத்தில் நான் விரிந்துவிரிந்து எல்லையற்றவனாக விரிந்துவிட்டேன். சிறிது நேரம் கழிந்தபிறகு மீண்டும் சாதாரண நிலைக்கு வந்தேன். மிகவும் ஆனந்தமான அந்த அனுபவத்தில் மிதந்துகொண்டிருப்பது போல் தோன்றியது. அந்த அனுபவம் ஏற்பட்டபிறகு என்னால் பேசவே முடியாதநிலை வந்தது. யாருடனும் பேச விரும்பவில்லை. அது மட்டுமல்ல மனமே வேலை செய்யவில்லை. சிந்தனை வந்தால்தானே பேசுவதற்கு. சிந்தனையே வரவில்லையே. உடல் ஒரு எந்திரம்போல செயல்பட்டது. இந்த நாட்களில் மற்றவர்கள் என்னிடம் பேசுவதையோ பழகுவதையோ தவிரத்துவிட்டார்கள் .நான் தனிநபராகவே இருக்க வேண்டியிருந்தது. 

-

மற்றவர்கள் கண்களுக்கு நான் சாதாரணமானவனாக தெரியவில்லை. சிலர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று கருதினார்கள். சிலர் உன்னிடம் தெய்வீகம் வளர்ந்துகொண்டிருக்கிறது.உனது அருகில் வரவே பயமாக இருக்கிறது என்றார்கள். மொத்தத்தில் நான் தனிமையில் விடப்பட்டேன்.இந்த அனுபவத்தை யாராவது ஒருவரிடம் ஏன் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்று தோன்றியது. இதுதான் நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு. அதே நேரத்தில் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய நல்லவிஷயமும் இதுதான். ஏனென்றால் இன்று உயிரோடு இருப்பதற்கு காரணம் இந்த நிகழ்வு தான். ஆன்மீக விஷயங்களை குருவைத்தவிர மற்றவர்களிடம் தெரிவிக்கக்கூடாது என்பது நியதி.இது எனக்கும் தெரியும்.ஆனால் அந்த நேரத்தில் அதை மறந்துவிட்டேன். எனக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்களை எனக்கு நம்பிக்கைக்குரிய இன்னொரு துறவியிடம் கூறிவிட்டேன். அதை அவரால் நம்ப முடியவில்லை.

-

அந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலும் அகமுகமாகவே இருக்கவேண்டியிருந்த்து. தினசரி காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை உபநிடதம், கீதை,இந்துமத்த்தின் பல நூல்கள் கற்றுத்தரப்பட்டன.வகுப்புகள் ஆங்கிலத்தில் நடக்கும். எனக்கு ஆங்கிலம் குறைவாகவே தெரியும்.பேசமுடியும் ஆனால் எழுதமுடியாது,படிக்க முடியாது, சமஸ்கிருதமும் தெரியாது. கீதை,உபநிடதங்கள் போன்றவற்றை தமிழின் உதவியால்தான் படித்தேன்.

-

அந்த 2 ஆண்டுகளில் அதிகமாக எழுதுவதற்கு வாய்ப்பு கிடைத்த்து. அந்த நாட்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் மனப்போராட்டம் போன்றவற்றை குறித்துவைத்திருக்கிறேன்.அவைகளிலிருந்து சிலவற்றை விளக்கலாம் என நினைக்கிறேன்.

-

பேலூர் மடத்தில் தங்கி இருந்த காலத்தில் ஆன்மீகம் தொடர்பான கருத்துக்களை எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தேன். சுமார் 25 சிறிய நோட்டுகளில் எழுதி வைத்திருந்தேன். ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அது தொடர்பாக சுவாமி விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை பல நூல்களிலிருந்து திரட்டி எழுதிவைப்பது போன்றவை அதில் இருக்கும். அந்த நாட்களில் எனது மனநிலையை நோட்டுகளில் எழுதி வைத்திருந்தேன் அதிலிருந்து சில பகுதிகள்

-

image75

பாகம்-3

மடத்தில் ஏற்பட்ட அனுபவங்கள்

அக்டோபர் 14-2004- நான் பேலூர் மடம் வந்த பிறகு கலந்துகொண்ட முதல் எரியூட்டல். அதாவது இறந்த துறவிகளை எரிக்கும் நிகழ்வு. கங்கை கரையில் துறவியின் உடலை எரியூட்டும் நிகழ்வு நடக்கும். அந்த சமயத்தில் 

அதன் அருகில் அமர்ந்து பக்தி பாடல்கள் பாடுவார்கள். நான் தியானத்தில் அமர்ந்திருந்தேன். எனது மனநிலை மிகவும் உயர்வாக இருந்தது. யாரிடமும் எதுவும் பேசவோ உடலை அசைக்கவோ முடியவில்லை. சுமார் ஒன்றரை மணிநேரம் இப்படியே கழிந்தது.

-

அக்டோபர் 20-2004 இன்று முழுவதும் வெறுமையாக இருந்தது. எனக்கென்று யாரும் இல்லை. எந்தப்பிடிப்பும் இல்லாததுபோல் உணர்ந்தேன்.ஸ்ரீராமகிருஷ்ணரே எனக்கு எல்லாமாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தித்தேன்.அவரை மட்டுமே நேசிக்க வேண்டும் என நினைத்தேன்

-

அக்டோபர் 21-2004- ஒவ்வொருவரும் அவரவர் எந்த நிலையில் இருக்கிறார்களோ அந்த நிலையிலேயே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இறைவன் விருப்பபடியே அவர்கள் நடக்கிறார்கள். இறைவன் நினைத்தால் மண்ணை பொன்னாக்குவார். பொன்னை மண்ணாக்குவார். வித்தியாசமான பல குணங்கள் மூலம்

இறைவனே வேலை செய்கிறார். அதனால் ஒவ்வொருவரையும் அவரவர் எந்த எந்த நிலையில் இருக்கிறார்களோ அந்த நிலையிலேயே ஏற்றுக்கொள்ள வேண்டும்

-

அக்டோபர் 22-2004- பிறரிடம் ஏன் குற்றம் காணவேண்டும்? அவரவர் பாத்திரத்தை அவரவர் நடிக்கின்றனர்

-

நவம்பர் 17-2004- இன்று மாலை ஆரத்தி வேளையில் மனம் மிகவும் உயர்ந்த நிலைக்கு சென்றது. ஒரேயடியாக உடலைவிட்டு சென்றுவிடுவேனோ என்று நினைத்தேன். பலபேர் பக்கத்தில் உட்கார்ந்திருந்ததால் ஒரேயடியாக மேலே சென்ற மனம் மெதுவாக சாதாரண நிலைக்கு வந்தது. இதேபோன்று மாலை ஆரத்தி வேளையில் பல நாட்கள் உணர்கிறேன். இன்று மிகஅதிகம்

-

நவம்பர் 28-2004 மனம் படிப்படியாக ராமகிருஷ்ணரின் பாதங்களில் சரணடைந்துகொண்டிருக்கிறது. நடையில்,பேச்சில்,பார்வையில் கம்பீரம் தெரிகிறது. என்னைப் பார்ப்பவர்கள் பயந்து பின்வாங்குவதுபோல் எனக்கு தோன்றுகிறது. அதே நேரத்தில் பலபேரை பார்க்கவும் விருப்பம் இல்லை.

-

நவம்பர் 30-2004 ஆரத்தி வேளையில் மனம் மிக உயர்ந்த தளத்திற்கு சென்றது. சுமார் 20 நிமிடம் உடல் உணர்வு இல்லை. அந்தநிலையில் உடல் கரைந்துபோனதுபோல் போய்விட்டது. நான் உணர்வு இருந்தது.

-

அந்த நாட்களில் ஏற்பட்ட அனுபவங்களை இவ்வாறு டைரியில் குறித்து வைத்திருக்கிறேன். ஆனால் இந்த அனுபவங்கள் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. எனது அனுபவங்களை இன்னொருவரிடம் பகிர்ந்துகொண்டபின் இந்த அனுபவங்கள் கிடைக்கவில்லை. தடை ஏற்பட்டுவிட்டது. அதுவரை சொர்க்கம் போன்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு அதன்பிறகு நரகம் போன்ற வாழ்க்கை வாழ்வதாக தோன்றியது. 

-

ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டிருப்பவர்கள் அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து. அன்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்துவிடுகிறார்கள்.ஆன்மீக வாழ்வில் அடியெடுத்து வைக்கும் போது தாய்,தந்தை,உறவினர்களிடமிருந்து தனிமைப்பட ஆரம்பிக்கிறார்கள்.இவர்கள் ஆன்மீக வாழ்வின் தடைகள் என்று நினைக்கிறார்கள். சாதாரண மனிதனின் உணர்ச்சிகளை மதிக்க தவறிவிடுகிறார்கள்.இது ஆன்மீக வாழ்வில் ஒரு தடை. ஏனென்றால் அன்பும் அறிவும் ஒருங்கிணைந்து சென்றால்தான் இறைக்காட்சி கிடைக்கும். பொதுவாக ஆன்மீக வாழ்வில் ஈடுபடுபவர்கள் சொந்த,பந்தங்கள்,உறவினர்கள்.நண்பர்கள் என்று அனைவரிடமிருந்தும் விலக நேர்கிறது.படிப்படியாக இந்த விரிசல் அதிகமாகி கடைசியில் தனிமைப்பட்டுவிடுகிறார்கள். அவரை யாரும் சந்திக்க விரும்பமாட்டார்கள்.இவரும் யாரையும் சந்திக்க விரும்ப மாட்டார். முற்றிலும் தனிமையான நிலை. இது நரக வாழ்க்கை போன்றதாக இருக்கும்.

-

உணவு,உடை,உறைவிடம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு நாம் மற்றவர்களை சார்ந்துதான் வாழவேண்டியுள்ளது. உடலுக்கு நோய் வந்தால் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்துதான் வாழ வேண்டியுள்ளது. ஆனால் இவ்வாறு தனிமையில் பழக்கப்பட்டவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் இருப்பதாலும்,அவர்கள் இவருக்கு எந்த உதவியும் செய்ய முன்வராமல் இருப்பதாலும் மனத்தில் பெரிய போட்டங்கள் எழும். சில வேளைகளில் மனநிலைகூட பாதிக்கப்படலாம்.சிலர் தற்கொலை செய்து கொண்டு இறந்தும் போகலாம்.

-

துறவு வாழ்க்கை என்பது ஆரம்பிக்கும் போது இவ்வாறுதான் துவங்கும். யார்மீதும் பாசம் இருக்காது. எப்படி முக்திபெறுவது என்ற எண்ணம் மட்டுமே இருக்கும்.இதை ஏன் இங்கே தெரிவிக்கிறேன் என்றால் இப்படிப்பட்ட மனநிலைதான் எனக்கு அந்த காலகட்டத்தில் உருவாகத்தொடங்கியிருந்தது. முற்றிலும் தனிமைப்பட்ட நிலையை உணர்ந்தேன். மனத்தில் யாரை குறித்தும் நான் கவலைப்படாததால் யாரும் என்னைக்குறித்து கவலைப்படவில்லை. யார் இந்த உலகத்தை ஒதுக்குகிறார்களோ,அவர்களை இந்த உலகம் ஒதுக்கும். நம்மிடம் அளவுக்கு அதிகமாக அறிவு இருந்து என்ன பயன்? இறைவனை நேசிப்பதாக நினைத்துக்கொண்டு,நம்மை சுற்றியிருப்பவர்களை நேசிக்க மறந்துவிடுகிறோம். இறைவன்தான் நம்மை சுற்றியுள்ளவர்களிலும் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள தவறிவிடுகிறோம்.

-

காடுகளுக்கோ மலைகளுக்கோ சென்று தவவாழ்க்கை வாழ்வதால் நமக்கு இறைக்காட்சி கிடைத்துவிடும் என்று நினைக்கிறோம். இது தவறு. இங்கே நமக்கு எப்படிப்பட்ட மனநிலை இருக்கிறதோ,அப்படிப்பட்ட மனநிலைதான் காடுகளுக்கு சென்ற பிறகும் இருக்கும்.ஆகவே இங்கேயே இப்போதே நமது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் . ஒருவேளை குகைகளுக்கு சென்று தவம் புரியும் போது இறைவனே அனைத்து உயிர்களாகவும் ஆகியிருக்கிறார் என்ற ஞானம் தான் அப்போது ஏற்படும். அப்போது தவறு செய்துவிட்டோமே.நம்மை சுற்றி வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவரும் இறைவன் அல்லவா அவர்களை மதிக்க தவறிவிட்டோமே என்று தோன்றும். ஆனால் அவர்களால் மீண்டும் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி வர முடியாது.

-

முற்றிலும் தனிமையான வாழ்க்கை வாழ்ந்த பிறகு எனது மனத்தில் மாற்றங்கள் வர ஆரம்பித்தன.தனிமை நம்மை மரணத்தை நோக்கிதான் அழைத்து செல்லும். நாம் வாழவேண்டுமானால் மற்றவர்களை அவர்களது மனநிலைக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். ஆன்மீகத்தை பற்றி அறியாதவனுடன் அவனது மனநிலையில் பழக வேண்டும். அவன் நம்மை ஏற்றுக்கொள்ளும்படி நடந்துகொள்ள வேண்டும். அதற்காக தீயவனுடன் பழகி தீயவற்றை ஆதரிக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. ஒவ்வொருவரின் மனநிலைகளையும் புரிந்து அவர்களுடன் அந்த மனநிலையில் பழகினால் நம்மை நோக்கி மற்றவர்கள் வருவார்கள். நம்முடன் பேசுவதில் ஆனந்தம் காண்பார்கள்.

-

இந்த மனநிலை ஏற்பட்டபிறகு என்னை நோக்கி பலர் வரஆரம்பித்தார்கள். எப்போதும் என்னை சுற்றி யாராவது இருந்துகொண்டே இருந்தார்கள்.பல்வேறு வேடிக்கைகள் என்று கலகலப்பாக நாட்கள் சென்றது. இது என்ன இவரது அறையில் ஏன் அனைவரும் சென்று கூடுகிறார்கள்.இங்கிருந்து எப்போதும் சிரிப்பு சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறதே என்று பலர் வியப்படைந்தார்கள் சிலர் எரிச்சலடைந்தார்கள். எனக்கு தேவையானவற்றை கவனித்துக்கொள்ள அவர்களே முன்வருவார்கள்.அன்பு செய்ய பழகினால் அன்பு காட்ட பலர் முன்வருவார்கள் என்பது தெளிவாக புரிந்தது. இப்படியாக வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஒரு ஆனந்த சந்தையில் மத்தியில் இருந்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டது. 

-

ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை.மடத்தைவிட்டு வெளியேறவேண்டிய காலம் வந்தது. வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தகூடிய சம்பவங்கள் வந்தன...

-

இவ்வாறு பேலூர் மடத்தில் வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருந்தது. அந்த நாட்களில் ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்கள்,சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள்,இந்துமதத்தின் தத்துவங்கள் போன்றவற்றை வெளி உலகத்தில் வாழ்பவர்களுக்கு,முக்கியமாக பாமரர்களுக்கு சொல்ல வேண்டும், மடத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் அது நடக்காது என்ற எண்ணம் அடிக்கடி வந்தது. இன்னொரு பக்கம் வெளி உலகத்திற்கு செல்வது, அங்கே வாழ்வது போன்றவை கற்பனை செய்து பார்க்கவே கடினமான ஒன்றாக இருந்தது. இந்த ஐந்து வருட வாழ்க்கையில்,வெளி உலகை மொத்தமாக மறந்துவிட்டேன்.மனத்திலிருந்து அந்த எண்ணங்கள் அகன்றுவிட்டது. 

-

ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் அடிக்கடி என் மனத்தில் வந்துகொண்டே இருந்தது.அது என்னவென்றால் என் தாயின் கடைசி காலங்களில் அவருடன் வசிப்பேன் என்று மடத்திற்கு வருவதற்கு முன்பு வாக்கு கொடுத்திருந்தேன்.அவ்வாறு வாக்கு கொடுத்ததால்தான் அவர் மடத்திற்கு செல்லவே அனுமதி கொடுத்திருந்தார். இந்த ஒரு சம்பவம் மட்டும் இந்த நாட்களில் மனத்தில் இருந்து கொண்டே இருந்தது. ஒன்று கடைசி காலத்தில் அவருடன் வாழ்வது. இரண்டு மக்களிடம் சென்று ஆன்மீக கருத்துக்களை பரப்புவது. அந்த இரண்டு கருத்துக்களும் மடத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு வராது. ஏனென்றால் தாய் தந்தையை எப்போதாவது பாரத்துவருவதற்கு தடையில்லை. கடைசி நாட்களில் அவருடன் வசிப்பது என்பது மடத்தின் 

சட்டத்தை மீறியதாகும். இரண்டாவதாக மக்களோடு மக்களாக சென்று அவர்களுக்கு ஆன்மீகத்தை போதிப்பது என்பது சுவாமி விவேகானந்தர் போன்ற சிலரால் மட்டுமே முடியும். அந்த அளவு திறமை உள்ளவர்கள் யார் இருக்கிறார்கள்? இது பற்றி அந்த நாட்களில் எழுந்த சிந்தனைகளை அப்போது நோட்டில் குறித்து வைத்திருக்கிறேன். ஸ்ரீராமகிருஷ்ணரின் சான்னித்தியத்தை பேலூர் மடத்தில் நான் நன்றாக உணர்ந்திருந்ததால், அங்கு நடக்கும் சில முக்கிய செயல்கள் அவரது விருப்பப்படிதான் நடக்கின்றன என்பதில் நம்பிக்கை இருந்தது.ஆகவே எது நடந்தாலும் அது எனக்கு நல்லதற்காகத்தான் இருக்கும் என்று முடிவு செய்து கொண்டேன்.

-

இவ்வாறு ஒருபக்கம் சந்தோசமாகவும்,இன்னொரு பக்கம் எதிர்காலத்தைப்பற்றிய சிந்தனையிலும் நாட்கள் கழிந்தது. 

-

அங்கே சில கண்டிக்கத்தக்க செயல்கள் நடந்து கொண்டிருந்ததை நான் பார்க்க நேர்ந்தது.பலர் இது பற்றி என்னிடம் பேசினார்கள். இதைப்பற்றி மேலிடத்தில் தெரிவித்து இந்த சம்பங்கள் நடக்காமல் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.யாருக்கும் மேலிடத்தில் இதுபற்றி தெரிவிக்க தைரியம் இல்லை.நான் அங்கே மிக சாதாரணமானவன்,பல ஆண்டுகள் அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் துறவிகள்கூட மேலிடத்தை சேர்ந்த நிர்வாகிகளிடம் பேச பயப்படுவார்கள் அப்படியிருக்கும் போது மடத்தில் பயிற்சியில் இருக்கும் நான் எப்படி சென்று பார்ப்பது என்ற தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. சில வாரங்கள் இப்படிப்பட்ட தயக்கத்துடனே கழிந்தது.

-

image76

பாகம்-4

கடினமான காலங்கள்

கடைசியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மேலிடத்தில் உள்ள உயர்மட்ட நிர்வாகிகளிடம் இதைபற்றி பேசினேன். அவர்களும் பொறுமையாக அனைத்தையும் கேட்டார்கள். உன்னிடத்தில் ஏதவாது ஆதாரம் இருக்கிறதா என்றார்கள். பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நானும் நேரில் பார்த்திருக்கிறேன் என்றேன். இவைகளில் சம்மந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் வலுவான ஆதாரங்கள் வேண்டும். இல்லாவிட்டால் அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட செயல்கள் நடப்பது எங்களுக்கு முன்பே தெரியும். நாங்கள் சரியான ஆதாரத்திற்காக காத்திருக்கிறோம். நீ ஏதாவது வலுவான ஆதாரங்களை திட்டி கொண்டு வா. நடவடிக்கை எடுக்கலாம். அதுவரை இது பற்றி யாரிடமும் விவாதிக்கமல் அமைதியான உனது வேலையை பார் என்று அறிவுரை கூறி அனுப்பிவிட்டார்கள். இது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருந்தது. இவர்களிடமிருந்து இந்த பதிலை நான் எதிர்பார்க்கவில்லை.

-

வெளி உலகத்தில் சரியான ஆதாரம் இல்லாவிட்டால் நீதிபதி குற்றவாளியை விடுவித்துவிடுவார். அவன்தான் குற்றவாளி என்பது நீதிபதிக்கு தெரியும்.ஆனாலும் குற்றசாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரம் இல்லை என்றுகூறி விடுவித்துவிடுவார். அந்த குற்றவாளி வெளியில் சென்று மறுபடி அதேபோல் குற்ற செயல்களை செய்வான். பழையபடி பிடிபடுவான்,குற்றம் நிரூபிக்கப்படவில்லை,ஆதாரம் இல்லை என்று கூறி பழையபடி விடுவிப்பார்கள்.ஒன்று அவனாக திருந்த வேண்டும்,அல்லது இவனை போல் வேறு ஒரு குற்றவளியின் கையில் மாட்டி சாகவேண்டும். இதுதான் பொதுவாக வெளி உலகத்தில் நாம் பார்க்கிறோம். ஆதாரம் இல்லை என்ற காரணத்தினால் குற்றவாளி என்று தெரிந்தும் பலர் தப்பித்து சென்றுகொண்டே இருக்கிறார்கள்,மீண்டும் மீண்டும் குற்றம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.இதை தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை.உரிய ஆதாரங்களை திரட்டுவதில் உள்ள சிக்கல்தான் இதற்கு காரணம். நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்ற காரணத்தினால் ஆயிரக்கணக்கில் குற்றவளிகள் தப்பித்துவிடுகிறார்கள்.அந்த குற்றவாளிகளால் ஆயிரக்கணக்கில் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.

-

மக்களின் கடைசி புகலிடமாக இருப்பது நீதித்துறைதான் இந்த நீதித்துறையே இவ்வாறு செயலற்று போனால் யாரிடம் சென்று முறையிடுவது? கடவுளிடம்தான் முறையிட வேண்டும். எனக்கு குருவாகவும் எனக்கு எல்லாமாகவும் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இதுபற்றி முறையிட்டேன். அப்போது என் மனத்தில் ஒரு சிந்தனை எழுந்தது. சுவாமி கௌதமானந்தர் மிகவும் நியாயமானவர்,அநீதிகளை பொறுத்துக்கொள்ளமாட்டார் என்பது எனக்கு தெரியும். ஏனென்றால் மூன்று வருடம் அவரின் கீழ்தானே பணியாற்றியிருக்கிறேன். இப்படிப்பட்ட சம்பங்கள் அவர்முன்னால் வரும்போது, அவரே உரிய ஆதாரங்களை திரட்ட முயற்சி செய்து, உரிய குற்றவாளியை கண்டுபிடித்து அவர்மேல் நடவடிக்கை எடுப்பதை பார்த்திருக்கிறேன்.ஆகவே இங்கு நடந்துகொண்டிருக்கும் சம்பங்களை விவரித்து அவருக்கு கடிதம் எழுதினேன். அவர் பேலூர் மடத்து நிர்வாகிகளிடம் இதுபற்றி கடுமையாக பேசியிருப்பார் என்பது எனக்கு புரிந்தது. 

-

என்னை அழைத்தார்கள். உன்னிடம் கீழ்படிதல் என்ற குணம் இல்லை. சுவாமி விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா? கீழ்படிதல் குணம் இல்லாதவர்களை மடத்தைவிட்டு உடனே வெளியே அனுப்பிவிடும்படி கூறியிருக்கிறார். உனக்கு சமாதி அனுபவம் கிடைத்து என்று யாரிடமாவது சொன்னாயா என்று கேட்டார்கள்.ஆம் ஒருவரிடம் கூறினேன் என்றேன். உனக்கு தேவையான பயிற்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டது.இனிமேல் நீ இங்கிருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை.இங்கிருந்தால் உன்னையாரும் கவனித்துக்கொள்ளமாட்டார்கள்.ஆகவே வீட்டிற்கு சென்று தாய்தந்தையர்களுடன் வாழ்.தவ வாழ்க்கைக்கு செல்கிறேன் என்று கூறி ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கு செல்லாதே. உனது சொந்த ஊருக்கே செல். நீ வேண்டுமானால் புதிய மடத்தை ஆரம்பித்து உன் இஷ்டப்படி நடந்துகொள் என்றார்கள். அவர்களது இந்த முடிவு எனக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும்.இன்னொரு பக்கம் ஸ்ரீராமகிருஷ்ணரின் விருப்பம் இவ்வாறு தான் இருக்கிறது என்ற நம்பிக்கையும் இருந்ததால் என்னை தேற்றிக்கொண்டேன். ஆனால் மடத்தில் உள்ள மற்றவர்கள் இதை கேட்டு மனம் வருத்தமுற்றார்கள். புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து சொந்த ஊரை நோக்கி பயணத்தை ஆரம்பித்தேன்....

-

இங்கே ஏதோ குற்றம்,தவறு என்று எதை குறிப்பிடுகிறார் ? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அதைப்பற்றி நான் உரிய தேவை ஏற்படாமல் பேசப்போவதில்லை. தவறுகள் எல்லா காலத்திலும் எல்லா இடங்களிலும் நடந்துகொண்டேதான் இருக்கும். அவற்றை ஒரேயடியாக நீக்க முடியாது. ஒரு தவறை நீக்கினால் இன்னொன்று உதயமாகும். அதே வேளையில் அவைகளை நீக்குவதற்காக நாம் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அது தான் நம்மை வலிமையுடையவர்களாக மாற்றும். குற்றவாளிகளை தண்டிப்பதன் மூலம் அவர்களை நல்வழியில் கொண்டுவர முடியும். அவர்கள் குற்றங்களை செய்து செய்தே பாவியாகி அழிந்து போகட்டும்,நல்லவர்கள் தொடர்ந்து துன்பப்ட்டுக்கொண்டே இருக்கட்டும்.இவ்வாறு துன்பப்டுவதால் இறைவனிடம் நெருக்கம் அதிகமாகும் முக்தி விரைவில் கிடைத்துவிடும் என்று கருதுவது சரியல்ல. இது நடைமுறையில் பின்பற்றப்பட்டால் உலகத்தின் சமநிலை பாதிக்கப்படும்.

-

மடத்தைவிட்டு வெளியேறியபின் நேராக சொந்த ஊரை நோக்கி வந்தேன்.வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். நான் மடத்தைவிட்டு வெளியேறுவதற்கு சில நாட்கள் முன்பு என் தந்தை ஒரு கடிதம் எழுதியிருந்தார்.அதில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.மனக்கஷ்டம்,பல்வேறு நோய்களினால் பணக்கஷ்டம், யாரும் நிம்மதியாக இல்லை. நீ வீட்டில் வந்து சிலநாட்கள் தங்கினால் எங்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்று எழுதியிருந்தார். நான் வீட்டிற்கு சென்றபோது கடிதத்தை படித்து மனமிரங்கி வீட்டிற்கு வந்திருப்பதாக தந்தை நினைத்துக்கொண்டார். அப்போது உங்களை பார்க்க வந்தேன்,சில நாட்களில் மடத்திற்கு சென்றுவிடுவேன் என்றேன். அவர்கள் அப்போது சொன்ன வார்த்தை ஆறுதலாக இருந்தது.நீ இங்கேயே ஒரு மடத்தை ஆரம்பித்து சொந்த ஊரிலேயே இரு.யாரும் உன்னை தொந்தரவு செய்ய மாட்டார்கள். வெளியில் எங்கும் செல்லாதே என்றார்கள்.இது எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

-

ஆனால் எனது மனதில் ஆயிரம் கேள்விகள்,குழப்பங்கள்.இதற்கு பிறகு என்ன என்ற கேள்வியில் கலங்கியோயிருந்தேன்.சாதாரண மனிதர்களை பார்ப்பதோ அவர்களிடம் பேசுவதோ இயலாத ஒரு மனநிலை.அவர்களை கண்டாலே விலகி செல்வதுதான் நல்லது என்று விலகி நிற்கும் மனநிலையில் இருந்தேன். மனிதர்கள் தொடர்பு அதிகம் இல்லாத ஒரு தோட்டத்தில் ஒரு ஷெட் ஒன்று இருந்தது. அங்கே தங்கிக்கொண்டேன்.தினசரி தந்தை மூன்றுவேளையும் சாப்பாடு கொண்டு தருவார்.படிப்பு,ஆன்மீக சாதனை என்று ஒரு தவ வாழக்கையில் நாட்கள் கழிந்தது. ஆனால் மனத்தில் முன்பிருந்த நிம்மதி இல்லை. என்னிடம் பேச்சுதிறமை இல்லை. சாஸ்திரங்கள் அதிகம் படிக்கவில்லை.சமஸ்கிருதம் தெரியாது.ஆச்சார்யராக இருக்கவேண்டுமானால் திறமையானவராக இருக்க வேண்டும். நம்மிடம் அதற்கான ஒரு தகுதிகூட இல்லையே இதை வைத்துக்கொண்டு மக்களிடம் எப்படி செல்வது? அது மட்டுமல்ல யாரையும் பார்க்கவோ பழகவோ விருப்பமில்லாத மனிநிலையில் இருக்கிறேனே என்ற எண்ணம் இருந்தது.

-

சில மாதங்கள் இப்படியே கழிந்தது. அப்போது நான் வெள்ளை உடை அணிந்திருந்தேன்.பொதுவாக இவ்வாறு மடத்தைவிட்டு வெளியேறுபவர்கள் சில வருடங்களில் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் மாட்டிக்கொள்வார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். சிலர் திருமணம் செய்யாமல் வெள்ளை உடையிலேயே காலம் முழுவதும் வாழ்வார்கள்.நான் அடுத்தக்கட்ட நிகழ்வுக்கு செல்ல வேண்டும் இல்லாவிட்டால், வாழ்க்கைச் சுழலில் அகப்பட்டுக்கொள்வோம் என்ற பயம் ஏற்ப்பட்டது. ஒரு நல்ல நாளில் தலையை நானே மழித்துக்கொண்டு ஸ்ரீராமகிருஷ்ணர்,அன்னை சாரதாதேவியின் படத்திற்கு முன்பு அவர்களை குருவாக ஏற்றுக்கொண்டு.காவி உடை அணிந்து கொண்டேன்.துறவிக்குரிய தகுதி இருப்பவர் இவ்வாறு துறவியாகலாம் என படித்திருந்தேன்.பெயரை சுவாமி வித்யானந்தர் என்று வைத்துக்கொண்டேன். அதற்கு ஒரு காரணம் இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சமாதிநிலையை அடைந்த துறவி அதன்பிறகு வித்யாமாயையை சார்ந்து வாழ்வான் என்று கூறியிருக்கிறார். வித்யாமாயை என்றால் அனைத்து நல்லகுணங்களும் சேர்ந்தது.வித்யா சக்தி அவித்யா சக்தி என்று இரண்டு சக்திகள் உள்ளன. வித்யா என்றால் நல்ல சக்தி,அவித்யா என்றால் தீய சக்தி. இந்த இரண்டும் சேர்ந்தது மாயை. மாயையை ஆழ்வது இறைவன்.ஆகவே ஸ்ரீராமகிருஷ்ணர் குறிப்பிட்ட வித்யாமாயையை சேர்ந்து வித்யானந்தா என்ற பெயரை வைத்துக்கொண்டேன்.பிற்காலத்தில் பலர் குரு அல்லவா பெயரை தருவார்கள் நீங்களே உங்கள் பெயரை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டார்கள். சுவாமி விவேகானந்தர் என்ற பெயரை அவரேதான் வைத்துக்கொண்டார் என்று பதில் சொன்னேன்.சுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து துறவுக்கான துணியை பெற்றுக்கொண்டதைப்போல, நானும் ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து பெற்றுக்கொள்வதாக கருதிக்கொண்டேன். ஆகவே சாதாரண குருவிடமிருந்து துறவுக்கான தீட்சையை பெற்றுக்கொள்ளவில்லை.

-

துறவியான பிறகு தாயிடமும் தந்தையிடமும் ஆசியை பெற்றுக்கொண்டேன் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் மனத்தில் இருந்த பாரமும் நீங்கியது.எனது மனத்தில் இருந்த மிகப்பெரிய பாரமும் நீங்கியது. காடு,மலைகள் என்று எங்கும் இதுவரை சென்றதில்லை. காடுகளில் சென்று தவவாழ்க்கை வாழ்ந்தால் அது இன்னும் நல்லது என்று தோன்றியது. வீட்டில் உள்ளவர்களிடம் பல்வேறு மடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு 

விரைவில் வருகிறேன் என்று கூறிக்கொண்டு புறப்பட்டேன்.சில மடங்களில் சில நாட்கள் தங்கினேன்.சில இடங்களில் சிலமாதம் தங்கினேன். முடிவில் திருவண்ணாமலையில் சென்று தவ வாழ்க்கை வாழலாம் என்று முடிவுசென்து கொண்டேன்.இதற்கு முன்பு அங்கு சென்றதில்லை.ஆனால் பலர் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். உணவுக்கும் தங்குவதற்கும் பிரச்சினை இல்லை என்று கேள்விப்பட்டிருந்தேன்.ஆகவே திருவண்ணாமலையை நோக்கி புறப்பட்டேன்.அப்போது என்னிடம் ஒரு செட் துணி மட்டுமே இருந்தது. கையில் செலவுக்கு காசுகூட கிடையாது. திருவண்ணாமலை செல்ல சிலர் பணம் தந்தார்கள். திருவண்ணாமலை வந்து சேரும்போது இரவு 9 மணி ஆகிவிட்டது.

-

திருவண்ணமலைக்கு இரவு 9 மணிக்கு வந்து சேர்ந்தேன். முழுக்க முழுக்க இறைவனை மட்டுமே எண்ணி அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்து.யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காமல், தானாக வரும் உணவை ஏற்றுக்கொண்டு,முற்றிலும் தனிமையான தவ வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.கிரிவலப்பாதை எது என்பதை கேட்டு அறிந்துகொண்டு அதை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.இரவு வேளை என்பதால் ரோட்டில் இருட்டாக இருந்தது. சுமார் 3 கி.மீ நடந்து சென்றபிறகு அங்கு ஒரு அம்மன் கோவிலைக் கண்டேன். என்னிடம் மீதி இருந்த பணம் அனைத்தையும் அங்குள்ள உண்டியலில் போட்டுவிட்டு.இரவு அந்த கோவிலின் முன் படுத்துக்கொண்டேன்.image77

பாகம்-5

திருவண்ணாமலையில் சில அனுபவங்கள்

விடிந்ததும் உள் கிரிவலப்பாதை என்று சொல்லும் காட்டு வழியில் நடக்க ஆரம்பித்தேன் சில கிலோமீட்டர்கள் நடந்த பிறகு ஒரு இடத்தில் சென்று அமர்ந்துகொண்டேன். இரவு உணவு உண்ணவில்லை. இனி உணவு எப்படி கிடைக்கும்,எங்கே கிடைக்கும் என்பதும் தெரியாது. முழுக்க முழுக்க இறைவனை நினைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருப்போம். யாராவது அந்த வழியாக வரும்போது சாப்பிடுவதற்கு உணவு தருவார்கள் என்று நினைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்தேன். 

-

நேரம் ஆகிக்கொண்டே இருந்தது,தியானம் வரவில்லை பசிதான் வந்தது. யாராவது வருவார்களா என்று காத்திருந்தேன் சிலர் அந்த வழியாக வந்தார்கள். ஆனால் என்னை கண்டுகொண்டதாக தெரியவில்லை. சுவாமி நீங்கள் யார் என்று கேட்பதற்கு கூட யாரும் தயாராக இருப்பதாக தோன்றவில்லை. மதியம் தாண்டிவிட்டது. மாலையாகிட்டது பலர் அந்த வழியாக நடந்துசென்றார்கள். நான் அவர்களிடம் எதுவும் கேட்டகவில்லை,அவர்களும் என்னிடம் எதவும் கேட்டவில்லை. இப்போது கடவுளை பற்றிய நினைப்பே இல்லை. ஒரு வேளை உணவே கிடைக்காமல் போய்விருவோ என்ற எண்ணம்தான் இருந்தது. இரவு வேளையில் திருவண்ணாமலைக்கு வந்ததால் அந்த இடத்தை பற்றி எனக்கு எதுவும் தெரியாமல் போய்விட்டது. எப்படி வெளியே செல்வது எங்கே செல்வது எதுவும் தெரியவில்லை. நான் இப்போது எந்த இடத்தில் இருக்கிறேன் என்பது கூட தெரியவில்லை. கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் என்று சொல்வார்களே அதே நிலை தான். அனைத்தையும் விட்டுவிட்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன் இப்போது உண்மையாகவே அட்ரஸ் தெரியாத ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டோமோ என்று தோன்றியது. இரவும் வந்தது. இறைவனைப்பற்றிய நினைப்பும் வரவில்லை.தியானமும் வரவில்லை. பசியால் கவலையும் மனக்குழப்பமும் தான் வந்தது. தியானம் செய்வதற்காக கண்ணை மூடினால் பூரியும்,சப்பாத்தியும்தான் கண் எதிரி வந்தது. 

-

இந்த நேரத்தில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எந்த உணவும் உடம்புக்கு தேவைப்படாத ஒரு நிலையை நாம் அடையும் போது தான் காடுகளிலோ குகைகளிலோ சென்று முழுக்க முழுக்க தியானத்தில் அமரும் 

மனநிலையை அடைவோம். அதுவரை அது சாத்தியம் இல்லை. யாராவது அவசரப்பட்டு அனைத்தையும் விட்டுவிட்டு காட்டில் சென்று தவம் செய்யலாம் என நினைத்தால்,அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காது.இது படிப்படியாக நடக்கக்கூடிய நிகழ்வு. முதலில் சாதுக்களுடன் வாழவேண்டும். சில ஆண்டுகள் வாழ்ந்த பிறகு ஆன்மீகத்தை நன்று கற்றுக்கொண்டு, தனிமை வாழ்க்கைக்கு நன்கு பயிற்சி பெற்றபின், உணவு கிடைக்ககூடிய இடத்தில் தனிமையில் வசிக்க வேண்டும். சில ஆண்டுகள் அவ்வாறு வசித்தபின் உணவை படிப்படியாக குறைத்துக்கொண்டே வரவேண்டும். தியானத்தை அதிகப்படுத்திக்கொண்டே வரவேண்டும். பின்னர் முற்றிலும் உணவே இல்லாமல் வாழ முடியும் என நிலை வந்த பிறகு முற்றிலும் மனிதர்கள் காணா முடியாத காடுகளிலோ குகைகளிலோ வந்து அமர்ந்து தியானத்தில் மூழ்கவேண்டும். அப்போது கண்கள்,காதுகள்,மூக்கு,நாக்கு,தோல் அனைத்தையும் அதன் அதன் செயல்களிலிருந்து விலக்கி, ஆன்மாவை தியானிக்க வேண்டும். அப்போது உடல் உணர்வை கடந்த சமாதிநிலை அனுபவம் கிடைக்கும். அதன் பிறகு யோகி அதில் ஒன்று கலந்துவிடுவான். உடல் அழிந்துவிடும்.

-

எனக்கு இப்படிப்பட்ட பக்கும் இன்னும் வரவில்லை. ஆன்மாவின் காட்சி ஏற்கனவே கிடைத்திருந்தாலும்,அது குருவின் அருளால் கிடைத்து. அதில் முழுக்க முழுக்க நிலைபெற்றிருக்கும் பக்குவம் இன்னும் வரவில்லை என்பது அப்போது புரிந்தது. இன்னும் அனுபவிக்க வேண்டிய சில கர்மங்கள் இருக்கின்றன.செய்து முடிக்க வேண்டிய சிலகடமைகள் பாக்கி இருக்கின்றன.

-

அடுத்த நாள் காலையும் வந்துவிட்டது, மதியமும் வந்துவிட்டது உணவு கிடைக்கவில்லை. அப்போது மனத்தில் ஒரு எண்ணம் வந்தது. இனி உணவு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.உடல் அப்படியே மெலிந்து அழிந்தாலும் பரவாயில்லை.நாம் ஏற்கனவே ஆன்மாவை தரிசித்துவிட்டோம்.உணவு கிடைக்காவிட்டால் உடல் அழிந்துவிடும்,மனம் அழிந்துவிடும்.ஆனால் நான் ஆன்மா என்பது எனக்குத் தெரியும்.எனக்கு அழிவே கிடையாது. எனக்கு இறப்பே கிடையாது.ஆகவே எதற்காக கவலைப்படவேண்டும்? நமக்கு எதுதேவை? எதுவும் தேவையில்லை. நான் பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை. இந்த உடல் இருந்தால் என்ன போனால் என்ன?இந்த உலகம் என்பது நமது மனத்தின் படைப்புதானே.இந்த உடலும் மனத்தின் படைப்புதான். சொந்தம் பந்தம்,கடமைகள்,செயல்கள்,உலகம்,இன்னும் அனைத்தும் மனம் உருவாக்கியிருக்கும் ஒரு கனவு போன்றவைதான். நான் ஆன்மா இதனுடன் சம்மந்தப்படாதவன் என்ற நிலை படிப்படியாக வர ஆரம்பித்தது.

-

அதாவது உடல் முற்றிலும் சோர்வாகிவிட்டது. மனம் வேலை செய்வதை படிப்படியாக நிறுத்த துவங்கிவிட்டது.இனி உணவே கிடைக்காது அப்படியே இறந்துவிடவேண்டியதுதான் என்ற மனநிலைக்கு அது வந்துவிட்டது. அந்த நேரத்தில் ஏற்கனவே எனக்கு கிடைத்திருந்த ஆன்மீக அனுபவத்தின் காரணமாக ஞானம் வெளிப்பட்டது. கவலைகள் அனைத்தும் அகன்று உடலைவிட்டுவிடலாம் என்ற எண்ணம் தோன்றி அப்படியே 

முழுக்கமுழுக்க அமைதியில் ஆழ்ந்து அமர்ந்திருந்தேன்.

-

சில மணிநேரம் கழிந்த பிறகு நான் மீண்டும் வீட்டிற்கு வருவதாக வாக்கு கொடுத்திருந்தேனே. ஒருவேளை வராவிட்டால் அவர்கள் என்ன நினைப்பார்களோ? நான் எங்கே இருக்கிறேன் என்பதுகூட யாருக்கும் தெரியாது. என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. நாம் எவ்வாளவு பெரிய ஞானியாக இருந்தாலும், பெற்றோரின் கண்களுக்கு குழந்தைதான். நான் உடலை விடுவதால் அவர்களுக்கு என்ன லாபம்? என்ற எண்ணம் வந்தது.ஆகவே அவசரப்படக்கூடாது.இந்த உலகைவிட்டு செல்வதைவிட,இந்த உலகத்தில் வாழ்வதுதான் நல்லது என்று தோன்றியது.

-

ஞானம் மறைந்தது. உணவு கிடைப்பதற்கு என்ன வழி என்று பார்ப்போம் என்ற எண்ணத்தில் அங்கிருந்து எழுந்து சிறிது தூரம் நடந்தேன் ஒரு துறவி அந்த வழியாக வந்தால் சுவாமி நான் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை. சாப்பாடு எங்கு கிடைக்கும் என்று தெரியவிலை என்று சொன்னேன். அவர் மிகவும் கோபப்பட்டார். திருண்ணாமலையில் வந்து உடலைவிட்டுவிடலாம் என்று நினைத்தீர்களோ. இது அதற்கான இடமில்லை.என்றார். ஒருவேளை அவர் என்னைப்போல பலரை பார்த்திருப்பார் என நினைக்கிறேன். அங்கே தூரத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது இரவு எங்கே உணவு கிடைக்கும். மதியம் இன்ன இடத்திற்கு சென்றால் அங்கே உணவு கிடைக்கும். இங்குள் துறவிகளுக்கு தினமும் இரண்டு வேளை உணவு கிடைக்கும் என்றார். அவரது வார்த்தையை கேட்ட பிறகு தான் சென்ற உயிர் திரும்பி வந்தது. அதே போல் இரவு வேளையில் கோவில் சென்று உணவை பெற்றுக்கொண்டேன்.அப்போது என்னைப்போல நூற்றுக்கணக்கில் அங்கே துறவிகளாக இருப்பதை பார்த்தேன். அவர்கள் எல்லாம் யார்? 

-

திருவண்ணாமலையில் நூற்றுக்கணக்கில் சாதுக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன். மதியம் வேளைகளில் அவர்கள் கூடும் இடங்களில் அவர்களுடன் அமர்ந்துகொள்வேன். அவர்களில் பலர் காவியுடை உடுத்திய பிச்சைக்காரர்கள் என்பது தெரிந்தது. பல்வேறு கோவில்களில் பிச்சையெடுத்துவந்த பிச்சைக்காரர்கள் இவர்கள். திருவண்ணாமலையில் தாராளமாக உணவு கிடைக்கிறது, வெளிநாட்டினர் பலர் இங்கு வருவதால் பணம் கிடைக்கிறது என்பதால் இங்கு வந்திருக்கிறார்கள்.ஆனால் ஒன்று காவி உடை அணிந்திருந்தால்தான் இங்கு எல்லாம் கிடைக்கும் என்பதால் காவி உடை அணிந்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.நீண்ட தாடி வைத்திருப்பார்கள்.பார்ப்பதற்கு உண்மையான சாதுக்கள் போல தெரிவார்கள். பகல்வேளைகளில் அங்கு வரும் பக்தர்களிடமும்,வெளிநாட்டினரிடமும் ஆசி கொடுப்பதுபோல் பேசி பணத்தை வாங்கிக்கொள்வார்கள். மாலை வந்ததும் வேசத்தை கலைத்துவிட்டு சாதாரண உடைகளி்ல் மதுக்கடைகளில் சென்று போதை ஏற்றிக்கொள்வார்கள்.சிலர் இரவு வேளைகளில் இன்னும் சொல்ல முடியாத - எல்லாம் ஈடுபடுவார்கள். 

-

இவர்களில் மத்தியில் சில உண்மையான சாதுக்களும் இருக்கிறார்கள். பெரும்பாலும் திருவண்ணாமலையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கிக்கொள்கிறார்கள்.யாராவது பக்தர்கள் பணத்தை கொடுக்கிறார்கள். பகல் வேளைகளில் ரமணர் ஆஸ்ரமம் அல்லது வேறு இடங்களில் உணவை பெற்றுக்கொள்கிறார்கள். 

-

சிலர் கொலை,கொள்ளை போன்ற குற்றச் செயல்களை செய்துவிட்டு காவி உடையை அணிந்துகொண்டு சாதுக்களாக மாறி வாழ்ந்து வருவதாகவும் கேள்விப்பட்டேன்.அதனால் அடிக்கடி போலீஸ் அங்கு வந்து சோதனை செய்வதுண்டு. 

-

இவ்வாறு பகல் வேலைகளில் திருவண்ணாமலை வெளி கிரிவல பாதையிலும், இரவு நேரத்தில் உள் கிரிவலப்பாதையிலும் தங்கிக்கொள்வேன்.உள் கிரிவல பாதை என்பது காடு. காடு என்றவுடன் அங்கு அடர்த்தியான மரங்கள் இருக்கும் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். திருவண்ணாமலைக்கு வந்து பார்த்தவர்களுக்கு தெரியும், அங்கு பெரும்பாலும் புளியமரங்கள்தான் நிறைந்திருக்கின்றன. நிழல்கொடுக்கும் மரங்கள் மிகக்குறைவு. காட்டிற்குள் இருக்கும் மரங்களில் பெரும்பாலும் முள்மரங்கள்தான் ஏராளம். பகல் வேளைகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அங்குள்ள பாதைகளில் வெயில்பட்டு கதகத்துகொண்டிருக்கும். வெளி கிரிவலப்பாதை ஓரளவு பரவாயில்லை.

-

தங்களுக்கென்று தங்கிக்கொள்ள தனி இடம் இல்லாதவர்கள் பொதுவாக கோவிலின் வெளியில் இரவில் படுத்துக்கொள்வார்கள். இரவில் போலீஸ் ரைடு இருக்கும் என்பதால் கோவிலைதவிர மற்ற இடங்களில் படுக்க அனுமதி இல்லை. ஆகவே பலர் ஒன்றாக சேர்ந்தே இருப்பார்கள். நான் இரவு வேளைகளில் எந்த வெளிச்சமும் இல்லாத காட்டினுள் சென்று ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பேன். பகல்வேளைகளில் வெளி கிரிவலப்பாதைகளில் உள்ள மரங்களின் கீழ் அமர்ந்திருப்பேன். பொதுவாக இரவு வேளைகளில் விழித்திருப்பேன், பகல் வேளையில் படுத்திருப்பேன்.அந்த நாட்களில் யாரிடமும் பொதுவாக பேசாமல் மௌனவிரதம் காத்துவந்தேன்.

சில சாதுக்கள் என்னிடம் பேசுவதுண்டு. என்னைப்ற்றி கேட்பதுண்டு,அதைத்தவிர மற்ற நேரங்களில் பேசுவதில்லை.

-

சிலர் இரவில் எங்கே படுக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். உள்கிரிவல பாதையில் இருக்கும் பாதைகளை மாலைவேளையில் தண்ணீரால் நன்று கழுவி சூடு குறைந்த பிறகு அதன்மேல் அமர்ந்திருப்பேன் என்றேன். அடடா அங்கே திருடர்கள் இருப்பார்களே! உங்களிடம் உள்ள அனைத்தையும் திருடிவிடுவார்கள் அங்கே செல்லாதீர்கள் என்றனர். என்னிடம் தான் எதுவும் இல்லையே என்றேன். அங்கே தற்கொலை செய்து கொள்பவர்கள் பிசாசுகளாக சுற்றிக்கொண்டிருப்பதை சிலர் பார்த்திருக்கிறார்கள், கவனமாக இருங்கள் என்றார்கள். நான் பல நாட்களாக அங்கே இருக்கிறேன் யாரையும் பார்க்கவில்லையே என்றேன். அதன்பிறகு அவர்கள் எதுவும் பேசவில்லை.

-

-

இரவு வேளைகளில் காற்றில் மரங்கள் அசையும் சப்தமும், மிருகங்களில் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். காட்டுமிருகங்கள் வந்துவிடும் என்ற பயத்தால் தூங்காமல் விழித்திருப்பேன். என்னுடன் அன்னை ஸ்ரீசாரதாதேவியின் டாலர் ஒன்று எப்போதும் இருக்கும்.இரவு வேளைகளில் பயம் ஏற்படும்போது அதை தொட்டுக்கொள்வேன். பயம் அகன்றுவிடும்.

-

அந்த நாட்களில் நான் கற்றுக்கொண்டது என்ன? பொதுவாக மடங்களில் வசிக்கும் துறவிகள் மடத்தை சார்ந்து வாழ்கிறார்கள். சில வருடங்கள் கழிந்தபிறகு அதைவிட்டு வெளியே வரமுடியாது.அதுவே ஒரு பந்தமாக மாறிவிடும். இதற்கு பயமும் ஒரு காரணமாக இருக்கலாம்.வெளியே உணவுக்கும்,உடைக்கும்,தங்குவதற்கும் வழி இருக்காது.ஆகவே இந்த அடிப்படை வசதிகள் இருக்கும் மடத்தில் இருந்துகொள்ளலாம்,இதைவிட்டு விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். 

-

image78

பாகம்-6

கடவுள் காப்பாரா?

இதுவே பல்வேறு தீமைகளுக்கும் காரணமாகிறது. சிலவேளைகளில் சில தீமைகளை நாம் பார்க்கிறோம், எங்கே இதை வெளியில் சொன்னால் நாம் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வோம்,நம்மை மடத்தைவிட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள். பிறகு சாப்பாட்டிற்கும்,தங்குவதற்கும் எங்கே செல்வது?ஆகவே 

கண்முன்னே நடக்கும் அக்கிரமங்களை கண்டும் காணாமலும் இருந்துவிடுவோம் என்று இருந்துவிடுகிறார்கள். இது ஆன்மீக வாழ்க்கைக்கு பெரிய தடையாகும். தீமைகளை எதிர்த்து போராடவேண்டும் என்பதற்காகவே நம் கண்முன்னால் தீமைகள் வருகின்றன. அவைகளை எதிர்த்து போராடி போராடி நாம் வலிமையுடையவர்களாக மாறிக்கொண்டே வருவோம். கடைசியில் நான் ஆன்மா, நான் சர்வ வல்லமை வாய்ந்தவன் என்பதை உணர்ந்துகொள்கிறோம். அதன் பின் நம் கண்முன் தீமைகள் தெரியாது நாம் அவைகளை கடந்துவிடுவோம். தீயவன் நம் முன்னே வந்தாலும், அந்த நேரத்திற்கு நமது ஆன்மீக கவர்ச்சி காரணமாக அவனிடமுள்ள தீமைகள் மறைந்துவிடும்.அவனால் நம்முன்னால் தீமைகளை செய்ய முடியாது.தீமைகளை எதிர்த்து போராடி போராடி கடைசியில் நாம் இறைவனாக மாறிவிடுகிறோம். தீமைகளை எதிர்த்து போராடாதவன் வாழ்க்கையில் தோல்வியடைகிறான்.

-

யாரையும் எதையும் எதிர்பார்க்காமல் இறைவனை மட்டும் சார்ந்து வாழும் வாழ்க்கையை அங்கு கற்றுக்கொண்டேன். இனி எதற்காகவும் யாரிடமும் கைகட்டி நிற்கவேண்டியதில்லை என்ற சுயபலத்தை அங்கே கற்றுக்கொண்டேன். 

-

அமைதியாக ஆனந்தமாக நாட்கள் இவ்வாறு கழிந்துகொண்டிருந்தது.இவ்வாறு ஒரு மாதம் கடந்தது. திருவண்ணாமலைவிட்டு நான் செல்லவேண்டிய சம்பவம் ஒன்று அதன்பிறகு நடந்தது...

-

திருவண்ணாமலையில் இப்படியே ஒரு மாதம் கழிந்தது. ஒரு நாள் இரவில் பயங்கர மழை கொட்டியது. ஒதுங்குவதற்கு வேறு இடம் இல்லாததால் நனைந்துகொண்டே இருக்க வேண்டியதாயிற்று. காலையில் மழை நின்றுவிடும் என்று நினைத்தேன்.ஆனால் காலையிலும் நிற்கவில்லை . நனைந்த துணியோடு அப்படியே இருக்க வேண்டியதாயிற்று. இதில் என்னுடைய உடல்நிலை முழுவதும் கெட்டுவிட்டது.மழை நிற்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை. இனி இங்கு இருக்க முடியாது. சொந்த ஊரை நோக்கி செல்ல வேண்டியது தான் என்று முடிவு செய்தேன். இந்த தவ வாழ்க்கை இனி போதும் இங்கு மீண்டும் வரவேண்டாம் என்று நினைத்துக்கொண்டேன். இன்னொரு காரணமும் இருந்தது. இங்கு நாம் உழைக்கவில்லை. மற்றவர்களிடமிருந்து யாசகமாக உணவை பெற்றுக்கொள்கிறோம்.இதனால் நம்முடைய புண்ணியங்கள் தீர்ந்துகொண்டே செல்லும்.பாவம் அதிகரிக்கும். உழைக்காமல் உணவை பெறுபவர்கள் யாராக இருந்தாலும்,அது பிச்சைக்காரர்களாக இருந்தாலும் சாதுவாக இருந்தாலும் அவர்களுக்கு பாவம் வந்துசேரும். அவர்களிடம் உள்ள புண்ணியம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்லும்.

-

இதை சரி செய்வதற்காக பிச்சையேற்று வாழும் துறவிகள் , தங்களுக்கு தெரிந்த ஆன்மீக கருத்துக்களை 

மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள். மற்றவர்களின் முக்திக்காக உதவுவார்கள்.இவ்வாறு செய்யாமல் தங்கள் சொந்த முக்தியை மட்டும் கவனித்துக்கொண்டு வாழும் துறவிகள் கடைசி காலத்தில் மிகவும் துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும். பிறரிடமிருந்து உணவை உண்டு உண்டு,அவர்களின் பாவத்தை சுமக்கும் பாவமூட்டைகளாக மாறிவிடுவார்கள்..இங்கு நீண்ட நாட்கள் இப்படியே வசித்தால் அது நமக்கு நல்லதல்ல, எதிர்கால பணிக்கு நல்லதல்ல என்பதால் அதற்கு மேலும் அங்கு தங்கியிருக்க முடியவில்லை

-

ஊருக்கு செல்லவேண்டும். என்னிடம் காசு எதுவும் இல்லை என்ன செய்வது? இதுபற்றி ஒருவரிடம் தெரிவித்தேன். அவர் விழுப்புரம்வரை பஸ்சில் செல்வதற்கு பணம் கொடுத்தார். அதற்கு பிறகு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்லுங்கள் துறவிகளை ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்று சொல்லிவிட்டார். இதுவரை எங்கேயும் டிக்கெட் எடுக்காமல் சென்றதில்லை, என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே திருவண்ணாமலையைவிட்டு விழுப்புரத்திற்கு சென்றேன். அங்கிருந்து ரயில் மூலம் கன்னியாகுமரி புறப்பட்டேன்.என்னுடன் பயணித்தவர்கள் எனக்கு உரிய மரியாதை கொடுத்து உட்கார இடமும் தந்தார்கள். வரும்போது இறைவா! இந்த முறை என்னை எப்படியாவது காப்பாற்றிவிடு. டிக்கெட் பரிசோகரிடம் மாட்டிவைத்துவிடாதே என்று வேண்டிக்கொண்டே வந்தேன். அதனால் மனத்தில் ஒரு பதட்டம் இருந்துகொண்டே இருந்தது. என்னை சுற்றி இருப்பவர்களிடம் பேசிக்கொண்டே வந்தேன். சில மணி நேரம் கழிந்து டிக்கெட் பரிசோதகர் வந்தார். எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். டிக்கெட் எங்கே என்று கேட்டார்? எடுக்கவில்லை என்றேன். 

-

அவர் ஒருவேளை வேறு மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சுமார் 30 நிமிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடினமான வார்த்தைகளால் அனைவரின் முன்னிலையிலும் உதாசீனமாக பேசிக்கொண்டே வந்தார். என்னுடையை தலையை நிமிர்த்தி யாரையும் பார்க் முடியாச சூழலில் நான் கூனி குறுகி நிற்க வேண்டியதாயிற்று. கடைசில் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பிறகு கதவின் அருகே உட்கார்ந்து பயணித்தேன் என் அருகே டிக்கெட் எடுக்காத இன்னும் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தார்கள். பரிசோதகர் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை.கடைசிவரை அந்த இடத்தைவிட்டு எழுந்து மற்றவர்கள் உட்காரும் இடத்திற்கு வரவில்லை.

-

இது என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்களுள் மிக முக்கியமானதாக கருதுகிறேன்.கடவுள் காப்பாற்றுவார் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இந்த சம்பவம் பெரிய ஏமாற்றமாக இருந்தது.அதன் பிறகு வாழ்க்கையில் எப்பவுமே கடவுளிடம் பிரார்திப்பதையே விட்டுவிட்டேன். நமது செயலுக்கு நாம்தான் பொறுப்பேற்ற வேண்டும். நாம் தவறு செய்தால் அதற்குரிய தண்டனையை நாம்தான் அனுபவிக்க வேண்டும். கடவுள் காப்பாற்றுவார் என்று நினைப்பது தவறு. கோவிலுக்கு செல்லும் வழியில் சிலர் விபத்தில் மரணமடைகிறார்கள். கோவிலுக்கு சென்ற பிறகு சிலர் மரணமடைகிறார்கள் .கோவில் கூரை இடிந்து விழுந்தே சிலர் இறந்துபோகிறார்கள். இதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? புயலில் சிக்கி பலர் உயிழக்கிறார்கள். உயிர் பிரிவதற்கு முன்பு வரை கடவுளே காப்பாற்று! கடவுளே காப்பாற்று! என்று எத்தனை முறை அவர்கள் வேண்டியிருப்பார்கள். படிப்படியாக அவர்கள் மரணத்தை அடையும், அவர்களை எந்த கடவுளும் காப்பாற்றவில்லை. கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பி நம்பி நாம் ஒருவிதமான மயக்கநிலையில் வாழ்கிறோம். இதிலிருந்து வெளிவரவேண்டும். கடவுள் கண்டிப்பாக இருக்கிறார். ஆனால் நமது செயல்களுக்கு நாம்தான் பொறுப்பு, சுனாமி வந்தாலும் சரி,புயல் வந்தாலும் சரி, கோவில் வழிபாட்டின் போது ஆற்றில் மூழ்கி இறந்தாலும் சரி,இவைகளுக்கு கடவுள் காரணமல்ல.

-

கடைசியில் ஒரு வழியாக எனது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

-

அப்போது எனக்கு வயது 28. சொந்த ஊரில் தனிமையாக வசித்து வந்தேன். எனக்கு தேவையான உணவு உட்பட அனைத்து தேவைகளுக்கும் வீட்டில் உள்ளவர்களை சார்ந்து வாழவேண்டிய சூழ்நிலை.எத்தனை நாட்களுக்கு இப்படியே செல்லும் உனக்கென்று ஒரு வருமானம் இருக்க வேண்டாமா என்று தந்தை வருத்தப்பட்டார்.

-

நமக்கு தெரிந்த ஆன்மீக கருத்துக்களை மக்களிடம் பேசி, அதன் மூலம் சிறிய அளவு வருமானத்தை பெற்றுக்கொள்ளலாமா என்று யோசித்தேன். அது சாத்தியம் இல்லை என்பதை பிறகு புரிந்துகொண்டேன். ஏனென்றால் ஆன்மீகம் என்பது நமக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்வதல்ல, நம்மிடமிருந்து சக்தியை கொடுப்பதுதான் ஆன்மீகம். சில தகவல்களை பேசி கை தட்டால்களை வாங்கிக்கொண்டு,ஊதியமும் பெற்றுக்கொள்வதால் சமுதாயத்தில் பெரிய மாற்றங்கள் எதவும் வராது. அப்படிப்பட்ட பலபேர் ஏற்கனவே இருக்கிறார்கள்.ஸ்ரீராமகிருஷ்ணர் எதை விரும்புவார்? சுவாமி விவேகானந்தர் நாம் எப்படி இருந்தால் அதை விரும்புவார் என்று நம்மை நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

-

திருடன் ஒருவனை நாம் பார்க்கும்போது. இனி திருடாதே என்று சொன்னால், உடனே தன் திருட்டுதொழிலையே நிறுத்திவிட வேண்டும். அது தான் ஆன்மீகம். யாருடைய உபதேசத்தால் தீயவர்களும்,நல்லவர்களாக மாறுவார்களோ அதுதான் ஆன்மீக உபதேசம். வெறுமனே பேசுவது ஆன்மீகம் அல்ல. இந்த நிலையை நான் அடைந்திருக்கிறேனா என்று என்னையே சுய பரிசோதனை செய்துகொண்டேன். இல்லை. அது இன்னும் நீண்ட தூரத்தில் உள்ளது. அது வரை காத்திருக்கவேண்டும். நம்மை நாமே இன்னும் திருத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். 

-

பொதுவாக துறவு என்று வரும்போது அனைத்தையும் துறந்து தனியிடத்தை நோக்கி சென்றுவிடுகிறோம். இது நல்லதுதான்.ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும். ஞானம் அடையும் வரை மனிதர்களின் தொடர்பை தவிர்த்துவிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது உண்மைதான்.ஆனால் ஞானம் அடைந்த பிறகு அந்த இறைவனே அனைத்து மனிதர்களாகவும் ஆகியிருக்கிறார் என்ற உண்மை படிப்படியாக புரிய ஆரம்பிக்கும். 

-

ஸ்ரீராமகிருஷ்ணரிக் கடைசி நாட்களில்,சுவாமி விவேகானந்தர் வீட்டை துறந்து செல்ல ஆயத்தமாக இருந்தார். அப்போது ராமகிருஷ்ணரிடம் கேட்கிறார்.அனைத்தையும் துறக்க வேண்டுமா? அப்போது ராமகிருஷ்ணர் பதில் சொல்கிறார். அனைத்தையும் இறைவனாக பார்க்கும் போது எதை துறப்பாய்? துறப்பதற்கு என்ன உள்ளது?இது சுவாமி விவேகானந்தர் கற்றுக்கொண்ட முக்கிய பாடமாகும்.

image79

பாகம்-7

நான் கற்றுக்கொண்டது என்ன?

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களில் முக்கியமானது இது தான்- ஞானத்தை அடைய வேண்டுமானால் குடும்பத்தை தற்காலிகமாக துறந்து தனியிடத்தை நாடி செல்லவேண்டும். ஞானம் பெற்ற பிறகு இல்லறத்தில் வாழ்ந்தால் அது தவறில்லை. அப்போது தாய்,தந்தையரை இறைவனாக பார்த்து அவர்களுக்கு சேவை செய்யலாம். அப்போது மாயை இருக்காது,தயை மட்டுமே இருக்கும். குடும்பம் பந்தப்படுத்தாது. அவ்வாறு அனைத்தை இடங்களிலும் இறைவனை பார்ப்பது விஞ்ஞானம்.

-

இந்த உபதேசத்தை புரிந்துகொள்ளவும், அதை நடைமுறைப்படுத்தவும் வேண்டிய காலம் வந்துவிட்டது.

-

நாம் வளர்ந்து பெரியவர்களாகும் வரை தாய்,தந்தை,சமுதாயம், உலகம் என்று அனைத்தும் நமக்கு பல விதங்களில் உதவி செய்திருக்கிறது. வளர்ந்த பிறகு நாம் அவர்களுக்கு என்ன செய்தோம்? அவ்வாறு அவர்களுக்கு திருப்பி எதுவும் செய்யாமல் இருப்பவன் கடமை தவறியவன்.இந்த எண்ணம் அந்த நாட்களில் தீவிரமாக இருந்தது. நம்மை வளர்த்தவர்களுக்கு பதிலுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? பொருளாதார உதவி செய்திருக்கிறோமா? அறிவு வளர உதவி செய்திருக்கிறோமா? ஆன்மீக உதவி செய்திருக்கிறோமா? ஒன்றும் இல்லை. சமுதாயத்தில் வாழும் ஒருவன் மற்றவர்களின் முக்திக்கு உதவாமல் தான் மட்டும் எப்படியாவது முக்தி அடைந்தால் போதும் என்று நினைத்தால்,அவனது முயற்சி தோல்வியையே அடையும். 

-

ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம் வந்தது. சில வருடங்கள் மற்றவர்களைப்போல் உழைத்து சம்பாதிக்க வேண்டும். நமது உணவுக்காவது நாம் தேவையானவற்றை சம்பாதித்துக்கொள்ள வேண்டும். யாரும் நம்மை பார்த்து வருத்தப்படும்படி நடந்துகொள்ளக்கூடாது என நினைத்தேன். ஏற்கனவே எனக்கு தெரிந்த கம்பியூட்டர் அனிமேசன்,எடிட்டிங் வேலைகளை மீண்டும் செய்வதற்கான நேரம் வந்தது.எங்கே வேலைக்கு செல்லலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன்.

-

நாமோ துறவியின் உடையில் இருக்கிறோம்.இந்த உடையில் வெளியில் செல்ல முடியாது. சாதாரண உடையில் சென்றால் பிற்காலத்தில் என்னுடன் வசித்த மற்ற துறவிகள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள்,பிற்காலத்தில் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று பல்வேறு சிந்தனைகளில் குழம்பியிருந்தேன்.

அப்போது ஒன்று நியாபகத்திற்கு வந்தது. துறவையும் துறந்துவிடு அதுதான் உண்மையான துறவு என்று மடத்தில் இருக்கும்போது மூத்த துறவிகள் சொல்லியிருக்கிறார்கள். துறவு உடை என்பது ஒரு அகங்காரம். அந்த அகங்காரம் நம்மை பாதுகாக்கும். ஆனால் ஞானத்தில் நிலைபெற்றிருக்க வேண்டுமானால் நான் துறவி என்ற அகங்காரத்தையும் துறந்துவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் ஆன்மீகத்தில் உயர்ந்தவன்,நான் துறவி, நான் போதிப்பவன் போன்ற எண்ணங்கள் தடைகள் தான். நானும் சாதாரண மனிதனும் ஒன்று. நானும் ஏழையும் ஒன்று.நானும் முட்டாளும் ஒன்று என்று சாதாரணமானவர்களுடன் நம்மை ஒன்றுபடுத்திக்கொள்கிறோமோ அப்போதுதான் ஞானம் பூர்த்தியடையும்.

-

இப்போது பாதை தெளிவாகிவிட்டது அடுத்தக்கட்ட பயணத்திற்கு தயார்படுத்திக்கொண்டேன்....

-


நான் கற்றுக்கொண்டது என்ன? 

-

-சுவாமி வித்யானந்தர்

-

எனது வாழ்க்கை வரலாற்றை இன்னும் தொடர்ந்து எழுதவேண்டும் என்று பலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.28 வயதுவரை நடந்த சில சம்பவங்களையும் எனது மனநிலைகளையும் முன்பு பதிவிட்டிருந்தேன். அதன்பிறகு 12 ஆண்டுகள் ஒருவிதமான தவவாழ்க்கை வாழ்கிறேன் என்று சொல்லாம். ஏன் ஒருவிதமான என்று கூறுகிறேன் என்றால் பழைய காலங்களில் தவ வாழ்க்கை வாழ்பவர்கள் மக்கள் தொடர்பு இல்லாமல் வாழ்வார்கள்.ஆனால் நான் மக்கள் தொடர்புடன்,நவீன எலக்ரானிக்ஸ் சாதனங்களான டி.வி, இன்டர்நெட்,மொபைல்.கம்பியூட்டர் போன்ற சாதனங்களுடன் வாழ்கிறேன். ஒரு பக்கத்தில் தனிமை வாழ்க்கை உள்ளது. இன்னொரு பக்கத்தில் இந்த உலகம் என் முன்னே நவீன சாதனங்களுடன் இருக்கிறது. அதனால் இதை ஒருவிதமான தவவாழ்க்கை என்று கூறலாம்.

-

எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நான் சொல்வதைவிட மற்றவர்கள் சொல்வது நல்லது.ஆனால் நான் கற்றுக்கொண்டது என்ன என்பதை நான்தான்கூற முடியும்.மற்றவர்களால் முடியாது.அதனால் மற்றவர்களுக்கு ஏதாவது பலன் ஏற்படும் என்பதால் தொடர்ந்து எழுத ஆரம்பிக்கிறேன்.ஆனால் இதன்பிறகு வரும் தொடர்கள் எனது சிந்தனைகளின் தொகுப்பாகதான் இருக்கும்.அங்கே நிகழ்வுகளுக்கு அதிக இடம் இருக்காது. பல வருடங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் வசிப்பதால் சம்பங்களுக்கு அதிகம் இடம் இல்லை.ஆனால் மனத்தினுள் நடக்கும் போராட்டங்கள்,கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம் உள்ளன.அவைகளை பகிர்ந்துகொள்ளலாம்

-

 ஆன்மீக சாதனைகளில் மூன்று படிகள் உண்டு 1. பசுநிலை 2. வீரநிலை 3. திவ்யநிலை. இந்த உலகத்தில் நல்லது கெட்டது என்று இரண்டு உள்ளது. நல்ல அம்சங்களை வித்யாமாயை என்றும் தீயஅம்சங்களை அவித்யாமாயை என்றும். இந்த இரண்டும் நேர்ந்தநிலை ஆத்யாசக்தி என்றும் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுகிறார். ஆத்யாசக்தி என்பது குணங்களுடன்கூடிய இறைவன்.இந்த ஆத்யா சக்தியிலிருந்துதான் வித்யாசக்தியும்,அவித்யாசக்தியும் வருகின்றன.இந்த இரண்டு சக்திகளும் சேர்ந்து பல்வேறு விதங்களில் பிரபஞ்சத்தில் செயல்பட்டு,அவை இயங்குவதற்கு காரணமாக அமைகிறது.

-

ஆன்மீகத்தில் அடியெடுத்து வைப்பவர்கள் பசுநிலை சாதகர்கள்.அதாவது நம்மிடம் உள்ள மிருக இயல்பை அடக்கி,நல்ல இயல்பை வெளியே கொண்டுவருவது. பசுநிலை சாதகர்கள் வித்யா சக்தியை சார்ந்து வாழ்வார்கள். தீயதை முற்றிலும் அகற்றிவிடுவார்கள். தீயவர்களின் தொடர்பை முதலில் நீக்கிவிடவேண்டும்.அதற்காக நல்லவர்களுடன் தொடர்பில் இருப்பார்கள்.இதில் வெற்றி பெறும்போது ஆன்மீக விழிப்பு உண்டாகும். குண்டலிசக்தி விழித்துஎழும். அதன்பிறகு படிப்பபடியாக ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.இந்த நிலையில் அதிக வருடங்கள் தொடர்ந்து இருக்க முடியாது ஏனென்றால் மேலே செல்லும் குண்டலி சக்தி அதிக நாட்கள் ஒரே இடத்தில் நிற்காது,அது ஓருயடியாக மேல்நோக்கி சென்று சமாதிநிலையை அடையவேண்டும். அவ்வாறு மேல்நோக்கி செல்வதில் தடை ஏற்பட்டால் கீழ்நோக்கி வந்துவிடும்.ஆன்மீக சாதகர்களுக்கு சறுக்கல் ஏற்படலாம்.குண்டலினி சக்தி மேல்நோக்கி செல்வதில் உள்ள முதல் தடை உடல்தான். அதனால் பெரும்பாலானவர்கள் குகைகளை நாடிசெல்வார்கள்.சிலர் காடுகளில் தனிமையில் வாழ்வார்கள். படிப்படியாக உணவை குறைத்து உடலை நடந்துசென்றுவிடுவார்கள். இது ஒருவிதமான தற்கொலைபோன்றதுதான். ஆனால் மனம்,பிராணன் முற்றிலும் அடங்கிவிடுவதால் மறுபிறப்பு ஏற்படாது

-


ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தைவிட்டு வெறியேறிய பிறகு வேறுமடங்களுக்கு செல்லாமல் சொந்த ஊருக்கு ஏன் வரவேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். 

-

ஒழுங்கு நடவடிக்கையை காரணம்காட்டி ஒருவரை மடத்திலிருந்து நீக்கியபிறகு இன்னொரு மடத்தில் அவரை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். சில மடங்களில் சேர்ந்து தங்கிக்கொள்ளலாம் என முயற்சித்தேன் சில இடங்களில் சில மாதங்கள் வசிக்கவும் செய்தேன் ஆனால் அவர்கள் நம்மை ஏதோ குற்றவாளியை பார்ப்பதுபோலவே பார்ப்பார்கள்.வசதியான இடங்களில் மரியாதை இல்லாமல் தாழ்ந்து வாழ்வதைவிட.ஒரு குடிசையில் சுயமரியாதையுடன் வாழ்வது மேல். 27 வது வயதில் மடத்தைவிட்டு வெளியே வந்தபின் எத்தனையோ குழப்பங்கள் மனத்தை ஆக்கிரமித்திருந்தன. மடங்களில் வாழ முடியாத சூழல், மக்கள் வாழும் வெளி உலகத்துடனும் வாழ முடியாத சூழல். அது எப்படியென்றால், 5 ஆண்டுகள் முற்றிலும் சமுதாயத்தைவிட்டு விலகி வேறு ஒரு உலகில் வாழ்ந்த பின்பு இந்த சமுதாயம் முன்புபோல நமக்கு காட்சியளிக்காது. ஏதோ மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பி வந்த மிருகத்தை மனிதர்கள் பார்ப்பது போல நம்மை பார்ப்பார்கள். அதுவும் சொந்த ஊர் என்றால் கேட்கவே வேண்டாம். எல்லோரும் நமக்கு தெரிந்தவர்கள். இதோ பாருங்கள் இவன்தான் வீட்டைவிட்டு ஓடிப்போனவன்,எங்கேயோ மடத்தில் இத்தனை நாட்கள் இருந்துவிட்டு இப்போது வந்திருக்கிறான் என்று ஆச்சர்யத்துடன் கூறிக்கொள்வார்கள். நாம் தெருக்களில் சென்றால் ஆச்சர்யத்தில் வீட்டின் வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.அப்போது நமக்கு இருக்கும் மனநிலையை சற்று எண்ணிப்பாருங்கள்.

-

அப்போது வெள்ளை ஆடை அணிந்திருந்தேன் தலையில் ஒரு குடுமி இருந்தது. எனது ஊரில் உள்ளவர்கள் பிராமண சமுதாயத்தினர் அல்ல, முற்காலத்தில் சூத்திரர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள்,அவர்கள் இப்படிப்பட்ட மனிதனை இதற்கு முன்பு பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்களின் பார்வையில் நான் எப்படி தெரிந்திருப்பேன் என்று சற்று கற்பனைசெய்து பாருங்கள்.ஆன்மீக கருத்துக்களை மக்களிடம் கூறலாம் என்ற தைரியத்தோடு வெளியே வந்துவிட்டோம்,ஆனால் ஒரு கோமாளியைபோல் மற்றவர்கள் கண்ணுக்கு இப்போது தெரிகிறோம். முதலில் ஆன்மீகத்தை பற்றி தெரிந்துகொள்ள நினைக்கும் மக்கள் எங்கே இருக்கிறார்கள்? 

-

நமக்கு முன் எதிர்காலம் இப்படித்தான் இருந்தது. ஒரு பக்கம் மடங்களில் நம்மை சேர்க்கமாட்டார்கள்.அப்படியே சேர்த்தாலும்  நம்மை மதிக்கமாட்டார்கள். இன்னொரு பக்கம் நம்மை ஆச்சர்யத்துடன் பார்க்கும் மக்கள். நம்மிடம் பேசவோ பழகவோ விரும்பாதவர்கள். இவனிடம் பேசினால் நாமும் வீட்டைவிட்டு ஓடிபோகவேண்டியிருக்கும் என்று நினைக்கும் எனது சமவயதினர். அனைத்தையும் விட்டுவிட்டு ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டால் என்ன என்ற மனநிலையும் வந்தது. 

-

 மகாகவி காளிதாஸ் என்று ஒரு சினிமா உண்டு.அதில் ஒரு பாடல் வரும் காளிதாஸ் தனது நண்பரான மன்னரை பிரிந்து சொந்த ஊருக்கு வரும் வழியில் காளி கோவில் ஒன்று இருக்கும்.அங்கே தங்கி இருப்பார்.வீட்டிற்கு செல்லவா அல்லது மீண்டும் மன்னனிடம் செல்லவா என்ற குழபப்த்தில் அங்கே அமர்ந்திருப்பார்.அப்போது காளிதேவி ஒரு வயதான தாய்வேடத்தில் வந்து மகனே, உனது வீட்டிற்கு சென்று தாய்தந்தையருடன்  வாழ். “யாருக்கும் வாழ்வுண்டு.அதற்கொரு நாள் உண்டு. அதுவரை பொறுப்பாய் மனனே என் அருகில் இருப்பாய் மகனே” என்று அந்த வரிகள் வரும். இந்த வரிகள்தான் எனது வாழ்க்கையில் பெரும் நம்பிக்கையை தந்தது. காளிதாஸ் காளியின் பேச்சை கேட்காமல் மன்னை நாடி செல்ல வேண்டும் என்று முடிவெடுத்ததால் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுவான். நமக்கு அப்படிப்பட்ட நிலை வராமல் இருக்க வேண்டுமானால், நமக்கு ஒரு காலம் வரும் அதுவரை காத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்

-

கோழைகூட ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு பொறுமையாக காத்திருந்து வேலைசெய்தால் ஒரு நாள் இந்த உலகை வெற்றிகொள்ளலாம் என்பது சுவாமி விவேகானந்தரின் கருத்து. ஆகவே பொறுமையாக காத்திருப்போம்,தற்போது நம்மை மதித்து நமக்கு இடம் தரக்கூடடிய ஒரே இடம் எனது தாய்தந்தையர்கள் மட்டும்தான்.ஆகவே அவர்களுடனேயே இருப்போம் என்று முடிவுவெடுத்து அவர்களது கண்காணிப்பில் வசிக்க தொடங்கினேன்

-

நான் வாழ்வதென்கென்று   ஒரு குடிசை போன்ற சிறிய இடம் கிடைத்தது. மனிதர்களின் தொந்தரவு இல்லை.   யாரையும் பார்க்க வேண்டியதில்லை.தாயார் மூன்று வேளையும் சாப்பாடுட்டை தயார்செய்து கொடுத்தாள்  எனது தந்தை என்னை தேடிவந்து தருவார்.உணவுக்கும் தங்குவதற்கும் அதைவிடமேலாக அன்பிற்கும் குறைவு இல்லை. .ஆனால் எத்தனை ஆண்டுகள் இதேபோல் வாழ்வது? எத்தனை ஆண்டுகள் எனக்கு உரிய வேளையில் சாப்பாடு கொண்டு தருவார்கள்? கலங்கியது நான் மட்டுமல்ல என்னை சார்ந்தவர்களும்தான்...

-

நீங்கள் எப்படிப்பட்ட ஆன்மீக சாதனைகள் செய்தீர்கள்  என்று ஒருவர் கேட்டிருந்தார்.

-

நான் செய்த ஆன்மீக சாதனைகள் என்பது முற்றிலும் வேறுபட்டது.பேலூர் மடத்தில் வசித்த நாட்களில் முதல் ஆறுமாதம் எப்போதும் ஜபம் செய்துகொண்டே இருப்பேன். காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக மனதிற்குள் ஜபம் ஓடிக்கொண்டே இருக்கும். அதன்பிறகு தியானம் செய்வதில் நாட்டம் ஏற்பட்டது.அதன்பிறகு சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை சிந்திப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதைப்பற்றியே தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருப்பேன். உதாரணமாக மறுபிறவி என்ற ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதைப்பற்றியே சிந்திப்பேன்,அது தொடர்பான கருத்துக்களை அவரது புத்தகங்களில் தேடி படிப்பேன்.சிலநாட்கள் அந்த ஒரே சிந்தனையே தொடர்ந்துகொண்டிருக்கும்,அதைப்பற்றி ஓரளவு தெரிந்துகொண்டோம் என்ற திருப்தி ஏற்பட்டபின் அடுத்த தலைப்பை எடுத்து அதைப்பற்றி சிந்திப்பேன் இவ்வாறு எனது சந்தேகங்களை தீர்ப்பதற்கு புத்தகத்தை மறுபடிமறுபடி படிக்க தொடங்கினேன்.சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை நோட்டுபுத்தகத்தில் மிகமெதுவாக எழுதுவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தேன்.இதனால் ஒரே சிந்தனையை அதிகநேரம் சிந்திக்க முடியும். மனத்தில் அது ஆழமாக பதியும்.அதுமட்டுமல்ல அது மனத்தை ஒருநிலைப்படுத்தவும் உதவும்

-

மடத்தைவிட்டு வெளியே வந்த பின் நான் செய்த தவவாழ்க்கை என்பது இதுதான். காலை 9 மணி முதல் இரவு 10 மணிவரை சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை எழுதிக்கொண்டே இருப்பேன். இடையில் மதியம் சிறிதுநேரம் ஓய்வு எடுப்பேன். மாலையில் சிறிது நேரம் நடப்பேன் அவ்வளவுதான். இவ்வாறு சுவாமி விவேகானந்தரின் நான்கு யோகங்கள் மற்றும் அவரது சொற்பொழிவுகள் அனைத்தையும்  பலமுறை எழுதியிருப்பேன். ஒருமாதம் 2 மாதம் அல்ல இரண்டு ஆண்டுகள் இந்த வேலைதான் தொடர்ந்து நடந்தது. கிட்டத்தட்ட 100 நோட்டுகளாவது எழுதி முடித்திருப்பேன்.இதுதான் நான் செய்த சாதனை இந்த நாட்களில் ஜெபம் செய்யவில்லை,தியானமும் செய்யவில்லை. தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்ததுதான் நான் செய்த ஆன்மீக சாதனை.அப்படியானால் அவரது புத்தகம் முழுவதையும் மனப்பாடம் செய்துவிட்டீர்களா என்று கேட்கலாம். இல்லை மனப்பாடம் செய்யவில்லை. 

-

அது என்ன பெரிய விஷயமா? ஆம். அது பெரிய விஷயம்தான். மனத்தை கடந்துசெல்வதற்கு அதை ஒரு யோகமாக, எடுத்துக்கொண்டேன். கை எழுதிக்கொண்டிருக்கும் கண் பார்த்துக்கொண்டிருக்கும்,ஆனால் மனத்தில் எந்த சிந்தனையும் இருக்காது. இதை தான் சுவாமி விவேகானந்தர் ஒருவன் மனம்ஒத்து ஒரு செயலை செய்தால் மனத்தை கடந்துசெல்ல முடியும் என்கிறார். இவ்வாறு மனத்தை கடந்து செல்லாமல் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா? முடியாது.. சுவாமி விவேகானந்தர் மனத்தை கடந்து சென்று செய்த சொற்பொழிவுகளை சரியாக புரிந்துகொள்ள வேண்டுமானால் நாமும் மனத்தை கடந்துசெல்ல வேண்டும். இல்லாவிட்டால் புரிந்ததுபோல இருக்கும் ஆனால் புரியாது.முக்கியமாக ஞானயோத்தில் வரும் அத்வைத கருத்துக்களை புரிந்துகொள்ளவேண்டுமானால் மனத்தை கடந்துசெல்லவேண்டும்

-

மடத்தில் இருந்தபோது மற்ற துறவிகள் ஆன்மீகம் தொடர்பாக பல புத்தகங்களை படிப்பார்கள்.ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக சுவாமி விவேகானந்தரின் புத்தகங்களை திரும்பத்திரும்ப படிப்பதிலேயே என் வாழ்நாளை செலவிட்டுவருகிறேன். குறைந்தது 100 தடவைக்கு மேல் படித்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். அந்த அளவு அதை தொடர்ந்து ஏன் படிக்கிறீர்கள்? படித்தது புரியவில்லையா என்று கேட்கலாம். உண்மைதான் படித்தது புரியவில்லைதான். இன்னும் படித்து புரிந்துகொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது. இந்த பிறவி முழுவதும் தொடர்ந்து அதை படித்துக்கொண்டே இருப்பேன். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளுடன் எனது சிந்தனை முற்றிலும் ஒன்றுபடும்வரை படித்துக்கொண்டே இருப்பேன். ஸ்ரீராமகிருஷ்ணரை புரிந்துகொள்ள வேண்டுமானால் அதற்கு சுவாமி விவேகானந்தரைபோன்ற ஒருவரின் மூளைவேண்டும். அந்த அளவு ஸ்ரீராமகிருஷ்ணர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். 

-

ஊரில் தனிமையாக வாழ்ந்து வந்த காலத்தில் எனக்கு பலவருடங்களுக்கு முன்பே அறிமுகமான பக்கத்து ஊரைசேர்ந்த  ஒருவர் என்னை பார்க்க வந்தார். அவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர் என்பதால் அவருடன் பேசுவதில் மகிழ்ச்சியடைந்தேன். மாதம் மாதம் உங்கள் செலவுக்கு நான் ஏற்பாடு செய்கிறேன். மாதாமாதம் 100 ரூபாய் என் சார்ப்பின் தருகிறேன்.அதேபோல் பலரை இங்கே அழைத்து வருவேன் அவர்களும் மாதாமாதம் 100 ரூபாய் தருவார்கள். எப்படியும் 3000 ரூபாய் கிடைக்கும்பபடி செய்துவிடலாம்,உங்கள் சாப்பாட்டு செலவுக்கு அதுபோதும் என்றார்.பரவாயில்லை கடவுள் கண்ணை திறந்துவிட்டார் என்று நினைத்தேன். முதல் மாதம் எனது பங்கு என்று 100 ரூபாய் தந்துவிட்டு சென்றார். அதன் பிறகு பல மாதங்களாக ஆளை காணவே இல்லை ஒரு நாள் எதேச்சையாக பார்த்தேன். ஏன் இங்கு வரவில்லை என்று கேட்டேன். வீட்டில் உள்ளவர்கள்(அவரது மனைவி) என்னிடம் பேசக்கூடாது என்று கூறிவிட்கள் அதனால்தான் வரமுடியவில்லை. உங்கள் வாழ்க்கை எப்படி போகிறது என்று கேட்டார். உங்களை போன்றவர்கள் வராததால் நிம்மதியாக போகிறது என்றேன்.இத்தனைக்கும் அவருக்கு மாதம் 20,000க்கும் மேல் சம்பளம் வரும்.

-

மனிதர்களை குறைசொல்லி எந்த பயனும் இல்லை. திருவண்ணாமலையில் வாழ்ந்த நாட்களில் மதியமும் இரவும்தான் சாப்பாடு கிடைக்கும். காலை வேளைகளில் ஒரு டீ சாப்பிடுவதற்கு கூட வழி இருக்காது.யாரும் நம்மை கண்டுகொள்ளவே மாட்டார்கள். எங்கோ தூரத்தில் ஒரு மகான் இருக்கிறார் என்று கேள்விப்பட்டால் அரை தேடி செல்வார்கள்.அவர் கேட்காமலே பணம்,பொருள் என்று அவரது காலடியில் வைப்பார்கள்.இதெல்லாம் அந்த மகானின் நன்மைக்காகவா செய்கிறார்கள்? இல்லை. இப்படி அவர்கள் கொடுப்பது பல மடங்காக திரும்பி நமக்கே கிடைக்கும் என்பதால் கொடுக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் கோடிக்கணக்கில் திரும்ப கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.இப்படிப்பட்டவர்கள் என்னை பார்க்க வராமல் இருக்கவேண்டும் என்று கடவுளை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.அவர்களை கடவுள் கண்ணை திறந்து பார்ப்பதே இல்லை. யார் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகிறார்களோ,அவர்கள் கொடுக்கும் சிறு காணிக்கை, அது எதுவாக இருந்தாலும் அதைத்தான் கடவுள் ஏற்றுக்கொள்வார்.

-

image80

பாகம்-8

உலகியல் வாழ்க்கை

இந்த நிகழ்வு மனிதர்களின் மனநிலையை காட்டுவதாக இருந்தது.ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்களே இப்படி இருக்கிறார்களே இவர்களை நம்பி நாம் ஆன்மீக பணியில் எப்படி ஈடுபட முடியும்? எனது தேவைகளுக்காக நான் ஏன் மற்றவர்களைபோல வேலைக்கு சென்று சம்பாதிக்ககூடாது? கம்பியூட்டர் சர்வீஸ், அனிமேசன் வேலைகள் ஓரளவு தெரியும் என்பதால் பணிபுரிவதில் சிக்கல்இல்லை. ஓரளவு பணத்தை சேர்த்துக்கொண்டடு அதை வங்கியில் பிக்சட் டெபாசிட் போட்டு வைத்துவிட்டு.பிறகு அதில் கிடைக்கும் வட்டியை வைத்து ஏன் நமது தேவைகளை தீர்த்துக்கொள்ள கூடாது என்று நினைத்தேன்.

-

 அப்போது ஸ்ரீராமகிருஷ்ணரின் இந்த உபதேசம்தான் என் மனதில் வந்தது. அவரது சீடரான நிரஞ்சன் ஒருவரின் கீழ் பணத்திற்காக வேலை செய்வதை கேட்டு,ஸ்ரீராமகிருஷ்ணர் பெரிதும் வருத்தப்படுவார். உனது தாய்க்காக நீ வேலை செய்கிறாய் இல்லாவிட்டால், உனது முகத்தையே என்னால் பார்க்க முடிந்திருக்காது என்று கூறுவார். மற்றவர்களின் கீழ் பக்தர்கள் வேலை செய்வதை அவர் விரும்பவில்லை. முதலாளிகள் சொல்லும் பொய்க்கு உடந்தையாக செயல்பட வேண்டியிருக்கும்,அவர்களது மனப்போக்கு பக்தர்களுக்கும் வரும்.இது பக்தியை பாதிக்கும் என நினைத்தார்.சுயமாக தொழில் செய்வதை அவர் ஆதரித்தார். சுயமாக சம்பாதிக்கும் பணத்தை நல்ல வழியில் செலவிடவேண்டும் என்பது அவரது கருத்து.

-

ஸ்ரீராமகிருஷ்ணரின் தேவைகளை கவனித்துக்கொள்ள மதுர்பாபு,சம்புமல்லிக் உட்பட ஜந்துபேர் இருந்தார்கள்.அதனால் அவர் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்வேண்டிய சூழலில் இல்லை.மிக உயர்ந்த நிலையை அடைந்தவர்களுக்கு உதவி செய்ய யார் வராவிட்டாலும் இறைவன் தகுந்த ஏற்பாடுகளை செய்துவிடுவார்.அவர்கள் யாரிடமும் கைகட்டி நிற்கவேண்டியதில்லை. ஆனால் நாம்  அப்படிப்பட்ட நிலையை அடையவில்லையே.என்ன செய்வது? சுயமாக தொழில் செய்ய வேண்டுமானால்கூட,முதலில் பலரது தொடர்பு தேவை. மனிதர்களிடமிருந்து விலகி இருக்கும் என்னை யார் பார்க்கவருவார்கள்? ஆகவே முதலில் மனிதர்களை தேடி நாம்தான் செல்ல வேண்டும். அவர்களின் கீழ்தான் வேலை செய்ய வேண்டும். வேறு வழியே இல்லை

-

அந்த காலகட்டத்தில் கேபிள்-டிவி என்பது மக்களிடம் செல்வாக்கு பெற்றதாக இருந்தது. அங்கு வேலை செய்ய ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்திருந்தார்கள். நாகர்கோவிலில் ஒரு டிவி சேனலில் வேலை கிடைத்தது. மாதம் 2500 ரூபாய்தான் சம்பளம். கேபிள்-டிவி வேலை எப்படி இருக்கும் என்றால். சுற்றிலும் பல டிவிக்களில் ஏதாவது சினிமா சம்மந்தமாக நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்கும். பலர் வந்துபோய்க்கொண்டிருப்பார்கள். எப்போதும் கலகலப்பாகவும், சத்தமாகவும்,முழுக்க முழுக்க உலகியல் சூழல் நிலவும்படி இருக்கும். அமைதியை விரும்புவர்களுக்கு அந்த இடம் கொஞ்சமும் ஒத்துவராது. ஆனால் யார் போர்க்களத்தில் அமைதியையும், காட்டின் நடுவே வாழும்போது செயல்திறத்தையும் வெளிப்படுத்துகிறானோ அவனே யோகத்தில் நிலைபெற்றவன் என்று விவேகானந்தர் கூறுகிறார். இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் நம்மால் அமைதியாக மனத்தை வைத்துக்கொள்ள முடியுமானால் அது நம்மை யோகத்தை நோக்கி அழைத்து செல்லும் என்பதை புரிந்துகொண்டேன்.

-

நாம் ஒரு இடத்தில் வேலை செய்யும் போது.மற்றவர்கள் கண்ணிற்கு எப்படி தெரிய வேண்டும் என்பது முக்கியம். அவர்கள் நம்மை தன்னைப்போன்ற ஒருவனாக நினைத்தால்தான் நம்மிடம் பழகுவார்கள். ஏதோ வேறு கிரகத்திலிருந்து வந்தவன்போல் நாம் நடந்துகொண்டால் நம்மிடமிருந்து விலகிப்போய்விடுவார்கள். ஆகவே அவர்கள் முழுக்க முழுக்க உலகியலில் மூழ்கிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களது பார்வைக்கு நாம் உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. அதேநேரத்தில் அவர்களைபோல நாமும் உலகியல் மனிதர்களாக மாறிவிடக்கூடாது. உதாரணமாக அவர்களுக்கு முறையற்ற காமம்,பணத்தாசை,போதை பழக்கங்களில் ஈடுபாடு,பொய்பேசுவது போன்ற பல கீழ்த்தரமான செயல்கள் இருக்கும். நாமும் அதைபோல மாறிவிடக்கூடாது. அதேநேரத்தில் அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை விலக்கிவிடவும்கூடாது. அவ்வாறுசெய்தால் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டு உணர்வு வந்துவிடும். ஆன்மீகத்தின் ஆரம்பநிலையில் இருப்பவர்கள்,இப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகிதான் இருக்கவேண்டும்.ஆனால் என்னைப்போன்ற மனநிலையில் இருப்பவர்கள்,அவர்களைவிட நான் உயர்ந்தவன் அல்ல என்ன மனநிலையுடன்தான் பழகவேண்டும்.

-

-

உலகியல் மத்தியில் வாழும்போது எப்படி இருந்தது?ஆன்மீக வாழ்க்கையிலிருந்து வீழ்ச்சி ஏற்படவில்லையா என்று ஒருவர் கேட்டிருந்தார்

-

ஸ்ரீராமகிருஷ்ணர்  ஒருமுறை  நாடகம் ஒன்றை பார்க்க சென்றார். நாடகம் முடிந்த பின் நாடகம் எப்படி இருந்தது என்று கேட்டார்கள். இதில் நடித்துக்கொண்டிருந்த நடிகர்கள் உண்மையில் இறைவனாகவே எனக்கு தெரிந்தார்கள்.இறைவனே வேடமிட்டுவந்து இப்படியெல்லாம் நடிப்பதை தெளிவாக பார்க்கிறேன் என்றார். இறைவனே மனிதனாகவும் மற்ற உயிர்களாகவும் ஆகியிருப்பதாக மகான்கள் பார்க்கிறார்கள்.  இதுதான் விஞ்ஞானம். விசேச-ஞானம். இறைவன் எங்கும் இருக்கிறார் என்று அறிவது ஞானம். அவரை அனைத்து இடங்களிலும் பார்த்தால் அது விஞ்ஞானம்.  நாம் தற்போது சயின்டிஸ்ட்களை விஞ்ஞானி என்று அழைக்கிறோமே அது தவறு. இறைவனை எங்கும் பார்க்கும் ஸ்ரீராமகிருஷ்ணர் போன்றவர்கள்தான் விஞ்ஞானி.

-

“நான் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பேனாக.ஆயிரக்கணக்கான துயரங்களை அனுபவிப்பேனாக, உண்மையில் உள்ளதான ஒரே தெய்வத்தை அதாவது எல்லா உயிர்களின் தொகுப்பான அந்த தெய்வத்தை அனைத்திற்கும் மேலாக, தீயவர்களான என் தெய்வம், துயரப்படுகின்றவர்களான என் தெய்வம் ஏழையான என் தெய்வம் என்று நான் சிறப்பாக போற்றுகின்ற தெய்வத்தை வழிபடுவதற்காக பிறப்பேனாக”  என்று சுவாமி விவேகானந்தர்  கூறுகிறார்

-

 எங்கும் இறைவன் என்ற இந்த கருத்தை சுவாமி விவேகானந்தர்  மக்களிடம் பரப்பவிரும்பினார். இறைக்காட்சியை பெற்ற பிறகு வரும் நிலையை, அதற்கு முன்பு பயிற்சிசெய்து கொண்டுவரமுடியுமா? ராமகிருஷ்ணர் போன்றவர்கள் உண்மையிலேயே இறைவனை எங்கும் கண்டார்கள். அப்படி காணாதவர்கள் அந்த பாவனையை பயிற்சி செய்து அதேபோல் எங்கும் இறைவனை காண முடியுமா? முடியும் என்கிறார் சுாவாமி விவேகானந்தர். அதைத்தான் செயல்முறை வேதாந்தம் என்ற சொற்பொழிவில் கூறுகிறார். 

-

எங்கும் இறைவனைப்பாருங்கள். ஆண்,பெண்,குழந்தை என்று அனைத்து மனிதர்களிலும் இறைவனைப்பாருங்கள். இதை பயிற்சி செய்யுங்கள்.முதலில் நீங்கள் நேசிக்கும் ஒருவரை இறைவனாக பாருங்கள்,பின்பு படிப்படியாக அந்த கருத்தை விரிவுபடுத்தி மற்றவர்களையும் இறைவனாக பாருங்கள். பின்பு உங்கள் எதிரிகளைகூட இறைவனாக பாருங்கள்.படிப்படியாக இந்த கருத்தை விரிவடைய செய்து மனிதர்களை மட்டுமல்ல.மிருகங்களை,தாவரங்களை . அசையும் மற்றும் அசையாத அனைத்தையும் இறைவனாக பாருங்கள். இந்த உலகிற்கு அப்பால் வாழும் தேவன்,தேவி,முன்னோர்கள்,ரிஷிகள் போன்ற அனைவரையும் இறைவனாக பாருங்கள்.இந்த கருத்தை உண்மையிலேயே நடைமுறைக்கு கொண்டு வந்தால் அது, மரணமற்ற நிலையை கொடுக்கும்.

-

இந்த கருத்தை முதலில் படிப்பவர்கள் சிரிப்பார்கள்.இந்த நூற்றாண்டின் சிறந்த வேடிக்கை என்பார்கள். அவர்கள் வேதாந்தத்தின் அத்வைத தத்துவத்தை படிக்க வேண்டும். நானும் இறைவனும் ஒன்று. இறைவனே இந்த மனிதர்களாக ஆகியிருக்கிறார்.இன்னும் ஒருபடி மேலே சென்று நானே இந்த உலகத்தில் உள்ள அனைத்துமாக ஆகியிருக்கிறேன்.இந்த பிரபஞ்சத்தை படைத்து.காத்து.அழிக்கும் இறைவனாக இருப்பதும் நானே.என்னிடம் எல்லையற்ற சக்தி உள்ளது.  என்று அந்த தத்துவம் கூறுகிறது. இவைகளை முறையாக படித்து தெரிந்து கொண்டு.தீவிர பயிற்சியில் ஈடுபட்டால்தான் புரியும்.

-

இதை வெறுமனே படிப்பதோடு நின்றுவிடக்கூடாது,வாழ்ந்து காட்ட வேண்டும், செயல்முறையில் கொண்டுவரவேண்டும் என நினைத்தேன்.காலை முதல் இரவு வரை சுற்றிலும் உலகியலில் மூழ்கிக்கிடக்கும் மக்கள் மத்தியில் இதை பயிற்சி செய்ய விரும்பினேன். மக்களோடு மக்களாக பஸ்சில் பயணிக்கும்போது,சுற்றியிருப்பார்கள் இறைவன்தான் என்று மனத்தில் நினைத்துக்கொள்வேன்.டீ க்கடையில் டீ குடிக்கும்போது, சுற்றிலும் இருப்பவர்கள் இறைவன்தான் என மனத்தில் நினைத்துக்கொள்வேன். தெருவோரம் இட்லி விற்பவன்,நடந்துசெல்பவன், காரில் செல்பவன் என்று என் கண்ணில் யாரெல்லாம் படுகிறார்களோ அவர்கள் அனைவரும் இறைவன்தான் என்று நினைத்துக்கொள்வேன். இவ்வாறு இறைவனைப்பற்றிய சிந்தனை என் மனத்தில் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது.

-

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. வேலை செய்துகொண்டிருக்கும் போது ஒருவன் தவறு செய்தால் அவனை கண்டிக்க கூடாதா? அவன் இறைவன் என்று நினைத்து அவனை மன்னிக்க வேண்டுமா?

-

 இல்லை. இங்கே இந்த கருத்தை தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. நாம் இதுவரை எங்கும் இறைவனை பார்க்கவில்லை.அந்த பயிற்சியில்தான் இருக்கிறோம். அதில் வெற்றிபெறும் வரை  நம் முன் இருக்கும் கடமையை செய்துகொண்டே செல்ல வேண்டும். எங்கும் இறைவனைப் பார்க்கும் நிலை ஒருநாள் வரும்.அப்போது கடமைகள் அனைத்தும் நம்மைவிட்டு நீங்கியிருக்கும். அப்போது மன்னித்தல்,தண்டித்தல் போன்றே பேச்சே இருக்காது. மகான்களுக்குகூட அந்த நிலை எப்போதும் கிடைப்பதில்லை. எப்போதும் அந்த நி்லையில் இருக்கமுடிந்தால்,இந்த உடலைவிட்டுவிட்டு இறைவனுடன் ஒன்றாகிவிடுவார்கள்.அதுதான் முக்தி.

-

உலகியல் சிந்தனைகள் உள்ள மனிதர்களுடன் பழகும் போது. இதே உயர்ந்த மனநிலையுடன்தான் எப்போதும் இருந்தீர்களா என்று கேட்கலாம். 

-

இல்லை. எப்போதும் அந்த உயர்ந்த நிலையில் இல்லை. பலமுறை வேலைப்பளு காரணமாக இதை மறந்திருக்கிறேன். திடீரென்று நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்? நீ துறவியல்லவா? இந்த வேலைகள் உனக்கு தேவையா? இறைவனைவிட்டு வெகுதூரத்தில் விலகிவிட்டாயே என்று மனத்தில் சிந்தனை தோன்றும். கூடவே யார் இறைவன்? அவர் எங்கே இருக்கிறார்? இங்கு நாம் பார்க்கும் இவர்கள் இறைவன் அல்லாமல் வேறு யார்? என்ற சிந்தனை தோன்றும். நீ இறைவனுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறாய்,இறைவனுடன்தான் பழகிக்கொண்டிருக்கிறாய். என்ற சிந்தனைகள் எழுந்து மனத்தில் நிம்மதியை கொண்டுவரும்.இப்படி பலமுறை நடந்திருக்கிறது. 

-

இந்த பயிற்சியை முடித்துவிட்டீர்களா? அதில் வெற்றி கிடைத்துவிட்டதா? என்று நீங்கள் கேட்கலாம். இல்லை. பயிற்சி 

இன்னும் முடியவில்லை. ஆனால் இந்த பயிற்சியை ஆரம்பித்தபின் மனத்தில் உள்ள கவலைகள் எல்லாம் மறைந்துவிட்டது. எதிரியைகூட நேசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு எல்லோர்மீதும் அன்பு ஏற்படுகிறது. மனத்தில் எப்போதும் அமைதி இருக்கிறது. மரணம் என்பது இந்த உடலுக்கு ஏற்பட்டாலும் கோடிக்கணக்கான உடல்களில் நான் வாழ்வேன் என்ற மனநிறைவு ஏற்படுகிறது. அழகான பெண்கள் முதல் அசிங்கியமான ஆண்கள் வரை அத்தனைபேராகவும் நானே இருக்கிறேன் என்பதால் யாரிடமும் ஈர்ப்பும் ஏற்படவில்லை.யாரிடமும் வெறுப்பும் ஏற்படவில்லை. 

-

நம்முன் உள்ள கடமைகளை செய்துகொண்டே செல்லவேண்டும்.தாய்க்கும்,தந்தைக்கும்,உறவினர்களுக்கும்,சமுதாயத்திற்கும்,உலகிற்கும் உள்ள கடமைகளை செய்துகொண்டெ செல்ல வேண்டும். ஏனென்றால் நாம் பலவிதங்களில் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறோம்.அந்த கடனை திருப்பி செலுத்தவேண்டும். முற்றிலும் கடன் அடைக்கப்பட்டபிறகு தான் இந்த உலகிலிருந்துவிடுதலை கிடைக்கும். அப்போதுதான் எங்கும் இறைவனை உண்மையாகவே பார்ப்போம்

-

ஒரு காலத்தில் மனிதர்களை கண்டு பயந்தேன். நம்மை ஆன்மீகத்தைவிட்டு விலக்கிவிடுவார்கள் என நினைத்தேன். வேலையை நினைத்து பயந்தேன் அது நம்மை உலகியலில் ஆழ்த்திவிடும் என்று நினைத்தேன். சொந்தங்களை நினைத்து பயந்தேன் இவர்கள் நம்மை உலகியலில் சிக்கவைத்துவிடுவார்கள் என நினைத்தேன்.முக்கியமாக பெண்களை கண்டு பயந்தேன்.இவர்கள் மாயையின் வடிவங்கள் என்று நினைத்தேன். இப்போது எந்த பயமும் இல்லை.

-

எனது பயணம் முடியவில்லை. இன்னும் பயணிக்கவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது....

-

-

ஆன்மீகம் என்ற பெயரில் சிலர் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவாராக வரப்போகிறீர்களா? என்று ஒருவர் கேட்டார்.

-

எங்கள் குடும்ப சொத்தை பங்குபோடும்போது உனக்கு எவ்வளவு வேண்டும்? என்று தந்தை கேட்டார். எனக்கு எதுவும் தராதீர்கள் என் பெயரில் எதையும் எழுதி வைக்காதீர்கள் என்று கூறினேன். நாங்கள் மொத்தம் 5 பேர். இரண்டு அண்ணன் ஒரு தங்கை ஒரு தம்பி. மற்றவர்களுக்கு சொத்து பங்கிடப்பட்டது. எனக்கு எதுமே கொடுக்வில்லையே என்று தந்தை பலமுறை வேதனைப்பட்டார். ஒரு 5 சென்ட் நிலம் இருக்கிறது அதையாவா எழுதிவைக்கிறேன் என்றார். அவரது வேதனையை தாங்க முடியாமல் சரி என்று ஒத்துக்கொண்டேன். அந்த ஒரு நிலம்தான் எனக்காக ஒதுக்கப்பட்டது. சிறுவயதில் என்னை சுற்றிலும் உள்ள வயல்வெளிகளை பார்த்து ரசித்த இடம் அது. அங்கு வெறுமனே அமர்ந்திருந்து நேரத்தை கழித்த இடம். எதிர்காலத்தில் என்னை பார்க்க வருபவர்கள் ஒருவேளை அந்த இடத்தை பார்க்கவிரும்பலாம் என்பதற்காக இறைவனே எதை என்பெயரில் எழுதிவைத்திருக்கிறாரோ என்னவோ. தற்போது அங்கு செல்வதற்கு உரிய பாதை இல்லை. அங்குசென்று 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

-

மனித வாழ்க்கைக்கு பணம் மிகவும் முக்கியம். பணம் இ்லாமல் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தேன் என்பதை இதற்கு முன்பு விளக்கியிரு்கிறேன்.தற்போது யாரையும் சார்ந்து இருக்கவேண்டிதில்லை.எனவே படிப்படியாக நமக்கு தற்போதைய தேவைக்கும் எதிர்கால தேவைக்கும் உரிய பணத்தை சேர்த்துவைத்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.பத்து லட்சம் ரூபாய் சேர்த்துவைத்துவிட்டு இந்த பணிகளிலிருந்து விலகிவிட்டால்,மாதா மாதம் அதிலிருந்து வரும் வட்டி தொகையை வைத்து வாழ்ந்துவிடலாம் என்பது எதிர்பார்ப்பு. 

 இதற்காக கூடுதல் சம்பளம் தரும் டி.வி சேனல்களை பார்த்து சேர வேண்டியிருந்தது.இரண்டு மூன்று இடங்களை தாண்டி மாதம் 10,000 வருமானம் என்ற அளவுக்கு மிக குறுகிய காலத்தில் முன்னேற முடிந்தது.பிறகு சுயமாக தொழில் செய்ய துவங்கினேன். டி.வி சேனல்களுக்கு விளம்பரங்களை தயார் செய்து கொடுப்பது. இதில் குறுகிய காலத்தில் நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாக பணம் சம்பாதிக்க முடிந்தது. எவ்வளவு என்று கேட்காதீர்கள். வரவு எவ்வளவோ அதே அளவுக்கு செலவும் அதிகரித்தது. இந்த நாட்களில் தாய் தந்தை இருவருக்கும் பல்வேறு நோய்கள் காரணமாக ஆஸ்பத்திரிகளுக்காகவும்,மருந்து மாத்திரைகளுக்காகவும் பெருமளவு பணம் செலானது.

-

ஆறு வருடங்கள் இதேபோல் வேலை செய்தேன். முடிவில் எதுவும் சேர்த்துவைக்க முடியவில்லை. எவ்வளவு பணம் வந்தாலும் அதே அளவுக்கு செலவும் இருந்தது. பிறரை எதிர்பார்த்து வாழக்கூடாது நமது சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற முடிவு எனக்கு ஒத்துவராது என்பது தெளிவானது. 2012 லிருந்து பேஸ்புக்-ல் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை படிப்பும் பணியை மேற்கொண்டேன்.இது மிகுந்த மனநிறைவை தந்தது.படிப்படியாக இதில் முழுகவனம் செலுத்த தொடங்கினேன்.அதனால் வருமானம் குறைந்துகொண்டே வந்தது. அதேபோல் செலவும் குறைந்துகொண்டே வந்தது. அதன் பிறகு வந்த காலங்களில் இன்னும் குறைந்தது. 

-

உண்மையான பக்தனை இறைவன் எந்த நேரத்திலும் கைவிடமாட்டான் என்பது ஸ்ரீராமகிருஷ்ணரின் வார்த்தை.இனி சிறிது நாட்கள் உலகியல் வேலைகள் எதுவும் செய்யாமல் ஆன்மீக பணிகளை மட்டும் செய்வோம்.இறைவன் நம்மை காப்பாற்றுகிறாரா இல்லையா என்பதை பார்க்கலாம் என சோதிக்க நினைத்தேன்.அதன் படி சில மாதங்கள் உலகியல் வேலைகளை முற்றிலும் நிறுத்திக்கொண்டேன். வருமானம் மொத்தமாக நின்றுபோனது. அந்த நாட்களில் குருதேவரின் பக்தர்கள் சிலர் எனது ஆன்மீக பணியை பாராட்டி எனக்கு பணம் அனுப்பிவைத்தார்கள். குருதேவரின் வார்த்தைகள் பொய்யாகாது என்பதை புரிந்துகொண்டேன்.இனி எதற்கு உலகியல் வேலைகள்? முழுக்க முழுக்க ஆன்மீக பணியில் ஈடுபடுவோம். நாம் யாருக்காக வேலை செய்கிறோமோ அவர் நமக்கு எப்போது எது தேவையோ அதை கொடுப்பார் எதற்காக கவலை? 

-


-

உங்கள் உணவு முறைகள் என்ன? என்று ஒருவர் கேட்டிருந்தார்

-

நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் அவர்களிடம் எப்படிப்பட்ட உணவு வழக்கம் இருந்ததோ அதேதான் என்னிடமும் இருந்தது.வாரத்தில் இரண்டுநாட்கள் சைவம் மீதி நாட்கள் அசைவம் முக்கியமாக மீன். கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுவாக வாழும் பெரும்பாலானவர்களின் உணவு பழக்கம் இப்படித்தான் இருக்கிறது.

-

நான் சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்த பிறகுதான் முற்றிலும் சைவ உணவு உண்ணும் வாய்ப்பு கிடைத்தது. கல்கத்தாவில் விவேகானந்தர் ஆரம்பித்த தலைமை மடத்தில் சைவம் அசைவம் என்ற இரண்டு உணவு முறைகளும் உண்டு. சைவம் சாப்பிடுபவர்கள் தனியாகவும், அசைவம்சாப்பிடுபவர்கள் தனியாகவும் அமர்ந்திருப்பார்கள். மீன் அங்குள்ள முக்கிய உணவு. அங்கு வசித்த 2ஆண்டுகளும் மீன் உணவையே உண்டேன்.

-

அதன் பின் படிப்படியாக அசைவ உணவு உண்ணமுடியாத மனநிலை உருவாகிவிட்டது.இந்த நிலை படிப்படியாக உருவானது. தற்போது அசைவ உணவுகளை உண்ண முடிவதில்லை. அசைவ உணவு உண்டால் ஜீரணிப்பதில்லை.அதன் மணம் பிடிப்பதில்லை. அது மட்டுமல்ல, தற்போது பால்,முட்டை,கேக்,பிஸ்கட்,உட்பட சப்பாத்திகூட சாப்பிட முடிவதில்லை. தற்போது பழக்கத்தில் உள்ள 99 சதவீத உணவுகளை என்னால் உண்ண முடிவதில்லை. சுருக்கமாக சொன்னால் விரைவில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ண முடிகிறது.

-

ஒரு இயந்திரத்திலிருந்து எவ்வளவு சக்தியை பெற விரும்புகிறோமோ அதே அளவு எரிபொருளை உள்ளே செலுத்தவேண்டும். உணவுதான் நமது உடலுக்கான எரிபொருள். உடல் அதிக வேலைசெய்ய வேண்டுமானால் அதிகம் சத்துள்ள உணவுகள் தேவை. உடல் உழைப்பு தேவையில்லை என்றால் உணவும் குறைவாக போதும். 

-

உணவு என்பது ஒவ்வொரு மனிதனின் தனி உரிமை. அரசாங்கம் அனுமதித்துள்ள உணவை ஒருவன் உண்ணலாம். தியானம்,தவம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களது உணவு முறைகள் படிப்படியாக மாறிவிடும்.அவர்களால் அசைவ உணவுகளை உண்ண முடியாது. 

-


-

பிற மதத்தினருடன் உங்களுக்கு ஏதாவது பழக்கம் உண்டா?அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா? என்று ஒருவர் கேட்டார்

-

நான் கேபிள்,டி.வி யில் பணியாற்றிய காலத்தில் 2 ஆண்டுகள் இஸ்லாமிக் டி.வி என்ற ஒரு முஸ்லீம் டி.வியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.முதலில் முஸ்லீம்களின் டி.வி க்கு ஏன் செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன் ஆனால், காலசூழ்நிலைகள் என்னை அங்கே கொண்டுவந்து சேர்த்தது. வீடியோ ரிக்கார்டிங் மற்றும் எடிட்டடிங் பணி,டி.வி சேனல் நிகழ்ச்சிகள் ஒழுங்காக ஒளிபரப்பாகிறதா என்பதை கவனிப்பது இதுதான் அங்கு எனது பணி. முஸ்லீம் மத பிரச்சாரகர்கள் பேசுவதை ரிக்கார்டிங்செய்து.எடிட் செய்து, டி.வி யில் ஒளிபரப்ப வேண்டும்.

-

தினமும் 12 மணிநேரம் வேலை. எப்போதும் முஸ்லீம் மதம் தொடர்பான சொற்பொழிவுகளை கேட்க வேண்டியிருக்கும். அவர்கள் பேசுவதை கேட்கவேண்டும்,எடிட்டிங் நேரத்திலும் அதை கேட்க வேண்டும்.டி.வி யில் ஒளிபரப்பாகும் போதும் ஒழுங்காக எடிட்டிங் செய்திருக்கிறோமா என்பதை தெரிந்துகொள்ள மீண்டும் கேட்க வேண்டும். இவ்வாறு  ஒரு சொற்பொழிவை குறைந்தது மூன்று முறை கேட்க வேண்டும். அது மட்டுமல்ல டி.வி யில் ஒளிபரப்பாகும் அனைத்து சொற்பொழிவுகளும் சரியாக ஓடுகிறதா என்பதை எப்போதும் கேட்கவேண்டும். அதற்காக என் அருகில் ஒரு டி.வி எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். 

-

அது மட்டுமல்ல அங்கு சொற்பொழிவாற்ற வரும் முஸ்லீம் மதகுருக்கள்,மற்றவர்கள் என்று பெரும்பாலானவர்கள் 

அந்த மதத்தில் தீவிர பற்றுகொண்ட முஸ்லீம்கள்தான். எப்படிப்பட்ட சூழ்நிலை அங்கு நிலவும் என்பதை யூகித்து அறிந்துகொள்ளுங்கள். சலாம் மாகிக்கும், அஸ்சலாம் மாலிக்கும்,அல்லாகு அக்பர் போன்ற வார்த்தைகள்தான் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும். அது மட்டுமல்ல தினசரி ஐந்துவேளை தொழுகை எப்போது துவங்கும் என்பதற்கான அட்டவணை இருக்கும்.அதன் படி டி.வியிலும் நிகழ்ச்சிகளை  ஒழுங்குபடி அமைக்க வேண்டும். காலை முதல் இரவு வரை அவர்களின் பழக்க வழக்கங்கள்,பேசும் முறை,பழகும் விதம்.உணவு முறைகள் போன்ற அனைத்தையும் கற்றுக்கொள்ள முடிந்தது. சில நேரங்களில் பள்ளி வாசலுக்கு சென்று அங்கு பேசுபவர்களின் பேச்சை ரிக்கார்டிங் செய்ய வேண்டியிருக்கும்.

-

புதிதாக டி.வி சேனலுக்கு வருபவர்கள் என்னை முஸ்லீம் என்று நினைத்துக்கொண்டு. சலாம் மாலிக் என்பார்கள் பதிலுக்கு நான் அஸ்சலாம் மாலிக் என்று சொல்ல வேண்டும் என்பது விதி.ஆனால் எனது வாயிலிருந்து அந்த வார்த்தை ஒருமுறை கூட வரவில்லை. கைகளால் சலாம் என்று கூறுவேன். அவர்களை அவமரியாதை செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமல்ல,அந்த வார்த்தை எனது வாயிலிருந்து வரவில்லை,அது ஏன் என்று தெரியவில்லை. நான் விவேகானந்தரை பின்பற்றுபவன் என்பது அங்குள்ள அனைவருக்கும் தெரியும்.அது மட்டுமல்ல ஏற்கனவே மடங்களில் வசித்தவன் என்பதும் தெரியும். அங்கு பணியாற்றும்போது மற்றவர்கள் என்னை அவர்களில் ஒருவனாகவே பார்த்தார்கள்.அவர்களின் வீடுகளுக்கு சென்றிருக்கிறேன்,அவர்களோடு உணவருந்தியிருக்கிறேன்.நான் அவர்களை எனது நெருங்கிய உறவினர்களாக பார்த்தேன்,அவர்களும் அவ்வாறே பார்த்தார்கள்,பழகினார்கள்.இன்னும் சொல்வதானால் என்னை அதிகம் நம்பிக்கைக்கு உரியவாகவே கண்டார்கள்.

-

நாம் நமது மதத்தில் தீவிரமாக இருந்துகொண்டு, இதேபோல் முஸ்லீம்களுடன் நெருக்கமாக சேர்ந்து வாழ முடியுமா என்பதுதான் கேள்வி. 

-

பெரும்பாலும் மதப்பிரச்சிகைள் ஏன் ஏற்படுகிறது என்றால் நாம் நமது மதத்தை தீவிரமாக பின்பற்றுவது இல்லை. ஏதோ அரைகுறையாக தெரிந்துவைத்துக்கொண்டு, பிறரை வெறுக்க கற்றுக்கொண்டுள்ளோம். இந்தியாவின் மதப்பிரச்சனையை தீர்க்க வேண்டுமானால் இந்துக்கள் அனைவரும் இந்துமதத்தில் இன்னும் ஆழமாக செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் ஆன்மீகவாதிகளாகமாறவேண்டும்.

-

முஸ்லீம்கள் எண்ணிக்கையில் அதிகமானால் இந்தியாவில் இந்துமதம் அழிந்துவிடும் என்ற கருத்து உண்மைதான்.பாகிஸ்தானில் இதைதான் நாம் பார்த்தோம். இதற்கு தீர்வு என்ன?

-

ஆன்மீகத்திற்கு ஒரு வலிமை உண்டு. தீவிரவாதத்தை அது அழித்துவிடும். இந்தியாவில் ஆன்மீக கருத்துக்கள் அதிகமாக பின்பற்றப்படும்போது,அதை எதிர்க்கும் தீவிரவாத கருத்துக்கள், அது எந்தமதத்தில் இருந்தாலும் சரி அவைகள் அழிந்துகொண்டே வரும். ஏதாவது ஒரு மதம் தீவிரவாதத்தை போதித்தால்,தீவிரவாதிகளுடன் சேர்ந்து அந்த மதமும் அழிந்துவிடும்.ஆகவே இந்தியாவில் தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட ஆன்மீகத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் நான் கண்ட முடிவு.

-

-

நான் கற்றுக்கொண்டது என்ன? கடைசி பகுதி

-

வாழ்க்கையில் எது நமக்கு தேவை என்று நினைக்கிறோமோ அது அப்போது கிடைப்பதில்லை. எப்போது அது தேவையில்லையோ அப்போது அது நம்மிடம் வருகிறது. இதை எல்லோரும் அனுபவித்திருப்போம்.

-

சுவாமி விவேகானந்தர் பிரபலமாவதற்கு முன் இந்தியாவில் பிச்சையேற்று வாழ்ந்தார். ஒரு சமயம் அவர் படித்தவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தார். பல மணிநேரமாக பேசிக்கொண்டே இருந்தார்.பசியால் வேதனை ஒருபக்கம் இருந்தது. தமது திறமையை மதித்து யாராவது உணவு தருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்திருக்கலாம்.இது எனது எண்ணம். ஆனால் அவரது பேச்சை கேட்டு மெய்மறந்து போனார்களே தவிர யாரும் அவருக்கு உணவுகொடுக்க வேண்டும் என்று யோசிக்கவில்லை. முடிவில் எல்லோரும் கலைந்து சென்றுவிட்டார்கள். வேதனையுடன் அவர் அமர்ந்திருக்கும்போது ஒரு ஏழை உணவை கொண்டுவந்துகொடுத்தார். 

-

சுவாமிஜி நீங்கள் பலமணி நேரம் எதுவும் உண்ணாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தனை பார்த்தேன் எனது மனம் தாங்கவில்லை.நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடியாத அறிவற்றவன் நான்.உங்கள் பேச்சை கேட்டு பயன்பெற்ற படித்தவர்கள் யாராவது உணவு தருவார்கள் என நினைத்தேன் அவர்கள் அதைபற்றி கவலைப்படாமல் கலைந்துசென்றுவிட்டார்கள். அதனால்தான் நான் இந்த எளியை உணவை கொண்டு வந்தேன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றான்.

-

இந்த சம்பவத்தை நினைத்துப் பாருங்கள். இதில் யாரை கடவுள் விரும்புவார்? சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பிரபலமாவதற்கு முன்பு அவர் கடும் குளிரில் தங்குவதற்கு இடம் இல்லாமல் ரயில் நிலையத்தில் பழையபொருட்கள் வைக்கும் இடத்தில் படுத்துக்கொண்டார்.அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவரை கேலி செய்தார்கள்.ஹோட்டலுக்குள் அவரைவிட மறுத்தார்கள். சிகாகோ சொற்பொழிவில் பிரபலமான பின் அமெரிக்காவின் அனைத்து வீடுகளும் அவருக்காக திறந்திருந்தன.அவரை தங்கள் வீட்டில் தங்க வைப்பதை பெருமையாக நினைத்தார்கள். விவேகானந்தருடைய பெயர் மட்டுமல்ல அவர் யாருடன் தங்கியிருக்கிறார் என்ற பெயரும் பத்திரிக்கையில் வரும் அல்லவா அதற்காகத்தான், அவரை தங்கள்வீட்டில் தங்க வைத்தார்கள்.

-

இது தான் மனிதனின் மனநிலை. ஒருவன் புகழ் அடையும்போது அவனுடன் சேர்ந்துகொள்ள பலர் முன்வருவார்கள்.யாருமே இல்லாத நிலையில் உதவ முன்வருபவன்தான் உண்மையான மனிதன்.கடவுளின் பார்வை அவன்மேல்தான் விழும்.

-

இவையெல்லாம் சோதனைகள். ஒருவனின் தன்னம்பிக்கை சோதித்து பார்க்கப்படுகிறது.இறைவனை அடைவதற்கு முன்பு ஒருவன் அனைத்தையும் இழக்கவேண்டிவரும். தனக்கென்று எதுவுமே இல்லை. தனக்கென்று யாருமே இல்லை.எனது உடம்பு, மனம் இதுகூட எனக்கு உதவவில்லை என்ற நிலையை அவன் அடையவேண்டிவரும். இதன் பிறகு தான் கடவுள் வருகிறார். கடவுளின் காட்சி கிடைத்தபிறகு இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லாம்  அவனை சூழ்ந்துகொள்வார்கள். உலகில் உள்ள செல்வம் எல்லாம் அவனது காலடியில் கொட்டிக்கிடக்கும். அதிகார வர்க்கத்தினர் ஏவலர்களாக கைகட்டி நிற்பார்கள். இவையெல்லாம் எனக்கு தேவையில்லை. என்னை தனிமையில் விட்டுவிடுங்கள். உங்கள் நட்பு.செல்வம், புகழ் எல்லாம் கடவுள் காட்சி தொடர்ந்து கிடைப்பதில் தடையாக இருக்கிறது என்று அவன் எவ்வளவு கூறினாலும் அவைகள் அவனை விடுவதில்லை

-

சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். நான் புகழின் உச்சத்தை அடைந்தநாளை நினைத்து வேதனைப்படுகிறேன். யாரும் அறியாமல்.எதையும் எதிர்பாராமல் மிதந்துசென்று நாட்கள்தான் இனிமையானவை என்கிறார். புகழ் மனிதனின் புனிதத்தை சுரண்டும் திருடன். எந்த அளவு மனிதன் புகழை அடைகிறானோ அந்த அளவுக்கு அவனது புனிதம் சோதனைக்கு உள்ளாகிறது. தன்னை தூய்மையாக வைத்துக்கொள்ள அவன் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.

-

நாம் எதற்காக இந்த உலக மக்களுக்காக பாடுபடவேண்டும்? இறைக்காட்சி கிடைக்கும்போது இவைகள் எல்லாம் ஒரு கனவுபோல் மாறிவிடும். இந்த கனவுக்குள்  தொடர்ந்து இருப்பதால்,அது இறைக்காட்சிக்கு தடையாக இருக்கும். ஒரு மனிதன் கடவுளைக்காணும் போது அதில் தொடர்ந்து இருக்கவிரும்புவானா அல்லது கடவுளைவிட்டு விட்டு இந்த கனவுலகில் வாழ நினைப்பானா?மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். உதவ வேண்டும் என்பதெல்லாம் அந்த இறைவனை அடைவதுவரைதான்.இந்த செயல்கள் நாம் இந்த உலகத்தில் இறுக பற்றிக்கொண்டிருக்கும் பிடியை அடித்து நொறுக்குகிறது. கடைசியில் இந்த உலகத்தில் உள்ள எதுவுமே வேண்டாம் என்று விட்டுவிடும்படி இயற்கை வற்புறுத்தும்,இந்த உலகத்தை மட்டுமல்ல அதனுடன் சார்ந்த இந்த உடலையும்,உடலுடன் சார்ந்த மனத்தையும் எல்லாவற்றையும்,விட்டுவிட வேண்டும். அதன் பின் ஒளிவருகிறது

-

ஒளி வந்த பிறகு, மீண்டும் இந்த கனவு காண யார் விரும்புவார்? மனிதன் இருந்தால் என்ன இறந்தால் என்ன? நாடுகள் இருந்தால் என்ன அழிந்தால் என்ன?, இந்த பிரபஞ்சம் இருந்தால் என் அழிந்தால் என்ன? எல்லாம் கனவுதானே.

-

ஞானம் பெற்றவன் இந்த மனநிலையில்தான் இருப்பான். கடைசில் இந்த கனவை உருவாக்கி அதை நடத்திக்கொண்டிருப்பவனே நான்தான் என்ற நிலை வந்துவிடும். அவன் வெறும் சாட்சியாக ,கனவை காண்பவனாக மாறிவிடுவான். நாம் கனவு காணும்போது அந்த கனவை உருவாக்கியது யார்? நாம் தான் அதில் வரும் மற்றவர்களை உருவாக்கியது யார்? அதுவும் நாம்தான். அந்த கனவை நாம் உருவாக்கினாலும் அதில் நமக்கென்று ஒரு கதாபாத்திரமும் இருக்கும். உதாரணமாக புலியை நாம் உருவாக்கியிருப்போம்,நம்மைபோன்ற ஒருவனையும் உருவாக்கியிருப்போம்.  பின்பு புலியை கண்டு நாமே  ஓடிக்கொண்டிருப்போம். கனவு கலையும் போது புலியும் இருக்காது, புலியை கண்டு ஓடிய நாமும் இருக்க மாட்டோம்

-

இறைவன் காணும் கனவுதான் இந்த உலகம். அவரே அனைத்துமாக இருக்கிறார். எதற்காக இந்த கனவு இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்,இந்த கனவிலிருந்து விழித்தபின் கிடைக்கும்.அப்போது கனவும் இருக்காது,கனவு காண்பவரும் இருக்கமாட்டார்.எல்லாம் ஒன்றாகிவிடும்.

தத்துவமஸி.அஹம் பிரம்மாஸ்மி

-

எனது அனுபவம் முற்றும்

image81

Contact Me

Questions or Comments

Send me a message or ask me a question using this form. I will do my best to get back to you soon!