²õ£ñ¤ õ¤«õè£ùï¢îó¤ù¢ õö¤ò¤ô¢ Þñîî àôèñ¢ º¿õ¶ñ¢ ðóð¢¹õîø¢è£ù ðí¤ ïìªè£í¢®¼è¢è¤ø¶
சித்துப் பிராணனைக் கட்டுப்படுத்துதல் இப்போது பிராணாயாமத்திலுள்ள பயிற்சிகளைப் பார்ப்போம். யோகிகளைப் பொறுத்தவரை நுரையிரல்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதுதான் முதற்படி. உடலிலுள்ள நுண்ணிய இயக்கங்களை உணர்வதே நாம் செய்ய வேண்டுவது. நமஆ மனம் புறமாகிவிட்டது. அகத்தில் நிகழ்கின்ற நுண்ணிய இயக்கங்களை உணரும் தன்மையை இழந்துவிட்டது. அவற்றை உணரத் தொடங்குவோமானால் அடக்கி ஆளவும் தொடங்குவோம். நரம்புகள் உடல் முழுவதும் பரவிச் சென்று ஒவ்வொரு தசைக்கும் ஊக்கமும் சக்தியும் ஊட்டுகின்றன. ஆனால் அவற்றை நாம் உணர்வதில்லை. அவற்றை உணர்வதற்கு நாம் பழகலாம் என்கிறான் யோகி. எப்படி? நுரையீரல்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் தான், போதிய காலம் நாம் அதைச் செய்தோமானால் உடலில் நுட்பமான இயக்கங்களை அடக்கி ஆளலாம். இப்போது பிராணாயாமத்திலுள்ள பயிற்சிக்கு வருகிறோம். நேராக நிமிர்ந்து அமருங்கள்; உடம்பு நேராக இருக்க வேண்டும். முதுகுத்தண்டு முதுகெலும்புடன் சேர்ந்திராவிட்டாலும் அதனுள் இருக்கிறது. வளைந்து அமர்ந்தால் முதுகுத்தண்டிற்கு இடைஞ்சல் செய்கிறீர்கள். எனவே அது சுதந்திரமாக இருக்குமாறு அமருங்கள். வளைந்து உட்காந்து தியானம் செய்யும்போதெல்லாம் உங்களுக்கு நீங்களே தீங்கு செய்துகொள்கிறீர்கள். மார்பு, கழுத்து தலை இவை மூன்று அங்கங்களும் எப்போதும் நேர்கோட்டில் அமைய வேண்டும். சிறிது பயிற்சிக்குப் பின்னர் இது மூச்சு விடுவதைப்போல் எளிதாகி விடுவதைக் காணலாம். இரண்டாவதாக, நரம்புகளை வசப்படுத்துதல். சுவாச உறுப்புகளை ஆளும் நரம்பு மையம் மற்ற நரம்புகளையும் ஒருவிதமாக அடக்கி ஆள்கிறது, எனவே லயத்துடன் கூடிய சுவாசம் தேவை என்பதை முன்பே கூறினோம். பொதுவாக நாம் மூச்சுவிடுவதை மூச்சுவிடுதல் என்றே சொல்வதற்கில்லை.23. அது சிறிதும் ஒழுங்கற்றது. மேலும் ஆண்களும் பெண்களும் மூச்சுவிடுவதில் இயற்கையான சில வேறுபாடுகள் உள்ளன. அளவாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடக் கற்றுக் கொள்வதுதான் முதல் பாடம். இது உடலை இயைபுப்படுத்தும். சிறிதுகாலம் இதைப் பயிற்சி செய்த பின் ஒம் அல்லது வேறு ஏதாவது மந்திரத்தையும் சேர்த்து ஜபிப்பது நல்லது. சாதாரணமாக இந்தியாவில் நாங்கள் ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்வதற்குப் பதிலாகச் சில உருவகச் சொற்களை பயன்படுத்துவது வழக்கம். அதனால்தான் பிராணாயாமத்துடன் ஓம் அல்லது வேறு ஏதாவது மந்திரத்தை ஜபிக்கும்படிக் கூறினேன். சுவாசத்துடன் இந்த மந்திரரமும் கலந்து லயத்துடன், இயைபுடன் உள்ளே சென்று வெளிவரட்டும். அப்போது உடல் முழுவதுமே ஒரு லயத்திற்கு வசப்பட்டு விடுவதைக் காணலாம். ஓய்வு என்றால் என்ன என்பது அப்போதுதான் உங்களுக்குத் தெரியவரும். அதனுடன் ஒப்பிடும்போது தூக்கம் ஓர் ஓய்வே அல்ல. இந்த ஓய்வு மட்டும் கிடைத்து விட்டால் மிகவும் களைப்புற்றிருந்த நரம்புகள் அமைதி பெறும். இதற்கு முன்பு நீங்கள் உண்மையில் ஓய்வையே அனுபவித்ததில்லை, அப்போது உணர்வீர்கள் இந்தப் பயிற்சியின் முதல் விளைவை முகத்திலேயே காண முடியும்; முகபாவம் மாறும், அழகற்ற மடிப்பு மறைந்துவிடும். அமைதியான சிந்தனையுடன் முகம் சாந்தமாகப் பொலிந்து தோன்றும். அடுத்து வருவது இனிமையான குரல். கரகரப்பான குரலுடைய யோகியை நான் பார்த்ததே இல்லை. இந்த அறிகுறிகள் சிலமாதப் பயிற்சியிலேயே தோன்றிவிடும். மேலே கூறிய சுவாசப் பயிற்சியைச் சில நாட்கள் செய்த பிறகு, சற்று உயர்ந்த பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும். இடை வழியாக, அதாவது இடது நாசி வழியாக நுரையிரல்களைக் காற்றினால் மெள்ள நிரப்புங்கள். அதே வேளையில் நரம்பு ஓட்டத்தின் மீது மனத்தை ஒருமுகப்படுத்துங்கள். அந்த நரம்பு ஒட்டத்தை நீங்கள் முதுகுத் தண்டு வழியாக கீழே அனுப்பி, அங்கே குண்டலினியின் இருப்பிடமான, முக்கோண வடிவமான மூலாதாரத் தாமரையை அது வலிமையாகத் தாக்குவதாக நினையுங்கள். பிறகு நரம்பு ஓட்டத்தை அங்கு சிறிது நேரத்திற்கு நிறுத்தி வையுங்கள். பிறகு அந்த நரம்பு ஒட்டத்தை மேலே பிங்கலை வழியாகக் காற்றை வெளியில் அனுப்புங்கள். இது உங்களுக்குச் சற்று சிரமமாக இருக்கும். மிக எளிதான வழி கைவிரல்களைப் பயன்படுத்திக் கொள்வதுதான். வலது நாசித்துளையைப் பெருவிரலால் மூடிவிட்டு, இடது நாசி வழியாக மூச்சை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும். பின்னர் பெருவிரலாலும் சுட்டுவிரலாலும் இரண்டு நாசிகளையும் மூடிவிட்டு, ஓட்டத்தைக் கீழே அனுப்பிச் சுழுமுனையின் அடிப்பகுதியைத் தாக்குவதாக நினையுங்கள். பின்னர் பெருவிரலை விலக்கி, மூச்சை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள். அடுத்து, அதே நாசி வழியாக மூச்சை உள்ளிழுங்கள். அப்போது இடது நாசி, சுட்டுவிரலால் மூடியபடியே இருக்கட்டும். பின்னர் முன்புபோல் இரண்டு நாசிகளையும் மூடுங்கள். இந்துக்கள் பழகுவது போல், இந்த நாட்டிலுள்ள உங்களால் இதைச் சுலபமாகப் பழக முடியாது. ஏனெனில் அவர்கள் சிறுவயதிலிருந்தே இதைப் பழகிவருகின்றனர். அவர்களது சுவாசப்பைகள் இதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. நான்கு வினாடிகளாக ஆரம்பித்து, மெதுவாக அதிகரிப்பது நல்லது. நான்கு வினாடி உள்ளிழுங்கள், பதினாறு வினாடி வெளி விடுங்கள். இது ஒரு பிராணாயாமம். இந்தச் சமயத்தில் முக்கோண வடிவத்திலுள்ள மூலாதாரத் தாமரையை நினைத்து மனத்தை அந்த மையத்தில் குவியுங்கள். மனோ பாவனை உங்களுக்கு பேருதவியாக இருக்கும். அடுத்த பிராணாயாமத்தில் சிறிது வித்தியாசம் உள்ளது. இதில் மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, உடனே மெதுவாக வெளியேற்றிவிட வேண்டும். மூச்சை வெளியில் நிறுத்த வேண்டும். முந்திய முறைக்குரிய அதே எண்ணிக்கைகளைப் பயன்படுத்த வேண்டும். வித்தியாசம் எல்லாம், முதல் வகையில் மூச்சு உள்ளே நிறுத்தப்பட்டது, இரண்டாம் வகையில் வெளியில் நிறுத்தப்படுகிறது. இரண்டாவதுதான் சுலபமானது. மூச்சை சுவாசப்பையில் நிறுத்தி வைக்கின்ற பிராணாயாமம் அதிகமாகச் செய்யக் கூடாது. காலையில் நான்கு முறையும் மாலையில் நான்கு முறையும் செய்யுங்கள். பிறகு மெதுவாக நேரத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம். அதற்குரிய ஆற்றல் உங்களுக்கு இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். அப்படி ஆற்றல் இருப்பதாக நீங்கள் உணரும்போது கவனமாக, எச்சரிக்கையாக நான்கிலிருந்து ஆறாக உயர்த்தலாம். ஒழுங்கீனமான பயிற்சி உங்களுக்குக் கேட்டை விளைவிக்கும். நாடிகளைச் சுத்தப்படுத்துவதுவதற்காகக் கூறிய மூன்று வகைப் பிராணாயாமங்களுள் முதல் வகையும் மூன்றாம் வகையும் எளியவை; ஆபத்து ஏதும் இல்லாதவை. முதல் வகையை எவ்வளவு அதிகமாகச் செய்கிறீர்கயளா அந்த அளவு அமைதியில் நிலைபெறுவீர்கள். ஓம் என்ற மந்திரத்தை நினையுங்கள். வேலை செய்து கொண்டிருக்கும்போதுகூட நீங்கள் இதைச் செய்யலாம். எல்லா விதத்திலும் அது உங்களுக்கு நல்லது. தீவிர முயற்சியுடன் பயிற்சி செய்தால் ஒருநாள் குண்டலினி எழும், தினந்தோறும் ஓரிருமுறை பயிற்சி செய்பவர்களுக்கு உடலும் உள்ளமும் சிறிது அமைதி பெறும்; குரல் இனிமை பெறும், மேலும் தொடர்ந்து செய்பவர்களுக்கு மட்டுமே குண்டலினி சக்தி விழித்தெழும். அவர்களுக்கு இயற்கை முழுவதுமே மாறத் தொடங்கும். அறிவுப் பொக்கிஷம் தானாகத் திறக்கும். அதன் பிறகு அறிவைத் தேடி நூல்களை நாட வேண்டியதில்லை. உங்கள் சொந்த மனமே எல்லையற்ற அறிவை உடைய நூலாகிவிடும். முதுகுத் தண்டின் இருபுறமும் செல்கின்ற நாடிகளைப் பற்றியும் தண்டுவடத்தின் வழியாகச் செல்லும் சுழுமுனையைப் பற்றியும் ஏற்கனவே கூறினேன். இவை மூன்றும் எல்லா பிராணிகளிலும் உண்டு; முதுகெலும்பு உள்ள பிராணிகள் எல்லாவற்றிற்கும் இவை உண்டு; சாதாரண மனிதனிடம் இந்தச் சுழுமுனை மூடியிருக்கிறது என்கிறான் யோகி, அதன் செயல்பாடு புலப்படுவதில்லை. மற்ற இரண்டு நாடிகளும் சக்தியை உடலின் பல பாகங்ளுக்கு எடுத்துச் செல்கின்றன. யோகிக்கு மட்டுமே சுழுமுனை திறக்கப்பட்டுள்ளது. சுழுமுனைப் பாதை திறந்து குண்டலினி மேலே செல்லத் தொடங்கும்போது நாம் புலன்களைக் கடந்து செல்கிறோம். நமது மனங்கள் புலன்களைக் கடந்தவையாகின்றன, உணர்வு கடந்தவையாகின்றன, அறிவு எட்ட முடியாத நிலையை, புத்திக்கும் அப்பாலுள்ள நிலையை அடைகிறோம். சுழுமுனையைத் திறப்பதே யோகியின் முதல் நோக்கம். அவனது கருத்துப்படி சுழுமுனை வழியில்தான் இந்த மையங்கள், அல்லது உருவக மொழியில் கூறுவதனால், தாமரைகள் வரிசையாக உள்ளன. அடியில் தண்டுவடத்தின் கீழ்நுனியில் உள்ளது மூலாதாரம், அடுத்து சுவாதிஷ்டானம், மூன்றாவது மணிபூரகம், நான்காவது அனாஹதம், ஐந்தாவது விசுத்தம், ஆறாவது ஆஜ்ஞை. கடைசியாக மூளையில் இருப்பது சஹஸ்ராரம் அல்லது ஆயிரம் இதழ்த் தாமரை. இப்போது நாம் கவனிக்க வேண்டியது கீழே உள்ள மூலாதாரமும், மேலே உள்ள சஹஸ்ராரமும்தான். எல்லா சக்தியும் அதன் இருப்பிடமான மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். உடலில் உள்ள எல்லா சக்திகளுள்ளும் உயர்ந்தது ஓஜஸ் என்கிறான் யோகி. இந்த ஓஜஸ், மூளையில் சேமித்து வைக்கப்படுகிறது. ஒரு மனிதனின் தலையில் எந்த அளவிற்கு ஓஜஸ் அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவன் ஆற்றல் மிக்கவனாகவும், அதிக புத்திசாலியாகவும், ஆன்மிக வலிமை பெற்றவனாகவும் இருப்பான். ஒருவன் அழகான கருத்துக்களைக் கூறலாம், அவற்றை அழகான மொழியில் எடுத்துச் சொல்லலாம். ஆனால் அவை பிறரைக் கவராமல் போகலாம். இன்னொருவனோ இனிய மொழியிலும் பேசுவதில்லை, சிறந்த கருத்துக்களைச் சொல்வதும் இல்லை. ஆயினும் அவனது சொற்கள் பிறர் உள்ளத்தை வசீகரிக்கின்றன. அவனது ஒவ்வோர் அசைவும் வலிமை உடையதாக இருக்கிறது. இதுதான் ஓஜஸின் ஆற்றல். குறைவாகவோ அதிகமாகவோ ஒவ்வொரு மனிதனிடமும் ஓஜஸ் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. உடலில் செயல்படுகின்ற எல்லா ஆற்றல்களும் அவற்றின் மிக உயர்ந்த நிலையில் ஓஜஸாக மாறுகின்றன. ஒரு சக்திதான் இன்னொரு சக்தியாக மாறுகிறது என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். மின்சாரமாக, காந்த சக்தியாகச் செயல்படுகின்ற அதே சக்திதான் அகச் சக்தியாக மாறுகிறது. தசைச் சக்தியாகச் செயல்படுபவைதாம் ஓஜஸாக மாறுகிறது. பாலுறவு சக்தியாக, பாலுணர்ச்சியா வெளிப்படும் மனித ஆற்றல் தடுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டால் எளிதில் ஓஜஸாக மாறுகிறது என்று யோகி கூறுகிறான். இந்தக் காம சக்தி முழுவதையுமே சேகரித்து ஓஜஸாக மாற்ற அவன் முயற்சிக்கிறான். ஒழுக்கமுடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே ஒஜஸை மேலே எடுத்துச் சென்று மூளையில் சேமிக்க முடியும். அதனால் தான் பிரம்மச்சரியம் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது. பிரம்மச்சாரியத்திலிருந்து வழுவினால் ஒருவனிடமிருந்து ஆன்மீகம் நீங்கிவிடுவதையும், மன வலிமையையும் ஒழுக்க வீரியத்தையும் அவன் இழந்து விடுவதையும் உணர முடியும். இந்தக் காரணத்தினால் தான், பெரிய ஆன்மீக வீரர்களைத் தந்துள்ள எல்லா மதங்களும் சிறிதும் வழுவாத பிரம்மச்சாரியத்தை எப்போதும் வற்புறுத்துவதைக் காண்கிறோம். இதே காரணத்தினால்தான், திருமணம் செய்து கொள்ளாத துறவியர் தோன்றினர். எண்ணம், சொல், செயல் அனைத்திலும் அப்பழுக்கற்ற பிரம்மச்சரியம் அவசியம். அப்படி இல்லாமல் ராஜயோகம் பயில்வது ஆபத்தில் முடியும்; ஒருவனைப் பைத்தியக்காரனாகக்கூட ஆக்கி விடலாம். ராஜயோகத்தையும் பின்பற்றிக் கொண்டு, அதே வேளையில் தூய்மையற்ற வாழ்வும் வாழ்ந்தால் ஒருவன் யோகி ஆக முடியுமா என்ன?

Copyright © 2017 by Swami Vidyananda . All rights reserved.