²õ£ñ¤ õ¤«õè£ùï¢îó¤ù¢ õö¤ò¤ô¢ Þñîî àôèñ¢ º¿õ¶ñ¢ ðóð¢¹õîø¢è£ù ðí¤ ïìªè£í¢®¼è¢è¤ø¶
பதஞ்ஜலி யோக சூத்திரங்கள்-முன்னுரை - யோக சூத்திரங்களை விளக்குவதற்கு முன் ஒரு முக்கியமான விஷயத்தை விவாதிக்க விரும்புகிறேன். யோக நெறியின் கொள்கை முழுவதும் இதையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. நாம் இப்போது சார்பு நிலையில் உள்ளோம். ஆனால் இதற்கு முன்பு தனி நிலையில் இருந்தோம். இந்தத் தனி நிலையிலிருந்தே நாம் தோன்றியுள்ளோம். வெளிப்பட்டுள்ளோம். இப்போது மீண்டும் இந்தச் சார்பு நிலையிலிருந்து தனிநிலையை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருக்கிறோம். உலகின் மேதைகளும் பொதுவாக இதை ஒப்புக்கொள்வதாகத்தான் தோன்றுகிறது. தூல இயற்கை ஆராய்ச்சிகளும் இந்த உண்மையை ஏறக்குறைய தெளிவாக்கியுள்ளது. இதை ஒப்புக்கொண்டால் அந்தத் தனி நிலை சிறந்ததா, அல்லது இப்போதைய சார்பு நிலைதான் மிகவுயர்ந்தது என்று எண்ணுபவர்களுக்குக் குறைவில்லை. நாம் பிரிவுகளற்ற பரம்பொருளின் வெளிப்பாடுகள். பிரிவுகளுடன் கூடிய இந்த நிலையே தனி நிலையைவிட உயர்ந்தது என்று மிகச் சிறந்த சிந்தனையாளர்கள்கூடக் கருதுகிறார்கள். அந்தத் தனிநிலையில் எந்தப் பண்பும் இருக்க முடியாது; அந்த நிலை உயிரற்றதாக, உணர்ச்சியற்றதாக, மந்தமானதாகத்தான் இருக்க வேண்டும். இப்போதைய இந்த வாழ்வில்தான் நாம் சுகபோகங்களை அனுபவிக்க முடியும். எனவே அதைப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர்கள் கற்பனை செய்துகொள்கிறார்கள். முதலில் நாம் வாழ்க்கைப் பிரச்சினைக்கான மற்ற தீர்வுகளை ஆராய வேண்டியுள்ளது. பழைய தீர்வு என்ன வென்றால் மரணத்திற்குப் பின்னரும் மனிதன் அப்படியே வாழ்கிறான். அவனது தீய பக்கங்கள் ஒழிந்து நல்ல பக்கங்கள் மட்டும் என்றென்றும் நிலைநிற்கிறது என்பதுதான். தர்க்கரீதியாகச் சொல்வதானால் மனிதனின் லட்சியம் உலகமே. அதாவது இந்த உலக வாழ்வே சற்று உயர்ந்த நிலையில் அங்கும் நீட்டப்படுகிறது. தீமைகளற்ற அதைச் சொர்க்கம் என்ற பெயரால் அழைக்கிறார்கள். அவ்வளவுதான். இந்தக் கொள்கை முற்றிலும் தவறானது. சிறுபிள்ளைத்தனமானது என்பது தெளிவு. ஏனெனில் அப்படி ஒரு நிலை இருக்க முடியாது. தீமை கலவாத நன்மை இருக்க முடியாது. அதுபோல் நன்மை கலவாத தீமையும் இல்லை. தீமையே கலவாமல் நன்மையே நிறைந்துள்ள உலகில் வாழலாம் என்பது சம்ஸ்கிருத நியாயத் தத்துவவாதிகள் கூறுவதுபோல் ஆகாயக் கோட்டை தான். தற்காலத்தில் பல பிரிவினர் வேறொரு கொள்கையைக் கூறுகின்றனர். முன்னேறிக்கொண்டே இருப்பது, இலக்கை நோக்கிச் சென்றுகொண்டே இருப்பதுதான் மனிதனின் கதி. ஆனால் இலக்கை அடைவது என்பது மட்டும் கிடையாது. மிக நல்லதுபோல் தோன்றினாலும் இதுவும் தவறே. ஏனெனில் நேர்கோட்டு இயக்கம் என்ற ஒன்றே கிடையாது. ஒவ்வோர் இயக்கமும் வட்டத்தில்தான் நகர்கிறது. ஒரு கல்லை எடுத்து வானவெளியில் வீசுங்கள். அதற்குத் தடையொன்றும் இல்லாமலிருந்து, நீங்களும் போதிய காலம் வாழ்ந்திருந்தால் அந்தக் கல் சரியாக உங்கள் கைக்கே திரும்பி வந்துசேரும். நேர்கோடு எல்லையற்று நீட்டப்படும்போது வட்டமாகத்தான் அது நிறைவுறும். ஆகவே, முடிவின்றி முன்னேறிச் சென்று கொண்டிருப்பதுதான் மனிதனின் விதி என்ற கருத்து தவறானது. நமது விஷயத்திற்குப் புறம்பாக இருந்தாலும் இங்கு ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். இந்தக் கருத்து, யாரையும் வெறுக்கக் கூடாது. அன்பு காட்ட வேண்டும் என்ற நீதிநெறிக் கோட்பாட்டை விளக்குவதாக உள்ளது எப்படியெனில் ஒரு டைனமோவிலிருந்து புறப்படுகின்ற மின்னோட்டம் கற்றை முடித்து முடிவில் டைனமோவை அடைகிறது என்கிறது நவீனக் கொள்கை. வெறுப்பும் அன்பும் அதுபோல்தான் புறப்பட்ட இடத்திற்கு அவை திரும்பி வந்தே தீர வேண்டும். எனவே யாரையும் வெறுக்காதீர்கள். ஏனெனில் உங்களிடமிருந்து புறப்பட்ட அந்த வெறுப்பு நாளடைவில் உங்களிடமே திரும்பி வரும். நீங்கள் அன்பு காட்டினால், அந்த அன்பும் சுற்றினை முடித்துவிட்டு உங்களிடம் திரும்பி வரும். ஒருவனது இதயத்திலிருந்து புறப்படுகின்ற வெறுப்பு முழுவேகத்தில் அவனிடம் திரும்பி வரவே செய்கிறது. இதை யாராலும் தடுக்க முடியாது. அதுபோலவே அன்பின் ஒவ்வொரு வெளிப்பாடும் அவனிடம் வந்து சேர்கிறது. நடைமுறைக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் முடிவற்ற முன்னேற்றக் கொள்கை ஏற்கக்கூடியதாக இல்லை. ஏனெனில் உலகில் உள்ள ஒவ்வொன்றின் இலக்கும் அழிவாகவே உள்ளது. நமது முயற்சிகளும் நம்பிக்கைகளும் அச்சங்களும் இன்பங்களும் எல்லாம் நம்மை எங்கே இட்டுச் செல்கின்றன? மரணமே நம் அனைவருக்கும் முடிவு. அதைப்போல் சர்வ நிச்சயமானது வேறு எதுவுமில்லை. ஆகவே இந்த நேர்கோட்டு இயக்கம், முடிவற்ற முன்னேற்றம் எங்கே உள்ளது? சிறிது தூரம் சென்றுவிட்டுல புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்தாக வேண்டும். அண்டப் பிழம்புகளிலிருந்து சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் முதலியவை உருவாகின்றன. மீண்டும் அவை கரைந்து அண்டப் பிழம்பிற்கே திரும்பிச் செல்கின்றன. எங்குமே இவ்வாறுதான் நடைபெறுகிறது. செடி, நிலத்திலிருந்து சத்தை எடுத்து வளர்கிறது. பின்னர் நிலத்திலேயே சங்கமித்து, அதைத் திருப்பிக் கொடுக்கிறது. உலகில் உள்ள உருவம் ஒவ்வொன்றும் சூழ்ந்துள்ள அணுக்களிலிருந்து ஆக்கப்பெற்று இறுதியில் அணுக்களாகவே ஆகின்றன. ஒரே விதி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகச் செயல்பட முடியாது; ஒரே விதத்தில் தான் செயல்படும். இதைவிட நிச்சயமானது வேறொன்றும் இல்லை. இயற்கைக்கு இது விதியானால் எண்ணங்களும் இந்த விதி பொருந்தும். எழுகின்ற எண்ணங்களும் மாய்ந்து, கிளம்பிய இடத்திற்கே செல்லும், நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இறைவன் அல்லது பரம்பொருள் என்று அழைக்கப்படுகின்ற நமது மூலகாரணத்திற்கு நாம் திரும்பிச் சென்றேயாக வேண்டும் நாம் கடவுளிடமிருந்து வந்தோம். நாம் அவரிடம் திரும்பிச் சென்றேயாக வேண்டும். அவரைக் கடவுள் என்றோ, சுத்தப் பிரம்மம் என்றோ இயற்கை என்றோ கூறிக்கொள்ளுங்கள், உண்மை அதுவே யாரிடம் அவை திரும்பிச் செல்லுமோ இந்த உண்மை சர்வ நிச்சயமானது. இயற்கை ஒரே நியதியில் இயங்குகிறது. ஒரு கோளத்தில் நிகழும் செயல்பாடே லட்சக்கணக்கான பிற கோளங்களிலும் நடைபெறுகிறது. கிரகங்களைப் பொறுத்தவரை எது உண்மையோ, அதுவே பூமியைப் பொறுத்தவரை மனிதனைப் பொறுத்தவரை, அனைத்தையும் பொறுத்தவரை, உண்மை. ஒரு பெரிய அலை எண்ணிறந்த சிற்றலைகளின் தொகுதியாகும். உலகத்தின் வாழ்வு என்பது லட்சக்கணக்கான சிற்றுயிர்களின் வாழ்க்கைத் தொகுதி. உலகத்தின் அழிவு என்பது இந்த லட்சக்கணக்கான சிற்றுயிர்களுடைய அழிவின் தொகுதி. இப்பொழுது கேள்வி எழுகிறது. கடவுளிடம் திரும்பிச் செல்வது உயர்ந்த நிலையா, இல்லையா? அது உயர்நிலையே என்று யோக நெறியின் தத்துவ அறிஞர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். மனிதனின் இப்போதைய நிலை ஒரு வீழ்ச்சி என்று அவர்கள் கூறுகின்றனர். அப்படியில்லை. மனிதனின் இப்போதைய நிலை ஓர் உயர்ச்சி என்று சொல்லக்கூடிய மதம் ஒன்று கூட உலகில் இல்லை. இதன் கருத்து என்னவென்றால் முதலில் அவன் பரிபூரணமானவனாக, தூயவனாக இருந்தான். பின்னர் வீழ்ச்சி அடையத் தொடங்கினான். இதற்குக் கீழே போக முடியாது என்ற நிலை வந்தால் மேல்நோக்கிப் படிப்படியாக முன்னேறி வட்டத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். வட்டம் பூர்த்தியாகியே தீரும். மனிதன் எவ்வளவுதான் கீழே சென்றாலும். இறுதியில் மேல்நோக்கி வந்து மூல காரணமாகிய இறைவனை அடைந்தேயாக வேண்டும். அவன் ஆரம்பத்தில் கடவுளிடமிருந்தே வந்தான். இடையில் மனிதன் ஆனான். இறுதியில் கடவுளிடமே திரும்பிப் போகிறான்,. இவ்வாறு துவைத நெறி அதனை விளக்குகிறது. அத்வைதத்தின்படி மனிதனே கடவுள் மறுபடியும் அவன் அவரை அடைகிறான். நமது இப்போதைய நிலை உயர்வானது என்றால், ஏன் இவ்வளவு அச்சமும் துயரமும்? அவற்றிற்கு ஏன் ஒரு முடிவு வரவில்லை? இந்த நிலை உயர்வானது என்றால் ஏன் இது முடிய வேண்டும்? நலிவதும் அழிவை நோக்கிச் செல்வதும் உயர்நிலை ஆகாது. ஏன் இந்த நிலை பயங்கரமாகவும் அதிருப்தியைத் தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும்? மேல்நோக்கிச் செல்ல வேண்டுமானால் இந்த நிலை வழியாகத்தான் சென்றாக வேண்டும். நாம் மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு இதைக் கடந்தே தீர வேண்டும் என்ற அளவில் இதனை ஏற்றுக்கொள்ளலாம். அவ்வளவுதான். ஒரு விதையை நிலத்தில் இட்டால் அது அழுகி, சில காலத்திற்குள் கரைந்துவிடுகிறது. அந்த அழிவிலிருந்தே அழகிய புதிய மரம் உண்டாகிறது. அதுபோல் கடவுளாக வேண்டுமானால் ஒவ்வோர் உயிரும் அழிந்தே தீர வேண்டும். எனவே மானிடம் என்று நாம் அழைக்கின்ற இப்போதைய நிலையிலிருந்து எவ்வளவு விரைவாக வெளியேறுகிறோமோ அவ்வளவுக்கு நல்லது. அதற்காகத் தற்கொலை செய்துகொள்வதா? அல்லவே அல்ல. அதனால் குழப்பமே மிகும். நம்மை வருத்தவதும், உஙலகைப் பழிப்பதும், அதிலிருந்து வெளியேறும் வழிகள் அல்ல. நம்பிக்கையே இல்லாத மனத்தளர்வு என்ற சதுப்பு நிலத்தினூடே நாம் சென்றாக வேண்டும். எவ்வளவு விரைவாக அதைக் கடக்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது. மனிதநிலைதான் மிகவுயர்ந்த நிலை என்பது அல்ல இதனை எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மிகவுயர்ந்த நிலை என்று கூறப்பட்ட இந்தத் தனி நிலை. சிலர் பயப்படுவதுபோல் கடற்பஞ்சு அல்லது கல் போன்ற ஒரு நிலை அல்ல என்பதைப் புரிந்துகொள்வது தான் இதில் உண்மையில் கடினமான பகுதி. அவர்களைப் பொறுத்தவரை இரண்டு நிலைகளே உள்ளன. ஒன்று கல் நிலை; மற்றது கருத்து நிலை. வாழ்வு என்பதை இந்த இரண்டு நிலைகளுக்குள் வரையறுக்க அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? கருத்து அல்லது எண்ணத்தைவிட எல்லையற்ற அளவு உயர்ந்த நிலை ஒன்று இல்லையா? ஒளியின் அதிர்வுகள் மிகக் குறைவாக இருக்கும்போது நாம் ஒளியைக் காண்பதில்லை. அதிர்வுகள் சற்று அதிகரிக்கும்போது ஒளி நம் கண்களுக்குப் புலனாகிறது. அவை இன்னும் அதிகரித்தாலும் நாம் ஒளியைக் காண முடிவதில்லை. அது நமக்கு இருளாகிவிடுகிறது. இறுதியில் நிலவிய இருளும் முதலில் நிலவிய இருளும் ஒரே மாதிரி யானவையா? இல்லவே இல்லை. இரண்டும் இரு துருவங்கள். கல்லின் எண்ணமற்ற நிலையும் கடவுளின் எண்ண மற்ற நிலையும் ஒன்றா? ஒருபோதும் இல்லை. கடவுள் சிந்திப்பதில்லை. அவர் ஆராய்வதில்லை. அவர் ஏன் ஆராய வேண்டும்? ஆனால் அவர் அறியாதது ஏதாவது உண்டா? அப்படி ஏதாவது இருந்தால் அல்லவா அவர் ஆராய்ந்து அறிய வேண்டும். கல் ஆராய முடியாது. கடவுள் ஆராய்வதில்லை. இதுதான் கல்லுக்கும் கடவுளுக்கும் உள்ள வேறுபாடு. தத்துவ அறிஞர்கள் எண்ணத்திற்கு அப்பால் செல்ல பயப்படுகின்றனர். எண்ணத்திற்கு அப்பால் அவர்கள் எதையும் காண்பதில்லை. ஆராய்ச்சி அறிவிற்கு, தர்க்க அறிவிற்கு அப்பால் எவ்வளவோ உயர்ந்த நிலைகள் உள்ளன. உண்மையில் ஆன்மீக வாழ்க்கையின் முதற்படியே புத்திக்கு அப்பால் தான் இருக்கிறது. எண்ணத்தையும் புத்தியையும் ஆராய்ச்சியையும் கடக்கும்போதுதான் கடவுளை நோக்கி முதல் அடியை எடுத்து வைக்கிறீர்கள். அதுதான் வாழ்வின் ஆரம்பம். சாதாரணமாக நாம் வாழ்வு என்று கூறுவது வெறும் கருநிலையே. எண்ணத்தையும் பகுத்தறிவையும் கடந்தநிலை தான் மிகவுயர்ந்த நிலை என்று கூறுவதற்கான நிரூபணம் எது என்ற கேள்வி எழுகிறது. முதலில், உலகின் மாமனிதர்கள் அனைவரும் வாய்ச்சொல் வீரர்களைவிட எவ்வளவோ உயர்ந்தவர்கள். அனைவரும் உலகையே அசைத்தவர்கள். அனைவரும் தன்னலத்தைக் கனவிலும் கருதாதவர்கள். அனைவரும் இந்த வாழ்வு இதற்கு அப்பாலுள்ள எல்லையற்ற நிலையை அடையும் வழியில் உள்ள ஒரு நிலை மட்டுமே என்று உறுதியாகக் கூறியுள்ளனர். இரண்டாவதாக, அவர்கள் கூறியதுடன் மட்டும் நிற்கவில்லை. தாங்கள் சென்ற வழியில் செல்வதற்கான பாதையை ஒவ்வொருவருக்கும் காட்டியுள்ளனர். தாங்கள் பின்பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு வேண்டிய சாதனங்களை விளக்கியுள்ளனர். மூன்றாவதாக, அவர்கள் காட்டிய பாதையைத் தவிர நமக்கு வேறு வழியும் இல்லை. வேறு விளக்கமும் எதுவும் இல்லை. இந்த உலக வாழ்வைவிட உயர்நிலை இல்லை என்று வைத்துக் கொண்டாலும், இந்த வட்டத்திற்குள்ளேயே நாம் ஏன் சுழன்று கொண்டிருக்கிறோம்? இந்த உலகைப் பகுத்தறிவு விளக்க முடியுமா? இந்த உலகை நாம் கடந்து செல்லாவிட்டால், உயர்ந்த எதையும் நாம் கேட்கக் கூடாது என்றால், புலன்களால் உணரக் கூடிய இந்த உலகமே நமது அறிவின் எல்லை என்று ஆகிவிடும். இது ஆஜ்ஞேய வாதம். ஆனால் புலன்களால் வரும் அறிவு சரியானது என்பதற்கு என்ன நிரூபணம் உள்ளது? ஒருவன் நடுவீதியில் அசையாமல் நின்று உயிரைவிடத் தயாராக இருப்பானானால் அவனையே உண்மையான சந்தேகவாதி என்று நான் கூறுவேன். பகுத்தறிவே எல்லாம் என்றால் சூன்யவாதத்தின் இந்தப் பக்கத்தைப் பற்றிக்கொண்டு நாம் எங்கும் நிற்க முடியாது. ஒருவன் தேடும் பணம், பெயர், புகழ் இவற்றைத் தவிர மற்றவற்றில் உண்மையில்லை என்று கூறினால் அவன் ஓர் ஏமாற்றுக்காரன். பகுத்தறிவு என்றழைக்கப்படுகின்ற உறுதியான சுவரை நம்மால் தாண்டிச் செல்ல முடியாது என்று கான்ட் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்திருக்கிறார். ஆனால் இந்தியத் தத்துவச் சிந்தனைகள் அடிப்படையாகக் கொள்கின்ற முதல் கருத்து இதுதான். இந்த அடிப்படையில் நின்றுகொண்டுதான் பகுத்தறிவைக் கடந்த ஒன்றைத் துணிந்து தேடவும், அதை அடைவதில் வெற்றி பெறவும் செய்துள்ளனர். அதில் மட்டுமே நமது இப்போதைய நிலைக்கான விளக்கத்தைக் காண முடியும். இந்த உலகிற்கு அப்பால் நம்மை இட்டுச் செல்வதான ஒன்றைப் படிப்பதன் பலன் இதுவே. நீயே எங்கள் தந்தை! அஞ்ஞானப் பெருங்கடலைத் தாண்டி அக்கரைக்கு எங்களை எடுத்துச் செல்வாயாக இதுவே மத விஞ்ஞானம் ஆகிறது வேறெதுவுமில்லை.

Copyright © 2017 by Swami Vidyananda . All rights reserved.