²õ£ñ¤ õ¤«õè£ùï¢îó¤ù¢ õö¤ò¤ô¢ Þñîî àôèñ¢ º¿õ¶ñ¢ ðóð¢¹õîø¢è£ù ðí¤ ïìªè£í¢®¼è¢è¤ø¶
ராஜயோகம்-ராஜயோகச் சுருக்கம் இங்கே காணப்படும் ராஜயோகச் சுருக்கம் கூர்ம புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது. யோகமாகிய நெருப்பு மனிதனைச் சூழ்ந்துள்ள பாவக்கூட்டை எரித்துவிடுகிறது. அப்போது அறிவு தூய்மை பெறுகிறது. நிர்வாணம் நேரடியாக வாய்க்கிறது. யோகத்திலிருந்து ஞானம் வருகிறது. ஞானம் யோகிக்கு உதவுகிறது. யார் யோகத்தையும் ஞானத்தையும் இணைத்து கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு இறைவன் அருள்புரிகிறார். மஹாயோகத்தைத் தினமும் ஒருமுறை அல்லது இரண்டுமுறை அல்லது மூன்றுமுறை அல்லது எப்போதும் கடைப்பிடிப்பவர்கள் தேவர்களே என்பதை அறிந்து கொள்ளுங்கள். யோகத்தில் இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று அபாவம், மற்றது மஹாயோகம். தனது ஆன்மாவைச் சூன்யமாக, குணமற்றதாக தியானிப்பது அபாவம். ஆன்மாவைப் பேரானந்தம் நிறைந்ததாக, நிர்மலமானதாக, இறைவனுடன் ஒன்றுபட்டு இருப்பதாகக் காண்பது மஹாயோகம். இந்த இரண்டின் மூலமாகவும் யோகி தன் ஆன்மாவை உணர்கிறான். மஹாயோகத்தில் யோகி தன்னையும் பிர பஞ்சம் முழுவதையும் இறைவனாகக் காண்கிறான். இது யோகங்கள் அனைத்திலும் உயர்ந்தது. மேலான இதனுடன் ஒப்பிடும்போது, நாம் படித்தும் கேட்டும் உள்ள பிற யோகங்கள், யோகம் என்று கூறத் தகுதியற்றவை. யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்பவை ராஜயோகத்தின் அங்கங்கள். அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், அபரிக்கிரகம், பிரம்மச்சரியம், ஆகியவை யமம். இவை மனத்தை அதாவது சித்தத்தைத் தூய்மையாக்கும். மனத்தாலோ வாக்காலோ உடலாலோ எந்த உயிருக்கும் துன்பம் விளைவிக்காமல் இருப்பது அஹிம்சை. அஹிம்சையை விட மேலான தர்மம் ஒன்றில்லை. சத்தியத்தால் நாம் கர்ம பலன்களை அடைகிறோம். படைப்பிலுள்ள எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமலிருப்பதால் ஒருவனுக்குக் கிடைக்கின்ற ஆனந்தத்தைவிடமேலான ஆனந்தம் எதுவுமில்லை. சத்தியத்தால் அனைத்தையும் அடையலாம். சத்தியத்திலேயே அனைத்தும் நிலைபெற்றிருக்கின்றன. உள்ளதை உள்ளபடி கூறுதல்-இதுதான் சத்தியம். திருட்டுத் தனமாகவோ, வலிமையைப் பயன்படுத்தியோ பிறர் பொருளைக் கவராது இருத்தல் அஸ்தேயம். மனம், வாக்கு மற்றும் உடலால் எப்போதும் எல்லா நிலைகளிலும் தூயவனாக இருப்பது பிரம்மச்சரியம், எவ்வளவுதான் பயங்கரமாகத் துன்புற்றாலும்,பிறர் பொருளைத் தானமாக பெறாமலிருப்பது அபரிக்கிரகம். பிறரிடமிருந்து தானமாக ஒன்றைப் பெறுகின்ற ஒருவனின் உள்ளம் அசுத்தம் அடைகிறது. அவன் தாழ்ந்த நிலையை அடைகிறான். சுதந்திரத்தை இழக்கிறான். கட்டுண்டவனாகிறான், பற்றுக் கொண்டவனாகிறான். அடுத்து வருவது நியமம். அன்றாட ஆசாரங்களும் நியதிகளும் அடங்கியது இது. யோகத்தில் வெற்றி பெற இது உதவுகிறது. தபஸ்-தவம்; ஸ்வாத்யாயம்-கல்வி; ஸந்தோஷம்-திருப்தி; சவுசம்-தூய்மை; ஈசுவர ப்ரணி தானம்-இறைவழிபாடு-இவை நியமம். உண்ணாநோன்பின் மூலமோ வேறு வழிகளாலோ உடலை அடக்கியாள்தல் உடல் சம்பந்தமான தவம். வேதங்களையும் மற்ற மந்திரங்களையும் ஓதுவது ஸ்வாத்யாயம். இதனால் உடலில் உள்ள சத்வப் பகுதி தூய்மை அடைகிறது. மந்திரங்களை உச்சரிப்பது மூன்று வகைப்படும். வாசிகம், உபாம்சு, மானசம், வாசிகம் மிகத் தாழ்ந்தது. மானசம் மிகவுயர்ந்தது. உரக்க உச்சரித்தல் வாசிகம். உதடு அசைந்து ஒலி வராமல் உச்சரிப்பது உபாம்சு. வெளியில் கேட்காமல் மந்திரத்தை உச்சரித்து. அதனுடன் மந்திரத்தின் பொருளையும் சிந்திப்பது மானசம். இதுவே மூன்றிலும் உயர்ந்த முறை. தூய்மை என்பது அகத் தூய்மை புறத் தூய்மை என இருவகைப்படுவதாக மகான்கள் கூறுகின்றனர். உடலை நீராலோ மண்ணாலோ வேறு பொருட்களாலோ தூய்மை செய்வது அதாவது குளித்தல் போன்றவை புறத்தூய்மை. வாய்மையாலும் மற்ற எல்லா நற்குணங்களாலும் மனத்தைத் தூய்மைப்படுத்துவது அகத்தூய்மை. இரண்டுமே தேவை. அகத்தில் தூய்மை, புறத்தில் அழுக்கு என்றால் அது சரியாகாது. இரண்டும் சேர்ந்து வாய்க்க முடியாதபோது அகத் தூய்மையை நாடுவது நல்லது. ஆனால் இருவகைத் தூய்மையும் இல்லாமல் ஒருவன் யோகியாக மாட்டான். தோத்திரம், சிந்தனை, பக்தி-இவைமூலம் இறைவனை வழிபட வேண்டும். யமம், நியமம்பற்றிக் கூறினோம். அடுத்தது ஆசனம். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் மார்பும் தோள்களும் தலையும் நேராக இருக்க வேண்டும். உடம்பு இறுக்கமின்றித் தளர்வாக இருக்க வேண்டும் என்பதுதான். அடுத்தது பிராணாயாமம், பிராணன் என்பது உடம்பில் உள்ள உயிர்ச்சக்திகள், ஆயாமம் என்றால் அடக்குதல், இதில் மூவகை உண்டு. சாதாரணமானது, நடுத்தரமானது, உயர்ந்தது, பிராணாயாமத்தில் மூன்று பகுதிகள் உண்டு. உள்ளிழுத்தல்(பூரகம்), அடக்கல்(கும்பகம்), வெளிவிடல் (ரேசகம்) பன்னிரண்டு நொடியுடன் ஆரம்பிப்பது சாதாரண வகை. இருபத்தி நான்கு நொடியுடன் ஆரம்பிப்பது நடுத்தரமானது. முப்பத்தாறு நொடியுடன் ஆரம்பிப்பது உயர்ந்த வகையானது. சாதாரண பிராணாயாமத்தில் உடல் வியர்க்கும். நடுத்தரமானதில் உடல் நடுங்கும். உயர்ந்த பிராணாயாமத்தில் உடல் ஆந்தரத்தில் மிதக்கும், பேரானந்தம் பிறக்கும். வேதங்களில் காயத்ரீ என்ற மந்திரம் உள்ளது. அது மிகப் புனிதமான மந்திரம். இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த பரம்பொருளின் மகிமையை நாம் தியானிப்போம். அவர் நமது மனங்களை ஒளி பெறச் செய்யட்டும். ஓங்காரத்தை இந்த மந்திரத்தின் முதலிலும் முடிவிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பிராணாயாமத்தில் மூன்று முறை காயத்ரியை உச்சரியுங்கள். பூரகம், கும்பகம், ரேசகம் என பிராணாயாமம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக எல்லா நூல்களும் கூறுகின்றன. புலன்களின் கருவிகளான இந்திரியங்கள் புறப்பொருட்களுடன் தொடர்புகொண்டு புற நாட்டம் கொள்கின்றன. அவற்றைச் சுயேச்சையால் கடடுப்படுத்துவது அல்லது அவற்றைத் தன்னை நோக்கிக் குவிப்பது பிரத்யாஹாரம். மனத்தை இதயக் கமலத்தில் அல்லது சஹஸ்ராரத்தில் நிறுத்தி வைப்பது தாரணை. மனம் ஓரிடத்தில் நிலைப்படும்போது அந்த இடத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட விதமான மன அலைகள் எழுகின்றன. இவை மற்ற மன அலைகளால் மூழ்கடிக்கப்படாமல் படிப்படியாக முன்னணிக்கு வருகின்றன. அப்போது மற்றவை பின்வாங்கி இறுதியில் மறைந்துவிடுகின்றன. பின்னர் இந்தப் பல்வேறு அலைகளும் ஒன்றாகி ஓர் அலை மட்டும் மனத்தில் எஞ்சும், இதுவே தியானம். அடிப்படை எதுவும் இல்லாமல், மனம் முழுவதும் ஒரே அலையாக, ஒரே வடிவமாக ஆவது சமாதி, சமாதியில் இடங்கள், மையங்கள் இவற்றின் எந்த உதவியும் இன்றி இடங்கள் மையங்கள் இவற்றின் எந்த உதவியும் இன்றி எண்ணத்தின் கருத்து மட்டுமே இருக்கும். மனத்தை ஒரு மையத்தில் பன்னிரண்டு நொடிகள் நிறுத்தினால் அது தாரணை, பன்னிரண்டு தாரணைகள் ஒரு தியானம். பன்னிரண்டு தியானங்கள் ஒரு சமாதி. எங்கு நெருப்பு உள்ளதோ, எங்கு நீர் உள்ளதோ, எங்கு சருகுகள் சிதறிக் கிடக்கின்றனவோ, எங்கு எறும்புப் புற்றுகள் அதிகம் உள்ளனவோ, எங்கு காட்டு மிருகங்கள் உள்ளனவோ, எங்கு அபாயம் உள்ளதோ எங்கு நாற் சந்திகள் கூடுகின்றனவோ, எங்கு ஓசை மிகுந்து உள்ளதோ, எங்கு தீயவர்கள் பலர் உள்ளனரோ, அங்கு யோகம்பயிலக் கூடாது. இது குறிப்பாக இந்தியாவிற்குத்தான் பொருந்தும். உடல் மிகவும் சோம்பலாகவோ நோயுற்றோ மனம் துன்புற்றோ கவலையுற்றோ இருந்தாலும் யோகம் பழகக் கூடாது. மறைவானதும், மக்கள் வந்து உங்களைத் தொந்தரவு செய்யாததுமான இடத்திற்குச் செல்லுங்கள். அழுக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்காதீர்கள். மாறாக அழகிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடத்தையோ, உங்கள் வீட்டில் ஓர் அழகிய அறையையோ தேர்ந்தெடுங்கள். பயிற்சி செய்யும்போது முதலில் பண்டைய யோகிகள் எல்லோரையும் உங்கள் குருவையும் கடவுளையும் வணங்கிவிட்டு, அதன்பிறகு பயிற்சியைத் தொடங்குங்கள். இனி, தியானத்தைப்பற்றிக் கூறப்படுகிறது. தியானிப்பதற்குச் சில உதாரணங்களும் தரப்படுகின்றன. நிமிர்ந்து அமருங்கள், மூக்கின் நுனியைப் பாருங்கள். மனத்தை ஒருமுகப்படுத்த இது எவ்விதம் உதவுகிறது. காட்சி நரம்புகள் இரண்டையும் அடக்குவதால் மனத்தின் எதிர்ச் செயல்பகுதி பெருமளவிற்குக் கட்டுப்பட்டு அதன் மூலம் எவ்வாறு கயேச்சையும் கட்டுப்பாட்டில் வருகிறது என்பதையெல்லாம் போகப்போக அறிந்துகொள்ளலாம். தியானத்திற்கு உரிய சில வழிகள் இதோ-தலைக்கு மேல் பல அங்குல உயரத்தில் ஒரு தாமரை இருப்பதாக நினையுங்கள். தர்மம் அதன் மையம். ஞானம் அதன் தண்டு. தாமரையின் எட்டு இதழ்களும் யோகியின் அஷ்டமாசித்திகள். தாமரையின் எட்டு இதழ்களும் எட்டு சித்திகள். அதேவேளையில் உள்ளே உள்ள மகரந்த கேசரங்களும் சூல்பைகளும் தியாகம். புறத்திலிருந்து வருகின்ற சித்திகளைத் தியாகம் செய்தால் யோகி முக்தி அடைவான். தாமரையின் எட்டு இதழ்களும் எட்டு சித்திகள். அதேவேளையில் உள்ளே உள்ள மகரந்த கேசரங்களும் சூல்பைகளும் உயர்நிலை தியாகம். அதாவது இந்தச் சித்திகளைத் துறத்தல்,. தாமரையின் நடுவில் பொன்னொளி வீசுபவராக, சர்வ வல்லமை உள்ளவராக, அணுக அரியவராக, ஓங்காரம் என்னும் பெயரை உடையவராக, விளக்க முடியாதவராக, பேரொளியால் சூழப்பட்டவராக இறைவனை தியானம் செய்யுங்கள். மற்றொரு தியானமும் கூறப்படுகிறது. உங்கள் இதயத்தில் ஒரு வெளி இருப்பதாக நினையுங்கள். அதில் சுடர் ஒன்று ஒளிவிடுகிறது. அது உங்கள் ஆன்மா. அதனுள், உங்கள் ஆன்மாவிற்கு ஆன்மாவாகிய கடவுள் ஒரு பேரொளியாக இருப்பதாக எண்ணுங்கள். அதனை உங்கள் இதயத்தில் தியானம் செய்யுங்கள். பிரம்மச்சரியம், அஹிம்சை, மிகக் கொடிய எதிரியடமும் இரக்கம், உண்மை, இறை நம்பிக்கை இவை எல்லாம் வெவ்வேறான விருத்திகள், நீங்கள் இவற்றில் நிறைநிலை அடையவில்லையென்று அஞ்ச வேண்டாம். முயற்சி செய்யுங்கள் அனைத்தும் கைகூடும். எல்லா பற்றும், எல்லா பயமும், எல்லா கோபமும் விட்டவன், தன்னை முழுவதுமாக இறைவனுக்கே அர்ப்பணம் செய்து அவரிடமே சரண்புகுந்தவன். மனம் தூய்மையடையப் பெற்றவன். இவர்கள் எந்த ஆசையுடன் இறைவனை அணுகினாலுள் அதை அவர்களுக்கு அருள்கிறார் அவர். எனவே ஞானம், பக்தி அல்லது தியாகம் இவற்றால் அவரை வழிபடுங்கள். யாரையும் வெறுக்காதவன், அனைவரிடமும் நட்பு பூண்டவன். எல்லாவற்றிடமும் கருணை உடையவன். அகங்காரம் விட்டவன். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய்க் கருதுபவன். பொறுமையுடையவன். எப்போதும் திருப்தியுற்றவன். எப்போதும் யோகத்தில் நிலை பெற்றவனாய் செயல்புரிபவன், தன்னைக் கட்டுப்படுத்தியவன், திட சங்கல்பம் உடையவன். மனத்தையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பணம் செய்தவன். இத்தகையவனே எனது பக்தன். யார் பிறரைத் துன்புறுத்துவதில்லையோ, யாரைப் பிறரால் துன்புறுத்த முடியாதோ, யார் மகிழ்ச்சி, கோபம், பயம், மனக்கிளர்ச்சி இவற்றிலிருந்து விடுபட்டவனோ இத்தகையவனே எனக்குப் பிரியமானவன். எதையும் சார்ந்திருக்காதவன், தூயவன், சுறுசுறுப்பு உடையவன், துன்பமோ இன்பமோ எது வந்தாலும் பொருட்படுத்தாதவன். ஒருபோதும் துயரப்படாதவன், தனக்கான எல்லா முயற்சிகளையும் விட்டவன். புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாகக் கொள்பவன். அமைதியாக இருப்பவன். ஆழ்ந்த சிந்தனையுடையவன். சிறிதே கிடைத்தாலும் அதில் திருப்தி கொள்பவன். உலகே தன் வீடாக இருப்பதால் தனக்கென்று வீடு இல்லாதவன். தனது கொள்கைகளில் உறுதி படைத்தவன். இத்தகையவனே எனது அன்பிற்குரிய பக்தன். இத்தகையோரே யோகிகள் ஆவார்கள். நாரதர் என்ற தேவ முனிவர் ஒருவர் இருந்தார். மனிதர்களிடையில் பெரிய யோகிகளான முனிவர்கள் இருப்பதுபோல், தேவர்களிலும் யோகிகள் உள்ளனர், நாரதர் மிகப் பெரிய யோகி. அவர் எங்கும் சஞ்சரிப்பார். ஒருநாள் அவர் ஒரு காட்டின் வழியாகச் செல்லும்போது ஒருவனைக் கண்டார். வெகுகாலம் ஓரிடத்திலேயே அமர்ந்து தியானித்து தவம் செய்ததால், அவனது உடலைச் சுற்றிக் கறையான்கள் புற்று கட்டிவிட்டன. அவன் நாரதரை அழைத்து எங்கே போகிறீர்? என்று கேட்டான். நான் சொர்க்கத்திற்குச் செல்கிறேன் என்றார் நாரதர். அப்படியானால், ஆண்டவன் எனக்கு எப்போது அருள்புரிவார். எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் அவன். நாரதர் சிறிது தூரம் சென்றார். அங்கே ஒருவன் பாடிக் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் நாரதரைக் கண்டு நாரதரே! எங்கு செல்கிறீர்? என்று கேட்டான். அவனது குரலும் செயலும் சாந்தமாக இல்லை. நாரதர். நான் சொர்க்கத்திற்குப் போகிறேன் என்றார். அப்படியானால் எனக்கு எப்போது முக்தி கிடைக்கும் என்று கேட்டு வாருங்கள் என்றான் அவன். நாரதர் சென்றுவிட்டார். சிறிது காலத்திற்குப் பின் நாரதர் அந்தக் காட்டின் வழியாகத் திரும்பி வந்தார். உடலைச் சுற்றிப் புற்றி வளர்ந்திருந்த மனிதன், நாரதரே! என்னைப்பற்றி பகவானிடம் கேட்டீரா? என்றான், ஆம் என்றார் நாரதர். பகவான் என்ன சொன்னார்? என்று கேட்டான் அவன். நீ இன்னும் நான்கு பிறவிகளுக்குப் பின்னர் முக்தி அடைவாய் என்று பகவான் கூறினார் என்றார் நாரதர். அதைக் கேட்டதும் அவன் அழுது புலம்பி, என்னைச் சுற்றிப் புற்று மூடும்வரை இவ்வளவு காலம் தியானித்தேன் இன்னும் நான்கு பிறவிகளா? என்றான். நாரதர் மற்ற மனிதனிடம் சென்றார். பகவானிடம் கேட்டீரா, நாரதரே? என்றான் அவன் ஆம் கேட்டேன். அந்தப் புளியமரத்தைப் பார். அதில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகளுக்குப் பின்பு உனக்கு முக்தி கிட்டும் என்றார் பகவான். என்று நாரதர் கூறினார். அதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியால் குதித்தபடியே இவ்வளவு விரைவாக எனக்கு முக்தி கிடைக்கப் போகிறதே! என்று கூறனான். அப்போது ஒரு குரல்! மகனே! இந்தக் கணமே உனக்கு முக்தி அளிக்கிறேன் என்று கூறியது. அவனது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெகுமதி அது. அத்தனை பிறவிகளிலும் பாடுபட அவன் தயாராக இருந்தான். எதுவும் அவனைத் தளரச் செய்யவில்லை. ஆனால் முதல் மனிதனுக்கோ நான்கு பிறவிகள் கூட மிக நீண்ட காலமாகத் தோன்றியது. யுகயுகங்களாகவும் காத்திருக்கத் தயாராக இருந்த மனிதனிடம் இருந்தது போன்ற விடாமுயற்சி மட்டுமே பெரும் பேற்றை அளிக்கும்.

Copyright © 2017 by Swami Vidyananda . All rights reserved.