²õ£ñ¤ õ¤«õè£ùï¢îó¤ù¢ õö¤ò¤ô¢ Þñîî àôèñ¢ º¿õ¶ñ¢ ðóð¢¹õîø¢è£ù ðí¤ ïìªè£í¢®¼è¢è¤ø¶
ராஜயோகம்-பிரத்யாஹாரமும் தாரணையும் பிரத்யாஹாரம். அது என்ன? பிரத்தியட்ச அறிவு எப்படி ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். முதலில் புறக் காரணங்கள் உள்ளன. அடுத்தப்படியாக மூளை மையங்கள் மூலமாக உடலில் செயல்படுகின்ற அகக் காரணங்கள் உள்ளன. அடுத்ததாக மனம் உள்ளது. இவையெல்லாம் ஒன்றுசேர்ந்து ஏதாவது புறப்பொருளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும்போது அந்தப் பொருளை நாம் அறிகிறோம்.அந்த வேளையில், மனத்தைக் குவித்து ஒரு பொறியுடன் மட்டும் இணைந்திருக்கச் செய்வது மிகவும் கடினமான ஒன்று. மனம் ஓர் அடிமை. நல்லவனாக இரு, நல்லவனாக இரு நல்லவனாக இரு என்று திரும்பத் திரும்ப உலககெங்கும் போதிக்கப்படுவதைக் கேட்கிறோம். திருடாதே, பொய் சொல்லாதே என்று அறவுறுத்தப்படாத ஒரு குழந்தைகூட உலகின் எந்த நாட்டிலும் இருக்க முடியாது. ஆனால் அப்படிச் செய்யாமல் இருப்பது எப்படி என்பதை யாரும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. வெறும் வாய்ப் பேச்சினால் அவனுக்குப் பயனில்லை. அவன் ஏன் திருடனாகக் கூடாது? திருடாமல் இருப்பது எப்படி என்று அவனுக்கு நாம் கற்றுக் கொடுப்பதில்லை திருடாதே என்று மட்டும் அவனிடம் வெறுமனே சொல்கிறோம். மனத்தை அடக்கியாளக் கற்றுக் கொடுக்கும்போதுதான் உண்மையில் அவனுக்கு உதவுகிறோம். பொறிகள் எனப்படுகின்ற சில குறிப்பிட்ட மையங்களுடன் மனம் தன்னை இணைத்துக் கொள்ளும்போது தான் அக மற்றும் புறச் செயல்கள் எல்லாமே நிகழ்கின்றன. மனம் உடன்பட்டாலும் சரி உடன்படாவிட்டாலும் சரி, இந்த மையங்களுடன் இணைவதற்காக இழுக்கப்படுகிறது. இதனால்தான் மனிதன் முட்டாள் தனமாக காரியங்களைச் செய்துவிட்டு, பின்னால் துன்பப்படுகிறான். மனம் மட்டும் அவன் வசம் இருந்திருந்தால் அவற்றை அவன் செய்திருக்கவே மாட்டான். மனத்தை அடக்குவதால் ஏற்படும் பலன் என்ன? அது பொறிகளோடு சேர்ந்துகொள்ளாது. அதனால் எண்ணங்களும் செயல்களும் இயல்பாகவே கட்டுப்பாட்டில் இருக்கும். இதுவரை புரிகிறது. ஆனால் இது முடியாக்கூடியதா? ஆம், கண்டிப்பாக முடியும். இன்று அதை நீங்கள் காணவும் செய்கிறீர்கள், துன்பம், கவலை, தீமை என்பவை இல்லையென்று மறுத்து விடும்படி நம்பிக்கை வைத்தியர்கள் மக்களுக்குக் கற்பிக்கின்றனர். அவர்களின் வழி சற்று சுற்றுவழிதான். ஆனால் தங்களுக்குத் தெரியாமல் அவர்கள் எப்படியோ யோக நெறியின் ஒரு பகுதியையே பயன்படுத்துகின்றனர். ஒருவனது துன்பத்தை மறுப்பதன் மூலம் அவனது துன்பத்தை நீக்குவதில் வெற்றி காணும்போது உண்மையில் அவர்கள் பிரத்யாஹாரத்தின் ஒரு பகுதியையே பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் புலன்களைப் புறக்கணிக்கத் தக்க வலிமையை அவனது மனத்திற்கு உண்டாகச் செய்கிறார்கள் அவர்கள். மனவசியக்காரர்களும் இதை முறையையே கையாண்டு, தங்கள் சமிஜ்ஞைகள் மூலம் நோயாளியிடம் ஒரு வகையான பிரத்யாஹாரத்தைத் தற்காலிகமாகச் சிறிது நேரத்திற்கு உண்டாக்குகிறார்கள். மனோ வசியம் என்று கூறப்படுகின்ற இது, பலவீனமான மனத்தின் மீதுதான் செயல்புரிய முடியும். வசியம் செய்பவன் தன் நிலைத்த பார்வையின் மூலமோ அல்லது வேறுவழிகளிலோ நோயாளியின் மனத்தை ஒருவித மந்தமான முடக்க நிலைக்குக் கொண்டுவருவதில் வெற்றி பெறாமல் தனது சமிஜ்ஞைகளை, ஆதிக்கத்தை அவன்மீது செயல்படுத்த முடியாது. மனவசியத்தின் மூலமும் சரி, நம்பிக்கை வைத்தியத்தின் மூலமும் சரி, நோயாளியின் நரம்பு மையங்களைக் கட்டுப்படுத்துவது ஆட்சேபணைக்குரியது. அது அவனை அழிவிலேயே சேர்க்கும். உண்மையில் இது, ஒருவன் தன் சொந்த சுயேச்சை பலத்தால் மூளை மையங்களை வசப்படுத்துவதல்ல; மற்றொருவனின் சுயேச்சை, நோயாளியின் மனத்தைத் திடீரெனத் தாக்கி நிலைகுலையச் செய்வது போன்ற செயலே இது. வெறிபிடித்துப் பாய்ந்தோடும் குதிரைகளைக் கடிவாளத்தாலும் கை வலிமையாலும் பிடித்து இழுத்து நிறுத்தாமல், இன்னொருவனை அழைத்து அவற்றின் தலையில் ஓங்கி அடிக்கச் செய்து நிலைகுலைய வைத்து, அந்த நேரத்திற்கு அவைகளைச் சாதுவாகச் செய்தலாகும். இந்த முறைகள் ஒவ்வொன்றிலும் அவற்றிற்கு ஆட்படும் ஒருவன் தனது மன ஆற்றல்களைச் சிறிதுசிறிதாக இழக்கிறான். கடைசியில், மனம் முழுக் கட்டுப்பாட்டு ஆற்றலைப் பெறுவதற்குப் பதிலாக, வலிமையிழந்த, உருவமிழந்த பிண்டமாக ஆகிவிடுகிறது. அவனது இறுதிப் போக்கிடம் பைத்தியக்கார விடுதி மட்டுமே. சொந்த மனத்தின் மூலம் சுயமாக மனத்தை அடக்க வேண்டும். அவ்வாறில்லாத எந்த முயற்சியும் அழிவை உண்டாக்கும் என்பது மட்டுமல்ல, குறிக்கோளை அடைய விடாமலும் செய்துவிடும். ஒவ்வோர் ஆன்மாவின் குறிக்கோளும் சுதந்திரம், பிரபுத்துவம், ஜடப்பொருள் மற்றும் எண்ணங்களின் அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம்பெறல், புற மற்றும் அக இயற்கைகளின் தலைவனாதல். இந்தக் குறிக்கோளை நோக்கி அழைத்துச் செல்வதற்குப் பதிலாக பிறருடைய சுயேச்சையின் ஒவ்வொரு வெளிப்பாடும், அது எந்த முறையில் இருந்தாலும்- நமது பொறிகளை நேர்முகமாக அடக்கினாலும் சரி, அல்லது அதைச் செயலிழக்கச் செய்து, நாமே கட்டுப்டுத்தும்படி தூண்டினாலும் சரி- அது ஏற்கனவே நம்மைப் பிணைத்துள்ள பழைய எண்ணங்கள், பழைய மூடநம்பிக்கைகள் என்ற தடித்த சங்கிலிக்கு இன்னொரு வளையமாக அமைந்துவிடுகிறது. எனவே பிறர் உங்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். எதிர்பாராத விதமாக நீங்கள் பிறருக்கு அழிவை உண்டாக்குவது பற்றியும் எச்சரிக்கையாக இருங்கள். இதன் மூலம் சிலர் பலரது எண்ணங்களுக்கு ஒரு புதுப் பாதையைக் காட்டி சிறிது உதவி செய்யலாம் என்பது உண்மை தான். அதே வேளையில் அவ்வாறு செய்யும்போது, தாங்கள் அறியாமலே வெளிப்படுத்துகின்ற சமிஜ்ஞைகளால் ஆயிரக்கணக்காண மக்களின் மனத்தில் ஒருவகை செயலற்ற நிலையை, மந்த நிலையை, மயக்க நிலையை உண்டாக்கி, அதன் காரணமாக அவர்களை ஏறக்குறைய ஆன்மாவையே இழந்தவர்கள்போலாக்கி விடுகின்றனர். எனவே கண்னை மூடிக்கொண்டு அப்படியே நம்பும்படி யாரிடமாவது ஒருவன் கூறினாலோ அல்லது வலிமையான தனது சுயேச்சையின் ஆற்றலால் தன்னைப் பின்பற்றச் செய்தாலோ, அவன் மனப்பூர்வமாக இல்லாவிடிலும் மனித குலத்திற்குத் தீங்கையே விளைவிக்கிறான். எனவே உங்கள் மனத்தையே பயன்படுத்துங்கள் உங்கள் உடலையும் மனத்தையும் நீங்களே அடக்கி ஆளுங்கள். நீங்கள் நோயுறாதவரை எந்த வெளிச் சக்தியும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதையும் அப்படியே குருட்டுத்தனமாக நம்பும்படி உங்களிடம் சொல்பவனை, அவன் எவ்வளவு உயர்ந்தவனாக நல்லவனாக இருந்தாலும் சரி, அவனைத் தவிர்த்து விடுங்கள். குதிப்பதும், ஆடிப்பாடி உரக்கக் கத்துவதுமான நெறிகள் உலகம் முழுவதுமே உள்ளன. அவர்கள் ஆடிப்பாடிப் பிரச்சாரம் செய்யத் தொடங்கும் போது அது தொற்று வியாதிபோல் பரவவும் செய்கிறது. அவர்களும் ஒருவகை மனவசியக்காரர்களே. உணர்ச்சி வசப்படுகின்ற இயல்புடையோர் மீது அவர்கள் தற்கலிகமாக ஒருவகையான கட்டுப்பாட்டை உண்டாக்குகின்றனர். அந்தோ, காலப்போக்கில் அனேகமாக இவர்கள் மக்கள் கூட்டத்தையே இழிநிலைக்கு ஆளாக்கிவிடுகின்றனர். மனத்தை மந்தநிலையில் ஆழ்த்திச் செயலிழக்கச் செய்யும் இத்தகைய புறச் சக்திகளுக்கு ஆளாகி, நல்லவர் போல் தோன்றுவதைவிடத் தீயவராக இருப்பது தனி மனிதனுக்கும் சரி இனத்திற்கும் சரி நல்லது. நல்லெண்ணம் உடையவர்களாக இருந்தாலும் பொறுப்பற்றவர்களான இத்தகைய கொள்கை வெறியர்கள், மக்கள் குலத்திற்குச் செய்யும் கொடுமையின் பரிமாணத்தை எண்ணும்போது மனம் வேதனையில் மூழ்குகிறது. பாட்டு மற்றும் பிரார்த்தனையுடன் கூடிய அவர்களது சமிஜ்ஞையின் காரணமாக, திடீரென்று ஆன்மீக எழுச்சிக்குள்ளாகின்ற மனங்கள் உண்மையில் சக்தியிழந்து, சோர்ந்து மயக்க நிலையே அடைகின்றன என்பதை அவர்கள் உணர்வதில்லை. மேலும் அத்தகைய மனங்கள் எந்தத் தீய சமிஜ்ஞையின் காரணமாக, தீடீரென்று ஆன்மிக எழுச்சிக்குள்ளாகின்ற மனங்கள் உண்மையில் சக்தியிழந்து, சோர்ந்து மயக்க நிலையையே அடைகின்றன என்பதை அவர்கள் உணர்வதில்லை. மேலும் அத்தகைய மனங்கள் எந்தத் தீய சமிஜ்ஞையையும் பெறுவதற்கான வழியைத் திறந்து வைத்தவைபோலாகி விடுகின்றன. மேகமண்டலத்திற்கு மேல் இருந்துகொண்டு ஏதோ ஒரு கடவுள் தங்கள் மீது பொழிகின்ற சக்தியின் காரணமாகவே தாங்கள் மனித உள்ளங்களை மாற்ற முடிகிறது என்று தங்கள் அற்புத ஆற்றலைப் புகழ்ந்துகொள்கின்றன இந்த அறிவிலிகள், இந்த முட்டாள்கள் தாங்கள் இதன்மூலம் எதிர்காலத்தின் அழிவிற்கான, பாவச் செயல்களுக்கான, பைத்தியக்காரத்தனத்திற்கான, மரணத்திற்கான விதைகளை விதைக்கிறோம் என்பதைக் கனவிலும் நினைப்பதில்லை. ஆகவே உங்கள் சுதந்திரத்தைப் பறிப்பது எதுவாயினும் அதைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள். அது ஆபத்தானது என்பதை உணருங்கள். உங்களிடமுள்ள சக்தி முழுவதையும் பயன்படுத்தி அதைத் தவிர்த்து விடுங்கள். மனத்தைத் தன் விருப்பப்படி நரம்பு மையங்களுடன் இணைக்கவோ பிரிக்கவோ செய்வதில் வெற்றி பெறுபவன் பிரத்யாஹாரத்திலும் வெற்றி பெறுகிறான். பிரத்யாஹாரம் என்பது மனத்தின் ஆற்றல்களைப் புறத்தில் போகாமல் தடுத்து, புலன்களின் பிடியிலிருந்து அதனை விடுவித்து, உள்ளே குவித்தல் ஆகும். இதைச் செய்ய முடிந்த பின்தான் நாம் உண்மையில் நற்குணம் என்பதைப் பெறுகிறோம், அதன்பின்தான் முக்திப் பாதையில் ஒரு நீண்ட அடியெடுத்து வைக்கிறோம். அதற்குமுன் நாம் வெறும் எந்திரங்களே. மனத்தை அடக்குவதுதான் எவ்வளவு கடினமானது! பித்துப் பிடித்தக் குரங்கோடு மனத்தை ஒப்பிடுவது பொருத்தமானதுதான். குரங்குகள் இயற்கையாகவே சஞ்சல மனம் படைத்தவை. அத்தகைய குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு நிறைய கள்ளைக் குடிக்கக் கொடுத்தான் ஒருவன். அதன் பரபரபப்பு அதிகமாகியது. அது போதாதென்று தேள் ஒன்று அதனைக் கொட்டியது. தேள் கொட்டினால் மனிதனே நாள் முழுவதும் குதிப்பான். குரங்கின் நிலையைச் சொல்லவா வேண்டும்! அதன் போதாத காலத்தைப் பூரணமாக்க ஒரு பேயும் அதைப் பிடித்துக் கொண்டது. அந்தக் குரங்கின் அடக்க முடியாத சஞ்சலத்தையும் படபடப்பையும் விளக்க வார்த்தைகள் எங்கே உள்ளன? மனித மனம் அந்தக் குரங்கின் நிலைக்கு நிகரானது. இயற்கையாகவே அது சஞ்சல இயல்பு நிகரானது. இயற்கையாகவே அது சஞ்சல இயல்பு படைத்தது. ஆசை என்னும் கள் குடித்ததனால் அதன் சஞ்சலமும் வெறியும் அதிகரிக்கிறது. ஆசை குடி கொண்ட பிறகோ பிறர் வெற்றியைக் கண்டு பொறாமை கொள்கின்ற குணமாகிய தேள் கொட்டியது. முடிவாக கர்வம் என்ற பேயும் மனத்தினுள் புகுந்து எல்லா பெருமையும் தனக்கே என்று நினைக்கச் செய்கிறது. இத்தகைய மனத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம்! எனவே முதல் பாடமாக வருவது இது: சிதுநேரம் அமர்ந்து மனத்தை அதன் போக்கிலேயே அலையவிடுங்கள். அது எப்போதும் குமுறிக் கிளம்பிய வண்ணமே உள்ளது. குரங்கு குதித்துத் தாவுவது போன்றது அது. எவ்வளவு வேண்டுமானாலும் அது குதிக்கட்டும். நீங்கள் பொறுமையாக அதைக் கவனிக்க மட்டும் செய்யுங்கள். அறிவே வலிமை என்பது பழமொழி. அது உண்மை. மனம் என்ன செய்கிறது என்பதை அறியாமல் அதைக் கட்டுப்படுத்த முடியாது. கடிவாளத்தை விட்டுப்பிடியுங்கள். தீய எண்ணங்கள் பல அதில் எழலாம். அத்தகைய எண்ணங்கள் உங்கள் மனத்தில் இருந்ததைப்பற்றி நீங்களே திகைப்படைவீர்கள். நாள் செல்லச்செல்ல மனத்தின் வெறித்தனமான போக்கு குறைவதையும், அது மெள்ள மெள்ள அமைதி பெறுவதையும் காண்பீர்கள். ஆரம்பத்தில் சில மாதங்கள் மனத்தில் பல எண்ணங்கள் எழுவதைக் காண்பீர்கள். பிறகு தொடர்ந்து குறைந்துகொண்டே போகும். கடைசியாக மனம் பூரணக் கட்டுப்பாட்டில் வந்துவிடும். ஆனால் தினமும் பொறுமையுடன் பயிற்சி செய்ய வேண்டும். நீராவியைத் திறந்து விட்டால் எந்திரம் இயங்கியே தீரும். அதுபோல் கண்முன் பொருட்கள் இருந்தால் அவை நமக்குப் புலப்பட்டே தீரும். தான் எந்திரம் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமானால் ஒருவன், தான் எதன் கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதைக் காட்ட வேண்டும். இவ்வாறு மனத்தைக் கட்டுப்படுத்தி புலன்களின் மையங்களுடன் அது தொடர்பு கொள்ளாமல் தடுப்பதே பிரத்யாஹாரம். இதைச் செய்வது எப்படி? இது ஒரு பெரிய வேலைதான், ஒரு நாளில் செய்து முடிக்கின்ற வேலையல்ல. பொறுமையாக தொடர்ந்து வருடக்கணக்காகப் பயிற்சி செய்தால் நாம் வெற்றி பெற முடியும். பிரத்யாஹாரத்தைச் சிறிதுகாலம் பயிற்சி செய்த பின் அடுத்த படியாகிய தாரணையை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில இடங்களில் மனத்தை நிறுத்தி வைப்பது என்றால் என்ன? உடலில் சில பகுதிகளை மற்றவற்றிலிருந்து பிரித்து அவற்றை மனம் உணரும்படிச் செய்தல். உதாரணமாக, மற்ற உறுப்புகளை விட்டுவிட்டுக் கையை மட்டும் உணர முயலுங்கள். இவ்வாறு சித்தத்தை ஓரிடத்தில் எல்லைப்படுத்தி நிறுத்துவதே தாரணை. தாரணை பலவகைப்படும். இத்துடன் சிறிது கற்பனையையும் சேர்த்துக் கொள்வது நல்லது. உதாரணமாக இதயத்தில் ஒரு புள்ளியின் மீது மனத்தைச் செலுத்துங்கள். இது மிகவும் கடினமானது. எளிதான வழி அங்கு ஒரு தாமரை இருப்பதாக நினைப்பதுதான். அந்தத் தாமரை ஒளிமயமாக, பேரொளிமயமாக பிரகாசித்துக் கொண்டிருப்பதாக நினையுங்கள். மனத்தை அங்கே நிறுத்துங்கள். அல்லது உச்சந்தலையிலுள்ள தாமரை தாமரை ஜோதிமயமாக ஒளிர்வதாக எண்ணுங்கள். அல்லது நாம் ஏற்கனவே கூறிய சுழுமுனை நாடியிலுள்ள பல மையங்களையும் நினைக்கலாம். யோகி தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். அவன் தனியாக வாழ முயல வேண்டும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பு மனத்தைச் சஞ்சலமுறச் செய்கிறது. அவன் அதிகம் பேசக் கூடாது, ஏனெனில் பேசுவது மனத்தைச் சிதறும்படிச் செய்யும். அதிகம் வேலை செய்யவும் கூடாது; ஏனெனில் அதிக வேலை மனத்தை அலைவுறச் செய்கிறது. நாள் முழுவதும் கடுமையாக உழைத்த பிறகு மனத்தை அடக்க முடியாது. மேற்கண்ட நியதிகளைக் கடைப்பிடிப்பவன் யோகி ஆகிறான். யோக சாதனைகளை மிகச் சிறிதளவு கடைப்பிடிப்பவன்கூடப் பெரும் பயன் அடைகிறான்; யோகத்தின் ஆற்றல் அத்தகையாது. அது யாருக்கும் தீங்கு செய்யாது; மாறாக எல்லோருக்கும் நன்மையே செய்யும். முதன்முதலாக அது நாடி நரம்புகளின் பதற்றத்தைத் தணிக்கும், அமைதியை அளிக்கும், எதையும் நாம் முன்பைவிடத் தெளிவதக அறியும்படிச் செய்யும், மன இயல்பு நன்றாகும், ஆரோக்கியம் வளரும். சிறந்த ஆரோக்கியமும் இனிய குரலும் முதல் அறிகுறிகளுள் அடங்கும். குரலின் குறைபாடுகள் மறைந்துவிடும். வரப்போகின்ற பல்வேறு பலன்களுள் இது முதலாவதாகும். முயன்று பயிற்சி செய்தால் வேறு அறிகுறிகளும் உண்டாகும். சில வேளைககளில் தூரத்தில் அடிக்கின்ற மணி நாதங்கள் ஒன்றுசேர்ந்து தொடர்ந்து காதில் விழும். சிலவேளைகளில் ஒளிப்புள்ளிகள் மிதப்பது போல் தோன்றி பெரிதாகிக் கொண்டே போகும். இவையெல்லாம் தோன்றும்போது நீங்கள் விரைந்து முன்னேறுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். யோகிகள் ஆகவும், தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபடவும் விரும்புபவர்கள் முதலில் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அன்றாட அலுவல்களுடன் ஏதோ சிறிது பயிற்சி மட்டும் செய்ய எண்ணுபவர்கள் விரும்பிய உணவை உண்ணலாம். ஆனால் மிதமாக உண்ண வேண்டும், அவ்வளவுதான். விரைவாக முன்னேற விரும்புபவனுக்கு, கடினமாகப் பயிற்சி செய்ய விழைபவனுக்கு உணவில் கட்டுப்பாடு கண்டிப்பாக வேண்டும். சில மாதங்களுக்கு பாலும், பயிறு, பருப்பு வகைகளும் மட்டுமே உட்கொள்வது அனுகூலமாக இருக்கும். உடலும் மனமும் நுட்பமாகுந்தோறும், ஆரம்பத்தில் உணவில் சில ஒழுங்கீனம்கூட ஒருவனது சமநிலையைக் குலைத்து விடும். முழுமையாக கட்டுப்பாடு உண்டாகும்வரை, ஒரு பிடி உணவு அதிகமாகவோ குறைவதகவோ இருந்தால் போதும், அது மொத்தமாக எல்லாவற்றையும் பாதிக்கும். கட்டுப்பாடு வந்த பிறகு ஒருவன் விரும்புவதை உட்கொள்ளலாம். மனத்தை ஒருமுகப்படுத்த ஆரம்பிக்கும் காலத்தில் ஒரு குண்டூசி கீழே விழுந்தாலும் மூளையை இடியே தாக்கிச் செல்வதுபோல் இருக்கும். புலன்கள் நுட்பமாகுந்தோறும் உணரும் சக்தியும் நுண்மையாகிறது. இவை நாம் கடக்க வேண்டிய படிகள். விடாமுயற்சி உடையவர்கள் வெற்றி பெறுவார்கள். வீண்வாதங்களைழும் மனத்தைக் குழப்புபவற்றையும் விட்டுவிடுங்கள். வறட்டு அறிவினாலும் சொல்வண்ணங்களாலும் என்ன பயன்? மனத்தின் சமநிலையைக் குலையச் செய்து அதைப் பதற்றமுறச் செய்வது ஒன்றே அதனால் வரும் பலன். நுண்ணுலகங்களில் உள்ளவற்றை உணர வேண்டும்? எனவே பயனற்ற பேச்சுக்களை விடுங்கள். அனுபூதி பெற்றவர்கள் எழுதிய நூல்களை மட்டுமே படியுங்கள். முத்துச் சிப்பிபோல் இருங்கள். அதைப்பற்றி இந்தியாவில் அழகிய கதை ஒன்று உண்டு: சுவாதி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது மழை பெய்து, அதில் ஒரு துளி முத்துச் சிப்பியினுள் விழுந்தால், அது முத்தாகுமாம். முத்துச் சிப்பிகளுக்கு இது தெரியும். எனவே அந்தச் சுவாதி நட்சத்திரம் பிரகாசிக்கும்போது அவை நீரின் மேற்பரப்புக்கு வந்து, மழை நீரின் அபூர்வமான அந்தத் துளியைப் பெறுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும். துளி விழுந்தவுடன் தங்கள் ஓடுகளை மூடிக்கொண்டு கடலின் அடித்தளத்திற்குச் சென்றுவிடும். அங்கே பொறுமையாகக் காத்திருந்து அந்தத் துளியை முத்தாக்குமாம். நாமும் அப்படி இருக்க வேண்டும். முதலில் கேட்க வேண்டும், பிறகு புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் எல்லா சுஞ்சலங்களையும் விட்டு, புற ஆதிக்கங்கள் எதுவும் வராதவண்ணம் மனத்தை மூடி, உங்களுள் உள்ள உண்மையை ஒளிரச் செய்வதில் ஈடுபடுங்கள். ஓர் அபாயம் உள்ளது. புதுமை என்பதற்காக மட்டும் ஒரு லட்சியத்தை ஏற்றுக்கொள்வது, பின்னர் அதைவிடப் புதுமையான ஒன்றைக் கண்டதும் பழையதை விட்டு விடுவது-இது உங்கள் ஆற்றல்களைச் சிதறடித்துவிடும். ஒன்றை எடுங்கள், அதைப் பின்பற்றுங்கள், முடிவு காணும் வரை அதை விடாதீர்கள். அந்த லட்சியத்திலேயே வெறியாக இருப்பவன் மட்டுமே ஒளியைக் காண்கிறான். இங்கொன்றும் அங்கொன்றுமாக நுனிப்புல் மேய்ந்து திரிபவர்கள் ஒருபோதும் எதையும் அடைய மாட்டார்கள். கணநேரம் புலன்களுக்கு ஏதோ சுகம் கிடைக்கலாம், ஆனால் அத்துடன் எல்லாம் முடிந்துவிடும். அவர்கள் எப்போதும் இயற்கைக்கு அடிமைகளே, அவர்களால் ஒருபோதும் புலன்களைக் கடந்து செல்ல முடியாது. உண்மையிலேயே யோகியாக விரும்புபவர்கள் நுனிப்புல் மேய்வதை அடியோடு விட்டுவிட வேண்டும். ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதையே உங்கள் வாழ்க்கையாகக் கொள்ளுங்கள். அதையே நினையுங்கள், அதையே கனவு காணுங்கள், அந்த லட்சியத்திற்காகவே வாழுங்கள். மூளை, தசைகள், நரம்புகள் என்று உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியும் அந்த லட்சியத்தால் நிறையட்டும். பிற கருத்துக்கள் அனைத்தையும் அடியோடு விட்டுவிடுங்கள். வெற்றிக்கு வழி இதுவே. ஆன்மிகச் செம்மல்கள் உருவாக்கப்பட்ட வழி இதுவே. மற்றுள்ளவர்கள் வெறும் பேசும் எந்திரங்கள் மட்டுமே. நாமும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகிய மற்றவர்களையும் அத்தகையவர்கள் ஆக்க உண்மையில் விரும்புவோமானால் ஆழ்ந்து மூழ்க வேண்டும். மனத்தைப் பதற்றமுறாமல் வைத்துக்கொள்வது முதல்படி. சஞ்சலப்படுத்துகின்ற கருத்துடையவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. சில மனிதர்கள், சில இடங்கள், சில உணவு போன்றவை நம்மை வெறுப்புடன் ஒதுங்கச் செய்வது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அவற்றை ஒதுக்கி விடுங்கள். இனி, மிகவுயர்ந்த நிலையை அடைய விருமகபுவோர் எல்லா சேர்க்கையையும் நல்நோர், தீயோர் இரு வகையினரின் சேர்க்கையையும் தவிர்த்தேயாக வேண்டும். கடினமாகப் பயிற்சி செய்யுங்கள். வாழ்ந்தாலும் சரி செத்தாலும் சரி, அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். பலனைப்பற்றி எண்ணாமல் பயிற்சியில் மூழ்குங்கள். நீங்கள் போதிய அளவு தைரியசாலியாக இருந்தால் ஆறே மாதங்களில் பூரண யோகி ஆகிவிடலாம். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக எல்லாவற்றையும் பிடித்துக் கொள்பவர்கள் எந்த முன்னேற்றமும் அடைய மாட்டார்கள். பாடங்களைக் கேட்பதால் மட்டும் எந்தப் பயனும் விளையாது. தமோ குணம் நிறைந்தவர்களான மந்தமான அறிவிலிகளுக்கு, எந்த லட்சியத்திலும் மனம் ஒன்றாதவர்களுக்கு, வேடிக்கைக்கு ஏதாவது வேண்டும் என்று ஏங்குபவர்களுக்கு மதம், தத்துவம் எல்லாமே வெறும் பொழுதுபோக்குகளே. அவர்களிடம் இடைவிடாத முயற்சி என்பது கிடையாது. ஒரு சொற்பொழிவைக் கேட்பார்கள், ஆ! மிக நன்றாக இருக்கிறது என்பார்கள். வீட்டிற்குப் போய் அப்படியே மறந்தும் விடுவார்கள். வெற்றி வேண்டுமானால் இடைவிடாத முயற்சியும் தீவிர சங்கல்பமும் உங்களிடம் வேண்டும். நான் கடலையே குடித்துவிடுவேன். எனது சங்கல்பத்தால் மலைகளை துளாகிவிடும் என்கிறான் இடையீடின்றிப் பாடுபவன். அத்தகைய ஆற்றலை, சங்கல்பத்தைப் பெறுங்கள். கடினமாக உழையுங்கள், லட்சியத்தை அடைவீர்கள்.

Copyright © 2017 by Swami Vidyananda . All rights reserved.