²õ£ñ¤ õ¤«õè£ùï¢îó¤ù¢ õö¤ò¤ô¢ Þñîî àôèñ¢ º¿õ¶ñ¢ ðóð¢¹õîø¢è£ù ðí¤ ïìªè£í¢®¼è¢è¤ø¶
தியானமும்- ஆன்மீகமும் இயற்கைக்கு அடிமையா யிருப்பதை எதிர்க்க உதவும் சக்தியே தியானம். இயற்கை நம்மை அறை கூவி அழைப்பாள். இதோ பார்! இது எவ்வளவு அழகிய பொருள்! நான் கேட்க மறுக்கிறேன். இப்பொழுது அவள் கூறுகிறாள். இந்தச் சுகந்த வாசனையை முகர்ந்து பார்! நான் எனது நாசிக்குக் கூறுகிறேன், அதை முகர்ந்து பார்க்காதே. நாசியும் முகரவில்லை. கண்களே, அதைப் பார்க்காதீர்! என்று கூறுகிறேன். கண்களும் பார்க்கவில்லை. இயற்கை ஒரு கொடுமையான செயலை விளைவிக்கிறது. என் குழந்தைகளில் ஒன்றைக் கொன்று விட்டு அது கூறுகிறது. அயோக்கிய மனிதனே! அழு, துக்கக் கடலில் முழ்கு! நான் விடையளிக்கிறேன், நான் துக்கப்பட வேண்டியதில்லை. இயற்கையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெறத் துள்ளுகிறேன், சில வேளைகளிலாவது இவ்வாறு முயன்று பாருங்கள்! இயற்கையினால் ஏற்படும் தளைகளை நிச்சயமாக தியானத்தால், மாற்றிவிடக்கூடும். இந்த ஆற்றல் உங்களிடம் இருந்தால் அதுவே சுவர்க்கம், அதுவே விடுதலை அல்லவா? அதுவே தியானத்தால் பெறும் ஆற்றல். இந்த ஆற்றலை எவ்வாறு பெறுவது? இதை வெவ்வேறு முறைகளில் பெற முடியும். ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொரு வழியில் செல்லும். ஆயினும், பொதுவான நியதி இதுதான்; மனத்தின் எண்ண அலைகளை அடக்குங்கள். மனது நீர் பெருகிய ஓர் ஏரி போன்றது. அதில் விழும் ஒவ்வொரு கல்லும் அலைகளை எழுப்புகிறது. இந்த அலைகளால் நமது பிம்பம் ஏரியின் நீரில் தெரிவதில்லை. பூரணச் சந்திரன் நீரில் பிரதிபலிக்கிறான். அனால் நீர்ப் பரப்பு கலக்கப்பட்டு இருப்பதால் பிம்பம் தெளிவாகத் தெரிவதில்லை. நீர்ப்பரப்பு அமைதி பெறட்டும். அலைகளை எழுப்பும்படி இயற்கையைத் தூண்ட வேண்டாம். சிறிது நேரம் அமைதியாய் இருங்கள். இப்போது இயற்கை ஒடுங்குவதால் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்கிறீர்கள். கடவுள் ஏற்கனவே எங்கும் உள்ளார். ஆனால் மனம் அவரைப் பற்றவில்லை. அது எண்ண அலைகளால் குழப்பம் அடைந்து, புலன்களின் வழியில் எப்பொழுதும் சென்று கொண்டு இருக்கிறது. புலன்களை அடக்க முயற்சி செய்யுங்கள். எண்ண அலைகள் சுழன்று கொண்டுதான் இருக்கின்றன. ஒரு சமயம் மனத்தை அடக்கிவிட்டதாக எண்ணிக் கடவுளைத் தியானிக்கிறேன். மறு நிமிடம் மனம் லண்டனுக்குச் சென்று விடுகிறது. அங்கிருந்து அதைத் திருப்பினால் அது நியூயார்க்கிற்குச் சென்று அங்கு நான் புரிந்த செயல்களை நினைக்கிறது. இந்த எண்ண அலைகளைத் தியானத்தின் ஆற்றலினால்தான் நிறுத்த இயலும். - ஆனந்தக் கோட்டையின் வாசலைத்திறந்து, பேரின்பம் அளிக்க உதவும் திறவுகோல் தியானமே. துதிகள் சடங்குகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு முறைகளையும் தியானத்துடன் ஒப்பிடுகையில் அவை ஆழத்தில் உள்ள படிகள் அல்லது பாலர் வகுப்புகள் என்றே கருத வேண்டும் . நீங்கள் கடவுளைத் துதித்து நிவேதனம் அளிக்கின்றீர்கள். இது உங்கள் ஆன்மீக உணர்வை எழுப்புவதாக நினைக்கிறீர்கள். மந்திரங்கள், துதிகள், மலர்கள் விக்கிரகங்கள். கோவில்கள், தீப ஆராதனை போன்றவை மனத்தை ஆன்மீக நிலைக்கு உயர்த்துகின்றன. அந்த ஆன்மீக உணர்வு உங்கள் ஆன்மாவிலேயே உள்ளது. வேறிடத்தில் அல்ல மக்கள் முன்கூறிய வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் புரிந்து செய்யவில்லை. சரியாகப் புரிந்து செய்தால் அதுவே தியானத்தின் ஆற்றலாகும். மெள்ள மெள்ளப் படிப்படியாக, நாம் பயிற்சி பெறவேண்டும். இது வேடிக்கையன்று; ஒரு நாளல்ல பல வருடங்கள். பல பிறவிகள் வேண்டி யிருக்கலாம். கவலை கொள்ளற்க, தியானத்தில் ஈடுபடப் பழகுங்கள். புரிந்து தன்னிச்சையாகவே இந்தப் பயிற்சி நடைபெற வேண்டும். சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைந்து வெற்றி பெறலாம். அப்போது ஒரு பெரிய நிதியைப் பெற்றதாக உணர்வீர்கள். இதை ஒருவரும் உங்களிடமிருந்து எடுத்துச் செல்ல இயலாது. ஒருவரும் இதை அழிக்க முடியாது. இந்த இன்பத்தை எந்தத் துன்பமும் இனிமேல் பாதிக்க முடியாது. - கடவுளை நேரிடையாக அனுபவிக்கும் வழியைக் கற்பிக்கும் அறிவியலே யோக சாத்திரம் ஆகும். சமய உண்மையை ஒருவன் உணர்ந்தால் அன்றி, ஒருவன் தன் சமயத்தைப் பற்றிக் கூறுவதில் பயனில்லை. ஆண்டவன் பெயரை முன்னிட்டு ஏன் இவ்வளவு சமயச் சண்டையும் குழப்பமும்? வேறு எந்தக் காரணத்தையும் விட, சமயச் சச்சரவில் அவரவர் கடவுள் பேரில் தான் அதிகம் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. ஏனெனில் மக்கள் சமயத்தின் மூலம் கொள்கைகளைத் தெரிந்து கொள்ளாது தங்கள் முன்னோர்கள் மேற்கொண்ட பழக்கங்களுக்கு மனத்தளவில் இசைவு கொண்டு, திருப்தி அடைந்து, மற்றவர்களும் அவ்வண்ணமே அவற்றை ஏற்க வேண்டுமென்று விரும்புவதால்தான். ஆன்மாவை உணராத மனிதன் தனக்கு ஆன்மா உண்டென்றும்; கடவுளைக் காணாத மனிதன் கடவுள் உண்டென்றும் கூறுவதற்கு அவனுக்கு என்ன உரிமை உள்ளது? கடவுள் ஒருவர் இருந்தால், அவரை நாம் காண வேண்டும். ஆன்மா ஒன்று உண்டு என்றால், அதை நாம் அறிய வேண்டும். இல்லையெனில், கடவுள் நம்பிக்கையற்று இருப்பதே நன்று. கூற்றும் செயலும் வேறுபட்டு இருப்பதைக் காட்டிலும் நாத்திக வாதியாய் இருத்தலே நன்று. மனிதன் உண்மையைக் காண விரும்ப வேண்டும். அதைத் தன் அனுபவத்தில் காண வேண்டும்; அதைத் தன் அனுபவத்தில் காண வேண்டும்; அதைத் தேடிக் கண்டு, நன்றாகப் பற்றி உணர்விலே அனுபவித்தால் எல்லா ஐயங்களும் பறந்துவிடும்; இருள் அனைத்தும் சிதறிவிடும்; கோணல்கள் அனைத்தும் நிமிர்ந்து விடும் என்று வேதங்கள் முழங்குகின்றன. - மனத்தை அடக்குவது எவ்வளவு அரிது! அது பைத்தியம் பிடித்த குரங்குக்கு ஒப்பாகக் கூறப்பட்டுள்ளது. இயற்கையாக எல்லாக் குரங்குகளும் இருப்பது போன்று. அமைதியற்ற ஒரு குரங்கு ஓர் ஊரில் இருந்தது. அதன் சஞ்சலத்தை மிகுதியாக்கக் கள்ளினை ஒருவன் அதற்குக் குடிக்கக் கொடுத்தான். பின்பு அதை ஒரு தேள் கொட்டிற்று. ஒரு மனிதனைத் தேள் கொட்டினாலே அவன் வலியால் நாள் முழுவதும் குதித்துக் கொண்டு இருப்பான். அந்தோ! அந்தப் பரிதாபமான குரங்கின் துன்பத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை. அதன் நிலையை மேலும் பரிதாபமாக்க, அதனுள் ஒரு பேய் புகுந்தது. இப்போது அதன் அடக்க முடியாத நிலை குலைவைச் சொற்களால் விவரிக்க இயலுமா? மனிதனின் மனமும் அக் குரங்கைப் போன்றதே; இயற்கையிலே நில்லாமல் அது இயங்கிக் கொண்டு இருக்கும். ஆசை யென்னும் மதுவை அருந்துவதால் அதன் கலக்கம் அதிகரிக்கின்றது. ஆசை பற்றிய பின் பிறரின் வெற்றியைக் கண்டு ஏற்படும் பொறாமை என்ற தேள் அதைக் கொட்டுகிறது, பிறகு கர்வம் என்ற பிசாசு மனத்தில் புகுந்து, எல்லாச் சிறப்பும் தனக்கே என்று கர்வம் கொள்ளச் செய்கிறது. இவ்வகைப் பட்ட மனத்தை அடக்குவது எவ்வாறு இயலும்! கடினமான கடமை: நமது உடலில் மூன்று முக்கிய நரம்பு ஒட்டங்கள் இருப்பதாக யோகிகள் கூறுகின்றனர். முதுகெலும்பின் இடப்பக்கத்தில் இடகலை என்ற நரம்புத் தொகுதியும், வலப்பக்கத்தில் பிங்கலை என்ற நரம்புத் தொகுதியும், முதுகெலும்பின் உள்ளே சுமுமுனை என்ற நரம்பும் உள்ளன. இந்த சுழுமுனை நரம்பு உள்கூடாக உள்ளது. இதன் முனை அடைப்பட்டுள்ளது என்றும் சாதாரண மனிதனுக்கு இது அதிகப் பயனில்லை என்றும் யோகிகள் கூறுகின்றனர். சாதாரண மனிதனுக்குப் பொறிகளிலிருந்து உள்ளே வரும் உணர்ச்சிகளும் வெளியே தசைகளுக்குச் செல்லும் கட்டளைகளும் இடகலை, பிங்கலை நரம்புகள் வழியாகச் செல்கின்றன. நமக்கு இப்போது செய்ய வேண்டியதாக இருப்பது கடினமான செயல். உள்ளத்தில் ஆழ்ந்து மூழ்கி இருந்து அனிச்சையாக வெளிவரும் எண்ண அலைகளைக் கட்டுப் படுத்துவது முதன் முதலான வேலை. தீய செயல் சந்தேகமின்றி, உணர்வு அல்லது நனவு மட்டத்தில் தான் நிகழ்கிறது. ஆனால் தீய செயல் நிகழ்வதற்குக் காரணம் மனத்தின் உணர்வு இல்லாத உள்நனவில் (சப் கான்சியஸ் மையின்ட்) அடிமட்டத்தில் மூழ்கிக் கிடக்கிறது. ஆதலின் அது ஆற்றல் மிகுந்தது. உள் நனவைக் கட்டுப்படுத்துவதின் முறையை நாம் முதலில் ஆராய வேண்டும். பின்பு நனவுக்கு அப்பால் உள்ள உயர் நனவை ஆராய வேண்டும். ஆகவே நமக்கு இப்போது இருவகை வேலைகள் உள்ளன. முதலில் சாதாரண நரம்பு ஓட்டங்களான இடகலை, பிங்கலை ஓட்டங்களைச் சரியாக இயக்கச் செய்து, உள் நனவில் அமுங்கியிருக்கும் உணர்வின் பயனாகத் திடீரென்று வெளி வரும் அனிச்சைச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். பிறகு உயர் நனவைப் (சூப்பர் கான்சியஸ் மையின்ட்) பெற வேண்டும் நீண்டகாலப் பயிற்சியால் மனத்தை அடக்கி ஒரு முகப் படுத்தி இந்த நிலையை அடைபவனே யோகி. சுழுமுனை இப்போது திறந்து அதனுள் இதற்குமுன் சென்றிராத ஓர் ஓட்டம் இயங்கி, மேலே பல (தாமரை போன்ற) மையங்களை அடைந்து, இறுதியில் முளையை அடைகிறது. அப்போது யோகியானவன் தானே பிரம்மம், தானே இறைவன் என்பதை அறிகிறேன். - உங்களால் இயலுமானால், யோகப் பயிற்சிக்குத் தனித்த ஓர் அறையைச் சீராக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவ் வறையில் துயிலல் வேண்டாம். அதைப் புனிதமாக வைத்திருக்க வேண்டும். குளித்துத் தூய ஆடை அணிந்து, மனத்தையும் உடலையும் தூய்மைப் படுத்தி அவ்வறையில் புகுதல் வேண்டும். அவ்வறையில் மலர்கள் வைத்து அலங்கரிக்கவும், இவை யோகிக்குத் தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்தும். மனத்திற்கினிய தூய படங்களையும் அங்கு வைக்கலாம். காலையிலும் மாலையிலும் நறுமணம் கமழும் சாம்பிராணிப் புகை இடுங்கள். கோபமோ, சச்சரவோ, தூய்மையற்ற எண்ணமோ அவ்வறையில் நிகழ்தல் கூடாது. உங்களுடன் ஒத்த எண்ணமுடையவர்களை மாத்திரம் அவ்வறையில் புக விடுங்கள். படிப்படியாக அந்த அறை புனிதத்தன்மை பெறும். துன்பம் அல்லது சந்தேகத்தால் மனம் கலங்கும்போது அவ்வறையில் நீங்கள் புகுந்தால் மன அமைதியை அடைவீர்கள். இக் காரணம் பற்றியே புனிதச் சூழ்நிலையை உண்டாக்கக் கோயில்கள் ஏற்பட்டன. சில கோயில்களில் அவ்விதப் புனிதச் சூழ்நிலை அழிந்திருக்கக் காண்கிறோம். ஒரு தனித்த அறையைச் சீர் படுத்தி வைக்க இயலாதவர்கள் விரும்பிய இடத்தில் தியானப் பயிற்சி செய்யலாம். எங்கு நெருப்பு உள்ளதோ, எங்கு நீர் உள்ளதோ, எங்கு உலர்ந்த சருகுகள் சிதறிக் கிடக்கின்றனவோ, எங்கு எறும்புப் புற்றுகள் உள்ளனவோ, எங்கு காட்டு மிருகங்களின் பயம் உளதோ, எங்கு நாற்சந்திகளும் கூடுகின்றனவோ, எங்கு ஓசையும் கூச்சலும் மிகுந்து உள்ளதோ, எங்கு தீயவர்கள் உளரோ, அங்கு யோகம் பயிலக்கூடாது. உடல் சோம்பலுற்று அல்லது நலமற்று இருந்தாலும், மனம் துன்புற்று அல்லது கவலையுற்று இருந்தாலும் யோகம் பயிலக் கூடாது. மறைவானதும், மக்கள் கூட்டம் இல்லாததும், அழுக்கற்றதும், அழகான இயற்கைக் காட்சிகளை உடையதுமான இடத்தைத் தேர்ந்தெடுங்கள் உங்களது வீட்டில் அமைதியான, அழகிய அறையைத் தேர்ந்தெடுப்பதும் நன்று. பண்டைக்கால யோகிகளையும், உங்களது குருவையும் கடவுளையும் வணங்கி விட்டு, பயிற்சியைத் தொடங்குக. தியானத்திற்கு ஏற்ற காலம் தினமும் இருதடவைகளாவது தியானம் பயில வேண்டும். காலையும் மாலையும் பயில்வதற்குச் சிறந்த நேரங்கள். இரவு முடிந்து பகல் தொடங்கும் போதும், பகல் முடிந்து இரவு தொடங்கும்போதும் உள்ள சந்திக் காலங்களில் ஓரளவு அமைதி நிலவுகிறது. அக்காலங்களில் உடலும் உள்ளமும் அமைதி பெறும் தன்மையுடையன. இந்த இயற்கைச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, பயிற்சியைத் தொடங்க வேண்டும். பயிற்சி முடிந்தால் ஒழிய உணவு உட்கொள்வதில்லை என்ற விதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் பசியின் தூண்டுதலால் சோம்பல் பறந்து போகும். கடவுள் வழிபாடு செய்வதற்கு முன்பு உணவு கொள்ளல் கூடாது என்று இந்தியாவில் சிறுவர்களைப் பயில்விப்பது வழக்கம். சிறிது காலத்திற்குப் பின் இப்பழக்கம் இயற்கையாக அமைந்து, குளித்து வழிபாடு செய்வதற்கு முன் சிறுவர்களுக்குப் பசி தோன்ற மாட்டாது. வழிபாடு இப்போது இவ்வாறு வழிபாடு செய்க: எவ்வுயிரும் இன்புற்று இருக்க; எவ்வுயிருக்கும் அமைதி நிலவுக; எவ்வுயிருக்கும் ஆனந்தம் பெறுக; எத்திசை உயிர்களும் இவற்றைப் பெறுக. இவ்வாறு பலதடவை மனத்தில் தியானித்தால் நீங்களும் நலத்தை அடைவீர்கள். உங்கள் நலத்தையும் இன்பத்தையும் எளிதில் பெருக்கும் வழி. பிறர் இன்புற்றிருக்க உதவுவதுதான் என்பதை நாளடைவில் அறிந்து கொள்வீர்கள். இதற்குப்பின்பு, கடவுளிடம் நம்பிக்கை உள்ளவர்கள் பிரார்த்தனை செய்க- பணத்திற்காக அன்று, உடல் நலத்திற்காக அன்று, கவர்க்கத்திற்காக அன்று, ஞானம் பெறுவதற்கே பிரார்த்தனை செய்க; மற்றப் பிரார்த்தனை சுயநலம் ஆகும். - ஆசனத்தில் உட்கார்ந்து, மனத்தை அதன் வழியே செல்லவிட்டு பொறுத்திருந்து கவனிக்கவும். அறிவே ஆற்றல் என்று கூறுகிறது ஒரு முதுமொழி, மனது என்ன செய்கிறது என்று தெரிந்தாலன்றி அதனை அடக்க இயலாது. அதன் கடிவாளத்தைத் தளர்த்தி விடுக. கொடிய எண்ணங்கள் மனத்தினில் எழுந்திடும். அத்தகைய எண்ணங்கள் உங்கள் மனத்தினில் இருப்பதைக் காண நீங்களே வியப்புறுவீர்கள். நாட்கள் செல்லச் செல்ல, மனத்தில் சீரற்ற எண்ண அலைகள் குறைந்து கொண்டே வந்து, மனமும் சிறிது சிறிதாக அமைதி பெறுவதைக் காணலாம். வீண் வாதங்களையும் மனத்தைச் சிதறச் செய்யும் பேச்சுக்களையும் தவிர்க்கவும். புத்தி சாதுரியமான, வெற்றுப் பேச்சால் பயன் கிடைக்குமா? அது மனத்தின் சமநிலையை இழக்கச் செய்து, மனத்தைக் குழப்பிவிடும். உயர்ந்த நிலைகளில் உள்ள பயன்களைப் பெறல் வேண்டும். வீண் பேச்சினால் அடை கிடைக்குமா? ஆதலின் வீண் பேச்சை விடுக. ஆன்ம ஞானம் அடைந்தவர் எழுதிய நூல்களையே படியுங்கள். சிந்தனை செய்க! உங்கள் உடலை நினைத்து அது நலமும் வலிமையும் பெற்றதாகக் கருதுங்கள். உடல் சிறந்த கருவி, அது வைரம் போல் உறுதி பெற்றதாக நினைத்திடுக. உடல் உதவியினால்தான் வாழ்க்கை என்னும் கடலை நாம் தாண்டிடல் இயலும். வலிமை யற்றவர் விடுதலை பெறார். எல்லாப் பலவீனத்தையும் உதறித் தள்ளி விடுக. மனத்திடம் அது வலிமை பெற்றதாகக் கூறிடுக. உடலிடம் அது வலிமை பெற்றதாகக் கூறிடுக, உங்களிடம் அளவில்லா தன்னம்பிக்கை வைத்திடுக. தியான முறைகள் சிரசின் உச்சிக்கு அப்பால் சிறிது தூரத்தில் ஒரு தாமரை இருப்பதாகக் கருதி, அதன் மையத்தை நற்குணமாகவும், காம்பை ஞானமாகவும் கருதிடுக. அத்தாமரையின் எட்டு இதழ்களும் ஒரு யோகி பெறுவதற்குரிய அட்டமா சித்திகள் என்றும் உள்ளேயுள்ள கேசரங்களையும் சூலகத்தையும் இச் சித்திகளைத் துறக்கும் பெருந்தியாகமெனவும் நினைத்திடுக. அத்தாமரையின் உள்ளே பொன்னொளி பெற்றவராய் அறிவதற்கரியராய், சர்வவல்லமை பெற்றவராய் ஓங்கார மென்னும் பெயர் உடையவராய், சொல்வதற்கு அரியவராய் பேரொளியால் சூழப்பட்டவரை மனத்தினிலே தியானித்திடுக. தியானத்திற்கு மற்றும் ஒரு முறை கூறப்படுகிறது. உங்கள் இதயத்தில் ஒரு சிறு இடைவெளி (அம்பலம்) இருப்பதாகவும், அதில் ஒரு சுடர் எரிவதாகவும், அச் சுடரை உங்கள் ஆன்மாவுக்கு ஆன்மாவாகிய, கடவுளாகவும் நினைத்து அதனைத் தியானித்திடுக (உபநிடதத்தில் தகரவித்தை) குறிக்கோளை அடைவது எங்ஙனம்? கடினமாகப் பயிற்சி செய்க. வாழ்வானாலும் சரி, சாவானாலும் சரி என்று நினைத்து, பயனைக் கருதாமல் பயிற்சியைத் தொடங்கி, ஈடுபடுக. தைரியமிருந்தால் ஆறே மாதங்களில் நீங்கள் பூரண யோகியாய் விடலாம். ஆனால் யோகத்தில் சிறிதளவும், மற்றவை ஒவ்வொன்றிலும் சிறிது சிறிதாகவும் பற்றி நிற்பவர்கள் முன்னேற்றம் அடையார். பாடங்களை மட்டும் கற்பதால் பயனில்லை. வெற்றி பெற, அளவிலாப் பொறுமை வேண்டும்; அளவிலா மனத்திடம் வேண்டும். முயற்சியும் மனவலிமையும் உடையவன். நான் எல்லாக் கடல் நீரையும் குடித்து விடுவேன். எனது சித்தத்தின் வலிமையால் மலையையும் தவிடு பொடி ஆக்கி விடுவேன் என்று முழங்குவான். அவ்வகைச் சக்தியும், மன வலிமையும் பெற்று, கடினமாகப் பயின்றிடுக. நீங்கள் உறுதியாய் குறிக்கோளை அடைவீர்கள். கவனிக்கவும்! எல்லா இயக்கங்களும் ஒருவித வட்ட வடிவத்தில் அமைந்து உள்ளன. ஒரு கல்லை வானத்தில் வீசினால், தடையில்லாமலிருந்தால் மறுபடியும் அக்கல் உங்களை அடையும். டைனமோ என்ற மின் உற்பத்திக் கருவியிலிருந்து கிளம்பும் மின் சக்தி மறுபடியும் அந்த எந்திரத்தை அடைகிறது. அது போலவே, அன்பும் பகைமையும் பிறக்கும் இடத்திற்கே வருபவை. ஆதலின் யாரிடத்தும் பகைமை கொள்ளற்க. ஏனெனில் உங்களிடத்தில் எழுந்த பகைமை உங்களிடமே திரும்பி வரும். ஒருவரிடம் நீங்கள் அன்பு காட்டினால் அது மீண்டும் உங்களிடமே திரும்பி வரும். மனதாகிய ஏரி ஓர் ஏரியின் அடித்தளத்தை நாம் காண முடியாது; ஏனெனில் அதன் மேற்பரப்பை அலைகள் மூடியுள்ளன. அலைகள் அடங்கி, நீர்ப்பரப்பு அமைதியுற்ற பின்பு, நாம் அடித்தளத்தைப் பார்க்கலாம். மண்ணுடன் நீர் கலங்கியிருந்தாலும், அடித்தளத்தைப் பார்க்க முடியாது. ஏரியின் அடித்தளமே நமது ஆன்மா, ஏரியே நமது சித்தம்; அலைகளே நமது எண்ண அலைகளாகும். மனம் மூவகை நிலைமைகள் பெற்றது. இருள் போன்ற அஞ்ஞானமாகிய தாமஸம் விலங்குகளிடத்தும், மந்த மதியுடைய மக்களிடத்தும் காணப்படும். அது கெடுதியினை விளைவிக்கும். வேறுவகை எண்ணம் அவ்வகை மனத்தில் புகுவதில்லை. இரண்டாவது வகை மனம், சுறுசுறுப்புத் தன்மையுள்ள ரஜோகுணம். அதன் நோக்கம் அதிகாரமும், இன்பமும் பெறுதல், நான் வலிமை பெற்று மற்றவரை அடக்கி ஆள்வேன் என்று எண்ணுவது அதன் இயல்பு. மூன்றாவதாக, அமைதி, பொறுமை என்பவற்றைப் பெற்ற சத்துவகுண மனம். இங்கு அலைகள் ஓய்ந்து மனமாகிய ஏரியின் நீர் தெளிவு பெற்றுள்ளது. மனத்தை அடக்குதல் இவ்விதம் எழுகின்ற மன அலைகளை அடக்கி ஆள்வதற்குத் தியானம் ஒரு சிறந்த சாதனமாய் உள்ளது. அலைகின்ற இந்த மன எண்ணங்களைத் தியானத்தினால் அடக்கிவிடமுடியும். பல நாட்களாக மாதங்களாக வருடங்களாகத் தியானத்தைப் பயின்றிடல், அது பழக்கமாகி, நீங்கள் கருதாமலேயே அது நிகழுமானால், கோபத்தையும் பகைமையையும் நீங்கள் அடக்கித் தடுத்துவிடலாம். மகிழ்ச்சி பெறுக! நீங்கள் சமய ஒழுக்கம் பெற்றுவிட்டதற்கு முதல் அறிகுறி மகிழ்ச்சி அடைந்திருத்தலாகும். கூம்பிய முகத்துடன் இருப்பவனைக் குன்ம (அஜீரண) வியாதி பெற்றிருப்பவனாக ஒருவர் நினைக்கக்கூடும். அவன் சமய சாதனை பெற்றவன் ஆகான். ஒரு யோகிக்கு அனைத்தும் இன்பத்தைத் தருபவை. பார்க்கும் ஒவ்வொரு மனித முகமும் அவனுக்கு மகிழ்ச்சியே அளிக்கும். நற்குணமுடைய மனிதனுக்கு அதுவே அறிகுறி. இருள் படர்ந்த முகங்களுக்கும் உங்களுக்கும் ஏன் தொடர்பு வேண்டும்? உங்கள் முகத்தில் துன்பகரமாகிய இருள் படர்ந்திருக்குமாயின் வெளியே செல்லாதீர்கள்; அன்று தாழிட்ட அறையில் இருங்கள். வெளியே இந்த நோயை கொண்டு செல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? எவன் எவ்வுயிரிடத்தும் பகைமை இல்லாதவனாய், நட்புப் பூண்டவனாய், கருணை உடையவனாய், என்னுடையது என்ற எண்ணம் இல்லாதவனாய், இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய்க் கருதுபவனாய், பொறுமை உடையவனாய், எப்பொழுதும் மகிழ்ச்சி பெற்றிருப்பவனாய், யோகத்தில் விருப்பமுடையவனாய், அடங்கிய மனத்தினனாய், திடமான சித்தம் உடையவனாய், மனத்தையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பணம் செய்தவனாய் உள்ளவனோ, அவனே எனது பக்தன். எவனிடமிருந்து உலகம் துன்பம் பெறுவதில்லையோ, எவன் உலகத்தினிடமிருந்து துன்பம் அடைவதில்லையோ, எவன் மகிழ்ச்சி, சினம், அச்சம் மனக்கிளர்ச்சி இவற்றினின்று விடுபட்டவனோ, அவன் எனக்குப் பிரியமானவன். எவன் எதையும் விரும்பாதவனாய், தூயனாய் சுறுசுறுப்பு உடையவனாய், துன்பம் வரினும் இன்பம் வரினும் பொருட்படுத்தாதவனாய், ஒருபொழுதும் துயரப்படாதவனாய், தனது நலனைப் பெருக்குவதற்கு முயற்சி விட்டவனாய், இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் சமமாகக் கொள்பவனாய், மௌனியாயும் ஆழ்ந்த சிந்தனை உடையவனாயும் இருப்பவனாய், கிடைத்ததைக் கொண்டு திருப்தி பெற்றுக் களிப்புடன் இருப்பவனாய், வீடுவாசல் இல்லாதவனாய், யாதும் தன் ஊரே, உலகமே தன் வீடு என்று நினைப்பவனாய், தன் கொள்கையில் திடச்சித்தம் உள்ளவனாய் இருக்கிறானோ, அவனே எனக்குப் பிரியமான பக்தன் கீதையில் கூறியபடி இவ்வகை மனிதனே யோகி ஆகத் தகுதியுள்ளவன். முத்துச்சிப்பி போல் இரு சுவாதி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது மழை பெய்து ஒரு துளி நீர் முத்துச் சிப்பியின் உள்ளே விழுமாயின். அது முத்தாகும் என்று ஓர் இந்தியக் கதை கூறுகிறது. முத்துச் சிப்பிகளுக்கு இது தெரியுமாதலால், அந்த சுவாதி நட்சத்திரம் பிரகாசிக்கும்பொழுது நீரின் மேற்பரப்பிற்கு வந்து, மழைத் துளியைப் பெறுவதற்கு சிப்பிகள் காத்துக் கொண்டிருக்குமாம். மழைத்துளியைப் பெற்றவுடன் ஓடுகளை மூடிக்கொண்டு சிப்பிகள் கடலின் அடித்தளத்திற்குச் சென்று பொறுமையுடன் அந்தத் துளியை முத்தாக்கிக் கொண்டிருக்குமாம். நாமும் அதுபோன்று இருக்கவேண்டும். முதலில்கேட்டு, பின்பு சிந்தித்துத் தெளிந்து, குழப்பங்களை விட்டொழித்து, புறத் தூண்டுதல்கள் கலக்காத வண்ணம் மனத்தினை மூடி உள்ளேயுள்ள உணமையை பிரகாசிக்கச் செய்வதில் ஈடுபடுங்கள். பொறுமை நாரதர் என்ற தேவ முனிவர் ஒருவர் இருந்தார். மனிதர்களிடையில் பெரிய யோகிகளான முனிவர்கள் இருப்பது போன்று தேவர்களுக்குள்ளேயும் யோகிகள் இருக்கின்றனர். நராதர் மிகப்பெரிய யோகி; அவர் எங்கும் சஞ்சரிப்பது உண்டு. ஒரு நாள் ஒரு காட்டின் ஊடே அவர் செல்லும்பொழுது ஒரு முனிவரைக் கண்டார். வெகு காலம் தியானித்து நகராமல் தவம் செய்து கொண்டு இருந்ததால் அவரது உடலைச் சுற்றி கரையான் எறும்புகள் ஒரு புற்றைக் கட்டிவிட்டன. அந்த முனிவர் நாரதரை அழைத்து, எங்கே போகிறீர்? என்று கேட்டார். நான் சுவர்க்கத்திற்குச் செல்கிறேன் என்று நாரதர் விடை பகர்ந்தார். அப்படியானால். ஆண்டவர் எனக்கு அருள் புரிந்து எப்பொழுது முக்தி அளிப்பார் என்று தெரிந்துவரவேண்டும் என்று முனிவர் கேட்டுக்கொண்டார். நாரதர் சிறிது தூரம் சென்ற பின் மற்றொரு மனிதனைக் கண்டார். அவன் நடனமாடி பாடிக்குதித்துக் கொண்டு இருந்தான். அவன் நாரதரைக் கண்டு நாரதரே! எங்கு செல்கிறீர்? என்று வினவினான். அவனது குரலும் செயலும் அவனைப் பைத்தியக் காரனோ என ஒருவரைக் கருதச் செய்தன. நாரதர். சுவர்க்கத்திற்குப் போகிறேன் என்றார். அப்படியானால் எனக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கும் என்று கேட்டு வாரும். என்றான் அவன். நாரதர் சென்றுவிட்டார். சிறிது காலம் சென்ற பின்பு நாரதர் அக் காட்டின் வழியாகத் திரும்பி வந்தார். உடலைச் சுற்றிப் புற்று வளர்ந்திருந்த முனிவர், நாரதரே! என்னைப்பற்றி பகவானிடம் கேட்டீரா? என்றார். ஆம் என்றார் நாரதர். பகவான் என்ன சொன்னார்?... என்றான் தவசி. நீ இன்னும் நான்கு பிறவிகளுக்குப் பின்பு முக்தி அடைவாய் என்று பகவான் கூறினார். என்றார் நாரதர், அந்த முனிவர் அழுது புலம்பி, என்னைச் சுற்றிப் புற்று மூடும்வரை பல வருடங்கள் தியானித்தேன், அப்படிச் செய்தும் இன்னும் முக்தி பெற நான்கு பிறவிகள் இருக்கின்றனவே! என்றார் நாரதர் மற்ற மனிதனிடம் சென்றார். பகவானிடம் கேட்டீரா, நாரதரே! என்றான் அவன். ஆம், கேட்டேன். அந்தப் புளிய மரத்தைப் பார். அதில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனைப் பிறவிகளுக்குப் பின்பு உனக்கு முக்தி கிட்டும். என்று கூறினார் நாரதர். அந்த மனிதன் மகிழ்ச்சியால் நடனமாடி இவ்வளவு விரைவாக எனக்கு விடுதலை கிடைக்கப் போகிறதே! என்றான். அப்பொழுது அசரீரியாக ஒரு வாக்குக் கேட்டது. மகனே குழந்தாய்! இப்பொழுதே உனக்கு விடுதலை தந்து விடுகிறேன். அவனது பொறுமைக்கும் விடா முயற்சிக்கும் உடனே வெகுமதி கிடைத்துவிட்டது அதைரியப்படாமல் கணக்கற்றப் பிறவிகளிலும் முக்தி பெறுவதற்காக முயற்சி செய்ய அவன் சித்தமாய் இருந்ததுதான் காரணம். அமைதிப் பிரதேசம் ஆன்மீக வாழ்விற்கு மிகவும் சிறப்பாக உதவுவது தியானம். தியானத்தில் உடல் சார்புள்ள. ஆன்மீகமற்ற நிலைமைகளை அறவே விலக்கிவிட்டு, நமது தெய்வத் தன்மையை உணர்கிறோம். தியானத்தில் வெளிப்புறத்து உதவி ஒன்றையும் நாம் ஆதாரமாகக் கொள்ளவில்லை. இருள் அறைகளிலும் ஆன்மா தொடும்போது அது பிரகாசமான வண்ணங்களில் சித்தரங்களைத் தீட்டிவிடும். இழிவான பொருளிலும் ஆன்மா நறுமணத்தைச் சொரிய முடியும்; தீய இயல்பு உள்ளவரை ஆன்மா தெய்வத் தன்மை உள்ளவராக ஆக்கும்; பகையும் சுயநலமும் விலகிவிடும். உடலைப் பற்றி எவ்வளவு குறைவாகச் சிந்திக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்று. ஏனெனில் உடல் தான் நம்மைக் கீழ் நிலைக்குத் தள்ளுகிறது. ஆசையும், பாசமும், உறவும் நம்மைத் துன்பத்தில் வீழ்த்துகின்றன. நாமே ஆன்மா, உடல் அன்று; பிரபஞ்சம் ஒரு திரை; அதில் காணப்படும் பொருள்களும் நல்லவையும் கெட்டவையும் திரையில் தீட்டிய சித்திரங்கள்-காட்சிகள். நாம் சாட்சியாக இருக்கிறோம் என்று கருதலே அந்த இரகசியம். ஒரு காலத்தில் வலிமையும் சுறுசுறுப்பும் பெற்ற மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்குத் தன் குடும்பத்தைக் காப்பாற்றும் வழி தெரியவில்லை. இறுதியில் அவன் ஒரு கொள்ளைக்காரன் ஆனான். சாலைகளில் வரும் மனிதர்களைத் தாக்கி, கொள்ளையடித்து அப் பணத்தால் தன் தாய், தகப்பன், மனைவி, குழந்தைகள் உள்ள தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். ஒருநாள் அவன், நாரத மகா முனிவர் சாலையில் செல்லும்போது அவரைத் தாக்கினான். நாரதர் கொள்ளைக்காரனைப் பார்த்து, நீ ஏன் திருடுகிறாய்? திருட்டும், மனிதர்களைக் கொல்வதும் பாவம். எதற்காக இந்தப் பாவத்தைச் செய்கிறாய்? என்று கேட்டார். கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு என் குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன். என்று திருடன் கூறினான். நீ செய்கிற பாவத்தில் உன் குடும்பத்தினரும் பங்கு பெறுவார்களா? என்று நாரதர் கேட்டார். அதற்கு அவன் ஆம் என்றான். பின்பு நாரதர் அவனிடம், நன்று, நான் ஓடிவிடாமல் இருக்க ஒரு மரத்தில் என்னைக் கட்டிவிட்டு, உன் வீட்டுக்குச் சென்று, உன் குடும்பத்தினரிடம் உன் பணத்தில் அவர்கள் பங்கு பெறுவது போன்று, நீ செய்கிற பாவத்திலும் பங்கு பெறுவார்களா என்று கேட்டு வா என்று கூறினார். அந்த மனிதன் தன் தந்தையிடம் சென்று அப்பா! எவ்வாறு பணம் சம்பாதிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் ஒரு கொள்ளைக்காரன் மக்களைக் கொன்று, கொள்ளையடித்துப் பணம் சேகரித்து, உங்களைக் காப்பாற்றுகிறேன் என்று கூறினான். ஆ! நீ கொள்ளைக்காரனா! பாவி! என் முன் நில்லாதே. சண்டாளா! ஓடிப்போ என்றார் தகப்பன். பின்பு அவன் தன் தாயிடம் சென்று, அம்மா! நான் மக்களைக் கொன்று, கொள்ளையடித்து, அந்தப் பணத்தால் உங்களைக் காப்பாற்றுகிறேன். என்றான். அப்படியா! ஏன் இந்தப் பாவத்தொழிலைச் செய்கிறாய்? என்று தாய் கத்தினாள் எனது பாவத்திலும் பங்கு பெறுவாயா? என்று மகன் கேட்டான், நான் எதற்குப் பாவத்தைச் சுமக்க வேண்டும்? நான் ஒரு நாளும் கொள்ளை யடிக்கவில்லை என்றாள் தாய். பின்பு அவன் தன் மனைவியிடம் சென்று நான் மனிதர்களைக் கொள்ளையடித்து, அப் பணத்தால் உங்களை காப்பாற்றுகிறேன். நான் செய்கிற பாவத்திலும் பங்கு எடுத்துக் கொள்வாயா? என்று கேட்டான். அதற்கு மனைவி, நீர் எனது கணவன். ஆதலின் என்னைப் பராமரிப்பது உமது கடமை. உமது பாவத்தில் நான் பங்கு பெற முடியாது என்றாள். கொள்ளைக்காரனின் கண் இப்போது திறந்து விட்டது. அவனது நெருங்கிய உறவினரும் அவனுடைய பாவத்தில் பங்குபெற மறுத்து விட்டனர். முனிவரைக் கட்டிப்போட்ட இடத்திற்கு அவன் வந்து முனிவரது கட்டுக்களை அவிழ்த்துவிட்டு, அவர் காலில் விழுந்து வணங்கி நடந்ததைக் கூறி, நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். முனிவர் கூறினார், நீ இந்தப் பாவத் தொழிலை விட்டுவிடு. உனது உறவினர் ஒருவரும் உன்னிடம் உண்மையில் அன்பு செலுத்தவில்லை. அவர்கள் உன்னிடமுள்ள பணத்தில் பங்கு பெறுவார்கள். ஆனால் உன்னிடம் பணம் இல்லையெனில் உன்னை விட்டுவிடுவர். உன் பாவத்தில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, நாம் நல்லது செய்தாலும் தெரியாமல் தீயது செய்தாலும் நம்மை ஆதரிக்கும் கடவுளை வழிபடு. அவர் நம்மை ஒரு பொழுதும் கைவிடுவதில்லை. ஏனெனில் அவரது அன்பு சுயநல மற்றது. பின்பு நாரத முனிவர் எங்ஙனம் வழிபாடு செய்வது என்பதை அவனக்குச் சொல்லிக் கொடுத்தார். அந்த மனிதன் குடும்பத்தைத் துறந்துவிட்டு, காட்டுக்குச் சென்று பல வருடங்கள் நீடித்த தவம் புரிந்தான். அவனைச் சுற்றிக் கரையான் எறும்புகள் புற்றுக்களைக் கட்டி விட்டன. ஒரு நாள் ஓ முனிவரே! எழுந்திரும் என்று ஒரு குரல் கூறிற்று. ஆ! நான் முனிவனா! நான் கொள்ளைக்காரன் அல்லவோ? என்று அவன் கூறினான். இல்லை இனிமேல் நீர் கொள்ளைக்காரன் இல்லை. தியானத்தால் நீர் தூய்மை பெற்றுவிட்டீர்! உமது பழைய பெயர் போய் விட்டது. பல வருடங்கள் தியானத்தில் இருந்து தவம் புரிந்ததால், உம்மைச் சுற்றிக் கட்டப்பட்ட கரையான் புற்றைக் கூட நீர் கவனிக்கவில்லை. கரையான் புற்றிலிருந்து மறுபிறவி பெற்றதுபோல் முனிவராக வந்து விட்டீர். ஆதலால் உமது பெயர் இன்று வால்மீகி என்று வழங்கப்படும் என்று அக் குரல் கூறிற்று. தியானத்தின் மூன்று படிகள் தியானத்தில் மூன்று படிகள் உள்ளன. முதல்படி தாரணை எனப்படும். தாரணை என்பது ஒரு பொருளின் மீது மனத்தைக் குவிப்பது. இந்தக் கண்ணாடி மீது மனத்தைக் குவிப்பதற்கு முயல்கிறேன். என் மனத்தினின்று இக் கண்ணாடியைத் தவிர மற்றப் பொருள்களை நீக்குவதற்கு முயற்சிக்கிறேன். ஆனால் மனம் சஞ்சலம் அடைகிறது. மனது தடுமாறாமல் ஒரு பொருளின் மீது நிலைத்து இருத்தலே தியானம் எனப்படும். இதற்கு அடுத்த மற்றொரு நிலை, கண்ணாடிக்கும் எனக்கும் உள்ள வேற்றுமை மறைகிறது. இந்த உயர்ந்த நிலைக்குச் சமாதி எனப் பெயர். தியானத்தில் கண்ணாடியும் மனதும் ஒன்றுபடுகின்றன. அவைகளுக்குள் யாதொரு வேற்றுமையும் தான் காண்பதில்லை. எல்லாப் புலன்களும் செயல் புரியாது நின்று அவற்றின் மூலமாகப் பிரயோகித்த சக்தி திரண்டு மனத்தின் மீது குவிக்கப்படுகிறது. கண்ணாடி அப்போது முழுமையாக மனத்தின் சக்திக்கு உட்பட்டது. இந்த ஆற்றல் அடையப் படவேண்டும். அது யோகிகளால் நடத்தப்படும் பெரிய விளையாட்டு. ஓய்பு பெறுவது எங்ஙனம்? தியானம் என்பது மனது அதன் மேலேயே திருப்பப்படுதல். மனது எல்லா எண்ண அலைகளையும் நிறுத்தும் போது வெளியுலகத்திலிருந்து வரும் தூண்டுதல்கள் மனத்தின் மீது அதிகாரம் செலுத்த முடியாது. உங்கள் உணர்வு விரிகின்றது. தியானம் செய்கிறபோதெல்லாம் உங்கள் மனத்தின் ஆற்றல் பெருகுகின்றது. இன்னும் சிறிது கடினமாகப் பயின்றால், தியானம் எளிதாக வருகின்றது. அப்பொழுது உடலைப் பற்றியோ மற்றப் பொருள்களைப் பற்றியோ நீங்கள் உணர்வதில்லை. ஒரு மணி நேரம் தியானம் தொடர்ந்து செய்தால் உங்கள் வாழ்க்கையிலே நிம்மதியான ஓய்வைப் பெற்றதாக உணர்வீர்கள். உடலுக்கும் உள்ளத்திற்கும் பூரண ஓய்வு கொடுப்பது தியானமே. ஆழ்ந்த உறக்கம் கூட அவ்வகையான ஓய்வு கொடுப்பதில்லை. தியானத்தின்போது மூளை ஓய்வு பெறுகின்றது. ஆனால் உறக்கத்தில் மனது ஓய்வு பெறாமல் குதித்துக் கொண்டு இருக்கிறது. தியானத்தின் போது உங்கள் உடல் இருப்பதைக் கூட மறந்து விடுகிறீர்கள். உங்களைப் பல துண்டுகளாக வெட்டினாலும் நீங்கள் உணர மாட்டீர்கள். நீங்கள் எடை குறைந்து இலேசாக இருப்பது போல் உணர்வீர்கள். தியானத்தினால் கிடைக்கும் பூரண ஓய்வு இது தான். ஒரு வினைக்குப் பிரதி வினை உண்டு. இயற்கையில் ஏற்படும் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் பாதி வேலை செய்கிறீர்கள். இயற்கை மீதியைச் செய்கிறது. உங்களுடைய பாதி வேலையை நிறுத்திவிட்டால் ஒன்றும் நிகழ்வதில்லை. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பிரதிச் செயல் ஏற்படுகிறது. ஒரு மனிதன் என்னை அடித்தால் அந்த அடியின் விளைவாக எனது உடலில் காயம் ஏற்படுகிறது. மற்றொரு எடுத்துக்காட்டைக் கவனிப்போம். ஓர் ஏரியின் அமைதியான நீர்ப் பரப்பில் கற்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். அப்போது ஒரு கல் போட்டவுடன் பிரதிக் கிரியையாக சிறு அலைகள் உண்டாகின்றன. கல்லைப் பார்க்காவிட்டாலும் அலைகளைப் பார்க்கிறோம். அதே போன்று வெளியில் காணப்படும் பொருள்கள் ஏரி நீரில் கல் போடுவதற்கு ஒப்பாகும். அந்தப் பொருளைப் பின்பு பார்க்காமல் இருந்தாலும் மனத்தில் அலைகள் இருக்கும். தியானத்தின் ஆற்றலினால் நாம் விரும்புவது கிடைக்கும். இயற்கையை ஆளும் சக்தி வேண்டுமாயின் தியானத்தால் அதைப் பெற இயலும். தியானத்தின் உதவியினால்தான், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு விஞ்ஞானி ஓர் உண்மைக்காக ஆராய்ச்சி செய்து, தன்னையும் மற்றப் பொருள்களையும் மறந்து. அழ்ந்த சிந்தனையில் ஈடுபடும்போது உண்மை, மின்னல் போல மனத்தில் பளிச்சிடுகிறது. சிலர் இதை ஆவேச சக்தி அல்லது திருவருள் என்கின்றனர். இது திடீரென்று வந்த சக்தி அன்று. மனத்தில் ஏற்கனவே மறைந்து இருக்கிற சக்திதான் அது. அவர்களின் ஆராய்ச்சியின் பயனாய்த் தியானத்தின் உதவியால் உண்மை வெளி வந்தது. இந்த விஞ்ஞானிகள் ஆத்மாவைக் கடைகின்றனர். அப்போது பேருண்மைகள் வெளி வருகின்றன. ஆதலால் தியானப் பயிற்சியானது உண்மைகளைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞான முறையாகும். தியானம் அறிவியலின் ஒரு பிரிவு! உண்மை ஒன்றே; அது பலவிதமாய் இருக்க முடியாது. அதுவே விஞ்ஞானம் அல்லது அறிவு என்பது. விஞ்ஞானம் உண்மையைப் பல விதமாக நோக்குகிறது. அறிவு ஒரே உண்மையைக் காண்கிறது. பலவாறாகக் காணப்படுவதை ஒன்றாகக் காண்பதே விஞ்ஞானம் எனப்படும். இந்தப் பிரபஞ்சம் பூராவும் ஒன்றாகவே உள்ளது. அந்த அறிவியலுக்குப் பெயர் வேதாந்தம். வேறுபட்ட ஐந்து மூலப் பொருள்களைக் காண்கிறோம், அவை திடப் பொருள். திரவப்பொருள். வாயுப்பொருள், ஒளிப்பொருள், காணப்படாத நுண்ணிய பொருள், தியானத்தால் எல்லாவற்றையும் ஆன்மாவில் அடங்கச் செய்கிறோம். திடப் பொருள் திரவமாகி, பின்பு வாயுவாகிறது. வாயு, கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய பொருளாகி, பிறகு மனதாகிறது. மனது மறைந்துவிடுகிறது. பிறகு எல்லாம் ஆன்மாவே. சிந்திப்பதால் தியானம் ஏற்படுகிறது. இந்த ஐந்து வகைப் பொருள்களும் ஒன்று மற்றொன்றாகி, தூய்மைப்படுத்தப்பட்டு மனமாகி, பிறகு ஆன்மாவாக மாறுகிறது. இதே முறையில் உங்கள் சிந்தனை முறைகளும் இருக்க வேண்டும். நீங்களே அந்த ஆன்மா. ஒரு பெரிய களிமண் கட்டி இருக்கிறது. அதிலிருந்து நான் ஒரு சிறிய சுண்டெலி செய்கிறேன். நீங்கள் ஒரு சிறு யானை செய்கிறீர்கள். இரண்டும் களிமண்தான். இரண்டையும் கலைத்து விடுவோம். ஒரே களிமண்ணாகவே அவை உள்ளன. பவாஹாரி பாபா ஒரு சிறந்த இலட்சிய யோகி ஒரு நாள் பவாஹாரி பாபாவின் ஆசிரமத்திற்கு ஒரு திருடன் வந்தான். அவன் அங்குள்ள பொருள்களை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு, வெளிவரும் போது, அம் முனிவரைக் கண்டு, பயந்து மூட்டையைக் கீழே போட்டு விட்டு ஓடிவிட்டான். அந்த முனிவர் அந்த மூட்டையைத் தூக்கிக் கொண்டு அந்தத் திருடன் பின்னால் ஓடினார். பல மைல்கள் ஓடி, முடிவில் திருடனை நெருங்கி, அவன் காலடியில் மூட்டையைப் போட்டு விட்டார். பின்பு கூப்பிய கையுடனும் பெருகி வழியும் கண்ணீருடனும் அவனிடம், மூட்டையைத் தூக்கிக் கொண்டு போகையில் இடையில் வந்ததற்காக என்னை மன்னித்துக்கொள் என்றார். மூட்டை என்னுடையது அன்று, மூட்டை உனக்கே சொந்தம், என்று கூறி முட்டையை ஏற்றுக்கொள்ள வேண்டினார். ஒரு சமயம் பவாஹாரி பாபாவை ஒரு நல்ல பாம்பு கடித்துவிட்டது. அவர் மூர்ச்சை அடைந்தார். அவர் இறந்துவிட்டதாக எல்லாரும் நினைத்தனர். ஆனால் மாலையில் அவர் உயிர் பிழைத்து எழுந்துவிட்டார். பாம்பு கடித்ததைப் பற்றி நண்பர்கள் அவரிடம் கேட்டபோது அவர், அந்தப் பாம்பு கடவுளிடமிருந்து வந்த ஒரு தூதன். என்று கூறினார். எந்தச் சிறிய வேலை செய்தாலும் பவாஹாரி பாபா தன் முழு கவனத்தையும் அவ்வேலையில் செலுத்துவார். அவரது இஷ்ட தெய்வமான இராமச்சந்திரனை அவர் எவ்வாறு தன் கவனத்தை எல்லாம் செலுத்தி வழி படுவாரோ, அதே போன்று ஒரு தாமிரப் பாத்திரத்தைச் சுத்தம் செய்யும்போதும் கவனம் செலுத்துவார். குறிக்கோளுக்கு நாம் செலுத்தும் கவனமும் அன்பும் போன்று, அதை அடைய உதவும் சாதனத்திற்கும் அதே கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் சொல்லுவார், இதற்கு அவரே சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார். சுவாமி விவேகானந்தர் அவரைச் சந்தித்தபோது, நீங்கள் குகையிலிருந்து வெளிவந்து எளிய ஜனங்களுக்கு உதவலாமே என்று சொன்னார். அதற்கு அவர் உடலால் செய்யும் உதவிதான் சிறந்த உதவி என்று நினைக்கிறீர்களா? ஒரு மனது மற்றொரு மனத்துக்கு உதவ முடியாதா? என்று விடையளித்தார். புத்தரைப் பற்றிய ஒரு கதை புத்தர் பிறந்த பிறகு, அவர் மிகப் பரிசுத்தமாய் இருப்பதைக் கண்டு, அவரைப் பார்த்தவர்களெல்லாம் யாகம் செய்யும் மதத்தை விட்டு, சந்நியாசி ஆகி, முக்தி பெற்றார்களாம். ஆதலால் தேவதைகள் ஒரு கூட்டத்தில் கூடிப் பேசினர். யாகம் செய்யும்போது ஜனங்கள் பலியாகக் கொடுக்கும் உணவினால் நமது பசியை ஆற்றினோம். இப்போது புத்தரால் யாகங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. நமது அதிகாரம் போய்விட்டது. புத்தர் மிகவும் சுத்தமாகவும் களங்கமற்றும் இருக்கிறார். அவரை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்று தீர்மானித்து அவர்கள் புத்தரிடம் வந்தனர். நாங்கள் ஒரு யாகம் செய்யப் போகிறோம். அதற்குப் பெரிய நெருப்பு ஒன்று வளர்க்க வேண்டும். தீ வளர்ப்பதற்கு சுத்தமான இடம் உலகில் எங்கும் கிடைக்கவில்லை. நீர் மிகவும் சுத்தமாக இருக்கிறீர். நீர் கீழே படுத்தால் உமது மார்பில் தீ வளர்க்கிறோம். என்று தேவதைகள் கூறினார். அப்படியே ஆகட்டும் என்று கூறி புத்தர் கீழே படுத்தார். அவரது மார்பின் மீது பெரிய தீ வளர்க்கப்பட்டது. புத்தர் செத்துவிட்டார் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அவர் சாகவில்லை. பின்பு அவர்கள் எல்லோரும் சேர்ந்து புத்தரை அடித்தனர். அப்போதும் அவரைக் கொல்ல முடியவில்லை. நெருப்பின் கீழேயிருந்து ஒரு குரல் ஏன் இந்த வீண் முயற்சிகள் செய்கின்றீர்கள்? என்று கூறிற்று. யாரும் உம்மைப் பார்த்தவுடனே, அவரது களங்கம் நீங்கி அவர் விடுதலை பெற்று விடுகிறார். அதனால் எங்களை ஒருவரும் வழிபடுவதில்லை என்று அவர்கள் கூறினர். உங்கள் முயற்சி வீணாகும். பரிசுத்தம் ஒரு நாளும் கொல்லப்பட மாட்டாது என்று அந்தக் குரல் கூறிற்று. வினா: யாரைக் குரு என்று கூற வேண்டும்? சுவாமி விவேகானந்தர்: யார் உன்னுடைய இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் கூறமுடியுமோ அவரே உனது குரு. வினா: ஒரு எவ்வாறு பக்தி பெற முடியும்? சுவாமிஜி: பக்தி உனக்குள்ளேயே இருக்கிறது. ஆசையும் செல்வமும் ஆகிய திரை அதை மறைக்கின்றது. அந்தத் திரை விலகியவுடன் பக்தி தானாகவே வெளி வருகிறது. வினா: குண்டலினி (ஆன்மீக சக்தி) உடலில் உண்மையாகவே இருக்கிறதா? சுவாமிஜி: குண்டலினியும் சுழுமுனை நாடியில் தாமரை மையங்களும் உடலில் இல்லை. ஆனால் அவை யோக சக்தியால் உடலில் உண்டாக்கப்படுவதாக பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்வது வழக்கம். வினா: விக்கிரகங்களை வழிபடுவதால் ஒருவர் முக்தி பெற முடியுமா? சுவாமிஜி: விக்கிரக ஆராதனை நேரிடையாக முக்தி கொடுப்பதில்லை. அது மறைமுகமான காரணம்- ஒரு சாதனம். விக்கிரக ஆராதனையைப் பழிக்கலாகாது. அது கடவுளை அடைவதற்கு மனத்தைத் தயார் செய்கிறது. வினா: முக்தி என்பது என்ன? சுவாமிஜி: முக்தி என்றால் பூரண விடுதலை. நற் செய்கை, தீய செய்கைகளினால் ஏற்படும் தளைகளிலிருந்து விடுதலை பெறுதல். தங்கச் சங்கிலியும் இரும்புச் சங்கிலி போல் ஒரு தளைதான். காலில் குத்திய ஒரு முள்ளை மற்றொரு முள்ளால் எடுத்து விட்டுப் பிறகு இரண்டு முட்களையும் எறிந்துவிட வேண்டும் என்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்வது வழக்கம். ஆதலால் தீய பழக்கங்களை நற் பழக்கங்களால் போக்கிவிட்டு பிறகு நற்பழக்கங்களையும் போக்கிவிட வேண்டும். வினா: வேதாந்த ஞானத்தை எவ்வாறு பெற முடியும்? சுவாமிஜி: கேட்டல், சிந்தித்தல், தியானித்தல் இவற்றால் ஞானம் பெற வேண்டும். ஒரு சத்குருவினிடமிருந்து கேட்க வேண்டும். ஒருவன் வழக்கமான சீடனாக இல்லாவிட்டாலும் முக்தி பெற விருப்பமுள்ளவனாயிருந்து சத்குருவினிடம் வேதாந்தத்தைக் கேட்டால், அவன் முக்தி அடைவான். வினா: நாம் எங்கு தியானிக்க வேண்டும்- உடலுக்குள்ளேயா அல்லது வெளியிலா? மனத்தை உள்ளே வைத்திருக்கவா அல்லது வெளியில் வைத்திருக்க வேண்டுமா? சுவாமிஜி: நாம் உள்ளுக்குள்ளேயே தியானிக்க வேண்டும். மனத்தைப் பற்றி தீர்மானிக்க வெகு காலம் ஆகும். முதலில் உடலை வசப்படுத்த வேண்டும். ஆசனத்தில் பூரண உறுதியான நிலையைப் பெற்ற பிறகுதான் மனத்தைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்க வேண்டும். ஆசனத்தில் வெற்றி பெற்றவுடன், நீண்ட காலத்திற்கு கால் கைகள் அசைவற்று இருக்கும். இது தேவையான காலம் உட்கார்ந்து தியானிக்க உதவியாக இருக்கும். வினா: சில சமயம் ஜபத்தினால் (மந்திரத்தைப் பல தடவை திரும்பத் திரும்பச் சொல்வதால்)களைப்பு உண்டாகிறது. அப்போது ஜபத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டுமா அல்லது ஆன்மீகத்தைப் பற்றிய நூலைப் படிக்கலாமா? சுவாமிஜி: ஜபம் செய்யும் போது களைப்பு இரண்டு காரணங்களால் ஏற்படலாம். சில சமயம் மூளைகளைப் படைகிறது. சில சமயம் சோம்பலினால் களைப்ப உண்டாகிறது. முதல் காரணமாக இருந்தால், தற்காலிமாக ஜபத்தை நிறுத்த வேண்டும். இல்லாவிடில் மனப்பிரமை அல்லது பைத்தியம் உண்டாகலாம். சோம்பல் காரணமானால், ஜபத்தை நீடிக்கும்படி மனத்தைக் கட்டாயப்படுத்த வேண்டும். வினா: மனது அலைந்துகொண்டு இருந்தாலும் வெகுநேரம் ஜபம் பயில்வது நல்லதா? சுவாமிஜி: நல்லதுதான்; மூர்க்கமான குதிரையை வசப்படுத்துவதற்கு குதிரைக்காரன் அதன் முதுகு மீது நீடித்து உட்கார்ந்து குதிரையை ஓட்டுவது போன்றது இது. வினா: பிரார்த்தனையின் பயன் யாது? சுவாமிஜி: பிரார்த்தனையினால் ஒருவரது நுண்ணிய ஆற்றல் எழுப்பப்படுகிறது. அறிந்து உணர்வுடன் அதைச் செய்தால் எல்லா ஆசைகளும் நிறைவேற்றப்படும்; அறிவுக்கு எட்டாமல் உணர்வு இல்லாமல் அதைச் செய்தால் விருப்பங்களில் பத்தில் ஒன்றாவது நிறைவேற்றப்படும். வினா: பலவீனமான உடலையுடைய ஒருவன் யோகம் செய்தால் பயங்கரமான எதிர்ப் பலன் உண்டாகும் என்று பக்தி யோகத்தில் கூறுகிறீர்கள். அப்போது என்ன செய்வது? சுவாமிஜி: பரமாத்மாவை அடைவதற்கு முயற்சி செய்கையில் இறந்துவிடுவோமா என்ற பயம் ஏன் உண்டாக வேண்டும்? கல்வி கற்கும் போதாவது அல்லது நல்லதைச் செய்ய முயலும் போதாவது இறந்து விடுவோமா என்று மனிதன் பயப்படுவதில்லை. மதத்திற்காக இறப்பதற்கு ஏன் பயப்பட வேண்டும்? 31. அனுபவமும் மெய்ப்பித்தலும் சுவாமிஜி: ஒரு நாள் தட்சிணேசுவரக் கோயில் தோட்டத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் என்னை மார்பில் தொட்டார். வீடுகள், அதனுடைய கதவுகள், அறைகள், ஜன்னல்கள், தாழ்வாரம், மரங்கள், சூரியன் எல்லாம் பொடிப் பொடியாகி அணுக்காளி பறந்து கொண்டிருந்ததாகவும் அவை எல்லாம் ஆகாசத்தில் இணைந்ததாகவும் காண ஆரம்பித்தேன். படிப் படியாக ஆகாசமும் மறைந்தது. அத்துடன் என் அகங்காரத்தின் உணர்வும் மறைந்தது. பிறகு என்ன நடந்தது என்று ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. முதலில் நான் பயந்து விட்டேன். அந்த நிலையிலிருந்து விழித்துக் கொண்டதும் வீடுகளையும், கதவுகளையும் ஜன்னல்களையும் தாழ்வாரங்களையும் மற்றவையும் கண்டேன். அதே விதமான உணர்ச்சி அமெரிக்காவில் ஓர் ஏரியின் அருகில் ஏற்பட்டது. சீடன்: இந்த விதமான நிலைமை மூளையின் குழப்பத்தால் ஏற்படாதா? இவ்வித நிலைமை அடைவதில் என்ன ஆனந்தம் இருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சுவாமிஜி- மூளைக் குழப்பமா! அவ்வாறு நீ எப்படி சொல்லலாம்? அந்த நிலைமை ஜன்னி வியாதியில் ஏற்படும் சித்தப் பிரமையினாலாவது, கள், சாராயம் முதலிய போதைப் பொருள்களை உட்கொண்டதனாலாவது, பல வகைப் பிராணாயாமங்களைச் செய்தலினாலாவது உண்டாகவில்லை. அந்த நிலைமை நல்ல உடல் நலமும் நல்ல புத்தியும் உள்ளவனுக்கு வந்தது. இந்த அனுபவம் வேதங்களின் கூற்றுக்கு ஒத்து உள்ளது. பண்டைக்காலத்துத் தெய்வ அருள் பெற்ற ரிஷிகள், ஆசாரியர்கள் இவர்களின் அனுபவத்திற்கும் கூற்றுக்கும் ஒத்திருக்கிறது. ஃ 32. பற்றற்று இருத்தல் எவ்வாறு? நமது துன்பங்கள் எல்லாம் பொருள்களிலிருந்தும் விஷயங்களிலிருந்தும் மனத்தை அப்புறப்படுத்தும் ஆற்றல் இல்லாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. மனத்தின் குவியச் செய்யும் ஆற்றலை வளர்ப்பது போன்று அதைப் பொருள்களிலிருந்து பிரிக்கும் ஆற்றலையும் வளர்க்க வேண்டும். நமது மனத்தின் சக்தி முழுவதையும் ஒன்றின் மேல் பற்றிக் கொள்ளக் கற்றுக் கொள்வது போல், மனத்தை நம் இச்சையினால் திடீரென ஒன்றிலிருந்து பிரித்து மற்றொன்றைப் பற்றச் செய்வதற்கும் கற்க வேண்டும். இந்த இரண்டு ஆற்றலையும் சேர்த்து வளர்க்க வேண்டும். இது தான் மனத்தின் ஆற்றலைச் சீராக வளர்க்க வேண்டிய முறை. என் கருத்துப்படி, கற்றல் என்பது மனத்தின் குவிக்கச் செய்யும் ஆற்றலை வளர்த்தல்; விவரங்களையும் நிகழ்ச்சிகளையும் சேகரித்து ஞாபகத்தில் வைப்பது அன்று. நான் மறுபடியும் கற்க வேண்டியிருந்தால், இந்த மாதிரி விவரங்களைக்ச் சேகரிக்க மாட்டேன். முதலில் மனத்தின் குவிக்கும் ஆற்றலையும், பிரிக்கும் ஆற்றலையும் பெருக்கி, பிறகு வேண்டும்போது அந்த சக்தியால் விவரங்களைச் சேகரித்துக் கொள்வேன். நம் மனத்தைப் பொருள்களின் மீது செலுத்த வேண்டும். பொருள்கள் நம் மனத்தை இழுக்கக்கூடாது. அப்போது மனத்தைக் குவிக்கச் செய்ய வற்புறுத்துகிறோம். சாதாரணமாகவே அழகிய பொருள்கள் நம் மனத்தை வற்புறுத்தி அவற்றின்பால் இழுக்கின்றன. இதை நம்மால் தடுக்க முடிவதில்லை. மனத்தை அடக்கி ஆள்வதற்கும் நாம் விரும்பும் பொருள்மீது மட்டும் அதை ஒருமுகப்படுத்திச் செலுத்தவதற்கும் சிறந்த பயிற்சி வேண்டும். 33. மனத்தை ஆராயும் வழி கட்டுக்கடங்காததும், நம்மால் செலுத்தப்படாததுமான மனது நம்மை அழித்துவிடும்; நம்மால் கட்டுப்படுத்தப்பட்ட மனதும் செலுத்தப்பட்ட மனதும் நம்மைக் காப்பாற்றி, விடுதலை அளிக்கும். விஞ்ஞானத்தில் ஓர் ஆராய்ச்சிக்குப் போதுமான தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். இந்தத் தகவல்கள் ஆராயப்பட்டு விஞ்ஞானத்தில் ஓர் உண்மையோ, விதியோ கண்டுபிடிக்கப்படும். ஆனால் மனத்தை ஆராய்ச்சி செய்வதற்கு, வெளியிலிருந்து தகவல்கள் சேகரிக்கப்படமாட்டா. மனத்தை அதனாலேயே பகுக்க வேண்டும். ஆதலால் அறிவியல்களில் சிறந்த அறிவியல் மன இயல் ஆகும். உடலுக்குள்ளே ஆன்மா இருக்கிறது. உங்கள் மனத்தை உள்ளே திருப்பி அதனுடன் பிணைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அதை உறுதிப்படுத்திய பின்பு அதன் சுழற்சியைக் கவனித்து தகவல்களைச் சேகரியுங்கள். மனத்தைக் கட்டுப்படுத்த, நாம் முதலில் உணர்வு அற்ற மனப் பகுதியான அடி நனவில் (சப்- கான்சியஸ் மயின்ட்) சேகரிக்கப்பட்டுள்ள எண்ணங்களை வகைப்படுத்தி, சீராக்கி அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். இது தான் முதல்படி. அடி நனவில் உள்ள எண்ணங்களை கட்டுப்படுத்துவதால் நனவில் உள்ள எண்ணங்கள் அடக்கியாளப்படும். 34. தியான பயிற்சிக்குச் சில குறிப்புகள் சுவாமி சுத்தானந்தா: தியானத்தின் உண்மையான இயல்பு யாது? சுவாமிஜி: தியானம் என்பது மனத்தை ஒரு பொருளின் மீது குவியச் செய்தல். மனத்திற்கு ஒரு பொருளின் மீது குவிக்கும் தன்மை கிடைத்து விட்டால் வேறு எந்தப் பொருளின் மீதும் மனத்தைக் குவிக்க முடியும். சீடன்: நமது புனித நூல்களில் இருவகைத் தியானங்கள் கூறப்படுகின்றன. ஒன்று ஒரு பொருளின் மேல்; மற்றது யாதொரு பொருளும் இல்லாமல்; எவ்வகைத் தியானம் சிறப்பானது? சுவாமிஜி: தியானப் பயிற்சியில் முதலில் ஒரு பொருளை மனத்தின் முன் வைத்துக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். ஒரு தடவை ஒரு கருப்புப் புள்ளியை எனது மனத்தின் முன் வைத்து மனத்தை அதன்மேல் ஒரு முகப்படுத்தி வந்தேன். சில நாட்களுக்குப் பிறகு என் மனத்தின்முன் அந்தப் புள்ளியைக் காணமுடியவில்லை. அந்தப் புள்ளி இருந்ததாகவே எண்ணவில்லை. மனத்தில் ஓர் எண்ண அலையும் ஏற்படவில்லை. அமைதியான கடல் போல் அது இருந்தது. அந்த நிலையில் உயர்ந்த உண்மைகள் மனதில் பளிச்சிட்டதை உணர்ந்தேன். ஆகவே மனத்திற்கு முன் ஒரு சிறு பொருளை வைத்து தியானப் பயிற்சி செய்வதனாலேயும் மனம் குவிக்கப்படுகிறது. ஒருவர் விரும்பும் பொருளின் மீது மனத்தைச் செலுத்தித் தியானப் பயிற்சி செய்யும்போது மனது எளிதில் அமைதி நிலைமை அடைகிறது. அதனால்தான் இந்தியாவில் உருவ வழிபாடு இருக்கிறது. மனத்தை அலையச் செய்யாமல் அமைதி யாக்குவதற்கு மனத்தை ஒரு பொருளின் மீது ஒருமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. சீடன்: மனம் ஒரு பொருளின் மீது குவிக்கப்பட்டு அப்பொருளுடன் அது ஐக்கியமானால் அது எவ்விதம் பிரம்மத்தின் உணர்வை உண்டு பண்ணும்? சுவாமிஜி: முதலில் மனது பொருளின் உருவத்தை அடைந்தாலும் பின்னால் அப்பொருளின் உணர்வு மறைந்துவிடுகிறது. அப்பொருளில் உள்ள உருவற்ற பிரம்மத்தின் மீது மட்டும் உணர்வு இருக்கவேண்டும். சுவாமிஜி: அற்புதம் நிகழ்த்தும் ஆற்றலை, மனத்தை ஒருமுகப்படுத்திக் குவித்தலால் பெறலாம். மற்றொருவர் மனத்தில் நினைப்பதை அறியும் சக்தியைப் பெறும் முறையைக் கற்கிறாயா? நான் நான்கு அல்லது ஐந்து நாட்களில் உனக்குக் கற்றுக் கொடுக்கிறேன். சீடன்: அதனால் எனக்கு என்ன பயன்? சுவாமிஜி: இன்னொருவர் எண்ணத்தை நீ அறியலாம். சீடன்: பிரம்மத்தை அறிவதற்கு அந்த சக்தி உதவுமா? சுவாமிஜி: உதவாது சீடன்: அப்படியானால் அந்த அறிவியலை நான் கற்க வேண்டியதில்லை. சுவாமிஜி: பரமஹம்ஸர் இந்த அற்புதம் நிகழ்த்தும் சக்தியைப் பற்றி இழிவாகப் பேசுவார். இந்த அற்புதம் செய்யும் சக்தியில் ஒருவன் ஈடுபட்டால் அவன் பிரம்மத்தை அறிய முடியாது என்று அவர் கூறுவார். மனிதனின் மனது பலவீனமாய் இருப்பதால் சாதாரண மக்களும், சந்நியாசிகளில் பலரும். இந்த அற்புதங்களால் கவரப்படுகின்றனர். மேல் நாட்டில் மக்கள் இந்த அற்புதங்களைக் கண்டு வியப்பில் மூழ்குகின்றனர். இராமகிருஷ்ண பரமஹம்ஸர் இந்த அற்புத சக்திகள் ஆன்மீக வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்று கருணையுடன் எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததால், அற்புதங்களால் நாங்கள் கவரப்படவில்லை. நாங்கள் அவற்றைக் கவனிப்பதும் இல்லை. 36. சமாதியின் மர்மம் சீடன்: நிர்விகல்ப சமாதியை அடைந்தவர் அகங்கார உணர்வால் மறுபடியும் இந்த உலக உணர்விற்குத் திரும்ப முடியுமா? சுவாமிஜி: அவதாரப் புருஷர்கள் உலக நன்மைக்காக அவ்வாறு செய்ய முடியும். சாதாரண ஜீவர்கள் அவ்வாறு செய்ய முடியாது, என்று பரமஹம்ஸர் சொல்வார். சீடன்: சமாதியில் ஒருவர் இருக்கும்போது மனது அடங்கிவிடுகிறது. உணர்வும் இல்லை. அகங்காரத்தின் உணர்வால் எப்படி மறுபடியும் மனம் சுறுசுறுப்பு அடைந்து உலக விவகாரத்தை நினைக்கத் திரும்ப முடியும்? மனது இல்லாமல் இருக்கும்போது எது, எவ்வாறாகச் சமாதியிலிருந்து சாதாரண நிலைக்கு வரும்? சுவாமிஜி: நிர்விகல்ப சமாதி ஏற்படும்போது மனது, உணர்வு எல்லாம் செயலிழக்கும்போது, அதிலிருந்து சாதாரண நிலைமைக்கு வரமுடியாதென்று வேதாந்தம் கூறுகிறது. ஆனால், அவதார புருஷர்கள் உலகுக்கு நன்மை செய்ய விரும்புவதால் உயர் நனவிலிருந்து (சூப்பர் கான்சியஸ் சிடேட்) சாதாரண உணர்வு நிலைக்கு வரமுடியும். 37. ஓஜஸ் சக்தி செயலாலும் சிந்தனையாலு<ம் சிற்றின்பத்தில் செலவிடப்படும் சக்தியைத் தடுத்துச் சேர்த்து வைத்தால் அது ஓஜஸ் சக்தியாக மாறுவதாக யோகிகள் கூறுகின்றனர். முதுகெலும்பின் கடைசி எலும்புக்கு அடியில் மூலாதாரத்தில், வட்டமிட்டுக் கிடக்கும் ஒரு சிறு பாம்பு உறங்குவதாக யோகி சித்திரிக்கிறான். அதைக் குண்டலினி என்கிறான். பிரம்மச்சரியத்தால் குண்டலினி எனப்படும் இந்த ஓஜஸ் சக்தியை யோகி தண்டுவடம் வழியாக மேலே அனுப்பி, மூளையின் அடியில் உள்ள பினியல் என்னும் நாளமில்லா சுரப்பியில் ஆன்ம சக்தியாகச் சேர்த்து வைக்கிறான். எவ்வளவுக்கெவ்வளவு ஓஜஸ் மூளையில் சேர்த்து வைக்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வலிமையும், புத்திக் கூர்மையும் ஆன்ம சக்தியும் பெற்றவனாக மனிதன் விளங்குகிறான். ஒரு மனிதன் அழகிய நடையில் சிறந்த எண்ணங்களைப் பேசலாம்; ஆனால் அவை மக்களைக் கவராமல் இருக்கின்றன. மற்றொருவன் அவ்வளவு அழகாகப் பேசாமல் இருந்தாலும், அவனுடைய சொற்கள் மக்களை வசப்படுத்துகின்றன. அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் சக்தி இருக்கிறது. இதுதான் ஒஜஸின் சக்தி. பரிசுத்தமுள்ள, சிற்றின்பத்தில் ஈடுபடாத ஆடவரும் பெண்டிரும்தான் ஓஜஸை மேலே எழுப்பி மூளைச் சுரப்பியில் சேர்த்து வைக்கக் கூடியவர். ஆதலால் பிரம்மச்சரியம் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது. பிரம்மச்சரியத்திலிருந்து நழுவினால் ஒழுக்க வலிமையும் இரா. ஆன்மீக வலிமை பெற்றவர்களைத் தோற்றுவித்த சமயங்களிலெல்லாம் பிரம்மச்சரியம் அவசியம் என்று கூறப்படுவது இக் காரணம் பற்றியே. எண்ணத்திலும், பேச்சிலும், செய்கையிலும் பூரணமான பிரம்மச்சரியம் அவசியம். 38. கற்பதில் திறமை சில நாட்களுக்கு முன்பு என்ஸைகிளோபீடியா பிரிட்டானிகா என்ற பிரிட்டனின் கலைக்களஞ்சியத்தின் ஒரு தொகுதி பேலூர் மடத்திற்காக வாங்கப்பட்டது. பளப்பளப்பான அப் பெரிய புத்தகங்களைப் பார்த்து. ஒருவர் வாழ்க்கையில் இந்தப் புத்தகங்கள் முழுவதையும் படிப்பது இயலாது என்று ஒரு சீடர் கூறினார். சுவாமிஜி ஏற்கனவே பத்துப் புத்தகங்களைப் படித்துவிட்டு பதினொன்றாவதைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார் என்ற உண்மை அச்சீடருக்குத் தெரியாது. சுவாமிஜி: இந்தப் பத்துப் புத்தகங்களிலிருந்து எதையாவது கேள். நான் விடை அளிக்கிறேன். சீடன்: நீங்கள் இப்புத்தகங்களைப் படித்து விட்டீர்களா? வியப்பாக இருக்கிதே! சுவாமிஜி: இல்லாவிட்டால் நான் ஏன் உன்னைக் கேள்வி கேட்கும்படி கூறுகிறேன்? சீடர்: கேள்விகேட்டார். ஒவ்வொரு புத்தகத்திலிருந்தும் கேள்விக்குச் சரியாக விடையளித்தது மின்றி புத்தகத்தில் கண்ட சொற்களையே சுவாமிஜி திரும்பக் கூறினார். சீடர் மிக்க வியப்புற்று, புத்தகங்களைக் கீழே வைத்துவிட்டு. உங்கள் சக்தி, மனித சக்திக்கு மீறி இருக்கிறது. என்றார். சுவாமிஜி: தெரிந்து கொள். பிரம்மச்சரியத்தைக் கண்டிப்பாக அனுசரித்தால் கற்பதில் நிபுணத்துவம் குறுகிய காலத்தில் பெற்றுவிட இயலும். 39. மனத்தின் ஆற்றல் இராஜயோகம் என்ற அறிவியல், உள்ளத்தின் நிலைகளைக் கவனிப்பதற்குரிய வழிகளை நமக்கு அளிக்கிறது, இதற்குக் கருவி நமது மனமே. உற்றுநோக்கின் கவனிக்கும் சக்தியைச் சரியாக வழிப்படுத்தி, உள்ளத்தை நோக்கித் திருப்பினால், அது மனத்தைப் பாகுபடுத்தி விஷயங்களைத் தெளிவு படுத்தும். மனத்தின் சக்திகள் பரந்த ஒளிக்கதிர்கள் போன்றன. அவற்றை ஒன்று சேர்த்தால் அவை சிறந்த ஒளியைத் தந்து தெளிவு உண்டாக்கும். அறிவைப் பெறுவதற்கு இதுதான் வழி. தாக்குவதற்குரிய வழியை அறிந்து தாக்கினால், உலகம் அதன் இரகசியங்களைக் கொடுக்கத் தயாராய் இருக்கிறது. மனத்தைக் குவிக்கச் செய்வதனால், அத்தகைய தாக்கலில் வலிமை ஏற்படுகிறது. மனிதனின் மனத்தின் வலிமைக்கு எல்லையே இல்லை. எவ்வளவுக் கெவ்வளவு மனத்தை ஒருமுனைப் படுத்துகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு வலிமையை அது ஒரு முனையில் செலுத்தக்கூடும். இது தான் இரகசியம். 40. அற்புதத்தில் நாட்டம் இராஜயோக நெறியில் அற்புதம் உண்டாக்கும் சக்தி கிடைப்பின் அதை நீக்கிவிட வேண்டும். வாழ்க்கையில் சிறந்த வழிகாட்டி வலிமையே. பிற விஷயங்களைப் போலவே மத ஆராய்ச்சியிலும் எது உங்கள் வலிமையைக் குறைக்கிறதோ அதை அறவே நீக்கிவிட வேண்டும். அதனுடன் ஒரு தொடர்பும் கொள்ளலாகாது. அற்புதம் விளைவித்தலோ அல்லது இரகசிய மார்க்கமோ மனிதன் மூளையைப் பலவீனமாக்கும் சாத்திரங்களில் மிகச் சிறந்ததான யோக சாத்திரத்தை அது அனேகமாய் அழித்து விட்டது. ஒரு யோகி, சொகுசான வாழ்வு, கடுந்தவம் ஆகிய இரண்டு தீவிரங்களையும் விலக்க வேண்டும். அவன் பட்டினியிருக்கவோ, உடலைத் துன்புறுத்தவோ கூடாது. அப்படிச் செய்கிறவன் யோகி ஆக முடியாது என்று கீதை கூறுகிறது. பட்டினி கிடப்பவனும் தூங்காது விழித்திருப்பவனும், அதிகம் தூங்குபவனும் அதிகம் வேலை செய்பவனும், வேலை செய்யாது இருப்பவனும் யோகி ஆக முடியாது. 42. இராஜபாதை இராஜ யோகம் என்ற சாத்திரமானது அமரத்துவம் பெறுவதற்கு அனுஷ்டிக்கக் கூடியது. விஞ்ஞான ரீதியான ஒரு வழியை வகுத்துத் தருகிறது. ஒவ்வொரு அறிவியலும் தனக்கென உரிய ஆராய்ச்சி முறையைப் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் வான இயல் வல்லுனராக ஆக வேண்டுமாயின் ஓரிடத்தில் உட்கார்ந்து வான இயல், ஓ வான இயல்! என்று கத்தினால் அது உங்களிடம் ஒரு பொழுதும் வராது. அதே மாதிரிதான் இரசாயன இயலும். ஒரு முறையைப் பின்பற்ற வேண்டும். ஒரு சோதனைச் சாலைக்குச் சென்று பொருட்களைக் கலந்து சோதித்தால்தான், இரசாயன அறிவு உண்டாகும். வான இயல் வல்லு<னராக நீங்கள் ஆக விரும்பினால், வான ஆராய்ச்சிக் களத்திற்குச் சென்று, ஒரு தொலை நோக்கியை எடுத்து, கிரகங்களையும் நட்சத்திரங்களையும் உற்று நோக்கி ஆராய்ந்து வந்தால், நாளடைவில் வான இயல் வல்லு<னர் ஆகலாம். ஒவ்வோர் அறிவியலு<க்கும் தனிப்பட்ட முறைகள் உண்டு. உங்களுக்கு நான் ஆயிரம் மதப் பிரசங்கங்கள் செய்யலாம். ஆனால் செயல் முறையைப் பின்பற்றினாலன்றிச் சமயப்பற்று உடையவர்களாக நீங்கள் ஆக முடியாது. 43. தியானத்தின் திறன் இரவும் பகலு<ம் பிரம்மனைச் சிந்தித்து மனத்தை ஒருமுனைப் படுத்தித் தியானம் செய்யுங்கள். வெளியுலக வாழ்க்கையில் ஈடுபடும்போது மற்றவர் நன்மைக்காகப் பணி செய்யுங்கள். அல்லது உங்கள் மனத்தில், எல்லோர் மனதும் பிரம்மனை நோக்கிச் செல்லட்டும்! எல்லா ஜீவர்களும் உலகமும் நன்மை அடையட்டும்! என்று திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். இவ்வகையான தொடர்ந்த எண்ண அலைகளின் ஓட்டத்தினால்கூட உலகம் பயன் அடையக்கூடும். நற்செய்கைகளோ, நல்ல எண்ணங்களோ இந்த உலகில் பயன் அடையாமல் இருக்காது. உங்கள் எண்ண அலைகளின் ஓட்டம் அமெரிக்காவில் ஒருவரின் சமய உணர்வை எழுப்பலாம்! 44. தியான வேளையிலே மனத்தை ஒரு பொருளின்மீது நிலைநிறுத்த வேண்டும், சாதாரண மனிதனின் மனது பலவிதப் பொருட்களின்மீது சிதறிச் செலுத்தப்படுகிறது. தியான வேளையில்கூட முதலில் மனது அலைய ஆரம்பிக்கும். மனத்தில் தோன்றும் விருப்பத்தை, அமைதியாய் உட்கார்ந்து, எவ்வகை எண்ணங்கள் வருகின்றன என்று கவனிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து கவனித்தால், சிறிது நேரத்திற்குப் பின் மனது அமைதி பெறுகிறது. எண்ண அலைகள் வருவதில்லை. முன்னால் ஆழ்ந்து சிந்தித்த விஷயங்கள் உணர்வற்ற அடி நனவிலிருந்து தொடர்ந்து உணர்வுக்குப் பாய்கின்றன. ஆதலால், அவை தியானவேளையில் மனத்திற்கு வருகின்றன. தியானத்தின் போது இந்த எண்ண அலைகள் வெளிவருதல். மனது ஒரு முனைப்படுவதற்கு ஆரம்பிக்கிறது என்பதற்குச் சான்று. சில சமயம் மனது சில கருத்துகளின் தொகுப்பின் மீது குவிக்கப்படுகிறது. இதற்கு விகல்பத்துடன் அல்லது அலைகளுடன் கூடிய தியானம் என்று பெயர். மனது செயல்புரிவதை நிறுத்தியவுடன் அது உருகி, உள்ளே உள்ள ஆன்மாவுடன் ஐக்கியமாகிறது. அந்த ஆன்மா அனந்த ஞானம். அதற்கு அதுவே ஆதாரம். இதுதான் நிர்விகல்ப சமாதி எனப் படுவது. அந்நிலையில் எல்லாச் செயல்களும் நிறுத்தப்படுகின்றன. இராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் நாங்கள் இருவகைச் சமாதிகளையும் கண்டோம். இந்த நிலைகளை அடைவதற்கு அவருக்கு முயற்சி தேவை இல்லாமல் இருந்தது; தூண்டப் படாமல் இயற்கையாகவே அப்போதைக்கப்போது அவருக்கு வந்தன. அது அற்புதமான நிகழ்ச்சி. அவரைப் பார்த்துதான் எங்களுக்கு இவ் விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. - சுவாமிஜி: ஒவ்வொரு நாளும் தனியாகவே தியானம் செய்யுங்கள். ஒவ்வொன்றும் அதன் இரகசியத்தைக் கொடுத்துவிட்டு. தியானிக்கும்போது தீவிர உணர்ச்சியை முற்றிலும் அடக்கி விடுங்கள். தீவிர உணர்ச்சியில் ஈடுபடுவர்களது குண்டலினி சக்தி விரைவாக மேலே எழும்; ஆனால் வெகு விரைவாகக் கீழே போய்விடும். அப்போது அது பக்தனை அழித்துவிடுகிறது. இதனால்தான் பக்திக் கீர்த்தனங்களைப் பாடுவது போன்ற உணர்ச்சியைத் தூண்டும் வழிகளில் பெரிய குறைபாடு உள்ளது. குதித்து நடனமாடுவதால் குண்டலினி சக்தி மேலே எழுகின்றது. ஆனால் அது நிரந்தரமாய் இருப்பதில்லை. அது பின்னடையும்போது, ஒருவனது காம வேட்கை அதிகப்படுகிறது. ஆனால் தொடர்ந்து தியானப் பயிற்சியும் மனம் குவித்தலும் இல்லாததால் தான் இது நேரிடுகிறது. சீடன்: எந்த சாத்திரத்திலும் இந்த ஆன்மீகப் பயிற்சியை நான் படிக்கவில்லை. இன்று உங்களிடமிருந்து முற்றிலும் புதிய விஷயங்களைக் கேட்கிறேன். சுவாமிஜி: சாத்திரங்களில் ஆன்மீகப் பயிற்சியின் எல்லா இரகசியங்களும் உள்ளன என்று நினைக்கிறாயா? இவை குருக்கள், சீடர்கள் மூலமாகப் பரம்பரையாகவும் இரகசியமாகவும் வழங்கப்பட்டு வந்துள்ளன. ஒரு நாள் கூட தியானப் பயிற்சி இல்லாமல் இராதே. உனக்கு ஒரு நாளில் அதிக வேலை இருந்தால், கால் மணி நேரமாவது பயிற்சி செய் மகனே! உறுதியாக உன்னை அர்ப்பணித்துக் கொள்ளாமல் நீ குறிக்கோளை அடைய இயலுமா? 46. உங்கள் ஆன்மாவைப் படியுங்கள் மனத்தை அடக்குக; புலன்கள் இயங்குவதைத் தடுங்கள். அப்போது நீங்கள் யோகி ஆகிறீர்கள். அதற்குப்பின் மற்றவை வரும். கேட்கவோ, பார்க்கவோ, முகரவோ, ருசி பார்க்கவோ மறுத்து விடுங்கள், பொறிகளின் மீது மனம் செல்வதைத் தடுத்துவிடுங்கள். ஒரு பொருளின்மீது மனம் ஈடுபட்டிருக்கும்போது அனிச்சையாகத் தொடர்ந்து நீங்கள் அதைச் செய்கிறீர்கள். ஆதலால் இச்சையுடன்-உணர்வுடன் அதைச் செய்வதற்கு நீங்கள் கற்க இயலும். மனது புலன் உணர்ச்சியை எங்கு செலுத்த வேண்டுமோ அங்கு செலுத்த முடியும். வேலை செய்வதற்கு உடல் மூலமாகத் தான் கூடும் என்ற மூட நம்பிக்கையை விட்டு விடுங்கள். உங்கள் அறைக்குள் சென்று உபநிடதங்களை உங்கள் ஆன்மாவிலிருந்து பெறுக. நீங்கள் தான் உலகில் சிறந்த புத்தகம். அனைத்தும் உங்கள் உள்ளே அடங்கியுள்ளது. உங்களுக்குள்ளே உள்ள குரு போதிக்க ஆரம்பித்தால் ஒழிய, வெளிப் போதனை வீண். நமக்குள்ளே உள்ள புத்தகம் திறந்தாலொழிய வெளிப் புத்தகங்கள் பயனற்றவை. நமது புத்தகத்தில் உள்ளதை உறுதிப் படுத்தினால்தான் மற்றப் புத்தகங்கள் நல்லவையாகும். வலிமை பெற்றவன்தான் வலிமையைப் புரிந்து கொள்ளுகிறவன். யானைதான் சிங்கத்தின் வலிமையை அறியும்-எலி அன்று. இயேசுவின் குணங்களைப் பெற்றால் அன்றி. அவரை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? மேன்மை பெற்றவன்தான் மேன்மையை உயர்வாக மதிக்க முடியும். கடவுளின் இயல்பைப் பெற்றவன் தான் கடவுளை அடையக் கூடும். நாமே உயிருள்ள புத்தகங்கள். நாம் பேசுகிற பேச்சுக்கள்தான் புத்தகங்கள். ஒவ்வொருவரும் உயிருள்ள கடவுள். உயிருள்ள இயேசு; அவ்வாறு பாருங்கள் மனிதனைப் படியுங்கள். அவனே உயிருள்ள கவிதை. பைபிள்களையும், இயேசுக்களையும், புத்தர்களையும் பிரகாசிக்கச் செய்யும் ஜோதி நம்மிடத்திலே உள்ளது. அப்படிக் கருதா விட்டால் மற்றப் புத்தகங்கள் இறந்தவையே. உயிருள்ளவை அல்ல. 47. யோகத்தின் எட்டு அங்கங்கள் எட்டு முக்கிய அங்கங்களாகப் பகுக்கப் பட்டிருப்பதால், இராஜ யோகம் அஷ்டாங்க யோகம் என்று கூறப்படும். முதலாவது இயமம், இது அனைத்திலும் மிக முக்கியமானது, ஏனெனில் முழு வாழ்க்கையையும் இது அடக்கியாள வேண்டுவது. இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. 1. உள்ளம், உரை, செயலினால் எவ்வுயிரையும் துன்புறுத்தாமை. 2. உள்ளம், உரை, செயலினால் பிறர் பொருளைக் கவராமை. 3. உள்ளம், உரை, செயலினால் முழு பிரமச்சரியம் அனுஷ்டித்தல். 4. உள்ளம், உரை, செயலினால் உண்மை அனுஷ்டித்தல். 5. பிறர் கொடுக்கும் பரிசுகளைப் பெற்றுக் கொள்ளாமை. இரண்டாவது நியமம்: உடலைப் பேணல், நித்தமும் நீராடல், சுத்தமான உணவு முதலியன. மூன்றாவது ஆசனம்: உடலை அமர்த்தும் நிலை. இடுப்பு, தோள்கள், தலை இவற்றை நேராக வைத்து, முதுகுத் தண்டுக்குத் தொந்தரவு கொடாமல் விடுதலை அளித்தல் நான்காவது பிராணாயாமம்: மூச்சைச் சரிவர அடக்கியாளுதல்(பிராணன் என்னும் உயிர்ச் சக்தியை அடக்கியாள்வதற்காக) ஐந்தாவது பிரத்தியாகாரம்: மனத்தைப் புறத்தே புலன்கள் வழி செல்லாது தடுத்து, அதை உள்முகமாகத் திருப்புதல்; மனத்தில் உள்ள பொருளை அறியச் சிந்தித்தல். ஆறாவது தாரணை- ஒரு பொருளின் மீது மனத்தைக் குவித்தல். ஏழாவது தியானம்: மனத்தைக் குவித்து நிறுத்தி இடைவிடாது சிந்தித்தல். எட்டாவது சமாதி: நமது முயற்சிகள் அனைத்திற்கும் குறிக்கோளான ஞான ஒளி பெறுதல். இராஜயோகத்தின் மூலம் கடவுளை அடைய விரும்புகிறவன் உடலாலு<ம், மனத்தாலும், அறத்தாலும் (நற்குணங்களாலும்) ஞானத்தாலும் வலிமை பெற்று இருக்க வேண்டும். இப்பாதையிலே ஒவ்வொரு அடியையும் கவனமாக வைத்து மேலே நட. 48. முதற்படி ஒவ்வொருவருடைய தனித் தன்மையையும் வளர்த்து வரவேண்டும். எல்லோரும் மையத்தில் ஒன்று கூடுவர். சிந்தனா சக்தியே தெய்வ ஆவேச சக்திக்கு வாசல். எல்லா எண்ணங்களுக்கும் அடிப்படை. எல்லா தீர்க்கதரிசிகளும், கவிகளும் விஞ்ஞான உண்மைகள் கண்டுபிடித்தவர்களும் மாபெரும் சிந்தனா சக்தியைப் பெற்றிருந்தனர். இயற்கை நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் நம்மிடத்தில் உள்ளது. கல் வெளியே விழுகிறது. ஆனால் ஈர்ப்பு சக்தி நம்மிடம் உள்ளது. வெளியில் இல்லை. உணவை அதிகம் உண்பவரும் பட்டினி கிடப்பவரும், மிதமிஞ்சித் தூங்குபவரும், குறைவாகத் தூங்குபவரும் யோகிகளாக முடியாது. அறியாமை, சஞ்சலமனம் உடைமை, பொறாமை, சோம்பல், மித மிஞ்சிய பற்று இவை யோகப் பயிற்சியில் வெற்றி பெறுவதற்கு பெரும் பகைகள் ஆகும். மூன்று பெரும் தேவைகளாவன. முதலாவது: உடலிலும் உள்ளத்திலும் சுத்தம். எல்லா அசுத்தமும் மனத்தைக் கீழே இழுக்கும் அனைத்தையும் விடவேண்டும். இரண்டாவது: பொறுமை, முதலில் வியக்கும் தோற்றங்கள் உண்டாகும். ஆனால் பின்னால் அவை நின்றுவிடும். இது மிகக் கடினமான வேளை, ஆனால் உறுதியாய் இரு. பொறுமையைப் பற்றினால் முடிவில் வெற்றி உனதே. மூன்றாவது: விடாமுயற்சி, உடல் நலம் பெறினும் நோயுற்றாலும் பயிற்சியை ஒரு நாளும் செய்யாமல் இராதே. 49. உள்ளமும் அதன் பதிகளும் அந்தக்கரணமாகிய உள்ளத்தில் நான்கு பகுதிகள் உள்ளன. முதலாவது: மனம், அதாவது சிந்திக்கும் சக்தி, இது அடக்கப்படாமலிருந்தால் அது முழுதும் வீணாகும். சரியாக அடக்கப்பட்டால் அது வியக்கத்தக்க சக்தி ஆகும். இரண்டாவது: புத்தி என்னும் சங்கல்ப சக்தி. இதை அறிந்து கொள்ளும் சக்தி என்பர். மூன்றாவது: அகங்காரம். நான் என்று தன்னை அறியும் ஆணவம் நான்காவது: சித்தம் இது மனத்தில் அடித்தளம் போன்றது. இதன் வழியாக எல்லா மனச் சக்திகளும் வேலை செய்கின்றன. பலவிதமான மனச் சக்திகளான அலைகள் எழுவதற்கு இது அடிப்படையான கடல் ஆகும். சித்தம் பற்பல சக்திகள் ஆகாமலோ, மாறுபடாமலோ, இருக்குமாறு தடுப்பதற்கு உதவும் சாத்திரமே யோகம் எனப்படும். கடலில் தெரியும் சந்திரனின் பிம்பம் அலைகளால் உடைந்தோ கலைந்தோ போவது போன்று, ஆத்மா என்ற உண்மைப் பொருளின் பிம்பம் மன அலைகளால் உடைந்து போகிறது. கடல் அமைதியாகி கண்ணாடி போன்று இருந்தால்தான், சந்திரனின் பிம்பம் தெரியும். அதுபோல் சித்தம் அமைதியாய் இருக்கும்படி அடக்கப்பட்டால்தான் ஆன்மாவை அறிய முடியும். 50. அமைதியில் தியானம் செய் நமக்கு வெளியே கடவுளைக் காண முடியாது. நமது ஆன்மாக்களே வெளியிலிருக்கும் தெய்வத் தன்மையை வழங்குகின்றன. நாமே கோயில்கள். இதைப் போன்று தான் வெளியில் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மனத்தின் சக்தியை ஒரு முனைப்படுத்தலே நமக்குக் கடவுளைக் காண உதவும் கருவி ஆகும். நீங்கள் உங்களுடைய ஆன்மாவைத் தெரிந்து கொண்டால் சென்ற காலத்திலோ, இப்பொழுதோ, எதிர் காலத்திலோ உள்ள எல்லா ஆன்மாக்களையும் தெரிந்தவர் ஆவீர்கள். ஒரு முனைப்படுத்திக் குவித்த மனது. ஆன்மாவின் ஒவ்வொரு மூலையையும் காண்பதற்கு விளக்குப்போல் உதவும். உண்மை பின்னமாகவும் ஒருபட்சமாகவும் இருக்கமுடியாது. அது அனைவருக்கும் நன்மை தரக்கூடியது. முடிவில் அமைதியான இடத்தில் அமைதியான மனத்துடன் ஆன்மா மீது தியானம் செய்யுங்கள். அதன் மீது உங்கள் மனத்தை ஒருமுனைப்படுத்துங்கள். அதனுடன் ஐக்கியமாய் இருக்க முயற்சி செய்க. பேச்சு வேண்டியதில்லை மவுனம் உண்மையைத் தெரிவிக்கும். பேச்சில் உங்களது சக்தியைச் செலவழிக்காதீர்கள். மவுனமாகத் தியானம் செய்க. வெளி உலகம் உங்களைத் தாக்கி, தொந்தரவு கொடுக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் மனது உயர்ந்த நிலையில் இருக்கும்போது நீங்கள் அதை அறிய மாட்டீர்கள். மவுனமாயிருந்து உங்கள் சக்தியைச் சேகரித்துக் கொண்டு ஆன்மீகச் சக்தியின் டைனமோ (மின் உற்பத்தி எந்திரம்) ஆகிவிடுங்கள்.

Copyright © 2017 by Swami Vidyananda . All rights reserved.