²õ£ñ¤ õ¤«õè£ùï¢îó¤ù¢ õö¤ò¤ô¢ Þñîî àôèñ¢ º¿õ¶ñ¢ ðóð¢¹õîø¢è£ù ðí¤ ïìªè£í¢®¼è¢è¤ø¶
சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகளின் தொகுப்பு நம்பிக்கையும் வலிமையும் 1.நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லா விட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை. 2. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். 3. இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே . ஏனெனில் நீ வரம் பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும் இடமும்கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ. 4. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே, நீங்களா பாவிகள்! அப்படி மனிதனை அழைப்பது தான் பாவம். அது மனித இயல்பின் மீதே சுமத்தப்படும் பழிச்சொல்லாகும். ஓ சிங்கங்களே எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித்தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள் சுதந்திர ஆன்மாக்கள் அழியாத திருவருளைப் பெற்றவர்கள். 5.போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே. பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகிவிடாது. எனவே இந்தக் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய். 6.பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். மக்களுக்கு ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்றிப் போதிப்பாயாக. 7.வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும் பெரும் மனவுறுதி யையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவேன். எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும் என்று சொல்கிறான் . அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய். 8. இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவதில்லையா? தாரைகளும் தப்பட்டைப் பறைகளும் இந்தியாவில் கிடைக்காமலா போய்விட்டன? இத்தகைய கருவிகளின் பெருமுழக்கத்தை, நமது குழந்தை களைக் கேட்கச் செய். பெண்களாக்கும் மென்மை மிக்க இசைகளைக் குழந்தைப் பருவம் முதலே கேட்டுக் கேட்டு, இந்த நாடே கிட்டத்தட்டப் பெண்கள் நிறைந்த சமுதாயாக மாற்றப்பட்டிருக்கிறது. 9.அறியாமை மிக்க , உயிரற்ற புல் பூண்டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமே மேலானது. தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதைவிடப் போர்க்களத்தில் மாய்வதே மேல். 10. சகோதரா, நீ அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கில்லை நீ அழுவ தேன் சகோதரா? துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா நீ ஏன் அழ வேண்டும் மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன் மாவில் நிலைத்திரு. 11.மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே . நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும். இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் விஷயத்தைப் பொருட்படுத்தாதிருந்தால் , பாம்பின் விஷம்கூடச் சக்தியற்றதாகி விடும். 12.ஒரு சமயம் நான் காசியில் இருந்த போது ஒரு பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தேன். அந்தப் பாதையின் ஒரு புறம் நீர் நிறைந்த ஒரு பெரிய குளமும், மறு புறம் உயர்ந்த சுவரும் எழுப்பப்பட்டிருந்தன. அந்த இடத்தில் பல குரங்குகள் இருந்தன. காசியைச் சேர்ந்த குரங்குகள் மிகவும் பொல்லாதவை. சில சமயங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடியவை. அவை தங்கள் பாதையில் என்னைச் செல்ல விடக்கூடாது என்று நினைத்தன போலும்! எனவே நான் செல்லச் செல்ல அவை கிறீச்சிட்டுப் பெரும் சப்தமிட்ட படி என் கால்களைப் பற்றின. அவை நெருங்க நெருங்க நான் ஓட ஆரம்பித்தேன். ஆனால் நான் ஓட ஓட அவையும் பின் தொடர்ந்து ஓடிவந்து என்னைக் கடித்தன. அந்தக் குரங்குகளிடமிருந்து தப்பவே வழியில்லை என்று எனக்குப்பட்டது. ஆனால் அப்போது முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை வழியில் சந்தித்தேன். அவர் என்னைநோக்கி , குரங்குகளை எதிர்த்து நில் என்று கூறினார். நான் திரும்பிக் குரங்குகளை எதிர்த்து நின்றேன். அவை பின்வாங்கி முடிவில் ஓடியேமறைந்தன. இதுவே வாழ்க்கை முழுவதற்கும் படிப்பினையாகும். பயங்கரத்தை எதிர்த்து நில் அஞ்சாமல் அதை எதிர்த்து நில். 2.மனதின் ஆற்றல்கள். 13.ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்துவிடு வெற்றிக்கு இதுதான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவான்களாக விரும்பினால் மற்றவர்களையும் பாக்கியவான்களாக்க விரும்பினால் நம்முள் நாம் மேலும் ஆழ்ந்து சென்றாக வேண்டும். 14. ஒருமுகப்படுத்தும் இந்த ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன் மனதை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால் மேலும் சிறப்பாகச் செருப்புக்களுக்கு மெருகு பூசுவான். மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில்உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல் , ஒரே தட்டுதல் இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது. 15. பிரம்மசரியம்தான் எல்லா ஒழுக்கங்களுக்கும் , எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்குமாகக் கீழே இழுத்துச் சென்றுவிடும் நம்மைப் பிளந்துவிடும். அழிந்துவிடும். ஆனால் அடக்கப்பட்டுச் சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமோ நம்மைக் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலை பெறச் செய்யும். 16.சிந்தனையின் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கபடுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ ஒரு போதும் தவறு செய்வதில்லை. 17. நல்ல எண்ணங்கள் தீய எண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வென்றும் தனித்தனியே வலிமை மிக்க ஆற்றலைப்பெற்றிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் அவை நிறைந்திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்து இருந்து வருவதனால் அந்த எண்ணங்கள் செயலுக்குவரும் வரையில் அவை கருத்து வடிவில் இருக்கின்றன. உதாரணமாக, மனிதனின் கையிலுள்ள ஆற்றல், அவன் ஓர் அடிஅடிக்கும் வரையிலும் , அவன் அந்த ஆற்றலுக்குச் செயல் வடிவு தரும் வரையிலும் மறைந்திருக்கிறது. நாம் நல்ல தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம் . நாம் நம்மைத் தூய்மைப்படுத்தி நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொண்டால் அவை நம்முள் நுழைகின்றன. நல்ல ஆன்மா தீய எண்ணங்களை எளிதில் ஏற்ப தில்லை. 3.மனிதன் தனது விதியைத் தானே அமைக்கிறான. 18.நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ. அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால் எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை . எனவே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 19.மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளை எல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய், பிசாசு என்று கற்பித்துக்கொண்டு,அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள். விதி என்னால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே அதன் பொருட்டுத்தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டு வதற்கும் ஒருவருமில்லை. 20. உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்த தைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது.உன்னுடைய ஒவ்வொரு சொல்லும் சிந்தனையும் செயலும், அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும் செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்ல எண்ணங்களும் செயல்களும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன என்னும் ஊக்கம் தரும் நம்பிக்கையும் இருக்கிறது. இதை நீ எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். 21.ஏன் எதற்கு? என்று ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது நமது வேலையன்று, மாறாக செயலில் ஈடுபட்டுச் செத்து மடிவது ஒன்று தான் நமது கடன் . மகத்தான காரியங்களைச் செய்வதற்காக ஆண்டவன் நம் மைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றும் அவற்றை நாம் செய்து முடிப்போம் என்றும் உறுதியாக நம்பு. 22.துரதிர்ஷ்டவசமாக இந்த வாழ்க்கையில் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் எந்த விதமான ஓர் உயர்ந்த இலட்சியமும் இல்லாமல், இருளடைந்த இந்த வாழ்க்கையில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த இலட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால் இலட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான் உறுதி யாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் இலட்சியத்தைக் கொண்டிருப்பது மேலானது. 23. நமது வாழ்க்கை சிறந்ததாகவும் தூய்மையுடையதாகவும் இருந்தால் மட்டும்தான் உலகமும் சிறப்பும் தூய்மையும் பெற்றதாக இருக்க முடியும். அது காரியம்; நாம் அதை விளைவிக்கும் காரணம் எனவே நம்மை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோமாக நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக் கொள்வோமாக. 24.சண்டையிடுவதிலும் குறை சொல்லிக்கொண்டிருப்பதிலும் என்ன பயன் இருக்கிறது? நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை. தான் செய்ய வேண்டிய கடமையாக அமையும் சிறிய அற்பமான வேலைகளுக்கு முணுமுணுப்பவன் எல்லாவற்றுக்கும் முணுமுணுக்கவே செய்வான். எப்போதும் முணுமுணுத்தபடியே அவன் துன்பம் பொருந்திய வாழ்க்கை வாழ்வான். அவன் தொடுவது எல்லாமே தோல்வியில் முடியும். ஆனால் தன் கடமைகளைத் தவறாமல் ஒழுங்காகச் செய்துகொண்டு தன்னால் ஆனவரை வாழ்க்கையில் முயன்று கொண்டிருப்பவன் கட்டாயம் ஒளியைக் காண்பான். மேலும் மேலும் உயர்ந்த கடமைகள் அவனது பங்காக அவனைத் தேடித் தாமாகவந்து சேரும். 25.தூய்மை பொறுமை விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். தன்னுடைய சொந்த சுக வசதிகளை மட்டும் கவனித்துக்கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்திலுங்கூட இடம் கிடைக்காது. 26.பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் , அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். வேறு எந்தச் சக்தியாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு முறை நீ அவற்றை இயங்கச் செய்து விட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நீனைவில் வைத்துக் கொண்டால் , தீய செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத் தடுத்து நிறுத்தும். 27.மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான்? பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா? நீ உன்னுடைய எண்ணங்களையும் சொற்களையும் முற்றிலும் ஒன்றாக இருக்கும்படிச் செய்தால் , அதைச் செய்ய உன்னால் இயலுமானால், பணம் தண்ணீரைப் போலத் தானாக உனது காலடியில் வந்து கொட்டும். 28. இந்தப் பிரபஞ்சத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதை தான் மிகவும் கரடுமுரடாகவும் செங்குத்தானதாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் இத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கிறார்களே என்பதுதான் வியப்புக்கு உரிய விஷயம் . பல பேர் தோல்வி அடைந்து விழுந்து போனதில் ஆச்சரியமே இல்லை. ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும். 29. ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு, பிறகு கடைசியில் ஏற்றுக்கொள்ளப்படுதல். தனது காலத்தை விட்டு முற்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுவான். எனவே எதிர்ப்பும் அடக்கு முறையும் வரவேற்கத்தக்கவையே. ஆனால் நான் மட்டும் உறுதியாகவும், தூய்மையாகவும், கடவுளிடம் அளவு கடந்த நம்பிக்கை உடையவனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த இடைஞ்சல்கள் எல்லாம் மறைந்து போய்விடும். 4. கல்வியும் சமுதாயமும் 30. பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி அதைக் கல்வி என்று சொல்வது பொருத்தமா? எத்தகைய கல்வி தன்னம் பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால் களில் நிற்கும்படி செய்கிறதோ, அது தான் உண்மையான கல்வியாகும். வாழ்க்கையை உருவாக்கக் கூடிய, மனிதனை மனிதனாக்கக் கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக் கூடிய கருத்துக் களைக் கிரகித்து அவற்றை நாம் நம்முடையவை யாக்கிக் கொள்ள வேண்டும். நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துக்களைக் கிரகித்துக்கொண்டு அவற்றை நீ உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனை விட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய். 31.ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை. பண்டைக் காலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மசரிய முறை இந்த நாளில் மறைந்து போனது தான் இதற்குக் காரணம். முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள் பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும். எப்போது முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். அதன் பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும். 32. கல்வி கல்வி கல்வி ஒன்றே இப்போது நமக்குத் தேவை ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு நான் பிரயாணம் செய்திருக்கிறேன். அங்கே சாதாரண ஏழை எளிய மக்களுக்குக்கூடக் கிடைத்திருக்கும் வாழ்க்கை வசதிகளையும் கல்வியையும் நான் கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நமதுநாட்டு ஏழை எளிய மக்களின் பரிதாப நிலையை நினைத்து நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறு பாட்டிற்கும் என்ன காரணம்! கல்வி என் பதுதான் எனக்குகே கிடைத்த விடை. 33. நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது . அதாவது எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தை இல்லாமல் இருப்பது. இந்த நோயை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள் மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும். 34. தாழ்ந்த நிலையிலுள்ள நம்முடைய மக்களுக்குக் கல்வியைத் தந்து இழந்து விட்ட தங்களின் உயர்ந்த நிலையை அவர்கள் வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். இதுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய ஒரே சேவையாகும்... உயர்ந்த கருத்துக்களை அவர்களுக்குக் கொடுங்கள் அந்த ஒரே ஒரு உதவி தான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பிறகு அதன் விளைவாக மற்ற நன்மைகள் எல்லாம் வந்து சேரும். இரசாயனப் பொருள்களை ஒன்றுசேர்த்து வைப்பதுதான் நமது கடமை பின்பு அவை இயற்க்கையின் விதியையொட்டித் தாமாகவே படிகங்களாக மாறிவிடும் இப்போது மலை முகமதுவிடம் செல்லாவிட்டால், முகமதுதான் மலையிடம் செல்ல வேண்டும். ஏழைப் பையன் கல்வியை நாடி வர முடியாவிட்டால், கல்வி தான் அவனை நாடிப்போக வேண்டும். 35. எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை. 36.மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும் பிரம்மசரியமும் வாழ்க்கையின் அடிப்படை இலட்சியங்களாக நமக்குத் தேவைப்படுகின்றன. எல்லா விதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் சொல்கிறது. இந்த அறிவு ஒரு சிறு வனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும். மதம் தான் எல்லாவற்றிற்கும் உயிர் நாடி. சமய வாழ்க்கை சோறு போன்றது. மற்றவை எல்லாமே கறி, கூட்டுப் போன்றவை. கறி, கூட்டு வகைகளை மட்டும் உண்பதனால் அஜீர்ணம் ஏற்படு கிறது. அப்படியே சோற்றை மட்டுமே சாப்பிட்டாலும் அஜீர்ணம் ஏற்படும். 37.பிரம்மசரியத்தை உறுதியாக அனுஷ்டிக்கிற ஒரே ஒரு காரணத்தாலேயே எல்லா விதமான கல்வியறிவையும் மிகக் குறுகிய காலத்தில் கற்றுத்தேர்ச்சி பெற்றுவிட முடியும். அத்தகையவன் ஒரே ஒரு முறை தான் கேட்டதையும் அறிவதையும் மறவாமல் நினைவில் வைத்துக் கொள்கிறான். இப்படிப்பட்ட பிரம்மசரியம் நம் நாட்டில் இல்லாமல் போனதனால் தான் எல்லாமே இன்று அழிந்து போகும் நிலையில் இருக்கின்றன. 38. கற்பு நிலையிலிருந்து வழுவுவதுதான் ஒரு நாட்டின் அழிவிற்கு முதல் அறிகுறி என்பதை வரலாற்றில் நீ பார்க்கவில்லையா? கற்புத் தவறுதல் என்ற கேடு சமுதாயத்தில் நுழையும்பொழுது அந்த இனத்திற்கு முடிவுக் காலம் நெருங்குவது தெளிவாகிவிடுகிறது. 39.ஒரு கொள்கையை எடுத்துக் கொள். அதற்காகவே உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக்கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். 40.அன்பு நேர்மை , பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை அன்புதான் வாழ்க்கை ஆகும். எல்லா விதமான சுயநலமும் மரணம் தான். இந்த உண்மை இம்மை மறுமை யாகிய இரண்டு உலகங்களுக்கும் பொருந்தும் நன்மை செய்துகொண்டிருப்பது தான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமலிருப்பதுதான் மரணம். இப்போது நாம் பார்க்கிற மக்களில் தொண்ணூறு சதவீதம் இறந்துபோனவர்கள். அவர்கள் பிசாசுகள் தாம். எனது அருமைக் குழந்தைகளே அன்பு செலுத்துபவர்களைத் தவிர வேறு யாரையும் வாழ்வதாகக் கருத முடியாது. 41. மேலை நாடுகளிலுள்ள சமுதாய வாழ்க்கை முறை கணீரென்று சிரிப்பதைப் போன்றதாகும். ஆனால் அதன் அடியில் அழுகையும் புலம்பலும் மறைந்திருக்கின்றன. அதன் முடிவும் தேம்பி யழுவதாகவே அமையப் போகிறது. மேற்புறத்தில் மட்டுமே வேடிக்கையும் விளையாட்டும் அங்குக் காணப்படுகின்றன. ஆனால் உண்மையில் அளவில்லாத துயரமே அதில் நிறைந்திருக்கிறது. மாறாக இந்த நாட்டிலோ வெளிப்படையாக இருளும் துயரமும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் அடியில் கவலையின்மையும் மகிழ்ச்சியும் மறைந்திருக்கின்றன. 5. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு 42.ஒரு காரியத்தின் பயனில் கருத்தைச் செலுத்துமளவிற்கு அந்தக் காரியத்தைச் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். இது என்னுடைய வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்களுள் ஒன்றாகும் இந்த ஒரு பாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன் குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில் வெற்றிக்கு உரிய எல்லா இரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. 43. நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை பிறருக்கு உதவி புரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான். நாம் ஏன் உலகிற்கு நன்மை செய்ய வேண்டும்? மேலோட்டமாகப் பார்த்ததால் உலகிற்கு நன்மை செய்வதாகத் தோன்றும். ஆனால் உலகிற்கு நன்மை செய்வதனால், உண்மையில் நமக்கு நாமே தான் உதவி செய்துகொள்கிறோம். உயர்ந்த பீடத்தில் நின்று உனது கையில் ஐந்து காசுகளை எடுத்துக்கொண்டு, ஏ பிச்சைக்காரா! இதை வாங்கிக்கொள் என்று நீ சொல்லாதே மாறாக அவனுக்குக் கொடுப்பதனால் உனக்கு நீயே உதவி புரிந்துகொள்ள முடிந்ததை நினைத்து அந்த ஏழை அங்கு இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு கொடுப்பவன் தான் பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல. இந்த உலகில் உன்னுடைய தர்ம சிந்தனையையும் இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்திருப்பதற்காக நீ நன்றியுள்ளவனாக இரு. இதன் மூலம் தூய்மையும் பரிபூரணத் தன்மையும் உன்னை வந்தடையும். 44. தீமையைச் செய்வதனால் நாம் நமக்கு மற்றவர்களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்துகொள்கிறோம். கர்மயோகத்தின் விதியின்படி ஒருவன் செய்த ஒரு கர்மத்தை, அது தனக்கு உரிய பலனை விளைவித்து முடிக்கும் வரையிலும் அழிக்க முடியாது. கருமம் தனக்கு உரிய பலனை விளைப்பதை இயற்கையிலுள்ள எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. நான் ஒரு தீய செயலைச் செய்தால், அதற்கு உரிய துன்பத்தை நான் அனுபவித்தே ஆகவேண்டும். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் இதைத் தடுக்கவும் முடியாது; நிறுத்தி வைக்கவும் முடியாது. அதேபோல நான் ஒரு நல்ல காரியத்தைச் செய்தால் அது தனக்கு உரிய நல்ல பலனை விளைவிப்பதைப் பிர பஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது, 45. நான் அல்லேன் , நீயே என்னும் இந்த மனப்பான்மைதான் எல்லா நன்மைகளுக்கும் எல்லாச் சிறந்த ஒழுக்கங்களுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. இருப்பது சொர்க்கமா நரகமா என்று யார் இங்கே கவலைப்படுகிறார்கள்? ஆத்மா என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்று யார் கவலைப்படுகிறார்கள்? மாறாத ஒன்று இருக்கிறதா இல்லையா என்று யார் கவலைப்படுகிறார்கள்? இதோ, இங்குள்ள உலகில் துன்பம் நிறைந்திருக்கிறது. புத்தர் பெருமான் செய்ததைப்போல இந்தத் துன்பத்தைக் குறைப்பதற்கு முயற்சி செய். அல்லது அந்த முயற்சியிலேயே உயிரை விட்டுவிடு. நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி ஆக்ஞேயவாதியாக இருந்தாலும் சரி, அல்லது வேதாந்தியாக இருந்தாலும் சரி; கிறிஸ்தவனாக இருந்தாலும் சரி , அல்லது இஸ்லாமியனாக இருந்தாலும் சரி , உன்னுடைய சுக துக்கங்களை மறந்து நீ வேலை செய். இதுதான் நீ இப்போது கற்றுக்கொள்ள வேண்டிய முதற் பாடமாகும். 46. எந்தவிதமான சுயநல நோக்கமும் இல்லாமல் பணம் புகழ் மற்றும் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொண்டு செய்பவன் தான் சிறப்பாகப் பணியாற்றுகிறான். இத்தகைய மனநிலையில் ஒருவன் பணியாற்ற வல்லவனாகும்போது, அவன் ஒரு புத்த பகவான் ஆகிவிடுவான். உலகத்தையே மாற்றி அமைக்கக்கூடிய வகையில் வேலை செய்யும் சக்தி அத்தகையவனிடமிருந்து வெளிப்படுகிறது. 47.உன்னால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவை தான் செய்ய முடியும். கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய். உனக்கு அப்படித் தொண்டு செய்யும் பாக்கியம் இருந்தால் அவர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் ஆண்டவனுக்கே நீ தொண்டு செய்தவனாகிறாய் தனது குழந்தைகளில் யாரேனும் ஒரு வருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய். ஆனால் அது காரணமாக உன்னைப்பற்றி நீ மிகவும் பெருமையாக நினைத்துக் கொள்ளாதே மற்றவர்களுக்குக் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு உனக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் நீ பாக்கியசாலி ஆகிறாய். எனவே நீ செய்யும் இந்தச் சேவையைக் கடவுள் வழிபாடாகவே செய். 48.கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிரத் தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்துகொண்டிருக்கிறேன் மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான். 49.உலகமாகிய இந்த நரகத்தில் ஒருவனால் ஒரே ஒரு நாளைக்காகிலும் ஒரே ஒருவனுடைய இதயத்திற்குச் சிறிது இன்பமும் மகிழ்ச்சியும் அளிக்க முடியுமானால் அந்த ஒன்றே ஒன்று மட்டும்தான் உண்மையாகும். இந்த உண்மையை வாழ்நாளெல்லாம் பட்ட கஷ்டங்களுக்குப் பிறகு நான் உணர்ந்துகொண்டேன். மற்றவை எல்லாம் பொருளற்ற வெறும் பகற்கனவுகள் என்று தான் சொல்லவேண்டும். 50. உலகிற்கு யார் ஒளிதரப் போகிறார்கள்? பண்டைக் காலத்தில் தியாகம் தான் வாழ்க்கைக்கு உரிய விதியாக இருந்தது. இனி வரப்போகும் பல கோடி நூற்றாண்டுகளுக்கும் இந்த விதி அப்படியே தான் இருக்கப் போகிறது. பலரின் நன்மைக்காக, அனைவரின் சுகத்திற்காக, உலகில் தைரியமும் சிறப்பும் பெருமளவில் பெற்றிருப்பவர்கள் தங்களைத் தியாகம் செய்துகொண்டுதான் ஆகவேண்டும். என்றென்றும் நிலைத்த மாறாத அன்பும் கருணையும் பொருந்திய பல நூறு புத்தபிரான்கள் இப்போது தேவைப்படுகிறார்கள். 51.தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக்கொள்வதில் நமது சக்தியைச் சிதற விடாமல், அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்க பூர்வமான பணிகளில் நாம் ஈடுபடுவோமாக. யார் ஒருவர் எதைப் பெறுவதற்குத் தகதி உடைய வராக இருக்கிறாரோ, அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் முடியாது. இந்தக் கருத்தை நான் மனப் பூர்வமாக நம்புகிறேன். கடந்த காலம் மிகவும் பெருமைக்கு உரியதாக இருந்தது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் எதிர்காலம் மேலும் சிறப்பாக அமையப்போகிறது என்பதை நான் முழுமனதுடன் நம்புகிறேன். 52. மோகமாகிய முதலையின் வாயில் மக்கள் எப்படிப் பரிதாபமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள் அந்தோ! இதயத்தைப் பிளக்கக் கூடிய அவர்களின் சோகக் குரலை கேளுங்கள் முன்னேறிச் செல்லுங்கள்! கட்டுண்டு கிடக்கும் மக்களைப் பந்த பாசங்களிலிருந்து விடுவிப்பதற்காகவும் எளியவர்களின் துன்பச் சுமையைக் குறைப்பதற்காகவும் அறியாமையில் மூழ்கியிருக்கும் இருண்ட கிணறுகள் போன்ற உள்ளங்களை ஒளி பெறச் செய்வதற்காகவும் ஏ வீரர்களே முன்னேறிச் செல்லுங்கள்! அஞ்சாதே அஞ்சாதே என்று வேதாந்த முரசு முழங்கிக் கொண்டிருப்பதைக் கேளுங்கள். 53. தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான் . சிவபெருமானை விக்கிரகத்தில் மட்டும் காண்பவனுடைய வழிபாடு ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. 54. கிராமம் கிராமமாகச் சென்று மனிதகுலத்திற்கும் பரந்த இந்த உலகத்திற்கும் நன்மை செய். மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கும் செல்ல வேண்டும். மரணம் வருவது இவ்வளவு உறுதியாக இருக்கும் போது நல்ல ஒரு காரியத்திற்காக உயிரை விடுவது மேல். 55.பெரியவர்கள் பெருந் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனித குலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை நீ உலக வரலாறு முழுவதிலும் காணலாம். உனது சொந்த முக்திக்காக எல்லாவற்றையும் நீ துறந்துவிட விரும்பினால் அது அவ்வளவு ஒன்றும் பாராட்டுவதற்கு உரியதில்லை. உலகத்தின் நன்மைக்காக உன் முக்தியையும் நீ தியாகம் செய்து விட விரும்புகிறாயா? அப்படி நீ செய்தால் கடவுளாகவே நீ ஆகிவிடுவாய். இதைச் சற்றுச் சிந்தித்துப் பார். 56.புனிதமான வாழ்க்கையின் விளைவாக எழும் உற்சாகத்தினால் எழுச்சி அடைந்தவர்கள்; கடவுளிடம் அழியாத நம்பிக்கை என்பதை அரணாகப் பெற்றவர்கள்; ஏழை எளியவர்களிடமும் தாழ்ந்தவர்களிடமும் ஒடுக்கப்பட்டவர்களிடமும் கொண்ட இரக்கம் காரணமாகச் சிங்கத்தைப் போன்ற தைரியம் அடைந்தவர்கள் இத்தகைய ஆண்களும் பெண்களும் நூறாயிரம் பேர் வேண்டும். இவர்கள் மோட்சம் பரோபகாரம், தாழ்ந்தவர்களின் முன்னேற்றம், சமூக சமத்துவம் ஆகிய இந்த உயர்ந்த கொள்கைகளைப் பிரசாரம் செய்தபடி இந்த நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைவரை செல்வார்கள் 57.என் மகனே ! உனக்கு எனது சொற்களின் பேரில் ஏதாவது மரியாதை இருக்குமானால் , முதலாவதாக உன்னுடைய அறையின் எல்லாக் கதவுகளையும் ஜன்னல் களையும் திறந்துவிடு. இதுவே நான் உனக்குத் தரும் முதல் அறிவுரையாகும். கீழ்நோக்கிச் சென்றபடியும் துன்பத்தில் மூழ்கியபடியும் ஏராளமான ஏழை மக்கள் நீ வாழும் பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீ அவர்களை அணுகிச் சென்று உன்னுடைய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் செலுத்தி அவர்களுக்கு தொண்டுசெய். நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்து வகைகளை வழங்க ஏற்பாடு செய். உன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தி அந்த நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்குக் கல்வியறிவைப் புகட்டு. என் மகனே நான் உனக்குச் சொல்கின்ற இந்த முறையில் உன்னுடைய சகோதரர்களாகிய மக்களுக்கு நீ தொண்டு செய்ய ஆரம்பிப்பாயானால் நிச்சயமாக உனக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கும் 58.அந்நாளில் நிலவிய தொண்டு மனப்பான்மை, கீழ்ப்படிதல் தன்னடக்கம் ஆகிய வீரனுக்கு உரிய பண்புகள் இன்று எங்கே போய்விட்டன? போருக்குச் செல்லும் வீரன் தன்னைத் தியாகம் செய்து கொள்கிறனேயன்றி, தனது நலத்தைக் கருதுவதில்லை. ஒருவன் மற்றவர்களுடைய இதயங்களின் மீதும் வாழ்க்கையின் மீதும் ஆணை செலுத்த வேண்டுமானால் முதலில் கட்டளைக்கு உட்பட்டு முன்னேறிச் சென்று தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். 59. பணம் படைத்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இருக்கிறார்களே, அவர்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டாம். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைவிட, செத்துப்போனவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். பணிவும் தாழ்மையும் கொண்டு, அதே சமயத்தில் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய உங்களிடம்தான் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள் திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால் ஆகப்போவதும் ஒன்றுமில்லை. துன்பத்தால் வாடுகிறவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். பிறகு உதவிக்காகக் கடவுளை நோக்குங்கள். உங்களுக்குத் தேவைப்படும் உதவி நிச்சயமாக வந்தே தீரும். ....... குளிராலோ பசியாலோ இந்த நாட்டிலேயே(அமெரிக்காவில்) நான் அழிந்து போக நேரலாம். ஆனால் இளைஞர்களே ஏழைகள், அறியாமை மிக்கவர்கள், நசுக்கப்பட்டவர்கள் ஆகியோருடைய நலனுக்காகப் போராடும் என்னுடைய இரக்கம், முயற்சி ஆகியவற்றை உங்களிடம் நான் ஒப்படைக்கிறேன். நாள்தோறும் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்த முப்பது கோடி மக்களின் நல்வாழ்வை மீட்டுத் தருவதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பதாகச் சபதம் மேற்கொள்ளுங்கள். 60.இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை . வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக உன்னை உருவாக்கிக் கொள். முதலில் உலக மக்களின் துன்பங்களைக் குறித்து நீ வருந்து..... வெறுப்பு உணர்ச்சியாலோ, பொறாமையாலோ, உன்னுடைய மனம் அலைக்கழிக்கப்படாமல் இருக்கிறதா என்று உன்னையே நீ கேட்டுக்கொள். உலகின் மீது வெறுப்புணர்ச்சி, கோபம் ஆகியவை அடுக்கடுக்காகச் சுமத்தப்பட்டு வருகின்றன. அது காரணமாக நல்ல காரியங்கள் தொடர்ந்து பலகாலமாக நிறைவேற்றப்படாமற் போயிருக்கின்றன. மாறாகத் தீமையே விளைவிக்கப்பட்டிருக்கிறது. நீ தூய்மை உள்ளவனாக இருந்தால் வலிமை உள்ளவனாக இருந்தால் நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய். 61.மற்றவர்களுடைய நன்மைக்காக என்னுடைய இந்த வாழ்க்கை அழிந்து போகிற அந்த நாளும் வருமா? இந்த உலகம் வெறும் குழந்தை விளையாட்டு அல்ல மற்றவர்களின் நன்மைக்காகத் தங்களுடைய இதயத்தின் இரத்தத்தைச் சிந்தி, பாதை அமைப்பவர்கள்தாம் பெரியோர்கள் ஆவார்கள். ஒருவர் தமது உடலைத் தந்து பாலம் ஒன்றை அமைக்கிறார். அந்தப் பாலத்தின் உதவியால் பல்லாயிரக் கணக்கான மக்கள் அந்த ஆற்றைக் கடந்துவிடுகிறார்கள். இப்படி நீண்ட நெடுங்காலமாக நடந்துகொண்டு வந்திருக்கிறது. இந்த முறை அப்படியே இருக்கட்டும் அப்படியே இன்றைக்கும் இருக்கட்டும். 6.மதமும் ஒழுக்கமும் 62. சுயநலம் சுயநலமின்மை என்பவற்றைத் தவிரக் கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. கடவுளுக்குத் தெரிந்த அளவுக்குச் சாத்தானுக்கும் எல்லாம் தெரியும், கடவுளுக்குச் சமமான ஆற்றல்கள் சாத்தானுக்கு உண்டு. ஆனால் தெய்விகத் தன்மை மட்டும்தான் அதனிடம் இல்லை. எனவே அது சாத்தானாகவே இருக்கிறது. இந்தக் கருத்தை நவீன உலகத்தோடு ஒப்பிட்டுப் பார். தெய்விகத் தன்மை இல்லாமல் பெறுகிற மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைச் சாத்தான்களாக்கி விடுகின்றன. 63.சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து தங்கத்தாலான அரண்மனையில் வாழ்ந்தபோதும் அறவே சுயநலம் இல்லா தவனாக இருக்கலாம். அப்போது அவன் கடவுளிடமே இருக்கிறான். மற்றொருவன் குடிசையில் வாழ்ந்து கந்தைத் துணியை உடுத்துபவனாக இருக்கலாம் . அவனுக்கு உலகின் செல்வம் எதுவுமே இல்லாமலிருக்கலாம். அப்படி இருந்தும் அவன் சுயநலம் உடையவனாக இருந்தால் அவன் இலௌகிகத்தில் ஒரேடியாக மூழ்கியவனே ஆவான். 64.இரசாயனமும் இயற்கை விஞ்ஞானமும் எப்படி இந்தப் பௌதிக உலகம் பற்றிய உண்மைகளைக் கையாள்கின்றனவோ, அதைப் போலவே மதம் அரிய தத்துவ உண்மைகளைக் கையாள்கிறது. ஒருவன் இரசாயனத்தைக் கற்க இயற்கை என்னும் புத்தகத்தைப் படிக்க வேண்டும். உன்னுடைய மனம், இதயம் ஆகியவைதாம் மதத்தைக் கற்பதற்கு நீ படிக்க வேண்டிய நூல்களாகும். ஞானி பெரும்பாலும் பௌதிக விஞ்ஞானம் பற்றித் தெரியாதவராக இருக்கிறார். ஏனென்றால், அவர் தமக்குள் இருக்கும் புத்தகத்தைப் படிக்ககிறார். அது பௌதிக விஞ்ஞானத்தைத் தெரிந்து கொள்வதற்குத் தவறான புத்தகமாகும். விஞ்ஞானியுங்கூடப் பெரும்பாலும் மதத்தைப் பற்றித் தெரியாதவராக இருக்கிறார். ஏனென்றால் அவருங்கூடத் தவறான புத்தகத்தையே படிக்கிறார்; அதாவது அவர் தமக்கு வெளியே உள்ள புத்தகத்தைப் படிக்கிறார். 65.நான் மதப்பற்று உள்ளவனாக இருக்க விரும்பினேன். இந்தத் தத்துவங்களை எல்லாம் அனுபவித்து அறிந்து கொள்ள விரும்பினேன். ஆனால் அவ்விதம் அவற்றை என்னால் அனுபவித்து அடைய முடியாமற் போய்விட்டது. ஆதலால் நான் எதையுமே நம்புவது கிடையாது என்று சொல்லுகிற பல மனிதர்களை நீ இந்த உலகிலே பார்க்கலாம். படித்தவர்களில் கூட இப்படிப்பட்டவர்கள் இருப்பதை நீ காணலாம். என் வாழ்நாள் முழுவதும் மதப்பற்று உள்ளவனாக இருப்பதற்கு நான் முயற்சி செய்தேன்; ஆனால் அதிலே ஒன்றுமில்லை என்று மக்களில் பலர் உன்னிடம் சொல்வார்கள். ஆனால் அதே சமயத்தில் நீ இந்த நிகழ்ச்சியையும் காண்பாய்; ஒருவர் இரசாயன சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு பெரிய விஞ்ஞானியாக இருக்கிறார். அவர் உன்னிடம் வந்து இரசாயனத்தைப் பற்றிச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நான் இரசாயன விஞ்ஞானியாக திகழ வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அப்படியிருந்தும் என் முயற்சியில் நான் ஒன்றும் வெற்றி பெற்ற தாகத் தெரியவில்லை. எனவே இரசாயனத்தைப் பற்றிய எதையும் நான் நம்புவதில்லை என்று நீ அவரிடம் சொல்வாயானால் அவர் உன்னைத் திருப்பி, எப்போது நீ முயற்சி செய்தாய் ? என்று கேட்பார். நான் தூங்கச் செல்லும் போது, ஓ இரசாயனமே! நீ என்னிடம் வா என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தேன் . அது என்னிடம் வரவே இல்லை என்று நீ சொல்வாய். இரசாயன விஞ்ஞானி உன்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு , அப்பனே ! இரசாயனத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு அது வழியே அல்ல நீ இரசாயனப் பரிசோதனைச்சாலைக்குச் சென்று எல்லா வகையான அமிலங்களையும் காரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு ஏன் அவ்வப்போது உன் கைகளைச் சுட்டுப் பொசுக்கிக் கொள்ளவில்லை? நீ அப்படிச் செய்திருந்தால் இரசாயணத்தைப் பற்றியஞானம் உனக்கு வந்திருக்கும் என்று சொல்லுவார் .மதம் சம்பந்தமாக அப்படிப்பட்ட பெரிய முயற்சியை நீ எடுத்துக்கொள்கிறாயா? ஒவ்வொரு துறைக்கும் அதைக் கற்பதற்கென்று ஒரு தனி வழிமுறை இருக்கிறது. அத்தகைய முறையில் தான் மதத்தையும் கற்கவேண்டும். 66.ஒரு மனிதன் மிகவும் அருமையான நடையில் சிறந்த கருத்துக்களைப் பற்றிய பேசுபவனாக இருக்கலாம் . ஆனால் அது மக்களைக் கவருவதாக இருக்காது. மற்றொருவன் பேச்சில் அழகிய மொழி கருத்து என்னும் இவற்றுள் எதுவும் இல்லாமலிருக்கலாம். ஆனால் அவனுடைய சொற்கள் கேட்பவர்களின் உள்ளங்களைக் கவர்கின்றன. அவனுடைய ஒவ்வொரு செயலும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இந்தச் சக்தி ஓஜஸ்ஸினால் வருவதாகும்... கற்பொழுக்கம் உடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே ஓஜஸ்ஸை மேலே எழுப்பி மூளையில் சேமித்து வைக்க முடியும் . ஆகையால் தான் பிரம்ம சரியம் எப்போதும் மிகவும் உயர்ந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டு வருகிறது. ஒருவன் பிரம்மசரியத்திலிருந்து தான் வழுவியதாக உணர்ந்தால் ஆன்மிகச் சக்தி அவனிடமிருந்து போய்விடுகிறது. அத்தகையவன் தன் மன உறுதியை இழந்து விடுகிறான். இதனால்தான் மகத்தான ஆன்மிக வலிமையைப் பெற்ற பெரியோர்களை உருவாக்கித் தந்த உலகிலுள்ள எல்லா மதச் சம்பிரதாயங்களும் பரிபூர்ணப் பிரம்மசரியத்தை எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கின்றன. 7.நமது தாய்நாடு 67. இந்தியா அழிந்துவிடுமா? அது அப்படி அழிந்துவிடுமானால் உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும். சமயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும். எல்லா உயர்ந்த இலட்சியங்களும் மறைந்து போய்விடும். அவை இருந்த இடத்திலே காமமும் ஆடம்பரமும் ஆண் தெய்வமாகவும் பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும், பணமே அங்குப் பூசாரியாக உட்கார்ந்துகொள்ளும். வஞ்சகம், பலாத்காரம், போட்டி ஆகிய வற்றையே அது தன்னுடைய பூஜைக் கிரியை முறைகளாக வைத்துக் கொள்ளும். மனித ஆன்மாவையே அது பலி பீடத்தில் பலியாக்கும் . ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்றுமே நடக்கப்போவதில்லை..... உயர்ந்த பண்பு ஒழுக்கம், ஆன்மிகம் ஆகிய எல்லாச் சிறந்த பெருமைகளுக்கும் பிறப்பளித்தவள் நமது இந்தியத்தாய். முனிவர்கள் பலர் வாழ்ந்த நாடு இந்த நாடு கடவுளுக்குச் சமமான மகான்கள் இன்னமும் இந்த நாட்டிலே தான் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய இந்தியாவா அழிந்து போய்விடும்? எனது அருமைச் சகோதரா! ஒரு பழைய கைவிளக்கை எடுத்துக்கொண்டு இந்தப் பரந்த உலகிலுள்ள நாடு நகரங்கள் பட்டி தொட்டிகள் காடு கழனிகள் எல்லாவற்றின் ஊடேயும் உன்னை நான் பின்தொடர்கிறேன். உன்னால் முடியுமானால் , இப்படிப்பட்ட தலை சிறந்த மகான்களை வேறு எந்த நாட்டிலாவது தேடிக் காட்டு பார்க்கலாம். 68.மற்ற நாடுகளின் முன்னேற்றத்தின் முன்பு இந்தியாவின் முன்னேற்றம் ஒளி மங்கிக் காணப்படுவதற்கான காரணத்தை நீ சொல்ல முடியுமா? அவள் அறிவாற்றலில் குறைந்தவளா? அல்லது திறமையில் தான் குறைந்தவளா? அவளுடைய கலை கணித அறிவு தத்துவங்கள் ஆகிய இவற்றைப் பார். பிறகு அறிவாற்றலில் இந்திய அன்னை குறைந்தவள் என்று நீ சொல்ல முடியுமா? அவள் தன்னுடைய மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனது நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். இந்த ஒன்றுதான். உலக நாடுகளின் முன்னணியில் தனக்கு உரிய உயர்ந்த இடத்தை அவள் திரும்பப் பெறுவதற்குத் தேவை யாகும்.... துறவும் தொண்டுமே இந்தியாவின் இலட்சியங்கள் இந்தப் பாதையிலே மேலும் மேலும் . அவளை ஈடுபடுத்துங்கள். மற்றவை தாமாக வந்து சேரும். 69.அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே நமது நாடு என்னும் இந்தக் கப்பல் பல்லாயிரக் கணக்கான நீண்ட நெடுங்காலமாகத் தனது நாகரிகத்தை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறது. தனது எண்ணற்ற அரும்பெரும் செல்வங்களால் இந்த உலகம் முழுவதையும் மேலும் மேலும் வளமாக்கிக் கொண்டிருக்கிறது. பல ஆயிரக் கணக்கான நூற்றாண்டுகளாக நமது இந்தக் கப்பல் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க நமக்கு உதவி புரிந்து வந்திருக்கிறது. பல்லாயிரக் கணக்கான மக்களை வாழ்க்கைக் கடலின் துன்பமற்ற மறுகரைக்கு அழைத்துச்சென்ற படியே இருக்கிறது. ஆனால் இன்று அந்தக் கப்பலில் ஓர் ஓட்டை விழுந்து பழுதடைந்து போயிருக்கிறது. இந்த நிலைக்கு உங்களுடைய தவறுகளே காரணம் . அல்லது வேறு காரணங்களும் இருக்கலாம். அதைக் குறித்து நாம் அவ்வளவாகப் பொருட்படுத்த வேண்டிய தில்லை. நீங்கள் அதில் அமர்ந்துகொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் செய்யப்போகும் காரியம் என்ன? அந்தக் கப்பலைத் திட்டிக்கொண்டு நீங்கள் ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு இருக்கப்போகிறீர்களா? அல்லது நீங்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக இணைந்து, அந்தக் கப்பலைப் பழுது பார்க்க உங்கள் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தப் போகிறீர்களா? நமது இதயத்தை மனமுவந்து அந்தப் பணிக்கு நாம் தருவோமாக. அல்லது அந்தப் பணியிலே தோல்வி அடைந்தால் மனதில் திட்டிக் கொண்டிருக்காமல் வாழ்த்திக்கொண்டே அனைவரும் ஒன்றாக மூழ்கி இறந்துவிடுவோமாக. 70. ஓர் அரக்கி தன்னுடைய உயிரை ஒரு சிறிய பறவையில் வைத்திருந்தாள். அந்தப் பறவை கொல்லப்பட்டாலன்றித் தன்னை ஒருவராலுமே கொல்ல முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்தாள். இந்த அரக்கியின் கதையை நாம் குழந்தைகளாக இருந்தபோது கேட்டிருக்கிறோம். ஒரு நாட்டின் வாழ்க்கையும் அதைப் போன்றதே ஆகும் .... இப்போது நமது நாடாகிய இந்த அரக்கியின் உயிர்நாடி எங்கே இருக்கிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். அது மதத்தில் தான் இருக்கிறது. இதை ஒருவராலுமே அழித்து விட முடியவில்லை. எனவே தான் இந்தியா நாடு எத்தனையோ துன்பங்களையும் சோதனைகளையும் கடந்து இன்னமும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு நாட்டினுடைய உயிர்நாடியைச் சமய வாழ்க்கையில் வைத்துக்கொண்டிருப்பதனால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது? அதை மற்ற நாடுகளில் உள்ளதைப் போன்று , சமுதாயச் சுதந்திரத்திலோ அல்லது அரசியல் சுதந்திரத்திலோ வைத்தால் என்ன? என்று படித்த இந்தியர் ஒருவர் கேட்கிறார். இவ்வாறு பேசிக்கொண்டிருப்பது மிகவும் சுலபம்...... உண்மை இதுதான்; ஓர் ஆறு தன்னுடைய உற்பத்தி ஸ்தானமாகிய மலையிலிருந்து ஓராயிரம் மைல் தூரம் கீழே இறங்கி ஓடி வந்திருக்கிறது. அந்த ஆறு மீண்டும் தனது உற்பத்தி ஸ்தானத்துக்குத் திரும்பிப் போகுமா? அல்லது போகத்தான் முடியுமா? ஒருவேளை எப்போதாவது அந்த ஆறு அப்படித் திரும்பிப் போக முயற்சி செய்யுமானால் நாலா புறங்களிலும் சிதறி, ஒன்றுமே இல்லாமல் வற்றிப் போய்விடும். எப்படி இருந்தாலம் அந்த ஆறு , பரந்த அழகிய, சமவெளிகளில் பாய்ந்தோடியோ அல்லது கரடுமுரடான நிலத்தில் பாய்ந்து சென்றோ விறைவிலோ அல்லது காலம் தாழ்ந்தோ உறுதியாகக் கடலில் சென்று கலக்கத் தான் போகிறது.பதினாயிரம் ஆண்டு களாக நமது நாட்டில் இருந்து வரும் நமது சமுதாயத்தின் வாழ்க்கை அமைப்பு முறையைத் தவறு என்று சொன்னால் அதைத் திருத்துவதற்கு வேறு வழியே கிடையாது. இப்போது அதற்கு ஒரு புதிய இயல்பை உருவாக்குவதற்கு முயற்சி செய்தால், அது அழிவில்தான் முடியும். இந்த முடிவு தவிர்க்க முடியாத தாகிவிடும். 71.நமது நாட்டின் உயிர் வாழக்கையை மேலோட்டமாகப் பார்த்தால் சாம்பல் பூத்து இறந்து விட்டதைப் போலக் காணப்படுகிறது. ஆனால் அதன் அடியில் நெருப்பைப் போன்று அது இன்றும் கனன்று எரிந்து கொண்டிருக்கிறது. நமது நாட்டின் வாழ்க்கை மதத்தில்தான் அமைந்திருக்கிறது. அதன் மொழியும் மதம்தான் ; மதமே அதனுடைய கருத்துக்கள்; அதனுடைய அரசியல் சமுதாயம் நகராட்சி மன்ற அமைப்புக்கள் , பிளேக் தடுப்பு வேலைகள், பஞ்ச நிவாரணப்பணிகள் ஆகிய இவை எல்லாமே மதத்தின் மூலமாகத்தான் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. இனி மேலும் அப்படியே நடத்தப்பட வேண்டும். அவ்விதம் இந்தப் பணிகள் நடத்தப்படாவிட்டால் எனது நண்பரே உம்முடைய எல்லாக் கூச்சல்களும் புலம் பல்களும் ஒன்றுமே இல்லதாமல் பயனற்ற வையாக முடிந்து போகும். 72. ஒவ்வொரு நாட்டிலும் மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் ஒரே மாதிரி யாகத்தான் இருக்கின்றன. வலிமைபடைத்த ஒரு சிலர் கட்டளை இடுகிறார்கள். அவற்றை எல்லாம் எஞ்சியுள்ள மக்கள் அனைவரும் செம்மறி ஆடுகளைப் போல முடிந்த முடிவுகளாக ஏற்றுப் பின்பற்றி நடப்பார்கள். அவ்வளவுதான் விஷயம்.உங்களுடைய பாராளுமன்றம் சட்டசபை, வாக்களிப்பு முறை உங்கள் பெரும்பான்மை மக்களுடைய இரகசிய வாக்களிப்பு முறை ஆகிய இவை அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன் . எனது நண்பரே இவை எல்லாம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் நடைபெறுகின்றன... இப்போது இங்கு இருக்கிற கேள்வி இதுதான் இத்தகைய வலிமையைப் பெற்றவர்கள் இந்தியாவிலே யார் இருக்கிறார்கள்? ஆன்மிகத் துறையில் மிகப் பெரும் வலிமை படைத்த சமயச் சான்றோர்களிடையே அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தாம் நமது சமுதாயத்தை முன்னின்று வழி நடத்து கின்றனர். தேவைப்படும் போது மீண்டும் அவர்களே சமூகத்தின் விதிமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் மாற்றியமைந்கிறார்கள். அவர்கள் சொல்வதை நாம் அமைதியுடன் கேட்கிறோம் அவர்களின் கட்டளைகளைப் பின்பற்றி நடக்கவும் செய்கிறோம். 73.ஒரு நல்ல இலட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல். எனது அருமைக் குழந்தைகளே! முன்னேறிச் செல்லுங்கள். பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியைப் பெற்றிருக்கிறது. ஜால வித்தையிலே இந்தியா அந்த விளக்கைப் பெற்றிருக்கவில்லை. போலித் தன்மை யினாலும் அந்த விளக்கைப் பெற்றிருக்க வில்லை. ஆனால் உண்மையான மதத்தின் தலைசிறந்த சமய போதனையாகவும் மிகவும் உயர்ந்த ஆன்மிக உண்மையாகவும் அந்த விளக்கை இந்தியா பெற்றிருக்கிறது. ஆகையால் தான் பலவிதமான இன்ப துன்பங்களில் இருந்தும் இன்று வரையிலும் கடவுள் இந்தியாவைப் பாதுகாத்து வைத்திருக்கிறார், இப்போது அதற்கு உரிய சரியான நேரம் வந்து விட்டது. எனது வீரக் குழந்தைகளே, நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்துநின்று வேலை செய்யுங்கள். 74. மிருகபலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக அமைதி அன்பு ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும் ..... புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்து விட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள் இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போலத் தெளிவாக நான் பார்க்கிறேன் அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள். 75. கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும்! மீனவர்கள், சக்கிலியர்கள் தோட்டிகள் ஆகியவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழட்டும் ! பல சரக்குக் கடைகள் பலகாரக் கடைகளிலிருந்து அவள் தோன்றட்டும் தொழிற்சாலைகள் கடைவீதிகள் சந்தை ஆகியவற்றிலிருந்தெல்லாம் புதிய இந்தியா எழுந்து வெளிவரட்டும்! 76. பாமர மக்களைப் புறக்கணித்து ஒதுக்கியதுதான் நமது நாடு செய்த பெரும்பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் பாமர மக்களுக்குச் சிறந்த கல்வியையும் நல்ல உணவு வசதிகளையும் கொடுத்து, அவர்களை நன்றாகக் கவனிக்க வேண்டும். அந்தப் பாமர மக்கள் தாம்நம்முடைய கல்விக்கு வரியாகப் பணம் தருகிறார்கள் அவர்களே நமது கோயில்களையும் கட்டு கிறார்கள். ஆனால் அவற்றுக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைப்பதோ வெறும் உதைகள்தாம் நடைமுறையில் அவர்கள் நம் அடிமைகளாகவே இருக்கின்றனர் இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால் இந்தப் பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும். 77. செய்துமுடிக்கப்பட வேண்டிய பணிகள் மிகவும் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவற்றை நிறைவேற்றி முடிப்பதற்கான வசதிகளோ இந்த நாட்டில் இல்லை. நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் பணி புரிவதற்கான கைகள்தாம் இல்லை . நம்மிடம் வேதாந்தக் கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய ஆற்றல் இல்லை. நமது நூல்களில் உலக சமத்துவம் பற்றிய கொள்கை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையிலோ நாம் பெருமளவுக்கு வேற்றுமை பாராட்டுகிறோம். இதே இந்தியாவில்தான் மிகவும் உயர்ந்த சுயநல மற்ற பயன் கருதாத பணியைக் குறித்த உண்மைகள் போதிக்கப்பட்டன; ஆனால் நடைமுறையில் நாம் மிகவும் கொடூர மானவர்கள்; இதயம் இல்லாதவர்கள். நமது சதைப்பிண்டமாகிய உடலை தவிர வேறு எதைப்பற்றியுமே நினைக்க முடியாதவர்கள். செல்வச் செழிப்பை இழந்து அதிர்ஷ்டத்தை இழந்து, பகுத்தறிவையும் அறவே இழந்து நசுக்கப்பட்டு என்றைக்கும் பட்டினியால் வாடியபடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டவர்களாகவும் பொருமை கொண்டவர்களாகவும் உள்ள இந்த இந்திய நாட்டு மக்களை யாரேனும் ஒருவர் மனப்பூர்வமாக நேசித்தால் இந்தியா மீண்டும் விழித்துக்கொள்ளும் என்று நான் கூடத்தான் நம்புகிறேன். எப்போது பரந்த இதயம் படைத்த நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் வாழ்க்கையின் ஆடம்பரங்களையும் எல்லா இன்பங்களையும் துறந்துவிட்டு ஆதரவற்ற நிலை அறியாமை ஆகிய நீர்ச்சுழலில் சிறிது சிறிதாக மிகக் கீழ் நிலைக்கு மூழ்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டு கோடானுகோடி மக்களின் நல்வாழ்விற்காக வருந்தித் தங்களின் முழு ஆற்றலையும் செலுத்தி உழைக்க முன்வருவார்களோ அப்போதுதான் இந்தியா விழித்தெழும். 78.இந்தியாவிலுள்ள எல்லாத் தீமை களுக்கும் அடிப்படை வேராக அமைந்துள்ளது இந்த நாட்டு ஏழை மக்களின் இழிந்த நிலையே ஆகும். மேலை நாட்டு ஏழை மக்களைப் பேய்கள் என்று தான் சொல்ல வேண்டும் அவர்களோடு ஒப்பிட்டால் நம் நாட்டு மக்களைத் தேவ தூதர்கள் என்றே சொல்ல வேண்டும் ஆகவே இவர்களின் நிலையைச் சுலபமாக உயர்த்திவிடலாம். இவர்கள் இழந்துவிட்ட தனித்தன்மையை வளர்த்துக் கொள்ளும் படி செய்வதே இப்போது நாம் இவர்களுக்குச் செய்ய வேண்டிய ஒரே சேவையாகும். 79. கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக இந்தியாவில் சீர்திருத்தமன்றங்களும் க்காரர்களும் நீர்க்குமிழிகளைப் போலத் தோன்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தோ! அவர்களின் ஒவ்வொருவரும் தோல்வியே அடைந்திருக்கின்றனர். சீர்திருத்தத்தின் இரகசியம் எங்கே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. அவர்களுக்கு இருந்த அவசரத்தில் நமது சமுதாயத்திலுள்ள எல்லாத் தீமைகளையும் மதத்தின் மேலேயே அவர்கள் சுமத்தி விட்டார்கள். தன் நண்பனின் நெற்றியிலே உட்கார்ந்த கொசுவைக் கொல்வ தற்காக ஒருவன் முயற்சி செய்தான். அவன் கொடுத்த பலமான அடிகள் மனிதனையும் கொசுவையும் சேர்த்தே கொன்று விட்ட கதையைப் போல இந்தச் சீர் திருத்த முறைகளும் அமைந்துவிட்டன. ஆனால் இந்த முயற்சியில் அதிர்ஷ்டவசமாக அசைக்க முடியாத ஒரு பெரிய பாறையின் மீதே மோதிக் கொண்டார்கள். மோதலினால் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியே அவர்களை நசுக்கி அழித்துவிட்டது சுயநலம் இல்லாத உயர்ந்த ஆனால் அதே சமயத்தில் தவறான வழியில் சென்ற அந்தச் சீர்திருத்தக்காரர்களின் புகழ் வாழட்டும். உறங்குகிற கும்பகர்ணனை எழுப்புவதற்கு அந்தப் பெரிய அதிர்ச்சிகளெல்லாம் தேவைப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் அழிவு வேலைகளைச் சேர்ந்தவையே ஆகும்; ஆக்கப்பணிகள் ஆகிவிடா.இந்தக் காரணத்தால் தான் அந்த முயற்சிகள் எல்லாம் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. எனவே தான் அவை யாவும் அழிந்து போயிருக்கின்றன. நாம் அவர்களை வாழ்த்து வோமாக அவர்களின் அனுபவத்தின் மூலமாக நாம் பயனடைவோம். நீ கிழக்கு மேற்குத் திசைகள் எல்லாவற்றிலும் முயற்சி செய்து பார் இந்து என்னும் இனம் முற்றிலும் அழிந்து மறைந்து அதற்குப் பதிலாக வேறு ஒரு புதிய இனம் அந்த இடத்துக்கு வரும் வரையிலும் இந்தியா அழிந்து மறையும் வரையிலும் இந்தியா ஒரு போதும் ஐரோப்பாவாக ஆகிவிடாது. 80.எனது சகோதரர்களே! நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர் கால இந்தியா நமது உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது. இந்தியத் தாய் தயாராகக் காத்திருக்கிறாள். அவள் உறங்கிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறாள். எழுமின் ! விழிமின் இந்த நமது தாயகமாகிய தேவி தனது அழிவற்ற அரியணையின் மீது புத்திளமை பெற்றவளாக. முன்பு எப்போதும் இருந்ததை விடவும் அதிகமான மகிமை கொண்ட வளாக அமர்ந்திருப்பதைக் காணுங்கள். 81. கண்டனம் செய்யும் சொல் எதையுமே சொல்ல வேண்டாம்.உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள். நீங்கள் ஒவ்வொரு வரும் நாட்டின் சுமை முழுவதும் உங்களின் தோள்களின் மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணிக்கொண்டு இந்த நாட்டின் கதிமோட்சத்திற்காகவும் உலகத்தின் கதிமோட்சத்திற் காகவும் பணியாற்றுங்கள் வேதாந்தத்தின் ஒளியையும் வாழ்க்கை முறைகளையும் வீட்டுக்கு வீடு எடுத்துச் செல்லுங்கள், ஒவ்வொருவரிடமும் மறைந்திருக்கும் தெய்விகத் தன்மையை அதன் மூலமாக வெளிப்படுத்துங்கள். 82.உங்களுடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுங்கள். நமக்குத் தேவை, இரும்பைப் போன்ற தசைகளும், எஃகைப் போன்ற நரம்புகளும் தாம். காலமெல்லாம் அழுதுகொண்டிருந்தது போதும் இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுய வலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள். 83. இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், நவீனத்தலை முறையைச் சேர்ந்தவர்கள் ஆகிய உங்களிடம்தான் என் நம்பிக்கை இருக்கிறது. இவர்களிடமிருந்தே என் தொண்டர்கள் தோன்றுவார்கள். சிங்கங்களைப் போல அவர்கள் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார்கள். நான் என் கருத்தை வகுத்து அதற்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறேன். இந்தியா முழுவதும் இந்தக் கருத்துக்கள் பரவும் வரை யிலும் அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இந்த அரிய கருத்துக் களைப் பரப்பிப்கொண்டே செல்வார்கள். 84. தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒரு சில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையிலே உருவாக்க வேண்டும் அதன் பிறகு தான்ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். 85. மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துக் சிறிதளவு நினைப்பதுங்கூடத் சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தருகிறது. நான் உங்களை எல்லாம் மிகவும் நேசிக்கிறேன். என்றாலும். நீங்கள் அனைவரும் பிறருக்காக உழைத்து உழைத்து அந்தப் பணியில் இறந்து போவதையே நான் விரும்புகிறேன், நீங்கள் அவ்விதம் இறந்தபோனால் நான் மிகவும் மகிழ்வேன். எழுந்திருங்கள்! தேச முன்னேற்றம் என்னும் சக்கரத்தை நகர்த்துவதற்கும் உங்கள் தோள்களைக் கொடுங்கள். இந்த வாழ்க்கை எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப் போகிறது இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்னால் நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறியாக எதையாவது விட்டுச் செல்லுங்கள் அப்படி இல்லாவிட்டால் இந்த மரம் கல் முதலியவற்றுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. 86. என் மகனே! மரணம் நேரு வதைத் தடுப்பதற்கில்லை என்னால் கற்களைப் போலவும் கட்டைகளைப் போலவும் செத்து மடிவதைவிட வீரர்களைப் போல இறப்பது மேலானது அல்லவா? நிலையில்லாத இந்த உலகிலே இரண்டொரு நாள் அதிகமாகவே வாழ்ந்து விடுவதனால் பெறப் போகிற பயன்என்ன? வாழ்க்கை என்னும் கத்தி துருப்பிடித்து அழிந்து போவதை விடத் தேய்ந்து அழிவதே மேலானது. அதிலும் குறிப்பாக மற்றவர்களுக்கு ஒரு சிறிதளவிற்கு நன்மை செய்வதற்காக அழிந்துபோவது மிகவும் நல்லது. 87. பாராட்டப்படுகிறேனோ இல்லையோ, இந்த இளைஞர்களை ஒன்று திரட்டிச் செயலில் இடுபடச் செய்வதற்காக நான் பிறந்திருக்கிறேன். அது மட்டுமல்ல, ஒவ்வொரு நகரத்திலும் நூற்றுக்கணக்கான பேர் என்னுடன் சேர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தவே முடியாத அலைகளைப் போலப் புரட்டி அடித்துக்கொண்டு போகும் வகையில் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்க விரும்புகிறேன் . அவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாகவும் சமுதாயத்தால் நசுக்கப்பட்டவர்களாகவும் உள்ளவர்களின் வீட்டு வாசலுக்கே சென்று வசதி ஒழுக்கம் மதம் கல்வி ஆகியவற்றைக் கொண்டு சேர்ப்பார்கள். இதை நான் சாதித்தே தீருவேன் அல்லது செத்து மடிவேன். 88.நீங்கள் உண்மையிலேயே என்குழந்தைகளானால் எதற்குமே அஞ்சி ஸ்தம்பித்து நின்று விடமாட்டீர்கள், நீங்கள் சிங்க ஏறுகளைப் போலத் திகழ்வீர்கள். இந்தியாவையும், இந்த உலகம் முழுவதையுமே நாம் தட்டியெழுப்பியாகவேண்டும். தங்களுடைய பணியை செய்து முடிப்பதற்காகத் தீயில் குதிப்பதற்கும் என் குழந்தைகள் தயாராக இருக்க வேண்டும். 89.எங்கெல்லாம் கொள்ளை நோய் பரவுகிறதோ பஞ்சம் ஏற்படுகிறதோ மக்கள் துன்பத்தில் வாடுகிறார்களோ அங்கெல்லாம் நீங்கள் அனைவரும் சென்று அவர்களுடைய துன்பத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். மிஞ்சிப் போனால் இந்த முயற்சியில் அதிகபட்சம் நீங்கள் உயிரிழக்க நேரிடலாம். அதனாலென்ன? உங்களைப் போல எத்தனை எத்தனையோ பேர் நாள்தோறும் புழுக்களைப் போலப் பிறப்பதும் இறப்பதுமாக இருக்கிறார்கள். அதனால் இந்தப் பரந்த உலகத்திற்கு என்ன குறைந்து போய்விட்டது ? மரணம் வருவதோ உறுதி ஆனால் இறப்பதற்கு என்று மேலான இலட்சியத்தைக் கொண்டிரு மேலானதொரு குறிக்கோளுக்காக வாழ்ந்து இறந்தபோவது மிகவும் சிறந்தது. 90.மரணம் வரும் வரையிலும் வேலை செய். நான் உன்னுடன் இருக்கிறேன். நான் இறந்த பிறகும் என் ஆவி உன்னுடன் இருந்து வேலை செய்யும். இந்த வாழ்க்கை வருவதும் போவதுமாக இருக்கிறது. செல்வம் புகழ், இன்பங்கள் இவைஎல்லாமே ஏதோ ஒரு சில நாட்களுக்குத் தான் நிலைத்திருக்கப் போகின்றன. உலகப் பற்று நிறைந்த ஒரு புழுவைப் போல இறந்து போவதைவிட உண்மையை எடுத்துப்போதித்துக்கொண்டே கடமை என்னும் களத்திலே உயிரை விடுவது மிக மிக மேலானது முன்னேறிச் செல்! 8.பல்சுவை 91.உண்மை ,தூய்மை, சுயநல மின்மை ஆகிய இந்த மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ, அவற்றைப் பெற்றிருப்பவர்களை நசுக்கக்கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்குமே கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து நிற்கக் கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு. 92.வாழ்க்கையில் எனக்கு உள்ள ஒரே பேராவல் இதுதான்; ஒவ்வொருவரின் இருப்பிடத்துக்கும் உயர்ந்த கருத்துக்களைக் கொண்டு செல்லக்கூடிய ஓர் இயக்கத்தை ஏற்படுத்தி அதை நடத்தி வைக்க வேண்டும். அதன் பிறகு ஆண்களும் பெண்களும் தங்கள் விதியைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளட்டும். வாழ்க்கையின் மிக முக்கியமான பிரச்சனைகளைக் குறித்து நம் முன்னோர்களும் மற்ற நாட்டவர்களும் கொண்டிருந்த கருத்துக்களை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். குறிப்பாக இப்போது மற்ற நாட்டவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் பார்த்து அதன் பிறகு அவர்கள் ஒரு முடிவுக்கு வரட்டும். இரசாயனப் பொருள்களை ஒன்று சேர்த்து வைப்பதுதான் நமது வேளையாகும் இயற்கையின் நியதியையொட்டி அவை தாமாகவே படிகங்களாக மாறுதலடைந்துவிடும். கடுமையாக உழை உறுதியாக இரு. பாமர மக்களின் மதத்துக்கு ஊறு விளைவிக்காமல் அவர்களை முன்னேற்றமடையச் செய்வதே உன் இலட்சியமாக இருக்கட்டும். மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்கு தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும். 93.கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகிலே மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது இது என் உறுதியான நம்பிக்கை. படித்த இந்துக்களிடையே நீ காணும் அந்தச் சாதிவெறி பிடித்த, மூடநம்பிக்கை கொண்ட இரக்கமற்ற போலித்தனம்மிக்க நாத்திக மனம் கொண்ட கோழைகளில் ஒருவனாக வாழ்ந்து இறந்து போவ தற்காகப் பிறந்தவன் என்றா என்னை நீ நினைக்கிறாய்! கோழைத்தனத்தை நான்வெறுக்கிறேன் கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியலாகும்.மற்றவை எல்லாம் வெறும் குப்பைதான். 94.நீயே தூய்மை பொருந்தியவன ஓ மாபெரும் வீரனே! கண்விழித்து எழுந்திரு இந்த உறக்கம் உனக்குப் பொருந்தாது. விழித்துக்கொள். எழுந்து நில். இந்த உறக்கம் உனக்கு ஏற்றதல்ல துன்பப்படுபவனாகவும் பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே எல்லாம் வல்ல ஆற்றல் படைத்தவனே விழித்தெழுந்து உன் இயல்பை நீ வெளிப்படுத்து. உன்னைநீயே பாவி என்று நினைப்பது உனக்குப் பொருந்தாது. உன்னை நீயே பலவீனன் என்று நீ கருதுவதும் உனக்குப் பொருந்தாது. இந்த உண்மையை உலகிற்கு எடுத்துச்சொல். உனக்கும் சொல்லிக் கொள். அப்போது உன் வாழ்க்கையில் ஏற்படும் விளைவை நீ கவனி. மின்னல் வேகத்தில் எப்படி எல்லாம் மாறிவிடுகிறது என்பதைப் பார். பின்பு அந்த உண்மைகளை மனிதகுலத்திற்கு எடுத்துச் சொல் . அதன் மூலம் மக்களுக்கு அந்த உண்மைகளின் ஆற்றலை எடுத்துக்காட்டு. 95. உன்னைப் போன்ற மக்களிடம் தான் நான் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். என் சொற்களின் உண்மையான கருத்தைப் புரிந்துகொண்டு அந்த ஒளியில் உன்னைச் செயலில் ஈடுபடுத்திக்கொள் உனக்கு நான் போதுமான அளவுக்கு அறிவுரைகளை வழங்கியிருக்கிறேன் .இப்போது அதில் சிறிதளவாவது செயலுக்குக் கொண்டுவா என் அறிவுரைகளை கேட்டதன் பயனாக வாழ்க்கையில் நீ வெற்றி யைப்பெற்றாய் என்பதை உலகம் புரிந்து கொள்ளட்டும்.

Copyright © 2017 by Swami Vidyananda . All rights reserved.